பேச்சுக்களின் பெயரால் புலிகளைச் சிதைக்க தீட்டிய திட்டங்கள் என்ன?: ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியது 'சிங்கள' நாளேடு! Puthinam on (Ranil Wickremasinghe supporting) Sinhala Lankadeepa Daily's concerns for Geneva & Karuna 2 February 2006 "...சமாதான பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலின் முதலாவது விடயம் யுத்த நிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்துவதாகும். விடுதலைப் புலிகள் சொல்லப்போவது அதெல்லாம் செய்வதற்கு முன்னர் கருணாவை நிராயுதபாணியாக்குங்கள் என்பதையாகும். ...அரசாங்கம் கருணாவின் தலையைப் பலிகொடுக்குமா? .."
சிறிலங்கா அரசாங்கங்கள் பேச்சுக்கள் என்ற பெயரால் விடுதலைப் புலிகளைச் சிதைக்கத் தீட்டிய திட்டங்கள் என்ன என்பதை முன்னணி சிங்கள நாளேடான 'லங்காதீப' ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியுள்ளது.
இன்றைய 'லங்காதீப' நாளேடு வெளியிட்டுள்ள அந்தக் கட்டுரையின் சில விடயங்கள் வழமையான அவதூறுகளானாலும் திரைமறைவுச் சதிகளை அம்பலப்படுத்தியிருப்பதால் அதை புதினம் படிப்பாளர்களுக்கு தருகிறோம்.
கட்டுரையின் முழு வடிவம்:
வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் கருணையை இழந்த பின்னர் கருணாவிற்கு கருணை காட்டியது சிறிலங்கா அரசாங்கம் என்றொரு கருத்து உள்ளது. ஆனால் இப்போது அந்தக் கருணையும் இல்லாது போவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
அண்மையில் சிறிலங்கா அரசாங்கத்தை கருணா குற்றம் சாட்டியிருந்தார். அதேபோல சிறிலங்கா அரசாங்கம் கருணாவைக் குற்றம் சாட்டியது. சிறிலங்கா அரசாங்கம் தன்னை ஓரங்கட்டிவிட்டு விடுதலைப் புலிகளுடன் சமாதான ஒப்பந்தத்தில் ஈடுபட உள்ளது என்று கருணா குற்றம் சாட்டியிருந்தார்.
விடுதலைப்புலி முக்கிய உறுப்பினர் ஒருவர் உட்பட அதன் உறுப்பினர்களைப் படுகொலை செய்து அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான இணக்கப்பாட்டை கருணா சிதைக்க முற்படுகிறார் என்றே கருணா மீது அரசாங்கம் குற்றம் சாட்டியது.
இவ்விரு குற்றச்சாட்டுக்களிலும் ஒன்று தெளிவாகிறது. அதாவது ஜெனீவா பேச்சுவார்த்தை மேசையில் அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் இருசாராரும் இணைந்து கருணாவின் கழுத்தில் கத்தியை வைக்கப் பார்க்கின்றனர்.
விடுதலைப் புலிகள் ஜெனீவாவிற்குச் செல்வது கருணாவின் கழுத்தைக் கேட்பதற்கே. கருணா இதனை அறிவார். இதனால்தான் அவர் முதல் முறையாக அரசாங்கத்தைக் குற்றம் சாட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகள் மீண்டும் யுத்தத்திற்குப் போவதை தவிர்க்க வேண்டுமாயின் அவர்களுக்கு கருணாவின் கழுத்தைக் கொடுக்க வேண்டியேற்படும் என்பதை அரசாங்கமும் அறியாமல் இல்லை. அரசாங்கமும் விடுதலைப் புலிகளைப் படுகொலை செய்தமை தொடர்பாக முதல் முறையாகக் கருணாவைக் குற்றம் சாட்டியது அந்த வேலைக்கான வழியை அமைத்துக் கொள்வதற்காக இருக்கலாம்.
இப்போது கருணா தனது தலையைக் காத்துக் கொள்ளப் பார்க்கிறார். அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இணக்கப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்து விடுதலைப் புலிகளுடன் கருணா யுத்த நிறுத்த உடன்படிக்கை செய்து கொண்டது தனது கழுத்தைக் காப்பதற்கு வேறு மார்க்கம் இல்லை என்பதாக இருக்கலாம்.
கருணாவிற்கு வேறு யாரின் கருணை உள்ளது?
ரணிலின் பயங்கரமான குள்ளநரித்தனத்தினாலேயே பிரபாகரன் கருணாவை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று கடந்த மாவீரர் நாள் உரையின் போது அன்ரன் பாலசிங்கம் தெரிவித்திருந்தார்.
ரணில் எங்களை பாங்கொங்கிற்கு அழைத்துச் சென்று கனவுலகொன்றை காண்பித்து எங்களை அழிக்கப்பார்த்தார். கருணா அதில் சிக்கிக் கொண்டார். நாங்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்துகையில் அவர் சொப்பிங் சென்றார். பாங்கொக்கில் விலை மாதர் பின்னால் சென்றார்... .. இவ்வாறு பாலசிங்கம் கூறினார். 2005 நவம்பர் மாதம் 27 ஆம் நாள் பாலசிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.
பிரபாகரனுக்கும் கருணாவிற்கும் இடையிலான மோதல்கள் 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காலத்திலேயே வெடித்தது. ஆனால் பிரபாகரனுக்கும் கருணாவிற்கும் இடையில் பிரச்சனைகள் இருப்பதனை சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த 2003 ஆம் ஆண்டிலேயே ரணில் அரசாங்கம் அறிந்திருந்தது.
அந்தப் பிரச்சனை உச்சக்கட்டத்தையடைந்து பேச்சுவார்த்தை மேசைக்கு வரும் வரையே ரணில் அரசாங்கம் பார்த்துக் கொண்டிருந்தது. விடுதலைப் புலிகள் தயாரித்த இடைக்கால நிர்வாக சபை யோசனை பேச்சுவார்த்தைக்கு எடுக்கப்படும் நேரத்திலேயே இந்தப் பிரச்சனை பேச்சுவார்த்தை மேசைக்கு வரவிருந்தது.
வடக்கிற்கும் கிழக்கிற்கும் ஒரு இடைக்கால அதிகாரம் சபை என்பது முடியாது. கிழக்கிற்கென எனக்கு தனியாகவொரு அதிகார சபை தேவை. இதற்கு எனது தலைவர் விரும்பாவிடில் நான் தலைவரிடமிருந்து விலகி கிழக்கிற்குத் தலைமை தாங்குவேன். பேச்சுவார்த்தை மேசையில் இப்படிக் கூறுவதற்காக கருணா காத்திருந்தார்.
அப்படி நிகழ்ந்திருந்தால் முழு உலகத்தின் முன்பாக பேச்சுவார்த்தை மேசையில் விடுதலைப் புலிகள் இரண்டாக பிளவுப்பட்டிருப்பார்கள்.
எம்மால் இதற்கு இணங்க முடியாது. கருணாவைப் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து நீக்க வேண்டும். அவர் இனிமேலும் எங்களின் பிரதிநிதியல்ல. இந்தப் பிரச்சனை எழுந்திருந்தால் பாலசிங்கத்தினால் முன்வைக்கக்கூடுமாகவிருந்த வாதம் இதுதான்.
ஆம். நான் இனிமேலும் உங்களின் பிரதிநிதியல்ல. நீங்கள் பிரதிநிதித்துவம் செய்வது வடக்கை. நான் பிரதிநிதித்துவப்படுத்துவது கிழக்கை. அதன் தலைவராக நான் இந்தப் பேச்சுவார்த்தை மேசையில் இருப்பேன். இது கருணாவினால் முன்வைக்கப்படவிருந்த வாதம்.
உங்களின் இயக்கம் உடைந்து போயுள்ளது தெளிவாகிறது. நீங்கள் வடகிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்கிறீர்கள் என்ற அடிப்படையிலேயே இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. கிழக்கின் முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்காகவே நாம் ரவூப் ஹக்கீமை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்தோம். ஆனால் கிழக்கின் தமிழ் பிரதிநிதித்துவமாக நீங்கள் நியமித்த பிரதிநிதி இப்போது உங்களிடமிருந்து பிரிந்து கிழக்கிற்கு புதிய தலைமையைக் கொடுத்துள்ளார்.
நாம் அவரின் தலைமைத்துவத்தைக் கருத்தில் எடுக்காவிட்டால் அவர் யுத்த நிறுத்த உடன்படிக்கையை ஏற்காது கிழக்கிற்காக போர் தொடுப்பார். அப்படி நிகழாதென்ற உறுதிமொழியை உங்களால் தர முடியுமா? அதனால் எமக்கு அவரைப் பேச்சுவார்த்தை மேசையில் வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
இது கருணாவை பேச்சுவார்த்தை மேசையில் வைத்துக்கொள்வதற்காக ரணில் அரசாங்கத்தினால் முன்வைக்க வேண்டியேற்படும் வாதமாகும்.
இந்த வாதப்பிரதிவாதங்களின் முடிவானது விடுதலைப் புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை யோசனையை அவர்களாகவே கைவிடுவதாகும்.
பேச்சுவார்த்தை மேசையில் புதிய தரப்பாக இணைந்துள்ள கருணா தரப்பினதும் யோசனைகளைக் கருத்தில் எடுத்தே ரணில் அரசாங்கத்திற்கு புதிய இடைக்கால நிர்வாக சபைக்கான யோசனைகளை தயாரிக்க வேண்டியேற்படும்.
கருணா பேச்சுவார்த்தை மேசையில் இருக்கும் வரை கருணாவைக் கொல்வதற்கான வாய்ப்பு பிரபாகரனுக்குக் கிடைக்காததால் கிழக்கின் பலத்தைப் பெருக்கிக் கொண்டு கருணா கிழக்கிற்கென புதிய இயக்கத்தை ஆரம்பித்து அதன் தலைவராக முடியுமாகவிருந்தது.
இதுதான் நடக்கவிருந்தது. எனினும் அது நடக்கவில்லை. ஏன்?
காரணம் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஜே.வி.பியுடன் கூட்டுச் சேர்ந்து ரணிலின் அரசைக் கவிழ்த்துப் பொதுத் தேர்தலுக்கான பாதையை ஏற்படுத்திக் கொண்டதால் ஆகும்.
அதனால் உள்வீட்டுப் பிரச்சனையை உலகத்தார் முன் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு செல்லாது வீட்டிற்குள்ளேயே தீர்த்துக் கொள்வதற்கு பிரபாகரனுக்கு வாய்ப்புக்கிடைத்தது.
ரணிலின் அரசாங்கத்தை தோற்கடித்து 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி - ஜே.வி.பி. கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடனே அந்த அரசாங்கத்திடம் பிரபாகரன் வேண்டுகோளொன்றை விடுத்தார். இராணுவத்தினரை முகாம்களுக்குள் வைத்துவிட்டு கருணாவைத் துப்பரவு செய்வதற்கு இடமளிக்குமாறே வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
கூட்டணி அரசாங்கம் அந்த கோரிக்கைக்கு இடமளித்தது. அரசாங்கப்படைகள் முகாம்களில் இருந்துகொண்டு இதனைக் கண்டும் காணாமல் இருந்த போது கருணாவை பிரபாகரன் விரட்டியடித்தார். கடைசியில் கருணாவின் உயிரைக் காக்க முன்வந்தது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவாகும்.
கருணாவைக் கொலை செய்ய பிரபாகரன் தேடுகையில் மௌலானா அவரைக் கொழும்பிற்குக் கொண்டுவந்தார்.
அப்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சி- ஜே.வி.பி. கூட்டமைப்பு பிரபாகரனின் ஆணைக்கு எவ்வளவு கீழ் படிந்தார்களென்றால் கருணாவைக் கொல்வதற்குப் பிரபாகரனுக்கு இடமளித்துவிட்டு கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டார்கள்.
கொழும்பிற்கு வந்த கருணாவின் உயிர் எந்நேரம் பறிபோகுமோவென்ற நிலை.
இந்த வேளையில் கருணாவிற்கு உதவியது விசத்தால் விசத்தை முறிப்பது போல தமிழர் ஒருவராலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டும் என நம்பிய அதற்காகவே பாடுபட்ட தமிழரான கூட்டணி அரசாங்கத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமராகும்.
சமாதான நடவடிக்கைகளுக்காக கருணாவின் கழுத்தில் கத்தியை வைக்காது பிரபாகரனை அழிக்க கருணாவைப் பயன்படுத்தலாமென அவர் எண்ணியிருக்கலாம். அதிலிருந்து கருணா நாளாந்தம் 2, 3 விடுதலைப் புலிகளை கொல்லவும் விடுதலைப்புலி முக்கிய உறுப்பினர்களை இலக்கு வைக்கவும் ஆரம்பித்தார்.
கருணாவின் இந்தத் தாக்குதல் பிரபாகரனுக்கு சரியாகப்படவில்லை. கருணாவை நிராயுதபாணியாக்கும் வரை பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதில்லை என்று பிரபாகரன் அப்போதிருந்த அரச தலைவர் சந்திரிகாவை பயமுறுத்தினார்.
கருணாவுடன் தனக்கோ அரசாங்கத்திற்கோ எவ்விதத் தொடர்ப்பும் இல்லையென்பதைக் காண்பிப்பதற்காக சந்திரிகா செய்யாதது எதுவுமில்லை. முன்னாள் இராணுவத் தளபதி லயனல் பலகல்லவிற்கும் கருணாவிற்கும் இடையில் தொடர்ப்பிருப்பதாக பிரபாகரன் சுமத்திய குற்றச்சாட்டிலிருந்து சந்திரிகாவும் அரசாங்கமும் தாங்கள் தப்பித்துக்கொள்வதற்காக எடுத்த நடவடிக்கையினாலேயெ பலகல்ல பதவியை விட்டுச் செல்லவேண்டியேற்பட்டது.
கருணாவுடன் தொடர்பில்லை என்பதைக் காட்டுவதற்காக சந்திரிகா எடுத்த தீர்மானத்தினால் கருணாவிற்கு உதவிய கதிர்காமரும் அசௌகர்யத்திற்கு உள்ளானார். அந்த அசௌகர்யத்திலிருந்து விடுபடுவதற்காக அவர் ஜே.வி.பியின் உதவியை நாடினார். கருணா குழுவையும் ஈ.பி.டி.பி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆனந்தசங்கரி குழுவையும் இணைத்து விடுதலைப் புலிகளுக்கெதிராக புதிய கூட்டணியொன்றை ஏற்படுத்துவதற்கு ஜே.வி.பி. முயன்றது.
அந்த கூட்டணியினாலேயே கருணா பாதுகாப்புப் பெற்றார்.
சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க கருணாவை நிராயுதபாணியாக்க வேண்டும் என சந்திரிகாவிற்கு அழுத்தம் கொடுத்த அவரின் சமாதானத் தூதுவர்களையும் அழித்து கருணாவை பாதுகாத்தது அந்த கூட்டணியே.
சமாதான நடவடிக்கைகளை தொடங்குவதற்காக கருணாவைப் பலியிடக்கூடாதென்ற நிலைப்பாட்டில் இருந்தமையினால் சந்திரிகாவிடமிருந்தும் அவரின் சமாதான தூதுவர்களிடமிருந்தும் ஓரங்கட்டப்பட்ட லக்ஸ்மன் கதிர்காமர், பாதுகாப்புத் தேடியதும் அந்தக் கூட்டணியிடமே.
அதேபோல விடுதலைப் புலிகளுக்குத் தேவையானவாறு அல்லாமல் அரசாங்கத்திற்குத் தேவையானவாறே சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட வேண்டும் என்ற கதிர்காமரின் நிலைப்பாட்டிற்கு சந்திரிகாவைக் கொண்டுவருவதற்கான ஒத்துழைப்பை அவர் வேண்டியதும் இந்த கூட்டணியிடமே.
ஐரோப்பாவில் சமாதானப் பேச்சுக்களை நடத்தாமலும், பேச்சுவார்த்தைகளுக்கான விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணியாது இறுதித்தீர்விற்காக மட்டுமே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு சந்திரிகாவை இணங்கச் செய்வதற்கும் அவர் இந்தக் கூட்டணியின் உதவியையே நாடினார்.
இந்தக் கூட்டணியை அமைத்து கதிர்காமருக்கு அவரின் நிலைப்பாட்டை சந்திரிகாவிலும் நாட்டிலும் பலப்படுத்திக் கொள்வதற்கு சக்தியைக் கொடுத்தது ஜே.வி.பி.யாகும்.
கதிர்காமரின் நிலைப்பாட்டிற்கு எதிராக எவ்வாறேனும் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலிருந்து கொண்டு அந்த நிலைப்பாட்டிற்கு சந்திரிகாவை தள்ளிய அப்போதைய சமாதான செயலகப் பணிப்பாளர் ஜயந்த தனபாலவை விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தித் தாக்கி கதிர்காமரைப் பாதுகாத்ததும் ஜே.வி.பியாகும்.
ஜே.வி.பி, கருணா, ஈ.பி.டி.பி., ஆனந்தசங்கரி கூட்டணியின் பலத்தில் நடந்த கதிர்காமரின் பயணமானது விடுதலைப் புலிகள் அவரைப் படுகொலை செய்ததுடன் முடிவடைந்தது.
சமாதானப் பேச்சுவார்த்தைக்கென கருணாவின் தலையைப் பலிகொடுக்க இடமளிக்காத கதிர்காமரைப் புலிகள் பலியேடுத்தது இப்படித்தான்.
2005 ஆம் ஆண்டு தேர்தலின் போது ஜே.வி.பி, கருணா, ஈ.பி.டி.பி. ஆகியன மகிந்தருக்கு ஆதரவளித்தது என்பது கதிர்காமர் சென்றப் பாதையில் அவரும் செல்வதற்காகவே.
மகிந்த அரச தலைவரானார்.
இன்று ஜயந்த தனபால, மகிந்தவின் சமாதான ஆலோசகராவார். அவர் அன்றிலிருந்து இருக்கும் நிலைப்பாடான எந்த வகையிலேனும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டு அதற்கமைய சமாதான செயற்பாடுகளை ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.
அதன்படி சமாதான பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலின் முதலாவது விடயம் யுத்த நிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்துவதாகும்.
விடுதலைப் புலிகள் சொல்லப்போவது அதெல்லாம் செய்வதற்கு முன்னர் கருணாவை நிராயுதபாணியாக்குங்கள் என்பதையாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதாயின் கருணாவின் கழுத்து தேவையென்பதாகும். விடுதலைப் புலிகள் கதிர்காமரின் தலையைப் பலியெடுத்தது கருணாவின் தலையை பலி கேட்கவே. அரசாங்கம் கருணாவின் தலையைப் பலிகொடுக்குமா?
அரசாங்கம் எவ்வாறு செயற்படுமென இப்போதைக்கு கூறமுடியாதுள்ளது என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|