சிறிலங்காவின் கட்டுநாயக்கா வான்படைத் தளம் மீது, வான்புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் தாக்குதல்களை நடாத்திவிட்டு, பாதுகாப்பாக வன்னிப்படைத் தளத்திற்குத் திரும்பி விட்டதாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்கள். சிறிலங்காவைப் பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் இந்தத் துணிகரத் தாக்குதல் குறித்து, உலகின் சகல ஊடகங்களும் முதன்மைச் செய்தியாக வெளியிட்டு வருகின்றன. தமிழீழ விடுதலைப் போராட்டம், இன்று ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது - என்று வெளிநாட்டு ஆய்வாளர்களும் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். மக்கள் வாழ்விடங்கள்மீது விமானக் குண்டுத் தாக்குதல்களை நடாத்திப் பொதுமக்களைக் கொல்கின்ற சிறிலங்கா விமானப்படையினர்போல் அல்லாது, வான்புலிகள் தங்கள் எதிரியின் வான்படைத் தளம் மீதே தாக்குதல் நடாத்தியுள்ளார்கள் என்றும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளார்கள்.
கடந்த வாரம் எமது கட்டுரையின் இறுதியில் நாம் இவ்வாறு தெரிவித்திருந்தோம்.: “தமிழ் மக்களுக்கு நீதியான, நியாயமான, நிரந்தரமான கௌரவமான தீர்வு எதுவும் கிட்டாததோடு மட்டுமல்லாது, மிகப் பெரிய அளவில் இடப்பெயர்வுகளையும், அழிவுகளையும் தமிழர்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள்.
சர்வதேசம் உடனடியாக தலையிட்டு ஆவன செய்யாவிட்டால், மிகப்பாரிய தடுப்பு நடவடிக்கையை, தமிழர் தேசம் மேற்கொள்ள வேண்டி வரும். தமிழர்களின் அழிவு என்பது எப்போதும் ஒரு பக்கமாகவே இருக்க முடியாது.இ என்பதைக் காலம் சொல்லும் வேளைவரும். அந்த வேளை நெருங்கும் வேளை வந்து விட்டது. ஏன்றுதான் நாம் கருதுகின்றோம்.!”
இவ்வாறு நாம் கடந்தவாரம் கருத்து வெளியிட்டிருந்தோம்.
இன்று வான் புலிகள் நடாத்தியுள்ள இந்தத் தாக்குதல் குறித்து, தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் திரு இராசையா இளந்திரையன் மிகக் கச்சிதமான வார்த்தைகளில் இவ்வாறு கூறியுள்ளார். “இந்தத் தாக்குதல் எம்முடைய முற்தடுப்பு நடவடிக்கை மட்டுமல்லாது, சிறிலங்கா வான்படையினர் நடாத்துகின்ற கண்மூடித்தனமான குண்டுத் தாக்குதல்களிலிருது எமது மக்களைக் காப்பாற்றுவதற்காகவும் நடாத்தப்பட்டது. எதிர்காலத்தில் சிறிலங்காப் படையினரின் கேந்திர நிலையங்கள் மீது, இவ்வகையான தாக்குதல்கள் நடாத்தப்படும்” என்று இந்த வான் தாக்குதலுக்கான காரணத்தை அவர் குறிப்பிடுகின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் குறித்து தமிழர் உலகம் மகிழ்ச்சி கொள்கின்ற இந்தவேளையில், திரு இளந்திரையன் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை நாம் உள்வாங்குவது மிக முக்கியமானதாகும். மிக அண்மைக் காலங்களில் மகிந்த ராஜபக்சவின் அரசு செய்து வருகின்ற அராஜகச் செயல்களை விரிவாகத் தர்க்கிப்பது, இவ்வேளையில் அவசியமானது என்றே நாம் கருதுகின்றோம்.
சிறிலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்ற இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, தமிழீழ மக்கள்- குறிப்பாகத் தென் தமிழீழ மக்கள்- மாபெரும் அவலங்கைள அனுபவித்து வருகின்றார்கள். சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் காரணமாக, திருகோணமலையில் இருந்து, மட்டக்களப்பு வரையிலான பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள், இலட்சக்கணக்கில் இடம் பெயர்ந்து, இன்னல் மிக்க அகதி வாழ்வை வாழ்ந்து வருகின்றார்கள்.
தமிழ் மக்களின் வாழ்விடங்களைக் குறி வைத்து பீரங்கி, பல்குழல் எறிகணை செலுத்திகள், மோட்டார்கள் ஆகியவற்றின் சூட்டாதரவுடன் மிகப்பாரிய தாக்குதல்களை சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டு வருகின்றது. விடுதலைப்புலிகளுடனான நேரடிச் சண்டையைத் தவிர்த்துக் கொண்டு, இவ்வகையான மிக நீண்ட தூர ஆயுதத் தாக்குதல்களை மட்டற்ற வகையில் சிறிலங்கா ராணுவம் மேற்கொண்டு வருகின்றது. இந்தக் குண்டுகள் போய் வெடிக்கும் இடங்களில் விடுதலைப் புலிகள் நிலைகொண்டுள்ளார்களா, இல்லையா என்று கூடக் கவலையில்லாமல், கண்டபடி கணக்கற்ற வகையில் மிக நீண்ட தூர ஆயுதத் தாக்குதல்களை சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இராணுவம் இவ்வாறு செய்வதற்கு முக்கியமான காரணம் உண்டு!
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க வேண்டும் என்கின்ற காரணத்தையும் விட தமிழ்ப் பொதுமக்கள் மீது பேரழிவைக் கொண்டு வரவேண்டும் என்பதுதான், சிறிலங்கா அரசின் நோக்கமாக உள்ளது.! இத்தகைய அழிவுகள் மூலமாகவும் அவலங்கள் ஊடாகவும், தமிழ் மக்களை அச்சுறுத்தி, அவர்களை அடிபணிய வைப்பதற்குச் சிறிலங்கா அரசு முனைந்து செயற்பட்டு வருகின்றது.
சரியாகச் சொல்லப்போனால், அவலத்தின் ஊடாக ஓர் அரசியல் நகர்த்தப் படுகின்றது.!
தமிழ் மக்களுக்கு அவலங்களை ஏறுபடுத்துவதற்காக, சிங்கள அரசு கீழ்வரும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.: • தமிழ் மக்களின் சொத்துக்களை அழித்தல். • பயிர் அறுவடை செய்கின்ற காலங்களில் அதைத் தடுக்கும் வகையில் தாக்குதல்களை மேற்கொள்ளுதல். • பரந்துபட்ட வகையில் தமிழர்களின் பொருளாதார வாழ்வை அழித்தல். • தொடர் தாக்குதல்களின் மூலம் தமிழர்களை இடம் பெயரச் செய்து, மிகப் பெரிய உளவியல் தாக்கத்தை அவர்களிடையே ஏற்படுத்துதல்.
இவைகளை மேற்கொள்வதன் மூலம் விடுதலைப் போராட்டத்தின் மீது மக்களை வெறுப்புக் கொள்ள வைத்து, அவர்களை அடிபணிய வைப்பதற்கு மகிந்த ராஜபக்ச முயன்று வருகின்றார். அதாவது தமிழ் மக்களின் அவலங்களுக்கு ஊடாக, கேவலமான ஓர் அரசியலை, மகிந்த ராஜபக்ச நகர்த்திச் செல்கின்றார்.
தமிழ் மக்களுக்கு போராட்டம் என்பது இன்று இயல்பாகி விட்டது- என்பதை மகிந்த ராஜபக்ச நன்கு அறிவார். ஆகவே இந்தப் போராட்ட இயல்பை மழுங்க செய்து, போராட வேண்டும் என்கின்ற மனஉறுதியை உடைக்க வேண்டும் என்பதற்காக மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு அவலங்களை ஏற்படுத்தி வருகின்றார்.
இன்று எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக தமிழ் மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அகதிகளாக செல்ல ஆரம்பித்து உள்ளார்கள். பட்டிப்பளை, வவுணதீவு, செங்கலடி, கிரான், படுவான்கரைப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள், அரச கட்டுப்பாட்டுப்பகுதிகளில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இன்னல்படுவதாக, மட்டக்களப்பில் இருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கிருக்கும் அரச சார்பற்ற, வெளிநாட்டு உதவி நிறுவனங்களும் செயலற்ற நிலையில் உள்ளதால் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் மேலும் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளார்கள். யுத்த செய்திகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கின்ற வெளிநாட்டு ஊடகங்களோ, தமிழ் மக்களின் இந்த இன்னல்கள் குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
தென் தமிழீழத்தில் இவ்வாறு இடம் பெயர்ந்துள்ள மக்களின் அத்தியாவசியத் தேவைகள் கவனிக்கப் படாதது மட்டுமல்லாது, அவர்கள் வேறு பிரச்சனைகளையும் எதிர் நோக்க வேண்டியுள்ளது. இடம் பெயர்ந்துள்ள பிரதேசங்களில் உள்ள ஒட்டுக்குழுக்களின் அச்சுறுத்தல்களுக்கும், இராணுவத்தின் நெருக்குவாரங்களிற்கும் இம் மக்கள் முகம் கொடுக்க வேண்டியதாக உள்ளது. அத்தோடு ஆட்கடத்தல், கப்பம் கொடுத்தல், போன்ற வன்முறைகளையும் இம் மக்கள் எதிர் கொள்ள வேண்டியுள்ளது.
இடம்பெயர்ந்து, அடிப்படை வசதிகள் கூட இல்லாது, தவிக்கின்ற இந்தத் தமிழ் பொதுமக்களைப் பலாத்தகாரமாக மீளக் குடியமர்த்தும் செயற்பாடுகளையும் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டு வருகின்றது. இடம் பெயர்ந்த தமிழ்ப் பொதுமக்களைச் சிறிலங்கா இராணுவம் தனது சொந்தப் பாதுகாப்பிற்காக, மனித கேடயங்களாக உபயோகிக்க முனைகின்ற இக் கொடிய செயலை, அமெரிக்காவில் இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளிப்படுத்திக் குற்றம் சாட்டியுள்ளது. இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் உள்ள தம்பனை, சின்னப் பண்ணிவிரிச்சான் ஆகிய கிராமங்களை நோக்கி முன்நகர முயன்ற சிறிலங்காப் படையினர் சுமார் 120 தமிழ்ப் பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன் படுத்தியமை அவதானத்திற்கு உரியதாகும். ஏனென்றால் இவ்வகையான மனிதக் கேடயங்களின் பின்னணியிலும் அவல அரசியல்தான் உள்ளது.!
வரலாற்றின் மிகப்பெரிய சோக நிகழ்வுகளின் ஒன்றான யாழ்ப்பாண இடப்பெயர்வின்போது, சுமார் ஐந்து இலட்சம் தமிழ் மக்கள், ஒரே இரவில் யாழ்ப்பாணத்தை விட்டு இடம் பெயர்ந்தார்கள். ஆனால் அன்று அவர்கள் பட்ட இன்னல்களை விட, தென்தமிழீழ மக்கள் இன்று பாரிய இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றார்கள். யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய தமிழ் மக்களை வன்னிப் பெருநிலம் கைநீட்டி வரவேற்று, இயன்ற வசதிகளை ஏறுபடுத்திக் கொடுத்தது அன்று. இடம்பெயர்ந்த தமிழ்ப் பொதுமக்கள், மேலதிக தாக்குதல்களை எதிர் கொள்ளவில்லை. ஆனால் தென்தமிழீழ மக்களோ, இடம் பெயர்ந்த பின்னரும் தாக்குதல்களையும், வன்முறைகளையும் இன்று எதிர் கொள்கின்றார்கள்.
தமிழ் மக்களுக்குச் சமத்துவத்தை அளிக்க முன்வராத சிறிலங்கா அரசு, ஒரே ஒரு விடயத்தில் மட்டும் சமத்துவத்தை அளித்து வருகின்றது. சிறிலங்கா அரசு வடதமிழீழ மக்கள் என்றோ தென்தமிழீழ மக்கள் என்றோ வித்தியாசம் காட்டுவதில்லை. சிறிலங்கா அரசைப் பொறுத்த வரையில் அவர்கள் எல்லோருமே தமிழ் மக்கள்தான். ஆகவே அவர்கள் எல்லோரையுமே அவல வாழ்விற்குள் தள்ள வேண்டும்! அதைத்தான் சிpறிலங்கா அரசுகள் அன்றிலிருந்து இன்றுவரை செய்து வருகின்றன.
அதனால்தான் வன்னிப்பிரதேசத்தின் காட்டோர எல்லையை ஒட்டிய பகுதிகளில் வாழுகின்ற தமிழ்ப் பொதுமக்கள் மீதும் குண்டுகளை வீசி அவர்களையும் இடம்பெயர வைக்கிறார்கள். இது தமிழீழ பகுதிகளில் பரவலாக நடைபெறுகின்ற விடயமாகும்.
இதன் அடிப்படையில்தான் மகிந்தவின் சிந்தனையின்படி மன்னார் மாவட்டத்துக் கிராமப் பகுதிகளில் தமிழ்ப் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக உபயோகித்து சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையை நாம் பொருத்திப் பார்க்க வேண்டும். இந்த இராணுவ முன்னகர்வு முயற்சி, தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு விட்டது. ஆனால் இந்த இராணுவ நடவடிக்கை காரணமாக, சுமார் 15.000 தமிழ்ப்பொதுமக்கள் தமது வாழ்விடங்களை விட்டு இடம் பெயர்ந்துள்ளார்கள்.
இங்கே அடிப்படையான விடயம் என்னவென்றால், தமிழ் மக்களின் சொத்துக்களை அழித்து, அவர்களுடைய பொருளாதாரப் பலத்தை இழக்கப் பண்ணி, அவர்களை அகதிகளாக இடம்பெயர வைப்பதன் மூலம் அவர்களை கையறு நிலைக்குக் கொண்டு போகும் செயற்பாட்டைச் சிறிலங்கா அரசு திட்டமிட்டுச் செய்து வருவதேயாகும். இத்தகைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதன் மூலம் தமிழ் மக்களுக்கு அவலங்களை ஏற்படுத்தி, அதன்மூலம் அவர்களை அச்சுறுத்தி, அடிபணிய வைக்க முடியும் என்று மகிந்த ராஜபக்ச எண்ணுகின்றார்.
இப்படிப்பட்ட அவலங்களின் ஊடாகத் தன்னுடைய அரசியலை நடாத்தி இதன் மூலம், தான் வெற்றி பெறலாம் என்று மகிந்த ராபக்ச எண்ணுகின்றார். ஆகNவு இந்த அழிவுகளையும், கொலைகளையும் சிறிலங்கா அரசு அறியாமல் தெரியாமல் செய்யவில்லை. இவற்றைச் சிந்தித்துத் திட்டமிட்டுத்தான் மகிந்தவின் அரசு செய்து வருகின்றது. இன்று மகிந்த ராஜபக்சவோடு கைகோர்த்து கூடி நிற்கின்ற ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்றவர்கள் மகிந்த ராஜபக்சவின் இந்த அவல அரசியலக்கு பக்க துணையாக நின்று தமிழ்ப் பொதுமக்களின் அழிவுக்குக் காரணமாக உள்ளார்கள். என்பதை நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம்.
எப்பாடுபட்டாவது, ஏதாவது ஒரு வழியில், தமிழர்களைப் பலம் இழக்கச் செய்து அதன் மூலம் அவர்களை அழிக்க வேண்டும் என்று சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச விரும்புகின்றார். அதற்காக அவர் தெரிவு செய்திருப்பது அவலத்தின் ஊடாக ஓர் அரசியல் நகர்வு.!
தமிழர்கள் மீது பாரிய அவலத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கின்ற மகிந்த ராஜபக்ச, சிங்கள தேசத்தில் பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார். அம்பாந்தோட்டையில் பாரிய துறைமுக விரிவாக்கப் பணியை மேற்கொள்வதற்காக சீனாவின் உதவியை மகிந்த ராஜபக்ச பெற்றிருக்கின்றார். அதேபோல் ரம்புக்கன் ஓயா என்ற இடத்தில் 400 மில்லியன் ரூபாய் செலவில் பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தை மகிந்த ராஜபக்ச செயற்படுத்த உள்ளார். அதாவது தமிழர் தாயகப் பகுதியில் அவலமும் அழிவும்! ஆனால் தங்களது சிங்களப் பகுதியிலோ அபிவிருத்தியும் ஆனந்தமும்!
எப்படியாவது தமிழர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு ஓர் அவல வாழ்வைக் கொடுப்பதற்காக, மகிந்த ராஜபக்ச இன்று ஒரு பெரிய படைப்பலத்தைக் கட்டி எழுப்பி வருகின்றார்.
இங்கே கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இவை குறித்துச் சம்பந்தப்பட்ட உலகநாடுகள் பெரிதாக கண்டு கொள்ளவும் இல்லை.- அக்கறைப்படவும் இல்லை. தமிழினத்தின் அழிவை உலகநாடுகள் மௌனமாகப் பார்த்த வண்ணமே உள்ளன.
இந்த உலகநாடுகள் சமாதானம், சமாதானம் என்று சொல்லி வருகின்ற போதிலும் சிpறிலங்கா அரசின் அத்துமீறல்களைஇ அதன் அராஜக நடவடிக்கைகளைஇ வெட்ட வெளிச்சமான தமிழின படுகொலைகளை வெறுமனே பார்த்துக்கொண்டு ஒரு மௌன சாட்சியாக அசையாமல் நிற்கின்றன.
சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்திலும், பேச்சு வார்த்தைகள் பயன்படாமல் போனகாலத்திலும் சிறிலங்கா அரசு தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதற்கான செயற்பாடுகளையே மேற்கொண்டு வந்துள்ளது. விடுதலைப் புலிகளைத் தாக்குவதாகச் சொல்லிக் கொண்டு தமிழ்ப் பொதுமக்கள் மீது விமானக் குண்டுத் தாக்குதல்களையும் எறிகணைத் தாக்குதல்களையும் நடாத்தி, அவர்களைக் கொன்றும் அகதிகளாக்கியும் வந்துள்ள சிறிலங்கா அரசின் செய்கைகளை சர்வதேசம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. இதன் காரணமாக தமிழர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்குரிய தார்மீக வலுவை இன்று சர்வதேசம் இழந்து விட்டது.
இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் கட்டுநாயக்கா வான் படைத்தளம் மீது விமானக்குண்டுத் தாக்குதல்களை நடாத்தியுள்ளார்கள். பிரச்சனை இத்தோடு முடியப் போவதில்லை. பிரச்சனை நாளை விஸ்வரூபம் எடுக்கும். அப்போது சர்வதேசம் மீண்டும் சமாதானம் என்று பேச முயன்றால் அவர்களுக்குத் தார்மீக வலு கிடைக்கப் போவதில்லை. புலிகளோடு சண்டையைப் பிடித்துக் கொண்டே பேச்சுவார்த்தைகள், தீர்வுத்திட்டம் குறித்துப் பேசுவது புலிகளைப் பலவீனப்படுத்துவதற்காகவே தவிர வேறு ஒன்றுக்குமல்ல.! இந்த உத்தி மிக நீண்ட காலமாகவே மேற்கொள்ளப்பட்டு தோல்வி கண்ட உத்தியாகும்! விடுதலைப்புலிகள் பலவீனமாக இருந்தால்தான் பேச்சுவார்த்தைக்கு இசைவார்கள் என்ற சிந்தனை மிகத் தவறானதாகும். தமிழீழ விடுதலைப்புலிகள், பலத்தின் அடிப்படையில்தான், பேச்சு வார்த்தைகளை அணுகுவார்கள் என்பதைக் கடந்த கால வரலாறே நிரூபித்து நிற்கும்.
சிறிலங்கா அரசிற்கு சர்வதேசம் உரிய அழுத்தத்தைக் கொடுக்கும் வரை சிறிலங்கா அரசு மோட்டுத்தனமான பேய்க்கூத்தை ஆடிக்கொண்டுதான் இருக்கப் போகின்றது. இந்த மோட்டுத்தனமான பேய்க்கூத்திற்கு சர்வதேசம் நாளையும் இணங்கிப் போகுமென்றால்இ நாட்டின் நிலைமைகள் விரைவில் மாற வேண்டி வரும்.! அவ்வாறு நாட்டின் நிலைமைகள் முற்றாக மாறுகின்ற போது சர்வதேசம் மீண்டும் பங்குபற்ற நினைத்து வந்தால் மனச்சாட்சி உறுத்தலோடு குற்றஉணர்வோடுதான் வரவேண்டியிருக்கும். அப்போது நெகிழ்ச்சிப் போக்கோடு இருந்த விடுதலைப் புலிகளிடம் நாளை இதே நெகிழ்ச்சிப்போக்கை சர்வதேசம் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் சர்வதேசத்திற்கு உரிய மரியாதையை தந்து அதன்மீது நம்பிககையை விடுதலைப்புலிகள் வெளிப்படுத்தியிருந்தார்கள். ஆனால் சர்வதேசம் அந்த நம்பிக்கைக்கு உரிய செயல்வடிவத்தை அளிக்கவில்லை.
அன்புக்குரிய புலம்பெயர்ந்த உறவுகளுக்கு உரிமையோடு ஒரு வேண்டுகோள்:!
வெற்றிச் செய்திகளைக் கேட்டு ஆனந்தக் கூத்தாடுவதும், பின்னடைவுச் செய்திகளைக் கேட்டால் சோர்வுற்று விழுவதும் எமது குணங்களில் ஒன்றாக உருவாகி வருகின்றது. காலமும், சூழலும் சரியாக வருகின்ற போதெல்லாம் தம்முடைய பேராற்றலையும் தம்முடைய வல்லமையையும் காலத்திற்குக் காலம் தமிழீழ விடுதலைப்புலிகள் வெளிப்படுத்தியே வந்துள்ளார்கள். தமிழீழத் தேசியத் தலைவரிடமும் தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் முற்று முழுதாக நம்பிக்கை வைத்து நாம் அவர்களுக்கு பின்னால் நிற்போம். அவர்களுடைய வல்லமையையும், வழிகாட்டலையும் கேள்விக்குறியாக்கும் எண்ணத்தைக் கைவிட்டு தேசியத் தலைவரின் கரங்களைப் பலப்படுத்துவதையே, எமது குறிக்கோளாக கொள்ளுவோம்.
சர்வதேசம் உடனடியாகத் தலையிட்டு ஆவன செய்யாவிட்டால் மிகப்பாரிய தடுப்பு நடவடிக்கையைத் தமிழர்தரப்பு மேற்கொள்ள வேண்டி வரும். தமிழர்களின் அழிவு என்பது எப்போதும் ஒரு பக்கமாகவே இருக்க முடியாது என்பதைக் காலம் சொல்லும் வேளை வரும். அந்த வேளை நெருங்கும் வேளை வந்துவிட்டது என்றுதான் கருதுகின்றோம் - என்று நாம் கடந்த வாரம் குறிப்பிட்டு இருந்தோம்.
அதன் அடிப்படையில் இந்த வாரம் நாம் இவ்வாறு குறிப்பிட விரும்புகின்றோம். விரைவில் உரிய தீர்வு வரும் அது வரும்போது வேகமாகவே வரும்!! புலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாம் எமக்கான தார்மீகக் கடமையைச் செய்திடுவோம். |