தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Tamil National ForumSelected Writings - M.Thanapalasingham  > மாணிக்கவாசகரின் யாத்திரை > Mannikkavasagar's Thiruvasagam & tirukkOvaiyAr

Selected Writings
M.Thanapalasingham, Australia
ம.தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

மாணிக்கவாசகரின் யாத்திரை

11 October 2005

அக்ரோபர் மாதம் 2005 இல் சிட்னியில் இடம்பெற்ற
யோகசுவாமிகள் குருபூசையில் ஆற்றிய உரையின் சாரம்.

"அப்பரது இசம்பந்தரது பதிகங்களில் காணாத ஈரத்தை,  நெகிழ்வை, கசிவை மாணிக்கவாசகரது திருவாசகத்தில் காண்கின்றோம். ...சம்பந்தர் அப்பரைவிட இறைவனிடம் நெருங்கிய உறவைப் பாடுகின்றார். சுந்தரர் ஒருவிதமான பரிகாசத்துடன் இறைவனை தோழனாகக் கண்டு பாடுகின்றார். மாணிக்கவாசகரோ ஒரு காதலியின் விரகதாபத்துடன் தன்னை இழந்து, முற்றாகப் பறிகொடுத்த நிலையில் பாடுகின்றார்...அவர் தும்பியை நோக்கி " தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன் உண்ணாது " பேரின்பதேனை உண்ணுவாயாக எனப் பணித்ததை ஏற்று நாமும் திருவாசகம் என்னும் தேனை அருந்தி மகிழ்வோமாக."

[see also Mannikkavasagar's Thiruvasagam & tirukkOvaiyAr ]


தேடலில் ஈடுபடும் மனிதர்களின் வாழ்வில் அவ்வப்போது நிகழும் சம்பவங்கள் அவர்களின் பயணத்தையே மாற்றிவிடுவதைக் காண்கின்றோம்.

நல்லூர் வீதியிலே நடந்த யோகரை தேரடியில் வழிமறித்து யாரடா நீக தேரடா உள் " என நிலந்தன்மேல் வந்தருளிய செல்லப்ப மு~ர்த்தம் ஜீவனாக வலம்வந்த யோகரை ஜீவன் முக்தர் ஆக்கிய அந்த மானதக்காட்சியை மனம்கொண்டு வாதவூரர் மாணிக்கவாசகரான யாத்திரைபற்றி சிறிது சிந்திப்போமாக.

கல்வியிலும், அறிவிலும், அரசியல் சாணுக்கியத்திலும் கைதேர்ந்த திருவாதவதூரர் பாண்டிய மன்னனின் முதல் அமைச்சராக இருந்ததும், பாண்டிய மன்னனின் ஆணையை ஏற்று குதிரைகள் வாங்கப் புறப்பட்டதும் நாம் அறிந்ததே.

சங்ககாலத்தில் இருந்து தமிழ் நாட்டிற்கு அரேபியக் குதிரைகள் வந்திறங்கியதைக் காண்கின்றோம். சங்ககாலத்தின் பிற்பகுதியில் எழுந்த பட்டினப்பாலையில் காவிரப்பூம்பட்டணத்தில் "புலி பொறித்து புறம்போக்கிய " சுங்கத்துறையில் வந்திறங்கியவற்றுள்

" நீரின்வந்த நிமிர் பரிப்புரவியும் "

இடம்பெறுவதைக் காண்கின்றோம்.

கடல் வழியாக வேகமாகச் செல்லும் உயரமான குதிரைகள் வந்திறங்கின என்பதே இதன் பொருள். இது போன்ற வேகமாகச் செல்லும் குதிரைகளை வாங்கி வருமாறு மண்ணாளும் வேந்தனால் அனுப்பப்பட்ட வாதவூரரை லோகநாயகனான சிவனார் வேகம் கெடுத்து தடுத்தாட்கொள்கின்றார்.

"வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க "

என்ற கோசத்துடன் மாணிக்கவாசகர் தனது யாத்திரைரையை மாற்றிக்கொள்கின்றார்.

மாணிக்கவாசகரின் இந்த யாத்திரையை செயின்ற் போல் (சுவாமிகள்) டமாஸ்கஸ் ஊடாகச்க செய்த யாத்திரைக்கு ஒப்பிடுகின்றார் யீஇ யு. போப்.(தனது 80 ஆவது வயதில் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ) பயணத்தை தொடங்கியபோது இத்தனை ஆச்சரியங்கள் இருக்கப்போவதை இருவருமே அறிந்திருக்கவில்லை.

நாட்டுப்பற்றுக் கொண்ட மாணிக்கவாசகர் பாண்டியமன்னனைக் கைவிட்டபோதும் பாண்டிநாட்டின் மீதுள்ள பற்றினை விடவில்லை. சிவனை தென்பாண்டி நாட்டானே என விழித்து அவனை தண்ணார் தமிழ் அளிக்கும் தென்பாண்டிநாட்டின் பிரசையாக்கி விடுகின்றார்.

" நமச்சிவாய வாழ்க "எனத் தொடங்கும் திருவாசகம் இறுதிப் பதிகமான (51ஆவது) அச்சோப் பதிகத்தில் " அம்மை எனக்கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே " என்ற வாசகத்துடன் முடிவுபெறுகின்றது.

"காண்பதெல்லாம் உண்மை,  இந்தக் காட்சி நித்தியமாம் " என்றான் பாரதி. அந்த சக்தியின் துணைகொண்டே சிவனை அடையலாம் என்ற கருத்தினையே மாணிக்கவாசகரும் உணர்த்துகின்றார் எனலாம்.

அன்பு என்ற வாழ்வியல் தத்துவமே வாதவதூரரின் வாசகங்களை ஆரத்தழுவி உள்ளதை திருவாசகம் எங்கணும் காணமுடிகின்றது. இதனால் தான் எதற்குமே அஞ்சாதவர் "அன்பிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே " எனக் கதறுகின்றார்.

அன்பிற்கான அவரது ஏக்கம், தவிப்பு,  கதறல், பதைபதைத்தல்,  தேடல், யாவும் எமது ஊனினை உருக்கி உள் ஒழி பெருக்குகின்றது.

கண்ணப்பரை ஒத்த அன்பு தனக்கு இல்லையே என்ற தவிப்பு

" கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் ஈசற்கே சென்று ஊதாய் கோத்தும்பி '

பொருவில் அன்புருவமானார் எனச் சேக்கிழார் பெருமானால் விழிக்கப்பட்ட கண்ணப்பரை,  கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்கு அடியேன் என சுந்தரரால் வழிபடப்பட்ட கண்னப்பருக்கு தான் நிகரில்லாதபோதும் சிவனார் தன்னை தனது நிலையில் வைத்து அருள் புரிந்த கருணையை பாடுகின்றார்.

அப்பரது இசம்பந்தரது பதிகங்களில் காணாத ஈரத்தை,  நெகிழ்வை, கசிவை மாணிக்கவாசகரது திருவாசகத்தில் காண்கின்றோம். அப்பரும் சம்பந்தரும் அவர்கள் காலத்தில் இருந்த புறச்சமயங்களான சமண பௌத்த மதங்களுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்த வேண்டிய சூழல்.

இந்தப் பிரச்சனை மாணிக்கவாசகருக்கு இருக்கவில்லை. உதாரணமாக சம்பந்தரது பதிகம் ஒவ்வொன்றிலும் பத்தாவது பாடலில் சமண பௌத்த மதங்கள் இழித்துப் பேசப்படுகின்றன. அப்பரின் பாடல்களில் ஒருவித தாழ்வுமனப்பான்மை காணப்படுகின்றன.

சம்பந்தர் அப்பரைவிட இறைவனிடம் நெருங்கிய உறவைப் பாடுகின்றார். சுந்தரர் ஒருவிதமான பரிகாசத்துடன் இறைவனை தோழனாகக் கண்டு பாடுகின்றார். மாணிக்கவாசகரோ ஒரு காதலியின் விரகதாபத்துடன் தன்னை இழந்து, முற்றாகப் பறிகொடுத்த நிலையில் பாடுகின்றார்.

இதனால் இவரது பாடல்களில் தீவிரபக்தியும் காதலியின் தவிப்பும் தலை தூக்கி நிற்பதைக் காணமுடிகின்றது. தன்னை காதலியாகப் பாவனை செய்ததால் பெண்களால் பாடப்படும் சுண்ணம், அம்மானை,  பூக்கொய்தல், என்பன போன்ற நாட்டுப்புற பா வகைகளையும் வடிவங்களையும் கையாண்டு அற்புதமான கவிதைகளைப் படைத்துள்ளார் எனலாம். இந்த இடத்தில் தன் காலத்து பாமர மக்களின் பாடல்வடிவங்களான சிந்து கண்ணி என்பவற்றை தனதாக்கி அவற்றில் வெளகளத்தின் பெருக்கைப் போல் கவிப்பெருக்குச் செய்த பாரதியை எண்ணுகின்றேன்.

மாணிக்கவாசகரின் இரண்டாவது யாத்திரை தில்லையை நோக்கியது. இறைவனுடன் கலந்துகொள்ளும் காலம் கனிந்துவிட்ட நிலை.

" போகும் காலம் வந்ததுகாண் பொய் கெட்டு உடையான் கழல் புகவே "

என்ற அவதி, அந்தரம் அவரை ஆட்கொண்டுள்ளதைக் காணமுடிகின்றது. இங்கே பொய் கெட்டு என்பதற்கு யோகசுவாமிகளின்

" நீ உடம்பன்று, புத்தியன்று சித்தமன்று, நீ ஆத்மா "

என்பதை அறிந்துகொள் என்ற விளக்கத்தை உள்வாங்கலாம்.

வேகமாகச் செல்லும் குதிரைகளை வாங்க வேகமாகச் சென்ற வாதவூரர் வேகம் கெடுத்தாளப்பட்டது முதல் யாத்திரை. தில்லை நோக்கியவர் போகும் காலம் வந்தது என அவதியுறுவது இரண்டாவது யாத்திரை.

பல்லவர் ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்தில் தென்பாண்டி நாட்டிலே, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையிலே வைகை ஆற்றின் கரையினிலே நற்றமிழ் ஞானசம்பந்தரால் விதைக்கப்பட்ட சைவம் என்ற விதை பல்லவர் ஆட்சியின் முடிவினிலே மாணிக்கவாசகர் என்னும் விருட்சமாகி திருவாசகம் என்னும் தேனினை சொரிந்து நிற்பதைக் காண்கின்றோம்.

அவர் தும்பியை நோக்கி " தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன் உண்ணாது "
பேரின்பதேனை உண்ணுவாயாக எனப் பணித்ததை ஏற்று நாமும் திருவாசகம் என்னும் தேனை அருந்தி மகிழ்வோமாக.

Mail Usup- truth is a pathless land -Home