தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம் - நூல் அமைப்பு, அறிமுகம், சொற்றொகுதி, விளக்கக் குறிப்புகள்பாடல் 1 & 2பாடல்கள் 3-10 > பாடல்கள் 11-18 > பாடல்கள் 19-25 > பாடல்கள் 25-35 > பாடல் 36 - 50 >
 

 
Kalevala - A Finland Epic

கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம்
பாடல் 1 & 2

தொகுப்பு: எலியாஸ் லொண்ரொத்
தமிழ் மொழிபெயர்ப்பு: ஆர். சிவலிங்கம் (உதயணன்)
நூல் அமைப்பும் அறிமுகமும்: டாக்டர் அஸ்கொ பார்பொலா (பேராசிரியர் - இந்திய இயல்)

Compiled by: Elias Lonnrot
Translated into Tamil by R.Sivalingam
Edited with an introduction by Asko Parpola


Etext Preparation (input) : Ms. Sarala Sandirasegarane
Etext Preparation (proof-reading) : Udhayanan
Etext Preparation (webpage) : Kumar Mallikarjunan

C: Project Madurai 1999  Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


பாடல் 1 - வைனா மொயினனின் பிறப்பு

 

அடிகள் 1-102: பாடல் ஆரம்பம்.

அடிகள் 103 - 176: வாயுவின் கன்னிமகள் கடலின் நீர்ப் பரப்பில் இறங்கிக் காற்றாலும் அலைகளாலும் அணைக்கப்பட்டு நீரன்னை ஆகிறாள்.

அடிகள் 177 - 212: ஒரு பறவை நீரன்னையின் முழங்காலில் கூடு கட்டி அதில் முட்டைகளை இடுகிறது.

அடிகள் 213 - 244: முட்டைகள் கூட்டிலிருந்து உருண்டோ டி உடைந்து பல துண்டுகளாகின்றன; உடைந்த துண்டுகள் பூமி, வானம், சூரியன், சந்திரன், முகில்களாக உருவாகின்றன.

அடிகள் 245 - 280: கடலில் மேட்டு நிலங்கள், வளைகுடாக்கள், கரைகள், ஆழ்ந்த பகுதி, ஆழமற்ற பகுதி ஆகியவற்றை நீரன்னை படைக்கிறாள்.

அடிகள் 281 - 344: நீரன்னையின் வயிற்றில் பிறந்த வைனாமொயினன், வெகுகாலம் அலைகளால் அலைகழிக்கப்பட்டு, முடிவில் கரையேறுகிறான்.


* இவ்வடையாளமிட்ட சொற்களை சொற்றொகுதியில் பார்க்க
** இவ்வடையாளமிட்ட சொற்களை விளக்கக் குறிப்புகளில் பார்க்க


எனதுள்ளத்தில் உள்ளுணர்வு இப்போ விழிக்கிறது
எனதுள்ளே உயிர்பெற்று எழுகிறது எண்ணமெல்லாம்
பாடலையான் பக்குவமாய்ப் பாடுவதற்கு வந்திட்டேன்
பாடலையான் பண்ணுடனே பலபேர்க்கும் பகருகிறேன்
சுற்றத்தின் வரலாற்றைச் சுவையாகச் சொல்வதற்கு
உற்றதொரு பேரினத்தின் பழங்கதையை ஓதுதற்கு ;
வார்த்தைகளோ வாயினிலே வந்து நெகிழ்கிறது
நேர்த்திமிகு சொற்றொடர்கள் நேராய்ச் சொரிகிறது
நாவிலே நயமாக நன்றாகப் புரள்கிறது
பாவாகிப் பற்களிடைப் பதமாய் உருள்கிறது.   10

அன்பான சோதரனே, அரியஎன்றன் தோழர்களே !
என்னோடே வளர்துயர்ந்த எழில்மிகுந்த நண்பர்களே !
இப்போது வந்திடுங்கள் இணைந்தொன்றாய்ப் பாடிடுவோம்
நற்சுவையாய்ச் சொல்லுதற்கு நல்லுள்ளத்தைத் தாருங்கள்
ஒன்றாகக் கூடியுள்ளோம் ஒன்றாகச் சந்தித்தோம்
நன்றாய் இருவேறு இடமிருந்து நாம் வந்தோம் ;
அரிதாகக் கூடிடுவோம அரிதாகச் சந்திப்போம்
அரிதாக ஒருவரினை ஒருவர்நாம் சந்திப்போம்
வறிதாகிப் போய்வீணே மயங்குகின்ற எல்லைகளில்
தெரியும்வட பால்நிலத்தில் செழிப் பிழந்த பூமியின்கண்.   20

கரத்தோடு கரம்சேர்த்துக் கனிவாகக் கைகோர்த்து
விரலோடு விரல்சேர்த்து விரலையழ காய்க்கோர்த்து
நன்றாய்நாம் பாடிடுவோம் நயம்திகழப் பாடிடுவோம்
ஒன்றிச்சீர் கொண்டவற்றை உவகையோடு பாடிடுவோம்
பொன்னான நல்லிதயம் படைத்தவர்கள் கேட்கட்டும்
இனிமையுறு நன்நெஞ்சம் இயைந்தவர்கள் அறியட்டும்
எழுச்சி மிகுந்தோங்கும் இளைஞர்களின் மத்தியிலும்
வளர்ந்துவரும் தேசீய மக்களவர் மத்தியிலும்
யாமறிந்து கொண்டுள்ள நல்லியல்புச் சொற்களையும்
நமதுளத்தில் ஊறுகின்ற நற்சுவைசேர் கதைகளையும்   30

முதிய*வைனா மொயினனரைக் **கச்சணியி லேயிருந்து
*இல்மரினன் ஊதுலையின் இயைஆழத் தேயிருந்து
*தூரநெஞ்சி னன்வாளின் தொடுகூர் முனையிருந்து
*யொவுகாஹை னன்குறுக்கு **வில்லினது வழியிருந்து
**வடபால் நிலத்துற்ற வயல்களிலே தானிருந்து
*கலேவலாப் பகுதியதன் கனவெளிக ளுடிருந்து.
என்தந்தை முன்பொருகால் இனிதிசைத்த பாடலிது
முன்னர்ஒரு கோடரிக்குப் பிடிசமைத்த நேரமதில்
என்அன்னை கற்பித்த எழிற்பாடல் தானிதுவாம்
**தறித்தண்டில் நூலதனைத் தான்சுற்றும் வேளையிலே   40

சிறுகுழந்தை யாய்நிலத்தில் செம்மையுறத் தான்தவழ்ந்து
அவள்முழங்கா லவைமுன்னே அழகாகத் தான்நகர்ந்து
**பால்தாடி கொண்டுள்ள பராரிக் குழந்தையதாய்
வாயில் **புளித்திட்ட பாலொழுக வந்திடுங்கால்.
*சம்போவின் சொற்களுக்குத் தனிப்பஞ்ச மொன்றில்லை
*லொவ்ஹியின் மாயங்கட் கெல்லையே ஒன்றில்லை:
வார்த்தைகளில் சம்போவும் வாகாய் முதிர்ந்ததுண்டு
மாயத்தால் லொவ்ஹியும் மறைந்தன்றோ போய்விட்டாள்
பாடலினால் *விபுனனும் பட்டிறந்து போய்விட்டான்
ஆடலினால் அழிந்திட்டான் ஆடவனாம் *லெ(ம்)மின்கைனன்  50

இன்னும் பலகதைகள் இருக்கின்ற தோதுதற்கு
மன்னும் இவைதவிர மாயவுரை யானறிவேன்
பாதையிலே பொறுக்கியது பாதிக் கதைமேலும்
புதர்களிலே பறித்தெடுத்தேன் மீதிக் கதையின்னும்
பற்றைகளில் நான்கொஞ்சம் பதமாகப் பெற்றிட்டேன்
கண்டுகொண்டேன் முளைகளிலே கதைவேறு கொஞ்சந்தான்
புல்முனையின் பசுமையிலும் புணர்ந்ததுண்டு சிற்சிலவே
சிறுப்பாதைப் பரப்பினிலும் சேர்ந்ததுண்டு சிலகதைகள்
நான்மந்தை களைமேய்த்து நடக்கும் இடையனென
சிறுவனெனப் புல்வெளியில் சென்றிட்ட போதினிலும்   60

தேன்வடியும் மேட்டுநிலச் சீர்சால் மடியினிலும்
பொன்னான குன்றின் புகழ்சார் முடியினிலும்
கருநிறத்து *முரிக்கி யதனை நனிதொடர்ந்தும்
புள்ளியுள்ள நல்லாவாம் *கிம்மோ அருகினிலும்.
குளிர்வந்து தந்ததுண்டு குணமார் சிலகதைகள்
கார்வந்து சொன்னதுண்டு கவினார் சிலகவிகள்
காற்றுவந்து கூறியது கவியொன்று கேட்டேன்யான்
கடலலையும் கூடவந்து கவிகூறக் கேட்டேன்யான்
புதுப்பாடல் புள்ளினங்கள் புகன்றுதர வும்பெற்றேன்
மரநுனிகள் மாயச்சொல் வகைசொல்ல வும்கேட்டேன்.   70

இவற்றையெல்லாம் பந்தாக இணைத்தொன்று சேர்த்திட்டேன்
நயத்துடனே ஒழுங்கமைத்து நற்பொதியாய்க் கட்டிவைத்தேன்
**சறுக்குகின்ற வண்டியிலே தான்பந்தை நான்வைத்தேன்
வண்டியையும் வீட்டுக்கு மகிழ்வூரக் கொண்டுசென்றேன்
களஞ்சியத்தில் வண்டியினைக் கவனமாய் விட்டுவைத்தேன்
சரக்கையெல்லாம் கூடத்தின் சரியான மேற்றளத்தில்
சிறுசெப்புச் சிமிழொன்றில் சேர்த்தேயான் வைத்திருந்தேன்.
பலகாலம் என்கதைகள் படுகுளிரில் தான்தங்கி
பல்லாண்டு மறைவாகப் பாங்கா யிருந்ததுண்டு.   80

என்கதையைப் படுகுளிரில் இருந்தெடுத்து விடலாமா?
உறைகுளிரில் இருந்தந்த உயர்பாட்டை மீட்பதுவா?
சிறுகுமிழை வீட்டுக்குள் சீரமையக் கொண்டுவந்து
ஆசனத்தின் நுனியினிலே அச்சிமிழைத் தான்வைத்து
சீரான கூரைமரத் தம்பத்தின் கீழாக
சிறப்புடைய முகட்டின்கீழ் செம்மையுற வைப்பதுவா?
சொற்களின் பெட்டகத்தைத் துணிவாய்த் திறந்தெடுத்து
கதைகளின் பெட்டகத்தைக் கவனமுடன் தான்திறந்து
பந்தாக விருந்தவதைப் பக்குவமாய்த் தான்கழற்றி
நான்பொதியின் நன்முடிச்சை நன்றாய் அவிழ்ப்பதுவா?   90

சிறப்பான பாட்டொன்று செம்மையுறப் பாடுவன்யான்
சீரான இசைக்கூட்டிச் செம்மையுறப் பாடுவன்யான்
**தானியத்து ரொட்டிசிறி தாயெடுத்து உண்டதன்பின்
**பார்லிப்பா னம்சிறிது பார்த்துப் பருகிவிட்டு;
பார்லியின் பானமது பருகுதற்கு இல்லையெனின்
மதுபானம் கூட வைத்திருக்க வில்லையெனின்
வறட்சியுற்ற வாயதனால் வளமாகப் பாடுவன்யான்
வெறும்நீரை யானருந்தி விருப்புடனே பாடுவன்யான்
எமதிந்த அந்தியினை இன்றே மகிழவைக்க
பேரான இப்பகலைப் பெரிதாய்ச் சிறப்பிக்க   100

நாளை வரும்பொழுதை நலமாக ஆக்கிவைக்க
புதிதாம் புலரியொன்றைப் பொன்னாய்த் தொடங்கிவைக்க.
இவ்விதமே கூறுகதை இனிதாக யான்கேட்டேன்
எவ்வாறு ஆனதென்றும் எளிதாய்த் தெரிந்துகொண்டேன்:
எங்களிடம் தனியாக இரவெல்லாம் வந்திருந்து
தனியாகப் பகலெல்லாம் தானே புலர்வகையில்.
தனியாகத் தோன்றினான் தகைவைனா மொயினனவன்
தோன்றியது நிலையான துய்ய கவிச்செல்வம்
அவனைச் சுமந்த அழகான நங்கையென்னும்
அன்னையாம் *வாயுமகள் அவளிடத்தி லேயிருந்து.   110

வாயுக்குக் கன்னி மகளொருத்தி யன்றிருந்தாள்
வனப்பெல்லாம் இயற்கைமகள் வளமாகத் தான்பெற்றாள்
தூய்மையுடன் பலநாள் துணிவோடு வாழ்ந்திருந்தாள்
திடமான கன்னிகையாய்ச் சீராக வாழ்ந்திருந்தாள்
வாயுவின் முன்றிலிலே வளமாய் விரிபரப்பில்
விண்வெளியின் விசாலித்து விரிந்த விளைநிலத்தில்.
நாளாக நாளாக நன்றாய் மனம்சலித்து
"ஐயகோ, வாழ்விதுவா?" அலுத்திட்டாள் இவ்விதமாய்
தனியாக எப்போதும் தானாகச் சுற்றிவந்து
கன்னிகையாய் எப்போதும் காலத்தைப் போக்கிவந்தாள்  120

வானத்து வெளியெல்லாம் வந்தாள் பவனியதாய்
வெறுமைமிகு விண்வெளியின் வீதியெல்லாம் தான்தவழ்ந்தாள்.
ஆனதனால் மெதுவாய் அங்கிருந்து கீழிறங்கி
அழகுமிகு நீரலைமேல் அவள்படிந்து நின்றிட்டாள்
தெளிவாக நீண்டு தெரியும் சமுத்திரத்தின்
திடமாம் மடியதனில் சேரவந்து வீழ்ந்திருந்தாள்.
அப்போ பெருங்காற்று அதிபலமாய்த் தோன்றியது
கிழக்கிருந்து காலநிலை கெட்டுச் சினந்தெழுந்து
சமுத்திரத்தை யேநுரையாய்த் தாக்கிக் கலக்கிவைக்க
திரைதிரை யாய்மோதிச் சீரழித்த தேயாங்கு.   130

காற்றவளைக் கீழ்மேலாய்க் கலக்கி யசைத்தாட்ட
பாவை யவள்துரத்தப் பட்டாள் நுரைதிரையால்
நீல நிறத்தோடு நீண்ட சமுத்திரத்தில்
வெள்ளைத் திரைபரந்து மிகுந்த கடற்பரப்பில்;
காற்றுவந்து கர்ப்பத்தில் கலந்தந்தக் கன்னிகையும்
சமுத்திரத்தின் நல்வலியால் தகைசால் பொலிவானாள்.

கனமாம் கருவொன்று கவினுதரம் தங்கியதால்
கனத்த வயிற்றோடு கன்னியவள் வாழ்ந்திட்டாள்
ஒன்று இரண்டல்ல உறுமெழுநூ றாண்டுகளாய்
மனித வரலாற்றில் மன்னுபொன்பான் வாழ்காலம்   140

ஆனாலும் ஓர்பிறப்பும் அங்கே நடக்கவில்லை
ஏதும் படைப்பொன்றும் இன்னும் நிகழவில்லை.
நீரன்னை யாகவவள் நெடுநாளாய்ச் சுற்றிவந்தாள்
நீந்திக் கிழக்கினிலும் நீந்தினாள் மேற்கினிலும்
நீந்தி வடமேற்கே நீந்திட்டாள் தெற்கனைத்தும்
வாயுக் கரையெல்லாம் வந்திட்டாள் நீந்தியவள்
பிரசவத்து நோவலியால் பெருந்துயரம் தான்கண்டு
கருவதனால் நேர்ந்திட்ட கடுந்துயரம் தான்கொண்டாள்
ஆனாலும் ஓர்பிறப்பும் அங்கே நடக்கவில்லை
ஏதும் படைப்பொன்றும் இன்னும் நிகழவில்லை.   150

அழுதாள் அரற்றினாள் ஆற்றா தலமந்தாள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாளே இவ்விதமாய்:
"நானோவிந் நாளினிலே நலமிழந்த பாவியையோ
ஏழைச் சிறுமியென எங்கும் அலைகின்றேன்!
ஏதோ முடிவொன்றுக் கிப்போது வந்திட்டேன்
என்றென்று மேயிந்த எழில்வானத் தின்கீழாய்
கடுங்காற்று வந்து கதிகீழ்மேல் நின்றசைக்க
நுரைதிரை யிங்கெழுந்து நொந்தவென்னை யேதுரத்த
அகன்று பரந்திட்ட அந்நீர்ப் பரப்பினிலே
விரிந்து பரந்திட்ட வியன்கடலின் வீழ்மடியில்.   160

பவனத்தி லிருந்திருந்தால் பலனா யிருந்திருக்கும்
காற்றினது கன்னிகையாய் கனநலமாய் வாழ்ந்திருப்பேன்
இப்போது போல எங்குமலைந் தோயாமல்
நீரன்னை யாக நிலைகெட்டுப் போகாமல்:
இங்கே யிருப்பதுவோ இகல்குளிராய்க் காண்கிறது
நீரில் நடுங்கி நிதம்நலிந்து வாடுகிறேன்
எடுத்தே யெறியும் இவ்வலைமேல் வாழ்வதனால்
நெடிதாகி நீண்ட நீர்ப்பரப்பில் நீந்துவதால்.

ஓ,மா **முதுமனிதா, உயர்மா தெய்வமதே!
வானம் முழுவதையும் வலிதாங்கும் தற்பரனே!   170

தேவைப் படும்தருணம் தெரிந்திங்கு வந்திடுவாய்
கூவி யழைக்கையிலே குறைபோக்க வந்திடுவாய்
துயருற்ற பெண்ணெனது துன்பத்தைத் தீர்த்திடுவாய்
வயிற்றில் வரும்நோவின் வாதையைப் போக்கிடுவாய்
விரைவில் வருவாய் வெளிப்படுவாய் இக்கணத்தில்
தேவைமிகு நேரமிது திண்ணமாய் வந்திடுவாய்".

*** *** ***

காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது
கணநே ரம்சில கடந்தே முடிந்தது
**நேராய்ப் பறக்கும் **தாரா வந்தது
வறிதாய் அங்கும் இங்கும் பறந்தது     180
கூடொன் றமைக்கும் இடத்தைத் தேடி
குடிலொன்று கட்டி வாழ்ந்திடல் நாடி.

கிழக்கே பறந்தது மேற்கே பறந்தது
கிளர்வட மேற்கொடு தெற்கும் பறந்தது
ஆயினும் அதற்கிட மொன்றும் கிடைத்தில(து)
அங்குவீண் போக்கிட மொன்றுங் கிடைத்தில(து)
கூடொன்று கட்டிக் குடியிருந் தாறிட
வீடொன் றமைத்து விரும்பிவாழ்ந் தோய்திட.

அந்தரந் தன்னிலே அகலா நின்றது
சிந்தனை செய்தது சீருற நினைத்தது    190

"நான்என் கூட்டைக் காற்றில் கட்டவா?
நல்ல வசிப்பிடம் அலையில் அமைக்கவா?
காற்றுவந் தேயதைக் கட்டொடு வீழ்த்தும்
கதறும் திரையதைத் திண்ணம் அழிக்கும்."

அப்போ தங்குநீ ரன்னையாம் பெண்ணாள்
அழகுநீ ரன்னை காற்றதன் கன்னி
கடல்மேல் தன்முழங் காலதைத் தூக்கி
கடலலை மேல்தன் தோளை உயர்த்தி
பொன்வாத் துக்குப் புகலிடம் தந்தாள்
பொலிவாம் ஓரிடம் வாழ்ந்திடத் தந்தாள்.    200

வனப்புறு வாத்தது வண்ணவான் பறவை
வானத்தி லூர்ந்துமே லந்தரம் நின்று
நீரன்னை தந்த முழங்கால் கண்டு
நீல நிறத்துநீர்ப் பரப்பதன் மேலே
புல்வளர் ஓர்திடல் புதிதென் றெண்ணி
பொன்வசந் தப்பரப் பென்றெண் ணியது.

பறந்துவாத் தந்தரம் பறவா நின்று
பவிசுறு முழங்கா லதில்மெது விறங்கி
வீட்டின் தேவையால் கூடொன் றமைத்து
இதப்பத மாயிருந் திட்டது முட்டை     210

எழில் பொன் முட்டை இட்டது ஆறு
இரும்பா லானது ஒன்றுடன் ஏழு.

*** *** ***
முட்டைகளை அப்பறவை முனைந்து அடைக்காக்க
முழங்கால் சூடாகி வெப்பமாய் மாறிற்று;
முதல்நாள் மறுநாளும் முழுதுமடை காத்ததது
மூன்றா வதுநாளும் விரைந்துஅடை காத்ததுவே
அப்போது அங்கிருந்த அழகுநீ ரன்னையவள்
நீரன்னை யான நெடுங்காற் றதன்கன்னி
மேலெல்லாம் வெந்நெருப்பால் வேகுவது போலறிந்து
தோலெல்லாம் தீப்பற்றிச் சுடுவதுபோ லேயுணர்ந்தாள்:  220
முழங்கால் முழுவதிலும் முண்டதீப் பற்றிவந்து
முற்றாய் நரம்புகளு முருகுவதா யாங்குணர்ந்தாள்.

அப்போ தவசரமாய் அசைத்தாள் முழங்காலை
உடலுறுப்பு அத்தனையும் உலுப்பினாள் ஒன்றாக
முட்டைக ளெல்லாம் முழ்கினவே நீரோடி
ஆழி அலைகளிலே அமிழ்ந்தனவே போராடி;
முட்டை யெலாம் மோதுண்டு முற்றாய் நொருங்கிடவே
சிதறினவே யாங்கு சிறுசிறிய துண்டுகளாய்.

அச்சிறிய துண்டுகளோ அமிழவில்லைச் சேற்றினிலே
நீரிற்போய்த் துண்டுகளும் நேராய் அழியவில்லை;   230 

துண்டுகள் நற்பொருட்க ளாய்மாறித் தோன்றினவே
தூய பொருட்களெனத் துகளெல்லாம் மாறினவே:
முட்டை யொன்றன் கீழ்ப்பாதி முழுதாக மாற்றமுற்று
பூமியன்னை யாய்க்கீழே பொலிந்து விளங்கிற்று
உடைந்தமுட்டை தன்னுடைய உயர்வான மேற்பாதி
சுவர்க்கமாய் மேலெழுந்து தோன்றி ஒளிர்ந்ததுவே,
மேற்பாதி யிலிருந்த மிகுமஞ்சள் ஒண்கருவோ
மங்கள சூரியனாய் வந்து திகழ்ந்ததுவே,
மேற்பாதி யிலிருந்த வெள்ளைக் கருவதுவும்
நிலவாக வானில் நீள்பவனி வந்ததுவே,     240

முட்டையிலே பன்னிறத்தும் முண்டிருந்த புள்ளியெலாம்
வான வெளியினிலே வந்தனவே விண்மீனாய்,
முட்டையிலே கார்நிறத்தில் முன்பிருந்த யாவையுமே
வானில் முகில்களென மாறித் திகழ்ந்தனவே.

*** *** ***

கரைந்தது நேரம் கடந்தது காலம்
வருடங்க ளோடி மறைந்தன விரைவாய்
புதிய சூரியன் பொலிவுடன் எழுந்தான்
புத்தெழில் நிலவும் பொன்வான் திகழ்ந்தது.
இன்னும் நீந்தினள் எழில்நீ ரன்னை
கன்னிநீ ரன்னை காற்றதன் புதல்வி    250

புகார்நிறைந் திருந்த பொலிதிரை களின்மேல்
நுரைத்தெழுந் திட்ட நுண்திரை மடியில்
அவளின் முன்னால் அகன்ற நீர்ப்பரப்பு
அவளின் பின்னே அகல்தெளிந் திடுவான்.

அங்ஙனம் சென்ற ஆண்டொன் பதிலே
பத்தாவ தான பருவக் கோடையில்
கடலிலே யிருந்து காண்தலை தூக்கினள்
நீரிலே யிருந்து நெற்றியை யுயர்த்தினள்
அடுத்துத் தொடங்கினள் படைத்தற் றொழிலை
பிராணி வகைகளைப் பெரிதும் படைத்தனள்    260

உயர்ந்த தெளிந்த ஒளிர்கடல் மேலே
விரிந்து பரந்த வியன்கடல் மடியில்.

தூக்கிக் கரங்களைச் சுற்றிலும் திருப்பி
மேட்டு நிலங்களை வெளிவரச் செய்தனள்
அடியில் கால்களை அழுத்தமா யூன்றி
மீனினம் வாழும் மிகுகுழி பறித்தனள்
நீரின் அடியிலே நிறைவுடன் நீந்தி
ஆழியின் அடியில் ஆழம் படைத்தனள்.

பின்னர்பக் கத்தைப் பெருங்கரை திருப்பி
கரைகளைக் கொஞ்சம் கவனமாய்ச் செய்தனள்  270

நிலத்தினை நோக்கி நீட்டினாள் கால்களை
**வஞ்சிர மீன்வலை வீச்சிடம் வந்தது
தலையைத் திருப்பித் தரையை நோக்கினள்
கடலின் கரையில் வளைகுடா வந்தது.

நீந்தினள் மீண்டும் நிலத்திலே யிருந்து
அகன்றநீர்ப் பரப்பில் அமைதியும் கொண்டனள்;
நீரின் நடுவே பாறைத் தீவுடன்
கடலின் மறைவிற் கற்குன் றமைத்தனள்
கடலிலே நகரும் கப்பல்கள் மோதி
கடற்றொழி லாளர் காண்தலை யழிக்க.    280

தீவெலாம் தோன்றிச் சீராய் முடிந்தன
பாறைத் தீவுகள் பரவையில் தோன்றின
தூண்கள் வானிடைத் தோன்றி நிமிர்ந்தன
நாடுகண் டங்கள் நன்கே யமைந்தன
பாறைகள் மீதெலாம் பல்கின **சித்திரம்
வெற்பெலாம் கோடுகள் பெற்று விளங்கின;
வைனா மொயினன் வந்து பிறந்திலன்
நிலைபே றுடைக்கவி நிலம்பிறந் திலனே.

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
தாயின் வயிற்றுள் தவழ்ந்து திரிந்தான்    290

முப்பது கோடை முழுதாம் பருவமும்
குளிர்தரும் அத்தகைக் கூதிர் காலமும்
புகார்நிறைந் திருந்த பொலிதிரை களின்மேல்
நுரைத்தெழுந் திட்ட நுண்திரை மடியில்.

சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்
எங்ஙனம் எவ்விதம் இங்கே வாழ்வது
இருண்ட இந்த இகல்மறை விடத்தில்
நெருக்கம் நிறைந்த நிதவசிப் பிடத்தில்
சந்திரன் தண்ணொளி கண்டதே யில்லை
சூரியன் பேரொளி வந்ததே யில்லை.   300

இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்வித முரைத்தான்:
"நிலவே விடுவி, கதிரே கரைசேர்,
**தாரகைக் குலமே சதாவழி காட்டு
மனிதனை மர்ம வாயில்க ளிருந்து
அந்நிய மான அகல் கதவிருந்து
கொடியஇச் சிறிய குடம்பையி லிருந்து
குறுகி ஒடுங்கிய குடிலினி லிருந்து.
பயணியை இந்தப் பாரிடைக் கொணர்வாய்
மனிதக் குழந்தையை வளர்வெளிக் கருள்வாய்  310

வானக நிலவின் வண்ணம் காண
சூரியன் ஒளியைச் சுகித்துயான் நயக்க
தாரகைக் குலத்தைத் தனிமையில் நோக்க
வானநட் சத்திர வகையினைக் கற்க."

விண்மதி அவனை விடுவியா நிலையில்
கதிரவன் அவனைக் கைதரா நிலையில்
நாட்கள் எல்லாம் நரகமா யமைய
வாழ்வே சுமையாய் மாறிப் போகும்;
நகர்த்தி கோட்டைக் கதவம் திறந்தான்
மெதுவாய் மோதிர விரலினை யெடுத்து   320

எலுப்பின் பூட்டைச் சிறிதிடை விலக்கி
இடதுகாற் பெருவிரல் இட்டான் வெளியே
நகத்தினை வாயிலின் நனிவெளி நகர்த்தினன்
கதவின் வெளிமுழங் கால்களை வைத்தனன்.
கடலினை நோக்கிக் காண்சிரம் முன்வர
அவனது கரங்கள் அலைகளில் திரும்ப
இங்ஙனம் மானிடன் இருங்கடல் தங்கினன்
மாபெரும் வீரன் வளர்திரை தங்கினன்.

ஐந்து ஆண்டுகள் அங்கே இருந்தனன்
ஐந்தா றாண்டுகள் அவ்வா றிருந்தனன்   330
ஏழாம் ஆண்டோ டெட்டும் முடிந்தது
கடைசியில் நின்றனன் கடற்பரப் பினிலே
பெயரிலா மேட்டில் பின்பவன் நின்றனன்
மரங்களே யில்லா மண்ணதில் நின்றனன்.
முழங்கால் தரையிடை முழுமையாய்ப் பதித்து
கரங்களை ஊன்றி மெதுவாய்த் திரும்பி
நிலவைப் பார்க்க நின்றான் எழுந்து
செங்கதி ரோனைச் சீராய் நயக்க
தாரகைக் குலத்தைத் தனிமையில் நோக்க
வானநட் சத்திர வகையினைக் கற்க.   340

வைனா மொயினனின் வருபிறப் பதுவே
தொன்னிலைப் **பாவலன் தோன்றிய கதையே
அவனைச் சுமந்த அழகிய நங்கை
வாயு மகளாம் தாயிட மிருந்து.



பாடல் 2 - வைனாமொயினனின் விதைப்பு

 


அடிகள் 1 - 42: வைனாமொயினன் மரங்களற்ற தரைக்கு வந்து, விளைநில மைந்தன் சம்ஸா பெல்லர்வொயினனை விதைக்கச் சொல்லுகிறான்.

அடிகள் 43 - 110 : முதலில் சிந்தூர மரம் முளைக்கவில்லை. பின்னர் முளைத்த மரம் ஓங்கி வளர்ந்து நாட்டையும் சூரியனையும் சந்திரனையும் மறைக்கிறது.

அடிகள் 111 - 224 : ஒரு சிறிய மனிதன் கடலிலிருந்து உதயமாகிச் சிந்தூர மரத்தை வெட்டி வீழ்த்திச் சூரியனையும் சந்திரனையும் மீண்டும் பிரகாசிக்கச்
செய்கிறான்.

அடிகள் 225 - 256 : மரங்களில் பறவைகள் பாடுகின்றன; புல்லினம், பூஞ்செடிகள், சிறுபழச் செடிகள் வளர்கின்றன; பார்லி மட்டும் வளரவில்லை.

அடிகள் 257 - 264 : வைனாமொயினன் நீர்க் கரையின் மணலில் சில பார்லித் தானியங்களைப் பெறுகிறான்; பறவைகளுக்குப் புகலிடமாக ஒரு மிலாறு மரத்தை மட்டும் தவிர்த்துவிட்டுக் காட்டை வெட்டி அழிக்கிறான்.

அடிகள் 265 - 284 : புகலிடத்திற்கு ஒரு மரத்தை விட்டதற்காக நன்றியுள்ள ஒரு கழுகு நெருப்பை உண்டாக்கி வெட்டிய மரங்களை எரிக்கிறது.

அடிகள் 285 -378 : வைனாமொயினன் பார்லியை விதைத்து, அதன் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் பெருக்கத்துக்குமாகப் பிரார்த்திக்கிறான்.



எழுந்தான் பின்னர் வைனா மொயினன்
இரண்டுகால் களையும் இத்தரை வைத்தான்
செறிகடல் சூழ்ந்த தீவக நிலத்தில்
மரங்கள்இல் லாத மண்ணதன் மேலே.
பல்லாண் டூழி பயின்றாங் கிருந்தான்
எப்போதும் ஆங்கே இருந்துவாழ்ந் திட்டான்
மொழிகளே யற்று மெளனமா யிருந்தான்
மரங்கள்இல் லாத மண்ணதன் மீதே.

சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்
நீண்டகா லங்கள் நெடிதுசிந் தித்தான்:    10

இந்த நிலத்தில் எவர்தான் விதைப்பது
பயன்தரு பயிரை பாங்காய் விளைப்பது?
விளைநில மைந்தன் *பெல்லர் வொயினன்
*சம்ஸா என்னும் தனிச்சிறு வாலிபன்
நிலத்தில் அவனே விதைத்திடல் வேண்டும்
பயனுறப் பயிரைப் பண்ணலும் வேண்டும்.

விதைத்தலை நிகழ்த்த வெளிக்கிட் டானவன்
நிலத்திலும் விதைத்தான் சேற்றிலும் விதைத்தான்
வளர்கான் வெளியின் மணலிலும் விதைத்தான்
தேய்ந்து தேறிய குன்றிலும் விதைத்தான்.    20

**தேவ தாருவைத் திகிரியில் வைத்தான்
உவந்தின் **னொன்றை உயர்நிலம் வைத்தான்
கம்பம் **புல்லினைக் கரம்பையில் நட்டான்
நாற்றுச் செடிகளைத் தாழ்நிலம் நட்டான்.

**மிலாறுவைத் தாழ்ந்த விளைநிலம் வைத்தான்
சொரிந்த மண்ணிலே **சிறுமரம் வைத்தான்
**ஒருசிறு பழச்செடி உயர்புது மண்ணிலும்
ஒருசிறு **மரத்தை ஒளிர்பசுந் தரையிலும்
**பேரியைப் புனிதப் பெருமண் தரையிலும்
**அலரியை மேட்டிலும் அவன்நட் டிட்டான்   30

**சூரைச் செடியைத் தொடுவெறு நிலத்திலும்
**சிந்துர மரத்தைத் திடலிலும் நட்டான்.

மரங்கள் யாவும் வளர்ந்துயர்ந் திட்டன
நாற்றுச் செடிகள் நன்றாய் ஓங்கின;
மலர்ந்த முடியுடன் **மரமொன் றெழுந்தது
தேவ தாருவும் செறிந்து விரிந்தது
சதுப்பு நிலத்தில் மிலாறு தழைத்தது
சொரிந்தமண் ணிடையே **சிறுமர வினமும்
புதுமண் புலத்தில் **சிறுபழச் செடியும்
தொல்வெறு நிலத்துச் சூரைச் செடியும்    40

சூரைச் செடிகளின் சுவைமிகு பழங்களும்
சிறுசெடிப் **பழங்களும் திகழ்ந்தன கனிந்து.

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
நிகழ்ந்ததை நோக்க நேரிலே வந்தான்
சம்ஸா என்பான் தானிடு விதைகளை
பெல்லர் வொயினன் பெய்திடு விதைகளை:
மரங்களத் தனையும் வளர்ந்ததைக் கண்டான்
நாற்றுச் செடிகளின் நளினமும் கண்டான்;
சிந்துர மரத்தில் செழுந்தழை இல்லை
தேவநற் றருவில்வேர் தெரியவு மில்லை.    50

அதன்விதி அதுவென அப்பால் சென்றனன்
தானே முளைத்துத் தழைக்குமென் றெண்ணினன்
முன்று இரவுகள் முழுமையாய் முடிய
முன்று பகல்களும் முனைந்துகாத் திருந்தான்.
ஒருமுறை பார்க்கப் போயினன் பின்னர்
வாரமொன் றகல வந்துநோக் கினனால்:
சிந்துர மரத்திற் செழுந்தழை இல்லை
தேவநற் றருவில்வேர் தெரியவு மில்லை.

கண்டனன் பின்னர்நற் கன்னியர் நால்வர்
ஐவர்நீர் எழுந்தனர் அவர்மணப் பெண்போல்;   60

புல்லினை வெட்டியே பொற்புற வைத்தனர்
பனிபடர் புல்லினைப் பாங்குற அள்ளினர்
புகார்படி கடலதன் புணர்முனை நுனியில்
செறிபனிப் புகாருள தீவதன் கரையில்;
வெட்டிய புல்லதை விரைந்தொன் றாக்கினர்
கட்டியே குவித்துக் கவினுற வைத்தனர்.

**நீர்விலங் கொன்றந் நீரில் எழுந்தது
நேராய் எழுந்தது நின்றது அலைமேல்;
காய்ந்தவப் புற்களைக் கனலிடை யிட்டது
கனலதும் ஓங்கிக் கடுகதி எழுந்தது    70

அனைத்தையும் சாம்பரா யாக்கிய தக்கினி
சாம்பர்கள் சேர்ந்தன தகர்துக ளாயின.

துகளெலாம் சேர்ந்தொரு தொடர்திட் டாகியே
தோய்ந்துலர் சாம்பராய் தொட்டுயர்ந் திருந்தது.
ஆங்கிருந் ததுவொரு அழகிய செழும்இலை
செழுமிலை யிருந்ததோர் சிந்துர விதையொடு
அவற்றிலே யிருந்தொரு அரும்முளை வந்தது
பசுந்தளிர் செழுப்பொடு பாங்காய் வளர்ந்தன
எழில்நிலத் தேயொரு இதச்சிறு **செடியென
இரட்டைக் கிளைகளாய்ப் பிரிந்து வளர்ந்தது.    80

கிளைகள் வளர்ந்து கிளர்ந்து விரிந்தன
இலைகள் செழித்து எங்கும் செறிந்தன:
உச்சி உயர்ந்து ஒளிர்விண் நின்றது
வானில் இலைகள் வளர்ந்து விரிந்தன
முகில்களை மோதி முட்டி நிறுத்தின
ஆவிநீ ராவதை அடியோ லகற்றின
ஆதவன் ஒளிர்வதை அவைதடுத் திட்டன
விரிநில வொளியையும் விண்மிசைத் தடுத்தன.

முதிய வைனா மொயினன் பின்னர்
சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்    90

சிந்துர மரத்தைச் சிதைப்பவர் உளரோ
அகல்பெரு மரத்தை அழிப்பவர் உளரோ?
மானிட வாழ்வு சோகமா கிறதே
மீனினம் நீந்தச் சிரமமா கிறதே
ஆதவன் ஒளியும் அருகிப் போனதால்
தண்ணில வொளியும் தடுக்கப் பட்டதால்.

ஆயினும் அங்கொரு ஆளும் இல்லையே
விறல்நெஞ் சுடைய வீரன் இல்லையே
சிந்துர மரத்தைச் சிதைத்து வீழ்த்திட
உயர்ந்து நூறான உச்சியை ஒடிக்க.     100

முதிய வைனா மொயினனப் போது
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"அன்னையே, பெண்ணே, அரிதெனைச் சுமந்த
இயற்கையின் மகளே, எனை வளர்த்தவளே!
தண்புன லிருந்தொரு சக்தியை யனுப்பு
தண்புனல் அமைந்த சக்திகள் அனேகம்
சிந்துர மரமிதைச் சிதைத்து விழுத்திட
தீயஇம் மரத்தைச் சிதல்சித லாக்க
உதய சூரியன் ஒளியினி லிருந்து
வண்ண நிலவதன் வழியினி லிருந்து."    110

ஆழியி லிருந்தொரு ஆடவன் எழுந்தான்
அலையிலே யிருந்தொரு ஆண்மகன் எழுந்தான்;
அவனோ பென்னம் பெரியஆ ளல்லன்
ஆயினும் சின்னஞ் சிறியனு மல்லன்:
நீளமோ மனிதன் நேர்பெரு விரலாம்
உயரமோ பெண்ணின் ஒருகைச் சாணாம்.

செப்பினா லான தொப்பிதோ ளதிலே
செப்பினா லான செருப்புகள் காலில்
செப்பினால் செய்து திகழும் கையுறை
கையுறை மீதில் கவின்செப் போவியம்    120

இடுப்பினைச் சுற்றிச் பட்டிசெப் பினிலே
பட்டியின் பின்புறம் **பரசுசெப் பினிலே
பரசின் பிடியொரு பெருவிரல் நீளம்
பரசின் அலகோ பகர்நகத் தளவு.

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்:
பார்க்கப் புகுந்தால் பாங்குறு மனிதனே
தோற்றம் நோக்கித் துணிதலும் மனிதனே
நீளமோ மனிதன் நேர்பெரு விரலாம்
உயரமோ எருதின் ஒண்குளம் பளவு.     130

பின்வரும் சொற்களில் பின்அவன் சொன்னான்
இயம்பினன் அவனே இயம்பினன் இவ்விதம்:
"எவ்வகை இனத்தில் இயைந்தமா னுடன்நீ
எளியமா னுடனே, எத்தகை மனிதன்?
உயரிலா உடலிலும் உயர்ந்துளாய் சற்றே
சவத்தினைக் காட்டிலும் சற்றே சிறந்துளாய்?"

செறிகடல் தோன்றிய சிறுமகன் சொன்னான்
அலைகளில் எழுந்த அவன்விடை பகர்ந்தான்:
"நவில்வகை யாவினும் நானொரு மனிதன்
சிறுமா னுடன்தான் செறிபுனற் சக்தி    140
சிந்துர மரத்தைச் சிதைக்கவே வந்தேன்
அதனைத் துண்டிட் டழிக்கவே வந்தேன்."

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"எண்ணவே இல்லைநான் உன்னைப் படைத்ததும்
உன்னைப் படைத்து உனையனுப் பியதும்
வலிய சிந்துர மரம்விழற் கல்ல
மாபெரும் மரத்தை மாய்ப்பதற் கல்ல."

அவ்வித மாக அவன்பகர் வேளை
மீண்டும் பார்வையை வீசிய பொழுது    150
மனிதனோ முற்றிலும் மாறிடக் கண்டான்
வீரனோ புதியனாய் விளங்கிடக் கண்டான்.
பாதங்கள் தரையிற் பதிந்து நின்றன
தலையோ நிமிர்ந்து முகிலைத் தொட்டது
தாடியோ முழுங்கால் தன்னிலும் தாழ்ந்தது
தலைமயிர் குதிவரை தழைத்துநீண் டிருந்தது
இருவிழிக் கிடையே இடைவெளி ஆறடி
காற்சட் டையதும் காற்புறம் ஆறடி
முழங்காலின் பக்கமும் முழுமையாய் ஒன்றரை
இடுப்பின் சுற்றள விரண்டா யிருந்தது.    160

கைவிரல் கோடரிக் காம்பினில் வைத்து
அலகினைத் தீட்டி ஆக்கினன் கூர்மை
ஆறு கற்களில் அதனைத் தீட்டினன்
ஏழாம் கல்லிலும் இன்னும் தீட்டினன்.

எழுந்தான் நகர்ந்தான் எதிர்ப்புறம் வந்தான்
இன்னும் சுலபமாய் முன்னே நடந்தான்
அவன்காற் சட்டை அகன்ற உடையொடு
விரிந்தகாற் சட்டை பரந்த உடையொடு;
முதலடி எடுத்து முன்னே வைத்தான்
மென்மைகொண் டமைந்த மிகுமணற் பரப்பில்,    170
இரண்டடி வைத்து இன்னுமுன் வந்து
**ஈரல் நிறத்தில் இயைந்தமண் ணடைந்தான்,
முன்றாம் அடியை முயன்றுமேல் வைத்து
சிந்தூ ரத்தின் செறிவே ரடைந்தான்.

கோடரி கொண்டே கொடுமரம் தாக்கி
ஓங்கி வெட்டினன் உயர்கூ ரலகால்
ஒருமுறை வெட்டி இருமுறை வெட்டினன்
மூன்றாம் முறையும் முயன்றான் விரைவாய்;
அனற்பொறி கோடரி அலகில் எழுந்தது
சிந்துர மரத்தில் தீப்பொறி தெறித்தது,     180
நொந்து சரிந்து வந்தது சிந்துரம்
அடற்பெரு மரமும் ஆட்டங் கண்டது.

முயன்றஅவ் வாறமை மூன்றாம் முறையில்
சிந்துர மரத்தைத் தீர்த்துக் கட்டினன்
பெருவலி மரமும் பெயர்ந்து வீழ்ந்தது
நூறாம் கிளைகளைத் துணிபடச் செய்தது.
கிழக்கே அடிமரத் துண்டைக் கிடத்தினன்
வடமேற் கினிலே மரமேற் பகுதி
வடக்கே இலைதழை வந்துவீழ்ந் ததுவால்
கொம்பர்கள் வடக்கில் குவிந்துவீழ்ந் தனவே.    190

அவனொரு கிளையினை அங்கையி லெடுத்து
எல்லையில் லாத இன்பம் பெற்றான்;
உச்சி மரத்தை ஒடித்தான் எளிதாய்
முடிவிலா மாய வித்தையைக் கண்டான்;
இலையுறும் கிளையை எடுத்தான் தனித்து
திடமாம் அன்பைத் தொட்டெடுத் திட்டான்.
எஞ்சிய சிதைவுகள் எங்கும் சிதறின
மிஞ்சிக் கிடந்த மிகுமரத் துண்டுகள்
உயர்ந்த தெளிந்த ஒளிர்கடல் மேலே
பரந்து விரிந்த படரலை களின்மேல்    200
காற்று வந்துதா லாட்டிச் சென்றது
கடலலை எழுந்து கடத்திச் சென்றது
திறந்த நீரிலே செல்லும் தோணிபோல்
அலைகடல் மீது அலையும் கப்பல்போல்.

வடநா டவற்றை வாயு சுமந்தது;
வடநிலச் **சிறுபெண் மங்கையாங் கொருத்தி
சிறுசிறு துணிகளைச் செம்மையாய்த் தோய்த்தாள்
உடைகளைக் கழுவி உலரவும் வைத்தாள்
நீரின் கரையில் நிலைத்தபா றையிலே
நீண்ட கரையில் நிலவும் முனையில்.    210

மிதந்ததுண் டுகளை மெல்லியள் கண்டாள்
கைப்பை ஒன்றிலே கவனமாய்ச் சேர்த்தாள்
பையினை யெடுத்துப் படர்ந்தில் லடைந்தாள்
முன்றிலில் வைத்தாள் முழுநீள் பிடிப்பை
மாயவித் தைக்கு வலுசரம் செயற்கு
படைக்கலம் மந்திரப் பணிக்காய்ச் செய்ய.

சிந்துர மரத்தைச் சிதைத்தபோ தினிலே
தீயஅத் தருவும் தீர்த்தழிந் ததுவால்
கதிரவன் மீண்டும் கதிர்களைத் தந்தான்
திங்களின் நீள்நிலா திரும்பிவந் திட்டது     220
மேகம் நீண்டு மேலே மிதந்தது
வானவில் விண்ணில் வளைந்து நின்றது
புகார்படி கடலதன் புணர்முனை நுனியில்
செறிபனிப் புகாருள தீவதன் கரையில்.

முழுதாய்க் காடுகள் முளைத்துத் தழைத்தன
வனங்கள் செழித்து வளர்ந்திட லாயின
தருக்களில் இலைகள், தரையினிற் புற்கள்,
மரங்களிற் பாடி மகிழ்புட் குலங்கள்,
பாடும் பறவைகள் பரவசப் பட்டன
மரத்தின் உச்சியில் **மணிக்குயில் கூவின.    230
பூமியிற் சிறுபழச் செடிகள் பொலிந்தன
வயல்களில் பொன்னிறப் பூக்கள் மலர்ந்தன
பல்லினப் புற்களும் பாங்காய் முளைத்தன
வளர்ந்தன பற்பல வடிவங் களிலே;
ஆயினும் பார்லி அங்கெழ வில்லை
அரிதாம் அப்பயிர் அதுமுளைத் திலதே.

முதிய வைனா மொயினன் அதன்பின்
எங்கும் நடந்தே எண்ணிப் பார்த்தான்
நீலக் கடலின் நீள்கரை தன்னில்
மாபெருங் கடலின் மடிவின் எல்லையில்;    240
ஆறுதானிய அருமணி கண்டான்
ஏழு விதைகளை எடுத்தனன் ஆங்கே
ஆழியின் எல்லை யாம்பரப் பிடத்தே
மணல் நிறைந்திட்ட வண்கரை மீது
அவற்றைக் **கீரியின் அருந்தோல் வைத்தான்
கோடை அணிலின் குறுங்கா லடியில்.

விதைகளை நிலத்தில் விதைக்கச் சென்றான்
சென்றான் தானியச் செழும்விதை தூவ
*கலேவலாப் பகுதியின் கற்கிணற் றருகே
*ஒஸமோ வின்வயல் உளவிளை விடத்தே.    250

மரமிசை யொருபுள் வாய்திறந் திசைத்தது:
"ஒஸமோவின் பார்லி ஒன்றுமே முளையா
கலேவலாவின் **பயிறும் கவினுற வளரா
மண்ணைக் கிளறிப் பண்செய் யாவிடில்
அடர்வன மரங்களை அழித்தி டாவிடில்
அழித்த மரங்களை எரித்தி டாவிடில்."

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
கூரிய அலகுக் கோடரி செய்தான்
விரிபெரும் பகுதியை வெட்டியே அழித்தான்
மண்ணைக் கிளறிப் பண்செய் திட்டான்    260
வியன்மர மனைத்தையும் வெட்டி வீழ்த்தினன்
தனிமிலா றொன்றே தவிர்ந்து நின்றது
பறவை யினங்கள் பாங்குறத் தங்க
குயில்வந் திருந்து கூவுதற் காக.

விண்ணிலோர் கழுகு வீச்சா யெழுந்தது
விண்ணகம் முழுவதும் மேவிப் பறந்தது
அதனைப் பார்க்க அவ்விடம் வந்தது:
"இம்மரம் மட்டுமேன் இங்குநிற் கிறது?
மிலாறு மரத்தையேன் வீழ்த்திட வில்லை?
எழிலுறு மரமிதை ஏன்வெட் டிடவி(ல்)லை?"   270

முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"இம்மரம் மட்டுமிங் கிருப்பதன் காரணம்:
பறவைகள் வந்து பாங்காய்த் தங்க
வானக் கழுகு வந்துநன் கமர."

விண்ணகப் பறவை விறற்கழு குரைத்தது:
"இங்குநீ நல்லதோர் இருந்தொழில் செய்தனை:
மிலாறு மரத்தினை வெட்டா திட்டனை
உன்னதத் தருவை உயர்ந்திட விட்டனை
பறவைகள் வந்து பாங்குறத் தங்க
நானே வந்து நன்றா யமர."     280

விண்ணகப் பறவைதீ விரைந்துமுட் டிற்று
எரியினை யோங்கி எழுந்திட வைத்தது
வடக்கின் காற்று வன்கா டழித்தது
வடகீழ்க் காற்றும் மரங்களை யுண்டது
எல்லா மரங்களும் எரிந்து முடிந்தன
சாம்பலாய் மாறித் தகர்துக ளாயின.

அப்போ முதிய வைனா மொயினன்
ஆறு விதைகளை அள்ளினான் ஒன்றாய்
ஏழு விதைகளை எடுத்தான் கையில்
கீரித் தோலதன் கீழே யிருந்து     290
கோடை அணிலின் காலிடை யிருந்து
கோடைப் **பிராணியின் கொழுங்கா லிருந்து.

பிற்பா டவன்நிலம் வித்திடப் போனான்
தானிய மணிகளைத் தூவிச் சிதறி
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"விதைக்கப் போகிறேன் நான்இவ் விதைகளை
படைப்பின் பெரியோன் பணைவிர லிருந்து
சகலதும் வல்லோன் தன்கரத் திருந்து
இந்தப் புவிமிசை இவைமுளைத் துயர
வளர்ந்து செழித்து வளமுடன் பல்க.    300

புவியின் கீழெழில் பொலிமுது மகளே!
மண்ணின் மங்கை, மாநிலத் தலைவி!
முளையை வெளியே முளைத்துய ரச்செய்
செழித்து வரச்செய் திகழ்மண் துணையால்;
நிலத்தின் சக்தி நிதம்பொய்க் காது
இந்தப் பூமி இருக்கும் வரைக்கும்,
தந்தவன் அன்பு தரித்திருப் பதனால்
இயற்கையின் மகளின் இருந்துணை யதனால்.

மண்ணே, எழுவாய் வளர்துயி லிருந்து!
படைப்போன் புற்களே, படுக்கையி லிருந்து!   310
தண்டுகள் எழட்டும் தரையினைக் கிழித்து!
காம்புகள் கிளர்ந்து கடுகநின் றிடடட்டும்!
கதிர்மணி யாயிரம் கவினொடு வரட்டும்!
நூறுநூ றாகக் கிளைபடர்ந் திடட்டும்!
எனது உழவினில், எனது விதைப்பினில்,
எனது உழைப்பிற் கியையூ தியமாய்!

ஓ, மனு முதல்வ, உயர்மாதெய்வமே!
விண்ணகம் வாழும் மேல்வகைத் தந்தையே!
முகிற்குலம் புரக்கும் முதுகா வலனே!
நீராவி அனைத்தையும் நிதமாள் பவனே!    320
முகில்கள் யாவையும் குவிவுற வணைத்து
சந்திக்க வைப்பாய் தவழ்வான் வெளியில்,
இயக்குவாய் கிழக்கில் இருந்தொரு முகிலை
வடமேற் கொன்று வந்துதிக் கட்டும்
மேற்கி லிருந்து மிகுதியை அனுப்பு
அனுப்புதெற் கிருந்தும் அதிவிரை வாக
தொல்வா னிருந்து தூறல்கள் வரட்டும்
எழிலியி லிருந்துதேன் துளிகள் விழட்டும்
முதுபுவி முளைக்கும் முளைகளின் மீது
உயிர்பெற் றுயரும் பயிர்களின் மீது."    330

மானிட முதல்வன், மாபெருந் தேவன்
நிலைபெறும் சுவர்க் கமாள் நேசத் தந்தை
மேகம் மேலுறும் வியன்சபை யமர்பவர்
உயர்ந்து தெளிந்த உயர்மன் றுறைபவர்;
ஒருமுகில் கிழக்கிருந் துடன் வருவித்தார்
வடமேற் கிருந்தொரு மழைமுகில் படைத்தார்
இன்னொன்றை மேற்கே இருந்தும் அனுப்பினார்
அனைத்தையும் தெற்கிருந் தவர்விரை வித்தார்
அனைத்தையும் ஒன்றுசேர்த் தழுத்தித் தள்ளினார்
ஒன்றுடன் ஒன்றை உராயப் பிணித்தார்.    340
வானத் திருந்து மாரியைப் பொழிந்தார்
தேன்துளி தெளித்தார் திரள்முகில் அதனால்
முளைத்து வந்த முளைகளின் மேலே
உயிர்பெற் றுயர்ந்த பயிர்களின் மேலே.
கூர்முனை ஒன்று குதித்துமே லெழுந்தது
இளந்தூர் ஒன்று இதமாய் வளர்ந்தது
பசுமை வயலின் படர்நிலத் திருந்து
வைனா மொயினனின் கைவினைத் திறத்தால்.

இரண்டு நாட்கள் இனிது முடிந்தன
இரண்டாம் முன்றாம் இரவுகள் போயின    350
முழுமையாய் வாரம் ஒன்று முடிந்தபின்
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
வளர்ச்சியைப் பார்க்க வலமாய் வந்தான்
தானே உழுது தானே விதைத்த
ஊக்கத் துறுபலன் நோக்குதற் காக;
விரும்பிய வாறே விளைந்தது பார்லி
ஆறு வழிகளில் அகல்கதிர் செறிந்து
தண்டுகள் முத்திசை தாமே பிரிந்து.
முதிய வைனா மொயினனு மாங்கே
செலுத்தினான் பார்வை திரும்பினான் சுற்றி    360
குலவும் வசந்தக் கோகிலம் வந்தது
வளர்ந்த மிலாறினை வந்ததும் கண்டது:
"இம்மரம் மாத்திரம் ஏனிங்கு நின்றது?
மிலாறு மட்டுமேன் வீழாது நின்றது?"

முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"இம்மரம் மட்டுமேன் இங்குநிற் கிறதெனில்
மிலாறு மட்டுமேன் வீழ்ந்திட விலையெனில்
உனக்காய் நீவந் துறைவதற் காக;
குயிலே குயிலே கூவுவாய் இப்போ
இனிய நெஞ்சால் இன்பமாய்ப் பாடு.    370
வெண்பொன் நெஞ்சால் மிகுபாட் டிசைப்பாய்
**ஈயநன் நெஞ்சால் எழிற்பா விசைப்பாய்
காலையில் பாடு, மாலையில் பாடு,
நண்பகல் ஒருமுறை நலமிகப் பாடு
என்விளை நிலமிரும் மகிழ்ச்சியில் திளைக்க
எனதுகா னகமெல்லாம் எழிலொடே வளர
தடமெல்லாம் தாழ்விலாச் செழிப்பினில் கொழிக்க
எனதுமா நிலமெல்லாம் எழில்வளம் பொலிய."


Mail Usup- truth is a pathless land -Home