சனிக்கிழமை, 8 யூலை 2006, 08:30 ஈழம் புதினம் நிருபர் நேரடிப் பேச்சுக்கான மகிந்தவின் அழைப்பு போலித்தனமானது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் NDTV தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வழங்கிய நேர்காணலில் சு.ப.தமிழ்ச்செல்வன் இதனை தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், மகிந்த ராஜபக்ச ஆகியோருடைய நேர்காணல்களை அண்மையில் வெளியிட்ட NDTV நிறுவனம் அதன் தொடர்ச்சியாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனிடம் இருந்தும் நேர்காணல் ஒன்றைப் பெற்றுள்ளது.
அந்த நேர்காணலில் சு.ப.தமிழ்ச்செல்வனிடம் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகளும் அதற்கு அவர் தெரிவித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: நாம் அரச தலைவரின் அழைப்பின் பேரில் தான் இலங்கை வந்தோம். அரச தலைவரை ஒரு நேர்காணல் கண்டிருக்கின்றோம். இருதரப்பும் சந்தித்து பேச்சு நடத்தி பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவேண்டிய காலம் நெருங்கிவிட்டது. மகிந்த ராஜபக்சவும் பிரபாகரனும் எதுவித தலையீடுமின்றி சந்தித்து பேசுவது தீமையில்லையென தோன்றுகின்றது. அப்படியான நிலைப்பாடு உங்களுக்கு ஏற்புடையதாக இருக்குமா?
பதில்: மகிந்த ராஜபக்சவுடைய பேச்சுக்கும் செயலுக்கும் நிறைய இடைவெளியிருக்கின்றது. பேசுவதொன்று செய்வதொன்றாக அண்மைக்கால நடவடிக்கைகளை அவதானிக்கவும் ஊகிக்கவும் முடிகின்றது. ஏனெனில் இதுவரை காலமும் இல்லாத அளவிற்கு எங்களுடைய தாயகத்தில் எங்கள் மக்கள்இ குழந்தைகள் பெருமளவானோர் படுகொலை செய்யப்பட்டும்இ கடத்தப்பட்டும் உள்ளனர்.
பெரியளவிலான இராணுவ வன்முறையை - அரச பயங்கரவாதத்தை - கட்டவிழ்த்து விட்டுக்கொண்டு பேச்சுக்கான அழைப்பை மகிந்த ராஜபக்ச விடுப்பதென்பது போலித்தனமானது. அனுசரணையாளர்களோடு இணைந்து நல்லதொரு முடிவை எட்டக்கூடிய நல்ல வாய்ப்பு உள்ள நிலையில் அதனை உதாசீனப்படுத்தி - பலவீனப்படுத்தி - மகிந்த ராஜபக்ச நேரடிப் பேச்சுக்கான அழைப்பை விடுப்பதென்பது போலித்தனமான அறிவிப்பாகத் தான் அதனை கருதவேண்டியுள்ளது.
கேள்வி: இத்தகைய கசப்புணர்வும் அவநம்பிக்கையும் இருக்கின்ற நிலையில் உண்மையிலேயே நீங்கள் யுத்தத்திற்கு தயாராகின்றீர்கள் என்று கருதலாமா?
பதில்: உண்மையில் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் தமிழ் மக்களின் பாதுகாவலர்களாக விடுதலைப் புலிகளும் தலைமையும் இருக்கின்றது. கடந்த 58 வருடங்களாக எங்களுடைய மக்கள் இனப்படுகொலைகளைச் சந்தித்து பல்லாயிரகணக்கான மக்கள் கொல்லப்பட்டு பல இலட்சம் மக்கள் தமது சொந்த இடத்திலிருந்து விரட்டப்பட்டுஇ வெளியேற்றப்பட்டு ஒரு அவலமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் தான் ஒர் ஆயுதப்போராட்டத்தை தொடங்கி எமது தலைவர் அவர்கள் ஒரு விடுதலை அமைப்பை கட்டியெழுப்பி தமிழர் தாயகத்தில் 70 வீதமான நிலப்பரப்பை மீட்டெடுத்துஇ ஆக்கிரமிப்பு இராணுவத்தை வெளியேற்றி இன்று ஒரு நடைமுறையரசை - ஒரு நிம்மதியான வாழ்வை - எமது மக்களுக்கு வழங்கியிருக்கின்றோம்.
மக்களைப் பாதுகாப்பதற்கான பலத்தை பேணுகிறோம்
ஒரு நடைமுறை அரசை கட்டியெழுப்பி நிர்வாகித்து வருகின்றோம். அந்த வகையில் நாம் ஒரு போரை விரும்பாவிட்டாலும் எங்களுடைய தாயகப் பிரதேசத்தில் சிங்களப் படைகளும் எதிரிப்படைகளும் ஒரு இன அழிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு ஒரு யுத்தத்தை மேற்கொள்வார்களானால் அந்த யுத்தத்தலிருந்து எமது மக்களையும் எமது தாயகத்தையும் காக்கக்கூடிய வல்லைமையுடனும் வலிமையுடனும் எமது பலத்தைப் பேணிவருகின்றோம்.
கேள்வி: இன்றைய சூழ்நிலையில் அரசியல் பிரச்சனைகளுக்கு ஒரு ஒழுங்கைச் செய்வதென்றால் எந்த விதமான மாதிரி சரிவரும். இந்தியா ஒரு விதமான "மொடலை"ச் சொல்லுகின்றது இலங்கை அரசு இரண்டு விதமான மொடல்களைச் சொல்லியிருக்கின்றது. எந்தவிதமான அரசியல் தீர்வு மாதிரி தமிழ் மக்களுக்கு ஏற்புடையதாக இருக்குமெனக் கருதுகிறீர்கள்?
பதில்: ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தமது உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய மக்கள் தான் என்றுமே இதனைத் தீர்மானித்திருக்கின்றார்ககள். தங்களுக்கு எது என்பதை தீர்மானிப்பது அந்த மக்களுக்குரியதான உரிமை. மற்றவர்களுடைய ஆலோசனைகளை ஆலோசனைகளாக எடுக்கலாமே தவிர அவை தீர்வாக அமையாது. எங்களுடைய மக்களைப் பொறுத்தவரையில் தங்களுடைய முழு அளவிலான உரிமைகளை மீட்டெடுப்பதற்காக ஒரு உரிமைப் போராட்டத்தை நீண்டகாலமாக முன்னெடுத்து வருகின்றார்கள். எங்களுடைய மக்கள் தான் எந்தத் தீர்வு என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
எங்களுடைய உரிமைகளை மறுத்து இராணுவ ஆக்கிரமிப்பை முழு அளவில் திணித்துள்ள சிங்கள அரசாங்கம் என்ன தீர்வை முன்வைக்கப்போகின்றது என்று "மொடலை" முன்வைத்தால் எங்களுடைய கருத்துக்களைச் சொல்லக்கூடியதாக இருக்கும். எங்களைப் பொறுத்த வரையில் எமது மக்கள் முழு அளவிலான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் - முழு அளவிலான அரசியல் தீர்வைப் பற்றிய சிந்தனையோடும் எதிர்பார்ப்போடும் தான் இருக்கின்றார்கள்.
மக்களே தீர்மானிப்பர்
எங்களுடைய மக்கள் தீர்மானிப்பார்கள் தமக்கு எது தேவையென்று - இப்போது உள்ள பிரச்சனை நங்கள் ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் இன வன்முறைக்கும் முகம் கொடுத்த வண்ணம் உள்ளோம். இதிலிருந்து எமது மக்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்பதே எமது உண்மையான பிரச்சனையாக உள்ளது.
கேள்வி: தங்களுடைய மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எங்களுக்கு தந்த செவ்வியிலே கூறிய விடயங்கள் எங்களை ஒரு மதிப்பீடு செய்ய வைத்திருக்கின்றது. அதாவது சர்வதேச ரீதியாக ஓரளவு ஒதுக்கப்பட்ட நிலையில் இருக்கின்ற விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியாவிலிருந்து ஒதுக்கப்பட்டதாக இல்லாமல் இந்தியாவின் அனுசரணையைப் பெற்றுக்கொள்வற்காக இந்தியாவிடம் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பாக ஒரு மன்னிப்பு கோருவது போன்ற ஒரு தொனியில் நாம் கணிப்பீடு செய்தால் அதனை சரியென நீங்கள் சொல்லுவீர்களா?
பதில்: எங்களைப் பொறுத்தவரையில் சிங்கள இனவாத அரசாலும் சிங்கள இனவாதிகளாலும் சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தினராலும் எங்களுடைய மக்கள் மிகக் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். இந்த ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்டு எமது தாயகத்தில் சுதந்திரமாக - கௌரவமாக - நிம்மதியாக - ஏனைய மக்கள் போன்று - இனங்கள் போன்று - வாழ்வுறுமையை மீட்டெடுப்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கின்றோம்.
நாங்கள் போராடுவது சிங்கள ஆக்கிரமிப்புக்கு எதிராகத்தான் சர்வதேச நாடுகளுடனோ, பிராந்திய நாடுகளுடனோ, இந்தியாவுடனோ எந்த நாடுகளுடனோ முரண்பாடுகளையோ அல்லாவிட்டால் பகையுணர்வையோ ஏற்படுத்திக்கொள்ள நாம் விரும்பவில்லை.
நாம் முழுமையாகவே எங்களுடைய தாயகத்தில் எமது உரிமைகளை மீட்டெடுத்து நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காகத் தான் போராடிக்கொண்டிருக்கின்றோம். இதுதான் தமிழீழ விடுதலைப் போராட்டம் - தமிழர்களுடைய உரிமைப் போராட்டம் - ஈழத்தமிழர்களுடைய உரிமைப் போராட்டம் - இன்று உலகில் வாழும் தமிழ் மக்கள் தமது முழு அளவிலான ஆதரவை தந்துகொண்டிருக்கின்றார்கள் இந்த நேரத்தில் எங்களுடைய உரிமைப் போராட்டத்தை வென்று விடுவதில்தான் முழுக் கவனமும் உள்ளதே தவிர நாங்கள் பழையவற்றைக் கிளறி - அந்தக் கசப்பான நினைவுகளை மீண்டும் கிளப்பி - சர்ச்சைக்குரிய நிலைமையைத் தோற்றுவிக்க நாங்கள் விரும்பவில்லை. இது தான் எங்களுடைய நிலைப்பாடு.
ராஜீவ் கொலை விவகாரம் கேள்வி: அப்படியானால் ஏன் அன்ரன் பாலசிங்கம் கவலை தெரிவித்து மன்னிப்பு தெரிவித்து எங்களை ஒளிபரப்புச் செய்யும் நிலைக்குத் தள்ளியிருந்தார்?
பதில்: என்னைப் பொறுத்தவரையில் அது பற்றி கருத்துச் சொல்ல முடியாமல் உள்ளது. ஏனெனில் பல வருடங்களுக்கு முன்னாக எமது தேசியத் தலைமை தெளிவான தன்னுடைய நிலைப்பாட்டைச் சொல்லியுள்ளது. இதற்குப் புது வியாக்கியானங்கள் கொடுத்து உரிய பதில்களை சோடிக்க விரும்பவில்லை. அன்ரன் பாலசிங்கம் அவர்கள் உங்களுக்கு கூறியிருக்கின்றார் என்றால் அவரைத் தான் நீங்கள் கேட்கவேண்டும்.
கேள்வி: ஐ.நா. சபையிலே 1998 ஆம் சாசனத்தின் பிரகாரம் வயது குறைந்தவர்களை போருக்கு எடுக்கக் கூடாதென்ற நிலைப்பாடு இருக்கக்கூடியதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் சிறுவர்களைப் படைக்குத் திரட்டுவது மாத்திரமன்றி மனிதநேயமற்ற வகையில் நடத்துவதாகவும் தொடர்ந்து ஐ.நா. சாசனத்திற்கு எதிராகப் புலிகள் நடந்கொண்டிருக்கின்றார்கள் என்றும் ஐ.நா.சபையில் சர்ச்சை உருவாக்கப்பட்டுள்ளது. அதனுடைய நிலைப்பாடு என்ன?
சிறுவர்களின் அவலம்
பதில்: இதனை முற்றாக மறுக்கிறோம். நாங்கள் ஐ.நா. சபைக்கு பகிரங்கமாக வேண்டியிருக்கிறோம். தாங்கள் நேரில் வந்து உண்மை நிலைகளைக் கண்டறிவதற்கு அழைத்திருக்கிறோம். எங்களுடைய குழந்தைகள் பெரும் அவலத்திற்கு உட்படுத்தப்படுகின்றார்கள். பெரும் அவலத்திற்குள் சிறார்கள் சிக்கியுள்ளார்கள். பாடசாலைகள்இ கிராமங்கள்இ பொது இடங்கள்இ எனப் பல இடங்களில் எமது சிறார்கள் கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள். பாடசாலை சீருடையோடு நூற்றுக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள்இ குழந்தைகளை மட்டும் கொன்றொழிப்பது மட்டுமல்ல. பாதுகாவலர்களையும் கொன்றொழித்திருக்கின்றார்கள்.
பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் உறவுகளை இழந்து எமது பராமரிப்பில் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் புலிகள் ஆயுதப்படையில் சேர்த்தார்கள் என்று சொல்லுவது தவறு. உண்மை நிலைகளைக் கண்டு அறிக்கைகளை விடுவது தான் பொருத்தமாக இருக்கும். ஐ.நா.சபையிடம் வேண்டியிருக்கின்றோம். உண்மை நிலைகளை நேரடியாக வந்து கண்டறிந்து மதிப்பீடுகளை செய்யும் படி வேண்டியிருக்கின்றோம்.
எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் சிறுவர்களை படையில் சேர்க்கவில்லை. பெற்றோர்களை இழந்த - போரால் பாதிக்கப்பட்ட - பல்லாயிரக்கணக்கான சிறுவர்களைப் பாதுகாத்து, மறுவாழ்வு கொடுத்து எதிர்கால வாழ்வுக்குரிய வேலைத் திட்டங்களை மேற்கொண்டு இருக்கின்றோம். இதை வந்து இலங்கை அரசாங்கம் தவறான பிரசாரத்திற்குப் பயன்படுத்துவதுடன் தமிழீழ விடுதலைப் போராட்டம் மீதும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் தொடர்ந்து குற்றம் சுமத்திப் பரப்புரை செய்து வருகின்றது.
எங்கள் மக்களுடைய போக்குவரத்தை தடைசெய்து தவறான பரப்புரைகளை அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஐ.நாவுக்கு உண்மை நிலைகளை கண்டறிய நாம் அழைப்பு விடுத்துள்ளோம். அண்மையில் கூட எமது குழந்தைகள் 6 மாதக் குழந்தை, 8 மாதக் குழந்தை, 10 வயதுக் குழந்தை என்று வேறுபாடுகளின்றி கொன்றொழித்தது மட்டுமன்றி குழந்தைகளுடைய கழுத்திலே கொடிய இராணுவம் தூக்குப் போட்டு தொங்கவிட்டிருக்கின்றது. இது எங்களுடைய மக்களின் மனங்களில் ஆத்திர உணர்வையும் கொந்தளிப்பையும் தோற்றுவித்துள்ளது, இப்படியான கொடுமைகளைச் செய்துகொண்டு வெளியுலகிற்கு உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களை அரசு பரப்பி வருகின்றது என்பது தான் உண்மை. |