கல்கியின் பொன்னியின் செல்வன் kalkiyin ponniyin celvan முதலாவது பாகம் - புது வெள்ளம் அத்தியாயம் 51-57 ஐம்பத்தொன்றாம் அத்தியாயம் - மாமல்லபுரம் ஐம்பத்திரண்டாம் அத்தியாயம் - கிழவன் கல்யாணம் ஐம்பத்து மூன்றாம் அத்தியாயம் - மலையமான் ஆவேசம் ஐம்பத்து நான்காம் அத்தியாயம் - "நஞ்சினும் கொடியாள்" ஐம்பத்தைந்தாம் அத்தியாயம் - நந்தினியின் காதலன் ஐம்பத்தாறாம் அத்தியாயம் - அந்தப்புர சம்பவம் ஐம்பத்தேழாம் அத்தியாயம் - மாயமோகினி
ஐம்பத்தோராம் அத்தியாயம் மாமல்லபுரம்
நேயர்கள் ஏற்கெனவே நன்கு அறிந்துள்ள மாமல்லபுரத்துக்கு இப்போது அவர்களை அழைத்துச் செல்ல விரும்புகிறோம்.
மகேந்திர பல்லவரும் மாமல்ல நரசிம்மரும் இத்துறைமுகப்பட்டினத்தை அற்புதச் சிற்பவேலைகளின் மூலம் ஒரு சொப்பனபுரியாகச் செய்த காலத்திற்குப் பிறகு இப்போது முந்நூறு ஆண்டுகளுக்கு மேலேயே ஆகி விட்டன.
நகரத்தின் தோற்றம் ஓரளவு மங்கியிருக்கிறது. மாறுதல் நம் மனத்துக்கு மகிழ்ச்சி தரவில்லை.
மாடமாளிகைகள் இடிந்து விழுந்து பாழடைந்து கிடக்கின்றன. வீதிகளிலும் துறைமுகத்திலும் முன்போல் அவ்வளவு ஜனக்கூட்டம் இல்லை. வர்த்தகப் பெருக்கமும் அவ்வளவாக இல்லை. பெரிய பெரிய பண்டக சாலைகள் இல்லை. வீதிகளிலெல்லாம் ஏற்றுமதி இறக்குமதிப் பண்டங்கள் மலை மலையாகக் குவிந்திருக்கவில்லை.
கடல் பூமிக்குள் புகுந்து ஆழம் மிகுந்த கால்வாயாக அமைந்து கப்பல்கள் வந்து பத்திரமாய் நிற்பதற்குரிய இயற்கைத் துறைமுகமாக இருந்ததை முன்னர் பார்த்தோம். இப்போது அந்தக் கால்வாயில் மணல் அடித்து அடித்துத் தூர்ந்து போய் ஆழம் வெகுவாகக் குறைந்து போயிருக்கிறது. ஆழமற்ற அக்கடற்கழியில் சிறிய படகுகளும் ஓடங்களும்தான் வரக்கூடும். நாவாய்களும் மரக்கலங்களும் சற்றுத் தூரத்தில் கடலிலே தான் நிற்க வேண்டும். படகுகளில் வர்த்தகப் பொருள்களை ஏற்றிச் சென்று அந்த மரக்கலங்களில் சேர்ப்பிக்க வேண்டும்.
மேலே கூறிய இடைக் காலத்தில் மாமல்லபுரம் சில புதிய சிறப்புக்களையும் அடைந்திருந்ததைக் குறிப்பிட வேண்டும்.முக்கியமாக கடற்கரையோரத்தில் விளங்கிய அழகிய கற்கோயில் நம் கண்களையும் கருத்தையும் கவர்கின்றது. அது மகேந்திரன் - மாமல்லன் காலத்தில் அமைக்கப்பட்ட குன்றுகளைக் குடைந்தெடுத்த கோவில்களைப் போன்றதல்ல. குன்றுகளிலிருந்து கற்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து கட்டப்பட்ட கோயில். சமுத்திர ராஜனுடைய தலையில் சூட்டப்பட்ட அழகிய மணிமகுடத்தைப் போல் விளங்குகிறது. அடடா! அந்தக் கோயில் அமைப்பின் அழகை என்னவென்று சொல்வது?
இதைத் தவிர நகரத்தின் நடுவே மூவுலகும் அளந்த பெருமாள் சயனித்திருக்கும் விண்ணகரக் கோயில் ஒன்றும் காட்சி அளிக்கிறது. சைவத்தையும் வைஷ்ணவத்தையும் இரு கண்களைப் போல எண்ணிப் போற்றி வளர்த்த பரமேசுவர பல்லவன் திருப்பணி செய்த விண்ணகரம் அது. திருமங்கையாழ்வார் இந்தக் கோயிலுக்கு வந்து தலசயன பெருமாளைத் தரிசித்துப் பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் தமிழ்ப் பாடல்களைப் பாடியிருக்கிறார். அவருடைய காலத்திலேகூடப் பல்லவ சாம்ராஜ்யம் பெருகி வளர்ந்த சிறப்புடன் விளங்கியது என்பதையும் மாமல்லபுரம் செல்வம் கொழிக்கும் துறைமுகமாக விளங்கியது என்பதையும் பின்வரும் பாசுரத்தின் மூலம் நன்கு அறியலாம்:-
"புலன்கொள் நிதிக்குவை யொடு
புழைக்கை மா களிற்றினமும்
நலங்கொள் நவமணிக் குவையும்
சுமந்தெங்கும் நான் றொசிந்து
கலங்கள் இயங்கும் மல்லைக்
கடல் மல்லைத் தலசயனம்
வலங்கொள் மனத்தா ரவரை
வலங்கொள் என் மட நெஞ்சே!" திருமங்கையாழ்வாரின் காலத்துக்குப் பிற்பட்ட நூறாண்டுக் காலத்தில் பல்லவ சாம்ராஜ்ய சூரியன் அஸ்தமித்துவிட்டது. 'கல்வியில் இணையில்லாத காஞ்சி' மாநகரின் சிறப்பும் குறைந்து விட்டது. 'கலங்கள் இயங்கும் கடல் மல்லை'யின் வர்த்தக வளமும் குன்றி வந்தது.
ஆனால் தமிழகத்துக்கு அழியாப் புகழ் அளிப்பதற்கென்று அமைந்த அந்த அமர நகரத்தின் அற்புதச் சிற்பக் கலைகளுக்கு மட்டும் எந்தவிதக் குறைவும் நேரவில்லை. பாறைச் சுவர்களில் செதுக்கப்பட்ட சித்திர விசித்திரமான சிற்பங்களும் குன்றுகளைக் குடைந்து எடுத்து அமைத்த விமான ரதங்களும் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவற்றை அமைத்த காலத்தில் விளங்கியது போலவே இன்றைக்கும் புத்தம் புதியனவாக விளங்கின. பண்டங்களை ஏற்றுமதி செய்வதற்காக வந்த வர்த்தகர்களின் கூட்டத்தைக் காட்டிலும் சிற்பச் செல்வங்களைக் கண்டு களித்துப் போவதற்காக வந்த ஜனக் கூட்டம் அதிகமாயிருந்தது.
*******************
மாமல்லபுரத்து வீதிகளின் வழியாக இரட்டைக் குதிரைகள் பூட்டிய அழகிய விமான ரதம் ஒன்று சென்றது.குதிரைகளின் அலங்காரங்களும், ரதத்தின் வேலைப்பாடுகளும், பொன் தகடு வேய்ந்து மாலை வெயிலில் மற்றொரு சூரியனைப் போல் பிரகாசித்த ரதத்தின் மேல் விதானமும் அதில் இருந்தவர்கள் அரச குலத்தினராயிருக்க வேண்டும் என்பதை உணர்த்தின.
ஆம்; அந்தப் பொன் ரதத்தின் விசாலமான உட்புறத்தில் அரசகுலத்தினர் மூவர் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவன் தான், வீராதி வீரனும் சுந்தர சோழரின் மூத்த குமாரனுமான ஆதித்த கரிகாலன். மிக இளம்பிராயத்திலேயே இவன் போர்க்களத்துக்குச் சென்று செயற்கரும் வீரச் செயல்கள் புரிந்தான். மதுரை வீரபாண்டியனை இறுதிப் போரில் கொன்று, "வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி" என்று பட்டப் பெயர் பெற்றான். வீரபாண்டியன் வீர சொர்க்கம் அடைந்து பாண்டிய நாடு சோழ சாம்ராஜ்யத்தின் கீழ் வந்த உடனடியாகத்தான் சுந்தரசோழர் நோய்வாய்ப்பட்டார். ஆதித்த கரிகாலனே அடுத்த பட்டத்துக்கு உரியவன் என்பதை ஐயமற நிலைநாட்ட அவனுக்கு யுவராஜ்ய பட்டாபிஷேகம் செய்வித்தார். அது முதலாவது கல்வெட்டுக்களில் தன் பெயரைப் பொறித்துச் சாஸனம் அளிக்கும் உரிமையும் ஆதித்த கரிகாலன் பெற்றான்.
பின்னர், தொண்டை மண்டலத்தை இரட்டை மண்டலத்துக் கன்னர தேவனுடைய ஆதிக்கத்திலிருந்து முழுதும் விடுவிக்கும் பொருட்டு ஆதித்த கரிகாலன் வடநாட்டுக்குப் பிரயாணமானான். அங்கேயும் பல போர்க்களங்களில் செயற்கரும் வீரச் செயல்களைப் புரிந்தான். இரட்டை மண்டலத்துப் படைகளை வட பெண்ணைக்கு வடக்கே துரத்தியடித்தான். மேலும் வடதிசையில் படையெடுத்துச் செல்வதற்குப் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ளுதல் அவசியமாயிற்று. ஆதலின் காஞ்சியில் வந்து தங்கிப் படை திரட்டவும் மற்றும் படையெடுப்புக்கு அவசியமான ஆயுத தளவாட சாமக்ரியைகளைத் திரட்டவும் தொடங்கினான். இந்த நிலையில் பழுவேட்டரையர்கள் அவனுடைய முயற்சிக்குத் தடங்கல் செய்யத் தொடங்கினார்கள். இலங்கைப் போர் முடிந்த பிறகுதான் வடநாட்டுப் படையெடுப்புத் தொடங்கலாம் என்று சொன்னார்கள். இன்னும் பலவிதமான வதந்திகளும் காற்றிலே மிதந்து வரத் தொடங்கின. இலங்கையில் போர் செய்யச் சென்றுள்ள படைக்குச் சோழ நாட்டிலிருந்து வேண்டிய உணவுப் பொருள் போகவில்லையென்று தெரிந்தது. இதனாலெல்லாம் ஆதித்த கரிகாலனுடைய வீர உள்ளம் துடித்துக் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
நமது கதை நடந்த காலத்துக்கு முன்னும் பின்னும் சுமார் முந்நூறு ஆண்டு காலத்தில் தமிழ் அன்னையின் திருவயிற்றில் இதிகாச காவியங்களில் நாம் படிக்கும் மகா வீரர்களையொத்த வீரப் புதல்வர்கள் தோன்றிக் கொண்டிருந்தார்கள். வீமனையும் அர்ச்சுனனையும் பீஷ்மரையும் துரோணரையும் கடோத்கஜனையும் அபிமன்யுவையும் ஒத்த வீரர்கள் தமிழகத்தில் அவதரித்தார்கள். உலகம் வியக்கும்படியான தீரச் செயல்களைப் புரிந்தார்கள். போரில் அடைந்த ஒவ்வொரு வெற்றியும் இவர்களுடைய தோள்களுக்கு மேலும் வலி அளித்தன. வயது முதிர்ந்த கிழவர்கள் மலையைப் பெயர்த்தெடுக்கும் வலிமை பெற்றிருந்தார்கள். பிராயம் ஆகாத இளம் வாலிபர்கள் காற்றில் ஏறிச் சென்று வான முகட்டை அடைந்து விண்மீன்களை உதிர்க்கும் ஆற்றல் பெற்றிருந்தார்கள்.
இப்படிப்பட்ட வீரர்கள் இருவர் அச்சமயம் ஆதித்த கரிகாலன் ஏறிச் சென்ற ரதத்தில் அவனுடன் சம ஆசனத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.
இவர்களில் ஒருவர் திருக்கோவலூர் மலையமான். இவர் ஆண்ட மலையமானாடு வழக்கத்தில் பெயர் சுருங்கி 'மலாடு' என்றும் 'மிலாடு' என்றும் வழங்கியது. ஆகையால் இவருக்கு 'மிலாடுடையார்' என்ற பட்டப் பெயர் ஏற்பட்டிருந்தது.
சுந்தர சோழ சக்கரவர்த்தியின் இரண்டாவது பத்தினியாகிய வானமாதேவி இவருடைய செல்வத் திருமகள்தான். எனவே, ஆதித்த கரிகாலனுடைய பாட்டனார் இவர். முதிர்ந்த பிராயத்திலும் நிறைந்த அறிவிலும் இவர் கௌரவர்களின் பாட்டனாரான பீஷ்மரை ஒத்திருந்தார். ஆதித்த கரிகாலன் இவரிடம் பெரும் பக்தி வைத்திருந்த போதிலும் இவருடைய புத்திமதி சில சமயம் அந்த வீர இளவரசனின் பொறுமையைச் சோதித்தது.
ரதத்தில் இருந்தவர்களில் இன்னொருவன் பார்த்திபேந்திரன். இவன் பழைய பல்லவர் குலத்திலிருந்து கிளை வழி ஒன்றில் தோன்றியவன். ஆதித்த கரிகாலனை விட வயதில் சிறிது மூத்தவன். அரசுரிமை அற்றவனாதலால் போர்க்களத்தில் தன் ஆற்றலைக் காட்டி வீரப் புகழை நிலை நாட்ட விரும்பினான். ஆதித்த கரிகாலனைச் சென்றடைந்தான். வீரபாண்டியனோடு நடத்திய போரில் ஆதித்த கரிகாலனுக்கு வலது கையைப் போல இருந்து உதவி புரிந்தான். இதனால் ஆதித்த கரிகாலனுடைய அந்தரங்க நட்புக்கு உரியவனானான். வீரபாண்டியன் விழுந்த நாளிலிருந்து இருவரும் இணை பிரியாத் தோழர்கள் ஆனார்கள்.
இந்த மூவரும் ரதத்தில் சென்றபோது தஞ்சாவூரிலிருந்து பராபரியாக வந்த செய்திகளைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்.
"இந்தப் பழுவேட்டரையர்களின் அகம்பாவத்தை இனிமேல் என்னால் ஒரு கணமும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. நாளுக்கு நாள் அவர்கள் வரம்பு கடந்து போகிறார்கள். நான் அனுப்பிய தூதன் பேரில் 'ஒற்றன்' என்ற குற்றம் சுமத்துவதற்கு இவர்களுக்கு எத்தனை அகந்தை இருக்க வேண்டும்? அவனைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஆயிரம் பொன் வெகுமதி கொடுப்பதாகப் பறையறைவித்தார்களாமே? இதையெல்லாம் நான் எப்படிப் பொறுக்க முடியும்? என் உறையிலுள்ள வாள் அவமானத்தில் குன்றிப் போயிருக்கிறது. நீங்களோ பொறுமை உபதேசம் செய்கிறீர்கள்!" என்றான் ஆதித்த கரிகாலன்.
"பொறுமை உபதேசம் நான் செய்யவில்லை. ஆனால் இந்த மாதிரி முக்கியமான காரியத்துக்கு வந்தியத்தேவனை அனுப்ப வேண்டாம் என்று மட்டும் அப்போதே சொன்னேன். அந்தப் பதற்றக்காரன் காரியத்தைக் கெடுத்து விடுவான் என்று எனக்குத் தெரியும்! வாளை வீசவும் வேலை எறியவும் மட்டும் தெரிந்திருந்தால் போதுமா? இராஜ காரியமாகத் தூது செல்கிறவனுக்குப் புத்திக் கூர்மை இருக்க வேண்டும்..." என்று கூறினான் பார்த்திபேந்திரன்.
இளவரசன் கரிகாலன் வந்தியதேவனிடம் காட்டிய அபிமானம் பார்த்திபேந்திரனுக்குப் பிடிப்பதில்லை. எப்போதும் அவனைப் பற்றி ஏதாவது குறை சொல்லிக் கொண்டிருப்பான். அவன் செய்யும் எந்தக் காரியத்திலும் குற்றம் கண்டுபிடிப்பான். ஆகையால் இந்தச் சந்தர்ப்பத்திலும் அவ்வாறு குற்றம் சொன்னான்.
"ஆரம்பித்து விட்டாயா, உன் கதையை? வந்தியத்தேவன் பேரில் ஏதாவது சொல்லிக் கொண்டிராவிட்டால் உனக்குப் பொழுது போகாது. அவனுக்குப் புத்திக் கூர்மையில்லாவிட்டால் வேறு யாருக்கு இருக்கிறது? எந்த விதத்திலாவது, எப்படியாவது, சக்கரவர்த்தியிடம் நேரில் ஓலையைக் கொடுத்து விடவேண்டும் என்று நான் இட்ட கட்டளையை அவன் நிறைவேற்றி விட்டான். அதனால் பழுவேட்டரையர்கள் கோபங்கொண்டிருக்கிறார்கள். இதில் வந்தியத்தேவனின் தவறு என்ன?" என்று ஆதித்த கரிகாலன் கேட்டான்.
"தாங்கள் சொல்லி அனுப்பிய காரியத்தோடு அவன் நின்றிருக்க மாட்டான். வேறு வேண்டாத காரியங்களிலும் தலையிட்டிருப்பான்!" என்றான் பார்த்திபேந்திரன்.
"நீ சற்றுச் சும்மாயிரு! தாத்தா! ஏன் இப்படி மௌனமாயிருக்கிறீர்கள்? தங்களுடைய கருத்து என்ன? ஒரு பெரும் படை திரட்டிக் கொண்டு சென்று தஞ்சாவூரிலிருந்து சக்கரவர்த்தியை மீட்டு காஞ்சிக்கு அழைத்து வந்துவிட்டால் என்ன? எத்தனை நாள் சக்கரவர்த்தியைப் பழுவேட்டரையர்கள் சிறையில் வைத்திருப்பது போல வைத்திருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருப்பது? எத்தனை நாள் பழுவேட்டரையர்களுக்குப் பயந்து காலம் கழிப்பது?" என்று பொங்கினான் ஆதித்த கரிகாலன்.
தம் வாழ் நாளில் அறுபத்தாறு போர்க்களங்களைக் கண்டு அனுபவம் பெற்றவரான திருக்கோவலூர் மலையமான் - மிலாடுடையார் - மறுமொழி சொல்லுவதற்காகத் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். இதற்குள் எதிரே கடல் அலைகள் தெரியவும், "முதலில் இந்த ரதத்திலிருந்து இறங்குவோம், தம்பி! வழக்கமான இடத்தில் போய் உட்கார்ந்து பேசுவோம். எனக்கு வயது ஆகி விட்டதல்லவா? ஓடுகிற ரதத்தில் பேசுவது எளிதாக இல்லை" என்றார்.
பக்க தலைப்பு
ஐம்பத்திரண்டாம் அத்தியாயம் கிழவன் கல்யாணம்
மாமல்லபுரத்துக் கடற்கரையில் சிறிய சிறிய கற்பாறைகள் பல உண்டு. சில சமயம் கடல் பொங்கி வந்து அப்பாறைகளின் மீது அலைகள் மோதிக் கொண்டிருக்கும். சில சமயம் கடல் பின்வாங்கிச் சென்று அப்பாறைகள் உலருவதற்கு அவகாசம் அளிக்கும். அவற்றில் ஒரு சிறிய பாறையையேனும் மாமல்லபுரத்து மகா சிற்பிகள் சும்மா விட்டுவிடவில்லை. அந்தந்தப் பாறைக்குத் தகுந்தபடி பெரிதாகவும் சிறிதாகவும் காட்சிகளைக் கற்பனை செய்து அழியாச் சிற்ப உருவங்களை அமைத்து வைத்தார்கள்.
அவ்விதம் சிறிய பாறைகள் இரண்டு எதிரெதிராக அமைந்திருந்த இடத்தை ஆதித்த கரிகாலனும் மற்ற இருவரும் அணுகினார்கள். ரதத்திலிருந்து இறங்கிச் சென்றார்கள். இரண்டு பாறைகளையும் இரண்டு சிம்மாசனங்களாகக் கருதி, கரிகாலனும் மலையமானும் அமர்ந்தார்கள். பார்த்திபேந்திரன் அவர்களுக்குச் சற்று அப்பால் நின்றான். அடிக்கடி அலைகள் வந்து அவர்களுடைய முழங்கால் வரையில் நனைத்துக் கொண்டிருந்தன. அலைகள் பாறைகளில் மோதியபோது எழுந்த திவலைகள் சில சமயம் அவர்கள் மீது முத்து மழையாகப் பொழிந்து கொண்டிருந்தன. சற்றுத் தூரத்தில் படகுகள் வரிசை வரிசையாகப் பல்வகைப் பண்டங்களைச் சுமந்து கொண்டு கடலைக் கிழித்துக் கொண்டு சென்றன. அப்பண்டங்களைப் படகிலிருந்து இறக்கிப் பாய்மரம் விரித்து நின்ற பெரிய மரக் கலங்களில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.
"இரட்டை மண்டலப் படையெடுப்புக்காகச் சேகரித்து வைத்த பண்டங்களெல்லாம் இலங்கைக்குப் போக வேண்டியிருப்பதை நினைத்தால் என் நெஞ்சம் கொதிக்கிறது!" என்றான் பார்த்திபேந்திரன்.
"பின்னே என்ன செய்கிறது? சோழ நாட்டின் பொறுக்கி எடுத்த வீரர் படைகள் இலங்கையில் இருக்கின்றன. அவர்கள் போர்க்களங்களில் வெற்றி மேல் வெற்றி அடைந்து வருகிறார்கள். ஆயிரம் வருஷமாக இலங்கை அரசர்கள் வீற்றிருந்து அரசு புரிந்த அனுராதபுரத்தைக் கைப்பற்றி ஜயக்கொடி நாட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வீரர்கள் பட்டினி கிடந்து சாகும்படி விட்டுவிடுவதா?" என்றான் ஆதித்த கரிகாலன்.
"அப்படி விட வேண்டும் என்று யார் சொன்னார்கள்? உணவுப் பண்டங்கள் அனுப்ப வேண்டியதுதான். ஆனால் சோழ நாட்டிலிருந்து நாகப்பட்டினத் துறைமுகத்தில் ஏறிப் போக வேண்டும். அல்லது பாண்டிய நாட்டிலிருந்து சேதுக்கரையில் ஏற்றி அனுப்ப வேண்டும். இந்த வரண்ட தொண்டை மண்டலத்திலிருந்து போக வேண்டிய அவசியம் என்ன? அதிலும் நாம் வடக்கே படையெடுத்துச் செல்வதற்கு இதனால் தடை ஏற்படுமே என்பதை எண்ணிச் சொன்னேன்!" என்றான் பார்த்திபேந்திரன்.
"அதை நினைத்தால் எனக்கும் உள்ளம் கொதிக்கத்தான் கொதிக்கிறது. அந்தப் பாவி பழுவேட்டரையர்களின் நோக்கம் என்ன தான் என்று தெரியவில்லை. எத்தனை நாள் இதையெல்லாம் சகித்துக் கொண்டிருப்பது? தாத்தா! ஏன் இன்னும் பேசாமல் வாயை மூடிக் கொண்டிருக்கிறீர்கள்? ஏதாவது வாயைத் திறந்து சொல்லுங்கள்!" என்றான் கரிகாலன்.
"குழந்தாய்! இந்தக் கடல் அலைகள் ஓயாமல் 'ஓ' வென்று சத்தமிடுகின்றன. கடல் அலைகளோடு போட்டி போட்டுக் கொண்டு உன் தோழன் பார்த்திபேந்திரனும் கூச்சலிடுகிறான். இதற்கு நடுவில் நான் என்னமாய்ப் பேசுவது? எனக்கோ வயதாகித் தள்ளாமை வந்து விட்டது...!" என்றார் மலையமான் மிலாடுடையார்.
"பார்த்திபேந்திரா! சற்று நேரம் நீ சும்மா இரு. தாத்தா அவருடைய கருத்தைச் சொல்லட்டும்!" என்றான் ஆதித்த கரிகாலன்.
"இதோ வாயை மூடிக் கொண்டு விட்டேன். பாவம்! தாத்தா தள்ளாத வயதில் மலைக் கோட்டையிலிருந்து கீழே இறங்கி இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்திருக்கிறார். அவர் முன்னால் நான் வாயைத் திறக்கலாமா? இந்தக் கடலுக்குத் தான் கொஞ்சமும் புத்தியில்லை! ஓயாமல் இரைந்து கொண்டிருக்கிறது! இதை அடக்குவார் ஒருவரும் இல்லை. நம் மலை அரசரிடம் சமுத்திர ராஜனுக்குக் கொஞ்சமும் பயமில்லை போலிருக்கிறது!" என்றான் பார்த்திபேந்திரன்.
"தம்பி! பார்த்திபேந்திரா! அப்படியும் ஒரு காலம் இருந்தது. திருக்கோவலூர் மலையமான் என்ற பெயரைக் கேட்டு இந்தக் காசினியில் உள்ள அரசர்களெல்லாம் நடுநடுங்குவார்கள். இரட்டை மண்டலத்துச் சளுக்கர்களும், வல்லத்து வாண கோவரையர்களும், வைதும்பராயர்களும், கங்கர்களும், கொங்கர்களும் மலையமான் பெயரைக் கேட்டதுமே இடி முழக்கம் கேட்ட சர்ப்பத்தைப் போல் பொந்தில் ஒளிந்து கொள்வார்கள். சமுத்திர ராஜனும் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாகத்தான் இருப்பான். இந்த உடம்பு கொஞ்சம் தளர்ச்சி அடைந்ததும் இப்போது எல்லாரும் துள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். ஆயிரம் வருஷத்துப் பழங்குடியைச் சேர்ந்த என்னை நேற்றைக்கு மேற்கேயிருந்து வந்த பழுவேட்டரையர்கள் ஒழித்துவிடப் பார்க்கிறார்கள்! அது ஒரு நாளும் நடக்கப் போவதில்லை! கரிகாலா! பழுவேட்டரையர்களின் நோக்கம் இன்னதென்று தெரியவில்லை என்பதாகச் சற்று முன்னால் சொன்னாய் அல்லவா! அவர்களுடைய நோக்கம் இன்னதென்று நான் சொல்லுகிறேன், கேள்! உன்னையும் உன் சகோதரனையும் தனித் தனியே பலவீனப்படுத்துவதுதான் அவர்களுடைய நோக்கம். இலங்கையில் உன் தம்பி அருள்மொழி தோல்வி அடைய வேண்டும். அதனால் அவனுக்கு அவமானம் நேர வேண்டும். இங்கே உனக்கு உன் தம்பியின் பேரில் கோபம் ஏற்பட வேண்டும். நீங்கள் இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும். அதைப் பார்த்து இந்தக் கிழவன் வேதனைப் படவேண்டும்! இதுதான் அவர்களுடைய அந்தரங்க நோக்கம்....." என்று மிலாடுடையார் ஆத்திரத்துடன் சொல்லி வருகையில் கரிகாலன் குறுக்கிட்டான்.
"இந்த நோக்கத்தில் அவர்கள் ஒரு நாளும் வெற்றி அடையப் போவதில்லை, தாத்தா! என் தம்பியையும் என்னையும் யாராகிலும் பிரிக்க முடியாது. அருள்மொழிக்காக நான் உயிரையும் விடுவேன். எனக்கு ஒவ்வொரு சமயம் தோன்றுகிறது; - கப்பல் ஏறி நானும் இலங்கைக்குப் போகலாமா என்று. அங்கே அவன் என்ன கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறானோ என்னமோ! நான் இங்கே சுகமாக உண்டு உடுத்து அரண்மனையில் தூங்கிக் கொண்டு காலங்கழிக்கிறேன். என் வாளும் வேலும் துருப்பிடித்துப் போகின்றன. ஒவ்வொரு கணமும் எனக்கு ஒரு யுகமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. இங்கு இருக்கவே பிடிக்கவில்லை. தாத்தா! சொல்லுங்கள்! இந்தப் பண்டங்கள் ஏற்றும் கப்பல்களில் ஒன்றில் ஏறி நானும் இலங்கைக்குப் போகட்டுமா?" என்று கேட்டான் கரிகாலன்.
"அரசே! அருமையான யோசனை! பல நாளாக நான் நினைத்துக் கொண்டிருந்ததைத் தாங்களும் சொல்லுகிறீர்கள். புறப்படலாம், வாருங்கள்! இதற்குத் தாத்தாவை யோசனை கேட்பதில் பயனில்லை. இவரைக் கேட்டால் 'வேண்டாம் பொறு!' என்றுதான் புத்திமதி சொல்லுவார்! நாளைக்கே நாம் புறப்படலாம். தொண்டை மண்டலப் படையில் பாதியை அழைத்துக் கொண்டு போகலாம். இலங்கை யுத்தத்தை ஒரு வழியாக முடித்துக் கொண்டு நேரே நாகப்பட்டினத்தில் வந்து இறங்கலாம். இறங்கித் தஞ்சாவூருக்குச் சென்று அந்தப் பழுவேட்டரையர்களை ஒரு கை பார்த்து விடலாம்...!" என்று பார்த்திபேந்திரன் பொறித்துக் கொட்டினான்.
"கரிகாலா! பார்த்தாயா? நான் முதலிலேயே என்ன சொன்னேன்? இவன் வாயை மூடிக் கொண்டிருந்தால் தான் நான் பேசுவேன் என்று சொல்லவில்லையா?"
"இதோ வாயை மூடிக் கொள்கிறேன், தாத்தா! நீங்கள் சொல்வதையெல்லாம் சொல்லி முடியுங்கள்!" என்று பார்த்திபேந்திரன் வாயைக் கையினால் பொத்திக் கொண்டான்.
"கரிகாலா! நீ வீராதி வீரன். உன்னைப் போன்ற பராக்கிரமசாலி இந்த வீரத் தமிழகத்திலே கூட அதிகம் பேர் பிறந்ததில்லை. என்னுடைய எண்பது பிராயத்துக்குள் நானும் எத்தனையோ பெரிய யுத்த களங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் எதிரிகளின் கூட்டத்தில் தன்னந்தனியே புகுந்து சென்று உன்னைப் போல் சண்டையிட்ட இன்னொரு வீரனைப் பார்த்ததில்லை. சேவூர்ப் பெரும்போர் நடந்தபோது உனக்குப் பிராயம் பதினாறு கூட ஆகவில்லை. அந்த வயதில் பகைவர்களின் கூட்டத்தில் நீ புகுந்து சென்ற வேகத்தையும், இடசாரி வலசாரியாக வாள் சுழன்ற வேகத்தையும், பகைவர்களின் தலைகள் உருண்ட வேகத்தையும் போல் நான் என்றும் பார்த்ததில்லை. இன்னும் என் கண் முன்னால் அந்தக் காட்சி நின்று கொண்டிருக்கிறது. உன்னைப் போலவே உன் சிநேகிதன் பார்த்திபேந்திரனும் வீராதி வீரன்தான். ஆனால் நீங்கள் இரண்டு பேரும் பதற்றக்காரர்கள்; முன்கோபம் உள்ளவர்கள். அதனால் உங்களுக்கு யோசிக்கும் சக்தி குறைந்து விடுகிறது. எது செய்ய வேண்டுமோ அதற்கு நேர்மாறான காரியத்தைச் செய்யத் தோன்றிவிடுகிறது...."
"தாத்தா! இம்மாதிரி உபதேசம் தாங்கள் இதற்கு முன் எத்தனையோ தடவை செய்திருக்கிறீர்கள்..."
"செய்திருக்கிறேன். ஆனால் ஒன்றும் பயன்படவில்லை என்கிறாயா? பேசாமல் என்னை ஊருக்குத் திரும்பிப் போகச் சொல்லுகிறாயா?"
"இல்லை, இல்லை! இப்போது நடக்க வேண்டிய காரியம் என்னவென்று சொல்லுங்கள்."
"உன் சகோதரன் அருள்மொழியை உடனே இவ்விடத்துக்கு அழைத்துக் கொள்ள வேண்டும். நீயும் உன் சகோதரனும் பிரிந்திருக்கவே கூடாது..."
"தாத்தா! இது என்ன யோசனை? அருள்மொழி இங்கே வந்துவிட்டால் இலங்கை யுத்தம் என்ன ஆகிறது?"
"இலங்கை யுத்தம் இப்போது ஒரு கட்டத்திற்கு வந்திருக்கிறது, அனுராதபுரத்தைப் பிடித்தாகிவிட்டது. இனி அங்கே மழைக் காலம். இனி நாலு மாதத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது. பிடித்த இடத்தை விட்டுக் கொடாமல் பாதுகாத்து வர வேண்டியதுதான். இதை மற்ற தளபதிகள் செய்வார்கள். அருள்மொழி இச்சமயம் இங்கே இருக்க வேண்டியது மிகவும் அவசியம். கரிகாலா! உண்மையை மூடி மூடி வைப்பதில் பயன் என்ன? விஜயாலய சோழரின் குலத்துக்கும் அவர் அடிகோலிய சோழ சாம்ராஜ்யத்துக்கும் பேராபத்து வந்திருக்கிறது. நீயும் உன்னைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் இப்போது ஒரே இடத்தில் தங்கிச் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்முடைய பலத்தையெல்லாம் திரட்டி வைத்துக் கொள்ளவும் வேண்டும். எப்போது என்ன விதமான அபாயம் வரும் என்று சொல்ல முடியாது.......''
"தாத்தா! இது என்ன இப்படி என்னைப் பயமுறுத்துகிறீர்கள்? என் கையில் வாள் இருக்கும் வரையில் எனக்கு என்ன பயம்? எப்படிப்பட்ட அபாயம் வந்தால் தான் என்ன? தன்னந்தனியாக நின்று சமாளிப்பேன். எத்தகைய அபாயத்துக்கும் நான் பயப்படுகிறவன் அல்ல....."
"பிள்ளாய்! நீ எப்படிப்பட்ட தைரியசாலி என்று எனக்குச் சொல்ல வேண்டுமா? ஆயினும், திருவள்ளுவர் பெருமான் சொல்லியிருப்பதையும் சில சமயம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
"அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்!" என்று அந்த மகான் சொல்லியிருக்கிறார். போர்க்களத்தில் பகைவர்களுக்கு எதிரெதிரே நின்று போரிடும் போது அச்சம் கூடாது. அப்படிப் பயப்படுகிறவன் கோழை. அவ்விதம் பயப்படுகிற பிள்ளை என் வம்சத்தில் பிறந்தால் அவனை நானே இந்தக் கிழடாய்ப் போன வலுவிழந்த கையினால் வெட்டிப் போட்டு விடுவேன். ஆனால் மறைவில் நடக்கிற சதிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் கண்ணுக்குத் தெரியாத அபாயங்களுக்கும் பயப்பட்டேயாக வேண்டும். பயப்பட்டு, அந்தந்த நிலைமைக்குத் தகுந்த முன் ஜாக்கிரதையும் செய்து கொள்ள வேண்டும். அரச குலத்தில் பிறந்து சிம்மாசனத்துக்கு உரியவர்கள் இது விஷயத்தில் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது. இருந்தால் நாட்டுக்கே நாசம் விளையும்."
"தாத்தா! அப்படி என்ன இரகசிய அபாயங்களைத் தாங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? சற்று விளக்கமாகச் சொன்னால்தானே நாங்கள் ஜாக்கிரதையாயிருக்க முடியும்...?"
"சொல்லத்தான் வருகிறேன். சில நாளைக்கு முன்னால் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் அர்த்த ராத்திரி வேளையில் ஒரு கூட்டம் நடந்தது. அதற்குப் பெரிய பழுவேட்டரையர் வந்திருந்தார். இன்னும் தென்னவன் மழவராயர், குன்றத்தூர்க் கிழார், வணங்காமுடி முனையரையர், அஞ்சாத சிங்க முத்தரையர், இரட்டைக் குடை ராஜாளியார் - இவர்கள் எல்லாரும் வந்திருந்தார்களாம். என் காதுக்கு வந்தது இந்தப் பெயர்கள் தான். வேறு பலரும் வந்திருக்கலாம்......"
"வந்திருக்கட்டும்; அதனால் என்ன? எல்லாரும் நடுநிசி வரையில் கூத்தும் கேளிக்கையும் பார்த்துவிட்டு, வயிறு புடைக்கச் சாப்பிட்டு, அதற்கு மேல் மிடாமிடாவாய்க் கள்ளைக் குடித்து விட்டுத் தூங்கப் போயிருப்பார்கள். அதைப் பற்றி நமக்கு என்ன. நீங்கள் சொன்ன தாடி மீசை நரைத்த கிழடுகள் எல்லாம் கூடிப் பேசி என்ன புரட்டி விடுவார்கள்?"
"கிழடுகளைப் பற்றி உனக்கு இவ்வளவு நல்ல அபிப்பிராயம் இருக்கும் பட்சத்தில் நான் என்ன சொல்லி என்ன பயன்? நானும் ஒரு கிழவன் தானே? அவர்கள் எல்லாரையும் விடத் தொண்டு கிழவன் நான்..!"
"தாத்தா! கோபம் வேண்டாம். அந்தக் கையினாலாகாத கிழங்களோடு தங்களை நான் சேர்த்து விடுவேனா? சரி, அப்புறம் என்ன நடந்தது, சொல்லுங்கள்!"
"கையினால் ஆகாக் கிழங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறாய்! அவர்களில் தலைமைப் பெரிய கிழவன் கொஞ்ச நாளைக்கு முன்புதான் கலியாணம் செய்து கொண்டான் என்பதை மறந்து விடாதே! இளம் பெண்ணை மணந்த கிழவனைப் போல் உலகில் அபாயகரமான இளைஞன் யாரும் இல்லை என்பதையும் தெரிந்து கொள்!"
கிழவனின் கல்யாணத்தைப் பற்றிய பேச்சுத் தொடங்கியதும் ஆதித்த கரிகாலனுடைய முகத்தில் ஒரு விசித்திர மாறுதல் உண்டாகியது. அவனுடைய கண்கள் திடீரென்று சிவந்து இரத்த பலி கேட்கும் க்ஷூத்ர தேவதையைப் போல் விழித்தன.உதடுகள் துடிதுடித்தன. பற்கள் நறநறவென்று கடித்துக் கொண்டன.
இதையெல்லாம் மலையமான் கவனிக்கவில்லை. ஆனால் பார்த்திபேந்திரன் கவனித்துக் கொண்டான்.
"அந்தக் கலியாணப் பேச்சு இப்போது என்னத்துக்கு, ஐயா! சம்புவரையர் அரண்மனையில் அப்புறம் என்ன நடந்தது என்பதைச் சொல்லுங்கள்" என்றான் பல்லவ வீரன்.
"அதைத்தான் சொல்ல வந்தேன் ஆனால் வயதாகிவிட்டது அல்லவா? புத்தி தடுமாறி வேறு எங்கேயோ போய் விடுகிறேன்.கேள் கரிகாலா! பார்த்திபேந்திரா! நீயும் கேட்டுக் கொள்! அந்த நள்ளிரவுக் கூட்டம் கிழவர்களின் கூட்டம் மட்டும் அல்ல. சில வாலிபர்களும் அதில் இருந்தார்கள். ஒருவன் சம்புவரையன் மகன் கந்தமாறன். இன்னொருவன்..." என்று தயங்கினதைப் பார்த்து, "யார், தாத்தா? இன்னொருவன் யார்?' என்று கரிகாலன் தூண்டிக் கேட்டான்.
"உன்னுடைய பெரிய பாட்டனார் கண்டராதித்தருடைய திருக்குமாரன், உன்னுடைய சித்தப்பன் - மதுராந்தகத் தேவன்தான்!"
இதைக் கேட்டதும் ஆதித்த கரிகாலனும் பார்த்திபேந்திரனும் கலகலவென்று சிரித்தார்கள்.
"இது என்ன சிரிப்பு! இந்தச் சிரிப்புக்குப் பொருள் என்ன? மறுபடியும் என்னைப் பரிகசிக்கிறீர்களா?" என்று மிலாடுடையார் கேட்டார்.
"இல்லை, தாத்தா! இல்லை! மதுராந்தகனைத் தாங்கள் 'வாலிபன்' என்கிறீர்களே? அதற்காகத்தான் சிரிக்கிறோம். அவன் கிழங்களிலேயெல்லாம் தொண்டுக் கிழடு அல்லவா? பழுத்த சிவஞானக் கிழடு அல்லவா?" என்றான் ஆதித்த கரிகாலன்.
"கிழவனுக்குச் சில சமயம் யௌவனம் திரும்பும் என்று நீ கேள்விப்பட்டது இல்லையா? அதுபோல் மதுராந்தகனுக்கும் இளமை திரும்பியிருக்கிறது. சில நாள் முன்பு வரையில் 'துறவியாகப் போகிறேன்; சிவ கைங்கரியம் செய்யப் போகிறேன்' என்று சொல்லிக் கொண்டிருந்தவன், ஒன்று, இரண்டு, மூன்று என்று கலியாணம் செய்து கொண்டு போகிறான் அல்லவா?....."
"செய்து கொள்ளட்டும். இன்னும் பல கலியாணம் செய்து கொள்ளட்டும்; அதனால் என்ன?"
"தம்பி! மதுராந்தகனின் கலியாணங்கள் சாதாரண கலியாணங்கள் அல்ல. இராஜரீகக் கலியாணங்கள். பழுவேட்டரையர்களின் அந்தரங்க சூழ்ச்சியைச் சேர்ந்த கலியாணங்கள்...!"
"தாத்தா! இன்னும் எதற்காக மர்மமாகவே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? விட்டுச் சொல்லுங்கள்! பழுவேட்டரையர்கள் என்னதான் விரும்புகிறார்கள்? ஊர் ஊராய்ச் சென்று அவர்கள் கூட்டம் போடுவதின் நோக்கம் என்ன? மதுராந்தகத் தேவனை வைத்துக் கொண்டு என்ன செய்யப் பார்க்கிறார்கள்?" என்று ஆதித்த கரிகாலன் கேட்டான்.
"வேறு ஒன்றும் இல்லை. உனக்கும் உன் தம்பிக்கும் இராஜ்ய உரிமை இல்லையென்று செய்துவிட்டு, மதுராந்தகனைச் சோழ நாட்டின் சிம்மாசனத்தில் ஏற்ற எண்ணியிருக்கிறார்கள். அதற்கு உன் தந்தையின் சம்மதத்தைப் பெறுவதற்காகவே அவரைத் தஞ்சைக் கோட்டையில் சிறையில் வைத்திருப்பது போல் வைத்திருக்கிறார்கள்!" என்றார் மிலாடுடையார்.
பக்க தலைப்பு
ஐம்பத்து மூன்றாம் அத்தியாயம் மலையமான் ஆவேசம்
அறிவைப் போலவே ஆற்றலும் ஆற்றலைப் போல அனுபவமும் பெற்று முதிர்ச்சி அடைந்திருந்த திருக்கோவலூர் மலையமான் அரசர் கடைசியாகக் கூறிய வார்த்தைகளைக் கேட்டு, ஆதித்த கரிகாலன் மூர்ச்சையடைந்து விழுந்து விடவில்லைதான்! ஆயினும் சிறிது நேரம் செயல் இழந்து ஸ்தம்பித்து நின்று விட்டான். பார்த்திபேந்திரனும் வாயடைத்துப் போய் மௌனமாகி நின்றான்.கடலும் ஓசை அடங்கி விட்டதாகத் தோன்றியது. தூரத்தில் படகிலிருந்து பண்டங்களை இறக்கி மரக்கலங்களில் ஏற்றுவோரின் 'ஏலேலோ' சத்தங்கூட அச்சமயம் அடங்கி நின்று போயிருந்தது.
வியப்புக்கு இடங்கொடுத்து விட்டதற்காக வெட்கப்பட்ட ஆதித்த கரிகாலன், சட்டென்று பாட்டனார் முகத்தை நிமிர்ந்து நோக்கி, "தாத்தா! இப்படியெல்லாம் நாடு நகரங்களில் சிலர் பேசி வருவதாக என் காதிலும் விழுந்தது.அது வெறும் பொய் வதந்தி என்று எண்ணியிருந்தேன். நீங்கள் இவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறீர்களே? தெரிந்து கொண்டுதான் சொல்கிறீர்களா? இப்படியும் நடக்கக்கூடுமா!" என்றான்.
"ஏன் நடக்க முடியாது? உன் பாட்டனாருக்கு முன்னால் உன் பெரிய பாட்டனார் கண்டராதித்த தேவர்தானே சோழ நாட்டை ஆண்டார்! அவருடைய குமாரனுக்கு உங்களைக் காட்டிலும் அதிக உரிமை இந்த ராஜ்யத்தில் உண்டல்லவா?" என்றார் மலையமான் மிலாடுடையார்.
"இல்லவே இல்லை! அந்த முழு அசடன், நாலு வார்த்தை பேசத் தெரியாதவன், கையில் வாள் எடுத்து அறியாதவன், பெண்ணாய்ப் பிறக்கத் தவறி ஆணாகப் பிறந்தவன் - அவனுக்கு இந்த இராஜ்யம் உரிமையா? பால் மணம் மாறாத பன்னிரண்டாம் பிராயத்தில் போர்க்களம் புகுந்தவர், வீர பாண்டியன் தலை கொண்ட சிங்கம், தோல்வி என்பதையே அறியாத வீராதி வீரர், ஆதித்த கரிகாலருக்கு உரிமையா? ஐயா! மிலாடுடையாரே! வயதாகி விட்டபடியால், தங்களுடைய அறிவு கூட மழுங்கி விட்டதா?" என்று சீறினான் பார்த்திபேந்திரன்.
அவனைக் கரிகாலன் அதட்டி அடக்கி விட்டு, "தாத்தா! எனக்கு இந்த இராஜ்யம் ஒரு பொருட்டு அல்ல. வேண்டுமானால் என் கை வாளின் உதவி கொண்டு இதைப் போன்ற பத்து இராஜ்யங்களை ஸ்தாபித்துக் கொள்வேன். ஆனால் இதில் நியாயம் எப்படி? முதலிலேயே மதுராந்தகனுக்குத்தான் இராஜ்யம் என்று சொல்லியிருந்தால் நான் குறுக்கே நின்றிருக்க மாட்டேன். நாடு அறிய, நகரம் அறிய மக்கள் எல்லாரும் அறிய எனக்குத் தான் அரசுரிமை என்று இளவரசப் பட்டாபிஷேகம் செய்துவிட்டு, இப்போது எப்படி மாறலாம்? உங்களுக்கு இது சம்மதமாயிருக்கிறதா?" என்று கேட்டான்.
"எனக்குச் சம்மதமாயில்லை, ஒரு நாளும் நான் சம்மதிக்கப் போவதுமில்லை. நீ சம்மதித்து இராஜ்யத்தை மதுராந்தகனுக்குக் கொடுப்பதாகச் சொன்னால், முதலில் உன்னை இந்த வாளால் கண்டதுண்டமாய் வெட்டிப் போடுவேன்.பிறகு உன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற உன் தாயை வெட்டிப் போடுவேன். பிறகு உன் தாயைப் பெற்றவனாகிய நானும் என் கையினாலேயே வெட்டிக் கொண்டு சாவேன். என் உடம்பில் உயிர் இருக்கும் வரை இந்தச் சோழ ராஜ்யம் உன்னை விட்டுப் போக விடேன்!" என்று அந்த வயோதிகர் கர்ஜித்தபோது, அவருடைய மங்கிய கண்களில் மின்னொளி வீசியது. உணர்ச்சி ஆவேசத்தில் தளர்ந்து போயிருந்த அவர் உடம்பெல்லாம் நடுங்கியது.
பார்த்திபேந்திரன், "அப்படிச் சொல்லுங்கள், தாத்தா! அப்படிச் சொல்லுங்கள்!" என்று கூவிக் கொண்டே ஓடிவந்து மலையமானைத் தழுவி கொண்டான். அவனுடைய கண்களில் கண்ணீர் பெருகிற்று.
கரிகாலனும் சற்று நேரம் ஆழ்கடலை நோக்கியவாறு இருந்தான். பிறகு பாட்டனாரைப் பார்த்து, "தாத்தா! தங்களுடைய எண்ணம் அதுவானால் தயக்கம் ஏன்? உடனே படை திரட்டிக் கொண்டு தஞ்சைக்குப் புறப்படுவோம். பழுவேட்டரையர்களையும் மற்றும் அவர்களைச் சேர்ந்த மழுவரையர், சம்புவரையர், முத்தரையர், முனையரையர் எல்லோரையும் ஒரேயடியாக ஒழித்து விட்டுத் தஞ்சைக் கோட்டையைப் பிடிப்போம். மதுராந்தகனைச் சிறையில் அடைப்போம். சக்கரவர்த்தியை விடுதலை செய்வோம். தங்களுடைய ஆசி எங்களுக்கு இருந்தால் போதும், நானும் பார்த்திபேந்திரனும் சேர்ந்தால், எங்களை வெல்லக்கூடியவர்கள் இந்தப் பூவுலகில் யார்?" என்று பெருமிதத்துடன் கூறினான்.
"உங்களை போரில் வெல்ல முடியாது; உண்மைதான். ஆனால் சூழ்ச்சியும் சதியும் சேர்ந்து எதிர்த்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? படையுடன் நீங்கள் தஞ்சையை நெருங்கும் போதே, பெற்ற தகப்பனுடன் மகன் யுத்தம் செய்ய வருவதாகக் கதை கட்டி விடுவார்கள்! அந்த அவமானத்தைத் தாங்காமல் சக்கரவர்த்தி உயிரை விட்டு விட்டார் என்றும் சொல்லி விடுவார்கள். அதை நம்புகிற ஜனங்களும் இருக்கக்கூடும் அல்லவா? அந்த நிலைமையில், நீதான் என்ன செய்வாய், குழந்தாய்! உன் மனமும் தளர்ச்சி அடைந்து விடும்! பெற்ற தகப்பனோடு யுத்தம் செய்ய வந்தவன் என்ற பழிச் சொல்லை உன்னால் தாங்க முடியுமா?"
ஆதித்த கரிகாலன் தன் செவிகளைப் பொத்திக் கொண்டு, "சிவ சிவா! கேட்கச் சகிக்கவில்லை!" என்றான்.
"அதனால்தான் முதலிலேயே நான் சொன்னேன்;-- பெரிய அபாயம் நம்மைச் சூழ்ந்திருக்கிறது என்று!"
"உபாயம் என்ன, தாத்தா! உபாயம் என்ன?"
"முதலில் இலங்கைக்கு நம்பிக்கையான ஆள் ஒருவனை அனுப்ப வேண்டும். அனுப்பி, அருள்மொழியை அழைத்து வரச் செய்ய வேண்டும். அவன் போர்க்களத்தை விட்டு, தன் கீழுள்ள போர் வீரர்களை விட்டு, இலேசில் வரமாட்டான். அவன் மனத்தைத் திருப்பி அழைத்து வரக்கூடிய ஆற்றல் உள்ளவன் ஒருவனை அனுப்ப வேண்டும்......"
பார்த்திபேந்திரன் முன் வந்து, "ஐயா! நீங்கள் சம்மதம் கொடுத்தால் நானே போய் அழைத்து வருகிறேன்!" என்றான்.
"அது கரிகாலன் இஷ்டம்; உன் இஷ்டம். ஆனால் போகிறவன் வந்தியத்தேவனைப் போல் சம்பந்தமில்லாத காரியங்களில் தலையிடக் கூடாது....."
"பார்த்தீர்களா? நான் சொன்னேனே?" என்றான் பார்த்திபேந்திரன்.
"வந்தியத்தேவனைப் பற்றித் தங்களுக்கு ஏதாவது தகவல் வந்திருக்கிறதா, தாத்தா?" என்று ஆதித்த கரிகாலன் கேட்டான்.
"அவனைப் பற்றி முதலில் எனக்குச் சந்தேகமாகக் கூட இருந்தது, அவனும் நம் எதிரிகளுடன் சேர்ந்து விட்டானோ என்று. அப்புறம் அந்தச் சந்தேகம் தௌிந்தது."
"பார்த்தாயா, பார்த்திபேந்திரா!" என்றான் கரிகாலன்.
"அவர் முழுவதும் சொல்லட்டும். அதற்குள் அவசரப்படுகிறீர்களே? ஐயா! வந்தியத்தேவன் பேரில் தங்களுக்கு என்ன சந்தேகம் வந்தது?"
"சம்புவரையர் மாளிகையில் கூட்டம் நடந்த அன்று அவனும் அங்கிருந்தான் என்று அறிந்தேன். ஆனால் சதியில் அவனுக்குச் சம்பந்தமில்லையென்று பிறகு தெரிந்து கொண்டேன்."
"தாத்தா! இதெல்லாம் எப்படித் தங்களுக்குத் தெரிந்தது?"
"கடம்பூர் மாளிகை விருந்துக்கு எனக்கு அழைப்பு வரவில்லை. அதிலேயே கொஞ்சம் சந்தேகம் உண்டாயிற்று. பிறகு, அங்கு வந்துவிட்டுத் திரும்பி ஊருக்குச் சென்ற குன்றத்தூர்க் கிழாரை வழியில் சிறைப்படுத்தி என் மலைக் கோட்டைச் சிறைக்குக் கொண்டு போனேன். அவரிடமிருந்து அங்கு நடந்தவைகளையெல்லாம் தெரிந்து கொண்டேன். வந்தியத்தேவன் சம்புவரையர் மகன் கந்தமாறனின் சிநேகிதனாம்....."
"ஆமாம்; நம்முடைய சைன்யத்திலே இருவரும் இருந்தவர்கள் தானே? வடபெண்ணைக் கரையில் இருவரும் காவல் புரிந்தார்கள். அதிலிருந்து அவர்களுக்குச் சிநேகிதம் ஏற்பட்டிருந்தது எனக்குத் தெரியும்..."
"எப்படியோ, வந்தியத்தேவன் அன்றைக்கு அம்மாளிகையில் இருந்தான். அவன் சதியில் சம்பந்தப்பட்டானா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமலிருந்தது. பிறகு அதற்கு ஒரு வழி கிடைத்தது. தஞ்சைக் கோட்டைக்குள் கந்தமாறனுடைய முதுகில் வந்தியத்தேவன் குத்திவிட்டுத் தப்பித்துச் சென்று விட்டான் என்று தெரிந்ததும்..."
"தாத்தா! இதை ஒரு நாளும் நான் நம்பமாட்டேன். வந்தியத்தேவன் வேறு எது செய்தாலும் செய்யாவிட்டாலும் ஒருவனுடைய முதுகில் குத்தக் கூடியவன் அல்ல. அதிலும் சிநேகிதனுடைய முதுகில் குத்தக் கூடிய சண்டாளன் அல்ல....."
"அந்தச் சிநேகிதன் தன் எஜமானுக்கு விரோதமான சதியில் ஈடுபட்டவன் என்று தெரிய வந்தால்? இவனையும் அந்தச் சதியில் சேர்ப்பதற்கு அந்தச் சிநேகிதன் ஒருவேளை முயற்சி செய்திருந்தால்?....."
"எப்படியிருந்தாலும் முகத்துக்கு முகம் நின்று சண்டையிட்டிருப்பானே தவிர ஒரு நாளும் முதுகில் குத்தியிருக்க மாட்டான்!"
"உன் சிநேகிதனிடம் உன்னுடைய நம்பிக்கையை வியக்கிறேன், தம்பி! உண்மை எப்படியோ இருக்கட்டும். கந்தமாறனுடைய முதுகில் குத்தியதாக வந்தியத்தேவன் பேரில் பழுவேட்டரையர்கள் குற்றம் சுமத்தி அவனை வேட்டையாடி வருகிறார்கள். இவ்வளவுதான் எனக்குத் தெரியும். ஆகையால், வந்தியத்தேவனுக்கும் கந்தமாறனுக்கும் ஏதோ ஒரு விதத்தில் சண்டை வந்திருக்க வேண்டும். இதிலிருந்து அவன் உனக்கு எதிரான சதியில் சேர்ந்திருக்கவில்லை என்று நிச்சயமாகிறதல்லவா?"
"அதற்கு இவ்வளவு தூரம் சாட்சியம் வேண்டியதில்லை. வந்தியத்தேவன் நம் விரோதிகளுடன் சேர்வது என்றால், அப்போது இந்தப் பூமியே தலைகீழாகி விடும். அலை கடல் வறண்டு விடும். வானம் இடிந்து விழும். சூரியன் இராத்திரியில் உதிப்பான். சோழர் குலம் சர்வ நாசத்தை அடையும்....." என்று ஆதித்த கரிகாலன் பரபரப்போடு கூறினான்.
"இளவரசர் சொல்லுவதை நானும் ஒத்துக் கொள்வேன். வந்தியத்தேவன் ஒருநாளும் நமக்குத் துரோகம் செய்து எதிரிகளுடன் சேர மாட்டான். அவனிடம் நான் சொல்லும் குற்றம் ஒன்றே ஒன்றுதான். அழகான பெண் முகத்தைக் கண்டால் வந்தியத்தேவன் தலை கிறுகிறுத்து விடுவான். அவனுடைய மதி மயங்கிவிடும்!"
இதைக் கேட்ட ஆதித்த கரிகாலன் புன்னகை புரிந்தான். "அது தெரிந்திருந்தபடியால்தான் சக்கரவர்த்தியிடம் ஓலையைக் கொடுத்துவிட்டு, இளையபிராட்டியிடம் போகும்படி அவனை அனுப்பினேன். இளவரசியை ஒரு தடவை அவன் பார்த்து விட்டால், அப்புறம் தப்புவது ஏது? அவளுக்கு அடிமையாக இருக்க வேண்டியதுதானே?" என்றான்.
உடனே மலையமான் மிலாடுடையார், "ஓகோ! அப்படியா வந்தியத்தேவனுக்குச் சொல்லி அனுப்பியிருக்கிறாய்? எனக்கு தெரியாமல் போயிற்றே? தஞ்சாவூரை விட்டுக் கிளம்பிய பிறகு வந்தியத்தேவனிடமிருந்து ஏதாவது செய்தி வந்ததா? அல்லது இளையபிராட்டியிடமிருந்தாவது செய்தி வந்ததா?" என்றார்.
"ஒவ்வொரு நிமிஷமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை ஒன்றும் செய்தி வரவில்லை..."
"அருள்மொழி இவ்விடம் வந்த பிறகு உன் சகோதரியையும் இங்கே தருவித்து விட வேண்டியதுதான். அப்புறம் நமக்கு ஒரு கவலையும் இல்லை.இளையபிராட்டியிடம் எல்லா யோசனையையும் விட்டுவிட்டு அவள் சொல்கிறபடி நாம் கேட்டு நடந்து வந்தால் போதும்!..."
"தாத்தா! இது விஷயத்தில் வந்தியத்தேவனைக் காட்டிலும் தாங்கள் மோசமாயிருக்கிறீர்களே?"
"ஆம் கரிகாலா! உன் சகோதரி இரண்டு வயதுக் குழந்தையாயிருந்த போதே கொடுங்கோலைக் கையில் பிடித்து விட்டாள். என்னையும் உன் பாட்டியையும் தாய் தகப்பனையும் தன் இஷ்டப்படி ஆட்டி வந்தாள். இப்போதும் என் வரையில் அப்படித்தான். அவள் வைத்ததே எனக்குச் சட்டம். கரிகாலா! உன் சகோதரியைப் பற்றிச் சொன்னால் உனக்கு அது குறைவு என்று நினைக்காதே! உனக்கு அது பெருமையே தவிர வேறில்லை. இளையபிராட்டி குந்தவையைப் போன்ற அறிவுச் செல்வத்தைப் படைத்தவர் ஆண்களிலோ, பெண்களிலோ இது வரையில் பிறந்ததில்லை. நமது முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் எப்படிப்பட்டவர் என்பது உனக்குத் தெரியுமில்லையா? அவரே இளையபிராட்டியிடம் யோசனை கேட்பார் என்றால், வேறு என்ன சொல்ல வேண்டும்?" என்று மிலாடுடையார் ஒரே பரவசமாகப் பேசினார்.
வந்தியத்தேவனிடம் அசூயை கொண்ட பார்த்திபேந்திரன், "அதெல்லாம் சரிதான்; யார் இல்லை என்றார்கள்? ஆனால் ஒருவேளை வந்தியத்தேவன் இளையபிராட்டியைப் பார்ப்பதற்கு முன்னால் வேறு ஒரு பெண் முகத்தைப் பார்த்து மயங்கியிருந்தால் என்ன செய்வது? உதாரணமாக, அந்தப் பழுவூர் இளையராணி என்கிற மோகினியைப் பார்த்திருந்தால்?..." என்றான். கடைசி வார்த்தைகளை அவன் சற்றுத் தாழ்ந்த குரலில் கூறியபடியால், கிழவரின் காதில் அது விழவில்லை. ஆனால் ஆதித்த கரிகாலன் காதில் விழுந்தது. அவன் சட்டென்று திரும்பிக் கண்களில் தீப்பொறி பறக்கப் பார்த்திபேந்திரனைப் பார்த்தான். அந்தப் பார்வை பல்லவ வீரனைக் கதிகலங்கச் செய்து விட்டது.
மலையமான் பாறையிலிருந்து எழுந்து நின்று, "பார்த்திபேந்திரா! நீ நாளைக்கே இலங்கைக்குப் புறப்படுகிறாய் அல்லவா? வாலிபர்களாகிய உங்களுக்குப் பேசுவதற்கு எவ்வளவோ இருக்கும். நான் கிழவன், மெள்ள மெள்ள அரண்மனைக்குப் போய்ச் சேர்கிறேன். நீங்கள் பேச வேண்டியதைப் பேசிவிட்டுச் சாவகாசமாக வந்து சேருங்கள்!" என்றார்.
அவர் சற்றுத் தூரம் சென்ற பிறகு பார்த்திபேந்திரன் ஆதித்த கரிகாலனைப் பார்த்து, "அரசே! என் தலைவா! தங்கள் மனத்தில் ஏதோ ஒரு சங்கடம் குடிகொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வேதனை தங்கள் உள்ளத்தை அரித்துக் கொண்டிருக்கிறது. அது பழுவூர் இளையராணி சம்பந்தமானது என்பதை நான் அறிவேன். பெரிய பழுவேட்டரையரின் கலியாணத்தைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் தங்கள் தோற்றமே மாறிவிடுகிறது. தங்கள் கண்கள் சிவந்து அனலைக் கக்குகின்றன. எத்தனை காலம் இந்த வேதனையைத் தங்கள் மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டு புழுங்கப் போகிறீர்கள்? என்னைத் தங்கள் 'உயிருக்கு உயிரான சிநேகிதன்' என்று ஆயிரந்தடவை கூறியிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட சிநேகிதனிடம் தங்கள் உள்ளத்தைத் திறந்து காட்டக் கூடாதா? வேதனை இன்னதென்பதை எனக்குச் சொல்லக் கூடாதா? பரிகாரம் ஏதாவது கண்டுபிடித்துச் சொல்ல எனக்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்கக் கூடாதா? தாங்கள் மனத்திற்குள்ளே வேதனைப்பட்டுப் புழுங்குவதைப் பார்த்துக் கொண்டு எத்தனை நாள்தான் நான் சும்மா இருக்க முடியும்?" என்று அடங்கா ஆர்வத்தோடு கூறினான்.
ஆதித்த கரிகாலன் ஒரு நெடிய பெருமூச்சு விட்டு, "நண்பா! என் மன வேதனை என்றும் தீராத வேதனை.என் உயிரோடு மடிய வேண்டிய வேதனை. அதற்குப் பரிகாரமே கிடையாது. ஆயினும் உன்னிடம் சொல்லக் கூடாது என்பதில்லை. இன்றிரவு சொல்லுகிறேன். இப்போது கிழவருடன் அரண்மனைக்குப் போய்ச் சேர்வோம். அவரைத் தனியாக அனுப்புவது உசிதமில்லை!" என்று கூறிப் பாறையிலிருந்து எழுந்தான்.
பக்க தலைப்பு
ஐம்பத்து நான்காம் அத்தியாயம் "நஞ்சினும் கொடியாள்"
மாமல்லபுரத்தில் பழைய பல்லவ சக்கரவர்த்திகளின் மாளிகை ஒன்றில் அன்றிரவு அம்மூன்று வீரசிகாமணிகளும் தங்கினார்கள். இரவு உணவு அருந்தியானதும் மலையமான் அரசர் ஐந்து ரதங்களுக்கு அருகில் அரவான் கதை நடக்கிறது என்று கேள்விப்பட்டு அதைக் கேட்கப் போய் விட்டார். ஆதித்த கரிகாலனும் பார்த்திபேந்திரனும் அரண்மனை மேல் மாடத்துக்குச் சென்றார்கள்.
மேல்மாடத்திலிருந்து ஆதித்த கரிகாலன் மாமல்லபுரத்தின் இரவுத் தோற்றத்தைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். ஆங்காங்கு மினுக்கு மினுக்கு என்று சில தீபங்கள் மங்கலாகப் பிரகாசித்தன. வீதிகளில் பெரும்பாலும் நிசப்தம் குடிகொண்டிருந்தது. கோவில்களில் அர்த்தஜாம பூஜை முடிந்து வௌிக் கதவுகளைச் சாத்திக் கொண்டிருந்தார்கள். சமுத்திரத்தின் கோஷம் 'ஓ' வென்று சோகத் தொனியாகக் கேட்டது.ஐந்து ரதங்களுக்குப் பக்கத்தில் வில்லுப்பாட்டு வித்வானும் அவருடைய கோஷ்டியும் அரவான் கதை நடத்த, அவர்களைச் சூழ்ந்து கதை கேட்டுக் கொண்டிருந்த ஜனக் கூட்டம் தீவர்த்திகளின் ஒளியில் கரிய நிழல் உருவங்களாகத் தெரிந்தனர்.
"இந்த முதிர்ந்த வயதில் கிழவர் கதை கேட்கப் போய் விட்டார், பார்! என்ன இருந்தாலும் பழைய காலத்து மனிதர்கள்தான் மனிதர்கள்! அவர்களுடைய உடல் வலிமையும் மனோதிடமும் இந்த நாளில் யாருக்கு உண்டு?" என்றான் ஆதித்த கரிகாலன்.
"அரசே! தாங்களும் பழைய காலத்தின் பெருமையைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்து விட்டீர்களா? பழைய கால மனிதர்கள் சாதித்த என்ன காரியத்தை நம் காலத்தில் நாம் சாதிக்கவில்லை? தங்களைப் போல் இளம் பருவத்தில் போர்க்களத்தில் வீரச் செயல் புரிந்தவர்களைப் பற்றிக் கதைகளிலும் காவியத்திலும் கூடக் கேட்டதில்லையே?" என்றான் பார்த்திபேந்திரன்.
"பார்த்திபா! நீ உண்மை உள்ளம் படைத்தவன். மனத்தில் ஒன்று வைத்துக் கொண்டு வாயினால் ஒன்று பேசாதவன் என்பதை நன்கு அறிந்திருக்கிறேன். இல்லாவிட்டால் நீ என்னுடைய நண்பன் அல்ல, இத சத்ரு என்றே சந்தேகிப்பேன். அவ்வளவு தூரம் என்னைக் குறித்து நீ முகஸ்துதி செய்கிறாய். முகஸ்துதியைப் போல் ஒருவனைப் பாதாளப் படுகுழியில் தள்ளக்கூடியது வேறொன்றுமில்லை!" என்றான் ஆதித்த கரிகாலன்.
"ஐயா! சுயநல நோக்கத்துடன் ஒருவனைப் பற்றி இல்லாத உயர்வைப் புனைந்து சொன்னால் அது முகஸ்துதியாகும். தஞ்சாவூரில் பழுவேட்டரையர்களின் அடிமையாக இருக்கிறானே மதுராந்தகன், அவனிடம் சென்று 'நீ வீராதி வீரன்' என்று நான் புகழ்ந்தால் அது முகஸ்துதியாகும். அப்படி நான் எப்போதாவது செய்ததாகத் தெரிந்தால் என்னை உடனே தங்கள் கையிலுள்ள வாளினால் கொன்று விடுங்கள். தங்களைப் பற்றி நான் சொன்னதில் ஒரு வார்த்தை கூட அதிகம் இல்லையே? பழைய காலத்தில் எந்த வீரன் இவ்வளவு இளம் வயதில் இத்தனை பெரிய காரியங்களைச் சாதித்திருக்கிறான்! தங்கள் பெரிய பாட்டனாராகிய யானை மேல் துஞ்சின இராஜாதித்தியரை ஒருவேளை தங்களுக்குச் சமமாக வேணுமானால் சொல்லலாம்; தங்களை விட அதிகம் என்று அவரையும் சொல்ல முடியாது..."
"நிறுத்து, பார்த்திபா, நிறுத்து! இராஜாதித்யர் எங்கே? நான் எங்கே? மகா சமுத்திரம் போல் பொங்கி வந்த இராஷ்டிர கூடர்களின் மாபெரும் சைன்யத்தை ஒரு சின்னஞ்சிறு படையை வைத்துக் கொண்டு எதிர்த்து நிர்மூலமாக்கி வீர சொர்க்கம் அடைந்த இராஜாதித்தியரைப் பற்றிப் பேசுவதற்கே நாம் தகுதியற்றவர்கள். அவருடன் நம்மை ஒப்பிட்டுக் கொள்வதா? சோழ குலம் இருக்கட்டும்; நீ பிறந்த பல்லவ குலத்தில் முற்காலத்தில் எப்பேர்ப்பட்ட மகாபுருஷர்கள் இருந்தார்கள்! மகேந்திரவர்மரையும் மாமல்லரையும் இனி இந்த நாட்டில் எப்போதாவது காணப் போகிறோமா? தெற்கே துங்கபத்திரையிலிருந்து வடக்கே நர்மதை வரையில் ஒரு குடை நிழலில் ஆண்ட புலிகேசியை வென்று வாதாபியை அழித்து ஜயஸ்தம்பம் நாட்டிய நரசிம்மவர்மர் எங்கே? நீயும் நானும் எங்கே? இந்த மாமல்லபுரத்தைப் போல் ஒரு சொப்பனபுரியை நம்முடைய காலத்திலோ நமக்குப் பிற்காலத்திலோ யாராவது சிருஷ்டி செய்ய முடியுமா?.... அடடா! ஒரு தடவை நாலு புறமும் நன்றாய்ப் பார், பார்த்திபா! அதோ வில்லுப் பாட்டு நடக்கிறதே, அங்கே உற்றுப் பார்! அம்மாதிரி கற்பாறைகளைக் குடைந்து அற்புத ரதங்களின் வடிவங்களிலே அமைத்தவர்கள் சாதாரண மனிதர்களா? முந்நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாமல்லபுரம் எத்தகைய கோலாகலமான காட்சி அளித்திருக்க வேண்டுமென்று நினைக்கும் போதே எனக்கு உடம்பு சிலிர்க்கிறது! உனக்கு அத்தகைய உணர்ச்சி உண்டாகவில்லையா? உன் முன்னோர்களைப் பற்றி எண்ணும்போது உன் தோள்கள் பூரிக்க வில்லையா?"
"அரசே! சற்று முன்பு தங்களை முகஸ்துதி செய்வதாகச் சொன்னீர்களே? சில சமயம் தங்களிடமுள்ள குற்றங்குறைகளையும் நான் எடுத்துச் சொல்வதுண்டு என்பதை மறந்து விட்டீர்கள். சிற்பம் - சித்திரம் - கலை என்று வாழ்நாளை வீணாக அடிக்கும் பைத்தியம் தங்களையும் பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பைத்தியம் பிடித்ததினாலேதான் என் முன்னோர்கள் அடைந்த வெற்றியெல்லாம் வீணாக ஆயிற்று. வாதாபிக்குச் சென்று ஜயஸ்தம்பம் நாட்டி விட்டு மாமல்லர் திரும்பி வந்தாரே? பிறகு என்ன செய்தார்? கற்களைச் செதுக்கிக் கொண்டும் பாறைகளைக் குடைந்து கொண்டும் உட்கார்ந்திருந்தார்! அதன் பலன் என்ன? சில காலத்துக்கெல்லாம் மறுபடியும் சளுக்கர்கள் தழைத்தோங்கினார்கள். பெரும்படையுடன் மீண்டும் பழிவாங்குவதற்கு வந்தார்கள். காஞ்சியையும் உறையூரையும் அழித்தார்கள். மதுரை வரையில் சென்றார்கள். நெடுமாற பாண்டியன் மட்டும் நெல்வேலியில் சளுக்கர் படையைத் தடுத்து நிறுத்தித் தோற்கடித்திராவிட்டால் இன்று வரை இத்தென்னாடு முழுதும் சளுக்கர் ஆட்சியில் இருந்திருக்கும் அல்லவா?"
"இல்லை, பார்த்திபா, இல்லை! உலகில் எந்த அரச குலமும் என்றென்றைக்கும் நீடித்திருந்ததாக நாம் கேள்விப்பட்டதில்லை. இராமர் பிறந்த இக்ஷவாகு குலத்துக்கும் ஒரு முடிவு ஏற்பட்டது. சளுக்கர்களை வீழ்த்த இரட்டை மண்டலத்தார் தோன்றினார்கள். இராஜ்யங்கள் சில சமயம் உன்னத நிலைமை அடைவதும் சில சமயம் தாழ்ச்சி உறுவதும் இயல்பு. சில இராஜ்யங்கள் சில காலம் எவ்வளவோ உன்னதமாக இருந்து விட்டு இருந்த இடம் தெரியாமல் போய் விடுகின்றன. என்னுடைய முன்னோர்களையே பார்! கரிகால்வளவன், கிள்ளிவளவன் முதலிய சோழ மன்னர்கள் எவ்வளவோ சீரும் சிறப்புமாயிருந்தார்கள். அவர்களையெல்லாம் பற்றி இப்போது நமக்கு என்ன தெரிந்திருக்கிறது? கவிஞர்கள் சிலர் அவர்களைப் புகழ்ந்து பாடியிருப்பதனால் அவர்கள் பேரையாவது தெரிந்து கொண்டிருக்கிறோம். கவி பாடிய பாணர்கள் உண்மையைத்தான் பாடினார்களோ, அல்லது நன்றாக மதுபானம் செய்துவிட்டு, மனம் போன போக்கில் பாடினார்களோ, நமக்குத் தெரியாது. ஆனால் மகேந்திர பல்லவரும் மாமல்லரும் இந்தச் சிற்பபுரியைச் சிருஷ்டித்தார்களே, இது ஆயிரமாயிரம் ஆண்டு காலம் அவர்களுடைய பெருமையை உலகத்துக்கு உணர்த்திக் கொண்டிருக்கும். அவர்கள் செய்த காரியத்துக்கு ஈடாக நீயும் நானும் என்ன செய்திருக்கிறோம்! போர்க்களத்திலே பல்லாயிரம் மனிதர்களைக் கொன்று குவித்திருக்கிறோம்; இரத்த வெள்ளம் ஓடச் செய்திருக்கிறோம். உலகில் நம் பெயரை நிலைநிறுத்த வேறு என்ன செய்திருக்கிறோம்?"
இதைக் கேட்ட பார்த்திபேந்திரன் இவ்விதம் பேசுவது ஆதித்த கரிகாலன்தானா என்று ஐயுறும் பாவனையுடன் சிறிது நேரம் திகைத்திருந்தான். பிறகு ஒரு பெருமூச்சு விட்டு, "அரசே! போரையும் வீரத்தையும் குறித்துத் தாங்களே இவ்விதம் பேசுவது என்றால், நான் என்ன சொல்வதற்கு இருக்கிறது? தங்களுடைய மனம் இன்று சரியான நிலையில் இல்லை. ஆகையினாலேயே இப்படிப் பேசுகிறீர்கள்! ஐயா! தங்கள் மனத்திலுள்ள வேதனை இன்னதென்பதை எனக்குச் சொல்லலாகாதா? தங்களுடைய வயிர நெஞ்சத்தைச் சிறிது திறந்து காட்டக் கூடாதா?" என்று ஆவலோடு கேட்டான்.
"பார்த்திபா! என் நெஞ்சைப் பிளந்து காட்டினேனாயின், அதற்குள்ளே என்ன இருக்கும், - எவர் இருப்பர் என்று நினைக்கிறாய்?"
"அதைத்தான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன், சுவாமி!"
"என்னைப் பெற்ற தாயும் தந்தையும் இருக்க மாட்டார்கள். என் உயிரினும் இனிய தங்கையும் தம்பியும் இருக்க மாட்டார்கள். என் உயிருக்குயிராகிய நண்பர்களாகிய நீயும் வந்தியத்தேவனும் இருக்க மாட்டீர்கள். வஞ்சகமே வடிவான ஒரு பெண் அதில் இருப்பாள். பாவமே உருவான பழுவூர் இளையராணி அதில் இருப்பாள். நஞ்சினும் கொடியவளான நந்தினி என் நெஞ்சுக்குள்ளே இருந்து என்னைப் படுத்தி வைக்கும் பாட்டை இன்று வரை வாயைத் திறந்து யாரிடமும் சொன்னதில்லை. உன்னிடந்தான் இன்று சொன்னேன்!" என்று ஆதித்த கரிகாலன் கூறிய வார்த்தைகளில் தணலின் ஜூவாலை வீசிற்று.
"அரசே! அதை ஒருவாறு நான் ஊகித்தேன். பழுவூர் இளையராணியின் பேச்சு வரும்போதெல்லாம் தங்கள் முகம் கறுத்துக் கண்கள் சிவந்து சொல்ல முடியாத மனவேதனையை வௌியிட்டதைக் கொண்டு அறிந்தேன். ஆனால் இந்தத் தகுதியில்லா மோகம் எப்படித் தங்கள் நெஞ்சில் இடம்பெற்றது? அன்னியப் பெண்களையெல்லாம் அன்னையெனக் கருதும் மரபில் தாங்கள் வந்தவராயிற்றே? பழுவேட்டரையர் தங்கள் குலத்துக்கு நெடுங்கால உறவினர்; பிராயம் முதிர்ந்தவர். இன்றைக்கு அவர்கள் நமக்குப் பகைவர்களானாலும் முன்னால் அப்படியில்லையே? தங்கள் தந்தையும் பாட்டனாரும் அவரை எவ்வளவு மதித்து மரியாதை செய்தார்கள்? அப்படிப்பட்டவர் அக்னி சாட்சியாக மணந்து கொண்ட பெண்ணை... அவள் எவ்வளவுதான் கெட்டவளானாலும்...தாங்கள் மனத்திலும் கருதலாமா?"
"கூடாது, பார்த்திபா, கூடாது! அது எனக்குத் தெரியாது என்றா நினைக்கிறாய்? தெரிந்திருப்பதினாலேதான் இந்த மனவேதனை. அவள் பழுவேட்டரையரை மணந்த பிறகு என் நெஞ்சில் இடம் பெறவில்லை. அதற்கு வெகு காலம் முன்பே என் உள்ளத்தில் அவளுடைய மோக விஷம் ஏறிவிட்டது. அதைக் களைந்தெறிய எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. குற்றம் எல்லாம் அவள் பேரில் என்று தோன்றும்படி நான் பேசுகிறேன். குற்றம் யாருடையது என்பதைக் கடவுளே அறிவார். பார்க்கப் போனால், பாவம் பழியெல்லாம் எங்களைப் படைத்த கடவுள் தலையிலேயே விழ வேண்டும். அல்லது எங்களைச் சந்திக்கப் பண்ணிப் பின்னர் பிரித்து வைத்த விதியின் பேரில் குற்றம் சொல்ல வேண்டும்!"
"அரசே! நந்தினி பழுவூர் ராணியாவதற்கு முன்னால் தாங்கள் அவளைச் சந்தித்ததுண்டா? எங்கே, எப்போது எப்படிச் சந்தித்தீர்கள்?"
"அது பெரிய கதை. இன்றைக்கு அதைக் கேட்க விரும்புகிறாயா?"
"கட்டாயம் கேட்க விரும்புகிறேன். அதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கு மன நிம்மதியிராது. நாளைக்கு இலங்கை போகச் சொல்லுகிறீர்களே? அங்கே சென்று என் கடமையைச் சரிவரச் செய்ய முடியாது. நிலைமை இன்னதென்பதைத் தெரிந்து கொண்டு தங்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுப் போனால்தான் என் உள்ளம் ஒருவாறு நிம்மதி அடையும்!"
"நண்பா! எனக்கு ஆறுதல் சொல்லப் போகிறாயா? இந்த ஜன்மத்தில் எனக்கு ஆறுதல் என்பது கிடையாது. அடுத்த பிறவியில் உண்டா என்பதும் சந்தேகம் தான். உன்னுடைய மன நிம்மதிக்காகச் சொல்கிறேன். உன்னிடம் சொல்லாமல் நான் எதையோ ஒளித்து வைத்திருப்பதாக எண்ணிக் கொண்டு நீ இலங்கை போக வேண்டியதில்லை!"
இவ்விதம் கூறி ஆதித்த கரிகாலன் சிறிது நிதானித்தான். பிறகு ஒரு நெடிய பெருமூச்சு விட்டு விட்டுச் சொல்லத் தொடங்கினான்.
பக்க தலைப்பு
ஐம்பத்தைந்தாம் அத்தியாயம் நந்தினியின் காதலன்
"முதன் முதலாக என்னுடைய பன்னிரண்டாம் பிராயத்தில் நந்தினியை நான் சந்தித்தேன். ஒருநாள் பழையாறையில் எங்கள் அரண்மனையின் பின்புறத்திலுள்ள நீர் ஓடையில் நானும் என் தங்கையும் தம்பியும் ஓடம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். விளையாட்டு முடிந்து ஓடத்திலிருந்து இறங்கிப் பூஞ்சோலை வழியாக அரண்மனைக்குச் சென்றோம். வழியில் எங்கள் பெரிய பாட்டி செம்பியன் மாதேவியின் குரல் கேட்டது. நாங்கள் மூன்று பேரும் பாட்டியிடம் செல்லமாக வளர்ந்தவர்கள். பாட்டியிடம் நாங்கள் ஓடம் விட்டதைப் பற்றிச் சொல்வதற்காக அவருடைய குரல் கேட்ட கொடி வீட்டுக்குள் புகுந்தோம். அங்கே பாட்டியைத் தவிர இன்னும் மூன்று பேர் இருந்தார்கள். மூன்று பேரில் ஒருத்தி எங்களையொத்த பிராயத்துச் சிறு பெண். மற்ற இருவரும் அவளுடைய பெற்றோர்கள் என்று தெரிந்தது. அந்தப் பெண்ணைப் பற்றி அவர்கள் ஏதோ மாதேவடிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் கொடி வீட்டுக்குள் புகுந்ததும் அங்கிருந்த எல்லாரும் எங்களைப் பார்த்தார்கள். ஆனால் அந்தச் சிறு பெண்ணின் வியப்பினால் விரிந்த நெடிய கண்கள் எங்களைப் பார்த்தது மட்டுமே என் கண்ணுக்குத் தெரிந்தது. அந்தக் காட்சி இன்றைக்கு நினைத்துப் பார்த்தாலும் என் மனக்கண் முன்னால் நிற்கிறது..."
இவ்விதம் கூறிக் கரிகாலன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு மௌனமாயிருந்தான். வானத்தில் அச்சமயம் உலாவிய மெல்லிய மேகத் திரைகளுக்குள்ளே அந்தச் சிறு பெண்ணின் முகத்தை அவன் பார்த்தானோ என்னமோ தெரியாது.
"ஐயா! அப்புறம் சொல்லுங்கள்!" என்று பார்த்திபேந்திரன் கேட்டதும், கரிகாலன் இந்த உலகத்துக்கு வந்து கதையைத் தொடர்ந்தான்:
"பாட்டியிடம் ஓடம் விட்டு விளையாடியதைப் பற்றி என் தங்கை குந்தவை தான் சொன்னாள். அதைக் கேட்ட பிறகு, மாதேவடிகள், "என் கண்ணே! இந்தப் பெண்ணைப் பார்த்தாயா? எவ்வளவு சூடிகையாயிருக்கிறாள்? இவர்கள் பாண்டிய தேசத்திலிருந்து நம்முடைய ஈசான சிவபட்டர் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்.கொஞ்ச நாளைக்கு இங்கே இருப்பார்கள். இந்தப் பெண்ணின் பெயர் நந்தினி, இவளையும் சில சமயம் உங்கள் விளையாட்டுக்களில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவள் உனக்கு நல்ல தோழியாயிருப்பாள்!" என்றார். ஆனால் என் தங்கைக்கு இது பிடிக்கவில்லையென்பதை நான் அறிந்து கொண்டேன். நாங்கள் மூவரும் அங்கிருந்து அரண்மனைக்குச் சென்ற போது குந்தவை, 'அண்ணா! அங்கே ஒரு பெண் நின்றாளே? எவ்வளவு அவலட்சணமாயிருந்தாள் பார்த்தாயா? அவளுடைய முகம் ஏன் அப்படிக் கோட்டான் முகம் மாதிரி இருக்கிறது? அவளுடன் நான் விளையாட வேண்டும் என்கிறாரே, பாட்டி? அவள் முகத்தைப் பார்த்தால் என்னால் சிரிக்காமலிருக்கவே முடியாதே! என்ன செய்வது?" என்றாள். இதைக் கேட்டதும் எனக்கு ஒரு முக்கியமான உண்மை தெரிய வந்தது. அதாவது பெண்கள் பிறக்கும்போதே பொறாமையுடன் பிறக்கிறார்கள் என்பதுதான். ஒரு பெண் எவ்வளவு அழகுடையவளாயிருந்தாலும் இன்னொரு பெண் அழகாயிருப்பதைக் காணச் சகிப்பதில்லை.
"எங்கள் குலத்தில் பிறந்த பெண்களுக்குள்ளே என் சகோதரி சௌந்தரியம் மிக்கவள் என்பது பிரசித்தமானது. அவளுக்கும் இன்னொரு பெண் அழகாயிருப்பதைக் கண்டு பொறுக்கவில்லை. இல்லாவிட்டால் அந்தப் பெண்ணைக் குறித்து ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? நான் என் சகோதரியை இலேசில் விடவில்லை. அவளுக்குக் கோபம் உண்டாக்குவதற்காகவே அந்த இன்னொரு பெண் அழகாய்த்தான் இருக்கிறாள் என்று வற்புறுத்திச் சொன்னேன். இருவரும் அடிக்கடி இதைப் பற்றி விவாதம் செய்து சண்டை பிடித்தோம். எங்கள் சகோதரன் அருள்மொழியோ இந்தச் சண்டையின் காரணத்தை அறியாமல் திகைத்தான். பிறகு சில நாளைக்கெல்லாம் பாண்டிய நாட்டு யுத்தத்துக்குச் சென்ற என் தந்தையோடு நானும் புறப்பட்டுச் சென்றேன். பாண்டிய சைன்யத்தையும் பாண்டியர்களுக்கு உதவியாக இலங்கை அரசன் அனுப்பிய சைன்யத்தையும் பல இடங்களில் முறியடித்தோம். கடைசியில், வீரபாண்டியன் ஓடி ஒளிந்து கொண்டானா அல்லது போர்க்களத்தில் மடிந்தானா என்பது அச்சமயம் தெரியவில்லை. வீரபாண்டியன் மறைந்ததும் பாண்டிய சைன்யத்துக்கு உதவியாக வந்த இலங்கை வீரர்கள் பின்வாங்கி ஓடினார்கள். அவர்களைத் துரத்திக் கொண்டு நாங்கள் சேதுக்கரை வரையில் சென்றோம். இறந்தவர்கள் போக மற்றவர்கள் கப்பலேறித் தப்பித்துச் சென்றார்கள். அடிக்கடி பாண்டியர்களுக்கு உதவியாகப் படைகள் அனுப்பித் தொல்லைப்படுத்தும் இலங்கை மன்னர்களுக்கு என் தந்தை புத்தி கற்பிக்க விரும்பினார். கொடும்பாளூர்ச் சிறிய வேளாரின் தலைமையில் ஒரு பெரிய படையை இலங்கைக்கு அனுப்புவதென்று தீர்மானித்தார். இதற்கு வேண்டிய கப்பல்களையும் தளவாடங்களையும் சேகரிக்கச் சிறிது காலமாயிற்று. ஆயினும் நாங்கள் அங்கேயே தாமதித்து, கப்பல்களில் படைகளை ஏற்றி அனுப்பினோம். மாதோட்டத்தில் நம் வீரர்கள் பத்திரமாய்ச் சென்று இறங்கினார்கள் என்று தெரிந்த பிறகே அங்கிருந்து சோழ நாட்டுக்குத் திரும்பினோம்.
"மீண்டும் நான் பழையாறைக்கு வந்து சேர்வதற்குள் இரண்டு வருஷத்துக்கு மேலாகிவிட்டது. மதுரைப் பக்கத்திலிருந்து வந்திருந்த அர்ச்சகர் பெண்ணை நான் அடியோடு மறந்து விட்டேன். பழையாறைக்கு வந்து பார்த்தபோது என் சகோதரியும் அப்பெண்ணும் அடையாளம் அறிய முடியாதபடி வளர்ந்திருக்கக் கண்டேன். அவர்களிருவரும் மிக்க சிநேகத்துடன் பழகுவதையும் கண்டேன். நந்தினி வளர்ந்திருந்தது மட்டுமல்ல, ஆடை ஆபரணங்களினாலும் ஜொலித்துக் கொண்டிருந்தாள். இது என் சகோதரியின் காரியம் என்று அறிந்தேன். முன் போலில்லாமல் நந்தினி இப்போது என்னைப் பார்க்கவும் பேசவும் கூச்சப்பட்டாள். அதை நான் போக்குவதற்குப் பாடுபட்டேன். வேறு எதிலும் காணாத இன்பம் அவளுடன் பேசிப் பழகுவதில் அடைந்தேன். இது எனக்கு அந்தச் சிறிய பிராயத்தில் எவ்வளவு வியப்பை அளித்தது என்பதைச் சொல்ல முடியாது. காவேரியில் பெருகி வரும் புது வெள்ளத்தைப் போல் என் உள்ளத்தில் ஏதோ ஒரு புதுமை உணர்ச்சி பொங்கி, வெள்ளமாய்ப் பெருகிக் கொண்டிருந்தது. ஆனால் இது என்னைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் பிடிக்கவில்லையென்பதை விரைவிலேயே கண்டு கொண்டேன். நான் வந்ததிலிருந்து குந்தவை அப்பெண்ணிடம் வெறுப்பைக் காட்டத் தொடங்கினாள். ஒருநாள் எங்கள் பாட்டியார் மாதேவடிகள் என்னை அழைத்து, 'நந்தினி அர்ச்சகர் வீட்டுப் பெண்; நீயோ சக்கரவர்த்தி குமாரன்; உங்கள் இரண்டு பேருக்கும் இப்போது பிராயமும் ஆகிவிட்டது. ஆகையால் நந்தினியிடம் நீ பழகுவது உசிதமல்ல' என்று புத்திமதி கூறினார். அதுவரை பாட்டியைத் தெய்வமென மதித்து வந்த நான் அப்போது அவரிடம் கோபமும் அவருடைய வார்த்தையில் அவமதிப்பும் கொண்டேன். அவருடைய புத்திமதியை மீறி நந்தினியைத் தேடிப் பிடித்துப் பேசிப் பழகினேன். இது நெடுங்காலம் நிலைத்திருக்கவில்லை. திடீரென்று ஒருநாள் நந்தினியும், அவளுடைய பெற்றோர்களும் பாண்டிய நாட்டில் அவர்களுடைய ஊருக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார்கள் என்று தெரிந்தது. அப்போது எனக்குத் துக்கம் பொங்கி வந்தது; கோபம் என்னை மீறி வந்தது. துக்கத்தை என் மனதிற்குள் வைத்துக் கொண்டு கோபத்தை என் சகோதரியின் பேரில் காட்டினேன். நல்லவேளையாகச் சில நாளைக்கெல்லாம் நான் வடக்கே பிரயாணப்பட நேர்ந்தது. திருமுனைப்பாடியையும் தொண்டை மண்டலத்தையும் ஆக்கிரமித்திருந்த இராஷ்டிரகூடப் படைகளை விரட்டுவதற்காகப் புறப்பட்ட சோழ சைன்யத்துடன் நானும் புறப்பட்டு வந்தேன். அப்போதுதான் நீயும் நானும் சந்தித்தோம்; இணைபிரியா சிநேகிதர்களானோம்.
"மலையமான் அரசருடைய உதவியுடன் நீயும் நானும் இராஷ்டிரகூடப் படைகளுடன் போரிட்டோம். பாலாற்றுக்கு வடக்கே அவர்களைத் துரத்தி அடித்துக் காஞ்சி நகரையும் கைப்பற்றினோம். அச்சமயத்தில் இலங்கையிலிருந்து கெட்ட செய்தி வந்தது. நமது படை அங்கே முறியடிக்கப்பட்டதென்றும் கொடும்பாளூர் சிறிய வேளார் இறந்து விட்டார் என்றும் தெரிந்தன. இதைக் கேட்டுவிட்டு, அது வரையில் பாலைவனத்தின் மத்தியில் பாறைக் குகையில் ஒளிந்திருந்த வீரபாண்டியன், புற்றிலிருந்து பாம்பு புறப்படுவது போல் வௌிப்பட்டு வந்தான். மறுபடியும் சைன்யத்தைத் திரட்டிக் கொண்டு மதுரையைக் கைப்பற்றி மீனக் கொடியை ஏற்றினான். இதையெல்லாம் கேட்ட போது உனக்கும் எனக்கும் எப்படிப்பட்ட வீராவேசம் உண்டாயிற்று என்பது ஞாபகம் இருக்கிறதல்லவா? நாம் இருவரும் உடனே புறப்பட்டுப் பழையாறைக்குச் சென்றோம். என் தந்தை சக்கரவர்த்திக்கு அப்போதே உடல் நலம் கெடத் தொடங்கியிருந்தது. கால்களின் சுவாதீனம் குறைந்திருந்தது. ஆயினும் சக்கரவர்த்தி பாண்டிய நாட்டுப் போர்க்களம் புறப்படச் சித்தமாயிருந்தார். வேண்டாம் என்று நான் அவரைத் தடுத்தேன். பாண்டிய சைன்யத்தை முறியடித்து மதுரையை மீண்டும் கைப்பற்றி வீரபாண்டியனுடைய தலையையும் கொணராமல் சோழ நாட்டுக்குத் திரும்புவதில்லை என்று என் தந்தை முன்னால் பிரதிக்ஞை செய்தேன். அப்போது நீயும் என்னுடன் இருந்தாய். என் பிரதிக்ஞையை ஒப்புக் கொண்டு என் தந்தை நம்மைப் பாண்டிய நாட்டுப் போர்க்களத்துக்கு அனுப்பினார். ஏற்கெனவே படைத் தலைமை வகித்துச் சென்றிருந்த கொடும்பாளூர் பூதிவிக்கிரம கேசரியின் தலைமையில் நாம் போர் செய்ய வேண்டும் என்று பணித்தார். அதற்குச் சம்மதித்து நாம் சென்றோம். வழியில் பெரிய பழுவேட்டரையரைச் சந்தித்தோம். அவரைப் படைத் தலைவராக்காமல் கொடும்பாளூர் வேந்தரை நியமித்ததில் பழுவேட்டரையருக்கு அதிருப்தி உண்டாகியிருந்தது என்பதை அறிந்தோம்.
"நம்முடைய போர் ஆவேசத்தைக் கண்டு சேநாதிபதி பூதிவிக்கிரம கேசரி யுத்தம் நடத்தும் பொறுப்பை நம்மிடமே ஒப்புவித்துவிட்டார்.நண்பா! அந்த யுத்தத்தில் நீயும் நானும் நம்ப முடியாத வீரச் செயல்களைப் புரிந்தோம் என்று பெருமை கொள்வதில் யாதொரு தவறும் இல்லை.பாண்டிய சைன்யத்தை முறியடித்து மதுரையைக் கைப்பற்றினோம். அத்துடன் நாம் திருப்தி அடைந்துவிடவில்லை. மறுபடியும் பாண்டிய சைன்யம் தலையெடுக்க முடியாதபடி அதை நிர்மூலம் செய்துவிட விரும்பினோம். சிதறி ஓடிய வீரர்களை நாலா பக்கத்திலும் துரத்திச் சென்று ஒருவர் மிச்சமில்லாமல் துவம்ஸம் செய்துவிடும்படி நம் படை வீரர்களுக்குக் கட்டளையிட்டோம். நாம் மட்டும் ஒரு வலிமையான படையுடன் பாண்டியனைத் துரத்திக் கொண்டு போனோம். உயரமாகப் பறந்த மீனக் கொடி பாண்டியன் எந்தத் திசையை நோக்கி ஓடுகிறான் என்பதை நமக்குக் காட்டியது. அந்தத் திசையை நோக்கி நாமும் சென்று அவனைப் பிடித்தோம். வீரபாண்டியனைச் சுற்றிலும் ஆபத்துதவிகள் மதில் சுவரைப் போல் பாதுகாத்து நின்றார்கள். சோழ நாட்டு வேளக்காரப் படையைக் காட்டிலும் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் ஒருபடி மேலான வீரர்கள். பின்வாங்கி ஓடுவதில்லையென்றும் தங்கள் உயிரை அளித்தாவது பாண்டிய மன்னனைக் காப்பாற்றுவோம் என்றும் சபதம் செய்தார்கள். அது சாத்தியப்படாமற் போய், பாண்டிய மன்னனுக்கு ஆபத்து வந்து விட்டால், தங்கள் தலையைத் தாங்களே வெட்டிக் கொண்டு பலி கொடுப்போம் என்று சபதம் பூண்டவர்கள். அப்படிப்பட்ட வீரர்கள் தங்கள் கடனை நிறைவேற்றினார்கள். ஒருவர் மிச்சமின்றி அவர்களைக் கொன்று தீர்த்தோம். இறந்தவர்களின் சவங்கள் மலை மலையாய்க் குவிந்தன. ஆனால் அவர்களுக்கு நடுவில் வீரபாண்டியனை நாம் காணவில்லை. மீனக் கொடியைப் பார்த்து நாம் ஏமாந்து போனோம். மீனக் கொடியைத் தாங்கிக் கொண்டு யானை ஒன்று நின்றது. ஆனால் அதன் பேரிலோ, பக்கத்திலோ பாண்டிய மன்னனைக் காணவில்லை! வீரபாண்டியன் போர்க்களத்திலிருந்து தப்பி ஓடி ஒளிந்து கொள்ளுவதில் சமர்த்தன் அல்லவா? இப்போதும் அவன் ஓடியிருக்கலாம் என்று சந்தேகித்து, படைகளைப் பிரித்து நாலாபுறமும் அனுப்பினோம்.
"வைகை நதியின் இரு கரைகளோடு நீங்கள் எல்லோரும் விரைந்து சென்றீர்கள். நானும் சும்மா இருக்கவில்லை. வைகை நதியில் இறங்கி மணலில் நடந்து தெற்கே சென்றேன். ஒரு தனிக் குதிரையின் குளம்படி மணலில் சில இடங்களில் பதிந்திருந்தது. குதிரை போன வழியில் மணலில் இரத்தக் கறையும் காணப்பட்டது. அதைப் பிடித்துக் கொண்டு நான் போனேன். வைகையாற்றின் மத்தியில் ஒரு தீவு போல் அமைந்திருந்த சோலையை அடைந்தேன். அந்தச் சோலைக்குள்ளே திருமாலின் கோவில் ஒன்றிருந்தது. அதையொட்டி இரண்டொரு அர்ச்சகர் வீடுகள் இருந்தன. பெருமாள் பூஜைக்குரிய பூ மரங்கள் அச்சோலையில் ஏராளமாக இருந்தன. ஒரு சிறிய தாமரைக் குளம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. நண்பா! உனக்கு ஒருவேளை ஞாபகம் இருக்கலாம். அந்தச் சோலையைச் சுட்டிக்காட்டி அதில் நம் வீரர்கள் யாரும் தப்பித் தவறிக் கூடப் பிரவேசிக்கக் கூடாது என்று நான் கண்டிப்பான கட்டளையிட்டிருந்தேன். இதற்குக் காரணம், அந்தப் பெருமாள் கோவிலின் பூஜைக்குப் பங்கம் எதுவும் வரக் கூடாது என்று நான் எண்ணியது மாத்திரம் அல்ல. அங்கே இருந்த பட்டரின் வீட்டில் என் உள்ளத்தைக் கவர்ந்து என் நெஞ்சில் கோவில் கொண்ட பெண்ணரச இருந்ததுதான்."
"ஒருநாள் அந்தச் சோலைக்குள் நான் புகுந்தபோது நந்தினியைப் பார்த்து விட்டேன். அவளுடைய கோலம் இப்போது சிறிது மாறிப் போயிருந்தது. தலைக் கூந்தலை ஆண்டாள் விக்கிரகத்தைப் போல் முன்னால் மகுடமாகக் கட்டி அதில் பூமாலை சுற்றியிருந்தாள். கழுத்திலும் பூமாலை தரித்திருந்தாள். 'இது என்ன கோலம்?' என்று நான் கேட்டேன். அவள் என்னைப் பிரிந்து வந்த பிறகு மானிடர் யாரையும் மணப்பதில்லை என்றும் ஆண்டாளைப் போல் கண்ணனையே மணப்பது என்றும் சங்கல்பம் செய்து கொண்டதாகக் கூறினாள். இது வெறும் பைத்தியக்காரத்தனமாக எனக்குத் தோன்றியது. மானிடப் பெண்ணாவது, கடவுளை மணப்பதாவது? - ஆயினும் அதைப் பற்றி அச்சமயம் விவகாரம் செய்ய நான் விரும்பவில்லை. 'யுத்தம் முடியட்டும்; பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்று எண்ணினேன். அவளுக்கு ஏதேனும் உதவி வேண்டுமா என்று கேட்டேன். 'உங்கள் போர் வீரர்கள் யாரும் இங்கு வராதபடி செய்யுங்கள். இங்கே என் வயதான தாய் தந்தையர் மட்டுந்தான் இருக்கிறார்கள். அவர்கள் கண் தெரியாதவர்கள். திடகாத்திரனான என் தமையன் ஒருவன் உண்டு. அவன் இப்போது திருப்பதி யாத்திரை போயிருக்கிறான்!' என்றாள். அவள் கேட்டபடி அங்கே நம் வீரர் யாரும் வராமல் பார்த்துக் கொள்வதாக நான் வாக்குறுதி கொடுத்துவிட்டுத் திரும்பினேன். அப்புறம் இரண்டு மூன்று தடவை அவளைப் போய்ப் பார்த்தேன். அவளிடத்தில் நான் கொண்ட பழைய மோகம் ஒன்றுக்குப் பத்து மடங்கு பெருகிக் கொழுந்துவிட்டெரிந்தது. எனினும் பொறுமையைக் கடைப்பிடித்தேன். வந்த காரியத்தை முதலில் முடிக்க வேண்டும். வீரபாண்டியனுடைய தலையுடன் பழையாறைக்குப் போக வேண்டும்; அதற்குப் பிரதியாக நந்தினியை மணந்து கொள்ளத் தந்தையிடம் அனுமதி கேட்பது என்று முடிவு செய்தேன்.
"இப்படி நான் தீர்மானித்திருந்த நிலையில், ஒற்றைக் குதிரையின் குளம்படி அந்தச் சோலைக்குள்ளே போயிருப்பதைக் கண்டதும் அளவிலாத வியப்பும் ஆத்திரமும் கொண்டேன். மேலும் சென்று பார்த்தபோது, அடர்ந்த மரங்களின் மறைவில் குதிரை கட்டியிருப்பதைக் கண்டேன். எனவே தப்பி வந்தவன் அந்தக் குடிசை வீடுகளில் ஒன்றில்தான் இருக்க வேண்டும்.நந்தினியின் வீட்டுக்குச் சென்று பலகணி வழியாகப் பார்த்தேன். நண்பா! அங்கே நான் கண்ட காட்சி பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் என் நெஞ்சில் தீட்டியது போலப் பதிந்திருக்கிறது. ஒரு பழைய கயிற்றுக் கட்டிலில் வீரபாண்டியன் படுத்துக் கிடந்தான். நந்தினி அவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடுத்துக் குடிக்கச் செய்தாள். அவள் முகம் முன் எப்போதுமில்லாத காந்தியுடன் ஜொலித்தது. அவள் கண்களில் இரண்டு துளி கண்ணீர் ததும்பி நின்றது. என்னை மீறி வந்த ஆத்திரத்துடன் கதவைப் படார் என்று உதைத்துத் திறந்து கொண்டு உள்ளே போனேன். காயங்களைக் கட்டிக் கொண்டிருந்த நந்தினி என்னைக் கண்டதும் அதை நிறுத்தி விட்டு முன்னால் வந்தாள். சாஷ்டாங்கமாக என்னை நமஸ்கரித்து எழுந்தாள். கை கூப்பிய வண்ணம், 'ஐயா! நீங்கள் என் பேரில் ஒருநாள் வைத்திருந்த அன்பின் பேரில் ஆணையிட்டு வேண்டுகிறேன். இவரை ஒன்றும் செய்யாதீர்கள்! படுகாயப்பட்டுக் கிடக்கும் இவரை உங்கள் கையால் கொல்ல வேண்டாம்!' என்றாள்.
நான் தட்டுத் தடுமாறி, 'உனக்கும் இந்த மனிதனுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக அவன் உயிரைக் காப்பாற்றும்படிக் கேட்கிறாய்?' என்றேன்.
'இவர் என் காதலர்; இவர் என் தெய்வம்; இவர் என்னை மணந்து கொள்ளச் சம்மதித்திருக்கும் தயாளன்!' என்றாள் நந்தினி.
"காயம் பட்டிருந்த வீரபாண்டியனைப் பார்த்துக் கொஞ்சம் உண்டாகியிருந்த இரக்கமும் என்னிடமிருந்து அகன்று விட்டது. இந்தப் பாதகன் சண்டாளன், - எப்படி என்னைப் பழி வாங்கி விட்டான்! என் இராஜ்யத்தையே கைப்பற்றியிருந்தாலும் பாதகம் இல்லை; என் உள்ளத்தில் குடிகொண்டிருந்த பெண்ணரசியையல்லவா அபகரித்து விட்டான்? இவனிடம் எப்படி இரக்கம் காட்ட முடியும்? முடியவே முடியாது!
"நந்தினியை உதைத்துத் தள்ளி விட்டு அவளைத் தாண்டிக் கொண்டு சென்று வாளின் ஒரே வீச்சில் வீரபாண்டியனுடைய தலையை வெட்டி வீழ்த்தினேன். அந்த மூர்க்க பயங்கர செயலை இப்போது நினைத்துப் பார்த்தால் எனக்கு வெட்கமாயிருக்கிறது. ஆனால் அச்சமயம் யுத்த வெறியோடு கூடக் குரோத வெறியும் என்னைப் பீடித்திருந்தது. அந்த ஆவேசத்தில் வீரபாண்டியனைக் கொன்றுவிட்டு அந்த வீட்டின் வாசற்படியைத் தாண்டும் போது நந்தினியை ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். அவளும் என்னைக் கண்கொட்டாமல் பார்த்தாள். அதைப் போன்ற பார்வை இந்தப் பூவுலகில் நான் கண்டதில்லை. அதில் காமக் குரோத லோப மோக மத மாற்சரியம் என்னும் ஆறு வித உணச்சிகளும் அத்தனை நெருப்பு ஜூவாலைகளாகக் கொழுந்து விட்டு எரிந்தன. அதன் பொருள் என்னவென்று எத்தனையோ தடவை எண்ணி எண்ணிப் பார்த்தும் எனக்கு இன்று வரை தெரியவில்லை!
"அதற்குள் என்னைத் தேடிக் கொண்டு நீயும் இன்னும் பலரும் வந்து விட்டீர்கள். வீரபாண்டியனுடைய தலையற்ற உடலையும் இரத்தம் சிந்திய தலையையும் பார்த்துவிட்டு எல்லோரும் ஜயகோஷம் செய்தீர்கள். ஆனால் என்னுடைய நெஞ்சில் விந்திய பர்வதத்தை வைத்ததுபோல் ஒரு பெரும் பாரம் அமுக்கிக் கொண்டிருந்தது!..."
பக்க தலைப்பு
ஐம்பத்தாறாம் அத்தியாயம் அந்தப்புரசம்பவம்
பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் காஞ்சியில் மகேந்திர பல்லவ சக்கரவர்த்தி அரசு புரிந்த காலத்தில் நாடெங்கும் மகா பாரதக் கதையைப் படிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார். பௌத்த சமண மதங்களின் பிரசாரத்தினால் மக்கள் சாதுக்களாகப் போயிருந்த தமிழ்நாட்டில் மீண்டும் வீர உணர்ச்சி தளிர்த்துப் பரவ வேண்டும் என்பதற்காக அந்த ஏற்பாடு செய்தார். பாரதக் கதை படிப்பதற்கென்றே பல ஊர்களில் பாரத மண்டபங்கள் கட்டினார். அவர் தொடங்கிய ஏற்பாடு இன்னமும் தொண்டை மண்டலத்தில் தடைப்படாமல் நடந்து வந்தது. இரவில் மக்கள் மண்டபங்களிலோ திறந்த வௌியிலோ கூடி பாரதக் கதை கேட்டார்கள். பாரதப் பெருங் கதையையும் பாரதத்திலுள்ள கிளைக் கதைகளையும் பாட்டிலும் பண்ணிலும் வசனத்திலும் அமைத்து வீராவேசத்துடன் சொல்லக் கூடிய பாடினிகள் பலர் தோன்றினார்கள்.
அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை சென்றிருந்தபோது மணிபுரியை அடுத்த வனத்தில் மணிபுரி ராஜகுமாரியான சித்ராங்கியைக் கண்டான். இருவரும் காதல் கொண்டார்கள். சித்ராங்கிக்கு அரவான் என்னும் அருமைப் புதல்வன் பிறந்தான். மலைநாட்டுக் கோமகளுக்கு அர்ச்சுனனால் பிறந்த மகனாதலால் அரவான் மகா வீரனாயிருந்தான். பாரத யுத்தம் நடக்கப் போகிறது என்று அறிந்து அவனும் பாண்டவர் படையில் சேர வந்து சேர்ந்தான். போர் தொடங்குவதற்கு முன்னால் சகல இலட்சணங்களும் பொருந்திய மகா வீரனான இளைஞன் ஒருவனைக் களபலி கொடுக்க வேண்டும் என்ற பேச்சு வந்த போது, "இதோ நான் இருக்கிறேன்; என்னைக் களபலியாகக் கொடுங்கள்!" என்று அரவான் முன் வந்தான். அவனைக் காட்டிலும் சிறந்த வீரன் யாரும் பாண்டவர் பக்கத்தில் இல்லாதபடியால், தானாக முன் வந்த அரவானையே பலி கொடுக்க வேண்டியதாயிற்று.
தன்னுடைய கட்சியின் வெற்றிக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த வீர அரவானின் கதை தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. துரோபதை அம்மனுக்குக் கோயில் கட்டிய இடங்களிலெல்லாம் பக்கத்தில் அரவானுக்கும் கோயில் கட்டி திருவிழா நடத்தினார்கள்.
மாமல்லபுரத்து ஐந்து ரதங்களின் அருகில் அன்றிரவு நடந்த அரவான் கதை முடிவடைந்து விட்டதாகத் தோன்றியது. "மூன்று உலகமும் உடைய சுந்தர சோழ சக்கரவர்த்தி வாழ்க!" "கோப்பரகேசரி ஆதித்த கரிகாலர் வாழ்க!" என்று பல குரல்களில் எழுந்த கோஷங்கள் காற்றிலே மிதந்து வந்தன. கதை கேட்டுக் கொண்டிருந்தவர்கள் எழுந்து கலையத் தொடங்கினார்கள்.
"கதை முடிந்து விட்டது. மலையமான் சிறிது நேரத்தில் திரும்பி வந்து விடுவார்" என்றான் கரிகாலன்.
"அரவான் கதை முடிந்தது; ஆனால் தாங்கள் சொல்லி வந்த கதை இன்னும் முடியவில்லையே?" என்றான் பார்த்திபன்.
"இந்தப் பிராயத்தில் மலையமானின் மனோதிடத்தைப் பார்! இன்னமும் நடுநிசி வரையில் கண் விழித்துக் கதை கேட்கப் போகிறார் பார்!" என்றான் கரிகாலன்.
"தொண்டு கிழமாகிற வரையில் உயிரோடிருப்பது அவ்வளவு அதிசயமான காரியமா! ஊரில் எத்தனையோ கிழவர்கள் இருக்கிறார்கள். இரவில் தூக்கம் பிடியாமல் கதை கேட்கப் போகிறார்கள்...."
"திருக்கோவலூர் மிலாடுடையாரை அப்படிச் சாதாரணக் கிழவர்களோடு சேர்த்து விடுகிறாயா? எத்தனை போர்க்களங்களைப் பார்த்தவர் அவர்? மலையமானின் வயதில் நாம் உயிரோடிருப்போமா என்பதே சந்தேகம். இருந்தாலும், அவரைப் போல் திடமாயிருக்க மாட்டோம்."
"அரசே! பழைய காலத்து மனிதர்கள் திடமாயிருப்பதற்குக் காரணம் இருக்கிறது..."
"அது என்ன காரணம்?"
"அவர்கள் பெண்களின் மோகவலையில் சிக்குவதில்லை. கேவலம் ஓர் அர்ச்சகரின் மகளிடம் மனத்தைப் பறி கொடுத்துவிட்டு அவளை நினைத்து உருகிக் கொண்டிருப்பதில்லை. அப்படி எந்தப் பெண்ணிடமாவது மனம் சென்றால் அவள் கூந்தலைப் பற்றி இழுத்துக் கொண்டு வந்து அந்தப்புரத்தில் சேர்த்து விட்டு, வேறு வேலையைப் பார்ப்பார்கள்!..."
"பார்த்திபா! நந்தினி உண்மையில் அர்ச்சகர் வீட்டுப் பெண் அல்ல; அவளுடைய பிறப்பைக் குறித்து ஏதோ ஓர் இரகசியம் இருக்க வேண்டும்!..."
"நந்தினி யாருடைய மகளாயிருந்தால் என்ன? அர்ச்சகர் மகளாயிருந்தால் என்ன? அரசர் மகளாயிருந்தால் என்ன? அல்லது அனாதைப் பெண்ணாயிருந்தால் தான் என்ன? அந்த இன்னொரு கிழவர் பெரிய பழுவேட்டரையரைப் பாருங்கள்! எங்கேயோ வழியில் அவளைப் பார்த்தார்; உடனே இழுத்துக் கொண்டு வந்து எட்டோடு ஒன்பது என்று அந்தப்புரத்தில் அடைத்தார்..."
"நண்ப! அதை நினைத்தால் எனக்கு அதிசயமாகத்தான் இருக்கிறது!..."
"எதை நினைத்தால்? அந்தக் கிழவர் எப்படி இவளுடைய வலையில் சிக்கினார் என்பதைத்தானே?"
"இல்லை, இல்லை! ஒரு காலத்தில் என்னைக் காதலித்ததாகச் சொன்னவள், பிறகு வீரபாண்டியனைக் காதலித்து அவன் உயிரைக் காப்பாற்ற முயன்றவள், இந்தத் தொண்டு கிழவரை மணந்து கொள்ள எவ்வாறு சம்மதித்தாள்? அதை நினைத்தால்தான் அதிசயமாயிருக்கிறது."
"எனக்கு அது ஒன்றும் அதிசயமாகத் தோன்றவில்லை, ஐயா! தங்களுடைய செயலை நினைத்தால்தான் அதிசயமாயிருக்கிறது! சோழ குலத்தின் பரம வைரியான பாண்டியன், - தோல்வியடைந்ததும் ஓடி ஒளியும் கோழையினும் கோழையானாலும் 'வீரபாண்டியன்' என்று பெயர் சூட்டிக் கொண்டவன், - அவனுக்கு அடைக்கலம் கொடுத்து உயிர்ப்பிச்சை கேட்டவளைத் தாங்கள் சும்மா விட்டுவிட்டு வந்தீர்களே? அதை எண்ணினால்தான் அதிசயத்திலும் அதிசயமாயிருக்கிறது. ஒன்று அவளையும் அங்கேயே கத்தியால் வெட்டிப் போட்டிருக்க வேண்டும்; அதற்கு விருப்பமில்லாவிட்டால் காலையும் கையையும் சேர்த்துக் கட்டிச் சிறைப்படுத்தி வந்திருக்க வேண்டும்! இந்த இரண்டில் ஒன்று செய்யாமல் சும்மா விட்டு விட்டு வந்தீர்களே!... இப்போது எனக்குக் கூட ஞாபகம் வருகிறது, அரசே! அந்தக் குடிசையின் வாசலில் தாங்கள் வீரபாண்டியன் உடலைத் தூக்கிக் கொண்டு வந்து போட்டீர்கள். நாங்கள் அனைவரும் வெறிகொண்டவர்களைப் போல் வெற்றி முழக்கம் செய்தோம். அதற்கு நடுவில் குடிசைக்குள்ளேயிருந்து விம்மல் சத்தம் ஒன்று வந்தது. 'அது யார்?' என்று நான் கேட்டேன். 'யாரோ அர்ச்சகர் குடும்பத்துப் பெண்கள். ஏற்கெனவே அவர்கள் பீதியடைந்து கதிகலங்கிப் போயிருக்கிறார்கள். நீங்கள் யாரும் உள்ளே போக வேண்டாம்!" என்றீர்கள். வெற்றி வெறியில் இருந்த நாங்களும் அதைப் பொருட்படுத்தவில்லை. உடனே எல்லோருமாக வீரபாண்டியனுடைய தலையை எடுத்துக் கொண்டு கிளம்பினோம், தாங்களும் எங்களுடன் வந்தீர்கள். ஆனால் எங்கள் களிப்பிலும் கொண்டாட்டத்திலும் அவ்வளவாகத் தாங்கள் கலந்து கொள்ளவில்லை. உற்சாகம் குன்றிக் காணப்பட்டீர்கள். நான் காரணம் கேட்டேன். தாங்கள் ஏதோ சமாதானம் சொன்னீர்கள். தங்களுக்கு ஏதேனும் பலமான காயம் பட்டிருக்குமோ என்று நான் சந்தேகித்துக் கேட்டது கூட எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது!" என்றான் பார்த்திபேந்திரன்.
"என் உடம்பில் ஒன்றும் காயம் படவில்லை, பார்த்திபா! உள்ளத்தில் என்றும் ஆறாத காயம் பட்டு விட்டது.வீரபாண்டியன் படுத்துக் கிடந்த கட்டிலுக்கு முன்னால் வந்து அவள் கைகூப்பி என்னிடம் உயிர்ப் பிச்சை கேட்ட காட்சி என் மனத்தை விட்டு அகலவில்லை. 'ஐயோ! அவள் கேட்டதைக் கொடுக்காமல் போய் விட்டோமே! என்று என் மனம் பதைபதைத்தது. என் உயிரைக் கொடுப்பதின் மூலம் வீரபாண்டியனை உயிர்ப்பித்து அவளிடம் சேர்க்க முடியுமானால் அப்படியே நான் செய்திருப்பேன். இது முடியாதபடியால் என்னை நானே நொந்து கொண்டேன். பார்த்திபா! நம்முடைய வல்லமைகளைப் பற்றி நாம் எவ்வளவோ நினைத்துக் கொள்கிறோம். நம்மால் ஆகாத காரியம் ஒன்றுமேயில்லை என்று கருதி இறுமாப்பு அடைகிறோம். 'அரசர்களிடம் மகா விஷ்ணுவின் அம்சம் இருக்கிறது' என்று ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்திருப்பதைக் கேட்டு விட்டு, அதைக் கூட உண்மையென்று நம்பி விடுகிறோம். ஆனால், உடலை விட்டுப் பிரிந்து போன ஆவியைத் திரும்பக் கொண்டு வரும் வல்லமை நமக்கு உண்டா? அரச குலத்தில் பிறந்த யாருக்காவது இருந்திருக்கிறதா? நம்மால் உயிரை வாங்கத்தான் முடியும்; ஆனால் உயிரைக் கொடுக்கும் சக்தி மனிதர்களாய்ப் பிறந்த யாருக்கும் இல்லை!..."
"அப்படி இல்லாமலிருப்பதே மிக நல்லது. அந்த வல்லமை தங்களுக்கு இருந்திருந்தால், எவ்வளவு தவறான காரியம் நடந்து போயிருக்கும்? பாண்டியனுக்கு மறுபடியும் உயிரைக் கொடுத்திருப்பீர்கள். அவன் மீண்டும் எங்கேயாவது மலைப் பொந்தில் போய் ஒளிந்திருப்பான். பாண்டிய நாட்டு யுத்தம் ஒருவேளை இன்னும் நடந்து கொண்டிருக்கும்! இவ்வளவும் ஒரு பெண்ணின் பொய்க் கண்ணீருக்காக!" என்றான் பார்த்திபேந்திரன்.
"பல்லவா! நீ பெண் குலத்தை வெறுக்கும் துர்ப்பாக்கியசாலி! காதல் என்றால் இன்னதென்று நீ அறிய மாட்டாய்! அதனாலேயே இவ்விதம் பேசுகிறாய்!"
"ஆம்; நான் எந்தப் பெண்ணுடைய கண் வலையிலும் சிக்கியதில்லைதான். ஆனால் தங்கள் அந்தரங்கத்துக்குரிய நண்பன் வந்தியத்தேவன் மஞ்சள் பூசிய முகம் எதைக் கண்டாலும் மயங்கிப் பல்லை இளிப்பவன். ஆகையினாலேயே அவனைத் தங்களுக்கு என்னைக் காட்டிலும் பிடித்திருக்கிறது. இல்லையா, அரசே!"
"ஆகா! கடைசியில் வந்தியத்தேவனிடம் வந்து விட்டாய் அல்லவா? ஏது, இத்தனை நேரம் அவனை மறந்து விட்டாயே என்று பார்த்தேன்!"
"ஆம், அவனைப் பற்றி உண்மையைச் சொன்னால் தங்களுக்குக் கசப்பாகவே இருக்கும். அந்தப் பேச்சை விட்டு விடுகிறேன். பிறகு என்ன நடந்தது, அரசே! நந்தினியை மறுபடியும் தாங்கள் சந்திக்கவே இல்லையா? வீரபாண்டியனுக்காக உருகினவள் எப்படிக் கிழவர் பழுவேட்டரையரை மணந்தாள் என்று அவளைக் கேட்கவே இல்லையா?"
"வீரபாண்டியனைக் கொன்ற இரவில் வெற்றிக் கோலாகலங்களுக்குப் பிறகு நீங்கள் எல்லாரும் பாசறைகளில் படுத்துத் தூங்கினீர்கள். எனக்கோ தூக்கம் வரவேயில்லை. அவளை மறுபடியும் பார்க்க வேண்டும் என்று என் உடம்பிலுள்ள ஒவ்வொரு நரம்பும் துடித்தது. அவளைப் பார்த்து ஏதேனும் சமாதானம் சொல்ல வேண்டும், மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று விரும்பினேன். மற்றொரு சமயம் அவள் பேரில் எனக்குப் பொங்கி எழுந்த கோபத்தைக் கொட்ட வேண்டும் என்று ஆவேசம் உண்டாயிற்று. எப்படியாவது அவளைப் பார்த்தாலொழிய மனநிம்மதி ஏற்படாது, சோழ நாட்டுக்குத் திரும்பிப் போக முடியாது என்று தோன்றியது. ஆகையால், நள்ளிரவில் நீங்கள் யாரும் அறியாமல் பாசறையிலிருந்து புறப்பட்டுக் குதிரை ஏறிச் சென்றேன். வைகை நதியின் நடுவிலிருந்த தீவை அடைந்தேன்.மனம் பதைபதைக்க, உடம்பெல்லாம் நடுங்க, கால்கள் தள்ளாட, குதிரையிலிருந்து இறங்கி, மெள்ள மெள்ள நடந்து பெருமாள் கோயிலுக்கு அருகில் சென்றேன். அங்கேயிருந்த குடிசைகள் எல்லாம் எரிந்து சாம்பலாகிக் கிடப்பதைக் கண்டேன். ஒரு வயோதிகரும் வயோதிக ஸ்திரீயும் எரிந்த குடிசைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருந்தார்கள். இன்னும் கொஞ்சம் நெருங்கிச் சென்று பார்த்ததில் அவர்கள்தான் முன்னொரு தடவை நந்தினியைப் பழையாறை அரண்மனைத் தோட்டத்துக்கு அழைத்து வந்தவர்கள் என்று தெரிந்தது. என்னைப் பார்த்ததும் அவர்களுடைய துக்கமும் பீதியும் பன்மடங்கு ஆயின.
முதலில் அவர்களால் எதுவுமே பேச முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களைத் தைரியப்படுத்தி விசாரித்தேன். ஆற்றுக்கு அக்கரையில் இருந்த கிராமத்தில் அவர்களுடைய மூத்த குமாரி இருந்தாளாம். அவளுக்குப் பிரசவ காலம் என்று அறிந்து அவளைப் பார்த்து வரப் போயிருந்தார்களாம். நந்தினி அவர்களுடன் வர மறுத்து விட்டாளாம். மனம் போனபடி நடந்து பழக்கமுள்ள அந்தப் பிடிவாதக்காரப் பெண்ணை ஒன்றும் செய்ய முடியாமல் அவர்கள் மட்டும் போய் விட்டுத் திரும்பி வந்தார்களாம். வழியில் யாரோ சில முரடர்கள் ஒரு பெண்ணைக் காலையும் கையையும் கட்டி, எரிந்து கொண்டிருந்த சிதையில் பலவந்தமாகப் போட முயன்றதை அவர்கள் பார்த்தார்களாம். யுத்த காலத்தில் இத்தகைய விபரீதங்கள் நடப்பது இயல்பு என்று எண்ணி அவர்களுக்கு அருகில் போகவும் பயந்து கொண்டு விரைவாக இங்கே வந்து சேர்ந்தார்களாம். வந்து பார்த்தால் குடிசைகள் பற்றி எரிந்து கிடந்தனவாம். நந்தினியையும் காணவில்லையாம். இந்த விவரத்தைச் சொல்லிவிட்டு அர்ச்சகரும் அவர் மனைவியும், 'இளவரசே! எங்கள் மகள் எங்கே? எங்கள் அருமைக் குமாரி எங்கே?' என்று கதறினார்கள். அவர்கள் நந்தினியின் உண்மைப் பெற்றோர்கள் அல்லவென்று எனக்கு முன்னமே தெரிந்திருந்தது. இப்போது அது சர்வ நிச்சயமாயிற்று. உண்மையில் பெற்றவர்களாயிருந்தால் இப்படித் தனியாக விட்டு விட்டுப் போயிருப்பார்களா? ஆகையால் அவர்கள் பேரில் எனக்கு இரக்கமோ அனுதாபமோ உண்டாகவில்லை. நந்தினியின் கதியைப் பற்றிச் சொல்ல முடியாத துக்கம் ஏற்பட்டு நெஞ்சை அடைத்தது. 'உங்கள் மகள் எரிந்த சிதையைத் தேடிப் போய் நீங்களும் எரிந்து செத்துப் போங்கள்!' என்று வயிற்றெரிச்சல் தீர அவர்களைச் சபித்து விட்டு, திரும்பிப் பொழுது விடிவதற்குள் பாசறைக்கு வந்து சேர்ந்தேன். நீங்கள் எல்லாரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தீர்கள்.நான் போனது, திரும்பி வந்தது ஒன்றும் உங்களில் யாருக்கும் தெரியாது..."
"ஆம்; இளவரசே! தெரியாதுதான். அதற்குப் பிறகும் இத்தனை காலமாக இதையெல்லாம் தங்கள் மனத்திலேயே வைத்துக் கொண்டிருந்ததை நினைத்தால் வியப்பாயிருக்கிறது. சிநேக தர்மத்துக்கு இவ்வளவு மாறாகத் தாங்கள் நடந்து கொள்வீர்கள் என்று நான் கனவிலும் எண்ணவில்லை. தங்களுடைய நிலையில் நான் இருந்திருந்தால் தங்களிடம் சொல்லாமல் இருந்திருக்க மாட்டேன்" என்றான் பார்த்திபன்.
"ஆனால் நீ என்னுடைய நிலையில் இல்லையே, பார்த்திபா! இந்த உலகில் யாருமே என்னுடைய நிலையில் இருந்திருக்க முடியாது. என் நிலையில் இருந்திருந்தால், நீ எப்படி நடந்து கொண்டிருப்பாய் என்று யார் சொல்ல முடியும்?" என்றான் கரிகாலன்.
"அரசே! நடந்து போனதைப் பற்றி இப்போது நமக்குள் விவாதம் வேண்டாம். அப்புறம் என்ன நடந்தது? நந்தினியைப் பிறகு எப்போது பார்த்தீர்கள்? பழுவூர் இளையராணி ஆன பிறகா? அதற்கு முன்னமேயா?"
"அதற்கு முன்னால் நான் பார்த்திருந்தால், அவள் பழுவூர் ராணி ஆகியிருக்கமாட்டாள். பழுவேட்டரையரின் கலியாணம் நடந்தபோது நானும் நீயும் ஊரில் இல்லை. அந்தச் செய்தி வந்தபோது நாம் இருவரும் அருவருப்போடு பேசிக் கொண்டது உனக்கு நினைவில் இருக்குமே? அதற்குச் சில நாளைக்குப் பிறகு எனக்கு யுவராஜ்ய பட்டாபிஷேகம் நடந்தது. அடுத்த பட்டம் யாருக்கு என்பதைப் பற்றிச் சந்தேகம் எதுவும் இருக்கக் கூடாது என்றுதான் என் தந்தையும் பாட்டியும் மற்ற பெரியோர்களும் சேர்ந்து அந்த ஏற்பாடு செய்தார்கள். மதுராந்தகனுக்கு யாராவது துர்ப்போதனை செய்து தூபம் போட்டு விடப் போகிறார்கள் என்ற பயம் அவர்களுக்கு இருந்ததோ என்னமோ? இளவரசுப் பட்டம் கட்டியதோடு, பரகேசரிப் பட்டம் அளித்து என் பெயராலேயே கல்வெட்டு சாஸனம் ஏற்படுத்தும் உரிமையையும் அளித்தார்கள். 'இனி இச்சோழ சாம்ராஜ்யத்தை ஆளும் பொறுப்பு முழுதும் உனக்கே' என்று என் அருமைத் தந்தை மனதார, வாயாரக் கூறினார். அதை நாட்டார், நகரத்தார், அமைச்சர்கள், தளபதிகள் அனைவரும் ஒப்புக் கொண்டு ஜயகோஷம் செய்தார்கள். இந்தக் கோலாகலத்தில் நான் நந்தினியை அடியோடு மறந்திருந்தேன். ஆனால் பட்டாபிஷேகச் சடங்கு நடந்து முடிந்த சிறிது நேரத்துக்கெல்லாம் அவளை நான் என்றும் மறக்க முடியாத சம்பவம் நேர்ந்தது.
"பழமையான சோழர் குலத்து மணிமகுடத்துடன் என்னைச் சக்கரவர்த்தி அந்தப்புரத்துக்கு அழைத்துப் போனார். என் அன்னையிடமும் பாட்டியிடமும் மற்ற அந்தப்புர மாதரிடமும் ஆசி பெறுவதற்காக அழைத்துப் போனார். என்னைத் தொடர்ந்து என் சகோதரனும் முதன் மந்திரியும் பழுவேட்டரையர்களும் வந்தார்கள். அந்தப்புரத்தில் வயது மிகுந்த தாய்மார்களோடு, என் தங்கையும் அவளுடைய தோழிகளும் மற்றும் பல இளமங்கையரும் கூட்டமாக நின்றார்கள். எல்லாரும் ஆடை ஆபரணங்களினால் ஜொலித்துக் கொண்டு மகிழ்ச்சியினால் மலர்ந்த முகங்களோடு எங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆனால் அத்தனை முகங்களிலும் ஒரே ஒரு முகந்தான் என் கண்ணுக்குத் தெரிந்தது, அது நந்தினியின் முகந்தான். எரிந்து சாம்பராய்ப் போனாள் என்று நான் எண்ணியிருந்த என் இதய தேவதை தான் அவள்! அந்த அரண்மனை அந்தப்புரத்துக்குள் அவள் எப்படி வந்தாள்? அவ்வளவு பிரமாதமான ஆடை அலங்காரங்களுடன் ராணிகளுக்குள் நடுநாயகமான மகாராணியாக அங்கே எப்படி நிற்கிறாள்? அவள் முகத்தில்தான் என்ன மந்தகாஸம்? அவளுடைய சௌந்தரியம் முன்னைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாயிருப்பது எப்படி? சில கண நேரத்திற்குள் என் உள்ளம் பற்பல ஆகாசக் கோட்டைகளைக் கட்டிவிட்டது! சோழ சாம்ராஜ்யத்திற்கு உரியவன் என்று நான் முடிசூட்டிக் கொண்ட அன்றைய தினம் உண்மையிலேயே என் வாழ்நாளில் அதிர்ஷ்ட தினம் ஆகப் போகிறதா? என் உள்ளத்தைக் கவர்ந்த ராணியை என் பட்ட மகிஷியாகவும் அடையப் போகிறேனா? ஏதோ, ஓர் அதிசயமான இந்திர ஜாலத்தினால், மந்திர சக்தியினால், அவ்விதம் நடக்கப் போகிறதா?... இப்படி நான் எண்ணிக் கொண்டிருக்கையில் என் அன்னை வானமாதேவி முன்னால் இரண்டு அடி நடந்து வந்து 'குழந்தாய்!' என்று சொல்லி என்னை ஆசீர்வதித்து உச்சி மோந்தாள்! அதே சமயத்தில் யாரும் எதிர்பாராத அச்சம்பவம் நடந்து விட்டது. என் தந்தை 'ஆ!' என்று ஒரு கூச்சலிட்டு விட்டுத் திடீரென்று தரையில் சுருண்டு விழுந்து மூர்ச்சை அடைந்தார். உடனே, அவ்விடத்தில் பெருங்குழப்பமாகிவிட்டது. நானும் மற்ற எல்லாரும் சக்கரவர்த்தியைத் தூக்கி உட்கார வைத்து மூர்ச்சை தௌிவிப்பதில் கவனம் செலுத்தினோம். என் அன்னையையும், பாட்டி செம்பியன் மாதேவியையும் தவிர மற்ற மாதர் அனைவரும் உள்ளே சென்று விட்டார்கள். தந்தைக்குச் சீக்கிரத்தில் மூர்ச்சை தௌிந்து விட்டது.
"என் சகோதரி குந்தவையைத் தனி இடத்துக்கு நான் அழைத்துச் சென்று, 'நந்தினி அங்கே எப்படி வந்தாள்?' என்று கேட்டேன். நந்தினி பெரிய பழுவேட்டரையரை மணந்து கொண்டு இப்போது பழுவூர் இளையராணியாக விளங்குகிறாள் என்று குந்தவை சொன்னாள். என் நெஞ்சில் கூரிய ஈட்டி பாய்ந்தது. நண்பா! போர்க்களங்களில் எத்தனையோ முறை நான் காயம் பட்டதுண்டு. ஆனால், 'நந்தினிதான் பழுவூர் இளையராணி' என்று குந்தவை கூறியதனால் என் நெஞ்சில் ஏற்பட்ட காயம் இன்னும் ஆறவில்லை!' என்று ஆதித்த கரிகாலன் கூறித் தன்னுடைய நெஞ்சை அமுக்கிப் பிடித்துக் கொண்டான். நெஞ்சில் அவனுக்கு இன்னும் வலி இருந்து வந்தது என்பது நன்றாய்த் தெரிந்தது.
பக்க தலைப்பு
ஐம்பத்தேழாம் அத்தியாயம் மாய மோகினி
ஆரம்பத்திலிருந்து அவ்வளவாக அனுதாபம் இல்லாமலே கரிகாலன் கதையைக் கேட்டுக் கொண்டு வந்த பார்த்திபனுக்கும் இப்போது நெஞ்சு உருகி விட்டது. தன்னுடைய கண்களில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.
"அரசே! ஒரு பெண்ணின் பேரில் ஏற்பட்ட காதலினால் இப்படிப்பட்ட துன்பம் உண்டாகக் கூடும் என்று நான் கனவிலும் கருதியதில்லை! இளவரசுப் பட்டாபிஷேகம் நடந்த அன்று இப்படி ஓர் அனுபவம் தங்களுக்கு நேர்ந்தது என்று எங்களுக்கெல்லாம் தெரியாது. ஆகையால், தாங்கள் மனச்சோர்வுடன் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டோம். என்னவெல்லாமோ பரிகாசப் பேச்சுகள் பேசித் தங்களைச் சந்தோஷப்படுத்தப் பார்த்தோம். அதெல்லாம் இப்போது எனக்கு நினைவு வருகிறது!" என்றான்.
"ஆம்; நீங்கள் பரிகாசப் பேச்சுப் பேசினீர்கள். என்னை உற்சாகப்படுத்தப் பார்த்தீர்கள். என்னுடைய ஆட்சிக் காலத்தில் நான் செய்யப் போகும் மகத்தான காரியங்களைப் பற்றி பேசினீர்கள். இலங்கையிலிருந்து இமயம் வரையில் சோழ சாம்ராஜ்யத்தை அன்றைய தினமே விஸ்தரித்து விட்டீர்கள்! இன்னும், கடல் கடந்து சென்றும் இராஜ்யங்களைக் கைப்பற்றினீர்கள். அந்தப் பேச்செல்லாம் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.அவ்வளவும் எனக்கு எவ்வளவு துன்பமளித்தது என்பதும் நினைவிருக்கிறது. பிறகு ஒரு நாள் என்னை நந்தினி பழுவூர் அரண்மனைக்குக் கூப்பிட்டு அனுப்பினாள். போகலாமா, வேண்டாமா என்று என் மனத்தில் ஒரு போராட்டம் எழுந்தது. கடைசியில், போவதென்று முடிவு செய்தேன். பல விஷயங்களில் எனக்குத் தோன்றியிருந்த ஐயங்களை அவளைக் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினேன். அவளுடைய பிறப்பின் உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்பினேன். அந்தப்புரத்தில் என் தந்தை அன்று மூர்ச்சை அடைந்து விழுந்ததற்கும் அங்கே நந்தினியை அவர் அகஸ்மாத்தாகக் கண்டதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகங்கூட என் மனத்தில் தோன்றியிருந்தது. அன்றைய தினம் சக்கரவர்த்திக்கு விரைவில் மூர்ச்சை தௌிந்து விட்டதாயினும் மறுபடி அவர் பழைய ஆரோக்கியத்தை அடையவேயில்லை என்பது உனக்கு நினைவிருக்கும். நந்தினியுடன் பேசுவதிலிருந்து எனக்கு அதுவரை விளங்காத மர்மம் ஏதேனும் வௌியாகலாம் என்று எண்ணினேன். இதையெல்லாம் ஒரு வியாஜமாக வைத்துக் கொண்டேனே தவிர, உண்மையில் நான் சென்ற காரணம், அவளிடமிருந்த காந்த சக்திதான். வேறு காரணங்களைக் கற்பித்து என்னை நானே ஏமாற்றிக் கொண்டு சென்றேன். பழுவேட்டரையர் ஊரில் இல்லை. அவருடைய அரண்மனையில் என்னைத் தடுப்பாரும் இல்லை; எனக்கும் நந்தினிக்கும் ஏற்பட்டிருந்த பழைய சிநேகிதத்தைப் பற்றி அங்கே அறிந்தவர்களும் இல்லை. இளவரசுப் பட்டம் கட்டிக் கொண்ட ராஜகுமாரன் பழுவூர் அரண்மனை ராணிமார்களிடம் ஆசி பெறுவதற்காக வருவதாகவே நினைத்தார்கள். அரண்மனைத் தோட்டத்தில் உள்ள லதா மண்டபத்தில் நந்தினியை நான் சந்தித்தேன். பார்த்திபா! கடற்பிரயாணம் செய்வோரின் அனுபவங்களை நீ கேட்டிருக்கிறாய் அல்லவா? சமுத்திரத்தில் சில இடங்களில் அளவில்லாத சக்தியுடனும் வேகத்துடனும் கூடிய நீரோட்டங்கள் இருக்குமாம். அந்த நீரோட்டங்களில் கப்பல்கள் அகப்பட்டுக் கொண்டால் சிறிது நேரத்தில் சுக்குச் சுக்காகப் போய்விடுமாம். நந்தினியின் முன்னிலையில் நான் இருந்தபோது, கடல் நீரோட்டத்தில் அகப்பட்டுக் கொண்ட கப்பலின் கதியை அடைந்தேன். என் உடல், உள்ளம், இருதயம் எல்லாம் ஆயிரம் சுக்கல்களாகி விட்டன. என்னுடைய நாவிலே வந்த வார்த்தைகள் எனக்கே வியப்பை அளித்தன! 'ஐயோ! இது என்ன இப்படிப் பேசுகிறோம்?' என்று நெஞ்சில் ஒரு பக்கம் தோன்றிக் கொண்டிருந்தபோது, வாய் ஏதேதோ உளறிக் கொண்டிருந்தது. எனக்கு இளவரசுப் பட்டம் சூட்டியதைப் பற்றி நந்தினி தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாள்.
'எனக்கு அதில் ஒன்றும் மகிழ்ச்சி இல்லை!' என்றேன்.
'ஏன்?' என்று கேட்டாள்.
'இது என்ன கேள்வி கேட்கிறாய்? எனக்கு எவ்வாறு மகிழ்ச்சி இருக்கும்? நீதான் இப்படி அநியாயம் செய்து விட்டாயே?' என்றேன்.நான் சொல்வது அவளுக்கு விளங்காதது போல நடித்தாள். இவ்விதம் பேச்சு வளர்ந்து கொண்டே போயிற்று. என் அன்பை நிராகரித்தது பற்றியும், வீரபாண்டியனைக் காதலித்தது பற்றியும் அவள் மீது நான் குற்றம் சாட்டினேன். கிழவர் பழுவேட்டரையரை மணந்தது பற்றியும் குத்தலாகப் பேசினேன்.
'இளவரசே! முதலில் தாங்கள் என் காதலைக் கொன்றீர்கள்; பிறகு என்னைக் காதலித்தவனை என் கண் முன்னால் கொன்றீர்கள்; என்னையும் கொன்றாலொழியத் தங்கள் மனம் திருப்தியடையாது போலிருக்கிறது. நான் உயிரோடிருப்பதே தங்களுக்குப் பிடிக்கவில்லை. நல்லது; என்னையும் கொன்று தங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்!' என்று சொல்லித் தன்னுடைய இடுப்பில் செருகியிருந்த சிறிய கத்தியை எடுத்து நீட்டினாள்.
'நான் ஏன் உன்னைக் கொல்கிறேன்? நீயல்லவா என்னை உயிரோடு வதைத்துக் கொண்டிருக்கிறாய்!' என்றேன்.
கடைசியில், இப்போது நினைத்துப் பார்த்தாலும் வெட்கம் தருகிற வார்த்தைகளை என் வாய் சொல்லிற்று. 'இன்னமுங்கூட மோசம் ஒன்றும் நேர்ந்துவிடவில்லை. ஒரு வார்த்தை சொல்லு! இந்த கிழவனை விட்டு விட்டு வந்துவிடுவதாகச் சொல்லு! உனக்காக நான் இந்த ராஜ்யத்தை விட்டு வந்துவிடுகிறேன். இருவரும் கப்பல் ஏறிக் கடல் கடந்து தூர தேசத்துக்குப் போய் விடுவோம்!' என்றேன்.
நந்தினி அதைக் கேட்டுப் பயங்கரமாகச் சிரித்தாள். அதை நினைத்தால் இப்போது கூட எனக்கு ரோமம் சிலிர்க்கிறது. 'கடல் கடந்து தூர தேசத்துக்குப் போய் நாம் என்ன செய்வது என்கிறீர்கள்? விறகு வெட்டிப் பிழைக்கவா? அல்லது வாழைத் தோட்டம் போட்டுப் பிழைக்கவா?' என்றாள். 'அதெல்லாம் உனக்குப் பிடிக்காதுதான்! அர்ச்சகர் வீட்டில் வளர்ந்தவள் பழுவூர் ராணி ஆகிவிட்டாய் அல்லவா?' என்றேன்.
'இதோடு திருப்தியடைவதாக எண்ணம் இல்லை. சோழ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் சக்கரவர்த்தினியாக வீற்றிருப்பதாக உத்தேசம். தங்களுக்கு இஷ்டமிருந்தால் சொல்லுங்கள், பழுவேட்டரையர் இருவரையும் கொன்றுவிட்டு, சுந்தர சோழரைச் சிறையில் அடைத்து விட்டு, சக்கரவர்த்தியாகி என்னைத் தங்கள் பட்டமகிஷியாக்கிக் கொள்கிறதாயிருந்தால் சொல்லுங்கள்!' என்றாள். 'ஐயோ! என்ன பயங்கரமான வார்த்தைகளைச் சொல்கிறாய்?' என்றேன். 'காயமடைந்து படுத்துக் கிடந்த பாண்டியனை என் கண் முன்னால் கொன்றது பயங்கரமான காரியமில்லையா?' என்று நந்தினி கேட்டாள். இதனால் என் குரோதம் கொழுந்து விடத் தொடங்கியது. ஏதேதோ வெறி கொண்ட வார்த்தைகளை உளறி அவளை நிந்தித்துவிட்டுக் கிளம்பினேன். அப்போதும் அவள் என்னை விடவில்லை. 'இளவரசே! எப்போதாவது தங்களுடைய மனத்தை மாற்றிக் கொண்டால் என்னிடம் திரும்பி வாருங்கள். என்னைச் சக்கரவர்த்தினியாக்கிக் கொள்ளத் தங்கள் மனம் இடம் கொடுக்கும் போது வாருங்கள்!' என்றாள். அன்று அவளை விட்டுப் பிரிந்தவன் பிறகு அவளைப் பார்க்கவே இல்லை!' என்றான் ஆதித்த கரிகாலன்.
இதையெல்லாம் கேட்டுப் பயங்கரமும் திகைப்பும் அடைந்த பார்த்திபேந்திரன், "அரசே! இப்படியும் ஒரு ராட்சஷி உலகில் இருக்க முடியுமா? அவளைத் தாங்கள் மறுபடி சந்திக்காததே நல்லதாய்ப் போயிற்று!" என்று கூறிப் பெருமூச்சு விட்டான்.
"அவளை நான் போய்ப் பார்க்கவில்லை என்பது சரிதான்! ஆனால் அவள் என்னை விட்டபாடில்லை. பல்லவா! இரவும் பகலும் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து என்னை வதைக்கிறாள். பகலில் நினைவிலே வருகிறாள். இரவில் கனவிலே வருகிறாள். ஒரு சமயம் முகத்தில் மோகனப் புன்னகையுடன் என்னைக் கட்டி அணைத்து முத்தம் கொடுக்க வருகிறாள். இன்னொரு சமயம் கையில் கூரிய கத்தியுடன் என்னைக் குத்திக் கொல்ல வருகிறாள். ஒரு சமயம் கண்களில் கண்ணீர் பெருக்கி விம்மிக் கொண்டு வருகிறாள். வேறொரு சமயம் தலைவிரி கோலமாய்க் கன்னங்களைக் கை விரல்களினால் பிறாண்டிக் கொண்டும் அலறி அழுது கொண்டும் வருகிறாள். ஒரு சமயம் பைத்தியம் பிடித்தவளைப் போல் பயங்கரமாய்ச் சிரித்துக் கொண்டும் வருகிறாள். இன்னொரு சமயம் அமைதியான முகத்துடன் ஆறுதல் சொல்ல வருகிறாள். கடவுளே! அந்தப் பாதகி என்னை எப்படித்தான் வதைக்கிறாள் என்று சொல்லி முடியாது. இன்று மாலை பாட்டன் கூறியது நினைவிருக்கிறதா! நான் ஏன் தஞ்சை போகக் கூடாது என்பதற்கு ஏதேதோ காரணம் கூறினார். உண்மையில் நான் தஞ்சை போகாமலிருப்பதற்கும் என் தந்தையைக் காஞ்சிக்கு வரவழைக்க விரும்புவதற்கும் காரணம் நந்தினிதான்..."
"அரசே! கேவலம் ஒரு பெண்ணுக்குப் பயந்து கொண்டா தஞ்சைக்குப் போகாமலிருக்கிறீர்கள்? அப்படி அவள் என்ன தான் செய்து விடுவாள்? வஞ்சனையாக விஷம் வைத்துத் தங்களைக் கொன்று விடுவாள் என்று அஞ்சுகிறீர்களா?......."
"இல்லை, பார்த்திபா, இல்லை! இன்னமும் என்னை நீ நன்றாகப் புரிந்து கொள்ளவில்லை. அவள் என்னைக் கொன்று விடுவாள் என்பதற்காக நான் அஞ்சவில்லை. அவளுடைய இஷ்டப்படி என்னைச் செய்ய வைத்து விடுவாளோ என்றுதான் பயப்படுகிறேன். 'உன் தந்தையைச் சிறையில் போடு!' 'உன் தங்கையை நாட்டை விட்டுத் துரத்து!' 'இந்தக் கிழவனைக் கொன்று என்னைச் சிம்மாசனத்தில் ஏற்று!' என்று அந்த மாயமோகினி மறுமுறை சொன்னால், எனக்கு அப்படியெல்லாம் செய்யத் தோன்றிவிடுமோ என்று பயப்படுகிறேன். நண்பா! ஒன்று நந்தினி சாக வேண்டும்; அல்லது நான் சாக வேண்டும்; அல்லது இரண்டு பேரும் சாக வேண்டும். இல்லாவிடில் இந்த ஜன்மத்தில் எனக்கு மன அமைதி கிடையாது!" என்றான் கரிகாலன்.
"அரசே! இது என்ன பேச்சு? தாங்கள் ஏன் சாக வேண்டும்? எனக்கு அனுமதி கொடுங்கள்! இலங்கைக்கு அப்புறம் போகிறேன். உடனே தஞ்சாவூர் சென்று அவளைக் கொன்றுவிட்டு வருகிறேன். ஸ்திரீ ஹத்தி தோஷம் எனக்கு வந்தால் வரட்டும்.."
"அப்படி ஏதாவது செய்தால் உன்னை என் பரம வைரியாகக் கருதுவேன். நந்தினியைக் கொல்லத் தான் வேண்டுமென்றால், என்னுடைய இந்தக் கையினாலேயே அவளைக் கொல்லுவேன். கொன்றுவிட்டு என்னையும் கொன்று கொண்டு மாளுவேன்! வேறொருவர் அவளுடைய சுண்டு விரலின் நகத்துக்குக் கேடு செய்வதையும் என்னால் பொறுக்க முடியாது! நண்பா! நீ நந்தினியை மறந்துவிடு! அவளைப் பற்றி நான் சொன்னதெல்லாவற்றையும் மறந்துவிடு! பாட்டன் சொன்னபடி நீ நாளைக்கே புறப்பட்டு இலங்கைக்குப் போ! என் சகோதரன் அருள்மொழியை எப்படியாவது வற்புறுத்தி இங்கே அழைத்து வா! அவனை இங்கே இருக்கச் செய்வோம். பாட்டனும் பேரனும் யோசித்து என்ன வேணுமோ செய்து கொள்ளட்டும். நாம் இலங்கைக்குச் செல்வோம், மீண்டும் கப்பல் ஏறிப் பெரும்படையுடன் கீழைக் கடல்களில் செல்வோம்.சாவகம், புஷ்பகம், கடாரம் முதலிய தேசங்களுக்குச் சென்று வெற்றிக் கொடி நாட்டுவோம். பிறகு மேற்கே திரும்புவோம். அரபு, பாரஸீகம், மிசிரம் முதலிய நாடுகளுக்குச் சென்று அங்கெல்லாம் தமிழர் வீரத்தையும் புலிக் கொடியையும் நிலைநாட்டுவோம். பார்த்திபா! அந்த நாடுகளில் எல்லாம் கற்பு என்னும் கட்டுப்பாடு இந்த நாட்டில் உள்ளது போல் கிடையாது என்பது உனக்குத் தெரியுமா? அரசர்கள் தங்கள் இஷ்டம்போல் அவர்களுடைய ஆட்சியின் கீழ் உள்ள எந்தப் பெண்ணையும் அழைத்துச் சென்று அந்தப்புரத்தில் சேர்த்துக் கொள்வார்களாம்!....." என்றான் கரிகாலன்.
பார்த்திபன் இதற்கு மறு மொழி சொல்லுவதற்குள் திருக்கோவலூர் மலையமான் அங்கு வந்து சேர்ந்தார். "அரவான் கதையைப் போல் அற்புதமான கதை இந்த உலகத்திலேயே கிடையாது. நீ இப்போது சொல்லிக் கொண்டிருந்த எந்த நாட்டிலும் கிடையாது. ஆனால் இன்னுமா நீங்கள் தூங்காமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? பார்த்திபேந்திரா! நாளைக்கு இலங்கைக்குப் புறப்பட வேண்டும் என்பது உனக்கு நினைவிருக்கிறதல்லவா?" என்றார்.
"அதைப் பற்றித்தான் தூங்காமல் பேசிக் கொண்டிருக்கிறோம்!" என்றான் பார்த்திபேந்திரன். |