"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Selected Writings by Sanmugam Sabesan
தமிழ் (ஈழத்தின்) செல்வன்
5 November 2007
[ see also Brigadier S P Tamilselvan -
"he gave his life for the freedom of his people" ]சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலால், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச் செல்வன் அவர்களும், லெப்டினன்ட் கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், கப்டன் நேதாஜி, லெப்டினன்ட் ஆட்சிவேல், லெப்டினன்ட் வாகைக் குமரன் ஆகியோர் வீரச் சாவடைந்த மாபெரும் சோகச் செய்தி கேட்டுத் தமிழீழ மக்களும், உலகத் தமிழர்களும், சமாதான விரும்பிகளும் ஆற்றொண்ணாத் துயரில் மூழ்கியுள்ளார்கள்.
தமிழ் உலகமே ஆழமாக நேசித்த ஓர் அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கின்றது. எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனையும், ஏனைய ஐந்து போராளிகளையும் இழந்து, இன்று தமிழீழத் தேசம் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பேரிழப்பைச் சந்தித்திருக்கின்றது."நான் தமிழ்ச் செல்வனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். நீண்ட நெருப்பு நதியாக நகரும் எமது விடுதலை வரலாற்றில், அவன் ஒரு புதிய நெருப்பாக இணைந்திருக்கின்றான். இந்த இணைவிலே, எமது கனத்த இதயங்களில் ஒரு பெரும் இலட்சிய நெருப்பை மூட்டியிருக்கின்றான். எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றியிருக்கின்றான். இந்த உறுதியில் உரம் பெற்று, நாம் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம்" -
என்று கனத்த இதயத்தோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள், பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனுக்கும், ஏனைய ஐந்து போராளிகளுக்கும் தனது வீர வணக்கத்தைச் செலுத்தியுள்ளார்.
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்கள் பன்முக ஆளுமை படைத்தவர் ஆவார். அவர் நான்காவது பயிற்சி முகாமில் பயிற்சியெடுத்த பின்பு, தேசியத் தலைவரின் மெய்ப்பாதுகாவலராகப் பணியாற்றினார். பின்னர் யாழ் தென்மராட்சிக் கோட்டப் பொறுப்பாளராகவும், யாழ் மாவட்டச் சிறப்பு இராணுவத் தளபதியாகவும் கடமையாற்றினார்.ஆகாயக் கடல் வெளிச் சமரிலும், தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையிலும் அவர் விழுப்புண் பட்டார். 1993ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பணியை ஏற்றுக் கொண்ட அவர், தன்னுடைய வீரச்சாவு வரைக்கும் அந்த மிகப் பெரிய பணியை மிகச் சிறப்பாக மேற்கொண்டு வந்தார். சந்திரிக்கா அம்மையார் அரசுடனான அமைதிப் பேச்சு வார்த்தைக் காலத்திலிருந்து அண்மைக் காலம் வரை, தமிழர் தரப்பு பேச்சு வார்த்தைக் குழுவில் பங்கேற்றும், தலைமையேற்றும் தேசப்பணியைத் தளராது ஆற்றி வந்தார்.
அவருடைய அரசியல் பணி என்பதானது ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும். இங்கே ஒரு முக்கிய விடயத்தைச் சுட்டிக்காட்ட விழைகின்றோம். இந்தப் பேச்சு வார்த்தைக் காலங்களுக்கு முன்னால் -அதாவது மிகச் சிக்கலான மிக நெருக்கடியான காலப்பகுதிகளில் -பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆற்றிய அரசியல் பணி என்பது மிகவும் மகத்தானதாகும்.யாழ்ப்பாண இடப்பெயர்வு, ஜெயசுக்குறு இராணுவ நடவடிக்கை போன்ற மிக இக்கட்டான இன்னல் மிக்க போர்க் காலங்களிலும் தமிழ்ச்செல்வன் அவர்கள்தான் அரசியல் பொறுப்பாளராக இருந்து, பெரும் பணியைச் செய்திருக்கின்றார். அதாவது மிகச் சிக்கலான காலப் பகுதியில்தான், அவருடைய அரசியல் பணி வாழ்க்கை நடைபெற்றிருக்கின்றது. சமாதானத்திற்கான காலப்பகுதியில் மட்டுமல்ல, போர்க் காலங்களிலும் அவர்தான் அரசியல்துறைக்குப் பொறுப்பாளராக இருந்து, தேசியத் தலைவருக்கு அருந்துணையாக விளங்கிப் பெரும் பணியைப் புரிந்திருக்கின்றார்.
சமாதானத்திற்கான காலத்தின்போது, எத்தனையோ வெளிநாட்டு இராஜதந்திரிகளைத் தமிழீழத்திலும், வெளிநாடுகளிலும் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். வெளிநாட்டு இராஜதந்திரிகளின் முரண்பட்ட கருத்துக்களையெல்லாம் சிரித்த முகத்துடன் உள்வாங்கிக் கொண்டு, அதே சிரித்த முகத்துடன், தமிழர் தரப்புக் கருத்துக்களைத் தெளிவாகவும், அதே வேளை உறுதியாகவும் வலியுறுத்தியுள்ள அந்தச் சாதுரியம் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்குக் கை வந்த ஒரு கலையாகும். இந்த இராஜதந்திரிகளைக் கையாண்ட முறையில் தமிழ்ச்செல்வன் அவர்கள் காட்டிய ஆளுமையானது அவரது சிறப்புத் தன்மையை வெளிக்காட்டி நிற்கின்றது.
அவருடைய பன்முக ஆளுமையின் ஒரு பகுதியாக அவர் வழங்கிய செவ்விகளைக் குறிப்பிடலாம். அரசியலுக்கு அப்பாற்பட்டுத் தேவையற்ற கருத்துக்களை வழங்காமல், சிக்கல் இல்லாமல், இயல்பான முறையில், அதே வேளை ஆழமான விதத்தில், செவ்விகளை வழங்குகின்ற நேர்த்தியைத் தமிழ்ச்செல்வன் அவர்கள் பெற்றிருந்தார்.அவுஸ்திரேலியா உட்பட்ட எத்தனையோ மேலை நாட்டு அனுபவம் மிக்க அரசியல்வாதிகள், முன்னுக்குப் பின் முரணாகச் செவ்விகளை வழங்கி விட்டுப் பின்னர் பகிரங்கமாக மன்னிப்புக் கோருவதையும், தாங்கள் வழங்கிய செவ்விகளில் கருத்துப் பிழை அல்லது தவறான சொற்பிரயோகம் ஏற்பட்டு விட்டது என்று பின்னர் அறிக்கைகளை விடுவதையும் நாம் கண்டு வருகின்றோம். ஆனால் பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் அவர்கள் எத்தனை வகைப்பட்ட கேள்விகளாக இருந்தாலும் - அவை குதர்க்கமான, விதண்டாவாதமான கேள்விகளாக இருந்தாலும் - அவற்றைச் சிரித்த முகத்துடன் உள் வாங்கி மிகத் தெளிவான பதில்களை வழங்கக் கூடிய திறமைசாலியாக விளங்கினார்.
அவருடைய வெளிநாட்டுப் பயணங்கள் ஊடாகப் புலம்பெயர் வாழ் தமிழர்களிடையே மிகப் பெரிய விழிப்புணர்ச்சியையும், ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்தினார். புலம்பெயர் வாழ் தமிழர்களோடு அவருக்கு மிக அந்நியோன்யமான, நெருக்கமான மிக நல்ல உறவு இருந்தது. அதேபோல் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மீது மிகுந்த மரியாதையையும், அளவு கடந்த அன்பையும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் கொண்டிருந்தார்கள். அவரின் எதிர்பாராத இழப்பினால் இன்று புலம்பெயர் வாழ் தமிழர்கள் பரிதவித்துச் சோகமுற்று நிற்பதானது இந்த நெருக்கத்தையும், மரியாதையையும் புலப்படுத்தி நிற்கின்றது.
தமிழ்ச்செல்வன் அவர்களைக் கொன்றதன் மூலம் சிறிலங்கா அரசு ஓர் அரசியல் படுகொலையைச் செய்திருக்கின்றது. ஆம், இது ஓர் அரசியல் படுகொலையாகும்!
இந்த அரசியல் படுகொலையானது சிங்களப் பௌத்தப் பேரினவாதத்தின் சமாதான விரோதச் செயற்பாடுகளை மீண்டும் ஒருமுறை தோலுரித்துக் காட்டியுள்ளது. பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களும், சக போராளிகளும் தங்களது உயரிய உயிர்களைத் தம் மக்களின் சுதந்திரத்திற்காகக் காணிக்கையாக்கியுள்ள இந்த வேளையில் சிங்கள பௌத்தப் பேரினவாதத்தின் நீண்ட காலச் செயற்பாடுகளையும், கருதுகோளையும் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகும்!
சிங்கள அரசுகள் எப்போதுமே இரண்டு முரண் நிலைகளில் இருந்து செயற்பட்டு வருகின்றன. சமாதானத் தீர்வு குறித்துப் பேசுகின்ற சிறிலங்கா அரசுகள் அதேவேளையிலேயே சண்டைக்கான ஆயத்தங்களையும், முயற்சிகளையும் மேற்கொண்டு வந்திருக்கின்றன. ஆனால் இப்படிப்பட்ட குற்றச்சாட்டு, புலிகளின் மீதுதான் எப்போதும் வைக்கப்பட்டு வந்திருக்கின்றது.
தாங்கள் பலவீனமாக இருக்கின்ற போதெல்லாம் பேச்சு வார்த்தைகளை ஆரம்பிப்பதுவும், அதனூடே தம்மை வலுப்படுத்திக் கொண்டு சண்டையை ஆரம்பிப்பதுவுமே சிறிலங்கா அரசுகளின் வழக்கமாக இருந்து வந்துள்ளது. முன்னர் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவிற்கு மிகப் பெரிய நெருக்கடி வந்தபோதுதான் திம்புப் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தார். பிறகு இந்த நெருக்கடிகளுக்கு ஊடாக, தன்னுடைய அரசியல் இலாபத்தை இந்தியா பேசப் புறப்பட்டு, இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அது அன்றைய அயல்நாட்டு அழுத்தம்!
பின்னாளில் சந்திரிக்கா அம்மையார், தன்னுடைய அரசியல் தேவைகளுக்காகச் சமாதானம் பற்றிப் பேசினார். அந்த வேளையில் சிங்கள மக்கள் போரின் காரணமாக நலிவடைந்து துன்பப்பட்டுக் கொண்டிருந்தபோது, அந்தத் நேரத்துத் தேவை குறித்தும், அதனூடே தான் பதவியைக் கைப்பற்ற முடியும் என்பதைக் கருத்தில் கொண்டும்தான் சந்திரிக்கா அம்மையார் சமாதானம் குறித்துப் பேசினார். பெரிதாகச் சமாதானம் குறித்துப் பேசிய சந்திரிக்கா அம்மையார்தான், பிறகு மிகக் கடுமையான போர்களைத் தமிழ் மக்கள் மீது நடாத்தினார் என்பது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயமாகும்.
பின்னர் கட்டுநாயக்கா விமானப்படைத் தளத் தாக்குதலால் பாரிய வீழ்ச்சியைச் சிங்களதேசம் அடைந்தபோது, மீண்டும் சமாதானப் பேச்சு வார்த்தையைச் சிங்கள அரசு ஆரம்பித்தது. பிறகு, இன்று அநுராதபுர வான் படைத் தளம் மீது பாரிய தாக்குதல் நடாத்தப்பட்ட உடனேயே, மகிந்தவின் அரசு சமாதானம் பற்றிப் பேசியதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாரிய பொருளாதார நெருக்கடிகள் சிங்கள மக்களுக்கு வருகின்ற போதெல்லாம் - அதாவது சிங்களப் பேரினவாதத்திற்கு அப்பால், இந்தப் பிரச்சனைகள் பெரிதாகின்ற போது - சமாதானம் குறித்த கருத்துக்களுக்குச் சிங்கள மக்கள் எடுபடுவார்கள். பிறகு சமாதானத்தை முறித்துத் தமிழ் மக்களோடு யுத்தம் என்று சிங்கள பேரினவாதம் சொல்கின்றபோதும், சிங்கள மக்கள் அதற்கும் எடுபட்டுச் சிங்கள அரசுக்குத் துணை நிற்பார்கள்.
சிங்கள அரசுகள் சமாதானத் தீர்வு என்று எப்போதும் சொல்லிக் கொண்டு, அதே வேளை சமாதானத்திற்கான காரணிகளாக இருக்கின்ற எல்லாவற்றையும் முறியடித்துக் கொண்டு வந்துள்ளன. பேச்சு வார்த்தைகளை மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் குழப்புவது அல்லது போடப்பட்ட ஒப்பந்தங்களை மீறுவது என்று தொடர்ந்து சிங்கள அரசுகள் இயங்கி வந்துள்ளன.
முன்னர் இந்தியாவின் நலன் சார்ந்த, இந்தியாவின் அழுத்தம் ஒன்று சிறிலங்காவிற்கு இருந்தது. இன்று சர்வதேசத்தின் அழுத்தம் ஒன்று சிறிலங்காவிற்கு உண்டு. இந்தச் சர்வதேசத்தின் அழுத்தத்திலிருந்து வெளியில் வருவதற்கான ஒரு வழியாகத்தான், அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனைச் சிங்கள அரசு கொலை செய்துள்ளது.
இந்தக் கருத்தைச் சற்று ஆழமாகக் கவனிக்க வேண்டும்.
இன்று சர்வதேசம் கொடுக்கின்ற அழுத்தத்தையும், தனது பொருளாதார நெருக்கடியையும் சமாளித்துத் தன்னைச் சுதாகரித்துக் கொள்வதற்காக, மகிந்தவின் சிங்கள அரசு பேச்சுவார்த்தை, சர்வகட்சிக் குழு, சமாதானத் தீர்வு என்ற நாடகங்களை அரங்கேற்றி வருகின்றது. அதே நேரத்தில் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்கு, விடுதலைப் புலிகள் முன்வர மாட்டார்கள் என்ற குற்றச்சாட்டை சிங்கள அரசு முன் வைக்க வேண்டுமென்றால் ஏதாவது ஒன்றை (குழப்பத்தை) செய்து தீர வேண்டும். அவற்றில் ஒன்றுதான் பேச்சுவார்த்தையைக் குழப்பக் கூடிய வகையில், அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனைக் குண்டு வீசிக் கொலை செய்த, சிறிலங்காவின் நடவடிக்கையாகும்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் அவர்களைத் தாங்கள் கொன்றதன் மூலம், விடுதலைப் புலிகள் கோபமடைந்து அரசியல் செயற்பாட்டில் இருந்து விலகிக் கொள்வார்கள் என்று சிங்கள அரசு திட்டம் போடுகின்றது. இதன் மூலம் சர்வ தேசம் கொடுக்கின்ற அழுத்தங்களில் இருந்து வெளியால் வருவதோடு மட்டுமல்லாது தாங்கள் பெரிய வெற்றியைக் கண்டு விட்டோம்| என்று தமது சிங்கள மக்களுக்குச் சொல்ல முடியும் என்றும் மகிந்தவின் அரசு எண்ணுகின்றது.
இவ்வாறு பல்வேறுபட்ட உத்திகளைக் கையாள்வதற்காகத்தான் அரசியல்துறைப் பொறுப்பாளரான தமிழ்ச் செல்வன் அவர்களைச் சிறிலங்கா அரசு படுகொலை செய்துள்ளது.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் காவல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களை, உடனடியாக அரசியல்துறைக்கும் பொறுப்பாளராக நியமித்ததன் முக்கியத்துவத்தை நாம் இதன் மூலம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இங்கே வேறு சில விடயங்களையும் நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.
மகிந்தவின் அரசு தொடர்ந்து சமாதானத்தைப் பற்றிப் பேசி வருகின்றது. சமாதானத் தீர்வு ஒன்றை வழங்கப் போகின்றோம் என்று சொல்லிக்கொண்டு ஒரு குழுவையும் நியமித்துள்ளது. அதனை உலகத்திற்குக் காட்டிக் கொண்டு, அதே வேளை அந்தக் குழுவை இயங்க விடாமல் தடுத்தும் வைத்திருக்கின்றது. அநுராதபுரத் தாக்குதலுக்குப் பிறகு நாங்கள் சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கு அழைத்தபோதும் விடுதலைப்புலிகள் இணங்கவில்லை| என்ற பொய்ப் பரப்புரையை மகிந்தவின் அரசு மேற்கொண்டது.அநுராதபுரத் தாக்குதலின் காரணமாக நலிவடைந்து போயுள்ள மகிந்தவின் அரசு மீது, சமாதானத்தை நோக்கிய ஓர் அழுத்தம் உருவாகியது. இந்த அழுத்தத்தைச் சமாளிப்பதற்கு, மகிந்த அரசுக்கு ஒரு கால அவகாசம் தேவைப்பட்டது. அதற்காகச் சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கான முயற்சிகளைக் குழப்பி, அந்தப் பழியைப் புலிகள் மீது போட வேண்டும். இதனைச் செய்வதற்காகத்தான் இந்தக் கேவலமான, கொடுரமான உத்தியை மகிந்தவின் அரசு கையாளுகின்றது.
"தமிழ் உலகம் ஆழமாக நேசித்த ஓர் அரசியல் தலைவன் என்றும்", "தமிழீழ மக்களின் மனங்களை வென்ற ஒரு தன்னிகரற்ற தலைவன் என்றும்" தேசியத் தலைவர் குறிப்பிட்டது போல் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்கள், தமிழீழத்தின் செல்வனும், செல்வமும் ஆவார்.அவருடைய மறைவு ஒரு மாபெரும் இழப்பாகும். எனினும் தமிழீழ விடுதலைப்புலிகளின் நீண்ட மரபில், பிரிகேடியர் தமிழ்ச் செல்வனை மட்டுமல்லாது, பொன்னம்மான், குமரப்பா, புலேந்திரன், திலீபன், கிட்டண்ணா, சங்கர், ராஜீ என்று பல ஆளுமை மிக்க தலைவர்களை இழந்தும், தொடர்ந்து விடுதலைப் போராட்டம் தக்க வைக்க வைக்கப்பட்டு, முன் நகர்த்திக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பதை நாம் இந்த வேளையில் நினைவில் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு மக்கள் போராட்டமாகும். இது மக்கள் போராட்டமாக இருப்பதனால், இழப்புக்கள் - அழிவுகள் ஊடாகவும், இது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்லும். அதுபோல், சிறிலங்கா அரசின் இந்தக் கோரக் கொலை காரணமாக, அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஒரு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ள போதிலும், இந்தப் பின்னடைவு ஊடாகவும், தமிழீழ விடுதலைப் போராட்டம் நகர்ந்து முன்னேறிச் செல்லும்.
சிங்கள அரசு நேர்மையாக, உண்மையாக எதையுமே செய்யாது என்பதும், பேச்சுவார்த்தை ஊடாக எதையுமே தீர்க்காது என்பதும், பேச்சு வார்த்தை பற்றிப் பேசிக்கொண்டு, அதைக் குழப்புவதற்காகத் தன்னால் எதையெல்லாம் செய்யலாமோ, அவற்றைச் செய்து வருகின்றது என்பதும், இன்று சர்வதேசத்திற்கு சிங்கள அரசாலேயே நன்றாகப் புரிய வைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பாரிய இழப்புக்களும், நெருக்கடிகளும் எமது உறுதிப்பாடுகளுக்கு வருகின்ற ஒரு சோதனை என்பதைப் புலம் பெயர்வாழ் தமிழர்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும். சோதனைகளைக் கடக்க வேண்டியதுதான் எமது பணி! எமது விடுதலைப் போராட்டத்தின்பால் நாம் தெளிவாக, உறுதியாக இருக்க வேண்டும்."நீண்ட நெருப்பு நதியாக நகருகின்ற எமது விடுதலை வரலாற்றில் தமிழ்ச்செல்வன் ஒரு புதிய நெருப்பாக இணைந்திருக்கின்றார்|- என்றும் இதன் மூலம் எமது கனத்த இதயங்களில் ஒரு பெரும் இலட்சிய நெருப்பை மூட்டி எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றியிருக்கின்றார்"
என்றும் கூறியுள்ள தமிழீழத் தேசியத் தலைவர், இந்த உறுதியில் உரம் பெற்று நாம் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம்| என்று உறுதி தெரிவித்துள்ளார்.
தமிழீழத் தேசியத் தலைவருடைய கரங்களை மேலும் பலப்படுத்த வேண்டிய எமது தார்மீகக் கடமையை இந்த உத்தமர்களின் வீரச் சாவுகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.