தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments

 Home > Spirituality & the Tamil Nation  > திருவிவிலியம் - பழைய ஏற்பாடு >  புத்தகம் 1 - தொடக்கநூல் > புத்தகம் 2 - விடுதலைப் பயணம் > புத்தகம் 3 - லேவியர் > புத்தகம் 4. எண்ணிக்கை > புத்தகம் 5. இணைச் சட்டம் > புத்தகம் 6. யோசுவாபுத்தகம் 7. நீதித்தலைவர்கள்புத்தகம் 8. ரூத்து > புத்தகம் 9. சாமுவேல் - முதல் நூல்புத்தகம் 10. சாமுவேல் - இரண்டாம் நூல் > புத்தகம் 11. அரசர்கள் - முதல் நூல் > புத்தகம் 12. அரசர்கள் - இரண்டாம் நூல் > புத்தகம் 13 - குறிப்பேடு - முதல் நூல் > புத்தகம் 14  - குறிப்பேடு - இரண்டாம் நூல் > புத்தகம் 15 - எஸ்ரா > புத்தகம் 16 -  நெகேமியா > புத்தகம் 17 - எஸ்தர் > புத்தகம் 18 - யோபு > புத்தகம் 19 - திருப்பாடல்கள் > புத்தகம் 20 - நீதிமொழிகள்

Holy Bible - Old Testament
Book 5. Deuteronomy

விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 5. இணைச் சட்டம்


Acknowledgements:
Our sincere thanks to Rev.Fr. Adaikalarasa, SDB of the Don Bosco Mission, Madurai for providing us with the "bamini" Tamil font e-version of this work and for his help in proof-reading of the TSCII version.
PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

© Project Madurai 2006. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.



அதிகாரம் 1.

1.     யோர்தானுக்கு அப்பால் பாரானுக்கும் தோப்பேல், லாபான், அட்சரோத்து, திசகாபு ஆகியவற்றிற்கும் இடையே, சூபுக்குக் கிழக்கே அமைந்த அராபா பாலை நிலத்தில் இஸ்ரயேலர் அனைவருக்கும் மோசே உரைத்த வார்த்தைகள் இவையே.
2.     காதேசுபர்னேயா என்ற அந்த இடம் ஓரேபிலிருந்து சேயிர் மலை வழியாகப் பதினொரு நாள் பயணத் தொலையில் இருந்தது.
3.     இஸ்ரயேல் மக்களுக்கென ஆண்டவர் கட்டளையிட்ட யாவற்றையும் நாற்பதாவது ஆண்டின் பதினொன்றாம் திங்கள் முதல் நாளன்று மோசே அவர்களுக்கு உரைத்தார்.
4.     போனில் வாழ்ந்த எமோரியரின் அரசன் சீகோனையும், எதிரேயி அருகே அசித்தரோத்தில் வாழ்ந்த பாசானின் அரசன் ஓகையும் முறியடித்த பின்னர்,
5.     யோர்தானுக்கு அப்பால் மோவாபு நாட்டில், பின்வரும் இந்தச் சட்டங்களை மோசே எடுத்துரைத்தார். அவர் கூறியது:
6.     ஆண்டவராகிய நம் கடவுள் ஓரேபில் நமக்கு உரைத்தது: இந்த மலைப்பகுதியில் நீங்கள் நெடுநாள் தங்கிவிட்டீர்கள்.
7.     புறப்படுங்கள், எமோரியரின் மலைப்பகுதி நோக்கிப் பயணமாகுங்கள். சமவெளியிலும், குன்றுகளிலும், பள்ளத்தாக்கிலும், நெகேபிலும், கடற்கரையோரங்களிலும் வாழும் எல்லா மக்களிடமும் செல்லுங்கள். கானானிய நாட்டுக்கும், லெபனோனுக்கும், யூப்பிரத்தீசு பேராறு வரைக்கும் செல்லுங்கள்.
8.     இதோ! அந்த நாட்டை உங்கள்முன் வைத்துள்ளேன். ஆண்டவர் உங்கள் மூதாதையராகிய, ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் வழி மரபினருக்கும் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறியபடி நீங்கள் போய் அந்த நாட்டை உரிமையாக்கிக் கொள்ளுங்கள்.
9.     அப்பொழுது நான் உங்களுக்குக் கூறியது: என்னால் தனியாளாக உங்களைத் தாங்க முடியாது.
10.     உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களைப் பலுகச் செய்துள்ளார். இதோ, இப்பொழுது நீங்கள் விண்மீன்களைப் போல் பெருந்திரளாய் உள்ளீர்கள்.
11.     உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர், நீங்கள் இப்பொழுது இருப்பதைவிட ஆயிரம் மடங்கு உங்களைப் பெருகச் செய்வாராக! வாக்களித்தது போல உங்களுக்கு ஆசி வழங்குவாராக!
12.     உங்கள் பளுவையும் துன்பத்தையும் வழக்குகளையும் என்னால் தனியாளாகத் தாங்கமுடியுமா?
13.     உங்கள் ஒவ்வொரு குலத்திலும் ஞானமும், அறிவாற்றலும், நற்பெயரும் கொண்டவர்களைத் தேர்வு செய்யுங்கள். நான் அவர்களை உங்களுக்குத் தலைவர்களாக ஏற்படுத்துவேன்.
14.     நீங்களும் எனக்கு மறுமொழியாக, செய்ய வேண்டியது குறித்து நீர் சொன்னது நன்று! என்றீர்கள்.
15.     எனவே, ஞானமும் நற்பெயரும் கொண்ட உங்கள் குலத் தலைவர்களை நான் தேர்ந்தெடுத்தேன்: அவர்களை ஆயிரவர் தலைவராக, நூற்றுவர் தலைவராக, ஜம்பதின்மர் தலைவராக, பதின்மர் தலைவராக, மற்றும் உங்கள் ஒவ்வொரு குலத்தின் அலுவலர்களாக ஏற்படுத்தினேன்.
16.     மேலும், உங்கள் நீதித்தலைவர்களுக்கு நான் கட்டளையிட்டு, உங்கள் சகோதரர்களின் வழக்குகளைக் கேளுங்கள், ஒருவனுக்கும் அவன் சகோதரனுக்குமிடையே அல்லது அவனோடு தங்கும் அன்னியனுக்குமிடையே நீதியின்படி தீர்ப்பிடுங்கள்.
17.     விருப்பு வெறுப்பின்றித் தீர்ப்பிடுங்கள்: உயர்ந்தோனுக்கும் தாழ்ந்தோனுக்கும் ஒன்றுபோல் செவிகொடுங்கள்: எந்த மனிதனுக்கும் அஞ்ச வேண்டாம், ஏனெனில், நீதித்தீர்ப்பு கடவுளுக்கே உரியது. உங்களால் தீர்க்க இயலாததை என்னிடம் கொண்டு வாருங்கள்: நான் வழக்கைக் கேட்பேன் என்றேன்.
18.     இவ்வாறு, நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் அந்நேரத்தில் நான் உங்களுக்குக் கட்டளையாகக் கூறினேன்.
19.     பின்னர் தம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டிருந்தபடி, நாம் ஓரேபை விட்டுப் புறப்பட்டு, நீங்களே கண்டு அஞ்சிய பெரும் பாலை நிலம் முழுவதும், எமோரியரின் மலைப்பாதை வழி நடந்து, காதேசுபர்னேயாவுக்கு வந்து சேர்ந்தோம்.
20.     அங்கு, நான் உங்களை நோக்கி, நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கொடுக்கவிருக்கும் எமோரியரின் மலை நாட்டுக்கு நீங்கள் வந்துவிட்டீர்கள்:
21.     இதோ, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குத் தந்துள்ள நாட்டைப் பாருங்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் மூதாதையருக்கு அளித்த வாக்கிற்கிணங்க நீங்கள் போய் அதை உரிமையாக்கிக் கொள்ளுங்கள். அஞ்சவேண்டாம். கலக்கமுற வேண்டாம் என்றேன்.
22.     அப்பொழுது, நீங்கள் எல்லோரும் என்னிடம் வந்து, நமக்கு முன் ஆள்களை அனுப்புவோம், அவர்கள் நமக்காக அந்த நாட்டை ஆய்ந்து பார்ப்பார்கள், நாம் அதனுள் செல்லவேண்டிய பாதையைப் பற்றியும் நாம் செல்ல வேண்டிய நகர்களைக் குறித்தும் அவர்கள் செய்தியுடன் நம்மிடம் திரும்புவார்கள் என்றீர்கள்.
23.     அது நல்லதாக எனக்குத் தோன்றியது. உங்களிலிருந்து குலத்துக்கு ஒருவராகப் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்தேன்.
24.     அவர்கள் புறப்பட்டு, மலையில் ஏறி, எசுக்கோல் பள்ளத்தாக்கு வரை சென்று, அதை உளவு பார்த்தனர்.
25.     மேலும், அவர்கள் அந்த நாட்டின் கனிகளில் சிலவற்றைப் பறித்து நம்மிடம் கொணர்ந்து, நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கொடுக்கவிருப்பது நல்ல நாடு என்று நமக்குச் செய்தி சொன்னார்கள்.
26.     ஆயினும், நீங்கள் முன்னேறிச் செல்ல மறுத்தீர்கள். மாறாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவருடைய வார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்தீர்கள்.
27.     உங்கள் கூடாரங்களில் நீங்கள் முறுமுறுத்து, ஆண்டவர் நம்மை வெறுத்ததால், நம்மை அழிக்கும்படி, எமோரியரிடம் கையளிப்பதற்காக, எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்டு வரச் செய்துள்ளார்.
28.     நாம் எங்கே போவது? நம்மைவிட வலிமையிலும் உயரத்திலும் மிகுந்த மக்களையும், அவர்களுடைய வானளாவிய மதில்கள் கொண்ட மாபெரும் நகர்களையும், மற்றும் ஏனாக்கின் புதல்வர்களையும் அங்கு கண்டோம் என்று சொல்லி நம் சகோதரர்கள் நம் உள்ளங்களைக் கலங்கடித்தார்களே என்று கூறினீர்கள்.
29.     ஆனால், நான் உங்களுக்குச் சென்னேன்: நீங்கள் கலக்கமுற வேண்டாம், அவர்களுக்கு அஞ்சவும் வேண்டாம்.
30.     உங்களுக்கு முன்னே செல்கின்ற உங்கள் கடவுளாகிய ஆண்டவர், நீங்கள் காண எகிப்தில் எல்லாவற்றிலும் அவர் செய்தது போலவே, இப்பொழுதும் உங்களுக்காகப் போர் புரிவார்.
31.     பாலை நிலத்தில், நீங்கள் நடந்து வந்த வழிகளில் எல்லாம் இங்கு வந்து சேரும்வரை ஒருவன் தன் மகனைத் தூக்கிச் செல்வது போல, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களைத் தூக்கி வந்ததைக் கண்டீர்களே!
32.     ஆயினும் இவற்றுக்குப் பின்னும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நீங்கள் உறுதியுடன் பற்றிக் கொள்ளவில்லை.
33.     பாளையமிறங்கத் தக்க இடத்தை உங்களுக்காகத் தேடவும், நீங்கள் செல்ல வேண்டிய வழியை உங்களுக்குக் காட்டவும், இரவில் நெருப்பிலும் பகலில் மேகத்திலும் உங்கள் முன் அவர் நடந்து சென்றாரே!
34.     ஆகையால், உங்கள் முறையீட்டுக் குரலைக் கேட்டுக் கடுஞ்சினமுற்று ஆண்டவர் ஆணையிட்டுக் கூறியதாவது:
35.     உங்கள் மூதாதையருக்குக் கொடுப்பதாக நான் வாக்களித்த நல்ல நாட்டை இந்தக் கெட்ட தலைமுறையின் மனிதருள் எவனும் காணப் போவதில்லை.
36.     எப்புன்னேயின் மகனாகிய காலேபு மட்டும் அதைக் காண்பான். அவன் நடந்து வந்த நாட்டை அவனுக்கும் அவன் புதல்வருக்கும் நான் கொடுப்பேன். ஏனெனில் அவன் ஆண்டவரை முற்றிலும் பின்பற்றினான்.
37.     அன்றியும், உங்கள் பொருட்டு ஆண்டவர் என்மீதும் சினம் கொண்டு, நீயும் அங்கு போகமாட்டாய்.
38.     நூனின் மகனும் உன் ஊழியனுமாகிய யோசுவா அங்குச் செல்வான். நீ அவனை உறுதிப்படுத்து. ஏனெனில், அவன் இஸ்ரயேல் அதை உரிமையாக்கிக் கொள்ளுமாறுசெய்வான்.
39.     இவர்கள் கடத்திச் செல்லப்படுவர் என்று நீங்கள் குறிப்பிட்ட உங்கள் சிறுவரும், இன்றுவரை நன்மை தீமை பற்றிய அறிவற்ற உங்கள் புதல்வரும் அதனுள் செல்வர். அவர்களுக்கே அதை நான் கொடுப்பேன். அவர்கள் அதை உரிமையாக்கிக் கொள்வார்கள்.
40.     நீங்களோ புறப்பட்டு, செங்கடல் நெடுஞ்சாலை வழியே பாலை நிலத்துக்குப் பயணமாகுங்கள் என்றார்.
41.     உடனே நீங்கள் எனக்கு மறுமொழியாக, நாங்கள் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாங்கள் போய்ப் போர் புரிவோம் என்றீர்கள். பிறகு, நீங்கள் ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டீர்கள். மலைமீது ஏறிப்போவது எளிது என்றும் எண்ணினீர்கள்.
42.     அப்பொழுது ஆண்டவர் என்னிடம், நீங்கள் போக வேண்டாம்: போர்புரியவும் வேண்டாம்: உங்கள் பகைவர் உங்களை முறியடிப்பார்: ஏனெனில் நான் உங்கள் நடுவே இருக்கமாட்டேன் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.
43.     நானும் உங்களுக்கு அதையே சொன்னேன். நீங்களோ கேட்கவில்லை. மாறாக, நீங்கள் செருக்குற்று ஆண்டவரின் வாக்கை மீறி மலைமீது ஏறினீர்கள்.
44.     அந்த மலைப் பகுதிவாழ் எமோரியர் உங்களுக்கு எதிராகப் புறப்பட்டு, தேனீக்கள் போல் உங்களைத் துரத்தியடித்தனர். சேயிர் தொடங்கி ஓர்மாவரையிலும் உங்களை முறியடித்தனர்.
45.     அப்பொழுது, நீங்கள் திரும்பி வந்து ஆண்டவர்முன் அழுதீர்கள். ஆனால், ஆண்டவர் உங்கள் குரலைக் கேட்கவில்லை, உங்களுக்காகச் செவி சாய்க்கவும் இல்லை.
46.     இவ்வாறு நீங்கள் வெகு நாள்கள் காதேசில் தங்க நேர்ந்தது.

அதிகாரம் 2.


1.     பின்னர் ஆண்டவர் எனக்குச் சொல்லியபடி, நாங்கள் புறப்பட்டுச் செங்கடல் நெடுஞ்சாலை வழியாகப் பாலைநிலத்தில் பயணம் செய்து, பல நாள்கள் சேயிர் மலைநாட்டைச் சுற்றித் திரிந்தோம்.
2.     அப்பொழுது ஆண்டவர் என்னிடம் உரைத்தது:
3.     நீங்கள் நெடுங்காலமாக இந்த மலைப்பகுதியில் சுற்றித்திரிந்துள்ளீர்கள்: இப்போது வடக்கு நோக்கிச் செல்லுங்கள்.
4.     மேலும், மக்களுக்கு நீ கட்டளையிட வேண்டியது: சேயிர் வாழ் ஏசாவின் புதல்வராகிய உங்கள் சகோதரர்களுடைய எல்லையைக் கடக்கப் போகின்றீர்கள். அவர்கள் உங்களுக்கு அஞ்சுவார்கள். எனவே நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்.
5.     அவர்களோடு தகராறு செய்ய வேண்டாம். ஏனெனில் அவர்களுடைய நாட்டில் ஓரடி நிலம்கூட உங்களுக்குக் கொடுக்கமாட்டேன். ஏனெனில், ஏசாவுக்கு சேயிர் மலை நாட்டை உடைமையாகக் கொடுத்துள்ளேன்.
6.     நீங்கள் அவர்களிடமிருந்து விலைக்கு உணவு வாங்கி உண்பீர்கள். அவ்வாறே நீங்கள் அவர்களிடமிருந்து விலைக்குத் தண்ணீர் வாங்கிக் குடிப்பீர்கள்.
7.     ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நீங்கள் செய்த அனைத்திலும் உங்களுக்கு ஆசி வழங்கியுள்ளார். இப் பெரும் பாலைநிலம் வழியாக நீங்கள் நடந்து வந்திருப்பதை அவர் அறிவார். இந்த நாற்பது ஆண்டுகளும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருந்துள்ளார். உங்களுக்கு எதுவுமே குறைவுபடவில்லை.
8.     அதன்பிறகு, நாம் சேயிர்வாழ் நம் சகோதரராகிய ஏசாவின் மக்களிடமிருந்து புறப்பட்டு, அராபா வழியாய் ஏலாத்துக்கும், எட்சியோன்கெபேருக்கும் சென்றோம். மீண்டும் புறப்பட்டு மோவாபுப் பாலைநிலம் வழியாகச் சென்றோம்.
9.     அப்பொழுது, ஆண்டவர் என்னிடம், நீ மோவாபைத் துன்புறுத்தாமலும் அவர்களோடு போரிட்டுத் தகராறு செய்யாமலும் இரு. ஏனெனில் அவர்களது நாட்டை உனக்கு உடைமையாகக் கொடுக்க மாட்டேன். மாறாக, ஆர்பகுதிகளை லோத்தின் புதல்வருக்கு உடைமையாகக் கொடுத்துள்ளேன்.
10.     முற்காலத்தில் ஏமியர் அங்குக் குடியிருந்தனர். அம்மக்கள் ஏனாக்கியர் போன்று வலிமைமிக்கவர்கள், நெடியதாய் வளர்ந்தவர்கள், எண்ணிக்கையில் மிகுதி உடையவர்கள்.
11.     அவர்கள் ஏனாக்கியர்போல் அரக்கர்கள் எனக் கருதப்பட்டனர். மோவாபியரோ அவர்களை ஏமியர் என்று அழைக்கின்றனர்.
12.     முற்காலத்தில் ஓரியர் சேயிரில் குடியிருந்தனர். ஆண்டவர் தங்களுக்கு உடைமையாகக் கொடுத்த நாட்டில் இஸ்ரயேல் செய்ததுபோல், ஏசாவின் மக்களும் ஓரியரைத் தங்கள் முன்னின்று வெளியேற்றி அழித்து அவர்கள் இடத்தில் குடியேறினர்.
13.     இப்பொழுது, எழுந்து, செரேது ஓடையைக் கடந்து செல்லுங்கள் என்றார். நாமும் செரேது ஓடையைக் கடந்து சென்றோம்.
14.     நாம் காதேசு பர்னேயாவினின்று புறப்பட்டு செரேது ஓடையைக் கடப்பதற்கு ஆன காலம் முப்பத்தெட்டு ஆண்டுகள். அதற்குள் அந்தத் தலைமுறையின் போர்வீரர் அனைவரும், ஆண்டவர் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறியபடியே, பாளையத்தினின்று அடியோடு அழிந்தொழிந்தனர்.
15.     உண்மையாகவே, அவர்கள் அனைவரும் அடியோடு அழிந்தொழியும்வரை ஆண்டவரின் கை அவர்களுக்கு எதிராய் இருந்தது.
16.     மக்களுள் போர்வீரராய் இருந்த எல்லோரும் முற்றிலும் இறந்தனர்.
17.     பின்னர், ஆண்டவர் என்னிடம் கூறியது:
18.     இன்று நீ ஆர் நகரைத் தாண்டி மோவாபின் எல்லையைக் கடந்து செல்வாய்.
19.     அப்பொழுது அம்மோனின் புதல்வரை நெருங்கி வருவாய். நீ அவர்களைத் துன்புறுத்தாமலும், அவர்களோடு போரிட்டுத் தகராறு செய்யாமலும் இரு. ஏனெனில், அம்மோனியரின் நாட்டை உனக்கு மாறாக, அதை லோத்தின் புதல்வருக்கு உடைமையாகக் கொடுத்துள்ளேன்
20.     ஏனெனில் அதுவும் அரக்கர்களின் நிலம் எனக் கருதப்பட்டது. முற்காலத்தில் அங்கு அரக்கர்கள் குடியிருந்தனர். அம்மோனியர் அவர்களை சம்சுமியர் என்று அழைக்கின்றனர்.
21.     அம்மக்கள் ஏனாக்கியர் போன்று வலிமைமிக்கவர்கள், நெடியதாய் வளர்ந்தவர்கள், எண்ணிக்கையில் மிகுந்தவர்கள். ஆனால் ஆண்டவர் அவர்களை அம்மோனியர் முன்னிலையில் அழித்தார். அம்மோனியரும் அவர்களை வெளியேற்றித் தங்கள் முன்னின்று அழித்து அவர்களது இடத்தில் குடியேறினர்.
22.     இது ஆண்டவர் சேயிர்வாழ் ஏசாவின் மக்களுக்குச் செய்ததற்கு ஒப்பாகும். ஆண்டவர் ஓரியரை அழித்தார். ஏசாவின் மக்கள் ஓரியரை வெளியேற்றிவிட்டு அவர்கள் இடத்தில் இன்றுவரை வாழ்கின்றனர்.
23.     அதுபோல் கட்சேரிம் தொடங்கி ஆசா வரை வாழ்ந்த அவ்வியரை கப்தோரிலிருந்து வந்த கப்தோரியர் அழித்து, அவர்கள் இடத்தில் குடியேறினர்.
24.     இப்பொழுது, எழுந்து பயணமாக்குங்கள். அர்னோன் ஓடையைக் கடந்து செல்லுங்கள். இதோ, எமோரியனும் எஸ்போனின் அரசனுமாகிய சீகோனையும் அவனது நாட்டையும் உங்களிடம் கையளித்துள்ளேன். அதை உடைமையாக்கிக் கொள்ளுமாறு, அவனோடு போரிடுங்கள்.
25.     உன்னைப்பற்றிய திகிலும் அச்சமும் வானத்தின் கீழுள்ள எல்லா மக்களினங்கள் மீதும் உண்டாகுமாறு இன்று செய்வேன். அவர்கள் உன்னைப் பற்றிக் கேள்வியுற்று நடுங்கி, உன் பொருட்டுப் பதைபதைப்பர்.
26.     அப்பொழுது நான் கெதமோத்துப் பாலைநிலத்திலிருந்து எஸ்போனின் மன்னனாகிய சீகோனிடம் தூதரை அனுப்பி நல்லுறவுச் செய்தியுடன் சொன்னது:
27.     நாங்கள் உமது நாட்டின் நெடுஞ்சாலை வழியே கடந்து செல்ல அனுமதி கொடும். வலமோ இடமோ திரும்பாமல், நெடுஞ்சாலையில் மட்டும் நாங்கள் செல்வோம்.
28.     நீர் எமக்கு உணவை விலைக்குத் தாரும். நாங்கள் உண்போம். எமக்கு நீரை விலைக்குத் தாரும், நாங்கள் பருகுவோம். நாங்கள் கால்நடையாய்க் கடந்து போக மட்டும் அனுமதி கொடும்.
29.     சேயிர் வாழ் ஏசாவின் மக்களும், ஆர் நகர் வாழ் மோவாபியரும் எமக்கு அனுமதி கொடுத்தது போல், யோர்தானைக் கடந்து, எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்குக் கொடுக்க இருக்கிற நாட்டில் சேர்வதற்கு அனுமதி கொடும்.
30.     ஆனால் எஸ்போனின் மன்னன் சீகோன் தன் நாட்டின் வழியே கடந்து செல்ல நமக்கு அனுமதியளிக்கவில்லை. இன்றும் இருப்பதுபோல் அவனை உங்கள் கையில் ஒப்படைக்கும் பொருட்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவன் மனத்தைக் கடினப்படுத்தியிருந்தார்: அவன் இதயத்தையும் கல்லாக்கியிருந்தார்.
31.     அப்பொழுது ஆண்டவர் என்னிடம், இதோ, சீகோனையும் அவன் நாட்டையும் உன் கையில் ஒப்படைக்கிறேன். அவனது நாட்டை உடைமையாக்கிக் கொள்ளுமாறு அதைக் கைப்பற்றத் தொடங்கு என்றார்.
32.     சீகான் தம் மக்கள் அனைவரோடும் நம்மை எதிர்கொண்டு யாகசுவில் போரிடப் புறப்பட்டு வந்தான்.
33.     நம் கடவுளாகிய ஆண்டவர் அவனை நம் கையில் ஒப்படைத்தார். நாம் அவனையும் அவன் புதல்வரையும் அவன் குடிமக்கள் அனைவரையும் முறியடித்தோம்.
34.     அச்சமயம் அவன் நகர்கள் அனைத்தையும் கைப்பற்றி அங்கிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், எவரையுமே தப்பவிடாமல் அழித்தொழித்தோம்.
35.     கால்நடைகளையும், நாம் பிடித்த நகர்களின் கொள்ளைப் பொருள்களையும் நமக்கெனச் சூறையாடினோம்.
36.     அர்னோன் ஓடையின் ஓரத்தில் உள்ள அரோயேரும், ஓடையை ஒட்டியுள்ள நகர் தொடங்கி, கிலயாது வரைக்கும் நம்மை எதிர்க்கக் கூடிய அரண்சூழ் நகர் எதுவுமே இருந்ததில்லை. நம் கடவுளாகிய ஆண்டவர் எல்லாவற்றையும் நம் கையில் ஒப்படைத்தார்.
37.     ஆனால், நம் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்ட இடங்கள் அனைத்தையும், அம்மோனியரின் நாட்டையும், யாபேக்கு ஓடைக் கரையிலுள்ள ஊர்களையும் மலை நாட்டு நகர்களையும் நீங்கள் அணுகவில்லை.

அதிகாரம் 3.


1.     பின்பு நாம் திரும்பி பாசானுக்குப் போகும் வழியில் சென்றோம். பாசானின் மன்னன் ஓகு, தம் மக்கள் அனைவரோடும் நம்மை எதிர்கொண்டு எதிரேயியில் போரிடப் புறப்பட்டு வந்தான்.
2.     அப்பொழுது ஆண்டவர், என்னை நோக்கிக் கூறியது, அவனுக்கு நீ அஞ்சாதே, ஏனெனில், அவனையும், அவன் மக்கள் அனைவரையும், அவன் நாட்டையும் உன்னிடம் ஒப்படைத்துள்ளேன். எஸ்போனில் வாழ்ந்த எமோரியரின் அரசன் சீகோனுக்கு நீ செய்தது போலவே, அவனுக்கும் செய் என்றார்.
3.     அவ்வாறே, நம் கடவுளாகிய ஆண்டவர் பாசானின் மன்னனாகிய ஓகையும் அவன் மக்கள் அனைவரையும் நம்மிடம் ஒப்படைத்தார். அவனுக்குச் சொந்தமான எவனும் எஞ்சியிராதபடி அவர்களைத்தாக்கினோம்.
4.     அச்சமயம் அவன் நகர்கள் அனைத்தையும் கைப்பற்றினோம். அப்பகுதியில் நாம் கைப்பற்றாத நகர் எதுவுமே இல்லை. அர்கோபின் எல்லா பகுதிகளிலும், பாசானிலிருந்த ஓகின் நாட்டிலும் மொத்தம் அறுபது நகர்களைக் கைப்பற்றினோம்.
5.     அந்த நகர்களெல்லாம் மிக உயர்ந்த மதில்களாலும், இரட்டைக் கதவுகளாலும், தாழ்ப்பாள்களாலும் அரண் செய்யப்பட்டிருந்தன. அவை தவிர மதில்கள் இல்லாத நகர்களும் எண்ணிறந்தவை.
6.     அவற்றை அழித்தொழித்தோம். எஸ்போனின் அரசன் சீகோனுக்குச் செய்ததுபோலவே எல்லா நகர்களையும், ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் அழித்தொழித்தோம்.
7.     எல்லாக் கால்நடைகளையும் நகர்களின் கொள்ளைப் பொருள்களையும் நமக்கெனச் சூறையாடினோம்.
8.     அவ்வேளையில் எமோரியரின் இரண்டு மன்னர்களிடமிருந்ததும், யோர்தானுக்கு இக்கரையிலிருக்கும் அர்னோன் ஓடை தொடங்கி எர்மோன் மலை வரையிலும் உள்ள நாட்டைக் கைப்பற்றினோம்.
9.     சீதோனியர் அந்த எர்மோனை சிரியோன் என்றழைக்கின்றனர். எமோரியரோ அதைச் செனீர் என்றழைக்கின்றனர்
10.     சமவெளியில் உள்ள எல்லா நகர்களையும், கிலயாது முழுவதையும், பாசான் முழுவதையும், சல்கா, எதிரேயிவரை உள்ள, பாசானிலிருந்த ஓகின் அரச நகர்களையும் கைப்பற்றினோம்.
11.     அரக்கர்களில் பாசானின் மன்னனாகிய ஓகு மட்டுமே எஞ்சியிருந்தான். அவனது கட்டில் இரும்பினால் ஆனது. அதுமனிதரின் கைமுழத்தின்படி, ஒன்பது முழ நீளமும் நான்கு முழ அகலமும் கொண்டது. அது அம்மோனியரின் இரப்பா நகரில் உள்ளதன்றோ!
12.     அக்காலத்தில் நாம் உடைமையாக்கிக் கொண்ட இந்த நாட்டில், அர்னோன் ஓடைக் கரையிலுள்ள அரோயேர் முதல் கிலயாது மலை நாட்டின் ஒரு பகுதியையும், அதன் நகர்களையும் ரூபன் குலத்திற்கும் காத்துக் குலத்திற்கும் நான் கொடுத்தேன்.
13.     கிலயாதின் மறு பகுதியையும், ஓகின் ஆட்சிக்குட்பட்ட பாசான் முழுவதையும், மனாசேயின் பாதிக் குலத்திற்குக் கொடுத்தேன். மேலும், அரக்கர்களின் நாடு எனப்பட்ட பாசானைச் சார்ந்த அர்கோபுப் பகுதி முழுவதையும் கொடுத்தேன்.
14.     மனாசேயின் மகன் யாயிர் அர்கோபுப் பகுதி முழுவதையும், கெசூரியர், மாகாத்தியர் என்பவர்களது எல்லை வரை உடைமையாக்கிக் கொண்டு, பாசான் என்னும் அப்பகுதி யைத் தனது பெயராலேயே, அவ்வோத்து யாயீர் என்றழைத்தான். அது இன்றுவரை வழக்கில் உள்ளது.
15.     மாக்கிருக்குக் கிலயாதைக் கொடுத்தேன்.
16.     அர்னோன் ஓடைவரை உள்ள கிலயாதின் பகுதியையும், அர்னோன் நடு ஓடையும் அதன் எல்லைப்புற நாடும் தொடங்கி, அம்மோனியரின் எல்லையாகிய யாபோக்கு ஆறுவரைக்கும் ரூபன் குலத்திற்கும் காத்துக் குலத்திற்கும் கொடுத்தேன்.
17.     மற்றும், கினரேத்து முதல் பிஸ்காவுக்குக் கிழக்கே தாழ்வாக இருக்கும் அராபாவின் உப்புக் கடல் வரை, யோர்தானை எல்லையாகக் கொண்ட சமவெளியையும் அவர்களுக்குக் கொடுத்தேன்.
18.     அப்பொழுது நான் உங்களை நோக்கிக் கட்டளையிட்டது: உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இந்த நாட்டை நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு தந்துள்ளார், உங்களுள் போர்வீரர் அனைவரும், போர்க்கலன் தாங்கியவராய் உங்கள் சகோதரராகிய இஸ்ரயேல் மக்களுக்கு முன்னே செல்லுங்கள்.
19.     உங்கள் மனைவியரும், பிள்ளைகளும், மந்தைகளும் மட்டும் உங்களுக்குத் திரளான மந்தைகள் உண்டென்று நான் அறிவேன். நான் உங்களுக்குத் தந்துள்ள நகர்களில் தங்கட்டும்.
20.     ஆண்டவர் உங்களுக்கு அமைதி அளித்ததுபோல், உங்கள் சகோதரருக்கும் அமைதி அளிப்பர். உங்கள் கடவுளாகிய ஆண்டவர், யோர்தானுக்கு மேற்கே அவர்களுக்குக் கொடுக்கும் நாட்டை அவர்கள் உரிமையாக்கிக் கொள்ளும் வரையிலும் நீங்கள் இருங்கள். பின்னர் நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ள உரிமைப் பகுதிக்குத் திரும்பலாம்.
21.     மேலும் நான் யோசுவாவுக்குக் கட்டளையிட்டது: உன் கடவுளாகிய ஆண்டவர்: அந்த இரண்டு அரசர்களுக்கும் செய்தவைகளை நீ கண்ணால் கண்டாயே! நீ செல்கின்ற எல்லா நாடுகளுக்கும் ஆண்டவர் அதுபோலவே செய்வார்.
22.     நீ அவர்களுக்கு அஞ்சாதே. ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்காகப் போர் புரிவார்.
23.     அந்நாளில் நான் ஆண்டவரை நோக்கி மன்றாடிச் சொன்னது:
24.     தலைவராகிய ஆண்டவரே, நீர் உம் ஊழியனுக்கு உமது கைவன்மையையும் மாண்பையும் காட்டியுள்ளீர். உம் ஆற்றல்மிகு செயல்களுக்கு ஒப்பானவற்றைச் செய்யக்கூடிய கடவுள் எவராவது விண்ணிலோ மண்ணிலோ உண்டா?
25.     நான் கடந்து சென்று, யோர்தானுக்கு மேற்கிலுள்ள நல்ல நாட்டையும், அழகிய மலைப்பகுதியையும், லெபனோனையும் கண்டிட எனக்கு அனுமதி அளியும்.
26.     ஆண்டவரோ, உங்கள் பொருட்டு என்மேல் சினம் கொண்டவராய், எனக்குச் செவி கொடுக்கவில்லை. அவர் என்னை நோக்கிக் கூறியது: போதும், இது குறித்து இனி நீ என்னிடம் எதுவும் பேச வேண்டாம்.
27.     பிஸ்கா மலை முகட்டுக்கு ஏறிப்போ: மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும் உன் பார்வையைச் செலுத்து. கண்குளிரப் பார்த்துக்கொள். ஏனெனில் நீ இந்த யோர்தானைக் கடந்து செல்லமாட்டாய்.
28.     நீ யோசுவாவுக்குப் பொறுப்பளித்து, அவனைத் திடப்படுத்தி, உறுதிப்படுத்து. ஏனெனில், அவனே இந்த மக்கள் முன்னால் செல்வான்: நீ காணும் நாட்டை அவர்கள் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளச் செய்வான்.
29.     பின்னர், நாங்கள் பெத்பகோருக்கு எதிரேயுள்ள பள்ளத்தாக்கில் தங்கினோம்.

அதிகாரம் 4.


1.     இப்பொழுது இஸ்ரயேலரே! கேளுங்கள்: நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள்.
2.     நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்கவும் வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நான் உங்களுக்குக் கற்றுத்தருகிறேன்: அவற்றைப் பின்பற்றுங்கள்.
3.     பாகால் பெகோரில் ஆண்டவர் செய்ததை உங்கள் கண்களால் கண்டீர்கள். பெகோரின் தெய்வமாகிய பாகாலைப் பின்பற்றியவர்கள் உங்களிடையே இல்லாதவாறு உங்கள் கடவுளாகிய ஆண்டவரால் அழிக்கப்பட்டார்கள்.
4.     மாறாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை உறுதியாகப் பற்றிக்கொண்ட நீங்கள் இன்றும் வாழ்கின்றீர்கள்.
5.     நம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படியே நியமங்களையும் முறைமைகளையும் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். எனவே, நீங்கள் போய் உரிமையாக்கிக் கொள்ளும் நாட்டில் அவற்றைப் பின்பற்ற வேண்டும்.
6.     நீங்கள் அவற்றைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும், உண்மையில் இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர்.
7.     நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக்கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?
8.     நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறுபேரினம் ஏதாகிலும் உண்டா?
9.     கவனமாய் இருங்கள்: உங்கள் கண்களால் நீங்கள் கண்ட அனைத்தையும் மறந்து போகாதபடி உங்கள் இதயங்களில் காத்துக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்நாள் முழுமையும் நீங்கள் அவற்றை மறக்க வேண்டாம். உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் அவற்றை எடுத்துக் கூறுங்கள்.
10.     ஓரேபில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நீங்கள் நின்ற நாளை மறந்து விட வேண்டாம். அன்று ஆண்டவர் என்னிடம், மக்கள் கூட்டமைப்பை என்முன் கூடிவரச் செய். அவர்கள் என் வார்த்தைகளைக் கேட்கச் செய்வேன். அதனால், அவர்கள் இத்தரையில் வாழும் நாளெல்லாம் எனக்கு அஞ்சி நடக்கக் கற்றுக் கொள்வர்: அவ்வாறே பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுப்பர் என்றார்.
11.     நீங்களும் மலையடிவாரத்தில் வந்து நின்றீர்கள். மலையினின்று நெருப்பு எழும்பி, வானம் மட்டும் எட்ட, மலைமுகட்டைக் காரிருளும் மேகமும் சூழ்ந்தன.
12.     நெருப்பிலிருந்து ஆண்டவர் உங்களோடு பேசினார். பேச்சு ஒலியை நீங்கள் கேட்டீர்கள்: உருவம் எதையும் காணவில்லை: குரல் மட்டும் கேட்டது.
13.     அப்பொழுது, அவர் தம் உடன்படிக்கையை உங்களுக்கு அறிவித்து, பத்துக்கட்டளைகளைத் தந்து, அதைப் பின்பற்றும்படி ஆணையிட்டார். அதை அவர்படி ஆணையிட்டார். அதை அவர் இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.
14.     நீங்கள் சென்று உரிமையாக்கிக் கொள்ளும் நாட்டில் கடைப்பிடிக்கும்படி உங்களுக்கு நியமங்களையும் முறைமைகளையும் கற்பிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்.
15.     ஓரேபு மலையில் நெருப்பினின்று ஆண்டவர் உங்களோடு பேசிய அந்நாளில், நீங்கள் எந்த உருவத்தையும் காணவில்லை. எனவே மிகவும் எச்சரிக்கையாய் இருங்கள்.
16.     நீங்கள் அழிவுக்கு உள்ளாகாதபடி சிலைகளைச் செய்யாதீர்கள்.
17.     ஆண் அல்லது பெண், நிலத்தின் விலங்குகள் அல்லது வானத்துப் பறவைகள்,
18.     தரையில் ஊர்வன அல்லது தரைக்குக் கீழே நீரில் வாழும் மீன்கள், எந்த உருவத்திலும் சிலைகளைச் செய்யாதீர்கள்.
19.     மேலும், வான் நோக்கிக் கண்களை உயர்த்தி, கதிரவன், நிலா, விண்மீன்கள், வான்படைகள் ஆகிய நீங்கள் கண்ணால் காணும் பொருள்களுக்குமுன் மண்டியிட்டு வணங்காதபடி எச்சரிக்கையாய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர், வானத்துக்குக் கீழுள்ள எல்லா மக்களினங்களுக்கும் பணிபுரியவே அவற்றை ஏற்படுத்தியுள்ளார்.
20.     இன்று இருப்பதுபோல், நீங்கள் அவரது உரிமைச் சொத்தான மக்களாகும்படி இரும்புச் சூளையாகிய எகிப்திலிருந்து உங்களைக் கூட்டி வந்தவர் ஆண்டவரே!
21.     ஆனால், உங்களின் செயல்களுக்காக ஆண்டவர் என்மேல் சினம் கொண்டார். நான் யோர்தானைக் கடந்து போகமாட்டேன் எனவும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கவிருக்கும் அந்த வளமிகு நாட்டுக்குள் நான் நுழையமாட்டேன் எனவும் ஆணையிட்டுக் கூறினார்.
22.     ஏனெனில், நான் இப்பகுதியிலேயே இறப்பேன். யோர்தானைக் கடந்து செல்ல மாட்டேன். ஆனால், நீங்கள் கடந்து அந்த வளமிகு நாட்டை உடைமையாக்கிக் கொள்வீர்கள்.
23.     எனவே, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையை மறந்துவிடாதீர்கள், மேலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டபடி எந்தவொரு உருவத்திலும் உங்களுக்கெனச் சிலையைச் செய்யாதபடி கவனமாய் இருங்கள்.
24.     ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அழிக்கும் நெருப்புப் போன்றவர்: அவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்.
25.     நீங்கள் பிள்ளைகளையும் பேரப் பிள்ளைகளையும் பெற்று, நாட்டில் நெடுநாள் வாழ்ந்தபின், இழி செயல்புரிந்து ஏதேனும் ஓர் உருவத்தில் சிலையை உருவாக்கி, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகத் தீயதைச் செய்து, அவருக்குச் சினமூட்டுவீர்களாயின்,
26.     இன்றே விண்ணையும் மண்ணையும் உங்களுக்கு எதிரான சான்றுகளாக ஏற்படுத்துவேன். நீங்கள் யோர்தானைக் கடந்து சென்று, உடைமையாக்கிக் கொள்ளப்போகும் அந்த நாட்டிலிருந்து விரைவில் முற்றிலும் அழிந்து போவீர்கள். நீங்கள் அங்கு வெகுநாள் வாழமாட்டீர்கள். மாறாக, வேரோடு சாய்க்கப்படுவீர்கள்.
27.     ஆண்டவர் உங்களை மக்களினத்தாரிடையே சிதறடிப்பார்: அவர் உங்களைக் கொண்டு சேர்க்கும் வேற்றினத்தாரிடையே உங்களுள் எஞ்சியிருப்போர் எண்ணிக்கை மிகச் சிறியதாக இருக்கும்.
28.     அங்கு மரத்தாலும் கல்லாலுமான, மனிதரின் கையால் செய்யப்பட்ட தெய்வங்களை வழிபடுவீர்கள். அவற்றால் காணவோ கேட்கவோ உண்ணவோ நுகரவோ முடியாது.
29.     மாறாக, அங்கு இருக்கையில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நீங்கள் நாடினால், உங்கள் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் தேடினால், அவரைக் கண்டடைவீர்கள்.
30.     உங்களுக்குப் பெருந்துயர் உண்டாகும் பொழுது, இவ்வார்த்தைகளின் உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். இறுதி நாள்களில் நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி அவரது குரலுக்குச் செவிகொடுப்பீர்கள்.
31.     ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இரக்கம் மிகு இறைவன். அவர் உங்களைக் கைவிடமாட்டார், அழிக்கவும் மாட்டார். உங்கள் மூதாதையரோடு அவர் ஆணையிட்டுச் செய்த உடன்படிக்கையை மறக்கவும் மாட்டார்.
32.     உங்களுக்கு முற்பட்ட பண்டைக் காலத்தைப்பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கடவுள், உலகில் மனிதனைப் படைத்த நாள் முதல், வானத்தின் ஒருமுனை முதல் மறுமுனை வரைக்கும் எங்காவது இத்தகைய மாபெரும் செயல் நடந்துண்டோ? அல்லது இதுபோல் கேள்விப்பட்டதுண்டா?
33.     நெருப்பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியைக் கேட்டும், நீங்கள் உயிர்வாழ்ந்ததுபோல் வேறு எந்த மக்களினமாவது வாழ்ந்ததுண்டா?
34.     அல்லது, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் எகிப்தில் உங்கள் கண்முன்னே உங்களுக்குச் செய்த அனைத்தையும் போல, சோதனைகள், அடையாளங்கள், அருஞ்செயல்கள், போர், வலிய கரம், ஓங்கிய புயம் மற்றும் அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் மூலம் ஓர் இனத்தை வேறொரு நாட்டினின்று தமக்கென உரிமையாக்கிக்கொள்ள முன்வரும் கடவுள் உண்டா?
35.     ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர், என நீங்கள் அறிந்து கொள்ளும் படியாக இவை உங்கள் கண்முன் நிறைவேற்றப்பட்டன.
36.     நீங்கள் கற்றுக்கொள்ளும்படி வானினின்று வந்த அவர்தம் குரலை நீங்கள் கேட்குமாறு செய்தார். அந்நெருப்பினின்று வந்த அவரது வாக்கை நீங்கள் கேட்டீர்கள்.
37.     உங்கள் மூதாதையர்க்கு அவர் அன்பு காட்டியதால், அவர்களுக்குப்பின் அவர்களுடைய வழிமரபினரைத் தேர்ந்து கொண்டார். எனவே அவரே முன்நின்று தமது பேராற்றலுடன் உங்களை எகிப்திலிருந்து கூட்டி வந்தார்.
38.     உங்களை விட ஆற்றலும் வலிமையும் மிகுந்த வேற்றினத்தாரை உங்கள் முன்னின்று துரத்தவும், உங்களை அவர்களது நாட்டிற்குள் இட்டுச் சென்று இன்றும் உள்ளது போல், அதை உங்களது உரிமைச் சொத்தாகத் தரவுமே கூட்டி வந்தார்.
39.     மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர் என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்.
40.     நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.
41.     அப்பொழுது மோசே, யோர்தானுக்குக் கிழக்கே மூன்று நகர்களைக் குறித்துக் கொடுத்தார்.
42.     முன் பகையின்றி, தவறுதலாகத் தன் தோழனைக் கொன்றுவிட்ட எவனும், இந்த நகர்கள் ஒன்றினுள் ஓடிப்புகுந்து அடைக்கலம் பெற்று உயிர் தப்புமாறு அந்நகர்களைக் குறித்தார்.
43.     ரூபனியர் எல்லையில் பாலை நிலச் சமவெளியில் உள்ள பெட்சேர், காத்தியர் எல்லையில் உள்ள கிலயாதின் இராமோத்து, மனாசே எல்லையில் உள்ள பாசானின் கோலான் ஆகிய நகர்களே அவை.
44.     இஸ்ரயேல் புதல்வரின் முன்னிலையில் மோசே அளித்த சட்டம் இதுவே:
45.     இஸ்ரயேல் புதல்வர் எகிப்திலிருந்து வெளியேறியபோது, மோசே அவர்களுக்கு அளித்த சான்றுகள், நியமங்கள், முறைமைகள் இவையே.
46.     யோர்தானுக்குக் கிழக்கே பெத்பகோருக்கு எதிரே உள்ள சமவெளியில் எஸ்போனில் வாழ்ந்த எமோரியின் அரசனாகிய சீகோனின் நாட்டில் இது நிகழ்ந்தது. மோசேயும் இஸ்ரயேல் புதல்வரும் எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்டு வரும் வழியில் சீகோனையும் அவன் நாட்டையும் முறியடித்திருந்தனர்.
47.     அவர்கள் அவனது நாட்டைத் தங்களது உடைமையாக்கியிருந்தனர். மேலும் பாசானின் அரசன் ஓகின் நாட்டையும் யோர்தானுக்குக் கிழக்கே வாழ்ந்த எமோரியரின் இரு அரசர்களையும் முறியடித்திருந்தனர்.
48.     அர்னோன் ஓடைக்கரையிலுள்ள அரோயேர் முதல் எர்மோன் என்ற சிரியோன் மலைவரையிலும்,
49.     யோர்தானுக்குக் கிழக்கே அராபா பாலைநிலம் அனைத்தையும், பீஸ்காவிற்குக் கிழக்கே தாழ்வாக இருக்கும் அரபாக் கடல் வரைக்கும் அவர்கள் கைப்பற்றியிருந்தனர்.

அதிகாரம் 5.


1.     மோசே இஸ்ரயேலர் அனைவரையும் வரவழைத்துக் கூறியதாவது: இஸ்ரயேலரே, உங்கள் காதுகள் கேட்க நான் இன்று கூறப்போகும் நியமங்களையும் முறைமைகளையும் கேளுங்கள். அவைகளைக் கற்று, கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள்.
2.     கடவுளாகிய ஆண்டவர் ஓரேபில் நம்மோடு ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்.
3.     நம் மூதாதையரோடு ஆண்டவர் இது போன்ற உடன்படிக்கையைச் செய்து கொள்ளவில்லை. மாறாக, நம்மோடு, ஆம் இன்று இங்கு உயிரோடிருக்கும் நம் அனைவரோடும் செய்து கொண்டார்.
4.     மலையில் நெருப்பின் நடுவிலிருந்து ஆண்டவர் உங்களோடு நேருக்கு நேர் பேசினார்.
5.     ஆண்டவரின் வாக்கை உங்களுக்கு அறிவிக்க நானே அவ்வேளையில் ஆண்டவருக்கும் உங்களுக்கும் உடையே நின்றேன். ஏனெனில், நீங்கள் நெருப்பைக் கண்டு அஞ்சினீர்கள்: மலைமீதும் ஏறவில்லை. அப்பொழுது அவர் கூறியது:
6.     கடவுளாகிய ஆண்டவர் நானே. அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உன்னைப் புறப்படச் செய்தவர் நானே.
7.     என்னைத் தவிர வேறு கடவுள் உனக்கு இருத்தல் ஆகாது.
8.     மேலே விண்ணுலகிலும், கீழே மண்ணுலகிலும், மண்ணுலகின் கீழுள்ள நீர்த்திரளிலும் உள்ள எந்த உருவத்திலேனும் உனக்கென நீ சிலையைச் செய்யாதே.
9.     நீ அவைகளை வழிபடவோ அவற்றுக்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்: என்னை வெறுக்கும் மூதாதையரின் தீச்செயலுக்காக மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் பிள்ளைகளைத் தண்டிப்பவன்.
10.     மாறாக, என்மீது அன்பு கூர்ந்து என் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர்க்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுபவன்.
11.     கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே. ஏனெனில் தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவனை ஆண்டவர் தண்டியாது விடார்.
12.     கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் புனிதமாகக் கடைப்பிடி.
13.     ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலைகளையும் செய்வாய்.
14.     ஏழாம் நாளோ உன் கடவுளாகிய அண்டவருக்கான ஓய்வுநாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும், மாடு, கழுதை மற்றெல்லாக் கால்நடைகளும், உன் வாயில்களுக்கும் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். நீ ஓய்வெடுப்பதுபோல் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் ஓய்வெடுக்கட்டும்.
15.     எகிப்து நாட்டில் நீ அடிமையாய் இருந்தாய் என்பதையும், உன் கடவுளாகிய ஆண்டவரே தம் வலிய கரத்தாலும் ஓங்கிய புயத்தாலும் உன்னை அங்கிருந்து கூட்டி வந்தார் என்பதையும் நினைவில் கொள். ஆதலால் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டார்.
16.     தந்தையையும் தாயையும் மதித்து நட இதனால் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு அளிக்கும் நாட்டில் நீ நெடுநாள் நலமுடன் வாழ்வாய். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இடும் கட்டளை இதுவே.
17.     கொலை செய்யாதே.
18.     விபசாரம் செய்யாதே.
19.     களவு செய்யாதே.
20.     பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே.
21.     பிறர் மனைவியைக் காமுறாதே! பிறர் வீடு, நிலம், அடிமை, அடிமைப்பெண், மாடு கழுதை அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.
22.     இவ்வார்த்தைகளை ஆண்டவர், மலைமேல் நெருப்பு, மேகம் காரிருள் நடுவிலிருந்து, உரத்தக்குரலில் உங்கள் சபையோர் எல்லோரிடமும் பேசினார். மேலும், வேறு எதையும் கூட்டாமல் அவர் அவற்றை இரு கற்பலகைகளில் எழுதி என்னிடம் தந்தார்.
23.     மலையில் தீப்பற்றிஎரியும் பொழுதே, இருளின் நடுவிலிருந்து வந்த குரலொலியை நீங்கள் கேட்டதும், நீங்கள் எல்லோரும், உங்கள் குலத்தலைவர்களும் உங்கள் பெரியோர்களும் என்னை அணுகினீர்கள்.
24.     நீங்கள் என்னிடம் கூறியது: இதோ, நம் கடவுளாகிய ஆண்டவர் அவர்தம் மாட்சியையும் ஆற்றலையும் நமக்குக் காண்பித்துள்ளார். மேலும், நெருப்பின் நடுவிலிருந்து வந்த அவரது குரலையும் நாம் கேட்டோம். கடவுள் மனிதரோடு பேசியதையும், ஆயினும் அம்மனிதன் உயிரோடிருப்பதையும் இன்று கண்டோம்.
25.     அப்படியானால் இப்பொழுது நாங்கள் ஏன் சாகவேண்டும்? ஏனெனில் இப்பெரும் நெருப்பு எங்களை விழுங்குமே! நம் கடவுளாகிய ஆண்டவரின் குரலை இனியும் கேட்போமாகில் நாங்கள் மடிவோம்.
26.     நெருப்பிலிருந்து பேசுகின்ற வாழும் கடவுளின் குரலை நாங்கள் கேட்டும் உயிரோடு இருப்பதுபோல், கடவுளது குரலைக் கேட்டும் உயிரோடு இருக்கின்ற மானிடன் எவனாவது உண்டா?
27.     நீரே அருகில் சென்று, நம் கடவுளாகிய ஆண்டவர் கூறப்போவது அனைத்தையும் கேட்டு, அவர் கூறுவது அனைத்தையும் நீரே எமக்குச் சொல்லும், நாங்கள் கேட்டு அதன்படியே செய்வோம்.
28.     நீங்கள் என்னிடம் சொன்ன வார்த்தைகளை ஆண்டவர் கேட்டு, அவர் என்னிடம் கூறியது: இந்த மக்கள் உன்னிடம் சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்: அவர்கள் சொல்வது சரியே.
29.     அவர்களும், அவர்கள் மக்களும் என்றென்றும் நலமாயிருக்குமாறு எந்நாளும் எனக்கு அஞ்சி நடந்து, என் கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடிக்கும் இத்தகைய உள்ளம் அவர்களுக்கு இருந்தால் எவ்வளவோ நல்லது!
30.     நீ சென்று உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப் போங்கள் என அவர்களுக்குச் சொல்.
31.     நீயோ இங்கே என்னோடு இரு. எல்லாக் கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் நான் உனக்குச் சொல்வேன். அவர்களுக்கு நான் உடைமையாகக் கொடுக்கப்போகும் நாட்டில் அவர்கள் கடைப்பிடிக்குமாறு அவற்றை நீ கற்றுக் கொடு.
32.     ஆகவே, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டவற்றை நிறைவேற்றுவதில் கருத்தாயிருங்கள். வலமோ இடமோ விலகி நடக்கவேண்டாம்.
33.     மாறாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டுக் கூறிய எல்லா வழிகளிலும் நடங்கள்: அப்பொழுது வாழ்வீர்கள், அது உங்களுக்கு நலமாகும். நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டிலும் நெடுநாள் வாழ்வீர்கள்.

அதிகாரம் 6.


1.     உங்களுக்குக் கற்றுக்கொடுக்குமாறும், நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டில் கடைப்பிடிக்குமாறும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்ட கட்டளைகளும், நியமங்களும், முறைமைகளும் இவைகளே.
2.     நீங்களும் உங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் உங்கள் வாழ் நாளெல்லாம் கடைப்பிடிப்பீர்களாக! இதனால், நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.
3.     இஸ்ரயேலே, அவற்றிற்குச் செவிகொடு! அவற்றைச் செயல்படுத்த முனைந்திடு! அதனால், உன் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு வாக்களித்தபடி, பாலும் தேனும் நிறைந்துவழியும் நாட்டில் நீ நலம் பல பெற்று மேன்மேலும் பெருகுவாய்.
4.     இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர்.
5.     முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!
6.     இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும்.
7.     நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின்போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
8.     கையில் அடையாளமாக அவற்றைக் கட்டிக்கொள். உன் கண்களுக்கிடையே அடையாளப்பட்டமாக அவை இருக்கட்டும்.
9.     வீட்டின் கதவு நிலைகளிலும் நுழை வாயில்களிலும் அவற்றை எழுது.
10.     மேலும், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு எனும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள் உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புகச் செய்யும்போதும், நீ கட்டி எழுப்பாத, பரந்த வசதியான நகர்களையும்,
11.     நீ நிரப்பாத எல்லாச் செல்வங்களால் நிறைந்த வீடுகளையும், நீ வெட்டாத பாறைக் கிணறுகளையும், நீ நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும் அவர் உனக்குக் கொடுக்கும் போதும், நீ உண்டு நிறைவுகொள்ளும் போதும்,
12.     அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியே கூட்டிவந்த ஆண்டவரை மறந்துவிடாதபடி கவனமாய் இரு.
13.     கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நட! அவருக்குப் பணிந்து அஞ்சி நட! அவருக்குப் பணிந்து அவர் பெயராலே ஆணையிடு!
14.     உங்களைச் சுற்றிலுமுள்ள மக்களின் தெய்வங்களாகிய வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம். ஏனெனில், உங்களிடையே உள்ள உங்கள் கடவுளாகிய ஆண்டவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத கடவுள்.
15.     இல்லையெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் சினம் உங்கள்மேல் மூண்டு, உலகினின்றே உங்களை அழித்து விடலாம்.
16.     மாசாவில் நீங்கள் சோதித்தது போல, உங்கள் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்.
17.     உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கற்றுக்கொடுத்த கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் நிறைவேற்றுவதில் கருத்தாய் இருங்கள்.
18.     ஆண்டவருக்கு முன்னால் நேரியதையும் நல்லதையுமே செய்யுங்கள். அப்பொழுது, எல்லாம் உங்களுக்கு நலமாகும். உங்கள் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நல்ல நாட்டில் நீங்கள் புகுந்து அதை உடைமையாக்கிக் கொள்வீர்கள்.
19.     மேலும், ஆண்டவர் உரைத்தபடி உங்கள் பகைவர் அனைவரையும் உங்கள் முன்பாகவே அழித்தொழிப்பார்.
20.     வருங்காலத்தில், உன் பிள்ளை உன்னை நோக்கி, நம் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்ட கட்டளைகள், நியமங்கள், முறைமைகள் ஆகியவற்றின் உட்பொருள் என்ன? என்று கேட்கும் போது,
21.     நீ உன் பிள்ளைக்கு இவ்வாறு சொல்: நாங்கள் எகிப்தில் பார்வோனுக்கு அடிமைகளாய் இருந்தோம். ஆனால், ஆண்டவர் தம் வலிய கரத்தால் எங்களை எகிப்திலிருந்து வெளியேறச் செய்தார்.
22.     எங்கள் கண்கள் காண எகிப்து நாட்டின் மீதும், பார்வோன் மீதும், ஆண்டவர் மாபெரும் அடையாளங்களையும் அச்சுறுத்தும் அருஞ்செயல்களையும் செய்தார்.
23.     நம் மூதாதையருக்குக் கொடுப்பதாக அவர் ஆணையிட்டுச் சொன்ன நாட்டுக்கு எங்களை அழைத்து வந்தார்: அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அங்கிருந்து வெளியே கொணர்ந்தார்.
24.     நமக்கு இன்று இருப்பதுபோல் என்றும் நலமாகும்பொருட்டும், நமது வாழ்வை அவர் பாதுகாக்கும் பொருட்டும், நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும்படி இந்த எல்லாக் கட்டளைகளையும் நிறைவேற்ற நம் ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டார்.
25.     நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டது போல அவரது திருமுன் இந்த எல்லாக் கட்டளைகளையும் நிறைவேற்ற முனைந்தால் அதுவே நேரிய வாழ்வாகும்.

அதிகாரம் 7.


1.     நீ உரிமையாக்கிக் கொள்ளைப்போகும் நாட்டில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புகச்செய்து, உன்னைவிட வலிமையிலும் எண்ணிக்கையிலும் மிகுந்த மக்களாகிய இத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் எனும் முன்னே விரட்டியடித்து,
2.     கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உன்னிடம் கையளிக்கும்போது, நீ அவர்களை முறியடித்து முற்றிலும் அழிப்பாய். அவர்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளவோ அவர்களுக்கு இரங்கவோ வேண்டாம்.
3.     நீ அவர்களோடு திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளாதே. உன் மகளை அவர்கள் மகனுக்குக் கொடுக்காதே. உன் மகனுக்கு அவர்கள் மகளைக் கொள்ளாதே.
4.     ஏனெனில், என்னைப் பின்பற்றுவதிலிருந்து உன் பிள்ளைகளை அவர்கள் விலக்கி, வேற்றுத் தெய்வங்களை வணங்கும்படி செய்வார்கள். அதனால், ஆண்டவரின் சினம் உனக்கெதிராய் மூண்டு உன்னை விரைவில் அழிக்கும்.
5.     மாறாக, நீ அவர்களுக்கு இவ்வாறு செய்: அவர்களின் பலிபீடங்களை இடித்து, அவர்களின் சிலைத் தூண்களை உடைத்து, அவர்களின் அசேராக் கம்பங்களை வெட்டி, அவர்களின் கைவினையான சிலைகளைத் தீயில் எரித்துவிடு.
6.     ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம் நீங்கள். மண்ணிலுள்ள எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் சொந்த மக்களாக கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்டார்.
7.     எல்லா மக்களிலும் நீங்கள் திரளானவர்கள் என்பதற்காக ஆண்டவர் உங்கள்மீது அன்பு கொண்டு உங்களைத் தேர்ந்து கொள்ளவில்லை. உண்மையில், எல்லா மக்களிலும் நீங்கள் சொற்பமானவர்களே?
8.     மாறாக, உங்களிடம் அன்புகூர்ந்ததனாலும், உங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டுக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் பொருட்டும், ஆண்டவர் தமது வலிமைமிகு கரத்தால் உங்களைப் புறப்படச் செய்து, அடிமைத்தன வீட்டினின்றும் எகிப்து மன்னனாகிய பார்வோனின் கையினின்றும் உங்களை விடுவித்தார்.
9.     எனவே, உங்கள் கடவுளாகிய ஆண்டவரே கடவுள் எனவும், அவரே உண்மையான இறைவன் எனவும் அறிந்து கொள்ளுங்கள். அவர்மீது அன்பு கூர்வோர்க்கும் அவரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்போருக்கும் ஆயிரம் தலைமுறைவரைக்கும் தம் இரக்கத்தின் உடன்படிக்கையைக் காக்கின்றவர் அவரே!
10.     ஆனால், அவரைப் பகைப்பவரை அழிப்பதன் மூலம் நேரடியாகப் பதிலளிப்பார்: அவரை வெறுப்பவரை நேரடியாகத் தண்டிப்பதற்கும் காலம் தாழ்த்த மாட்டார்.
11.     எனவே நீங்கள் கடைப்பிடிக்கும்படி நான் உங்களுக்கு இன்று இடும் கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் நிறைவேற்றுங்கள்.
12.     இந்த முறைமைகளை நீங்கள் கேட்டு, அவைகளைக் கடைப்பிடித்து நிறைவேற்றுவீர்களாயின் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் மூதாதையரிடம் ஆணையிட்டுச் செய்த இரக்கத்தின் உடன்படிக்கையைக் காப்பார்.
13.     அவர் உங்களிடம் அன்பு கூர்வார். உங்களுக்குத் தரப்படுமென்று உங்கள் மூதாதையருக்கு அவர் ஆணையிட்டு வாக்களித்த நாட்டில் உங்களைப் பெருகச் செய்வார். உங்கள் கருவின் கனிகளும், தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகிய உங்கள் நிலத்தின் விளைவுகளும், உங்கள் கால்நடையின் கன்றுகளும், உங்கள் மந்தையின் குட்டிகளும் பெருகும்படி செய்து ஆசி வழங்குவார்.
14.     மற்றெல்லா மக்களினங்களையும்விட நீங்கள் ஆசி பெற்றவர்களாய் இருப்பீர்கள். உங்களுக்குள்ளும் உங்கள் கால்நடைகளுக்குள்ளும் ஆணிலும் பெண்ணிலும் மலடு இராது.
15.     எல்லா நோய்களும் உங்களிடமிருந்து அகலும்படி ஆண்டவர் செய்வார். நீங்கள் அறிந்துள்ள எகிப்தியரின் கொடிய நோய்கள் எல்லாம் உங்களிடையே இல்லாமல் உங்கள்பகைவர் மேல் வரும்படி செய்வார்.
16.     உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களிடம் கையளிக்கவிருக்கும் எல்லா மக்களையும் முற்றிலும் அழித்துவிடுங்கள். உங்கள் கண்கள் அவர்களுக்கு இரங்காதிருக்கட்டும். அவர்களின் தெய்வங்களுக்கு நீங்கள் பணிய வேண்டாம். அது உங்களுக்குக் கண்ணியாக ஆகிவிடும்.
17.     இந்த மக்களினங்கள் எல்லாம் எங்களைவிடத் திரளானவர்களாய் உள்ளதால், அவர்களை விரட்டியடிக்க எங்களால் எப்படி முடியும் என்று உங்கள் உள்ளத்தில் நீங்கள் உரையாடும்போது,
18.     அவர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம். மாறாக, பார்வோனுக்கும் எகிப்தியர் அனைவருக்கும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் செய்ததை நினைவில் நிறுத்துங்கள்.
19.     உங்கள் கண்கள் கண்ட கொடிய வாதைகளையும், உங்களைப் புறப்படும்படி செய்யுமாறு, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் வலிமைமிகு கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும், புரிந்த அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் நினைவில் நிறுத்துங்கள்: நீங்கள் அஞ்சுகின்ற எல்லா மக்களினங்களுக்கும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவ்வாறே செய்வார்.
20.     அதற்கும் தப்பி, உங்களிடமிருந்து ஓடி ஒளிந்து கொள்பவர்களுக்குள்ளே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் செங்குளவிகளை அனுப்பி அவர்களை அழிப்பார்.
21.     அவர்களுக்கு அஞ்சவேண்டாம்: ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களிடையே உள்ளார்: அஞ்சுதற்குரிய ஆற்றல்மிகு கடவுள் அவரே.
22.     உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அந்த மக்களை, உங்கள் கண்கள் காண, கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போகச் செய்வார். உடனடியாக அவர்களை அழித்துவிட வேண்டாம். அப்படிச் செய்தால், உங்களிடையே காட்டு விலங்குகள் பெருகிவிடும்.
23.     உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உங்களிடம் கையளிப்பார். அவர்கள் அழிந்துபோகுமட்டும் அவர்களைப் பெரிதாகக் கலங்கடிப்பார்.
24.     அவர்களின் மன்னர்களையும் உங்களிடம் கையளிப்பார். அவர்களது பெயர் மண்ணினின்று மறைந்து போகச் செய்யுங்கள். நீங்கள் அவர்களை முற்றிலும் அழிக்கும்வரை எந்த மனிதரும் உங்களுக்கு எதிராக நிற்க முடியாது.
25.     கைவினையான அவர்களின் தெய்வச் சிலைககளைத் தீயில் எரித்து விடுங்கள்: அவைகளின் மேலுள்ள வெள்ளியையோ தங்கத்தையோ நீங்கள் விரும்பவோ உங்களுக்காக எடுக்கவோ வேண்டாம்: ஏனெனில் அவை உங்களுக்குக் கண்ணியாக ஆகிவிடும். அவை உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அருவருப்பானவை.
26.     அவைகளைப்போலச் சாபத்துக்கு உள்ளாகாதபடி, அருவருப்பான எதையும் உங்கள் வீட்டுக்குக் கொண்டு வராதிருங்கள், அவைகளை முற்றிலும் அருவருக்கவேண்டும். ஏனெனில், அவை சாபத்துக்கு உள்ளானவை.

அதிகாரம் 8.


1.     இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடும் எல்லாக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள். அதனால், நீங்கள் வாழ்ந்து, பெருகி, ஆண்டவர் உங்கள் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறிய நாட்டில் புகுந்து, அதை உங்கள் உடைமையாக்கிக் கொள்வீர்கள்.
2.     உங்கள் கடவுளாகிய ஆண்டவர் பாலைநிலத்தில் உங்களைக் கூட்டிச் சென்ற எல்லா வழிகளையும் நினைவில் கொள்ளுங்கள். அதன்மூலமே அவர் உங்களை எளியவராக்கினார். அவர்தம் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடிப்பீர்களோ மாட்டீர்களோ என உங்கள் உள்ளச் சிந்தனையை அறிந்து கொள்ளவும் சோதித்தார்.
3.     அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்குப் பசியைத் தந்தார். ஆனால், மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கின்றார் என்று நீங்கள் தெரிந்துகொள்ளுமாறு, நீங்களும் உங்கள் மூதாதையரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார்.
4.     இந்த நாற்பது ஆண்டுகளும் உங்கள் மேலுள்ள ஆடை நைந்து போகவில்லை: உங்கள் காலடிகள் வீங்கவும் இல்லை.
5.     ஒருவன் தன் மகனுக்குக் கற்றுக்கொடுப்பதுபோல, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கும் கற்றுக்கொடுத்தார் என்பதை உங்கள் உள்ளத்தில் உணர்வீர்களாக.
6.     உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள். அதுவே அவர்தம் வழிகளில் நடந்து அவருக்கு அஞ்சி வாழ்வதாகும்.
7.     ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை வளமிகு நாட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த நாடு பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பாய்கின்ற ஆறுகளையும் ஊற்றுகளையும் ஏரிகளையும் கொண்டது.
8.     கோதுமை, திராட்சை, அத்தி, மாதுளை, பார்லி ஆகியவை நிறைந்த நாடு. அது ஒலிவ எண்ணெயும் தேனும் நிறைந்த நாடு.
9.     அந்த நாட்டில் பஞ்சமின்றி நீங்கள் அப்பங்களை உண்பீர்கள். அங்கு உங்களுக்கு எந்தக் குறையும் இராது. அந்த நாட்டின் பாறைகள் அனைத்தும் இரும்பு. அதன் மலைகளிலிருந்து செம்பு வெட்டி எடுக்கலாம்.
10.     நீங்கள் உண்டு நிறைவு கொள்வீர்கள். அப்போது, வளமிகு நாட்டை உங்களுக்குக் கொடுத்ததற்காக உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவீர்கள்.
11.     இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்ற கட்டளைகள், நியமங்கள், முறைமைகள் ஆகியவற்றினின்று வழுவியதன் மூலம் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து போகாதபடி கவனமாய் இருங்கள்.
12.     நீங்கள் உண்டு நிறைவுகொள்ளும் போதும், அழகிய வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருக்கும்போதும்,
13.     உங்கள் ஆடுமாடுகள் பலுகும் போதும், வெள்ளியும் பொன்னும் உங்களுக்கு உள்ளதெல்லாம் பெருகும் போதும்.
14.     நீங்கள் நெஞ்சில் செருக்குற்று, அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிட வேண்டாம்.
15.     அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, நீரற்று வறண்ட நிலமான பரந்த கொடிய பாலைநிலத்தில் உங்களை வழி நடத்தியவர்: இறுகிய பாறையிலிருந்து உங்களுக்காக நீரைப் புறப்படச் செய்தவர்.
16.     உங்கள் மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலைநிலத்தில் உங்களை உண்பித்தவர்: இறுதியில் உங்களுக்கு நல்லது செய்வதற்காக உங்களை எளியவராக்கிச் சிறுமைப்படுத்திச் சோதித்தவரும் அவரே.
17.     எனவே, எங்கள் ஆற்றலும் எங்கள் கைகளின் வலிமையு§ம் இந்தச் செல்வங்களை எங்களுக்கு ஈட்டித்தந்தன என்று உங்கள் உள்ளங்களில் எண்ணாதபடி கவனமாய் இருங்கள்.
18.     உங்கள் மூதாதையருடன் ஆணையிட்டுச் செய்துகொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துமாறு, இந்நாளில் இருப்பது போன்ற செல்வங்களை ஈட்ட வல்ல ஆற்றலை உங்களுக்கு அளித்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நினைவில் கொள்ளுங்கள்.
19.     மாறாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவைகளைப் பணிந்து வணங்கினால், நீங்கள் அழிந்து போவீர்கள் என்று இன்றே உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.
20.     உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீங்கள் கீழ்ப்படியாமலிருந்தால், உங்கள் கண்கள் காண, அவர் அழியச் செய்த மற்ற மக்களினங்கள் போல, இறுதியில் நீங்களும் அழிந்து போவீர்கள்.

அதிகாரம் 9.


1.     இஸ்ரயேலரே, செவிகொடுங்கள்! நீங்கள் இன்று யோர்தானைக் கடந்து, உங்களைவிட எண்ணிக்கையும் வலிமையும் மிகுந்த நாடுகளையும், வானளாவிய மதில்கள் கொண்ட மாபெரும் நகர்களையம் கைப்பற்றுவீர்கள்.
2.     அந்த மக்கள், எண்ணிக்கையிலும் உயரத்திலும் மிகுந்த ஏனாக்கின் வழிமரபினர். அவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும். ஏனாக்கின் புதல்வரை எதிர்த்து நிற்கக் கூடியவன் எவன்? என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பது அவர்களைப்பற்றியே.
3.     சுட்டெரிக்கும் நெருப்பைப் போன்று உங்களை வழி நடத்திச் செல்பவர் உங்கள் கடவுளாகிய ஆண்டவரே என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர் அவர்களை முறியடித்து உங்கள் முன் வீழ்ச்சியுறச் செய்வார். அதனால், ஆண்டவர் வாக்களித்தபடி, நீங்கள் அவர்களைத் துரத்தி விரைவில் அழிப்பீர்கள்.
4.     உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் முன்னின்று அவர்களை விரட்டியடித்தபின், எங்களுடைய நேரிய நடத்தையின் பொருட்டே இந்த நாட்டை உடைமையாக்கிக்கொள்ளும்படி ஆண்டவர் எங்களைக் கூட்டி வந்தார் , என்று உங்கள் உள்ளத்தில் எண்ண வேண்டாம். ஏனெனில், அந்த நாடுகளின் நெறிகெட்ட நடத்தையின் பொருட்டே ஆண்டவர் அவைகளை உங்கள் முன்னின்று விரட்டியடிப்பார்.
5.     அவர்களது நாட்டை நீங்கள் உடைமையாக்கிக்கொள்ளப்போவது உங்களது நேரிய நடத்தையினாலோ உங்களது உள்ளத் தூய்மையினாலோ அன்று: மாறாக, அந்த நாடுகளின் நெறிகெட்ட நடத்தையின் பொருட்டே, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் முன்னின்று அவர்களை விரட்டியடிப்பார். அதனால், உங்கள் மூதாதையராகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு ஆண்டவர் ஆணையிட்டு உரைத்த வாக்கு நிறைவேறும்.
6.     எனவே, நீங்கள் உடைமையாக்கிக்கொள்ளும்படி இந்த வளமிகு நாட்டை உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குத் தரப்போவது உங்களது நேரிய நடத்தையின் பொருட்டு அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் வணங்காகக் கழுத்தினர்.
7.     பாலைநிலத்தில் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நீங்கள் சினத்துக்கு உள்ளாக்கினதை நினையுங்கள்: அதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியே வந்த நாள் முதல் இந்த இடத்திற்கு வரும்வரை ஆண்டவரை எதிர்த்துக் கலகம் செய்தீர்கள்.
8.     ஓரேபிலும் நீங்கள் ஆண்டவரைக் கடுஞ்சினத்துக்கு உள்ளாக்கினீர்கள். அதனால், உங்களை அழிக்கும் அளவுக்கு ஆண்டவர் சினம்கொண்டார்.
9.     ஆண்டவர் உங்களோடு செய்து கொண்ட உடன்படிக்கைப் பலகைகளாகிய கற்பலகைகளைப் பெற்றுக் கொள்ளும்படி நான் மலையில் ஏறினபோது, நாற்பது பகலும் நாற்பது இரவும் தங்கியிருந்தேன். அப்பொழுது, நான் அப்பம் உண்டதுமில்லை: நீர் பருகியதுமில்லை.
10.     கடவுளின் விரலால் எழுதப்பட்டிருந்த இரு கற்பலகைகளை ஆண்டவர் என்னிடம் தந்தார். சபை கூடிய நாளில், மலையில் நெருப்பின் நடுவிலிருந்து ஆண்டவர் உங்களோடு பேசிய எல்லா வார்த்தைகளும் அவற்றில் இருந்தன.
11.     நாற்பது பகலும் நாற்பது இரவும் கழிந்த பின், உடன்படிக்கைப் பலகைகளான இரு கற்பலகைகளை ஆண்டவர் என்னிடம் தந்தார்.
12.     அப்பொழுது, ஆண்டவர் என்னிடம், எழுந்து, இங்கிருந்து விரைந்து இறங்கிச் செல். ஏனெனில், நீ எகிப்திலிருந்து அழைத்துவந்த உன் மக்கள் சீரழிந்து விட்டனர். நான் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்த வழியிலிருந்து விரைவில் விலகிவிட்டனர். வார்ப்புச்சிலை ஒன்றை அவர்களுக்கெனச் செய்து கொண்டனர் என்றார்.
13.     மேலும் அவர் என்னிடம், நானும் இந்த மக்களைப் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன்: இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள்.
14.     என்னை விட்டு விடு. நான் அவர்களை அழிப்பேன். மண்ணினின்று அவர்கள் பெயர் இல்லாது ஒழிப்பேன். பிறகு, அவர்களைவிட வலிமையிலும் எண்ணிக்கையிலும் மிகுதியான மக்களினமாக உன்னை ஆக்குவேன் என்றார்.
15.     பின்னர் நான் திரும்பி, மலையிலிருந்து இறங்கினேன். மலை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடன்படிக்கையின் இரு பலகைகளும் என் இருகைகளிலும் இருந்தன.
16.     நான் பார்த்தபொழுது நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்து கொண்டிருந்தீர்கள். உங்களுக்கென வார்ப்புக் கன்றுக்குட்டியைச் செய்து, ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டிருந்த வழியிலிருந்து விரைவில் விலகியிருந்தீர்கள்.
17.     அப்பொழுதுநான் இரு பலகைகளையும் தூக்கி என் இரண்டு கைகளிலுமிருந்து வீசி எறிந்து உங்கள் கண்களுக்கு முன்னே உடைத்தேன்.
18.     பிறகு, ஆண்டவர் சினம்கொள்ளுமாறு நீங்கள் அவர் முன்னிலையில் தீச்செயல் செய்து புரிந்த பாவம் அனைத்துக்காகவும் நாற்பது பகலும் நாற்பது இரவும் நான் ஆண்டவர்முன் தாழ்ந்து பணிந்து கிடந்தேன். முன்புபோலவே நான் அப்பம் உண்ணவும் இல்லை, நீர் பருகவும் இல்லை.
19.     உங்களை அழிக்கும்படி ஆண்டவர் உங்கள்மேல் கொண்டிருந்த சினத்தையும் கோபக் கனலையும் கண்டு நான் அஞ்சினேன். ஆனால் ஆண்டவர் மீண்டும் ஒருமுறை என் மன்றாட்டைக் கேட்டார்.
20.     ஆரோன் மீதும் ஆண்டவர் கடும் சினம் கொண்டு அவனை அழிக்க எண்ணியிருந்தார். நான் ஆரோனுக்காகவும் மன்றாடினேன்.
21.     அப்பொழுது, நீங்கள் செய்த உங்கள் பாவப் பொருளாகிய கன்றுக்குட்டியை நான் எடுத்து, நெருப்பில் சட்டெரித்து, தூசுபோல் ஆகுமட்டும் நொறுக்கித் தூளாக்கி, அந்தத் தூளை மலையிலிருந்து கீழே ஓடும் ஆற்றில் கொட்டினேன்.
22.     தாபேராவிலும், மாசாவிலும், கிப்ரோத்து அத்தாவாவிலும் ஆண்டவருக்குக் கடும் சினம் வரச் செய்தீர்கள்.
23.     ஆண்டவர் உங்களைக் காதேசு பர்னேயாவிலிருந்து அனுப்பி, நான் உங்களுக்குக் கொடுத்துள்ள நாட்டை உடைமையாக்கிக் கொள்ளுங்கள் என்றார். நீங்களோ உங்கள் கடவுளாகிய ஆண்டவரை எதிர்த்துக் கலகம் செய்தீர்கள். அவர்மீது நம்பிக்கை கொள்ளவும் இல்லை: அவர் குரலுக்குச் செவி கொடுக்கவும் இல்லை.
24.     நான் உங்களை அறிந்த நாளிலிருந்து நீங்கள் ஆண்டவரை எதிர்த்துக் கலகம் செய்துகொண்டே இருக்கிறீர்கள்.
25.     ஆண்டவர், நான் உங்களை அழிப்பேன் என்று சொன்னதால் நாற்பது பகலும் நாற்பது இரவும் ஆண்டவர் முன்னால் தாழ்ந்து பணிந்து கிடந்தேன்.
26.     அப்போது இறைவனாகிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடியது: என் தலைவராம் ஆண்டவரே! நீர் உமது மாட்சியால் விடுவித்து, உமது வலிமைமிகு கரத்தால் எகிப்திலிருந்து அழைத்துவந்த உம் உடைமையாகிய மக்களை அழிக்க வேண்டாம்.
27.     ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு எனும் உம் அடியார்களை நினைவு கூர்ந்தருளும், இம்மக்களின் வணங்காக் கழுத்தையும், அவர்களது தீய நடத்தையையும், பாவங்களையும் பொருட்படுத்த வேண்டாம்.
28.     இல்லையெனில், நீர் எந்த நாட்டினின்று எங்களை விடுவித்து அழைத்து வந்தீரோ, அந்த நாட்டினர் ஆண்டவர் அவர்களுக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுச் சொன்ன நாட்டில் அவர்களைக் கொண்டு போக இயலாததாலும், அவர்களை வெறுத்ததாலும், பாலை நிலத்தில் அவர்களைக் கொல்லுமாறு எகிப்திலிருந்து கூட்டிவந்தார் என்று ஏளனம் செய்வர் அன்றோ!
29.     ஆண்டவரே, உமது மிகுந்த வலிமையாலும் ஓங்கிய புயத்தாலும் வெளிக்கொணர்ந்த இவர்கள் உமது உடைமையாகிய மக்களாய் உள்ளனர் அன்றோ!

அதிகாரம் 10.


1.     அந்நாளில் ஆண்டவர் என்னை நோக்கி, முன்னவைப்போன்ற இரு கற்பலகைகளை வெட்டி எடுத்துக் கொண்டு மலைமேல் ஏறி என்னிடம் வா. மரத்தால் ஆன பேழையையும் உனக்காகச் செய்துகொள்.
2.     நீ உடைத்துப் போட்ட முன்னைய பலகைகளில் இருந்த வார்த்தைகளையே நான் இப்பலகைகளிலும் எழுதுவேன். நீ அவற்றைப் பேழையில் வை என்றார்.
3.     எனவே சித்திம் மரத்தாலான ஒரு பேழையைச் செய்தேன். முன்னவை போன்ற இரு கற்பலகைகளை வெட்டி எடுத்தேன். அவ்விரு கற்பலகைகளையும் என் கையில் எடுத்துக்கொண்டு மலைமேல் ஏறினேன்.
4.     சபை கூடிய நாளில், மலையில் நெருப்பினின்று, உங்களுக்குக் கூறிய பத்துக்கட்டளைகளை முன்பு எழுதியது போலவே ஆண்டவர் அப்பலகைகளில் எழுதினார். பின்னர் அவர் அவற்றை என்னிடம் கொடுத்தார்.
5.     அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, நான் செய்திருந்த பேழையில் பலகைகளை வைத்தேன். ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி அவை அங்கே உள்ளன.
6.     அதன்பின், இஸ்ரயேல் மக்கள பெனயாக்கானுக்கு அருகிலுள்ள பெயரோத்திலிருந்து மோசேராவுக்குப் பயணம் செய்தார்கள். அங்கே ஆரோன் இறந்து அடக்கம் செய்யப்பட்டார். அவர் மகன் எலயாசர் அவருக்குப் பதிலாக குரு ஆனார்.
7.     அங்கிருந்து அவர்கள் குத்கோதாவுக்கும் தொடர்ந்து பாய்ந்தோடும் ஆறுகள் உள்ள யோற்றுபாத்தாவுக்கும் பயணம் செய்தார்கள்.
8.     அந்நாளில் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சுமக்கவும், இந்நாள்வரை இருப்பது போல ஆண்டவர் திருமுன் நின்று பணிபுரியவும், அவருடைய பெயரால் ஆசி வழங்கவும், ஆண்டவர் லேவியின் குலத்தைத் தனித்து வைத்தார்.
9.     எனவேதான், லேவியர்க்குத் தம் சகோதரர்களுடன் பங்கு இல்லை: உரிமைச் சொத்தும் இல்லை: உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவர்களுக்குச் சொல்லி இருப்பதுபோல, ஆண்டவரே அவர்களது உரிமைச் சொத்து.
10.     முதன்முறை போன்றே நான் நாற்பது பகலும் நாற்பது இரவும் மலைமீது தங்கியிருந்தேன். மீண்டும் ஒருமுறை ஆண்டவர் என் மன்றாட்டைக் கேட்டார். உங்களை அழிப்பதை ஆண்டவர் விரும்பவில்லை.
11.     ஆண்டவர் என்னிடம், நீ எழுந்து மக்களுக்குமுன் புறப்பட்டுச் செல். நான் அவர்களுக்கு அளிப்பதாக அவர்களின் மூதாதையருக்கு ஆணையிட்டுச் சொன்ன நாட்டுக்குள் சென்று அதை அவர்கள் உடைமையாக்கிக்கொள்ளட்டும் என்றார்.
12.     எனவே இஸ்ரயேலரே, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, அவர்தம் அனைத்து வழிகளிலும் நடந்து, அவர் மீது அன்புகூர்ந்து, உங்கள் முழு இதயத்தோடும் உங்கள் முழு உள்ளத்தோடும் அவருக்குப் பணிபுரிந்து,
13.     உங்களுக்கு எல்லாம் நலமாகும் பொருட்டு நான் இன்று கற்பிக்கின்ற அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்பதன்றி, அவர் உங்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கின்றார்?
14.     விண்ணும் விண்ணின் வானங்களும், மண்ணும் அதில் உள்ள அனைத்தும் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு உரியன.
15.     இருப்பினும், உங்கள் மூதாதையரின்மீது பற்றுவைத்து அன்பு கூர்ந்தார். அவர்களுக்குப்பின் அவர்களுடைய வழிமரபினராகிய உங்களை எல்லா மக்களினங்களினின்றும், இந்நாளில் இருப்பதுபோலத் தெரிந்துகொண்டார்.
16.     ஆகவே, உங்கள் உள்ளத்தை விருத்த சேதனம் செய்யுங்கள். வணங்காக் கழுத்தினராய் இராதீர்கள்.
17.     ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரே, தெய்வங்களுக்கெல்லாம் கடவுள், இறைவாக்கெல்லாம் இறைவன். மாட்சியும் ஆற்றலும் உள்ள அஞ்சுததற்குரிய கடவுள் அவரே. அவர் ஓர வஞ்சனை செய்வதில்லை: கையூட்டு வாங்குவதும் இல்லை.
18.     அனாதைகளுக்கும் கைம்பெண்களுக்கும் நீதி வழங்குபவர் அவரே. அன்னியர்மேல் அன்புகூர்ந்து அவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பவர் அவரே.
19.     அன்னியருக்கு அன்பு காட்டுங்கள்: ஏனெனில் எகிப்தில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள்.
20.     உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே அஞ்சுங்கள்: அவருக்கே பணிபுரிந்து அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். அவர் பெயராலே ஆணையிடுங்கள்.
21.     அவரே உங்கள் புகழ்ச்சி! அவரே உங்கள் கடவுள்! உங்கள் கண்கள் கண்ட ஆற்றல்மிகு அச்செயல்களை உங்களுக்காகச் செய்தவர் அவரே.
22.     உங்கள் மூதாதையர் எழுபது ஆள்களாய் எகிப்துக்குப் போனார்கள். இப்பொழுதோ உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை வானத்து விண்மீன்கள் போல் பெருகச் செய்துள்ளார்.

அதிகாரம் 11.


1.     ஆகையால் நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு கூருங்கள். அவருடைய நெறிகளையும், நியமங்களையும், முறைமைகளையும், கட்டளைகளையும் எந்நாளும் கடைப்பிடியுங்கள்.
2.     உங்கள் பிள்ளைகள், கடவுளாகிய ஆண்டவரின் படிப்பினைகள் அறிந்ததுமில்லை: பார்த்ததுமில்லை. அவர்தம் மாட்சி, வலிய கரம், ஓங்கிய புயம்,
3.     எகிப்திய மன்னனாம் பார்வோனுக்கும் அவனது நாடு முழுமைக்கும் எகிப்தில் அவர் செய்த எல்லாச் செயல்கள், அவர்தம் அடையாளங்கள்,
4.     எகிப்தியப்படையும், அவர்கள் குதிரைகளும், தேர்களும் உங்களைப் பின்தொடர்ந்து வருகையில், செங்கடலின் நீரை ஆண்டவர் அவர்கள் மேல் பொங்கி வரச்செய்து இந்நாள்வரை இருப்பது போல அவர்களை அழித்தது,
5.     நீங்கள் இந்த இடத்திற்கு வரும்வரை பாலைநிலத்தில் அவர் உங்களுக்குச் செய்தது,
6.     ரூபனின் பேரர்களும், எலியாபின் புதல்வர்களுமான தாத்தானையும், அபிராமையும், அவர்கள் குடும்பங்கள், அவர்கள் கூடாரங்கள், அவர்களைப் பின்பற்றிய எல்லா உயிரினங்கள் ஆகியவற்றை இஸ்ரயேலர் எல்லோர் நடுவிலும் நிலம் தன் வாயைப் பிளந்து விழுங்கும்படி செய்தது ஆகியவை அனைத்தையும் எண்ணிப் பாருங்கள்.
7.     ஏனெனில் ஆண்டவர் செய்த மாபெரும் செயல்கள் அனைத்தையும் உங்கள் கண்கள் கண்டன.
8.     எனவே இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடும் அனைத்துக் கட்டளைகளையும் கடைப்பிடியுங்கள். அதனால் நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளும்படி கடந்து சென்றடையும் நாட்டை உடைமையாக்கும் வலிமை பெறுவீர்கள்.
9.     மேலும், உங்கள் மூதாதையருக்கும் அவர்கள் வழிமரபினருக்கும் கொடுப்பதாக ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்ன மண்ணில் நீங்கள் நெடிது வாழ்வீர்கள். அது பாலும் தேனும் நிறைந்து வழியும் நாடு.
10.     ஏனெனில், நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாடு, நீங்கள் விட்டு வந்த எகிப்து நாட்டைப் போன்றது அன்று. அங்கு நீங்கள் விதை விதைத்து, காய்கறித் தோட்டத்திற்குப் பாய்ச்சுவதுபோல மெய்வருத்தி நீர் பாய்ச்சி வந்தீர்கள்.
11.     ஆனால் நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளுமாறு கடந்து சென்றடையவிருக்கும் நாடு, மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த நாடு: வானத்தின் மழை நீரையே குடிக்கும் நாடு!
12.     உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கண்காணிக்கும் நாடு! ஆண்டின் தொடக்கம் முதல் ஆண்டின் முடிவுவரை உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கண் காத்திடும் நாடு!
13.     இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகிற என் கட்டளைகளைப் பின்பற்றி உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்ந்து, உங்கள் முழு இதயத்தோடும் உங்கள் முழு உள்ளத்தோடும் அவருக்கு ஊழியம் செய்தால்,
14.     தக்க காலத்தில் அவர் உங்கள் நிலத்திற்கு மழை தருவார், முன்மாரியும் பின்மாரியும் தருவார். அதனால் உங்கள் தானியத்தையும், திராட்சை இரசத்தையும், எண்ணையையும் சேகரிப்பீர்கள்.
15.     வயல்வெளிகளில் உங்கள் கால்நடைகளுக்கு அவர் புல் தருவார். நீங்கள் உண்டு நிறைவு கொள்வீர்கள்.
16.     நீங்கள் வேற்றுத் தெய்வங்கள் பக்கம் திரும்பி, அவற்றுக்கு ஊழியம் செய்து, அவற்றை வணங்கிடுமாறு, உங்கள் உள்ளங்கள் வஞ்சிக்கப்படாதபடி கவனமாய் இருங்கள்.
17.     இல்லையெனில், ஆண்டவரின் சினம் உங்கள் மீது வரும். மழையே இல்லாதபடி வானங்களை அவர் மூடிவிடுவார். உங்கள் நிலம் தன்பலனைத் தராது. அவர் உங்களுக்குக் கொடுக்கும் அந்த வளமிகு நாட்டினின்று விரைவில் அழிந்து போவீர்கள்.
18.     எனவே என் வார்த்தைகளை உங்கள் நெஞ்சிலும் நினைவிலும் நிறுத்துங்கள். அவற்றை உங்கள் கைகளில் அடையாளமாகக் கட்டிக் கொள்ளுங்கள். உங்கள் கண்களுக்கிடையே அவை அடையாளப் பட்டமாக இருக்கட்டும்.
19.     நீங்கள் அவற்றை உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். நீங்கள் வீட்டில் இருக்கும்போதும், பயணம் செய்யும்போதும், படுக்கும் போதும், எழும்போதும் அவற்றைப் பேசுங்கள்.
20.     உங்கள் வீட்டின் கதவு நிலைகளிலும் நுழைவாயில்களிலும் அவற்றை எழுதுங்கள்.
21.     அதனால், விண்ணுலகு மண்ணுலகின்மீது நிற்குமட்டும், உங்கள் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில் நீங்களும் உங்கள் மக்களும் நெடுநாள் வாழ்வீர்கள்.
22.     ஏனெனில், நீங்கள் பின்பற்றுமாறு நான் உங்களுக்குக் கட்டளையிடும் இந்த எல்லாக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் நீங்கள் கருத்தாய் இருந்தால்,
23.     உங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு கூர்ந்து அவர் வழிகளில் நடந்து, அவரைப் பற்றிக் கொண்டால், அவர் இந்த நாட்டினரை எல்லாம் உங்கள் முன்பே விரட்டியடிப்பார். உங்களைவிட எண்ணிக்கையிலும் வலிமையிலும் மிகுந்த அந்நாடுகளை நீங்கள் முறியடிப்பீர்கள்.
24.     உங்கள் காலடிபடும் இடங்கள் எல்லாம் உங்களுடையவை ஆகும். பாலைநிலமும் லெபனோனும், யூப்பிரத்தீசு ஆறும் மேற்குக் கடற்கரையும் உங்கள் எல்லையாயிருக்கும்.
25.     எவனாலும் உங்களை எதிர்த்து நிற்க இயலாது. ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் செல்லும் நாடுகள் அனைத்திலும் உங்களைப்பற்றி அச்சத்தையும் திகிலையும் உண்டாக்குவார்.
26.     இதோ! இன்று உங்கள் முன்பாக ஆசியையும் சாபத்தையும் வைக்கின்றேன்.
27.     நான் இன்று உங்களுக்கு விதித்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடித்தால், ஆசியும்,
28.     உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிக்காமல், நான் இன்று உங்களுக்கு விதித்த வழிகளினின்று விலகி நடந்து, நீங்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றினால் சாபமும் உண்டாகும்.
29.     நீங்கள் சென்று உடைமையாக்கிக் கொள்ளப் போகும் நாட்டுக்குள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை இட்டுச் செல்லும் போது, கெரிசிம் மலையிலிருந்து ஆசியையும் ஏபால் மலையிலிருந்து சாபங்களையும் அறிவிப்பீர்கள்.
30.     யோர்தானுக்கு அப்பால், சாலைக்கு மேற்கே கதிரவன் மறையும் திசையில், அராபாவில் வாழும் கானானியரின் நாட்டில், கில்காலுக்கு எதிர்ப்புறமாக மோசே தோப்பு அருகே அல்லவா அவ்விடம் உள்ளது?
31.     உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கப்போகும் நாட்டை உடைமையாக்கிக்கொள்ள நீங்கள் யோர்தானைக் கடந்து செல்ல வேண்டும். அதை உடைமையாக்கி, அங்கு வாழும்போது,
32.     நான் இன்று உங்கள்முன் வைக்கின்ற நியமங்களையும் முறைமைகளையும் நிறைவேற்றுவதில் கருத்தாய் இருங்கள்.

அதிகாரம் 12.


1.     மண்ணில் வாழும் நாளெல்லாம், நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளுமாறு, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் கவனமாய்ப் பின்பற்ற வேண்டிய நியமங்களும் முறைமைகளும் இவையே:
2.     நீங்கள் விரட்டியடிக்கப்போகும் மக்களினங்கள் தங்கள் தெய்வங்களுக்கு, உயர்ந்த மலைகளின்மீதும், குன்றுகளின் மீதும், பசுமையான மரங்களின் மீதும், ஊழியம் செய்த எல்லா இடங்களையும் முற்றிலும் அழித்து விடுங்கள்.
3.     அவர்களின் பலிபீடங்களை இடித்து, அவர்களின் சிலைத்தூண்களை நொறுக்கி, அவர்களின் அசேராக்கம் பங்களைத் தீயில் சுட்டெரித்து, அவர்களின் கைவினையான தெய்வங்களின் சிலைகளை உடைத்து, அவர்களின் பெயர் அவ்விடங்களில் இல்லாது ஒழியுங்கள்.
4.     ஆனால் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அவ்விதம் செய்யாதீர்கள்.
5.     ஆண்டவராகிய கடவுள் தம் பெயர் விளங்கவும், அங்கே குடியமரவும், உங்கள் எல்லாக் குலங்களிலிருந்து தெரிந்தெடுக்கும் இடத்தையே நீங்களும் நாடி அங்கே செல்லுங்கள்.
6.     உங்கள் எரி பலிகளையும், மற்றப் பலிகளையும், பத்திலொரு பங்கையும், அர்ப்பணக் காணிக்கைகளையும், நேர்ச்சைக் காணிக்கைகளையும் தன்னார்வப் பலிகளையும், ஆடுமாடுகளின் தலையீற்றையும் அங்கே கொண்டு வாருங்கள்.
7.     அங்கே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் உண்பீர்கள். உங்கள் உழைப்பின் பயனும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரால் ஆசி பெற்றதுமாகிய எல்லாவற்றுக்காகவும் நீங்களும் உங்கள் வீட்டார் அனைவரும் மகிழ்வீர்கள்.
8.     இந்த நாள்களில் இங்கே நாம் செய்வது போல ஒவ்வொருவரும் தம் பார்வையில் சரியெனத் தோன்றுவதைச் செய்ய வேண்டாம்.
9.     ஏனெனில், உங்கள் ஆண்டவராகிய கடவுள் கொடுக்கப்போகும் உரிமைச் சொத்துக்கும் ஓய்வுக்கும் இன்னும் நீங்கள் போகவில்லை.
10.     ஆனால், நீங்கள் யோர்தானைக் கடந்து சென்று, உங்கள் ஆண்டவராகிய கடவுள் உரிமையாகத் தருகின்ற நாட்டில் குடியமரும்போது, நீங்கள் அச்சமின்றி வாழும்பொருட்டு, உங்களைச் சுற்றிலுமுள்ள உங்கள் பகைவர் அனைவரிடமிருந்தும் உங்களுக்கு அவர் ஓய்வு தரும்போது,
11.     அவர்தம் பெயர் விளங்குமாறு அவர் தெரிந்தெடுக்கும் இடத்திற்கு நான் உங்களுக்குக் கட்டளையிடும் எல்லாவற்றையும் கொண்டு செல்வீர்கள். உங்கள் எரி பலிகளையும், மற்றப் பலிகளையும், பத்திலொரு பங்கையும், அர்ப்பணக் காணிக்கைகளையும், ஆண்டவருக்கு நேர்ந்துகொண்ட சிறந்த நேர்ச்சைக் காணிக்கைகள் அனைத்தையும் கொண்டு செல்வீர்கள்.
12.     நீங்களும், உங்கள் புதல்வரும், உங்கள் புதல்வியரும், அடிமைகளும், அடிமைப் பெண்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன் அகமகிழ்வீர்களாக! தங்களுக்கெனத் தனிப்பங்கோ உரிமைச் சொத்தோ இல்லாவிடில், உங்கள் நகர்களில் உள்ள லேவியரும் அவ்விதமே மகிழ்வார்களாக!
13.     கண்ட இடமெல்லாம் உங்கள் எரி பலிகளைச் செலுத்தாதபடி கவனமாய் இருங்கள்.
14.     ஆனால், உங்கள் குலங்களுள் ஒன்றிலிருந்து ஆண்டவர் ஓர் இடத்தைத் தெரிந்தெடுப்பார். அங்கே நீங்கள் உங்கள் எரி பலிகளைச் செலுத்துங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிடும் எல்லாவற்றையும் அங்கே நிறைவேற்றுங்கள்.
15.     ஆயினும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு அளித்துள்ள ஆசிக்கு ஏற்ப, உங்கள் நகர்களில், உங்கள் விருப்பப்படியே விலங்குகளை அடித்து உண்ணலாம். தீட்டுள்ளவனும் தீட்டற்றவனும் அவற்றிலிருந்து உண்ணலாம். பெண் மானையும் கலைமானையும் உண்பதுபோல் உண்ணலாம்.
16.     இரத்தத்தை மட்டும் அருந்த வேண்டாம்: தண்ணீரை ஊற்றுவதுபோல அதைத் தரையில் ஊற்றி விடுங்கள்.
17.     உங்கள் விளைச்சலின் பத்திலொரு பங்கிலிருந்தோ, திராட்சை இரசத்திலிருந்தோ, ஆடு மாடுகளின் தலையீற்றுக்களிலிருந்தோ, நீங்கள் நேர்ந்துகொண்ட சிறந்த நேர்ச்சைக் காணிக்கைகளிலிருந்தோ, உங்கள் தன்னார்வப் பலிகளிலிருந்தோ, உங்கள் அர்ப்பணப் பலிகளிலிருந்தோ எதையும் எடுத்து உங்களது நகரில் உண்ண வேண்டாம்.
18.     ஆனால், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் நீங்கள் அதை அவர் முன்னிலையில் உண்ணுங்கள். நீங்களும், உங்கள் மகன், மகள், அடிமை, அடிமைப்பெண் ஆகியோரும் உங்கள் நகர்களில் உள்ள லேவியரும் உண்ணுங்கள். நீங்கள் செய்யும் அனைத்திலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரில் அகமகிழுங்கள்!
19.     உங்கள் நாட்டில் வாழும் நாளெல்லாம் லேவியரைக் கைவிடாதபடி கவனமாய் இருங்கள்.
20.     உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு வாக்களித்தபடி உங்களது எல்லையை விரிவுபடுத்தும் போது நீங்கள் இறைச்சி உண்ண விரும்பி, நான் இறைச்சி உண்பேன் என்றால் நீங்கள் விரும்பிய அளவு உண்ணலாம்.
21.     அவர்தம் பெயர் விளங்குமாறு ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடம் உங்களுக்கு வெகு தொலைவில் இருந்தால், அவர் உங்களுக்குக் கொடுத்துள்ள ஆட்டையோ மாட்டையோ நான் உங்களுக்கு விதித்துள்ளபடி, உங்கள் நகரிலேயே அடித்து நீங்கள் விரும்புவதுபோல் உண்ணலாம்.
22.     பிணைமானையும் கலைமானையும் உண்பதுபோல உண்ணலாம். தீட்டுள்ளவர்களும் தீட்டற்றவர்களும் உண்ணலாம்.
23.     இரத்தத்தை அருந்தாதபடி மட்டும் கவனமாய் இருங்கள். ஏனெனில் இரத்தமே உயிர். சதையோடு உயிரையும் சேர்த்து உண்ணாதீர்கள்.
24.     இரத்தத்தை நீங்கள் அருந்த வேண்டாம். தண்ணீரை ஊற்றுவதுபோல அதைத் தரையில் ஊற்றிவிடுங்கள்.
25.     நீங்கள் அதை அருந்தலாகாது. அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப்பின் உங்கள் மக்களுக்கும் எல்லாம் நலமாகும். ஆண்டவரின் பார்வையில் நீங்கள் நேரியன செய்தவர்கள் ஆவீர்கள்.
26.     உங்களிடமிருந்து வரவேண்டிய புனிதப் பொருள்களையும் உங்களது நேர்ச்சைக் காணிக்கைகளையும் எடுத்துக்கொண்டு ஆண்டவர் தேர்ந்து கொள்ளும் இடத்திற்குச் செல்லுங்கள்.
27.     அங்கு உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பீடத்தில் உங்கள் எரிபலிகளைச் செலுத்துங்கள். சதையோடும் இரத்தத்தோடும் செலுத்துங்கள். உங்கள் பலிப்பொருள்களின் இரத்தத்தை நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பீடத்திலே ஊற்றி விடுங்கள். ஆனால் இறைச்சியை நீங்கள் உண்ணலாம்.
28.     நான் உங்களுக்கு விதிக்கும் இக்கட்டளைகளை எல்லாம் கடைப்பிடிப்பதில் கவனமாய் இருங்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நீங்கள் நவமானதையும் நேரியதையும் செய்தால் உங்களுக்கும் உங்களுக்குப்பின் உங்கள் பிள்ளைகளுக்கும் என்றும் எல்லாம் நலமாகும்.
29.     நீங்கள் சென்று விரட்டியடிக்கும் மக்களினங்களை உங்கள் கடவுளாகிய ஆண்டவர் வேரறுப்பார். நீங்கள் அவர்களை விரட்டியடித்துவிட்டு அவர்களது நாட்டில் குடியேறுங்கள்.
30.     உங்கள் முன்னிலையில் அவர்கள் முறியடிக்கப்பட்டபின் அவர்களைப் பின்பற்றி வஞ்சிக்கப்படாதபடியும், இந்த மக்களினங்கள் தங்கள் தெய்வங்களுக்கு எப்படி ஊழியம் செய்தனவோ அவ்விதமே நாங்களும் செய்வோம், என்று சொல்லி அவர்களின் தெய்வங்களைப்பற்றிக் கேட்டறியாதபடியும் கவனமாய் இருங்கள்.
31.     உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அவர்களது முறைப்படி செய்யவேண்டாம். ஏனெனில், ஆண்டவர் வெறுக்கும் எல்லா அருவருப்பானவற்றையும் அவர்களுடைய தெய்வங்களுக்கு அவர்கள் செய்தார்கள். தங்கள் புதல்வரையும், புதல்வியரையும் கூட அவர்களின் தெய்வங்களுக்கென நெருப்பில் சுட்டெரித்தார்கள்.
32.     நான் உங்களுக்கு விதிக்கிற யாவற்றையும் கடைப்பிடிப்பதில் கவனமாய் இருங்கள். அவற்றோடு எதையும் கூட்டவோ அவற்றிலிருந்து எதையும் குறைக்கவோ வேண்டாம்.

அதிகாரம் 13.


1.     உங்கள் நடுவில் ஓர் இறைவாக்கினன் அல்லது கனவு காண்பவன் தோன்றி உங்களிடையே ஓர் அடையாளம் அல்லது அருஞ்செயல் காட்டுவேன் என்று சொல்லலாம்.
2.     அவன் சொல்வதுபோல் அடையாளம் அல்லது அருஞ்செயல் நடக்கலாம். அதன்பின் அவன், வாருங்கள், வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் புரிவோம் என்று கூறலாம். அவை நீங்கள் அறியாதவை.
3.     அந்த இறைவாக்கினன் அல்லது கனவு காண்பவனின் சொற்களுக்குச் செவி கொடுக்க வேண்டாம். ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது நீங்கள் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அன்பு கூர்கின்றீர்களா என்று அவர் உங்களைச் சோதிக்கின்றார்.
4.     உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் பின்பற்றி அவருக்கு அஞ்சி, அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவர் குரலுக்குக் கீழ்ப்படிந்து, அவருக்கு ஊழியம் செய்து அவரைப் பற்றிக் கொள்ளுங்கள்.
5.     ஆனால், அந்த இறைவாக்கினன் அல்லது கனவு காண்பவன் கொல்லப்பட வேண்டும். ஏனெனில் எகிப்து நாட்டிலிருந்து, உங்களை அழைத்துவந்த, அடிமைத்தனத்தின் வீட்டிலிருந்து உங்களை விடுவித்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக, அவர் உங்களை வாழச் சொன்ன வழிகளிலிருந்து கலகம் செய்ய அவன் தூண்டினான். இத்தகைய தீமையை உங்களிடமிருந்து கருவறுங்கள்.
6.     தாயின் மகனாகிய உன் சகோதரன், உன் மகன், மகள், அன்பு மனைவி, ஆருயிர் நண்பன் ஆகியோருள் எவராவது, நீயும் உன் மூதாதையரும் அறிந்திராத வேற்றுத் தெய்வங்களிடம் சென்று அவற்றுக்கு ஊழியம் செய்வோம், என்று இரகசியமாக, நயவஞ்சகமாகக் கூறலாம்.
7.     உன்னைச் சுற்றிலும், உனக்கு அருகிலோ தொலையிலோ உலகின் ஒரு முனை முதல் மறுமுனை வரையிலோ உள்ள மக்களினத்தாரின் சில தெய்வங்களைப்பற்றி உன்னிடம் கூறலாம்.
8.     நீ அவனுக்கு இணங்கவோ, செவிகொடுக்கவோ, இரக்கம் காட்டவோ வேண்டாம். அவனைத் தப்பவிடவோ ஒளித்துவைக்கவோ வேண்டாம்.
9.     மாறாக நீ அவனைக் கொல்வாய். முதலில் உன் கையும், பின்னர் மக்கள் அனைவரின் கைகளும் அவனைக் கொல்வதற்காக அவன்மீது படட்டும்.
10.     அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளிக் கொணர்ந்த உன் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து உன்னை விலக்கிவிட அவன் முயற்சி செய்த காரணத்தால் நீ அவனைக் கல்லால் எறிந்து கொல்வாய்.
11.     இஸ்ரயேல் முழுவதும் இதைக் கேட்டு அஞ்சட்டும். அதனிடையே இதுபோன்ற தீயசெயல்கள் இனி ஒருபோதும் நடவாதிருக்கட்டும்.
12.     நீங்கள் குடியேறும்படி உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கும் நகர் ஒன்றினுள்
13.     சில கயவர் வந்த அந்நகரின் மக்களில் சிலரிடம், வாருங்கள் வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் புரிவோம் என்று கூறிச் சிலரைத் தவறான வழியில் இட்டுச் சென்றதாக நீங்கள் கேள்விப்படலாம். அவற்றை நீங்கள் அறியீர்கள்.
14.     நீங்கள் நன்றாக விசாரித்து, ஆராய்ந்து, கவனமுடன் கேட்டுத் தெளிந்தபின், உண்மையாகவும் உறுதியாகவும் உங்களிடையே இத்தகைய அருவருக்கத்தக்க செயல் நடந்தது என்று அறிய வரலாம்.
15.     அப்பொழுது நீங்கள் அந்த நகரின் மக்களைக் கருக்கு வாய்ந்த வாளால் வெட்டுங்கள். அந்நகரிலுள்ள எல்லோரையும் கால்நடைகளையும் வாளுக்கு இரையாக்குங்கள். அதை முற்றிலும் அழித்துவிடுங்கள்.
16.     அந்நகரில் உள்ள பொருள்களை எல்லாம் அதன் நாற்சந்தியில் ஒன்று சேர்த்து நகரையும் பொருள்களையும் தீயால் சுட்டெரித்து உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எரிபலி ஆக்குங்கள். அந்நகர் ஒரு மேடாக என்றும் இருக்கும். அது மீண்டும் கட்டி எழுப்பப்படாது.
17.     அழிவுக்குரிய அப்பொருள் எதையும் உங்கள் கைதொட வேண்டாம். அதனால் ஆண்டவர் தமது கடுஞ்சினத்திலிருந்து மனம்மாறி, பேரிரக்கம் காட்டுவார். உங்கள் மூதாதையருக்கு அவர் வாக்களித்தபடி உங்களைப் பலுகச் செய்வார்.
18.     நீங்களோ உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் அனைத்துக் கட்டளைகளையும் நான் இன்று உங்களுக்கு விதித்தபடி கடைப்பிடியுங்கள். அவர் பார்வையில் நேரியதைச் செய்யுங்கள்!

அதிகாரம் 14.     .


1.     நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் மக்கள். எனவே, இறந்தவருக்காக உங்கள் உடலைச் சிதைத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் தலைமுடியை மழித்துக்கொள்ளவும் வேண்டாம்.
2.     ஏனெனில், நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம். மண்ணுலகின்மீது உள்ள எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் தனிச்சொத்தாக ஆண்டவர் தேர்ந்துகொண்டார்.
3.     தீட்டான எதையும் உண்ணவேண்டாம்.
4.     நீங்கள் உண்ணத்தகும் விலங்குகள் இவையே: மாடு, செம்மறியாடு,
5.     வெள்ளாடு, கலைமான், காட்டுமான், கவரிமான், காட்டு வெள்ளாடு, கொம்புமான், காட்டெருது, காட்டுச் செம்மறி ஆகியன.
6.     மேலும், விரிகுளம்பு உள்ள விலங்குகளில் குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருப்பதும் அசை போடுவதுமான விலங்குகளை உண்ணலாம்.
7.     ஆயினும், அசைபோடுவனவற்றிலும், விரிகுளம்பு உள்ளவைகளிலும், ஒட்டகம், முயல், குழி முயல் போன்றவற்றை உண்ண வேண்டாம். ஏனெனில், அவை அசை போடுகின்றன. ஆனால், அவற்றுக்கு விரிகுளம்பு இல்லை. அவை உங்களுக்குத் தீட்டானவை.
8.     பன்றி விரிகுளம்பு உள்ளதாயினும், அசைபோடுவதில்லை: அதுவும் உங்களுக்குத் தீட்டானது. இவற்றின் இறைச்சியை உண்ணவும் வேண்டாம்: இவற்றின் இறந்த உடலைத் தொடவும் வேண்டாம்.
9.     நீர்வாழ்வன அனைத்திலும் சிறகும் செதிலும் உள்ளவற்றை நீங்கள் உண்ணலாம்.
10.     சிறகும் செதிலும் அற்ற எதையும் உண்ணலாகாது. அவை உங்களுக்குத் தீட்டானவை.
11.     தீட்டற்ற எல்லாப் பறவைகளையும் நீங்கள் உண்ணலாம்.
12.     ஆனால் பறவைகளில் பின்வருவனவற்றை நீங்கள் உண்ணலாகாது:
13.     கழுகு, கருடன், பைரி, வல்லூறு, எல்லாவிதப் பருந்துகள்,
14.     எல்லாவிதக் காகங்கள்,
15.     நெருப்புக் கோழிகள், கூகைகள், செம்புகங்கள், எல்லாவிதமான வேட்டைப் பருந்துகள்,
16.     ஆந்தை, கோட்டான், நாரை
17.     மீன்கொத்தி, நீர்க்காகங்கள், நீர்க்கோழி,
18.     கொக்கு மற்றும் எல்லாவித வல்லூறு, புழுக்கொத்தி, வெளவால் ஆகியன.
19.     மேலும், பறப்பனவற்றில் பூச்சிகள் யாவும் உங்களுக்குத் தீட்டானவை. அவற்றை உண்ண வேண்டாம்.
20.     தீட்டற்ற பறவைகள் அனைத்தையும் நீங்கள் உண்ணலாம்.
21.     தானாய் இறந்துபோன எதையும் உண்ண வேண்டாம். ஆனால், அதை உன்வீட்டிலிருக்கும் அன்னியனுக்கு உண்ணும்படி நீ கொடுக்கலாம், அல்லது வேற்றினத்தானுக்கு விற்கலாம். ஏனெனில் நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம். வெள்ளாட்டுக் குட்டியை அதன் தாய்ப்பாலில் சமைக்க வேண்டாம்.
22.     ஆண்டுதோறும் உன் நிலத்தில் விளையும் எல்லாப் பலன்களிலும் பத்திலொரு பாகத்தைப் பிரித்தெடு.
23.     தம்பெயர் விளங்கும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்துகொண்ட இடத்தில், உன் தானியங்களிலும், உன் திராட்சை இரசத்திலும், எண்ணெயிலும் பத்திலொரு பாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுக்களையும் அவரது திருமுன் உண்பாய். அதனால் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு என்றும் அஞ்சி நடக்கக் கற்றுக் கொள்வாய்.
24.     கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசியளிக்கும் போது, அவர் தம் பெயர் விளங்கும்படி தேர்ந்து கொண்ட இடம் உனக்கு வெகு தொலையில் இருந்தால், நெடும் பயணம் செய்யவேண்டியதாயும், உன் பொருள்களைத் தூக்கிச் செல்ல முடியாததாயும் இருந்தால்,
25.     நீ அதை விற்று, பணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்திற்குச் செல்.
26.     அங்கே உன் விருப்பம் போல் மாடு, ஆடு, திராட்சை இரசம், அல்லது மது ஆகியவற்றையும் உன் நெஞ்சம் விரும்பும் எதையும் அந்தப் பணத்திற்கு வாங்கி, நீயும் உன் வீட்டாரும் உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் உண்டு மகிழ்வீர்களாக!
27.     நகரில் குடியிருக்கும் லேவியனுக்கு உன்னோடு பங்கும் சொத்துரிமையும் இல்லாததால், அவனைக் கைவிட்டு விடாதே.
28.     மூன்றாம் ஆண்டின் இறுதியில் அவ்வாண்டில் விளைகின்ற எல்லாப் பலன்களிலும் பத்திலொரு பாகத்தைப் பிரித்து, உனது நகரின் வாயிலருகே வை.
29.     உன்னோடு பங்கும் சொத்துரிமையும் இல்லாத லேவியரும், உன் நகரில் வாழும் அன்னியரும், அனாதைகளும், கைம்பெண்களும் உண்டு நிறைவு கொள்வர். அப்போது அனைத்துச் செயல்களிலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார்.

அதிகாரம் 15.     .


1.     ஏழாம் ஆண்டின் முடிவில் நீ விடுதலை அளிப்பாய்.
2.     விடுதலையின் விவரம் இதுவே: ஒருவன் தனக்கு அடுத்திருப்பவனுக்குக் கொடுத்த கடனிலிருந்து அவனை விடுதலை செய்யட்டும். அது ஆண்டவருக்கெனக் குறிக்கப்பட்ட விடுதலை ஆண்டாகையால், தனக்கு அடுத்திருப்பவனுக்கோ தன் சகோதரனுக்கோ கொடுத்த கடனைத் தண்டல் செய்ய வேண்டாம்.
3.     வேற்றினத்தானின் கடனை நீ தண்டலாம். ஆனால், உன் சகோதரன் பட்ட கடனிலிருந்து விடுதலை கொடு.
4.     உன்னிடம் வறியவர் இல்லாதிருக்கட்டும். அப்பொழுது நீ உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டில் உன்னை ஆசியால் நிரப்புவார்.
5.     நான் இன்று உனக்குக் கட்டளையிடும் எல்லாக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்து, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடு.
6.     அப்பொழுது உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குத் தந்த வாக்குறுதியின்படி உனக்கு ஆசி வழங்குவார். நீ பல இனத்தாருக்கும் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்க மாட்டாய். நீ பல இனத்தாரையும் ஆளுவாய். உன்னையோ எவனும் ஆள மாட்டான்.
7.     கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டிலுள்ள எந்த நகரிலாவது உன் சகோதரன் ஒருவன் வறியவனாய் இருந்தால், உன் வறிய சகோதரன் மட்டில் உன் உள்ளத்தைக் கடினப்படுத்தாதே, உன் கையை மூடிக்கொள்ளாதே.
8.     மாறாக, அவனுக்கு உன் கரங்களைத் தாராளமாகத் திறந்து, அவன் தேவைக்கு ஏற்ப, எவ்வளவு தேவையானாலும், கடன் கொடு.
9.     விடுதலை ஆண்டாகிய ஏழாம் ஆண்டு அண்மையில் உள்ளதே என்று ஏங்குமாறு உன் உள்ளத்தில் நெறி கெட்ட சிந்தனைகள் எழாதபடி எச்சரிக்கையாய் இரு. ஏனெனில் உன் வறிய சகோதரனை எரிச்சலுடன் நோக்கி, அவனுக்கு எதுவும் தரவில்லையெனில், உனக்கு எதிராக அவன் ஆண்டவரிடம் முறையிடுவான். அது உன்னைக் குற்றத்திற்கு உள்ளாக்கும்.
10.     நீ அவனுக்குத் தாராளமாய்க் கொடு. அவனுக்குக் கொடுக்கும்போது உள்ளத்தில் பொருமாதே. அப்போது, நீ செய்யும் அனைத்துச் செயல்களிலும், மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளிலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார்.
11.     உனது நாட்டில் ஏழைகள் என்றும் இருப்பர். எனவே நான் உனக்குக்கட்டளையிட்டுச் சொல்கிறேன்: உன் சகோதரனுக்கும், உன் நாட்டிலுள்ள வறியவர்க்கும், தேவையுள்ளோர்க்கும் உன் கையைத் தாராளமாய்த் திற.
12.     இனத்து ஓர் எபிரேயனோ ஓர் எபிரேயளோ உன்னிடம் அடிமையாய் விலைப்பட்டிருந்தால் ஆறு ஆண்டுகள் அவர்கள் உனக்குப் பணிபுரியட்டும். ஏழாம் ஆண்டில் உன்னிடமிருந்து விடுதலை கொடுத்து அவர்களை அனுப்பி விடு.
13.     உன்னிடமிருந்து விடுதலை கொடுத்து அவர்களை அனுப்பும்போது, வெறுங்கையராய் அனுப்பாதே.
14.     கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கியுள்ளபடி, உன் ஆட்டுமந்தையிலும், உன்களத்திலும், உன் திராட்சை ஆலையிலுமிருந்து தாராளமாக அவனுக்குக் கொடுத்து அனுப்பு.
15.     எகிப்து நாட்டில் நீ அடிமையாக இருந்தாய் என்பதையும் உன் கடவுளாகிய ஆண்டவரே உன்னை மீட்டார் என்பதையும் நினைவில் கொள். எனவே நான் உனக்கு இதைக் கட்டளையிடுகிறேன்.
16.     ஆனால், அவன் உன்மீதும் உன் வீட்டார் மீதும் அன்பு கூர்வதாலும், உன்னிடம் தங்குவது அவனுக்கு நலமென்று தோன்றுவதாலும், உம்மைவிட்டுப் போகமாட்டேன் என்று உன்னிடம் கூறுவானாகில்,
17.     நீ ஒரு குத்தூசியால் அவன் காதைக் கதவோடு சேர்த்துக் குத்துவாய். அதன்பின் அவன் என்றென்றும் உன் அடிமையாய் இருப்பான். உன் அடிமைப் பெண்ணுக்கும் அவ்வாறே செய்.
18.     நீ அவனுக்கு விடுதலை கொடுத்து அனுப்பிவிடுவது உனக்கு வருத்தம் தரலாகாது. ஏனெனில், அவன் ஒரு வேலையாளின் பாதிக்கூலிக்கு ஆறு ஆண்டுகள் உனக்குப் பணி செய்திருப்பான். மேலும் உன் கடவுளாகிய ஆண்டவர், நீ மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளிலும், உனக்கு ஆசி வழங்குவார்.
19.     ஆடு மாடுகளின் ஆண் தலையீற்றுகளை உன் கடவுளாகிய ஆண்டவருக்கென ஒப்புக்கொடு. உன் மாட்டின் தலையீற்றிடம் வேலை வாங்காதே: உன் ஆட்டின் தலையீற்றின் உரோமத்தை கத்தரியாதே.
20.     கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொள்ளுமிடத்தில், நீயும் உன் வீட்டாரும், ஆண்டுதோறும் அவர்தம் திருமுன் அவற்றை உண்பீர்கள்.
21.     அவை ஏதாகிலும் குறை உள்ளனவாய் இருப்பின்-முடம், குருடு அல்லது வேறு எந்த ஊனமும் இருப்பின் அவற்றை உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலியிடாதே.
22.     அவற்றை உன் நகர எல்லைக்குள் உண்பாயாக. கலைமானையும் கவரிமானையும் உண்பது போல் உண்ணலாம். தீட்டுள்ளவனும் தீட்டற்றவனும் உண்ணலாம்.
23.     அதன் இரத்தத்தையோ உண்ண வேண்டாம். தண்ணீரைப் போல் அதைத் தரையில் ஊற்றிவிடு.

அதிகாரம் 16.     .


1.     ஆபீபு மாதத்தை நினைவில்கொண்டு, உன் கடவுளாகிய ஆண்டவருக்கெனப் பாஸ்காவைக் கொண்டாடு. ஏனெனில் ஆபீபு மாதத்தில்தான், ஓர் இரவில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்தார்.
2.     தம் பெயர் விளங்கும் பொருட்டு ஆண்டவர் தெரிந்து கொள்ளும் இடத்தில், உன் ஆடுமாடுகளிலிருந்து உன் ஆண்டவராகிய கடவுளுக்குப் பாஸ்காப் பலிசெலுத்து.
3.     அதனுடன் புளிப்புள்ள அப்பத்தை உண்ணாதே. எகிப்து நாட்டிலிருந்து நீ வெளியேறிய நாளை உன் வாழ்நாளெல்லாம் நினைவுகூரும் வண்ணம், ஏழு நாள்கள் அவற்றைப் புளிப்பற்ற அப்பத்தோடு உண்பாய். அது துயரத்தின் அப்பம். ஏனெனில் நீ எகிப்து நாட்டிலிருந்து அவசரமாய்ப் புறப்பட்டு வந்தாய்.
4.     எல்லைக்குள் எங்கும் ஏழு நாள்களுக்குப் புளிப்புள்ள அப்பம் இருத்தலாகாது. நீ முதல் நாள் மாலையில் செலுத்தும் பலியின் இறைச்சி எதுவும் இரவு முழுவதும் காலை வரையிலும் இருத்தலாகாது.
5.     கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கப்போகும் எந்த நகருக்குள்ளும் நீ பாஸ்காப் பலியைச் செலுத்தவேண்டாம்.
6.     ஆனால் அவர்தம் பெயர் அதில் நிலைக்கும்படி, உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில், நீ பாஸ்காப்பலியைச் செலுத்து, கதிரவன் மறையும் மாலை வேளையில், நீ எகிப்திலிருந்து புறப்பட்ட அந்த நேரத்தில், பலி செலுத்து.
7.     கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் அதை நெருப்பில் வாட்டி உண்பாய். விடியற் காலையில் உன் கூடாரத்திற்குத் திரும்பிச் செல்வாய்.
8.     ஆறு நாள்களுக்கு நீ புளிப்பற்ற அப்பத்தை உண்பாய். ஏழாம் நாள் உன் கடவுளாகிய ஆண்டவருக்காகத் திருப்பேரவை கூடும். அன்று நீ வேலை ஏதும் செய்யாதே.
9.     நீ ஏழு வாரங்களை எண்ணிக்கொள். விளைந்து நிற்கும் கதிரில் கதிரரிவாளை முதலில் வைத்தநாள் தொடங்கி ஏழு வாரங்களைக் கணக்கிடு.
10.     அதன்பின், உன் கடவுளாகிய ஆண்டவருக்கென வாரங்களின் விழாவைக் கொண்டாடு. அவர் உனக்கு ஆசி வழங்குவதற்கேற்ப, உன் கைகளால் அவருக்குத் தன்னார்வக் காணிக்கைகளைச் செலுத்து.
11.     கடவுளாகிய ஆண்டவர் தம்பெயர் விளங்குமாறு தெரிந்தெடுக்கும் இடத்தில், நீயும், உன் புதல்வர் புதல்வியரும், உன் ஆண் ஊழியர்களும் பெண் ஊழியர்களும், உன் நகரில் உள்ள லேவியனும் அன்னியனும் அனாதைகளும், கைம்பெண்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் மகிழ்வீர்களாக.
12.     நீ எகிப்தில் அடிமையாய் இருந்தாய் என்பதை நினைவிலிருத்தி, இந்த முறைமைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு.
13.     களத்தின் பலனையும் ஆலையின் பலனையும் சேகரித்தபின், கூடார விழாவை ஏழு நாள்கள் கொண்டாடுவாய்.
14.     நீயும், உன் புதல்வர் புதல்வியரும், உன் அடிமைகளும், உன் அடிமைப் பெண்களும், உன் நகரில் உள்ள லேவியனும், அன்னியனும், அனாதைகளும், கைம்பெண்களும் இவ்விழாவில் மகிழுங்கள்.
15.     ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு ஏழு நாள்கள் விழாக் கொண்டாடு. ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நிலத்தின் விளைச்சல்களுக்கும் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்குவார். அப்பொழுது நீ நிறைவாக மகிழ்ச்சியுறுவாய்.
16.     ஆண்டில் மூன்று முறை உன் ஆண்மக்கள் அனைவரும் உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் அவர் திருமுன் வரவேண்டும், வாரங்கள் விழாவிலும், கூடார விழாவிலும் வரவேண்டும். புளிப்பற்ற அப்ப விழாவிலும், வாரங்கள் விழாவிலும், கூடார விழாவிலும் வரவேண்டும். ஆண்டவர் திருமுன் அவர்கள் வெறுங்கையராய் வரவேண்டாம்.
17.     கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கியுள்ளதற்கேற்ப, ஒவ்வொருவனும் தன்னால் ஆனதைக் கொண்டு வருவானாக!
18.     உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் குலங்களுக்கெனக் கொடுக்கும் எல்லா நகர்களிலும் நீதிபதிகளையும் தலைவர்களையும் நியமனம் செய்வாய். அவர்கள் நீதியுடனும் நேர்மையுடனும் மக்களுக்குத் தீர்ப்பு வழங்கட்டும்.
19.     நீதியைத் திரித்துவிடாதே. ஒருதலைச்சார்பாகச் செயல்படாதே. கையூட்டு வாங்காதே. ஏனெனில், கையூட்டு ஞானிகளின் கண்களைக் குருடாக்கும், நேர்மையாளரின் வழக்கைப் புரட்டிவிடும்.
20.     நீதியை, ஆம், நீதியை மட்டுமே நிலைநிறுத்து. அதனால் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை உடைமையாக்கிக் கொள்வாய்.
21.     கடவுளாகிய ஆண்டவருக்கு நீ எழுப்பவிருக்கும் பீடத்தின் அருகில் அசேராக் கம்பங்களை ஊன்ற வேண்டாம்.
22.     சிலைத் தூண்களையும் நிறுத்தாதே. ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் அவற்றை வெறுக்கிறார்.

அதிகாரம் 17.     .


1.     ஊனமோ வேறு எந்தக் குறையோ உள்ள மாட்டையாவது ஆட்டையாவது உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலி செலுத்த வேண்டாம். ஏனெனில், அதை உன் கடவுளாகிய ஆண்டவர் வெறுக்கிறார்.
2.     கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கிற நகர்கள் ஒன்றில், ஓர் ஆண் அல்லது பெண், உன் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கையை மீறி, அவருக்கு எதிராகக் குற்றம் செய்வதாக உனக்குத் தெரிந்தால்,
3.     நான் கட்டளையிட்டதற்கு எதிராக, வேற்றுத் தெய்வங்கள் அல்லது நிலா, கதிரவன் அல்லது வேறு யாதொரு வான் கோளங்களைப் பின்சென்று, பணிந்து வணங்கினால்
4.     அது பற்றி உனக்குச் சொல்லப்படும் போது அல்லது நீ கேள்விப்படும் போது அதை நீ நன்கு விசாரி. அது உண்மை எனவும் அத்தகைய அருவருப்பான செயல் இஸ்ரயேலில் நடந்தது உறுதி எனவும் நீ கண்டால்,
5.     அக்குற்றத்தைச் செய்த ஆணையோ பெண்ணையோ உன் நகர வாயிலுக்குக் கூட்டிச் சென்று அவனை அல்லது அவளைக் கல்லால் எறிந்து கொல்.
6.     இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தை முன்னிட்டே, குற்றவாளி கொலை செய்யப்பட வேண்டும். ஒரே சாட்சியின் வாக்குமூலத்தை முன்னிட்டு எவரும் கொலை செய்யப்படலாகாது.
7.     முதலில் சாட்சிகளின் கைகளும் பின்னர் எல்லா மக்களின் கைகளும் கொல்லப்பட வேண்டியவனுக்கு எதிராக ஓங்கட்டும். இவ்வாறு உன்நடுவிலிருந்து தீமையை அகற்றுவாய்.
8.     இரத்தப் பழிகளைக் குறித்தோ, உரிமை வழக்குகளைக் குறித்தோ, தடியடியைக் குறித்தோ தீர்ப்புக் கூறுவது கடினமாய் இருந்தால் அல்லது உன் நகரிலுள்ள வேறு எந்த வழக்கும் சிக்கலானதாக இருந்தால், நீ எழுந்து உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொள்ளும் இடத்திற்குச் செல்.
9.     அங்கு, லேவியரான குருக்களிடத்திலும் அன்றைய நாளின் நீதிபதிகளிடமும் அறிவுரை கேள். நியாயத் தீர்ப்பை அவர்கள் உனக்குத் தெரிவிப்பார்கள்.
10.     ஆண்டவர் தேர்ந்துகொள்ளும் இடத்திலிருந்து அவர்கள் உனக்குத் தெரிவிப்பதன்படி நட. அவர்கள் கற்பித்தபடி எல்லாம் செயல்படுவதில் கருத்தாயிரு.
11.     அவர்கள் உனக்குக் கற்பித்த சட்டங்களின்படியும், அவர்கள் உனக்குத் தெரிவித்த தீர்ப்பின்படியும் செயல்படு. அவர்கள் உனக்குத் தெரிவித்த தீர்ப்பினின்று இடமோ வலமோ பிறழாதே.
12.     கடவுளாகிய ஆண்டவருக்கு ஊழியம் புரிய அங்கே நிற்கும் குருக்களுக்கோ நீதிபதிகளுக்கோ செவிகொடாமல் செருக்குடன் செயல்படுகிறவன் சாகவேண்டும். இவ்வாறு இஸ்ரயேலிலிருந்து தீமையை அகற்றுவாய்.
13.     எல்லா மக்களும் அதைக் கேட்டு, அஞ்சுவர்: எவரும் செருக்குடன் செயல்படார்.
14.     கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கப்போகும் நாட்டுக்குள் சென்று அதை உடைமையாக்கி அதில் குடியேறியபின், என்னைச் சுற்றிலுமுள்ள எல்லா வேற்றினத்தாரையும் போல, நானும் எனக்கு ஓர் அரசனை ஏற்படுத்துவேன் என்று நீ சொல்வாய்.
15.     அப்போது உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் ஒருவனையே உன் அரசனாக ஏற்படுத்துவாய். உன் இனத்தான் ஒருவனையே உன் அரசனாக்குவாய். உன் இனத்தான் அல்லாத அன்னியன் ஒருவனை உனக்கு அரசனாக நியமிக்காதே.
16.     அவன் தனக்கெனக் குதிரைகளை மிகுதியாக்கிக் கொள்ளாமலும், குதிரைகளை மிகுதியாக்கிக்கொள்ளும் பொருட்டு மக்களை மீண்டும் எகிப்துக்குப் போகச் சொல்லாமலும் இருக்கட்டும். ஏனெனில், இனி அந்த வழியாகத் திரும்பவும் செல்லக்கூடாதென ஆண்டவர் உங்களுக்குச் சொல்லியுள்ளார்.
17.     அவன் இதயம் ஆண்டவரைவிட்டு விலகாதிருக்க வேண்டுமானால், பல மனைவியரைக் கொள்ளலாகாது: வெள்ளியும் பொன்னும் அளவுமீறிச் சேர்க்கலாகாது.
18.     அவன் தன் அரசுக் கட்டிலில் அமர்ந்தபின், லேவியராகிய குருக்கள் பொறுப்பிலுள்ள இச்சட்ட நூலின் நகல் ஒன்றைத் தனக்கென ஓர் ஏட்டில் எழுதிக் கொள்ளட்டும்.
19.     அதைத் தன்னோடு வைத்துக்கொள்ளட்டும். அதை நாள்தோறும் அவன் வாழ்நாள் முழுவதும் வாசிக்கட்டும். அதனால், அந்தச் சட்டத்தின் எல்லா வார்த்தைகளையும், அதன் நீதிமுறைகளையும் நிறைவேற்றுதவன் மூலம் அவன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நடக்கக் கற்றுக் கொள்வான்.
20.     அதனால், அவன் இதயத்தில் இறுமாப்புக்கொண்டு, தன் சகோதரருக்கு மேல் தன்னை உயர்த்திக் கொள்ளாமலும், கட்டளைகளிலிருந்து வலமோ இடமோ பிறழாமலும் இருப்பான் . அப்போது அவனும் அவன் புதல்வர்களும் இஸ்ரயேலில் நெடுநாள் ஆட்சி புரிவர்.

அதிகாரம் 18.     .


1.     லேவிய குருக்களுக்கும் அனைத்து லேவிய குலத்தாருக்கும் இஸ்ரயேல் மக்களிடையே பங்கும் சொத்துரிமையும் இல்லை. ஆண்டவருக்கெனச் செலுத்தப்படும் எரிபலிகளையும் அவருக்கே உரியவைகளையும் அவர்கள் உண்பார்கள்.
2.     அவர்கள் சகோதரர்கள் நடுவே அவர்களுக்கு உரிமைச்சொத்து இல்லாதிருக்கட்டும். ஆண்டவர் அவர்களுக்கு வாக்களித்தபடி அவரே அவர்களின் உரிமைச் சொத்து.
3.     மக்களிடமிருந்து குருக்களுக்குச் சேரவேண்டிய உரிமம் ஆவது: பலியிட வருவோர் பலியிடப்படும் ஆடு, மாடு இவற்றின் முன்னந்தொடை, தாடைகள், இரைப்பை ஆகியவற்றைக் குருவுக்குக் கொடுக்க வேண்டும்.
4.     தானியம், திராட்சை இரசம், எண்ணெய் இவற்றின் முதற்பலனையும், கத்தரித்த ஆட்டு மயிரின் முதற்பங்கையும் அவனுக்குக் கொடுக்க வேண்டும்.
5.     ஏனெனில், அவனும் அவன் புதல்வர்களும் உன் கடவுளாகிய ஆண்டவர் பெயரால் அவர் முன்னிலையில் என்றென்றும் ஊழியம் செய்யும்படி அவர் அவனை உங்களது குலங்கள் அனைத்திலிருந்தும் தேர்ந்து கொண்டார்.
6.     இஸ்ரயேலில் பரவியுள்ள யாதொரு நகரில் வாழும் ஒரு லேவியன் அங்கிருந்து புறப்பட்டு ஆண்டவர் தேர்ந்துகொள்ளும் இடத்திற்கு விரும்பி வந்தால்,
7.     அங்கே ஆண்டவரின் முன்னிலையில் ஊழியம் செய்யும் லேவியராகிய தன் சகோதரரைப் போல, அவனும் கடவுளாகிய ஆண்டவர் பெயரால் ஊழியம் செய்வான்.
8.     அவன் தன் தந்தைவழிச் சொத்தில் வரவேண்டியதை அனுபவிப்பதுமின்றி, தன் ஊழியத்திற்கான பங்கையும் உணவுக்காகப் பெற்றுக்கொள்ளட்டும்.
9.     கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டுக்குள் போனபின், அந்த வேற்றினத்தாரின் அருவருப்பான செயல்களைக் கற்றுக் கொள்ளாதே.
10.     தன் புதல்வனை அல்லது புதல்வியைத் தீ மிதிக்கச் செய்கிறவனும், குறி சொல்கிறவனும், நாள் பார்க்கிறவனும், சகுனங்களை நம்புகிறவனும், சூனியக்காரனும்,
11.     மந்திரவாதியும், ஏவிவிடுகிறவனும், மாயவித்தைக்காரனும், இறந்தவர்களிடம் குறிகேட்கிறவனும் உங்களிடையே இருத்தலாகாது.
12.     ஏனெனில், இவற்றையெல்லாம் செய்கிறவன் ஆண்டவருக்கு அருவருப்பானவன். இப்படிப்பட்ட அருவருப்பான செயல்களின் நிமித்தம், உன் கடவுளாகிய ஆண்டவர் உன் முன்னிலையினின்று அவனைத் துரத்திவிடுவார்.
13.     கடவுளாகிய ஆண்டவருக்கு நீ முற்றிலும் உண்மையாய் இரு.
14.     ஏனெனில், நீ துரத்திவிடவிருக்கும் இந்த வேற்றினத்தார் குறிசொல்லுகிறவர்களுக்கும், நாள் பார்க்கிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள். அவ்வாறு செயல்பட உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை அனுமதிக்கவில்லை.
15.     கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப்போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு.
16.     ஓரேபில் திருப்பேரவை கூடிய நாளில், நீ உன் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடி, நான் இறந்து போகாதபடி, என் கடவுளாகிய ஆண்டவரின் குரலொலியை இனி நான் கேட்காமலும் இப்பெரும் நெருப்பை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று விண்ணப்பித்தபோது,
17.     ஆண்டவர் என்னைநோக்கி, அவர்கள் சொன்னதெல்லாம் சரி என்றார்.
18.     உன்னைப்போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான்.
19.     என்பெயரால் அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பான்.
20.     ஆனால், ஓர் இறைவாக்கினன் எனது பெயரால் பேசுவதாக எண்ணிக்கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால், அல்லது வேற்றுத் தெய்வங்களின் பெயரால் பேசினால், அந்த இறைவாக்கினன் சாவான்.
21.     ஆண்டவர் சொல்லாத வார்த்தை இன்னதென்று எப்படி நான் அறிவது? என்று நீ உன் மனத்தில் எண்ணலாம்.
22.     ஓர் இறைவாக்கினன் ஆண்டவரின் பெயரால் உரைப்பது நடைபெறாமலும் நிறைவேறாமலும் போனால், அந்த இறைவாக்கினன் தன் எண்ணப்படியே பேசுபவன். அவனுக்கு நீ அஞ்ச வேண்டியதில்லை.

அதிகாரம் 19.     .


1.     கடவுளாகிய ஆண்டவர் வேற்றினத்தாரை வேரறுத்து, அவர்களின் நாடுகளை உனக்குக் கொடுப்பார். நீ அவற்றை உடைமையாக்கி, அவர்களது நகர்களிலும் வீடுகளிலும் குடியேறுவாய்.
2.     நீ உடைமையாக்கிக்கொள்ளும்படி, உன் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கவிருக்கும் நாட்டினிடையே மூன்று நகர்களை உனக்கென ஒதுக்கி வை.
3.     கொலை செய்தவன் எவனும் அங்கே தப்பி ஓடம்படி சாலைகளை அமை. இவ்வாறு, உன் உரிமைச் சொத்தாகுமாறு கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை மூன்று பாகங்களாகப் பிரி.
4.     அங்கே ஓடிப்போவதன் மூலம் உயிர் வாழத்தக்க கொலையாளி யாரெனில், தற்செயலாய் முன்பகை ஏதுமின்றித் தனக்கு அடுத்திருப்பவனைக் கொலைசெய்பவனே.
5.     சான்றாக: ஒருவன் மரம் வெட்டுவதற்காகத் தனக்கு அடுத்திருப்பவனோடு காட்டுக்குள் செல்கிறான். மரத்தை வெட்டுவதற்காகக் கோடரியைத் தன் கையால் ஓங்கும்போது, கோடரியின் இரும்பு கைப்பிடியினின்று கழன்று அடுத்திருப்பவன் மீது விழ அவன் இறந்து போகிறான். அப்போது அப்படிப்பட்டவன் இந்நகர்கள் ஒன்றினுக்குள் தப்பியோடி அங்கே வாழலாம்.
6.     இல்லையெனில் கொலை செய்யப்பட்டவனின் முறை உறவினன், கோப வெறியால் பழிவாங்கும்படி கொலையாளியைப் பின்தொடரும் போது, செல்லும் வழி நீண்டதாக இருந்தால் அவனைப் பிடித்துக் கொன்றுவிட ஏதுவாகும். ஆனால், கொலை செய்யப்பட்டவன் மீது கொலையாளிக்கு முன்பகை இல்லாததால் அவன் சாவுக்குரிய குற்றம் ஏதும் செய்யவில்லை என்பது உண்மை.
7.     எனவேதான் நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்: மூன்று நகர்களை உனக்கென ஒதுக்கி வை.
8.     நான் இன்று உனக்குக் கட்டளையிடும் எல்லாக் கட்டளைகளையும் நிறைவேற்றுவதில் நீ கருத்தாய் இருந்து, உன் கடவுளாகிய ஆண்டவர்மேல் அன்புகூர்ந்து, அவரது வழிகளில் என்றும் நடந்தால்,
9.     உன் கடவுளாகிய ஆண்டவர் உன் மூதாதையருக்கு வாக்களித்தபடி, உனக்கு இந்த நாடுகள் அனைத்தையும் கொடுத்து, உன் எல்லைகளை விரிவாக்குவார். அப்போது இன்னும் மூன்று நகர்களை இந்த நகர்களோடு சேர்த்துக்கொள்.
10.     இல்லையெனில், நீ உரிமையாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கவிருக்கும் நாட்டில், குற்றமில்லாதவனின் இரத்தம் சிந்தப்படுவதால், உன் மேல் இரத்தப்பழி வரலாம்.
11.     ஆனால், ஒருவன் தனக்கு அடுத்திருப்பவனைப் பகைத்து, அவனுக்காகப் பதுங்கியிருந்து, அவனைத் தாக்கி, அவனை வெட்டிச் சாகடித்தபின், இந்த நகர்கள் ஒன்றினுக்குள் ஓடி ஒளிந்தால்,
12.     அவனது நகர்ப் பெரியோர்கள் ஆளனுப்பி, அங்கிருந்து அவனைக் கொண்டுவந்து கொலை செய்யப்பட்டவனின் முறை உறவினனின் கையில் அவனை ஒப்படைப்பர்.
13.     நீ அவனுக்கு இரக்கம் காட்டாதே. குற்றமில்லாதவனின் இரத்தப்பழியை இஸ்ரயேலில் இருந்து துடைத்துவிடு. அப்போது உனக்கு நலமாகும்!
14.     நீ உடைமையாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கவிருக்கும் உன் உரிமைச் சொத்தாகிய நாட்டில் முன்னோர்கள் குறித்துள்ள உனக்கு அடுத்திருப்பவனின் எல்லைக் கல்லை நகர்த்தி வைக்காதே.
15.     ஒருவனது எந்தக் குற்றத்தையும் எந்தப் பழிபாவச்செயலையும் உறுதி செய்ய, ஒரே சாட்சியின் வாக்குமூலம் போதாது. இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தாலே அது உறுதிசெய்யப்பட வேண்டும்.
16.     ஒருவன்மேல் குற்றம் சுமத்தும்படி ஒரு பொய்ச்சாட்சி முன்வந்தால்,
17.     வழக்காடுகிற இருவரும் ஆண்டவரின் திருமுன் அன்றைய நாளில் ஊழியம் புரியும் குருக்களிடமும் நீதிபதிகளிடமும் வரட்டும்.
18.     நீதிபதிகள் தீர விசாரிப்பர். சான்று சொன்னவன் பொய்ச்சாட்சி என்றும், தன் சகோதரனை அநியாயமாகக் குற்றம் சாட்டியுள்ளான் என்றும் அறிந்தால்,
19.     அவன் தன் சகோதரனுக்குச் செய்ய நினைத்ததுபோலவே, அவனுக்குச் செய்யுங்கள். இவ்வாறு, உங்கள் நடுவிலிருந்து தீமையை அகற்றுங்கள்.
20.     அப்போது அதைக்கேட்டு மற்றவர்களும் அஞ்சுவர். அத்தகைய தீச்செயலை உங்களிடையே எவரும் செய்யத் துணியார்.
21.     நீ அவனுக்கு இரக்கம் காட்டாதே: உயிருக்கு உயிர்: கண்ணுக்குக் கண்: பல்லுக்குப் பல்: கைக்குக் கை: காலுக்குக் கால்!

அதிகாரம் 20.     .


1.     நீ உன் பகைவருக்கு எதிராகப் போருக்குப் போகையில், உன்னிடம் உள்ளதைவிட மிகுதியான குதிரைகளையும், தேர்களையும், பெரும் படையையும் நீ கண்டால், அவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஏனெனில், எகிப்திலிருந்து உன்னை வெளியே கூட்டிவந்த உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னோடு உள்ளார்.
2.     நீ போரிடத் தொடங்குமுன், குருக்கள் முன்வந்து வீரர்களிடம் கூற வேண்டியது:
3.     இஸ்ரயேலே கேள்! இன்று நீங்கள் உங்கள் பகைவர்களுக்கு எதிராகப் போர்புரிய முன்வந்துள்ளீர்கள். உங்கள் இதயம் சோர்ந்து போக வேண்டாம்: அஞ்ச வேண்டாம்: கலங்க வேண்டாம்: அவர்களைப் பார்த்துத் தத்தளிக்கவும் வேண்டாம்.
4.     ஏனெனில், உங்களுக்காக உங்கள் பகைவருக்கு எதிராகப் போர்புரியவும், உங்களைக் காப்பாற்றவும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரே உங்களோடு செல்கிறார்.
5.     அதன்பின், படைத்தலைவர்கள் வீரர்களிடம் கூறவேண்டியது: புது வீட்டைக் கட்டி, அதை அர்ப்பணம் செய்யாதவன் தன் வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும். அவன் போரில் இறக்க நேரிட்டால், வேறு ஒருவன் அதை அர்ப்பணம் செய்ய வேண்டியிருக்கும்.
6.     திராட்சைத் தோட்டம் அமைத்து அதன் பயனை அனுபவிக்காதவன் தன் வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும். அவன் போரில் இறக்க நேரிட்டால், வேறு ஒருவன் அதன் பயனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
7.     ஒரு பெண்ணை மண உறுதிப்பாடு செய்தும் அவளோடு கூடி வாழாதவன் தன் வீட்டிற்குத் திரும்பிப் போகட்டும். அவன் போரில் இறக்க நேரிட்டால் வேறு ஒருவன் அவளை மணக்க வேண்டியிருக்கும்.
8.     மீண்டும் படைத்தலைவர்கள் வீரர்களிடம் கூறவேண்டியது: உங்களில் அச்சமுற்று உள்ளம் சோர்ந்திருப்பவன் தன் வீட்டிற்குத் திரும்பிப் போகட்டும். இல்லையெனில், அவன் தோழனும் அவனைப்போல் ஊக்கம் இழந்து விடுவான்.
9.     இவ்வாறு படைத்தலைவர்கள் வீரர்களிடம் பேசி முடித்தபின், அவர்களை நடத்திச் செல்லும் படைத்தளபதிகளை நியமிக்கட்டும்.
10.     ஒரு நகரோடு போரிட நீ அதை நெருங்கும் போது, அது சரணடையுமாறு முயற்சி செய்.
11.     அது சரணடைந்து, தன் வாயில்களை உனக்குத் திறந்தால், அதிலுள்ள மக்கள் எல்லாரும் உனக்கு அடிமைகளாகி உனக்குப் பணிவிடை செய்வர்.
12.     அது உன்னிடம் சரணடையாது உனக்கு எதிராகப் போர் தொடுத்தால், நீ அதை முற்றுகையிடு.
13.     கடவுளாகிய ஆண்டவர் அதை உன்கையில் ஒப்படைக்கும்போது, அதிலுள்ள எல்லா ஆண்களையும் வாளால் கொன்றுவிடு.
14.     ஆனால், பெண்களையும் சிறுவர்களையும், ஆடு மாடுகளையும் நகரிலுள்ள அனைத்தையும் உன் கொள்ளைப் பொருளாகக் கொள். உன் கடவுளாகிய ஆண்டவர் எதிரியிடமிருந்து உனக்குக் கொடுத்துள்ள கொள்ளைப் பொருள்களை நீ அனுபவிக்கலாம்.
15.     இந்த நாடுகளைச் சாராத தொலையிலுள்ள எல்லா நகர்களுக்கும் அவ்வாறே செய்வாய்.
16.     ஆனால், இந்த மக்களின் நகர்களை உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்துள்ளதால், அதில் உயிர் வாழும் எதையும் கொல்லாபமல் விடாதே.
17.     இத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர் மற்றும் எபூசியர் அனைவரையும் உன் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டபடி அழித்தொழிப்பாய்.
18.     அதனால், தங்கள் தெய்வங்களுக்காகச் செய்கின்ற அருவருக்கத்தக்கவற்றை உனக்குக் கற்றுக்கொடுத்து, உன் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்ய உன்னைத் தூண்டமாட்டார்கள்.
19.     ஒரு நகருக்கு எதிராகப் போர் தொடுத்து நீ அதை நெடுநாள் முற்றுகையிட்டுக் கைப்பற்றினால், அதிலுள்ள மரங்களைக் கோடரியால் வெட்டி அழிக்காதே. நீங்கள் அவற்றின் பழங்களை உண்ணலாம். ஆனால் அவற்றை வெட்டலாகாது. வயல்வெளி மரங்கள் உன்னை முற்றுகையிட வரும் மனிதர் அல்லவே!
20.     உணவுக்கு உதவாத மரங்கள் என்று உனக்குத் தெரிபவற்றை மட்டும் வெட்டி அழிக்கலாம். உன்னோடு போர் புரியும் நகருக்கு எதிராக அதை வீழ்த்தும்வரை அவற்றைக் கொண்டு முற்றுகைக் கொத்தளங்களை எழுப்பலாம்.

அதிகாரம் 21.     .


1.     நீ உடைமையாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் கொடுத்த மண்ணில் திறந்த வெளியில் ஒருவன் கொலையுண்டு கிடக்க, அவனைக் கொலைசெய்தவன் யாரென்று தெரியாதிருந்தால்,
2.     தலைவர்களும் நீதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலையுண்டு கிடப்பவனைச் சுற்றிலுமுள்ள நகர்களுக்கு உள்ள தொலைவு எவ்வளவு என்று அளப்பார்களாக.
3.     கொலையுண்டு கிடப்பவனுக்கு மிக அருகிலுள்ள நகர்த் தலைவர்கள், வேலையில் பழக்கப்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படாததுமான ஓர் இளம் பசுவை மந்தையிலிருந்து பிடிப்பர்.
4.     பின்னர், உழப்படாததும் விதைக்கப்படாததும் நீரோடுவதுமான பள்ளத்தாக்கிற்கு அந்தக் கிடாரியை அந்நகர்த்தலைவர்கள் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கில் அதன் கழுத்தை முறிப்பர்.
5.     அப்பொழுது, தனக்கு ஊழியம் செய்யவும், ஆண்டவர் பெயரால் ஆசி வழங்கவும், உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்ட லேவியின் புதல்வர்களாகிய குருக்கள் முன்வர வேண்டும். ஏனெனில், அவர்களது வாக்கின்படியே எல்லா வழக்குகளும் எல்லாத் தடியடிகளும் தீர்க்கப்படவேண்டும்.
6.     அப்போது கொலையுண்டவனுக்கு மிக அருகில் உள்ள நகர்த் தலைவர்கள் எல்லோரும் பள்ளத்தாக்கில் கழுத்து முறிக்கப்பட்ட கிடாரியின் மீது அவர்கள் கைகளைக் கழுவி,
7.     உரத்துச் சொல்ல வேண்டியது: எங்கள் கைகள் அந்த இரத்தத்தைச் சிந்தியதுமில்லை, எங்கள் கண்கள் அதைக் கண்டதுமில்லை.
8.     ஆண்டவரே, நீர் மீட்ட உம் மக்களாகிய இஸ்ரயேலை மன்னித்தருளும். குற்றமற்றவனின் இரத்தத்தைச் சிந்தினபழியை உம்மக்கள் இஸ்ரயேல்மேல் சுமத்தாதேயும். இரத்தப் பழியிலிருந்து அவர்களை விடுவித்தருளும்.
9.     இவ்வாறு குற்றமற்றவனின் இரத்தத்தைச் சிந்தின பழியை உன்னிடமிருந்து நீக்கி விடுவாய். ஏனெனில் ஆண்டவரின் முன்னிலையில் நேரியதைச் செய்துள்ளாய்.
10.     உன் பகைவர்களுக்கு எதிராகப் போர் புரியப்போகையில், உன் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உன் கையில் ஒப்படைப்பார். நீ அவர்களைச் சிறைப்பிடிப்பாய்.
11.     அப்போது, சிறைப்பட்டவர்களில் அழகிய தோற்றமுடைய ஒரு பெண்ணைக் கண்டு, அவள்மேல் காதல்கொண்டு, அவளை உன் மனைவியாக்கிக்கொள்ள விரும்பினால்,
12.     அவளை உன் வீட்டுக்குள் அழைத்துக்கொண்டு போ. அவள் தன் தலையை மழித்து, நகங்களை வெட்டிக்கொள்வாள்.
13.     அவள் சிறைக் கைதியின் ஆடையைக் கழற்றிவிட்டு, உன்வீட்டில் தங்கி, ஒரு மாதகாலம் தன் தந்தையையும் தாயையும் நினைத்துத் துக்கம் கொண்டாடுவாள். அதன்பின் நீ அவளோடு கூடி அவள் கணவனாவாய்: அவள் உனக்கு மனைவியாவாள்.
14.     அவள்மேல் உனக்கு விருப்பமில்லாமற் போனால், அவள் விருப்பம் போல் அவளைப் போகவிடு. நீ அவளைக் கெடுத்துவிட்டதால் பணத்துக்கு விற்கவோ அடிமைபோல் நடத்தவோ வேண்டாம்.
15.     இரண்டு மனைவியரைக் கொண்ட ஒருவன் ஒருத்தியின்மேல் விருப்பாகவும், மற்றவள்மேல் வெறுப்பாகவும் இருக்கும்போது, இருவருமே அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றிருக்கையில், வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வன் தலைப்பேறாக இருப்பானாயின்,
16.     அவன் தனக்குண்டான சொத்தைத் தன் புதல்வர்களுக்குப் பங்கிடும் நாளில், தலைச்சனுக்குரிய உரிமையைத் தலைச்சனாகிய வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வனுக்கன்றி, விரும்ப்பட்ட பெண்ணின் புதல்வனுக்குக் கொடுக்கக்கூடாது.
17.     வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வனையே தலைச்சனாக ஏற்றுக் கொண்டு, தன்னிடம் உள்ள சொத்துக்களில் அவனுக்கு இரண்டு பங்கு கொடுக்க வேண்டும். ஏனெனில் அவனே தன் தந்தையின் ஆற்றலது முதற் கனி. தலைச்சனுக்குரிய உரிமை அவனையே சாரும்.
18.     ஒருவனுடைய புதல்வன் பிடிவாதமும் முரட்டுத்தனமும் கொண்டவனாய், தந்தை சொல்லையோ தாய் சொல்லையோ கேளாமல், அவர்களால் தண்டிக்கப்பட்ட பின்பும் அடங்காமல் போனால்,
19.     தந்தையும் தாயும் அவனைப் பிடித்து, அவனது நகர் வாயிலுள்ள தலைவர்களிடம் கொண்டு போவர்.
20.     எங்கள் மகனாகிய இவன் பிடிவாதமும் முரட்டுத்தனமும் கொண்டவனாய் இருக்கிறான்: எங்கள் சொல் கேட்பதில்லை: பெருந்தீனிக்காரனும் குடிவெறியனுமாய் இருக்கிறான் என்று நகர்த் தலைவர்களிடம் அவர்கள் சொல்ல வேண்டும்.
21.     உடனே, அந்நகரத்து மனிதர் எல்லோரும் அவனைக் கல்லால் எறிவர்: அவனும் செத்தொழிவான். இவ்வாறு, உன்னிடமிருந்து தீமையை அகற்று. அதைக் கேட்டு இஸ்ரயேலர் எல்லோரும் அஞ்சுவர்.
22.     சாவுக்கு ஏதுவான பாவம் செய்த மனிதன் சாகடிக்கப்பட்டபின் அவனது பிணத்தை ஒரு மரத்திலே தொங்கவிடு,
23.     ஆனால் அவன் பிணம் இரவில் மரத்தில் தொங்கக்கூடாது. அவனை நீ அன்றே அடக்கம் செய்ய வேண்டும். ஏனெனில் தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன். நீயோ உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கும் நாட்டைத் தீட்டுப் படுத்தாதே.

அதிகாரம் 22.     .


1.     உன் இனத்தவன் ஒருவனின் ஆடோ மாடோ வழிதவறித் திரிவதைக் கண்டும், அதைக் காணாதவன்போல் இருந்துவிடாதே. அதை உன் இனத்தானிடம் திருப்பிக் கொண்டு போ:
2.     உனக்கு அடுத்திருப்பவன் உன்னிடமிருந்து வெகு தொலையில் இருந்தால், அல்லது அவன் யாரென்று நீ அறியாதிருந்தால், அதை உன் வீட்டுக்குள் கொண்டுபோய் உன்னோடு வைத்துக்கொள். உனக்கு அடுத்திருப்பவன் அதைத் தேடி வரும்பொழுது அதை அவனிடம் திரும்பக் கொடு.
3.     உனக்கு அடுத்திருப்பவனிடமிருந்து காணாமல் போன கழுதைக்கோ, ஆடைக்கோ வேறு எந்தப் பொருளுக்கோ அவ்விதமே செய். நீ அவற்றைக் கண்டும் காணாதவன் போல் இருந்துவிடாதே.
4.     உனக்கு அடுத்திருப்பவனின் கழுதையோ மாடோ வழியில் விழுந்து கிடப்பதைக் கண்டும் காணாதவன்போல் இருந்துவிடாதே. அதைத் தூக்கிவிட அவனுக்கு உதவிசெய்.
5.     ஆண்களின் ஆடைகளைப் பெண்கள் அணியலாகாது. பெண்களின் உடைகளை ஆண்கள் உடுத்தலாகாது. ஏனெனில் அப்படிச் செய்பவர்கள் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அருவருப்பானவர்கள்.
6.     வழியோரமாய், மரத்திலோ தரையிலோ, குஞ்சுகள் அல்லது முட்டைகள் உள்ள பறவைக்கூட்டையும், அந்தக் குஞ்சுகள் அல்லது முட்டைகள்மேல் தாய் உட்கார்ந்து கொண்டிருப்பதையும் கண்டால், குஞ்சுகளோடு தாயைப் பிடிக்காதே.
7.     தாயைப் போகவிடு. குஞ்சுகளை உனக்கென எடுத்துக்கொள். அப்போது உனக்கு நலமாகும். நீ நெடுநாள் வாழ்வாய்.
8.     நீ புது வீட்டைக் கட்டும்போது உன் வீட்டு மாடியைச் சுற்றிக் கைப்பிடிச் சுவரைக் கட்டு. இல்லையெனில், ஒருவன் மாடியிலிருந்து விழுந்தால், விழுந்தவனின் இரத்தப்பழி உன் வீட்டின்மீது வரும்.
9.     திராட்சைத் தோட்டத்தில் வேறு விதைகளை விதைக்காதே. அப்படிச் செய்தால், நீ விதைத்தவற்றின் பயிரையும் திராட்சைத் தோட்டத்தின் பலனையும் தீட்டுப்படுத்துவாய்.
10.     மாட்டையும் கழுதையையும் பிணைத்து உழலாகாது.
11.     ஆட்டுமயிரும் நூலும் கலந்து நெய்யப்பட்ட ஆடையை உடுத்தாதே.
12.     உன்னை நீ மூடிக்கொள்ளும் மேற்போர்வையின் நான்கு மூலைகளிலும் தொங்கல்களை அமைத்துக்கொள்.
13.     ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளோடு கூடியபின், அவளை வெறுத்து,
14.     அவள் மீது அவதூறுசொல்லி, அவளது பெயரைக் கெடுத்து, நான் இந்தப்பெண்ணை மணம் முடித்தேன்: ஆனால் அவளோடு உறவுகொண்டபோது, அவள் கன்னியல்ல என்று கண்டுகொண்டேன் என்று கூறினால்,
15.     அப்பெண்ணின் தந்தையும் தாயும் அவளது கன்னிமையின் அடையாளத்தை எடுத்துக்கொண்டு, அவளை நகர் வாயிலுள்ள தலைவர்களிடம் கூட்டி வருவார்கள்.
16.     அப்போது, அப்பெண்ணின் தந்தை தலைவர்களிடம், என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன்: அவனோ அவளை வெறுக்கிறாள்.
17.     அத்தோடு, உன் மகளிடம் கன்னிமையைக் காணவில்லை என்று கூறி அவளைப் பற்றி அவதூறு சொல்லுகிறான்: இதோ என் மகளின் கன்னிமைக்கான சான்று என்று சொல்லுவான். பின்பு அவர்கள் நகர்த் தலைவர்களின் முன்னர் அந்தத் துணியை விரிப்பார்கள்.
18.     அப்போது அந்நகர்த் தலைவர்கள் அம்மனிதனைப் பிடித்துத் தண்டிப்பார்கள்.
19.     பின்னர், அவனுக்கு நூறு வெள்ளிக் காசுகள் தண்டம் விதித்து, அதைப் பெண்ணின் தந்தையிடம் கொடுப்பார்கள். ஏனெனில், இஸ்ரயேலின் கன்னி ஒருத்தியின் மேல் அவன் அவதூறு கூறியுள்ளான். அவளே இவனுக்கு மனைவியாக இருப்பாள். அவன் வாழ்நாள் முழுவதும் அவளைத் தள்ளிவிட முடியாது.
20.     ஆனால், அப்பெண்ணிடம் கன்னிமை காணப்படவில்லை என்பது உண்மையானால்,
21.     அந்தப் பெண்ணை அவள் தந்தையின் வீட்டு வாயிலுக்கு வெளியே கொண்டுவந்து அவளது நகரின் மனிதர் அவளைக் கல்லால் எறிவர். அவளும் சாவாள். ஏனெனில், அவள் தன் தந்தையின் வீட்டிலிருக்கும்போதே வேசித்தனம் பண்ணி இஸ்ரயேலுக்கு இழுக்கானதைச் செய்தாள். இவ்வாறு தீமையை உன்னிடமிருந்து அகற்று.
22.     ஒரு மனிதன் மற்றொருவனுடைய மனைவியோடு படுத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், அப்பெண்ணும் அப்பெண்ணோடு படுத்தவனும், இருவரும் சாவர். இவ்வாறு இஸ்ரயேலிலிருந்து தீமையை அகற்று.
23.     மணமாகியும் கன்னிமை கழியாத ஒருத்தியை நகரில் ஒருவன் சந்தித்து அவளோடு உறவுகொண்டால்,
24.     அவர்கள் இருவரையும் நகர் வாயிலுக்குக் கொண்டு போய்க் கல்லால் எறிவர்: அவர்களும் சாவர். அவள் நகரில் இருந்தும் உதவிக்காகக் கூக்குரலிடாததாலும், அவன் மற்றொருவனின் மனைவியைக் கெடுத்ததாலும் அவர்கள் சாவர். இவ்வாறு உன்னிடமிருந்து தீமையை அகற்று.
25.     ஆனால், மணமாகியும் கன்னிமை கழியாத ஒருத்தியை வயல்வெளியில் ஒருவன் கண்டு அவளைப் பலவந்தமாகப் பிடித்து அவளோடு உறவுகொண்டால், அவளோடு உறவுகொண்ட அம்மனிதன் மட்டுமே சாகட்டும்.
26.     அந்தப் பெண்ணுக்கு ஒரு தீங்கும் செய்ய வேண்டாம். சாவுக்கு ஏதுவான பாவம் எதுவும் அவள் செய்யவில்லை. தனக்கு அடுத்திருப்பவனை ஒருவன் தாக்கி அவனைக் கொல்வது போலத்தான் இதுவும்.
27.     ஏனெனில், அவன் அவளை வயல்வெளியில் மேற்கொண்டான். மணமாகியும் கன்னிமை கழியாத அவள் கூக்குரலிட்டும் அவளைக் காப்பாற்ற எவரும் இல்லை.
28.     மணமாகாத ஒரு கன்னிப் பெண்ணை ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தப்படுத்தி, அவளோடு உறவுகொண்டது கண்டுபிடிக்கப்பட்டால்,
29.     அப்பெண்ணின் தந்தைக்கு அவளோடு உறவு கொண்டவன் ஜம்பது வெள்ளிக்காசுகள் தரவேண்டும். அவன் அவளைக் கெடுத்துவிட்டதால் அவளை மனைவியாக்கிக்கொள்ள வேண்டும். அவன் வாழ்நாள் முழுவதும் அவளை மணமுறிவு செய்யமுடியாது.
30.     எவனும் தன் தந்தையின் மனைவியோடு கூடலாகாது: தன் தந்தையின் படுக்கையை இழிபுபடுத்தலாகாது.

அதிகாரம் 23.     .


1.     விதையடிக்கப்பட்டவனும் ஆண் குறி அறுக்கப்பட்டவனும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையலாகாது.
2.     வேசித்தனத்தால் பிறந்தவன், அவனது பத்தாம் தலைமுறை வரைக்கும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையலாகாது.
3.     அம்மோனியரும் மோவாபியரும், அவர்களது பத்தாம் தலைமுறைவரைக்கும், அவர்களைச் சார்ந்த எவரும் எக்காலத்திலும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையக்கூடாது.
4.     ஏனெனில், நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வரும்வழியில் அவர்கள் அப்பங்களோடும் தண்ணீரோடும் உங்களை எதிர்கொள்ளவில்லை. அத்தோடு, ஆராம் நகராயிலுள்ள பெத்தோர் எனும் ஊரிலிருந்து பெகோரின் மகன் பிலயாமை உன்னைச் சபிக்கும்படி கூலிக்கு அமர்த்தினார்கள்.
5.     ஆயினும், உன் கடவுளாகிய ஆண்டவர் பிலயாமுக்குச் செவிகொடுக்கமனமின்றி, சாபத்தை உனக்கு ஆசியாக மாற்றினார். ஏனெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்மீது அன்புகூர்கிறார்.
6.     வாழ்நாள் எல்லாம் நீ அவர்களது நல்லுறவையும் நலத்தையும் நாடாதே.
7.     ஏதோமியனை வெறுக்காதே: ஏனெனில் அவன் உன் சகோதரன். எகிப்தியனை வெறுக்காதே: ஏனெனில் அவன் நாட்டில் நீ அன்னியனாய் வாழ்ந்தாய்.
8.     அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளின் மூன்றாம் தலைமுறை தொடங்கி ஆண்டவரின் திருப்பேரவைக்குள் வரலாம்.
9.     நீ உன் பகைவருக்கு எதிராகச் சென்று பாளையம் இறங்கியிருக்கையில் எல்லாத் தீச்செயல்களிலிருந்தும் விலகியிரு.
10.     உங்களில் ஒருவன் இரவில் நிகழ்ந்த செயலால் தீட்டுப்பட்டிருந்தால், அவன் பாளையத்திற்கு வெளியே செல்லட்டும். பாளையத்திற்குள்ளே வரக்கூடாது.
11.     மாலையானதும் நீரில் குளித்து கதிரவன் மறைந்ததும் அவன் பாளையத்துக்குள் வரட்டும்.
12.     நீ வெளிக்குச் செல்வதற்கெனப் பாளையத்திற்கு வெளியே ஓர் இடம் இருக்கட்டும்.
13.     படைக்கலன்களோடு ஒரு மண்வெட்டியும் வைத்துக்கொள். நீ வெளிக்குச் செல்கையில் அதனால் ஒரு குழி தோண்டு. நீ கழித்ததை அதனால் மூடிவிட்டுத் திரும்பு.
14.     ஏனெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைக் காக்கவும் உன் பகைவர்களை உன்னிடம் ஒப்படைக்கவும் பாளையத்துக்குள்ளே உலா வருகிறார். அவர் உன்னிடத்தில் கழிவைக்கண்டு உன்னைவிட்டு விலகாதவாறு உன் பாளையம் தூய்மையாய் இருக்கட்டும்.
15.     தம் தலைவனிடமிருந்து தப்பிவந்து உன்னிடம் அடைக்கலம் தேடியுள்ள அடிமைகளை அவனிடம் ஒப்படைக்காதே.
16.     குடியிருப்பு ஒன்றில் தமக்குப் பிடித்தமானதைத் தேர்ந்து கொண்டு அவர்கள் உன்னோடு உன்னிடையே இருப்பாராக. நீ அவர்களைக் கொடுமைப்படுத்தாதே.
17.     இஸ்ரயேலின் புதல்வியருள் எவளும் விலைமகளாய் இருத்தலாகாது. இஸ்ரயேலின் புதல்வர் எவனும் விலைமகனாய் இருத்தலாகாது.
18.     விலைமாதின் வாடகையையோ, விலை மகளின் கூலியையோ எவ்வித நேர்ச்சையின் பொருட்டும் உன் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்திற்குள் கொண்டு வராதே. ஏனெனில், இவை இரண்டுமே அவருக்கு அருவருப்பானவை.
19.     இனத்தவனிடமிருந்து வட்டி வாங்காதே. பணத்துக்கோ, தானியத்துக்கோ, கடனாகக் கொடுத்த எந்தப் பொருளுக்கோ வட்டி வாங்காதே.
20.     வேற்று இனத்தானிடமிருந்து நீ வட்டி வாங்கலாம். ஆனால், நீ உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டில், நீ மேற்கொள்ளும் செயல்களில் எல்லாம், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கும் பொருட்டு உன் இனத்தானிடம் வட்டி வாங்காதே.
21.     கடவுளாகிய ஆண்டவருக்கு நேர்ச்சை செய்திருந்தால், அதைச் செலுத்துவதற்குக் காலந்தாழ்த்தாதே. ஏனெனில், அது உனக்குப் பாவமாகும். உன் கடவுளாகிய ஆண்டவரும் அதை உன்னிடம் கேட்பார் என்பது உறுதி.
22.     ஆனால் நேர்ச்சை செய்யாதிருந்தால் அது உனக்குப் பாவமாகாது.
23.     உனது வாயால் வாக்களித்து, உன் சொந்த விருப்பத்தினால் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு நேர்ச்சை செய்வதால் உன்வாயால் சொல்வதைச் செயலில் காட்டக் கருத்தாயிரு.
24.     உனக்கு அடுத்திருப்பவனின் திராட்சைத் தோட்டத்திற்குச் சென்றால், உன் விருப்பம்போல் திராட்சையை உண்ணலாம்: ஆனால் உன் கூடையில் எதையும் வைத்தலாகாது.
25.     உனக்கு அடுத்திருப்பவனுடைய விளை நிலத்திற்குச் சென்றால், உன்கையால் கதிர்களைக் கொய்யலாம்: ஆனால் கதிர் அரிவாளை உனக்கு அடுத்திருப்பவனின் கதிர்களில் வைக்காதே.

அதிகாரம் 24.     .


1.     ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளோடு கூடியபின், அவளது அருவருக்கத்தக்க செயலைக் கண்டு அவள்மேல் அவனுக்கு விருப்பமில்லாமற்போனால், அவன் முறிவுச் சீட்டு எழுதி, அவள் கையில் கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடுகிறான்.
2.     அவள் அவனது வீட்டைவிட்டு வெளியே சென்று வேறொருவனுக்கு மனைவி ஆகிறாள்.
3.     இரண்டாம் கணவனும் அவளை வெறுத்து, முறிவுச்சீட்டு எழுதி, அவள் கையில் கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடுகிறான், அல்லது அவளைத் தன் மனைவியாக ஏற்றுக்கொண்ட இரண்டாம் கணவன் இறந்துவிடுகிறான்.
4.     இந்நிலையில், அவள் தீட்டுப்பட்டுவிட்ட காரணத்தால், அவளைத் தள்ளிவைத்த முதல் கணவன் அவளை மீண்டும் தன் மனைவியாக ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஏனெனில் அது ஆண்டவர் முன்னிலையில் வெறுப்பானதாகும். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கும் நாட்டை நீ பாவத்துக்கு உள்ளாக்காதே!
5.     ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாகத் திருமணம் செய்திருந்தால், அவன் போருக்குப் போக வேண்டாம். அவன்மீது யாதொரு பொறுப்பும் சுமத்தப்படலாகாது. அவன் ஓராண்டு காலம் எவ்வித இடையூறுமின்றித் தன்வீட்டில் இருந்துகொண்டு தன் மனைவியை மகிழ்விப்பான்.
6.     மாவரைக்கும் கல்லின் கீழ்க்கல்லையாவது மேற்கல்லையாவது அடகாக வாங்காதே. அது அவன் மனித உயிரை அடகாக வாங்குவது போலாகும்.
7.     இஸ்ரயேலின் மக்களாகிய தன் இனத்தாருள் ஒருவரைக் கடத்திக் கொண்டு போய் அவரை அடிமையாக நடத்துவதாக அல்லது விற்பதாக ஒருவன் கண்டுபிடிக்கப்பட்டால், அந்தக் கடத்தல்காரன் சாகட்டும். இவ்வாறு உன்னிடமிருந்து தீமையை அகற்று.
8.     தொழுநோயைக் குறித்து எச்சரிக்கையாய் இரு. லேவிய குருக்கள் உனக்குக் கற்பிப்பதுபோல் அனைத்தையும் செய்வதில் மிகக் கவனமாயிரு. நான் அவர்களுக்குக் கட்டளையிட்டுள்ளவாறு செய்வதில் கருத்தாயிரு.
9.     எகிப்திலிருந்து நீ புறப்பட்டு வரும் வழியில் உன் கடவுளாகிய ஆண்டவர் மிரியாமுக்குச் செய்ததை நினைவில இருத்து.
10.     உனக்கு அடுத்திருப்பவருக்கு நீ ஏதாகிலும் கடனாகக் கொடுத்தால், அதற்க அடகாக எதையும் வாங்க அவரது வீட்டினுள் நுழையாதே.
11.     வெளியே நில். உன்னிடம் கடன் வாங்கியவர், வெளியே உன்னிடம் அடகைக் கொண்டுவரட்டும்.
12.     அவர் வறியவராயின், நீ அந்த அடகை வைத்துக்கொண்டு தூங்கச் செல்லாதே.
13.     மாறாக, கதிரவன் மறைவதற்குள் அந்த அடகை அவரிடம் நீ திருப்பிக்கொடுத்தாக வேண்டும். அதனால், அவர் தம் மேலாடையை விரித்துப் படுக்கும்போது உனக்கு ஆசி வழங்குவார். உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நீ ஏற்புடையவன் ஆவாய்.
14.     வறியவரும் எளியவருமான கூலியாள்கள், உன் இனத்தாராயினும் சரி அல்லது உன்நாட்டில் உன் நகர்வாயிலுக்குள் உள்ள அன்னியராயினும் சரி, அவரைக் கொடுமைப்படுத்தாதே.
15.     அவரது கூலியை அந்தந்த நாளில் கொடுத்துவிடு. கதிரவன் மறையுமுன்னே கொடு. ஏனெனில் அவர் வறியவராய் இருப்பதால், அவரது பிழைப்பு அதில் அடங்கியுள்ளது. இல்லையெனில், உனக்கெதிராக ஆண்டவரை நோக்கி முறையிடுவார். அப்போது அது உனக்குப் பாவமாகும்.
16.     பிள்ளைகளுக்காகத் தந்தையரும், தந்தையருக்காகப் பிள்ளைகளும் கொல்லப்பட வேண்டாம். அவரவர் தம் பாவத்திற்காகக் கொல்லப்படட்டும்.
17.     அன்னியர் அல்லது அனாதைக்கு உரிய நீதியைப் புரட்டாதே. கைம்பெண்ணின் ஆடையை அடகாக வாங்காதே.
18.     எகிப்து நாட்டில் நீ அடிமையாய் இருந்ததையும், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை விடுவித்ததையும் நீ நினைவில் இருத்தி, இவற்றைச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
19.     வயலில், விளைச்சல் அறுவடை செய்யும்போது, அரிக்கட்டினை மறந்து வயலிலே விட்டு வந்தால், அதை எடுக்கத் திரும்பிப் போகாதே. அதை அன்னியருக்கும் அனாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு. அப்போது நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார்.
20.     நீ உன் ஒலிவ மரத்தை அடித்து உதிர்க்கும்போது, உதிராததைப் பறிக்காதே. அதை அன்னியருக்கும் அனாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு.
21.     நீ உன் திராட்சைத் தோட்டக் கனிகளைச் சேகரித்தபின், பொறுக்காமல் கிடப்பதை எடுக்கச் செல்லாதே. அதை அன்னியருக்கும் அனாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு.
22.     எகிப்து நாட்டில் நீ அடிமையாய் இருந்ததை நினைவிலிருத்தி, இவற்றைச் செய்யும்படி, நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

அதிகாரம் 25.     .


1.     மனிதரிடையே வழக்கு ஏற்பட்டு அவர்கள் நீதிமன்றத்தை நாடும்பொழுது, நீதிபதிகள் நேர்மையாளரை நேர்மையாளர் என்றும், குற்றவாளியைக் குற்றவாளி என்றும் தீர்ப்பிடுவர்.
2.     குற்றவாளி அடிபட வேண்டியவனென்றால், நீதிபதி அவனைப் படுக்கச்செய்து தம் முன்னிலையில் அடிக்கச் செய்வார். அவனது குற்றத்திற்கு ஏற்ப அடிகளின் எண்ணிக்கையும் இருக்கும்.
3.     அவனுக்கு நாற்பது அடிகள் கொடுக்கலாம்: அதற்குமேல் வேண்டாம். அதற்குமேல் அடித்தால் உன் கண்களுக்கு முன்பாக உன் இனத்தான் மானமிழந்தவன் ஆவான்.
4.     போர் அடிக்கும் மாட்டின் வாயைக் கட்டாதே.
5.     உடன்பிறந்தோர் சேர்ந்து வாழ்கையில், அவர்களில் ஒருவன் மகப்பேறின்றி இறந்துபோனால், இறந்தவனின் மனைவி குடும்பத்திற்கு வெளியே அன்னியனுக்கு மனைவியாக வேண்டாம். அவள் கொழுந்தனே அவளைத் தன் மனைவியாக ஏற்று, அவளோடு கூடிவாழ்ந்து, கணவனின் உடன்பிறந்தோன் செய்ய வேண்டிய கடமையை அவளுக்குச் செய்யட்டும்.
6.     அவளுக்குப் பிறக்கும் ஆண் தலைப்பேறு இறந்துபோன சகோதரனின் பெயரிலேயே வளரட்டும். இதனால் அவன் பெயர் இஸ்ரயேலிலிருந்து அற்றுப்போகாது.
7.     இறந்தவனின் உடன்பிறந்தான் தன் அண்ணியை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லையெனில், அவள் நகர்வாயிலில் உள்ள தலைவர்களிடம் சென்று, தன் அண்ணன் பெயரை இஸ்ரயேலில் நிலைநிறுத்தும்படி ஒரு கணவனின் தம்பிக்குரிய கடமையை எனக்குச் செய்ய என் கொழுந்தனுக்கு விருப்பமில்லை என்று கூறுவாள்.
8.     அப்போது நகர்த் தலைவர்கள் அவனைக் கூப்பிட்டு அவனோடு பேசுவர். அவனோ விடாப்படியாக அவளை ஏற்றுக் கொள்ள எனக்கு விருப்பமில்லை என்று கூறினால்
9.     அவன் அண்ணி அவனை அணுகி, தலைவர்களின் கண்முன்பாக, அவன் காலிலுள்ள மிதியடிகளைக் கழற்றி, அவன் முகத்தில் துப்பி, தன் சகோதரனின் வீட்டைக் கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படும் என்று கூறுவாள்.
10.     இஸ்ரயேலில் அவளது பெயர் மிதியடிகழற்றப்பட்டவனின் வீடு என்றழைக்கப்படும்.
11.     ஆண்கள் ஒருவரோடொருவர் சண்டையிடுகையில், ஒருவனுடைய மனைவி, தன் கணவனை, அவனை அடிப்பவனின் கையிலிருந்து விடுவிப்பதற்காக வந்து, கையை நீட்டி, மற்றவனது ஆண்குறியைப் பிடிப்பாளாகில்,
12.     அவளுடைய கையைத் துண்டிப்பாய். அவளுக்கு இரக்கம் காட்டாதே.
13.     பெரியதும் சிறியதுமான ஏமாற்று எடைக்கற்களை உன் பையில் வைத்திருக்காதே.
14.     பெரியதும் சிறியதுமான ஏமாற்று முகத்தல் அளவைகளை உன் வீட்டில் வைத்திருக்காதே.
15.     நிறைவான நேர்மையான எடைக்கற்கள் உன்னிடம் இருக்கட்டும். நிறைவான நேர்மையான முகத்தல் அளவைகள் உன்னிடம் இருக்கட்டும். அதனால், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில் உன் நாள்கள் நீடித்திருக்கும்: நீ நெடுநாள் வாழ்வாய்:
16.     மாறாக, மேற்குறிப்பிட்டவற்றில் நேர்மையற்று நடப்போர் அனைவரும் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அருவருப்பானவர்.
17.     நீ எகிப்திலிருந்து புறப்பட்டு வருகையில் அமலேக்கு உனக்குச் செய்ததை நினைவில் இருத்து.
18.     நீ களைத்துச் சோர்ந்திருக்கையில் வழியிலே அவன் உன்னை எதிர்த்து, உன் பின்னால் வலுவற்றவர்களை வெட்டி வீழ்த்தினான். ஏனெனில் அவன் கடவுளுக்கு அஞ்சவில்லை.
19.     ஆகவே, உன் கடவுளாகிய ஆண்டவர், உனது உரிமைச் சொத்தாக உடைமையாக்கிக் கொள்ளுமாறு உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டைச் சுற்றியுள்ள பகைவர் அனைவரையும் உனக்குக் கீழ்ப்படுத்தி, உனக்கு ஓய்வு தரும்போது, அமலேக்கின் நினைவு வானத்தின் கீழ் இல்லாதவாறு அழிக்க வேண்டும். இதை மறந்துவிடாதே!

அதிகாரம் 26.     .


1.     உனது உரிமைச்சொத்தாக, உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டிற்குள் சென்று, அதை உன் உடைமையாக்கி, அதில் நீ குடியேறும்போது,
2.     அந்த நாட்டின் நிலத்து முதற்பலன் அனைத்தையும் எடுத்துக்கூடையில் வைத்து, உன் கடவுளாகிய ஆண்டவர் தம் பெயர் விளங்குமாறு தேர்ந்து கொள்ளும் இடத்திற்குக் கொண்டுபோ.
3.     அன்றைய நாளில் அங்கு பணியில் இருக்கும் குருவிடம் சென்று அவரை நோக்கி, எங்களுக்குக் கொடுப்பதாக எங்கள் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில் வந்து சேர்ந்துள்ளேன் என எம் கடவுளாகிய ஆண்டவர்முன் இன்று அறிக்கையிடுகிறேன் என்று சொல்.
4.     அப்போது, குரு அந்தக் கூடையை உன் கையிலிருந்து எடுத்து, அதை உன் கடவுளாகிய ஆண்டவரது பலிபீடத்தின்முன் வைப்பார்.
5.     நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிக்கையிட்டுக் கூறவேண்டியது: நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டுக்கு இறங்கிச் சென்றார். அங்கு மக்கள் சிலருடன் அன்னியராய் இருந்தார். ஆனால் அங்கேயே பெரிய, வலிமைமிகு, திரளான மக்களினத்தைக் கொண்டவர் ஆனார்.
6.     எகிப்தியர் எங்களை ஒடுக்கினார்: துன்புறுத்தினர்: கடினமான அடிமை வேலைகளை எங்கள்மீது சுமத்தினர்.
7.     அப்போது நாங்கள் எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினோம். ஆண்டவர் எங்கள் குரலைக் கேட்டார். எங்களுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அவதியையும் கண்டார்.
8.     தம் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அடையாளங்களாலும், அருஞ்செயல்களாலும் ஆண்டவர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார்.
9.     அவர் எங்களை இந்த இடத்திற்குக் கூட்டிவந்தார். பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டை எங்களுக்குத் தந்தார்.
10.     எனவே ஆண்டவரே, இதோ, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற்பலனைக் கொண்டு வந்துள்ளேன் என்று சொல்லி, அதை உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் வைத்து, அவரைப் பணிந்து தொழுவாய்.
11.     பின்னர், நீயும் லேவியரும், உன்னோடு உள்ள அன்னியரும், கடவுளாகிய ஆண்டவர் உனக்கும் உன் வீட்டாருக்கும் செய்த அனைத்து நன்மைகளை முன்னிட்டு அக்களியுங்கள்.
12.     பத்திலொரு பகுதி செலுத்தும் ஆண்டாகிய மூன்றாம் ஆண்டில், அவ்வாண்டின் விளைச்சலில் பத்திலொரு பாகத்தை, லேவியருக்கும், அன்னியருக்கும், அனாதைக்கும் கைம்பெண்ணுக்கும் கொடு. அதனால் அவர்கள் உன் வாயில்களுக்குள்ளே உண்டு நிறைவு அடைவர்.
13.     அதன்பின், நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிவிக்க வேண்டியது: நீர் எனக்குக் கட்டளையிட்ட அனைத்துக் கட்டளைகளின்படி, தூய பகுதியை என் வீட்டிலிருந்து எடுத்து அவற்றை லேவியருக்கும், அன்னியருக்கும், அனாதைக்கும், கைம்பெண்ணுக்கும் கொடுத்துள்ளேன். உம் கட்டளைகளை நான் மீறவில்லை, அவைகளை நான் மறக்கவுமில்லை.
14.     எனது துயர நாளில் அதிலிருந்து உண்டதுமில்லை: தீட்டான போது அதிலிருந்து எடுக்கவுமில்லை: இழவுக்காக அதிலிருந்து கொடுக்கவும் இல்லை. என் கடவுளாகிய ஆண்டவர் குரலுக்குக் கீழ்ப்படிந்து, நீர் எனக்குக் கட்டளையிட்டபடி அனைத்தையும் செய்துள்ளேன்.
15.     நீர் உமது தூய உறைவிடமாகிய விண்ணிலிருந்து கண்ணோக்கி, நீர் எங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டுக் கூறியபடி உம் மக்களாகிய எங்களுக்கும் எங்களுக்குக் கொடுத்துள்ள பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டுக்கும் ஆசிவழங்குவீராக .
16.     இந்த முறைமைகளையும் நியமங்களையும் நீ நிறைவேற்றுமாறு உன் கடவுளாகிய ஆண்டவர் இன்று உனக்குக் கட்டளையிட்டுள்ளார். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவற்றை நிறைவேற்றுவதில் கருத்தாயிரு.
17.     ஆண்டவரை உன் கடவுளாய் ஏற்பதாகவும் உனக்குக் கடவுளாக இருப்பார் என்றும், அவருடைய வழிகளில் நடப்பதாகவும், அவருடைய நியமங்களையும், கட்டளைகளையும் முறைமைகளையும் கடைப்பிடிப்பதாகவும், அவர் குரலுக்குச் செவி கொடுப்பதாகவும் இன்று நீ அவருக்கு வாக்களித்துள்ளாய்.
18.     நீ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தால், அவர் கூறியபடியே நீ அவருக்குச் சொந்தமான மக்களினமாய் இருப்பாய் என்றும்,
19.     அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும், புகழிலும், பெயரிலும், மாட்சியிலும் உன்னையே உயர்த்துவார் என்றும், அதனால் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய் என்றும் ஆண்டவர் இன்று உனக்கு வாக்களித்துள்ளார்.

அதிகாரம் 27.     .


1.     மோசே இஸ்ரயேலின் தலைவர்களோடு சேர்ந்து மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: இன்று நான் உங்களுக்கு விதிக்கும் அனைத்துக் கட்டளைகளையும் கடைப்பிடியுங்கள்.
2.     நீங்கள் யோர்தானைக் கடந்து, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் நுழையும் நாளில், பெரிய கற்களை நாட்டி, அவற்றின்மேல் சாந்து பூசுங்கள்.
3.     உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு வாக்களித்தது போல், உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டுக்குள் நீங்கள் நுழையுமாறு கடந்து சென்றதும், அக்கற்களின் மீது திருச்சட்டத்தின் அனைத்து வார்த்தைகளையும் எழுதிவையுங்கள்.
4.     நீங்கள் யோர்தானைக் கடந்து சென்றதும், நான் இன்று உங்களுக்குக் கட்டளையிட்டது போல, இத்தகைய கற்களை ஏபால் மலைமீது நாட்டி, அவற்றின் மீது சாந்து பூசுங்கள்.
5.     அங்கு உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குக் கற்களாலான ஒரு பலிபீடத்தைக் கட்டுங்கள். அவற்றின்மீது இரும்புக்கருவிபடவேண்டாம்.
6.     கற்களால் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிபீடம் கட்டுங்கள். அதன்மேல் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எரிபலிகளைச் செலுத்துங்கள்.
7.     நல்லுறவுப் பலிகளையும் செலுத்தி அங்கேயே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் உணவருந்தி மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
8.     மேலும், அக்கற்களின்மீது இத்திருச்சட்டத்தின் அனைத்து வார்த்தைகளையும் மிகத் தெளிவாக எழுதிவையுங்கள்.
9.     பின்னர், மோசே லேவியக் குருக்களோடு சேர்ந்து இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் சொன்னதாவது: இஸ்ரயேலே, கவனமாகக் கேள். நீ இன்று உன் கடவுளாகிய ஆண்டவரின் மக்களினம் ஆகியுள்ளாய்.
10.     எனவே, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடு. நான் இன்று உனக்கு விதிக்கும் அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நிறைவேற்று .
11.     மோசே அன்று மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது:
12.     நீங்கள் யோர்தானைக் கடந்தபின், மக்களுக்கு ஆசிவழங்குமாறு, சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமின் ஆகியோர் கெரிசிம் மலைமீது நிற்கட்டும்.
13.     மக்களுக்குச் சாபம் வழங்குமாறு, ரூபன், காத்து, ஆசேர், செபுலோன், தாண், நப்தலி ஆகியோர் ஏபால் மலைமீது நிற்கட்டும்.
14.     லேவியர் இஸ்ரயேலர் அனைவருக்கும் உரத்த குரலில் கூறவேண்டியது:
15.     ஆண்டவருக்கு அருவருப்பானதும், சிற்பியின் கைவினைப் பொருள்களுமான வார்ப்புச் சிலையையோ செதுக்குச் சிலையையோ செய்து அதை மறைவான இடத்தில் வைப்பவர் சபிக்கப்படட்டும் . உடனே மக்கள் அனைவரும் பதில் மொழியாக அப்படியே ஆகட்டும் என்பர்.
16.     தம் தந்தையையோ தாயையோ பழிக்கிறவர் சபிக்கப்படட்டும். உடனே மக்கள் அனைவரும் அப்படியே ஆகட்டும் என்பர்.
17.     தமக்கு அடுத்திருப்பவரின் எல்லைக் கல்லை அப்புறப்படுத்துபவர் சபிக்கப்படட்டும் : உடனே மக்கள் அனைவரும் அப்படியே ஆகட்டும் என்பர்.
18.     பார்வையற்றவரை வழிதவறச் செய்பவர் சபிக்கப்படட்டும். உடனே மக்கள் அனைவரும் அப்படியே ஆகட்டும் என்பர்.
19.     அன்னியருக்கும், அனாதைக்கும், கைம்பெண்ணுக்கும் உரிய நீதியைப் புரட்டுபவர் சபிக்கப்படட்டும் : உடனே மக்கள் அனைவரும் அப்படியே ஆகட்டும் என்பர்.
20.     தன் தந்தையின் மனைவியோடு கூடுகிறவன் தன் தந்தைக்கு உரியவளின் உடையைத் திறந்ததனால் சபிக்கப்படட்டும்: உடனே மக்கள் அனைவரும் அப்படியே ஆகட்டும் என்பர்.
21.     எந்தவொரு விலங்கோடும் புணர்கிறவன் சபிக்கப்படட்டும்: உடனே மக்கள் அனைவரும் அப்படியே ஆகட்டும் என்பர்.
22.     தன் தந்தையில் புதல்வி அல்லது தன் தாயின் புதல்வியாகிய தன் சகோதரியுடன் கூடுகிறவன் சபிக்கப்படட்டும்: உடனே மக்கள் அனைவரும் அப்படியே ஆகட்டும் என்பர்.
23.     தன் மனைவியின் தாயோடு கூடுபவன் சபிக்கப்படட்டும்: உடனே மக்கள் அனைவரும் அப்படியே ஆகட்டும் என்பர்.
24.     தமக்கு அடுத்திருப்பவரை ஒளிந்திருந்து கொல்பவன் சபிக்கப்படட்டும்: உடனே மக்கள் அனைவரும் அப்படியே ஆகட்டும் என்பர்.
25.     குற்றமற்றவரைக் கொல்வதற்காகக் கையூட்டு வாங்குபவர் சபிக்கப்படட்டும் : உடனே மக்கள் அனைவரும் அப்படியே ஆகட்டும் என்பர்.
26.     இத்திருச் சட்டத்தின் வார்த்தைகளை எல்லாம் கடைப்பிடித்து நடவாதவர் சபிக்கப்படட்டும்: உடனே மக்கள் அனைவரும் அப்படியே ஆகட்டும் என்பர்.

அதிகாரம் 28.     .


1.     கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிக்கொடு. நான் இன்று உனக்கு விதிக்கும் அவருடைய கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. அப்போது, உலகிலுள்ள மக்களினங்கள் அனைத்திற்கும் மேலாக, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை உயர்த்துவார்.
2.     கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுத்தால், இந்த ஆசிகளெல்லாம் உன்மேல் வந்து உன்னில் நிலைக்கும்.
3.     நீ நகரிலும் ஆசி பெற்றிடுவாய்: வயல் வெளியிலும் ஆசிபெற்றிடுவாய்.
4.     கருவின் கனியும், உன் நிலத்தின் பயனும் உன் கால்நடைகளின் ஈற்றுகளும், உன் மாடுகளின் கன்றுகளும் உன் ஆடகளின் குட்டிகளும் ஆசி பெற்றிடும்.
5.     கூடையும் உன் மாவுபிசையும் தொட்டியும் ஆசி பெற்றிடும்.
6.     நீ வருகையிலும் செல்கையிலும் ஆசி பெற்றிடுவாய்.
7.     உனக்கு எதிராக எழும் உன் பகைவர்கள் உனக்குமுன் முறியடிக்கப்படும்படி ஆண்டவர் அவர்களை உன்னிடம் ஒப்படைப்பார். அவர்கள் ஒருவழியாய் உனக்கு எதிராக வருவர்: ஆனால் ஏழு வழியாய் உன் கண்களுக்கு முன்னே ஓடிப்போவர்.
8.     களஞ்சியங்களிலும், நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் நீ ஆசி பெறும்படி ஆண்டவர் ஆணையிடுவார். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில் நீ ஆசி பெற்றிடுவாய்.
9.     கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவர்தம் வழிகளில் நடந்தால், அவர் உனக்கு ஆணையிட்டுச் சொன்னபடி, உன்னைத் தம் தூய மக்களினமாக நிலைநிறுத்துவார்.
10.     அப்போது, பூவுலகில் மக்களினத்தார் அனைவரும், ஆண்டவர் தம் பெயரை உனக்கு வழங்கி இருக்கிறார் எனக்கண்டு உனக்கு அஞ்சுவர்.
11.     உனக்குக் கொடுப்பதாக, உன் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில், உன் கருவின் கனி உன் கால் நடைகளின் ஈற்றுகள், உன் நிலத்தின் பயன்கள் ஆகியவற்றில் நலன்களால் நீ நிறைவு பெறும்படி ஆண்டவர் அருள்வார்.
12.     தக்க காலத்தில் உன் நிலத்திற்கு மழை கொடுக்கவும், அதனால் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்கவும், தம் நன்மைகளின் கருவூலமாகிய வானத்தை ஆண்டவர் உனக்காகத் திறப்பார். நீ பல்வேறு இனத்தாருக்கும் கடன் கொடுப்பாய்: நீயோ கடன் வாங்கமாட்டாய்.
13.     இன்று நான் உனக்கு விதிக்கும் உன் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவற்றைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. அப்போது, ஆண்டவர் உன்னை முதல்வனாக ஆக்குவாரே அன்றி, கடையனாக ஆக்கமாட்டார். நீ உயர்வாயேயன்றித் தாழ்ந்து போகமாட்டாய்.
14.     எனவே, நான் இன்று உனக்குக் கட்டளையிடும் எதிலிருந்தும் விலகாதே. வலமோ இடமோ விலகி நடக்காதே, வேற்றுத் தெய்வங்களின் பின்சென்று அவற்றுக்கு ஊழியம் செய்யாதே.
15.     ஆனால், உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடாமலும், இன்று நான் உனக்கு விதிக்கும் இந்தக் கட்டளைகளையும், நியமங்களையும் கடைப்பிடிப்பதில் கருத்தின்றியும் இருந்தால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து உன்னில் நிலைக்கும்.
16.     நீ நகரிலும் சபிக்கப்படுவாய், வயல்வெளியிலும் சபிக்கப்படுவாய்.
17.     கூடையும் உன் மாவு பிசையும் தொட்டியும் சபிக்கப்படும்.
18.     கருவின் கனியும், உன் நிலத்தின் பயனும், உன் மாடுகளின் கன்றுகளும், உன் ஆடுகளின் குட்டிகளும் சபிக்கப்படும்.
19.     நீ வருகையிலும் சபிக்கப்படுவாய், செல்கையிலும் சபிக்கப்படுவாய்.
20.     நீ மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களிலும், நீ கெட்டு விரைவில் அழியுமட்டும், ஆண்டவர் உன்மீது சாபமும், குழப்பமும் பேரழிவுமே வரச்செய்வார். ஏனெனில் உன் பொல்லாத செயல்களினால் என்னைவிட்டு விலகிவிட்டாய்.
21.     நீ உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டிலிருந்து, ஆண்டவர் உன்னை அழிக்குமட்டும், கொள்ளை நோய் உன்னைவிடாது தொற்றிக்கொள்ளச் செய்வார்.
22.     உருக்கு நோய், காய்ச்சல், கொப்புளம், எரிவெப்பம், வாள், இடி, நச்சுப்பனி ஆகியவற்றால் ஆண்டவர் உன்னை வதைப்பார்.
23.     உன்னை தலைக்கு மேலுள்ள வானம் வெண்கலமாகவும் உனக்குக் கீழேயுள்ள நிலம் இரும்பாகவும் இருக்கும்.
24.     ஆண்டவர் புழுதியையும் தூசியையும் உன் நாட்டின் மழையாகப் பொழியச் செய்வார். நீ அழியுமட்டும் அவை வானத்திலிருந்து உன்மேல் விழும்.
25.     பகைவர்களுக்கு முன்னால் நீ முறியடிக்கப்படுமாறு ஆண்டவர் உன்னை விட்டுவிடுவார். ஒரு வழியாய் அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்த நீ ஏழு வழியாய் அவர்கள் கண்களுக்கு முன்னே ஓடிப்போவாய். உனக்கு நேர்வதைக்கண்டு பூவுலகின் எல்லா நாடுகளும் பேரச்சம் கொள்ளும்.
26.     பிணம் வானத்துப் பறவைகள் அனைத்திற்கும் நிலத்தின் விலங்குகளுக்கும் இரையாகும். அவற்றை விரட்டியடிப்பார் எவரும் இரார்.
27.     எகிப்தின் கொப்புளங்களாலும், மூல நோயாலும், சொறியினாலும், சிரங்கினாலும், ஆண்டவர் உன்னை வதைப்பார். அவற்றிலிருந்து நீ நலம் பெற முடியாது.
28.     மூளைக்கோளாறினாலும், பார்வையிழப்பாலும், மனக் குழப்பத்தாலும் ஆண்டவர் உன்னை வதைப்பார்.
29.     பார்வையற்றோன், இருளில் தடவித்திரிவது போல் நீ பட்டப்பகலில் தடவித்திரிவாய். உன் முயற்சிகளில் நீ வெற்றிபெறமாட்டாய். நீ எந்நாளும் ஒடுக்கப்படுகிறவனும் பறி கொடுக்கிறவனுமாய் இருப்பாய். உன்னை விடுவிக்க எவரும் இரார்.
30.     நீ ஒரு பெண்ணை மணமுடிப்பாய்: வேறு ஒருவன் அவளோடு கூடி வாழ்வான். நீ ஒரு வீட்டைக்கட்டுவாய்: ஆனால் அதில் நீ குடியிருக்க மாட்டாய். நீ திராட்சைத் தோட்டத்தை அமைப்பாய்: ஆனால், அதன் பயனை அனுபவிக்கமாட்டாய்.
31.     மாடு உன் கண்களுக்கு முன்னால் வெட்டப்படும்: ஆனால் அதிலிருந்து நீ உண்ண முடியாது. உன் கழுதை உன் கண்களுக்கு முன்னால் கொள்ளையிடப்படும்: அது உன்னிடம் திருப்பிக்கொடுக்கப்படமாட்டாது. உன் ஆடுகள் உன் பகைவனுக்குக் கொடுக்கப்படும். அவற்றை விடுவிப்பார் எவரும் இரார்.
32.     கண்முன்னே, உன் புதல்வரும் புதல்வியரும் வேற்று மக்களுக்குக் கொடுக்கப்படுவர். அவர்களைப் பார்க்க நாள்தோறும் உன் கண்கள் ஏங்கி எதிர்பார்த்துப் பூத்துப்போகும். உன் கைகளும் வலிமையற்றுப்போகும்.
33.     நீ அறியாத மக்களினம் உன் நிலத்தின் கனிகளையும் உன் உழைப்பின் பயனையும் உண்ணும். நீயோ எந்நாளும் ஒடுக்கப்பட்டவனும் நொறுக்கப்பட்டவனுமாய் இருப்பாய்.
34.     உன்கண்கள் காணும் இக்காட்சிகளால் உனக்குப் பைத்தியம் பிடிக்கும்.
35.     முழங்கால்களிலும் தொடைகளிலும் தோன்றும், குணப்படுத்தவே முடியாத, கொடிய கொப்புளங்களால் ஆண்டவர் உன்னை வதைப்பார். உன் உள்ளங்கால்முதல் உச்சந்தலைவரை அது பரவும்.
36.     உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திய அரசனையும், உனக்கும், உன் மூதாதையருக்கும் தெரியாத இனத்தாரிடம் ஆண்டவர் போகச் செய்வார். அங்கு மரத்தாலும் கல்லாலுமான வேற்றுத் தெய்வங்களுக்கு நீ ஊழியம் செய்வாய்.
37.     ஆண்டவர் உன்னைக் கொண்டுபோய்விடும் அனைத்து மக்கள் நடுவிலும், நீ அருவருப்புப் பொருளாக, கேலிப் பழமொழியாக, நகைப்புச் சொல்லாக ஆகிவிடுவாய்.
38.     வயலில் மிகுதியாக விதைத்துக் கொஞ்சமே அறுப்பாய்: ஏனெனில் வெட்டுக் கிளிகள் அதைத்தின்று அழித்துவிடும்.
39.     திராட்சைத் தோட்டங்களை அமைத்துப் பேணுவாய்: ஆயினும் இரசம் குடிக்கவும் மாட்டாய்: பழங்களைச் சேகரிக்கவும் மாட்டாய்: ஏனெனில் புழுக்கள் அவற்றைத் தின்றழிக்கும்.
40.     ஒலிவ மரங்கள் உனக்குரிய நிலமெங்கும் இருக்கும்: ஆனால் நீ எண்ணெய் தேய்க்க மாட்டாய். ஏனெனில் உன் ஒலிவம்பிஞ்சுகள் உதிர்ந்துவிடும்.
41.     நீ புதல்வரையும் புதல்வியரையும் பெற்றெடுப்பாய்: ஆயினும் அவர்கள் உனக்குரியவர்களாக இருக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அடிமைகளாக கொண்டு போகப்படுவர்.
42.     மரங்கள் எல்லாவற்றையும், உன் நிலத்தின் பயனையும் வெட்டுக்கிளி உடைமையாக்கிக் கொள்ளும்.
43.     உன்னிடையே வாழும் அன்னியர் உன்னைவிட மேம்பட்டு மேலும் மேலும் உயர்வர்: நீயோ படிப்படியாகத் தாழ்ந்து போவாய்.
44.     உனக்கு கடன் கொடுக்க அவர்களால் முடியும். அவர்களுக்குக் கடன் கொடுக்க உன்னால் இயலாது. அவர்கள் முதல்வராய் இருக்க நீ கடையன் ஆவாய்.
45.     இந்தச் சாபங்கள் அனைத்தும் உன்னைத் துரத்திவந்து பிடித்து, நீ அழியுமட்டும் உன்னை வதைக்கும். ஏனெனில், நான் உனக்குக் கட்டளையிட்ட அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நீ கடைப்பிடிக்கவில்லை: உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுக்கவுமில்லை.
46.     இச்சாபங்கள் உனக்கும் உன் வழிமரபினர்க்கும் அடையாளமாகவும் வியத்தகு செயலாகவும் என்றும் இருக்கும்.
47.     எல்லா நலன்களும் நிறைந்திருக்கையில் நீ உன் கடவுளாகிய ஆண்டவருக்கு மன மகிழ்வோடும் இதயக்களிப்போடும் ஊழியம் செய்யவில்லை.
48.     எனவே, பசியோடும், தாகத்தோடும், வெற்றுடம்போடும் யாது மற்ற நிலையிலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கெதிராக அனுப்பும் உன் பகைவர்களுக்கு நீ பணிவிடை செய்வாய். அவர்கள் உன்னை அழித்தொழிக்கும் மட்டும் இரும்பு நுகத்தடியை உன் கழுத்தில் வைப்பர்.
49.     வெகு தொலையிலிருந்து, பூவுலகின் கடைக்கோடியிலிருந்து, ஓர் இனத்தை ஆண்டவர் உனக்கு எதிராக எழச்செய்வார். அது கழுகைப்போல மிக வேகமாக வரும். அந்த இனத்தின் மொழி உனக்குப் புரியாது.
50.     அந்த இனம் கொடிய முகம் கொண்டது: முதியவர்களை மதிக்காது: இளைஞர்களுக்கு இரக்கம் காட்டாது.
51.     நீ அழிந்து போகும்வரை அந்த இனம் உன் கால்நடைகளின் ஈற்றுகளையும், உன் நிலத்தின் பயனையும் உண்ணும். உன்னை அழிக்கும்வரை, உன் தானியத்தையும், இரசத்தையும், எண்ணெயையும், உன் மாடுகளின் கன்றுகளையும், உன் ஆடுகளின் குட்டிகளையும் அந்த இனம்விட்டு வைக்காது.
52.     உனது நாடெங்கும், நீ நம்பியிருக்கும் உயர்ந்தவையும், அரண்சூழ் கொத்தளங்கள் கொண்டவையுமான மதிற்சுவர்கள் விழும்வரை, அந்த இனம் உன் நகர் வாயில்களையெல்லாம் முற்றுகையிடும். ஆம், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுத்த நாடெங்கிலுமுள்ள உன் நகர் வாயில்களை முற்றுகை இடும்.
53.     உன் பகைவன் முற்றுகையிட்டு உன்னை எவ்வளவு வாட்டி வதைப்பானெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுத்துள்ள உன் கருவின் கனிகளான உன் புதல்வர், புதல்வியரின் சதையைக்கூட உண்பாய்.
54.     உன் பகைவன், உன் நகர்கள் அனைத்தையும் முற்றுகையிட்டு, உன்னை எவ்வளவு வாட்டி வதைப்பானெனில், உங்களிடையே மிக மென்மையான இனிய குணத்தோடு வளர்ந்தவன், இனி எதுவுமே இல்லாததால், தான் உண்ணும் தன் பிள்ளையின் சதையைத் தன் சகோதரனுக்கோ, தன் அன்பு மனைவிக்கோ, எஞ்சியுள்ள தன் பிள்ளைகளுக்கோ கொடுக்கமாட்டான்:
55.     உணவின் பொருட்டு அவர்களை வெறுப்பான்.
56.     உன் பகைவன், உன் நகர்கள் அனைத்தையும் முற்றுகையிட்டு, உன்னை எவ்வளவு வாட்டி வதைப்பானெனில், உங்களிடையே மிக மென்மையான இனிய குணத்தோடு வளர்ந்தவள், தன் உள்ளங்காலைத் தரையில் நன்றாக ஊன்றி நடக்காத அளவு இனிமையும் மென்மையும் மிக்கவள், இனி எதுவுமே இல்லாததால், குழந்தை பிறந்த உடனே தன் குழந்தையையும் அதனோடு வருகின்ற கழிவுகளையும் மறைவாக உண்பாள்:
57.     எவருக்கும் கொடுக்க மாட்டாள். உணவின் பொருட்டுத் தன் இனிய கணவனையும், தன் புதல்வர் புதல்வியரையும் வெறுப்பாள்.
58.     உன் கடவுளாகிய ஆண்டவர் என்னும் மாட்சிமிகு, அச்சந்தரும் இந்தத் திருப்பெயருக்கு அஞ்சும்படி, இந்நூலில் எழுதியுள்ள திருச்சட்டத்தின் அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு.
59.     இல்லையெனில், உன்மீதும் உன் வழிமரபினர்மீதும் விவரிக்க இயலாத வாதைகளை, கொடிய, நீங்கா வாதைகளை, கடின, நீங்கா நோய்களை ஆண்டவர் வரச்செய்வார்.
60.     மேலும், நீ கண்டு அஞ்சிய, அனைத்து எகிப்திய கொள்ளை நோய்களையெல்லாம் உன்மீது வரச் செய்வார். அவை உன்னைத் தொற்றிக்கொள்ளும்.
61.     திருச்சட்ட நூலில் எழுதப்படாத எல்லா நோய்களையும் வாதைகளையும் நீ அழிந்து போகும்வரை ஆண்டவர் உன்மீது வரச்செய்வார்.
62.     எண்ணிக்கையில் வானத்து விண்மீன்களைப் போன்று இருந்த உங்களுள் மிகச் சிலரே எஞ்சியிருப்பீர்கள். ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீங்கள் செவிகொடுக்கவில்லை.
63.     உங்களுக்கு நன்மைகள் செய்து உங்களைப் பெருகச் செய்வதில் மகிழ்ந்த ஆண்டவர், உங்கள்மேல் அழிவைக் கொணர்ந்து உங்களை வேரறுப்பதில் மகிழ்வார். நீங்கள் உடைமையாக்கிக்கொள்ளப்போகும் நாட்டிலிருந்து நீங்கள் பிடுங்கி எறியப்படுவீர்கள்.
64.     உலகின் ஒரு முனைமுதல் மறுமுனைவரை உள்ள எல்லா மக்களினங்களிடையிலும் ஆண்டவர் உன்னைச் சிதறடிப்பார். அங்கு, நீயும் உன் மூதாதையரும் அழியாத, மரத்தாலும் கல்லாலும் ஆன வேற்றுத் தெய்வங்களுக்கு நீ ஊழியம் செய்வாய்.
65.     அந்த மக்களினங்களிடையே உனக்கு ஓய்வு இராது: உன் உள்ளங்கால்கள் தங்கி இளைப்பாற இடம் இராது. அங்கே ஆண்டவர் நடுநடுங்கும் இதயத்தையும், பஞ்சடைந்த கண்களையும், தளர்வுற்ற மனத்தையும் உனக்குக் கொடுப்பார்.
66.     உயிர் உனக்குக் கேள்விக் குறியாகும். உன் வாழ்வுமீது நம்பிக்கையிழந்து இரவும் பகலும் அச்சத்தோடு வாழ்வாய்.
67.     கண்களால் காணும் காட்சிகளால் உன் இதயம் அச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதால், காலையானதும், இது மாலையாக இருக்கக் கூடாதா? என்பாய்: மாலையானதும், இது காலையாக இருக்கக்கூடாதா? என்பாய்.
68.     நீங்கள் இனி ஒரு நாளும் மீண்டும் மேற்கொள்ள மாட்டீர்கள் என எந்தப் பயணத்தைப்பற்றி நான் உங்களுக்கு வாக்களித்திருந்தேனோ, அந்தப் பயணத்தைக் கப்பல்களில் மேற்கொண்டு நீங்கள் எகிப்துக்குத் திரும்பிச் செல்லுமாறு ஆண்டவர் செய்வார். அங்கே உங்களை நீங்களே அடிமைகளாக, ஆண், பெண் அடிமைகளாக, உங்கள் பகைவர்களுக்கு விற்க முயல்வீர்கள்: ஆனால் உங்களை எவரும் விலைக்கு வாங்கமாட்டார்.

அதிகாரம் 29.     .


1.     ஓரேபில் ஆண்டவர் இஸ்ரயேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைத் தவிர, மேவாபு நாட்டில் அவர் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளுமாறு மோசேக்குக் கட்டளையிட்டு உரைத்த வார்த்தைகள் பின்வருமாறு:
2.     மோசே இஸ்ரயேலர் அனைவரையும் வரவழைத்துக் கூறியது: எகிப்து நாட்டில் பார்வோனுக்கும், அவன் அலுவலர் அனைவருக்கும், அவன் நாடு முழுமைக்கும் உங்கள் கண்முன்பாக ஆண்டவர் செய்தவற்றை நீங்கள் கண்டீர்கள்.
3.     கொடிய சோதனைகளையும், அடையாளங்களையும், அருஞ்செயல்களையும், வியத்தகு செயல்களையும் அங்கே உங்கள் கண்களால் கண்டீர்கள்.
4.     ஆயினும், புரிந்துகொள்ளும் உள்ளத்தையும், காண்கின்ற கண்களையும், கேட்கின்ற செவிகளையும் இந்நாள் வரை ஆண்டவர் உங்களுக்குத் தரவில்லை.
5.     நாற்பது ஆண்டுகள் நான் உங்களைப் பாலைநிலத்தில் கூட்டிவந்தேன். அப்பொழுது உங்கள் மேலுள்ள ஆடைகள் நைந்து போகவில்லை: உங்கள் காலிலுள்ள காலணிகள் பழுதடைந்து போகவுமில்லை.
6.     நீங்கள் அப்பம் உண்ணவோ, இரசம் குடிக்கவோ, மதுபானம் அருந்தவோ இல்லை. இதனால், நானே கடவுளாகிய ஆண்டவர் என்று நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
7.     நீங்கள் இந்த இடத்திற்கு வந்தபோது எஸ்போனின் அரசனாகிய சீகோனும், பாசானின் அரசனாகிய ஓகும் நமக்கு எதிராகப் போர்புரிய வந்தனர். நாம் அவர்களை முறியடித்தோம்.
8.     அவர்களது நாட்டைப் பிடித்து, ரூபனியருக்கும், காத்தியருக்கும், மனாசேயின் பாதிக் குலத்தாருக்கும் உரிமைச் சொத்தாகக் கொடுத்தோம்.
9.     எனவே, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள். அப்போது நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களிலும் நீங்கள் நிறைவு பெறுவீர்கள்.
10.     இன்று நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நிற்கின்றீர்கள். உங்கள் குலங்களின் தலைவர்களும், உங்கள் பெரியோர்களும், உங்கள் அலுவலர்களும், இஸ்ரயேலின் ஆடவர் ஏனையோரும்.
11.     உங்கள் சிறுவரும், உங்கள் மனைவியரும், உங்கள் பாளையத்தில் உங்களோடு உள்ள அன்னியராகிய விறகு வெட்டியும் தண்ணீர் சுமப்பவனும் ஆகிய எல்லோரும் நிற்கின்றீர்கள்.
12.     ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய உங்கள் மூதாதையருக்கு உங்கள் கடவுளாகிய ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னது போலவும், அவர் உங்களுக்கு வாக்களித்தது போலவும், அவர் இன்று உங்களைத் தம் சொந்த மக்களாக நிலைநிறுத்தி உங்கள் கடவுளாக இருக்குமாறும்,
13.     உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இன்று உங்களோடு செய்யப்போகின்ற அவர்தம் உடன்படிக்கையிலும் வாக்குறுதியிலும் பங்கு கொள்ளுமாறும் நீங்கள் நிற்கின்றீர்கள்.
14.     வாக்குறுதியுடன் கூடிய இந்த உடன்படிக்கையை உங்களோடு மட்டும் அவர் செய்து கொள்ளவில்லை.
15.     மாறாக, இங்கு நம்மோடு நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நிற்கின்றவர்களோடும், இன்று இங்கு நம்மோடு இல்லதாவர்களோடும் செய்துகொள்கிறார்.
16.     எகிப்து நாட்டில் நாம் எவ்வாறு குடியிருந்தோம் என்பதையும் வேற்றினங்களிடையே நாம் எவ்வாறு கடந்து வந்தோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
17.     அவர்களின் அருவருப்புகளை, மரத்தாலும், கல்லாலும், வெள்ளியாலும் பொன்னாலுமான அவர்களின் தெய்வச் சிலைகளை நீங்கள் பார்த்தீர்கள்.
18.     அந்த வேற்றினங்களின் தெய்வங்களுக்குப் பணிபுரியுமாறு நம் கடவுளாகிய ஆண்டவரைவிட்டு விலகிச் செல்லும் மனமுள்ள ஆணோ, பெண்ணோ, குடும்பமோ, குலமோ உங்களிடையே இன்று இல்லாதிருக்கட்டும். நச்சுத்தன்மையும் கறையான் அரிப்பும் கொண்ட வேரைப் போன்ற எவரும் உங்களிடையே இல்லாதிருக்கட்டும்.
19.     அத்தகையோர் இந்த வாக்குறுதியின் வார்த்தைகளைக் கேட்ட பின்பும், நாங்கள் இதயப்பிடிவாதத்தோடு நடந்தாலும், எங்களுக்கு எல்லாம் நலமாகும் என்று சொல்லித் தங்களையே தேற்றிக் கொள்வார்களாகில், பசுமையானதும் உலர்ந்ததும் சேர்ந்தழியும்.
20.     ஆண்டவர் அவர்களுக்கு இரக்கம் காட்ட மாட்டார். மாறாக ஆண்டவரின் சினமும் சகிப்பின்மையும் அவர்கள் மீது கனன்றெரியும். இந்த நூலில் எழுதப்பட்டுள்ள சாபங்கள் அனைத்தும் அவர்கள்மேல் விழும். ஆண்டவர் அவர்களது பெயரை மண்ணுலகினின்று துடைத்து விடுவார்.
21.     திருச்சட்ட நூலில் எழுதியுள்ள உடன்படிக்கையின் சாபங்களுக்கு ஏற்ப, ஆண்டவர் அத்தகையோரை இஸ்ரயேலின் குலங்கள் அனைத்தினின்றும் பிரித்தெடுத்துத் தீமைக்கு உள்ளாக்குவார்.
22.     அப்பொழுது, உங்களுக்குப் பின்வரும் தலைமுறையான உங்கள் பிள்ளைகளும், நெடுந்தொலை நாட்டிலிருந்து வரும் அன்னியரும், ஆண்டவர் இந்த நாட்டின்மேல் வரச்செய்த வாதைகளையும், நோய்களையும் காணும்போது,
23.     ஆண்டவர் தம் சினத்திலும் சீற்றத்திலும் வேரறுத்த சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் போன்ற இடங்கள் அழிந்ததைப்போல, இந்த நாட்டின் நிலம் முழுவதும், கந்தகமும் உப்புமாக வெந்துபோய் விதைப்பும், விளைச்சலுமின்றி யாதொரு புற்பூண்டும் முளைக்காமல் இருப்பதைக் காணும் போது,
24.     வேற்றினத்தார் அனைவரும் ஆண்டவர் ஏன் இவ்வாறு இந்த நாட்டுக்குச் செய்தார்? இந்தக் கடுஞ்சீற்றம் கனன்றெழக் காரணம் என்ன? என்று கேட்பர்.
25.     அதற்கு மறுமொழியாக, அவர்களுடைய மூதாதையரின் கடவுள் அவர்களை எகிப்திலிருந்து கூட்டி வரும்பொழுது, அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை அவர்கள் விட்டு விலகினர்.
26.     அவர் அவர்களுக்குக் கொடுக்காதவையும் அவர்கள் அறியாதவையுமான வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி அவற்றுக்கு ஊழியம் செய்தனர்.
27.     ஆகவே, ஆண்டவர் சீற்றம் கொண்டு, இந்நூலில் எழுதப்பட்டுள்ள சாபங்கள் அனைத்தையும் இந்நாட்டின்மீது வரச்செய்தார்.
28.     அவர் தம் சினத்தாலும், கோபத்தாலும், சீற்றத்தாலும், அவர்களை அவர்களது நாட்டிலிருந்து வேரறுத்தார். இந்நாளில் இருப்பது போல் அவர்களை வேற்று நாட்டுக்கு விரட்டியடித்தார் என்று சொல்லப்படும்.
29.     எனவே, மறைவானவை நம் கடவுளாகிய ஆண்டவருக்கு உரியவை. வெளிப்படுத்தப்பட்டவையோ, இத்திருச்சட்டத்தின் வார்த்தைகளைக் கடைப்பிடிக்குமாறு, நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவை.

அதிகாரம் 30.     .


1.     இவை எல்லாம் நிகழும்போது, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைச் சிதறடித்துள்ள மக்களினங்களுக்கிடையே வாழ்கையில், நான் உனக்கு முன்னே வைத்த ஆசி, சாபம் ஆகியவற்றை, உன் உள்ளத்தில் சிந்தனை செய்.
2.     நான் இன்று உனக்கு அளிக்கும் அனைத்துக் கட்டளைகளின்படி உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா. நீயும் உன் பிள்ளைகளும் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால்,
3.     கடவுளாகிய ஆண்டவர் உன்னை அடிமைத்தனத்தினின்று விடுவிப்பார். உன்மேல் இரக்கம்கொண்டு, உன்னை அவர் சிதறடித்துள்ள எல்லா நாடுகளிலுமிருந்து மீண்டும் கூட்டிச் சேர்ப்பார்.
4.     நீ வானத்தின் கடையெல்லைவரை துரத்தப்பட்டிருந்தாலும், உன் கடவுளாகிய ஆண்டவர், அங்கிருந்து உன்னைக் கூட்டிச் சேர்ப்பார். ஆண்டவர் அங்கிருந்து உன்னை அழைத்துக் கொண்டு வருவார்.
5.     கடவுளாகிய ஆண்டவர், உன் மூதாதையர் உடைமையாக்கியிருந்த நாட்டுக்குள் உன்னைக் கொணர்வார். நீயும் அதை உடைமையாக்கிக்கொள்வாய். உனக்கு நன்மைகள் ஈந்து உன் மூதாதையரைவிட உன்னைப் பெருகச் செய்வார்.
6.     கடவுளாகிய ஆண்டவர் உன் உள்ளத்தையும் உன் வழிமரபின் உள்ளத்தையும் பண்படுத்துவார். அதனால் உன் கடவுளாகிய ஆண்டவர்மீது நீ முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அன்பு கூர்வாய். அப்போது, நீயும் வாழ்வு பெறுவாய்.
7.     கடவுளாகிய ஆண்டவர், இந்தச் சாபங்களை எல்லாம் உன் பகைவர்மீதும், உன்னை வெறுப்பவர்மீதும், உன்னைக் கொடுமைப்படுத்துவோர் மீதும் வரச்செய்வார்.
8.     நீ ஆண்டவரிடம் திரும்பிவா. அவரது குரலுக்குச் செவிகொடு. நான் இன்று உனக்குக் கட்டளையிடும் அனைத்தையும் கடைப்பிடி.
9.     நீ மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களிலும் நீ நிறைவு பெறும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் செய்வார். உனது கருவின் கனி, உன் கால்நடைகளின் ஈற்று, உனது நிலத்தின் பயன் அனைத்தும் நலமே அமையுமாறு செய்வார். உன் மூதாதையரில் மகிழ்வு கொண்டது போல், உன் நன்மையின் பொருட்டு உன்மீது மீண்டும் மகிழ்வார்.
10.     எனவே, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடு. சட்ட நூலில் எழுதப்பட்டுள்ள அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடி. உன் முழ இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பு.
11.     ஏனெனில், இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்தக் கட்டளை உனக்குப் புரியாதது இல்லை: உன்னிடமிருந்து வெகு தொலையிலும் இல்லை.
12.     நாம் அதைக்கேட்டு, நிறைவேற்றுமாறு, நமக்காக யார் விண்ணகத்துக்குப் போய், அதைக் கொண்டு வருவார் என்று நீ சொல்லாதவாறு, அது விண்ணில் இல்லை.
13.     நாம் அதைக்கேட்டு நிறைவேற்றுமாறு, நமக்காக யார் கடல்கடந்து சென்று, அதை நம்மிடம் கொண்டு வருவார் என்று நீ சொல்லாதவாறு, அது கடல்களுக்கு அப்பால் இல்லை.
14.     ஆனால், நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது: உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.
15.     இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன்.
16.     அது இதுதான்: இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு. அவரைப் பின்பற்றி அவரது வழியில் நட. அவரது கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் கடைப்பிடி. அப்போது நீ வாழ்வாய், நீ பலுகுவாய். நீ உடைமையாகக் கொள்ளப்போகும் நாட்டில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசிவழங்குவார்.
17.     ஆனால், உனது உள்ளம் விலகிச் சென்று, நீ செவிகொடாமல் கெட்டலைந்து, வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றுக்குப் பணிவிடை புரிந்தால்,
18.     இன்று நான் உனக்கு அறிக்கையிட்டுக் கூறுகிறேன். நீ நிச்சயம் அழிந்துபோவாய். நீ உரிமையாக்கிக் கொள்ளுமாறு, யோர்தானைக் கடந்து சென்றடையும் பூமியில் உன் வாழ்நாள் நீடித்திருக்காது.
19.     மேல் இன்று நான் விண்ணையும் மண்ணையும் சான்றாக அழைத்து, வாழ்வையும் சாவையும், ஆசியையும் சாபத்தையும் உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உனது வழித்தோன்றல்களும் வாழும் பொருட்டு வாழ்வைத் தேர்ந்துகொள்.
20.     கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு: அவரது குரலுக்குச் செவிகொடு: அவரையே பற்றிக் கொள். ஏனெனில், அவரே உனது வாழ்வு: அவரே உன் நீடிய வாழ்வு. அதனால், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில் நீ குடியேறுவாய்.

அதிகாரம் 31.     .


1.     மோசே தொடர்ந்து பின்வரும் வார்த்தைகளை இஸ்ரயேலர் அனைவருக்கும் கூறினார்:
2.     அவர் சொன்னது: இன்று எனக்கு வயது நூற்று இருபது. இனி என்னால் நடமாட இயலாது. மேலும், நீ யோர்தானைக் கடக்க மாட்டாய் என்று ஆண்டவர் எனக்குக் கூறியுள்ளார்.
3.     கடவுளாகிய ஆண்டவரே உன்முன் செல்வார். அவரே உன் முன்னின்று இந்த வேற்றினங்களை அழிப்பார். நீ அவற்றுக்கு உரியவற்றை உடைமையாக்கிக் கொள்வாய். ஆண்டவர் சொன்னபடி, யோசுவா உனக்கு முன்பாகச் செல்வான்.
4.     எமோரியரின் மன்னர்களான சீகோனுக்கும் ஓகுக்கும் அவர்களின் நாட்டுக்கும் செய்ததுபோல அவர்களை அழித்தது போல ஆண்டவர் அவற்றுக்கும் செய்வார்.
5.     ஆண்டவர் அவர்களை உங்களிடம் ஒப்படைப்பார். நான் இன்று உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்துக் கட்டளைகளின்படி நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள்.
6.     வலிமைபெறு: துணிவுகொள்: அஞ்சாதே, அவர்கள் முன் நடுங்காதே: ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவரே உனக்குமுன் செல்பவர்! அவர் உன்னை விட்டு விலக மாட்டார்: உன்னைக் கைவிடவும் மாட்டார்.
7.     பின்னர் மோசே யோசுவாவை வரவழைத்து, இஸ்ரயேலர் அனைவர் முன்னிலையிலும் அவரிடம் கூறியது: வலிமை பெறு: துணிவுகொள்: இவர்களுக்குக் கொடுப்பதாக அவர்களின் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள், இந்த மக்களோடு நீ செல்லவேண்டும். அதை இவர்கள் உரிமையாக்கிக் கொள்ளமாறு செய்யவேண்டும்.
8.     ஆண்டவரே உனக்குமுன் செல்வார். அவர் உன்னோடு இருப்பார். அவர் உன்னை விட்டு விலக மாட்டார். அவர் உன்னைக் கைவிடவும் மாட்டார் அஞ்சாதே, திகைக்காதே!
9.     பின்னர், மோசே இந்தத் திருச்சட்டநூலை எழுதி, ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சுமக்கிற லேவியின் வழி வந்த குருக்களிடமும் இஸ்ரயேலின் தலைவர்கள் அனைவரிடமும் ஒப்படைத்தார்.
10.     மேலும் மோசே அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது: விடுதலை ஆண்டாகிய ஒவ்வொரு ஏழாம் ஆண்டின் முடிவில் வரும் கூடார விழாவில்,
11.     உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்துகொள்ளும் இடத்தில், இஸ்ரயேலர் அனைவரும் அவர் முன்னிலையில் வந்து கூடும்போது, அவர்கள் அனைவரும் கேட்க இத்திருச்சட்ட நூலை அவர்களுக்கு உரக்க வாசியுங்கள்.
12.     மக்களை ஒன்று திரட்டுங்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் உங்கள் நகரில் வாழும் அன்னியரும் அதைக் கேட்டு அறிந்து கொள்ளட்டும். அவர்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, இத்திருச்சட்டத்தின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாய் இருக்கட்டும்.
13.     இவற்றை அறியாத அவர்களுடைய புதல்வர்களும், நீங்கள் யோர்தானைக் கடந்து, உடைமையாக்கிக் கொள்ளப்போகும் மண்ணில் வாழும் நாளெல்லாம், இவற்றைக் கேட்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சக் கற்றுக் கொள்ளட்டும்.
14.     பின்னர் ஆண்டவர் மோசேயிடம், நீ இறக்கும் நாள் நெருங்கிவிட்டது. யோசுவாவைக் கூப்பிடு. இருவரும் சந்திப்புக் கூடாரத்துக்கு வாருங்கள். நான் அவனுக்குப் பணிப் பொறுப்புத் தரவேண்டும் என்றார். அவ்வாறே மோசேயும் யோசுவாவும் போய்ச் சந்திப்புக் கூடாரத்தில் நின்றனர்.
15.     ஆண்டவர் கூடாரத்தில் மேகத்தூணில் தோன்றினார். மேகத்தூண் கூடாரத்தின் நுழைவாயிலில் நின்றது.
16.     அப்பொழுது ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ உன் மூதாதையரோடு துஞ்சப்போகிறாய். இந்த மக்களோ தாங்கள் போகவிருக்கும் நாட்டில் கிளர்ந்தெழுந்து வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றிக் கள்ள உறவு கொள்வர். அவர்கள் என்னைவிட்டு விலகி, நான் அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை மீறுவர்.
17.     அப்போது, எனது சினம் அந்நாளில் அவர்களுக்கு எதிராகக் கனன்றெரியும். நான் அவர்களைக் கைவிடுவேன். அவர்களிடமிருந்து என் முகத்தை மறைத்துக் கொள்வேன். அவர்கள் அறியும்படி பல தீங்குகளும், இன்னல்களும் அவர்கள் மேல் வரும். அந்நாளில் அவர்கள் நம் கடவுள் நம்மோடு இல்லாததால் அன்றோ இத்தகைய தீங்குகள் நமக்கு வந்துள்ளன என்பர்.
18.     அவர்கள் வேற்றுத் தெய்வங்களை அணுகி, செய்த தீய செயல்கள் அனைத்தின் பொருட்டும், அந்நாளில் நான் என்முகத்தை மறைத்துக் கொள்வேன்.
19.     எனவே, இப்பொழுது நீ இந்தப்பாட்டை எழுது. அதை இஸ்ரயேல் மக்களுக்குக் கற்றுக்கொடு. அதை அவர்கள் நாவில் வை. அதனால், இந்தப் பாடலே இஸ்ரயேல் மக்களுக்கு எதிராக நான் தரும் சான்றாக விளங்கும்.
20.     ஏனெனில், அவர்களின் மூதாதையருக்கு ஆணையிட்டுச் சொன்ன, பாலும் தேனும் நிறைந்து வழியும் நாட்டுக்குள் நான் அவர்களைக் கொண்டு போனதும் அவர்கள் உண்டு நிறைவு பெற்று கொழுத்துப் போவர். அப்போது அவர்கள் வேற்றுத் தெய்வங்களை அணுகி அவற்றுக்கு ஊழியம் செய்து, எனக்குச் சினமூட்டுவர்: என் உடன்படிக்கையையும் மீறுவர்.
21.     பல்வேறு தீங்குகளும் இன்னல்களும் அவர்கள் மேல் வரும்போது, அவர்களுடைய மரபினரின் வாய் பாடலை மறந்து போகாதிருக்கும். இப்பாடலே அவர்களுக்கு எதிராகச் சான்று பகரும். ஏனெனில் இப்பொழுதே, அவர்கள் தீட்டியுள்ள திட்டத்தை நான் ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள் அவர்களைக் கொண்டுபோகுமுன்பே அறிவேன் என்றார்.
22.     ஆகையால், மோசே இப்பாடலை அன்றே எழுதி இஸ்ரயேல் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.
23.     மேலும், ஆண்டவர் நூனின் மகனாகிய யோசுவாவுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: வலிமை பெறு, துணிவு கொள், ஏனெனில் நீ இஸ்ரயேல் மக்களை நான் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள் கொண்டு போவாய். நான் உன்னோடு இருப்பேன் என்றார்.
24.     மோசே இத்திருச்சட்டத்தின் வார்த்தைகளை ஒரு நூலாய் எழுதி முற்றிலும் முடித்த பின்பு,
25.     ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கி வந்த லேவியரை நோக்கிக் கட்டளையிட்டுக் கூறியது:
26.     இத்திருச்சட்ட நூலை எடுத்து, உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின் அருகில் வையுங்கள். அங்கே அது உங்களுக்கு எதிரான சான்றாக இருக்கும்.
27.     ஏனெனில், நான் உங்கள் கலகக் குணத்தையும் முரட்டுப் பிடிவாதத்தையும் அறிவேன். இன்று நான் உங்களுடன் உயிரோடு இருக்கையில், ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்கிறீர்கள்: நான் இறந்த பின் இன்னும் எவ்வளவு செய்வீர்களோ?
28.     எனவே, உங்கள் குலங்களின் தலைவர்கள் அனைவரையும் உங்கள் அலுவலர்களையும் ஒன்று கூட்டுங்கள். அவர்கள் கேட்க நான் இவ்வார்த்தைகளை எடுத்துரைத்து, அவர்களுக்கு எதிராக விண்ணையும் மண்ணையும் சான்றாக வைப்பேன்.
29.     ஏனெனில், நான் இறந்தபின் நீங்கள் கெட்டுச் சீரழிவீர்கள்: நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழிகளிலிருந்து விலகி, ஆண்டவரின் முன்னிலையில் அருவருப்பானவைகளைச் செய்வீர்கள். நீங்கள் செய்துகொள்ளும் சிலைகளால் அவருக்குச் சினமூட்டுவீர்கள். ஆகையால் இறுதிக் காலத்தில் உங்களுக்குத் தீங்குகள் நேரிடும் என்பதையெல்லாம் நான் அறிவேன்.
30.     பின்னர் இஸ்ரயேல் சபையினர் அனைவரும் கேட்க, மோசே பின்வரும் பாடலின் வார்த்தைகள் அனைத்தையும் சொன்னார்:

அதிகாரம் 32.     .


1.     வானங்களே! நான் பேசுவேன்: செவிகொடுப்பீர்: பூவுலகே! என் சொல்லை உற்றுக்கேள்.
2.     பெருமழை பைந்தளிர்மீது பொழிவதுபோல், மென்சாரல் பசும்புல்மீது விழுவதுபோல், என் அறிவுரை மழையெனப் பெய்திடுக! என் சொற்கள் பனியென இறங்கிடுக!
3.     நான் ஆண்டவரின் பெயரைப் பறைசாற்றுவேன்: நம் கடவுளின் மாட்சியைப் பாராட்டுவேன்.
4.     அவரே பாறை! அவர் செயல் நிறைவானது! அவர்தம் வழிகள் அனைத்தும் நீதியானவை! வஞ்சகம் அற்ற உண்மைமிகு இறைவன்! அவரே நீதியும் நேர்மையும் உள்ளவர்!
5.     அவர்தம் கேடுகெட்ட பிள்ளைகள் அவரிடம் பொய்ம்மையாய் நடந்துகொண்டனர்: அவர்கள் நெறிபிறழ்ந்த வஞ்சகம் மிக்க தலைமுறையினர்!
6.     ஞானமற்ற, மதிகெட்ட மக்களே! ஆண்டவருக்கு நீங்கள் அளிக்கும் கைம்மாறு இதுதானா? உங்களைப் படைத்து, உருவாக்கி, நிலை நிறுத்திய உங்கள் தந்தை அவரல்லவா?
7.     பண்டைய நாள்களை நினைத்துப்பார்! பலதலைமுறையின் ஆண்டுகளைக் கவனித்துப்பார்! உன் தந்தையிடம் கேள்: அவர் உனக்கு அறிவிப்பார்: பெரியோரிடம் கேள்: அவர்கள் உனக்குச்சொல்வர்.
8.     உன்னதமானவர் வெவ்வேறு இனங்களுக்கு உரிமைச்சொத்துக்களைப் பங்கிட்டபோது, ஆதாமின் பிள்ளைகளை அவர் பிரித்தபோது, இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மக்கள் இனங்களின் எல்லைகளையும் திட்டமிட்டார்.
9.     ஆண்டவரின் பங்கு அவர்தம் மக்களே! அவரது உரிமைச் சொத்து யாக்கோபே!
10.     பாழ்வெளியில் அவர் அவ¨ன் கண்டார்: வெறுமையான ஓலமிடும் பாலையில் அவனைக் கண்டார்: அவர் அவனைப் பாதுகாத்துப் பேணினார்: கண்ணின் மணியென அவனைக் காத்தருளினார்.
11.     கழுகு தன் கூட்டின்மேல் அசைத்தாடித் தன் குஞ்சுகளின்மேல் படந்து அணைப்பது போலும், தன் சிறகுகளை விரித்து அவற்றைச் சுமந்து செல்வது போலும் அவற்றைத் தன் சிறகுகளில் சுமப்பது போல்,
12.     ஆண்டவர் ஒருவரே அவனை வழிநடத்தினார்: வேற்றுத் தெய்வங்கள் அவனோடு இருந்ததில்லை.
13.     பூவுலகின் முகடுகளில் அவனை வாழச்செய்தார்: வயல்வெளியின் விளைச்சலை அவன் உண்டான்: கன்மலைத் தேனை அவன் சுவைத்தான்: கற்பாறை எண்ணெயைப் பயன்படுத்தினான்.
14.     பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் செம்மறிக்கிடாய், வெள்ளாட்டுக்கிடாய் இவற்றின் கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம் போன்ற முந்திரிச் சாற்றையும் அவர்கள் உண்ணும்படி ஆண்டவர் கொடுத்தார்.
15.     ஆனால் கொழுத்த காளை மார்பிலே பாய்ந்தது: எசுரூன் கொழுத்துப் பருத்து முரடனானான்: தனைப்படைத்த கடவுளை விட்டு அவன் விலகினான்: தனது மீட்பின் பாறையை எள்ளி நகைத்தான்.
16.     வேற்றுத் தெய்வங்களால் அவருக்கு எரிச்சலூட்டினர்: அருவருப்புகளால் அவருக்குச் சினமூட்டினர்.
17.     இறையல்லாத பேய்களுக்குப் பலி செலுத்தினர்: அவர்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களுக்கு, நேற்று முளைத்த புதிய தெய்வங்களுக்கு, உங்கள் முன்னோர் அஞ்சாத அவற்றிற்குப் பலியிட்டனர்.
18.     உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்: உன்னை உருவாக்கிய கடவுளை மறந்து விட்டாய் .
19.     தன் மைந்தரும் தம் மகளிரும் தமக்குச் சினமூட்டியதை, ஆண்டவர் கண்டு அவர்களை இகழ்ந்து ஒதுக்கினார்.
20.     அவர் உரைத்தார்: எனது முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்வேன்: அவர்களது முடிவு என்னவென்று நான் கவனித்துக் கொள்வேன்: ஏனெனில், அவர்கள் கேடுகெட்ட தலைமுறையினர்: நேர்மை அறவே அற்ற பிள்ளைகள்.
21.     இல்லாத தெய்வத்தால் எனக்கு எரிச்சலூட்டினர்: அவர்களின் சிலைகளால் எனக்குச் சினமூட்டினர்: ஒன்றுமில்லாத இனத்தால் அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்: மதிகெட்ட வேற்றினத்தால் அவர்களுக்குச் சினமூட்டுவேன்.
22.     எனது சினத்தில் நெருப்புப்பொறி தெறிக்கும்: கீழுலகின் அடிமட்டம்வரை அது எரிக்கும்: பூவுலகையும் அதன் விளைபலன்களையும் அழிக்கும்: மாமலைகளின் அடித்தளமே தீப்பற்றி எரியும்.
23.     தீங்குகளை அவர்கள்மேல் கொட்டிக் குவிப்பேன்: என் அம்புகளை அவர்கள்மேல் எய்து தீர்ப்பேன்.
24.     பசியினால் அவர்கள் வாடுவர்: கொள்ளை நோயால் மாய்வர்: கொடிய வாதைகளால் மடிவர்: விலங்குகளின் பற்களுக்கு இரையாவர்: புழுதியில் ஊரும் நச்சுப்பூச்சிகளால் மடிவர்.
25.     வெளியிலே வாள்: உள்ளே பேரச்சம்! இளைஞனும் கன்னிப் பெண்ணும் பால்குடி மறைவாக் குழந்தையும் முடிநரைத்த கிழவனும் அழிவர்.
26.     நான் சொன்னேன்: அவர்களை எத்திக்கிலும் சிதறடிப்பேன்: அவர்களது நினைவு மனிதரிடமிருந்து அற்றுப் போகச் செய்வேன்.
27.     ஆயினும், எங்கள் கைகள் வலிமையானவை! இதையெல்லாம் ஆண்டவர் செய்யவில்லை! என்று அவர்களின் பகைவர் திரித்துப் பேசுவர் என்பதாலும் பகைவனின் பழிச் சொல்லுக்கு அஞ்சியும் வாளாவிருந்தேன்.
28.     அவர்கள் புத்தி கெட்ட மக்கள்: அவர்களிடம் விவேகம் சிறிதும் இல்லை.
29.     அவர்கள் ஞானமடைந்து இதனை உணர்ந்து தங்களுக்கு நிகழப்போவதை உய்த்துணர்ந்தால் எத்துணை நலம்!
30.     ஒரே ஆள் ஆயிரம் பேரைத் துரத்துவதும் இரண்டு பேர் பதினாயிரம் பேரை விரட்டுவதும் அவர்களது பாறையை அவர்களை விற்றுவிட்டதாலன்றோ? அவர்களின் கடவுள் அவர்களைக் கைவிட்டதாலன்றோ?
31.     அவர்களது பாறை நமது பாறை போன்றன்று என்று நம்முடைய பகைவர்களே ஏற்றுக்கொள்கின்றனர்.
32.     அவர்களது கொடிமுந்திரி சோதோமிலிருந்து வருவதாகும்: கொமோராவின் வயல்வெளியிலிருந்து வருவதாகும்: அவர்களது திராட்சைகள் நச்சுத் திராட்சைகள்: அவர்களது திராட்சைக் கொத்துக்கள் கசப்பானவை.
33.     அவர்களது இரசம் பாம்பின் நஞ்சு போன்றது: விரியன் பாம்பின் கொடிய நஞ்சு போன்றது.
34.     இது என்னிடம் சேமிக்கப்பட்டுள்ளது அன்றோ? என் கருவூலங்களில் முத்திரையிடப்பட்டுள்ளது அன்றோ?
35.     பழிவாங்குவதும் கைம்மாறளிப்பதும் எனக்கு உரியன: உரிய நாளில் அவர்களின் கால்கள் தள்ளாடும்: அவர்களது அழிவுநாள் அண்மையில் உள்ளது: அவர்களுக்கு வரப்போகும் கொடுமைகள் தீவிரமாகின்றன.
36.     அவர்கள் ஆற்றல் இழந்து விட்டவர்கள் எனவும் அடிமையோ குடிமகனோ எவனுமில்லை எனவும் காணும்போது ஆண்டவரே அவர் மக்களுக்குத் தீர்ப்பிடுவார்: அவர்தம் ஊழியர்களுக்காக அவர் மனமிரங்கிடுவார்.
37.     அப்பொழுது அவர் உரைப்பார்: அவர்களின் தெய்வங்கள் எங்கே? அவர்கள் தஞ்சம் புகுந்த பாறை எங்கே?
38.     அவர்கள் பலியிட்டவற்றின் கொழுப்பை உண்டவர்கள் எங்கே? நீர்மப்படையல் இரசத்தைக் குடித்தவர்கள் எங்கே? அவர்கள் இப்போது முன்வந்து உனக்கு உதவட்டுமே! அவர்களது உனது புகலிடம் ஆகட்டுமே!
39.     நானே இருக்கிறவர்! என்னைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை என்பதை இப்பொழுது உணர்ந்து கொள்ளுங்கள்! கொல்பவரும் நானே: உயிரளிப்பவரும் நானே! காயப்படுத்துபவரும் நானே: குணமாக்குபவரும் நானே! என் கைகளிலிருந்து விடுவிப்பார் எவரும் இரார்.
40.     ஏனெனில், என் கைகளை வானோக்கி உயர்த்தி என்றும் வாழும் என்மீது ஆணையிட்டு உரைக்கிறேன்.
41.     மின்னும் என் வாளை நான் தீட்டி, நீதித் தீர்ப்பை என் கையில் எடுக்கும்போது என் பகைவரைப் பழி வாங்கி என்னைப் பகைப்பவருக்குப் பதிலடி கொடுப்பேன்.
42.     கொலையுண்டோர், சிறைப்பட்டோரின் இரத்தத்திலும் நீள்முடித் தலைவரின் இரத்தத்திலும் என் அம்புகள் குடிக்கச் செய்வேன்: என் வாள் சதையை உண்ணச் செய்வேன்.
43.     வேற்றினங்களே! ஆண்டவரின் மக்களோடு மகிழுங்கள்: அவர் தம் ஊழியரின் இரத்தத்திற்குப் பழி வாங்கினார்: அவர் தம் பகைவர்களுக்குப் பதிலடி கொடுத்தார். தம் மக்களின் நாட்டைக் கறைநீக்கம் செய்தார்.
44.     மோசேயும் நூனின் மகனான யோசுவாவும் வந்து, இந்தப் பாடலின் வார்த்தைகளை மக்கள் கேட்குமாறு எழுத்துரைத்தார்கள்.
45.     இந்த வார்த்தைகளை எல்லாம் இஸ்ரயேலுக்குச் சொல்லி முடித்தபின், மோசே அவர்களுக்குச் சொன்னது:
46.     உங்களுக்கு எதிரான சான்றாக நான் இன்று உரைத்த வார்த்தைகள் எல்லாவற்றையும் உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். அப்போதுதான் இத்திருச்சட்டத்தின் வார்த்தைகள் அனைத்தையும் கருத்தாய்க் கடைப்பிடிக்குமாறு நீங்கள் உங்கள் மக்களுக்குக் கட்டளையிடுவீர்கள்.
47.     இத்திருச்சட்டத்தின் எவ்வார்த்தையும் வீணானதல்ல. அதுவே உங்களது வாழ்வு. யோர்தானைக் கடந்து, நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் மண்ணில் இந்த வார்த்தைகளால் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.
48.     அதே நாளில் ஆண்டவர் மோசேயுடன் பேசியது:
49.     மோவாபு நாட்டில் எரிகோவுக்கு எதிரேயுள்ள, அபாரிம் மலையில் நெபோ என்னும் மலைமீது ஏறிக் கானான் நாட்டைப் பார். உன் மக்கள் இஸ்ரயேலுக்கு நான் உடைமையாகக் கொடுக்கப்போகும் நாடு அதுவே.
50.     சகோதரன் ஆரோன் ஓர் என்னும் மலையில் இறந்து, உன் மூதாதையருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டான். அதுபோல நீ ஏறிச் செல்லவிருக்கும் மலையில் நீயும் இறந்து உன் இனத்தாருடன் சேர்த்துக் கொள்ளப்படுவாய்.
51.     ஏனெனில், சீன் என்னும் பாலை நிலத்தில், மெரிபத்து-காதேசு எனும் நீர்ச்சுனைக்கு அருகில், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் எனக்குத் துரோகம் செய்தாய். அதனால், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் என்னைப் புனிதப்படுத்தவில்லை.
52.     எனினும், உனக்கு முன்பாக உள்ள நாட்டை நீ பார்ப்பாய். அதையே நான் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கப் போகிறேன். நீயோ அதனுள் செல்ல மாட்டாய்.

அதிகாரம் 33.     .


1.     கடவுளின் அடியவரான மோசே, தாம் இறப்பதற்குமுன் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசி வழங்கிக் கூறியது:
2.     ஆண்டவர் சீனாயினின்று வந்தார்: சேயிரினின்று அவர்களுக்குத் தோன்றினார்: பாரான் மலையினின்று அவர்கள் மீது ஒளிர்ந்தார்: பல்லாயிரம் புனிதர் புடைசூழ வந்தார்: அவரது வலப்புறத்தினின்று மின்னல் ஒளிர் திருச்சட்டம் ஏந்திவந்தார்.
3.     உண்மையாகவே, மக்களினங்களின் அன்பர் அவர்: அவர்தம் புனிதர்கள் அவர் கையில் உள்ளனர். அவர்கள் அவரது பாதங்களில் அமர்வர்: அனைவரும் அவரது கூற்றுகளை ஏற்றுக்கொள்வர்.
4.     மோசே எங்களுக்குத் திருச்சட்டத்தைக் கட்டளையாக வழங்கினார்: அதுவே யாக்கோபினது திருக்கூட்டத்தின் உடைமை.
5.     மக்கள் தலைவர்களும் இஸ்ரயேலின் குலங்களும் ஒன்று திரட்டப்பட்ட பொழுது அவர் எசுரூன்மீது அரசனாய் இருந்தார்.
6.     ரூபன் வாழட்டும்: அவன் மடிந்து போகாதிருக்கட்டும்: அவன்தன் புதல்வர் குறையாதிருக்கட்டும்!
7.     யூதாவுக்கான ஆசி இதுவே. அவர் கூறியது: ஆண்டவரே, யூதாவின் குரலைக் கேளும்: அவனை அவனுடைய மக்களிடம் கொண்டு வாரும்: அவனது கைகள் அவனுக்குப் போதுமானது ஆகட்டும். அவனுக்குத் துணை நின்று அவனுடைய பகைவரிடமிருந்து காத்தருளும்.
8.     லேவியைக் குறித்து அவர் கூறியது: ஆண்டவரே, உம் தும்மிம், ஊரிம் என்பவை மாசாவில் சோதிக்கப்பட்டு மெரிபாவின் நீரூற்றருகில் வழக்காடிய உம் பற்றுமிகு அடியானிடம் இருக்கட்டும்.
9.     அவனிடமே அவற்றைக் கொடும்: ஏனெனில் அவன் தன் தந்தையையும் தாயையும் நோக்கி நான் உங்களைப் பாரேன் என்றவன்: தன் சகோதரர்களை அடையாளம் கண்டு கொள்ளாதவன்: தன் சொந்தப் பிள்ளைகளையே அறியாதவன்: உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்து உம் உடன்படிக்கையை நிறைவேற்றுபவன்:
10.     யாக்கோபுக்கு உம் நீதிமுறைமைகளையும் இஸ்ரயேலுக்கு உம் திருச்சட்டத்தையும் கற்றுத்தருபவன்: உமது முன்னிலையில் தூபம் காட்டுபவன்: உமது பீடத்தில் எரிபலிகளைச் செலுத்துபவன்.
11.     ஆண்டவரே, அவனது ஆற்றலை ஆசியால் நிரப்பும்: அவனுடைய கரங்களின் உழைப்பை ஏற்றுக்கொள்ளும்: அவனுக்கு எதிராக எழும்புவோரை அவர்களின் இடுப்பு ஒடிந்துவிழும் வண்ணம் வதையும். அவனைப் பகைப்பவர் மீண்டும் எழாதவாறு செய்யும்.
12.     பென்யமினைக் குறித்து அவர் கூறியது: ஆண்டவரின் அன்புக்கு உரியவன்: அவரால் அவன் பாதுகாப்புடன் வாழ்வான். எக்காலமும் அவனை அவர் அரவணைத்துக் காப்பார்: அவர்தம் கரங்களுக்கிடையே அவன் வாழ்வான்.
13.     யோசேப்பைக் குறித்து அவர் கூறியது: அவனது நிலம் ஆண்டவரால் ஆசி பெற்றது: அது வானத்தின் செல்வத்தாலும் பனியாலும்,
14.     ஆழ்நிலத்தின் நீரூற்றுகளாலும் கதிரவன் வழங்கும் கனிகளாலும் பருவங்கள் விளைவிக்கும் பயன்களாலும்
15.     பண்டைய மலைகளின் உயர் செல்வங்களாலும், என்றுமுள குன்றுகளின் அரும் பொருள்களாலும் ஆசிபெற்றது.
16.     நிலம் தரும் பெரும் விளைச்சலும் அதன் நிறைவும், முட்புதரில் வீற்றிருந்தவரின் அருளன்பும், எல்லா ஆசிகளும் யோசேப்பின் தலைமீதும் தன் சகோதரருள் தேர்ந்தெடுக்கப்பட்டவனின் உச்சந்தலைமீதும் தங்குவதாக!
17.     அவனது நடை தலையீற்றுக் காளையின் பீடுநடை போன்றது. அவனின் கொம்புகள் காட்டெருமையின் கொம்புகள் போன்றவை: அவற்றால் மக்களினத்தாரைப் பூவுலகின் கடை எல்லைவரை முட்டித் துரத்துவான். அவை எப்ராயிமின் பதினாயிரம் படைகளும் மனாசேயின் ஆயிரம் படைகளும் ஆகும்.
18.     செபுலோனைக் குறித்து அவர் கூறியது: செபுலோனே. நீ பயணம் செய்கையில் மகிழ்ந்திடு! இசக்காரே, நீ கூடாரங்களில் தங்கும் போது மகிழ்ந்திடு!
19.     அவர்கள் மக்களினங்களை மலைக்கு அழைத்துச் செல்வர்: அங்க அவர்கள் ஏற்புடைய பலிகளைச் செலுத்துவர்: அவர்கள் கடலில் பலுகியிருப்பதும் மணலில் புதைந்திருப்பதுமான திரளான செல்வங்களை அனுபவிப்பார்.
20.     காத்தைக் குறித்து அவர் கூறியது: காத்தைப் பெருகச் செய்பவர் போற்றி! போற்றி! காத்து சிங்கத்தைப்போல் தங்கியிருந்து புயத்தையும் தலையையும் பீறிப் பிளந்திடுவான்.
21.     அவன் தனக்கெனச் சிறந்த இடத்தைத் தேர்ந்து கொண்டான்: தலைவனுக்குரிய பங்கு அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது: மக்களின் தலைவணாகி, அவன் ஆண்டவரின் நீதியை நிலை நிறுத்தினான்: ஏனைய இஸ்ரயேலரோடு சேர்ந்து, அவர்தம் நீதிமுறையை நிலைநாட்டினான்.
22.     தாணைக் குறித்து அவர் கூறியது: தாண் பாசானினின்று பாய்ந்துவரும் சிங்கக்குட்டி.
23.     நப்தலியைக் குறித்து அவர் கூறியது: ஆண்டவரின் அருளன்பால் நிறைவு பெற்றவன்: கலிலேயக் கடலையும் தென்திசையையும் உடைமையாக்கிக் கொள்வான்.
24.     ஆசேரைக் குறித்து அவர் கூறியது: ஆசேர் எல்லாக் குலங்களிடையே ஆசி பெற்றவனாவான்: தன் உடன்பிறந்தாருக்கு உகந்தவனாய் இருப்பான்: அவன் தன் காலை எண்ணெயில் தோய்ப்பான்.
25.     தாழ்ப்பாள்கள் இரும்பாலும் செம்பாலும் ஆனவை: உன் வாழ்நாள் அனைத்தும் நீ பாதுகாப்புடன் இருப்பாய்.
26.     எசுரூபின் இறைவன்போல் எவருமில்லை: அவர் உனக்கு உதவிட வானங்களின் வழியாக தமது மாட்சியுடன் மேகங்கள்மீது ஏறிவருவார்.
27.     என்றுமுள கடவுளே உனக்குப் புகலிடம்: என்றுமுள அவரது புயம் உனக்கு அடித்தளம்: பகைவரை உன் முன்னின்று விரட்டியடித்து, அவர்களை அழித்துவிடு என்பார் அவர்.
28.     அப்போது, இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழ்ந்திடும்: யாக்கோபின் உறைவிடம், தானியமும், இரசமும் மிகுந்த நிலத்தில் இருக்கும்: அவர்தம் மேகங்கள் பனி மழை பொழியும்.
29.     இஸ்ரயேலே! நீ பேறு பெற்றவன்: ஆண்டவரால் மீட்கப்பட்ட மக்களினமே! உன்னைப்போல் வேறு இனம் உண்டோ? உன்னைக் காக்கும் கேடயமும் உன் வெற்றி வாளும் அவரே! உன் பகைவர் உன்முன் கூனிக்குறுகுவர்!

அதிகாரம் 34.     .


1.     அதன்பின், மோசே மோவாபுச் சமவெளியிலிருந்து எரிகோவுக்குக் கிழக்கே நெபோ மலையில் உள்ள பிஸ்காவின் உச்சிக்கு ஏறிச் சென்றார். ஆண்டவர் அவருக்குத் தாண் வரையில் உள்ள கிலயாது நாடு முழுவதையும் காட்டினார்.
2.     மேலும் நப்தலி முழுவதையும் எப்ராயிம் நிலப்பகுதியையும், மனாசே நிலப்பகுதியையும் யூதாவின் நிலப்பகுதி முழுவதையும், மேற்கே மத்தியதரைக் கடல் வரையிலும் காட்டினார்:
3.     மற்றும் நெகேபையும் போ£ச்சை மாநகராகிய எரிகோ முதல் சோவார் வரையிலும் உள்ள நிலப்பரப்பையும் காட்டினார்.
4.     அப்போது ஆண்டவர் மோசேக்கு உரைத்தது: நான் உன் வழிமரபினருக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஆணையிட்டுக் கூறிய நிலம் இதுவே. உன் கண்களால் நீ அதைப் பார்க்கும்படி செய்துவிட்டேன். ஆனால் நீ அங்கு போகமாட்டாய் .
5.     எனவே, ஆண்டவர் கூறியபடியே, அவர்தம் ஊழியர் மோசே மோவாபு நாட்டில் இறந்தார்.
6.     மோவாபு நாட்டில் பெத்பகோருக்கு எதிரே உள்ள பள்ளத்தாக்கில் அவர் அவரை அடக்கம் செய்தார். ஆனால் இன்றுவரை எந்த மனிதருக்கும் அவரது கல்லறை இருக்குமிடம் தெரியாது.
7.     மோசே இறக்கும் போது அவருக்கு வயது நூற்றிருபது. அவரது கண்கள் மங்கினதுமில்லை: அவரது வலிமை குறைந்ததுமில்லை.
8.     மோவாபுச் சமவெளியில் இஸ்ரயேல் மக்கள் மோசேக்காக முப்பது நாள்கள் துக்கம் கொண்டாடினர். மோசேக்காக இஸ்ரயேல் மக்கள் அழுது துக்கம் கொண்டாடின நாள்கள் நிறைவுற்றன.
9.     நூனின் மகனாகிய யோசுவாவின் மேல் மோசே தம் கைகளை வைத்ததால், அவர் ஞானத்தின் ஆவியால் நிரப்பப் பெற்றிருந்தார். இஸ்ரயேல் மக்கள் யோசுவாவுக்குச் செவிகொடுத்து, மோசேக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி நடந்தார்கள்.
10.     ஆண்டவர் நேருக்குநேர் சந்திக்க மோசேயைப்போல், இறைவாக்கினர் வேறெவரும் இஸ்ரயேலில் இதுகாறும் எழுந்ததில்லை.
11.     ஏனெனில். எகிப்து நாட்டில், பார்வோனுக்கும், அவன் அலுவலருக்கும், அவன் நாடு முழுவதற்கும் அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்யும்படி ஆண்டவர் மோசேயை அனுப்பினார்.
12.     இஸ்ரயேலர் அனைவரின் கண்கள் காணுமாறு அவர் ஆற்றிய அனைத்து ஆற்றல்மிகு செயல்களும் அச்சுறுத்தும் மாபெரும் செயல்களுமே இதற்குச் சான்றாகும்.


Mail Usup- truth is a pathless land -Home