தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments

Home > Tamil National ForumSelected Writings - M.Thanapalasingham > தமிழ்ச்செல்வனின் சிரிப்பு மலர்ந்து கொண்டிருக்கும் தமிழீழத்தின் சிரிப்பு
 

Selected Writings
M.Thanapalasingham, Australia

-
ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

தமிழ்ச்செல்வனின் சிரிப்பு
மலர்ந்துகொண்டிருக்கும் தமிழீழத்தின் சிரிப்பு

Thamilselvan

"... இவன் இழப்பிற்கு ஈடில்லை. நாம் அழுவதை அவன் தடுக்கமாட்டான் ஆனால் தளம்பினால் அவன் சகிக்கமாட்டான். எந்த உன்னதமான இலட்சியத்திற்காக தன் உயிரையும் காதலையும் ஈய்வதற்கு அவன் என்றுமே முன்னின்றானோ அந்த இலட்சியத்திற்காக நாம் பன்மடங்கான உறுதியோடு செயல்படுவதே நாம் தமிழ்ச்செல்வனுக்கு செலுத்தக்கூடிய வீர வணக்கமாகும்..."

[see also Brigadier S P Thamilselvan (1967 - 2007) ]


உண்மையின் அழகும் அழகின் உண்மையும் இரண்டறக்கலக்கும் இடத்தில் உன்னதத்தை தரிசிக்க முடியும் என்பர். தமிழ்ச்செல்வனைக் கண்டோர் உள்ளங்களில் ததும்பி வழியும் உணர்வு இதுவாகத்தான் இருக்க முடியும். இந்தக் காட்சியில் தோயும்போது தேசியத்தலைவர் குறிப்பிடும் அந்த மந்திரச்சிரிப்பின் உள்ளே புதைந்து கிடக்கும் ஆயிரம் அர்த்தங்களை தேடமுடியும்.

வீரம் செறிந்த, தியாகம் நிறைந்த, தமிழீழப் போராட்ட வரலாற்றில் , அந்தப்போராட்டத்தின் அரசியல், சமுக, பண்பாட்டுக் கோலங்களின் திரட்சியாகவும் தமிழீழ மக்களின் அன்பின் உருவமாகவும், இவை யாவற்றையும் தன்னுள்ளே வரித்துக்கொண்ட நவீன தமிழ் இராசதந்திரியாகவும் வலம் வந்த ஒரு உன்னதமான மனிதனை இழந்து தவிக்கின்றோம்.

இந்த ஒளி விளக்கை சமாதானத்தின் மேசையில் சந்தித்து அணைத்துவிட முடியாதநிலையில் சிங்களத்தின் வக்கிரம் அவன்மேல் தன் குருரத்தை காட்டியிருக்கிறது. இது தமிழ் மக்களுக்கு புதிய ஒன்றல்ல. சில வாரங்களுக்கு முன்னர்கூட இந்த வக்கிரத்தை அனுராதபுரத்தில் கண்டோம். ரோமனின் பெருஞ்சாலை (The Roman Road ) என்னும் கவிதையில் தொமஸ் ஹஷடி (Thomas Hardy) என்னும் கவிஞன் கூறிய

" நாங்கள் அந்தப் புராதன பெருஞ்சாலை ஊடாக நடந்தோம். அந்த ரோமன் பெரும்சாலை "

" We walked that ancient throughfare, The Roman Road "

ஆந்தப் பெருஞ்சாலைக்கு ஈடான , சிங்களத்தை ஆட்டிப்படைக்கும் மகாவம்சக் கருவூலம் என்ற அந்தப் புராதன பெருஞ்சாலையூடாக புயலை தம் மேனியாக்கி ஒரு பூகம்பத்தையே அந்தப் புராதன நகரில் ஏற்படுத்தியிருந்தனர் எங்கள் மறவர்கள். இவர்களின் புயல்மேனிகளை சிங்களம் அசிங்கப்படுத்தியிருந்தததை நாம் மறக்கமாட்டோம்.

ஆன்ரோனியா கிறாம்சி ( Antonio Gramsci ) என்னும் புகழ் பூத்த புரட்சிகர புத்திஜீவி, புத்திஜீவிகளைப் பற்றிக் கூறும்போது எல்லா மனிதருக்கும் புத்தியுண்டு. எனவே அடிப்படையில் எல்லோருமே புத்திஜீவிகள்தான். இந்தப் புத்திஜீவிகளில் தொழில்துறை சார்ந்தோர் , இலக்கியம் விஞ்ஞானம் போன்ற தளங்களில் உள்ளோர் ஒருவகை. ஆயின் சமுக செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் இயல்பு கொண்டோரே உண்மையான பத்திஜீவிகள். இவர்களை (organic intellectual)  உள்ளார்ந்த பத்திஜீவிகள் என்று கூறுவார். தேசியத்தலைவர் எவ்வாறு தமிழ்ச்செல்வன், போரியலில், அரசியலில், இராசதந்திரத்தில் புடம்போடப்பட்டான் என்று கூறும்போது கிறாம்சியின் இலக்கணத்திற்கு தமிழ்ச்செல்வன் இலக்கியமாகின்றான் என்பதை ஊகிக்க முடிகின்றது.

உயிர் எமக்கு பெரும் செல்வம். அதைவிட உயர்வானது காதல். காதலையும்விட உயர்வானது விடுதலை. எனவே அந்த விடுதலைக்காக உயிரையும் காதலையும் நான் துறப்பேன் என ஹங்கேரிய நாட்டின் விடுதலைக் கவிஞனும் போராளியுமான சாந்தோர் பெட்டோஃபி

"உயிரொரு பெருநிதி - காதல்
உயர்வுடை யதனினும் ஆம்
சுயம் பெரு விடுதலை – காண
துறப்ப னவற்றினை நான் "

ஏனப் பாடியுள்ளமை எம் மறவர்களைப் பொறுத்தளவில் எத்துணை உண்மை.

தமிழச்செல்வன் எடுத்த அவதாரங்களில் அவனது இராசதந்திர அவதாரம் கிருஸ்ணபகவானுக்கே சவால்விடுவதாக உள்ளது.

சொல்லின் செல்வனான இவன், இராசதந்திரமான கேள்விகளுகளுக்கு பதில் அளிக்கும் போது கையாண்ட சொல்சிக்கனம், சொல்லால் சொல்ல விரும்பாதவற்றை தன் உடம்பின் லாவண்ணியத்தால் காட்டிநின்ற பாவனைகள், கண்கள் செய்த மாயங்கள், நேர்கொண்ட பார்வை, சிரிப்பது கண்களா அல்லது அடுக்கியபற்களா எனக் கூறமுடியாத நிலை. யாவற்றிற்கும் மேலாக இவன் தாங்கிநின்ற அந்தக் கைத்தடி இருக்கிறதே, அது தடியா அல்லது வென்று பகை கெடுக்க அவன் கையில் வேலா, சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அந்த மேசையின் எதிரிலும் நடுவிலும் இருந்தோர் தமிழ்ச்செல்வன் என்னும் பெயரை சொல்லியபோதே அந்தப் பெயரின் சக்தி தமிழர்தரப்பில் எத்துணை மின்அலைகளைப் பாய்ச்சி வலுவூட்டியிருக்கும் என எம்மால் இப்போது எண்ணமுடிகிறது.

இவன் இழப்பிற்கு ஈடில்லை. நாம் அழுவதை அவன் தடுக்கமாட்டான் ஆனால் தளம்பினால் அவன் சகிக்கமாட்டான். எந்த உன்னதமான இலட்சியத்திற்காக தன் உயிரையும் காதலையும் ஈய்வதற்கு அவன் என்றுமே முன்னின்றானோ அந்த இலட்சியத்திற்காக நாம் பன்மடங்கான உறுதியோடு செயல்படுவதே நாம் தமிழ்ச்செல்வனுக்கு செலுத்தக்கூடிய வீர வணக்கமாகும்.


 
Mail Usup- truth is a pathless land -Home