தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > தீர்வும், தீர்த்துக் கட்டுதலும்!
 

Selected Writings by Sanmugam Sabesan,  
சபேசன், அவுஸ்திரேலியா

தீர்வும், தீர்த்துக் கட்டுதலும்! !

20 March 2007


 சிறிலங்கா அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற யுத்த நடவடிக்கைகள் காரணமாக கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் மாபெரும் மனித அவலத்துக்கு இன்று முகம் கொடுத்து வருகின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்புப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள தமிழ்ப் பொதுமக்களின் எண்ணிக்கை, 150,000த்தை தாண்டியிருப்பதாகச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. இதேவேளை கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை, சிறிலங்கா அரசாங்கம் பலாத்காரமாக மீளக் குடியமர்த்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

கிரான், பாலச்சோலை, ஐயன்கேணி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ்ப் பொதுமக்களைப் பலவந்தமாகக் கிளிவெட்டிப் பகுதிக்குச் சிறிலங்கா இராணுவத்தினர் கொண்டு செல்வதாக, அமெரிக்காவில் இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.

“சிறிலங்காப் படையினர் புரிந்து வருகின்ற இந்தப் பலாத்காரமான மீளக்குடியமர்தலுக்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும், இவ்வாறு பொதுமக்களைப் பலவந்தமாகக் குடியமர்த்தும் செயலானது, ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளுக்கு முரணானது, என்பதுடன் மக்களைப் பலவந்தமாகக் குடியமர்த்துவதில்லை என்று சிறிலங்கா அரசினால் அடிக்கடி சொல்லப்பட்டு வந்த உறுதிமொழிகளை மீறுகின்ற செயலாகும” என்றும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழும் யாழ் குடாநாட்டு மக்கள், தாம் அங்கிருந்து வெளியேறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் அறுபது ஆயிரம் தமிழ்ப் பொதுமக்கள் யாழ் நகரை விட்டு வெளியேறுவதற்காக விண்ணப்பித்துள்ளதாக யாழ் செயலகத்தின் புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.

'தமிழீழ விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து, தமிழ் மக்களை விடுவிப் போம்' என்று சிறிலங்கா அரசு செய்து வந்த பொய்ப்பரப்புரை இன்று பிசுபிசுத்துப் போய்விட்டது. சிங்கள இராணுவத்தின் பிடியிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, யாழ் மக்கள் வெளியேறுகின்ற நிலைமை இன்று உருவாகி விட்டது. அதேபோல், இராணுவத்தினரிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, இடம்பெயர வேண்டிய அவல நிலையில் கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் உள்ளார்கள்.

மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா அரசு இன்று வெளிப்படையாகவே தமிழின அழிப்பைச் செய்து வருகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் மீது அரசியல் அழுத்தங்களையும் தடைகளையும் கொண்டு வருவதன் மூலம் தான், இலங்கைத் தீவில் சமாதானம் நிலவும்’ என்றும் ‘அதனூடேதான் சமாதானத் தீர்வையும், அதிகாரப் பரவலாக்கலையும் கொண்டு வரமுடியும்' என்றும் மகிந்த ராஜபக்ச, சர்வதேசத்திற்குத் தெரிவித்து வந்திருந்தார். ஆனால் மகிந்த ராஜபக்சவின் வெளிப்படையான யுத்த முனைப்பு, அவருடைய உள்நோக்கத்தை இன்று சர்வதேசத்திற்குத் தெளிவு படுத்தியுள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர, முன்னர் தெரிவித்திருந்த சில விடயங்கள் குறித்துச் சில தர்க்கங்களை முன் வைப்பது இவ்வேளையில் பொருத்தமானதாக இருக்கக் கூடும் என்று நாம் நம்புகின்றோம்.

மங்கள் சமரவீர கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் திகதியன்று -அதாவது அவர் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்தபோது - அதிபர் மகிந்த ராஜபக்சவிற்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இன்று மகிந்த ராஜபக்சவோடு முரண்பட்டுத் தனது அமைச்சர் பதவியை இழந்துவிட்ட நிலையில் தான் அன்று எழுதிய கடிதத்தை மங்கள சமரவீர ஊடகங்களுக்குக் கொடுத்துப் பகிரங்கப்படுத்தியிருந்தார். ஒரு நாட்டின் வெளிவிவகார அமைச்சர், அந்த நாட்டின் அரச அதிபருக்கு எழுதிய அந்தக் கடிதத்தைச் சற்று ஊன்றிக் கவனித்தால், சில விடயங்கள் அம்பலமாகுவதை நாம் அவதானிக்கலாம்.

மங்கள சமரவீர, தான் வெளிநாடுகளில், சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட பரப்புரைப் பயணங்களின் போது தான் எதிர் கொண்ட பிரச்சனைகளை, அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். “சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகின்ற மனித உரிமை மீறல்கள், ஜனநாயகத்திற்குப் புறம்பான செயல்கள் காரணமாக, தன்னுடைய பரப்புரைப் பணி எவ்வளவு கடினமாக உள்ளது. இவற்றை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும்” என்ற கருத்துப்பட, மங்கள சமரவீர, கடந்த ஆண்டு அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகின்ற பல அராஜகச் செயல்கள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தன. அத்தோடு, சிறிலங்கா அரசு, உடனடியாகச் செய்ய வேண்டிய சில விடயங்களும் தெரிவிக்கப்பட்டிருந்தன.

அன்றைய அமைச்சர் மங்கள சமரவீர, அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தில் உள்ள சாராம்சம் வருமாறு:

• இலங்கைத் தமிழர்கள் பற்றிய பிரச்சனையைப் பொறுத்த வரையில், இந்திய மத்திய அரசின் கொள்கைகள், தமிழ் நாட்டினால் வழி நடத்தப்படுகின்றன.

• தமிழ் நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் எந்த நடவடிக்கைகளையும் இந்திய மத்திய அரசு எடுக்காது என்பதை நாம் (சிறிலங்கா அரசு) புரிந்து கொள்ள வேண்டும்.


• இந்தியாவின் இந்தப்போக்கை மாற்ற வேண்டுமானால், சிறிலங்கா அரசு, தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வை அங்கீகரிக்க வேண்டும். அத்தோடு மனித உரிமை, மற்றும் மனிதாபிமானப் பணிகளிலும் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

• கடத்தல்கள், படுகொலைகள் போன்றவற்றைக் (குறிப்பாக) சிறிலங்கா இராணுவமும், கருணா குழுவும் மேற்கொண்டு வருவதாக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. சிறிலங்கா அரசு, இவை குறித்து விசாரணை செய்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், சிறிலங்கா அரசுமீது குற்றச் சாட்டுக்கள் எழ வாய்ப்பு உள்ளது.

• சிறிலங்காவில் பத்திரிகைச் சுதந்திரம், மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

• அரசிற்கு எதிராகத் தகவல் கொடுப்பவர்களை சிறிலங்கா அரசு கொல்கின்றது. இது அனைத்துலகச் சமூகத்தைச் சிறிலங்காவிடமிருந்து விலகிச் செல்வதற்கே வழி வகுக்கும்.

• சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு, உரிய அதிகாரப் பகிர்வைத் தருவதற்குத் தயாராக இருக்கின்றது என்றும், அந்த அதிகாரப் பகிர்வை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ள வைப்பதற்காக, விடுதலைப்புலிகள் மீது தடைகள் போன்ற அழுத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் நாம் (சிறிலங்கா அரசு) பிரச்சாரம் செய்து வந்தோம். எம்முடைய இந்தப் பிரச்சாரத்தை நம்பித்தான், ஐரோப்பிய ஒன்றியமும், கனடாவும் விடுதலைப்புலிகளை தடை செய்தன. ஆகவே சிறிலங்கா அரசு, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை அளித்து, அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். சிறிலங்கா அரசு அதிகாரப் பகிர்வை இனியும் உதாசீனப்படுத்த முடியாது!

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரான மங்கள சமரவீர, சிறிலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு கடந்த ஆண்டு எழுதிய இந்தக்கடிதத்தின் மூலம், பல உள் விடயங்கள் வெளிப்பட்டிருப்பதோடு மட்டுமல்லாது, சில அடிப்படை உண்மைகளும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கின்றன. அவை வருமாறு:

• சிறிலங்கா அரசு வேண்டுமென்றே மனித உரிமைகளை மீறி வருகின்றது.

• ஜெனிவாப்பேச்சு வார்த்தைகளில் ஒப்புக் கொண்டதற்கு மாறாக கருணா போன்ற தமிழ் ஒட்டுக் குழுக்களைப் பாவித்து, தமிழ் மக்கள் மீது வன்முறையைச் சிறிலங்கா அரசு ஏவி வருகின்றது.

• சிறிலங்காவின் பத்திரிகைச் சுதந்திரம் மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. அரச ஊடகங்களை, அரசு தவறாக வழி நடத்துகின்றது. ஊடகவியலாளர்களை அரசு திட்டமிட்டுக் கொல்கின்றது.

• அதிகாரப் பரவலாக்கம் போன்ற சில வாக்குறுதிகளை, வெளிநாடுகளுக்கு அளித்ததன் மூலம் தான், வெளிநாடுகளின் ஆதரவைச் சிறிலங்கா அரசு பெற்றுக் கொண்டது. ஆனால் அவற்றை நிறைவேற்றும் நோக்கம் சிறிலங்கா அரசிற்கு அறவே கிடையாது!

மகிந்த ராஜபக்சவின் அதிகாரப் பரவலாக்கல் போன்ற வாக்குறுதிகளை உலகமெங்கும் கொண்டு சென்று விற்று விட்டு வந்த மங்கள சமரவீர, இன்று தன்னுடைய அதிகாரத்தையும் தொலைத்துவிட்டு வீதியில் நிற்கின்றார். சிறிலங்காவின் அரச அதிபர் சர்வதேசத்தையும், தனது அமைச்சரையும் ஏமாற்றிய செயல் இந்தக்கடிதம் மூலம் ஒப்புக் கொள்ளப்படுகின்றது.

மகிந்த ராஜபக்சவின் இரட்டை வேட நடிப்புக் கலை குறித்து இன்று உலக நாடுகளும், சர்வதேச அமைப்புக்களும் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளன. முன்னரேயே இவர் குறித்து இவர்கள் புரிந்து கொண்டிருந்தபோதும் அதனை இவர்கள் வெளிக்காட்டாமல் இருந்து வந்துள்ளார்கள் என்று சொல்வதுதான் பொருத்தமானதாக இருக்கும். முன்னரேயே புரிந்து கொண்டதை இப்போதுதான் புரிந்து கொண்டது போல், உலகமும் நடிக்கின்றது.

• சிறிலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்ச தன்னுடைய சொந்த நலனைப் பேணுவதற்காக எடுத்துக் கொண்டுள்ள செயற்பாடு தமிழினப் படுகொலையாகும். இதன் பொருட்டு மகிந்தவின் அரசு, சகல உலக நியதிகளையும் மீறி வருகின்றது.

• மகிந்த ராஜபக்ச தனது நலன் கருதி, நாட்டின் ஜனநாயகத்தையே மீறிச் செயல் படுகின்றார்.

• மகிந்த ராஜபக்ச தனது நலனுக்காக, எதிர்கட்சிகளை உடைப்பதுபோல், தன்னுடைய சொந்தக் கட்சியையே உடைக்க முற்படுகின்றார்.

• மகிந்த ராஜபக்ச தனது நலனுக்காகவே, அவசர காலச் சட்டத்தை நீடிப்புச் செய்கின்றார்.

• மகிந்த ராஜபக்ச தனது நலனுக்காகவும், தனது அரசியல் பதவி இருப்புக்காகவும், தமிழ் மக்கள்மீது தொடர்ந்து போரை நடாத்தி வருகின்றார்.

• மகிந்த ராஜபக்ச தனது நலனுக்காக மேற்கொண்டு வருகின்ற இந்தச் செயற்பாடுகள் காரணமாக இன்று இலட்சக்கணக்கில் தமிழ்ப் பொது மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றார்கள்.

• இவை எல்லாவற்றோடு, இன்னும் ஒரு மிகக் கேவலமான, கொடுமையான விடயமும் இலங்கையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தமிழர்களைக் குறிவைத்து மிகப் பெரிய அளவில் ஆட்கடத்தலும், காசு பறித்தலும் இடம் பெற்று வருகின்றன. யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும், மலையகத்திலும், தமிழர்கள் தொடர்ந்து கடத்தப்பட்டுக் கொலை செய்யப்படுவதும், அல்லது பணம் பறிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்படுவதும் நாளாந்த நிகழ்வுகளாக அமைந்து வருகின்றன.

அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், அதியுயர் பாதுகாப்புச்சோதனைகள் மிகக் கெடுபிடியாக மேற் கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் அடையாளம் தெரியாத, வெள்ளை நிற வான்களில் வருபவர்கள், தமிழர்களைக் கடத்திக்கொண்டு செல்கிறார்கள். இந்த அடையாளம் தெரியாத வாகனங்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு அடையாளம் இவற்றிற்கு இலக்கத்தகடுகள் இல்லை என்பதுதான்.!

இத்தகைய ஆட்கடத்தலும், பணம் பறித்தலும், சிறிலங்கா அரச ஆதரவோடுதான் நடைபெற்று வருகின்றது என்பது மிக வெளிப்படையான உண்மையாகும்.! இதற்குரிய முழுப் பொறுப்பையும், சிறிலங்காவின் அரச அதிபரான மகிந்த ராஜபக்சதான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.!

மகிந்த ராஜபக்ச, தீர்வு, தீர்வு! என்று கூறிக்கொண்டு, தமிழ் மக்களைத் தீர்த்துக் கட்டும் செயற்பாடுகளைத்தான் மிக முனைப்பாக மேற்கொண்டு வருகின்றார். சிறிலங்கா அரசுகளின் வாக்குறுதிகளை நம்பி முன்னைய தமிழர்கள் ஏமாந்தது போல், இன்று சர்வதேசம் ஏமாந்து போய் நிற்கின்றது. தமிழர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டு வருவதை அறிந்து, பின்னர் பாரிய போராட்டத்தை மேற்கொண்டார்கள். ஆனால் சர்வதேசமோ, விரும்பியே ஏமாறுவது போல்தான் தெரிகின்றது. ஏனென்றால் சர்வதேசத்தின் செயற்பாடுகள், “மௌனமான மொழியைத்தான்” (?) பேசி வருகின்றன.

தமிழ் மக்களுக்கு நீதியான, நியாயமான, நிரந்தரமான, கௌரவமான தீர்வு எதுவும் கிட்டாததோடு மட்டுமல்லாது, மிகப்பெரிய அளவில் இடப்பெயர்வுகளையும், அழிவுகளையும் தமிழர்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள். சர்வதேசம் உடனடியாக தலையிட்டு ஆவன செய்யாவிட்டால், மிகப்பாரிய தடுப்பு நடவடிக்கையை தமிழர் தரப்பு மேற்கொள்ள வேண்டி வரும். தமிழர்களின் அழிவு என்பது, எப்போதும் ஒரு பக்கமாகவே இருக்க முடியாது என்பதைக் காலம் சொல்லும் வேளை வரும்.

அந்த வேளை நெருங்கும் வேளை வந்து விட்டது என்றுதான் நாம் கருதுகின்றோம்.!

Mail Usup- truth is a pathless land -Home