சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்துதேவ ராகலாம் சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்துவானம் ஆளலாம் சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்துகொண்ட வான்பொருள் சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்துகொள்ளும் உண்மையே. | 201 |
பொய்க்குடத்தில் ஐந்தொதுங்கிப் போகம்வீசு மாறுபோல் இச்சடமும் இந்திரியமும் நீருமேல் அலைந்ததே அக்குடம் சலத்தைமொண்டு அமர்ந்திருந்த வாறுபோல் இச்சடம் சிவத்தைமொண்டு உகந்தமர்ந்து இருப்பதே. | 202 |
பட்டமும் கயிறுபோல் பறக்கநின்ற சீவனைப் பட்டறிவினாலே பார்த்துநீ படுமுடிச்சு போடடா; திட்டவும் படாதடா, சீவனை விடாதடா கட்டடாநீ சிக்கெனக் களவறிந்த கள்வனை. | 203 |
அல்லிறந்து பகலிறந்து அகப்பிரமம் இறந்துபோய் அண்டரண்ட மும்கடந்த அனேகனேக ரூபமாய்ச் சொல்லிறந்த மனமிறந்த சுகசொரூப உண்மையைச் சொல்லியாற என்னில்வேறு துணைவரில்லை ஆனதே. | 204 |
ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்; கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும் துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே. | 205 |
அங்கலிங்க பீடமும் அசவைமூன்று எழுத்தினும் சங்குசக் கரத்திலும் சகல வானத்திலும் பங்குகொண்ட யோகிகள் பரமவாசல் அஞ்சினும் சிங்கநாத ஓசையும் சிவாயம்அல்ல தில்லையே. | 206 |
அசவை - அசுபா மந்திரம்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள் அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்; அஞ்செழுத்தும் நெஞ்சழுத்து அவ்வெழுத் தறிந்தபின் அஞ்செழுத்தும் அவ்வின்வண்ணம் ஆனதே சிவாயமே. | 207 |
ஆதரித்த மந்திரம் அமைந்தஆக மங்களும் மாதர்மக்கள் சுற்றமும் மயக்கவந்த நித்திரை ஏதுபுக் கொளித்ததோ, எங்கும்ஆகி நின்றதோ? சோதிபுக் கொளித்திடம் சொல்லடா சுவாமியே. | 208 |
அக்கரம் அனாதியோ, ஆத்துமா அனாதியோ? புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ? தக்கமிக்க நூல்களும் சதாசிவம் அனாதியோ? மிக்கவந்த யோகிகாள், விரைந்துரைக்க வேணுமே. | 209 |
ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில் ஒன்பதாம் ராமராம ராமஎன்னும் நாமமே வன்மமான பேர்கள்வாக்கில் வந்துநோய் அடைப்பதாம் அன்பரான பேர்கள்வாக்கில் ஆழ்ந்தமைந்து இருப்பதே. | 210 |
அள்ளிநீரை இட்டதேது? அங்கையில் குழைந்ததேது? மெள்ளவே முணமுணவென்று விளம்புகின்ற மூடர்காள் கள்ளவேடம் இட்டதேது கண்ணைமூடி விட்டதேது? மெள்ளவே குருக்களே, விளம்பிடீர் விளம்பிடீர். | 211 |
அன்னைகர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம் முன்னையே தரித்தும் பனித்துளிபோலாகுமே; உன்னிதொக் குளழலும் தூமையுள்ளுளே அடங்கிடும் பின்னையே பிறப்பதும் தூமைகாணும் பித்தரே. | 212 |
அழுக்கறத் தினங்குளித்து அழுக்கறாத மாந்தரே, அழுக்கிருந்தது எவ்விடம், அழகில்லாதது எவ்விடம். அழுக்கிருந்தது எவ்விடத்து அழுக்கறுக்க வல்லீரேல் அழுக்கிலாதது சோதியோடு அணுகிவாழ லாகுமே. | 213 |
அணுத்திரண்ட கண்டமாய் அனைத்துபல்லி யோனியாய் மனுப்பிறந்து ஓதிவைத்த நூலிலே மயங்குறீர் சனிப்பதுஏது; சாவதுஏது; தாபரத்தின் ஊடுபோய் நினைப்பதுஏது? நிற்பதுஏது; நீர்நினைந்து பாருமே. | 214 |
ஆதியாகி அண்டரண்டம் அப்புறத்தும் அப்புறம் சோதியாகி நின்றிலங்கு சுருதிநாத சோமனை போதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகள், சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே! | 215 |
ஆக்கைமூப்பது இல்லையே ஆதிகா ரணத்திலே நாக்கைமூக்கையுள் மடித்து நாதநாடி யூடுபோய் ஏக்கறுத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லீரேல் பார்க்கப்பார்க்கத் திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே. | 216 |
அஞ்சும்அஞ்சும் அஞ்சும்அஞ்சும் அல்லல்செய்து நிற்பதும் அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அமர்ந்துளே இருப்பதும் அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லீரேல் அஞ்சும்அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே. | 217 |
அஞ்செழுத்தி னாதியாய் அமர்ந்துநின்றது ஏதடா? நெஞ்செழுத்தி நின்றுகொண்டு நீசெபிப்பது ஏதடா? அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதாவது ஏதடா? பிஞ்செழுத்தின் நேர்மைதான் பிரித்துரைக்க வேண்டுமே. | 218 |
உயிரிருந்தது எவ்விடம்? உடம்பெடுப்பு தன்முனம்? உயிரதாவது ஏதடா? உடம்பதாவது ஏதடா? உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா? உயிரினால் உடம்பெடுத்த உண்மைஞானி சொல்லடா. | 219 |
சுழித்தவோர் எழுத்தையும் சொன்முகத்து இருத்தியே துன்ப்இன்ப முங்கடந்து செல்லுமூல நாடிகள் அழுத்தமான அக்கரம் அங்கியுள் எழுப்பியே ஆறுபங்க யம்கலந்து அப்புறத் தலத்துளே. | 220 |
உருத்தரிப்ப தற்குமுன் உயிர்புகுந்த நாதமும் கருத்தரிப்ப தற்குமுன் காயம் என்ன சோணிதம் அருள்தரிப்ப தற்குமுன் அறிவுமூலா தாரமாம் குறித்தறிந்து கொள்ளுவீர் குணங்கெடும் குருக்களே. | 221 |
எங்கும்உள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின் பங்குகூறு போடுவார், பாடுசென்று அணுகிலார் எங்கள்தெய்வம் உங்கள்தெய்வம் என்றிரண்டு பேதமோ? உங்கள்பேதம் அன்றியே உண்மைஇரண்டு இல்லையே? | 222 |
அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய்ப் பெரியதாகி உலகுதன்னில் நின்றபாதம் ஒன்றலோ விரிவதென்று வேறுசெய்த வேடமிட்ட மூடரே, அறிவினோடு பாரும்இங்கும் அங்கும் ஒன்றதே. | 223 |
வெந்தநீறு மெய்க்கணிந்து வேடமும் தரிக்கிறீர் சிந்தையுள் நினைந்துமே தினம்செபிக்கு மந்திரம் முந்துமந்தி ரத்திலோ, மூலமந்திரத்திலோ, எந்தமந்தி ரத்திலோ ஈசன்வந்து இயங்குமே? | 224 |
அகாரகார ணத்திலே அனேகனேக ரூபமாய் உகாரகார ணத்திலே உருத்தரித்து நின்றனன் மகாரகார ணத்திலே மயங்குகின்ற வையகம் சிகாரகார ணத்திலே தெளிந்ததே சிவாயமே. | 225 |
அவ்வெழுத்தில் உவ்வுவந்து அகாரமும் சனித்ததோ? உவ்வெழுத்து மவ்வெழுத்தும் ஒன்றைஒன்றி நின்றதோ! செவ்வைஒத்து நின்றலோ சிவபதங்கள் சேரினும் மிவ்வையொத்த ஞானிகாள், விரித்துரைக்க வேணுமே. | 226 |
மிவ்வை - நற்குணம்
ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும் சோதியான மூன்றிலும் சொரூபம்அற்ற ரெண்டிலும் நீதியான தொன்றிலே நிறைந்துநின்ற வத்துவை ஆதியான தொன்றுமே அற்றதஞ் செழுத்துமே. | 227 |
வானிலாதது ஒன்றுமில்லை வானுமில்லை வானிடில் ஊனிலாதது ஒன்றுமில்லை ஊனுமில்லை ஊனிடில் நானிலாதது ஒன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில் தானிலாதது ஒன்றுமில்லை தயங்கி ஆடுகின்றதே! | 228 |
சுழித்ததோர் எழுத்தைஉன்னி சொல்லுமுகத்து இருத்தியே துன்ப்இன்ப முங்கடந்து சொல்லும்நாடி யூடுபோய் அழுத்தமான அக்கிரத்தின் அங்கியை எழுப்பியே ஆறுபங்க யம்கடந்து அப்புறத்து வெளியிலே. | 229 |
விழுத்தகண் குவித்தபோ தடைந்துபோய் எழுத்தெலாம் விளைந்துவிட்ட இந்திரசால வீடதான வெளியிலே அழுத்தினாலு மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில் அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை ஆனதே. | 230 |
நல்லமஞ் சனங்கள்தேடி நாடிநாடி ஓடுறீர் நல்லமஞ் சனங்களுண்டு நாதன்உண்டு நம்முளே எல்லைமஞ் சனங்கள்தேடி ஏகபூசை பண்ணினால் தில்லைமேவும் சீவனும் சிவபதத்துள் ஆடுமே. | 231 |
உயிர்அகத்தில் நின்றிடும் உடம்பெடுத்த தற்குமுன் உயிர்அகாரம் ஆயிடும் உடல்உகாரம் ஆயிடும் உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது அச்சிவம் உயிரினால் உடம்புதான் எடுத்தவாறு உரைக்கினேன். | 232 |
அண்டம்ஏழும் உழலவே அனந்தயோனி உழலவே பண்டைமால், அயனுடன் பரந்துநின்று உழலவே எண்திசை கடந்துநின்ற இருண்டசத்தி உழலவே அண்டரண்டம் ஒன்றதாய் ஆதிநட்டம் ஆடுமே. | 233 |
உருவநீர் உறுப்புகொண்டு உருத்தரித்து வைத்திடும் பெரியபாதை பேசுமோ பிசாசைஒத்த மூடரே, கரியமாலம் அயனுமாக காணொணாத கடவுளை உரிமையாக உம்முளே உணர்ந்துணர்ந்து கொள்ளுமே. | 234 |
பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள் அதென்றுநீர் எண்ணமுற்றும் என்னபேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள் பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும் ஒண்ணுமாகி உலகளித்த ஒன்றைநெஞ்சில் உண்ணுமே. | 235 |
நாலதான போனியும் நவின்றவிந்தும் ஒன்றதாய் ஆலதான வித்துளே அமர்ந்தொடுங்கு மாறுபோல் சூலதான உற்பனம் சொல்வதான மந்திரம் மேலதான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே. | 236 |
அருவமாய் இருந்தபோது அன்னைஅங்கு அறிந்திலை உருவமாய் இருந்தபோது உன்னைநான் அறிந்தனன் குருவினான் தெளிந்துகொண்டு கோதிலாத ஞானமாம் பருவமான போதலோ பரப்பிரமம் ஆனதே. | 237 |
பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும் மறப்பதும் நினைப்பதும் மறைந்ததைத் தெளிந்ததும் துறப்பதும் கொடுப்பதும் சுகித்துவாரி உண்பதும் பிறப்பதும் இறப்பதும் பிறந்தவீடு அடங்குமே. | 238 |
கண்ணிலே இருப்பனே கருங்கடல் கடைந்தமால் விண்ணிலே இருப்பனே மேவிஅங்கு நிற்பனே தன்னுளே இருப்பனே தராதலம் படைத்தவன் என்னுளே இருப்பனே எங்குமாகி நிற்பனே. | 239 |
ஆடுநாடு தேடினும் ஆனைசேனை தேடினும் கோடிவாசி தேடினும் குறுக்கேவந்து நிற்குமோ? ஓடிஇட்ட பிச்சையும் உகந்துசெய்த தர்மமும் சாடிவிட்ட குதிரைபோல் தர்மம்வந்து நிற்குமே. | 240 |
எள்இரும்பு கம்பளி இடும்பருத்தி வெண்கலம் அள்ளிஉண்ட நாதனுக்கோர் ஆடைமாடை வத்திரம் உள்ளிருக்கும் வேதியர்க்கு உற்றதானம் ஈதிரால் மெள்ளவந்து நோய் அனைத்தும் மீண்டிடும் சிவாயமே. | 241 |
ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே தேரிலே வடத்தைவிட்டு செம்பைவைத்து இழுக்கிறீர் ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை போரிலான மனிதர்பண்ணும் புரளிபாரும் பாருமே. | 242 |
மருள்புகுந்த சிந்தையால் மயங்குகின்ற மாந்தரே குருக்கொடுத்த மந்திரம் கொண்டுநீந்த வல்லீரேல் குருக்கொடுத்த தொண்டரும் முகனொடித்த பிள்ளையும் பருத்திபட்ட பன்னிரண்டு பாடுதான் படுவரே. | 243 |
அன்னைகர்ப்ப அறைஅதற்குள் அங்கியின்பிர காசமாய் அந்தறைக்குள் வந்திருந்து அரியவந்து ரூபமாய் தன்னைஒத்து நின்றபோது தடையறுத்து வெளியதாய் தங்கநற் பெருமைதந்து தலைவனாய் வளர்ந்ததே. | 244 |
உன்னையற்ப நேரமும் மறந்திருக்க லாகுமோ உள்ளமீது உறைந்தெனை மறைப்பிலாத சோதியைப் பொன்னவென்ற பேரொளிப் பொருவில்லாத ஈசனே பொன்னடிப் பிறப்பில்லாமை என்றுநல்க வேணுமே. | 245 |
பிடித்ததண்டும் உம்மதோ பிரமமான பித்தர்காள் தடித்தகோலம் அத்தைவிட்டு சாதிபேதங் கொண்மினோ, வடித்திருந்த தோர்சிவத்தை வாய்மைகூற வல்லீரேல் திடுக்கமுற்ற ஈசனைச் சென்றுகூட லாகுமே. | 246 |
சத்திநீ தயவுநீ தயங்குசங்கின் ஓசைநீ சித்திநீ சிவனும்நீ சிவாயமாம் எழுத்துநீ முத்திநீ முதலும்நீ மூவரான தேவர்நீ அத்திபூரம் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே. | 247 |
சட்டையிட்டு மணிதுலங்கும் சாத்திரச் சழக்கரே பொத்தகத்தை மெத்தவைத்துப் போதமோதும் பொய்யரே நிட்டைஏது ஞானமேது? நீரிருந்த அட்சரம் பட்டைஏது? சொல்லீரே பாதகக் கபடரே? | 248 |
உண்மையான சுக்கிலம் உபாயமாய் இருந்ததும் வெண்மையாகி நீரிலே விரைந்துநீர தானதும் தண்மையான காயமே தரித்துஉருவம் ஆனதும் தெண்மையான ஞானிகாள் தெளிந்துரைக்க வேணுமே. | 249 |
வஞ்சகப் பிறவியை மனத்துளே விரும்பியே அஞ்செழுத்தின் உண்மையை அறிகிலாத மாந்தர்காள் வஞ்சகப் பிறவியை வதைத்திடவும் வல்லீரேல் அஞ்செழுத்தின் உண்மையை அறிந்துகொள்ள லாகுமே. | 250 |
காயிலாத சோலையில் கனியுகந்த வண்டுகள் ஈயிலாத தேனையுண்டு இராப்பகல் உறங்குறீர் பாயிலாத கப்பலேறி அக்கரைப் படுமுனே வாயினால் உரைப்பதாகு மோமவுன ஞானமே. | 251 |
பேய்கள்பேய்கள் என்கிறீர் பிதற்குகின்ற பேயர்காள், பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுமோ ஆதிபூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுமோ காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே. | 252 |
மூலமண்ட லத்திலே முச்சதுரம் ஆதியாய் நாலுவாசல் எம்பிரான் நடுஉதித்த மந்திரம் கோலிஎட்டு இதழுமாய் குளிர்ந்தலர்ந்த தீட்டமாய் மேலும்வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே. | 253 |
ஆதிநாடி நாடிஓடிக் காலைமாலை நீரிலே சோதிமூல மானநாடி சொல்லிறந்த தூவெளி ஆதிகூடி நெற்பறித்தது அகாரமாதி ஆகமம் பேதபேதம் ஆகியே பிறந்துடல் இறந்ததே. | 254 |
பாங்கினோடு இருந்துகொண்டு பரமன்அஞ் செழுத்துளே ஓங்கிநாடி மேல்இருந்து உச்சரித்த மந்திரம் மூங்கில்வெட்டி நார்உரித்து முச்சில்செய் விதத்தினில் ஆய்ந்தநூலில் தோன்றுமே அரிந்துணர்ந்து கொள்ளுமே. | 255 |
புண்டரீக மத்தியில் உதித்தெழந்த சோதியை
மண்டலங்கள் மூன்றினோடு மன்னுகின்ற மாயனை அண்டரண்டம் ஊடறுத்து அறிந்துணர வல்லீரேல் கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்ப தில்லையே. | 256 |
புண்டரீகம் - தாமரை
அம்பலங்கள் சந்தியில் ஆடுகின்ற வம்பனே அன்பனுக்குள் அன்பனாய் நிற்பதுஆதி வீரனே அன்பருக்குள் அன்பராய் நின்றஆதி நாதனே உம்பருக்கு உண்மையாய் நின்றஉண்மை உண்மையே. | 257 |
அண்ணலாவது ஏதடா? அறிந்துரைத்த மந்திரம் தண்ணலாக வந்தவன் சகலபுராணம் கற்றவன் கண்ணனாக வந்ததன் காரணத் துதித்தவன் ஒண்ணதாவது ஏதடா? உண்மையான மந்திரம்? | 258 |
உள்ளதோ புறம்பதோ உயிர்ஒடுங்கி நின்றிடம் மெள்ளவந்து கிட்டிநீர் வினவவேணும் என்கிறீர்? உள்ளதும் புறம்பதும் ஒத்தபோது நாதமாம் கள்ளவாச லைத்திறந்து காணவேணும் மந்திரம். | 259 |
ஆரலைந்து பூதமாய் அளவிடாத யோனியும் பாரமான தேவரும் பழுதிலாத பாசமும் ஓரொணாத அண்டமும் உலோகலோக லோகமும் சேரவெந்து போயிருந்த தேகம்ஏது செப்புமே? | 260 |
என்னகத்துள் என்னைநான் எங்குநாடி ஓடினேன்? என்னகத்துள் என்னைநான் அறிந்திலாத தாகையால் என்னகத்துள் என்னைநான் அறிந்துமே தெரிந்தபின் என்னகத்துள் என்னைஅன்றி யாதுமொன்று மில்லையே. | 261 |
விண்ணினின்று மின்னெழுந்து மின்னொடுங்கு மாறுபோல் என்னுள்நின்றும் எண்ணும்ஈசன் என்னகத்திருக் கையால் கண்ணினின்று கண்ணில்தோன்றும் கண்ணிறி விலாமையால் என்னுள்நின்ற என்னையும் யானறிந்தது இல்லையே. | 262 |
அடக்கினும் அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய் அடக்கினும் அடக்கொணாத அன்பிருக்கும் என்னுளே கிடக்கினும் இருக்கினும் கிலேசம்வந்து இருக்கினும் நடக்கினும் இடைவிடாத நாதசங் கொலிக்குமே. | 263 |
மட்டுலாவு தண்துழாய் அலங்கலாய் புனற்கழல் வீட்டுவீழில் தாகபோக விண்ணில்மண்ணில் வெளியினும் எட்டினோடு இரண்டினும் இதத்தினால் மனந்தனைக் கட்டிவீடி லாதுவைத்த காதலின்பம் ஆகுமே. | 264 |
ஏகமுத்தி மூன்றுமுத்தி நாலுமுத்தி நன்மைசேர் போகமுற்றி புண்ணியத்தில் முத்திஅன்றி முத்தியாய் நாகமுற்றி சயனமாய் நலங்கடல் கடந்ததீ யாகமுற்றி ஆகிநின்ற தென்கொலாதி தேவனே. | 265 |
மூன்றுமுப்பது ஆறினோடு மூன்றுமூன்று மாயமாய் மூன்றுமுத்தி ஆகிமூன்று மூன்றுமூன்று மூன்றுமாய்த் தோன்றுசோதி மூன்றுதாய் துலக்கமில் விளக்கதாய் ஏன்றெனாவின் உள்புகுந்த தென்கோலோ நம்ஈசனே. | 266 |
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அல்லவற்றுள் ஆயுமாய் ஐந்துமூன்றும் ஒன்றுமாகி நின்றஆதி தேவனே ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய் அமைந்தனைத்து நின்றநீ ஐந்தும்ஐந்தும் ஆயநின்னை யாவர்காண வல்லரே. | 267 |
ஆறும்ஆறும் ஆறுமாய் ஓர்ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய் ஏறுசீர் இரண்டுமூன்றும் ஏழும்ஆறும் எட்டுமாய் வேறுவேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய் ஊறும்ஓசை யாய்அமர்ந்த மாயமாம் மாயனே. | 268 |
எட்டும்எட்டும் எட்டுமாய் ஓர்ஏழும் ஏழுமாய் எட்டும் ஒன்றும் மூன்றுமாகி நின்றஆதி தேவனே எட்டுமாய பாதமோடு இறைஞ்சி நின்றவண்ணமே எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல்நீங்கி நிற்பரே. | 269 |
பத்தினோடு பத்துமாய் ஓர்ஏழினோடு ஒன்பதாய் பத்துநாற் திசைக்குள்நின்ற நாடுபெற்ற நன்மையால் பத்துமாய கொத்தமோடும் அத்தலமிக் காதிமால் பத்தர்கட் கலாதுமுத்தி முத்திமுத்தி யாகுமே. | 270 |
வாசியாகி நேசம்ஒன்றி வந்தெதிர்த்த தென்னுக நேசமாக நாளுலாவ நன்மைசேர் பாவங்களில் வீசிமேல் நிமிர்ந்ததோளி யில்லையாக்கி னாய்கழல் ஆசையாய் மறக்கலாது அமரர்ஆகல் ஆகுமே. | 271 |
எளியதாக காயமீதில் எம்பிரான் இருப்பிடம் அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும் கொளுகையான சோதியும் குலாவிநின்றது அவ்விடம் வெளியதாகும் ஒன்றிலே விளைந்ததே சிவாயமே. | 272 |
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள் அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள் அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி அவ்வெழுத்தை அறிந்தபின் அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அவ்வுமாம் சிவாயமே. | 273 |
பொய்யுரைக்க போகமென்று பொய்யருக் கிருக்கையால் மெய்யுரைக்க வேண்டுதில்லை மெய்யர்மெய்க் கிலாமையால் வையகத்தில் உண்மைதன்னை வாய்திறக்க அஞ்சினேன் நையவைத்தது என்கொலோ நமசிவாய நாதனே! | 274 |
ஒன்றைஒன்று கொன்றுகூட உணவுசெய்து இருக்கினும் மன்றினூடு பொய்களவு மாறுவேறு செய்யினும் பன்றிதேடும் ஈசனைப் பரிந்துகூட வல்லீரேல் அன்றுதேவர் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே. | 275 |
மன்று - கடை
மச்சகத் துளேஇவர்ந்து மாயைபேசும் வாயூவை அச்சகத்துளே இருந்து அறிவுணர்த்திக் கொள்விரேல் இச்சைஅற்ற எம்பிரான் எங்கும்ஆகி நிற்பனே அச்சகத் துளேயிருந்து அறுவுணர்த்திக் கொண்டபின். | 276 |
வயலிலே முலைத்தநெல் களையதான வாறுபோல் உலகினோரும் உண்மைகூறில் உய்யுமாறது எங்ஙனே விரகிலே முளைத்தெழுந்த மெய்யலாது பொய்யதாய் நரகிலே பிறந்திருந்து நாடுபட்ட பாடதே. | 277 |
விரகு - விரகதாபம்
ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்றுநீர் தேடுகின்ற பாவிகாள், தெளிந்தஒன்றை ஓர்கிலீர்; காடுநாடு வீடுவீண் கலந்துநின்ற கள்வனை நாடிஓடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே. | 278 |
ஆடுகின்ற அண்டர்கூடும் அப்புறம திப்புறம் தேடுநாலு வேதமும் தேவரான மூவரும் நீடுவாழி பூதமும் நின்பதோர் நிலைகளும் ஆடுவாழின் ஒழியலா தனைத்துமில்லை இல்லையே. | 279 |
ஆவதும் பரத்துளே அழிவதும் பரத்துளே போவதும் பரத்துளே புகுவதும் பரத்துளே தேவரும் பரத்துளே திசைகளும் பரத்துளே யாவரும் பரத்துளே யானும் அப்பரத்துளே. | 280 |
ஏழுபார் எழுகடல் இடங்கள்எட்டு வெற்புடன் சூழுவான் கிரிகடந்து சொல்லும் ஏழுலகமும் ஆழிமால் விசும்புகொள் பிரமாண்டரண்ட அண்டமும் ஊழியான் ஒளிக்குளே உதித்துடன் ஒடுங்குமே. | 281 |
கயத்துநீர் இறைக்குறீர் கைகள்சோர்ந்து நிற்பதேன்? மனத்துள்ஈரம் ஒன்றிலாத மதிஇலாத மாந்தர்காள்; மனத்துள்ஈரம் கொண்டுநீர் அழுக்கறுக்க வல்லீரேல் நினைத்திருந்த சோதியும் நீயும்நானும் ஒன்றலோ? | 282 |
நீரிலே பிறந்திருந்து நீர்சடங்கு செய்கிறீர் ஆரைஉன்னி நீரெலாம் அவத்திலே இறைக்கிறீர் வேரைஉன்னி வித்தைஉன்னி வித்திலே முளைத்தெழும் சீரைஉன்ன வல்லீரேல் சிவபதம் அடைவிரே. | 283 |
பத்தொடொத்த வாசலில் பரந்துமூல வக்கரம் முத்திசித்தி தொந்தமென்று இயங்குகின்ற மூலமே மத்தசித்த ஐம்புலன் மாகரமான கூத்தையே அத்தியூரர் தம்முளே அமைந்ததே சிவாயமே. | 284 |
அணுவினோடும் அண்டமாய் அளவிடாத சோதியைக் குணமதாகி உம்முளே குறித்திருக்கில் முத்தியாம் முணமுணென்று உம்முளே விரலைஒன்றி மீளவும் தினந்தினம் மயக்குவீர் செம்புபூசை பண்ணியே. | 285 |
மூலமான அக்கரம் முகப்பதற்கு முன்னெலாம் மூடமாக மூடுகின்ற மூடமேது *முடரே காலனான அஞ்சுபூதம் அஞ்சிலே ஒடுங்கினால் ஆலயோடு கூடுமோ அனாதியோடு கூடுமோ? | 286 |
முச்சதுர மூலமாகி முடிவுமாகி ஏகமாய் அச்சதுரம் ஆகியே அடங்கியோர் எழுத்துமாய் மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய் உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே. | 287 |
வண்டுலங்கள் போலும்நீர் மனத்துமாசு அறுக்கிலீர் குண்டலங்கள் போலுநீர் குளத்திலே முழுகுறீர் பண்டும் உங்கள் நான்முகன் பறந்துதேடி காண்கிலான், கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பர் காணுமே. | 288 |
நின்றதன்று இருந்ததன்று நேரிதன்று கூறிதன்று பந்தமன்று வீடுமன்று பாவகங்கள் அற்றது. கெந்தமன்று கேள்வியன்று கேடிலாத வானிலே அந்தமின்றி நின்றதொன்றை எங்ஙனே உரைப்பதே. | 289 |
பொருந்துநீரும் உம்முளே புகுந்துநின்ற காரணம் எருதிரண்டு கன்றைஈன்ற ஏகமொன்றை ஓர்கிலிர் அருகிருந்து சாவுகின்ற ஆவையும் அறிந்திலீர் குருவிருந்து உலாவுகின்ற கோலம்என்ன கோலமே? | 290 |
அம்பரத்துள் ஆடுகின்ற அஞ்செழுத்து நீயலோ? சிம்புகளாய்ப் பரந்துநின்ற சிற்பரமும் நீயலோ? எம்பிரானும் எவ்வுயிர்க்கும் ஏகபோகம் ஆதலால் எம்பிரானும் நானுமாய் இருந்ததே சிவாயமே. | 291 |
ஈரொளிய திங்களே இயங்கிநின்றது தற்பரம் ஏரொளீய திங்களே அஃது யாவரும் அறிகிலீர் காரொளிப் படலமும் கடந்துபோன தற்பரம் தாரொளிப் பெரும்பதம் ஏகநாத பாதமே. | 292 |
கொள்ளொணாது மெல்லொணாது கோதாறக் குதட்டடா தள்ளொணாது அணுகொணாது ஆகலான் மனத்துளே தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பயன் விள்ளொணாது பொருளைநான் விளம்புமாறது எங்ஙனே? | 293 |
வாக்கினால் மனத்தினால் மதித்தகார ணத்தினால் நோக்கொணாத நோக்கையுன்னி நோக்கையாவர் நோக்குவார் நோக்கொணாத நோக்குவந்து நோக்கநோக்க நோக்கிடில் நோக்கொணாத நோக்குவந்து நோக்கைஎங்கண் நோக்குமே. | 294 |
உள்ளினும் புறம்பினும் உலகமெங்கணும் பரந்து எள்ளில்எண்ணெய் போலநின்று இயங்குகின்ற எம்பிரான் மெள்ளவந்து என்னுட்புகுந்து மெய்த்தவம் புரிந்தபின் வள்ளலென்ன வள்ளலுக்கு வண்ணமென்ன வண்ணமே? | 295 |
வேதமொன்று கண்டிலேன் வெம்பிறப்பு இலாமையால் போதம்நின்ற வடிவதாய்ப் புவனமெங்கும் ஆயினாய், சோதியுள் ஒளியுமாய்த் துரியமோடு அதீதமாய் ஆதிமூலம் ஆதியாய் அமைந்ததே சிவாயமே. | 296 |
சாண்இரு மடங்கினால் சரிந்தகொண்டை தன்னுளே பேணிஅப் பதிக்குளே பிறந்திறந்து உழலுவீர், தோணியான ஐவரைத் துறந்தறுக்க வல்லீரேல் காணிகண்டு கோடியாய்க் கலந்ததே சிவாயமே. | 297 |
அஞ்சுகோடி மந்திரம் அஞ்சுளே அடங்கினால் நெஞ்சுகூற உம்முளே நினைப்பதோர் எழுத்துளே அஞ்சுநாலு மூன்றதாகி உம்முளே அடங்கினால் அஞ்சும்ஓர் எழுத்ததாய் அமைந்ததே சிவாயமே. | 298 |
அக்கரந்த அக்கரத்தில் உட்கரந்த அக்கரம் சக்கரத்து சிவ்வைருண்டு சம்புளத் திருந்ததும் எள்கரந்த எண்ணெய்போல் எவ்வெழுத்தும் எம்பிரான் உள்கரந்து நின்றநேர்மை யாவர்காண வல்லரே. | 299 |
ஆகமத்தின் உட்பொருள் அகண்டமூலம் ஆதலால் தாகபோக மின்றியே தரித்ததற் பரமும்நீ ஏகபாதம் வைத்தனை உணர்த்தும் அஞ்செழுத்துளே ஏகபோகம் ஆகியே இருந்ததே சிவாயமே. | 300 |
மூலவாசல் மீதுளேஓர் முச்சரம் ஆகியே நாலுவாசல் எண்விரல் நடுஉதித்த மந்திரம் கோலம்ஒன்றும் அஞ்சுமாகும் இங்கலைந்து நின்றநீ வேறுவேறு கண்டிலேன் விளைந்ததே சிவாயமே. | 301 |
சுக்கிலத் தடியுளே சுழித்ததோர் எழுத்துளே அக்கரத் தடியுளே அமர்ந்தஆதி சோதிநீ உக்கரத் தடியுளே உணர்ந்த அஞ்செழுத்துளே அக்கரம் அதாகியே அமர்ந்ததே சிவாயமே. | 302 |
குண்டலத்து ளேயுளே அறுத்தகத்து நாயகன் கண்டவந்த மண்டலம் கருத்தழித்த கூத்தனை விண்டலர்ந்த சந்திரன் விளங்குகின்ற மெய்ப்பொருள் கண்டுகொண்ட மண்டலம் சிவாயமல்லது இல்லையே. | 303 |
சுற்றும்ஐந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி சத்தியும் சிவனுமாக நின்றதன்மை ஓர்கிலீர் சத்தியாவு தும்முடல், தயங்குசீவ னுட்சிவம் பித்தர்காள் அறிந்திலீர் பிரான்இருந்த கோலமே. | 304 |
மூலம்என்ற மந்திரம் முளைத்த அஞ்செழுத்துளே நாலுவேதம் நாவுளே நவின்றஞான மெய்யுளே ஆலம்உண்ட கண்டனும் அரிஅயனும் ஆதலால் ஓலம்என்ற மந்திரம் சிவாயமல்லது இல்லையே. | 305 |
தத்துவங்கள் என்றுநீர் தமைக்கடிந்து போவீர்காள் தத்துவம் சிவமதாகில் தற்பரமும் நீரல்லோ? முத்திசீவன் நாதமே மூலபாதம் வைத்தப்பின் அத்தனாரும் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே. | 306 |
மூன்றுபத்து மூன்றையும் மூன்றுசொன்ன மூலனே தோன்றுசேர ஞானிகாள் துய்யபாதம் என்தலை என்றுவைத்த வைத்தபின் இயல்பும் அஞ்செழுத்தையும் தோன்றஓத வல்லீரேல் துய்யசோதி காணுமே. | 307 |
உம்பர் வானகத்தினும் உலகபாரம் ஏழினும் நம்பர்நாடு தன்னிலும் நாவலென்ற தீவினும் செம்பொன் மாடம் மல்குதில்லை அம்பலத்துள் ஆடுவான் எம்பிரான் அலாதுதெய்வம் இல்லைஇல்லை இல்லையே. | 308 |
பூவலாய் ஐந்துமாய் புனலில்நின்ற நான்குமாய் தீயிலாய மூன்றுமாய்ச் சிறந்தகால் இரண்டுமாய் வேயிலாய தொன்றுமாய் வேறுவேறு தன்மையாய் நீயலாமல் நின்றநேர்மை யாவர்காண வல்லரே? | 309 |
அந்தரத்தில் ஒன்றுமாய் அசைவுகால் இரண்டுமாய் செந்தழலில் மூன்றுமாய்ச் சிறந்தஅப்பு நான்குமாய் ஐந்துபாரில் ஐந்துமாய் அமர்ந்திருந்த நாதனைச் சிந்ததையில் தெளிந்தமாயை யாவர்காண வல்லரே. | 310 |
மனவிகாரம் அற்றுநீர் மதித்திருக்க வல்லீரேல் நினைவிலாத மணிவிளக்கு நித்தமாகி நின்றிடும்; அனைவர் ஓதும் வேதமும் அகம்பிதற்ற வேணுமேல் கனவுகண்டது உண்மைநீர் தெளிந்ததே சிவாயமே. | 311 |
இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா? சுட்டமண் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா? முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியைப் பற்றிநின்றது ஏதடா பட்டநாத பட்டரே. | 312 |
நீரிலே முளைத்தெழுந்த தாமரையின் ஓரிலை நீரினோடு கூடிநின்றும் நீரிலாத வாறுபோல் பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம் பாரினோடு கூடிநின்ற பண்புகண்டு இருப்பீரே. | 313 |
உறக்கிலென், விழிக்கிலென், உணர்வுசென்று ஒடுங்கிலென் சிறந்த ஐம்புலன்களும் திசைத்திசைகள் ஒன்றிலென்? புறமும்உள்ளும் எங்ஙனம் பொருந்திருந்த தேகமாய் நிறைந்திருந்த ஞானிகாள் நினைப்பது ஏதும் இல்லையே. | 314 |
ஓதுவார்கள் ஓதுகின்ற ஓர்எழுத்தும் ஒன்றதே வேதம் என்ற தேகமாய் விளம்புகின்றது அன்றிது, நாதம்ஒன்று நான்முகன் மாலும்நானும் ஒன்றதே! ஏதுமின்றி நின்றதொன்றை யான்உணர்ந்த நேர்மையே | 315 |
பொங்கியே தரித்தஅச்சுப் புண்டரீக வெளியிலே தங்கியே தரித்தபோது தாதுமா துளையதாம் அங்கியுள் சரித்தபோது வடிவுகள் ஒளியுமாய்க் கொம்புமேல் வடிவுகொண்டு குருஇருந்த கோலமே. | 316 |
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறது எங்கெனில் மண்ணினோடு சோதிபோல் கலந்தநாத விந்துவும் அண்ணலோடு சத்தியும் அஞ்சுபஞ்சு பூதமும் மண்ணினோடு கொடுத்தழிப் பாரொடேழும் இன்றுமே. | 317 |
ஒடுக்குகின்ற சோதியும் உந்திநின்ற ஒருவனும் நடுத்தலத்தில் ஒருவனும் நடந்துகாலில் ஏறியே விடுத்துநின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய் அடுத்துநின்ற அறிமினோ அனாதிநின்ற ஆதியே. | 318 |
உதித்தமந் திரத்தினும் ஒடுங்கும் அக்கரத்தினும் மதித்தமண் டலத்தினும் மறைந்துநின்ற சோதிநீ, மதித்தமண் டலத்துளே மரித்துநீ இருந்தபின் சிரித்தமண் டலத்துளே சிறந்ததே சிவாயமே. | 319 |
திருத்திவைத்த சற்குருவைச் சீர்பெற வணங்கிலீர் குருக்கொடுக்கும் பித்தரே கொண்டுநீந்த வல்லீரோ? குருக்கொடுக்கும் பித்தரும் குருக்கொள்வந்த சீடனும் பருத்திபட்ட பாடுதான் பன்னிரண்டும் பட்டதே. | 320 |
விழித்தகண் துதிக்கவும் விந்துநாத ஓசையும், மேருவும் கடந்தஅண்ட கோளமும் கடந்துபோய் எழுத்தெலாம் அழிந்துவிட்ட இந்திரசால வெளியிலே யானும்நீயு மேகலந்த தென்னதன்மை ஈசனே. | 321 |
ஓம்நமோ என்றுமுளே பாவையென்று அறிந்தபின், பானுடல் கருத்துளே பாவையென்று அறிந்தபின், நானும்நீயும் உண்டடா நலங்குலம் அதுஉண்டடா, ஊணும்ஊணும் ஒன்றுமே உணர்ந்திடாய் உனக்குளே. | 322 |
ஐம்புலனை வென்றவர்க்கு அன்னதானம் ஈவதால் நன்புலன்க ளாகிநின்ற நாதருக்கது ஏறுமோ ஐம்புலனை வென்றிடாது அவத்துமே உழன்றிடும் வம்பருக்கும் ஈவதும் கொடுப்பதும் அவத்தமே. | 323 |
ஆணியான ஐம்புலன்கள் அவையும்மொக்குகள் ஒக்குமோ? யோனியில் பிறந்திருந்த துன்பமிக்கு மொக்குமோ? வீணர்காள் பிதற்றுவீர் மெய்மையே உணர்திரேல் ஊண்உறக்க போகமும் உமக்கெனக்கும் ஒக்குமே. | 324 |
ஓடுகின்ற ஐம்புலன் ஒடுங்கஅஞ் செழுத்துளே நாடுகின்ற நான்மறை நவிலுகின்ற ஞானிகாள் கூடுகின்ற பண்டித குணங்கள்மூன்று எழுத்துளே ஆடுகின்ற பாவையாய் அமைந்ததே சிவாயமே. | 325 |
புவனசக்க ரத்துளே பூதநாத வெளியிலே, பொங்குதீப அங்கியுள் பொதிந்தெழுந்த வாயுவைத் தவனசோமர் இருவரும் தாம்இயங்கும் வாசலில் தண்டுமாறி ஏறிநின்ற சரசமான வெளியிலே. | 326 |
மவுனஅஞ் செழுத்திலே வாசிஏறி மெள்ளவே வானளாய் நிறைந்தசோதி மண்டலம் புகுந்தபின் அவனும்நானும் மெய்கலந்து அனுபவித்த அளவிலே அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே. | 327 |
வாளுறையில் வாளடக்கம் வாயுறையில் வாய்வடக்கம் ஆளுறையில் ஆளடக்கம் அருமைஎன்ன வித்தைகாண்! தாளுறையில் தாளடக்கம் தன்மையான தன்மையும் நாளுறையில் நாளடக்கம் நானும் நீயும் கண்டதே. | 328 |
வழுத்திடான் அழித்திடான் மாயரூபம் ஆகிடான் கழன்றிடான் வெகுண்டிடான் காலகால காலமும் துவண்டிடான் அசைந்திடான் தூயதூபம் ஆகிடான் சுவன்றிடான் உரைத்திடான் சூட்சசூட்ச சூட்சமே. | 329 |
ஆகிகூவென் றேஉரைத்த அட்சரத்தின் ஆனந்தம் யோகியோகி என்பர்கோடி உற்றறிந்து கண்டிடார் பூகமாய் மனக்குரங்கு பொங்கும்மங்கும் இங்குமாய் ஏகம்ஏக மாகவே இருப்பர்கோடி கோடியே. | 330 |
கோடிகோடி கோடிகோடி குவலயத்தோர் ஆதியை நாடிநாடி நாடிநாடி நாளகன்று வீணதாய்த் தேடிதேடி தேடிதேடித் தேகமும் கசங்கியே கூடிகூடி கூடிகூடி நிற்பர்கோடி கோடியே. | 331 |
கருத்திலான் வெளுத்திலான் பரன்இருந்த காரணம் இருத்திலான் ஒளித்திலான் ஒன்றும்இரண்டும் ஆகிலான் ஒருத்திலான் மரித்திலான் ஒழிந்திடான் அழிந்திடான் கருத்தில்கீயும் கூவும்உற்றோன் கண்டறிந்த ஆதியே. | 332 |
வாதிவாதி வாதிவாதி வண்டலை அறிந்திடான் ஊதிஊதி ஊதிஊதி ஒளிமழுங்கி உளறுவான் வீதிவீதி வீதிவீதி விடைஎருப் பொறுக்குவான் சாதிசாதி சாதிசாதி சகாரத்தைக் கண்டிடான். | 333 |
ஆண்மைஆண்மை ஆண்மைஆண்மை ஆண்மைகூறும் அசடரே காண்மையான வாதிரூபம் காலகால காலமும் பாண்மையாகி மோனமான பாசமாகி நின்றிடும் நாண்மையாகி நரலைவாயில் நங்குமிங்கும் அங்குமே. | 334 |
மிங்குஎன்ற அட்சரத்தின் மீட்டுவாகிக் கூவுடன் தூங்கமாகச் சோமனோடு சோமன்மாறி நின்றிடும் அங்கமா முனைச்சுழியில் ஆகும்ஏகம் ஆகையால் கங்குலற்றுக் கியானமுற்றுக் காணவாய் சுடரொளி. | 335 |
சுடரெழும்பும் சூட்சமும் கழிமுனையின் சூட்சமும் அடரெழும்பி ஏகமாக அமர்ந்துநின்ற சூட்சமும் திடரதான சூட்சமும் திரியின்வாலை சூட்சமும் கடலெழும்பு சூட்சமும் கண்டறிந்தோன் ஞானியே. | 336 |
ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடிகோடியே வானிலாத மழைநாளென்ற வாதிகோடி கோடியே தானிலா சாகரத்தின் தன்மைகாணா மூடர்கள் மூனிலாமல் கோடிகோடி முன்னறிந்த தென்பரே. | 337 |
சூட்சமான கொம்பிலே சுழிமுனைச் சுடரிலே வீச்சமான வீயிலே விபுலைதங்கும் வாயிலே கூச்சமான கொம்பிலே குடிஇருந்த கோவிலே தீட்சையான தீவிலே சிறந்ததே சிவாயமே. | 338 |
பொங்கிநின்ற மோனமும் பொதிந்துநின்ற மோனமும் தங்கிநின்ற மோனமும் தயங்கிநின்ற மோனமும் கங்கையான மோனமும் கதித்துநின்ற மோனமும் திங்களான மோனமும் சிவனிருந்த மோனமே. | 339 |
மோனமான வீதியில் முனைச்சுழியின் வாலையில் பானமான வீதியில் பசைந்தசெஞ் சுடரினில் ஞானமான மூலையில் நரலைதங்கும் வாயிலில், ஓனமான செஞ்சுடர் உதித்ததே சிவாயமே. | 340 |
உதித்தெழுந்த வாலையும் உயங்கிநின்ற வாலையும் கதித்தெழுந்த வாலையும் காலையான வாலையும் மதித்தெழுந்த வாலையும் மறைந்துநின்ற ஞானமும் கொதித்தெழுந்து கும்பலாகி கூவும்கீயும் ஆனதே. | 341 |
கூவும்கீயும் மோனமாகி கொள்கையான கொள்கையை மூவிலே உதித்தெழுந்த முச்சுடர் விரிவிலே பூவிலே நறைகள்போலப் பொருந்திநின்ற பூரணம் ஆவிஆவி ஆவிஆவி அன்பருள்ளம் உற்றதே. | 342 |
ஆண்மைகூறும் மாந்தரே அருக்கனோடும் வீதியை காண்மையாகக் காண்பீரே கசடறுக்க வல்லீரே தூண்மையான வாதிசூட்சம் சோபமாகும் ஆகுமே நாண்மையான வாயிலில் நடித்துநின்ற நாதமே. | 343 |
நாதமான வாயிலில் நடித்துநின்ற சாயலில் வேதமான வீதியில் விரிந்தமுச் சுடரிலே கீதமான கீயிலே கிளர்ந்துநின்ற கூவிலே பூதமான வாயிலைப் புகலறிவன் ஆதியே. | 344 |
ஆவிஆவி ஆவிஆவி ஐந்துகொம்பின் ஆவியே மேவிமேவி மேவிமேவி மேதினியில் மானிடர் வாவிவாவி வாவிவாவி வண்டர்கள் அறிந்திடார் பாவிபாவி பாவிபாவி படியிலுற்ற மாந்தரே. | 345 |
வித்திலே முளைத்தசோதி வில்வளையின் மத்தியில் முத்திலே ஒளிவதாகி மோனமான தீபமே நத்திலே திரட்சிபோன்ற நாதனை அறிந்திடார் வத்திலே கிடந்துழன்ற வாலையான சூட்சமே. | 346 |
மாலையோடு காலையும் வடிந்துபொங்கும் மோனமே மாலையோடு காலையான வாறறிந்த மாந்தரே மூலையான கோணமின் முளைத்தெழுந்த செஞ்சுடர் தாலையோடு பானகன்று தங்கி நின்ற மோனமே. | 347 |
மோனமான வீதியில் முடுகிநின்ற நாதமே ஈனமின்றி வேகமான வேகம்என்ன வேகமே கானமான மூலையில் கனிந்திருந்த வாலையில் ஞானமான செஞ்சுடர் நடந்ததே சிவாயமே. | 348 |
உச்சிமத்தி வீதியில் ஒழிந்திருந்த சாதியில் பச்சியுற்ற சோமனும் பரந்துநின்று லாவவே செச்சியான தீபமே, தியானமான மோனமே, கச்சியான மோனமே, கடந்ததே சிவாயமே. | 349 |
அஞ்சுகொம்பில் நின்றுநாதம் ஆலைபோல் எழும்பியே பிஞ்சினோடு பூமலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே செஞ்சுடர் உதித்தபோது தேசிகன் கழன்றுடன் பஞ்சபூதம் ஆனதே பறந்துநின்ற மோனமே. | 350 |
சடுதியான கொம்பிலே தத்துவத்தின் இயலிலே அடுதியான ஆவிலே அரன்இருந்த ஊவிலே இடுதிஎன்ற சோலையில் இருந்தமுச் சுடரிலே நடுதிஎன்று நாதம்ஓடி நன்குற அமைந்ததே. | 351 |
அமையுமாலின் மோனமும் அரன்இருந்த மோனமும் சமையும்பூத மோனமும் தரித்திருந்த மோனமும் இமையும்கொண்ட வேகமும் இலங்கும்உச்சி மோனமும் தமையறிந்த மாந்தரே சடத்தைஉற்று நோக்கிலார். | 352 |
பாய்ச்சலூர் வழியிலே பரன்இருந்த சுழியிலே காய்ச்சகொம்பின் நுனியிலே கனியிருந்த மலையிலே வீச்சமானது ஏதடா? விரிவுதங்கும் இங்குமே மூச்சினோடு மூச்சைவாங்கு முட்டிநின்ற சோதியே. | 353 |
சோதிசோதி என்றுநாடித் தோற்பவர் சிலவரே ஆதிஆதி என்றுநாடும் ஆடவர் சிலவரே வாதிவாதி என்றுசொல்லும் வம்பரும் சிலவரே நீதிநீதி நீதிநீதி நின்றிடும் முழுச்சுடர். | 354 |
சுடரதாகி எழும்பியங்குத் தூபமான காலமே இடரதாய்ப் புவியும்விண்ணும் ஏகமாய் அமைக்கமுன் படரதாக நின்றஆதி பஞ்சபூதம் ஆகியே அடரதாக அண்டம்எங்கும் ஆண்மையாக நின்றதே. | 355 |
நின்றிருந்த சோதியை நிலத்தில்உற்ற மானிடர் கண்டறிந்து கண்குளிர்ந்து காதலுற்று உலாவுவோர் கண்டமுற்ற மேன்முனையில் காட்சிதன்னைக் காணுவார் கன்றிஅற்று நாலைபொங்கி நாதமும் மகிழ்ந்திடும். | 356 |
வயங்குமோனச் செஞ்சுடர் வடிந்தசோதி நாதமும் கயங்கள்போலக் கதறியே கருவூரற்ற வெளியிலே பயங்கொடின்றி இன்றியே படர்ந்துநின்ற பான்மையை நயங்கள்கோவென் றேநடுங்கி நங்கையான தீபமே. | 357 |
தீபஉச்சி முனையிலே திவாகரத்தின் கழியிலே கோபமாறு கூவிலே கொதித்துநின்ற தீயிலே தாபமான மூலையில் சமைந்துநின்ற சூட்சமும் சாபமான மோட்சமும் தடிந்துநின்று இலங்குமே. | 358 |
திவாகரம் - சூரிய ஒளி
தேசிகன் சுழன்றதே திரிமுனையின் வாலையில் வேசமோடு வாலையில் வியன்இருந்த மூலையில் நேசசந்தி ரோதயம் நிறைந்திருந்த வாயிலில் வீசிவீசி நின்றதே விரிந்துநின்ற மோனமே. | 359 |
உட்கமல மோனமீதில் உயங்கிநின்ற நந்தியை விக்கலோடு கீயுமாகி வில்வளைவின் மத்தியில் முட்பொதிந்தது என்னவே முடுகிநின்ற செஞ்சுடர் கட்குவைகள் போலவும் கடிந்துநின்ற காட்சியே. | 360 |
உந்தியில் சுழிவழியில் உச்சியுற்ற மத்தயில் சந்திரன் ஒளிகரணம் தாண்டிநின்ற செஞ்சுடர் பந்தமாக வில்வளைவில் பஞ்சபூத விஞ்சையாம் கிந்துபோல கீயில்நின்று கீச்சுமூச்சு என்றதே. | 361 |
செச்சையென்ற மூச்சினோடு சிகாரமும் வகாரமும் பச்சையாகி நின்றதே பரவெளியின் பான்மையே இச்சையான ஊவிலே இருந்தெழுந்த ஈயிலே உச்சியான கோணத்தில் உதித்ததே சிவாயமே. | 362 |
ஆறுமூலைக் கோணத்தில் அமைந்தஒன்ப தாத்திலே தாறுமென்று நங்கையான நாவியும் தெரிந்திடக் கூறுமென்று ஐவர்அங்கு கொண்டுநின்ற மோனமே பாறுகொண்டு நின்றது பரந்ததே சிவாயமே. | 363 |
பறந்ததே கறந்தபோது பாய்ச்சலூரின் வழியிலே பிறந்ததே பிராணன்அன்றிப் பெண்ணும்ஆணும் அல்லவே துறந்ததோ சிறந்ததோ தூயதுங்கம் ஆனதோ இறந்தபோதில் அன்றதே இலங்கிடும் சிவாயமே. | 364 |
அருளிருந்த வெளியிலே அருக்கன்நின்ற இருளிலே பொருளிருந்த சுழியிலே புரண்டெழுந்த வழியிலே தெருளிருந்த கலையிலே தியங்கிநின்ற வலையிலே குருவிருந்த வழியினின்று ஊவும்ஈயும் ஆனதே. | 365 |
ஆனதோர் எழுத்திலே அமைந்துநின்ற ஆதியே கானமோடு தாலமீதில் கண்டறிவது இல்லையே; தானும்தானும் ஆனதே சமைந்தமாலை காலையில் ஏனலோடு மாறுபோல் இருந்ததே சிவாயமே. | 366 |
ஆறுகொண்ட வாரியும் அமைத்துநின்ற தெய்வமும் தூறுகொண்ட மாரியும் துலங்கிநின்ற தூரமும் வீறுகொண்ட மோனமும் விளங்கும் உட்கமலமும் மாறுகொண்ட ஊவிலே மடிந்ததே சிவாயமே. | 367 |
வாயில்கண்ட கோணமில் வயங்கும்ஐவர் வைகியே சாயல்கண்டு சார்ந்ததும் தலைமன்னாய் உறைந்ததும் காயவண்டு கண்டதும் கருவூர்அங்குச் சென்றதும் பாயும்என்று சென்றதும் பறந்ததே சிவாயமே. | 368 |
பறந்ததே துறந்தபோது பாய்ச்சலூர் வழியிலே மறந்ததே கவ்வுமுற்ற வாணர்கையின் மேவியே பிறந்ததே இறந்தபோதில் பீடிடாமற் கீயிலே சிறந்துநின்ற மோனமே தெளிந்ததே சிவாயமே. | 369 |
வடிவுபத்ம ஆசனத்து இருத்திமூல அனலையே மாருதத்தி னால் எழுப்பி வாசல்ஐந்து நாலையும் முடிவுமுத்தி ரைப்படுத்தி மூலவீணா தண்டினால் முளரிஆல யம்கடந்து மூலநாடி ஊடுபோம். | 370 |
அடிதொடக்கி முடியளவும் ஆறுமா நிலம்கடந்து அப்புறத்தில் வெளிகடந்த ஆதிஎங்கள் சோதியை உடுபதிக்கண் அமுதருந்தி உண்மைஞான உவகையுள் உச்சிபட்டு இறங்குகின்ற யோகிநல்ல யோகியே. | 371 |
உள்ளதோ புறம்பதோ உயிர்ஒடுங்கி நின்றிடம் மெள்ளவந்து கிட்டிநீர் வினாவவேண்டும் என்கிறீர் உள்ளதும் பிறப்பதும் ஒத்தபோது நாதமாம் கள்ளவாசலைத் திறந்து காணவேண்டும் மாந்தரே. | 372 |
முத்திசித்தி தொந்தமாம் முயங்குகின்ற மூர்த்தியை மற்றுஉதித்த ஐம்புலன்கள் ஆகுமத்தி அப்புலன் அத்தர்நித்தர் காள்கண்டர் அன்பினால் அனுதினம் உச்சரித்து உளத்திலே அறிந்துணர்ந்து கொண்மினே. | 373 |
மூன்றிரண்டும் ஐந்துமாய் முயன்றெழுந்த தேவராய் மூன்றிரண்டும் ஐந்ததாய் முயன்றதே உலகெலாம் ஈன்றதாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமாய்த் தோன்றும்ஓர் எழுத்தினோடு சொல்லலொன்றும் இல்லையே. | 374 |
வெளியுருக்கி அஞ்செழுத்து விந்துநாத சந்தமும் தளியுருக்கி நெய்கலந்து சகலசுத்தி ஆனதும் வெளியிலும் அவ்வினையிலும் இருவரை அறிந்தபின் வெளிகடந்த தன்மையால் தெளிந்ததே சிவாயமே. | 375 |
மந்திரங்கள் கற்றுநீர் மயங்குகின்ற மாந்தரே மந்திரங்கள் கற்றுநீர் மரித்தபோது சொல்வீரோ? மந்திரங்கள் உம்முளே மதித்தநீரும் உம்முளே மந்திரங்கள் ஆவது மனத்தின்ஐந்து எழுத்துமே. | 376 |
முப்புறத்தில் அப்புறம் முக்கண்ணன்வினைவிலே சிற்பரத்துள் உற்புனம் சிவாயம்அஞ் செழுத்துமே தற்பரம் உதித்துநின்ற தாணுஎங்கும் ஆனபின் இப்புறம் ஒடுங்குமோடி எங்கும்லிங்கம் ஆனதே. | 377 |
ஆடிநின்ற சீவன்ஓர் அஞ்சுபஞ்ச பூதமோ கூடிநின்ற சோதியோ, குலாவிநின்ற மூலமோ? நாடுகண்டு நின்றதோ, நாவுகற்ற கல்வியோ? வீடுகண்டு விண்டிடினி வெட்டவெளியும் ஆனதே. | 378 |
உருத்தரித்த போதுசீவன் ஒக்கநின்ற உண்மையும் திருத்தமுள்ளது ஒன்றிலும் சிவாயம்அஞ் செழுத்துமாம். இருத்துநின்று உறுத்தடங்கி ஏகபோகம் ஆனபின் கருத்தினின்று உதித்ததே கபாலம்ஏந்தும் நாதனே. | 379 |
கருத்தரித்து உதித்தபோது கமலபீடம் ஆனதும் கருத்தரித்து உதித்தபோது காரணங்கள் ஆனதும் கருத்தரித்து உதித்தபோது காண்இரண்டு கண்களாய்க் கருத்தினின்று உதித்ததே கபாலம் ஏந்தும் நாதனே. | 380 |
ஆனவன்னி மூன்றுகோணம் ஆறிரண்டு எட்டிலே ஆனசீவன் அஞ்செழுத்து அகாரமிட்டு அலர்ந்ததும் ஆனசோதி உண்மையும் அனாதியான உண்மையும் ஆனதாய் தானதாய் அவலமாய் மறைந்திடும். | 381 |
ஈன்றெழுந்த எம்பிரான் திருவரங்க வெளியிலே நான்றபாம்பின் வாயினால் நாலுதிக்கும் ஆயினான் மூன்றுமூன்று வளையமாய் முப்புரம் கடந்தபின் ஈன்றெழுந்த அவ்வினோசை எங்குமாகி நின்றதே. | 382 |
எங்கும்எங்கும் ஒன்றலோ ஈரேழ்லோகமும் ஒன்றலோ? அங்கும்இங்கும் ஒன்றலோ அனாதியானது ஒன்றலோ? தங்குதாபரங்களும் தரித்தவாரது ஒன்றலோ? உங்கள்எங்கள் பங்கினில் உதித்ததே சிவாயமே. | 383 |
அம்பரத்தில் ஆடும்சோதி யானவன்னி மூலமாம் அம்பரமும் தம்பரமும் அகோரமிட்டு அலர்ந்ததே அம்பரக் குழியிலே அங்கமிட்டு ருக்கிட அம்பரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே. | 384 |
வாடிலாத பூமலர்ந்து வண்டுரிசை நாவிலே ஓடிநின்று உருவெடுத்து உகாரமாய் அலர்ந்ததும் ஆடிஆடி அங்கமும் அகப்படக் கடந்தபின் கூடிநின்று உலாவுவமே குருவிருந்த கோலமே. | 385 |
விட்டடி விரைத்ததோ அவ்வேர்உருக்கி நின்றதோ எட்டிநின்ற சீவனும் ஈரேழ்லோகம் கண்டதோ? தட்டுருவம் ஆகிநின்ற சதாசிவத்து ஒளியதோ வட்டவீடு அறிந்தபேர்கள் வானதேவர் ஆவரோ. | 386 |
வானவர் நிறைந்தசோதி மானிடக் கருவிலே வானதேவர் அத்தனைக்குள் வந்தடைவர் வானவர் வானகமும் மண்ணகமும் வட்டவீடு அறிந்தபின் வானெலாம் நிறைந்தமன்னு மாணிக்கங்கள் ஆனவே. | 387 |
பன்னிரண்டு கால்நிறுத்தி பஞ்சவண்ணம் உற்றிடின் மன்னியே வெளிக்குள்நின்று வேறிடத்து அமர்ந்ததும் சென்னியாம் தலத்திலே சீவன்நின்று இயங்கிடும் பன்னிஉன்னி ஆய்ந்தவர் பரப்பிரம்மம் ஆனதே. | 388 |
உச்சகண்டு கண்கள்கட்டி உண்மைகண்டது எவ்விடம்? மச்சுமாளி கைக்குளே மானிடம் கலப்பிரேல் எச்சிலான வாசலும் ஏகபோகம் ஆய்விடும் பச்சைமாலும் ஈசனும் பரத்ததே சிவாயமே. | 389 |
வாயிலிட்டு நல்லுரிசை அட்சரத் தொலியிலே கோயிலிட்டு வாவியும் அங்கொம்பிலே உலர்ந்ததும் ஆயிலிட்ட காயமும் அனாதியிட்ட சீவனும் வாயுவிட்ட வன்னியும் வளர்ந்ததே சிவாயமே. | 390 |
அட்சரத்தை உச்சரித்து அனாதியங்கி மூலமாய் அட்சரத்தை யும்திறந்து அகோரமிட்டு அலர்ந்ததும் மட்சரத்தில் உட்கரம் அகப்படக் கடந்தபின் அட்சரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே. | 391 |
கோயிலும் குளங்களும் குறியினிற் குருக்களாய் மாயிலும் மடியிலும் மனத்திலே மயங்குறீர், ஆயனை அரனையும் அறிந்துணர்ந்து கொள்விரேல் தாயினும் தகப்பனோடு தான்அமர்ந்தது ஒக்குமே. | 392 |
கோயில் எங்கும் ஒன்றலோ, குளங்கள்நீர்கள் ஒன்றலோ? தேயுவாயு ஒன்றலோ, சிவனும்அங்கே ஒன்றலோ? ஆயசீவன் எங்குமாய் அமர்ந்துதவாரது ஒன்றலோ? காயம்ஈதறிந்த பேர்கள் காட்சியாவர் காணுமே. | 393 |
காதுகண்கள் மூக்குவாய் கலந்தவாரது ஒன்றலோ? சோதியிட்டு எடுத்ததும் சுகங்கள்அஞ்சும் ஒன்றலோ? ஓதிவைத்த சாத்திரம் உதித்தவாரது ஒன்றலோ? நாதவீடு அறிந்தபேர்கள் நாதர்ஆவர் காணுமே. | 394 |
அவ்வுதித்த அட்சரத்தின் உட்கலந்த அட்சரம் சவ்வுதித்த மந்திரம் சம்புளத்து இருந்ததால் மவ்வுதித்த மாய்கையால் மயங்குகின்ற மாந்தர்காள், உவ்வுதித்தது அவ்வுமாய் உருத்தரித்தது உண்மையே. | 395 |
அகாரமென்னும் அக்கரத்தில் அக்கரம் ஒழிந்ததோ? அகாரமென்னும் அக்கரத்தில் அவ்வுவந்து உதித்ததோ? உகாரமும் அகாரமும் ஒன்றிநன்று நின்றதோ? விகாரமற்ற ஞானிகாள், விரிந்துரைக்க வேணுமே. | 396 |
சத்தியாவது உன்னுடல், தயங்குசீவன் உட்சிவம் பித்தர்காள் இதற்குமேல் பிதற்றுகின்றது இல்லையே. சுத்திஐந்து கூடம்ஒன்று சொல்லிறந்த தோர்வெளி சத்திசிவமும் ஆகிநின்று தண்மையாவது உண்மையே. | 397 |
சுக்கிலத் துளையிலே சுரோணிதக் கருவுளே முச்சதுர வாசலில் முளைத்தெழுந்த மேட்டினில் மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய் உச்சரிக்கும் மந்திரம் ஓம்நம சிவாயமே. | 398 |
அக்கரம் அனாதிஅல்ல ஆத்துமம் அனாதிஅல்ல புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதிஅல்ல தக்கமிக்க நூல்களும் சாத்திரமும் அனாதிஅல்ல ஒக்கநின்று உடன்கலந்த உண்மைகாண் அனாதியே. | 399 |
மென்மையாகி நின்றதேது விட்டுநின்று தொட்டதேது? உண்மையாக நீயுரைக்க வேணும்எங்கள் உத்தமா? பெண்மையாக நின்றதொன்று விட்டுநின்று தொட்டதை உண்மையாய் உரைக்கமுத்தி உட்கலந்து இருந்ததே. | 400 |
அடக்கினால் அடங்குமோ அண்டம்அஞ் செழுத்துளே? உடக்கினால் எடுத்தகாயம் உண்மையென்று உணர்ந்துநீ சடக்கிலாறு வேதமும் தரிக்கஓதி லாமையால் விடக்குநாயு மாயவோதி வேறுவேறு பேசுமோ? | 401 |
உடக்கு - உள்மர்மம்
உண்மையான சக்கரம் உபாயமாய் இருந்ததும் தண்மையான காயமும் தரித்தரூபம் ஆனதும் வெண்மையாகி நீரலே விளைந்துநின்ற தானதும் உண்மையான ஞானிகாள் விரிந்துரைக்க வேணுமே. | 402 |
எள்ளகத்தில் எண்ணெய்போல் எங்குமாகி எம்பிரான் உள்ளகத்தி லேயிருக்க ஊசலாடும் மூடர்காள் கொள்ளைநாயின் வாலினைக் குணக்கெடுக்க வல்லீரேல் வள்ளலாகி நின்றசோதி காணலாகும் மெய்மையே. | 403 |
வேணும் என்ற ஞானமும் விரும்புகின்ற நூலிலே தாணுஉண்டங்கு என்கிறீர் தரிக்கிலீர், மறக்கிலீர் தாணுவொன்று மூலநாடி தன்னுள்நாடி உம்முளே காணும்அன்றி வேறுயாவும் கனாமயக்கம் ஒக்குமே. | 404 |
வழக்கிலே உரைக்கிறீர் மனத்துளே தவக்கிறீர் உழக்கிலாது நாழியான வாறுபோலும் ஊமைகாள், உழக்குநாலு நாழியான வாறுபோலும் உம்முளே வழக்கிலே உரைக்கிறீர் மனத்துள்ஈசன் மன்னுமே. | 405 |
அகாரமானது அம்பலம் அனாதியானது அம்பலம் உகாரமானது அம்பலம் உண்மையானது அம்பலம் மகாரமானது அம்பலம் வடிவானது அம்பலம் சிகாரமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே. | 406 |
சக்கரம் பறந்தோடி சக்கரம்மேல் பலகையாய் செக்கிலாடும் எண்ணெய்போலச் சிங்குவாயு தேயுவும் உக்கிலே ஒளிக்கலந்து உகங்களும் கலக்கமாய்ப் புக்கிலே புகுந்தபோது போனவாறது எங்ஙனே? | 407 |
வளர்ந்தெழுந்த கொங்கைதன்னை மாயமென்று எண்ணிநீர் அருள்கொள்சீவ ராருடம்பை உண்மையகத் தேர்வீர்காள் விளங்குஞானம் மேவியே மிக்கோர்சொல்லலைக் கேட்பிரேல் களங்கமற்று நெஞ்சுளே கருத்துவந்து புக்குமே. | 408 |
நாலுவேதம் ஓதுகின்ற ஞானம்ஒன்று அறிவீரோ? நாலுசாமம் ஆகியே நவின்றஞான போதமாய் ஆலம்உண்ட கண்டனும் அயனும்அந்த மாலுமாய்ச் சாலஉன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே. | 409 |
சுற்றும்என்று சொல்வதும் சுருதிமுடிவில் வைத்திடீர் அத்தம்நித்தம் ஆடியே அர்ந்திருந்தது எவ்விடம்? பத்திமுற்றி அன்பர்கள் பரத்தில்ஒன்று பாழது, பித்தரே, இதைக்கருதி பேசலாவது எங்ஙனே? | 410 |
எங்ஙனே விளக்கதற்கு ஏற்றவாறு நின்றுதான் எங்ஙனே எழுந்தருளி ஈசன்நேசர் என்பரேல் அங்ஙனே இருந்தருளும் ஆதியான தற்பரம் சிங்கம்அண்மி யானைபோலத் திரிமலங்கள் அற்றவே. | 411 |
அற்றவுள் அகத்தையும் அலகிடும் மெழுக்கிடும் மெத்ததீபம் இட்டதில் ப்ரவாதபூசை ஏய்த்தியே நற்றவம் புரிந்தும்ஏக நாதர்பாதம் நாடியே கற்றிருப்ப தேசரிதை கண்டுகொள்ளும் உம்முளே. | 412 |
பார்த்துநின்றது அம்பலம் பரமன்ஆடும் அம்பலம் கூத்துநின்றது அம்பலம் கோரமானது அம்பலம் வார்த்தையானது அம்பலம் வன்னியானது அம்பலம் சீற்றமாவது அம்பலம் தெளிந்ததே சிவாயமே. | 413 |
சென்றுசென்று இடந்தொறும் சிறந்தசெம்பொன் அம்பலம் அன்றும்இன்றும் நின்றதோர் அனாதியான அம்பலம் என்றும்என்றும் இருப்பதோர் இறுதியான அம்பலம் ஒன்றிஒன்றி நின்றதுள் ஒனிந்ததே சிவாயமே. | 414 |
தந்தையாய் தருமம்நீ சகலதே வதையும்நீ சிந்துநீ தெளிவும்நீ சித்திமுத்தி தானும்நீ விந்துநீ விளைவுநீ மேலதாய் வேதம்நீ எந்தைநீ இறைவன்நீ என்னை ஆண்ட ஈசனே. | 415 |
எப்பிறப்பி லும்பிறந்து இறந்துஅழிந்த ஏழைகாள் இப்பிறப்பி லும்பிறந்து என்னநீறு பூசுறீர் அப்புடன் மலம்அறுத்தே ஆசைநீக்க வல்லீரேல் செப்புநாத ஓசையில் தெளிந்துகாணல் ஆகுமே. | 416 |
அப்பு - நீர்
எட்டுயோகம் ஆனதும் இயங்குகின்ற நாதமும் எட்டுஅக்க ரத்துளே உகாரமும் அகாரமும் விட்டலர்ந்து மந்திரம் வீணாதண்டின் ஊடுபோய் அட்ட அட்சரத்துளே அமர்ந்ததே சிவாயமே. | 417 |
பிரான்பிரான் என்றுநீர் பிதற்றுகின்ற மூடரே பிரானைவிட்டு எம்பிரான் பிரிந்தவாறது எங்ஙனே? பிரானுமாய்ப் பிரானுமாயப் பேருலகந் தானுமாய் பிரானிலே முளைத்தெழுந்த பித்தர்காணும் உம்முடல். | 418 |
அந்த - முடிவு ஆதியில்லை அந்தமில்லை ஆனநாலு வேதமில்லை சோதியில்லை சொல்லுமில்லை சொல்லிறந்த தூவெளி நீதியில்லை நேசமில்லை நிச்சயப் படாததும் ஆதிகண்டு கொண்டபின் அஞ்செழித்தும் இல்லையே. | 419 |
அம்மையப்பன் அப்பன்நீர் அமர்ந்தபோது அறிகிலீர் அம்மையப்பன் ஆனநீர் ஆதியான் பாசமே அம்மையப்பன் நின்னைஅன்றி யாருமில்லை ஆனபின் அம்மையப்பன் நின்னைஅன்றி யாருமில்லை இல்லையே. | 420 |
முந்தஓர் எழுத்துளே முளைத்தெழந்த செஞ்சுடர் அந்தஓர் எழுத்துளே பிறந்துகாயம் ஆனதும் அந்தஓர் எழுத்துளே ஏகமாகி நின்றதும் அந்தஓர் எழுத்தையும் அறிந்துணர்ந்து கொள்ளுமே. | 421 |
கூட்டம்இட்டு நீங்களும் கூடிவேதம் ஓதுறீர் ஏட்டகத்துள் ஈசனும் இருப்பதென்ன எழுத்துளே? நாட்டம் இட்டு நாடிடும் நாலுமூன்று தன்னுளே ஆட்டகத்துள் ஆடிடும் அம்மைஆணை உண்மையே. | 422 |
ஆட்டகம் - ஆனந்த தாண்டவம் ஆடுகின்ற இடம்.
காக்கை மூக்கை ஆமையார் எடுத்துரைத்த காரணம் நாக்கை ஊன்றி உள்வளைத்து ஞானநாடி ஊடுபோய் ஏக்கைநோக்க அட்சரம் இரண்டெழுத்தும் ஏத்திடில் பார்த்தபார்த்த திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆனதே. | 423 |
ஏக்கை - ஏக்கம்
ஓசைஉள்ள கல்லைநீர் உடைத்திரண்டாய் செய்துமே வாசலில் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கிறீர் பூசைக்கு வைத்தகல்லில் பூவும்நீரும் சாத்துறீர் ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல்லு சொல்லுமே? | 424 |
ஓட்டுவைத்துக் கட்டிநீர் உபாயமான மந்திரம் கட்டுபட்ட போதிலும் கருத்தன்அங்கு வாழுமோ? எட்டும்எட்டும் எட்டுளே இயங்குகின்ற வாயுவை வட்டம்இட்ட யவ்விலே வைத்துணர்ந்து பாருமே. | 425 |
இந்தஊரில் இல்லைஎன்று எங்குநாடி ஓடுறீர்? அந்தஊரில்ஈசனும் அமர்ந்து வாழ்வது எங்ஙனே? அந்தமான பொந்திலாறில் மேவிநின்ற நாதனை அந்தமான சீயில்அவ்வில் அறிந்துணர்ந்து கொள்ளுமே. | 426 |
புக்கிருந்த தும்முளே பூரியிட்ட தோத்திரம் தொக்குசட்சு சிங்குவை ஆக்கிராணன் சூழ்ந்திடில் அக்குமணியும் கொன்றைசூடி அம்பலத்துள் ஆடுவார் மிக்கசோதி அன்புடன் விளம்பிடாது பின்னையே. | 427 |
பின்னெழுந்த மாங்கிசத்தைப் பேதையர் கண்பற்றியே பின்புமாங்கி சத்தினால் போகமாய்கை பண்ணினால் துன்புறும் வினைகள்தாம் சூழ்ந்திடும்பின் என்றலோ அன்பராய் இருந்தபேர்கள் ஆறுநீந்தல் போல்வீடே. | 428 |
விட்டிருந்த தும்முளே விசனமற்று இருக்கிறீர் கட்டிவைத்த வாசல்மூன்று காட்சியான வாசல்ஒன்று கட்டிவைத்த வாசலும் கதவுதாள் திறந்துபோய்த் திட்டமான ஈசனைத் தெளியுமாங் கிசத்துளே. | 429 |
ஆகும் ஆகும் ஆகுமே அனாதியான அப்பொருள் ஏகர்பாதம் நாடிநாடி ஏத்திநிற்க வல்லீரேல் பாகுசேர்மொழி உமைக்குப் பாலனாகி வாழலாம் வாகுடன் நீர்வன்னியை சமருவியே வருந்திடீர். | 430 |
வாகு - வலிமை
பாலகனாக வேணும்என்று பத்திமுற்றும் என்பிரேல் நாலுபாதம் உண்டதில் நினைந்திரண்டு அடுத்ததால் மூலநாடி தன்னில்வன்னி மூட்டிஅந்த நீருண ஏலவார் குழலியூடே ஈசர்பாதம் எய்துமே. | 431 |
எய்துநின்னை அன்பினால் இறைஞ்சி ஏத்தவல்லீரேல் எய்தும் உண்மைதன்னிலே இறப்பிறப்பு அகற்றிடும் மைஇலங்கு கண்ணிபங்கள் வாசிவானில் ஏறிமுன் செய்தவல் வினைகளும் சிதறும்அஃது திண்ணமே. | 432 |
பங்கன் - பார்வதியை இடப்பாகத்தில் உடையவன் வாசி - காற்று
திண்ணம்என்று சேதிசொன்ன செவ்வியோர்கள் கேண்மினோ அண்ணல் அன்புளன்புருகி அறிந்து நோக்கலாயிடும் மண்ணும் அதிரவிண்ணும் அதிரவாசியை நடத்திடில் நண்ணிஎங்கள் ஈசனும் நமதுகடலில் இருப்பனே. | 433 |
இருப்பன் எட்டெட்டுஎண்ணிலே இருந்துவேற தாகுவன் நெருப்பவாயு நீருமண்ணும் நீள்விசும்பும் ஆகுவன் கருப்புகுந்து காலமே கலந்தசோதி நாதனைக் குருப்புனலில் மூழ்கினார் குறித்துணர்ந்து கொள்வரே. | 434 |
கொள்ளுவார்கள் சிந்தையில் குறிப்புணர்ந்த ஞானிகள் அள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டிவேண்டி ஏத்தினால் உள்ளுமாய்ப் புறம்புமாம் உணர்வதற்கு உணர்வுமாய்த் தெள்ளிதாக நின்றசோதி செம்மையைத் தெளிந்திடே. | 435 |
தெளிந்தநற் சரியைதன்னில் சென்று சாலோகம்பெறும் தெளிந்தநற் கிரியைபூசை சேரலாம் சாமீபமே தெளிந்தநல்ல யோகம் தன்னில் சேரலாகும் சாரூபம் தெளிந்தஞானம் நான்கிலும் சேரலாம் சாயுச்யமே. | 436 |
சேருவார்கள் ஞானம்என்று செப்புவர் தெளிவுளோர் சேருவார்கள் நாலுபாதச் செம்மைஎன்ற தில்லையே சேருவார்கள் சிவகதி திருவருளைப் பெற்றபேர் சேருமாறு கண்டுநாலும் செய்தொழில் திடப்படே. | 437 |
திறமலிக்கு நாலுபாதம் செம்மையும் திடப்படார் அறிவிலிகள் தேசநாடி அவத்திலே அலைவதே குறியதனைக் காட்டிஉள் குறித்துநோக்க வல்லீரேல் வெறிகமழ் சடையுடையோன் மெய்ப்பதம் அடைவரே. | 438 |
அடைவுளோர்கள் முத்தியே அறிந்திடாத மூடரே, படையுடைய தத்துவமும் பாதகங்கள் அல்லவோ? மடைதிறக்க வாரியின் மடையில் ஏறு மாறுபோல் உடலில்மூல நாடியைஉயர ஏற்றி ஊன்றிடே. | 439 |
ஊன்றிஏற்றி மண்டலம் உருவிமூன்று தாள்திறந்து ஆன்றுதந்தி ஏறிடில் அமுதம்வந்து இறங்கிடும் நான்றிதென்று தொண்டருக்கு நாதனும் வெளிப்படும் ஆன்றியும் உயிர்ப்பரம் பொருந்திவாழ் வதாகவே. | 440 |
தந்தி - நாடி
ஆகமூல நாடியில் அனல்எழுப்பி அன்புடன் மோகமான மாயையில் முயல்வதும் ஒழிந்திடில் தாகமேரு நாடியே அனேகமான வாறுபோல் ஏகர்பாதம் அன்புடன் இறைஞ்சினார் அறிவரே. | 441 |
அறிந்துநோக்கி உம்முளே அயந்தியானம் உம்முளே பிறந்திராமல் ஏகர்பாதம் பெற்றிருப்பது உண்மையே அறிந்துமீள வைத்திடா வகையுமரணம் ஏத்தினார் செறிந்துமேலை வாசலைத் திறந்துபாரும் உம்முளே. | 442 |
சோதியாக உம்முளே தெளிந்துநோக்க வல்லீரேல் சோதிவந்து உதித்திடும் துரியகீதம் உற்றிடும் ஆதி சக்கிரத்தினில் அமர்ந்துதீர்த்தம் ஆடுவன் பேதியாது கண்டுகொள் பிராணனைத் திருத்தியே. | 443 |
திருவுமாகிச் சிவனுமாகித் தெளிந்துளோர்கள் சிந்தையில் மருவிலே எழுந்துவீசும் வாசனைய தாகுவன் கருவிலே விழுந்தெழுந்த கந்மவாத னைஎலாம் பரிதமுன் இருளதாய் பரியும்அங்கி பாருமே. | 444 |
பரிதி - சூரியன் அங்கி - நெருப்பு
பாரும்எந்தை ஈசன்வைத்த பண்பிலே இருந்துநீர் சேருமே நடுவறிந்து செம்மையான அப்பொருள் வேரையும் முடியையும் விரைந்துதேடி மால்அயன் பார்இடந்து விண்ணிலே பிறந்தும்கண்டது இல்லையே. | 445 |
மால் - திருமால் பார் - உலகம் இடந்து - தோண்டி
கண்டிலாது அயன்மால்என்று காட்சியாகச் சொல்லுறீர் மிண்டினால் அரசனும் மேவலாய் இருக்குமோ? தொண்டுமட்டும் அன்புடன் தொழுதுநோக்க வல்லீரேல் பண்டுமுப் புரம்எரிந்த பத்திவந்து முற்றுமே. | 446 |
முற்றுமே அவன்ஒழிந்து முன்பின்ஒன்றும் காண்கிலேன் பற்றிலாத ஒன்றுதன்னை பற்றிநிற்க வல்லது கற்றிதாலோ ஈசர்பாதம் காணலா யிருக்குமோ? பெற்றபேரை அன்புடன் பிரியமாகக் கேளுமே. | 447 |
கேட்டுநின்ற உன்னிலை கிடைத்த காலந்தன்னுளே வாட்டமுள்ள தத்துவ மயக்கமும் அகற்றிடும் வீட்டிலே வெளியதாகும் விளங்கவந்து நேரிடும் கூட்டிவன்னி மாருதம் குயத்தைவிட்டு எழுப்புமே. | 448 |
எழுப்பி மூலநாடியை இதப்படுத்த லாகுமோ மழுப்பிலாத சபையைநீர் வலித்துவாங்க வல்லீரேல் சுழுத்தியும் கடந்துபோய் சொப்பனத்தில் அப்புறம் அழுத்திஓர் எழுத்துளே அமைப்பதுஉண்மை ஐயனே. | 449 |
அல்லதில்லை என்றுதான் ஆவியும் பொருளுடல் நல்லஈசர் தாள்இணைக்கும் நாதனிக்கும் ஈந்நிலை என்றும்என்னுள் நேசமும் வாசியை வருந்தினால் தொல்லையாம் வினைவிடென்று தூரதூரம் ஆனதே. | 450 |
ஆனதே பதியது உயிர் அற்றதே பசுபாசம் போனவே மலங்களும் புலன்களும் வினைகளும் கானகத்தில் இட்டதீயில் காற்றுவந்து அடுத்ததோ? ஊனகத்தில் வாயுஉன்னி ஒன்றியே உலாவுமே. | 451 |
உலாவும் உவ்வும் அவ்வுமாய் உதித்தடர்ந்து நின்றதும் உலாவிஐம் புலன்களும் ஒருதலத்து இருந்திடும் நிலாவும்அங்கு நேசமாகி நின்றும் அமுதம்உண்டுதாம் உலாவும் எங்கள் ஈசனைக் குறித்துணர்ந்து கும்பிடே. | 452 |
கும்பிடும் கருத்துளே குகனைஐங் கரனையும் நம்பியே இடம்வலம் நமக்கரித்து நாடிட எம்பிரானும் அம்மையும் இருத்தியே நடுவனைத் தும்பிபோல வாசகம் தொடர்ந்துசோம்பி நீங்குமே. | 453 |
நீங்கும்ஐம் புலன்களும் நிறைந்தவல் வினைகளும் ஆங்காரமாம் ஆசையும் அருந்தடந்த பாதமும் ஓங்காரத்தின் உள்ளிருந்து ஒன்பதொழிந் தொன்றிலத் தூங்காஈசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே. | 454 |
கருக்கலந்த காலமே கண்டுநின்ற காரணம் உருக்கலந்த போதலோ உன்னைநான் உணர்ந்தது விரக்கில்என் மறைக்கில்என் வினைக்கிசைந்த போதெலாம் உருக்கலந்து நின்றபோது நீயும்நானும் ஒன்றலோ? | 455 |
ஞானநூல்கள் தேடியே நவின்றஞான யோகிகாள், ஞானமான சோதியை நாடிஉள் அறிகிலீர் ஞானம்ஆகி நின்றதோர் நாதனை அறிந்தபின் ஞானம்அல்லது இல்லைவேறு நாம் உரைத்த துண்மையே | 456 |
கருத்தரிப்ப தற்குமுன் காயம்நின்றது எவ்விடம்? உருத்தரிப்ப தற்குமுன் உயிர்ப்புநின்றது எவ்விடம்? மருட்பொதிந்த சிந்தையில் மயக்கம்நின்றது எவ்விடம்? விருப்புணர்ந்த ஞானிகாள் விரிந்துரைக்க வேணுமே. | 457 |
கருவினில் கருவதாய் எடுத்தஏழு தோற்றமும் இருவினைப் பயத்தினால் பிறந்திறந்து உழன்றிடும் மறுவினைப் பிறவிமூன்று காலமும் வகுத்தபின் உறுவினைப்பயன் இதென்று உணர்ந்தஞானி சொல்லுமே. | 458 |
வாயில்எச்சில் போகவே நீர்குடித்துத் துப்புவீர் வாயிருக்க எச்சில்போன வாறதென்ன எவ்விடம்? வாயில்எச்சில் அல்லவோ நீர்உரைத்த மந்திரம்? நாயினை அறிந்தபோது நாடும்எச்சில் ஏதுகொல்? | 459 |
தொடக்கதென்று நீர்விழத் தொடங்குகின்ற ஊமர்காள் தொடக்கிருந்தது எவ்விடம்? சுத்தியானது எவ்விடம்? தொடக்கிருந்த வாறறிந்து சுத்தபண்ண வல்லீரேல் தொடக்கிலாத சோதியைத் தொடர்ந்துகாண லாகுமே. | 460 |
மேதியோடும் ஆவுமே விரும்பியே புணர்ந்திடில் சாதிபேத மாம்உருத் தரிக்கும்ஆறு போலவே வேதம்ஓது வானுடன் புலைச்சிசென்று மேவிடில் பேதமாய்ப் பிறக்கிலாத வாறதென்ன பேசுமே. | 461 |
மேதி - எருமை
வகைக்குலங் கள்பேசியே வழக்குரைக்கும் மாந்தர்காள் தொகைக்குலங் கள்ஆனநேர்மை நாடியே உணர்ந்தபின் மிகைத்த சுக்கிலம் அன்றியே வேறுஒன்று கண்டிலீர் நகைக்குமாறு மனு எரிக்கநாளும்நாளும் நாடுவீர். | 462 |
ஓதும்நாலு வேதமும் உரைத்த சாத்திரங்களும் பூதத்தத்து வங்களும் பொருந்தும் ஆகமங்களும் சாதிபேத உண்மையும் தயங்குகின்ற நூல்களும் பேதபேதம ஆகியே பிறந்துஉழன்று இருந்ததே. | 463 |
அங்கலிங்கம் பூண்டுநீர் அகண்டபூசை செய்கிறீர் அங்கலிங்கம் பூண்டுநீர் அமர்ந்திருந்த மார்பனே எங்கும்ஓடி எங்கும்எங்கும் ஈடழிந்து மாய்கிறீர் செங்கல்செம்பு கல்லெலாம் சிறந்துபார்க்கும் மூடரே. | 464 |
தீட்டம்தீட்டம் என்றுநீர் தினமும்மூழ்கும் மூடரே தீட்டமாகி அல்லவோ திரண்டுகாயம் ஆனதும் பூட்டகாயம் உம்முளே புகழுகின்ற பேயரே தீட்டுவந்து கொண்டலோ தெளிந்ததே சிவாயமே. | 465 |
உந்திமேலே நாலுமூன்று ஓம்நமசி வாயமாம் சந்திசந்தி என்றுநீர் சாற்றுகின்ற பேயரே மூந்தவந்து நம்முளே மூலநாடி ஊடுபோய் அந்திசந்தி அற்றிடம் அறிந்துணர்ந்து பாருமே. | 466 |
வன்னிமூன்று தீயினில் வாழும்எங்கள் நாதனும் கன்னியான துள்ளிருக்கக் காதல்கொண்டது எவ்விடம் சென்னிநாலு கையிரண்டு சிந்தையில் இரண்டிலொன்று உன்னியுன்னி நம்முளே உய்த்துணர்ந்து பாருமே. | 467 |
தொண்டுசெய்து நீங்களும் சூழஓடி மாள்கிறீர் உண்டுஉழன்று நும்முளே உற்றுணர்ந்து பார்க்கிலீர் வண்டுலாவு சோலைசூழ வாழும்எங்கள் நாதனும் பண்டுபோல நும்முளே பகுத்திருப்பன் ஈசனே. | 468 |
பரம்உனக்கு எனக்குவேறு பயம்இல்லை பாரையா கரம்உனக்கு நித்தமும் குவித்திடக் கடமையாம் சிரமுருக்கி அமுதளித்த சீருலாவும் நாதனே உரம்எனக்கு நீஅளித்த உண்மைஉண்மை உண்மையே. | 469 |
என்அகத்தில் என்னைநான் எங்கும்ஓடி நாடினேன் என்அகத்தில் என்னைஅன்றி ஏதும்ஒன்று கண்டிலேன் மின்எழுப்பி விண்ணகத்தின் மின்ஒடுங்கு மாறுபோல் என்அகத்துள் ஈசனோடு யானும்அல்ல தில்லையே. | 470 |
இடங்கள்பண்ணி சுத்திசெய்தே இட்டபீட மீதிலே அடங்கநீறு பூசல்செய்து அருந்தவங்கள் பண்ணுவீர் ஒடுங்குகின்ற நாதனார் உதிக்கும்ஞானம் எவ்விடம்? அடங்குகின்றது எவ்விடம்? அறிந்துபூசை செய்யுமே. | 471 |
புத்தகங் களைசுமந்து பொய்களைப் பிதற்றுவீர். செத்திடம் பிறந்திடம் அதுஎங்ஙன்என்று அறிகிலீர் அத்தனைய சிந்தனை அறிந்துநோக்க வல்லீரேல் உத்தமத்துள் ஆயசோதி உணரும்போகம் ஆகுமே. | 472 |
அருளிலே பிறந்துநின்று மாயைரூபம் ஆகியே இருளிலே தயங்குகின்ற ஏழைமாந்தர் கேண்மினோ. பொருளிலே தவம்புனைந்து பொருந்திநோக்க வல்லீரேல் மருள்அதுஏது? வன்னியின் மறைந்ததே சிவாயமே. | 473 |
தன்மசிந்தை ஆம்அளவும் தவமறியாத் தன்மையாய்க் கன்மசிந்தை வெயில்உழன்று கருத்தழிந்த கசடரே, சென்மம்சென்மம் தேடியும் தெளிவொணாத செல்வனை நன்மையாக உம்முளே நயந்துகாண வேணுமே. | 474 |
கள்ளவுள்ள மேயிருக்கக் கடந்தஞானம் ஓதுவீர் கள்ளம்உள் அறுத்தபோது கதிஇதன்றிக் காண்கிலீர்? உள்ளமே விளக்கிநித்தம் ஒளியணுக வல்லீரேல் தெள்ளு ஞானம் உம்முளே சிறந்ததே சிவாயமே. | 475 |
காணவேண்டும் என்றுநீர் கடல்மலைகள் ஏறுவீர் ஆணவம் அதல்லவோ அறிவில்லாத மாந்தரே? வேணும் என்று அவ்வீசர்பாதம் மெய்யுளே தரிப்பிரேல் தாணுவாக நின்ற சீவன் தான்சிவம் அதாகுமே. | 476 |
தாணு - பரம்பொருள்
அணுவினோடு அகண்டமாய் அளவிடாத சோதியைக் குணமதாக உம்முளே குறித்துநோக்கின் முத்தியாம் மிணமிணென்று விரலைஎண்ணி மீளொணா மயக்கமாய்த் துணிவிலாத படியினால் தொடர்ந்து பூசை செய்குவீர். | 477 |
எச்சில்எச்சில் என்றுநீர் இடைந்திருக்கும் ஏழைகாள் துச்சில்எச்சில் அல்லவோ தூயகாயம் ஆனதும் வைத்தெச்சில் தேனலோ, வண்டின்எச்சில் பூவலோ? கைச்சுதாடல் வைத்துடன் கறந்தபாலும் எச்சிலே! | 478 |
சுதா - பசுவின் முலைக்காம்பு
தீர்த்தலிங்க மூர்த்திஎன்று தேடிஓடும் தீதரே தீர்த்தலிங்கம் உள்ளில்நின்ற சீவனைத் தெளியுமே தீர்த்தலிங்கம் உம்முளே தெளிந்துகாண வல்லீரேல் தீர்த்தலிங்கம் தான்அதாய்ச் சிறந்ததே சிவாயமே. | 479 |
ஆடுகொண்டு கூறுசெய்து அமர்ந்திருக்கும் ஆறுபோல் தேடுகின்ற செம்பினைத் திடப்படப் பரப்பியே நாடுகின்ற தம்பிரானும் நம்முளே இருக்கவே போடுதர்ப்ப பூசைஎன்ன பூசைஎன்ன பூசையோ? | 480 |
என்னை அற்பநேரமும் மறக்கிலாத நாதனே ஏகனே இறைவனே இராசராச ராசனே உன்னை அற்ப நேரமும் ஒழிந்திருக்க லாகுமே உனதுநாமம் எனதுநாவில் உதவிசெய்வீர் ஈசனே. | 481 |
எல்லையற்று நின்றசோதி ஏகமாய் எரிக்கவே வல்லபூர ணப்பிரகாசர் ஏகதபோகம் ஆகியே நல்லஇன்பம் மோனசாக ரத்திலே அழுத்தியே நாடொணாத அமிர்தம்உண்டு நான்அழிந்து நின்றநாள். | 482 |
ஆனவாற தாயிடும் அகண்டமான சோதியை ஊனைகாட்டி உம்முளே உகந்துகாண வல்லீரேல் ஊனகாயம் ஆளலாம் உலகபாரம் ஆளலாம் கானநாடும் ஆளலாம் வண்ணநாடர் ஆணையே. | 483 |
நித்தமும் மணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து வத்தியே கதறியே கண்கள்மூடி என்பயன்? எத்தனைபேர் எண்ணினும் எட்டிரண்டும் பத்தலோ? அத்தனுக்கிது ஏற்குமோ அறிவிலாத மாந்தரே? | 484 |
எட்டிரண்டும் கூடியே இலிங்கமான தேவனை மட்டதாக உம்முளே மதித்துநோக்க வல்லீரேல் கட்டமான பிறவிஎன் கருங்கடல் கடக்கலாம் இட்டமான ஒளியினோடு இசைந்திருப்பீர் காண்மினே. | 485 |
உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும் தண்மையான மந்திரம் சமைந்துரூபம் ஆகியே வெண்மையான மந்திரம் விளைந்துநீற தானேதே உண்மையான மந்திரம் அதொன்றுமே சிவாயமே. | 486 |
தச்சுவாயில் உச்சிமேல் ஆயிரம் தலங்களாய் முச்சுடரும் மூவிரண்டும் மூண்டெழுந்த தீச்சுடர் வச்சிரம் அதாகியே வளர்ந்துநின்றது எவ்விடம்? இச்சுடரும் இந்திரியமும் ஏகமானது எங்ஙனே? | 487 |
481. ஏகன் - தனிமுதன்மையானவன்
வல்லவாசல் ஒன்பதும் மறுத்தடைத்த வாசலும் சொல்லும்வாசல் ஓர்ஐந்தும் சொல்லவிம்மி நின்றதும் நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய் எல்லைவாசல் கண்டபின் இனிப்பிறப்ப தில்லையே. | 488 |
வண்டுபூ மணங்களோடு வந்திருந்த தேன்எலாம் உண்டுளே அடங்கும்வண்ணம் ஓதுலிங்க மூலமாய்க் கண்டுகண்டு வேரிலே கருத்தொடுங்க வல்லீரேல் பண்டுகொண்ட வல்வினை பறந்திடும் சிவாயமே. | 489 |
ஓரெழுத்தில் லிங்கமாக ஓதும்அக் கரத்துளே ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர் மூவெழுத்தும் மூவராய் முளைத்தெழுந்த சோதியை நாலெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே. | 490 |
தூரதூர தூரமும் தொடர்ந்தெழுந்த தூரமும் பாரபார பாரம்என்று பரிந்திருந்த பாவிகாள்! நேரநேர நேரமும் நினைந்திருக்க வல்லீரேல் தூரதூர தூரமும் தொடர்ந்துகூடல் ஆகுமே. | 491 |
குண்டலங்கள் பூண்டுநீர் குளங்கள்தோறும் மூழ்குறீர் மண்டுகங்கள் போலநீர் மனத்தின் மாசறுக்கிலீர்; மண்டைஏந்து கையரை மனத்திருந்த வல்லீரேல் பண்டைமால் அயன்தொழப் பணிந்து வாழலாகுமே. | 492 |
மண்டுகம் - தவளை
கூடுகட்டி முட்டையிட்டுக் கொண்டிருந்த வாறுபோல் ஆடிரண்டு கன்றைஈன்ற அம்பலத்துள் ஆடுதே; மாடுகொண்டு வெண்ணெய்உண்ணும் மானிடப் பசுக்களே! வீடுகண்டு கொண்டபின்பு வெட்டவெளியும் காணுமே. | 493 |
நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே சுற்றிவந்து முணமுணேன்று சொல்லுமந்திரம் ஏதடா நட்டகல்லும் பேசுமோ நாதன்உள் இருக்கையில்! சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ? | 494 |
நானும்அல்ல நீயும்அல்ல நாதன்அல்ல ஓதுவேன் வானில்அல்ல சோதிஅல்ல சோதிநம்முள் உள்ளதே நானும்நீயும் ஒத்தபோது நாடிகாண லாகுமோ? தானதான தந்தான தாதனான தானனா. | 495 |
நல்லதல்ல கெட்டதல்ல நடுவில்நிற்பது ஒன்றுதான் நல்லதென்று போதது நல்லதாகி நின்றபின் நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகும் ஆதலால் நல்லதென்ற நாடிநின்று நாமம்சொல்ல வேண்டுமே. | 496 |
பேய்கள்கூடிப் பிணங்கள்தின்னும் பிரியமில்லாக் காட்டிலே நாய்கள்சுற்ற நடனமாடும் நம்பன்வாழ்க்கை ஏதடா? தாய்கள்பால் உதிக்கும்இச்சை தவிரவேண்டி நாடினால் நோய்கள்பட்டு உழல்வதேது நோக்கிப்பாரும் உம்முளே. | 497 |
நம்பன் - பரமேசுவரன்
உப்பைநீக்கில் அழுகிப்போகும் ஊற்றையாகும் உடலில்நீ அப்பியாசை கொண்டிருக்கல் ஆகுமோசொல் அறிவிலா தப்பிலிப்பொய் மானம்கெட்ட தடியனாகும் மனமேகேள்; ஒப்பிலாசெஞ் சடையனாகும் ஒருவன்பாதம் உண்மையே. | 498 |
பிறப்பதெல்லாம் இறப்பதுண்டு பேதைமக்கள் தெரிகிலாது இறப்பதில்லை எனமகிழ்ந்து எங்கள்உங்கள் சொத்தெனக் குறிப்புப்பேசித் திரிவரன்றிக் கொண்டகோலம் என்னவோ? நிறப்பும்பொந்தி அழிந்தபோது நேசமாமோ ஈசனே. | 499 |
சுட்டெரித்த சாந்துபூசும் சுந்தரப்பெண் மதிமுகத் திட்டநெட்டு எழுந்தறியாது ஏங்கிநோக்கு மதவலீர் பெட்டகத்துப் பாம்புறங்கும் பித்தலாட்டம் அறியிரோ? கட்டவிழ்த்துப் பிரமன்பார்க்கில் கதிஉமக்கும் ஏதுகாண்? | 500 |
வேதம்ஓது வேலையோ வீணதாகும் பாரிலே! காதகாத தூரம்ஓடிக் காதல்பூசை வேணுமோ? ஆதிநாதன் வெண்ணெய் உண்டஅவனிருக்க நம்முளே? கோதுபூசை வேதம்ஏது குறித்துப்பாரும் உம்முளே. | 501 |
பரம்இலாதது எவ்விடம்? பரம்இருப்பது எவ்விடம்? அறம்இலாத பாவிகட்குப் பரம்இலைஅது உண்மையே; கரம்இருந்தும் பொருளிருந்தும் அருளிலாத போதது பரம்இலாத சூனியமாம் பாழ்நரகம் ஆகுமே. | 502 |
மாதர்தோள் சேராததேவர் மானிலத்தில் இல்லையே! மாதர்தோள் புணர்ந்தபோது மனிதர்வாழ்வு சிறக்குமே, மாதராகும் சத்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால் மாதராகும் நீலிகங்கை மகிழ்துகொண்டான் ஈசனே. | 503 |
நீலிகங்கை - நீல நிறம் உடைய கங்கை.
சித்தர்என்றும் சிறியர்என்றும் அறியொணாத சீவர்காள்! சித்தர்இங்கு இருந்தபோது பித்தர்என்று எண்ணுவீர்! சித்தர்இங்கு இருந்தும் என்ன பித்தன்நாட்டிருப் பாரோ? அத்தன்நாடும் இந்தநாடும் அவர்களுக்கெலா மொன்றே. | 504 |
மாந்தர்வாழ்வு மண்ணிலே மறந்தபோது விண்ணிலே சாந்தனான ஆவியைச் சரிப்படுத்த வல்லீரேல் வேந்தன்ஆகி மன்றுளாடும் விமலன்பாதம் காணலாம் கூந்தலம்மை கோணல்ஒன்றும் குறிக்கொணாதி துண்மையே. மன்று - மன்றம்; சபை; விமலன் - மலமற்றவன் | 505 |
சருகு - உதிர்ந்த இலை.
சருகருத்தி நீர்குடித்துச் சாரல்வாழ் தவசிகாள்! சருகருந்தில் தேகங்குன்றிச் சஞ்சலம் உண்டாகுமே; வருவிருந்தோடு உண்டுஉடுத்தி வளர்மனை சுகிப்பிரேல் வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே. | 506 |
காடுமேடு குன்றுபள்ளம் கானின்ஆறு அகற்றியும் நாடுதேசம் விட்டலைவர் நாதன்பாதம் காண்பரோ? கூடுவிட்டு அகன்றுன்ஆவி கூத்தனூர்க்கே நோக்கலால் வீடுபெற்ற அரன்பதத்தில் வீற்றிருப்பர் இல்லையே. | 507 |
கட்டையால்செய் தேவரும் கல்லினால்செய் தேவரும் மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும் சட்டையால்செய் தேவரும் சாணியால்செய் தேவரும் வெட்டவெளிய தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே. | 508 |
தங்கள்தேகம் நோய்ப்பெறின் தனைப்பிடாரி கோயிலில் பொங்கல்வைத்து ஆடுகோழிப் பூசைப்பலியை இட்டிட நங்கச்சொல்லு நலிமிகுந்து நாளும்தேய்ந்து மூஞ்சூராய் உங்கள்குலத்துத் தெய்வம்உம்மை உருக்குலைப்ப தில்லையே. | 509 |
ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை மோசம்செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர் பூசையோடு நேமநிட்டை பூரிக்கச்செய் பாதகர் காசினியில் எழுநரகைக் காத்திருப்பது உண்மையே. | 510 |
நேசமுற்றுப் பூசைசெய்து நீறுபூசிச் சந்தனம் வாசமோடு அணிந்துநெற்றி மைதிலகம் இட்டுமே மோசம்பொய் புனைசுருட்டு முற்றிலும்செய் மூடர்காள் வேசரிகளம் புரண்டவெண் ணீறாகும் மேனியே. | 511 |
வாதம்செய்வேன் வெள்ளியும் பொன்மாற்றுயர்ந்த தங்கமும் போதவே குருமுடிச்சுப் பொன்பணங்கள் தரவெனச் சாதனைசெய் தெத்திச்சொத்து தந்ததைக்க வர்ந்ததுமே காததூரம் ஓடிச்செல்வர் காண்பதும் அருமையே. | 512 |
யோகசாலை காட்டுவார் உயரவும் எழும்புவார் வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார் மோகம்கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின் பேயது பிடித்தவர்போல் பேருலகில் சாவரே. | 513 |
காயகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட மாயவித்தை செய்வதுஎங்கு மடிப்புமோசம் செய்பவர் நேரமாகக் கஞ்சாஅடித்து நேர்அபினையைத் தின்பதால் நாயதாக நக்கிமுக்கி நாட்டினில் அலைவரே. | 514 |
நீரினில் குமிழிஒத்த நிலையிலாத காயம்என்று ஊரினில் பறைஅடித்து ஊதாரியாய்த் திரிபவர் சீரினில் உனக்குஞான சித்திசெய்வேன் பாரென நேரினில் பிறர்பொருளை நீளவும்கைப் பற்றுவார். | 515 |
காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம் தாவுருத்தி ராட்சம்யோக தண்டுகொண்ட மாடுகள் தேவியை அலையவிட்டுத் தேசம்எங்கும் சுற்றியே பாவியென்ன வீடெலாம் பருக்கைகேட்டு அலைவரை. | 516 |
முத்திசேரச் சித்திஇங்கு முன்னளிப்பேன் பாரெனக் சத்தியங்கள் சொல்லிஎங்கும் சாமிவேடம் பூண்டவர் நித்தியம் வயிறுவளர்க்க நீதிஞானம் பேசியே பத்தியாய்ப் பணம்பறித்துப் பாழ்நரகில் வீழ்வரேல். | 517 |
செம்மைசேர் மரத்திலே சிலைதலைகள் செய்கிறீர் கொம்மையற்ற கிளையில்பாத குறடுசெய்து அழிக்கிறீர் நும்முளே விளங்குவோனை நாடிநோக்க வல்லீரேல் இம்மலமும் மும்மலமும் எம்மலமும் அல்லவே. | 518 |
எத்திசைஎங்கும் எங்கும்ஓடி எண்ணிலாத நதிகளில் சுற்றியும் தலைமுழுகச் சுத்தஞானி யாவரோ? பத்தியோடு அரன்பதம் பணிந்திடாத பாவிகாள்; முத்திஇன்றி பாழ்நரகில் மூழ்கிநொந்து அலைவரே. | 519 |
கல்லுவெள்ளி செம்பிரும்பு காய்ந்திடும் தராக்களில் வல்லதேவ ரூபபேதம் அங்கமைத்துப் போற்றிடில் தொல்லைஅற் றிடம்பெரும் சுகந்தருமோ சொல்லுவீர்? இல்லைஇல்லை இல்லைஇல்லை ஈசன்ஆணை இல்லையே. | 520 |
இச்சகம் சனித்ததுவும் ஈசனைஐந்து எழுத்திலே மெச்சவம் சராசரங்கள் மேவும்ஐந்து எழுத்திலே உச்சிதப் பலஉயிர்கள் ஓங்கல்அஞ் செழுத்திலே நிச்சயமெய்ஞ் ஞானபோதம் நிற்கும்ஐந் தெழுத்திலே. | 521 |
சாத்திரங்கள் பார்த்துப்பார்த்துத் தான்குருடு ஆவதால் நேத்திரங்கெட வெய்யோனை நேர்துதிசெய் மூடர்காள் பாத்திரம் அறிந்துமோன பக்திசெய்ய வல்லீரேல் சூத்திரப்படி யாவரும் சுத்தர்ஆவர் அங்ஙனே. | 522 |
மனவுறுதி தானிலாத மட்டிப்பிணை மாடுகள் சினமுறப் பிறர்பொருளைச் சேகரித்து வைத்ததைத் தினந்தினம் ஊர்எங்கும் சுற்றிதிண்டிக்கே அலைபவர் இனமதில் பலரும்வையும் இன்பம் அற்ற பாவிகள். | 523 |
சிவாயவசி என்னவும் செபிக்கஇச் சகம்எலாம் சிவாயவசி என்னவும் செபிக்கயாவும் சித்தியாம் சிவாயவசி என்னவும் செபிக்கவானம் ஆளலாம் சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே. | 524 |