"ஒளவையின் ஆத்திசுடிக்கு சுப்பிரமணிய பாரதியும் வழி நூல் இயற்றினார். அந்த நூலுக்குப் ' புதிய ஆத்திசூடி ' எனப் பெயரிட்டு, 'பழைய ஆத்திசூடி ' ஒளவையார் பாடிய என்பதை சொல்லாமல் சொல்லுகிறார். .. 'பல்வகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே' என்ற உண்மையினை வலியுறுத்திக் கடவுள் வாழ்த்துப் பாடினார் பாரதி."
ஒளவையாருடைய நீதி நூல்கள் பலவிருந்தாலும் அவற்றுள் ஆத்திசூடி என்னும் நூலே மக்களால் பெரிதும் பாரட்டப்படுகிறது. 'அறஞ்செய விரும்பு' ,ஆறுவது சினம்' என்ற எளிய வரிகள் பாமரர் முதல் பண்டிதர் வரை கவர்ந்துள்ளது. புலவர்கள் பலரும் ஆத்திசூடிக்கு உரை எழுதியுள்ளார்கள். யாழ்பாணம் ஆறுமுக நாவலர், ஆத்திசூடிக்கு உரை எழுதி, அதனை தாம் வெளியிட்ட 'பால பாடம்' என்னும் நூலில் சேர்த்து வைத்துள்ளார்.
மகா வித்துவான் இராமானுஜம் என்பார் ஒரு கவிராயர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வாழ்ந்தவர். அவரும் ஆத்திசூடிக்கு பதவுரை எழுயுள்ளார். அவரே 'கொன்றை வேந்தனுக்கும்' உரை எழுதி இயற்றியுள்ளார்.
அரியூர் எஸ்.சுவாமிநாத ஐயர் ஆத்திசூடிக்கு விருத்தியுரை எழுதி, உ.வே. சாமிநாதய்யர் அவர்களால் பார்வையிட்டு 1898 -ம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆத்திசூடி 108 சூத்திரங்கள் கொண்டிருப்பதால் அதனை 'அஷ்டோத்திர நீதி என்று கூறுகின்றனர். திருத்துருத்தி இந்திர பீடம் கரபாத்திர சுவாமிகளது ஆதீனத்தைச் சார்ந்த ஒருவர், ஆத்திசூடிக்கு வேந்தாந்தத் தத்துவப்படி பாகியார்த்தமும், அந்தராத்தமும் எழுதி 116 பக்கங்கள் கொண்ட பெருநூலாக வெளியிட்டுள்ளார்கள். 'பாகியார்த்தம் ' என்றால் ' வெளிப்படைப் பொருள் ' என்றும் அந்தரார்த்தம்' என்றால், ' உள்ளுறைப் பொருள் ' என்று பொருள். இந்நூலில், ஆத்திசூடி வாக்கியங்களை ஞானியர் பலர் பாடியுள்ள வேதாந்தப் பாடல்களோடு ஒப்பிட்டுக் காட்டி, ஒளவையை சுத்த வேதாந்தியாக காட்டுவதுடன், உள்ளுரையும் பொருளாக காட்டுகிறது.
'அறஞ்செய விரும்பு ' 'பொருள்தனைப் போற்றிவாழ் ' 'மெல்லினல்லாள் தோள்சேர் ' 'வீடு பெற நில் '
என்ற வாக்கியங்கள் ஆத்திசூடியில் உள்ளமையால் அறம்-பொருள்-இன்பம்-வீடு என்ற புருஷார்த்தங்கள் நான்கையும் அந்நூல் போதிக்கின்றன கூறலாம். குழந்தைக்கு தாய் அறிவுரை கூறுவது போலவும், சீடனுக்குக் குரு உபதேசிப்பது போலவும், 'விரும்பு'- 'விரும்பேல்' 'ஒழி' - 'ஒழியேல்' 'மற' - 'மறவேல்' என்ற போக்கில் அமைந்துள்ளது.
பண்டிதமணி கதிரேசன் செட்டியார், ஆத்திசூடி பற்றி ' இயல்வது கரவேல்' என்னும் சூத்திரம் மனம், மொழி, உடலால் பிறர்க்குச் செய்யக் கூடிய உதவியை செய்ய வேண்டும் என்னும் உட்பொருளை நுட்பங்களாக இனிது விளக்கும் என்கிறார். உயர்ந்த நீதிகளைச் சிறுவர்கள் எளிதில் உணர்ந்துக் கொள்வதற்கும், வேதாந்திகள் தாங்கள் போற்றும் வேதாந்த சாத்திரத்தின் நுட்பங்கள் புதைந்து கிடக்கிறது எனவும், சைவசித்தியார்கள் சைவசித்தாங்கள் ஆத்திசூடியில் மறைந்து கிடக்கிறது என்கிறார்கள்.
ஆத்திசூடியிலுள்ள ' அறஞ்செய விரும்பு ' என்ற முதல் சூத்திரத்திற்கு மட்டும் விரியுரை எழுதி அந்நீதிநூலின் பாயிரத்துக்கும் விளக்கம் எழுதி ஆத்திசூடி முதற் விருத்தியுரை ' என்னும் பெயரில் 32 பக்கங்கள் ஒரு நூல் வெளியிட்டுள்ளார் மாகறல் கார்த்திகேய முதலியார்.
திருத்தணிகைச் சரவணப் பெருமாளையர் என்னும் புலவர், 19-ம் நூற்றாண்டில் ஆத்திசூடி , கொன்ற வேந்தன் , மூதுரை என்னும் நூலுகளுக்கு உரை எழுதி வெளியிட்டுள்ளார்.
ஒளவையாரின் ஆத்திசூடியை முதல் நூலாகக் கொண்டு பெரும் புலவர்கள் வழி நூல்களும் இயற்றி வெளியிட்டுள்ளார்கள். இரட்டனை அசலாம்பிகை அம்மையார் ஆத்திசூடி வெண்பாப் ' பாடியுள்ளார். இராம பாரதி என்பாரும் ' ஆத்திசூடி வெண்பாப் ' பாடியுள்ளார். புன்னைவனநாதன் என்னும் வள்ளலை முன்னிலையாக்கி, ஆத்திசூடி வாக்கியம் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வெண்பாவின் இறுதியடியாக வைத்து, முதல் மூன்று அடிகளில் புராணக்கதை ஒன்றை அமைத்து ,108 வெண்பாக்கள் பாடியுள்ளார்கள்.
அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார்பால் எல்லையற்ற பற்றும் பக்தியும் கொண்டு வாழ்ந்த ' திருப்புகழ்ச் சுவாமிகள் ' என்று அழைக்கப்படும் முருகதாச சுவாமிகள் 'எம்மதமும் சம்மதம் ' என்னும் சமரச நெறியில் தமக்கு நம்பிக்கை தோன்ற காரணம் ஒளவையாரின் ஆத்திசூடியே என்கிறார். வேதங்களை உடன்பாடாகக் கொண்ட சைவம், வைணவம், ஐந்தரம், சாக்தம், கெளமாரம், காணாபத்தியம் ஆகிய அறுவகை அகச் சமயத்தாருக்கும் பிணக்குகள் உண்டு. அந்த பிணக்குகளை ஒழித்து சைவமல்லாத பிற சமயங்களின் தெய்வங்களைக் குறைத்துப் பேசாத பண்பினைத் 'தெய்வம் இகழேல் ' என்ற ஆத்திசூடிச் சூத்திரமே தமக்கு அளித்தது என்கிறார்.
ஒளவையின் ஆத்திசுடிக்கு சுப்பிரமணிய பாரதியும் வழி நூல் இயற்றினார். அந்த நூலுக்குப் ' புதிய ஆத்திசூடி ' எனப் பெயரிட்டு, 'பழைய ஆத்திசூடி ' ஒளவையார் பாடிய என்பதை சொல்லாமல் சொல்லுகிறார்.
பழைய ஆத்திசூடியினை பின்பற்றித் தாம் இயற்றிய புதிய ஆத்திசூடியில் கடவுள் வாழ்த்தில் : ''ஆத்திசூடி , இளம்பிறை அணிந்து மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்'' என்று தொடங்கி, அத்துடன் வைணவர், இஸ்லாகியர், கிறித்துவர் கிய பிற சமயத்தின் வழிபடும் தெய்வங்களையும் வழிபடுகிறார்.
''ஆத்திசூடி, இளம்பிறை அணிந்து மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன் மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்; உருவகத் தாலே உணர்ந்துண ராது பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே ; அதனியல் ஒளியுறும் அறிவோம் அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார் அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம் இந்த மாறுதலால் ஒளவையார் வாழ்ந்த காலத்தில் சூழ்நிலைகேற்ப அவர் தொழுத சைவருக்குரிய தெய்வத்தையும் வழிபட்டு, அதன் பின்னர் இராமலிங்க அடிகளாரால் வளர்க்கப்பட்ட ' எம்மதமும் சம்மதம்' என்னும் சர்வ சமய சமரச உணர்ச்சியும் எதிரொலித்தது. 'பல்வகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே' என்ற உண்மையினை வலியுறுத்திக் கடவுள் வாழ்த்துப் பாடினார் பாரதி.
பாரதியின் புதிய ஆத்திசூடியிலுள்ள 110 வாக்கியங்களும் புத்தம் புதியவையே. ஒளவையாரின் ஆத்திசூடியிலிருந்து ஒரு வாக்கியத்தைக் கூட அவர் கையாளவில்லை. ஆயினும், அகர வரிசை முறையில், தனித்தனி வாக்கியமாக நீதி நூல் இயற்றுவதில் அவருக்கு வழிகாட்டியாக இருந்தவர் ஒளவையார்.
ஆத்திசூடி , கொன்றைவேந்தனுக்கு அடுத்தபடியான நீதிநூலாக, உலக நீதியைக் கருதலாம். இதனை இயற்றியவர் ஒளவையாராக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
|