தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments

Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil NationThirumuraikal > 63 Nayanmars - Sri Swami Sivananda > Periya Puranam - பெரியபுராணம் - சேக்கிழார் > Canto 1, Carukkam -1(திருமலைச் சருக்கம்) & 2 (தில்லை வாழ் அந்தணர் சருக்கம்)  > Canto 1, Carukkam -3 (ilai malinta carukkam)  > Canto 1,  Carukkam -4  (mummaiyAl ulakANTa carukkam) > Canto 1,  Carukkam 5 (tiruninRa carukkam) > Canto 2 Carukkam - 6 part 1  (vampaRA varivaNTuc carukkam) >  Canto 2 Carukkam - 6 part 2  (vampaRA varivaNTuc carukkam) >  Canto 2 Carukkam - 6 part 3  (vampaRA varivaNTuc carukkam) > Canto 2 Carukkam 7 -13 > koRRavankuTi umApati civAcAriyAr's cEkkizAr cuvAmikaL purANam - History of Periyapuranam

periya purANam of cEkkizAr - Canto 2
Carukkam -6 part 2  (vampaRA varivaNTuc carukkam)

சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
என்ற பெரிய புராணம் - இரண்டாம் காண்டம்
சருக்கம் 6  (வம்பறா வரிவண்டுச் சருக்கம்)
6.1 திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் - இரண்டாம் பகுதி (2599 -3154)

 

Acknowledgements:

Our Sincere thanks go to Dr. Thomas Malten and Colleagues of the Univ. of Koeln, Germany
for providing us with the transliterated/romanized version of the etext and giving us permission
to release the TSCII version as part of Project Madurai etext collections.
TSCII proof reading by tiruciRRampalam aRakaTTaLai, Kovilpatti, Tamilnadu.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.

Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


திருச்சிற்றம்பலம்

2599திரு மடப் புறச் சுற்றினில் தீய பாதகத்தோர்
மருவுவித்த அத்தொழில் வெளிப்படுதலும் மறுகிப்
பரிசனத்தவர் பதைப் பொரும் சிதைத்து நீக்கி
அருகர் இத்திறம் புரிந்தமை தெளிந்து சென்று அணைவார்
6.1.701
2600கழுமலப் பதிக் கவுணியர் கற்பகக் கன்றைத்
தொழுது நின்ற அமண் குண்டர் செய் தீங்கினைச் சொன்ன
பொழுது மாதவர் துயிலும் இத்திரு மடப் புறம்பு
பழுது செய்வதோ பாவிகாள் எனப் பரிந்து அருளி
6.1.702
2601என் பொருட்டு அவர் செய்த தீங்கு ஆயினும் இறையோன்
அன்பருக்கு எய்துமோ என்று பின்னையும் அச்சம்
முன்புற பின்பு முனிவுற முத்தமிழ் விரகர்
மன் புரக்கும் மெய்ம்முறை வழு என மனம் கொண்டார்
6.1.703
2602வெய்ய தீங்கு இது வேந்தன் மேற்று எனும் விதி முறையால்
செய்யனே திரு ஆலவாய் எனும் திருப்பதிகம்
சைவர் வாழ் மடத்து அமணர்கள் இட்ட தீத் தழல் போய்ப்
பையவே சென்று பாண்டியற்கு ஆக எனப் பணித்தார்
6.1.704
2603பாண்டிமா தேவியார் தமது பொற்பில்
பயிலும் நெடு மங்கல நாண் பாதுகாத்தும்
ஆண் தகையார் குலச் சிறையார் அன்பினாலும்
அரசன் பால் அபராதம் உறுதலாலும்
மீண்டும் சிவ நெறி அடையும் விதியினாலும்
வெண்ணீறு வெப்பு அகலப் புகலி வேந்தர்
தீண்டி இடப் பேறு உடையன் ஆதலாலும்
தீப்பிணி பையவே செல்க என்றார்
6.1.705
2604திருந்து இசைப் பதிகம் தொடை திரு ஆல வாயின்
மருந்தினைச் சண்பை மன்னவர் புனைந்திட அருளால்
விரிந்த வெம் தழல் வெம்மை போய்த் தென்னனை மேவிப்
பெருந்தழல் பொதி வெதுப்பு எனப் பெயர் பெற்றதன்றே
6.1.706
2605செய்ய மேனியர் திருமகனார் உறை மடத்தில்
நையும் உள்ளத்தராய் அமண் கையர் தாம் நணுகிக்
கையினால் எரி இட உடன் படும் எல்லி கரப்ப
வெய்யவன் குண கடல் இடை எழுந்தன மீது
6.1.707
2606இரவு பாதகர் செய்த தீங்கு இரவி தன் மரபில்
குரவ ஓதியார் குலச் சிறை யாருடன் கேட்டுச்
சிவபுரப் பிள்ளை யாரை இத் தீயவர் நாட்டு
வரவழைத்த நாம் மாய்வதே என மனம் மயங்கி
6.1.708
2607பெருகும் அச்சமோடும் ஆருயிர் பதைப்பவர் பின்பு
திரு மடப்புறம் மருங்கு தீது இன்மையில் தெளிந்து
கரும் உருட்ட மண்கையர் செய்தீங்கு இது கடைக்கால்
வருவது எப்படியாம் என மனம் கொளும் பொழுது
6.1.709
2608அரசனுக்கு வெப்பு அடுத்தது என்று அருகு கஞ்சுகிகள்
உரை செயப் பதைத்து ஒரு தனித் தேவியார் புகுத
விரைவும் அச்சமும் மேல் கொளக் குலச்சிறையாரும்
வரை செய் பொன்புய மன்னவன் மருங்கு வந்து அணைந்தார்
6.1.710
2609வேந்தனுக்கு மெய் விதிர்ப்புற வெதுப்புறும் வெம்மை
காந்து வெந்தழல் கதும் என மெய் எலாம் கவர்ந்து
போந்து மாளிகை புறத்து நின்றார்களும் புலர்ந்து
தீந்து போம்படி எழுந்தது விழுந்துடல் திரங்க
6.1.711
2610உணர்வும் ஆவியும் ஒழிவதற்கு ஒரு புடை ஒதுங்க
அணையல் உற்றவர் அருகு தூரத்து இடை அகலப்
புணர் இளம் கதலிக் குருத்தொடு தளிர் புடையே
கொணரினும் சுருக்கொண்டு அவை நுண்துகள் ஆக
6.1.712
2611மருத்து நூலவர் தங்கள் பல் கலைகளில் வகுத்த
திருத்தகும் தொழில் யாவையும் செய்யவும் மேல் மேல்
உருத்து எழுந்த வெப்பு உயிரையும் உருக்குவது ஆகக்
கருத்து ஒழிந்து உரை மறந்தனன் கௌரியர் தலைவன்
6.1.713
2612ஆனவன் பிணி நிகழ்வுழி அமணர்கள் எல்லாம்
மீனவன் செயல் கேட்டலும் வெய்து உயிர்த்து அழிந்து
போன கங்குலில் புகுந்தது இன் விளைவு கொல் என்பார்
மான முன் தெரியா வகை மன்னன் மாட்டு அணைந்தார்
6.1.714
2613மால் பெருக்கும் சமண்கையர் மருங்கு சூழ்ந்து
வழுதி நிலை கண்டு அழிந்து வந்த நோயின்
மூல நெறி அறியாதே தங்கள் தெய்வ மொழி நவில்
மந்திரம் கொண்டு முன்னும் பின்னும்
பீலிகொடு தை வருதற்கு எடுத்த போது பிடித்த
பீலிகள் பிரம்பினோடும் தீந்து
மேல் எரியும் பொறி சிதறி வீழக் கண்டு வெப்பின்
அதிசயம் நோக்கி வெருவல் மிக்கார்
6.1.715
2614கருகிய மாசு உடையக்கைத் தீயோர் தங்கள்
கை தூங்கு குண்டிகை நீர் தெளித்துக்காவாய்
அருகனே அருகனே என்று என்று ஓதி அடல் வழுதி
மேல் தெளிக்க அந்நீர்ப் பொங்கிப்
பெருகும் எரி தழல் சொரிந்த நெய் போல் ஆகி
பேர்த்தும் ஒரு தழல் அதன் மேல் பெய்தாற் போல
ஒருவரும் இங்கு இருமருங்கும் இராது போம் என்று
அமணரைப் பார்த்து உரைத்த அரசன் உணர்வு சோர்ந்தான்
6.1.716
2615பாண்டி மாதேவியாரும் பயம் எய்தி அமைச்சர் பாரம்
பூண்டவர் தம்மை நோக்கிப் புகலியில் வந்து நம்மை
ஆண்டு கொண்டவர் பால் கங்குல் அமணர் தாம் செய்த தீங்கு
மூண்டவாறு இனையது ஆகி முடிந்ததோ என்று கூற
6.1.717
2616கொற்றவன் அமைச்சராம் குலச்சிறையாரும் தாழ்ந்து
மற்று இதன் கொடுமை இந்த வஞ்சகர் மதில்கள் மூன்றும்
செற்றவர் அன்பர் தம்பால் செய்தது ஈங்கு அரசன் பாங்கு
முற்றியது இவர்கள் தீர்க்கின் முதிர்வதே ஆவது என்பார்
6.1.718
2617இரு திறத்தவரும் மன்னன் எதிர் பணிந்து இந்த வெப்பு
வரு திறம் புகலி வந்த வள்ளலார் மதுரை நண்ண
அருகர்கள் செய்த தீய அனுசிதம் அதனால் வந்து
பெருகியது இதற்குத் தீர்வு பிள்ளையார் அருளே என்று
6.1.719
2618காயமும் மனமும் மாசு கழுவுதல் செய்யார் செய்யும்
மாயமும் இந்த நோயை வளர்ப்பதே வளர் வெண் திங்கள்
மேய வேணியர்பால் ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கில்
தீய இப்பிணியே அன்றி இப் பிறவியும் தீரும் என்றார்
6.1.720
2619மீனவன் செவியின் ஊடு மெய் உணர்வளிப்போர் கூற
ஞான சம்பந்தர் என்னும் நாம மந்திரமும் செல்ல
ஆன போது அயர்வு தன்னை அகன்றிட அமணர் ஆகும்
மானம் இல்லவரைப் பார்த்து மாற்றம் ஒன்று உரைக்கல் உற்றான்
6.1.721
2620மன்னவன் அவரை நோக்கி மற்று இவர் செய்கை எல்லாம்
இன்னவாறு எய்து நோய்க்கே ஏது ஆயின என்று எண்ணி
மன்னிய சைவ நீதி மா மறைச் சிறுவர் வந்தால்
அன்னவர் அருளால் இந்நோய் அகலுமேல் அறிவேன் என்றான்
6.1.722
2621என்று முன் கூறிப் பின்னும் யான் உற்ற பிணியைத் தீர்த்து
வென்றவர் பக்கம் சேர்வன் விரகு உண்டேல் அழையும் என்ன
அன்று அவர் உவகை பொங்கி ஆர்வத்தால் அணையை நூக்கிச்
சென்ற நீர் வெள்ளம் போலும் காதல் வெள்ளத்தில் செல்வார்
6.1.723
2622பாய் உடைப் பாதகத்தோர் திரு மடப் பாங்கு செய்த
தீவினைத் தொழிலை நோக்கி உள் அழி திரு உள்ளத்தான்
மேய அத்துயரம் நீங்க விருப்புறு விரைவினோடு
நாயகப் பிள்ளையார் தம் நற்பதம் பணிவார் ஆகி
6.1.724
2623மன்னவன் இடும்பை தீர மற்று அவன் பணி மேல் கொண்டே
அன்னமென் நடையினாரும் அணிமணிச் சிவிகை ஏறி
மின் இடை மடவார் சூழ வேல் படை அமைச்சனாரும்
முன் அணைந்து ஏகச் சைவ முதல்வனார் மடத்தைச் சார்ந்தார்
6.1.725
2624திருமடம் சாரச் சென்று சேயரிக் கண்ணினார் முன்
வருபரி இழிந்து நின்ற அமைச்சனார் வந்த பான்மை
சிரபுர பிள்ளையார்க்கு விண்ணப்பம் செய்வீர் என்னப்
பரிசனத்தவரும் புக்கு பதம் அறிந்து உணர்த்து கின்றார்
6.1.726
2625பாண்டி மாதேவியாரும் பரிவுடை அமைச்சனாரும்
ஈண்டும் வந்து அணைந்தார் என்று விண்ணப்பம் செய்ய சண்பை
ஆண் தகையாரும் ஈண்ட அழையும் என்று அருளிச் செய்ய
மீண்டு போந்து அழைக்கப் புக்கார் விரை உறும் விருப்பின் மிக்கார்
6.1.727
2626ஞானத்தின் திரு உருவை நான் மறையின் தனித் துணையை
வானத்தின் மிசை அன்றி மண்ணில் வளர் மதிக் கொழுந்தைத்
தேன் நக்க மலர்க் கொன்றைச் செஞ் சடையார் சீர் தொடுக்கும்
கானத்தின் எழுபிறப்பைக் கண் களிப்பக் கண்டார்கள்
6.1.728
2627கண்ட பொழுது அமண் கொடியோர் செய்த கடும் தொழில் நினைந்தே
மண்டிய கண் அருவி நீர் பாய மலர்க் கை குவித்துப்
புண்டரிகச் சேவடிக் கீழ்ப் பொருந்த நில முற விழுந்தார்
கொண்ட குறிப் போடும் நெடிது உயிர்த்த கொள்கையராய்
6.1.729
2628உரை குழறி மெய்ந் நடுங்கி ஒன்றும் அறிந்திலர் ஆகித்
தரையின் மிசைப் புரண்டு அயந்து சரண கமலம் பற்றிக்
கரையில் கவலைக் கடலுக்கு ஓர் கரை பற்றினால் போன்று
விரைவுறு மெய் அன்பினால் விடாது ஒழிவார் தமைக்கண்டு
6.1.730
2629அருமறை வாழ் பூம்புகலி அண்ணலார் அடி பூண்ட
இருவரையும் திருக்கையால் எடுத்து அருளித் தேற்றிடவும்
தெரு மந்து தெளியாதார் தமை நோக்கிச் சிறப்பு அருளிச்
திருவுடையீர் உங்கள் பால் தீங்கு உளதோ என வினவ
6.1.731
2630வெஞ்சமணர் முன் செய்த வஞ்சனைக்கு மிக அழிந்தே
அஞ்சினோம் திருமேனிக்கு அடாது என்றே அது தீந்தோம்
வஞ்சகர் மற்று அவர் செய்த தீத்தொழில் போய் மன்னவன் பால்
எஞ்சல் இலாக் கொடுவிதுப்பாய் எழா நின்றது எனத் தொழுது
6.1.732
2631வெய்ய தொழில் அமண் குண்டர் விளைக்க வரும் வெதுப்பவர் தாம்
செய்யும் மதி மாயைகளால் தீராமைத் தீப்பிணியால்
மையல் உறு மன்னவன் முன் மற்று அவரை வென்று அருளில்
உய்யும் எமது உயிரும் அவன் உயிரும் என உரைத்தார்கள்
6.1.733
2632என்று அவர் உரைத்த போதில் எழில் கொள் பூம் புகலி வேந்தர்
ஒன்றும் நீர் அஞ்ச வேண்டா உணர்வு இலா அமணர் தம்மை
இன்று நீர் உவகை எய்த யாவரும் காண வாதில்
வென்று மீனவனை வெண் நீறு அணிவிப்பன் விதியால் என்றார்
6.1.734
2633மொழிந்து அருள அது கேட்டு முன் இறைஞ்சி முகம் மலர்வார்
அழுந்தும் இடர்க் கடல் இடை நின்று அடியோமை எடுத்து அருள
செழும் தரளச் சிவிகையின் மேல் தென்னாடு செய்தவத்தால்
எழுந்து அருளப் பேறு உடையேம் என் பெறோம் எனத் தொழலும்
6.1.735
2634ஆவதும் அழிவும் எல்லாம் அவர் செயல் அமணர் ஆகும்
பாவ காரிகளை நோக்கும் பழுது உடன் நீங்க வெல்லச்
சேவுயர் கொடியினார் தம் திரு உள்ளம் அறிவேன் என்று
பூவலர் பொழில் சூழ் சண்பைப் புரவலர் போதுகின்றார்
6.1.736
2635வையகம் உய்ய வந்த வள்ளலார் மடத்தினின்று
மெய்யணி நீற்றுத் தொண்டர் வெள்ளமும் தாமும் போந்து
கை இணை தலையின் மீது குவிய கண் மலர்ச்சி காட்டச்
செய்யவார் சடையார் மன்னும் திரு ஆல வாயுள் புக்கார்
6.1.737
2636நோக்கிட விதி இலாரை நோக்கி யான் வாது செய்யத்
தீக் கனல் மேனியானே திருவுளமே என்று எண்ணில்
பாக்கியப் பயனாய் உள்ள பால் அறா வாயர் மெய்மை
நோக்கி வண் தமிழ் செய் மாலைப் பதிகம் தான் நுவலல் உற்றார்
6.1.738
2637கான் இடை ஆடுவாரைக் காட்டு மா உரி முன் பாடித்
தேன் அலர் கொன்றையார் தம் திருவுளம் நோக்கிப் பின்னும்
ஊனமில் வேத வேள்வி என்று எடுத்துத் துரையின் மாலை
மானமில் அமணர் தம்மை வாதில் வென்று அழிக்கப்பாடி
6.1.739
2638ஆலமே அமுதம் ஆக உண்டு வானவர்க்கு அளித்துக்
காலனை மார்க் கண்டர்க்காக் காய்ந்தனை அடியேற்கு இன்று
ஞலம் நின் புகழே ஆக வேண்டும் நான் மறைகள் ஏத்தும்
சீலமே ஆலவாயில் சிவ பெருமானே என்றார்
6.1.740
2639நாதர் தம் அருள் முன்பெற்று நாடிய மகிழ்ச்சி பொங்கப்
போதுவார் பணிந்து போற்றி விடை கொண்டு புனித நீற்று
மேதகு கோலத்தோடும் விருப்புறு தொண்டர் சூழ
மூது எயில் கபாடம் நீடு முதல் திரு வாயில் சார்ந்தார்
6.1.741
2640அம் மலர்க் குழலினார்க்கும் அமைச்சர்க்கும் அருள வேண்டிச்
செம் மணிப் பலகை முத்தின் சிவிகை மேல் கொண்ட போதில்
எம் மருங்கிலும் தொண்டர் எடுத்த ஆர்ப்பு எல்லை இன்றி
மும்மை நீடு உலகம் எல்லாம் முழுதுடன் நிறைந்தது அன்றே
6.1.742
2641பல்லிய நாதம் பொங்கப் படர் திருநீற்றின் சோதி
நல் ஒளி வட்டம் ஆகி நண்ணி மேல் வருவது என்ன
வில் வளர் தரளக் கோவை வெண்குடை நிழற்ற வெவ்வேறு
எல்லையில் முத்தின் தாளம் தாரை சங்கு எங்கும் ஓத
6.1.743
2642கண்ணினுக்கு அணியாய் உள்ளர் எழுச்சியில் காட்சி பெற்றார்
நண்ணிய சமயம் வேறு நம்பினர் எனினும் முன்பு
பண்ணிய தவங்கள் என் கொல் பஞ்சவன் தஞ்சம் மேவிப்
புண்ணிய மூர்த்தி வந்து மதுரையில் புகுத என்றார்
6.1.744
2643தென்னவர் தேவி யாரும் திருமணிச் சிவிகை மீது
பின் வர அமைச்சர் முன்பு பெரும் தொண்டர் குழத்துச் செல்லப்
பொன் அணி மாட வீதி ஊடு எழுந்து அருளிப் புக்கார்
கன்னி நாடு உடையான் கோயில் காழி நாடு உடையப் பிள்ளை
6.1.745
2644கொற்றவன் தன் பால் முன்பு குலச்சிறையார் வந்து எய்திப்
பொன் தட மதில் சூழ் சண்பைப் புரவலர் வரவு கூற
முன் துயர் சிறிது நீங்கி முழுமணி அணிப் பொன் பீடம்
மற்றவன் முடியின் பக்கத்து இடுக என வல்லன் ஆனான்
6.1.746
2645மந்திரி யாரைப் பின்னும் எதிர் செல மன்னன் ஏவச்
சிந்தை உள் மகிழ்ந்து போந்தார் செயலை யான் சமயத்து உள்ளோர்
பைந்துணர் அலங்கல் மன்னன் பரிசு கண்டு இதுவோ பண்பால்
நம் தனிச் சமயம் தன்னை நாட்டு மாறு என்று பின்னும்
6.1.747
2646நின் அற நெறியை நீயே காத்து அருள் செய்தி ஆகில்
அன்னவர் தம்மை இங்கே அழைத்தனை அவரும் யாமும்
முன் உற ஒக்கத் தீர்க்க மொழிந்து மற்று அவரால் தீர்ந்தது
என்னினும் யாமும் தீர்த்தோம் ஆகவும் இசைவாய் என்றார்
6.1.748
2647பொய் தவம் ஆகக் கொண்ட புன் தலைச் சமணர் கூறச்
செய்தவப் பயன் வந்து எய்தும் செவ்வி முன் உறுதலாலே
எய்திய தெய்வச் சார்வால் இரு திறத்தீரும் தீரும்
கைதவம் பேசமாட்டேன் என்று கைதவனும் சொன்னான்
6.1.749
2648என்று அவன் உரைப்பக் குண்டர் எண்ணம் கெட்டு இருந்த எல்லைத்
தென் தமிழ் நாடு செய்த செய்தவக் கொழுந்து போல்வார்
வன் தனிப் பவன முன்னர் வாயிலுள் அணைந்து மாடு
பொன் திகழ் தரளப் பத்திச் சிவிகை நின்று இழிந்து புக்கார்
6.1.750
2649குலச்சிறையார் முன்பு எய்த கொற்றவன் தேவியாரும்
தலத்திடை இழிந்து சென்றார் தண் தமிழ் நாட்டு மன்னன்
நிலத்து இடை வானின் நின்று நீள் இருள் நீங்க வந்த
கலைச் செழும் திங்கள் போலும் கவுணியர் தம்மைக் கண்டார்
6.1.751
2650கண்ட அப்பொழுதே வேந்தன் கை எடுத்து எய்த நோக்கித்
தண்டுணர் முடியின் பாங்கர்த் தமனிய பீடம் காட்ட
வண் தமிழ் விரகர் மேவி அதன் மிசை இருந்தார் மாயை
கொண்டவல் அமணர் எல்லாம் குறிப்பினுள் அச்சம் கொண்டார்
6.1.752
2651செழியனும் பிள்ளையார் தம் திருமேனி காணப் பெற்று
விழி உற நோக்கல் ஆலே வெம்மை நோய் சிறிது நீங்கி
அழிவுறு மன நேர் நிற்க அந்தணர் வாழ்வை நோக்கிக்
கெழுவுறு பதியாது என்று விருப்புடன் கேட்ட போது
6.1.752
2652பொன்னி வளம் தரு நாட்டுப் புனல் பழனப் புறம் பணை சூழ்
கன்னி மதில் கழுமலம் நாம் கருதும் ஊர் எனச் சிறந்த
பன்னிரண்டு பெயர் பற்றும் பரவிய சொல் திருப்பதிகம்
தென்னவன் முன்பு அருள் செய்தார் திருஞான சம்பந்தர்
6.1.754
2653பிள்ளையார் செம் பொன் மணிப் பீடத்தில் இருந்த பொழுது
உள்ள நிறை பொறாமையினால் உழை இருந்த கார் அமணர்
கொள்ளும் மனத்திடை அச்சம் மறைத்து முகம் கோபத்தீத்
துள்ளி எழும் எனக் கண்கள் சிவந்து பல சொல்லுவார்
6.1.755
2655காலை எழும் கதிரவனைப் புடை சூழும் கருமுகில் போல்
பீலி சேர் சமண் கையர் பிள்ளையார் தமைச் சூழ்வார்
ஏலவே வாதினால் வெல்வதனுக்கு எண்ணித் தாங்கு
கோலுநூல் எடுத்து ஓதித் தலை திமிர்ப்பக் குரைத்தார்கள்
6.1.756
2655பிள்ளையார் அது கோளாப் பேசுக நும் பொருள் எல்லை
உள்ளவாறு என்று அருள ஊத்தைவாய்ப் பறி தலையார்
துள்ளி எழும் அநேகராய்ச் சூழ்ந்து பதறிக் கதற
ஒள்ளிழையார் அது கண்டு பொறார் ஆகி உள் நடுங்கி
6.1.757
2656தென்னவன் தன்னை நோக்கித் திருமேனி எளியர் போலும்
இன் அருள் பிள்ளையார் மற்று இவர் உவர் எண்ணிலார்கள்
மன்ன நின் மயக்கம் எங்கள் வள்ளலார் தீர் நல்கும்
பின்னை இவ்வமணர் மூள்வார் வல்லரேல் பேச என்றார்
6.1.758
2657மாறனும் அவரை நோக்கி வருந்தநீ என்று மற்று
வேறு ஆவது என் கொல் என்மேல் வெப்பு ஒழித்து அருகர் நீரும்
ஆறு அணி சடையினார்க்கு அன்பராம் இருவரும் நீங்கள்
தேறிய தெய்வத்தன்மை என்னிடைத் தெரிப்பீர் என்றான்
6.1.759
2658ஞான ஆரமுதம் உண்டார் நல்தவத் திருவை நோக்கி
மானினேர் விழியினாய் கேள் மற்று எனைப் பாலன் என்று
நீ நனி அஞ்ச வேண்டாம் நிலை அமணர்க்கு என்றும்
யான் எளியேன் அலேன் என்று எழும் திருப்பதிகம்பாடி
6.1.760
2659பெற்றியால் அருளிச் செய்த பிள்ளையார் தமக்கும் முன்னம்
சுற்று நின்று அழைத்தல் ஓவா அருகர்க்கும் தென்னர் கோமான்
இற்றைநாள் என்னை உற்ற பிணியை நீர் இகலித் தீரும்
தெற்று எனத் தீர்த்தார் வாதில் வென்றவர் என்று செப்ப
6.1.761
2660. மன்னவன் மாற்றம் கேட்டு வடிவு போல் மனத்து மாசு
துன்னிய அமணர் தென்னர் தோன்றலை நோக்கி நாங்கள்
உன் உடம்பு அதனில் வெப்பை ஒருபுடை வாம பாகம்
முன்ன மந்திரித்துத் தெய்வ முயற்சியால் தீர்த்தும் என்றார்
6.1.762
2661யாதும் ஒன்று அறிவு இலாதார் இருள் என அணையச் சென்று
வாதினில் மன்னவன் தன் வாம பாகத்தைத் தீர்ப்பார்
மீது தம் பீலி கொண்டு தடவிட மேல் மேல் வெப்புத்
தீதுறப் பொறாது தென்னவன் சிரபுரத்தவரைப் பார்த்தான்
6.1.763
2662தென்னவன் நோக்கம் கண்டு திருக்கழு மலத்தார் செல்வர்
அன்னவன் வலப்பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறே
மன்னும் மந்திரமும் ஆகி மருந்துமாய் தீர்ப்பது என்று
பன்னிய மறைகள் ஏத்திப் பகர் திருப்பதிகம் பாடி
6.1.764
2663திருவளர் நீறு கொண்டு திருக்கையால் தடவத் தென்னன்
பொருவரு வெப்பு நீங்கிப் பொய்கையில் குளிர்ந்தது அப்பால்
மருவிய இடப்பால் மிக்க அழல் என மண்டு தீப்போல்
இருபுடை வெப்பும் கூடி இடம் கொளாதுஎன்னப் பொங்க
6.1.765
2664உறி உடைக் கையர் பாயின் உருக்கையர் நடுக்கம் எய்தி
செறி மயில் பீலி தீய தென்னவன் வெப்பு உறு தீத்தம்மை
ஏறிய மாகடலும் கன்றி அருகு விட்டு ஏற நிற்பார்
அறிவுடையாரை ஒத்தார் அறிவு இலா நெறியில் நின்றார்
6.1.766
2665பலர் தொழும் புகலி மன்னர் ஒரு புடை வெப்பைப் பாற்ற
மலர்தலை உலகின்மிக்கார் வந்து அதிசயத்துச் சூழ
இலகு வேல் தென்னன் மேனி வலம் இடம் எய்தி நீடும்
உலகினில் தண்மை வெம்மை ஒதுங்கினால் ஒத்தது அன்றே
6.1.767
2666மன்னவன் மொழிவான் என்னே மதித்த இக் காலம் ஒன்றில்
வெம் நரகு ஒரு பால் ஆகும் வீட்டு இன்பம் ஒரு பால் ஆகும்
துன்னு நஞ்சு ஒரு பால் ஆகும் சுவை அமுது ஒரு பால் ஆகும்
என் வடிவு ஒன்றில் உற்றேன் இரு திறத்து இயல்பும் என்பான்
6.1.768
2667வெந்தொழில் அருகர் தோற்றீர் என்னை விட்டு அகல நீங்கும்
வந்து எனை உய்யக் கொண்ட மறைக்குல வள்ளலாரே
இந்த வெப்பு அடைய நீங்க எனக்கு அருள் புரிவீர் என்று
சிந்தையால் தொழுது சொன்னான் செல் கதிக்கு அணியன் ஆனான்
6.1.769
2668திருமுகம் கருணை காட்டத் திருக்கையால் நீறு காட்டிப்
பெருமறை துதிக்கும் ஆற்றால் பிள்ளையார் போற்றிப் பின்னும்
ஒருமுறை தடவ அம் கண் ஒழிந்து வெப்பு அகன்று பாகம்
மருவு தீப் பிணியும் நீங்கி வழுதியும் முழுதும் உய்ந்தான்
6.1.770
2669கொற்றவன் தேவியாரும் குலச்சிறையாரும் தீங்கு
செற்றவர் செய்ய பாத தாமரை சென்னி சேர்த்துப்
பெற்றனம் பெருமை இன்று பிறந்தனம் பிறவா மேன்மை
உற்றனன் மன்னன் என்றே உளம் களித்து உவகை மிக்கார்
6.1.771
2670மீனவன் தன் மேல் உள்ள வெப்பு எலாம் உடனே மாற
ஆன பேர் இன்பம் எய்தி உச்சி மேல் அங்கை கூப்பி
மானம் ஒன்று இல்லார் முன்பு வன் பிணி நீக்க வந்த
ஞான சம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன் என்றான்
6.1.772
2671கந்து சீறும் மால் யானை மீனவர் கருத்து நேர்
வந்து வாய்மை கூற மற்று மாசு மேனி நீசர் தாம்
முந்த மந்திரத்து விஞ்சை முற்றும் எஞ்ச அஞ்சியே
சிந்தை செய்து கைவரும் திறம் தெரிந்து தேடுவார்
6.1.773
2672சைவமைந்தர் சொல்லின் வென்றி சந்த இன் சொல் மாலையால்
கைதவன் தன் வெப்பு ஒழிந்த தன்மை கண்டு அறிந்தனம்
மெய் தெரிந்த தர்க்க வாதம் வெல்லலால் ஆவது அன்று வேறு
எய்து தீயின் நீரில் வெல்வது என்று தம்மில் எண்ணினார்
6.1.774
2673பிள்ளையாரும் உங்கள் வாய்மை பேசுமின்கள் என்றலும்
தள்ளு நீர்மை யார்கள் வேறு தர்க்கவாதின் உத்தரம்
கொள்ளும் வென்றி அன்றியே குறித்த கொள்கை உண்மைதான்
உள்ளவாறு கண் புலத்தில் உய்ப்பது என்ன ஒட்டினார்
6.1.775
2674என்று வாது கூறலும் இருந்த தென்னர் மன்னனும்
கன்றி என் உடம்பு ஒடுங்க வெப்புநோய் கவர்ந்த போது
என்றும் அங்கு ஒழித்திலீர்கள் என்னவாது உமக்கு எனச்
சென்று பின்னும் முன்னும் நின்று சில்லி வாயர் சொல்லுவார்
6.1.776
2675என்ன வாது செய்வது என்று உரைத்தே வினா எனச்
சொன்னவாசகம் தொடங்கி ஏடு கொண்டு சூழ்ச்சியால்
மன்னும் தம் பொருள் கருத்தின் வாய்மை தீட்டி மாட்டினால்
வெம் நெருப்பின் வேவு உருமை வெற்றி ஆவது என்றனர்
6.1.777
2676என்ற போது மன்னன் ஒன்று இயம்பும் முன்பு பிள்ளையார்
நன்று நீர் உரைத்தவாறு நாடு தீயில் ஏடுதான்
வென்றிடில் பொருள் கருத்து மெய்ம்மை ஆவது என்றிரேல்
வன் தனிக்கை யானை மன்னன் முன்பு வம்மின் என்றனர்
6.1.778
2677அப்படிக்கு எதிர் அமணரும் அணைந்துறும் அளவில்
ஒப்பில் வண்புகழ்ச் சண்பையர் காவலர் உரையால்
செப்பரும் திறல் மன்னனும் திருந்து அவை முன்னர்
வெப்புறும் தழல் அமைக்க என வினை ஞரை விடுத்தான்
6.1.779
2678ஏயமாந்தரும் இந்தனம் குறைத்து உடன் அடுக்கி
தீ அமைத்தலும் சிகை விடும் புகை ஒழிந்து எழுந்து
காயும் வெவ் அழல் கடவுளும் படர் ஒளி காட்ட
ஆயும் முத்தமிழ் விரகரும் அணைய வந்து அருளி
6.1.780
2679செங்கண் ஏற்றவரே பொருள் என்று தாம் தெரித்த
பொங்கு இசைத் திருப்பதிகங்கள் முறையினைப் போற்றி
எங்கள் நாதனே பரம் பொருள் எனத் தொழுது எடுத்தே
அங்கையால் முடி மிசைக் கொண்டு காப்பு நாண் அவிழ்த்தார்
6.1.781
2680சாற்றும் மெய்ப் பொருள் தரும் திருமுறையினைத் தாமே
நீற்று வண்கையால் மறித்தலும் வந்து நேர்ந்து உளதால்
நால்தடம் புயத்து அண்ணலார் மருவு நள்ளாறு
போற்றும் அப்பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள்
6.1.782
2681அத் திருப் பதிகத்தினை அமர்ந்து கொண்டு அருளி
மைத்த வெம் கடு மிடற்று நள்ளாறரை வணங்கி
மெய்த்த நல் திரு ஏட்டினைக் கழற்றி மெய்ம் மகிழ்ந்து
கைத் தலத்து இடைக் கொண்டனர் கவுணியர் தலைவர்
6.1.783
2682நன்மை உய்க்கும் மெய்ப் பதிகத்தின் நாதன் என்று எடுத்தும்
என்னை ஆள் உடை ஈசன் தன் நாமமே என்றும்
மன்னும் மெய்ப் பொருளாம் எனக் காட்டிட வன்னி
தன்னில் ஆக எனத் தளிர் இள வளர் ஒளி பாடி
6.1.784
2683செய்ய தாமரை அக இதழினும் மிகச் சிவந்த
கையில் ஏட்டினைக் கைதவன் பேர் அவை காண
வெய்ய தீயினில் வெற்று அரையவர் சிந்தை வேவ
வையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்து முன் இட்டார்
6.1.785
2684இட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ்ப் பதிகம்
மட்டுலாங்குழல் வனமுலை மலைமகள் பாகத்து
அட்ட மூர்த்தியைப் பொருள் என உடைமையால் அமர்ந்து
பட்ட தீயிடைப் பச்சையாய் விளங்கியது அன்றே
6.1.786
2685மையல் நெஞ்சு உடை அமணரும் தம் பொருள் வரைந்த
கையில் ஏட்டினைக் கதுவு செம் தீயினில் இடுவார்
உய்யுமோ இது என உறும் கவலையாம் உணர்வால்
நையும் நெஞ்சினர் ஆகியே நடுங்கி நின்றிட்டார்
6.1.787
2686அஞ்சும் உள்ளத்தர் ஆகியும் அறிவிலா அமணர்
வெம் சுடர்ப் பெரும் தீயினில் விழுத்திய ஏடு
பஞ்சு தீ இடைப் பட்டது படக் கண்டு பயத்தால்
நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்து திலர் நின்றார்
6.1.788
2687மான மன்னவன் அவையின் முன் வளர்த்த செந்தீயின்
ஞானம் உண்டவர் இட்ட ஏடு இசைத்த நாழிகையில்
ஈனம் இன்மை கண்டு யாவரும் வியப்பு உற எடுத்தார்
பான்மை முன்னையில் பசுமையும் புதுமையும் பயப்ப
6.1.789
2688எடுத்த ஏட்டினை அவையின் முன் காட்டி அம் முறையில்
அடுத்த வண்ணமே கோத்தலும் அதிசயித்து அரசன்
தொடுத்த பீலி முன் தூக்கிய கையரை நோக்கிக்
அடுத்த நீர் இட்ட ஏட்டினைக் காட்டுமின் என்றான்
6.1.790
2689அருகர் தாம் இட்ட ஏடு வாங்கச் சென்று அணையும் போதில்
பெருகு தீக் கதுவ வெந்து பேர்ந்தமை கண்ட மன்னன்
தருபுனல் கொண்டு செம் தீத் தணிப்பித்தான் சமணர் அங்குக்
கருகிய சாம்ப ரோடும் கரி அலால் மற்று என் காண்பர்
6.1.791
2690செய்வது ஒன்று அறிகிலாதார் திகைப்பினால் திரண்ட சாம்பல்
கையினால் பிசைந்து தூற்றிப் பார்ப்பது கண்ட மன்னன்
எய்திய நகையினோடும் ஏடு இன்னம் அரித்து காணும்
பொய்யினால் மெய்யை ஆக்கப் புகுந்த நீர் போமின் என்றான்
6.1.792
2691வெப்பு எனும் தீயில் யான் முன் வீடு பெற்று உய்ய நீங்கள்
அப்பொழுது அழிந்து தோற்றீர் ஆதலால் அதுவாறு ஆக
இப்பொழுது எரியில் இட்ட ஏடு உய்ந்தது இல்லை என்றால்
துப்புர உடையீர் நீங்கள் தோற்றிலீர் போலும் என்றான்
6.1.793
2692தென்னவன் நகை உட்கொண்டு செப்பிய மாற்றம் தேரார்
சொன்னது பயனாகக் கொண்டு சொல்லுவார் தொடர்ந்த வாது
முன்னுற இருகால் செய்தோம் முக்காலில் ஒரு கால் வெற்றி
என்னினும் உடையோம் மெய்ம்மை இனி ஒன்று காண்பது என்றார்
6.1.794
2693தோற்கவும் ஆசை நீங்காத் துணிவிலார் சொல்லக் கேட்டு இம்
மாற்றம் என் ஆவது என்று மன்னவன் மறுத்த பின்னும்
நீற்று அணி விளங்கு மேனி நிறை புகழ் சண்பை மன்னர்
வேற்று வாது இனி என் செய்வது என்றலும் மேற்கோள் ஏற்பார்
6.1.795
2694நீடு மெய்ப் பொருளின் உண்மை நிலை பெறும் தன்மை எல்லாம்
ஏடுற எழுதி மற்றவ் வேட்டினை யாமும் நீரும்
ஓடு நீர் ஆற்றில் இட்டால் ஒழுகுதல் செய்யாது அங்கு
நாடி முன் தங்கும் ஏடு நற்பொருள் பரிப்பது என்றார்
6.1.796
2695என்று அமண் கையர் கூற ஏறு சீர் புகலி வேந்தர்
நன்று அது செய்வோம் என்று அங்கு அருள் செய நணுக வந்து
வென்றிவேல் அமைச்சனார் தாம் வேறு இனிச் செய்யும் இவ்வாது
ஒன்றினும் தோற்றார் செய்வது ஒட்டியே செய்வது என்றார்
6.1.797
2696அங்கது கேட்டு நின்ற அமணரும் அவர் மேல் சென்று
பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமே ஆகத்
தங்கள் வாய் சோர்ந்து தாமே தனிவாதில் அழிந்தோம் ஆகில்
வெங்கழு ஏற்றுவான் இவ் வேந்தனே என்று சொன்னார்
6.1.798
2697மற்றவர் சொன்ன வார்த்தை கேட்டலும் மலய மன்னன்
செற்றத்தால் உரைத்தீர் உங்கள் செய்கையும் மறந்தீர் என்று
பற்றிய பொருளின் ஏடு படர் புனல் வைகை ஆற்றில்
பொற்புற விடுவதற்குப் போதுவ என்று கூற
6.1.799
2698பிள்ளையார் முன்னம் பைம் பொன் பீடத்தில் இழிந்து போந்து
தெள்ளு நீர்த் தரளப் பத்தி சிவிகை மேல் ஏறிச் சென்றார்
வள்ளலார் அவர் தம் பின்பு மன்னன் மா ஏறிச் சென்றான்
உள்ளவாறு அறிகிலாதார் உணர்வு மால் ஏறிச் சென்றார்
6.1.800
2699தென்னவன் வெப்புத் தீர்ந்து செழுமணிக் கோயில் நீங்கிப்
பின்னுற அணைந்த போது பிள்ளையார் பெருகும் செல்வம்
மன்னிய மூதூர் மறுகில் வந்து அருளக் கண்டு
துன்னிய மாதர் மைந்தர் தொழுது வேறு இனைய சொன்னார்
6.1.801
2700மீனவன் கொண்ட வெப்பை நீக்கி நம் விழுமம் தீர்த்த
ஞான சம்பந்தர் இந்த நாயனார் காணும் என்பார்
பால் நறும் குதலைச் செய்ய பவளவாய் பிள்ளையார் தாம்
மான சீர்த் தென்னன் நாடு வாழ வந்து அணைந்தார் என்பார்
6.1.802
2701எரியிடை வாதில் தோற்றது இவர்க்கு நம் அருகர் என்பார்
புரிசடை அண்ணல் நீறே பொருள் எனக் கண்டோ ம் என்பார்
பெருகு ஒளி முத்தின் பைம் பொன் சிவிகை மேல் பிள்ளையார் தாம்
வரும் அழகு என்னே என்பார் வாழ்ந்தன கண்கள் என்பார்
6.1.803
2702ஏதமே விளைந்த இந்த அடிகள் மார் இயல் பால் என்பார்
நாதனும் ஆல வாயில் நம்பனே காணும் என்பார்
போதம் ஆவதுவும் முக்கண் புராணனை அறிவது என்பார்
வேதமும் நீறும் ஆகி விரவிடும் எங்கும் என்பார்
6.1.804
2703அடிகள்மார் முகங்கள் எல்லாம் அழிந்தன பாரீர் என்பார்
கொடிய வஞ்சனைகள் எல்லாம் குலைந்தன போலும் என்பார்
வடிகொள் வேல் மாறன் காதல் மாறின வண்ணம் என்பார்
விடிவதாய் முடிந்தது இந்த வெஞ்சமணர் இருளும் என்பார்
6.1.805
2704நெருப் பினில் தோற்றார் தாங்கள் நீரிவெல்வார் களோ என்பார்
இருப்பு நெஞ்சு உடையர் ஏனும் பிள்ளையார்க்கு எதிரோ என்பார்
பருப் பொருள் உணர்ந்தார் தாங்கள் படுவன் பாரீர் என்பார்
கருப்புடைக் கழுக்கோல் செய்தார் மந்திரியார் தாம் என்பார்
6.1.806
2705ஏடுகள் வைகை தன்னில் இடுவதற்கு அணைந்தார் என்பார்
ஓடும் நீருடன் செலாது நிற்குமோ ஓலை என்பார்
நீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்லார் என்பார்
நாடு எலாம் காண இங்கு நண்ணுமா காணீர் என்பார்
6.1.807
2706தோற்றவர் கழுவில் ஏறத் துணிவதே அருகர் என்பார்
ஆற்றிய அருளின் மேன்மைப் பிள்ளையார்க்கு அழகு இது என்பார்
நீற்றினால் தென்னன் தீங்கு நீங்கிய வண்ணம் கண்டார்
போற்றுவார் எல்லாம் சைவ நெறியினைப் போற்றும் என்பார்
6.1.808
2707இன்னன இரண்டு பாலும் ஈண்டினர் எடுத்துச் சொல்ல
மின் ஒளி மணி பொன் வெண் குடை மீது போதப்
பன் மணி சிவிகை தன் மேல் பஞ்சவன் நாட்டு உளோர்க்கு
நன் நெறி காட்ட வந்தார் நான் மறை வாழ வந்தார்
6.1.809
2708தென் தமிழ் விளங்க வந்த திருக்கழு மலத்தான் வந்தான்
மன்றுளார் அளித்த ஞான் வட்டில் வண்கையன் வந்தான்
வென்றுலகு உய்ய மீளவை கையில் வெல்வான் வந்தான்
என்றுபன் மணிச் சின்னங்கள் எண் திசை நெருங்கி ஏங்க
6.1.810
2709பன் மணி முரசம் சூழ்ந்த பல்லியம் இயம்பப் பின்னே
தென்னனும் தேவியாரும் உடன் செலத் திரண்டு செல்லும்
புன் நெறி அமணர் வேறு ஓர் புடைவரப் புகலி வேந்தர்
மன்னிய வைகை ஆற்றின் கரை மிசை மருவ வந்தார்
6.1.811
2710கார் கெழு பருவம் வாய்ப்பக் காமுறும் மகளிர் உள்ளம்
சீர் கெழு கணவன் தன்பால் விரைவு உறச் செல்லுமா போல்
நீர் கெழு பௌவம் நோக்கி நிரை திரை இரைத்துச் செல்லும்
பார் கெழு புகழின் மிக்க பண்புடை வைகை ஆறு
6.1.812
2711ஆற்றில் நீர் கடுக ஓடும் மருங்கு உற அரசன் நோக்கி
நீற்று அணி திகழ்ந்த மேனி நிறை மதிப் பிள்ளையாரும்
வேற்றுரு அருகர் நீரும் விதித்த ஏடு இடுக என்றான்
தோற்றவர் தோலார் என்று முன்னுறத் துணிந்து இட்டார்கள்
6.1.813
2712படு பொருள் இன்றி நெல்லில் பதடி போல் உள் இலார் மெய்
அடுபவர் பொருளை அத்தி நாத்தி என்று எழுதி ஆற்றில்
கடுகிய புனலைக் கண்டும் அவாவினால் கையில் ஏடு
விடுதலும் விரிஅந்து கொண்டு வேலை மேல் படர்ந்தது அன்றே
6.1.814
2713ஆறு கொண்டு ஓடும் ஏட்டைத் தொடர்ந்து எதிர் அணைப்பார் போலத்
தேறு மெய் உணர்வு இலாதார் கரைமிசை ஓடிச் சென்றார்
பாறும் அப்பொருள் மேல் கொண்ட பட்டிகை எட்டாது அங்கு
நூறுவில் கிடைக்கு முன்னே போனது நோக்கிக் காணார்
6.1.815
2714காணவும் எய்தா வண்ணம் கடலின் மேல் செல்லும் ஏடு
நாணிலா அமணர் தம்மை நாட்டாற்றில் விட்டுப் போகச்
சேணிடைச் சென்று நின்றார் சிதறினார் திகைத்தார் மன்னன்
ஆணையில் வழுவ மாட்டாது அஞ்சுவார் அணைய மீண்டார்
6.1.816
2715வேறு ஒரு செயல் இலாதார் வெரு உற்று நடுங்கித் தம்பால்
ஈறு வந்து எய்திற்று என்றே மன்னவன் எதிர் வந்து எய்தி
ஊறுடை நெஞ்சில் அச்சம் வெளிப்பட ஒளிப்பார் போன்று
மாறு கொண்டு ஈரும் இட்டால் வந்தது காண்டும் என்றார்
6.1.817
2716மாசு சேர் அமணர் எல்லாம் மதியினில் மயங்கிக் கூற
ஆசிலா நெறியில் சேர்ந்த அரசனும் அவரை விட்டுத்
தேசு உடைப் பிள்ளையார் தம் திருக்குறிப்பு அதனை நோக்கப்
பாசுரம் பாடல் உற்றார் பர சமயங்கள் பாற
6.1.818
2717தென்னவன் மாறன் தானும் சிரபுரத்துத் தலைவர் தீண்டிப்
பொன் நவில் கொன்றையார் தம் திருநீறு பூசப் பெற்று
முன்னை வல் வினையும் நீங்க முதல்வனை அறியும் தன்மை
உன்னினான் வினைகள் ஒத்துத் துலை என நிற்றலாலே
6.1.819
2718உலகியல் வேத நூல் ஒழுக்கம் என்பதும்
நிலவு மெய்ந் நெறி சிவ நெறியது என்பதும்
கலதி வாய் அமணர் காண்கிலார்கள் ஆயினும்
பலர் புகழ் தென்னவன் அறியும் பான்மையால்
6.1.820
2719அந்தணர் தேவர் ஆன் இனங்கள் வாழ்க என்று
இந்த மெய்ம் மொழிப் பயன் உலகம் இன்பு உறச்
சந்த வேள்விகள் முதல் சங்கரர்க்கு முன்
வந்த அர்ச்சனை வழிபாடும் அன்னவாம்
6.1.821
2720வேள்வி நல் பயன் வீழ் புனல் ஆவது
நாளும் அர்ச்சனை நல் உறுப்பு ஆதலால்
ஆளும் மன்னனை வாழ்த்தியது அர்ச்சனை
மூளும் மற்று இவை காக்கும் முறைமையால்
6.1.822
2721ஆழ்க தீயது என்று ஓதிற்று அயல் நெறி
வீழ்க என்றது வேறு எல்லாம் அரன் பெயர்
சூழ்க என்றது தொல் உயிர் யாவையும்
வாழி அஞ்சு எழுத்து ஓதி வளர்கவே
6.1.823
2722சொன்ன வையகமும் துயர் தீர்கவே
என்னும் நீர்மை இக பரத்தில் உயர்
மன்னி வாழும் உலகத்தவர் மாற்றிட
முன்னர் ஞான சம்பந்தர் மொழிந்தனர்
6.1.824
2722அரிய காட்சியர் என்பது அவ் வாதியைத்
தெரியலாம் நிலையால் தெரியார் என
உரிய அன்பினில் காண்பவர்க்கு உண்மையாம்
பெரிய நல் அடையாளங்கள் பேசினார்
6.1.825
2724ஆயினும் பெரியார் அவர் என்பது
மேய இவ் இயல்பே அன்றி விண் முதல்
பாய பூதங்கள் பல் உயிர் அண்டங்கள்
ஏயும் யாவும் இவர் வடிவு என்பதாம்
6.1.826
2725பின்பும் ஆர் அறிவார் அவர் பெற்றியே
என்பது யார் உணர்வான் எனும் சென்று எட்ட ஒணா
மன்பெரும் தன்மையார் என வாழ்த்தினார்
அன்பு சூழ் சண்பை ஆண் தகையார் அவர்
6.1.827
2726வெந்த சாம்பல் விரை என்பது தமது
அந்தம் இல் ஒளி அல்லா ஒளி எலாம்
வந்து வெம் தற மற்றப் பொடி அணி
சந்த மாக் கொண்ட வண்ணமும் சாற்றினார்
6.1.828
2727தமக்குத் தந்தையர் தாய் இலர் என்பதும்
அமைத்து இங்கு யாவையும் ஆங்கு அவை வீந்த போது
இமைத்த சோதி அடங்கிப் பின் ஈதலால்
எமக்கு நாதர் பிறப்பு இலர் என்றதாம்
6.1.829
2728தம்மையே சிந்தியார் எனும் தம்மை தான்
மெய்ம்மை ஆகி விளங்கு ஒளி தாம் என
இம்மையே நினைவார் தம் இருவினைப்
பொய்ம்மை வல் இருள் போக்குவர் என்றதாம்
6.1.830
2729எந்தையார் அவர் எவ்வகையார் கொல் என்று
இந்த வாய்மை மற்ற எப்பொருள் கூற்றினும்
முந்தையோரை எக் கூற்றின் மொழிவது என்று
அந்தண் பூந்தராய் வேந்தர் அருளினார்
6.1.831
2730ஆதி ஆட்பால் அவர்க்கு அருளும் திறம்
நாதன் மாட்சிமை கேட்க நவிலுங் கால்
ஓதும் எல்லை உலப்பில ஆதலின்
யாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்றதாம்
6.1.832
2731அன்ன ஆதலில் ஆதியார் தாள் அடைந்து
இன்ன கேட்கவே ஏற்ற கோள் பலவும்
முன்னை வல் வினையும் முடிவு எய்தும் அத்
தன்மையார்க்கு என்றனர் சண்பை காவலர்
6.1.833
2732மன்னும் ஏதுக்களால் எனும் வாய்மைதான்
அன்னது ஒப்பு வேறு இன்மையில் சங்கரன்
இன்ன தன்மையை ஏது எடுத்துக் காட்டு
அன்ன ஆற்றால் அளப்பு இலன் என்றதாம்
6.1.834
2733தோன்று காட்சி சுடர் விட்டு உளன் என்பது
ஆன்ற அங்கிப் புறத்து ஒளியாய் அன்பில்
ஊன்ற உள் எழும் சோதியாய் நின்றனன்
ஏன்று காண்பார்க்கு இது பொருள் என்ற தாம்
6.1.835
2734மாதுக்கம் நீக்கல் உறுவீர் மனம் பற்றும் என்பது
ஆதிச் சுடர்ச் சோதியை அன்பின் அகத்துள் ஆக்கிப்
போதித்த நோக்கு உற்று ஒழியாமல் பொருந்தி வாழ்ந்து
போதித்த பந்தப் பிறப்பின் நெறி பேர்மின் என்றாம்
6.1.836
2735ஈண்டு சாதுக்கள் என்று எடுத்து ஓதிற்று
வேண்டும் வேட்கைய எல்லாம் விமலர்தாள்
பூண்ட அன்பினில் போற்றுவீர் சார்மின் என்று
ஆண்ட சண்பை அரசர் அருளினார்
6.1.837
2736ஆடும் எனவாம் திருப்பாட்டின் அமைத்த மூன்றும்
நீடும் புகழோ பிறர் துன்பம் நீத்தற்கோ என்று
தேடும் உணர்வீர் உலகுக்கு இவை செய்த ஈசர்
கூடும் கருணைத் திறம் என்றனர் கொள்கை மேலோர்
6.1.838
2737கருதும் கடிசேர்ந்த என்னும் திருப் பாட்டில் ஈசர்
மருவும் பெரும் பூசை மறுத்தவர்க் கோறல் முத்தி
தரு தன்மையது ஆதல் சண்ணீசர் தம் செய்கை தக்கோர்
பெரிதும் சொலக் கேட்டனம் என்றனர் பிள்ளையார் தாம்
6.1.839
2738வேத முதல்வன் எனும் மெய்த் திருப்பாட்டினினேர்
ஆதி உலகோர் இடர் நீங்கிட ஏத்த ஆடும்
பாதம் முதலாம் பதிணெண் புராணங்கள் என்றே
ஓது என்று உரை செய்தனர் யாவும் ஓதாது உணர்ந்தோர்
6.1.840
2739பாவுற்ற பார் ஆழி வட்டத் திருப்பாட்டின் உண்மை
காவல் தொழிலான் எனும் கண்ணனும் காவல் பெற்றது
யாவர்க்கும் மேல் ஆய ஈசன் அருள் ஆழி பெற்று
மேவுற்ற சீர் உற்றது என்றனர் வேத வாயர்
6.1.841
2740மாலா யவன் என்ன வரும் திருப்பாட்டில் மாலும்
தோலா மறை நான்முகனும் தொடர்வாம் அமரர்
ஏலா வகை சுட்ட நஞ்சு உண்டு இறவாமை காத்த
மேலாம் கருணைத் திறம் வெம் குருவேந்தர் வைத்தார்
6.1.842
2741ஆன அற்று அன்றி என்ற அத்திருப் பாட்டில் கூடல்
மா நகரத்துச் சங்கம் வைத்தவன் தேற்றத் தேறா
ஈனர்கள் எல்லைக் கிட்ட ஏடு நீர் எதிர்ந்து செல்லில்
ஞானம் ஈசன் பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார்
6.1.843
2742வெறியார் பொழில் சண்பையர் வேந்தர் மெய்ப் பாசுரத்தைக்
குறி ஏறிய எல்லை அறிந்து கும்பிட்டேன் அல்லேன்
சிறியேன் அறிவுக்கு அவர் தந்து திருப்பாதம் தந்த
நெறியே சிறிது யான் அறி நீர்மை கும்பிட்டேன் அன்பால்
6.1.844
2743அலரும் விரை சூழ் பொழில் காழியுள் ஆதி ஞானம்
மலரும் திருவாக்கு உடை வள்ளலார் உள்ள வண்ணம்
பலரும் உணர்ந்து உய்யப் பகர்ந்து வரைந்து ஆற்றில்
நிலவும் திரு ஏடு திருக்கையால் நீட்டி இட்டார்
6.1.845
2744திரு உடைப் பிள்ளையார் தம் திருக்கையால் இட்ட ஏடு
மரு உறும் பிறவி ஆற்றில் மாதவர் மனம் சென்றால் போல்
பொரு புனல் வைகை ஆற்றில் எதிர்ந்து நீர் கிழித்துப் போகும்
இரு நிலத்தோர் கட்கு எல்லாம் இது பொருள் என்று காட்டி
6.1.846
2745எம்பிரான் சிவனே எல்லாப் பொருளும் என்று எழுதும் ஏட்டில்
தம்பிரான் அருளால் வேந்தன் தன்னை முன் ஓங்கப் பாட
அம்புய மலராள் மார்பன் அனபாயன் என்னும் சீர்த்திச்
செம்பியன் செங்கோல் என்னத் தென்னன் கூன் நிமிர்ந்தது அன்றே
6.1.847
2746ஏடு நீர் எதிர்ந்து செல்லும் பொழுது இமையோர்கள் எல்லாம்
நீடிய வாழ்த்தில் போற்றி நிமிர்ந்த பூமாரி தூர்த்தார்
ஆடியல் யானை மன்னன் அற்புதம் எய்தி நின்றான்
பாடு சேர் அமணர் அஞ்சி பதைப்புடன் பணிந்து நின்றார்
6.1.848
2747ஆற்றின் மேல் செல்லும் ஏடு தொடர்ந்து எடுப்பதற்கு வேண்டிக்
காற்றென விசையில் செல்லும் கடும் பரி ஏறிக் கொண்டு
கோல் தொழில் திருத்த வல்ல குலச்சிறையார் பின் சென்றார்
ஏற்று உயர் கொடியினாரைப் பாடினார் ஏடு தங்க
6.1.849
2748ஏடகம் பிள்ளையார் தாம் வன்னி என்று எடுத்துப் பாடக்
கூடிய நீரில் ஏடு குலச்சிறை யாரும் கூடிக்
காடு இடமாக ஆடுங்கண்ணுதல் கோயில்மாடு
சீர் நடவுட் புக்கு நின்ற ஏடு எடுத்துக் கொண்டார்
6.1.850
2749தலை மிசை வைத்துக்கொண்டு தாங்க அரும் மகிழ்ச்சி பொங்க
அலைபுனல் கரையில் ஏறி அங்கு இனிது அமர்ந்த மேருச்
சிலை உடையவர் தாள் போற்றி மீண்டு சென்று அணைவார் தெய்வ
மலை மகள் குழைத்த ஞானம் உண்டவர் தம்பால் வந்தார்
6.1.851
2750மற்றவர் பிள்ளையார் தம் மலர் அடி வணங்கிப் போற்றிக்
கொற்றவன் முதலாய் உள்ளோர் காண முன் கொணர்ந்த ஏடு
பற்றிய கையில் ஏந்திப் பண்பினால் யார்க்கும் காட்ட
அற்றருள் பெற்ற தொண்டர் அர ஒலி எழுந்தது அன்றே
6.1.852
2751மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கி
துன்னிய வாதில் ஒட்டித் தோற்ற இச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளையார் பால் அனுசிதம் முற்றச் செய் தார்
கொல் நுனைக் கழுவில் ஏற முறை செய்க என்று கூற
6.1.853
2752புகலியில் வந்த ஞானப் புங்கவர் அதனைக் கேட்டும்
இகல் இலர் எனினும் சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்கு
தகவு இலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே
மிகை இலா வேந்தன் செய்கை விலக்கி இடாது இருந்த வேலை
6.1.854
2753பண்பு உடை அமைச்சனாரும் பார் உளோர் அறியும் ஆற்றால்
கண்புடை பட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற
நண்பு உடை ஞானம் உண்டார் மடத்துத் தீ நாடி இட்ட
எண் பெரும் குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள்
6.1.855
2754தோற்றவர் கழுவில் ஏறித் தோற்றிடத் தோற்றும் தம்பம்
ஆற்று இடை அமணர் ஓலை அழிவினால் ஆர்த்த தம்பம்
வேற்று ஒரு தெய்வம் இன்மை விளக்கிய பதாகைத் தம்பம்
போற்று சீர்ப் பிள்ளையார் தம் புகழ்ச் சயத் தம்பம் ஆகும்
6.1.856
2755தென்னவன் தனக்கு நீறு சிரபுரச் செல்வர் ஈந்தார்
முன்னவன் பணிந்து கொண்டு முழுவதும் அணிந்து நின்றான்
மன்னன் நீறு அணிந்தான் என்று மற்றவன் மதுரை வாழ்வார்
உன்னி நின்றார்கள் எல்லாம் தூய நீறு அணிந்து கொண்டார்
6.1.857
2756பூதி மெய்க்கு அணிந்து வேந்தன் புனிதனாய் உய்ந்த போது
நீதியும் வேதநீதி ஆகியே நிகழ்ந்தது எங்கும்
மேதினி புனிதம் ஆக வெண்ணீற்றின் விரிந்த சோதி
மாதிரம் தூய்மை செய்ய அமண் இருள் மாய்ந்தது அன்றே
6.1.858
2757மீனவற்கு உயிரை நல்கி மெய்ந் நெறி காட்டி மிக்க
ஊனமாம் சமணை நீக்கி உலகு எலாம் உய்யக் கொண்ட
ஞான சம்பந்தர் வாய்மை ஞாலத்தில் பெருகி ஓங்கத்
தேனலர் கொன்றையார் தம் திருநெறி நடந்தது அன்றே
6.1.859
2758மறையவர் வேள்வி செய்ய வானவர் மாரி நல்க
இறைவன் நல் நெறியின் ஓங்க இகத்தினில் அவனி இன்பம்
குறைவிலது எனினுங் கூற்றை உதைத்தவர் நாமம் கூறி
நிறை கடல் பிறவித் துன்பம் நீங்கிடப் பெற்றது அன்றே
6.1.860
2759அம் கயல் கண்ணி தன்னோடு ஆலவாய் அமர்ந்த அண்ணல்
பங்கயச் செய்ய பாதம் பணிவன் என்று எழுந்து சென்று
பொங்கு ஒளிச் சிவிகை ஏறிப் புகலியர் வேந்தர் போந்தார்
மங்கையர்க்கு அரசியாரும் மன்னனும் போற்றி வந்தார்
6.1.861
2760எண்ணரும் பெருமைத் தொண்டர் யாவரும் மகிழ்ச்சி எய்திப்
புண்ணியப் பிள்ளையாரைப் புகழ்ந்து அடி போற்றி போத
மண் எலாம் உய்ய வந்த வள்ளலார் தம்மைக் கண்டு
கண்ணினால் பயன் கொண்டார்கள் கன்னி நாட்டவர்கள் எல்லாம்
6.1.862
2761ஆலவாய் அண்ணல் கோயில் அம் கண் முன் தோன்றக் கண்டு
பால் அறாவாயர் பண்பினால் தொழுது சென்று
மாலும் நான்முகனும் போற்ற மன்னினார் கோயில் வாயில்
சீல மாதவத்தோர் முன்பு சிவிகை நின்று இழிந்து புக்கார்
6.1.863
2762தென்னவன் தானும் எங்கள் செம்பியன் மகளார் தாமும்
நன்னெறி அமைச்சனாரும் ஞான சம்பந்தர் செய்ய
பொன்னடிக் கமலம் போற்றி உடன் புகப் புனிதர் கோயில்
தன்னை முன் வலம் கொண்டுள்ளால் சண்பையர் தலைவர் புக்கார்
6.1.864
2763கைகளும் தலை மீது ஏறக் கண்ணில் ஆனந்த வெள்ளம்
மெய் எலாம் பொழிய வேத முதல்வரைப் பணிந்து போற்றி
ஐயனே அடியனேனை அஞ்சல் என்று அருள வல்ல
மெய்யனே என்று வீடல் ஆலவாய் விளம்பல் உற்றார்
6.1.865
2764ஒன்று வேறு உணர்வும் இல்லேன் ஒழிவற நிறைந்த கோலம்
மன்றில் நான் மறைகள் ஏத்த மானுடர் உய்ய வேண்டி
நின்று நீ ஆடல் செய்கை நினைப்பதே நியமம் ஆகும்
என்று பூம் புகலி மன்னர் இன் தமிழ்ப் பதிகம் பாட
6.1.866
2765தென்னவன் பணிந்து நின்று திரு ஆல வாயில் மேவும்
மன்னனே அமணர் தங்கள் மாய்கை ஆல் மயங்கி யானும்
உன்னை யான் அறிந்திலேனை உறு பிணி தீர்த்து ஆட் கொள்ள
இன் அருள் பிள்ளையாரைத் தந்தனை இறைவா என்றான்
6.1.867
2766சீர் உடைப் பிள்ளையாரும் சிறப்பு உடை அடியாரோடும்
காரினில் பொலிந்த கண்டத்து இறைவர் தாள் வணங்கிக் காதல்
ஆர் அருள் பெற்றுப் போற்றி அங்கு நின்று அரிது நீங்கி
ஏர் இயல் மடத்தில் உள்ளால் இனிது எழுந்து அருளிப் புக்கார்
6.1.868
2767நீடு சீர்த் தென்னர் கோனும் நேரியன் பாவை ஆரும்
மாடு சென்று இறைஞ்சி நோக்கி மாளிகை தன்னில் போகக்
கூடிய மகிழ்ச்சி பொங்கக் கும்பிடும் விருப்பினாலே
நாடி அங்கு இருந்து தங்கள் நாதரைப் பாடல் உற்றார்
6.1.869
2768திருவியம் அகத்தின் உள்ளும் திரு நீல கண்டப் பாணர்க்கு
அருளிய திறமும் போற்றி அவர் ஒடும் அளவளாவித்
தெருள் உடைத் தொண்டர் சூழத் திருத் தொண்டின் உண்மை நோக்கி
இருள் கெட மண்ணில் வந்தார் இனிது அமர்ந்து இருந்தார் அன்றே
6.1.870
2769பூழியன் மதுரை உள்ளார் புறத்து உளார் அமணர் சேரும்
பாழியும் அருகர் மேவும் பள்ளியும் ஆன எல்லாம்
கீழ் உறப் பறித்துப் போக்கிக் கிளர் ஒளித் தூய்மை செய்தே
வாழி அப் பதிகள் எல்லாம் மங்கலம் பொலியச் செய்தார்
6.1.871
2770மீனவன் தேவி யாரும் குலச் சிறையாரும் மிக்க
ஞான சம்பந்தர் பாதம் நாள் தொறும் பணிந்து போற்ற
ஆன சண்பையர் கோன் ஆரும் ஆலவாய் அமர்ந்தார் பாதம்
ஊன் அமர்ந்து உருக ஏத்தி உளம் களித்து உறையும் நாளில்
6.1.872
2771செய் தவத்தால் சிவ பாத இருதயர் தாம் பெற்று எடுத்த
வைதிக சூளா மணியை மா தவத்தோர் பெரு வாழ்வை
மை திகழும் திரு மிடற்றார் அருள் பெற்ற வான் பொருளை
எய்திய பூம் புகலியிலே இருந்த நாள் மிக நினைந்தார்
6.1.873
2772ஆன புகழ்த் திருநாவுக்கரசர் பால் அவம் செய்த
மானம் இலா அமணர் உடன் வாது செய்து வெல்வதற்கும்
மீனவன் தன் நாடு உய்ய வெண் நீறு பெருக்கு தற்கும்
போனவர் பால் புகுந்தபடி அறிவன் எனப் புறப்படுவார்
6.1.874
2773துடி இடையாள் தன்னோடும் தோணியில் வீற்று இருந்த பிரான்
அடி வணங்கி அலர் சண்பை அதன் இன்றும் வழிக் கொண்டு
படியின் மிசை மிக்கு உளவாம் பரன் கோயில் பணிந்து ஏத்தி
வடி நெடு வேல் மீனவன் தன் வள நாடு வந்து அணைந்தார்
6.1.875
2774மா மறையோர் வளம் பதிகள் இடைத் தங்கி வழிச் செல்வார்
தே மருவு நறும் பைந்தார்த் தென்னவன் தன் திரு மதுரை
தாம் அணைந்து திரு ஆலவாய் அமர்ந்த தனி நாதன்
பூ மருவும் சேவடிக் கீழ் புக்கு ஆர்வத்தோடும் பணிந்தார்
6.1.876
2775அங்கணரைப் பணிந்து போந்து அருகு அணைந்தார் தமை வினவ
இங்கு எம்மைக் கண் விடுத்த காழியர் இள ஏறு
தங்கும் இடம் திரு நீற்றுத் தொண்டர் குழாம் சாரும் இடம்
செங்கமலத் திருமடம் மற்று இது என்றே தெரிந்து உரைத்தார்
6.1.877
2776செப்புதலும் அது கேட்டுத் திரு மடத்தைச் சென்று எய்த
அப்பர் எழுந்து அருளினார் எனக் கண்டோ ர் அடி வணங்கி
ஒப்பில் புகழ்ப் பிள்ளையார் தமக்கு ஓகை உரை செய்ய
எப்பொழுது வந்து அருளிற்று என்று எதிரே எழுந்து அருள
6.1.878
2777சிவ பாத இருதயர் தாம் முன் தொழுது சென்று அணையத்
தவம் ஆன நெறி அணையும் தாதையார் எதிர் தொழுவார்
அவர் சார்வு கண்டு அருளித் திருத் தோணி அமர்ந்து அருளிப்
பவ பாசம் அறுத்தவர் தம் பாதங்கள் நினைவுற்றார்
6.1.879
2778இருந்தவத்தோர் அவர் முன்னே இணை மலர்க்கை குவித்து அருளி
அரும் தவத்தீர் எனை அறியாப் பருவத்தே எடுத்து ஆண்ட
பெரும் தகை எம் பெருமாட்டி உடன் இருந்ததே என்று
பொருந்து புகழ்ப் புகலியின் மேல் திருப் பதிகம் போற்றி இசைத்தார்
6.1.880
2779மண்ணின் நல்ல என்று எடுத்து மனத்து எழுந்த பெரு மகிழ்ச்சி
உள் நிறைந்த காதலினால் கண் அருவி பாய்ந்து ஒழுக
அண்ணலார் தமைவினவித் திருப்பதிகம் அருள் செய்தார்
தண் நறும்பூஞ் செங்கமலத்தார் அணிந்த தமிழ் விரகர்
6.1.881
2780திருப் பதிகம் திருக்கடைக் காப்புச் சாத்திச் சிறப்பின் மிகு
விருப்பினால் அவர் தமக்கு விருந்து அளித்து மேவும் நாள்
அருப்புறு மெய்க் காதல் புரி அடியவர்கள் தம்மோடும்
பொருப்புறு கைச் சிலையார் சேர் பதி பிறவும் தொழப் போவார்
6.1.882
2781ஆலின் கீழ் நால்வர்க்கு அன்று அறம் உரைத்த அங்கணனை
நூலின் கண் பொருள் பாடி நூல் அறிவார்க்கு ஈந்தானை
காலம் பெற்று இனிது இறைஞ்சிக் கை தொழுது புறம் போந்தார்
சீலம் கொள் தென்னவனும் தேவியரும் உடன் போத
6.1.883
2782தேன் நிலவு பொழில் மதுரைப் புறத்துப் போந்த
தென்னவனார் தேவியார் அமைச்சர்சிந்தை
ஊன் நெகிழும் படி அழிந்து அங்கு ஒழுகு கண்ணீர்
பாய்ந்து இழிய உணர்வு இன்றி வீழக் கண்டே
யான் உம்மைப் பிரியாத வண்ணம் இந் நாட்டு
இறைவர் பதி எனைப்பலவும் பணீவீர் என்று
ஞானம் உணர்வார் அருள அவரும் போத நம்பர்
திருப்பரம் குன்றை நண்ணினாரே
6.1.884
2783ஆறு அணிந்தார் தமை வணங்கி அங்குப் போற்
அணி ஆப்பன் ஊரை அணைந்து பணிந்துபாடி
நீறு அணிந்த செல்வர் பதி பிறவும் சேர்ந்து நிலவு
திருப் பதிகங்கள் நிகழப் பாடிச்
சேறு அணிந்த வயல் பழனக் கழனி சூழ்ந்த சிர
புரத்து வந்து அருளும் செல்வர் செங்கண்
ஏறு அணிந்த வெல் கொடியார் திருப்புத்தூரை
எய்தி இறைஞ்சிச் சில நாள் இருந்தார் அன்றே
6.1.885
2784பற்றார் தம் புரங்கள் மலைச் சிலையால்
செற்ற பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து
புற்று ஆரும் பணி பூண்ட புனிதனார் தம் பூவணத்தைப்
புக்கு இறைஞ்சிப் புகழ்ந்து பாடிக்
கற்றார்கள் தொழுது ஏத்தும் கானப் பேரும்
கைதொழுது தமிழ் பாடிச் சுழியல் போற்றிக்
குற்றாலம் குறும் பலாக் கும்பிட்டு ஏத்திக் கூற்று
உகைத்தார் நெல்வேலி குறுகினாரே
6.1.886
2785. புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றி
புரிசடையார் திருப்பதிகள் பிறவும் சென்று
நண்ணி இனிது அமர்ந்து அங்கு நயந்து பாடி
நல்தொண்டர் உடன் நாளும் போற்றிச் செல்வார்
விண்ணவரை செற்று உகந்தான் இலங்கை செற்ற மிக்க
பெரும் பாதகத்தை நீக்க வேண்டித்
திண்ணிய பொன் சிலைத் தடக்கை இராமன் செய்த
திரு இராமேச் சுரத்தைச் சென்று சேர்ந்தார்
6.1.887
2786செங்கண் மால் வழிபட்ட கோயில் நண்ணித்
திருமுன்பு தாழ்ந்து எழுந்து தென்ன னோடும்
மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை
மந்திரியாரும் சூழ் மணி நீள் வாயில்
பொங்கி எழும் விருப்பினால் உடனே புக்குப்
புடை வலம் கொண்டு உள் அணைவார் போற் செய்து
பங்கயச் செங்கை குவித்துப் பணிந்து நின்று
பாடினார் மன்னவனும் பரவி ஏத்த
6.1.888
2787சேதுவின்கட் செங்கண் மால் பூசை செய்த
சிவபெருமான் தனைப்பாடிப் பணிந்து போந்து
காதலுடன் அந் நகரில் இனிது மேவிக் கண் நுதலான்
திருத் தொண்டனார்க் கெல்லாம்
கோதில் புகழ்ப் பாண்டிமா தேவி யார் மெய்க்
குலச்சிறையார் குறை அறுத்துப் போற்றிச் செல்ல
நாதர் தமை நாள் தோறும் வணங்கி ஏத்தி நளிர்
வேலைக் கரையில் நயந்து இருந்தார் அன்றே
6.1.889
2788அந்நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி
ஆழிபுடை சூழ்ந்து ஒலிக்கும் ஈழம் தன்னில்
மன்னு திருக்கோண மலை மகிழ்ந்த செம் கண் மழ
விடையார் தமைப் போற்றி வணங்கிப்பாடி
சென்னி மதி புனை மாடம் மா தோட்டத்தில் திருக்
கேதீச் சரத்து அண்ணல் செய்ய பாதம்
உன்னி மிகப் பணிந்து ஏத்தி அன்பரோடும் உலவாத
கிழி பெற்றார் உவகை உற்றார்
6.1.890
2789. அப் பதியைத் தொழுது வடதிசை மேல் செல்வார்
அங்கை அனல் தரித்த பிரான் அமரும் கோயில்
புக்கு இறைஞ்சிப் பல பதியும் தொழுது போற்றிப் புணரி
பொரு தலை கரைவாய் ஒழியப் போந்தே
செப்ப அரிய புகழ்த் திருவாடானை சேர்ந்து செந்தமிழ்
மாலைகள் சாத்திச் சிவனார் மன்னும்
ஒப்பரிய புனவாயில் போற்றி செய்து வணங்கினார்
உலகு உய்ய ஞானம் உண்டார்
6.1.891
2790பதி நிலவு பாண்டி நாடு அதனில் முக்கண் பரமனார்
மகிழ் இடங்கள் பலவும் போற்றி
விதி நிலவு வேத நூல் நெறியே ஆக்கி வெண்ணீற்றின்
சார்வினால் மிக்கு உயர்ந்த
கருதி அருளிக் காழி நகர் சூழ வந்தார் கண்
நுதலான் திருத்தொண்டர் பலரும் சூழ
மதி நிலவு குலவேந்தன் போற்றிச் செல்ல மந்திரியார்
மதி மண மேற்குடியில் வந்தார்
6.1.892
2791அந் நகரில் இனிது அமர்வார் அருகு சூழ்ந்த
பதிகளில் நீடு அங்கணர் தம் கோயில் தாழ்ந்து
மன்னு திருத் தொண்டருடன் மீண்டு சேர்ந்து மன்னவனும்
மங்கையருக்கு அரசியாரும்
கொன்னவில் வேல் குலச்சிறையார் தாமும் கூடிக்
குரைகழல்கள் பணிந்து குறை கொண்டு போற்றச்
சென்னி வளர் மதி அணிந்தார் பாதம் போற்றிச் சிரபுரத்துச்
செல்வர் இனிது இருந்த நாளில்
6.1.893
2792பொங்கு புனல் காவிரி நாடு அதனின் மீண்டு
போதுதற்குத் திருவுள்ளம் ஆகப் போற்றும்
மங்கையர்க்கு அரசியார் தாமும் தென்னர் மன்னவனும்
மந்திரியார் தாமும் கூட
அங்கு அவர் தம் திருப்பாதம் பிரியல் ஆற்றாது உடன்
போக ஒருப்படும் அவ் அளவு நோக்கி
இங்கு நான் மொழிந்த அதனுக்கு இசைந்தீர் ஆகில்
ஈசர் சிவநெறி போற்றி இருப்பீர் என்று
6.1.894
2793சால மிகத் தளர் வாரைத் தளரா வண்ணம்
தகுவன மற்று அவர்க்கு அருளிச் செய்த பின்பு
மேலவர் தம் பணி மறுக்க அவரும் அஞ்சி மீள்வதனுக்கு
இசைந்து திருவடியில் வீழ்ந்து
ஞாலம் உய்ய வந்து அருளும் பிள்ளையாரை
பிரியாத நண்பினொடும் தொழுது நின்றார்
ஆல விடம் உண்டவரை அடிகள் போற்ற அந் நாட்டை
அகன்று மீண்டு அணையச் செல்வார்
6.1.895
2794பொன்னி வளம் தரு நாடு புகுந்து மிக்க
பொருவில் சீர்த் திருத் தொண்டர் குழாத்தினோடும்
பன்னகப் பூண் அணிந்தவர் தம் கோயில் தோறும்
பத்தர் உடன் பதி உள்ளோர் போற்றச் சென்று
கன்னி மதில் திருக்களரும் போற்றிக் கண்டம் கறை
அணிந்தார் பாதாள ஈச்சுரமும் பாடி
முன் அணைந்த பதி பிறவும் பணிந்து போற்றி முள்ளிவாய்க்
கரை அணைந்தார் முந்நூல் மார்பர்
6.1.896
2795மலைவளர் சந்தனம் அகிலும் தேக்கும் உந்தி மலர்ப்
பிறங்கல் வண்டு இரைப்பச் சுமந்து பொங்கி
அலை பெருகி ஆள் இயங்கா வண்ணம் ஆறு பெருகுதலால்
அத்துறையில் அணையும் ஓடம்
நிலை புரியும் ஓடக் கோல் நிலை இலாமை நீர்
வாழ்நர் கரையின் கண் நிறுத்திப் போகக்
கலை பயிலும் கவுணியர் கோன் அதனைக் கண்டு
அக் கரையின் கண் எழுந்தருளி நின்ற காலை
6.1.897
2796தேவர் பிரான் அமர்ந்த திருக்கொள்ளம்
பூதூர் எதிர் தோன்றத் திரு உள்ளம் பணியச் சென்று
மேவுதலால் ஓடங்கள் விடுவார் இன்றி ஒழிந்திடவும்
மிக்கதோர் விரைவால் சண்பைக்
காவனார் ஓடத்தின் கட்டு அவிழ்த்துக் கண் நுதலான்
திருத்தொண்டர் தம்மை ஏற்றி
நாவலமே கோலாக அதன் மேல் நின்று நம்பர்
தமைக் கொட்டம் என நவின்று பாட
6.1.899
2797உம்பர் உய்ய நஞ்சு உண்டார் அருளால்
ஓடம் செலச் செல்ல உந்து தலால் ஊடு சென்று
செம் பொன் நேர் சடையார் தம் கொள்ளம்
பூதூர் தனைச் சேர அக்கரையில் சேர்ந்த பின்பு
நம்பர் அவர் தமை வணங்க ஞானம் உண்ட
பிள்ளையார் நல் தொண்டருடன் இழிந்து
வம்பலரும் நறும் கொன்றை நயந்தார் கோயில்
வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார்
6.1.899
2798நீண் நிலைக் கோபுரம் அதனை இறைஞ்சி புக்கு நிகர்
இலாத் தொண்டருடன் நெருங்கச் சென்று
வாண் நிலவு கோயிலினை வலம் கொண்டு எய்தி
மதிச் சடையார் திரு முன்பு வணங்கி நின்று
தாணுவே ஆற்றின் கண் ஓடம் உய்க்கும் தன்மையால்
அருள் தந்த தலைவா நாகப்
பூணினாய் களிற்றுரிவை போர்த்த முக்கண் புனிதனே
எனப் பணிந்து போற்றிச் செய்தார்
6.1.900
2799போற்றி இசைத்துப் புறம் போந்து அங்கு உறையும்
நாளில் பூழியன் முன் புன் சமயத்து அமணர் தம்மோடு
ஏற்ற பெரு வாதின் கண் எரியின் வேவாப் பதிகம்
உடை இறையவரை இறைஞ்ச வேண்டி
ஆற்றவும் அங்கு அருள் பெற்றுப் போந்து முன்னம்
அணைந்த பதிகளும் இறைஞ்சி அன்பர் சூழ
நாற்றிசையும் பரவும் திரு நள்ளாறு எய்தி நாடு உடை
நாயகர் கோயில் நண்ணினாரே
6.1.901
2800நீடு திருத் தொண்டர் புடை சூழ அம்கண்
நித்தில யானத்து இடை நின்று இழிந்து சென்று
பீடு உடைய திருவாயில் பணிந்து புக்குப் பிறை
அணிந்த சென்னியர் மன்னும் கோயில்
மாடு வலம் கொண்டு உள்ளால் மகிழ்ந்து புக்கு
மலர்க் கரங்கள் குவித்து இறைஞ்சி வள்ளலாரைப்
பாடக மெல் அடி எடுத்துப் பாடி நின்று பரவினார்
கண் அருவி பரந்து பாய
6.1.902
2801தென்னவர் கோன் முன் அமணர்
செய்த வாதில் தீயின் கண் இடும் ஏடு பச்சையாகி
என் உள்ளத் துணையாகி ஆலவயில் அமர்ந்து
இருந்தவாறு என் கொல் எந்தாய் என்று
பன்னு தமிழ்த் தொடை சாத்தி பரவிப்போந்து
பண்பினிய தொண்டருடன் அங்குவைகி
மன்னுப்புகழ்ப் பதி பிறவும் வணங்கச் சண்பை
வள்ளலார் நல்லாறு வணங்கிச் செல்வார்
6.1.903
2802சீர் நிலவு திருத்தெளிச் சேரியினைச்
சேர்ந்து சிவபெருமாள் தனைப் பரவிச் செல்லும் போது
சார்வு அறியாச் சாக்கியர்தம் போதி மங்கை
சார்தலும் மற்ற அது அறிந்த சைவர் எல்லாம்
ஆர் கலியின் கிளர்ச்சி எனச் சங்கு தாரை அளவு
இறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்துப்
பார் குலவு தனக் காளம் சின்னம் எல்லாம் பர
சமய கோள் அரி வந்தான் என்று ஊத
6.1.904
2802புல் அறிவில் சாக்கியர்கள் அறிந்தார்
கூடிப் புகலியர் தம் புரவலனார் புகுந்து தங்கள்
எல்லையினில் எழுந்து அருளும் பொழுது
தொண்டர் எடுத்த ஆர்ப்பு ஒலியாலும் எதிர் முன் சென்று
மல்கி எழும் திருச்சின்ன ஒலிகளாலும் மனம்
கொண்ட பொறாமையினால் மருண்டு தங்கள்
கல்வியினில் மேம்பட்ட புத்த நந்தி முதலான
தேரார்க்கும் கனன்று சொன்னார்
6.1.905
2804மற்றவர்கள் வெவ்வுரையும் பிள்ளையார்
முன் வருசின்னப் பெருகு ஒலியும் மன்னும் தொண்டர்
பொற்பு உடைய ஆர்ப்பு ஒலியும் செவியின்
ஊடு புடைத்த நாராசம் எனப் புக்க போது
செற்றமிகு உள்ளத்துப் புத்த நந்தி செயிர்த்து
எழுந்து தேரர் குழாம் சூழச் சென்று
வெற்றிபுனை சின்னங்கள் வாதில் எமை வென்று
அன்றோ பிடிப்பது என வெகுண்டு சொன்னான்
6.1.906
2805புத்தர் இனம் புடை சூழப் புத்த நந்தி
பொருவில் ஞானப் புனிதர் திருமுன்பு ஊதும்
மெய்த்த விறல் சின்னங்கள் விலக்கும் காலை
வெகுண்டு எழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கி
இத்தகைய செயற்கு இவரைத் தடிதல் செய்யாது
இது பொறுக்கில் தங்கள் நிலை ஏற்பர் என்று
முத்து நிரைச் சிவிகையின் மேல் மணியை வந்து
முறை பணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார்
6.1.907
2806வரும் இடத்தில் அழகு இதாம் நமக்கு
வாதில் மற்று இவர் தம் பொருள் நிலைமை மாறாத வண்ணம்
பொரும் இடத்தில் அறிகின்றோம் புத்த நந்தி
பொய்ம் மேற் கோள் எனப் புகலி வேந்தர் கூற
அருமறை சொல் திருப்பதிகம் எழுதும் அன்பர்
ஆளுடைய பிள்ளையார் திருவாக்காலே
உரும் இடித்து விழப் புத்தன் உத்த மாங்கம்
உருண்டு வீழ்க என பொறா உரை முன் விட்டார்
6.1.908
2807ஏறு உயர்த்தார் சைவ நெறி ஆணை
உய்க்க எதிர் விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும்
மாறு இல் வலி மந்திரமாம் அசனி போல
வாய்மை உரைத் திருத் தொண்டர் வாக்கினாலே
வேறு மொழிப் போர் ஏற்பான் வந்த புத்தன்
மேனியும் தலையினையும் வெவ்வேறாகக்
கூறுபட நூறி இடப் புத்தர் கூட்டம் குலைந்து
ஓடி விழுந்து வெருக் கொண்டது அன்றே
6.1.909
2808மற்றவர்கள் நிலைமையையும் புத்த
நந்தி வாக்கின் போர் ஏற்றவன் தன் தலையும் மெய்யும்
அற்று விழ அத்திர வாக்கு அதனால் அன்பர்
அறுத்ததுவும் கண்ட அரசன் அடியார் எல்லாம்
வெற்றி தரும்பிள்ளையார் தமக்குச் சென்று
விண்ணப்பம் செய எதிர்ந்த விலக்கு நீங்க
உற்ற விதி அதுவே யாம் அர என்று எல்லாம்
ஒதுக என அவ் ஒலி வான் உற்றது அன்றே
6.1.910
2809அஞ்சி அகன்று ஓடிய அப்புத்தர் எலாம்
அதிசயித்து மீண்டும் உடன் அணைந்து கூடி
வஞ்சனையோ இதுதான் மற்றவர்தம் சைவ
வாய்மையோ என மருண்டு மனத்தில் கொள்வார்
எஞ்சலின் மந்திர வாதம் அன்றி எம்மோடு
பொருள் பேசுவற்கு இசைவது என்று
தம் செயலின் மிக்கு உள்ள சாரி புத்தன்
தன்னையே முன் கொண்டு பின்னும் சார்ந்தார்
6.1.911
2810அத்தன்மை கேட்டு அருளிச் சண்பை
வந்த அடல் ஏறு திரு உள்ளத்து அழகு இது என்று
மெத்த மகிழ்ச்சியின் ஓடும் விரைந்து சென்று
வெண் தரள சிவிகையின் நின்று இழிந்து வேறு ஓர்
சத்திரமண்டபத்தின் மிசை ஏறி நீடு சைவருடன்
எழுந்து அருளி இருந்து சாரும்
புத்தர்களை அழைக்க எனத் திரு முன் நின்றார்
புகலி காவலர் போற்றிச் சென்றார்
6.1.912
2811சென்றவர்கள் தேரர் குழாம் அணைந்து
நீங்கள் செப்பி வரும் பொருள் நிலைமை தெரிக்கஎங்கள்
வென்றி மழ இளம் களிறு சண்பை யாளி வேத
பாரகன் மும்மைத் தமிழின் வேந்தன்
நன்று மகிழ்ந்து அழைக்கின்றான் ஈண்டநீரும்
நண்ணூம் எனக் கூறுதலும் நன்மை சாராத்
தன் தகைமைப் புத்தருடன் சாரி புத்தன்
சந்திர மண்டபமும் சார வந்தான்
6.1.913
2812அங்கு அணைந்து மண்டபத்துப் புத்தரோடும்
பிள்ளையார் அருகு அணைய நின்ற போதில்
எங்கும் நிகழ் திருச்சின்னம் தடுத்த புத்தன் இரும்
சிரத்தைப் பொடி ஆக்கும் எதிரில் அன்பர்
பொங்கு புகழ்ப் புகலி காவலர் தம் பாதம் போற்றி
அருளால் சாரிபுத்தன் தன்னை
உங்கள் தலைவனும் பொருளும் உரைக்க என்ன
உற்ற வாதினை மேற்கொண்டு உரை செய்கின்றான்
6.1.914
2813கற்பங்கள் அனைத்தினிலும் பிறந்து
வீந்து கதிமாறும் கணபங்க இயல்பு தன்னில்
பொற்புடைய தானமே தவமே தன்மை புரிந்த
நிலை யோகமே பொருந்தச் செய்ய
உற்பவிக்கும் ஒழிவு இன்றி உரைத்த ஞானத்து
ஒழியாத பேரின்ப முத்தி பெற்றான்
பற்பலரும் பிழைத்து உய்ய அறமுன் சொன்ன
பான்மை யான் யாங்கள் தொழும் பரமன் என்றான்
6.1.915
2814என்று உரைத்த சாரி புத்தன் எதிர் வந்து
ஏற்ற இரும் தவத்துப் பெரும் தன்மை அன்பர்தாமும்
நன்று உமது தலைவன் தான் பெற்றான் என்று
நாட்டுகின்ற முத்தி தான் ஆவது என்றார்
நின்றவுரு வேதனையே குறிப்புச் செய்கை நேர்
நின்ற ஞானம் என நிகழ்ந்த ஐந்தும்
ஒன்றிய அகம் அந்த விவேகமுத்தி என்ன
உரை செய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான்
6.1.916
2815ஆங்கு அவன்தான் உரைத்த மொழி கேட்ட
அன்பர் அதனை அனுவாதம் செய்தவனை நோக்கித்
தாங்கிய ஞானத்துடனாம் அந்தம் ஐந்தும் தாம்
வீந்து கெட்டன வேல் தலைவன் தானும்
ஈங்கு உளன் என்ற அவனுக்கு விடயம் ஆக யாவையும்
முன் இயற்றுதற்கு விகாரமே செய்து
ஓங்கு வடிவு அமைத்து விழ எடுக்கும் பூசை கொள்வார்
ஆர் உரைக்க என உரைக்கல் உற்றான்
6.1.917
2816கந்தமாம் வினை உடம்பு நீங்கி எம் கோன்
கலந்து உளன் முத்தியில் என்றான் என்ன காணும்
இந்திரியம் கண் முதல் ஆம் கரணம் தானும்
இல்லையேல் அவன் உணர்ச்சி இல்லை என்றார்
முந்தை அறிவிலன் ஆகி உறங்கினானை நிந்தித்து
மொழிந்து உடல் மீது ஆடினார்க்கு
வந்த வினைப் பயன் போல வழிபட்டார்க்கும் வரும்
அன்றோ நன்மை என மறுத்துச் சொன்னான்
6.1.918
2817சொன்ன உரை கேட்டு அருளி அன்பர்
தாமும் தொடர்ந்த வழிபாடு பல கொள்கின்றானுக்கு
அன்னவற்றின் உடன்பாடும் எதிர்வும் இல்லை
ஆன போது அவன் பெறுதல் இல்லை என்றார்
முன் அவற்றில் உடன்பாடும் எதிர்வும் இன்றி
முறுகு துயில் உற்றானை முனிந்து கொன்றால்
இன் உயிர் போய்க் கொலை ஆகி முடிந்தது அன்றோ
இப்படியால் எம் இறைவற்கு எய்தும் என்றான்
6.1.919
2818இப்படியால் எய்தும் என இசைத்து நீ
இங்கு எடுத்துக் காட்டிய துயிலும் இயல்பினான் போல்
மெய்ப் படியே கரணங்கள் உயிர் தாம் இங்கு
வேண்டுதியால் நும் இறைவற்கு ஆன போது
செப்பிய அக் கந்தத்தின் விளைவு இன்றாகித் திரிவு
இல்லா முத்தியில் சென்று இலனும் ஆனான்
அப்படி அக் கந்தத்துள் அறிவும் கெட்டால்
அம்முத்தி உடன் இன்பம் அணையாது என்றார்
6.1.920
2819அவ் உரை கேட்டு எதிர் மாற்றம்
அறைவது இன்றி அணைந்துடன் அம்முத்தி எனும் அதுவும் பாழாம்
கவ்வையில் நின்றவனை எதிர் நோக்கி ஞானக்
கடல் அமுதம் அனையவர் தம் காதல் அன்பர்
பெய்வகையே முத்தியினில் போனான் முன்பே
பொருள் எல்லாம் உணர்ந்து உரைத்துப் போனான் என்றாய்
எவ்வகையால் அவன் எல்லாம் உணர்ந்த தீதும்
இல்லது உரைப்பாய் எனினும் ஏற்போம் என்றார்
6.1.921
2820உணர்வு பொதுச் சிறப்பு என்ன இரண்டின்
முன் உளவான மரப் பொதுமை உணர்த்தல் ஏனைப்
புணர் சிறப்பு மரங்களில் வைத்து இன்னது என்றல்
இப்படியால் வரம்பு இல்லா பொருள்கள் எல்லாம்
கொணரும் விறகினைக் குவை செய்திடினும்
வேறு குறைத்து அவற்றை தனித்தனியே இடினும் வெந்தீத்து
உணர் கதுவிச் சுடவல்ல வாறு போலத் தொகுத்தும்
விரித்தும் தெரிக்கும் தொல்லோன் என்றான்
6.1.922
2821எடுத்து உரைத்த புத்தன் எதிர் இயம்பும்
அன்பர் எரி உணர்வுக்கு எடுத்துக் காட்டாகச் சொன்னாய்
அடுத்த உணர்வு உரு உடையது அன்று சொன்ன
அனல் வடிவிற்றாம் அதுவும் அறிதி நுங்கோன்
தொடுத்த நிகழ்காலமே அன்றி ஏனைத் தொடர்ந்த
இரு காலமும் தொக்கு அறியும் ஆகில்
கடுத்த எரி நிகழ் காலத்து இட்டது அல்லால்
காணாத காலத்துக்கு அதுவாம் என்றார்
6.1.923
2822ஆதல்஢னால் உன் இறைவன் பொருள்கள்
எல்லாம் அறிந்த நும் முத்தி போல் ஆயிற்று அன்றே
ஏதமாம் இவ் அறிவால் உரைத்த நூலும் என்ற
அவனுக்கு ஏறுகுமாறு அருளிச் செய்ய
வாதம் மாறு ஒன்று இன்றித் தோற்றான் புத்தன்
மற்று அவனை வென்று அருளிப் புகலி மன்னர்
பாத தாமரை பணிந்தார் அன்பர் தங்கள்
பான்மையழி புத்தர்களும் பணிந்து வீழ்ந்தார்
6.1.924
2823புந்தியினால் அவர் உரைத்த பொருளின்
தன்மை பொருள் அன்றாம் படி அன்பர் பொருந்தக் கூற
மந்தவுணர் உடையவரை நோக்கிச் சைவம்
அல்லாது மற்று ஒன்றும் இல்லை என்றே
அந்தமில் சீர் மறைகள் ஆதமங்கள் ஏனை
அகில கலைப் பொருள் உணர்ந்தார் அருளிச் செய்ய
சிந்தையினில் அது தெளிந்து புத்தர் சண்பைத்
திரு மறையோர் சேவடிக்கீழ் சென்று தாழ்ந்தார்
6.1.925
2824அன்று அவர்க்குக் கவுணியர் கோன்
கருணை நோக்கம் அணைதலினால் அறிவின்மைஅகன்று நீங்கி
முன் தொழுது விழுந்து எழுந்து சைவர் ஆனார்
முகைமலர் மாரியின் வெள்ளம் பொழிந்தது எங்கும்
நின்றனவும் சரிப்பனவும் சைவமேயாம் நிலைமை
அவர்க்கு அருள் செய்து சண்பை வேந்தர்
சென்று சிவனார் பதிகள் பணிய வேண்டித்
திருக்கடவூர் அதன் மருங்கு சேர வந்தார்
6.1.926
2825அந்நகரில் அடியார்கள் எதிர் கொள்ளப் புக்கு அருளி
கொன் நவிலும் கூற்று உதைத்தார் குரை கழல்கள் பணிந்து ஏத்தி
மன்னி அமர்ந்து உரையும் நாள் வாகீசமா முனிவர்
எந்நகரில் எழுந்து அருளிற்று என்று அடியார் தமை வினவ
6.1.927
2826அங்கு அவரும் அடி போற்றி ஆண்ட அரசு எழுந்து அருளிப்
பொங்கு புனல் பூந்துருத்தி நகரின் கண் போற்றி இசைத்து
தங்கு திருத்தொண்டு செயும் மகிழ்ச்சியினால் சார்ந்து அருளி
எங்கும் நிகழ்ந்திட இருந்தபடி எல்லாம் இயம்பினார்
6.1.928
2827அப்பரிசு அங்கு அவர் மொழிய ஆண்ட அரசினைக் காணும்
ஒப்பு அரிய பெருவிருப்பு மிக்கு ஓங்க ஒளிபெருகு
மைப் பொருவு கறைக் கண்டர் கழல் வணங்கி அருள் பெற்றுச்
செப்ப அரிய புகழ்ப் புகலிப் பிள்ளையார் செல்கின்றார்
6.1.929
2828பூ விரியும் தடம் சோலை புடை பரப்பப் புனல் பரக்கும்
காவிரியின் தென்கரை போய்க்கண் நுதலார் மகிழ்ந்த இடம்
மேவி இனிது அமர்ந்து இறைஞ்சி விருப்பு உறுமெய்த் தொண்டரோடு
நாவரசர் உழைச் சண்பை நகர் அரசர் நண்ணுவார்
6.1.930
2829அந்தணர் சூளா மணியார் பூந்துருத்திக்கு அணித்தாக
வந்து அருளும் பெருவார்த்தை வாகீசர் கேட்டு அருளி
நம் தமையாளுடையவரை நாம் எதிர் சென்று இறைஞ்சுவது
முந்தை வினைப்பயன் என்று முகம் மலர அகம் மலர்வார்
6.1.931
2830எதிர் சென்று பணிவன் என எழுகின்ற பெருவிருப்பால்
நதி தங்கு சடை முடியார் நல் பதங்கள் தொழுது அந்தப்
பதி நின்றும் புறப்பட்டு பர சமயம் சிதைத்தவர் பால்
முதிர்கின்ற பெரும் தவத்தோர் முன் எய்த வந்து அணைந்தார்
6.1.932
2831திருச்சின்னம் பணிமாறக் கேட்ட நால்திசை உள்ளோர்
பெருக்கின்ற ஆர்வத்தால் பிள்ளையார் தமைச் சூழ்ந்த
நெருகின் இடையவர் காணா வகை நிலத்துப் பணிந்து உள்ளம்
உருக்கி எழும் மனம் பொங்கத் தொண்டர் குழாத்துடன் அணைந்தார்
6.1.933
2832வந்து அணைந்த வாகீசர் வண் புலி வாழ் வேந்தர்
சந்த மணித் திருமுத்தின் சிவிகையினைத் தாங்கியே
சிந்தை களிப்பு உற வந்தார் திருஞான சம்பந்தர்
புந்தியில் வேறு ஒன்று நிகழ்ந்திட முன் புகல்கின்றார்
6.1.934
2833அப்பர் தாம் எங்கு உற்றார் இப்பொழுது என்று அருள் செய்யக்
செப்ப அரிய புகழ்த் திருநாவுக் கரசர் செப்புவார்
ஒப்பு அரிய தவம் செய்தேன் ஆதலினால் உம் அடிகள்
இப்பொழுது தாங்கிவரப் பெற்று உய்ந்தேன் யான் என்றார்
6.1.935
2834அவ் வார்த்தை கேட்டு அஞ்சி அவனியின் மேல் இழிந்து அருளி
இவ்வாறு செய்து அருளிற்று என்னாம் என்று இறைஞ்சுதலும்
செவ்வாறு மொழி நாவலர் திருஞான சம்பந்தர்க்கு
எவ்வாறு செயத் தகுவது என்று எதிரே இறைஞ்சினார்
6.1.936
2835சூழ்ந்து மிடைந்த கருணையும் தொண்டர் எல்லாம் அது கண்டு
தாழ்ந்து நிலம் உற வணங்கி எழுந்து தலை கை குவித்து
வாழ்ந்து மனக் களிப்பினராய் மற்று இவரை வணங்கப் பெற்று
ஆழ்ந்த பிறப்பு உய்ந்தோம் என்று அண்டமெலாம் உற ஆர்த்தார்
6.1.937
2836திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் தமைப்
பெருகு ஆர்வத் தொடும் அணைந்து தழீஇக் கொள்ளப் பிள்ளையார்
மருவாரும் மலர் அடிகள் வணங்கி உடன் வந்து அணைந்தார்
பொருவாரும் புனல் சடையார் மகிழ்ந்த திருப்பூந் துருத்தி
6.1.938
2837அன்பர் குழாத்தொடும் செல்வார் ஆன் ஏற்றார் மகிழ் கோயில்
முன் பணித்து ஆகச் சென்று கோபுரத்தை முன் இறைஞ்சித்
துன்பம் இலாத் திருத் தொண்டர் உடன் தொழுது புக்கு அருளி
என்பு உருக வலம் கொண்டு பணிந்து ஏத்தி இறைஞ்சினார்
6.1.939
2838பொய்யிலியாரைப் பணிந்து போற்றியே புறத்து அணைவார்
செய்ய சடையார் கோயில் திருவாயில் முன்னாக
மையறு சீர் தொண்டர் குழாம் வந்து புடை சூழ உலகு
உய்யவந்தார் தங்களுடன் மகிழ்ந்து அங்கு இனிது இருந்தார்
6.1.940
2839வாக்கின் தனி மன்னர் வண்புகலி வேந்தர் தமை
போக்கும் வரவும் வினவப் புகுந்தது எல்லாம்
தூக்கின் தமிழ் விரகர் சொல் இறந்த ஞான மறை
தேக்கும் திருவாயால் செப்பி அருள் செய்தார்
6.1.941
2840காழியினில் வந்த கவுணியர் தம் போர் ஏற்றை
ஆழி மிசை கல் மிதப்பில் வந்தார் அடிவணங்கி
வாழி திருத்தொண்டு என்னும் வான் பயிர்தான் ஒங்குதற்குச்
சூழும் பெரு வேலி ஆனீர் எனத் தொழுதார்
6.1.942
2841பிள்ளையார் தாமும் அவர் முன் தொழுது பேர் அன்பின்
வெள்ளம் அனைய புகழ் மாதினியர் மேன்மையையும்
கொள்ளும் பெருமைக் குலச் சிறையார் தொண்டினையும்
உள்ள பரிசு எல்லாம் மொழிந்து ஆங்கு உவந்து இருந்தார்
6.1.943
2842தென்னற்கு உயிரோடு நீறு அளித்துச் செங்கமலத்து
அன்னம் அனையார்க்கும் அமைச்சர்க்கும் அன்பு அருளித்
துன்னும் நெறி வைதிகத்தின் தூ நெறியே ஆக்குதலால்
மன்னு புகழ் வாகீசர் கேட்டு மனம் மகிழ்ந்தார்
6.1.944
2843சொல்லின் பெரு வேந்தர் தொண்டை வள நாடு எய்தி
மல்கு புகழ்க் காஞ்சி ஏகாம்பரம் என்னும்
செல்வர் கழல் பணிந்து சென்றது எல்லாம் செப்புதலும்
புல்கு நூல் மார்பரும் போய்ப் போற்ற மனம் புரிந்தார்
6.1.945
2844அங்கணரைப் போற்றி எழுந்த ஆண்ட அரசு அமர்ந்த
பொங்கு திரு மடத்தில் புக்கு அங்கு இனிது அமர்ந்து
திங்கள் பகவணியும் சென்னியார் சேவடிக்கீழ்த்
தங்கு மனத்தோடு தாள் பரவிச் செல்லும் நாள்
6.1.946
2845வாகீச மாமுனிவர் மன்னும் திரு ஆலவாய்
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் கழல் வணங்கப்
போகும் பெரு விருப்புப் பொங்கப் புகலியின்மேல்
ஏகும் பெரும் காதல் பிள்ளையார் ஏற்று எழுவார்
6.1.947
2846பூந்துருத்தி மேவும் புனிதர் தமைப் புக்கு இறைஞ்சிப்
போந்து திருவாயில் புறத்து அணைந்து நாவினுக்கு
வேந்தர் திரு உள்ளம் மேவ விடை கொண்டு அருளி
ஏந்தலார் எண்ணிறந்த தொண்டருடன் ஏகினார்
6.1.948
2847மாடு புனல் பொன்னி இழிந்து வட கரையில்
நீடு திரு நெய்த்தானம் ஐயாறு நேர்ந்து இறைஞ்சிப்
பாடு தமிழ் மாலைகளும் சாத்திப் பரவிப் போய்
ஆடல் புரிந்தார் திருப் பழனம் சென்று அணைந்தார்
6.1.949
2848செங்கண் விடையார் திருப் பழனம் சேர்ந்து இறைஞ்சிப்
பொங்கிய காதலின் முன் போற்றும் பதி பிறவும்
தங்கிப்போய்ச் சண்பை நகர் சார்ந்தார் தனிப் பொருப்பின்
மங்கை திருமுலைப்பால் உண்டு அருளும் வள்ளலார்
6.1.950
2849தென்னாட்டு அமண் மாசு அறுத்துத் திரு நீறே
அந்நாடு போற்று வித்தார் வந்து அணையும் வார்த்தை கேட்டு
எந் நாள் பணிவது என ஏற்று எழுந்த மா மறையோர்
முன்னாக வேதம் முழங்க எதிர் கொண்டார்
6.1.951
2850போத நீடு மா மறையவர் எதிர் கொளப் புகலி காவலரும் தம்
சீத முத்து அணிச் சிவிகை நின்று இழிந்து எதிர் செல்பவர் திருத் தோணி
நாதர் கோயில் முன் தோன்றிட நகை மலர்க் கரம் குவித்து இறைஞ்சிப் போய்
ஓத நீரின் மேல் ஓங்கு கோயிலின் மணிக் கோபுரம் சென்று உற்றார்
6.1.952
2851அங்கம் மா நிலம் தெட்டுற வணங்கிப் புக்கு அஞ்சலி முடி ஏறப்
பொங்கு காதலில் புடைவலம் கொண்டு முன் பணிந்து போற்றி எடுத்து ஓதித்
துங்க நீள் பெரும் தோணி ஆம் கோயிலை அருளினால் தொழுது ஏறி
மங்கையோடு உடன் வீற்று இருந்து அருளினார் மலர்க் கழல் பணிவுற்றார்
6.1.953
2852முற்றும் மெய் எலாம் புளகங்கள் முகிழ்த்து எழ முகந்து கண் களிகூரப்
பற்றும் உள்ளம் உள் அலைத்து எழும் ஆனந்தம் பொழிதரப் பணிந்து ஏத்தி
உற்றுமை சேர்வது எனும் திருவியமகம் உவகையால் எடுத்து ஓதி
வெற்றியாக மீனவன் அவை எதிர் நதி மிசை வருகான் என்பார்
6.1.954
2853சீரின் மல்கிய திருப்பதிகத்தினில் திருக் கடைக் காப்பு ஏற்றி
வாரின் மல்கிய வன முலையாள் உடன் மன்னினார் தமைப் போற்றி
ஆரும் இன் அருள் பெற்று மீண்டு அணைபவர் அம்கையால் தொழுது ஏத்தி
ஏரின் மல்கிய கோயில் முன் பணிந்து போந்து இறைஞ்சினர் மணிவாயில்
6.1.955
2854தாதையாரும் அங்கு உடன் பணிந்து அணைந்திடச் சண்பையார் தனி ஏறு
மூது எயில் திருவாயிலைத் தொழுது போய் முகை மலர்க் குழலார்கள்
ஆதரித்து வாழ்த்துரை இரு மருங்கு எழ அணி மறுகு இடைச் சென்று
காதலித்தவர்க்கு அருள் செய்து தம் திருமாளிகைக் கடை சார்ந்தார்
6.1.956
2855நறவம் ஆர் பொழில் புகலியில் நண்ணிய திருஞான சம்பந்தர்
விறலியார் உடன் நீல கண்ட பெரும் பாணர்க்கு மிக நல்கி
உறையுளாம் அவர் மாளிகை செல விடுத்து உள் அணைதரும் போதில்
அறலின் நேர் குழலார் மணி விளக்கு எடுத்து எதிர்கொள அணை உற்றார்
6.1.957
2856அங்கு அணைந்து அருமறைக் குலத் தாயர் வந்து அடி வணங்கிடத் தாமும்
துங்க நீள் பெரும் தோணியில் தாயர் தாள் மனம் கொளத் தொழுவாராய்த்
தங்கு காதலின் அங்கு அமர்ந்து அருளும் நாள் தம்பிரான் கழல் போற்றிப்
பொங்கும் இன் இசை திருப்பதிகம் பல பாடினார் புகழ்ந்து ஏத்தி
6.1.958
2857நீல மா விடம் திரு மிடற்று அடக்கிய நிமலரை நேர் எய்தும்
காலம் ஆனவை அனைத்தினும் பணிந்து உடன் கலந்த அன்பர்களோடும்
சால நாள் அங்கு உறைபவர் தையலாள் தழுவிடக் குழை கம்பர்
கோலம் ஆர்தரக் கும்பிடும் ஆசை கொண்டு எழும் குறிப்பினர் ஆனார்
6.1.959
2858தாண்டகத் திரு நாட்டினைச் சார்ந்து வந்து எம்பிரான் மகிழ் கோயில்
கண்டு போற்றி நாம் பணிவது என்று அன்பருக்கு அருள் செய்வார் காலம் பெற்று
அண்டருக்கு அறிவரும் பெரும் தோணியில் இருந்தவர் அருள் பெற்றுத்
தொண்டர் சூழ்ந்து உடன் புறப்படத் தொடர்ந்து எழும் தாதையார்க்கு உரை செய்வார்
6.1.960
2859அப்பர் நீர் இனி இங்கு ஒழிந்து அருமறை அங்கி வேட்டு அன்போடும்
துப்பு நேர் சடையார் தமைப் பரவியே தொழுது இரும் எனச் சொல்லி
மெய்ப் பெரும் தொண்டர் மீள்பவர் தமக்கு எலாம் விடை கொடுத்து அருளிப்போய்
ஒப்பு இலாதவர் தமை வழி இடைப் பணிந்து உருகும் அன்போடு செல்வார்
6.1.961
2860செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் திரு நடம் பணிந்து ஏத்திப்
பல் பெரும் தொண்டர் எதிர் கொளப் பரமர் தன் திருத்தினை நகர் பாடி
அல்கு தொண்டர்கள் தம்முடன் திருமாணிக் குழியினை அணைந்து ஏத்தி
மல்கு வார் சடையார் திருப் பாதிரிப் புலியூரை வந்து உற்றார்
6.1.962
2861கன்னி மாவனம் காப்பு என இருந்தவர் கழல் இணை பணிந்து அங்கு
முன்ன மா முடக்கு கான் முயற்கு அருள் செய்த வண்ணமும் மொழிந்து ஏத்தி
மன்னுவார் பொழில் திரு வடுகூரினை வந்து எய்தி வணங்கிப்போய்
பின்னுவார் சடையார் திருவக்கரை பிள்ளையார் அணைவுற்றார்
6.1.963
2862வக்கரைப் பெருமான் தன்னை வணங்கி அங்கு அமரும் நாள் அருகாலே
செக்கர் வேணியர் இரும்பை மாகாளமும் சென்று தாழ்ந்து உடன் மீண்டு
மிக்க சீர் வளர் அதிகை வீரட்டமும் மேவுவார் தம் முன்பு
தொக்க மெய்த் திருத்தொண்டர் வந்து எதிர் கொளத் தொழுது எழுந்து அணைவுற்றார்
6.1.964
2863ஆதி தேவர் அங்கு அமர்ந்த வீரட்டானம் சென்று அணைபவர் முன்னே
பூதம் பாட நின்று ஆடுவார் திரு நடம் புலப்படும் படி காட்ட
வேத பாலகர் பணிந்து மெய் உணர்வுடன் உருகிய விருப்போடும்
கோது இலா இசை குலவு குண்டைக்குறள் பூதம் என்று எடுத்து ஏத்தி
6.1.965
2864பரவி ஏத்திய திருப் பதிகத்து இசை பாடினார் பணிந்து அங்கு
விரவும் அன்பொடு மகிழ்ந்து இனிது உறைபவர் விமலரை வணங்கிப் போய்
அரவ நீள் சடை அங்கணர் தாம் மகிழ்ந்துறை திரு வாமாத்தூர்
சிர புரத்து வந்து அருளிய திருமறைச் சிறுவர் சென்று அணைவுற்றார்
6.1.966
2865சென்று அணைந்து சிந்தையின் மகிழ் விருப்பொடு திகழ் திருவாமாத்தூர்ப்
பொன்ற அங்கு பூங்கொன்றையும் வன்னியும் புனைந்தவர் அடி போற்றிக்
குன்ற வார் சிலை எனும் திருப்பதிகம் மெய் குலவிய இசை பாடி
நன்றும் இன்புறப் பணிந்து செல்வார் திருக்கோவலூர் நகர் சேர்ந்தார்
6.1.967
2866கோவல் நீடிய வீரட்டம் அமர்ந்தவர் குரை கழல் பணிந்து ஏத்தி
ஆவின் ஐந்து உகந்து ஆடுவார் அறை அணி நல்லூரை அணைந்து ஏத்தி
பா அலர்ந்த செந்தமிழ் கொடு பரவுவார் பரவு சீர் அடியார்கள்
மேவும் அன்புறு மேன்மையாம் தன்மையை விளங்கிட அருள் செய்தார்
6.1.968
2867சீரின் மன்னிய பதிகம் முன் பாடி அத் திரு அறை அணி நல்லூர்
வாரின் மல்கிய கொங்கையாள் பங்கர் தம் மலை மிசை வலம் கொள்வார்
பாரின் மல்கிய தொண்டர்கள் இமையவர் நாள்தொறும் பணிந்து ஏத்தும்
காரின் மல்கிய சோலை அண்ணாமலை அன்பர் காட்டிடக் கண்டார்
6.1.969
2868அண்ணாமலை அங்கு அமரர்பிரான் வடிவு போன்று தோன்றுதலும்
கண்ணால் பருகிக் கை தொழுது கலந்து போற்றும் காதலினால்
உண்ணா முலையாள் எனும் பதிகம் பாடி தொண்டருடன் போந்து
தெண்ணீர் முடியார் திருவண்ணாமலைச் சென்று சேர்வுற்றார்
6.1.970
2869அங்கண் அணைவார் பணிந்து எழுந்து போற்றி செய்து அம்மலை மீது
தங்கு விருப்பில் வீற்று இருந்தார் தட்டாமறைகள் தம் முடி மேல்
பொங்கும் ஆர்வத் தொடும் புனைந்து புளகம் மலர்ந்த திரு மேனி
எங்கும் ஆகிக் கண் பொழியும் இன்ப அருவி பெருக்கினார்
6.1.971
2870ஆதி மூர்த்தி கழல் வணங்கி அங்கண் இனிதின் அமரும் நாள்
பூத நாதர் அவர் தம்மைப் பூவார் மலரால் போற்றி இசைத்து
காதலால் அத் திருமலையில் சில நாள் வைகிக் கமழ் கொன்றை
வேத கீதர் திருப்பதிகள் பிறவும் பணியும் விருப்புறுவார்
6.1.972
2871மங்கை பாகர் திருவருளால் வணங்கிப் போந்து வட திசையில்
செங்கண் விடையர் பதி பலவும் பணிந்து புகலிச் செம்மலார்
துங்க வரைகள் கான் பலவும் கடந்து தொண்டை திருநாட்டில்
திங்கள் முடியார் இனிது அமரும் திருவோத்தூரைச் சேர்வுற்றார்
6.1.973
2872தேவர் முனிவர்க்கு ஒத்து அளித்தார் திருவோத்தூரில் திருத் தொண்டர்
தாவில் சண்பைத் தமிழ் விரகர் தாம் அங்கு அணையக் களி சிறந்து
மேவும் கதலி தோரணங்கள் விளக்கு நிரைத்து நிறை குடமும்
பூவும் பொரியும் சுண்ணமும் முன் கொண்டு போற்றி எதிர் கொண்டார்
6.1.974
2873சண்பை வேந்தர் தண் தரளச் சிவிகை நின்றும் இழிந்து அருளி
நண்பின் மிக்க சீர் அடியார் சூழ நம்பர் கோபுரம் சூழ்
விண் பின் ஆக முன் ஓங்கும் வியன் பொன் புரிசை வலம் கொண்டு
பண்பு நீராடி பணிந்து எழுந்து பரமர் கோயிலுள் அடைந்தார்
6.1.975
2874வாரணத்தின் உரி போர்த்த மைந்தர் உமையாள் மணவாளர்
ஆரணத்தின் உள் பொருளாய் நின்றார் தன் முன் அணைந்து இறைஞ்சி
நாரணற்கும் பிரமற்கும் நண்ண அரிய கழல் போற்றும்
காரணத்தின் வரும் இன்பக் கண்ணீர் பொழியக் கைதொழுதார்
6.1.976
2875தொழுது விழுந்து பணிந்து எழுந்து சொல் மாலைகளால் துதி செய்து
முழுதும் ஆனார் அருள் பெற்றுப் போந்து வைகி முதல்வர் தம்மைப்
பொழுது தோறும் புக்கு இறைஞ்சிப் போற்றி செய்து அங்கு அமர்வார் முன்
அமுது வணங்கி ஒரு தொண்டர் அமணர் திறத்து ஒன்று அறிவிப்பார்
6.1.977
2876அங்கை அனல் ஏற்றவர்க்கு அடியேன் ஆக்கும் பனைகள் ஆன எலாம்
மங்குலுற நீள் ஆண் பனையாய்க் காயா வாகக் கண்ட அமணர்
இங்கு நீர் இட்டு ஆக்குவன காய்த்தற்கு கடை உண்டோ என்று
பொங்கு நகை செய்து இழைத்து உரைத்தார் அருள வேண்டும் எனப் புகல
6.1.978
2877பரமனார் திருத் தொண்டர் பண்பு நோக்கிப் பரிவு எய்த்
விரவு காதலொடும் விரைந்து விமலர் கோயில் புக்கு அருளி
அரவும் மதியும் பகை தீர அணிந்தார் தம்மை அடி வணங்கி
இரவு போற்றித் திருப்பதிகம் இசையில் பெருக எடுத்து அருளி
6.1.979
2878விரும்பு மேன்மைத் திருக் கடைக் காப்பு அதனில் விமலர் அருளாலே
குரும்பை ஆண்பனை ஈனும் என்னும் வாய்மை குலவு தலால்
நெருங்கும் ஏற்றுப் பனை எல்லாம் நிறைந்த குலைகளாய்க் குரும்பை
அரும்பு பெண்ணை ஆகி இடக் கண்டோ ர் எல்லாம் அதிசயித்தார்
6.1.980
2879சீரின் மன்னும் திருக்கடைக் காப்பு ஏற்றிச் சிவனார் அருள் பெற்றுப்
பாரில் நீடும் ஆண் பனை முன் காய்த்துப் பழுக்கும் பண்பினால்
நேரும் அன்பர் தம் கருத்து நேரே முடித்துக் கொடுத்து அருளி
ஆரும் உவகைத் திருத் தொண்டர் போற்ற அங்கண் இனிது அமர்ந்தார்
6.1.981
2880தென் நாட்டு அமண் மாசு அறுத்தார் தம் செய்கை கண்டு திகைத்த அமணர்
அந்நாடு அதனை விட்டு அகல்வார் சிலர் தம் கையில் குண்டிகைகள்
என்ன ஆவன மற்று இவை என்று தகர்ப்பார் இறைவன் ஏறு உயர்த்த
பொன்னார் மேனிப் புரிசடையான் அன்றே என்று போற்றினார்
6.1.982
2881பிள்ளையார் தம் திருவாக்கில் பிறத்தலால் அத் தாலமும் முன்பு
உள்ள பாசம் விட்டு அகல ஒழியாப் பிறவி தனை ஒழித்துக்
கொள்ளும் நீர்மைக் காலங்கள் கழித்துச் சிவமே கூடினவால்
வள்ளலார் மற்று அவர் அருளின் வாய்மை கூறின் வரம்பு என்னாம்
6.1.983
2882அங்கண் அமரர் பெருமானைப் பணிந்து போந்து ஆடு அரவின் உடன்
பொங்கு கங்கை முடிக்கு அணிந்தார் மகிழும் பதிகள் பல போற்றி
மங்கை பாகர் அமர்ந்து அருளும் வயல் மாகறலை வழுத்திப் போய்க்
கொங்கு மலர் நீர்க் குரங்கணி முட்டத்தைச் சென்று குறுகினார்
6.1.984
2883ஆதி முதல்வர் குரங்கணின் முட்டத்தை அணிந்து பணிந்து ஏத்தி
நீதி வாழும் திருத்தொண்டர் போற்ற நிகரில் சண்பையினில்
வேதமோடு சைவ நெறி விளங்க வந்த கவுணியனார்
மாதோர் பாகர் தாம் மன்னும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார்
6.1.985
2884நீடு காஞ்சி வாணரும் நிலவு மெய்ம்மை அன்பரும்
மாடு சண்பை வள்ளலார் வந்து அணைந்த ஓகையால்
கூடுகின்ற இன்ப நேர் குலாவு வீதி கோலினார்
காடு கொண்ட பூகம் வாழை காமர் தோரணங்களால்
6.1.986
2885கொடி நிரைத்த வீதியில் கோலவே திகைப்புறம்
கடி கொள் மாலை மொய்த்த பந்தர் கந்த நீர்த் தசும்புடன்
மடிவில் பொன் விளக்கு எடுத்து மாதர் மைந்தர் மல்குவார்
படி விளங்கும் அன்பரும் பரந்த பண்பில் ஈண்டுவார்
6.1.987
2886கோதைமார் ஆடலும் குலாவும் தொண்டர் பாடலும்
வேத கீத நாதமும் மிக்கு எழுந்து விம்மவே
காதல் நீடு காஞ்சி வாணர் கம்பலைத்து எழுந்து போய்
மூது எயில் புறம்பு சென்று அணைந்து முன் வணங்கினார்
6.1.988
2887சண்பை ஆளும் மன்னர் முன்பு தொண்டர் வந்து சார்தலும்
பண்பு நீடியான முன்பு இழிந்து இறைஞ்சு பான்மை கண்டு
எண் பெருக்கும் மிக்க தொண்டர் அஞ்சலித்து எடுத்த சொல்
மண் பரக்க வீழ்ந்து எழுந்து வானமுட்ட ஆர்த்தனர்
6.1.989
2888சேண் உயர்ந்த வாயில் நீடு சீர் கொள் சண்பை மன்னனார்
வாண் நிலாவும் நீற்று அணி விளங்கிட மனத்தினில்
பூணும் அன்பர் தம் உடன் புகுந்திடப் புறத்து உளோர்
காணும் ஆசையில் குவித்த கைந்நிரை எடுத்தனர்
6.1.990
2889வியன் நெடும் தெருவின் ஊடு மிக்க தொண்டர் ஆர்ப்பு எழக்
கயல் நெடும் கண் மாதரும் காதல் நீடும் மாந்தரும்
புயல் பொழிந்ததாம் எனப் பூவினொடு பொன் சுண்ணம்
இயலும் ஆறு வாழ்த்து எடுத்து இரு மருங்கும் வீசினார்
6.1.991
2890இன்ன வண்ணம் யாவரும் இன்பம் எய்த எய்துவார்
பின்னுவார் சடை முடிப் பிரான் மகிழ்ந்த கோயில்கள்
முன் உறப் பணிந்து போய் மொய் வரைத் திருமகள்
மன்னு பூசனை மகிழ்ந்த மன்னர் கோயில் முன்னினார்
6.1.992
2891கம்பவாணர் கோயில் வாயில் கண்டுகை குவித்து எடுத்து
உம்பர் ஓங்கும் கோபுரத்தின் முன் இறைஞ்சி உள் அணைந்து
அம் பொன் மாளிகைப் புறத்தில் அன்பரோடு சூழ வந்து
இம்பர் ஞாலம் உய்ய வந்த பிள்ளையார் இறைஞ்சுவார்
6.1.993
2892செம் பொன் மலைக் கொடி தழுவக் குழைந்து அருளும் திருமேனிக்
கம்பவரை வந்து எதிர் வணங்கும் கவுணியர்தம் காவலனார்
பம்பு துளிக் கண் அருவி பாய்ந்து மயிர்ப் புளகம் வரத்து
அம் பெருகு மனக் காதல் தள்ள நிலம் மிசைத் தாழ்ந்தார்
6.1.994
2893பல முறையும் பணிந்து எழுந்து பங்கயச் செங்கை முகிழ்ப்ப
மலரும் முகம் அளித்த திரு மணிவாயால் மறையான் என்று
உலகுய்ய எடுத்து அருளி உருகிய அன்பு என்பு உருக்க
நிலவு மிசை முதற்று ஆளம் நிரம்பிய நீர்மையில் நிகழ
6.1.995
2894பாடினார் பணிவுற்றார் பரிவுறும் ஆனந்தக் கூத்து
ஆடினார் அகம் குழைந்தார் அஞ்சலி தம் சென்னியின் மேல்
சூடினார் மெய்ம் முகிழ்த்தார் சூகரமும் அன்னமுமாய்த்
தேடினார் இருவருக்கும் தெரிவரியார் திருமகனார்
6.1.996
2895மருவிய ஏழ் இசை பொழிய மனம் பொழியும் பேர் அன்பால்
பெருகிய கண் மழை பொழியப் பெரும் புகலிப் பெரும் தகையார்
உருகிய அன்புள் அலைப்ப உமை தழுவக் குழைந்தவரைப்
பருகிய மெய் உணர்வினொடும் பரவியே புறத்து அணைந்தார்
6.1.997
2896புறத்து அணைந்த தொண்டருடன் போந்து அமைந்த திருமடத்தில்
பெறற்கு அரும் பேறு உலகு உய்யப் பெற்று அருளும் பிள்ளையார்
மறப்பு அரிய காதல் உடன் வந்து எய்தி மகிழ்ந்து உறைவார்
அறம் பெரும் செல்வக் காமக் கோட்டம் அணைந்து இறைஞ்சினார்
6.1.998
2897திரு ஏகம்பத்து அமர்ந்த செழும் சுடரைச் சேவடியில்
ஒரு போதும் தப்பாதே உள் உருகிப் பணிகின்றார்
மருவு திரு இயமகமும் வளர் இருக்கும் குறள் மற்றும்
பெருகும் இசைத் திருப்பதிகத் தொடை புனைந்தார் பிள்ளையார்
6.1.999
2898நீடு திருப் பொழில் காஞ்சி நெறிக்காரைக் காடு இறைஞ்சிச்
சூடு மதிக் கண்ணியார் துணை மலர்ச் சேவடி பாடி
ஆடும் அவர் இனிது அமரும் அனே கதங்கா வதம் பரவி
மாடு திருத் தானங்கள் பணிந்து ஏத்தி வைகும் நாள்
6.1.1000
2899எண் திசையும் போற்றி இசைக்கும் திருப்பதி மற்று அதன் புறத்துத்
தொண்டருடன் இனிது ஏகித் தொல்லை விடம் உண்டு இருண்ட
கண்டர் மகிழ் மேல் தளியும் முதலான கலந்து ஏத்தி
மண்டு பெரும் காதலினால் வணங்கி மீண்டு இனிது இருந்தார்
6.1.1001
2900அப்பதியில் விருப்பினோடும் அங்கணரை பணிந்து அமர்வார்
செப்பரிய புகழ்ப் பாலித் திரு நதியின் தென் கரை போய்
மைப் பொலியும் கண்டர் திருமால் பேறு மகிழ்ந்து இறைஞ்சி
முப்புரம் செற்றவர் தம்மை மொழி மாலை சாத்தினார்
6.1.1002
2901திருமால் பேறு உடையவர் தம் திரு அருள் பெற்று எழுந்து அருளிக்
கருமாலும் கருமாவாய் காண்பரிய கழல் தாங்கி
மரு ஆற்றல் மழவிடையார் திருவல்லம் வணங்கித் தம்
பொருமாற்கு திருப்பதிகப் பெரும் பிணையல் அணிவித்தார்
6.1.1003
2902அங்கு உள்ள பிற பதியில் அரிக்கு அரியார் கழல் வணங்கி
பொங்கு புனல் பால் ஆற்றின் புடையில் வடபால் இறைவர்
எங்கும் உறை பதி பணிவார் இலம்பை அம் கோட்டூர் இறைஞ்சிச்
செங்கண் விடை உகைத்தவரைத் திருப்பதிகம் பாடினார்
6.1.1004
2903திருத்தொண்டர் பலர் சூழ திரு வில் கோலமும் பணிந்து
பொருட் பதிகத் தொடை மாலை புரம் எரித்த படி பாடி
அருள் புகலி ஆண் தகையார் தக்கோலம் அணைந்து அருளி
விருப்பினோடும் திருவூறல் மேவினார் தமைப் பணிந்தார்
6.1.1005
2904தொழுது பல முறை போற்றிச் சுரர் குருவுக்கு இளைய முனி
வழுவில் தவம் புரிந்து ஏத்த மன்னினார் தமை மலர்ந்த
பழுதில் செழும் தமிழ் மாலை பதிக இசை புனைந்து அருளி
முழுதும் அளித்தவர் அருளால் போந்தனர் முத்தமிழ் விரகர்
6.1.1006
2905குன்ற நெடும் சிலை ஆளர் குலவிய பல் பதி பிறவும்
நின்ற விருப்புடன் இறைஞ்சி நீடு திருத் தொண்டர் உடன்
பொன் தயங்கு மணி மாடப் பூந்தராய்ப் புரவலனார்
சென்று அணைந்தார் பழையனூர்த் திரு ஆலம் காட்டு அருகு
6.1.1007
2906இம்மையிலே புவி உள்ளோர் யாரும்
காண ஏழ் உலகும் போற்றி இசைப்ப எம்மை ஆளும்
அம்மை திருத் தலையாலே நடந்து போற்றும்
அம்மை அப்பர் திரு ஆலம் காடாம் என்று
தம்மை உடையவர் மூதூர் மிதிக்க அஞ்சிச்
சண்பை வரும் சிகாமணியார் சாரச் சென்று
செம்மை நெறி வழுவாத பதியின் மாடோ ர்
செழும் பதியில் அன்று இரவு பள்ளி சேர்ந்தார்
6.1.1008
2907மாலை இடை யாமத்துப் பள்ளி
கொள்ளும் மறையவனார் தம் முன்பு கனவிலே வந்து
ஆல வனத்து அமர்ந்து அருளும் அப்பர் நம்மை
அயர்தனையோ பாடுதற்கு என்று அருளிச் செய்ய
ஞாலம் இருள் நீங்க வரும் புகலி வேந்தர் நடு
இடை யாமத்தின் இடைத் தொழுது உணர்ந்து
வேலை விடம் உண்டவர் தம் கருணை போற்றி
மெய் உருகித் திருப்பதிகம் விளம்பல் உற்றார்
6.1.1009
2908துஞ்ச வருவார் என்றே எடுத்த
ஓசைச் சுருதி முறை வழுவாமல் தொடுத்த பாடல்
எஞ்சல் இலா வகை முறையே பழையன் ஊரார்
இயம்பு மொழி காத்த கதை சிறப்பித்து ஏத்தி
அஞ்சன மா கரி உரித்தார் அருளாம் என்றே
அருளும் வகை திருக்கடைக் காப்பு அமையச்சாத்திப்
பஞ்சுரமாம் பழைய திறம் கிழமை கொள்ளப்
பாடினார் பார் எல்லாம் உய்ய வந்தார்
6.1.1010
2909நீடும் இசைத் திருப் பதிகம் பாடிப்
போற்றி நெடும் கங்குல் இருள் நீங்கி நிகழ்ந்த காலை
மாடு திருத் தொண்டர் குழாம் அணைந்த போது
மாலையினில் திரு ஆல வனத்து மன்னி
ஆடும் அவர் அருள் செய்த படியை எல்லாம்
அருளிச் செய்து அகம்மலர பாடி ஏத்திச்
சேடர் பயில் திருப்பதியைத் தொழுது போந்து
திருப்பாசூர் அதன் மருங்கு செல்லல் உற்றார்
6.1.1011
2910திருப்பாசூர் அணைந்து அருளி அங்கு
மற்றச் செழும் பதியோர் எதிர் கொள்ளச் சென்று புக்குப்
பொருப்பு அரையன் மடப்பாவை இடப் பாகத்துப்
புராதனர் வேய் இடம் கொண்ட புனிதர் கோயில்
விருப்பின் உடன் வலம் கொண்டு புக்குத் தாழ்ந்து
வீழ்ந்து எழுந்து மேனி எல்லாம் முகிழ்ப்ப நின்றே
அருள் கருணைத் திருவாளன் நாமம் சிந்தை இடையார்
என்று இசைப் பதிகம் அருளிச் செய்தார்
6.1.1012
2911மன்னு திருப்பதிக இசைப் பாடிப்
போற்றி வணங்கிப் போந்து அப்பதியில் வைகி மாடு
பிஞ்ஞகர் வெண் பாக்கம் முதலாய் உள்ள பிறபதிகள்
பணிந்து அணைவார் பெருகும் அன்பால்
முன் நிறைந்த திருவாய் மஞ்சன நீர் ஆட்டும்
முதல் வேடர் கண்ணப்ப நாயனாரை
உன்னி ஒளிர் காளத்தி மலை வணங்க உற்ற
பெரு வேட்கை உடன் உவந்து சென்றார்
6.1.1013
2912மிக்க பெரும் காதலுடன் தொண்டர்
சூழ மென்புனல் நாட்டினை அகன்று வெற்பும் கானும்
தொக்க பெருவன் புலக்கான் அடைந்து போகிச்
சூல கபாலக் கரத்துச் சுடரும் மேனி
முக்கண் முதல் தலைவன் இடம் ஆகி உள்ள முகில்
நெருங்கும் காரி கரை முன்னர் சென்று
புக்கு இறைஞ்சி போற்றி இசைத்து அப் பதியில் வைகிப்
பூதியரோடு உடன் மகிழ்ந்தார் புகலி வேந்தர்
6.1.1014
2913இறைவர் திருக்காரிகரை இறைஞ்சி
அப்பால் எண் இல் பெருவரைகள் இருமருங்கும் எங்கும்
நிறை அருவி நிரைபலவாய் மணியும் பொன்னும்
நிறை துவலை புடை சிதறி நிகழ் பலவாகி
அறை கழல் வானவர்க்கு இறைவன் குலிச ஏற்றால்
அற்ற சிறை பெற்றவன் மேல் எழுவதற்குச்
சிறகு அடித்துப் பறக்க முயன்று உயர்ந்த போலும்
சிலை நிலத்தில் எழுந்து அருளி செல்லா நின்றார்
6.1.1015
2914஡தவர்கள் நெருங்கு குழாம் பரந்து
செல்ல மணி முத்தின் பரிச் சின்னம் வரம்பு இன்று ஆகப்
பூதி நிறை கடல் அணைவது என்னச் சண்பைப்
புரவலனார் எழுந்து அருளும் பொழுது சின்னத்
தீதில் ஒலி பல முறையும் பொங்கி எங்கும்
திருஞான சம்பந்தன் வந்தான் என்னும்
நாதம் நிறை செவியின் வாய் மக்கள் எல்லாம்
நலம் மருவு நினைவு ஒன்றாய் மருங்கு நண்ண
6.1.1016
2915கானவர் தம் குலம் உலகு போற்ற
வந்த கண்ணப்பர் திருப் பாதச் செருப்பு தோய
மான வரிச் சிலை வேட்டை ஆடும் கானும் வான
மறை நிலை பெரிய மரமும் தூறும்
ஏனை இமையோர் தாமும் இறைஞ்சி ஏத்தி
எய்தவரும் பெருமையவாம் எண் இலாத
தானமும் மற்று அவை கடந்து திருக் காளத்தி சார
எழுந்து அருளினார் சண்பை வேந்தர்
6.1.1017
2916அம்பொன் மலைக் கொடி முலையாள்
குழைத்த ஞானத்து அமுது உண்ட பிள்ளையார் அணைந்தார் என்று
செம்பொன் மலை வில்லியார் திருக்காளத்தி சேர்ந்த
திருத் தொண்டர் குழாம் அடைய ஈண்டிப்
பம்பு சடைத் திரு முனிவர் கபாலக் கையர் பல
வேடச் சைவர் குல வேடர் மற்றும்
உம்பர் தவம் புரிவார் அப்பதியில் உள்ளோருடன்
விரும்பி எதிர்கொள்ள உழைச் சென்று உற்றார்
6.1.1018
2917திசை அனைத்தும் நீற்றின் ஒளி தழைப்ப
மண் மேல் சிவலோகம் அணைந்தது எனச் சென்றபோது
மிசை விளங்கும் மணி முத்தின் சிவிகை நின்றும்
வேத பாலகர் இழிந்து வணங்கி மிக்க
அசைவில் பெரும் தொண்டர் குழாம் தொழுது
போற்றி அர எனும் ஓசையின் அண்டம் நிறைப்ப அன்பால்
இசை விளங்கும் தமிழ் விரகர் திருக்காளத்தித் திருமலை
இம் மலைகளில் யாது என்று கேட்டார்
6.1.1019
2918வந்து அணைந்த மாதவத்தோர் வணங்கித்
தாழ்ந்து மறைவாழ்வே சைவ சிகாமணியேதோன்றும்
இந்த மலை காளனோடு அத்தி தம்மில் இகலி
வழிபாடு செய இறைவர் மேவும்
அந்தமில் சீர் காளத்தி மலையாம் என்ன அவனிமேல்
பணிந்து எழுந்து அஞ்சலி மேல் கொண்டு
சிந்தை களி மகிழ்ச்சி வரத் திரு விராகம்
வானவர் தானவர் என்று எடுத்துச் செல்வார்
6.1.1020
2919திருந்திய இன் இசை வகுப்பு திருக் கண்ணப்பர்
திருத் தொண்டு சிறப்பித்துத் திகழ பாடிப்
பொருந்து பெரும் தவர் கூட்டம் போற்ற வந்து பொன்
முகலிக் கரை அணைந்து தொழுது போகி
அருந்தவர்கள் எம் மருங்கும் மிடைந்து செல்ல
ஆளுடைப் பிள்ளையார் அயன் மால் தேடும்
மருந்து வெளியே இருந்த திருக்காளத்தி மலை
அடிவாரம் சார வந்து தாழ்ந்தார்
6.1.1021
2920தாழ்ந்து எழுந்து திருமலையைத் தொழுது
கொண்டே தடம் சிலாதலம் சோபானத்தால் ஏறி
வாழ்ந்து இமையோர் குழாம் நெருங்கு மணி நீள் வாயில்
மருங்கு இறைஞ்சி உள் புகுந்து வளர் பொன் கோயில்
சூழ்ந்து வலம் கொண்டு இறைவர் திருமுன்பு எய்தித்
தொழுது தலை மேல் கொண்ட செங்கை போற்றி
வீழ்ந்து எழுவார் கும்பிட்ட பயன் காண்பார் போல் மெய்
வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்
6.1.1022
2921உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை
உருவினையும் அவ் அன்பின் உள்ளே மன்னும்
வெள்ளச் செஞ்சடைக் கற்றை நெற்றிச் செங்கண்
விமலரையும் உடன் கண்ட விருப்பும் பொங்கிப்
பள்ளத்தில் இழி புனல் போல் பரந்து செல்லப் பைம்
பொன் மலைவல்லி பரிந்து அளித்த செம்பொன்
வள்ளத்தில் ஞான ஆர் அமுதம் உண்டார் மகிழ்ந்து எழுந்து
பல முறையும் வணங்குகின்றார்
6.1.1023
2922பங்கயக் கண் அருவி நீர் பாய நின்று
பரவும் இசைத் திருப்பதிகம் பாடி ஆடி
தங்கு பெரும் களி காதல் தகைந்து தட்பத் தம் பெருமான்
கழல் போற்றும் தன்மை நீட
அங்கு அரிதில் புறம் போந்து அங்கு அயன் மால் போற்ற
அரியார் தம் திருமலைக் கீழ் அணைந்து இறைஞ்சிப்
பொங்கு திருத்தொண்டர் மடம் காட்ட அங்குப் புக்கு அருளி
இனிது அமர்ந்தார் புகலி வேந்தர்
6.1.1024
2923யாவர்களும் அறிவரிய இறைவன் தன்னை
ஏழ் உலகும் உடையானை எண் இலாத
தேவர்கள் தம் பெருமானைத் திருக்காளத்தி மலையின்
மிசை வீற்றிருந்த செய்ய தேனைப்
பூவலரும் பொழில் புடைசூழ் சண்பை ஆளும்
புரவலனார் காலங்கள் தோறும் புக்குப்
பாமலர் கொண்டு அடி போற்றிப் பருகி ஆர்ந்து பண்பு
இனிய திருப்பதியில் பயிலும் நாளில்
6.1.1025
2924அங்கண் வடதிசை மேலும் குடக்கின்
மேலும் அரும் தமிழின் வழக்கு அங்கு நிகழாது ஆக
திங்கள் புனை முடியார் தம் தானம் தோறும் சென்று
தமிழ் இசை பாடும் செய்கை போல
மங்கை உடன் வானவர்கள் போற்றி இசைப்ப வீற்று
இருந்தார் வட கயிலை வணங்கிப் பாடி
செம் கமல மலர் வாவித் திருக்கேதாரம் தொழுது
திருப்பதிக இசை திருந்த பாடி
6.1.1026
2925கூற்றுதைத்தார் மகிழ்ந்த கோ கரணம்
பாடி குலவு திருப் பருப்பகத்தின் கொள்கைபாடி
ஏற்றின் மிசை வருவார் இந்திரன் தன் நீல பருப்பதமும்
பாடி மற்று இறைவர் தானம்
போற்றிய சொல் மலர் மாலை பிறவும் பாடிப் புகலியார்
தம் பெருந் தகையார் புனிதம் ஆகும்
நீற்றின் அணி கோலத்துத் தொண்டர் சூழ நெடிது
மகிழ்ந்து அப்பதியில் நிலவுகின்றார்
6.1.1027
2926தென் திசையில் கயிலை எனும் திருக்காளத்தி
போற்றி இனிது அமர்கின்றார் திரை சூழ் வேலை
ஒன்று திரு ஒற்றியூர் உறைவர் தம்மை இறைஞ்சுவது
திரு உள்ளத்து உன்னி அங்கண்
இன் தமிழின் விரகர் அருள் பெற்று மீள்வார் எந்தையார்
இணை அடி என் மனத்த என்று
பொன் தரளம் கொழித்து இழி பொன் முகலி கூடப்
புனைந்த திருப்பதிக இசை போற்றிப் போந்தார்
6.1.1028
2927மன்னு புகழ்த் திருத் தொண்டர் குழாத்தினோடும்
மறைவாழ வந்தவர் தாம் மலையும் கானும்
முன் அணைந்த பதி பிறவும் கடந்து போந்து முதல்வனார்
உறைபதிகள் பலவும் போற்றிப்
பன் மணிகள் பொன்வர் அன்றி அகிலும் சந்தும்
பொருது அலைக்கும் பாலி வடகரையில் நீடு
சென்னி மதி அணிந்தவர்தம் திருவேற்காடு சென்று
அணைந்தார் திருஞானம் உண்ட செல்வர்
6.1.1029
2928திருவேற்காடு அமர்ந்த செழும் சுடர்
பொன் கோயில் சென்று அணைந்து பணிந்து த்஢ருப்பதிகம் பாடி
வரு வேற்று மனத்து அவுணர் புரங்கள் செற்றார்
வலிதாயம் வந்து எய்தி வணங்கிப் போற்றி
உரு வேற்றார் அமர்ந்து உறையும் ஓத வேலை
ஒற்றியூர் கை தொழச் சென்று உற்ற போது
பெரு வேட்கை தருவாழ்வு பெற்ற தொண்டர் பெரும்
பதியோர் எதிர் கொள்ளப் பேணி வந்தார்
6.1.1030
2929மிக்க திருத் தொண்டர் தொழுது
அணையத் தாமும் தொழுது இழிந்து விடையவன் என்று எடுத்துப் பாடி
மைக் குலவு கண்டத்தார் மகிழும் கோயில் மன்னு
திருக் கோபுரத்து வந்து தாழ்ந்து
தக்க திருக் கடைக் காப்புச் சாற்றித் தேவர்
தம் பெருமான் திருவாயில் ஊடு சென்று
புக்கருளி வலம் கொண்டு புனிதர் முன்பு போற்று
எடுத்துப் படியின் மேல் பொருந்த வீழ்ந்தார்
6.1.1031
2930பொன் திரள்கள் போல் புரிந்த சடையார்
தம்பால் பொங்கி எழும் காதல் மிகப் பொழிந்து விம்மிப்
பற்றி எழும் மயிர்ப் புளகம் எங்கும் ஆகிப் பரந்து
இழியும் கண் அருவி பாய நின்று
சொல் திகழும் திருப்பதிகம் பாடி ஏத்தித் தொழுது
புறத்து அணைந்தருளித் தொண்டரோடும்
ஒற்றி நகர் காதலித்து அங்கு இனிது உறைந்தார்
உலகுய்ய உலவாத ஞானம் உண்டார்
6.1.1032
2931இன்ன தன்மையில் பிள்ளையார் இருந்தனர் இப்பால்
பன்னு தொல் புகழ்த் திரு மயிலாப் புரி பதியில்
மன்னு சீர்ப் பெரும் வணிகர் தம் தோன்றலார் திறத்து
முன்னம் எய்தியது ஒன்றினை நிகழ்ந்தவா மொழிவாம்
6.1.1033
2932அரு நிதித் திறம் பெருக்குதற்கு அரும்கலம் பலவும்
பொரு கடல் செலப் போக்கி அப் பொருள் குவை நிரம்ப
வரும் மரக்கலம் மனைப் படப்பு அணைக்கரை நிரைக்கும்
இரு நிதிப் பெரும் செல்வத்தின் எல்லையில் வளத்தார்
6.1.1034
2933தம்மை உள்ளவாறு அறிந்த பின் சங்கரற்கு அடிமை
மெய்ம்மையே செயும் விருப்புடன் மிக்கது ஓர் அன்பால்
பொய்ம்மை நீக்கிய பொருள் இது எனக் கொளும் உள்ளச்
செம்மையே புரி மனத்தினார் சிவநேசர் என்பார்
6.1.1035
2934கற்றை வார் சடை முடியினார் அடியவர் கலப்பில்
உற்ற செய்கையில் ஒழிவு இன்றி உருகிய மனமும்
பற்று இலா நெறிப் பர சமயங்களைப் பாற்றும்
செற்றம் மேவிய சீலமும் உடையார் ஆய்த் திகழ்வார்
6.1.1036
2935ஆன நாள் செல அருமறைக் கவுணியர் பெருமான்
ஞான போனகம் நுகர்ந்ததும் நானிலம் உய்ய
ஏனை வெம் சமண் சாக்கியம் இழித்து அழித்ததுவும்
ஊனம் இல் புகழ் அடியார் பால் கேட்டு உவந்து உளராய்
6.1.1037
2936செல்வம் மல்கிய சிர புரத்தலைவர் சேவடிக் கீழ்
எல்லை இல்லது ஓர் காதலின் இடை அறா உணர்வால்
அல்லும் நண் பகலும் புரிந்தவர் அருள் திறமே
சொல்லவும் செயல் கேட்கவும் தொழிலினர் ஆனார்
6.1.1038
2937நிகழும் ஆங்கு அவர் நிதிப் பெரும் கிழவனின் மேலாய்த்
திகழும் நீடிய திருவினில் சிறந்து உளர் ஆகிப்
புகழும் மேன்மையில் உலகினில் பொலிந்து உளார் எனினும்
மகவு இலாமையின் மகிழ் மனை வாழ்க்கையின் மருண்டு
6.1.1039
2938அரிய நீர்மையில் அரும் தவம் புரிந்து அரன் அடியார்க்கு
உரிய அர்ச்சனை உலப்பில செய்த அந் நலத்தால்
கரியவாங்குழல் மனைவியார் வயிறு எனும் கமலத்து
தூரிய பூமகள் என ஒரு பெண் கொடி உதித்தாள்
6.1.1040
2939நல்ல நாள் பெற ஓரையின் நலம் மிக உதிப்பப்
பல் பெரும் கினை உடன் பெரு வணிகர் பார் முழுதும்
எல்லையில் தனம் முகந்து கொண்டு யாவரும் உவப்ப
மல்லல் ஆவண மறுகு இடைப் பொழிந்து உளம் மகிழ்ந்தார்
6.1.1041
2940ஆறு சூடிய முடியினார் அடியவர்க்கு அன்பால்
ஈறு இலாத பூசனைகள் யாவையும் மிகச் செய்து
மாறு இலா மறையவர்க்கு வேண்டின எல்லாம் அளித்துப்
பேறு மற்று இதுவே எனும் பெரும் களி சிறந்தார்
6.1.1042
2941சூத நல் விணை மங்கலத் தொழில் முறை தொடங்கி
வேத நீதியின் விதி உளி வழா வகை விரித்த
சாதகத் தொடு சடங்குகள் தச தினம் செல்லக்
காதல் மேவிய சிறப்பினில் கடி விழா அயர்ந்தார்
6.1.1043
2942யாவரும் பெரு மகிழ்ச்சியால் இன்புறப் பயந்த
பாவை நல் உறுப்பு அணி கிளர் பண்பு எலாம் நோக்கி
பூவினாள் என வருதலில் பூம்பாவை என்றே
மேவும் நாமமும் விளம்பினர் புவியின் மேல் விளங்க
6.1.1044
2943திங்கள் தோறும் முன் செய்யும் அத் திருவளர் சிறப்பின்
மங்கலம் புரி நல்வினை மாட்சியில் பெருக
அங்கண் மா நகர் அமைத்திட ஆண்டு எதிர் அணைந்து
தங்கு பேர் ஒளிச் சீறடி தளி நடை பயில
6.1.1045
2944தளரும் மின்னின் அங்குரம் எனத் தமனியக் கொடியின்
வளர் இளம் தளிர்க் கிளை என மணி கிளர் ஒளியின்
அளவிஇல் அஞ்சுடர் கொழுந்து என அணை உறும்பருவத்து
இள வனப்பு இணை அனையவர்க்கு ஏழி ஆண்டு எய்த
6.1.1046
2945அழகின் முன் இளம் பதம் என அணிவிளக்கு என்ன
விழவு கொண்டு எழும் பேதையர் உடன் விளையாட்டில்
கழலொடு அம்மனை கந்துகம் என்று மற்று இனைய
மழலை மெல் கிளிக் குலம் என மனை இடை ஆடி
6.1.1047
2946பொன் தொடிச் சிறு மகளிர் ஆயத்து ஒடும் புணர்ந்து
சிற்றில் முற்றவும் இழைத்து உடன் அடும் தொழில் சிறு சோறு
உற்ற உண்டிகள் பயின்று ஒளி மணி ஊசல் ஆடி
மற்றும் இன்புறு வண்டல் ஆட்டு அயர்வுடன் வளர
6.1.1048
2947தந்தையாரும் அத் தளிர் இளம் கொம்பு அனாள் தகைமை
இந்த வையகத்து இன்மையால் இன்புறு களிப்பு
வந்த சிந்தையின் மகிழ்ந்து மற்று இவள் மணம் பெறுவன்
அந்தமில் என அருநிதிக்கு உரியன் என்று அறைந்தார்
6.1.1049
2948ஆய நாள்களில் அமண் பயில் பாண்டி நாடு அதனைத்
தூய ஞானம் உண்டு அருளிய தோன்றலார் அணைந்து
மாயம் வல்ல அமண் கையரை வாதில் வென்றதுவும்
மேய வெப்பு இடர் மீனவன் மேல் ஒழித்ததுவும்
6.1.1050
2949நெருப்பில் அஞ்சினார் தங்களை நீரில் ஒட்டிய பின்
மருப்பு நீள் கழுக் கோலில் மற்று அவர்கள் ஏறியதும்
விருப்பினால் திருநீறு மீனவற்கு அளித்து அருளிப்
பொருப்பு வில்லியார் சாதனம் போற்று வித்ததுவும்
6.1.1051
2950இன்னவாறு எலாம் அறிந்துளார் எய்தி அங்கு இசைப்பச்
சொன்னவர்க்கு எலாம் இருநிதி தூசு உடன் அளித்து
மன்னு பூந்தராய் வள்ளலார் தமைத் திசை நோக்கிச்
சென்னி மேல் கரம் குவித்து வீழ்ந்து எழுந்து செந்நின்று
6.1.1052
2951சுற்றம் நீடிய கிளை எலாம் சூழ்ந்து உடன் கேட்பக்
கற்ற மாந்தர் வாழ் காழி நாடு உடையவர்க்கு அடியேன்
பெற்று எடுத்த பூம் பாவையையும் பிறங்கிய நிதியும்
முற்றும் என்னையும் கொடுத்தனன் யான் என்று மொழிந்தார்
6.1.1053
2952எல்லையில் பெரும் களிப்பினால் இப்பரிசு இயம்பி
முல்லை வெண் நகை முகிழ் முலையார் உடன் முடியாமல்
மல்கு செல்வத்தின் வளமையும் மறை வளர் புகலிச்
செல்வரே உடையார் எனும் சிந்தையால் மகிழ்ந்தார்
6.1.1054
2953ஆற்று நாள்களில் அணங்கு அனார் கன்னி மாடத்தின்
பால் தடம் பொழில் மருங்கினில் பனி மலர் கொய்வான்
போற்றுவார் குழல் சேடியர் உடன் புறம் போந்து
கோல் தொடித் தளிர் கையினால் முகை மலர் கொய்ய
6.1.1055
2954அன்பர் இன்புறும் ஆர்வத்தின் அளித்த பாங்கு அல்லால்
பொன் பிறங்கு நீர்ப் புகலி காவலர்க்கு இது புணராது
என்பது உள் கொண்ட பான்மை ஓர் எயிற்று இளம் பணியாய்
முன்பு அணைந்தது போல ஓர் முள் எயிற்று அரவம்
6.1.1056
2955மௌவல் மாதவிப் பந்தரில் மறைந்து வந்து எய்திச்
செவ்வி நாண்முகை கவர் பொழுதினில் மலர்ச் செங்கை
நவ்வி வாள் விழி நறு நுதல் செறி நெறி கூந்தல்
கொவ்வை வாய் அவள் முகிழ் விரல் கவர்ந்தது குறித்து
6.1.1057
2956நாலு தந்தமும் என்பு உறக் கவர்ந்து நஞ்சு உகுத்து
மேல் எழும் பணம் விரித்து நின்று ஆடி வேறு அடங்க
நீல வல் விடம் தொடர்ந்து எழ நேர் இழை மென்பூ
மாலை தீ இடைப் பட்டது போன்று உளம் மயங்கி
6.1.1058
2957தரையில் வீழ் தரச் சேடியர் வெருக்கொடு தாங்கி
விரை செய் மாடத்தின் உள் கொடு புகுந்திட வணிகர்
உரையும் உள்ளமும் நிலை அழிந்து உறு துயர் பெருகக்
கரையில் சுற்றமும் தாமும் முன் கலங்கினார் கலுழ்ந்தார்
6.1.1059
2958விடம் தொலைத் திடும் விஞ்சையில் பெரியராம் மேலோர்
அடர்ந்த தீ விடம் அகற்றுதற்கு அணைந்துளார் அனேகர்
திடம் கொள் மந்திரம் தியானம் பாவக நிலை முட்டி
தொடர்ந்த செய்வினைத் தனித் தனித் தொழிலராய் சூழ்வார்
6.1.1060
2959மருந்தும் எண்ணில மாறில செய்யவும் வலிந்து
பொருந்து வல் விடம் ஏழு வேகமும் முறை பொங்கிப்
பெரும் தடம் கண் மெல் கொடியனாள் தலை மிசைப் பிறங்கித்
திருந்து செய் வினை யாவையும் கடந்து தீர்ந்து இலதால்
6.1.1061
2960ஆவி தங்கு பல் குறிகளும் அடைவில ஆக
மேவு காருட விஞ்சை வித்தகர் இது விதி என்று
ஓவும் வேலையில் உறு பெரும் சுற்றமும் அலறிப்
பாவை மேல் விழுந்து அழுதனர் படர் ஒலிக் கடல் போல்
6.1.1062
2961சிந்தை வெம் துயர் உறும் சிவநேசரும் தெளிந்து
வந்த செய்வினை இன்மையில் வையகத்து உள்ளோர்
இந்த வெவ்விடம் ஒழிப்பவருக்கு ஈகுவன் கண்ட
அந்தமில் நிதிக் குவை எனப் பறை அறைவித்தார்
6.1.1063
2962முரசு இயம்பிய மூன்று நாள் அகவையின் முற்ற
அரசர் பாங்கு உளோர் உள்பட அவனி மேல் உள்ள
கரையில் கல்வியோர் யாவரும் அணைந்து தம் காட்சி
புரையில் செய்கையில் தீர்ந்திடாது ஒழிந்திடப் போனார்
6.1.1064
2963சீரின் மன்னிய சிவநேசர் கண்டு உளம் மயங்கிக்
காரின் மல்கிய சோலை சூழ் கழுமலத் தலைவர்
சாரும் அவ்வளவும் உடல் தழல் இடை அடக்கிச்
சேர என்பொடு சாம்பல் சேமிப்பது தெளிவார்
6.1.1065
2964உடைய பிள்ளையார்க்கு என இவள் தனை உரைத்த அதனால்
அடைவு துன்புறுவது அதற்கு இலையாம் நமக்கு என்றே
இடர் ஒழிந்த பின் அடக்கிய என்பொடு சாம்பல்
புடை பெருத்த கும்பத்தினில் புகப் பெய்து வைப்பார்
6.1.1066
2965கன்னி மாடத்தில் முன்பு போல் காப்புற அமைத்துப்
பொன்னும் முத்தும் மேல் அணிகலன் பூந்துகில் சூழ்ந்து
பன்னு தூவியின் பஞ்சணை விரைப் பள்ளி அதன் மேல்
மன்னும் பொன்னரி மாலைகள் அணிந்து வைத்தனரால்
6.1.1067
2966மாலை சாந்தொடும் மஞ்சனம் நாள் தொறும் வழாமைப்
பாலின் நேர் தரும் போனகம் பகல் விளக்கி இனைய
சாலும் நன்மையில் தகுவன நாள்தொறும் சமைத்தே
ஏலுமால் செய யாவரும் வியப்பு எய்தும் நாளில்
6.1.1068
2967சண்பை மன்னவர் திரு ஒற்றியூர் நகர் சார்ந்து
பண்பு பெற்ற நல் தொண்டர் களுடன் பணிந்து இருந்த
நண்பு மிக்க நல் வார்த்தை அந் நல் பதி உள்ளோர்
வண் புகழ்ப் பெரு வணிகர்க்கு வந்து உரை செய்தார்
6.1.1069
2968சொன்னவர்க்கு எலாம் தூசொடு காசு பொன் அளித்தே
இன்ன தன்மையர் என ஒணா மகிழ் சிறந்து எய்தச்
சென்னி வாழ் மதியார் திரு ஒற்றியூர் அளவும்
துன்னு நீள் நடைக் காவணம் துகில் விதானித்து
6.1.1070
2969மகர தோரணம் வண் குலைக் கமுகொடு கதலி
நிகரில் பல் கொடித் தாமங்கள் அணிபெற நிரைத்து
நகர நீள் மறுகு யாவையும் நலம் புனைந்து அணியால்
புகரில் பொன் உலகம் இழிந்ததாம் எனப் பொலிவித்தார்
6.1.1071
2970இன்னவாறு அணி செய்து பல் குறை அறுப்ப ஏவி
முன்னம் ஒற்றியூர் நகர் இடை முத்தமிழ் விரகர்
பொன் அடித் தலம் தலைமிசை புனைவான் என்று எழுவார்
அந்நகர் பெரும் தொண்டரும் உடன் செல அணைந்தார்
6.1.1072
2971ஆய வேலையில் அருமறைப் புகலியர் பிரானும்
மேய ஒற்றியூர் பணிபவர் வியன் நகர் அகன்று
காயல் சூழ் கரைக் கடல் மயிலாப்புரி நோக்கித்
தூய தொண்டர் தம் குழாத்தொடும் எதிர் வந்து தோன்ற
6.1.1073
2972மாறில் வண் பெரு வணிகரும் தொண்டரும் மலர்ந்த
நீறு சேர் தவக் குழாத்தினை நீள் இடைக் கண்டே
ஆறு சூடினார் திருமகனார் அணைந்தார் என்று
ஈறிலாத ஓர் மகிழ்ச்சியினால் விழுந்து இறைஞ்ச
6.1.1074
2973காழி நாடரும் கதிர் மணிச் சிவிகை நின்று இழிந்து
சூழ் இரும் பெரும் தொண்டர் முன் தொழுது எழுந்து அருளி
வாழி மாதவர் வணிகர் செய் திறம் சொலக் கேட்டே
ஆழி சூழ் மயிலா புரித் திருநகர் அணைந்தார்
6.1.1075
2974அத் திறத்து முன் நிகழ்ந்தது திரு உள்ளத்து அமைத்துச்
சித்தம் இன்புறும் சிவநேசர் தம் செயல் வாய்ப்பப்
பொய்த்த அச் சமண் சாக்கியர் புறத்துறை அழிய
வைத்த அப்பெரும் கருணை நோக்கால் மகிழ்ந்து அருளி
6.1.1076
2975கங்கை வார் சடையார் கபாலீச்சரத்து அணைந்து
துங்க நீள் சுடர்க் கோபுரம் தொழுது புக்கு அருளி
மங்கை பங்கர் தம் கோயிலை வலம் கொண்டு வணங்கிச்
செங்கை சென்னி மேல் குவிந்திடத் திருமுன்பு சேர்ந்தார்
6.1.1077
2976தேவ தேவனைத் திருக் கபாலீச்சரத்து அமுதைப்
பாவை பாகனைப் பரிவுறு பண்பினால் பரவி
மேவு காதலின் விரும்பிய விரைவினால் விழுந்து
நாவின் வாய்மையில் போற்றினார் ஞான சம்பந்தர்
6.1.1078
2977போற்றி மெய் அருள் திறம் பெறு பரிவுடன் வணங்கி
நீற்றின் மேனியில் நிறை மயிர்ப் புளகங்கள் நெருங்கக்
கூற்று அடர்த்தவர் கோயிலின் புறம் போந்து அருளி
ஆற்றும் இன் அருள் வணிகர் மேற் செல அருள் செய்வார்
6.1.1079
2978ஒருமை உய்த்த நல் உணர்வினீர் உலகவர் அறிய
அருமையால் பெறு மகள் என்பு நிறைத்த அக் குடத்தைப்
பெரு மயானத்து நடம் புரிவார் பெரும் கோயில்
திருமதில் புறவாய்தலிற் கொணர்க என்று செப்ப
6.1.1080
2979அந்தமில் பெரு மகிழ்ச்சியால் அவனி மேல் பணிந்து
வந்து தம் திரு மனையினில் மேவி அம்மருங்கு
கந்த வார் பொழில் கன்னி மாடத்தினில் புக்கு
வெந்த சாம்பலோடு என்பு சேர் குடத்தை வேறு எடுத்து
6.1.1081
2980மூடு பன் மணிச் சிவிகை உள்பெய்து முன்போத
மாடு சேடியர் இனம் புடை சூழ்ந்து வந்து அணைய
ஆடல் மேவினார் திருக் கபாலீச்சரம் அணைந்து
நீடு கோபுரத்து எதிர் மணிச் சிவிகையை நீக்கி
6.1.1082
2981அங்கணாளர் தம் அபிமுகத்தினில் அடி உறைப்பால்
மங்கை என்பு சேர் குடத்தினை வைத்து முன் வணங்கப்
பொங்கு நீள் புனல் புகலி காவலர் புவனத்துத்
தங்கி வாழ்பவர்க்கு உறுதியாம் நிலைமை சாதிப்பார்
6.1.1083
2982மாடம் ஓங்கிய மயிலை மா நகர் உளார் மற்றும்
நாடு வாழ்பவர் நன்றி இல் சமயத்தின் உள்ளோர்
மாடு சூழ்ந்து காண்பதற்கு வந்து எய்தியே மலிய
நீடு தேவர்கள் ஏனையோர் விசும்பு இடை நெருங்க
6.1.1084
2983தொண்டர் தம் பெரும் குழாம் புடை சூழ்தரத் தொல்லை
அண்டர் நாயகர் கோபுர வாயில் நேர் அணைந்து
வண்டு வார் குழலாள் என்பு நிறைந்த மண் குடத்தைக்
கண்டு தம்பிரான் கருணையின் பெருமையே கருதி
6.1.1085
2984இந்த மாநிலத்து இறந்துளோர் என்பினைப் பின்னும்
நந்து நன்னெறிப் படுத்திட நன்மையாம் தன்மை
அந்த என்பொடு தொடர்ச்சியாம் என அருள் நோக்கால்
சிந்தும் அங்கம் அங்குடைய பூம்பாவை பேர் செப்பி
6.1.1086
2985மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதி சூடும்
அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல்
கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டார் தல்
உண்மையாம் எனில் உலகர் முன் வருக என உரைப்பார்
6.1.1087
2986மன்னுவார் சடையாரை முன் தொழுது மட்டு இட்ட
என்னும் நல் பதிகத்தினில் போதியோ என்னும்
அன்ன மெய்த் திருவாக்கு எனும் அமுதம் அவ்வங்கம்
துன்ன வந்து வந்து உருவமாய்த் தொக்கது அக்குடத்துள்
6.1.1088
2987ஆன தன்மையின் அத்திரு பாட்டினில் அடைவே
போன வாயுவும் வடிவமும் பொலிவொடு நிரம்பி
ஏனை அக்குடத்து அடங்கி முன் இருந்து எழுவதன் முன்
ஞான போனகர் பின் சமண்பாட்டினை நவில்வார்
6.1.1089
2988தேற்றமில் சமண் சாக்கியத் திண்ணரிச் செய்கை
ஏற்றது அன்று என எடுத்து உரைப்பார் என்ற போது
கோல் தொடிச் செங்கை தோற்றிடக் குடம் உடைந்து எழுவாள்
போற்று தாமரைப் போது அவிழ்ந்து எழுந்தனள் போன்றாள்
6.1.1090
2989எடுத்த பாட்டினில் வடிவு பெற்று இரு நான்கு திருப்பாட்டு
அடுத்த அம்முறைப் பன்னிரண்டு ஆண்டு அளவு அணைந்து
தொடுத்த வெஞ்சமண் பாட்டினில் தோன்றிடக் கண்டு
விடுத்த வேட்கையர் திருக் கடைக் காப்பு மேல் விரித்தார்
6.1.1091
2990ஆங்கனம் எழுந்து நின்ற அணங்கினை நோக்குவார்கள்
ஈங்கு இது காணீர் என்னா அற்புதம் எய்தும் வேலைப்
பாங்கு சூழ் தொண்டர் ஆனோர் அரகர என்னப் பார்மேல்
ஓங்கிய ஓசை உம்பர் நாட்டினை உற்றது அன்றே
6.1.1092
2991தேவரும் முனிவர் தாமும் திருவருள் சிறப்பு நோக்கி
பூவரு விரை கொள் மாரி பொழிந்தனர் ஒழிந்த மண்ணோர்
யாவரும் இருந்த வண்ணம் எம்பிரான் கருணை என்றே
மேவிய கைகள் உச்சி மேல் குவித்து இறைஞ்சி வீழ்ந்தார்
6.1.1093
2992அங்கு அவள் உருவம் காண்பார் அதிசயம் மிகவும் எய்திப்
பங்கம் உற்றாரே போன்றார் பர சமயத்தின் உள்ளோர்
எங்குள செய்கை தான் மற்று என் செய்தவாறு இது என்று
சங்கையாம் உணர்வு கொள்ளும் சமணர் தள்ளாடி வீழ்ந்தார்
6.1.1094
2993கன்னி தன் வனப்புத் தன்னைக் கண்களால் முடியக் காணார்
முன்னுறக் கண்டார்க்கு எல்லாம் மொய் கரும் குழலின் பாரம்
மன்னிய வதனம் செம் தாமரையினில் கரிய வண்டு
துன்னிய ஒழுங்கு துற்ற சூழல் போல் இருண்டு தோன்ற
6.1.1095
2994பாங்கு அணி சுரும்பு மொய்த்த பனிமலர் அளகப் பந்தி
தேங்கமழ் ஆரம் சேரும் திருநுதல் விளக்கம் நோக்கில்
பூங்கொடிக்கு அழகின் மாரி பொழிந்திடப் புயல் கீழ் இட்ட
வாங்கிய வான வில்லின் வளர் ஒளி வனப்பு வாய்ப்ப
6.1.1096
2995பருவ மென் கொடிகள் பண்டு புரம் எரித்தவர் தம் நெற்றி
ஒரு விழி எரியின் நீறாய் அருள் பெற உளனாம் காமன்
செரு எழும் தனு அது ஒன்றும் சேம வில் ஒன்றும் ஆக
இரு பெரும் சிலைகள் முன் கொண்டு எழுந்தன போல ஏற்ப
6.1.1097
2996மண்ணிய மணியின் செய்ய வளர் ஒளி மேனியாள் தன்
கண்ணிணை வனப்புக் காணில் காமரு வதனத் திங்கள்
தண்ணளி விரிந்த சோதி வெள்ளத்தில் தகைவின் நீள
ஒண் நிறக் கரிய செய்ய கயல் இரண்டு ஒத்து உலாவ
6.1.1098
2997பணி வளர் அல்குல் பாவை நாசியும் பவள வாயும்
நணிய பேர் ஒளியில் தோன்றும் நலத்தினை நாடுவார்க்கு
மணி நிறக் கோபம் கண்டு மற்றது வவ்வத் தாழும்
அணி நிறக் காம ரூபி அணைவதாம் அழகு காட்ட
6.1.1099
2998இளமயில் அனைய சாயல் ஏந்து இழை குழை கொள் காது
வளம் மிகு வனப்பினாலும் வடிந்த தாள் உடைமையாலும்
கிளர் ஒளி மகரம் வேறு கெழுமிய தன்மையாலும்
அளவில் சீர் அனங்கன் வென்றிக் கொடி இரண்டு அனையாக
6.1.1100
2999வில் பொலி தரளக் கோவை விளங்கிய கழுத்து மீது
பொற்பமை வதனமாகும் பதும நல் நிதியம் பூத்த
நற்பெரும் பணிலம் என்னும் நன்னிதி போன்று தோன்றி
அற்பொலிவு கண்டார் தந்த அருட்கு அடையாளம் காட்ட
6.1.1101
3000எரியவிழ் காந்தள் மென்பூத் தலை தொடுத்து இசைய வைத்துத்
திரன் பெறச் சுருக்கும் செச்சை மாலையோ தெரியின் வேறு
கரு நெடு கயல் கண் மங்கை கைகளால் காந்தி வெள்ளம்
அருகு இழிந்தனவோ என்னும் அதிசயம் வடிவில் தோன்ற
6.1.1102
3001ஏர் கெழு மார்பில் பொங்கும் ஏந்து இளம் கொங்கை நாகக்
கார் கெழு விடத்தை நீக்கும் கவுணியர் தலைவர் நோக்கால்
ஆர் திரு அருளில் பூரித்து அடங்கிய அமுதக் கும்பச்
சீர் கெழு முகிழைக் காட்டும் செவ்வியில் திகழ்ந்து தோன்ற
6.1.1103
3002காம வேள் என்னும் வேடன் உந்தியில் கரந்து கொங்கை
நேமி அம் புட்கள் தம்மை அகப்பட நேரிது ஆய
தாம நீள் கண்ணி சேர்ந்த சலாகை தூக்கியதே போலும்
வாமமே கலை சூழ் வல்லி மருங்கின் மேல் உரோம வல்லி
6.1.1104
3003பிணி அவிழ் மலர் மென் கூந்தல் பெண் அமுது அனையாள் செம்பொன்
அணி வளர் அல்குல் தங்கள் அரவு செய் பிழையால் அஞ்சி
மணி கிளர் காஞ்சி சூழ்ந்து வனப்புடை அல்குல் ஆகிப்
பணி உலகு ஆளும் சேடன் பணம் விரித்து அடைதல் காட்ட
6.1.1105
3004வரிமயில் அனைய சாயல் மங்கை பொன் குறங்கின் மாமை
கரி இளம் பிடிக்கை வென்று கதலி மென் தண்டு காட்ட
தெரிவுறும் அவர்க்கு மென்மைச் செழு முழந்தாளின் செவ்வி
புரிவுறு பொன் பந்து என்னப் பொலிந்து ஒளி விளங்கிப் பொங்க
6.1.1106
3005பூவலர் நறுமென் கூந்தல் பொன் கொடி கணைக்கால் காமன்
ஆவ நாழிகையே போலும் அழகினில் மேன்மை எய்த
மேவிய செம்பொன் தட்டின் வனப்பினை மீதிட்டு என்றும்
ஓவியர்க்கு எழுத ஒண்ணாப் பரட்டு ஒளி ஒளிர் உற்று ஓங்க
6.1.1107
3006கற்பகம் ஈன்ற செவ்விக் காமரு பவளச் சோதிப்
பொன் திரள் வயிரப் பத்திப் பூந்துணர் மலர்ந்த போலும்
நற்பதம் பொலிவு காட்ட ஞாலமும் விசும்பு எல்லாம்
அற்புதம் எய்தத் தோன்றி அழகினுக்கு அணியாய் நின்றாள்
6.1.1108
3007எண்ணில் ஆண்டு எய்தும் வேதாப் படைத்தவள் எழிலின் வெள்ளம்
நண்ணும் நான் முகத்தால் கண்டான் அவளினும் நல்லாள் தன்பால்
புண்ணியப் பதினாறு ஆண்டு பேர் பெறும் புகலி வேந்தர்
கண் நுதல் கருணை வெள்ளம் ஆயிரம் முகத்தால் கண்டார்
6.1.1109
3008இன்னணம் விளங்கிய ஏர் கொள் சாயலாள்
தன்னை முன் கண் உறக் கண்ட தாதையார்
பொன் அணி மாளிகைப் புகலி வேந்தர் தாள்
சென்னியில் பொருந்த முன் சென்று வீழ்ந்தனர்
6.1.1110
3009அணங்கினும் மேம்படும் அன்னம் அன்னவள்
பணம் புரி அரவரைப் பரமர் முன் பணிந்து
இணங்கிய முகில் மதில் சண்பை ஏந்தலை
வணங்கியே நின்றனள் மண்ணுளோர் தொழ
6.1.1111
3010சீர் கெழு சிவ நேசர் தம்மை முன்னமே
கார் கெழு சோலை சூழ் காழி மன்னவர்
ஏர் கெழு சிறப்பில் நும் மகளை கொண்டு இனிப்
பார் கெழு மனையில் படர்மின் என்றலும்
6.1.1111
3011பெருகிய அருள் பெறும் வணிகர் பிள்ளையார்
மருவு தாமரை அடி வணங்கிப் போற்றி நின்று
அருமையால் அடியனேன் பெற்ற பாவையைத்
திருமணம் புணர்ந்து அருள் செய்யும் என்றலும்
6.1.1113
3012மற்றவர் தமக்கு வண் புகலி வாணர் நீர்
பெற்ற பெண் விடத்தினால் வீந்த பின்னையான்
கற்றைவார் சடையவர் கருணை காண்வர
உற்பவிப் பித்தலால் உரை தகாது என
6.1.1114
3013வணிகரும் சுற்றமும் மயங்கிப் பிள்ளையார்
அணிமலர் அடியில் வீழ்ந்து அரற்ற ஆங்கு அவர்
தணிவில் நீள் பெருந்துயர் தணிய வேத நூல்
துணிவினை அருள் செய்தார் தூய வாய்மையார்
6.1.1115
3014தெள்ளு நீதியின் முறை கேட்ட சீர்க்கிளை
வெள்ளமும் வணிகரும் வேட்கை நீத்திடப்
பள்ள நீர்ச் செலவு எனப் பரமர் கோயிலின்
உள் எழுந்து அருளினார் உடைய பிள்ளையார்
6.1.1116
3015பான்மையால் வணிகரும் பாவை தன் மணம்
ஏனையோர்க்கு இசைகிலேன் என்று கொண்டு போய்
வானுயர் கன்னி மாடத்து வைத்தனர்
தேனமர் கோதையும் சிவத்தை மேவினாள்
6.1.1117
3016தேவர் பிரான் அமர்ந்து அருளும் திருக் கபாலீச்சரத்து
மேவிய ஞானத் தலைவர் விரிஞ்சன் முதல் எவ்வுயிர்க்கும்
காவலனார் பெருங்கருணை கை தந்த படி போற்றிப்
பாவலர் செந்தமிழ் பாடி பன் முறையும் பணிந்து எழுவார்
6.1.1118
3017தொழுது புறம் போந்து அருளித் தொண்டர் குழாம் புடை சூழ
பழுதில் புகழ் திருமயிலைப் பதியில் அமர்ந்து அருளும் நாள்
முழுதுலகும் தரும் இறைவர் முதல் தானம் பல இறைஞ்ச
அழுதுலகை வாழ்வித்தார் அப்பதியின் மருங்கு அகல்வார்
6.1.1119
3018திருத்தொண்டர் அங்கு உள்ளார் விடை கொள்ளச் சிவநேசர்
வருத்தம் அகன்றிட மதுர மொழி அருளி விடை கொடுத்து
நிருத்தர் உறை பிற பதிகள் வணங்கிப் போய் நிறை காதல்
அருத்தியோடும் திருவான்மியூர் பணிய அணைவுற்றார்
6.1.1120
3019திருவான்மியூர் மன்னும் திருத்தொண்டர் சிறப்பு எதிர
வருவார் மங்கல அணிகள் மறுகு நிரைத்து எதிர்கொள்ள
அருகாக இழிந்து அருளி அவர் வணங்கத் தொழுது அன்பு
தருவார் தம் கோயில் மணித்தடம் நெடுங்கோபுரம் சார்ந்தார்
6.1.1121
3020மிக்குயர்ந்த கோபுரத்தை வணங்கி வியன் திருமுன்றில்
புக்கருளி கோயிலினைப் புடை வலம் கொண்டு உள் அணைந்து
கொக்கு இறகும் மதிக் கொழுந்தும் குளிர் புனலும் ஒளிர்கின்ற
செக்கர் நிகர் சடை முடியார் சேவடியின் கீழ்த் தாழ்ந்தார்
6.1.1122
3021தாழ்ந்து பல முறை பணிந்து தம்பிரான் முன் நின்று
வாழ்ந்து களிவரப் பிறவி மருந்தான பெருந் தகையைச்
சூழ்ந்த இசைத் திருப்பதிகச் சொல் மாலை வினா உரையால்
வீழ்ந்த பெரும் காதலுடன் சாத்தி மிக இன்புற்றார்
6.1.1123
3022பரவி வரும் ஆனந்தம் நிறைந்த துளி கண் பனிப்ப
விரவு மயிர்ப் புளகங்கள் மிசை விளங்கப் புறத்து அணைவுற்று
அரவ நெடும் திரை வேலை அணிவான்மியூர் அதனுள்
சிரபுரத்துப் புரவலனார் சில நாள் அங்கு இனிது அமர்ந்தார்
6.1.1124
3023அங்கண் அமர்வார் உலகு ஆள் உடையாரை அரும் தமிழின்
பொங்கும் இசைப் பதிகங்கள் பல போற்றிப் போந்து அருளிக்
கங்கை அணி மணி முடியார் பதி பலவும் கலந்து இறைஞ்சிச்
செங்கண் விடைக் கொடியார் தம் இடைச் சுரத்தைச் சேர் உற்றார்
6.1.1125
3024சென்னி இள மதி அணிந்தார் மருவு திரு இடைச் சுரத்து
மன்னும் திருத் தொண்டர் குழாம் எதிர் கொள்ள வந்து அருளி
நல் நெடும் கோபுரம் இறைஞ்சி உள்புகுந்து நல் கோயில்
தன்னை வலம் கொண்டு அணைந்தார் தம்பிரான் திரு முன்பு
6.1.1126
3025கண்ட பொழுதே கலந்த காதலால் கை தலை மேல்
கொண்டு தலம் உற விழுந்து குலவு பெரு மகிழ்ச்சி உடன்
மண்டிய பேர் அன்பு உருகி மயிர் முகிழ்ப்ப வணங்கி எழுந்து
அண்டர் பிரான் திருமேனி வண்ணம் கண்டு அதிசயித்தார்
6.1.1127
3026இருந்த இடைச் சுரம் மேவும் இவர் வண்ணம் என்னே என்று
அரும் தமிழின் திருப்பதிகத்து அலர் மாலை கொடு பரவித்
திருந்து மனம் கரைந்து உருகத் திருக்கடைக் காப்புச் சாத்திப்
பெரும் தனி வாழ்வினைப் பெற்றார் பேர் உலகின் பேறு ஆனார்
6.1.1128
3027நிறைந்து ஆரா வேட்கையினால் நின்று இறைஞ்சி புறம் போந்து அங்கு
உறைந்து அருளிப் பணிகின்றார் உமைபாகர் அருள் பெற்றுச்
சிறந்த திருத் தொண்டருடன் எழுந்து அருளிச் செந்துருத்தி
அறைந்து அளிகள் பயில் சாரல் திருக்கழுக் குன்றினை அணைந்தார்
6.1.1129
3028சென்று அணையும் பொழுதின் கண் திருத்தொண்டர் எதிர் கொள்ளப்
பொன் திகழும் மணிச் சிவிகை இழிந்து அருளி உடன் போந்து
மன்றல் விரி நறும் சோலைத் திருமலையை வலம் கொண்டு
மின் தயங்கும் சடையாரை விருப்பினுடன் பணிகின்றார்
6.1.1130
3029திருக்கழுக் குன்று அமர்ந்த செங்கனகத் தனிக் குன்றைப்
பெருக்க வளர் காதலினால் பணிந்து எழுந்து பேராத
கருத்தின் உடன் காதல் செயும் கோயில் கழுக்குன்று என்று
திருப்பதிகம் புனைந்து அருளிச் சிந்தை நிறை மகிழ் உற்றார்
6.1.1131
3030இன்புற்று அங்கு அமர்ந்து அருளி ஈறில் பெரும் தொண்டர் உடன்
மின் பெற்ற வேணியினார் அருள் பெற்றுப் போந்து அருளி
என்புற்ற மணிமார்பர் எல்லை இலா ஆட்சி புரிந்து
அன்புற்று மகிழ்ந்த திரு அச்சிறு பாக்கம் அணைந்தார்
6.1.1132
3031ஆதி முதல் வரை வணங்கி ஆட்சி கொண்டார் என மொழியும்
கோயில் திருப்பதிக இசை குலாவிய பாடலில் போற்றி
மாதவத்து முனிவருடன் வணங்கி மகிழ்ந்து இன்புற்றுத்
தீது அகற்றும் செய்கையினார் சில நாள் அமர்ந்து அருளி
6.1.1133
3032ஏறணிந்த வெல் கொடியார் இனிது அமர்ந்த பதி பிறவும்
நீறணிந்த திருத்தொண்டர் எதிர் கொள்ள நேர்ந்து இறைஞ்சி
வேறு பல நதி கானம் கடந்து அருளி விரிசடையில்
ஆறணிந்தார் மகிழ்ந்த திரு அரசிலியை வந்து அடைந்தார்
6.1.1134
3033அரசிலியை அமர்ந்து அருளும் அங்கண் அரசைப் பணிந்து
பரசி எழு திருப் புறவார் பனம் காட்டூர் முதலாய
விரை செய் மலர்க் கொன்றையினார் மேவு பதி பல வணங்கித்
திரை செய் நெடும் கடல் உடுத்த திருத்தில்லை நகர் அணைந்தார்
6.1.1135
3034எல்லையில் ஞானத் தலைவர் எழுந்து அருள எதிர் கொள்வார்
தில்லையில் வாழ் அந்தணர் மெய்த் திருத்தொண்டர் சிறப்பின் ஒடு
மல்கி எதிர் பணிந்து இறைஞ்ச மணிமுத்தின் சிவிகை இழிந்து
அல்கு பெரும் காதல் உடன் அஞ்சலி கொண்டு அணைகின்றார்
6.1.1136
3035திரு எல்லையினைப் பணிந்து சென்று அணைவார் சேண் விசும்பை
மருவி விளங்குஒளி தழைக்கும் வடதிசை வாயிலை வணங்கி
உருகு பெரும் காதல் உடன் உள் புகுந்து மறையின் ஒலி
பெருகி வளர் மணிமாடப் பெரும் திரு வீதியை அணைந்தார்
6.1.1137
3036நலம் மலியும் திருவீதி பணிந்து எழுந்து நல் தவர்தம்
குலம் நிறைந்த திருவாயில் குவித்த மலர்ச் செங்கையோடு
தலமுற முன் தாழ்ந்து எய்தித் தமனிய மாளிகை மருங்கு
வலமுற வந்து ஓங்கிய பேரம்பலத்தை வணங்கினார்
6.1.1138
3037வணங்கி மிக மனம் மகிழ்ந்து மால் அயனும் தொழும் பூத
கணங்கள் மிடை திருவாயில் பணிந்து எழுந்து கண் களிப்ப
அணங்கு தனி கண்டு அருள அம்பலத்தே ஆடுகின்ற
குணம் கடந்த தனிக் கூத்தர் பெரும் கூத்து கும்பிடுவார்
6.1.1139
3038தொண்டர் மனம் பிரியாத திருப்படியைத் தொழுது இறைஞ்சி
மண்டுபெருங் காதலினால் நோக்கி முகம் மலர்ந்து எழுவார்
அண்டம் எலாம் நிறைந்து எழுந்த ஆனந்தத்துள் அலைந்து
கண்ட பேரின் பத்தின் கரையில்லா நிலை அணைந்தார்
6.1.1140
3039அந்நிலைமை அடைந்து திளைத்து ஆங்கு எய்தாக் காலத்தில்
மன்னு திரு அம்பலத்தை வலம் கொண்டு போந்து அருளி
பொன் அணி மாளிகை வீதிப் புறத்து அணைந்து போது தொறும்
இன்னிசை வண்தமிழ் பாடிக் கும்பிட்டு அங்கு இனிது இருந்தார்
6.1.1141
3040திருந்திய சீர்த் தாதையார் சிவ பாத இருதயரும்
பொருந்து திருவளர் புகலிப் பூசுரரும் மாதவரும்
பெரும் திருமால் அயன் போற்றும் பெரும் பற்ற புலியூரில்
இருந் தமிழ் ஆகரர் அணைந்தார் எனக் கேட்டு வந்து அணைந்தார்
6.1.1142
3041ஆங்கு அவரைக் கண்டு சிறப்பு அளித்து அருளி அவரோடும்
தாங்கரிய காதலினால் தம் பெருமான் கழல் வணங்க
ஓங்கு திருத் தில்லை வாழ் அந்தணரும் உடன் ஆகத்
தேன் கமழ் கொன்றைச் சடையார் திருச்சிற்றம்பலம் பணிந்தார்
6.1.1143
3042தென் புகலி அந்தணரும் தில்லை வாழ் அந்தணர் முன்
அன்பு நெறி பெருக்குவித்த அண்டகையார் அடி போற்றி
பொன் புரி செஞ்சடைக் கூத்தர் அருள் பெற்று போந்து அருளி
இன்புறு தோணியில் அமர்ந்தார் தமை வணங்க எழுந்து அருள
6.1.1144
3043நல் தவர் தம் குழாத்தோடும் நம்பர் திரு நடம் செய்யும்
பொன் பதியின் திரு எல்லை பணிந்து அருளிப் புறம் போந்து
பெற்றம் உயர்த்தவர் அமர்ந்த பிறபதியும் புக்கு இறைஞ்சிக்
கற்றவர்கள் பரவு திருக் கழுமலமே சென்று அடைவார்
6.1.1145
3044பல் பதிகள் கடந்து அருளிப் பன்னிரண்டு பேர் படைத்த
தொல்லை வளப் பூந்தராய் தூரத்தே தோன்றுதலும்
மல்கு திரு மணிமுத்தின் சிவிகை இழிந்து எதிர் வணங்கி
செல்வ மிகு பதி அதன் மேல் திருப்பதிகம் அருள் செய்வார்
6.1.1146
3045மன்னும் இசை மொழி வண்டார் குழல் அரிவை என்று எடுத்து
மின்னு சுடர் மாளிகை விண் தாங்குவ போல் வேணுபுரம்
என்னும் இசைச் சொல் மாலை எடுத்து இயம்பி எழுந்து அருளிப்
புன்னை மணம் கமழ் புறவப் புறம்பு அணையில் வந்து அணைந்தார்
6.1.1147
3046வாழி வளர் புறம்பு அணையின் மருங்கு அணைந்து வரி வண்டு
சூழும் மலர் நறும் தீப தூபங்களுடன் தொழுது
காழி நகர் சேர்மின் எனக் கடை முடிந்த திருப்பதிகம்
ஏழிசையின் உடன் பாடி எயின் மூதூர் உள் புகுந்தார்
6.1.1148
3047சேண் உயர்ந்த திருத்தோணி வீற்று இருந்த சிவபெருமான்
தான் நினைந்த ஆதரவின் தலைப்பாட்டு தனை உன்னி
நீள் நிலைக் கோபுரம் அணைந்து நேர் இறைஞ்சிப் புக்கு அருளி
வாண் நிலவு பெருங் கோயில் வலம் கொண்டு முன் பணிந்தார்
6.1.1149
3048முன் இறைஞ்சித் திருவருளின் முழு நோக்கம் பெற்று ஏறிப்
பொன் இமயப் பாவையுடன் புணர்ந்து இருந்த புராதனரைச்
சென்னி மிசைக் குவித்த கரம் கொடு விழுந்து திளைத்து எழுந்து
மன்னு பெரு வாழ்வு எய்தி மனம் களிப்ப வணங்குவார்
6.1.1150
3049பரவு திருப் பதிகங்கள் பலவும் இசையினில் பாடி
விரவிய கண் அருவி நீர் வெள்ளத்தில் குளித்து அருளி
அரவு அணிந்தார் அருள் பெருக புறம்பு எய்தி அன்பர் உடன்
சிரபுரத்துப் பெரும் தகையார் தம் திருமாளிகை சேர்ந்தார்
6.1.1151
3050மாளிகையின் உள் அணைந்து மறையவர்கட்கு அருள் புரிந்து
தாள் பணியும் பெரும் கிளைக்குத் தகுதியினால் தலை அளிசெய்து
ஆளுடைய தம் பெருமான் அடியவர் களுடன் அமர்ந்து
நீளவரும் பேரின்பம் மிகப் பெருக நிகழு நாள்
6.1.1152
3051காழி நாடு உடைய பிரான் கழல் வணங்கி மகிழ்வு எய்த
ஆழியினும் மிகப் பெருகும் ஆசையுடன் திருமுருகர்
வாழி திரு நீல நக்கர் முதல் தொண்டர் மற்று எணையோர்
சூழும் நெடும் சுற்றம் உடன் தோணிபுரம் தொழுது அணைந்தார்
6.1.1153
3052வந்தவரை எதிர் கொண்டு மனம் மகிழ்ந்து சண்பையர்கோன்
அந்தமில் சீர் அடியார்கள் அவரோடும் இனிது அமர்ந்து
சுந்தரவார் அணங்கின் உடன் தோணியில் வீற்று இருந்தாரைச்
செந்தமிழின் பந்தத்தால் திருப்பதிகம் பல பாடி
6.1.1154
3053பெரு மகிழ்ச்சியுடன் செல்லப் பெரும் தவத்தால் பெற்றவரும்
மருவு பெரும் கிளையான மறையவரும் உடன் கூடித்
திருவளர் ஞானத்தலைவர் திருமணம் செய்து அருளுதற்குப்
பருவம் இது என்று எண்ணி அறிவிக்கப் பாங்கு அணைந்தார்
6.1.1155
3054நாட்டு மறை முறை ஒழுக்கம் ஞான போனகருக்கும்
கூட்டுவது மனம் கொள்வார் கோதில் மறை நெறிச் சடங்கு
காட்டவரும் வேள்வி பல புரிவதற்கு ஓர் கன்னிதணை
வேட்டருள வேண்டும் என விண்ணப்பம் செய்தார்கள்
6.1.1156
3055மற்றவர் தம் மொழி கேட்டு மாதவத்தின் கொழுந்து அனையார்
சுற்றம் உறும் பெரும் பாசத் தொடர்ச்சி விடும் நிலைமையராய்
பெற்றம் உயர்த்தவர் அருள் முன் பெற்றதினால் இசையாது
முற்றியது ஆயினும் கூடாது என்று அவர் முன் மொழிந்து அருள
6.1.1157
3056அருமறையோர் அவர் பின்னும் கை தொழுது அங்கு அறிவிப்பார்
இருநிலத்து மறை வழக்கம் எடுத்தீர் நீர் ஆதலினால்
வருமுறையால் அறுதொழிலின் வைதிகமாம் நெறி ஒழுகும்
திருமணம் செய்து அருளுதற்குத் திரு உள்ளம் செய்யும் என
6.1.1158
3057மறை வாழ அந்தணர் வாய்மை ஒழுக்கம் பெருகும்
துறை வாழச் சுற்றத்தார் தமக்கு அருளி உடன் படலும்
பிறை வாழும் திருமுடியில் பெரும் புனலோடு அரவு அணிந்த
கறை வாழும் கண்டத்தார் தமைத் தொழுது மனம் களித்தார்
6.1.1159
3058திரு ஞான சம்பந்தர் திரு உள்ளம் செய்த அதற்குத்
தருவாய்மை மறையவரும் தாதையரும் தாங்க அரிய
பெருவாழ்வு பெற்றார் ஆய்ப் பிஞ்ஞகனார் அருள் என்றே
உருகா நின்று இன்பம் உறும் உள மகிழ்ச்சி எய்துவார்
6.1.1160
3059ஏதமில் சீர் மறையவரில் ஏற்ற குலத்தோடு இசைவால்
நாதர் திருப் பெருமணத்து நம்பாண்டார் நம்பி பெறும்
காதலியைக் காழி நாடு உடையபிரான் கைப்பிடிக்க
போதும் அவர் பெரும் தன்மை எனப் பொருந்த எண்ணினார்
6.1.1161
3060திருஞான சம்பந்தர் சீர் பெருக மணம் புணரும்
பெருவாழ்வு திருத்தொண்டர் மறையவர்கள் மிகப்பேணி
வருவாரும் பெரும் சுற்றம் மகிழ் சிறப்ப மகள் பேசத்
தருவார் தண் பந்தணை நல்லூர் சார்கின்றார் தாதையார்
6.1.1162
3061மிக்க திருத்தொண்டர்களும் வேதியரும் உடன் ஏகத்
திக்கு நிகழ் திருநல்லூர் பெருமணத்தைச் சென்று எய்தத்
தக்க புகழ் நம்பாண்டார் நம்பிதாம் அது கேட்டுச்
செக்கர் சடைமுடியார் தம் திருப்பாதம் தொழுது எழுவார்
6.1.1163
3062ஒப்பரிய பேர் உவகை ஓங்கி எழும் உள்ளத்தால்
அப்பு நிறை குடம் விளக்கு மறுகு எல்லாம் அணி பெருக்கிச்
செப்பரிய ஆர்வம் மிகு பெரும் சுற்றத்து ஒடும் சென்றே
எப்பொருளும் எய்தினேன் எனத் தொழுது அங்கு எதிர் கொண்டார்
6.1.1164
3063எதிர் கொண்டு மணி மாடத்தினில் எய்தி இன்பமுறு
மதுர மொழி பல மொழிந்து வரன் முறையால் சிறப்பு அளிப்ப
சதுர் முகனின் மேலாய சண்பை வரு மறையவரும்
முதிர் உணர்வின் மாதவரும் அணைந்த திறம் மொழிகின்றார்.
6.1.1165
3064ஞான போனகருக்கு நல்தவத்தின் ஒழுக்கத்தால்
ஊனமில் சீலத்து உம்பால் மகள் பேச வந்தது என
ஆன பேர் அந்தணர்கள் பால் அருள் உடைமை யாம் என்று
வான் அளவு நிறைந்த பெரு மனம் மகிழ்ச்சி ஒடு மொழிவார்
6.1.1166
3065உம்முடைய பெரும் தவத்தால் உலகு அனைத்தும் ஈன்று அளித்த
அம்மை திருமுலைப் பாலில் குழைத்த ஆர் அமுது உண்டார்க்கு
எம்முடைய குலக் கொழுந்தை யாம் உய்யத் தருகின்றோம்
வம்மின் என உரைத்து மனம் மகிழ்ந்து செலவிடுத்தார்
6.1.1167
3066பேர் உவகையால் இசைவு பெற்றவர் தாம் மீண்டு அணைந்து
கார் உலவு மலர்ச் சோலைக் கழுமலத்தை வந்து எய்திக்
சீர் உடைய பிள்ளையார்க்கு அவர் நேர்ந்தபடி செப்பிப்
பார் குலவும் திருமணத்தின் பான்மையினைத் தொடங்குவார்
6.1.1168
3067திருமணம் செய் கலியாணத் திருநாளும் திகழ் சிறப்பின்
மருவிய ஓரையும் கணித மங்கல நூலவர் வகுப்பப்
பெருகு மண நாள் ஓலை பெரும் சிறப்பினுடன் போக்கி
அருள் புரிந்த நன்னாளில் அணிமுளைப் பாலிகை விதைத்தார்
6.1.1169
3068செல்வம் மலி திருப்புகலி செழும் திரு வீதிகள் எல்லாம்
மல்கு நிறை குடம் விளக்கு மகர தோரணம் நிரைத்தே
எல்லையிலா ஒளி முத்து மாலைகள் எங்கணும் நாற்றி
அல்கு பெரும் திரு ஓங்க அணி சிறக்க அலங்கரித்தார்
6.1.1170
3069அருந்தவத்தோர் அந்தணர்கள் அயல் உள்ளோர் தாம் உய்ய
பொருந்து திரு நாள் ஓலை பொருவு இறந்தார் கொண்டு அணையத்
திருந்து புகழ் நம்பாண்டார் நம்பி சிறப்பு எதிர் கொண்டு
வருந்தவத்தான் மகள் கொடுப்பார் வதுவை வினை தொடங்குவார்
6.1.1171
3070மன்னும் பெரும் சுற்றத்தார் எல்லாரும் வந்து ஈண்டி
நன்னிலைமைத் திருநாளுக்கெழுநாளாம் நல் நாளில்
பன்மணி மங்கல முரசம் பல்லியங்கள் நிறைந்து ஆர்ப்ப
பொன் மணிப் பாலிகை மீது புனித முளை பூரித்தார்
6.1.1172
3071சேண் உயரும் மாடங்கள் திருப் பெருகு மண்டபங்கள்
நீணிலைய மாளிகைகள் நிகரில் அணி பெற விளக்கிக்
காண வரும் கை வண்ணம் கவின் ஓங்கும் படி எழுதி
வாண் நிலவு மணிக் கடைக் கண் மங்கலக் கோலம் புனைந்து
6.1.1173
3072நீடு நிலைத் தோரணங்கள் நீள் மருகு தொறும் நிரைத்து
மாடுயரும் கொடி மாலை மணி மாலை இடைப் போக்கிச்
சேடுயரும் வேதிகைகள் செழும் சாந்து கொடு நீவிப்
பீடு கெழு மணி முத்தின் பெரும் பந்தர் பல புனைந்தார்
6.1.1174
3073மன்றல் வினைத் திரு முளை நாள் தொடங்கி வரும் நாள் எல்லாம்
முன்றில் தொறும் வீதி தொறும் முக நெடுவாயிகள் தொறும்
நின்று ஒளிரும் மணி விளக்கு நிறைவாசப் பொன் குடங்கள்
துன்று சுடர்த் தாமங்கள் தூபங்கள் துதைவித்தார்
6.1.1175
3074எங்கணும் மெய்த் திருத்தொண்டர் மறையவர்கள் ஏனையோர்
மங்கல நீள் மணவினை நாள் கேட்டு மிக மகிழ்வு எய்திப்
பொங்கு திருப்புகலிதனில் நாள்தோறும் புகுந்து ஈண்ட
அங்கண் அணைந்தவர்க்கு எல்லாம் பெரும் சிறப்பு மிக அளித்தார்
6.1.1176
3075மங்கல தூரிய நாதம் மறுகு தொறும் நின்று இயம்பப்
பொங்கிய நான்மறை ஓசை கடல் ஓசை மிசைப் பொலியத்
தங்கு நறும் குறை அகிலின் தழைத்த செழும் புகையின் உடன்
செங்கனல் ஆகுதிப் புகையும் தெய்வ விரை மணம் பெருக
6.1.1177
3076எண் திசையில் உள்ளோரும் ஈண்டு வளத்தொடு நெருங்கப்
பண்ட நிறை சாலைகளும் பல வேறு விதம் பயில
மண்டு பெரு நிதிக் குவைகள் மலைப் பிறங்கல் என மலிய
உண்டி வினைப் பெரும் துழனி ஓவாத ஒலி ஓங்க
6.1.1178
3077மா மறை நூல் விதிச் சடங்கில் வகுத்த முறை நெறி மரபின்
தூ மணம் நல் உபகரணம் சமைப்பவர் தம் தொழில் துவன்றத்
தாமரையோன் அனைய பெரும் தவ மறையோர் தாம் எடுத்த
பூமருவு பொன் கலசப் புண்ணிய நீர் பொலிவு எய்த
6.1.1179
3078குங்குமத்தின் செழும் சேற்றின் கூட்டு அமைப்போர் இனம் குழுமப்
பொங்குவிரைப் புதுக் கலவைப் புகை எடுப்போர் தொகை விரவத்
துங்க நறும் கர்ப்பூரச் சுண்ணம் இடிப்போர் நெருங்க
எங்கும் மலர்ப் பிணை புனைவோர் ஈடங்கள் மிகப் பெருக
6.1.1180
3079இனைய பல வேறு தொழில் எம்மருங்கும் நிரைத்து இயற்றும்
மனை வளரும் மறுகு எல்லாம் மண அணி செய் மறை மூதூர்
நினைவு அரிய பெரு வளங்கள் நெருங்குதலால் நிதிக் கோமான்
தனை இறைவர் தாம் ஏவச் சமைத்தது போல் அமைந்து உளதால்
6.1.1181
3080மாறிலா நிறை வளம் தரும் புகலியின் மணம் மீக்
கூறு நாளின் முன் நாளினில் வேதியர் குழாமும்
நீறு சேர் திருத்தொண்டரும் நிகர் இலாதவருக்கு
ஆறு சூடினார் அருள் திருக்காப்பு நாண் அணிவார்
6.1.1181
3081வேத வாய்மையின் விதி உளி வினையினால் விளங்க
ஓத நீர் உலகில் இயன் முறை ஒழுக்கமும் பெருகக்
காதல் நீள் திருத்தொண்டர்கள் மறையவர் கவின் ஆர்
மாதர் மைந்தர் பொன் காப்பு நாண் நகர் வலம் செய்தார்
6.1.1183
3082நகர் வலம் செய்து புகுந்த பின் நவமணி அணைந்த
புகரில் சித்திரவிதன மண்டபத்தினில் பொலியப்
பகரும் வைதிக விதிச் சமாவர்த்தனப் பான்மை
திகழ முற்றிய செம்மலார் திரு முன்பு சேர்ந்தார்
6.1.1184
3083செம் பொனின் பரிகலத்தினில் செந்நெல் வெண்பரப்பின்
வம்பு அணிந்த நீள் மாலை சூழ் மருங்குற அமைத்த
அம் பொன் வாச நீர்ப் பொன் குடம் அரசு இலை தருப்பை
பம்பு நீள்சுடர் மணி விளக்கு ஒளிர் தரும் பரப்பில்
6.1.1185
3084நாத மங்கல முழக்கொடு நல் தவ முனிவர்
வேத கீதமும் விம்மிட விரை கமழ் வாசப்
போது சாந்தணி பூந்துகில் புணைந்த புண்ணியம் போல்
மீது பூஞ்சயனத்து இருந்தவர் முன்பு மேவி
6.1.1186
3085ஆர்வம் மிக்கு எழும் அன்பினால் மலர் அயன் அனைய
சீர்மறைத் தொழில் சடங்கு செய் திருந்து நூல் முனிவர்
பார் வழிப்பட வரும் இரு வினைகளின் பந்தச்
சார்பு ஒழிப்பவர் திருக்கையில் காப்பு நாண் சாத்த
6.1.1187
3086கண்ட மாந்தர்கள் கடி மணம் காண வந்து அணைவார்
கொண்ட வல்வினையாப்பு அவிழ் கொள்கைய ஆன
தொண்டர் சிந்தையும் வதனமும் மலர்ந்தன சுருதி
மண்டு மாமறைக் குலம் எழுந்து ஆர்த்தன மகிழ்ந்தே
6.1.1188
3087நிறைந்த கங்குலின் நிதிமழை விதி முறை எவர்க்கும்
புரந்த ஞான சம்பந்தர் தாம் புன் நெறிச் சமய
அரந்தை வல்லிருள் அகல வந்து அவதரித்தால் போல்
பரந்த பேர் இருள் துரந்து வந்து தொழுதனன் பகலோன்
6.1.1189
3088அஞ்சிறைச் சுரும்பு அறை பொழில் சண்பை ஆண் தகையார்
தஞ்சிவத் திருமணம் செயத் தவம் செய் நாள் என்று
மஞ்சனத் தொழில் புரிந்து என மாசு இருள் கழுவிச்
செஞ்சுடர்க் கதிர் பேரணி அணிந்தன திசைகள்
6.1.1190
3089பரம்பு தம் வயின் எங்கணும் உள்ள பல் வளங்கள்
நிரம்ப முன் கொணர்ந்து எண் திசையவர் நெருங்குதலால்
தரம் கடந்தவர் தம் திருக் கல்லி யாணத்தின்
வரம்பில் தன் பயன் காட்டுவது ஒத்தது வையம்
6.1.1191
3090நங்கள் வாழ்வு என வரும் திருஞான சம்பந்தர்
மங்கலத் திருமண எழுச்சியின் முழக்கு என்னத்
துங்க வெண்திரைச் சுரிவளை ஆர்ப்பொடு சூழ்ந்து
பொங்கு பேர் ஒலி முழக்குடன் எழுந்தது புணரி
6.1.1192
3091அளக்கர் ஏழும் ஒன்றாம் எனும் பெருமை எவ்வுலகும்
விளக்கு மாமண விழாவுடன் விரைந்து செல்வன போல்
துளக்கில் வேதியர் ஆகுதி தொடங்கிடா முன்னம்
வளர்க்கும் வேதியில் வலம் சுழித்து எழுந்தது வன்னி
6.1.1193
3092சந்த மென் மலர்த் தாது அணி நீறு மெய் தரித்துக்
கந்தம் மேவும் வண்டு ஒழுங்கு எனும் கண்டிகை பூண்டு
சிந்தை தூய அன்பர்களுடன் திருமணம் போத
மந்த சாரியின் மணம் கொணர்ந்து எழுந்தது மருத்து
6.1.1194
3093எண் திசை திறத்து யாவரும் புகலி வந்து எய்தி
மண்டும் அத்திருமண எழுச்சியின் அணிவாய்ப்பக்
கொண்ட வெண் நிறக் குரூஉச் சுடர்க் கொண்டல்கள் என்ன
வெண் துகில் கொடி நிரைத்தது போன்றது விசும்பு
6.1.1195
3094ஏல இந்நலம் யாவையும் எழுச்சி முன் காட்டும்
காலை செய்வினை முற்றிய கவுணியர் பெருமான்
மூலம் ஆகிய தோணி மேல் முதல்வரை வணங்கிச்
சீலமார் திரு அருளினால் மணத்தின் மேல் செல்வார்
6.1.1196
3095காழி மாநகர் வேதியர் குழாத்தொடும் கலந்து
சூழும் அன்பர்கள் ஏனையோர் துதைந்து முன் செல்ல
வாழி மா மறை முழங்கிட வளம்பதி வணங்கி
நீழல் வெண் சுடர் நித்திலச் சிவிகை மேற்கொண்டார்
6.1.1197
3096யான வாகனம் ஏறுவார் யாரும் மேல் கொள்ளக்
கானம் ஆகிய தொங்கல் பிச்சம் குடை கவரி
மேல் நெருங்கிட விசும்பினும் நிலத்தினும் எழுந்த
வான துந்துபி முழக்குடன் மங்கல இயங்கள்
6.1.1198
3097சங்கொடு தாரை சின்னம் தனிப் பெரும் காளம் தாளம்
வங்கியம் ஏனை மற்று மலர் துளைக் கருவி எல்லாம்
பொங்கிய ஒலியின் ஓங்கிப் பூசுரர் வேத கீதம்
எங்கணும் எழுந்து மல்கத் திருமணம் எழுந்தது அன்றே
6.1.1199
3098கோதையர் குழல் சூழ் வண்டின் குழாத்து ஒலி ஓர் பால் கோல
வேதியர் வேத வாய்மை மிகும் ஒலி ஒரு பால் மிக்க
ஏதம் இல் விபஞ்சி வீணை யாழ் ஒலி ஒரு பால் ஏத்தும்
நாத மங்கலங்கள் கீத நயப்பு ஒலி ஒரு பாலலாக
6.1.1200
3099விண்ணினை விழுங்க மிக்க வெண் துகில் பதாகை வெள்ளம்
கண் வெறி படைப்ப மிக்க கதிர் விரி கவரிக் கானம்
மண்ணிய மணிப் பூண் நீடும் அரிசனம் மலிந்த பொற்பின்
எண்ணிலா வண்ணத்தூசின் பொதி பரப்பு எங்கும் நண்ண
6.1.1201
3100சிகையொடு மான் தோல் தாங்கும் இடையும் ஆசானும் செல்வார்
புகை விடும் வேள்விச் செந்தீ இல்லுடன் கொண்டு போவார்
தகையிலா விருப்பின் மிக்க பதிகங்கள் விளம்பிச் சார்வார்
வகையறு பகையும் செற்ற மாதவர் இயல்பின் மல்க
6.1.1202
3101அறுவகை விளங்கும் சைவத்து அளவிலா விரதம் சாரும்
நெறி வழி நின்ற வேடம் நீடிய தவத்தில் உள்ளோர்
மறுவறு மனத்தில் அன்பின் வழியினால் வந்த யோகக்
குறி நிலை பெற்ற தொண்டர் குழாமாகி ஏக
6.1.1203
3102விஞ்சையர் இயக்கர் சித்தர் கின்னரர் மிடைந்த தேவர்
அஞ்சனம் நாட்ட ஈட்டத்து அரம்பையர் உடனாய் உள்ளோர்
தஞ்சுடர் விமானம் ஏறித் தழைத்த ஆதரவின் ஓடு
மஞ்சுறை விசும்பின் மீது மாண அணி காணச் சென்றார்
6.1.1204
3103மற்றிவர் மிடைந்து செல்லும் மங்கல வனப்பின் காட்சி
முற்ற இத் தலத்தில் உள்ளோர் மொய்த்து உடன் படரும் போதில்
அற்புத நிகழ்ச்சி எய்த அணைதலால் மணம் மேல் செல்லும்
பொற்பு அமை மணத்தின் சாயை போன்று முன் பொலியச் செல்ல
6.1.1205
3104தவ அரசு ஆள உய்க்கும் தனிக்குடை நிழற்றச் சாரும்
பவம் அறுத்து ஆளவல்லார் பாதம் உள்ளத்துக் கொண்டு
புவனங்கள் வாழ வந்த பூந்தராய் வேந்தர் போந்து
சிவன் அமர்ந்து உறையும் நல்லூர் திருப் பெருமணத்தைச் சேர்ந்தார்
6.1.1206
3105பெருமணக் கோயில் உள்ளார் மங்கலம் பெருகும் ஆற்றால்
வருமணத் திறத்தின் முன்னர் வழி எதிர் கொள்ளச் சென்று
திருமணம் புணர எய்தும் சிரபுரச் செம்மலார் தாம்
இருள் மணந்து இலங்கும் கண்டத்து இறைவர் தம் கோயில் புக்கார்
6.1.1207
3106நாதரைப் பணிந்து போற்றி நல் பொருள் பதிகம் பாடி
காதல் மெய் அருள் முன் பெற்றுக் கவுணியர் தலைவர் போந்து
வேதியர் வதுவைக் கோலம் புனைந்திடவேண்டும் என்னப்
பூத நாயகர் தம் கோயில் புறத்து ஒரு மடத்தில் புக்கார்
6.1.1208
3107பொன் குடம் நிறைந்த வாசப் புனித அஞ்சனம் நீராட்டி
விற்பொலி வெண்பட்டு ஆடை மேதக விளங்கச் சாத்தி
நற்றிரு உத்தரீய நறும் துகில் சாத்தி நானப்
பற்பல கலவைச் சாந்தம் பான்மையின் அணிந்த பின்னர்
6.1.1209
3108திருவடி மலர் மேல் பூத்த செழு நகைச் சோதி என்ன
மருவிய தரளக் கோவை மணிச்சரி அணையச் சாத்தி
விரிசுடர்ப் பரட்டின் மீது விளங்கு பொன் சரட்டில் கோத்த
பெருகு ஒளி முத்தின் தாமம் பிறங்கிய தொங்கல் சாத்தி
6.1.1210
3109தண் சுடர் பரிய முத்துத் தமனிய நாணில் கோத்த
கண் கவர் கோவைப் பத்திக் கதிர்க் கடி சூத்திரத்தை
வெண் சுடர்த் தரள மாலை விரிசுடர்க் கொடுக்கின் மீது
வண் திரு அரையின் நீடு வனப்பு ஒளிவளரச் சாத்தி
6.1.1211
3110ஒளி கதிர்த் தரளக் கோவை உதர பந்தனத்தின் மீது
தளிர் ஒளி துளும்பு முத்தின் சன்ன வீரத்தைச் சாத்திக்
குளிர் நிலவு எறிக்கும் முத்தின் பூண நூல் கோவை சாத்தி
நளிர் கதிர் முத்து மாலை நகு சுடர் ஆரம்சாத்தி
6.1.1211
3111வாள் விடு வயிரக் கட்டு மணிவிரல் ஆழி சாத்தித்
தாளுறு தடக்கை முத்தின் தண்டையும் சரியும் சாத்தி
நீளொளி முழங்கைப் பொட்டு நிரை சுடர் வடமும் சாத்தித்
தோள் வளைத் தரளப் பைம் பூண் சுந்தரத் தோள் மேல் சாத்தி
6.1.1213
3112திருக் கழுத்து ஆரம் தெய்வக் கண்டிகை மாலை சேரப்
பருத்த முத்து ஒழுங்கு கோத்த படர் ஒளி வடமும் சாத்தி
பெருக்கிய வனப்பின் செவ்விபிறங்கிய திருவார் காதில்
வருக்க வெண் தரளக் கொத்தின் வடிக் குழை விளங்க சாத்தி
6.1.1214
3113நீற்று ஒளி தழைத்துப் பொங்கி நிறை திரு நெற்றிமீது
மேற் பட விரிந்த சோதி வெண் சுடர் எழுந்தது என்னப்
பாற்படுமுத்தின் பாரப் பனிச்சுடர்த் திரணை சாத்தி
ஏற்பவைத்து அணிந்த முத்தின் எழில் வளர் மகுடம் சேர்த்தார்
6.1.1215
3114இவ்வகை நம்மை ஆளும் ஏர்வளர் தெய்வக் கோலம்
கைவினை மறையோர் செய்யக் கடிகொள் செங்கமலத் தாதின்
செவ்வி நீள் தாம மார்பர் திரு அடையாள மாலை
எவ்வுலகோரும் ஏத்தத் தொழுது தாம் எடுத்துப் பூண்டார்
6.1.1216
3115அழகினுக்கு அணியாம் வெண்ணீறும் அஞ்சு எழுத்தும் ஓதிச்சாத்திப்
பழகிய அன்பர் சூழப் படர் ஒளி மறுகில் எய்தி
மழ விடை மேலோர் தம்மை மனம் கொள வணங்கி வந்து
முழவொலி எடுப்ப முத்தின் சிவிகை மேல் கொண்டபோது
6.1.1217
3116எழுந்தன சங்க நாதம் இயம்பின இயங்கள் எங்கும்
பொழிந்தன விசும்பில் விண்ணேர் கற்பகப் புதுப்பூ மாரி
தொழுந்தகை முனிவர் தொண்டர் சுருதியின் வாழ்த்துப் பொங்கி
வழிந்தன திசைகள் மீது மலர்ந்தன உலகம் எல்லாம்
6.1.1218
3117படர் பெரும் தொங்கல் பிச்சம் பைம் கதிர்ப் பீலிப் பந்தர்
அடர் புனை செம் பொன் பாண்டில் அணிதுகில் சதுக்கம் மல்கக்
கடலின் மீது எழுந்து நிற்கும் கதிர் நிறை மதியம் போல
வடநிரை அணிந்த முத்தின் மணிக்குடை நிழற்ற வந்தார்
6.1.1219
3118சீரணி தெருவினூடு திருமணம் செல்ல முத்தின்
ஏரணி காளம் சின்னம் இலங்கு ஒளித் தாரை எல்லாம்
பேரொலி பெருக முன்னே பிடித்தன மறைகளோடு
தாரணி உய்ய ஞான சம்பந்தன் வந்தான் என்று
6.1.1220
3119மண்ணினுக்கு இடுக்கண் தீர வந்தவர் திரு நாமங்கள்
எண்ணில பலவும் ஏத்திச் சின்னங்கள் எழுந்த போது அவ்
அண்ணலார் வதுவை செய்ய அலங்கரித்து அணையப் பெற்ற
புண்ணிய மறையோர் மாட மங்கலம் பொழிந்து பொங்க
6.1.1221
3120முற்று மெய்ஞ்ஞானம் பெற்ற மூர்த்தியார் செங்கை பற்ற
நற்பெரும் தவத்தின் நீர்மை நலம் படைத்து எழுந்த தெய்வக்
கற்பகப் பூங்கொம்பு அன்னார் தம்மையும் காப்புச் சேர்த்துப்
பொற்புறும் சடங்கு முன்னர்ப் பரிவுடன் செய்தவேலை
6.1.1222
3121செம் பொன் செய் வாசிச் சூட்டுத் திருமணிப் புனை பூண் செல்வப்
பைம் பொனின் மாலை வேய்ந்த பவள மென் கொடி ஒப்பாரை
நம்பன் தன் அருளே வாழ்த்தி நல் எழில் விளங்கச் சூட்டி
அம் பொன் செய் தீபம் என்ன அழகு அலங்கரித்து வைத்தார்
6.1.1223
3122மா மறை மைந்தர் எல்லாம் மணத்து எதிர் சென்று மன்னும்
தூமலர்ச் செம் பொன் சுண்ணம் தொகு நவமணியும் வீசத்
தாமரை மலரோன் போல்வார் அரசிலை தருப்பை தோய்ந்த
காமர் பொன் கலச நன்னீர் இருக்குடன் கலந்து வீச
6.1.1224
3123விண்ணவர் மலரின் மாரி விசும்பு ஒளி தழைப்ப வீச
மண்ணகம் நிறைந்த கந்த மந்த மாருதமும் வீசக்
கண் ஒளி விளக்கம் மிக்கார் காமர் தோரணங்களூடு
புண்ணிய விளைவு போல்வார் பூம் பந்தர் முன்பு சார்ந்தார்
6.1.1225
3124பொன் அணி சங்கின் வெள்ளம் பொலிவுடன் முழங்கி ஆர்ப்ப
மன்னிய தரளப் பத்தி வளர் மணிச் சிவிகை நின்றும்
பன் மலர் நறும் பொன் சுண்ணம் பரந்த பாவாடை மீது
முன் இழிந்து அருளி வந்தார் மூவுலகு உய்ய வந்தார்
6.1.1226
3125மறைக்குல மனையின் வாழ்க்கை மங்கல மகளிர் எல்லாம்
நிரைத்த நீர்ப் பொன் குடங்கள் நிரை மணி விளக்குத் தூபம்
நறைக் குல மலர் சூழ் மாலை நறுஞ் சுடர் முளைப் பொன் பாண்டில்
உறைப் பொலி கலவை ஏந்தி உடன் எதிர் ஏற்று நின்றார்
6.1.1227
3126ஆங்கு முன் இட்ட செம் பொன் அணி மணிப் பீடம் தன்னில்
ஓங்கிய ஞான வெள்ளம் உள் நிறைந்து எழுவது என்னத்
தாங்கிய முத்தின் பைம் பூண் தண் நிலா எறிப்ப ஏறிப்
பாங்கு ஒளி பரப்ப நின்றார் பர சமயங்கள் வீழ்த்தார்
6.1.1228
3127எதிர் வரவேற்ற சாயல் இளம் மயில் அனைய மாதர்
மதுரமங்கல முன் ஆன வாழ்த்து ஒலி எடுப்ப வந்து
கதிர் மணிக் கரக வாசக் கமழ் புனல் ஒழுக்கிக் காதல்
விதி முறை வலம் கொண்டு எய்திமேவும் நல் வினைகள் செய்தார்
6.1.1229
3128மங்கலம் பொலிய ஏந்தி மாதரார் முன்பு செல்லக்
கங்கையின் கொழுந்து செம் பொன் இம வரை கலந்தது என்ன
அங்கு அவர் செம் பொன் மாடத்து ஆதி பூமியின் உட்புக்கார்
எங்களை வாழ முன்னாள் ஏடு வைகையினுள் இட்டார்
6.1.1230
3129அகில் நறும் தூபம் விம்ம அணிகிளர் மணியால் வேய்ந்த
துகில் புனை விதான நீழல் தூ மலர் தவிசின் மீது
நகில் அணி முத்த மாலை நகை முக மடவார் வாழ்த்த
இகலில் சீர் மறையோர் சூழ இனிதின் அங்கு இருந்த வேலை
6.1.1231
3130திருமகள் கொடுக்கப் பெற்ற செழு மறை முனிவர் தாமும்
அருமையான் முன் செய் மெய்ம்மை அருந்தவ மனைவியாரும்
பெருமகிழ்ச்சியினால் பாதம் விளக்குவார் பிள்ளையார் முன்
உரிமையால் வெண் பால் தூ நீர் உடன் எடுத்து ஏத்திவந்தார்
6.1.1232
3131வந்து முன் எய்தித் தான் முன் செய் மா தவத்தின் நன்மை
நந்து நம்பாண்டார் நம்பி ஞான போனகர் பொன் பாதம்
கந்தவார் குழலினார் பொன் கரக நீர் எடுத்து வார்ப்ப
புந்தியால் நினை தியானம் புரி சடையான் என்றுன்னி
6.1.1233
3132விருப்பினால் விளக்கி மிக்க புனித நீர் தலைமேல் கொண்டு
பொருப்புறு மாடத்து உள்ளும் புறத்துளும் தெளித்த பின்னர்
உருப்பொலி உதரத் துள்ளும் பூரித்தார் உவகை பொங்கி
அருப்புறு கிளைஞர் மேலும் தெளித்தனர் ஆர்வத்தோடும்
6.1.1234
3133பெருகொளி ஞானம் உண்ட பிள்ளையார் மலர்க்கை தன்னில்
மருவும் மங்கல நீர் வாசக் கரகம் முன் ஏந்தி வார்பார்
தரு முறைக் கோத்திரத்தின் தம் குலம் செப்பி என்றன்
அருநிதிப் பாவை யாரைப் பிள்ளையர்க்கு அளித்தேன் என்றார்
6.1.1235
3134நல் தவக் கன்னியார் கை ஞான சம்பந்தர் செம்கை
பற்றுதற்கு உரிய பண்பில் பழுது இல் நல் பொழுது நண்ண
பெற்றவர் உடன் பிறந்தார் பெரு மணப் பிணை அன்னாரைச்
சுற்றம் முன் சூழ்ந்து போற்றக் கொண்டு முன் துன்னினார்கள்
6.1.1236
3135ஏகமாம் சிவ மெய்ஞ் ஞானம் இசைந்தவர் வலப்பால் எய்தி
நாகமார் பணப்பேர் அல்குல் நல்தவக் கொழுந்து அன்னாரை
மாகமார் சோதி மல்க மன்னி வீற்று இருந்த வெள்ளை
மேகமொடு இசையும் மின்னுக் கொடி என விளங்க வைத்தார்
6.1.1237
3136புனித மெய்க் கோல நீடு புகலியார் வேந்தர் தம்மைக்
குனி சிலை புருவ மென் பூங்கொம்பனார் உடனே கூட
நனி மிகக் கண்ட போதின் நல்ல மங்கலங்கள் கூறி
மனிதரும் தேவர் ஆனார் கண் இமையாது வாழ்த்தி
6.1.1238
3137பத்தியில் குயிற்றும் பைம் பொன் பவளக் கால் பந்தர் நாப்பண்
சித்திர விதானத்தின் கீழ்ச் செழும் திரு நீல நக்கர்
முத் தமிழ் விரகர் முன்பு முதன் மறை முறையின் ஓடு
மெய்த்த நம் பெருமான் பாதம் மேவும் உள்ளத்தால் செய்ய
6.1.1239
3138மறையொலி பொங்கி ஓங்க மங்கல வாழ்த்து மலக
நிறை வளைச் செங்கை பற்ற நேர் இழை அவர் முன் அந்தப்
பொறை அணி முந்நூல் மார்பர் புகரில் பொரிகை அட்டி
இறைவரை ஏத்தும் வேலை எரிவலம் கொள்ள வேண்டி
6.1.1240
3139அருப்பு மென் முலையினார் தம் அணிமலர்க் கைப் பிடித்து அங்கு
ஒருப் படும் உடைய பிள்ளையார் திரு உள்ளம் தன்னில்
விருப்புறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே என்று
திருப் பெரு மணத்தை மேவும் சிந்தையில் தெளிந்து செல்வார்
6.1.1241
3140மந்திர முறையால் உய்த்த எரிவலம் ஆக மாதர்
தம் திருக் கையைப் பற்றும் தாமரைச் செங்கையாளர்
இந்த இல் ஒழுக்கம் வந்து சூழ்ந்ததே இவள் தன்னோடும்
அந்தமில் சிவன் தாள் சேர்வன் என்னும் ஆதரவு பொங்க
6.1.1242
3141மலர் பெரும் கிளையும் தொண்டர் கூட்டமும் மல்கிச் சூழ
அலகில் மெய்ஞ்ஞானத் தொல்லை அடைவுறும் குறிப்பால் அங்கண்
உலகின் எம்மருங்கும் நீங்க உடன் அணைந்து அருள வேண்டிக்
குல மணம் புரிவித்தார் தம் கோயிலை நோக்கி வந்தார்
6.1.1243
3142சிவன் அமர்ந்து அருளும் செல்வத் திருப் பெரு மணத்துள் எய்தித்
தவ நெறி வளர்க்க வந்தார் தலைப்படும் சார்பு நோக்கிப்
பவம் அற என்னை முன்னாள் ஆண்ட அப்பண்பு கூட
நவம் மலர்ப் பாதம் கூட்டும் என்னும் நல் உணர்வு நல்க
6.1.1244
3143காதல் மெய்ப் பதிகம் நல்லூர்ப் பெருமணம் எடுத்துக் கண்டோ ர்
தீதுறு பிறவிப் பாசம் தீர்த்தல் செம் பொருளாகக் கொண்டு
நாதனே நல்லூர் மேவும் பெரு மண நம்பனே உன்
பாத மெய்ந் நீழல் சேரும் பருவம் ஈது என்று பாட
6.1.1245
3144தேவர்கள் தேவர் தாமும் திருஅருள் புரிந்து நீயும்
பூவை அன்னாளும் இங்கு உன் புண்ணிய மணத்தின் வந்தார்
யாவரும் எம்பால் சோதி இதன் உள் வந்து எய்தும் என்று
மூவுலகு ஒளியால் விம்ம முழுச் சுடர்த் தாணுவாகி
6.1.1246
3145கோயில் உட் பட மேல் ஓங்கும் கொள்கையால் பெருகும் சோதி
வாயிலை வகுத்துக் காட்ட மன்னு சீர்ப் புகலி மன்னர்
பாயின ஒளியால் நீடு பரம் சுடர்த் தொழுது போற்றி
மாயிரு ஞாலம் உய்ய வழியினை அருளிச் செய்வார்
6.1.1247
3146ஞான மெய்ந் நெறி தான் யார்க்கும் நமச்சிவாய அச் சொலாம் என்று
ஆன சீர் நமச்சிவாயத் திருப்பதிகத்தை அங்கண்
வானமும் நிலமும் கேட்க அருள் செய்து இம் மணத்தில் வந்தோர்
ஈனமானம் பிறவி தீர யாவரும் புகுக என்ன
6.1.1248
3147வரு முறைப் பிறவி வெள்ளம் வரம்பு காணாது அழுந்தி
உரு எனும் துயரக் கூட்டில் உணர்வு இன்றி மயங்குவார்கள்
திருமணத்துடன் சேவித்து முன் செலும் சிறப்பினாலே
மருவிய பிறவி நீங்க மன்னு சோதியினுள் புக்கார்
6.1.1249
3148சீர் பெருகு நீல நக்கர் திரு முருகர் முதல் தொண்டர்
ஏர் கெழுவு சிவபாத இருதயர் நம்பாண்டார் சீர்
ஆர் திரு மெய்ப் பெரும் பாணர் மற்று எனையோர் அணைந்துளோர்
பார் நிலவு கிளை சூழப் பன்னிகளோடு உடன் புக்கார்
6.1.1250
3149அணி முத்தின் சிவிகை முதல் அணி தாங்கிச் சென்றேர்கள்
மணி முத்த மாலை புனை மடவார் மங்கலம் பெருகும்
பணி முற்றும் எடுத்தார்கள் பரிசனங்கள் வினைப்பாசம்
துணிவித்த உணர்வினர் ஆய்த் தொழுது உடன் புக்கு ஒடுங்கினார்
6.1.1251
3150ஆறு வகைச் சமயத்தில் அரும் தவரும் அடியவரும்
கூறு மறை முனிவர்களும் கும்பிட வந்து அணைந்தாரும்
வேறு திரு அருளினால் வீடு பெற வந்தாரும்
ஈறில் பெரும் சேதியின் உள் எல்லாரும் புக்கு அதற்பின்
6.1.1252
3151காதியைக் கைப்பற்றிக் கொண்டு வலம் செய்து அருளித்
தீது அகற்ற வந்து அருளும் திருஞான சம்பந்தர்
நாதன் எழில் வளர் சோதி நண்ணி அதன் உள்புகுவார்
போத நிலை முடிந்த வழிப் புக்கு ஒன்றி உடன் ஆனார்
6.1.1253
3152பிள்ளையார் எழுந்து அருளிப் புக்கு அதன்பின் பெரும் கூத்தர்
கொள்ள நீடிய சோதிக் குறி நிலை அவ்வழி கரப்ப
வள்ளலார் தம் பழைய மணக் கோயில் தோன்றுதலும்
தெள்ளு நீர் உலகத்துப் பேறுஇல்லார் தெருமந்தார்
6.1.1254
3153கண் நுதலார் திருமேனி உடன் கூட கவுணியனார்
நண்ணியது தூரத்தே கண்டு நணுகப் பெறா
விண்ணவரும் முனிவர்களும் விரிஞ்சனே முதல் ஆனோர்
எண்ணிலவர் ஏசறவு தீர எடுத்து ஏத்தினார்
6.1.1255
3154அரும் தமிழா கரர் சரிதை அடியேனுக்கு அவர் பாதம்
தரும் பரிசால் அறிந்தபடி துதி செய்தேன் தாரணிமேல்
பெருங்கொடையும் திண்ணனவும் பேர் உணர்வும் திருத்தொண்டால்
வரும் தகைமை கலிக் காமனார் செய்கை வழுத்து வேன்
6.1.1256
திருச்சிற்றம்பலம்

வம்பறா வரிவண்டு சருக்கத்தில்
திருஞான சம்பந்த நாயனார் புராணம் முற்றிற்று.

 
Mail Usup- truth is a pathless land -Home