தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan >   மகாவம்சம் - சில செய்திகள்


Selected Writings by Sanmugam Sabesan
சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா

 மகாவம்சம் - சில செய்திகள்

21 May 2007


சிறிலங்காவின் புதிய அதிபராக, அன்று மகிந்த ராஜபக்ச, சிங்கள மக்களால் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னரும் , பின்னருமாகப் பல கருத்துருவாக்கங்களை அவரும் அவருடைய கட்சியினரும் வெளியிட்டிருந்தார்கள். இக்கருத்துக்களில் ஒன்று ‘பண்டாரநாயக்கா சகாப்தம்’ என்பதாகும். இன்னுமொரு கருத்து, சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையின் அடிப்படையில் எழுதப்பட்ட மகாவம்சம் தருகின்ற தகவல்களை மையமாகக் கொண்டதாகும்.

பண்டாரநாயக்கா சகாப்தம்(?) கொண்டு வந்த கேடுகள் குறித்து நாம் ஏற்கனவே பல தடவைகள் தர்க்கித்து உள்ளோம். ஆகவே இச் சந்தர்ப்பத்தில் நாம் மகாவம்சம் குறித்துச் சற்று ஆழமாக கவனத்தைச் செலுத்துவது பொருத்தமாக இருக்ககூடும்.

“முதலில் மகாவம்சம் என்ற நூல் எதனைச் சொல்கின்றது, அது எப்போது எவரால் எழுதப்பட்டது, அதற்கு ஆதாரமாக அமைந்துள்ளவை எவை? ”- என்பவை குறித்து நாம் அறிந்து கொள்வது சற்று தெளிவைத் தரக்கூடும்.

இலங்கைத் தீவின் வரலாற்றை விபரிக்கின்ற வரலாற்று நூல் ஆவணங்களில், முதன்மையாகத் திகழ்வது மகாவம்சம் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும், மகாவம்சம் இலங்கை வரலாற்றினைச் சிலவிடத்து நம்பகத்தன்மையோடும், பலவிடத்து நம்பகமற்றதாகவும் விபரிக்கின்றது - என்று கலாநிதி க.குணராசா குறிப்பிடுகின்றார். மகாவம்சம் குறித்துக் கலாநிதி க.குணராசா எழுதிய ஆய்வு நூலையும், அதற்கு உதவிய சில உசாத்துணை நூல்களையும் நாம் நன்றியுடன் பயன்படுத்திக் கொள்ள விழைகின்றோம். பல சொல்லாடல்கள் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன.

மகாவம்சம் பாளி மொழியில், செய்யுள் வடிவில் பாடப்பட்டிருக்கின்றது. இலங்கைத் தீவிற்குப் பௌத்த சமயம் வந்த வரலாறு குறித்தும், இலங்கையை ஆட்சி புரிந்த மன்னர்களது வரலாறு குறித்தும் மகாவம்சம் விபரிக்கின்றது.

மகாவம்சம் விபரிக்கின்ற மூலக்கதைகளைக் கூறாமலேயே, மகாவம்சம் கூறுகின்ற இலங்கை வரலாற்றை அறிய முடியும். சிங்கள இனத்திற்கு அவமானம் தருகிற சம்பவங்கள் என்று கருதி, பலர் சில மூலக் கதைகளைத் தவிர்த்தும், புதுக்கியும், ஏன் திரித்தும் கூட எழுத ஆரம்பித்திருக்கின்றார்கள். மகாவம்சம் சொல்வதை ஏற்பதும், ஏற்காமல் போவதும் வேறு விடயமாகும். ஆனால், மகாவம்சத்தின் புனிதத்தன்மையைக் கெடாமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பலர் ஏற்கனவே உள்ள மகாவம்சத்தை, புதுப்பிக்க முற்படும் செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

இலங்கையின் வரலாறு குறித்துப் பேசுகின்ற மகாவம்சத்தின் வரலாறு என்ன என்பது குறித்து முதலில் கவனிப்போம்.

இலங்கையில் பௌத்த மதம் பரவி, நிலை பெற்ற காலத்தில் பௌத்த விகாரைகளில் வாழ்ந்து வந்த பௌத்த பிக்குகள் சமய மரபுகள் குறித்தும், மன்னர்களின் வரலாற்றுக் கதைகள், அவர்களது பணிகள் குறித்தும் ஏடுகளில் எழுதியதோடு மட்டுமல்லாது, வாய்மொழி மூலமாகவும் பேணி வந்தார்கள். இவை காலம் காலமாகப் பேணப்பட்டு வந்ததோடு, “அட்டகதா” என்று அழைக்கப்பட்டும் வந்தன. இவ்வாறு பல்வேறு பௌத்த விகாரைகளில் பேணப்பட்டு வந்த ‘அட்டகதாக்கள்’, ஒரு கட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு ‘அட்டகதா-மகாவம்சம்’ என்று அழைக்கப்படலானது.

‘அட்டகதா-மகாவம்சத்தின்’ ஏட்டுப்பிரதிகளைத் தழுவிப் பின்னாளில் தீபவம்சம் என்ற நூல் எழுதப்பட்டது. கிறிஸ்துவுக்குப் பின் நான்காம் நூற்றாண்டளவில்தான் தீபவம்சம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றார்கள். தீபவம்சத்தின் ஆசிரியர் யார் என்று அறுதியிட்டு கூறமுடியாமல் உள்ளது. காலத்திற்குக் காலம் பல பௌத்த பிக்குகளால் எழுதப்பட்ட செய்யுள்களை ஒருங்கிணைத்துத்தான் ‘தீபவம்சம்’ முழுமை பெற்றிருக்கக் கூடும்.

இந்தத் தீபவம்சம் என்கின்ற நூலில் இருந்துதான், தற்போதைய மகாவம்சம் என்கின்ற நூல் உருவாகியுள்ளது. தீபவம்சத்தை மீள் ஒழுங்கு செய்ததுதான் மகாவம்சம் என்று பிளீற் (குடுநுநுவு) கூறுவார். இன்னொரு வகையில் சொல்லப் போனால் ‘தீபவம்சம் என்கின்ற நூலின் மிகத்திருத்தமான வடிவமே மகாவம்சம்’ என்றும் கூறலாம்.

இவ்வாறு பல பௌத்த பிக்குகள் காலம் காலமாக, ஏடுகள் ஊடாகவும், வாய்மொழி ஊடாகவும் பேணி வந்த செய்யுள்கள் ‘அட்டகதா’ என்றும், பின்னர் ‘அட்டகதா-மகாவம்சம்’ என்றும் அதன் பின்னர் ‘தீபவம்சம்’ என்றும், ஈற்றில் ‘மகாவம்சம்’ என்றும் ஒருங்கிணைக்கப்பட்டு மீள் ஒழுங்கு செய்யப்பட்டன. மீள் ஒழுங்கைச் செய்து மகாவம்சத்தை உருவாக்கியவர் மகாநாம தேரர் என்று சில ஆய்வாளர்கள் கருதுவார்கள். மகாநாம தேரர்தான் மகாவம்சத்தின் மூல ஆசிரியர் எனக் கொள்ளக் கூடிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கருதுகின்ற ஆய்வாளர்களும் உண்டு.

இது ‘மகாவம்சம்’ என்கின்ற வரலாற்று நூல் உருவான வரலாறு ஆகும்.!

இந்த ‘மகாவம்சம்’ என்கின்ற வரலாற்று நூல் எவ்வாறு பகுக்கப்பட்டிருக்கின்றது, அது எதனைச் சொல்கின்றது என்பதனை இப்போது பார்ப்போம்.

மூலநூலான தீபவம்சத்தில் 37 அத்தியாயங்கள் உள்ளன. அதேபோல மகாவம்சத்தில் முதலில் 37 அத்தியாயங்கள் அடங்கியுள்ளன. அத்தோடு மேலும் 63 அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டு, எல்லாமாக நூறு அத்தியாயங்கள் மகாவம்சத்தில் தற்போது உள்ளன. 38ம் அத்தியாயத்தில் இருந்து 100வது வரையிலான அத்தியாயங்கள் ‘சூளவம்சம்’ என்ற தொடர் நூலில் உள்ளவையாகும். இவற்றைப் பாளி மொழியில் இருந்து, ஜேர்மன் மொழிக்கு, மொழி பெயர்ப்புச் செய்த வில்லியம் கெய்கர், முதல் 37 அத்தியாயங்களை, ‘மகாவம்சம்’ என்ற தலைப்பில், மொழி பெயர்த்தார்.

மீதி 100 வரையிலான அத்தியாயங்களை ‘சூளவம்சம் தொகுதி ஒன்று’, ‘சூளவம்சம் தொகுதி இரண்டு’ என்று மொழி பெயர்த்தார். பின்னாளில், அதாவது 1889ல், முதலியார் எல்.சி விஜயசிங்க என்பவர், ஜோர்ஜ் ரேனர் என்பவரின் ஆங்கில மொழிபெயர்ப்பை மீளாய்வு செய்து மறுபதிப்பாக வெளியிட்டார். ஆனால் முதலியார் விஜயசிங்க ஒரு மாறுதலை, தலைப்புகளின் பெயரில் கொண்டு வந்தார். சூளவம்சம் கூறுகின்ற 38 முதல் 100 வரையிலான அத்தியாயங்களுக்கு ‘மகாவம்சம் தொகுதி இரண்டு’ என்று பெயரிட்டார். முதலியார் விஜயசிங்கவின் கருத்துப்படி நூறு அத்தியாயங்களும் மகாவம்சம் என்ற பொதுப் பெயருக்குள்ளேயே அடக்கமாகி விட்டன.

ஆனால் இங்கே ஓர் உண்மையையும் சுட்டிக்காட்ட வேண்டும். பாளி மொழியில் இருந்து மகாவம்சத்தை ஜேர்மன் மொழிக்கு, மொழி பெயர்த்த வில்லியம் கெய்கர், அதனை ஜேர்மன் மொழியிலிருந்து ஆங்கில மொழிக்கு மொழி பெயர்த்தது 1912ம் ஆண்டில்தான். அதற்கு முன்னரேயே பாளி மொழியிலிருந்து நேரடியாக ஆங்கிலத்திற்கு ‘மகாவம்ச’ என்ற பெயரில் 1837ல் ஜோர்ஜ் ரேனர் மொழி பெயர்ப்பு செய்ததையும், அதனைத்தான் முதலியார் விஜயசிங்க மீளாய்வு செய்ததையும் நாம் இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.

எது எப்படியிருப்பினும், ‘மகாவம்சம் என்கின்ற நூல், கிறிஸ்துவுக்கு பின் 6ம் நூற்றாண்டில்தான் எழுதப்பட்டுள்ளது’ என்றுதான் வரலாற்று ஆசிரியர்களும், ஆய்வாளர்களும் கருதுகின்றார்கள்.

தற்போதைய மகாவம்சத்தில், நூறு அத்தியாயங்கள் (பிற்சேர்க்கையாக) சேர்க்கப்பட்டுள்ள போதிலும், முதல் 37 அத்தியாயங்கள் குறித்து இப்போதைக்கு நாம் கவனம் செலுத்தலாம். ஏனெனில் அவையே கருப்பொருளாகவும் உள்ளன. இந்த 37 அத்தியாயங்களும் என்ன சொல்கின்றன? அவை தெரிவிக்கும் கருத்துக்கள் என்ன? அவற்றில் மறைந்திருக்கும் உண்மைகள் என்ன? என்பவை குறித்து மிகச் சுருக்கமாகத் தர்க்கிக்க விழைகின்றோம்.

மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயம் புத்தரின் மூன்று இலங்கை வருகைகளை விபரிக்கின்றது. மகாவம்சத்தின்படி, மகததேசத்தில் உள்ள உருவெல என்னும் இடத்திலுள்ள அரச மரத்தின் அடியில், ஒரு வைகாசி மாதத்துப் பௌர்ணமி நாளில் கௌதம புத்தர் அமர்ந்திருக்கின்றார். அப்போது அவருக்குச் சில விடயங்கள் புலனாகின்றன. பௌத்த மதம் பெரு வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கை என்பதும், ஆனால் அங்கு ஏற்கனவே வசித்து வருகின்ற இயக்கர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் புத்தர் எண்ணுகின்றார்.

அன்புக்குரிய நேயர்களே! மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயத்தின் குறிப்புகளின்படி இலங்கைத்தீவின் ஆதிக்குடிகள் இயக்கர்கள் என்பது புலனாகின்றது. இதனை மனதில் உள்வாங்கிக் கொண்டு அடுத்த சம்பவத்திற்கு வருவோம்.

மகாவம்சத்தின்படி, இலங்கைத்தீவு எங்கணும் வாழ்கின்ற இயக்கர்கள், குறிப்பிட்ட ஒரு தினத்தில், மகாவலி கங்கை அருகே வந்து கூடுவது வழக்கம். அந்த வேளையில், புத்தர் அங்கே பிரசன்னமாகிப் பயங்கரமான சூறைக்காற்றை உருவாக்கி இயக்கர்களைப் பயமுறுத்துகின்றார். உடனே இயக்கர்கள் “இந்த இலங்கைத்தீவு முழுவதையுமே உமக்குத் தருகின்றோம். எங்களை காப்பாற்றுங்கள்” என்று கெஞ்ச, புத்தர் அவர்களை, மலைநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றார்.

இயக்கர்கள் அகன்றதும், அந்த இடத்தில் ‘தேவர்கள்’ கூடுகின்றார்கள். இந்தத் ‘தேவர்கள்’ என்பவர்கள் யார்? பின்னாளில் விஜயன் வருவதற்கு முன்னரேயே ஊடுருவி இருந்த ஆரியர்கள் என்பவர்கள்தான் இந்தத் ‘தேவர்கள்’!. உண்மையில் இந்தியாவிற்குள், கைபர் மற்றும் போலன் போன்ற இமயமலைக் கணவாய்கள் ஊடாக, கிறிஸ்துவுக்கு முன்னர், 2500க்கும் (கிறிஸ்துவுக்கு முன்னர்) 1500க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில், ஆரியர்கள் ஊடுருவி விட்டார்கள்.

இந்தியத் திராவிட மக்களைத் தென்புலமாக நகர வைத்ததுடன், விஜயனின் வருகைக்கு முன்னரேயே, இலங்கையின் தென் புலங்களில் ஆரியர்கள் குடியேறினர். ஆனால் கிறிஸ்துவுக்கு முன்னர் 483ம் ஆண்டில், விஜயனின் வருகையோடுதான், ஆரியரின் வருகை ஆரம்பமானது என்று சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் பிடிவாதமாக உள்ளார்கள். மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயத்தை சற்று விபரமாக ஆராய்ந்து பார்த்தால், உண்மைகள் வெளிப்படும்.

மகாவம்சத்தின்படி, புத்தர் இரண்டாம் முறையும், இலங்கைக்கு வருகின்றார். இம்முறை இரண்டு நாக மன்னர்கள் தமக்குள்ளே போர் புரிவதைத் தடுப்பதற்காக வருகின்றார். முன்பு சூறைக்காற்றை உருவாக்கி ஆதிக்குடிகளைப் பயப்படுத்திய புத்தர், இம்முறை பயங்கர இருளைப் பரவச்செய்து, நாக மன்னர்களையும், அவரது வீரர்களையும் பயங்கொள்ள வைக்கின்றார். பின்னர் அங்கு வாழ்ந்த எட்டுக்கோடி நாகர்களுக்கு, ‘புத்தம்- தர்மம் -சங்கம்’ என்ற போதனைகளை அளிக்கின்றார்.

இது நடைபெற்று மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், மகாவம்சத்தின்படி, புத்தர் மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்கின்றார். கல்யாணி என்ற தேசத்தின், நாக மன்னனின் வேண்டுதலை ஏற்று அங்கே செல்வதோடு, பல இடங்களுக்கும் சென்று, அந்த இடங்களை ஆசிர்வதித்துத் திரும்புகின்றார்.

இந்தச் செய்திகளில் மறைந்துள்ள சில உண்மைகளை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இலங்கையின் ஆதிக்குடிவாசிகளாக இயக்கர்களும், நாகர்களும் உள்ளார்கள். மகாவம்சத்தின்படி, இயக்கர்களை அகற்றியது போல், புத்தரால் நாகர்களை அகற்ற முடியவில்லை. நாக வழிபாடும், ‘நாக’ என்ற சொல் வரும் பெயர்களும், (எ.கா - நாகநாதன், நாகலிங்கம், நாகமுத்து, நாகபூசணி), மற்றும் இலங்கையின் வடபெரும் பகுதி நாகதீபம் என அழைக்கப்பட்டதும், பல வரலாற்று உண்மைகளை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றன.

மகாவம்சத்தின் இரண்டாவது அத்தியாயம், புத்தரின் மூதாதைகள் குறித்தும், மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது அத்தியாயங்கள் புத்த மத மகாநாடுகள் குறித்தும், ஆறாவது அத்தியாயம் விஜயனின் கதை குறித்தும், ஏழாவது அத்தியாயம் இலங்கைத்தீவில் விஜயன் கரை இறங்குவது குறித்தும் விபரிக்கின்றன. மிகுதி அத்தியாயங்கள் யாவும், சிங்கள மன்னர்கள் பற்றியும், அவர்களது ஆட்சி முறைகள் பற்றியும், தமிழ் மன்னர்களுக்கும் சிங்கள மன்னர்களுக்கும் இடையில் ஏற்பட்ட போர்கள் குறித்தும் விபரிக்கின்றன.

இப்போது மேற்கூறிய மகாவம்ச அத்தியாயங்கள் குறித்துத் தொகுப்பாக அதேவேளை சுருக்கமாகச் சில தகவல்களைத் தரவிழைகின்றோம்.

விஜயனின் கதை என்பது ஒரு கட்டுக்கதையாகவும், நாடோடிக் கதைகளின் திரிபாகவும் உள்ளது என்பதை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். விஜயனின் முதல் மனைவியான குவேனி பற்றிய குறிப்புக்கள் எதுவும், மகாவம்சத்திற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாடப்பட்ட தீபவம்சத்தில் இல்லை. தவிரவும், பின்னாளில் அரசகுலப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து மணப்பதற்காக, மதுரையில் அரசாண்ட பாண்டிய மன்னனின் மகளையும், பாண்டிய மன்னனின் அரசப் பிரதானிகளின் பெண் மக்களான எழுநூறு பேரையும் தேர்ந்தெடுத்து, விஜயனும் அவனது எழுநூறு தோழர்களும் (அல்லது அவ்வேளையில் இருந்த அரசனும் அவனது நண்பர்களும் என்றும் கொள்ளலாம்) மணம் புரிந்தார்கள் என்று மகாவம்சம் சொல்கின்றது.

இது வேறு ஒரு சிக்கலையும் உருவாக்குகின்றது.

விஜயனும் அவனது தோழர்களும் மணந்த பெண்கள், பாண்டிய மகளிர்கள் என்பதனால், சிங்கள இரத்தத்துடன் பாண்டிய நாட்டுத் திராவிட இரத்தமும் சேர்ந்து, சிங்கள வம்சம் ஒரு கலப்பு வம்சமாக உருவாகி விட்டது என்ற தர்க்கமும் எழுகிறது அல்லவா? இதனைத் தாங்க முடியாத சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் சிலர், பாண்டிய மதுரையை, ‘பாண்டு மதுராவாக்கி’, மகாபாரத பாண்டவர் குலத்தில் தொடர்பு தேடி வருகின்றார்கள். ஆனால் மகாவம்சத்தின் கெய்கரின் மொழி பெயர்ப்பிலும், முதலியார் விஜயசிங்கவின் மீளாய்விலும் ‘தெற்கேயுள்ள மதுரை’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாவம்சம் குறிப்பிடுகின்ற மற்றைய முக்கிய அம்சங்களில், காமினி அபயன் என்கின்ற துட்ட காமினியும், எல்லாளன் என்கின்ற தமிழ் மன்னனும் அடங்குவர். துட்ட காமினியைத் தனது பாட்டுடைத் தலைவனாகத்தான் மகாவம்சம் விபரிக்கின்றது. அவனது வரலாற்றை விபரிக்கும்போது, இரண்டு அம்சங்களை மகாவம்சம் வலியுறுத்துகின்றது. ஒன்று தமிழர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள். மற்றது பௌத்த மதத்திற்கு அவன் ஆற்றிய சேவை.

துட்ட காமினி எல்லாளனுக்கு எதிரான யுத்தத்திற்கு, புத்த மதத்தை முன்வைத்தான். ‘நான் அரச போகங்களுக்காக இந்த யுத்தத்தில் இறங்கவில்லை. பௌத்த சாசனத்தின் உன்னதத்திற்காகவே போர் தொடுக்கின்றேன்’ என்று அந்தக் காலத்திலேயே மிகக் கவர்ச்சிகரமான கோசத்தைத் துட்ட காமினி முன் வைத்தான்.

கிறிஸ்துவுக்கு முன்னர் 145ம் ஆண்டு தொடக்கம் கிறிஸ்துவுக்கு முன்னர் 101ம் ஆண்டு வரையிலான 44 ஆண்டுகள், தமிழ் மன்னனான எல்லாளன் ஆட்சி செய்த காலமாகும். எல்லாளனைச் சோழ இளவரசனாகவும், தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்தவனுமாகவும், பாளி இலக்கியங்கள் கூறுவதில் உண்மையில்லை. இப்படியொரு சோழன் இந்தியாவில் இருந்ததாக, தமிழ் நாட்டு வரலாற்றில் எந்த ஆதாரமுமில்லை. எல்லாளன் என்பவன் இலங்கையைச் சேர்ந்த தமிழ் மன்னனேயாவான். அவனது நீதி தவறாத ஆட்சி குறித்துப் பல இடங்களில் மகாவம்சமும் கூறுகின்றது. இளைஞனான துட்டகாமினியுடன், 72 ஆண்டுகள் நிரம்பிய எல்லாளன் தனிச் சமர் செய்து இறந்ததன் காரணமாக எல்லாளனின் தோல்வி, தமிழீழ மக்களின் தோல்வியாயிற்று என்று திருச்செல்வம் குறிப்பிடுவார்.

மகாவம்சத்தின் ஊடாக மேலும் சில விடயங்கள் தெரிய வருகின்றன. அனுராதபுர சிம்மாசனத்தில் அமர்ந்து சிங்களவரும், தமிழரும் மாறி மாறி இலங்கையை ஆட்சி புரிந்துள்ளார்கள். மகாவம்சத்தின்படி, இந்த நாட்டைத் தமிழ் மன்னர்களும், சிங்கள மன்னர்களும் மாறி மாறி ஆளும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். இயக்கர்கள், ஆரியர்கள், தமிழர்கள் என்போரின் கலப்பு மக்களாகச் சிங்கள மக்கள் உள்ளார்கள்.

எல்லாள தமிழ் மன்னன் இறந்த 57 ஆண்டுகளுக்குப் பின்னர், அனுராதபுரத்தை ஐந்து தமிழ் மன்னர்கள் ஆண்டுள்ளார்கள். மகாவம்சத்தின்படி, சிங்கள மன்னர்களால் பல சைவக்கோவில்களும், சைவச் சின்னங்களும் அழிக்கப்பட்டு, அவ்விடங்களில் பௌத்த தூபிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்னரேயே அங்கே ஆதிக்குடிகளான இயக்கர், நாகர் என்போர் வாழ்ந்து வந்துள்ளார்கள். இவை மகாவம்சம் தந்துள்ள செய்திகளாகும்.

மகாவம்சம் தருகின்ற - மறைமுகமாகத் தருகின்ற - மற்றைய முக்கியமான செய்தி, இலங்கைத் தீவு சிங்கள மக்களது மட்டுமல்ல, தமிழ் மக்களது பாரம்பரிய பூமியும் கூட என்பதுதான்.

கருணையே வடிவான புத்தனை, சமநீதிக்காகப் போராடிய புத்தனை, மொழிக் கொள்கையில் தெளிவான புத்தனை, ஆரியர்களை எதிர்த்துத் திராவிடர்களுக்காக குரல் கொடுத்த புத்தனை, ஒரு புரட்சிக்கார புத்தனை, மகாவம்சமும், இன்றைய சிங்கள சிறிலங்கா அரசுகளும், பௌத்த மட பீடங்களும், பிக்குகளும் எவ்வளவு திரிபுபடுத்தியுள்ளனர் என்பதை நேரம் கருதி இயன்ற அளவில் ஒரு வரைமுறைக்குள் வைத்துச் சுட்டிக் காட்ட முனைந்தோம்.

“சிங்களதேசம் இன்னும் மகாவம்ச மனவுலகில் அந்தப் புராணக் கருத்துலகில் புதைந்து போய்க் கிடக்கின்றது. இலங்கைத்தீவானது, தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும், சிங்கள இனத்திற்கே உரித்தான சொத்துடமை என்றும் மகாவம்சம் திரித்து விட்ட புனைகதையில் சிங்கள மக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கின்றார்கள்.” தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர்தின உரை- 2005
 


கலாநிதி க.குணராசா அவர்களுக்கும், சம்பந்தப்பட்ட உசாத்துணை நூல்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

Mail Usup- truth is a pathless land -Home