எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே! இன்று வணக்கதிக்கு உரிய நாள். சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிய உத்தமர்களை நாம் நினைவு கூரும் புனித நாள்.
இன்றைய நன்னாளில், அந்த மகத்தான மனிதப் பிறவிகளின் நினைவாக நாம் ஏற்றும் தீபங்களில், அந்த அக்கினி நாக்குகளின் அபூர்வ நடனத்தில், எமது மாவீரர்களின் சுதந்திரத் தாகம் அணையாத சுடராக ஒளிவிட்டு எரிவதை நாம் எமது நெஞ்சில் நினைவு கொள்வோமாக.
சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள்.
மாவீரர்களே, உங்களது ஒப்பற்ற தியாக வரலாறுகளின் ஒன்றிணைப்பாகவே எமது தேசத்தின் வீர விடுதலைக் காவியம் படைக்கப்படுகிறது.
எமது விடுதலை இயக்கத்தின் முதலாவது மாவீரன், எனது பிரியமான தோழன் சத்தியநாதன் எனது மடியில் உயிர்நீத்து இன்றுடன் இருபத்துமூன்று ஆண்டுகளாகக் காலநதி ஓடிவிட்டது. இந்தக் கால நீட்சியிற் கட்டவிழ்ந்த போராட்ட வரலாற்றில் பதினேளாயிரத்துத் தொள்ளாயிரத்து மூன்று (17,903) மாவீரர் தேச விடுதலைக்காகக் களமாடி வீழ்ந்திருக்கிறார்கள். இந்தப் பெருந்தொகைப் போராளிகளைவிடப் பலமடங்கு தொகையில் பொதுமக்களும் எதிரியாற் கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள். ஒட்டுமொத்தத்தில் எமது தேசத்தின் விடுதலைக்காக நாம் கொடுத்த உயிர்ப்பலி மிகப் பெரியது. அளப்பரியது.
தமிழீழத் தேசத்தின் விடுதலைக்காகத் தமிழ் மக்கள் புரிந்துள்ள மாபெரும் தியாகத்தை, அதன் ஆன்மீக மகத்துவத்தை, அதன் வரலாற்று முக்கியத்துவத்தைச் சிங்களத் தேசம் மட்டுமன்றிச் சர்வதேசச் சமூகமும் உணர்ந்து கொள்ளாதது எமக்கு ஏமாற்றத்தையும் வேதனையையும் தருகிறது.
அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை.
சிங்களத் தேசம் இன்னும் மகாவம்ச மனவுலகில், அந்தப் புராணக் கருத்துலகிற் புதைந்து போய்க் கிடக்கிறது. இலங்கைத் தீவானது தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும் சிங்கள இனத்திற்கே உரித்தான சொத்துடைமை என்றும் மகாவம்சம் திரித்துவிட்ட புனைகதையிற் சிங்கள மக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கிறார்கள்.
அடிமனதில் ஆழமாக உறைந்து, அசைவற்றதாக இறுகிப் போன இந்தப் புராணக் கருத்து நிலையிலிருந்து சிங்களத் தேசம் விடுபடப்போவதில்லை. இந்தக் கருத்தியற் குருட்டுத்தனத்தால் இலங்கைத் தீவின் உண்மை வரலாற்றையும் அங்கு நிலவும் சமுதாய மெய்ந்நிலைகளையும் சிங்கள மக்களாலும் அவர்களது அரசியல், மதத் தலைமைகளாலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.
இலங்கைத் தீவின் வடகிழக்கு மாநிலத்தைத் தாயகத் தேசமாகக் கொண்டு, தமிழீழ மக்கள் என்ற வரலாற்றுத் தொன்மைமிக்க ஓர் இனம் இருப்பதையும் அவர்கள் ஒரு தனித்துவத் தேசமாக வாழ்ந்து வருவதையும் அவர்களுக்கு அடிப்படையான அரசியல் உரிமைகள், சுதந்திரங்கள் உள்ளன என்பதையும் சிங்களவராற் புரிந்துகொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. தமிழரது இருப்பு நிலைபற்றிய உண்மையைக் கிரகித்து, அவர்களது அரசியல் அபிலாசைகளைப் புரிந்துகொள்ளச் சிங்களத் தேசம் மறுத்து வருவதாலேயே தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சினை தீர்வின்றி, முடிவின்றிச் சிக்கலடைந்து இழுபட்டு வருகிறது.
சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள - பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது.
தென்னிலங்கை அரசியற் களத்தில் அதன் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. இப்படியான புறநிலையில், தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்குச் சிங்களத் தேசத்திலிருந்து ஒரு நீதியான, நியாயமான தீர்வு கிட்டுமென அன்றும் சரி, இன்றும் சரி, நாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. எமக்கே உரித்தான எமது அடிப்படை உரிமைகளை நாமாகவே போராடி வென்றெடுக்க வேண்டுமே தவிர, சிங்கள அரசியல்வாதிகளின் காருணியத்தில் பெற்றுக்கொள்ளலாம் என நாம் என்றுமே கருதியதில்லை. இதுவே, அன்றும் இன்றும் எமது விடுதலை இயக்கத்தின் உறுதியான இலட்சியமாக இருந்து வருகிறது.
சிங்கள அரசியல் தலைமைகளிடமிருந்து நீதி கிடைக்கப்போவதில்லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்து, எமது உரிமைகளை நாமாகவே போராடி வென்றெடுக்க வேண்டும் என உறுதிபூண்டிருந்தபோதும் தவிர்க்கமுடியாத வரலாற்றுச் சூழ்நிலைகள் காரணமாகச் சிங்கள அரசுடன் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்ற நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம். பிரதேச வல்லரசான இந்தியாவின் தலையீடு ஒரு கால கட்டத்திலும், சர்வதேச நாடுகளின் அழுத்தம் இன்னொரு கட்டத்திலுமாகச் சமாதான முயற்சிகளில் எம்மை ஈடுபடச் செய்தன. அத்தோடு பேச்சுக்களில் நாம் பங்குபற்றியதற்கு வேறு காரணங்களும் இருக்கவே செய்தன.
தமிழீழ மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தேசிய விடுதலை இயக்கம் என்ற ரீதியில் எமது அமைப்புக்குச் சட்டரீதியான அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் பேச்சுவார்த்தை ஒரு சாதனமாக அமைந்தது. அதுமட்டுமன்றி, எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை உலகமயப்படுத்தி, சர்வதேசச் சமூகத்தின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்றுக்கொள்வதற்கும் இது அவசியமாக இருந்தது. அடுத்ததாக நாம் ஆயுத வன்முறையிற் காதல்கொண்ட போர் வெறியர் அல்லர் என்பதையும் சமாதான மென்முறையில் நாம் பற்றுறுதி கொண்டவர்கள் என்பதையும் உலகுக்கு உணர்த்திக் காட்டவேண்டிய தேவையும் எழுந்தது. இறுதியாக, எல்லாவற்றிலும் முக்கியமாகத் தமிழீழ மக்களின் அடிப்படையான அரசியற் கோரிக்கைகளை ஏற்று ஒரு நியாயமான தீர்வுத் திட்டத்தைச் சிங்கள இனவாத ஆட்சியாளர் முன்வைக்கப் போவதில்லை என்ற உண்மையைச் சர்வதேச சமூகத்திற்கு நிரூபித்துக் காட்டுவதும் எமது நோக்கமாக இருந்தது. இப்படியான குறிக்கோள்களுடனேயே நாம் பேச்சுக்களிற் பங்குகொண்டோம்.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாகத் தொடரும் எமது தேச விடுதலைப் போராட்டத்தில், வௌவேறு கால கட்டங்களில், வௌவேறு வரலாற்றுச் சூழ்நிலைகளில், நாம் போருக்கு ஓய்வு கொடுத்துச் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றினோம். எதிரியானவன் கபட நோக்கும் வஞ்சக நெஞ்சும் கொண்டவன் என்பது எமக்குத் தெரியும். அத்தோடு சமரசப் பேச்சுக்களால் பயன் எதுவும் கிட்டப் போவதில்லை என்பதும் எமக்குத் தெரியும்.
சமாதானப் பேச்சு என்பது எமது விடுதலைப் போராட்டப் பாதையில் வைக்கப்பட்ட பொறி என்பதையும் நாம் நன்கு அறிவோம். இத்தனையையும் தெரிந்தும் நாம் நேர்மையுடனும் நேரிய நோக்குடனும் சமாதானப் பாதையில் பயணித்தோம். ஆயினும் நாம் மிகவும் விழிப்புடனும் விவேகத்துடனும் செயற்பட்டோம். சமாதானப் பயணத்தின் போது - சமரசப் பேச்சுக்களின் போது சிக்கலான பல சவால்களையும் நெருக்குவாரங்களையும் நாம் எதிர்நோக்க நேரிட்டது. எமது விடுதலைப் போராட்டத்திற்குப் பங்கம் ஏற்படும் வகையிற் பொறிகள் வைக்கப்பட்டன. சதிவலைகள் பின்னப்பட்டன. ஆனால் நாம் நிலைமையைப் புரிந்து சாதுரியமாகக் காய்களை நகர்த்தியதால் பொறிகளுக்குள் மாட்டிக் கொள்ளவுமில்லை சதிவலைப் பின்னல்களுக்குட் சிக்கிவிடவுமில்லை. சிங்கள ஆட்சியாளரும் அவர்களுக்கு முண்டுகொடுத்து நின்ற வல்லரசுகளும் எமது விடுதலைப் போராட்டத்திற்கும் எமது மக்களின் நலனுக்கும் விரோதமாகச் செயற்பட எத்தனித்த போதெல்லாம் எமது இயக்கம் அம்முயற்சிகளை வன்மையாக எதிர்த்து நின்றது. இந்தியத் தலையீடு நிகழ்ந்த காலத்தில், எமது மக்களின் நலனுக்கும் எமது தேசச் சுதந்திரப் போராட்டத்திற்கும் அச்சுறுத்தல் எழுந்தபோது இந்திய வல்லரசையும் அதன் இராணுவ இயந்திரத்தையும் எதிர்த்துப் போராடவும் நாம் துணிந்தோம் என்பதை எமது மக்கள் அறிவார்கள்.
எமது விடுதலை இயக்கம், திம்புவில் தொடங்கிப் பல்வேறு கட்டங்களில், பல்வேறு சமாதான முயற்சிகளிற் பங்குபற்றியபோதும் இம்முறையே எமது போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஒரு நீண்ட கால இடைவெளியை - கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகால இடைவெளியைச் சமாதானத்திற்கு நாம் அர்ப்பணித்தோம். இந்த நீண்ட கால விசாலத்தில் எமது மக்களின் பிரச்சினைகளுக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் அயராது மேற்கொண்ட முயற்சிகள் அனைத்துமே அர்த்தமற்றுப்போயின.
இம்முறை நிகழ்ந்த சமாதானப் பேச்சுக்கள் சாராம்சத்தில் வித்தியாசமானவை, முக்கியத்துவமானவை. மூன்றாம் தரப்பு உலக நாடொன்றின் அனுசரணையில், சர்வதேசச் சமூகத்தின் கண்காணிப்பில் இந்தப் பேச்சுக்கள் நிகழ்ந்தன. முதலில் ரணில் விக்கிரமசிங்காவின் அரசுடனும் பின்னர் சந்திரிகாவின் ஆட்சிபீடத்துடனும் நிகழ்ந்த பேச்சுக்களின்போது மேற்கொள்ளப்பட்ட முடிவுகள், தீர்மானங்கள், உடன்பாடுகள் எவையுமே செயல்வடிவம் பெறவில்லை. நாம் பொறுமையின் எல்லையைக் கடந்து சகிப்புத்தன்மையின் சிகரம்வரை சென்றோம். எத்தனையோ விடயங்களில் விட்டுக்கொடுத்து, சகல வாய்ப்புக்களையும் நாம் வழங்கியபோதும் சிங்களப் பேரினவாத ஆட்சிப்பீடங்கள் எமது மக்களுக்கு நீதி வழங்க மறுத்துவிட்டன.
2001ஆம் ஆண்டு, டிசம்பர் 24 ஆம் நாளன்று, நாமாகவே தன்னிச்சையாகப் போரை நிறுத்திச் சமாதானக் கதவுகளைத் திறந்துவிட்டோம். வன்னி மாநிலத்தை மீட்டெடுத்து, ஆனையிறவுப் படைத் தளத்தை துவம்சம் செய்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாக நிலைநிறுத்தி, பலத்தின் அத்திவாரத்தில் நின்றவாறே சிங்களத் தேசத்திற்கு நாம் நேசக் கரம் நீட்டினோம். நோர்வே அரசு நடுநிலை வகிக்க ரணில் விக்கிரமசிங்காவின் அரசுடன் உலகத் தலைநகர்களில் நிகழ்ந்த பேச்சுக்கள் பற்றி நான் இங்கு விபரித்துக்கூறத் தேவையில்லை.
எமது மக்கள் எதிர்கொண்ட அவலமான வாழ்க்கைப் பிரச்சினைகளையும் அவசர மனிதாபிமானப் பிரச்சினைகளையுங்கூட ரணிலின் ஆட்சிபீடத்தால் தீர்த்துவைக்க முடியவில்லை. ரணிலின் அரசாங்கமானது பேச்சுக்களை இழுத்தடித்துக் காலத்தைக் கடத்தியதோடு, உலக வல்லரசு நாடுகளுடன் இரகசியக் கூட்டுச் சேர்ந்து எமது விடுதலை இயக்கத்திடமிருந்து ஆயுதங்களைக் களைந்துவிடும் ஒரு சூழ்ச்சிகரச் சதிவலையைப் பின்னுவதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தியது. இந்தச் சதித்திட்டத்தின் ஒரு முக்கிய ஏற்பாடாகவே 2003ஆம் ஆண்டு, ஜுன் மாதத்தில் டோக்கியோ மாநாடு அரங்கேறவிருந்தது. இதனை அறிந்து கொண்ட நாம் டோக்கியோ மாநாட்டைப் பகிஸ்கரித்ததுடன் பேச்சுக்களிலிருந்தும் விலகிக் கொண்டோம்.
சமாதான முயற்சியில் எதையுமே சாதிக்காது ரணிலின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதனையடுத்து, சமாதானத்திற்கு விரோதமான இனவாத சக்திகளுடன் கூட்டுச்சேர்ந்து புதிய அரசை அமைத்தார் சந்திரிகா. நாம் ஏற்கெனவே முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டம்பற்றிப் பேசுவதற்கு எமது இயக்கம் இணக்கம் தெரிவித்தபோதும் சந்திரிகா அதற்கு இணங்காது காலத்தை இழுத்தடித்தார்.
இடைக்காலத் தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, அரசியல் வெறுமைக்குட் காலம் ஓடியது. இந்த அரசியற் சூனியத்திற்குள், இந்த நிச்சயமற்ற வெறுமைக்குள் எம்மைச் சிக்கவைத்து, எமது விடுதலைப் போராட்டத்தைத் திசை திருப்பி மழுங்கடிப்பதே சிங்கள ஆட்சியாளரின் வஞ்சக நோக்கம் என்பதை நாம் உணர்ந்து கொண்டோம். இனித் தொடர்ந்தும் சமாதான மாயைக்குள் செயலற்று இருப்பது அபத்தம் என எண்ணிய நாம் எமது தேச விடுதலைப் போராட்டத்தைக் காலதாமதமின்றி முன்னெடுக்கத் தீர்மானித்தோம். அதற்கான செய்திட்டத்தை நெறிப்படுத்திக் கொண்டிருந்த வேளையிலேயே, அதாவது சென்ற ஆண்டுக் கடைசியில், இயற்கையின் அந்தக் கோரத்தாண்டவம் நிகழ்ந்தது.
திடீரென எவருமே எதிர்பாராத் தருணத்தில் இந்தப் பேரவலம் நிகழ்ந்தது. எமது தாயகப் பூமியின் கிழக்குக் கரையோரக் கிராமங்கள், குடியிருப்புகள் மீது சுனாமிப் பேரலைகள் தாக்கி என்றுமில்லாத பேரழிவுகளை ஏற்படுத்தின. இயற்கையின் இரக்கமற்ற இந்த ஊழிக் கூத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் இருபதினாயிரம் பேர் கொன்றொழிக்கப்பட்டனர். மூன்று லட்சம் பேர்வரை வீடுகள், சொத்துக்களை இழந்து அகதிகளாக அல்லற்பட்டனர். ஏற்கெனவே யுத்தத்தினாற் சிதைந்து போயிருந்த தமிழர் தேசம்மீது இன்னொரு பேரழிவு ஏற்பட்டதால், சுமக்க முடியாத துன்பப் பளுவைச் சுமக்க எமது மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். உடனடியாகவே இப்பேரவலத்திற்கு முகங்கொடுக்க எமது விடுதலை இயக்கம் முடிவெடுத்தது. எமது இயக்கத்தின் படைத்துறைப் பிரிவுகளும் மற்றும் நிர்வாக, சமூக சேவைக் கட்டமைப்புகளும் களத்தில் இறங்கிப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர மனிதாபிமான, நிவாரணப் பணியில் ஈடுபட்டன.
ஆழிப்பேரலை அனர்த்தம் உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பிவிட்டதால், பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வு, புனர்நிர்மாணத்திற்கெனப் பெரும் தொகையில் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு உலக நாடுகள் முன்வந்தன. அதேசமயம், எமது விடுதலை இயக்கத்துடன் கூட்டுச்சேர்ந்து, ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கி நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்குச் சந்திரிகா அம்மையார் விருப்பம் தெரிவித்தார். பேரவலத்திற்கு ஆளாகி நிற்கும் தமிழ் பேசும் மக்களின் அவசர மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய தேவை அன்று எமக்கு எழுந்தது. இதனால் சந்திரிகா அரசாங்கத்துடன் பேசி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் புனர்வாழ்வும் பெற்றுக்கொடுக்க முடிவெடுத்தோம். நோர்வேயின் அனுசரணையுடன் இரு தரப்புச் சமாதானச் செயலகங்கள் மட்டத்திற் பேச்சுக்கள் நிகழ்ந்தன. முடிவின்றி, நீண்ட காலத்திற்கு இப்பேச்சுக்கள் இழுபட்டுச் செல்வதை நாம் விரும்பவில்லை. ஆகையால் நாம் மென்போக்கைக் கடைப்பிடித்து, சில முக்கிய விடயங்களில் நெகிழ்ந்து கொடுத்து, ஒரு நிர்வாகக் கட்டமைப்பை நிறுவுவதற்கு இணங்கினோம். இதற்கான உடன்பாடும் கைச்சாத்தாகியது.
சிறீலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் இணைந்து உருவாக்கிய இந்த நிவாரணக் கட்டமைப்புக்கு அனைத்துலக நாடுகளும் தமது நல்லாதரவை வழங்கின. முரண்பட்டு நின்ற இரு தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படும் நல்லெண்ணச் சூழ்நிலை பிறந்துள்ளதாக நம்பிக்கை தெரிவித்தன. ஆயினும் இந்த நல்லெண்ணச் சூழ்நிலை உருவாகுவதையோ, தமிழருக்கு நிவாரண உதவிகள் கிடைப்பதையோ சிங்கள - பௌத்த இனவாதச் சக்திகளாற் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
சந்திரிகாவின் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஜே.வி.பி நிவாரணக் கட்டமைப்புக்குக் கடுமையான ஆட்சேபம் தெரிவித்து அரசிலிருந்து விலக்கிக்கொண்டது. ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்ற தீவிர இனவாதக் கட்சிகள் இந்த நிவாரண உடன்பாடு சிறீலங்கா அரசியலமைப்புக்கு விரோதமானதென உயர்நீதிமன்றத்தில் வழக்குகளையும் தாக்கல் செய்தன. சிங்கள இனவாதச் சக்திகளுக்குச் சார்பான முறையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சுனாமிக் கட்டமைப்பை முழுமையாக முடக்கிச் செயலிழக்கச் செய்தது.
சுனாமிக் கட்டமைப்புக்குச் சாவுமணி அடிக்கப்பட்டதுடன் தமிழ் மக்களுக்கு எஞ்சியிருந்த இறுதி நம்பிக்கையையும் சிங்களப் பௌத்தப் பேரினவாதம் சாகடித்துவிட்டது. சர்வ அதிகாரம் படைத்த ஜனாதிபதி சந்திரிகாவினாற்கூட, சிங்கள இனவாதச் சக்திகளை மீறித் தமிழ் மக்களுக்கு ஒரு நிவாரணத் திட்டத்தைத்தானும் நிறைவுசெய்ய முடியவில்லை. நிலைமை இப்படி இருக்கும்பொழுது பேரினவாதச் சகதியில் மூழ்கிக் கிடக்கும் சிங்கள அதிகார வர்க்கத்திடமிருந்து நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். சுனாமி நிர்வாகக் கட்டமைப்பானது எந்தவிதமான அரசியல் அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை. அத்துடன் அதற்கு உருப்படியான நிர்வாக வலுவும் இருக்கவில்லை. மிகவும் வரையறுக்கப்பட்ட செயற்பாடுகளைக் கொண்ட ஒரு தற்காலிக ஒழுங்கமைப்புக்கே தென்னிலங்கையில் இத்தகைய எதிர்ப்பு என்றால் தமிழர் தாயகத்தில் தன்னாட்சி அதிகாரமுடைய ஆட்சியமைப்பைச் சிங்கள அரசியல் தலைமைகளுடன் பேசிப் பெற்றுக்கொள்ளலாம் என்று எதிர்பார்ப்பது வெறும் பகற் கனவு. கடந்த நான்கு ஆண்டுகாலச் சமாதான முயற்சியின் பயனாக நாம் பட்டுணர்ந்துகொண்ட மெய்யுண்மை இது. இந்தச் சமாதான நாடகத்தை மிகவும் உன்னிப்பாக அவதானித்துவந்த உலக நாடுகளுக்கும் இந்த உண்மை தெளிவாகியிருக்கும் என்றே நாம் நம்புகிறோம்.
எனது அன்பான மக்களே,
சிங்கள ஆட்சியாளரின் நயவஞ்சக அரசியலுக்கு நல்லதொரு எடுத்துக் காட்டாக இன்னொரு பாரதூரமான விடயத்தையும் நான் இங்கு எடுத்துக்கூற விரும்புகிறேன். சமாதானத்தின் திரைக்குப் பின்னால், மறைமுகமாக, எமது இயக்கத்திற்கு எதிராக நிகழ்த்தப்படும் ஓர் இரகசிய யுத்தம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். எமது விடுதலை இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, எமது போராட்டத்திற்குப் பங்கம் விளைவிக்கும் நோக்குடன் இந்த நாசகார நிழல் யுத்தம் ஏவிவிடப்பட்டது.
எமது இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள், முக்கிய போராளிகள், ஆதரவாளர்கள் எமக்கு ஆதரவான அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள் என்ற வகையில் பெருந்தொகையானோர் மிகவும் கோழைத்தனமாகக் கொன்றொழிக்கப்பட்டுள்ளனர். இந்த நிழல் யுத்தத்தின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பது எமக்கு நன்கு தெரியும். இராணுவப் புலனாய்வுத் துறையின் வழிநடத்தலில் இந்த வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றபோதும் இதன் பின்புலத்திற் சிங்கள இனவாத அரசியல்வாதிகளின் அரூப கரங்கள் செயற்படுவதையும் நாம் அறிவோம். அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில், அரச படையினரின் பாதுகாப்புக் கவசத்துடன் ஒட்டுப் படைகளான தமிழ் ஆயுதக் குழுக்களை கருவிகளாகக் கொண்டு இந்த மறைமுக யுத்தம் நடத்தப்படுகிறது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிராயுதபாணிகளாக நின்று அரசியற் பணிகளில் ஈடுபட்ட எமது போராளிகள் கொலை செய்யப்படுவதையும், எமது அரசியற் செயலகங்கள் தாக்கியழிக்கப்படுவதையும் நாம் கடுமையாக ஆட்சேபித்தோம். ஆனால், சிங்கள அரசு எமது ஆட்சேபனைகளைப் பொருட்படுத்தவில்லை. இதனால் இறுதியில் எமது அரசியற் போராளிகளை எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் மீள அழைக்க நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம்.
போருக்கு ஓய்வு கொடுத்ததால் உருவாகிய சமாதானச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி, ஒரு வித்தியாசமான மென் தீவிர யுத்தம் எம்மீது தொடுக்கப்பட்டிருக்கிறது. போர்நிறுத்த விதிகளுக்கு அமையத் தமிழ்க் கூலிப் படைகளின் ஆயுதங்களைக் களைய வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடு. இந்த முக்கிய கடப்பாட்டை நிறைவுசெய்யத் தவறிய சிங்கள அரசு, இந்த ஆயுதக் குழுக்களையே கருவிகளாகப் பயன்படுத்தி எமது விடுதலை இயக்கத்திற்கு எதிராக வன்முறையை ஏவிவிட்டிருப்பது ஒரு பாரதூரமான போர்க் குற்றமாகும். ஒரு கையால் அரவணைப்பது போல நடித்து மறுகையாற் குத்தும் நம்பிக்கைத் துரோகச் செயலிது.
சமாதான முயற்சியிலும் சமரசத் தீர்விலும் சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு உண்மையான ஆர்வமும் அக்கறையும் இருக்கவில்லை என்பதையே இச்செயற்பாடு எடுத்துக்காட்டுகிறது. இராணுவ அணுகுமுறையை இவர்கள் இன்னும் கைவிட்டதாகத் தெரியவில்லை. சமாதானச் சூழலிலும் ஒரு புதிய வடிவிற் போரை உருமாற்றம் செய்து இராணுவப் பயங்கரவாதத்தைத் தொடர்கிறது சிங்கள அரசு. இந்த நிழல் யுத்தத்தின் நிஜ வடிவத்தையும் அதன் அசிங்கமான முகத்தையும் அந்தரங்க நோக்கத்தையும் சர்வதேச சமூகம் கண்டுகொள்ளும் என நாம் நம்புகிறோம்.
சமாதானம், போர்நிறுத்தம், பேச்சுவார்த்தை என்பன எல்லாம், தமிழ் மக்களைப் பொறுத்தவரை, அர்த்தமற்ற சொற்பதங்களாக, யதார்த்த மெய்ந்நிலைக்குப் பொருந்தாத வார்த்தைப் பிரயோகங்களாக மாறிவிட்டன. சமாதானச் சூழலில் நிகழ்த்தப்படும் மறைமுக யுத்தம், போர்நிறுத்த விதிகளுக்கு முரணாகத் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, சமரசப் பேச்சுக்களைப் பயன்படுத்திப் பின்னப்படும் சர்வதேசச் சதிவலைப் பின்னல் - இப்படியாக அமைதி முயற்சி திரிவுபடுத்தப்பட்டுத் தவறான முறையிற் பயன்படுத்தப்படுகிறது. இதனால் எமது மக்களுக்கு எல்லாவற்றிலுமே நம்பிக்கை இழந்துவிட்டது.
நிலையான அமைதியையும் நிம்மதியான வாழ்வையும் பெற்றுத்தராத சமாதானத்தில், வாழ்விடங்களை ஆக்கிரமித்து நிற்கும் இராணுவத்தை அகற்ற முடியாத போர்நிறுத்தத்தில், தீராது தொடரும் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடித்தராத பேச்சுக்களில், எமது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.
நிலையற்ற வாழ்வையும், நிச்சயமற்ற எதிர்காலத்தையும் இனியும் எமது மக்கள் பொறுத்துக்கொள்ளத் தயாராகவில்லை. பொறுத்துப் பொறுத்து பொறுமையிழந்த தமிழ் மக்களின் பொங்குணர்வாகவே அவர்களது அரசியல் அபிலாசைகளின் ஆவேச வெளிப்பாடாகவே தமிழீழத் தாயகமெங்கும் வெகுசனப் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. சமீப காலமாக, தமிழ் மாவட்டங்கள் தோறும் மாறி, மாறி அரங்கேறிவரும் தமிழ்த் தேசிய எழுச்சி நிகழ்வுகளிற் சமுத்திரமாக மக்கள் திரண்டெழுந்து உரிமை முழக்கம் செய்து வருகிறார்கள்.
சுயநிர்ணய உரிமைகோரி, தம்மைத் தாமே ஆட்சிபுரியும் அரசியற் சுதந்திரங்கோரி, தமிழீழ மக்கள் எழுப்பும் உரிமைக் குரலானது உலக மனச்சாட்சியின் கதவுகளைத் தட்டத் தொடங்கியுள்ளது. ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட தேசமாக அணிதிரண்டு நிற்கும் தமிழினத்தின் உரிமைக் குரலைச் சர்வதேசச் சமூகம் இனியும் அசட்டை செய்யமுடியாது. தமது அரசியல் தகைமையைத் தாமாகவே நிர்ணயித்துக்கொள்ள எமது மக்கள் விரும்புகிறார்கள். காலங்காலமாக அரச ஒடுக்குமுறைக்கு ஆளாகிய ஒரு தேசிய மக்கள் சமுதாயம் என்ற ரீதியில், தமது அரசியல் அபிலாசைகளைச் சர்வதேசச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதே எமது மக்களின் அறைகூவலாகும்.
எமது சுயநிர்ணயப் போராட்டப் பயணத்தில் நாம் இன்று ஒரு தீர்க்கமான வரலாற்றுத் திருப்புமுனையை அடைந்துள்ளோம். தென்னிலங்கை அரசியல் அதிகார வர்க்கம் தமிழரின் சுயநிர்ணய உரிமையை என்றுமே அங்கீகரிக்கப் போவதில்லை. சிங்களப் பௌத்தப் பெரும்பான்மை மக்களின் நலன்களைப் பேணிப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்திலும், அந்தச் சட்டத்தின் அத்திவாரத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆட்சியமைப்பிலும் தமிழினத்தின் சுயநிர்ணயத்திற்கு என்றுமே இடமிருக்கப் போவதில்லை. நாமாகவே போராடி, எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை என்பதை எமது மக்கள் இன்று உணர்ந்து விட்டார்கள். சுயநிர்ணயம் என்பதே சுயமாக, சுதந்திரமாக, மற்றவர்களின் தலையீடின்றி, எமது அரசியல் வாழ்வை நாமாகத் தீர்மானிப்பதுதான். அந்தக் காலமும் சூழலும் இப்போது கனிந்துவிட்டது.
தமிழரின் தேசியத் தனித்துவத்தை அங்கீகரித்து, அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்தளித்து, அவர்களை அரவணைத்து வாழச் சிங்களத் தேசம் மறுத்து வருகிறது. இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு, கடந்த 57 ஆண்டுகளாக இந்த அரசியற் புறக்கணிப்புத் தொடர்கிறது. வேண்டப்படாத இனத்தவராக, ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, புறந்தள்ளி வைக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து சலித்துப்போன தமிழர், சிங்கள ஆட்சியமைப்பையும் அதன் அதிகாரபீடத்தையும் ஒதுக்கிப் புறக்கணிக்கத் தீர்மானித்து விட்டனர். சிறீலங்காவின் அரச அதிபர் தேர்தலில், பெரும்பான்மையான தமிழ் மக்கள் வாக்களிக்காதமை இந்தப் புறக்கணிப்பின் காத்திரமான வெளிப்பாடாகும்.
சிங்களத்தின் அரச அதிபரைத் தீர்மானிக்கும் வாக்குப் பலம் இருந்தபோதும் அந்த வாய்ப்பினைப் பயன்படுத்த எமது மக்கள் விரும்பவில்லை. வேட்பாளர்கள் மீதான தனிப்பட்ட விருப்பு வெறுப்பாகவோ அவர்களது கட்சிகள், கொள்கைகள் மீதான தீர்ப்பாகவோ இதனைக் கருதுவது தவறு. ஒட்டுமொத்தமாகச் சிங்கள ஆட்சியமைப்பில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆழமான விரக்தியினதும் நம்பிக்கையீனத்தினதும் வெளிப்பாடாகவே இத்தேர்தற் புறக்கணிப்பு நிகழ்ந்துள்ளது. தமிழரின் அரசியற் போராட்ட வரலாற்றில் இதுவொரு பாரதூரமான திருப்பத்தை சுட்டிக்காட்டுகிறது. சிங்கள அரசியல் ஆட்சிமுறையில் நம்பிக்கையிழந்த தமிழீழ மக்கள், தனிவழி சென்று தமது அரசியல் தலைவிதியைத் தாமே நிர்ணயிக்கத் துணிந்துவிட்டனர் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.
சிங்களத் தேசமானது ஒரு புதிய தேசத் தலைவனைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. அந்தத் தலைவனின் கீழ் ஒரு புதிய ஆட்சிபீடம் பதவி ஏறியுள்ளது. இந்த ஆட்சியமைப்பானது பிரத்தியேகமாகச் சிங்களப் பெரும்பான்மை மக்களால், அவர்களது வாக்குப் பலத்தால் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த ஆட்சியமைப்பிற் சிறுபான்மைத் தேசிய இனத்தவரின் பங்களிப்பு இருக்கவில்லை. இது முற்று முழுதாகவே ஒரு சிங்களப் பௌத்த ஆட்சிபீடமாகும். இதனால் மகிந்த ராஜபக்சா இலங்கை வாழ் மக்கள் சமூகங்கள் அனைத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர் சிங்கள - பௌத்த மக்களின் நலனைப் பேணும் அரச அதிபராகவே ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அரச அதிபர் மகிந்தாவின் சிந்தனைகளையும் கொள்கைகளையும் நாம் நன்கறிவோம். தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக அவரது அரசியல் தரிசனத்திற்கும் தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கும் மத்தியிலான இசைவற்ற இடைவெளிகளையும் இணங்காத முரண்பாடுகளையும் நாம் அறிவோம். இவைபற்றி நான் இங்கு ஒப்பீட்டு மதிப்பாய்வு செய்ய விரும்பவில்லை.
சமீபத்திய அரச அதிபர் தேர்தலும் அதனை எமது மக்கள் புறக்கணித்ததால் ஏற்பட்ட ஆட்சிமாற்றமும் தமிழ், சிங்கள தேசங்கள் மத்தியில், அரசியல் ரீதியாக, ஆழமான ஒரு பிளவை ஏற்படுத்தியுள்ளன. தென்னிலங்கையில், சிங்கள - பௌத்தம் மேலாண்மை பெற்றுள்ள அதே சமயம், தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியம் நிலைப்பட்டு, பலப்பட்டு, எழுச்சிபெற்று வருகிறது. சிங்களத்தில் மகிந்த ராஜபக்சாவின் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. தமிழீழத்திலும் தமிழ்த் தேசிய எழுச்சியின் திண்ணிய வடிவமாக எமது விடுதலை இயக்கத்தின் ஆட்சியமைப்பு விரிவடைந்து, வலுவடைந்து இயங்கி வருகிறது.
சிங்கள இராணுவ ஆதிக்கத்திலிருந்து எமது தாயக நிலத்தின் பெரும் பகுதியை நாம் மீட்டெடுத்து, அங்கு தன்னாட்சி அதிகாரமுள்ள ஆட்சியமைப்பை நிறுவி, அதனை நேர்த்தியாக நிர்வகித்து வருகிறோம் என்பது இன்று உலகறிந்த உண்மை. பெருந்தொகை மக்கள் வாழும் நிர்வாகக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களையும் அதனைக் கட்டிக்காக்க பலம்பொருந்திய படைத் துறையையும் சட்டம் ஒழுங்கைப் பேணக் காவல்துறையையும் நீதித்துறையையும் அத்தோடு ஒரு நிழல் அரசாங்கத்திற்குரிய அடித்தளக் கட்டுமாணங்களையும் கொண்டதாக பிரமாண்டமான நிர்வாக அமைப்பை நாம் இயக்கி வருகிறோம்.
பெரும் தொகையான எமது மக்கள் இன்னும் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த போதும், உணர்வாலும் இலட்சியத்தாலும் அவர்கள் எமது விடுதலை இலட்சியத்திற்குப் பின்னால் அணிதிரண்டு நிற்கிறார்கள். இந்தக் கள யதார்த்தத்தை, அரசியல் மெய்ம்மையைச் சிங்கள ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதுடன், எமது விடுதலை இயக்கத்தை ஒரு 'பயங்கரவாதக் குழு|'என உலகத்திற்குச் சிறுமைப்படுத்திச் சித்திரித்துக்காட்ட முனைந்து வருகிறார்கள். இந்தப் பொய்யான பரப்புரைகளை நம்பி, உலக நாடுகள் சில எமது இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் தொடர்ந்தும் வைத்திருப்பது எமக்கு வேதனையையும் ஏமாற்றத்தையும் தருகிறது.
சமாதான முயற்சியின் பாதுகாவலர் என உரிமை கோரி, இலங்கையின் இனப்பிரச்சினையில் ஆர்வமும் அக்கறையும் காட்டிய உலக வல்லாதிக்க நாடுகள், ஒரு தரப்பினரான எமது விடுதலை இயக்கத்தைப் ஷபயங்கரவாதிகள்| என ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு, மறுதரப்பினரான சிறீலங்கா அரசின் நலன்களுக்குச் சார்பாக நிலைப்பாடு எடுத்தன. இது பேச்சுக்களிற் பங்கு கொண்டோரது சமநிலை உறவை வெகுவாகப் பாதித்தது. அத்தோடு எமது அரசியல் தகைமையை நாமே தீர்மானிக்கும் சுதந்திரத்தையும் பாதித்தது. இந்நாடுகளின் ஒருதலைப்பட்சமான நிலைப்பாடும் குறுக்கீடும் சமாதானப் பேச்சுக்கள் முறிந்துபோவதற்கும் ஒரு காரணமாக அமைந்தன. பயங்கரவாதம் என்ற சொற்பதத்திற்கு ஒரு தெளிவான, தீர்க்கமான வரைவிலக்கணம் இல்லாததால் தர்மத்தின் வழிதழுவி நிகழும் நியாயமான அரசியற் போராட்டங்களும் பயங்கரவாதமாகத் திரிவுபடுத்தப்படுகின்றன. இந்தவகையில் இனவாத ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடும் சுதந்திர இயக்கங்களுக்கும் பயங்கரவாதச் சேறு பூசப்படுகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான இன்றைய சர்வதேச எதிர்ப்பியக்கத்தில் அடக்குமுறை அரசுகளின் இராணுவப் பயங்கரவாதம் மூடிமறைக்கப்படுகிறது. ஆயினும் அந்த அரச பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்பவர்கள் மீதே பயங்கரவாத முத்திரை குத்தப்படுகிறது. இந்தத் துர்ப்பாக்கிய நிலைதான் எமது விடுதலை இயக்கத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது.
நோர்வே நாட்டின் அனுசரணையுடனும் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் கடந்த நான்கு ஆண்டுக் காலம்வரை இழுபட்ட சமாதான முயற்சியின்போது சிங்கள அரச தரப்பினால் ஏற்பட்ட சிக்கல்கள், போடப்பட்ட முட்டுக்கட்டைகள், இழைக்கப்பட்ட நம்பிக்கைத் துரோகங்கள் எல்லாவற்றையுமே உலகம் நன்கறியும். எத்தனையோ இம்சைகள், ஆத்திரமூட்டல்கள் மத்தியிலும் நாம் பொறுமையை இழந்து, சமாதானக் கதவுகளை மூடிவிடவில்லை என்பதையும் சர்வதேசச் சமூகம் அறியும். நான்கு ஆண்டுக்கால அமைதிப் பயணத்திற் சமாதானத்தின் மீதான எமது பற்றுறுதியை நாம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துக் காட்டிவிட்டோம்.
எனது அன்பான மக்களே,
எமது போராட்ட இலட்சியத்தை அடையும் அணுகுமுறை குறித்து ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கவேண்டிய காலத்தை நாம் நெருங்கிவிட்டோம். இந்த வரலாற்றுத் திருப்புமுனையான கட்டத்தில், எமக்கு ஒரு புதிய சவாலாக, சிங்களத் தேசத்தில் ஒரு புதிய அரச அதிபரின் தலைமையில், ஒரு புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளது. இந்தப் புதிய அரசு எமக்கு நேசக் கரம் நீட்டுகிறது. எமது விடுதலை இயக்கத்துடன் பேசுவதற்கு விருப்பம் தெரிவிக்கிறது. போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து அமைதி பேணப் போவதாகச் சொல்கிறது. தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் ஒரு புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கப் போவதாக அறிவித்து வருகிறது. ஜனாதிபதி மகிந்தாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்ட சிந்தனைகளை ஆழமாக அலசிப் பார்க்கும் பொழுது தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளையோ அதன் மூலக் கோட்பாடுகளையோ அவர் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. கொள்கை ரீதியாக எமக்கும் அவருக்கும் மத்தியிலான இடைவெளி மிகப்பெரிது. எனினும் அவர் நடைமுறை அரசியலில் நம்பிக்கை கொண்ட யதார்த்தவாதி என்று கருதப்படுவதால், சமாதான வழிமுறையை எவ்விதம் கையாளப் போகிறார் என்பதையும், தமிழ் மக்களுக்கு எவ்விதம் நீதி வழங்கப் போகின்றார் என்பதையும் முதலில் நாம் அறிந்து கொள்வது அவசியம். ஆகவே, ஜனாதிபதி ராஜபக்சாவின் நகர்வுகளை, அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைச் சிறிது காலம் நாம் பொறுத்திருந்து பார்ப்பதென முடிவு செய்துள்ளோம். பொறுமையிழந்து, நம்பிக்கையிழந்து, விரக்தியின் விளிம்பை அடைந்துள்ள எமது மக்கள் இனியும் பொறுத்துப் பொறுத்துக் காத்திருக்கத் தயாராக இல்லை. ஆகவே, வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய கால இடைவெளிக்குள், எமது மக்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்தி செய்யும் வகையில், ஒரு நியாயமான தீர்வுத் திட்டத்தைப் புதிய அரசாங்கம் முன்வைக்க வேண்டும். இது எமது இறுதியான, உறுதியான, அவசர வேண்டுகோளாகும். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, கடும்போக்கைக் கடைப்பிடித்து, காலத்தை இழுத்தடிக்கப் புதிய அரசாங்கம் முற்படுமானால் நாம் எமது மக்களுடன் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை, எமது தாயகத்தில் தன்னாட்சியை நிறுவும் தேசச் சுதந்திரப் போராட்டத்தை அடுத்த ஆண்டில் தீவிரப்படுத்துவோம்.
எமது மாவீரர்களின் வீரம் செறிந்த போராட்ட வாழ்வையும், எமது மண்ணின் விடுதலைக்காக அவர்கள் புரிந்த மகத்தான தியாகங்களையும் நினைவுகூரும் இப்புனித நாளில், எத்தகைய இடர்களையும் எத்தகைய துன்பங்களையும் எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுப்போமென உறுதிபூணுவோமாக.
'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" |