உ கணபதி துணை
தவத்திரு ஆறுமுக நாவலரவர்களின் சைவ வினா விடை கடவுள் இயல் புண்ணிய பாவ இயல் விபூதி இயல்-1 சிவ மூலமந்திர இயல் சிவாலய தரிசன இயல் தமிழ் வேத இயல் பதி இயல் விபூதி இயல்-2 உருத்திராக்ஷவியல் சிவலிங்கவியல் பஞ்சாக்ஷரவியல் நித்திய கரும இயல் [see also comment by Sivaram Arumugam, 25 December 2004]
1. கடவுள் இயல்
1. உலகத்துக்குக் கருத்தா யாவர்?
சிவபெருமான்.
2. சிவபெருமான் எப்படிப்பட்டவர்?
என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்.
3. சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யுந் தொழில்கள் யாவை?
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றுமாம்.
4. சிவபெருமான் இந்த மூன்று தொழில்களையும் எதைக் கொண்டு செய்வார்?
தமது சத்தியைக் கொண்டு செய்வார்.
5. சத்தி என்னுஞ் சொல்லுக்குப் பொருள் யாது?
வல்லமை.
6. சிவபெருமானுக்குச் சத்தி யாவர்?
உமாதேவியார்.
7. சிவபெருமானுடைய திருகுமாரர்கள் யாவர்?
விநாயகக் கடவுள், வைரவக் கடவுள், வீரபத்திரக் கடவுள், சுப்பிரமணியக் கடவுள் என்னும் நால்வர்.
8. சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள்செய்யும் பொருட்டு உமாதேவியாரோடும் எழுந்தருளி இருக்கும் முக்கிய ஸ்தானம் யாது?
திருகைலாச மலை
9. சிவபெருமான் ஆன்மாக்களுக்கு எவ்விடங்களிலே நின்று அருள் செய்வார்?
சிவலிங்கம் முதலாகிய திருமேனிகளிடத்திலும், சைவாசாரியர் இடத்திலும், சிவனடியார் இடத்திலும் நின்று அருள் செய்வார்.
திருசிற்றம்பலம்
2. புண்ணிய பாவ இயல்
1. சிவபெருமான் ஆன்மாகளுக்காக அருளிச் செய்த முதனூல்கள் எவை?
வேதம், சிவாகமம் இரண்டுமாம்.
2. வேத சிவாகமங்களில் விதிக்கப்பட்டவைகள் எவைகள்?
புண்ணியங்கள்.
3. புண்ணியங்கள் ஆவன யாவை?
கடவுளை வழிபடுதல், தாய் தகப்பன், உபாத்தியாயர், குரு முதலாகிய பெரியோர்களை வணங்குதல், உயிர்களுக்கு இரங்குதல், உண்மை பேசுதல், செய்ந்நன்றி அறிதல் முதலானவைகள்.
4. புண்ணியங்கள் செய்தவர் எதனை அனுபவிப்பர்?
மேல் உலகங்களாகிய புண்ணிய லோகங்களிலே போய், இன்பத்தை அனுபவிப்பர்.
5. வேத சிவாகமங்களிலே விலக்கப்பட்டவைகள் எவைகள்?
பாவங்கள்.
6. பாவங்கள் ஆவன யாவை?
கொலை, களவு, கள்ளுக் குடித்தல், மாமிசம் புசித்தல், பொய் பேசுதல், வியபிசாரம், சூதாடுதல் முதலானவைகள்.
7. பாவங்களைச் செய்தவர் எதனை அனுபவிப்பர்?
நரகங்களிலே விழுந்து, துன்பத்தை அநுபவிப்பர்.
திருசிற்றம்பலம்
3. விபூதி இயல்-1
1. சிவபெருமானை வழிபடுஞ் சமயத்துக்குப் பெயர் யாது?
சைவசமயம்.
2. சைவசமயிகள் சரீரத்திலே ஆவசியமாகத் தரிக்க வேண்டிய அடையாளம் யாது?
விபூதி.
3. விபூதி ஆவது யாது?
பசுவின் சாணத்தை அக்கினியாலே சுடுதலால் உண்டாக்கிய திருநீறு.
4. எந்த நிற விபூதி தரிக்கத் தக்கது?
வெள்ளை நிற விபூதி.
5. விபூதியை எதில் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்?
பட்டுப் பையிலேனும், சம்புடத்திலேனும் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்.
6. விபூதியை எந்தத் திக்குமுகமாக இருந்துகொண்டு தரித்தல் வேண்டும்?
வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு தரித்தல் வேண்டும்.
7. விபூதியை எப்படி தரித்தல் வேண்டும்?
நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து 'சிவசிவ' என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் நெற்றியிலே தரித்தல் வேண்டும்.
8. விபூதி நிலத்திலே சிந்தினால் யாது செய்தல் வேண்டும்?
சிந்திய விபூதியை எடுத்துவிட்டு, அந்த இடத்தைச் சுத்தம் செய்தல் வேண்டும்.
9. நடந்து கொண்டாயினும், கிடந்துகொண்டாயினும் விபூதி தரிக்கலாமா?
தரிக்கல் ஆகாது.
10. எக்காலங்களிலே விபூதி ஆவசியமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்?
நித்திரை செய்யப் புகும் போதும், நித்திரை விட்டெழுந்த உடனும், தந்த சுத்தம் செய்த உடனும், சூரியன் உதிக்கும் போதும், அத்தமிக்கும் போதும், ஸ்நானஞ் செய்த உடனும், போசனத்துக்குப் போம் போதும், போசனஞ் செய்த பின்னும் விபூதி ஆவசியமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்.
11. ஆசாரியர் ஆயினும், சிவனடியார் ஆயினும் விபூதி தந்தால், எப்படி வாங்கல் வேண்டும்?
மூன்று தரம் ஆயினும், ஐந்து தரம் ஆயினும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, இரண்டு கைகளையும் நீட்டி வாங்கல் வேண்டும்.
12. விபூதி வாங்கித் தரித்துக் கொண்ட பின் யாது செய்தல் வேண்டும்?
முன் போல் மீண்டும் நமஸ்கரித்தல் வேண்டும்.
13. சுவாமி முன்னும், குரு முன்னும், சிவனடியார் முன்னும் எப்படி நின்று விபூதி தரித்தல் வேண்டும்?
முகத்தைத் திருப்பி நின்று தரித்தல் வேண்டும்.
14. விபூதி தாரணம் எத்தனை வகைப்படும்?
உத்தூளனம், திரிபுண்டரம் என இரண்டு வகைப்படும்.
( உத்தூளனம் = நீர் கலவாது, திரிபுண்டரம் =மூன்று குறி)
15. திரிபுண்டரந் தரிக்கத் தக்க தானங்கள் யாவை?
சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப் புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறுமாம்.
இவைகளுள், விலாப் புறம் இரண்டையும் நீக்கிக் காதுகள் இரண்டையும் கொள்வதும் உண்டு. முழங்கைகளையும் மணிக்கட்டுகளையும் நீக்கிப் பன்னிர்ண்டு தானங் கொள்வதும் உண்டு.
16. திரிபுண்டரந் தரிக்கும் இடத்து, நெற்றியில் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்?
இரண்டு கடைப்புருவ எல்லைவரையுந் தரித்தல் வேண்டும், அதிற் கூடினாலுங் குறைந்தாலுங் குற்றமாம்.
17. மார்பிலும் புயங்களிலும் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்?
அவ்வாறங்குல நீளந் தரித்தல் வேண்டும்.
(அங்குலம் = 2.5 செ.மீ)
18. மற்றைத் தானங்களில் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்.
ஒவ்வோர் அங்குல நீளந் தரித்தல் வேண்டும்.
19. மூன்று குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?
ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டல் ஆகாது.
திருசிற்றம்பலம்
4. சிவ மூலமந்திர இயல்
1. சைவசமயிகள் நியமமாகக் செபிக்க வேண்டிய சிவமூலமந்திரம் யாது?
ஸ்ரீபஞ்சாக்ஷரம்.(திருவைந்தெழுத்து).
2. ஸ்ரீபஞ்சாக்ஷர செபஞ் செய்தற்கு யோக்கியர் ஆவார் யாவர்?
மது பானமும், மாமிச போசனமும் இல்லாதவராய், ஆசாரம் உடையவராய், சிவதீ¨க்ஷ பெற்றவராய் உள்ளவர்.
3. ஸ்ரீபஞ்சாக்ஷரத்திலே எத்தனை உரு நியமமாகச் செபித்தல் வேண்டும்?
நூற்றெட்டு உருவாயினும், பத்து உருவாயினும் நியமமாகச் செபித்தல் வேண்டும்.
4. எந்த திக்குமுகமாக இருந்து செபித்தல் வேண்டும்?
கிழக்கு முகமாகவேனும், வடக்கு முகமாகவேணும் இருந்து செபித்தல் வேண்டும்.
5. எப்படி இருந்து செபித்தல் வேண்டும்?
முழந்தாள் இரண்டையும் மடக்கி, காலோடு காலை அடக்கி, இடத்தொடையின் உள்ளே வலபுறங்காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த, நிமிர்ந்திருந்து கொண்டு, செபித்தல் வேண்டும்.
6. எப்படி இருந்து செபிக்கல் ஆகாது?
சட்டை இட்டுக்கொண்டும், தலையிலே வேட்டி கட்டிக் கொண்டும், போர்த்துக்கொண்டுஞ் செபிக்கல் ஆகாது.
7. செபஞ் செய்யும் பொழுது மனம் எங்கே அழுந்திக் கிடத்தல் வேண்டும்?
சிவபெருமான் இடத்திலே அழுந்திக் கிடத்தல் வேண்டும்.
8. நிற்கும் பொழுதும், நடக்கும்பொழுதும், இருக்கும் பொழுதும், கிடக்கும் பொழுதும், மற்றை எத்தொழிலைச் செய்யும் பொழுதும் மனசை எதிலே பதித்தல் வேண்டும்?
உயிருக்கு உயிராகிய சிவபெருமானுடைய திருவடிகளிலேயே மனசைப் பதித்தல் வேண்டும்.
9. மரிக்கும் பொழுது எப்படி மரித்தல் வேண்டும்?
வேறு ஒன்றிலும் பற்று வையாது, சிவபெருமான் இடத்திலே பற்று வைத்து, தமிழ் வேதத்தைக் கேட்டுக் கொண்டும் ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை உச்சரித்துக் கொண்டும் மரித்தல் வேண்டும்.
திருசிற்றம்பலம்
5. சிவாலய தரிசன இயல்
1. சிவபெருமானை வழிபடுதற்கு உரிய முக்கிய ஸ்தானம் யாது?
திருக்கோயில்.
2. திருக்கோயிலுக்கு எப்படிப் போதல் வேண்டும்?
ஸ்தானஞ் செய்து தோய்த்துலர்ந்த வஸ்திரந்தரித்து, விபூதி இட்டுக்கொண்டு, போதல் வேண்டும்.
3. திருக்கோயிலுக்குச் சமீபித்த உடனே யாது செய்தல் வேண்டும்?
தூலலிங்கமாகிய திருக்கோபுரத்தைத் தரிசித்து, இரண்டு கைகளையுஞ் சிரசிலே குவித்து, சிவநாமங்களை உச்சரித்துக் கொண்டு, உள்ளே போதல் வேண்டும்.
4. திருக்கோயிலின் உள்ளே போனவுடன் யாது செய்தல் வேண்டும்?
பலிபீடத்துக்கு இப்பால் நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
5. கிழக்கு நோக்கிய சந்நிதானத்திலும், மேற்கு நோக்கிய சந்நிதானத்திலும், எந்தத் திக்கிலே தலைவைத்து நம்ஸ்காரம் பண்ணல் வேண்டும்?
வடக்கே தலைவைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
6. தெற்கு நோக்கிய சந்நிதானத்திலும், வடக்கு நோக்கிய சந்நிதானத்திலும், எந்தத் திக்கிலே தலைவைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?
கிழக்கே தலை வைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
7. எந்த திக்குக்களிலே கால் நீட்டி நமஸ்காரம் பண்ணல் ஆகாது?
கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி நமஸ்காரம் பண்ணல் ஆகாது.
8. ஆடவர்கள் என்ன நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?
அட்டாங்க நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
9. அட்டாங்க நமஸ்காரமாவது யாது?
தலை, கை இரண்டு, செவி இரண்டு, மோவாய், புயங்கள் இரண்டு என்னும் எட்டு அவயவமும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல்.
10. பெண்கள் என்ன நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?
பஞ்சாங்க நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
11. பஞ்சாங்க நமஸ்காரமாவது யாது?
தலை, கை இரண்டு, முழந்தாள் இரண்டு என்னும் ஐந்து அவயவமும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல்.
12. நமஸ்காரம் எத்தனை தரம் பண்ணல் வேண்டும்?
மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும் பண்ணல் வேண்டும். ஒருதரம், இருதரம் பண்ணுதல் குற்றம்.
13. நமஸ்காரம் பண்ணியபின் யாது செய்தல் வேண்டும்?
பிரதக்ஷ¢ணம்(வலம் வருதல்) பண்ணல் வேண்டும்.
14. எப்படி பிரதக்ஷ¢ணம் பன்னல் வேண்டும்?
இரண்டு கைகளையும் சிரசிலேனும் மார்பிலேனுங் குவித்து சிவநாமங்களை உச்சரித்துக்கொண்டு, கால்களை மெல்ல வைத்துப் பிரதக்ஷ¢ணம் பண்ணல் வேண்டும்.
15. பிரதக்ஷ¢ணம் எத்தனை தரம் பண்ணல் வேண்டும்?
மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும் பண்ணல் வேண்டும்.
16. சுவாமி சந்நிதானங்களை எந்த முறையாகத் தரிசனஞ் செய்தல் வேண்டும்?
முன் விக்கினேசுரரைத் தரிசனஞ் செய்து, பின் சிவலிங்கப் பெருமானையும் உமாதேவியாரையுந் தரிசனஞ் செய்து, பின் சிவலிங்கப் பெருமானையும் உமாதேவியாரையுந் தரிசனஞ் செய்து, விபூதி வாங்கித் தரித்துக் கொண்டு, அதன் பின் சபாபதி, தக்ஷ¢ணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், சுப்பிரமணியர் முதலிய மூர்த்திகளைத் தரிசனஞ் செய்தல் வேண்டும்.
17. விக்னேசுரரைத் தரிசிக்கும் பொழுது யாது செய்தல் வேண்டும்?
முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்று முறை குட்டி, வலக்காதை இடக்கையினாலும், இடக்காதை வலக்கையினாலும் பிடித்துக் கொண்டு, மூன்று முறை தாழ்ந்தெழுந்து, கும்பிடல் வேண்டும்.
18. சந்நிதானங்களிலே தரிசனம் பண்ணும் பொழுதெல்லாம் யாது செய்தல் வேண்டும்?
இரண்டு கைகளையுஞ் சிரசில் ஆயினும் மார்ப்பில் ஆயினும் குவித்துக்கொண்டு, மனங் கசித்துருகத் தோத்திரஞ் செய்தல் வேண்டும்.
19. எந்தக் காலத்தில் சுவாமி தரிசனஞ் செய்யல் ஆகாது?
அபிஷேகம், நிவேதனம் முதலியவை நடக்கும் பொழுது தரிசனஞ் செய்யல் ஆகாது.
20. அபிஷேக காலத்தில் பிரதக்ஷ¢ண நமஸ்காரங்களும் பண்ணல் ஆகாதா?
அப்பொழுது உட்பிரகாரத்திலே பண்ணல் ஆகாது.
21. தரிசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?
சண்டேசுரர் சந்நிதியை அடைந்து கும்பிட்டு, மூன்று முறை கை கொட்டி, சிவதரிசன பலத்தைத் தரும் பொருட்டுப் பிரார்த்தித்தல் வேண்டும்.
22. சண்டேசுர தரிசனத்தின் பின் யாது செய்தல் வேண்டும்?
சிவசந்நிதானத்தை அடைந்து, நமஸ்காரம் பண்ணி, இருந்து, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தில் இயன்ற உருச்செபித்துக் கொண்டு, எழுந்து, வீட்டுக்குப் போதல் வேண்டும்.
23. நித்தியமும் நியமமாக ஆலய தரிசனஞ் செய்ய இயலாதவர் யாது செய்தல் வேண்டும்?
சோமவாரம், மங்களவாரம், சுக்கிரவாரம், பிரதோஷம், பெளர்ணிமை, அமாவாசை, திருவாதிரை, கார்த்திகை, மாசப்பிறப்பு, சூரியகிரகணம், சந்திர கிரகணம், சிவராத்திரி, நவராத்திரி முதலிய புண்ணிய காலங்களிலாயினும் தரிசனஞ் செய்தல் வேண்டும்.
24. திருக்கோயிலிலே செய்யத் தகாத குற்றங்கள் யாவை?
ஆசாரம் இல்லாது போதல், கால் கழுவாது போதல், எச்சில் உமிழ்தல், மலசலங் கழித்தல், மூக்குநீர் சிந்துதல், ஆசனத்து இருத்தல், சயனித்தல், காலை நீட்டிக் கொண்டு இருத்தல், மயிர் கோதி முடித்தல், சூதாடல், பாக்கு வெற்றிலை உண்டல், சிரசிலே வஸ்திரந் தரித்துக்கொள்ளுதல், தோளிலே உத்திரீயம் இட்டுக் கொள்ளுதல், சட்டை இட்டுக் கொள்ளுதல், விக்கிரகத்தைத் தொடுதல், நிருமாலியத்தைக் (பூசித்துக் கழித்த பொருள்) கடத்தல், நிருமாலியத்தை மிதித்தல், தூபி துசத்தம்பம் பலிபீடம் விக்கிரகம் என்னும் இவைகளின் நிழலை மிதித்தல், வீண் வார்த்தை பேசல், சிரித்தல், சண்டை இடுதல் விளையாடுதல், சுவாமிக்கும் பலிபீடத்துக்குங் குறுக்கே போதல் முதலியவைகளாம்.
திருச்சிற்றம்பலம்
6. தமிழ் வேத இயல்
1. சைவசமயிகள் ஓத வேண்டிய தமிழ் வேதங்கள் எவை?
தேவாரம், திருவாசகம் என்னும் இரண்டுமாம்.
2. தேவாரஞ் செய்தருளினவர் யாவர்?
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் மூவர்.
3. திருவாசகஞ் செய்தருளினவர் யாவர்?
மாணிக்கவாசக சுவாமிகள்.
4. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்?
சோழநாட்டில் உள்ள சீர்காழியிலே வைதிகப் பிராமண குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார்.
5. திருநாவுக்கரசு நாயனார் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்?
திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருவாமூரிலே வேளாளர் குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார்.
6. சுந்தரமூர்த்தி நாயனார் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்?
திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூரிலே சிவப்பிராமண குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார்.
7. மாணிக்கவாசக சுவாமிகள் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்?
பாண்டி நாட்டில் உள்ள திருவாதவூரிலே அமாத்தியப் பிராமண குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார்.
8. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முதலிய நால்வரும் எவ்வாறு பெயர் பெறுவார்கள்?
சைவ சமய குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்.
9. யாது காரணத்தினால் இவர்கள் சைவசமய குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்?
பல அற்புதங்களைக் கொண்டு சைவசமயமே மெய்ச்சமயம் என்று தாபித்தபடியினாலே சைவசமய குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்.
10. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?
(1) மூன்றாம் வயசிலே உமாதேவியார் கறந்து பொற் கிண்ணத்தில் ஊட்டிய திருமுலைப்பாலை உண்டது.
(2) சிவபெருமானிடத்திலே பொற்றாளமும், முத்துப் பல்லக்கும், முத்துச் சின்னமும், முத்துக் குடையும், முத்துப் பந்தளும், உலவாக்கிழியும், படிக்காசும் பெற்றது.
(3) வேதாரணியத்திலே வேதங்களினாலே பூட்டப் பட்டுத் திருநாவுக்கரசு நாயனாருடைய திருப்பதிகத்தினாலே திறக்கப்பட்ட திருக்கதவு அடைக்கப்பாடினது.
(4) பாலை நிலத்தை நெய்தல் நிலம் ஆகும்படி பாடினது.
(5) பாண்டியனுக்குக் கூனையுஞ் சுரத்தையும் போக்கினது.
(6) சமணர்கள் எதிரே தேவாரத் திருவேட்டை அக்கினியிலே போட்டுப் பச்சையாக எடுத்தது.
(7) வைகையாற்றிலே திருவேட்டைப் போட்டு எதிர் ஏறும்படி செய்தது.
(8) புத்த நந்தியுடைய தலையிலே இடி இடிக்கச் செய்தது.
(9) ஆற்றிலே தாமும் அடியார்களும் ஏறிய ஓடத்தைத் திருப்பதிகத்தினாலே கரை சேர்த்தது.
(10)ஆண் பனைகளைப் பெண் பனைகள் ஆக்கினது.
(11) விஷத்தினால் இறந்த செட்டியை உயிர்ப்பித்தது.
(12) விஷத்தினால் இறந்த பெண்ணினுடைய எலும்பைப் பெண் ஆக்கினது.
(13) தமது திருக்கல்யாணம் தரிசிக்க வந்தவர்கள் எல்லாரையுந் தம்மோடு அக்கினியிலே புகுவித்து முத்தியிலே சேர்த்தது.
11. திருநாவுக்கரசு நாயனார் இடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?
(1) சமணர்கள் ஏழு நாள் சுண்ணாம்பறையிலே பூட்டப்பட்டு இருந்தும் வேவாது பிழைத்தது.
(2) சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டுஞ் சாவாது பிழைத்தது.
(3) சமணர்கள் விடுத்த யானையினால் வலஞ் செய்து வணங்கப்பட்டது.
(4) சமணர்கள் கல்லிலே சேர்த்துக் கட்டிச் சமுத்திரத்திலே இடவும் அக்கல்லே தோணியாகக் கரை ஏறினது.
(5) சிவபெருமானிடத்திலே படிக்காசு பெற்றது.
(6) வேதாரணியத்திலே வேதங்களாலே பூட்டப்பட்ட திருக்கதவு திறக்கப் பாடினது.
(7) விஷத்தினாலே இறந்த பிராமணப் பிள்ளையை உயிர்ப்பித்தது.
(8) காசிக்கு அப்பால் ஒரு தடாகத்தின் உள்ளே முழுகித் திருவையாற்றில் ஒரு வாவின் மேலே தோன்றி கரை ஏறினது.
12. சுந்தரமூர்த்தி நாயனாரிடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?
(1) செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது.
(2) சிவபெருமான் கொடுத்தருளிய பன்னிராயிரம் பொன்னை விருத்தாசலத்தில் உள்ள ஆற்றில் போட்டுத் திருவாரூரில் உள்ள குளத்திலே எடுத்தது.
(3) காவேரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது.
(4) முதலை விழுங்கிய பிராமணப் பிள்ளையை அம்முதலை வாயினின்றும் அழைத்துக் கொடுத்தது.
(5) வெள்ளை யானையில் ஏறிக்கொண்டு திருக்கைலாசத்துக்கு எழுந்தருளியது.
13. மாணிக்கவாசக சுவாமிகளிடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?
(1) சிவபெருமானே நரியைக் குதிரை ஆக்கிக்கொண்டு வரும்படிக்கும், மண் சுமந்து அடி படும்படிக்கும் பெற்றுக் கொண்டது.
(2) புத்தர்களைத் தருக்கத்தில் வென்று ஊமைகள் ஆக்கிப் பின் ஊமை தீர்த்துச் சைவர்கள் ஆக்கியது.
(3) பிறவி தொடுத்து ஊமையாய் இருந்த ஒரு பெண்ணை ஊமை தீர்த்துப் புத்தர்கள் வினாவிய வினாக்களுக்கு விடை சொல்லும்படி செய்தது.
(4) தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும்படி பெற்றுக்கொண்டது.
(5) எல்லாருங் காணக் கனகசபையின் உள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.
14. இந்த அற்புதங்களினாலே யாது விளங்குகின்றது?
சைவசமயமே மெய்ச்சமயம் என்பது நன்றாக விளங்குகின்றது.
15. தமிழ் வேதம் ஓதுதற்கு யோக்கியர் யாவர்?
மதுபானமும் மாமிச போசனமும் இல்லாதவராய் ஆசாரம் உடையவராய், சிவதீ¨க்ஷ பெற்றவராய் உள்ளவர்.
16. தமிழ் வேதத்தை எப்படி ஓதல் வேண்டும்?
சுத்தி செய்யப்பட்ட இடத்தில் பீடத்தின் மேலே தமிழ் வேத புத்தகத்தை வைத்து, அருச்சித்து, நமஸ்காரஞ் செய்து, இருந்துகொண்டு, அன்புடனே ஓதுதல் வேண்டும், புத்தகத்தை நிலத்திலேனும், ஆசனத்திலேனும், படுக்கையிலேனும், மடியிலேனும், வைக்கல் ஆகாது.
17. தமிழ் வேதத்தை அன்புடனே நியமமாக ஓதினவர் யாது பெறுவர்?
சிவபெருமானுடைய திருவடிக் கீழ்ப் பேரின்பத்தைத் அநுபவிப்பர்.
திருச்சிற்றம்பலம்
7. பதி இயல்
1. உலகத்துக்குக் கருத்தா யாவர்?
சிவபெருமான்.
2. சிவபெருமான் எப்படிப்பட்டவர்?
நித்தியரும், சருவவியாபகரும், அநாதிமலமுத்தரும், சருவஞ்ஞரும், சருவகர்த்தாவும், நித்தியானந்தரும், சுவதந்திரருமாய் உள்ளவர்.
3. நித்தியர் என்பது முதலிய சொற்களுக்குப் பொருள் என்ன?
நித்தியர் = என்றும் உள்ளவர்; சருவவியாபகர் = எங்கும் நிறைந்தவர்; அநாதிமலமுத்தர் = இயல்பாகவே பாசங்களின் நீங்கினவர்: சருவஞ்ஞர் = எல்லாம் அறிபவர்; சருவகர்த்தா =எல்லாம் செய்பவர்; நித்தியானந்தர் = என்றும் மகிழ்ச்சியுடையவர்; சுவதந்திரர்=தம்வயமுடையவர்.
4. சிவபெருமான் செய்யும் தொழில்கள் எவை?
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்துமாம்.
5. இவ்வைந்தொழிலுஞ் சிவபெருமான் செய்வது தம் பொருட்டோ பிறர் பொருட்டோ?
தம்பொருட்டன்று; ஆன்மாக்களாகிய பிறர் பொருட்டே. [ஆன்மா, பசு, புற்கலன் என்பவை ஒரு பொருட் சொற்கள்.]
6. படைத்தலாவது யாது?
ஆன்மாக்களுக்குத் தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தினின்றும் தோற்றுவித்தல்.
7. காத்தலாவது யாது?
தோற்றுவிக்கப்பட்ட தனு கரண புவன் போகங்களை நிறுத்தல்.
8. அழித்தலாவது யாது?
தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தில் ஒடுக்குதல்
9. மறைத்தலாவது யாது?
ஆன்மாக்களை இருவினைப் பயன்களாகிய போக்கியப் பொருள்களில் அமிழ்த்துதல்.
10. அருளலாவது யாது?
ஆன்மாக்களுக்குப் பாசத்தை நீக்கிச் சிவத்துவத்தை விளக்குதல்.
11. தனு கரண புவன் போகம் என்றது என்னை?
தனு = உடம்பு; கரணம் = மன முதலிய கருவி; புவனம் = உடம்புக்கு ஆதாரமாகிய உலகம். போகம் = அநுபவிக்கப்படும் பொருள்.
12. ஒரு காரியத்திற்கு காரணம் எத்தனை?
முதற் காரணம், துணைக் காரணம், நிமித்த காரணம் என மூன்றாம். குடமாகிய காரியத்துக்கு முதற் காரணம் மண், துணைக் காரணம் திரிகை, நிமித்த காரணம் குயவன். திரிகை - சக்கரம்.
13. தனு கரண புவன் போகம் எனப்படும் பிரபஞ்சமாகிய காரியத்திற்கு முதற்காரணம் துணைக்காரணம் நிமித்த காரணம் எவை?
முதற் காரணம் சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதி என மூன்று. துணைக்காரணம் சிவசக்தி; நிமித்த காரணம் சிவபெருமான்.
14. சிவசத்தியாவது யாது?
அக்கினியோடு சூடு போலச் சிவத்தோடு பிரிவின்றி உள்ளதாகிய வல்லமை.
15. சிவபெருமானுக்கு உரிய வடிவம் எவை?
அருவம், அருவுருவம், உருவம் என்னும் மூன்றுமாம்.
16. சிவபெருமான் இம்மூவகைத் திருமேனியையுடைய பொழுது எவ்வெப் பெயர் பெறுவர்?
அருவத் திருமேனியையுடைய பொழுது சிவன் எனவும், அருவுருவத் திருமேனியையுடைய பொழுது சதாசிவன் எனவும், உருவத் திருமேனியையுடைய பொழுது மகேசுவரன் எனவும் பெயர் பெறுவர்.
17. சிவபெருமானுடைய உருவம் ஆன்மாக்களாகிய நம் போலிகளுடைய உருவம் போன்றதா?
ஆன்மாக்களுடைய உருவம் இருவினைக்கு ஈடாகித் தோல், எலும்பு முதலிய தாதுக்களால் உண்டாகிய உருவம்; சிவபெருமானுடைய உருவம், ஆன்மாக்கள் செய்யுந் தியானம், பூசை முதலியவைகளின் பொருட்டுச் சிவசத்தியாகிய திருவருட் குணங்களுள் இன்னது இன்னது, இன்ன இன்ன அவயவம் என்று பாவிக்கப்படும் உருவம்.
18. சிவபெருமான் ஐந்தொழிலுந் தாமே செய்வாரா?
சுத்தமாயையிற் கிருத்தியம் ஐந்துந் தாமே செய்வார்; அசுத்தமாயையிற் கிருத்தியம் ஐந்தும் அனந்தேசுரரை அதிட்டித்து நின்று செய்வார்; பிரகிருதியின் கீழ் உள்ள கிருத்தியம் ஐந்தும் அவ்வனந்தேசுரர் வாயிலாக ஸ்ரீகண்டருத்திரரை அதிட்டித்து நின்று செய்வார். ஸ்ரீகண்டருத்திரர் பிரமாவை அதிட்டித்து நின்று படைத்தலும், விட்ணுவை அதிட்டித்து நின்று காத்தலும், காலருத்திரரை அதிட்டித்து நின்று அழித்தலுஞ் செய்வார். [அதிட்டித்தல்=நிலைக்களமாகக் கொண்டு செலுத்துதல்]
19. ஸ்ரீகண்டருத்திரர் இன்னும் எப்படிபட்டவர்?
சைவாகமங்களை அறிவிக்கும் ஆசாரியர்; பிரமா, விட்டுணு முதலிய தேவர்களுக்கும் இருடிகளுக்கும் அறுபத்துமூவர் முதலாயினோர்களுக்கும் நிக்கிரக அநுக்கிரகங்களைச் செய்யுங் கருத்தா; சைவத்திற் புகுந்து சமயதீ¨க்ஷ பெற்றவர்கள் வழிபடும் மூர்த்தி.
20. பிரமா, விட்டுணு, உருத்திரன், மகேசுரன் சதாசிவன் என்னும் ஐவருடைய சத்திகளுக்குப் பெயர் என்ன?
பிரமாவினுடைய சத்தி சரஸ்வதி; விட்டுணுவினுடைய சத்தி இலக்குமி; உருத்திரனுடைய சத்தி உமை; மகேசுரனுடைய சத்தி மகேஸ்வரி; சதாசவினுடைய சத்தி மனோன்மணி.
21. ஆன்மாக்களாலே பூசித்து வழிபடப்படுஞ் சதாசிவ வடிவம் யாது?
பீடமும் இலிங்கமுமாகிய கன்மசாதாக்கிய வடிவமாம். பீடஞ் சிவசக்தி, இலிங்கஞ் சிவம்.
22. இலிங்கம் என்பதற்குப் பொருள் என்னை?
படைத்தல், காத்தல் முதலியவைகளினால் உலகத்தைச் சித்திரிப்பது [லிங்க=சித்திரித்தல்]
23. மகேசுர வடிவம் எத்தனை?
சந்திரசேகரர், உமாமகேசர், இடபாரூடர், சபாபதி, கல்யாணசுந்தரர், பிக்ஷ¡டனர், காமாரி, காலாரி, திரிபுராரி, சலந்தராரி, மாதங்காரி, வீரபத்திரர், ஹரியத்தர், அர்த்தநாரீசுரர், கிராதர், கங்காளர், சண்டேசாநுக்கிரகர், நீலகண்டர், சக்கரப்பிரதர், கசமுகாநுக்கிரகர், சோமாஸ்கந்தர், ஏகபாதர், சுகாசீனர், தக்ஷ¢ணாமூர்த்தி, லிங்கோற்பவர் என்னும் இருபத்தைந்துமாம்.
திருசிற்றம்பலம்
8. விபூதி இயல்-2
1. சைவசமயிகள் ஆவசியமாகச் சரீரத்திலே தரிக்கற் பாலனவாகிய சிவசின்னங்கள் யாது?
விபூதி, உத்திராக்ஷம் என்னும் இரண்டுமாம்.
2. விபூதியாவது யாது?
பசுவின் சாணத்தை அக்கினியாலே தகித்தலால் உண்டாகிய திருநீறு, விபூதியின் பெயர்: பசிதம், பசுமம், க்ஷ¡ரம், இர¨க்ஷ.
3. எந்த நிற விபூதி தரிக்கத் தக்கது?
வெண்ணிற விபூதியே தரிக்கத் தகும்; கருநிற விபூதியும், செந்நிற விபூதியும், புகைநிற விபூதியும், பொன்னிற விபூதியுந் தரிக்கலாகாது.
4. விபூதியை எப்படி எடுத்து வைத்துக்கொள்ளல் வேண்டும்?
புது வஸ்திரத்தினாலே வடித்தெடுத்துப் புதுப் பாண்டத்தினுள்ளே இட்டு, மல்லிகை, முல்லை, பாதிரி, சிறுசண்பகம் முதலிய சுகந்த புஷ்பங்களை எடுத்து அதனுள்ளே போட்டுப், புது வஸ்திரத்தினாலே அதன் வாயைக் கட்டி வைத்துக்கொள்ளல் வேண்டும்.
5. விபூதியை எதில் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்?
பட்டுப் பையிலேனும், சம்புடத்திலேனும், வில்வக் குடுக்கையிலேனும், சுரைக் குடுக்கையிலேனும் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும். குடுக்கைகளினன்றிப் பிறவற்றில் உள்ள விபூதியைத் தரிக்கலாகாது.
6. விபூதியை எந்தத் திக்குமுகமாக இருந்துகொண்டு தரித்தல் வேண்டும்?
வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு தரித்தல் வேண்டும்.
7. விபூதியை எப்படி தரித்தல் வேண்டும்?
நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து 'சிவசிவ' என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் நெற்றியிலே தரித்தல் வேண்டும். இப்படியன்றி, நடுவிரல் ஆழிவிரல்களினால் இடப்பக்கந் தொடுத் திழுத்துப் பெருவிரலிரலினால் வலப் பக்கந் தொடுத் திழுத்துத் தரித்தலுமாம். வாய்ங்காந்து கொண்டும், தலை நடுங்கிக் கொண்டும், கவிழ்ந்து கொண்டுந் தரிக்கலாகாது. ஒரு விரலாலேனும் ஒரு கையாலேனுந் தரிக்கலாகாது.
8. விபூதி நிலத்திலே சிந்தினால் யாது செய்தல் வேண்டும்?
சிந்திய விபூதியை எடுத்து விட்டு, அந்தத் தலத்தைச் சுத்தம் செய்தல் வேண்டும்.
9. எவ்வெவர் முன் எவ்வெப்பொழுது விபூதி தரிக்கலாகாது?
சண்டாளர் முன்னும், பாவிகண் முன்னும், அசுத்த நிலத்தும், வழிநடக்கும் போதும், கிடக்கும் போதுந் தரிக்கலாகாது.
10. எவ்வெக் காலங்களிலே விபூதி ஆவசியமாகத் தரித்துக்கொள்ளல் வேண்டும்?
சந்தியாகால மூன்றினும், சூரியோதயத்தினும், சூரியாஸ்தமயனத்தினும், ஸ்நானஞ் செய்தவுடனும், பூசைக்கு முன்னும் பின்னும், போசனத்துக்கு முன்னும் பின்னும், நித்திரைக்கு முன்னும் பின்னும், மலசல மோசனஞ் செய்து செளசம் பண்ணி ஆசமித்த பின்னும், தீ¨க்ஷ யில்லாதவர் தீண்டிய போதும், பூனை, கொக்கு, எலி முதலியன தீண்டிய போதும், விபூதி ஆவசியமாகத் தரித்தல் வேண்டும்.
11. விபூதி தரியாதவருடைய முகம் எதற்குச் சமமாகும்?
சுடுகாட்டுக்குச் சமமாகும்; ஆதலினால் விபூதி தரித்துக்கொண்டே புறத்திற் புறப்படல் வேண்டும்.
12. ஆசாரியராயினும், சிவனடியாராயினும் விபூதி தந்தால், எப்படி வாங்கித் தரித்தல் வேண்டும்?
மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, இரண்டு கைகளையும் நீட்டி வாங்கித் தரித்துக்கொண்டு, முன்போல மீட்டும் நமஸ்கரித்தல் வேண்டும்.
13. எப்படிப்பட்ட விபூதி தரிக்கலாகாது?
ஒரு கையால் வாங்கிய விபூதியும், விலைக்குக் கொண்ட விபூதியும், சிவதீ¨க்ஷயில்லாதார் தந்த விபூதியுந் தரிக்கலாகாது.
14. சுவாமி முன்னும், சிவாக்கினி முன்னும், குரு முன்னும், சிவனடியார் முன்னும் எப்படி நின்று விபூதி தரித்தல் வேண்டும்?
முகத்தைத் திருப்பி நின்று தரித்தல் வேண்டும்.
15. சுவாமிக்குச் சாத்தப்பட்ட விபூதிப் பிரசாதம் யாவராயினுங் கொண்டுவரின், யாது செய்தல் வேண்டும்?
கொண்டு வந்தவர் தீ¨க்ஷ முதலியவற்றினாலே தம்மின் உயர்ந்தவராயின், அவரை நமஸ்கரித்து வாங்கித் தரித்தல் வேண்டும்; அப்படிபட்டவரல்லராயின், அவ்விபூதிப் பிரசாதத்தை ஒரு பாத்திரத்தில் வைப்பித்து, அதனைப் பத்திர புஷ்பங்களால் அருச்சித்து நமஸ்கரித்து எடுத்துத் தரித்தல் வேண்டும்.
16. விபூதிதாரணம் எத்தனை வகைப்படும்?
உத்தூளனம், திரிபுண்டரம் என இரண்டு வகைப்படும்.
( உத்தூளனம் = திருநீறுபூசுதல்)
17. திரிபுண்டரமாவது யாது?
வளையாமலும், இடையறாமலும், ஒன்றை ஒன்று தீண்டாமலும், மிக அகலாமலும், இடைவெளி ஒவ்வோரங்குல வளவினாதாகத் தரித்தல் வேண்டும்.
18. திரிபுண்டரந் தரிக்கத் தக்க தானங்கள் யாவை?
சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப் புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறுமாம்.
இவைகளுள், விலாப் புறம் இரண்டையும் நீக்கிக் காதுகள் இரண்டையும் கொள்வதும் உண்டு. முழங்கைகளையும் மணிக்கட்டுகளையும் நீக்கிப் பன்னிரண்டு தானங் கொள்வதும் உண்டு.
19. திரிபுண்டரந் தரிக்குமிடத்து இன்ன இன்ன தானங்களில் இவ்வளவு இவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும் என்னும் நியமம் உண்டோ?
ஆம்; நெற்றியில் இரண்டு கடைப்புருவ வெல்லை நீளமும், மார்ப்பிலும் புயங்களிலும் அவ்வாறங்குல நீளமும், மற்றைத் தானங்களில் ஒவ்வொரங்குல நீளமும் பொருந்தத் தரித்தல் வேண்டும். இவ்வெல்லையிற் கூடினும் குறையினுங் குற்றமாம்.
20. எல்லோரும் எப்பொழுதும் விபூதியைச் சலத்திற் குழைத்துத் தரிக்கலாமா?
தி¨க்ஷயுடையவர் சந்தியாகால மூன்றினுஞ் சலத்திற் குழைத்துத் தரிக்கலாம்; மற்றைக் காலங்களிற் சலத்திற் குழையாமலே தரித்தல் வேண்டும். தீ¨க்ஷ இல்லாதவர் மத்தியானத்துக்குப் பின் சலத்திற் குழையாமலே தரித்தல் வேண்டும்.
21. விபூதிதாரணம் எதற்கு அறிகுறி?
ஞானாக்கினியினாலே தகிக்கப்பட்ட பசுமல நீக்கத்தில் விளங்குஞ் சிவத்துவப் பேற்றிற்கு அறிகுறி.
திருச்சிற்றம்பலம்
9. உருத்திராக்ஷவியல்
1. உருத்திராக்ஷமாவது யாது?
தேவர்கள் திரிபுரத்தசுரர்களாலே தங்களுக்கு நிகழ்ந்த துன்பத்தை விண்ணப்பஞ் செய்து கொண்ட பொழுது, திருக்கைலாசபதியுடைய மூன்று திருக்கண்களினின்றும் பொழிந்த நீரிற்றோன்றிய மணியாம்.
2. உருத்திராக்ஷந் தரித்தற்கு யோக்கியர் யாவர்?
மது பானமும், மாமிச போசனமும் இல்லாதவராய், ஆசார முடையவராய் உள்ளவர்.
3. உருத்திராக்ஷந் தரித்துக்கொண்டு மதுபானம் மாமிச போசனம் முதலியவை செய்தவர் யாது பெறுவர்?
தப்பாது நரகத்தில் வீழ்ந்து, துன்பத்தை அநுபவிப்பர்.
4. எவ்வெக் காலங்களில் உருத்திராக்ஷம் ஆவசியமாகத் தரித்துக்கொள்ளல் வேண்டும்?
சந்தியாவந்தம், சிவமந்திரசெபம், சிவபூசை, சிவத்தியானம், சிவாலயதரிசனம், சிவபுராணம் படித்தல், சிவபுராணங் கேட்டல், சிராத்தம் முதலியவை செய்யுங் காலங்களில் ஆவசியகமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்; தரித்துக்கொள்ளாது இவை செய்தவருக்குப் பலம் அற்பம்.
5. ஸ்நான காலத்தில் உருத்திராக்ஷதாரணங் கூடாதா?
கூடும்; ஸ்நானஞ் செய்யும் பொழுது உருத்திராக்ஷ மணியிற் பட்டு வடியுஞ் சலம் கங்கா சலத்துக்குச் சமமாகும்.
6. உருத்திராக்ஷத்தில் எத்தனை முகமணி முதல் எத்தனை முகமணி வரையும் உண்டு?
ஒருமுக மணி முதற் பதினாறுமுக மணி வரையும் உண்டு.
7. உருத்திராக்ஷ மணியை எப்படிக் கோர்த்துத் தரித்தல் வேண்டும்?
பொன்னாயினும், வெள்ளியாயினும், தாமிரமாயினும் முத்தாயினும், பவளமாயினும், பளிங்காயினும் இடையிடையே இட்டு, முகத்தோடு முகமும், அடியோடு அடியும் பொருந்தக் கோர்த்துத் தரித்தல் வேண்டும்.
8. உருத்திராக்ஷந் தரிக்கத் தக்க தானங்கள் யாவை?
குடுமி, தலை, காதுகள், கழுத்து, மார்பு, புயங்கள், கைகள், பூணூல் என்பவைகளாம்.
9. இன்ன இன்ன தானங்களில் இத்தனை இத்தனை மணி தரித்தல் வேண்டும் என்னும் நியமம் உண்டோ?
ஆம்; குடுமியிலும் பூணூலிலும் ஒவ்வொரு மணியும், தலையிலே இருபத்திரண்டு மணியும், காதுகளிலே ஒவ்வொரு மணி அல்லது அவ்வாறு மணியும், கழுத்திலே முப்பத்திரண்டு மணியும், புயங்களிலே தனித்தனி பதினாறு மணியும், மார்பிலே நூற்றெட்டு மணியும் தரித்தல் வேண்டும். குடுமியும் பூணூலும் ஒழித்த மற்றைத் தானங்களிலே அவ்வத்தானங் கொண்ட அளவு மணி தரித்தலும் ஆகும்.
10. இந்தத் தானஙக ளெல்லாவற்றிலும் எப்போதும் உருத்திராக்ஷந் தரித்துக்கொள்ளலாமா?
குடுமியிலும், காதுகளிலும், பூணுலிலும் எப்போதுந் தரித்துக்கொள்ளலாம்; மற்றைத் தானங்களிலோ வெனின், சயனத்திலும் மலசல மோசனத்திலும், நோயினும், சனனாசெளச மரணாசெளசங்களிலுந் தரித்துக்கொள்ளலாகாது..
11. உருத்திராக்ஷதாரணம் எதற்கு அறிகுறி?
சிவபெருமானுடைய திருக்கண்ணிற் றோன்றுந் திருவருட்பேற்றிற்கு அறிகுறி.
திருச்சிற்றம்பலம்
10. சிவலிங்கவியல்
1. சிவபெருமானை ஆன்மாக்கள் வழிபடும் இடங்கள் எவை?
சிவபெருமான், புறத்தே சிவலிங்கம் முதலிய திருமேனிகளும் குருவுஞ் சங்கமமும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்தே உயிர் இடமாகக் கொண்டு நின்றும், ஆன்மாக்கள் செய்யும் வழிபாட்டைக் கொண்டருளுவர். ஆதலால், ஆன்மாக்கள் அவரை வழிபடும் இடங்கள் இவைகளேயாம். சிவத்துக்குப் பெயராகிய இலிங்கம் என்னும் பதம், உபசாரத்தால், அச்சிவம் விளங்கப் பெறும் ஆதாரமாகிய சைல முதலியவற்றிற்கும் வழங்கும். [சைலம்=சிலையாலாகியது]
2. சிவபெருமான் இவ்விடங்களில் நிற்பர் என்றது அவர், எங்கும் வியாபகர் என்றதனோடு மாறுபடுமன்றோ?
மாறுபடாது; சிவபெருமான், எங்கும் வியாபகமாய் நிற்பினும், இவ்விடங்களில் மாத்திரமே தயிரில் நெய் போல விளங்கி நிற்பர்; மற்றை இடங்களிலெல்லாம் பாலில் நெய் போல வெளிப்படாது நிற்பர்.
3. சிவலிங்கம் எத்தனை வகைப்படும்?
பரார்த்த லிங்கம், இட்ட லிங்கம் இருவகைப்படும்.
4. பரார்த்த லிங்கமாவது யாது?
சிவபெருமான் சங்கார காலம் வரையுஞ் சாந்நித்தியராய் இருந்து ஆன்மாக்களுக்கு அநுக்கிரக்கப் பெறும் இலிங்கமாம். இது, தாவரலிங்கம் எனவும் பெயர் பெறும். சாந்நித்யம்=அண்மை, அடுத்தல், வெளிப்படுத்தல், தாவரம் எனினும், திரம் எனினும், நிலையியற் பொருள் எனினும் பொருந்தும்.
5. பரார்த்த லிங்கம் எத்தனை வகைப்படும்?
சுயம்பு லிங்கம், காண லிங்கம், தைவிக லிங்கம், ஆரிட லிங்கம், மானுட லிங்கம் என ஐவகைப்படும். இவைகளுள்ளே, சுயம்பு லிங்கமாவது தானே தோன்றியது. காண லிங்கமாவது விநாயகர், சுப்பிரமணியர் முதலிய கணர்களாலே தாபிக்கப்பட்டது. தைவிக லிங்கமாவது விட்டுணு முதலிய தேவர்களாலே தாபிக்கப்பட்டது. ஆரிட லிங்கமாவது இருடிகளாற் றாபிக்கப்பட்டது. அசுரர், இராக்கதர் முதலாயினாற் றாபிக்கப்பட்டதும் அது. மானுடலிங்கமாவது மனிதராற் றாபிக்கப்பட்டது.
6. இவ்வைவகை யிலிங்கங்களும் ஏற்றக்குறைவு உடையனவா?
ஆம்; மானுட லிங்கத்தின் உயர்ந்தது ஆரிட லிங்கம்; அதனின் உயர்ந்தது தைவிக லிங்கம்; அதனின் உயர்ந்தது காணலிங்கம்; அதனின் உயர்ந்தது சுயம்பு லிங்கம்.
7. பரார்த்த லிங்கப் பிரதிட்டை, பரார்த்த பூஜை, உற்சவம் முதலியவை செய்தற்கு அதிகாரிகள் யாவர்?
ஆதிசைவர்களுக்குள்ளே, சமயதீ¨க்ஷ, விசேஷதீ¨க்ஷ, நிருவாணதீ¨க்ஷ, ஆசாரியாபி§க்ஷகம் என்னும் நான்கும் பெற்றவர்களாய்ச் சைவாகமங்களிலே மகாபாண்டித்திய முடையவர்களாய் உள்ளவர்கள்.
8. திருக்கோயிலுள் ளிருக்குஞ் சிவலிங்கம் முதலிய திருமேனிகள் எல்லாரலுமே வழிபடற் பாலானவா?
ஆம்; சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கும் மார்க்கத்தாராலும் வழிபடற் பாலனவேயாம்; ஆயினும், அவ்வழிபாடு அவரவர் கருத்து வகையால் வேறுபடும்; படவே, அவருக்குச் சிவபெருமான் அருள் செய்யும் முறைமையும் வேறுபடும்.
9. சிவலிங்கம் முதலிய திருமேனிகளைச் சரியையாளர்கள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்? அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வர்?
சரியையாளர்கள் பகுத்தறித லில்லாது சிவலிங்கம் முதலிய திருமேனியே சிவமெனக் கண்டு வழிபடுவர்கள்; அவர்களுக்குச் சிவபெருமான் அங்கே வெளிப்படாது நின்று அருள் செய்வர்.
10. கிரியையாளர்கள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்? அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வர்?
கிரியையாளர்கள் அருவப் பொருளாகிய சிவபிரான் ஈசானம் முதலிய மந்திரங்களினாலே சிவலிங்க முதலிய திருவுருக் கொண்டார் என்று தெளிந்து, மந்திர நியாசத்தினால் வழிபடுவர்கள்; அவர்களுக்குச் சிவபெருமான், கடைந்த பொழுது தோன்றும் அக்கினிபோல, அவ்வம் மந்திரங்களினாலும் அவ்வவர் விரும்பிய வடிவமாய், அவ்வத் திருமேனிகளில் அவ்வப்பொழுது தோன்றி நின்று, அருள் செய்வர்.
11. யோகிகள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்? அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வர்?
யோகிகள், யோகிகளுடைய இருதய மெங்கும் இருக்குஞ் சிவபெருமான் இந்தத் திருமேனியிலும் இருந்து பூசை கொண்டருளுவர் என்று தெளிந்து, சாத்திய மந்திரங்களினால் வழிபடுவார்கள்; அவர்களுக்குச் சிவபெருமான், கறந்த பொழுது தோன்றும் பால் போல, அவ்வம் மந்திரங்களினால் அவ்வவர் விரும்பிய வடிவமாய், அவ்வத் திருமேனிகளில் அவ்வப்பொழுது தோன்றி நின்று அருள் செய்வர்.
12. ஞானிகள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்/ அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வர்?
ஞானிகள் மேலே சொல்லப்பட்ட முத்திறத்தாரும் போல ஓரிடமாகக் குறியாது, அன்பு மாத்திரத்தால் அங்கே வழிபடுவார்கள். அவர்களுக்குச் சிவபெருமான், கன்றை நினைந்த தலையீற்றுப் பசுவின் முலைப்பால் போலக், கருணை மிகுதியினால் அவ்வன்பே தாமாகி, எப்பொழுதும் வெளிப்பட்டு நின்று அங்கே அருள் செய்வர்.
13. சிவபெருமானுடைய திருவுருவஞ் சிவசக்தி வடிவம் என்று முன் செல்லப்பட்ட தன்றோ: இங்கே அவர் திருவுருவம் மந்திர வடிவம் என்றது என்னை?
சிவபெருமானுக்கு வாச்சிய மந்திரமாகிய சிவசத்தியே உண்மை வடிவம்; அச்சிவசத்தி, கரியினிடத்தே அக்கினி போல வாசக மந்திரத்தினிடத்தே நின்று சாதகருக்குப் பயன் கொடுக்கும். ஆதலினாலே, சிவபெருமானுக்குச், சிவசத்தியினால், வாசக மந்திரத்தோடு சம்பந்தம் உண்டு. அச்சம்பந்தம் பற்றி வாசக மந்திரஞ் சிவபெருமானுக்கு உபசார வடிவமாம்.
14. மந்திரநியாசம் என்றது என்ன?
வாச்சிய மந்திரங்களாகிய சிவசக்தி பேதங்களை உள்ளத்தில் சிந்தித்து, அவைகளை அறிவிக்கும் வாசக மந்திரங்களை உபசரித்துச், சிவபெருமானுக்கு உபசார வடிவத்தை அம்மந்திரங்களினாலே சிர முதலாக அமைத்தலாம். [நியசித்தல்=வைத்தல், பதித்தல்]
15. இட்டலிங்கமாவது யாது?
ஆசாரியர் விஷேதீ¨க்ஷயைப் பண்ணி, சீடனைப் பார்த்து, "நீ உள்ளளவுங் கைவிடாது இவரை நாடோறும் பூசி" என்று அநுமதி செய்து, "அடியேன் இச்சரீரம் உள்ளவரையுஞ் சிவபூசை செய்தன்றி ஒன்றும் உட்கொள்ளேன்" என்று பிரதிஞ்ஞை செய்வித்துக்கொண்டு கொடுக்க, அவன் வாங்கிப் பூசிக்கும் இலிங்கமாம். இது ஆன்மார்த்த லிங்கம் எனவும், சல லிங்கம் எனவும் பெயர் பெறும்.
16. இட்டலிங்கம் எத்தனை வகைப்படும்?
வாண லிங்கம், படிக லிங்கம், இரத்தின லிங்கம், லோகஜ லிங்கம், சைல லிங்கம், க்ஷணிக லிங்கம், எனப் பலவகைப்படும்.
17. இட்டலிங்கம் பூசைக்கு அதிகாரிகள் யாவர்?
பிராமணர் முதலிய நான்கு வருணத்தாரும் அநுலோமர் அறுவருமாகிய பத்துச் சாதியாருள்ளும், அங்ககீன ரல்லாதவர்கள் இட்டலிங்க பூசைக்கு அதிகாரிகள்; இவர்களுள்ளும், பிணியில்லாதவராய், இடம் பொருளேவல்கள் உடையவராய்ச், சிவபூசா விதி, பிராயச்சித்த விதி, மார்கழி மாதத்துக் கிருதாபி§க்ஷகம் முதலாகப் பன்னிரண்டு மாதமுஞ் செய்யப்படும் மாதபூசாவிதி, சாம்பவற்சரிகப் பிராயச் சித்தமாகச் சாத்தப்படும் பவித்தர விதி முதலியவைகளை நன்றாக அறிந்தவராய், அறிந்தபடியே அநுட்டிக்க வல்லவராய் உள்ளவர் மாத்திரமே, வாண முதலிய சிவலிங்கப் பிரதிட்டை செய்வித்துக் கொண்டு பூசை பண்ணலாம். மற்றவரெல்லாரும் க்ஷணிக லிங்க பூசையே பண்ணக் கடவர். அவர் குளிக்கப் புகுந்து சேறு பூசிக்கொள்வது போலச் சிவலிங்கப் பிரதிட்டை செய்வித்துக் கொள்ளப் புகுந்து பாவந் தேடிக்கொள்வது புத்தி யன்று.
18. எவ்வகைப்பட்ட சிவலிங்கம் பிரதிட்டை செய்வித்துக் கொள்ளல் வேண்டும்?
சிவாகம விதிவிலக்குகளை ஆராய்ந்து, சிவலிங்கங்களைப் பரீ¨க்ஷ செய்து, யாதொரு குற்றமும் இல்லாததாய் நல்லிலக்கணங்கள் அமையப்பெற்றதாய் உள்ள சிவலிங்கத்தையே பிரதிட்டை செய்வித்துக் கொள்ளல் வேண்டும்.
19. க்ஷணிக லிங்கமாவது யாது?
பூசித்தவுடன் விடப்படும் இலிங்கமாம்.
20. க்ஷணிக லிங்கம் எத்தனை வகைப்படும்?
மண், அரிசி, அன்னம், ஆற்றுமணல், கோமயம், வெண்ணெய், உருத்திராக்ஷம், சந்தனம், கூர்ச்சம், புஷ்பமாலை, சருக்கரை, மா எனப் பன்னிரண்டு வகைப்படும்.
21. மேலே சொல்லப்பட்ட பத்துச் சாதியாருள் அங்ககீனரும் மற்றைச் சாதியாருஞ் சிவபூசை பண்ண லாகாதா?
தங்கள் தங்கள் அதிகாரத்திற் கேற்ப ஆசாரியர் பண்ணிய தீ¨க்ஷயைப் பெற்றுத் தூல லிங்கமாகிய தூபியையேனுந் திருக்கோபுரத்தையேனும் பத்திர புஷ்பங்களால் அருச்சித்துத் தோத்திரஞ் செய்து நமஸ்கரிப்பதே அவர்களுக்குச் சிவபூசை; சூரிய விம்பத்தின் நடுவே சதாசிவமூர்த்தி அநவரதமும் எழுந்தருளி யிருப்பர் என்று நினைந்து அவருக்கு எதிராகப் புட்பங்களைத் தூவித் தோத்திரஞ் செய்து நமஸ்கரிப்பதும் அவர்களுக்குச் சிவபூசை.
22. சிவபூசை எழுந்தருளப் பண்ணிக் கொண்டவர் பூசை பண்ணாது புசிக்கின் என்னை?
பூசை பண்ணாது புசிப்பது பெருங் கொடும் பாவம். அப்படிப் புசிக்கும் அன்னம் புழுவுக்கும், பிணத்துக்கும், மலத்துக்குஞ் சமம்; அப்படிப் புசித்தவனைத் தீண்டல் காண்டல்களும் பாவம். ஆதலால், ஒரோவிடத்துப் பூசை பண்ணாது புசித்தவன், ஆசாரியரை அடைந்து அதற்குப் பிராயச்சித்தஞ் செய்து கொள்ளல் வேண்டும்.
23. ஞானநிட்டை யுடைவர் சிவபூசை முதலிய நியமங்களைச் செய்யாது நீக்கிவிடலாமா?
நித்திரை செய்வோர் கையிற் பொருள் அவர் அறியாமற்றானே நீங்குதல் போல, ஞானநிட்டையுடையவருக்குச் சிவபூசை முதலிய நியமங்கள் தாமே நீங்கிற் குற்றமில்லை; அப்படி யன்றி அவர் தாமே அவைகளை நீக்குவாராயின், நரகத்து வீழ்தல் தப்பாது.
24. சிவபூசை எழுந்தருளப் பண்ணிக்கொண்டவர் சனன மரணா செளசங்களில் யாது செய்தல் வேண்டும்?
திடபத்தி யுடையவர் ஸ்நானஞ் செய்து, ஈர வஸ்திரத்தைத் தரித்துக்கொண்டு, தாமே சிவபூசை பண்ணலாம்; ஸ்நானஞ் செய்தமை முதற், பூசை முடிவுவரையுந் தாமரையிலையில் நீர் போல அவரை ஆசெளசஞ் சாராது. திடபத்தி யில்லாதவர், ஆசெளசம் நீங்கும் வரையும் தம்முடைய ஆசாரியரைக் கொண்டாயினும் தம்மோடு ஒத்தாரைக் கொண்டாயினும் தம்முடைய பூசையைச் செய்வித்துத், தாம் அந்தரியாகஞ் செய்துகொண்டு, அப்பூசை முடிவிலே புறமண்டபத்தி னின்று புட்பாஞ்சலித்திரயஞ் செய்து, நமஸ்காரம் பண்ணல் வேண்டும். (அந்தரியாகம்-உட்பூசை)
25. வியாதினாலே தங் கைகால்கள் தம் வசமாகாதிருப்பின் யாது செய்தல் வேண்டும்?
தம்முடைய ஆசாரியரைக் கொண்டாயினும் தம்மோடு ஒத்தாரைக் கொண்டாயினும் தம்முடைய பூசையைச் செய்வித்துத், தாம் அந்தரியாகஞ் செய்தல் வேண்டும்.
26. சிவபூசை யெழுந்தருளப் பண்ணிக்கொண்ட பெண்கள் பூப்பு வந்தபோது யாது செய்தல் வேண்டும்?
மூன்று நாளும் பிறர் தண்ணீர் தர ஸ்நானஞ் செய்து கொண்டு, அந்தரியாகஞ் செய்தல் வேண்டும்; நான்காம் நாள் ஸ்நானஞ் செய்து, பஞ்ச கவ்வியமேனும், பாலேனும் உட்கொண்டு; மீட்டும் ஸ்நானஞ் செய்து, சிவபூசை செய்தல் வேண்டும், அம்மூன்று நாளும் அந்தரியாகஞ் செய்யாதொழியின், அக்குற்றம் போம்படி அகோரத்தை ஆயிரம் உருச் செபித்தல் வேண்டும்.
27. பெண்கள், தாம் பிரசவித்த சூதகம் தமக்குரியார் இறந்த ஆசெளசம், வியாதி இவைகள் வரின், யாது செய்தல் வேண்டும்?
வருணத்தாலுந் தீ¨க்ஷயாலுந் தம்மோ டொத்தவரைக் கொண்டு பூசை செய்வித்தல் வேண்டும்.
28. ஆசெளசம், வியாதி முதலியவை வந்தபோது பிறரைக் கொண்டு பூசை செய்வித்தவர் யாவரும், ஆசெளச முதலியவை நீங்கிய பின் யாது செய்தல் வேண்டும்?
பிராயசித்தத்தின் பொருட்டு அகோரத்தை முந்நூறுருச் செபித்துத் தாம் பூசை செய்தல் வேண்டும்.
29. சிவலிங்க காணாவிடத்து யாது செய்தல் வேண்டும்?
அந்தரியாக பூசை செய்து, பால் பழம், முதலியவற்றை உண்டு, நாற்பது நாள் இருத்தல் வேண்டும் அவ்விலிங்கம் வாராதொழியின் வேறொருலிங்கத்தை ஆசாரியர் பிரதிட்டை செய்துதரக் கைக்கொண்டு, பூசை செய்தல் வேண்டும். அதன்பின் வந்ததாயின் அவ்விலிங்கத்தையும் விடாது பூசை செய்தல் வேண்டும்.
30. சிவலிங்கப் பெருமானுக்கு விசேஷபூசை செய்யத்தக்க காலங்கள் எவை?
பஞ்சாக்ஷரவியலிலே சொல்லப்பட்டவை முதலிய புண்ணிய காலங்களுஞ் சென்மத்திரயங்களுமாம். இன்னும் மார்கழி மாச முழுதினும் நாடோறும் நித்திய பூசையே யன்றி அதற்குமுன் உஷக்கால பூசையும் பண்ணல் வேண்டும். சிவராத்திரி தினத்திலே பகலில் நித்திய பூசையேயன்றி இராத்திரியில் நான்கு யாம பூசையும் பண்ணல் வேண்டும் (சென்மத்திரயங்களாவன; பிறந்த நக்ஷத்திரமும் அதற்குப் பத்தா நக்ஷத்திர்மும், அதற்குப் பத்தா நக்ஷத்திரமுமாம்.)
31. சென்மத்திரய பூசையால் வரும் விசேஷ பலம் என்னை?
சென்மத்திரயந்தோறும் சிவலிங்கப்பெருமானூக்குப் பதமந்திரங்கொண்டு பாலினாலும் சர்க்கரையினாலும் விசேஷமாக அபிஷேகஞ் செய்து, சுகந்தத் திரவியங்கள் கலந்த சந்தனக் குழம்பு சாத்திப் பாயச முதலியன நிவேதனஞ் செய்துகொண்டுவரின், உற்பாதங்களும், பயங்கரமாகிய கிரக பிடைகளும், சகல வியாதிகளும் நீங்கும்.
திருச்சிற்றம்பலம்
11. பஞ்சாக்ஷரவியல்
1. சைவசமயிகள் நியமமாகச் செபியக்கற்பாலதாகிய சிவமூலமந்திரம் யாது?
ஸ்ரீபஞ்சாக்ஷரம்.(திருவைந்தெழுத்து).
2. ஸ்ரீபஞ்சாக்ஷர செபஞ் செய்தற்கு யோக்கியர் ஆவார் யாவர்?
மது பானமும், மாமிச போசனமும் இல்லாதவராய், ஆசாரம் உடையவராய், சிவதீ¨க்ஷ பெற்றவராய் உள்ளவர்.
3. ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை எப்படிப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்?
தத்தம் வருணத்துக்கும் ஆச்சிரமத்துக்குந் தீ¨க்ஷக்கும் ஏற்பக் குருமுகமாகவே பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
4. மந்திரோபதேசம் பெற்றவர் குருவுக்கு யாது செய்து கொண்டு செபித்தல் வேண்டும்?
குருவை வழிபட்டு, அவருக்கு வருடந்தோறும் இயன்ற தக்ஷணை கொடுத்துக்கொண்டே செபித்தல் வேண்டும்.
5. ஸ்ரீபஞ்சாக்ஷரத்திலே நியமமாக ஒரு காலத்துக்கு எத்தனை உருச் செபித்தல் வேண்டும்?
நூற்றெட்டுருவாயினும், ஐம்பதுருவாயினும், இருபத்தைந்துருவாயினும், பத்துருவாயினும் நியமமாகச் செபித்தல் வேண்டும்.
6. செபத்துக்கு எதைக் கொண்டு உரு எண்ணல் வேண்டும்?
செபமாலையைக் கொண்டாயினும், வலக்கை விரலிறையைக் கொண்டாயினும் உரு எண்ணல் வேண்டும். (விரலிறை=கட்டைவிரல்)
7. செபமாலையை என்ன மணி கொண்டு செய்வது உத்தமம்?
உருத்திராக்ஷமணி கொண்டு செய்வது உத்தமம்.
8. செபமாலைக்கு எத்தனை மணி கொள்ளத் தகும்?
இல்வாழ்வான் இருபத்தேழு மணியும், துறவி இருபத்தைந்து மணியுங் கொள்ளத் தகும். இல்வாழ்வான் நூற்றெட்டுமணி ஐம்பத்து நான்கு மணிகளாலுஞ் சபமாலை செய்து கொள்ளலாம்.
9. செபமாலைக்கு எல்லா முகமணியும் ஆகுமா?
இரண்டு முக மணியும், மூன்று முக மணியும், பன்னிரண்டுமுக மணியும், பதின்மூன்று முக மணியுஞ் செபமாலைக்கு ஆகாவாம்; அன்றியும், எல்லாமணியும் ஒரே விதமாகிய முகங்களையுடையனவாகவே கொள்ளல் வேண்டும்; பல விதமாகிய முகமணிகளையுங் கலந்து கோத்த செபமாலை குற்றமுடைத்து.
10. செபமணிகளை எதினாலே கோத்தல் வேண்டும்?
வெண்பட்டிலேனும் பருத்தியிலேனும் இருபத்தேழிழையினா லாக்கிய கயிற்றினாலே கோத்தல் வேண்டும்.
11. செபமாலையை எப்படிச் செய்தல் வேண்டும்?
முகத்தோடு முகமும் அடியோடு அடியும் பொருந்தக் கோர்த்து, ஒன்றை ஒன்று தீண்டா வண்ணம் இடையிடையே நாகபாசம், பிரமக்கிரந்தி, சாவித்திரி என்பவைகளுள் இயன்றதொரு முடிச்சை இட்டு, வடநுனி இரண்டையும் ஒன்றாகக் கூட்டி, அதிலே நாயகமணியை ஏறிட்டுக் கோத்து, முடிந்து கொள்ளல் வேண்டும். நாயகமணிக்கு மேரு என்றும் பெயர்.
12. செபமாவது யாது?
தியானிக்கப்படும் பொருளை எதிர்முக மாக்கும் பொருட்டு அதனை உணர்த்தும் மந்திரத்தை உச்சரித்தலாம்.
13. மந்திரம் என்பதற்குப் பொருள் யாது?
நினைப்பவனைக் காப்பது என்பது பொருள். ஆகவே, மந்திரம் என்னும் பெயர், நினைப்பவனைக் காக்கும் இயல்புடைய வாச்சியமாகிய சிவத்துக்குஞ் சிவசத்திக்குமே செல்லும்; ஆயினும், வாச்சியத்துக்கும் வாசகத்துக்கும் பேதமில்லாமை பற்றி, உபசாரத்தால் வாசகத்துக்குஞ் செல்லும்; எனவே, மந்திரம் வாச்சிய மந்திரம், வாசகமந்திரம் என இரு திறப்படும் என்ற படியாயிற்று. [மந்=நினைப்பவன்; திர=காப்பது]
14. மந்திரசெபம் எத்தனை வகைப்படும்?
மானசம், உபாஞ்சு, வாசகம் என மூவகைப்படும்.
15. மானசமாவது யாது?
நா நுனி உதட்டைத் தீண்டாமல், ஒருமை பொருத்தி மனசினாலே செபித்தலாம்.
16. உபாஞ்சுவாவது யாது?
தன் செவிக்கு மாத்திரங் கேட்கும்படி, நா நுனி உதட்டைத் தீண்ட மெல்லச் செபித்தலாம். இதற்கு மந்தம் என்றும் பெயர்.
17. வாசகமாவது யாது?
அருகிலிருக்கும் பிறர் செவிக்குங் கேட்கும்படி செபித்தலாம். இதற்குப் பாஷ்யம் என்றும் பெயர்.
18. இம்மூவகைச் செபமும் பலத்தினால் ஏற்றக்குறைவு உடையனவா?
ஆம்; வாசகம் நூறு மடங்கு பலமும், உபாஞ்சு பதினாயிர மடங்கு பலமும், மானசங் கோடி மடங்கு பலமுந் தரும்.
19. எந்தத் திக்கு முகமாக எப்படி இருந்து செபித்தல் வேண்டும்?
வடக்குமுக மாகவேனும் கிழக்குமுக மாகவேனும், மரப்பலகை, வஸ்திரம், இரத்தின கம்பளம், மான்றோல், புலித்தோல், தருப்பை என்னும் ஆசனங்களுள் இயன்ற தொன்றிலே, முழந்தாள் இரண்டையும் மடக்கி, காலோடு காலை அடக்கி, இடத் தொடையினுள்ளே வலப் புறங்காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த, நிமிர்த்திருந்து கொண்டு, செபித்தல் வேண்டும்.
20. எப்படி இருந்து செபிக்க லாகாது?
சட்டையிட்டுக் கொண்டும், சிரசில் வேட்டி கட்டிக் கொண்டும், போர்த்துக் கொண்டும், குடுமியை விரித்துக் கொண்டும், கெளபீனந் தரியாதும், வேட்டி தரியாதும், விரலிலே பவித்திரந் தரியாதும், பேசிக் கொண்டும், இருளில் இருந்து கொண்டும், நாய், கழுதை, பன்றி முதலியவற்றையும், புலையர் முதலாயினோரையும் பார்த்துக் கொண்டுஞ் செபிக்கலாகாது. செபஞ் செய்யும் போது, கோபம், களிப்பு, கொட்டாவி, தும்பல், நித்திரை, சோம்பல், வாதம் முதலியவை ஆகாவாம்.
21. செபமாலை கொண்டு எப்படி செபித்தல் வேண்டும்?
பிறர் கண்ணுக்குப் புலப்படா வண்ணம் பரிவட்டத்தினால் மூடப்பட்ட செபமாலையை, வாசகமாகக் செபிக்கிற் சுட்டுவிரலிலும், மந்தமாகச் செபிக்கின் நடுவிரலிலும், மானசமாகச் செபிக்கின் ஆழிவிரலிலும் வைத்து, சிவபெருமானுடைய திருவடிகளை மனசிலே தியானித்துக் கொண்டு, பெருவிரலினாலே நாயக மணிக்கு அடுத்த முகமேனோக்கிய மணியை முதலாகத் தொட்டு, ஒவ்வொரு மணியாகப் போகத்தின் பொருட்டுக் கீழ்நோக்கித் தள்ளியும் முத்தியின் பொருட்டு மேனோக்கித் தள்ளியுஞ் செபித்து, பின்பு நாயகமணி கைப்பட்டதாயின், அதனைக் கடவாது திரும்ப மறித்து வாங்கி, அதனைத் திரும்பக் கையில் ஏறிட்டுச் செபித்தல் வேண்டும். செபிக்கும் போது, செபமாலையின் மணிகள் ஒன்றோடொன்று ஓசைப்படிற் பாவமுண்டாம்.
22. இன்ன இன்ன பொழுது செபித்தவர் போக மோக்ஷங்களுள் இன்னது இன்னது பெறுவர் என்னும் நியமம் உண்டோ?
ஆம்; பிராணவாயுவானது இடப்பக்க நாடியாகிய இடையிலே நடக்கும் போது செபித்தவர் போகத்தையும், வலப்பக்க நாடியாகிய பிங்கலையிலே நடக்கும் போது செபித்தவர் மோக்ஷத்தையும், நடுநிற்கு நாடியாகிய கழுமுனையிலே நடக்கும் போது செபித்தவர் போகம் மோக்ஷம் என்னும் இரண்டையும் பெறுவர்.
23. ஸ்ரீ பஞ்சாக்ஷர செபம் எவ்வெக் காலங்களிலே விசேஷமாகச் செய்யத் தக்கது?
அட்டமி, சதுர்த்தசி, அமாவாசை, பெளர்ணிமை, விதிபாதயோகம், பன்னிரண்டு மாதப்பிறப்பு, கிரகணம், சிவராத்திரி, அர்த்தோதயம், மகோதயம் முதலாகிய புண்ணிய காலங்களிலே புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானஞ் செய்து, தியானஞ் செபம் முதலியன விசேஷமாகச் செய்தல் வேண்டும். சித்திரை, ஐப்பசி என்னும் இவ்விரண்டு மாதப் பிறப்பும் விஷ¤ எனப்படும்; இவைகளிலே, மாதம் பிறத்தற்கு முன்னெட்டு நாழிகையும் பின்னெட்டு நாழிகையும் புண்ணிய காலம். ஆடி மாதப் பிறப்பு, தக்ஷ¢ணாயனம் எனப்படும்.
இதிலே மாதம் பிறக்கு முன் பதினாறு நாழிகை புண்ணிய காலம். தை மாதப்பிறப்பு உத்தராயணம் எனப்படும்; இதிலே, மாதம் பிறந்த பின் பதினாறு நாழிகை புண்ணிய காலம். கார்த்திகை, மாசி, வைகாசி, ஆவணி என்னும் இந்நான்கு மாதப் பிறப்பும் விட்டுணுபதி எனப்படும்; இவைகளிலே மாதம் பிறக்கு முன் பதினாறு நாழிகை புண்ணிய காலம். ஆனி, புரட்டாதி, மார்கழி, பங்குனி என்னும் இந்நான்கு மாதப்பிறப்பும் சடசீதிமுகம் எனப்படும்; இவைகளிலே, மாதம் பிறந்த பின் பதினாறு நாழிகை புண்ணிய காலம். சூரிய கிரகணத்திலே பரிசகாலம் புண்ணிய காலம்; சந்திர கிரகணத்திலே விமோசன காலம் புண்ணிய காலம். அர்த்தோதயமாவது தை மாதத்திலே ஞாயிற்றுக் கிழமை அமாவாசையுந் திருவோண நக்ஷத்திரமும் விதிபாத யோகமுங் கூடிய காலம். மகோதயமாவது தை மாதத்திலே திங்கட்கிழமையும் அமாவாசையுந் திருவோண நக்ஷத்திரமும், விதிபாத யோகமுங் கூடிய காலம்.
24. ஸ்ரீ பஞ்சாக்ஷர செபத்தாற் பயன் என்னை?
ஸ்ரீ பஞ்டாக்ஷரத்தின் பொருளை அறிந்து, சிவபெருமான் ஆண்டவன், தான் அடிமையென்னும் முறைமையை மனத்தகத்தே வழுவாமல் இருத்தி, அதனை விதிப்படி மெய்யன்போடு செபித்துக் கொண்டுவரின், விறகினிடத்தே அக்கினி பிரகாசித்தற் போல, ஆன்மாவினிடத்தே சிவபெருமான் பிரகாசித்து, மும்மலங்களும் நிங்கும்படி ஞானானந்தத்தைப் பிரசாதித் தருளுவர்.
திருச்சிற்றம்பலம்
12. நித்திய கரும இயல்
1. நாடோறும் நியமமாக எந்த நேரத்தில் நித்திரை விட்டெழுதல் வேண்டும்?
சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே நித்திரை விட்டெழுதல் வேண்டும்.
2. நித்திரை விட்டெழுந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?
விபூதி தரித்துச் சிவபெருமானைத் தோத்திரஞ் செய்து கொண்டு பாடங்களைப் படித்தல் வேண்டும்.
மலசமோசனம்
3. அதற்குப் பின் யாது செய்யத் தக்கது?
மலசல மோசனஞ் செய்யத்தக்கது.
4. எவ்விடத்தில் மலசலங் கழித்தல் வேண்டும்?
திருக்கோயிலுக்குத் தூரமாய் உள்ள தனி இடத்தில் மலசலங் கழித்தல் வேண்டும்.
5. எவ்விடத்தில் மலசலங் கழித்தல் ஆகாது?
வழியிலும், குழியிலும், நீர்நிலைகளிலும், நீர்க்கரையிலும், கோமயம் உள்ள இடத்திலும், சுடுகாட்டிலும், பூந்தோட்டத்திலும், மரநிழலிலும், உழுத நிலத்திலும், அறுகம் பூமியிலும், பசு மந்தை நிற்கும் இடத்திலும், புற்றிலும், அருவி பாயும் இடத்திலும், மலையிலும், மலசலங் கழித்தல் ஆகாது.
6. எந்தத் திக்குமுகமாக இருந்து கொண்டு மலசலங் கழித்தல் வேண்டும்?
பகலிலே வடக்கு முகமாகவும், இரவிலே தெற்கு முகமாகவும் இருந்து கொண்டு மலசலங் கழித்தல் வேண்டும்.
7. எப்படி இருந்து மலசலங் க்ழித்தல் வேண்டும்?
தலையயுங் காதுகளையும் வஸ்திரத்தினாலே சுற்றி, மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்து மலசலங் கழித்தல் வேண்டும்.
சௌசம்
8. மலசலங் கழித்தவுடன் யாது செய்தல் வேண்டும்?
எழுந்து, சலக்கரையை அடைந்து, சலத்துடன் ஒரு சாணுக்கு இப்பால் இருந்து கொண்டு சௌசஞ் செய்தல் வேண்டும்.
9. சௌசம் எப்படி செய்தல் வேண்டும்?
மண்ணுஞ் சலமும் கொண்டு, இடக்கையினாலே குறியில் ஒரு தரமும், குதத்தில் ஐந்து தரதிற்கு மேலும், இடக்கையை இடையிடயே ஒருதரமும், பின்னும் இடக்கையை பத்துத் தரமும், இரண்டு கையையுஞ் சேர்த்து ஏழு தரமுஞ் சுத்தி செய்து, சகனத்தைத் துடைத்து கால்களை முழங்கால் வரையும், கைகளை முழங்கை வரையும் ஒவ்வொரு தரங் கழுவுதல் வேண்டும்.
10.இப்படி செய்தபின் யாது செய்தல் வேண்டும்?
அவ்விடத்தை விட்டு வேறொரு துறையிலே போய், வாயையும், கண்களையும், நாசியையும், காதுகளையும், கை கால்களில் உள்ள நகங்களையுஞ் சுத்தி செய்து, எட்டுத் தரஞ் சலம் வாயிற்கொண்டு, இடப்புறத்திலே கொப்பளித்தல் வேண்டும்.
11.வாய் கொப்ப்ளித்த பின் யாது செய்தல் வேண்டும்?
தலைக்கட்டு இல்லாமல் மூன்று முறை ஆசமனஞ் செய்தல் வேண்டும்.
12.ஆசமனம் எப்படி செய்தல் வேண்டும்?
வலக்கையை விரித்துப் பெருவிரலையுஞ் சிறுவிரலையும் பிரித்துவிட்டு, பெருவிரல் அடியில் சார்ந்த உழுந்தமிழ்ந்து சலத்தை ஆசமித்தல் வேண்டும்.
13.சௌசத்துக்குச் சமீபத்தில் சலம் இல்லையானால் யாது செய்தல் வேண்டும்?
பாத்திரத்திலே சலம் கொண்டு, ஓரிடத்தில் வைத்துக் கொண்டு, மலசலங் கழித்து சௌசஞ் செய்து விட்டு பாத்திரத்தைச் சுத்தி செய்து, சலங்கொண்டு, வாய் கொப்ப்ளித்துக் கால் கழுவுதல் வேண்டும்.
தந்த சுத்தி
14.சௌசத்துக்குப் பின் யாது செய்யத்தக்கது?
தந்தசுத்தி செய்யத் தக்கது.
15.எதனாலே தந்த சுத்தி செய்தல் வேண்டும்?
சலத்தினாலே கழுவப் பெற்ற பற்கொம்பினாலேனும், இலையினாலுலேனுந் தந்த சுத்தி செய்தல் வேண்டும்.
16.எந்தத் திக்கு முகமாக இருந்து தந்த சுத்தி செய்தல் வேண்டும்?
கிழக்கு முக்மாகவேனும், வடக்கு முகமாகவேனும், இருந்து தந்த சுத்தி செய்தல் வேண்டும்.
17.தந்த சுத்தி எப்படி செய்தல் வேண்டும்?
பல்லின் புறத்தேயும் உள்ளேயும் செவ்வையாகச் சுத்தி செய்து, ஒரு கழியை இரண்டாகப் பிளந்து, அவற்றினாலே நாக்கை வழித்து இடப்புறத்திலே போட்டு விட்டு, சலம் வாயிற் கொண்டு பன்னிரண்டு தரம் இடப்புறத்திலே கொப்பளித்து, முகத்தையுங் கை கால்களையுங் கழுவுதல் வேண்டும்.
18.நின்று கொண்டாயினும் இருந்து கொண்டாயினும் தந்த சுத்தி பண்ணலாமா?
பண்ணல் ஆகாது.
ஸ்நானம்
19.தந்த சுத்திக்குப்பின் யாது செய்யத்தக்கது?
ஸ்நானஞ் செய்யத்தக்கது.
20.ஸ்நானஞ் செய்யத்தக்க நீர் நிலைகள் யாவை?
ஆறு, ஓடை, குளம், கேணி, மடம் முதலியவையாம்.
21.ஸ்நானஞ் செய்யுமுன் யாது செய்தல் வேண்டும்?
கௌபீனத்தைக் கசக்கிப் பிழிந்து தரித்து, இரண்டு கைகளையும் கழுவி, வேட்டியைத் தோய்த்து அலம்பித் தரித்து, உடம்பைச் சலத்தினாலே கழுவி, செவ்வையாகத் தேய்த்துக் கொள்ளல் வேண்டும்.
22.எவ்வளவினதாக ஆகிய சலத்தில் இறங்கி ஸ்நானஞ் செய்தல் வேண்டும்?
தொட்பூழ் அளவினதாகிய சலத்திலே இறங்கி ஸ்நானஞ் செய்தல் வேண்டும்.
23.எந்த திக்கு முகமாக நின்று ஸ்நானஞ் செய்தல் வேண்டும்?
நதியிலே ஆனால் அதற்கு எதிர்முகமாக நின்றும், குளம் முதலியவற்றிலே ஆனால் வடக்கு முகமாகவேனும் நின்றும் ஸ்நானஞ் செய்தல் வேண்டும்.
24.சலத்திலே எப்படி முழுகல் வேண்டும்?
ஆசமனஞ் செய்து, இரண்டு காதுகளையும் இரண்டு பெருவிரல்களினாலும், இரண்டு கண்களையும் இரண்டு கட்டு விரல்களினாலும், இரண்டு நாசிகளையும் இரண்டு நடுவிரல்களினாலும் மூடிக் கொண்டு சிவபெருமானைச் சிந்தித்து முழுகல் வேண்டும்.
25.இப்படி முழுகின உடனே யாது செய்தல் வேண்டும்?
ஆசமனஞ் செய்து கொண்டு, கரையில் ஏறி, வேட்டியைப் பிழிந்து தலையில் ஈரத்தைத் துவட்டி, உடனே நெற்றியில் விபூதி தரித்து, உடம்பில் உள்ள ஈரத்தைத் துவட்டிக் குடுமியை முடித்து, ஈரக் கௌபீனத்தைக் களைந்து, உலர்ந்த கௌபீனத்தைத் தரித்து, இர்ண்டு கைகளையுங் கழுவி, உலர்ந்த வஸ்திரத்தைத் தரித்துக்கொண்டு, ஈர வஸ்திரத்தையும் கௌபீனத்தையும் உலரும்படி கொடியிலே போடவேண்டும்.
26.சிரஸ்நானஞ் செய்ய இயலாதவர் யாது செய்தல் வேண்டும்?
கண்ட ஸ்நானமேனும், கடிஸ்நானமேனுஞ் செய்தல் வேண்டும்.
27.கண்ட ஸ்நானம் ஆவது யாது?
சலத்தினாலே கழுத்தின் கீழே கழுவி, கழுவாது எஞ்சிய உடம்பை நனைந்த வஸ்திரத்தினாலே ஈரம் படிம்படி துடைப்பது.
28.கடி ஸ்நானமாவது யாது?
சலத்தினாலே அரையின் கீழே கழுவி, கழுவாது எஞ்சிய உடம்பை நனைந்த வஸ்திரத்தினாலே ஈரம் படும்படி துடைப்பது.
அநுட்டானம்
29.ஸ்நானத்துக்குப்பின் யாது செய்தல் வேண்டும்?
சுத்த சலம் கொண்டு அநுட்டனம் பண்ணி பஞ்சாக்ஷர செபஞ் செய்து தோத்திரம் பண்ணல் வேண்டும்.
போசனம்
30.அநுட்டானத்திற்குப்பின் யாது செய்யத்தக்கது?
போசனஞ் செய்யத்தக்கது.
31.போசன பந்திக்கு யோக்கியர் ஆவார் யாவார்?
மதுபானமும், மாமிச போசனமும் இல்லாதவராகவும், சமசாதியாராயும், ஆசாரம் உடையவராயும் உள்ளவர்.
32.எவர்கள் இடத்திலே போசனம் பண்ணல் ஆகாது?
தாழ்ந்த சாதியார் இடத்திலும், கள்ளுக் குடிப்பவர் இடத்திலும், மாமிசம் புசிப்பவர் இடத்திலும், ஆசாரம் இல்லாதவர் இடத்திலும் போசனம் பண்ணல் ஆகாது.
33. இவர்கள் காணும்படி போசனம் பண்ணலாமா?
போசனம் பண்ணல் ஆகாது.
34.எவ்வகைப்பட்ட தானத்தில் இருந்து போசனம் பண்ணல் வேண்டும்?
கோமயத்தினாலே மெழுகப்பட்ட தானத்தில் இருந்து போசனம் பண்ணல் வேண்டும்.
35.போசனத்துக்கு உரிய பாத்திரங்கள் யாவை?
வாழையிலை, பலாவிலை, புன்னையிலை, பாதிரியிலை, தாமரையிலை என்பனவாகும்.
36. போசன பாத்திரங்களை யாது செய்தபின் போடல் வேண்டும்?
சலத்தினாலே நன்றாகக் கழுவியபின் போடல் வேண்டும்.
37.வாழையிலையை எப்படிப் போடல் வேண்டும்?
தண்டு உரியாமல் அதனுடைய அடி வலப்பக்கத்திலே பொருந்தும்படி போடல் வேண்டும்.
38. இலை போட்ட பின் யாது செய்ய வேண்டும்?
அதிலே சலத்தினாலே பரோஷித்து, லவணம், கறி, அன்னம், பருப்பு, நெய் இவற்றைப் படைத்தல் வேண்டும்.
39. போசனம் பண்ணும் போது எப்படி இருத்தல் வேண்டும்?
வீண்வார்த்தை பேசாமலும், சிரியாமலும், தூங்காமலும், அசையாமலும், கால்களை மடக்கிக் கொண்டு செவ்வையாக இருத்தல் வேண்டும்.
40. போசனம் எப்படிப் பண்ணல் வேண்டும்?
அன்னத்திலே பிசையத்தக்க பாகத்தை வலக்கையினாலே வலப்பக்கத்திலே வேறகப் பிரித்துப் பருப்பு, நெய்யோடு பிசைந்து சிந்தாமல் புசித்தல் வேண்டும். அதன்பின் சிறிது முன்போல் பிரித்து, புளிக்கறியோடு ஆயினும் இரசத்தோடு ஆயினும், பிசைந்து, புசித்தல் வேண்டு. அதன்பின் மோரோடு பிசைந்து, புசித்தல் வேண்டும். கறிகளை இடயிடையே தொட்டுக் கொள்ளல் வேண்டும். இலையிலும் கையிலும் பற்றறத் துடைத்துப் புசித்தபின், வெந்நீரேனும், தண்ணீரேனும் பானம் பருகல் வேண்டும்.
41. போசனம் பண்ணும் போது உமியத்தக்கதை எங்கே உமிழ்தல் வேண்டும்?
இலையின் முற்பக்கத்தை, மிதத்தி, அதன் கீழ் உமிழ்தல் வேண்டும்.
42. போசனம் பண்ணும் போது மனத்தை எதிலே இருத்துதல் வேண்டும்?
சிவபெருமானுடைய திருவடியிலே இருத்துதல் வேண்டும்.
43. போசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?
எழுந்து வீட்டுக்குப் புறத்தே போய்க் கைகளைக் கழுவி, சலம் வாயிற் கொண்டு, பதினாறு தரம் இடப்புறத்திலே கொப்புளித்து, வாயையும் கைகளையும் கால்களையும் கழுவுதல் வேண்டும்.
44. உச்சிட்டத்தை எப்படி அகற்றல் வேண்டும்?
இலையை எடுத்து எறிந்துவிட்டு, கை கழுவிக்கொண்டு, உச்சிட்டத்தானத்தைக் கோமயஞ் சேர்ந்த சலந்தெளித்து மெழுகிப் புறத்தே போய்க் கழுவிவிட்டுப் பின்னும் அந்தத்தானத்தில் சலந்தெளித்து விடல் வேண்டும்.
45. உச்சிட்டத்தானத்தை எப்படி மெழுகுதல் வேண்டும்?
இடையிலே கையைஎடாமலும், முன்பு தீண்டிய இடத்தை பின்பு தீண்டாமலும், புள்ளி இல்லாமலும் மெழுகுதல் வேண்டும்.
படித்தல்
46. போசனத்திற்குப் பின் யாது செய்யத்தக்கது?
உபாத்தியாயர் இடத்தே கல்வி கற்கத்தக்கது.
இரவிற் செய்யுங் கருமம்
47. சூரியன் அஸ்தமிக்கும் போது யாது செய்தல் வேண்டும்?
மலசல விமோசனஞ் செய்து, சௌசமும் ஆசமனமும் பண்ணி, விபூதி தரித்து, சிவபெருமானை வணங்கித் தோத்திரஞ் செய்து கொண்டு, விளக்கிலே பாடங்களைப் படித்தல் வேண்டும்.
48. அதன்பின் யாது செய்தல் வேண்டும்?
போசனஞ் செய்து, நூறு தரம் உலாவி, சிறிது நேரஞ் சென்றபின், சயனித்தல் வேண்டும்.
49. எப்படிச் சயனித்தல் வேண்டும்?
கிழகே ஆயினும், மேற்கே ஆயினும் தலைவைட்த், சிவபெருமானைச் சிந்த்தித்துக் கொண்டு வலக்கை மேலாகச் சயனித்தல் வேண்டும். வடகே தலை வைத்தல் ஆகாது.
50. எப்போது எழுந்து விடல் வேண்டும்?
சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே எழுந்துவிடல் வேண்டும்.
திருச்சிற்றம்பலம்
|