தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments

Home >Tamil Language & Literature > Kalki - R.Krishnamurthy > கல்கியின் பொன்னியின் செல்வன் -  நூலடக்கம் > முதலாவது பாகம் - புது வெள்ளம் > இரண்டாம் பாகம் - சுழற்காற்றுமூன்றாம் பாகம் - கொலை வாள்நான்காம் பாகம் - மணிமகுடம் ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம் > அத்தியாயம் 1-10 >அத்தியாயம் 11-20 > அத்தியாயம் 21-30 > அத்தியாயம் 31-40 > அத்தியாயம் 41-50 > அத்தியாயம் 51-60 > அத்தியாயம் 61-70 >  அத்தியாயம் 71-80 > அத்தியாயம் 81-90 > முடிவுரை

CONTENTS
OF THIS SECTION
Last updated
25/06/07

Acknowledgements:
Etext donation : AU-KBC Research Center (Mr. Baskaran), Anna University, Chennai, India Proof-reading: Mr. S. Anbumani, Mr. N.D. Logasundaram, Mr. Narayanan Govindarajan, Ms. Pavithra Srinivasan, Mr. Ramachandran Mahadevan, Ms. Sathya, Mr. Sreeram Krishnamoorthy, Dr. Sridhar Rathinam, Mrs. Srilatha Rajagopal, Mr. Vinoth Jagannathan Web version: Mr. S. Anbumani, Blacksburg, Virginia, USA © Project Madurai 1999 - 2003 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
கல்கியின் பொன்னியின் செல்வன்
kalkiyin ponniyin celvan

முடிவுரை



முடிவுரை

நேயர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மூன்றரை ஆண்டுகாலம் "பொன்னியின் செல்வன்" கதையைத் தொடர்ந்து படித்துவந்ததில் நேயர்கள் காட்டிய பொறுமையையும் ஆர்வத்தையும் அன்பையும் போற்றி வணங்குகிறேன். கதை ஆரம்பித்துச் சில மாதங்கள் வரையில் நேயர்களிடையே இது இவ்வளவு ஆர்வத்தை உண்டாக்குமென்று தோன்றவில்லை. பழந்தமிழ்நாட்டுச் சரித்திரப் பெயர்கள் சிலருக்குப் பெரிதும் தலைவேதனை உண்டாக்கி வந்ததாகத் தெரிந்தது. போகப் போக, அந்த தலைவேதனையை நேயர்கள் எப்படியோ போக்கிக்கொண்டார்கள். இதற்கு முன்னால் எந்தத் தொடர்கதையையும் நேயர்கள் இவ்வளவு ஆர்ரவத்துடன் படித்ததில்லையென்று சொல்லும் நிலைமை வெகு விரைவில் ஏற்பட்டது. அதே ஆர்வம் தொடர்ந்து நிலைபெற்று இருந்து வந்தது.

கதை ஆரம்பித்த மறுவருடம் ஆடிப் பதினெட்டாம்பெருக்கு தினத்தில் பரமக்குடியிலிருந்து பல நண்பர்கள் கையெழுத்திட்டுப் "பொன்னியின் செல்வன்" கதைக்குத் தங்கள் பாராட்டுதல்களைத்தெரிவித்தார்கள். "பொன்னியின் செல்வன்" முதல் அத்தியாயம் பதினெட்டாம் பெருக்குத் திருவிழாவன்று வீரநாரயண ஏரிக்கரையில் தொடங்குகிறது அல்லவா?

பின்னர் அடிக்கடி பல நேயர்கள் கடிதம் எழுதித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

இந்தப் பாராட்டுதல்களை யெல்லாம் கதையின் ஆசிரியருக்குரியவையாக நான் கருதவில்லை. பழந்தமிழ் நாட்டின் சரித்திரத்திற்குரிய பெருமையாகவே கருதினேன். உண்மையிலேயே, தமிழ்நாட்டின் பழைய வரலாறு, தமிழர்கள் மிகவும் பெருமிதம் கொள்ளக்கூடிய வரலாறுதான். சென்ற சில ஆண்டுகளாகத்தான் தமிழகத்தின் பழைய சரித்திர ஆராய்ச்சி முறையாக நடைபெற்று வருகிறது. கல்வெட்டுகளும், செப்புப் பட்டயங்களும் படிக்கப்பட்டு வருகின்றன. வரலாற்று ஆராய்சியாளர் அந்த ஆதாரங்களை வைத்துத் தமிழகத்தின் சரித்திரத்தை அங்கங்கே பகுதிபகுதியாக நிர்மாணித்து வருகிறார்கள்.

சரித்திரத்தின் எந்த ஒருகாலப் பகுதியைப் பற்றியும் பரிபூரணமாகவும், ஐயந்திரிபுக்கு இடமின்றி வரலாறு எழுதப்பட்டதாகச் சொல்வதற்கில்லை.

ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னால் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு நீடித்து அரசுபுரிந்த பல்லவ சக்கரவர்த்திகளின் வரலாறு ஓரளவு ஆராயப்பட்டிருக்கிறது. இந்த இருநூறு ஆண்டுகளைப் பற்றிய சரித்திர வரலாற்று விவரங்கள் நன்கு தெரிய வந்திருக்கின்றன

பின்னர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கி முன்னூறு ஆண்டு புகழுடன் விளங்கிய விஜயாலய சோழ பரம்பரையின் காலத்து நிகழ்சிகளும் ஓரளவு ஆராயப்படடிருக்கின்றன. இக்காலத்து நிகழ்சிகளைப் பற்றித் திட்டமாக நிர்ணயிக்கமுடியாதபடி பல ஐயப்பாடுகள் தோன்ற இடமிருக்கிறது. ஆயினும், சில சம்பவங்கள் மறுக்கமுடியாத தகுந்த ஆதாரங்களுடன் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.

இவற்றுள் எல்லாம் மிக முக்கியமானது, தமிழகத்துக்கு இணையைற்ற பெருமையை அளிக்கக்கூடியது, உலக சரித்திரத்திலே ஒப்பற்ற சம்பவம் என்று கொண்டாடுவதற்குத் தகுதியானது ஒன்று உண்டு. சுந்தர சோழரின் இரண்டாவது திருக்குமாரனாகிய அருள்மொழிவர்மன், (பிற்காலத்த்ில் இராஜராஜசோழன் என்று புகழ்பெற்ற பேரரசன்) இளம் பிராயத்தில் எளிதில் பெற்றிருக்கக்கூடிய சோழ சாம்ராஜ்ஜியத்தை வேண்டாம் என்று மறுத்து, உத்தமசோழனுக்கு பட்டம் கட்டி வைத்தான்.

"சுந்தரசோழனுக்குப் பின்னர் அவனுடைய மகன் அருள்மொழிவர்வனே சோழ சிங்காதனம் ஏறி அரசாளவேண்டும் என்று சோழநாட்டு மக்கள் பெரிதும் விரும்பினார்கள். ஆயினும் அருள்மொழிவர்மன் தன் பெரிய பாட்டனாகிய கண்டராதித்தனுடைய புதல்வனும், தனக்குச் சிறிய தகப்பன் முறையிலிருந்தவனுமான உத்தம சோழனுடைய உரிமையை மதித்து அவனுக்கு முடிசூட்டிவைத்தான்" என்று திருவாலங்காட்டு செப்பேடுகள் அறுதியிட்டு உறுதி கூறுகின்றன.

இந்த நிகழ்சியை மற்றும் பல செப்பேடுகளும் கல்ெவெட்டுகளும் அந்தக் காலத்தில் அறிஞர் பலரால் எழுதப்பட்ட நூல்களும் உறுதிப்படுத்துகின்றன.

அருள்மொழிவர்மன் திருமுடி சூட்டிக்கொள்ள வேண்டுமென்று இராஜ்ஜியத்தின் மக்கள் விரும்பினார்கள்; உற்றார் உறவினர் விரும்பினார்கள்; அக்காலத்தில் மிக்க வலிமை பெற்றிருந்த சோழப் பெரும் படையின் வீரர்கள் அனைவரும் விரும்பினார்கள்.

அவ்வாறு எல்லாவித ஆதரவும் அனுகூலங்களும் அருள்மொழிவர்மனுக்கு இருந்தும், அவன் சாம்ராஜ்ஜயத்தை உத்தமசோழனுக்கு அளித்து பட்டம் கட்டுவித்தான்.

உலக சரித்திரத்திலும், காவிய இதிகாசங்களிலும் இதற்கு ஒப்பான இன்னொரு அரும்பெருஞ் செயலைக் காண்பதரிது.

அசோக சக்கரவர்த்தி கலிங்க நாட்டுப் போரில் மகத்தான வெற்றி அடைந்த பிறகு, இனி யுத்தம் வேண்டாம் என்று முடிவு செய்ததைத்தான் அருள்மொழிவர்மன் தியாகத்திற்கு இணையாக கூறலாம்.

"பொன்னியின் செல்வன்" கதையில் சிகரமான சம்பவம் அருள்மொழிவர்மனின் ஓப்பற்ற தியாகமேயாகும். கதையில் வரும் சகல நிகழ்ச்சிகளும் இந்த மகத்தான சம்பவத்தை நோக்கியே சென்று கொணடிருக்கின்றன. அதனாலேயே இக்கயைின் ஐந்தாவது பகுதிக்கு 'தியாக சிகரம்' என்று பெயர் தரப்பட்டது. இக்கதையின் சிகரமான நிகழ்ச்சி பொன்னியின் செல்வன் செய்த சாம்ராஜ்ய தியாகந்தான் என்பதைக் கதையை படித்துவந்த நேயர்கள் அனைவரும் உணர்ந்திருப்பார்கள் என நம்புகிறேன். யாராவது அதை உணரவில்லையென்றால், அதற்குக் காரணம் ஆசிரியருடைய ஆற்றல் குறைவு என்றே கூறவேண்டும். அந்தக் குறையை கதையாசிரியர் தாழ்மையுடன் ஓப்புக்கொண்டு நேயர்களிடம் மன்னிப்பு கோர வேண்டியதுதான்.

"பொன்னியின் செல்வன்" கதை வௌியாகி வந்த போதெல்லாம் நேயர்கள் ஓப்பற்ற ஆர்வம் காட்டி வந்தார்கள். பலர் பாராட்டி கடிதங்கள் எழுதி உற்சாகப் படித்திவந்தார்கள். நேயர்களிடமிருந்து வந்த கடிதங்களில் அப்போதெல்லாம் கருத்து வேற்றுமையே காணப்படவில்லை.

கதை முடிவடைந்த பிறகும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்திருக்கின்றன. இக்கடிதங்களில் பெரிதும் கருத்து வேற்றுமை காணப்படுகிறது. பாதிப்பேர் கதையைப் பாராட்டிக் கதையின் முடிவையும் பாராட்டியிருக்கிறார்கள். இன்னும் பாதிப்பேர் கதை முடிந்த விதத்தை குறை கூறியிருக்கிறார்கள். சட்டென்று முடித்துவிட்டதாகவும் பல கதாபாத்திரங்கள் பின்னால் என்ன ஆனார்கள் என்று சொல்லாமலே கதையை முடித்துவிட்டதற்காகவும் வருந்தியிருக்கிறார்கள். காராசாரமாகக் கண்டனங்கள் எழுதியவர்களும் உண்டு.

கண்டனமாகவும் குறைசொல்லியும் எழுதியிருப்பவர்கள் அனைவரும் கதையை இன்னும் வளர்த்தி எழுதியிருக்கலாம் என்றே அபிப்பிராயம் தெரிவித்திருப்பதை எண்ணி ஒருவாறு திருப்தி அடைகிறேன். மூன்றரையாண்டு தொடர்ந்து வௌியாகி வந்த கதையைக்குறித்து அலுப்பு அடைந்து " எப்போது முடிக்கப்போகிறீர்?" என்று கேளாமல், "ஏன் இப்படி திடுதிப்பென்று முடித்து விட்டீர்? ஏன் மேலும் வளர்த்தி எழுதியிருக்கக்கூடாதா" என்று நேயர்கள் கேட்பது ஒருவாறு மகிழ்ச்சியடைவதற்குரிய நிலைமைதான். ஆயினும் நேயர்களில் ஒரு பெரும் பகுதியினரை திருப்தி செய்யமுடியாமற் போனது பற்றி வருந்துகிறேன்.

"பொன்னியின் செல்வன்" கதையை இப்போது முடித்திருப்பதற்கு இரண்டு முக்க்ிய காரணங்கள் உண்டு.

(1) முன்னமே குறிப்பிட்துபோல், கதையில் சிகரமான நிகழ்ச்சி பொன்னியின் செல்வன் தன்கையில் கிடைத்த மகா சாம்ராஜ்ஜியத்தை தியாகம் செய்து இன்னொருவருக்கு முடிசூட்டியதேயாகும்.

ஆகையால், அந்த பெரு நிகழ்ச்சிக்குப்பிறகு கதையை வளர்த்திக்கொண்டு போவது ஆங்கிலத்தில் சொல்லப்படுவது போல், 'கிளைமாக்ஸு'க்குப்பிறகு 'ஆண்டி கிளைமாக்ஸு'க்குப்போவதாக முடியும்.

(2) நேயர்கள் பலர் இப்போது சீக்கிரம் முடித்துவிட்டதாக குறைசொன்னாலும் , இந்த கதை மேலும் வளர்ந்தால் விரைவில் அதே நேயர்கள் வேறுவிதமாக குறைபட நேரிடும். "எப்போது முடிக்கப்போகிறீர்?" என்று ஆசிரியரை நேயர்கள் கேட்கும் நிலைமை விரைவில் வந்துவிடும்.

(3) பொதுவாக 'நாவல்கள்' எழுதுவதற்கும், முக்கியமாக 'சரித்திர நவீனங்கள்' எழுதுவதற்கும் சட்டதிட்டங்கள் ஏற்படடிருக்கவில்லை. (அப்படி இருந்தால் அவற்றை நான் படித்தில்லை). ஒவ்வொரு ஆசிரியிரும் தமக்குரிய முறையை வகுத்துக்கொண்டு எழுதுகிறார்கள்.

(4) ஆயினும், முழுவதும் கற்பனையாக எழுதப்படும் சமூக வாழ்க்கை நவீனங்களுக்கும், சரித்திர சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதும் நவீனங்களுக்கும் ஒரு வேற்றுமை அவசியம் இருந்து தீருகிறது.

(5) முற்றிலும் கற்பனை செய்யப்பட்ட கதைகளில் வரும் பாத்திரங்களில் எல்லோருக்கும் கதையாசிரியர் சுலபமாக முடிவு சொல்லிவிடலாம். கதாநாயகனும் கதாநாயகியும் கலியாணம் செய்து கொண்ட பிறகோ, அல்லது கதாநாயகன் தூக்குமேடை ஏறியும் கதாநாயகி கடலில் விழுந்தும் இறந்த பின்னரோ, கதையில் வரும் மற்றப் பாத்திரங்களை ஒரு பாராவில் சரிப்படுத்திவிடலாம். கலியாணம் செய்து கொண்ட தம்பதி பிள்ளை குட்டி பேரர்களை பெற்று நெடுங்காலம் வாழ்ந்தார்கள் என்றும், மற்றக் கதாபாத்திரங்களில் நல்லவர்கள் எல்லோரும் சுகமடைந்தார்கள் என்றும், கெட்டவர்கள் எல்லோரும் பல கஷ்டங்கள் பட்டு செத்தொழிந்தார்கள் அல்லது தக்க தண்டனை அடைந்தார்கள் என்றும் கூறிக் கதையை திருப்திகரமாக முடிக்கலாம்.

(6) சரித்திரக் கதைகளை இந்த விதத்தில் முடிப்பது அவ்வளவு எளிய காரியமும் அன்று; உசிதமும்ஆகாது.

(7) சரித்திரக் கதைகளில் வரும் பாத்திரங்களில் இறந்து போனவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் பிற்காலத்தில் பற்பல காரியங்களில் ஈடுபடுவார்கள்; வெற்றியோ, தோல்வியோ சுகமோ துக்கமோ அடைவார்கள். அவற்றைக்குறித்து முன்னதாகவே சொல்லி விடுவது முறையாகுமா? அல்லது ஆதாரங்களுடன் கூடிய விவரங்கள் இல்லாமல் முடிவான நிகழ்ச்சிகளைப் பற்றி மட்டும் சொல்வதுதான் உசிதமாகுமா?

(8) கதையை எந்தக் காலத்தில் முடிக்கிறோமோ, அந்தக் காலத்தில் பாத்திரங்கள் இருந்த நிலையிலேயே விட்டு விடுவதுதான் முறையென்று கருதினேன். ஆனால் இது பல நேயர்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்பதைக் காண்கிறேன். ஓரளவேனும் அவர்களைத் திருப்தி செய்விக்க வேண்டியது அவசியம் என்று உணருகிறேன்.

பல நேயர்கள் அறிந்துகொள்ள விரும்பும் விவரங்களை கேள்வி பதில் ரூபத்தில் இதோ கோவைப்படுத்தித் தந்திருக்கிறேன்:-

1. வந்தியத்தேவர் இளவரசி குந்தவைப்பிராட்டியாரை மணந்தாரா?

2. கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையர் என்ன ஆனார்?

3. வீர வைஷ்ணவனான ஆழ்வார்க்கடியான் என்ன செய்தான்?

4. பொன்னியின் செல்வரின் பிரயாணம் என்ன ஆயிற்று?

5. பழைய மதுராந்தகரும் சின்னப் பழுவேட்டரையரின் மகளும் என்ன ஆனார்கள்?

6. நந்தினியினால் முடிசூட்டப்பட்ட இளம்பாண்டியனைப்பற்றிய விவரம் ஏன்ன?

7. நந்தினியின் கதி என்ன?

8. வானதி விஷயமாக குடந்தை சோதிடர் கூறியவை பலித்தனவா?

9. ஆபத்துதவிகள் என்ன செய்தார்கள்?

மேற்கூறிய கேள்விகள் பலவற்றுக்குப் பதில்களை தமிழ்நாட்டு சரித்திரம் படித்தவர்கள் தாங்களே அறிந்து கொள்வார்கள். ஆயினும் அனைவருக்கும் திருப்தி அளிக்கும் பொருட்டு மேற்கண்ட கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில் தந்து விடுகிறேன்.

1. மேலும் பல இடையூறுகளைத்தாண்டிய பிறகு குந்தவையும் வந்தியத்தேவனும் மணம்செய்து கொள்கிறார்கள். இருவரும் சோழ சாம்ராஜ்ஜியத்தில் மிக மதிக்கப்படுகிறார்கள். தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டு ஒன்றில் "இராஜராஜ தேவரின் திருத்தமக்கையார், வல்லவரையர் வந்தியத்தேவரின் மகாதேவியார், ஆழ்வார் பராந்தகக் குந்தவையார்" என்று பொறிக்கப்பட்டு விளங்குகிறது.

2. இரும்பு மனிதராகிய சின்னப்பழுவேட்டரையர் உயிர் பிழைத்துப் பல கஷ்டங்களை அநுபவித்த பிறகு ஊருக்குத் திரும்பி வருகிறார். சோழ சாம்ராஜ்ஜியத்திற்கு பல அரிய சேவைகள் செய்கிறார்.

3. வீர வைஷ்ணவன் ஆழ்வார்க்கடியான் தனது ஒற்றறியும் வேலையை மேலும் நடத்திக்கொண்டிருக்கிறான். நந்தினியும் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளும் செய்யும் சதித் திட்டங்களை அறிந்து வந்து சொல்கிறான்.

4. பொன்னியின் செல்வர் வந்தியத்தேவனுடன் பெரிய கடற்படை தயாரித்துக் கொண்டு கடற் கொள்ளைக்காரர்களை அடக்கிச் சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கடல்களுக்கு அப்பால் உள்ள வௌிநாடுகளில் நிலை நாட்டுகிறார். உத்தமசோழருக்கு பட்டம்கட்டிப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் அவர் இறந்தததும், பொன்னியின் செல்வர் சிங்காதனம் ஏறுகிறார். 'இராஜராஜ சோழன்' என்ற பட்டத்துடன் நீண்ட காலம் சோழ சாம்ராஜ்ஜியத்தை ஆளுகிறார்.

5. பழைய மதுராந்தகன் ஆபத்துதுவிகளின் தூண்டுதலாலும், ஈழமன்னன், சேரமன்னன் உதவிகொண்டும் பாண்டியநாட்டைக் கவர்ந்து முடிசூட்டிக்கொள்ள முயலுகிறான். அவனுடைய முயற்சி பெரிதும் பலம் பெறுகிறது. இராஜராஜசோழர் பட்டத்திற்கு வந்த பிறகு அமரபுஜங்கன் நெடுஞ்செழியனை போரில் வெல்கிறார். அவன் வீரசொர்க்கம் எய்துகிறான்.

6. திருப்புறம்பியம் காட்டில் முடி சூட்டப்பட்ட இளம் பாண்டியனும் இராஜ்ஜயத்திற்கு உரிமை கொண்டாடுகிறான். அவன் போர்களத்திலிருந்து தப்பிச்சென்று மறுபடியும் நாட்டைப்பெற சதி செய்கிறான். இவன் பிற்காலத்தில் இராஜேந்திரச் சோழனால் முறியடிக்கப்படுகிறான்.

7. நந்தினி அமரபுஜங்கன் இறந்த பிறகு தானும் உயிர் துறக்கிறாள். அதற்கு முன்னால் இராஜராஜசோழர் அவளைச் சந்திக்கிறார். அவரிடம் தன் பிறப்பை பற்றிய உண்மையையும் கரிகாலனின் மரணத்தைப் பற்றிய உண்மையையும் கூறிவிட்டு இறக்கிறாள்.

8. குடந்தை ஜோதிடரின் கூற்றுக்கள் வானதியின் விஷயத்தில் பலிக்கின்றன. (சோதிடர் சாஸ்திரம் பார்த்துச்சொன்னாரா? ஊகித்துச்சொன்னாரா? நாம் அறியோம்.) வானதிக்குப் பிறக்கும் குழந்தையான இராஜேந்திரன் 'கங்கையும் கடாரமும் கொண்டசோழன்' என்று பிற்காலத்தில் சரித்திரத்தில் பகழ்பெறுகிறான்.

ஆனால் வானதி தன் சபதத்தை நிறைவேற்றிவிட்டு உயிர் துறக்கிறாள். இராஜராஜனுடன் சோழ சிங்காதனம் ஏறுகிறவள் 'உலகமகாதேவி' என்னும் திருநாமங்கொண்ட இன்னொரு ராணியாவாள்.

9. ஆபத்துதவிகள் பாண்டிய இராஜ்ஜியத்தை ஸ்தாபிக்கும் முயற்சிகளில் மேலும் ஈடுபட்டு வருகிறார்கள். நந்தினி உயிரோடு இருந்தவரையில் ஆதித்த கரிகாலனுடைய அகால மரணத்தைப் பற்றி விசாரிக்கப்படவில்லை. நந்தினியின் மரணத்திற்குப் பிறகு இராஜராஜசோழன் ரவிதாஸன் முதலிய ஆபத்துதவிகளை கைப்பற்றி தண்டனை விதித்து அவர்களுடைய சொத்துக்களை பறிமுதல் செய்யவும் கட்டளை பிறப்பிக்கிறான்.

நேயர்கள் அவ்வளவாக கவலைப்படாத இன்னும் சில கதாபாத்திரங்களைப் பற்றிய விவரங்களையும் கூறிவிடுகிறேன்.

சுந்தரசோழர் காஞ்சி பொன்மாளிகையில் மூன்று ஆண்டு காலம் வசித்துவிட்டு அங்கேயே உயிர்துறந்து 'பொன்மாளிகைத்துஞ்சியத் தேவர்' என்று பெயர் பெறுகிறார். அவருடைய அருமை மனைவி வானமாதேவி - மலையமானுடைய மகள் - அவருடன் உடன்கட்டை ஏறிச் சொர்க்கம் அடைகிறாள்.

பார்த்திபேந்திரன் குந்தவை தன்னை நிராகரித்துவிட்ட கோபத்தினால் காஞ்சியில் சுதந்திர பல்லவ இராஜ்ஜயத்தை நிலை நிறுத்தப் பார்க்கிறான். அதில் தோல்வி கண்டு சந்ததியில்லாமல் மாண்டுபோகிறான்.

கந்தமாறன் பாலாற்றின் வடமேற்கில் புதிய மாளிகைக் கட்டிக்கொண்டு சோழ சாம்ராஜ்ஜயத்திற்கு தொண்டுசெய்து வாழ்கிறான். அவனுக்குப் பின்னால் சம்புவரையர் குலம் மிகப் பிரசித்தி அடைகிறது.

நேயர்களைத் திருப்தி படுத்துவதற்காகவே மேலே கண்டவற்றை எழுதினேன். உண்மையில் இவையெல்லாம் இன்னும் ஒரு பெரிய சரித்திரக் கதைக்கு ஆதாரமாகக் கூடிய முக்கிய நிகழ்ச்சிகளாகும்.

உத்தமசோழனுக்குப் பின்னால் சிங்காதனம் ஏறிய இராஜராஜன், இராஜேந்தரன், இராஜாதிராஜன், வீர ராஜேந்திரன், குலோத்துங்க சோழன் முதலிய சோழப் பேரரசர்களின் காலத்திய மகோந்நத நிகழ்ச்சிகள் "பொன்னியின் செல்வன்" கதையைப் போல் பல சரித்திரக் கதைகள் புனைவதற்கு ஆதாரமாகக்கூடியவை.

இந்தக் கதையின் ஆசிரியரைக்காட்டிலும் அறிவிலும் ஆற்றலிலும் ஆராய்ச்சியிலும் மிக்கவர்கள் வருங்காலத்தில் சோழ சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்ட பல மகோந்நதமான நவீனங்களை எழுதி தமிழகத்திற்கு மேலும் மேலும் தொண்டு செய்வார்கள் என்று நம்புகிறேன்.

கல்கி

Mail Usup- truth is a pathless land -Home