"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > The Twelve Thirumurai > A Short Introduction to Thirumandiram > tirumantiram of tirumUlar : முதல் இரண்டாம் தந்திரங்கள் (1- 548) > மூன்றாந் தந்திரம் (549- 883) > நான்காம் தந்திரம் பகுதி 1 (884 -1154) > நான்காம் தந்திரம் - பகுதி 2 (1155 - 1418) > ஐந்தாம் தந்திரம் (1419 - 1572) > ஆறாம் தந்திரம் (1573 - 1703) > ஏழாம் தந்திரம் (1704- 2121) > எட்டாம் தந்திரம் (2122-2648) > ஒன்பதாம் தந்திரம் (2649-3047)
tirumantiram of tirumUlar
(10th tirumuRai in nampi ANTAr nampi anthology)
tantiram 7 verses 2649 - 3047
10ம் திருமறை - திருமூலர் அருளிய திருமந்திரம
ஒன்பதாம் தந்திரம் (2649-3047)
This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
© Project Madurai 2001. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
asfga
- ஒன்பதாம் தந்திரம்
1. குருமட தரிசனம்
2649
பலியும் அவியும் பரந்து புகையும்
ஒலியும் ஈசன் தனக்கென்ற உள்கிக்
குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த்
தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே. 1
2650
இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை
அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின்
அவனுக்கு இவனில்லம் என்றென்று அறிந்தும்
அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே. 2
2651
நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின்
கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி
தேட அரியன் சிறப்பிலி எம்இறை
ஓடும் உலகுயிர் ஆகிநின் றானே. 3
2652
இயம்புவன் ஆசனத் தோடு மலையும்
இயம்புவன் சித்தக் குகையும் இடமும்
இயம்புவன் ஆதாரத் தோடு வனமும்
இயம்புவன் ஈராறு இருநிலத் தோர்க்கே. 4
2653
முகம்பீடம் மாமடம் முன்னிய தேயம்
அகம்பர வர்க்கமே ஆசில்செய் காட்சி
அகம்பர மாதனம் எண்எண் கிரியை
சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே. 5
2654
அகமுக மாம்பீடம் ஆதார மாகும்
சகமுக மாம்சத்தி யாதன மாகும்
செகமுக மாம்தெய்வ மேசிவ மாகும்
அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே. 6
2655
மாயை இரண்டும் மறைக்க மறைவுறும்
காயம்ஓர் ஐந்தும் கழியத்தா னாகியே
தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள்
ஆய்பவர் ஞானாதி மோனத்த ராமே. 7
2. ஞானகுரு தரிசனம்
2656
ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில்
கூறக் குருபரன் கும்பிடு தந்திடும்
வேறே சிவபதம் மேலாய் அளித்திடும்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே. 1
2657
துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய பரசிவம் யாவையும் ஆகி
விரிவு குவிவுஅற விட்ட நிலத்தே
பெரிய குருபதம் பேசஒண் ணாதே. 2
2658
ஆயன நந்தி அடிக்குஎன்தலைபெற்றேன்
வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன்
காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன்
சேயன நந்திக்குஎன் சிந்தைபெற் றேனே. 3
2659
கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடம் தீர்ந்து பயம்கெடு மாபோல்
குருவின் உருவம் குறித்த அப் போதே
திரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே. 4
2660
அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்கு
அண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவன்இவன் ஆமே. 5
2661
தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும்
மான்ற அறிவு மறிநன வாதிகள்
மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்றற
ஊன்றிய நந்தி உயர்மோனத் தானே. 6
2662
சந்திர பூமிக் குள்தன்புரு வத்திடைக்
கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும்
பந்தம் இலாத பளிங்கின் உருவினள்
பந்தம் அறுத்த பரம்குரு பற்றே. 7
2663
மனம்புகுந் தான்உலகு ஏழும் மகிழ
நிலம்புகுந் தான்நெடு வானிலம் தாங்கிச்
சினம்புகுந் தான்திசை எட்டும்நடுங்க
வனம்புகுந் தான்ஊர் வடக்கென்பது ஆமே. 8
2664
தானான வண்ணமும் கோசமும் சார்தரும்
தானாம் பறவை வனமெனத் தக்கன
தானான சோடச மார்க்கந்தான் நின்றிடில்
தாமாம் தசாங்கமும் வேறுள்ள தானே. 9
2665
மருவிப் பிரிவுஅறி யாஎங்கள் மாநந்தி
உருவம் நினைக்க நின்று உள்ளே உருக்கும்
கருவில் கரந்துஉள்ளம் காணவல் லார்க்குஇங்கு
அருவினை கண்சோரும் அழிவார் அகத்தே. 10
2666
தலைப்பட லாம்எங்கள் தத்துவன் தன்னைப்
பலப்படு பாசம் அறுத்துஅறுத் திட்டு
நிலைப்பெற நாடி நினைப்பற உள்கில்
தலைப்பட லாகும் தருமமும் தானே. 11
2667
நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்
சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்
தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும்
கனத்த மனத்தடைந் தால்உயர்ந் தாரே. 12
2668
தலைப்படும் காலத்துத் தத்துவம் தன்னை
விலக்குறின் மேவை விதியென்றும் கொள்க
அனைத்துஉல காய் நின்ற ஆதிப் பிரானை
நினைப்புறு வார்பத்தி தேடிக் கொள்வாரே. 13
2669
நகழ்வுஒழிந் தார்அவர் நாதனை யுள்கி
நிகழ்வுஒழிந் தார்எம் பிரானொடும் கூடித்
திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தையின் உள்ளே
புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே. 14
2670
வந்த மரகத மாணிக்க ரேகைபோல்
சந்திடு மாமொழிச் சற்குரு சன்மார்க்கம்
இந்த இரேகை இலாடத்தின் மூலத்தே
சுந்தரச் சோதியுள் சோதியும் ஆமே. 15
2671
உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க்
கண்ணுமா யோகக் கடவுள் இருப்பது
மண்ணு நீரனல் காலொடு வானுமாய்
விண்ணு மின்றி வெளியானோர் மேனியே. 16
2672
பரசு பதியென்று பார்முழு தெல்லாம்
பரசிவன் ஆணை நடக்கும் பாதியால்
பெரிய பதிசெய்து பின்னாம் அடியார்க்கு
உரிய பதியும்பா ராக்கி நின்றானே. 17
2673
அம்பர நாதன் அகலிடம் நீள்பொழில்
தம்பர மல்லது தாமறியோம் என்பர்
உம்பருள் வானவர் தானவர் கண்டிலர்
எம்பெரு மான்அருள் பெற்றிருந் தாரே. 18
2674
கோவணங் கும்படி கோவண மாகிப்பின்
நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான்
தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம்
போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே. 19
3. பிரணவ சமாதி
2675
தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை
பாலித்த சூக்கும மேலைப் சொரூபப்பெண்
சூலித்த முத்திரை ஆங்கதிற்காரணம்
மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே. 1
2676
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே. 2
2677
ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதங்கள்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்கார தீதத்து உயிர்மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பரசிவ ரூபமே. 3
2678
வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும்
அருக்கம் சராசரம் ஆகும் உலகில்
தருக்கிய ஆதாரம் எல்லாம்தன் மேனி
சுருக்கம்இல் ஞானம் தொகுத் துணர்ந் தோரே. 4
2679
மலையும் மனோபவம் மருள்வன ஆவன
நிலையில் தரிசனம் தீப நெறியாம்
தலமும் குலமும் தவம்சித்த மாகும்
நலமும்சன் மார்க்கத்து உபதேசம் தானே. 5
2680
சோடச மார்க்கமும் சொல்லும்சன்மார்க்கிகட்கு
ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழிற்
கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்து
ஏறியே ஞானஞே யாந்தத்து இருக்கவே. 6
4. ஒளி
2681
ஒளியை அறியில் உருவும் ஒளியும்
ஒளியும் உருவம் அறியில் உருவாம்
ஒளியின் உருவம் அறியில் ஒளியே
ஒளியும் உருக உடனிருந் தானே. 1
2682
புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும்
அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும்
பகல்ஒளி செய்தும் அத்தா மரையிலே
இகல்ஒளி செய்துஎம் பிரான்இருந் தானே. 2
2683
விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன்
துளங்கொளி பெற்றன சோதி யருள
வளங்கொளி பெற்றதே பேரொளி வேறு
களங்கொளி செய்து கலந்து நின்றானே. 3
2684
இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி
துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்
வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி
விளங்கொளி செய்கின்ற மெய்காய மாமே. 4
2685
மேல்ஒளி கீழ்அதன் மேவிய மாருதம்
பால்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம்
நீர்ஒளி செய்து நெடுவிசும்பு ஒன்றிலும்
மேல்ஒளி ஐந்தும் ஒருங்கொளி யாமே. 5
2686
மின்னிய தூவொளி மேதக்க செவ்வொளி
பன்னிய ஞானம் பரந்து பரத்தொளி
துன்னிய ஆறுஒளி தூய்மொழி நாடொறும்
உன்னிய வாறுஒளி ஒத்தது தானே. 6
2667
விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து
துளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும்
உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்ற
வளங்கொளி எங்கும் மருவிநின் றானே. 7
2688
விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும்
துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான்
அளங்கொளி ஆரமு தாகநஞ் சாரும்
களங்கொளி ஈசன் கருத்தது தானே. 8
2689
இயலங்கியது எவ்வொளி அவ்வொளி ஈசன்
துலங்கொளி போல்வது தூங்கருட் சத்தி
விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி
உளங்கொளி யுள்ளே ஒருங்கிகின் றானே. 9
2690
உலங்கொளி யாவதுஎன் உள்நின்ற சீவன்
வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதி
விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி
வளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே. 10
2691
விளங்கொளி யாய்நின்ற விகிர்தன் இருந்த
துளங்கொளி பாசத்துள் தூங்கிருள் சேராக்
களங்கிருள் நட்டமே கண்ணுதல் ஆட
விளங்கொளி உள்மனத்து ஒன்றிநின் றானே. 11
2692
போது கருங்குழற் போனவர் தூதிடை
ஆதி பரத்தை அமரர் பிரானொடும்
சோதியும் அண்டத்துஅப் பாலுற்ற தூவொளி
நீதியின் நல்லிருள் நீக்கிய வாறே. 12
2693
உண்டில்லை என்னும் உலகத்து இயல்பிது
பண்டில்லை என்னும் பரங்கதி யுண்டுகொல்
கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறில்
விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே. 13
2694
சுடருற ஒங்கிய ஒள்ளொளி ஆங்கே
படருறு காட்சிப் பகலவன் ஈசன்
அடருறு மாயையின் ஆரிருள் வீசில்
உடலுறு ஞாலத் துறவியின் ஆமே. 14
2695
ஒளி பவ ளத்திரு மேனிவெண் ணீற்றன்
அளிபவ ளச்சொம்பொன் ஆதிப் பிரானும்
களிபவ ளத்தினன் காரிருள் நீங்கி
ஒளிபவ ளத்தென்னோடு ஈசன் நின் றானே. 15
2696
ஈசன்நின் றான்இமை யோர்கள் நின் றார்நின்ற
தேசம்ஒன் றின்றித் திகைத்துஇழைக் கின்றனர்
பாசம்ஒன் றாகப் பழவினை பற்றற
வாசம்ஒன் றாமலர் போன்றது தானே. 16
2697
தானே யிருக்கும் அவற்றில் தலைவனும்
தானே யிருக்கும் அவனென நண்ணிடும்
வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப்
பானாய் இருக்கப் பரவலும் ஆமே. 17
5. தூல பஞ்சாக்கரம்
2698
ஐம்பது எழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்
ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின்
ஐம்பது எழுத்தே அஞ்செழுத் தாமே. 1
2699
அகார முதலாக ஐம்பத்தொன்று ஆகி
உகார முதலாக ஓங்கி உதித்து
மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந்து ஏறி
நகார முதலாகும் நந்திதன் நாமமே. 2
2700
அகராதி ஈரெண் கலந்த பரையும்
உகராதி தன்சத்தி உள்ளொளி ஈசன்
சிகராதி தான்சிவ வேதமே கோணம்
நகராதி தான்மூலமந்திரம் நண்ணுமே. 3
2701
வாயொடு கண்டம் இதயம் மருவுந்தி
ஆய இலிங்கம் அவற்றின்மேல் அவ்வாய்த்
தூயதோர் துண்டம் இருமத் தகம்செல்லல்
ஆயதுஈ றாம்ஐந்தோடு ஆம்எழுத்து அஞ்சுமே. 4
2702
கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக்
கரணங்கள் விட்டுயிர் தானெழும் போது
மரணம்கை வைத்துஉயிர் மாற்றிடும் போதும்
அரணம்கை கூட்டுவது அஞ்செழுத் தாமே. 5
2703
ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்
ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலார்
சேயுறு கண்ணி திருஎழுத்து அஞ்சையும்
வாயுறு ஓதி வழுத்தலும் ஆமே. 6
2704
தெள்ளமுது ஊறச் சிவாய நமஎன்று
உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும்
வெள்ளமுது ஊறல் விரும்பிஉண் ணாதவர்
துள்ளிய நீர்போல் சுழல்கின்ற வாறே. 7
2705
குருவழி யாய குணங்களில் நின்று
கருவழி யாய கணக்கை அறுக்க
வரும்வழி மாள மறுக்கவல் லார்கட்கு
அருள்வழி காட்டுவது அஞ்செழுத் தாமே. 8
2706
வெறிக்க வினைத்துயிர் வந்திடும் போது
செறிக்கின்ற நந்தி திருஎழுத்து ஓதும்
குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும்
குறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே. 9
2707
நெஞ்சு நினைந்துதம் வாயாற் பிரான்என்று
துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று
மஞ்சு தவழும் வடவரை மீதுரை
அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே. 10
2708
பிரான்வைத்த ஐந்தின் பெருமை யுணராது
இராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர்
பராமுற்றும் கீழோடு பல்வகை யாலும்
அராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே. 11
6. சூக்கும பஞ்சாக்கரம்
2709
எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை
ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த்
தெளிய ஒதிச்சிவாயநம என்னும்
குளிகை யிட்டுப் பொன் னாக்குவன் கூட்டையே. 1
2710
சிவன்சத்தி சீவன் செறுமல மாயை
அவஞ்சேர்த்த பாச மலம்ஐந்து அகலச்
சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர
அவம்சேர்த்த பாசம் அணுககி லாவே. 2
2711
சிவன்அரு ளாய சிவன்திரு நாமம்
சிவன்அருள் ஆன்மா திரோதம் மலமாயை
சிவன்முத லாகச் சிறந்து நிரோதம்
பவமது அகன்று பரசிவன் ஆமே. 3
2712
ஓதிய நம்மலம் எல்லாம் ஒழித்திட்டு அவ்
ஆதி தனைவிட்டு இறையருள் சத்தியால்
தீதில் சிவஞான யோகமே சித்திக்கும்
ஓதும் சிவாயமலமற்ற உண்மையே. 4
2713
நமாதி நனாதி திரோதாயி யாகித்
தம்ஆதிய தாய்நிற்கத் தான்அந்தத் துற்றுச்
சமாதித் துரியம் தமதுஆகம் ஆகவே
நமாதி சமாதி சிவமாதல் எண்ணவே. 5
2714
அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில்
ஒருவனை ஈன்றவர் உள்ளுறும் மாயை
திரிமலம் நீங்கிச் சிவாயஎன்று ஓதும்
அருவினை தீர்fப்பதும் அவ்வெழுத் தாமே. 6
2715
சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்
சிவசிவ வாயுவும் தேர்ந்துள் அடங்கச்
சிவசிவ ஆய தெளிவின் உள் ளார்கள்
சிவசிவ ஆகும் திருவருள் ஆமே. 7
2716
சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே. 8
2717
நவமென்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்
சிவமென்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப்
பவமது தீரும் பரிசும்அது அற்றால்
அவதி தீரும் அறும்பிறப்பு அன்றோ. 9
7. அதிசூக்கும பஞ்சாக்கரம்
2718
சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி
அவாயம் அறவே அடிமைய தாக்கிச்
சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை
அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே. 1
2719
செஞ்சுடர் மண்டலத்து ஊடுசென்று அப்புறம்
அஞ்சண வும்முறை ஏறிவழிக் கொண்டு
துஞ்சும் அவன்சொன்ன காலத்து இறைவனை
நெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே. 2
2720
அங்கமும் ஆகம வேதமது ஓதினும்
எங்கள் பிரான்எழுத்து ஒன்றில் இருப்பது
சங்கைகெட்டு அவ்எழுத்து ஒன்றையும் சாதித்தால்
அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே. 3
2721
பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே
விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை
எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்
எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே. 4
8.1 திருக்கூத்து தரிசனம்
2722
எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே. 1
2723
சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச்
சொற்பத மாம்அந்தச் சுந்தரக் கூத்தனைப்
பொற்பதிக் கூத்தனைப் பொன்தில்லைக் கூத்தனை
அற்புதக் கூத்தனை யார்அறி வாரே. 2
8.2 சிவானந்தக் கூத்து
2724
தான்அந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்
தேன்உந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்
ஞானம் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு
ஆனந்தக் கூத்தாட ஆடரங்கு ஆனதே. 3
2725
ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்
ஆனந்தம் ஆக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக் கூத்துஉகந் தானுக்கே. 4
2726
ஒளியாம் பரமாம் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி யாகும் சமயக்
களியார் பரமும் கருதுறை யந்தக்
தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே. 5
2727
ஆன நடம்ஐந்து அகள சகளத்தர்
ஆன நடமாடி ஐங்கரு மத்தாக
ஆன தொழில்அரு ளால்ஐந் தொழில்செய்தே
தேன்மொழி பாகன் திருநட மாடுமே. 6
2728
பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகண்ட
மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட
தாகாண்ட ஐங்கரு மாத்தாண்ட தற்பரத்து
ஏகாந்த மாம்பிர மாண்டத்த என்பவே. 7
2729
வேதங்கள் ஆட மிகுஆ கமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளர்அண்டம் ஏழாடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட
நாதம்கொண் டாடினான் ஞானாந்தக் கூத்தே. 8
2730
பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்
வேதங்கள் ஐந்தின் மிகும்ஆ கமந்தன்னில்
ஓதும் கலைகாலம் ஊழியுடன் அண்டப்
போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனே. 9
2731
தேவர் சுரர்நரர் சித்தர்வித் தியாதரர்
மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்
தாபதர் சத்தர் சமயம் சராசரம்
யாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே. 10
8.3 சுந்தரக் கூத்து
2732
அண்டங்கள் ஏழினிக்கு அப்புறத்து அப்பால்
உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சிமேல்
கண்டம் கரியான் கருணை திருவுருக்
கொண்டுஅங்கு உமைகாணக் கூத்துஉகந் தானே. 11
2733
கொடிகட்டி பாண்டுரங் கோடுசங் காரம்
நடம் எட்டோ டு ஐந்துஆறு நாடியுள் நாடும்
திடம்உற்று ஏழும்தேவ தாருவும் தில்லை
வடம் உற்ற மாவனம் மன்னவன் தானே. 12
2734
பரமாண்டத்து ஊடே பராசத்தி பாதம்
பரமாண்டத்து ஊடே படரொளி ஈசன்
பரமாண்டத்து ஊடே படர்தரு நாதம்
பரமாண்டத்து ஊடே பரன்நடம் ஆடுமே. 13
2735
அங்குசம் என்ன எழுமார்க்கம் போதத்தில்
தங்கிய தொந்தி எனும்தாள ஒத்தினில்
சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல்
பொங்கிய காலம் புகும்போகல் இல்லையே. 14
2736
ஆன்நந்தி யாடிபின் நவக் கூத்தாடிக்
கான்நந்தி யாடிக் கருத்தில் தரித்தாடி
மூனச் சுழுனையுள் ஆடி முடிவில்லா
ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே. 15
2737
சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான்ஐந்தும்
முத்திகள் எட்டும் முதலாம் பதம் எட்டும்
சித்திகள் எட்டும் சிவபதம் தான்எட்டும்
சுத்திகள் எட்டுஈசன் தொல்நடம் ஆடுமே. 16
2738
மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும்
தேகங்கள் சூழும் சிவபாற் கரன் ஏழும்
தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும்
ஆகின்ற நந்தி அடிக்கீழ் அடங்குமே. 17
8.4 பொற்பதிக் கூத்து
2739
தெற்கு வடக்குக் கிழக்குமேற்கு உச்சியில்
அற்புத மானதோர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில்பே ரின்பத்து உபய உபயத்துள்
தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே. 18
2740
அடிஆர் பவரே அடியவர் ஆமால்
அடியார்பொன் அம்பலத்து ஆடல்கண்டாரே
அடியார் அரனடி ஆனந்தம் கண்டோ ர்
அடியார் ஆனவர் அத்தருள் உற்றோர். 19
2741
அடங்காத என்னை அடக்கி அடிவைத்து
இடம்காண் பரானநத்தத் தேஎன்னை இட்டு
நடந்தான் செயும்நந்தி நன்ஞானக் கூத்தன்
படம்தான்செய்து உள்ளுள் படிந்திருந் தானே. 20
2742
உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச்
செம்பொன் திருமன்றுள் சேவகக் கூத்தனைச்
சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை
இன்புற நாடிஎன் அன்பில்வைத் தேனே. 21
2743
மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்
பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச்
சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை
ஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரே. 22
2744
விம்மும் வெருவும் விழும்எழும் மெய்சோரும்
தம்மையும் தாமறி யார்கள் சதுர்கெடும்
செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்
அம்மலர்ப் பொற்பாதத்து அன்புவைப் பார்கட்கே. 23
2745
தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்
வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்
ஓட்டறும் ஆசை அறும்உளத்து ஆனந்த
நாட்ட முறுக்குறும் நாடகங் காணவே. 24
2746
காளியோடு ஆடிக் கனகா சலத்துஆடிக்
கூளியோடு ஆடிக் குவலயத் தேஆடி
நீடிய நீர்தீகால் நீள்வான் இடையாடி
நாளுற அம்பலத் தேயாடும் நாதனே. 25
2747
மேரு நடுநாடி மிக்கிடை பிங்கனல்
கூரும்இவ் வானின் இலங்கைக் குறியுறும்
சாரும் திலைவனத் தண்மா மலயத்தூடு
ஏறும் கழுமுனை இவைசிவ பூமியே. 26
2748
பூதல மேருப் புறத்தான தெக்கணம்
ஓதும் இடைபிங் கலைஒண் சுழுமுனையாம்
பாதி மதியோன் பயில்திரு அம்பலம்
ஏதமில் பூதாண்டத்து எல்லையின் ஈறே. 27
8.5 பொற்றில்லைக்கூத்து
2749
அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டினில் சத்தி திருஅம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. 28
2750
குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம்
சிரானந்தம் பூரித்துத் தென்திசை சேர்ந்து
புரானந்த போகனாய்ப் பூவையும் தானும்
நிரானந்த மாகி நிருத்தஞ் செய் தானே. 29
2751
ஆதி பரன்ஆட அங்கைக் கனலாட
ஓதும் சடையாட உன்மத்த முற்றாடப்
பாதி மதியாடப் பாரண்ட மீதாட
நாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே. 30
2752
கும்பிட அம்பலத்து ஆடிய கோன்நடம்
அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம்
செம்பொருள் ஆகும் சிவலோகம் சேர்ந்துற்றால்
உம்பரம் மோனஞா ஞானந்தத்தில் உண்மையே. 31
2753
மேதினி மூவேழ் மிகும்அண்டம் ஓரேழு
சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு
நாதமொடு அந்தம் நடானந்தம் நாற்பதம்
பாதியோடு ஆடிடும் பரன்இரு பாதமே. 32
2754
இடைபிங் கலைஇம வானோடு இலங்கை
நடுநின்ற மேரு நடுவாம் சுழுமுனை
கடவும் திலைவனம் கைகண்ட மூலம்
படர்பொன்றி என்னும் பரமாம் பரமே. 33
2755
ஈறான கன்னி குமரியே காவிரி
வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்புஏழுள்
பேறான வேதா கமமே பிறத்தலான்
மாறாத தென்திசை வையகம் சுத்தமே. 34
2756
நாதத்தினில் ஆடி நாற்பதத் தேயாடி
வேதத்தில் ஆடித் தழல் அந்தம் மீதாடி
போதத்தில் ஆடி புவனம் முழுதாடும்
தீதற்ற தேவாதி தேவர் பிரானே. 35
2757
தேவரோடு ஆடித் திருஅம்பலத்து ஆடி
மூவரோடு ஆடி முனிசனத் தோடு ஆடிப்
பாவினுள் ஆடிப் பராசத் தியில் ஆடிக்
கோவினுள் ஆடிடும் கூத்தப் பிரானே. 36
2758
ஆறு முகத்தில் அதிபதி நான்என்றும்
கூறு சமயக் குருபரன் நானென்றும்
தேறினர் தெற்குத் திருஅம்ப லத்துளே
வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே. 37
2759
அம்பலம் ஆடரங் காக அதன்மீதே
எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொளி
உம்பர மாம்ஐந்து நாதத்து ரேகையுள்
தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே. 38
2760
ஆடிய காலும் அதிற்சிலம்பு ஓசையும்
பாடிய பாட்டும் பலவான நட்டமும்
கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்
தேடியு ளேகண்டு தீர்ந்தற்ற வாறே. 39
2761
இருதயம் தன்னில் எழுந்த பிராணன்
கரசர ணாதி கலக்கும் படியே
அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன்
குரவனயாய் எங்கணும் கூத்துகந் தானே. 40
8.6 அற்புதக் கூத்து
2762
குருவுரு வன்றிக் குனிக்கும் உருவம்
அருவுரு வாவது அந்த அருவே
திரிபுரை யாகித் திகழ்தரு வாளும்
உருவரு வாகும் உமையவள் தானே 41
2763
திருவழி யாவது சிற்றம் பலத்தே
குருவடி வுள்ளாக்குனிக்கும் உருவே
உருஅரு வாவதும் உற்றுணர்ந் தோர்க்கு
அருள்வழி யாவதும் அவ்வழி தானே. 42
2764
நீரும் சிரிசிடைப் பன்னிரண்டு அங்குலம்
ஓடும் உயிர்எழுந்து ஓங்கி உதித்திட
நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்து
ஆடும் இடந்திரு அம்பலந் தானே. 43
2765
வளிமேகம் மின்வில்லு வானகஓசை
தெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல்
களிஒளி ஆறும் கலந்துடன் வேறாய்
ஒளியுரு வாகி ஒளித்துநின் றானே. 44
2766
தீமுதல் ஐந்தும் திசை எட்டும் கீழ்மேலும்
ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம்
மாயைமா மாயை கடந்துநின் றார்காண
நாயகன் நின்று நடஞ்செய்யும் ஆறே. 45
2767
கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்
கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே. 46
2768
இடம்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்
அடங்கலும் தாமாய்நின்று ஆடுகின் றாரே. 47
2769
சத்தி வடிவு சகல ஆனந்தமும்
ஒத்த ஆனந்தம் உமையவள் மேனியாம்
சத்தி வடிவு சகளத்து எழுந்துஇரண்டு
ஒத்த ஆனந்தம் ஒருநட மாமே. 48
2770
நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்
பற்றுக்குப் பற்றாற்ப் பரமன் இருந்திடம்
சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே. 49
2771
அண்டங்கள் தத்துவ மாகிச் சதாசிவம்
தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம்
தெண்டினில் ஏழும் சிவாசன மாகவே
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. 50
2772
மன்று நிறைந்த விளக்கொளி மாமலர்
நன்றிது தான்இதழ் நாலொடு நூறவை
சென்றுஅது தான்ஒரு பத்திரு நூறுள
நின்றது தான்நெடு மண்டல மாமே. 51
2773
அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி
தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி
எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி
அண்ட நடஞ்செயும் ஆலயம் தானே. 52
2774
ஆகாச மாம்உடல் அங்கார் முயலகன்
ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகண்
மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக
மாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானே. 53
2775
அம்பல மாவது அகில சராசரம்
அம்பல மாவது ஆதிப் பிரானடி
அம்பல மாவது அப்புத்தீ மண்டலம்
அம்பல மாவது அஞ்செழுத் தாமே. 54
2776
கூடிய திண்முழ வம்குழல் ஓமென்று
ஆடிய மானுடர் ஆதிப் பிரான் என்ன
நாடிய நற்கணம் ஆரம்பல் பூதங்கள்
பாடிய வாறுஒரு பாண்டரங் காமே. 55
2777
அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்
தெண்டிசை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள்
புண்டரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக்
கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே. 56
2778
புளிக்கண்ட வர்க்குப் புனலூறு மாபோல்
களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம்
துளிக்கும் அருட் கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்
ஒளிக்குள்ஆ னந்தத்து அமுதூறும் உள்ளத்தே. 57
2779
திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது
உண்டார்க்கு உணவுண்டால் உன்மத்தம் சித்திக்கும்
கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக்
கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே. 58
2780
அங்கி தமருகம் அக்குமா லைபாசம்
அங்குசம் சூலம் கபாலம் உடன்ஞானம்
தங்குஉ பயந்தரு நீல மும்உடன்
மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே. 59
2781
ஆடல் பதினோர் உறுப்பும் அடைவாகக்
கூடிய பாதம் சிலம்புகைக் கொள்துடி
நீடிய நாதம் பராற்பர நேயத்தே
ஆடிய நந்தி புறம்அகந் தானே. 60
2782
ஒன்பதும் ஆட ஒருபதி னாறுஆட
அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாட
இன்புறும் ஏழினும் ஏழுஐம்பத் தாறுஆட
அன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. 61
2783
ஏழினில் ஏழாய் இகழ்ந்தெழுந்து ஏழதாய்
ஏழினில் ஒன்றாய் இழிந்துஅமைந்து ஒன்றாகி
ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி
ஏழிசை நாடகத் தேஇசைந் தானே. 62
2784
மூன்றினில் அஞ்சாகி முந்நூற்று அறுபதாய்
மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய்
மூன்றின்இலக்கம் முடிவாகி முந்தியே
மூன்றிலும் ஆடினான் மோகாந்தக் கூத்தே. 63
2785
தாமுடி வானவர் தம்முடி மேலுறை
மாமணி ஈசன் மலரடித் தாளினை
வாமணி அன்புடை யார்மனத் துள்ளெழுங்
காமணி ஞாலம் கடந்துநின் றானே. 64
2786
புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும்
தெரிந்தவன் ஆடும் அளவுஎங்கள் சிந்தை
புரிந்தவன் ஆடில்பல்பூதங்கள் ஆடும்
எரிந்தவன் ஆடல்கண்டு இன்புற்ற வாறே. 65
2787
ஆதி நடஞ்செய்தான் என்பர்கள் ஆதர்கள்
ஆதி நடஞ்செய்கை யாரும் அறிகிலர்
ஆதி நடமாடல் ஆரும் அறிந்தபின்
ஆதி நடமாட லாம் அருட் சத்தியே. 66
2788
ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்து
அன்புறு கோணம் அதிபதந்து ஆடிடத்
துன்புறு சத்தியுள் தோன்றிநின்று ஆடவே
அன்புறு எந்தை நின்று ஆடலுற் றானே. 67
2789
தத்துவம் ஆடச் சதாசிவம் தானாடச்
சித்தமும் ஆடச் சிவசத்தி தானாட
வைத்த சராசரம் ஆட மறையாட
அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. 68
2790
இருவருங் காண எழில்அம் பலத்தே
உருவோடு அருவோடு ஒருபர ரூபமாய்த்
திருவருள் சத்திக்குள் சித்தன்ஆ னந்தன்
அருளுரு வாகிநின்று ஆடலுற் றானே. 69
2791
சிவமாட சத்தியும் ஆடச் சகத்தில்
அவமாட ஆடாத அம்பரம் ஆட
நவமான தத்துவம் நாதாந்தம் ஆடச்
சிவமாடும் வேதாந்தச் சித்தாந்தத் துள்ளே. 70
2792
நாதத்தின் அந்தமும் நாற்போத அந்தமும்
வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னாந்தமும்
தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்து
நாதப் பிரமம் சிவநாட மாமே. 71
2793
சிவமாதி ஐவர்திண் டாட்டமும் தீரத்
தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத்
தவமாம் பரன்எங்கும் தானாக ஆடும்
தவமாம் சிவானந்தத் தோர் ஞானக் கூத்தே. 72
2794
கூடிநின் றானொடு காலத்துத் தேவர்கள்
வீடநின் றான்விகிர் தா என்னும் நாமத்தைத்
தேடநின் றான்திக ழுஞ்சுடர் மூன்றொளி
ஆடநின் றான்என்னை ஆட்கொண்ட வாறே. 73
2795
நாதத் துவம்கடந்து ஆதி மறைநம்பி
பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்
நேதத் துவமும் அவற்றோடு நேதியும்
பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே. 74
2796
ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலர்
ஆனந்த மாநடம் ஆரும் அறிகிலர்
ஆனந்த மாநடம் ஆரும் அறிந்தபின்
தான் அந்தம் அற்றிடம் ஆனந்த மாமே. 75
2797
திருந்துநல் சீஎன்று உதறிய கையும்
அருந்தவர் வாஎன்று அணைத்த மலர்க்கையும்
பொருந்த அமைப்பில் அவ்வென்ற பொற்கையும்
திருந்தநல் தீயாகும் திருநிலை மவ்வே. 76
2798
மருவும் துடியுடன் மன்னிய வீச்சு
மருவிய அப்பும் அனலுடன் கையும்
கருவின் மிதித்த கமலப் பதமும்
உருவில் சிவாய நமவென வோதே. 77
2799
அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம்
அரன் அங்கி தன்னில் அறையிற் சங் காரம்
அரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயி
அரனடி என்றும் அனுக்கிரகம் என்னே. 78
2800
தீத்திரன் சோதி திகழ்ஒளி உள்ஒளி
கூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினள்
மூர்த்திகள் மூவர் முதல்வன் இடைசெல்லப்
பார்த்தனன் வேதங்கள் பாடினள் தானே. 79
2801
நந்தியை எந்தையை ஞானத் தலைவனை
மந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்து
அந்தர வானத்தின் அப்புறத்து அப்பர
சுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே. 80
2802
சீய குருநந்தி திருஅம்ப லத்திலே
ஆயுறு மேனியை யாரும் அறிகிலர்
தீயுறு செம்மை வெளுப்பொடும் அத்தன்மை
ஆயுறு மேனி அணைபுக லாமே. 81
2803
தானான சத்தியும் தற்பரை யாய்நிற்கும்
தானாம் பரற்கும் உயிர்க்கும் தரும் இச்சை
ஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள்
ஆனால் அரனடி நேயத்த தாமே. 82
9. ஆகாசப் பேறு
2804
உள்ளத்துள் ஓம்என்ற ஈசன் ஒருவனை
உள்ளத்து ளேயங்கி யாய ஒருவனை
உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை
உள்ளத்து ளேயுடல் ஆகாய மாமே. 1
2805
பெருநில மாய் அண்ட மாய்அண்டத்து அப்பால்
குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன்
பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன்
அருநிலை யாய்நின்ற ஆதிப் பிரானே. 2
2806
அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்
பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை
உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது
கொண்ட குறியைக் குலைத்தது தானே. 3
2807
பயனறு கன்னியர் போகத்தின் உள்ளே
பயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதி
அயனொடு மால்அறி யாவகை நின்றிட்டு
உயர்நெறி யாய்ஒளி ஒன்றது வாமே. 4
2808
அறிவுக்கு அறிவாம் அகண்ட ஒளியும்
பிறிவா வலத்தினில் பேரொளி மூன்றும்
அறியாது அடங்கிடும் அத்தன் அடிக்குள்
பிறியாது இருக்கில் பெரும்காலம் ஆமே. 5
2809
ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்து
ஏகாச மாசுணம் இட்டுஅங்கு இருந்தவன்
ஆகாச வண்ணம் அமர்ந்துநின்று அப்புறம்
ஆகாச மாய்அங்கி வண்ணனும் ஆமே. 6
2810
உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க
உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது
குயில்கொண்ட பேதை குலாவி உலாவி
வெயில்கொண்டு என்உள்ளம் வெளியது ஆமே. 7
2811
நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்து
அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி
நணுகிய மின்னொளி சோதி வெளியைப்
பணியின் அமுதம் பருகலும் ஆமே. 8
2812
புறத்துளா காசம் புவனம் உலகம்
அகத்துளா காசம்எம் ஆதி அறிவு
சிவத்துளா காசம் செழுஞ்சுடர் சோதி
சகத்துளா காசம் தானம்ச மாதியே. 9
10. ஞானோதயம்
2813
மனசந் தியில்கண்ட மனநன வாகும்
கனவுற ஆனந்தம் காண்டல் அதனை
வினவுற ஆனந்தம் மீதொழிவுஎன்ப
இனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே. 1
2814
கரியட்ட கையன் கபாலம்கை யேந்தி
எரியும் இளம்பிறை சூடும்எம் மானை
அரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால்
கரியன்கொல் சேயன்கொல் காண்கின்றி லேனே. 2
2815
மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்
தக்கார் உரைத்த தவநெறியே சென்று
புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை
நக்கார் சுழல்வழி நாடுமின் நீரே. 3
2816
விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே. 4
2817
தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு
தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை
தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்தபின்
தத்துவன் அங்கே தலைப்படுந் தானே. 5
2818
விசும்பொன்று தாங்கிய மெய்ஞ்ஞானத் துள்ளே
அசும்பினின்று ஊறியது ஆர்அமுது ஆகும்
பசும்பொன் திகழும் படர்சடை மீதே
குசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே. 6
2819
முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின்
கொத்தும் பசும்பொன்னின்தூவொளி மாணிக்கம்
ஒத்துஉயிர் அண்டத் துள் அமர் சோதியை
எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே. 7
2820
நான்என்றும் தான்என்றும் நாடினேன் நாடலும்
நான்என்றும் தான்என்றும் இரண்டில்லை என்பது
நான்என்ற ஞான முதல்வனே நல்கினான்
நான்என்ற நானும் நினைப்பு ஒழிந்தேனே. 8
2821
ஞானத்தின் நன்னெறி நாதாந்த நன்னெறி
ஞானத்தின் நன்னெறி நானென்று அறிவோர்தல்
ஞானத்தின் நல்யோக நன்னிலை யேநிற்றல்
ஞானத்தின் நன்மோக நாதாந்த வேதமே. 9
2822
உய்யவல் லார்கட்கு உயிர்சிவ ஞானமே
உய்யவல் லார்கட்கு உயிர்சிவ தெய்வமே
உய்யவல் லார்கட்கு ஒடுக்கம் பிரணவம்
உய்யவல் லார்அறி வுள்அறி வாமே. 10
2823
காணவல் லார்க்குஅவன் கண்ணின் மணியொக்கும்
காணவல் லார்க்குக் கடலின் அமுதொக்கும்
பேணவல் லார்க்கப் பிழைப்பிலன் பேர்நந்தி
ஆணவல் லார்க்கே அவன்துணை யாமே. 11
2824
ஓம்என்றும் எழுத் துள்நின்ற ஓசைபோல்
மேல்நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்
சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மானடி
ஆய்கின்ற தேவர் அகம்படி யாமே. 12
11. சத்திய ஞானானந்தம்
2825
எப்பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி
முப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே
இப்பாழும் இன்னாவாறு என்பதில்லா இன்பத்துத்
தற்பரஞா னானந்தர் தானது வாகுமே. 1
2826
தொம்பதம் தற்பதஞ் சொன்ன துரியம்போல்
நம்பிய மூன்றாம் துரியத்து நன்றாகும்
அம்புவி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே. 2
2827
மன்னும் சத்தியாதி மணியொளி மாசோயை
அன்னதோடு ஒப்பம் இடல்ஒன்றா மாறது
இன்னிய உற்பலம் ஒண்சீர் நிறமணம்
பன்னிய சோபை பகர்ஆறும் ஆனதே. 3
2828
சத்தி சிவன்பர ஞானமும் சாற்றுங்கால்
உய்த்த அனந்தம் சிவமுயர் ஆனந்தம்
வைத்த சொருபத்த சத்தி வருகுரு
உய்த்த உடல்இவை உற்பலம் போலுமே. 4
2829
உருஉற் பலநிறம் ஒண்மணம் சோபை
தரநிற்ப போல்உயிர் தற்பரன் தன்னில்
மருவச் சிவம்என்ற மாமுப் பதத்தின்
சொரூபத்தின் சத்தியாதி தோன்றநின் றானே. 5
2830
நினையும் அளவில் நெகிழ வணங்கிப்
புனையில் அவனைப் பொதியலும் ஆகும்
எனையும் எங்கோன்நந்தி தன்னருள் கூட்டி
நினையும் அளவில் நினைப்பித் தனனே. 6
2831
பாலொடு தேனும் பழத்துள் இரதமும்
வாலிய பேரமு தாகும் மதுரமும்
போலும் துரியம் பொடிபடி உள்புகச்
சீல மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே. 7
2832
அமரத் துவம்கடந்து அண்டம் கடந்து
தமரத்து நின்ற தனிமையன் ஈசன்
பவளத்து முத்தும் பனிமொழி மாதர்
துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே. 8
2833
மத்திமம் ஆறாறு மாற்றி மலநீக்கிச்
சுத்தம தாகும் துரியத் துரிசற்றுப்
பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றும்
சத்திய ஞா னானந்தம் சார்ந்தனன் ஞானியே. 9
2834
சிவமாய் அவமான மும்மலம் தீரப்
பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத்
தவமான சத்திய ஞானானந் தத்தே
துவமார் துரியம் சொரூபம் தாமே. 10
12. சொரூப உதயம்
2835
பரம குரவன் பரம்எங்கு மாகித்
திரமுற எங்கணும் சேர்ந்துஒழி வற்று
நிரவும் சொரூபத்துள் நீடும் சொரூபம்
அரிய துரியத்து அணைந்துநின் றானே. 1
2836
குலைக்கின்ற நீரின் குவலய நீரும்
அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாசம்
நிலத்திடை வானிடை நீண்டகன் றானை
வரைந்து வலம்செயு மாறுஅறி யேனே. 2
2837
அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள்
எங்குநின் றாரும் இறைவன் என்று ஏத்துவர்
தங்கிநின் றான்தனிநாயகன் எம்இறை
பொங்கிநின் றான்புவ னாபதி தானே. 3
2838
சமயச் சுவடும் தனையறி யாமல்
சுமையற்ற காமாதி காரணம் எட்டும்
திமிரச் செயலும் தெளிவுடன் நின்றோர்
அமரர்க்கு அதிபதி யாகிநிற் பாரே. 4
2839
மூவகைத் தெய்வத்து ஒருவன் முதல்உரு
வாய்அது வேறாம் அதுபோல் அணுப்பரன்
சேய சிவமுத் துரியத்துச் சீர்பெற
ஏயும் நெறியென்று இறைநூல் இயம்புமே. 5
2840
உருவன்றி யேநின்று உருவம் புணர்க்கும்
கருவன்றி யேநின்று தான்கரு வாகும்
அருவன்றி யேநின்ற மாயப் பிரானைக்
குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே. 6
2841
உருவம் நினைப்பவர்க்கு உள்ளுறும் சோதி
உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர்
உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர்
உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே. 7
2842
பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றாப்
பரஞ்சோதி என்னுள் படிந்துஅதன் பின்னைப்
பரஞ்சோதி யுள்நான் படியப் படியப்
பரஞ்சோதி தன்னைப் பறையக் கண்டேனே. 8
2943
சொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கி
அரியன உற்பலம் ஆமாறு போல
மருவிய சத்தியாதி நான்கும் மதித்த
சொரூபக்குரவன் சுகோதயத் தானே. 9
2944
உரையற்ற ஆனந்த மோன சொரூபத்தின்
கரையற்ற சத்தியாதி காணில் அகார
மருவுற்று உகாரம் மகாரம தாக
உரையற்ற காரத்தில் உள்ளொளி யாமே. 10
2845
தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து
முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்
புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து
கலைநின்ற கள்வனில் கண்டுகொண் டேனே. 11
2846
ஆமாறு அறிந்தேன் அகத்தின் அரும்பொருள்
போமாறு அறிந்தேன் புகுமாறும் ஈதென்றே
ஏமாப்ப தில்லை இனியோர் இடமில்லை
நாமாம் முதல்வனும் நான்என லாமே. 12
13. ஊழ்
2847
செற்றிலென் சீவிலென் செஞ்சாந்து அணியலென்
மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென்
வித்தகன் நந்தி விதிவழி யல்லது
தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே. 1
2848
தான்முன்னம் செய்த விதிவழி தானல்லால்
வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை
கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று
நான்முன்னம் செய்ததே நன்னில மானதே. 2
2849
ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே
கூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லை
நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப்
பேறிட்டுஎன் உள்ளம் பிரியகில் லாவே. 3
2850
வான்நின்று இடிக்கில்என் மாகடல் பொங்கிலன்
கான்நின்ற செந்தீக் கலந்துடல் வேகில்என்
தான்ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கிலென்
நான்ஒன்றி நாதனை நாடுவன் நானே. 4
2851
ஆனை துரக்கிலென் அம்பூடு அறுக்கிலென்
கானத்து உழுவை கலந்து வளைக்கிலென்
ஏனைப் பதியினில் என்பெரு மான்வைத்த
ஞானத்து உழவினை நான்உழு வேனே. 5
2852
கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்
நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை
வீடு கெடின்மற்றோர் வீடுபுக் கால்ஒக்கும்
பாடது நந்தி பரிசறி வார்க்கே. 6
14. சிவ தரிசனம்
2853
சிந்தையது என்னச் சிவனென்ன வேறில்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்
சிந்தையின் உள்ளே சிவனிருந்தானே. 1
2854
வாக்கும் மனமும் மறைந்த மறைபொருள்
நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது
போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை
யாக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே. 2
2855
பரனாய்ப் பராபர னாகிஅப் பால்சென்று
உரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய்
தரனாய் தனதென ஆறுஅறி வொண்ணா
அரனாய் உலகில் அருள்புரிந் தானே. 3
15. சிவ சொரூப தரிசனம்
2856
ஓதும் மயிரக்கால் தோறும் அமு தூரிய
பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்
ஆதி சொரூபங்கள் மூன்றுஅகன்று அப்பாலை
வேதம் ஓதும் சொரூபிதன் மேன்மையே. 1
2857
உணர்வும் அவனே உயிரும் அவனே
புணரும் அவனே புலவி அவனே
இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே. 2
2858
துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரும்
முன்னி அவர்தம் குறையை முடித்திடும்
மன்னிய கேள்வி மறையவன் மாதவன்
சென்னியுள் நின்றதோர் தேற்றத்தின் ஆமே. 3
2859
மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்
தன்னுற்ற சோதி தலைவன் இணையிலி
பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்
என்னுற்று அறிவன்நான் என்விழித் தானே. 4
2860
சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தம்
சித்தத்தின் நில்லாச் சிவானந்தப் பேரொளி
சுத்தப் பிரம துரியம் துரியத்துள்
உய்த்த துரியத்து உறுபே ரொளியே. 5
2861
பரன்அல்ல நீடும் பராபரன் அல்ல
உரன்அல்ல மீதுணர் ஒண்சுடர் அல்ல
தரன்அல்ல தான்அவை யாய்அல்ல வாகும்
அரன்அல்ல ஆனந்தத்து அப்புறத்தானே. 6
2862
முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா
சத்தியுள் நின்றோர்க்குத் தத்துவங் கூடலால்
சுத்தி யகன்றொர் சுகானந்த போதரே. 7
2863
துரிய அதீதம் சொல்லறும் பாழாம்
அரிய துரியம் அதீதம் புரியில்
விரியும் குவியும் விள்ளா மிளிரும்தன்
உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே. 8
16. முத்தி பேதம், கரும நிருவாணம்
2864
ஓதிய முத்தியடைவே உயிர்பர
பேத மில் அச்சிவம் எய்தும் துரியமோடு
ஆதி சொரூபம் சொரூபத்த தாகவே
ஏதமி லாநிரு வாணம் பிறந்ததே. 1
2865
பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்
சுற்றற் றவர்சுற்றுக் கருதிய கண்ணுதல்
சுற்றற் றவர்சுற்றி நின்றான் சோதியைப்
பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே. 2
17. சூனிய சம்பாஷணை
2866
காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய்
ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம்
ஏய பெருமான்இருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பறி யேனே. 1
2867
தூறு படர்ந்து கிடந்தது தூநெறி
மாறிக் கிடக்கும் வகையறி வாரில்லை
மாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்கு
ஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானே. 2
2868
ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்
சாறுபடுவன நான்கு பனையுள
ஏறற்கு அரியதோர் ஏணியிட்டு அப்பனை
ஏற்றலு றேன்கடல் ஏழுங்கண் டேனே. 3
2869
வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுதுகொண்டு ஓடினோர் தோட்டக் குடிகண்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே. 4
2870
ஐஎன்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்
செய்யுண்டு செய்யின் தெளிவுஅறி வாரில்லை
மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்
பொய்யொன்றும் இன்றிப் புகஎளி தாமே. 5
2871
பள்ளச்செய் ஒன்றுண்டு பாடச்செய் இரண்டுள
கள்ளச்செய் அங்கே கலந்து கிடந்தது
உள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்கு
வெள்ளச்செய் யாகி விளைந்தது தானே. 6
2872
மூவணை ஏரும் உழுவது முக்காணி
தாமணி கோலித் தறியுறப் பாய்ந்திடும்
நாஅணைகோலி நடுவில் செறுஉழார்
காலணை கோலிக்களர்உழு வாரே. 7
2873
ஏற்றம் இரண்டுள ஏழு துரவுள
மூத்தான் இறைக்க இளையான் படுத்தநீர்
பாத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடில்
கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் ளாமே. 8
2874
பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுள
குட்டிப் பசுக்களோர்ஏழுளு ஐந்துள
குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும்
பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே. 9
2875
ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுள
ஊற்றுப் பசுக்கள் ஒரு குடம் பால்போதும்
காற்றுப் பசுக்கள் கறந்துண்ணுங் காலத்து
மாற்றுப் பசுக்கள் வரவுஅறி யோமே. 10
2876
தட்டான் அசுத்தில் தலையான மச்சின்மேல்
மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது
வட்டம் படவேண்டி வாய்மை மடித்திட்டுத்
தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே. 11
2877
அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி
திரிக்கின்ற ஒட்டம்சிக்கெனக் கட்டி
வரிக்கின்ற நல்ஆன் கறவையைப் பூட்டில்
விரிக்கின்ற வெள்ளரி வித்துவித் தாமே. 12
2878
இடாக்கொண்டு தூவி எருவிட்டு வித்திக்
கிடாக் கொண்டு பூட்டிக் கிளறி முளையை
மிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார்
கிடாக்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே. 13
2879
விளைந்து கிடந்தது மேலைக்கு வித்தது
விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்
விளைந்து விளைந்து விளைந்துகொள் வார்க்கு
விளைந்து கிடந்தது மேவுமுக் காதமே. 14
2880
களர்உழு வார்கள் கருத்தை அறியோம்
களர்உழு வார்கள் கருதலும் இல்லைக்
களர்உழு வார்கள் களரின் முளைத்த
வளர்இள வஞ்சியின்மாய்தலும் ஆமே. 15
2881
கூப்பிடு கொள்ளாக் குறுநரி கொட்டகத்து
ஆப்பிடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு
நாட்பட நின்று நலம்புகுந்து ஆயிழை
ஏற்பட இல்லத்து இனிதிருந்தானே. 16
2882
மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்
குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ
உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்
முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே. 17
2883
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே. 18
2884
ஆமாக்கள் ஐந்தும் அரியேறு முப்பதும்
தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும்
தாமாக் குரங்கொளில் தம்மனத் துள்ளன
மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே. 19
2885
எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத்
தெருளாத கன்னி தெறிந்திருந்து ஓத
மலராத பூவின் மணத்தின் மதுவைப்
பிறவாத வண்டு மணமுண்ட வாறே. 20
2886
போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்
கூகின்ற நாவலின் கூழைத் தருங்கனி
ஆநின்ற வைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்
வேகின்ற கூரை விருத்திபெற் றாரே. 21
2887
மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு
வேம்பினில் சார்ந்து கிடந்த பனையிலோர்
பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பார்இன்றி
வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே. 22
2888
பத்துப் பரும்புலி யானை பதினைந்து
வித்தகர் ஐவர் வினோகர் ஈ ரெண்மர்
அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்
அத்தலை ஐவர் அமர்ந்து நின் றாரே. 23
2889
இரண்டு கடாவுண்டு இவ்வூரின் உள்ளே
இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பின்
இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கில்
இரண்டு கடாவும் ஒருகடா வாமே. 24
2890
ஒத்த மனக்கொல்லை உள்ளே சமன்கட்டிப்
பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்
முத்தம் கயிறாக மூவர்கள் ஊரினுள்
நித்தம் பொருது நிரம்பநின் றாரே. 25
2891
கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்
நாகையும் பூழும் நடுவில் உறைவன
நாகையைக் கூகை நணுகல் உறுதலும்
கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே. 26
2892
குலைக்கின்ற நன்னகை யாம்கொங்கு உழக்கின்
நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்
உலைக்குப் புறமெனில் ஓடும் இருக்கும்
புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே. 27
2893
காடுபுக் கார்இனிக் காணார் கருவெளி
கூடுபுக்கு ஆனது ஐந்து குதிரையும்
மூடுபுக்கு ஆனது ஆறுள ஒட்டகம்
மூடு புகாவிடின் மூவனை யாமே. 28
2894
கூறையும் சோறும் குழாயகத்து எண்ணெயும்
காறையும் நாணும் வளையலும் கண்டவர்
பாறையில் உற்ற பறக்கின்ற சீலைபோல்
ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே. 29
2895
துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல்
விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும்
வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பாள்
ஒருத்திஉள் ளாள்அவர் ஊர்அறி யோமே. 30
2896
பருந்துங் கிளியும் படுபறை கொட்டத்
திருந்திய மாதர் திருமணப் பட்டார்
பெருந்தவப் பூதம் போலுரு வாகும்
இருந்திய பேற்றினில் இன்புறு வாரே. 31
2897
கூடும் பறவை இரைகொத்தி மற்றதன்
ஊடுபுக்கு உண்டி அறுக்குறில் என்ஒக்கும்
சூடுஎறி நெய்யுண்டு மைகான்று இடுகின்ற
பாடுஅறி வார்க்குப் பயன்எளி தாமே. 32
2898
இலைஇல்லை பூவுண்டு இனவண்டு இங்கில்லை
தலைஇல்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின்
குலைஇல்லை கொய்யும் மலர்உண்டு சூடும்
தலைஇல்லை தாழ்ந்த கிளைபுல ராதே. 33
2899
அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு
நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்
மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த்
தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே. 34
2900
கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம்
காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர்
காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக்
கூப்பிட மீண்டதோர் கூரை கொண் டாரே. 35
2901
கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை
எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்
கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்
எட்டிப் பழத்துக்கு இளைக்கின்ற வாறே. 36
2902
பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக்
குடைகொண்ட பாசத்துக் கோலம் உண் டானும்
கடைவண்டு தான் உண்ணும் கண்கலந் திட்ட
பெடைவண்டு தான்பெற்றது இன்பமும் ஆமே. 37
2903
கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வதன்
எல்லை கடப்பித்து இறையடிக் கூட்டியே
வல்லசெய்து ஆற்றல் மதித்தபின் அல்லது
கொல்லசெய் நெஞ்சம் குறியறி யாதே. 38
2904
தட்டத்து நீரிலே தாமரை பூத்தது
குட்டத்து நீரில் குவளை எழுந்தது
விட்டத்தின் உள்ளே விளங்கவல் லார்கட்குக்
குட்டத்தில் கிட்டதோர் கொம்மட்டி யாமே. 39
2905
ஆறு பறவைகள் ஐந்தக்து உள்ளன
நூறு பறவை நுனிக்கொம்பின் மேலன
ஏறும் பெரும்பதி ஏழுங் கடந்தபின்
மாறுதல் இன்றி மனைபுக லாமே. 40
2906
கொட்டனஞ் செய்து குளிக்கின்ற கூவலுள்
வட்டனப் பூமி மருவிவந் தூறிடுங்
கட்டனஞ் செய்து கயிற்றால் தொழுமியுள்
ஒட்டனஞ் செய்தொளி யாவர்க்கு மாமே. 41
2707
ஏழு வளைகடல் எட்டுக் குலவரை
யாழும் விசும்பினில் அங்கி மழைவளி
தாழு மிருநிலந் தன்மை ய்துகண்டு
வாழ நினைக்கில தாலய மாமே. 42
2908
ஆலிங் கனஞ்செய்து அகம்சுடச் சூலத்துச்
சால்இங்கு அமைத்துத் தலைமை தவிர்த்தனர்
கோல்இங்கு அமைத்தபின் கூபப் பறவைகள்
மால்இங்கன் வைத்துஅது முன்பின் வழியே. 43
2909
கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிதென்பர்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்
இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே. 44
2910
கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர்
முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்
பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன்
மறையொன்று கண்ட துருவம் போ லாமே. 45
2911
கோரை எழுந்து கிடந்த குளத்தினில்
ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது
நாரை படுக்கின்றாற் போலல்ல நாதனார்
பாரை கிடக்கப் படிகின்ற வாறே. 46
2912
கொல்லைமுக் காதமும் காடுஅரைக் காதமும்
எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி
எல்லை மயங்காது இயங்க வல் லார்கட்கு
ஒல்லை கடந்துசென்று ஊர்புக லாமே. 47
2913
உழவொன்று வித்து ஒருங்கின காலத்து
எழுமழை பெய்யாது இருநிலச் செல்வி
தழுவி வினைசெய்து தான்பய வாது
வழுவாது போவன் வளர்சடை யோனே. 48
2914
பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம்
ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ
மதுங்கிய வார்களி ஆரமுது ஊறப்
பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே. 49
2915
தோணியொன்று ஏறித் தொடர்ந்து கடல்புக்கு
வாணிபம் செய்து வழங்கி வளர்மகன்
நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலைதளர்ந்து
ஆலிப் பழம்போல் அளிக்கின்ற அப்பே. 50
2916
முக்காதம் ஆற்றிலே மூன்றுள வாழைகள்
செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன
பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர்
நக்கு மலருண்டு நடுவுநின் றாரே. 51
2917
அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்தி
முடியும் நுனியின் கண் முத்தலை மூங்கில்
கொடியும் படையும் கோட்சரன் ஐஐந்து
மடியும் வலம்புரி வாய்த்தது அவ் வாறே. 52
2918
பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம்
தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக்
குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின்
குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே. 53
2919
மொட்டித்து எழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக்
கட்டுவிட்டு ஓடின் மலர்தலும் காணலாம்
பற்றுவிட்டு அம்மனை பாழ்பட நோக்கினால்
கட்டுவிட் டார்க்கு அன்றிக் காணஒண் ணாதே. 54
2920
நீரின்றிப் பாயும் நிலத்தினிற் பச்சையாம்
யாவரும் என்றும் அறியவல் லார்இல்லை
கூரும் மழைபொழி யாது பொழிபுனல்
தேரின் இந் நீர்மை திடரின்நில் லாதே. 55
2921
கூகை குருந்தமது ஏறிக் குணம் பயில்
மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து
நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்
பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே. 56
2922
வாழையும் சூரையும் வந்திடம் கொண்டன
வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர்
வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு
வாழை இடம்கொண்டு வாழ்கின்ற வாறே. 57
2923
நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப்
புனத்துக் குறவன் புணர்ந்த கொழுமீன்
விளக்குமின் யாவர்க்கும் வேண்டிற் குறையாது
அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே. 58
2924
தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில்
விளிப்பதோர் சங்குண்டு வேந்தணை நாடிக்
களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும்
அளிக்கும் பதத்தொன்று ஆய்ந்து கொள் வார்க்கே. 59
2925
குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை
படைகண்டு மீண்டது பாதி வழியில்
உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார்
அடையா நெடுங்கடை ஐந்தொடு நான்கே. 60
2926
போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டொடு நாலு புரவியும்
பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே. 61
2927
பாசி பாடர்ந்து கிடந்த குளத்திடைக்
கூசி யிருக்கும் குருகு இரைதேர்ந்துண்ணும்
தூசி மறவன் துணைவழி எய்திடப்
பாசங் கிடந்து பதைக்கின்ற வாறே. 62
2928
கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டு
கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு
வம்பாய் மலர்ந்ததோர் பூவுடைப் பூவக்குள்
வண்டாய்க் கிடந்து மணங்கொள்வன் ஈசனே. 63
2929
வீணையும் தண்டும் விரவி இசைமுரல்
தாணுவும் மேவித் தருதலைப் பெய்தது
வாணிபம் சிக்கென்று அதுஅடை யாமுன்னம்
காணியும் அங்கே கலக்கின்ற வாறே. 64
2930
கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தது
வங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லை
திங்கள்புக்கால் இருளாவது அறிந்திலர்
தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே. 65
2931
போதும் புலர்fந்தது பொன்னிறங் கொண்டது
தாதவிழ் புன்னை தயங்கும் இருகரை
ஏதமில் ஈசன்இயங்கு நெறியிது
மாதர் இருந்ததோர் மண்டலம் தானே. 66
2932
கோமுற்று அமரும் குடிகளும் தம்மிலே
காமுற்று அகத்தி இடுவர் கடைபொறும்
வீவற்ற எல்லை விடாது வழிகாட்டி
யாமுற்ற அதட்டினால் ஐந்துண்ண லாமே. 67
2933
தோட்டத்தில் மாம்பழம் தோண்டி விழுந்தக்கால்
நாட்டின் புறத்தில் நரியழைத்து என்செயும்
மூட்டிக் கொடுத்து முதல்வனை முன்னிட்டு
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே. 68
2934
புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப்
புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப்
புலம்பின் அவளொடும் போகம் நுகரும்
புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே. 69
2935
தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது
வாணி மிதித்துநின்று ஐவர்கோல் ஊன்றலும்
வாணிபம் செய்வார் வழியிடை ஆற்றிடை
ஆணி கலங்கில் அதுஇது வாமே. 70
18. மோன சமாதி
2936
நின்றார் இருந்தார் கிடந்தார் எனஇல்லை
சென்றார்தம் சித்தம் மோன சமாதியாம்
மன்றுஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்றுண்டு
சென்றாங்கு அணைந்தவர் சேர்கின்ற வாறே. 1
2937
காட்டும் குறியும் கடந்த அக் காரணம்
ஏட்டின் புறத்தில் எழுதிவைத்து என்பயன்
கூட்டும் குருநந்தி கூட்டிடின் அல்லது
ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே. 2
2938
உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்
உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை
உணர்வுடை யார்கள் உணர்ந்த அக்காலம்
உணர்வுடை யார்கள் உணர்ந்து கண் டாரே. 3
2939
மறப்பது வாய்நின்ற மாயநன் னாடன்
பிறப்பினை நீங்கிய பேரரு ளாளன்
சிறப்பிடை யான்திரு மங்கையும் தானும்
உறக்கமில் போகத்து உறங்கிடுந் தானே. 4
2940
துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய துரியம் அதன்மீது மூன்றாய்
விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே
உரையில் அநுபூ திகத்தினுள் ளானே. 5
2941
உருவிலி ஊனிலி ஊனம்ஒன்று இல்லி
திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்
பொருவிலி பூதப் படையுடை யாளி
மருவிலி வந்துஎன் மனம்புகுந் தானே. 6
2942
கண்டறி வார்இல்லைக் காயத்தின் நந்தியை
எண்டிசை யோரும் இறைவன் என்று ஏத்துவர்
அண்டங் கடந்த அளவிலா ஆனந்தத்
தொண்டர் முகந்த துறையறி யோமே. 7
2943
தற்பரம் அல்ல சதாசிவன் தான்அல்ல
நிட்களம் அல்ல சகள நிலையல்ல
அற்புத மாகி அனுபோகக் காமம்போல்
கற்பனை இன்றிக் கலந்துநின் றானே. 8
2944
முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே. 9
2945
அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பராபரம் சேர்பர மும்விட்டுக்
கப்புறு சொற்பதம் மாயக் கலந்தமை
எப்படி அப்படி என்னும் அவ்வாறே. 10
2946
கண்டார்க்கு அழகிது காஞ்சிரத் தின்பழம்
தின்றார்க்கு அறியலாம் அப்பழத் தின்சுவை
பெண்தான் நிரம்பி மடவியள் ஆனால்
கொண்டான் அறிவன் குணம்பல தானே. 11
2947
நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே
சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன
உந்தியின் உள்ளே உதித்தெழும் சோதியைப்
புந்தியி னாலே புணர்ந்துகொண் டேனே. 12
2948
விதறு படாவண்ணம் வேறிருந்து ஆய்ந்து
பதறு படாதே பழமறை பார்த்துக்
கதறிய பாழைக் கடந்ததக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றானே. 13
2949
வாடா மலர்புனை சேவடி வானவர்
கூடார் அறநெறி நாடொறும் இன்புறச்
சேடார் கமலச் செழுஞ்சுடர் உட்சென்று
நாடார் அமுதுற நாடார் அமுதமே. 14
2950
அதுக்கென்று இருவர் அமர்ந்த சொற் கேட்டும்
பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல்
சதுக்கென்று வேறே சமைந்தாரைக் காண
மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே. 15
2951
தானும் அழிந்து தனமும் அழிந்துநீடு
ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து மனமும் அழிந்துபின்
நானும் அழிந்தமை நானறி யேனே. 16
2952
இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப்
பொருளிற் பொருளாய்ப் பொருந்தவுள் ளாகி
அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே
உருளாத கன்மனம் உற்றுநின் றேனே. 17
2953
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே. 18
19. வரையுரை மாட்சி
2954
தான்வரைவு அற்றபின் ஆரை வரைவது
தான்அவ னானபின் ஆரை நினைவது
காமனை வென்றகண் ஆரை உகப்பது
தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே. 1
2955
உரையற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாண லாகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்று இருந்தான் புரிசடை யோனே. 2
2956
மனமாயை மாயைஇம் மாயை மயக்கம்
மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை
பினைமாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா
தனைஆய்ந்து இருப்பது தத்துவந் தானே. 3
20. அணைந்தோர் தன்மை
2957
மலமில்லை மாசில்லை மானாபி மானம்
குலமில்லை கொள்ளும் குணங்களும் இல்லை
நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே
பலமன்னி அன்பில் பதித்துவைப் போர்க்கே. 1
2958
ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன்
அழிந்தாங்கு இனிவரும் ஆக்கமும் வேண்டேன்
செழுஞ்சார் புடைய சிவனைக் கண் டேனே. 2
2959
ஆலைக் கரும்பும் அமுதும்அக் காரமும்
சோலைத் தண்ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப்
பீலிக்கண் அன்ன வடிவுசெய் வாளொரு
கோலப்பெண் ணாட்குக் குறை யொன்றும் இல்லையே. 3
2960
ஆராலும் என்னை அமட்டஒண் ணாதிதினிச்
சீரார் பிரான்வந்தென் சிந்தை புகுந்தனன்
சீராடி அங்கே திரிவதால் லால் இனி
யார்படுஞ் சாரா அறிவறிந் தேனே. 4
2961
பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம்
தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை
அரிந்தேன் வினையை அயில்மன வாளால்
முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே. 5
2962
ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்
ஒன்றுகண் டீர்உல குக்குஉயி ராவது
நன்றுகண் டீர்இனி நமசிவா யப்பழம்
தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே. 6
2963
சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன்
வந்தென்னை யாண்ட மணிவிளக்கு ஆனவன்
அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்
சிந்தையின் மேவித் தியக்கு அறுத் தானே. 7
2964
பண்டுஎங்குள் ஈசன் நெடுமால் பிரமனைக்
கண்டுஅங்கு இருக்கும் கருத்தறி வாரில்லை
விண்டு அங்கே தோன்றி வெறுமனம் ஆயிடில்
துண்டு அங்கு இருந்ததோர் தூறுஅது வாமே. 8
2965
அன்னையும் அத்தனும் அன்புற்றது அல்லது
அன்னையும் அத்தனும் ஆரறி வார்என்னை
அன்னையும் அத்தனும் யானும் உடனிருந்து
அன்னையும் அத்தனை யான்புரிந் தேனே. 9
2966
கொண்ட சுழியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்துளே
உண்டனர் நானினி உய்ந்தொழிந் தேனே. 10
2967
தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே வடவரை ஆதியுமாய நிற்கும்
தானே உடலுயிர் தத்துவமாய் நிற்கும்
தானே உலகில் தலைவனும் ஆமே. 11
2968
நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நானுடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன்
தவம்வரும் சிந்தைத் தான்எதிராரே. 12
2969
சித்தம் சிவமாய் மலமூன்றும் செற்றவர்
சுத்தச் சிவமாவர் தோயார் மலபந்தம்
சுத்தும் சிலகும் கலகமும் கைகாணார்
சத்தம் பரவிந்து தானாம்என்று எண்ணியே. 13
2970
நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினைப்பற்று அறுக்கும் விமலன் இருக்கும்
வினைப்பற்று அறுக்கும் விமலனைத் தேடி
நினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே. 14
2971
சிவபெரு மான்என்று நான்அழைத்து ஏத்தத்
தவப்பெரு மான்என்று தான்வந்து நின்றான்
அவபெரு மான்என்னை யாளுடை நாதன்
பவபெரு மானைப் பணிந்துநின் றேனே. 15
2972
பணிந்துநின் றேன்பர மாதி பதியைத்
துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டேன்
அணிந்துநின் றேன்உடல் ஆதிப் பிரானைத்
தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே. 16
2973
என்நெஞ்சம் ஈசன் இணையடி தாம் சேர்ந்து
முன்னம்செய்து ஏத்த முழுதும் பிறப்பறும்
தன்நெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி
பின்னம்செய்து என்னைப் பிணக்கறுத் தானே. 17
2974
பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத்து எண்ணும்
கணக்கறுத் தாண்டவன் காண்நந்தி என்னைப்
பிணக்கறுத்து என்னுடன் முன்வந்த துன்பம்
வணக்கலுற் றேன்சிவன் வந்தது தானே. 18
2975
சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப்
பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்டு
அவன்எந்தை ஆண்டருள் ஆதிப் பெருமான்
அவன்வந்தென் னுள்ளே அகப்பட்ட வாறே. 19
2976
கரும்பும் தேனும் கலந்ததோர் காயத்தில்
அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே. 20
2977
உள்ள சரியாதி ஒட்டியே மீட்டென்பால்
வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச்
செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால்
கைவளம் இன்றிக் கருக்கடந் தேனே. 21
2978
மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று
தூண்டா விளக்கிக் தகளிசெய் சேர்தலும்
பூண்டாள் ஒருத்தி புவன சூடாமணி
மாண்டான் ஒருவன்கை வந்தது தானே. 22
2979
ஆறே அருவி அகங்குளம் ஒன்றுண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவிமுலை கொம்பனை யாளொடும்
வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே. 23
2980
அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே. 24
2981
மனம்வி ரிந்து குவிந்தது மாதவம்
மனம்வி ரிந்து குவிந்தது வாயு
மனம்வி ரிந்து குவிந்தது மன்னுயிர்
மனம்வி ரிந்துரை மாண்டது முத்தியே. 25
21 தோத்திரம்
2982
மாயனை நாடி மனநெடும் தேரெறிப்
போயின நாடறி யாதே புலம்புவர்
தேயமும் நாடும் திரிந்தெங்கள் செல்வனைக்
காயம்மின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே. 1
2983
மன்னு மலைபோல் மதவா ரணத்தின்மேல்
இன்னிசை பாட இருந்தவர் ஆரெனில்
முன்னியல் கால முதல்வனார் நாமத்தைப்
பன்னினர் என்றே பாடறி வீரே. 2
2984
முத்தினின் முத்தை முகிழிள ஞாயிற்றை
எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனனை
அத்தனைக் காணாது அரற்றுகின் றேனையோர்
பித்தன் இவனென்று பேசுகின் றாரே. 3
2985
புகுந்துநின் றான்எங்கள் புண்ணிய மூர்த்தி
புகுந்துநின் றான்எங்கள் போதறி வாளன்
புகுந்துநின் றானடி யார்தங்கள் நெஞ்சம்
புகுந்துநின் றானையே போற்றுகின் றேனே. 4
2986
பூதக்கண் ணாடியில் புகுந்திலன் போதுளன்
வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படு
நீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன்
கீதக்கண் ணாடியில் கேட்டுநின் றேனே. 5
2987
நாமம் ஓர் ஆயிரம் ஓதுமின் நாதனை
ஏமம் ஓர் ஆயிரத் துள்ளே இசைவீர்கள்
ஓமம்ஓர் ஆயிரம் ஓதவல் லார்அவர்
காமம் ஆயிரம் கண்டொழிந் தாரே. 6
2988
போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகழ் ஞானத்தைத்
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தைப்
போற்றுகின் றேன்எம் பிரானென்று நானே. 7
2989
நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை
ஊனார் கமலத்தின் ஊடுசென்று அப்புறம்
வானோர் உலகம் வழிபட மீண்டபின்
தேனார உண்டு தெவிட்டலும் ஆமே. 8
2990
வந்துநின் றான்அடி யார்கட்கு அரும்பொருள்
இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும்
சுந்தர மாதர் துழனியொன்று அல்லது
அந்தர வானத்தின் அப்புறம் ஆமே. 9
2991
மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்
எண்ணிற் கலங்கி இறைவன் இவன்என்னார்
உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்
தெண்ணீர்ப் படுத்த சிவன்அவன் ஆமே. 10
2992
மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்
கைத்தலம் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமைந் தொழிந் தேனே. 11
2993
அமைந்தொழிந் தேன்அள வில்புகழ் ஞானம்
சமைந் தொழிந் தேன்தடு மாற்றம்ஒன் றில்லை
புகைந் தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி
வகைந்து கொடுக்கின்ற வள்ளலும் ஆமே. 12
2994
வள்ளல் தலைவனை வானநன் னாடனை
வெள்ளப் புனற்சடை வேதமுதல்வனைக்
கள்ளப் பெருமக்கள் காண்பர்கொலோஎன்று
உள்ளத்தின் உள்ளே ஒளிந்திருந்து ஆளுமே. 13
2995
ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளை
நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர்
கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்
வாளும் மனத்தொடும் வைத்தொழிந் தேனே. 14
2996
விரும்பில் அவனடி வீர சுவர்க்கம்
பொருந்தில் அவனடி புண்ணிய லோகம்
திருந்தில் அவனடி தீர்த்தமும் ஆகும்
வருந்தி அவனடி வாழ்த்தவல் லார்க்கே. 15
2997
வானகம் ஊடறுத் தான்இவ் வுலகினில்
தானகம் இல்லாத் தனியாகும் போதகன்
கானக வாழைக் கனிநுகர்ந்து உள்ளுறும்
பானகச் சோதியைப் பற்றிநின் றேனே. 16
2998
விதியது மேலை அமரர் உறையும்
பதியது பாய்புனல் கங்கையும் உண்டு
துதியது தொல்வினைப் பற்றறு விக்கும்
பதியது வவ்விட்டது அந்தமும் ஆமே. 17
2999
மேலது வானவர் கீழது மாதவர்
தானிடர் மானுடர் கீழது மாதுஅனங்
கானது கூவிள மாலை கமழ்சடை
ஆனது செய்யும்என் ஆருயிர் தானே. 18
3000
சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை
ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பிலி
யாழுஞ் சுனையும் அடவியும் அங்குளன்
வாழும் எழுந்தைந்து மன்னனும் ஆமே. 19
3001
உலகமது ஒத்துமண் ஒத்ததஉயர் காற்றை
அலர்கதிர் அங்கிஓத்து ஆதிப் பிரானும்
நிலவிய மாமுகில் நீர்ஒத்து மீண்டுஅச்
செலவுஒத்து அமர்திகைத் தேவர் பி ரானே. 20
3002
பரிசறிந்து அங்குளன் அங்கி அருக்கன்
பரிசறிந்து அங்குளன் மாருதத்து ஈசன்
பரிசறிந்து அங்குளன் மாமதி ஞானப்
பரிசறிந்து அந்நிலம் பாரிக்கும் ஆறே. 21
2903
அந்தம் கடந்தும் அதுஅது வாய்நிற்கும்
பந்த உலகினில் கீழோர் பெரும் பொருள்
தந்த உலகெங்கும் தானே பாராபரன்
வந்து படைக்கின்ற மாண்பது வாமே. 22
2904
முத்தண்ண ஈரண்ட மேமுடி ஆயினும்
அத்தன் உருவம் உலகுஏ ழெனப்படும்
அத்தனின் பாதாளம் அளவுள்ள சேவடி
மத்தர் அதனை மகிழ்ந்துஉண ராரே. 23
2905
ஆதிப் பிரான்நம் பிரான்அவ் அகலிடச்
சோதிப் பிரான்சுடர் மூன்றுஒளி யாய்நிற்கும்
ஆதிப் பிரான்அண்டத்து அப்புறம் கீழவன்
ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே. 24
3006
அண்டம் கடந்துஉயர்ந்து ஓங்கும் பெருமையன்
பிண்டம் கடந்த பிறவிச் சிறுமையன்
தொண்டர் நடந்த கனைகழல் காண்டொறும்
தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றானே. 25
3007
உலவுசெய் நோக்கம் பெருங்கடல் சூழ
நிலம்முழுது எல்லாம் நிறைந்தனன் ஈசன்
பலம்முழுது எல்லாம் படைத்தனன் முன்னே
புலம்முழு பொன்னிற மாகிநின் றானே. 26
3008
பராபர னாகிப் பல்லூழிகள் தோறும்
பராபர னாய்இவ் அகலிடம் தாங்கித்
தராபர னாய்நின்ற தன்மை யுணரார்
நிராபர னாகி நிறைந்துநின் றானே. 27
3009
போற்றும் பெருந்தெய்வம் தானே பிறரில்லை
ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்
வேற்றுடல் தானென்றும் அதுபெருந் தெய்வமாம்
காற்றது ஈசன் கலந்து நின்றானே. 28
3010
திகையனைத் தும்சிவ னேஅவ னாகின்
மிகையனைத் தும்சொல்ல வேண்டா மனிதரே
புகையனைத் தும்புறம் அங்கியிற் கூடு
முகையனைத் தும்எங்கள் ஆதிப் பிரானே. 29
3011
அகன்றான் அகலிடம் ஏழும்ஒன்றாகி
இவன்தான் எனநின்று எளயனும் அல்லன்
சிவன்தான் பலபல சீவனு மாகி
நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே. 30
3012
கலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்ற
தலைவனனை நாடுமின் தத்துவ நாதன்
விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்ப
உரையில்லை உள்ளுறும் உள்ளவன் தானே. 31
3013
படிகால் பிரமன்செய் பாசம் அறுத்து
நெடியான் குறுமைசெய் நேசம் அறுத்துச்
செடியார் தவத்தினில் செய்தொழில் நீக்கி
அடியேனை உய்யவைத்து அன்புகொண் டானே. 32
3014
ஈசனென்று எட்டுத் திசையும் இயங்கின
ஓசையில் நின்றெழு சத்தம் உலப்பிலி
தேசமொன்று ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும்
வாச மலர்போல் மருவி நின் றானே. 33
3015
இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம்இறை
நல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன்
தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி
சொல்லரும் சோதி தொடர்ந்துநின் றானே. 34
3016
உள்ளத் தொடுங்கும் புறத்துளும் நானெனும்
கள்ளத் தலைவன் கமழ்சடை நந்தியும்
வள்ளற்பெருமை வழக்கஞ்செய் வார்கள்தம்
அள்ளற் கடலை அறுத்துநின் றானே. 35
3017
மாறெதிர் வானவர் தானவர் நாடொறும்
கூறுதல் செய்து குரைகழல் நாடுவர்
ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறுத்துளும்
வேறுசெய்து ஆங்கே விளக்கொளி யாமே. 36
3018
விண்ணிலும் வந்த வெளியிலன் மேனியன்
கண்ணிலும் வந்த புலனல்லன் காட்சியன்
பண்ணினில் வந்த பயனல்லன் பான்மையன்
எண்ணில் ஆ னந்தமும் எங்கள் பிரானே. 37
3219
உத்தமன் எங்கும் உகக்கும் பெருங்கடல்
நித்திலச் சோதியன் நீலக் கருமையன்
எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனைச்
சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே. 38
3020
நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்
அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம்
மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம்
புறம்பல காணினும் போற்றகி லாரே. 38
3021
இங்குநின் றான்அங்கு நின்றனன் எங்குளன்
பொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன்
கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறு
எங்குநின் றான்மழை போல்இறை தானே. 40
3022
உணர்வது வாயுவே உத்தம மாயும்
உணர்வது நுண்ணறிவு எம்பெரு மானைப்
புணர்வது வாயும் புல்லிய தாயும்
உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே. 41
3023
தன்வலி யால்உல கேழும் தரித்தவன்
தன்வலி யாலே அணுவினும் தான்நொய்யன்
தன்வலி யால்மலை எட்டினும் தான்சாரான்
தன்வலி யாலே தடம்கட லாமே. 42
3024
ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்இறை
ஊனே சிறுமையும் உட்கலந்து அங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே. 43
3025
பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளைக்
குண்டாலம் காயத்துக் குதிரை பழுத்தது
உண்டனர் உண்டார் உணர்விலா மூடர்கள்
பிண்டத்துஉட் பட்டுப் பிணங்குகின்றார்களே. 44
22. சர்வ வியாபி
3026
ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓரொளி
ஆயும் அறிவையும் மாயா உபாதியால்
ஏய பரிய புரியும் தனதுஎய்தும்
சாயும் தனது வியாபகம் தானே. 1
3027
நான்அறிந்து அப்பொருள் நாடஇடம் இல்லை
நான்அறிந்து அங்கே வழியுற விம்மிடும்
ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தான்அறிந்து அங்கும் தலைப்பட லாமே 2
3028
கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்து
உடலிடை வாழ்வுகொண்டு உள்ளொளி நாடி
உடலிடை வைகின்ற உள்ளுறு தேவனைக்
கடலின் மலிதிரைக் காணலும் ஆமே. 3
3029
பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித்
தெரிந்துட லாய் நிற்கும் தேவர் பிரானும்
இருஞ்சுடர் விட்டிட்டு இகலிடம் எல்லாம்
பரிந்துடன் போகின்ற பல்கோரை யாமே. 4
3030
உறுதியின் உள்வந்த உள்வினைப் பட்டு
இறுதியின் வீழ்ந்தார் இரணமது ஆகும்
சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி
பெறுதியின் மேலோர் பெருஞ்சுட ராமே. 5
3031
பற்றி னுள்ளே பரமாய பரஞ்சுடர்
முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்றொளி
நெற்றியின் உள்ளே நினைவாய் நிலைதரு
மற்றவ னாய்னி ன்ற மாதவன் தானே. 6
3032
தேவனும் ஆகும் திசைதிசை பத்துளும்
ஏவனும் ஆம்விரி நீருலகு ஏழையும்
ஆவனு மாம் அமர்ந்து எங்கும் உலகினும்
நாவனும் ஆகி நவிற்றுகின் றானே. 7
3033
நோக்கும் கருடன் நொடிஏழ் உலகையும்
காக்கும் அவனித் தலைவனும் அங்குள
நீக்கும் வினைஎன் நிமலன் பிறப்பிலி
போக்கும் வரவும் புணரல் லானே. 8
3034
செழுஞ்சடை யன் செம்பொ னேயொக்கும் மேனி
ஒழிந்தன னாயும் ஒருங்குடன் கூடும்
கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன்
ஒழிந்திலகு ஏழுலகு ஒத்துநின் றானே. 9
3035
உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புலனும் அவனே
இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே. 10
3036
புலமையின் நாற்றமில் புண்ணியன் எந்தை
நலமையின் ஞான வழக்கமும் ஆகும்
விலமையில் வைத்துள் வேதியர் கூறும்
பலமையில் எங்கும் பரந்துநின் றானே. 11
3037
விண்ணவ னாய்உலகு ஏழுக்கு மேலுளன்
மண்ணவ னாய்வலம் சூழ்கடல் ஏழுக்கும்
தண்ணவன் ஆயது தன்மையின் நிற்பதோர்
கண்ணவ னாகிக் கலந்துநின் றானே. 12
3038
நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி
நின்றனன் தான்நிலம் கீழொடு மேலென
நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல்
நின்றனன் தானே வளங்கனி யாயே. 13
3039
புவனா பதிமிகு புண்ணியன் எந்தை
அவனே உலகில் அடர்பெரும் பாகன்
அவனே அரும்பல சீவனும் ஆகும்
அவனே இறையென மாலுற்ற வாறே. 14
3040
உண்ணின்று ஒளிரும் உலவாப் பிராணனும்
விண்ணின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும்
மண்ணின்று இயங்கும் வாயுவு மாய் நிற்கும்
கண்ணின்று இயங்கும் கருத்தவன் தானே. 15
3041
எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப்
பண்ணும் திறனும் படைத்த பரமனைக்
கண்ணிற் கவரும் கருத்தில் அதுஇது
உண்ணின்று உருக்கியோர் ஆயமும் ஆமே. 16
3042
இருக்கின்ற எண்டிசை அண்டம்பா தாளம்
உருக்கொடு தன்னடு ஒங்கஇவ்வண்ணம்
கருக்கொடு எங்கும் கலந்திருந் தானே
திருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே. 17
3043
பலவுடன் சென்றஅப் பார்முழுது ஈசன்
செலவுஅறி வார்இல்லை சேயன் அணியன்
அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதி
பலவில தாய் நிற்கும் பான்மைவல் லானே. 18
3044
அதுஅறி வானவன் ஆதிப் புராணன்
எதுஅறி யாவகை நின்றவன் ஈசன்
பொதுஅது வான புவனங்கள் எட்டும்
இதுஅறி வானநந்தி எங்கள் பிரானே. 19
3045
நீரும் நிலனும் விசும்புஅங்கி மாருதம்
தூரும் உடம்புறு சோதியு மாய் உளன்
பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்இறை
ஊரும் சகலன் உலப்பிலி தானே. 20
3046
மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
மூலன் உரைசெய்த முன்னூறு மந்திரம்
மூலன் உரைசெய்த முப்பது உபதேசம்
மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே. 21
23. வாழ்த்து
3047
வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே. 1.
ஒன்பதாம் தந்திரம் முற்றிற்று.
திருமூலர் திருமந்திரம் முற்றிற்று
திருச்சிற்றம்பலம்