தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments

Home >Tamil Language & Literature > Kalki - R.Krishnamurthy > கல்கி -  அலை ஒசை >  பாகம் 1- பூகம்பம் > பாகம் 2 - புயல் > பாகம் 3 - எரிமலை > பாகம் 4 - பிரளயம் - அத்தியாயங்கள் - 1 to 11 >  பாகம் 4 - பிரளயம் - அத்தியாயங்கள் - 12 to 23  > பாகம் 4 - பிரளயம் அத்தியாயங்கள் - 24 to 35 > பாகம் 4 - பிரளயம் - அத்தியாயங்கள் - 36 to 43

கல்கி - அலை ஒசை: பாகம் 4 - பிரளயம்
kalki -  alai Ocai: Part IV - piraLayam
[also in pdf ]


Acknowledgements:

Our Sincere thanks go to tiru Bhaskaran Sankaran of Anna University - KBC Research Center, MIT - Chrompet Campus, Chennai, India. for his dedication in publishing Kalki's Works and for the help to publish them in PM in TSCII format. Etext preparation, TAB level proof reading by Ms. Gracy & Ms Parimala
HTML Version and TSCII version proof reading : tiru N D LogaSundaram, selvi L Selvanayagi Chennai
PDF version: Dr. K. Kalyanasundaram Lausanne, Switzerland.

©  Project Madurai 1999 - 2004 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


 உள்ளுறை - அத்தியாயங்கள்

4.001தாயின் மனக்குறைமின்பதிப்பு
4.002"சீதா வருகிறாள்!"மின்பதிப்பு
4.003டாக்டரின் உத்தரவுமின்பதிப்பு
4.004காதல் என்னும் மாயைமின்பதிப்பு
4.005மாயா மோகினிமின்பதிப்பு
4.006நீர்மேற் குமிழிமின்பதிப்பு
4.007நித்திய வாழ்வுமின்பதிப்பு
4.008"மாமழை போற்றுதும்"மின்பதிப்பு
4.009பட்டாபியின் புனர்ஜென்மம்மின்பதிப்பு
4.010எலெக்ஷன் சனியன்!மின்பதிப்பு
4.011பட்டாபியின் பதவி மோகம்மின்பதிப்பு

கல்கியின் அலை ஒசை: பாகம் 4- 'பிரளயம்'
முதல் அத்தியாயம் :
தாயின் மனக்குறை

இராஜம்பேட்டை கிராமத்தை நாம் பார்த்து ஏறக்குறைய ஒரு வியாழ வட்டம் ஆகிறது. கணக்காகச் சொல்லப் போனால் பதினோரு வருஷமும் பத்து மாதமும் ஆகின்றன. பழைய தபால் சாவடிக் கட்டிடமும் ஏறக்குறைய முன்னால் பார்த்த மாதிரியே காணப்படுகிறது. ஆனால் அக்கட்டிடத்தின் வெளிச்சுவரிலும் தூண்களிலும் சில சினிமா விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருப்பதைக் காண்கிறோம். விளம்பரம் ஒட்டப்படாத இடங்களில் "ஜே ஹிந்த்" என்றும், "நேதாஜி வாழ்க!" என்றும் எழுதப்பட்டிருந்தன. தபால் சாவடிக்கெதிரே சாலையில் கப்புங் கிளையுமாகப் படர்ந்திருந்த பெரிய ஆலமரத்தைக் காணவில்லை. இதனால் அந்தச் சாலையின் அழகு குன்றி வெறிச்சென்றிருந்தது. மிட்டாய்க் கடை இருந்த இடத்தில் இப்போது ரேஷன் கடை இருந்தது. கடைக்காரர் மனது வைத்து எப்போது அரிசிப் படி போடுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டு நாலைந்து ஸ்திரீகள் கையில் கூடையுடன் நின்றார்கள். தபால் சாவடிக்குள்ளே ஜன நடமாட்டம் காணப்பட்டது. ஆனால் நமக்குத் தெரிந்தவர்கள் யாரும் அங்கில்லை. போஸ்ட் மாஸ்டர், போஸ்ட்மேன், ரன்னர் - எல்லோரும் நமக்குப் புதியவர்கள். வரப்போகும் தபால் ஸ்டிரைக்கைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருந் தார்கள். இந்தத் தெரியாத மனிதர்களை விட்டு விட்டு நமக்குத் தெரிந்த மனிதர்கள் இன்னும் வசிக்கும் இராஜம்பேட்டை அக்கிரகாரத் துக்குப் போவோம்.

அக்கிரகாரத்தின் தோற்றத்தில் சில மாறுதல்கள் காணப்பட்டன. முன்னே நாம் பார்த்ததற்கு இப்போது இன்னும் சில வீடுகள் பாழடைந்து போயிருந்தன. கிட்டாவய்யரின் வீட்டு வாசலில் பந்தல் இல்லை. வீட்டின் முகப்பு களைகுன்றிப் போயிருந்தது. ஆனால் சீமாச்சுவய்யரின் வீடு இப்போது முன்னைவிட ஜோராக இருந்தது. சீமாச்சுவய்யர் சரியான சமயத்தில் தேவபட்டணத்துக்குப் போய் ஜவுளிக் கடை வைத்தார். திருமகளின் கடாட்சம் அவருக்கு அமோகமாகப் பெருகியது. பழைய வீட்டைத் திருத்தி நன்றாகக் கட்டியிருந்தார். கிட்டா வய்யருக்குச் சமீப காலத்தில் சில கஷ்டங்கள் ஏற்பட்டிருந்தன. குடிபடைகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் குடியிருக்கும் மனைக் கட்டு விஷயமாக நெடுங்காலமாய்ச் சச்சரவு நடந்து கொண்டிருந்தது. சென்ற வருஷத்தில் கோர்ட்டில் மிராசுதாரர்களுக்குச் சாதகமாகத் தீர்ந்தது. இந்த வழக்கில் முன்னால்நின்று நடத்தும் பொறுப்புக் கிட்டாவய்யரின் தலையில் சுமந்திருந்தது. இதனால் பணவிரயம் அதிகமானதோடு குடிபடைகளின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார்.

யாரும் எதிர்பாராத விபத்து ஒன்று கிட்டாவய்யருக்குச் சென்ற வருஷம் நேரிட்டது. சுற்றுப் புறங்களில் திருட்டுகளும், கொள்ளைகளும் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டிருந்தன; திருட்டுக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்ட ஒரு கூட்டத்தினர் பட்டாமணியம் கிட்டாவய்யரைச் சமபடுத்தி வாக்குமூலம் எழுதி வைத்தார்கள். உடனே கிட்டாவய்யர் பட்டாமணியம் உத்யோகத்திலிருந்து சஸ்பெண்டு செய்து வைக்கப்பட்டார். குற்றச்சாட்டுகளைப் பற்றிய போலீஸ் விசாரணையும் உத்தியோக விசாரணையும் நடந்தன. கடைசியாக விரோதத்தின் பேரில் பொய்யாக எழுதி வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்று ஏற்பட்டது. ஆயினும் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது கிட்டாவய்யருடைய மனதில் ஏற்பட்ட வேதனைக்கு அளவே கிடையாது. வீட்டை விட்டு வெளியே புறப்படுவதற்கே அவருக்கு வெட்கமாயிருந்தது! ஆயினும் வெளியில் கிளம்புவது அவசியமாகவும் இருந்தது! பணம் நிறையச் செலவாயிற்று. முடிவாக ஒன்றுமில்லை என்று ஏற்பட்ட போதிலும், "பணத்தைச் செலவழித்து அமுக்கி விட்டார்!" என்ற பேச்சும் பராபரியாகக் காதில் விழாமற் போகவில்லை. பத்துநாளைக்கு முன்பு கிட்டாவய்யர் தேவபட்டணம் சென்று, அதற்குச் சில நாளைக்கு முன்னால்தான் சிறையிலிருந்து விடுதலையடைந்து வந்திருந்த தம் மாப்பிள்ளை பட்டாபிராமனைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தார். இராஜம்பேட்டையிலிருந்து நாலு மைல் தூரத்தில் இராத்திரி பத்து மணிக்குக் கட்டை வண்டியில் வந்து கொண்டிருந்தபோது முகமூடி அணிந்திருந்த திருடர்கள் ஏழெட்டுப்பேர் வந்து சூழ்ந்து கொண்டு வண்டிக்காரனையும் கிட்டாவய்யரையும் நன்றாக அடித்து விட்டு அவரிடமிருந்த மணிபர்ஸை அபகரித்துக் கொண்டு போய் விட்டார்கள். கிட்டாவய்யர் உடம்பெல்லாம் காயங்களுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அன்றிரவே அவருக்குக் கடுமையான சுரமும் வந்துவிட்டது.

இந்தச் செய்தியை அறிந்ததும் தேவபட்டிணத்திலிருந்து பட்டாபிராமனும் லலிதாவும் குழந்தைகளுடன் புறப்பட்டு வந்தார்கள். இரண்டு நாள் இருந்துவிட்டுப் பட்டாபிராமன் போய் விட்டான். கிட்டாவய்யரும் சரஸ்வதி அம்மாளும் கேட்டுக் கொண்டதின் பேரில் லலிதாவையும் குழந்தைகளையும் இன்னும் சில நாள் இருந்துவிட்டு வரும்படி சொல்லிப் போனான். ரேழிப் பக்கத்துக் காமரா அறையில் போட்டிருந்த கட்டிலில் கிட்டாவய்யர் படுத்திருந்தார் - அவருக்கு உடம்பு இப்போது சௌகரியமாகி விட்டது. ஆனாலும் முன்போல் எழுந்து நடமாடும் படியான தெம்பு இன்னும் ஏற்படவில்லை, இப்போது அவர் அரைத் தூக்கமாயிருந்தார். வீட்டுக்குள்ளே கூடத்தில் பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னால் முதன் முதலில் பார்த்த காட்சியை இன்றைக்கும் பார்க்கிறோம். லலிதாவுக்கு அவளுடைய தாயார் சரஸ்வதி அம்மாள் தலைவாரிப் பின்னிக் கொண்டிருந்தாள். ஆனால் லலிதா முன்னைப் போல் இப்போது சின்ன வயதுக் கன்னிப் பெண் அல்ல. அவள் - இரண்டு குழந்தைகளின் தாயார். அந்தக் குழந்தைகள் இருவரும் - பட்டுவும் பாலுவும் - சற்றுத் தூரத்தில் உட்கார்ந்து பொம்மைகள் நிறையப் போட்டிருந்த ஒரு தமிழ் சஞ்சிகையைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். லலிதாவின் முகமண்டலத்தில் அவ்வளவாகச் சந்தோஷம் குடிகொண்டிருக்கவில்லை. அவளுடைய கண்கள் கலங்கியிருந்தன. மழை பொழியத் தொடங்குவதற்குத் தயாராக இருக்கும் மாரிக்காலத்து இருண்ட மேகங்களை அவளுடைய கண்கள் அச்சமயம் ஒத்திருந்தன. ஏதாவது ஒரு சின்னக் காரணம் ஏற்பட வேண்டியதுதான்; அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் மழை சொரியத் தொடங்கிவிடும். அத்தகைய காரணத்தை ஏற்படுத்திக் கொடுக்க லலிதாவின் தாயார் சரஸ்வதி அம்மாள் இருக்கவே இருந்தாள். லலிதாவின் தலையை வாரிக்கொண்டே தன்னுடைய மனக்குறைகளையும் அந்த அம்மாள் வெளியிட்டுக் கொண்டிருந்தாள்.

"இறுக்கம் தாங்கவில்லை; ஆனால் பாழும் மழை மட்டும் பெய்ய மாட்டேன் என்கிறது! வயல்களில் பயிரெல்லாம் காய்கிறதாம்! தெய்வம் எப்போது கண் திறந்து பார்க்குமோ தெரியவில்லை. இந்தக் கலியுகத்தில் தெய்வத்துக்கே சக்தி இல்லாமல் போய் விட்டது போல் தோன்றுகிறது. இல்லாவிட்டால் இந்த மாதிரி அக்கிரமங்கள் எல்லாம் உலகத்தில் நடக்குமா? உங்கள் அப்பா பெயரைச் சொன்னால் நாடு நகரமெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்த உலகம் உண்டு. இப்போது அவருடைய வண்டியைத் திருடர்கள் வழி மறித்து அடித்துப் பணப் பையைப் பிடுங்கிக்கொள்ளும் காலம் ஏற்பட்டுவிட்டது. ஒரு அதிகாரம், ஒரு அத்து - இப்போதெல்லாம் கிடையாது. பயம் என்பதே இல்லாமல் போய்விட்டது." லலிதா குறுக்கிட்டு, "அம்மா, ஊரெல்லாம் அப்பா பெயரைக் கேட்டுப் பயந்து கொண்டிருந்த காலத்திலும் நீ மட்டும் பயப்பட வில்லையே? எதிர்த்துப் பேசிக்கொண்டுதானே இருந்தாய்!" என்றாள். "நன்றாயிருக்கிறதடி நீ சொல்வது! என் மாதிரி புருஷனுக்குப் பயந்து எல்லாரும் நடந்தால் போதாதா? ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசுவதற்குக் கூடப் பயந்து பயந்து இருந்த படியால் தான் இந்தக் குடும்பம் இந்தக் கதிக்கு வந்தது! நான் மட்டும் எதிர்த்துப் பேசியிருந்தேனானால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? உன்னுடைய கலியாணத்தையே எடுத்துக்கொள்! என் இஷ்டப்படி விட்டிருந்தால் இந்த இடத்தில் உன்னைக் கொடுத்திருப்பேனா? கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுக்கிறது என்று சொல்வார்கள். அந்த மாதிரி உன்னுடைய கதி ஆகிவிட்டது!...."

"ஏதாவது உளறாதே, அம்மா குழந்தைகளின் காதில் விழப்போகிறது." "விழுந்தால் என்ன? நன்றாய் விழட்டும். உன் பெண்ணும் பிள்ளையும் வேண்டுமானால் மாப்பிள்ளையிடம் போய்ச் சொல்லட்டும். எனக்கு ஒருவரிடத்திலும் பயம் கிடையாது. காங்கிரஸாம்! காந்தியாம்! இரண்டு வருஷம் ஜெயிலிலே இருந்து விட்டு வந்தாராம்! எதற்காக ஜெயிலுக்குப் போக வேணும்! திருடினாரா? கொள்ளையடித்தாரா? மாப்பிள்ளைக்குப் போட்டியாக இந்தப் பிராமணரும் ஜெயிலுக்குப் போய்விடுவாரோ என்று எனக்குப் பயமாயிருந்தது. ஏதோ நான் செய்த பூஜா பலத்தினால் அந்த ஒரு அவமானம் இல்லாமற் போயிற்று. உன் அகத்துக்காரர் இரண்டு வருஷம் ஜெயிலில் இருந்து விட்டுத்தான் வந்தாரே? என்ன பலனைக் கண்டார்? சில பேர் காங்கிரஸிலே சேர்ந்து ஜெயிலுக்குப் போய் வந்து விட்டு மெம்பர், கிம்பர் என்று ஆகிச் சம்பாதித்து வருகிறார்களே? அப்படியாவது ஏதாவது உண்டா? அதுவும் கிடையாது...""அம்மா! இவர் மற்றவர்களைப்போல் சட்டசபை மெம்பர் ஆவதற்காகவோ, வேறு உத்தியோகப் பதவிக்காகவோ ஜெயிலுக்குப் போகவில்லை; சுயராஜ்யத்துக்காகப் போனார்!...." "சரி அப்படியாவது சுயராஜ்யம் வந்ததா? சொல்லேன், பார்ப்போம்! யுத்தத்திலே ஹிட்லர் ஜெயித்துவிடப் போகிறான் - இங்கிலீஷ்காரன் வாயிலே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டு போய்விடப் போகிறான் என்று எல்லோருமாகச் சேர்ந்து சொன்னீர்கள். உன் அண்ணா சூரியா இருக்கிறானே, அந்தச் சமர்த்துப் பிள்ளை, உன் அப்பாவைப் பட்டாமணியம் வேலையை விட்டுவிட வேண்டும் என்று சொன்னான் கடைசியில், என்ன ஆயிற்று?

சுயராஜ்யத்தையும் காணோம், கியராஜ்யத்தையும் காணோம். அதுதான் போனாற் போகிறது என்றால், இப்போதாவது மாப்பிள்ளை கோர்ட்டுக்குப் போய் நாலு பணம் சம்பாதிக்கலாம் அல்லவா? வக்கீல் வேலைக்கு படித்துவிட்டு வீட்டிலே கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தால் என்ன பிரயோஜனம்? இல்லையென்றால், ஏதாவது உத்தியோகமாவது தேடிக்கொள்ள வேணும். சும்மாயிருந்தால் எப்படி ஜீவனம் நடக்கும். நீயோ சம்சாரியாகி விட்டாய்! இங்கேயாவது முன்னைப் போல் கொட்டிக்கிடக்கிறதா? பணத்தினால் காசினால் அதிகம் செய்ய முடிகிறதா? அப்படிச் செய்தால்தான் என்ன? உனக்கு வைத்துக் கொண்டு வாழத் தெரியவில்லை. அவர்தான் சொன்னார் என்று ஒரு தங்க ஒட்டியாணத்தை விற்றுவிட்டேன் என்று சொல்கிறாயே? உன்னுடைய சமர்த்தை என்னவென்று சொல்லுவது? கட்டிய பெண்டாட்டிக்கு ஒரு புருஷன் புதிதாக நகை பண்ணி போடாவிட்டாலும், ஏற்கெனவே பண்ணிய நகையை விற்பானோ! இது என்னடி வெட்கக்கேடு...?"

"அம்மா! இப்படியெல்லாம் நீ அவரைப் பற்றிக் குறை சொல்வதாயிருந்தால், இரண்டு நாளைக்குப் பிறகு போகிறவன் இன்றைக்கே புறப்பட்டு விடுகிறேன்..." என்றாள் லலிதா. "போ!போ! இந்த நிமிஷமே புறப்பட்டுவிடு! என் தலையெழுத்து அப்படி. நான் யாருக்கு என்னமாய் உழைத்தாலும் என் பேரில் யாருக்கும் ஈவிரக்கம் கிடையாது. தான்பெற்ற பிள்ளையும் பெண்ணும் தனக்கே சத்துரு என்றால், அது லையெழுத்துத் தானே? பத்து மாதம் நான் உன்னை வயிற்றில் சுமந்து பெற்றெடுக்கவில்லையா? பெற்ற தாயாருக்கு ஒரு வார்த்தை சொல்லுவதற்குப் பாத்தியதை கிடையாதா?" "என்னை நீ எவ்வளவு வேணுமானாலும் சொல், அம்மா! பொறுத்துக் கொள்கிறேன். ஆனால் அவரைப் பற்றி ஒன்றும் சொல்லாதே! நீ தானே அவரைத் தேடி என்னை அவருக்குக் கலியாணம் செய்து கொடுத்தாய்? இப்போது குறை சொல்லுவதில் என்ன பிரயோஜனம்?" என்று கேட்டாள் லலிதா. "நான் ஒன்றும் இந்த மாப்பிள்ளையைத் தேடிப் பார்த்துப் பிடித்துக் கொண்டு வரவில்லை. உன் அண்ணா சூரியா சொன்னான் என்று உன் அப்பா ஏற்பாடு செய்துவிட்டார். ஆயிரம் ரூபாய் சம்பளக்காரனை நான் உனக்காக வரன் பார்த்திருந்தேன். கொடுத்து வைக்கவில்லை, பம்பாயிலிருந்து அந்த மகராஜி - உன் அத்தை, - சரியான சமயம் பார்த்து அந்தப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள். பெண்ணைப் பார்க்க மாப்பிள்ளை வருகிற சமயத்தில் வீட்டில் வேறு பெண் இருக்ககூடாது என்று முட்டிக் கொண்டேன்.

என் பேச்சை யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. நான் என்ன இங்கிலீஷ் படித்தவளா? நாகரிகம் தெரிந்தவளா? பட்டிக்காட்டு ஜடம் தானே; என் பேச்சை யார் கேட்பார்கள்? ஆனாலும் இந்தப் பட்டிக்காட்டு ஜடம் சந்தேகப்பட்டுச் சொன்னது போலவே நடந்துவிட்டது. உன்னைப் பார்ப்பதற்காக வந்தவனை உன் அத்தங்கா சீதா மயக்கிவிட்டாள். அவளிடம் என்ன மோகனாஸ்திரம் வைத்திருந்தாளோ, என்ன சொக்குப்பொடி வைத்திருந் தாளோ தெரியாது. வந்தவனும் பல்லை இளித்து விட்டான்! உன்னுடைய அதிர்ஷ்டம் கட்டையாகப் போய் விட்டது...." "இல்லவே இல்லை, என் அதிர்ஷ்டம் நன்றாயிருந்தது. அந்த ஆயிரம் ரூபாய் சம்பளக்காரனைச் சீதா கலியாணம் செய்து கொண் டாளே அவளுடைய கதி என்ன ஆயிற்று? அவள் பட்ட கஷ்டமெல்லாம் உனக்குத் தெரியாதா, அம்மா? போன மாதத்திலே கூடச் சித்ரா கடிதம் எழுதியிருந்தாள். சீதாவின் புருஷன் ரொம்பப் பொல்லாதவன், அயோக்கியன் என்று. அதையெல்லாம் சொல்லக்கூட எனக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு என்னைக் கலியாணம் பண்ணிக் கொடுத்திருந்தால் நானும் சீதாவைப் போலத்தானே கஷ்டப்பட வேண்டும்?" என்றாள் லலிதா. "அப்படி ஒன்றும் கிடையாது, அந்தப் பெண் சீதாவுக்குத் துக்கிரி ஜாதகம். அதனாலே அவள் போன இடம் அப்படியாயிற்று. உன்னை அந்த வரனுக்குக் கொடுத்திருந்தால் இப்போது ராஜாத்தி மாதிரி இருப்பாய்!"

"என்னுடைய ஜாதகம் அதிர்ஷ்ட ஜாதகமாயிருந்தால், நான் வாழ்க்கைப்பட்ட இடத்தில் சுபிட்சமாயிருக்க வேண்டுமே? அவ்விதம் ஏன் இல்லை?" என்று கேட்டாள் லலிதா. "உன் அரட்டைக் கல்லிக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. நீ போன இடத்தில் இப்போது என்ன குறைந்து போய்விட்டது? வீடு, வாசல், பணம், சொத்து, எல்லாந்தான் இருக்கிறது. நாமாகக் கஷ்டத்தை வரவழைத்துக் கொள்வதற்கு அதிர்ஷ்டம் என்ன செய்யும்? ஜாதகம் என்ன செய்யும்? உன் தங்க ஒட்டியாணத்தை விற்றுத்தான் சாப்பிடவேண்டும் என்று ஆகிவிடவில்லை. மாப்பிள்ளைக்கு ஏதோ கிறுக்குப் பிடித்திருக்கிறது. நீயும் சேர்ந்து கூத்தடிக்கிறாய்!" என்றாள் சரஸ்வதி அம்மாள். "சரி, அம்மா, சரி! தலை பின்னியாகி விட்டதோ இல்லையோ? போதும், விடு!" என்றாள் லலிதா. இவ்வளவு நேரமும் சரஸ்வதி அம்மாள் தன்பெண்ணின் கூந்தலைவாரி ஜடை போட்டுக் கொண்டி ருந்தாள். கூந்தலை விட்டுவிட்டால் அப்புறம் லலிதாவை உட்கார வைத்துத் தன் மனக் குறைகளைக் கேட்கச் செய்ய முடியாது என்று சரஸ்வதி அம்மாளுக்குத் தெரிந்திருந்தது. ஆகையினாலேயே சிறிதும் அவசரப்படாமல் சாவகாசமாகக் கூந்தலை வாரிப் பின்னி விட்டாள். அவள் தலை முடிந்த சமயத்தில் வாசலில் "தபால்!" என்ற சத்தம் கேட்டது. லலிதா உடனே அம்மாவின் பிடியிலிருந்து தலைப் பின்னலைப் பலவந்த மாகத் திமிறி விடுவித்துக்கொண்டு எழுந்தாள். "இவ்வளவு வயதாகியும் உன் சுபாவம் மட்டும் மாறவில்லை. அந்த நாளில் திமிறிக் கொண்டு ஓடியது போலவே இப்போதும் ஓடுகிறாய். நல்லவேளையாகத் தபால் ஆபீஸுக்கே ஓடிப் போகாமல் வீட்டு வாசலோடு நிற்கிறாயே, அதுவரையில் விசேஷந் தான்!" என்றாள் சரஸ்வதி அம்மாள். அவளுடைய வார்த்தைகளை அரைகுறையாகக் காதில் வாங்கிக் கொண்டு லலிதா வாசற்பக்கம் சென்றாள்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


இரண்டாம் அத்தியாயம்
"சீதா வருகிறாள்!"

வாசலில் வந்து நின்று "தபால்!" என்று சத்தமிட்ட போஸ்டுமேன் வயதான மனிதர். அவர் லலிதாவை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்துவிட்டு "நீங்கள்தானா அம்மா, லலிதா பட்டாபிராமன் என்கிறது?" என்று கேட்டார். "ஆமாம்!" என்று சொல்லி லலிதா கையை நீட்டினாள். போஸ்டுமேன் கடிதத்தை அவள் கையில் கொடுத்துவிட்டுப் போனார். கடிதத்தின் மேல் விலாசம் கணவருடைய கையெழுத்திலே இருக்கிறது என்பதை லலிதா கவனித்துவிட்டு ஆவலுடன் உறையைப் பிரித்தாள். அதற்குள்ளே இரண்டு கடிதங்கள் இருந்தன. ஒன்று கணவர் எழுதியிருப்பதுதான் இன்னொன்று ஆகா!- சீதாவின் கையெழுத்துப் போல அல்லவா இருக்கிறது? இருக்கட்டும்; முதலில் இவருடைய கடிதத்தைப் படிக்கலாம்:-

"சௌ. லலிதாவுக்கு ஆசீர்வாதம்.
"உனக்குக் கடிதம் எழுத ஆரம்பிக்கும் போது, 'என் ஆருயிரே!' 'அன்பின் சிகரமே!' 'காதற் கனிரசமே வாழ்வின் துணைவியே' என்றெல்லாம் எழுத ஆரம்பிக்க வேண்டுமென்று எண்ணுகிறேன். ஆனால் எழுதும்போது அதெல்லாம் வருவதில்லை, பழைய கர்நாடக பாணியில்தான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இங்கே நான் சௌக்கியமாகவும் சௌகரியமாகவும் வந்து சேர்ந்தேன். யாரும் என்னை வழிமறித்து மணிபர்ஸைப் பறிக்கவில்லை. அப்படி யாராவது பறித்திருந்தாலும் அதிகமாக அவர்களுக்கு ஒன்றும் கிடைத்திராது. ஒரு ஆளுக்குத் தேவபட்டணத்துக்கு ரயில் சார்ஜும் மேலே ஒன்றரை அணாவுந்தான் கிடைத்திருக்கும். ஏமாந்து போயிருப்பார்கள்! நல்ல சமயம் பார்த்துச் சமையற்கார அம்மா லீவு வாங்கிக் கொண்டு விட்டாள். நான்தான் இப்போது சமையல் செய்கிறேன். சமையல் 'பஸ்ட் கிளாஸ்' என்று உன் தம்பி சுண்டு சர்டிபிகேட் கொடுக்கிறான். நான் இரண்டு வருஷம் ஜெயிலில் இருந்ததில் என்ன பிரயோஜனம் வேண்டும்? ஜெயிலில் இருந்திராவிட்டால் சமையல் செய்யக் கற்றுக் கொண்டிருக்க முடியுமா? வீட்டில் நான் சமையற்கட்டிற்குள் வந்தாலே நீங்கள் எல்லாரும் குடி முழுகிப் போனதுபோல் கூச்சல் போடுவீர்களே? போகட்டும்.'அத்திம்பேருக்கு ஒத்தாசையாயிரு!" என்று நீ சுண்டுவிடம் சொல்லி அனுப்பினாயல்லவா? சுண்டு எனக்கு மிகவும் ஒத்தாசையாக இருந்து வருகிறான்.

நேற்றுக் குழம்பை அடுப்பிலே கவிழ்த்து விட்டான்! 'போதும் அப்பா, உன் ஒத்தாசை! நீ சும்மா இருந்தால், அதுவே பெரிய உதவியாயிருக்கும்!' என்று சொன்னேன். சுண்டு ஒத்தாசைக்கு வந்துவிடப் போகிறானே என்று எனக்கு இப்போது ஒரே பீதியாக இருக்கிறது. உன் தாயார் ஒட்டியாணத்தை மறந்து விட்டாளா, இல்லையா? அது தங்க ஒட்டியாணம் அல்ல - முலாம் பூசிய பித்தளை ஒட்டியாணம் என்பதையும், அதை நான் விற்றுவிடவில்லை - தானம் கொடுத்தேன் என்பதையும் உன் அம்மாவிடம் சொல்லிவிட்டாயா? சொன்னால் ஒருவேளை அவளுடைய கோபம் இன்னும் அதிகமாகி விடுமோ, என்னமோ? உன் தாயாரின் சமாசாரம் உனக்குத்தான் தெரியும். ஆகையால் உன்னுடைய உசிதப்படி செய்துகொள். மாமாவுக்கு இப்போது உடம்பு நன்றாய்ச் சௌகரியமாகியிருக்கும் என்று நம்புகிறேன். அவருக்கு இப்படிப்பட்ட கஷ்டம் வந்ததை நினைத்தால் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது. நம்முடைய சூரியா சொன்ன யோசனையைக் கேட்டு நடந்திருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும். இந்த மாதிரியெல்லாம் பொருள் நஷ்டமும் மனக் கஷ்டமும் ஏற்பட்டிருக்குமா? எல்லாம் கடவுளுடைய செயல்! நீ எப்போது புறப்பட்டு வருவதாக உத்தேசம்? கூடிய சீக்கிரம் வந்துவிடுவது நல்லது. நீ சீக்கிரம் வரவேண்டியதற்கு ஒரு முக்கிய காரணத்தை இத்துடன் இருக்கும் கடிதத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்வாய். உன் தோழி சீதா உன்னைப் பார்க்க வருவதாகச் சொல்லிப் பயமுறுத்தியிருக்கிறாள். அவள் வரும்போது நீ இங்கே இல்லாமல் இருந்தால் என்னால் என்ன செய்ய முடியும்? அதைப் பற்றி நினைத்தாலே எனக்குப் பயமாயிருக்கிறது. ஸ்ரீமதி சீதா புது டில்லி முதலான இடங்களில் இருந்து நாகரிக வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவள். நானோ சுத்தக் கர்நாடக மனிதன். ஆகையால் ஸ்ரீ மதி சீதா தேவியை வரவேற்று உபசரிக்கும் விதம் எனக்கு எவ்விதம் தெரியும்? ஆகையினால் இந்தக் கடிதம் பார்த்தவுடன் அப்பா - அம்மாவிடம் நல்லபடியாகச் சொல்லி விடைபெற்றுக் கொண்டு வந்து சேரவும். சீமாச்சுவய்யர் உன்னைப் பத்திரமாக அழைத்துக் கொண்டு வந்து விடுவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இங்ஙனம். பட்டாபிராமன்"

மேற்படி கடிதத்தைப் படித்து வந்த போது அதில் பல விஷயங்கள் எழுதியிருந்த போதிலும், "சீதா வருகிறாள்!" என்னும் ஒரு விஷயமே லலிதாவின் மனதில் தங்கியது. கணவன் கடிதத்தைப் படித்து முடித்ததும் அடங்கா ஆர்வத்துடன் சீதாவின் கடிதத்தைப் படிக்கத் தொடங் கினாள். அப்போது காமரா அறையிலிருந்து, "லலிதா!" என்று அப்பா அருமையாக அழைக்கும் குரல் கேட்கவே, லலிதா கடிதத்தைப் படித்த வண்ணமே உள்ளே சென்றாள். அவளைப் பார்த்ததும் கிட்டாவய்யர், "லலிதா! எனக்கு ஏதாவது கடிதம் உண்டா? கையில் இரண்டு கடிதம் வைத்திருக்கிறாய்ப் போலிருக்கிறதே! இரண்டும் உனக்கு வந்தது தானா? யார் கடிதம் எழுதியிருக்கிறார்கள்?" என்று கேட்டார். "ஒரு கடிதம் தேவபட்டணத்திலிருந்து இவர் எழுதியிருக்கிறார். இன்னொன்று அத்தங்கா சீதா எழுதிய கடிதம் அப்பா! கல்கத்தாவில் சித்ராவின் வீட்டிலிருந்து எழுதியிருக்கிறாள். சீக்கிரத்தில் அவளுடைய பெண்ணைப் பார்க்க மதராஸுக்கு வருகிறாளாம். அப்படியே தேவபட் டணத்துக்கு வருவதாக எழுதியிருக்கிறாள்..." "ஓகோ! அப்படியா! சீதா கடிதம் எழுதியிருக்கிறாளா? பாவம்! கொஞ்ச நாளாய் அவளைப்பற்றி ஒரு தகவலும் தெரியாம லிருந்தது. அவளை ஒரு தடவை பார்க்க வேண்டும் என்ற சபலம் எனக்குக்கூட உண்டு. அவளைப் பார்த்துச் சில புத்திமதிகள் சொல்ல வேண்டும் என்று இருக்கிறேன். தேவபட்டணத்துக்குச் சீதா வந்தால் இங்கேயும் ஒரு தடவை வரச் சொல்கிறாயா, லலிதா! எனக்குத்தான் இன்னும் ஒரு மாதம் வெளியில் புறப்பட முடியாது போலிருக்கிறது!" என்றார் கிட்டாவய்யர்.

"ஆகட்டும், அப்பா! வரச் சொல்லுகிறேன். இப்போது நான் ஊருக்குப் புறப்படலாமா, அப்பா! சீதா வருகிறதாக எழுதியிருக்கிறபடியால் என்னைச் சீக்கிரம் புறப்பட்டுச் வரச் சொல்லி இவர் எழுதியிருக்கிறார். உங்களை இப்படி விட்டு விட்டுப் போக மனது கஷ்டமாய்த்தானிருக்கிறது. ஆன போதிலும்...." நீ போக வேண்டியதுதான், லலிதா! சீக்கிரம் புறப்பட வேண்டியதுதான். மாப்பிள்ளை இரண்டு வருஷம் ஜெயிலில் இருந்து விட்டு இப்போதுதான் வந்திருக்கிறார். அவரை எத்தனை நாள் நீ தனியாக விட்டுவிட்டு இருக்க முடியும்? சீதாவும் வருகிறதாகச் சொல்லியிருக்கிற படியால் அவசியம் போகத்தான் வேண்டும். எனக்குக்கூட ஒவ்வொரு சமயம் தேவபட்டணத்துக்கே வந்துவிடலாமா என்று தோன்றுகிறது. இந்த ஊரில் எனக்கு இனிமேல் நிம்மதியிராது! எங்கேயாவது போனால்தான் மனது சாந்தம் அடையும்." "அதற்கென்ன, அப்பா! பேஷாக வாருங்கள்! நீங்கள் தேவபட்டணத்துக்கு வருவதற்கு யாரைக் கேட்கவேணும்! - நான் நாளைக்குப் புறப்படுகிறேன். இன்றைக்கு அவருக்கு ஒரு பதில் எழுதி விட்டு வருகிறேன். தபால் ஆபீஸில் தபால் கட்டும் சமயம் ஆகிவிட்டது!" இவ்விதம் சொல்லிவிட்டு லலிதா உள்ளே போய்க் கடிதம் ஒன்று எழுதத் தொடங்கினாள். அப்போது அவளுடைய செல்வக்குமாரி பட்டுவும் அவளுடைய புத்திரன் பாலசுப்பிரமணியனும் அம்மாவின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டார்கள். "அம்மா! அப்பாவிடமிருந்து கடிதம் வந்திருக்கிறதா?" என்று பட்டு மெதுவாகக் கேட்டாள். "ஆமாம்; இந்தா! படி!" என்று லலிதா கடிதத்தை எடுத்துப் பட்டுவிடம் கொடுத்தாள். பட்டு தட்டுத் தடுமாறி அதில் ஒரு வரி படித்துவிட்டு, "அப்பா கோணலும் மாணலுமாய்க் கிறுக்கித் தள்ளுகிறார் எனக்குப் புரியவில்லை. இந்த இன்னொரு கடிதம் யார் எழுதியது!" என்று கேட்டாள்.

"அதுவா? சீதா அத்தங்கா எழுதியது!" என்றாள் லலிதா. "சீதா அத்தங்கா என்றால் யார்?" என்று பட்டு கேட்டாள். "சீதா அத்தங்கா என்னுடைய அத்தையின் மகள். ரேழி அறையில் தாத்தா படுத்துக் கொண்டிருக்கிறார், பாரு! அவருக்கு ஒரு தங்கை இருந்தாள். அவள்தான் எனக்கு அத்தை, அவளுடைய பெண் சீதா! சீக்கிரத்தில் உங்கள் இரண்டு பேரையும் பார்ப்பதற்கு வருவதாகச் சொல்லியிருக்கிறாள். அதற்குள்ளே நீங்கள் இரண்டு பேரும் ரொம்ப சமர்த்தாக ஆகிவிட வேண்டும். நச்சுபிச்சு என்று வந்தவர்களை ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கக்கூடாது." "இல்லை; நான் கேள்வி கேட்கவில்லை, அம்மா! சீதா அத்தங்காவை நான் பார்த்ததே கிடையாதே! எப்படி அம்மா அவள் இருப்பாள்?" லலிதாவுக்குச் சட்டென்று ஒரு எண்ணம் உதித்தது. பாதி எழுதியிருந்த கடிதத்தை அப்படியே வைத்துவிட்டுக் கூடத்துக் காமிரா அறைக்குள் போனாள். அங்கே இருந்த ஒரு பழைய அலமாரியைத் திறந்து அதில் அடைத்து வைத்திருந்த குப்பை கூலங்களில் கையை விட்டுத் தேடினாள். கடைசியாக, ஒரு மங்கிப் போயிருந்த பழைய போட்டோ படத்தை எடுத்துக் கொண்டு வந்தாள். இரண்டு பக்கமும் இரண்டு குழந்தைகள் உட்கார்ந்திருக்க, அந்தப் புகைப்படத்தைக் காட்டி, "இதோ பார்த்தாயா பட்டு! இதுதான் சீதா அத்தங்கா! இதுதான் நான்! சிறு பிராயத்தில் நாங்கள் இரண்டு பேரும் ரொம்ப சிநேகிதமாயிருந்தோம். எங்களுக்குக் கலியாணம் ஆன சமயத்தில் இந்தப் படம் எடுத்தது. குளத்தங்கரை பங்களாவுக்குப் போய் அடிக்கடி பேசிக் கொண்டிருப்போம். அதையெல்லாம் நினைத்தால் இப்போது சொப்பனம் மாதிரி இருக்கிறது" என்றாள். இந்தச் சமயத்தில் சரஸ்வதி அம்மாள் கிட்டாவய்யருக்குச் சாப்பாடு கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வந்தாள். வரும்போதே, "ஏண்டி லலிதா ! அதென்னடி நான் கேள்விப்படுகிறது? இந்தப் பிராமணர் சொல்கிறது நிஜமா? தேவபட்டணத்துக்குச் சீதா வரப் போகிறாளாமே, வாஸ்தவந்தானா?" என்று இரைந்து கொண்டு வந்தாள்.

"ஆமாம், அம்மா! சீதா வருகிறாள்! அதற்காக நீ ஏன் இவ்வளவு இரைச்சல் போடுகிறாய்?" என்றாள் லலிதா. "நானா இரைச்சல் போடுகிறேன்? அழகாய்த்தானிருக்கிறது. நீ மாத்திரம் என்னிடம் சொல்லாமல் மறைக்கலாமாக்கும்; அந்தத் துக்கிரி இப்போது எதற்காக வருகிறாள்? யார் அவளை வரச் சொன்னார்கள்? அவள் வரவில்லையென்று யார் அழுதார்கள்? லலிதா! நான் சொல்லுகிறதைக் கேள், இங்கே இப்போது சௌகரியமில்லை. ஆகையால் வரவேண்டாம் என்று உடனே கடிதம் எழுதிப் போட்டுவிடு!" "அம்மா! சீதா இந்த ஊருக்கு வரவில்லை! என்னையும் என் குழந்தைகளையும் பார்க்கத் தேவபட்டணத்துக்குத்தான் அவள் வருகிறாள். நீ எதற்காக வீணாய்ச் சண்டை பிடிக்கிறாய்!" "அப்படியானால் நான் வேறு, நீ வேறா என்று கேட்கிறேன். நான் உன்னைப் பெற்ற தாயார் இல்லையா? உன்னுடைய குழந்தைகள் என்னுடைய பேரன் பேத்திகள் இல்லையா? ஏன்தான் இப்படி என்னைக் கண்டு கரிக்கிறீர்களோ, தெரியவில்லை..." "உனக்குச் சீதா அத்தங்காவை எப்போதும் பிடிக்கிறது கிடையாது; அதனாலேதான் சொன்னேன்." "அதனாலேதான் நானும் கேட்கிறேன். எனக்குப் பிடிக்காதவள் உனக்கு மட்டும் எதற்காகப் பிடித்திருக்க வேணும்? நான் சொல்கிறதைக் கேள், லலிதா! அவள் ரொம்ப துக்கிரி; மனதில் நல்ல எண்ணம் கிடையாது. பாம்புக்குப் பாலை கொடுத்தாலும் அது விஷத்தைத்தான் கக்கும். இந்தச் சமயம் தேவபட்டணத்துக்குக்கூட வரவேண்டியதில்லை என்று உடனே எழுதிவிடு. இன்றையத் தபாலிலேயே கடிதத்தைச் சேர்த்துவிடு. தெரிகிறதா?...." இந்தச் சமயத்தில் வாசலில் மாட்டு வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது. "வண்டிச் சத்தம் கேட்கிறதே! யார் வந்திருப்பார்கள்! நேற்றைக்கு முற்றத்தில் காக்காய் கத்தியபோதே எனக்குத் தெரியும், யாராவது விருந்தாளிகள் வந்து நிறபார்கள் என்று. பட்டு! நீ போய்ப் பாரடி அம்மா!" பட்டுவோடு லலிதாவும் எழுந்து வாசற் பக்கம் போனாள். வண்டியிலிருந்து இறங்கியவர்களைப் பார்த்ததும் லலிதாவின் அதிசயமும் மகிழ்ச்சியும் அளவு கடந்து பொங்கின.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

மூன்றாம் அத்தியாயம்
டாக்டரின் உத்தரவு

வண்டியிலிருந்து இறங்கியவர்கள் சீதாவும் சூரியாவும் சுண்டுவுந்தான். ஆனால் சூரியாவையும் சுண்டுவையும் லலிதா அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. அவர்களுடன் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டுச் சீதாவின் கைகளைப் பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டு சென்றாள். "உன்னைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தேன். நம்முடைய கல்யாணத்தின்போது நாம் இரண்டுபேரும் தனியாக உட்கார்ந்து போட்டோ எடுத்துக் கொண்டோ ம், பாரு! அதைப் பட்டுவுக்கும் பாலுவுக்கும் இப்பத்தான் காட்டிக் கொண்டிருந்தேன். பட்டு என் பெண்; பாலு என் பிள்ளை. அவர்களுக்கு உன்னைப் பற்றி சொல்லிக் கொண்டேயிருந்தேன். சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாசலில் வண்டி வந்து விட்டது. வண்டியில் யார் வந்திருப்பார்கள் என்று வெளியே வந்து பார்த்தால் நீ இறங்குகிறாய், என்ன அதிசயத்தைச் சொல்வது? சற்று முன்னாலேதான் போஸ்டுமேன் கடிதம் கொண்டு வந்து கொடுத்தான். உன்னுடைய கடிதத்தைப் பிரித்துப் பார்த்துவிட்டு அனுப்பியிருந்தார். நீ வருவதற்குள் நான் அங்கே வந்துவிட வேண்டுமென்று எழுதியிருந்தார். நீ புது டில்லியிலும் கல்கத்தாவிலும் இருந்து நாகரிக வாழ்க்கை வாழ்ந்தவளாம். உன்னை உபசரிப்பதற்கு இவருக்குத் தெரியாதாம்! வேடிக்கையாக இல்லையா இவர் எழுதியிருப்பது? நானும் உடனே திரும்பிவிடுவது என்றுதான் தீர்மானித்து அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்பா உன்னைப் பார்க்கவேண்டும் என்று சொன்னார். இங்கே ஒரு தடவை உன்னை அனுப்பி வைக்கும்படி சொன்னார். நான் அனுப்புவதற்குள் நீயே வந்துவிட்டாய்!" என்று லலிதா அளவில்லாத ஆர்வத்தோடு வார்த்தைகளைக் கொட்டினாள்.

இதற்குள் அவர்கள் வீட்டுக் கூடத்துக்கு வந்துசேர்ந்தார்கள். அங்கே குழந்தைகள் இருவரும் நின்று அதிசயத்துடனும் சங்கோசத்துடனும் சீதாவை ஏறிட்டுப் பார்த்தார்கள். "இவர்கள்தானே உன் குழந்தைகள்? பட்டுவும் பாலுவும்?" என்று சீதா கேட்டாள். "ஆமாம்; இவர்கள்தான்!" என்று லலிதா கூறிவிட்டுக் குழந்தைகளைப் பார்த்துச் சொன்னாள்: "பார்த்தீர்களா? சீதா அத்தங்காளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேனே? சொல்லி வாய் மூடுவதற்குள்ளே வந்து விட்டாள். அத்தங்காள் ரொம்ப அழகாயிருப்பாள் என்று சொன்னேனோ, இல்லையோ? நான் சொன்னது நிஜமா இல்லையா என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். சீதா! நீ ஜெயிலில் இருந்து இன்னும் எத்தனையோ கஷ்டங்களைப் பட்ட பிறகும் இவ்வளவு அழகாயிருக்கிறாயேடி! உன் அகத்துக்காரர் உன்னை விட்டு எப்படித்தான் பிரிந்திருக்கிறாரோ, தெரியவில்லை! அவருக்கு நன்றாகச் சீமைப் பைத்தியம் பிடித்திருக்கிறது. சீமையில் இப்போது அப்படி என்ன அவசர வேலையாம்! அது போகட்டும், வஸந்தியை ஏன் நீ அழைத்துக் கொண்டு வரவில்லை?" ஏற்கெனவே வாட்டமுற்றிருந்த சீதாவின் முகம் குழந்தை வஸந்தியைப் பற்றிக் கேட்டதும் அதிகமாகச் சுணக்கமுற்றது. "வஸந்தி பள்ளிக்கூடம் போகிறாள். அவளுடைய படிப்பைக் கெடுப்பானேன் என்று அழைத்து வரவில்லை லலிதா! மாமா எங்கே? அவரைப் பார்க்க வேண்டாமா?" என்றாள். "பார்க்காமல் என்ன? பார்க்க வேண்டியதுதான். அப்பா சற்று முன்னால்தான் உன்னைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். நீ வந்தது அவருக்குச் சந்தோஷமாயிருக்கும். அப்பாவுக்கு நேர்ந்த ஆபத்தைப் பற்றித் தெரியுமல்லவா, சீதா?..."

"தேவபட்டணத்துக்கு நேற்றைக்கு வந்ததும் தெரிந்தது. உன் அகத்துக்காரர் அம்மாஞ்சியிடம் சொன்னாராம். அதைக் கேட்டதும் மறுவண்டியில் புறப்பட்டோ ம். உன் அகத்துக்காரர் கூட ஒரு நாள் இருந்துவிட்டுப் போகலாமே என்று சொன்னாராம்..." "சொன்னாராம் என்கிறாயே? உன்னிடம் சொல்லவில்லையா? அவருக்குப் பொம்மனாட்டிகளைக் கண்டாலே ரொம்ப சங்கோசம். ஆனால் உன்னிடம் அவருக்கு ரொம்ப மரியாதை. நீ தேசத்துக்காக ஜெயிலுக்குப் போயிருக்கிறாய் என்று கேட்டதுமுதல் அடிக்கடி உன்னைப்பற்றி விசாரித்துக் கொண்டிருப்பார். இப்போது நீயே வந்து விட்டாய். சீதா! உன் அகத்துக்காரர் சீமையிலிருந்து திரும்பி வரும் வரையில் தேவபட்டணத்தில் எங்கள் வீட்டிலேயே நீ தங்கியிருக்க வேண்டும். வேறு எந்த இடத்துக்கும் போகக்கூடாது. தெரிகிறதா?" "அதைப் பற்றி இப்போது என்ன அவசரம், லலிதா! பிறகு சாவகாசமாகப் பேசிக் கொள்ளலாம். இப்போது மாமாவைப் போய்ப் பார்க்கலாம்!" என்றாள் சீதா. இந்தச் சந்தர்ப்பத்தில் சரஸ்வதி அம்மாள் அங்கு வரவே, "அம்மா! இதோ சீதா அத்தங்கா வந்திருக்கிறாள், பார்த்தாயா?" என்றாள் லலிதா. "நமஸ்காரம், மாமி! சௌக்கியமா?" என்று சீதா பவ்யமாகப் பேச்சை ஆரம்பித்தாள். சரஸ்வதி அம்மாளோ முகத்தைச் சுளுக்கிக்கொண்டு, "வந்தாயாடி, அம்மா! வா! என்னவெல்லாமோ கேள்விப்பட்டேன். மனதுக்கு அவ்வளவு சந்தோஷமாயில்லை. ஏதோ இந்த மட்டும் வந்து சேர்ந்தாயே? மாமாவுக்கு உடம்பு சரியில்லை என்று தெரியுமோ, இல்லையோ? யாராயிருந்தாலும் சரி; அவரிடம் அதிகமாக நச்சு பிச்சு என்று பேசக் கூடாது.

டாக்டரின் உத்தரவு! புது மனுஷாளைக் கண்டால் அவருக்குத் தலைகால் தெரியாமல் போய்விடும் லலிதா! நான் சொல்லுகிறது தெரிகிறதோ, இல்லையோ? அப்பா அதிகமாகப் பேசுவதற்கு இடங்கொடுக்க வேண்டாம்" என்றாள். லலிதாவின் மனம் வேதனை அடைந்தது. அவள் கோபமாக அம்மாவைப் பார்த்தாள். அப்போது சீதா, "மாமி! நான் மாமாவிடம் அதிகமாகப் பேச்சுக் கொடுக்கவில்லை. உடம்பு சரியில்லாதவர்களோடு அதிகமாகப் பேசக் கூடாதென்று அவ்வளவு தூரம் தெரியாதா எனக்கு?" என்றாள். "உனக்குத் தெரியாமலிருக்குமா, அம்மா! நீ மெட்ராஸ், பம்பாய், டில்லி, கல்கத்தா எல்லாப் பட்டணங் களிலும் இருந்தவள். நான் இந்தப் பட்டிக்காட்டிலேயே விழுந்து கிடக்கிறவள். ஏதாவது கொஞ்சம் உடம்பு அதிகம் என்றால் என் தலையிலேதானே விடிகிறது! வயது வேறே ஆகிவிட்டது, முன்னேயெல்லாம்போல் சக்கரமாகச் சுற்றிக் காரியம் செய்ய முடிகிறதா? யாராவது இரண்டு பேர் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்துவிட்டால் எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று பயமாயிருக்கிறது. முன்னைப்போல் சமைக்கப் பரிசாரகனாவது இருக்கிறானா? அதுவும் இல்லை. உன் மாமாவுக்குக் கடன் உடன் அதிகமாகப் போய் விட்டது. பரிசாரகன் வைத்துக் கொள்ளக் கட்டவில்லை!...." "போதும், அம்மா! உன்னுடைய பஞ்சப் பாட்டை அப்புறம் பாடலாம். அத்தங்கா வந்ததும் வராததுமாக இதெல்லாம் எதற்காகச் சொல்லுகிறாய்? எனக்குக் கொஞ்சங் கூடப் பிடிக்கவில்லை! நீ வா, சீதா! மாமாவைப் போய்ப் பார்க்கலாம்!" என்று சொல்லிச் சீதாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனாள் லலிதா.

கிட்டாவய்யர் படுத்திருந்த கட்டிலுக்குப் பக்கத்தில் சூரியாவும் சுண்டுவும் உட்கார்ந்து அவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். லலிதாவும் சீதாவும் அறைக்குள் வந்ததும் அவர்கள் எழுந்தார்கள். "அத்தங்கா! அப்பாவுக்கு நான் வந்ததில்கூட அவ்வளவு சந்தோஷமில்லை. உன்னை அழைத்து வந்ததிலேதான் திருப்தி. உன் கதையையெல்லாம் அப்பாவுக்குக் கேட்க வேண்டுமாம்!" என்று சூரியா சொல்லிவிட்டுச் சுண்டுவையும் அழைத்துக் கொண்டு போனான். மாமாவுக்குச் சீதா நமஸ்காரம் செய்தாள். அவர் உட்காரச் சொன்னதும் உட்கார்ந்தாள். கிட்டாவய்யரும் கட்டிலில் எழுந்து உட்கார்ந்து, சீதாவின் தலையை அன்புடன் தொட்டு, "மகராஜியாக இரு!" என்றார். மாமாவை அந்தப் பலவீனமான நிலையில் உடம்பில் காயக்கட்டுகளுடன் பார்த்ததினாலும், "மகராஜியா இரு!" என்ற அவருடைய ஆசீர்வாதம் வேறு பல நினைவுகளை உண்டு பண்ணியதனாலும் சீதாவின் கண்களிலிருந்து கலகலவென்று கண்ணீர் பொழிந்தது. அந்தக் கண்ணீரின் காரணத்தைக் கிட்டாவய்யர் வேறு விதமாக அர்த்தம் செய்து கொண்டார். தம் மனையாள் சீதாவை வரவேற்றுச் சொல்லிக் கொண்டிருந்த வார்த்தைகள் அவருடைய காதிலும் விழுந்து அவருக்கு வருத்தத்தை உண்டு பண்ணியிருந்தன. எனவே அவர் உணர்ச்சி ததும்பிய குரலில், "நீ வருத்தப்படாதே, சீதா! உன் மாமியின் சுபாவந்தான் தெரியுமே! உலகத்தில் எத்தனை எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டு விட்டன. ஆனால் உன் மாமி மட்டும் கொஞ்சங்கூட மாறாமல் அப்படியேயிருக்கிறாள்!"

சீதா கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, "அதற்காக நான் வருத்தப்படவில்லை, மாமா! உங்களை இப்படிப் பார்த்ததும் எனக்குத் துக்கமாயிருக்கிறது. மாமி சொன்னதில் ஒரு குற்றமும் கிடையாது. நான் பிறந்த வேளை அப்படி!" என்றாள். "நீ பிறந்த வேளைக்கு என்ன வந்தது? திவ்யமான நாள் நட்சத்திரத்தில் நீ பிறந்தவள். உனக்கு மலைபோல் வரும் கஷ்டங்கள் எல்லாம் பனிப்போல் நீங்கிவிடும். கொஞ்ச நாளில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி நீ சௌக்கியமாக இருப்பாய்" என்றார் கிட்டாவய்யர். "தங்களுடைய ஆசீர்வாதத்தினால் அப்படியே ஆகட்டும். மாமா! முதலில் தங்களுடைய உடம்பு சௌக்கியமாக வேண்டும். உங்களை யாரோ அடித்துவிட்டார்கள் என்று கேட்டதும் நான் துடித்துப் போய்விட்டேன். ஒரு ஈ காக்காய்க்குக் கூடத் தீங்கு எண்ணாத தங்களை அடித்தவர்கள் எப்பேர்ப்பட்ட சண்டாளப் பாபிகளாய் இருக்கவேண்டும்?" என்றாள் சீதா. "தலைவிதி, அம்மா! தலைவிதி! அதற்கு அவர்களைத் திட்டி என்ன பிரயோஜனம்? சீதா! ஒரு விஷயத்தைக் கேள், திருடர்கள் நான் வந்த வண்டியை வழிமறித்து அடித்தபோது ஒரு அடி படார் என்று மண்டையில் விழுந்தது என் கதி கலங்கியது.

அந்த நிமிஷமே உயிர் போய்விடும் போலத் தோன்றியது. அப்போது நான் என்ன நினைத்தேன் தெரியுமா? என் மனக்கண் முன்னால் யார் வந்தது தெரியுமா? உன் தாயார் ராஜம்மாள்தான் வந்தாள், அவள் எங்கேயோ வானவெளியில் நின்று தன் மெலிந்த கரங்களை நீட்டி, "அண்ணா! வாருங்கள்!' என்று என்னை அழைப்பது போலத் தோன்றியது. அப்போது நான், "அடாடா! குழந்தை சீதாவைப் பார்த்துச் சொல்லிக் கொள்ளாமல் வந்துவிட்டோ மே? சீதா சௌக்கியமா என்று இவள் கேட்டால் பதில் என்ன சொல்வது?" என்று நினைத்துக்கொண்டேன். இவ்வளவும் அடிபட்டுக் கலங்கிய ஒரு நிமிஷ நேரத்தில் என் மனத்தில் நடந்தது?" என்றார் கிட்டாவய்யர். "மாமா! இதிலிருந்து என் பேரிலும் அம்மா பேரிலும் உங்களுக்கு எவ்வளவு அன்பு என்று தெரிகிறது. ஆனால் நீங்கள் அதிகமாகப் பேசவேண்டாம். டாக்டரின் உத்தரவுப்படி நடக்க வேண்டும் அல்லவா?" என்றாள் சீதா. "ஆமாம்; ஒரே மூச்சில் அதிகமாகப் பேசக்கூடாதுதான். உன்னைப் பார்க்கவேண்டும் என்றும் உன்னிடம் சில விஷயங்கள் சொல்ல வேண்டும் என்றும் எவ்வளவோ ஆவலாயிருந்தேன். உன்னைப் பார்க்க முடியாமலே போய்விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். நல்லவேளையாக நீயே என்னைப் பார்ப்பதற்கு வந்துவிட்டாய். மற்றதெல்லாம் இராத்திரி சாவகாசமாகப் பேசிக் கொள்ளலாம். நீ இப்போது போய்க் குளித்துவிட்டுச் சாப்பிடு அம்மா!" என்று கிட்டாவய்யர் அருமையுடன் கூறினார்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

நான்காம் அத்தியாயம்
காதல் என்னும் மாயை

சீதாவும் லலிதாவும் அன்று சாயங்காலம் குளத்தங்கரை பங்களாவுக்குச் சென்றார்கள். 'பங்களா'வென்று அந்தக் கட்டிடத்தை முன்னே மரியாதைக்குச் சொல்லக்கூடியதாயிருந்தது. இப்போது அப்படிக்கூடச் சொல்வதற்கில்லை. அந்தக் கட்டிடத்தின் கூரையில் பல துவாரங்கள் காணப்பட்டன. கீழ்த்தரை குண்டும் குழியுமாயிருந்தது. திண்ணைக்குப் பந்தோபஸ்தாகவும் அலங்காரமாகவும் அமைந்திருந்த மூங்கில் பிளாச்சு வேலி பல இடங்களில் முறிந்து விழுந்து கிடந்தது. பங்களாதான் இப்படி என்றால், பங்களாவுக்கு எதிரில் இருந்த குளமும் களை குன்றிக் காணப்பட்டது. குளத்தில் தண்ணீருக்குக் குறைவில்லை. ஆனால் முன்னொரு காலத்தில் கரையோரமாக வளர்ந்திருந்த அலரிச் செடிகளையும் செம்பருத்திச் செடிகளையும் இப்போது காணவில்லை. குளத்தின் படித்துறை பாசி பிடித்தும் இடிந்தும் காணப்பட்டது. சீதாவும் லலிதாவும் குளக்கரையில் இடிந்த படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டார்கள். சிறிது நேரம் சீதா சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேயிருந்தாள். சுற்றுப்புறத் தோற்றத்தில் இன்னும் ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதாக அவளுக்குத் தோன்றிக் கொண்டேயிருந்தது. பளிச்சென்று அது என்ன என்பது புலனாயிற்று. "லலிதா! குளத்தின் மேலக்கரையில் இருந்த சவுக்கு மரத்தோப்பு எங்கே?" என்று கேட்டாள். "அதை வெட்டி விறகுக்கு விற்றாகிவிட்டது?" என்றாள் லலிதா. "அதனால்தான் இந்தப் பக்கமெல்லாம் இப்படி பார்ப்பதற்கு வெறிச்சென்று இருக்கிறது. சவுக்குத் தோப்பை வெட்டி விட்டபடியால் இந்தக் குளக்கரையின் அழகே போய் விட்டது. இப்போது என்னுடைய வாழ்க்கை சூனியமாயிருப்பதுபோல் இந்தப் பிரதேசமும் சூனியமாயிருக்கிறது!" என்று சொல்லிச் சீதா பெருமூச்சு விட்டாள்.

"நீ இப்படிப் பேசுவது எனக்குப் புரியவேயில்லை! டில்லியிலிருந்து நீ கடைசியாக எழுதிய கடிதங்களும் எனக்குச் சரியாக அர்த்தமாகவில்லை! உனக்கென்ன வருத்தம், சீதா! ஏன் இப்படி வாழ்க்கையையே வெறுத்தவள்போல் பேசுகிறாய்? அவருக்கும் உனக்கும் ஒத்துக் கொள்ளவில்லையா? இந்த ஊரில் நீங்கள் ஒருவரையொருவர் பார்த்துப் பிரியப்பட்டுக் கலியாணம் செய்து கொண்டீர்களே? இந்தப் பக்கத்து ஊர்களிலெல்லாம் வெகு காலம் வரை உங்களுடைய காதல் கலியாணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்களே, அதெல்லாம் வெறும் பொய்யா? உங்களுக்குள் ஏன் ஒத்துக் கொள்ளவில்லை? உண்மையில் அவருக்கு உன் பேரில் அன்பு இல்லையா?" என்று லலிதா வருத்தமான குரலில் கேட்டாள். "எனக்குத் தெரியாது. அவருக்கு என் பேரில் அன்பு இருக்கிறதா இல்லையா என்பதே எனக்குத் தெரியாது. ஆரம்பத்தி லிருந்தே அவருக்கும் எனக்கும் மத்தியில் ஒரு மாயத்திரை தொங்கிக் கொண்டிருந்தது. அவருடைய மனதை நான் அறிய முடியாமல் அந்தத் திரை மறைத்துக் கொண்டிருந்தது. அந்தத் திரையைத் திறந்து அவருடைய மனதில் உள்ளது என்னவென்பதை அறிந்து கொள்ள நான் பிரயத்தனப் படவேயில்லை. அத்தனை தைரியம் எனக்கு இல்லை. திரையைத் திறந்து பார்த்தால் உள்ளே என்ன இருக்குமோ என்னமோ என்று பயந்தேன். பேய் பிசாசு இருக்குமோ, புலியும் கரடியும் இருக்குமோ, அல்லது விசுவாமித்திரரை மயக்கிய மேனகையைப் போல யாராவது ஒரு மாயமோகினி இருப்பாளோ என்று எனக்குப் பயமாயிருந்தது. ஆகையினால் திரையை நீக்கி அவருடைய மனதை அறிந்து கொள்ள நான் பிரயத்தனப்படவே யில்லை. அப்படிப் பிரயத்தனப்பட்டிருந்தால் ஒரு வேளை நான் கொலைகாரியாகியிருப்பேன். அல்லது கொலையுண்டு செத்துப் போயிருந்தாலும் போய் இருப்பேன்!" என்றாள் சீதா.

"நீ பேசுவது மர்மமாகவும் பயங்கரமாகவும் இருக்கிறது சீதா! நமக்குக் கலியாணம் ஆன புதிதில் இதே இடத்தில் நாம் உட்கார்ந்து எத்தனை நாள் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம்? அவர் உன்னிடம் வைத்த காதலைக் குறித்து எவ்வளவு பூரிப்புடன் பேசிக் கொண்டிருந்தாய்? அதையெல்லாம் கேட்கக் கேட்க எனக்கும் எத்தனையோ சந்தோஷமாயிருந்தது. என்னுடைய கணவர் என்னிடம் அப்படியெல்லாம் இல்லையே என்றெண்ணி ஏமாற்றமும் அடைந்தேன். இப்போது நீ பேசுவதைப் பார்த்தால் எல்லாம் பொய் என்று பெரியவர்கள் சொல்லுவது உண்மைதான் போலிருக்கிறது" என்று லலிதா கூறினாள். "அதில் சந்தேகமில்லை, லலிதா! பெரியவர்கள் இந்த உலகத்தை 'மாய உலகம்' என்று சொல்லுவது சரிதான். இந்த மாய உலகத்தில் காதல் ஒன்றுதான் உண்மையானது என்று சிலர் சொல்லுவதுண்டு. நாவல்களிலும், நாடகங்களிலும், சினிமாக்களிலும் இப்படிச் சொல்வார்கள். அதைப் போல மூடத்தனம், பைத்தியக்காரத்தனம் - வேறொன்றும் கிடையாது. இந்த மாய உலகத்தில் எத்தனையோ மாயைகள் இருக்கின்றன. எல்லா மாயைகளிலும் பெரிய மாயை காதல் என்பதுதான். என்னுடைய பெண்ணுக்கும் உன்னுடைய பெண்ணுக்கும் கொஞ்சம் வயதாகும்போது, அதுவரை நான் உயிரோடிருந்தால், அவர்களிடம் சொல்லப் போகிறேன். கதைகளைப் படித்து விட்டும் நாடகங்களையும் சினிமாக்களையும் பார்த்துவிட்டும் காதல், கீதல் என்று பைத்தியக்கார எண்ணம் எண்ணிக் கொண்டிராதீர்கள். பெரியவர்கள் பார்த்துச் செய்து வைக்கும் கலியாணத்திலேதான் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாயிருக்கலாம் என்று சொல்லப் போகிறேன். காதல் என்பது வெறும் மாயை என்பதற்கு என்னையே உதாரணமாகக் காட்டப் போகிறேன்."

"சீதா! உன்னுடைய பேச்சில் எனக்கு இன்னமும் நம்பிக்கை உண்டாகவில்லை! ஏதோ ஒரு பெருந் துக்கத்தினால் அல்லது மனக்கசப்பினால் இப்படிப் பேசுகிறாயோ என்று நினைக்கிறேன். காதல் என்பது மாயை என்றும் பொய் என்றும் சொல்லுகிறாயே? ஆனால் அந்தச் சமயத்தில், நமக்குக் கலியாணம் ஆகும் சமயத்தில், நீ அநுபவித்த சந்தோஷமெல்லாம் பொய் என்று சொல்ல முடியுமா? இந்தக் குளக்கரையில் உட்கார்ந்து நீ சொன்னதெல்லாம் எனக்கு அப்படியே ஞாபகம் இருக்கிறது. அவருடைய பெயரைச் சொன்னால் உன் உடம்பு எப்படிப் பூரித்தது என்பதெல்லாம் எனக்கு நேற்று நடந்ததுபோல் ஞாபகத்துக்கு வருகிறது. அதெல்லாம் வெறும் பொய் என்பதாக நான் இன்னமும் நம்ப முடியவில்லை." "நீ மட்டும் என்ன? என்னால்கூட நம்பமுடியவில்லைதான். லலிதா! அதையெல்லாம் நினைத்தால் இப்போது கூட என் உடம்பு சிலிர்க்கிறது. முதன் முதலில் அவரும் நானும் பார்த்துக் கொண்ட பிறகு, எங்களுடைய ஆசையை வெளியிட்டுக் கொண்ட பிறகு, இந்தப் பூவுலகம் எனக்குச் சொர்க்கலோகமாக மாறியிருந்தது. அவர் முதன் முதலில் என் கரத்தைத் தொட்டுக் கண்களால் ஒற்றிக்கொண்ட பிறகு, அவருடைய காதலைச் சொல்லிவிட்டு நான் சற்றும் எதிர்பாராத நிலையில் என் கன்னத்தில் கன்னி முத்தம் ஈந்த பிறகு, என்னுடைய மனித ஜன்மம் மாறித் தேவ கன்னிகை ஆகியிருந்தேன். அந்த நாட்களில் வானத்து நட்சத்திரங்கள் எல்லாம் என் தேகத்தை அலங்கரித்தன. பூலோகத்துப் புஷ்பங்கள் எல்லாம் என் உடம்பில் மலர்ந்து மணம் வீசின. சந்திர கிரணங்கள் என் தேகத்தை மூடும் சல்லாத்துணி ஆயின. தென்றல் காற்று என் மேனியைக் குளிர்விப்பதற்காகவே வீசிற்று. சந்தனம் எனக்காகவே கந்தம் அளித்தது.

நான் அணிந்த பட்டுப் புடவைகள் என்னுடைய மேனியின் அழகினால் சோபை பெற்று விளங்கின; இதையெல்லாம் நானே உணர்ந்தேன். லலிதா! அவ்வளவும் அப்போது உண்மையாகத்தான் தோன்றியது. 'மாயை' என்றோ 'பொய்' என்றோ ஒரு கணமும் நான் நினைக்கவில்லை. அவர் என்னிடம் அந்த நாளில் வைத்திருந்த ஆசையைத்தான் என்னவென்று சொல்லுவேன் தமயந்தியிடம் நளன் வைத்த ஆசையும் ஜூலியட்டிடம் ரோமியோ வைத்த ஆசையும் லைலாவிடம் மஜ்னூன் வைத்த ஆசையும் அவர் என்னிடம் வைத்திருந்த ஆசைக்கு இணையாகாது என்றே தோன்றியது. வெள்ளி நிற அன்னப்பறவைகள் பூட்டிய புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டு நாங்கள் நீல வானத்தில் நட்சத்திர மண்டலங்களுக்கிடையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தோம். எங்களுடைய ஆனந்த யாத்திரைக்கு அந்தமே கிடையாது என்று எண்ணினேன். ஆனால் ஒரு நாள் அதற்கு முடிவு வந்தேவிட்டது. உன்னையும் என்னையும் போல் பெண்ணாய்ப் பிறந்தவள் ஒருத்தி வந்து எங்கள் ஆனந்த வாழ்க்கையில் குறுக்கிட்டாள். அந்த நிமிஷத்தில் சனியன் பிடித்தது. அவருடைய மனம் பேதலித்தது. என்னுடைய சொர்க்கம் ஒரு நொடிப்பொழுதில் நரகமாக மாறியது. லலிதா! நான் வங்கநாட்டுச் சிறையில் இருந்தபோது ஒரு பாடலைக் கேட்டேன். அது என் மனதை ரொம்பவும் கவர்ந்தது. என் மனதில் உற்சாகம் குன்றித் துயரம் ஏற்படும்போதெல்லாம் அதைப் பாடுவேன். உனக்கு அதை இப்போது பாடிக் காட்டட்டுமா?" என்றாள் சீதா.

"பேஷாய்ப் பாடு! கேட்கவும் வேண்டுமோ? நீ பாடுவது எனக்கு எப்போதுமே பிடிக்குமே! அது வங்காளிப் பாஷைப் பாட்டா?" என்றாள் லலிதா. "நான் கேட்டது வங்காளிப் பாட்டுத்தான்; ஆனால் அதை நானே தமிழ்ப்படுத்தினேன்; கேள்!" என்று சொல்லிவிட்டு சீதா துயரம் ததும்பிய வர்ணமெட்டில் பின்வரும் பாட்டைப் பாடினாள்:-

"பாற்கடல் மீதினில் பசும்பொன் படகினில் பரிந்தேற்றிச் சென்றவர் யார்?

- என்னைப் பரிந்தேற்றிச் சென்றவர் யார்?
காற்றங்கு அடித்திடக் கடல் பொங்கும் வேளையில் கைவிட்டுச் சென்றவர் யார்? - சகியே கைவிட்டுச் சென்றவர் யார்?
வான வெளியினில் தேனிலவு தன்னில் தானாக நின்றவர் யார்? - சகியே தானாக நின்றவர் யார்?
தானாக நின்றென்னைத் தாவி அணைத்துப் பின் தனியாக்கிச் சென்றவர் யார்? - என்னைத் தனியாக்கிச் சென்றவர் யார்?"

இந்தப் பாட்டைப் பாடிவிட்டுச் சீதா விம்மி விம்மி அழத்தொடங்கினாள். லலிதா அவளை அன்புடன் அணைத்துக் கொண்டு பலவிதமாக ஆறுதல் கூறினாள். அவ்விதம் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும்போது லலிதா தன் மனத்திற்குள், "ஐயோ! பாவம்! என்னவெல்லாமோ கஷ்டங்களை அனுபவித்து இவளுடைய மூளையில் கொஞ்சம் கோளாறு உண்டாகி யிருக்கிறது!" என்று எண்ணிக் கொண்டாள்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

ஐந்தாம் அத்தியாயம்
மாயா மோகினி

உலகமாகிற அரங்க மேடையை மறைப்பதற்கு மெல்லிய இருள் திரை விழுந்து கொண்டிருந்தது. வானத்தின் வடகிழக்கு மூலையில் கரிய மேகங்கள் திரண்டிருந்தன. மேகத் திரளை ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை வரை கிழித்துக்கொண்டு மின்னல் கீற்றுக்கள் ஒரு கணம் ஜொலிப்பதும் மறுகணம் மறைவதுமாயிருந்தன. வாடைக்காற்று ஜில்லென்று வீசியது, தென்னந்தோப்புகளில் தென்னை மட்டைகள் ஆடி உராய்ந்து மர்ம சத்தத்தை உண்டாக்கின. வயல் வரப்பில் மேய்ந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த பசு ஒன்று திடீரென்று கன்றை நினைத்துக் கொண்டு, "அம்மா!" என்று கத்திற்று. பட்டிக்காட்டுச் சங்கீத வித்துவான் ஒருவன். "நாளைக்கு நாளைக்கென் றேதினம் கழியுது! ஞானசபையை எண்ணில் ஆனந்தம் பொழியுது;" என்று பாடிக்கொண்டு சென்றான். கொஞ்ச தூரத்தில் இன்னொரு இசைப் புலவன் புல்லாங் குழலில் நாட்டக் குறிஞ்சி ராகத்தை வாசிக்க முயற்சி செய்ய, அது புன்னாகவராளியாக உருக்கொள்ளப் பார்த்தது. சற்றுத் தூரத்திலிருந்த இலுப்பை மரத்தோப்பில் ஒரு இராத்திரிப் பறவை 'கிரீச்' என்று சத்தமிட்டு விட்டுச் சடபடவென்று இறகுகளை அடித்துக்கொண்டு ஒரு மரத்தின் உச்சியிலிருந்து இன்னொரு மரத்தின் உச்சிக்குப் பறந்து சென்றது. வான விதானத்தில் விண்மீன்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்து எட்டிப் பார்க்கத் தொடங்கின.

சீதாவின் விம்மல் சத்தம் வரவர லேசாக மறைந்தது. "அத்தங்கா! வீட்டுக்குப் போகலாமா?" என்று லலிதா கேட்டாள். "லலிதா! எனக்கு வீடு எங்கேயிருக்கிறது போவதற்கு?" என்று சொன்னாள் சீதா. "நான் உயிரோடிருக்கும் வரை என்னுடைய வீடு உன்னுடைய வீடுதான்!" என்றாள் லலிதா. உன்னுடைய நல்ல மனதை நான் அறிவேன், லலிதா! அதனாலேதான் உன்னைத் தேடி வந்தேன். ஆயினும் பெண்ணாகப் பிறந்தவளுக்கு அது போதுமா? எவ்வளவுதான் பிராண சினேகிதியாயிருந்தாலும் சொந்த வீட்டில் சுதந்திரமாயிருப்பது போல் இன்னொரு வீட்டில் இருக்க முடியுமா?..." "ஏன் இருக்க முடியாது? பேஷாய் இருக்கலாம். என்னுடைய தேவபட்டணத்து வீட்டில் எனக்கு எவ்வளவு சுதந்திரம் உண்டோ அவ்வளவு உனக்கு உண்டு; இன்னும் அதிகமாகக்கூட உண்டு!" என்றாள் லலிதா. "உன்னுடைய அன்பு காரணமாக இப்படிச் சொல்கிறாய். நீ சொன்னால் போதுமா? உனக்கு எஜமானர் இருக்கிறார் அல்லவா?" "இருந்தால் என்ன? அவர் எஜமானர் என்றால் நான் எஜமானி. அவருக்கு வீட்டில் எவ்வளவு பாத்தியதை உண்டோ அவ்வளவு எனக்கும் உண்டு! என்னுடைய எஜமானரின் நல்ல குணம் உனக்குத் தெரியாது, சீதா! என்னைக் காட்டிலும் அவர் உன்னிடம் அதிக பிரியமாக இருப்பார். அதிலும் நீ தாய்நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டாய் என்றும் சிறையிலே இருந்தாய் என்றும் அவருக்குத் தெரிந்தது முதல் உன்னைச் சிலாகித்து எத்தனையோ தடவை பேசியிருக்கிறார். நீ எங்கள் வீட்டில் எத்தனை நாள் இருந்தாலும் அவருக்குச் சந்தோஷமாகவேயிருக்கும்!" என்றாள் லலிதா.

சீதா, தன் தாய் நாட்டின் விடுதலைக்காகச் சிறை போகவில்லை என்றும், தன்னை இன்னொருத்தி என்று நினைத்துத் தவறாகச் சிறைக்கு அனுப்பிவிட்டார்கள் என்றும் சொல்லிவிட எண்ணினாள். "லலிதா! நீங்கள் எல்லாரும் நினைப்பதுபோல் அப்படியொன்றும் நான் தாய்நாட்டுக்குச் சேவை செய்துவிடவில்லை...." என்று சீதா சொல்ல ஆரம்பித்தாள். "எல்லாம் எனக்குத் தெரியும்! சூரியா அப்போதே எல்லாவற்றையும் விவரமாக எழுதியிருந்தான். ஒன்றுமே செய்யாதவர்கள் எல்லாம் பிரமாதமாகத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். நீ பிரமாதமான காரியத்தைச் செய்துவிட்டு ஒன்றுமில்லை என்று ஏன் சொல்லிக்கொள்ள வேண்டும்? அடக்கத்துக்கும் எல்லை வேண்டாமா?" என்றாள் லலிதா. ஓஹோ! இவர்கள் எல்லாம் இப்படி நினைப்பதற்குக் காரணம் சூரியாவா? தன்னைப் பெருமைப்படுத்துவதற்காக அவ்விதம் சூரியா எழுதியிருக்கிறான். அதை இப்போது இல்லையென்று சொல்லிச் சூரியாவைக் காட்டிக் கொடுப்பானேன்? தன்னைப்பற்றிச் சிலர் பெருமையாக நினைத்துக் கொண்டால் நினைத்துக்கொண்டு போகட்டுமே? அப்படி நினைப்பதால் யாருக்கு என்ன நஷ்டம்? தான் சொல்ல எண்ணியதைச் சீதா மாற்றிக்கொண்டு, "மற்றவர்கள் செய்யாத காரியம் அப்படி என்ன நான் பிரமாதமாகச் செய்துவிட்டேன்? உன் அகத்துக்காரர் கூடத்தான் சிறையில் இரண்டரை வருஷத்துக்குமேல் இருந்திருக்கிறார்!" என்றாள். "ஆமாம்; அவர் செய்ததை நினைத்தாலும் எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது!" என்றாள் லலிதா. சற்று நேரம் இருவரும் மௌனமாக இருந்தார்கள்.

திடீரென்று லலிதா, "இதுதான் எனக்கு அர்த்தமாகவேயில்லை. உன்னுடைய இல்வாழ்க்கையில் சந்தோஷமில்லை என்று சொல்கிறாயே? கலியாணமான புதிதில் நீ எழுதிய கடிதங்களையெல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறேன். அந்தக் கடிதங்களை நான் அடிக்கடி எடுத்துப் படிப்பதுண்டு. உன்னுடைய கடிதங்களைப் படிக்கும்போது சுவாரஸ்யமான நாவல்களைப் படிப்பது போல அவ்வளவு சந்தோஷமாயிருக்கும். நீ கோபித்துக் கொள்ளாமலிருந்தால் ஒரு விஷயம் சொல்கிறேன். உன்னுடைய கடிதங்களை இவருக்குக்கூட நான் படித்துப் பார்க்கும்படி கொடுப்பதுண்டு..." "ஐயையோ! என்ன வெட்கக்கேடு! இப்படி நீ செய்வாய் என்று தெரிந்திருந்தால் எழுதியிருக்கவே மாட்டேன்!" என்றாள் சீதா. "எதற்காக இவ்வளவு பதற்றப்படுகிறாய்? இப்போது என்ன முழுகிப் போய்விட்டது. உன்னுடைய கடிதங்களைப் படித்து இவர் எவ்வளவோ சந்தோஷப்பட்டிருக்கிறார். இன்னொன்று கூடச் சொல்கிறேன், கேள்! உன்னுடைய கடிதங்களை அவர் படித்ததினால்தான் என்னிடம் அவருடைய அலட்சியம் நீங்கி அன்பாக நடந்துக்கொள்ளத் தொடங்கினார் என்று எனக்குச் சில சமயம் தோன்றும்." "அந்தவரையில் என் கடிதங்கள் உனக்கும் பிரயோஜனமாயிருந்தது பற்றிச் சந்தோஷந்தான்!" "ஆனால் உன்னுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்பதை நினைத்தால் மிகவும் வருத்தமாயிருக்கிறது, அத்தங்கா! அவருக்கு ஏன் அப்படிப் புத்தி மாறியது! பெண்ணாய்ப் பிறந்தவள் யாரோ ஒருத்தியைப் பற்றிச் சொன்னாயே? அந்தப் பாதகி யார்? அவள் பெயர் என்ன?" "அவள் பெயர் தாரிணி!"

"தாரிணியா! சூரியா அவளைப் பற்றிக்கூட எழுதியிருந்தானே? அவள் ரொம்ப சாமர்த்தியக்காரி, உபகாரி, அப்படி இப்படி என்று. உன்னுடைய உயிரை ஒரு தடவை அவள் காப்பாற்றினாள் என்று எழுதியிருந்தானே!" "சூரியா உத்தமமான பிள்ளை, அவனுடைய மனது ரொம்ப நல்ல மனது. வெளுத்ததெல்லாம் பால் அவனுக்கு. அதனால் தாரிணியைப்பற்றி 'ஆ! ஹூ!' என்கிறான். அவளுடைய உண்மையான குணம் அவனுக்குத் தெரியாது." "அப்படியானால் அவள் ரொம்பப் பொல்லாதவளா?" என்று லலிதா கேட்டபோது சீதா சிறிது நிதானித்துவிட்டுக் கூறினாள்:- "தாரிணியைப் பொல்லாதவள் என்று நான் எப்படிச் சொல்ல முடியும்? அவள் எவ்வளவோ நல்லவள்தான். என்னை ஏரியில் முழுகிப் போகாமல் அவள் காப்பாற்றியது உண்மைதான். அது மட்டுந்தானா? கொடிய சுரத்தில் வீழ்ந்து யமனோடு நான் போராடிக்கொண்டிருந்த சமயத்தில் அவள்தான் எனக்குச் சிசுருஷை செய்து காப்பாற்றினாள். அவளும் நானும் தனியாக இருக்கும்போது அவளை என் உடன் பிறந்த சகோதரி என்றே எண்ணத் தோன்றும். உன்னைக்காட்டிலும்கூட அதிகமான அன்பு அவளிடம் எனக்கு உண்டாகும். அவளை விட்டு ஒரு நிமிஷ நேரமும் பிரிந்திருக்க மனம் வராது. வாழும்போது சேர்ந்தாற்போல் வாழ்ந்து சாகிறபோது சேர்ந்து சாகவேண்டும் என்று எண்ணிக் கொள்வேன். அந்த மாதிரி அவளிடமே சொல்லியும் இருக்கிறேன். ஆனால் என்னுடைய கணவரின் பக்கத்தில் அவள் நிற்பதைப் பார்த்துவிட்டால் என்னுடைய மனதெல்லாம் மாறிவிடும். அவளிடம் எனக்குள்ள அன்பு விஷமாகிவிடும். அவர் அவளுடைய முகத்தைப் பார்த்தால் போதும்; எனக்கு உடம்பெல்லாம் பற்றி எரியும். அவரும் அவளும் பேசிக்கொள்வதைப் பார்த்தால் எனக்கு வெறி பிடித்துவிடும். ஒன்று அவளையாவது கொன்றுவிட வேண்டும், அல்லது நானாவது செத்துப் போய்விட வேண்டும் என்று தோன்றும்..."

"ஐயோ! அத்தங்கா! எவ்வளவு கொடுமையான வார்த்தைகளைப் பேசுகிறாய்? எனக்கு அம்மாதிரியெல்லாம் மனம் வேறுபடுவதேயில்லை. இவர் யாராவது ஒரு ஸ்திரீயுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் எனக்கு அதில் எவ்விதமான வருத்தமோ கோபமோ உண்டாவதில்லை. உனக்கு மட்டும் ஏன் அப்படிப் பிசகான எண்ணம் தோன்ற வேண்டும்? நீ சொல்வதையெல்லாம் கேட்டால் பிசகு உன் பேரிலேதான் என்று எனக்குத் தோன்றுகிறது." "லலிதா! நீ பாக்கியசாலி! என்னைப்போல் நீயும் நரக வேதனை அனுபவிக்க வேண்டும் என்று கனவிலும் நான் எண்ணமாட்டேன். அத்தகைய துர்க்கதிக்கு நீ ஆளாகாதபடி கடவுள் உன்னைக் காப்பாற்றட்டும். ஆனால் பிசகெல்லாம் என் பேரில்தான் என்று எண்ணிக்கொண்டு விடாதே! இந்த உலகத்தில் சில அதிசயப் பிறவியான ஸ்திரீகள் இருக்கிறார்கள். அவர்களிடம் ஏதோ ஓர் அபூர்வமான சக்தி இருக்கிறது. அப்படிப்பட்ட வசீகர சக்தியுடைய ஸ்திரீகள் தாங்களே கடவுளுக்கும் தர்மத்துக்கும் பயந்து ஒழுங்காக நடந்து கொண்டால்தான் உண்டு. இல்லாவிட்டால் எத்தனையோ குடும்பங்களை அவர்கள் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிட முடியும். தாரிணியைப் பற்றிச் சூரியா எழுதியிருந்ததாகச் சொன்னாயல்லவா? நீ கோபித்துக் கொள்ளவில்லை என்று வாக்குறுதி கொடுத்தால் ஒரு விஷயம் சொல்லுகிறேன். சூரியா எவ்வளவோ நல்ல பிள்ளைதானே? ஆனால் அவன்கூட அந்த மாயாமோகினியின் வசீகரத்தில் மயங்கிப் போனவன்தான்!" என்றாள் சீதா.

"ஒரு விதத்தில் நீ சொல்லுவது எனக்குச் சந்தோஷமாயிருக்கிறது. அண்ணா சூரியாவுக்கும் வயதாகி விட்டது அல்லவா? எத்தனை நாளைக்கு இப்படியே பிரம்மச்சாரியாகத் திரிந்து கொண்டிருப்பான்? சூரியா கலியாணம் செய்து கொள்ளாதபடியினால் சுண்டுவின் கலியாணமும் தடைப்படுகிறது என்று அம்மா ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கிறாள். இனிமேல் சூரியா நம்ம பக்கத்துப் பெண்களைக் கலியாணம் செய்து கொள்ளுவான் என்று எனக்குத் தோன்றவில்லை. சூரியாவுக்கும் நீ சொல்லுகிற அந்தத் தாரிணிக்கும் காதல் என்பது உண்மையானால் அவர்கள் இருவரும் கலியாணம் செய்து கொள்ளட்டுமே?" என்று லலிதா கூறிய வார்த்தைகளில் ஆர்வம் ததும்பிக் கொண்டிருந்தது. "லலிதா! இராத்திர ஢யெல்லாம் இராமாயணம் கேட்டு விட்டுச் சீதைக்குராமர் என்னவேணும் என்பதுபோலப் பேசுகிறாயே? காதல் என்பதெல்லாம் வெறும் ஏமாற்றம்!..." இவ்விதம் சீதா சொல்லிக் கொண்டிருக்கும்போதே சற்றுத் தூரத்தில் காலடிச் சத்தம் கேட்டது. வந்தவன் சூரியாதான். "இரண்டு பெண்மணிகள் சேர்ந்துவிட்டால் காதலையும் கலியாணத்தையும் தவிர வேறு பேச்சுக் கிடையாது போலிருக்கிறது. அங்கே, அப்பா உங்களைக் காணோமே என்று தவியாகத் தவித்துக் கொண்டிருக்கிறார். இரண்டு பேரையும் கையோடு கூப்பிட்டுக் கொண்டு வரச் சொன்னார்!" என்றான் சூரியா.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

ஆறாம் அத்தியாயம்
நீர்மேற் குமிழி

கிட்டாவய்யர் மெலிந்து மலினமான குரலில், "சீதா! உன்னை ரொம்ப நேரமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இருட்டி இத்தனை நேரம் வரையிலா குளத்தங்கரையில் உட்கார்ந்திருப்பது? முக்கியமான ஒரு விஷயம் பற்றி உன்னிடம் பேச வேண்டும் என்று சொல்லியிருந்தேனே?" என்றார். "தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் மாமா! இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்கேதானே இருக்கப்போகிறேன்?" என்று சீதா சமாதானம் கூறத் தொடங்கினாள். "இன்னும் கொஞ்ச நாளைக்கு நீ இங்கேயே இருக்கப் போகிறாய் என்பது சரிதான். ஆனால் நான் இருக்க வேண்டுமே உயிரோடு?" என்றார் கிட்டாவய்யர். "ஐயோ! மாமா! இப்படிப் பேசுகிறீர்களே! இந்தப் பாவியின் அதிர்ஷ்டமா இது? நான் அநாதை; திக்கில்லாதவள். நீங்களும் இவ்விதம் என்னிடம் கோபித்துக் கொண்டு பேசுவதாயிருந்தால்...." என்று கூறிக்கொண்டே சீதா கலகலவென்று கண்ணீரைப் பொழிந்தாள். "சீதா! நீ வருத்தப்படாதே! அப்படி நான் சொல்லியிருக்கக் கூடாதுதான். ஏதோ அபஸவ்யமாக வாயில் வந்து விட்டது. போனால் போகட்டும். ஆனாலும் நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து விடுமா என்ன? சாவைக் குறித்து எதற்காக நாம் பயப்பட வேண்டும்? என்றைக்காவது ஒரு நாள் இந்த உலகத்தை விட்டு எல்லோரும் போக வேண்டியதுதானே! 'நீர்மேற் குமிழி' என்று தெரியாமலா பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்? 'இன்றைக்கு இருப்பாரை நாளைக்கிருப்பர் என்று எண்ணவோ திடமில்லையே!' என்று தாயுமான சுவாமிகள் அருளிச் செய்திருக்கிறார். இன்றைக்குச் செத்தால் நாளைக்கு இரண்டாம் நாள் ஆகிவிடுகிறது. பட்டினத்தடிகள் என்ன சொல்லியிருக்கிறார்? 'காலன் வருமுன்னே கண் பஞ்சடையுமுன்னே'...'

"மாமா! மாமா! என் பேரில் ஏதோ உங்களுக்குக் கோபம் போலிருக்கிறது. அதனாலேதான் இப்படிப் பேசுகிறீர்கள். கொஞ்சநாள் இங்கே இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு வந்தேன். உங்களைத் தவிர என்னிடம் அன்புள்ளவர்கள் இந்த உலகத்திலேயே யாரும் இல்லை என்று எண்ணிக் கொண்டு வந்தேன். நீங்களும் என்னை வெறுப்பதாகவே தெரிகிறது. நாளைக்கே நான் புறப்பட்டு விடுகிறேன்!" "சீதா! கொஞ்சம் பொறு! நான் சொல்வதைக் கேட்டுக்கொள்! உன் பேரில் எனக்கு யாதொரு கோபமும் இல்லை; என் பேரிலேதான் கோபம். கொஞ்சநாளாக நான் படுத்த படுக்கையாயிருக்கிறேன் அல்லவா? படுத்தபடியே யோசித்துக் கொண்டிருக்கிறேன். சில வருஷங்களாக நான் செய்த காரியங்கள் எல்லாம் தப்பு என்று தோன்றிக்கொண்டு வருகிறது. நம் நாட்டுப் பெரியவர்கள் வர்ணாசிரம தர்மம் என்று ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதில் வர்ணத்தை மாத்திரம் நாம் பிடித்துக் கொண்டிருக்கிறோம். சாதி ஆசாரத்தை அனுஷ்டிப்பதாகச் சொல்கிறோம். அதுவும் எப்படி? நமக்குச் சௌகரியமாயிருக்கும் வரையில்தான்! ஆனால் ஆசிரம தர்மத்தை எத்தனை பேர் அனுஷ்டிக்கிறார்கள்? மனிதர்களுக்கு வயது ஆகிவிட்டால் வானப் பிரஸ்த ஆசிர மத்தை மேற்கொள்ள வேண்டும். எனக்கு அந்த வயது முன்னமே ஆகிவிட்டது. பிள்ளைகள் தலையெடுத்து விட்டார்கள், பேரன் பேத்திகள் பிறந்து விட்டார்கள், இன்னமும் எதற்காக இந்தக் குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டும்! அதனுடைய பலன் என்ன? இந்த ஊர்க்காரர்கள் சிலருடைய துர்ப்புத்தியைக் கேட்டுக் குடி படைகளின் விரோதத்தையெல்லாம் சம்பாதித்துக் கொண்டேன். என்னுடைய பாட்டனார் காலத்தி லிருந்து தலைமுறை தலைமுறையாக இந்தக் குடும்பத்துக்கு வந்த குடிபடைகள் இப்போது என்னிடம் வெட்டுப்பழி, குத்துப்பழியாகத் துவேஷம் கொண்டிருக்கிறார்கள்.

குடியிருந்த மனைக்கட்டுகளிலிருந்து அவர்களைத் துரத்தியடித்தேன். கோர்ட்டிலே கேஸ் போட்டு ஜயித்தேன், என்ன உபயோகம்? தலைமுறை தலைமுறையாக நம் குடும்பத்தை வாழ்த்திக் கொண்டிருந்தவர்கள் இன்று சபித்துக் கொண்டிருக் கிறார்கள். கடைசியாக இந்த ஆபத்து ஒன்று வந்து சேர்ந்தது. நம்முடைய மூதாதைகள் செய்த பூஜாபலத்தினால் இன்றுவரை உயிர் பிழைத்திருக்கிறேன். அங்கேயே என்னைக் கொன்று போட்டுவிடாமல் இந்த மட்டும் உயிரோடு விட்டார்களே! அந்தத் திருடர்கள் நன்றாயிருக்கட்டும்!" "மாமா! உங்களை அடித்த மகா பாவிகள் நன்றாயிருக்கவா? அவர்கள் நாசமாய்ப்போக வேண்டும். அவர்கள் கை அழுகிப் போக வேண்டும். யாரை வேண்டுமானாலும் நான் மன்னிக்கத் தயார், மாமா! உங்களை அடித்த பாவிகளை மட்டும் மன்னிக்க முடியாது." அவர்களை மன்னிப்பதற்கு நீ யார், அம்மா! அல்லது நான்தான் யார்? அவர்களைக் குற்றம் சொல்லுவதற்குத்தான் நாம் யார்? எய்தவனைவிட்டு அம்பை நோவதில் பயன் என்ன? எல்லா உயிர்களிலும் பகவான் குடிகொண்டிருக்கிறார் அடித்தவர்களிடத்திலும் அதே கடவுள்தான் இருக்கிறார். அடிப்பட்டவர்களிடத்திலும் அதே கடவுள்தான் இருக்கிறார். என்னை அடித்தவர்கள் மீது நான் கோபித்துக் கொண்டால், பகவானையே கோபித்துக் கொண்டதாகவல்லவா ஏற்படும்? உண்மையில் பகவான் என்னை அடித்தவர்களின் உருவத்தில் வந்து எனக்கு ஒரு பாடம் புகட்டியிருக்கிறார். 'வயது அறுபது ஆகப் போகிறதே! உனக்கு இன்னும் இந்த ஊரில் என்ன வேலை? போகிற கதிக்கு வழி தேடிக்கொள்ள வேண்டாமா? இனி மேலும் இந்தச் சம்சார பந்தத்தில் கிடந்து உழலப் போகிறாயா? புத்தி கெட்டவனே!' என்று பகவான் திருடனைப்போல வந்து எனக்கு உபதேசம் செய்திருக்கிறார்.

சீதா! எனக்கு இனிமேல் இந்த ஊரிலேயே இருக்கப் பிரியம் இல்லை. நல்ல வேளையாக நீ வந்த காரணத்தினால் சூரியாவும் வந்திருக்கிறான். அவனிடம் இந்தக் குடும்பப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வெளிக் கிளம்பிவிடப் போகிறேன். காசிக்குச் சென்று கங்கையில் ஸ்நானம் செய்ய வேணும். அப்புறம் ஹரித்வாரம், ரிஷிகேசம், பத்ரிநாத் முதலிய ஸ்தலங்களுக்குப் போக வேண்டும். கைலாசகிரிக்கே போக வேண்டும் என்று ஆசை இருக்கிறது. கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு பெரியவர் 'கைலாச யாத்திரை'யைப் பற்றி எழுதியிருந்த ஒரு புத்தகத்தைப் படித்தேன். அதைப் படித்து முதல் கைலையங்கிரியே எனக்குத் தியானமாயிருந்து வருகிறது". "மாமா! நீங்கள் அப்படி யாத்திரை கிளம்புவதாக இருந்தால் என்னுடன் வாருங்கள். நான் அழைத்துக்கொண்டு போகிறேன்!" என்று சீதா மகிழ்ச்சி ததும்பக் கூறினாள். வாழ்நாளைக் கழிப்பதற்கு ஒரு ஆனந்தமான மார்க்கம் கிடைத்துவிட்டதே என்று அவளுடைய உள்ளம் குதூகலித்தது. "ஆகட்டும், சீதா! உன்னோடு அந்தப் புண்ணிய ஸ்தலங்களுக்கெல்லாம் யாத்திரை போகும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமானால், அதைக்காட்டிலும் எனக்குச் சந்தோஷமான காரியம் வேறொன்றும் இராது. அதற்காகத்தான் உன்னிடம் இதையெல்லாம் பற்றிச் சொன்னேன் ஆனால் நீயும் நானும் யாத்திரை கிளம்புவதற்கு முன்னால் உன்னுடைய வாழ்க்கையை நீ செப்பனிட்டுக் கொள்ள வேண்டும்!" என்றார் கிட்டாவய்யர். சீதா பதில் ஒன்றும் சொல்லாமல் மௌனமாகத் தலை குனிந்தாள்.

"நான் எதைப்பற்றிச் சொல்கிறேன் என்பதை நீ தெரிந்து கொண்டாய்; அதனாலேதான் மௌனமாயிருக்கிறாய். உனக்கும் உன் புருஷனுக்கும் ஒத்துக்கொள்ளவில்லை என்று தெரிந்ததிலிருந்து எனக்கு ஏற்பட்டிருக்கும் மன வேதனையைச் சொல்லி முடியாது. இந்த ஊரிலே உனக்குக் கலியாணம் நிச்சயமாகி நடந்தது. லலிதாவைப் பார்க்க வந்தவன் உன்னைக் கலியாணம் செய்து கொள்வேன் என்று சொன்னான். உன் அம்மாமிக்கு வயிறு எரிந்தது, எத்தனையோ பேர் சூயைப்பட்டார்கள். ஆனால் நான் பரிபூரணமாகச் சந்தோஷமடைந்து லலிதாவுடன் ஒரே பந்தலில் உனக்குக் கலியாணம் செய்து கொடுத்தேன். இப்படிப்பட்ட பாக்கியம் உனக்குக் கிடைத்ததே என்று எல்லாத் தெய்வங்களுக்கும் நன்றி செலுத்தினேன். அது இப்படி ஆக வேண்டுமா? உன் தாயார்தான் கடைசி வரையில் கஷ்டப்பட்டு வேதனைப்பட்டுச் செத்துப் போனாள். நீயும் அப்படி இருக்க வேணுமா? ஆசைப்பட்டுக் கலியாணம் செய்து கொண்ட புருஷனுடன் நீ சந்தோஷமாயிருக்கக்கூடாதா? சொல், சீதா!" "தலைவிதி வேறு விதமாயிருக்கும்போது நாம் என்ன செய்ய முடியும், மாமா? நீங்கள் எவ்வளவோ சந்தோஷத்துடன் கலியாணம் செய்து வைத்தீர்கள். நானும் பிரியப்பட்டுத்தான் கலியாணம் செய்து கொண்டேன். ஆனால் அவருடைய குணம் இப்படி யிருக்கும் என்று யார் கண்டது?" "அவனுடைய குணத்தைப்பற்றிச் சொல்கிறாய். உன்னுடைய குணம் எப்படி என்று யோசித்துப் பார்த்தாயா? பிறத்தியாரிடம் உள்ள குற்றத்தைக் கண்டுபிடித்துச் சொல்வது சுலபம்.நம்மிடமுள்ள குற்றத்தை உணர்வது கஷ்டம்.

'இரண்டு கையையும் கொட்டினால்தான் சத்தம்' என்று கேட்டதில்லையா? புருஷன் எவ்வளவுதான் குணங்கெட்டவனா யிருந்தாலும் ஸ்திரீ குணமுடையவளாயிருந்தால் கடைசியில் புருஷனும் சீர்திருந்தி விடுவான், சீர்திருத்த முடியும். சீதா! நீ படித்தவள்; நாலும் அறிந்தவள்; நீ தேசத்துக்குச் செய்த சேவையைப் பற்றிச் சூரியா புகழ்ந்து சொன்னான். அதையெல்லாம் பற்றி எனக்குச் சந்தோஷந்தான். ஆனால் நான் சொல்லும் ஒரு விஷயத்தைக் கேட்டுக்கொள். இந்தியா தேசம் விடுதலை அடைய வேண்டும் என்று நீங்கள் எல்லோரும் பாடுபடுகிறீர்கள். இந்த நாட்டின் முக்கியமான பெருமை என்ன தெரியுமா? உலகத்தில் எத்தனையோ தேசங்கள் சில காலம் மிகவும் மேன்மையோடு இருக்கின்றன; பிறகு அடியோடு அழிந்து போகின்றன. ஆனால் நம்முடைய இந்தியா தேசம் பதினாயிரம் வருஷமாக அழிந்து போகாமலும் மேன்மை குன்றாமலும் இருந்து வருகிறது. மகாத்மா காந்தியைப் போன்ற உத்தம புருஷர்கள் இந்தப் பாரத தேசத்தில் இன்னும் அவதரிக்கிறார்கள். ஏன் தெரியுமா? இந்தத் தேசத்துப் பெண்மணிகளின் மகிமையினால்தான். ஆதிகாலத்திலிருந்து இந்தத் தேசத்தில் புருஷன் எவ்வளவு மூர்க்கனாயும் குணக்கேடனாயு மிருந்தாலும் அவனோடு ஒத்து வாழ்க்கை நடத்துகிறது என்று ஸ்திரீகள் இருந்து வந்தார்கள். அவர்களுடைய புண்ணியந்தான் இந்தப் பாரத தேசத்தைக் காப்பாற்றி வருகிறது. காந்தி மகாத்மா தம்முடைய தர்மபத்தினி கஸ்தூரிபாயைப் பற்றி எழுதியிருப்பதை நீ படித்திருப்பாய். மகாத்மா காரணமின்றிக் கஸ்தூரிபாயைக் கடிந்து கொண்டபோது அந்த மாதரசி எவ்வளவு பொறுமையாக நடந்து, கணவரே பின்னால் பச்சாதாபப் படும்படியாகச் செய்திருக்கிறாள்?

அவ்வளவு தூரம் போக வேண்டாம். உன்னுடைய மாமியையே எடுத்துக்கொள். ஓயாமல் அவள் என்னிடம் சண்டை பிடிக்கிறாள் என்பது உண்மைதான். ஆனால் காரியாம்சத்தில் என் விருப்பத்தை மீறி அவள் ஏதாவது செய்வதுண்டா? எத்தனையோ தடவை நான் அவளை ரொம்பக் கோபித்துக் கொண்டிருக்கிறேன். அதற்காக அவள் இந்த வீட்டைவிட்டுப் போய்விடுகிறேன் என்று எப்போதாவது சொன்னதுண்டா?" "மாமா! கஸ்தூரிபாய் தெய்வாமிசம் பொருந்தியவர். மாமி மிகவும் பாக்கியசாலி; உங்களைப் பதியாகப் பெற்றார். ஆனால் நானோ எல்லாவிதத்திலும் துர்பாக்கியம் செய்தவள். கல்கத்தாவில் அலிப்பூர் ஜெயிலில் நான் இருந்த காலத்தில் ஒரு வருஷம் இவர் கல்கத்தாவில் இருந்திருக்கிறார். நான் சிறையில் இருப்பது அவருக்குத் தெரியும். ஆனால் ஒரு தடவையாவது அவர் என்னை வந்து பார்க்கவில்லை. அப்படியிருந்த போதிலும் சிறையிலிருந்து விடுதலை அடைந்ததும் அவரைப் போய்ப் பார்த்துக் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்வது என்று எண்ணியிருந்தேன், ஆனால் என்ன ஆயிற்று? நான் விடுதலையாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னாலேதான் அவர் சீமைக்குப் புறப்பட்டுப் போய்விட்டார். கல்கத்தாவில் அவர் நடத்திய வாழ்க்கையைப் பற்றி அறிந்த பிறகு எனக்கு அடியோடு புளித்துப் போய்விட்டது. இனிமேல் அவரோடு சேர்ந்து வாழ்வது இயலாத காரியம் என்று தீர்மானித்து விட்டேன்!"

"அப்படிச் சொல்லாதே, சீதா! கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், தீர விசாரித்ததே மெய் என்று ஒரு பழமொழி உண்டு. நீ இல்லாதபோது நீ கண்ணால் பார்க்காத விஷயங்களைப் பற்றி யாரோ சொன்னதை வைத்துக்கொண்டு ஒன்றையும் முடிவு கட்டக் கூடாது. உன் பேரில் ராகவனுக்குக் கோபம் ஏற்படவும் காரணம் இருக்கிறது. சூரியாவுக்கு நீ வீட்டில் இடம் கொடுத்ததினாலும் பிற்பாடு ஜெயிலுக்குப் போனதினாலும் ராகவனுக்கு உத்தியோகம் போய்விட்டது. உத்தியோகம் என்றால் சாதாரண உத்தியோகமா? மாதம் இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் உள்ள உத்தியோகம். உன்னுடைய காரியத்தினால் அவ்வளவு பெரிய சர்க்கார் உத்தியோகம் போச்சு என்றால் புருஷனுக்குக் கோபமாயிராதா?" என்றார் கிட்டாவய்யர். "அந்த வேலை போனதினால் ஒன்றும் மோசமில்லை, மாமா! அதைவிடப் பெரிய சம்பளத்துடன் அவருக்குப் பாங்கி வேலை கிடைத்திருக்கிறது" என்றாள் சீதா. "அது எப்படியிருந்தாலும் சரி, ராகவன் சீமையிலிருந்து வந்தவுடன் அவனை நான் பார்க்கப் போகிறேன், நீயும் என்னுடன் வரவேண்டும். உங்கள் இரண்டு பேருக்கும் மத்தியில் உள்ள தடங்கல்களையெல்லாம் போக்கி மறுபடியும் உங்களைக் குடியும் குடித்தனமுமாகப் பார்த்தால்தான் என் மனம் நிம்மதி அடையும். மறு உலகத்தில் உன் தாயாரின் ஆத்மாவும் சாந்தி அடையும். இருக்கட்டும், சீதா! உன் தகப்பனாரைப் பற்றி யாதொரு தகவலும் இல்லையா?" என்று கிட்டாவய்யர் கேட்டார்.

"மாமா! எனக்கு அப்பாவைப் பற்றி ஒரு சந்தேகம் இருக்கிறது. அது ஒரு ஊகமான சந்தேகந்தான். உங்களிடம் சொல்லக்கூட என் மனம் தயங்குகிறது. நாக்குக் கூசுகிறது." "என்னிடம் உனக்கு என்ன கூச்சம். அம்மா! என்ன விஷயமிருந்தாலும் தயக்கமில்லாமல் சொல்லு!" "அப்பா இஸ்லாம் மதத்தில் சேர்ந்து விட்டதாக எனக்குச் சந்தேகம், மாமா!" "சிவசிவ சிவா! கேட்பதற்கே கர்ண கடூரமாயிருக்கிறதே!- எதனால் உனக்கு இப்பேர்ப்பட்ட சந்தேகம் உண்டாயிற்று சீதா?" "நானும் அம்மாவும் பம்பாயில் இருந்தபோது, ஒரு ஸ்திரீ வந்து எனக்காக ரத்தின ஹாரமும் பணமும் கொடுத்துவிட்டுப் போனது ஞாபகம் இருக்கிறதல்லவா? அம்மா உங்களிடம் அதைப் பற்றிச் சொல்லியிருக்கிறாளே?" "ஞாபகம் இருக்கிறது. அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?" "அந்த ஸ்திரீயை ஒரு சமயம் நான் டில்லியில் பார்த்தேன். அவளுடன் தாடி வளர்ந்த சாயபு ஒருவரையும் கண்டேன். என் மனதில் ஏதோ ஒரு சந்தேகம் உதித்தது. பிறகு நான் டில்லியிலிருந்து கல்கத்தாவுக்குப் போகும் மார்க்கத்தில் ஆக்ராவில் ஒரு பெரிய ஆபத்து எனக்கு வந்தது. ரயிலில் ஒரு பெட்டியை எடுத்ததாகத் திருட்டுக் குற்றம் சாட்டி என்னைக் கோர்ட்டில் கொண்டு போய் நிறுத்தினார்கள்.

திக்குத்திசை புரியாமல் நான் திகைத்து நின்ற சமயத்தில் ஒரு சாயபு கோர்ட்டுக்கு வந்து அந்தப் பெட்டியை அவர் திருடியதாக ஒப்புக் கொண்டார். அதற்காகத் தண்டனையும் அடைந்தார். எனக்காக அப்பேர்ப்பட்ட தியாகத்தைச் செய்தவர் யாராயிருக்கும் என்று கல்கத்தா சிறையில் வசித்தபோது யோசித்துப் பார்த்தேன். ஒருவேளை அப்பாவாக இருக்கலாமென்று தோன்றியது. அப்புறம் யோசிக்க யோசிக்க அவர்தான் என்று உறுதி பெற்றேன்." "பகவானே! இப்படியும் உண்டா? நீ சொல்வது ஏதோ கதை மாதிரி இருக்கிறதே தவிர, உண்மையாகவே தோன்ற வில்லை. துரைசாமிக்கு இப்படிப் புத்தி கெட்டுப்போகும் என்று யாரால் நம்ப முடியும்? ஏதோ ஸ்திரீ விஷயமான சபலம் இருந்தாலும், கொஞ்ச நாளைக் கெல்லாம் விட்டுத் தொலைத்துத் தலை முழுக வேண்டும். அதற்காக மதம்விட்டுமதம் மாறுவார்களா? அதிலும் எப்பேர்ப்பட்ட மதம்? கோயிலை இடிக்க வேண்டும்; விக்கிரகத்தை உடைக்க வேண்டும் என்று சொல்லும் மதம்! மத சம்பந்தமான விஷயங்களில் உன் புருஷன் எப்படி அம்மா!" "அவருக்கு ஹிந்து மதத்தில் ரொம்ப பற்று உண்டு. வேறு மதங்களைப் பிடிப்பதேயில்லை. அதிலும் முஸ்லிம் மதம் என்றால் அவருக்கு ரொம்பக் கோபம் வரும்.

சர்க்கார் உத்தியோகம் பார்த்தபோது அவருக்குக் கீழேயிருந்த துருக்க உத்தியோகஸ்தர்களை அவருக்கு மேலே தூக்கிப் போட்டு விட்டார்களாம். அதனால் அந்த மதத்தின் பேரிலேயே அவருக்கு அசாத்தியமான கோபம்" என்றாள் சீதா. "பிற மதத்தின் பேரில் கோபத்துக்குக் காரணம் அழகாய்த்தானிருக்கிறது. எப்படியிருந்தாலும் ஹிந்து மதத்தில் பற்று உள்ள வரையில் விசேஷந்தான். எப்படியாவது நான் திருத்தி விடுகிறேன் பார், சீதா! கூடிய சீக்கிரம் உன்னுடைய கஷ்டங்கள் எல்லாம் முடிந்துவிடும்" என்றார் கிட்டாவய்யர். "மாமா! என்னுடைய கஷ்டங்கள் தீர்ந்துவிடும் என்றா சொல்கிறீர்கள்? எனக்கு அப்படித் தோன்றவில்லையே? காரணமில்லாமல் அடிக்கடி மனதில் பீதி உண்டாகிறது. அப்போதெல்லாம் மார்புப் படபடவென்று அடித்துக் கொள்கிறது. அடிவயிற்றை ஏதோ இழுத்துப் பிடிக்கிறது. இராத்திரியில் நிம்மதியான தூக்கம் கிடையாது. மாமா! பயங்கரமான கனவுகள் காண்கிறேன்!" என்றாள் சீதா. அவளுடைய உடம்பு நடுங்கிற்று; கண்ணீர் பெருகிற்று. இதுவரை படுத்துக்கொண்டும் சாய்ந்து கொண்டும் பேசி வந்த கிட்டாவய்யர் எழுந்து உட்கார்ந்தார். சீதாவின் தலையைத் தொட்டுக்கொண்டு, "குழந்தாய்! அதெல்லாம் வீண் பிரமை. ஏதோ பழைய கஷ்டங்களை அநுபவித்த ஞாபகத்தினால் உன் மனம் கொஞ்சம் பேதலித்திருக்கிறது. அப்படிப் பீதி உண்டாகும் போதெல்லாம் ராமராம என்று தாரக நாமத்தைச் சொல்லு; பீதி மறைந்துவிடும். மேலும் நான்தான் உன்னுடன் வரப் போகிறேனே! உனக்கு ஒரு கஷ்டம் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்!" என்றார் கிட்டாவய்யர். இந்தச் சமயத்தில் லலிதா அந்த அறைக்குள்ளே வந்தாள். கிட்டாவய்யர் கடைசியில் கூறிய மொழிகளைக் கேட்டுவிட்டு "அப்பா! இது என்ன? தேவபட்டணத்துக்கு என்னுடன் வரப்போவதாகச் சொன்னீர்கள். அரைமணியில் மறந்துவிட்டு இப்போது சீதாவுடன் புறப்பட ஆயத்தம் செய்கிறீர்களே! இந்த பம்பாய் அத்தங்காளிடம் ஏதோ ஒரு வசீகர சக்தி கட்டாயம் இருக்கிறது" என்றாள்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

ஏழாம் அத்தியாயம்
நித்திய வாழ்வு

இந்த உலகத்தில் எத்தனையோ தேசங்கள் சில சமயம் சிறப்புடன் வாழ்வதும் பிறகு அழிந்து போவதும் வழக்கமாயிருக்கையில், பாரத தேசம் மட்டும் பல்லாயிரம் வருஷமாக நித்திய வாழ்வு பெற்றிருப்பதின் காரணம் என்ன என்பது பற்றிக் கிட்டாவய்யர் சீதாவிடம் கூறினார் அல்லவா? அவருடைய புதல்வன் சூரியநாராயணன் சற்று நேரத்துக்கெல்லாம் அதற்கு வேறொரு காரணம் கூறினான். கிட்டாவய்யர் வீட்டுத் திண்ணையில் கூடிய பார்லிமெண்டு சபையில் நடந்த விவாதத்தின்போது சூரியா அந்தக் காரணத்தைச் சொன்னான். "கொஞ்சம் இதைக் கேளுங்கள்; ஒரு குண்டூசியில் வரிசையாகத் தபால்தலைகளைக் குத்திக் கோப்பதாக வைத்துக்கொள்ளலாம். அதில் மேலேயுள்ள ஒரே ஒரு தபால், மனிதன் தோன்றிய பிறகு சென்றிருக்கும் காலம். அதற்கு முன்னால், கீழேயுள்ள அவ்வளவு தபால்தலைகளின் அளவுள்ள காலம், இந்த உலகத்தில் மனிதனைத் தவிர மற்ற பல்வேறு ஜீவராசிகள் வாழ்ந்து வந்தன. ஜீவராசிகளிலே தென்னை மர உயரமும் மதுரைக் கோயில் கோபுரத்தின் நீளமும் உள்ள சில பிராணிகள் இருந்தன. சிருஷ்டியின் ஆரம்ப காலத்தில் அந்தப் பயங்கரமான பிராணிகள் இந்த உலகத்தில் அங்குமிங்கும் அகப்பட்டதையெல்லாம் விழுங்கிக்கொண்டு சஞ்சரித்தன. அந்தப் பிராணிகள் எல்லாம் இப்போது எங்கே? அவற்றின் இனமே அழிந்து இருந்த இடந் தெரியாமல் மறைந்து விட்டன. சரித்திர ஆராய்ச்சிக் காரர்கள் வெகு அபூர்வமாக அத்தகைய பிராணிகளின் எலும்புக் கூடுகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றும், கரையாத பனித்திரளின் அடியில் அகப்பட்டுக் கொண்டபடியால் அந்த எலும்புக்கூடுகள் லட்சக்கணக்கான வருஷம் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்து இப்போது அகப்படுகின்றன. அவ்வளவு பிரமாண்டமான பிராணிகள் அவற்றின் வர்க்கத்து வாரிசே இல்லாமல் நசித்துப் போனதின் காரணம் என்ன? மாறிக்கொண்டு வந்த உலகத்தின் சீதோஷ்ண நிலைமைக்கேற்ப அவை மாறாமலிருந்ததுதான். மாறிக்கொண்டு வந்த பிராணிகளோ இன்று வரையில் வாழையடி வாழையாக வாழ்ந்து பல்கிப் பெருகி வருகின்றன.

"மனித குலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உலகத்தில் பல தேசங்களில் மக்கள் ஒவ்வொரு சமயம் மிக உன்னத நிலைமையில் இருந்திருக்கிறார்கள். பாபிலோனியா, அஸ்ஸீரியா, கிரீஸ், எகிப்து முதலிய அத்தகைய பழைய காலத்து நாகரிக மக்களின் சமூகங்கள் நசித்து அழிந்து போய்விட்டது. ஏன் தெரியுமா? காலத்துக்கேற்ப அந்தச் சமூகங்கள் மாறாமல் அப்படியே இருக்கப் பார்த்ததுதான் காரணம். ஆனால் நம்முடைய பாரத தேசமோ உலகில் வேறு எந்தத் தேசத்தையும் காட்டிலும் அநாதியான நாகரிகத்தை உடையது. ஆயினும் இன்றுவரை அழிந்து போகாமல் இருக்கிறது. காரணம் என்ன? இந்தத் தேசத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் கால மாறுதலுக்கு ஏற்பத் தங்களுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டு வந்திருப்பதுதான். ஒரே ஒரு உதாரணத்தைக் கேளுங்கள். வேத காலத்தில் நம் முன்னோர்கள் பலவித யாகங்கள் செய்தார்கள். அந்த யாகங்களில் குதிரைகள், மாடுகள், ஆடுகள் முதலிய பல ஜீவப் பிராணிகளைப் பலி கொடுத்தார்கள். அந்த மிருகங்களின் மாமிசத்தை அவிப்பாகம் என்பதாகத் தேவர்களுக்கு அளித்து மிச்சத்தைத் தாங்களும் உண்டார்கள். கௌதம புத்தர் அவதரித்து யாகங்களைக் கண்டித்தார். யாகங்களில் பலி கொடுப்பதைக் கண்டித்தார். கௌதம புத்தருடைய கொள்கைகள் உலகமெங்கும் பரவின. அந்தக் கொள்கைகளில் முக்கியமானவற்றை அந்தக் காலத்துப் பாரத மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்; யாகங்கள் நின்று போயின. பிற்காலத்தில் ஹிந்து தர்மத்தை நிலைநாட்ட அவதரித்த ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ ராமானுஜர் முதலிய ஆச்சாரிய புருஷர்கள் யாகம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. துளசிதாஸர், துக்காராம், தியாகராஜர் முதலிய பக்த சிரோமணிகளும் யாகம் செய்யச் சொல்லவில்லை.,இந்த ஒரு உதாரணத்தைப்போல ஆயிரம் உதாரணம் ஹிந்து சமூகத்தின் சரித்திரத்திலிருந்து எடுத்துக்காட்டலாம். அவ்விதம் அடிக்கடி புதிய கருத்துக்களை ஏற்றுக்கொண்டு ஆச்சாரங்களையும் வழக்கங்களையும் மாற்றிக்கொண்டு வந்ததினால் ஹிந்து சமூகம் இன்றைக்கு ஜீவசக்தி பெற்றிருக்கிறது.

"அத்தகைய அவசியம் - ஹிந்து சமூகம் பல ஆசாரங்களையும் பழக்கவழக்கங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் தற்சமயம் ஏற்பட்டிருக்கிறது. ஹிந்து தர்மத்துக்குக் கேடு நேராமல் என்னென்ன சமூக சீர்த்திருத்தங்கள் செய்ய வேண்டுமென்று போதனை செய்ய மகாத்மா காந்தி அவதரித்திருக்கிறார். அவருடைய போதனையின்படி தீண்டாமை, சாதி வித்தியாசம், குழந்தை மணம் முதலிய வழக்கங்களை ஒழித்தேயாக வேண்டும். நம்முடைய பாட்டனார்களின் காலத்தில் கடைப்பிடித்த பழக்கவழக்கங்களையே இன்னமும் கைக்கொள்ளலாம் என்று எண்ணினோ மானால் நம்மைப் போன்ற அறிவீனர்கள் இல்லை என்று ஏற்பட்டுவிடும்." "பாரத தேசத்து மக்கள் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டு வந்தால் இந்த உலகில் நிலைபெற்று வாழலாம்; மேன்மையாகவும் வாழலாம். வழக்கங்களை மாற்ற மாட்டோ ம் என்று பிடிவாதம் பிடித்தால் சரித்திரத்தில் எத்தனையோ ஜீவப்பிராணிகளும் எத்தனையோ தேசமக்களும் அழிந்து போனது போல நாமும் அழிந்துபோக வேண்டியதுதான்!...." சூரியாவின் இந்த நீண்ட பிரசங்கத்தைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருவரான பிச்சுவய்யர் இப்போது குறுக்கிட்டு, "நீ சொல்லுகிறது சரிதான், அப்பா! யார் இல்லை என்கிறார்கள்? நம்முடைய காலத்திலேயே எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டுத்தான் இருக்கின்றன. நான் சிறு பையனாயிருந்த போது பிராமணன் சாப்பிடுவதை மற்றச் சாதியார் பார்க்கக் கூடாது. சமபந்தி போஜனம் செய்தால் சாதிப்பிரஷ்டம் செய்து விடுவார்கள். அந்த ஆசாரத்தையெல்லாம் இப்போது யார் பார்க்கிறார்கள்? அந்தக் காலத்தில் இந்த அக்கிரகாரத்தில் ஒருவர்கூடத் தலையில் கிராப் வைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்ததில்லை. இப்போது எந்த வீட்டிலாவது கிராப் வைத்துக் கொள்ளாத பையன் இருந்தால் காட்டுப் பார்க்கலாம்! கிடையவே கிடையாது!" என்று சொன்னார்.

"மாமா! இந்த மாதிரி முக்கியமில்லாத விஷயங்களில் மாறுதல் நடந்திருக்கிறது, ஆனால் இது போதுமா? போதாது. நம்முடைய பாட்டனார் காலத்தில் பண்ணையாட்களை நடத்தியது போல இந்தக் காலத்திலும் நடத்தலாம் என்று நினைத்தோமானால் பெரும் பிசகாக முடியும்...." "பார்த்தீராங்காணும், பஞ்சுவய்யரே! பையன் எங்கேயெல்லாமோ சுற்றி என்னவெல்லாமோ சக்கரவட்டமாகப் பேசுகிறானே என்று பார்த்தேன், கடைசியில் பண்ணை ஆள் விஷயத்துக்கு வந்து விட்டான். அப்பனே! அந்த விஷயம் ஹைகோர்ட்டு வரையில் போய்த் தீர்ந்து போய்விட்டது. அதைப் பற்றி நீ இப்போது பேச வேண்டாம். வேறு ஏதாவது இருந்தால் சொல்லு" என்றார் அப்பாத்துரை சாஸ்திரிகள். "சாஸ்திரிகள் சொல்லுவது சரிதானே, சூரியா! இந்தக் கிஸான் கிளர்ச்சி விஷயம் இருக்கவே இருக்கிறது. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீ சுயராஜ்ய இயக்கத்தைப் பற்றிச் சொல்லு. மகாத்மா காந்தி முதலானவர்கள் இவ்வளவு பாடுபட்டார்களே! என்ன ஆயிற்று? சுயராஜ்யம் எப்போது வரப்போகிறது? நேதாஜி சுபாஷ் போஸ் இப்போது எங்கே இருக்கிறார்? ஜயப்பிரகாச நாராயணன் என்ன சொல்லுகிறார்? 'வெள்ளைக்காரா? வெளியே போ!' என்று தொண்டை கிழியக் கத்திக் கொண்டிருந்தீர்களே, அதன் பலன் என்ன? வெள்ளைக்காரன் எப்போது வெளியே போகப் போகிறான்?" என்று சீமாச்சுவய்யர் கேட்டார். "இவர்கள் தொண்டை கிழியும்படி 'வெள்ளைக்காரா! வெளியே போ!' என்று எங்கே கத்தி னார்கள்? நம்ப ஊர் சந்தைத் தோப்பில் நின்றுகொண்டு கத்தினார்கள். வெள்ளைக்காரனுடைய காதில் விழும்படி கத்தினால்தானே? அப்படிக் கத்தியிருந்தால் வெள்ளைக்காரன் வெளியே போயிராவிட்டாலும் அவனுடைய காதாவது செவிடாகப் போயிருக்கும்! அப்படியொன்றும் இவர்கள் செய்யவில்லையே! குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருந்தார்கள்; நம்ப ஊர்க் கழுதைப் பொட்டலில் வெள்ளைக்காரன் இருக்கிறானா, என்ன? இவர்களுடைய கூச்சலைக் கேட்டுவிட்டு வெளியே போவதற்கு?" என்று பஞ்சுவய்யர் வெளுத்து வாங்கினார்.

"மாமா! கொஞ்சம் பொறுங்கள். இப்போது உங்களுக்கு எகத்தாளமாய்த் தானிருக்கும். ஆனால் கொஞ்ச நாளில் நீங்களே பார்க்கப் போகிறீர்கள்! வெள்ளைக்காரன் மூட்டை கட்டிக் கொண்டு வெளியேறத்தான் போகிறான்!" என்றான் சூரியா. "சரிதான், அப்பா, சரிதான்! முப்பது வருஷமாய் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நானும் கேட்டுக் கொண்டு தானிருக்கிறேன். முன்னொரு சமயம் 'ஒரு வருஷத்திலே சுயராஜ்யம் வரப் போகிறது' என்று சொன்னார்கள். அது வராமல் டிமிக்கி கொடுத்துவிட்டது. அப்புறம் உப்புச் சத்தியாக்கிரஹத்தின்போது சுயராஜ்யம் 'இதோ வரப் போகிறது!' என்றார்கள். 'சுயராஜ்யம் வாங்கி வருகிறதற்காக மகாத்மா லண்டனுக்குப் போயிருக்கிறார்!' என்றார்கள். 'வைஸ்ராய் இர்வின் சரணாகதி அடைந்து விட்டான்' என்றார்கள். கடைசியில் ஒன்றுமில்லை என்று ஆகிவிட்டது. இப்போதும் 1942-ம் வருஷத்தில் 'ஆச்சுப் போச்சு' என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நேதாஜி படையெடுத்து வருகிறார் என்று சொன்னார்கள். எல்லாம் வெறும் சவுடால் பேச்சு என்று ஆயிற்று. அப்பேர்ப்பட்ட பயங்கரமான யுத்தம் நடந்தபோது, ஹிட்லர் ஒரு பக்கமும் டோ ஜா ஒரு பக்கமும் நெருக்கிக் கொண்டிருந்தபோதே, - இங்கிலீஷ்காரன் மசியவில்லையே! யுத்தத்தில் ஜெயித்தபிறகா இந்தியாவுக்குச் சுயராஜ்யம் கொடுத்து விடப் போகிறான்!" என்றார் வேலாயுத முதலியார்.

"முதலியார்வாள்! உங்களைப் போல்தான் நானும் நினைத்தேன். இன்னும் அநேகரும் யுத்த சமயத்திலேதான் இந்தியாவின் சுயராஜ்யத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று எண்ணினார்கள். ஆனால் அவதார புருஷரான மகாத்மா வேறு விதமாக நினைத்தார். யுத்த காலத்தில் இங்கிலீஷ்காரர்களுக்குக் கஷ்டம் கொடுக்கக்கூடாது என்று சொன்னார். நல்ல பாம்பு மந்திரத்துக்குக் கட்டுப்படுவது போல நாம் சத்தியத்துக்குக் கட்டுப்பட வேண்டும் என்று கூறினார். அவர் பேச்சை மீறி என்னைப் போல் எத்தனையோ பேர் இரகசியப் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டோ ம். ஆனால் ஒரு பயனும் கிடைக்கவில்லை. கடைசியாக இப்போது மகாத்மாவின் வழியினால் தான் இந்தியாவுக்குக் கதிமோட்சம் கிட்டப் போகிறது என்ற நிச்சயத்திற்கு வந்திருக்கிறோம்!" என்றான் சூரியா. "நீயும் உன்னைப் போன்றவர்களும் மெத்தப் படித்த புத்திசாலிகள். அதனால் உங்களுக்குக் காந்தி காட்டுகிற வழிதான் சரியான வழி என்று நிச்சயிக்க இவ்வளவு காலம் ஆயிற்று. ஆனால் நாங்கள் எல்லோரும் படிப்பு வாசனையில்லாத பட்டிக்காட்டு மனிதர்கள். ஆகையால் ஆரம்பத்திலேயே அந்த நிச்சயத்துக்கு வந்துவிட்டோ ம். இந்தியாவுக்குக் கதிமோட்சம் பிறந்தால் மகாத்மாவினால்தான் பிறக்க வேண்டும். வேறு யாராலும் இல்லை என்று முப்பது வருஷத்துக்கு முன்னாலேயே முடிவு செய்து விட்டோ ம். உன் அப்பாவும் நானும் அன்றைக்குக் கதர் கட்ட ஆரம்பித்தவர்கள் இன்றைக்கும் கதர் கட்டி வருகிறோம். தெரியுமோ, இல்லையோ? சீமாச்சு இப்போது விற்கிறது மில் துணியானாலும் அவன் கட்டிக் கொள்கிறது கதர் வேஷ்டிதான்!" என்று சொன்னார் பஞ்சுவய்யர்.

"மாமா! காந்தி மகானிடம் உங்களுக்கு அவ்வளவு பக்தியும் நம்பிக்கையும் எப்போது இருக்கிறதோ, அப்போது அவர் சொல்கிறதை முழுவதும் கேட்டு அப்படியே நடக்க வேண்டியதுதானே?" என்றான் சூரியா."என்ன காரியத்தில் இதுவரை மகாத்மா சொல்கிறபடி நாங்கள் நடக்கவில்லை, நீ மட்டும் நடந்துவிட்டாய் என்பதைச் சொல்லேன் பார்க்கலாம்!" என்றார் அப்பாதுரை சாஸ்திரிகள். "சுயராஜ்யம் கூடிய சீக்கிரம் வரப் போகிறது. அதற்குள்ளே நம்மிடமுள்ள குறைகளை நீக்கிக்கொண்டு சுயராஜ்யத்துக்குத் தயாராக வேணும் என்று மகாத்மா சொல்கிறார்." "என்ன குறை எங்களிடம் இருக்கிறது, அதை எப்படி நீக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லேன்!" "முக்கியமாக, கிராமங்களில் உள்ள மிராசுதாரங்களுக்கும் குடிபடைகளுக்கும் தகராறு இருக்கக்கூடாது. உழைக்கிறவனுக்கு உழைப்பின் பலன் என்கிற கொள்கையை எல்லாரும் ஒப்புக் கொள்ள வேண்டும்." "சூரியாவையரே! நீ வேறு என்ன வேணுமானாலும் பேசும், இந்த ஆள்படை விஷயத்தைப் பற்றி மட்டும் பேசவேண்டாம். உம்முடைய தகப்பனார் ஏற்கெனவே இடங்கொடுத்துக் கொடுத்து அதன் பலனை இப்போது அநுபவிக்கிறார். அவருடைய உயிருக்கே உலை வைக்கப் பார்த்தார்கள். தெய்வாதீனமாகப் பிழைத்தார்!..." "அப்பாவை எங்களுடைய ஆட்கள் கொல்ல யத்தனித்தார்கள் என்பதை நான் நம்பவே மாட்டேன், அப்படி ஒரு நாளும் நடந்திராது. யாரோ வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் செய்த காரியத்துக்கு ஏழைக் குடிபடைகள்மேல் எதற்காகப் பழியைப் போடுகிறீர்கள்!" "சரி விடு! உன்னிடம் இதைப்பற்றி வாதம் இடுவானேன்!

போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. சில நாளைக்கெல்லாம் உண்மை என்னவென்று தெரிந்து விடுகிறது. அப்புறம் இந்த மாதிரி பேச மட்டாய்!" இந்தச் சமயத்தில் லலிதா வீட்டு வாசலுக்கு வந்து, "அண்ணா! உன்னை அப்பா கூப்பிடுகிறார்!" என்றாள். "சரி அப்பாவைப் போய்ப் பார்! அவர் சொல்கிறதையாவது கேட்டு அதன்படி செய்!" என்று சொல்லிவிட்டுத் திண்ணைப் பார்லிமெண்ட் அங்கத்தினர்கள் சபையைக் கலைத்து விட்டுப் போய்ச் சேர்ந்தார்கள். சூரியா தன் தந்தை இருந்த அறைக்குள் சென்று அவர் படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் உட்கார்ந்தான். "மன்னியுங்கள், அப்பா! நாங்கள் சத்தம் போட்டுப் பேசியது உங்களுக்குத் தலைநோவாக இருந்திருக்கும். தெரியாமல் இரைந்து பேசிவிட்டேன்!" என்றான். "சூரியா! நீ பேசியதெல்லாம் என் காதில் விழுந்து கொண்டிருந்தது. அதனால் எனக்குத் தலைவலி உண்டாகவில்லை. ரொம்பவும் சந்தோஷம் உண்டாயிற்று. உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று நானே எண்ணிக் கொண்டிருந்தேன். சில நாளாக நான் யோசனை செய்து பார்த்ததில் நீ சொல்வதுதான் சரி என்ற உன்னுடைய முடிவுக்கு வந்திருக்கிறேன். நீ இந்த ஊரில் தங்கி உன்னுடைய இஷ்டப்படி எல்லாம் நடத்து; குடிபடைகளுக்கு என்ன செய்யவேண்டுமோ செய். நான் உனக்குப் பூரண அதிகாரம் கொடுக்கிறேன். எனக்கு இந்த ஊரில் இருக்க இனிப்பிரியமில்லை. வானப் பிரஸ்த ஆசிரமத்தை என்னுடைய மனம் நாடுகிறது. எங்கேயாவது யாத்திரை போக வேண்டும் என்று தோன்றுகிறது. லலிதா தேவபட்டணத்தில் வந்திருக்கும்படி கூப்பிடுகிறாள். காசி ஹரித்வாரம், பத்திரிநாத் முதலிய ஷேத்திரங்களைத் தரிசனம் செய்வதற்குச் சீதா என்னை அழைத்துப் போவதாகச் சொல்கிறாள்..."

"சீதா எதற்காக உங்களை அழைத்துப் போக வேணும், அப்பா! நான் அழைத்துப் போகிறேன். அந்த இடங்களெல்லாம் எனக்குத் தெரியும், காசியில் ஆறுமாதம் இருந்தேன்." "சூரியா! நீ என்னைக் காசிக்கு அழைத்துக் கொண்டு போவதைக் காட்டிலும் இங்கே இருந்து குடிபடைகளைக் கவனித்துச் செய்ய வேண்டியதைச் செய்தால் அதுவே எனக்குப் பரம திருப்தியாயிருக்கும்..." இந்தச் சமயத்தில் சரஸ்வதியம்மாள் உள்ளேயிருந்து வந்து, "சூரியா! அப்பாவோடு அதிகமாகப் பேச்சுக் கொடுக்காதே! அர்த்த ராத்திரி ஆகப்போகிறதே! அவர் தூங்க வேண்டாமா?" என்றாள். "அம்மா சொல்வது சரிதான்; தூங்குங்கள் அப்பா! விவரமாக நாளைக்குப் பேசிக்கொள்ளலாம். எப்படியும் உங்கள் இஷ்டப்படி நடந்து கொள்வேன்!" என்றான் சூரியா. மறுநாள் தந்தையுடன் தொடர்ந்து பேச்சு நடத்துவதற்குச் சூரியாவுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கிட்டாவய்யரைத் தீர்த்தயாத்திரை அழைத்துப் போவது யார் என்ற பிரச்சனையும் எழுவதற்கு இடமில்லாமல் போய் விட்டது. திருமூலர் என்னும் மகான் மனித வாழ்வின் அநித்தியத்தைக் குறிப்பிடுவதற்கு ஓர் அற்புதமான பாடலைப் பாடியிருக்கிறார்.

'அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக் கொடியாரோடு மந்தணம் புகுந்தார்!
இடப்பக்கமே இறை நொந்ததே என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே!

இராத்திரி அறுசுவை உண்டி தயாரித்து வைத்ததை ஒரு கிரகஸ்தர் சாப்பிட்டார், பிறகு மனைவியோடு சயன அறைக்குச் சென்றார், 'இடது மார்புக்கு அருகில் கொஞ்சம் வலிக்கிறது!' என்று சொன்னார். தூங்கினால் வலி போய்விடும் என்று படுத்தார். படுத்தவர் படுத்தவர்தான்! பிறகு எழுந்திருக்க வேயில்லை. திருமூலர் வாக்கின் கடைசி வரி கிட்டாவய்யரின் விஷயத்தில் பலித்துவிட்டது. இராத்திரி சூரியாவிடம் தன் உள்ளத்தைத் திறந்து காட்டிவிட்டு நிம்மதியோடு படுத்துத் தூங்கியவர் மறுபடி எழுந்திருக்கவே இல்லை. அடுத்த நாள் காலையில் அந்த வீட்டில் பரிதாபமான ஓலக்குரல்களும் துயரம் ததும்பிய பிரலாபமும் ஒப்பாரியும் ஒருமித்து எழுந்தன. எல்லாரிலும் அதிகத் துயரத்துடன் புலம்பி அதிகமாகக் கண்ணீர் விட்டுக் கதறியவள் கிட்டாவய்யரின் மருமகளாகிய சீதாவேயாகும்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


எட்டாம் அத்தியாயம்
"மாமழை போற்றுதும்"

போர்க்களத்தில் அம்பு மழையைப் பொருட்படுத்தாமல் குறிப்பிட்ட இலட்சியத்தை நோக்கிச் செல்லும் வீரனைப்போல் அந்த ரயில் வண்டி காற்றையும் மழையையும் பொருட்படுத்தாமல் போய்க்கொண்டிருந்தது. இரண்டாம் வகுப்பு வண்டி ஒன்றில் சீதாவும், லலிதாவும், லலிதாவின் புருஷன் பட்டாபிராமனும் குழந்தைகள் இருவரும் இருந்தார்கள். அவர்கள் எல்லோருடைய கவனமும் வண்டிக்கு வெளியே தோன்றிய காட்சிகள் சென்றிருந்தது. வானம் முழுதும் கருமேகங்கள் மூடி மழை பெய்து கொண்டிருந்தபடியால் பகல் நேரம் அந்திப் பொழுதைப் போல் மங்கி இருள் அடைந்து தோன்றியது. சடசடவென்று அடித்த மழை ஒரு பக்கத்து ஜன்னல் கண்ணாடிகளைத் தாக்கிச் சுக்கு நூறாக்கிவிட முயன்று கொண்டிருந்தது. ஆனால் இன்னொரு பக்கத்து ஜன்னல் கண்ணாடிகளின் வழியாக வெளியே தோன்றிய பலவிதக் காட்சிகள் தெளிவாகப் புலனாகிக் கொண்டிருந்தன. நீர்வளமும் நிலவளமும் நிறைந்து செழித்த பிரதேசத்தின் வழியாக ரயில் அச்சமயம் போயிற்று. பெருங் காற்றில் பேயாட்டம் ஆடிய தென்னை மரங்களின் மட்டைகள் வானத்து மேகங்களின்மீது கோபங்கொண்டு தாக்கி அடித்தன. அடர்ந்து செழித்து வளர்ந்திருந்த மூங்கில் மரங்கள் நாலா பக்கமும் சுற்றிச் சுற்றி மழைத் துளிகளைத் தாக்கிச் சிதறச் செய்து கொண்டிருந்தன. மாமரக்கிளைகள் அலங்கோலமாக ஆடியபோது, அவற்றில் மழைக்கு ஒதுங்கிப் பதுங்கிக் கொண்டிருந்த பட்சிகளின் பாடு மிகவும் கஷ்டமாகப் போய்விட்டது.

திடீரென்று ஒரு மாமரத்தின் கிளை முறிந்து கீழே விழுந்தது. அதிலிருந்த ஒரு காக்கை மழையினால் நனைந்த சிறகுகளை விரிக்க முடியாமல் விரித்து, பறக்க முடியாமல் பறந்து கரகரவென்று கட்டிப் போயிருந்த தொண்டையினால், "அபயம்" "அபயம்" என்று கூவிக்கொண்டு இன்னொரு மரத்தில் போய் உட்கார்ந்தது. "ஐயோ! பாவம்!" என்று சீதா பரிதாபக் குரலில் கூறிவிட்டு லலிதாவைப் பார்த்தாள். லலிதா குழந்தை பாலுவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தபடியால் பட்டாபிராமனுடைய முகத்தை நோக்கினாள். பட்டாபிராமன் அச்சமயம் சீதாவைக் கவனித்துக் கொண்டிருந்தான். மழையில் நனைந்த காக்கைக்கு அவள் இரக்கப்பட்டதைக் குறிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான். "அந்தக் காக்கையின் பாடு கஷ்டந்தான்!" என்று சொன்னான். "நான் பிறந்த வேளையில் அந்தக் காக்கையும் பிறந்திருக்க வேண்டும்!" என்றாள் சீதா. லலிதா திரும்பிப் பார்த்து, "எந்தக் காக்கை? எதைப்பற்றிப் பேசுகிறீர்கள்!" என்று கேட்டாள். சீதாவும் பட்டாபிராமனும் பேசாமல் இருந்தார்கள். "ஒரே மௌனமாயிருக்கிறீர்களே? என்ன விஷயம் என்று எனக்குச் சொல்லக் கூடாதா?" என்று லலிதா மறுபடியும் கேட்டாள். "ஒரு மரக்கிளை ஒடிந்து விழுந்தது, அதிலிருந்து ஒரு காக்கை அலறி அடித்துக் கொண்டு இன்னொரு மரத்துக்குப் பறந்து சென்றது! நீ வனிக்கவில்லை!" என்றான் பட்டாபிராமன். "பாலு என்னமோ கேட்டான் அதற்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன், அதனால் கவனிக்கவில்லை" என்றாள் லலிதா. "அதைத்தான் நானும் சொன்னேன்!" என்றான் பட்டாபிராமன். "குழந்தையைக் காட்டிலும் எனக்கு காக்கை ஒசத்தியில்லை!" என்று சொன்னாள் லலிதா. "குழந்தையைக் காட்டிலும் காக்கை ஒசத்தி என்று யார் சொன்னது?" என்றான் பட்டாபிராமன். ரயில் போய்க் கொண்டேயிருந்தது.

ஒரு ஊருக்குப் பக்கத்தில் வயல்கள் சூழ்ந்திருக்க பொட்டைத் திடலில் ஒரு சிதை எரிந்து கொண்டிருந்தது. சிதையின் தீ மழையில் நனைந்து அணைந்து போய் விடாதபடி சிலர் அதன்மேல் அவசர அவசரமாகக் கீற்றுப் பந்தல் போட்டுக் கொண்டிருந்தார்கள். "அதோ பார், அம்மா! நெருப்புக்கு மேலே பந்தல் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்! எதற்காக அம்மா?" என்று பட்டு கேட்டாள். எல்லாரும் அந்தப் பக்கம் பார்த்தார்கள். சிதை எரிவதைக் கண்டதும், "மாமாவையும் இந்த மாதிரி தானே சிதையில் வைத்துக் கொளுத்திவிட்டு வந்தோம்?" என்று சீதா சொல்லி விட்டு விம்மி அழத் தொடங்கினாள். லலிதாவின் கண்களிலும் கண்ணீர் துளித்தது ஆனால் அவள் அழவில்லை. "அப்பா செத்துப் போனது கூட எனக்கு அவ்வளவு பெரிதாக இல்லை. நீ துக்கப்படுகிறதைப் பார்த்தால்தான் அதிக வருத்தமாயிருக்கிறது!" என்று லலிதா கூறினாள். "மாமா செத்துப் போனதற்காக யாரும் வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை. அவர் மிக மேலான கதிக்குப் போயிருப்பார். மோட்சங்களுக்குள்ளே மிக உயர்ந்த மோட்சத்துக்கு அவர் நிச்சயம் போயிருப்பார்!" என்றான் பட்டாபிராமன். சீதா விம்மலை நிறுத்திக் கண்களையும் துடைத்துக் கொண்டு, "அது வாஸ்தவந்தான். சூரியாவைப் போன்ற ஒரு பிள்ளையைப் பெற்றதற்கே அவர் எவ்வளவோ மேன்மையான கதிக்குப் போயிருக்க வேண்டும்!" என்றாள். "சந்தேகமில்லை; பத்து நாளைக்குள் சூரியா குடியானவர்களை எவ்வளவு சரிக் கட்டிக் கொண்டு விட்டான்!" என்று பட்டாபிராமன் சொன்னான். "அப்பா செத்துப் போன அன்றைக்கே குடிபடைகள் எல்லாம் கூட்டமாய் வந்து கதறி அழுது விட்டார்களே!" என்றாள் லலிதா. ரயில் போய்க் கொண்டேயிருந்தது. எங்கே பார்த்தாலும் தண்ணீர் மயமாகக் காணப்பட்டது. "இது என்ன, ஒரே ஜலப்பிரளயமாகவல்லா இருக்கிறது? ராஜம்பேட்டையைக் காட்டிலும் இங்கே மழை அதிகம் போலிருக்கிறதே!" என்றான் பட்டாபிராமன். "நாம் ரயில் ஏறிக் கிளம்பிய பிறகு அங்கேயும் மழை கொட்டியிருக்கலாம்," என்றாள் சீதா.

"மழை இல்லை, மழை இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது அடைத்து வைத்துக் கொண்டு கொட்டுகிறது!" என்றாள் லலிதா. "மழை கொஞ்சநாள் இல்லாமற் போனால்தான் மழை எவ்வளவு அவசியமானதென்று ஜனங்களுக்குத் தெரிகிறது. வேத காலத்து ரிஷிகள் சூரியனை எப்படி தோத்திரம் செய்தார்களோ அப்படியே வருணனையும் பிரார்த்தனை செய்தார்கள். சிலப்பதிகாரம் என்ற தமிழ்க் காவியத்தில் சூரியனையும் சந்திரனையும் போற்றிவிட்டு, "மாமழை போற்றுதும்" மாமழை போற்றுதும்" என்று அழகாகப் பாடியிருக்கிறது!" என்று பட்டாபிராமன் தன்னுடைய புலமையைத் தெரியப்படுத்திக் கொண்டான். "இருந்தாலும் மழையை ரொம்பப் போற்றி விடாமலிருந்தால் நல்லது. இப்படி ஒரே கொட்டாகக் கொட்டினால் ஏழை ஜனங்கள் என்ன செய்வார்கள்? அதோ பாருங்கள்!" என்றாள் லலிதா. அவள் சுட்டிக்காட்டிய பக்கத்தில் ஒரு கிராமத்து வீதிகளுக்குள்ளே மழைத் தண்ணீர் ஆற்று வெள்ளம் போலப் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது. ஒரு குடிசை வீட்டின் கூரையைப் பெருங்காற்று அப்படியே பிய்த்துத் தூக்கி அப்பாலே எறிந்திருந்தது. குடிசையில் பாக்கி நின்ற குட்டிச் சுவர்கள் மழையில் நனைந்து கரைந்து கொண்டிருந்தன. குடிசைக்குள்ளேயிருந்த சட்டிப் பானை தட்டுமுட்டுச் சாமான்களை ஒரு ஸ்திரீயும் இரண்டு ஆண் பிள்ளைகளும் எடுத்து அப்புறப்படுத்த முயன்று கொண்டிருந்தார்கள். "இந்த மாதிரி எவ்வளவு குடிசை இன்றைக்கு இடிந்து விழுந்து போச்சோ? அந்தக் குடிசைகளில் வசித்த ஏழை ஜனங்கள் எல்லாரும் என்ன கஷ்டப்படுவார்களோ?" என்று லலிதா பரிதாபப்பட்டாள். "எனக்கு இங்கேயே ரயிலிலிருந்து குதித்து விடலாம் என்று தோன்றுகிறது. ஓடிப்போய் வீடுவாசல் இழந்த அந்த ஏழை ஜனங்களுக்கு ஒத்தாசை செய்ய வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது!" என்றாள் சீதா. மழை மேலும் கடுமையாகப் பெய்தது. காற்று இன்னும் தீவிர வேகமடைந்து மோதி அடித்தது. ரயில் அசைந்து ஆடிக்கொண்டும் திணறித் திண்டாடிக் கொண்டும் தண்டவாளங்களின் மீது ஊர்ந்தும் சென்று கொண்டேயிருந்தது.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

ஒன்பதாம் அத்தியாயம்
பட்டாபியின் புனர்ஜென்மம்

ரயில் தேவபட்டணம் ஸ்டேஷனை நெருங்கியபோது இரவு எட்டு மணி இருக்கும். ரயில் பாதையின் இரு பக்கமும் தேங்கியிருந்த மழைத் தண்ணீரில் ரயில் வண்டியின் விளக்குகள் வரிசையாகப் பிரதிபலித்தன. அவ்வாறே தேவபட்டணத்தை அடுத்துள்ள சாலைகளில் போட்டிருந்த விளக்குகளும் பக்கத்தில் கடல் போலத் தேங்கியிருந்த தண்ணீரில் வரிசையாகப் பிரதிபலித்து மினுமினுத்தன. வானை மூடியிருந்த மேகங்களினாலும் பூமியில் சூழ்ந்திருந்த அந்தகாரத்தினாலும் கருமை உருக்கொண்டிருந்த அந்த இரவு நேரத்தில் வரிசை வரிசையான மின்சார தீபங்களும் தண்ணீரில் அவற்றின் பிரதிபிம்பங்களும் சேர்ந்து ஏதோ ஒரு மாயாபுரி வானத்திலிருந்து பூமியில் இறங்கியிருக்கிறது போன்ற பிரமையை உண்டாக்கின. ரயில் ஸ்டேஷனுக்குள் சென்று நின்றதும் பட்டாபிராமன் முதலியவர்கள் ரயில் கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கினார்கள். கதவைத் திறந்தவுடனேயே ஊதல் காற்று சுளீர் என்று அடித்தது. கீழே அவர்கள் இறங்கி நின்ற இடத்தில் பிளாட்பாரத்தின் மேற்கூரை இருந்தபோதிலும் திறந்திருந்த இரு பக்கங்களிருந்தும் மழைச்சாரல் வந்து தாக்கியது. போர்ட்டர்கள் குளிரில் நடுங்கிக் கொண்டே வந்து சாமான்களைத் தூக்கிக் கொண்டார்கள். அந்தச் சமயத்தில் ஸ்டேஷனுக்கு ஒரு பக்கத்திலிருந்து ஏராளமான ஜனங்கள் சொட்டச் சொட்ட நனைந்த துணிகளுடன் கூச்சலிட்டுக் கொண்டு ஓடி வந்தார்கள். சிறிது நேரத்தில் நூற்றுக்கணக்கான ஸ்திரீகளும் புருஷர்களும் குழந்தைகளும் ரயில் பிளாட்பாரத்திலும் பிளாட்பாரத்துக்கு வெளியிலும் வந்து நிறைந்து விட்டார்கள். அவர்களுடைய துணியிலிருந்தும் உடம்பிலிருந்தும் சொட்டிய ஜலம் ரயில்வே ஸ்டேஷனை வெள்ளக்காடு ஆக்கியது. முதலில் இவ்வளவு பேரும் ரயில் ஏற வருகிறார்களா என்ன என்று எண்ணிப் பட்டாபிராமன் ஆச்சரியப்பட்டான். ஆனால் ஈரத்துணிகளுடன் வந்தவர்கள் யாரும் அந்த ரயிலுக்குள் ஏறவில்லை, ரயிலும் போய்விட்டது.

அந்தக் கூட்டத்துக்குள் புகுந்து இடிபட்டுக் கொண்டு பட்டாபிராமனும் அவனுடைய குடும்பத்தாரும் வெளியேற வேண்டி நேர்ந்தது. "இது என்ன கூட்டம்? இவ்வளவு பேரும் எந்த ரயிலில் ஏறுவதற்காக வந்திருக்கிறார்கள்?" என்று பட்டாபிராமன் போர்ட்டரைக் கேட்டான். "இவர்கள் ரயில் ஏற வரவில்லை, ஸார்! இன்று சாயங்காலம் அடித்த புயலிலும் மழையிலும் இவர்களுடைய கூரைக் குச்சுகள் பிய்த்துக் கொண்டு போய்விட்டன. மழைக்குத் தங்க இடமில்லாமல் இங்கே வந்து குவிந்திருக்கிறார்கள். சனியன் பிடித்தவர்கள்!" என்றான் போர்ட்டர். "ஏன் அப்பா வீணாகத் திட்டுகிறாய்? ஏழை ஜனங்கள் வேறு எங்கே போவார்கள்?" என்றாள் சீதா. "எங்கேயாவது சத்திரம் சாவடி பார்த்துப் போய்த் தொலைகிறது தானே? தங்க இடமில்லாவிட்டால் ரயில்வே ஸ்டேஷன்தானா அகப்பட்டது? இன்றைக்குச் சாயங்காலத்திலிருந்து இவர்களைத் துரத்தித் துரத்தி எனக்குக் கையும் அலுத்துவிட்டது சத்தம் போட்டுப் போட்டு வாயும் வலிக்கிறது!" என்றான் போர்ட்டர். கஷ்டப்பட்டு வாடகை வண்டிகள் பிடித்து ஏறிக்கொண்டு பட்டாபிராமன் முதலியவர்கள் வீடு போய்ச் சேர்ந்தார்கள். வீடு சேர்ந்ததும் லலிதா சரசரவென்று வீட்டுக் காரியங்களைப் பார்க்கத் தொடங்கினாள். பட்டாபிராமன் ஆபீஸ் அறைக்குள் சென்று வந்திருந்த கடிதங்களைப் பார்த்துவிட்டுப் பத்திரிகை படிக்கத் தொடங்கினான். குழந்தைகள் வேறு உலர்ந்த துணி உடுத்திக் கொண்டு சீக்கிரமாகச் சாப்பிட்டுவிட்டுத் தூங்குவதற்குச் சென்றார்கள்.

சீதா மட்டும் சோகமே உருக் கொண்டவளாக ஈரமான துணியைக் கூட மாற்றிக் கொள்ளாமல் ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். இலை போட்டானதும் லலிதா சாப்பிடக் கூப்பிடுவதற்காகக் கூடத்தில் வந்து பார்த்தாள். "இது என்ன, சீதா! ஈரத் துணியைக் கூட மாற்றிக் கொள்ளாமல் உட்கார்ந்திருக்கிறாயே?" என்று கேட்டாள். அதே சமயத்தில் பட்டாபிராமன் தன்னுடைய ஆபீஸ் அறைக்குள்ளேயிருந்து வெளியே வந்தான். "எனக்கென்னமோ அந்த ஏழை ஜனங்களின் நினைவாகவே இருக்கிறது, அவர்கள் எல்லாரும் - சின்னக் குழந்தைகள் உள்பட - ராத்திரியெல்லாம் ஈரத் துணியோடுதானே கழிக்கப் போகிறார்கள்? அவர்களை நினைத்தால் வேறு உலர்ந்த துணி உடுத்திக் கொள்ளவே மனம் வரவில்லை! இந்த மச்சு வீட்டில் கொஞ்சம்கூட நனையாமல் சௌகரியமாக உட்கார்ந்திருப்பதே வேதனையாயிருக்கிறது!" என்றாள் சீதா. "அது பரிதாபமான விஷயந்தான்; அதற்காக நாம் என்ன செய்வது? பத்துப் பேரா, இருபது பேரா? ஆயிரம் பேருக்கு மேலே இருக்கும்பொழுது விடிந்த பிறகு அவர்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கலாம்!" என்றான் பட்டாபிராமன். "சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்; வாருங்கள்!" என்றாள் லலிதா. "இன்று இராத்திரி அத்தனை ஜனங்களும் பட்டினி கிடக்கப் போகிறார்கள். பச்சைக் குழந்தைகள் பசி தாங்காமல் அழுவார்கள். அதை நினைத்துக் கொண்டால் நமக்கு எப்படிச் சாப்பிடுவதற்கு மனம் வரும்?" என்றாள் சீதா.

"ஆகையால் அதை நினைத்துப் பார்க்கவே கூடாது. உலகத்திலுள்ள கஷ்டங்களையெல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால் நமக்கு மன நிம்மதி இராதுதான்!" என்றான் பட்டாபிராமன். "நம்முடைய கவலையை நாம் பட்டால் போதாதா? ஊர்க் கவலையையெல்லாம் எதற்காக விலைக்கு வாங்க வேண்டும்?" என்றாள் லலிதா. "சில பேரால் அப்படிச் சொந்தக் காரியத்தை கவனிப்பதோடு இருக்க முடிகிறது. என்னால் அப்படி இருக்க முடியவில்லையே" என்றாள் சீதா. "எனக்குப் பட்டும், பாலுவும் சாரலில் நனைந்ததைப் பற்றியே நினைவாயிருக்கிறது. ஜலதோஷம் பிடித்துக் கொள்ளாமலிருக்க வேண்டுமே என்று கவலையாயிருக்கிறது!" என்று லலிதா சொன்னாள். "ரயில்வே ஸ்டேஷனில் இந்தக் குழந்தைகள் மாதிரி எத்தனை குழந்தைகளைப் பார்த்தோம்! அவ்வளவு பேரும் இன்று ராத்திரியெல்லாம் மழையிலும் சாரலிலும் கிடக்கப் போகிறார்கள். அவர்களுக்கெல்லாம் உடம்புக்கு வந்தால் யார் கவனிப்பார்கள்?" என்றாள் சீதா. "நானும் அதைப்பற்றி யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். பொழுது விடியட்டும்; என்னுடைய சிநேகிதர்களுடன் கலந்து யோசித்து ஏதாவது ஏற்பாடு செய்யலாம். இப்போது உலர்ந்த துணி உடுத்திக்கொண்டு சாப்பிடலாம் வாருங்கள்! நம்முடைய உடம்பைப் பாதுகாத்துக் கொண்டால்தானே மற்றவர்களுக்கு நம்மால் உதவி செய்ய முடியும்?" என்றான் பட்டாபிராமன். இதைக் கேட்ட சீதா எழுந்து சாப்பிடச் சென்றாள். சாப்பிட்ட பிறகு மூன்று பேரும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் படுக்கச் சென்றார்கள். லலிதா படுத்துக்கொண்ட உடனே கம்பளியை இழுத்துப் போர்த்திக்கொண்டு நிம்மதியாகத் தூங்கத் தொடங்கினாள். சீதாவுக்கு ரயில்வே ஸ்டேஷனில் பார்த்த ஏழை ஜனங்களை நினைத்து நினைத்து இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. பட்டாபிராமனுக்கோ சீதாவின் தயாள குணத்தை எண்ணி எண்ணித் தூக்கம் வரவில்லை.

மறுநாள் பொழுது விடிந்ததும் பட்டாபிராமன் சீதாவிடம் சொன்ன வார்த்தையை நிறைவேற்ற எண்ணி வெளியே சென்றான். எத்தனை ஏழைக் குடும்பங்களின் குடிசைகள் விழுந்துவிட்டன. எத்தனை பேர் தங்க இடமின்றியும் உண்ண உணவின்றியும் தவிக்கிறார்கள் என்பதை யெல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டான். சில சிநேகிதர்களோடு கலந்து பேசி வெள்ளக் கஷ்ட நிவாரண வேலை தொடங்குவதற்கு வேண்டிய ஏற்பாடு செய்தான். மத்தியானம் வீட்டுக்குத் திரும்பி வந்து சீதாவிடம் எல்லா விவரங்களையும் கூறினான். "கல்கத்தாவில் இந்த மாதிரி கஷ்ட நிவாரண வேலையில் எனக்குக் கொஞ்சம் அனுபவம் உண்டு. நானும் உங்களுடன் வந்து ஸ்திரீகளுக்கும் குழந்தைகளுக்கும் என்னால் இயன்ற உதவி செய்கிறேனே! வீட்டில் வெறுமனே உட்கார்ந்திருக்கப் பிடிக்கவே இல்லை!" என்றாள் சீதா. பட்டாபிராமன் மிக்க சந்தோஷத்துடன் அதை ஒப்புக் கொண்டான். "இந்த ஊரில் அம்மாதிரி சேவை செய்யக்கூடிய இன்னும் சில சகோதரிகளும் இருக்கிறார்கள்! அவர்களுடன் உன்னைச் சேர்த்து விடுகிறேன்" என்று சொன்னான். அன்று மத்தியானமே பட்டாபிராமன் ஒரு பக்கத்திலும் சீதா இன்னொரு பக்கத்திலும் வெள்ளக் கஷ்ட நிவாரண வேலையில் ஈடுபட்டார்கள். முதலில் சிலநாள் வரையில் குடிசைகளை இழந்த ஏழை ஜனங்களுக்குப் பள்ளிக்கூடங்களில் தங்க இடம் கொடுக்கப்பட்டது. அவ்வளவு பேருக்கும் சமையல் செய்து சாப்பாடு போடவேண்டியிருந்தது. நோய்ப் பட்டவர்களுக்கு மருந்து கொடுக்க சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. குழந்தைகளுக்கு நோய் நொடி வராமல் சர்வ ஜாக்கிரதையுடன் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தன.

மழை நின்று தரை காய்ந்த பிறகு அவர்களுக்கெல்லாம் புதிதாகக் குடிசைகள் கட்டிக்கொள்ள வசதி செய்து கொடுக்க வேண்டி வந்தது.நிவாரண வேலை முடிவடைவதற்கு மூன்று மாதம் பிடித்தது. இந்த மூன்று மாத காலமும் பட்டாபிராமனுக்கும் சீதாவுக்கும் ஓயாத ஒழியாத வேலை இருந்தது. அவர்களுடன் அந்த ஊர்க்காரர்கள் இன்னும் பலர் ஒத்துழைத்தார்கள். சீதாவின் ஊக்கமும் உழைப்பும் இனிய சுபாவமும் மதுரமான மொழிகளும் அனைவருக்கும் உற்சாகத்தை ஊட்டி வந்தன. தேவபட்டணமெங்கும் சீதாவின் புகழ் பரவி வந்தது. பட்டாபிராமன் சிறையிலிருந்து வந்தது முதல் உற்சாகம் குன்றியிருந்தான். தேசத்திற்குச் சுதந்திரமோ வந்தபாடில்லை. நாட்டில் தேசீய ஊக்கம் என்பதே கிடையாது. பழையபடி கோர்ட்டுக்குப் போய் வக்கீல் தொழில் செய்யப் பிடிக்கவில்லை. மேலும், கட்சிகாரர்களுக்கு எங்கே போவது? செய்வதற்கு வேறு வேலையும் இல்லை. இதனாலெல்லாம் மனச்சோர்வு அடைந்திருந்தவன் இப்போது புனர்ஜென்மம் எடுத்தவன் போல் ஆனான். வெள்ளக் கஷ்ட நிவாரணத்தில் அவனுக்கு வேலை நிறைய இருந்தது. அந்த வேலை அவனுக்கு மிகவும் பிடித்தமாகவும் இருந்தது. மாலையில் வீடு திரும்பியதும் அன்றன்று நடந்த வேலைகளைப்பற்றிப் பட்டாபியும் சீதாவும் உற்சாகமாகப் பேசிக் கொள்வார்கள். வீட்டில் பொதுவாகக் கலகலப்பு அதிகமாயிற்று. இது லலிதாவுக்கு மிகவும் சந்தோஷமாயிருந்தது.

"இந்த வீடு இம்மாதிரி முன்னெப்போதும் கலகலப்பாயிருந்ததில்லை, சீதா! இவரும் இவ்வளவு குதூகலமா யிருந்ததில்லை. உன்னை இவருக்கு ரொம்பவும் பிடித்துப்போயிருக்கிறது. யாருக்குத்தான் உன்னைப் பிடிக்காமலிருக்கும்; நீ இங்கேயே எப்போதும் இருந்து விடு, சீதா!" என்று லலிதா அடிக்கடி சொல்லுவாள். "கடவுளுடைய சித்தமும் அப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது. எனக்குப் போக்கிடம் எங்கே?" என்று சொல்வாள் சீதா. "உன் குழந்தை வஸந்தியை நீ மதராஸில் விட்டு வைத்திருப்பது மட்டும் எனக்குப் பிடிக்கவில்லை. நாலு பேர் நாலு சொல்வதற்கு ஏன் இடம் வைத்துக் கொள்ள வேண்டும்? குழந்தையையும் இவ்விடத்துக்கு அழைத்துக் கொண்டு வந்து விடு! இரண்டு குழந்தையோடு மூன்றாவது குழந்தையாக இருந்துவிட்டுப் போகிறாள்!" என்று லலிதா கூறுவாள். "இந்தக் கோடைக்குப் பள்ளிக்கூடம் சாத்தியதும் வஸந்தியை அழைத்து வந்துவிடலாம் என்றுதான் எண்ணிக்கொண்டிருக்கிறேன்" என்று சீதா பதில் கூறுவாள். நாள் செல்லச் செல்ல, அந்த வீட்டில் லலிதாவின் செல்வாக்கு குன்றி சீதாவின் செல்வாக்கு அதிகமாகிக் கொண்டு வந்தது. பட்டுவும் பாலுவும் அம்மாவின் வார்த்தையைக் காட்டிலும் அத்தையின் வார்த்தைக்கு அதிக மதிப்புக் கொடுக்கத் தொடங்கினார்கள். அரை நாழிகை நேரம் அம்மா சாப்பிடக் கூப்பிட்டாலும் அவர்கள் வரமாட்டார்கள்; ஆனால் அத்தை ஒரு தடவை கூப்பிட்டால் ஓடி வந்து விடுவார்கள்.

வேலைக்காரர்கள் வீட்டு அம்மாளைக் காட்டிலும் டில்லி அம்மாளுக்கு அதிக மரியாதை காட்டத் தொடங்கினார்கள். லலிதா ஏதாவது ஒரு காரியத்தை இந்த மாதிரி செய்ய வேண்டும் என்று சொன்னால், "டில்லி அம்மா அப்படிச் செய்யச் சொல்லியிருக்கிறார்களே!" என்று வேலைக்காரர்கள் கூசாமல் பதில் சொல்லுவார்கள். சுண்டு, லலிதா சொல்லுகிற காரியத்தை எந்த நாளும் செய்ததில்லை; இப்போதும் அவள் பேச்சை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டான். ஆனால் சீதா அவனிடம் ஏதாவது செய்யும்படி சொல்லிவிட வேண்டியதுதான்! அடுத்த நிமிஷமே விழுந்தடித்து ஓடிச் சென்று அந்தக் காரியத்தைச் செய்துவிட்டு வருவான். 'எள்ளு' என்று சொன்னால், 'எண்ணெய்' கொண்டு வந்து விடுவான். இதெல்லாம் லலிதாவுக்குத் திருப்தியாகவே இருந்து வந்தது. தன்னுடைய அத்தியந்த அன்புக்குரிய தோழிக்கு இப்படி எல்லாரும் மரியாதை செய்வது அவளுக்கு மகிழ்ச்சி தந்தது. "அத்தங்கா! உன்னிடம் என்னதான் சொக்குப் பொடி இருக்கிறதோ? இப்படி எல்லாரும் மயங்கிப் போய்விடுகிறார்களே?" என்று லலிதா சீதாவிடம் அடிக்கடி சொல்லி வந்தாள்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பத்தாம் அத்தியாயம்
எலெக்ஷன் சனியன்!

வெள்ளக் கஷ்டத்தில் அகப்பட்ட ஏழைகளுக்கு முடிவில் அதனால் நன்மை ஏற்பட்டது. வயோதிகர்கள், குழந்தைகள் ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் இரண்டு இரண்டு புதுத் துணிகள் உடுத்திக் கொள்ளக் கிடைத்தன. சுத்தமான இடத்தில் சுத்தமான முறையில் கட்டிய புதிய குடிசைகள் கிடைத்தன. ஊருக்கு நடுவே ஒரு சிறு பிள்ளையார் கோவிலும் கட்டிக் கொடுக்கப்பட்டது. பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் பிரதி சனிக்கிழமை தோறும் பஜனை நடந்தது. இவ்வாறு வெள்ளக் கஷ்டத்துக்கு ஆளானவர்களின் பாடு கொண்டாட்டமாயிற்று. ஆனால் கஷ்ட நிவாரண வேலை செய்தவர்களின் பாடு திண்டாட்டமாயிற்று. செய்வதற்கு வேலை ஒன்றும் இல்லாமற்போகவே பட்டாபிராமன் மறுபடியும் மனச் சோர்வு அடைந்தான். சீதா சீமைக்குச் சென்ற கணவனைப் பற்றியும் மதராஸில் உள்ள குழந்தையைப் பற்றியும் எண்ணி எண்ணி உருகினாள். வீட்டில் கலகலப்புக் குறைந்தது; எல்லாருடைய முகமும் களை இழந்தது. ஒரு நாள் மாலை சில நண்பர்கள் பட்டாபிராமனைத் தேடிக் கொண்டு வந்தார்கள். அந்த ஊரில் நகரசபைத் தேர்தல் வருகிறதென்றும் அதற்குப் பட்டாபிராமன் நிற்கவேண்டும் என்றும் அவர்கள் சொன்னார்கள். தேர்தலில் நின்று ஜெயித்தால் சேர்மன் பதவி கிடைப்பதற்கும் 'சான்ஸ்' இருக்கிறது என்று ஆசை காட்டினார்கள். பட்டாபி ராமனுக்கு இந்த யோசனை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஏற்கெனவே ஒரு தடவை தன் தந்தை இன்னொருவருக்காகத் தேர்தலில தலையிட்ட தினால் நேர்ந்த விளைவுகள் அவனுக்கு எச்சரிக்கையாக இருந்தன.

ஆனாலும் அடியோடு அவன் மறுத்துச் சொல்லவில்லை. சிறை சென்று வந்த தியாகியாகிய அவனை யாரும் எதிர்த்து நிற்க மாட்டார்கள் என்று நண்பர்கள் கூறினார்கள். அது மட்டுமல்லாமல், சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள விபத்தின்போது அவன் ஏழை ஜனங்களுக்குச் செய்த சேவையைத் தேவப்பட்டணமே பார்த்துப் பிரமித்துப் போயிருப்பதாகவும், யாராவது அவனை எதிர்த்து நிற்கத் துணிந்தால் அத்தகையை எதிரிக்குத் தேவபட்டணம் நல்ல பாடம் கற்பிக்கும் என்றும், பட்டாபிராமன் வெற்றி அடைவது சர்வ நிச்சயம் என்றும் அந்த நண்பர்கள் சொன்னார்கள். அவர்களுக்குப் பட்டாபிராமன், "யோசித்துச் சொல்கிறேன்" என்று பதில் அளித்தான். அன்றிரவு சாப்பிடும்போது லலிதா, "யாராரோ வந்து என்னென்னமோ சொல்லிக் கொண்டிருந்தார்களே? என்ன சொல்லிக் கொண்டிருந்தார்கள்?" என்று கேட்டாள். "முனிசிபல் எலெக்ஷனுக்கு நிற்கும்படி சொன்னார்கள்! உன் அபிப்பிராயம் என்ன?" என்று பட்டாபிராமன் லலிதாவைக் கேட்டு விட்டுச் சீதாவின் முகத்தைப் பார்த்தான். லலிதா, "எலெக்ஷனும் வேண்டாம்; ஒன்று வேண்டாம் ஊரில் இருப்பவர்களுக்கு வேறு வேலை இல்லையாக்கும். ஏமாந்தவர் என்று தேடி வந்தார்களாக்கும்?" என்றாள். "சட்டென்று அப்படி ஏன் சொல்கிறாய், லலிதா! வந்தவர்கள் எல்லாரும் உன் அகத்துக்காரரின் சிநேகிதர்கள் தானே? அவர்கள் வேண்டுமென்று கெடுதலான காரியத்தைச் சொல்லுவார்களா?" என்று சீதா கேட்டாள். "உனக்கு இந்த ஊர் சமாச்சாரம் தெரியாது அத்தங்கா! முன்னே ஒரு தடவை இவருடைய அப்பா யாரோ ஒருவருக்காக எலெக்ஷனில் வேலை செய்தார். ஆனால் எங்களுக்கும் எதிர் வீட்டுக்காரர்களுக்கும் பேச்சு வார்த்தையே இல்லாமற் போயிற்று. பல வருஷங் கழித்துச் சூரியா வந்து சண்டையைத் தீர்த்து வைத்தான்! உனக்குக்கூட நான் எழுதியிருந்தேனே?" என்றாள்.

"அப்போது நடந்ததற்கும் இப்போது நடப்பதற்கும் எவ்வளவோ வித்தியாசம்! இவருடைய அப்பா தேசத்துக்காக எதுவும் செய்யவில்லை. இவர் இரண்டரை வருஷம் சிறையில் இருந்து விட்டு வந்திருக்கிறார். இவர் எலெக்ஷனுக்கு நின்றால் யார் எதிர்த்து நிற்க முடியும்? எதிர்த்து நிற்கிறவர்கள் அதோ கதி அடைய வேண்டியதுதான்!" என்று சீதா கூறினாள். "நீங்கள் நினைப்பதுபோல் அவ்வளவு சுலபமான காரியமில்லை. கள்ள மார்க்கெட்டில் ஏராளமான பணம் பண்ணிய ஆசாமி ஒருவர் இந்த வார்டில் நிற்கப் போவதாகக் கேள்விப்படுகிறேன். போட்டி பலமாக இருக்கும்!" என்றான் பட்டாபிராமன். "எவ்வளவு பலமாக இருந்தாலும் சரிதான்! அதற்காகப் பயந்து விடுவதா என்ன? நீங்கள் மட்டும் தேர்தலுக்கு நின்றால், நான் வீடு வீடாகப் போய் வோட்டுக் கேட்கத் தயார்!" என்றாள் சீதா. "நீங்கள் அவ்வளவு ஊக்கமாக வேலை செய்வதா யிருந்தால் நானும் நிற்கத் தயார்!" என்று சொன்னான் பட்டாபிராமன். "அப்படி உற்சாகமாகச் சொல்லுங்கள்! நாளைக்கே வேலை ஆரம்பித்து விடலாம்!" என்றாள் சீதா. "எல்லாவற்றுக்கும் கொஞ்சம் யோசித்துச் செய்யலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. எதிர்த்த வீட்டுக்கார ரிடம் யோசனை கேளுங்களேன் நமக்கு வேண்டியவர்களில் வயதானவர், சரியான யோசனை சொல்லக்கூடியவர், தாமோதரம் பிள்ளைதானே?" என்று லலிதா சொன்னாள். "எதிர்த்த வீட்டுக்காரரைப் போய்க் கேட்பது என்ன? அவர்தான் ஜஸ்டிஸ் கட்சிக்காரர் என்பது தெரியுமே? எலெக்ஷனுக்கு நிற்க வேண்டாம் என்றுதான் அவர் சொல்லுவார்!" என்றாள் சீதா.

"எலெக்ஷனுக்கு நின்றால் ரொம்பப் பணச் செலவு ஆகும். நமக்கு இப்போது வருமானமும் இல்லையே?" என்றாள் லலிதா. "பணம், பணம் என்று அடித்துக் கொள்வது எனக்குப் பிடிப்பதே இல்லை. பணத்தை தலையில் கட்டிக்கொண்டா போகப் போகிறோம்? அப்படி யொன்றும் பணச் செலவும் அதிகமாக ஆகிவிடாது. ஆகிற செலவுக்கு நான் என் கழுத்துச் சங்கிலியை விற்றுக் கொடுக்கிறேன்!" என்று சீதா ஆவேசமாகக் கூறினாள். "நீ ஒன்றும் கழுத்துச் சங்கிலியை விற்றுக் கொடுக்க வேண்டாம். அப்படி நாங்கள் கதியற்றுப் போய்விடவில்லை!" என்றாள் லலிதா. "போதும் போதும்; நிறுத்து. இந்த உதவாக்கரைப் பேச்சை!" என்று பட்டாபிராமன் கடுகடுப்புடன் லலிதாவைப் பார்த்துச் சொன்னான். "யார் என்ன சொன்னாலும், நீங்கள் எலெக்ஷனுக்கு நிற்கிறது எனக்குக் கொஞ்சங்கூடப் பிடித்தமில்லை!" என்றாள் லலிதா. "உனக்கு நான் செய்கிற காரியம் எதுதான் பிடித்தமாயிருந்தது? நான் 1942-ல் சட்ட மறுப்புச் செய்தபோதும் நீ 'வேண்டாம்' என்றுதான் சொன்னாய். உன்னுடைய யோசனையைக் கேட்டால் உருப்பட்டாற் போலத்தான்!" என்றான் பட்டாபிராமன். லலிதாவின் கண்களில் கண்ணீர் ததும்பிற்று. அதைக் காட்டிக் கொள்ள அவளுக்கு வெட்கமாயிருந்தது. வேறு பக்கம் திரும்பிக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். சமையற்காரியோ அல்லது வேறு வேலைக்காரர்களோ இருக்கும்போது தன் கணவருடன் எந்த விஷயத்தைப் பற்றியும் வாக்குவாதம் தொடங்கக் கூடாது என்று அவள் மனம் சங்கல்பம் செய்து கொண்டது. வேலைக்காரர்கள் முன்னால் மட்டும் என்ன? சீதா இருக்கும்போதுகூட எந்த விஷயத்தைப் பற்றியும் இனிமேல் விவாதம் செய்யக்கூடாதுதான்! என்ன அவமானம்! என்ன மானக்கேடு.

மறுநாள் பட்டாபிராமன் எதிர் வீட்டுக்குப் போய்த் தாமோதரம்பிள்ளையிடம் தான் எலெக்ஷனுக்கு நிற்கத் தீர்மானித்திருப்பதாகவும் அவருடைய ஆசிர்வாதம் வேண்டும் என்றும் தெரியப்படுத்தினான். "என்னுடைய ஆசீர்வாதம் வேண்டிய மட்டும் தருகிறேன், தம்பி! ஆனால் இந்த அருமையான யோசனை உனக்கு யார் சொன்னது?" என்று தாமோதரம் பிள்ளை கேட்டார். "எல்லா சிநேகிதர்களும் ஒருமிக்க வந்து சொன்னார்கள்; எனக்கும் அது சரி என்று தோன்றித்தான் நிற்கிறேன்" என்றான் பட்டாபி. "அதிலுள்ள லாப நஷ்டங்களைப்பற்றி யோசித்தாயா? பணச் செலவு ரொம்ப ஆகுமே! அதோடு வீண் விரோதங்கள் ஏற்படும். இப்போது உனக்கு ஊரில் ரொம்ப நல்ல பெயர் இருக்கிறது. அதை ஏன் கெடுத்துக் கொள்கிறாய்!" என்றார் தாமோதரம் பிள்ளை. "நல்ல பெயர் எதற்காகக் கெடுகிறது? தேசத் தொண்டில் இறங்கிய பிறகு அதையெல்லாம் பார்த்தால் சரிப்படுமா? நான் சிறைக்குப் போவதற்கே பயப்படவில்லையே? மற்றதற்கெல்லாம் பயப்பட்டு விடுவேனா?" என்றான் பட்டாபிராமன். "சிறைக்குப் போவது வேறு விஷயம், தம்பி. அதனால் யாருக்கும் கஷ்டமோ நஷ்டமோ இல்லை. ஆனால் எலெக்ஷன் விஷயம் அப்படியல்ல. பலபேருடைய துவேஷத்துக்கு ஆளாகும் படி நேரிடும்."

"எது எப்படியானாலும் நான் தேர்தலுக்கு நிற்பது என்று தீர்மானித்துச் சிநேகிதர்களிடம் சொல்லியும் விட்டேன். இனிப் பின் வாங்குவதற்கில்லை!" என்றான் பட்டாபிராமன். "அப்படியானால் சரி; உனக்கு வெற்றி கிடைக்கக்கூடும். அதற்கு என்னாலான உதவியும் செய்கிறேன். உன் தகப்பனாரையும் சூரியாவையும் உத்தேசித்து உனக்கு நான் உதவி செய்யத்தான் வேண்டும். ஆனால் ஒரு விஷயம், தம்பி! அந்தப் புது டில்லிப் பெண் சீதா எப்போது ஊருக்குப் போகப் போகிறாள்? சீக்கிரத்தில் அவளை அனுப்பி விடுவது நல்லது!" என்றார் தாமோதரம் பிள்ளை. "இதென்ன திடீரென்று இப்படிச் சொல்கிறீர்கள்? சீதாவைப் பற்றி நீங்கள் அடிக்கடி புகழ்ந்து பாராட்டுவது வழக்கம் ஆயிற்றே?" "நல்ல காரியம் செய்து கொண்டிருந்த வரையில் புகழ்ந்து பாராட்டினேன். இந்தக் காரியத்தில் உன்னைத் தூண்டி விட்டிருப்பது நல்ல காரியம் என்று எனக்குத் தோன்றவில்லை!" "பிள்ளைவாள்! சீதாவுக்கும் என்னுடைய தீர்மானத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை! அவள் என்னைத் தூண்டிவிடவும் இல்லை; எனக்குச் சுயபுத்தி இல்லையா, என்ன?" என்றான் பட்டாபிராமன்.

நகரசபைத் தேர்தலுக்கு நிற்பதாகப் பட்டாபிராமன் தெரிவித்த நாளிலிருந்து அந்த வீட்டில் வருவோர் போவோரின் கூட்டமும் கூச்சலும் அதிகமாயின. பகல் என்றும் இரவென்றும் இல்லாமல் தேர்தலுக்கு வேலை செய்யும் சிநேகிதர்களும் தொண்டர்களும் எந்த நேரத்திலும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் பலர் பட்டாபியின் வீட்டிலேயே காப்பி, சிற்றுண்டி, சாப்பாடு முதலியவை வைத்துக்கொண்டார்கள். வெற்றிலை கவுளி கவுளியாகவும், புகையிலை கத்தை கத்தையாகவும் செலவாயின. பணம் நோட்டு நோட்டாகச் செலவாகி வந்தது. சீட்டுக்கட்டு தினம் ஒன்று வாங்கப்பட்டது. வீட்டில் ஒரு வருஷத்துக்குச் சேகரித்து வைத்திருந்த உணவுப் பண்டங்கள் எல்லாம் ஒரு மாதத்தில் தீர்ந்து போயின. லலிதாவுக்கு இது ஒன்றும் பிடிக்கவில்லை. அவளுடைய வருத்தத்தை அதிகப்படுத்துவதற்கு இன்னும் சில நிகழ்ச்சிகளும் சேர்ந்து கொண்டன சீதாவின் ஆடம்பரமும் அதிகார தோரணையும் நாளுக்கு நாள் அதிகமாக வளர்ந்தன. பெண்மைக்குரிய அடக்கம் வரவரக் குறைந்து வந்தது. தேர்தல் வேலைக்கு என்று வருகிற புருஷர்களோடு சரிசமமாக உட்கார்ந்துகொண்டு இரைந்து பேசுவதும் வாதாடுவதும், 'ஹா ஹா ஹா' என்று கைதட்டிச் சிரிப்பதும் வழக்கமாகிக் கொண்டு வந்தன. சீதாவின் நல்ல குணங்களைப் பற்றி ஏற்கெனவே ரொம்பவும் புகழ்ந்து பேசிய அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் இப்போது அவளைப் பற்றிக் குறைவாகப் பேசத் தொடங்கினார்கள். பட்டாபிராமனைப் பற்றியும் ஒரு மாதிரி எகத்தாளமாகப் பேச ஆரம்பித்தார்கள். இந்தப் பேச்சு லலிதாவின் காதுக்கு எட்டி அவளுக்கு மிக்க மன வேதனையை உண்டுபண்ணி வந்தது.

ஒரு நாள் வாசல் பக்கத்துக் காமிரா உள்ளில் பட்டாபிராமனும் அவனுடைய எலெக்ஷன் தோழர்களும் சீதாவும் உட்கார்ந்து அட்ட காசமாகப் பேசிச் சத்தம் போட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த லலிதாவின் மனதில் ஆத்திரம் பொங்கிக்கொண்டிருந்தது. வந்திருந்தவர்கள் எப்போது போய்த் தொலைவார்கள் என்று காத்திருந்தாள். அவர்கள் போனதும் சீதாவும் உள்ளே வந்து மச்சுப்படி ஏறித் தனது அறைக்குச் சென்றாள். பிறகு பட்டாபிராமன் வந்தான்; லலிதாவைப் பார்த்து, "சமையல் ஆகிவிட்டதா? சீக்கிரம் கிளம்ப வேணும்" என்றான். "நன்றாகச் சீக்கிரம் கிளம்பினீர்கள்! சீக்கிரம் கிளம்பி என்ன கோட்டை கட்டப் போகிறீர்களோ, தெரியவில்லை. இந்த எலெக்ஷன் சனியன் உங்களை நன்றாகப் பிடித்துக்கொண்டு ஆட்டுகிறது!" என்றாள் லலிதா. "என்ன உளறுகிறாய்? வாயை மூடு! ஷட் அப்?" என்று பட்டாபிராமன் உரத்துக் கத்தினான். "நான் ஒன்றும் உளறவில்லை, உள்ளதைத்தான் சொல்லுகிறேன். எலெக்ஷன் சனியன் மட்டுமா? சீதா சனியனும் உங்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறது!" என்று லலிதா ஆத்திரமாகச் சொன்னாள். பட்டாபிராமன் ரௌத்ராகாரம் அடைந்தான், அவனுடைய முகம் விகாரப்பட்டது. "என்ன சொன்னாய்? ஜாக்கிரதை; வாயைத் திறந்தாயோ, கொன்று விடுவேன்!" என்று பதறிக்கொண்டே சொன்னான். "ஆமாம்; அப்படியே கொன்று விடுங்கள்! உங்கள் மகாத்மா காந்தி இதைத்தானே சொல்லிக் கொடுத்திருக்கிறார்?" பட்டாபியின் பதட்டம் கொஞ்சம் அடங்கியது. தக்க பதில் சொல்வதற்குச் சிறிது யோசித்தான். அதற்குள் லலிதா, "இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம். நான் சொல்லுகிறதைக் கொஞ்சம் கேளுங்கள்.

இந்த எலெக்ஷன் சங்கடத்தை விட்டுத் தொலையுங்கள். அதை விட்டுத் தொலைக்க முடியாவிட்டால் சீதாவையாவது இந்த வேலைக்குக் கூப்பிட வேண்டாம். ஊர் சிரிக்கிறது; என் மானம் போகிறது!" என்றாள். "மானம் போகட்டும்; தாராளமாகப் போகட்டும். நானும் எலெக்ஷனை விடுவதாகவும் உத்தேசமில்லை. சீதாவுக்குத் தடை உத்தரவு போடப் போவதுமில்லை. இதிலெல்லாம் நீ தலையிட வேண்டாம்; உன் வேலையைப் பார்!" என்றான் பட்டாபிராமன். "நான் தலையிடாமல் வேறு யார் தலையிடுவது, நீங்கள் இவ்விதம் சொன்னால் சீதாவை நான் ஊருக்குப் போகச் சொல்லி விடுகிறேன்!" என்றாள் லலிதா. "சீதாவை ஊருக்குப் போகச் சொல்ல நீ யார்? உனக்கு என்ன அதிகாரம்?" என்று பட்டாபிராமன் கர்ஜித்தான். "பின்னே யாருக்கு அதிகாரம்? என்னுடைய அத்தங்கா சீதாவை நான் அழைத்துக்கொண்டு வந்தேன்; நான் போகச் சொல்கிறேன்." "சீதா இந்த வீட்டிலிருந்து போகமாட்டாள். யாராவது போகிறதாயிருந்தால் நீதான் போகவேண்டும்!" "என்னுடைய வீட்டிலிருந்து நான் ஏன் போகிறேன்? எங்கிருந்தோ வந்த நாயை வீட்டிலே வைத்துவிட்டு....?" பட்டாபிராமனுக்கு மறுபடியும் ரௌத்ராகாரம் வந்து விட்டது. "என்னடி சொன்னாய்? யாரடி நாய்?" என்று கேட்டுக் கொண்டே அவன் லலிதா அருகில் வந்தான். "இதோ இந்த நிமிஷமே உன்னை இந்த வீட்டை விட்டுத் துரத்திவிட்டு மறு காரியம் பார்க்கிறேன்! திமிர் பிடித்த கழுதை!" என்று சொல்லிக் கொண்டே லலிதாவின் கழுத்தில் கையைப் போட்டு வெளி வாசற்படியை நோக்கித் தள்ளத் தொடங்கினான். லலிதா, "ஐயோ! ஐயோ!" என்று அலறினாள். அதைக் கேட்டுவிட்டு வந்தனைப்போல் சூரியா அச்சமயம் உள்ளே நுழைந்தான். சூரியா வந்ததைப் பார்த்துவிட்டுப் பட்டாபிராமனும் லலிதாவும் பிரமித்துப் போய் நின்றார்கள். மேல் மச்சுப்படியில் நின்று கொண்டு சீதா இந்த நாடகத்தையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய உள்ளத்தின் கொந்தளிப்பை முகத்தோற்றம் காட்டியது.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பதினொன்றாம் அத்தியாயம்
பட்டாபியின் பதவி மோகம்

சூரியாவைப் பார்த்து ஒரு நிமிஷம் திகைத்துப் போய்ப் பேசாமல் நின்ற லலிதா மறு நிமிஷம் ஒருவாறு சமாளித்துக் கொண்டு முகத்தில் மலர்ச்சியையும் வருவித்துக் கொண்டாள். "சூரியாவா! இது என்ன? சொல்லாமல் திடீரென்று வந்து விட்டாய்," என்று கேட்டுவிட்டுப் பட்டாபிராமனைத் திரும்பிப் பார்த்து, "பார்த்தீர்களா? இந்த மாதிரியெல்லாம் விளையாட வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன் அல்லவா? சூரியாவாக இருந்ததினால் போயிற்று! வேறு யாராவது பார்த்திருந்தால் நிஜம் என்றல்லவா நினைத்துக் கொள்வார்கள்?" என்றாள். பட்டா பிராமன் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு, "வா, அப்பா! நல்ல சமயம் பார்த்துத்தான் வந்தாய்! தாம்பத்திய கலக நாடகம் நடந்து கொண்டிருக்கும் போது!" என்றான். சூரியாவுக்குத் தான் கண்ட காட்சியை உண்மை என்று நம்புவதா, நாடகம் என்று நினைப்பதா என ஒரு கண நேரம் திகைப்பு உண்டாயிற்று. எப்படியாவது இருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டு, "நாடகத்தைப் பார்க்க நான் தனியாக வரவில்லை! அம்மாவையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன்!" என்றான். இதைக் கேட்டவுடன் பட்டாபிராமன், லலிதா இருவருடைய முகங்களும் சுருங்கின. பட்டாபிராமன் மாடிக்குப் போகலாமா என்று அண்ணாந்து பார்த்தான். அங்கே சீதா எதையோ பறிகொடுத்தது போன்ற முகபாவத் துடன் நிற்பதைக் கண்டதும் மேலும் கோபமடைந்து தன்னுடைய ஆபீஸ் அறைக்குள் சென்று படாரென்று கதவைச் சாத்தினான். லலிதா சூரியாவை நெருங்கி வந்து, "அண்ணா! இவருக்கு என் மேல் நிஜமாகக் கோபம். நீ கொஞ்சம் அவருடன் நல்ல வார்த்தையாகப் பேசிச் சமாதானப்படுத்து!" என்றாள்.

அந்தச் சமயம் சரஸ்வதி அம்மாள் மூட்டை முடிச்சுகளுடனும் ஊறுகாய் ஜாடியுடனும் உள்ளே வரவே, "வா! அம்மா!" என்று சொல்லிக்கொண்டு அவளை வரவேற்கப் போனாள். சூரியா அண்ணாந்து பார்த்தான், அங்கே ஒரு நிமிஷத்துக்கு முன்னால் நின்று கொண்டிருந்த சீதா அறைக்குள் போய் விட்டதை அறிந்து கொண்டான். பட்டாபிராமனைப் பார்ப்பதற்கு அவனுடைய ஆபீஸ் அறைக்குச் சென்றான். "சூரியா! உன்னிடம் வேஷம் போட எனக்கு விருப்பம் இல்லை. உன் தங்கை அம்மாதிரி பொய் நடிப்பு நடிக்கவேண்டும் என்கிறாள். அது என்னால் முடியாத காரியம், உண்மையைச் சொல்லிவிடுகிறேன். நீ உள்ளே நுழைந்து வந்தபோது நான் லலிதாவைக் கழுத்தைப் பிடித்து நிஜமாகவே தள்ளிக் கொண்டிருந்தேன். அதற்குக் காரணம் உன் அத்தங்கா சீதாதான். அந்தப் புண்ணியவதியை நீ தயவு பண்ணி இங்கிருந்து அழைத்துக் கொண்டு போய்விடு. அவள் இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து உன் தங்கையின் குணமே மாறிப் போய்விட்டது. அவளுடைய நச்சையும் ஆத்திரத்தையும் ஆங்காரத்தையும் என்னால் பொறுக்கவே முடியவில்லை. தயவு பண்ணி உன் அத்தங்காளை அழைத்துக் கொண்டு போய்த் தொலை!" என்று படபடவெனப் பொழிந்தான் பட்டாபிராமன். "ஆகட்டும், ஸார்! உங்கள் இஷ்டப்படியே செய்கிறேன். நீங்களும் லலிதாவும் இந்த நிலைமைக்கு வருவீர்கள் என்று நான் சொப்பனத்தில்கூட நினைக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் நான் என்பதை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது" என்றான் சூரியா.

"நீ என்ன செய்வாய், சூரியா! உன் பேரில் என்ன தப்பு? ஸ்திரீகளுடைய சுபாவம் இவ்வளவு மோசமாயிருக்கும் என்று உனக்கு எப்படித் தெரியும்? இத்தனை நாளாகக் கிரகஸ்தாசிரமம் நடத்தும் எனக்கே தெரியவில்லையே? இந்த முட்டாள் தனத்தைக் கேள்! உன் அத்தங்கா சீதாவை இங்கே அழைத்துவர வேண்டாம் என்று நான் எவ்வளவோ முட்டிக் கொண்டேன். இவள் கேட்கவில்லை; பிடிவாதமாக அழைத்துக் கொண்டு வந்தாள். 'அத்தங்கா' 'அத்தங்கா' என்று பரிந்து பிராணனை விட்டு விடுகிறவளைப் போலப் பேசினாள். சீதா நாகரிகமாக நாலுபேருடன் பேசுவதையும் பழகுவதையும் கண்டால் இவளுக்கு அசூயையாயிருக்கிறது. அப்படியெல்லாம் இவளை இருக்க வேண்டாமென்று யார் தடுத்தார்கள்? நானோ இந்த 'ரெச்சட்' எலெக்ஷனில் அகப்பட்டுக்கொண்டு தவிக்கிறேன். வேலை விழி பிதுங்குகிறது, இன்னும் இரண்டு வாரந்தான் பாக்கி யிருக்கிறது வோட்டுப் போடும் தேதிக்கு. பலமாக வேலை செய்யாவிட்டால் இத்தனை நாள் பட்ட கஷ்டமும் செலவழிந்த பணமும் வீணாய்ப் போய்விடும். இந்த நெருக்கடியில் நான் எலெக்ஷன் வேலையைக் கவனிப்பதா, இந்தப் பெண் பிள்ளைகளின் சண்டையைத் தீர்த்துக் கொண் டிருப்பதா? நல்ல வேளையாக மகராஜன், நீ வந்துவிட்டாய்! சீதாவை அழைத்துக்கொண்டு போய்விடு! நான் நிம்மதியாக என் வேலையைப் பார்க்கிறேன்!" என்று பட்டாபிராமன் பேசி நிறுத்தியபோது பெரும் மழை பெய்து ஓய்ந்தது போலிருந்தது. "பட்டாபி ஸார்! இந்த எலெக்ஷன் தொல்லையில் நீங்கள் அகப்பட்டுக் கொள்ளாமலிருந் திருக்கலாம்," என்று சூரியா பேசத் தொடங்குவதற்குள்ளே பட்டாபிராமன் மறுபடியும் குறுக்கிட்டான்.

"நீ இப்படித்தான் சொல்லுவாயென்று எனக்குத் தெரியும். நீ சர்வ சங்க பரித்யாகி; நித்தியப் பிரம்மச்சாரி. உன்னைப் போலவே எல்லாரும் உலகத்தை வெறுத்துவிட்டு இருக்க முடியுமா? எனக்கு இந்த உலகத்திலே இன்னும் சில காரியங்கள் இருக்கின்றன. எனக்குச் சில வாழ்க்கை இலட்சியங்கள் இருக்கின்றன. இந்தப் பட்டணத்தில் கொஞ்சம் பொது ஊழியம் செய்ய வேண்டும், நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று ஆசையிருக்கிறது. எனக்குப் பணம் காசில் பற்றுக் கிடையாது. ஆனால் புகழ் என்பது ஒன்று இருந்து தொலைக்கிறதல்லவா? புகழை விரும்பாமல் யார் இருக்க முடியும்? தன்னோடொத் தவர்கள் தன்னுடைய ஊர் மனிதர்கள், தன்னுடைய தேசத்தவர்கள் இவர்களிடம் புகழ் அடைய ஒருவன் விரும்பவில்லை யென்று சொன்னால் அதை நான் நம்ப முடியாது. அப்படிச் சொல்கிறவனை நான் சுத்த 'ஹம்பக்' என்றுதான் சொல்வேன். இந்தத் தேவபட்டணத்தில் என் தகப்பனார் எவ்வளவோ செல்வாக்குடன் இருந்தார், அவர் காலம் ஆகிவிட்டது. 'யானைக்குப் பிறந்தது பூனையாயிற்று' என்று பெயர் வாங்க எனக்கு இஷ்டமில்லை. நாலு பேருக்கு மத்தியில் நானும் ஒரு மனுஷன் என்று பெயர் வாங்காவிட்டால் இந்த வாழ்க்கையினால்தான் என்ன பிரயோஜனம்? மேலும், இந்த ஊர் 'பார்ட்டி பாலிடிக்ஸ்' விஷயமும் உனக்குத் தெரியாது. பழைய முனிசிபல் சேர்மன் கள்ள மார்க்கெட்டில் ஏராளமாகப் பணம் சேர்த்து இல்லாத அட்டூழியங்கள் எல்லாம் செய்து கொண்டிருக்கிறான். தேவபட்டணமே தன்னுடைய சொந்தக் கோட்டை என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். அவனை இந்தத் தடவை தோற்கடித்தாலொழிய, இந்த ஊரில், 'காங்கிரஸ்' என்ற பெயரையே யாரும் எடுக்க முடியாது. அந்தக் கிராதகனை எதிர்த்து நின்று தோற்கடிப்பதற்கு என்னைத் தவிர வேறு யாரும் கிடையாது. இங்கே எல்லாருடைய ஏகோபித்த அபிப்ராயமும் இதுதான். இதில் தலையிடுவதற்கு உனக்கு உரிமை இல்லை; தகுதியும் இல்லை! எலெக்ஷன் இன்னும் இரண்டு வாரம் இருக்கும் சமயத்தில் நான் பின்வாங்கினால் அதைக் காட்டிலும் அவமானம் வேறு வேண்டியதில்லை. அப்புறம் நான் வெளியில் தலைகாட்டவே முடியாது."

பட்டாபிராமன் மூச்சு விடுவதற்காகப் பேச்சை நிறுத்திய சமயம் பார்த்துச் சூரியா சொன்னான்: "பட்டாபி ஸார்! நான் ஒரு வார்த்தை சொல்லுவதற்குள் நீங்கள் நூறு வார்த்தை சொல்லி விட்டீர்கள். இந்தச் சமயத்தில் உங்களைப் பின்வாங்கும்படி நான் சொல்லவில்லை. அதற்கு உரிமையோ, தகுதியோ, ஒன்றும் எனக்கு கிடையாது என்பதையும் அறிந்திருக்கிறேன். 'எலெக்ஷனில் இறங்காமல் இருந்திருக்கலாம்' என்று மட்டுந்தான் சொன்னேன். அதுவும் என்னுடைய அபிப்ராயமே தவிர உங்களைக் கட்டாயப்படுத்த உத்தேசமே எனக்குக் கிடையாது. இப்போது நீங்கள் தேர்தலுக்கு நின்று இவ்வளவு தூரம் வேலை நடத்திய பிறகு உங்களைப் பின் வாங்கும்படி சொல்ல எனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? நான் சொல்ல வந்தது வேறு விஷயம். எலெக்ஷன் வேலையில் சீதா ரொம்ப ஒத்தாசையாயிருக்கிறாள் என்று நான் கேள்விப்பட்டேன். ஆகையால் அவளை இந்தச் சமயம் ஊருக்கு அனுப்புவது உசிதமாயிராது. இத்தனை நாள் இருந்தவள் இன்னும் இரண்டு வாரம் இருக்கட்டும். அதற்குப் பிறகு வேண்டுமானால் பார்க்கலாம்....." "உனக்கென்னடா, அப்பா, சூரியா! வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று சொல்லி விடுகிறாய். கஷ்டப்படுகிறவன் நான் அல்லவா? இந்த இரண்டு பொம்மனாட்டிகளுக்கு மத்தியில் அகப்பட்டுக் கொண்டு என்னால் இனிமேல் சங்கடப்பட முடியாது. வேலை அநியாயமாய்க் கெட்டுப் போகிறது. அப்படிச் சீதா இங்கு இருக்கிறதாயிருந்தால் லலிதாவையாவது நீ அழைத்துக்கொண்டு போகவேண்டும். போதும் போதாதற்கு உன் அம்மா வேறு வந்திருக்கிறாள். சிவ சிவா; வீட்டில் இனிமேல் இருபத்து நாலு மணி நேரமும் ரகளைதான். சூரியா! உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும். நீ சீதாவையும் உன் தாயாரையும் இன்றைக்காவது நாளைக்காவது அழைத்துக் கொண்டு போய்விடு! தெரிகிறதா? நானும் லலிதாவும் எப்படியோ எங்கள் பாட்டைப் பார்த்துக் கொள்கிறோம். இந்த உலகத்தில் ஒருவரைப் பார்த்து ஒருவர் பிறந்திருக்கவில்லையல்லவா? சீதாவை நம்பிக் கொண்டுதானா இந்த எலெக்ஷனில் நின்றேன்?...."

"பட்டாபி ஸார்! கொஞ்சம் என் வார்த்தையைக் கேளுங்கள். என்னுடைய அபிப்ராயத்தில் உங்களுக்கு எப்போதும் கௌரவம் இருந்து வந்தது. நான் அப்படி ரொம்பத் தவறுதலாக எந்தக் காரியத்தையும் சொல்லமாட்டேன் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்து வந்தது. அதைக் கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கொண்டு ஒரே ஒரு நாள் எனக்குச் சாவகாசம் கொடுங்கள். அதற்குள் சீதாவிடமும் லலிதாவிடமும் பேசிப் பார்த்துவிட்டு முடிவாக என் அபிப்பிராயத்தைச் சொல்கிறேன். ஒன்றிலும் சரிக்கட்டி வராது என்று தோன்றினால் உங்கள் இஷ்டப்படியே சீதாவை அழைத்துக்கொண்டு போய் விடுகிறேன்!" என்றான் சூரியா. "சரி! உன்னுடைய சாமர்த்தியத்தைப் பார்த்து விடலாம்!" என்றான் பட்டாபிராமன். சீதாவைப் பார்த்துச் சூரியா , "அத்தங்கா! நான் உள்ளே வந்தபோது நடந்த நாடகத்தை நீயும் மாடியிலிருந்து பார்த்தாய் போலிருக்கிறதே!" என்றான். "ஆமாம், சூரியா! அது என் தலைவிதி! காசிக்குப் போனாலும் தன் பாவம் தன்னோட என்பார்கள் அல்லவா? அதுபோல நான் எந்த இடத்துக்குப் போனாலும் என்னோடு துரதிர்ஷ்டத்தையும் கொண்டு போகிறதாகக் காண்கிறது. நான் நல்லது செய்யப் பார்த்தாலும் அது எப்படியோ கெடுதலாய் முடிந்து விடுகிறது. இன்றைக்கே நான் இந்த வீட்டிலிருந்து கிளம்பி விடுவதாகத் தீர்மானித்து விட்டேன்!" "இன்றைக்கே கிளம்பி எங்கே போவதாக உத்தேசம்?" என்று சூரியா கேட்டான். "எங்கே போகிறது? போகிறதற்கு இடமில்லையா என்ன? கிணறு, குளம், ஏரி, சமுத்திரம் எல்லாந்தான் இருக்கிறது! இல்லாவிட்டால் ரயில் தண்டவாளம் இருக்கிறது! மதராஸுக்குப் போய் ஒரு தடவை வஸந்தியைப் பார்த்துவிட வேணும். அப்புறம், ஏதாவது ஒரு வழி தேடிக் கொள்கிறேன். உனக்கு அதைப்பற்றிய கவலை வேண்டாம்!" என்று சொல்லிவிட்டுச் சீதா கலகலவென்று கண்ணீர் வடித்தாள். "அத்தங்கா! எல்லாக் கஷ்டங்களுக்கும் ஒரு முடிவு உண்டு. வாழ்க்கையில் நீ ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறாய் என்பது உண்மைதான். ஆனால் உன்னைவிடக் கஷ்டம் அனுபவித்தவர்களும் உலகத்தில் உண்டு. அவர்களுக்கெல்லாம் விடிவுகாலம் வந்திருக்கிறது."

"என்னுடைய கஷ்ட காலம் என்னோடு மட்டும் போனால் தேவலையே, சூரியா! நான் எங்கே போகிறேனோ, அங்கெல்லாம் தொடர்ந்து வந்து விடுகிறதே! ராஜம்பேட்டைக்கு வந்தேன்; அருமை மாமாவை யமலோகத்துக்கு அனுப்பினேன்! இவ்விடம் வந்தேன்; என் அருமைத் தோழிக்கும் அவளுடைய புருஷனுக்கும் சண்டையை மூட்டினேன், டில்லியிலே அவருக்கு என்னாலே உத்தியோகமே போய்விட்டது. சூரியா! வஸந்தியை மதராஸிலிருந்து நான் ஏன் அழைத்துக்கொண்டு வரவில்லை தெரியுமா? பள்ளிக்கூடம் வீணாய்ப் போய் விடுமே என்று குழந்தை சொன்னது வாஸ்தவந்தான். அது அவளாய்ச் சொல்லவில்லை, பாட்டி சொல்லிக் கொடுத்ததையே சொன்னாள். 'பள்ளிக்கூடம் போனால் போகிறது; என்னுடன் வா!' என்று நான் சொல்லி யிருந்தால் கட்டாயம் வந்திருப்பாள். ஆனால் நான் வற்புறுத்திக் கூப்பிடவில்லை. எனக் கென்னமோ மனதில் சதா காலமும் ஒரு பயம் தோன்றிக் கொண்டிருந்தது - என்னுடன் இருப்பவர்களுக்கெல்லாம் ஏதாவது ஆபத்து வரும் என்று, அதனால்தான் குழந்தையை அழைத்து வரவில்லை. பாட்டியிடமே பத்திரமாயிருக்கட்டும் என்று விட்டு வந்தேன்." "அத்தங்கா! ஒருவரால் ஒருவருக்குக் கஷ்டம் வரும் என்பதெல்லாம் முட்டாள்தனம். உலகத்தில் உனக்கு மட்டும்தானா கஷ்டம் வந்திருக்கிறது. தேசம் தேசமாகக் கஷ்டம் வந்திருக்கிறது. லட்சக்கணக்கான ஜனங்களுக்கு, கோடிக்கணக்கான ஜனங்களுக்கு ஒரேயடியாகக் கஷ்டம் வந்திருக்கிறது. வங்காளத்தில் அறுபது லட்சம் ஜனங்கள் பஞ்சத்தினால் செத்துப் போனார்கள்! ஹிரோஷீமா என்னும் பட்டணத்தில் வசித்த இரண்டரை லட்சம் ஜனங்களும் ஒரே நிமிஷத்தில் அமெரிக்கர் போட்ட அணுகுண்டினால் செத்துப் போனார்கள்!

நேற்று உலகத்தையே ஜயித்து விட்டதாகக் கனவு கண்ட ஜெர்மானியர் எட்டுக் கோடிப் பேர் இன்று நாலு தேசங்களின் காலடியில் கிடந்து மிதிபடுகிறார்கள். கஷ்டம் ஏன் வருகிறது? எப்படி வருகிறது என்பதெல்லாம் நம்முடைய பகுத்தறிவினால் கண்டறிய முடியாத தெய்வ இரகசியம். ஒருவருக்கு இன்னொருவர் கஷ்டத்தை உண்டுபண்ண முடியாது. ஒருவருடைய துரதிர்ஷ்டம் இன்னொருவரைத் தொடர முடியாது." "சரி சூரியா! உன்னோடு வாதம் செய்ய என்னால் முடியுமா? பின்னே என்னதான் செய்ய வேண்டும் என்கிறாய் சொல்!" "கடவுள் எந்தெந்த நிலைமையில் நம்மை வைத்திருக்கிறாரோ அந்தந்த நிலைமையில் நம்முடைய கடமையைச் செய்ய வேண்டியது" என்றான் சூரியா. "இப்போது என்னுடைய கடமை என்ன!" என்று சீதா கேட்டாள். "அத்தங்கா! இப்போது உன்னுடைய கடமை இந்த எலெக்ஷனில் பட்டாபி ஜயிக்கும்படி செய்வதுதான். மாப்பிள்ளை பட்டாபியின் மனதை என்னைப் போல் அறிந்தவர்கள் இல்லை, பட்டம் பதவியின் பேரில் அவருக்கு மோகமே கிடையாது. ஆறு மாதத்துக்கு முன்னால் அவரிடம் 'தேர்தலுக்கு நில்லுங்கள்' என்று யாராவது சொல்லியிருந்தால் குலுங்கச் சிரித்திருப்பார். அப்படிப்பட்டவருடைய மனதில் தேர்தல் வெறியை நீ மூட்டிவிட்டாய்! இதுவரை தேர்தல் வேலையில் ஒத்தாசையும் செய்து வந்திருக்கிறாய். இந்தச் சமயத்தில் நீ கைவிட்டு போனால் அடியோடு எல்லாம் மாறிப் போனாலும் போகும். ஆகையால் தேர்தல் தேதி வரையில் இருந்து, ஆரம்பித்த காரியத்தை முடித்துக் கொடுக்க வேண்டியது உன்னுடைய கடமை" என்றான் சூரியா.

"நீ சொல்வதெல்லாம் சரி என்று நான் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படியே ஒப்புக்கொண்டாலும் இந்த வீட்டில் இனிமேல் நான் எப்படி இருக்க முடியும்? நீ வருவதற்குச் சற்று முன்னால் இங்கே என்ன பேச்சு நடந்தது என்று உனக்குத் தெரியாது. என்னை இந்த வீட்டை விட்டு விரட்டி விட்டு மறுகாரியம் பார்க்கும்படி லலிதா பட்டாபிராமனிடம் சொன்னாள். 'சீதா இந்த வீட்டை விட்டுப் போகமாட்டாள், போகிறதாயிருந்தால் நீதான் போகவேண்டும்!' என்று பட்டாபிராமன் சொன்னார். இந்த வார்த்தைகளை என் காதாலேயே கேட்டேன். நிலைமை இவ்வளவு விகாரமாகப் போன பிறகு நான் இந்த வீட்டில் இருக்கலாமா?" "அத்தங்கா! அவர்கள் இரண்டு பேரும் புத்தி நிதானமாயிருக்கும்போது அவ்விதம் சொல்லியிருக்க மாட்டார்கள். லலிதா ஏதோ கோபத்தில் உளறியிருக்கிறாள். பட்டாபியும் ஆத்திரத்தினால் யோசியாமல் ஏதோ சொல்லி யிருக்கிறார். நீ தேர்தல் முடியும் வரையில் இங்கே இருக்க வேண்டும் என்று லலிதாவைக் கொண்டே நான் கேட்டுக் கொள்ளச் செய்கிறேன்." "அவள் கேட்டுக் கொண்டு என்ன பிரயோசனம்? மாமி வேறு வந்திருக்கிறாள். மாமிக்கு ஏற்கெனவே என் பேரில் அசாத்தியமான கோபம். இதெல்லாம் மாமிக்குத் தெரிந்தால் என்னை இந்த வீட்டில் ஒரு நிமிஷமாவது இருக்க விடுவாளா?" "மாப்பிள்ளைக்குச் சேர்மன் வேலை ஆகவேண்டும் என்ற ஆசை அம்மாவின் மனதில் குடிகொண்டு விட்டது. அதற்காக உன் காலில் விழுந்து வேண்டிக் கொள்ள வண்டுமானாலும் வேண்டிக் கொள்வாள். உண்மையில் உன்னை இங்கே இருக்கும்படி செய்வதற்காகவே அம்மா இப்போது வந்திருக்கிறாள், தெரியுமா?"

இதைக் கேட்டதும் சீதாவுக்கு ஒரே ஆச்சரியமாகப் போய் விட்டது. இத்தனை நேரம் வாடிச் சுருங்கியிருந்த அவளுடைய முகத்தில் சிறிது மலர்ச்சி உண்டாயிற்று "சூரியா! நீ சொல்வது உண்மைதானா? அல்லது பரிகாசம் செய்கிறாயா!" என்று கேட்டாள். "பரிகாசம் இல்லை; உண்மைதான்! இன்னும் சிறிது நேரத்துக்கெல்லாம் அம்மாவே உன்னிடம் வந்து சொல்லுவாள். ராஜம்பேட்டை சீமாச்சுவய்யர் பட்டாபிக்கு எதிராக இந்த தேர்தலில் வேலை செய்கிறாராமே?" "ஆமாம்! அதைப்பற்றி என்ன?" "சீமாச்சுவய்யர் இங்கிருந்து கிராமத்துக்கு வந்து அம்மாவிடம் உன்னைப் பற்றிப் புகார் சொன்னார். நீ தான் பட்டாபியின் புத்தியைக் கெடுத்துவிட்டாய் என்றும், எலெக்ஷனுக்கு நிற்பதில் பணம் எல்லாம் போய்விடும் என்றும், லலிதாவுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லையென்றும் சொன்னார். ஆனால் பலன் சீமாச்சுவய்யர் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக ஆயிற்று. மாப்பிள்ளை பெரிய உத்தியோகத்துக்குப் போகவில்லையென்று அம்மாவுக்கு ரொம்பக் குறை. இப்போது சேர்மன் வேலையாவது ஆகட்டும் என்று நூறு தெய்வங்களை வேண்டிக் கொண்டிருக்கிறாள். பெண்ணுக்குப் புத்தி சொல்வதற்காகவும் உன்னை உற்சாகப்படுத்து வதற்காகவும் வந்திருக்கிறாள். மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு நின்றது தப்பு என்று நான் சொன்ன தற்காக என்பேரில் அம்மாவுக்கு அசாத்தியான கோபம்."

இந்த அதிசயத்தைக் குறித்துச் சீதா சிறிது நேரம் யோசனை செய்து கொண்டிருந்தாள். பிறகு சூரியாவைப் பார்த்து, "நான் எப்படியும் மதராசுக்கு ஒரு நடை போக வேண்டும், சூரியா! குழந்தை வஸந்தியிடமிருந்து நேற்று கடிதம் வந்திருக் கிறது" என்றாள். "வஸந்தி கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறாள்?" என்று சூரியா கேட்டான். "இன்னும் நாலு நாளில் பள்ளிக்கூடம் சாத்தி விடுவார்களாம். என்னைப் பார்க்க ஆசையாயிருக்கிறதாம். உடனே மதராசுக்கு வந்து அழைத்துப் போகும்படி எழுதியிருக்கிறாள்." "அத்தங்கா! நீ எலெக்ஷன் வேலையைப் பார்! நான் போய் வஸந்தியை அழைத்துக் கொண்டு வருகிறேன்!" என்றான் சூரியா. சரஸ்வதி அம்மாள் தன் குமாரி லலிதாவைப் பார்த்து, "உன்னைப் போல் அசட்டுப் பெண்ணைப் பார்த்ததே இல்லை. உன் அகத்துக்காரர் எலெக்ஷனில் ஜயிப்பதற்கு அந்தப் பெண் சீதா எவ்வளவோ பாடுபட்டு வேலை செய்கிறாளாம்; நீ ஏதாவது குற்றம் குறை சொல்லிக் கொண்டிருக்கிறாயாமே?" என்றாள். "அம்மா! உனக்குக்கூட எலெக்ஷன் பைத்தியம் பிடித்து விட்டு! எலெக்ஷன் என்றாள் ஏதோ சாதாரண விஷயம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதனால் எவ்வளவோ விரோதங்கள் வந்து சேரும். என் மாமனார் எலெக்ஷனில் தலையிட்டதனால் எவ்வளவு சங்கடப்பட்டார், தெரியுமா?" "எல்லாம் தெரியுமடி, தெரியும். எனக்குத் தெரியாததற்கு நீ சொல்ல வந்துவிட்டாய்? எனக்கு முன்னாலேயே நீ பிறந்து விட்டாயோ? அந்தப் பிராமணர் வேறே யாருக்காகவோ எலெக்ஷன் வேலை செய்து சங்கடத்தை விலைக்கு வாங்கிக் கொண்டார். இது அப்படியில்லையே! மாப்பிள்ளையே தானே நிற்கிறார்?"

"மாப்பிள்ளையே நின்றால் விரோதம் வராமல் போய்விடுமா?" "எந்தக் காரியத்திலேதான் விரோதம் ஏற்படாமல் இருக்கிறது? வெற்றிலைப் பாக்குக் கடை வைத்து நாலு காசு லாபம் சம்பாதித்தால் அதற்குக்கூட நாலு பேர் விரோதம். யாராவது ஒரு பொம்மனாட்டி நல்ல புடவை கட்டிக் கொண்டால் அதைப் பார்த்து நாலு பேருக்கு அசூயை. மாட்டு வண்டியிலே போனால் அதில் நாலு பேருக்கு விரோதம். மோட்டாரிலே போனால் அதில் நாலு பேருக்கு விரோதம். அப்படியெல்லாம் விரோதம் வரும் என்று பயந்து கொண்டிருந்தால் இந்த உலகத்தில் வாழ முடியுமோ? ஆண்டிப் பரதேசியாய்ப் போக வேண்டியதுதான். மாப்பிள்ளை இந்த எலெக்ஷனிலே ஜயித்தால் நாளைக்குச் சேர்மன் வேலைக்கு வரலாம் என்று சொல்கிறார்களே? அது நிஜந்தானே?" "வந்தால் என்ன பிரயோசனம் அம்மா! சேர்மன் என்று நெற்றியில் எழுதிக் கட்டிக் கொள்கிறதா?" "சீ! அசடே! ஏதாவது ஏடாகூடமாய்ச் சொல்லாதே! சேர்மன் வேலை என்றால் சாதாரணம் என்று நினைக்கிறாயோ?

என்னுடைய அம்மாவைப் பெற்ற தாத்தா இதே தேவப்பட்டணத்தில் சேர்மனாயிருந்தார். அவருடைய வீட்டுக்குச் சேர்மன் வீடு என்று பெயர். அந்தக் காலத்திலே மோட்டார் வண்டி இல்லை. இரட்டைக் குதிரை சாரட்டில் ஆபீஸுக்கு கிளம்புவார். அதைப் பார்க்க வீதியில் உள்ளவர்கள் எல்லோரும் வீட்டு வாசலில் வந்து நின்று வேடிக்கை பார்ப்பார்கள். தாத்தாவுடன் இரட்டைக் குதிரை சாரட்டில் நான்கூட ஒரு தடவை ஏறிப் போயிருக்கிறேன். நன்றாக ஞாபகமாயிருக்கிறது." லலிதாவுக்குச் சிரிப்பு வந்தது, மனதிலும் மகிழ்ச்சி உண்டாயிற்று. சீதாவைப் பற்றிக் கேள்விப்பட்டு அதைப்பற்றித் தன்னிடம் சண்டை பிடிக்கவும் அவளை உடனே வீட்டைவிட்டு அனுப்பச் சொல்லவுமே அம்மா புறப்பட்டு வந்திருப்பதாக நினைத்தாள். விஷயம் அதற்கு மாறாயிருக்கவே லலிதாவின் மனத்திலிருந்து ஒரு பாரம் நீங்கியது போலிருந்தது. "அம்மா! முன்னெல்லாம் சேர்மன் வேலைக்கு இருந்த கௌரவம் இப்போது கிடையாது. அப்படியேயிருந்தாலும், அதற்காகச் செலவழிக்கிற பணம் எல்லாம் என்ன ஆகிறது? நம்மிடத்தில் பணம் கொட்டியா கிடக்கிறது? சேர்மன் உத்தியோகத்துக்குச் சம்பளம் கிடையாது என்று உனக்குத் தெரியுமோ, இல்லையோ?" என்றாள்.

"சம்பளம் இல்லாமற் போனால், என்ன? பட்டிக்காட்டில் இருந்தால் எனக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைத்துக் கொண்டு பேசுகிறாயோ. முன்னேயெல்லாம் சேர்மன் வேலை என்றால் வெறும் கௌரவந்தான். இப்போது கௌரவத்துடன் வருமானமும் உண்டு. இத்தனை நாளும் இந்த ஊரிலே சேர்மன் வேலை பார்த்தவர் இரண்டு லட்சம் ரூபாய் சம்பாதித் திருக்கிறாராம். வியாபாரிகளுக்குச் சர்க்கரை பெர்மிட் வாங்கிக் கொடுத்து ஐம்பதினாயிரம் ரூபாய் சம்பாதித்திருக்கிறாராம். அவர் குழந்தைக்குப் போன வருஷம் ஆண்டு நிறைவு கலியாணம் நடந்ததாம். அரை லட்சத்துக்குப் 'பிரஸெண்டு' மட்டும் வந்ததாம். உன் குழந்தைகளுக்குத்தான், ஆண்டு நிறைவு நடந்தது. என்ன கிடைத்தது? வந்திருந்தவர்களுக்குப் போலீஸ் காரர்களின் குண்டாந்தடி அடிதான் கிடைத்தது." லலிதா களுக்கென்று சிரித்தாள். "என்னடி சிரிக்கிறாய். பெண்ணே? நான் சொல்கிறது சிரிப்பாயிருக்கிறதா!" என்று சரஸ்வதி அம்மாள் கேட்டாள். "அதற்காகச் சிரிக்கவில்லை அம்மா! நீ சொல்கிறது ஒரு விதத்தில் உண்மைதான். சில பேர் சேர்மன் வேலையிலே கூடப் பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் உன் மாப்பிள்ளை அப்படிப்பட்டவர் இல்லையே என்பதை நினைத்துக்கொண்டு சிரித்தேன். அவர் கை நீட்டிப் பணம் வாங்கவும் மாட்டார்; பிரஸெண்டு வாங்கவும் மாட்டார்.

ஒருவரை ஒன்று கேட்கவும் மாட்டார்." "இவர் என்னத்துக்காக வாங்கவேணும்? இவர் கை நீட்டி ஒன்றும் வாங்க வேண்டியதில்லை. ஒருவரை ஒன்று கேட்க வேண்டியதுமில்லை. சேர்மன் வேலை ஆகிவிட்டால் எல்லாம் தானே தேடிக் கொண்டு வராதா?" இதைக் கேட்டுக்கொண்டே சீதா சமையலறைக்குள் வந்தாள். லலிதா அவளைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள். தனக்கும் தன் புருஷனுக்கும் நடந்த பேச்சைச் சீதா மேல் மாடியிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தது லலிதாவுக்குத் தெரியாது. ஆகையால் கொஞ்சம் குதூகலமாகவே சீதாவைப் பார்த்து "அத்தங்கா! கேட்டாயா அதிசயத்தை! அம்மா ஒரேயடியாக உன் கட்சி பேசுகிறாள். இந்த எலெக்ஷன் விஷயத்திலே நம் வீட்டில் உன் கட்சிக்குத்தான் மெஜாரிடி இருக்கிறது; நான் மைனாரிடியாகி விட்டேன். அம்மாவுக்கு இருக்கிற உற்சாகத்தைப் பார்த்தால் மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு இவளே வீடு வீடாகப் போய் வோட்டுக் கேட்பாள் போலிருக்கிறது!" என்றாள் லலிதா.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
Mail Usup- truth is a pathless land -Home