தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > இயற்கையின் சீற்றமும், செயற்கையின் சீற்றமும்

Selected Writings by Sanmugam Sabesan

இயற்கையின் சீற்றமும், செயற்கையின் சீற்றமும்

8 May 2007

"..சிறிலங்கா அரசு மீது சில அழுத்தங்களை மேற் கொள்ளுகின்ற மேற்குலகம், அதே வேளை, விடுதலையைக் கோரி நிற்கின்ற தமிழர் தரப்புமீதும் சில அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது. .. சிங்கள அரசும் தமிழீழ விடுதலைப்புலிகளும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை உலக நாடுகள் தொடர்ந்தும் வலியுறுத்தியே வருகின்றன. சிங்களவர்கள் விடுதலைப்புலிகளோடு பேசுவதில் தடை இல்லையென்றால், தமிழர்கள் விடுதலைப் புலிகளோடு பேசுவதில் என்ன தவறு இருக்க முடியும்? "


இலங்கைத்தீவைப் பொறுத்தவரையில், அண்மைக்காலத்தில், மேற்குலகம் சில அதிரடிச் செயற்பாடுகளை மேற் கொண்டு வருவதை நாம் அவதானிக்க முடிகின்றது.

 

சிறிலங்கா அரசு மீது சில அழுத்தங்களை மேற் கொள்ளுகின்ற மேற்குலகம், அதே வேளை, விடுதலையைக் கோரி நிற்கின்ற தமிழர் தரப்புமீதும் சில அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது.

 

உள்நாட்டுப் பிரச்சனை என்று முன்னர் வர்ணிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று உலக மயமாக்கப்பட்டு விட்ட இவ் வேளையில், சில கருத்துக்களை முன் வைத்துத் தர்க்கிப்பது அவசியமானது என்று நாம் கருதுகின்றோம்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில், தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனைக்குச் சார்பாக விவாதங்கள் நடைபெறுவதும், சிறிலங்காவிற்கான நிதி உதவியைப் பிரித்தானிய அரசு முடக்கி வைப்பதும், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்கு, பிரித்தானியாவின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் செல்லத் திட்டமிடுவதும், சிறிலங்கா அரசிற்கு கடுமையான ஒரு செய்தியுடன் அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் செல்லவிருப்பதும் இன்றைய பரபரப்புச் செய்திகளாக உள்ளன.

அதேபோல், ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்துள்ள சில நாடுகளில் வாழுகின்ற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் மீதும், மேற்குலகம் பல்வகையான அழுத்தங்களை மேற்கொண்டு வருவதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய சிறிலங்கா அரசிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையே மேற்குலகத்தின் அனுசரணையோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டு அது நடைமுறைக்கு வந்தது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இயல்பு நிலை ஒன்றை உருவாக்கி, அதனூடே சமாதானப் பேச்சு வார்த்தைகளை நடாத்தி, அதன் மூலம் இனத்துவ முரண்பாட்டிற்குத் தீர்வு ஒன்றை காண்பதுவே இவற்றின் அடிப்படை நோக்கமாக இருந்தது.

எனினும் சிங்கள பௌத்தப் பேரினவாத அரசுகளின் அராஜக செயற்பாடுகள் மற்றும் சமாதான விரோத நடவடிக்கைகள் காரணமாக, மேற்குலகின் இந்தச் சமாதான முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இந்த ஐந்து ஆண்டுக்கால நிகழ்வுகளை விபரிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல! மாறாக, குறிப்பிட்ட இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டி, அதனூடே தற்கால நிகழ்வுகளைத் தர்க்கிக்க விழைகின்றோம்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர், நடைபெற்ற நிகழ்வுகளில், இரண்டு நிகழ்வுகளை மிக முக்கியமானதாக நாம் கருதுகின்றோம். ஐம்பது ஆண்டு காலப் போர் கொண்டு வந்த அனர்த்தங்களைக் களைவதற்காக, தமிழீழ விடுதலைப் புலிகளால் ,உருவாக்கப்பட்ட இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை (ISGA) வரைவு அதில் ஒன்றாகும். மற்றது, ஆயிரம் ஆண்டு காலமும் கண்டிராத அழிவைக் கொண்டு வந்த சுனாமிக் கடற்கோளினால், ஏற்பட்ட பேரழிவுகளை எதிர் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட, பொதுக்கட்டமைப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தமாகும்!(P-TOMS)

தமது விடுதலைப் போராட்ட வரலாற்றில், தமிழீழ விடுதலைப்புலிகள் முதல் முறையாக, சிறிலங்காவின் பேரினவாத அரசிற்கு அளித்த இடைக்கால அதிகாரத் திட்டத்தை, சிறிலங்காவின் பேரினவாதம்
ஏற்றுக் கொள்ளவில்லை. உலகத்தின் பல அறிவு ஜீவிகளின் பங்களிப்போடு, மிகக் கவனத்தோடு, சிரத்தையோடு தயாரிக்கப்பட்ட அந்த வரைவை, சிங்கள அதிகாரம் கிடப்பில் போட்டது. இதனால் சமாதாப் பேச்சு வார்த்தை மேலும் தள்ளாட்டம் கண்டது.

உலகமே எதிர் பார்த்திராத வகையில் சுனாமி ஆழிப்பேரலை கொண்டு வந்த அனர்த்தங்களை எதிர் கொள்வதற்காக, கடல் கோள் நிவாரணப் பொதுக்கட்டமைப்புப் புரிந்துணர்வு உடன் படிக்கை ஒன்று உருவாக்கப் பட்டது. இந்த உடன்படிக்கையில் சிறிலங்கா அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் சமதரப்பினராகக் கைச் சாத்திட்டனர்.

அதாவது சுனாமிக் கடற்கோள் நிவாரணத்திற்காக உலக நாடுகள் வழங்கவுள்ள உதவி நிதியை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் சிறிலங்கா அரசும் எவ்வாறு பயன்படுத்தப் போகின்றன, என்பதை வரையறுக்கும் ஒப்பந்தம்தான் பொதுக்கட்டமைப்பு ஒப்பந்தமாகும்.!

உலகநாடுகளின் அனுசரணையுடன், சிறிலங்கா அரசின் ஒப்புதலுடன் கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் தமிழீழ விடுதலைப்புலிகள் சுனாமி நிதியை நிவாரணப் பணிக்காகப் பயன்படுத்துவதை ஏற்றுக் கொண்டு உறுதிப்படுத்துகின்றது.

உலக நாடுகளும்,  விடுதலைப் புலிகளும்,  சிறிலங்கா அரசும் ஏற்றுக் கொண்ட இந்த சுனாமி நிவாரண ஒப்பந்தத்திற்குச் சிறிலங்காவின் தலைமை நீதி மன்றம் ஓர் இடைக்காலத் தடையை விதித்து தமிழ் மக்கள் மீது இரண்டாவது சுனாமியாகப் பாய்ந்தது.

அவ்வேளையில், அதாவது பொதுக்கட்டமைப்பு உருவாகுவதற்கு முன்னரும், அது உருவாகியபோதும், பின்னர் தடை செய்யப்பட்ட போதும் நாம் மூன்று கட்டுரைகளை எழுதியிருந்தோம். அவற்றின் சில பகுதிகளை நாம் இப்போது தருவதானது, தற்போதைய சிக்கல்களை விளக்க உதவக் கூடும்.

சுனாமி நிதி குறித்த பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னரேயே அதாவது 16.05.2005 அன்று நாம் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி வருமாறு-

எம்முடைய கவலையெல்லாம் பொதுக்கட்டமைப்பு உருவாகுமா இல்லையா என்பது அல்ல!  அப்படி ஒரு பொதுக்கட்டமைப்பு உருவாகினால், அந்தக் கட்டமைப்பு, உரியமுறையில் தக்க வகையில் செயற்படுத்தப்படுமா? என்பதுதான் எம்முடைய கேள்வி!..

 

எனவே தமது மக்களின் வாழ்வியல் பிரச்சனைக்கான தீர்வு குறித்தும், தேசியப் பிரச்சனைக்கான தீர்வு குறித்தும் தகுந்த முடிவுகளை எடுக்க வேண்டிய தார்மீகக் கடமை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு உண்டு...

- - -என்று நாம் பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கு முதல்- 16.05.2005 அன்று எழுதியிருந்தோம்.  பின்னர் பொதுக்கட்டமைப்பு ஒப்பந்தம் 24.06.2005 அன்று கைச்சாத்திடப் பட்டது. அப்போது 27.06.2005 அன்று நாம் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம்.-

 

“பாதிப்புற்ற அனைத்து மக்களுக்கும் தேவையான, அவசர மனிதாபிமான உதவிகளைச் செய்து, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள கரையோரச் சமுதாயங்களுக்குத் துரிதமான நிவாரணத்தையும், புனர்வாழ்வையும், புனரமைப்பையும், அபிவிருத்தியையும் வழங்குவதற்கும், அத்துடன் பாதிக்கப்பட்ட இடப்பரப்புகளை மீளக்கட்டியெழுப்பும் நடைமுறைக்கு வசதியளிப்பதற்கும், அதனைத் துரிதப்படுத்துவதற்குமென, இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப்புலிகளும் நல்லெண்ணத்துடனும் அவற்றின் முனைப்பான முயற்சிகளைப் பயன்படுத்தியும் ஒருமித்துச் செயலாற்றத் தீர்மானித்தும் இப்பொதுக்கட்டமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டுள்ளன.”-

- என்று இந்தக்கடற்கோள் நிவாரணப் பொதுக்கட்டமைப்புப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் முகவுரை கூறுகின்றது.- - - -- - - - - - - - - - - - - -

- (ஆனால்)

தமிழீழ விடுதலைப்புலிகள், தமது இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்குரிய வரைபை ரணில் விக்கிரமசிங்கவின் அன்றைய அரசிடம் கையளித்த உடனேயே ரணில் அரசிலிருந்த மூன்று முக்கிய அமைச்சர்களை அம்மையார் கையகப்படுத்தியிருந்தார்.- - - - - - இப்போது சுனாமிப் பேரழிவு நடந்து ஆறு மாதங்களுக்குப் பின்னர், எத்தனையோ இழுத்தடிப்புக்களுக்குப் பின்னர், இழுபறிகளுக்குப் பின்னர் சர்வதேச அழுத்தம் காரணமாக பொதுக்கட்டமைப்பினை உருவாக்க வேண்டிய கட்டாயத்தின் பெயரில் சந்திரிக்கா அம்மையார் இறங்கி வந்திருக்கின்றார்.!

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் நாள் எப்போது?(ஏனென்றால்) ----- காலத்தைச் செயல்பாடு ஏதுமின்றி இழுத்தடிக்கும் கைங்காரியத்தில் அம்மையார் கை தேர்ந்தவர்.- - - - - இந்தப் பொதுக்கட்டமைப்பினை முறையாக அமல்படுத்துவதற்கு அம்மையாரின் அரசிற்கு வலு இருக்கிறதா? வலு இல்லாவிட்டாலும் விருப்பமாவது இருக்கின்றதா? என்ற கேள்வியும் பெரிதாக எழுவதை எம்மால் தவிர்க்க முடியவில்லை.”

- என்று இவ்வாறு பொதுக்கட்டமைப்புக் கைச் சாத்திடப்பட்டபோது (27.06.2005) அன்று நாம் கருத்து வெளியிட்டிருந்தோம்.

நாம் அச்சப்பட்டது போன்றே, பொதுக்கட்டமைப்பு அமல் படுத்தப்படாமல் போனது. சரியாக மூன்று வாரங்களுக்குப் பின்னர் அதாவது 15.07.2005 அன்று சிறிலங்காவின் தலைமை நீதிமன்றம் பொதுக்கட்மைப்பிற்கு ஓர் இடைக்காலத் தடையை விதித்தது.

இது குறித்து நாம் 18.07.2005 அன்று கீழ் வருமாறு கருத்து வெளியிட்டிருந்தோம்-

 

“தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளை, இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்குள் வைத்துக்கொண்டே அவர்கள்மீது வலிந்து ஒரு யுத்தத்தை திணிப்பதுதான் (அரசின்) நோக்கமுமாகும்.- - - - -- இன்று இலங்கைத்தீவின் யதார்த்த நிலையைச் சம்பந்தப்பட்ட உலக நாடுகள் நன்கு அறியும். சிங்கள பௌத்தப் பேரினவாத அரசுகள் தொடர்ந்தும் தமிழீழ மக்களுக்குப் புரிந்து வருகின்ற அநீதி குறித்தும் இந்த உலக நாடுகள் நன்கு அறியும்.

 

 சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஊடாக, நியாயமான-நிரந்தரமான-தீர்வு கிட்ட வேண்டும் என்று உலகநாடுகள் விரும்புவதில் தப்பில்லை. ஆனால் சமாதானத்தின் பெயரால் ஓர் இனமக்கள் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டு. அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டு வருவது நீதியாகாது. உண்மை தெரிந்தும், உறங்குவது போல் பாவனை செய்வதும் நீத்pயாகாது. சிறிலங்காவின் நீதித்துறையின் தரத்திற்கு சம்பந்தப்பட்ட உலக நாடுகளும் கீழிறங்கி விடலாகாது என்பதே எமது கேண்டுகோளுமாகும்!”

 

-இவ்வாறு நாம் 18.17.2005 அன்று கருத்து தெரிவித்திருந்தோம்.

 

ஆழிப்பேரலை குறித்தும், பொதுக்கட்டமைப்புக் குறித்தும் நாம் 2005ம் ஆண்டு எழுதியவற்றை, மீண்டும் இங்கே குறிப்பிடுவதற்கு தகுந்த காரணங்கள் உண்டு.

ஆழிப்பேரலை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்காக உலகநாடுகள் வழங்கவிருந்த நிதியை விடுதலைப்புலிகளுக்கு வழங்குவதற்குச் சர்வதேசமும், சிறிலங்காவும் ஒப்பந்தம் ஒன்றினூடாக ஏற்றுக் கொண்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கும், இவற்றைத் தடுப்பதற்குச் சிங்களப் பேரினவாதம் முயற்சிகள் எடுக்கும் என்ற யதார்த்தத்தைச் சர்வதேசம் உணர்ந்திட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு முன்னரேயே எம்மிடம் இருந்தது என்பதைப் புரிய வைப்பதற்காகவும், இவற்றை மீண்டும் குறிப்பிட்டோம்.

இங்கே இன்னுமொரு மிக முக்கியமான விடயத்தையும் நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம்.

சுனாமிக் கடற்கோள் தமிழீழப் பகுதிகளைத் தாக்கிய சில வினாடிப் பொழுதுக்குள்ளேயே, மிகச் சிறப்பான முறையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தமது மக்களைக் காப்பாற்றும் பணிகளிலும், அவர்களுக்கான நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டார்கள். சுனாமிக்கடற்கோள் தந்த பேரழிவுகளின் செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்ற அதேவேளையில்,
தமிழீழ விடுதலைப்புலிகளின் மிகச் சிறப்பான பணிகளைப் பற்றிச் சர்வதேச ஊடகங்கள், செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருந்தன. எவ்வாறு மிகக் கட்டுக்கோப்பான முறையில் மிகப் பொறுப்பான விதத்தில் மிகச் சீரிய வகையில் தமிழீழ விடுதலைப்புலிகள் பணியாற்றினார்கள் என்பதை அன்றைய தினங்களில் உலகநாடுகள் அறிந்து கொண்டன. இது அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் நன்கு தெரியும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் சொல்லுக்கு முன்னர் செயலை வைப்பவர்கள் என்ற உண்மையை உலகம் அன்று புரிந்துகொண்டது. அதன் காரணமாகத்தான் உலகநாடு தந்த நிதி உதவியை தமிழீழ விடுதலைப்புலிகள் ஊடாக பயன்படுத்துகின்ற யோசனையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் அடிப்டையில்தான் உத்தியோக பூர்வமாக, சட்டரீதியாகத் தமிழீழ விடுதலைப்புலிகளும் சிறிலங்கா அரசும் பொதுக்கட்டமைப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். ஆனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைத்து விடக்கூடாது என்ற அநீதியான நோக்கத்தில் சிறிலங்காவின் தலைமை நீதிமன்றம் பொதுக்கட்மைப்புக்கு ஒர் இடைக்காலத் தடையை விதித்தது.

இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான துன்பமான வேளையில் எமது மக்களுக்கு உதவுவதற்கு வேறு யார்தான் உள்ளார்கள்.?

அவ்வேளையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் புரிந்திட்ட மகத்தான பணிகள் குறித்தும் நாம் அவசியம் குறிப்பிட்டேயாக வேண்டும். கடற்கோள் அனர்த்தக் காலத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மட்டும் உதவி செய்வதோடு நின்று விடவில்லை. கிழக்கில் பாதிக்கப்பட்டிருந்த சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அது பெரும்பணி புரிந்தது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இந்த உயரிய பணிகளைப் பாராட்டி சிறிலங்காவின் அன்றைய அரச அதிபர் சந்திரிக்கா அம்மையாரே விருது அளித்துக் கௌரவித்தமையை எமது மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.’

ஆனால் பின்னாளில் இந்தப் புனர்வாழ்வுக் கழகத்தின் தொண்டர்களை அரச பயங்கரவாதம் கொலை செய்ததையும், கழகத்தின் வங்கிக் கணக்குகளைச் சிறிலங்கா அரசு முடக்கி வைத்ததையும் நாம் யாருக்குச் சொல்லி முறையிடுவது.?

சுனாமிக் கடற்கோள் அவலத்தின் பின்னர் இங்கேயுள்ள நல்மனம் கொண்ட அவுஸ்திரேலியர்கள் கொள்கலன்களில் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களையும் சிறிலங்கா அரசு தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாது அவற்றிற்குச் சுங்க வரியையும் விதித்தது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் செயற்படுகின்ற நிர்வாக முறையின் யதார்த்தம் என்ன? அங்கே அரச சார்பற்ற நிறுவனங்களும் சிறிலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் இசைந்துதான் செயற்பாடுகள் நடைபெறுகின்றன.

சகல வெளிநாடுகளும் சில விடயத்தைப் பல ஆண்டுகளாகக் கூறி வருகின்றன. சிங்கள அரசும் தமிழீழ விடுதலைப்புலிகளும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை உலக நாடுகள் தொடர்ந்தும் வலியுறுத்தியே வருகின்றன.

சிங்களவர்கள் விடுதலைப்புலிகளோடு பேசுவதில் தடை இல்லையென்றால் ,
தமிழர்கள் விடுதலைப் புலிகளோடு பேசுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

சுனாமிக்கு என்று உலகநாடுகள் கொடுத்த நிதி உதவி விடுதலைப் புலிகளுக்குக் கொடுக்கப்படவில்லை. ஆனால் மற்றைய உலகநாடுகள் செய்திராத பணியை மற்றைய அரச சார்பற்ற நிறுவனங்கள் செய்திடாத சேவையை தமிழீழ விடுதலைப்புலிகள் செய்திருக்கின்றார்கள். செய்து காட்டியிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு உதவுவதற்கு உலக நாடுகள் முன்வரவில்லை. ஆனால் உலகமே பாராட்டுகின்ற வகையில் தமிழீழ விடுதலைப்புலிகள் சுனாமிக் கடற்கோளின் போது பணியாற்றியிருக்கின்றார்கள்.

கொடுபடாத நிதியைக் கொடுக்கப்பட்டு விட்டது என்று குற்றம் சாட்டுவதை விட அதை முறையாகக் கொடுக்கப்பட வேண்டிய தேவையை உணர்ந்து உலகம் செயற்பட வேண்டும். சிறிலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் இசைந்து உத்தியோக பூர்வமாகக் கையெழுத்திட்ட அந்த பொதுக்கட் டமைப்புக் காகித்தின் உண்மையான பெறுமதி என்ன?

இயற்கையின் சீற்றமா, செயற்கையின் சீற்றமா கொடியது?

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சில மேற்குலக நாடுகள் சிறிலங்கா அரசின் மீது மேற் கொள்ள ஆரம்பித்துள்ள சில அழுத்தங்கள் குறித்துக் குறிப்பிட்டிருந்தோம். உலக நாடுகள் சிறிலங்கா மீது கொடுக்கின்ற அத்தகைய அழுத்தங்கள் தமது தன்நலம் சார்ந்தே இருக்கும் என்பதையும்,
அவற்றின் மீது தேவையற்ற நம்பிக்கைகளை நாம் கொள்ளக் கூடாது என்பதையும் விளக்குகின்ற தர்க்கங்களை நாம் அடுத்த வாரம் முன்வைப்போம். 

Mail Usup- truth is a pathless land -Home