• தமிழீழ விடுதலைப் புலிகள், பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு, ஐக்கிய இலங்கைக்குள், (இந்திய முறையிலான) சமஷ்டி அடிப்படையிலான தீர்வை ஏற்பார்களேயானால், அதற்குப் பெரும் வரவேற்புக் கிடைப்பது மட்டுமல்லாது, ஆச்சரியப்படக் கூடிய விதத்தில் எதிர்பாராதவர்களின் ஆதரவு கூடக் கிடைக்கும் என்றும், இந்தியாதான் இலங்கையைக் காப்பாற்ற வல்லது என்ற ரீதியிலும், ஆனந்தசங்கரி தன்னை ஆள்பவர்களின் திசை திருப்பும் கருத்தொன்றை முன் வைத்துள்ளார்.
இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலமாக, இந்தியா கொண்டு வந்த 13வது சட்டத் திருத்தத்தையே, மகிந்த ராஜபக்சவின் அரசு இன்று தூக்கியெறிந்து விட்டது. இந்தச் சட்டத் திருத்தத்தைக் கூட, செயற்படுத்தாத நிலையில்தான் சிறிலங்கா அரசு உள்ளது. தவிரவும், 13வது சட்டத்திருத்தம், பிரிவினைக்குரிய திருத்தம் கூட அல்ல! இதைக்கூட சிங்கள அரசு தூக்கியெறிந்து விட்டது என்றால், சிங்கள அரசு, தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வு எதையும் சமாதான முறையில் தரப்போவது இல்லை என்பதே புலனாகிறது.
இரண்டு அரசுகளாலும் இணக்கப்பாடு காணப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட விடயத்தைத் தூக்கி எறிந்து, கிழக்கு மாகாணத்தைத் தனித் தனியாகப் பிரித்து, புதிய கொடிகளை உருவாக்கி, தமிழர்களைத் துரத்தியடித்து, ஒப்பந்தத்தின் அடிப்படையையே சிதைத்து விட்ட, சிங்களப் பௌத்தப் பேரினவாத அரசை, இந்த ஒப்பந்தத்திற்காகப் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்ற இந்திய அரசால் கூடக் கட்டுப்படுத்த முடியவில்லை. மத்தியில் கூட்டாட்சி- மாநிலத்தில் சுயாட்சி- என்று சொல்லி வந்தவர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனையே அமலாக்க முடியாத இந்தியாவும், சர்வதேசமும் என்ன ஆதரவைத் தந்து, எதைத்தான் நிறைவேற்றப் போகின்றன?
• தமிழீழத் தேசியத் தலைவர் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு, ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையிலான ஒரு தீர்வை ஏற்றால், அவருக்கு நாட்டு நிர்வாகத்தில் ஒரு கணிசமான பங்களிப்புக் கிட்டும், என்கின்ற ரீதியிலும், திரு ஆனந்தசங்கரி தனது எசமானர்களின் கருத்தொன்றை முன் வைக்கின்றார்.
இது குறித்து நாம் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்ட விழைகின்றோம். இந்திய-இலங்கை ஒப்பந்தம் தமிழீழத் தேசியத் தலைவருக்குப் பதவியையும், அந்தஸ்தையும் கொடுக்க முன் வந்த ஒப்பந்தமாகும்.
ஆனால், இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற, அவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்காத ஒப்பந்தம் என்ற காரணத்தினால், தேசியத் தலைவர் அதனை ஏற்கவில்லை. அத்தோடு, இந்த ஒப்பந்தத்தையும், சிங்களப் பேரினவாத அரசு தூக்கியெறிந்து விடும் என்று, தேசியத் தலைவர் அன்றே தீர்க்க தரிசனமாகச் சொன்னார். அது அவ்வாறே நடந்தது.
நீங்களாக (ஆனந்த சங்கரியாக) இருந்தால், இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு, தமிழீழ மக்களை மீண்டும் ஏமாற்றியிருப்பீர்கள்!
பதவிக்காகவும், சுயநலத்திற்காகவும் மட்டும் வாழவேண்டும் என்றால், உங்களுடைய கடிதங்களில் சொல்லப்படுகின்றபடி வாழலாம்தான்! ஆளும் கட்சிகளுக்கு ஆதரவாக வாழ்ந்து, சொத்துக்கள்-வாகனங்கள் போன்றவற்றை வாங்கி, தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிராகக் கடிதங்களையும் அறிக்கைகளையும் எழுதி, சுகமாக வாழ்ந்து முடித்து, வானுலகமோ, எந்த உலகமோ போய்ச்சேரலாம்தான். ஆனால் அது நேர்மையற்ற வாழ்க்கையாகும்! வேலுப்பிள்ளை பிரபாகரன் இதற்காகப் பிறக்கவில்லை !
ஆனந்த சங்கரியைப் போன்ற அரசியல்வாதிகள் மக்களோடு மக்களாக விடுதலைப் போராட்டத்தோடு இணைந்து நின்றிருந்தால், தமிழீழ விடுதலை மிகச் சுலபமாகியிருக்கும்.
இவர்களைப் போன்ற சந்தர்ப்பவாத, சுயநல அரசியல்வாதிகள் குழப்புவதால்தான் சிக்கல்கள் உருவாகின்றன. ஆனந்தசங்கரி போன்றவர்களின் கடிதங்களும், அறிக்கைகளும் அவர்களை ஆள்பவர்களுக்காக, இவர்கள் செய்கின்ற வேலைகள்தான்! இவர்களைப் போன்றவர்கள் தங்களுக்காக என்னவெல்லாம் செய்கின்றார்களோ அவற்றைத் தமிழீழத் தேசியத் தலைவர் செய்யவில்லை என்பதுதான் சிங்கள அரசுகளின் கோபமாகும். ஆனந்தசங்கரிக்கும் அதுதான் கோபம். இவர்களுக்குத் தமிழ் மக்கள் முக்கியமில்லை. தனி நபரின் சுயநலவாழ்வுதான் முக்கியம். இதுதான் இவர்களுக்கும் தேசியத் தலைவருக்கும் உள்ள வித்தியாசம்!
• தமிழர்களின் நலனில் தான் அக்கறை கொண்டவன் என்று திரு ஆனந்தசங்கரி சொல்லி வருகின்றார். தமிழர்களின் நலனில் உண்மையாகவே அக்கறை கொண்டுள்ளவர்கள் எவருமே, தமிழீழம்தான் சரியான தீர்வு என்ற கருத்தில் உறுதியாக ஒருமித்துத்தான் உள்ளார்கள். ஆனால் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டவன் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பது அக்கறையானவர் செய்யக் கூடிய செயல் அல்ல! அந்தச் செயலுக்கு வேறு ஒரு
பெயர்தான| உண்டு!
தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையை, சிங்கள அரசுகள் தீர்க்காததால்தான் நிலைமை சிக்கலாகியது என்பதையும், சிங்கள அரசுகள் பிரச்சனையைத் தீர்க்காமல் இழுத்தடிக்கின்றன என்பதையும் இன்று சர்வதேசமும் விளங்கிக் கொண்டுதான் உள்ளது. ஆனால் ஆனந்தசங்கரி போன்றவர்கள் பிரச்சனையை நன்கு விளங்கிக் கொண்டுள்ள போதிலும் விளங்காத மாதிரி நடிப்பது தமிழர்களின் நலன்மீது அக்கறை கொண்டவர்களின் செயல் அல்ல, என்பதைத்தான் தெளிவாக்குகின்றது. தமிழர்களின் நலன் மீது அக்கறை கொண்டுள்ளவர் தமிழர்களுக்கான சரியான தீர்வை வலியுறுத்த வேண்டும். தமிழர்களுக்கான சரியான தீர்வு தமிழீழம்தான்! இதனை வலியுறுத்துவதுதான் ஆனந்தசங்கரியுடைய முழு நேர வேலையாக இருக்க வேண்டும். ஆனால் இன்று அவர் செய்யும் வேலை என்ன?
• தேசியத் தலைவர் பிரபாகரன் குழப்பாமல் இருந்திருந்தால், மிகப் பிரபல்யமான அஹிம்சைவாதி தந்தை செல்வநாயகம் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, சமாதான முறையில் தீர்வு ஒன்றைக் கண்டிருக்கும் என்று ஆனந்த சங்கரி இன்று குறிப்பிடுகின்றார்.
மிகப் பிரபல்யமான அஹிம்சைவாதி- என்று தந்தை செல்வநாயகத்தைப் புகழுகின்ற ஆனந்தசங்கரி, தான் அன்று தந்தை செல்வாவை மிகக் கீழ் நிலையில் வைத்துப் பண்பாடற்ற முறையில் திட்டித் தீர்த்ததையும், அவரைப்பற்றி அவதூறாகப் பேசியும், எழுதியும் வந்ததையும் ஏனோ குறிப்பிட மறந்து விட்டார்.
ஆனந்தசங்கரி அவர்கள்தான் அன்றிலிருந்து இன்றுவரை கொள்கையில் உறுதியான பிடிப்பில்லாமல், தமிழர்களின் பிரச்சனைக்கான தீர்வைக் குழப்பி வருகின்றார். குழப்புவது ஆனந்தசங்கரியே தவிர தேசியத் தலைவர் அல்ல! தந்தை செல்வா அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்த தமிழீழக் கோரிக்கையை இன்று குழப்புவது திரு ஆனந்த சங்கரி அல்லவா? இவ்வாறு ஆனந்த சங்கரி குழப்புவது தந்தை செல்வா அவர்களுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், தமிழர்களுக்கும் செய்கின்ற துரோகம் அல்லவா?
• முன்னர் 15ஆயிரம் அதிகப்படி வாக்குகள் பெற்று ஓர் அமைச்சரையே தோற்கடித்த தனக்கு, பின்னால் வெறும் 187 வாக்குகள் மட்டுமே கிடைத்ததற்கும் விடுதலைப் புலிகளைத்தான் ஆனந்த சங்கரி குற்றம் சாட்டுகின்றார்.
இங்கே சுட்டிக் காட்டப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், தமிழர்களின் உரிமைக்குரலுக்கு ஆதரவாக இருந்தபோது, ஆனந்தசங்கரி வென்றார் என்பதுவும், தமிழர்களின் உரிமைக் குரலுக்கு எதிராக இருந்தபோது ஆனந்தசங்கரி தோற்றார் என்பதுவும்தான். ஆனந்தசங்கரி மட்டுமல்ல, அமிர்தலிங்கமும் தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்தான்.
அமிர்தலிங்கம் வடக்கிலிருந்து மட்டக்களப்பு சென்று, இந்திய ஆதரவுடன் தேர்தலில் நின்று, அங்கேயும் தோற்றார். இவர்களுடைய அரசியல் தோல்விகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தம் எதுவுமில்லை. தமிழ் மக்கள் தங்களது உரிமைக்காகக் குரல் கொடுக்காதவர்களைக் காலம் காலமாக புறக்கணித்தே வந்துள்ளார்கள் என்பதுதான் வரலாற்று உண்மையுமாகும்!
• தமிழீழ விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் இன்றைய பேரழிவுக்குக் காரணம் என்று, ஆனந்தசங்கரி அவர்கள் தன்னுடைய ஆள்பவர்களின் கருத்தை முன்வைக்க்ன்றார். தமிழ் மக்களுடைய உயிரழிவையும் அவர்களுடைய பொருளாதார அழிவையும் ஆனந்தசங்கரி பட்டியல் இட்டுக் காட்டியிருக்க்ன்றார்.
இவ்வாறு தமிழர்களின் பேரழிவையும், பொருளாதார அழிவையும் ஆனந்த சங்கரி சுட்டிக் காட்டுவதன் மூலம், தெரிந்தோ தெரியாமலோ ஓர் உண்மையையும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் பேரழிவுகளையெல்லாம் சிங்கள அரசுகளே செய்துள்ளன என்பதை ஆனந்தசங்கரியே ஒப்புக் கொண்டுள்ளார் என்றுதான் பொருள். இந்தப் பேரழிவு ஏன் வந்தது? இந்தப் பேரழிவுகளைத் தமிழ்மக்கள் தொடர்ந்து எதிர் கொண்டு வந்தபோது தமிழர்களின் நலனில் அக்கறை கொண்ட ஆனந்தசங்கரி என்ன செய்து கொண்டிருந்தார்? சிங்கள அரசுகளுக்கு பிடில் வாசித்துக் கொண்டிருந்தாரா?
சுய சிந்தனையின்படி எழுதாத காரணத்தினாலோ என்னவோ, தமிழீழ விடுதலைப் புலிகளைக் குற்றம் சாட்டுகின்ற ஆனந்தசங்கரி அவர்கள், சில உண்மைகளையும் எழுதி விட்டார். அவருடைய வசனங்களைக் கிழே தருகின்றோம்.
"தனிச் சிங்களச் சட்டத்தை மைல் கல்லாக வைத்துப் பார்த்தால் எமது இனப்பிரச்சனை 50வயதைத் தாண்டி விட்டது. அப்போது (பிரபாகரன்) பிறந்திருக்கவில்லை அல்லது குழந்தையாக இருந்திருப்பார்."
"சகல இன மக்களும் அமைதியாக வாழ்ந்த நாட்டிற்கு அழிவைக் கொண்டு வந்ததே தனிச்சிங்கள சட்டம்தான்."
உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் குழப்பப்படாதிருந்தால், கடந்த 50 ஆண்டுகளில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களும், பல கோடானுகோடி பெறுதியான சொத்துக்களும் இழக்கப்படாது காப்பாற்றியிருக்க முடியும். சில அரசியல் தலைவர்களின் முரட்டுப்பிடிவாதமே இத்தனை இழப்புக்களுக்கும் காரணமாக இருந்துள்ளது. ……. அதற்குரிய விடையை இன்றைய தலைமுறையினர் கூறட்டும்.
இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும், தமிழ் பேசும் மக்களின் காலை வாரிவிட்டு நாட்டுக்குப் பெரும் அபகீர்த்தியை எவ்வாறு ஏற்படுத்தினர் என்பதையும், அதனாலேயே 70 ஆயிரம் பேரின் உயிர்களையும், பலகோடி பெறுமதியான சொத்துக்களையும் நாடு இழந்தது என்பதையும் இளம் தலைமுறையினர் அறிய வேண்டும்.
பண்டா - செல்வா ஒப்பந்தம், ட்டலி-செல்வா ஒப்பந்தம் ஆகியவற்றை நிறைவேற்றாது, மாறிமாறி ஆட்சிப்பீடமேறிய அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் சிறுபான்மையினரைப் புறக்கணித்து விட்டன என்பதை ஒருவரும் உணராது இருக்க முடியாது.
ஜேஆர் ஜெயவர்த்தனா ………… இனப்பிரச்சனைத் தீர்வில் பெரிய அக்கறை காட்டவில்லை.
தீங்கு விளைவிக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுதல் செய்பவர்கள் உலகத்திலேயே எமது நாட்டில் மட்டும் இருப்பது ஆச்சரியமே! உதாரணம் - கண்டி தலதா மாளிகாவிற்கு மேற்கொள்ளப்பட்ட யாத்திரை.
பண்டா செல்வா ஒப்பந்தம் 1957ம் ஆண்டு அமல் படுத்தப்பட்டிருப்பின், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் உயிர்களும், பலகோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களும் காப்பாற்றப்பட்டிருக்கும். கறுப்பு யூலை 1983 கலவரத்தைத் தடுத்திருக்க முடியும். 70 ஆயிரம் பேரின் உயிரைக் குடித்த இந்தப் போரையும் தடுத்திருக்கலாம். இந்த இழப்புக்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியது யார்? இவற்றிற்கும் இதேபோன்ற எதிர்கால் நிகழ்வுகளுக்கும் எமது நாட்டில் உள்ள சில சுயநலம் கொண்ட அரசியல்வாதிகளே பொறுப்பேற்க வேண்டும்."
இவ்வாறு தன்னையும், தன்னுடைய எசமானர்களையும் தெரிந்தோ தெரியாமலோ ஆனந்தசங்கரி தோலுரித்துக் காட்டியிருந்தாலும், தன்னுடைய எசமானர்களுக்கான சப்பைக்கட்டு வாதங்களை முன்வைக்கவும் தவறவில்லை.
• 1970ம் ஆண்டு தரப்படுத்தல் என்ற துயரமான முடிவு எடுக்கப்பட்ட போதும் 1977ம் ஆண்டு ஆட்சி புரிந்த அரசு எல்லோருக்கும் திருப்தி தரக்கூடிய ஒரு திட்டத்தை வகுத்தது| என்று ஆனந்தசங்கரி கூறுகின்றார்.
இங்கே சுட்டிக் காட்டப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், 1977களில்தான் நீங்கள் தமிழீழத்திற்கான தேர்தலில் நின்றீர்கள். சிறிலங்கா அரசுகளின் திட்டங்களில் திருப்தி இல்லாத காரணத்தினால்தான் தமிழீழத்தைப் பாராளுமன்றத்தில் முன்மொழிந்தீர்கள். அரசின் திட்டம் சரியில்லை, ஏமாற்றுவித்தை என்பதுதானே அதற்கு காரணமாக இருந்தது. இன்று தலைகீழான ஒரு காரணத்தை நீஙகள்தான் சொல்கின்றீர்கள்.
• பண்டா-செல்வா, டட்லி-செல்வா ஒப்பந்தங்கள் நிறைவேற்றப் படாததைச் சுட்டிக் காட்டுகின்றார் ஆனந்தசங்கரி. இங்கே சொல்லப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், இவை நிறைவேறாமல் போனதற்கு தமிழ் மக்கள் காரணம் இல்லை என்பதுதான். சிங்கள அரசியல்வாதிகளுக்கு அப்பால், சிங்கள பொதுமக்களும் பௌத்த பீடாதிபதிகளும் இந்த ஒப்பந்தங்கள் கிழித்தெறியப் பட்டதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். ஆனால் இவர்களையும் தூக்கிப் பிடிக்கின்ற வேலையையும் ஆனந்த சங்கரி செய்கின்றார். அதனைப் பின்னர் தர்க்கிப்போம்.
• திரு ஆனந்தசங்கரி அவர்கள், முன்னாள் அரச அதிபரான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையாரால் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தை மிகச் சிறந்த தீர்வாக கணிக்கின்றார்.
நாம் இழந்த இன்னொரு சந்தர்ப்பம், இதுவரை காலமும் முன்வைக்கப்பட்ட தீர்வுகளில், மிகச் சிறந்த தீர்வாகக் கணிக்கப்பட்ட, 1995ம் ஆண்டில் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களால் முன்வைக்கப்பட்ட தீர்வாகும். பலர் அதை ஏற்றுக் கொண்டனர். அத்தீர்வு ஏற்கப்பட்டு அமல்படுத்தப்பட்டிருந்தால், பெறுமதி மிக்கப் பெரும் தொகையான சொத்துக்கள், 12 ஆண்டுகால யுத்தத்திற்காகச் செலவிடப்பட்ட பெருந்தொகைப் பணம், யுத்தமுனையில் இழக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அத்தனையையும் காப்பாற்றி இருக்க முடியும். ….. இந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் பொருட்சேதத்திற்கு யார் பொறுப்பாளி? என்று ஆனந்த சங்கரி தனது எசமானர்களுக்காக கேள்வி எழுப்புகின்றார்.
ஆனந்தசங்கரி புகழுகின்ற சந்திரிக்கா அம்மையார் முன்வைத்த தீர்வுத் திட்டம் தான் என்ன? அதற்கு என்ன நடந்தது?
சந்திரிகா அம்மையார் யூனியன் அதிகாரம் (ருnழைn ழறநச) என்று ஒரு திட்டத்தைத் தயாரிக்க முனைந்தார். ஒற்றையாட்சி முறையிலிருந்து வெளியில் வருவதற்கான திட்டம்தான் அது. இரட்டையாட்சியல்ல! தொகுதிகளை மாநிலங்களாகப் பிரிப்பது என்ற அடிப்படையில் ஒற்றையாட்சிக்கு அப்பாற்பட்ட ஒரு திட்டத்தை முன்வைக்க சந்திரிக்கா முயன்றார். ஆனால் அவரே அந்த அதிகாரங்களைக் குறைத்துக் குறைத்துக் கொண்டு போய் ஈற்றில் சிங்கள மக்களின் எதிர்ப்பால் அதனைக் கைவிட்டு விட்டார். பண்டாரநாயக்காவின் திட்டத்தை பண்டாரநாயக்காவே கிழித்தெறிந்தார். சந்திரிக்காவின் திட்டத்தை சந்திரிக்காவே கைவிட்டார். இத் திட்டங்கள் கைவிடப்பட்டதற்கு காரணம் தமிழர்கள் அல்ல! சிங்கள மக்கள்தான் காரணம்!. சிங்கள மக்கள் பண்டாரநாயக்காக் காலத்திலும் தீர்வுக்கு எதிர்ப்புத்தான்! சந்திரிக்கா-மகிந்த காலத்திலும் தீர்வுக்கு எதிர்ப்புத்தான்!
• ஆனந்தசங்கரி அவர்கள் இன்னுமொரு திட்டம் பற்றியும் கூறுகின்றார்.
சட்டவல்லுனர்களையும், அனுபவம் வாய்ந்த அரசியல் யாப்புச் சட்டத்தரணிகளையும் கொண்ட நிபுணர்கள் குழுவால் தயாரிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கும், சர்வதேச சமூகத்திற்கும் ஏற்புடைய அரசில் தீர்வுத்திட்ட நகல் ஒன்று தயாரிக்கப்பட்டது. அது சிறுபான்iயினரின் அபிலாசைகளுக்கு ஏற்புடையதாய இருந்தும், எல்லேருக்கும் தெரிந்த ஒரு காரணத்தினால் எதிர்பாராத வகையில் நிராகரிக்கப்பட்டது. அந்த நகலை ஏற்கும்படி வேண்டப்பட்டிருந்தால் நிலைமை முற்று முழுதாக மாறியிருக்கும்| என்று ஆனந்தசங்கரி சொல்லி வருத்தப்படுகின்றார்.
இந்த விடயத்திற்குரிய பதிலை அல்லது தெளிவை ஆனந்தசங்கரி அவர்கள்தான் தரவேண்டும். இது என்ன தீர்வுத் திட்டம்? இது யாரால் தயாரிக்கப்பட்டது? இது யாரால் நிராகரிக்கப்பட்டது என்பது ஆனந்தசங்கரிக்கும், அவருடைய எசமானர்களுக்கும்தான் தெரியும்! எமக்குத் தெரியாது!
• ஆனந்தசங்கரி அவர்கள் சிறிலங்கா படையினருக்காகவும் வக்காலத்து வாங்குகின்றார். புத்திஜீவிகள், கல்விமான்கள் பல்வேறு தரப்பட்ட அரச ஊழியர்கள் …… என்பவர்களில் ஒருவர்தானும் (சிறிலங்கா) அரசபடையினரால் கொல்லப்பட்டிருக்கின்றாரா? …… என்று ஆனந்தசங்கரி கேள்வி எழுப்புகின்றார்.
யாரையோ| திருப்திப் படுத்துவதற்காக ஆனந்தசங்கரி இவ்வாறு கேட்கின்றார். இராணுவ நடவடிக்கைகளாலும், விமானப் படைத் தாக்குதல்களாலும், ஒட்டுக்குழுக்களாலும் எவ்வளவோ பேர் கொல்லப்பட்டும், தொடர்ந்தும் கொல்லப்பட்டு வருவதையும் ஆனந்தசங்கரி அறியவில்லையா? தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் இன்ன பிறர் என்று பட்டியல் துன்பகரமாக நீண்டு கொண்டே போகின்றது.
• ஆனந்தசங்கரி தனது எசமானர்களின் பொருட்டு, இனவாதம் பேசுகின்ற சிங்கள வகுப்பு வாதிகளையும் உயர்த்த்ப் பிடிக்கின்றார்.
இனவாதம் பேசுகின்ற பௌத்த-சிங்கள வகுப்புவாதிகள் பொறுப்பற்ற முறையில் பேசி வந்தாலும், ஒரு தமிழ் உயிரையும் பறித்ததில்லை| என்று ஆனந்த சங்கரி சிங்கள இனவாதிகளின் கருணை குறித்து மெச்சுகின்றார்.
சிங்கள இனவாதிகள் புரிந்த தமிழினப் படுகொலைகள் குறித்து சிங்கள அறிஞர்கள் மட்டுமல்ல முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் ஏற்றுக் கொண்டுள்ளார். 1956ம் ஆண்டிலிருந்து இன்றுவரை சிங்கள இனவாதப் பொதுமக்கள் தமிழ் மக்களைக் கொன்று குவித்தே வந்துள்ளார்கள். இவ்வாறு சிங்கள இனவாதப் பொதுமக்கள் தமிழர்களைக் கொல்வதை இராணுவம் தடுக்கவில்லை. மாறாக சிங்கள இனவாதிகளுக்குப் பக்க பலமாக நின்று தமிழினப் படுகொலைகளுக்கு பேருதவி செய்தது. சிங்களப் பொதுமக்கள்தான் இனக்கலவரங்களின் போது கொன்று குவித்துக் கொள்ளையடித்தார்கள். ஆனால் ஆனந்தசங்கரியோ சிங்கள இனவாதிகளை மெச்சிக் கொண்டிருக்கின்றார்.
• சிங்கள மக்களின் சார்பில் ஆனந்தசங்கரி அவர்கள் இன்னுமொரு கருத்தையும் முன்வைக்கின்றார்.
............. பெரும்பகுதியான சிங்கள மக்கள் தமிழ் மக்களுடன் சமமாக வாழ்வதையே விரும்புகின்றார்கள்| என்று ஆனந்தசங்கரி கருத்துக் கணிப்பு ஒன்றைத் தருகின்றார்.
மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களித்து, அவரைப் பதவியில் அமர்த்திய சிங்கள மக்கள், தமிழ் மக்களோடு தாம் சமமாக வாழவேண்டும் என்பதற்காக வாக்களிக்கவில்லை. அடிப்படைச் சிங்கள மக்கள் தமிழ் மக்கள் மீதான போருக்காகத்தான் வாக்களித்தார்கள். அடிப்படையிலேயே போர் என்கின்ற போது, தமிழ் மக்களை அழித்தொழிப்பது என்பதுதான் விருப்பமே தவிர, சரிசமமாக வாழ்வது என்பது அல்ல!
சமமாக வாழ்வது என்றால், தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப் படுகின்றபோது சிங்கள மக்கள் ஆதரித்திருக்க வேண்டும். ஒப்பந்தங்களும், பொதுக் கட்டமைப்பும் தூக்கியெறியப்பட்ட போது சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்து எதிர்த்த்ருக்க வேண்டும். ஆனால் சிங்கள மக்கள் தமிழர் அழிவுக்குத்தான் ஆதரவாக உள்ளார்கள். தமிழர்களின் உரிமைக்கு எதிராகத்தான் உள்ளார்கள்.
• ஆனந்தசங்கரி அவர்கள், சிங்கள மக்கள் பற்றியும் பௌத்த பீடாதிபதிகளான நான்கு மகாநாயக்கர்கள் குறித்தும் தனது எசமானர்களின் கருத்தை வெளியிடுகின்றார்.
தமிழ் மக்களுக்கு ஏற்புடையதான ஐக்கிய இலங்கைக்குள் ஒரு சமஷ்
டி ஆட்சி முறையைப் பெற்றுக் கொடுக்க சிங்கள மக்கள் போராடுவார்கள்| என்றும்,
பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக மகிந்தவின் அரசுக்குப் பூரண ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நான்கு மகாநாயக்கர்கள் கேட்டுள்ளார்கள| என்றும் ஆனந்தசங்கரி உற்சாகத்துடன் பேசுகின்றார்.
தமிழ் மக்களுக்கு ஆதரவாக இதுவரை எந்த ஒரு வெகுசனப் போராட்டத்தையும் சிங்கள இனம் நடாத்தவில்லை. இதற்கான வரலாற்றுச் சான்றும் இல்லை. மாறாகத் தமிழர்களுக்கு எதிராகத்தான் சிங்கள இனம் போராட்டங்களை நடாத்தியுள்ளது. அதேபோலத்தான் சிங்கள பௌத்த பீடாதிபதிகளும் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான கருத்துருவாக்கங்களையும், செயற்பாடுகளையும் முன்னெடுத்து வந்திருக்கின்றார்கள். இன்று மகிந்தவின் அரசுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று பீடாதிபதிகள் கேட்டுக் கொண்டிருப்பது, மகிந்தவின் இராணுவ நடவடிக்கைகளுக்கான ஆதரவின் வெளிப்பாடுதான்!
• தமிழ் மக்கள் யுத்தம் காரணமாகச் சந்தித்து வரும் பேரழிவுகளுக்கு அடிப்படைக் காரணம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்தான்| என்று ஆனந்த சங்கரி குற்றம் சாட்டுகின்றார்.
முன்பு அக்கராயனில் சிங்களக் குடியேற்றத்தை ஆர்ம்பித்து வைத்த ஆனந்தசங்கரி இன்று தமிழர்களின் அழிவு பற்றியும் பேசுகின்றார். இந்த அழிவுகள் யாரால் மேற்கொள்ளப்படுன்றதோ, அவர்களைத் தனது எசமானர்களாக ஏற்றுக்கொண்டுள்ள ஆனந்தசங்கரி, தமிழினத்தைக் காப்பாற்றுகின்ற தலைமையைக் குற்றம் சொல்ல முயற்சிக்கின்றார். அன்று தமிழீழக் கோரிக்கையை முன்வைத்துத் தேர்தலில் வென்று, இராணுவ முகாம்களை அழித்துத் தமிழீழம் பெறுவோம் என்று முழங்கிய ஆனந்தசங்கரி இன்று இவ்வாறு புலம்புகின்றார்.
கிழக்குத் தீமோர் சுதந்திரப் போராட்டம் பாரிய அழிவுகளைச் சந்தித்த போராட்டமாகும். சர்வதேசம் உண்மை நிலையைத் தெரிந்து கொண்டுதான் அந்த அழிவைப் பார்த்துக் கொண்டு நின்றது. அதற்காக அந்த நாடு போராடாமல் இருக்கவில்லை. பாலஸ்தீனம் இன்றும் பாரிய அழிவுகளை சந்தித்துக் கொண்டுதான் உள்ளது. அதற்காக அந்த நாடும் போராடாமல் இருக்கவில்லை. நியாயம் கிடைக்கும் வரை போராட்டத்தை எவருமே கைவிட முடியாது. போராட்டத்தைக் கைவிட்டால் போராடுகின்ற இனங்கள் முழு அழிவுக்கு ஆளாகும். போராடுவதன் மூலம்தான் பேரழிவைத் தவிர்க்கும் வாய்ப்பும், வெற்றிக்கான வாய்ப்பும் உண்டு.
ஹிட்லர் போன்ற பாசிசவாதிகளை எதிர்கொள்ளும் போது, பேரழிவுகள் இல்லாமல் போரிட முடியாது. ஹிட்லர் போன்ற பாசிசவாதிகளை அழிக்க வேண்டும் என்பதற்காக, உலகநாடுகள் பாரிய அழிவுகளைச் சந்தித்துப் போராடின.
தமிழர்கள் தமது போராட்டத்திற்கு முன்பிருந்தே - அதாவது 1956ல் இருந்தே - தொடர்ச்ச்யாக அழிக்கப்பட்டு வருகின்றார்கள். அப்போது ஆயுதப் போராட்டம் இல்லை. 1983லும் ஆயுதப் போராட்டம் பெருமளவில் வளர்ச்சி பெறவில்லை. ஆயினும் தமிழர்கள் அழிக்கப் பட்டார்கள். சிங்கள தேசம் அழிவைக் கூட்டியதே தவிர குறைக்கவில்லை.