தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments

Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > Ramalinga Atikal - Vallalar >  திருவருட்பா - முதல் திருமுறை (1 - 537) > இரண்டாம் திருமுறை (571 - 1006) > இரண்டாம் திருமுறை (1007 - 1543) > இரண்டாம் திருமுறை (1544 - 1958) > மூன்றாம் திருமுறை (1959 - 2570) > நான்காம் திருமுறை (2571- 3028) >  ஐந்தாம் திருமுறை (3029-3266) >ஆறாம் திருமுறை (3267 -3871) > ஆறாம் திருமுறை (3872 - 4614) > ஆறாம் திருமுறை - (4615 - 5063) > ஆறாம் திருமுறை - (5064 -5818) > திருவருட்பா - பல்வகைய தனிப்பாடல்கள் > திருவருட்பா அகவல் & திருவொற்றியூர் வடிவுடை மாணிக்க மாலை


thiruvarutpa of rAmalinga adikaL (aka vaLLaLAr)
thirumurai - I (1 - 537)

திருவருட்பா
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
முதல் திருமுறை (1 - 537)



Etext input: Mr. Sivakumar of Singapore
Our sincere thanks go to Mr. Sivakumar for allowing us to present the Unicode/UTF-8 version of thiruvarutpa verses as part of Project Madurai collections.

C - Project Madurai 1999
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.tamil.net/projectmadurai

You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.



முதல் திருமுறை

சென்னைக் கந்தகோட்டம்
பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

1.
திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள்
திறலோங்கு செல்வம்ஓங்கச்
செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்
திகழ்ந்தோங்க அருள்கொடுத்து
மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க
வளர்கருணை மயம்ஓங்கிஓர்
வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்த
வடிவாகி ஓங்கிஞான
உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில்
ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்
உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க
உய்கின்ற நாள்எந்தநாள்
தருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

2.
பரம்ஏது வினைசெயும் பயன்ஏது பதிஏது
பசுஏது பாசம்ஏது
பத்திஏ தடைகின்ற முத்தியே தருள்ஏது
பாவபுண் யங்கள்ஏது
வரம்ஏது தவம்ஏது விரதம்ஏ தொன்றும்இலை
மனம்விரும் புணவுண்டுநல்
வத்திரம் அணிந்துமட மாதர்தமை நாடிநறு
மலர்சூடி விளையாடிமேல்
கரமேவ விட்டுமுலை தொட்டுவாழ்ந் தவரொடு
கலந்துமகிழ் கின்றசுகமே
கண்கண்ட சுகம்இதே கைகண்ட பலன்எனும்
கயவரைக் கூடாதருள்
தரமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

3.
துடிஎன்னும் இடைஅனம் பிடிஎன்னும் நடைமுகில்
துணைஎனும் பிணையல்அளகம்
சூதென்னும் முலைசெழுந் தாதென்னும் அலைபுனல்
சுழிஎன்ன மொழிசெய்உந்தி
வடிஎன்னும் விழிநிறையும் மதிஎன்னும் வதனம்என
மங்கையர்தம் அங்கம்உற்றே
மனம்என்னும் ஒருபாவி மயல்என்னும் அதுமேவி
மாள்கநான் வாழ்கஇந்தப்
படிஎன்னும் ஆசையைக் கடிஎன்ன என்சொல்இப்
படிஎன்ன அறியாதுநின்
படிஎன்ன என்மொழிப் படிஇன்ன வித்தைநீ
படிஎன்னும் என்செய்குவேன்
தடிதுன்னும் மதில்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

4.
வள்ளல்உனை உள்ளபடி வாழ்த்துகின் றோர்தமை
மதித்திடுவ தன்றிமற்றை
வானவரை மதிஎன்னில் நான்அவரை ஒருகனவின்
மாட்டினும் மறந்தும்மதியேன்
கள்ளம்அறும் உள்ளம்உறும் நின்பதம்அ லால்வேறு
கடவுளர் பதத்தைஅவர்என்
கண்எதிர் அடுத்தைய நண்என அளிப்பினும்
கடுஎன வெறுத்துநிற்பேன்
எள்ளளவும் இம்மொழியி லேசுமொழி அன்றுண்மை
என்னை ஆண் டருள்புரிகுவாய்
என்தந்தை யேஎனது தாயேஎன் இன்பமே
என்றன்அறி வேஎன்அன்பே
தள்ளரிய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

5.
பதிபூசை முதலநற் கிரியையால் மனம்எனும்
பசுகரணம் ஈங்கசுத்த
பாவனை அறச்சுத்த பாவனையில் நிற்கும்மெய்ப்
பதியோக நிலைமைஅதனான்
மதிபாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே
மலைவில்மெய்ஞ் ஞானமயமாய்
வரவுபோக் கற்றநிலை கூடும்என எனதுளே
வந்துணர்வு தந்தகுருவே
துதிவாய்மை பெறுசாந்த பதம்மேவு மதியமே
துரிசறு சுயஞ்சோதியே
தோகைவா கனமீ திலங்கவரு தோன்றலே
சொல்லரிய நல்லதுணையே
ததிபெறும் சென்னையிலக கந்தகோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

6.
காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்
கனலோப முழுமுடனும்
கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட
கண்கெட்ட ஆங்காரியும்
ஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்
றியம்புபா தகனுமாம்இவ்
வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்
எனைப்பற்றி டாமல்அருள்வாய்
சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்
திறன்அருளி மலயமுனிவன்
சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ
தேசிக சிகாரத்னமே
தாமம்ஒளிர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகர் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

7.
நிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு
நிகழ்சாந்த மாம்புதல்வனும்
நெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும்மருள்
நீக்கும்அறி வாம்துணைவனும்
மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு
மனம்என்னும் நல்ஏவலும்
வருசகல கேவலம்இ லாதஇட மும்பெற்று
வாழ்கின்ற வாழ்வருளுவாய்
அலைஇலாச் சிவஞான வாரியே ஆனந்த
அமுதமே குமுதமலர்வாய்
அணிகொள்பொற் கொடிபசுங் கொடிஇரு புறம்படர்ந்
தழகுபெற வருபொன்மலையே
தலைவர்புகழ் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

8.
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமைவேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
பேசா திருக்க்வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
பிடியா திருக்கவேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்கவேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

9.
ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ
திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
இடுகின்ற திறமும்இறையாம்
நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள
நினைவிடா நெறியும்அயலார்
நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
நெகிழாத திடமும்உலகில்
சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத்
தீங்குசொல் லாததெளிவும்
திரம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
திருவடிக் காளாக்குவாய்
தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

10.
கரையில்வீண் கதைஎலாம் உதிர்கருங் காக்கைபோல்
கதறுவார் கள்ளுண்டதீக்
கந்தம்நா றிடஊத்தை காதம்நா றிடஉறு
கடும்பொய்இரு காதம்நாற
வரையில்வாய் கொடுதர்க்க வாதம்இடு வார்சிவ
மணங்கமழ் மலர்ப்பொன்வாய்க்கு
மவுனம்இடு வார்இவரை முடர்என ஓதுறு
வழக்குநல் வழக்கெனினும்நான்
உரையிலவர் தமையுறா துனதுபுகழ் பேசும்அவ
ரோடுறவு பெறஅருளுவாய்
உயர்தெய்வ யானையொடு குறவர்மட மானும்உள்
உவப்புறு குணக்குன்றமே
தரையில்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

11.
நாம்பிரமம் நமைஅன்றி ஆம்பிரமம் வேறில்லை
நன்மைதீ மைகளும் இல்லை
நவில்கின்ற வாகிஆந் தரம்இரண்டினும்ஒன்ற
நடுநின்ற தென்றுவீணாள்
போம்பிரம நீதிகேட் போர்பிரமை யாகவே
போதிப்பர் சாதிப்பர்தாம்
புன்மைநெறி கைவிடார் தம்பிரமம் வினைஒன்று
போந்திடில் போகவிடுவார்
சாம்பிரம மாம்இவர்கள் தாம்பிரமம் எனும்அறிவு
தாம்புபாம் பெனும்அறிவுகாண்
சத்துவ அகண்டபரிபூரண காரஉப
சாந்தசிவ சிற்பிரம நீ
தாம்பிரிவில் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

12.
பார்கொண்ட நடையில்வன் பசிகொண்டு வந்திரப்
பார்முகம் பார்த்திரங்கும்
பண்பும்நின் திருவடிக் கன்பும்நிறை ஆயுளும்
பதியும்நல் நிதியும்உணர்வும்
சீர்கொண்ட நிறையும்உட் பொறையும்மெய்ப் புகழும்நோய்த்
தீமைஒரு சற்றும்அணுகாத்
திறமும்மெய்த் திடமும்நல் இடமும்நின் அடியர்புகழ்
செப்புகின் றோர்அடைவர்காண்
கூர்கொண்ட நெட்டிலைக் கதிர்வேலும் மயிலும்ஒரு
இக்஑ழியங் கொடியும்விண்ணோர்
கோமான்தன் மகளும்ஒரு மாமான்தன் மகளும்மால்
கொண்டநின் கோலமறவேன்
தார்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

13.
வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ
வானைஒரு மான்தாவுமோ
வலியுள்ள புலியைஓர் எலிசீறு மோபெரிய
மலையைஓர் ஈச்சிறகினால்
துன்புற அசைக்குமோ வச்சிரத் துண்ஒரு
துரும்பினால் துண்டமாமோ
சூரியனை இருள்வந்து சூழுமோ காற்றில்மழை
தோயுமோ இல்லைஅதுபோல்
அன்புடைய நின்அடியர் பொன்அடியை உன்னும்அவர்
அடிமலர் முடிக்கணிந்தோர்க்
கவலமுறு மோகாமம் வெகுளிஉறு மோமனத்
தற்பமும்வி கற்பம்உறுமோ
தன்புகழ்செய் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

14.
காணலிடை நீரும்ஒரு கட்டையில் கள்வனும்
காண்உறு கயிற்றில் அறவும்
கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக்
கதித்தபித் தளையின்இடையும்
மானலில் கண்டுள மயங்கல்போல் கற்பனையை
மாயையில் கண்டுவிணே
மனைஎன்றும் மகவென்றும் உறவென்றும் நிதிஎன்றும்
வாள்வென்றும் மானம்என்றும்
ஊனலின் உடம்பென்றும் உயிரென்றும் உளம்என்றும்
உள்என்றும் வெளிஎன்றும்வான்
உலகென்றும் அளவுறுவி காரம்உற நின்றஎனை
உண்மைஅறி வித்தகுருவே
தானமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

15.
கற்றொளிகொள் உணர்வினோர் வேண்டாத இப்பெருங்
கன்மவுட லில்பருவம்நேர்
கண்டழியும் இளமைதான் பகல்வேட மோபுரைக்
கடல்நீர்கொ லோகபடமோ
உற்றொளியின் வெயில்இட்ட மஞ்சளோ வான்இட்ட
ஒருவிலோ நீர்க்குமிழியோ
உரைஅனல் பெறக்காற்றுள் ஊதும் துரத்தியோ
உன்றும்அறி யேன் இதனைநான்
பற்றுறுதி யாக்கொண்டு வனிதையர்கண் வலையினில்
பட்டுமதி கெட்டுழன்றே
பாவமே பயில்கின்ற தல்லாது நின்அடிப்
பற்றணுவும் உற்றறிகிலேன்
சற்றைஅகல் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

16.
சடமாகி இன்பம் தராதாகி மிகுபெருஞ்
சஞ்சலா காரமாகிச்
சற்றாகி வெளிமயல் பற்றாகி ஓடும்இத்
தன்மைபெறு செல்வமந்தோ
விடமாகி ஒருகபட நடமாகி யாற்றிடை
விரைந்துசெலும் வெள்ளம்ஆகி
வேலைஅலை யாகிஆங் காரவலை யாகிமுதிர்
வேனில்உறு மேகம்ஆகிக்
கடமாய சகடமுறு காலாகி நீடுவாய்க்
காலோடும் நீராகியே
கற்விலா மகளிர்போல் பொற்பிலா துழலும்இது
கருதாத வகைஅருளுவாய்
தடமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

17.
உப்புற்ற பாண்டம்என ஒன்பது துவாரத்துள்
உற்றசும் பொழுகும்உடலை
உயர்கின்ற வானிடை எறிந்தகல் என்றும்மலை
உற்றிழியும் அருவிஎன்றும்
வெப்புற்ற காற்றிடை விளக்கென்றும் மேகம்உறு
மின்என்றும் வீசுகாற்றின்
மேற்பட்ட பஞ்சென்றும் மஞ்சென்றும் வினைதந்த
வெறுமாய வேடம்என்றும்
கப்புற்ற பறவைக் குடம்பைஎன் றும்பொய்த்த
கனவென்றும் நீரில்எழுதும்
கைஎழுத் தென்றும்உட் கண்டுகொண் டதிலாசை
கைவிடேன் என்செய்குவேன்
தப்பற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

18.
எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்
ஏக்கற்றி ருக்கும்வெறுவாய்
எங்கள்பெரு மான்உனை வணங்காத மூடர்தலை
இகழ்விற கெடுக்கும்தலை
கந்தமிகு நின்மேனி காணாத கயவர்கண்
கலநீர் சொரிந்தஅழுகண்
கடவுள்நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி
கைத்திழவு கேட்கும்செவி
பந்தம்அற நினைஎணாப் பாவிகள் தம்நெஞ்சம்
பகீர்என நடுங்கும்நெஞ்சம்
பரமநின் திருமுன்னர் குவியாத வஞ்சர்கை
பலிஏற்க நீள்கொடுங்கை
சந்தமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

19.
ஐயநின் சீர்பேசு செல்வர்வாய் நல்லதெள்
அழுதுண் டுவந்ததிருவாய்
அப்பநின் திருவடி வணங்கினோர் தலைமுடி
அணிந்தோங்கி வாழுந்தலை
மெய்யநின் திருமேனி கண்டபுண் ணியர்கண்கள்
மிக்கஒளி மேவுகண்கள்
வேலநின் புகழ்கேட்ட வித்தகர் திருச்செவி
விழாச்சுபம் கேட்கும்செவி
துய்யநின் பதம்எண்ணும் மேலோர்கன் நெஞ்சம்மெய்ச்
சுகருப மானநெஞ்சம்
தோன்றல்உன் திருமுன் குவித்தபெரி யோர்கைகன்
சுவர்ன்னமிடு கின்றகைகள்
சையம்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

20.
உழல்உற்ற உழவுமுதல் உறுதொழில் இயற்றிமலம்
ஒத்தபல பொருள்ஈட்டிவீண்
உறுவயிறு நிறையவெண் சோறடைத் திவ்வுடலை
ஒதிபோல் வளர்த்துநாளும்
விழல்உற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐயஇவ்
வெய்யஉடல் பொய்என்கிலேன்
வெளிமயக் கோமாய விடமயக் கோஎனது
விதிமயக் கோஅறிகிலேன்
கழல்உற்ற நின்துணைக் கால்மலர் வணங்கிநின்
கருணையை விழைந்துகொண்டெம்
களைகணே ஈராறு கண்கொண்ட என்றன்இரு
கண்ணேஎ னப்புகழ்கிலேன்
தழைவுற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

21.
வானம்எங் கேஅமுத பானம்எங்கே அமரர்
வாழ்க்கைஅபி மானம்எங்கே
மாட்சிஎங் கேஅவர்கள் சூழ்ச்சிஎங் கேதேவ
மன்னன்அர சாட்சிஎங்கே
ஞானம்எங் கேமுனிவர் மோனம்எங் கேஅந்த
நான்முகன் செய்கைஎங்கே
நாரணன் காத்தலை நடத்தல்எங் கேமறை
நவின்றிடும் ஒழுக்கம்எங்கே
ஈனம்அங் கேசெய்த தாருகனை ஆயிர
இலக்கம்உறு சிங்கமுகனை
எண்அரிய திறல்பெற்ற சூரனை மறக்கருணை
ஈந்துபணி கொண்டிலைஎனில்
தானமிங் கேர்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

22.
மனமான ஒருசிறுவன் மதியான குருவையும்
மதித்திடான் நின் அடிச்சீர்
மகிழ்கல்வி கற்றிடான் சும்மாஇ ரான்காம
மடுவினிடை வீழ்ந்துசுழல்வான்
சிவமான வெஞ்சுரத் துழலுவன் உலோபமாம்
சிறுகுகையி னுட்புகுவான்
செறுமோக இருளிடைச் செல்குவான் மதம்எனும்
செய்குன்றில் ஏறிவிழுவான்
இனமான மாச்சரிய வெங்குழியின் உள்ளே
இறங்குவான் சிறிதும்அந்தோ
என்சொல்கே ளான்எனது கைப்படான் மற்றிதற்
கேழையேன் என்செய்குவேன்
தனநீடு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

23.
வாய்கொண் டுரைத்தல்அரி தென்செய்கேன் என்செய்கேன்
வள்ளல்உன் சேவடிக்கண்
மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை
பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு
பித்துண்ட வன்குரங்கோ
பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ
பேதைவிளை யாடுபந்தோ
காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங் கோபெருங்
காற்றினாற் சுழல்கறங்கோ
காலவடி வோஇந்திர ஜாலவடி வோஎனது
கர்மவடி வோஅறிகிலேன்
தாய்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

24.
கற்றமே லவரொடும் கூடிநில் லேன்கல்வி
கற்கும்நெறி தேர்ந்துகல்லேன்
கனிவுகொண் டுனதுதிரு அடியைஒரு கனவினும்
கருதிலேன் நல்லன்அல்லேன்
குற்றமே செய்வதென் குணமாகும் அப்பெருங்
குற்றம்எல் லாம்குணம்எனக்
கொள்ளுவது நின்அருட்குணமாகும் என்னில்என்
குறைதவிர்த் தருள்புரிகுவாய்
பெற்றமேல் வரும்ஒரு பெருந்தகையின் அருள்உருப்
பெற்றெழுந் தோங்குசுடரே
பிரணவா காராரின் மயவிமல சொருபமே
பேதமில் பரப்பிரமமே
தற்றகைய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

25.
பாய்ப்பட்ட புலிஅன்ன நாய்ப்பட்ட கயவர்தம்
பாழ்பட்ட மனையில்நெடுநாள்
பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன்னமுது
பட்டபா டாகும்அன்றிப்
போய்ப்பட்ட புல்லுமணி புப்பட்ட பாடும்நற்
புண்பட்ட பாடுதவிடும்
புன்பட்ட உமியும்உயர் பொன்பட்ட பாடவர்கள்
போகம்ஒரு போகமாமோ
ஆய்ப்பட்ட மறைமுடிச் சேய்ப்பட்ட நின்அடிக்
காட்பட்ட பெருவாழ்விலே
அருள்பட்ட நெறியும்மெய்ப் பொருள்பட்ட நிலையும்உற
அமர்போக மேபோகமாம்
தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

26.
சேவலம் கொடிகொண்ட நினைஅன்றி வேறுசிறு
தேவரைச் சிந்தைசெய்வோர்
செங்கனியை விட்டுவேப் பங்கனியை உண்ணும்ஒரு
சிறுகருங் காக்கைநிகர்வார்
நாவலங் காரம்அற வேறுபுகழ் பேசிநின்
நற்புகழ் வழுத்தாதபேர்
நாய்ப்பால் விரும்பிஆன் துய்ப்பாலை நயவாத
நவையுடைப் பேயர் ஆவார்
நீவலந் தரநினது குற்றேவல் புரியாது
நின்றுமற் றேவல்புரிவோர்
நெல்லுக் கிறைக்காது புல்லுக் கிறைக்கின்ற
நெடியவெறு வீணராவார்
தாவலம் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

27.
பிரமன்இனி என்னைப் பிறப்பிக்க வல்லனோ
பெய்சிறையில் இன்னும்ஒருகால்
பின்பட்டு நிற்குமோ முன்பட்ட சூட்டில்
பெறுந்துயர் மறந்துவிடுமோ
இரவுநிறம் உடைஅயமன் இனிஎனைக் கனவினும்
இறப்பிக்க எண்ணம்உறுமோ
எண்ணுறான் உதைஉண்டு சிதைஉண்ட தன்உடல்
இருந்தவடு எண்ணுறானோ
கரவுபெறு வினைவந்து நலியுமோ அதனைஒரு
காசுக்கும் மதியேன்எலாம்
கற்றவர்கள் பற்றும்நின் திருஅருளை யானும்
கலந்திடப் பெற்றுநின்றேன்
தரமருவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

28.
நீர்உண்டு பொழிகின்ற கார்உண்டு விளைகின்ற
நிலன்உண்டு பலனும்உண்டு
நிதிஉண்டு துதிஉண்டு மதிஉண்டு கதிகொண்ட
நெறிஉண்டு நிலையும் உண்டு
ஊர்உண்டு பேர்உண்டு மணிஉண்டு பணிஉண்டு
உடைஉண்டு கொடையும்உண்டு
உண்டுண்டு மகிழவே உணவுண்டு சாந்தம்உறும்
உளம்உண்டு வளமும்உண்டு
தேர்உண்டு கரிஉண்டு பரிஉண்டு மற்றுள்ள
செல்வங்கள் யாவும்உண்டு
தேன்உண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதத்
தியானமுண் டாயில்அரசே
தார்உண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

29.
உளம்எனது வசம்நின்ற தில்லைஎன் தொல்லைவினை
ஒல்லைவிட் டிடவுமில்லை
உன்பதத் தன்பில்லை என்றனக் குற்றதுணை
உனைஅன்றி வேறும்இல்லை
இளையன்அவ னுக்கருள வேண்டும்என் றுன்பால்
இசைக்கின்ற பேரும்இல்லை
ஏழையவ னுக்கருள்வ தேன்என்றுன் எதிர்நின்
றியம்புகின் றோரும்இல்லை
வளமருவும் உனதுதிரு அருள்குறைவ தில்லைமேல்
மற்றொரு வழக்கும்இல்லை
வந்திரப் போர்களுக் கிலைஎன்ப தில்லைநீ
வன்மனத் தவனும்அல்லை
தளர்விலாச் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

30.
எத்திக்கும் என்உளம் தித்திக்கும் இன்பமே
என்உயிர்க் குயிராகும்ஓர்
ஏகமே ஆனந்த போகமே யோகமே
என்பெருஞ் செல்வமேநன்
முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான
முர்த்தியே முடிவிலாத
முருகனே நெடியமால் மருகனே சிவபிரான்
முத்தாடும் அருமைமகனே
பத்திக் குவந்தருள் பரிந்தருளும் நின்அடிப்
பற்றருளி என்னைஇந்தப்
படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனாப்
பண்ணாமல் ஆண்டருளுவாய்
சத்திக்கும் நீர்ச்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.


31.
நான்கொண்ட விரதம்நின் அடிஅலால் பிறர்தம்மை
நாடாமை ஆகும்இந்த
நல்விரத மாம்கனியை இன்மைஎனும் ஒருதுட்ட
நாய்வந்து கவ்விஅந்தோ
தான்கொண்டு போவதினி என்செய்வேன் என்செய்வேன்
தளராமை என்னும்ஒருகைத்
தடிகொண் டடிக்கவோ வலியிலேன் சிறியனேன்
தன்முகம் பார்த்தருளுவாய்
வான்கொண்ட தெள்அமுத வாரியே மிகுகருனை
மழையே மழைக்கொண்டலே
வள்ளலே என்இருகண் மணியேஎன் இன்பமே
மயில்ஏறு மாணிக்கமே
தான்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

திருச்சிற்றம்பலம்.

சென்னைக் கந்தகோட்டம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

32.
அருளார் அமுதே சரணம் சரணம்
அழகா அமலா சரணம் சரணம்
பொருளா எனைஆள் புனிதா சரணம்
பொன்னே மணியே சரணம் சரணம்
மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
மயில்வா கனனே சரணம் சரணம்
கருணா லயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

33.
எண்ணேர் மறையின் பயனே சரணம்
பதியே பரமே சரணம் சரணம்
விண்ணேர் ஒளியே வெளியே சரணம்
வெளியின் விளைவே சரணம் சரணம்
உண்ணேர் உயிரே உணர்வே சரணம்
உருவே அருவே உறவே சரணம்
கண்ணே மணியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

34.
முடியா முதலே சரணம் சரணம்
முருகா குமரா சரணம் சரணம்
வடிவேல் அரசே சரணம் சரணம்
மயிலூர் மணியே சரணம் சரணம்
அடியார்க் கெளியாய் சரணம் சரணம்
அரியாய் பெரியாய் சரணம் சரணம்
கடியாக் கதியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

35.
பூவே மணமே சரணம் சரணம்
பொருளே அருளே சரணம் சரணம்
கோவே குகனே சரணம் சரணம்
குருவே திருவே சரணம் சரணம்
தேவே தெளிவே சரணம் சரணம்
சிவசண் முகனே சரணம் சரணம்
காவேர் தருவே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

36.
நடவும் தனிமா மயிலோய் சரணம்
நல்லார் புகழும் வல்லோய் சரணம்
திடமும் திருவும் தருவோய் சரணம்
தேவர்க் கரியாய் சரணம் சரணம்
தடவண் புயனே சரணம் சரணம்
தனிமா முதலே சரணம் சரணம்
கடவுள் மணியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

37.
கோலக் குறமான் கணவா சரணம்
குலமா மணியே சரணம் சரணம்
சீலத் தவருக் கருள்வோய்சரணம்
சிவனார் புதல்வா சரணம் சரணம்
ஞாலத் துயர்தீர் நலனே சரணம்
நடுவா கியநல் ஒளியே சரணம்
காலன் தெறுவோய் சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

38.
நங்கட் கிளியாய் சரணம் சரணம்
நந்தா உயர்சம் பந்தா சரணம்
திங்கட் சடையான் மகனே சரணம்
சிவைதந் தருளும் புதல்வா சரணம்
துங்கச் சுகம்நன் றருள்வோய் சரணம்
சுரர்வாழ்த் திடுநம் துரையே சரணம்
கங்கைக் கொருமா மதலாய் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

39.
ஒளியுள் ஒளியே சரணம் சரணம்
ஒன்றே பலவே சரணம் சரணம்
தெளியும் தெருளே சரணம் சரணம்
சிவமே தவமே சரணம் சரணம்
அளியும் கனியே சரணம் சரணம்
அமுதே அறிவே சரணம் சரணம்
களியொன் றருள்வோய் சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

40.
மன்னே எனைஆள் வரதா சரணம்
மதியே அடியேன் வாழ்வே சரணம்
பொன்னே புனிதா சரணம் சரணம்
புகழ்வார் இதயம் புகுவாய் சரணம்
அன்னே வடிவேல் அரசே சரணம்
அறுமா முகனே சரணம் சரணம்
கன்னேர் புயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

41.
வேதப் பொருளே சரணம் சரணம்
விண்ணோர் பெருமாள் சரணம் சரணம்
போதத் திறனே சரணம் சரணம்
புனைமா மயிலோய் சரணம் சரணம்
நாதத் தொலியே சரணம் சரணம்
நவைஇல் லவனே சரணம் சரணம்
காதுக் கினிதாம் புகழோய் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

திருச்சிற்றம்பலம்.

3. பிரார்த்தனை மாலை
கட்டளைக் கலித்துறை

திருச்சிற்றம்பலம்

42.
சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஓர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருட்
கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே1.

43.
கண்முன் றுறுசெங் கரும்பின்முத் தேபதம் கண்டிடுவான்
மண்முன் றுலகும் வழுத்தும் பவள மணிக்குன்றமே
திண்முன்று நான்கு புயங்கொண் டொளிர்வச் சிரமணியே
வண்முன் றலர்மலை வாழ்மயில் ஏறிய மாணிக்கமே.

44.
மாணித்த ஞான மருந்தேஎன் கண்ணின்உள் மாமணியே
ஆணிப்பொன் னேஎன தாருயி ரேதணி காசலனே
தாணிற்கி லேன்நினைத் தாழாத வஞ்சர் தமதிடம்போய்ப்
பேணித் திரிந்தனன் அந்தோஎன் செய்வன்இப் பேதையனே.

45.
அன்னே எனைத்தந்த அப்பாஎன் றேங்கி அலறுகின்றேன்
என்னேஇவ் வேழைக் கிரங்காது நீட்டித் திருத்தல்எந்தாய்
பொன்னே சுகுணப் பொருப்பே தணிகைப் பொருப்பமர்த்த
மன்னே கலப மயில்மேல் அழகிய மாமணியே.

46.
மணியே தினைப்புன வல்லியை வேண்டி வளர்மறைவான்
கணியே எனநின்ற கண்ணே என்உள்ளக் களிநறவே
பணியேன் எனினும் எனைவலிந் தாண்டுன் பதந்தரவே
நணியே தணிகைக்கு வாஎன ஓர்மொழி நல்குவையே.

47.
நல்காத ஈனர்தம் பாற்சென் றிரந்து நவைப்படுதல்
மல்காத வண்ணம் அருள்செய்கண் டாய்மயில் வாகனனே
பல்காதல் நீக்கிய நல்லோர்க் கருளும் பரஞ்சுடரே
அல்காத வண்மைத் தணிகா சலத்தில் அமர்ந்தவனே.

48.
அமரா வதிஇறைக் காருயிர் ஈந்த அருட்குன்றமே
சமரா புரிக்கர சேதணி காசலத் தற்பரனே
குமரா பரம குருவே குகாஎனக் கூவிநிற்பேன்
எமராஜன் வந்திடுங் கால்ஐய னேஎனை ஏன்றுகொள்ளே.

49.
கொள்உண்ட வஞ்சர்தம் கூட்டுண்டு வாழ்க்கையில் குட்டுண்டுமேல்
துள்உண்ட நோயினில் சூடுண்டு மங்கையர் தோய்வெனும்ஓர்
கள்உண்ட நாய்க்குன் கருணைஉண் டோ நற் கடல்அமுதத்
தெள்உண்ட தேவர் புகழ்தணி காசலச் சிற்பரனே.

50.
சிற்பகல் மேவும்இத் தேகத்தை ஒம்பித் திருஅனையார்
தற்பக2 மேவிலைந் தாழ்ந்தேன் தணிகை தனில்அமர்ந்த
கற்பக மேநின் கழல்கரு தேன்இக் கடைப்படும்என்
பொற்பகம் மேவிய நின்அருள் என்என்று போற்றுவதே.

51.
போற்றேன் எனினும் பொறுத்திடல் வேண்டும் புவிநடையாம்
சேற்றே விழுந்து தியங்குகின் றேனைச் சிறிதும்இனி
ஆற்றேன் எனதர சேஅமு தேஎன் அருட்செல்வமே
மேற்றேன் பெருகு பொழில்தணி காசல வேலவனே.

52.
வேல்கொண்ட கையும் விறல்கொண்ட தோளும் விளங்குமயில்
மேல்கொண்ட வீறும் மலர்முகம் ஆறும் விரைக்கமலக்
கால்கொண்ட வீரக் கழலும்கண் டால்அன்றிக் காமன்எய்யும்
கோல்கொண்ட வன்மை அறுமோ தணிகைக் குருபரனே.

53.
குருவே அயன்அரி ஆதியர் போற்றக் குறைதவிர்ப்பான்
வருவேல் பிடித்து மகிழ்வள்ள லேகுண மாமலையே
தருவே தணிகைத் தயாநிதி யேதுன்பச் சாகரமாம்
கருவேர் அறுத்திக் கடையனைக் காக்கக் கடன்உனக்கே.

54.
உனக்கே விழைவுகொண் டோ லமிட் டோ ங்கி உலறுகின்றேன்
எனக்கே அருள்இத் தமியேன் பிழைஉளத் தெண்ணியிடேல்
புனக்கேழ் மணிவல்லி யைப்புணர்ந் தாண்டருள் புண்ணியனே
மனக்கேத மாற்றும் தணிகா சலத்தமர் வானவனே.

55.
வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே
நானோர்எளியன்என் துன்பறுத் தாள்என நண்ணிநின்றேன்
ஏனோநின் நெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந்
தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவகுருவே.

56.
கையாத துன்பக் கடல்முழ்கி நெஞ்சம் கலங்கிஎன்றன்
ஐயாநின் பொன்அடிக் கோலமிட் டேன்என்னை ஆண்டுகொளாய்
மையார் தடங்கண் மலைமகள் கண்டு மகிழ்செல்வமே.
செய்யார் தணிகை மலைஅர சேஅயிற் செங்கையனே.

57.
செங்கைஅம் காந்தன் அனையமின் னார்தம் திறத்துழன்றே
வெங்கயம் உண்ட விளவாயி னேன்விறல் வேலினைஓர்
அங்கையில் ஏந்திய ஐயா குறவர் அரிதில்பெற்ற
மங்கை மகிழும் தணிகேச னேஅருள் வந்தெனக்கே.

58.
கேளாது போல்இருக் கின்றனை ஏழைஇக் கீழ்நடையில்
வாளா இடர்கொண் டலறிடும் ஓலத்தை மாமருந்தே
தோளா மணிச்சுட ரேதணி காசலத் து'ய்ப்பொருளே
நாளாயின் என்செய்கு வேன்இறப் பாய நவைவருமே.

59.
நவையே தருவஞ்ச நெஞ்சகம் மாயவும் நான்உன்அன்பர்
அவையே அணுகவும் ஆனந்த வாரியில் ஆடிடவும்
சுவையே அமுதன்ன நின்திரு நாமம் துதிக்கவும்ஆம்
இவையேஎன் எண்ணம் தணிகா சலத்துள் இருப்பவனே.

60.
இருப்பாய மாய மனத்தால் வருந்தி இளைத்துநின்றேன்
பொருப்பாய கன்மப் புதுவாழ்வில் ஆழ்ந்தது போதும்இன்றே
கருப்பாழ் செயும்உன் சுழல்அடிக் கேஇக் கடையவனைத்
திருப்பாய் எனில்என்செய் கேன்தணி காசலத் தெள்ளமுதே.

61.
தெள்அகத் தோங்கிய செஞ்சுட ரேசிவ தேசிகனே
கள்அகத் தேமலர்க் காஆர் தணிகைஎங் கண்மணியே
என்அகத் தேஉழன் றென்நின் றலைத்தெழுந் திங்கும்அங்கும்
துள்அகத் தேன்சிரம் சேரும்கொ லோநின் துணைஅடியே.

62.
அடியேன் எனச்சொல்வ தல்லாமல் தாள்அடைந் தாரைக்கண்டே
துடியேன் அருண கிரிபாடும் நின்அருள் தோய்புகழைப்
படியேன் பதைத்துரு கேன்பணி யேன்மனப் பந்தம்எலாம்
கடியேன் தணிகையைக் காணேன்என் செய்வேன்எம் காதலனே.

63.
தலனே அடியர் தனிமன மாம்புகழ் சார்தணிகா
சலனே அயன்அரி ஆதியர் வாழ்ந்திடத் தாங்கயில்வேல்
வலனேநின் பொன்அருள் வாரியின் முழ்க மனோலயம்வாய்ந்
திலனேல் சனன மரணம்என் னும்கடற் கென்செய்வனே.

64.
என்செய்கை என்செய்கை எந்தாய்நின் பொன்அடிக் கேஅலங்கல்
வன்செய்கை நீங்க மகிழ்ந்தணி யேன்துதி வாய்உரைக்க
மென்செய்கை கூப்ப விழிநீர் துளித்திட மெய்சிலிர்க்கத்
தன்செய்கை என்பதற் றேதணி காசலம் சார்ந்திலனே.

65.
சாரும் தணிகையில் சார்ந்தோய்நின் தாமரைத் தாள்துணையைச்
சேரும் தொழும்பா திருப்பதம் அன்றிஇச் சிற்றடியேன்
ஊரும் தனமும் உறவும் புகழும் உரைமடவார்
வாருந் தணிமுலைப் போகமும் வேண்டிலன் மண்விண்ணிலே.

66.
மண்நீர் அனல்வளி வான்ஆகி நின்றருள் வத்துஎன்றே
தெண்நீர்மை யால்புகழ் மால்அய னேமுதல் தேவர்கள்தம்
கண்நீர் துடைத்தருள் கற்பக மேஉனைக் கண்டுகொண்டேன்
தண்நீர் பொழிற்கண் மதிவந் துலாவும் தணிகையிலே.

67.
தணியாத துன்பத் தட்ங்கடல் நீங்கநின் தன்மலர்த்தாள்
பணியாத பாவிக் கருளும்உண் டோ பசு பாசம்அற்றோர்க்
கணியாக நின்ற அருட்செல்வ மேதணி காசலனே
அணிஆ தவன்முத லாம்அட்ட முர்த்தம் அடைந்தவனே.

68.
அடையாத வஞ்சகர் பால்சென் றிரந்திங் கலைந்தலைந்தே
கடையான நாய்க்குள் கருணைஉண் டோ தணி கைக்குள்நின்றே
உடையாத நல்நெஞ்சர்க் குண்மையைக் காண்பிக்கும் உத்தமனே
படையாத தேவர் சிறைமீட் டளித்தருள் பண்ணவனே.

69.
பண்ணவ னேநின் பதமலர் ஏத்தும் பயன்உடையோர்
கண்ணவ னேதணி காசல னேஅயில் கையவனே
விண்ணவர் ஏத்திய மேலவ னேமயல் மேவுமனம்
புண்ணவ னேனையும் சேர்ந்தாய்என் னேஉன்றன் பொன்அருளே.

70.
பொன்ஆர் புயத்தனும் பூஉடை யோனும் புகழ்மணியே
என்ஆவி யின்துணை யேதணி காசலத் தேஅமர்ந்த
மன்னாநின் பொன்அடி வாழ்த்தாது வீணில் வருந்துறுவேன்
இன்னா இயற்றும் இயமன்வந் தால்அவற் கென்சொல்வனே.

71.
சொல்லார் மலர்புனை அன்பகத் தோர்க்கருள் சொல்லும்எல்லாம்
வல்லாய்என் றேத்த அறிந்தேன் இனிஎன்றன் வல்வினைகள்
எல்லாம் விடைகொண் டிரியும்என் மேல்இய மன்சினமும்
செல்லாது காண்ஐய னேதணி காசலச் சீர்அரைசே.

திருச்சிற்றம்பலம்.

4. எண்ணப் பத்து
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்.

72.
அணிகொள் வேல்உடை அண்ணலே நின்திரு அடிகளை அன்போடும்
பணிகி லேன்அகம் உருகிநின் றாடிலேன் பாடிலேன் மனமாயைத்
தணிகி லேன்திருத் தணிகையை நினைகிலேன் சாமிநின் வழிபோகத்
துணிகி லேன்இருந் தென்செய்தேன் பாவியேன் துன்பமும் எஞ்சேனே.

73.
சேல்பி டித்தவன் தந்தைஆ தியர்தொழும் தெய்வமே சிவப்பேறே
மால்பி டித்தவர் அறியொனாத் தணிகைமா மலைஅமர்ந் திடுவாழ்வே
வேல்பி டித்தருள் வள்ளலே யான்சதுர் வேதமும் காணாநின்
கால்பி டிக்கவும் கருணைநீ செய்யவும் கண்டுகண் களிப்பேனோ.

74.
களித்து நின்திருக் கழலிணை ஏழையேன் காண்பனோ அலதன்பை
ஒளித்து வன்துயர் உழப்பனோ இன்னதென் றுணர்ந்திலேன் அருட்போதம்
தெளித்து நின்றிடும் தேசிக வடிவமே தேவர்கள் பணிதேவே
தளிர்த்த தண்பொழில் தணிகையில் வளர்சிவ தாருவே மயிலோனே.

75.
மயிலின் மீதுவந் தருள்தரும் நின்றிரு வரவினுக் கெதிர்பார்க்கும்
செயலி னேன்கருத் தெவ்வணம் முடியுமோ தெரிகிலேன் என்செய்கேன்
அயிலின் மாமுதல் தடிந்திடும் ஐயனே ஆறுமா முகத்தேவே
கயிலை நேர்திருத் தணிகைஅம் பதிதனில் கந்தன்என் றிருப்போனே.

76.
இருப்பு நெஞ்சகக் கொடியனேன் பிழைதனை எண்ணுறேல் இனிவஞ்சக்
கருப்பு காவணம் காத்தருள் ஐயனே கருணைஅம் கடலேஎன்
விருப்புள் ஊறிநின் றோங்கிய அமுதமே வேல்உடை எம்மானே
தருப்பு காஇனன் விலகுறும் தணிகைவாழ் சாந்தசற் குணக்குன்றே.

77.
குன்று நேர்பிணித் துயரினால் வருந்திநின் சூரைகழல் கருதாத
துன்று வஞ்சகக் கள்ளனேன் நெஞ்சகத் துயர்அறுத் தருள்செய்வான்
இன்று மாமயில் மீதினில் ஏறிஇவ் வேழைமுன் வருவாயேல்
நன்று நன்றதற் கென்சொல்வார் தணிகைவாழ் நாதநின் அடியாரே.

78.
யாரை யுந்துணை கொண்டிலேன் நின்அடி இணைதுணை அல்லால்நின்
பேரை உன்னிவாழ்ந் திடும்படி செய்வையோ பேதுறச் செய்வாயோ
பாரை யும்உயிர்ப் பரப்பையும் படைத்தருள் பகவனே உலகேத்தும்
சீரை உற்றிடும் தணிகைஅம் கடவுள்நின் திருவுளம் அறியேனே.

79.
உளங்கொள் வஞ்சக நெஞ்சர்தம் இடம்இர் உழந்தகம் உலைவுற்றேன்
வளங்கொள் நின்பத மலர்களை நாள்தொறும் வாழ்த்திலேன் என்செய்கேன்
குளங்கொள் கண்ணனும் கண்ணனும் பிரமனும் குறிக்கரும் பெருவாழ்வே
தளங்கொள் பொய்கைசூழ் தணிகைஅம் பதியில்வாழ் தனிப்பெரும் புகழ்த்தேவே.

80.
தேவர் நாயகன் ஆகியே என்மனச் சிலைதனில் அமர்ந்தோனே
முவர் நாயகன் எனமறை வாழ்த்திடும் முத்தியின் வித்தேஇங்
கேவ ராயினும் நின்திருத் தணிகைசென் றிறைஞ்சிடில் அவரேஎன்
பாவ நாசம்செய் தென்றனை ஆட்கொள்ளும் பரஞ்சுடர் கண்டாயே.

81.
கண்ட னேகவா னவர்தொழும் நின்திருக் கழல்இணை தனக்காசை
கொண்ட னேகமாய்த் தெண்டன்இட் டானந்தக் கூத்தினை உகந்தாடித்
தொண்ட னேனும்நின் அடியரில் செறிவனோ துயர்உழந் தலைவேனோ
அண்ட னேதிருத் தணிகைவாழ் அண்ணலே அணிகொள்வேல் கரத்தோனே

திருச்சிற்றம்பலம்.

5. செழுஞ்சுடர் மாலை

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்.

82.
ஊணே உடையே பொருளேஎன் றுருகி மனது தடுமாறி
வீணே துயரத் தழுந்துகின்றேன் வேறோர் துணைநின் அடிஅன்றிக்
காணேன் அமுதே பெருங்கருணைக் கடலே கனியே கரும்பேநல்
சேணேர் தணிகை மலைமருந்தே தேனே ஞானச் செழுஞ்சுடரே

83.
பாரும் விசும்பும் அறியஎனைப் பயந்த தாயும் தந்தையும்நீ
ஒரும் போதிங் கெனில்எளியேன் ஒயாத் துயருற் றிடல்நன்றோ
யாரும் காண உனைவாதுக் கிழுப்பேன் அன்றி என்செய்கேன்
சேரும் தணிகை மலைமருந்தே தேனே ஞானச் செழுஞ்சுடரே.

84.
கஞ்சன் துதிக்கும் பொருளேஎன் கண்ணே நின்னைக் கருதாத
வஞ்சர் கொடிய முகம்பார்க்க மாட்டேன் இனிஎன் வருத்தம்அறுத்
தஞ்சல் எனவந் தருளாயேல் ஆற்றேன் கண்டாய் அடியேனே
செஞ்சந் தனம்சேர் தணிகைமலைத் தேனே ஞானச் செழுஞ்சுடரே.

85.
மின்நேர் உலக நடைஅதனால் மேவும் துயருக் காளாகிக்
கல்நேர் மனத்தேன் நினைமறந்தென் கண்டேன் கண்டாய் கற்பகமே
பொன்னே கடவுள் மாமணியே போதப் பொருளே பூரணமே
தென்னேர் தணிகை மலைஅரசே தேவே ஞானச் செழுஞ்சுடரே

86.
வளைத்தே வருத்தும் பெருந்துயரால் வாடிச் சவலை மகவாகி
இளைத்தேன் தேற்றும் துணைகாணேன் என்செய் துய்கேன் எந்தாயே
விளைத்தேன் ஒழுகும் மலர்த்தருவே விண்ணே விழிக்கு விருந்தேசீர்
திளைத்தோர் பரவும் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.

87.
அடுத்தே வருத்தும் துயர்க்கடலில் அறியா தந்தோ விழுந்திட்டேன்
எடுத்தே விடுவார் தமைக்காணேன் எந்தாய் எளியேன் என்செய்கேன்
கடுத்தேர் கண்டத் தெம்மான்தன் கண்ணே தருமக் கடலேஎன்
செடித்தீர் தணிகை மலைப்பொருளே தேனே ஞானச் செழுஞ்சுடரே.

88.
உண்டால் குறையும் எனப்பசிக்கும் உலுத்தர் அசுத்த முகத்தைஎதிர்
கண்டால் நடுங்கி ஒதுங்காது கடைகாத் திரந்து கழிக்கின்றேன்
கொண்டார் அடியர் நின்அருளை யானோ ஒருவன் குறைபட்டேன்
திண்டார் அணிவேல் தணிகைமலைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.

89.
வேட்டேன் நினது திருஅருளை வினையேன் இனிஇத் துயர்பொறுக்க
மாட்டேன் மணியே அன்னேஎன் மன்னே வாழ்க்கை மாட்டுமனம்
நாட்டேன் அயன்மால் எதிர்வரினும் நயக்கேன் எனக்கு நல்காயோ
சேட்டேன் அலரும் பொழில்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.

90.
கல்லா நாயேன் எனினும்எனைக் காக்கும் தாய்நீ என்றுலகம்
எல்லாம் அறியும் ஆதலினால் எந்தாய் அருளா திருத்திஎனில்
பொல்லாப் பழிவந் தடையும்உனக் கரசே இனியான் புகல்வதென்னே
செல்லார் பொழில்சூழ் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.

91.
அன்னே அப்பா எனநின்தாட்3 கார்வம் கூர்ந்திங் கலைகின்றேன்
என்னே சற்றும் இரங்கிலைநீ என்நெஞ் சோநின் நல்நெஞ்சம்
மன்னே ஒளிகொள் மாணிக்க மணியே குணப்பொன் மலையேநல்
தென்னேர் பொழில்சூழ் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே

92.
நடைஏய் துயரால் மெலிந்து நினை நாடா துழலும் நான்நாயில்
கடையேன் எனினும் காத்தல்என்றன் கண்ணே நினது கடன்அன்றோ
தடையேன் வருவாய் வந்துன்அருள் தருவாய் இதுவே சமயம்காண்
செடிதீர்த் தருளும் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.

திருச்சிற்றம்பலம்

3. நின் அருட்கார்வம்.

6. குறைஇரந்த பத்து

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

93.

சீர்பூத்த அருட்கடலே கரும்பே தேனே
செம்பாகே எனதுகுலத் தெய்வ மேநல்
கூர்பூத்த வேல்மலர்க்கை அரசே சாந்த
குணக்குன்றே தணிகைமலைக் கோவே ஞானப்
பேர்பூத்த நின்புகழைக் கருதி ஏழை
பிழைக்கஅருள் செய்வாயோ பிழையை நோக்கிப்
பார்பூத்த பவத்தில்உற விடில்என் செய்கேன்
பாவியேன் அந்தோவன் பயம்தீ ரேனே.

94.
தீராத துயர்க்கடலில் அழுந்தி நாளும்
தியங்கிஅழு தேங்கும்இந்தச் சேய்க்கு நீகண்
பாராத செயல்என்னே எந்தாய் எந்தாய்
பாவிஎன விட்டனையோ பன்னா ளாக
ஏராய அருள்தருவாய் என்றே ஏமாந்
திருந்தேனே என்செய்கேன் யாரும் இல்லேன்
சீராருந் தணிகைவரை அமுதே ஆதி
தெய்வமே நின்கருத்தைத் தெளிந்தி லேனே.

95.
தெளிக்குமறைப் பொருளேஎன் அன்பே என்றன்
செல்வமே திருத்தணிகைத் தேவே அன்பர்
களிக்கும்மறைக் கருத்தேமெய்ஞ் ஞான நீதிக்
கடவுளே நின்அருளைக் காணேன் இன்னும்
சுளிக்கும்மிடித் துயரும்யமன் கயிறும் ஈனத்
தொடர்பும்மலத் தடர்பும்மனச் சோர்வும் அந்தோ
அளிக்கும்எனை என்செயுமோ அறியேன் நின்றன்
அடித்துணையே உறுதுணைமற் றன்றி உண்டோ .

96.
உண்டாய உலகுயிர்கள் தம்மைக் காக்க
ஒளித்திருந்தவ் வுயிர்வினைகள் ஒருங்கே நாளும்
கண்டாயே இவ்வேழை கலங்கும் தன்மை
காணாயோ பன்னிரண்டு கண்கள் கொண்டோ ய்
தண்டாத நின்அருட்குத் தகுமோ விட்டால்
தருமமோ தணிகைவரைத் தலத்தின் வாழ்வே
விண்டாதி தேவர்தொழும் முதலே முத்தி
வித்தேசொற் பதம்கடந்த வேற்கை யானே.

97.
கையாத அன்புடையார் அங்கைமேவும்
கனியேஎன் உயிரேஎன் கண்ணே என்றும்
பொய்யாத பூரணமே தணிகை ஞானப்
பொருளேநின் பொன்அருள்இப் போதியான் பெற்றால்
உய்யாத குறைஉண்டே துயர்சொல் லாமல்
ஓடுமே யமன்பாசம் ஓய்ந்து போம்என்
ஐயாநின் அடியரொடு வாழ்கு வேன்இங்
கார்உனைஅல் லால்எனக்கின் றருள்செய் வாயே.

98.
வாய்க்கும்உன தருள்என்றே அந்தோ நாளும்
வழிபார்த்திங் கிளைக்கின்றேன் வருத்தும் பொல்லா
நோய்க்கும்உறு துயர்க்கும்இலக் கானேன் மாழ்கி
நொந்தேன்நின் அருள்காணேன் நுவலும் பாசத்
தேய்க்கும்அவன் வரில்அவனுக் கியாது சொல்வேன்
என்செய்கேன் துணைஅறியா ஏழை யேனே
தூய்க்குமர குருவேதென் தணிகை மேவும்
சோதியே இரங்காயோ தொழும்பா ளர்க்கே.

99.
ஆளாயோ துயர்அளக்கர் வீழ்ந்து மாழ்கி
ஐயாவோ எனும்முறையை அந்தோ சற்றும்
கேளாயோ என்செய்கேன் எந்தாய் அன்பர்
கிளத்தும்உன தருள்எனக்குக் கிடையா தாகில்
நாளாய்ஓர் நடுவன்வரில் என்செய் வானோ
நாயினேன் என்சொல்வேன் நாணு வேனோ
தோளாஓர் மணியேதென் தணிகை மேவும்
சுடரேஎன் அறிவேசிற் சுகங்கொள் வாழ்வே.

100.
வாழ்வேநற் பொருளேநல் மருந்தே ஞான
வாரிதியே தணிமைமலை வள்ள லேயான்
பாழ்வேலை எனுங்கொடிய துயருள் மாழ்கிப்
பதைத்தையா முறையோநின் பதத்துக் கென்றே
தாழ்வேன்ஈ தறிந்திலையே நாயேன் மட்டும்
தயவிலையோ நான்பாவி தானோ பார்க்குள்
ஆழ்வேன்என் றயல்விட்டால் நீதி யேயோ
அச்சோஇங் கென்செய்கேன் அண்ணால் அண்ணால்

101.
அண்ணாவே நின்அடியை அன்றி வேறோர்
ஆதரவிங் கறியேன்நெஞ் சழிந்து துன்பால்
புண்ணாவேன் தன்னைஇன்னும் வஞ்சர் பாற்போய்ப்
புலந்துமுக வாட்டம்உடன் புலம்பி நிற்கப்
பண்ணாதே யாவன்இவன் பாவிக் குள்ளும்
படுபாவி என்றென்னைப் பரிந்து தள்ள
எண்ணாதே யான்மிகவும் ஏழை கண்டாய்
இசைக்கரிய தணிகையில்வீற் றிருக்கும் கோவே.

102.
கோவேநல் தணிகைவரை அமர்ந்த ஞான
குலமணியே குகனேசற் குருவே யார்க்கும்
தேவேஎன் விண்ணப்பம் ஒன்று கேண்மோ
சிந்தைதனில் நினைக்கஅருள் செய்வாய் நாளும்
பூவேயும் அயன்திருமால் புலவர் முற்றும்
போற்றும்எழில் புரந்தரன்எப் புவியும் ஓங்கச்
சேவேறும் பெருமான்இங் கிவர்கள் வாழ்த்தல்
செய்துவக்கும் நின்இரண்டு திருத்தாள் சீரே.

திருச்சிற்றம்பலம்

7. ஜீவசாட்சி மாலை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

103.
பண்ஏறும் மொழிஅடியர் பரவி வாழ்த்தும்
பாதமலர் அழகினைஇப் பாவி பார்க்கில்
கண்ஏறு படும்என்றோ கனவி லேனும்
காட்டென்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ
விண்ஏறும் அரிமுதலோர்க் கரிய ஞான
விளக்கேஎன் கண்ணேமெய் வீட்டின் வித்தே
தண்ஏறு பொழிதணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

104.
பண்டுமன துவந்துகுணம் சிறிதும் இல்லாப்
பாவியேன் தனைஆண்டாய் பரிவால் இன்று
கொண்டுகுலம் பேசுதல்போல் எளியேன் குற்றம்
குறித்துவிடில் என்செய்கேன் கொடிய னேனைக்
கண்டுதிருத் தொண்டர்நகை செய்வார் எந்நாய்
கைவிடேல் உன்ஆணை காண்முக் காலும்
தண்துளவன் புகழ்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

105.
புன்புலைய வஞ்சகர்பால் சென்று வீணே
புகழ்ந்துமனம் அயர்ந்துறுகண் பொருந்திப் பொய்யாம்
வன்புலைய வயிறோம்பிப் பிறவி நோய்க்கு
மருந்தாய நின்அடியை மறந்தேன் அந்தோ
இன்புலைய உயிர்கொள்வான் வரில்என் பால்அவ்
வியமனுக்கிங் கென்சொல்கேன் என்செய் கேனே
தன்புகழ்காண் அருந்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

106.
பெருங்களப முலைமடவார் என்னும் பொல்லாப்
பேய்க்கோட்பட் டாடுகின்ற பித்த னேனுக்
கிரும்புலவர்க் கரியதிரு அருள்ஈ வாயேல்
என்சொலார்4 அடியர்அதற் கெந்தாய் எந்நாய்
கரும்பின்இழிந் தொழுகும்அருள் சுவையே முக்கண்
கனிகனிந்த தேனேஎன் கண்ணே ஞானம்
தரும்புனிதர் புகழ்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
4. சொல்வர். தொ.வே. முதற்பதிப்பு.

107.
கல்அளவாம் நெஞ்சம்என வஞ்ச மாதர்
கண்மாயம் எனும்கயிற்றால் கட்டு வித்துச்
சொல்அளவாத் துன்பம்எனும் கடலில் வீழ்த்தச்
சோர்கின்றேன் அந்தோநல் துணைஓன் றில்லேன்
மல்அளவாய்ப் பவம்மாய்க்கும் மருந்தாம் உன்றன்
மலர்ப்பாதப் புணைதந்தால் மயங்கேன் எந்நாய்
சல்லம்5உலாத் தரும்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

108.
அன்னைமது லாம்பந்தத் தழுங்கி நாளும்
அலைந்துவயி றோம்பிமனம் அயர்ந்து நாயேன்
முன்னைவினை யாற்படும்பா டெல்லாம் சொல்லி
முடியேன்செய் பிழைகருதி முனியேல் ஐயா
பொன்னைநிகர் அருட்குன்றே ஒன்றே முக்கட்
ப&ஙதஇமணமே நறவேநற் புலவர் போற்றத்
தன்னைநிகர் தரும்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

109.
பன்னரும்வன் துயரால்நெஞ் சழிந்து நாளும்
பதைத்துருகி நின்அருட்பால் பருகக் கிட்டா
துன்னரும்பொய் வாழ்க்கைஎனும் கானத் திந்த
ஊர்நகைக்கப் பாவிமழல் உணர்ந்தி லாயோ
என்னருமை அப்பாஎன் ஐயா என்றன்
இன்னுயிர்க்குத் தலைவாஇங் கெவர்க்கும் தேவா
தன்னியல்சீர் வளர்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

110.
கோவேநின் பதம்பதுதியா வஞ்ச நெஞ்சக்
கொடியோர்பால் மனவருத்தம் கொண்டாழ் கின்றேன்
சாவேனும் அல்லன்நின்பொன் அருளைக் காணேன்
தமியேனை உய்யும்வண்ணம் தருவ தென்றோ
சேவேறும் சிவபெருமான் அரிதின் ஈன்ற
செல்வமே அருள்ஞானத் தேனே அன்பர்
தாவேதம் தெறும்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

111.
ஓயாது வரும்மிடியான் வஞ்சர் பால்சென்
றுளங்கலங்கி நாணிஇரந் துழன்றெந் நாளும்
மாயாத துயரடைந்து வருந்தித் தெய்வ
மருந்தாய நின்அடியை மறந்திட் டேனே
தாயாகித் தந்தையார்த் தமராய் ஞான
சற்குருவாய்த் தேவாகித் தழைத்த ஒன்றே
சாயாத புகழ்த்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

112.
மின்னாளும் இடைமடவார் அல்கு லாய
வெங்குழியில் வீழ்ந்தாழ்ந்து மெலிந்தேன் அல்லால்
எந்நாளும் உனைப்போற்றி அறியேன் என்னே
ஏழைமதி கொண்டேன்இங் கென்செய் கேனே
அன்னாய்என அப்பாஎன் றரற்றும் அன்பர்க்
காரமுதே அருட்கடலே அமரர் கோவே
தன்னார்வத் தமர்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

113.
வன்சொலினார் இடைஅடைந்து மாழ்கும் இந்த
மாபாவி யேன்குறையை வகுத்து நாளும்
என்சொலினும் இரங்காமல் அந்தோ வாளா
இருக்கின்றாய் என்னேநின் இரக்கம் எந்தாய்
இருள்அகற்றும் செழுஞ்சுடரே எவர்க்கும் கோவே
தன்சொல்வளர் தரும்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

114.
மீளாத வன்துயர்கொண் டீனர் தம்மால்
மெலிந்துநினை அழைத்தலறி விம்மா நின்றேன்
கேளாத கேள்விஎலாம் கேட்பிப் பாய்நீ
கேட்கிலையோ என்அளவில் கேள்வி இன்றோ
மதியேசிற் சுகஞான மழைபெய் விண்ணே
தாளாளர் புகழ்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

115.
மண்ணினால் மங்கையரால் பொருளால் அந்தோ
வருந்திமனம் மயங்கிமிக வாடி நின்றேன்
புண்ணியா நின்அருளை இன்னும் காணேன்
பொறுத்துமுடி யேன்துயரம் புகல்வ தென்னே
எண்ணினால் அளப்பரிய பெரிய மோன
இன்பமே அன்பர்தம திதயத் தோங்கும்
தண்ணினால் பொழில்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

116.
வஞ்சகராம் கானின்இடை அடைந்தே நெஞ்சம்
வருந்திஉறு கணவெயிலால் மாழாந் தந்தோ
தஞ்சம்என்பார் இன்றிஒரு பாவி நானே
தனித்தருள்நீர்த் தாகம்உற்றேன் தயைசெய் வாயோ
செஞ்சொல்மறை முடிவிளக்கே உண்மை ஞானத்
தேறலே முத்தொழில்செய் தேவர் தேவே
சஞ்சலம்நீத் தருள்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

117.
வாழாத வண்ணம்எனைக் கெடுக்கும் பொல்லா
வஞ்சகநெஞ் சால்உலகில் மாழாந் தந்தோ
பாழான மந்தையர்பால் சிந்தை வைக்கும்
பாவியேன் முகம்பார்க்கப் படுவ தேயோ
ஏழாய வன்பவத்தை நீக்கும் ஞான
இன்பமே என்அரசே இறையே சற்றும்
தாழாத புகழ்த்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

118.
உளந்தளர விழிசுருக்கும் வஞ்சர் பால்சென்
றுத்தமநின் அடியைமறந் தோயா வெய்யில்
இளந்தளிர்போல் நலிந்திரந்திங் சூழலும் இந்த
ஏழைமுகம் பார்த்திரங்காய் என்னே என்னே
வளந்தருசற் குணமலையே முக்கட் சோதி
மணியின்இருந் தொளிர்ஒளியே மயிலு'ர் மன்னே
தளந்தரும்ப&ஙதஇம் பொழில்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

119.
கல்லாத வஞ்சகர்பால் சென்று வீணாள்
கழித்து நிற்கும் கடையன்இவன் கருணை இல்லாப்
பொல்லாத பாவிஎன எண்ணி என்னைப்
புறம்போக்கில் ஐயாயான் புரிவ தென்னே
எல்லாம்செய் வல்லவனே தேவர் யார்க்கும்
இறைவனே மயில்ஏறும் எம்பி ரானே
சல்லாப வளத்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

120. கன்னேய நெஞ்சகர்மாட் டணுகி ஐயோ
கரைந்துருகி எந்தாய்நின் கருணை கானா
தென்னேஎன் றேங்கிஅழும் பாவி யேனுக்
கிருக்கஇடம் இலையோநின் இதயங் கல்லோ
பொன்னேஎன் உயிர்க்குயிராய்ப் பொருந்து ஞான
பூரணமே புண்ணியமே புனித வைப்பே
தன்னேரில் தென்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

121. பாவவினைக் கோர்இடமாம் மடவார் தங்கள்
பாழ்ங்குழிக்கண் வீழமனம் பற்றி அந்தோ
மாவல்வினை யுடன்மெலிந்திங் சூழல்கின் றேன்நின்
மலர்அடியைப் பேற்றேன்என் மதிதான் என்னே
தேவர்தொழும் பொருளேஎன் குலத்துக் கெல்லாம்
தெய்வமே அடியர்உளம் செழிக்கும் தேனே
தாவகன்றோர் புகழ்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

122. கன்னியர்தம் மார்பிடங்கொண் டலைக்கும் புன்சீழ்க்
கட்டிகளைக் கருதிமனம் கலங்கி வீணே
அன்னியனாய் அலைகின்றேன் மயக்கம் நீக்கி
அடிமைகொளல் ஆகாதோ அருட்பொற் குன்றே
சென்னிமிசைக் கங்கைவைத்தோன் அரிதில் பெற்ற
செல்வமே என்புருக்கும் தேனே எங்கும்
தன்னியல்கொண் டுறும்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

123. உள்ளமனக் குரங்காட்டித் திரியும் என்றன்
உளவறிந்தோ ஐயாநீ உன்னைப் போற்றார்
கள்ளமனக் குரங்குகளை ஆட்ட வைத்தாய்
கடையனேன் பொறுத்துமுடி கில்லேன் கண்டாய்
தெள்ளமுதப் பெருங்கடலே தேனே ஞானத்
தெளிவேஎன் தெய்வமே தேவர் கோவே
தள்ளரிய புகழ்த்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

124. வந்தாள்வாய் ஐயாவோ வஞ்சர் தம்பால்
வருந்துகின்றேன் என்றலறும் மாற்றம் கேட்டும்
எந்தாய்நீ இரங்காமல் இருக்கின் றாயால்
என்மனம்போல் நின்மனமும் இருந்த தேயோ
கந்தாஎன் றுரைப்பவர்தம் கருத்துள் ஊறும்
கனிரசமே கரும்பேகற் கண்டே நற்சீர்
தந்தாளும் திருத்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

125. ஊர்ஆதி இகழ்மாயக் கயிற்றால் கட்டுண்
டோ ய்ந்தலறி மனம்குழைந்திங் குழலு கின்றேன்
பார்ஆதி அண்டம்எலாம் கணக்கில் காண்போய்
பாவியேன் முகவாட்டம் பார்த்தி லாயோ
சீர்ஆதி பகவன்அருட் செல்வ மேஎன்
சிந்தைமலர்ந் திடஊறுந் தேனே இன்பம்
சார்ஆதி மலைத்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

126. வாஎன்பார் இன்றிஉன தன்பர் என்னை
வஞ்சகன்என் றேமறுத்து வன்கணாநீ
போஎன்பார் ஆகில்எங்குப் போவேன் அந்தோ
பொய்யனேன் துணைஇன்றிப் புலம்பு வேனே
கோஎன்பார்க் கருள்தருமக் குன்றே ஒன்றே
குணங்குறிஅற் றிடஅருளும் குருவே வாழ்க்கைத்
தாஎன்பார் புகழ்த்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

127. மாயைநெறி யாம்உலக வாழ்க்கை தன்னில்
வருந்திநினை அழைத்தலறி மாழ்கா நின்றேன்
தாயைஅறி யாதுவரும் சூல்உண் டோ என்
சாமிநீ அறியாயோ தயைஇல் லாயோ
பேயைநிகர் பாவிஎன நினைந்து விட்டால்
பேதையேன் என்செய்கேன் பெருஞ்சீர்க் குன்றே
சாயைகடல் செறிதணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

128. மின்னைநிகர்ந் தழிவாழ்க்கைத் துயரால் நெஞ்சம்
மெலிந்துநின தருள்பருக வேட்டுநின்றேன்
என்னைஇவன் பெரும்பாவி என்றே தள்ளில்
என்செய்கேன் தான்பெறும்சேய் இயற்றும் குற்ற
அன்னைபொறுத் திடல்நீதி அல்ல வோஎன்
ஐயாவே நீபொறுக்கல் ஆகா தோதான்
தன்னைநிகர் தரும்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

129. முந்தைவினை யால்நினது வழியில் செல்லா
முடனேன் தனைஅன்பர் முனிந்து பெற்ற
தந்தைவழி நில்லாத பாவி என்றே
தள்ளிவிடில் தலைசாய்த்துத் தயங்கு வேனே
எந்தைநின தருள்சற்றே அளித்தால் வேறோர்
எண்ணமிலேன் ஏகாந்தத் திருந்து வாழ்வேன்
சந்தனவான் பொழில்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

130. பன்னகநொந் துறுவஞ்ச உலகில் நின்று
பரதவித்துன் அருட்கெதிர்போய்ப் பார்க்கின் றேன்நின்
பொன்னருளைப் புணர்ந்துமன மகிழ்ந்து வாழப்
புண்ணியனே நாயேற்குப் பொருத்தம் இன்றோ
பின்னைஒரு துணைஅறியேன் தனியே விட்டால்
பெருமநினக் கழகேயோ பேதை யாம்என்
தன்னைஅளித் தருள்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

திருச்சிற்றம்பலம்.

8. ஆற்றா முறை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

131. விண்அ றாதுவாழ் வேந்தன் ஆதியர்
வேண்டி ஏங்கவும் விட்டென் நெஞ்சகக்
கண்அ றாதுநீ கலந்து நிற்பதைக்
கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன்
எண்அ றாத்துயர்க் கடலுள் முழ்கியே
இயங்கி மாழ்குவேன் குலவும் போரி6 வாழ்
சாமி யேதிருத் தணிகை நாதனே.
6. போரி-திருப்போருர்

132. வாட்கண் ஏழையர் மயலில் பட்டகம்
மயங்கி மால்அயன் வழுத்தும் நின்திருத்
தாட்கண் நேயம்அற் றுலக வாழ்க்கையில்
சஞ்ச ரித்துழல் வஞ்ச னேன்இடம்
ஆட்க ணேசுழல் அந்த கன்வரில்
அஞ்சு வேன்அலால் யாது செய்குவேன்
நாட்க ணேர்மலர்ப் பொழில்கொள் போரிவாழ்
நாய காதிருத் தணிகை நாதனே.

133. எண்ணில் புன்தொழில் எய்தி ஐயவோ
இயல்பின் வாழ்க்கையில் இயங்கி மாழ்கியே
கண்ணின் உண்மணி யாய நின்தனைக்
கருதி டாதுழல் கபட னேற்கருள்
நண்ணி வந்திவன் ஏழை யாம்என
நல்கி ஆண்டிடல் நியாய மேசொலாய்
தண்இ ரும்பொழில் சூழும் போரிவாழ்
சாமி யேதிருத் தணிகை நாதனே.

134. கூவி ஏழையர் குறைகள் தீரஆட்
கொள்ளும் வள்ளலே குறுகும் வாழ்க்கையில்
பாவி யேன்படும் பாட னைத்தையும்
பார்த்தி ருந்தும்நீ பரிந்து வந்திலாய்
சேவி யேன் எனில் தள்ளல் நீதியோ
திருவ ருட்கொரு சிந்து வல்லையோ
தாவி ஏர்வளைப் பயில்செய் போரிவாழ்
சாமி யேதிருத் தணிகை நாதனே.

135. சந்தை நேர்நடை தன்னில் ஏங்குவேன்
சாமி நின்திருத் தாளுக் கன்பிலேன்
எந்தை நீமகிழ்ந் தென்னை ஆள்வையேல்
என்னை அன்பர்கள் என்சொல் வார்களோ
நிந்தை ஏற்பினும் கருணை செய்திடல்
நித்த நின்அருள் நீதி ஆகுமால்
தந்தை தாய்என வந்து சீர்தரும்
தலைவ னேதிருத் தணிகை நாதனே.

136. செல்லும் வாழ்க்கையில் தியங்க விட்டுநின்
செய்ய தாள்துதி செய்தி டாதுழல்
கல்லும் வெந்நிடக் கண்டு மிண்டுசெய்
கள்ள நெஞ்சினேன் கவலை தீர்ப்பையோ
சொல்லும் இன்பவான் சோதி யேஅருள்
தோற்ற மேசுக சொருப வள்ளலே
சல்லி யங்கெட அருள்செய் போரிவாழ்
சாமி யேதிருத் தணிகை நாதனே.

137. ஏது செய்குவ னேனும் என்றனை
ஈன்ற நீபொறுத் திடுதல் அல்லதை
ஈது செய்தவன் என்றிவ் வேழையை
எந்த வண்ணம்நீ எண்ணி நீக்குவாய்
வாது செய்வன்இப் போது வள்ளலே
வறிய னேன்என மதித்து நின்றிடேல்
தாது செய்மலர்ப் பொழில்கொள் போரிவாழ்
சாமி யேதிருத் தணிகை நாதனே.

138. பேயும் அஞ்சுறும் பேதை யார்களைப்
பேணும் இப்பெரும் பேய னேற்கொரு
தாயும் அப்பனும் தமரும் நட்பும்ஆய்த்
தண்அ ருட்கடல் தந்த வள்ளலே
நீயும் நானும்ஓர் பாலும் நீருமாய்
நிற்க வேண்டினேன் நீதி ஆகுமோ
சாயும் வன்பவம் தன்னை நீக்கிடும்
சாமி யேதிருத் தணிகை நாதனே.

139. பொய்யர் தம்மனம் புகுதல் இன்றெனப்
புனித நு'லெலாம் புகழ்வ தாதலால்
ஐய நின்திரு அருட்கி ரப்பஇங்
கஞ்சி நின்றென்இவ் விஞ்சு வஞ்சனேன்
மெய்யர் உள்ளுளே விளங்கும் சோதியே
வித்தி லாதவான் விளைந்த இன்பமே
தைய லார்இரு வோரும் மேவுதோள்
சாமி யேதிருத் தணிகை நாதனே.

140. மாலின் வாழ்க்கையின் மயங்கி நின்பதம்
மறந்து ழன்றிடும் வஞ்ச நெஞ்சினேன்
பாலின் நீர்என நின்அ டிக்கணே
பற்றி வாழ்ந்திடப் பண்ணு வாய்கொலோ
சேலின் வாட்கணார் தீய மாயையில்
தியங்கி நின்றிடச் செய்கு வாய்கொலோ
சால நின்உளம் தான்எவ் வண்ணமோ
சாற்றி டாய்திருத் தணிகை நாதனே.

திருச்சிற்றம்பலம்.

9. இரந்த விண்ணப்பம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

141. நாளை ஏகியே வணங்குதும் எனத்தினம் நாளையே கழிக்கின்றோம்
ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர்திருத் தணிகேசன்
தாளை உன்னியே வாழ்ந்திலம் உயிர்உடல் தணந்திடல் தனைஇந்த
வேளை என்றறி வுற்றிலம் என்செய்வோம் விளம்பரும் விடையோமே.

142. விடைய வாழ்க்கையை விரும்பினன் நின்திரு விரை மலர்ப் பதம்போற்றேன்
கடைய நாயினேன் எவ்வணம் நின்திருக் கருணைபெற் றுய்வேனே
விடையில் ஏறிய சிவபரஞ் சுடர்உளே விளங்கிய ஒளிக்குன்றே
தடையி லாதபேர் ஆனந்த வெள்ளமே தணிகைஎம் பெருமானே.

143. பெருமை வேண்டிய பேதையில் பேதையேன் பெருந்துயர் உழக்கின்றேன்
ஒருமை ஈயும்நின் திருப்பதம் இறைஞ்சிலேன் உய்வதெப் படியேயோ
அருமை யாம்தவத் தம்மையும் அப்பனும் அளித்திடும் பெருவாழ்வே
தரும வள்ளலே குணப்பெருங் குன்றமே தணிகைமா மலையானே.

144. மலையும் வேற்கணார் மையலில் அழுந்தியே வள்ளல்நின் பதம்போற்றோ
தலையும் இப்பெருங் குறையினை ஐயகோ யாவரோ டுரைசெய்கேன்
நிலைகொள் ஆனந்த நிருத்தனுக் கொருபொருள் நிகழ்த்திய பெருவாழ்வே
தலைமை மேவிய சற்குரு நாதனே தணிகையம் பதியானே.

145. பதியும் அப்பனும் அன்னையும் குருவும்நற் பயன்தரு பொருளாய
கதியும் நின்திருக் கழல்அடி அல்லது கண்டிலன் எளியேனே
விதியும் மாலும்நின் றேத்திடும் தெய்வமே விண்ணவர் பெருமானே
வதியும் சின்மய வடிவமே தணிகைமா மலைஅமர்ந் திடுவாழ்வே.

146. வாழும் நின்திருத் தொண்டர்கள் திருப்பதம் வழுத்திடா துலகத்தே
தாழும் வஞ்சர்பால் தாழும்என் தன்மைஎன் தன்மைவன் பிறப்பாய
ஏழும் என்னதே ஆகிய தையனே எவர்எனைப் பொருகின்றோர்
ஊழும் நீக்குறும் தணிகைஎம் அண்ணலே உயர்திரு வருள்தேனே.

147. தேனும் தெள்ளிய அமுதமும் கைக்கும்நின் திருவருள் தேன்உண்டே
யானும் நீயுமாய்க் கலந்துற வாடும்நாள் எந்தநாள் அறியேனே
வானும் பூமியும் வழுத்திடும் தணிகைமா மலைஅமர்ந் திடுதேவே
கோனும் தற்பர குருவுமாய் விளங்கிய குமாரசற் குணக்குன்றே.

148. குன்று பொய்உடல் வாழ்வினை மெய்எனக் குறித்திவண் அலைகின்றேன்
இன்று நின்திரு வருள்அடைந் துய்வனோ இல்லைஇவ் வுலகத்தே
என்றும் இப்படிப் பிறந்திறந் துழல்வனோ யாதும்இங் கறிகில்லேன்
நன்று நின்திருச் சித்தம்என் பாக்கியம் நல்தணி கையில்தேவே.

149. தேவ ரும்தவ முனிவரும் சித்தரும் சிவன்அரி அயன்ஆகும்
முவ ரும்பணி முதல்வநின் அடியில்என் முடிஉற வைப்பாயேல்
ஏவ ரும்எனக் கெதிர்இலை முத்திவீ டென்னுடை யதுகண்டாய்
தாவ ரும்பொழில் தணிகையம் கடவுளே சரவண பவகோவே.

150. வேயை வென்றதோள் பாவையர் படுகுழி விழுந்தலைந் திடும்இந்த
நாயை எப்படி ஆட்கொளல் ஆயினும் நாதநின் செயல்அன்றே
தாயை அப்பனைத் தமரினை விட்டுனைச் சார்ந்தவர்க் கருள்கின்றோய்
மாயை நீக்குநல் அருள்புரி தணிகைய வந்தருள் இந்நாளே.

திருச்சிற்றம்பலம்.

10. கருணை மாலை

கலிவிருத்தம்

திருச்சிற்றம்பலம்

151. சங்க பாணியைச் சதுமு கத்தனைச்
செங்கண் ஆயிரத் தேவர் நாதனை
மங்க லம்பெற வைத்த வள்ளலே
தங்க ருள்திருத் தணிகை ஐயனே.

152. ஐய னேநினை அன்றி எங்கணும்
பொய்ய னேற்கொரு புகல்இ லாமையால்
வெய்ய னேன்என வெறுத்து விட்டிடேல்
மெய்ய னேதிருத் தணிகை வேலனே.

153. வேலன் மாதவன் வேதன் ஏத்திடும்
மேலன் மாமயில் மேலன் அன்பர்உள்
சால நின்றவன் தணிகை நாயகன்
வால நற்பதம் வைப்பென் நெஞ்சமே.

154. நெஞ்ச மேஇஃ தென்னை நின்மதி
வஞ்ச வாழ்வினில் மயங்கு கின்றனை
தஞ்சம் என்றருள் தணிகை சார்த்தியேல்
கஞ்ச மாமலர்க் கழல்கி டைக்குமே.

155. கிடைக்குள் மாழ்கியே கிலம்செய் அந்தகன்
படைக்குள் பட்டிடும் பான்மை எய்திடேன்
தடைக்குள் பட்டிடாத் தணிகை யான்பதத்
தடைக்க லம்புகுந் தருள்செ ழிப்பனே.

156. செழிக்கும் சீர்திருத் தணிகைத் தேவநின்
கொழிக்கும் நல்லருள் கொள்ளை கொள்ளவே
தழிக்கொண் டன்பரைச் சார்ந்தி லேன்இவண்
பழிக்குள் ஆகும்என் பான்மை என்னையோ.

157. என்னை என்னைஈ தென்றன் மாதவம்
முன்னை நன்னெறி முயன்றி லேனைநின்
பொன்னை அன்னதாள் போற்ற வைத்தனை
அன்னை என்னும்நல் தணிகை அண்ணலே.

158. அண்ணி லேன்நினை ஐய நின்அடி
எண்ணி லேன்இதற் கியாது செய்குவேன்
புண்ணி னேன்பிழை பொறுத்துக் கோடியால்
தண்ணின் நீள்பொழில் தணிகை அப்பனே.

159. அப்பன் என்னுடை அன்னை தேசிகன்
செப்பன் என்குலத் தெய்வம் ஆனவன்
துப்பன் என்உயிர்த் துணைவன் யாதும்ஓர்
தப்பில் அன்பர்சேர் தணிகை வள்ளலே.

160. வள்ளல் உன்அடி வணங்கிப் போற்றஎன்
உள்ளம் என்வசத் துற்ற தில்லையால்
எள்ளல் ஐயவோ ஏழைஎன் செய்கேன்
தள்ள ரும்பொழில் தணிகை வெற்பனே.

161. வெற்ப னேதிருத் தணிகை வேலவனே
பொற்ப னேதிருப் போரி நாதனே
கற்ப மேல்பல காலம் செல்லுமால்
அற்ப னேன்துயர்க் களவு சாற்றவே.

162. சாறு சேர்திருத் தணிகை எந்தைநின்
ஆறு மாமுகத் தழகை மொண்டுகொண்
டுறில் கண்களால் உண்ண எண்ணினேன்
ஈறில் என்னுடை எண்ணம் முற்றுமோ.

163. முற்று மோமனம் முன்னி நின்பதம்
பற்று மோவினைப் பகுதி என்பவை
வற்று மோசுக வாழ்வு வாய்க்குமோ
சற்றும் ஓர்கிலேன் தணிகை அத்தனே.

164. அத்த னேதணி காச லத்தருள்
வித்த னேமயில் மேற்கொள் வேலனே
பித்த னேன்பெரும் பிழைபொ றுத்திடில்
சுத்த அன்பர்கள் சொல்வர் ஏதமே.

165. ஏதி லார்என எண்ணிக் கைவிடில்
நீதி யோஎனை நிலைக்க வைத்தவா
சாதி வான்பொழில் தணிகை நாதனே
ஈதி நின்அருள் என்னும் பிச்சையே.

166. பிச்சை ஏற்றவன் பிள்ளை நீஎனில்
இச்சை ஏற்றவர்க் கியாது செய்குவாய்
பச்சை மாமயில் பரம நாதனே
கச்சி நேர்தணி கைக்க டம்பனே.

167. கடப்ப மாமலர்க் கண்ணி மார்பனே
தடப்பெ ரும்பொழில் தணிகைத் தேவனே
இடப்ப டாச்சிறி யேனை அன்பர்கள்
தொடப்ப டாதெனில் சொல்வ தென்கொலோ.

168. என்சொல் கேன்இதை எண்ணில் அற்புதம்
வன்சொ லேன்பிழை மதித்தி டாதுவந்
தின்சொ லால்இவண் இருத்தி என்றனன்
தன்சொல் செப்பரும் தணிகைத் தேவனே.

169. தேவ நேசனே சிறக்கும் ஈசனே
பாவ நாசனே பரம தேசனே
சாவ காசனே தணிகை வாசனே
கோவ பாசனே குறிக்கொள் என்னையே.

170. குறிக்கொள் அன்பரைக் கூடு றாதஇவ்
வெறிக்கொள் நாயினை வேண்டி ஐயநீ
முறிக்கொள் வாய்கொலோ முனிகொள் வாய்கொலோ
நெறிக்கொள் வோர்புகழ் தணிகை நித்தனே.

171. தணிகை மேவிய சாமி யேநினை
எணிகை விட்டிடேல் என்று தோத்திரம்
அணிகை நின்அடிக் கயர்ந்து நின்றுவீண்
கணிகை போல்எனைக் கலக்கிற் றுள்ளமே.

172. உள்ளம் நெக்குவிட் டுருகும் அன்பர்தம்
நள்அ கத்தினில் நடிக்கும் சோதியே
தள்அ ருந்திறல் தணிகை ஆனந்த
வெள்ள மேமனம் விள்ளச் செய்வையே.

173. செய்வ தன்றவன் சிறிய னேன்றனை
வைவர் அன்பர்கள் என்னில் மத்தனேன்
உய்வ தெவ்வணம் உரைசெய் அத்தனே
சைவ நாதனே தணிகை மன்னனே.

174. மன்னும் நின்அருள் வாய்ப்ப தின்றியே
இன்னும் இத்துயர் ஏய்க்கில் என்செய்கேன்
பொன்னின் அம்புயன் போற்றும் பாதனே
தன்னில் நின்றிடும் தணிகை மேலனே.

175. மேலை வானவர் வேண்டும் நின்திருக்
காலை என்சிரம் களிக்க வைப்பையோ
சாலை ஓங்கிய தணிகை வெற்பனே
வேலை ஏந்துகை விமல் நாதனே.

176. வேத மாமுடி விளங்கும் நின்திருப்
பாதம் ஏத்திடாப் பாவி யேன்தனக்
கீதல் இன்றுபோ என்னில் என்செய்கேன்
சாதல் போக்கும்நல் தணிகை நேயனே.

177. நேயம் நின்புடை நின்றி டாதாஎன்
மாய நெஞ்சினுள் வந்தி ருப்பையோ
பேய னேன்பெரும் பிழைபொ றுத்திடத்
தாய நின்கடன் தணிகை வாணனே.

178. வாணு தல்பெரு மாட்டி மாரொடு
காணு தற்குனைக் காதல் கொண்டனன்
ஏணு தற்கென தெண்ணம் முற்றுமோ
மாணு தற்புகழ்த் தணிகை வண்ணனே.

179. வண்ண னேஅருள் வழங்கும் பன்னிரு
கண்ண னேஅயில் கரங்கொள் ஐயனே
தண்ண னேர்திருத் தணிகை வேலனே
திண்ணம் ஈதருள் செய்யும் காலமே.

180. கால்கு றித்தஎன் கருத்து முற்றியே
சால்வ ளத்திருத் தணிகை சார்வன்என்
மால்ப கைப்பிணி மாறி ஓடவே
மேல்கு றிப்பனால் வெற்றிச் சங்கமே.

திருச்சிற்றம்பலம்

11. மருண்மாலை விண்ணப்பம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

181. சொல்லும் பொருளு மாய்நிறைந்த சுகமே அன்பர் துதிதுணையே
புல்லும் புகழ்சேர் நல்தணிகைப் பொருப்பின் மருந்தே பூரணமே
அல்லும் பகலும் நின்நாமம் அந்தோ நினைந்துன் ஆளாகேன்
கல்லும் பொருவா வன்மனத்தால் கலங்கா நின்றேன் கடையேனே.

182. கடையேன் வஞ்ச நெஞ்சகத்தால் கலுழ்கின் னேன்நின் திருக்கருணை
அடையேன் அவமே திரிகின்றேன் அந்தோ சிறிதும் அறிவில்லேன்
விடையே றீசன் புயம்படும்உன் விரைத்தாள் கமலம் பெறுவேனோ
கொடைஏர் அருளைத் தருமுகிலே கோவே தணிகைக் குலமணியே.

183. மணியே அடியேன் கண்மணியே மருந்தே அன்பர் மகிழ்ந்தணியும்
அணியே தணிகை அரசேதெள் அமுதே என்றன் ஆருயிரே
பிணிஏய் துயரால் வருந்திமனப் பேயால் அலைந்து பிறழ்கின்றேன்
தணியேன் தாகம் நின்அருளைத் தருதல் இலையேல் தாழ்வேனே.

184. தாழ்வேன் வஞ்ச நெஞ்சகர்பால் சார்வேன் தனக்குள் அருள்தந்தால்
வாழ்வேன் இலையேல் என்செய்கேன் வருத்தம் பொறுக்க மாட்டேனே
ஏழ்வே தனையும் கடந்தவர்தம் இன்பப் பெருக்கே என்உயிரே
போழ்வேல் கரங்கொள் புண்ணியனே புகழ்சேர் தணிகைப் பொருப்பரசே.

185. அரைசே அடியர்க் கருன்குகனே அண்ணா தணிகை ஐயாவே
விரைசேர் கடம்பமலர்ப்புயனே வேலா யுதக்கை மேலோனே
புரைசேர் மனத்தால் வருந்திஉன்றன் பூம்பொற் பதத்தைப் புகழ்கில்லேன்
தரைசேர் வாழ்வில் தயங்குகின்றேன் அந்தோ நின்று தனியேனே.

186. தனியே துயரில் வருந்திமனம் சாம்பி வாழ்க்கைத் தளைப்பட்டிங்
கினிஏ துறுமோ என்செய்கேன் என்றே நின்றேற் கிரங்காயோ
கனியே பாகே கரும்பேஎன் கண்ணே தணிகைக் கற்பகமே
துனிஏய் பிறவி தனைஅகற்றும் துணையே சோதிச் சுகக்குன்றே.

187. குன்றே மகிழ்ந்த குணக்குன்றே கோவே தணிகைக் குருபரனே
நன்றே தெய்வ நாயகமே நவிலற் கரிய நல்உறவே
என்றே வருவாய் அருள்தருவாய் என்றே புலம்பி ஏங்குற்றேன்
இன்றே காணப் பெறில்எந்தாய் இறவேன் பிறவேன் இருப்பேனே.

188. இருப்பேன் துயர்வாழ் வினில்எனினும் எந்தாய் நினது பதங்காணும்
விருப்பேன் அயன்மால் முதலோரை வேண்டேன் அருள வேண்டாயோ
திருப்பேர் ஒளியே அருட்கடலே தெள்ளார் அமுதே திருத்தணிகைப்
பொருப்பே மகிழ்ந்த புண்ணியமே புனித ஞான போதகமே.

189. போதா நத் அருட்கனியே புகலற் கரிய பொருளேஎன்
நாதா தணிகை மலைஅரசே நல்லோர் புகழும் நாயகனே
ஓதா தவமே வருந்துயரால் உழன்றே பிணியில் உலைகின்றேன்
ஏதாம் உனதின் அருள்ஈயா திருந்தால் அந்தோ எளியேற்கே.

190. எளியேன் நினது திருவருளுக் கெதிர்நோக் குற்றே இரங்குகின்ற
களியேன் எனைநீ கைவிட்டால் கருணைக் கியல்போ கற்பகமே
அளியே தணிகை அருட்சுடரே அடியர் உறவே அருள்ஞானத்
துளியே அமையும் எனக்கெந்தாய் வாஎன் றொருசொல் சொல்லாயே.

திருச்சிற்றம்பலம்

12. பொறுக்காப் பத்து

எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

191. மெய்யர்உள் ளகத்தின் விளங்கும்நின் பதமாம்
விரைமலர்த் துணைதமை விரும்பாப்
பொய்யர் தம் இடத்திவ் வடியனேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி
அளித்திடும் தெள்ளிய அமுதே
தையலர் மயக்கற் றவர்க்கருள் பொருளே
தணிகைவாழ் சரவண பவனே.

192. நன்மைய எல்லாம் அளித்திடும் உனது
நளினமா மலர்அடி வழுத்தாப்
புன்மையர் இடத்திவ் வடியனேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
சின்மயப் பொருள்நின் தொண்டர்பால் நாயேன்
சேர்ந்திடத் திருவருள் புரியாய்
தன்மயக் கற்றோர்க் கருள்தரும் பொருளே
தணிகைவாழ் சரவண பவனே.

193. மருள்இலா தவர்கள் வழுத்தும்நின் அடியை
மனமுற நினைந்தகத் தன்பாம்
பொருள்இலா தவர்பால் ஏழையேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
அன்பர்பால் இருந்திட அருளாய்
தரளவான் மழைபெய் திடும்திருப் பொழில்சூழ்
தணிகைவாழ் சரவண பவனே.

194. நிலைஅருள் நினது மலர்அடிக் கன்பு
நிகழ்ந்திட நாள்தொறும் நினையாப்
புலையர்தம் இடம்இப் புன்மையேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
மலைஅர சளித்த மரகதக் கொம்பர்
வருந்திஈன் றெடுத்தமா மணியே
தலைஅர சளிக்க இந்திரன் புகழும்
தணிகைவாழ் சரவண பவனே.

195. வல்இருள் பவம்தீர் மருந்தெனும் நினது
மலர்அடி மனம்உற வழுத்தாப்
புல்லர்தம் இடம்இப் பொய்யனேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
ஒல்லையின் எனைமீட் டுன்அடி யவர்பால்
உற்றுவாழ்ந் திடச்செயின் உய்வேன்
சல்லமற் றவர்கட் கருள்தரும் பொருளே
தணிகைவாழ் சரவண பவனே.

196. கற்பிலார் எனினும் நினைந்திடில் அருள்நின்
கருணைஅம் கழல்அடிக் கன்பாம்
பொற்பிலா தவர்பால் ஏழையேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
அற்பிலேன்7 எனினும் என்பிழை பொறுத்துன்
அடியர்பால் சேத்திடில் உய்வேன்
தற்பரா பரமே சற்குண மலையே
தணிகைவாழ் சரவண பவனே.

197. பத்திகொண் டவருள் பரவிய ஒளியாம்
பரஞ்சுடர் நின்அடி பணியும்
புத்திகொள் ளலர்பால் எளியனேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
நித்திய அடியர் தம்முடன் கூட்ட
நினைந்திடில் உய்குவன் அரசே
சத்திசெங் கரத்தில் தரித்திடும் அமுதே
தணிகைவாழ் சரவண பவனே.

198. நீற்றணி விளங்கும் அவர்க்கருள் புரியும்
நின்அடிக் கமலங்கள் நினைந்தே
போற்றிடா தவர்பால் பெய்யனேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
ஆற்றல்கொள் நின்பொன் அடியருக் கடியன்
ஆச்செயில் உய்குவன் அமுதே
சாற்றிடும் பெருமைக் களவிலா தோங்கும்
தணிகைவாழ் சரவண பவனே.

199. பரிந்திடும் மனத்தோர்க் கருள்செயும் நினது
பாததா மரைகளுக் கன்பு
புரிந்திடா தவர்பால் எளியனேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
தெரிந்திடும் அன்பர் இடம்உறில் உய்வேன்
திருவுளம் அறிகிலன் தேனே
சரிந்திடும் கருத்தோர்க் கரியநற் புகழ்கொள்
தணிகைவாழ் சரவண பவனே.

200. எண்உறும் அவர்கட் கருளும்நின் அடியை
ஏத்திடா தழிதரும் செல்வப்
புண்உறும் அவர்பால் எளியனேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
கண்உறு மணியாம் நின்அடி யவர்பால்
கலந்திடில் உய்குவன் கரும்பே
தண்உறும் கருணைத் தனிப்பெருங் கடலே
தணிகைவாழ் சரவண பவனே.

திருச்சிற்றம்பலம்

13. வேட்கை விண்ணப்பம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

201. மன்னே என்றன் உயிர்க்குயிரே மணியே தணிகை மலைமருந்தே
அன்னே என்னை ஆட்கொண்ட அரசே தணிகை ஐயாவே
பொன்னே ஞானப் பொங்கொளியே புனித அருளே பூரணமே
என்னே எளியேன் துயர்உழத்தல் எண்ணி இரங்கா திருப்பதுவே.

202. இரங்கா நின்றிங் கலைதரும்இவ் வெளியேன் கனவின் இடத்தேனும்
அரங்கா அரவின் நடித்தோனும் அயனும் காண்டற் கரிதாய
உரங்கா முறும்மா மயில்மேல்நின் உருவம் தரிசித் துவப்படையும்
வரங்கா தலித்தேன் தணிகைமலை வாழ்வே இன்று வருவாயோ.

203. வருவாய் என்று நாள்தோறும் வழிபார்த் திரங்கி மனந்தளர்ந்தேன்
கருவாய் பவன்என் றெனைத்தள்ளக் கருதுவாயே அன்றிஅருள்
உருவாய் வந்து தருவாயே தணிகா சலத்துள் உற்றமர்ந்த
ஒருவர் உன்றன் திருவுளத்தை உணரேன் என்செய் துய்கேனே.

204. உய்யும் பொருட்டுன் திருப்புகழை உரையேன் அந்தோஉரைக்கடங்காப்
பொய்யும் களவும் அழுக்காறும் பொருளாக் கொண்டேன் புலையேனை
எய்யும் படிவந் தடர்ந்தியமன் இழுத்துப் பறிக்கில் என்னேயான்
செய்யும் வகைஒன் றறியேனே தென்பால் தணிகைச் செஞ்சுடரே.

205. செஞ்சொல் சுவையே மெய்ஞ்ஞானச் செல்வப் பெருக்கே தெள்ளமுதே
விஞ்சைப் புலவர் புகழ்தணிகை விளக்கே துளக்கில் வேலோனே
வெஞ்சொல் புகழும் வஞ்சகர்பால் மேவி நின்தாள் மலர்மறந்தே
பஞ்சில் தமியேன் படும்பாட்டைப் பார்த்தும் அருட்கண் பார்த்திலையே.

206. பார்க்கின் றிலையே பன்னிருகண் படைத்ததும் எளியேன் பாடனைத்தும்
தீர்க்கின் றிலையே என்னேயான் செய்வேன் சிறியேன் சீமானே போர்க்குன் றொடுசூர் புயக்குன்றும் பொடிசெய் வேற்கைப் புண்ணியனே
சீர்க்குன் றெனும்நல் வளத்தணிகைத் தேவே மயில்ஊர் சேவகனே.

207. சேவற் கொடிகொள் குணக்குன்றே சிந்தா மணியே யாவர்கட்கும்
காவற் பதியே தணிகைவளர் கரும்பே கனியே கற்பகமே
முவாக் கிறையே வேய்ஈன்ற முத்தன் அளித்த முத்தேநல்
தேவர்க் கருள்நின் சேவடிக்கே விழைந்தேன் யாதும்தெரியனே.

208. தெரியேன் உனது திருப்புகழைத் தேவே உன்றன் சேவடிக்கே
பரியேன் பணியேன் கூத்தாடேன் பாடேன் புகழைப் பரவசமாய்த்
தரியேன் தணிகை தனைக்காணேன் சாகேன் நோகேன் கும்பிக்கே
உரியேன் அந்தோ எதுகொண்டிங் குய்கேன் யாதுசெய்கேனே.

209. செய்வ துனது திருவடிக்காம் திறனே சிந்தை நின்பாலே
வைவ துனைகனை நினையாத வஞ்ச கரையே வழுத்திநிதம்
உய்வ தனது திருநாமம் ஒன்றைப் பிடித்தே மற்றொன்றால்
எய்வ தறியேன் திருத்தணிகை எந்தாய் எந்தாய் எளியேனே.

210. எளியேன் நினது சேவடியாம் இன்ப நறவை எண்ணிஎண்ணி
அளியேன் நெஞ்சம் சற்றேனும் அன்பொன் றில்லேன் அதுசிறிதும்
ஒளியேன் எந்தாய் என்உள்ளத் தொளித்தே எவையும் உணர்கின்றாய்
வளியே முதலாய் நின்றருளும் மணியே தணிகை வாழ்மன்னே.

14. ஆறெழுத் துண்மை

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

211. பெருமை நிதியே மால்விடைகொள் பெம்மான் வருந்திப் பெறும்பேறே
அருமை மணியே தணிகைமலை அமுதே உன்றன் ஆறெழுத்தை
ஒருமை மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
இருமை வளனும் எய்தும்இடர் என்ப தொன்றும் எய்தாதே.

212. எய்தற் கரிய அருட்சுடரே எல்லாம் வல்ல இறையோனே
செய்தற் கரிய வளத்தணிகைத் தேவே உன்றன் ஆறெழுத்தை
உய்தற் பொருட்டிங் குச்சரித்தே உயர்ந்த திருவெண் ணீறிட்டால்
வைதற் கில்லாப் புகழ்ச்சிவரும் வன்கண் ஒன்றும் வாராதே.

213. வாரா இருந்த அடியவர்தம் மனத்தில் ஒளிரும் மாமணியே
ஆரா அமுதே தணிகைமலை அரசே உன்றன் ஆறெழுத்தை
ஓரா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
ஏரார் செல்வப் பெருக்கிகவா இடும்பை ஒன்றும் இகந்திடுமே.

214. இகவா அடியர் மனத்தூறும் இன்பச் சுவையே எம்மானே
அகவா மயில்ஊர் திருத்தணிகை அரசே உன்றன் ஆறெழுத்தை
உகவா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
சுகவாழ் வின்பம் அதுதுன்னும் துன்பம் ஒன்றும் துன்னாதே.

215. துன்னும் மறையின் முடிவில்ஒளிர் தூய விளக்கே சுகப்பெருக்கே
அன்னை அனையாய் தணிகைமலை அண்ணா உன்றென் ஆறெழுத்தை
உன்னி மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
சென்னி அணியாய் அடிசேரும் தீமை ஒன்றும் சேராதே.

216. சேரும் முக்கண் கனிகனிந்த தேனே ஞானச் செழுமணியே
யாரும் புகழும் தணிகைஎம தன்பே உன்றன் ஆறெழுத்தை
ஓரும் மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
பாரும் விசும்பும் பதஞ்சாரும் பழங்கண் ஒன்றும் சாராதே.

217. சார்ந்த அடியார்க் கருள்அளிக்கும் தருமக் கடலே தற்பரமே
வார்ந்த பொழில்சூழ் திருத்தணிகை மணியே உன்றன் ஆறெழுத்தை
ஓர்ந்து மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
ஆர்ந்த ஞானம் உறும்அழியா அலக்கண் ஒன்றும் அழிந்திடுமே.

218. அழியாப் பொருளே என்உயிரே அயில்செங் கரங்கொள் ஐயாவே
கழியாப் புகழ்சேர் தணிகைஅமர் கந்தா உன்றன் ஆறெழுத்தை
ஒழியா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
பழியா இன்பம் அதுபதியும் பனிமை ஒன்றும் பதியாதே.

219. பதியே எங்கும் நிறைந்தருளும் பரம சுகமே பரஞ்சுடரே
கதியே அளிக்கும் தணிகைஅமர் கடம்பா உன்றன் ஆறெழுத்தை
உதியேர் மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
துதிஏர் நினது பதந்தோஎன்றும் துன்பம் ஒன்றும் தோன்றாதே.

220. தோன்ற ஞானச் சின்மயமே துஎய சுகமே சுயஞ்சுடரே
ஆன்றார் புகழும் தணிகைமலை அரசே உன்றன் ஆறெழுத்தை
ஊன்றா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
ஈன்றான் நிகரும் அருள்அடையும் இடுக்கண் ஒன்றும் அடையாதே.

திருச்சிற்றம்பலம்

15. போக் குரையீடு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

221. கற்கி லேன்உன தருட்பெயர் ஆம்குக கந்தஎன் பவைநாளும்
நிற்கி லேன்உன தாகம நெறிதனில் நீசனேன் உய்வேனோ
சொற்கி லேசமில் அடியவர் அன்பினுள் தோய்தரு பசுந்தேனே
அற்கி லேர்தரும் தணிகைஆர் அழுதமே ஆனந்த அருட்குன்றே.

222. பாவ வாழ்க்கையில் பாவியேன் செய்திடும் பண்பிலாப் பிழைநோக்கித்
தேவ ரீர்மன திரக்கமுற் றேஅருள் செய்திடா திருப்பீரேல்
காவ லாகிய கடும்பிணித் துயரம்இக் கடையனேன் தனக்கின்னும்
யாவ தாகுமோ என்செய்கோ என்செய்கோ இயலும்வேல் கரத்தீரே.

223. சேவி யாதஎன் பிழைகளை என்னுறே சிறிதறி தரும்போதோ
பாவி யேன்மனம் பகீலென வெதும்பியுள் பதைத்திடக் காண்கின்றேன்
ஆவி யேஅருள் அமுதமே நின்திரு வருள்தனக் கென்னாமோ
பூவில் நாயகன் போற்றிடும் தணிகையம் பொருப்பமர்ந் திடுவாழ்வே.

224. துன்பி னால்அகம் வெதும்பிநைந் தயர்ந்துநின் துணைஅடி மலர்ஏத்தும்
அன்பி லாதஇப் பாவியேன் செய்பிழை அனைத்தையும் பொறுப்பாயேல்
வன்பி லாதநின் அடியவர் தம்திரு மனத்தினுக் கென்னாமோ
இன்பி னால்சுரர் போற்றிடும் தணிகைவாழ் இறைவனே எம்மானே.

225. என்செய் கேன்இனும் திருவருள் காண்கிலேன் எடுக்கும் துயர்உண்டேன்
கன்செய் பேன்மனக் கடையனேன் என்னினும் காப்பதுன் கடன்அன்றோ
பொன்செய் குன்றமே பூரண ஞானமே புராதனப் பொருள்வைப்பே
மன்செய் மாணிக்க விளக்கமே தணிகைவாழ் வள்ளலே மயிலோனே.

226. மண்ணில் நண்ணிய வஞ்சகர் பால்கொடு வயிற்றினால் அலைப்பட்டேன்
கண்ணில் நண்ணரும் காட்சியே நின்திருக் கடைக்கண்ணோக் கருள்நோக்கி
எண்ணி எண்ணிநெஞ் சழிந்துகண் ணீர்கொளும் ஏழையேன் தனக்கின்னும்
புண்ணில் நண்ணிய வேல்எனத் துயர்உறில் புலையன்என் செய்கேனே.

227. மலங்கி வஞ்சகர் மாட்டிரந் தையகோ வருந்திநெஞ் சயர்வுற்றே
கலங்கி நின்திருக் கருணையை விழையும்என் கண்அருள் செய்யாயோ
இலங்கி எங்கணும் நிறைந்தருள் இன்பமே எந்தையே எந்தாயே
நலங்கி ளர்ந்திடும் தணிகையம் பதியமர் நாயக மணிக்குன்றே.

228. சைவ நாயக சம்பந்தன் ஆகிய தமிழ்அருட் குன்றேஎன்
தெய்வ மேநினை அன்றிஓர் துணையிலேன் திருவருள் அறியாதோ
வைவ தேகொளும் வஞ்சகர் தம்இடை வருந்திநெஞ் சழிகின்றேன்
செய்வ தோர்கிலேன் கைவிடில் என்செய்கேன் தெளிவிலாச் சிறியேனே.

229. வாழ்வில் ஆம்சிறு களிப்பினால் உன்றனை மறந்திறு மாக்கின்றேன்
தாழ்வி லேசிறி தெண்ணிநொந் தயர்வன்என் தன்மைநன் றருள்ஆளா
கேழ்வி மேவிய அடியவர் மகிழ்வுறக் கிடைத்தருள் பெருவாழ்வே
வேழ்வி8 ஓங்கிய தணிகைமா மலைதனில் விளங்கிவீற் றிருப்போனே.
8. கேழ்வி வேழ்வி என்பன எதுகை நோக்கித் திரித்தவாறு. தொ.வே.

230. என்றும் மாதர்மேல் இச்சைவைத் துன்றனை எண்ணுவேன் துயருற்றால்
கன்று நெஞ்சகக் கள்வனேன் அன்பினைக் கருத்திடை எணில்சால
நன்று நன்றெனக் கெவ்வணம் பொன்அருள் நல்குவை அறிகில்லேன்
துன்று மாதவர் போற்றிடும் தணிகைவாழ் சோதியே சுகவாழ்வே.


16. பணித்திறம் வேட்டல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

231. நண்ணேனோ மகிழ்வினொடும் திருத்தணிகை மலைஅதனை நண்ணி என்றன்
கண்ணேநீ அமர்ந்தஎழில் கண்குளிரக் காணேனோ கண்டு வாரி
உண்ணேனோ ஆனந்தக் கண்ணீர்கொண் டாடிஉனக் குகப்பாத் தொண்டு
பண்ணேனோ நின்புகழைப் பாடேனோ வாயாரப் பாவி யேனே.

232. பாவியேன் படுந்துயருக் கிரங்கிஅருள் தணிகையில்என் பால்வா என்று
கூவிநீ ஆட்கொளஓர் கனவேனும் காணேனோ குணப்பொற் குன்றே
ஆவியே அறிவேஎன் அன்பேஎன் அரசேநின் அடியைச் சற்றும்
சேவியேன் எனினும்எனைக் கைவிடேல் அன்பர்பழி செப்பு வாரே.

233. வாரேனோ திருத்தணிகை வழிநோக்கி வந்தென்கண் மணியே நின்று
பாரேனோ நின்அழகைப் பார்த்துலக வாழ்க்கைதனில் படும்இச் சோபம்
தீரேனோ நின்அடியைச் சேவித்தா னந்தவெள்ளம் திளைத்தா டேனோ
சாரேனோ நின்அடியர் சமுகம்அதைச் சார்ந்தவர்தாள் தலைக்கொள் ளேனோ.

234. கொள்ளேனோ நீஅமர்ந்த தணிகைமலைக் குறஎண்ணம் கோவே வந்தே
அள்ளேனோ நின்அருளை அள்ளிஉண்டே ஆனந்தத் தழுந்தி ஆடித்
துள்ளேனோ நின்தாளைத் துதியேனோ துதித்துலகத் தொடர்பை எல்லாம்
தள்ளேனோ நின்அடிக்கீழ்ச் சாரேனோ துணைஇல்லாத் தனிய னேனே.

235. தனியேஇங் குழல்கின்ற பாவியேன் திருத்தணிகா சலம்வாழ் ஞானக்
கனியேநின் வேடியைக் கண்ஆரக் கண்டுமனம் களிப்பு றேனோ
துனியேசெய் வாழ்வில்அலைந் தென்எண்ணம் முடியாது சுழல்வேன் ஆகில்
இனிஏது செய்வேன்மற் றொருதுணையும் காணேன்இவ் வேழை யேனே.

236. இவ்வேளை அருள்தணிகை அமர்ந்தருளும் தேவைஎன திருகண் ஆய
செவ்வேளை மனங்களிப்பச் சென்றுபுகழ்ந் தானந்தத் தெளிதேன்உண்டே
எவ்வேளை யும்பரவி ஏத்தேனோ அவன்எணிகள் இயற்றி டேனோ
தெவ்வேளை அடர்க்கவகை தெரியாமல் உழல்தருமிச் சிறிய னேனே.

237. சிறியேன்இப் போதெகித் திருத்தணிகை மலைஅமர்ந்த தேவின் பாதம்
குறியேனோ ஆனந்தக் கூத்தாடி அன்பர்கள்தம் குழாத்துள் சென்றே
அறியேனோ பொருள்நிலையை அறிந்தெனதென் பதைவிடுத்திவ் வகில மாயை
முறியேனோ உடல்புளகம் முடேனோ நன்னெறியை முன்னி இன்றே.

238. முன்னேனோ திருத்தணிகை அடைந்திடநின் சந்நிதியின் முன்னே நின்று
மன்னேனோ அடியருடன் வாழேனோ நின்அடியை வாழ்த்தி டேனோ
உன்னேனோ நன்னிலையை உலகத்தோர் எல்லீரும் உங்கே வாரும்
என்னேனோ நின்பெயரை யார்கூறி னாலும் அவர்க் கிதங்கூ றேனோ.

239. கூறேனோ திருத்தணிகைக் குற்றுன்அடிப் புகழதனைக் கூறி நெஞ்சம்
தேறேனோ நின்அடியர் திருச்சமுகம் சேரேனோ தீராத் துன்பம்
ஆறேனோ நின்அடியன் ஆகேனோ பவக்கடல்விட் டகன்றே அப்பால்
ஏறேனோ அருட்கடலில் இழியேனோ ஒழியாத இன்பம் ஆர்ந்தே.

240. தேடேனோ என்நாதன் எங்குற்றான் எனஓடித் தேடிச் சென்றே
நாடேனோ தணிகைதனில் நாயகனே நின்அழகை நாடி நாடிக்
கூடேனோ அடியருடன் கோவேஎம் குகனேஎம் குருவே என்று
பாடேனோ ஆனந்தப் பரவசம்உற் றுன்கமலப் பதம்நண் ணேனோ.

திருச்சிற்றம்பலம்

17. நெஞ்சொடு புலத்தல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

241. வாவா என்ன அருள்தணிகை வருந்தை என்கண் மாமணியைப்
பூவாய் நறவை மறந்தவநாள் போக்கின் றதுவும் போதாமல்
முவா முதலின் அருட்கேலா முட நினைவும் இன்றெண்ணி
ஆவா நெஞ்சே எனைக்கெடுத்தாய் அந்தோ நீதான் ஆவாயோ.

242. வாயாத் துரிசற் றிடும்புலவோர் வழுத்தும் தணிகை மலைஅமுதைக்
காயாக் கனியை மறந்தவநாள் கழிக்கின் றதுவும் போதாமல்
ஈயாக் கொடியர் தமக்கின்றி ஏலா நினைவும் இன்றெண்ணி
மாயா என்றன் வாழ்வழித்தாய் மனமே நீதான் வாழ்வாயோ.

243. வாழும் படிநல் அருள்புரியும் மருவுந் தணிகை மலைத்தேனைச்
சூழும் கலப மயில்அரசைத் துதியாப் பவமும் போதாமல்
வீழும் கொடியர் தமக்கன்றி மேவா நினைவும் மேவிஇன்று
தாழும் படிஎன் தனைஅலைத்தாய் சவலை மனம்நீ சாகாயோ.

244. காயோம் எனநின் றவர்க்கினிய கனியாம் தணிகைக் கற்பகத்தைப்
போய்ஓர் கணமும் போற்றுகிலாய் புன்மை புரிந்தாய் புலங்கெட்டாய்
பேயோ எங்கும் திரிந்தோடிப் பேணா என்பைப் பேணுகின்ற
நாயோ மனமே நீஉனைநான் நம்பி வாளா நலிந்தேனே.

245. தேனும் கடமும் திகழ்தணிகைத் தேவை நினையாய் தீநரகம்
மானும் நடையில் உழல்கின்றாய் மனமே உன்றன் வஞ்சகத்தால்
நானும் இழந்தேன் பெருவாழ்வை நாய்போல் அலைந்திங் கவமே9நீ
தானும் இழந்தாய் என்னேஉன் தன்மை இழிவாம் தன்மையதே.
9. நலித்திங்கவமே. தொ.வே.முதற்பதிப்பு, ச.மு.க.பதிப்பு

246. தன்னால் உலகை நடத்தும்அருட் சாமி தணிகை சாராமல்
பொன்னால் மண்ணால் பூவையரால் புலம்பி வருந்தும் புல்நெஞ்சே
உன்னால் என்றன் உயர்விழந்தேன் உற்றார் இழந்தேன் உன்செயலைச்
சொன்னால் நகைப்பர் எனைவிட்டும் தொலையாய் இங்கு நிலையாயே.

247. நிலைக்கும் தணிகை என்அரசை நீயும் நினையாய் நினைப்பதையும்
கலைக்கும் தொழில்கொண் டெனைக்கலக்கம் கண்டாய் பலன்என் கண்டாயே
முலைக்கும் கலைக்கும் விழைந்தவமே முயங்கும் முட முழுநெஞ்சே
அலைக்கும் கொடிய விடம்நீஎன் றறிந்தேன் முன்னர் அறிந்திலனே.

248. இலதை நினைப்பாய் பித்தர்கள்போல் ஏங்கா நிற்பாய் தணிகையில்என்
குலதெய் வமுமாய்க் கோவாய்சற் குருவாய் நின்ற குகன்அருளே
நலதென் றறியாய் யான்செய்த நன்றி மறந்தாய் நாணாதென்
வலதை அழித்தாய் வலதொடுநீ வாழ்வாய் கொல்லோ வல்நெஞ்சே.

249. நெஞ்சே உகந்த துணைஎனக்கு நீஎன் றறிந்தே நேசித்தோன்
மஞ்சேர் தணிகை மலைஅமுதை வாரிக் கொளும்போ தென்னுள்ளே
நஞ்சே கலந்தாய் உன்உறவு நன்றே இனிஉன் நட்பகன்றால்
உய்ஞ்சேன் இலையேல் வன்னரகத் துள்ளேன் கொள்ளேன் ஒன்றையுமே.

250. கொள்ளும் பொழில்சூழ் தணிகைமலைக் கோவை நினையா தெனைநரகில்
தள்ளும் படிக்கோ தலைப்பட்டாய் கசத்தின் மடவார் தம்மயலாம்
கள்ளுண் டந்தோ வெறிகொண்டாய் கலைத்தாய் என்னைக் கடந்தோர்கள்
எள்ளும் படிவத் தலைக்கின்றாய் எனக்கென் றெங்கே இருந்தாயோ.

251. இருந்தாய் இங்கு கண்டவிடத் தேகா நின்றாய் அவ்விடத்தும்
பொருந்தாய் மீண்டும் புகுவாய்பின் போவாய் வருவாய் புகழ்த்தணிகை
மருந்தாய் நின்ற குகன்அடியை வழுத்தாய் எனையும் வலிக்கின்றாய்
திருந்தாய் நெஞ்சே நின்செயலைச் செப்ப எனக்குத் திடுக்கிடுமே.

திருச்சிற்றம்பலம்


18. புன்மை நினைந் திரங்கல்
கட்டளைக் கலிப்பா
திருச்சிற்றம்பலம்

252. மஞ்சட் பூச்சின் மினுக்கில்இ ளைஞர்கள்
மயங்க வேசெயும் வாள்விழி மாதர்பால்
கெஞ்சிக் கொஞ்சி நிறைஅழிந் துன்அருட்
கிச்சை நீத்துக் கிடந்தனன் ஆயினேன்
மஞ்சுற் றோங்கும் பொழில்தணி காசல
வள்ளல் என்வினை மாற்றுதல் நீதியே
தஞ்சத் தால்வந் தடைந்திடும் அன்பர்கள்
தம்மைக் காக்கும் தனிஅருட் குன்றமே.

253. முலையைக் காட்டி மயக்கிஎன் ஆருயிர்
முற்றும் வாங்குறும் முண்டைகள் நன்மதி
குலையக் காட்டும் கலவிக்கி சைந்துநின்
கோலங் காணக் குறிப்பிலன் ஆயினேன்
நிலையைக் காட்டும்நல் ஆனந்த வெள்ளமே
நேச நெஞ்சகம் நின்றொளிர் தீபமே
கலையைக் காட்டும் மதிதவழ் நற்றணி
காச லத்தமர்ந் தோங்கதி காரனே.

254. வஞ்ச மேகுடி கொண்டு விளங்கிய
மங்கை யர்க்கு மயல்உழந் தேஅவர்
நஞ்சம் மேவு நயனத்தில் சிக்கிய
நாயி னேன்உனை நாடுவு தென்றுகாண்
கஞ்சம் மேவும் அயன்புகழ் சோதியே
கடப்ப மாமலர்க் கந்தசு கந்தனே
தஞ்ச மேஎன வந்தவர் தம்மைஆள்
தணிகை மாமலைச் சற்குரு நாதனே.

255. பாவம் ஓர்உரு வாகிய பாவையர்
பன்னு கண்வலைப் பட்டும யங்கியே
கோவை வாய்இதழ்க் கிச்சைய தாகிநின்
குரைக ழற்கன்பு கொண்டிலன் ஆயினேன்
மேவு வார்வினை நீக்கிஅ ளித்திடும்
வேல னேதணி காசல மேலேனே
தேவர் தேடரும் சீர்அருட் செல்வனே
தெய்வ யானை திருமண வாளனே.

256. கரத்தைக் காட்டியே கண்களை நீட்டியே
கடைய னேன்உயிர் வாட்டிய கன்னியர்
உரத்தைக் காட்டி மயக்கம யங்கினேன்
உன்றன் பாத உபயத்தைப் போற்றிலேன்
புரத்தைக் காட்டு நகையின்எ ரித்தோர்
புண்ணி யற்குப் புகல்குரு நாதனே
வரத்தைக் காட்டும் மலைத்தணி கேசனே
வஞ்ச னேற்கருள் வாழ்வுகி டைக்குமோ.

257. காசம் மேகம் கடும்பிணி சூலைமோ
காதி யால்தந்து கண்கலக் கம்செயும்
மோச மேநிசம் என்றுபெண் பேய்களை
முன்னி னேன்நினை முன்னிலன் ஆயினேன்
பாசம் நீக்கிடும் அன்பர்கள் போல்எனைப்
பாது காக்கும் பரம்உனக் கையனே
தேசம் யாவும் புகழ்தணி காசலச்
செல்வ மேஅருட் சிற்சுக வாரியே.

258. ஐயம் ஏற்றுத் திரிபவர் ஆயினும்
ஆசை ஆம்பொருள் ஈந்திட வல்லரேல்
குய்யம் காட்டும்ம டந்தையர் வாய்ப்பட்டுன்
கோல மாமலர்ப் பாதம்கு றித்திலேன்
மைஉ லாம்பொழில் சூழும்த ணிகைவாழ்
வள்ள லேவள்ளி நாயக னேபுவிச்
சைய றும்பர ஞானிகள் போற்றிடும்
சாமி யேஎனைக் காப்பதுன் தன்மையே.

259. கண்ணைக் காட்டி இருமுலை காட்டியோ
கத்தைக் காட்டி அகத்தைக்கொண் டேஅழி
மண்ணைக் காட்டிடும் மாய வனிதைமார்
மாலைப் போக்கிநின் காலைப் பணிவனோ
பண்ணைக் காட்டி உருகும்அ டியர்தம்
பத்திக் காட்டிமுத் திப்஗எருள் ஈதென
விண்ணைக் காட்டும் திருத்தணி காசல
வேல னேஉமை யாள்அருள் பாலனே.

260. படியின் மாக்களை வீழ்த்தும் படுகுழி
பாவம் யாவும் பழகுறும் பாழ்ங்குழி
குடிகொள் நாற்றக் குழிசிறு நீர்தரும்
கொடிய ஊற்றுக் குழிபுழுக் கொள்குழி
கடிம லக்குழி ஆகும் கருக்குழிக்
கள்ள மாதரைக் கண்டும யங்கினேன்
ஒடிவில் சீர்த்தணி காசல நின்புகழ்
ஓதி லேன்எனக் குண்டுகொல் உண்மையே.

261. கச்சுக் கட்டி மணங்கட்டிக் காமுகர்
கண்ணைக் கட்டி மனங்கட்டி வஞ்சகம்
வச்சுக் கட்டிய வன்கழற் கட்டியும்
மண்ணின் கட்டியும் மானும்மு லைக்கட்டிக்
கிச்சைக் கட்டிஇ டும்பைஎ னும்சுமை
ஏறக் கட்டிய எற்கருள் வாய்கொலோ
பிச்சைக் கட்டிய பித்தன் புதல்வனே
பெருமை கட்டும் பெருந்தணி கேசனே.

திருச்சிற்றம்பலம்

19. திருவடி சூட விழைதல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

262. தேனார் அலங்கல் குழல்மடவார் திறத்தின் மயங்காத் திறல்அடைதற்
கானார் கொடிஎன் பெருமான்தன் அருட்கண் மணியே அற்புதமே
கானார் பொழில்சூழ் திருத்தணிகைக் கரும்பே கருணைப் பெருங்கடலே
வானார் அமுதே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.

263. தாழும் கொடிய மடவியர்தம் சழக்கால் உழலாத் தகைஅடைந்தே
ஆழும் பரமா னந்தவெள்ளத் தழுந்திக் களிக்கும் படிவாய்ப்ப
ஊழ்உந் தியசீர் அன்பர்மனத் தொளிரும் சுடரே உயர்தணிகை
வாழும் பொருளே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.

264. மின்னுண் மருங்குல் பேதையர்தம் வெளிற்று மயக்குள் மேவாமே
உன்னும் பரம யோகியர்தம் உடனே மருவி உனைப்புகழ்வான்
பின்னும் சடைஎம் பெருமாற்கோர் பேறே தணிகைப் பிறங்கலின்மேல்
மன்னும் சுடரே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.

265. ஆறத் துயரம் தருங்கொடியார்க் காளாய் உழன்றிங் கலையாதே
கூறாப் பெருமை நின்அடியார் கூட்டத் துடன்போய்க் குலாவும்வண்ணம்
தேறாப் பொருளாம் சிவத்தொழுகும் தேனே தணிகைத் திருமலைவாழ்
மாறாச் சுகமே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.

266. விரதம் அழிக்கும் கொடியார்தம் விழியால் மெலியா துனைப்புகழும்
சரதர் அவையில் சென்றுநின்சீர் தனையே வழுத்தும் தகைஅடைவான்
பரதம் மயில்மேல் செயும்தணிகைப் பரனே வெள்ளிப் பருப்பதம்வாழ்
வரதன் மகனே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே

267. வெயில்மேல் கீடம் எனமடவார் வெய்ய மயற்கண் வீழாமே.
அயில்மேல் கரங்கொள் நினைப்புகழும் அடியார்சவையின் அடையும்வகைக்
குயில்மேல் குலவும் திருத்தணிகைக் குணப்பொற் குன்றே கொள்கலப
மயில்மேல் மணியே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.

268. தனமும் கடந்தே நாரியர்மால் தனையும் கடந்தே தவம்அழிக்கும்
சினமும் கடந்தே நினைச்சேர்ந்தோர் தெய்வச் சபையில் சேர்ந்திடவே
வளமும் கடமும் திகழ்தணிகை மலையின் மருந்தே வாக்கினொடு
மனமும் கடந்தோய் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.

269. கல்லாக் கொடிய மடவார்தம் காமக் குழிக்கண் வீழாமே
நல்லார்க் கெல்லாம் நல்லவநின் நாமம் துதிக்கும் நலம்பெறவே
சொல்லாற் புனைந்த மாலையொடும் தொழுது தணிகை தனைத்துதிக்க
வல்லார்க் கருளும் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.

270. கள்ளக் கயற்கண் மடவார்தம் காமத் துழலா துனைநினைக்கும்
உள்ளத் தவர்பால் சேர்ந்துமகிழ்ந் துண்மை உணர்ந்தங் குற்றிடுவான்
அள்ளற் பழனத் திருத்தணிகை அரசே ஞான அமுதனிக்கும்
வள்ளற் பெருமான் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.

271. பாகைப் பொருவும் மொழியுடையீர் என்று மடவார்ப் பழிச்சாமல்
ஓகைப் பெறும்நின் திருத்தொண்டர் உடன்சேர்ந் துண்மை யுணர்ந்திடுவான்
தோகைப் பரிமேல் வருந்தெய்வ சூளா மணியே திருத்தணிகை
வாகைப் புயனே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பபாயே.

திருச்சிற்றம்பலம்

20. ஆற்றா விரகம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

272. தணிகை மலையைச் சாரேனோ சாமி அழகைப் பாரேனோ
பிணிகை யறையைப் பேரேனோ பேரா அன்பு கூரேனோ
அணிசெய் அருள்நீர் ஆரேனோ ஆறாத் தாகம் தீரேனோ
பணிசெய் தொழும்பில் சேரேனோ பார்மீ திரங்கும் நீரேனே.

273. எளியேன் என்ன இருப்பாரோ ஏழைக் கிரங்கும் விருப்பாரோ
அளியேன் பேர்நெஞ் சிருப்பாரோ அழியாக் காமம் திருப்பாரோ
களியேன் என்ன உருப்பாரோ கருதும் அருட்குக் கருப்பாரோ
தெளியேன் யான்என் செய்கேனே தென்பால் தணிகைப் பொருப்பாரே.

274. செய்கொள் தணிகை நாடேனோ செவ்வேள் புகழைப் பாடேனோ
கைகள் கூப்பி ஆடேனோ கருணைக் கடலில் நீடேனோ
மெய்கொள் புளகம் முடேனோ மெய்அன் பர்கள்பால் கூடேனோ
பொய்கொள் உலகோ டுடேனோ புவிமீ திருகால் மாடேனே.

275. வந்தென் எதிரில் நில்லாரோ மகிழ ஒருசொல் சொல்லாரோ
முந்தம் மதனை வெல்லாரோ மோகம் தீரப் புல்லாரோ
கந்தன் எனும்பேர் அல்லாரோ கருணை நெஞ்சம் கல்லாரோ
சந்தத் தணிகை இல்லாரோ சகத்தில் எல்லாம் வல்லாரே.

276. நாட்டும் தணிகை நண்ணேனோ நாதன் புகழை எண்ணேனோ
கூட்டும் தொழும்பு பண்ணேனோ குறையா அருள்நீர் உண்ணேனோ
சூட்டும் மயக்கை மண்ணேனோ தொழும்பர் இடத்தை அண்ணேனோ
காட்டும் அவர்த்எள் கண்ணோனோ கழியா வாழ்க்கைப் புண்ணேனே.

277. காமப் பயலைத் தடுப்பாரோ கடப்ப மலர்த்தார் கொடுப்பாரோ
ஏமத் தனத்தைக் கடுப்பாரோ என்மேல் அன்பை விடுப்பாரோ
மாமற் றொருவீ டடுப்பாரோ மன்ததில் கோபம் தொடுப்பாரோ
தாமத் தாழ்வைக் கெடுப்பாரோ தணிகை தனில்வேல் எடுப்பாரே.

278. காவி மலைக்கண் வதியேனோ கண்ணுள் மணியைத் துதியேனோ
பாவி மயலை மிதியேனோ பரமானந்தத் துதியயேனோ
ஓவில் அருளைப் பதியேனோ உயர்ந்த தொழும்பில் கதியேனோ
தாவில் சுகத்தை மதியேனோ சற்றும் பயனில் ஓதியேனே.

279. வருந்தும் தனிமுன் மன்னாரோ வருத்தம் உனக்கேன் என்னரோ
இருந்தென் இடத்தே துன்னாரோ இணைத்தாள் ஈய உன்னாரோ
பொருந்திங் கயலார் அன்னாரோ பொருள்ஈ தென்று பன்னாரோ
செருந்தி மலரும் திருத்தணிகைத் தேவர் எவர்க்கும் முன்னாரே.

280. தணிகா சலம்போய்த் தழையேனோ சாமி திருத்தாள் விழையேனோ
பணிகா தலித்துப் பிழையேனோ பாடி மனது குழையேனோ
திணிகாண் உலகை அழையேனோ சேர்ந்தவ் வீட்டுள் நுழையேனோ
பிணிகாண் உலகில் பிறந்துழன்றே பேதுற் றலையும் பழையேனே.

281. மன்னும் குவளை ஈயாரோ மதவேள் மதத்தைக் காயாரோ
இன்னும் கோபம் ஓயாரோ என்தாய் தனக்குத் தாயாரோ
துன்னும் இரக்கம் தோயாரோ துகளேன் துயரை ஆயாரோ
பன்னும் வளங்கள் செறிந்தோங்கும் பணைகொள் தணிகைத் தூயாரே.




21. ஏழைமையின் இரங்கல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

282. தேனே உளங்கொள் தெளிவே அகண்ட சிதம்மேவி நின்ற சிவமே
கோனே கனிந்த சிவபோத ஞான குருவே விளங்கு குகனே
தானே தனக்கு நிகராய் விளங்கு தணிகா சலத்தெம் அரசே
நானே ழைஇங்கு மனம்நொந்து நொந்து தலிகின்ற செய்கை நலமோ.

283. தலமேவு தொண்டர் அயன்ஆதி தேவர் நவைஏக நல்கு தணிகா
சலமேவி உன்றன் இருதாள் புகழ்ந்து தரிசிப்ப தென்று புகலாய்
நிலமேவு கின்ற சிவயோகர் உள்ளம் நிகழ்கின்ற ஞான நிறைவே
வலமேவு வேல்கை ஒளிர்சேர் கலாப மயில்ஏறி நின்ற மணியே.

284. மணியே கலாப மலைமேல் அமர்ந்த மதியே நினைச்சொல் மலரால்
அணியேன் நல்அன்பும் அமையேன் மனத்தில் அடியார் அடிக்கண் மகிழ்வாய்ப்
பணியேன் நினைந்து கதையேன் இருந்து பருகேன் உவந்த படியே
எணியே நினைக்கில் அவமாம்இவ் வேலைழ எதுபற்றி உய்வ தரசே.

285. உய்வண்ணம் இன்றி உலகா தரத்தில் உழல்கின்ற மாய மடவார்
பொய்வண்ணம் ஒன்றின் மனமாழ்கி அண்மை புரிதந்து நின்ற புலையேன்
மெய்வண்ணம் ஒன்று தணிகா சலத்து மிளிர்கின்ற தேவ விறல்வேல்
கைவண்ண உன்றன் அருள்வண்ணம் ஆன கழல்வண்ணம் நண்ணல் உளதோ.

286. நண்ணாத வஞ்சர் இடம்நாடி நெஞ்சம் நனிநொந்து நைந்து நவையாம்
புண்ணாகி நின்ற எளியேனை அஞ்சல் புரியாது நம்பொன் அடியை
எண்ணாத பாவி இவன்என்று தள்ளின் என்செய்வ துய்வ தறியேன்
தண்ணார் பொழிற்கண் மதிவந் துலாவு தணிகா சலத்தி றைவனே.

287. இறையேனும் உன்றன் அடிஎண்ணி அங்கிஇழுதென்ன நெஞ்சம் இளகேன்
மறைஓதும் உன்றன் அருள்பெற்ற தொண்டர் வழிபட்டலங்கல் அணியேன்
குறையோடும் இங்கு மயல்கொண்டு நின்ற கொடியேனை ஆளல் உளதோ
நிறையோர் வணங்கு தணிகா சலத்தில் நிலைபெற் றிருக்கும் அவனே.

288. அவம்நாள் கழிக்க அறிவேன் அலாதுன் அடிபேணி நிற்க அறியேன்
தவம்நாடும் அன்ப ரோடுசேர வந்து தணிகா சலத்தை அடையேன்
எவன்நான் எனக்கும் அவண்நீ இருக்கும் இடம்ஈயில் உன்றன் அடியார்
இவன்ஆர் அவன்றன் இயல்பென்ன என்னில் எவன்என் றுரைப்பை எனையே.

289. எனையான் அறிந்துன் அடிசேர உன்னை இறையேனும் நெஞ்சி னிதமாய்
நினையேன் அயர்ந்து நிலையற்ற தேகம் நிசம்என் றுழன்று துயர்வேன்
தனையே நின்அன்பன் எனவோதி லியாவர் தகும்என் றுரைப்பர் அரசே
வனைஏர் கொளுஞ்செய் தணிகா சலத்து மகிழ்வோ டமர்த்த அமுதே.

290. முதுவோர் வணங்கு தணிகா சலத்து முதலேஇவ் வேழை முறியேன்
மதுவால் மயங்கும் அளிபோல் மயங்கி மதியாது நின்ற பிழையால்
விதுவாகி அன்பர் உளம்மேவும் நீகை விடில்ஏழை எங்கு மெலிவேன்
இதுநீதி அல்ல எனஉன் றனக்கும் எவர்சொல்ல வல்லர் அரசே.

திருச்சிற்றம்பலம்

22.பணித்திறஞ் சாலாப் பாடிழிவு
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

291. அடுத்திலேன் நின்அடியர் அவைக்குட் சற்றும்
அன்பிலேன் நின்தொழும்பன் ஆகேன் வஞ்சம்
தடுத்திலேன் தணிகைதனில் சென்று நின்னைத்
தரிசனம்செய் தேதுரத் தமிழ்ச்சொல் மாலை
தொடுத்திலேன் அழுதுநின் தருளை வேண்டித்
தொழுதுதொழு தானந்தத் தூய்நீர் ஆடேன்
எடுத்திலேன் நல்லன்எனும் பெயரை அந்தோ
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.

292. திரப்படுவேன் மைல்புரி மாய வாழ்வில்
தியங்குவேன் சிறிதேனும் தெளிபொன் றில்லேன்
மரப்படுவேன் சிதடருடன் திரிவேன் வீணே
மங்கையர்தம் கண்கள்எனும் வலைக்குள் வீழ்வேன்
கரப்பவர்க்கு முற்படுவேன் கருணை இல்லேன்
கண்அனையாய் நின்தணிகை மலையைக் காணேன்
இரப்பவர்க்கோர் அணுவளவும் ஈயேன் பேயேன்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.

293. செய்திலேன் நின்தொண்டர் அடிக்குற் றேவல்
திருத்தணிகை மலையைவலஞ் செய்து கண்ணீர்ப்
பெய்திலேன் புலன்ஐந்தும் ஒடுக்கி வீதல்
பிறத்தல்எனும் கடல்நீந்தேன் பெண்கள் தம்மை
வைதிலேன் மலர்கொய்யேன் மாலை சூட்டேன்
மணியேநின் திருப்புகழை வழுத்தேன் நின்பால்
எய்திலேன் இவ்வுடல்கொண் டேழை யேன்யான்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.

294. சீர்கொண்டார் புகழ்தணிகை மலையிற் சேரேன்
சிவபொருமான் பெற்றபெருஞ் செல்வ மேநின்
பேர்கொண்டார் தமைவணங்கி மகிழேன் பித்தேன்
பெற்றதே அமையும்எனப் பிறங்கேன் மாதர்
வார்கொண்டார் முலைமலைவீழ்ந் துருள்வேன் நாளும்
வஞ்சமே செய்திடுவேன் மதிஒன் றில்லேன்
ஏர்கொண்டார் இகழ்ந்திடஇங் கேழை யேன்யான்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.

295. காமாந்த காரியாய் மாதர் அல்குல்
கடல்வீழ்ந்தேன் மதிதாழ்ந்தேன் கவலை சூழ்ந்தேன்
நாமாந்த கனைஉதைத்த நாதன் ஈன்ற
நாயகமா மணியேநல் நலமே உன்றன்
பூமாந்தண் சேவடியைப் போற்றேன் ஓங்கும்
பொழில்கொள்தணி காசலத்தைப் புகழ்ந்து பாடேன்
ஏமாந்த பாவியேன் அந்தோ அந்தோ
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.

296. நன்றறியேன் தீங்கனைத்தும் பறியேன் பொல்லா
நங்கையர்தம் கண்மாய நவையைச் சற்றும்
வென்றறியேன் கொன்றறிவார் தம்மைக் கூடும்
வேடனேன் திருத்தணிகை வெற்பின் நின்பால்
சென்றறியேன் இலையென்ப தறிவேன் ஒன்றும்
செய்தறியேன் சிவதருமம் செய்வோர் நல்லோர்
என்றறியேன் வெறியேன்இங் கந்தோ அந்தோ
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.

297. அல்லார்க்கும் சூழலார்மேல் ஆசை வைப்பேன்
ஐயாநின் திருத்தாள்மேல் அன்பு வையேன்
செல்லார்க்கும் பொழில்தணிகை எங்கே என்று
தேடிடேன் நின்புகழைச் சிந்தை செய்யேன்
கல்லார்க்கும் கடுமனத்தேன் வன்க ணேன்புன்
கண்ணினேன் உதவாத கையேன் பொய்யேன்
எல்லார்க்கும் பொல்லாத பாவி யேன்யான்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.

298. அரும்பாய நகைமடவார்க் காளாய் வாயா
அலைக்கின்றேன் அறிவென்ப தறியேன் நின்பால்
திருப்பாத பாதகனேன் திருஒன் றில்லேன்
திருத்தணிகை மலைக்கேகச் சிந்தை செய்யேன்
கரும்பாய வெறுத்துவேம் பருந்தும் பொல்லாக்
காக்கைஒத்தேன் சற்றேனும் கனிதல் இல்லா
இடும்பாய வன்நெஞ்சக் கள்வ னேன்யான்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.

299. அம்பாதல் நெடுங்கண்ணார்க் கிச்சை கொள்வேன்
அகமலர முகமலர்வோ டருள்செய் உன்றன்
செம்பாத மலர்ஏத்தேன் இலவு காத்தேன்
திருத்தணிகை யேநமது செல்வம் என்றே
நம்பாத கொடியேன்நல் லோரைக் கண்டால்
நாணிலேன் நடுங்கிலேன் நாயிற் பொல்லேன்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.

300. பண்ணேன்நின் புகழ்சொல்வோர் தமக்குப் பூசை
பாடேன்நின் திருச்சீரைப் பரமன் ஈன்ற
கண்ணேநின் தணிகைதனைக் கண்டு போற்றேன்
கைகுவியேன் மெய்குளிரேன் கண்ணீர் பாயேன்
உண்ணேன்நல் ஆனந்த அமுதை அன்பர்
உடன்ஆகேன் ஏகாந்தத் துறஓர் எண்ணம்
எண்ணேன்வன் துயர்மண்ணேன் மனஞ்செம் புண்ணேன்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.

திருச்சிற்றம்பலம்

23.பணித்திறஞ் சாலாப் பாடிழிவு
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

301. வரங்கொள் அடியர் மனமலரில் மகிழ்வுற் றமர்ந்த மாமணியே
திரைங்கொள் தணிகை மலைவாழும் செல்வப் பெருக்கே சிற்பரமே
தரங்கொள் உலக மயல்அகலத் தாழ்ந்துன் உருக அழுதழுது
கரங்கொள் சிரத்தோ டியாஉன்னைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

302. வல்லி ஒருபால் வானவர்தம் மகளாண் டொருபால் வரமயில்மேல்
எல்லின் இலங்கு நெட்டிலைவேல் ஏந்தி வரும்என் இறையவனே
சொல்லி அடங்காத் துயர்இயற்றும் துகள்சேர் சனனப் பெருவேரைக்
கல்லி எறிந்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே

303. உருத்துள் இகலும் சூர்முதலை ஒழித்து வானத் தொண்பதியைத்
திருத்தும் அரைசே தென்தணிகைத் தெய்வ மணியே சிவஞானம்
அருத்தும் நினது திருவருள்கொண் டாடிப் பாடி அன்பதனால்
கருத்துள் உருகி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

304. போதல் இருத்தல் எனநினையாய்ப புனிதர் சனனப் போரோடு
சாதல் அகற்றும் திருத்தணிகைச் சைவக் கனியே தற்பரமே
ஓதல் அறியா வஞ்சகர்பால் உழன்றே மாதர்க் குள்ளுருகும்
காதல் அகற்றி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

305. வீட்டைப் பெறுவோர் உள்அகத்து விளங்கும் விளக்கே விண்ணோர்தம்
நாட்டை நலஞ்செய் திருத்தணிகை நகத்தில் அமர்ந்த நாயகமே
கேட்டைத் தருவஞ் சகஉலகில் கிடைத்த மாய வாழ்க்கைஎனும்
காட்டைக் கடந்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

306. மட்டித் தளறு படக்கடலை மலைக்கும் கொடிய மாஉருவைச்
சட்டித் தருளும் தணிகையில்எந் தாயே தமரே சற்குருவே
எட்டிக் கனியாம் இவ்வுலகத் திடர்விட் டகல நின்பதத்தைக்
கட்டித் தழுவிநின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

307. இலக்கம் அறியா இருவினையால் இம்மா னிடம்ஒன் றெடுத்தடியேன்
விலக்கம் அடையா வஞ்சகர்பால் வீணாட் போக்கி மேவிமனத்
தலக்கண் இயற்றும் பொய்வாழ்வில் அலைந்தேன் தணிகை அரசேஅக்
கலக்கம் அகன்று நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

308. விரைவாய் கடப்பந் தார்அணிந்து விளங்கும் புயனே வேலோனே
தரைவாய் தவத்தால் தணிகைஅமர் தருமக் கடலே தனிஅடியேன்
திரைவாய் சனனக் கடற்படிந்தே தியங்கி அலைந்தேன் சிவஞானக்
கரைவாய் ஏறி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

309. பள்ள உலகப் படுகுழியில் பரிந்திங் குழலா தானந்த
வெள்ளத் தழுந்தும் அன்பர்விழி விருந்தே தணிகை வெற்பரசே
உள்ளம் அகல அங்கும்இங்கும் ஓடி அலையும் வஞ்சநெஞ்சக்
கள்ளம் அகற்றி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

310. அடலை அணிந்தோர் புறங்காட்டில் ஆடும் பெருமான் அளித்தருளும்
விடலை எனமு வரும்புகழும் வேலோய் தணிகை மேலோயே
நடலை உலக நடைஅளவற்றை நண்ணா தோங்கும் ஆனந்தக்
கடலை அடுத்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

திருச்சிற்றம்பலம்

24.பணித்திறஞ் சாலாமை
கலி விருத்தம்
திருச்சிற்றம்பலம்

311. வஞ்சகப் பேதையர் மயக்கில் ஆழ்ந்துழல்
நெஞ்சகப் பாவியேன் நினைந்தி லேன்ஐயோ
வெஞ்சகப் போரினை விட்டு ளோர்புகழ்
தஞ்சகத் தணிகைவாழ் தரும வானையே.

312. வான்நிகர் கூந்தலார் வன்க ணால்மிக
மால்நிகழ் பேதையேன் மதித்தி லேனையோ
தான்இரும் புகழ்கொளும் தணிகை மேல்அருள்
தேன்இருந் தொழுகிய செங்க ரும்பையே.

313. கருங்கடு நிகர்நெடுங் கண்ணி னார்மயல்
ஒருங்குறு மனத்தினேன் உன்னி லேன்ஐயோ
தரும்புகழ் மிகுந்திடுந் தணிகை மாமலை
மருங்கமர்ந் தனப்ருள் மன்னும் வாழ்வையே.

314. வைவளர் வாட்கணார் மயக்கில் வீழ்ந்தறாப்
பொய்வளர் நெஞ்சினேன் போற்றி லேன்ஐயோ
மெய்வளர் அன்பர்கள் மேவி ஏத்துறும்
செய்வளர் தணிகையில் செழிக்கும் தேனையே.

315. செழிப்படும் மங்கையர் தீய மாயையில்
பழிப்படும் நெஞ்சினேன் பரவி லேன்ஐயோ
வழிப்படும் அன்பர்கள் வறுமை நீக்கியே
பொழிற்படும் தணிகையில் பொதிந்த பொன்னையே.

316. பொதித்தரும் மங்கையர் புளகக் கொங்கைமேல்
வதிதரும் நெஞ்சினேன் மதித்தி லேன்ஐயோ
மதிதரும் அன்பர்தம் மனத்தில் எண்ணிய
கதிதரும் தணிகைவாழ் கற்ப கத்தையே.

திருச்சிற்றம்பலம்

25. குறை நேர்ந்த பத்து
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

317. வான்பிறந்தார் புகழ்தணிகை மலையைக் கண்டு
வள்ளலே நின்புகழை மகிழ்ந்து கூறேன்
தேன்பிறந்த மலர்க்குழலார்க் காளா வாளா
திரிகின்றேன் புரிகின்றேன் தீமை நாளும்
ஊன்பிறந்த உடல்ஓம்பி அவமே வாழ்நாள்
ஒழிக்கின்றேன் பழிக்காளாய் உற்றேன் அந்தோ
ஏன்பிறந்தேன் ஏன்பிறந்தேன் பாவி யேன்யான்
என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.

318. மெய்யாவோ நற்றணிகை மலையைச் சார்ந்து
மேன்மையுறும் நின்புகழை விரும்பி ஏத்தேன்
உய்யாவோ வல்நெறியேன் பயன்ப டாத
ஓதிஅனையேன் எட்டிதனை ஒத்தேன் அன்பர்
பொய்யாஓ டெனமடவார் போகம் வேட்டேன்
புலையனேன் சற்றேனும் புனிதம் இல்லேன்
ஐயாவோ நாணாமல் பாவி யேன்யான்
யார்க்கெடுத்தென் குறைதன்னை அறைகு வேனே.

319. வாட்செல்லா நெடுங்கண்ணார் மயலில் வீழ்ந்து
மனம்போன வழிசென்று வருந்தா நின்றேன்
சேட்செல்லார் வரைத்தணிகைத் தேவ தேவே
சிவபொருமான் பெற்றபெருஞ் செல்வ மேதான்
நாட்செல்லா நின்றதினி என்செய் கேனோ
நாயினேன் பிழைதன்னை நாடி நின்பால்
கோட்சொல்லா நிற்பர்எனில் என்னா மோஎன்
குறையைஎடுத் தெவர்க்கெளியேன் கூறு கேனே.

320. பொல்லாத மங்கையர்தம் மயற்குள் ஆகும்
புலையமனத் தால்வாடிப் புலம்பு கின்றேன்
கல்லாத பாவிஎன்று கைவிட் டாயோ
கருணைஉரு வாகியசெங் கரும்மே மேரு
வில்லான்தன் செல்வமே தணிகை மேவும்
மெய்ஞ்ஞான ஒளியேஇவ் வினையேன் துன்பம்
எல்லாம்நீ அறிவாயே அறிந்தும் வாரா
திருந்தால்என் குறையைஎவர்க் கியம்பு கேனே.

321. முன்அறியேன் பின்அறியேன் மாதர் பால்என்
முடமனம் இழுத்தோடப் பின்சென் றெய்த்தேன்
புன்னெறியேன் பொய்யரொடும் பயின்றேன் நின்றன்
புனிதஅருட் கடலாடேன் புளகம் முடேன்
பொன்அரையன் தொழும்சடிலப் புனிதன் ஈன்ற
புண்ணியமே தணிகைவளர் போத வாழ்வே
என்அரைசே என்அமுதே நின்பால் அன்றி
எவர்க்கெடுத்தென் குறைதன்னை இயம்பு கேனே.

322. விடுமாட்டில் திரிந்துமட மாத ரார்தம்
வெய்யநீர்க் குழிவீழ்ந்து மீளா நெஞ்சத்
தடுமாற்றத் தொடும்புலைய உடலை ஓம்பிச்
சார்ந்தவர்க்கோர் அணுஅளவும் தான்ஈ யாது
படுகாட்டில் பலன்உதவாப் பனைபோல் நின்றேன்
பாவியேன் உடற்சுமையைப் பலரும் கூடி
இடுகாட்டில் வைக்குங்கால் என்செய் வேனோ
என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.

323. மின்னைநேர் இடைமடவார் மயல்செய் கின்ற
வெங்குழியில் வீழ்ந்தழுந்தி வெறுத்தேன் போலப்
பின்னையே எழுந்தெழுந்து மீட்டும் மீட்டும்
பேய்போல வீழ்ந்தாடி மயற்குள் முழ்கிப்
பொன்னையே ஒத்தஉன தருளை வேண்டிப்
போற்றாது வீணேநாள் போக்கு கின்ற
என்னையே யான்சிரிப்பேன் ஆகில் அந்தோ
என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.

324. முலைஒருபால் முகம்ஒருபால் காட்டும் பொல்லா
முடமட வார்கள்தமை முயங்கி நின்றேன்
இலைஒருபால் அனம்ஒருபால் மலஞ்சேர்த் துண்ணும்
ஏழைமதி யேன்தணிகை ஏந்த லேபொன்
மலைஒருபால் வாங்கியசெக வண்ண மேனி
வள்ளல்தரு மருந்தேநின் மலர்த்தாள் ஏத்தேன்
புலைஒருவா வஞ்சகநெஞ் சுடையேன் என்றன்
புன்மைதனை எவர்க்கெடுத்துப் புகலு வேனே.

325. வேய்ப்பால்மென் தோள்மடவார் மறைக்கும் மாய
வெம்புழுச்சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன்
தாய்ப்பாலை உண்ணாது நாய்ப்பால் உண்ணும்
தகையனேன் திருத்தணிகை தன்னைச் சார்ந்து
ஆய்ப்பாலை ஒருமருங்கான் ஈன்ற செல்வத்
தாரமுதே நின்அருளை அடையேன் கண்டாய்
ஏய்ப்பாலை நடுங்கருங்கல் போல்நின் றெய்த்தேன்
என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.


326. வஞ்சமட மாதரார் போகம் என்னும்
மலத்தினிடைக் கிருமிஎன வாளா வீழ்ந்தேன்
கஞ்சமலர் மனையானும் மாலும் தேடக்
காணாத செங்கனியில் கனிந்த தேனே
தஞ்சம் என்போர்க் கருள்புரியும் வள்ளலேநல்
தணிகைஅரை சேஉனது தாளைப் போற்றேன்
எஞ்சல்இலா வினைச்சேம இடமாய் உற்றேன்
என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.

திருச்சிற்றம்பலம்

26. முறையிட்ட பத்து
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

327. பொன்னைப் பொருளா நினைப்போர்பால் போந்து மிடியால் இரந்தலுத்தேன்
நின்னைப் பொருள்என் றுணராத நீசன் இனிஓர் நிலைகாணேன்
மின்னைப் பொருவும் சடைப்பவள வெற்பில் விளைந்த வியன்கரும்பே
முன்னைப் பொருளே தணிகையனே முறையோ முறையோ முறையேயோ.

328. மக்கட் பிறவி எடுத்தும்உனை வழுந்தாக் கொடிய மரம்அனையேன்
துக்கக் கடலில் வீழ்ந்துமனம் சோர்கின் றேன்ஓர் துனைகாணேன்
செங்கர்ப் பொருவு வடிவேற்கைத் தேவே தெவிட்டாத் தெள்ளமுதே
முக்கட் கரும்பின் முழுமுத்தே முறையோ முறையோ ஆறையேயோ.

329. அன்பின் உனது திருஅடிக்கே ஆளாய்த் தொண்டொன் றாற்றாதே
துன்பின் உடையோர் பால்அணுகிச் சோர்ந்தேன் இனிஓர் துணைகாணேன்
என்பில் மலிந்த மாலைபுனை எம்மான் தந்த பெம்மானே
முன்பின் நடுவாய் முளைத்தோனே முறையோ முறையோ முறையேயோ.

330. அருகா மலத்தில் அலைந்திரக்கம் அறியா வஞ்ச நெஞ்சகர்பால்
உருகா வருந்தி உழன்றலைந்தேன் உன்தாள் அன்றித் துணைகாணேன்
பெருகா தரவில் சிவன்பெறும்நற் பேறே தணிகைப் பெருவாழ்வே
முருகா முகம்மு விரண்டுடையாய் முறையோ முறையோ முறையேயோ.

331. பொன்னின் றொளிரும் மார்பன்அயன் போற்றும் உன்தாள் புகழ்மறந்தே
கன்னின் றணங்கும் மனத்தார்பால் கனிந்தேன் இனிஓர் துணைகாணேன்
மின்னின் றிலங்கு சடைக்கனியுள் விளைந்த நறவே மெய்அடியார்
முன்னின் றருளும் தணிகையனே முறையோ முறையோ முறையேயோ.

332. வெதிர்உள் ளவரின் மொழிகேளா வீண ரிடம்போய் மிகமெலிந்தே
அதிரும் கழற்சே வடிமறந்தேன் அந்தோ இனிஓர் துணைகாணேன்
எதிரும் குயில்மேல் தவழ்தணிகை இறையே முக்கண் இயற்கனியின்
முதிரும் சுவையே முதற்பொருளே முறையோ முறையோ முறையேயோ.

333. ஈனத் திவறும் மனக்கொடியோர் இடம்போய் மெலிந்து நாள்தோறும்
ஞானத் திருத்தாள் துணைசிறிதும் நாடேன் இனிஓர் துணைகாணேன்
தானத் தறுகண் மலைஉரியின் சட்டை புனைந்தோன் தரும்பேறே
மோனத் தவர்த்ம் அகவிளக்கே முறையோ முறையோ முறையேயோ.

334. தேவே எனநிற் போற்றாத சிறிய ரிடம்போய்த் தியங்கிஎன்றன்
கோவே நின்றன் திருத்தாளைக் குறிக்க மறந்தேன் துணைகாணேன்
மாவே ழத்தின் உரிபுனைந்த வள்ளற் கினிய மகப்பேறே
முவே தனையை அறுத்தருள்வோய் முறையோ முறையோ முறையேயோ.

335. வேதா நந்த னொடுபோற்றி மேவப் படும்நின் பதம்மறந்தே
ஈதா னம்தந் திடுவீர்என் றீன ரிடம்போய் இரந்தலைந்தேன்
போதா னந்தப் பரசிவத்தில் போந்த பொருளே பூரணமே.

336. வடியாக் கருணை வாரிதியாம் வள்ளல் உன்தாள் மலர்மறந்தே
கொடியா ரிடம்போய்க்குறையிரந்தேன் கொடியேன் இனிஓர் துணைகாணேன்
அடியார்க் கெளிய முக்கணுடை அம்மான் அளித்த அருமருந்தே
முடியா முதன்மைப் பெரும்பொருளே முறையோ முறையோ முறையேயோ.

திருச்சிற்றம்பலம்

27. நெஞ்சவலங் கூறல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

337. இழுதை நெஞ்சினேன் என்செய்வான் பிறந்தேன்
ஏழை மார்முலைக் கேவிழைந் துழன்றேன்
பழுதை பாம்பென மயங்கினன் கொடியேன்
பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
அழுது கண்கள்நீர் ஆர்ந்திடும் அடியர்
அகத்துள் ஊறிய ஆனந்த அமுதே
தொழுது மால்புகழ் தணிகைஎன் அரசே
தோன்ற லேபரஞ் சுடர்தரும் ஒளியே.

338. வஞ்ச நெஞ்சினேன் வல்விலங் கணையேன்
மங்கை மார்முலை மலைதனில் உருள்வேன்
பஞ்ச பாதகம் ஓர்உரு எடுத்தேன்
பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
கஞ்சன் மால்புகழ் கருணைஅங் கடலே
கண்கள் முன்றுடைக் கரும்பொளிர் முத்தே
அஞ்சல் அஞ்சல்என் றன்பரைக் காக்கும்
அண்ண லேதணி காசலத் தரசே

339. மையல் நெஞ்சினேன் மதிஇயிலேன் கொடிய
வாட்க ணார்முலை மலைக்குப சரித்தேன்
பைய பாம்பினை நிகர்த்தவெங் கொடிய
பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
மெய்யர் உள்ளகம் விளங்கொளி விளக்கே
மேலை யோர்களும் விளம்பரும் பொருளே
செய்ய மேனிஎன் சிவபிரான் அளித்த
செல்வ மேதிருத் தணிகையந் தேவே.

340. மதியில் நெஞ்சினேன் ஓதியினை அனையேன்
மாதர் கண்எனும் வலையிடைப் பட்டேன்
பதியில் ஏழையேன் படிற்றுவஞ் சகனேன்
பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
பொதியில் ஆடிய சிவபிரான் அளித்த
புண்ணி யாஅருட் போதக நாதா
துதிஇ ராமனுக் கருள்செயும் தணிகைத்
துஎய னேபசுந் தோகைவா கனனே.

341. துட்ட நெஞ்சினேன் எட்டியை அனையேன்
துயர்செய் மாதர்கள் சூழலுன் தினமும்
பட்ட வஞ்சனேன் என்செய உதித்தேன்
பாவியேன் எந்தப் பரிசுகொண் டடைவேன்
நட்டம் ஆடிய நாயகன் அளித்த
நல்ல மாணிக்க நாயக மணியே
மட்ட றாப்பொழில் சூழ்திருத் தணிகை
வள்ள லேமயில் வாகனத் தேவே

342. காயும் நெஞ்சினேன் பேயினை அனையேன்
கடிகொள் கோதையர் கண்வலைப் பட்டேன்
பாயும் வெம்புலி நிகர்த்தவெஞ் சினத்தேன்
பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
தாயும் தந்தையும் சாமியும் எனது
சார்பும் ஆகிய தணிகையங் குகனே
ஆயும் கொன்றைசெஞ் சடைக்கணிந் தாடும்
ஐயர் தந்தருள் ஆனந்தப் பேறே.

343. தீங்கு நெஞ்சினேன் வேங்கையை அனையேன்
தீய மாதர்தம் திறத்துழல் கின்றேன்
பாங்கி லாரொடும் பழகிய வெறியேன்
பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
தெங்கு கங்கையைச் செஞ்சடை இருத்தும்
சிவபி ரான்செல்வத் திருஅருட் பேறே
ஓங்கு நல்தணி காசலத் தமர்ந்த
உண்மை யேஎனக் குற்றிடும் துணையே.

344. கள்ள நெஞ்சினேன் நஞ்சினை அனையேன்
கடிய மாதர்தங் கருக்குழி எனும்ஓர்
பள்ளம் ஆழ்ந்திடு புலையனேன் கொலையேன்
பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
வெள்ள வார்சடை வித்தகப் பெருமான்
வேண்ட நற்பொருள் விரித்துரைத் தோனே
புள்அ லம்புதண் வாவிசூழ் தணிகைப்
பொருப்ப மர்ந்திடும் புனிதபூ ரணனே.

345. மத்த நெஞ்சினேன் பித்தரில் திரிவேன்
மாதர் கண்களின் மயங்கிநின் றலைந்தேன்
பத்தி என்பதோர் அணுவும்உற் றில்லேன்
பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
பித்த நாயகன் அருள்திருப் பேறே
பிரமன் மாலுக்கும் பேசரும் பொருளே
தத்தை பாடுறும் பொழிற்செறி தணிகா
சலத்தின் மேவிய தற்பர ஒளியே.

346. அழுக்கு நெஞ்சினேன் பொய்யல தறியேன்
அணங்க னார்மயல் ஆழத்தில் விழுந்தேன்
பழுக்கும் முடருள் சேர்ந்திடுங் கொடியேன்
பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
மழுக்கை ஏந்திய மாசிலா மணிக்குள்
மன்னி ஓங்கிய வளர்ஒளிப் பிழம்பே
வழுக்கி லார்புகழ் தணிகைஎன் அரசே
வள்ள லேஎன்னை வாழ்விக்கும் பொருளே.

திருச்சிற்றம்பலம்

28. ஆற்றாப் புலம்பல்
கொச்சகக் கவிப்பா
திருச்சிற்றம்பலம்

347. அண்ணாவோ என் அருமை ஐயாவோ பன்னிரண்டு
கண்ணாவோ வேல்பிடித்த கையாவோ செம்பவன
வண்ணாவோ துன்பத் திருங்கடற்குள் மன்னின்னே

348. மன்னப்பார் போற்று மணியேநின் பொன்னருளைத்
துன்னப்பா ராது சுழன்றேன் அருணைகிரி
தன்னப்பா நற்றணிகை தன்னில் அமர்ந்தருளும்
என்னப்பா இன்னும் இந்த ஏழைக் கிரங்காயோ

349. காய்நின்ற நெஞ்சக் கடையேன் திருத்தணிகை
வாய்நின் றுனதுபுகழ் வாய்பாடக் கைகுவித்துத்
தூய்நின்றே நாளைத்தொழுதாடித் துன்பம்எலாம்
போய்நின் நடைவேனோ புண்ணியநின் பொன்னருளே

350. பொன்பிணிக்கும் நெஞ்சப் புலையேனை இவ்வுலகில்
வன்பிணிக்கோ பெற்று வளர்த்தாய் அறியேனே
என்பிணைத்தார் வள்ளற் கினிமை பெறும்மணியே
அன்பிணைத்தோர் போற்றும் அருட்டணிகை மன்னவனே.

351. வன்நோயும் வஞ்சகர்தம் வன்சார்பும் வன்துயரும்
என்னோயுங் கொண்டதனை எண்ணி இடிவேனோ
அன்னோ முறைபோகி ஐயா முறையேயோ
மன்னோ முறைதணிகை வாழ்வே முறையேயோ.

திருச்சிற்றம்பலம்.

29. திருவருள் விழைதல்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்.

352. தாணு ஈன்றருள் செல்வமே தணிகையில் சாமியே நினைஏத்திக்
காணு வேன்இலை அருள்இவண் புன்மையில் காலங்கள் கழிக்கின்றேன்
மாணும் அன்பர்கள் என்சொலார் ஐயநீ வந்தெனக் கருள்வாயேல்
நாணு வேன்அலன் நடுங்கலன் ஒடுங்கலன் நாயினும் கடையேனே.

353. கடைப்பட் டேங்கும்இந் நாயினும் கருள்தரக் கடவுள்நீ வருவாயேல்
மடைப்பட் டோ ங்கிய அன்பகத் தொண்டர்கள் வந்துனைத் தடுப்பாரேல்
தடைப்பட் டாய்எனில் என்செய்வேன் என்செய்வேன் தளர்வது தவிரேனே
அடைப்பட் டோ ங்கிய வயல்திருத் தணிகையம் பதிஅமர்ந் திடுதேவே.

354. தேவ ரேமுதல் உலகங்கள் யாவையும் சிருட்டிஆ தியசெய்யும்
முவ ரேஎதிர் வருகினும் மதித்திடேன் முரகநின் பெயர்சொல்வோர்
யாவ ரேனும்என் குடிமுழு தாண்டெனை அளித்தவர் அவரேகாண்
தாவ நாடொணாத் தணிகையம் பதியில்வாழ் சண்முகப் பெருமானே.

திருச்சிற்றம்பலம்.

30. புண்ணியநீற்று மான்மியம்
லண்ணக் கலி விருத்தம்
திருச்சிற்றம்பலம்

355 திவசங்கள் தொறும்கொண்டிடு தீமைப்பிணி தீரும்
பவசங்கடம் அறும்இவ்விக பரமும்புகழ் பரவும்
கவசங்கள்எ னச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும்
சிவசண்முக எனவேஅருள் திருநீறணிந் திடிலே.

356. மால்ஏந்திய சூழலார்தரு மயல்போம்இடர் அயல்போம்
கோல்ஏந்திய அரசாட்சியும் கூடும்புகழ் நீடும்
மேல்ஏந்திய வானாடர்கள் மெலியாவிதம் ஒருசெவ்
வேல்ஏந்திய முருகாஎன வெண்ணீறணித் திடிலே.

357. தவம்உண்மையொ டுறும்வஞ்சகர் தம்சார்வது தவிரும்
நவம்அண்மிய அடியாரிடம் நல்கும்திறன் மல்கும்
பவனன்புனல் கனல்மண்வெளி பலவாகிய பொருளாம்
சிவசண்முக எனவேஅருள் திருநீறனிந் திடிலே.

358. துயில்ஏறிய சோர்வும்கெடும் துயரம்கெடும் நடுவன்
கையில்ஏறிய பாசம்துணி கண்டேமுறித் திடுமால்
குயில்ஏறிய பொழில்சூழ்திருக் குன்றேறி நடக்கும்
மயில்ஏறிய மணியேஎன வளர்நீறணிந் திடிலே.

359. தேறாப்பெரு மனமானது தேறுந்துயர் மாறும்
மாறாப்பிணி மாயும்திரு மருவும்கரு ஓருவும்
வீறாப்பொடு வருசூர்முடி வேறாக்கிட வரும்ஓர்
ஆறாக்கரப்9 பொருளேஎன அருள்நீறணிந் திடிலே.

360. அமராவதி இறையோடுநல் அயனுந்திரு மாலும்
தமராகுவர் சிவஞானமுந் தழைக்குங்கதி சாரும்
எமராஜனை வெல்லுந்திறல் எய்தும்புகழ் எய்தும்
குமராசிவ குருவேஎனக் குளிர்நீறணிந் திடிலே.

361. மேலாகிய உலகத்தவர் மேவித்தொழும் வண்ணம்
மாலாகிய இருள்நீங்கிநல் வாழ்வைப்பெறு வார்காண்
சீலாசிவ லீலாபர தேவாஉமை யவள்தன்
பாலாகதிர் வேலாஎனப் பதிநீறணிந் திடிலே.

362. அகமாறிய நெறிசார்குவர் அறிவாம்உரு அடைவார்
மிகமாறிய பொறியின்வழி மேவாநல மிகுவார்
சகமாறினும் உயர்வானிலை தாமாறினும் அழியார்
முகமாறுடை முதல்வாஎன முதிர்நீறணிந் திடிலே.

363. சிந்தாமணி நிதிஐந்தரு செழிக்கும்புவே னமும்ஓர்
நந்தாஎழில் உருவும்பெரு நலனும்கதி நலனும்
இந்தாஎனத் தருவார்தமை இரந்தார்களுக் கெல்லாம்
கந்தாசிவன் மைந்தாஎனக் கனநீறணிந் திடிலே.

364. எண்ணார்புரம் எரித்தார்அருள் எய்தும்திரு நெடுமால்
நண்ணாததோர் அடிநீழலில் நண்ணும்படி பண்ணும்
பண்ணார்மொழி மலையாள்அருள் பாலாபனி ரண்டு
கண்ணாஎம தண்ணஎனக் கனநீறணிந் திடிலே.

திருச்சிற்றம்பலம்

9. ஆறக்கரம் என்பது ஆறாக்கரம் என நீட்டும் வழி நீட்டல்.தொ.வே.



31. உறுதி உணர்த்தல்
கட்டளைக் கலித்துறை
திருச்சிற்றம்பலம்

365. மஞ்சேர் பிணிமடி யாதியை நோக்கி வருந்துறும்என்
நெஞ்சே தணிகையன் ஆறெழுத் துண்டுவெண் ணீறுண்டுநீ
எஞ்சேல் இரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
அஞ்சேல் இதுசத் தியம்ஆம்என் சொல்லை அறிந்துகொண்டே.

366. அறியாத நம்பிணி ஆதியை நீக்கும் அருள்மருந்தின்
நெறியாம் தணிகையன் ஆறெழுத் துண்டுவெண் ணீறுண்டுநீ
எறியா திரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
குறியா திருக்கலை என்ஆணை என்றன் குணநெஞ்சமே.

367. என்றே பிணிகள் ஒழியும்என் றேதுயர் எய்தியிடேல்
நின்றே தணிகையன் ஆறெழுத் துண்டுவெண் ணீறுண்டுநீ
நன்றேஎக் காலமும் வாழிய நன்னெஞ்சமே.

திருச்சிற்றம்பலம்

32. எண்ணத் தேங்கல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

368. போதுகொண் டவனும் மாலும்நின் றேத்தும்
புண்ணிய நின்திரு அடிக்கே
யாதுகொண் டடைகேன் யாதுமேற் செய்கேன்
யாதுநின் திருஉளம் அறியேன்
தீதுகொண் டவன்என் றெனக்கருள் சிறிதும்
செய்திடா திருப்பையோ சிறியோன்
ஏதிவன் செயல்ஒன் றிலைஎனக் கருதி
ஈவையோ துணிகைவாழ் இறையே.

369. வாழ்வனோ நின்பொன் அடிநிழல் கிடைத்தே
வயங்கும்ஆ னந்தவெள் ளத்துள்
ஆழ்வனோ எளியேன் அல்லதிவ் வுலகில்
அறஞ்செயாக் கொடியர்பாற் சென்றே
தாழ்வனோ தாழ்ந்த பணிபுரிந் தவமே
சஞ்சரித் துழன்றுவெங் நரகில்
வீழ்வனோ இஃதென் றறிகிலேன் தணிகை
வெள்பினுள் ஒளிர்அருள் விளக்கே.

திருச்சிற்றம்பலம்

33. கையடை முட்டற் கிரங்கல்
கட்டளைக் கலித்துறை
திருச்சிற்றம்பலம்

370. கார்பூத்த கண்டத் தொடுமேவு முக்கட் கனிகனிந்து
சீர்பூத் தொழுகுசெந் தேனே தணிகையில் தெள்அமுதே
பேர்பூத்த ஒற்றியில் நின்முன்னர் ஏற்றிடப் பேதையனேன்
ஏர்பூத்த ஒண்பளி தம்10 காண் கிலன்அதற் கென்செய்வனே.

371. கருமருந் தாய மணிகண்ட நாகன் கண்மணியாம்
அருமருந் தேதணி காசலம் மேவுன்என் ஆருயிரே
திருமருங் கார்ஒற்றி யூர்மே வியநின் திருமுன்னராய்
ஒருமருங் கேற்றஎன் செய்கேன் கற்பூர ஒளியினுக்கே.

372. பால்எடுத் தேத்தும்நற் பாம்பொடு வேங்கையும் பார்த்திடஓர்
கால்எடுத் தம்பலத் தாடும் பிரான்திருக் கண்மணியே
வேல்எடுத் தோய்தென் தணிகா சலத்தமர் வித்தகநின்
பால்எடுத் தேற்றக் கிடைக்குங் கொலோவெண் பளிதம்எதற்கே.

373. கண்ணப்பன் என்னும் திருப்பெய ரால்உல கம்புகழும்
திண்ணப்பன் ஏத்தும் சிவனார் மகனுக்குத் தெண்டன்இட்ட
விண்ணப்பம் ஒன்றிந்த மேதினி மாயையில் வீழ்வதறுத்
தெண்ணப் படும்நின் திருவருள் ஈகஇவ் வேழையற்கே.

திருச்சிற்றம்பலம்
10. பளிதம் = கர்ப்பூரம்

34. அடியார்பணி அருளவேண்டல்
கட்டளைக் கலித்துறை
திருச்சிற்றம்பலம்

374. எப்பா லவரும் இறைஞ்சும் தணிகை இருந்தருள்என்
அப்பாஎன் பொன்னடிக் கென்நெஞ் சகம்இட மாக்கிமிக்க
வெப்பான நஞ்சன வஞ்சகர் பாற்செலும் வெந்துயர்நீத்
திப்பாரில் நின்அடி யார்க்கேவல் செய்ய எனக்கருளே.

375. எய்யா தருள்தணி காசலம் மேவிய என்அருமை
ஐயா நினது திருவடி ஏத்திஅன் றோஅயனும்
செய்யாள் மருவூம் பூயனுடைத் தேவனும் சேணவனும்
நையாத ஆயூளும் செல்வமும் வண்மையூம் நண்ணினரே.

376. வாளாருங் கண்ணியர் மாயையை நீக்கி மலிகரணக்
கோளாகும் வாதனை நீத்துமெய்ஞ் ஞானக் குறிகொடுநின்
தாளாகும் நீழல் அதுசார்ந்து நிற்கத் தகுந்ததிரு
நாளாகும் நாள்எந்த நாள்அறி யேன்தணி காசலனே.

377. ஊன்பார்க்கும் இவ்வூடற் பொய்மையைத் தேர்தல் ஒழிந்தவமே
மான்பார்க்கும் கண்ணியர் மையலில் வீழும் மயக்கம்அற்றே
தேன்பார்க்கும் சோலைத் தணிகா சலத்துன் திருஅழகை
நான்பார்க்கும் நாள்எந்த நாள்மயில் ஏறிய நாயகனே.

378. என்னே குறைநமக் கேழைநெஞ் சேமயில் ஏறிவரும்
மன்னே எனநெடு மாலும் பிரமனும் வாழ்த்திநிற்கும்
தன்னேர் தணிகைத் தடமலை வாழும்நற் றந்தைஅருள்
பொன்னேர் திருவடிப் போதுகண் டாய்நம் பூகலிடமே.

379. பேதைநெஞ் சேஎன்றன் பின்போந் திடுதிஇப் பேயூலக
வாதைஅஞ் சேல்பொறி வாய்க்கலங் கேல்இறை யூம்மயங்கேல்
போதையெஞ் சேல்தணி காசலம் போய்அப் பொருப்பமர்ந்த
தாதைஅஞ் சேவடிக் கீழ்க்குடி யாகத் தயங்குவமே.

திருச்சிற்றம்பலம்

35. நாள் அவம்படாமை வேண்டல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
திருச்சிற்றம்பலம்

380. குன்றமொத் திலங்கு பணைமுலை நெடுங்கண்
கோதையர் பால்விரைந் தோடிச்
சென்றஇப் பூலையேன் மனத்தினை மீட்டுன்
திருவடிக் காக்கும்நாள் உளதோ
என்தனி உயிரே என்னுடைப் பொருளே
என்உளத் திணிதெழும் இன்பே
மன்றலம் பொழில்குழி தணிகையம் பொருப்பில்
வந்தமர்ந் தருள்செயூம் மணியே.

381. மணிக்குழை அடர்ந்து மதர்த்தவேற் கண்ணார்
வஞ்சக மயக்கினில் ஆழ்ந்து
கணிக்கரும் துயர்கொள் மனத்தினை மீட்டுன்
கழலடிக் காக்கநாள் உளதோ
குணிக்கரும் பொருளே குணப்பெருங்குன்றே
குறிகுணங் கடந்ததோர் நெறியே
எணிக்கரும் மாலும் அயனும்நின் றேத்தும்
எந்தையே தணிகைஎம் இறையே.

382. இறைக்குளே உலகம் அடங்கலும் மருட்டும்
இலைநெடு வேற்கணார் அளகச்
சிறைக்குளே வருந்தும் மனத்தினை மீட்டுன்
திருவடிக் காக்குநாள் உளதோ
மறைக்குளே மறைந்தம் மறைக்கரி தாய
வள்ளலே உள்ளகப் பொருளே
மறைக்குளே மடவார்க் கனநடை பயிற்றும்
அணிதிருத் தணிகைவாழ் அரைசே.

383. அரைமதிக் குறழும் ஒண்ணுதல் வாட்கண்
அலர்முலை அணங்கனார் அல்குல்
பூரைமதித் துழலும் மனத்தினை மீட்டுன்
பொள்ளாடிக் காக்குநாள் உளதோ
பரைமதித் திடஞ்சேர் பராபரற் கருமைப்
பாலனே வேலுடை யவனே
விரைமதித் தோங்கும் மலர்ப்பொழில் தணிகை
வெற்பினில் ஒளிரும்மெய் விளக்கே.

384. விளக்குறழ் அணிப்பூண் மேல்அணிந் தோங்கி
விம்முறும் இளமுலை மடவார்
களக்கினில் ஆழ்ந்த மனத்தினை மீட்டுன்
கழல்அடிக் காக்கும்நாள் உளதோ
அளக்கருங் கருணை வாரியே ஞான
அமுதமே ஆனந்தப் பெருக்கே
கிளக்கரும் பூகழ்கொள் தணிகையம் பொருப்பில்
கிளர்ந்தருள் பூரியூம்என் கிளையே.

385. கிளைக்குறும் பிணிக்கோர் உறையூளாம் மடவார்
கீழுறும் அல்குல்என் குழிவீழ்ந்
திளைக்கும்வன் கொடிய மனத்தினை மீட்டுன்
இணைஅடிக் காக்கும்நாள் உளதோ
விளைக்கும்ஆ னந்த வியன்தனி வித்தே
மெய்அடி யவர்உள விருப்பே
திளைக்கும்மா தவத்தோர்க் கருள்செயூந் தணிகைத்
தெய்வமே அருட்செழுந் தேனே.

386. தேன்வழி மலர்ப்பூங் குழல்துடி இடைவேல்
திறல்விழி மாதரார் பூணர்ப்பாம்
கான்வழி நடக்கும் மனத்தினை மீட்டுன்
கழல்வழி நடத்தும்நாள் உளதோ
மான்வழி வரும்என் அம்மையை வேண்டி
வண்பூனத் தடைந்திட்ட மணியே
வான்வழி அடைக்கும் சிகரிசூழ் தணிகை
மாமலை அமர்ந்தருள் மருந்தே

387. மருந்தென மயக்கும் குதலைஅந் தீஞ்சொல்
வாணுதல் மங்கையர் இடத்தில்
பொருந்தென வலிக்கும் மனத்தினை மீட்டுன்
பொன்னடிக் காக்கும்நாள் உளதோ
அருந்திட தருந்த அடியருள் ஓங்கும்
ஆனந்தத் தேறலே அமுதே
இருந்தரு முனிவர் பூகழ்செயூம் தணிகை
இனிதமர்ந் தருளிய இன்பமே.

388. இன்பமற் றுறுகண் வினைவழி நிலமாம்
ஏந்திழை யவர்பூழுக் குழியில்
துன்பமுற் றுழலும் மனத்தினை மீட்டுன்
துணையடிக் காக்கும்நாள் உளதோ
அன்பர்முற் றுணர அருள்செயூம் தேவே
அரிஅயன் பணிபெரி யவனே
வன்பதை அகற்றி மன்பதைக் கருள்வான்
மகிழ்ந்துறும் தணிகையின் வாழ்வே.

389. வாழும்இவ் வூலக வாழ்க்கையை மிகவூம்
வலித்திடும் மங்கையர் தம்பால்
தாமும்என் கொடிய மனத்தினை மீட்டுன்
தாள்மலர்க் காக்கும்நாள் உளதோ
சூழும்நெஞ் சிருளைப் போழும்மெய் ஒளியே
தோற்றம்ஈ றற்றசிற் சுகமே
ஊழும்உற் பவம்ஓர் ஏழும்விட் டகல
உதவூசீர் அருட்பெருங் குன்றே.

திருச்சிற்றம்பலம்

36. அன்பிற் பேதுறல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

390. முடர்கள் தமக்குள் முற்படுங் கொடிய
முறியனேன் தனக்குநின் அடியாம்
ஏடவிழ் கமலத் திருநற வருந்த
என்றுகொல் அருள்புரிந் திடுவாய்
ஆடர வணிந்தே அம்பலத் தாடும்
ஐயருக் கொருதவப் பேறே
கோடணி தருக்கள் குலவும்நற் றணிகைக்
குற்றமர்ந் திடுகுணக் குன்றே

391. கற்றவர் புகழ்நின் திருவடி மலரைக்
கடையனேன் முடிமிசை அமர்த்தி
உற்றஇவ் வுலக மயக்கற மெய்மை
உணர்த்தும்நாள் எந்தநாள் அறியேன்
நற்றவர் உணரும் பரசிவத் தெழுந்த
நல்அருட் சோதியே நவைதீர்
கொற்றவேல் உகந்த குமரனே தணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே.

392. ஞாலவாழ் வெனும்புன் மலமிசைந் துழலும்
நாயினும் கடையஇந் நாய்க்குன்
சீலவாழ் வளிக்கும் திருவடிக் கமலத்
தேன்தரு நாளும்ஒன் றுண்டோ
ஆலவாய் உகந்த ஒருசிவ தருவில்
அருள்பழுத் தளிந்தசெங் கனியே
கோலவா னவர்கள் புகழ்திருத் தணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே.

393. பவம்எனுங் கடற்குள் வீழ்ந்துழன் றேங்கும்
பாவியேன் தன்முகம் பார்த்திங்
கெவையும்நா டாமல் என்னடி நிழற்கீழ்
இருந்திடென் றுரைப்பதெந் நானோ
சிவம்எனும் தருமக் கடல்அகத் தெழுந்த
தெள்ளிய அமுதமே தேனே
குவிமுலை வல்லிக் கொடியொடுந் தணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே.

394. முலைமுகங் காட்டி மயக்கிடும் கொடியார்
முன்புழன் றேங்கும்இவ் எளியேன்
நிலைமுகங் காட்டும் நின்திருப் பாத
நீழல்வத் தடையும்நாள் என்றோ
மலைமுகம் குழைய வளைத்திடும் தெய்வ
மணிமகிழ் கண்ணினுள் மணியே
கொலைமுகம் செல்லார்க் கருள்தருந் தணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே,

395. வருபயன் அறியா துழன்றிடும் ஏழை
மதியினேன் உய்ந்திடும் வண்ணம்
ஒருவரும் நினது திருவடிப் புகழை
உன்னும்நாள் எந்தநாள் அறியேன்
அருவுரு ஆகும் சிவபிரான் அளித்த
அரும்பெறல் செல்வமே அமுதே
குருவுரு ஆகி அருள்தரும் தணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே.

396. அழிதரும் உலக வாழ்வினை மெய்யென்
றலைந்திடும் பாவியேன் இயற்றும்
பழிதரும் பிழையை எண்ணுறேல் இன்று
பாதுகாத் தளிப்பதுன் பரமே
மொழிதரும் முக்கட் செங்கரும் பீன்ற
முத்தமே முக்தியின் முதலே
கொழிதரும் அருவி பொழிதருந் தணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே.

397. நின்நிலை அறியா வஞ்சகர் இடத்தில்
நின்றுநின் றலைதரும் எளியேன்
தன்நிலை அறிந்தும் ஐயகோ இன்னும்
தயைஇலா திருந்தனை என்னே
பொன்நிலைப் பொதுவில் நடஞ்செயும் பவளப்
பொருப்பினுள் மலர்ந்திடும் பூவே
கொல்நிலை வேங்கைக் கொளும்திருத் தணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே.

398. பாடிநின் திருச்சீர் புகழ்ந்திடாக் கொடிய
பதகர்பால் நாள்தொறும் சென்றே
வாடிநின் றேங்கும் எழையேன் நெஞ்ச
வாட்டம்இங் கறிந்திலை என்னே
ஆடிநீ றாடி அருள்செயும் பரமன்
அகம்மகிழ் அரும்பெறல் மருந்தே
கோடிலங் குயர்வான் அணிதிருத் தணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே.

399. வன்பொடு செருக்கும் வஞ்சர்பால் அலையா
வண்ணம்இன் றருள்செயாய் என்னில்
துன்பொடு மெலிவேன் நின்திரு மலர்ந்தாள்
துணைஅன்றித் துணைஒன்றும் காணேன்
அன்பொடும் பரமன் உமைகையில் கொடுக்க
அகமகிழ்ந் தணைக்கும்ஆர் அமுதே
கொன்பெறும் இலைவேல் கரத்தொடும் தணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே.

திருச்சிற்றம்பலம்

37. கூடல் விழைதல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

400. சகம்ஆ றுடையார் அடையா நெறியார்
சடையார் விடையார் தனிஆனார்
உகமா ருடையார் உமைஓர் புடையார்
உதவும் உரிமைத் திருமகனார்
முகம்ஆ றுடையார் முகம்மா றுடையார்
எனவே எனது முன்வந்தார்
அகமா ருடையேன் பதியா தென்றேன்
அலைவாய் என்றார் அஃதென்னே.

401. விதுவாழ் சடையார் விடைமேல் வருவார்
விதிமால் அறியா விமலனார்
மதுவாழ் குழலாள் புடைவாழ் உடையார்
மகனார் குகனார் மயில்ஊர்வார்
முதுவாழ் வடையா தவமே அலைவேன்
முன்வந்த திடயான் அறியாதே
புதுவாழ் வுடையார் எனவே மதிபோய்
நின்றேன் அந்தோ பொல்லேனே.

402. காயோ டுடனாய் கனல்கை ஏந்திக்
காடே இடமாக் கணங்கொண்ட
பேயோ டாடிப் பலிதேர் தரும்ஓர்
பித்தப் பெருமான் திருமகனார்
தாயோ டுறழும் தணிகா சலனார்
தகைசேர் மயிலார் தனிவேலார்
வேயோ டுறழ்தோள் பாவையர் முன்என்
வெள்வளை கொண்டார் வினவாமே.

403. பொன்னார் புயனார் புகழும் புகழார்
புலியின் அதளார் புயம்நாலார்
தென்னார் சடையார் கொடிமேல் விடையார்
சிவனார் அருமைத் திருமகனார்
என்நா யகனார் என்னுயிர் போல்வார்
எழின்மா மயிலார் இடையோர்கள்
தந்நா யகனார் தணிகா சலனார்
தனிவந் திவண்மால் தந்தாரே.

404. கல்லால் அடியார் கல்லடி உண்டார்
கண்டார் உலகங் களைவேதம்
செல்லா நெறியார் செல்லுறும் முடியார்
சிவனார் அருமைத் திருமகனார்
எல்லாம் உடையார் தணிகா சலனார்
என்னா யகனார் இயல்வேலார்
நல்லார் இடைன் வெள்வளை கொடுபின்
நண்ணார் மயில்மேல் நடந்தாரே.

405. காருர் சடையார் கனலார் மழுவார்
கலவார் புரமுன் றெரிசெய்தார்
ஆருர் உடையார் பலிதேர்ந் திடும்எம்
அரனார் அருமைத் திருமகனார்
போருர் உறைவார் தணிகா சலனார்
புதியார் எனஎன் முனம்வந்தார்
ஏருர் எமதுஎ ரினில்வா என்றார்
எளியேன் ஏமாந் திருந்தேனே.

406. கண்ணார் நுதலார் விடமார் களனார்
கரமார் மழுவார் களைகண்ணார்
பெண்ணார் புயனார் அயன்மாற் கரியார்
பெரியார் கைலைப் பெருமானார்
தணிகா சலனார் தணிவேலார்
எண்ணார் எளியாள் இவள்என் றெனையான்
என்செய் கேனோ இடர்கொண்டே.

407. மழுவார் தருகைப் பெருமான் மகனார்
மயில்வா கனனார் அயில்வேலார்
தழுவார் வினையைத் தணியார் அணியார்
தணிகா சலனார் தம்பாதம்
தொழுவார் அழுவார் விழுவார் எழுவார்
துதியா நிற்பார் அவர்நிற்கப்
புழுவார் உடலோம் பிடும்என் முனர்வந்
தருள்தந் தருளிப் போனாரே.

408. திருத்தம் பயின்றார் கடல்நஞ் சயின்றார்
நினைவார் தங்கள் நெறிக்கேற்க
அருத்தம் பகர்வார் அருமைப் புதல்வர்
அறுமா முகனார் அயில்வேலார்
திருத்தம் பெறுவார் புகழும் தணிகைத்
திருமா மலையார் ஒருமாதின்
வருத்தம் பாரார் வளையும் தாரார்
வாரார் அவர்தம் மனம்என்னே.

409. பிரமன் தலையில் பலிகொண் டெருதில்
பெயரும் பிச்சைப் பெருமானார்
திரமன் றினிலே நடனம் புரிவார்
சிவனார் மகனார் திறல்வேலார்
தரமன் றலைவான் பொழில்சார் எழில்சேர்
தணிகா சலனார் தமியேன்முன்
வரமன் றவும்மால் கொளநின் றன்னால்
மடவார் அலரால் மனநொந்தே.

திருச்சிற்றம்பலம்

38. தரிசனை வேட்கை
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

410. வேல்கொளும் கமலக் கையனை எனையாள்
மெய்யனை ஐயனை உலக
மால்கொளும் மனத்தர் அறிவரும் மருந்தை
மாணிக்க மணியினை மயில்மேல்
கால்கொளும் குகனை எந்தையை எனது
கருத்தனை அயன்அரி அறியாச்
சால்கொளும் கடவுள் தனிஅருள் மகனைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.

411. கண்ணனை அயனை விண்ணவர் கோனைக்
காக்கவைத் திட்டவேற் கரனைப்
பண்ணனை அடியர் பாடலுக் கருளும்
பதியினை மதிகொள்தண் அருளாம்
வண்ணனை எல்லா வண்ணமும் உடைய
வரதன்ஈன் றெடுத்தருள் மகனைத்
தண்ணனை எனது கண்ணனை அவனைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.

412. என்னுடை உயிரை யான்பெறும் பேற்றை
என்னுடைப் பொருளினை எளியேன்
மன்னுடைக் குருவின் வடிவினை என்கண்
மணியினை அணியினை வரத்தை
மின்னுடைப் பவள வெற்பினில் உதித்த
மிளிர்அருள் தருவினை அடியேன்
தன்னுடைத் தேவைத் தந்தையைத் தாயைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.

413. பரங்கிரி அமருங் கற்பகத் தருவைப்
பராபரஞ் சுடரினை எளியேற்
கிரங்கிவந் தருளும் ஏரகத் திறையை
எண்ணுதற் கரியபேர் இன்பை
உரங்கினர் வானோர்க் கொருதனி முதலை
ஒப்பிலா தோங்கிய ஒன்றைத்
தாங்கினார் அருண கிரிக்கருள் பவனைத்
தணியையில் கண்டிறைஞ் சுவனே.

414. அரும்பெறல் மணியை அமுதினை அன்பர்
அன்பினுக் கெளிவரும் அரசை
விரும்புமா தவத்தோர் உள்ளகத் தொளிரும்
விளக்கினை அளக்கரும் பொருளைக்
கரும்பினை என்னுட் கனிந்திடும் கனியை
முனிந்திடா தருள்அருட் கடலைத்
தரும்பர சிவத்துள் கிளர்ந்தொளிர் ஒளியைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.

415. மாரனை எரித்தோன் மகிழ்தரு மகனை
வாகையம் புயத்தனை வடிவேல்
தீரனை அழியாச் சீரனை ஞானச்
செல்வனை வல்வினை நெஞ்சச்
சூரனைத் தடிந்த வீரனை அழியாச்
சுகத்தனைத் தேன்துளி கடப்பந்
தாரனைக் குகன்என் பேருடை யவனைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.

416. வேதனைச் சிறைக்குள் வேதனை படச்செய்
விமலனை அமலனை அற்பர்
போதனைக் கடங்காப் போதனை ஐந்தாம்
பூதனை மாதவர் புகழும்
பாதனை உமையாள் பாலனை எங்கள்
பரமனை மகிழ்விக்கும் பரனைத்
தரதனை உயிர்க்குள் உயிரனை யவனைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.

417. குழகனை அழியாக் குமரனை அட்ட
குணத்தனைக் குறித்திடல் அறிதாம்
அழகனைச் செந்தில் அப்பனை மலைதோ
றாடல்வாழ் அண்ணலைத் தேவர்
கழகனைத் தண்டைக் காலனைப் பிணிக்கோர்
காலனை வேலனை மனதில்
சழகிலார்க் கருளும் சாமிநா தனைத்தென்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.

418. முத்தனை முத்திக் கொருதனி வித்தை
முதல்வனை முருகனை முக்கண்
பித்தனை அத்தன் எனக்கொளும் செல்வப்
பிள்ளையைப் பெரியவர் உளஞ்சேர்
சுத்தனைப் பத்தி வலைப்படும் அவனைத்
துரியனைத் துரியமும் கடந்த
சத்தனை நித்த நின்மலச் சுடரைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.

419. வள்அயில் கரங்கொள் வள்ளலை இரவில்
வள்ளிநா யகிதனைக் கவர்ந்த
கள்ளனை அடியர் உள்ளகத் தவனைக்
கருத்தனைக் கருதும்ஆ னந்த
வெள்ளம்நின் றாட அருள்குரு பரனை
விருப்புறு பொருப்பனை வினையைத்
தள்ளவந் தருள்செய் திடுந்தயா நிதியைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.

திருச்சிற்றம்பலம்

39. நாள் எண்ணி வருந்தல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

420. இன்னும் எத்தனை நாள்செலும் ஏழையேன் இடர்க்கடல் விடுத்தேற
மின்னும் வேற்படை மிளிர்தரும் கைத்தல வித்தகப் பெருமானே
துன்னும் நற்றணி காசலத் தமர்ந்தருள் தோன்றலே மயில்ஏறி
மன்னும் உத்தம வள்ளலே நின்திரு மனக்கருத் தறியேனே.

421. ஈறி லாதநின் அருள்பெற எனக்கினும் எத்தனை நாட்செல்லும்
மாறி லாதவர் மனத்தொளிர் சோதியே மயில்மிசை வரும்வாழ்வே
துஎறி லாவளச் சோலைசூழ் தணிகைவாழ் சுத்தசின் மயத்தேவே
ஊறி லாப்பெரு நிலையஆ னந்தமே ஒப்பிலான் அருட்பேறே.

422. கூழை மாமுகில் அனையவர் முலைத்தலைக் குளித்துழன் றலைகின்ற
ஏழை நெஞ்சினேன் எத்தனை நாள்செல்லும் இடர்க்கடல் விடுத்தேற
மாழை மேனியன் வழுத்துமா ணிக்கமே வாழ்த்துவா ரவர்பொல்லா
ஊழை நீக்கிநல் அருள்தருத் தெய்வமே உத்தமச் சுகவாழ்வே.

423. ஐய இன்னும்நான் எத்தனை நாள்செலும் அல்லல்விட் டருள்மேவத்
துய்ய நன்னெறி மன்னிய அடியர்தம் துயர்தவிர்த் தருள்வோனே
வெய்ய நெஞ்சினர் எட்டொனா மெய்யனே வேல்கொளும் கரத்தோனே
செய்ய மேனிஎஞ் சிவபிரான் பெற்றநற் செல்வனே திறலோனே.

424. பாவி யேன் இன்னும் எத்தனை நாள்செலும் பருவரால் விடுத்துய்யக்
கூவி யேஅன்பர்க் கருள்தரும் வள்ளலே குணப்பெருங் குன்றேஎன்
ஆவி யேஎனை ஆள்குரு வடிவமே ஆனந்தப் பெருவாழ்வே
வாவி ஏர்தரும் தணிகைமா மலைமிசை மன்னிய அருள்தேனே.

425. எளிய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் இடர்க்கடல் விடுத்தேற
ஒளிஅ னேகமாய்த் திரண்டிடும் சிற்பர உருவமே உருவில்லா
வெளிய தாகிய வத்துவே முத்தியின் மெய்ப்பயன் தருவித்தே
அளிய தாகிய நெஞ்சினார்க் கருள்தரும் ஆறுமா முகத்தேவே.

426. தொண்ட னேன்இன்னும் எத்தனை நாள்செலும் துயர்க்கடல் விடுத்தேற
அண்ட னேஅண்டர்க் கருள்தரும் பரசிவன் அருளிய பொருவாழ்வே
கண்ட னேகர்வந் தனைசெய அசுரனைக் களைந்தருள் களைகண்ணே
விண்ட னேர்புகுஞ் சிகரிசூழ் தணிகையில் விளங்கிய வேலோனே.

427. வீண னேன்இன்னும் எத்தனை நாள்செல்லும் வெந்துயர்க் கடல்நீத்தக்
காண வானவர்க் கரும்பெருந் தலைவனே கருணையங் கண்ணானே
துஎண நேர்புயச் சுந்தர வடிவனே துளக்கிலார்க் கருள்ஈயும்
ஏண னேஎனை ஏன்றுகொள் தேசிக இறைவனே இயலோனே.

428. கடைய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் கடுந்துயர்க் கடல்நீந்த
விடையின் ஏறிய சிவபிரான் பெற்றருள் வியன்திரு மகப்பேறே
உடைய நாயகிக் கொருபெருஞ் செல்வமே உலகமெலாம் அளிப்போனே
அடைய நின்றவர்க் கருள்செயுந் தணிகைவாழ் ஆனந்தத் தெளிதேனே.

429. பேய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் பெருந்துயர்க் கடல்நீந்த
மாய னேமுதல் வானவர் தமக்கருள் மணிமிடற் றிறையோர்க்குச்
சேய னேஅகந் தெளிந்தவர்க் கினியனே செல்வனே எனைக்காக்குந்
தாய னேஎன்றன் சற்குரு நாதனே தணிகைமா மலையானே.

திருச்சிற்றம்பலம்

40. ஏத்தாப் பிறவி இழிவு
எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

430. கல்லை ஒத்தஎன் நெஞ்சினை உருக்கேன்
கடவுள் நின்அடி கண்டிட விழையேன்
அல்லை உத்தகோ தையர்க்குளங் குழைவேன்
அன்பி லாரொடும் அமர்ந்தவம் உழல்வேன்
தில்லை அப்பன்என் றுலகெடுத் தேத்தும்
சிவபி ரான்தருஞ் செல்வநின் தணிகை
எல்லை உற்றுனை ஏத்தின் றாடேன்
என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.

431. மையல் நெஞ்சினேன் மதிசிறி தில்லேன்
மாத ரார்முலை மலைஇவர்ந் துருள்வேன்
ஐய நின்திரு அடித்துணை மறவா
அன்பர் தங்களை அடுத்துளம் மகிழேன்
உய்ய நின்திருத் தணிகையை அடையேன்
உடைய நாயகன் உதவிய பேறே
எய்ய இவ்வெறும் வாழ்க்கையில் உழல்வேன்
என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.

432. புலைய மாதர்தம் போகத்தை விழைந்தேன்
புன்மை யாவைக்கும் புகலிடம் ஆனேன்
நிலைய மாம்திருத் தணிகையை அடையேன்
நிருத்தன் ஈன்றருள் நின்மலக் கொழுந்தே
விலையி லாதநின் திருவருள் விழையேன்
வீணர் தங்களை விரும்பிநின் றலைந்தேன்
இலைஎ னாதணு வளவும் ஒன்றீயேன்
என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.

433. மருட்டு மங்கையர் புழுக்குழி ஆழ்ந்து
வருந்தி நாள்தொறும் மனம்இளைக் கின்றேன்
தெருட்டும் நின்திருத் தணிகையை அடையேன்
சிவபி ரான்பெற்ற செல்வமே நினது
அருட்டி றத்தினை நினைந்துநெக் குருகி
அழுது கண்கள்நீர் ஆர்ந்திட நில்லேன்
இருட்டு வாழ்க்கையில் இடறிவீழ் கின்றேன்
என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.

434. நச்சி லேபழ கியகருங் கண்ணால்
நலத்தை வேட்டுநற் புலத்தினை இழந்தேன்
பிச்சி லேமிக மயங்கிய மனத்தேன்
பேதை யேன்கொடும் பேயனேன் பொய்யேன்
சச்சி 11லேசிவன் அளித்திடும் மணியே
தங்கமே உன்றன் தணிகையை விழையேன்
எச்சி லேவிழைந் திடர்உறு கின்றேன்
என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.

435. மின்னை அன்னநுண் இடைஇள மடவார்
வெய்ய நீர்க்குழி விழுந்திளைத் துழன்றேன்
புன்னை யஞ்சடை முன்னவன் அளித்த
பொன்னை அன்னநின் பூங்கழல் புகழேன்
அன்னை என்னநல் அருள்தரும் தணிகை
அடைந்து நின்றுநெஞ் சகம்மகிழ்ந் தாடேன்
என்னை என்னைஇங் கென்செயல் அந்தோ
என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.

436. பட்டி மாடெனத் திரிதரும் மடவார்
பாழ்ங்கு ழிக்குள்வீழ்ந் தாழ்ந்திளைக் கின்றேன்
தட்டி லார்புகழ் தணிகையை அடையேன்
சம்பு என்னும்ஓர் தருஒளிர் கனியே
ஒட்டி லேன்நினை உளத்திடை நினையேன்
உதவு றாதுநச் சுறுமரம் ஆனேன்
எட்டி என்முனம் இனிப்புறும் அந்தோ
என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.

437. ஓங்கி நீண்டவாள் உறழ்கருங் கண்ணார்
உவர்ப்புக் கேணியில் உழைத்தகம் இளைத்தேன்
வீங்கி நீண்டதோர் ஓதிஎன நின்றேன்
விழலுக் கேஇறைத் தலைந்தனன் வீணே
தாங்கி னேன்உடற் சுமைதனைச் சிவனார்
தனய நின்திருத் தணிகையை அடையேன்
ஏங்கி னேன்சுழற் படுதுரும் பெனவே
என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.

438. பண்அ ளாவிய மொழியினால் மயக்கும்
படிற்று மங்கையர் பால்விழை வுற்றேன்
தன்அ ளாவிய சோலைசூழ் தணிகைத்
தடத்த ளாவிய தருமநல் தேவே
பெண்அ ளாவிய புடையுடைப் பெருமான்
பெற்ற செல்வமே அற்றவர்க் கமுதே
என்அ ளாவிய வஞ்சக நெஞ்சோ
டென்செய் வான்பிறந் தேன்எளி யேனே.

439. கான்அ றாஅள கத்தியர் அளக்கர்
காமத் தாழ்ந்தகங் கலங்குற நின்றேன்
வான மேவுறும் பொழில்திருத் தணிகை
மலையை நாடிநின் மலர்ப்பதம் புகழேன்
ஞான நாயகி ஒருபுடை அமர்ந்த
நம்ப னார்க்கொரு நல்தவப் பேறே
ஈனன் ஆகிஇங் கிடர்ப்படு கின்றேன்
என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.

திருச்சிற்றம்பலம்

11. வித்து = விச்சு, என்றாற்போல, சத்து = சச்சு எனப் போலியாயிற்று.
தொ.வே.



41. பவனிச் செருக்கு
கலி விருத்தம்
திருச்சிற்றம்பலம்

440. பூவுண்டவெள் விடைஏறிய புனிதன் மகனார்
பாவுண்ணதொர் அமுதன்னவர் பசுமாமயில் மேல்வத்
தாவுண்டனர் எனதின்னலம் அறியார்என இருந்தால்
நாவுண்டவர் திருமுன்பிது நலம் அன்றுமக் கெனவே.

441. ஒன்றார்புரம் எரிசெய்தவர் ஒற்றித்திரு நகரார்
மன்றார்நடம் உடையார்தரு மகனார்பசு மயில்மேல்
நின்றார்அது கண்டேன்கலை நில்லாது கழன்றே
தென்றாரொடு சொல்வேன்எனை யானேமறந் தேனே.

442. வாரார்முலை உமையாள்திரு மணவாளர்தம் மகனார்
ஆராஅமு தனையார்உயிர் அனையார்அயில் அவனார்
நேரார்பணி மயிலின்மிசை நின்றார்அது கண்டேன்
நீரார்விழி இமைநீங்கின நிறைநீங்கிய தன்றே.

443. ஒன்றோடிரண் டெனுங்கண்ணினர் உதவுந்திரு மகனார்
என்றோடிகல் எழிலார்மயில் ஏறிஅங் குற்றார்
நன்றோடினன் மகிழ்கூர்ந்தவர் நகைமாமுகங் கண்டேன்
கன்றோடின பசுவாடின கலைஊடின அன்றே.

444. மலைவாங்குவில் அரனார்திரு மகனார்பசு மயிலின்
நிலைதாங்குற நின்றார்அவர் நிற்கும்நிலை கண்டேன்
அலைநீங்கின குழல்து஑ங்கின அகம்ஏங்கின அரைமேல்
கலைநீங்கின முலைவீங்கின களிஓங்கின அன்றே.

445. மான்கண்டகை உடையார்தரு மகனார்தமை மயில்மேல்
நான்கண்டனன் அவர்கண்டனர் நகைகொண்டனம் உடனே
மீன்கண்டன விழியார்அது பழியாக விளைத்தார்
ஏன்கண்டனை என்றாள்அனை என்என்றுரைக் கேனே.

446. செங்கன்விடை தனில்ஏறிய சிவனார்திரு மகனார்
எங்கண்மணி அனையார்மயி லின்மீதுவந் திட்டார்
அங்கண்மிக மகிழ்வோடுசென் றவர்நின்றது கண்டேன்
இங்கண்வளை இழந்தேன்மயல் உழந்தேன்கலை எனவே.

447. தண்தேன்பொழி இதழிப்பொலி சடையார்தரு மகனார்
பண்தேன்புரி தொடையார்தமைப் பசுமாயில் மீதில்
கண்டேன்வளை காணேன்கலை காணேன்மிகு காமம்
கொண்டேன்துயில் விண்டேன்ஒன்றும் கூறேன்வரு மாறே.

448. மாவீழ்ந்திடு விடையார்திரு மகனார்பசு மயில்மேல்
நீவீழ்ந்திட நின்றார்அது கண்டேன்என்றன் நெஞ்சே
பூவிழ்ந்தது வண்டேமதி போய்வீழ்ந்தது வண்டே
நாவீழ்ந்தது மலரேகழை நாண்வீழ்ந்தது மலரே.

449. வெற்றார்புரம் எரித்தார்தரும் மேலார்மயில் மேலே
உற்றார்அவர் எழில்மாமுகத் துள்ளேநகை கண்டேன்
பொற்றார்புயங் கண்டேன்துயர் விண்டேன்எனைப் போல
மற்றார்பெறு வாரோஇனி வாழ்வேன்மனம் மகிழ்ந்தே.

திருச்சிற்றம்பலம்

42. திருவருள் விலாசப் பத்து
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

450. ஆறுமுகப் பெருங்கருணைக் கடலே தெய்வ
யானைமகிழ் மணிக்குன்றே அரசே முக்கட்
பேறுமுகப் பெருஞ்சுடர்க்குட் சுடரே செவ்வேல்
பிடித்தருளும் பெருந்தகையே பிரம ஞானம்
வீறுமுகப் பெருங்குணத்தோர் இதயத் தோங்கும்
விளக்கமே ஆனந்த வெள்ள மேமுன்
தேறுமுகப் பெரியஅருட் குருவாய் என்னைச்
சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.

451. கண்ணிமதி புனைந்தசடைக் கனியே முக்கட்
கரும்பேஎன் கண்ணேமெய்க் கருணை வாழ்வே
புண்ணியநல் நிலைஉடையோர் உளத்தில் வாய்க்கும்
புத்தமுதே ஆனந்த போக மேஉள்
எண்ணியமெய்த் தவர்க்கெல்லாம் எளிதில் ஈந்த
என்அரசே ஆறுமுகத் திறையாம் வித்தே
திண்ணியஎன் மனம்உருக்கிக் குருவாய் என்னைச்
சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவ.

452. நின்னிருநாள் துணைபிடித்தே வாழ்கின் றேன்நான்
நின்னைஅலால் பின்னைஒரு நேயம் காணேன்
என்னைஇனித் திருவுளத்தில் நினைதி யோநான்
ஏழையினும் ஏழைகண்டாய் எந்தாய் எந்தாய்
பொன்னைஅன்றி விரும்பாத புல்லர் தம்மால்
போகல்ஒழிந் துன்பதமே போற்றும் வண்ணம்
சின்னம்அளித் தருட்குருவாய் என்னை முன்னே
சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவ.

453. கல்விஎலாம் கற்பித்தாய் நின்பால் நேயம்
காணவைத்தாய் இவ்வுலகம் கானல் என்றே
ஒல்லும்வகை அறிவித்தாய் உள்ளே நின்றென்
உடையானே நின்அருளும் உதவு கின்றாய்
இல்லைஎனப் பிறர்பால்சென் றிரவா வண்ணம்
ஏற்றம்அளித் தாய்இரக்கம் என்னே என்னே
செல்வஅருட் குருவாகி நாயி னேனைச்
சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவ.

454. எந்தைபிரான் என்இறைவன் இருக்க இங்கே
என்னகுறை நமக்கென்றே இறுமாப் புற்றே
மந்தஉல கினில்பிறரை ஒருகா சுக்கும்
மதியாமல் நின்அடியே மதிக்கின் றேன்யான்
இந்தஅடி யேனிடத்துன் திருவு ளந்தான்
எவ்வாறோ அறிகிலேன் ஏழை யேனால்
சிந்தைமகிழ்ந் தருட்குருவாய் என்னை முன்னே
சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவ.

455. மாறாத பெருஞ்செல்வ யோகர் போற்றும்
மாமணியே ஆறுமுக மணியே நின்சீர்
கூறாத புலைவாய்மை உடையார் தம்மைக்
கூடாத வண்ணம்அருட் குருவாய் வந்து
தேறாத நிலைஎல்லாம் தேற்றி ஓங்கும்
சிவஞானச் சிறப்படைந்து திகைப்பு நீங்கிச்
சீறாத வாழ்விடைநான் வாழ என்னைச்
சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.

456. கற்றறிந்த மெய்உணர்ச்சி உடையோர் உள்ளக்
கமலத்தே ஓங்குபெருங் கடவு ளேநின்
பொற்றகைமா மலரடிச்சீர் வழுத்து கின்ற
புண்ணியர்தங் குழுவில்எனைப் புகுத்தி என்றும்
உற்றவருள் சிந்தனைதந் தின்ப மேவி
உடையாய்உன் அடியவன்என் றோங்கும் வண்ணம்
சிறறறிவை அகற்றிஅருட் குருவாய் என்னைச்
சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.

457. ஞாலம்எலாம் படைத்தவனைப் படைத்த முக்கண்
நாயகனே வடிவேற்கை நாத னேநான்
கோலம்எலாம் கொயேன்நற் குணம்ஒன் றில்லேன்
குற்றமே விழைந்தேன்இக் கோது ளேனைச்
சாலம்எலாம் செயும்மடவார் மயக்கின் நீக்கிச்
சன்மார்க்கம் அடையஅருள் தருவாய் ஞானச்
சீலம்எலாம் உடையஅருட் குருவாய் வந்து
சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.

458. கற்பனையே எனும்உலகச் சழக்கில் அந்தோ
கால்ஊன்றி மயங்குகின்ற கடையே னேனைச்
சொற்பனம்இவ் வுலகியற்கை என்று நெஞ்சம்
துணவுகொளச் செய்வித்துன் துணைப்பொற் றாளை
அற்பகலும் நினைந்துகனிந் துருகி ஞான
ஆனந்த போகம்உற அருளல் வேண்டும்
சிற்பரசற் குருவாய்வத் தென்னை முன்னே
சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.

459. பன்னிருகண் மலர்மலர்ந்த கடலே ஞானப்
பரஞ்சுடரே ஆறுமுகம் படைத்த கோவே
என்னிருகண் மணினேஎந் தாயே என்னை
ஈன்றானே என்அரசே என்றன் வாழ்வே
மின்னிருவர் புடைவிளங்க மயில்மீ தேறி
விரும்பும்அடி யார்காண மேவுந் தேவே
சென்னியில்நின் அடிமலர்வைத் தென்னை முன்னே
சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.

திருச்சிற்றம்பலம்

43. திருவருட் பேற்று விழைவு
அறுசீர்க்12 கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

460. உலகம் பரவும் பரஞ்சோதி உருவாம் குருவே உம்பரிடைக்
கலகம் தருசூர்க் கிளைகளைந்த கதிர்வேல் அரசே கவின்தருசீர்த்
திலகம் திகழ்வாள் நுதற்பரையின் செல்வப் புதல்வா திறல்அதனால்
இலகும் கலப மயிற்பரிமேல் ஏறும் பரிசென் இயம்புகவே.

461. புகுவா னவர்தம் இடர்முழுதும் போக்கும் கதிர்வேல் புண்ணியனே
மிகுவான் முதலாம் பூதம்எலம் விதித்தே நடத்தும் விளைவனைத்தும்
தகுவான் பொருளாம் உனதருளே என்றால் அடியேன் தனைஇங்கே
நகுவான் வருவித் திருள்நெறிக்கே நடத்தல் அழகோ நவிலாயே.

462. அழகா அமலா அருளாளா அறிவா அறிவார் அகம்மேவும்
குழகா குமரா எனைஆண்ட கோவே நின்சீர் குறியாரைப்
பழகா வண்ணம் எனக்கருளிப் பரனே நின்னைப் பணிகின்றோர்க்
கழகா தரவாம் பணிபுரிவார் அடியார்க் கடிமை ஆக்குகவே.

463. ஆக்கும் தொழிலால் களித்தானை அடக்குந் தொழிலால் அடக்கிப்பின்
காக்கும் தொழிலால் அருள்புரிந்த கருணைக் கடலே கடைநோக்கால்
நோக்கும் தொழில்ஓர் சிறிதுன்பால் உளதேல் மாயாநொடிப்பெல்லாம்
போக்கும் தொழில்என் பால்உண்டாம் இதற்கென் புரிவேன் புண்ணியனே.

464. புரிவேன் விரதம் தவந்தானம் புரியா தொழிவேன் புண்ணியமே
பரிவேன் பாவம் பரிவேன்இப் பரிசால் ஒன்றும் பயன்காணேன்
திரிவேன் நினது புகழ்பாடிச் சிறியேன் இதனைத் தீர்வேனேல்
எரிவேன் எரிவாய் நரகத்தே இருப்பேன் இளைப்பேன் விளைப்பேனே.

465. விளைப்பேன் பவமே அடிச்சிறியேன் வினையால் விளையும் வினைப்போகம்
திளைப்பேன் எனினும் கதிர்வடிவேல் தேவே என்னும் திருமொழியால்
இளைப்பேன் அலன்இங் கியம்புகிற்பேன் எனக்கென் குறையுண் டெமதூதன்
வளைப்பேன் எனவந் திடில்அவனை மடிப்பேன் கருணை வலத்தாலே.

466. வலத்தால் வடிவேல் கரத்தேந்தும் மணியே நின்னை வழுத்துகின்ற
நலத்தால் உயர்ந்த பெருந்தவர்பால் நண்ணும் பரிசு நல்கினையேல்
தலத்தால் உயர்ந்த வானவரும் தமியேற் கிணையோ சடமான
மலத்தால் வருந்தாப் பெருவாழ்வால் மகிழ்வேன் இன்பம் வளர்வேனே.

467. இன்பப் பெருக்கே அருட்கடலே இறையே அழியா இரும்பொருளே
அன்பர்க் கருளும் பெருங்கருணை அரசே உணர்வால் ஆம்பயனே
வன்பர்க் கரிதாம் பரஞ்சோதி வடிவேல் மணியே அணியேஎன்
துன்பத் திடரைப் பொடியாக்கிச் சுகந்தந் தருளத் துணியாயே.

468. சுகமே அடியர் உளத்தோங்கும் சுடரே அழியாத் துணையேஎன்
அகமே புகுந்த அருள்தேவே அருமா மணியே ஆரமுதே
இகமே பரத்தும் உனக்கின்றி எத்தே வருக்கும் எமக்கருள
முகமே திலைஎம் பெருமானே நினக்குண் டாறு முகமலரே.

469. ஆறு முகமும் திணிதோள்ஈ ராறும் கருணை அடித்துணையும்
வீறு மயிலும் தனிக்கடவுள் வேலும் துணைஉண் டெமக்கிங்கே
சீறும் பிணியும் கொடுங்கோளும் தீய வினையும் செறியாவே
நாறும் பகட்டான் அதிகாரம் நடவா துலகம் பரவுறுமே.

திருச்சிற்றம்பலம்
12. எழுசீர்.தொ.வே. அறுசீர் ச.மு.க. ஆ.பா.

44. செல்வச் சீர்த்தி மாலை
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

470. அடியார்க் கெளியர் எனும்முக்கன் ஐயர் தமக்கும் உலகீன்ற
அம்மை தனக்கும் திருவாய்முத் தளித்துக் களிக்கும் அருமருந்தே
கடியார் கடப்ப மலர்மலர்ந்த கருணைப் பொருப்பே கற்பகமே
கண்ணுள் மணியே அன்பர்மனக் கமலம் விரிக்கும் கதிரொளியே
படியார் வளிவான் தீமுதல்ஐம் பகுதி யாய பரம்பொருளே
பகர்தற் கரிய மெய்ஞ்ஞானப் பகே அசுரப் படைமுழுதும்
தடிவாய் என்னச் சுரர்வேண்டத் தடிந்த வேற்கைத் தனிமுதலே
தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.

471. காயா தளியக் கனிந்தன்பால் கல்லால் அடிநின் றருள்ஒழுகும்
கனியுட் சுவையே அடியர்மனக் கவலை அகற்றும் கற்பகமே
ஓயா துயிர்க்குள் ஒளித்தெவையும் உணர்த்தி அருளும் ஒன்றேஎன்
உள்ளக் களிப்பே ஐம்பொறியும் ஒடுக்கும் பெரியோர்க் கோர்உறவே
தேயாக் கருணைப் பாற்கடலே தெளியா அசுரப் போர்க்கடலே
தெய்வப் பதியே முதற்கதியே திருச்செந் துஎரில் திகழ்மதியே
தாயாய் என்னைக் காக்கவரும் தனியே பரம சற்குருவே
தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.

472. நாணும் அயன்மால் இந்திரன்பொன் நாட்டுப் புலவர் மணம்வேட்ட
நங்கை மார்கள் மங்கலப்பொன் நாண்காத் தளித்த நாயகமே
சேணும் புவியும் பாதலமும் தித்தித் தொழுகும் செந்தேனே
செஞ்சாற் சுவையே பொருட்சுவையே சிவன்கைப் பொருளே செங்கழுநீர்ப்
பூணும் தடந்தோட்பெருந் தகையே பொய்யர் அறியாப் புண்ணியமே
போகங் கடந்த யோகியர்முப் போகம் விளைக்கும் பொற்புலமே
தாணு என்ன உலகமெலாம் தாங்கும் தலைமைத் தயாநிதியே
தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.

473. முன்னைப் பொருட்கு முதற்பொருளே முடியா தோங்கும் முதுமறையே
முக்கட் கரும்பீன் றெடுத்தமுழு முத்தே முதிர்ந்த முக்கனியே
பொன்னைப் புயங்கொண் டவன்போற்றும் பொன்னே புனித பூரணமே
போத மணக்கும் புதுமலரே புலவர் எவரும் புகும்பதியே
மின்னைப் பொருவும் உலகமயல் வெறுத்தோர் உள்ள விளக்கொளியே
மேலும் கீழும் நடுவும்என விளங்கி நிறைந்த மெய்த்தேவே
தன்னைப் பொருவும் சிவயோகம் தன்னை உடையோர் தம்பயனே
தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.

474. பித்தப் பெருமாள் சிவபெருமாள் பெரிய பெருமான் தனக்கருமைப்
பிள்ளைப் பெருமான் எனப்புலவர் பேசிக் களிக்கும் பெருவாழ்வே
மத்தப் பெருமால் நீக்கும்ஒரு மருந்தே எல்லாம் வல்லோனே
வஞ்சச் சமண வல்இருளை மாய்க்கும் ஞான மணிச்சுடரே
அத்தக் கமலத் தயிற்படைகொள் அரசே முவர்க் கருள்செய்தே
ஆக்கல் அளித்தல் அழித்தல்எனும் அம்முத் தொழிலும் தருவோனே
சத்த உலக சராசரமும் தாளில் ஒடுக்கும் தனிப்பொருளே
தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.

475. ஏதம் அகற்றும் என்அரசே என்ஆ ருயிரே என்அறிவே
என்கண் ஒளியே என்பொருளே என்சற் குருவே என்தாயே
காத மணக்கும் மலர்கடப்பங் கண்ணிப் புயனே காங்கெயனே
கருணைக் கடலே பன்னிருகண் கரும்பே இருவர் காதலனே
சீத மதியை முடித்தசடைச் சிவனார் செல்வத் திருமகனே
திரமா லுடன்நான் முகன்மகவான் தேடிப் பணியும் சீமானே
சாதல் பிறத்தல் தவிர்த்தரளும் சரணாம் புயனே சத்தியனே
தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.

476. வன்பில் பொதிந்த மனத்தினர்பால் வருந்தி உழல்வேன் அல்லால்உன்
மலர்த்தாள் நினையேன் என்னேஇம் மதியி லேனும் உய்வேனோ
அன்பிற் கிரங்கி விடமண்டோ ன் அருமை மகனே ஆரமுதே
அகிலம் படைத்தோன் காத்தோன்றின் றிழித்தோன் ஏத்த அளித்தோனே
துன்பிற் கிடனாம் வன்பிறப்பைத் தொலைக்கும் துணையே சுகோதயமே
தோகை மயில்மேல் தோன்றுபெருஞ்சுடரே இடராற் சோர்வுற்றே
தன்பிற் படும்அச் சுரர்ஆவி தரிக்க வேலைத் தரித்தோனே
தணிகா சலமாந் தலைத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.

477. மாலும் அயனும் உருத்திரனும் வானத் தவரும் மானிடரும்
மாவும் புள்ளும் ஊர்வனவும் மலையும் கடலும் மற்றவையும்
ஆலும் கதியும் சதகோடி அண்டப் பரப்புந் தானாக
அன்றோர் வடிவம் மேருவிற்கொண் டருளுந் தூய அற்புதமே
வேலும் மயிலும் கொண்டுருவாய் விளையாட் டியற்றும் வித்தகமே
வேதப் பொருளே மதிச்சடைகேல் விமலன் தனக்கோர் மெய்ப்பொருளே
சாலும் சுகுணத் திருமலையே தவத்தோர் புகழும் தற்பரனே
தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.

478. ஏதம் நிறுத்தம் இவ்வுலகத் தியல்பின் வாழ்க்கை யிடத்தெளியேன்
எண்ணி அடங்காப் பெருந்துயர்கொண் டெந்தாய் அந்தோ இளைக்கின்றேன்
வேதம் நிறுத்தும் நின்கமல மென்நாள் துணையே துணைஅல்லால்
வேறொன் றறியேன் அஃதறிந்திவ் வினையேற் கருள வேண்டாவோ
போத நிறுத்தும் சற்குருவே புனித ஞானத் தறிவுருவே
பொய்யர் அறியாப் பரவெளியே புரம்முன் றெரித்தோன் தரும்ஒளியே
சாதல் நிறுத்தும் அவருள்ளளத் தலம்தாள் நிறுத்தும் தயாநிதியே
தணிகா சலமாந் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.

479. முருகா எனநின் றேத்தாத முடரிடம்போய் மதிமயங்கி
முன்னும் மடவார் முலைமுகட்டின் முயங்கி அலைந்தே நினைமறந்தேன்
உருகா வஞ்ச மனத்தேனை உருத்தீர்த் தியமன் ஒருபாசத்
துடலும் நடுங்க விசிக்கல்அவர்க் குரைப்ப தறியேன் உத்தமனே
பருகா துள்ளத் தினித்திருக்கும் பாலே தேனே பகர்அருட்செம்
பாகே தோகை மயில்நடத்தும் பரமே யாவும் படைத்தோனே
தருகா தலித்தோன் முடிகொடுத்த தரும துரையே தறப்ரனே
தணிகா சலமாந் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.

45. செவி அறிவுறுத்தல்
கலி விருத்தம்
திருச்சிற்றம்பலம்

480. உலகியற் கடுஞ்சுரத் துழன்று நாள்தொறும்
அலகில்வெந் துயர்கிளைத் தழுங்கு நெஞ்சமே
இலகுசிற் பரகுக என்று நீறிடில்
கலகமில் இன்பமாம் கதிகி டைக்குமே.

481. மருளுறும் உலகிலாம் வாழ்க்கை வேண்டியே
இருளுறு துயர்க்கடல் இழியும் நெஞ்சமே
தெருளுறு நீற்கனைச் சிவஎன் றுட்கொளில்
அருளுறு வாழ்க்கையில் அமர்தல் உண்மையே.

482. வல்வினைப் பகுதியால் மயங்கி வஞ்சர்தம்
கொல்வினைக் குழியிடைக் குதிக்கும் நெஞ்சமே
இல்வினைச் சண்முக என்று நீறிடில்
நல்வினை பழுக்கும்ஓர் நாடு வாய்க்குமே.

483. கடும்புலைக் கருத்தர்தம் கருத்தின் வண்ணமே
விடும்புனல் எனத்துயர் விளைக்கும் நெஞ்சமே
இடும்புகழ்ச் சண்முக என்று நீறிடில்
நடுங்கும்அச் சம்நினை நண்ணற் கென்றுமே.

484. அன்பிலா வஞ்சர்தம் அவலச் சூழலில்
என்பிலாப் புழுஎன இரங்கு நெஞ்சமே
இன்பறாச் சண்முக என்று நீறிடில்
துன்புறாத் தணிக்கதிச் சூழல் வாய்க்குமே.

485. செறிவிலா வஞ்சகச் செல்வர் வாயிலில்
அறிவிலா துழலும்என் அவல நெஞ்சமே
எறிவிலாச் சண்முக என்று நீறிடில்
மதிவிலாச் சிவகதி வாயில் வாய்க்குமே.

486. மறிதரு கண்ணினார் மயக்கத் தாழ்ந்துவீண்
வறியொடு மலைந்திடர் விளைக்கும் நெஞ்சமே
நெறிசிவ சண்முக என்று நீறிடில்
முறிகொளீஇ நின்றஉன் முடம் தீருமே.

487. காயமாம் கானலைக் கருதி நாள்தொறும்
மாயமாம் கானிடை வருந்தும் நெஞ்சமே
நேயமாம் சண்முக என்று நீறிடில்
தோயமாம் பெரும்பிணித் துன்பம் நீங்குமே.

488. சதிசெயும் மங்கையர் தமது கண்வலை
மதிகெட அழுந்தியே வணங்கும் நெஞ்சமே
நிதிசிவ சண்முக என்று நீறிடில்
வதிதரும் உலகில்உன் வருத்தம் தீருமே.

489. பசையறு வஞ்சகர் பாற்சென் றேங்கியே
வசைபெற நாள்தொறும் வருந்து நெஞ்சமே
இசைசிவ சண்ம என்று நீறிடில்
திசைபெற மதிப்பர்உன் சிறுமை நீங்குமே.

திருச்சிற்றம்பலம்
46. தேவ ஆசிரியம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

490. யாரை யுங்கடு விழியினால் மயக்குறும் ஏந்திழை அவர்வெந்நீர்த்
தாரை தன்னையும் விரும்பிவீழ்த் தாழ்ந்தஎன் தனக்கருள் உண்டேயோ
காரை முட்டிஅப் புறம்செலும் செஞ்சுடர்க் கதிரவன் இவர்ஆழித்
தேரை எட்டுறும் பொழில்செறி தணிகையில் தேவர்கள் தொழும்தேவே.

491. மறிக்கும் வேற்கணார் மலக்குழி ஆழ்ந்துழல் வன்த஀ அறும்என்பைக்
கறிக்கும் நாயினும் கடைநாய்க் குன்திருக் கருணையும் உண்டேயோ
குறிக்கும் வேய்மணி களைக்கதிர் இரதவான் குதிரையைப் புடைத்தெங்கும்
தெறிக்கும் நல்வளம் செறிதிருத் தணிகையில் தேவர்கள் தொழும்தேவே.

492. பிரியம் மேயவன் மடந்தையர் தங்களைப் பிடித்தலைத் திடுவஞ்சக்
கரிய பேயினும் பெரியபேய்க் குன்திருக் கருணையும் உண்டேயோ
அரிய மால்அயன் இந்திரன் முதலினோர் அமர்உல கறிந்தப்பால்
தெரிய ஓங்கிய சிகரிசூழ் தணிகையில் தேவர்கள் தொழும்தேவே.

48. போற்றித் திருவிருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

505. கங்கையஞ் சடைசேர் முக்கட் கரும்பருள் மணியே போற்றி
அங்கையங் கனியே போற்றி அருட்பெருங் கடலே போற்றி
பங்கையன் முதலோர் போற்றும் பரம்பரஞ் சுடரே போற்றி
சங்கைதீர்த் தருளும் தெய்வச் சரவண பவனே போற்றி.

506. பனிப்புற அருளும் முக்கட் பரஞ்சுடர் ஒளியே போற்றி
இனிப்புறு கருணை வான்தேன் எனக்கருள் புரிந்தாய் போற்றி
துனிப்பெரும் பவந்தீர்த் தென்னைச் சுகம்பெற வைத்தோய் போற்றி
தனிப்பெருந் தவமே போற்றி சண்முகத் தரசே போற்றி.

507. மணப்புது மலரே தெய்வ வான்சுவைக் கனியே போற்றி
தணப்பற அடியர்க் கின்பம் தரும்ஒரு தருவே போற்றி
கணப்பெருந் தலைவர் ஏத்தும் கழற்பதத் தரசே போற்றி
குணப்பெருங் குன்றே போற்றி குமரசற் குருவே போற்றி.

508. தவம்பெறு முனிவருள்ளத் தாமரை அமர்ந்தோய் போற்றி
பவம்பெறுஞ் சிறியேன் தன்னைப் பாதுகாத் தளித்தோய் போற்றி
நவம்பெறு நிலைக்கும் மேலாம் நண்ணிய நலமே போற்றி
சிவம்பெறும் பயனே போற்றி செங்கதிர் வேலோய் போற்றி.

509. முவடி வாகி நின்ற முழுமுதற் பரமே போற்றி
மாவடி அமர்ந்த முக்கண் மலைதரு மணியே போற்றி
சேவடி வழுத்தும் தொண்டர் சிறுமைதீர்த் தருள்வோய் போற்றி
துஎவடி வேல்கைக் கொண்ட சுந்தர வடிவே போற்றி

510. விண்ணுறு சுடரே என்னுள் விளங்கிய விளக்கே போற்றி
கண்ணுறு மணியே என்னைக் கலந்தநற் களிப்பே போற்றி
பண்ணுறு பயனே என்னைப் பணிவித்த மணியே போற்றி
எண்ணுறும் அடியார் தங்கட் கினியதெள் அமுதே போற்றி.

511. மறைஎலாம் பரவ நின்ற மாணிக்க மலையே போற்றி
சிறைஎலாம் தவிர்ந்து வானோர் திருவுறச் செய்தோய் போற்றி
குறைஎலாம் அறுத்தே இன்பம் கொடுத்தஎன் குருவே போற்றி
துறைஎலாம் விளங்கு ஞானச் சோதியே போற்றி போற்றி.

512. தாருகப் பதகன் தன்னைத் தடிந்தருள் செய்தோய் போற்றி
வேருகச் சூர மாவை வீட்டிய வேலோய் போற்றி
ஆருகச் சமயக் காட்டை அழித்தவெங் கனலே போற்றி
பொருகத் தகரை ஊர்ந்த புண்ணிய முர்த்தி போற்றி.

513. சிங்கமா முகனைக் கொன்ற திறலுடைச் சிம்புள் போற்றி
துங்கவா ரணத்தோன் கொண்ட துயர்தவிர்த் தனித்தோய் போற்றி
செங்கண்மால் மருக போற்றி சிவபிரான் செல்வ போற்றி
எங்கள்ஆர் அமுதே போற்றி யாவர்க்கும் இறைவ போற்றி

514. முத்தியின் முதல்வ போற்றி முவிரு முகத்த போற்றி
சத்திவேற் கரத்த போற்றி சங்கரி புதல்வ போற்றி
சித்திதந் தருளும் தேவர் சிகாமணி போற்றி போற்றி
பத்தியின் விளைந்த இன்பப் பரம்பர போற்றி போற்றி.

515. தெருளுடை யோர்க்கு வாய்த்த சிவானந்தத் தேனே போற்றி
பொருளுடை மறையோர் உள்ளம் புகுந்தபுண் ணியமே போற்றி
மருளுடை மனத்தி னேனை வாழ்வித்த வாழ்வே போற்றி
அருளுடை அரசே எங்கள் அறுமுகத் தமுதே போற்றி.

516. பொய்யனேன் பிழைகள் எல்லாம் பொறுத்திடல் வேண்டும் போற்றி
கையனேன் தன்னை இன்னும் காத்திடல் வேண்டும் போற்றி
மெய்யனே மெய்யர் உள்ளம் மேவிய விளைவே போற்றி
ஐயனே அப்ப னேஎம் அரசனே போற்றி போற்றி

517. முருகநின் பாதம் போற்றி முளரியங் கண்ணற் கன்பாம்
மருகநின் கழல்கள் போற்றி வானவர் முதல்வ போற்றி
பெருகருள் வாரி போற்றி பெருங்குணப் பொருப்பே போற்றி
தருகநின் கருணை போற்றி சாமிநின் அடிகள் போற்றி.

518. கோதிலாக் குணத்தோய் போற்றி குகேசநின் பாதம் போற்றி
தீதிலாச் சிந்தை மேவும் சிவபரஞ் சோதி போற்றி
போதில்நான் முகனும் காணாப் பூரண வடிவ போற்றி
ஆதிநின் தாள்கள் போற்றி அநாதிநின் அடிகள் போற்றி.

519. வேதமும் கலைகள் யாவும் விளம்பிய புலவ போற்றி
நாதமும் கடந்து நின்ற நாதநின் கருணை போற்றி
போதமும் பொருளும் ஆகும் புனிதநின் பாதம் போற்றி
ஆதரம் ஆகி என்னுள் அமர்ந்தஎன் அரசே போற்றி

திருச்சிற்றம்பலம்

50. சண்முகர் கொம்மி
தாழிசை
திருச்சிற்றம்பலம்

523. குறவர் குடிசை நுழைந்தாண்டி - அந்தக்
கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி
துறவர் வணங்கும் புகழாண்டி - அவன்
தோற்றத்தைப் பாடி அடியுங்கடி.

524. மாமயில் ஏறி வருவாண்டி - அன்பர்
வாழ்த்த வரங்கள் தருவாண்டி
தீமையி லாத புகழாண்டி - அவன்
சீர்த்தியைப் பாடி அடியுங்கடி.

525. பன்னிரு தோள்கள் உடையாண்டி - கொடும்
பாவிகள் தம்மை அடையாண்டி
என்னிரு கண்கள் அனையாண்டி - அவன்
ஏற்றத்தைப் பாடி அடியுங்கடி

526. வேங்கை மரமாகி நின்றாண்டி - வந்த
வேடர் தனைஎலாம் வென்றாண்டி
தீங்குசெய் சூரனைக் கொன்றாண்டி - அந்தத்
தீரனைப் பாடி அடியுங்கடி.

527. சீர்திகழ் தோகை மயில்மேலே - இளஞ்
செஞ்சுடர் தோன்றுந் திறம்போலே
கூர்வடி வேல்கொண்டு நம்பெருமான் - வருங்
கோலத்தைப் பாருங்கள் கோதையர்காள்.

528. ஆறு முகங்களில் புன்சிரிப்பும் - இரண்
டாறு புயந்திகழ் அற்புதமும்
வீறு பரஞ்சுடர் வண்ணமும்ஓர் - திரு
மேனியும் பாருங்கள் வெள்வளைகாள்.

529. ஆனந்த மான அமுதனடி - பர
மானந்த நாட்டுக் கரசனடி
தானந்த மில்லாச் சதுரனடி - சிவ
சண்முகன் நங்குரு சாமியடி.

530. வேதமுடி சொல்லும் நாதனடி - சதுர்
வேதமு டிதிகழ் பாதனடி
நாத வடிவுகொள் நீதனடி - பர
நாதங் கடந்த நலத்தனடி.

531. தத்துவத் துள்ளே அடங்காண்டி - பர
தத்துவம் அன்றித் துடங்காண்டி
சத்துவ ஞான வடிவாண்டி - சிவ
சண்முக நாதனைப் பாடுங்கடி.

532. சச்சிதா னந்த உருவாண்டி - பர
தற்பர போகந் தருவாண்டி
உச்சிதாழ் அன்பர்க் குறவாண்டி - அந்த
உத்தம தேவனைப் பாடுங்கடி.

533. அற்புத மான அழகனடி - துதி
அன்பர்க் கருள்செய் குழகனடி

534. சைவந் தழைக்க தழைத்தாண்டி -
ஞான சம்பந்தப் பேர்கொண் டழைத்தாண்டி
பொய்வந்த உள்ளத்தில் போகாண்டி - அந்தப்
புண்ணியன் பொன்னடி போற்றுங்கடி.

535. வாசி நடத்தித் தருவாண்டி - ஒரு
வாசியில் இங்கே வருவாண்டி
ஆசில் கருணை உருவாண்டி - அவன்
அற்புதத் தாள்மலர் ஏத்துங்கடி.

536. இராப்பகல் இல்லா இடத்தாண்டி - அன்பர்
இன்ப உளங்கொள் நடத்தாண்டி
அராப்பளி ஈந்த திடத்தாண்டி - அந்த
அண்ணலைப் பாடி அடியுங்கடி.

537. ஒன்றிரண் டான உளவாண்டி - அந்த
ஒன்றிரண் டாகா அளவாண்டி
மின்திரண் டன்ன வடிவாண்டி - அந்த
மேலவன் சீர்த்தியைப் பாடுங்கடி.

திருச்சிற்றம்பலம்
 
Mail Usup- truth is a pathless land -Home