"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > உமறுப் புலவரின் சீறாப்புராணம் - காண்டம் 1 (விலாதத்துக் காண்டம்) - பாடல்கள் (1- 596) > பாடல்கள் (597-1240) > காண்டம் 2 (நுபுவ்வத்துக் காண்டம்) பாடல்கள் (1-698 ) > பாடல்கள் (699 - 1104) > காண்டம் 3 (ஹிஜூறத்துக் காண்டம்) - பாடல்கள் (1- 607) > பாடல்கள் (608-1403)
உமறுப் புலவரின் சீறாப்புராணம்
காண்டம் 2 (நுபுவ்வத்துக் காண்டம்)
படலங்கள் 9 -21 / பாடல்கள் (699 - 1104)
Acknowledgements:
Etext preparation: Mr. Vassan Pillai, New Mexico, USA
Proof-reading: Dr. Ram Ravindran, Indianapolis, Indiana, USA
Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
தசைக் கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம்
(699 - 733)
ஹபீபு ராஜா வரிசை வரவிடுத்த படலம்
(734 - 774)
ஈமான் கொண்டவர்கள் ஹபஷா ராச்சியத்துக்குப் போந்த படலம்
(775- 811)
மானுக்குப் பிணை நின்ற படலம்
(812 - 883 )
ஈத்தங்குலை வரவழைத்த படலம்
(884 - 900 )
ஒப்பெழுதித் தீர்ந்த படலம்
(901- 939)
புத்து பேசிய படலம்
(940 - 951 )
பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம்
(952- 967)
பருப்பத ராஜனைக் கண்ணுற்ற படலம்
(968-1002)
அத்தாசு ஈமான் கொண்ட படலம்
(1003 -1014)
ஜின்கள் ஈமான் கொண்ட படலம்
(1015 - 1057)
காம்மாப் படலம்
(1058 - 1086)
விருந்தூட்டுப் படலம்
(1087-1104)
2.9 தசைக் கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம் (699 - 733)
699
மருமலர் சுமந்து தேன்வழிந் தொழுகு
மணிப்புய முகம்மது நபியுந்
தெரிதருந் தீனி னெறிமுறை யவருஞ்
சிந்தையிற் களிப்பொடுஞ் சிறப்ப
வரியமெய்ப் பொருளை முறைமுறை வணங்கி
யற்றையிற் கடன்கழித் தமரர்
திருவடி பரவத் தம்முயி ரனைய
செல்வரோ டுறைந்திடுங் காலை.2.9.1
700
பூரணக் களப கனதன மடவார்
பொருதிரைக் கவரிகா லசைப்ப
வாரணி முரச மதிர்தரச் சீறு
மடங்கலின் கொடிமுனங் குலவ
வாரணத் தலைவர் மருங்கினிற் பிரியா
தரசர்க ளுடன்வரத் தொலையாக்
காரணக் குரிசின் முகம்மதி னிடத்தில்
வந்தனன் ஹபீபெனு மரசன்.2.9.2
701
செம்மலர்ப் பதத்தில் வெண்கதிர் குலவுஞ்
செழுமணி முடிசிரஞ் சேர்த்தித்
தம்மினத் தவர்க ளூடன்சலா முரைத்துத்
தக்கதோ ரிடத்துநின் றவனை
வம்மெனத் திருவா யுரையருள் கொடுத்து
முகம்மது மருங்கினி லிருத்தி
வெம்மையி னமுதக் கனியெனுங் கலிமா
விளம்புக வெனவிரித் துரைத்தார்.2.9.3
702
நன்றெனப் புகழ்ந்து மனங்களித் தெழுந்து
நரபதி திமஷ்கினுக் கரசன்
வென்றிகொ ளரசே யினமொரு வசனம்
வினவுதல் வேண்டுமென் னிடத்தி
லென்றவ னுரைப்ப முகம்மது நபியு
மின்புறு முறுவல்கொண் டினிதாய்த்
துன்றுமென் மனத்திற் றெரிந்துன் மகடன்
றொல்வினை தௌிப்பதற் கென்றார்.2.9.4
703
ஆண்டகை யுரைத்த புதுமொழி நறுந்தே
னகத்தினிற் புகுந்துடல் களித்து
வேண்டுநற் பதவி படைத்தனன் சிறியேன்
விளைத்திடும் பவக்கட றொலைத்தேன்
காண்டகாப் புதுமை யனைத்தையுந் தெரிந்தேன்
கடிகம ழணிமலர்ப் பதத்தைத்
தீண்டவும் பெற்றே னினியரும் பொருளொன்
றிலையென வுரைத்தனன் றிறலோன்.2.9.5
704
புதியவன் றூதர் முகம்மதுந் திமஷ்கைப்
புரந்திடு மருந்தவத் தவனு
மதுரமென் மொழியா லளவளா யுளங்கண்
மகிழ்ந்தினி திருக்குமக் காலை
ககனிழிந் தரிய பெருஞ்சிறை யொடுக்கிக்
கடிதினிற் கண்ணிமைத் திடுமுன்
செகதலத் துறைந்த நபியிடத் துவந்தார்
தெரிமறை கொடுஜிபு ரீலே.2.9.6
705
மருங்கினி லெவர்க்குந் தோன்றிடா துறைந்து
வல்லவன் சலாமெடுத் தியம்பிப்
பெருங்குலம் விளக்கு முகம்மதை நோக்கிப்
பிறழ்ந்துருத் தோன்றிலாத் தசையை
நெருங்குவெண் கொடிக்கஃ பாவிடத் தேகி
நிரைமயிர்ப் போர்வையான் மூடி
யருங்கதிர்க்கல சத் தாபுஸம் ஸத்தி
னரியநீர் கரங்கொடு தௌித்தே.2.9.7
706
இறைவனை நோக்கித் துஆவிரந் தினிரே
லிலங்குருத் தோன்றுமென் றிசைத்துச்
சிறைநிறந் தோன்றா தமருல கதனில்
ஜிபுறயீ லேகிய பின்னர்
கறைநிறங் குலவுஞ் செழுங்கதிர் வடிவேற்
கரதல முகம்மது நயினா
ரறைமுர சதிரத் திமஷ்கிறை யவனு
மெழுந்தன ரரியகஃ பாவில்.2.9.8
707
வானவ ரிறையோ னருட்படி யமைத்த
மக்கமா நகரியி னாப்பண்
கானலர் பொதுளுங் ககுபத்துல் லாவிற்
கடிமதிட் புறத்தொரு பாலில்
தீனவ ருடனு மணிபெற விருந்து
செவ்வியன் ஹபீபினை நோக்கி
யீனமற் றுனது மகவெனுந் தசையை
யிவண்கொடு வருகவென் றிசைத்தார்.2.9.9
708
அந்தநன் மொழிகேட் டடற்படை மாலிக்
கருளிய ஹபீபெனு மரசன்
சிந்தையிற் களித்து மருங்குநின் றவரைத்
திண்ணிய தசையினைக் கொணர்கென்
றுந்திட வுரைப்ப வோடினர் சிலவ
ருறுபொருட் பொதிந்தெனப் பொதிந்து
தந்தபெட் டகத்தி னொடுமெடுத் துவந்தார்
தனுவிடு சரத்தினுங் கடிதின்.2.9.10
709
முன்னுறப் பணித்த பெட்டகத் திருந்த
முதிர்தசைக் கட்டியை யெடுத்து
மன்னிய குரிசின் முகம்மது நபிமுன்
வைத்தனர் சுரிகுழற் கருங்கண்
மின்னெனப் பிறழு மடந்தைய ருடனும்
விரிதிரைப் பசுங்கட லனைய
வந்நகர் மாக்க ளனைவரும் விரைவி
னடுத்ததி சயித்திட வன்றே.2.9.11
710
கடல்கிடந் துடுத்த பெரும்புவி யிடத்திற்
கண்டறி யாப்பெருங் காட்சி
மடலவிழ் கமல வாவிசூழ் திமஷ்கு
மன்னவன் மகவெனப் பிறந்து
மிடலுறுங் கதிர்வாண் முகம்மது பொருட்டால்
விளைக்குங்கா ரணத்தினுக் கிருந்த
வுடலெனுந் தசைத னுயிரலா தியைந்தோ
ருறுப்பெனும் வடிவுபெற் றிலவே.2.9.12
711
பொருந்துறுங் குறிப்பொன் றணுவினு மிலதாய்ப்
பொருவறும் புதுமையி னெதிரி
னிருந்தவத் தசையை முகம்மது நோக்கி
யிறைவ னருளெனக் குறித்துத்
திருந்துற மயிரின் போர்வையிற் போர்த்துச்
செங்கரத் தரியநீ ரேந்தி
மருந்தினு மமர ரமுதினுஞ் சிறப்ப
மகிழ்வொடுந் தௌித்துநின் றனரால்.2.9.13
712
மணியெனச் சிறந்து மலரின்மென் மையவா
மழைச்செழுங் கரங்களை யேந்தி
யணிதரப் போற்றிக் கனிந்தற நெகிழ்ந்த
வகத்தினி லரியநா யகனைத்
தணிவிலா துயர்த்திப் பலபல புகழாற்
சாற்றிநன் னெறிமுறை தவறாப்
பணிபணிந் திரந்தார் தீனிலை நிறுத்தும்
பதுமமென் பதமுகம் மதுவே.2.9.14
713
பூதலத் தெவர்க்கு மறைநெறி புதுக்கிப்
பொருவருஞ் சுவனநா டளிப்பத்
தூதென வுதித்த முகம்மதின் துஆவைத்
துய்யவ னுறக்கபூ லாக்கப்
பாதகக் குபிரர் மனம்பதை பதைப்பப்
பலன்படாப் பெருந்தசைத் திரட்சி
தீதறத் தோன்று மவயவஞ் சிறப்பத்
தெரிவையின் றிருவுரு வெடுத்த.2.9.15
714
வரியிழை மயிர்ப்போ ருவையெனுங் கரிய
வல்லிரு ளிடையெழு மதிபோல்
விரிகடற் பெருநீ ருண்டுசூ லுளைந்த
விசும்பிடை யுதித்தமின் குலம்போ
லரியின நறவுண் டலம்புகுங் குமத்தா
ரணிபுய முகம்மதின் கலிமாத்
தெரிதரப் பவள விதழ்திறந் தோதிச்
செறிதரு மவையிடத் தெழுந்தாள்.2.9.16
715
விண்ணகத் தரம்பைக் குலத்தினும் வடிவாய்
விரிகடன் மகளினும் வியப்பாய்
மண்ணகத் துறையு மெழுவகைப் பருவ
மடந்தைய ரணிந்திடு மணியாய்க்
கண்ணினுக் கடங்கா தழகினைச் சுமந்த
கனியுரு வெடுத்தகாட் சியதாய்ப்
பெண்ணலங் கனிந்து நலனெழில் பிறங்கப்
பெருநிலத் தெழுந்துநின் றனளே.2.9.17
716
மங்குலிற் பெருகி விடத்தினுங் கருகி
வரியற லினுமினு மினுத்துத்
தங்கிய யிதழித் திரளினுந் திரண்டு
சைவலத் தொடரினுந் தழைத்துக்
கொங்குறக் குழன்று நெறித்துவார்த் தொழுகிக்
குவலயத் திளைஞர்கண் வழுக்க
வெங்கணன் னயினார் முன்னைநா ளழைத்த
விருளினு மிருண்டமைக் குழலாள்.2.9.18
717
கீற்றிளம் பிறையுங் கணிச்சியின் வளைவுங்
கிளர்ந்தசெவ் வகத்தின்மென் மலருந்
தோற்றிடத் தோற்றி விளங்குநன் மலருந் தோற்றிடத்
தோற்றி விளங்குநன் னுதலாள் சுடருமுள் வாரணத் தலகு
மாற்றருந் தனுசுங் கருங்கொடி யெதிர்வு
மாற்றிமைக் கட்கடற் கரையின்
மேற்றிகழ் கரிய பவளமென் கொழுந்தாய்
விளங்கிய செழும்புரு வத்தாள்.2.9.19
718
மடற்குழை கிழித்துத் தடக்குழல் குழைத்து
வரியளி யினச்சிறைப் படுத்திக்
கடற்குளந் தேறா தலைதரச் செய்து
கணையயில் கடைபடக் கறுவி
விடத்தினை யரவப் படத்திடை படுத்தி
மீனினம் பயப்படத் தாழ்த்தித்
திடக்கதிர் வடிவா ளெனக்கொலை பழகிச்
செவந்தரி படர்ந்தமை விழியாள்.2.9.20
719
வள்ளையை வாட்டி யூசலை யசைத்து
மண்ணெழி லாடவ ருயிரைக்
கொள்ளைகொண் டுடலங் குழைப்பதற் கன்றோ
குழையெனும் பெயரிடுங் குழையா
ளெள்ளையுஞ் சிறந்த குமிழையும் வாசத்
தினியசண் பகமலர் தனையும்
விள்ளருங் கானத் திடையலர் படுத்தி
விலங்கிட விலங்கிய குமிழாள்.2.9.21
720
வெண்னிலாத் தரள நகைநிரை பொதிந்து
விரிந்தசெம் பவளமோ விலவோ
வண்ணவாய்ச் செழுஞ்சே தாம்பலின் மலரோ
வடிவுறு தொண்டையங் கனியோ
வெண்ணிநோக் கினருக் குவமையி னடங்கா
தெழில்குடி யிருந்தமு தொழுகிப்
பண்ணெலாஞ் சுவற்றி யாடவ ரிருகட்
பார்வையிற் செவந்தமெல் லிதழாள்.2.9.22
721
முல்லையு முருந்து நிரைத்தன போன்று
முத்தெனத் திகழ்ந்தற நெருங்கி
மெல்லெனச் செவந்த மணியினிற் பிரித்து
விளக்கியொப் பித்துவைத் தனபோல்
வில்லிடக் கவின்கொண் டிருபுறத் தொழுங்கும்
விரிந்தபூங் காவிகள் படர்ந்து
சொல்லரு மனத்தா டவர்மய லிருளைத்
துணித்திட நகைக்குமென் னகையாள்.2.9.23
722
பாலென வௌிறாக் கனியென வழியாப்
பசுமடற் றேனெனச் சிதறா
வேலவார் குழலார் செழுங்கரத் தேந்து
மிளங்கிளி மொழியெனக் குழறா
வேலைவா ழமுதம் பிறந்தென வுலகம்
விளங்கிடப் பொன்மழை பொழியச்
சாலவு மிறந்த தருவினந் தழைப்பத்
தரவரு மினியமென் மொழியாள்.2.9.24
723
வெய்யவ னலர்த்த விகசிதம் பொருந்தி
விரிநறைக் கமலமென் மலரிற்
செய்யவ ளிருப்ப தெனவெழில் சிறந்து
செழுங்களைக் கதிர்கள்கான் றொழுக
வையக மதிப்பத் திமஷ்கிறை யுரைத்த
வழிமுறை முகம்மதங் கழைத்த
துய்யவெண் மதிய நிகரென வுலகிற்
சொலும்படிச் சிறந்தமா முகத்தாள்.2.9.25
724
திரளினின் மணியாய் முரல்வினின் வளையாய்ச்
செவ்விநெய்ப் பினிற்கமு கெனலாய்
விரிகதிர் மணிப்பூண் டாங்குமென் கழுத்தாள்
வேயினைக் கரும்பைமெல் லணையச்
சருவிடப் பசந்து திரண்டுமென் மையவாய்த்
தழைத்தெழில் பிறங்கிய தோளாள்
வரிவளை சுமந்தி யாழினும் வியந்து
மயிர்நிரைந் தொளிருமுன் கையினாள்.2.9.26
725
குலிகமார்ந் தனபோ லரக்கினுஞ் சிவந்த
கொழுமடற் காந்தளங் கரத்தாள்
மலிசினைக் கௌிற்றின் வனப்பினும் வனப்பாய்
மணியணி சுமந்தமெல் விரலாள்
பொலிவுறச் சிவந்தீந் திலையெனக் கிளர்ந்து
புனக்கிளி நாசியின் வடிவாய்
நலிவிலா திளைத்த வயிரவொண் கதிராய்
நலங்கிடந் திலங்கிய வுகிராள்.2.9.27
726
தடித்தடி பரந்திட் டெழுந்தபூ ரித்துத்
தளதளத் தொன்றொடொன் றமையா
தடர்த்திமை யாத கறுத்தகண் ணதனா
லருந்தவத் தவருயிர் குடித்து
வடத்தினு ளடங்கா திணைத்தகச் சறுத்து
மதகரிக் கோட்டினுங் கதித்துப்
படத்தினும் பிறங்குஞ் சுணங்கணி படர்ந்த
பருமிதத் துணைக்கன தனத்தாள்.2.9.28
727
பரிமளச் சிமிழோ குலிகச்செப் பினமோ
பசுமதுக் கலசமோ வமிர்தம்
பெருகிய குடமோ காமநீ ருறைந்த
பேரிளங் குரும்பையோ கதிரின்
முருகுகொப் பளிக்கும் வனசமென் முகையோ
முழுமணி பதித்தமென் முடியோ
கரையிலா வழகா றொழுகிய வரையோ
கவலுதற் கரிதெனுந் தனத்தாள்.2.9.29
728
தனமெனு மிருகோட் டத்தியோ ராலிற்
றளைபடப் பிணித்தசங் கிலியோ
மனநிலை கவருங் கடிதட வரவின்
வாலணி கிடந்ததோ வலது
சினவுவிற் காமன் மலைக்குந்தன் மனைக்குஞ்
சேர்த்திய மயநடு நூலோ
வினனுட னழகு நிறைகுடி யிருந்த
விவள்வயி றணிமயி ரொழுங்கே.2.9.30
729
பெருவரை யிடத்தி னடியுறைந் திலங்கும்
பேரெழிற் சுமந்தபொற் கொடியோ
விரிகதிர் மணிமே கலைநடுக் கோத்து
விளங்கிட நுடங்குமெல் லிழையோ
குருமுகம் மதுநன் மொழிவழி யடங்காக்
குபிர்க்குலந் தேய்ந்தெனத் தேய்ந்து
தெரிவரி தெனலா யுவமையிற் பொருவாச்
சேயிழை மடந்தைசிற் றிடையே.2.9.31
730
கதிரொளி வழுக்கி னரம்பையைப் பழித்துக்
கவினுறுந் திரட்சியிற் கதத்த
மதமலைக் கரத்தின் வனப்பினை யழித்து
மாறரு மிருதுமென் மையினி
லிதமுறச் சிவந்த விலவினைக் கடைந்திட்
டிணையடி யணையெனப் படுத்திப்
புதுமையின் விளங்கித் தவத்துறை யவரும்
புகழ்ந்திடச் சிறந்தபொற் குறங்காள்.2.9.32
731
அணிமுகட் டலவன் றனைமுகந் தடுத்த
வரிவரிச் சினைவராற் போன்று
மணியினிற் செறித்த தூணியும் பொருவா
வடிவதாய் வெற்றிமன் னவர்முன்
றணிவிலா திசைக்குங் காளமும் பொருவாத்
தன்மைய வாகிமென் மையவாய்ப்
பணிபல சுமந்து சிறுமயிர் நெருங்காப்
பண்புறு மிணைக்கணைக் காலாள்.2.9.33
732
நிறைதரு தராசின் வடிவறும் பரடாள்
நிறைமணிப் பந்தெனுங் குதியாள்
பொறையொடுங் கமடத் தினம்வனம் புகுந்து
பொருவறா தைந்தையு மொடுக்கி
மறைபடத் தவஞ்செய் திணைபடற் கரிதான்
மதித்திடற் குறும்புறந் தாளாள்
கறைதரா மணியின் குலமென விரல்கள்
கவின்கொளச் சிவந்தமென் பதத்தாள்.2.9.34
733
வனமயிற் சாயற் குலமென வெழுந்து
மரைமல ரிதழின்மேற் குலவு
மனமென நடந்து நபிமுகம் மதுத
மடிமலர்ப் பதத்தினி லிறைஞ்சி
யினியன புகழ்ந்து பலரதி சயிப்ப
வினமுகிற் கருங்குழ னெகிழப்
புனைமணி பிறழ மின்னென நுடங்கிப்
புதுமையிற் றோன்றநின் றனளால்.2.9.35
தசைக் கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 9க்குத் திருவிருத்தம்... 733
2.10 ஹபீபு ராஜா வரிசை வரவிடுத்த படலம் (734 - 774)
734
பூங்கொடி யெனமுன நின்ற பூவையைத்
தேங்கம ழமுதவாய் திறந்து நந்நபி
வாங்குதெண் டிரைத்தடக் திமஷ்கு மன்னவன்
பாங்கினி லுறைகெனப் பரிவிற் கூறினார்.2.10.1
735
வரிவிழிச் சிறுநுதன் மடந்தை நன்னெறிக்
குருவிடம் விடுத்தெழில் குலவச் சென்றணி
விரிகதி ரிலங்கிலை வேற்கை மன்னவன்
றிருவடி கருங்குழற் சென்னி சேர்த்தினான்.2.10.2
736
தெண்டனிட் டெழுந்தபொன் மயிலைச் சீர்பெறக்
கண்டன னுவகையங் கடற்கு ளாயினன்
விண்டலத் தினிலாப் பதவி வெற்றியைக்
கொண்டன னெனமனக் குறைவு நீக்கினான்.2.10.3
737
தெரிவைபின் வரத்திமஷ் கிறைவர் செவ்விய
குருசினந் நபிகொழுங் கமல மெல்லடி
பரவிநற் புகழ்சில பகர்ந்து வாக்கொடும்
வரிசையி னெறிக்கலி மாவை யோதினார்.2.10.4
738
அரசரு மமைச்சருந் திமஷ்கி னாதிபர்
பரிகரி வீரரும் படைக்கு ழாங்களுந்
தெரிவையின் றொகுதியுஞ் சிறந்த நந்நபிக்
குரிமையி னொடுங்கலி மாவை யோதினார்.2.10.5
739
ஈனமொன் றில்லதோ ரிறைவ னாகிய
தானவன் றனையுளத் திருத்தித் தக்கதோர்
வானவர் புகழ்முகம் மதுவை வாழ்த்திநற்
றேனெனுங் கடற்பெருந் தீனி லாயினார்.2.10.6
740
மறைமுறை யொடுந்தின வணக்க நீங்கிலா
திறைவனைக் தொழுதிசு லாத்தி னேர்வழி
குறைவறப் படித்தருங் குபிரை நீக்கியே
முறைதவ றாப்பெரு முசுலி மாயினார்.2.10.7
741
மானகர் திமஷ்குமன் னவருந் தம்பெருஞ்
சேனையு முகம்மதின் றிருமு னாகிச்செங்
கான்மல ரடியிணை யிறைஞ்சிக் கைகொடுத்
தானநல் லறிவராய்ப் புறப்பட் டாரரோ.2.10.8
742
நபியெனு முகம்மதை வாழ்த்தி நன்னெறிப்
புவியெனு நகரினோர் புறத்தி னீங்கிநின்
றபுஜகில் தனையழைத் தரசர் நாயகர்
கவினுறும் பலமொழி யெடுத்துக் காட்டினார்.2.10.9
743
மந்திர மறைமுகம் மதுவை வாக்கினிற்
சிந்தையி லிகழ்ந்தவர் நரகஞ் சேர்குவ
ரந்தமி னாயகன் றூத ராமெனப்
புந்தியிற் புகழ்வர்பொன் னுலகம் போதுவார்.2.10.10
744
மலையென நிமிர்திமிள் திமஷ்கு மன்னவர்
நிலைகுலை மனத்தபூ ஜகில்த னெஞ்சினிற்
கலைமறை தௌிவினுங் கார ணத்தினும்
பலதர முரைத்துத்தம் பதியை நோக்கினார்.2.10.11
745
மதகரி யிருபுற னெருங்க மாப்படை
கதழ்வொடுங் கதியொடுங் கனைத்து முன்செலப்
பதலையு முரசமும் பம்பக் கானக
நதிகளுங் கடந்தய னடந்து போயினார்.2.10.12
746
கரித்திர ளொலித்தகம் பலையுங் காவளர்
பரித்திர ளொலித்தகம் பலையும் பண்முர
சிரைத்துந் தீன்கலி மாவை யின்புற
வுரைத்திடுந் தொனிக்கட லுடைத்துக் காட்டுமால்.2.10.13
747
கனியினுந் தேனினுங் காய்ந்த பாகினு
மினியன புதுமறை யியற்று நாவினர்
நனிபல சூழ்வர நகரை நண்ணினார்
பனிவரை யினும்புகழ் பரித்த பான்மையார்.2.10.14
748
விண்ணுறை கொடிமதிள் திமஷ்கு மேவிய
வண்ணலும் பதிமுதி யவருக் கன்பொடு
பண்ணருந் தீன்மொழி பயிற்றி நன்னெறி
யெண்ணிலை பெறவிசு லாத்தி லாக்கினார்.2.10.15
749
தீன்முறை நடத்திய திமஷ்கு மன்னவர்
மான்மதங் கமழ்ந்தமெய் நபிக்கு மாசிலாப்
பான்மதிக் கலைகலை பணிபொன் பட்டிவை
கூன்வெரிந் தொறுவினிற் கொடுத்த னுப்பினார்.2.10.16
750
நிதிமணி பணிபல நிறைந்த வொட்டகப்
பொதிபதிற் றொடுபரற் புடவி நீந்திவான்
மதிநடந் துலவிய மக்க மாகிய
பதியினுக் கடுத்தொரு பாலுற் றாரவர்.2.10.17
751
அருமறை நபிமுகம் மதுவுள் ளன்புறக்
குருமணி யொடுநிதி திமஷ்கிற் கொற்றவர்
வரவிடுத் தனரென வழங்கும் வாசகந்
தெரிதர அபூஜகில் செவியிற் சார்ந்ததே.2.10.18
752
மடித்தசிந் தையினெழுந் தேகி மன்னவன்
கொடுத்தனுப் பியநிதிக் குவையும் பண்டமும்
விடுத்ததிங் கெமக்கென வெகுண்டு வெஞ்சொலாற்
றடுத்தடுத் தனனபூ ஜகிலென் பானரோ.2.10.19
753
ஹபீபா சனுப்பிய கனக மியாவையு
மபுஜகில் தடுத்தன னென்ன வாதிநூற்
புவியினில் விளக்கிநற் புகழ்ந டாத்திய
நபிதிரு முனஞ்சிலர் நவின்றிட் டாரரோ.2.10.20
754
வேறு
உரைவி ளக்கிட முகம்மதுந் தோழர்க ளுடனும்
விரைவி னேகிப்பொன் றடுத்தவ ரெவரென வினவத்
தரையி லியானல திலையென வபூஜகில் சாற்ற
வருள்கி டந்தகட் கடைசிவப் புண்டவப் போதில்.2.10.21
755
உனக்கு வந்தது மோங்கிய தீன்முகம் மதுசீர்
தனக்கு வந்ததுங் கொணர்ந்தவர் சொல்குவர் சரதஞ்
சினக்க வந்திவண் மறிப்பது தகுவதோ செலுநின்
மனைக்கெ னச்சிலர் கூறலு மனத்திடைக் கொதித்தான்.2.10.22
756
மட்டு வார்பொழிற் றிமஷ்குமன் னவர்வர விடுத்த
பெட்ட கத்தையும் பொன்னையும் பிணக்கறக் கரியாய்ப்
பட்ட றத்தௌிந் துமக்கெமக் கெனப்பல ரறிய
வொட்டை வாய்திறந் துரைக்குமென் றபூஜகி லுரைத்தான்.2.10.23
757
உரைத்த வாய்மையிங் கெமக்கியை வதுபடி றுளத்தோய்
விரித்துக் கேட்டரு ளென்றன ரபூஜகில் விரைவி
னிருத்தி யிப்பொரு ணாளையிவ் வூரவ ரறியப்
பரித்த வொட்டகங் கரிபகர்ந் திடுமெனப் பகர்ந்தான்.2.10.24
758
நன்று நன்றெனத் தோழரு முகம்மது நபியும்
பொன்றி கழ்ந்தெழில் குலவிய மனையிடைப் புகுந்தார்
கன்று புன்மனத் தபூஜகில் கிளையுடன் கடிதிற்
சென்று வெண்மலர் செறிதரு மாலயஞ் சேர்ந்தான்.2.10.25
759
ஆல யம்புகுந் தழியுரு வெடுத்தபுத் ததற்குச்
சால மென்மலர்த் தொடையொடும் பலபணி தரித்துக்
கோல மார்ந்தெழத் தீபமுந் தூபமுங் கொடுத்துத்
தால மீதினிற் சிரம்பட விருகரந் தாழ்த்தான்.2.10.26
760
விழுந்து தெண்டனிட் டெழுந்திரு கரம்விரித் தேந்திப்
பொழிந்த நீர்விழி தரவிரந் தேத்திய புகழான்
மொழிந்து வல்வினை தொடுத்திடு முகம்மதின் வாய்மை
யழிந்தென் சொற்பழு தறவர மருள்கவென் றறைந்தான்.2.10.27
761
மரைத்த டந்திகழ் திமஷ்கிறை வரவிடு நிதியந்
தரைத்த லம்புகழ்ந் திடவபூ ஜகில்தனக் கெனவே
நுரைத்துத் தூங்கித ழொட்டைவாய் திறந்தெனை நோக்கி
யுரைத்த ளித்திட வேண்டுமென் பதுமெடுத் துரைத்தான்.2.10.28
762
எதிரி னின்றுதன் றேவதை தனைப்புகழ்ந் தேத்திக்
கதிர்கொள் பொன்முடிக் கோயிலின் வாயிலைக் கடந்த
சதியன் றன்முக நோக்குத றவறெனச் சிவந்து
கொதிகொ தித்தழன் றருக்கன்மேற் கடலிடைக் குதித்தான்.2.10.29
763
அற்றை நாளகன் றிடமறு தினத்தபூ ஜகில்தன்
சுற்ற மோடடைந் தான்றுணைத் தோழர்க ளோடும்
வெற்றி நன்னெறி முகம்மதும் விரைவினி லேகிக்
கொற்ற மன்வர விடுத்தவ ரிடத்தினிற் கூண்டார்.2.10.30
764
ஒட்டை வாய்திறந் துரைப்பதற் கெவர்முன முரைப்ப
திட்ட மாயுரை யெனவபூ ஜகிலுட னியம்பக்
கட்டு ரைப்படிக் கரியினை யெவர்களுங் களிப்ப
விட்டு ரைத்திடென் றுரைப்பதி யானென விரித்தான்.2.10.31
765
நன்று கூறுமு னென்றலு மபூஜகில் நடந்து
சென்று பூம்பொழி லொட்டகை யனைத்தையுந் திரட்டி
நின்று நீவிர்கள் சுமந்திவ ணிறக்கிய நிதியம்
வென்றி மன்னவ னெவர்க்கனுப் பியதென விரித்தான்.2.10.32
766
கேட்ட பூஜகில் நிற்பவொட் டகக்கிளை பதிற்றும்
நாட்டி வைத்திடுஞ் சிலையென நவின்றில மறுகி
மீட்டுங் கேட்டலு நவின்றில வீரமும் வலியும்
போட்டுக் கேட்டனன் பிற்றையும் புகன்றிசைத் திலவே.2.10.33
767
பரித்த வொட்டகை பகர்ந்தில கரியெனப் பலரு
மிரைத்து மாமறை முகம்மதின் றிருமுகத் தெதிர்ந்து
பிரித்தி டாக்கரி யாய்ப்பெரு வாயினைப் பிளந்து
விரித்து ரைத்திட விளம்புமென் றெடுத்துரை விரித்தார்.2.10.34
768
நிகர ரும்பதி முதியவர் நிகழ்த்திடும் வசன
முகம்ம தின்செவிப் புகுதலு மனமிக மகிழ்ந்து
மிகுவி தப்புது மைகடர வொட்டையை விளித்துப்
புகலு மென்றன ரபூஜகில் கெடுமனம் புழுங்க.2.10.35
769
உரைத்த சொல்லுளந் தரித்திடக் கிடந்தவொட் டகங்க
ணிரைத்தெ ழுந்தற வளைநெடுங் கழுத்தினை நீட்டி
விரித்த வாலசைத் துவந்திரு விழிகளை விழித்துப்
பெருத்த வாய்திறந் தறபெனு மொழியினிற் பேசும்.2.10.36
770
வரிசை நாயகன் றூதெனு முகம்மது நபியே
யரசர் கேசரி ஹபீபெனுந் திமஷ்கினுக் கரச
ரிரசி தம்பணி மணிதம னியமிவை யனைத்தும்
பரிச னத்தொடு நுமக்கனுப் பினரெனப் பகர்ந்த.2.10.37
771
உரைத ராவிலங் கினங்கரி யுரைத்ததென் றுரவோர்
தெரித ராப்பெரும் புதுமைகொ லெனச்சிர மசைத்து
விரித ராநிறை பெருங்கடன் மேதினி யனைத்தும்
புரித ராதிப ரிவரெனப் புகழ்ந்தயல் போனார்.2.10.38
772
மருந்தி லாப்பெரும் பிணிவளைத் தெனமதி மயங்கிக்
கரிந்து மாமுகம் வாய்வெளுத் தறத்தலை கவிழ்ந்து
திருந்தி லாமனத் தொடுஞ்சினத் தொடுஞ்செய லழிந்து
பொருந்தி லாதுதன் கிளையொடு மபூஜகில் போனான்.2.10.39
773
கன்ன லஞ்சுவை தீனிலை நிறுத்திய ஹபீபு
மன்னர் மன்னவர் வரவிடு நிதியமு மணியு
நன்ன யம்பெறுந் தோழர்கள் சூழ்வர நயினார்
தந்ந கத்தினிற் செறித்தனர் செழும்புகழ் தழைப்ப.2.10.40
774
மல்ல லம்புவி யிடத்தினில் தீனெறி வழுவா
தில்ல றத்தொடு முதிர்மறை யவரிர வலர்க
ளல்ல ளற்றிடப் பெருநிதி யெடுத்தினி தருளிப்
பல்ல ரும்புகழ் தரநபி யிருந்தனர் பரிவின்.2.10.41
ஹபீபு ராஜா வரிசை வரவிடுத்த படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 10க்குத் திருவிருத்தம்...774
2.11 ஈமான் கொண்டவர்கள் ஹபஷா ராச்சியத்துக்குப் போந்த படலம் (775- 811)
775
மாசி லானருள் பெருகிய மக்கமா நகரி
லாசி லாநபி தீனினை நிறுத்துமந் நாளிற்
பாச மற்றவ னபூஜகில் கிளைபல பகுப்பாய்ப்
பூச லிட்டனர் பெரும்பழி நடுநிலை புகுந்தே.2.11.1
776
சிகையி னீண்முடி குயிற்றிவெண் கதைநடுத் தீற்றி
நகைநி லாத்தரு மேனிலை மக்கமா நகரின்
மிகைம னத்தொடு காபிர்க டினந்தொறும் விளைக்கும்
பகையி னோடரும் பஞ்சமு முடன்பரந் ததுவே.2.11.2
777
வெறுத்த காலமுங் காபிர்க டொடுத்தவல் வினையு
மறுத்தி லாமையும் பீஸபீ லாற்களை மாய்த்து
நிறுத்துந் தீனென வேவலு மில்லையா னிதமும்
பொருத்தி ருப்பதெவ் வழியென வகத்திடைப் பொறுத்த.2.11.3
778
சொலத்த காப்பெரும் பகைதொடுத் தினத்தொடுஞ் சூழ்ந்து
குலத்தி னும்பிரித் தறநெறி தீனிலைக் குரியோ
ரிலத்தி னும்வரப் பொருந்திலா நமரினா லினியிந்
நிலத்தி ருப்பது பழுதென மனத்திடை நினைத்தே.2.11.4
779
மறுவி லாதநன் னெறிமறை தேருது மானை
யறிவி னாய்ந்தகு மதுதனித் தழைத்தரு கிருத்திப்
பிறவு முற்றதும் வருவது நிகழ்வதும் பேசி
யுறையு மிப்பதி பெரும்பகைக் காவன வுரைத்தார்.2.11.5
780
உற்ற நும்மனத் துடன்பட வுறைபவ ருடனும்
வெற்றி மன்னஜா சிய்யுறை திருநகர் மேவிக்
குற்ற மின்றியங் குறைவது கருத்தெனக் குறிப்ப
மற்று வேறுரை யாதுது மானுஞ்சம் மதித்தார்.2.11.6
781
ஷரகி றங்கிநன் னபியெனும் பெரும்பெயர் தரித்த
வருட மைந்தென வரவரு மிறஜபு மாதந்
தரும நேருது மானொடு றுக்கையா தமையு
மிருளும் போதனுப் பினர்ஹப ஷாவெனுந் தேயம்.2.11.7
782
திருத்துந் திண்புய நபிதிரு மகளுடன் சிறப்ப
விரிந்த பூங்குழன் மடந்தையர் மூவரும் வியப்பப்
பொருந்துந் தீனவர் பதின்மரும் புகழுது மானும்
பிரிந்தி டாதுசென் றந்தநா டடைந்ததற் பின்னர்.2.11.8
783
சந்த னந்திகழ் புயவபித் தாலிபு தவத்தால்
வந்த ஜஃபறு மவருடன் மைந்தர்கள் சிலரு
நந்து வெண்டர ளந்திகழ் நதிஹப ஷாபாற்
பிந்தி டாதொரு முறைமறை தனித்தனுப் பினரே.2.11.9
784
அன்ன மன்னமென் னடையினர் சிறுவர்க ளல்லான்
மன்னு மாடவ ரெண்ணொரு பஃதிரு வருமாய்ப்
பொன்னு லாஹப ஷாவள நாடணி புரத்தி
லின்ன லில்லெனச் சேர்ந்தவன் மகிழ்வொடு மிருந்தார்.2.11.10
785
உறைந்த மாந்தருக் கபஷிய ரசெனு முரவோர
னிறைந்த நன்கலை யொடும்பல வரிசையு நிதியுங்
குறைந்தி டாதெடுத் தருளிநன் மொழிபல கொடுத்துச்
சிறந்த தன்முத லினத்தினு மினத்தராய்ச் செய்தார்.2.11.11
786
விதித்த தீனிலைக் குரியரை ஹபஷியர் வேந்தன்
மதித்து நன்கொடு முயர்த்தின னெனும்வர லாற்றைக்
கொதித்த சிந்தைய னபூஜகில் குழுவொடுங் கேட்டுக்
கதித்த சூழ்ச்சியின் வேறொரு வினைகரு தினனே.2.11.12
787
வில்லு மிழ்ந்தசெம் மணித்தொடை திரண்டவெண் டரளம்
பல்ல வம்பொரு வாத்தம னியத்துகில் பலவுஞ்
சொல்ல ரும்மிர தச்சுவை யொட்டகச் சுமையா
மல்லு றும்புயன் கரத்தின்முத் திரையொடும் வைத்தான்.2.11.13
788
ஓதிக் கேட்டறிந் தொழுகிமுக் காலமு முணர்ந்த
மூத றிஞரி லிருவரை யழைத்துமுன் னிருத்தி
யாத ரத்தொடு சேர்த்தநல் வரிசையு மளித்துக்
கோத றத்தௌிந் தொழுதுபத் திரத்தையுங் கொடுத்தான்.2.11.14
789
கொடுத்து நன்மொழி கொடுத்துந ஜாசிய்யாங் கோவுக்
கடுத்து நின்றளித் திடும்வரி சைகளிவை யவன்சொற்
படுத்தி டாமதி மந்திரர்க் கிவையெனப் பகுத்து
விடுத்த னன்பெரு வஞ்சமும் படிறும் விடாதான்.2.11.15
790
அறும னத்தின னபூஜகில் கொடுத்தவை யனைத்து
மெறுழின் மிக்குய ரொட்டக மீதினி லேற்றித்
தறுகி லாதெழுந் திருவரு மரிதினிற் சார்ந்தார்
நறவு யிர்த்ததண் டலைதிகழ் ஹபஷிநன் னாட்டில்.2.11.16
791
சென்ற தூதுவர் வரிசைக ளனைத்தையுந் திருந்தக்
குன்றெ னத்திரள் புயனஜா சியின்முனங் குவித்து
முன்றி லிற்றனித் தெழுதிய முடங்கலை யெடுத்து
நின்று நீட்டினர் நிருபர்க ணெருங்கிய சபையில்.2.11.17
792
வரைந்த பத்திரப் பாசுர மக்கமா நகரி
லிருந்த ஹாஷிமா குலத்தொரு வன்றலை யெடுத்து
விரிந்த மந்திர வஞ்சக மாயங்கள் விளத்துத்
தெரிந்த வேதமுஞ் சமயமு நிலைகெடச் சிதைத்தும்.2.11.18
793
குடிபொ ருந்திலா திந்நகர்க் குலம்பழு தாக்கிப்
படிப குத்திடக் கொலையொடு பாதகம் விளைத்து
முடிவி லாப்பெருந் தேவத மாலய முழுது
மடிய றுத்திடத் துணிந்தனன் முகம்மதென் பவனே.2.11.19
794
அங்க வன்மொழிக் கொழுகின நவனினுங் கொடியோர்
பொங்கு மவ்வுழை புகுந்தனர் ஹபஷிமா புரத்தைப்
பங்க மாக்கமு னவர்களைத் தண்டனைப் படுத்தி
யெங்கி ருக்கினு மிருக்கொணா தகற்றிடு மெனவே.2.11.20
795
இன்ன வாசக மனைத்தினுங் கேட்டவ ரெவருந்
துன்ன லார்கொலோ சிட்டரோ வெனச்சிரந் தூக்கிப்
பன்னு வாரதின் மந்திரர் பகைத்தவா சகத்தாற்
சொன்ன வாற்றினின் முடிப்பது துணிவெனத் துணிந்தார்.2.11.21
796
அரசர் நாயகர் ஹபஷிந ஜாசியா மரசன்
பரிச னத்தவர் மொழியினும் மறிவினும் பார்த்தே
யுரைச மர்ப்பக முகம்மதின் வழியினுக் குரிய
வரிசை செய்திவ ணிருத்தலே கடனென வகுத்தான்.2.11.22
797
மலைம னத்தபூ ஜகிலனுப் பியவெகு மானத்
தலைவ ரைத்தன திரும்பதி யிடையினிற் சாராக்
குலனு டனுமர் பதிக்கடைந் திடுமெனக் குறித்து
விலகி யங்கவர் கொண்ர்ந்தபல் பொருளையும் வெறுத்தான்.2.11.23
798
சதும றைப்பொருண் முகம்மதின் வழியவர் தமைநல்
லிதம னத்தொடு மனுசரித் தபூஜகி லிடத்திற்
புதிய ரைப்புறம் போக்கின னெனுமொழிப் புகழை
மதுகை வேந்தபித் தாலிபு கேட்டுள மகிழ்ந்தார்.2.11.24
799
வணக்க வாசகத் தொடும்ஹப சரசனை வாழ்த்தி
யிணக்கி நற்பொருள் பெறப்பல பயித்தெடுத் தெழுதி
யுணக்கும் புன்மனத் தபூஜகி லெழுதிய வோலைப்
பிணக்க றுத்தபித் தாலிபு கொடுத்தனுப் பினரால்.2.11.25
800
புதிய நற்பொருள் பெறத்தெரி கவிதையின் புகழான்
மதுர வாசக மெழுதிய துணர்ந்துள மகிழ்ந்து
துதிசெ யுங்கலி மாநெறிப் படுமறைத் தூயோர்க்
கதிவி தப்பல வரிசைசெய் தபஷா சிருந்தார்.2.11.26
801
அந்த நாளையின் மக்கமா நகரவ ரெவரும்
வந்து நற்கலி மாவுரைத் தனரெனும் வசனம்
புந்தி கூர்தரக் கேட்டனர் சிலரதிற் பொருவாச்
சிந்தை யாயினர் நகர்க்கெனத் திரும்பினர் சிலரே.2.11.27
802
படைக்கை வேந்துது மானுடன் மனைவியும் பலருந்
தொடைக்கி ணங்கிய புயத்தவர் சூழ்வர நெறியி
னடக்க முன்மொழி பழுதென நவிறர நடுங்கி
யடைக்க லத்தினுங் கரவினும் பதியைவந் தடைந்தார்.2.11.28
803
புதிதின் மூவொரு பதின்மரு மூவரும் புறத்திற்
சதிய றத்தினி யவரவர் சார்பினிற் சார்ந்தா
ரதில பூசல்மா வென்பவ ரறிவினி லுயர்ந்த
மதியின் மிக்கபித் தாலிபை யடுத்துவந் திருந்தார்.2.11.29
804
சினத்து வன்கொலைக் காபிர்க டிரண்டிகல் செகுக்கு
மனத்தின் மிக்கபித் தாலிபு மதிமுக நோக்கி
யினத்தி னைத்தவிர்த் தபூசல்மா வென்பவன் றனைநும்
மனைத்த லத்தில்வைத் திருப்பது பழுதென வகுத்தார்.2.11.30
805
பொய்த்த மாமறை முகம்மதை மனையிடைப் புகுத்தி
வைத்தி ருந்தனை யபூசல்மா தனையுநும் மனைக்கு
ளெய்த்து வைத்திருப் பதுபழு தெனவிக லிடராய்
மொய்த்த டர்ந்தன ரபூஜகி லொடுமுரண் மதத்தார்.2.11.31
806
எடுக்கும் வாளயில் படைக்கலம் பலகரத் தேந்தித்
தொடுக்குங் பூசலிட் டடலபித் தாலிபைத் துரத்தி
விடுக்கு மென்பது மனையுட னகரையும் வெறுப்பக்
கெடுக்கு மென்பது மபூலகு பெனுமவன் கேட்டான்.2.11.32
807
எனக்கு முன்னவன் றனையிடர் விளைத்திட லெனது
மனக்கு றைப்பட ரிவைதவிர்த் திடீரெனின் மதியை
நினைக்கு முன்பகி ரகுமது நெறிநிலை நிறுவிக்
கனக்க வைத்தலியா னலதிலை யெனக்கழ றினனால்.2.11.33
808
மோதும் வாய்மையி னபூலகு பெனுமவன் முரணி
யோதும் வாசகங் குபிரவ ருளங்களை யுருவிப்
போது கின்றதென் றடர்ந்துநின் றவர்பொறி கலங்கித்
தீத கற்றியங் கவரவர் மனைவயிற் சேர்ந்தார்.2.11.34
809
கறைத விர்ந்திடா மனக்குறை ஷியங்குலக் காபி
ரறவு நொந்தகத் தடங்கின ரெனவற முதிர்ந்து
நிறையுந் தீனிலைக் குரியவர் மகிழ்ந்தநெஞ் சினராய்
மறைப டாமுகம் மதின்வழி வளர்த்திருந் தனரால்.2.11.35
810
அரிய நாயகன் றூதுவா னவர்க்கிறை யணுகிக்
கிரியின் மீதுநின் றரும்பெயர் நபியெனக் கிளத்தும்
வருட மாறினின் மாறுகொண் டவர்மனங் கலையத்
தெருளு மேன்மையின் முகம்மதுஞ் சிறந்திருந் தனரால்.2.11.36
811
பொருந்த மானிலத் துலவிய புகழுசை னயினா
ரருந்த வத்தினுட் பொருளென வருமபுல் காசிம்
விரிந்த மெய்நெறிச் சிந்தையி னடுவுற விளங்கி
யிருந்த மென்மலர்ப் பதமுகம் மதுமினி திருந்தார்.2.11.37
ஈமான் கொண்டவர்கள் ஹபஷா ராச்சியத்துக்குப் போந்த படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 11க்குத் திருவிருத்தம்...811
2.12 மானுக்குப் பிணை நின்ற படலம் (812 - 883 )
812
குயினிழல் பரப்பச் செவ்விக் கொழுந்தடை நறவஞ் சிந்தும்
வயிரவொண் வரையின் விம்மி வளர்ந்ததிண் புயத்து வள்ளல்
செயிரறு மறையின் றீஞ்சொற் செழுமழை பொழிந்து தீனின்
பயிர்வளந் தேறச் செய்து பரிவுட னிருக்கு நாளில்.2.12.1
813
அரியினஞ் செறிந்த போன்ற அறபிகள் குழுவி னாப்ப
ணொருதனிச் சீய மொப்ப வுடையவன் றூதர் செல்வத்
திருநகர்ப் புறத்து நீங்கிச் செழுமுகின் முடியிற் றாங்கி
மருமலர் செறியுஞ் சோலை சூழ்ந்ததோர் வரையைச் சார்ந்தார்.2.12.2
814
கொன்றையுங் குருந்துங் கார்க்கோற் குறிஞ்சியும் வேயுந் தற்றித்
துன்றிய நிழலு நன்னீர் சொரிதரு மிடமுஞ் செந்தேன்
மன்றலொண் மலரு நீங்கா வனந்திகழ் வரையின் கண் ண
சென்றன நெறிக்குங் காந்தி செவ்விமெய் முகம்ம தன்றே.2.12.3
815
வனந்தரி விலங்கு மாய்த்து வன்றசை வகிர்ந்து வாரித்
தினந்தொறுங் கோலிற் கோலித் தீயிடை யமிழ்த்திக் காய்த்தித்
தனந்தனி யிருந்து நின்று தன்றசைக் பெருக்க லன்றி
யனந்தலிற் பொழுதும் வேறோ ரறிவென்ப தறிந்தி லானே.2.12.4
816
காலினிற் கழலு நீண்ட கரியகா ளத்தின் வீக்கும்
பாலினில் வலையுங் கையிற் பருவரைத் தனுவுங் கூருங்
கோல்வெறி நணியுந் தோளிற் கூன்பிறை வாளு மென்மை
வாலுடைப் பறவை சேர்த்துங் கண்ணியு மருங்கிற் கொண்டோன்.2.12.5
817
குறுவெயர்ப் புதித்த மெய்யுங் கொழுந்தசை மணத்த வாயும்
பறிதலை விரிப்புங் கூர்ந்த படுகொலை விழியு மாக
வறபினி லறபி வேட னடவியிற் றொடர்ந்தோர் மானைக்
கறுவொடும் வலையிற் சேர்த்திக் கட்டிவைத் திருப்பக் கண்டார்.2.12.6
818
குழைகுழைத் தெரியுஞ் செந்தேன் கொழுமலர்க் காவை நோக்கார்
பொழிமலை யருவி நோக்கார் புறத்துநன் னிழலை நோக்கார்
செழுமுகிற் கவிகை வள்ளல் செறிதரு மீந்தின் செங்காய்
மறையெனச் சொரிவ நோக்கார் மானையே நோக்கிச் சென்றார்.2.12.7
819
அருளடை கிடந்த கண்ணு மழகொளிர் முகமுஞ் சோதி
சொரிநறை கமழ்ந்த மெய்யுஞ் சூன்முகிற் கவிகை யோடும்
வருவது தூயோன் றூதர் முகம்மது வென்னத் தேறிப்
பருவர லுழக்கு முள்ளத் தொடும்பிணை பகரு மன்றே.2.12.8
820
நெடியவன் றூதர் வந்தார் வேடனா னிலத்தி னந்த
முடலுயிர்க் கிறுதி யில்லை யுழையினத் தோடுஞ் சேர்ந்து
கடிதினிற் கன்றுங் காண்போ மெனமுகம் மதுவைக் கண்ணா
னொடிவரை யிமைமூ டாம னோக்கியே கிடந்த தன்றே.2.12.9
821
பொருப்பிடைத் துறுகற் சார்பிற் பொரியாரைத் தருவி னீழன்
மருப்புடைப் படலைத் திண்டோன் மன்னவ ருடனும் புக்கு
நெருப்பிடைத் தசைவா யார்ந்து நின்றவே டனையுஞ் செம்மான்
றிருப்புதற் கருங்கட் டுண்டு கிடப்பதுஞ் சிறப்பக் கண்டார்.2.12.10
822
இடைநிலத் துருக்கி விட்ட விரசிதம் பரந்த தென்ன
மடிசுதை யமுதஞ் சிந்த வடிக்கணீர் பனிப்பத் தேங்கு
முடலகந் துருத்தி யொப்ப நெட்டுயிர்ப் புயிர்த்துக் காலிற்
றுடரொடுங் கிடப்பத் தூயோன் றூதுவ ரடுத்து நின்றார்.2.12.11
823
கொடியடம் பிலையை மானும் குளம்பின்மேற் சுருக்கும் புள்ளிப்
பொடியுடற் பதைப்பும் வீங்கிப் புதையுநெட் டுயிர்ப்பு நோக்கி
நெடியவ னிறசூ லுல்லா நெஞ்சுநெக் குருகிக் கானின்
பிடிபடு மானின் றன்பாற் பேரருள் சுரப்ப நின்றார்.2.12.12
824
கதிர்விரி ஹபீபு நிற்பக் கானகத் தருக்க ளியாவும்
புதுமல ரலர்த்திச் செந்தேன் பொழிவமான் வருத்த நோக்கி
விதிர்சினைக் கரங்கள் சாய்த்து மென்றழைக் கூந்தல் சோர
மதியழிந் திரங்கிக் கண்ணீர் வடிப்பன போன்ற தன்றே.2.12.13
825
குலத்தொடும் பறவை தத்தங் குடம்பையிற் புகுதன் மானை
நிலத்திடைக் கிடத்திக் கட்டி நின்றவேட் டுவனைக் கண்ணா
னலத்தொடுங் காண்ப தாகா தெனநடு நடுங்கி யுள்ள
முலைத்தறப் பெடையி னோடு மொளிப்பன போன்ற தன்றே.2.12.14
826
ஏட்டலர் நறவ மாந்தி யிருஞ்சுரும் பிசைக்குந் தோற்றம்
வாட்டமின் முகம்ம திங்ஙன் வந்தனர் வருந்து மானை
மீட்டனர் வேட னீமான் விரும்பினன் பயங்க டீர்த்தார்
கூட்டுறைந் தொளித்தன் மாற்று மெனப்பல கூய போலும்.2.12.15
827
நிறைவளஞ் சுரந்த கானி னின்றநந் நபியை நோக்கிக்
குறியவா லசைத்து நீண்ட கொழுங்கழுத் துயர்த்தி நீட்டி
மறைபடா மதியே வண்மை முகம்மதே யென்னப் போற்றித்
தறுகிடா தெவர்க்குங் கேட்பச் சலாமெடுத் துரைத்துக் கூறும்.2.12.16
828
வல்லவ னுண்மைத் தூதே மன்னுமா நிலத்தின் மாந்த
ரல்லலை யகற்றி வேதத் தறநெறி பயிற்றிச் சொர்க்கத்
தில்லிடைப் புகுத்தப் பூவி னிடத்தினி லுதித்த கோவே
யொல்லையி னெனது சொற்கேட் டுவந்தரு ளளிக்க வேண்டும்.2.12.17
829
என்னுயி ரெனநீங் காத வினமுமென் கலையுங் கன்றுந்
துன்னிடத் திரண்டு பைம்புற் றுறைதொறு மேய்ந்து நாளு
முன்னிய பசிக டீர்த்தோர் மிருகங்கட் குயிர்கொ டாமன்
மன்னிய மலையின் சார்பு மனப்பய மகற்றி வாழ்ந்தேம்.2.12.18
830
இருநிலத் தாசைக் காயோ ரிளங்கன்றென் வயிற்று றாதான்
மருவிய கலையு நானும் வருத்தமுற் றிருக்குங் காலம்
பெருகுதீன் முகம்ம தேநும் பெயரினைப் போற்றல் செய்தே
னுருவமைந் திளஞ்சூன் முற்றி யுதரமும் வளர்ந்த தன்றே.2.12.19
831
தனியனென் னுயிருங் காக்குங் கலையுயிர் தானு மொன்றா
யினிதினொன் றாய தென்ன விளங்கன்றொன் றீன்றே னின்ப
நனிகளி கடலி லாழ்ந்து நறுமலை யிடத்திற் சேர்ந்து
துனிபல வகற்றி னேன்முன் சூழ்வினை யறிகே லேனே.2.12.20
832
உள்ளுயி ரனைய கன்று மொருத்தலு மியானு மோர்நாள்
வெள்ளமொத் தனைய மானி னினமோர் வெற்பின் சார்பி
னள்ளிலை யள்ளி வாய்கொண் டரும்பசி தடிந்து நீருண்
டெள்ளள வெனினு மச்ச மின்றிநின் றுலவு நேரம்.2.12.21
833
அத்திசைக் கெதிரின் மேல்பா லடுத்தொரு குவட்டின் கண்ணே
மத்தகக் கரியு மாய்க்கும் வரிப்புலி முழக்க நீண்ட
குத்திரத் தசனித் தாக்கின் குவலய மதிரக் கேட்டுத்
தத்தியெத் திசையுந் திக்குந் தனித்தனிச் சிதறி னேமால்.2.12.22
834
கூடிய தூறும் பாரிற் குளித்திடக் குதித்து வல்லே
யோடிய திசையி னொன்றை யொன்றுகாண் கிலதா யானும்
வாடிய மனத்தி னோடு மறியையு நோக்கா தாக்கை
யாடியிற் றுரும்பாய் வேறோ ரடவியி னடைந்திட் டேனால்.2.12.23
835
அடவியி னடையுங் காலை யவ்வுழைக் கரந்திவ் வேடன்
றுடரிடும் வலையைச் சுற்றிச் சுருக்கிடப் புலிவாய்த் தப்பி
மிடலரி யுழையிற் சிக்கி மிடைந்தென மிடைந்து செவ்வி
யுடலுயிர் பதைப்பத் தேம்பி யுணர்வழிந் தொடுங்கா நின்றேன்.2.12.24
836
வலையிடத் துறைந்த தென்ன மகிழ்ந்தெழுந் தோடி வந்து
நிலைபெற வடுத்துச் சாய்த்து நின்றெனை நோக்கி யாகத்
துலைவுறும் பசிக்கின் றென்பா லுற்றனை யென்னக் கூறிச்
சிலகணை நிலத்திற் சேர்த்தித் தெரிந்தொரு பாசந் தொட்டான்.2.12.25
837
திருக்கற நாலு தாளுஞ் செவ்விதிற் கூட்டி யங்கை
வரிக்கயி றதனாற் சுற்றி மாறுகொண் டீழ்த்துக் கட்டிக்
சரிக்கர மென்ன நீண்ட கரத்தினாற் றாங்கி முன்னர்ச்
சுருக்கிய வலையை நீக்கித் தோளினி லெடுத்துக் கொண்டான்.2.12.26
838
சுவைமுனைக் கோட்டுச் செவ்விக் கலையுட லுயிரு மீன்ற
நவியுட லுயிரு மோர்மா னுடன்கொண்டு நடப்ப தொத்துச்
சவிபுறந் தவழுங் கோட்டுச் சார்பிலிவ் வனத்தின் கண்ணே
சுவையறு மொழியா னென்னைச் சுமந்திவ ணிறக்கி வைத்தான்.2.12.27
839
கட்டுடன் கிடந்து நெஞ்சிற் கவலையுள் ளழிந்து மாறா
நெட்டுயிர்ப் பெறிந்து சோர்ந்து நிலத்திடைக் கிடக்கு நேரம்
வட்டவெண் கவிகை வள்ளல் முகம்மது நபியே யும்மைத்
திட்டியிற் றெரியக் கண்டேன் றிடுக்கமுந் தீர்ந்த தன்றே.2.12.28
840
எனவினை யுரைத்துப் பின்னு மெழினபி முகத்தை நோக்கி
மனநிலை வாக்கி னோடு முகம்மதே யென்னப் போற்றிப்
புனமுறை விலங்கின் சாதி யாயினுந் தமியேன் புன்சொற்
றனையருட் படுத்திக் கேட்பீ ரென்றுரை சாற்றிச் சாற்றும்.2.12.29
841
இச்சிலை வேடன் கையி னிறத்தலை யுளத்தி லெண்ணி
யச்சமுற் றுரைப்ப தன்றிவ் வவனியிற் சீவ னியாவு
நிச்சய மிறத்த லல்லா லிருப்பவை நிலத்தி லுண்டோ
முச்சகம் விளங்குந் தீனின் முதன்மறை முறைமைச் சொல்லோய்.2.12.30
842
கலையெனப் பிரிவி லாது கண்ணிமை காப்ப தென்ன
வலைவறக் காப்பச் சின்னா ளவனியிற் கலந்து வாழ்ந்தேன்
குலவிய மறியு மீன்றேன் குறித்தினி யிருப்ப தென்கொ
லிலைநுனிப் பனியி னாக்கை யிறத்தலே நலத்தன் மன்னோ.2.12.32
843
அடவியிற் கிரியில் வீணி லவதியுற் றிறந்தி டாமல்
வடிவுடைக் குரிசி லேநும் மலர்ப்பதச் செவ்வி நோக்கிப்
படுபரற் கானில் வேடன் பசிப்பிணி தீர்ப்ப தாக
வுடலிறத் திடுத லெவ்வெவ் விறப்பினு முயர்ச்சி மேலோய்.2.12.33
844
வரிப்புலி முழக்கங் கேட்டு மானினஞ் சிதறித் தத்தந்
தரிப்பிட மறியா தொன்றுக் கொன்றுடன் சாரா தெங்கு
முரைப்பரி தென்னப் போந்த தாலென தொருத்த றேடி
யிரைப்பறா நெடிக்கான் போய்ப்போ யிருந்ததோ விறந்த தேயோ.2.12.33
845
ஒல்லையி னோடி நீங்கா தொருத்தலின் றளவு மோந்து
புல்லினைக் கறியா நீரும் புசித்திடா திருந்து தேடி
யல்லலுற் றழுங்கிக் கண்ணி னருவிநீர் சொரிய வாடிப்
பல்லவ மெரியிற் புக்க தெனவுடல் பதைக்கு மன்றே.2.12.34
846
பிடிபடு மிதற்கு முன்னே மூன்றுநாட் பிறந்து புல்லின்
கொடிநுனை மேய்ந்து நீருங் குடித்தறி யாது பாவி
மடிமுலை யிறங்கிப் பாலும் வழிந்தது குழவி சோர்ந்து
படிமிசை கிடந்தென் பாடு படுவதோ வறிகி லேனே.2.12.35
847
கோட்டுடைக் கலையி னோடுங் கூடிற்றோ வலதோர் பாலின்
மீட்டதோ வினத்தைச் சேர்ந்து விம்மிநின் றேங்கிற் றோகான்
காட்டிடைப் புலிவாய்ப் பட்டுக் கழிந்ததோ வென்னைத் தேடி
வாட்டமுற் றலறி யோடி மறுகிற்றோ வறிகி லேனே.2.12.36
848
தேங்கிய பசியால் வாடித் திரிந்ததோ விறந்த தோவென்
றேங்கிய வருத்த மல்லா லிவ்விட ரதனி லாவி
நீங்குமென் றுள்ளத் துள்ளே னெட்டுட லுடுப்பி னாவி
தாங்கிய தரும வேந்தே தவறன்று சாத மன்றே.2.12.37
849
மன்னிய கலிமா வென்னும் வழிநிலை மாந்த ரியாரும்
பொன்னிலம் புகுதச் செய்யும் புண்ணியப் புகழின் மிக்கோய்
கொன்னிலைச் சிலைக்கை வேடன் கொடும்பசி தணிப்பே னென்றாட்
பின்னிய பிணிப்பு நீக்கிப் பிணையென விடுத்தல் வேண்டும்.2.12.38
850
விடுத்திரேற் கலையைச் சேர்ந்து விழைவுறுங் கவலை தீரப்
படுத்தியென் னினத்துக் கோதிப் பறழினுக் கினிய தீம்பால்
கொடுத்தரும் பசியை மாற்றிக் குலத்தொடுஞ் சேர்த்து வல்லே
யடுத்தொரு கடிகைப் போதிலடைவ னென் றைந்த தன்றே.2.12.39
851
மானுரை வழங்கக் கேட்டு மனத்தினிற் கருணை பொங்கிக்
கானவேட் டுவனை நோக்கிக் கன்றிடை வருத்தந் தீர்த்துத்
தான்வரு மளவு மியானே பிணையெனச் சாற்ரி நின்றார்
தீனெனும் பயிரைக் காத்துச் செழும்புகழ் விளக்குஞ் செம்மல்.2.12.40
852
பிரியமுற் றிரங்கிக் காட்டின் பிணக்கியான் பிணையென் றோது
முரையினைக் கேட்டு வேட னொண்புயங் குலுங்க நக்கித்
தெரிதரு மறிவி னோடுஞ் சினத்தொடுங் கலந்து தேர்ந்து
கருமுகிற் கவிகை வள்ளல் கவின்முக நோக்கிச் சொல்வான்.2.12.41
853
முள்ளுடைக் கானி லேகி முகமழிந் துச்சி வேர்வை
யுள்ளங்கா னனைப்ப வோடி யுடலுலைந் தொன்றுங் காணா
விள்ளரும் பசியான் மீளும் வேளையிப் பிணையை நோக்கி
யொள்ளிழை வலையிற் றாக்கிப் பிடித்திவ ணொருங்கு சார்ந்தேன்.2.12.42
854
பெருத்தமான் றசையா லிற்றைப் பெரும்பசி தவிர்ந்த தென்று
ளிருத்தியிங் கிருந்தே னந்த விருமனக் களிப்பை நீக்கி
வருத்தமுற் றிடுஞ்சொற் சொன்னீர் முகம்மதே யெவர்க்கு மிச்சொற்
பொருத்தம தன்று விண்ணு மண்ணிலும் புகழின் மிக்கோய்.2.12.43
855
கானிடைப் பிடித்த மானைக் கட்டவிழ்த் தவணிற் போக்கின்
மானிடர் பாலின் மீட்டும் வருவது முன்ன ருண்டோ
ஞானமு மறையுந் தேர்ந்தோர் செய்யுளு நாட்டிற் றுண்டோ
வூனமிப் பிணைச்சொ லையா வோதுவ தொழிக வென்றான்.2.12.44
856
என்னுறு பிணையாய்ப் போன விரும்பினை கடிகைப் போதி
னுன்னிடத் துறும்வா ராதே லுன்பசி தீர்ப்ப தாகப்
பின்னிரண் டொன்றுக் கன்பாய்த் தருகுவன் பேது றேலென்
றன்னவன் றனக்குச் சொன்னா ராரணத் தமிர்தச் சொல்லார்.2.12.45
857
காரணக் குரிசில் கூறுங் கட்டுரை செவியி னோர்ந்து
பாரினி லெவர்க்குந் தோன்றாப் புதுமைபார்த் தறிவோ மல்லாற்
சார்பினிற் சாரா லொன்றுக் கிரண்டுமே தருது மென்றார்
பேரினிற் பிணயாய்க் கொள்ளல் கருத்தெனப் பெரிதுட் கொண்டோன்.2.12.46
858
கள்ளமுங் கரப்பு மாறாக் கருத்தின னுயிர்கட் கென்று
மெள்ளள விரக்க மில்லா வேட்டுவ ரினத்தி னுள்ளே
னுள்ளம தறிந்துங் கேட்டீ ருரைப்பதென் ணுயர்ந்த மேன்மை
வள்ளல்நும் மதுர வாய்மை மறுத்திலேன் விடுத்தி ரென்றான்.2.12.47
859
வேட்டுவ னுரைப்பக் கேட்டு முகம்மது விருப்ப முற்று
வாட்டமுற் றிருந்த புள்ளி மானிடத் திருந்து பாரி
னீட்டிய காலிற் சேர்த்த துடரினை நெகிழ்த்துக் கானிற்
கூட்டுறாக் குழவிக் குப்பால் கொடுத்திவண் வருக வென்றார்.2.12.48
860
இருந்துகான் மடக்கி நீட்டி யெழுந்துடன் முறுக்கு நீக்கி
மருந்தெனு மமுதத் தீஞ்சொன் முகம்மதின் வதன நோக்கிப்
பொருந்திய கலிமா வோதிப் புகழ்ந்துடற் பூரிப் போடுந்
திருந்தவே டனையும் பார்த்துச் சென்றது கானின் மானே.2.12.49
861
வெண்ணிலாக் கதிர்கான் றென்ன மென்முலை சுரந்த தீம்பான்
மண்ணெலா நனைப்பச் சூழ்ந்த வனமெலாந் திரிந்து தேடிக்
கண்ணினி லினங்கா ணாது கலங்கியோர் வனத்தின் கண்ணே
யெண்ணரும் பிணையுங் கன்றுங் கலையுட னினிது கண்ட.2.12.50
862
மலைவற வினத்து ளாகி மனத்தினுட் கவலை நீக்கிக்
கலையினுள் வருத்தந் தீர்த்துக் கன்றினை யணைத்து விம்மு
முலையினை யூட்டி மென்மை முதுகுவா லடிநா நீட்டி
யலைதர வளைத்து மோந்து வேட்கையை யகற்றிற் றன்றே.2.12.51
863
கன்றது வயிறு வீங்கக் கதிர்முலை யமுத மூட்டி
நின்றதன் னினத்துக் கெல்லா நெடிபடுங் கானி லோடி
வன்றிறல் வேடன் கையிற் படும்வர வாறுந் தூதர்
வென்றிகொள் பிணையின் மீட்டு விட்டது மோதிற் றன்றே.2.12.52
864
பிணையென வுரைத்த மாற்றம் பிணைக்குல மனைத்துங் கேட்டுப்
பணைபடு கானி லுள்ளப் பதைப்பொடுந் துணுக்கி நிற்பத்
துணையெனுங் கலையி னங்கஞ் சோர்ந்துநெட் டுயிர்ப்பு வீங்கி
யணைதர வடுத்து நோக்கி யாற்றுவான் றொடங்கிற் றன்றே.2.12.53
865
மாறுகொண் டவர்கை தப்பி வந்தமா னினத்தின் சாதி
கோறலை விரும்பி முன்னு நரர்கையிற் கூடிற் றுண்டோ
வேறுரை பகரேல் பார்ப்பை வெறுத்துமுன் னினத்தை நீத்து
மீறெனப் போதல் வேண்டா மெனுமுரை யியம்பிற் றன்றே.2.12.54
866
இணைத்தெனைப் பிணித்த வேட னிதயத்துக் கியையப் பேசிப்
பினைதனைப் பொருத்தி நின்றோர் பெரியவன் றூத ரிந்தத்
திணைத்தலத் தறிவி லாத சேதனச் சாதி யன்றே
யணைத்துயி ரனைத்துங் காத்தற் கவரல தில்லை யன்றே.2.12.55
867
என்னுயி ரதனை வேட னிரும்பசிக் கியைய வீந்து
நன்னபி பிணையை மீட்ப நன்மனம் பொருந்தி லேனாற்
பொன்னுல கிழந்து தீயு நரகினிற் புகுவ தல்லாற்
பின்னொரு கதியு முண்டோ பிழையன்றிப் பெருமை யன்றே.2.12.56
868
சிறப்புடைக் குரிசின் முன்னஞ் செப்பிய மாற்ற மாறி
மறப்பொடு மிருந்தே னாகில் வரிப்புலி யினத்தின் வாய்ப்பட்
டிறப்பதே சரத மல்லா லிருப்பதற் கிடமற் றுண்டோ
வுறப்பெரும் விருப்ப மென்மே லிருத்தலை யொழித்தல் வேண்டும்.2.12.57
869
நதியிடைப் பெருக்கின் முன்னோர் நவ்விபி னடக்கு நாளின்
மதியிலி யொருத்தன் வள்ளன் முகம்மதின் வசன மாறிப்
புதியநன் னீரு ளாழ்ந்து நொடியினில் வீழ்ந்து போய
வதிசய முலகில் விண்ணி லியாவரே யறிகி லாதார்.2.12.58
870
ஈதெலா மறிந்து மென்னை யிவணிடை யிருத்தல் வேண்டி
யோதுதல் பழுதென் றோதி யுழையின மனைத்துந் தேற்றிக்
காதலிற் கலையைப் போற்றிக் கன்றினை யதன்பாற் சேர்த்திப்
பேதுற லெனப்பா லூட்டி யெழுந்தது பிணையு மன்றே.2.12.59
871
இனத்தினை விடுத்து நீங்கி யிருங்களிப் பிதயம் பூப்ப
வனத்தினி லேகுங் காலை மறிமுன மறிப்பச் சீறிச்
சினத்தது தடுப்ப வோடிச் செவ்விமான் முகத்தை நோக்கி
யினித்தவாய் புற்றீண் டாத விளமறி யுரைக்கு மன்றே.2.12.60
872
மாதவம் பெற்று நின்போன் முகம்மது நபிதஞ் செய்ய
பாதபங் கயத்தைக் கண்டு பரிவுட னீமான் கொண்டு
போதலே யன்றி நின்னைப் புறத்தினி லகற்றி வாழே
னீதுமுத் திரையென் றோதி யெழுந்துமுன் குதித்த தன்றே.2.12.61
873
இறையவன் றூதைக் கண்ட வதிசய மிதுகொ லென்ன
மறிமன மறுகி லாது வதைதனைப் பொருந்திச் சேற
லிறுதியிற் றின்ப நம்பா லெய்துமென் றகத்தி னெண்ணிச்
செறிவனங் கடந்து வேடன் றிசைதனை யடுத்த தன்றே.2.12.62
874
குருளையும் பிணையுங் கூடி வருவது குறித்து நோக்கி
முருகலர் புயத்தார் வள்ளன் முகம்மது மகிழ்ந்தன் பாக
விருளுறு மனத்த னான வேடனை யினிது கூவி
யொருபிணைக் கிரண்டுன் பாலில் வருவதென் றுரைத்திட் டாரால்.2.12.63
875
அன்னது கேட்டு வேட னோக்கியன் புற்ற காலை
முன்னிய கன்று மானு முகம்மதி னடியிற் றாழ்ந்து
பன்னிய சலாமுங் கூறிப் பாவியெற் காக வேட்டு
மன்னிய பிணையை மீட்டு மெனுமுரை வழங்கிற் றன்றே.2.12.64
876
மாடுறைந் திவைமான் கூற முகம்மது நபியும் விற்கை
வேடனை விளித்து நந்தம் பிணையினை விடுத்து நின்றன்
பீடுடைப் பசியை மாற்றிப் பெரும்பதிக் கடைக வென்றார்
வீடுபெற் றுயர்ந்து வாழ்ந்தே னெனமலர்ப் பதத்தின் வீழ்ந்தான்.2.12.65
877
பாதபங் கயத்தைப் போற்றிப் பருவர லகற்றி யாதி
தூதுவ ரிவரே யல்லா லிலையென மனத்திற் றூக்கி
வேதநா யகமே யென்பால் விருப்புறுங் கலிமாத் தன்னை
யோதுமென் றிருகை யேந்தி யுவந்துநின் றுரைப்ப தானான்.2.12.66
878
கருமுகிற் கவிகை வேந்தே கானக வேட னென்னு
முருவினன் விலங்கோ டொப்பே னுள்ளறி வுணர்வு மில்லேன்
றெருளுறப் பாவி யென்னை தீனிலைக் குரிய னென்னப்
பெரிதளித் திடுதல் நுந்நம் பெருமையிற் பெருமை யென்றான்.2.12.67
879
மதிமுக மகிழ்ச்சி கூர முகம்மது கலிமாச் சொல்ல
விதயமுற் றோதி வேட னினிதினி னீமான் கொண்டு
புதியினை வணங்கிச் செய்யுஞ் செய்தொழில் பொருந்தக் கேட்டு
நிதிமனைக் குரிய னாகி தீனிலை நெறிநின் றானே.2.12.68
880
பெறுகதி நின்னாற் பெற்றேன் பெரும்பவங் களைந்தேன் மாறாத்
தெறுகொலை விளைத்து முன்னஞ் செய்தொழி றவிழ்த்தே னீயு
மறுகலை யெறிந்து தேறு ம்னக்கலை யொடுகன் றோடு
முறுகலை யிடத்திற் போய்ச்சேர்ந் தொழுகலை முயல்தி யென்றான்.2.12.69
881
வானவர் பரவுங் கோமான் முகம்மது மானை நோக்கிக்
கானகஞ் சென்னீ யென்றார் கமலமென் பதத்திற் றாழ்ந்து
தீனிலைக் குரிய வேடன் றன்னையுந் திருந்தப் போற்றி
நானிலம் புகலப் பாரி னடந்தினஞ் சேர்ந்த தன்றே.2.12.70
882
தேனைக்குங் குமங்கள் சிந்தச் செழித்ததிண் புயத்து வள்ளல்
கானக்குவ் விடத்திற் காட்டுங் கமலமென் பதத்தைப் போற்றித்
தானைக்கும் பதிக்கு மியானே தலைவனென் பவர்போல் வேடன்
மானைக்கொண் டுவரப் போயீ மானைக்கொண் டகத்திற் புக்கான்.2.12.71
883
துடவைநன் மலரைத் தூற்றுந் தூய்நிழ லிடத்தை நீந்திப்
படர்முகிற் கவிகை யோங்கப் பாருள தெவையும் வாழ்த்த
வடவரை யனைய திண்டோள் வயவர்க ளினிது சூழக்
கடிமனை யிடத்திற் புக்கார் ஹபீபிற சூலூ மன்றே.2.12.72
மானுக்கு பிணை நின்ற படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 12க்குத் திருவிருத்தம்...883
2.13 ஈத்தங்குலை வரவழைத்த படலம் (884 - 900 )
884
சுருதியின் முறைிவழித் துணைவர் சூழ்தரக்
கருமுகி னிழலொடுங் கருணை பொங்கிட
மருவுமெண் டிசைக்குமான் மதங்க மழ்ந்திட
விருநிலம் புகழ்நபி யிருக்கும் போதினில்.2.13.1
885
காலினிற் கபுசுமோர் கையிற் குந்தமு
மேலிடுஞ் சட்டையும் விசித்த கச்சையுந்
தோலொரு தோளினுந் தூக்கி வந்தவ
னாலநந் நபிதமை யடுத்து நோக்கினான்.2.13.2
886
தரியலர்க் கன்புறுஞ் சார்பி னான்மறைக்
குருநெறி முகம்மதைக் குறித்தெ திர்ந்துநீ
ரிருநிலத் தெவரென வியம்பி னான்பர
ருரநெரித் திடச்செவி யுழுக்குஞ் சொல்லினால்.2.13.3
887
அச்சமொன் றின்றிநின் றறபி கூறலும்
வச்சிரப் புயமுகம் மதுதம் வாய்திறந்
திச்சகம் புகழ்தனி யிறைவன் றூதியா
னிச்சய மிதுவென நிகழ்த்தி னாரரோ.2.13.4
888
ஆதிதன் றூதென வறிவ தற்கரும்
பூதலத் தென்மனம் பொருந்தி யன்பொடுஞ்
சாதமுற் றிடப்பெருஞ் சாட்சி யாமெனுங்
கோதறு குறிப்பெவை கூறுவீ ரென்றான்.2.13.5
889
காரணக் கரியுனக் கியையக் காண்கிலென்
னாரணத் துறுங்கலி மாவை யன்பொடும்
பூரண மனத்தொடும் புகல்வை யோவெனச்
சீர்தரு மமுதவாய் திறந்து செப்பினார்.2.13.6
890
அவனியி லெவர்க்குநன் கறிய வென்மனக்
கவரறக் காரணக் கரியுண் டாமெனி
னபியுமை யலதிலை யென்ன நண்பொடும்
பவமற நும்வழிப் படுவ னியானென்றான்.2.13.7
891
நிலத்தினில் விண்ணினீ டிசைக்கு ணின்மன
நலத்தது கரியெவை நாட்டு வாயெனக்
குலத்துறு முகம்மது கூறக் கேட்டுநற்
சிலைத்தழும் பிருந்தோ ளறபி செப்புவான்.2.13.8
892
இருவருக் கெதிர்தர நின்ற வீந்ததின்
விரிதலைக் குலைமலர் வீழ்ந்தி டாதிவண்
வரவழைத் திடுவிரேன் மனமும் வாக்குமொத்
தருமறை மொழிவழி யாவ னியானென்றான்.2.13.9
893
ஈந்தினை நோக்கிநின் றிறைவன் றூதுவர்
வாய்ந்தநின் குலையிவண் வருக வேண்டுமென்
றாய்ந்தநன் மறைதெரி யமுத நன்கனி
யேய்ந்தவாக் கினைத்திறந் தியம்பி னாரரோ.2.13.10
894
ஆதிதன் றூதுவ ரறையக் கேட்டலுஞ்
சோதிவெண் குருத்தொடுந் தோன்ற மேலெழுந்
தேதினுஞ் சிதைகிலா திழிந்து மாநில
மீதினில் விரிதலை விளங்கி நின்றதே.2.13.11
895
விரிதலைத் தருவடி நின்ற மென்குலைப்
பரிவொடும் பயப்பயக் குதித்துப் பாரிடை
யிருவிழி தெரிபவ ரெவர்க்கு மின்புறத்
திருமுகம் மதுமுனஞ் சிறந்து நின்றதே.2.13.12
896
அந்தர விரிதலைக் கமைந்த பூங்குலை
யிந்தமா நிலத்திடை யிறங்கி யிவ்வுழை
வந்ததிற் புதுமையு மறுத்துண் டோவெனச்
சிந்தையுற் றற பிநந் நபியைச் சிந்தித்தான்.2.13.13
897
படித்தலம் புகழ்நபி பாதம் போற்றிநின்
றடிக்கடிப் புதுமையுற் றறபி யீந்தின
திடத்தினிற் குலைபொருந் திடச்செய் வீரெனத்
திடத்தொடும் பயத்தொடுஞ் செப்பி னானரோ.2.13.14
898
மழைமுகிற் கவிகையின் வள்ள னன்கெனக்
குழைதரும் விரிதலைக் குலையைப் பார்த்துநின்
னுழையினிற் செல்கென வுரைப்ப வோடிமுற்
புழைவழி நுழைந்தது பொருந்தி நின்றதே.2.13.15
899
மேதையச் சமுமுள விலங்கி னாயதோர்
சாதியன் றீதொரு தருமுன் னாதலும்
போதலும் படைத்தவர் புதிய நாயகன்
றூதுவ ருண்மையென் றடியைச் சூடினான்.2.13.16
900
பாதபங் கயமலர் சிரசிற் பற்றிநின்
றாதியிற் சொலுங்கலி மாவை யன்பொடு
மோதினன் றௌிந்தன னுரிய நாயகன்
றூதுவர்க் கிவனொரு துணைவ னாயினன்.2.13.17
ஈத்தங்குலை வரவழைத்த படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 13க்குத் திருவிருத்தம் ...900
2.14 ஒப்பெழுதித் தீர்ந்த படலம் (901- 939)
901
பரிவுறு நபியெனும் பட்ட மாகிய
வருடமே ழினிற்றின முஹர்ர மாத்தையிற்
றெரிதரும் பிறைமுத லிரவிற் சேரலர்க்
குரியவர் குறைஷிக ளொருங்கு கூடினார்.2.14.1
902
கறைகெழு மனக்கொடுங் காபி ராகிய
குறைஷியந் தலைவர்கள் பலருங் கூட்டமிட்
டறபிக டம்முட னாய்ந்து வாய்மையான்
முறைதவ றிடுமொரு கரும முன்னினார்.2.14.2
903
ஹாஷிமுத் தலிபென வடுத்துக் கூடிய
மாசறு மிருகுலத் தவரின் வாணிகம்
பேசுதல் சம்பந்தம் பிறவு நீக்கிவிட்
டேசறு சாதியின் விலக்கிட் டாரரோ.2.14.3
904
நெருப்புநீ ரிவைமுத னீக்கி நீணிலத்
திருப்பவ ரெவருமங் கவர்க்கி டங்கொடா
துருப்பமோ டிகல்வதே யெவர்க்கு மூழென
வரைப்புற வொருமுறி வரைந்திட் டார்களால்.2.14.4
905
சாதியின் விலக்கெனத் தவறி லாதெடுத்
தோதிய வொப்பெனு முறியை யூரவர்
மாதிர மடர்ககு பாவின் வாயிலிற்
றூதரு மறியவென் றெடுத்துக் தூக்கினார்.2.14.5
906
கொடுமனக் குறைஷியங் காபிர் கூடியப்
படிநடத் திடுமந்நாட் பலன்கொண் மாமறை
பிடிபடுந் தீனவ ரியாரும் பேதுறா
துடலுயி ரெனவுவந் தொருங்கு கூடினார்.2.14.6
907
தெரிதருந் தீனெறி யவருஞ் சேர்தரு
மிருவகைக் கிளைஞரு மிசைந்த பேர்களுந்
தருவெனத் தருமபுத் தாலிப் தம்புய
வரையென வளைந்தவர் வாழு நாளினில்.2.14.7
908
போதலர் மதீனமா புரத்தி னாடொறுங்
கோதுறா தவுசெனுங் கூட்டத் தார்கட்குங்
காதிய கசுறசுக் கிளைக்குங் கட்டறா
தோதிய பெரும்பகை பொழிந்த தில்லையால்.2.14.8
909
இசையுநூற் றிருபது வருட மும்கசு
றசுவெனுங் கூட்டத்தா ரமைத்த வெற்றியே
திசைபுகழ்ந் தனஅவு சென்னுந் திண்மையோர்
விசயமோ ராண்டினும் வேய்ந்த தில்லையால்.2.14.9
910
இந்தவல் வினையினா லிடைந்தவ் வௌசுளர்
தந்தம ரொடும்பலர் தனித்து சாவியே
சிந்தையிற் றௌிவொடுந் தெரிந்து பார்த்துநன்
மந்திர மீதென வகுத்துக் காட்டியே.2.14.10
911
மக்கமா நகருறை மன்னர் தம்மைநம்
மொக்கலி லின்புற வுவந்து சேர்த்துவந்
திக்கணம் கசுறசை யெதிர்வ தல்லது
புக்கிட மிலையெனப் பொருந்தக் கூறினார்.2.14.11
912
பெறுமுறை யீதெனப் பேசி நால்வரைத்
திறனொடுஞ் சேகரஞ் செய்து வம்மெனக்
குறைவற வரிசையுங் கொடுத்த யாசினை
யறமெனு மக்கமா நகர்க்க னுப்பினார்.2.14.12
913
பெருகிய கிளையவு சென்னும் பெற்றியோர்
வரவிடுத் தவர்சிலர் மக்க மீதினி
லரிதின்வந் தனரென வறிந்து நந்நபி
பரிவுட னெழுந்தவர் பாலி னேகினார்.2.14.13
914
அங்குறைந் தவரகத் தன்பு கூர்தரப்
பொங்கிய சிலமொழி புகன்று பின்னரு
மெங்கினுந் தீன்படர்ந் தேற நன்மறை
தங்கிய நாவினா லெடுத்துச் சாற்றுவார்.2.14.14
915
பற்றல ரிடரப் படர்ந்திவ் வூரினி
லுற்றநீ ருள்ளிவந் ததனி னோங்கிடும்
பெற்றியுண் டெனதுரை பெற்றி ரேற்பெரும்
வெற்றியுண் டுமதிடத் தெனவி ளம்பினார்.2.14.15
916
வள்ளலிவ் வுரைதர மதீன மாநக
ருள்ளவ ருள்ளகத் துவகை யூர்தர
விள்ளுநுங் கருத்தென வினவ நன்மொழி
தெள்ளிய மதுரவாய் திறந்து செப்பினார்.2.14.16
917
அரியவ னருளினா லமரர் கோனெனக்
கிருநிலத் தினினபி யென்னும் பேர்கொடுத்
துரியவே தமுமினி துதவி நன்னெறி
வரிசைநேர் வணக்கமும் வகுத்துப் போயினார்.2.14.17
918
அகமகிழ்ந் திம்மொழி யனைத்தும் வேறிதென்
றிகழ்விலா துண்மையென் றிசைந்து நீவிர்யான்
புகழ்கலி மாநெறி பொருந்தி னீரெனிற்
பகையறும் வெற்றியும் படரு மென்றரோ.2.14.18
919
நறைகமழ் முகம்மதாண் டுரைத்த நன்மொழி
திறனயா சறிந்துளந் தேறித் தன்வயி
னுறைபவர்க் கணிபெற வோதி வேண்டுவ
பிறநினை விலையினி யெனவும் பேசினார்.2.14.19
920
நன்பதந் தரும்புகழ் நபியைப் போற்றியா
னென்பதி புகுந்தெமர்க் கியம்பி யொல்லையி
னின்பதம் வரநிலை நிறுத்து வேனென
வன்புற வுரைத்தெழுந் தயாசு போயினார்.2.14.20
921
தடந்திகழ் மதீனமா நகரைச் சார்ந்தினத்
துடனபி யுரைத்தவை யுரைப்பக் கேட்டவர்
திடம்பெற விஃதுநன் றென்னச் சிந்தையி
னிடம்பெறக் களிப்பொடு மிருக்குங் காலையில்.2.14.21
922
கொடுஞ்சிலைக் கசுறசு வென்னுங் கூட்டத்தா
ரிடும்பகை யுடனிவ ரெதிர்ந்து தாக்கலும்
விடும்பரி படைக்கலம் வீழ்த்திக் காறளர்ந்
தடும்படை யொடுமுறிந் தவதி யாயினார்.2.14.22
923
பாடினிற் கசுறச படையெ லாமுறிந்
தோடின ரவுசெனுங் கூட்டத் தோர்க்கெனப்
பீடுடைப் பெரும்புகழ் பெருகிச் சூழ்திசை
நாடடங் கலுந்தெரி தரந டந்ததே.2.14.23
924
நபிதமைக் கண்டுரை நடத்தி வெற்றியும்
புவியினிற் பெற்றனம் பொருந்தி னோமெனி
லெவர்நமக் கெதிரவர்க் கியைவ தேயென
அவுசெனும் பெருங்குலத் தவர்கள் கூறினார்.2.14.24
925
முகம்மதின் தீனிலை வழிச்செல் வோமென
வகமகிழ்ந் தவுசினத் தவர்கள் கூறலும்
புகழொடு மறுவர்க ளெழுந்து பொன்னில
நகரெனு மக்கமா நகரை நண்ணினார்.2.14.25
926
மறுவறு மவுசெனுங் குலத்து மன்னவ
ரறுவரு நபிபத மடுத்துச் செவ்வியி
னுறுகலி மாவெடுத் தோதி யன்பரா
யெறுழ்வலி யொடுமிசு லாத்தி லாயினார்.2.14.26
927
வேறு
வாருதி யெனவரு மதீன மென்னுமவ்
வூரவர் நமக்குயிர்த் துணைவ ராகிய
பேரெனப் படைத்தனம் பெரிய னாலென
வேர்பெற நபிமன மகிழ்ந்தி ருந்தனர்.2.14.27
928
வேறு
பின்னுதிரைக் கடனிலத்தில் விளங்குபுக
ழுசைனயினார் பெரும்பே றான
மன்னவர்மன் னபுல்காசீ மனத்தினுநா
வினுமறவா திருத்தி வாழ்த்து
மின்னவிர்செம் ம்லர்ப்பதத்தாண் முகம்மதுதம்
பெருமறைதீன் வேர்விட் டோடி
யெந்நிலமு மிசுலாத்தின் கொழுந்துபல
படர்ந்தேறி யிலங்கிற் றன்றே.2.14.28
929
உலகடங்கத் தனியரசு செலுத்தும்
பெரியவனருளா லுயர்வா னீந்தி
யலகில்கதிர்ச் சிறைச்சபுற யீலகும
துறைந்தகுவ டடுத்தன் பாக
விலகுகலி மாவோதி மணித்துகில்
செங்கரத்திருத்தி வேத மீந்து
பலரறிய நபியெனும்பேர் பரித்தாண்டு
மிருநான்கும் படரு நாளில்.2.14.29
930
இறூமிகட்கும் பாரிசுநாட் டவர்க்கும்பெரும்
பகையாக விருந்தவ் வாண்டு
மறமுதிர்ந்து பாரிசவர் வெற்றிகொண்டா
ரெனும்வசன மக்க மீதி
லுறையும்பெருங் குபிரவர்கேட் டுடற்பூரித்
திசுலாத்தி லுற்ற பேரைத்
திறனடுத்த தெமர்க்கிழிந்த சிதைவடுத்த
துமர்க்கெனவுஞ் செப்பி னாரால்.2.14.30
931
தருவை நிகர் முகம்மதுநன் னபியுரைத்தா
ருறூமிகடஞ் சமர்க்காற் றாது
வெருவியிரு நிலத்தோடிப் பாரிசற
முறியுமென விரித்த வாய்மை
யொருபொழுதும் பழுதாகா தென்னஅபூ
பக்கரெடுத் துரைப்பக் கேட்டே
யிருமையினும் பலனறியா னிபுனுகல
பெனுமவன்வந் தெதிர்ந்து சொல்வான்.2.14.31
932
எங்கள்குலத் தவருரையே பழுதாகிப்
பாரிசவ ரிரிந்தா ரென்னி
லுங்கடமக் கருள்வேனூ றொட்டகையீ
தொட்டமென வுரைப்பநோக்கி
யெங்கணபி முன்னுரைத்த வுரைதவறி
யுறூமிகள்போ ரிடைந்தா ரென்னி
லுங்கடமக் களித்தலஃ தென்னவபூ
பக்கரெடுத் தோதினா ரால்.2.14.32
933
இருவருஞ்சம் மதித்திகலி யொட்டியவொட்
டகத்தினொடு மிருக்கு நாளி
லொருகவிகை நிலவவுறூ மிகளடர்ந்து
பாரிசவ ருடைந்தா ரென்னப்
பெருகுமொழி யவரவர்கேட் டிபுனுகல
புடனுரைப்பப் பெரிதி னீந்தா
னருவரைநே ரொட்டகநூ றடலரியே
றென்னமபூ பக்கர்க் கன்றே.2.14.33
934
ஒட்டியொட்டம் பலித்தவொட்டைத் திரளொடும்வந்
துயருமபூ பக்க ரோங்கி
மட்டவிழ்திண் புயக்குரிசின் முகம்மதுதம்
முனம்விடுப்ப மகிழ்ந்து நோக்கிக்
கட்டியபொன் மதிட்ககுபா நகரிடைவெங்
குபிரர்மனங் கருகி வாட
விட்டமுடன் சதக்காவென் றிரப்போர்க்கும்
வறிஞோர்க்கு மீந்திட் டாரால்.2.14.34
935
அன்பரா முகம்மதுவுக் கரியநபிப்
பெயர்வானோர்க் கரச ரீந்த
வொன்பதாம் வருடம்வரை யளவுமுயர்
ககுபாவி னொருங்கு தூக்கி
வன்பரா கியகுறைஷிக் காபிரிடு
மொப்புமுறி வசன மியாவு
மின்புறா நின்றுசித லரித்ததெனப்
பெரியதந்தைக் கியம்பி னாரால்.2.14.35
936
அரசரட லரியகும துரைத்தமொழி
யபித்தாலி பகத்தி னோர்ந்து
கரிசமிடுங் குலக்காபிர்க் குரைப்பவதி
லைவர்மனக் கறுப்பு நீக்கி
விரைவினொடு மொப்புமுறி தனைக்கிழிப்ப
வரும்போது வெகுண்டு கூறி
யெரியிடைநெய் யிட்டதெனச் சிலகாபிர்
தடுப்பமன மியைந்தி லாரே.2.14.36
937
சாதிவிலக் கொப்புமுறி பரிகரிக்கும்
வார்த்தைசெவி தடவக் கேட்டுக்
காதியெழுந் தபூஜகல்கண் செவந்துமனங்
கறுத்துமுகங் கடுத்து நோக்கி
மோதுதலுங் கேளாது ககுபாவிற்
றூக்கிவைத்த முறியை வாங்கிப்
பேதமறப் பார்ப்பளவின் முன்னெழுது
மெழுத்திலொன்றும் பெற்றி ராதே.2.14.37
938
அல்லலறச் சிறந்தவரி யல்லாவென்
றொருபெயரி னளவே யன்றி
யில்லையெழுத் தினியிதனா லிருந்துபல
னென்னெனவு மெழுது நாளிற்
பல்லருட னியான்பொருத்த மிலையெனவு
மெடுத்தோதிப் பலருங் காண
வொல்லையினிற் கிழித்தெறிந்தான் சாதிவிலக்
கெனும்பெயர்விட் டோடிற் றன்றே.2.14.38
939
இன்னிசைநன் மறைமுகம்ம திருங்கலிமாத்
தனைவிளக்கி யிருந்தோர்க் கெல்லா
மன்னமருந் திடநீருப் பங்கியளி
யாதவரோ டடுத்தி டாமற்
சொன்னபடி சாதிவிலக் கொப்புமுறி
யெழுதினமன் சூறு வென்போன்
றன்னிருக்கை வழங்காமன் மாறாத
பிணிபிடித்துத் தாழ்ந்திட் டானால்.2.14.39
ஒப்பெழுதித் தீர்ந்த படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 14க்குத் த்ிருவிருத்தம்..939
2.15 புத்து பேசிய படலம் (940 - 951 )
940
நிலத்தரசுக் கிதத்தநடுச் சிரத்தினணி
யெனச்சிறப்பு நிறைமக் காவிற்
குலத்தரச ரினிதுவப்பக் கலிமாவெண்
டிசைமுழுதுங் குலவி யோங்கச்
சிலைத்தடக்கை வயவேந்த ரினிதுசூழ்ந்
திருக்கு நபிசெவ்வி நோக்கி
மலைத்தடத்தின் புயகுசைனு வெனுமறபி
மகிழ்வினொடும் வந்துற் றானே.2.15.1
941
எதிரடுத்த குசையினுக்கன் பருளினொடுங்
கரஞ்சாய்த்திட் டிருக்கை யீந்து
மதியினுமும் மறையினுந்தேர்ந் தவரவர்கள்
கருத்தறிய வல்லோய் நாளுங்
கதிதருமென் புறுக்கானின் வழியொழுகா
திருந்தென்னுன் கருத்தி னூடும்
பதிவுபெறக் கலிமாவை யுரையெனநந்
நபியினிது பகர்ந்திட் டாரால்2.15.2
942
மானுரைத்த துடும்புரைத்த தமாவாசை
யிடத்தினிறை மதிவந் தோடித்
தானுரைத்த தறியேனோ வுமதுவழி
படுமவர்க டமைக்கா ணேனோ
யானுரைப்ப திலைக்கலிமா விதயம்பொருந்
தாப்புகழ்நா வேற்று வனோ
தீனுரைத்த ஹபீபரசன் றடியினையோர்
வடிவாக்குஞ் செவ்வி யோயே.2.15.3
943
அனைத்தையுங்கா ரணமலவென் றகத்திருத்தி
வெறுத்தனையுள் ளருளி னோடு
மனைத்தலத்தோ ருருத்தனைநீ வணங்கினையவ்
வுருத்திருந்த மணிவாய் விண்டு
கனைத்ததிரைக் கடனிலத்திற் பலர்புகழ
வுரைக்குரைகட் டுரைக்கு மேலியா
னினைத்தபடி கலிமாவை யுரைப்பையோ
வெனநபியு நிகழ்த்தி னாரால்.2.15.4
944
நந்நபியிந் நெறியுரைப்ப குசையினெனு
மறபிசிறு நகையி னோடு
மென்னிடத்தி லாறுபத்தைந் தாண்டுவரை
யிருந்துமன மினிது கூரச்
சொன்னதிலை யோர்மொழிமந் திரத்தடங்கித்
தெய்வமுரை சொல்லு மோநீ
ருன்னியவா சகத்தினொடு முரைக்குமென
வுரைப்பதென்கொ லுறுதித் தன்றே.2.15.5
945
பொன்னணிநன் மணிதூசு நறுமலர்கள்
பலசொரிந்து புகழ்ந்திட் டேத்து
மென்னொடுரை யாதகுல தெய்வமும
துரைக்குரைநேர்ந் தியம்பு மேயாற்
பன்னுமறை வழியொழுகிப் படிதீண்டா
மலரடியைப் பரவி வாழ்த்தி
மன்னுமிசு லாமாகிக் குபிரகற்றித்
தீனிலமை வளர்ப்ப னென்றான்.2.15.6
946
திசைமுழுது மொருபுடையிற் கிடத்துங்கரு
முகிற்கவிகைச் செம்ம னேர்ந்த
குசையினைநின் மனைத்தலத்தி லிருந்தவுரு
வெடுத்திவணிற் கொடுவா வென்ன
விசைதரும்வண் டிமிர்தொடையல் புரண்டசைய
வெழுந்துமனை யிடத்தி னேகி
வசையறுநன் மணிக்கலன்க ளொடுபலதூ
சணிந்துமலர் வனைந்திட் டானால்.2.15.7
947
விரைத்தழைகள் சுமத்திநறும் புகைகமழ்த்தி
விளங்குசெழுங் கரத்தி லேந்தி
யுரத்தினணைத் தொருதுகில்கொண் டுறப்போற்றி
நடந்துமறு கூடு லாவி
வரைத்தடத்திண் புயத்துநறை கமழ்ந்தமுகம்
மதுதண்மதி வதன நேரா
யிருத்தியொரு பாலிருந்தான் மும்மறையுந்
தெரிந்துமனத் திருத்தி னோனே.2.15.8
948
வைத்தபுத்தை முகநோக்கி யுனைவணங்கி
யிருந்தோன்றன் மனது கூர
வித்தலத்துள் ளோரறிய வெனதுவர
வாறுமெனக்கி யைந்த பேரு
மெய்த்தவுரை மறைப்பேரும் விண்ணினுமண்
ணினுமறிய விளம்பு வாயென்
றுத்தமசற் குணநயினா ரமுதமலர்
வாய்திறந்தங் கோதி னாரால்.2.15.9
949
வெண்ணிலவு துளித்தொழுகு மதிவதன
முகம்மதினை விளித்து நோக்கி
வண்ணமலர் வாய்திறந்து பெரியோன்றன்
றிருத்தூதாய் வந்த கோவே
பண்ணருநன் மறைநபியே வானவர்பொன்
னடிப்பரவப் படியின் வந்தோ
யெண்ணம்ருபே ரொளியுமும தொளியில்வரக்
கதிர்வடிவா யிருந்த வேந்தே.2.15.10
950
அலலாவின் றிருத்தூதர் வேதநபி
முகம்மதென வகத்திற் கொள்ளார்
பொல்லாத நரகடைவ ருமதடியிற்
பணிந்துகலி மாவைப் போற்றிச்
சொல்லார மனத்திருத்த வறிந்தவரே
சிறந்த பெருஞ் சுவனமாள்வா
ரெல்லாரு மெனைப்போல்வா ரறிவரிது
சரதமென வியம்பிற் றன்றே.2.15.11
951
புத்துரைத்த மொழிகேட்டு குசைனெனுமவ்
வறபியுடற் புளகத் தோடு
முத்தமணி யொளிமுகம்ம தடிபரவிக்
கலிமாவை முழங்க வோதிப்
பத்திபெறத் தொழுகைமுதற் படித்துத்தீ
னெனுமொழுங்கின் பரிவி னோடு
மெத்தலமும் புகழ்ந்தேத்த வீமான்கொண்
டிசுலாத்தி னிணங்கி னாரே.2.15.12
புத்துபேசிய படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 15க்குத் திருவிருத்தம்...951
2.16 பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம் (952- 967)
952
தனுவின் மான்மத முலவிய முகம்மது தழைப்பப்
புனித மாமறை மதிகலி மாக்கதிர் பொழிய
வினிதில் தீன்றிசை விளங்கிட விருக்குமந் நாளி
லனில மொத்தபித் தாலிபுக் கடைந்ததா யாசம்.2.16.1
953
வருத்த நாட்குநாண் முற்றிமெய் மெலிவொடு மயங்கி
யிருத்தல் கண்டுநந் நபிமன மிடைந்தரு கிருந்தார்
திருத்தி லாஅபூ ஜகுலொடு நகரவர் திரண்டு
குருத்த வெண்கதிர்ச் சுதைமனை யிடனறக் குவிந்தார்.2.16.2
954
பெருக வந்திருந் தவர்களை விழித்துரை பிறழா
தொருவ ருக்கொடு பகையிலை யெனும்படி யொழுகி
யிருமெ னத்தலத் தவர்க்கினத் தவர்க்கெடுத் திசைத்தார்
தெருளுஞ் சீரபித் தாலிபென் றுரைத்திடுஞ் செம்மல்.2.16.3
955
கடந்த மும்மதக் கரிதொடு குழியினைக் கடவா
தடைந்த வாறெனக் கிடந்திடும் பெரியதந் தையரைப்
படர்ந்த நன்கலி மாச்சொலுஞ் சொலுமெனப் பகர்ந்தார்
தொடர்ந்து வானவர் பரவிட வருமிற சூலே.2.16.4
956
காதி னுட்புகுந் தனவிலை யெனப்பினுங் கருதி
யோது நன்கலி மாவென முகம்மது முரைக்கும்
போதி னிற்றனி யழன்றபூ ஜகுலுடல் புழுங்கி
மோதி வந்தபித் தாலிபுக் குரிமையின் மொழிவான்.2.16.5
957
தந்தை தாய்தம ரொழுகிய மொழிவழி தவிர்ந்திட்
டிந்த நாளினின் முகம்மதி னுரையினுக் கியைந்தீர்
பிந்து நாளையின் முன்னுரை மறைநெறி பிசகா
தந்த வாய்மையை மனத்தினின் மறவலென் றறைந்தான்.2.16.6
958
உரப்பி யாங்கரித் தபூஜகு லுரைத்திடு முறையிற்
பரப்பு நன்கதிர் முகம்மது பகர்ந்தது தெரியா
திரைப்பெ ருங்கட லெனவினஞ் சூழ்தர விறந்தார்
மரைப்ப தத்தபித் தாலிபென் றழகுறும் வள்ளல்.2.16.7
959
வட்ட வாரிதிப் புவியிடை முகம்மது தமக்குப்
பட்ட மென்பவந் திறங்கிய வருடம்பத் ததின்மே
லெட்டு மாதமும் பதினொரு நாளுஞ்சென் றிதற்பின்
சட்ட கந்தனை விட்டுயிர் பிரிந்தவண் சார்ந்தார்.2.16.8
960
மறந்த யங்குவேற் கரஅபித் தாலிபு மன்ன
ரிறந்த காலையிற் கடலுடைந் தெனநக ரிரங்கச்
சிறந்த மாதர்தமை விழிமழை பொழிதரச் செருமி
யறங்கி டந்தநெஞ் சவரொடு மழுதிரங் கினரால்.2.16.9
961
வரிசை நந்நபி முகம்மது வயிறலைத் திரங்கப்
பரிச னத்தவ ரடங்கலும் பதைபதைத் தேங்க
வரச ரியாவரும் வந்தடுத் தெடுத்துநீ ராட்டிச்
சரகி னேர்வழி யடக்கினர் முடித்தனர் சடங்கு.2.16.10
962
பெரிய தந்தைய ரிறந்திடும் பருவரல் பெருகி
யரிய நாயகன் றூதுவ ரகத்தினி லழுங்கி
வரிகொள் வண்டிமிர் செம்மலர் மரைமுகம் வாடி
யுரைதெ ரிந்திலர் போலிடைந் தகத்துறைந் திருந்தார்.2.16.11
963
அகத்தி னிற்பெருந் துன்பொடு மிருக்குமூன் றாநாள்
வகுத்த நாயகன் விதிவழி குவைலிது மகளா
ரிகத்தி னிற்புகழ் நிறுத்திவிண் ணகம்புக ழிலங்கத்
தகுத்தொ டும்பெரும் புதுமையிற் றிருவடி சாய்ந்தார்.2.16.12
964
முடிவி லாதவன் றூதுவர் முகம்மது நபிக்கு
வடிவ மைந்தமெய்த் துணைவியாய் மகிதலத் திருந்து
கடிகொள் பொன்னக ரத்தினிற் கதிர்கொண்மா ளிகையிற்
குடிபு குந்தனர் கத்தீஜா வெனுங்குலக் கொடியே.2.16.13
965
நனைத தும்பிய மலர்ப்புய முகம்மது நபிக்கு
மனைவி யாகிய கத்தீஜா வெனுங்குல மயிலைப்
புனையும் பூந்துகிற் பொதிந்துநற் புகழொடு மேந்தி
வனையு மென்மனம் போலினி தடக்கினர் மகிழ்ந்தே.2.16.14
966
பேதை யர்க்கர சினையருட் பெரியவன் றூதர்க்
காத ரம்பெரு மயிலினை யெடுத்தினி தடக்கிக்
காத லுற்றுயர் தீனிலை யவர்கலந் திருந்து
கோத றச்செயுஞ் சடங்குகள் குறைவற முடித்தார்.2.16.15
967
இலக்க முற்றிடும் பெரியதந் தையரிறந் திருந்த
வலக்கண் மேற்கொள வருந்திய காலையி லணியாய்
நிலைக்கும் பேரெழின் மனைவியு மிறந்திட நிலையாக்
கலக்க முற்றது மறைமுகம் மதுநபி கருத்தில்.2.16.16
பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 16க்குத் திருவிருத்தம்...967
2.17 பருப்பத ராஜனைக் கண்ணுற்ற படலம் (968-1002)
968
ஆர ணப்பொரு ளகுமது மவதியுற் றதனாற்
கார ணப்பல னறிந்தும்வஞ் சனையெனுங் காபிர்
பார ணைத்தெறிந் திருகவுண் மதசலம் பரப்பும்
வார ணத்தினு மும்மடங் கெனும்படி வலித்தார்.2.17.1
969
மிகைத்த வீறரி முழைபுகுந் தெனவிற னயினா
ரகத்திற் றுன்பினி லடங்கின ரெனவறி கிலராய்ப்
பகைத்த புன்மனக் கொடியவர் பெரும்பகை தொடுத்தா
ரிகத்தி னும்மறு புரத்தினு மிவையிலை வெனவே.2.17.2
970
குறைஷி யங்குலக் காபிர்கள் விளைத்திடுங் கொடுமை
யறவு மேல்வளர்ந் தனகுறைந் திலஅபித் தாலி
பிறைவன் முன்விதி யமைத்திடும் படியிவ ணிறந்து
நிறையுந் திங்களு மூன்றெனத் தினநிகழ்ந் தனவே.2.17.3
971
காய முள்ளுரை யுயிரெனு மிருவருங் கம்புக்
காய தும்மினத் தவர்பகை யையுமனத் தடக்கித்
தூய நாயகன் தீனிலை பெருக்கிடுந் துணிவாற்
றாயி பென்னுமத் தலத்தினுக் கெழுந்தரு ளினரே.2.17.4
972
சவிகொள் வெண்சுதை மாமதிள் தாயிபி லிபினு
அபுது யாலிலென் றிடும்பெயர்க் குறைஷியென் பவனை
நபிக ணாயகங் கண்டன ரவனெதிர் நடந்து
குவிகை கொண்டுபின் னிவரொடு மனைகுறு கினனே.2.17.5
973
மனையி னிற்கொடு போய்முகம் மதுதமை யிருத்தி
யினிய வாசகத் தன்பொடும் புகழ்ந்தெடுத் தேத்தி
வனச மென்மலர் செழும்பதத் திணைவருந் திடவே
தனிய னென்வயின் சார்ந்தவை சாற்றுக வென்றான்.2.17.6
974
கண்ட போதினி லுவகையி னிருகரங் குவித்துக்
கொண்டு நின்றுநன் மொழிபகர்ந் தனனெனக் குறித்து
வண்டு வாழ்மலர்ப் புயமுகம் மதுநபி மணிவாய்
விண்டு தேன்சொரிந் தெனச்சில மொழிவிளம் புவரால்.2.17.7
975
ஆதி தன்னருள் வானவர்க் கரசெனை யடுத்து
நீதி நன்னபி யெனும்பெய ரளித்துநீ ணிலத்தில்
வேத மும்மெனக் கருளிதீ னிலைவிரித் திடுமென்
றோதி விண்ணகத் துறைந்தனர் செழுங்கதி ருலவ.2.17.8
976
அந்த நாட்டொடுத் திற்றைநாள் வரையுநல் லறிவர்
புந்தி கூர்தரச் செழுங்கலி மாத்தனைப் புகட்டி
வந்து சூழ்தரு பவக்களை தவிர்த்துமண் ணிலத்தி
லுய்ந்து நற்கதி பெறுவதற் குறுதிசெய் தனனால்.2.17.9
977
உன்னு நன்மறை முதற்கலி மாவெடுத் துரைத்துன்
றன்னை நல்வழி யவனெனுந் தகைமையிற் படுத்தி
மன்னுந் தீனிலை விரித்தறம் வளர்த்திட வேண்டிற்
றென்னு ளமதி னடைந்தனென் றுரைத்தன ரிறசூல்.2.17.10
978
கதிர்தி ரண்டுரு வெடுத்தவ ருரைத்தகட் டுரைகேட்
டதிவி தத்தொடு நன்கெனச் சிரங்கர மசைத்துப்
புதிய மாமறைக் கையமி லெனப்புகழ் படுத்தி
மதியின் வேறுவைத் திசைந்திடுஞ் சிலமொழி வகுப்பான்.2.17.11
979
எடுத்து ரைத்தவை யென்னினத் தவர்க்கெடுத் தியம்பி
யடுத்தி ரண்டொரு தினத்தினும் மிடத்தினி லணுகி
வடித்த வாய்மையி னொழுகுவன் மறைதெரி மதியோய்
படித்த லம்புகழ் நகரினிற் செலுமெனப் பகர்ந்தான்.2.17.12
980
இனைய வாசக முரைத்தவ னிருப்பநம் மிறசூல்
வினைய முற்றதிவ் விடத்தெனத் தாயுபை விடுத்து
நினைவு நேரொடு தொழுதெழுந் திருந்துநன் னெறிக்கே
நனைகொண் மென்மலர் கானகத் தருத்தர நடந்தார்.2.17.13
981
ஆல மும்வௌி றிடக்கெடுங் கொடுமனத் தப்து
யாலி லென்பவன் சிறியவர்க் கினியவை யுரைத்து
மேலும் பேதைநெஞ் சவருட னிவரையும் விரவிக்
கோலும் வன்கதம் வரச்சில மொழிகொளுத் தினனால்.2.17.14
982
வெறியும் பித்துமுற் றவனிவண் பெருவழி விடுத்தோர்
நெறியி டைத்தனி சென்றன னவன்றனை நேடி
மறியுங் காறலை தகர்ந்திட வலியகல் லெடுத்திட்
டெறியு மேகுமென் றுரைத்தன னரகிடை யெரிவான்.2.17.15
983
வஞ்ச கக்கொடி யவனுரைத் திடுமொழி வழியே
பஞ்ச பாதகர் நடந்தரும் பாதையைக் குறுகிக்
கஞ்ச மென்பத முகம்மதைக் கடிதினில் வளைந்திட்
டஞ்ச லாதுகற் குணிலெடுத் தெரிந்துநின் றடர்ந்தார்.2.17.16
984
கல்லி னாலுரஞ் சிரங்கரங் கான்முகங் காணா
தெல்ல வன்கதிர் பொழிந்தெனப் பல தொடுத் தெறிந்து
பல்லி னாலித ழதுக்கியு முறுக்கியும் படர்ந்தார்
சொல்லொ ணாப்பெரும் பாதகம் விளைத்திடுஞ் சூமர்2.17.17
985
இருமை யும்பத மிழந்தவர் செலச்சினந் தெறிந்து
கருனு தாலிபு மட்டினுந் தொடர்ந்தவர் கலைந்தார்
தருகை வள்ளனந் நபிமுகம் மதின்முழந் தாளி
லொருகல் லேறுபட் டூறுபட் டுதிர்ந்தன வுதிரம்.2.17.18
986
ஊறு பட்டதின் வருத்தமும் பசியினுள் ளுலைவு
மாறு பட்டவர் தொடர்ந்ததி னடந்தமெய் மலைவும்
பேறு பட்டமுந் தந்தவ னருளெனப் பெரிதின்
றேறு பட்டவ ணிருந்தனர் திருநபி யிறசூல்.2.17.19
987
இருந்து மெய்வருத் தந்தவிர்த் தந்தரத் திடத்திற்
றிருந்த நோக்கினர் மங்குலின் வயின்ஜிபு ரீலைப்
பொருந்தக் கண்டுகண் களித்தனர் புதியவன் றூதர்
விரிந்த வெள்ளிடை கடந்தணித் துறவிளங் கினரால்.2.17.20
988
வந்த டுத்திறை யவன்சிலா முரைத்துமெய் வருந்த
லிந்த மாநிலத் திற்றைநும் மினத்தவ ரிடரா
லந்த நாயக னமரரில் வரைக்கர சவரை
யுந்த மேவலுக் கேவின னெனவெடுத் துரைத்தார்.2.17.21
989
இறும்பி னுக்கர சாகிய மலக்கும திடத்தி
னுறும்ப கைத்திர ளெத்தனை யாகிலு மொடுக்கிக்
குறும்பி னைத்தவிர்த் திடவரு குவரெனக் கூறிப்
புறம்ப ரந்தசெங் கட்கடை யருளொடும் போனார்.2.17.22
990
உருப்பொ திந்தநல் வடிவவ ருரைத்தொரு நொடிக்குட்
பருப்ப தங்களுக் கிறைசெழுந் தடஞ்சிறை பரப்பித்
திருப்பு நீரலைக் கடல்வரை புவிதிடுக் கிடவே
விருப்ப முற்றுநந் நபியிடத் தடுத்தனர் விரைவின்.2.17.23
991
வெற்ப டங்கலுங் கரங்களிற் பிசைந்துவிட் டெறிந்து
புற்பு தக்கட லிறைத்தொரு கடலினிற் புகட்டிப்
பற்ப மாக்கும்வெங் கனலையும் புகையறப் படுத்தி
நிற்ப வீரமும் வலிமையும் படைத்தநன் னெறியார்.2.17.24
992
உதய மாகிரிக் கொருதரந் தடவுவ ரொருகை
புதைய மேற்கிரி தடவுவர் விண்ணைமண் புரளச்
சிதறித் தீவக மேழையுங் கடலிடை சிதைப்பார்
விதிய வன்விதித் திடுமவை யெவையெனும் விரதர்.2.17.25
993
ஒருநொ டிக்குளந் தரமடங் கலுந்திரிந் துலவி
யொருநொ டிக்குளிவ் வானகங் கவிந்தமட் டுலவி
யிரும னத்தொடும் வரவரம் படைத்தவ ரெழிலா
ரிருசெ விக்கொடுத் தேவலின் படிக்கிசைந் திருப்பார்.2.17.26
994
சித்தி ரத்தடப் புயவரை முகம்மது திருமு
னுத்த மத்தொடு மொடுங்கிநின் றொருசலா முரைத்து
முத்த வெண்கதி ரவரிரு மெனுமொழி கேட்டுப்
பத்தி யாயரு கிருந்தொரு மொழிபகர்ந் திடுவார்.2.17.27
995
எத்த லத்துயி ரினுக்குநல் லுணவளித் திரங்கு
மத்த னென்னைநும் மேவலுக் கருளின னதனா
லித்த லத்தில்வந் தடைந்தன னினியருட் கடைக்கண்
வைத்தி ரேற்பணி விடைதறு கிலன்மறை மதியோய்.2.17.28
996
அருந்து மாரமு தக்கலி மாவுரைக் கடங்கா
திருந்த வூரெவை பகைத்தவ ரியாவர்நும் மிதயம்
பொருந்தி டாத்திசை யெத்திசை பொருவராக் கதிர்மெய்
வருந்தல் செய்தவ ரெவர்திரி தரவழங் கிடுமே.2.17.29
997
செப்பி னீரெனிற் செறுநர்க டிரளுமத் திசையு
முப்பு வாரியு ளமிழ்த்துவ னலதொரு வரையா
லிப்பெ ரும்புவிக் குள்ளரைத் திடுகுவ னௌியேன்
றுப்ப றிந்திட வேண்டுமென் றிரவொடுஞ் சொன்னார்.2.17.30
998
விண்டி னுக்கர சிவைபகர்ந் திடத்துளி விதிர்க்குங்
கொண்ட லங்கவி கைக்கிறை யகங்களி கூர்ந்து
மண்ட லத்தும துரைவழி நடத்திடின் மறைநேர்
கண்டு தேறுவ ரெவர்பொறை நிலத்தினிற் கடனே.2.17.31
999
இறைய வன்னருட் படிக்கிட ரடைந்ததென் னிடத்திற்
குறையி தென்றுமா னிலத்தவர் தமைக்குறை படுத்தன்
மறையி னேரல வெகுளியை மனத்தினி லடக்கி
நிறையி னிற்பது பெரியவர்க் குரியநன் நிலையே.2.17.32
1000
மிக்க வன்குபிர்க் கொலைத்தொழின் மனத்தினை விடுத்திட்
டிக்க ணத்தினல் வழிப்படா ரெனிலிவர் பயந்த
மிக்க ளாயினு நல்வழிக் கொழுகுவர் மறையுந்
திக்க டங்கலும் பரந்துதீ னெறிமுறை செயுமே.2.17.33
1001
வான நாயக னேவலுக் குரியவ மகிழ்வின்
யானி னைத்திடும் பொழுதினில் வருகவிற் றையினுந்
தான மீதினிற் செல்கவென் றிசைத்தனர் தளரா
தான செய்கையீ தெனவெழுந் தனர்மலைக் கரசர்.2.17.34
1002
உள்ள மீதிலன் பொடுநபிக் குயர்சலா முரைத்து
வெள்ளி டைப்படர்ந் தவணடைந் தனர்மலர் விரிந்து
கள்ள லம்பிய பொழில் செறி கற்னுத ஆலிப்
வள்ள லாரிருந் தனர்புவி யிடையெழு மதிபோல்.2.17.35
பருப்பதராஜனைக் கண்ணுற்ற படலம்
ஆகப் படலம் 17க்குத் திருவிருத்தம்...1002
2.18 அத்தாசு ஈமான் கொண்ட படலம் (1003 -1014)
1003
மறைகலை புகழ்ந்த செவ்வி முகம்மது தனித்துத் தாக
நிறையொடும் பசியுந் துன்னி நீணெறி யிருப்ப வவ்வூ
ரிறபீஆ புதல்வர் தம்மி லிருவர்க ளினிது நோக்கிக்
குறைவிலா மனத்தி னோர்ந்து மனையிடங் குறுகி னாரால்.2.18.1
1004
அன்னவர் தொழும்ப னத்தா சென்பவ னவனைக் கூவிக்
கன்னலஞ் சுவையின் மிக்காந் திருகையின் கனியை யேந்தி
யின்னணங் கொடுபோ யாண்டி னிருப்பவர் கரத்தி னீந்து
பன்னரும் பசியை மாற்றி வாவெனப் பரிவிற் சொன்னார்.2.18.2
1005
காசறுந் தட்டத் திட்ட பழத்தினைக் கரத்தி லேந்தித்
தூசினிற் பொதிந்து தோளிற் சுமந்தரு நெறியை முன்னிப்
பாசடைத் தருக்க ளியாவும் பலமலர் சொரிய வாய்ந்த
வாசமூ டுலவுஞ் செவ்வி முகம்மது திருமுன் வைத்தான்.2.18.3
1006
கனியினைக் கொணர்ந்து வைத்தோன் செம்முகங் கவின நோக்கி
யினிதினி லிருக்கை யீந்திட் டெழிற் செழுங்கமலக் கையாற்
பனிமலர்த் துகிலை நீத்துப் பழத்தினைத் தீண்டி யின்ப
மனையநல் பிசுமி லோதி யமுதென நுகர்தல் செய்தார்.2.18.4
1007
பண்ணினு மினிய தேன்சார் பழத்தினிற் பசியைப் போக்கி
யுண்ணிறை யுவகை கூர்ந்தெவ் வூரவ னின்பே ரேதென்
றண்ணலு முரைப்பச் செவ்வி யகமகிழ்ந் தத்தா சென்போன்
புண்ணியப் பொருளே யென்னப் போற்றி வாய்புதைத்துச் சொல்வான்.2.18.5
1008
நள்ளென வுலகி னூழின் வருநசு றானி மார்க்கத்
துள்ளவ னீன வாவென் றோதிய வூரி னுள்ளேன்
றெள்ளிய னிறபி ஆதன் றிருமனைக் கிணகன் சேந்த
வள்ளிலை வேலோ யத்தா சென்பவ னடியே னென்றான்.2.18.6
1009
விரிந்தமுன் மறைக டேர்ந்து மெய்ந்நெறி முறைமை நாளும்
பிரிந்திடா துறையூ னூசு நபியெனும் பெயரின் வள்ள
லிருந்தவூ ரவனோ வென்றா ரினிதின்முன் னவரை யின்னோர்
தெரிந்தவா றெவ்வா றென்னச் சிந்தையுட் சிந்தித் தானே.2.18.7
1010
பொன்னுல கமரர் போற்றப் பூவிடை யிருந்த யூனு
சென்னுநன் னபியை நீவி ரெவ்வண மறிவீ ரென்ன
நன்னிலை யொடுமத் தாசு நவின்றனன் வணங்கி லாத
மன்னவர்க் குருமே றென்ன வருமுகம் மதுபின் சொல்வார்.2.18.8
1011
படியிடத் தினில்யூ னூசு நபியெனும் பட்டம் பெற்றோர்
நெடியவன் றூத ரியானு நபியெனு நிலைமை பெற்றேன்
வடிவுளோ யதனா லெற்கு மன்னுயிர்த் துணைவ ராகு
மடனபி மாரு மென்றா ராரணங் கிடந்த வாயார்.2.18.9
1012
நபிகளுக் கரசாய் வந்த நாயக முறைத்த மாற்றஞ்
செவியினிற் புகுத வுண்மைத் திருநபி யிவரே யென்னத்
தவிர்கிலா துள்ளத் துன்னிச் சரணிணை யிறைஞ்சி யேத்திக்
கவினுறுங் கலிமா வோதிக் கண்ணிணை களிப்ப நின்றான்.2.18.10
1013
மக்கநன் னகரில் வாழு முகம்மதுக் கத்தா சென்போ
னிக்கணத் தீமான் கொண்டா னெனுமொழி யிறபீ ஆதன்
மக்கள்கேட் டறவு நக்கி மாயவஞ் சகத்துட் புக்கிச்
சிக்கினன் றொழும்ப னியாமென் செய்குவோ மென்ன நைந்தார்.2.18.11
1014
மதிபகிர் நபிக்கன் பாக மந்திரக் கலிமா வோதி
யிதயமொத் தினிதீ மான்கொண் டிருமனக் குபிரை நீத்துப்
பதமலர் துதித்துத் தேடாப் பலன்கதி படைத்தே னென்னப்
புதியநல் வடிவ னாகிப் பொருவிலத் தாசு போனான்.2.18.12
அத்தாசு ஈமான் கொண்ட படலம் முற்றிற்று
ஆகப்படலம் 18க்குத் திருவிருத்தம்...1014
2.19 ஜின்கள் ஈமான் கொண்ட படலம் (1015 - 1057)
1015
படர்ந்துவண் டினந்தே னுண்டு செல்வழி பாடுங் கஞ்சத்
தடந்திகழ் கற்னு தஆலி பென்னுமத் தலத்தை நீந்திக்
கடந்தனிற் குபிரென் றோதுங் களிறட ரரியே றென்ன
நடந்துநன் னகுலா வென்னுந் தலத்தினை நண்ணி னாரால்.2.19.1
1016
பொங்கிநின் றமர ரியாரும் பொன்னடி பரவி யேத்து
மங்குலங் கவிகை வள்ளன் முகம்மது நகுலாத் தன்னிற்
றங்கினர் பறவை தத்தங் குடம்பையிற் சார வவவிப்
பங்கயங் குவியச் செங்கே ழலரிமேற் பரவை சார்ந்த.2.19.2
1017
அலரிமேற் கடலுட் புக்க வடரிரு படலஞ் சீப்ப
நிலவுகொப் பிளித்த தென்ன நீண்டமெய்ச் சோதி கால
நலனுறு நகுலா வென்ன நாட்டிய தலத்தி னோர்பாற்
சலதரக் கவிகை யோங்கத் தனித்தவ ணிருந்தா ரிப்பால்.2.19.3
1018
அலைகடற் றிரைக்கு நாப்ப ணாளியா சனத்தில் வைகி
யுலகெலாங் கொடுங்கோ லோச்சி யொருகுடை நிழலிற் றாங்கிப்
பலகலை மருவலார்க்குப் படிறெனும் படைந டாத்துந்
தலைமையன் சிறுமை கீழ்மை தனைப்பெரு மையதாய்க் கொண்டோன்.2.19.4
1019
கொலையினுக் குரிய தந்தை கோளுயிர்த் துணைவன் மாறா
நிலைகெடுங் கரவுக் கன்ப னிந்தனைக் குற்ற தம்பி
யிலைபிழி மதுவுக் கீன்ற சேயினு மினிய னீண்ட
வுலகினின் மாயமெல்லா மோருரு வெடுத்து நின்றோன்.2.19.5
1020
எண்ணிறந் தனைய காலமிருந் திறை யேவன் மாறி
விண்ணில கிழந்து மெய்மை விதிமறை தனக்கு நாணி
மண்ணிலத் திருந்து வாழு மானுட ரெவர்க்கும் வெய்ய
தண்ணிய னிபுலீ சென்னுந் தனிப்பெரு நாமத் தானே.2.19.6
1021
மக்கடங் குழுவின் வைகி மந்திரந் தலைவர் சூழ
மிக்கஜின் சிலதைக்கூவி விறன் முகம் மதுவை நீவி
ரிக்கணத் திற்றைப் போதி லெவ்விடத் துறைந்தா ரென்றென்
பக்கலி லுரைப்ப நோக்கி வம்மெனப் பரிவிற் சொன்னான்.2.19.7
1022
அருந்தவந் தவறி நின்ற வரசனீ துரைப்பக் கேட்டுப்
பெருந்தொகைக் குழுவி னோடும் பெரி தெழுந் தாழிசூழ
விருந்தவை யகத்தி காந்த மெட்டினுந் தேடிச் சென்று
பிரிந்ததி லொன்பான் ஜின்கள் பேரற படைந்த வன்றே.2.19.8
1023
அற்றையிற் பொழுதி ராவில் ரகசியத் தொழுகை யன்பாய்
முற்றுற முடித்து வள்ளன் முதலவன் றன்னை யேத்திக்
குற்றமற் றிரந்து நின்ற வசனத்தின் குறிப்புக் காதி
னுற்றடுத் தொருங்கு நோக்கி யோரிடத் துறைந்த வன்றே.2.19.9
1024
தரிப்பொடுந் துவாவை யோதித் தனிநகு லாவி னோர்பர்ல்
விருப்பொடு மிரப்பக் கேட்டு மிகமகிழ்ந் திதய நோக்கி
யிருப்பது நபியே வாய்கொண் டிசைப்பது புறுக்கா னென்னத்
திருப்புதற் கரிதாய் நின்று ஜின்கண் மெய்சிலிர்த்த வன்றே.2.19.10
1025
இத்தினத் தினிலன் பாக வெழினபி கமல பாத
முத்திபெற் றீமான் கொண்டு முதற்பவந் துடைப்போ மென்ன
வொத்தித மித்துத் தம்மி லொன்றுக்கொன் றுறுதி கூறிப்
பத்தியுள் ளிருத்தி நாட்டத் துடன் வௌிப்பட்ட வன்றே.2.19.11
1026
பனியொடு திமிர மூடப் படவரு மிரவின் கண்ணே
தனியிருந் தெழின்மெய்ச் சோதி தயங்கிய நபிமுன் பாக
வினியவர் போலச் சென்று வந்தவா றெடுத்துக் கூறிக்
கனியென நெகிழ்ந்த நெஞ்சிற் கருத்தையுங் கூற லுற்ற.2.19.12
1027
பின்னணித் தாதி தூதர் பிறப்பரென் றாதி நூல்கள்
பன்னிய துளதின் றெங்கட் பார்வைகள் குளிரக் கண்டே
முன்னைநாட் பவங்க டீர்த்தே முகம்மதே யென்னப் போற்றிச்
சொன்னயக் கலிமா வோதிச் சுடர்ப்பதந் தொழுது போன2.19.13
1028
நன்கலி மாவை யோதி நறுமனக் களிப்பி னோடுஞ்
ஜின்கடம் மினத்தைச் சேர்ந்து சென்றது மறபு நாட்டின்
மின்கடந் திலங்குஞ் சோதி விரிந்தமெய் முகம்ம தென்னுங்
கொன்கதிர் வேலார்க் கீமான் கொண்டது முரைத்துக் கூறும்.2.19.14
1029
பூதலத் திடத்தின் மக்கா புரத்தினின் முகம்ம தென்போர்க்
காகித னருளாற் றூதென் றருநபிப் பட்டம் வந்து
வேதமு மிறங்கித் தின்பத் தீனெறி விளக்கஞ் செய்தார்
பேதம தன்று காணா திருப்பதும் பிழைய தன்றே.2.19.15
1030
வஞ்சக னிபுலீ சென்போன் வார்த்தையு ளடங்கிப் பேதை
நெஞ்சின ராகித் தீயோ ரெனநிலை நின்றோம் வேறொன்
றஞ்சலித் தறியோம் நல்லோர்க் கவம்விளைத் தோமீ தெல்லாம்
நஞ்சுறை நரகம் புக்கு நெறியலா னலனு முண்டோ.2.19.16
1031
நபிதிருப் பாத நண்ணி நன்னெறி முறைவ ழாதோர்
புவியிடத் தினிது வாழ்ந்து பொன்னுல காள்வ ரென்றார்
கவினுறும் பெரியோர் வேதங் காட்டிய நெறியு மீதே
தவிர்கிலா தெழுக வென்னச் சாற்றின ஜின்க ளன்றே.2.19.17
1032
கூறிய மொழியைக் கேட்டுக் குழுவுட னிருந்த ஜின்க
டேறிய கருத்து ளொத்துத் தேர்ந்தெழுந் தவிட நீந்திப்
பேறுடை மக்க மென்னும் பெரும்பதி யடுத்தோர் ஜின்னை
யீறிலான் றூதர்க் கன்பாய்த் தூதுவிட் டிருத்த வன்றே.2.19.18
10331
நறைகொளுஞ் செவ்வித் திண்டோ னபிநகு லாவை நீந்தி
யிறைவனே வலினால் வானோ ரெண்ணிலர் சூழச் செல்வங்
குறைவறா மக்க மென்னுங் கொழுநக ரதனின் வந்தார்
மறைபட விருந்து ஜின்கள் வரவிடுந் தூதும் வந்த.2.19.19
1034
வந்ததூ திருந்த செவ்வி மதிமுகம் மதுவைக் கண்டு
கந்தமென் மலர்த்தாள் வீழ்ந்து கைகுவித் தெழுந்து போற்றிச்
சிந்தையின் மகிழ்ந்தன் பாகச் சின்களால் விடுக்க வந்த
சந்தியா னென்னச் சாற்றிப் பின்னருஞ் சாற்று மன்றே.2.19.20
1035
எங்கடங் குலத்தி னுள்ளா ரெண்ணிலர் நகர்க்க ணித்தாய்
மங்குலின் கவிகை யோய்நும் மலர்பதங் கண்டு தீனி
னிங்கிதத் தொடுமீ மான்கொண் டேகுதற் கிசைந்து நின்றா
ரங்கெழுந் தருள வேண்டு மென்றினி தறைந்த தன்றே.2.19.21
1036
ஜின்னிவை யுரைப்பக் கஞ்சச் செழுமுக மலர்ந்து வேதம்
பன்னிய பிசுமி லோதிப் பண்புட னெழுந்து வள்ளல்
பொன்னணி மாட வீதி நகர்ப்புறத் தடுத்துக் கூண்டு
மன்னிய குழுவின் வந்தார் மாநிலந் தழைக்க வந்தார்.2.19.22
1037
கருமுகி னிழற்றக் கஞ்சக் கதந்தரை படாது நானம்
பொருவறக் கமழவந்த புண்ணியப் பொருளைக் கண்டு
திருமுகத் தெதிர்ந்து ஜின்க டிரளொடு மிறைஞ்சி வாழ்த்திப்
பருவர லகற்றித் தேறச் சிலமொழி பகரு மன்றே.2.19.23
1038
வானகத் தமரர் செய்ய மலரடி பரவி யேத்த
நானிலத் தரிய வேத நபியெனும் பட்ட நும்பா
லானதற் குரித்தா யெங்க ளகத்தினிற் களங்க மென்னு
மூனமற் றிடவே றுண்மை யுறுதியொன் றறிய வேண்டும்.2.19.24
1039
வன்களங் ககற்றித் தீனின் வழிநிலை குறித்து வந்த
ஜின்களிற் றலமை யான ஜின்களிவ் வுரையைத் தேற்றப்
பொன்கடந் தொளிருந் திண்டோட் புரவல ரிறசூ லுல்லா
வின்களிப் பொழுக நோக்கி யெடுத்துரை கொடுப்ப தானார்.2.19.25
1040
குவடுறை விலங்கி னாலோ கொழுஞ்சிறைப் பறவை யாலோ
தவழ்தரு முயிரி னாலோ தருக்களி னாலோ வுங்கள்
செவியறிந் திதயங் கூர்ந்து தெரிதர வென்னை யிந்த
வவனியி லுண்மைத் தூதென் றறியவேண் டுவதே தென்றார்.2.19.26
1041
பேதமற் றுரைத்தீர் சோதி பெருகுதீன் விளக்கே யிந்தப்
பாதையிற் றருவந் தெங்கள் பார்வையிற் கணித்தாய் நின்று
தூதுவ ரென்றோர் மாற்றஞ் சொல்லுமேற் கலிமா வோதிக்
கோதற மனத்து ளீமான் கொள்வது திண்ணமென்ற.2.19.27
1042
கடத்தின்மா னுரைப்ப நின்ற காரணக் குரிசி றூரத்
திடத்தினி னின்ற வஞ்சித் தருவினை யெதிர்ந்து நோக்கி
படித்தலத் துறைந்த வேரின் பற்றறா தெழுந்து வெற்பி
னடுத்திவண் வாவென் றின்ப வமுதவாய் திறந்து சொன்னார்.2.19.28
1043
பாசடை குழைத்த வஞ்சித் தருபடி துளைதுதுள் ளோடி
வீிசிய கவட்டுச் சில்லி வேரிலொன் றறாத வண்ண
மாசற வெழுந்து செவ்வி முகம்மதின் பாத நோக்கிக்
காசினி யிடத்திற் றோயக் கவின்பெறப் படிந்த தன்றே.2.19.29
1044
பலனுறுங் கலிமாத் தன்னைப் பணரெனும் பலகை யார
நிலைபெறு மறபி னானன் னெடுநிலத் தெழுதிச் சின்கள்
குலனொடு மினிது காணக் கொழுந்தழை குழைய வூர்ந்து
கலைமுகம் மதுதம் முன்கண் களித்திட நின்ற தன்றே.2.19.30
1045
நின்றமா மரத்தை நோக்கி நெறிபட வெவருங் கேட்ப
வின்றெனை யிவர்கட் கின்னா ரெனவெடுத் தியம்பு கென்ன
மன்றலங் குரிசில் கூற மலரிலை குலுங்க வாடா
வென்றிகொ ளிறையோ ணுண்மைத் தூதென விளம்பிற் றன்றே.2.19.31
1046
சாடினி தெழுந்து வந்து தவறிலா துரைத்த மாற்றங்
கூடிய ஜின்க ளெல்லாஞ் செவிமனங் குளிரக் கேட்டு
நீடிய வுவகை யென்னு நெடுங்கட னீந்தி நீந்தித்
தேடிய பொருளி தென்னச் சேவடி சிரசிற் கொண்ட.2.19.32
1047
சீதமென் கவிகை நீழற் றிருநபி யிறசூ லுல்லா
பாதபங் கயத்தை முத்திக் கண்மலர் பரிவிற் சாத்திக்
கோதறுங் கலிமா வோதிக் குழுவொடு மீமான் கொண்டு
வேதநன் னிலைமை நீங்கா மெய்ந்நெறி மேவி நின்ற.2.19.33
1048
கலைநெறி பகரும் வள்ளல் கானகத் தருவை நோக்கி
யுலைவிலா துனது தானத் துறைகென வுரைப்பத் தீனி
னலனுறு மபுல்கா சீம்தம் நல்லிசை திசைக டோறு
நிலைபெற நின்ற தென்ன நெறிச்சென்று நின்ற தன்றே.2.19.34
1049
கணத்தொடும் ஜின்கள் வள்ளல் கமலமென் முகத்தை நோக்கி
யிணைத்தநன் னெறியி னின்றோ மின்றுதொட் டினிமே லுங்கட்
குணத்தக வுணவீ தின்ன தெனவெடுத் துரையு மென்னப்
பணித்துவாய் புதைத்து நின்று பண்புறப் பகர்ந்த வன்றே.2.19.35
1050
பறவையில் விலங்கி லுள்ள படைப்பினிற் றக்கு பீரி
லிறையவன் விதித்த வண்ணத் திறந்ததென் பவையு நுங்கட்
குறைபசிக் குணவென் றன்பா யோதினர் கேட்டு மீட்டு
மறுவற வெங்கட் குற்ற வாகனத் துணவே தென்ற.2.19.36
1051
தேறிய மறையின் றீஞ்சொல் தீனிலைக் குரிய தூயோ
ரேறுவா கனந்தின் றற்ற தெவையுள வவைக ளெல்லா
மாறுபா டன்றி நுங்கள் வாகனத் துணவே யென்னக்
கூறினர் பிணைக்கி யானே பிணையெனக் கூறுங் கொண்டல்.2.19.37
1052
விரிதரு மமுதச் செவ்வாய் திறந்திவை விளம்பக் கேட்டுத்
திருமுகத் தெதிர்ந்த பன்னீ ராயிரஞ் ஜின்க டங்கள்
சிரமடி மலரிற் சேர்த்தித் தீனவர் தமையும் வாழ்த்திப்
பரிவொடு மகிழ்ந்து தத்தந் திசையினிற் படர்ந்த வன்றே.2.19.38
1053
பரவையும் விசும்பும் பாரும் படர்ந்திருள் செறிந்து தோன்று
மிரவினிற் றிரண்ட ஜின்க ளினத்தினை யீமான் கொள்வித்
தரியட லேற தென்ன வழகொளி விரித்துக் காட்ட
மருமலர்க் கரிய கூந்தன் மயிலுறை மனையின் வந்தார்.2.19.39
1054
நெருங்கிய கங்குற் போதி னிறைந்தவல் லிருளை மோதி
யிருங்கதிர் கரங்க ளார வெடுத்தெடுத் தெறிந்து சிந்தி
யருங்கண மனைத்து நாணி யகல்விசும் பொளிப்ப நோக்கிக்
கருங்கடன் முகட்டில் வெய்ய கதிரவன் றோன்றி னானே.2.19.40
1055
காசினி யிடத்தி னற்றைக் காலையின் கடன் டீர்த்து
நேசமுற் றுவந்து தீனோ ருடனினி துறைந்து ஜின்கள்
மூசிவந் தீமான் கொண்டு போயது முறை வழாமற்
பேசிநல் லுணவு மீந்த செய்தியும் பிறக்கச் சொல்வார்.2.19.41
1056
மறச்சிலைக் கரத்தீர் தீனின் மானுடர் வாயின் மிச்சி
லிறைச்சியென் பனைத்துஞ் ஜின்கட் குணவென வீந்தேன்மேலுங்
கறித்தவென் பிறைச்சி மிச்சி லென்பதைக் களங்க மில்லாப்
புறத்தினில் வீச லியார்க்குங் கடனெனப் பொருந்தச் சொன்னார்.2.19.42
1057
பூமணம் பொருந்தக் காட்டும் புதுமைகண் டரிய ஜின்க
டாமதி யாது கூடித் தளத்தொடுந் திரண்டு வந்தீ
மான்மனம் பொருந்திற் றென்ற வார்த்தையிற் புளகங் கொண்டு
தேமலர்ப் புயத்தார் போற்றத் திருநபி யிருந்தா ரிப்பால்.2.19.43
ஜின்க ளீமான் கொண்ட படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 19க்குத் திருவிருத்தம்...1057
2.20 காம்மாப் படலம் (1058 - 1086)
1058
நரையொளி பிறங்க வுடம்பெலாந் திரைந்து
நரம்புக டெரிந்திட வறந்து
தெரிதருங் கட்பா வையினொளி மழுங்கித்
திரள்படப் பீழையுஞ் சாடித்
தரிபடா நாசித் துளையினீர் ததும்பத்
தைத்தறக் கிழிந்ததோர் துணியு
மரையிடைக் கிடந்து சரிந்தடிக் கடிவீழ்ந்
தவிழ்ந்திட வொருகரந் தாங்க.2.20.1
1059
உடற்குறை கூனுஞ் செவித்துளை யடைப்பு
மொருகையிற் ரடிக்குளா தரவி
னடக்கையி னடக்குந் தலைக்கிடு கிடுப்பு
நனிதர வசைந்து தள்ளாடி
யடிக்கடி யிளைப்பிற் குலுக்கிய கனைப்பு
மறத்தவித் தெழுந்தகோ லமுமா
யிடுக்கணுற் றொருவன் முகம்மது நயினா
ரிருந்திடு மவையகத் தெதிர்ந்தான்.2.20.2
1060
உள்ளுறக் கிடந்த பல்லறப் பெயர்ந்த
வுதட்டினில் வாயினீ ரொழுக
விள்ளுதற் கரிதா யொருசலாங் குழறி
விளம்பிநின் றனன்முக நோக்கி
வள்ளலும் பிரத்தி யுரைத்திவன் சூமன்
வங்கிஷத் துளனொரு வேடத்
தெள்ளருங் குணத்தா லடைந்தன னிவன்கூ
றீதென மனத்திருத் தினரே.2.20.3
1061
ஊன்றிய தடியிற் கிடந்துழன் றொதுங்கி
நின்றவ னுழையினை நோக்கி
வான்றிகழ் புகழார் திருமொழி கொடுத்து
வரவழைத் தொருமருங் கிருத்தி
யீன்றவ ரியாவ ரெவ்வழிக் குளநின்
னிருங்குலப் பெயரியா துனக்குத்
தோன்றிய நாம மேதிவை விடுத்துச்
சொல்லென மீளவு முரைத்தார்.2.20.4
1062
நபியெனும் பெயர்பெற் றவர்க்கெவர் கருத்து
நன்குறத் தெரிந்திடும் விசும்பி
னவரினும் புதியோன் றூதரின் முதலோ
ரவனியிற் பின்வரும் நயினா
ரிவர்கருத் தறியத் தெரிந்திடாப் பொருள்க
ளிலையெனக் கருத்தினி லிருத்தித்
தவறுவந் ததுந்தன் தலைமுறைப் பெயருந்
தனித்தனி விடுத்தெடுத் துரைப்பான்.2.20.5
1063
வானுல கடங்கத் தன்வசப் படுத்தி
மறுவறும் பெயர்க்கிடர் விளைத்துப்
பானிற வளைவெண் டிரைக்கடற் பரப்பிற்
பகையற வொருதனிக் கோலாற்
றானெனச் செலுத்தி யரசுவீற் றிருந்தோன்
றணப்பிலாப் பெரும்படை யுடையோ
னீனமுற் றொழியா மாயைகள் விளைக்கு
மியலிபு லீசெனும் பெயரோன்2.20.6
1064
அப்பெரும் புகழோன் றருதிரு மதலை
யவனினு மும்மடங் காகி
முப்பெரு நிலத்துந் தன்பெயர் நிறுத்து
முறைமைய னாளியா சனத்தா
னொப்பருந் திறலா னிலாக்கிசென் றோங்கி
யுறும்பெய ரினன்பெறும் புதல்வன்
கைப்படுங் கதிர்வாட் பெரும்படைக் கிறைவன்
காயிமென் றுரைத்தகா வலவன்.2.20.7
1065
காயிமென் பவன்றன் கண்ணினை மணியாய்க்
கருத்தினுள் ளுறைந்தமெய்ப் பொருளாய்ச்
சேயெனப் பிறந்தே னிசைபெறக் காம்மா
வென்னுமப் பெயரினன் சிறியே
னாயிரந் திருப்பேர்க் குரியவன் றூதே
யமரருக் கரியநா யகமே
மாயிரும் புவிமா னிடரிடர் களையு
முகம்மதே யெனப்புகழ்ந் திசைத்தான்.2.20.8
1066
மருங்கினி லிருந்து பகர்ந்தகாம் மாதன்
வார்த்தைகேட் டகத்தினிற் களித்துத்
தருங்கதிர்த் தரள நகையிற்புன் முறுவ
றரவரு விருத்தனை நோக்கி
நெருங்கிட வறந்த காறடு மாற
நெடிதுசஞ் சலத்தொடும் வருந்தி
யிருங்கண மடுத்தென் னிடத்தினி லுறைந்த
தென்னினை வெனவெடுத் திசைத்தார்.2.20.9
1067
முன்னெடுங் காலத் திப்பெரும் புவன
முழுதினு மொருகுடை நீழ
றன்னிடைப் படுத்தி நால்வகைக் கதத்த
தளத்தொடு மொருதனிக் கோலான்
மன்னிய திசைகள் பொதுவறப் புரந்து
மருவல ரிலையெனத் தடிந்திட்
டென்னையொப் பவரிந் நிலத்தினி லிலையென்
ரிருந்தன னாளியா சனத்தில்.2.20.10
1068
ஒருதனித் திகிரி செலுத்தியெந் நிலமு
முள்ளடிப் படுத்திடு நாளிற்
பொருவரு மதத்தாற் றவங்குண மிரக்கம்
பொறைநிறை புண்ணியம் பிறவுந்
தெரிவரா திகழ்ந்து பவம்பழி தொடரச்
செய்வழி முறைமையிற் செய்தேன்
பெருகிய வலியுஞ் சீர்த்தியு முடையோய்
பின்வருந் துன்பமொன் றறியேன்.2.20.11
1069
தீவினைக் குரித்தாய் வருந்தொழி லனைத்துஞ்
செய்தர சிருக்குமந் நாளிற்
பாவியென் னுடலு மிதயமு நடுங்கப்
பார்த்தெனைக் கடிந்துவற் புறுத்திக்
கூவிமுன் னிருத்தித் தாட்பெரு விரல்க
ளிரண்டையுங் கூட்டுற நெருக்கி
நோவர விறுகக் கட்டிவைத் தெழுந்து
போயின னொருநொது மலனே2.20.12
1070
காலினிற் பிணித்த பிணிப்பினை வலிதிற்
கழற்றின னோக்கினன் கழலா
தோலிடுங் கடகக் கரத்தினா லவிழ்த்தே
னவிழ்ந்திடா தொருங்குநின் றவர்கள்
மேலுற வகிர்ந்துிங் கருவியா லறுத்தும்
விரிந்தசெந் நெருப்பிடை கொடுத்து
நூலள வெனினு நெகிழ்ந்தில வதனின்
வலியினை நுவலுதற் கரிதே2.20.13
1071
கட்டினான் மிகுதி வருத்தமுற் றொடுங்கிக்
கலங்கினன் மலங்கின னெடுநாள்
விட்டிடா திழைத்த பாவங்க டிரண்டு
வெகுண்டொரு கயிற்றுரு வெடுக்கப்
பட்டதோ வலதென் னூழ்விதிப் பயனோ
படிபுரந் திடும்பெரும் பலனோ
கிட்டிய தவத்தோர் முனிந்திடு முனிவோ
வெனக் கிடந்தனன்மதி யிலியேன்.2.20.14
1072
அரசிழந் தெனது கிளையினிற் பெரியோ
ரிடத்தினு மடுத்தன னவரா
லொருதிருக் கெடுத்து நெகிழ்க்கவும் பயமுற்
றொடுங்கினர் பெருவரை யிடத்துங்
குரைகடலிடத்து மெண்டிசை புரக்குங்
கொற்றவ ரிடத்தினு மடைந்தே
னிருமென விருத்தி நோக்குவ ரலதென்
னிடர்தவிர்த் திடுபவ ரிலையே.2.20.15
1073
அந்தரம் புவிமட் டுலவியுங் காற்கட்
டவிழ்க்கவல் லமையின ரிலையென்
றிந்தன மெரியிற் கிடந்தென விதய
மிடைந்திட வுடைந்தன னௌியேன்
புந்தியற் றொடுங்கி யளவறுங் காலம்
போயபி னவனியின் மனுவிற்
சுந்தரத் தொடும்பே ரறத்தொடு முருவாய்த்
தோன்றின ராதமென் றொருவர்.2.20.16
1074
அவனி யிலாத நபியெனும் பேர்பெற்
றிருந்தன ரவரிடத் தேகித்
தவிர்கிலா திடருற் றனனென வௌியேன்
காற்றினன் வீக்கினை நோக்கி
கவரறப் பிணித்த காவல னலது
கட்டறுப் பவரெவ ரென்னக்
குவிதருந் திருவாய் விரிதர வுரைத்தார்
கொடியனென் வலிகுறைந் திடவே2.20.17
1075
இவ்வுரை பகர்ந்தா ராதநன் னபியென்
றிருந்தனன் வருந்தின னதற்பின்
குவ்வின னபிமா ரென்னுமப் பெயர்பெற்
றிருந்தவ ரிடந்தொருங் குறுகிச்
செவ்விதி னுரைத்தே னவ்வவ ரெவருந்
திருநபி முகம்மதென் பவரால்
வவ்விய தளைவிட் டகன்றிடு மலது
மறுத்தெவர் தவிர்ப்பரென் ரிசைத்தார்.2.20.18
1076
அன்னவ ருரைத்த மொழிமனத் தடக்கி
யிருந்தன னறிவெனுந் துணையா
லெந்நெடுங் காலத் தெப்புவி யிடத்தி
னினிதொடும் பிறப்பரென் றெண்ணிப்
பன்னெடுங் கால மிதுநினை வலது
வேறுரை பகர்ந்திருந் தறியேன்
மன்னிய புகழார் முகம்மது பிறந்தா
ரெனுமுரை மறைகள்சொற் றனவே.2.20.19
1077
புவியினி லறத்தின் மக்கமா புரத்திற்
பொதுவற வேதமு மிறங்கி
நபியெனுந் திருப்பட் டமுந்தரித் தரிய
நன்னிலைத் தீனெறி நடத்திக்
குவிகுபி ரகற்றி யிருந்தன ரென்னக்
கோதிலா மனமகிழ் வுடனே
யிவணில்வந் தடைந்தே னினிவினைப் பவங்க
ளியாவையு மௌிதின்வென் றனனே.2.20.20
1078
பதத்தி னிலடைந்த பவியென் மனத்திற்
பருவரற் களங்கறத் துடைத்துக்
கதத்தொடு மிறுக்கி வைத்தபா தகன்றன்
கட்டறக் கருணையிற் படுத்தி
யிதத்தொடு முமது தீன்வழிக் குரிய
னிவனென நிறுத்திமே லையினும்
விதித்தசொற் கடவாப் படிநடத் திடுக
வேண்டுமென் றுரைத்திடி வீழ்ந்தான்.2.20.21
1079
இரங்கிநின் றிறைஞ்சி யுரைத்தவா சகத்தை
யிருசெவி குளிர்தரக் கேட்டு
நெருங்கிட விறுக்கி வைத்தவர் பெயரை
நினைத்தரு ளொடுமுறு வலித்து
மருங்கினி லொடுங்கி யிருந்தகாம் மாவை
விழித்தணி மதுரவாய் திறந்துன்
னுரங்கெட விடுக்கண் விளைத்த வரியாவ
ருரையென முகம்மது முரைத்தார்.2.20.22
1080
கட்டிவைத் தகன்ற நாட்டொடுத் தவன்றன்
பெயரினைக் கருத்தினி லறியே
னெட்டியெத் தலத்துந் திரிந்தன னிவ்வூ
ருளனென வறிகிலேன் புவியின்
மட்டறுங் குலத்தி லிக்குலத் தின்னான்
மகவென்று மறிகிலே னெதிர்ந்து
கிட்டிடி லுருக்கண் டௌிதினி லறிவே
னெனக்கிளத் தினன்பெருங் கிளையோன்.2.20.23
1081
கருமுகிற் கவிகை நந்நபி காம்மா
வுரைத்தசொற் கருத்தினி லிருத்திக்
குருதியுந் தசையுஞ் சிதறுசெங் கதிர்வேற்
கொழுந்தடக் கரத்த பித்தாலி
புரியகண் மணியாய் வருமலி தமையென்
னுழையினிற் கொடுவரு கென்னப்
பரிவினிற் றூதை விடுத்தன ரவரும்
பண்புற விரைவொடு மெழுந்தார்.2.20.24
1082
சிங்கவே றனைய அலிதிருக்க ரத்திற்
செங்கதிர் வாட்கிடந் திலங்கத்
தங்கிய மரவத் தொடைபுரண் டசையத்
தானவன் புலிவர னோக்கி
யங்கமு மனமும் வெருவரத் திடுக்கிட்
டலம்வர வெழுந்துவாய் குழறிப்
பங்கமுற் றயர்ந்திட் டடிக்கடி நோக்கி
பதங்கர நனிநடு நடுங்கி.2.20.25
1083
மன்னர்மன் னவரை முகம்மதை நோக்கி
வாய்வௌி றிடவிழி சுழல
வெந்நிடை யொளித்திட் டொதுங்குற வொடுங்கி
விறற்புலி யலிதமைத் தூண்டி
என்னையுங் கெடுத்தென் னரசையு மழித்திட்
டித்தனைக் கியற்றிய சீமா
னன்னவ னலது வேறிலை யினம்வந்
தடுக்கிலென் விளையுமோ வறியேன்.2.20.26
1084
மெய்ப்பொருண் மறைக்கு நாயகப் பொருளே
விண்ணவ ருயிரினுக் குயிரே
யிப்புவி யிடத்தி லடைக்கல மடியே
னெனைப்பிணித் தடல்வலி யெறிந்த
துப்பின னீதோ வடுத்தனன் சற்றே
தூரநின் றிடவருள் பணித்தென்
கைப்பட நுந்தங் கரங்கொடுத் துயிரைக்
காப்பது கடனெனக் கரைந்தான்.2.20.27
1085
வெருவுறேல் காம்மா வெனக்கர மசைத்து
விறற்புலி யலிதமை நோக்கி
யெரிகதிர் வேலோய் நம்மிடத் தடைந்தோ
னீங்கிவ னிடருறு மிணைத்தாட்
பெருவிரற் றொடுப்பை விடுப்பையென் றினிதின்
பெரியவன் றூதுவ ருரைப்ப
வரியென மகிழ்ந்து நோக்கலுங் காற்கட்
டற்றிடத் துன்பமு மறுத்த.2.20.28
1086
காற்றளை யகலப் பயங்கர மகற்றிக்
காவலர் முகம்மதை யிறைஞ்சிப்
போற்றிநின் றமுத மெனுங்கலி மாவை
யுரைத்துநல் வழியினிற் புகுந்து
தேற்றுநன் மறையின் முதியரைப் புகழ்ந்து
செவ்விய ரலிபதம் வழுத்தி
மாற்றரும் வேடந் தனையும்விட் டொழிந்து
மதிவலா னெனத்தனி நின்றான்.2.20.29
1087
சீதவொண் கதிர்செய் முகம்மதி னடியிற்
சென்னிவைத் தடிக்கடி புகழ்ந்து
கோதற வெழுந்து தீன்வ ரெவர்க்குங்
குறைவறச் சலாமெடுத் துரைத்துக்
காதலின் தீன்தீன் விளங்கவென் றேத்திக்
கடிமலர்ச் சோலையு நீந்தி
மாதவம் பெருகு மனத்தினன் காம்மா
மன்னுதன் றிசையினிற் போனான்.2.20.30
காம்மாப் படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 20க்குத் திருவிருத்தம்....1086
2.21 விருந்தூட்டுப் படலம் (1087-1104)
1087
புவியி லின்பம் பொருந்திப் புகழ்பெறு
நபிமு கம்மது நண்பொடுந் தங்கிளை
யவர்கட் கன்புற் றரிய விருந்தெனக்
கவலு மென்றலிக் கோதினர் காமுற்றே.2.21.1
1088
தூய தூதுவ ரோதிய சொன்மறா
நேய முற்றெழுந் தங்கவர் நீண்மனை
வாயி றோறு நடந்துநல் வாக்கொடும்
போயி ருந்து விருந்து புகன்றனர்2.21.2
1089
மறுவி நாறு முகம்மதுக் கன்புறு
மறிவ ரும்மவ ரையர்க்கு முன்னருஞ்
சிறிய தந்தைய ரும்மவர் சேய்களு
முறவி னுற்றவ ரும்மவ ரொக்கலும்2.21.3
1090
வன்றி றற்புலி வாளலி முன்வர
மின்ற வழ்ந்தணி யாரங்கள் வீசிடத்
தொன்று தோன்றிய தூதுவர் மாமனை
முன்றி லெங்கணு மொய்த்திருந் தார்களால்.2.21.4
1091
சிறியர் பேதையர் தீீய்ப்பசி தீண்டிய
வறிய ரல்லது வந்தவர் நாற்பஃ
தறிவர் ஹாஷிம் கிளைக்குயி ராயினோ
ரிறைவன் றூதுவர்க் கின்புறு மாந்தரே.2.21.5
1092
எடுத்தி றாத்த லெனும்பதி னாறெடை
கொடுத்த பாலுங் குடித்தொரு மேழகத்
தடித்த சைச்சுடு கோலினிற் றள்ளுமு
னெடுத்துத் தின்ப ரிவர்சிறி யோர்களே.2.21.6
1093
வரிசை வள்ளன் முகம்மது வந்துநின்
றுரிய கேளி ருடனுழை யோரையும்
விரியுங் காந்தி விரித்த விரிப்பின் மேற்
பரிவி னீணவை பத்திவைத் தாரரோ.2.21.7
1094
மாற்ற லர்க்கரி யேறெனும் வள்ளலார்
தீற்று வெண்சுதை மாடத்துட் சென்றட
வூற்றுப் பாலையு மூற்றிக்கொண் டிங்ஙனஞ்
சோற்றை யுங்கொடு வாவனச் சொல்லினார்.2.21.8
1095
மருங்கு நின்றவர் மாம னையுட்புகுந்
தொருங்கி ருந்த வொருபடிச் சோற்றையுங்
கருங்க லென்னுங் கலசத்திற் பாலையுந்
தருங்கை வள்ள லிடங்கொடு சார்ந்தனர்.2.21.9
1096
அருந்துஞ் சோற்றையும் பாலையு மங்கையி
லொருத்த ரேந்தி யுலாவுகின் றாரிவர்
வருத்த மின்றி வரவழைத் தாளெலா
மிருத்து கின்றன ரென்னெனக் கூறுவார்.2.21.10
1097
இற்றை நாள்விருந் தென்னவிவ் வூரினிற்
சொற்ற தில்லைத்தொன் மாமறைக் காரணத்
துற்ற செய்தி யறியவென் றுன்னியோ
பற்றி னாலிவர் பாலழைத் தாரென்பார்2.21.11
1098
இன்று வந்திவர் முன்றி லிருந்தனம்
வென்றி யாக விருந்து வழங்கிடுஞ்
சொன்றி யும்மிவர் காரணத் தோற்றமு
நனறு கண்டறி வோமினி நாமென்பார்.2.21.12
1099
இந்த வண்ண மிவர்க ளியம்பிட
வந்த நாயகன் றூதுவ ரன்பொடு
வந்த சோற்றையும் பாலையு மன்னவர்
சிந்தை கூரச் சிறந்தளித் தாரரோ.2.21.13
1100
சேருஞ் சீனியுந் தேனுமொத் தாலென
மூர லும்மவை மூழ்கிய பாலையும்
வீரர் தங்கள் விலாப்புறம் வீங்கிட
வார வுண்டென ரங்கையில் வாரியே.2.21.14
1101
மாத ருஞ்சிறு மைந்தரு மாந்தரும்
பேத மற்றதம் மில்லுறை பேர்களுங்
கோதி லாதுண்டு பாலுங் குடித்தினிப்
போதும் போது மெனப்புகன் றார்களால்.2.21.15
1102
உருசிக் கும்படி பாகஞ்செய் யோர்படி
யரிசிக் சோறு மரைப்படிப் பாலுநல்
வரிசை யாக வழங்க வழங்கவே
பெருகிற் றல்லது பின்குறை வில்லையால்.2.21.16
1103
ஆகங் கூர்தர வுண்டவ ரியாவரும்
வாய்கை பூசி மகிழ்ந்தினி துற்றபின்
பாகு வெள்ளிலை பாளிதஞ் சந்தன
மோகை கூர வுவந்தளித் தரரரோ.2.21.17
1104
சோதி நாயகன் றூதெனும் வள்ளலுக்
கீதெ லாமரி தோவென வேத்திநின்
றோதிக் கையெடுத் துற்றச லாமுரைத்
தாத ரத்தொடு மங்கவர் போயினார்.2.21.18
விருந்தூட்டுப் படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 21க்குத் திருவிருத்தம்...1104
நுபுவ்வத்துக் காண்டம் முற்றுப் பெற்றது.
ஆகக் காண்டம் 2க்குப் படலம் 45க்குக் கூடிய திருவிருத்தம்...2344