Literary Works of Bharathidaasan ( Kanakasubbaratnam, 1891-1964) புரட்சி கவிஞர் பாரதிதாசன் (கனகசுப்பரத்னம், 1891 - 1964) படைப்புகள்mutaRl tokuti - 75 kavitaikaL புரட்சிக் கவிதைகள் - முதற் தொகுதி - 75 கவிதைகள் காதல் உள்ளுறை
1.11. மாந்தோப்பில் மணம் தாமரை பூத்த குளத்தினிலே - முகத் தாமரை தோன்ற முழுகிடுவாள்! - அந்தக் கோமள வல்லியைக் கண்டுவிட்டான் - குப்பன் கொள்ளை கொடுத்தனன் உள்ளத்தினை! - அவள் தூய்மை படைத்த உடம்பினையும் - பசுந் தோகை நிகர்த்த நடையினையும் - கண்டு காமனைக் கொல்லும் நினைப்புடனே - குப்பன் காத்திருந்தான் அந்தத் தோப்பினிலே.
முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் - ஒரு முழுமதி போல நனைந்திருக்கும் - தன் துகிலினைப் பற்றித் துறைக்குவந்தாள்! - குப்பன் சோர்ந்துவிட் டானந்தக் காமனம்பால்! - நாம் புகழ்வதுண் டோ குப்பன் உள்ளநிலை! - துகில் பூண்டு நடந்திட்ட கன்னியெதிர்க் - குப்பன் "சகலமும் நீயடி மாதரசி - என் சாக்காட்டை நீக்கிட வேண்டும்" என்றான்.
கன்னி யனுப்பும் புதுப்பார்வை - அவன் கட்டுடல் மீதிலும் தோளினிலும் - சென்று மின்னலின் மீண்டது! கட்டழகன் - தந்த விண்ணப்பம் ஒப்பினள் புன்னகையால்!
சற்றுத் தலைகுனிந் தேநடப்பாள் - அவள் சங்கீத வாய்மொழி ஒன்றினிலே - எண்ணம் முற்றும் அறிந்திடக் கூடுமென்றே - அவள் முன்பு நடந்திடப் பின்தொடர்ந்தான் - பின்பு சிற்றிடை வாய்திறந் தாள்.அதுதான் - இன்பத் தேனின் பெருக்கன்று; செந்தமிழே! "சுற்றத்தார் மற்றவர் பார்த்திடுவார் - என் தோழிகள் இப்பக்கம் வந்திடுவார்.
காலை மலர்ந்தது! மாந்தரெலாம் - தங்கள் கண்மலர்ந் தேநட மாடுகின்றார்! - இச் சோலையி லேஇள மாமரங்கள் - அடர் தோப்பினை நோக்கி வருக!" என்றாள். நாலடி சென்றனர்! மாமரத்தின் - கிளை நாற்புறம் சூழ்ந்திட்ட நல்விடுதி! மூலக் கருத்துத் தெரிந்திருந்தும் - அந்த மொய்குழல் "யாதுன்றன் எண்ண" மென்றாள்.
"உன்னை எனக்குக் கொடுத்துவிடு! - நான் உனக்கெனைத் தந்திட அட்டியில்லை" - இந்தக் கன்னல் மொழிக்குக் கனிமொழியாள் - எட்டிக் காய்மொழி யாற்பதில் கூறுகின்றாள்: "சின்ன வயதினில் என்றனையோர் - பெருஞ் சீமான் மணந்தனன் செத்துவிட்டான்! - எனில் அன்னது நான்செய்த குற்றமன்று! - நான் அமங்கலை" என்றுகண் ணீர்சொரிந்தாள்!
"மணந்திட நெஞ்சில் வலிவுளதோ?" - என்று வார்த்தைசொன் னாள்;குப்பன் யோசித்தனன்! - தன்னை இணங்கென்று சொன்னது காதலுள்ளம் - "தள்" என்றனமூட வழக்க மெலாம் - தலை வணங்கிய வண்ணம் தரையினிலே - குப்பன் மாவிலை மெத்தையில் சாய்ந்துவிட்டான்! - பின் கணம்ஒன்றி லேகுப்பன் நெஞ்சினிலே - சில கண்ணற்ற மூட உறவினரும்,
வீதியிற் பற்பல வீணர்களும் - வேறு விதியற்ற சிற்சில பண்டிதரும் - வந்து சாதியி லுன்னை விலக்கிடுவோம் - உன் தந்தையின் சொத்தையும் நீஇழப்பாய்! - நம் ஆதி வழக்கத்தை மீறுகின்றாய்! - தாலி அறுத்தவளை மணம் ஒப்புகின்றாய்! - நல்ல கோதை யொருத்தியை யாம்பார்த்து - மணம் கூட்டிவைப் போம்என்று சத்தமிட்டார்!
கூடிய மட்டிலும் யோசித்தனன் - குப்பன் குள்ளச் சமூகத்தின் கட்டுக்களை! - முன் வாடிக் குனிந்த தலைநிமிர்ந்தான் - அந்த வஞ்சியைப் பார்த்தனன் மீண்டும்அவன் - ஆ! ஏடி வடிவத்தின் ஆதிக்கமே! - மூடர் எதிர்ப்பில் வெளிப்படும் நமதுசக்தி! - மற்றும் பேடி வழக்கங்கள், மூடத்தனம் - இந்தப் பீடைகளே இங்குச் சாத்திரங்கள்!
காதல் அடைதல் உயிரியற்கை! - அது கட்டில் அகப்படும் தன்மையதோ? - அடி சாதல் அடைவதும் காதலிலே - ஒரு தடங்கல் அடைவதும் ஒன்றுகண்டாய்! - இனி நீதடு மாற்றம் அகற்றிவிடு! - கை நீட்டடி! சத்தியம்! நான்மணப்பேன்! - அடி கோதை தொடங்கடி! என்றுசொன்னான். - இன்பம் கொள்ளை!கொள்ளை!! கொள்ளை!!! மாந்தோப்பில்!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.12. காதற் கடிதங்கள் காதலியின் கடிதம்
என் அன்பே, இங்குள்ளோர் எல்லோரும் க்ஷேமமாய் இருக்கின் றார்கள்; என் தோழியர் க்ஷேமம்! வேலைக்காரர் க்ஷேமம்! இதுவுமன்றி உன்தயவால் எனக்காக உள்வீட்டுக் களஞ்சியநெல் மிகவு முண்டே, உயர்அணிகள் ஆடைவகை ஒவ்வொன்றில் பத்துவிதம் உண்டு. மற்றும் கன்னலைப்போற் பழவகை பதார்த்தவகை பக்ஷணங்கள் மிகவு முண்டு. கடிமலர்ப்பூஞ் சோலையுண்டு. மான்க்ஷேமம். மயில்க்ஷேமம். பசுக்கள் க்ஷேமம். இன்னபடி இவ்விடம்யா வரும்எவையும் க்ஷேமமென்றன் நிலையோ என்றால் "இருக்கின்றேன்; சாகவில்லை" என்றறிக. இங்ஙனம் உன் எட்டிக்காயே. காதலன் பதில் செங்கரும்பே, உன்கடிதம் வரப்பெற்றேன். நிலைமைதனைத் தெரிந்து கொண்டேன். தேமலர்மெய் வாடாதே! க்ஷேமமில்லை என்றுநீ தெரிவிக் கின்றாய். இங்கென்ன வாழ்கிறதோ? இதயத்தில் உனைக்காண எழும்ஏக் கத்தால், இன்பாலும் சர்க்கரையும் நன்மணத்தால் பனிக்கட்டி இட்டு றைத்த திங்கள்நிகர் உளிர்உணவைத் தின்றாலும் அதுவும்தீ! தீ!தீ! செந்தீ! திரவியஞ்சம் பாதிக்க இங்குவந்தேன். உனை அங்கே விட்டுவந்தேன்! இங்குனைநான் எட்டிக்காய் எனநினைத்த தாயுரைத்தாய்; இதுவும் மெய்தான். இவ்வுலக இன்பமெலாம் கூட்டிஎடுத் துத்தெளிவித் திறுத்துக் காய்ச்சி எங்கும்போல் எடுத்துருட்டும் உருட்சியினை எட்டிக்காய் என்பா யாயின் எனக்குநீ எட்டிக்காய் என்றுதான் சொல்லிடுவேன். இங்குன் அன்பன்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.13. காதற் குற்றவாளிகள் தோட்டத்து வாசல் திறக்கும் - தினம் சொர்ணம் வந்தால் கொஞ்ச நேரம்மட்டும் வீட்டுக் கதைகளைப் பேசிடுவாள் - பின்பு வீடுசெல்வாள். இது வாடிக்கையாம். சேட்டுக் கடைதனிற் பட்டுத்துணி - வாங்கச் சென்றனள் சுந்தரன் தாய்ஒருநாள்! பாட்டுச் சுவைமொழிச் சொர்ணம்வந்தாள் - வீட்டிற் பாடம் படித்திருந்தான் இளையோன்.
கூடத்திலே மனப் பாடத்திலே - விழி கூடிக் கிடந்திடும் ஆணழகை, ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால் - அவள் உண்ணத் தலைப்படும் நேரத்திலே, பாடம் படித்து நிமிர்ந்தவிழி - தனிற் பட்டுத் தெரிந்தது மானின்விழி! ஆடைதிருத்தி நின்றாள் அவள்தான் - இவன் ஆயிரம் ஏடு திருப்புகின்றான்!
தன்னந் தனிப்பட்ட என்னைவிட்டே - பெற்ற தாயும் கடைக்கு நடந்துவிட்டாள். இன்னுமுண்டோ அங்கு வேலைஎன்றான். - சொர்ணம் ஏறிட்டுப் பார்த்தனள் கூறுகின்றாள்: "தன்னந் தனிப்பட நீயிருந்தாய் - எந்தத் தையல்உன் பொன்னுடல் அள்ளிவிட்டாள்?" என்றனள். சுந்தரன் "என்னுளத்தைக் - கள்ளி! எட்டிப் பறித்தவள் நீ"என்றனன்.
உள்ளம் பறித்தது நான்என்பதும் - என்றன் உயிர் பறித்தது நீஎன்பதும் கிள்ளி உறிஞ்சிடும் மாமலர்த்தேன் - இன்பக் கேணியிற் கண்டிட வேணுமென்றாள். துள்ளி எழுந்தனன் சுந்தரன்தான்! - பசுந் தோகை பறந்தனள் காதலன்மேல்! வெள்ளத்தி னோடொரு வெள்ளமுமாய் - நல்ல வீணையும் நாதமும் ஆகிவிட்டார்!
சாதலும் வாழ்தலும் அற்றஇடம் - அணுச் சஞ்சல மேனும்இல் லாதஇடம், மோதலும் மேவலும் அற்றஇடம் - உளம் மொய்த்தலும் நீங்கலும் அற்றஇடம்! காதல் உணர்வெனும் லோகத்திலே - அவர் காணல் நினைத்தல் தவிர்ந்திருந்தார்! சூதற்ற சுந்தரன் தாயும்வந்தாள் - அங்குச் சொர்ணத்தின் தாயும் புகுந்துவிட்டாள்!
பெற்ற இளந்தலைக் கைம்பெண்ணடீ! - என்ன பேதமை? என்றனள் மங்கையின்தாய். சிற்சில ஆண்டுகள் முற்படவே - ஒரு சின்னக் குழந்தையை நீமணந்தாய்; குற்றம் புரிந்தனை இவ்விடத்தே - அலங் கோலமென்றாள் அந்தச் சுந்தரன்தாய். புற்றரவொத்தது தாயர் உள்ளம்! - அங்குப் புன்னகை கொண்டது மூடத்தனம்!
குற்றம் மறுத்திடக் காரணங்கள் - ஒரு கோடி இருக்கையில், காதலர்கள் கற்றவை யாவையும் உள்ளத்திலே - வைத்துக் கண்ணிற் பெருக்கினர் நீரருவி! சற்றிது கேளுங்கள் நாட்டினரே! - பரி தாபச் சரித்திரம் மானிடரே! ஒற்றைப் பெரும்புகழ்த் தாயகமே! - இந்த ஊமைகள் செய்ததில் தீமையுண்டோ ?
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.14. எழுதாக் கவிதை மேற்றிசையிற் சூரியன்போய் விழுந்து மறைந்திட்டான்; மெல்லஇருட் கருங்கடலில் விழுந்த திந்தஉலகும்! தோற்றியபூங் காவனமும் துளிரும்மலர்க் குலமும் தோன்றவில்லை; ஆயினும்நான் ஏதுரைப்பேன் அடடா! நாற்றிசையின் சித்திரத்தை மறைத்தஇருள், என்றன் நனவிலுள்ள சுந்தரியை மறைக்க வசமில்லை! மாற்றுயர்ந்த பொன்னுருக்கி வடிவெடுத்த மங்கை மனவெளியில் ஒளிசெய்தாள் என்னதகத் தகாயம்!
புன்னையின்கீழ்த் தின்னையிலே எனைஇருக்கச் சொன்னாள். புதுமங்கை வரவுபார்த் திருக்கையிலே, அன்னாள், வண்ணமலர்க் கூட்டத்தில், புள்ளினத்தில், புனலில், வானத்தில்,எங்கெங்கும் தன்னழகைச் சிந்திச் சின்னவிழி தழுவும்வகை செய்திருந்தாள்! இரவு சேர்ந்தவுடன் என்னுளத்தைச் சேர்ந்துவிட்டாள்! எனினும் சன்னத்த மலருடலை என்னிருகை ஆரத் தழுவுமட்டும் என்னுயிரில் தணிவதுண்டோ காதல்?
என்னுளத்தில் தன்வடிவம் இட்டஎழில் மங்கை இருப்பிடத்தில் என்னுருவம் தன்னுளத்திற் கொண்டாள்; மின்னொளியாள் வராததுதான் பாக்கியிந்த நேரம் வீறிட்ட காதலுக்கும் வேலிகட்டல் உண்டோ ? கன்னியுளம் இருளென்று கலங்கிற்றோ! கட்டுக் காவலிலே சிக்கிஅவள் தவித்திடுகின் றாளோ! என்னென்பேன் அதோபூரிக் கின்றதுவெண் ணிலவும்! எழில்நீல வான்எங்க ணும்வயிரக் குப்பை!
மாலைப்போ தைத்துரத்தி வந்தஅந்திப் போதை வழியனுப்பும் முன்னிருளை வழியனுப்பி விட்டுக் கோலநிலா வந்திங்கே கொஞ்சுகின்ற இரவில் கொலைபுரியக் காத்திருக்கும் காதலொடு நான்தான் சோலைநடுவே மிகவும் துடிக்கின்றேன்; இதனைத் தோகையிடம் போயுரைக்க எவருள்ளார்? அன்னாள் காலிலணி சிலம்புதான் கலீரெனக் கேளாதோ? கண்ணெதிரிற் காணேனோ பெண்ணரசை யிங்கே?
தண்ணிலவும் அவள்முகமோ! தாரகைகள் நகையோ! தளிருடலைத் தொடும்உணர்வோ நன்மணஞ்சேர் குளிரும்! விண்ணீலம் கார்குழலோ! காணும் எழிலெல்லாம் மெல்லியின்வாய்க் கள்வெறியோ! அல்லிமலர்த் தேனின் வண்டின்ஒலி அன்னவளின் தண்டமிழ்த்தாய் மொழியோ! வாழியஇங் கிவையெல்லாம் எழுதவரும் கவிதை! கண்டெடுத்தேன் உயிர்ப்புதையல்! அதோ வந்துவிட்டாள்! கண்டெழுத முடியாத நறுங்கவிதை அவளே!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.15. காதற் பெருமை நல்ல இளம்பருவம் - மக்கள் நாடும் குணம்,கீர்த்தி, கல்வி இவையுடையான் - உயர் கஜராஜ் என்பவனும், முல்லைச் சிரிப்புடையாள் - மலர் முக ஸரோஜாவும், எல்லையிற் காதற்கடல் - தனில் ஈடுபட்டுக் கிடந்தார்.
திங்கள் ஒருபுறமும் - மற்றைச் செங்கதிர் ஓர்புறமும் தங்கி யிருந்திடினும் - ஒளி தாவுதல் உண்டதுபோல் அங்கந்த வேலூரில் - இவர் அங்கம் பிரிந்திருந்தும் சங்கமம் ஆவதுண்டாம் - காதற் சமுத்திர விழிகள்!
ஒட்டும் இரண்டுளத்தைத் - தம்மில் ஓங்கிய காதலினைப் பிட்டுப்பிட் டுப்புகன்றார் - அதைப் பெற்றவர் கேட்கவில்லை. குட்டை மனத்தாலே - அவர் கோபப் பெருக்காலே வெட்டிப் பிரிக்கவந்தார் - அந்த வீணையை நாதத்தினை!
பொன்னவிர் லோகத்திலே - உள்ளம் பூரிக்கும் காதலிலே என்னுளம் கன்னியுளம் - இணைந் திருந்தும் இன்பஉடல் தன்னைப் பயிலுவதோர் - நல்ல சந்தர்ப்பம் இல்லையென்றே தன்னையும் தையலையும் - பெற்ற சமுகத்தை நொந்தான்.
"அண்டைஇல் லத்தினிலே - என் அன்பன் இருக்கின்றான்! உண்ணும் அமுதிருந்தும் - எதிர் உண்ண முடிந்ததில்லை! தண்டமிழ்ப் பாட்டிருந்தும் - செவி சாய்த்திடக் கூடவில்லை! வண்மலர் சூடலில்லை - அது வாசலிற் பூத்திருந்தும்."
என்று சரோஜாவும் - பல எண்ணி எண்ணிஅயர்வாள். தன்னிலை கண்டிருந்தும் - அதைச் சற்றும் கருதாமல் என்னென்ன மோபுகல்வார் - அந்த இரும்பு நெஞ்சுடையார். அன்னதன் பெற்றோரின் - செயல் அத்தனையும் கசப்பாள்.
நல்ல ஸரோஜாவின் - மணம் நாளைய காலைஎன்றார்! மெல்லியின் பெற்றோர்கள் - வந்து வேறொரு வாலிபனைச் சொல்லி உனக்கவன்தான் - மிக்க தோதென்றும் சொல்லிவிட்டார். கொல்லும் மொழிகேட்டாள் - மலர்க் கொம்பு மனம்ஒடிந்தாள்!
கொழிக்கும் ஆணழகன்! - அவன் கொஞ்சிவந் தேஎனது விழிக்குள் போய்ப்புகுந்தான் - நெஞ்ச வீட்டில் உலாவுகின்றான்! இழுத் தெறிந்துவிட்டே - மற் றின்னொரு வாலிபனை நுழைத்தல் என்பதுதான் - வெகு நூதனம் என்றழுவாள்!
காத லிருவர்களும் - தம் கருத் தொருமித்தபின் வாதுகள் வம்புகள்ஏன்? - இதில் மற்றவர்க் கென்னஉண்டு? சூதுநிறை யுளமே - ஏ துட்ட இருட்டறையே! நீதிகொள், என்றுலகை - அவள் நிந்தனை செய்திடுவாள்!
இல்லத்தின் மாடியிலே - பின்னர் எறிஉரைக்க லுற்றாள்: "இல்லை உனக்கெனக்கு - மணம் என்று முடித்துவிட்டார். பொல்லாத நாளைக்கொ" - வெறும் புல்லனை நான்மணக்க எல்லாம் இயற்றுகின்றார் - பெற்ற எமன்கள் இவ்விடத்தில்!ரு
அடுத்த மாடியிலே - நின்ற அன்பனிது கேட்டான்; துடித்த உள்ளத்திலே - அம்பு தொடுக்கப் பட்டுநின்றான்! எடுத்துக் காட்டிநின்றாள் - விஷம் இட்டதோர் சீசாவை! அடி எனதுயிரே! - அழை அழைஎனையும் என்றான்!
தீயும் உளத்தோனும் - விஷம் தேடி எடுத்துவந்தான்! "தூயநற் காதலர்க்கே - பெருந் தொல்லை தரும்புவியில் மாய்க நமதுடல்கள்! - விஷம் மாந்துக நம்மலர்வாய்! போய்நுகர் வோம்சலியா - இன்பம் பூமியின் கர்ப்பத்திலே!
என்று விஷம்குடித்தார் - அவர் இறப்பெனும் நிலையில் ஒன்றுபட்டுச் சிறந்தார் - இணை ஓதரும் காதலர்கள். இன்றுதொட் டுப்புவியே - இரண் டெண்ணம் ஒருமித்தபின் நின்று தடைபுரிந்தால் - நீ நிச்சயம் தோல்விகொள்வாய்!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.16. காதலைத் தீய்த்த கட்டுப்பாடு வேற்றூர்போய் நள்ளிரவில் வீடுவந்த வேலனிடம் ஆள்ஒருவன் கடிதம்தந்தான். ஏற்றதனை வாசிக்க லுற்றான்வேலன்: "என்னருமைக் காதலரே கடைசிச்சேதி; நேற்றிரவு நாமிருவர் பூந்தோட்டத்தில் நெடுநேரம் பேசியதை என்தாய்கண்டாள்! ஆற்றாத துயரால்என் தந்தை,அண்ணன் அனைவரிட மும்சொல்லி முடித்துவிட்டாள்.
குடும்பத்தின் பெயர்கெடுக்கத் தோன்றிவிட்டாய் கொடியவளே! விஷப்பாம்பே! என்றுதந்தை தடதடவென் றிருகையால் தலையில்மோதித் தரையினிலே புரண்டழுதார். அண்ணன்அங்கு மடமடவென் றேகொல்லைக் கிணற்றில்வீழ்ந்தே மாய்வார்போல் ஓடிப்பின் திரும்பிவந்து படுபாவி தாலியற்ற பிறகும்இந்தப் பழுதுநடை கொள்வதுண்டோ என்றுநைந்தார்.
தாயோஎன் எதிர்வந்து தாலியோடு சகலமும் போயினஏடி இன்னும்என்ன! தீயாகிக் கொளுத்திவிட்டாய் எம்மையெல்லாம்! தெருவார்கள் ஊரார்கள் இதையறிந்தால் ஓயாமல் தூற்றிடுவார்! யாம்இவ்வூரில் உயர்ந்திருந்தோம்; தாழ்த்திவிட்டாய் அந்தோ!நீதான் பாயேனும் விரித்ததிலே படுப்பதுண்டா பதியிழந்தால்? மூதேவி என்றுசொன்னாள்.
தந்தையார்அடி உன்னைக் கொன்றுபோட்டுத் தலையறுத்துக் கொள்ளுகின்றேன் என்பார்.அண்ணன் அந்தமதி யற்றவனைக் கொல்வேன்என்றே அருகிருக்கும் கொடுவாளைப் பாய்ந்தெடுப்பான்! இந்தவிதம் கொதித்தார்கள் இரவுமட்டும்! இனிஎன்னால் அவர்கட்குத் தொல்லைவேண்டாம்; சுந்தரனே, என்காதல் துரையே!உன்னைத் துறக்கின்றேன் இன்றிரவில் கடலில்வீழ்ந்தே!ரு
காதலியின் கடிதத்தில் இதைவாசித்தான்! கதறினான்! கடல்நோக்கிப் பறந்தான்வேலன்! ஈதறிந்தார் ஊரிலுள்ளார்! ஓடினார்கள்! எழில்வானம், முழுநிலவு, சமுத்திரத்தின் மீதெல்லாம் மிதக்கும்ஒளி, அகண்டாகாரம் மேவுபெருங் காட்சியில்ஓர் துன்பப்புள்போல் மாதுகடற் பாலத்தின் கடைசிநின்று வாய்விட்டுக் கதறுகின்றாள் வசமிழந்தாள்:
எனைமணந்தார் இறந்தார்;என் குற்றமல்ல; இறந்தவுடன் மங்கலநாண், நல்லாடைகள், புனைமலர்குங் குமம்அணிகள் போனதுண்டு; பொன்னுடலும் இன்னுயிரும் போனதுண்டோ ? எனைஆளும் காதலுக்கோர் இலக்கியத்துக் கிசைந்ததெனில் உயிரியற்கை; நான்என்செய்வேன்? தனையடக்கிக் காதலினைத் தவிர்த்துவாழும் சகம்இருந்தால் காட்டாயோ நிலவேநீதான்!
கண்படைத்த குற்றத்தால் அழகியோன்என் கருத்தேறி உயிர்ஏறிக் கலந்துகொண்டான்! பெண்படைத்த இவ்வுலகைப் பல்லாண்டாகப் பெற்றுணர்ந்த நெடுவானே! புனலே!கூறீர், மண்படைப்பே காதலெனில் காதலுக்கு மறுப்பெதற்குக் கட்டுப்பா டெதற்குக்கண்டார்? புண்படைத்த என்நாடே, கைம்மைக்கூர்வேல் பொழிகின்றாய் மங்கையர்மேல்! அழிகின்றாயே!
ஆடவரின் காதலுக்கும் பெண்கள்கூட்டம் அடைகின்ற காதலுக்கும், மாற்றமுண்டோ ? பேடகன்ற அன்றிலைப்போல், மனைவிசெத்தால் பெருங்கிழவன் காதல்செயப் பெண்கேட்கின்றான்! வாடாத பூப்போன்ற மங்கைநல்லாள் மணவாளன் இறந்தால்பின் மணத்தல்தீதோ? பாடாத தேனீக்கள், உலவாத்தென்றல், பசியாத நல்வயிறு பார்த்ததுண்டோ ?
இளமைதந்தாய், உணர்வுதந்தாய், இன்பங்காணும் இன்னுயிரும் தந்திட்டாய் இயற்கைத்தேவி, வளமையற்ற நெஞ்சுடையார் இந்நாட்டார்கள் மறுக்கின்றார் காதலினைக் கைம்மைகூறி! தளைமீற வலியில்லேன்! அந்தோ! என்றன் தண்டமிழின் இனிமைபோல் இனியசொல்லான் உளமாரக் காதலித்தான் என்னை!அன்னோன் ஊர்நிந்தை ஏற்பதனைச் சகிப்பேனோநான்!
ஓருயிரும் இரண்டுடலும் நாங்கள்!எம்மை உளிகொண்டு வெட்டிவிட்ட கட்டுப்பாடே, தீராத காதலினை நெஞ்சத்தோடு தீய்த்துவிட்டாய் என்றாள்.பின் ஓடிவந்து சீராளன் தாவினான்! வீழ்ந்தாள்!வீழ்ந்தான்! தேம்பிற்றுப் பெண்ணுலகு! இருவர்தீர்ந்தார்! ஊரார்கள் பார்த்திருந்தார் கரையில்நின்றே உளம்துடித்தார்; எனினும்அவர் உயிர்வாழ்கின்றார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.17. தலைவி காதல் சோலையிலோர் நாள் எனையே தொட்டிழுத்து முத்தமிட்டான் துடுக்குத் தனத்தை என்சொல்வேன் மாலைப் பொழுதில்இந்த மாயம்புரிந்த செம்மல் வாய்விட்டுச் சிரித்துப் பின் போய்விட்டானேடி தோழி! சோலையிலோர்...
ஓடி விழிக்கு மறைந்தான் - ஆயினும் என்றன் உள்ளத்தில் வந்து நிறைந்தான்! வேடிக்கை என்ன சொல்வேன் மின்னல்போல் எதிர் நின்றான்! வேண்டித் தழுவச் சென்றேன் தாண்டி நடந்து விட்டான்! சோலையிலோர்...
அகம் புகுந்தான் சேயோ - அவனை எட்டி அணக்க வழிசொல் வாயோ! சகம் பெறும் அவன்அன்று தந்த துடுக்கு முத்தம்! சக்ரவாகம் போல்வந்தான்; கொத்திப்போக மறந்தான்! சோலையிலோர்...
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.18. விரகதாபம் காதலும் கனலாய் என்னையே சுடும் ஈதென்ன மாயமோ! நாதர் மாதெனையே சோதித்தாரோ நஞ்சமோஇவ் வஞ்சிவாழ்வு? ஐயையோ!
நலியுதேஎன் அகமிகுதியு மலருடலே நனிமெலிதல் அநிதி இதுவலவோ? வனிதை யாளினெதிர் அழகுதுரை விரைவில் வருவாரோ அலது வருகிலரோ? வாரிச விக சித முக தரி சனமுற வசமதோ கலவி புரிவது நிசமோ மதுரமான அமுதமு மலரினொடுமது கனியிரச மதிவிரச மடைவதென்ன! காதலும் கனலாய்...
தென்ற லென்றபுலி சீறல் தாளேன் சீத நிலவே தீதாய் விளைந்திடுதே! வென்றி யணைந்திடும் அவர்புயம் அணைந்தே மேவி ஆவி எய்தல் எந்தநாள்? காதலும் கனலாய்... |