2545 | பூவார் முளரிப் புத்தேளும்புயங்க வணைமேற் றுயில்வோனும், நாவார் துதிசெய் தஞ்சலிக்கு நலமார் பழைசை நாயகனே, தேவா தேவர்க் கிறைவாநின் றிருத்தாள் கருத்தி லிருத்தேற்கு, மாவா வென்றிங் கருள்புரிந்தா யதுதா னின்பே ரருட்கழகே. | 1 |
2546 | அழகா ருமையோர் பங்குடையோ யமர ரேத்துந் திருப்பழைசைக், குழகா கொன்றை முடிமிலைந்த கோமா னேநின் னடியரொடும், பழகா திருக்கும் வன்னெஞ்சப் பாவி யேனைப் பவமென்னுந் தழல்கா யழுவத் தழுத்தாது தடுத்தாட் கொள்ள றக்கதே. | 2 |
2547 | தக்க னியற்று மகஞ்சிதைத்தாய் தறுகட் கூற்றந் தனைவதைத்தாய், செக்கர் முகிலேய் சடைமுடிமேற் றிங்கட் கொழுந்தோடரவணிந்தாய், முக்க ணுடையாய் திருப்பழைசை முதல்வா நின்றாட்கன்பில்லாப், பொக்க முடையே னானாலும் போற்றிக் கோடல் கடுனனக்கே. | 3 |
2548 | கடங்கால் பொருப்பி னுரிபோர்த்தாய் கண்ணார் நெற்றிப்புண்ணியனே, விடங்கா லரவ மரைக்கசைத்த விடங்கா தடங்கணுமைபாகா, தடங்கா மருவுஞ் செழும்பழைசைத் தலைவா பல நாணினைப்புகழா தடங்கா வுள்ளம் பொறிவழியே யணுகத் திரிந்தேணுறவுள்ளே. | 4 |
2549 | உள்ளம் பொறியின் வழிநடையுற் றோடச் சுழன்றுமடமாதர், கள்ள விழியின் வலைப்பட்டுக் கடையே னாகித் திரிவேனைத், தெள்ளு தமிழ்நற் றொடைப்பாடல் செய்து பணியப் பணித்தாண்டான், பள்ளவயற்கண் வளைமுத்தீன் பழைசைப் பதிவாழ் பெருமானே. | 5 |
2550 | மானேர் நோக்கி யொருபாகா மறைவாய் முழக்க நிறைபழைசைக், கோனே பொதுவிற் குனிக்குமருட் கூத்தா முக்கட்கொழுக்கரும்பே, தேனே கனியே யன்பருளந் தித்தித் திருக்குந்தெள்ளமுதே, வானே பெறினும் யானின்றாள் வழுத்து மன்பின்மாண்பருளே. | 6 |
2551 | மாணா வுள்ளப் பறவைமட மானார்மையற் கண்ணிவிழ, நாணா துழன்று தடுமாறி நவவாய்ப் புழுக்கூ டதுசுமந்து, வீணாள்கழிக்கு மறிவில்லேன் மெய்யா பழைசை யையாநின், பூணார் மலர்த்தாண் முடிக்கணிந்து புகழப் பெறுநா ளெந்நாளோ. | 7 |
2552 | என்னா யகனை விண்ணவருக் கிறையா யவனை மறைநான்கு, முன்னா நிற்கும் வடிவானை மூவா தானை மூத்தானைப், பொன்னார் மேனிப் புய்லும்விரைப் பூந்தா மரைவே தனுநாடிப், பன்னாடிரிந்துங் காணானைப் பழைசை நகரிற் கண்டேனே. | 8 |
2553 | கண்டேன் பழைசைப் பதியானைக் கைகான் முடங்குமறிவிலிவாய்த், தண்டே னெடுங்கோட் டிருந்தொழுகுந் தன்மையெனக்கண் டுளங்களிப்புக், கொண்டேன் சிரமே லிருகரமுங் குவித்தேன் குளித்தேன் முகமலர்ந்தேன், விண்டேன் பண்டை வினைக்கடலை வேண்டேன் மற்றைத் தேவரையே. | 9 |
2554 | வரைமா திருக்கு மொருகூறு மழுமா னணிந்த திருக்கரமு, மரைசேர் வேங்கை யதளுடையு மரவா பரணத் தகன்மார்பும், விரைசேர் கொன்றை முடியுமரை மேவுமடியும் வெளித்தோற்றி, நரைசேர் விடையான் றிருப்பழைசை நகரி லருளப் பெற்றேனே. | 10 |
2555 | வேறு. பெற்ற மேறிய பிரானையெம் மிறைவனைப் பெய்வளைகூறானைச், சுற்று நாககங் கணத்தனைப் பழைசைவாழ் சுந்தரப் பெருமானை, யற்ற மின்மதி முடியனைப் பொடியணி யையனைக் கரங்கூப்பிப், பற்றெ லாமறப் பற்றுவா ரெவரவர் பவக்கடல் கடந்தாரே. | 11 |
2556 | கடத்த யானையின் சருமமே யங்கக பாயெனக் கொண்டானைப், படத்த ராவணி புயத்தனை நயத்திருப் பழைசையம் பதியானை, நடத்த பாதனை வாழ்த்தியன் பொடுதின நாடுவா ரெவரேனும், வடத்தின் மேற்றுயின் மாலயன் முதற்சுரர் வாழ்த்தவீற் றிருப்பாரே. | 12 |
2557 | இருப்பை நேரும்வன் னெஞ்சனாய் மானமி லீனனாயெழிலாரும், மருப்பை நேர்முலை மாதர்பா லாதரம் வைத்துழன் றலைவேனைக், கருப்பை நீங்கித்தன் றாள்களிற் செந்தமிழ்க் கண்ணிசூட்டிடச்செய்தான், பொருப்பை வாங்கிய புராதனன் பழைசைவாழ்புண்ணியப் பெருமானே. | 13 |
2558 | பெருகு மையலம் பறவைவீழ்ந் தறிவெனும் பெருங்கலந் தகர்ந்தோடத் திருகு வெஞ்சினத் தீவினைச் சுறவுவாய் திறந்துணச் செயலின்றிக், கருகு நாயினே னுருகியுன் சிவானந்தக் கனிதருசெந்தேறல், பருகு மாறளித் ததுதிருப் பழைசைவாழ் பரம்பரன் விளையாட்டே. | 14 |
2559 | ஆட்ட மன்றிடைச் செய்பவன் பழைசைவா ழந்தணனந்தாத, நாட்ட மூன்றுடைப் புண்ணிய னாலய நண்ணியஞ் சலிப்பாரே, வாட்ட மின்றியிப் புவனபோ கந்துய்த்து வானிடைப் புகுந்தாங்கு, வேட்ட போகமுந் துய்த்துப்பின் சிவபுர மேவிநன் குறைவாரே. | 15 |
2560 | வாரு லாமுலை மாதர்பா லாதரம் வைத்துழன் றலைவீர்காள், தேரு லாமணி மறுகும்பொன் னெயிலுஞ்சூழ் திருப்பழைசையிற்சென்றே, காரு லாமணி கண்டனைக் கண்டுகண் களிப்புறத்தொழுதன்னா, னேரு லாம்புகழ் பாடுவீ ராடுவீ ரெழுபிறப் பறுமாறே. | 16 |
2561 | மாறு கொண்டெனை வஞ்சித்து நின்றனை மதியிலா மடநெஞ்சே, தாறு கொண்டபைங் கமுகடர் பழைசையிற் சார்ந்துசந்தனக்கொங்கை, கூறு கொண்டதம் பிரான்டி கண்டுகை குவித்துக்கண் ணீர்வார, நீறுகொண்டணிந் துருகிலை யெங்ஙன நிறையருள் பெறுவாயே. | 17 |
2562 | வாயி னாலுனை வாழ்த்தவுஞ் சென்னியால் வணங்கவு மடங்காச்செந், தீயில் வீழ்மெழு கொத்துள முருகவுஞ் செய்தவமுனமில்லேன், பேயி னேனிய தருளுறேன் பழைசைவாழ் பிறைமுடிப் பெம்மானிற், றோயு மாறினி நின்னடிக் காம்பவந் தோன்றிடவருள்வாயே. | 18 |
2563 | அரிதுமானிட யோனியிற் சனித்திட லதனினு மரிதாகு, முரிய வாகிய வுறுப்புக்கள் குறைபடா துதித்துநான் மறையாதி, விரியு நூலறிந் தநித்திய நித்திய விவேகமுற் றிருபற்றும், பரிய மால் பணி பட்டிலிங் கேசர்தாள் பற்றிநின் றிடறானே. | 19 |
2564 | தான வாறிழி தரவரு வாரணச் சருமமே னியிற்போர்த்த, ஞான வாரியே யன்பருக் கமுதமே நற்பழை சையின்வாழ்வே, கானலார்குழ லம்மையோர் பங்குடைக் கடவு ளெல் லாம்வல்ல, ஞானமூர்த்திநீ யென்னையு மடிமைகொண் டாளுத லரிதாமோ. | 20 |
2565 | வேறு. அருவரை யேய்க்குங் குஞ்சரவுரித்தா ரமுதொழு கியமதி முடித்து, மருவிய வரிண மழுவணி கைத்து மாண்டசெஞ் சூட்டகிப் பூட்டு, கருநிற வேனங் காணருந் தாட்டுக் கனலவிர் மத்தகக்கட்டு, தருவடர்பழைசை யென்னவென் னுளத்துஞ் சார்ந்தினி திருந்தபே ரொளியே. | 21 |
2566 | ஒளிபெறு நீலப் பொருப்பென நடக்கு மொழுகுமுக் கடத்தகுஞ் சரத்தை, அளிபெறு முளரி நாளநூல் கைக்கொண்டசைத்திட வொருமுடச் சிறுவன், தெளிவுற நினைத்த தேய்க்குமாலடியேன் சிற்றறிவா னின்றன் பெருஞ்சீர், களியுறப் பாடி நின்மலரடிகள் கைக்கொளல் பழசையம் பரனே. | 22 |
2567 | அம்பரம் புலித்தோ லணிகல மரவ மாமையோட் டொடுமுழு வெலும்பு, வெம்புசெந் தழல்வெய் யவன்மதி நாட்டம் விரும்புமூண் வெய்யவெங் காளம், பம்புவெம் பேய்கள் படையெனி னருளார் பட்டிலிங் கேசனைப் பழிச்சு, மும்பர்தம் பிரானை மண்ணுல கடியா ருற்றுநின் றேத்தலெவ் வாறே. | 23 |
2568 | எவ்வமாம் பிறவித் தொடுகட லிடைவீழ்ந் திந்திரி யச்சுற வரித்துக், கவ்வநீள் வினையின் சுழலகப் பட்டுக் கதறுவேற் கின்னருள் புரிந்தான், மவ்வலங் கோதை தன்னையோர் பாகம் வைத்தவன் பட்டிலிங் கேசன், தெவ்வர்த மரண மூன்றும் வெந்தொழியச் சிரித்தவன் றேவர்தம் பிரானே. | 24 |
2569 | தேவர்தம் பிரானே பட்டிலிங் கேசா செப்பரு மொப்பினின் குணங்கள், தாவரு மறைக ளுரைப்பது கேட்டுச் சரணடைந்தேனலேன் றோலுந், தீவரு விடமு மரவும்வெள் ளென்புஞ் செறிமுடைத் தலைகளு நமக்கே, யாவவென் றுடுத்துப் பூண்டு கொண்டிருக்கு மதிசயங் கண்டடைந் தேனே. | 25 |
2570 | ஏனமு மனமு மாயவர் வாய்வாழ்த் திடுமொலி யெழுகட லடைக்கும், வானவர் கணங்கள் வச்சிரத் தடக்கை வள்ளல் வாழ்த் தொலிமுகின் மாற்று, மானமா முனிவர் மறைமுழக் கொலியெண் மாச்செவி களைச்செவி டாக்கும், ஞானநா யகனைப் பழசையிலடியே னாவழுத் தொலியெங்குப் புகுமே. | 26 |
2571 | எங்குநின் னடியார் நின்னிடம் பெற்ற தெடுத்துரை யாடிவீற் றிருப்பார், செங்கரங் குவிப்பார் கண்கணீர் சொரிவார் சிந்திப்பா ரவையெலா முணரேன், பொங்கொளி மலையைக் குழைத்தது கேட்டுப் புகுந்தன னென்மன மலையுங், கொங்குலா மிதழிப் பட்டிலிங்கேசா குழைத்தெடுத் தாளுவை யெனவே. | 27 |
2572 | எனக்குநீ யருளு நல்வர மொன்றஃ தியாதெனி னெப்பிறப் புறினுங், கனக்குழன் மடவார் மயக்கிடை விழினுங் கற்பகா டவிநிழ லிருந்து, மனக்கினி தாம்பல் போகமுந் துய்த்து வாழினும் வரையிடை யுதித்த, வனக்கொடி பாகா பட்டிலிங் கேசா மலர்புரை நின்னடிக் கன்பே. | 28 |
2573 | அடிநினைந் துருகித் தொடுமணற் கேணி யதனினுங் கண்களூற் றெடுக்கப், படிமிசைப் புரண்டு பதைபதைத் தலறேன் பாடிடே னாடிடேன் பணியேன், முடிவது மறியேன் மூர்க்கனே னெனையு முன்னிநீ யருள்புரி வாயோ, பொடியணி மேனிப் புண்ணியா பழசைப் புராதனா பூரணப் பொருளே. | 29 |
2574 | பொருளலா வதனைப் பொருளென மதித்துப் பொறிவழிப் புலன்செலப் போக்கி, மருளிலா மடவார் மயக்கிடை முயங்கிமாண்டதோர் செய்கையு மின்றித், தெருளிலா தடியேன் றியங்குவதழகோ திருப்பழ சையில்விருப் புடையாய், இருளுலா மிடற்றா யமரர்நா யகநின் னிணையடிக் கறாதவன் பருளே. | 30 |
2575 | வேறு.
அன்புகுடி கொண்டுபழுத் தமைந்தமனத் துன்னடியார் பின்புசிவ மணங்கமழப் பித்தேறித் திரிகில்லே னென்புதசை பொதிகுடிலை யினிவேண்டே னிரங்காயோ தென்புனைபாட் டளிச்சோலைத் தேனுபுரி மேயவனே. | 31 |
2576 | மேயகொடும் பாசமொடு வெம்போத்தை நடத்திவருங் காய்சினக்கூற் றென்செயுந்தீக் கடும்பிணிகோ ளென்செயுமால் வேயனமென் றிரடோளி மேவுமொரு கூறுடையான் தீயகொடி யேனுளமுந் தேனுபுரி யாக்கொளினே. | 32 |
2577 | கொள்ளையின வண்டிழிந்து கொழுதிமூக் குழவுடைந்து கள்ளொழுகு நறுங்கொன்றைக் கண்ணிமுடி மிலைந்தபிரான் தெள்ளுபுனற் பெருவேலி திகழ்பட்டீச் சரமுமென துள்ளமுநான் மறைமுடியு முறையிடமாக் கொண்டானே. | 33 |
2578 | ஆனமருங் கொடிவலத்தா னழகமருங் கொடியிடத்தான் கூனமரு மதிமுடித்த கோதிலாக் குணக்கொண்ட றானமருந் தடஞ்சோலை தழைபழசைப் பதியன்றோ வானமரர் தாம்வாழ்வான் வலஞ்செயவந் தடைவதுவே. | 34 |
2579 | அடையலார் புரம்பொடித்த வண்ணலார் நறுங்கொன்றைத் தொடையலா ரென்னுளம்போற் றோன்றவினி துறையுமிட மடையெலாந் தவழ்சங்க மணியீன்ற வயற்சாலிப் புடையெலா மணங்குலவப் பொலிபட்டீச் சரந்தானே. | 35 |
2580 | பட்டாரு மிடைமடவாள் பாகாதென் பழசையாய் மட்டாருஞ் சடைமுடியாய் வானவர்தம் பெருமானே கட்டார்நின் றிருவடிக்கே கசிந்தணியேன் கரங்குவியேன் ஒட்டாம லுழல்வேனோ வுடையாய்நின் னடியேனே. | 36 |
2581 | அடிமுடிபன் னாடேடி யலைந்ததுவு மறிந்திலார் முடிவின்மடி வதுங்கருதார் முழுவெலும்பு தலைமாலை பொடியணிமே னியினோக்கார் புகழ்ப் பழசைப் பரனொடுவெள் கொடியவர்மா லயனையுடன் குறித்தெண்ணி யெய்ப்பாரே. | 37 |
2582 | எய்த்தேத முறுவேனை யிறப்பினொடு பிறப்பேற்று பொய்த்தேவர் புன்சமையம் புகுத்தாது புரந்தளித்தான் மெய்த்தேவ னுமைபாகன் விரிசெழுந்தா மரைமலருஞ் செய்த்தேறன் மடையுடைக்குந் திருப்பழசைப் பதியானே. | 38 |
2583 | ஆனையுரி போர்த்தபிரா னருட்பழசை நகர்வாணன் தேனொழுகு மலர்வாயாற் றீவிடமன் றருந்தானே லூனொழுகு நேமிதரித் தோங்குமா லயன்முதலாம் வானவர்மங் கையர்கழுத்தின் மங்கலநா ணிற்குமே. | 39 |
2584 | இருக்காதி மறைமுடிமே லிலங்குதிரு வடிப்பெருமான் மருக்காலுந் தடஞ்சோலை மந்திமதி மேற்பாயப் பெருக்காறு பொன்கொழிக்கும் பெரும்பட்டீச் சரமெனவுட் டிருக்காதி யரிறபவென் சிந்தைகுடி கொண்டானே. | 40 |
2585 | வேறு. கொண்டலி னிருண்ட கண்டன் கோமள வல்லி பாகன் தண்டலை வேலி சூழுந் தடமதிட் பழசை வாணன் புண்டரீ கத்தாள் போற்றிப் பூசித்த பெரும்பே றன்றோ வண்டுளர் தண்டுழா யோன் மலரவன் குதுகலிப்பே. | 41 |
2586 | கலம்பயில் கடனஞ் சுண்ட கண்டனே பழசை வாணா நலம்புனை குடங்கை நீரு நறியபச் சிலையு மிட்டோர்க் கலம்புபாற் கடலு மென்பூ வணையுநாற் கோட்டு மாவு மிலங்கிட வளிப்பாய் நீசென் றேற்றதென் னியம்புவாயே. | 42 |
2587 | இயம்புபல் லண்ட மெல்லா மிமைப்பொழு தழித்து மாற்றி வயங்கெழ மட்டித் தாடும் வல்லவன் பழசை வாணன் சயம்பெறு வான்கூட் டுண்ணுந் தரியல ராண மூன்றுந் தயங்கற வழித்தா னென்று சாற்றுதல் சீர்த்தியாமே. | 43 |
2588 | சீரமர் கஞ்சத் தண்ணல் சிரங்கர நகத்தாற் கொய்தாய் தாரம ரடிந கத்தாற் சலந்தர னுடலங் கீண்டாய் போரமர் வேளைப் பார்த்தும் புரத்தினை நகைத்துந் தீத்தாய் வாரமர் பழசை யாய்கைம் மழுச்சூலஞ் சுமந்த தென்னே. | 44 |
2589 | என்னிது விடையு நீவிற் றிருந்தருள் பொருப்பும் வெள்ளி மன்னிய கலையும் வில்லு மாதங்க மதிண்மூன் றெய்யப் பொன்னிற வாளிகொண்ட புராதனா பழசை வாணா சென்னியி லிரந்துண் பாய்நன் செய்கைநின் செய்கை தானே. | 45 |
2590 | செய்தவ முடையீர் நுங்கள் செறிபிறப் பகலக்காண்மின் கையில்வெண் டலையொன் றேந்திக் கடியபாம் பரைக்கசைத்துப் பொய்யினூற் சரட்டாற் பொல்லம் பொத்துகோ வணமுஞ்சாத்தி யையனற் பழசை வாண னாடுவா னெங்கும் போந்தே. | 46 |
2591 | எங்கணு நிறைந்து நின்றோ னெழினகர்ப் பழசை வாணன் றிங்களங் கண்ணி வேய்ந்த சிவபரஞ் சோதி பாத பங்கயம் புணையாப் பற்றிப் பவக்கடல் கடக்க வல்லா ரிங்கெவ ரேனு மன்னா ரிணையடிக் கடிய னியானே. | 47 |
2592 | யானுனக் குரைப்ப தொன்றுண் டறிவினெஞ் சினிது கேட்டி வேனெடுங் கண்ணி னார்கள் விருப்பறுத் துய்ய வேண்டி னூனுடற் குயிரே யாயவ் வுயிர்க்குமோ ருயிராய் நின்ற பானலங் குழலி பாகன் பழசையை வணங்கு வாயே. | 48 |
2593 | வணங்குநுண் ணிடையாள் பாகன் மானிட மேந்தும் வள்ளல் குணங்கினந் துணங்கை கொண்டு குதித்திடக் குனிக்கு மையன் பணங்கெழு மரவப் பூணன் பட்டிலிங் கேசன் யான்றன் மணங்கமழ் மலர்த்தாள் பாடி வழிபட வருளி னானே. | 49 |
2594 | அருட்பெருங் கடலைத் தேவ ரணிமணி முடியை யின்பத் திருக்கிளர் தவத்தோர் நெஞ்சுட் டித்திக்கு மமுதை யென்னை யுருக்குமொள் ளொளியை மாட முயர்பழ சையிற்கண் டோர்கள் கருக்குழி வீழார் காலன் கண்ணுற வும்ப டாரே. | 50 |
2595 | வேறு. படவர வணிகலம் பலிக்க லந்தலை யுடல்பொதி சாந்தநீ றுறையு மூர்வனம் விடமுண வுடையதண் மேவக் கண்டும்வா னடர்சுரர் பழசையாற் கடிமை யாவரே. | 51 |
2596 | ஆவலித் தழுதுதீ யடுத்த வெண்ணெயை யோவருங் கல்லென வுருகித் தேம்பியே பாவலர் குழாம்புகழ் பழசை வாணனுக் கேவர்தா மிரங்கிடா திருந்த பேர்களே. | 52 |
2597 | பேரருண் மேனியன் பிறைமு டித்தவன் தாரணி கொன்றையன் சரும வாடையன் பார்புகழ் பழசையன் பதக னேனையு மோரடி யானென வுயக்கொண் டானின்றே. | 53 |
2598 | இன்றமிழ் மாலைபொன் னிணைய டிக்கியான் பொன்றிகழ் கொன்றையிற் புனைந்து சூட்டிடேன் பன்றிகண் டறிவரு பழசை வாணன்றா ளொன்றிவெம் பவமறுத் துய்யு மாறெனே. | 54 |
2599 | என்னினி யான்பெறு மிலாப மாவது பன்னரும் புகழுடைப் பழசை நாயகன் பொன்னடி மலர்தலை பூணப் பெற்றது மன்னிய சீர்த்திவாய் வாழ்த்தப் பெற்றதே. | 55 |
2600 | பெறற்கரும் பேறெலாம் பெறவ ளித்தருள் சிறக்குநன் பழசையிற் செழிக்கு மையனை யறக்கொடி பாகனை யமரர் நாதனை மறக்கொடும் பதகரே மறக்கு நெஞ்சரே. | 56 |
2601 | நெஞ்சிடைக் கவலையு நீங்கிற் றேதஞ்செய் வெஞ்சினக் கூற்றமும் விலகிற் றெம்பிரான் பஞ்சடி கூறுடைப் பழசைநாயகன் செஞ்சடைப் பிரானடி சேர்ந்த பின்னரே. | 57 |
2602 | பின்னிய குழன்முடிப் பேதை பாகனார் பன்னிய மறையொலிப் பழசை வாணனார் பொன்னடி துதித்தபின் பொய்யனேன் மற்றோ ரன்னைதன் வயிற்றுதித் தலற லற்றதே. | 58 |
2603 | அற்றமின் மதிக்கலை யணிந்த வேணியன் நற்றமிழ்ப் பழசைவாழ் நாய கன்வசை சற்றுமில் லவனடி தாழ்ந்த வென்றலை மற்றொரு தேவர்க்கும் வணக்கஞ் செய்யுமே. | 59 |
2604 | செய்யுறு பழசையிற் சிறக்கு நாயகன் மெய்யறி வானந்தம் விளங்கு மூர்த்தியா மையனை யன்றிமற் றவரை நாயினேன் கையுமஞ் சலிக்குமே கண்ணு நோக்குமே. | 60 |
2605 | வேறு. நோக்க மூன்றுடை நோன்மைய னான்மறை யாக்கும் வாய னருளும் பழசையான் தேக்குந் தேனினுந் தித்திக்குஞ் சீர்புகழ் வாக்கு வந்திட மாய்ந்ததென் றுன்பமே. | 61 |
2606 | துன்ப மேயடர் சோற்றுத் துருத்தியாம் புன்பு லாற்புழுக் கூடு பொறுக்கிலே னின்ப மேவு மெழிற்பழ சைப்பதிக் கன்ப னேயெனை யாட்கொண் டருள்வையே. | 62 |
2607 | வையு லாமயின் மானு நெடுங்கணார் மையல் வாரியின் மாழ்கி யழுந்துவேன் பைய ராவணி பட்டிலிங் கேசவென் னைய வுய்ய வளித்தருள் செய்வையே. | 63 |
2608 | செய்யி ருக்குந் திருப்பழ சைச்சிவா நெய்யி ருக்கு நெறிக்குழல் பாகனே பொய்யி ருக்கும் புலைத்தொழி லேற்கருண் மெய்யி ருக்குமுன் னன்பருண் மேவவே. | 64 |
2609 | மேவி ராமன் வணங்கும் விமலனார் தேவ தேவர் சிறக்கும் பழசையார் தாவின் மெல்லடித் தாமரை வாழுமே தீவி னைச்சிறி யேனுட் சிலையினே. | 65 |
2610 | சில்ல ரிச்சிலம் பாரடிச் சேயிழை புல்லும் பாகன் புரக்கும் பழசையான் எல்லை யில்வினை யாவு மடியனேற் கொல்லை நீக்கின னோரில் வியப்பிதே. | 66 |
2611 | இதையந் தீமெழு கென்ன வுருகுவார் புதைகொள் கண்ணியர்க் குப்பொற் பழசையிற் சிதைவி லான்றனைத் தேர்கிலர் காலனா ருதைய மெய்தினெங் கோடி யொளிப்பரே. | 67 |
2612 | ஓடு வீருழல் வீரைம் பொறிக்கிரை தேடு வீர்கிடை யாமற் றிகைத்துப்பின் வாடு வீரிங்கு வம்மின் பழசையைக் கூடு வீரெங்கள் கூத்தனை வாழ்த்தவே. | 68 |
2613 | கூத்த யர்ந்து குழைந்து கசிந்துநின் றேத்தும் பட்டிலிங் கேசனை நேசனைத் தோத்தி ரஞ்செய்ம்மின் றொல்லை வினையறக் காத்த ளிப்பன் கருணை வடிவனே. | 69 |
2614 | வடியுண் கண்ணியோர் கூறன் மழுவலான் பொடிகொண் மேனியன் பூம்பழ சைப்பிரா னெடிய பாத நினைப்பவர் யாங்கணு முடிவி லின்பத்து மூழ்கி யிருப்பரே. | 70 |
2615 | வேறு. இருவி னைக்கிட மாயவிப் புழுக்குடி லினிதென் றொருவி டாதெடுத் துழலவே னியமனா ருடன்று துருவி நாளையென் முன்வரி லென்செய்வேன் சுருதி மருவி யேத்துநற் பழசையம் பதியுறை மணியே. | 71 |
2616 | மணியை மாதவர் முத்தியைப் பழசைநன் மருந்தைப் பணியை நேரல்குன் மாதரார் மையலிற் படுவார் பிணியை மெய்யடி யார்நிதிச் சேமத்தைப் பெட்பி னணியை யாசையை மாற்றியா னடைவதெந் நாளே. | 72 |
2617 | நாளெ லாம்வறி தாய்ச்செல வஞ்சரை நட்டு வாளெ லாமணி கண்ணியர்க் குருகிமா ழாந்தேன் றோளெ லாமர வணிந்தவா பழசைவாழ் தூயா ஆளெ லாம்வல்ல வுனக்கெனைப் புரப்பது மரிதே. | 73 |
2618 | அரிமு ரட்கருங் கேழலா கியுமுல களித்தோன் வரிசி றைப்பெரு வாரன மாய்முன மேவித் தெரிவ தற்கரி தாகிய பழசையான் றிருத்தாள் பரிவு பெற்றவோர் பற்றிலார்க் கெளிதகப் படுமே. | 74 |
2619 | படரு மண்புன லனல்வளி விண்ணெனப் பட்டங் கடரு மவ்வைந்தி னோடிய மானனிந் தருக்கன் றொடரு மெட்டுரு வாகிய பழசையான் றோற்று மிடரும் வீணுமென் றனக்கிலை யாக்குவ னினியே. | 75 |
2620 | இனிய வாசக மிதுபறி தலையிக லருகர் முனித ரும்புத்தர் சூனிய வாதியர் முதலீர் புனித மாமறைப் பழசைவாழ் பூரண னவனே நனிசெய் முத்தொழிற் றலைவன்யா வருக்கு நாயகனே. | 76 |
2621 | நாயி னேனுக்கு மின்னருள் சுரந்தவ னலஞ்சேர் தூய மாதவர் சூழ்பழசைப்பதித் தோன்றல் பாயும் வெண்கதி ரொண்மணிப் பந்தரொண் காழி மேய பிள்ளையார்க் கருளினா னென்பதும் வியப்பே. | 77 |
2622 | ஏத மாறுந்தென் கூடலிற் பழசைவா ழிறைவா ஓது நாவொரு பாணற்கா விறகெடுத் துழன்றாய் வாத வூரெம தடிகட்கா மண்சுமந் துடலிற் போத வோரடி பொறுத்தது போதுமோ வுனக்கே. | 78 |
2623 | உன்னு வோர்க்கருள் சுரக்குநற் பழசையுத் தமனே பன்னு மப்பர்தம் வயிற்றிடை நஞ்சினைப் பதித்தாய் மன்னு காழியர்க் கமுதுவைத் தாயிது வஞ்ச மன்ன தாலன்றோ நினக்குமூ ணஞ்சமா கியதே. | 79 |
2624 | ஆக மாதுற வருளிய பழசையம் மானே யேகி நாவலூ ரார்மணந் தவிர்த்ததென் னினிநீ போக தூதென வவர்சொலு முனம்புரி குழல்பால் வேக மாகவே நடந்ததென் னிதுவிளம் புவையே. | 80 |
2625 | வேறு. விளம்புவதொன் றுளதுனக்கு மடநெஞ்சே கேட்டியருள் வேட்டுநின்று, வளம்புகுநன் மணச்சோலை வளர்பழசைப் பெருமானை வானோ ருய்யத், தளம்புதிரைக் கடனஞ்ச முண்டவனைக் கண்டுகரந் தலைமேற் கூப்பிக், களம்புனையா தாடிடுவை பாடிடுவை யவன்றிருத்தாள் காணுமாறே. | 81 |
2626 | காணியிது வெனமண்ணைக் கருதியரைக் காணியருள் வேறுங் காணா, தூணியைபொன் மனைமாத ரெனவுழல்வீ ருய்யுமா றுரைப்பக் கேண்மின், சேணியைகற் பகந்தாழுஞ் செழுஞ்சோலைத் திருப்பழசைத் தேவதேவன், வேணியிலொண் புனறரித்தான் றாள டைமி னுங்கள்வினை வீயத் தானே. | 82 |
2627 | வீயாத பெருவாழ்விங் கடிமைநா யேற்கிதனின் மேலுமுண்டோ, வேயார்மென் றடந்தோளி யொருபாகன் றிருப்பழசைமேவு மையன், தீயார்தம் புன்சமையத் தீநெறியிற் செலுத்தாது தேவர் வாய்வாழ்த், தோயாத தன்னடிக்கே யெனைப்புகுவித் தாண்டதையிங் குணருங் காலே. | 83 |
2628 | காலனார் விழச்சினந்த கழற்காலா பழசைநகர்க் கடவுள் கேட்டீ, கோலவா ளரக்கன்முடி நெரித்துமண்டோ தரிக்கின்பங்கொடுத்தாய் நட்புச், சாலவியற் பகைபாற்சென் றென்னேற்றாய் பொன்னனையா டனக்கென் செய்தா, யேலவிவை கண்டலவோ வம் மையுடற் பாதிகொண்டா ளென்செய் வாளே. | 84 |
2629 | செய்யேந்துந் திருப்பழசை யெம்பிரா னுடையின்றிச் சென்னியோடு, கையேந்தி யரவசைத்துச் சண்ணித்த நீறுகவின் புதைப்பக்காள, மையேந்து மிடற்றொடுசென் றிடுபலியேற் றான் கண்ட மாயோன் மாழ்கிப், பையேந்து மரவல்கு லாவானேற் பெண் கள்மயல் பட்டிடாரே. | 85 |
2630 | பட்டாரு மிடையாளைப் பாகத்து வையாயேற் பழசை வாணா, கட்டாருங் குழலார்நீ பலியேற்ற ஞான்று மனங் கலங்கிச் சோர்ந்தார், முட்டாத மால்கொண்டா னெடுமாலா தலினழகு முழுதுங் கண்ணுற், றெட்டாமன் மலர்மாதர் முதலரம்பை மாதரெல்லா மிகல்செய் வாரே. | 86 |
2631 | செய்யிருக்குங் கழைகுழைக்கு மைங்கணைக்கா ளையை விழியாற் சினந்து சுட்டீ, ரையிருக்குஞ் சடைதரித்தீர் விற்கருஞ்செங் கற்றோய்த்த வாடை கொண்டீர், மையிருக்கு மணிமிடற்றீர் துறவி யர்சூழ் பழசைநகர் வாழ்வீர் நீவிர், பொய்யிருக்கு மருங்குலாண் முலைச்சுவடு கொண்டதென்னை புகலு வீரே. | 87 |
2632 | வீரமழு வலந்தரித்த பழசைநகர்ப் பெருமானே வெய்யோர் மேவு, மாரலொரு மூன்றுமெரித் தம்மூவர் நிரயம் வீழ்ந் தாழா தாண்டாய், சோருமறி வுடைநாயே னின்றிருத்தா ளன்றியொரு துணையுங் காணேன், சீரருடந் தாண்டிடினுய்ந் திடுவேன் கை விடில்வாடித் தியங்கு வேனே. | 88 |
2633 | வேனில்வேள் கணைகிழிக்கப் பொறிவழிச்சென் மனமலைப்ப வெம்பி வாடிப், பானலார் கண்ணியர்வாய்ப் பட்டுழலு வேற் குமருள் பாலிப் பாயோ, கானவார் பசுங்கதலி கமுகுநிறை படப்பையிற் போய்க் கழுநீர் பாயுந், தேனவாம் பொழிற்பழசைச் சிவபுரத் தில் வீற்றிருக்குஞ் செம்பொற் குன்றே. | 89 |
2634 | குன்றனைய முலைமடவாள் கூறானை நீறானைக் கொன்றை வேய்ந்த, பொன்றிகழ்செஞ் சடையானை விடையானைக் கருமிடற்றுப் புனிதன் றன்னை, வன்றறுகட் கூற்றொடுங்கச் சினந்தானை மானேந்து மலர்க்கை யானை, கன்றுகுணி லாக்கொண்டோன் காணானைப் பழசைநகர்க் கண்டே னியானே. | 90 |
2635 | வேறு. கண்ட பேர்க்குடன் காணு மற்புதம் பண்ட மாடமார் பழசை வாணனார் வண்டு லாங்குழல் வல்லி பாகனார் தொண்ட னேற்கருள் சுரந்த வாற்றையே. | 91 |
2636 | ஆற்ற வஞ்சினே னளவி னாளெலாம் போற்றி வைத்தவிப் புழுக்கு டம்பையைக் கூற்ற நாடுமுன் கூவிக் கொள்ளுவாய் பாற்ற டங்கள்சூழ் பழசை வள்ளலே. | 92 |
2637 | வள்ள லேயினி மற்றொர் பற்றிலேன் றள்ளு வாயெனிற் றளர்வ தன்றிப்பின் கொள்ளு வாரிலை கூவிக் கொள்ளுவாய் பள்ள வாவிசேர் பழசை யப்பனே. | 93 |
2638 | அப்பு லாஞ்சடைப் பழசை யையனே துப்பு லாமிதழ்த் தோகை பாகனே கப்பு லாவுடல் கழிய நின்னருள் வெப்பு லாமனத் தேற்கு வேண்டுமே. | 94 |
2639 | வேண்டு நந்திநீ விலகெ னச்சொனாய் பூண்ட வன்புடைப் புகலி வள்ளற்கா மூண்ட வென்வினை விலக முன்னினு மீண்டுய் வேனருள் பழசை யெந்தையே. | 95 |
2640 | எந்தை யெம்பிரா னெங்கு முள்ளவன் நந்த லில்சுக நல்க வேண்டினூல் வந்த நாவலீர் வம்மி னிங்ஙனம் பந்த நான்மறைப் பழசை பாடுமே. | 96 |
2641 | பாட வேண்டுநின் பழசை யம்பதி கூட வேண்டுநின் கூட்டத் தார்களைத் தேட வேண்டுநின் செம்பொற் சீரடி வீட வேண்டுமென் வினைகள் யாவுமே. | 97 |
2642 | வினையி லாதவன் விடையொன் றுள்ளவன் புனைந றுங்குழற் பூவை பங்குளான் றனைய டைந்தனன் பழசை யந்தலத் தினைவு தீர்ந்தன னின்ப மெய்தியே. | 98 |
2643 | எய்யு மாரனை யெரித்த வீரனார் பைய ராவணிப் பட்டி லிங்கர்தஞ் செய்ய தாண்மலர் சிரத் திருத்தியே யுய்ய வேண்டுவீ ரொருங்கு வம்மினே. | 99 |
2644 | வம்மி னெந்தைவாழ் பழசை வந்துநீர் கைம்ம லர்கொடு காலிற் சூட்டிநின் றெம்மை யாளென வெளிமை யின்மைவெம் பொய்ம்மை தீர்ப்பனம் பூவை பாகனே. | 100 |