தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments

Home > Tamil Language & Literature > Paventhar Bharathidasan - பாரதிதாசன் >  ilainjar ilakkiyam -  இளைஞர் இலக்கியம்

Literary Works of Bharathidaasan
( Kanakasubbaratnam, 1891-1964)
புரட்சி கவிஞர் பாரதிதாசன்
(கனகசுப்பரத்னம், 1891 - 1964) படைப்புகள்

VII : ilainjar ilakkiyam -  இளைஞர் இலக்கியம்

Etext preparation : Ms. Mahitha Sridhar, Toronto, ON, Canada; Mr. P.I.Arasu, Toronto, ON, Canada & Ms. Suhitha Arasu, Toronto, ON, Canada,
Etext proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
Web, pdf versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.To view the Tamil text correctly you need to set up the following:
    i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
    ii)Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
    © Project Madurai 1999 - 2003 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
    electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


உள்ளுறை
    1. தமிழ்
    2. இயற்கை
    3. அறிவு
    4. ஊர்தி
    5. தொழில்
    6. உயிர்கள்
    7. தாலாட்டும் துயிலெழுப்பும்
    8. சிரிப்பு
    9. சிறுகதைப் பாட்டு


1. தமிழ்
தமிழே வாழ்க! தாயே வாழ்க!
அமிழ்தே வாழ்க! அன்பே வாழ்க!
கமழக் கமழக் கனிந்த கனியே
அமைந்த வாழ்வின் அழகே வாழ்க!

சேர சோழ பாண்டிய ரெல்லாம்
ஆர வளர்த்த ஆயே வாழ்க!
ஊரும் பேரும் தெரியா தவரும்
பாரோர் அறியச் செய்தாய் வாழ்க!

சீரிய அறமும் சிறந்த வாழ்வும்
ஆரும் அடையும் அறிவைப் பொழிந்தாய்;
வீரம் தந்தாய் மேன்மை வகுத்தாய்
ஈர நெஞ்சே இன்பம் என்றாய்.

குமரி நாட்டில் தூக்கிய கொடியை
இமயத் தலைமேல் ஏறச் செய்தாய்.
தமிழைத் தனித்த புகழில் நட்டாய்
தமிழின் பகைவர் நெஞ்சைச் சுட்டாய்.

முத்தமிழ் அம்மா! முத்தமிழ் அம்மா!
தத்துவ உணர்வை முதலில் தந்தாய்;
எத்தனை இலக்கியம், இலக்கணம் வைத்தாய்
முத்துக் கடலே! பவழக் கொடியே!

எழுத்தே பேச்சே இயலே வாழ்க!
இழைத்த குயிலே இசையே வாழ்க!
தழைத்த மயிலே கூத்தே வாழ்க!
ஒழுக்க வாழ்வின் உயிரே வாழ்க!

(இழைத்த - மணி பதித்த)

தமிழே ஆதித் தாயே வாழ்க!
தமிழர்க் கெல்லம் உயிரே வாழ்க!
தமிழ் நாட்டுக்கும் பிற நாட்டுக்கும்
அமிழ்தாய் அமைந்த அம்மா வாழ்க!

ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப்
பாரில் தமிழன் நானே என்னும்
சீரைத் தந்த தமிழே வாழ்க!
ஓரா உலகின் ஒளியே வாழ்க!

(ஓரா - அறிவு நிரம்பாத
ஒளியே - அறிவே)

2. முத்தமிழ்
படிப்பும் பேச்சும் இயற்றமிழ்!
பாடும் பாட்டே இசைத்தமிழ்!
நடிப்பும் கூத்தும் சேர்ந்ததே
நாடகத் தமிழ் என்பார்கள்.
முடிக்கும் மூன்றும் முத்தமிழே!
முத்தமிழ் என்பது புத்தமுதே!
முடித்த வண்ணம் நம் தமிழே
முத்தமிழ் என்றே சொல்வார்கள்.

3. மூவேந்தர்
சேர வேந்தர் தமிழ் வேந்தர்!
சிறந்த சோழர் தமிழ் வேந்தர்!
பாரோர் எல்லாம் புகழ்கின்ற
பாண்டிய வேந்தர் தமிழ் வேந்தர்!
நேரே தமிழைக் காத்தரே!
நீண்ட நாட்டை ஆண்டாரே!
வீரத் தாலே புகழெல்லாம்
விளைத்த இவரே மூவேந்தர்.

4. தமிழ்மொழி-தமிழ்நாடு
நாம்பே சுமொழி தமிழ் மொழி!
நாமெல்லாரும் தமிழர்கள்!
மாம் பழம் அடடா! மாம் பழம்
வாய்க் கினிக்கும் தமிழ் மொழி!
தீம்பால் செந்தேன் தமிழ் மொழி!
செங்க ரும்பே தமிழ் மொழி!
நாம்பே சுமொழி தமிழ் மொழி!
நாமெல்லாரும் தமிழர்கள்!

நாம்பே சுமொழி தமிழ் மொழி!
நமது நாடு தமிழ் நாடு!
காம்பில் மணக்கும் மல்லிகை
காதில் மணக்கும் தமிழ் மொழி!
வேம்பா நஞ்சா தமிழ்மொழி?
விரும்பிக் கற்பது தமிழ் மொழி!
நாம்பே சுமொழி தமிழ் மொழி!
நமது நாடு தமிழ் நாடு!

5. கட்டாயக் கல்வி
பன்றி எதற்குத் தெருவில் வந்தது?
பாட்டையி லுள்ள கழிவை உண்ண.
என்ன கழிவு தெருவில் இருக்கும்?
இருக்கும் பிள்ளைகள் வௌிக் கிருந்தனர்.

என்ன காரணம் அப்படிச் செய்ய?
இருக்கும் பெற்றோர் ஒழுக்க மற்றோர்.
சின்ன நடத்தை எப்படித் தொலையும்?
சிறந்த அறிவு பெருக வேண்டும்.

அறிவை எப்படி அடைய முடியும்?
அனைவர் தாமும் படிக்க வேண்டும்.
நிறைய எவரும் படிப்ப தெப்படி?
நீள முயன் றால் முடியும்.

குறைகள் தீர முயல்வ தெப்படி?
கூட்ட மக்கள் கிளர்ச்சி வேண்டும்.
கறைகள் போகா திருப்ப தென்ன?
கட்டாயக் கல்வி கிட்டாமை தான்.

6. தமிழன்
நல்லுயிர், உடம்பு, செந்தமிழ் மூன்றும்
நான் நான் நான்!
கல்வியில் என்னை வெல்ல நினைப்பதும்
ஏன் ஏன் ஏன்?

பல்லுயிர் காக்கும் எண்ணம் எனக்குண்டு
பார் பார் பார்!
செல்வத்திலே என்னை வெல்ல நினைப்பவன்
யார் யார் யார்?

சொல்லுடல் உள்ளம் ஞாலந் தாங்கும்
தூண் தூண் தூண்!
புல்லர்கள் என்னை வெல்ல நினைப்பது
வீண் வீண் வீண்!

தொல்லுல குக்குள்ள அல்லல்அ றுப்பதென்
தோள் தோள் தோள்!
வல்லவன் என்னை வெல்ல நினைப்பவன்
தூள் தூள் தூள்!

7. தமிழ்நாடு ஒன்றுபடுக!
தமிழ்நா டே!என் தாய்நா டே!நீ
தமிழைச் சேர்த்தாய் எங்கள் உயிரில்
அமிழ்தைச் சேர்த்தாய் எங்கள் வாழ்வில்
தமிழ்நா டேநீ வாழ்க! வாழ்க!

முத்தமிழ் அன்னாய்! முழுதும் நாங்கள்
ஒத்து வாழ்ந்தால் உனக்கும் நல்லது
செத்துக் கிடக்கும் எமக்கும் நல்லது
முத்தமிழ் அன்னாய் வாழ்க! வாழ்க!

குமரி தொடங்கி இமயம் வரைக்கும்
அமைந்த உன்றன் அளவும் குறைந்தது.
தமிழர் மேன்மைத் தரமும் குறைந்தது
தமிழின் மேன்மைத் தரமும் குறைந்தது.

வாழ்விற் புதுமை மலரக் கண்டோம்!
தாழாத் தலைமுறை தழையச் செய்யும்
வாழைக் கன்றுகள் வளரக் கண்டோம்.
வாழ்க அன்னாய் வாழ்க! வாழ்க!

8. தமிழ்தான் நீயா?
தமிழப் பெண்ணே தமிழப் பெண்ணே
தமிழ்ப டித்தாயா?

தமிழ்ப டித்தேன் தமிழ்ப டித்தேன்
தமிழப் பெண் நானே.

தமிழப் பெண்ணே தமிழப் பெண்ணே
தமிழை ஏன் படித்தாய்?

தமிழ் "படித்தேன் " அதை உண்ணத்தான்
தமிழ்ப டித்தேன் நான்.

(தமிழ் "படித்தேன்" என்றால், தமிழானது ஒரு படி
அளவுள்ள தேன் போல் இனிப்பது என்பது பொருள்)

அமிழ்தைத் தந்தால் தமிழைத் தள்ளி
அதை நீ உண்பாயா?

அமிழ்தும் தமிழுக் கதிக இனிப்பா?
அதுவா எனைவ ளர்க்கும்?

தமிழ்தான் நீயோ? நீதான் தமிழோ?
தமிழப் பெண்ணே சொல்!

தமிழை யும்பார் என்னை யும்பார்
வேற்றுமை யே இல்லை!

9. வானொலி
வானொலி எல்லாம் தேனொலி ஆக்கும்
செந்தமிழ்ப் பாட்டைக் கேட்டுக் கேட்டு
நானும் மகிழ்வேன் நாடும் மகிழும்
நானிலம் எல்லாம் நன்றாய் மகிழும்!

ஏன்ஒலி செய்தார் செந்தமிழ் நாட்டில்
இன்னொரு மொழியில் அமைந்த பாட்டை?
நானும் அழவா? நாடும் அழவா?
நமது நாட்டில் அதற்கென்ன வேலை?

தெலுங்கு நாட்டில் தெலுங்கு வேண்டும்.
செந்தமிழ் நாட்டில் அதற்கென்ன வேலை?
தெலுங்கு நாட்டில் செந்தமிழ்ப் பாட்டைச்
சேர்ப்பதுண்டா? இல்லவே இல்லை!

விலங்கு பறவை செந்தமிழ் நாட்டில்
விரும்பிக் கேட்பதும் செந்தமிழ்ப் பாட்டை!
குலுங்கும் அரும்பும் செந்தமிழ் நாட்டில்
குளிர்ந்த செந்தமிழ் கேட்டு மலரும்!
2. இயற்கை3. அறிவு4. ஊர்தி5. தொழில்6. உயிர்கள்7. தாலாட்டும் துயிலெழுப்பும்8. சிரிப்பு9. சிறுகதைப் பாட்டுமுற்றும்.
Mail Usup- truth is a pathless land -Home