1. அறத்துப்பால் பாயிர இயல் | |
கடவுள் வாழ்த்து
சொன்னகம்பத் தேமடங்கல் தோன்றுதலால் அன்பரு இன்னமுத மாகும் இரங்கேசா - மன்னுமளத்து அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு. | 1 |
வான் சிறப்பு
கெண்டலுறை யூர்க்கச்சிக் கோநகரின் செய்குணத்தால் எண்டிசையும் போற்றும் இரங்கேசா - மண்டிக் கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. | 2 |
கொண்டல் - மேகம், சார்வாய் - அநுகூலமாய்.
நீத்தார் பெருமை
மன்னன்மக முங்காதி மைந்தன் தனையடைந்தோன் இன்னுயிருங் காத்தான் இரங்கேசா - சொன்னால் உரனென்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான் வரனென்னும் வைப்புக்கோர் வித்து. | 3 |
மகம் - யாகம், காதிமைந்தன் - விசுவாமித்திரன்.
அறன்வலி யுரைத்தல்
கானக் குரங்கெழலாற் கங்கை சுதன் முதலோர் ஈனப் படலால் இரங்கேசா - ஆன அறத்தினூஉங்கு ஆக்கமு மில்லை யதனை மறத்திலின் ஊங்கில்லை கேடு. | 4 |
எழலால் - வினங்கினதாலும், கங்கைசுதன் - கங்காதேவியின் புத்திரன், க்கம் - நன்மை
இல்லற இயல்
இல்வாழ்க்கை
பத்துடனான் கில்லம் பரகதிகொண் டேகினான் இத்தலமேல் ஆள்வான் இரங்கேசா - நித்தம் இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாந் தலை. | 53 |
இத்தலமேலாள்வான் - கஞ்சனூர் ழ்வார், இயல்பினான் - முறைப்படி.
வாழ்க்கைத் துணைநலம்
மாண்டவியார் சாபத்தை வல்லிளுளால் மாற்றினான் ஈண்டோர் மடந்தை இரங்கேசா - நீண்டபுகழ்ப் பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந் திண்மை யுண்டாகப் பெறின். | 6 |
திண்மை - கலங்காநிலைமை.
புதல்வரைப் பெறுதல்
வேதம் புகழ்நதியை மேதினியில் தந்துகுலந்து ஏதுங் கெடுத்தான் இரங்கேசா - ஓதும் எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். | 7 |
வேதம்புகழ் நதி - காயகங்கை, பழிபிறங்கா - பழிக்கு ஆளாகாத.
அன்புடைமை
வெற்பின் சிறகரிய செந்நென் பளித்துமுனி இப்புவியைக் காத்தான் இரங்கேசா - நற்புகழாம் அன்பிலா ரெல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. | 8 |
முனி - ததீசிமுனிவர்.
விருந்தோம்பல்
தேசுபெறு மாறன் தெளித்த முளையமுதிட்டு ஈசனுடன் போந்தான் இரங்கேசா - பேசுங்கால் செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு. | 9 |
மாறன் - இளையான்குடிமாற நாயனார், முளை - அன்றுவிதைத்த நென்முளை
இனியவை கூறல்
வன்சமர்நட் பால்வென்று மாநிறமா ளத்தருமன் இன்சொல்லாற் பெற்றான் இரங்கேசா - பொன்செய் நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பிற் றலைப்பிரியாச் சொல். | 10 |
வான்சமர் - பாரதப்போர், பண்பின் தலைப்பிரியாத - அறத்தினின்று வழுவாத, நயன் - இலாபம்
செய்ந்நன்றி அறிதல்
நாடிச் சிறைக்கருடன் நாகக் கொடுங்கணையை ஈடழித்தான் அன்றோ இரங்கேசா - நடுங்கால் செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. | 11 |
சிறைக்கருடன் - சிறகுகளையுடைய கருடன், ஈடழித்தான் - சின்னாபின்னப்படுத்தினான்
நடுவு நிலைமை
வேதவிதி வீமா விலங்கிற்கு உடற்பாதி ஈதல்அழ கென்றான் இரங்கேசா - ஒதுங்கால் நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல். | 12 |
விலங்கு - புருஷாமிருகம், நடுவிகந்தாம் க்கம் - நீதிதவறியதால் வரும் செல்வம்.
அடக்க முடைமை
ஆன்ற சபையில் அடங்காச் சிசுபாலன் ஏன்றிரந்தான் அன்றோ இரங்கேசா - சான்றோர்கள் காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை யுயிர்க்கு. | 13 |
ஆன்றசபை - பெரியோர்கள் சபை, ஏன்று - தண்டனையடைந்து, ஊங்கில்லை - சிறந்ததில்லை.
ஒழுக்கமுடைமை
வேடவான் மீகர்பின்பு வேதியரின் மேலானார் ஏடவிழ்தார் சூடும் இரங்கேசா - நாடில் ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். | 14 |
ஏடவிழ் - இதழ் விரிந்த, குடிமை - உயர்குடிப் பிறப்பு.
பிறனில் விழையாமை
அம்பிகையை நோக்கி யளகேசன் கண்ணிழந்தான் இம்பர் பரவும் இரங்கேசா - நம்பிப் பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனென்றோ ஆன்ற வொழுக்கு. | 15 |
அம்பிகை - பார்வதி, அளகேசன் - குபேரன், இம்பர் - இவ்வுலகோர்.
பொறையுடைமை
முந்து மரந்தரித்த மூர்க்கன்சொற் கேட்டுமவன் எந்தைபிரான் என்றான் இரங்கேசா - கொந்தி அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. | 16 |
முந்தும் - எதிரிலுள்ள, அகழ்வார் - தோண்டுகின்றவர்.
அழுக்காறாமை
வெள்ளி கொடுத்தல் விலக்கிவிழி தோற்றுலகில் எள்ளலுற்றான் அன்றோ இரங்கேசா - உள்ளத்து அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியுங் கேடீன் பது. | 17 |
வெள்ளி - சுக்கிரன், ஒன்னார் - பகைவர், ஈன்பது - தருவது.
வெ•காமை
முன்னோனைப் போரின் முடுக்கி விமானத்தை என்னோகைக் கொண்டான் இரங்கேசா - அன்னோ நடுவின்றி நன்பொருள் வெ·கிற் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். | 18 |
முன்னோன் - குபேரன், முடுக்கி - வென்று, பொன்றல் - கெடுதல்.
புறங்கூறாமை
தக்கதுரி யோதனன்பாற் சார்ந்த சகுனியைப்போல் இக்கு வலயத்தில் இரங்கேசா - மிக்குப் பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். | 19 |
பகச்சொல்லி - புறங்கூறி, தேற்றாதவர் - அறியாதவர்.
பயனில சொல்லாமை
வேந்தை வதிட்டன் வியத்தல்பழு தென்றமுனி ஏந்துதவந் தோற்றான் இரங்கேசா - ஆய்ந்தக்கால் சீ£ர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின். | 20 |
வேந்து - அரிச்சந்திரன், முனி - விசுவாமித்திரன், ஏந்துதவம் - நோற்ற நோன்மை, நீர்மை - பெருந்தன்மை.
தீவினை அச்சம்
காளமுனி பாண்டவர்மேல் ஏவுங் கடிவிழுங்க ஏளிதம் ஆனான் இரங்கேசா - நாளுந்தான் தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். | 21 |
கடி - பூதம், பயத்தல் - விளைவித்தல்.
ஒப்புரவறிதல்
அந்தணர் மேன்மை அறியாமற் சர்ப்பவென்ற இந்திரன்பாம் பானான் இரங்கேசா - முந்தவே ஒப்புரவி னால்வருங் கேடெனின் அ·தொருவன் விற்றுக் கோட்டக்க துடைத்து. | 22 |
சர்ப்ப - விரைந்துசொல்லுங்கள் என்னும் பொருளைத்தரும் சொல், இந்திரன் - நகுஷமகாராஜன், ஒப்புரவு - உலகநடையறிந்து செய்யுங் காரியம்.
ஈகை
அங்கியுங் குண்டலமும் ஆகண் டலர்க்களித்தான் இங்கிதமாக் கன்னன் இரங்கேசா - மங்கியே சாதலின் இன்னாத தில்லை இனிதாதூஉம் ஈதல் இயையாக் கடை. | 23 |
கண்டலன் - தேவேந்திரன், இயையாக்கடை - இசையாத போது.
புகழ்
மும்மை யுலகும் முசுகுந் தனுத்துதிக்கும் எம்மையாட் கொண்ட இரங்கேசா - செம்மையாத் தோன்றிற் புகழோடு தோன்றுக அ·திலார் தோன்றலின் தோன்றாமை நன்று. | 24 |
தோன்றல் - பிறத்தல்.
துறவற இயல்
அருளுடைமை
வஞ்சப் புறவினுடன் வான்துலையில் ஏறினான் இன்சொற் சிவிமுன் இரங்கேசா - எஞ்சாமல் மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை. | 25 |
வான்துலை - நீண்ட தராசு, சிவி - சிபிச்சக்கரவர்த்தி
புலான் மறுத்தல்
அந்தணணைக் கன்மாட பாதன் அருந்தினான் இந்த வுலகத்து இரங்கேசா - வந்த பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி ஸ்ரீங்கில்லை ஊன்தின் பவர்க்கு. | 26 |
கன்மாடபாதன்- கன்மாடபாதன் என்னும் அரசன், போற்றாதார் - காப்பாற்றாதவர்.
தவம்
வேந்தந் தணர்குலத்து மேலா கியதகைமை ஏந்துவத் தேய்ந்தான் இரங்கேசா - மாந்தர்க்கு வேண்டிய வேண்டியாங்கு எய்தலாற் செய்தவம் ஈண்டு முயலப் படும். | 27 |
ஈண்டு - இந்நிலவுலகில்
கூடா வொழுக்கம்
சந்யாசி யாய்விஜயன் தார்குழலைக் கொண்டகன்றான் இந்நா னிலம்போற்றும் இரங்கேசா - சொன்னால் வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியிந்தோல் போர்த்துமேய்ந் தற்று. | 28 |
தார்குழல் - சுபத்திரை, வல்லுருவம் - பொய்வேடம்.
கள்ளாமை
உத்தங்கன் ஓலை யளித்தநா கக்குலங்கள் இற்ற புகையால் இரங்கேசா - மற்றுலகில் உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தாற் கள்வேம் எனல். | 29 |
ஓலை - காதோலை, நாகக்குலங்கள் - தஷகனென்னும் நாகக் கூட்டங்கள், இற்ற - மடிந்தன, கள்வேம் - திருடுவோம்.
வாய்மை
மூவாரிச் சந்திரற்கு முன்னின்ற காட்சிபோல் ஏவர்பெற் றார்மேனாள் இரங்கேசா - பூவில் மனத்தொடு வாய்மை மொழியிற் றவத்தொடு தானஞ் செய்வாரிற் றலை. | 30 |
மனத்தொடு - திரிகரணசுத்தியாக.
வெகுளாமை
தாக்கி நிமிவதிட்டர் சாபத்தால் தம்முடல்விட்டு ஏக்கமுற்றார் அன்றோ இரங்கேசா - நோக்கினால் செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்லதனில் தீய பிற. | 31 |
நிமிவதிட்டர் - நிமிச்சக்கரவர்த்தியும் வசிட்டமுனிவரும்.
இன்னா செய்யாமை
பாந்தாள் முனிமேற் படுத்தபரிச் சித்தன்றான் ஏந்துதுன்பம் உற்றன் இரங்கேசா - மாந்தர் பிறர்கின்னா முற்பகற் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும். | 32 |
பாந்தள் - பாம்பு, படுத்த - போட்டதனால்.
சொல்லாமை
சொல்லார் முனிக்கிறுதி சூழ்கார்த்த வீரன்குலம் எல்லாம் இறந்தது இரங்கேசா - கொல்லவே தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை. | 33 |
சொல்லார்முனி - புகழ்பெற்ற ஜமதக்கினிமுனிவர்.
நிலையாமை
அட்டகோ ணத்தனுடல் அத்திரமென் றான்திசைகள் எட்டும் பரவும் இரங்கேசா - மட்டினால் நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை. | 34 |
அட்டகோணத்தன் - அட்டகோண மகரிஷி, அத்திரம் - நிலையற்றது, கடை - இழிவு.
துறவு
பீடுபெறு பட்டினத்தப் பிள்ளையைப்போ லேதுறவார்க்கு ஈடு தருமோ இரங்கேசா - நீடுலகில் யானெனது என்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த வுலகம் புகும். | 35 |
ஈடு - பலன், செருக்கு - அகங்காரம்.
மெய்யுணர்தல்
கர்ப்பத்தி லேசுகனார் கேடில்பொரு ளைக்குறித்தார் இப்புதுமைக் கன்பாம் இரங்கேசா - உற்பத்தி ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயனின்றே மெய்யுணர் வில்லாதவர்க்கு. | 36 |
கேடில்பொருள் - அழியாப்பொருள், மெய்யுணர்வு - உண்மையறிவு.
அவா அறுத்தல்
தேசஞ்சொல் பத்ரகிரி சிந்தையின்மூ வாசைவிட்டான் ஈசன் பரவும் இரங்கேசா - பாச அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டும் ற்றான் வரும். | 37 |
தேசஞ்சொல் - தேயத்தார்புகழும், ஆற்ற - முற்றும், தவாவினை - நல்வினை.
ஊழ்
சிந்துபதி தந்தையடு தேர்சிசய னாலிறந்தான் இந்துதவழ் இஞ்சி இரங்கேசா - முந்திவரும் ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். | 38 |
சிந்துபதி - சயிந்தவன், தேர்விசயன் - அருச்சுனன், இஞ்சி - மதில், ஊழ் - விதி. பொருட்பால்அரசியல்
இறைமாட்சி
ஒன்றி மறித்தான் உரோணிசக டைச்செளரி என்றும் புகாமல் இரங்கேசா - நன்று முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும். | 39 |
ஒன்றி - சென்று, செளரி - சனிபகவான், முறை - செங்கோல், இறை - கடவுள்
கல்வி
மல்லல் வியாகரண மாருதிகற் கக்கருதி எல்லவன்பின் போந்தான் இரங்கேசா - நல்ல ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து. | 40 |
மல்லல் - பெரிய, எல்லவன் - சூரியன், ஒருமை - ஒரே பிறப்பு
கல்லாமை
ஞானசம் பந்தருடன் நன்றாய்ச் சமணரெதிர்த்து ஈனமுற்றார் அன்றோ இரங்கேசா - ஆன அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல். | 41 |
கோட்டிக்கொளல் - சபையிற்பேசுதல், ன அரங்கு - தகுதியான வகுப்பிடம்
கேள்வி
பாகவதங் கேட்டுப் பதிச்சித்தன் முத்திபெற்றான் ஏக வுருவாம் இரங்கேசா - சோக இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். | 42 |
இழுக்கல் - வழுக்குதல்.
அறிவுடைமை
சீதரனைப் பார்த்தனன்று சேர்ந்தான் அரவுயர்த்தோன் யாதவரைச் சேர்ந்தான் இரங்கேசா - ஒதில் அறியுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அ·தறி கல்லா தவர். | 43 |
சீதரன் - கண்ணன், அரவுயர்ந்தோன் - துரியோதனன் அறிகல்லாதவர் - அறியமாட்டாதவர்.
குற்றங் கடிதல்
கையரிந்தான் மாறன் கதடிவித்த குற்றத்தால் எய்யுஞ் சிலைக்கை இரங்கேசா - பையத் தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். | 44 |
மாறன் - பாண்டியன்
பெரியாரைத் துணைக்கோடல்
யோகமுனி ராகவனை யுற்றரக்கர் போர்களைந்தே யாகம் முடித்தான் இரங்கேசா - ஆகையால் தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில். | 45 |
யோகமுனி - விசுவாமித்திரர், தக்கார் - மேலோர், செற்றார் - பகைவர்.
சிற்றினஞ் சேராமை
துன்னு சகுனிகன்னன் சொற்கேட்டு அரவுயர்த்தோன் என்னபயன் பெற்றான் இரங்கேசா - மன்னிய சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். | 46 |
சிற்றினம் - அற்பர் உறவு
தெரிந்து செயல்வகை
விடமணன் வன்மம் விளம்ப இலங்கைநகர் ஈடழிந்த தன்றோ இரங்கேசா - கூடத் தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வவார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல். | 47 |
வீடணன் - விபீடணன், ஈடு - பெருமை, அரும்பொருள் - செய்வதற்கரிய பொருள்.
வலி அறிதல்
பைதல் எனக்கருதிப் பார்க்கவரா மன்சிலையடு எய்துவந் தோற்றான் இரங்கேசா - வையத்து உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முறிந்தார் பலர். | 48 |
பைதல் - சிறுபையன், ஊக்கி - போர்செய்து, இடைக்கண் முறிந்தார் - இடையில் தோற்றார்.
காலம் அறிதல்
ஆண்டு பதின்மூன்று அரவுயர்த்தோன் செய்தவெல்லாம் ஈண்டுபொறுத் தாண்டான் இரங்கேசா - வேண்டிய காலங்கருதி யிருப்பர் கலங்காது ஞாலங் கருது பவர். | 49 |
கலங்காது - தவறாது, ஈண்டு - இவ்வுலகம்.
இடனறிதல்
சார்ந்துபறை கீறிச் சாரசந்தன் தன்னுடலை ஈர்ந்துவென்றான் வீமன் இரங்கேசா - தேர்ந்தக்கால் எண்ணியார் எண்ணம் இழப்பார் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின். | 50 |
சார்ந்து - சென்று, பறை - பேரிகை, இடன் - தகுதி
தெரிந்து தெளிதல்
கன்னன் தெளிந்தாசான் காதலனை ஐயமுற்றான் இன்னாற் பொலிந்தான் இரங்கேசா - முன்னமே தேரான் தெளிபுந் தெளிந்தான்கண் ஐயுறவுந் தீரா இடும்பை தரும். | 51 |
சான்காதலன் - அசுவத்தாமன், இடும்பை - துன்பம்.
தெரிந்து விளையாடல்
சல்லியனைத் தேருக்குச் சாரதியாய்க் கொண்டதனால் எல்லாவன்சேய் தோற்றான் இரங்கேசா - சொல்லில் இதனை யிதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். | 52 |
எல்லவன் - கன்னன்.
சுற்றந்தழால்
வில்லுக் கதிபன் விரகினால் ஐவரர்க்கு இல்லுற்று உய்ந்தார் இரங்கேசா - நல்ல விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவுந் தரும். | 53 |
வில்லுக்கதிபன் - விதுரன், விரகு - முன்புத்தி.
பொச்சாவாமை
தண்ணார் சடைமுடியைத் தக்கனிழந் தானரனை எண்ணாமல் அன்றோ இரங்கேசா - மண்ணோர் இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. | 54 |
தண்ணார் - குளிர்ச்சி பொருந்திய, மைந்துறுதல் - இறுமாந்திருத்தல்.
செங்கோன்மை
கண்கொண்டான் பொன்னிக் கரைகட்ட வாரானை எண்கொண்ட சோழன் இரங்கேசா - மண்கொண்ட வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின். | 55 |
வாரானை - வாராத பிரதாபருத்திரனை, பொன்னிக்கரை - கங்கைக்கரை.
கொடுங்கோன்மை
தன்று புவிக்கிடும்பை சூழ்ந்து புரவேந்தர் இன்றி யெறிந்தார் இரங்கேசா - கன்றியே அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. | 56 |
தேய்க்கும்படை - குறைக்கும்வாள், கன்றி - மன்நொந்து.
வெருவந்த செய்யாமை
தாடகைதன் மைந்தர் தவமுனியை அச்சுறுத்தி ஈடரக்க ரானார் இரங்கேசா - நாடி வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும். | 57 |
வெருவந்த - அஞ்சும்படியான, ஒருவந்தம் - நிச்சயமாக.
கண்ணோட்டம்
சொல்லுகவென் றங்கதனைத் தூதேவி மாதைவிடல் இல்லையவன் என்றான் இரங்கேசா - மெல்ல ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை. | 58 |
ஒறுத்தாற்றல் - தண்டஞ் செய்தல்.
ஒற்றாடல்
மேகநா தன்செய்த வேள்விதனை ஒற்றினால் ஏகியழித் துய்ந்தார் இரங்கேசா - சேகரித்த ஒற்றினால் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்த தில். | 59 |
மேகநாதன் - இந்திரஜித்தன், ஒற்றினால் - ஏவலால்.
ஊக்கமுடைமை
வீசு புகழ்விசயன் விற்றமும்பு சென்னியின் மேல் ஈசன் தரித்தான் இரங்கேசா - ஆசையால் ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையான் உழை. | 60 |
அதர்வினாய் - வழிகேட்டுக்கொண்டு, உடையானுழை - உடையானிடம்.
மடியின்மை
துஞ்சுவிழிக் கும்பகன்னன் துண்டஞ் செவியிழந்தும் எஞ்சுதலை யுற்றான் இரங்கேசா - விஞ்சும் மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும். | 61 |
துண்டம் - மூக்கு, மடிமை - சோம்பல்
ஆள்வினை யுடைமை
செய்துசிவ பூசை சிரஞ்சீவி ஆமபயம் எய்தினன்மார்க் கண்டன் இரங்கேசா - நொய்தாக ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர். | 62 |
நொய்தாக - அற்பமாக, உஞற்றுபவர் - முயற்சிசெய்வபர்.
இடுக்கண் அழியாமை
விற்று மனையாளை வெட்டுதலும் உற்றதுயர் இற்றது மன்னற்கு இரங்கேசா - அற்றுலகில் இன்னாமை இன்பம் எனக்கொளின் குந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு. | 63 |
இற்றது - நீங்கிற்று, ஒன்னார் - பகைவர்.
அமைச்சியல்
அமைச்சு
மானவன்மால் தேவர் வனசரராம் மாதைவிடாய் ஈனமுறும் என்றான் இரங்கேசா - ஞானத்து அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன். | 64 |
மானவன் - இராமன், அறிகொன்று - சொன்ன நன்மையையும் அழித்து
சொல்வன்மை
சோழன் சிவாற்பரச்சொல் தோற்றமைதான் இந்தவுலகு எழும் அறிந்த இரங்கேசா - தாழாமல் சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. | 65 |
சோழன் - கிருமிகண்ட சோழன்.
வினைத் தூய்மை
தன்மகிணன் தோற்றாள் தாணிமுழு தூங்கைகை என்மகற்கு நல்கொன்று இரங்கேசா - நன்மை கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும். | 66 |
மகிணன் - கணவன், ஒருவுதல் - நீக்குதல், பீழை - துன்பம்.
வினைத்திட்பம்
ஆர்க்குங் கடல்நீர் அருந்த வொருகரத்தில் ஏற்க அடங்கிற்று இரங்கேசா - பார்க்கும் உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி யன்னார் உடைத்து. | 67 |
ஆர்க்கும் - ஒலிக்கின்ற, எள்ளாமை - இகழாமை.
வினை செயல்வகை
தொட்ட தெரிப்போன் சுடர்முடிமேல் அங்கைவைப்பித் திட்டவனைச் செற்றாய் இரங்கேசா - முட்ட வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று. | 68 |
தூது
அக்கன் முதலரக்கர் ஆவிதனை வாங்கியூர் எக்கியனுக்கு ஈந்தான் இரங்கேசா - மிக்க இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு உறுதி பயப்பதாந் தூது. | 69 |
அக்கன் - அஷகுமாரன்.
மன்னரைச் சேர்ந்தொழுகல்
அஷன் நிதியோற்கு அபசாரஞ் செய்ததனால் எஷன் பிரிந்தான் இரங்கேசா - பஷம் பழையம் எனக்கருதி பண்பல்ல செய்யுங் கெழுதகைமை கேடு தரும். | 70 |
அஷன் - இயக்கன்.
குறிப்பறிதல்
பார்வைகண் டிராமன் பரன்வில் ஒடித்தணங்கை ஏர்வையாக் கொண்டான் இரங்கேசா - நீர்மைபொடும் ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல். | 71 |
பரன் - சிவன், ஏர்வை - மனைவி.
அவை அறிதல்
தேவர் குழாத்தினிடைத் தென்பால் அகத்தியனை ஏவினிகர் என்றான் இரங்கேசா - பூவில் அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். | 72 |
தொகை - பொருள்.
அவை அஞ்சாமை
ஆன்றசங்கர் போற்றவொன்றை ஐயிரண்டா மானிலத்தார்க்கு ஈன்றவரிற் சொன்னார் இரங்கேசா - தோன்றவே சுற்றாருட் கற்றா ரெனப்படுவர் கற்றார் முன் கற்ற செலச்சொல்லுவார். | 73 |
செலச்சொல்லுவார் - எளிதில் அறியும் வண்ணம் சொல்லுவார்.
அங்க இயல்
நாடு
சீரிதாம் எண்ணமுற்ற தேசத்தில் தென்திருக்கா வேரிசூழ் சோணாடு இரங்கேசா - ஆரப்பெரும் பொருளாற் பெட்டக்கதாகி யருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. | 74 |
ஆர - நிறைந்திருப்பதனால், பெட்டக்கது - விரும்பத்தக்கது, ஆற்ற - மிக.
அரண்
சிந்துவிடை யேழுமதில் சேர்ந்த இலங்கைநகர் எந்தவகை போயது இரங்கேசா - முந்தும் எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்க்கண் நில்லா தரண். | 75 |
சிந்து - சமுத்திரம்.
பொருள் செயல்வகை
நட்டுவனாம் பற்குணன்றான் நாடாளக் கண்டுதிசை எட்டும் பணிந்தது இரங்கேசா - கிட்டுபொருள் இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாருஞ் செய்வர் சிறப்பு. | 76 |
படை மாட்சி
மொய்கொள் கடல்போலும் மூல பலமடிய எய்துவென்ற தோர்வில் இரங்கேசா - வையத்து ஒலித்தக்கால் என்னாம் உவரி யெலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும். | 77 |
மொய்கொள் - நெருங்கிய, உவரி - திரண்டு.
படைச் செருக்கு
மார்பத்து அழுந்துகணை வாங்கிவிடுத் தான்கரங்கள் சர்பத்தன் மைந்தன் இரங்கேசா - ஆர்வத்தால் கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். | 78 |
மெய்வேல் - மார்பில் தைத்திருந்த வேலாயுதம்
நட்பு
வாசவன் தஷன் மகம்புகா வாறுற்றான் ஈசன் அயன்போற்றும் இரங்கேசா - நேசன் அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு. | 79 |
மகம் - யாகம், ஆறு - நன்னெறி
நட்பாராய்தல்
தேசுபெறு மார்த்தாண்டன் செல்வன்முடி சூடியிலங் கேசனை வென்றான் இரங்கேசா - மாசில் குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்துங் கொளல்வேண்டும் நட்பு. | 80 |
மார்த்தாண்டன் - சூரியன்.
பழைமை
தானவர் வேந்தைச் சடாயு பொருதிறந்தான் என உருவாம் இரங்கேசா - மாநிலத்தில் எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்துந் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. | 81 |
தானவர் - அரக்கர், எல்லைக்கண் - நட்பின் வரம்பு.
நட்பு
மாயமா ரீசன் மடிந்தோன் கவுசிகன்றான் ஏயதவ முற்றான் இரங்கேசா - யதனால் பேதை பெருங்கெழீ நட்பின் அறிவுடையார் எதின்மை கோடி யுறும். | 82 |
ஏதின்மை - பகைமை, கெநீஇ - நெருங்கிய.
கூடாநட்பு
சார்ந்துதிதி கர்ப்பஞ் சதகிருதேழ் கண்டமா ஈர்ந்தனன் அன்றோ இரங்கேசா - சேர்ந்தார்போல் சொல் வணக்கம் ஒன்னார்கட் கொள்ளற்க வில்வணக்கந் தீங்கு குறித்தமை யான். | 83 |
ஒன்னார் - பகைவர், சதகிருது - தேவேந்திரன்
பேதைமை
மாதாபி தாவை மதியாத லேசிறையில் ஏதாக வைத்தான் இரங்கேசா - மேதினியில் ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை. | 84 |
ஆர - அனுபவிக்க, தமர் - சுற்றத்தார்.
புல்லறிவாண்மை
தாதை சிலையடிப்பத் தான்மொழிந்தான் தீதாக ஈதடையார் செய்யார் இரங்கேசா - ஒதில் அறிவிலார் தாந் தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்குஞ் செய்தல் அரிது. | 85 |
பீழை - வருத்தம்.
இகல்
சென்ன நிறத்தான் சுதனே அரும்பகையாய் இன்னுயிரைக் கொன்றான் இரங்கேசா - மன்னும் இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணுங் கேடு தரற்கு. | 86 |
சொன்ன நிறத்தான் - இரணியன், இகல் - பகைமை.
பகைமாட்சி
சித்திரசே னன்கையிற் சிக்கினான் மன்னவர்மன் இத்தரணி போற்றும் இரங்கேசா - சுத்த வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க் கினிது. | 87 |
மன்னவர்மன் - துரியோதனன், பண்பு - குணம்.
பகைத்திறந் தெரிதல்
தெவ்வை இளந்தையென்று செப்பியே விக்கிரமன் எவ்வமிக வுற்றான் இரங்கேசா - வவ்வி இளைதாக முண்மரங் கொல்க களையுர் கைகொல்லுங் காழ்த்த விடத்து. | 88 |
தெவ்வை - பகைவனாகிய சாலிவாகனனை, காழ்த்தல் - முதிர்தல்.
உட்பகை
இவ்வுலகை ஆளாது இராமனைக்கான் போக்கினான் எவ்வமனக் கூனி இரங்கேசா - அவ்வியஞ்சேர் எட்பகவு அன்ன சிறுமைத்தே யினும் உட்பகை யுள்ளதாங் கேடு. | 89 |
எவ்வம் - குற்றம், எட்பகவு - எள்ளின் பிளவு.
பெரியாரைப் பிழையாமை
சொல்வல் லகத்தியார்க்குச் சூழ்ச்சிசெய்த வாதாவி இல்லவனும் மாய்ந்தார் இரங்கேசா - மல்வல்ல கூற்றத்தை கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க் காற்றாதார் இன்னா செயல். | 90 |
மல்வல்ல - வருத்தவல்ல.
பெண்வழிச் சேரல்
சந்தநுவேந் தேழு தனையர் உயிரிழந்தான் இந்துநுதற் கங்கை இரங்கேசா - அந்தோ மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது. | 91 |
இந்து - சந்திரன்.
வரைவின் மகளிர்
தொண்ட ரடிப்பொடியைத் தோளிறுக வீக்குதலால் எண்டிசையும் போற்றும் இரங்கேசா - கண்டிருந்தும் தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள். | 92 |
வீக்குதல் - கட்டுதல், தகை செருக்கி - ஆடல் பாடல் என்பவைகளால் இறுமாந்து.
கள்ளுண்ணாமை
தக்கரு மைந்தனென்பு சார்ந்தமது வுண்டசுங்கன் எக்கருமஞ் செய்தான் இரங்கேசா - மிக்க கனித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். | 93 |
சுங்கன் - சுக்கிரபகவான்.
சூது
தன்மர் துரியோ தன்னுடன் சூதாடி இன்மையுற்றார் அன்றோ இரங்கேசா - நன்மைப் பொருள்கொடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கொடுத்து அல்லல் உழப்பிக்குஞ் சூது. | 94 |
தன்மர் - தருமராஜர், உழப்பிக்கும் - விளைவிக்கும்.
மருந்து
அம்பருடன் வேள்விநுகர்ந் தக்கினிக்கு மந்தமுற்ற தென்ப தறிந்தும் இரங்கேசா - தன்பசியின் தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும். | 95 |
படும் - உண்டாகும்.
ஒழிபியல்
குடிமை
தூடணமாம் ஐவருடன் துன்னுதலென் றேகன்னன் ஈடனையை நீத்தான் இரங்கேசா - நீட அடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர். | 96 |
மானம்
ஆகங் குறைந்துருவே றானான்இல் லாளைவிடுத் தேகிநள வேந்தன் இரங்கேசா - கையினால் குன்றின் அனையாருங் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின். | 97 |
பெருமை
மண்பரவு சக்கரத்தை மாலெடுப்ப வீட்டுமனார் எண்புகழாக் கொண்டார் இரங்கேசா - பண்பாற் பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை யுடைய செயல். | 98 |
மண்பரவு - உலகம் புகழும்.
சான்றாண்மை
புத்தனெறி கற்கும் புராரி பதமளித்தான் இத்தரணி போற்றும் இரங்கேசா - மெத்தவே இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு. | 99 |
சால்பு - சான்றாண்மை
பண்புடைமை
துன்பமுறுந் தங்கையெனச் சொல்லி யுதிட்டிரனார் இன்பமுற்றார் அன்றோ இரங்கேசா - அன்பின் நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு. | 100 |
பாடறிதல் - பிறரியல்பு அறிந்து நடத்தல்.
நன்றியில் செல்வம்
செப்பும் இருநிதிகள் சேர்ந்துங் குபேரனுக்கு எப்பொருளால் என்னாம் இரங்கேசா - கைப்பொருள் அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று. | 101 |
ஆற்றாதான் - கொடாதவன், தமியன் - தனியன்.
நாணுடைமை
வாவி புகுந்த மகிபன் தனதுயிரை ஈவதற்குப் போந்தான் இரங்கேசா - ஆவதனால் நாணால் உயிரைத் துறப்பார் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாணாள் பவர். | 102 |
குடிசெயல் வகை
அன்னை அடிமைக்கு அமுதுகொணர்ந் தெள்ளலுடன் இன்னல் துடைத்தான் இரங்கேசா - உன்னுங்கால் நல்லாண்மை யென்பது ஒருவற்குத் தான் பிறந்த இல்லாண்மை யாக்கிக் கொளல். | 103 |
அமுது - தேவாமிர்தம்
உழவு
வன்பா ரதத்தலங்கை வைத்தார்க் கெதிரில்லை என்பார் அதனால் இரங்கேசா - முன்பார் உழுவார் உலகத்தார்க் காணி ய·தாற்றாது எழுவாரை யெல்லாம் பொறுத்து. | 104 |
அலம் - கலப்பை, எழுவார் - வேறு தொழில் செய்பவர்.
நல்குரவு
காவலனாம் பாஞ்சாலன் கண்டு துரோணரைநீர் ஏவரென்றான் அன்றோ இரங்கேசா - தாவில் அறஞ்சாரா நல்குரவு ஈன்றதாயானும் பிறன்போல நோக்கப் படும். | 105 |
அறஞ்சாரா - அறம் பொருந்தாத.
இரவு
அங்கியும்பர் கோன்பா வருந்தநினைந் தர்ச்சுனன்பால் இங்கிதமாப் பெற்றான் இரங்கேசா - மங்காது இரத்தலும் ஈதலே போலுங் கரத்தல் கனவிலுந் தேற்றாதார் மாட்டு. | 106 |
அங்கி - அக்கினிபகவான், கரத்தல் - மறைத்தல், தோற்றாதார் - நினையாதவர்.
இரவச்சம்
சென்று பலிபக்கல் செங்கைவிரித் தேற்றல்பழு தென்றுகுன்றி நின்றாய் இரங்கேசா - நன்றிதரும் ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்கு இரவி னிளிவந்த தில். | 107 |
இளிவு - இழிவான செய்கை.
கயமை
தேனிருந்த சொல்லாளைத் தேர்வேந்தர் காணவுடை ஏனுரிந்தான் மேனாள் இரங்கேசா - ஆனதனால் நன்றிறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத்து அவலம் இவர். | 108 |
கயவர் - இழிந்தவர், அவலம் - கவலை.
--------- காமத்துப் பால் களவியல் (ண்பாற் கிளவிகள்)
தகையணங் குறுத்தல்
சுந்தர மாமகலி தோள்தோய்ந்து பத்துநூ றிந்திரன்கண் பெற்றான் இரங்கேசா - இந்துமுறி ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு. | 109 |
ஞாட்பு - போர்.
குறிப்பறிதல்
மேதை விலோசனமும் மேவும் இணைநோக்கும் ஏது கலவிக்கும் இரங்கேசா - ஆதலால் கண்ணோடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்னு பயனு மில. | 110 |
மேதை விலோசனம் - குறிப்பறிவுள்ள கண்கள்.
புணர்ச்சி மகிழ்தல்.
உம்பரிற் றுன்முகனார் உள்ளகங்கை தோள்தோய இம்பர்வந்தார் அன்றோ இரங்கேசா - அன்பாகத் தாம்வீழ்வார் மென்றோட் டுயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. | 111 |
இம்பர் - இவ்வுலகம், வீழ்வார் - விரும்பும் மகளிர்.
நலம்புனைந் துரைத்தல்
ஒண்கயற்கண் பாரதியை ஓது மறைநாவில் எண்கண்ணன் வைத்தான் இரங்கேசா - பண்பில் அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம். | 112 |
காதர் சிறப்புரைத்தல்
சேர்ந்து திருமகளைத் தெள்ளமுதை யும்பருக்கே ஈந்த வுதாரம் இரங்கேசா - தேர்ந்தக்கால் பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர். | 113 |
தெள்ளமுது - தேவர்மிர்தம், வால் வயிறு - மெண்மையான பற்கள்.
நாணுத் துறவுரைத்தல்
சீசகன்பாஞ் சாலியின்மேல் கேவலமால் கொண்டுயிர்தோற் றேசுதலை யுற்றான் இரங்கேசா - ஆசையெனும் காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு நல்லாண்மை யென்னும் புணை. | 114 |
அலரறிவுறுத்தல்
நீந்துகடன் மூழ்கி நெடுநாட் கெள தமனார் ஏந்த கலி தோய்ந்தார், இரங்கேசா -மாந்தி களித்தொறுந் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம் வெளிப்படுந் தோறும் இனிது. | 115 |
தோய்ந்தார் - மணஞ்செய்து கொண்டார், களித்தொறும் - களிக்குந்தோறும்.
கற்பியல் (பெண்பாற் கிளவிகள்)
பிரிவாற்றாமை
தன்பதியின் செல்வகையினால் தாவில்நதி யாயினாள் என்பர் கவுசி இரங்கேசா - அன்பினாற் செல்லாமை யுண்டேல எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை. | 116 |
செல்கை - பிரிவாற்றாமை, தாவில் - அழிவில்லாத.
படர்மெலிந் திரங்கல்
குன்றெடுத்தான் மார்புகுடி கொண்டிருந்தாள் செங்கமலை என்றும் பிரியாது இரங்கேசா - நன்றிகூர் இன்பங் கடன்மற்றுக் காமம் அ·தடுங்கால் துன்பம் அதனிற் பெரிது. | 117 |
செங்கமலை - திருமகள்.
சண்விதுப் பழிதல்
காதல் அருச்சுனனைக் கண்டூர் வசியடைந்த தேதமன்றோ மேனாள் இரங்கேசா - ஒதில் கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்க துடைத்து. | 118 |
கலுழ்தல் - அழுதல்.
பசப்புறு பருவரல்
மன்னு மகலிகல் லாய் மாநிலத்தி லேகிடந்தாள் என்னுமொழி கேட்டாய் இரங்கேசா - துன்னப் பசந்தாள் இரளென்ப தல்லால் இவளைத் துறந்தார் அவரென்பா ரில். | 119 |
தனிப்படர் மிகுதி
தக்கசுவா காவைத் தருமன் விழுங்கவவள் எக்கியனை யுண்டாள் இரங்கேசா - மிக்க ஒருதலையான் இன்னாது காமங்காப் போல இருதலை யானும் இனிது. | 120 |
சுவாகா - சுவாகா வென்னுங் கன்னிகை, எக்கியன் - அக்கினி பகவான், கா - காவடி.
நினைந்தவர் புலம்பல்
சுந்தோப சுந்தரிகல் சூழ்ந்து பொருதிறந்த தெந்தவகை மேனாள் இரங்கேசா - சிந்தையால் உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலாற் கள்ளினுங் காமம் இனிது. | 121 |
கனவுநிலை யுரைததல்
செய்தவஞ்சேர் வாணனது செல்வி கனாநிலையில் எய்தினான் அன்றோ இரங்கேசா - பைய நனவினான் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் னுயிர். | 122 |
நல்காதவர் - இன்பந் தராதவர்.
பொழுதுகண் டிரங்கல்
காக்கும் பதியகலக் காட்டிற் சலர்க்காரி ஏக்கமுற்றாள் அன்றோ இரங்கேசா - நோக்கில் பனியரும்பிப் பைதல்கொண் மாலை துனியரும்பித் துன்பம் வளர வரும். | 123 |
உறுப்பு நலனழிதல்
மங்கையுமை யோர்பங்கு வாங்கி மகிணன் பால் இங்கித முற்றாள் இரங்கேசா - செங்கை முயக்கிடைத் தண்வளி போழப் பயப்புற்ற பேதை பெருமழைக் கண் | 124 |
முயக்கிடை - தன்னைத் தழுவியபோது.
நெஞ்சொடு கிளத்தல்
முன்னமிர திக்கு மொழிந்த பதிதந்த தின்னலம் அன்றோ இரங்கேசா - துன்ன நினைந்தொன்று சொல்வாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து. | 125 |
நிறை அழிதல்
பின்னைக் கினியமொழி பேசிவென்ற மாயவன்போல் என்னைத் தொண்டாளும் இரங்கேசா - முன்னின்ற பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம் பெண்மை யுடைக்கும் படை. | 126 |
பின்னை - நப்பின்னைப் பிராட்டியாகிய சத்தியபாமை, பெண்மை - பெண்புத்தி, படை - ஆயுதம்.
அவர்வயின் விதும்பல்
வஞ்சி உருகுமணி மாமால் வருவழிபார்த் தெஞ்சுமுளம் போலும் இரங்கேசா - பஞ்சணையிற் கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகோ டேறுமென் னெஞ்சு. | 127 |
மாமால் - ஸ்ரீகிருஷ்ணன், கோடுகோடு - வழிகள் தோறும்.
அன்பியல்
குறிப்பறிவுறுத்தல்
செட்டிவள்ளி யம்மைச் சிறுமுறுவல் கண்டுளத்தின் இட்டம் அறிந்தான் இரங்கேசா - மட்டார் முகைமொக்குள் உள்ளது நாற்றம்போற் பேதை நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு | 128 |
மட்டு - தேன், நகைமொக்குள் - புன்முறுவல்.
|