Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம் - நூல் அமைப்பு, அறிமுகம், சொற்றொகுதி, விளக்கக் குறிப்புகள் > பாடல் 1 & 2 > பாடல்கள் 3-10 > பாடல்கள் 11-18 > பாடல்கள் 19-25 > பாடல்கள் 25-35 > பாடல் 36 - 50 >
Kalevala - A Finland Epic
part I (verses 3-10)கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம்
பாடல்கள் 3-10
தொகுப்பு: எலியாஸ் லொண்ரொத் தமிழ் மொழிபெயர்ப்பு: ஆர். சிவலிங்கம் (உதயணன்) நூல் அமைப்பும் அறிமுகமும்: டாக்டர் அஸ்கொ பார்பொலா (பேராசிரியர் - இந்திய இயல்) |
Compiled by: Elias Lonnrot Translated into Tamil by R.Sivalingam Edited with an introduction by Asko Parpola
|
Etext Preparation (input) : Ms. Sarala Sandirasegarane
Etext Preparation (proof-reading) : Udhayanan
Etext Preparation (webpage) : Kumar Mallikarjunan
©Project Madurai 1999
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai
You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.
பாடல் 3 - பாடற்போட்டி
அடிகள் 1 - 20: வைனாமொயினன் அறிவில் விருத்தி பெற்றுப் பிரபலமாகிறான்.
அடிகள் 21 -330: அவனுடன் போட்டிக்கு வந்த யொவுகாஹைனன், அவனை அறிவில் வெல்ல முடியாமல் போருக்கு அழைக்கிறான். சினங் கொண்ட வைனாமொயினன் மந்திரப் பாடல்களைப் பாடி அவனைச் சேற்றில் அமிழ வைக்கிறான்.
அடிகள் 331 - 476: மிகவும் துயருற்ற யொவுகாஹைனன், தனது சகோதரி ஐனோவை வைனாமொயினனுக்கு விவாகம்ம்செய்து தருவதாக வாக்களிக்கிறான். அதை ஏற்றுக்கொண்டு வைனாமொயினன் அவனை விடுவிக்கிறான்.
அடிகள் 477 - 524: மன வருத்தத்துடன் வீட்டுக்குச் சென்ற யொவுகாஹைனன், தனக்கு ஏற்பட்ட துரதிர்ஷடங்களைப் பற்றித் தாயாருக்குக் கூறுகிறான்.
அடிகள் 525 - 580: வைனாமொயினன் தனது மருமகனாக வரப் போவதை அறிந்து தாயார் மகிழ்ச்சியடைகிறாள். ஆனால் மகள் ஐனோ கவலைப்பட்டு அழுகிறாள்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
வாழ்நாள் முழுதும் வாழ்ந்தே வந்தான்
*வைனோ நிலத்து வனவெளி களிலே
கலேவலா எனும்புதர்க் கவின்சம வெளியில்.
தன்கதை பலப்பல தாழ்விலா திசைத்தான்
மந்திரப் பாடல்கள் மாண்புறப் பயின்றான்.
நாளும் பொழுதும் பாடியே வந்தான்
இரவோ டிரவாய் இசைத்தே வந்தான்
நீண்ட தொன்மையின் நினைவுக் கதைகளை
தொடக்க காலத் தூயநற் கதைகளை 10
எல்லாச் சிறாரும் இவைகற் றிலராம்
வீரர்கள் மாத்திரம் விளங்கிக் கொண்டனர்
தீமை நிறைந்து தெரியுமிந் நாட்களில்
வாழ்வே முடிவுறும் வறுங்கடை நாட்களில்.
பாடற் செய்திகள் பரந்து கேட்டன
வெளியே செய்திகள் விரைந்து கேட்டன
வைனா மொயினனின் வனப்புறு பாடல்
நாயகன் தந்த ஞானச் செல்வம்
செய்திகள் சென்று தெற்கிலே பரவி
வடநிலம் புகுந்தும் விளக்கம் தந்தன. 20
இருந்தா னிளைஞன் யொவுகா ஹைனன்
லாப்பு லாந்தின் இளைத்ததோர் பையன்
ஒருமுறை கிராமம் ஒன்றிடைச் சென்றான்
அற்புதப் பாடலை அங்கே கேட்டான்
பாடல்கள் பாடும் பாங்கினைக் கேட்டான்
எழில்மிகும் பாடல்கள் இசைப்பதைக் கேட்டான்
வைனோ என்னும் வளமுறு நாட்டில்
கலேவலா எனும்புதர்க் கவின்சம வெளியில்
அவைஅவன் அறிந்த அரும்பா டலிலும்
தந்தையின் பாட்டிலும் சாலச் சிறந்தவை. 30
அதனால் அகத்தே அல்லல் எழுந்து
நெஞ்சில் பொறாமை நிறைந்து வழிந்தது
வைனா மொயினன் எனும்வான் பாடகன்
தன்னிலும் சிறந்த தகையோன் என்பதால்;
அன்னையை நோக்கி அவன் புறப்பட்டான்
ஈன்ற குரவரை எதிர்கொள வந்தான்
புறப்படும் போதே புகன்றான் ஒருமொழி
மீண்டும் வருவது வெகுநிசம் என்றே
*வைனொலா நாட்டின் வதிவிடங் களிலே
எதிர்த்துவை னோவை எழிற்பாட் டிசைக்க. 40
தந்தை அவனைத் தடுத்துச் சொன்னார்
தந்தையும் தடுத்தார் தாயும் தடுத்தாள்
அவன்வை னோநிலம் அடைவது பற்றி
வைனோவை எதிர்த்து வாதிடல் பற்றி;
"எதிர்ப்புப் **பாடல்கள் எழுந்தாங் கேமிகும்
பாடல்கள் தோன்றிப் படுவாய் மயக்கில்
வாயும் தலையும் வளர்பனிப் புதையும்
இரண்டுகை முட்டியும் இதனால் மரக்கும்
கைகளை அசைத்தல் கடினம தாகும்
கால்களை நகர்த்தலும் கைகூ டாது." 50
இளைஞன் யொவுகா ஹைனன் சொன்னான்:
"எந்தையின் அறிவு ஏற்றமிக் குயர்ந்தது
தாயின் அறிவுமத் தகைசால் சிறந்தது
எனதறி வதைவிட இயல்பாற் சிறந்தது;
போட்டிநான் விரும்பிப் போட்டேன் என்றால்
மனிதர்கள் மத்தியில் வந்தெதிர்த் தேனெனில்
போட்டிப் பாணன்மேற் பொங்கிநான் பாடுவேன்
சொல்பவன் மீது சொற்களை வீசுவேன்
தேர்ந்த பாடகன் செருக்கறப் பாடுவேன்
தோற்ற பாடகனாக் குவேன் அவனை 60
பாதம் கல்லின் படுவணிப் புதையும்
மரத்தின் ஆடைகள் அரைத்தல மிருக்கும்
உள்ளம் பெரிய கல்லாய்க் கனக்கும்
தோள்களின் மீது தோன்றும் பாறைகள்
கல்லின் உறைகள் கைகளை முடும்
கடுங்கல் தொப்பி கொடுந்தலை யிருக்கும்."
புறப்பட் டேகினன் புகல்மொழி கேளான்,
வீரிய மழிந்த விலங்கினை எடுத்தான்
விலங்கதன் வாயினில் வெங்கனல் வந்தது
கால்களி லிருந்து கனற்பொறி யெழுந்தது 70
ஆங்கார விலங்கில் அணிகல மேற்றினன்
வன்னப் பொன்னிலாம் வண்டியின் முன்னே;
தானே வண்டியில் தருக்கோ டேறினன்
ஆசனத் தேறி அமர்ந்து கொண்டனன்
தாவும் பரிமேற் சாட்டை வீசினன்
மணிமனைச் சவுக்கால் மற்றதை அடித்தான்
புரவியும் பயணம் புறப்பட் டதுவே
பாய்பரி விரைந்து பறந்துசென் றதுவே.
தொடங்கிய பயணம் தொடர்ந்து நடந்தது
ஒருநாள் சென்றான் இருநாள் சென்றான் 80
முன்றாம் நாளும் முழுதும் விரைந்தான்
முன்றாம் நாளின் முடிவிலே பயணம்
வந்து சேர்ந்தான் வைனோ நாட்டில்
கலேவலா என்னும் கடும்புதர்ச் சமவெளி.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
நிலைபெறும் மாய நெறியறி முதல்வன்
பாதை வழியே படர்ந்துகொண் டிருந்தான்
அமைதியாய்த் தன்வழி அவன்வர லானான்
வைனோ என்னும் வளமுறு நாட்டில்
கலேவலா என்னும் கடும்புதர்ச் சமவெளி. 90
வந்தான் இளைஞன் யொவுகா ஹைனன்
நேருக்கு நேராய் நெடுவழி வந்தான்
ஏர்க்கால் ஏர்க்காலை இடித்துமுட் டியது
வளர்பரிக் கழுத்து வட்டப் பட்டியும்
இழுவைப் பட்டியும் பட்டியில் மோதின
இழுவை வளையம் வளையத் திடித்தது.
இங்ஙனம் ஆங்கே இரண்டும் நின்றன
நிலைத்து நின்றனர் நினைத்துப் பார்த்தனர்
வியர்வை ஏர்க்கால் மீமிசை வழிந்தது
ஏர்க்கால் களிலே எரிப்பொறி பறந்தது. 100
முதிய வைனா மொயினன் கேட்டான்:
"எந்த இனத்தை இயைந்தவன் நீதான்?
முட்டாள் தனமாய் முன்னே வந்தாய்
இவ்வழி விவேகம் இன்றியே வந்தாய்
வளைமரக் கண்ட **வளையம் முறித்து
இளமரத் தமைந்த ஏர்க்கால் உடைத்து
எனது வண்டியை இடித்து நொருக்கி
நான்படர் வண்டியை நாடிச் சிதைத்தது?"
அப்போ திளைய யொவுகா ஹைனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 110
"நான்தான் இளைஞன் யொவுகா ஹைனன்
எதுஉன் சொந்த இனம்அதை இயம்பாய்
எந்த இனத்தை இயைந்தவன் நீதான்
இழிந்தவன், இழிந்த பாங்கினில் இயைந்தோன்?"
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
தனது பெயரைத் தானே புகன்று
தொடர்ந்து மேலும் சொல்லுரை பகர்ந்தான்:
"இளைஞன் யொவுகா ஹைனன் நீயெனில்,
விலகிநில் வழியை விட்டுச் சற்றே,
என்னிலும் பார்க்க இளையவன் வயதில்". 120
அப்போ திளைய யொவுகா ஹைனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"இளமை ஒருபொருட் டில்லைமா னுடரில்
இளமையும் முதுமையும் ஏதெனல் இல்லை
அறிவிற் சிறந்தோர் ஆரிங் கறியலாம்
ஆற்றலும் திறனும் ஆர்க்குள தறியலாம்
நிற்கலாம் பாதையில் நிகரில் அறிவினன்
மற்றவன் விலகி வழியினை விடலாம்;
முதிய வைனா மொயினன் நீயெனில்
நிலைபெறும் பாடகன் நீயே யென்றால் 130
பாடல் நாமே பாடத் தொடங்குவோம்
படித்த சொற்களைப் பகரத் தொடங்குவோம்
ஒருவரை ஒருவர் சோதனை செய்து
ஒருவரை ஒருவர் தோற்கச் செய்வோம்."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"என்னைப் பற்றியான் எதுசொல வப்பா?
மாயம் தெரிந்ததோர் வளர்பா டகனாய்
என்றும் வாழ்ந்தேன் எனதுவாழ் நாளில்
இவ்விளை நிலத்தில் இந்நிலப் பரப்பில் 140
இல்லத்து வயலின் எல்லைப் புறத்தில்
வீட்டுக் குயிலினைக் கேட்டுக் கொண்டே;
ஆயினும் அவைகள் அங்ஙனம் இருக்க,
செப்புவாய் எனக்குச் செவிகள்தாம் கேட்க
உனக்கு தெரிந்தவை எனைத்து என்பதை
மற்றையோர் தமைவிடக் கற்றுக் கொண்டதை?"
இளைய யொவுகா ஹைனன் இயம்பினன்:
"சிலசங் கதிகள் தெரியும் எனக்கு
தெரியும் அவைகள் தெளிவாய் எனக்கு
அவற்றின் விளக்கமும் அறிவேன் நன்றாய்; 150
புகைத்துளை ஒன்று முகட்டில் இருந்தது
அடுப்பின் அருகே அனலும் இருந்தது.
நன்றாய் ஒருகடல் நாயும் வாழ்ந்தது
அங்கே சுற்றித் திரிந்ததப் புனல்நாய்
மருங்கே யிருந்த வஞ்சிர மீனையும்
வெண்ணிற மீனையும் விருப்போ டுண்டது.
வெண்ணிற மீனின் விரிவயல் மென்மை
வஞ்சிர மீனின் வளர்ப்பரப் பகன்றது
**கோலாச்சி மீன்பனிக் கொழும்புகார் மீதும்
சேற்றுமீன் குளிரிலும் சிந்தின முட்டை. 160
கூனிய கழுத்துறும் **மீனினம் ஒன்று
ஆழத்தில் இலையுதிர் காலத்து நீந்தும்
கோடையில் உலர்ந்தநன் மேடையில் சினைக்கும்
ஓரத்துக் கரையெலாம் உலாவியே திரியும்.
இதுவும் போதா தின்னமு மென்றால்
நுட்பச் செய்திவே றுளநன் கறிவேன்
இன்னொரு சங்கதி எனக்குத் தெரியும்:
**மானிடம் கொண்டே வடக்கில் உழுதனர்
பெண்பரி தெற்குப் பெரும்பகு தியிலும்
லாப்பில் **காட்டெரு தும்பயன் பட்டன; 170
*பிஸாமலை மரங்களைப் பெரிதும் அறிவேன்
அறிவேன் *அசுர மலைத்தேவ தாருவை
பிஸாமலை மரங்கள் பெரிதுயர்ந் துறுபவை
வளர்தோங் கசுர மலைத்தேவ தாருவாம்.
மூன்றுநீர் வீழ்ச்சிகள் முழுவலி யுடைத்தாங் (கு)
ஊன்று மூவேரிகள் உயர்சிறப் புடனுள
மூன்று உயர்ந்த முதுமலை தாமும்
வானக் கூரை வளைவின் கீழே:
*ஹமேஎனு மிடத்தில் *ஹல்லா நீர்ச்சுழி
*கரேலி யாவில் *காத்ரா வீழ்ச்சி 180
*வுவோக்ஸியை யாரும் வென்றது மில்லை
*இமாத்திரா யாரும் கடந்தது மில்லை."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"பிள்ளையின் அறிவு, பெண்ணின் புத்தி,
தாடி யுளோர்க்குத் தகுந்ததே யில்லை,
பொருத்தமே யில்லைப் புணர்மனை யுளார்க்கு
ஆழ்ந்த முலத்தின் அர்த்தம் சொல்வாய்,
நித்தியப் பொருட்களின் தத்துவம் சொல்வாய்!"
பின்னர் இளைய யொவுகா ஹைனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 190
"ஒருசிறு **குருவியின் பிறப்புத் தெரியும்
அதுஒரு பறவை இனமெனல் புரிவேன்
**விரியன் பாம்பு விடப்பாம் புணர்வேன்
**நன்னீர் மீனை மீனென் றுணர்வேன்
இரும்பு கடினம் என்பதை யறிவேன்
கருமைச் சேறு கடும்உவர்ப் புணர்வேன்
கொதிக்கும் நீரோ கொடுந்துய ரிழைக்கும்
நெருப்பின் சூடு பெருங்கே டமைக்கும்.
புனல்தான் தொன்னாள் பூச்சு மருந்து
நீர்ச்சுழி நுரையே நேர்ப் பரிகாரம் 200
படைத்தவன் தான்பெரும் மந்திர வாதி
இறைவன் தான்பழம் மருத்துவ னாவான்.
நீரின் பிறப்பு நீண்மலை முடியில்
தீயின் பிறப்புத் திகழ்சொர்க் கத்தே
இரும்பின் முலம் துருவின் துகள்கள்
தாமிரம் கிடைப்பது மாமலை முடிவில்.
ஈரமேல் நிலமே வீறுகொள் பழம்பதி
அலரி மரமே முதல்வளர் தருவாம்
தேவதா ரடியே திகழ்முத லில்லம்
கல்லால் ஆனதே கலயமா தியிலே." 210
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"இன்னமும் நினைவில் இருப்பன வுளவோ
குதர்க்கம் யாவும் கூறி முடிந்ததோ?"
இளைய யொவுகா ஹைனன் இயம்பினன்:
"இன்னமும் நினைவில் இருப்பன கொஞ்சம்
அந்நே ரத்தை அகத்திடை மீட்கிறேன்
ஆழியை நான்உழும் அப்போ தினிலே
ஆழியில் ஆழம் அமைந்தஅந் நேரம்
மீனின் வளைகள் மிகத்தோண் டுகையில் 220
ஆழத்தின் ஆழம் அகழ்ந்தவே ளையிலே
ஏரிகள் யாவும் இயற்றிடும் நேரம்
பருவதம் யாவையும் பாங்குறப் பிரித்து
குன்றுகள் யாவையும் குவித்தவே ளையிலே.
வேறென்ன நானே ஆறாம் மனிதன்,
ஏழாம் விறல்சேர் ஏந்தலும் நானே
இந்த வையகம் தோன்றிய பொழுது
பைங்கால் பிறந்து பரவிய பொழுது
நீள்வான் இடைத்தூண் நிறுவிய பொழுது
சுவர்க்க வளைவுகள் தோன்றிய வேளை 230
நன்னிலா வானில் நகர்ந்தநே ரத்தே
செங்கதிர்க் குதவிகள் செய்தநே ரத்தே
தாரகைக் குலத்தைச் சமைத்தஅவ் வேளை
நீலவான் மீன்கள் நிறைத்தவந் நேரம்."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"உண்மையில் நீதான் உரைத்தவை பொய்யே
அந்நே ரம்நீ அவனியில் இல்லை
ஆழப் பெருங்கடல் அன்றுழு கையிலே
கடலிற் குழிகள் குடைந்தவே ளையிலே
மீனின் வளைகள் மிகத்தோண் டுகையில் 240
ஆழத்தின் ஆழம் அகழ்ந்தபோ தினிலே
ஏரிகள் அனைத்தும் இயைந்தபோ தினிலே
பருவதம் யாவையும் பாங்குறப் பிரித்து
குன்றுகள் யாவையும் குவித்தவே ளையிலே.
உன்னைக் கண்டவர் ஒருவரு மில்லை
கண்டது மில்லைக் கேட்டது மில்லை
இந்த வையகம் தோன்றிய பொழுது
பைங்கால் பிறந்து பரவிய பொழுது
நீள்வான் இடைத்தூண் நிறுவிய பொழுது
சுவர்க்க வளைவுகள் தோன்றிய வேளை. 250
நன்னிலா வானில் நகர்ந்தநே ரத்தே
செங்கதிர்க் குதவிகள் செய்தநே ரத்தே
தாரகைக் குலத்தைச் சமைத்தஅவ் வேளை
நீலவான் மீன்கள் நிறைத்தவந் நேரம்."
அப்பொழு திளைய யொவுகள் ஹைனன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"கூர்மைஎன் அறிவில் கூடிடா வேளை
கிளர்வாட் கூர்மையைக் கேட்பது உண்டு;
ஓ,நீ முதிய வைனா மொயின!
பாரியவா யுடைப் பாடகன் நீயே 260
எங்கள்வாள் முனைகளே இனித்தீர்ப் பளிக்கும்
வாள்களின் வீச்சே வருவிறல் காட்டும்."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"அச்சம் என்பதென் ஆண்மையில் இல்லை
உனதுவா ளினிலோ உன்னறி வினிலோ
கத்தி முனையிலோ கள்ளத் தனத்திலோ.
அதுவது இப்போ தப்படி யிருப்பதால்,
கடுவாள் வீரம் காட்டஎண் ணுகிலேன்
உன்னுடன் மோதி, ஓ,நீ இழிந்தவன்,
ஓ,இழிந் தவனே, உன்னுடன் மோதி." 270
அப்பொழு திளைய யொவுகா ஹைனன்
தன்வாய் கோணித் தலையைத் திருப்பி
கறுத்தத் தாடியைக் கையால் முறுக்கி
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே;
"எதிர்வாள் வீச்சை எவன்ஏற் கானோ
வன்வாள் முனையை மதிக்கான் எவனோ
அவனைப் பன்றியே ஆகப் பாடுவேன்
படுநீள் முகத்துப் பன்றி யாக்குவேன்
அத்தகு மனிதரை அங்ஙனம் செய்வேன்
அவனையவ் வாறே இவனையிவ் வாறே 280
அடர்எருக் குவியலில் அழியப் பண்ணுவேன்
முதுப்பசுத் தொழுவ முலையிற் போடுவேன்."
வைனா மொயினன் வஞ்சினங் கொண்டான்
வெஞ்சினத் தோடு வெட்கமு மடைந்தான்
அதனால் பாடற் கவனே தொடங்கினன்
அறிவுச் சொற்களை அவன்வெளி யிட்டான்;
பாடல்கள் குழந்தைப் பாடல்க ளல்ல
பிள்ளைப்பா வல்லது பெண்கேலி யல்ல
விறல்மிகும் தாடிகொள் வீரனின் பாட்டது
எல்லாப் பிள்ளையும் இசைக்கொணாப் பாட்டது 290
பாதிப் பையன்கள் பயின்றிடாப் பாட்டது
மூன்றிலோர் காதலர் மொழிந்திடாப் பாட்டது
தீமை நிறைந்து தெரியுமிந் நாட்களில்
வாழ்வே முடிவுறும் வறுங்கடை நாட்களில்.
முதிய வைனா மொயினன் பாடினன்
இப்புவி குலுங்கிற்(று) ஏரிகள் கலங்கின
தாமிர வெற்புகள் தலைநடுக் குண்டன
பெரும் பாறைகளோ பிளக்கத் தொடங்கின
குன்றுகள் இரண்டு கூறாய்ப் பறந்தன
சிகரம் சிதறித் தெரிகரை வீழ்ந்தன. 300
இளைய யொவுகா ஹைனனைப் பாடினான்:
உடைகளை நாற்றுச் செடிகளா யாக்கினான்
புரவியின் பட்டியை அலரியா யாக்கினான்
இழுவை**வார் அதைவளர் **சிறுமர மாக்கினான்;
பொன்னொளிர் வண்டிமேற் போந்தவன் பாடினான்
வாவியில் மரத்தினைப் போல்விழப் பாடினான்,
தளர்மணி தொங்கிய சாட்டையைப் பாடியே
நீரதன் கரையிலே நின்றபுல் லாக்கினான்,
வெண்சுட்டி முகத்தொடு விறற்பரி பார்த்தவன்
படிசுனை யருகுறும் பாறையா யாக்கினான். 310
கனகமார் அவனது கைப்பிடி வாளினை
விண்ணகத் தொளிர்தரு மின்னலா யாக்கினான்,
வளமுறுங் கோலத்து வச்சிர தனுவதை
புனலின்மேற் பொலிவுறும் வானவில் லாக்கினான்,
அலர்சிறை பொருந்திய அம்புகள் அனைத்தையும்
விரைந்துவிண் பறந்திடும் பருந்துக ளாக்கினான்
கோணிய அலகுடை நாயினைப் பார்த்தவன்
நிலத்திலே கல்லென நிற்கவே சபித்தனன்.
பாடலால் தலைமிசைப் பதித்தநல் தொப்பி
மேலே எழுந்துவிண் மேகமாய் நின்றது, 320
மற்றொரு பாடலால் மலர்கரக் கையுறை
**குவளை மலரெனக் குளிர்புனல் நின்றது,
அவனணிந் திருந்த நீலமே லாடை
மேகக் கூட்டமாய் விண்மிசை யூர்ந்தது,
எழிலாய் இணைந்த இடுப்பின் பட்டி
விண்மிசை சிதறி விண்மீ னானது.
யொவுகா ஹைனனைத் தொடர்ந்தும் பாடினான்
சென்றான் அரைவரை சேற்றுச் சகதியில்
புதைந்தது இடுப்புப் பூட்டுச் சகதியில்
சென்றது **கக்கம் செறிமண் வரைக்கும். 330
இப்போ திளைய யொவுகா ஹைனன்
தெரிந்து கொண்டனன் சீராய் உணர்ந்தனன்
தான்வந்த வழியைச் சரியாய் அறிந்தனன்
பயண மொன்றினைப் படுமனம் கொண்டதும்
பாப்போட் டியிலே பாடிட வந்ததும்
முதிய வைனா மொயினனை எதிர்த்ததும்.
நிலத்தில் காலைப் பெயர்த்துப் பார்த்தான்
முன்கால் தூக்க முடியவே யில்லை
அடுத்த காலையும் அசைத்துப் பார்த்தான்
அதுகற் காலணி இறுகிக் கிடந்தது. 340
பின்னர் இளைய யொவுகா ஹைனன்
வளர்நோ வறிந்தான் வருத்தப் பட்டான்
தொல்லைகள் கூடத் துயரம் உணர்ந்தான்.
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஓ,உயர் ஞான வைனா மொயின!
நிலைபெறும் மாய நெறியறி முதல்வ!
மாயச் சொற்களை மீளப் பெறுவாய்
மந்திரப் பாடலை வாங்குவாய் திரும்ப
இந்தச் சிக்கலில் இருந்தெனை விடுப்பாய்
துன்பத் திருந்து தூக்கிநிம் மதிதா 350
அதிக பெறுமதி அளிப்பேன் உனக்கு
அரிதாம் பரிசுகள் அளிப்பேன் பற்பல."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"சரிதான் எனக்குத் தருவாய் எவ்வெவை
மாயச் சொற்களை மீளப் பெற்றால்
மந்திரப் பாடலை வாங்கிக் கொண்டால்
இந்தச் சிக்கலில் இருந்துனை மீட்டால்
துன்பத் திருந்துகை தூக்கியே விட்டால்?"
இளைய யொவுகா ஹைனன் இயம்பினன்:
"என்னிடம் தனுக்கள் இரண்டு உள்ளன 360
எழிலார் குறுக்கு இருஞ்சிலை இரண்டு
அவற்றிலே ஒன்று அடுகதித் தாக்கும்
மற்றொன் றோகுறி வைத்தே பாயும்
இரண்டு வில்லில்நீ ஒன்றைப் பெறுவாய்."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"ஆ,உன் தனுக்களில் ஆசையே இல்லை
அவ்இழி சிலைகளில் அக்கறை இல்லை
என்னிட முண்டு எண்ணிலாச் சிலைகள்
சுவர்களொவ் வொன்றிலும் சொருகியுள் ளனவே
ஆப்புகள் அனைத்திலும் அனேகம்உள் ளனவே 370
மனித ரின்றியே வானெலாம் திரியும்
வேட்பவ ரின்றியே வெளித் தொழில் புரியும்."
இளைய யொவுகா ஹெனனைப் பாட
மேலும் சேற்றில் மிகஆழ்ந் திட்டான்.
இளைய யொவுகா ஹைனன் இயம்பினன்:
"என்னிடம் தோணிகள் இரண்டு உள்ளன
மங்கல மான மரக்கல மிரண்டு
கனமிலாத் தோணி கடுகதி செல்லும்
பெரும் பாரமேற்றும் பிறிதொரு தோணி
இரண்டி லொன்றை எடுத்துச் செல்வாய்." 380
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"அத்தோ ணிகளில் ஆசையே இல்லை
இரண்டில் ஒன்றையும் இல்லைநான் பெறுதல்
அவற்றில் என்னிடம் அநேகமுள் ளனவே
உருளையொவ் வொன்றிலும் உறும்தடைப் பட்டே
ஒவ்வொரு குடாவிலும் உறும்அடை பட்டு
சீறுகாற் றெதிர்த்தும் சிலதோணி செல்லும்
சீரறு நிலையிலும் சிலபட கேகும்."
இளைய யொவுகா ஹெனனைப் பாட
மேலும் சேற்றில் மிகஆழ்ந் திட்டான். 390
இளைய யொவுகா ஹைனன் இயம்பினன் :
"என்னிடம் உள்ளன இருபொலிக் குதிரை
எழிலார் புரவிகள் இரண்டென் னிடமுள
ஒன்றன் கடுகதிக் கொப்பிணை யில்லை
இழுவையின் இலட்சணம் எனலாம் மற்றது
இரண்டி லொன்றைநீ யீங்குபெற் றகல்வாய்."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"அட,உன் புரவியில் ஆசையு மில்லை
வெண்காற் குதிரைகள் வேண்டிய தில்லை
அவற்றில் என்னிடம் அனேகமுள் ளனவால் 400
தொட்டிகள் அனைத்திலும் கட்டிக் கிடக்கும்
நிறைந்தே தொழுவம் அனைத்திலும் நிற்கும்
தெளிபுனல் போலத் திரண்ட முதுகுடன்
பின்புறங் கொழுத்த பெருந்தசை யுடனே."
இளைய யொவுகா ஹெனனைப் பாட
மேலும் சேற்றில் மிகஆழ்ந் திட்டான்.
இளைய யொவுகா ஹைனன் இயம்பினன்:
"ஓ,நீ முதிய வைனா மொயின!
மாயச் சொற்களை மீளப் பெறுவாய்
மந்திரப் பாடலை வாங்குவாய் திரும்ப 410
பொன்தொப்பி நிறைகொள் பொற்கா சளிப்பேன்
அள்ளுமோர் தொப்பிகொள் வெள்ளிக ளளிப்பேன்
எந்தைபோ ரினிலே இவைகளைப் பெற்றார்
வெற்றிப் போரிலே பெற்றதிப் பொருள்கள்."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"வெள்ளிகள் எதுவும் வேண்டவே வேண்டாம்
இழிந்தோய், உனதுபொற் காசுகள் ஏற்கேன்
அவைகள் என்னிடம் அனேகம் உள்ளன
களஞ்சியம் அனைத்தும் கனத்தே கிடப்பன
பெட்டிகள் அனைத்தும் பெருகவே உள்ளன 420
நிலாவொளி நிகர்ப்ப நிலைபெறும் பொன்னாம்
தொல்பக லோன்போல் தோன்றிடும் வெள்ளிகள்."
இளைய யொவுகா ஹைனனைப் பாட
மேலும் சேற்றில் மிகஆழ்ந் திட்டான்.
இளைய யொவுகா ஹைனன் இயம்பினன்:
"ஓ,நீ முதிய வைனா மொயின!
இந்தச் சிக்கல் இருந்தெனை விடுவிப்பாய்
துன்பத் திருந்து தூக்கிநிம் மதிதா
வீட்டு வைக்கோல் மிகுபோர் தருவேன்
அகல்மண் வயலெலாம் அடைக்கலம் தருவேன் 430
என்னுடை வாழ்வைமீட் டெடுப்பதற் காக
என்னைமீட் டெடுத்துக் கொள்வதற் காக."
முதிய வைனா மொயினன் மொழிந்தான் :
"வைக்கோற் போரிலே இச்சையும் இல்லை
இழிந்தமா னிடனே செழித்தமண் வயலிலும்;
மண்வயல் அனேகம் உண்டே எனக்கும்
எல்லாத் திசையிலும் இருப்பன அவைகள்
எல்லா வெளியிலும் இகல்போர் உளவாம்
எனது வயல்கள்தாம் எனக்குகந் தனவாம்
தானியக் குவியல்கள் சாலச் சிறந்தவை." 440
இளைய யொவுகா ஹைனனைப் பாட
மேலும் சேற்றில் மிகஆழ்ந் திட்டான்.
பின்னர் இளைய யொவுகா ஹைனன்
ஆற்றல் அனைத்தும் அழிந்த நிலையில்
தாடை வரைக்கும் தாழ்ந்தே நின்றான்
தாடியோ தீதுறும் தலத்திலே யிருக்க
வாயினை நிறைத்து வன்சே(று) ஆர்ந்திட
படுமரத் துண்டிலே பற்கள்போய் இறுக.
இளைய யொவுகா ஹைனன் இயம்பினன்:
"ஓ,உயர் ஞான வைனா மொயின! 450
நிலைபெறும் மாய நெறியறி முதல்வ!
மீண்டும் பாடுநின் மேனிலைப் பாடலை
இளைத்த எனக்கிவ் விகவாழ் வருள்வாய்
எனக்கு விடுதலை இதிலிருந் தருள்வாய்
நீரோடை வந்ததென் நிலக்காற் கீழே
மண்ணும் எரிச்சலைக் கண்களில் தந்தது.
புனிதநற் சொற்களை இனிதுமீட் டழைத்தால்
மந்திர சக்தியை வரமீட் டெடுத்தால்
தருவேன் உனக்குச் சகோதரி *ஐனோ
தருவேன் உனக்குத் தாயீன் தனையை 460
தூய்மையா க்குவள்நின் தொல்வாழ் விடத்தை
நிலத்தைப் பெருக்கி நலத்தைச் செய்வாள்
மரத்தின் தட்டை உலர்த்தி எடுப்பாள் ;
கழுவித் தருவாள் முழுமே லாடைகள்
நேர்த்தியாய் பொன்னுடை நினக்கவள் நெய்வாள்
தேன்பல காரம் செய்வாள் இனிப்பாய்."
முதிய வைனா மொயினன் முடிவில்
இவ்வுரை கேட்டு இன்பமே கொண்டான்
யொவுகா ஹைனனின் யுவதியைப் பெற்றால்
கடுமுது காலம் கவனிப் பாளென. 470
களிப்பெனும் கல்லில் கருத்தோ டமர்ந்து
உயர்கவிக் கல்லில் ஓய்தலைப் பெற்று
ஒருகணம் பாடினான் மறுகணம் பாடினான்
படர்மும் முறையும் பாடலை யிசைத்தான்
புனிதச் சொற்களை இனிதுமீட் டழைத்தான்
மாயச் சொற்றொடர் மீளவும் பெற்றான்.
இளைய யொவுகா ஹைனன் மீண்டான்
தாடையோ சேற்றைத் தவிர்வெளி வந்தது
தாடியோ தீதுறும் தலம்வெளி வந்தது
பாறையில் இருந்துமீள் பரியதும் வந்தது 480
வண்டியோ புனற்கரை மரத்தினால் வந்தது
சலக்கரைப் புதர்நீள் சாட்டையும் வந்தது.
சறுக்குவண் டியிலே சாடியே ஏறினான்
வண்டியில் ஏறி வளமாய் அமர்ந்தான்
முறிந்த மனத்துடன் விரைந்தே சென்றான்
இதயம் நிறைந்திடும் துயருடன் சென்றான்
அன்புறும் அன்னையின் அருகினை நோக்கியே
உயர்வுறும் ஈன்றவர் உறைவிடம் நோக்கியே.
பெரும்ஒலி யார்ப்பக் கடுகதி சென்றான்
அகல்இல் நோக்கி ஆவலாய்ப் போனான் 490
வருகளஞ் சியத்தே வண்டியை நொருக்கி
வாயிற் படியிலேர்க் காலினை யுடைத்தான்.
அன்னையென் பவள்ஆழ் சிந்தனை செய்தாள்
தந்தையார் இங்ஙனம் வந்தெதிர் சொன்னார் :
"வன்கா ரணத்தொடே வண்டியை உடைத்தாய்
ஏர்க்கால் உடைத்ததில் இயல்கருத் துண்டு
ஏனப்பா நூதனம் இவ்வண்டி ஓட்டம்
வெகுமுட் டாள்போல் வீடேன் வந்தாய்?"
இளைய யொவுகா ஹைனன் அப்போது
கண்ணீர் பெருக்கிக் கவலைப் பட்டான் 500
தாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன்
தொப்பியைத் தூக்கி அப்புறம் வைத்தான்
உதடுகள் உலர்ந்து உரத்துப் போயின
வாய்வரை நாசி வளைந்து வந்தது.
தயங்கி தயங்கித் தாயவள் கேட்டாள்
வருத்தத் தாலொரு வாய்வினாக் கேட்டாள்:
"எதற்கு அழுதனை? என்மகன் இயம்பு!
இரங்கிய தெதற்கென் இளமையின் பயனே!
உதடுகள் உலர்ந்து உரத்தது எதற்கு
வாய்வரை நாசி வளைந்தது மெதற்கு?" 510
இளைய யொவுகா ஹைனன் இயம்பினன் :
"அன்னையே, தாயே, எனைச்சுமந் தவளே!
நிகழ்வின் காரண நிலையொன் றுண்டு
மந்திர வேலைகள் வலிதில் நடந்தமை
கண்ணீர் சிந்தக் காரண மாயின
மாயவித் தைகளால் வாய்புலம் பிட்டது;
நானும் இதற்காய் நாளெலாம் அழுவேன்
வாழ்நாள் முழுவதும் வேதனைப் படுவேன்
சமர்ப்பணம் செய்தேன் சகோதரி ஐனோ
அன்னையின் மகளை அளிக்கவாக் களித்தேன் 520
வைனா மொயினனைப் பேணுதற் காக
பாடகன் வாழ்க்கைப் படுதுணை யாக
உறுநொய் துற்றோன் ஒருதுணை யாக
முலையில் கிடப்போன் பாதுகாப் பிற்காய்."
செங்கரம் இரண்டையும் தேய்த்தனள் அன்னை
அங்கை இரண்டையும் அன்னாள் தேய்த்தபின்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"அரியஎன் மகனே, அழுவதை நிறுத்து!
எதுவுமே காரணம் இல்லை அழற்கு
அதிகம் துன்புறற் கவசியம் இல்லை; 530
நான்நாட் களெலாம் நண்ணிய தொன்று
நாளெலாம் வாழ்வில் நச்சிய தொன்று
உயர்ந்தோன் எமது உறவினன் ஒருவன்
விறலோன் ஒருவன் வருவான் என்றே
வைனா மொயினன் மருமக னாக
உயர்பா டகனே உறவின னாக."
இளைய யொவுகா ஹைனன் சோதரி
செய்தியைக் கேட்டுச் சிந்தினள் கண்ணீர்
ஒருநாள் அழுதாள் இருநாள் அழுதாள்
வாயிற் படிகளின் வலமிருந் தழுதாள் 540
பெருந்துயர் கொண்டு பின்னரும் அழுதாள்
இதயத் துயரினால் ஏங்கியே அழுதாள்.
அவளது அன்னை அவளிடம் சொன்னாள்:
"என்னுயிர் ஐனோ, எதற்காய் அழுதாய்?
மாவலோன் ஒருவன் மாப்பிள்ளை யாவான்
உயர்ந்தோன் ஒருவனின் உயர்மனை யிருந்து
பல்கணி வழியே பார்வையைச் செலுத்தி
பேச்செலாம் பேசலாம் பீடத் தமர்ந்து."
இவ்விதம் அந்த எழில்மகள் இசைத்தாள்:
"அன்னையே, தாயே, எனைச்சுமந் தவளே! 550
அழுவதற் கெனக்கோர் அருங்கா ரணமுள
அழுதேன் எனது அழகுறும் குழற்கே
சடையாய் **வளர்ந்தஎன் தாழ்குழற் கழுதேன்
மென்மையாய் வந்தஎன் பொன்முடிக் கழுதேன்,
இளமையில் எல்லாம் ஒளித்தே யிருந்து
மறைவாகிப் போயின் வளர்ந்ததன் பின்னே.
எனதுவாழ் நாளெலாம் இதற்காய் அழுவேன்:
எல்லவன் ஒளியின் இனிமையைப் பார்த்து
விண்மதி ஒளியின் மென்மையைப் பார்த்து
வானத் தொளிரும் வண்ணம் பார்த்து. 560
இளமையில் இவற்றை இழத்தலும் வேண்டும்
வளர்சிறு வயதில் மறத்தலும் வேண்டும்
என்னுடைச் சகோதரன் இருந்தொழில் தளத்தில்
பரியுமென் தந்தையின் பலகணிப் பீடம்."
அன்னை யென்பவள் அவள்மகட் குரைத்தாள்
பிள்ளைக் கிவ்விதம் பிரியமாய்ப் பகர்ந்தாள்:
"தோய்மதி யீனத் துன்பம் தவிர்ப்பாய்
கண்ணீர் சொரியக் காரண மில்லை
எதுவித ஏதுவும் எழுதுயர்க் கில்லை
அல்லற் படுவதில் அர்த்தமும் இல்லை 570
கடவுளின் செங்கதிர் கதிர்களை ஒளிரும்
இகதலத் தெத்தகு இடத்திலு மிருந்து
மகிழ்பிதாச் சாளரம் மட்டிலு மல்ல
சோதரன் தொழிற்களத் தொன்றிலு மல்ல.
வளர்சிறு பழவகை மலையிலே யுண்டு
தனியொரு **பழவகை தரையிலும் உண்டு
அவற்றைநீ நன்குபோய் ஆய்ந்தெடுத் திடலாம்
புகுமிட மெங்கணும் போய்ப்பறித் திடலாம்
தந்தையின் வயல்வெளி தன்னிலென் றென்றும்
சகோதரன் **தீய்ந்நிலம் தங்குதற் கில்லை." 580
பாடல் 4 - ஐனோவின் முடிவு
அடிகள் 1 - 30: வைனாமொயினன் யொவுகாஹைனனின் சகோதரி ஐனோவைக் காட்டில் சந்தித்து உரையாடுகிறான்.
அடிகள் 31 - 116: ஐனோ அழுதபடியே வீட்டுக்கு ஓடிப் போய்த் தாயாருக்குச் சொல்லுகிறாள்.
அடிகள் 117 - 188: தாயார் அழுகையை நிறுத்திவிட்டு, அலங்காரம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் இருக்கச் சொல்லுகிறாள்.
அடிகள் 189 - 254: ஐனோ மென்மேலும் அழுது ஒரு வயோதிப மனிதனை விவாகம் செய்ய முடியாது என்கிறாள்.
அடிகள் 255 - 370: ஐனோ கவலையில் காடுகளில் திரிந்து, ஒரு அபூர்வமான கடற்கரையை அடைந்து அதில் குளிக்கும் பொழுது அமிழ்ந்து போகிறாள்.
அடிகள் 371 - 434: அவளுடைய மரணச் செய்தியை ஒரு முயல் போய் வீட்டில் சொல்லுகிறது.
அடிகள் 435 - 518: அவளுடைய தாய் இரவு பகலாக அழுகிறாள்.
அதன்பின் இளமைப் பருவத்து ஐனோ
யொவுகா ஹைனனின் யெளவனச் சோதரி
துடைப்பம் பெறற்காய்த் தொடர்கா டடைந்தாள்
சென்றாள் **தூரிகை தேடிப் புதரிடை
ஒன்றைத் தந்தைக் கொடித்துச் சேர்த்தாள்
இரண்டாவ தொன்றை எடுத்தாள் தாய்க்காய்
மூன்றாவ தொன்றை முனைந்தாங் கெடுத்தாள்
தாழ்வில் செழுமைச் சகோதர னுக்காய்.
வீடு நோக்கிக் காலடி பெயர்த்தனள்
**பூர்ச்சம் புதர்கள் புணர்வழி யூடே 10
முதிய வைனா மொயினன் வந்தனன்
காரிகை யவளைக் காட்டிலே கண்டனன்
இலைதளை அடர்ந்த இருள்சோ லையிலே;
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"பிறருக் கல்ல பருவப் பெண்ணே,
எனக்குமட் டும்தான் இளங்கா ரிகையே
நித்தில ஆரம் நீகழுத் தணிவாய்
திகழ்மார் பதிலே சிலுவையை அணிவாய்
எழிலார் குழலை இணைத்துப் பின்னி
பட்டுத் துணியைப் பாங்குறக் கட்டு." 20
இனிவரும் சொற்களில் இளமகள் இசைத்தாள்:
"உனக்காக அல்ல ஒருவர்க்கு மல்ல
மார்பிற் சிலுவை மாண்போ டணிதல்
பட்டுத் துணியினால் பைங்குழல் பிணைத்தல்
**கப்பல் துணியில் அக்கறை இல்லை
கோதுமை ரொட்டிக் குறுதுய ரில்லை
கைத்தறித் துணிகளில் காலங் கழிக்கிறேன்
ரொட்டித் துகள்களில் திட்பமாய் வளர்கிறேன்
அன்புடை நெஞ்சத்(து) அப்பா அருகில்
மங்காப் பாசத்து மாதா துணையில்." 30
திருகிப் பிடுங்கினள் மார்பின் சிலுவையை
விரலணி விலக்கினள் விரல்களி லிருந்து
கழுத்தி லிருந்து கழற்றினள் மணிகள்
சிரசி லிருந்து செந்துணி விலக்கினள்
நிலத்தினி லிட்டனள் நிலத்துக் காக
சோலையில் எறிந்தனள் சோலைக் காக
விழிநீர் சிந்தி வீட்டை அடைந்தனள்
துன்புற் றழுதவள் தோட்டம் நடந்தனள்.
தந்தை பலகணி தன்மருங் கிருந்தார்
கோடரிப் பிடியைச் சீர்செய் தவராய்: 40
"எதற்காக அழுகிறாய், எளியஎன் மகளே?
எளியஎன் மகளே, இளமைப் பெண்ணே!"
"ஏங்கி அழுவதற் கேதுக் கள்ளுள
கவலைப் படற்கும் காரணம் உள்ளன
அதனா லேதான் அழுகிறேன் அப்பா
மிகவழு(து) அதனால் விண்ணப் பிக்கிறேன்
மார்பின் சிலுவை வறிதே கழன்றது
பட்டியி லிருந்தொரு படர்பூட் டவிழ்ந்தது
வியன்மார் பிருந்த வெள்ளிச் சிலுவையும்
இடுப்புப் பட்டியின் இயல்செப் பணியும்." 50
இருந்தான் சோதரன் எழில்வா யிற்கடை
வண்டிஏர் செதுக்கிய வண்ணம தாக:
"எதற்காக அழுகிறாய், எளியஎன் சோதரி?
எளியஎன் சோதரி, இளமைப் பெண்ணே!"
"ஏங்கி அழுவதற் கேதுக் கள்ளுள
கவலைப் படற்கும் காரணம் உள்ளன
அதனா லேதான் அழுகிறேன் சோதரா
மிகவழு(து) அதனால் விண்ணப் பிக்கிறேன்
விரலி லிருந்து விரலணி கழன்றது
கழுத்தி லிருந்து கதிர்மணி உதிர்ந்தது 60
விரலி லிருந்தஎன் வியன்பொன் மோதிரம்
கழுத்து மாலையின் கவின்வெண் மணிகள்."
இல்லின் கூடத்(து) இருந்தாள் சோதரி
பொன்னிலே கச்சணி பின்னிய வண்ணம்:
"எதற்காக அழுகிறாய், எளியஎன் சோதரி?
எளியஎன் சோதரி, இளமைப் பெண்ணே!"
"ஏங்கி அழுவதற் கேதுக் கள்ளுள
கவலைப் படற்கும் காரணம் உள்ளன
அதனால் அழுகிறேன் அருமைச் சோதரி
மிகவழு(து) அதனால் விண்ணப் பிக்கிறேன் 70
புருவத் திருந்து பொன்னணி கழன்றது
கூந்தலின் வெள்ளணி குலைந்து வீழ்ந்தது
நீலப் பட்டு நீள்விழி யிருந்து
சென்னிறப் பட்டும் சென்னியி லிருந்து."
முன்மணி மண்டபத்(து) அன்னை இருந்தாள்
பாலிருந் தாடை பகுத்த வண்ணமே:
"எதற்காக அழுகிறாய், எளியஎன் மகளே?
எளியஎன் மகளே, இளமைப் பெண்ணே!"
"தாயே, என்னைத் தனிசுமந் தவளே!
எனைவளர்த் தவளே, என்னுயி ரன்னாய்! 80
"ஏங்கி அழுவதற் கேதுக் கள்ளுள
கவலைப் படற்கும் காரணம் உள்ளன
எளியஎன் தாயே, இதனால் அழுகிறேன்,
மிகஅழு(து) இதனால் விண்ணப் பிக்கிறேன்
துடைப்பம் பெறற்காய்த் தொடர்கா டடைந்தேன்
சென்றேன் தூரிகை தேடிப் புதரிடை
ஒன்றைத் தந்தைக் கொடித்துச் சேர்த்தேன்
இரண்டாவ தொன்றை எடுத்தேன் தாய்க்காய்
மூன்றாவ தொன்றை முனைந்தாங் கெடுத்தேன்
தாழ்வில் செழுமைச் சகோதர னுக்காய். 90
வீடு நோக்கிக் காலடி பெயர்த்தேன்
நற்புதர் வழியாய் நடந்தே வந்தேன்
குகைவழி வந்தகுரிசில் *ஒஸ் மொயினன்
தீய்ந்த நிலத்தில் *கலேவைனன் கூறினன்:
"எனக்காய் அணிவாய் எளிமைப் பெண்ணே
எனக்காய் மட்டும் எளிமைப் பெண்ணே
கழுத்தில் அணிவாய் கவின்மணி மாலை
திகழ்மார் பதிலே சிலுவையை அணிவாய்
எழிலார் குழலை இணைத்துப் பின்னி
பட்டுத் துணியினால் பாங்குறக் கட்டு." 100
சிறந்தஎன் மார்புச் சிலுவையைப் பெயர்த்தேன்
கழுத்தி லிருந்து கழற்றினேன் மாலை
நீல நூலினை நீள்விழி யிருந்து
சிவப்பு நூலினைச் சிரசினி லிருந்து
நிலத்திற் போட்டேன் நிலத்திற் காக
சோலையில் எறிந்தேன் சோலைக் காக
இங்ஙனம் நானே இயம்பினேன் பின்னர்:
"உனக்கா யல்ல ஒருவர்க்கு மல்ல
மார்பிற் சிலுவை மாண்போ டணிதல்
பட்டுத் துணியினால் பைங்குழல் பிணைத்தல் 110
கப்பல் துணியில் அக்கறை இல்லை
கோதுமை ரொட்டிக் குறுதுய ரில்லை
கைத்தறித் துணிகளில் காலங் கழிக்கிறேன்
ரொட்டித் துகள்களில் திட்பமாய் வளர்கிறேன்
அன்புடை நெஞ்சத்(து) அப்பா அருகில்
மங்காப் பாசத்து மாதா துணையில்."
பின்னர் இவ்விதம் அன்னையும் சொன்னாள்
பெற்றவள் மகளைப் பார்த்துப் பேசினாள்:
"அழுகையை நிறுத்துஎன் அன்புடைப் புதல்வி!
ஏக்கம் எதற்கென் இளமையின் பயனே! 120
உருகிய வெண்ணையை ஓராண் டுண்பாய்
பாங்குளோர் தமைவிடப் பசுமையாய் வருவாய்,
ஆண்டிரண் டினிலே அயில்வாய் **பன்றியை
வேறெவர் யாரிலும் மென்மையாய் வருவாய்,
உண்பாய் மூன்றில் ஒளிர்பா லேட்டை
ஏனைய யாரிலும் எழிலாய் வருவாய்.
மலையதி லுள்ள மண்டபம் சென்று
சீருடன் இருக்கும் சிறுஅறை திறப்பாய்
பெட்டக மீமிசை பெட்டக மாங்குள
பெட்டிக ளருகில் பெட்டிக ளிருக்கும் 130
திறப்பாய் மிகமிகச் சிறந்த பெட்டியை
மின்னும் முடியை மெதுவாய்த் திறப்பாய்
கனகத் தியற்றிய கச்சுகள் ஆறும்
நீலப்பா வாடை ஏழும் இருக்கும்
நிலவின் மகளால் நெய்தவை தாமவை
செங்கதி ரோன்மகள் செய்தவை தாமவை.
நற்சிறு பெண்ணாய் நானிருக் கையிலே
நளிர்இளம் பெண்ணாய் நானிருக் கையிலே
சிறுபழம் நாடிச் சென்றேன் வனத்துள்
பனிமலைச் சரிவிலே பழம்சில தேடினேன் 140
நிலாமகள் அப்போ(து) நெய்ததைக் கேட்டேன்
பெருங்கதி ரோன்மகள் பின்னிடக் கேட்டேன்
நீல நிறப்பொழில் நேர்பின் புறத்தில்
செழித்த பசும்பொழில் திகழ்பக் கத்தே.
மாதரின் பக்கம் வந்தேன் மெதுவாய்
அரிவையர் தமது அருகே நெருங்கி
நாரியர் தம்மிடம் நான்கேட் டேனால்
இனிவரும் சொற்களில் இயம்பினன் நானே:
'திங்களின் மகளே, நின்பொன் தருவாய்,
வெங்கதிர் மகளே, வெள்ளியைத் தருவாய், 150
எதுவுமே யற்ற இச்சிறு மிக்கு
கனிவாய்க் கேட்கும் காரிகை எனக்கு.'
திங்களின் மகளும் செம்பொன் தந்தாள்
வெங்கதிர் மகளும் வெள்ளிதந் திட்டாள்
பொன்னை எனது புருவம் வைத்தேன்
வெள்ளியைச் சென்னி விளங்கவைத் திட்டேன்
மலரைப் போல மனையை நாடினேன்
தேடிவந் தேன்என் தாதையி னிடமே.
அணிந்துநான் பார்த்தேன் அந்நாள் மறுநாள்
தனிமுன் றாம்நாள் தரித்துப் பார்த்தேன் 160
புருவத் துப்பொன் பிரித்தே எடுத்து
சென்னிவெள் ளியையும் சேர்த்தே யெடுத்து
குன்றுயர் மாடம் கொண்டே சேர்த்து
பத்திர மாகப் பெட்டகத் திட்டேன்,
அன்று முதல்அவை அங்கே இருந்தன
இன்று வரைநான் எடுத்துப் பார்த்திலன்.
நயனத் தணிவாய் நல்லதோர் பட்டணி
பூணுவாய் புருவம் பொலிவுறு பொன்னணி
நித்தில ஆரம் நேர்கழுத் தணிந்து
பூணுக மார்பிற் பொன்மணிச் சிலுவை 170
மென்மையாய் செய்த மேலுடை அணிக
நுட்பமாய் நெய்த நூலா டையது
கம்பளி யதிலியை கனத்தபா வாடையும்
பாவாடை மேலொரு பட்டுப் பட்டியும்
பாங்குறப் பட்டிலே பண்ணுகா லுறையும்
எழிற்கா லணியும் இருகால் பூணுக;
கார்குழல் பின்னிக் கட்டிய பின்நீ
பட்டுப் பட்டி பாங்குறச் சூடுக
கனகநல் மோதிரம் கைவிரற் புனைந்து
பொன்னிலாம் வளையல்கள் பூணுக கைகளில். 180
அவ்விட மிருந்து அகத்திடை வருக
களஞ்சியப் பக்கல் காலடி வைக்க!
உவகையில் திளைப்பர் உறவினர் எல்லாம்
திளைப்பர் இனத்தவர் செழுமென் னினைவில்;
பாதையில் பூப்போல் பவனிநீ வந்து
**சிறுபழம் போலே செம்மையுற் றுலவுவை
முன்னரை விடவும் முழுமெரு கொளிர்வாய்
அன்றிலும் பார்க்க அழகுடன் பொலிவாய்."
இவ்வித மொழிகளில் இயம்பினாள் அன்னை
மகளுக் கன்புடன் மாதா புகன்றாள் ; 190
ஆயினும் புதல்வி அதைமனம் கொண்டிலள்
மாதா மொழிகளை மகளோ கேட்டிலள்
அப்புறத் தோட்டத்து அழுது திரிந்தனள்
துன்பம் தோய்ந்து தோட்டம் நடந்தனள்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னாள்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தாள் :
"நலமுறு நெஞ்சம் நயக்கும் உணர்வெது?
பாக்கியம் பெற்றோர் பயனுறு நினைவெது?
உறுநல நெஞ்சம் உணர்ந்திடு மிவ்விதம்
பாக்கியம் பெற்றவர் பாங்குறும் பேறிது 200
தொன்னீர் தோன்றிடும் துள்ளலைப் போலவும்
அல்லது மென்னீர் அலையது போலவும் ;
பாக்கியம் அற்றோர் பாங்குறும் உணர்வெது?
தனிநீள் வாலுடைத் தாரா நினைவெது?
பாக்கியம் அற்றோர் பாங்குறும் உணர்விது
தனிநீள் வாலுடைத் தாரா நினைவிது
பருவத முடியின் பனிக்கட் டியைப்போல்
கிணற்றிடைப் பட்ட கிளர்நீ ரதைப்போல்.
அடிக்கடி நானோர் அல்லலில் வீழ்கிறேன்
அல்லலின் பிள்ளையாய் அடிக்கடி தாழ்கிறேன் 210
எண்ணம் மிதிபடும் எளியபுல் லாயினன்
பேதையாய் தவழ்கிறேன் பெரும்புதர் நடுவில்
புற்றரை மத்தியில் போய்நான் திரிகிறேன்
தோப்பிலும் தூற்றிலும் தொடர்ந்தலைந் துழல்கிறேன்
கிளர்ந்தெழும் மனநிலை **கீலிலும் சிறப்பி(ல்)லை
என்னுளம் கரியிலும் இ(ல்)லையொரு வெளுப்பே.
அமையும்என் நிலையோ அருமையாய் இருந்திடும்
மென்மேல் என்நிலை மேன்மையுற் றிருந்திடும்
பிறப்பெடா திருந்தால் வளர்ந்திடா திருந்தால்
பெரிதாய் நானுருப் பெறாதிருந் திருந்தால் 220
இன்னல்கள் நிறைந்த இவைபோல் நாட்களில்
இன்பங்க ளற்ற இத்தகு பூமியில்;
ஆறாம் நிசிவய ததில்இறந் திருந்தால்
அன்றெட் டாம்நிசி வயதழிந் திருந்தால்
எனக்கெனத் தேவைகள் ஏற்பட் டிருக்கா(து):
தூயசாண் நீளத் துணியது ஒன்றும்
அகத்தினில் வாழ அருநிலப் பரப்பும்
அன்னை யவளின் அழுகைசிற் றளவும்
எந்தையின் கண்ணீர் இன்னும் சிறிதும்
சகோதரன் விழிநீர் சற்றும் இருக்கா(து)." 230
அங்ஙனம் ஒருநாள் மறுநாள் அழுதாள்
அன்னையும் பின்னர் அகங்கனிந் துசாவினள் :
"பேதாய், பொருமுவ தெதற்குப் பெண்ணே?
வியாகுலப் பெண்ணே, வீண்முறை யீடேன்? "
"நான்பே தைப்பெண் நான்அழல் இதற்கே
முழுப்பொழு தும்நான் முறையீ டிட்டேன்
பேறிலா எனைநீ பெறுமா றுரைத்தாய்
உன்னுயிர் மகளுக் குரைத்தாய் இதனை
முதியஆ டவற்கு வதுவைக் கிசைத்தாய்
வயதாம் மனிதர்(க்கு) வழிகாட் டென்றாய் 240
தொய்து தளர்ந்தோன் துணையென எண்ணி
முலையிற் கிடப்போன் மனைவியா கென்றாய்
ஆணையிட் டாயேல் அதுநன் றிதைவிட
ஆழக் கடலின் அலைகள் அடியில்
தொல்வெண் மச்சச் சோதரி யாகென
தவழ்மீன் குழுநடுச் சகோதர னாகென ;
நடுக்கடல் இதைவிட நன்றா யிருக்கும்
அலைக்கீழ் வாழ்வது அருமையா யிருக்கும்
வெண்மீ னதனின் அண்முசோ தரியாய்
மீனின் மத்தியில் மிகுசகோ தரனாய் 250
வயதே றியவன் மனைவியா காமல்
தொய்ந்து தளர்ந்தோன் துணையா காமல்
தளர்கா லுறையொடு தள்ளா டுபவர்க்(கு)
தடிமேல் வீழ்ந்து தடுமா றுபவர்க்(கு). "
மலைமிசை யுள்ள மண்டபம் சென்றாள்
மண்டபத் துள்ளே மங்கையும் போனாள்
பேர்மிகும் சிறந்த பெட்டியைத் திறந்து
மூடியைப் பின்னால் வேகமாய்த் தள்ளி
அம்பொன் கச்சுகள் ஆறையும் தேடி
நீலப்பா வாடைகள் ஏழையும் கண்டாள் 260
அவைகளை எடுத்து அணிந்தாள் அவளே
அலங்கார மெல்லாம் அருமையாய்ச் செய்தாள் ;
பொன்னணி யதனைப் பூண்டாள் நுதலில்
வெள்ளியால் ஆனதை மிலைந்தாள் குழலில்
நீலப் பட்டதை நீள்விழிக் கணிந்து
சிவப்பிலாம் இழைகளை சிரசிற்சூ டினளே.
களஞ்சியம் அகன்று கடிதினிற் போந்து
கழனிப் பரப்பெலாம் கடந்தப் பாலும்
சதுப்பிலும் மேட்டுத் தரையிலும் திரிந்து
கலங்கிமங் கொளியிற் காடெலாம் அலைந்தாள் 270
னோ போக்கிலே புதுப்பாட் டிசைத்தாள்
அலைந்து திரிகையில் அவள்இவை புகன்றாள் :
"இதயம் நிறைய இன்னல் இருக்குமால்
தலைவலி ஒன்றும் தனியாய் வந்தது
ஆனாலும் இன்னல் இன்னலா காது
வலியென வந்தது வலியா யிராது
அதிட்டம் அற்றநான் அழிந்திட நேர்ந்தால்
மிகுதுயர் பேதைநான் விலகவும் நேர்ந்தால்
இப்பெருந் துன்பங்க ளிடையிலே யிருந்து
இவற்றிலே யிருந்தகன் றெழுந்திட முடிந்தால். 280
இதுதான் உவப்பாய் எனக்குறும் நேரம்
வியனுல கிருந்துநான் விடைபெற் றேக
*மரண உலகின் மடிமேல் நடக்க
*துவோனி உலகைத் தொடர்ந்திடும் நேரம்;
என்னுயிர்த் தந்தை இனியழ மாட்டார்
தூயதாய் எனக்காய்த் துயர்ப்பட மாட்டாள்
சோதரி முகத்தில் துளிநீர் இராது
சகோதரன் விழிநீர் தான்சிந் தாது
அகல்நீர் புரண்டுநான் அழிந்து போனாலும்
மீன்நிறை கடலில் வீழ்ந்துவிட் டாலும் 290
ஆழத் தலைகளில் அமிழ்ந்துபோ னாலும்
கருநிறச் சேற்றில்நான் கடிதமிழ்ந் தாலும்."
ஒருநாள் நடந்தாள் இருநாள் நடந்தாள்
முன்றா வதுநாள் முற்றும் நடந்தாள்
கடைசியில் வந்தவள் கண்டாள் அலைகடல்
முதுபுதர்க் கடற்கரை முகம்கொடுத் திட்டாள்
இராவெனும் பொழுதும் எதிர்கொள வந்தது
மயங்கிருள் வந்துமுன் மறித்துநின் றதுவே.
அழுதனள் கன்னி அந்திப் பொழுதெலாம்
இருளாம் இரவெலாம் ஏங்கித் தவித்தனள் 300
நீர்நனைந் திட்ட நெடுங்கரைப் பாறையில்
வான்விரி பரந்த வளைகுடா எல்லையில்;
புலர்மறு காலைப் பொழுதும் விடிந்தது
கடல்முனை நோக்கி கயல்விழி செலுத்தி
வன்கடல் முனைமும் மாதரைக் கண்டனள்
மூவரும் கடலில் மூழ்கிக் குளித்தனர்
ஐனோ நான்காம் அரிவையா யிணைந்தாள்
ஆங்கொரு மெல்லியள் ஐந்தாவ தாகினள்.
அணிமேற் சட்டையை **அலரிமேற் போட்டாள்
**அரசில்பா வாடை யதனை யிட்டனள் 310
காலுறை கழற்றிக் கழித்தாள் வெறும்தரை
பாதணி எடுத்தீர்ம் பாறையில் வைத்தனள்
மணிகளை விலக்கி மணற்றரை சிந்தினள்
மிகுபரற் கற்றரை விரலணி வைத்தனள்.
பாறை தெரிந்தது படுகடல் நடுவண்
பொன்போல் மின்னிப் பொலிவாய் ஒளிர்ந்தது
நினைத்தனள் பாறையை நீந்தியே யடைய
நச்சினள் பாறைப் பக்கம் சாரவே.
பாவையும் முடிவிலே பாறையைச் சார்ந்து
பாங்குற விருந்தனள் பாறையுச் சியிலே 320
பொலிவுற மிளிரும் பொற்பா றையிலே
எண்ணிலா வர்ணம் இயைந்தொளிர் பாறையில்;
பாறையும் மெதுவதாய்ப் பைம்புனல் தாழ்ந்தது
அலைகளின் அடியிலே ஆழ்ந்துபோ னதுவால்
பாவையும் பாறையும் படுபுனல் அடியில்
ஐனோவும் பாறையின் அடிமிசைச் சென்றனள்.
அந்த இடம்தான் **கோழியின் அழிவிடம்
அங்குதான் பேதை அப்பெண் ணிறந்தாள்
மரணித்த நேர மங்கையின் கூற்றிது
ஆழத் தமிழ்கையில் அவள்புகல் மொழிகள்: 330
"குரைகடல் நானும் குளித்திடச் சென்றேன்
நீரின் பரப்பிலே நீந்தமுற் பட்டேன்
அங்கே நானோரு கோழியாய் வீழ்ந்தேன்
அங்கே பறவையாய் அகாலத் திறந்தேன்
என்னுடைத் தாதை என்அன் பப்பா
என்றுமே இந்த இகமுள வரையில்
பிடிக்கவே மாட்டார் பிறழ்மீ னாங்கே
படர்ந்து செறிந்தஅப் படர்புனற் பரப்பில்.
கரையிலே நானும் கழுவிடப் போனேன்
குரைகடல் இறங்கிக் குளித்திடச் சென்றேன் 340
அங்கே நானொரு கோழியாய் வீழ்ந்தேன்
அங்கே பறவையாய் அகாலத் திறந்தேன்
என்னுடை அன்னை என்அன் பம்மா
என்றுமே இந்த இகமுள வரையில்
குளிர்புனல் அள்ளிக் கொள்ளாள் கலயம்
மனையின் அயலுள வளைகுடா வதனில்.
கரையிலே நானும் கழுவிடப் போனேன்
குரைகடல் இறங்கிக் குளித்திடச் சென்றேன்
அங்கே நானொரு கோழியாய் வீழ்ந்தேன்
அங்கே பறவையாய் அகாலத் திறந்தேன் 350
என்னுடைச் சோதரன் அன்புச் சோதரன்
என்றுமே இந்த இகமுள வரையில்
அடுப்போர்ப் புரவிக் காங்குநீர் வழங்கார்
கடலின் அயல்சார் கரைகளிற் சென்றேன்.
கரையிலே நானும் கழுவிடப் போனேன்
குரைகடல் இறங்கிக் குளித்திடச் சென்றேன்
அங்கே நானொரு கோழியாய் வீழ்ந்தேன்
அங்கே பறவையாய் அகாலத் திறந்தேன்
என்னுடைச் சோதரி அன்புச் சோதரி
என்றுமே இந்த இகமுள வரையில் 360
நனிநீ ரள்ளி நயனம் கழுவாள்
மனையின் அருகுள வளைகுடா வதனில்.
கடல்நீ ராகக் காணும் அனைத்தும்
என்னுடல் ஓடும் இரத்தமே யாகும்
கடல்மீ னாகக் காணும் அனைத்தும்
என்னுடல் எடுத்த இறைச்சியே யாகும்
கரையிலே காணும் தாவர மனைத்தும்
வாய்ப்பிலாப் பேதையின் வளர்விலா வெலும்பே
பூமியில் தோன்றும் புல்லின மனைத்தும்
சிதைந்த பேதையின் சிகையதே யாகும்." 370
*** *** ***
மடமகள் முடிவிலே மரித்தனள் இவ்விதம்
எழிலுறும் கோழியொன் றிறந்ததிவ் விதமே.
இச்செய்தி யிப்போயா ரெடுத்தேக வல்லார்
வாயாலே யாரிந்த வார்த்தைபோய்ச் சொல்வார்
பொற்பாவை சீரான புகழ்பெற்ற வீட்டில்
மடவாளின் கவினான வளர்தோட்டக் காட்டில்?
கரடிவந் திச்செய்தி கடிதேற்றுச் செல்லும்
வாய்கொண்டு இவ்வார்த்தை வடிவாகச் சொல்லும்
ஆனாலும் செய்திசொலக் கரடிவர வில்லை
அதுதொலைந் தாயிற்றாம் ஆன்கூட்ட மொன்றில். 380
இச்செய்தி யிப்போயா ரெடுத்தேக வல்லார்
வாயாலே யாரிந்த வார்த்தைபோய்ச் சொல்வார்
பொற்பாவை சீரான புகழ்பெற்ற வீட்டில்
மடவாளின் கவினான வளர்தோட்டக் காட்டில்?
ஓநாய்வந் திச்செய்தி உடன்கொண்டு செல்லும்
வாய்கொண்டு இவ்வார்த்தை வடிவாகச் சொல்லும்
ஆனாலும் செய்திசொல ஓநாய்வர வில்லை
அதுதொலைந் தாயிற்றாம் மறிக்கூட்ட மொன்றில்.
இச்செய்தி யிப்போயா ரெடுத்தேக வல்லார்
வாயாலே யாரிந்த வார்த்தைபோய்ச் சொல்வார் 390
பொற்பாவை சீரான புகழ்பெற்ற வீட்டில்
மடவாளின் கவினான வளர்தோட்டக் காட்டில்?
நரியொன்று இச்செய்தி நனிகொண்டு செல்லும்
வாய்கொண்டு இவ்வார்த்தை வடிவாகச் சொல்லும்
ஆனாலும் செய்திசொல நரிவந்த தில்லை
அதுதொலைந் தாயிற்றாம் வாத்துக்கள் நடுவில்.
இச்செய்தி யிப்போயா ரெடுத்தேக வல்லார்
வாயாலே யாரிந்த வார்த்தைபோய்ச் சொல்வார்
பொற்பாவை சீரான புகழ்பெற்ற வீட்டில்
மடவாளின் கவினான வளர்தோட்டக் காட்டில்? 400
முயலொன்று பெறும்செய்தி மொழிகொண்டு செல்லும்
வாய்கொண்டு இவ்வார்த்தை வடிவாகச் சொல்லும்
செய்தியது முயல்கொண்டு சென்றங்கு சொல்லும்:
"மனிதரிடை இச்செய்தி மறைந்திட மாட்டாதே. "
முயல்வந்து செய்திகொடு முனைந்தோடிச் சென்று
**'முழுநீளச் செவி' யாங்கு கதைகொண்டு போந்து
வளைவான கால்கொண்டு வலுவிரைவி லோடி
**'சிலுவைவாய்' யதுவாங்கு சென்றுகடி தடையும்
பொற்பாவை சீரான புகழ்பெற்ற வீட்டில்
மடவாளின் கவினான வளர்தோட்டக் காட்டில். 410
வந்தமுயல் *சவுனாவின் மண்டபத்து ளோடி
மண்டபத்து வளைவினிலே பருங்கியது வாடி.
குளியலறை மண்டபத்தில் கோதையர்கள் கூடி
தூரிகையும் கையுமாய் வரவேற்றார் நாடி:
"சமையலாய் மாறவா சடிதியிலே வந்தாய்
பூத்தபெரு விழிகளினைப் பொரித்திடவா வந்தாய்
இல்லத்து எசமானர் இரவுணவுக் காக
இல்லையேல் எசமாட்டி நல்லுணவுக் காக
அல்லையேல் அருமைமகள் சிற்றுணவுக் காக
அதுவுமிலை யேல்மகனின் பகலுணவுக் காக?" 420
பின்னர் மெதுவாகப் பேசிற்று முயலும்
கூர்**'வட்ட விழி' விரிவாய்க் கூறிற்றே யாங்கு:
"பெரும்பாலும் இவண்வந்து பிசாசுதான் கூடும்
பெய்யுகல மதிற்சேர்ந்து கறிகளாய் மாறும்;
இப்போது நானிந்தச் செய்திகொடு வந்தேன்
என்வாயால் நானிந்த மொழியியம்பு கின்றேன்.
அழிந்ததுவே இங்கோயோர் அழகினிலும் அழகு
ஆ, அழிந்து போனதொரு **தகரமார் பணியே
வீழ்ந்ததுவே வெள்ளியினால் ஆனதொரு பட்டம்
**வெறிதாழ்ந்து போனதொரு செப்பினரும் பட்டி 430
அலைகடலின் ஆழத்தில் அதுதாழ்ந்து போச்சே
அலைதிரையின் அடிநீரில் அதுமாண்டு போச்சே
வெண்மீனின் நல்லதொரு சோதரியே யாக
மீனினத்தின் நடுவணொரு சோதரனே யாக."
*** *** ***
அன்னை அறிந்து அல்லலுற் றழுதாள்
புனற்றடம் போலப் புரண்டது விழிநீர்
இதன்பின் அன்னை இயம்பத் தொடங்கினள்
திரமிகு மொழிகளில் செப்பிட லானாள்:
"தவப்பே றில்லாத் தாயீர் வேண்டாம்
என்றும் ஆயுளில் இச்செயல் வேண்டாம் 440
தங்கள் மகளிரைத் தாலாட் டாதீர்
அவரவர் பிள்ளையை ஆராட் டாதீர்
மனம்மா றானால் வதுவைசெய் யாதீர்
என்போல் அதிட்டம் இல்லா அன்னையாய்,
பெண்களைச் சீராய்ப் பெரிதுதா லாட்டி
சிறியகோ ழிகளை விருப்புற வளர்த்தேன்."
அன்னை அழுதாள் கண்ணீர் உருண்டது
வருபுன லாகப் பெருகி வழிந்தது
நீல நிறத்து நெடுவிழி யிருந்து
காணாப் **பாக்கியக் கன்னங் களின்மேல். 450
ஒருதுளி உருள உருண்டதின் னொன்று
வருபுனலாகப் பெருகி வழிந்தது
காணாப் பாக்கியக் கன்னத் தின்வழி
மிதந்து பரந்த வியன்மார் பகத்தே.
ஒருதுளி உருள உருண்டதின் னொன்று
வருபுனலாகப் பெருகி வழிந்தது
மிதந்து பரந்த வியன்மார் பூடே
மேதகு நெசவார் மேலுடை மீதே.
ஒருதுளி உருள உருண்டதின் னொன்று
வருபுனலாகப் பெருகி வழிந்தது 460
மேதகு நெசவார் மேலுடை வழியாய்
சிவப்பினில் இயைந்த செழுங்கா லுறைமேல்.
ஒருதுளி உருள உருண்டதின் னொன்று
வருபுனலாகப் பெருகி வழிந்தது
சிவப்பினில் இயைந்த செழுங்கா லுறைவழி
பொன்னிறம் மின்னும் புதுக்கா லுறைமேல்.
ஒருதுளி உருள உருண்டதின் னொன்று
வருபுனலாகப் பெருகி வழிந்தது
பொன்னிறம் மின்னும் புதுக்கா லுறைவழி
படிமிசை நிலத்தில் பாதத் தின்கீழ் 470
தரையில்ஓ டும்நீர் தரைக்காய்ச் சேர்ந்தது
நீரா யோடுநீர் நீர்க்காய்ச் சேர்ந்தது.
ஓடி நிலத்தில் ஒன்றாய்ச் சேர்ந்தநீர்
**ஓடு மாறாக உருக்கொளத் தொடங்கி
நதிகள் முன்றாய் நன்றாய் வளர்ந்தது
அவள்அழும் செயலால் ஆங்குகும் விழிநீர்
தலையினி லிருந்து தவழ்ந்திடு கண்ணீர்
கண்மட லிருந்து கழிந்திடு கண்ணீர்.
தோன்றிற் றப்பா ஒவ்வொரு நதியிலும்
முன்று பயங்கர முழுநீர் வீழ்ச்சிகள், 480
ஒவ்வொரு வீழ்ச்சியில் உயரும் நுரையிலும்
முன்று பாறைகள் முறையாய் எழுந்தன,
ஒவ்வொரு பாறை யுளமுனை தோறும்
பைம்பொன் இயைந்த பருவதம் வந்தது,
ஒவ்வொரு பருவத உச்சியின் மேலும்
முன்று மிலாறு மரங்கள் முளைத்தன,
ஒவ்வொரு மிலாறு மரமுடி யினிலும்
அம்பொன் குயில்கள் அமர்ந்தன முன்று.
குயில்கள் இனிதே கூவத் தொடங்கின:
ஒருகுயில் இசைத்தது :'காதல்,காதல்!' 490
மறுகுயில் விளித்தது :'அன்னே,அன்பே!'
முன்றாம் குயிற்குரல் :'இன்பம்,இன்பம்!'
'காரல், காத' லென் றிசைத்த கருங்குயில்
முன்றுமா தங்கள் முழுதும் இசைத்தது
காதலை யறியாக் காரிகைக் காக
ஆழியில் உறங்கும் அரிவைக் காக.
'அன்பே, அன்பே'யென் றழைத்த குயிலது
ஆறுமா தங்கள் ஆங்கிருந் திசைத்தது
அமைதியை இழந்த அன்பருக் காக
துன்பத்து முழ்கிய துணைவருக் காக. 500
'இன்பம், இன்ப'மென் றிசைத்த குயிலது
வாழ்நாள் எல்லாம் மணிக்குரல் தந்தது
இன்பம் இழந்த இணையிலாத் தாய்க்காய்
விழிநீர் நாளெலாம் விடுமன் னைக்காய்.
இனிவரும் சொற்களில் இயம்பினள் அன்னை
கிளர்குயிற் கூவல் கேட்டபின் மொழிந்தாள் :
"அரும்பே றிழந்த அன்னையெக் காலும்
நெடுநாள் கூவல் நின்றுகேட் டிடற்க
காதிலே குயிலின் கானம் வீழ்கையில்
என்னுளம் அடித்து எழுந்து மாய்கிறது 510
கண்ணீர் விழிகளில் கழிந்துபாய் கிறது
கன்னம் வழியாய்ப் புனல்கழி கிறது
**பயற்றம் விதையிலும் பருத்தநீர்த் துளிகள்
**அவரையைக் காட்டிலும் கொழுத்த நீர்த்துளிகள்;
குறுகுமென் வாழ்நாள் கொடுமுழத் தளவு
குன்றுமென் உயரம் குறுஞ்சாண் அளவு
மேனி முழுவதும் மிகுபல மிழந்தேன்
வசந்தக் குயிலிசை வந்துவீழ் கையிலே. "
பாடல் 5 - கடற்கன்னி
அடிகள் 1-72 : வைனாமொயினன் மீன் பிடிக்கச் சென்று யொவுகாஹைனனின் சகோதரி ஐனோவை மீன் வடிவில் பிடித்துத் தோணியில் ஏற்றுகிறான்.
அடிகள் 73-133 : அவன் அந்த மீனை வெட்டப்போகும் சமயத்தில், அவள் நழுவி நீரில் குதித்துத் தான் யார் என்று சொல்கிறாள்.
அடிகள் 134-163 : வைனாமொயினன் அந்த மீனை மீண்டும் பிடிக்க முயன்று தோல்வியடைகிறான்.
அடிகள் 164-241 : மனமுடைந்து வீடு திரும்பிய அவனை, வடநாட்டு மங்கையை நேசிக்கும்படி அவனுடைய காலம் சென்ற தாய் ஆலோசனை கூறுகிறாள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
செய்தி எங்கணும் செறிந்து சென்றது
பாரெலாம் புதினம் பரவிச் சென்றது
நீருக் கடியில் நித்திரை செய்த
அழகிய நங்கை அழிந்த செய்தியே.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
பரவும் செய்தியாற் பெரிதும் வருந்தினன்;
மாலையில் அழுதான் காலையில் அழுதான்
இரவுகள் எல்லாம் இரங்கி அழுதான்
வியனெழில் நங்கை வீழ்ந்தது கேட்டு
தூயவள் நீரில் துயில்வதைக் கேட்டு 10
சேற்றுக் கடலுள் சென்றதை யறிந்து
அலையின் அடியில் அமிழ்ந்ததை அறிந்து.
சுடுநெடு மூச்சும் துயருமாய்ச் சென்றான்
இதயம் நிறைய இன்னலைச் சுமந்து
நீலக் கடலின் நீண்ட கரைகளில்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
**"கனவின் சக்திநின் கனவினைப் புகல்க
காசினி நிறைந்தநின் காட்சியைப் புகல்க
*அஹ்தோ வாழும் அகமெங் குளது
*வெல்லமோ மகளிர்தம் நல்லுலா வெவ்விடம்?" 20
கனவின் சக்திதன் கனவினைச் சொன்னது
காசினி நிறைந்த காட்சியைச் சொன்னது:
"அஹ்தோ வாழும் அகமாங் குளது
வெல்லமோ மகளிர்தம் நல்லுலா வவ்விடம்
புகார்படி கடலதன் புணர்முனை நுனியில்
செறிபனிப் புகாருள தீவதன் கரையில்
ஆழத் தடியினில் அலைகளின் கீழே
மிகுகருஞ் சகதி மேடையின் மேலே.
அதுவே அஹ்தோ அமைவசிப் பிடமாம்
வெல்லமோ மகளிர் நல்லுலா விடமாம் 30
அகலம் குறைந்ததோர் ஒடுங்கிய மாடம்
அளவில் சிறியதோர் குறுகிய கூடம்
பளிங்குக் கற்களின் படர்சுவர்ப் பக்கம்
கனத்துத் தடித்தகற் கட்டிகள் நடுவண்."
முதிய வைனா மொயினனப் போது
**தோணித் துறைக்குத் துரிதமாய்ச் சென்று
மீன்பிடிக் கயிற்றை விழியுறல் செய்து
மீன்பிடி முளையை மீளவும் நோக்கி
பருமுளை ஒன்றைப் பையிலே போட்டு
கரும்பொன் முளையைச் கைச்சாக் கிட்டான். 40
படகின் துடுப்பைப் பதமாய்ச் செலுத்தி
திண்ணமா யடைந்தான் தீவின் கரையை
புகார்படி கடலதன் புணர்முனை நுனியை
செறிபனிப் புகாருள தீவதன் கரையை.
மீன்பிடி முளையுடன் விழித்தாங் கிருந்தனன்
மீன்பிடி கயிற்றுடன் விழித்தாங் கிருந்தனன்
அசைத்தனன் கைவலை அதனைமுன் பின்னாய்
தூண்டில் இரையினைத் தூரத்து வீசினன்
அசைத்து முன்பின் அதனை நகர்த்தினன்;
செப்பின் பிடிகோல் செறிநடுக் குற்றது 50
வெண்பொற் கயிற்றினில் கிண்கிணி யோசை
பொன்னணிக் கோலினில் இன்னிசை யெழுந்தது.
பலநாள் கழிந்து ஒருநாள் நடந்தது
பலவிடி வகன்று ஒருவிடி வியன்றது
மீன்பிடி முள்ளை மீனொன் றெடுத்தது
தொங்கிய தம்மீன் தொடுமுள் முனையில்;
தோணியின் உள்ளே மீனை இழுத்தனன்
தோணித் தட்டிலே தூக்கிப் போட்டனன்.
தீரமாய்ப் பார்த்தனன் திருப்பிப் புரட்டினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 60
"உயர்மீ னினத்தில் ஒருவகை மீனிது
இதுபோல் மீனை என்றுமே பார்த்திலேன்!
**வெண்மீ னதைவிட மென்மையில் மிகுதி
**நன்னீர் மீனிலும் நன்கமை வெண்மை
**கோலாச்சி மீனிலும் குறைந்தது கருமை
மிகுசினை மீனெனின் மென்மையாய்க் காணேன்
ஆணென நோக்கிலும் அவ்வியை பில்லை
இதன்தலை மொட்டை இளம்பெண் ணல்ல
**அப்புவாழ் மகளெனின் அரைப்பட்டி எங்கோ!
இல்லப் பறவையா இல்லையே காதுகள்! 70
**ஆழிமீன் போல அதிகஒற் றுமைகள்
அலைகளின் அடியிலே உலாவரும் **மீனிது."
வைனா மொயினனின் வாள்இடுப் பினிலே
வெள்ளியின் நிறத்து மிகுகூர் மையது
பக்கத் திருந்து கத்தியை இழுத்தான்
விரியுறை யிருந்து வெண்முனைக் கத்தியை
கொழுமீன் கிழித்துக் கூறுகள் போட
தொடுமீன் வெட்டித் துண்டுதுண் டாக்க
உதய காலை உணவுடன் சேர்த்து
காலை யுணவாய்க் களிப்புடன் அமைக்க 80
நண்பகல் உணவாய் நன்றாய்ச் சமைக்க
இரவின் உணவாய் இனிதே யாக்க.
விரும்பினன் வஞ்சிர மீனினை வெட்ட
கத்தியால் கிழிக்கக் கருதி யிருந்தனன்;
விரைந்தது வஞ்சிர மீனும் கடலில்
எழில்மிகு மீனும் எகிறிப் பாய்ந்தது
செந்நிறத் தோணியின் திகழ்தட் டிருந்து
வைனா மொயினனின் வன்பட கிருந்து.
அப்போ ததுதன் அருஞ்சிர முயர்த்தி
துலங்கும் வலப்புறத் தோளையும் உயர்த்தி 90
ஐந்தாவ தாய்வரும் அலையதன் மேலே
ஆறாவ தாயுயர் அலையதன் மேலே
வியன்வலக் கரத்தை வெளியிலே காட்டி
இடதுகா லதையும் எடுத்துயர்த் தியது
ஏழாவ தாயுயர் எழிற்றிரை யதன்மேல்
உயர்ந்துபின் வந்த ஒன்பதாம் அலையில்.
அவ்வா றிருந்து இவ்வித மொழிகளில்
உரைத்தே அதுதான் உரைசெய லானது:
"ஓ,நீ முதிய வைனா மொயின!
இங்குநான் வந்தது இதற்கா யல்ல 100
மிளிர்வஞ் சிரமீன் வெட்டுதற் கல்ல
கொழுமீன் போலெனைக் கூறிடற் கல்ல
உனது காலை உணவுக் கல்ல
உதயகா லத்து உணவுக் கல்ல
பருவஞ் சிரமீன் பகலுண வல்ல
அரும்இர வுணவாய் ஆவதற் கல்ல."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"அவ்வா றாயின் எதற்காய் வந்தாய்?"
"இதற்கா யேதான் இங்குனை யடைந்தேன்
நேர்கை யணைப்பில் நின்கோ ழியதாய் 110
என்றுமுன் அருகில் இருப்பதற் காக
இல்லத் துணையென முழங்கா லிருக்க
படுக்கையை விரித்துப் பக்குவம் செய்ய
தலையணை யெடுத்துத் தனியாய் வைக்க
தோன்றுநின் சிறுகுடில் சுத்தம தாக்க
நிலத்தைப் பெருக்கி நலத்தைப் பேண
வீட்டுள் ளடுப்பை மூட்டிவைத் திருக்க
விளக்கினை ஏற்றி விளங்கவைத் திருக்க
தொடுபரும் ரொட்டிகள் சுட்டுவைத் திருக்க
அடர்தே னடைகளை ஆக்கிவைத் திருக்க 120
**பானக் கலயம் படிசுமந் தேக
உனக்காம் உணவினை ஒழுங்குசெய் தமைக்க.
வருநான் கடல்வாழ் வஞ்சிர மல்ல
விரிதிரை யடிவாழ் மீனின மல்ல
நானோர் இளம்பெண் நல்லிள அணங்கு
இளமை யொவுகா ஹைனன் சோதரி
வாழ்நாள் எலாம்நீ தேடிய மங்கை
வாழ்க்கை முழுதும்(நீ) மனங்கொளும் வனிதை.
ஏறும் வயோதிபத் திழிந்த மனிதனே,
மடத்தனம் மிகுந்த வைனா மொயினனே, 130
ஆதரிப் பதற்கு அறியாய் நீயே
வெல்ல மோவின் வியன்னீர் நங்கையை
அஹ்தோ பெற்ற அழகிய பிள்ளையை."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்
தாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன்:
"ஓ,நீ யொவுகா ஹைனனின் சோதரி
வருவாய் மீண்டும் மற்றொரு முறையே!"
வந்திலள் மீண்டும் மங்கை ஒருமுறை
வாழ்நாள் முழுக்க வரவே யில்லை
இப்போது திரும்பி இளங்கொடி சென்றாள் 140
மிகுபுனற் பரப்பில் விலகி மறைந்தாள்
படர்ஒளி விளங்கும் பாறைகள் உள்ளே
ஈரல் நிறத்துப் பாறைப் பிளவிடை.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
எண்ணினன் கருத்தில் இவற்றையப் போது
என்ன செய்வது எங்ஙனம் வாழ்வது;
பட்டுநூல் கொண்டொரு பருவலை பின்னினன்
நீரதன் குறுக்கிலும் நேரிலும் வீசினன்
வீசினன் **நீரிணை மீண்டும் வீசினன்
அமைதிநீர்ப் பரப்பிடை அசைத்தசைத் திழுத்தனன் 150
பருவஞ் சிரம்வாழ் பாறைகள் நடுவில்
வைனோ நிலத்திடை வயங்குநீர்ப் பரப்பில்
கலேவலாப் பகுதியின் கரைபுனல் முனையில்
ஆங்கிருண் டியைந்திடும் ஆழத்து நீரில்
விரிந்து படர்ந்து செறிந்தநீர திலே
யொவுகோ நாட்டின் உறுநதி யனைத்திலும்
லாப்பு லாந்தின் வளைகுடாக் கரைகளில்.
உறுபல் லினமீன் பெரிதும் பிடித்தனன்
அகல்புனல் நிறைந்த அனைத்தையும் பிடித்தனன்
தேடுமீன் மட்டும்கை கூடவே யில்லை 160
இதயத் திருந்தமீன் எதிர்ப்பட வில்லை
வெல்ல மோவின் விரிபுனல் மங்கை
அஹ்தோ பெற்ற அழகிய பிள்ளை.
முதிய வைனா மொயினன் அதன்பின்
தாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன்
தொப்பியைச் சற்றுத் தொடுபுறம் சாய்த்து
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"ஓகோ, நானொரு உயர்பைத் தியந்தான்
ஆண்மைக் கேற்ற அறிவற் றவன்நான்
முன்னொரு நாள்மனம் என்னிட மிருந்தது 170
அந்த மனமெலாம் சிந்தனா சக்தியே
உயர்ந்தசிந் தனைகள் நிறைந்து
கிடந்தன
அதுவெலாம் முன்னர் அன்றொரு நாளில்;
எனினும் இன்றைக் கிந்த நாட்களில்
இன்னல் நிறைந்த இன்றைய நாட்களில்
வயதும் வலிமையும் வாடியநாட் களிலே
சிந்தனை யனைத்துமே சீரழிந் தொழிந்தன
உள்ளுணர் வதன்தரம் உடைந்துகாண் கிறது
எல்லாம் எதிர்மா றியங்குகின் றனவே.
பல்லாண் டவட்காய்ப் பார்த்துநான் இருந்தேன் 180
வாழ்க்கையிற் பாதிநாள் வளர்விருப் புற்றேன்
வெல்ல மோவின் நற்புனல் மங்கை
கடைசியிற் புனல்தரு கவினுறு நங்கை
என்றுமே தோழியாய் எனக்கினி யவளாய்
வாழ்நாள் முழுவதும் மனையாள் ஆக
போட்டஎன் தூண்டிலைப் பார்த்துவந் தெடுத்தாள்
தோணியில் எனக்காய்த் துள்ளிவந் தமர்ந்தாள்;
அவளைவைத் திருக்கும் அறம்தெரிந் திலன்யான்
எடுத்தில் லடைந்திட இயலவே யில்லை
ஆனதால் மீண்டும் அவள்நீ ரடைந்தாள் 190
அலைகளின் ஆழத் தடிமிசை சென்றாள்."
*** *** ***
சிறுதூரம் அப்படியே சென்றான் அவன்பயணம்
துயரநெடு மூச்சோடும் சோர்ந்து நடந்துவந்தான்
அதன்பின் அவன்வீடு அதுநோக்கி வந்திட்டான்
வரும்போது இவ்வாறு வாஞ்சையொடு கூறிவந்தான்:
"குயிலினங்கள் முன்நாளில் கூடிவந்து கூவுமிங்கு
அந்நாள் அவைஎனது அகமகிழ்ச்சிக் காய்க்கூவும்
முன்னர் அவைகூவும் முழுக்காலை மாலையிலும்
நண்பகல் வேளையிலும் நன்கொருகால் கூவிடுமே,
எதற்காய் இனியகுரல் இன்றுவளம் மாறியது? 200
எழிலார் குயிலின்று எவ்வண்ணம் மாறியது?
இடர்வந் தழித்ததுவே இனிமைதரும் நற்குரலை
துயர்வந்து தீய்த்ததுவே தோய்ந்தநறை இன்குரலை
ஆனதினால் கூவுவதே இல்லையவை இப்போது
கதிரவன் சாய்பொழுதும் கண்டுஅவை கூவவில்லை
மாலை யிலேவந்து மகிழ்விப்ப தில்லையென்னை
காலை யிலேவந்து களிசேர்ப்ப தில்லையவை.
இதன்மேலே சிந்திக்க எனக்கெதுவு மில்லையந்தோ
எவ்வண் இருப்பதுவோ எவ்விதம்யான் வாழ்வதுவோ
வாழ்க்கைதான் இவ்வுலகில் வாகாய் நடப்பதெல்லாம் 210
இந்நாட்டின் நற்பயணம் இயல்பாய் நடக்கையிலே;
இப்போ துயிரோடு என்தாய் இருப்பாளேல்
என்னைப் பயந்தவள்தான் தன்னுணர்வோ டிங்கிருந்தால்
இயலும் அவளாலே எடுத்துண்மை தான்சொல்ல
எவ்வாறு தாங்கி இவ்வுலகில் வாழ்வதென்று
இன்னலுற்றுப் போயுடைந்த இதயம் தனையின்று
துயரமுற்றுத் தீய்ந்து தொலைந்த அதைஎன்று
இடுக்கண் மிகவுடைய இத்தகைய நாட்களிலே
இடும்பைவந் துற்ற இத்தகைய போழ்தினிலே."
அன்னையிதைக் கல்லறைக்குள் ஆங்கிருந்து கேட்டனளே 220
மென்திரையின் கீழிருந்து விடையதனைத் தந்தாளே:
"உன்னன்னை இன்னும் உயிரோடே தானுள்ளாள்
உன்னையே ஈன்றெடுத்தாள் உள்ளாள் விழிப்போடு
இதுதான் அவள்உனக்கு எடுத்துகந்து சொல்லுவது
எங்ஙனம்தான் தாங்குவது இந்தத் துயரையென்று
இன்னலுற்றுப் போயுடைந்த இதயம் தனையின்று
துயரமுற்றுத் தீய்ந்து தொலைந்த அதைஎன்று
இடுக்கண் மிகவுடைய இத்தகைய நாட்களிலே
இடும்பைவந் துற்ற இத்தகைய போழ்தினிலே;
வடபால் மகளிர் வாழிடத்து நீசெல்வாய் 230
அங்கே மகளிர் அழகில் மிகச்சிறந்தார்
அங்கே இருமடங்கு அழகுடைய நங்கையராம்
உயிர்ப்பு ஐந்தாறு உயர்மடங்கு உள்ளவராம்
யொவுகோவின் சோம்பல் நாரியர்போல் இல்லையவர்
*லாப்லாந்தின் பாங்கறியாப் பிள்ளைகளே அல்லர்அவர்.
என்மகனே அங்கே எடுப்பாய் மனையாளை
வடபால் எழில்சிறந்த மங்கையர்கள் தம்மிடையே
அழகு நயனம் அமைந்தவளை நீயடைவாய்
பார்வைக் கழகுப் பேரழகி யோர்பெண்ணை
கடுகதியில் செல்லும் கால்கள் உடையாளை 240
சுறுசுறுப்பு என்றும் தொடுசெயலில் சேர்ந்தாளை."
பாடல் 6 - சகோதரனின் பழிவாங்கல்
அடிகள் 1-78 : வைனாமொயினனில் வெறுப்புற்ற யொவுகாஹைனன் வைனாமொயினனின் வடநாட்டுப் பயணத்தின்போது வழியில் காத்திருக்கிறான்.
அடிகள் 79-182 : வைனாமொயினன் வரும்பொழுது யொவுகாஹைனன் அம்பு எய்கிறான்; ஆனால் குதிரை மட்டுமே இறக்கிறது.
அடிகள் 183-234 : வைனாமொயினன் நீரில் விழுந்து கடலுக்குள் அடித்துச் செல்லப்படுகிறான். வைனாமொயினனை எய்ததற்காக யொவுகாஹைனன் மகிழ்ச்சியடைகிறான்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
ஒருபய ணம்செய உடன்முடி வெடுத்தான்
கிளர்குளிர் நிறைந்த கிராமம் அதற்கு
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே.
வழுது **நிறப்பொலிப் புரவியை எடுத்தான்
பயற்றம் **தண்டுப் பதநிறக் குதிரையை
வாயிலே பொற்கடி வாளமும் மாட்டி
தலையிலே வெள்ளியின் தலையணி சூட்டி
வியன்முது கேறி மெதுவா யமர்ந்து
அகற்றிப் பரப்பி அவன்கால் போட்டு 10
ஆரம்ப மானது அரியதோர் பயணம்
மெதுவாய்ப் பயணம் மிகநீண் டதுவாம்
வழுது நிறத்து வான்பொலிப் பரியில்
பயற்றம் தண்டுப் பதநிறக் குதிரை.
படர்ந்தான் வைனோ பரந்த நிலத்திடை
கலேவலாப் பகுதிக் கடும்புதர்ப் பாதை
நிமிர்பரி விரைந்தது நீண்டது பயணம்
வீடுபின் தங்க மிகுவழி குறுக.
கடல்கள் யாவையும் கடந்தே சென்று
வெட்ட வெளிகளில் விரைந்திட லானான் 20
எழுபரிக் குளம்பில் ஈரம் படாமல்
அதன்கால் நீரில் அமிழ்ந்துபோ காமல்.
இளைஞன் யொவுகா ஹைனன் என்பவன்
லாப்பு லாந்தினன் இளைத்த இளைஞன்
நெஞ்சிலே வன்மம் நெடுநாள் வைத்து
அவனுளம் நிறைய அழுக்கா றுற்றான்
முதிய வைனா மொயினன் மீது
படர்புகழ் நிலைபெறும் பாடகன் மீது.
மிகுகனக் குறுக்கு வில்லொன் றியற்றி
அதற்கென அமைத்தான் அழகுறும் அம்பு ; 30
உரம்பெறும் இரும்பில் உறுசரம் செய்தான்
செம்பிலாம் தகட்டினைச் சேர்த்துமேற் பதித்தான்
பொன்னால் அதையலங் காரமே புனைந்தான்
வெள்ளியை உருக்கி வேலைகள் புரிந்தான்.
தேவை நாணொன்று தேடல்எங் ஙனமோ
சிலைக்குநாண் எங்குதான் சென்றுபெற் றிடலாம்?
**அரக்கராம் விலங்கதன் நரம்புகள் எடுத்தான்
**பிசாசமாம் செடியதன் நாரிலே தொடுத்தான்.
வில்லின் வேலை விரைவாய் முடிந்தது
குறுக்குவில் நிறைவைக் கொண்டிட லானது 40
பார்வைக்கு வில்லும் பகட்டாய் இருந்தது
செலவுக்கு ஏற்பச் செம்மையாய்த் தெரிந்தது.
வில்லின் முதுகில் விறற்பரி** நின்றது
பரியின் குட்டியோ பாய்ந்தது அடியில்
சிலையின் வளைவிலே சேயிழை உறங்கினள்
பதுங்கியே முதுகில் படுத்திருந் ததுமுயல்.
கணைகளைக் கொஞ்சம் கவனமாய்ச் செய்தான்
அம்புகள் அனைத்திலும் அமைந்தமுச் சிறகுகள்
அடிப்புறம் சிந்துர மரத்தினால் ஆனது
முனைகள் **மரப்பிசி னாலே முடிந்தன 50
வாளிகள் இங்ஙனம் வடிவாய் முடிந்ததும்
கட்டினான் இறகுகள் கணைகளின் மீது
**தூக்கணங் குருவியின் தோகை கொஞ்சமாம்
**சிட்டுக் குருவியின் சிறகுகள் கொஞ்சமாம்.
வாளிகள் அனைத்தையும் வயிர மாக்கினான்
கணைகள் யாவையும் கடுங்கூ ராக்கினான்
ஊரும் பிராணியின் காரிருள் நஞ்சுடன்
உரகத்து நச்சு உதிரம் பூசினன்.
மொட்டையம் புகளை முழுத்தயா ராக்கினன்
வளைத்து இழுக்கவில் வலுதயா ரானது 60
வைனா மொயினனின் வழிபார்த் திருந்தான்
**அமைதிநீர் மனிதனை அங்கெதிர் பார்த்தான்
மாலையில் பார்த்தான் காலையில் பார்த்தான்
பார்த்தான் நண்பகல் நேரத் தொருமுறை.
பார்த்தான் வைனா மொயினனைப் பலகால்
பலகால் களைப்பே இன்றிப் பார்த்தான்
பலகணி யிருந்தும் பலதிசை பார்த்தான்
சின்னாள் இருந்தான் சிறுகுடிற் பின்புறம்
தெருவழி வந்தே செவிகொடு கேட்டான்
வயற்புறம் வந்து வறிதுகாத் திருந்தான் 70
முதுகினில் அம்புறைத் தூணிமொய்த் திருந்தது
நல்வில் தயாராய் நற்புயத் திருந்தது.
இன்னமும் இன்னமும் எதிர்பார்த் திருந்தான்
பக்கத்து வீட்டின் பக்கலில் நின்றான்
நின்றனன் மேட்டின் நிமிர்முடி யேறி
நின்றான் வளைவிலே நிலத்து முனையினில்
நின்றான் நுரைத்தநீர் வீழ்ச்சியின் அருகில்
நின்றான் புனித நதியின் கீழ்ப்புறம்.
பலநாள் கழிந்து ஒருநாள் நடந்தது
பலவிடி வகன்று ஒருவிடி வியன்றது 80
வடமேற் கவன்விழி வைத்தவே ளையிலே
செங்கதி ரோன்கீழ் சென்னியைத் திருப்பினன்
கரும்புள்ளி யொன்று கடலில் தெரிந்தது
நிமிர்நுரை திரைமேல் நீலமாய்த் தெரிந்தது;
"கிழக்கே தெரிவது கிளர்கார்க் கூட்டமா
வடகீழ்க் கரையிலே வருகதிர் உதயமா?"
கிழக்கே தெரிவது கிளர்கார் அல்லவே
வடகீழ்க் கரையிலே வருகதிர் அல்லவே
வந்தவன் முதிய வைனா மொயினன்
என்றுமே நிலைத்த இசைப்பா டகனவன் 90
விரிவட பால்நிலம் விரைந்து செல்பவன்
காரிருள் புவிக்குக் கடுகிச் செல்பவன்
**வழுது நிறப்பொலிப் புறவியிற் சென்றான்
பயற்றம் தண்டுப் பதநிறக் குதிரையில்.
பின்னர் இளைஞன் யொவுகா ஹைனன்
லாப்பு லாந்தின் இளைத்த இளைஞன்
செய்தனன் தயார்நிலை தீயுமிழ் வில்லினை
தேர்ந்து எடுத்தனன் சிறந்த கணையினை
வைனா மொயினனின் வன்தலை நோக்கி
அமைதிநீர் மனிதனை அழிப்பதற் காக. 100
விரைந்து வந்து வினவினள் அன்னை
விரைந்தாள் பெற்றவள் விசாரணை செய்தாள்:
"குறுக்கு வில்லதன் இலக்கு எவர்க்கு
இரும்பு வில்லினை எடுத்தது எதற்கு?"
அப்பொழு திளைஞன் யொவுகா ஹைனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"குறுக்கு வில்லதன் இலக்கு அவனே
இரும்பு வில்லினை எடுத்ததும் இதற்கே
வைனா மொயினன் அவன்வன் தலைக்கு
அமைதிநீர் மனிதனை அழிப்பதற் காக; 110
முதிய வைனா மொயினனை எய்வேன்
என்றுமே நிலைத்த இசைப்பா டகனை
இதயத் தூடாய் ஈரலின் ஊடாய்
தோள்தசை ஊடாய்த் துளைப்பதற் காக".
தாயார் எய்வதைத் தடுத்து நின்றனள்
இங்ஙனம் தடுத்தவள் இயம்பினள் மீண்டும்:
"வைனா மொயினனை வாளிகொண் டெய்யேல்
கலேவலா மனிதனைக் கனன்றுகொல் லாதே
வைனோ என்பவன் மாபெரும் உறவினன்
மைத்துனன் சோதரி மைந்தனே **யாவான். 120
வைனா மொயினனை வாளிகொண் டெய்தால்
கலேவலா மனிதனைக் கணையால் வீழ்த்தினால்
இன்பம் உலகத் திருந்தே ஒழியும்
பாடல்கள் அழியும் பாரினில் இருந்தே
இன்பமே உலகின் இணையற் றதுவாம்
பாடல்கள் பார்மிசைப் பயனுள தாகும்
**இறந்தோர் உலகில் இருப்பதைப் பார்க்கிலும்
**செத்தோர் உலகினில் செறிந்ததைப் பார்க்கிலும்."
அப்போ திளைஞன் யொவுகா ஹைனன்
சிறிது நேரம் சிந்தனை செய்தான் 130
கொஞ்ச நேரம் நின்றுயோ சித்தான்
செங்கரம் எய்தலைச் செய்யச் சொன்னது
ஒருகை எடுத்தது மறுகை தடுத்தது
உந்துதல் செய்தன உறுவிரல் நரம்புகள்.
முடிவினில் இவ்விதம் மொழியத் தொடங்கினன்
உரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்:
"தொல்லையில் இருதரம் தொலைந்தது போலவே
உலகில்எம் இன்பமே ஒழிந்து போகட்டும்
பாடல்கள் யாவும்இப் பாரைநீங் கட்டும்
எய்வது நிச்சயம் எய்தலைத் தவிரேன்." 140
பெரிதாய்ப் பயங்கரப் பேர்வில் வளைத்து
செப்பின் சிலையைச் சிறிதே இழுத்து
இடமுழங் காலில் எடுத்துமேல் வைத்து
வலது பாதத்தின் வலுவடித் தாங்கி
அம்புறு தூணியில் அம்பொன் றெடுத்தான்
பொற்சிறை மூன்று பொருந்திய கணையை
விரைந்து செல்லும் விறல்வெங் கணையை
கடுங்கூர் மிகுந்த கணையை எடுத்து
சிலையின் பள்ளம் திணிப்புற வைத்து
நாணுடன் கணையை நன்றாய்ச் சேர்த்தான். 150
பின்னர் பயங்கரப் பெருஞ்சிலை தூக்கி
வலது தோளில் வலுவுடன் வைத்து
வசதியாய் வில்லை வளைத்திட நின்றான்
வைனா மொயினனை வதைப்பதற் காக,
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"மாய்ப்பாய், மிலாறு மரத்தின் முனையே!
தைப்பாய், தேவ தாருவின் தண்டே!
அறைவாய், பிசாசுச் செடியின் நாணே!
தழுவுமென் கரங்கள் தாழ்ந்தநே ரத்தில்
உறுசரம் எழுந்து உயர்ந்துபோ கட்டும், 160
உந்துமென் கரங்கள் உயர்ந்த வேளையில்
சரிந்து கணைகள் தாழ்ந்துபோ கட்டும்!"
விரல்களை வில்லின் விசையினில் வைத்தான்
அவனும் முதற்கணை அதனை ஏவினான்
உயரப் பறந்தெழுந் துடன்அது சென்றது
சிரசின் மேலே திகழ்வான் நோக்கி
முகிலை முட்டி மோதிச் சென்றது
சிதறிய முகிலில் சென்றதே சுழன்று.
அங்ஙனம் எய்தனன் அதுபணிந் திலதால்
இன்னொரு கணையை எடுத்துச் செலுத்தினன் 170
தாவிய கணைமிகத் தாழ்ந்தே சென்றது
கிளர்மண் தாயின் கீழாய்ச் சென்றது
அன்னை பூமியோ அழிவின் பக்கம்
பெருமண் மேடெலாம் பிளக்கப் பார்த்தன.
மீண்டும் எய்தனன் மூன்றாங் கணையை
மூன்றாம் தடவை முழுநேர்ப் பாய்ச்சல்
**நீல மாட்டின் தோளைத் துளைத்து
முதிய வைனா மொயினனின் கீழே;
வழுது நிறப்பொலிப் புரவியை எய்தான்
பயற்றம் தண்டுப் பதநிறக் குதிரையை 180
தோளின் கீழே தொடுதிசைப் பகுதி
இடது பக்கத்து இயல்முன் காலில்.
முதிய வைனா மொயினனப் போது
விரல்கள் தாழ்ந்து விரிபுனல் நனைய
கைகள் திரும்பி கடல்அலை தோய
முட்டி நுரையில் மூழ்கிட வீழ்ந்தான்
நீல மாட்டின் நிமிர்முது கிருந்து
பயற்றந் தண்டுப் பரிமிசை இருந்து.
அப்பொழு தொருபெரும் அடர்காற் றெழுந்தது
கடல்மிசைக் கொடியதோர் கருந்திரை யெழுந்தது 190
வைனா மொயினனை வளமாய்த் தாங்கி
கரையிருந் துதைத்துக் கடலுட் சென்றது
அகன்று பரந்த அந்நீர்ப் பரப்பில்
திறந்து பரந்த திகழ்நீர்ப் பரப்பில்.
அத்துடன் இளைஞன் யொவுகா ஹைனன்
பெருமையாய் நாவை அசைத்துப் பேசினன்:
"ஓ,நீ இல்லை வைனா மொயினன்
ஒளிர்விழி யுடனே உயிரோ டில்லை
வளருமிவ் வுலகின் வாழ்நாள் என்றும்
பொன்னிலாத் திகழும் பொற்பொழு தெல்லாம் 200
வைனோ நிலத்து வன்பரப் பேகுவாய்
கலேவலா எனும்புதர்க் கவின்சம வெளி.
அங்கே ஆறு ஆண்டுகள் உழல்வாய்
அலைந்து உழல்வாய் அருமேழ் கோடைகள்
எட்டு ஆண்டுகள் இன்னலை அடைவாய்
அகன்று பரந்த அகல்நீர்ப் பரப்பில்
இந்த அகன்ற இருநீர்ப் பரப்பில்
ஆறு ஆண்டுகள் அலைவாய் மரம்போல்
தேவ தாருபோல் ஏழாண் டிருப்பாய்
எட்டாண் டிறுமரக் கட்டைபோல் ஆவாய்!" 210
அதற்கு பின்னர் அவன்இல் சென்றான்
அங்கே அன்னை அவனிடம் கேட்டாள்:
"வைனா மொயினனை எய்தது உண்டா
கலேவா மைந்தனைக் கொலைசெய் தாயா?"
நன்றென இளைஞன் யொவுகா ஹைனன்
மறுமொழி யாக வழங்கினன் ஒருசொல்:
"வைனா மொயினனை எய்ததும் உண்டு
கலேவா மனிதனைக் கவிழ்த்ததும் உண்டு
ஆழ்கடல் பெருக்க அவனை அனுப்பினேன்
அலைகளைக் கூட்ட அவனை அனுப்பினேன்; 220
திரைநுரை நிறைந்த திகழ்பெருங் கடலில்
அலையெழுந் தெறியும் ஆழக் கடலில்
முதியமா னிடன்தன் முழுவிரல் தாழ்த்தி
கரங்களைத் திருப்பிக் கடல்நீர் அமிழ்ந்து
பக்கமாய் நகர்ந்து புக்கினான் புதைந்தே
முதுகினில் தங்கி மூழ்கினான் ஆழம்
அலைகளின் மேலே உழலுவான் அங்கே
ஒதுங்குவான் அங்கே உயர்நுரைத் திரைகளில்."
ஆயினும் இவ்விதம் அன்னையும் சொன்னாள்:
"சிறுபே தாய்நீ செய்தது தீவினை 230
இங்ஙனம் வைனா மொயினனை எய்தது
வழங்கிய கலேவா மனிதனை அழித்தது
உயர்வுறும் அமைதிநீர் ஒருதனி மனிதனை
கலேவலா பெற்றநற் கவின்திறல் வீரனை."
பாடல் 7 - வைனாமொயினனும் லொவ்ஹியும்
அடிகள் 1 - 88 : வைனாமொயினன் பல நாட்கள் கடலிலே மிதக்கிறான்.
அடிகள் 89 - 274 : முன்னொரு காலத்தில் வைனாமொயினன் காட்டை அழித்தபொழுது கழுகு வந்து அமர்வதற்காக ஒரு மரத்தை மட்டும் விட்டிருந்தான். நன்றியுள்ள அந்த கழுகு வைனாமொயினனைத் தனது சிறகில் சுமந்து சென்று வடநாட்டில் சேர்க்கிறது. வடநாட்டுத் தலைவி அவனைத் தனது வசிப்பிடத்துக்கு அழைத்துச் சென்று ஆறுதல் தருகிறாள்.
அடிகள் 275 - 322 : வைனாமொயினன் தனது சொந்த நாட்டுக்குச் செல்ல விரும்புகிறான். அவன் சம்போவைச் செய்து தந்தால், சொந்த நாட்டுக்கு அனுப்புவதோடு தனது மகளையும் விவாகம் செய்து தருவதாக வடநாட்டுத் தலைவி கூறுகிறாள்.
அடிகள் 323 - 368 : வைனாமொயினன் தான் சொந்த நாட்டுக்குச் சென்றதும் சம்போவைச் செய்வதற்குக் கொல்ல வேலைக் கலைஞன் இல்மரினனை அனுப்புவதாக வாக்களிக்கிறான். வடநாட்டுத் தலைவியிடம் ஒரு குதிரையையும் வண்டியையும் பெற்றுச் சொந்த நாட்டுக்குப் புறப்படுகிறான்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
நீண்ட கடலிடை நீந்திச் சென்றனன்
உழுத்த மரமென உடலசைத் தேகினன்
திரிந்தனன் உழுத்த தேவதா(ரு) மரம்போல்
கோடையாம் காலக் கொளும்அறு நாட்களாய்
அடுத்து வந்தூர்ந்த ஆறு இரவுகள்
அவனுக்கு முன்னால் அகன்ற நீர்ப்பரப்பு
அவனின் பின்னே தெளிந்தநல் வானம்.
இரவுகள் மீண்டும் இரண்டு நீந்தினான்
நீந்தினான் இரண்டு நீண்ட பகலிலும் 10
நீந்தினான் ஒன்பதாம் நிசிபுலர் வரையிலும்
அவ்விதம் எட்டாம் அப்பகல் கழிந்ததும்
வந்ததே உடலின் வாதைகள் பெரிதாய்
வாதையும் வளர்ந்து வேதனை தந்தது
ஏனெனில் கால்களில் இல்லையாம் நகங்கள்
பொலிவுறு கைவிரற் பொருத்துகள் இல்லை.
முதிய வைனா மொயினன் பின்னர்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"துயரப் பிறவிநான் துர்ப்பாக் கியவான்
திணிவுறும் துன்பத் தீதுகொள் சென்மம் 20
உரிமைகொள் நாடகன் றொதுங்கிச் செல்கிறேன்
வாழ்ந்தநல் நாட்டினை வலுவில் இழக்கிறேன்
வாழ்நாள் முழுவதும் வானதன் கீழே
தினகரன் திங்களின் திறந்த வெளியிலே
வெங்கால் எங்ஙணும் விரட்டிய நிலையிலே
தொடுதிரை திரண்டு துரத்தும் தன்மையில்
அகன்று பரந்த அந்நீர்ப் பரப்பில்
விரிந்து பரந்த வியன்கடல் மடியில்;
குளிரில் விறைத்துக் கொடுகிக் கிடக்கிறேன்
விதிர்ப்பு வந்ததால் வியாகுலம் வந்தது 30
பொழுதெலாம் எறியும் பொங்கலை வசித்தலால்
தண்ணீர்ப் பரப்பிலே தவித்திருப் பதனால்.
எதுவும் தெரியவும் இல்லை எனக்கு
எப்படி இருப்பது எங்ஙனம் வாழ்வது
தீமைகள் நிறைந்தஇத் தீயநாட் களிலே
காலம் கரையும்இக் காலகட் டத்தில்.
காற்றிலே எனக்குக் கட்டவா ஓர்குடில்
வாரியில் எனக்கொரு வசிப்பிடம் அமைக்கவா?
காற்றிலே எனக்குக் கட்டினால் ஓர்குடில்
ஆதாரம் காற்றில் அதற்கென இல்லையே 40
வாரியில் எனக்கொர் வசிப்பிடம் அமைத்தால்
வாரியும் வீட்டை வாரிச் செல்லுமே."
லாப்பிருந்து ஒருபுள் எழுந்தூர்ந்து இவர்ந்தது
வடகிழக் கிருந்து வந்ததோர் கழுகு
அதன்அள வதுபெரி தானது மல்ல
ஆனால் அதுசிறி தானது மல்ல
ஒற்றை இறகதால் உளநீர் துடைத்தது
மற்றோர் இறகினால் வான்பெருக் கிற்று
பறவையின் வாலது பரவையில் தங்கிட
அலகது குன்றிலும் அதியுயர்ந் திருந்தது. 50
பறவை பறந்தது, பறவை கிளர்ந்தது
பார்த்துத் திரும்பிப் பறவை சுழன்றது;
பறவையும் வைனா மொயினனைப் பார்த்தது
நீல நிறத்து நீள்கடற் பரப்பில்:
"எதற்கு மனிதா இக்கடல் உள்ளாய்
வீரனே அலைகளில் மிதக்கிறாய் எதற்கு?"
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"கடலில்நான் வந்ததன் காரணம் இதுதான்
அலைகளின் நடுவே ஆடவன் வந்துளேன் 60
வந்தனன் தேடியே வடபுல வனிதையை
நாடினேன் நாரியை நனியிருட் பூமியில்.
விரைந்தே பயணம் மேற்கொள லானேன்
உருகா திருந்த ஒளிர்கட லதன்மேல்
பலபகற் பொழுதில் ஒருபகற் பொழுது
பலநாட் காலையில் ஒருநாட் காலை
**தொல்தீ வமைந்த துரவினை அடைந்தேன்
அழகிய **யொவுகா ஆற்றினை அடைந்தேன்
எனக்குக் கீழே எழிற்பரி எய்தனன்
எனக்கு விடுகணை ஏறிய ததன்மேல். 70
இங்ஙன மாய்நான் இருங்கடல் வீழ்ந்தேன்
விரல்கள் முன்னர் விழுந்தன அலையில்
காற்றுவந் தென்னை கடத்திச் சென்றது
அலைகள் எழுந்தெனை அடித்துச் சென்றன.
வடமேற் கிருந்தொரு வாடை வந்தது
கிழக்கிருந் தொருபெருங் கிளர்காற் றூர்ந்தது
வாடை இழுத்து வலுதொலை சென்றது
கரையிலே இருந்து காற்றெடுத் தூர்ந்தது;
பற்பல பகலெலாம் படுபோ ராடினேன்
நீந்திநான் சென்றேன் நெடுநிசி பற்பல 80
இந்த அகன்ற இருநீர்ப் பரப்பிலே
திறந்து பரந்த திகழ்நீர்ப் பரப்பில்;
எதுவும் தெரியவே யில்லை எனக்கு
சிந்தனை யில்லைத் தெளிவுமே யில்லை
இறுதியில் எங்ஙனம் இறப்பேன் என்று
எவ்வகை மரணம் எனக்குறு மென்று
வளர்பசி எனக்கு மரணம் தருமோ
அல்லது கடலில் ஆழ்வதால் வருமோ?"
காற்றினைச் சேர்ந்த கழுகு சொன்னது:
"வளர்வே தனையால் வருந்துதல் வேண்டாம் 90
எழுந்திரு எழுந்தென் இகல்முது கமர்வாய்
எழுந்திரு இறகின் இயல்முனை யமர்வாய்
கடலிருந் துன்னைக் கடிதுகொண் டூர்வேன்
உன்மனத் துள்ள உறைவிடம் செல்வேன்
இன்னமும் அந்நாள் என்நினை வுளது
இனியஅந் நாட்களை இன்னும் நினைக்கிறேன்
கலேவலாக் காடுகள் கடிதுநீ அழித்துழி
ஒஸ்மோ நிலவனம் ஒருங்குநீ வெட்டுழி
மிலாறெனும் ஒருமரம் விட்டாய் வளர
அழகிய ஒருமரம் ஆங்குற விடுத்தாய் 100
பறவைகள் வந்து பாங்குறத் தங்க
நானே வந்து நன்றாய் அமர."
முதிய வைனா மொயினன் பின்னர்
தண்ணீ ரிருந்து தலையைத் தூக்கினன்
மாகட லிருந்து மனிதன் எழுந்தனன்
விரிதிரை யிருந்த வீரன் உயர்ந்தான்
சிறகுகள் மீது ஏறி யமர்ந்தான்
கழுகதன் இறகின் கவின்முனை யமர்ந்தான்.
காற்றின் பறவைஅக் கழுகதன் பின்னர்
முதிய வைனா மொயினனைச் சுமந்து 110
தூக்கிச் சென்றது தொடர்வாய்வு இடையே
பவனப் பாதையில் பறந்து சென்றது
எழில்வட பால்நிலத் தெல்லையை நோக்கி
புகார்படி *சரியொலாப் புகுநிலப் பரப்பில்;
வைனா மொயினனை மகிழ்ந்தாங் கிறக்கி
விண்ணில் ஏறி விரைந்து மறைந்தது.
அங்கே வைனா மொயினன் அழுதனன்
அங்கே அவனும் அழுது புலம்பினன்
கடலின் விரிந்த கரையதில் நின்று
அறிபெயர் தெரியா அவ்விடத் திருந்து 120
நுறுகா யங்கள் நொந்தரு கிருந்தன
ஆயிரம் புயல்கள் அடித்து வீசின
அசிங்கமாய்த் தாடியும் அமைந்தாங் கிருந்தது
சிகையும் சேர்ந்து சிக்கலாய் இருந்தது.
இரண்டு மூன்று இரவுகள் அழுதான்
அழுதான் பகலின் அத்தனை பொழுதிலும்
போக்கிடம் எதுவெனப் புலப்பட வில்லை
அன்னிய னாதலின் அவன்வழி தெரிந்திலன்
வீட்டினை நோக்கி மீண்டும் சென்றிட
பழகிய இடங்களைப் பார்த்துச் செல்ல 130
பிறந்த இடத்தை அறிந்தவன் செல்ல
வாழ்ந்தநாட் டிற்கு மறுபடி செல்ல.
வடபுலம் சார்ந்த வளர்சிறு **நங்கை
வெண்மை நிறத்து மெல்லியள் ஒருத்தி
உயர்கதி ரோடொரு உடன்பா டுற்றவள்
தினகர னோடும் திகழ்மதி யோடும்
ஒன்றாய் இவைகள் உதிப்பது என்றும்
ஒன்றாய் இவைகள் எழுவது என்றும்
இவைகளின் முன்னர் எழுந்திருப் பவளவள்
சூரிய சந்திரர் தோன்றிடு முன்னர் 140
சேவற் கோழியின் கூவலின் முன்னர்
கோழிக் குஞ்சுதன் பாடலின் முன்னர்.
ஆட்டுரோ மங்கள் ஐந்தை எடுப்பாள்
ஆடுகள் ஆறிருந் தவற்றை எடுப்பாள்
இணைப்பாள் ரோமம் இயல்கைத் தறியில்
அவற்றில் ஆடைகள் அழகுற நெய்வாள்
ஆதவன் உதயம் ஆவதன் முன்னர்
வண்ணநற் கதிரொளி வருவதன் முன்னர்.
மேலும் அடுத்துநீள் மேசையைக் கழுவி
படர்ந்த நிலத்துப் பரப்பினைப் பெருக்குவள் 150
சிறுசிறு குச்சியில் செய்ததூ ரிகையால்
இலைதழை கட்டிய இயைதுடைப் பத்தால்;
குப்பைகள் யாவையும் கூட்டி யெடுத்து
செப்பினாற் செய்த பெட்டியிற் சேர்த்து
கதவம் வழியே கடிதெடுத் தேகினள்
முன்றிற் பக்க முதுதோட் டத்திட
தோட்டத் தாங்கே தூரத் தொலைவில்
வேலியோ ரத்து வெட்ட வெளியினில்;
குப்பைமே டதிலே சற்றுநிற் கையிலே
என்னவோ கேட்டது பின்னாய்த் திரும்பினள் 160
அழுகுரல் கேட்டது ஆழியில் இருந்து
ஆற்றினூ டாகவும் அக்குரல் கேட்டது.
ஓடி நடந்து உடன்மீண் டேகினள்
விரைந்தவள் நின்றாள் வீட்டின் கூடம்
நின்றவள் வெளியே நேர்ந்ததைக் கூறினள்
சென்றதும் அவ்விடம் செப்பினள் இங்ஙனம்:
"ஆழியில் இருந்தோர் அழுகுரல் கேட்டேன்
ஆற்றினூ டாகவும் அக்குரல் கேட்டேன்."
*லொவ்ஹி என்பவள் வடநிலத் தலைவி
நீக்கல் எயிறுள நீள்வட முதுபெண் 170
விரைந்துதோட் டத்து வெளிக்குச் சென்றனள்
வந்து வேலியின் வாயிலில் நின்றனள்;
காதைக் கொடுத்துக் கவனமாய்க் கேட்டாள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"இதுவோ குழந்தையின் அழுகைபோ லில்லை
பூவையர் புலம்பல் போலவும் இல்லை
தாடி வைத்த தலைவனின் அழுகை
தாடையில் தாடி தரித்தவர் அழுகை."
நீள்பட கொன்றினை நீரிலே தள்ளினள்
அலையில்முப் பலகையின் படகைத் தள்ளினள் 180
தோணியை வலிக்கத் தொடங்கினள் தானே
வலித்து வலித்து விரைந்துமுன் னேறினள்
அடைந்தாள் வைனா மொயினனின் அருகை
புலம்பிய தலைவன் புக்கிடம் போயினள்.
வைனா மெயினன் வறிதாங் கழுதான்
அமைதிநீர் மனிதன் அங்கே புலம்பினன்
அலரிக் கொடுஞ்செடி அமைபுனல் ஓரம்
**சிறுபழச் செடியதன் குறுபுதர்ப் பக்கம்.
தாடி தளர்ந்தது தனிவாய் அசைந்தது
தாடையோ சற்றும் தளர்ந்தசைந் திலது. 190
வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்:
பின்வரு மாறுபேச் சுரை யாடினாள்:
"ஓ,நீ, அதிட்டம் ஒன்றிலா முதியோய்!
அன்னிய நாட்டில் அமர்ந்தீங் குள்ளாய்."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
தலையை தூக்கிச் சற்றுமேற் பார்த்து
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"இப்போழு தியானே இதுதெரிந் துணர்வேன்
அன்னிய நாட்டிலே அமர்ந்திருக் கின்றேன்
சிறிதும் முன்னர் அறியா இடம்தான் 200
நான்சொந்த நாட்டில் நற்சீ ருற்றவன்
சொந்தவீட் டில்நான் தொல்சிறப் புற்றவன்."
லொவ்ஹி என்பவள் வடபுலத் தலைவி
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"ஒன்றையிப் போது உனக்குச் சொல்லவா
உன்னிடம் கேட்க உண்டா அனுமதி
எந்த இனத்தை இயைந்தவன் நீதான்
வீரனே யாயினும் எவ்வகை வீரன்?"
நிலைபெறும் முதிய வைனா மொயினன் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 210
"நன்று, எனையே நன்றாய் அறிவார்,
முன்னொரு நாளில் முழுப்புகழ் உற்றவன்
மாலை வேளையில் மகிழ்வோ டிருப்பவன்
எல்லா இடத்திலும் இனியபா டகனாய்
வைனோ என்னும் வளமுறு றாட்டில்
கலேவலா எனும்புதர்க் கவின்சம வெளியில்
ஆயின்இன் றெவ்வள வாகநான் தாழ்ந்தேன்
எனக்கே தெரிந்தில தென்னை யாரென்று."
லொவ்ஹி என்பவள் வடபுலத் தலைவி
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: 220
"இரும்சே றகன்று எழுவாய் மனிதா
தேடுக விறலோய் செழும்புதுப் பாதை
புகலுக நினக்குப் புணர்துன் பத்தை
நடந்த கதையை நயம்படக் கூறு."
அழுகையை இங்ஙனம் அவள்புகன் றடக்கினள்
வீரனின் புலம்பலிவ் விதம்தடுத் தகற்றினள்
தன்னுடைத் தோணியில் தான்கொணர்ந் தேற்றினள்
தோணியின் தட்டிலே துணிந்திருப் பாட்டினள்
துடுப்பினைத் தானெடுத் துறுபுன லிட்டனள்
வளமதாய் அமர்ந்தவள் வலிக்கவும் தொடங்கினள் 230
வடபுல நிலமிசை மற்றவள் சென்றனள்
அன்னியன் தன்னையே அகத்திடைச் சேர்த்தனள்.
அவன்பசிக் குணவினை அமைவுறக் கொடுத்தனள்
நனைந்த அம்மனிதனை நன்குலர் வாக்கினள்
நீள்பொழு தவனுடல் நிலைபெறத் தேய்த்தனள்
உடலினைத் தேய்த்து உயர்சூ டேற்றினள்
மனிதனை மீண்டும்நல் வயநிலைக் காக்கினள்
வீரனை மேலும் சீருறச் செய்தனள்
விசாரணை செய்தாள் விரிவாய்க் கேட்டாள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: 240
"வைனா மொயினனே மனமடி வெதற்கு
*அமைதிநீர் மனிதனே அழுதது எதற்கு
இன்னல் நிறைந்தவவ் விகல்தீ திடத்திலே
கடலினோ ரத்துக் கரையதன் மேலே?"
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஏங்கி யழவெனக் கேதுக் கள்ளுள
கவலைப் படற்குக் காரணம் உண்டு
நெடும்பொழு தாழியில் நீந்தித் திரிந்தேன்
எற்றலை நடுவே எறிபட் டுழன்றேன் 250
அகன்று பரந்த அந்நீர்ப் பரப்பில்
திறந்து பரந்த திகழ்நீர்ப் பரப்பில்.
இதற்காய் வாழ்நாள் எல்லாம் அழுவேன்
வாழ்க்கை முழுவதும் மனமடி வுறுவேன்
சொந்தநா டகன்று தொடர்ந்து நீந்தினேன்
பழகிய இடமாம் பதிபிரிந் தெழுந்தேன்
முன்னறி யாதஇம் முதுமுன் வழிக்கு
அன்னிய மானஇவ் வருவா யிலுக்கு;
இங்குள்ள மரங்கள் எனைக்கடிக் கின்றன
தாருவின் குச்சிகள் தாம்அடிக் கின்றன 260
மிலாறுவின் தடிகள் மிகவறை கின்றன
இன்னொன் றின்னலை எடுத்தளிக் கின்றது;
பயில்கால் மட்டுமே பழக்கப் பட்டது
கதிரையும் முன்னர் கண்ட துண்டுயான்
அன்னிய மானஇவ் வகல்நாட் டினிலே
பழக்கப் படாதஇப் படர்புது வாயிலில்."
லொவ்ஹி என்பவள் வடபுலத் தலைவி
பின்வரும் சொற்களில் பின்அவள் சொன்னாள்:
"வைனா மொயினா, வறிதழ வேண்டாம்!
அமைதிநீர் மனிதா, அழுதிரங் கிடற்க! 270
இங்கு நீ வந்தது இனியநற் செய்கை
தரிப்பது இங்குநீ தரமிகும் செய்கை
உண்ணலாம் தட்டிலே உயர்வஞ் சிரமீன்
அத்துடன் பன்றி இறைச்சியை அயிரலாம்."
முதிய வைனா மொயினன் பின்னர்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"அன்னிய உணவில் ஆக்கமே இல்லை
சிறப்பாக இருப்பினும் பிறிதொரு வீட்டில்.
சிறப்புமா னிடர்க்குத் திகழ்தாய் நாடே
உயர்வா யிருக்கும் உரியவீ டதுதான்; 280
இரக்கமிக் கிறையே, இரங்குவாய் எனக்கு!
கருணையின் கர்த்தா, கதிதா எனக்கு!
சொந்தநா டடையத் தூயோய், அருள்வாய்!
நான்வாழ்ந் திருந்த நாட்டையந் நாட்டை!
உரியநாட் டிருப்பதே உயரிய **சிறப்பு
மிலாறுக் காலணி மிதிதட நீரு(ண்)ணல்
அன்னிய தேசத் தந்நாட் டருந்தும்
தேங்குபொற் குவளைத் தேனதைக் காட்டிலும்."
லொவ்ஹி என்பவள் வடபுலத் தலைவி
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்; 290
"அப்படி யாஎனக் களிப்பது யாதுநீ
உடையநா டதையே அடையச் செய்திடில்
வயல்உன் னுடையதில் வாழ்ந்திடச் செய்தால்
நின்சவு னாவை நீபெறச் செய்தால்?"
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"என்னப்பா கேட்கிறாய் என்னிட மிருந்து
என்றன் நாட்டுக் கெனையனுப் புதற்கு
சொந்த வயல்களில் நன்குசேர்ப் பதற்கு
கொஞ்சுமென் குயிலின் கூவலைக் கேட்க
சொந்தப் பறவையின் சிந்தினைக் கேட்க 300
தொப்பிகொள் பொற்பண மிப்போ தேற்பையா
தொப்பி நிறைந்திடும் பற்பல வெள்ளிகள்."
லொவ்ஹி என்பவள் வடபுலத் தலைவி
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்;
"ஓ,உயர் ஞான வைனா மொயின!
நிலைபெறும் மாய நெறியறி முதல்வ!
கிளர்பொற் காசுநான் கேட்கவு மில்லை
வெள்ளிகள் எனக்கு வேண்டிய தில்லை.
பொற்பணம் சிறுவரின் பொருள்விளை யாட்டில்
வெள்ளியும் புரவியின் வெறும் அலங்காரம் 310
*சம்போவை உன்னால் சமைக்க முடிந்தால்
**முதிர்ஒளி நிறங்களில் மூடியும் செய்தால்
அன்னத் தோகையின் அணிமுனை யிருந்து
மலட்டு மாட்டின் மடிப்பா லிருந்து
ஒற்றைப் பார்லி ஒளிர்மணி யிருந்து
ஒற்றை ஆட்டின் உரோமத் திருந்து
அப்போ துனக்கோர் அரிவையைத் தருவேன்
ஊதிய மாயோர் உயர்மகள் தருவேன்
சொந்த நாட்டைநீ சார்ந்திடச் செய்வேன்
உன்றன் பறவையின் உயர்குரல் கேட்க 320
சொந்தக் குயிலின் தொல்லிசை கேட்க
மீண்டும் உனது மிளிர்வயல் வெளியில்."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"சம்போ எனக்குச் சமைக்க இயலா
அவிரொளி மூடியை அடிப்பதும் அரிது
ஆயினும் சொந்தநா டதில்எனைச் சேர்ப்பாய்
இங்ஙனுப் பிடுவேன் கொல்லன்*இல் மரினனை
அவன் சம்போவை ஆக்குவான் உனக்கு
அவிரொளி மூடியை அமைப்பான் உனக்கு 330
உன்றன் பெண்ணை உவகைப் படுத்த
உன்றன் மகளின் உளமகிழ் விக்க.
"அவனொரு கைவினை யாளன்நற் கொல்லன்
கலைத்திறன் படைத்த கைவினைக் கலைஞன்
விண்ணைச் செய்த வினைவலான் அவனே
அவனே சுவர்க்க மூடியை அடித்தோன்
ஆயினும் சுத்தியல் அடிச்சுவ டில்லை
கருவிகள் படுத்திய கறைஅதில் இல்லை.
லொவ்ஹி என்பவள் வடபுலத் தலைவி
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: 340
"அவனுக் களிப்பேன் அரியஎன் மகளை
எனதுபெண் அவனுக் கென்றே யுரைப்பேன்
அரிய சம்போவை அமைப்பவ னுக்கு
அவிரொளி மூடியை அடிப்பவ னுக்கு
அன்னத் தோகையின் அணிமுனை யிருந்து
மலட்டு மாட்டின் மடிப்பா லிருந்து
ஒற்றைப் பார்லி ஒளிர்மணி யிருந்து
ஒற்றை ஆட்டின் உரோமத் திருந்து."
படர்ஏற் காலில் பரியினைப் பூட்டினள்
மண்ணிறப் புரவியை வண்டியின் கட்டினள் 350
முதிய வைனா மொயினனை ஏற்றினள்
அவனைப் பொலிப்பரி வண்டியில் அமர்த்தினள்
பின்வரும் சொற்களில் பின்அவள் சொன்னாள்
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்:
"உயரத் தலையை உயர்த்தலும் வேண்டாம்
உயர்த்திப் பார்த்தலும் வேண்டாம் உச்சியை.
பொலிப்பரி சிறிதும் களைக்கா திருந்தால்
மாலை வேளையும் வராது இருந்தால்;
உயரத் தலையை உயர்த்துதல் செய்தால்
உயர்த்தி உச்சியை நோக்குதல் செய்தால் 360
அழிவு வந்தே அடைந்திடும் உன்னை
தீய காலமும் தேடியே வந்திடும்."
முதிய வைனா மொயினன் பின்னர்
உயர்பரி அடித்து ஓடச் செய்தனன்
விரையச் செய்தனன் பிடர்மயிர்ப் புரவி
ஒலியெழும் பயணம் பொலிவுறச் செய்தனன்
நீளிருள் வடபால் நிலத்திடை யிருந்து
மருண்ட சரியோலா மண்ணிடை யிருந்து.
பாடல் 8 - வைனாமொயினனின் காயம்
அடிகள் 1 - 50 : பயணத்தின் போது வழியில் வைனாமொயினன் அழகாக உடையணிந்த வடநில மங்கையைக் கண்டு தனக்கு மனைவியாகும்படி கேட்கிறான்.
அடிகள் 51 - 132 : கடைசியில் வடநில மங்கை தனது தறிச் சட்டத்தில் சிந்திய துகள்களில் ஒரு தோணியைச் செய்து அதைத் தொடாமல் நீரில் விட்டால் அவனுடைய விருப்பத்திற்கு இணங்குவதாகக் கூறுகிறாள்.
அடிகள் 133 - 204 : வைனாமொயினன் தோணியைச் செய்யும் பொழுது, கோடரி முழங்காலில் தாக்கியதால் ஏற்பட்ட இரத்தப் பெருக்கை நிறுத்த முடியவில்லை.
அடிகள் 205 - 282 : வைனாமொயினன் இரத்தப் பெருக்கை நிறுத்தப் பரிகாரம் தேடிப் புறப்பட்டு, இரத்தப் பெருக்கை நிறுத்துவதாகக் கூறும் ஒரு முதியவனைச் சந்திக்கிறான்.
வனப்புறும் வனிதை **வடபுல நங்கை
நிலத்திடைக் கீர்த்தி நீரிலும் சிறந்தோள்
வானத்து வளைவில் வனப்பா யிருந்தாள்
விண்ணக வில்லின் மின்னலா யொளிர்ந்தாள்
தூயநல் லாடை சுத்தமா யணிந்து
வெண்ணிற உடையில் வண்ணமா யிருந்தாள்.
பொன்னிழை ஆடையைப் பின்னி யெடுக்கிறாள்
வெள்ளியில் சோடனை வேலைகள் செய்கிறாள்
தங்கத் தானது தறியில்நெய் கருவி
வெள்ளியில் ஆனது நல்லச் சுக்கோல். 10
அவளது பிடியிலே அசைந்தது கருவி
சுழன்றது அச்சவள் சுந்தரக் கரத்தில்
செப்பின் சட்டம் சத்தம் எழுப்பின
வெள்ளியின் அச்சிலே மிகுஒலி எழுந்தது
ஆடையை நங்கையும் அழகுற நெய்கையில்
ஆடையை வெள்ளியில் ஆக்கிய போதினில்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
செய்தான் பயணம் திகழுதன் வழியில்
இருள்நிறை வடபால் இயைநிலத் திருந்து
புகார்படி சரியொலாப் புகுநிலத் திருந்து. 20
சிறுதொலை பயணம் செய்தவப் பொழுது
கொஞ்சத் தூரம் குறுகிய நேரம்
கைத்தறி அசைந்த காற்றொலி கேட்டது
உயரத் தலைமேல் ஒலியது கேட்டது.
அப்போ தலையை அவன்மேல் தூக்கினன்
படர்வான் நோக்கிப் பார்வையை விட்டனன்:
வானத் தொருவில் வனப்பா யிருந்தது
வில்லில் இருந்தனள் மெல்லியள் ஒருத்தி
ஆடைகள் செய்கிறாள் அவள்தங் கத்தில்
வெள்ளியில் ஓசை விளைக்கிறாள் அவளும். 30
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
நிறுத்தினன் பரியை நேராய் அக்கணம்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே
இயம்பினன் அவனே இயம்பினன் இவ்விதம்:
"வருவாய் பெண்ணே எனதுவண் டிக்கு
எனது வண்டியுள் இறங்கி வருவாய்."
இந்தச் சொற்களில் இயம்பினள் அரிவை
இவ்விதம் அவளே இயம்பிக் கேட்டனள்:
"வனிதை உனது வண்டியில் எதற்கு
வண்டியுள் வனிதை வருவது எதற்கு?" 40
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
நன்று என்று நயமாய்ச் சொன்னான்:
"வனிதை எனது வண்டியில் இதற்கே
வண்டியுள் வனிதை வருவதும் இதற்கே
தேனில் ரொட்டிகள் செய்வதற் காக
பானம் வடிப்பதை பார்லியில் அறிய
இருக்கையில் அமர்ந்து இசைப்பதற் காக
சாளர வாயிலில் தனிமகிழ் வடைய
வைனோ நாட்டின் வளர்கா வெளிகளில்
கலேவலா வென்னும் கவின்பெரு விடங்களில்." 50
இந்தச் சொற்களில் இயம்பினள் அரிவை
உரைத்தே அவள்தான் உரைசெய லாயினள்:
"நான்புற் படுக்கையில் நடந்த பொழுதிலே
மஞ்சள் புற்றரைப் பவனியில் வந்துழி
நேரம் கடந்த நேற்றைய மாலையில்
தகிகதிர் வானில் சாய்ந்துசெல் பொழுதில்
சோலையில் இருந்தொரு தூயபுள் இசைத்தது
எழில்வயற் **பறவையின் இன்னிசை மாந்தினேன்
மகளிரின் வயமெழு மனவுணர் விசைத்தது
எழில்மரு மகள்மன இயல்புமாங் கிசைத்ததே. 60
பறவையை நோக்கிப் படிநின் றுரைத்தேன்
பின்வரும் வார்த்தையில் பிறிதொன் றுசாவினேன்:
'பறவையே, பறவையே, சிறுவயற் பறவையே!
பாடுவாய் செவிகளில் பாடலைக் கேட்க:
இரண்டிலே சிறந்தது எதுவெனப் புகல்வாய்
உயர்வெவர் வாழ்வென ஒருமொழி சொல்வாய்
தந்தையர் இல்லிடைத் தையலர் வாழ்க்கையா
கணவரின் வீட்டகக் காரிகை வாழ்க்கையா?'
சிறியபுள் ஆங்கே சீருறும் சொல்லில்
தண்வயற் பறவையும் தந்ததோர் விளக்கம்: 70
'வேனிற் பொழுதெலாம் மிகமிக ஒளிரும்
அதைவிட ஒளிரும் அரிவையின் இயல்பு;
உறைபனி இரும்பு உறுகுளி ரடையும்
மருமகள் நிலைமையோ மற்றதிற் **குளிராம்;
தந்தையார் வீட்டில் தரிக்கும் தையலோ
நன்னிலம் தந்த நற்சிறு பழமாம்;
மணப்பவன் வீட்டில் மருமகள் என்பவள்
சங்கிலி பூட்டிய தனிநாய் போன்றவள்;
அடிமைக் கின்பம் அரிதாய் வந்துறும்
என்றும் மருமகட் கில்லையிந் நிலையே.' " 80
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"பறவை சொன்னது பயனிலாக் கூற்று
வயற்புட் கூற்று வாய்வழிக் கத்தல்
வீட்டிலே மகளிர் வெறுங்குழந் தைகளாம்
மங்கையாய் மலர்வது மணம்பெறும் போதே
வருவாய் எனது வண்டியில் மங்காய்
எனது வண்டியுள் இறங்கிநீ வருவாய்
மதிப்பே யற்ற மனித னல்லயான்
ஏனைய வீரர்க் கிளைத்தவ னல்லயான்." 90
கூறினள் காரிகை கூர்மையாய் ஒருமொழி
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"உனையொரு மனிதனென் றுரைத்திடு வன்யான்
நாயகன் என்று நானுனை மதிப்பேன்
கிளர்பரி மயிரைநீ கிழிக்க முடியுமா
முழுக்கூர் மையிலா மொட்டைக் கத்தியால்
முடிச்சு ஒன்றினுள் முட்டைவைப் பாயா
பார்த்தால் முடிச்சுப் பாங்குதோன் றாமால்."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
கிளர்பரி மயிரைக் கிழித்துக் காட்டினன் 100
முழுக்கூர் மையிலா மொட்டைக் கத்தியால்
முற்றிலும் முனையிலா மொட்டைக் கத்தியால்;
முடிச்சு ஒன்றினுள் முட்டையை வைத்தனன்
பார்க்க முடிச்சுப் பாங்குதோன் றாமால்.
வனிதையை வண்டியுள் வருமா றியம்பினன்
தனது வண்டியுள் தையலை யழைத்தான்.
கூறினள் காரிகை கூர்மையாய் ஒருமொழி:
"நன்று உன்னிடம் நான்வரு வேன்எனின்
கல்லதன் தோலைக் கடிதுரித் தெடுத்தால்
கம்பங் கள்பனிக் கட்டியில் வெட்டினால் 110
சிறுதுண் டேனும் சிதறி விடாமல்
சிறுநுண் துகளும் சிந்துதல் இன்றி."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
சிறிது கூடச் சிரமமில் லாமல்
கல்லின் தோலை கடிதுரித் தெடுத்தான்
கம்பங் கள்பனிக் கட்டியில் வெட்டினான்
சிறுதுண் டேனும் சிதறி விடாமல்
சிறுநுண் துகளும் சிந்தி விடாமல்.
வனிதையை வண்டியுள் வருமா றுரைத்தான்
தனதுவண் டியுனுள் தையலை அழைத்தான். 120
கூறினள் காரிகை கூர்மையாய் ஒருமொழி
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னாள்:
"நன்றுநான் எவனை நாடுவேன் தெரியுமோ?
எனக்கொரு படகை இயற்றுவோன் தன்னை,
என்தறி மரத்தில் இழிந்த துகள்களில்
தறியின் சட்டத் துண்டுகள் தம்மில்,
படகை நீரிற் படுத்துவோன் தன்னை
புதுப்பட கலையிற் புணர்த்துவோன் தன்னை,
முழங்கால் படகில் முட்டுதல் கூடா
படகில் முட்டிகள் படுதலும் கூடா 130
திகழ்புயம் எங்ஙணும் திரும்புதல் கூடா
வயத்தோள் முன்னே வருதலும் கூடா."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"இல்லையெந் நாட்டும் இல்லையெப் புவியும்
இவ்வா னின்கீழ் எங்ஙணும் இல்லை
படகைக் கட்டும் பணித்திறன் உள்ளோன்
என்னைப் போலொரு எழிற்பட கமைப்போன்."
தறிமரம் சிந்திய தனித்துகள் எடுத்தான்
பகுதறிச் சட்டப் பலகைகள் சேர்த்தான் 140
படகு ஒன்றினைப் படைக்கத் தொடங்கினான்
பலகைகள் நுறு பதிக்கும் படகினை
உருக்கினால் ஆன உயர்மலை முடியில்
இரும்பினால் ஆன இகல்மலை முனையில்.
திறனாய்ச் செய்தான் செறிபட கொன்று
பலகையால் மாண்பொடு படகைச் செய்தான்
கட்டினான் முதல்நாள் கட்டினான் மறுநாள்
கட்டினான் மூன்றாம் நாளும் கடுகதி
முதுமலை கோடரி முட்டிய தில்லை
தொல்குன் றலகு தொட்டது மில்லை. 150
மூன்றா வதுநாள் முடிந்த வேளையில்
கோடரிப் பிடியைக் **கூளி அசைத்தது
**அலகை கோடரி அலகை இழுத்தது
கொடிய சக்தியால் பிடிவழு வியது:
பாறையிற் கோடரி பட்டுத் தெறித்தது
கூர்முனை தவறிக் குன்றிற் பாய்ந்தது
பாறையில் பட்ட கோடரி திரும்பி
புகுந்தது தசையில் புதைந்து கொண்டது
இளைஞன் முழங்கால் இரிந்துட் சென்றது
வைனா மொயினன் வன்கால் விரலுள்; 160
அவனது தசைக்குள் **அலகை அறைந்தது
புதைந்தது **பிசாசு புணர்நரம் பூடே
சோரி பொங்கிச் சுரந்து வழிந்தது
நீரூற் றெனவே நில்லா திழிந்தது.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
நிலைபெறும் மாய நெறியறி முதல்வன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே
உரைத்தே இவ்விதம் உரைசெய லாயினன்:
"அலகு வளைந்த அடர்கோ டரியே
கோடரி யதனின் கூரிய அலகே 170
மரத்தை மோதி விழுத்தும் நினைப்போ
**ஊசி மரத்தை யழிக்கும் உன்னலோ
தேவ தாருவைச் சிதைப்பதாய்க் கருத்தோ
பெரும்பூர்ச் சமரம் பிளப்பதாய் உணர்வோ
எனது தசைக்குள் ஏறிய வேளையில்
எனது நரம்பினுள் இறங்கிய போதினில்?"
மந்திரச் சொற்களை வழங்கத் தொடங்கினான்
மனத்திலே உன்னி மந்திரம் கூறினான்
மூலமாம் மொழிகளை ஆழமாய்க் கூறினான்
ஓதினான் அடுக்காய் ஒழுங்காய் உரைத்தான் 180
ஆயினும் நெஞ்சில் அவையிலா தொழிந்தன
இரும்புமூ லத்தின் சிறந்தநற் சொற்கள்,
சட்டமாய் நின்று கட்டும் திறத்தன
வன்பூட் டாகும் மந்திரச் சொற்கள்,
இரும்பினா லான இரணம் காக்க
நீலவாய் அலகின் காயம் போக்க.
குருதி நதிபோற் குமுறிப் பாய்ந்தது
நீள்நுரை ததும்பிநீர் வீழ்ச்சிபோல் வந்தது;
பழச்செடி தரையில் படிந்திடப் பாய்ந்தது
புற்றரைச் செடிகளில் பற்றையில் பாய்ந்தது 190
ஆங்குமண் மேடெதும் **அமைந்திட வில்லை
முகிழும் சோரிநீர் மூழ்கா நிலையில்
தடையில் குருதியில் தாழா நிலையில்
வருபுனல் ஆறென வழிந்தசெங் குருதி
முதுபுகழ் வீரன் முழங்கா லிருந்து
வைனா மொயினன் வன்கால் விரலால்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
பாறை யிருந்துசில் பாசிகள் பிடுங்கி
பாசிகள் சதுப்புப் படிவிலும் சேர்த்து
மண்ணிலே யுளமண் மேட்டிலும் எடுத்தான் 200
அகல்குரு திப்பொந் தடைப்பதற் கெண்ணி
தீயதாம் சக்தியின் வாயிலை மூட;
ஆயினும் பயனெதும் அதனால் இலது
சிறிதும் அச்செயல் சித்தித் திலது.
வருத்தம் வளர்ந்து வாதையைத் தந்தது
துன்பம் தொடர்ந்து தொந்தர வானது.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
கண்ணீர் விட்டுக் கதறிய ழுதான்;
புரவியைச் சேணம் பூட்டினன் பின்னர்
மண்ணிறப் புரவி வண்டிமுன் நின்றது 210
வண்டியில் தானே வலுவிரை வேறினன்
அமர்ந்து கொண்டனன் அவ்வண் டியினுள்.
சவுக்கைச் சுழற்றிச் சாடினன் பரியை
மணிமுனைச் சாட்டை வான்பரி அறைந்தான்
பறந்தது புரவி பயணம் விரைந்தது
வண்டி உருண்டது வருதொலை குறைந்தது.
காணவோர் சிற்றூர் கண்ணில் தெரிந்தது
மூன்று தெருவின்முற் சந்தியும் வந்தது.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
வருதாழ் தெருவில் வண்டியைச் செலுத்தினன் 220
தாழ்ந்த தெருவின் தாழ்ந்தவீட் டுக்கு.
இல்ல வாயிலில் இவ்வா றுசாவினன்:
"இந்த வீட்டிலே எவரெனு முளரோ
இரும்பினால் விளைந்த இரணம தாற்ற
வீரன் அடைந்த வெந்துயர் மாற்ற
இன்னலை யாக்கும் இரணம் போக்க?"
ஆங்கொரு குழந்தை அகலத் திருந்தது
அடுப்பின் அருகில் அமர்ந்தொரு சிறுவன்
இவ்வுரை யப்போ திவ்வித மொழிந்தான்:
"இந்த வீட்டிலே எவருமே யில்லை 230
இரும்பினால் விளைந்த இரணம தாற்ற
வீரன் அடைந்த வெந்துயர் மாற்ற
காயத்தால் வந்த கடுநோ தீர்க்க
இன்னலை ஆக்கும் இரணம் போக்க;
அடுத்த வீட்டில் ஆரும் இருப்பர்
அங்ஙனம் செல்வாய் அடுத்தவீட் டுக்கு."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
சவுக்கைச் சுழற்றி சாடினன் பரியை
திரும்பி வண்டி சென்றது பறந்தது.
தூரம் சிறிது தொலைந்தபின் அங்ஙனம் 240
வந்தது ஒருதெரு வழியின் மத்தியில்
வீதியின் மத்தியில் வீடொன் றிருந்தது.
வந்தில் வாயிலில் வருமா றுசாவினன்
இரந்தவன் கேட்டான் இற்பல கணிவழி:
"இந்த வீட்டில் எவரெனு முளரோ
இரும்பினால் விளைந்த இரணம தாற்ற
இரத்த மழையைத் தடுத்து நிறுத்த
அறுநரம் பதிலொழு கருவியைத் தடுக்க?"
முதிர்ந்தபெண் ஒருத்தி முழுநீள் அங்கியில்
அடுக்களை மணையில் அமர்ந்தே உளறுவாய் 250
வயதுறும் மாது வருமா றுரைத்தாள்
மூன்றுபல் தெரிய மொழிந்தனள் ஆங்கு:
"இந்த வீட்டிலே எவருமே யில்லை
இரும்பினால் விளைந்த இரணம தாற்ற
செந்நீர் மூலம் தெரிந்தவ ரில்லை
காயத் தால்வரு கடுநோ தீர்க்க
அடுத்த வீட்டில் ஆரும் இருப்பர்
அங்ஙனம் செல்வாய் அடுத்தவீட் டுக்கு."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
சவுக்கைச் சுழற்றி சாடினன் பரியை 260
திரும்பி வண்டி சென்றது பறந்தது.
தூரம் சிறிது தொலைந்தபின் அங்ஙனம்
பாதையின் உயரம் படியுயர் வீதி
வீடுகள் நடுவண் மிகவுயர் வீடு
வந்தில் வாயிலில் வருமா றுசாவினன்
கூரை மரப்பின் குறுகிநின் றுசாவினன்:
"இந்த வீட்டில் எவரெனு முளரோ
இரும்பினால் விளைந்த இரணம தாற்ற
இரத்தவெள் ளத்துக் கிடுதற் கொருஅணை
இரத்தப் பெருக்கைத் தடையிட் டடைக்க?" 270
ஆன வயதோன் அடுப்பரு கிருந்தான்
வளர்நரைத் தாடியில் மணையிலே இருந்தான்
உறுமினான் கிழவன் உறும்அடுப் பருகில்
கடுநரைத் தாடியன் கத்தினான் கண்டதும்:
"உயர்ந்த பொருட்கள் உடன்மூ டுண்டன
சிறந்த பொருட்கள் தினம்தோற் றிட்டன
படைத்தவன் பகர்ந்த படிமுச் சொற்களால்
மூலத்து ஆழம் மூண்ட நியதியால்:
எழில்நதி வாயிலும் ஏரிகள் தலையிலும்
பயங்கர அருவிகள் பாயும் கழுத்திலும் 280
வளைகுடாப் பகுதிமேல் வருநில முனையிலும்
ஒடுங்கிய பூமி உடன்தொடு கரையிலும்."
பாடல் 9 - இரும்பின் மூலக்கதை
அடிகள் 1-266 வைனாமொயினன் இரும்பின் மூலத்தை முதியவனுக்குச் சொல்லுகிறான்.
அடிகள் 267-416 : முதியவன் இரும்பை நிந்தித்து இரத்தப் பெருக்கை நிறுத்த மந்திர உச்சாடனம் செய்கிறான்.
அடிகள் 417-586 : முதியவன் தனது மகன் மூலம் ஒரு மருந்து தயாரித்துக் காயத்துக்குப் பூசிக் கட்டுவிக்கிறான். வைனாமொயினன் குணமடைந்து, கடவுளின் கருணையை நினைத்துக் கடவுளுக்கு நன்றி கூறுகிறான்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
வண்டியி லிருந்து வந்துகீ ழிறங்கினன்
தானே துயர்ப்படாத் தகவில் இறங்கினன்
உதவிக ளின்றி உடன்தா னிறங்கினன்
வீட்டின் உள்ளே விரைந்து சென்றனன்
கூரையின் கீழ்நடை கொண்டே சென்றனன்.
குடுக்கை வெள்ளியில் கொணரப் பட்டது
கொளும்பொன் கிண்ணமும் கொணரப் பட்டது.
கொள்கலன் கொஞ்சமும் கொள்ளவு மில்லை
ஒருதுளி தானும் உட்செல வில்லை 10
முதிய வைனா மொயினனின் குருதி
வீரன் பாத மிகுபொங் கிரத்தம்.
உறுமினன் கிழவன் உறும்அடுப் பருகில்
கடுநரைத் தாடியன் கத்தினான் கண்டதும்:
"எவ்வகை மனித இனத்தினன் நீதான்
வீரனே யாயினும் எவ்வகை வீரன்?
ஏழு தோணிகள் எலாம்நிறை குருதி
எட்டுத் தொட்டிகள் முட்டிய இரத்தம்
படுமுழங் காலால் பாக்கிய மற்றோய்,
பாய்ந்து தரையில் பரந்துபோ கின்றது; 20
எனக்கு நினைவுள தேனைய மந்திரம்
ஆயினும் பழையது அறநினை வில்லை
முதல்இரும் புதித்த மூலத் தொடக்கம்
தொடக்கத் தின்பின் தொடர்ந்ததன் வளர்ச்சி."
முதிய வைனா மொயினன் பின்னர்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"இரும்பின் பிறப்பு எனக்குத் தெரியும்
உருக்கின்உற் பத்தி உணர்வேன் நானும்
தாய்களின் முதலவள் தவழ்காற் றாகும்
சலமே மூத்தவன் சகோதரர் களிலே 30
இரும்புடன் **பிறப்பில் எல்லாம் இளையவன்
மத்தியில் அமைந்ததே வளர்நெருப் பாகும்.
மானிட முதல்வன், மாபெருந் தேவன்,
விண்ணில் உள்ள மேலவன் அவனே,
நீர்பிரிந் ததுவாம் நீள்வாய் விருந்து
நீரில் இருந்தே நிலமும் வந்தது
ஏழ்மை இரும்புக் கில்லைப் பிறப்பு
பிறந்ததும் இல்லை வளர்ந்ததும் இல்லை.
மானிட முதல்வன், வானகத் திறைவன்,
அகங்கை இரண்டை அழுத்தித் தேய்த்தான் 40
இரண்டையும் ஒன்றாய் இணைத்து அழுத்தினான்
இடமுழங் காலில் இயைந்த முட்டியில்
அதிலே பிறந்தனர் அரிவையர் மூவர்
மூவரும் இயற்கை முதல்தாய் மகளிர்
துருவுடை இரும்பின் தொல்தா யாக
நீலவா யுருக்கின் நெடுவளர்ப் பன்னையாய்.
நங்கையர் நடந்தனர் நல்லுலாப் போந்தனர்
வானத்துக் காரின் வளர்விளிம் பெல்லையில்
பூரித்து மலர்ந்த பூத்த மார்புடன்
மார்பின் காம்பில் வந்துற்ற நோவுடன்; 50
பாலைக் கறந்து படிமிசைப் பாய்ச்சினர்
மார்பகம் நிறைந்து பீரிட்டுப் பாய்ந்தது;
தாழ்நிலம் தோய்ந்து சகதியில் பாய்ந்தது
அமைதியாய் இருந்த அகல்புனல் கலந்தது.
கறந்தனள் ஒருத்தி கருநிறப் பாலாம்
மூவர்மங் கையரில் மூத்தவள் அவளே;
மற்றவள் கறந்தது மதிவெண் ணிறப்பால்
மங்கையர் மூவரில் மத்தியில் உள்ளவள்;
சிவப்பாய் கறந்தனள் திகழ்மூன் றாமவள்
மங்கையர் மூவரில் வளர்இளை யவளே. 60
கருமைப் பாலைக் கறந்தவள் எவளோ
அவளால் பிறந்தது அருமெல் இரும்பு;
கவின்வெண் ணிறப்பால் கறந்தவள் எவளோ
அவளால் பிறந்தது அரும்உருக் கென்பது;
கனிசெந் நிறப்பால் கறந்தவள் எவளோ
அவளால் பிறந்தது அடுகன இரும்பு.
காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது
தானே இரும்பது சந்திக்க விரும்பி
அன்புடை மூத்த அண்ணன் சகோதரன்
படர்செந் நெருப்பொடு பழக நினைத்தது. 70
கனலது தீய குணம்சற் றுடையது
ஆங்கா ரத்தொடு ஆவேச மானது;
பாக்கிய மற்ற பாவியை எரித்தது
இரும்பாம் பேதைத் தம்பியை எரித்தது.
ஓடி இரும்பு ஒளியப் பார்த்தது
ஒளிந்து தன்னைக் காக்கவுள் ளியது
கனன்ற கனலின் கரங்களி லிருந்து
சினந்த தீயின் செவ்வா யிருந்து.
அபயம் பெற்றது அதன்பின் இரும்பு
இனிதொளி **வபயம் இரண்டையும் பெற்றது 80
தனிநகர்ந் தசைந்த சகதிச் சேற்றினில்
கிளைத்துப் பாய்ந்த கிளர்நீ ரூற்றில்
தடம்திறந் தகன்ற சதுப்பு நிலத்தில்
கடினமாய்க் கிடந்த கடுங்குன் றுச்சியில்
அன்னம் முட்டை யிடும்அயல் இடங்களில்
வாத்துக் குஞ்சைப் பொரிக்குமால் பதிகளில்.
இரும்பு சேற்றில் இருந்தது ஒளிந்து
சதுப்பின் அடியில் தலைநிமிர்ந் திருந்தது
ஓராண் டொளித்தது ஈராண் டிருந்தது
மூன்றாம் ஆண்டும் முயன்றொளித் திருந்தது 90
இரண்டடி மரத்தின் இடைநடு வினிலே
முதுபூர்ச் சமர மூன்றுவே ரடியில்.
ஆயினும் தப்பிய தில்லையவ் விரும்பு
கொடிய நெருப்பின் கொல்கரத் திருந்து;
மீண்டொரு முறைவர வேண்டி யிருந்தது
தீயின் வசிப்பிடத் திருவா யிலுக்கு
படைக்கல அலகாய் படைக்கப் படற்கு
வாளின் அலகாய் மாற்றப் படற்கு.
ஓடிய **தோநாய் ஒன்றுறை சேற்றில்
செறிபுத ரிடையே திரிந்ததோர் கரடி 100
ஓநாய் **அடியில் உறுசேறு ஊர்ந்தது
கரடியின் கால்களில் காடு கலைந்தது.
கனிந்தாங் கெழுந்தது கடினவல் இரும்பு
உருக்கின் துண்டாங் குருவம் கொண்டது
ஓநாய் பாதம் ஊன்றிய இடத்தில்
கரடியின் குதிகள் கல்லிய இடத்தில்.
இல்மரி னன்எனும் கொல்லன் பிறந்தான்
பிறந்ததும் வளர்ந்ததும் இரண்டும் நிகழ்ந்தன
நிலத்தவன் பிறந்தது நிலக்கரிக் குன்றிலே
நிலத்தவன் வளர்ந்தது நிலக்கரிப் பரப்பிலே 110
செப்பின் சுத்தியல் செங்கரத் திருந்தது
சிறியதோர் குறடும் சேர்ந்தே இருந்தது.
இல்மரி னன்பிறப் பிரவுநே ரத்திலாம்
கொல்லவே லைத்தளம் எல்பகல் செய்தனன்
ஓர்இடம் பெற்றனன் உயர்தொழில் தளம்உற
ஊதுலைத் துருத்தியை ஓர்இடம் நிறுவிட
சேற்று நிலத்தொரு சிற்றிடம் கண்டனன்
ஈரமாய் அச்சிறு இடமதே யானதாம்
சென்றனன் அவ்விடம் செம்மையாய்ப் பார்த்திட
அண்மையில் நின்றவன் ஆய்வினைச் செய்யவே 120
அவ்விடம் ஊதுலைத் துருத்தியை அமைத்தவன்
உலைக்களம் ஒன்றினை உருப்பெறச் செய்தனன்.
ஓநாய்ச் சுவட்டை ஒற்றியே போனான்
கரடியின் அடியையும் கவனித் தேகினன்;
கண்டனன் அவ்விடம் கடினநல் இரும்பு
உருக்கதன் துண்டுகள் இருப்பதும் கண்டான்
ஓநாய்ச் சுவடுகள் உள்ளவவ் விடத்தில்
கரடியின் குதிக்கால் பதிவுகாண் பதியில்.
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்:
'ஐயகோ, ஏழைநீ யானகார் இரும்பே 130
இருக்கிறாய் கேவல மானவிவ் விடத்தில்
தாழ்ந்தவாழ் விடத்தில் தான்வாழ் கின்றாய்
ஓநாய்ச் சுவட்டில் உறுசேற் றுநிலம்
கரடியின் பாதம் பதிந்துகாண் பதியில்!'
சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்:
'உன்னுடை விளைவு என்னவாய் இருக்கும்
தீயில் உன்னைத் தோய்த்துக் காய்ச்சினால்
உலைக்களத் தினிலே உன்னையிட் டாக்கால்?'
இதைக்கேட் டேழை இரும்பு அதிர்ந்தது
அதிர்ந்தல மந்து அச்சம் கொண்டது 140
கனலின் சொல்லைக் காதில் கேட்டதும்
பெருங்கன லுடைய பேச்சு வந்ததும்.
இல்மரி னன்எனும் கொல்லன் கூறினன்:
'வருத்தப் படற்கு வகையேது மில்லை
தெரிந்தோரை நெருப்புத் தீய்ப்பதே யில்லை
சுற்றத்தை நெருப்புச் சுடுவதும் இல்லை.
கொதிகன லோனுடைக் கூடத் திருந்தால்
கொழுந்துவிட் டெரியும் கோட்டையில் வந்தால்
அழகுறும் உருவாங் கடைவதே யியல்பு
வனப்பொடு வண்ணமும் வருவதே யுண்டு 150
ஆண்களுக் குரிய அழகுறும் வாளாய்
பாவையர் இடுப்பின் பட்டிப் பட்டமாய்.'
அங்ஙனம் அந்தநாள் அன்று முடிந்ததும்
இரும்பைச் சதுப்பில் இருந்தே எடுத்து
சேற்று நிலத்தில் செறிந்ததை மீட்டு
கொல்லன் உலைக்குக் கொணரப் பட்டது.
கொல்லன் இரும்பைக் கொடுங்கனல் தள்ளினன்
இரும்பை உலையிடை இட்டனன் கொல்லன்
ஒருமுறை ஊதினான் இருமுறை ஊதினான்
மூன்றாம் முறையும் மீண்டும் ஊதினான் 160
குழைந்து இரும்பு குழம்பாய் வந்தது
கடின இரும்பு கனிந்தே வந்தது
கொண்டது வடிவம் கோதுமைக் களிபோல்
தானிய அடைக்குச் சரிப்படும் பசையாய்
கொல்லன் உலையில் கொதித்த தீயதில்
கொழுந்துவிட் டெரியும் கொதிகனற் சக்தியில்.
அப்பொழு தேழை இரும்பழுது உரைத்தது:
'ஓகோ, கொல்ல, உயர்இல் மரின!
இங்கிருந் தென்னை எடுப்பாய் வெளியே
வருத்தும் சென்னிற வளர்கன லிருந்து!' 170
கொல்லன்இல் மரினன் கூறினன் இங்ஙனம்:
'ஒளிர்கன லிருந்து உனைநான் எடுத்தால்
கோரமாய் ஓர்உரு கொள்ளுவாய் நீயே
கொடுமை நிறைந்த கருமம் செய்வாய்
தாக்கவும் கூடும்நின் சகோதர னையே
இன்னலைத் தருவைநின் அன்னையின் சேய்க்கே.'
ஏழை யிரும்பப் போத()ணை யிட்டது
சுத்தமாய் உண்மையாய்ச் சத்தியம் செய்தது
ஆணை உலைமேல் ஆணைகொல் களம்மேல்
ஆணைசுத்தி யல்மேல் ஆணைகட் டையின்மேல் 180
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னது
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தது:
'கடித்து விழுங்கக் கனமர முண்டு
உண்ணவும் கல்லின் உள்ளங்க ளுண்டு
தாக்கவும் மாட்டேன் சகோதரன் தனைநான்
அன்னையின் பிள்ளைக் கின்னலும் செய்யேன்.
எனக்குச் சிறந்தது அழியாது இருப்பதே
என்றுமே வாழ்ந்து இருப்பதே மிகநலம்
தோழரோ டிணைந்து துணையாய் இருப்பது
தொழிலாள ராயுதத் தொன்றா யிருப்பது 190
சொந்த உறவினை உண்பதைப் பார்க்கிலும்
ஆனஎன் உறவினை அழிப்பதைப் பார்க்கிலும்.'
அப்போ கொல்லன் அவன்இல் மரினன்
கவினழி வில்லாக் கைவினைக் கலைஞன்
இரும்பை அனலில் இருந்தே எடுத்தான்
அதனைப் பட்டடை அதன்மேல் வைத்தான்
அதனை மென்மையாய் அடித்தே எடுத்தான்
கருவிகள் கூர்மையாய்க் கவினுறச் செய்தான்
ஈட்டிகள் கோடரி எல்லாம் செய்தான்
பல்வகை யான படைக்கலம் செய்தான். 200
ஆயினும் குறைபா டதிலெதோ விருந்தது
ஏழை இரும்பில் இடர்ப்பா டிருந்தது
இரும்பின் நாக்கு இளகா திருந்தது
உருக்கின் வாயே உருவாக வில்லை
இரும்பிலே சிறிதும் இல்லையே வலிமை
அதனை நீரிலே அமிழ்த்தாத போது.
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
சிறிது தானே சிந்தனை செய்தான்:
சாம்பலை ஒன்றாய்த் தான்சிறி தெடுத்து
காரநீர் கொஞ்சம் கலந்துசற் றிணைத்து 210
உருக்கை உருக்கும் ஒருபசை யாக்கி
செய்தனன் இரும்பை இளக்கும் திரவம்.
நாவினால் திரவம் நக்கிப் பார்த்து
சுவைத்தான் நினைத்தது தோன்றிற் றோவென
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
'இவைகள் உகந்ததாய் இன்னமும் இல்லை
திரவம் உருக்கைச் செய்யுமா றில்லை
இரும்பில் பொருட்கள் இயற்றுமா றில்லை.'
நிலத்தி லிருந்தொரு நெடுவண் டெழுந்தது
நீலச் சிறகுடன் நேர்புல் திடலால் 220
அசைந்தது நகர்ந்தது அசைந்து படர்ந்தது
கொல்லுலை வேலைக்கு உளகளம் சுற்றி.
இங்ஙனம் அப்போ தியம்பினன் கொல்லன்:
'வண்டே, நிறைகுறை மனிதனே, ஓஓ!
தேனை உனது சிறகில் சுமந்துவா!
திகழுமுன் நாவிலே தேன்அதை ஏந்திவா!
அறுவகைப் பூக்களின் அலர்முடி யிருந்து
எழுவகைப் புல்லின் எழில்மடி யிருந்து
உருக்குப் பொருட்களை உருவாக் குதற்கு
இரும்பிற் பொருட்களை இயற்றுவ தற்கு.' 230
குளவியொன் றப்போ கூளியின் குருவி
அங்கே பார்த்து அதனைக் கேட்டது
குந்திப் பார்த்தது கூரைக் கோடியில்
பார்த்தது **மிலாறுப் பட்டைகீழ் இருந்து
உருக்குப் பொருட்கள் உருவம் ஆவதை
இரும்பில் பொருட்கள் இயற்றப் படுவதை.
பறந்தது ரீங்காரம் இட்டுஅது சுழன்றது
பரப்பி வந்தது பேயின் பயங்கரம்
திரிந்தது சுமந்து செறிஅரா நஞ்சம்
விரிகருங் கிருமி விடத்துடன் வந்தது 240
எறும்பதன் அரிக்கும் எரிதிர வத்தொடு
வந்தது தவளையின் மர்மநஞ் சுடனே
ஊட்டவே ஆலம் உருக்குப் பொருள்களில்
கூட்டவே இரும்பு பதஞ்செயும் திரவம்.
அவனே கொல்லன் அவ்வில் மரினன்
நித்திய வாழ்வுடை நேரிய கொல்லன்
எண்ணம் கொண்டான் இனிதுசிந் தித்தான்
தேன்உண் வண்டு திரும்பி வந்தது
தேவைக் குரிய தேனுடன் வந்தது
தேனைச் சுமந்து திரும்பி வந்தது 250
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
'எனக்கு நல்லது இவைகள் இருப்பது
செவ்வுருக் காக்கும் திரவம் சமைக்க
இரும்பின் பொருட்களை விரும்பி அமைக்க.'
அடுத்து உருக்கை அவன்கை எடுத்து
ஏழை இரும்பையும் எடுத்தான் ஒன்றாய்
நெருப்பில் இருந்ததை நேர்கைக் கொண்டு
உலையில் இருந்ததை ஒன்றாய் எடுத்தான்.
தீக்குணம் கொண்டது செவ்வுருக் கப்போ
இரும்புக் கடங்காப் பெருஞ்சினம் வந்தது 260
அதுதீக் குணத்தால் ஆணையை மீறி
வறுநாய் போல மாண்பை இழந்தது;
இழிந்துசோ தரனை எற்றிக் கடித்தது
உற்றசுற் றத்தை உறுவாய் கொண்டது
குருதியை ஆறாய்ப் பெருக வைத்தது
படர்நீ ரூற்றாய்ப் பாய வைத்தது."
உறுமினான் கிழவன் உறும்அடுப் பருகில்
தாடி அசைந்தது தலைகுலுங் கிற்று:
"இரும்பதன் பிறப்பு எனக்குத் தெரியும்
உருக்கதன் தீய வழக்கமும் தெரியும். 270
ஓ,நீ ஏழை, ஏழை இரும்பு,
ஏழை இரும்பு, பயனிலா இரும்பு,
உருக்கு அடுத்தது ஒருசூ னியப்பொருள்
நீயும் பிறந்த நிலையிப் படியா
தீயவை செய்யத் தினம்வளர்ந் திட்டது
தோற்றம் கொண்டது தொடர்பெரும் பொருட்களாய்?
முன்ஒரு கால்நீ முழுப்பெரி தல்லை
பெரியையு மல்லை சிறியையு மல்லை
அத்தனை அழகு அமைந்தது மில்லை
தீமைஅவ் வளவு திகழ்ந்தது மில்லை 280
நீபால் ஆக நிலைத்தவே ளையிலே
சுவையுறும் பாலாய் சுரந்தபோ தினிலே
இளமைப் பெண்ணின் எழில்மார் பகத்தில்
வனிதையின் கைகளில் வளர்ந்தநே ரத்தில்
விண்ணக மேக விளிம்பின் எல்லையில்
வளர்ந்து பரந்த வானதன் கீழே.
அப்போது நீயோ பெரியையும் அல்லை
பெரியையும் அல்லைச் சிறியையும் அல்லை
ஊற்றுச் சேற்றில் ஒளிந்த வேளையில்
தெளிந்த நீராய்த் திகழ்ந்த போதினில் 290
சதுப்பு நிலத்தின் தான்அகல் வாய்தனில்
கடினப் பாறைக் கற்குன் றுச்சியில்
மண்ணின் சேற்றுள் மாறிய வேளையில்
செந்துரு மண்ணாய்த் தேறிய வேளையில்.
அப்போது நீயோ பெரியையும் அல்லை
பெரியையும் அல்லைச் சிறியையும் அல்லை
**காட்டே றுன்னைச் சேற்றுறுத் துகையில்
**புல்வாய் மேட்டில் போட்டு மிதிக்கையில்
கால்களால் ஓனாய் கடிதழுத் துகையில்
கரடியின் பாதம் கடந்தவே ளையிலே. 300
அப்போது நீயோ பெரியையும் அல்லை
பெரியையும் அல்லைச் சிறியையும் அல்லை
சேற்றினில் இருந்துனை மீட்டவே ளையிலே
சதுப்புப் பூமியில் பெறப்படும் போதினில்
கொல்லன் தளத்துக் கொணர்ந்தநே ரத்தில்
இல்மரி னன்உலைக் களத்துறும் வேளையில்.
அப்போது நீயோ பெரியையும் அல்லை
பெரியையும் அல்லைச் சிறியையும் அல்லை
கடும்இரும் பாயாங் குறுமிய வேளையில்
அடிவெந் நீர்உனை அமுக்கிய போதினில் 310
உலைத்தீ அதிலே அழுத்திய நேரம்
சத்தியம் உண்மையாய்த் தான்செய்த வேளை
கொல்களம் மீதிலும் கொளும்உலை மீதிலும்
சுத்தியல் மீதிலும் தொடுகட்டை மீதிலும்
கொல்லனின் வேலை கொள்கள மீதிலும்
உலைத்தரை மீதிலும் உரைத்த()ணை யிடுகையில்.
பேருரு இப்போ பெற்றுவிட் டாயா?
உனக்கு ஆத்திரம் உதித்தே விட்டதா
இழிந்தோய், உன்ஆணை இன்றுடைந் திட்டதா?
நாய்போல் மதிப்பு நாசமா கிற்றா? 320
இன்னல் உனது இனத்துக் கிழைத்தனை
வறியஉன் கேளிரை வாயில் கொண்டனை.
தீய செயல்உனைச் செயத்தூண் டியதார்?
கொடுந்தொழில் செயவுனைக் கூறிய தெவர்கொல்?
உனைப்பயந் தவளா? உன்னுடைத் தந்தையா?
அல்லது மூத்தஉன் அருஞ்சகோ தரனா?
அல்லது இளையஉன் அருஞ்சகோ தரியா?
அல்லது யாரெனும் அரும்உற வினரா?
உந்தையும் அல்ல உன்தாய் அல்ல
மூத்த சகோதரன் முதல்எவ ரும்மிலர் 330
இளைய சகோதரி எவருமே அல்ல
உரிய உறவினர் ஒருவரும் அல்ல;
நீயாய்த் தானே நிகழ்த்தினை தீத்தொழில்
நெடும்பெரும் பிழையை நிகழ்த்தினை நீயே.
உணர்வாய் வந்து உன்தவறு இப்போ(து)
தீச்செய லுக்குச் செய்பரி காரம்
உனது தாயிடம் உரைப்பதன் முன்னர்
முறைப்பாடு செய்வதன் முன்பெற் றோரிடம்
அளவிலா வேலைகள் அன்னைக் குண்டு
பெரிய தொல்லைகள் பெற்றோர்க் குண்டு 340
தனையன் ஒருவன் தான்பிழை செய்கையில்
பிள்ளை ஒன்று பெருந்தவ றிழைக்கையில்.
இரத்தமே உனது பெருக்கை நிறுத்து!
உயர்சோரி ஆறே ஓட்டம் நிறுத்து!
பாய்வதை நிறுத்து பார்த்துஎன் தலையில்!
படர்ந்தென் நெஞ்சிற் பாய்வதை நிறுத்து!
இரத்தமே நில்முன் எதிர்சுவ ரைப்போல்!
மிகுசோரி ஆறே வேலியைப் போல்நில்!
ஆழியில் நிற்கும் **வாளென நிற்பாய்!
கொழுஞ்சே றெழுந்த கோரைப் புல்லென! 350
வயலிலே உள்ள வரம்பினைப் போல்நில்!
நீர்வீச்சி யில்உறு நெடுங்கல் எனநில்!
ஒருமனம் அப்படி உனக்கு இருந்தால்
வேகமாய் ஓடிப் பாயவேண் டுமென
தசைகள் ஊடே தான்செறிந் தோடு
எலும்பின் வழியே இனிப்பரந் தோடு
உடம்பின் உள்ளிடம் உனக்குச் சிறந்தது
தோலின் கீழே தொடர்தல்மிக் குகந்தது
நல்லது பாய்வதும் நரம்புக ளூடாய்
எலும்புகள் வழியாய்ப் பரம்பலும் நன்று 360
படிமிசை வீணாய்ப் பாய்வதைக் காட்டிலும்
அழுக்கிலே சிந்தி அகல்வதைக் காட்டிலும்.
பாலே மண்மேல் பரந்துசெல் லாதே
களங்கமில் குருதியே கடும்புல்புக் காதே
மனிதரின் சிறப்பே வளர்புல் ஏகேல்
வீரர்பொற் றுணையே மேடுசெல் லாதே
இருப்பிடம் உனக்கு இதயத் துள்ளது
சுவாசப் பைகளின் தொடர்கீழ் அறைகளில்;
பகருமவ் விடங்களில் பரவுக விரைவாய்
விளங்குமவ் விடங்களில் வேகமாய்ப் பாய்வாய்! 370
ஓடிட நீயொரு உயர்நதி யல்லை
பெருகிட நீயொரு பெருவாவி யல்ல
சிந்திடச் சதுப்புச் செழுநில மல்லைநீ
மரக்கலம் மோதித் தெறிக்குநீ ரல்லைநீ.
ஆனதால் அன்பே அறச்செய் பெருக்கினை
உலர்ந்துபோ அங்ஙனம் உடன்செய் யாவிடில்!
வரண்டதும் உண்டுமுன் வளர் *துர்யா வீழ்ச்சியும்
*துவோனலா நதியும் சேர்ந்துலர்ந் துள்ளது
கடலும் விண்ணும் காய்ந்தது வரண்டது 380
வரட்சிமுன் பெரிதாய் வந்தநே ரத்தில்
கொடுந்தீ பற்றிக் கொண்டநே ரத்தில்.
இதற்குநீ இன்னும் பணியா திருந்தால்
நினைவினில் உளவே நேர்பிற வழிகள்
புகல்வேன் அறிந்து புதிய மந்திரம்
அலகை யிடத்தொரு கலயம் கேட்பேன்
குருதியை அதனுள் கொதிக்கவும் வைப்பேன்
மூண்டசெங் குருதி முழுதையும் ஆங்கே
ஒருதுளி தானும் பெருநிலம் விழாமல்
சிவந்த இரத்தம் சிந்தப் படாமல் 390
பெருநிலத் திரத்தம் பெருக விடாமல்
மென்மேற் குருதி மிகுந்துபா யாமல்.
எனக்கிலை மனித சக்தியே என்றால்
மானிட முதல்வன் மகனல்ல என்றால்
இரத்தப் பெருக்கைத் தடுத்து நிறுத்த
நரம்பில் பாய்வதை வரம்பிட் டணைக்க
விண்ணிலே உள்ளார் விண்ணகத் தந்தை
எழில்முகில் களின்மேல் இருக்கும் இறைவன்
மனிதர்கட் கெல்லாம் மாபெரும் சக்தி
வீரர்கட் கெல்லாம் மிகப்பெரும் வீரன் 400
இரத்தத் தின்வாய் அடைத்து நிறுத்த
வெளிவரும் குருதியை முழுதாய் நிறுத்த.
மானிட முதல்வா, மாபெரும் கர்த்தா!
விண்ணுல கத்தே நண்ணிவாழ் இறைவா!
தேவையாம் தருணம் தெரிந்திங் கெழுக
வருவாய் அழைக்கும் தருணத் திங்கே
திணிப்பாய் நினது திருமாண் கரங்கள்
அழுத்துவாய் நினது அருவிறற் பெருவிரல்
காயத் துவாரம் கடிதடைத் திறுக்க
தீய கதவைத் திண்ணமாய் அடைக்க; 410
மென்மை இலைஅதன் மீதே பரப்பு
**தங்கநீ ராம்பலால் தடுத்ததை மூடு
குருதியின் வழிக்குக் கொள்தடை யொன்றிட
வெளிப்படும் பெருக்கை முழுப்படி நிறுத்த
குருதிஎன் தாடியில் கொட்டா திருக்க
ஓடா திருக்கஎன் உடுகந் தையிலே."
அங்ஙனம் இரத்த அகல்வா யடைத்தான்
அங்ஙனம் இரத்த அதர்வழி யடைத்தான்.
அனுப்பினான் மகனை அவன்தொழில் தலத்தே
பூசுமோர் மருந்து புண்ணுக் கியற்ற 420
புல்லில் இருக்கும் புணர்தா ளிருந்து
ஆயிரம் தலைகொள் மூலிகை யிருந்து
தரையிலே வடியும் தண்நறை யிருந்து
சொட்டும் இனியதேன் துளியிலே யிருந்து.
வேலைத் தலத்தே விரைந்தான் பையன்
பூச்சு மருந்தை வீச்சொடே சமைக்க
சிந்துர மரத்தைச் செல்வழி கண்டான்
இவ்விதம் கேட்டான் இகல்சிந் துரத்தை:
"உன்கிளை களிலே உண்டோ தேறல்
பட்டையின் உள்ளே படிதேன் உளதோ?" 430
சிந்துர மரமும் செப்பிய தொருமொழி:
"நேற்றே நேற்று நிகழ்பகல் வேளையில்
தேன்சொட் டியதென் செறிகிளை களிலே
தேன்மூடி நின்றதென் செழும்பசும் உச்சியில்
முகிலிலே யிருந்து முகிழ்ந்து வடிந்ததேன்
முகிலின் ஆவியில் முகிழ்ந்ததேன் அதுவே."
ஒடித்தான் சிந்துர ஒளிர்மரச் சுள்ளிகள்
எடுத்தான் மரத்திலே இருந்துஉகு துகள்களை
சிறந்த புல்லில் சிற்சில எடுத்தான்
பல்வகை மூலிகை பலவுமே எடுத்தான் 440
இவைகளைக் காணொணா திந்நாட் டினிலே
எல்லா இடத்திலும் இவைவளர்ந் திலவாம்.
கலயம் எடுத்து கனலிலே வைத்தான்
அதனுள் கலவையை அவன்கொதிப் பித்தான்
நிறைத்தான் சிந்துர நிமிர்மரப் பட்டைகள்
சேர்த்தான் சிறப்பாய்த் தேர்ந்த புற்களை.
கலகல ஒலியொடே கலயம் கொதித்தது
மூன்று இரவுகள் முழுதும் கொதித்தது
வசந்தத்து மூன்று வருபகல் கொதித்தது
பூச்சு மருந்தினைப் பார்த்தான் பின்னர் 450
பயன்படுத் தத்தகு பதமா மருந்தென
உகந்ததா மந்திரம் உறுமருந் தென்று.
ஆயினும் தகுந்ததாய் அம்மருந் தில்லை
உறுமந் திரமருந் துகந்ததா யில்லை;
சேர்த்தான் மேலும் சிலவகைப் புற்களை
பல்வகை மூலிகை பலதையும் சேர்த்தான்
பல்வே றிடங்களில் பாங்குறப் பெற்றவை
அவைசதப் **பயண அரும்வழி சேர்த்தவை
தந்தவை ஒன்பது மந்திர வாதிகள்
எண்மர் வைத்தியம் அறிந்தவர் ஈந்தவை. 460
கொதிக்க வைத்தான் அடுத்துமூன் றிரவுகள்
இறுதியாய் ஒன்பது இரவுகள் வைத்தனன்
அடுப்பினில் இருந்து எடுத்தான் கலயம்
பூச்சு மருந்தினைப் பார்த்தான் மீண்டும்
பயன்படுத் தத்தகு பதமா மருந்தென
உகந்ததா மந்திரம் உறுமருந் தென்று.
கிளைபல செறிந்த **வளவர சொன்று
வயலின் ஓரம் மறுகரை நின்றது
கொலைத் தொழிற் பையன் கூர்ந்ததை உடைத்து
இரண்டே இரண்டு பாகமாய்க் கிழித்தான்; 470
பூச்சு மருந்தைப் பூசினான் அதனில்
வைத்தியம் செய்தான் மருந்தத னாலே
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"மருந்து இதி லொரு மகிமை இருந்தால்
புண்களின் மீது பூசலாம் என்றால்
பூசிக் காயம் போக்கலாம் என்றால்
அரசே முழுமையாய் அமைந்துநன் கெழுவாய்
சிறந்துமுன் னரிலும் செழுமையாய் எழுவாய்!"
அரசு முழுமையாய் அமைந்துநன் கெழுந்தது
சிறந்துமுன் னரிலும் செழுமையாய் எழுந்தது 480
முடிவரை வளர்ந்து வடிவாய் நின்றது
அடிமரம் இன்னும் அமைந்துநன் கிருந்தது.
பின்னரும் மருந்தை நன்குசோ தித்தான்
பயனுடன் மருந்தின் பரிகரிப் புணர்ந்தான்
தேய்த்தான் உடைந்து சிதறிய கற்களில்
பகுபட வெடித்த பாறையில் தேய்த்தான்;
கற்கள் கற்களாய் கடும்பலத் தொன்றின
பாறைகள் இணைந்து பாங்காய்ப் பொருந்தின.
வேலைத் தலத்தினால் மீண்டான் பையன்
பூச்சு மருந்தினை ஆக்கலில் இருந்து 490
கலவை மருந்தினைக் கலப்பதில் இருந்து
முதியோன் கரங்களில் அதைஅவன் வைத்தான்:
"இதோநம் பிக்கைக் கேற்றநல் மருந்து
சித்தி வாய்ந்த சிறப்புறு மருந்து
மலைகளை இணைக்க வல்லது ஒன்றாய்
அனைத்துப் பாறையும் இணைத்திட வல்லது."
நாக்கினால் கிழவன் நன்குசோ தித்தான்
இனிய வாயால் நனிசுவைத் திட்டான்
பயன்பரி காரம் பாங்கா யுணர்ந்தான்
சித்தியும் சிறப்பும் தேர்ந்தறிந் திட்டான். 500
வைனா மொயினனில் மருந்தைப் பூசினன்
நோயடைந் தோனை நுவல்சுக மாக்கினன்
மேற்புறம் பூசினன் கீழ்ப்புறம் பூசினன்
பூசினன் மத்திய பாகமும் பூர்த்தியாய்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"எனது தசையினால் இதைப்போக் கிலன்யான்
கர்த்தரின் தசையால் கடிதுபோக் குகிறேன்
எனது சக்தியால் இதுசெய் திலன்யான்
சர்வவல் லவனின் சக்தியால் செய்கிறேன் 510
எனது வாயினால் நான் பேசவில்லை
இறைவனின் வாயினால் நான்பேசு கின்றேன்;
எனது வாயே இனியது என்றால்
இறைவனின் வாயே இனியது அதனிலும்
எனது கரங்கள் சிறந்தவை என்றால்
இறைவனின் கரங்கள் அதனினும் சிறந்தவை."
பூச்சு மருந்தைப் பூசிய பொழுது
சிறப்புறு மருந்தைத் தேய்த்தபோ தினிலே
நினைவின் சக்தியில் பாதியை நீக்கி
வைனா மொயினனை மயங்கச் செய்தது; 520
அறைந்தான் இப்புறம் அறைந்தான் அப்புறம்
அமைதி அற்றனன் ஆறுதல் அற்றனன்.
ஓட்டினன் கிழவன் உறுநோய் இங்ஙனம்
துன்பம் தருநோய் தூரவிலக் கினான்
**நோவின் குன்றில் நோவை ஏற்றினான்
நோவின் மலையின் நுவல்முடி யேற்றினான்
**சிலையிடை நோவைத் திணித்தனன் அங்கே
தந்தனன் பாறைகள் பிளக்கத் தகுதுயர்.
எடுத்தனன் ஒருபிடி இயல்பட் டுத்துணி
நீளத் துண்டுகள் நிலைபெற வெட்டினன் 530
சிறுசிறு துண்டுகள் சிதையக் கிழித்தனன்
உருட்டிச் சுற்றுத் துணிஉரு வாக்கினன்;
கட்டினன் உருட்டிய பட்டுத் துணியினால்
கட்டினன் அழகுறு பட்டுத் துணியினால்
மனிதனின் முழங்கால் வருரணம் சுற்றினன்
வைனா மொயினன் வல்விரல் சுற்றினன்.
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"ஆண்டவன் பட்டுத் துணிஇது ஆகுக
ஆகுக சுற்றுத் துணிஇறை ஆடையே 540
நலமுறும் இந்த நன்முழங் காற்கு
தூய்மை யுறுங்கால் தொடுபெரு விரற்கு
இப்பொழு தருள்மிகும் இறைவனே, பாரீர்!
மாபெரும் கர்த்தரே, வந்துகாப் பளியும்!
அருள்வீர் துன்பம் அணுகா தெதுவும்
தீதெதும் தொடரா திருந்துகாப் பீரே!"
முதிய வைனா மொயினன் பின்னர்
உதவி வந்ததை உணரப் பெற்றான்
வாய்த்தது நலமும் வந்தே விரைவில்
வளர்ந்து தசைகள் வளமும் பெற்றன 550
பெற்றனன் கீழ்ப்புறம் பெரும்நலம் சுகமும்
மறைந்தன நோவும் நோயும் மத்தியில்
போனது பக்கத் திருந்த புணர்நோ
அழிந்தது மேற்புறத் தமைந்த காயமும்
முன்னரைக் காட்டிலும் முழுப்பலம் பெற்றான்
நலம்மிகப் பெற்றான் நாடுமுன் நாளிலும்
நடக்க முடிந்தது நன்குஇப் பொழுதவன்
முழங்கால் மடக்க முடிந்தது நிறுத்த,
அடியொடு நோயும் நோவும் அற்றன
துளியும் இல்லை தொடர்வதை வருத்தம். 560
முதிய வைனா மொயினனப் போது
விழிகளைத் திருப்பி மேலே நோக்கி
ஆங்கு பார்வையை அழகாய்ச் செலுத்தினன்
சிரசின் மேலே தெரிவிண் உலகு
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"கருணையாங் கிருந்து கணந்தொறும் பெருகும்
அன்பும் அபயமும் அனுதினம் கிடைக்கும்
வானத்தில் விண்ணின் மறுஉல கிருந்து
எல்லாம் வல்ல இறையிட மிருந்து. 570
இறைவனே, நன்றி இப்போ புகல்வோம்,
இறைநின் புகழே இசைப்போம் கர்த்தரே!
இந்த உதவியைத் தந்தமைக் கெனக்கு
அன்புடை அபயம் அளித்தமைக் கெனக்கு
கொடுயதாய் வந்த இடும்பையி லிருந்து
இரும்பின் கூரிய இன்னலி லிருந்து!"
முதிய வைனா மொயினனப் போது
பின்வரும் பொழிகளில் பேசினன் பின்னும்:
"இனிவரும் மக்களே இதுஅற வேண்டாம்
வேண்டாமெப் போதும் மிகுவளர் மக்காள் 580
வீம்புவார்த தைக்கு மிளிர்பட கமைத்தல்
படைத்தலும் வேண்டாம் படகுக் கைமரம்;
மன்னுயிர் போம்வழி வகுத்தவன் இறைவன்
பயணத் தெல்லையைப் பகர்ந்தவன் கர்த்தன்
மனித தீரத்தில் வயமேது மில்லை
வீரனின் சக்தியில் விளைவேது மில்லை."
பாடல் 10 - சம்போவ ைச் செய்தல்
அடிகள் 1 - 100 : வைனாமொயினன் வீட்டுக்கு வந்து, இல்மரினனை வட பகுதிக்குச் சென்று சம்போவைச் செய்து வடநில மங்கையைப் பெறும்படி கூறுகிறான்.
அடிகள் 101 - 200 : இல்மரினன் வடபகுதிக்குச் செல்ல மறுக்கிறான். வைனாமொயினன் வேறு வழிகளைக் கையாண்டு அவனை வடபகுதிக்கு அனுப்புகிறான்.
அடிகள் 201 - 280 : இல்மரினன் வடபகுதிக்கு வருகிறான். அங்கு அவன் நன்கு வரவேற்கப்பட்டுச் சம்போவைச் செய்வதாக வாக்கு அளிக்கிறான்.
அடிகள் 281 - 432 : இல்மரினன் சம்போவைச் செய்து முடித்ததும் வடநிலத் தலைவி அதை வடக்கே மலைப் பாறைகளில் வைக்கிறாள்.
அடிகள் 433 - 462 : இல்மரினன் தனது வேலைக்கு ஊதியமாக வடநில மங்கையைக் கேட்கிறான். அவள் தான் இன்னமும் வீட்டை விட்டுப் புறப்படக்கூடிய நிலையில் என்கிறாள்.
அடிகள் 463 - 510 : இல்மரினன் ஒரு படகைப் பெற்று வீட்டுக்குத் திரும்பி, தான் வட பகுதியில் சம்போவைச் செய்துவிட்டதாக வைனாமொயினனுக்குக் கூறுகிறான்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
எடுத்தான் **பழுப்பு இகல்பொலிப் புரவி
புரவியைச் சேணம் பூட்டினன் பின்னர்
மண்ணிறப் புரவி வண்டிமுன் நின்றது
வண்டியில் தானே வலுவிரை வேறினன்
அமர்ந்து கொண்டனன் அவ்வண் டியினுள்.
சவுக்கைச் சுழற்றிச் சாடினன் பரியை
மணிமுனைச் சாட்டையால் வான்பரி அறைந்தனன்
பறந்தது புரவி பயணம் விரைந்தது
வண்டி உருண்டது வருதொலை குறைந்தது 10
மிலாறுவின் சட்டம் மிகச்சல சலக்க
**பேரியின் ஏர்க்கால் பின்கட கடத்தது.
அதன்பின் தொடர்ந்து அவன்பய ணித்தான்
நாட்டின் பரப்பிலும் நகர்நிலச் சதுப்பிலும்
திறந்து கிடந்த செறிவன வெளியிலும்.
ஒருநாள் சென்றான் இருநாள் சென்றான்
சென்றான் அங்ஙனம் மூன்றாம் நாளிலும்
வந்தான் பாலம் வருநீள் முடிவில்.
கலேவலா விருந்த கவின்பெரு விடங்களில்
வந்தான் ஒஸ்மோ வயல்களின் எல்லையில். 20
பின்வரும் சொற்களில் பின்அவன் சொன்னான்
உரைத்தே அவன்தான் உரைசெய லாயினன்:
"ஓநாய், உணவுகொள், கனவுகாண் பவரை,
லாப்லாந் தியரை இங்குகொல், நோயே,
'நான்இல் செல்லேன்' என்றவர் நவின்றார்
மேலும் 'வாழேன் விழியோ' டென்றார்
'இனிஇவ் வுலகில் இல்லைநான்' என்றார்
பொன்னிலாத் திகழும் பொற்பொழு தெல்லாம்
வைனோ என்னும் வளமுறு நாட்டில்
கலேவலா எனும்புதர்க் கவின்சம வெளியில்." 30
முதிய வைனா மொயினன் பின்னர்
பாடினான் மந்திரப் பாடலைப் பயின்றான்
பாடினான் தேவ தாருயர்ந் தலர்ந்தது
மலருடன் பொன்னிலை வளர்ந்து செழித்தது
எட்டிநின் றதுஅதன் எழில்முடி வானை
தவழ்முகில் களின்மேல் தழைத்து நின்றது
படர்கிளை வானில் பரப்பி நின்றது
திகழ்வான் எங்கும் செறிந்து நின்றது.
பாடினான் மந்திரப் பாடலைப் பயின்றான்
திங்களின் நிலவு திகழப் பாடினன் 40
பொன்முடித் தாரு பொலியப் பாடினன்
கவின்கிளைத் **தாரகைக் கணத்தைப் பாடினன்
அதன்பின் தொடர்ந்து பயணம் செய்தனன்
நச்சிய வசிப்பிடம் புக்கச் சென்றனன்
தாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன்
தொய்ந்து சரிந்த தொப்பியை அணிந்து,
அவனே கொல்லன் அவ்வில் மரினனை
கவினழி வில்லாத கைவினைக் கலைஞன்
வழியனுப் புவதாய் வாக்களித் தானே
தன்தலை போயினும் தருவதாய்ச் சொன்னான் 50
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே
புகார்படி *சரியொலாப் புகுநிலப் பரப்பில்.
நிமிர்பொலிப் பரியை நிறுத்தினன் முடிவில்
ஒஸ்மோ வின்புது உயர்வய லருகில்
முதிய வைனா மொயினன் அதன்பின்
வண்டியில் இருந்தே வன்தலை தூக்கி
வேலைத் தலத்தின் மிகுஒலி கேட்டனன்
நிலக்கரிக் குடிசையின் **கலக்கொலி கேட்டனன்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
வேலைத் தலத்தில் தானே நுழைந்தனன் 60
இருந்தனன் அங்கே கொல்லன்இல் மரினன்
வியன்சுத் தியலால் வேலைசெய் தவனாய்.
கொல்லன்இல் மரினன் கூறினன் இங்ஙனம்:
"வருவாய் முதிய வைனா மொயினனே
இந்நீள் நாட்கள் எங்கே சென்றனை
எங்கே இருந்தனை இத்தனை காலமும்?"
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"அங்கே சென்றேன் அந்தநீள் நாட்கள்
அங்கே இருந்தேன் அத்தனை காலமும் 70
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே
புகார்படி சரியொலாப் புகுநிலப் பரப்பில்
லாப்பின் பனியிலே வழுக்கிச் சென்றேன்
மந்திர அறிஞரின் வன்புலத் திருந்தேன்."
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஓகோ, முதிய வைனா மொயின!
நிலைபெறும் மாய நெறியறி முதல்வ!
பார்த்தது என்ன பயணப் போதிலே
வந்தாய் நின்இல் வழங்குக விபரம்" 80
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"சங்கதி எ(வ்)வளவோ சாற்றுதற் குண்டு
வடக்கே வாழ்கிறாள் வனிதை ஒருத்தி
குளிர்மிகும் கிராமக் குமரி ஒருத்தி
வாழ்வின் துணைவனை வரிக்கிறாள் இல்லை
நலமிகும் கணவரை நாடுவாள் இல்லை
வடநிலப் பாதி புகழ்கிற தவளை
அழகில் நிகரே அற்றவள் என்று:
விழியின் புருவத் தொளிரும் சந்திரன்
சூரியன் அவளின் மார்பிலே மிளிரும் 90
தோள்களில் துள்ளும் **தாரகைக் கூட்டம்
ஏழு தாரகை எழில்முது கொளிரும்.
இப்போது கொல்லன் இல்மரி னன்நீ,
கவின்அழி வில்லாக் கொல்வினைக் கலைஞ!
செல்வாய், அந்தச் சேயிழை அடைவாய்,
மின்னும் கூந்தலின் பொன்தலை காண்பாய்
சம்போ என்னும் சாதனம் செய்தால்
பாங்குடன் ஒளிரும் மூடியும் படைத்தால்
அரிவையை ஊதிய மாகநீ அடைவாய்
அழகியைத் தொழிற்குப் பலனாய் அடைவாய்." 100
கொல்லன்இல் மரினன் கூறினன் இங்ஙனம்:
"ஓகோ, முதிய வைனா மொயினனே!
வாக்களித் தனையோ மற்றெனைத் தரலாய்
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே
உன்தலை காத்தற் குறுதுணை யாக
உனக்கு விடுதலை தனைப்பெறற் காக?
என்நீள் வாழ்நாள் என்றுமே செய்யேன்
பொன்னிலாத் திகழும் பொற்பொழு தெல்லாம்
வடபால் நிலத்து வசிப்பிடம் போகேன்
சரியோ லாப்புறத் துறுகுடில் செல்லேன் 110
மனிதரை உண்ணும் மருண்டபூ மிக்கு
இகல்வலார் அழிக்கும் ஏழ்மைநாட் டுக்கு."
முதிய வைனா மொயினன் பின்னர்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"இன்னோர் அற்புதம் இருக்கிற தங்கே
மலர்முடித் தேவ தாரொரு மரமுள
மலர்முடி யோடு வளர்பொன் இலைகள்
ஆங்குஒஸ் மோவின் அகல்வயல் எல்லையில்
உச்சியில் திங்களின் உயர்நிலா வொளிரும்
கவின்கிளைத் தாரகைக் கணங்கள் இருக்கும்." 120
கொல்லன்இல் மரினன் கூறினன் இங்ஙனம்:
"நம்புதற் கில்லைநீ நவிலும்இக் கூற்றைநான்
நேரிலே போயதைப் பார்வைகொள் வரையிலும்
எனதுகண் களால்அதை எதிர்கொளும் வரையிலும்!"
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"நம்புதல் உனக்கு நன்கிலை யென்பதால்
நேரிலே சென்றுநாம் நிகழ்வதைப் பார்க்கலாம்
உணரலாம் பொய்யா உண்மையா என்பதை."
ஏகினர் பார்த்திட இருவரும் நேரில்
மலர்களால் மூடிய வளர்முடி மரத்தை 130
முதிய வைனா மொயினன் முதலில்
கொல்லன்இல் மரினன் கூடும் அடுத்தவன்.
அங்கே இருவரும் அடைந்தநே ரத்தில்
ஒஸ்மோ வயலில் ஒருப்படும் எல்லையில்
நிறுத்தினன் நடையை நின்றனன் கொல்லன்
திகைத்தனன் கண்டு தேவ தாருவை
கிளர்தா ரகைக்கணம் கிளையில் இருந்தது
மரத்தின் முடியினில் வளர்நிலா இருந்தது.
முதிய வைனா மொயினனு மாங்கே
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: 140
"இப்போநீ கொல்ல, இனியசோ தரனே!
மரத்தில் ஏறுவாய் மதியினை எடுக்க
கைகளில் தாரகைக் கணத்தினைக் கொள்ள
உச்சியைப் பொன்னிலே உடைய மரத்திலே!"
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
ஏறினன் உயரத் தெழில்மரம் மேலே
விண்வரை உயர விரைந்துயர் வேறினன்
கவினுறு திங்களைக் கைகொள வேறினன்
எடுத்திட ஏறினன் இனியதா ரகைக்குழாம்
திகழ்பொன் முடியுடைத் தேவதா ருவிலே. 150
பொன்மலர் முடியொடு பொலிந்த தாரது
அகன்ற தலையுடை அருந்தரு மொழிந்தது:
"ஐயகோ, சித்தம் அற்றபேய் மனிதா,
அனுபவம் அற்ற அப்பாவி மனிதா,
வேடிக்கை மனிதனே விரிகிளை ஏறினாய்
வந்தனை குழந்தைத் தனமாய் முடிவரை
திங்களின் சாயையைச் சீராய்ப் பெறற்காய்
பொய்யாம் உடுக்களைப் புக்கெடுப் பதற்காய்!"
முதிய வைனா மொயினனப் போது
பதமென் குரலால் பாடத் தொடங்கினன் 160
தொடர்காற் றெழுந்து சுழலப் பாடினன்
கொடுங்காற் றகோரம் கொள்ளப் பாடினன்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"சுழல்கால் இவனையுன் தோணியிற் கொள்வாய்
பவனமே உனது படகினில் பெறுவாய்
கொண்டுநீ சேர்ப்பாய் கொடுந்தொலை நாட்டில்
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே!"
காற்றுச் சுழன்று கடுகதி எழுந்தது
வாயு ஆங்கார மதுகொண் டெழுந்தது 170
கொல்லன்இல் மரினனைக் கொண்டு சென்றது
தூர தேசத்துத் தூக்கிச் சென்றது
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே
புகார்படி சரியொலாப் புகுநிலப் பரப்பில்.
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
சென்றான் தொடர்ந்து செய்தான் பயணம்
காற்று வீசிய கடுவழி சென்றான்
வாயு வீசிய வழியினிற் சென்றான்
திங்களின் மேலும் செங்கதிர்க் கீழும்
தாரகைக் கணத்தின் தயங்குதோள் மீதும்; 180
வடபால் முற்றம் வரையிலும் சென்றான்
சரியொலா சவுனா தம்தெரு சென்றான்
அவனை நாய்களோ அறியவே யில்லை
கடுங்குரை நாய்கள் கவனிக்க வில்லை.
லொவ்ஹி என்பவள் வடநிலத் தலைவி
நீக்கல் எயிறுள நீள்வட முதுபெண்
வந்துமுற் றத்தில் வனப்பொடு நின்றாள்
இவ்விதம் தானே இயம்பிட லானாள்:
"எவ்வகை மனித இனத்தினன் நீதான்
வீரனே யாயினும் எவ்வகை வீரன் 190
பவனம் வீசும் பாதையில் வந்தாய்
வந்தாய் வாயுவின் வழியின் தடத்திலே
ஆயினும் நாய்கள் அவைகுரைத் திலவே
சடைவால் நாய்கள் சத்தமிட் டிலவே."
கொல்லன்இல் மரினன் கூறினன் இங்ஙனம்:
"நானும் இங்கு நண்ணிய துண்மையாய்
கிராமத்து நாய்கள் கிளர்ந்தெழ அல்ல
செறிசடை வால்நாய் சினப்பதற் கல்ல
அன்னிய மானஇவ் வகல்கடை வாயிலில்
அறிமுக மற்றஇவ் வகல்வாய் வழியினில்." 200
அந்த வடநிலத் தலைவியும் அதன்பின்
உறுநவ அதிதியை உசாவினாள் இப்படி:
"அறிந்ததுண் டோ நீ, அறிமுகம் உண்டோ ?
உண்டோ கேட்டது உனக்குத் தெரியுமோ?
இல்மரினன் எனும் வல்லஅக் கொல்லனை
கைவினை வல்லோன் கவின்மிகும் கலைஞன்?
எதிர்பார்த் தவனை இருந்தோம் பலநாள்
இருந்தோம் வருவான் இங்கென வெகுநாள்
இந்த வடபால் இயைநிலப் பகுதியில்
சம்போ புதியாய்ச் சமைப்பதற் காக." 210
அவனே கொல்லன் அவ்வில் மரினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"அறிவேன் என்றும் சொல்லலாம் அவனை
வல்லஇல் மரினன் எனுமக் கொல்லனை
ஏனெனில் நான்இல் மரினன்என் பான்தான்
கவினழி வில்லாக் கலைஞனும் நானே."
லொவ்ஹி என்பவள் வடநிலத் தலைவி
நீக்கல் எயிறுள நீள்வட முதுபெண்
வீட்டினுக் குள்ளே விரைந்து சென்றனள்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னாள்: 220
"எனது செல்வியே, இளமென் மங்கையே,
பிள்ளைகள் அனைத்திலும் பெரும்இகல் பிள்ளாய்,
அணிவாய் ஆடைகள் அனைத்திலும் சிறந்ததை
வெண்மையாய் உள்ளதை மேனியில் தரிப்பாய்
மென்மையாய் இருப்பதை மிலைவாய் மார்பில்
நேர்த்தியாய் இருப்பதை நெஞ்சிலே அணிவாய்
சிறந்த அணிகளைச் செழுங்கழுத் தேற்றி
தரிப்பாய் நல்லதைத் தண்ணுதற் புருவம்
கன்னம் செந்நிறக் கவினுற மாற்றி
அலங்கா ரிப்பாய் அழகாய் வதனம் 230
இப்போ கொல்லன்இல் மரினன் என்பவன்
கவின்அழி வில்லாக் கைவினைக் கலைஞன்
சம்போ செய்யத் தானிங் குற்றான்
திகழ்ஒளி மூடியும் செய்வான் அதற்கே."
வடபால் நிலத்து வளமுறு நங்கை
நீரிலும் நிலத்திலும் நெடும்புகழ் பெற்றவள்
ஆடைகள் அனைத்திலும் அரியதை எடுத்தாள்
சுத்தமா யிருந்த சுடருடை எடுத்தாள்
ஆடைகள் அணிந்தாள் அலங்கரித் திட்டாள்
தலையணி ஆடை நலஒழுங் கமைத்தாள் 240
செப்பினால் பட்டியை செறித்தனள் இடையில்
பொன்னிலாம் மின்னரைக் கச்சினைப் பூட்டினள்.
வீட்டினி லிருந்து விரைந்தனள் கூடம்
முற்றத்தில் மெல்லடி வைத்துநின் றிட்டாள்
பேரொளி அவளது பெருவிழித் தெரிந்தது
காதுகள் உயர்ந்து கவினுற விளங்கின
முகத்திலே அழகது முழுமையா யிருந்தது
செழுமையாய் மிளிர்ந்தன சிவந்தகன் னங்கள்
பொன்னணி மின்னின பொலிந்துமார் பினிலே
மின்னின சென்னியில் வெள்ளிநல் அணிகள். 250
அவளே வடநிலத் தலைவியப் போது
கொல்லன்இல் மரினனைக் கூட்டிச் சென்று
வடபால் நிலத்து மாடங்கள் காட்டி
கூடம் சரியொலா எங்கும் காட்டினள்.
அங்கே அவனுக் கருவிருந் தளித்து
பானம் நிறையப் பாங்காய்க் கொடுத்து
மனம்நிறைந் தவனை உபசரித் திட்டாள்
தானே இவ்விதம் சாற்றத் தொடங்கினள்
"ஓகோ, கொல்ல, உயர்இல் மரின!
கவின்அழி வில்லாக் கைவினைக் கலைஞ! 260
சம்போ உன்னால் சமைக்க முடிந்தால்
முதிர்ஒளி நிறங்களில் மூடியும் செய்தால்
அன்னத் திறகின் அணிமுனை யிருந்து
மலட்டுப் பசுவின் மடிப்பா லிருந்து
ஒருசிறு பார்லி ஒளிர்மணி யிருந்து
கோடை ஆட்டின் குறுமயி ரிருந்து
அரிவையைப் பெறுவாய் அதற்கூ தியமாய்
அப்பணிக் கேற்ப அழகியைப் பெறுவாய்."
அப்போ கொல்லன் அவன்இல் மரினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: 270
"என்னால் சம்போ இயற்றிட முடியும்
முதிர்ஒளி நிறங்களில் மூடியும் செய்வேன்
அன்னத் திறகின் அணிமுனை யிருந்து
மலட்டுப் பசுவின் மடிப்பா லிருந்து
ஒருசிறு பார்லி ஒளிர்மணி யிருந்து
கோடை ஆட்டின் குறுமயி ரிருந்து
ஏனெனில் விண்ணை இயற்றியோன் நானே
வானக மூடியை வனைந்தவன் நானே
ஒன்றுமே யில்லா ஒன்றினி லிருந்து
அடிப்படை எதுவுமே அற்றதி லிருந்து." 280
அவன்சம் போசெய ஆயத்த மானான்
முதிர்ஒளி நிறங்களில் மூடியும் செய்ய
வேலைத் தலமாய் வேண்டினன் ஓரிடம்
கேட்டான் வேண்டிய கருவிவே லைக்கு;
ஆயினும் வேலைக் கங்கிட மில்லை
தொடர்தொழில் தலமும் துருத்தியும் இல்லை
இல்லை உலைக்களம் இல்லைப் பட்டடை
இல்லை சம்மட்டி இல்லைக் கைப்பிடி.
அப்போ கொல்லன் அவன்இல் மரினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 290
"தளர்முது பெண்கள் சந்தே கிப்பர்
சிறுமன மாந்தர் செய்வர் குறைத்தொழில்
இழிந்தவன் கூடஆண் இதுசெய மாட்டான்
சோம்புறு மனிதனும் வீம்பெதும் செய்யான்."
ஓரிடம் தேடினன் உலைக்களம் வைக்க
பார்த்தனன் ஒருதடம் பட்டடை அமைக்க
அவ்வட நாட்டின் அகல்பரப் பினிலே
வடநிலத் தமைந்த வயற்பரப் பினிலே.
ஒருநாள் தேடினன் மறுநாள் தேடினன்
மூன்றாம் நாளும் முடிவாய்த் தேடினன் 300
கடைசியில் மின்னுமோர் கல்லினைக் கண்டான்
கண்டான் கனத்துச் செறிந்தகற் பாறை.
தேடலை நிறுத்தித் தேர்ந்தஅவ் விடத்தில்
கொழுங்கன லாங்கே கொல்லன் மூட்டினன்
அங்கே பட்டடை அமைத்தான் முதல்நாள்
மறுநாள் உலைக்களம் மகிழ்ந்தொன் றமைத்தான்.
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
கவின்அழி வில்லாக் கைவினைக் கலைஞன்
உறுபொருட் களையவ் வுலையினில் வைத்து
உலையின் அடியில் உயர்தொழில் தொடங்கினன் 310
அடிமைகள் கொண்டான் அவ்வுலை ஊத
இயக்கினர் துருத்தியை இடைநின் றடிமைகள்.
ஊதினர் அடிமைகள் உலையினை நின்று
துருத்தியை இயக்கித் தொடர்தொழில் செய்தனர்
கோடைகா லத்துக் கொள்பகல் மூன்றிலும்
கோடைகா லத்துக் குளிர்நிசி மூன்றிலும்
கற்கள் குதிகாற் களின்கீழ் வளர்ந்தன
எழுந்தன பாறைகள் இகல்பெரு விரலடி.
அவ்விதம் வந்து அணைமுத லாம்நாள்
அவனே கொல்லன் அவன்இல் மரினன் 320
இருந்து குனிந்துள் எட்டிப் பார்த்தான்
அவனது உலைக்கள அடிப்புறம் தன்னில்
என்ன வருவது என்பதை அறிய
தீயினி லிருந்து செருகன லிருந்து.
உலையில் குறுக்குவில் ஒன்றிருந் தெழுந்தது
விளங்குபொன் தனுவது வெப்பத் திருந்து
முனையது வெள்ளியம் முழுவில் தங்கம்
செப்பின் ஒளியொடே திகழ்விற் கைப்பிடி.
சிலையது பார்க்கச் சிறப்புறு தோற்றம்
ஆயினும் தீச்செயல் அதன்கண் ஆனது 330
கேட்டது நாள்தொறும் கிளர்வில் ஓர்தலை
இருதலை கேட்டது இயையும் நல்நாள்.
அவனே கொல்லன் அவன்இல் மரினன்
நெஞ்சத் ததனால் நிறைவே இல்லை
வேறிரு துண்டாய் வில்லை முறித்தான்
மீண்டும் போட்டான் வெங்கனல் மீதே
ஊதினர் அடிமைகள் உடன்நின் றுலையை
துருத்தியை இயக்கித் தொழிலதை ஆற்றினர்.
அந்தநாள் முடிந்து அடுத்தநாள் வந்தது
கொல்லன்இல் மரினன் குறிப்பாய்த் தானே 340
இருந்து குனிந்துள் எட்டிப் பார்த்தனன்
அவனது உலைக்கள அடிப்புறம் தன்னில்
உலையில் இருந்து உதித்ததோர் படகு
செந்நிறப் படகு செறிகன லிருந்து
முன்முனைப் படகு பொன்னில் மிளிர்ந்தது
**மிண்டுக் குவடு மிளிர்ந்தன செப்பால்.
பார்க்க நன்றாய்ப் படகு இருந்தது
ஆயினும் தீச்செயல் அதன்கண் ஆனது
காரண மின்றிப் போருக் கெழுந்தது
ஆதார மின்றி அதுபோர் கேட்டது. 350
அந்தக் கொல்லன் அவன்இல் மரினன்
நெஞ்சத் ததனால் நிறைவே இல்லை
துண்ட துண்டமாய்த் துணித்தான் படகை
அனலிலே மீண்டும் அதையிட் டிட்டான்
ஊதினர் அடிமைகள் உடன்நின் றுலையை
துருத்தியை இயக்கித் தொழிலதை ஆற்றினர்.
முடிந்தது அந்நாள் மூன்றாம் நாள்வர
கொல்லன்இல் மரினன் குறிப்பாய்த் தானே
இருந்து குனிந்துள் எட்டிப் பார்த்தனன்
அவனது உலைக்கள அடிப்புறம் தன்னில் 360
கன்னிஆ வொன்று கனலுலை எழுந்தது
பொன்னின் கொம்புடன் பொருகன லிருந்து
தாரகைக் கணம்அதன் தனிநுதல் இருந்தது
தலையினில் சூரிய சக்கரம் இருந்தது.
பார்க்க நன்றாய்ப் பசுவும் இருந்தது
ஆயினும் தீச்செயல் அதன்கண் ஆனது
படர்வனம் பொழுதெலாம் படுத்துக் கிடந்தது
பாலைவீ ணாகப் படியிற் கறந்தது.
அந்தக் கொல்லன் அவன்இல் மரினன்
நெஞ்சத் ததனால் நிறைவே இல்லை 370
துண்ட துண்டமாய்த் துணித்தான் பசுவை
அனலிலே மீண்டும் அதையிட் டிட்டான்
ஊதினர் அடிமைகள் உடன்நின் றுலையை
துருத்தியை இயக்கித் தொழிலதை ஆற்றினர்.
நடந்தது அந்நாள் நான்காம் நாள்வர
அவனே கொல்லன் அவன்இல் மரினன்
இருந்து குனிந்துள் எட்டிப் பார்த்தனன்
அவனது உலைக்கள அடிப்புறம் தன்னில்
உழுபடை ஒன்று உலையில் எழுந்தது
பொன்னின் கொழுவுடன் புணர்கன லிருந்து 380
செம்பொன் கொழுவது செப்பிற் கைமரம்
வெள்ளியிற் கைப்பிடி மேற்புறம் ஆனது.
பார்க்கநன் றாயுழு படையோ இருந்தது
ஆயினும் தீச்செயல் அதன்கண் ஆனது
கலப்பை கிராமக் கனவயல் உழுதது
ஊரவர் நிலங்களை உழுபடை உழுதது.
அந்தக் கொல்லன் அவன்இல் மரினன்
நெஞ்சத் ததனால் நிறைவே இல்லை
ஓரிரு துண்டாய் உழுபடை முறித்து
அனலிலே மீண்டும் அதையிட் டிட்டான் 390
உலையிற் காற்றை ஊதச் செய்தனன்
வேகமாய் வாயுவை ஊதச் செய்தனன்.
வெங்கால் எழுந்து வேகம் கொண்டது
கீழ்மேல் காற்றுகள் கிளர்ந்து வீசின
தென்காற் றின்னும் சினந்துவீ சிற்று
வடகாற் றுக்கிர மாகவீ சிற்று.
வீசின ஒருநாள் வீசின மறுநாள்
வீசின விரைந்து மிகமூன் றாம்நாள்
சாளரம் தன்னில் தணலெரி மூண்டது
கதவுகள் எல்லாம் கனற்பொறி கக்கின 400
விரைந்தன தூசுகள் விண்ணினை நோக்கி
புகையெலாம் திரண்டு முகில்களாய் மாறின.
அந்தக் கொல்லன் அவன்இல் மரினன்
முடிந்தஅந் நாள்பின் மூன்றுநாள் முடிவில்
இருந்து குனிந்துள் எட்டிப் பார்த்தனன்
அவனது உலைக்கள அடிப்புறம் தன்னில்.
கண்டான் சம்போ கனிந்துட் பிறந்ததை
ஒளிரும் மூடியும் வளர்வதைக் கண்டான்.
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
கவின்அழி வில்லாக் கைவினைக் கலைஞன் 410
தகுசுத் தியலால் தட்டினன் தட்டினன்
அடித்துமென் மேலும் அடித்து அறைந்தனன்
திறமையின் பயனாய்ச் செய்தான் சம்போ;
சம்போ ஒருபுறம் தானிய ஆலை
இன்னொரு பக்கம் இலவண ஆலை
மூன்றாம் பக்கம் முழுப்பண ஆலை.
அரைக்கத் தொடங்கிய தப்புதுச் சம்போ
சுடர்மிகும் மூடியும் சுழன்றே வந்தது
அந்தியில் கொள்கலம் ஆர்ந்திட அரைத்தது,
ஒருகலம் நிறைய உணவுக் கரைத்தது 420
விற்பனைக் கொன்றை விரைந்தே அரைத்தது
அரைத்தமூன் றாவது அகச்சே மிப்பாம்.
வடநில முதியவள் மகிழ்ச்சியில் மிதந்தாள்
வந்துபெற் றேகினள் மாபெரும் சம்போ
வடநிலக் குன்றதன் மணிமுக டதன்மேல்
செப்பினால் இயைந்தசெம் மலைகளுக் குள்ளே
பூட்டினள் ஒன்பது பூட்டுகள் போட்டு;
இறங்கின சூழ்ந்ததை இகல்வல் வேர்கள்
ஒன்பது மடங்கிலோர் **ஆறடி ஆழம்;
அன்னையாம் புவியில் அதிலொன் றிறங்க 430
மற்றவேர் நீர்க்கரை வழியரு கிறங்க
மூன்றாம் வேர்முது மனைமலைச் சென்றது.
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
பெண்ணைப் பெறற்குப் பெருமையோ டெழுந்தான்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"இப்போ மங்கை எனக்குத் தானே
சம்போ இயற்றிச் சரியாய் முடித்ததால்
ஒளிரும் அழகுறும் ஒருமூ டியுடன்?"
வடக்கின் அழகிய மங்கையப் போது
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே: 440
"ஆரப்பா இனிவரும் அடுத்த ஆண்டினிலே
ஆரப்பா மூன்றாம் அடர்கோ டையதில்
குயிலை இங்கேக் கூவச் செய்வது
பறவைகள் அனைத்தையும் பாட வைப்பது
இன்னொரு நாடுநான் ஏகுவ தானால்
அந்நிய நாட்டிலோர் அருஞ்சிறு பழம்போல்?
இந்தக் கோழி இல்லா தொழிந்தால்
இந்த வாத்தும் எங்கும் அலைந்தால்
வழிமாறி அன்னையின் வம்சமும் போனால்
**செந்நிறப் பழமும் சீர்கெட் டழிந்தால் 450
இன்குயில் அனைத்தும் இல்லா தொழியும்
மகிழ்வுறும் பறவைகள் மறைந்தே போகும்
இந்த மலையின் எழில்முடி யிருந்து
இந்த மேட்டு எழில்நிலத் திருந்து.
அதுவிலா தெனக்கோ அவகா சமி(ல்)லை
கன்னிஎன் பருவம் கடக்கவு மில்லை
இந்தவே லைகளை இயற்றவும் வேண்டும்
அலர்கோ டைப்பொழு தவசர நாட்களில்:
படிமிசை சிறுபழம் பறிபடா திருக்கும்
நீர்க்கரைப் பாடல்கள் நிகழா திருக்கும் 460
உயர்மேட் டினிலம் உலாவற் றிருக்கும்
அழகுதோப் பெலாம்நான் ஆடா திருக்கும்."
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
கவின்அழி வில்லாக் கைவினைக் கலைஞன்
தாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன்
தொய்ந்து சரிந்த தொப்பியை அணிந்து
சிறிதுசித் தத்தே சிந்திக்க லானான்
நீண்ட நேரமாய் நிகழ்த்தினன் யோசனை
இல்லகப் பயணம் எப்படிச் செய்வது
பழகிய நாடு படர்வது எங்ஙனம் 470
இருள்நிறை வடபால் இயைநிலத் திருந்து
புகார்படி சரியொலாப் புகுநிலத் திருந்து.
வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்:
"ஓகோ, கொல்ல, உயர்இல் மரின!
சோர்ந்து மனமது துயரம் கொண்டதேன்
சரிந்து தொப்பியும் சாய்ந்து வந்ததேன்
பயணம் செய்வது பற்றிய எண்ணமா
வாழ்ந்தமுன் னிடத்து மீள்வது பற்றியா?"
கொல்லன்இல் மரினன் கூறினன் இங்ஙனம்:
"எனது எண்ணம் ஏகுவ தங்கே 480
எனதுவீட் டிற்கு இறந்துபோ தற்கு
எனதுநாட் டிற்கு இளைத்தே குதற்கு."
அந்த வடநிலத் தலைவியும் அதன்பின்
மனிதனுக் குணவும் பானமும் வழங்கி
படகுபின் தட்டில் பாங்குற அமர்த்தினள்
படகின் துடுப்போ படர்செப் பானது
காற்றினை வீசக் கட்டளை யிட்டனள்
வடக்குக் காற்றினை வளர்கதி வீச.
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
கவின்அழி வில்லாக் கைவினைக் கலைஞன் 490
நுவல்சுய நாட்டினை நோக்கிச் சென்றனன்
நீலக் கடலின் நீண்ட பரப்பிலே.
பயணம் ஒருநாள் பயணம் இருநாள்
சென்றான் அங்ஙனம் மூன்றாம் நாளிலும்
கொல்லன்இப் போது கூடும்இல் அடைந்தான்
பிறந்து வளர்ந்த பேரிடம் அடைந்தான்.
முதிய வைனா மொயினன் கேட்டனன்
இல்மரி னன்எனும் கொல்ல னிடத்தே:
"சகோதர, கொல்ல தகைஇல் மரின!
கவின்அழி வில்லாக் கைவினைக் கலைஞ! 500
புதிய சம்போ புனைந்து முடிந்ததா
திகழ்ஒளி மூடியும் செய்து முடிந்ததா?"
கொல்லன்இல் மரினன் கூறினன் இங்ஙனம்:
தானாய் ஒருபதில் தகுதியாய் உரைத்தான்:
"அரைத்திடு கின்றது அதிநவச் சம்போ
சுழன்றிடு கின்றது சுடர்மூ டியதும்
அந்தியில் கொள்கலம் ஆர்ந்திட அரைக்கும்
அரைக்குமோர் கொள்கலம் அதுஉண வுக்காம்
விற்பனைக் கரைக்கும் வேறொரு கொள்கலம்
சேமிக்க அரைக்கும் திரும்ப மூன்றாவதை." 510