"To us all towns are one, all men our kin. |
Home > Tamil National Forum > Selected Writings - Sanmugam Sabesan > ஆனந்தசங்கரியை ஆள்பவர்களுக்கு……பாகம் ஒன்று Selected Writings by Sanmugam Sabesan ஆனந்தசங்கரியை ஆள்பவர்களுக்கு……பாகம் ஒன்று 11 July 2007
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என்று, தன்னைத்தானே அழைத்துக் கொண்டு வருகின்ற திரு. ஆனந்தசங்கரி அவர்கள், அண்மைக் காலங்களில் அறிக்கைகளையும், பகிரங்கக் கடிதங்களையும் எழுதி வருகின்றார். தமிழீழம் என்பது பகல் கனவு என்றும், தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட வேண்டும் என்றும், சமஷ்டி அடிப்படையிலான தீர்வுதான் இப்போதைய பிரச்சனைக்கு உரிய ஒரே தீர்வு என்றும், தமிழீழத் தேசியத் தலைவருக்குத் தான் எழுதிய கடிதங்களுக்குப் பதில் கிடைக்கவில்லை - என்றும் திரு ஆனந்தசங்கரி கூறி வருகின்றார். யாரோ சிலரின் தூண்டுதல் காரணமாக, அவர்களுடைய தேவைகளுக்காகச் செயல்படுகின்ற - அரசியல் வாழ்க்கையில், ஒழுக்கமோ, குறிக்கோளோ இல்லாத - ஓர் அரசியல்வாதியான ஆனந்தசங்கரிக்குப் பதில் சொல்ல வேண்டிய தேவை எவருக்கும் இல்லை. அரசியல் ரீதியாக, மக்களால் தெரிவு செய்யப்படாத அரசியல்வாதிகளுக்கு, மக்களால் ஒதுக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகளுக்கு, யாரோ சிலரின் பணத்திலே, யாரோ சிலரின் பலத்திலே இருப்பவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய தேவையும் இல்லை. அறியாமல் பேசுபவர்களுக்குப் பதில் சொல்லலாம். தெரிந்து கொண்டு, விடயங்களை அறிந்து கொண்டு, ஆனால் வேண்டுமென்றே அரசியலுக்காகக் குதர்க்கமாகப் பேசுபவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைத்தான். ஆனாலும் திரு ஆனந்தசங்கரியை ஆள்பவர்களுக்குப் பதில் சொல்ல விழைகின்றோம். ஏன்? எதற்காக?? இன்றைய இளைய தலைமுறைக்கு ஆனந்தசங்கரியைப் பற்றியோ, அவருடைய அரசியல் திருகு தாளங்கள் குறித்தோ தெரியாது. இவரைப் போன்றவர்கள் எவ்வாறு கட்சி விட்டு கட்சி தாவினார்கள், பதவிக்காக எங்கெங்கெல்லாம் ஓடினார்கள், தங்களுடைய கொள்கை இலட்சியங்களிடமிருந்து எவ்வாறு குத்துக்கரணம் அடித்தார்கள் என்று இளைய தலைமுறைக்குத் தெரியாமல் இருக்க கூடும். பழைய தலைமுறை, ஆனந்தசங்கரி போன்றவர்களைக் கண்டு கொள்வதில்லை. அவர்களுக்கு ஆனந்தசங்கரியின் சுயரூபம் நன்கு தெரியும். ஆனால் இளைய தலைமுறைக்குச் சில விடயங்களைச் சொல்லவேண்டிய தேவை உள்ளது. அதனால் முக்கியமான சில விடயங்களைச் சொல்ல விழைகின்றோம். இதன்மூலம் திரு ஆனந்தசங்கரியை ஆள்பவர்களின் நோக்கங்களை நாம் அறியக் கூடியதாக இருக்கும். சுதந்திரன் பத்திரிகையின் 09.12.1977ம் ஆண்டு இதழில் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 28.11.1977ம் ஆண்டு, சிறிலங்காத் தேசிய அரசுப் பேரவையில், தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசிய உரையை, சுதந்திரன் பத்திரிகை வெளியிட்டிருந்தது. அந்தத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் கீழ்வருமாறு பேசியிருந்தார்:-
இவ்வாறு சுதந்திரத் தமிழீழ முழக்கமிட்ட தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் யார் என்று வாசகர்கள் கேட்கக் கூடும் அவர் வேறு யாருமில்லை. இன்று தமிழீழம் ஒரு பகல் கனவு - என்று கூறி வருகின்ற திரு வீ. ஆனந்தசங்கரி அவர்கள்தான், அன்று பாராளுமன்றத்தில் தமிழீழக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய முடியாது என்று முழங்கியவராவார். இதைத் தவிர திரு ஆனந்தசங்கரி மேலும் பல விடயங்கள் குறித்து, அன்று- 28-11-1977 அன்று- பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றார். எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தைச் சிங்களப் பொலிஸ் தாக்கியது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், ஆனால் உதவிப் பொலிஸ் அதிபராக இருந்தவரை, பொலிஸ் அதிபராக பதவி உயர்வு கொடுத்து உயர்த்தியிருப்பதாகவும் ஆனந்தசங்கரி தெரிவிக்கின்றார். அது மட்டுமல்லாது, கிளிநொச்சி-வவுனிக்குளத்தில் ஐந்து தமிழ் இளைஞர்கள், சிறிலங்காப் படையினரால் நாயைப்போல் சுட்டுக்கொல்லப்பட்ட விடயம் குறித்தும் ஆனந்தசங்கரி அன்று முறையிட்டிருக்கின்றார். அன்று சிறிலங்கா அரசோடு சேர்ந்தியங்கிய ஒரு தமிழ் அமைச்சர் குறித்தும் எள்ளலாக ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார். ஒரு தமிழரை அரசாங்கம் குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளது. ஒரு 500 வாக்குகளால் தப்பித் தவறி வென்ற ஒரு தமிழரை, செல்வாக்காக அரசு வைத்திருக்கின்றது என்று ஆனந்த சங்கரி கருத்து வெளியிட்டிருந்தார்.
இவ்வாறு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழக் கொள்கையை மீள் பரிசீலனை செய்ய முடியாது என்றும், சிறிலங்காப் பொலிஸின் அராஜகங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றும், இராணுவம், தமிழர்களை நாய்களை சுடுவது போல் சுட்டுத் தள்ளுகின்றது என்றும், சிங்கள அரசோடு சேர்ந்து இயங்கும் தமிழர்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டவர்கள என்றும், சிங்கள இராணுவ முகாம்களை எதிர்த்துச் சுதந்திரத் தமிழீழம் அமையப் போகின்றது என்றும் பாராளுமன்றத்தில் கூறிய ஆனந்த சங்கரி அவர்கள் இன்று தன்னுடைய இலட்சியத்தைக் காவு கொடுத்துவிட்டு, தமிழீழம் ஒரு கனவு என்றும், தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட வேண்டும என்றும், சமஷ்டி முறையில்தான் தீர்வு என்றும், சிங்கள அரசுகளுடன் ஒத்துப்போவதுதான் நல்லது என்றும், சிங்கள அரசு நல்ல தீர்வு தரும் என்றும் சொல்லி வருகின்றார். முன்னர் ஆனந்த சங்கரி சமசமாஜக் கட்சியிலிருந்து பின்னர் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு கட்சி மாறியதைப் போல் இன்றும் ஆனந்த சங்கரி கட்சி மாறுகின்றார். ஏனென்றால், ஆனந்த சங்கரியை ஆள்பவர்கள், அவரையும் குத்தகைக்கு எடுத்து விட்டார்கள். இவற்றினூடாகச் சுட்டிக் காட்டப்பட வேண்டிய முக்கியமான விடயம் ஒன்றுள்ளது ஆனந்தசங்கரியின் இந்தப் பாராளுமன்றப் பேச்சு, பேசப்பட்ட காலம் 1977ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுடைய விடுதலைப் போராட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகியது, 1972ம் காலப் பகுதியாகும். வேறு தமிழ் அமைப்புக்களும் ஆயுத முனையில் போராடத் தொடங்கி விட்டன. ஆனந்த சங்கரியின் அன்றைய பேச்சு, தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தால், இராணுவ முகாம்கள் அழிக்கப்படும், பின்னர் தமிழீழம் கிடைக்கும் என்ற நம்பிக்கையால் எழுந்த பேச்சாகும். இதனூடாகத் தன்னைப் போன்றவர்கள் சொகுசாகப் பதவிக்கு வரலாம் என்று ஆனந்த சங்கரி எண்ணினார். விடுதலைப் போராட்ட இயக்கங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என்றும் ஆனந்த சங்கரி நம்பினார். இதன் அடிப்படையில்தான் அமிர்தலிங்கமும், தன்னுடைய இரண்டாவது மகன் மூலம் ஒரு படையமைப்பை உருவாக்கினார். (இந்தப் படையமைப்புப் பின்னர் கலைக்கப்பட்டு இப்போது அவரது மகன் வெளிநாட்டில் உள்ளார்.) தன்னுடைய கட்டுப்பாட்டை மீறி, மற்றைய அமைப்புக்கள் செயல்படுகின்ற காரணத்தினால், தன்னுடைய சொந்தக் கட்டுப்பாட்டுக்குள் ஓர் அமைப்பைக் கொண்டுவர அமிர்தலிங்கம் ஆசைப்பட்டார். இதே ஆசையைத்தான் ஆனந்த சங்கரியும் கொண்டிருந்தார். இங்கே அடிப்படையான விடயம் என்னவென்றால், ஆயுதப் போராட்டம் ஊடாகத்தான் தமிழீழத்தை அடையலாம் என்பதே ஆனந்த சங்கரி, அமிர்தலிங்கம் போன்றோரின் உறுதியான கருத்தாக அமைந்திருந்தது என்பதேயாகும். ஆனால் ஆயுதப் போராட்டம், தங்களுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்றுதான் ஆனந்த சங்கரி போன்றோர் விரும்பியிருந்தார்கள். ஆனந்த சங்கரி ஆயுதப் போராட்டத்தை ஆள முடியாத காரணத்தால், எதிரியை எசமானனாக வரித்து, அவர்கள் தன்னையே ஆளும்படி தடம் புரண்டு விட்டார். தான் எழுதிய கடிதங்களுக்குத் தமிழீழத் தேசியத்தலைவர் பதில் தரவில்லை என்று இப்போது புலம்பிக் கொண்டிருக்கும் ஆனந்த சங்கரி அவர்கள், ஒரு விடயத்தை மட்டும் குறிப்பிட (வேண்டுமென்றே) மறந்து விட்டார். சமாதானப் பேச்சு வார்த்தைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையில், ஆனந்த சங்கரி அவர்களை வன்னிக்கு வந்து கருத்தாடல்களில் கலந்து கொள்ளுமாறு விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் பலமுறை கேட்டுக்கொண்ட போதும், ஆனந்தசங்கரி அதற்கு இணங்கவில்லை. தன்னைத் தற்போது ஆளுகின்ற சிங்களப் பேரினவாதத்திற்குத் தன்னை அர்ப்பணித்துவிட்டுத் தன்னுடைய துரோகத்தை மூடி மறைக்கும் சதி முயற்சியில் இன்று ஈடுபட்டு வருகின்றார். தமிழினம் யாரையெல்லாம் வெறுத்து ஒதுக்குகின்றதோ, அவர்களையெல்லாம் தலைவர்களாக அல்லது முக்கியமானவர்களாக மாற்றுவது, சிங்கள அரசின் போக்காகும். ஆனந்தசங்கரிக்கும் கருணாவிற்கும் என்ன வித்தியாசம்? இவர்கள் யாவரும் செயற்கைத் தவைர்களே. பதவி கிடைப்பது என்றால், தம்மை முழுமையாக விற்பதற்கும் இவர்கள் தயார் இன்று - தன்னை ஆள்பவர்களான, சிங்கள பௌத்தப் பேரினவாதத்தின் கட்டளைப்படி, - தமிழீழக் கோரிக்கையைக் கைவிடும்படி, தமிழீழத் தேசியத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளதாக ஆனந்த சங்கரி தெரிவிக்கின்றார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என்று தன்னை அழைத்துக் கொண்டு வருகின்ற ஆனந்த சங்கரியை இன்று ஆள்பவர்களிடம், ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றோம். உங்களுடைய கட்டளைப்படி, தமிழீழக் கோரிக்கையைக் கைவிடும்படி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என்று தன்னைச் சொல்லிக் கொள்கின்ற ஆனந்த சங்கரி கோரிக்கை வைத்து வருகின்றார். ஆனால் 1976ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதியன்று, தமிழர் விடுதலைக் கூட்டணி, வட்டுக்கோட்டையில், வரலாற்றுப் புகழ் வாய்ந்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று அழைக்கப்படுகின்ற தமிழீழப் பிரகடனத்தை அறிவித்தது. அதில் உள்ள இரண்டு பந்திகள் வருமாறு:- ‘இத்தீவில் உள்ள தமிழீழ நாட்டினத்தின் நிலையான வாழ்வைப் பாதுகாப்பதற்கு, ஒவ்வொரு நாட்டினத்திற்கும் உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், ஒரு சுதந்திர, இறைமையுள்ள, மதச் சார்பற்ற சோசலிசத் தமிழீழ அரசை மீள்வித்துப் புனரமைப்புச் செய்வது தவிர்க்க முடியாததாகி விட்டது என்று இந்த மகாநாடு தீர்மானிக்கின்றது. ………. ‘சுதந்திரத்திற்கான புனிதப் போரில் தம்மை முற்று முழுதாக அர்ப்பணிக்க முன்வருமாறும், இறைமையுள்ள சோசலிசத் தமிழீழ அரசு என்ற இலக்கை அடையும்வரை, தயங்காது உழைக்குமாறும், தமிழ்த் தேசிய இனத்திற்குப் பொதுவாகவும், தமிழ் இளைஞர்களுக்குச் சிறப்பாகவும், இந்த மகாநாடு அறைகூவல் விடுகின்றது. (புதிய தமிழ்ப் புலிகள் என்று இயங்கி வந்த விடுதலைப்புலிகள், இந்த வட்டுக்கோட்டை மகாநாட்டிற்கு முன்னதாகவே அதாவது 5.5.1976 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் என்று மீளப் பெயர் சூட்டிக் கொண்டமை ஒரு வரலாற்றுத் தகவலாகும்.) பிறிதாகப் பாராளுமன்றத்திலும் பிரகடனப்படுத்தப்பட்ட தமிழீழக் கோரிக்கையை முன் மொழிந்தவர்களில், கிளிநொச்சித் தொகுதியைச் சேர்ந்த வீரசிங்கம் ஆனந்தசங்கரியும் ஒருவராவார் ஆனந்தசங்கரி அவர்களின் எசமானர்களுக்கு நாம் கேட்கும் கேள்வி இதுதான் :- தமிழீழக் கோரிக்கையைக் கைவிடும்படி, உங்களது சிந்தனையைச் சொல்கின்ற ஆனந்தசங்கரியின் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி தன்னுடைய வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை மாற்றி விட்டதா? பாராளுமன்றத்தில் தமிழீழப் பிரகடனத்தை முன்மொழிந்த ஆனந்த சங்கரி, அதனை உத்தியோக பூர்வமாக மீளப்பெற்று கொண்டு விட்டாரா? இல்லையென்றால் - அவற்றை அவர் செய்யுமாறு, அவருக்கு ஆணையிடுங்கள், அவருடைய எசமானர்களே! அரசியல் தலைவர்கள் மாறி மாறி வரக் கூடும். ஆனால் தமிழ் மக்களால் கொடுக்கப்பட்ட, தமிழ் மக்களால் அறிவிக்கப்பட்ட, தமிழ் மக்களின் வேட்கையைப் பிரதிபலித்த அந்தக் கோட்பாடு இன்னும் மாறவில்லை. ஆனந்தசங்கரி இன்று தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல. தமிழ் மக்களுக்காகப் பெரிய போராட்டங்களையும் நடாத்தியவரும் அல்ல. சிங்களப் பௌத்தப் பேரினவாத எசமானர்களது வேலைக்காரனின் கூக்குரல், தமிழ் மக்களிடம் பலிக்காது. இன்று இந்திய சமஷ்டி முறையின் அடிப்படையில் ஒரு தீர்வை அடையலாம் என்று ஆனந்த சங்கரி தன்னை ஆள்பவர்களுக்காகக் குரல் கொடுத்து வருகின்றார். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையே தூக்கி எறிந்து விட்ட இவரது எசமானர்கள், தமிழர்களுக்கு ஒன்றும் தரப்போவதில்லை என்பது வெளிப்படையான விடயம்தான். இந்தியாவின் சமஷ்டி ஆட்சி முறையானது இலங்கைக்கு உகந்தது அல்ல என்பதையும் நாம் முன்னரும் தர்க்கித்து வந்துள்ளோம். எனினும் ஆனந்த சங்கரி அவர்களின் எசமானர்களது பார்வைக்காக, இந்திய சமஷ்டி ஆட்சி முறை குறித்துச் சில கருத்துக்களைத் தர விழைகின்றோம்.
உப கண்டம் என்று சொல்லக் கூடிய இந்தியாவின் விரிந்து பரந்துள்ள பாரிய நிலப்பரப்பானது, பல்வேறு மொழி பேசுகின்ற, பல்வேறு தேசிய இனங்களை, மாநில ரீதியாகக் கொண்டிருந்தாலும், அங்கே மத்தியிலேதான் அதிகாரம் அமைந்துள்ளது. மத்திய அரசு மாநில அரசைக் கலைக்க முடியும். சர்க்காரியா கமிஷ்ன் அதிகாரப்பரவலாக்கலைச் சிபாரிசு செய்திருந்தாலும், பாதுகாப்பு, வெளிநாட்டுக் கொள்கை போன்ற பல விடயங்களில் மத்திய அரசுதான் இறுதி முடிவுகளை எடுக்கும். மொழி வழி மாநிலங்களாக, ஆட்சியின் சில அதிகாரங்கள் மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவின் சமஷ்டி ஆட்சி முறை என்பது அடிப்படையில் ஓர் ஒற்றை ஆட்சி முறைதான் இந்தி மொழி மசோதாவை ஓர் உதாரணத்திற்கு நாம் சுட்டிக்காட்டலாம். ஆயினும் இந்திய சமஷ்டி ஆட்சி முறை, இன்றைய காலகட்டத்தில் ஓர் ஒற்றையாட்சி முறையைக் கடந்து செல்வதையும் நாம் காண்கின்றோம். கடந்த பல ஆண்டுகளாக மாநில அரசுகள் வலுப்பெற்று வருகின்றன. முன்னரைப்போல் ஒரு கட்சியின் தனி ஆட்சியாக, இன்று மத்திய அரசு இல்லை. தாயகக் கோட்பாட்டில், வெளிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள மாநிலங்களில், திட்டமிட்ட குடியேற்றங்களை மத்திய அரசு செய்ய முடியாது. இந்தியாவின் ஊடகத் துறையும், நீதித்துறையும் பல குறைகளைக் கடந்து மெதுவாக வலுப்பெற்று வருவதையும் நாம் இப்போது காண்கின்றோம். சுருக்கமாச் சொன்னால், அடிப்படையில் ஓர் ஒற்றையாட்சி முறையைக் கொண்டுள்ள இந்திய சமஷ்டி ஆட்சி முறை தனது ஒற்றையாட்சித் தன்மையை மெதுவாக இழந்து வருகின்றது என்று கூறலாம். இந்தியாவின் சமஷ்டி ஆட்சி முறை, ஒரு முழுமையான சமஷ்டி ஆட்சி முறை அல்ல என்ற கருத்தைத் தர்க்கித்த நாம், அதே வேளை தற்போது இந்தியா தனது ஒற்றையாட்சிக்குரிய தன்மையை மெதுவாக இழந்து வருவதையும் சுட்டிக் காட்டியிருந்தோம். இரண்டு வேறு தளங்களில் இருந்து, இக்கருத்துக்களை நாம் தர்க்கித்தமைக்குக் காரணம் உண்டு இந்தியாவையும், இலங்கையையும் சமஷ்டி ரீதியில் ஒப்பிட முடியாது என்பதையும், அப்படி ஒப்பிட முனைவது தவறானது என்பதையும் சுட்டிக் காட்டுவதற்காகத்தான் நாம் மேற்கூறிய விடயங்களைத் தர்க்கித்திருந்தோம். இந்தியாவின் சமஷ்டி ஆட்சி முறை ஏன் இலங்கைக்குப் பொருந்தி வராது என்பது குறித்து மேலும் சில முக்கிய காரணிகளை இங்கு சுட்டிக் காட்டுவது அவசியமானதாகும்.
ஆகவே இந்தியாவின் உள்ள ஆட்சி முறையை மீறி, அதற்கும் மேலாக, ஈழத் தமிழர்களுக்கு எதுவும் கொடுக்கக்கூடாது, கொடுக்க முடியாது என்ற சிந்தனை முற்றிலும் மூடத்தனமானதாகும். இந்தச் சிந்தனை முதலில் மாற வேண்டும். இன்று இந்தியாவே பாரிய அதிகாரப் பரவலாக்கலை நோக்கி நகர்ந்து செல்கின்றது என்ற யதார்த்தத்தையும், ஆனந்த சங்கரியின் எசமானர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய சமஷ்டி ஆட்சி முறை ஈழத்தமிழர்களுக்குப் பொருந்தி வராது. காலத்தைக் கடத்தும் பொருட்டு ஆனந்தசங்கரி மூலம், இந்திய சமஷ்டி ஆட்சி முறை பற்றிப் பேசி வருகின்றார்கள், அவரது எசமானர்கள். இந்தியா கொண்டு வந்த 13வது சட்டத்திருத்தத்தையே தூக்கி எறிந்துவிட்ட சிங்கள அரசா, இந்திய சமஷ்டி ஆட்சி முறையை இலங்கையில் அமல் படுத்தும்.? அது பொருத்தமற்றதாக இருந்தாலும் கூட, சிங்களப் பௌத்த பேரினவாத அரசு, தமிழர்களுக்கு எதையும் தரப்போவதில்லை. தமிழீழக் கொள்கையில் இருந்து குத்துக்கரணம் அடித்த ஆனந்தசங்கரி அவர்களின் அரசியல் பின்புலத்தைப் பற்றியும், அவருக்குள்ளே இருக்கின்ற முரண்பாடுகள் பற்றியும், தன்னுடைய புதிய எசமான விசுவாசம் காரணமாக அவர் பேசி வருகின்ற இந்திய சமஷ்டி ஆட்சி முறையில் உள்ள பொருத்தமற்ற தன்மை குறித்தும் இதுவரை தர்க்கித்திருந்தோம். தன்னுடைய எசமானர்களின் பொருட்டு அவர் எழுப்பியுள்ள சில கேள்விகளுக்கான பதில்களை எமது அடுத்த வாரக் கட்டுரை ஊடாகத் தர விழைகின்றோம். |