2814 | மலர்தலை யுலகிற் புன்னெறிச் சமயர் வாய்ப்பிதற் றுரை மனங் கொளாது, பலர்கொள்பூ தியுங்கண் மணியுமைந் தெழுத்தும்பற்றியா னுய்யுமா றருள்வாய், வலனுடைத் திகிரிப் படையினான் வணங்க வரமுகி லெனவுள மதித்துக், கலபமா மயில்கள் களிசிறந்தாடுங் கற்குடி மாமலைப் பரனே. | 1 |
2815 | பண்வழுக் குற்ற வீர்ஞ்சொலர் மையற் பரப்பினை நயந்துபா ராட்டிப், புண்வழுக் குற்ற மெய்யினைச் சுமந்தேன் பொய்யினைப் போக்குநா ளுளதோ, வெண்வழுக் குறுவா னவர்கள்பொன் மோலியிணைந் திணைந் துரிஞவீழ் துகளாற், கண்வழுக் குறுவின் மேருவேபோலுங் கற்குடி மாமலைப் பரனே. | 2 |
2816 | இட்டமா விரையாக் கலிபிழைத் தாரென் றிருங்கிளைதந்தை தாய் மனையாள், பட்டபால் வாய்ச்சே யொறுத்தகோட் புலியார்பத்திபெற் றுய்யுநா ளுளதோ, வட்டமாய் நடுப்பொன் மானந்தாங்குதலால் வரத்தகா தவருங்கண் டனாதிக், கட்டறுத் துய்ய வருட்குறியாகுங் கற்குடி மாமலைப்பரனே | 3 |
2817 | நளிமனம் வாக்குக் காயமூன் றாலு நனிமுயன் றவர்கொணின் னருளை, யொளிர்பசும் பொன்செய் கொழுக்கொடு வரகுக்குழுதயான் கொள்வது முளதோ, குளிறுமா மேகந் தவழ்ந்துறைபிலிறறுங் குளிர்க்குடைந் தாலென வுடலிற், களிவரக் காந்தட் டழல்வளர்த் தணைக்குங் கற்குடி மாமலைப்பரனே | 4 |
2818 | மங்கைமூக் கரிந்த தொன்றுமோ போது மாமலர் தொட்டது கரமென், றங்கையுந் துணித்த வன்பரோ வடியா ரஃதிலா வெமர்களோ வடியார், பங்கமி றவத்தா னினதுசா ரூபம் பயனுறப் பெற்றென வானக், கங்கையு மதியு முடிதரித் தோங்குங் கற்குடி மாமலைப்பரனே | 5 |
2819 | புண்ணிய வடிவாம் வேடர்தம் பிரானார் பொன்னடித் தாமரைச் செருப்பு, மண்ணிடைத் தோய வேட்டஞ்செய் நாளவ் வழிப்புலாய்க் கிடப்பினு முய்வே, னெண்ணுவ தினியா திமையவருலக மிறுதிநா ளழிவது நோக்கிக், கண்ணகன் குடுமி மதியினா னகைக்குங் கற்குடி மாமலைப்பரனே | 6 |
2820 | மறைநெறி வழாத புகலிகா வலனார் வளங்கொளோத் தூரிலாண் பனைகாய், நிறைதர வருள்கால் யானுமோர் பனையாய் நிற்பினு முய்வனென் செய்வே, னிறைவநின் றனக்குப் போர்வையுமுடையு மீந்தவென் றாதரித் தாற்போற், கறையடி புலிகள் பயிலவீற்றிருக்குங் கற்குடி மாமலைப்பரனே | 7 |
2821 | மண்பொழி தானக் களிற்றொடு பாகர் மடிந்தது போதுமோவெனையும், புண்பொழிவாளாற்கொல்லுமென் றவர் வாழ் புரங்குடியிருப்பினு முய்வே, னொண்பொழி லேத்தச் சிவானந்த வெள்ள மூற்றெழத் தவஞ்செயு மடியார், கண்பொழி நீரோ டருவிநீர் பாயுங் கற்குடி மாமலைப்பரனே | 8 |
2822 | யாதனின் யாத னினீங்கியா னோத லதனின தனினிலனெனமுன், னோதிய பெரியோர் வார்த்தையும் பேணா துழல்கொடியேற்கருள் குவையோ, மேதகு புழுகு நானமு முகிலும் விரைதருமாரமு நூற்றுக், காதநாற் றிசையுங் கமழ்தருந் தெய்வக் கற்குடி மாமலைப் பரனே. | 9 |
2823 | சாவிபோ மற்றைச் சமயங்கள் புக்குத் தவறுறேல் சைவ சித்தாந்த, மோவுறே லெனமுன் வாய்மலர்ந் தவர்த முரைவழி நிற்குமாறருள்வாய், பாவிய பாகற் கோட்டினிற் பற்றிப் படர்கறிக் கொடியினைவணக்கிக், காவளர் சார லருவிகல் லெனப்பாய் கற்குடி மாமலைப்பரனே. | 10 |
2824 | மெல்வினை ஞானம் வல்வினை ஞான மிளிரிவை பத்திவை ராக, நல்வினை யென்ப ரவற்றிலோர் வினையு நண்ணிலேன் றீவினை யன்றிச், செல்வழி யருள்வா யகத்திரு டனைநின் றிருவருளோட்டல்போற் புறத்துக், கல்லரு மிருளை யராமணி யோட்டுங் கற்குடி மாமலைப் பரனே. | 11 |
2825 | மெய்யெலா முரோமஞ் சிலிர்ப்பவென் புருக விழிகணீர் சொரியவன் புருவா, யையநின் புகழே பேசிடார் நாவா யளக்கரின் மிதக்குநாவாயே, தெய்வமங் கையர்கள் சுனைகுடைந் தேறித் திருமகப்பெறுவரம் வேண்டிக், கைகளேந் துதல்போற் காந்தள்கண் மலருங்கற்குடி மாமலைப் பரனே. | 12 |
2826 | செயிரறு நினது திருவருள் காட்டுந் திறத்தினாற் காண்பதை யன்றிப், பயிறரு கல்வி கேள்வியா னின்னைப் பளகறக் காணவும் படுமோ, வயிரமா மலைச்செம் மணிக்குவால் பச்சை மணிக்குவா லொடுபிறங் கிடுதல், கயிலைநீ யுமையோ டிருப்பது தெரிக்குங் கற்குடி மாமலைப் பரனே. | 13 |
2827 | ஏந்தறற் செறுவிற் செந்நெலுட் பதடி யென்னவிப் புவியிடைப் பிறந்த, மாந்தருட் பதடி யானயான் மூல மலத்தொட ரறுத்துய்வ தென்றோ, பாந்தளின் மிசைக்கண் படுக்குமா யவன்போற் பரப்பிய தழலெனப் பூத்த, காந்தளி னருகு யானைகண் படுக்குங் கற்குடி மாமலைப் பரனே. | 14 |
2828 | கல்லினால் வல்லப் பலகையால் வாளாற் கமரினாற் சாணையாலன்பர், புல்லுமும் மலமும் போக்கிநின் னடிக்கண் புகுந்தனர்யான்புகு மாறென், வெல்லும்வான் சைவம் விட்டுப்புன் சமயம் விரும்புவார் போற்பல கந்தங், கல்லுவார் மணிக ளகழ்ந்தெறிந்தெடுக்குங் கற்குடி மாமலைப் பரனே. | 15 |
2829 | வேணவா வெகுளி முதற்களை கட்டு வேரற மனச்செயி லன்பாம், பேணறல் பாய்த்திப் பத்தியாம் பைங்கூழ் பிறங்கயான் வளர்த்துய்வ தென்றோ, மாணுறு வட்டப் பளிக்கறை மதிபோல் வயங்கலா லுடுக்கண் மதனைக், காணவந் தாற்போல் வேரன்முத் திமைக்குங் கற்குடி மாமலைப் பரனே. | 16 |
2830 | சூதினாற் பொருள்செய் துன்னடி யார்க்கே துறுத்த மெய் யன்பரோ மூர்க்கர், வாதினாற் பொருள்செய் துண்டுடுத் துவக்கு மறத்தொழி லெமர்களோ மூர்க்கர், சீதளக் கதிரோ னெனவுல கேத்தத்தினமும் வெண் மதிமலர் ததைந்த, காதநீள் சுனையின் மூழ்கிநின்றேறுங் கற்குடி மாமலைப் பரனே. | 17 |
2831 | துன்றிய பூத விருளொரு பொருளுந் தோன்றக்காட் டாதுபோ லிரண்டு, ளொன்றினை யேனுங் காட்டிடா வனாதி யுறுமலமொழித்துய்வ தென்றோ, நன்றுநின் னுருவங் கண்டுகண் புனல்பெய்நற்றவர்க் கருகுநி லாக்கல், கன்றலின் மதியைக் கண்டுதண்புனல்பெய் கற்குடி மாமலைப் பரனே. | 18 |
2832 | தரணியான் மாக்க ளுடற்குரி மைகளிற் றலைக்குமே லிலாதது போல, வுரவுசெய் நின்ற னருட்குமே லிலையென் றுண்மையோ ரறிவர்யான் வலனோ, பொருள்செய்நம் மகளார் கதுப்பினுக் கிணையாப் புகறகா தெனக்கறுத் துவந்த, கருளினைத் துரந்தெக்காலமும் பகல்செய் கற்குடி மாமலைப் பரனே. | 19 |
2833 | சேரர்நின் கயிலைக் கெழுந்தநாட் பரிக்குந் திருப்பரி யுருக்கொண்டே னெனினு, மோருமென் கிளையு முய்யுமெற் குறுமோ வுதிக்குமாற் பரிக்குமஃ துறுமோ, பாரவில் வயிரப் படையினாற் சுமந்த பகையற வடுத்துற வுறல்போற், காரணைந் திரவி வெப்பற வுறைபெய் கற்குடி மாமலைப் பரனே. | 20 |
2834 | அன்றுநன் புகலூர் மணிமுதற் றோற்றி யரசினைச் சோதனைசெய்த, தென்றுமெம் போல்வா ருய்பொருட் டன்றோ விதனையுமெண்ணிலன் சிறியே, னொன்றுமும் முனிவர் தமிழ்வளர் வரையென் றொருமுனித் தமிழ்வரைத் தென்றற், கன்றுபன் மலர்வா சனையொடுற் றுலவுங் கற்குடி மாமலைப் பரனே. | 21 |
2835 | பிறைவடங் கிடந்த பொம்மல்வெம் முலையார் பெருங்களி மயக்கிடை வீழ்ந்து, நிறைபொறி யிலானை யாண்டதென் னென்று நினைவெறுப் பாரிலை யருள்வா, யிறைபிர ணவகுஞ் சரமுமை பிடியீ ரெச்சமும் யானையா னைக்கோ, கறையடி வதியு மிடமெனக்கரிசூழ் கற்குடி மாமலைப் பரனே. | 22 |
2836 | வறியவ ரகட்டும் பசித்தழ லவிய வல்சியீந் திடுதலோ மாயாக், குறியுடைச் செல்வர்க் கீதலோ வறமக் கொள்கைதேர்ந் தெனைப்புரந் தருள்வாய், சிறியபுன்சுரர்நன் றிலரென நின்னைத் தேடுவார் போற்பல்வா னரங்கள், கறிகறித் துமிழ்ந்து குளிர்சுனை நேடுங் கற்குடி மாமலைப் பரனே. | 23 |
2837 | பொற்புறு சபையின் மாதரார் நடனம் புரிந்தியான் காண்பதை யொழித்துச், சிற்பர சபையி னின்றிரு நடனந் தரிசிக்கப் பெறுவதெந்நாளோ, மற்பொரு முசுக்கள் காந்தளைப் பாந்தண் மணிப்பட மெனப்பயந் துந்திக், கற்பக தருவின் கழுத்தொடி தரப்பாய் கற்குடி மாமலைப் பரனே. | 24 |
2838 | தட்பமே மிகுந்த சாகரம் புனிதத் தடநதிப் புனலலா லெவரும், பெட்புறா திழிக்கு மங்கணப் புனலும் பெருகிடின் வெறுப்பது முளதோ, கொட்புறு மனத்தேன் பிதற்றுரை யுங்கொள் குகைதொறு முறைதவர்க் குறுவெங், கட்பணி யுமிழ்ந்த மணிவிளக் கெடுக்குங் கற்குடி மாமலைப் பரனே. | 25 |
2839 | மைக்கணார் முதலா மாயகா ரியங்கண் மயலென வெறுத்தெனதுள்ள, மெய்க்கணின் னடியார் பாதமே பற்றி விடாவிருப் புடனுறவருள்வாய், மொய்க்குமீ னுவரி புகுந்தறன் மடுத்து முழங்கிவந்தணைதரு முகிலைக், கைக்களி றோடிப் பிடியென வணைக்குங் கற்குடி மாமலைப் பரனே. | 26 |
2840 | வேடமே பொருளா வுயிரளித் தவரை மெய்ப்பொரு ளென்பருய் திறத்தோர், மாடமின் மக்கண் மெய்ப்பொரு ளென்று மயங்முவேற் குய்திற மெவனோ, பேடைமா மயின்மீ நோக்கியே யகவப் பெருமகண் மகிழ்நனூர் தியெனக், காடுடைத் தருக்கோ னூர்தியையுய்க்குங் கற்குடி மாமலைப் பரனே. | 27 |
2841 | பனிமதி நுதலெம் பிராட்டிமேற் கடைக்கண் பாய்த்திநீ யாடுமா னந்தத், தனிநடங் காண வருள்வையேன் மற்றோர் தவமுமோர் பேறும்வேண் டுவனோ, நனியரம் பையர்தங் குழைகள்கொண்டெறிய நறுவிளக் கோட்டுவா னரமக், கனிகள்கைப் பறித்து மீச்செல வெறியுங் கற்குடி மாமலைப் பரனே. | 28 |
2842 | வளிமுதன் மூன்றும் பயிறர விடக்கால் வகுத்தவிப் புழுக்குடி லந்தோ, விளிவுறக் குலையு முன்னராண் டிடினுண் டெனக்கினியெப்பிறப் புறுமோ, துளிமுகிற் கூந்தற் சசிபுல வியினாற் றுரந்தமுத்தாரமா நடஞ்செய், களிமயிற் கழுத்திற் பரிசிலின் வீழுங் கற்குடி மாமலைப் பரனே. | 29 |
2843 | மன்னெகப் புளக முடலெலாம் புதைப்ப மழைபொழி தருங்கணி னடியா, ரினநகத் திரிவே னாணஞ்சற் றில்லே னென்செய்கேனருள்செயூ டலினாற், சினமதக் களிறு தொடர்ந்திட வோடுஞ்சிறுபிடி குறமட மாதர், கனதனத் திடியுண் டஞ்சிமீண் டணைக்குங் கற்குடி மாமலைப் பரனே. | 30 |
2844 | தடித்தெழு மன்பே யுருவமாம் வேடர் தம்பிரா னோவென்றி முன்னீ, பொடித்தமுப் புரத்தும் வலியதோ வெய்ய பொய்யினேன் றீவினை யுரையாய், கொடிச்சிய ரேன லிடித்திடு முலக்கைக் கொம்புபட் டுடைந்திழி பாகற், கடிச்செழு நறவவ் வுரற்குழி நிறைக்குங் கற்குடி மாமலைப் பரனே. | 31 |
2845 | தேயுநுண் மருங்கு லிறுத்தெழு முலையார் சீறடிச் சிலம்பொலி நேடி, யாயுமென் செவிநின் குஞ்சித பாதத் தணிசிலம் பொலியறிந் திடுமோ, பாயுமம் புலியின் குழவியும் வானப் பரப்பிடை யுதித்திரு ளனைத்துங், காயுமம் புலியின் குழவியுந் தவழுங் கற்குடி மாமலைப் பரனே. | 32 |
2846 | பந்தமார் கிளைக ளறத்துணித் துரிமைப் பண்புடை மனையைநிற் களித்த, வெந்தையா ரவரோ பிறர்மனை நயக்கும் யாங்களோ நின்னடிக் கன்பர், முந்துமா தவத்து முனிவரே போல முடிச்சிகை வளர்த்துவன் கிராதர், கந்தமே யுண்டு கலையத ளுடுக்குங் கற்குடி மாமலைப் பரனே. | 33 |
2847 | நண்ணிமுன் னாலங் காட்டிற்குத் தலையா னடந்திடு மம்மையோ நினது, புண்ணியத் தலத்திற் காலினா னடந்தும் புகாப்பெரும் படிறனோ பேயார், விண்ணியை யமர ரவியுணா விரும்பி விரித்திரு கைகளு மேந்தக், கண்ணிய யாக முறுவர்செய் சாரற் கற்குடி மாமலைப் பரனே. | 34 |
2848 | மதித்துனை யுள்ளச் சினகரத் திருத்தி வாழ்ந்தவர் வாயிலா ரல்லர், துதித்துனைப் புகழாக் கொடியவெம் மனோரே துயரும்வா யிலாரிஃ துண்மை, யுதித்தசெங் கதிர்மீச் செல்பொழு தேத்த வுறுந்திசைப் பாலரோ டுற்ற, கதித்தகூற் றினைமுத் திட்டிட வுயர்ந்த கற்குடி மாமலைப் பரனே. | 35 |
2849 | ஏத்தியன் புறுநின் னடியரை நின்னை யிகழ்ந்துரை யாடி யுமத்தி, நாத்தியென் றுரைத்து நான்பர மென்று நந்துவார் மாட்டெனைக் கூட்டேல், பூத்திரள் சிந்திச் சூழ்பவர் பாவம் போதல்போற் கயக்கருந் தானங், காத்திர ளுடுத்த சாரனின் றோடுங் கற்குடி மாமலைப் பரனே. | 36 |
2850 | பொருந்திய சாந்தம் பொற்பணி முனிந்து புண்ணிய நீறுகண் டிகையே, தருந்திரு வெனவுட் கொள்ளுநா ளென்றோ சாரலிற் குடாவடி தவழ்த, லருந்தவ ரியற்றும் பெருமகஞ் சிதைப்பா னடுத்தவர் சாபத்திற் கஞ்சிக், கருந்தயித் தியர்க ளிரிவது கடுக்குங் கற்குடி மாமலைப் பரனே. | 37 |
2851 | அருந்தலை விரும்பி யணைத்தலைக் காண லவாவலை யுயிர்த்தலைக் கேட்க, வருந்தலை யெல்லா நின்னடிக் காக்கி வருந்தலை மையுமெனக் குளதோ, முருந்தலை சாரற் றேக்கடிப் படுத்த மொய்ம்மயி ரெண்கின்மேற் கிராதர், கருந்தலை வைத்து முடங்கத ளுறங்குங் கற்குடி மாமலைப் பரனே. | 38 |
2852 | மன்னுசெங் கதிரோ னன்றியு மவன்கல் வாய்த்தழ றோன்றுமோ வதுபோற், பன்னுநின் னருளை யன்றியெவ் வுயிரும் பளகறு முத்தியிற் புகுமோ, மின்னிடை யெயிற்றி மாதர்தண் சுனைத்தம் விளங்குருக் கண்டறற் குடிகொள், கன்னிய ரெனக்கை கூப்பிநின் றழைக்குங் கற்குடி மாமலைப் பரனே. | 39 |
2853 | சந்திரற் றரித்த நின்றிரு முடியிற் றழலா வையுமுடன் வைத்தாய், வந்தது புகழே யன்பரோ டெனைநீ வைப்பினும் வருவதுபுகழே, யிந்திரன் மயங்க நீன்மணிச் சுடர்மே லெழீஇயொரு முனிவனே போல்வெண், கந்தடு களிற்றைக் கருங்களி றாக்குங் கற்குடி மாமலைப் பரனே. | 40 |
2854 | தெளியுநின் கருணை மரகதக் கொழுந்தே சிவணுமென்பசியபுனேடிக், குளிர்பய னுதவுங் கோவினை யருத்தேன் கோதினையருத்துவேற் குளதோ, வொளிசெய்பொன் னுலகிற் கொடுமுடி யுரிஞ வுதிரும்பொற் றுகளிடை மூழ்கிக், களிறுமா தங்கப் பெயர்ப்பொருள் விளக்குங் கற்குடி மாமலைப் பரனே. | 41 |
2855 | தேகமே நானென் றுனியிரு சார்புந் திடமுறக் கொண்டவத் தைகளுள், ளேகியே யுழன்று திரியுநா ளொழிந்துன் னிணையடிவணங்குநா ளுளதோ, போகுயர் குடுமிக் கருகிருந் தெயினர் பொன்னுல கத்தவ ரிசைக்குங், காகுளி துத்தந் தாரங்கேட் டுவக்குங் கற்குடி மாமலைப் பரனே. | 42 |
2856 | பணியும்வெள் ளெலும்பு நரம்பும்பூண் டதற்குன் பாலெவர் வினாவினர் தகாதென், றணிதர விடையார்க் கருளினை யெனையுமாளினத் தன்மையாய் விடுமால், பிணிமுகச் சாயற் கொடிச்சியர்வதுவைப் பெருநல நுகரமங் கலநாள், கணியெனக் கணிக ளேடவிழ்த் துரைக்குங் கற்குடி மாமலைப் பரனே. | 43 |
2857 | மல்லலம் புவியிற் கூற்றினைக் கடத்தல் வயங்குநின் றிருவடித் துணையே, புல்லிய நெறியார்க் கன்றிமற் றல்லாப் புல்லிய நெறியினர்க் காமோ, வல்லியங் குழலா ருறுவெறி யாட்டி லணிகெழுமுருகியந் துவைக்கக், கல்லெனு மொலியே செல்லொலி மழுக்குங் கற்குடி மாமலைப் பரனே. | 44 |
2858 | பஃறலைப்பாய லான்முதற் றேவர் பகுத்தொதுக் கிடநந்தியோச்சுஞ், சுஃறொலிச் சூரல் கண்டுகை யேந்தித் துதிக்குநின் றிருமுனென் றுறுவேன், சிஃறொழில் களுஞ்செய் யாதுசெய் நின்னைத் தெளிதவர் புரிமகப் புகைபாற், கஃறெனுங் கானிற் குயினொடு தவழுங் கற்குடி மாமலைப் பரனே. | 45 |
2859 | மையினுங் கழிந்த கருங்குழன் மடவார் மயக்கினை நயந்து மட் சுமையா, மெய்யினுட் புகுந்து பொய்யினுட் சுழலும் வீணனுக்கெங்ஙன மருள்வாய், வையினுட் பழகு நெடுங்கணைக் கிராதர் வயங்கெழு தொண்டகந் துவைப்பக், கையினுட் குணிலென் றொளிர்பிறையெடுக்குங் கற்குடி மாமலைப் பரனே. | 46 |
2860 | கொடும்பசித் தழலு ணனிமுழு கியும்பொற் குடமெடுத்தாட்டினா ரன்ப, ரடும்பலூ ணுண்டுங் கைதொழ வருந்து மடியனுக்கெங்ஙன மருள்வாய், விடுஞ்சுடர்க் கற்ப மாமலர் பறித்து மேலவர்கண்வழி விரும்பிக், கடும்புட னிறங்க வேரல்க ளோங்குங் கற்குடி மாமலைப் பரனே. | 47 |
2861 | மறையவர் திருவை வைதிகர் துணையை வருபர சமயகோ ளரியைக், குறைவிலா வமுதைக் காழியுண் ஞானக் கொழுந்தினைத் துதிக்குமா றருள்வாய், நறைகம ழலங்கற் கதுப்பரம் பையர்க ணன்குமை திலகந்தீட் டுதற்குக், கறைதபு சுனைக ளாடியிற் பொலியுங் கற்குடி மாமலைப் பரனே. | 48 |
2862 | மைக்கருங் கடலிற் கன்மிசை மிதந்து மாறினின் னருட்கட லழுந்து, மெய்க்கணெம் பெருமா னாவினுக் கரசை விளம்பிலேனெங்ஙன முய்வே, னைக்கரு நெடுங்க ணாய்ச்சிய ருறிக்க ணளையெடுத் தவனென நிலவைக், கைக்கருங் களிறு கவளமென் றெடுக்குங் கற்குடி மாமலைப் பரனே. | 49 |
2863 | நின்னுடைத் தோழப் பெருந்தகைப் பிரானை நிகரறுமுதுகிரிச் செம்பொன், மன்னுமாற் றிட்டுக் குளத்தினி லெடுத்தவள்ளலைப் பரசுமா றருள்வாய், துன்னுசெந் தினையின் குரல்கவர்குருகின் றொகுதியைக் கவண்கயிற் றெயினக், கன்னியர் மணிவைத் தெறிந்தெறிந் தோட்டுங் கற்குடி மாமலைப் பரனே. | 50 |
2864 | துதிகரைந் துனக்குன் னடியருக் கன்பு துறுத்தலே முத்தியென் றெண்ணேன், மதிசெயு நானே பரமெனு மாயா வாதியு மாயின னழகே, திதியவன் பிரம னின்னமுந் தேடத் திகழுநின்னுருவென வோங்கிக், கதிரொளி மழுக்குங் கோபுரம் பலசூழ் கற்குடி மாமலைப் பரனே. | 51 |
2865 | ஆணவ மகன்ற வறிவன்றி யுருவி லையநீ பல்லுருக் கொண்டு, பேணுபன் னாமம் புனைந்துபல் லிடத்தும் பிறங்குத லுயிர்கட்கென் றறியேன், மாணநின் னடியு முடியுங்காண் கினுமம் மாலயனிவற்றடி முடியுங், காணரி தெனச்செய் பொன்மதில் பலசூழ் கற்குடி மாமலைப் பரனே. | 52 |
2866 | தினகரன் பூத விருள்விடக் கிரணஞ் செலுத்தல்போற் சிறியன்மும் மலமா, மினவிருள் விடநீ யருள்செலுத் திடினுண்டின்றெனின் விடலென்று மின்றாந், தனபதி நகரி லதிகமீ தென்னத் தவழ்சுடர் மணிபல பதித்த, கனகமா ளிகைகள் பலவுடுத் தோங்குங் கற்குடி மாமலைப் பரனே. | 53 |
2867 | நவையறு மாசி னாமமப் பூதி நாயனார் தாஞ்செயு மறங்க, ளவையினன் கெழுதி யுய்ந்தனர் யானின் றளவுஞ்சொல் லியுமறியேனாற், சுவைதரும் பல்பூக் கறித்துவாய் குதட்டித் துணர்த்தபைஞ்சூதமா நீழற், கவையடி மேதி துயில்வய லுடுத்த கற்குடி மாமலைப் பரனே. | 54 |
2869 | தாலிகொண் டுறுநெற் கொளச்செலும் பொழுது தக்ககுங் கிலியங்கொள் புனிதர்க், கேலுமன் பனந்தங் கோடிகூற் றொருகூறெய்தினு மையமின் றுய்வேன், மாலிருங் கடந்த களிற்றின மறைய வளர்கதிர்க் குலைச்செழுஞ் சாலிக், கால்கள்பாய் பழனம் பலவுடுத் தோங்குங் கற்குடி மாமலைப் பரனே. | 55 |
2869 | தூரமாஞ் செல்வச் செருக்கர்பி னடந்து தொடர்ந்துளந் திகைப்பதை யொழிந்து, சீரிய நின்மெய் யன்பரைத் தொடர்ந்து திகைப்பறச் செல்லுநா ளுளதோ, வாரிசத் தடத்தை யுழக்கிய பகட்டு வாளைபாய்ந் துறுகருக் கலங்கக், காரினைக் கலக்குங் கணியுடுத் தோங்குங் கற்குடி மாமலைப் பரனே. | 56 |
2870 | கூற்றினை யுதைத்துங் காமனை விழித்துங் கொன்றநின் றனக்கன்பு செய்யார், மாற்றறுங் கூற்றின் றண்டமுங் காம வருத்தமு மெங்ஙன மொழிவார், தாற்றிளங் கமுகின் கழுத்திறப் பாயுந் தகட்டகட் டிளநெடு வாளைக், காற்றடம் பணைக ணனியுடுத் தோங்குங் கற்குடி மாமலைப் பரனே. | 57 |
2871 | மின்னுசெந் தழலாய் நின்றுமென் பாதி மிலைந்துமல் லறநுதல் விழித்து, முன்னுநஞ் சயின்றுந் தெரிக்குநிற் கயன்மா லொப்பெனக் கரைநரும் வாழ்க, பன்னுகூன் குலைய குறுங்கழுத் தரம்பைப் பழங்கனிந் தொழுகிய செழுந்தேன், கன்னலின் படப்பை நனைக்குந்தண் பணைசூழ் கற்குடி மாமலைப் பரனே. | 58 |
2872 | இயல்புடை யோகத் திருந்தநா ளெவரு மெவையுமின் புணர்ப்பற விருந்த, செயலுணர்ந் துமையைப் புணர்ந்தரு ணீயே தெளிபர மென்பது தெளிந்தே, னயலுறு முளரி மணந்தமக் கிலாத தறிந்துநெற் கதிர்தலை வணக்குங், கயலுடைப் பழனக் கணியுடுத் தோங்குங் கற்குடி மாமலைப் பரனே. | 59 |
2873 | பராபர நினது மேனியிற் பட்ட பாண்டியன் கைப்பிரம் படிதான், சராசர மனைத்தும் படுதலா னீயே தறபர னெனவுளந் துணிந்தே, னிராவெனத் திரியுங் கவையடிக் கயவா யெருமைகள் கன்றுளிப் பொழிபால், கராமலை மடுக்க ணிறைதரும் பணைசூழ் கற்குடி மாமலைப் பரனே. | 60 |
2874 | பங்கயா சனனுந் திருநெடு மாலும் பாகசா தனனும்வா னவரு, மெங்குநா டியுங்கா ணரியநின் பாத மெளியதன் பருக்கென வுணர்ந்தேன், கொங்குலாந் தடத்திற் சலஞ்சல முகுத்த கொழுங்கதிர் முத்தம்வில் வீசிக், கங்குலை மழுக்கும் பணைமருங் குடுத்த கற்குடி மாமலைப் பரனே. | 61 |
2875 | ஐயவென் னுள்ள வெள்ளமிந் திரிய வடற்குலை யுடைத்ததி விரைவிற, செய்யநின் பாத பங்கயக் கடலிற் சேர்தரப் படருநா ளென்றோ, நெய்யணி கூந்த லுழத்தியர் நெடுங்க ணிழலற லிடைக்கண்டு மள்ளர், கையினாற் கயலென் றரித்திடுங் கணிசூழ் கற்குடி மாமலைப் பரனே. | 62 |
2876 | கட்டுவீ டருள்வோ னீயெனத் தெளிந்து கரிசுறு புன்றெய்வப் பற்று, விட்டுனை யடைந்தேற் கெப்பற்று மறுத்துன் மெய்ப்பற்றைப் பற்றுமாறருள்வாய், வட்டவாய்க் கமல மதுமடை யுடைக்க மள்ளர்கள் கரும்படு மினிய, கட்டியா லடைக்குங் கணிமருங் குடுத்த கற்குடி மாமலைப் பரனே. | 63 |
2877 | விரிதனு கரண புவனபோ கங்கள் வினைவழிக் கொடுத்தவை துய்த்த, பரிவுயி ரறப்பி னொடுக்கிமீட் டாக்கும் பரிவினுங் கதிதர லெளிதே, நெரிமருப் பெருமை கரும்பினைக் குதட்ட நேரிழி சாறவ னிரப்புங், கரிசறு மகணி மருங்குடுத் தோங்குங் கற்குடி மாமலைப் பரனே. | 64 |
2878 | செறிபிறப் பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பெனுஞ் செம்பொருள் காண்ப, தறிவெனத் தெரிக்குங் குறட்பொரு ளறிந்து மறிகிலன் போற்பிற காண்பேன், வெறிமலர்ப் பணைநெற் பச்சிளங் கதிர்கள் விண்ணகத் தேனுநா நீட்டிக், கறிசெய வளரும் படுகர்சூழ் பழனக் கற்குடி மாமலைப் பரனே. | 65 |
2879 | வெம்பிய காமம் வெகுளியுண் மயக்கம் வேரறப் பறித்துநின் பதமே, நம்பியென் புருக வனபுசெய் நாளு நாயினேற் குள்ளதோ வருள்வாய், பம்புபன் மலர்கண் மருதவேந் துறையப் பன்மணி குயிற்றிய பைம்பொற், கம்பலம் விரித்தாற் போலடர் பணைசூழ் கற்குடி மாமலைப் பரனே. | 66 |
2880 | வையமும் வானு முய்யவன் புருவாய் வாதவூர் வந்தவ தரித்த, வையனன புரையை நயந்துபா ராட்டு மவ்வள வாவதெற் கருள்வாய், செய்யதா மரையின் பன்மல ரொளிர்த றிகழ்தர விழித்துவச் சிரத்த, கையினான் கிடத்தல் போன்மெனும் பணைசூழ் கற்குடி மாமலைப் பரனே. | 67 |
2881 | ஒழுக்கமன் பருளா சாரநற் சீல முறவுப சாரம்வந் தித்த, லிழுக்கிலா வாய்மை தவந்துற வடக்க மிவைகளி லொன்றும்யா னறியே, னழுக்கிலா வமுத முடுக்கள போற் சிதற வணிமதி மேற்பெரு வாளை, கழுக்கடை யெனப்பாய் படுகர்சூழ் தெய்வக் கற்குடி மாமலைப் பரனே. | 68 |
2882 | நின்னுரை வழியே நிற்பவர் நில்லார் நீளற மறஞ்சுவர்க் காதி, மின்னுபோ கத்தா னரகத்தாற் றொலைத்து வீட்டுய்ப்போ னீயெனத் தெளிந்தேன், மன்னிய தென்னம் பழம்பல வீழ வருக்கையின் பழங்கிழிந் திழிதேன், கன்னலங் கழனி பாய்தரும் பணைசூழ் கற்குடி மாமலைப் பரனே. | 69 |
2883 | மானிடப்பிறவி வந்தது மனத்தால் வாக்கினாற் காயத்தாற் பணிசெய், தானிடத் தைந்து மாடுநின் னடிக்கீ ழமரவென் றறிந்திலன் சிறியேன், கூனுடைக் குலைய குறுங்கழுத் தரம்பைக் கொழுங்கனி யிழிந்ததேன் கருப்பங், கானிடைப் பாயும் படுகர்சூழ் தெய்வக் கற்குடி மாமலைப் பரனே. | 70 |
2884 | பொருள்செய்சன் மார்க்க நெடுஞ்சக மார்க்கம் புத்திர மார்க்கமின் பாக்கு, மிருமைசெய் தாத மார்க்கமிம் மார்க்கத் தியானொரு மார்க்கமு மறியேன், பருமர கதமுத் தந்துகிர் கண்டம் பாளைசெம் பழத்தினாற் காட்டிக், கருமுகி லணவுங் கமுகடர் கணிசூழ் கற்குடி மாமலைப் பரனே. | 71 |
2885 | கொச்சையர்க் குயர்மா னியுமர சினுக்குக் குலவுமப் பூதியுமுலக, நச்சுசுந் தரருக் குதியரும் போல நான்சிறந் துய்வதெந் நாளோ, வச்சணங் கயில்வேற் கண்ணுழத் தியர்நெல் லரிதருங் கொடும்புற விரும்பைக், கச்சப வெரிநிற் றீட்டிடுங் கணிசூழ் கற்குடி மாமலைப் பரனே. | 72 |
2886 | படர்புகழ்க் காழிப் பிள்ளையார்க் கிவனைப் பாரெனச் சற்றுநீ மொழிந்தாற், பிடகன்மாத் தலையி லுருமுவீழ்த் தவரென் பெருவினைக் கும்மது வீழ்ப்பா, ரடுமடைப் பள்ளி யுலைக்கழு நீர்செய் யாவிகால் குளம்பல நிரம்பக், கடலுடைத் தென்னப் பாயுமென் பால்சூழ் கற்குடி மாமலைப் பரனே. | 73 |
2887 | நயந்தரு நாவுக் கரசருக் கிவன்பா னாட்டம்வை யென்னினப்பூதி, பயந்தசேய்க் குற்ற விடந்தொலைத் தவரென் பாசவல்விடத்தையுந் தொலைப்பார், வயந்தரு மள்ள ருடைப்பினை யூரு வரைகுவி நவமணி வாரிக், கயந்தலை யெனநின் றடைத்திடுங் கணிசூழ் கற்குடி மாமலைப் பரனே. | 74 |
2888 | பழிதபு குணவன் றொண்டருக் கிவன்பாற் பார்வைசெ யென்பையேற் கராவாய்க், குழியினின் றொருசேய் மீட்டவர் சனனக் குழியினின் றென்னையு மீட்பார், வழிமதுப் பொழிபூங் கொடிகடாய் வளைப்ப வளைந்துபைங் கழைகணின் றிடுதல், கழிவில்கைக் கொடுவேள் பொரல்பொருங் கணிசூழ் கற்குடி மாமலைப் பரனே. | 75 |
2889 | அருவமா யுருவ மாயரு வுருவா யனைத்துயிர்க் குயிருமா யறிவாய்ப், பொருள்படு மறைக்குந் தெரிவரி யாயாம் புராணநிற் றெரிதலெற் கெளிதோ, சுருள்விரி யரம்பைக் குருத்துமீ யசைந்து சுரர்மினார் கலவியெய்ப் பாற்றுங், கருள்படு பொதும்பர்ப் படுகர்சூழ் தெய்வக் கற்குடி மாமலைப் பரனே. | 76 |
2890 | செவியினாற் கேட்டு மறிகிலே னின்னைத் தெரிந்தவர் போற்பல பிதற்றிக், குவிதரக் கவியும் புனைவனுன் னிடினென் குணமெனக் கேநகை தருமா, லவிருநெற் பணையின் ஞெண்டுகள் கிளைத்த வளவில்பல் வளையெலா நிரம்பக், கவிழிணர்ச் சூதத் தாதுகுங் கணிசூழ் கற்குடி மாமலைப் பரனே. | 77 |
2891 | அருமறை தெரிதண் டீசர்பா லென்னை யடைக்கலம் புகுத்துவையானால், வெருவறத் தந்தை தாடுணித் தவரென் வெம்பவத் தாளையுந் துணிப்பார், மருவிய வுணவு கொடுவரச் சென்ற மடவனச்சேவலை நோக்கிக், கருவுயிர்த் துறைபே டலமருங் கணிசூழ் கற்குடி மாமலைப் பரனே. | 78 |
2892 | நானவார் கூந்தற் பரவையார் மனைக்கு நள்ளிரு ணாப்பணீ தூது, போனநா ளாரூர் மறுகிலோ ரெறும்பாய்ப் பொருந்தினும் வருந்திடா துய்வேன், கூன்முது கிப்பி யுயிர்த்தவெண் முத்தங் குவிதரக் கயிலையே யென்று, கான்மலர் தூவிச் சுரர்தொழுங் கணிசூழ் கற்குடி மாமலைப் பரனே. | 79 |
2893 | கெடுத்திடு முலோகா யதன்முத லான கீழ்ப்படுஞ் சமயர் பொய் யுரையை, யடுத்திடும் படியெப் பிறப்பெனக் குறினு மருளனின் னடிக்கன்பே யருள்வாய், மடுத்தவெண் குருகோர் முடக்கிழ நாரை வாய்க்கொளு முணவினைத் தட்டக், கடுத்திடா தறவோர் போலுறை கணிசூழ் கற்குடி மாமலைப் பரனே. | 80 |
2894 | தரிசனங் கொடுத்தா ளுயர்ந்தவ னீயான் றாழ்ந்தவ னியல்பினெப்பொருளுந், தெரிபவ னீயா னீதெரி விக்கத் தெரிபவ னின்னடிக் கடியே, னரிசிதர்ந் தயில்கொன் றாள்வழக் கறுக்கு மங்கணார் முகமதி கண்டு, கரிசறக் குமுத மலருமென் பால்சூழ் கற்குடி மாமலைப் பரனே. | 81 |
2895 | பொருவினின் பூசை யென்னும்புண் ணியத்தாற் பொலிசிவ ஞானம்பெற் றடங்கி, மருவுற மேல்கீழ் தருமறம் பாவ மாற்றிநின் னடிக்கணென் றுறுவேன், குருமலர்ச் செந்தேன் புலியடிப் பைங்காய்க் கோழரை யரம்பையைச் சாய்த்துக், கருநிறக் கவரி நீந்தப்பாய் கணிசூழ் கற்குடி மாமலைப் பரனே. | 82 |
2896 | யானது செய்தேன் பிறரிது செய்தார் யானென தென்னுமிக் கோணை, ஞானவா ரழலால் வெதுப்புபு நிமிர்த்து நான்செவ்வே நிற்கவென் றருள்வாய், மீனுண வளித்து விரிசிறை நாரை மென்மடப் பெடையொடு திளைக்குங், கானகன் மென்பூந் தடத்தமென் பால்சூழ் கற்குடி மாமலைப் பரனே. | 83 |
2897 | மூதறி வுடையோர் புகழ்சிறுத் தொண்டர் முளரித்தா ளடைந்திலே னடைந்தான், மேதகு சேயை யறுத்தவர் வெறுத்தென் வினையினை யறுக்கவஞ் சுவரோ, மாதர்மென் றடத்தில் வெள்ளிதழ்க் கமல மலரினை மடவனச் சேவல், காதலி னணைக்கப் பெடைதுயர் பணைசூழ் கற்குடி மாமலைப் பரனே. | 84 |
2898 | பெருகிய வெள்ளந் திரைக்கட லன்றிப் பிபீலிகை யளையினும் புகல்போ, லுருகிய வன்ப ரன்றியென் பாலு முன்னருள் புகுவது வழக்கால், பருதிய யிரமோர் கடலிடைத் தோன்றும் பானமைபோ லொவ்வொரு மடுவிற், கருதுசெங் கமலம் பலமலர் பணைசூழ் கற்குடி மாமலைப் பரனே. | 85 |
2899 | உயிரெலா நின்ன தடிமையெப் பொருளு முன்னுடை மைப்பொரு ளென்னச், செயிரற வுணர்ந்த நின்னடி யவாதாள் சிறியனே னடைந்துய்வ தென்றோ, குயிலெனப் பேசுங் கடைசியர் வதனக்குறுநகை மதிநில வென்னக், கயிரவங் கருதி மலர்பணை யுடுத்த கற்குடி மாமலைப் பரனே. | 86 |
2900 | பாவியேன் சிந்தை நின்னடிக் காக்கிப் பணிவிடைக் கிருகையுமாக்கி, நாவினைத் திருவைந் தெழுத்தினுக் காக்கி நவையற வுய்யுநா ளுளதோ, வாவியிற் பொலிவெண் டாமரை மலர்போன் மதியுறப் பெருக்கெடுத் தொழுகுங், காவிரிப் புனல்பாய் நெடும்பணை யுடுத்த கற்குடி மாமலைப் பரனே. | 87 |
2901 | மிடைத்தம ருடற்றும் பலகுண மறுத்து மிகுசிவா னந்தமூற் றெடுப்பக், கிடைத்துனைக் காண வாணவ வெழினி கீழயான் பெறுவதெந் நாளோ, வுடைப்பினை மள்ள ரடைக்குமுன் வராலவ் வுடைப்படை படவுடை மடையின், கடைத்தலை வெடிபோய் விழும்பணை யுடுத்த கற்குடி மாமலைப் பரனே. | 88 |
2902 | ஐந்துபே ரறிவும் பார்வையாய் முடிய வடுத்திடு கரணமீ ரிரண்டுஞ், சிந்தையாய் முடிய நின்றிரு ந்டனந் தரிசிக்கு நாளுமெற் குளதோ, விந்திர தருவோ ரளிக்குந்தே னளியா வியல்பினை நோக்கிவெண் மலராற், கந்தவார் பொழில்க ணகைக்குமென் பால்சூழ் கற்குடி மாமலைப் பரனே. | 89 |
2903 | பூப்பயி னந்த வனம்பல வியற்றேன் பொருந்தல கிடேனினா லயத்தி, லாப்பிகொண் டைதா மெழுகிடே னெங்ங னடியனே னுய்யுமா றருள்வாய், வீப்பயி லளிகண் மூக்குழ வழிதேன் விரிகடற் படுமுவ ரகற்றுங், காப்பயின் மென்பான் மருங்குடுத் தோங்குங் கற்குடி மாமலைப் பரனே. | 90 |
2904 | அவாவெனப் படுவ வெவ்வகை யுயிர்க்கு மணியவெவ் விடத்து மெஞ்ஞான்றுந், தவாவரு பிறப்பின் வித்தென வுணரேன் றண்ணரு ளெங்ஙனம் பெறுவே, னுவாமதி தவழுஞ் சோலையி லிளைஞ ரொளிர்கத லியைமறை மாதர், கவானென வணைக்கு நெடும்பணை யுடுத்த கற்குடி மாமலைப் பரனே. | 91 |
2905 | மலைக்கொடி படருங் கற்பக தருவே வயங்கருண் மழை பொழி முகிலே, புலைக்கொடி யனையா ளென்றுமெய் யாவிப் பொய்யினே னடையுநா ளென்றோ, நிலைக்கொடி யாட வுலகங்கொண் டாட நிறைமலர்ச் செங்கொடி யாடக், கலைக்கொடி யாடு மாளிகை பலசூழ் கற்குடி மாமலைப் பரனே. | 92 |
2906 | அற்குடி கொண்ட விரைநறுங் கூந்த லணிமுலை யெம்பிராட்டி யையான், சொற்குடி கொண்ட யாப்பினா லன்பாற் றுதித்திடப் பெறுநன்னா ளென்றோ, விற்குடி கொளும்பொன் னுலகமேத் தெடுப்ப வியனொளி குடிகொள்பன் மணியென், கற்குடி கொளச்செய் நற்குடி மலைதாழ் கற்குடி மாமலைப் பரனே. | 93 |
2907 | பல்லெலாந் தெரித்துச் சொல்லெலாந் துறுத்துப் பாட்டெலாம் பாடினீர் யாமு, மில்லெலா மாய்ந்தோங் கொடுப்பதற் கிலையென் னிவர்கள்பாற் புலவரென் பெறுவார், சொல்லெலாந் திருவைந்தெழுத்திவண் வாழ்வோர் தொழிலெலாம் பணிவிடை யென்றுங், கல்லெலாஞ் சிவலிங் கம்மெனச் சுரர்தாழ் கற்குடி மாமலைப் பரனே. | 94 |
2908 | பொற்பக மலர்ந்த மாதரர் மையற் புணரியி லழுந்திடா துனக்கே, யற்பக மலர்ந்து சிவானந்தப் புணரி யழுந்திடு மாறெனக் கருள்வா, யெற்பக மலர்ந்த குவட்டுறும் யானை யீர்ங்கவு ளளிகளைக் கையாற், கற்பக மலர்ந்த குழையெடித் தோச்சுங் கற்குடி மாமலைப் பரனே. | 95 |
2909 | புவிமுழு தளந்தோ னேடியுங் காணாப் பொன்னடித் தாமரை காண்பான், குவிமனத் தோடு மகம்படித் தொண்டு கொண்டியா னுய்வதெந் நாளோ, வவிர்தரு பிறையைக் கண்டவில் வேட ரவாவொடு கொடிச்சியர் தமது, கவினுத லென்னப் பொட்டணிந் துவக்குங் கற்குடி மாமலைப் பரனே. | 96 |
2910 | மன்றினின் னடனங் கண்டகண் கொண்டு மற்றினிக் காண்பதி யாதென், றொன்றிய சிந்தை யுறுதிகொள் ளுவனே லுய்குவே னெனக்கது போதுங், குன்றவ ரேனற் குரல்களை யறைக்கட் கொண்டுபோய்க் குவித்தடும் யானைக், கன்றினான் மிதிப்பித் துதிர்தினை யளக்குங் கற்குடி மாமலைப் பரனே. | 97 |
2911 | நனியிடை யறாம லுன்னடி நினைக்க நாயினேற் கருளுவை யாயி, னினிவரு கதிரெங் கெழினுமெண் ணேன்யா னிருப்பனீ தருளிட வேண்டுந், துனியறு களிற்றின் கோடுபட் டுடைந்து சுட்டபொன் போற்பல வருக்கைக், கனிபழங் கீண்டு சுளைபல வுதிருங் கற்குடி மாமலைப் பரனே. | 98 |
2912 | நீதிசேர் சைவத் தடைந்தவ ரடையா நின்றவ ரடைபவர் தமக்கியான், பாதகக் குழிசித் தொடர்பற வடிமைப் படும்பரி சென்றுநீ யருள்வாய், கோதில்கற் பகத்தி னறுங்குள கருத்திக் கொழுமத யானையங் கூந்தற், காதலம் பிடியைப் புலவிதீர்த் தணைக்குங் கற்குடி மாமலைப் பரனே. | 99 |
2913 | சைவமே பொருண்மற் றவையல வென்று சார்திரு நீறுங்கண் டிகையுந், தெய்வவைந் தெழுத்தும் பற்றறப் பற்றத் திருவரு ளென்றெனக் கருள்வாய், பைவளர் மணியைத் தழலென நினைந்து பாவடிப் பருமநல் வேழங், கைவளர் கடநீர் மழையெனப் பொழியுங் கற்குடி மாமலைப் பரனே. | 100 |
2914 | வெண்பா. நிலமாலை கொண்ட நெடுஞ்சடையி லென்பின் குலமாலை யுஞ்சேர்த்துக் கொண்டாய் -- பலமேலோர் சொன்மாலை கொள்செவியிற் றூக்கற் குடியாயென் புன்மாலையுங் கொளது போல். | 101 |