Thaalatu - தாலாட்டு பாடல்கள்
ஆண் குழந்தை தாலாட்டு புரட்சி கவிஞர் பாரதிதாசன் in பெண்ணுலகு ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ! ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ! காராரும் வானத்தில் காணும் முழுநிலவே! நீராரும் தண்கடலில் கண்டெடுத்த நித்திலமே! ஆசை தவிர்க்கவந்த ஆணழகே சித்திரமே! ஓசை யளித்துமலர் உண்ணுகின்ற தேன்வண்டே! உள்ளம் எதிர்பார்த்த ஓவியமே என்மடியில் பிள்ளையாய் வந்து பிறந்த பெரும்பேறே! சின்ன மலர்வாய் சிரித்தபடி பால்குடித்தாய் கன்னலின் சாறே கனிரசமே கண்ணுறங்கு! நீதிதெரியும் என்பார் நீள்கரத்தில் வாளேந்திச் சாதியென்று போராடும் தக்கைகளின் நெஞ்சில் கனலேற்ற வந்த களிறே, எனது மனமேறு கின்ற மகிழ்ச்சிப் பெருங்கடலே! தேக்குமரம் கடைந்து செய்ததொரு தொட்டிலிலே ஈக்கள் நுழையாமல் இட்ட திரைநடுவில், பொன்முகத்தி லேயிழைத்த புத்தம் புதுநீலச் சின்னமணிக் கண்ணை இமைக்கதவால் மூடிவைப்பாய்! அள்ளும் வறுமை அகற்றாமல் அம்புவிக்குக் கொள்ளைநோய் போல்மதத்தைக் கூட்டியழும் வைதிகத்தைப் போராடிப் போராடிப் பூக்காமல் காய்க்காமல் வேரோடு பேர்க்கவந்த வீரா, இளவீரா! வாடப்பல புரிந்து வாழ்வை விழலாக்கும் மூடப் பழக்கத்தைத் தீதென்றால் முட்டவரும் மாடுகளைச் சீர்திருத்தி வண்டியிலே பூட்டவந்த ஈடற்ற தோளா, இளந்தோளா, கண்ணுறங்கு! "எல்லாம் அவன்செயலே" என்று பிறர்பொருளை வெல்லம்போல் அள்ளி விழுங்கும் மனிதருக்கும், காப்பார் கடவுள்உமைக் கட்டையில்நீர் போகுமட்டும் வேர்ப்பீர், உழைப்பீர் எனஉரைக்கும் வீணருக்கும், மானிடரின் தோளின் மகத்துவத்தைக் காட்டவந்த தேனின் பெருக்கே,என் செந்தமிழே கண்ணுறங்கு!
பெண் குழந்தை தாலாட்டு புரட்சி கவிஞர் பாரதிதாசன் in பெண்ணுலகு ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ! ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ! சோலை மலரே! சுவர்ணத்தின் வார்ப்படமே! காலைஇளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே! வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம் பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே! நாய்என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத் தாய்என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே! வெண்முகத்தில் நீலம் விளையாடிக் கொண்டிருக்கும் கண்கள் உறங்கு! கனியே உறங்கிடுவாய்! அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச் சின்ன உடலாகச் சித்தரித்த மெல்லியலே! மின்னல் ஒளியே, விலைமதியா ரத்தினமே! கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே! மூடத் தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற காடு, மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே! வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத் தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி! புண்ணிற் சரம்விடுக்கும் பொய்மதத்தின் கூட்டத்தைக் கண்ணிற் கனல்சிந்திக் கட்டழிக்க வந்தவளே! தெய்விகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை உய்விக்க வந்த உவப்பே! பகுத்தறிவே! எல்லாம் கடவுள்செயல் என்று துடைநடுங்கும் பொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய வந்தவளே! வாயில்இட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கை கோயிலென்று காசுதரும் கொள்கை தவிர்ப்பவளே! சாணிக்குப் பொட்டிட்டுச் சாமிஎன்பார் செய்கைக்கு நாணி உறங்கு; நகைத்துநீ கண்ணுறங்கு!
தாலாட்டும் துயிலெழுப்பும் புரட்சி கவிஞர் பாரதிதாசன் in இளைஞர் இலக்கியம் 1. தாலாட்டு (ஆண்) யானைக் கன்றே தூங்கு-நீ யாதும் பெற்றாய் தூங்கு! தேனே தமிழே தூங்கு-என் செங்குட்டு வனே தூங்கு! வானவ ரம்பா நீயே-மிக வளைத்துப் பார்க்கின் றாயே. ஆனஉன் விழியை வைத்தே-உன் அழகிய இமையால் சாத்து.
2. தாலாட்டு (பெண்) பட்டுப் பாப்பா தூங்கு!-நீ பாலும் குடித்தாய் தூங்கு! மொட்டில் மணக்கும் முல்லை!-என் முத்தே என்ன தொல்லை? சிட்டாய் ஆடிப் பறந்தாய்-உன் சிரிப்பால் எங்கும் நிறைந்தாய். பிட்டும் தருவேன் தூங்கு!-என் பெண்ணே கண்ணே தூங்கு!
3. தாலாட்டு (பொது) தொட்டிலில் ஆடும் கிளியே!-என் தூய தமிழின் ஒளியே! கட்டிக்கரும்பே தூங்கு!-முக் கனியின் சாறே தூங்கு! தட்டிற் பாலும் சோறும்-நான் தந்தே னேநாள் தோறும்; சுட்டப் பத்துடன் வருவேன்-நீ தூங்கி எழுந்தால் தருவேன்.
தாயின் தாலாட்டு புரட்சி கவிஞர் பாரதிதாசன் - குடும்ப விளக்கு
பொன்னே மணியே புதுமலரே செந்தேனே மின்னே கருவானில் வெண்ணிலவே கண்ணுறங்கு!
தன்னே ரிலாத தமிழே தமிழ்ப்பாட்டே அன்னைநான்; உன்விழியில் ஐயம் ததும்புவதேன்?
என்பெற்ற அன்னையார் உன்பாட்டி இன்னவர்கள் உன்தந்தை அன்னை உயர்பாட்டி இன்னவர்கள்!
என்னருமைத் தோழிமார் உன்தாய்மார் அல்லரோ? கன்னற் பிழிவே கனிச்சாறே கண்ணுறங்கு!
சின்னமலர்க் காலசையச் செங்கை மலர்அசைய உன்கண் உரைப்பதென்ன என்கண்ணே கண்ணுறங்கு!
தோழிமார் தாலாட்டு புரட்சி கவிஞர் பாரதிதாசன் - குடும்ப விளக்கு
தொகைமுத்துத் தொங்கலிட்ட தொட்டிலிலே அன்பே நகைமுத்தின் பெண்ணான நன்முத்தே மானே!
தகையாளர் வையத்தில் தந்த திருவே தொகைபோட்டு வாங்க ஒண்ணாத் தூய்அமிழ்தே கண்வளராய்!
கன்னங் கரிய களாப்பழத்தின் கண்ணிரண்டும் சின்னஞ் சிறிய ஒளிநெற்றித் தட்டிலிட்டே
இன்னும் எமக்கே இனிப்பூட்டிக் கொண்டிருந்தால் பொன்"உறக்க நாடு" புலம்பாதே கண்மணியே!
தங்கத் திருமுகத்தின் தட்டினிலே உன்சிரிப்பைப் பொங்கவைத்தே எம்உளத்தைப் பொங்கவைத்துக் கொண்டிருந்தால்
திங்கள் முகத்துன் சிரிப்போடு தாம்கொஞ்ச அங்"குறக்க நாட்டார்" அவாமறுத்த தாகாதோ?
செங்காந்த ளின்அரும்போ சின்னவிரல்? அவ்விரலை அங்காந்த வாயால் அமிழ்தாக உண்கின்றாய்!
கொங்கை அமிழ்து புளித்ததோ கூறென்றால் தெங்கின்பா ளைச்சிரிப்புத் தேனை எமக்களித்தாய்!
பஞ்சுமெத்தைப் பட்டு பரந்த ஒரு மேல்விரிப்பில் மிஞ்சும் மணமலரின் மேனி அசையாமல்
பிஞ்சுமா விண்விழியைப் பெண்ணே இமைக்கதவால் அஞ்சாது பூட்டி அமைவாகக் கண்ணுறங்காய்!
தங்கத்துப் பாட்டி தாலாட்டு புரட்சி கவிஞர் பாரதிதாசன் - குடும்ப விளக்கு
ஆட்டனத்தி யான அருமை மணாளனையே ஓட்டப் புனற்கன்னி உள்மறைத்துக் கொண்டுசெல்லப்
போதுவிழி நீர்பாயப் போய்மீட்டுக் கொண்டுவந்த ஆதிமந்தி கற்புக் கரசியவள் நீதானோ?
செல்வத் தமிழ்வேந்தர் போற்றும் செந்தமிழான கல்விக் கரசி கலைச்செல்வி ஔவை
இனியும் தமிழ்காத்தே இந்நாட்டைக் காக்க நினைத்துவந்தாள் என்னிலவள் நீதானோ என்கிளியே?
நாட்டு மறவர்குல நங்கையரைச் செந்தமிழின் பாட்டாலே அமிழ்தொக்கப் பாடிடுவாள் நற்காக்கைப்
பாடினியார் நச்செள்ளை பார்புகழும் மூதாட்டி கூடி உருவெடுத்தார் என்றுரைத்தால் நீதானோ?
அண்டும் தமிழ்வறுமை அண்டாது காக்கவந்த எண்டிசையும் போற்றும் இளவெயினி நீதானோ?
தக்கபுகழ்ச் சோழன் தறுகண்மை பாடியவள் நக்கண்ணை என்பவளும் நீதானோ நல்லவளே!
கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முற்றோன்றி மூத்த குடியின் திருவிளக்கே!
சற்றேஉன் ஆடல் தமிழ்ப்பாடல் நீநிறுத்திப் பொற்கொடியே என்னருமைப் பொன்னேநீ கண்ணுறங்காய்!
மலர்குழல் பாட்டி தாலாட்டு புரட்சி கவிஞர் பாரதிதாசன் - குடும்ப விளக்கு
உச்சி விளாம்பழத்தின் உட்சுளையும் கற்கண்டும் பச்சைஏ லப்பொடியும் பாங்காய்க் கலந்தள்ளி
இச்இச்சென உண்ணும் இன்பந்தான் நீ கொடுக்கும் பிச்சை முத்துக் கீடாமோ என்னருமைப் பெண்ணரசே!
தஞ்சைத் தமிழன் தரும்ஓ வியம்கண்டேன் மிஞ்சு பலிவரத்தின் மின்னும்கல் தச்சறிவேன்
அஞ்சுமுறை கண்டாலும் ஆவலறா உன்படிவம் வஞ்சியே இப்பெரிய வையப் படிவமன்றோ
முகிழாத முன்மணக்கும் முல்லை மணமும் துகள்தீர்ந்த சந்தனத்துச் சோலை மணமும்
முகநிலவு மேலேநான் உன்உச்சி மோந்தால் மகிழ மகிழ வருமணத்துக் கீடாமோ?
தமிழர் தனிச்சிறப்பு யாழின் இசையும் குமிக்கும் ஒருவேய்ங் குழலின் இசையும்
தமிழின் இசையும் சரியாமோ, என்றன் அமிழ்தே, மலர்வாய்நீ அங்காப்பின் ஓசைக்கே;
இன்பத்து முக்கனியே என்னன்பே கண்ணுறங்கு தென்பாண் டியர்மரபின் செல்வமே கண்ணுறங்காய்!
தாலாட்டு புரட்சி கவிஞர் பாரதிதாசன் in இசை அமுது ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆரரிரோ!
சீரோடு பூத்திருந்த செந்தாமரை மீது நேரோடி மொய்த்துலவு நீலமணி வண்டுதனைச் செவ்விதழால் தான்மூடும் சேதிபோல் உன்விழியை அவ்விமையால் மூடியே அன்புடையாய் நீயுறங்கு!
கன்னங் கறேலென்று காடுபட்ட மேகத்தில் மின்னி வெளிப்பட்ட விண்மீன்போல் உன்றன்விழி சின்ன இமையைத் திறந்ததேன்? நீயுறங்கு! கன்னலின் சாறே கனிச்சாறே நீயுறங்கு!
குத்துண்ட கண்ணாடி கொண்டபல வீரர்கள்போல் துத்திக்காய் போலச் சுடர்முகத்தை நீசுருக்கி ஏனழுதாய் என்றன் இசைப்பாட்டே கண்ணுறங்கு! வான்நழுவி வந்த வளர்பிறையே கண்ணுறங்கு!
கன்னம்பூ ரித்துக் கனியுதடு மின்உதிர்த்துச் சின்னவிழி பூத்துச் சிரித்ததென்ன செல்வமே? அன்னைமுகம் வெண்ணிலவே ஆனாலும் உன்விழியைச் சின்னதொரு செவ்வல்லி ஆக்காமல் நீயுறங்கு!
நெற்றிக்கு மேலேயுன் நீலவிழியைச் செலுத்திக் கற்றார்போல் என்ன கருதுகின்றாய்? நீகேட்டால் ஆனை அடிபோல் அதிரசத்தைச் சுட்டடுக்கித் தேனில் துவைத்தெடுத்துத் தின்னென்று தாரேனோ?
கொட்டித் தும்பைப்பூக் குவித்ததுபோல் உன்னெதிரில் பிட்டுநறு நெய்யில் பிசைந்துவைக்க மாட்டேனா? குப்பைமணக்கக் குடித்தெருவெல் லாம் மணக்க அப்பம் நிலாப்போல் அடுக்கிவைக்க மாட்டேனா?
மீன்வலைசேந் தும்கயிற்றை வேய்ந்த வளையம்போல் தேன்குழல்தான் நான்பிழிந்து தின்னத் தாரேனா? விழுந்துபடும் செங்கதிரை வேல் துளைத்ததைப்போல் உழுந்துவடை நெய்யழுக உண்ணென்று தாரேனா?
தாழையின் முள்போன்ற தகுசீ ரகச்சம்பா ஆழ உரலில் இடித்த அவலைக் கொதிக்குநெய் தன்னில்தான் கொட்டிப் பொறித்துப் பதக்குக் கொருபதக்காய்ப் பாகும் பருப்புமிட்டே
ஏலத்தைத் தூவி எதிர் வைக்கமாட்டேனா? ஞாலத்தொளியே நவிலுவதை இன்னும் கேள்: செம்பொன்னை மேற்பூசித் தேனைச் சுளையாக்கிக் கொம்பில் பழுத்தநறுங் கொய்யாப் பழமும்
செதில்அறுத்தால் கொப்பரையில் தேன்நிறைந்த தைப்போல் எதிர்த்தோன்றும் மாம்பழமும் இன்பப் பலாப்பழமும் வேண்டுமென்றால் உன்னெதிரில் மேன்மேற் குவிந்துவிடும். பாண்டியனார் நன்மரபின் பச்சைத் தமிழே!
நெருங்க உறவுனக்கு நீட்டாண்மைக் காரர் அறஞ்சிறந்த பல்கோடி ஆன தமிழருண்டே! எட்டும் உறவோர்கள் எண்ணறு திராவிடர்கள் "வெட்டிவா"வென் றுரைத்தால் கட்டிவரும் வீரர்அவர்
என்ன குறைச்சல் எதனால் மனத்தாங்கல்? முன்னைத் தமிழர் முடிபுனைந்து ஞாலத்தை ஓர்குடைக்கீழ் ஆண்ட உவகை உனக்குண்டு! சேரனார் சோழனார் சேர்ந்தபுகழ் உன்புகழே!
ஓவியக் கரைகண்டார் உண்மைநெறி தாம்வகுத்தார் காவிய சிற்பத்தில் கவிதையினில் கைகாரர் உன்னினத்தார் என்றால் உனக்கின்னும் வேண்டுவதென்? பொன்னில் துலங்குகின்ற புத்தொளியே கண்ணுறங்கு!
கற்சுவரை மோதுகின்ற கட்டித்தயிரா, நற் பொற்குடத்தில் வெண்ணெய்தரும் புத்துருக்கு நெய்யா,நல் ஆனைப் பசுக்கள் அழகான வெண்ணிலவைப் போல்நிறைந்த பாலைப் புளியக்கொட்டை தான்மிதக்கும்
இன்பநறும் பாலா, என்னஇல்லை? கண்ணுறங்காய்! அன்பில் விளைந்தஎன் ஆறுயிரே கண்ணுறங்கு! காவிரியின் பாதாளக் காலின் சிலம்பொலியும் பூவிரியப் பாடும் புதிய திருப்பாட்டும்
கேட்ட உழவர் கிடுகிடென நல்லவிழாக் கூட்டி மகிழ்ச்சி குதிகொள்ளத் தோளில் அலுப்பை அகற்றி அழகுவான் வில்போல் கலப்பை எடுத்துக் கனஎருதை முன்னடத்திப்
பஞ்சம் தலைகாட்டப் பாராப் படைமன்னர், நெஞ்சம் அயராமல் நிலத்தை உழுதிடுவார். வித்துநெல் வித்தி விரியும் களையெடுத்துக் கொத்துநெல் முற்றித் தலைசாய்ந்த கோலத்தை
மாற்றி யடித்து மறுகோலம் செய்தநெல்லைத் தூற்றிக் குவித்துத் துறைதோறும் பொன்மலைகள் கோலம் புரியும் குளிர்நாடும் உன்னதுவே! ஞாலம் புகழும் நகைமுத்தோய் கண்ணுறங்கு!
செம்புழுக்கல் பாலோடு பொங்கச் செழுந்தமிழர் கொம்புத்தேன் பெய்து குளிர்முக் கனிச்சுளையோ டள்ளூற அள்ளி முழங்கையால் நெய்யழுக உள்ளநாள் உண்ணும் உயர்நாடும் உன்னதுவே!
கோட்டுப்பூ நல்ல கொடிப்பூ நிலநீர்ப்பூ நாட்டத்து வண்டெல்லாம் நல்லஇசை பாய்ச்சக் கொத்தும் மரங்கொத்தி, தாளங் குறித்துவரத் தத்துபுனல் தாவிக் கரையில் முழாமுழக்க
மின்னும்பசுமை விரிதழைப்பூம் பந்தலிலே பன்னும் படம்விரித்துப் பச்சை மயிலாடுவதும், பிள்ளைக் கருங்குயிலோ பின்பாட்டுப் பாடுவதும் கொள்ளை மகிழ்ச்சித் தமிழ்நாடு கொண்டாய்நீ
குப்பையெலாம் மாணிக்கக் கோவை, கொடுந்தூம்பிற் கப்பும் கழுவுடையில் கண்மணியும் பொன்மணியும்! ஆடும் குளிர்புனலோ அத்தனையும் பன்னீராம்! சூடாமணி வரிசை தூண்டாச் சரவிளக்காம்!
எப்போதும் தட்டார் இழைக்கும் மணியிழையில் கொப்பொன்றே கோடிபெறும் கொண்டைப்பூ என்பெறுமோ? ஐந்தாறு வெண்ணிலவும் ஆறேழு செங்கதிரும் வந்தாலும் நாணும் வயிரத் திருகாணி
ஒன்றுக்கே வையத்தை ஒப்படைக்க வேண்டுமெனில் உன்மார்பின் தொங்கலுக்கு மூன்றுலகு போதுமா? மின்காய்த்த வண்ணம் மிகுமணிக ளோடுபசும் பொன்காய்த்த பூங்கொடியா ரோடுதம் காதலர்கள்
எண்ண மொன்றாகியே இல்லறத் தேர்தன்னைக் கண்ணும் கருத்தும் கவருமோர் அன்புநகர், ஆரும்நிகர் யார்க்கும் அனைத்தும் சரிபங்கென் றோரும்நகர், நோக்கி ஓடுந்தமிழ் நாடு
நின்நாடு! செல்வம் நிறைநாடு கண்ணுறங்கு பொன்னான தொட்டிலில் இப்போது!
அன்னைக்கு ஓர் தாலாட்டு - இரா.குறிஞ்சிவேந்தன் www.vanakkammalaysia.com
ஆண்டாண்டு காலமாக பிள்ளைத் தாலாட்டுப் பாடி வரும் அன்னையர் இனமே! இதோ வித்தியாசமாய் பிள்ளை நானும் பாடுகிறேன் நன்றித் தாலாட்டு ஒன்று!
பத்துமாதம் வயிற்றில் தாங்கியவள் என இலக்கியங்கள் உனைப் போற்றுகின்றன! வன்மையாக மறுக்கிறேன்; பத்துமாதம் நீ தாங்கவில்லை; தவமிருந்தாய்!
வயிற்றிலிருந்த வரை தொப்புள் கொடியாலும், வெளியே வந்த காலத்தில் பாசக்கொடியாலும் சுற்றி பால் வார்த்த தாயே! உன் இதயம் தானே எனக்கு இந்த உலகத்தினை சுவாசிக்கவும்,வாசிக்கவும் கற்றுத் தந்த பள்ளிக்கூடம்!
என் பசி நீயறிவாய்; என் ருசி நீயறிவாய்; என் உள்ளத்திலே மிதக்கும் ஆசைகள் கூட உனக்கு அத்துப்படி;
விரதம் பல இருந்து வரம் பல வாங்கி என்னை வாழ வைக்கத் துடித்தவளே!
மதிப்பெண்களைக் குறைவாக நான் வாங்கிய போதும் ஆசிரியருக்கு அர்ச்சனை செய்த உன் அப்பாவித்தனமான அன்பு என் ஆழ்மனதில் மிதக்கிறது கண்ணீரில்...
அப்பா-பிள்ளை இடையே அமைதிப் புறாக்களைப் பறக்கவிட்டே சமாதானம் இழந்த உன் தியாகம் பற்றி சொல்ல இன்றொரு நாள் தான் போதுமா?
எத்தனை பிறவி வந்தாலும் நீயே என் தாயாய் வருக என தவம் எதுவும் இருக்க மாட்டேன்... இந்த பிறவி ஒன்றே போதும் எப்போதும் உன்னை நினைத்திருக்க என் தாயே!
தங்கத்துக்குத் தாலாட்டு அன்புடன் புகாரி, கனடா
பொன்மாலை வேளையில் தவழ்கின்ற வெண்ணிலா கண்ணான கண்மணி உன்போலத் தவழுமா
பனிதூவும் காலையில் பூக்கின்ற பூக்களும் கனிவான உன்னெழில் முகம்போல பூக்குமா
ஆரீராரீ.. ஆரீராரோ
முற்றாத மாலையில் முகம்வீசும் தென்றலும் நான்பெற்ற கண்மணி உன்போல வீசுமா
வற்றாத கங்கையில் செழித்தோடும் வெள்ளமும் ஒப்பில்லாக் கண்மணி உன்போல ஓடுமா
ஆரீராரீ.. ஆரீராரோ
கிளிபேசும் பேச்சிலும் குயில்பாடும் பாட்டிலும் தளிரான கண்மணி உன்பாஷை கேட்குமா
மயில்தோகை விரிப்பிலும் மான்தேக வனப்பிலும் ஒயிலான கண்மணி உன்வண்ணம் விளங்குமா
ஆரீராரீ.. ஆரீராரோ
உலகங்கள் யாவுமே என் சொந்தம் ஆயினும் உயிரான உயிரென்றும் நீதானே கண்மணி
உயிர் நீங்கும் வேளையும் உறங்காத கண்களில் ஒளிவீசும் தங்கமே உனைத்தானே தேடுவேன்
ஆரீராரீ.. ஆரீராரோ
அன்பே அன்பே என் சொந்தமே கண்ணே கண்ணே கண் தூங்குவாய்
ஆரீராரீ.. ஆரீராரோ
மானே தேனே தேனோடையே பூவே பொன்னே பூ முத்தமே
ஆரீராரீ.. ஆரீராரோ
உயிரே உயிரே உயிர்த் தேடலே உயிரில் ஊறும் கவி வெள்ளமே
ஆரீராரீ.. ஆரீராரோ
|