தூரத்துப் பார்வைக்கு அது ஒரு நந்தவனம் போல் தோற்றமளிக்கும். உண்மையில் அது ஒரு நந்தவனம் அல்ல; இடுகாடு!
பச்சைக் கொடிகள் பற்றிப் படர்ந்த காம்பவுண்ட் சுவரால் நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்ட அந்த இடுகாட்டின் மேற்கு மூலையில், பனை ஓலைகளால் வேயப்பட்ட சின்னஞ்சிறு குடிசை ஒன்று இருக்கிறது.
அதில் தான் ஆண்டி வசிக்கிறான். குடிசைக்கு முன்னே வேப்ப மரக் கிளையில் கட்டித் தொங்கும் தூளியில் அவன் செல்ல மகன் இருளன் சுக நித்திரை புரிகிறான்.
அதோ அவன் மனைவி முருகாயி வேலியோரத்தில் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருக்கிறாள்.
ஆம்; ஆண்டிக்கு மனைவியும் மகனும் உண்டு. அவன் பெயர் மட்டும் தான் ஆண்டி. அவன் இருக்கும் அந்த இடம் தூரத்துப் பார்வைக்குத்தான் நந்தவனம்.
ஆண்டி ஒரு வெட்டியான். அவன் வாழும் இடம் இடுகாடு. அந்த மயான பூமிக்கு வரும் பிணங்களுக்குக் குழி வெட்டுவது அவன் தொழில். அதற்காக முனிசிபாலிடியில் மாதம் ஏழு ரூபாய் சம்பளமும், அந்த இடுகாட்டிலேயே வசிக்க ஒரு வீடும் தந்திருக்கிறார்கள்.
ஆண்டி 'ஒரு மாதிரியான' ஆள்; பைத்தியம் அல்ல. மகிழ்ச்சி என்பது என்னவென்றே தெரியாத மனிதர்கள் எப்பொழுதும் குஷியாகப் பாடிக்கொண்டே இருக்கும் அவனை 'ஒரு மாதிரி' என்று நினைத்தார்கள். அவன் உடம்பில் எப்பொழுதும் அலுப்போ, சோர்வோ ஏற்படுவதே இல்லை. வயது நாற்பது ஆகிறது; இருபது வயது இளைஞனைப்போல் துறுதுறு வென்றிருப்பான்.
அர்த்தம் புரிந்தோ புரியாமலோ அவன் வாய், உரத்த குரலில் சதா ஒரு பாட்டை அலப்பிக்கொண்டே இருக்கும்.
'நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி...'
குழி வெட்டும் வேலை இல்லாத சமயத்தில் அவன் நந்தவன வேலையில் ஈடுபடுவான். அவன் உழைப்பால் தான் அந்த இடுகாடு கூட 'நந்தவன' மாகி இருக்கிறது. அவனுக்குச் சோகம் என்பது என்ன வென்றே தெரியாது.
செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சும்போதும் சரி, பிணங்களுக்கு குழி பறிக்கும் போதும் சரி - சலனமோ, சங்கடமோ ஏதுமின்றி, உரத்த குரலில் கழுத்து நரம்புகள் புடைக்க அந்தப் பாட்டை தனது கரகரத்த குரலில் பாடுவான்.
அவனைப் பொறுத்தவரை அந்தப் பாட்டிற்கு அர்த்தம் கிடையாது; வெறும் பழக்கம்தான்.
அது புதைக்கும் இடமாதலால் பெரும்பாலும் குழந்தைகளின் பிரேதம்தான் அங்கு வரும்.
'மூன்றடி நீளம் மூன்றடி ஆழ'க் குழிகள் வெட்டுவது ஆண்டிக்கு ஒரு வேலையே அல்ல.
தலையின் இறுகக் கட்டிய முண்டாசுடன், வரிந்து கட்டிய வேட்டியுடன், கால்களை அகட்டி வைத்துக் கொண்டு நிற்பான். அவன் கையிலுள்ள மண்வெட்டி அனாயாசமாகப் பூமியில் விழுந்து மேற்கிளம்பும். ஒவ்வொரு வெட்டுக்கும் ஈர மண் மடிந்து கொடுக்கும். பூமியே புரண்டு கொடுக்கும்.
'... கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக் கூத்தாடிக்... கூத்தாடிப்... போட்டுடைத்தாண்டி...'
அந்தக் 'கூத்தாடி' என்ற வார்த்தையை அழுத்தி அழுத்தி உச்சரித்தவாறு பூமியின் மார்பை அவன் பிளக்கும்போது அவனை யாராவது கண்டால் அந்தப் பாட்டின் பொருள் தெரிந்துதான் அவன் பாடுகிறான் என்றே எண்ணத் தோன்றும்.
உண்மையில் அந்தப் பாட்டுக்கு உரிய பொருள் அவனுக்குத் தெரியவே தெரியாது.
அவன் அந்தப் பாட்டை, எங்கு எப்பொழுது கற்றுக் கொண்டான்?
நமக்குத் தெரிந்த ஒவ்வொரு வார்த்தையையும் எங்கு எப்பொழுது நாம் கற்றுக்கொண்டு முதன்முதலில் உச்சரித்தோம் என்று சொல்ல முடியுமா? ஆனால், ஏதோ ஒரு விசேஷமான வார்த்தையைக் குறிப்பாக எண்ணினோமானால் நம்மில் எவ்வளவோ பேர் சொல்லி விடுவோம்.
ஆண்டி இந்தப் பாட்டை எப்பொழுது எங்கு முதன் முதலில் கேட்டான்? சற்று நினைவு கூர்ந்தால் அவனால் சொல்லிவிட முடியும்.
---·---·---·---·
ஒரு நாள் காலை, கயிற்றுக் கட்டிலில் உறக்கம் கலைந்து எழுந்த ஆண்டி, தன் கண்களைக் கசக்கிவிட்ட பின் கண்ட காட்சி அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
குடிசை வாசலில், கிழிந்த கோரைப் பாயில், வழக்கத்திற்கு மாறாக இன்னும் உறக்கம் கலையாமல் தன்னை மறந்து கிடக்கிறாள் முருகாயி.
அவன், தான் எழுந்தபின் அவள் தூங்கிக் கொண்டிருப்பதை, கலியாணம் ஆகி இந்தப் பதினைந்து வருஷ காலத்தில் ஒருநாள் கூடப் பார்த்ததில்லை.
"ஏ... முருவாயி..." என்று குரல் கொடுத்தான்.
அவள் எழுந்திருக்கவில்லை; புரண்டு படுத்தாள்.
அவன் கயிற்றுக் கட்டிலை விட்டு எழுந்து அவள் அருகே சென்று அமர்ந்தான்.
'உடம்பு சுடுகிறதோ' என்ற நினைப்பில் அவள் நெற்றியில் கைவைத்துப் பார்த்தான். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.
"முருவாயி..." என்று மறுபடியும் உலுப்பினான்.
மயங்கிக் கிறங்கிய நிலையில் முருகாயி கண்களைத் திறந்தாள். எதிரில் புருஷன் குந்தி இருப்பதைக் கண்டதும் எழுந்து உட்கார்ந்து பேந்தப் பேந்த விழித்தாள்.
"என்ன முருவாயி... ஒடம்புக்கு என்னா பண்ணுது?" என்று பதறினான் ஆண்டி.
"ஒண்ணுமில்லே... கையி காலெல்லாம் கொடைச்சலா இருக்கு... ஒடம்பு பூரா அடிச்சி போட்ட மாதிரி... கிர்னு தலை சுத்துது..." என்று சொல்லும்போதே கறுத்த இமைகள் ஒட்டி ஒட்டிப் பிரிந்தன.
"கனா ஒண்ணு கண்டேன்."
"என்ன கனா புள்ளே?"
முருகாயி கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டே கொட்டாவி விட்டாள்.
"கனாவிலே ஒரு பூச்சி... கறுப்பா... சின்னதா..." அவள் உடல் ஒருமுறை குலுங்கிற்று.
"உம்..."
"சொல்லும்போதே திரேகம் சிலுக்குது மச்சான்... அந்தக் கறுப்புப் பூச்சி நவுந்து வந்து எங் கையி மேலே ஏறுச்சி... ஏறினவுடனே அது மஞ்சளா மாறிச்சி - ஊஹீம் மஞ்ச நெறமில்லே... தங்க நெறம்... அப்பிடி ஒரு சொலிப்பு சொலிச்சது... அது எங் கையிலே வந்து குந்திக்கிட்டு... 'என்னெத் தின்னுடு என்னெத் தின்னுடு'ன்னு சொல்லிச்சு."
"உம் அப்புறம்?..."
"தின்னுடு தின்னுடுன்னு சொல்லிக்கிட்டே எங்கையெ கொறிக்க ஆரம்பிச்சது. எனக்கு என்னவோ புத்திக் கொளம்பிப்போய் ஒரு ஆவேசம் வந்திடுச்சி... சீ, இந்த அல்பப் பூச்சி வந்து என்ன தைரியமா நம்மகிட்டே வந்து 'தின்னுடு தின்னுடு'ன்னு சொல்லுது பாத்தியா?... நாம்ப திங்கமாட்டோம்கிற தைரியம் தானேன்னு நெனைச்சி..."
- அவள் முகம் சிவந்தது, சுளித்தது!
"ஒடம்பெல்லாம் கூசுது மச்சான். அந்தப் பூச்சியெ ரெண்டு விரல்லே தூக்கிப் பிடிச்சி வாயிலே போட்டு 'கச முச'ன்னு மென்னு...வ் வோ ஓ!..."
- அவள் சொல்லி முடிக்கவில்லை, குடலை முறுக்கிக் கொண்டு வந்த ஓங்கரிப்பு பிடரியைத் தாக்கிக் கழுத்து நரம்புகளைப் புடைக்க வைத்தது; தலை கனத்தது; மூச்சு அடைக்க, கண்கள் சிவக்க,
"வ் வோ ஓ!..."
"மச்சான்... மச்சான்... அந்தப் பூச்சி வவுத்துக்குள்ளே ஓடுது மச்சான்..."
மறுபடியும் ஓர் பலத்த ஓங்காரம். அடி வயிற்றைப் பிசைந்துகொண்டே தலை குனிந்து உட்கார்ந்தாள். வாயெல்லாம் வெறும் உமிழ் நீர் சுரந்து ஒழுகியது.
"மச்சான்... வவுத்திலே பூச்சி"
- ஆண்டி புரிந்து கொண்டான். அவன் உடல் முழுதும் இன்பக் கிளுகிளுப்பு ஓடிப் பரவியது.
பதினைந்து வருஷமாய் வாய்க்காதது...
எத்தனையோ காலம் நினைத்து நினைத்துப் பார்த்து, ஏமாந்து ஏமாந்து, இல்லை என்ற தீர்க்கமான முடிவில் மறந்தே போனபின்...
- உடலை குலுக்கி, குடலை முறுக்கி ஓங்கரித்தாள்... முருகாயி.
- "ஆ... அதுதான் ஹாஹா... முருகாயி அதுதான்... ஹாஹா!" ஆண்டி சிரித்தான்.
"வ்வோ ஓ!..."
- குத்திட்டுத் தலை குனிந்து உட்கார்ந்திருந்த முருகாயியை உடலோடு சேர்த்து அணைத்துக் கொண்டு ஆண்டி சிரித்தான்.
"ஹாஹாஹ்ஹா... அதுதான் புள்ளே, அது தான்."
பலத்த ஓங்கரிப்புடன் வந்த சிரிப்பைத் தாங்க முடியாது தவித்தாள் முருகாயி.
"மச்சான் வவுத்தைப் பொறட்டுதே. தாங்க முடியலியே ஐயோ!..." என்று பதறினாள்.
"சும்மா, இரு புள்ளே, நம்ம வடிவேலு வைத்தியர் கிட்டே போயி எதனாச்சும் மருந்து வாங்கியாறேன்" என்று மேல் துண்டை உதறித் தோள்மீது போட்டுக் கொண்டு கிளம்பினான் ஆண்டி.
முருகாயி சிரித்தாள்.
"ஏ! சும்மாத்தானே இரு மச்சான். யாராவது சிரிக்கப் போறாங்க"
"நீ படற அவஸ்தையைப் பார்க்க முடியலியே புள்ளே..."
"நீ ஏன் பாக்கிறே?...அந்தாலே தள்ளிப்போய் நின்னுக்க..."
ஆண்டி மனசுக்குள் கும்மாளியிடும் மகிழ்ச்சியுடன் இடுகாட்டின் கேட்டருகே நின்றான்.
அப்போதுதான் அந்தச் சாலை வழியே சென்ற காவி தரித்த பண்டாரம் ஒருவன் தன்னை மறந்த லயத்தில் அந்தப் பாட்டைப் பாடியவாறு நடந்தான்.
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி."
இதுவரை அனுபவித்தறியாத ஒரு புதிய உணர்வில் மகிழ்ச்சியில் லயித்து தன் நிலை மறந்து நின்ற ஆண்டியின் மனத்தில், தாள லயம் தவறாமல் குதித்தோடி வந்த அந்தப் பாட்டின் ஒவ்வொரு வார்த்தையும் ஆழமாய்ப் பதிந்தன.
அதைப் பதிய வைப்பதற்காகவே பாடுவதுபோல் அந்தப் பண்டாரம் அந்த நான்கு வரிகளையே திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டு நடந்தான்.
அன்றுமுதல் தன்னையறியாமல் ஆண்டியும் அந்தப் பாடலைப் பாடிக் குதிக்க ஆரம்பித்தான்.
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி"
ஆயிரக்கணக்கான மனித உடல்கள் மாண்டபின் புதையுண்ட அந்த மயான பூமியில் ஒரு மனிதன் பிறந்தான்.
ஆண்டிக்கு ஒரு மகன் பிறந்தான்.
தாயின் கருவில் அவன் ஜனித்த அந்த நாளில் பிறந்த குதூகலம் ஆண்டிக்கு என்றும் மறையவில்லை.
பொழுதெல்லாம் தன் செல்வ மகனைத் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடினான்.
நூற்றுக்கணக்கான குழந்தைகளின் சவங்களுக்குக் குழிபறித்த ஆண்டியின் கரங்கள் தன் செல்வ மகனை மார்போடு அணைத்து ஆரத் தழுவின.
- தனது மதலையை மார்புறத் தழுவி மகிழ்ந்த ஆண்டியின் கரங்கள் ஊரார் பிள்ளைகளின் சவங்களுக்குக் குழி பறித்தன.
ஊராரின் புத்திர சோகம் அவனுக்குப் புரிந்ததே இல்லை.
ரோஜாச் செடிக்குப் பதியன் போடும் சிறுவனைப் போல பாட்டுப் பாடிக்கொண்டே குழி பறிப்பான்.
அருகிலிருக்கும் அந்தப் பச்சைச் சிசுவின் பிரேதத்தைப் பார்த்தும் - அதோ பக்கத்தில், பீறிவரும் அழுகையை அடக்கிக் கொண்டு நிற்கும் அந்தத் தகப்பனைப் பார்த்தும் - நெஞ்சில் ஈரமில்லாமல் பசை இல்லாமல் பாடிக் கொண்டிருக்கிறானே...
சீசீ இவனும் ஒரு மனிதனா!... அதனால்தான் அவனை எல்லோரும் 'ஒரு மாதிரி' என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.
குழி பறித்து முடித்தபின் நேரே தன் குடிசைக்கு ஓடுவான். தூளியில் உறங்கும் இருளனைத் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சுவான்; கூத்தாடுவான்.
அந்த மகிழ்ச்சிக்கு, குதூகலத்திற்கு, பாட்டிற்கு, கும்மாளத்துக்கெல்லாம் காரணம் இருளன்தானா?
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்...
எத்தனையோ பெற்றோரின் ஆனந்தத்துக்கு, கனவுகளுக்கெல்லாம் புதை குழியாயிருந்த அந்த இடுகாட்டில் மரணம் என்ற மாயை மறந்து, ஜனனம் என்ற புதரில் மட்டும் லயித்துக் குதித்துக் கொண்டிருந்த ஆண்டியின்...
ஆண்டியின்... - சொல்ல என்ன இருக்கிறது?
இருளன் ஒருநாள் செத்துப் போனான்.
வாடியிருந்து வரம் கேட்டு, காத்திருந்து தவமிருந்து காலம் போன ஒரு நாளில், எதிர்பாராமல் - நினைவின் நப்பாசை கூட அறுந்துபோன ஒரு காலமற்ற காலத்தில் வாராமல் வந்து அவதரித்து, ஆசை காட்டி விளையாடி கனவுகளை வளர்த்த இருளன், எதிர்பாராமல் திடீரென்று இரண்டு நாள் கொள்ளையிலே வந்ததுபோல் போய்விட்டான்.
ஆசைகளையும் கனவுகளையும், பாழுக்கும் பொய்மைக்கும் பறி கொடுத்த முருகாயி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு புரண்டு புரண்டு அழுதாள்.
எத்தனையோ சோகங்களின் திரடுகள் கரடு தட்டி மேடிட்டுப்போன அந்த மயான பூமியில் தனது பங்கிற்காக அந்தத் தாய் ஒப்பாரி வைத்து அழுதாள்.
வேப்ப மரத்தடியில், கட்டித் தொங்கும் வெறும் தூளியினருகே, முழங்கால்களில் முகம் புதைத்துக் குந்தி இருக்கிறான் ஆண்டி.
எங்கோ வெறித்த விழிகள்... என்னென்னமோ காட்சிகள்... எல்லாம் கண்டவை... இனி, காண முடியாதவை...
அதோ இருளன்! -
வேலியோரத்தில் தவழ்ந்து சென்றதும்... தூளியிலிருந்து உறக்கம் கலைந்த பின் தலையை மட்டும் தூளிக்கு வெளியே தள்ளித் தொங்க விட்டுக் கொண்டு, கன்னம் குழையும் சிரிப்புடன் 'அப்பா' வென்று அழைத்ததும்...
செடிக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருக்கும் போது அவனறியாமல் பின்னே வந்து, திடீரென்று பாய்ந்து புறம் புல்லி உடலைச் சிலிர்க்கவைத்து மகிழ்வித்ததும்...
எதிரிலிருக்கும் தட்டத்துச் சோற்றில், வேகமாய்த் தவழ்ந்து வந்து - தனது பிஞ்சுக் கைகளை இட்டுக் குழப்பி விரல்களுக்கிடையே சிக்கிய இரண்டொரு, பருக்கைகளை வாயில் வைத்துச் சுவைத்துச் சப்புக்கொட்டி, கைதட்டிச் சிரித்துக் களித்ததும்...
நெஞ்சோடு நெஞ்சாய்க் கிடந்து இரவு பகல் பாராமல் நாளெல்லாம் உறங்கியதும்...
- பொய்யா?... கனவா?... மருளா?... பித்தா?... பேதைமையா?
ஆண்டி சித்தம் குலைவுற்றவன் போல் சிலையாய் உட்கார்ந்திருந்தான்.
இருளன் தவழ்ந்து திரிந்த மண்ணெல்லாம், அவன் தொட்டு விளையாடிய பொருளெல்லாம், அவன் சொல்லிக் கொஞ்சிய சொல்லெல்லாம் ஆண்டியின் புலன்களில் மோதி மோதிச் சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தன.
அதோ குடிசையினுள்ளே அந்தச் சிறு பாலகனின் சடலம் ஊதிப் புடைத்துக் கிடக்கிறது. வாயிலும் கண்களிலும் ஈக்கள் மொய்க்கின்றன. நெற்றியில் சாந்துப் பொட்டு; கறுத்துப் போன இதழ்களுக்கிடையே பால் மணம் மாறாத இளம் பற்கள் மின்னித் தெரிகின்றன. கையையும் காலையும் அகல விரித்துக் கொண்டு...
- ஆழ்ந்த நித்திரையோ?...
'இல்லை செத்துப் போய்விட்டான்.'
வெகுநேரம் தன் செல்வ மகனின் - இனிமேல் பார்க்க முடியாத மகனின் - முகத்தை வெறித்துப் பார்த்தவாறே உட்கார்ந்திருந்தான்.
வேர்வைத் துளிகள் நெற்றியில் சரம் கட்டி நின்றன.
மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்டு மண்வெட்டியை எடுத்தான். கால்களை அகட்டி நின்று, கண்களை மூடிக் கொண்டு மண்வெட்டியை ஓங்கி, பூமியில் பதித்தான்.
'நந்தவனத்தில் ஓர் ஆண்டி!'
அந்தப் பாட்டு!... அவன் பாடவில்லை.
ஊரார் பிணத்துக்குக் குழி பறிக்கும்போது மனசில் அரிப்போ கனமோ இல்லாமல் குதித்து வருமே அந்தப் பாட்டு...
'பாடியது யார்?'...
மீண்டும் ஒருமுறை மண்வெட்டியை உயர்த்தி பூமியைக் கொத்தினான்.
'நந்தவனத்தில் ஓர் ஆண்டி'
- மீண்டும் அந்தக் குரல்!...
'யாரது!...'
புலன்களை எல்லாம் அடக்கிக் கொண்டு மீண்டும் மண்வெட்டியால் பூமியை வெட்டினான்.
மீண்டும் ஒரு குரல்:
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி..."
'ஐயோ! அர்த்தம் புரிகிறதே!'...
- ஆண்டி மண்வெட்டியை வீசி எறிந்துவிட்டுத் திரும்பிப் பார்த்தான்.
தூணைப் பிளந்து வெளிக் கிளம்பிய நரசிம்மாவதாரம் போன்று, பூமியை, புதைகுழி மேடுகளைப் பிளந்து கொண்டு ஒரு அழகிய சின்னஞ்சிறு பாலகன் வெளிவந்தான்.
கைகளைத் தட்டித் தாளமிட்டவாறே ஆண்டியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே பாடியது சிசு!
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி... கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி..."
குரல்கள் ஒன்றாகி, பலவாகி, ஏகமாகிச் சங்கமித்து முழங்கின.
அந்த மயான பூமியில் எத்தனையோ காலத்திற்கு முன் புதையுண்ட முதற் குழந்தை முதல் நேற்று மாண்டு புதையுண்ட கடைசிக் குழந்தைவரை எல்லாம் உயிர்பெற்று, உருப்பெற்று ஒன்றாகச் சங்கமித்து, விம்மிப் புடைத்து விகஸித்த குரலில் - மழலை மாறாத மதலைக் குரலில் - பாடிக்கொண்டு கைத்தாளமிட்டு அவனைச் சுற்றிச் சூழ நின்று ஆடின. வான வெளியெல்லாம் திசைகெட்டு தறிகெட்டுத் திரிந்து ஓடின.
ஆண்டி தன்னை மறந்து வாய்விட்டுச் சிரித்தான்.
அதோ, அவன் இருளனும் அந்தப் பாலகர் நடுவே நின்று நர்த்தனம் புரிகிறான். தாளம் போடுகிறான்.
பாட்டுப் பாடுகிறான்.
என்ன பாட்டுத் தெரியுமா?...
'நந்தவனத்தில் ஓர் ஆண்டி'
அடைத்துப் புடைத்து நெருக்கிக்கொண்டு ஓடும் சிசுக்களின் மகா சமுத்திரத்தில் தன் இருளனை தாவி அணைக்க ஓடினான்...
இருளனைக் காணோம்... தேடினான், காணோம்... இருளனை மட்டும் காணவே காணோம்... அந்தச் சிசுக்கள் யாவும் ஒன்றுபோல் இருந்தன.
என்னுடையது என்றும், இன்னொருவனுடையது என்றும், அவன் என்றும், அதுவென்றும் இதுவென்றும் பேதம் காண முடியாத அந்தச் சமுத்திரத்தில் இருளனை மட்டும் எப்படி இனம் கண்டுவிட முடியும்!...
ஆண்டி தவித்தான்!
ஆ!... என்ன தவிப்பு... என்ன தவிப்பு...
பன்னீர் மரத்தடியில் பிள்ளையின் பிணத்தருகே முகம் புதைத்து வீழ்ந்து கிடக்கும் ஆண்டியைக் கண்டு பதறியடித்துக் கொண்டு ஓடினாள் முருகாயி.
அவனைப் புரட்டி நிமிர்த்தி மடிமீது வைத்துக் கொண்டு கதறினாள்.
அவன் விழிகள் மெல்லத் திறந்தன.
- தெய்வமே! அவனுக்கு உயிர் இருந்தது; அவன் சாகவில்லை.
இன்னும் கூட அவன் அந்த 'நந்தவன'த்தில் தான் வாழ்கிறான். ஆனால் முன்போல் இப்போதெல்லாம் பாடுவதில்லை.
இடுகாட்டிற்கு வரும் பிணங்களைப் பார்க்கும் போதெல்லாம் 'கோ'வென்று கதறி அழுகிறான். ஊராரின் ஒவ்வொரு சோகத்திற்கும் அவன் பலியாகிறான்! ஆனால் இப்பொழுதும் ஊரார் அவனை ஒருமாதிரி என்றுதான் சொல்லுகிறார்கள்!
(எழுதப்பட்ட காலம்: செப்டம்பர் 1958)
நன்றி: இனிப்பும் கரிப்பும் (சிறுகதை தொகுப்பு) - ஒன்பதாம் பதிப்பு: அக்டோபர் 1994 - மீனாட்சி புத்தக நிலையம், மதுரை -1 |