"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Spirituality & the Tamil Nation > திருவிவிலியம் - பழைய ஏற்பாடு > புத்தகம் 1 - தொடக்கநூல் > புத்தகம் 2 - விடுதலைப் பயணம் > புத்தகம் 3 - லேவியர் > புத்தகம் 4. எண்ணிக்கை > புத்தகம் 5. இணைச் சட்டம் > புத்தகம் 6. யோசுவா > புத்தகம் 7. நீதித்தலைவர்கள் > புத்தகம் 8. ரூத்து > புத்தகம் 9. சாமுவேல் - முதல் நூல் > புத்தகம் 10. சாமுவேல் - இரண்டாம் நூல் > புத்தகம் 11. அரசர்கள் - முதல் நூல் > புத்தகம் 12. அரசர்கள் - இரண்டாம் நூல் > புத்தகம் 13 - குறிப்பேடு - முதல் நூல் > புத்தகம் 14 - குறிப்பேடு - இரண்டாம் நூல் > புத்தகம் 15 - எஸ்ரா > புத்தகம் 16 - நெகேமியா > புத்தகம் 17 - எஸ்தர் > புத்தகம் 18 - யோபு > புத்தகம் 19 - திருப்பாடல்கள் > புத்தகம் 20 - நீதிமொழிகள்
Holy Bible - Old Testament
Book 8. Ruth
விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 8. ரூத்து
Acknowledgements:
Our sincere thanks to Rev.Fr. Adaikalarasa, SDB of the Don Bosco Mission, Madurai for providing us with the "bamini" Tamil font e-version of this work and for his help in proof-reading of the TSCII version.
PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
© Project Madurai 2006.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
1. நீதித் தலைவர்கள் ஆட்சியாளராய் இருந்த காலத்தில். நாட் டில் ஒரு கோடிய பஞ்சம் உண்டாயிற்று. யூதாவிலுள்ள பெத்லகேம் ஊரைச் சார் ந்த ஒருவர் பிழைப்பதற்கென்று தம் மனைவியையும் மைந்தர் இருவரையும் அழைத்துக் கொண்டு மோவாயு நாட்டிற்கு சென்றார்.
2. அவர் பெயர் எலிமலேக்கு: அவர் மனைவி பெயர் நகோமி. மைந்தர் இருவரின் பெயர்கள் மக்லோன், கிலியோன் என்பன. அவர்கள் யூதாவிலிருந்த பெத்லகேமைச் சார்ந்த எப்ராத்துக் குடியினர்.
3. அவர்கள் மோவாபு நாட்டை அடைந்து அங்கு வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் அங்கே இருந்த காலத்தில் எலிமலேங்கு இறந்துபோனார். எனவே, நகோமி தம் இரு மைந்தரைத் தவிர வேறு துணையற்றவரானார்.
4. அவ்விருவரும் மோவாபு நாட்டுப் பெண்களை மணந்து கொண்டார். ஒருவர் பெயர் ஓர்பா: மற்றவர் பெயர் ரூத்து. அவர்கள் பிழைக்க வந்து ஏறத்தாழப் பத்தாண்டுகள் ஆயின.
5. பிறகு மக்லோனும் கிலியோனும் இறந்து போயினர். நகோமி தம் கணவரையும் இரு மைந்தரையும் இழந்து தன்னந் தனியராய் விடப்பட்டார்.
6. நாகோமியின் சொந்த நாட்டில் ஆண்டவர் தம் மக்களைக் கருணையுடன் கண்ணோக்கி, அவர்களுக்கு உணவு கிடைக்கும்படிச் செய்தார். இதை நகோமி மோவாபு நாட்டில் இருந்தபோதே கேள்விப்பட்டார். எனவே, அவர் மோவாபு நாட்டை விட்டுப்போக ஏற்பாடு செய்தார்.
7. பிறகு அவரும், அவருடைய மருமக்கள் இருவரும் தாங்கள் இருந்த இடத்தை விட்டு யூதா நாட்டுக்குப் பயணமானார்கள்.
8. ஆனால் வழியில் நகோமி அவர்களிடம், உங்கள் தாய் வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள். இறந்தவர்களுக்கு எனக்கும் நீங்கள் பரிவு காட்டியதுபோல், ஆண்டவரும் உங்களுக்குப் பரிவு காட்டுவாராக!
9. நீங்கள் இருவரும் மீண்டும் மணம் செய்துகொண்டு நலமுடன் இல்வாழ்க்கை நடத்த ஆண்டவர் அருள்புரிவாராக! என்று சொல்லி அவர்களை அணைத்து முத்தமிட்டார்.
10. அவர்களோ கதறி அழுது, இல்லையம்மா, நாங்கள் உம்மோடு வந்து, உம்முடைய இனத்தவரிடையே இருப்போம் என்றார்கள்.
11. அதற்கு நகோமி, மக்களே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்: என்னோடு வருவதால் உங்களுக்கு என்ன பயன்? நீங்கள் மணந்து கொள்ள மீண்டும் மைந்தரைப் பெற்றுத்தர இனி என்னால் இயலுமா?
12. மக்களே, திரும்பிச் செல்லுங்கள். எனக்கோ வயதாகிவிட்டது. கணவரோடு கூடி வாழும் பருவமும் கடந்துவிட்டது. அவ்வாறன்றி, பிள்ளை பிறக்கும் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு எனச் சொல்லி, இன்றிரவே நான் கணவரோடு கூடி மைந்தரைப் பெற்றெடுத்தாலும்
13. அவர்கள் பெரியவர்களாகும் வரையில் நீங்கள் வேறு யாரையும் மணம் செய்து கொள்ளாமல் அவர்களுக்காகக் காத்திருப்பீர்களா? மக்களே, வேண்டாம். ஆண்டவர் என்னைப் பெருந்துன்பத்தில் ஆழ்த்தியுள்ளார். என்னால் உங்களுக்கு நேர்ந்தவற்றிற்காக நான் மிகவும் வருந்துகிறேன் என்று சொன்னார்.
14. அதைக் கேட்டு அவர்கள் மீண்டும் கதறி அழுதார்கள். பிறகு ஓர்பா தம் மாமியாருக்கு முத்தம் கொடுத்துவிட்டுத் திரும்பிச் சென்றார்.
15. ஆனால் ரூத்தோ பிரிந்துபோக மறுத்துவிட்டார். நகோமி அவரிடம், இதோ பார்! உன் ஓரகத்தி தன் இனத்தவரையும் தன் தெய்வங்களையும் நோக்கித் திரும்பிப் போய்விட்டாள். அவளைப் போல் நீயும் திரும்பிப்போ என்றார்.
16. அதற்கு ரூத்து, உம்மோடு வராமல் உம்மை விட்டுப் பிரிந்து போகும்படி என்னை நீர் வற்புறுத்த வேண்டாம். நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன்: உமது இல்லமே எனது இல்லம்: உம்முடைய இனமே எனது இனம்: உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம்.
17. நீர் எங்கே இறப்பீரோ அங்கேயே நானும் இறப்பேன்: அங்கேதான் என் கல்லைறையும் இருக்கும்: சாவிலும் உம்மைவிட்டு நான் பிரியேன்: அப்படிப் பிரித்தால் ஆண்டவர் என்னைத் தண்டிப்பாராக& என்றார்.
18. ரூத்து தம்மோடு வர மன உறுதியுடன் இருப்பதைக் கண்டு, நகோமி வேறொன்றும் கூறவில்லை.
19. பின்னர் அவர்கள் தொடர்ந்து பயணம் செய்து பெத்லகேகம் ஊரை அடைந்தார்கள். அங்கு அவர்கள் வந்து சேர்ந்ததும் அந்த ஊர் முழுவதிலும் பெரும் பரபரப்பு உண்டாயிற்று. ஊர்பெண்கள் இவள் நகோமி தானே? என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். அவரோ,
20. என்னை நகோமி என அழைக்காதீர்கள்: மாரா என அழையுங்கள்.
21. நிறைவுடன் இங்கிருந்து சென்றேன். ஆனால் ஆண்டவர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரச் செய்தார். ஆண்டவர் என்னைத் தண்டித்து விட்டார். எல்லாம் வல்லவர் என்மீது துயரத்தைச் சுமத்தியுள்ளார். இப்படியிருக்க என்னை நகோமி என அழைப்பது ஏன்? என்றார்.
22. இவ்வாறு நகோமியும் அவர் தம் மருமகளான மொவாபியப் பெண் ரூத்தும் அந்நாட்டை விட்டுத்திரும்பி வந்தார். அவர்கள் பெத்லகேகம் ஊர் வந்து சேர்ந்தபோது, வாற்கோதுமை அறுவடை தொடங்கியிருந்தது.அதிகாரம் 2.
1. நகோமிக்குப் போவாக என்ற உறவினர் ஒருவர் இருந்தார். அவர் செல்வமும் செல்வாக்கும் உடையவர்: எலிமலேக்கின் வழியில் உறவானவா.
2. ரூத்து நகோமியிடம், நான் வயலுக்குப் போய், யார் என்னைக் கருணைக் கண்டுகொண்டு நோக்குவாரோ, அவர் பின்னே சென்று கதிர்களைப் பொறுக்கிக் கொண்டு வருகிறேன். எனக்கு அனுமதி தாரும் எனறார். அவரும், போய் வா, மகளே என்றார்
3. ரூத்து ஒரு வயலுக்குப் போய் அறுவடையாளர்கள் பின்னால் சென்று, அவர்கள் சிந்திய கதிர்களைப் பொறுக்கிச் சேர்த்தார். தற்செயலாக அவர் போயிருந்த அந்த வயல் எலிமலேக்கிற்கு உறவினராக போவாசுக்கு உரியதாய் இருந்தது.
4. சிறிது நேரம் கழித்து, போவாசு பெத்லகேமிலிருந்து அங்கு வந்து அவர் சேர்ந்தார். அவர் அறுவடையாளர்களை நோக்கி, ஆண்டவர் உங்களோடு இருப்பாராக! என்றார். அவர்களும் ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக! என்றார்கள்.
5. அவர் அறுவடையாள்களின் கண்காணியிடம் இவள் யார் வீட்டுப் பெண்? என்று கேட்டார்.
6. அதற்கு அறுவடையாள்களுக்கு மேற்பார்வையாளராய் நியமிக்கப்பட்டிருந்த வேலையாள், இவள்தான் மோவாபு நாட்டிலிருந்து திரும்பியுள்ள நகோமியோடு வந்திருக்கும் மோவாபியப் பெண்.
7. அறுவடையாள்களின பின்னே சென்று, சிந்தும் கதிர்களைப் பொறுக்கிக் கொள்வதற்கு என்னிடம் அனுமதி கேட்டாள். காலை முதல் இதுவரையில் அவள் சிறிதும் ஓய்வின்றிக் கதிர் பொறுக்கிக் கொண்டிருந்தாள். இப்போதுதான் அவள் பந்தல் நிழலில் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள் என்றார்.
8. பிறகு போவாசு ரூத்தை நோக்கி பெண்ணே நான் சொல்வதைக் கேள். இந்த வயலைத் தவிர வேறு எந்த வயலுக்கும் போய் நீ கதிர் பொறுக்க வேண்டாம். என் வயலில் வேலை செய்யும் பெண்களுடன் இங்கேயே இரு.
9. அறுவடையாளர்கள் வேலை செய்யும் இடத்தை நன்றாகக் கவனித்து. அங்கே போய் அவர்கள் பின்னால் கதிர் பொறுக்கும் பெண்களோடு நீயும் இரு. எந்த வேலைக்காரனும் உனக்குத் தொந்தரவு கொடுக்க கூடாதென நான் கட்டளையிட்டிருக்கிறேன். உனக்குத் தாகம் எடுத்தால் அவர்கள் நிரப்பி வைத்துள்ள பாண்டங்களிலிருந்து தண்ணீர் அருந்திக் கொள் என்றார்.
10. ரூத்து போவாசின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி என்னைஏன் இவ்வாறு கருணைக் கண் கொண்டு நோக்குகிறீர். அயல் நாட்டுப்பெண்ணாகிய என்னை ஏன் இவ்வளவு பரிவுடன் நடத்துகிறீர்? என்று கேட்டார்.
11. போவாசு, உன் கணவன் இறந்ததிலிருந்து உன் மாமியாருக்காக நீ செய்துள்ள அனைத்தையும் கேள்விப்பட்டேன். உன் தந்தையையும் தாயையும் சொந்த நாட்டையும் துறந்துவிட்டு, முன்பின் தெரியாத ஓர் இனத்தாருடன் வாழ நீ வந்திருப்பது எனக்குத் தெரியும்.
12. நீ செய்துள்ள அனைத்திற்கும் ஆண்டவர் உனக்குத் தகுந்த பலன் அளிப்பார். இஸ்ரயோலின் கடவுளான ஆண்டவருடைய இறக்கைகளின் அரவணைப்பை நீ தேடி வந்திருக்கிறாய். அவர் உனக்கு முழு நிறைவான பலனை அருள்வார் என்றார்.
13. அதற்கு ரூத்து, ஜயா, கருணைமிகும் கண்கொண்டு நோக்கின்றீர். உம்முடைய பணிப்பெண் அல்லாத என்னைக் கனிமொழி கொண்டே தேற்றுகின்றீ+ என்றார்.
14. உணவு வேளை வந்ததும் போவாசு ரூத்திடம், இங்கே வந்து இந்த அப்பத்தை எடுத்துப் புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்துச் சாப்பாடு என்றார். அவரும் அவ்வாறே போய் அறுவடையாள்களுடன் உட்கார்ந்து கொண்டார். அவர் பசிதீர உண்டபின்னும் சிறிதளவு உணவு எஞ்சியது.
15. பிறகு அவர் மீண்டும் கதிர் பொறுக்க எழுந்து சென்றார். போவாசு தம் அறுவடையாள்களிடம், அரிகட்டுகள் கிடக்குமிடத்தில் அவள் கதிர் பொறுக்கட்டும். அவளை யாரும் அதட்ட வேண்டாம்.
16. மேலும் கட்டுக்களிலிருந்து சில கதிர்களை உருவிப்போட்டு விடுங்கள். அவள் பொறுக்கி கொள்ளட்டும். யாரும் அவளை தடுக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார்.
17. அவருடைய வயலில் ரூத்து மாலை வரை கதிர்களை பொறுக்கிச் சேர்த்தார். அவற்றைத் தட்டி புடைத்து நிறுத்த போது வாற்கோதுமை ஏறத்தாழ இருபது படி இருந்தது.
18. அவர் அதை எடுத்துக் கொண்டு ஊருக்குள் சென்று தம் மாமியாரிடம் காட்டினார்: அவர் உண்ட பின் எடுத்து வைத்திருந்த உணவையும் அவரிடம் கொடுத்தார்.
19. அவர்தம் மாமியார் அவரிடம், இன்று எந்த வயலில் கதிர் பொறுக்கினாய்? அது யாருடைய வயல்? என்று கேட்டுவிட்டு, உனக்குப் பரிவு காட்டியவருக்கு ஆண்டவர் ஆசி வழங்குவாராக! என்றார். ரூத்து தம் யாரிடமும் தாம் கதிர் பொறுக்கின வயல் இன்னாருடையது என்பதைத் தெரிவிப்பதற்காக, நான் இன்று கதிர் பொறுக்கின வயலின் உரிமையாளர் போவாசு என்றார்.
20. நகோமி அவரிடம், அப்படியா? வாழ்வோருக்கும் இறந்தோர்க்கும் என்றும் பேரன்பு காட்டும் ஆண்டவர் அவருக்கு ஆசி வழங்குவாராக என்றார். மேலும் அவர், போவாசு நமக்கு நெருங்கிய உறவினர்: நம்மைக் காப்பாற்றும் கடமையுள்ள முறை உறவினரும் ஒருவர் என்றார்.
21. மோவாபியரான ரூத்து மீண்டும் அவர் அறுவடை முடியும்வரை தம்முடைய ஆள்களுடன் நான் கதிர் பொறுக்கிக் கொள்ளலாமென்று என்னிடம் சொன்னா+ என்றார்.
22. நகோமி தம் மருமகள் ரூத்திடம் ஆம் மகளே நீ அவருடைய பணிப் பெண்களோடு இருப்பதுதான் நல்லது. வேறொருவனது வயலுக்கு நீ போனால், அங்குள்ள ஆண்கள் உனக்குத் தொந்தரவு கொடுக்கக்கூடும் என்று சொன்னார்.
23. அவ்வாறே ரூத்து போவாசின் பணிப்பெண்களை விட்டுப் பிரியாதிருந்து, வாற்கோதுமையும் கோதுமையும் அறுவடையாகும் வரை கதிர் பொறுக்கி வந்தார்: தம் மாமியாருடனேயே தங்கியிருந்தார்.அதிகாரம் 3.
1. ஒரு நாள் மாமியாராகிய நகோமி ரூத்திடம் நீ இல்வாழ்க்கையில் ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் இருக்குமாறு செய்வது என் கடமை அல்லவா?
2. போவாசு நமக்கு உறவினர். அவருடைய பணிப்பெண்களோடுதான் நீ இத்தனை நாள்களும் இருந்தாய். நான் சொல்வதைக் கவனமாயக் கேள். இன்றிரவு அவர் களத்தில் வாற்கோதுமையைத் தூற்றிக் கொண்டிருப்பார்.
3. நீ குளித்துவிட்டு, எண்ணெய் தடவிக் கொண்டு, உன்“னிடமுள்ள ஆடைகளில் மிகவும் நல்லதை உடுத்திக் கொள்: பின்னர் அவருடைய களத்துக்குப் போ. ஆனால் அவர் உண்டு குடிக்கும் வரை, அவர் கண்ணில் படாமலிரு: அவர் படுக்கும் இடத்தைப் பார்த்து வைத்துக் கொள்.
4. அவர் உறங்கியதும், நீ சென்று அவர் கால்களை மூடியிருக்கும் போர்வையை விலக்கிவிட்டு, அங்கேயே படுத்துக் கொள். அதற்கு மேல் நீ செய்ய வேண்டியதை அவரே உன்னிடம் சொல்வார் என்றார்.
5. ரூத்து, நீர் சொல்லித்தந்த அனைத்தையும் நான் செய்கிறேன் என்றார்.
6. அவ்வாறே ரூத்து அந்தக் களத்துக்கு சென்று, தம் மாமியார் சொல்லித் தந்த அனைத்தையும் செய்தார். போவாசு உண்டு குடித்து மகிழ்ச்சியாய் இருந்தார்.
7. பிறகு, அவர் தானியக் குவியல் ஒன்றின் அருகே சென்று உறங்குவதற்காகப் படுத்துக்கொண்டார். சிறிது நேரம் கழித்து ரூத்து ஓசையின்றி அங்கே சென்று அவர் கால்களை மூடியிருந்த போர்வையை விலக்கி விட்டுப் படுத்துக் கொண்டார்.
8. நள்ளிரவில் திடீரென்று போவாசு விழித்துக் கொண்டார்: தலை உயர்த்திப் பார்க்கையில் தம் காலருகில் ஒரு பெண் படுத்துக்கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டார். உடனே அவர், யார் நீ? என்று கேட்க, அவர், நான் தான் ஜயா, ரூத்து உம்முடைய அடியாள். நீரே என்னைக் காப்பாற்றும் கடமையுள்ள என் முறை உறவினர். அந்த முறைப்படி என்னை உமது போர்வையால் மூடும் என்றார்.
9. அதற்கு அவர் என் மகளே, ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! நீ இது வரை காட்டிய குடும்பப் பற்றை விட இப்போது காட்டும் குடும்பப் பற்றே மேலானது என்பேன்.
10. ஏனெனில் பணமுள்ள ஓர் இளைஞனை நீ நாடவில்லை: ஏழையாயினும் இளைஞனே வரவேண்டும் என்று நீ கேட்கவில்லை.
11. என் மகளே, கவலைப்படாதே! என் உறவின் முறையினர் அனைவருக்கும் நீ எவ்வளவு நல்லவள் என்பது தெரியும். நீ கேட்பது அனைத்தையும் நான் செய்து முடிப்பேன்.
12. நான் உன்னைக் காப்பாற்றும் கடமையுள்ள உன்னுடைய முறை உறவினன் என்பது உண்மைதான். எனினும், என்னைவிட இன்னும் நெருங்கிய முறைஉறவினர் ஒருவர் உனக்கு இருக்கிறார்.
13. இந்த இரவு கழியும்வரை நீ இங்கேயே இரு. காலையில் அவர் உன்னுடைய முறை உறவினராகத் தம் கடமையை ஏற்றுக் கொள்ள முன்வருவாரானால் நல்லது. அவர் ஏற்றுக் கொள்ளாவிடில், நானே அக்கடமையை ஏற்றுக்கொள்வேன். வாழும் ஆண்டவர் மேல் இதை ஆணையிட்டுக் கூறுகிறேன். பொழுது புலரும்வரை இங்கேயே படுத்திரு என்றார்.
14. அவ்வாறே ரூத்து பொழுது புலரும்வரை அவர் அருகே படுத்திருந்தார். ஒரு பெண் களத்திற்கு வந்திருந்தது யாருக்கும் தெரியக்கூடாது என்று போவாசு ஏற்கனவே அவரிடம் சொல்லியிருந்தார். அதற்கிணங்க, ஆள் அடையாளம் கண்டுகொள்ள இயலாத வைகறைப் பொழுதிலேயே ரூத்து எழுந்து விட்டார்.
15. போவாசு அவரிடம், உன் போர்வையை விரித்துப்பிடி என்றார். அவரும் அவ்வாறே செய்தார். அவர் ஆறு மரக்கால் எடையுள்ள வாற்கோதுமையை அதில் கொட்டி, அதை அவர் எடுத்துப் போகுமாறு கொடுத்தார்.
16. ரூத்து மாமியாரிடம் வந்ததும், நகோமி, மகளே, என்ன நடந்தது? என்று கேட்டார். போவாசு தமக்குச் செய்ததையெல்லாம் ரூத்து கூறினார்.
17. மேலும் அவர், நான் உம்மிடம் வெறுங்கையோடு வரக்கூடாது என்று அவர் ஆறு மரக்கால் வாற்கோதுமையும் கொடுத்தார் என்றார்.
18. நகோமி அவரிடம், மகளே, இது எப்படி முடியும் என்பதை அறியும்வரை காத்திரு. அவர் காலந்தாழ்த்தமாட்டார்: இன்றே இதற்கு நல்லதொரு முடிவு காண்பார் என்றார்.அதிகாரம் 4.
1. இதற்கிடையில், போவாசு பொது மன்றம் கூடும் நகர வாயிலுக்குச் சென்று அங்கே அமர்ந்து கொண்டார். போவாசு முன்பு குறிப்பிட்ட எலிமலேக்கின் முறைஉறவினர் அவ்வழியாக வந்தார். போவாசு அவரைப் பெயர் சொல்லி அழைத்து, இங்கே வந்து சற்று உட்காரும் என்றார். அவரும் அவ்வாறே அருகில் வந்து உட்கார்ந்தார்.
2. பிறகு போவாசு ஊர்ப்பெரியோருள் பத்துப் பேரை வரவழைத்து இங்கே சற்று உட்காருங்கள் என்றார்.
3. அவர்கள் உட்கார்ந்தவுடன் போவாசு அந்த உறவினரை நோக்கி, நம் நெருங்கிய உறவினரான எலிமலேக்கிற்குச் சொந்தமான துண்டு நிலம் ஒன்று இருப்பது உமக்கு தெரியும் அல்லவா? மோவாபு நாட்டிலிருந்து திரும்பி வந்திருக்கும் நகோமி இப்போது அதை விற்கப் போகிறார்.
4. இதை உம் காதில் போட்டு வைக்க வேண்டும் என்று நினைத்தேன். இங்கு அமர்ந்திருப்பவர் முன்னிலையிலும் என் உறவின்முறைப் பெரியோர் முன்னிலையிலும் அந்த நிலத்தை நீர் வாங்கிக் கொள்ளும்: விருப்பமில்லையெனில் சொல்லிவிடும். ஏனெனில் அதை மீட்கும் உரிமை முதலில் உமக்கும் உமக்குப் பின் எனக்கும் உண்டு: வேறெவர்க்கும் இல்லை என்றார். அதற்கு அவர், சரி வேண்டுமானால் வாங்கிக் கொள்கிறேன் என்றார்.
5. போவாசு அவரிடம், ஆனால் நகோமியிடமிருந்து இந்த நிலத்தை நீர் வாங்கும் நாளில், இறந்தவனின் மனைவியான மோவாபியப் பெண் ரூத்தை உம் மனைவியாக ஏற்றுக்கொள்கின்றீர் என்பதைத் தெரிந்து கொள்ளும். இறந்துபோனவருக்கு வழிமரபு தோன்றுவதற்காகவும் அவரது குடும்பச் சொத்து அவர் பெயரிலேயே தொடர்ந்து இருப்பதற்காகவும் நீர் இதைச் செய்ய வேண்டும் என்றார்.
6. அவரோ என்னால் அந்த நிலத்தை வாங்க இயலாது. ஏனெனில் இதனால், என் குடும்பத்திற்குரிய உரிமைச் சொத்து குறைந்து போகும். நீரே அந்த உரிமையை எடுத்துக் கொள்ளும். என்னால் நிலத்தை வாங்கவே இயலாது என்றார்.
7. இஸ்ரயேலரிடையே பண்டைக் காலத்தில் ஒரு வழக்கம் இருந்தது. நிலவிற்பனை அல்லது கொடுக்கல் வாங்கல் நடைபெறும்போது எடுக்கும் முடிவை உறுதிப்படுத்துவதற்காக, ஒருவர் தம் காலணியைக் கழற்றி மற்றவரிடம் கொடுத்துவிடுவார். எடுக்கப்பட்ட முடிவை உறுதிப்படுத்தும் முறை இதுவே.
8. அவ்வாறே அந்த முறை உறவினர் போவாசிடம், நீரே வாங்கிக்கொள்ளும் என்று சொன்னபோது, அவர் தம் காலணியைக் கழற்றி அவரிடம் கொடுத்தார்.
9. அதன்பின் போவாசு அங்கிருந்த பெரியோரையும் மற்றெல்லாரையும் நோக்கி, நான் எலிமலேக்கு, கிலியோன், மக்லோன் ஆகியோருக்கு உரிமையான அனைத்தையும் நகோமியிடமிருந்து வாங்கி விட்டேன்: இதற்கு இன்று நீங்களே சாட்சி.
10. மேலும், மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபியப் பெண் ரூத்தை என் மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன். இறந்தவரின் உரிமைச் சொத்து அவர் பெயரிலேயே தொடர்ந்து இருக்கவும் அப்பெயர் அவருடைய உறவின்முறையிலும் ஊரிலும் நீடித்திருக்கவும் இதைச் செய்கிறேன். இதற்கும் நீங்கள் இன்று சாட்சி என்றார்.
11. அதற்கு நகர வாயிலில் இருந்த பெரியோரும் மற்றெல்லாரும் ஆம்: நாங்கள் சாட்சிகள். இஸ்ரயேலின் குடும்பம் பெருகச் செய்த ராகேல் லேயாள் இருவரைப் போல உமது இல்லம் புகுந்திடும் இந்தப் பெண்ணும் இருக்கும் வண்ணம் ஆண்டவர் அருள்க! எப்ராத்தில் வளமுடன் நீர் வாழ்க! பெத்லகேமில் புகழுடன் நீர் திகழ்க!
12. ஆண்டவர் இந்தப் பெண் வழியாக அருளும் பிள்ளைகளால் உமது குடும்பம் யூதா தாமார் மகனாம் பெரேட்சு குடும்பம் போன்று விளங்குதாக! என்று வாழ்த்தினர்.
13. இவ்வாறு போவாசு தாம் சொன்னபடியே ரூத்தைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவரை மணந்து கொண்டார். அவர்கள் கூடி வாழ்ந்த போது, அவர் கருத்தரிக்க ஆண்டவர் அருள்கூர்ந்தார். ரூத்து ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தார்.
14. ஊர்ப் பெண்கள் நகோமியைப் பார்த்து, ஆண்டவர் திருப்பெயர் போற்றி! போற்றி! உன்னைக் காக்கும் பொறுப்பினை உடையான் ஒருவனை அவர்தாம் அருளியுள்ளாரே: இஸ்ரயேலில் அவனது பெயரும் புகழுடன் ஓங்கித் திகழுவதாக!
15. புதுவாழ்வுனக்கு அன்னவன் தருவான்: முதுமையில் உனக்கு அன்னமும் அளிப்பான்: உன்பால் கொண்ட அன்பால், உனக்கு மைந்தர் எழுவரின் மேலாய் விளங்கும், மருமகள் அவனை ஈன்றவள் அன்றோ! என்று வாழ்த்தினார்கள்.
16. நகோமி குழந்தையைக் கையில் எடுத்து மார்போடணைத்துக் கொண்டார். அவரே, அதைப் பேணி வளர்க்கும் தாயானார்.
17. சுற்றுப்புறப் பெண்கள், நகோமிக்கு ஒரு மகன் பிறந்துள்ளான் என்று சொல்லி, அவனுக்கு ஓபேது என்று பெயரிட்டார்கள், அவனே தாவீதின் தந்தையான ஈசாயின் தந்தை.
18. பெரேட்சின் வழித்தோன்றல்களின் அட்டவணை இதுவே: பெரேட்சுக்கு எட்சரோன் பிறந்தார்.
19. எட்சரோனுக்கு இராம் பிறந்தார்: இராமுக்கு அம்மினதாபு பிறந்தார்:
20. அம்மினதாபுக்கு நகுசோன் பிறந்தார்: நகுசோனுக்குச் சல்மோன் பிறந்தார்.
21. சல்மோனுக்குப் போவாசு பிறந்தார்: போவாசுக்கு ஓபேது பிறந்தார்.
22. ஓபேதுக்கு ஈசாய் பிறந்தார்: ஈசாய்க்குத் தாவீது பிறந்தார்.