[சனிக்கிழமை, 20 சனவரி 2007, 16:55 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] Courtesy Puthinam
ஓவியர் நீதன் தமிழ்மக்களின் துயரத்தையும் அவலத்தையும் வெளிப்படுத்துவதில் வெற்றிபெற்றுள்ளார் என்று மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். லெப். கேணல் நவம் அறிவுக்கூடத்தின் போராளி ஓவியர் நீதனின் 'விடிவின் நிறங்கள்' ஓவியக்காட்சி அரங்கில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதனை அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு தொடக்கி வைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
மக்களின் அவலத்தையும் துயரத்தையும் வெளிப்படுத்துவதில் நீதன் வெற்றிபெற்றுள்ளார். மஞ்சள், சிவப்பு, கறுப்பு ஆகிய வண்ணங்களைக்கொண்டு அவர் தனது சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் ஓவிய மரபில் இப்படி சிவப்பையும் மஞ்சளையும் அதிகம் பயன்படுத்தப்பட்டிருப்பது ஓவியர் நீதனின் ஓவியங்களேயாகும்.
ஓவியர் நீதனின் படைப்பு துயரத்தையும் அவலத்தையும் கொண்டிருந்தபோதும் ஆனால் வண்ணக் கலவையின் தேர்வு அதனை விடுதலையின் வீச்சாக மாற்றியிருக்கிறது என்றும் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
தமிழ் ஊடக அறிவியல் கல்லூரிப் பணிப்பாளர் ராதேயன் கூறுகையில், நீதனின் ஓவியங்களுள் நுழைகின்ற போது நாம் புதிய உலகங்களை தரிசிக்கக்கூடியதாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.
மேலும் வெறுமனே பார்த்துவிட்டுப்போகாமல் உணர்ந்து கொண்டு போகத்தக்கதாக நீதனின் ஓவியங்கள் உள்ளன என்று வழக்கறிஞர் பொன்.பூலோகசிங்கமும், நிறங்களுக்கு ஊடாக ஓர் எழுச்சி உலகத்துக்குள் நீதனின ஓவியங்கள் எம்மை அழைத்துச் செல்கின்றன என்று கவிஞர் உதயலட்சுமியும் தெரிவித்தனர்.
நீதனின் ஓவியங்கள் ஊடாக அவரின் கால வளர்ச்சியையும் அவதானிக்கக்கூடியதாக இருப்பதாக தெரிவித்த ஒளி ஓவியர் ச.அமரதாஸ், ஓவியங்கள் ஓவியர்களை மட்டுமல்லாது பார்வையாளர்களையும் புதிய உலகத்துக்கு இட்டுச்செல்லவேண்டும் என்றும் கூறினார்.
இன்றைய இக்கலந்துரையாடலை போராளி ஓவியர் கதிர்ச்செல்வன் ஒருங்கிணைத்திருந்தார். ஓவியர் நீதனின் ஓவியக்காட்சி பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. நாளையும் நாளை மறுநாளும் கிளிநொச்சி நுண்கலைக்கல்லூரியில் நீதனின் விடிவின் நிறங்கள் ஓவியக்காட்சி நடைபெறவுள்ளது.