"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home >Tamil Language & Literature > Kalki - R.Krishnamurthy > சிவகாமியின் சபதம் > பொன்னியின் செல்வன் > பார்த்திபன் கனவு > சோலைமலை இளவரசி > கல்கி - அலை ஒசை > பாகம் 1- பூகம்பம் > பாகம் 2 - புயல் > பாகம் 3 - எரிமலை > பாகம் 4 - பிரளயம் - அத்தியாயங்கள் - 1 to 11 > பாகம் 4 - பிரளயம் - அத்தியாயங்கள் - 12 to 23 > பாகம் 4 - பிரளயம் அத்தியாயங்கள் - 24 to 35 > பாகம் 4 - பிரளயம் - அத்தியாயங்கள் - 36 to 43
Acknowledgements:Our Sincere thanks go to tiru Bhaskaran Sankaran of Anna University - KBC Research Center, MIT - Chrompet Campus, Chennai, India. for his dedication in publishing Kalki's Works and for the help to publish them in PM in TSCII format. Etext preparation, TAB level proof reading by Ms. Gracy & Ms Parimala
HTML Version and TSCII version proof reading : tiru N D LogaSundaram, selvi L Selvanayagi Chennai
PDF version: Dr. K. Kalyanasundaram Lausanne, Switzerland.© Project Madurai 1999 - 2004 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சாலையின் இரு புறத்திலும் ஆலமரங்கள் சோலையாக வளர்ந்திருந்தன. ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளைப் போல் அந்தச் சாலை எங்கே ஆரம்பமாகிறது, எங்கே முடிவாகிறது என்று தெரிந்துகொள்ள முடியாததாயிருந்தது. பகவானுடைய விசுவரூபத்தின் அடியும், முடியும்போல, இரு திசையிலும் அடர்ந்த மரக்கிளைகளிடையில் அந்தச் சாலை மறைந்து விட்டது. கிழக்கு மேற்காக வந்த சாலை வடதிசை நோக்கித் திரும்பிய முடுக்கிலே ராஜம்பேட்டைக் கிராமத்தின் தபால்சாவடி எழுந்தருளியிருந்தது. அதன் வாசற்கதவு பூட்டியிருந்தது. தூணிலே இரும்புக் கம்பியினால் கட்டித் தொங்க விடப் பட்டிருந்த தபால்பெட்டி திக்கற்ற அநாதையைப்போல் பரிதாபத் தோற்றம் அளித்தது.சற்றுத் தூரத்தில் ஒரு கட்டைவண்டி 'லொடக்' லொடக்' என்ற சத்தத்துடனே சாவகாசமாக அசைந்து ஆடிய வண்ணம் சென்றது. வண்டிக்காரன், 'அய் அய்' என்று அதட்டி மாடுகளை முடுக்கினான். தபால் சாவடிக்கு எதிரே சாலையின் மறுபக்கத்தில் ஒரு மிட்டாய்க் கடை. அந்தக் கடையின் வாசலில் அப்போது ஆள் யாரும் இல்லை. உள்ளேயிருந்து 'சொய் சொய்' என்ற சத்தம் மட்டும் கேட்டது. அந்தச் சத்தத்தோடு கடைக்குள்ளிருந்து வந்த வெங்காயத்தின் வாசனையும் சேர்ந்து மிட்டாய்க் கடை அய்யர் மசால் வடை போட்டுக்கொண்டிருந்தார் என்பதை விளம்பரப்படுத்தின. ஆலமரக் கிளையில் நிர்விசாரமாகக் குடியிருந்த பறவைகள் உல்லாசமாகக் கிறீச்சிட்டுக் கொண்டிருந்தன.அதோ 'டக்கு டக்கு' என்ற பாதக் குறட்டின் சத்தம் கேட்கிறது. வருகிறவர் ஸ்ரீமான் கே.பி. பங்காரு நாயுடு பி.பி.எம். அவர்கள்தான். பி.பி.எம் (B.P.M.) என்றால் சாதாரணமாக நினைத்து விட வேண்டாம். பிராஞ்சு போஸ்டு மாஸ்டர் என்று அறிந்து கொள்க. கிராமத்துப் போஸ்டு மாஸ்டருக்குச் சம்பளம் சொற்பந்தான். ஆனால், அவருடைய அதிகாரம் பெரியது. அவருடைய உத்தியோகப் பொறுப்பு அதைவிட அதிகமானது. "ஜில்லா கலெக்டராகட்டும்; ஹிஸ் எக்ஸலென்ஸி கவர்னரேயாகட்டும்; இந்தத் தபால் ஆபிஸுக்குள் அவர்களுடைய அதிகாரம் செல்லாது! இன்னொருவருக்கு வந்த கடிதத் தைக் கொடு என்று கவர்னர் கேட்டாலும், 'மாட்டேன்' என்று சொல்ல எனக்கு அதிகாரம் உண்டு!" என்று நாயுடுகாரு பெருமிதத்துடன் சொல்லிக் கொள்வார்.இதோ அருகில் வந்து விட்டார் போஸ்டு மாஸ்டர் பங்காரு நாயுடு. தபால் சாவடியின் பூட்டில் திறவுகோலைப் போட்ட உடனே கதவு திறந்து கொள்கிறது. பங்காரு நாயுடு அவருடைய சாம்ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கிறார். ஆனால், வாசற் படியைத் தாண்டியதும் மேலே அடி வைக்க முடியாமல் பிரமித்துப் போய் நிற்கிறார். தபால்கார பாலகிருஷ்ணன் உள்ளே சாவதானமாக உட்கார்ந்து நேற்று வந்த தபால்களை வரிசைப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறான். போஸ்டு மாஸ்டர் திகைத்து நின்றதைக் கண்ட பாலகிருஷ்ணன், "ஏன் ஸார், இப்படி வெறித்துப் பார்க்கிறீர்கள்! நான் என்ன பேயா, பிசாசா?" என்று கேட்டான். "நீ-நீ-வந்து-வந்து...எப்படி அப்பா நீ உள்ளே புகுந்தாய்?" என்று பங்காரு நாயுடு தடுமாறிக் கொண்டே கேட்டார்."எனக்கு இக்ஷிணி வித்தை தெரியும் ஸார்! கொஞ்சநாள் நான் பீதாம்பர ஐயரின் சிஷ்யனாயிருந்தேன். கண்சிமிட்டும் நேரத்தில் இந்தச் சுவருக்குள்ளே நுழைந்து வெளியிலே போய் விடுவேன்!" "உண்மையைச் சொல், அப்பனே? விளையாடாதே!" "என்ன ஸார், அப்படிக் கேட்கறீங்க! விளையாடுவதற்கு நான் என்ன பச்சைக் குழந்தையா?" "போஸ்டாபீஸ் கதவு பூட்டி யிருக்கும்போது எப்படி உள்ளே வந்தாய்? சொல், அப்பா!" "கதவு பூட்டியிருந்ததா, ஸார்! பார்த்தீங்களா, ஸார்!" "பின்னே? இப்பத்தானே சாவியைப் போட்டுத் திறந்தேன்?" "சாவியைப் போட்டுப் பூட்டைத் திறந்தீங்க! ஆனால், கதவைத் திறந்தீங்களா என்று கேட்டேன்." "பூட்டைத் திறந்தால் கதவைத் திறந்ததல்லவா, தம்பி! என்னவோ மர்மமாய்ப் பேசுகிறாயே?""ஒரு மர்மமும் இல்லீங்க, ஸார்! நேற்று சாயங்காலம் ஒரு வேளை கொஞ்சம் 'மஜா'விலே இருந்தீங்களோ, என்னமோ! நாதாங் கியை இழுத்து மாட்டாமல் பூட்டை மட்டும் பூட்டிக்கிட்டுப் போய்விட்டிங்க!" போஸ்டு மாஸ்டர் சற்றுத் திகைத் திருந்துவிட்டு "பாலகிருஷ்ணா! கடவுள் காப்பாற்றினார், பார்த்தாயா? நீ புகுந்தது போலத் திருடன் புகுந்திருந்தால் என்ன கதி ஆகிறது!" என்று சொல்லி உச்சிமேட்டை நோக்கிக் கும்பிட்டார். "கதி என்ன கதி? அந்தத் திருட்டுப் பயலின் தலைவிதி வெறுங்கையோடே திரும்பிப் போயிருப்பான்! இங்கே என்ன இருக்கிறது, திருட்டுப் பசங்களுக்கு? அதுபோகட்டும் ஸார் தபால்பெட்டியின் சாவியை இப்படிக் கொடுங்க!"சாவியை வாங்கிக் கொண்டு போய்ப் பாலகிருஷ்ணன் தபால் பெட்டியைத் திறந்து அதிலிருந்த தபால்களை எடுத்துக் கொண்டு வந்தான். தபால்களின் மேலே ஒட்டியிருந்த தலைகளில் 'டக் - டக்' 'டக் - டக்' என்று தேதி முத்திரை குத்த ஆரம்பித்தான். போஸ்டு மாஸ்டர் ஒருசிறு தகரப்பெட்டியில் இருந்த தபால்தலைகளை எண்ணிக் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தவர், திடிரென்று தலையை நிமிர்த்தி, "ஏனப்பா, பாலகிருஷ்ணா! தேதியைச் சரியாக மாற்றிக் கொண்டாயா?" என்று கேட்டார். பாலகிருஷ்ணன் முத்திரை அடிப்பதை நிறுத்திவிட்டு, "என்ன கேட்டிங்க, ஸார்?" என்றான். "முத்திரையில் தேதியைச் சரியாய் மாற்றிக் கொண்டாயா" என்பதாகக் கேட்டேன். "இன்றைக்குத் தேதி பதினைந்துதானே சார்!" "தேதி பதினைந்தா? நான் சந்தேகப்பட்டது சரிதான்!" "பின்னே என்ன தேதி, ஸார்!" "பதினாறு அப்பா, பதினாறு!" "கொஞ்சம் உங்கள் எதிரிலே இருக்கிற சுவரிலே பாருங்க, ஸார்!"பாலகிருஷ்ணன் காட்டிய இடத்தில் தினகரன் காலண்டர் மாட்டியிருந்தது. அது 1933-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 15தேதி என்று காட்டியது. "அட பரந்தாமா! வருஷத்தைக்கூட இதைப் பார்த்துப் போட்டுவிட்டாயோ?" "பின் எதைப் பார்த்துப் போடுகிறது? காலண்டர் காட்டுகிற வருஷம் மாதம் தேதிதானே போட்டுத் தொலைக்க வேணும்?" "அட கேசவா! இது போன வருஷத்துக் காலண்டர் அல்லவா? வருஷம், தேதி இரண்டும் பிசகு!" பங்காரு நாயுடு எழுந்து போய்க் காலண்டரில் வருஷத்தையும் தேதியையும் மாற்றினார். இப்போது அந்தக் காலண்டர் 1934-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 16தேதி என்று காட்டியது.சாலையில் பெட்டி வண்டி ஒன்று இரு பெரும் காளைகளால் இழுக்கப்பட்டு ஜம் ஜம் என்று சென்றது. "பட்டாமணியம் கிட்டாவய்யரின் வண்டி போகிறது, ஸார்!" என்றான் பாலகிருஷ்ணன். "ஆமாம்; ஜனவரி மாதம் பதினாறு தேதி ஆகிவிட்டது அல்லவா? ஜனவரி வசூலிக்கப் பட்டாமணியம் புறப்படுவது நியாயந்தானே?" என்று பங்காரு நாயுடு ஒரு பழைய சிலேடையைத் தூக்கிப் போட்டார். "ஏன் ஸார்! கிட்டாவய்யர் பெண்ணுக்கு எப்போது கல்யாணமாம்? உங்களுக்குத் தெரியுமா?" "பாலகிருஷ்ணா! உனக்கு என்ன அதைப்பற்றிக் கவலை?" "கவலையாகத்தான் இருக்கிறது. கலியாணம் ஆகிவிட்டால் அந்தக் குழந்தை புருஷன் வீடு போய்விடும்!" "போனால் உனக்கு என்ன?""ஏதோ இந்த விடியா மூஞ்சித் தபாலாபீஸுக்கு அந்தக் குழந்தை இரண்டிலே, மூன்றிலே வந்துகொண்டிருக்கிறது. அதனால் ஆபீஸ் கொஞ்சம் கலகலப்பாயிருக்கிறது. லலிதா புருஷன் வீட்டுக்குப் போய்விட்டால் அப்புறம் இங்கே ஒரு காக்காய்கூட வராது. நீங்களும் நானும் எதிரும் புதிருமாய் உட்கார்ந்து ஈ ஓட்ட வேண்டியதுதான்?" "பாவம்! இந்த ஆபீசுக்கு ஈயாவது வரட்டுமே பாலகிருஷ்ணா! அதை ஏன் ஓட்ட வேண்டுமென்கிறாய்?" "ஈயை ஓட்டாமல் என்னத்தைச் செய்வது? அதை நான் ஓட்டாவிட்டால் இங்கே இருக்கிற பசையையெல்லாம் அது ஒட்டிக் கொண்டு போய்விடும். பாருங்கள், ஸார்! நான் தேவபட்டணம் தபாலாபீஸில் வேலை பார்த்தபோது மாதம் பிறந்து ஏழாந் தேதிக்குள்ளே நூறுக்குக் குறையாமல் மணியார்டர் வந்து குவியும்!" "யாருக்கு? உனக்கா?" "எனக்கு என்னத்திற்கு வருகிறது? கொடுத்து வைத்த மவராசன் மகன்களுக்கு வரும்." "யாருக்கோ மணியார்டர் வந்தால் உனக்கு என்ன ஆயிற்று?""மணியார்டர் ஒன்றுக்கு அரைக்கால் ரூபாய் வீதம் நூற்றரைக்கால் இருபத்தைந்து ரூபாய் நம்பளுக்குக் கிடைக்கும்." "நூற்றரைக்கால் இருபத்தைந்தா? கணக்கிலே புலிதான்!" "தேவபட்டணத்தில் நூற்றரைக்கால் இருபத்தைந்துதான். இந்தத் தரித்திரம் பிடித்த ஊரில் நூற்றரைக்கால் ஏழரைகூட ஆகாது!" "போதும்! போதும்! வேலையைப் பார், பாலகிருஷ்ணா! தங்கவேலு அதோ வந்துவிட்டான்." வெளியே சற்றுத் தூரத்தில் 'ஜிங் ஜிங் ஜிக ஜிங்' என்ற சத்தம் கேட்டது. வர வர அந்தச் சத்தம் தபாலாபீசை நெருங்கியது. ரன்னர் தங்கவேலு கையில் உள்ள ஈட்டிச் சிலம்பைக் குலுக்கிக்கொண்டு தபால் சாவடியின் வாசலுக்கு வந்து சேர்ந்தான்உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
முஸபர்பூர்,(பீஹார்) 9-2-34
அன்பரே!
ரயிலிருந்து தங்களுக்கு நான் எழுதிய கடிதம் கிடைத்திருக்கலாம். அதுவே தங்களுக்கு நான் எழுதும் கடைசிக் கடிதம் என்று எண்ணியிருந்தேன். இங்கு வந்து நிலைமையைப் பார்த்த பிறகு எதனாலோ மறுபடியும் தங்களுக்கு எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. எவ்வளவுதான் தங்களை நான் மறக்க முயன்றாலும் அது கைகூடவில்லை. இப்போது நான் இயற்றிவரும் தொண்டில் தங்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்ற ஆசை என் மனதில் பொங்கிக் கொண்டிருக்கிறது. இக்காரணங்களினாலேயே தங்களுக்குக் கடிதம் எழுதத் துணிந்தேன். இங்கே பூகம்ப நிவாரணத் தொண்டர்களின் முகாமில் எல்லாரும் தூங்கிய பிறகு நான் மட்டும் மங்கலான கிரோஸின் எண்ணெய் விளக்கின் அருகில் உட்கார்ந்து இந்தக் கடிதம் எழுதுகிறேன். பீஹாருக்கு நான் வந்து பத்து தினங்கள் ஆகின்றன. இந்தப் பத்து நாளும் நான் கண்ட காட்சிகள், அம்மம்மா, - ஆயிரம் வருஷம் உயிரோடிருந்தாலும் மறக்க முடியாதவை. இந்த ஜென்மத்திலே மட்டும் அல்லாமல் அடுத்த ஜன்மத்திலும், அதற்கடுத்துவரும் ஜன்மங்களிலும் கூட மறக்க முடியாது என்று தோன்றுகிறது. பகலில் பார்த்த காட்சிகளை இரவில் மறுபடியும் என் கனவில் காண்கிறேன். பகலில் மன உறுதியினால் உணர்ச்சியை அடக்கிக் கொள்கிறேன். ஆனால் கனவில் அது சாத்தியப்படவில்லை. சில சமயம் பயங்கரத்தினால் அலறிக் கொண்டும் சில சமயம் பரிதாபத்தினால் தேம்பி அழுதுகொண்டும் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கிறேன்.
முஸபர்பூர் 12-2-34
அன்பார்ந்த ஐயா,
வருத்தம் தரும் ஒரு விஷயத்தைத் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. பம்பாயிலிருந்து வந்த ஒரு தேச சேவிகை - தாரிணி என்னும் பெயர் கொண்டவள் - இந்த முகாமில் தங்கிப் பூகம்பத்தினால் நஷ்டமடைந்த ஜனங்களுக்குத் தொண்டு செய்து வந்தாள். அவளுடைய உயர்ந்த குணங்களினால் இங்கே எல்லோருடைய பாராட்டுதலுக்கும் உரியவளாயிருந்தாள். நேற்று மத்தியானம் விடுதியில் சாப்பிட்டுவிட்டுப் போனவள் இரவு திரும்பி வரவில்லை. துரதிர்ஷ்டவசமாக அவளிடம் ஒரே ஒரு துர்ப்பழக்கம் இருந்தது. பூகம்பத்தினால் இந்தப் பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் பூமிப்பிளவுகளுக்குப் பக்கத்தில் போய் அடிக்கடி எட்டிப் பார்த்துக் கொண்டு நிற்பாள். நாங்கள் பலமுறை எச்சரித்தும் அவள் கேட்கவில்லை. கடைசியாக நேற்றுப் பிற்பகல் தாரிணியைப் பார்த்தவர்கள் அத்தகைய பிளவு ஒன்றுக்குப் பக்கத்தில் நின்று அவள் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள். எவ்வளவோ தேடிப் பார்த்தும் தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை. "அன்று ஜனககுமாரி பூமிக்குள் போனதுபோல் நானும் போய்விட விரும்புகிறேன்" என்று தாரிணி அடிக்கடி சொல்வது வழக்கம். அவளுடைய விருப்பம் நிறைவேறி விட்டதென்ற வருத்தத்துடன் முடிவு செய்ய வேண்டியதாயிருக்கிறது. தாரிணியின் உற்றார் உறவினர்கள் பற்றி எங்களுக்கு யாதொரு தகவலும் இல்லை.
"எண்ணும் பொழுதிலெல்லாம் - அவன் கை இட்ட இடந்தனிலே
தண்ணென் றிருந்ததடி - புதிதோர் சாந்தி பிறந்ததடி
எண்ணி எண்ணிப் பார்த்தேன் - அவன் தான் யாரெனச் சிந்தை செய்தேன்!
கண்ணன் திருவுருவம் அங்ஙனே கண்ணின்முன் நின்றதடி!
"பொன் மயில் ஏறி வருவான் - ஐயன்
பன்னிரு கையால் தன்னருள் சொரிவான் (பொன்)
செங்கதிர் வேலன் சிவனருள் பாலன்
மங்கை வள்ளி மணாளன்
பங்கயத்தாளன் தீனதயாளன் (பொன்)
புன்னகை தன்னால் இன்னல்கள் தீர்ப்பான்
புன்மை இருள் கணம் மாய்ப்பான்
கன்னலின் இனிய தண்தமிழ் அளிப்பான்" (பொன்)