"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Tamil Language & Literature > Jeyakantan > Short Story Collections of Jeyakantan - ஜெயகாந்தனின் சிறுகதைகள் > யுக சந்தி > இல்லாதது - எது > இரண்டு குழந்தைகள் > நான் இருக்கிறேன் > பொம்மை > தேவன் வருவாரா?. > துறவு > பூ உதிரும் > குறைப் பிறவி > யந்திரம் > டிரெடில் > பிணக்கு > நந்தவனத்தில் ஓர் ஆண்டி > நீ இன்னா ஸார் சொல்றே? > புதிய வார்ப்புகள் > சுயதரிசனம் > அக்ரஹாரத்துப் பூனை > அக்கினிப் பிரவேசம் > புது செருப்புக் கடிக்கும் > நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?
Short Story Collections of Jeyakantan in Unicode
ஜெயகாந்தன் - இரண்டு குழந்தைகள்
இரண்டு அடுக்கு மூன்று அடுக்கு மாடிகள் உடைய கட்டிடங்கள் நிறைந்த அந்தத் தெருவில் பெரிய உத்தியோகஸ்தர்கள், டாக்டர்கள், வக்கீல்கள் முதலியோர் வாழ்ந்தனர். அது மட்டுமல்லாமல், அநேகமாக ஒவ்வொரு வீட்டிற்கும் பக்கத்தில் சற்றுத்தள்ளியோ நெருங்கியோ அமைந்துள்ள கொட்டகைகளில் மாடுகள், பசுக்கள் வசித்தன. சில கொட்டகைகளில் கார்கள் இருந்தன. சேதன அசேதனப் பொருட்கள் யாவற்றுக்கும் இடம் கொடுத்த அந்தத் தெரு சிவப்பிக்கும் அவள் மகன் சோணையாவுக்கும் இடம் தந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட முடியுமா?.... முதலில் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலிருந்தும் அவளையும் அவள் குழந்தையையும் விரட்டினார்கள். பிறகு அந்த ரிட்டையர்ட் சப்ரிஜிஸ்திரார் சுப்புஐயரின் மனையாள் தயவின் பேரில், அவர்கள் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த மாட்டுக் கொட்டகையில் இடம் பிடித்தாள் சிவப்பி. மழையென்றும் குளிரென்றும் இயற்கை தொடுக்கும் தாக்குதல்களுக்கு அரணாய் அமைந்தது அந்தக் கொட்டகை. தினசரி அந்த மாட்டுக்கொட்டகையை அவள் சுத்தம்செய்வாள். அவள் படுத்துக்கொள்ளும் இடத்தை அவள் சுத்தம் செய்து கொள்ளுகிறாள். அதற்குக் காசு கொடுப்பார்களா, என்ன?.... பகல் பொழுதெல்லாம் இடுப்பில் பிள்ளைச் சுமையுடன், அந்தத் தெருவின் கோடியில் உள்ள விறகுக் கடையில் அவளைப் பார்க்கலாம். விறகுச் சுமை கிடைத்துவிட்டால், பிள்ளைச்சுமை இறங்கிவிடும். அவன் கையில் காலணாவுக்கு முறுக்கை வாங்கிக் கொடுத்து அங்கேயே மரத்தடியில் குந்தி இருக்கச் சொல்லிவிட்டு ஓடுவாள். பிள்ளையை விட்டுவிட்டுப் போகும் துடிப்பில், சுமையுடன் ஓட்டமாய் ஓடி ஒரு நொடியில் திருப்புவாள். சோணையாவும் புத்திசாலித்தனமாய், அம்மா வரும் வழியைப் பார்த்தவாறே உட்கார்ந்திருப்பான். அதுவரை முறுக்கைக் கடிக்கவேமாட்டான். தாயைக்கண்டதும் ஒரு சிரிப்பு மலரும். அவளும் ஓடி வந்து பிள்ளையைத் தூக்கி முத்தமிடுவாள். தாயுள்ளம் அந்தப் பிரிவைக் கூடத் தாங்க முடியாதது என்பது அவள் தவிப்பில் தெரியும். கையிலுள்ள முறுக்கைத் தாயின் வாயில் வைப்பான் சிறுவன். அவள் கொஞ்சம் கடித்து, அதை எடுத்து அவன் வாயில் வைத்து, "நீ தின்னுடா ஐயா...." என்று சொன்ன பிறகு தான் தின்பான். விறகுச் சுமை இல்லாத நேரங்களில் கடைத்தெருவில் சென்று கடைகளில் தானியம் புடைப்பாள். மாலை நேரத்தில் அந்தப் பெரிய தெருவின் ஒரு மூலையில், மரத்தடியில் மூன்று கற்களைச் சேர்த்து அடுப்பு மூட்டிச் சோறு சமைத்துத் தானும் தன் மகனும் உண்டபின் மாட்டுக் கொட்டகையில் வைக்கோல் பரப்பில் நித்திரை கொள்வாள். அந்தத் தெருவில் எல்லா வீட்டுக்கும் அவள் வேலை செய்வாள். அதிலும் சுப்பு ஐயர் வீட்டுக்காரர்களுக்கு அவளிடம் தனிச்சலுகை. அவளும் மற்ற வீட்டுக்காரர்களிடம் செய்யும் வேலைக்குக் கூலியாகக் காசு பெறுவது உண்டு. சுப்பு ஐயர் வீட்டில்...எப்பொழுதாவது அவர் மனைவி கொடுத்தாலும்கூட வாங்குவதில்லை. அவள் செய்யும் வேலைகளுக்காக மீந்துபோன சோறு, கறி குழம்பு வகையறாக்கள் அவளைச் சாரும். சுப்பு ஐயர் வீட்டில் அவளாகக் கேட்டு வாங்குவது, மத்தியான நேரத்தில் ஒரு குவளை சோறு வடித்த கஞ்சி மட்டும்தான். அந்தக் கஞ்சியில் அவளுக்கு அபரிமிதமான சுவை. சுப்பு ஐயர் வீட்டுக்குக் கிராமத்தில் இருந்து நெல் வருகிறது. நல்ல வீட்டு அரிசி; பச்சரிசிக் கஞ்சி மணக்கும்; அவளுக்குக் குடிக்க குடிக்க அது இனிக்கும். எந்த வேலை எப்படிப் போனாலும் பத்து பதினோரு மணிக்கு ஐயர் வீட்டு வாசற்படியில் தகரக் குவளையும் கையுமாய் வந்து நின்று விடுவாள். சுப்பு ஐயர் திண்ணையருகே ஈஸிச்சேரில் சாய்ந்திருக்கிறார். கையிலுள்ள விசிறி லேசாக அசைகிறது. திண்ணையில் தகரக் குவளையின் சப்தம் கேட்கவே ஐயர் நிமிர்ந்து பார்க்கிறார். "அடியே...ஒன் ஸ்வீகாரம் வந்திருக்கா; பாரு" சுப்புஐயருக்கு சிவப்பியைப் பார்த்தால் கொஞ்சமும் பிடிக்காது. மனைவி அவளிடம் பிரியமாய் இருப்பதே அதற்குக் காரணம். தனது வெறுப்பை எப்படியெப்படி யெல்லாமோ காட்டிக் கொள்வார். "என்னடா பயலே, வயசு நாலாகுதோன்னோ? இன்னம் என்ன ஆயி இடுப்பைவிட்டு எறங்கமாட்டேங்கறே. நீயும் போயி வெறகு தூக்கறதுதானே.... எப்பப் பார்த்தாலும் சவாரிதான்; நாளைக்கு நடந்து வரலேன்னா ஒன்னெ என்ன செய்றேன் பாரு...." என்று வேடிக்கை பேசவே சிவப்பி மகிழ்ந்து போனாள். ஐயர் தன் பிள்ளையைக் கொஞ்சிவிட்டார் என்ற நினைப்பில் சோணையாவை முத்தமிட்டாள். அதற்குள் சுப்பு ஐயரின் மனைவி உள்ளே இருந்து கஞ்சியில் உப்பைப் போட்டுக் கலக்கிக் கொண்டே வந்தாள். திண்ணையோரமாய் ஒதுங்கி, எட்டி நின்றவாறே புடவையைச் சேர்த்துப் பிடித்துக்கொண்டு சிவப்பி கையிலேந்தி நிற்கும் தகரக் குவளையில் அவள் கஞ்சியை வார்க்கும்போது, ஈஸிச்சேரில் சாய்ந்திருந்த சுப்பு ஐயர் நிமிர்ந்து உட்கார்ந்து கூர்ந்து கவனித்தார். கஞ்சியிலிருந்து ஒரு பருக்கை விழுவது தெரிந்ததோ, போச்சு, அவ்வளவுதான்'.... ஐயர் வீட்டு அம்மாள் இருந்த இருப்பும், இந்தக் கஞ்சித்தண்ணிக்குக்கூட வக்கில்லாமல் அவள் அப்பன் அடித்த 'லாட்ரி'யும்.... வம்ச பரம்பரையாகக் குலமுறை கிளர்த்த ஆரம்பித்துவிடுவார். "என்னடி அது 'லொடக்'னு கொட்டித்தே?..." என்று புருவத்தை உயர்த்தினார். அம்மாளுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது. "காட்டுடீ...ஐயர்கிட்டே கொண்டுபோய்க் காட்டு. கையைவிட்டுத் துழாவிப் பாருங்கோ... இந்த ஆத்து சொத்தெல்லாம் கொண்டுபோய்க் கொட்டிட்டேனேன்னோ.... இவர் துப்புக் கண்டுபிடிக்கிறார்...." என்று இரைந்துவிட்டு உள்ளே போனாள். "ஒண்ணுமில்லே சாமி....வெறும் கஞ்சி ஆடை" என்று அதை விரலால் எடுத்துக் காட்டி தூக்கி எறிந்தாள் சிவப்பி. "அடி அசடே....அதை எறிஞ்சுட்டியே...அதிலேதான் 'வைடமின் பி' இருக்கு." "எனக்கு அதொண்ணும் வாணாம் சாமி...." என்று கஞ்சிக் குவளையுடன் நகர்ந்தாள் சிவப்பி. அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஐயர் தனக்குள் சொல்லிக் கொண்டார்: "ஹ்ம்...கஞ்சித் தண்ணியைக் குடிச்சுட்டு என்ன தெம்பா, இருக்கா' அதிலேதான் சத்தெல்லாம் இருக்கு" என்று முணகியபின், உரத்த குரலில்.... "அடியே...இனிமே சோத்தெ வடிக்காதே. பொங்கிப்பிடு. அதிலேதான் சத்தெல்லாம் இருக்கு. ஒடம்புக்கு ரொம்ப நல்லது...." என்று சொன்னார். "ஆமா...இப்போ இருக்கற சத்தே போறும்" என்று சலித்துக்கொண்டு உள்ளே போனாள் அம்மாள். அம்மாள் எத்தனை தடவைகள் சலித்துக் கொண்டாலும், ஐயருக்கு சிவப்பியைப் பார்க்கும் போதெல்லாம் --- லோகத்தில் இருக்கும் சத்தெல்லாம் தன் வீட்டுக் கஞ்சித் தண்ணீரில் தான் இருப்பதாகத் தோன்றும். ராமநாதபுரம் ஜில்லாவிலிருந்து "பஞ்சம் பிழைப்ப"தற்காக மதுரை வந்தவள் சிவப்பி. பெயரளவில் சிவப்பி. கரிய ஆகிருதி...ஆரோக்கியமும் திடமான உடற்கட்டும் உடைய அவள் பஞ்சத்திலடிபட்டு இந்த நகரத்திற்கு வந்தவள்தான் என்றாலும், இங்குள்ளவர்கள் கண்டு வியக்கும்படிதான் இருந்தது அவள் உடல் வனப்பு. செழிப்பாக இருக்கும் பூமியில் வளமாக வாழும் வாய்ப்பும் கிட்டியிருந்தால் நிச்சயம் இவளால் முறம் கொண்டு புலியை விரட்டி இருக்க முடியும்' ஆனால் இப்போது.... முறம் கொண்டு தானியங்கள் புடைப்பதும், கூலிக்கு விறகு சுமப்பதுமாய் உழைத்துத் தானும் ---- கருப்பையாத்தேவனின் வாரிசாக திகழ்ந்து, தன் சிரிப்பிலும் புன்னகையிலும் அவள் கணவனின் சாயல் காட்டி, ஆறுதல் தரும் நான்கு வயது மகனான --- சோணையாவும் வயிறு வளர்ப்பது தான் அந்த மறத்தியின் உடல் வலு புரியும் மகத்தான சாதனை. இடுப்புக் குழந்தையும் தாயுமாய் அவளை இங்கே விட்டு விட்டு, ஏதாவது வேலை தேடி வருவதாகச் சொல்லி, வடக்குச் சீமைக்குப் போன அவள் புருஷன் கருப்பையாத் தேவனின் முகதரிசனம் ஆறு மாசமாகியும் கிடைக்கவில்லை. அன்று ஐயரவர்களுக்கு பிறந்த தின வைபவம். வீட்டில் விசேஷமானதால் விருந்தினர்களும் வந்திருந்தனர். வந்தவர்களுக்கெல்லாம் பந்தி நடந்ததால் சிவப்பி கஞ்சிக்காகக் காத்திருக்க வேண்டி இருந்தது. பிள்ளை பசியால் துடித்தான். அவனுக்கு 'பராக்கு'க் காட்டிப் பேசிச் சிரித்து விளையாடியவாறு கொட்டகையின் ஓரத்திலிருந்த மர நிழலில் குந்தியிருந்தாள் சிவப்பி. "ஒங் ஐயா எங்கலே...." என்று மகனின் முகவாயைப் பிடித்துக் கொஞ்சினாள் சிவப்பி. "ஐயா...ஓ....போயித்தாரு..." "எப்பலே வரும் ஒங்க ஐயா..." என்றதும் அவன் அவள் மடியிலிருந்து இறங்கி நடந்து, தெருவில் போய் நின்று இரண்டு பக்கமும் மாறி மாறிப் பார்த்துவிட்டு வந்தான். "ஆத்தா...ஐயா....ஊம்" என்று இரண்டு கையையும் விரித்தான். அவன் முகத்தில் ஏமாற்றமும் சோர்வும் படர்ந்திருந்தது. "ஐயா நாளைக்கு வந்துடும். வாரப்போ ஒனக்கு முட்டாயி, முறுக்கு, புதுச் சட்டை எல்லாம் கொண்ணாந்து குடுத்து...அப்புறம் நாம்ப நம்ம ஊருக்குப் போயி, நம்ம ஊட்லே இருக்கலாம்...." என்று கூறும்போது அவள் குரல் தழுதழுத்தது; கண்களில் நீர் துளிர்த்தது. மகனின் முகத்தில் முத்தம் கொடுக்கும் போது அவன் முகத்திலேயே கண்ணீரையும் துடைத்துக் கொண்டாள். இந்த சமயத்தில் ஐயர் வீட்டு வாசலில் இலை வந்து விழும் சப்தம் கேட்டது---- "ஆத்தா...கஞ்சி....கஞ்சி..." என்று குழந்தை பறந்தான். மகனை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு, கையில் தகரக் குவளையுடன் போய் நின்றாள் சிவப்பி. சுப்பு ஐயர் அப்பொழுதுதான் சாப்பாடு முடிந்து, திண்ணைக்கருகே ஈஸிசேரில் வந்து சாய்ந்து ஏப்பம் விட்டார். "என்ன சேப்பி?..." "இன்னக்கி விசேஸங்களா சாமி?" ---அவள் சாதாரணமாய், உபசாரத்திற்குத்தான் கேட்டு வைத்தாள். "என்னத்தெ விசேஷம் போ....ஊர்லேந்து பொண்ணு வந்திருக்காளோன்னா?... அதான்...ஹி...ஹி...." ---இவளுக்கு ஏதாவது தரவேண்டி இருக்குமோ என்ற பயத்தில் பூசி மழுப்பினார் ஐயர். உள்ளேயிருந்து அம்மாளின் குரல் மட்டும் கேட்டது. "யாரது சேப்பியா....?" "ஆமாங்க." "சித்தெ சந்துவழியா கொல்லப்புறம் வாயேண்டி....ஒன்னத்தான் நெனச்சிண்டே இருந்தேன். தொட்டியிலே.... ரெண்டு வாளி ஜலம் சேந்தி நெரப்பு... சாப்பிட்டவாளுக்குக் கையலம்பக்கூட ஜலம் இல்லே....சீக்கிரம் வா...." என்று அம்மாவின் குரல் ஒலித்ததும் இடுப்பிலிருந்த குழந்தையுடன் உள்ளே போகும் சிவப்பியைப் பார்த்து, "இடுப்பைவிட்டு எறங்காமே ஒன் உசிரை வாங்கறதே, சனி அத்தெ எறக்கி விட்டுட்டுப் போ'..." என்றார் ஐயர். குழந்தையை இறக்கி மர நிழலில் உட்கார வைத்து "ஆத்தா போயி கொஞ்சம் தண்ணி எறைச்சி ஊத்திட்டு வாரேன்; அழுவாமே குந்தி இருக்கியா, ஐயா?..." என்று அவனை முத்தம் கொஞ்சினாள் சிவப்பி. 'சரி' என்று சமர்த்தாகத் தரையில் சம்மணம் கட்டி உட்கார்ந்து கொண்டான் சிறுவன். சந்துப் பக்கம் போகும் போது சிவப்பி திரும்பித் திரும்பித் தன் மகனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சென்றாள். அவனும் சிரித்தவாறு உட்கார்ந்திருந்தான். பையன் அழாமல் அடம் பிடிக்காமல் இருந்ததில் ஐயருக்குக் கொஞ்சம் ஏமாற்றம்; ஆத்திரம் என்று கூடச் சொல்லலாம். உள்ளேயிருந்து ஆரோகண அவரோகண கதிகளிலெல்லாம் குரலை முழக்கிக் கொண்டு வந்தான் அவர் மகள் வயிற்றுப் பேரன். அவனுக்கும் வயது நான்குதான் இருக்கும். நான்கு விரலையும் வாய்க்குள் திணித்தவாறு சிணுங்கிக் கொண்டே அவருகே வந்தான் பேரன். "ஏண்டா கண்ணா அழறே? இப்படி வா...மடியிலே வந்து தாச்சிக்கோ" என்று பேரனை அழைத்தார். "மாத்தேன் போ....அம்மா...ஆ...ஆ" என்று வாயைப் பிளந்து கொண்டு அழ ஆரம்பித்தான் குழந்தை. "அம்மா சாப்பிடறாடா கண்ணா...சாப்டுட்டு வந்து ஒன்னெத் தூக்கிண்டுடுவா. சமத்தோன்னோ?....அதோ பாரு, அந்தப் பையனை...அவ அம்மாவும் எங்கேயோ போயித்தான் இருக்கா...ஒன்னெ மாதிரி அவன் அழறானோ?" என்று சோணையாவைக் காட்டினார் ஐயர். சோணையா கையைத் தட்டிக்கொண்டு ஐயரின் பேரனைப் பார்த்துச் சிரித்தான்; அவனோ காலை உதைத்துக் கொண்டு அழுதான்' ---தனது பேரனுக்கு அவனை வேடிக்கை காட்டப்போய், தன் பேரன் அவனுக்கு வேடிக்கையாகிப் போனானே என்ற ஊமை ஆத்திரம் ஐயருக்கு... "ஏண்டா சிரிக்கிறே? அப்படியே போட்டேன்னா..." என்று விளையாட்டாய்க் கண்டித்து தம் எரிச்சலைத் தீர்த்துக் கொண்டார் ஐயர். "அந்தப் பையன்தான் அசடு....அவனை நன்னா அடிப்போமா?" ---அவர் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் கத்தினான் பேரன். "இதெவிட அசடு லோகத்திலே உண்டோ.... நன்னா ஒதைக்கணும்" என்று கருவிக்கொண்டே ஐயரின் மகள் எச்சில் இலையுடன் தெருப்பக்கம் வந்தாள். இலையைப் போட்டுக் கையைக் கழுவிய பின், "சனியனே, கத்திப் பிராணனைத் தொலைக்காதே' " என்று பல்லைக் கடித்துக் கொண்டு வந்து மகனைத் தூக்கிக் கொண்டாள். "என்னடி பொண்ணே, ஒன்னும் சாப்பிடாம இலையைக் கொண்டு வந்து எறிஞ்சிருக்கே... எல்லாம் அப்படியே இருக்கு ...ஜாங்கிரிகூடன்னா அப்படியே கெடக்கு? இப்படி 'வேஸ்ட்' பண்ணுவாளோ?..." என்று அரற்றினார் ஐயர். "இந்த சனி என்னெ சாப்பிட விட்டாத்தானே...?" "சரி...அவனெக் கத்த விடாதே' அவனுக்கு ஒரு ஜாங்கிரி குடு" என்று சொல்லிவிட்டு சோணையாவைப் பார்த்தார். "ஏண்டா பயலே, நோக்கு ஜாங்கிரி வேணுமா?" என்றார் கண்களைச் சிமிட்டிக் கொண்டே. ---பையனுக்கு புரியவில்லை. "மிட்டாயிடா...மிட்டாய், வேணுமா?" மிட்டாயி என்றதும் பையனுக்குப் புரிந்துவிட்டது. சந்தோஷத்துடன் தலையை ஆட்டிக் கொண்டு எழுந்து வந்தான். "அதோ, அதான்...மிட்டாயிடா... எடுத்துத் தின்னு பாரு, இனிக்கும்...." என்று நாக்கைச் சப்புக்கொட்டி ஆசை மூட்டி எச்சில் இலையைக் காட்டினார் ஐயர். சோணையா தனது பிஞ்சுக் கரங்களால் எச்சிலையில் கிடக்கும் துண்டு ஜாங்கிரியை எடுத்து வாயில் வைத்துச் சுவைத்தான்.... "எலே...எலே...போடுலே கீளே----தூ...." என்று கூவியவாறு சந்திலிருந்து ஓடிவந்த சிவப்பி அவன் கையிலிருந்த ஜாங்கிரியைத் தட்டிவிட்டாள். "துப்புலே.... துப்பு..." என்று அவன் தலையில் 'நறுக்' கென்று குட்டினாள். சோணையா அழுதான்; அவன் பிளந்த வாய்க்குள் விரலைவிட்டு அந்த ஜாங்கிரித் துண்டை வழித்து எறிந்தாள். "நா எலும்பை முறிச்சி கஞ்சி ஊத்தறேன்....எச்சப் பொறுக்கறியா?..." என்று முதுகில் அறைந்தாள். "கொழந்தேயெ அடிக்காதே சேப்பி..." என்றார் ஐயர். "இல்லே சாமி...நாங்க இல்லாத ஏளைங்க....இப்பவே கண்டிக்காட்டி நாளைக்கி எச்சிக்கலை பொறுக்கியாவே ஆயிடும்..." என்று சொல்லிவிட்டு இடுப்பில் இருக்கும் சோணையாவின் முகத்தைத் துடைத்து "இனிமே எச்சியெல்லாம் எடுக்காதே' " என்று சமாதானமாய்க் கேட்டாள். பையன் விம்மிக் கொண்டே ஐயரைக் காட்டி, "சாமி....சாமிதான் எடுத்துத் திங்கச் சொல்லிச்சு..." என்று அழுதான். சிவப்பிக்கு உடம்பு பதைத்தது, கண்கள் சிவக்க ஐயரைப் பார்த்தாள். "ஏன் சாமி...ஒங்க புள்ளையா இருந்தா சொல்லுவீங்களா?... ஒங்க எச்சி ஒஸத்தியா இருந்தா ஒங்களோட, எம் பையனுக்கு ஏன் அதைத் தரணும்..." என்று கோபமாய்க் கேட்டாள். "என்னடி அது சத்தம்?" என்று கேட்டுக் கொண்டே பாத்திரத்தில் கஞ்சிக் கொண்டு வந்தாள் வீட்டு அம்மாள். "நீயே பாரும்மா...எம்மூட்டப் புள்ளைக்கி எச்சிலைத் திங்கப் பளக்கிக் கொடுக்கிறாரும்மா, சாமி..." என்று கண்ணைத் துடைத்துக் கொண்டாள் சிவப்பி. "நான் என்ன பண்ணுவேண்டி...நேக்கு அவர் ஒரு பச்சைக் கொழந்தை...ஒன் கொழந்தையை நீ அடிக்கறே; நா என்ன பண்றது, சொல்லு?" "ஏண்டி சேப்பி, நான்தான் அவனை எடுத்துத் திங்கச் சொன்னேன்னு சொல்றயே, நான் சொன்னதை நீ கண்டையா?...." என்று எழுந்து வந்தார் ஐயர். "எம்மவன் வறவனுக்கு பொறந்தவன். பொய் சொல்ல மாட்டான் சாமி..." ஆக்ரோஷத்தோடு இரைந்தாள் சிவப்பி. ஐயர் அசந்து போனார்' "ஆமா; சொன்னேன்னுதான் வச்சுக்கோயேன்...எங்க வீட்டுக் கஞ்சியெ தெனம் குடிக்கறயே, அது மட்டும் எச்சல் இல்லியா?... அதுவும் எச்சல்தான் தெரிஞ்சுக்கோ..." என்று பதிலுக்கு இரைந்தார் ஐயர். "இந்தாங்க சாமி...ஒங்க எச்சிக் கஞ்சி' நீங்களே தான் குடிச்சிக்குங்க... இந்த எச்சில் எனக்கு வாணாம்..." என்று தகரக் குவளையைத் 'தடா'லெனச் சாய்த்துவிட்டு, மகனைத் தூக்கி இடுப்பில் பொத்தென இருத்திக்கொண்டு வேகமாய் நடந்தாள் சிவப்பி; இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்து மனம் பொறுக்காமல் "எல்லாம் என் கர்மம், என் கர்மம்' " என்று தலையிலடித்துக் கொண்டு உள்ளே போனாள் ஐயரின் மனைவி. உள்ளே தோட்டத்தில் தொட்டி நிறைய---சிவப்பியின் உழைப்பால் நிறைந்திருந்த--- தண்ணீரையும் பாத்திரம் நிறைய அவளுக்காக எடுத்து வைத்திருந்த சோற்றையும் குழம்பையும் பார்த்த அம்மாளுக்குக் கண்கள் கலங்கிப் போயின. "அடியே...பாத்தையோ, நம்மாத்துக் கஞ்சியெக் குடிச்சு வந்த கொழுப்புடீ... இனிமே அவளுக்கு கஞ்சி ஊத்தப் படாது சொல்லிட்டேன்... நாளையிலேருந்து சாத்தெ வடிக்காதே.... பொங்கிப்பிடு.... அதிலேதான், சத்து இருக்கு..." என்ற ஐயரின் வழக்கமான பல்லவி திண்ணையிலிருந்து சற்றுக் கண்டிப்பான குரலில் ஒலித்தது. மறுநாள் ஐயர் வீட்டில் சோற்றை வடித்தார்களோ, பொங்கினார்களோ,.... ஆனால், வழக்கமாகக் கஞ்சி வாங்க வரும் சிவப்பியை மட்டும் மறுநாள்... மறுநாள் என்ன, அதன் பிறகு ஒரு நாளும் அந்தத் தெருவில் காணவில்லை. |