தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > ஆழப்பதிந்த ஆடி மாதங்கள்

Selected Writings by Sanmugam Sabesan

ஆழப்பதிந்த ஆடி மாதங்கள்
19 July 2004

இவ் ஆய்வு 19.07.04 அன்று அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில்
தமிழ்க்குரல் வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது

" தமிழர்களின் வேதனைக் காலங்களின் சிகரமான கறுப்பு யூலை மறக்கவோ மன்னிக்கவோ முடியாத சம்பவங்கள் நிறைந்த யூலை மாதங்கள். அந்த மாதங்களை மனதில் தாங்கும் மாந்தர்கள் நாங்கள். வரப்போகும் காலமெல்லாம் எம் நெஞ்சங்களில் அத் தாக்கம் என்றும் இருக்கும்."


யூலை மாதத்தின் இறுதி வாரத்தில் மீண்டும் எமது நேயர்களைச் சந்திக்கின்ற இவ்வேளையில் இவ்வளவு காலமும் யூலை மாதங்களில் நிகழ்ந்த நிகழ்வுகள் பல எமது நினைவுகளில் நிழலாடுகின்றன. 1983ம் ஆண்டில். இந்த யூலை மாத இறுதியில் தான் அன்றைய சிறிலங்கா அரசு தயாரித்து வழங்கிய தமிழினப் படுகொலைகள் அரங்கேறின. 21 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற படுபாதகச் செயல்கள் மூலம் உலகநாடுகள் முன்பு சிறிலங்கா அரசு தலை குனிந்து நின்றது. அன்று உயிர் துறந்த, உடமை துறந்த அப்பாவித் தமிழர்களை இன்று உளம் கலங்க எண்ணிப் பார்க்கிறோம்.

அது மட்டுமல்ல... 29ம்திகதி யூலை மாதத்தில் தான் பின்னாளில் வேறு ஒரு காரியமும் நடந்தேறியது. 17 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1987ம் ஆண்டு யூலை மாதம் 29ம் திகதி அன்றுதான் சிறிலங்காவின் அன்றைய ஜனாதிபதி ஜெயவர்த்தனாவும், அன்றைய இந்தியாவின் பிரதமரான ராஜீவ் காந்தியும் ஈழத் தமிழர்களின் தலைவிதியை தாமே நிர்ணயிக்கும் பொருட்டு இலங்கை-இந்திய ஒப்பந்தம் என்ற ஏதோ ஒன்றில் கையெழுத்திட்டார்கள்.

அன்று கையெழுத்துப் போட்டவர்களின் தலையெழுத்தை விதி மாற்றி எழுதியதால் அவர்கள் இப்பொழுது நம்மிடையே இல்லை என்றாலும் அன்று அவசரத்தில் அள்ளித் தெளித்த அலங்கோலத்தின் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா கூறியது இவ்வேளையில் எமது ஞாபகத்திற்கு வருகின்றது. 'நாம் பிரபாகரனிடம் சரணாகதி அடைவதை தவிர்க்கவே இந்த ஒப்பந்தத்தை உருவாக்கினோம்.

 பிரபாகரனின் வாளை எனது கட்சி அலுவலகத்தில் நான் தொங்க விடப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை" பாவம் வாளை தொங்க விடப்போவதாகச் சொன்னவர்தான் வாழாமல் வெகுதூரம் சென்று விட்டார். ஆனால் ஜே.ஆர் உம் இந்திய அமைதி காக்கும் படையும் அன்று இட்ட தீயினால் ஆயிரக்கணக்கில் இறந்து போன அப்பாவித் தமிழ் பொது மக்களையும் கோடிக் கணக்கான பொதுச் சொத்து சேதங்களையும் இந்த நேரத்தில் நினைக்கிறோம்.

தர்மத்தினை சூது வந்து கவ்விய போதும் காலத்தின் தவப்பலனான தமிழர்களின் தேசியத் தலைவனால் தமிழீழம் பின்னர்; விடிவெள்ளியைக் கண்டது. 17 ஆண்டுகளுக்கு பின்னர் விடிவெள்ளியை மட்டுமல்ல விடியலின் பூபாளத்தையும் தேசம் தேடி நிற்கின்றது.

அன்றிலிருந்து இன்றுவரை யூலை மாதங்களில் நடைபெற்ற சம்பவங்கள் பலவற்றை இப்போது நேயர்களின் நினைவுக்கு கொண்டுவர விரும்புகிறோம்.

1957ம் ஆண்டு யூலை

27ம் திகதி அன்று பண்டாரநாயக்கா-செல்வநாயகம் ஒப்பந்தம் கையெழுத்தாகியது

1975ம் ஆண்டு யூலை

27ம் திகதி அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்ட தினமாகும்.

1977ம் ஆண்டு யூலை

21ம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழீழ மக்கள் தமக்கு தமிழீழமே வேண்டும் என்று ஆணை கொடுக்கிறார்கள்.

அதே வருடம் அதே மாதம் சிங்கள காடையர்கள் தமிழர்களை நூற்றுக்கணக்கில் கொன்று குவித்தார்கள்.

1979ம் ஆண்டு யூலை

20ம் திகதி அன்று Prevention of Terrorism Act - PTA  என்று அழைக்கப்படுகின்ற பயங்கரவாதத் தடைச் சட்டம் தமிழர்களை கருத்திற் கொண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

1983ம்ஆண்டு யூலை

23ம் திகதி அன்று விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 13 இராணுவத்தினர் மரணம் அடைந்தனர்.

24ம் திகதி சிறிலங்கா அரசின் திட்டமிடப்பட்ட தமிழினப் படுகொலைகள் ஆரம்பமாகின.

25ம் திகதி 35 தமிழ் கைதிகள் வெலிக்கடைச் சிறைச்சாலையில், சிங்களக் குண்டர்களால் கொலை செய்யப்பட்டார்கள்.

27ம் திகதி மேலும் 19 தமிழ் கைதிகள் அதே சிறைச்சாலையில் சிங்களக் காடையர்களால் கொலை செய்யப்பட்டார்கள்.

1985ம் ஆண்டு யூலை

8ம் திகதி திம்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.

1987ம் ஆண்டு யூலை

5ம் திகதி தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் திருப்புமுனையாக கரும்புலியாக கப்டன் மில்லர் அவர்கள் சரித்திரம் படைத்த தினமாகும்.

17ம் திகதி சிறிலங்கா ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாவும் அவரது அமைச்சர்களும், இந்திய தூதுவருடன் பேச்சு வார்த்தைகள் ஆரம்பித்த தினமாகும்.

19ம் திகதி இந்திய ராஜதந்திரிகள் தமிழீழத் தேசியத் தலைவருடன் பேச்சு வார்த்தைகளை நடாத்திய தினமாகும்.

27ம் திகதி டிக்ஸிற் இந்தியாவிலிருந்து கொழும்புக்கு வந்து ஜெயவர்த்தனாவுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்திய தினமாகும்.

29ம் திகதி சிறிலங்காவும் இந்தியாவும் உத்தியோகபூர்வமாக, அபகீர்த்தியான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தினமாகும்.

1991ம் ஆண்டு யூலை

10ம் திகதி வரலாற்றுச் சிறப்பு மிக்க மரபு வழிப் போர் ஒன்றை ஆணையிறவில் விடுதலைப்புலிகள் ஆரம்பித்த தினமாகும்.

1993ம் ஆண்டு யூலை

25ம் திகதி மண்கிண்டி இராணுவ முகாம் தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்ட தினமாகும்.

1995ம் ஆண்டு யூலை

9ம் திகதி சிறிலங்கா விமானப்படையினால் மேற்கொள்ளப்பட்ட மிருகத்தமான குண்டுத் தாக்குதலால். நவாலித் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ்;ப் பொதுமக்கள் தாயார் குழந்தைகள் முதியோர் உட்பட 141 உயிர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட தினமாகும். தேவாலயமும் படு சேதம் அடைந்தது.

14ம் திகதி யாழ் குடாநாட்டைக் கைப்பற்றுவதற்கு முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தின் மீது விடுதலைப் புலிகள் நடாத்திய புலிப்பாய்ச்சல் சமர் நடந்த தினமாகும்.

1999ம் ஆண்டு யூலை

18ம் திகதி வரலாற்றுப் புகழ் மிக்க ஓயாத அலைகள்-01 இராணுவ நடவடிக்கையை தமிழீழ விடுதலைப்புலிகள் ஆரம்பித்த தினமாகும். இந்தச் சமரினால் முல்லைத்தீவு மாவட்டம் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது.

2001ம் ஆண்டு யூலை

24ம் திகதி முழு உலகையும் பரபரப்பிலும் வியப்பிலும் ஆழ்த்தியது கட்டுநாயக்கா விமானத்தளம் மீதான தாக்குதல் நடைபெற்ற தினமாகும். அன்றைய தினம் 28 வான் கலங்கள் அழிக்கப்பட்டன.

அன்பு நேயர்களே! யூலை மாதங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் மறக்க முடியாத அத்தியாயங்களாக என்றென்றும் நிலைத்து இருக்கும்.

எத்தனை வேதனைகள்? எத்தனை சோதனைகள்? எதிர்பாராத இடங்களில் இருந்ததெல்லாம் எவ்வளவோ இடர்;ப்பாடுகள் தமிழீழ மக்களும் அவர்களைக் காக்கும் மறவர்களும் கடந்திட்ட நெருப்பாற்றின் கொடுமையை யார் தான் சொற்களினால் விளக்கிட இயலும்? இவர்களின் நெடுங்காலத் தியாகத்தினால் விளைந்த அறுவடைக் கால நேரமிது அல்லவா?

தமிழர்களின் வேதனைக் காலங்களின் சிகரமான கறுப்பு யூலை மறக்கவோ மன்னிக்கவோ முடியாத சம்பவங்கள் நிறைந்த யூலை மாதங்கள். அந்த மாதங்களை மனதில் தாங்கும் மாந்தர்கள் நாங்கள். வரப்போகும் காலமெல்லாம் எம் நெஞ்சங்களில் அத் தாக்கம் என்றும் இருக்கும்.

 

 

Mail Usup- truth is a pathless land -Home