"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > மகாவித்வான் ரா. இராகவையங்காரின் கவிச்சக்ரவர்த்தி கம்பர் > Kamba Ramayanam - கம்பராமாயணம்
கவிச்சக்ரவர்த்தி கம்பர்
மகாவித்வான் ரா. இராகவையங்கார்
(சேது சமஸ்தான வித்வான் & அண்ணாமலைப் பல்கலைக்கழக
முன்னாள் தலைமைத் தமிழாராய்ச்சியாளர்)
kaviccakravarti kampar
by R. Raghava Iyengar
Acknowledgements:Our Sincere thanks go to Prof. R. Vijayaraghavan and family (grandson of Mahavidwan Raghava Iyengar) for giving us permission to reproduce the electronic version of this work as part of Project Madurai collections. Our thanks also go to Ms. Deepta Thattai of Columbia, SC, USA for the preparation of etext of this work © Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the websitehttp://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
கவிச்சக்ரவர்த்தி கம்பர்
'கல்வியிற் பெரியர்' என்றும், 'கவிச்சக்ரவர்த்தி' என்றும் நல்லியற்புலவரெல்லாம் மனமொத்து வாயாரப் புகழும் பெருமாண்புடைய அருமைக் கம்பரின் பெருமைச் சிறப்பு முழுதும், இத்தமிழுலகம் நன்றறிந்து நாளும் பாராட்டுவதேயாம். இக்கவியரசர் வரலாறு, காலம் முதலியன இக்காலத்து, ஒன்றோடொன்றொவ்வாப் பல்வேறு வகையால் வழங்கப்படுகின்றன.சிறிது பழைய தமிழ் நூல்களையே பெருங்கருவியாகக் கொண்டு நோக்கின், அவற்றதுண்மை இன்னதென்று துணியலாகும். இவ்வாராய்ச்சிக்குப் பெருண்துணையாகக் காண்பன:- தமிழ் நாவலர் சரிதை, தொண்டைமண்டல சதகம், சோழமண்டல சதகம், பாண்டிமண்டல சதகம் என்பனவும், பிறவுமாம். இவற்றுள் கண்ட சில பாடல்களையும் அடிகளையும் ஈண்டு எடுத்தோதி விளக்குதலானே, இத்தெய்வப்புலவரது வரலாறு ஒருவாறு நண்குணரலாகும். இவற்றில் சில கற்பனை வரலாறுகளும் இருக்க வாய்ப்பு உண்டு.
இவர் ஊர்
திருவழுந்தூர்த் தாதியை, சோழன், எந்த ஊர் என்று கேட்ட போது பாடியது,கம்பன் பிறந்தவூர் காவேரி தங்குமூர்
கும்பமுனி சாயங் குலைந்தவூர் - செம்பதுமத்
தாதகத்து நான்முகனுந் தாதையுந்தே டிக்காணா
வோ தகத்தார் வாழுமழுந் தூர்.
(தமிழ் நாவலர் சரிதை)
இவர் குலம்
நாரணன் விளையாட் டெல்லா நாரத முனிவன் சொல்ல
வாரணக் கவிதைசெய்தா னறிந்துவான் மீகியென்பான்
சீரணி சோழநாட்டுத் திருவழுந் தூருவச்சன்(1)
(2)காரணி கொடையான் கம்பன் றமிழினாற் கவிதை செய்தான்.
(இராமாவதாரப் பாயிரம்.)
இப்பாட்டில் 'உவச்சன்' என்பதற்கியைய, வாணியன் தாதன் என்பான் இக்கம்பரைப் பாடிய வசைப்பாட்டின்கண், "கைம்மணிச் சீரன்றிச் சீரறி யாக்கம்ப நாடன்" (தமிழ் நாவலர் சரிதை) என வருதல் காண்க. கைம்மணிச் சீர் - கையின் மணியோசை. உவச்சர் என்பார் காளிகோயில் முதலியவற்றிற் பூசைபுரியும் வகுப்பினராதலால், அவர்க்குக் கையால் மணியொலிப்பித்தலுந் தொழிலாம்.
இவர் வளர்ந்து கல்வி பயின்று சிறந்தவாறு
பெற்றுவளர்த்தும் வித்தைதனைப் பேணிக்கொடுத்தும் பெயா கொடுத்தும்
பற்றவரும்பா லமுதளித்தும் பகைத்தவறுமைப் பயந் தீர்ந்துங்
கற்றமுதனூற் றிருவழுந்தூர்க் கம்பன்றழையக் கருணை செய்தோர்
மற்றும்புலவோ ரையும்வாழ வைத்தார் சோழ மண்டலமே.
(சோழமண்டல சதகம்.)
இங்ஙனம் கம்பரை வளர்த்துச் சிறப்பித்தவன் வெண்ணெய் நல்லூர்ச் சடையன் என்பான். இதனை மேல்வருஞ் செய்யுளானும் உணர்க.
கம்பர், தெய்வ வரத்தினாற் கவி சொல்லிய நாளிற் பாடிய வெண்பா:
மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றென்று
வீட்டளவும் பால்சொரியும் வெண்ணெயே - நாட்டி
லடையா நெடுங்கதவு மஞ்சலென்ற சொல்லு
முடையான் சரராமனூர் (தமிழ் நாவலர் சரிதை)
சரராமன் என்பது வெண்ணெய்நல்லூர்ச் சடையற்க்கு ஒரு பெயர். "மழையென், றாசங்கை கொண்ட கொடை மீளியண்ணல் சரராமன் வெண்ணெய்," (நாகபாசப் படலம்) என இவர் இராமாவதாரத்து வழங்குதலானுமுணர்க.
இவர் ஏரெழுபது பாடி அரங்கேற்றியது
குணங்கொள் சடையன் புதுச்சேரிக் கொடையன் சேதிராயன் முதற்
கணங்கொள் பெரியோர் பலர்கூடிக் கம்பநாடன் களிகூற
விணங்கும்பரிசி லீந்துபுலி யேழும்புகழே ரெழுபதெனு
மணங்கொள் பெருங்காப் பியப்பனுவல் வகித்தார் சோழ மண்டலமே
(சோழமண்டல சதகம்.)
சடையனாகிய புதுச்சேரிக் கொடையன் என்க, சேதிராயனும் புதுவை ஊராதல் பற்றிப் புதுச்சேரிக் கொடையனாகிய சேதிராயன் எனினுமமையும், சடையன், சேதிராயன் முதலிய பெரியோர் நிறைந்த அவையியற்றான் இவர் ஏரெழுபது அரங்கேற்றியது.
இப்பாட்டின்கண் 'குணங்கொள் சடையன்' எனப்பட்ட மேற்கூறிய வெண்ணெய்ச் சரராமனாவன். புதுவை, புதுச்சேரி என்று வழங்குகின்ற ஊரும் இவனதாதல் பற்றி இவனையே 'புதுச்சேரிக் கொடையன்' எனவும், 'புதுவைச் சடையன்' எனவும் வழங்குபவர் எனத் தெரிகின்றது. இவனைப் 'புதுவைத் திரிகர்த்தன்' 'வெண்ணெய்த் திரிகர்த்தன்' என வழங்குதலுமுண்டு. இவன், மூவேந்தர்க்கும் அவர் பரிசனங்கட்கும் ஒருகாற் பெருவிருந்தளித்து, அவரால் திரிகர்த்தராயன் எனச் சிறப்புப் பெயர் சூட்டப்பெற்றான் என்பர். இவர் சோணாட்டில் மிகப்பெரிய காணிவளமுடையனாயிருந்தனனெனவும், நாளும் பல்லாயிரவர்க்குப் பாலுஞ்சோறும் பரிந்தளித்தனனெனவும், சிங்களமாண்ட பரராசசிங்கப் பெருமான் என்னுமரசன், ஈழநாடு பஞ்சம் பட்டபோது இவ்வள்ளலைப் பாட, இவன் ஆயிரங்கப்பலில் நெல்நிறைத்துக் கொண்டுபோய்க் கொடுத்து அவன் நாடு முற்றும் பாதுகாத்துச் சிறந்தனனெனவும் சொல்லுவர்.இவன் சங்கரன் என்பவர்க்குப் புதல்வனென்பதும், இணையாரமார்பன் என்பவனைத் தம்பியாக உடையவனென்பதும், பெரும்பாலும் திருவெண்ணெய் நல்லூரையே தனது பெருங்குடிக் கிருக்கையாகக் கொண்டவனென்பதும், கல்வியில் சிறந்தானென்பதும் தெரிகின்றன. சிறுபான்மை, இவனைப் புதுவைச் சடையன் என வழங்குவது, அதன்கண் இவன் தந்தையாகிய சங்கரன் வதிந்த சிறப்புப் பற்றியும், அவ்வூர் இவனுக்குச் சிறந்த கடற்றுறைப் பட்டினமாதல் பற்றியும் ஆகும். இவன் வியலூர் என்னும்மிடத்துமிருந்தனனென்ப. புதுவையும் வெண்ணெயும் வியலூரும் தூரவூர்களல்லாமை உணர்ந்து கொள்க. இவன் தந்தையாகிய சங்கரனுக்கு ஒட்டக்கூத்தர் முதலில் உதவித்தொழில் புரிந்து கொண்டிருந்தனரெனவும், அவரை, அப்புதுவைக்கணிருந்த காங்கேயன் என்னும் உபகாரியொருவன் கல்விபயிலுவித்து நல்லறிஞராக்கிக் கவிராக்ஷசன் எனவும், கெளடப் புலவன் எனவும், பெயர் சிறப்பித்து உயரச் செய்தானெனவும், அந்நன்றி பாராட்டி அக்கூத்தர் காங்கேயன் மேல் 'நாலாயிரக் கோவை'யொன்று பாடினாரெனவும் அறியலாவன, "கெளடம்" என்பது ஒருவகைக் கவிமார்க்கம்.
அது, பொருள் புலப்படத் தொடுப்பதிலும் சொல்வளம்படத் தொடுப்பதே சிறப்பெனக் கருதுவோம். 'இடுக்கட்புண்படு' 'பத்துக் கொண்டன' 'விக்காவுக்கு' என்பது முதலாக வரும் இக்கூத்தர் பாடல்கள், அக்கெளட நெறியே என்றதாதலுணர்க. ஒட்டக்கூத்தர், சடையன்றந்தையாகிய சங்கரனுக்கு உதவித்தொழில் புரிந்துகொண்டிருந்தனரெனவும், கம்பர் அச்சடையனால் வளர்த்துச் சிறப்பிக்கப்பட்டனரெனவும் தெரிதலால் கம்பர் கூத்தருக்கு இளையராவரென உய்த்துணரப்படுகின்றது. மற்றுமிச் சடையனைப் பற்றியன ஆங்காங்குக் கூறப்படும். பின்னர்க் கண்டுகொள்க.
இனி, புதுவைச் சடையனும், வெண்ணெய்ச்சடையனும் வேறு வேறாவரெனக் கூறின், இருவரும் 'திரிகர்த்தன்' எனச் சிறப்புப் பெயர் புனையப் பெற்றனரெனவும், இருவரும் நாளும் பல்லாயிரவர்க்குப் பசியாற்றும் வண்மையும் வளப்பமுமுடையராயிருந்தனரெனவும், இவ்விருவரும் கல்வியிற் பெரிய கம்பரைப் போற்றினரெனவும், "புதுவைச் சடையனிருந்த வியலூர்" என்று பாடப்பெற்ற வியலூர், வெண்ணெய்நல்லூர்க்கு மிக அணித்தாதலால், அவ்விருவரும் நெருங்கி வதிந்தனரெனவும் கொள்ள நேரும். அங்ஙனம் திரிகர்த்தனென்னும் பட்டம் அக்காலத்து இருவர்க்குச் சூட்டியமை அறியப்படாமையாலும், புதுவையானொருவனே திரிகர்த்தனே பட்டம் பெற்றானாக வெண்ணெய்த்திரிகர்த்தன் எனவும் வழங்குதலறியப்படுதலாலும், திரிகர்த்தனென்னுஞ் சிறப்புடையானொருவனே வெண்ணெயும் புதுவையுமுடையனாயினான் எனக் கருதுதலே இயைபுடைத்தாமென்பது உணரத்தக்கது. அன்றியும், ஊரன்றி மற்றைவளமுங் குணமும் வண்மையும் பெயரும், கம்பரால் புகழப்படுஞ் சீருஞ்சிறப்புமென்னுமிவற்றில் எவ்வகை வேற்றுமையும் அறியப்படாமை காண்க. இவற்றுக்கெல்லாம் செய்யுள் வருமாறு; --
சோழமண்டல சதகப் பாடல்கள்
அளிக்கும்படைமூ வேந்தருங்கொண் டாடும்விருந்தா லதிசயமாய்த்
திளிக்குந் திரிகர்த் தராயனெனச் செப்பும்வரிசைத் திறஞ்சேர்ந்தோன்
விளைக்குமரிசி மாற்றியநீர் வெள்ளங்கிழக்கு விளையுமென
வளைக்குப் பெருமைப் புதுவையர்கோன் வளஞ்சேர் சோழமண்டலமே.
(சோழமண்டல சதகம்.)
[மேற்கோள்]
புரந்தர தாரு புதுவைச் சடையன்
னிருந்தவிய லூர்தெற்கு மேற்கு - பரந்த பொன்னி
யாற்றுநீ ரால்விளையு மப்பாற் கிழக்கரிசி
மாற்றுநீ ரால்விளையு மாம்.
யாமார் புகழ வியற்கம்ப நாட னிராமரொடும்
பாமாலை சூட்டுங் குலமுடை யானைப் படிபுரக்கக்
கோமாற னிட்டபொற்சிங்கா தனம் பெற்ற கொற்றவனைத்
தேமாலை யச்சந் தவிர்ப்பான் வெண்ணெய்த்திரிகர்த்தனையே.
தண்ணார் கமலச் சதுமுகத் தோனையும் தப்புவதோ
பண்ணா மணித்தலைக் கட்செவி யானது பாரிலுள்ளே
கண்ணாக வாழும் வெண்ணெய்த்திரி கர்த்தன் கலைத்தமிழ்கேட்
டெண்ணா முடியசைத் தாலுல கேழுமிறக்கு மன்றே.
எட்டுத் திசையும் பரந்த நிலா வெறிக்குங்கீர்த்தியேருழவர்
சட்டப்படுஞ்சீர் வெண்ணெய்நல்லூர்ச் சடையன் கெடிலன் சரிதமெலா
மொட்டிப்புகழ வாயிநா வுடையார்க்கன்றி யொருநாவின்
மட்டுப்படுமோ வவன்காணி வளஞ்சேர் சோழ மண்டலமே.
தேனார்தொடையார் பரராச சிங்கப்பெருமான் செழுந்தமிழ்க்குக்
கானார்நெல்லின் மலைகோடி கண்டிநாடு கரைசேரக்
கூனார்கப்ப லாயிரத்திற் கொடுபோயளித்த கொடைத் தடக்கை
மானாகரன் சங்கரன் சடையன் வளஞ்சேர் சோழ மண்டலமே.
[மேற்கோள்]
இரவுநண்பக லாகிலென்பக லிருளறாவிர வாகிலெ
னிரவியெண்டிசை மாறிலென்கட லேழுமேறிலென் வற்றிலென்
மரபுதங்கிய முறைமைபேணிய மன்னர்போகிலெனாகிலென்
வளமையின்புறு சோழமண்டல வாழ்க்கை காரணமாகவே
கருதுசெம்பொனி னம்யலத்திலோர் கடவுணின்று நடிக்குமே
காவிரித்திரு நதியிலேயொரு கருணைமாமுகி றுயிலுமே
தருவுயர்ந்திடு புதுவையம்பதி தங்குமன்னிய சேகரன்
சங்கரன்றரு சடையனென்றொரு தருமதேவதை வாழவே.
இது பரராசசிங்கப்பெருமான் சடையனுக்கு எழுதி விடுத்த செய்யுளாயினுமாம்.
கம்பர் காவிரி எச்சிற்படப் பாடிய வெண்பா
மெய்கழுவி வந்து விருந்துண்டு மீளுமவர்
கைகழுவ நீர்போதுங் காவிரியே பொய்கழுவும்
போர்வேள் சடையன் புதுவையான் றன்புகழை
யார்போற்ற வல்லா ரறிந்து. (தமிழ் நாவலர் சரிதை)
விருந்துநுகர்வோர் கைகழுவ விளங்கும்புனற்கா விரியென்றார்
தருந்தாயனைய புகழ்ப்பதுவைச் சடையன்கொடையார் சாற்றவல்லார்
பரிந்தாரெவர்க்கு மெப்போதும் பாலுஞ்சோறும் பசிதீர
வருந்தாதளிக்க வல்லதன்றோ வளஞ்சேர்சோழ மண்டலமே.
இவற்றால் இவன் நாளும் பல்லாயிரவர்க்குணவளித்தது உணரப்படும்.
கோலாகலமன் னரிலவன்போற் கொடுத்தேபுகழுங் கொண்டாரார்
மேலார்கவுடப் புலவனெனும் விழுப்பேர்க்கூத்தன் முழுப்பேரா
னாலாயிரக்கோ வையம்புனைய நவில்கென்றிசைத்து நாட்டுபுகழ்
மாலாமெனுங்காங் கயன்வாழ்வு வளஞ்சேர்சோழ மண்டலமே. (சோழமண்டல சதகம்.)
[மேற்கோள்]
புதுவைச் சடையன் பொருந்து சங்கரனுக்
குதவித் தொழில்புரி யொட்டக் கூத்தனைக்
கவிக்களி றுகைக்குங் கவிராட்சதனெனப்
புவிக்குயர் கவுடப் புலவனு மாக்கி
வேறுமங் கலநாள் வியந்துகாங் கயன்மேற்
கூறுநாலாயிரக்கோவைகொண் டுயர்ந்தோன்.
இனிச் சேதிராயனென்பான் புதுவையின்கணிருந்த ஓர் உபகாரி. இவன் 'கம்பர் வேளாளரைச் சிறப்பித்துப்பாடிய ஏரெழுபது' என்னும் நூலைச் சடையனுடனிருந்து கேட்டவன். கம்பர் ஏரெழுபது அரங்கேற்றும்போது இச்சேதிராயனை விடந்தீண்டிற்றாகவும் அதனாலரங்கேற்றம் இடையறவு படலாகாது என்னுங்கருத்தாற் சேதிராயன் தனக்கு நிகழ்ந்ததனைப் பிறர்க்குறையாது மறைத்து அவையத்திருந்து நூல்கேட்க, விடந்தலைக்கேறுதலால் மயங்கி வீழ்ந்தனன். அவ்வளவில் ஆங்குக்கூடிய பெரியார் பலரும் உடற்குறியால் விடமென்று கண்டு வருந்தாநிற்கையிற் கம்பர் தமதருமைத் தெய்வவாக்கினாற் சிலவெண்பாக்கள் பாடி விடத்தையேறியபண்பே யிறக்கி அவனை உயிர்ப்பித்தார் என்ப. இச்சேதிராயனுக்குத் தொண்டைநாட்டிலுங் காணிவளமுண்டு. இவற்றிர்குச் செய்யுள்:
அழுவதுங் கொண்டு புலம்பாது நஞ்சுண் டதுமறைத்தே
ரெழுபதுங் கொண்டு புகழ்க்கம்ப வாணனெழுப்பவிசை
முழுவதுங் கொண்டொரு சொற்பேச நெய்யின் முழுகிக்கையின்
மழுவதுங் கொண்டு புகழ்கொண்ட தாற்றொண்டை மண்டலமே.
(தொண்டைமண்டல சதகம்.)
"..............................பாவலர்தா
மேரெழுப தோதியரங் கேற்றுங் களரியிலே
காரிவிட நாகங் கடிக்குங்கை." (திருக்கைவழக்கம்)
கம்பர் ஏரெழுபது பாடி அரங்கேற்றும்போது
புதுவைச் சேதிராயனை
விடந்தீண்டத் தீர்த்த வெண்பா
ஆழியான் பள்ளி யணையே யவன்கடைந்த
வாழி வரையின் மணித்தாம்பே - பூழியான்
பூணே புரமெரித்த பொற்சிலையிற் பூட்டுகின்ற
நாணே யகல நட.
மங்கை யொருபாகர் மார்பிலணி யாரமே
பொங்கு கடல்கடைந்த பொற்கயிறே - திங்களையுஞ்
சீறியதன் மேலூருந் தெய்வத் திருநாணே
யேறிய பண்பேயிறங்கு. (தமிழ் நாவலர் சரிதை)
இவர் வல்லியை விழைந்தது
இவர் ஒருகால் தொண்டைநாட்டுள்ள திருவொற்றியூருக்குச் சென்றபோது, அங்குச் சதுரானன பண்டிதன் மடத்திருந்த வல்லி எனப்பெயரிய கணிகையொருத்தியை விழைந்து, பலகாலம் அவளுடன் அங்கே தங்கி மகிழ்ந்து அவளுக்கு எருமைகள் வாங்கி வரப் புழற்கோட்டம்புக்குக் காளிம்பன் என்னும் நிரைமேய்ப்பானொருவனைக் கண்டு பாட, அவன் ஈன்ற எருமைகள் ஆயிரம் (பல) கொடுக்கப் பெற்று, அவற்றையெல்லாம் வல்லிபாலுய்த்துப், பின் அவளுக்கு அணி பலவியற்றித் தருதற்குத் திருமயிலைபோய் ஆண்டுத்திருவாலி என்னும் தட்டான் ஒருவனைப்பாடி அணியெல்லாம் இயற்றுவித்துக்கொண்டு மீண்டு அவளுக்கு அணிவித்து, இன்னவாறு அவளுக்கு வேண்டுவன பலவும் உதவிவந்தனர். அவள் இவர்பாற் பாராட்டிய பேரன்பினாற் பின் அவளைப் பிரியலாற்றாது உடன்கொண்டு சோணாடுபுக்கு ஆங்கும் அவளுடன் இனிது களித்தனர் என்ப. அக்காலத்து ஆங்கு வல்லியிருந்தவீட்டினை மழையால் நனையாமற், கம்பருக்கு ஆருயிர்த் துணைவனான சடையவள்ளல் ஓரிரவிற்குள் நெற்கதிராலே வேய்ந்து இனிது புரிந்தனன் என்ப. இவற்றிர்குச் செய்யுள் வருமாறு:
திருவொற்றியூர் வல்லியைக் கண்டு சொல்லியது
இல்லென்பார் தாமவரை யாமவர்தம் பேரறியோம்
பல்லென்று செவ்வாம்பன் முல்லையையும் பாரித்துக்
கொல்லென்று காமனையுங் கண்காட்டிக் கோபுரக்கீழ்
நில்லேன்று போனாரென் னெஞ்சைவிட்டுப் போகாரே.
(தமிழ் நாவலர் சரிதை)
நடக்கிலன்னமா நிற்கினல் வஞ்சியாங்
கிடக்கி லோவியப் பாவை கிடந்ததாந்
தடக்கை யான்சது ரானன பண்டிதன்
மடத்து ளாளென் மனத்துறை வல்லியே. (க்ஷெ)
கம்பருக்குக் காளிம்பன் ஈன்ற எருமை
ஆயிரம் கொடுத்த வெண்பா
புக்கு விடைதழுவிக் கோடுழுத புண்ணெல்லாந்
திக்கிலுயர் காளிம்பன் றென்புழன்மா - னக்கணமே
தோள்வேது கொண்டிலனேற் சுந்தரப்பொற் றோன்றலுக்கு
வாழ்வேது கண்டிலமே மற்று. (தமிழ் நாவலர் சரிதை)
கம்பர் திருவாலிமேற் பாடிய வெண்பா
அண்ணறிரு வாலி யணிமயிலை யத்தனையும்
வெண்ணிலவின் சோதி விரித்ததே - நண்ணுந்
தடந்துப்பு விற்பாணந் தன்முகத்தே கொண்டு
நடந்துப்பு விற்பா ணகை. (க்ஷெ)
தனதானியத்தி லுயர்ந்தோர்க டாமேயென்னுந் தருக்கேயோ
வினவாதிரவி னெற்கதிரான் வேய்ந்தாரவல்லி வீடதல்லாற்
கனிசேர்தமிழ்க்குப் பன்னிரண்டு கடகயானைக் காடளித்த
மனைவாழ்வுடையான் வெண்ணெய்நல்லூர் வாழ்வான் சோழமண்டலமே.
(சோழமண்டல சதகம்.)
[மேற்கோள்]
பொதுமாதர் வீட்டைப் புகழ்பெற வேனெற்
கதிரானே வேய்ந்தருளுங் கங்கைப் - பதிநேர்
வருவெண்ணெய் நாடன் வருநா வலர்க்குத்
தருவா னவன்சடையன் றான்.
கம்பர் குரும்பை என்னுந் தாதிபாற்
சொல்லிய கலித்துறை
சொல்லியைச் சொல்லி னமுதான செல்லியைச் சொற்கரும்பு
வில்லியை மோக விடாய்தவிர்ப் பாளை விழியம்பினாற்
கொல்லியைக் கொல்லியம் பாவையொப் பாளைக் குளிரொற்றியூர்
வல்லியைப்புல்லியகைக்கோ விவர்வந்து வாய்த்ததுவே.
(தமிழ் நாவலர் சரிதை)
இப்பாட்டினால் இவர் வல்லியைப் பிரிந்த காலத்துக் குரும்பை என்பாளைத் தழுவி மனம் பொருந்தாமையால் வெறுத்தனர் எனத் தெரிகின்றது. இவர் வல்லியைப் பிரிகின்றபோது பாடியதாக "வடிப்பாளை வீசுந் திருவொற்றியூர்வல்லி" என்னும் முதலையுடைய பாட்டொன்றும் வழங்குகின்றது.
இவர்களையன்றிக் களந்தைப் பதியிலொருத்தியையும் இவர் விழைந்தனரென "வில்லிகளந்தை மின்னை" (தமிழ் நாவலர் சரிதை) என்னும் முதலையுடைய செய்யுளான் விளங்குகின்றது. இப்புலமைக்கரசரது அறிவு வீற்றிருந்த செறிவுடை மனத்தையும் இவ்வாறு அலைக்கவல்ல காமனே யாரினும் பெருவலியுடையன் என்பது ஒருதலை.
'எவர்க்கும் வேள்கணை தீர்திறமின்று' என்பரன்றோ? இவ்விழைவெலாமுட்கொண்டு போலும் இப்புலவர் பெருந்தகையார் "கற்றனர் ஞான மின்றேற் காமத்தைக் கடக்கலாமோ" (மாரீசன்வதை) எனப்பாடினாராவர்.
இவர் இராமாயணம் பாடி அரங்கேற்றியது
அரும்பெறன்மணியும் பெரும்பெயரமிழ்துமே நிறையப் பெற்ற பாற்கடல்போலப் பரந்துவிளங்குகின்ற இராமாயணமென்னுந் தெய்வான்பனுவலை இவர் பாடியருளியதற்குக் காரணம், இவரது சீராமபத்தியேயன்றி வேறில்லையென்பது, இவர், "ஆசைபற்றியறையலுற் றேன்மற்றிவ், வேசில் கொற்றத் திராமன் கதையரோ." எனவும், "ஆங்கவன் புகழ்ந்த நாட்டை யன்பெனு நறவமாந்தி, மூங்கையான் பேச லுற்றா னென்னயான் மொழியலுற்றேன்" எனவும் இராமாவதாரத்துரைத்துப் புகுந்தவாற்றால் நன்கறியத்தக்கது. இவர் "பத்தர் சொன்னவும் பன்னப்பெறுபவோ" என்றதூஉம் இக்கருத்தையே வலியுறுத்தும். இவர் வளர்ந்து சிறத்தற்க்குக் காரணமான சடையவள்ளல் குடிக்கும் இச்சீராமபத்தி உண்டென்பது, அவ்வள்ளற்க்குச் சரராமன் எனப்பெயரிட்டு வழங்கியவாற்றால் ஊகிக்கப்படும். அக்குடிப் பரிசயம் இவரது பத்திக்கு ஒரு காரணமாயினும் ஆம். அன்றியும் வான்மீகி முனிவர் திருவாய் மலர்ந்தருளிய சீராமாயணத்தின் திட்பநுட்ப ஒட்பன்களே இவர்காலத்து யாண்டும் பரந்து விளங்கிமேம்பட்டன என்பதும், அக்காலத்தறிஞரெல்லாம் சீராம கதையை அம்ழ்தினும் அதிகமாகமதித்துவந்தனரென்பதும்,
"வைய மென்னை யிகழவு மாசெனக்
கெய்த வும்மி தியம்புவ தியாதெனிற்
பொய்யில் கேள்விப் புலமையி னோர்புகழ்
தெயவ மாக்கதை மாட்சி தெரிக்கவே." (பாயிரம்)
"நொய்தினொய்யசொன் னூற்கலுற் றேனெனை
வைத வைவின் மராமர மேழ்துளை
யெய்த வெய்தவற் கெய்திய மாக்கதை
செய்த செய்தவன் சொன்னின்ற தேயத்தே." (க்ஷெ)
"வாங்கரும் பாத நான்கும் வகுத்தவான் மீகியென்பான்
றீங்கவி செவிகளாரத் தேவரும் வருகச் செய்தான்." (நாட்டுப்படலம்)
3"எறிகடலுலகந் தன்னு ளின் றமிழ்ப் புலவர்க் கெல்லா
முறுவலுக் குரியதாக மொழிந்தனன் மொழிந்த வென்சொற்
சிறுமையுஞ் சிலையி ராமன் கதைவழிச் செறித றன்னா
லறிவுடை மாந்தர்க் கெல்லா மமிழ்தமொத் திருக்குமன்றே." (பாயிரம்)
என இவர் இராமாவதாரத்து வழங்கியவாற்றால் உய்த்துணரப்படும். இவ்வாறு அறிஞரெல்லாம் ஒருங்குபாராட்டும் சீராம காதையின் தெய்வமாட்சி, இப்பெரும்புலவரது அறிவுடை நெஞ்சினையும் நன்கு கவர்ந்ததாதலின், அதனையே தமது 'செவ்விய மதுரஞ்சேர்ந்த நற்பொருளிற் சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய' தமிழ்ப்பாக்களாற் பாடிப் புகழ் நிறுத்துதற்கு ஆசைப்பட்டனர் எனினும் அமையும்.
இவர் இராமாயணத்தைப் பெரும்பான்மை வெண்ணெய்நல்லூரிலும், சிறுபான்மை ஒற்றியூரிலும் இருந்துபாடினரெனவும், ஒற்றியூரில் இவரிருந்தபோது இந்நூலை இரவிலே பாடினரெனவும், அக்காலத்து மாணாக்கர் பலர் பிந்தாமலெழுதுவதற்கு அவ்வூர்க் காளியைத் தீப்பந்தம் பிடிக்கப் பாடினரெனவும்,
'தொடை நிரம்பிய தோமறு மாக்கதை
சடையன் வெண்ணெய்நல் லூர்வயிற் றந்ததே'
(இராமாவதாரப் பாயிரம்.)
கம்பர் காளியைப்
பந்தம்பிடியென்று பாடியது
ஒற்றியூர் காக்க வுறைகின்ற காளியே
வெற்றியூர்க் காகுத்தன் மெய்ச்சரிதை - பற்றியே
நந்தா தெழுதுதற்கு நல்லிரவின் மாணாக்கர்
பிந்தாமற் பந்தம் பிடி. (தமிழ் நாவலர் சரிதை)
என வருவனவற்றால் அறியப்படுகின்றன. இவர் தாம் பாடிய சீராம கதைக்கு இட்டபெயர் இராமாவதாரம் என்பது, (இது பின்னர் விளக்கப்படும்.)
"நடையி னின்றுயிர் நாயகன் றோற்றத்தி
னிடைநி கழ்ந்த விராமாவ தாரப்பேர்த்
தொடைநி ரம்பிய தோமறு மாக்கதை."
(இராமாவதாரப் பாயிரம்.)
4"இத்த லத்து மிராமாவ தாரமே
பத்தி செய்து பரிவுடன் கேட்பவர்
புத்தி மிக்கரும் புண்ணிய முந்தரு
மெத்த லத்து மவனடி யெய்துவார்." (க்ஷெ)
என வருவனவற்றாலும், புறத்திரட்டுடையார் இந்நூலை, இராமாவதாரம் என்னும் பெயரே கொண்டாளுதலாலும் தெரிகின்றது. இவர் பாடியது பாலகாண்டமுதல் யுத்த காண்ட மீறாகவுள்ள ஆறுகாண்டங்களே என்பதும், பின் உத்தரகாண்டத்தை ஒட்டக்கூத்தர் பாடினாரென்பதும், அவ்வுத்தரகாண்டம் சோழனதவைக்களத்தே அரங்கேற்றப்பட்டதென்பதும்,
"பூணிலாவுங் கம்பனலம் பொலியுந்தமிழாற் புகழெய்திக்
காணுமாறு காண்டமுறுங் கதையிற்பெரிய கதையென்னுந்
தாணிலாவுங் கழலபயன் சபையிற்பயிலுத் தரகாண்டம்
வாணிதாச னரங்கேற்ற வைத்தார்சோழ மண்டலமே."
(சோழமண்டல சதகம்.)
என்னும் பாடலாற் றெரிகின்றன. ஈண்டு அபயன் என்பது சோழன் என்னும் பொருளில் வந்தது. ஒட்டக்கூத்தர் சரசுவதி தம்பலங் கொடுக்க அதனாற் கவித்திறம் எய்தினவராதலால் அவரை 'வாணி தாசன்' எனப் பெயர் சிறப்பித்து வழங்குவரெனத் தெரியலாகும். இங்ஙனம் கம்பர் பாடியன ஆறுகாண்டங்களேயாம் என்பதற்குப் பெரிதும் இயையவே, அரசகேசரியார் தாமியற்றிய இரகுவம்மிசம் என்னுஞ் செந்தமிழ் நூலிற் சீராமமூர்த்தியின் திருவவதாரமேயுரைத்து "மற்றிவ்விராமகதையின் பூருவபாகம் முழுவதையுங் கடலிற்பெரிய தமிழ்க்கல்வியினையுடைய கம்பநாடர் நிகழ்ந்தவாறு உரைத்தாராதலால் அதனை யீண்டு ஓதினேனில்லை; அவருரையாத அக்கதையின் உத்தரபாகமே யானினியோதப்புக்கேன்" என்னுங்கருத்தினை வெளிப்படுத்த,
பொற்றா மரைமா னொழியாது பொலியு மார்ப
வெற்றாங்கு மேனி ரகுராம சரிதை யாவுங்
கற்றார் கலியிற் பெரிதாந் தமிழ்க் கம்பநாட
னுற்றாங் குரைத்தானுரையாத வோது கிற்பாம்.
என ஒரு பாடலைக்கூறி அதன்பின்னே சீதை வனம்புகுதல், இலவணன்வதை, சம்புகன்வதை, இராமாவதார நீங்குதல் முதலாகிய உத்தரகாண்டக் கதைகளையே பல படலங்களாற் பாடியதனையும் ஈண்டைக்கு ஆராய்ந்து கொள்க. இவ்விரகுவம்மிசச் செய்யுளாற் கம்பர் உத்தர காண்டம் பாடினாரில்லையென்பது நன்கு தெளியப்படும். இனிச் சில இராமாயண ஏடுகளில்,
கரைபொரு காண்டமேழு 5கதைகளாயிரத்தெண்ணூறு
பரவிய பாடைபத்து படலநூற் றைம்பத்தாறு
ளுரைதரு விருத்தம்பன்னீ ராயிரத் தொருபத்தாறு
வரமிகு கம்பன்சொன்ன வண்ணமு மெண்பத்தேழே.
என ஓர் செய்யுள் உள்ளது. மேற்காட்டிய பிரபலமான பிரமாணங்களோடு பகைத்தலால் பண்டை வழக்கறியாதார் ஒருவர் பிற்காலத்து இயற்றியதாகுமெனக் கொள்ளத்தகும். 'கரைபொருகாண்டமாறு' என்னும் முதலோடு, அதற்குப் பொருந்திய படலமுதலியவற்றின் வரையறையையுமுடைய பழைய பாட்டொன்றைப் பிற்காலத்தார் ஏழுகாண்டங்கட்கும் ஒருவாறு இயையத்திரித்து இவ்வாறு வழங்கினரென ஊகித்தலுமாம். இச்செய்யுளிற் கணக்கிட்ட ஏழுகாண்டச் செய்யுட்டொகையினின்று உத்தரகாண்டச் செய்யுட்டொகையாகிய 1500ஐக் கழித்து நோக்கின் மற்ற ஆறுகாண்டங்கட்கும் உரிய செய்யுட்டொகை 10516 ஆகும். இக்காலத்து முதல் ஆறுகாண்டங்கட்கும் உள்ள செய்யுட்டொகை அச்சுப் பிரதிகளில் 10587ஆகவும் ஏட்டுப் பிரதிகளில் 10825; 10685 ஆகவும் பல வேறுவகைப்படுவது, ஆறுகாண்டங்கட்கும் உள்ள படலத்தொகையும் இங்ஙனமே 113, 115, 128, 137 எனப்பலவாறாகக் காணப்படுகின்றது. உத்தரகாண்டச் செய்யுட்டொகை, 1500 என்பதிற் பெரும்பான்மை வேறுபாடு காணாவிடினும் அதன் படலத்தொகை 18, 23, என வேறு வேறு காணப்படுகிறது. இவ்வளவு மாறுபாடுற்ற இக்காலத்துப் பிரதிகளைக் கொண்டு இச்செய்யுளில் கண்ட வரையறைகட்குப் பொருந்தவுரைப்பது அரிதாமென்க. அன்றியும் புறத்திரட்டுடையார் இராமாவதாரமெனப் பெயரிட்டாண்ட,
எய்தவின்னல் வந்த போழ்தி யாவரேனும் யாவையுஞ்
செய்ய வல்ல ரென்ப தோர்க சென்னெறிக்க ணேகிட
மைய கண்ணி செய்ய பாதம் வல்ல வாய மற்றிவன்
கைக ளின்று பன்ன சாலை கட்ட வல்ல வாயவே
(இடுக்கணழியாமை - 15)
என்னுஞ் செய்யுளுக்கு வேறாக இக்காலத்து
மேவு கான மிதிலையர் கோன்மகள்
பூவின் மெல்லிய பாதமும் போந்தன
தாவி லெம்பிகை சாலை சமைத்தன
யாவை யாது மிலார்க்கியை யாதவே.
(அயோத்திய காண்டம். சித்திரகூடப்படலம்)
என ஒரு செய்யுள் காணப்படுதலாற் கம்பர் பாடிய பாடல்கள் சில பிற்காலத்து விடப்பட்டும் பிறர் பாடியன சில இடையிடையே மடுக்கப்பட்டும் இப்போதைப் பிரதிகளுள்ளனவென்று தெளியப்படும்.
6பரிபாடலிலும் சிந்தாமணியிலும் பிற்காலத்துக் கந்தியார் என்பாரொருவர் தன்சொற்களையுஞ் செய்யுள்களையும் இடைமடுத்தாற்போல இவ்விராமவதாரத்திலும் பிற்காலத்து வெள்ளியம்பலத் தம்பிரான் என்பாரொருவர் தன் செய்யுள்கள் சிலவற்றை இடைமடுத்துப் போயினரென்பர். இவற்றை வெள்ளிபாடல் என்னும் பெயரான் வழங்குவர். இப்பிறழ்ச்சியேயன்றி எழுதினர் பிழைப்பாலும் பாடகர் பிழைப்பாலும் இவ்வேடுகளெய்திய மாறுபாட்டிற்கும் அளவேயில்லை. ஆதலால் இந்நிலையில் கம்பர் ஆறு காண்டங்கட்கும் வகுத்த படலங்கள் இத்துணையெனவும், பாடிய பாடல்கள் இத்துணையெனவும், அப்படலங்களும் பாடல்களும் இவை இவை எனவும் வரையறுத்துணர்த்தல் இயலாதென்றுணர்க. மேற்குறித்த மாறுபாடுகளொன்றும் எய்தாதனவும், புறத்திரட்டில் இராமவதாரம் என்று பெயரிட்டு எடுத்தாளப்பட்ட செய்யுள்களெல்லாம் தம்பாலுள்ளனவும் ஆகிய மிகப்பழைய ஏடுகள் சில கிடைத்தனவாயின் இவ்வரையறைகளின் உண்மை நன்கு புலனாகும் என்று கொள்க.
இனி கம்பர் தாம் பாடியருளிய இராமாவதாரத்துள் சடைய வள்ளலது பெருநன்றி பாராட்டி அவ்வள்ளலை ஆங்காங்கு ஒருபது கவிகளால் புகழ்ந்துள்ளனரென்பது,
எண்ணத்தகும்பா ருள்ளளவு மிரவிமதிய மெழுமளவும்
கண்ணிற்கினிய சயராம் கதையிலொருபான் கவிமுழுதுங்
வெண்ணெய்ச்சடையன் சடையனென விறலார்கம்பன் விளங்கவைத்த
வண்ணத்துரைவே ளான்பெருமான் வளஞ்சேர் சோழ மண்டலமே.
(சோழமண்டல சதகம்.)
என்னுஞ் செய்யுளாற் றெரிகின்றது. அப்பத்துப் பாடல்களாவன :-
நடையி னின்றுயர் நாயகன் தோற்றத்தின்
இடைநி கழ்ந்த விராமாவ தாரப்பேர்த்
தொடைநி ரம்பிய தோமறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர்வயிற் றந்ததே. (பாயிரம்.)
விண்ணவர் போயபின்றை விரிந்தபூ மழையினாலே
தண்ணெனும் கானநீங்கித் தாங்கருந் தவத்தின் மிக்கோன்
மண்ணவர் வறுமைநோய்க்கு மருந்தன சடையள் வெண்ணை
யண்ணறன் சொல்லேயன்ன படைக்கல மருளினானே.
(பாலகாண்டம், வேள்விப்படலம்)
அரம டந்தையர் கற்பக நவநிதி யமிழ்தஞ்
சுரபி வாம்பரி மதமலை முதலியதொடக்கற்
றொருபெ ரும்பொருளின்றியே யுவரிபுக் கொளிப்ப
வெருவி யோடின வெண்ணைவாழ் கண்ணன்மேவாரின்
(க்ஷெ அகலிடைப்படலம் 18)
வண்ண மாலைக் கைபரப்பி யுலகை வளைந்த விருளெல்லா
முண்ண வெண்ணித் தண்மதியத் துதயத்தெழுந்த நிலாக் கற்றை
விண்ணு மண்ணுந் திசையனைத்தும் விழுங்கிக் கொண்ட விரிநன்னீர்ப்
பண்ணை வெண்ணைச் சடையன்றன் புகழ்போலெங்கும் பரந்துளதால்.
(க்ஷெ மிதிலைகாண்படலம். 74.)
மஞ்செனத் திகழ்தரு மலையை மாருதி
யெஞ்சலிற் கடிதெடுத் தெறிய வேநளன்
விஞ்சையிற் றாங்கினன் சடையன்வெண்ணையிற்
றஞ்சமென் றார்களைத் தாங்குந் தன்மைபோல்.
(யுத்தகாண்டம், சேதுபந்தனப்படலம்.)
வாசங்கலந்த மரைநாளநூலின் வகையென்ப தென்னை மழையென்
றாசங்கைகொண்ட கொடைமீளியண்ணல் சரராமன் வெண்ணை யணுகுந்
தேசங்கலந்த மறைவாணர் செஞ்சொ லறிவாள ரென்றிம் முதலோர்
பாசங்கலந்த பசிபோலகன்ற பதகன்றுரந்த வுரகம்.
(க்ஷெ நாகபாசப்படலம். 263)
வன்னிநாட் டியபொன் மொளலி வானவன் மலரின் மேலான்
கன்னிநாட் டிருவைச் சேர்ந்த கண்ணனுமாளுங் காணிச்
சென்னிநாட் டெரியல் வீரன் றியாகமா விநோதன் தெய்வப்
பொன்னிநாட் டுவமைப்பைப் புலன்கொள நோக்கிப் போனான்.
(க்ஷெ மருத்துமலைப்படலம். 58)
7அந்தணர் வணிகர் வேளாண் மரபின ராலி நாட்டுச்
சந்தணி புயத்து வள்ளல் சடையனே யனைய சான்றோர்
ருய்ந்தன மடிய மென்னு முவகைய ருவரி நாண
வந்தன ரிராமன் கோயின் மங்கலத் துரிமை மாக்கள்.
'சங்கரனைய சான்றோர்' எனவும் பிரதிபேதமுண்டு
(க்ஷெ திருவபிடேகப்படலம்.)
அரியணை யநுமன் தாங்க அங்கத னுடைவாள் வாங்கப்
பரதன்வெண் கவிகை யேந்த விருவருங் கவரி பற்ற
விரைசெறி குழலி லோங்க வெண்ணைமன் சடையன் வண்மை
மரபுளோர் கொடுப்ப வாங்கி வசிட்டனே புனைந்தான் மொளலி.
(க்ஷெ க்ஷெ. 38)
'விரதமா தவர்களேத்த வெண்ணையூர்ச் சடையன் முந்தை' எனவும், 'விரிகடலுலகங்காக்கும் வெண்ணைமன் சடையன் வண்மை' எனவும், 'உரிமையி னயோத்தியுள்ளாருரைசெய் வெண்காடன் வந்த மரபினோர்' எனவும் பிரதிபேதங்கள் உள்ளன.
8மறையவர் வாழி வேத மனுநெறி வாழி நன்னூன்
முறைசெயு மரசர் திங்கண் மும்மழை வாழி மெய்ம்மை
யிறையவ னிராமன் வாழி யிக்கதை கேட்போர்வாழி
யறைபுகழ்ச் சடையன் வாழி யரும்புக ழநுமன் வாழி.
(க்ஷெ விடை கொடுத்த படலம் வாழ்த்து)
இவற்றுள் 'வெண்ணைவாழ் கண்ணன்' எனவும் 'கன்னிநாட்டிருவை சேர்ந்த கண்ணன்' எனவும் வருவனவற்றாற் சடையற்குக் கண்ணன் என்பதும் 9புலவர் கொடுத்த குணப்பெயராமெனத் தெரிகின்றது. பலர்க்குக் கண்போன்றவன் ஆதலால் அவ்வாறு வழங்கினராவர். இக்கருத்துக்கியையவே 10தண்ணார் கமலச்சதுமுகத் தோனை, என்னும் பாட்டில் "பாரிலுள்ளோர் கண்ணாக வாழும் வெண்ணைத் திரிகர்த்தன்" என வந்ததுங் காண்க. இராமகதையில் ஒரு பான் கவியாற் புகழப்பட்டவன் சடையனே என்பது "சயராமகதையிலொரு பான்கவிமுழுதும், வெண்ணைச் சடையன் சடையனென விறலார் கம்பன் விளங்க வைத்த, வண்ணத்துரைவேளாண் பெருமான்" என்று கூறுதலானும் அறியப்படும். இதற்குப் பொருந்தவே பாண்டிமண்டல சதகமுடையாரும்
தேனேறு மின்சொலி ராமாயணத்துத் திருவழுந்தூ
ரானே றனைய தமிழ்க்கம்ப நாட னமைத் துவைத்த
தானேரில் கீர்த்திசெய் வெண்ணெய்நல் லூரிற் சடையனைப் போல்
வானேறு சீர்த்திகொள் வேளாளர் பாண்டியன் மண்டலமே
எனக்கூறினார். இனி 'அந்தணர் வணிகர்' என்னுஞ் செய்யுளிற் 'சங்கரனனையசான்றோர்' எனவும் 'அரியணையநுமன்' என்னுஞ் செய்யுளில் 'உரிமையி னயோத்தியுள்ளாரைசெய்வெண் காடன்வந்த மரபினோர்' எனவும் வந்த பாடங்களையே கொண்டு நோக்கிற் கம்பர் சடையனையல்லாமல் அவன் குலத்தவரையும் பாடினாரெனெ எண்ணலாகும். சங்கரன் என்பான் சடையன் தந்தை என்பது முன்னரே கூறப்பட்டது. வெண்காடன் என்பவன் சடையனுக்கு இன்னவுறவினன் என்பது தெளியப்படவில்லையாயினும் நெருங்கிய சுற்றத்தவன் என்பது மட்டிலூகித்தலாகும். இச்சடைய வள்ளலது குலத்துப் பெண் வழியினரென்று சொல்லப்படுகின்ற மெய்கண்டதேவர்க்குச் ச்வேதவனப் பெருமாள் என ஒரு பெயருளதாதல் பற்றி ஈண்டை வெண்காடன் என்பது அவர் பெயராக வைத்து அவர்க்குப் பிற்காலத்து ஒருவர் இப்பாடத்தை இடைமடுத்தனரோ என ஐயுறுதற்கு மிடனுண்டாதலால் இப்பாடபேதங்களிலுண்மை இப்போது அறிதலறிதாகின்றது.
ஒருசாரார் கண்ணன், சரராமன் என்னுமிருவரும் சடையனுக்குத் தம்பியர் எனவும் கூறுவர். இவ்வாறு பகுத்தறிதற்கு ஏற்ற மேற்கோளொன்றும் யான் காண்கிலேன். அன்றியும் கம்பர், பாண்டியன் முன்னே இணையாரமார்பன் என்பானொருவனை இன்னவன் என்றுரைத்தவிடத்துச் சரராமனுக்கிளையான் எனவே கூறியுள்ளார். சரராமன் சடையனின் வேறாய் அவனுக்கு இளையனேயாயின் இயல்பாகவே மூத்தோனும் எல்லாரினுஞ் சிறந்து புகழ் பெற்றோனும் பல்லோரானும் நன்கறியப்பட்டோ னும் ஆகிய சடையனுக்கிளையான் எனக்கூறுவல்லரது அவ்வாறு கூறார்; பின்னர்ச் சரராமனை இன்னவன் எனத் தெரிவித்தற்குச் சடையன்றம்பி எனவே கூறவேண்டும்.
இவையல்லாமற் கம்பர் தெய்வவரத்தினாற் கவி சொல்லிய நாளில் முதன்முதற் பாடிய 'மோட்டெருமை வாவிபுக' என்னும் வெண்பாவில் வெண்ணெய்நல்லூரைச் சரராமனூர் எனப்பாடுதலால் சடையனினும் முற்படச் சரராமனது நன்றியே பாராட்டினார் எனக் கருதற்கும் இடனாகும். சோழமண்டல சதமுகமுடையார், ஒருபான் கவிமுழுதும் வெண்ணைச்சடையன் புகழப்பட்டுள்ளான் எனக் கருதியதும் தவறாகும். கம்பர் தம்மால் நன்றி பாராட்டிப் புகழப்பட்டார் பலராகவும், நூல் இறுதியிற் சடையன் ஒருவனையே வாழ்த்தலும் தாம் சாகும்போதும் அச்சடையனது நன்றியே நினைந்துருகுதலும் 11பொருந்தாவாம். இவற்றால் அவ்வொருசாரார் கூற்றுப் பெரிதும் ஐயப்படுதலுடைத்து. மழையென்றா சங்கை கொண்ட கொடைமீளியண்ணலும், மண்ணவர் வறுமைநோய்க்கு மருந்தானவனும், பாரிலுள்ளோர் பலர்க்குக் கண்போன்றவனும், திரிகர்த்தன் எனப் பட்டம் பெற்றவனுமாகிய வெண்ணைச் சடையனொருவனே சரராமன், கண்ணன் என்னும் பெயர்களானும் விளங்கினோன் எனக்கருதுதற்கண் மேற்காட்டிய இடையீடொன்றும் எய்தாமையும் பலவற்றுக்கும் பொருந்தியதாலும் ஆராய்ந்து கொள்க. இவர்,
"புவிபுகழ் சென்னிபோ ரமலன் றோழ்புகழ்
கவிகடம் மனையெனக் கனக ராசியுஞ்
சவிபுடைத் தூசுமென் சாந்தும் மாலையு
மவிரிழைக் குப்பையு மளவி லாதது"
(கிட்கிந்தாகாண்டம், பிலநீங்குபடலம்.)
"சென்னிநாட் டெரியல் வீரன்றியாகமா விநோதன் தெய்வப்
பொன்னிநாட் டுவமை வைப்பைப் பலன்கொள் நோக்கிப்போனான்."
(யுத்தகாண்டம், மருத்துமலைப் படலம்)
எனப்பாடுதலான் இவரைச் சிறப்பித்துயர்த்திய சோழனும் இவரால் நன்றி பாராட்டப்பட்டுள்ளான் என்பது அறியலாகும். இனி இவர் இராமாவதாரம் அரங்கேற்றியது திருவரங்கப் பெரியகோயிற்கண்ணே யென்பதும் அந்நாள் பங்குனி உத்திரமாம் என்பதும்,
திண்மையேறுங் கம்பனிடஞ் செய்யத்தகும்பல் சிறப்பயர்ந்து
நண்மையேறு மிராமகதை நற்பேர்புவியிற் றழைத்தேற
வுண்மையேறுந் திருவரங்கத் தொருவன்சபையி லுத்தரநாள்
வண்மையேற வரங்கேற்றி வைத்தார்சோழ மண்டலமே.
(மேற்கோள்)
"பண்ணிய விராமகாதை பங்குனி யுத்தரத்திற்
கண்ணிய வரங்கர் முன்னே கவியரங் கேற்றினானே".
என்பனவற்றானறியப்படும். பங்குனியுத்தரநாள் சீராமமூர்த்தியின் திருக்கல்யாண தினமாதலால் அதனையே தாம்பாடிய இராமாவதாரம் அரங்கேற்றுதற்கு உரிய மங்கலநாளாகக் கொண்டனராவர்;
பங்குனி யுத்தர மான பகற்போ
தங்க ணிருக்கினி லாயி நாமச்
சிங்க மணத்தொழில் செய்த திறத்தான்
மங்கள வங்கி வசிட்டன் வகுத்தான் (கடிமணப்படலம்)
எனக் கூறியதனையும் நோக்கிக்கொள்ளுக. 'பங்குனி யுத்த நாளில்' என்னும் பிரதிபேதமுமுண்டு. அது சோழ மண்டல சதகத்துக் கூறப்பட்டதனோடு மாறுபடுதலையும் பங்குனி யுத்தரம் போலச் சிறவாமமையும் தேர்ந்துகொள்க. இவர் சோழனது அவையிலரங்கேற்றாமற் பெரியகோயிலையே அதற்கேற்ற நல்லவையாகக் கருதியதனானே, இவர் அரசவையிலும் அறிவுடையந்தணரது நல்லவையையே பெரிதும் மதித்தனரென்பதும், ஒருவரான் வேண்டப்படாமற் றாமே தமது சீராமபத்தி முதிற்ச்சியாற் பாடிய பெருநூலாகலின் அதனை அப்பெரிய கோயிற் கடைத்தலை பற்றி வாழும் பரமபத்தர்களான அரியபெரியார்கள் திருச்செவிகளில் ஏற்பிக்கவே உள்ளமுவந்தனரென்பதும் நன்குணரலாகும்.
இவர் இராமாவதாரம் அரங்கேற்றுதற்காகத் திருவரங்கப் பெரியகோயிலையெய்தி ஆண்டைப் பிரணவாகார விமானத்து அறிதுயிலமர்ந்த கருணைமாமுகிலைச் சேவித்து நின்றபோது அவ்விறைவன், இவரது பத்திக்குவந்து இவரைத் தன்னடியார்க்கு ஆட்படுத்தக்கருதி 12"நஞ்சட கோபனைப் பாடினையோ" என்று அருச்சகர் முகனாய்த் திருவுளம்பற்றித் தமிழ்மகளின் தவப்பேறனைய சடகோபரது பரமஞானபத்தியதிசயத்தை இவர் நெஞ்சிற்றேற்றுவித் தருளினான். அப்போதே இவர் அவ்வாழ்வாரது திருக்கோயின் முன்றிலிற் புக்குப் பணிந்து கிடந்தார்க்கு ஆழ்வாரது திருவருணோக்கம் உண்டாயிற்று. அந்நிலையிலெழுந்து ஆழ்வாரைப்போற்றி, 'வேதத்தின் முன்செல்க' என்றெடுத்துத் தேனெனப் பாலெனச் சில்லமிழ் தூற்றென ஒருநூறு செய்யுள் அந்தாதியாகப் பாடி ஆழ்வார்க்கடியராய்ச் சிறந்தனர். இதன்பின்னேதா னிராமாவதார வரங்கேற்றம் சிறப்பாக நிறைவேறியடென்ப. இவர் சடகோபரந்தாதிக்கண்,
"பாவைத் திருவாய் மொழிப்பழத் தைப் பசுங் கற்பகத்தின்
பூவைப் பொருகடற் போதா மமுதைப் பொருள் சுரக்குங்
கோவைப் பணித்தவெங் கோவையல் லாவென்னைக் குற்றங்கண்டென்
நாவைப் பறிப்பினு நல்லோரன் றோமற்றை நாவலரே."
எனப்பாடுதலால் இவர் இராமாவதாரம் அரங்கேற்றப் புக்கபோது திருவரங்கத்துள்ள பெருநாவலர்கள் இவர்க்கு ஆழ்வார் சம்பந்தமில்லாமை பற்றி இவர்பாற் பலகுற்றங் காணத் தலைப்பட்டனரெனவும் ஆழ்வாரைப்பாடியடியராயபின்னே தான் இவர் அவர்களால் அபிமானிக்கப்பட்டனரெனவும் கொள்ளத்தகும். இவர் ஆழ்வாரால் அருளப்பட்டனரென்பது,
இழைத்தா ரொருவரு மில்லா மறைகளை யின்றமிழாற்
குழைத்தார் குருகையிற் கூட்டங்கொண் டார்கும ரித்துறைவர்
மழைத்தார் தடக்கைக ளாலென்னை வானின்வரம் பிடைநின்
றழைத்தா ரறிவுந்தந் தாரங்கும் போயவர்க் காட்செய்வனே.
நாய்போற் பிறர்கடை தோறு நுழைந்தவ ரெச்சினச்சிப்
பேய்போற் றிரியும் பிறவியி னேனைப் பிறவியென்னும்
நோய்போ மருந்தென்னு நுன்றிருவாய்மொழி நோக்குவித்துத்
தாய்போ லுதவிசெய் தாய்க்கடி யேன்பண்டென் சாதித்ததே.
என இவர் பாடுதலான் நன்கறியலாகும். இவர் ஆழ்வாரது திருவாய்மொழியினை எவ்வளவாக மதித்தனரென்பது
பண்ணுந் தமிழுந் தவஞ்செய் தனபழ நான்மறையு
மண்ணும் விசும்புந் தவஞ்செய் தனமகிழ் மாறன்செய்யு
ளெண்ணுந் தகைமைக் குரியமெய் யோகியர் ஞானமென்னுங்
கண்ணும் மனமுஞ் செவியுந் தவஞ்செய்த காலத்திலே.
13உரிக்கின்ற கோடலி னுந்துகந் தம்மென வொன்றுமின்றி
விரிக்குந் தொறுவெறும் பாழாய் விடும்பிறர் புன்கவிமெய்
தெரிக்கின்ற கோச்சட கோபன்றன் றெய்வக் கவிபுவியிற்
சுரிக்கின்ற நுண்மணலூற்றொக்குந் தோண்டச் சுரத்தவினே.
என்னும் இவர் பாடல்களான் உணரப்படும்.
(இவ்வுவமை இராமாவதாரத்தும் வந்தது கண்டு கொள்க.)
தேவிற் சிறந்த திருமாற்குத் தக்கதெய் வக்கவிஞன்
பாவிற் சிறந்த திருவாய் மொழிபகர் பண்டிதனே
நாவிற் சிறந்தநம் மாறற்குத் தக்கநந் நாவலவன்
பூவிற் சிறந்தவாழ் வான்கம்ப நாட்டுப் புலமையனே.
என்னுஞ் சடகோபரந்தாதிப் பாயிரத்தான் அத்திருவரங்கத்துள்ள பெரியாரெல்லாம் இவரை நம்பெருமாளுக்கு உரியராகிய நம்மாழ்வார்போல, நம்மாழ்வார்க்குரியராகிய நந்நாவலரென்று 14உரிமையினுயர்த்தி அன்பு பாராட்டினாரென்பது தேறப்படும். நன்னாவலவன் என்றும் பாடமோதுவாருமுளர்.
இனிச் சில இராமாயண ஏடுகளில் விடைகொடுத்த படலத்ஹ்டின்பின் சில அரிய செய்யுட்கள் வரையப்பட்டுள்ளன. அவையாவன:
நாராயணாய நமவென்னு நன்னெஞ்சர்
பாராளும் பாதம் பணிந்தேத்து மாறறியேன்
காராரு மேனிக் கருணா கரமூர்த்திக்
காரா தனையென் னறியாமை யொன்றுமே.
பராவரு மிராமன் மாதோ டிளவல்பின் படரக்கான் போய்
விராதனைக் கரனை மானைக் கவந்தனை வென்றி கொண்டு
மராமரம் வாலி மார்பு துளைத்தணை வகுத்துப் பின்ன
ரிராவணன் குலனும் யொன்ற வெய்துட னயோத்தி வந்தான்.
வாள்வளஞ் சுரக்க நீதி மதுநெறி முறையெந் நாளுந்
தான்வளர்ந் திடுக நல்லோர் தங்கிளை தழைத்துவாழ்க
தேன்வளர்ந் தறாத மாலைத் தெசரத ராமன்செய்கை
யானளந் தறிந்த பாட லிடையறா தொளிர்க வெங்கும்.
ஆவின் கொடைச்சசர ராயிரத்து நூறொழித்துத்
தேவன் றிருவழுந்தூர் நன்னாட்டு-மூவலூர்ச்
சீரார் குணாதித்தன் சேயமையப் பாடினான்
காரார்கா குத்தன கதை.
தராதலத்தி னுள்ள தமிழ்க்குற்ற மெல்லா
மராவு மரமாயிற் றன்றே-யிராவணனை
யம்பினால் வீழ்த்தா னடிபணியு மாதித்தன்
கம்பனா டாள்வான் கவி.
ஆதவன் புதல்வன் முத்தி யறிவினை யளிக்கு மண்ணல்
போதவ னிராமகாதை புகன்றருள் புனிதன் மண்மேற்
கோதவஞ் சிறிது மில்லான் கொண்டன்மா றன்ளை யொப்பான்
மாதவன் கம்பன் செம்பொன் மலரடி தொழுது வாழ்வாம்
இம்பரு மும்பர் தாமுமேத்திய விராமகாதை
தம்பமா முத்தி சேர்தல் சத்தியஞ் சத்தியம்மே
யம்பரந் தன்னின் மேவு மாதித்தன் புதல்வன் ஞானக்
கம்பன்செங் கமல பாதங் கருத்துற விருத்துவாமே.
இவற்றுள்; முதன்மூன்றும் கம்பர் பாடியவாமெனத் தோற்றுகின்றது. மற்றை நான்கும் பிறர்பிறர் கூறியனவாகும்.
இறுதிச் செய்யுளில் 'ஆதித்தன் புதல்வன்' எனவருதலானும், அவ்வாதித்தன் என்னும் பெயரே மற்றையிரண்டு வெண்பாக்களிலும் பயிறலானும் கம்பர் தந்தையார்க்கு ஆதித்தன் என்பது தெரிகின்றது. இது பற்றியே "தராதலத்திலுள்ள" என்னும் பாட்டில் 'ஆதித்தன் கம்பன்' என வழங்கினர் என்று அறியப்படுகின்றது. இது சங்கரன் புதல்வனான சடையனைச் 'சங்கரன் சடையன்' என வழங்கியது போல்வது.
ஆதவன் என்பது ஆதித்தனென்பதற்குப் பிரதிநாமமாதலால், இவரை, "ஆதவன் புதல்வன்" எனவும் வழங்கினராவர்.15 'ஆவின்கொடை' என்னுஞ் செய்யுளில் "திருவழுந்தூர் நன்னாட்டு மூவலூர்ச் சீரார் குணாதித்தன்சேய்" என வருதலால், இவருடைய தந்தையார் திருவழுந்தூர் நாட்டு மூவலூரில் வசித்தவரெனத் தோன்றுவது. கம்பர் பிறந்தவூர் திருவழுந்தூர் என்பது நன்கு தெளியப்பட்டதாதலின் அவ்விரண்டூர்களிலும் இவர் தந்தையார் இருந்தனராவரெனக் கருதப்படுகின்றது. திருவழுந்தூரும், மூவலூரும் மிகவும் அண்மை ஊர்களென்பதும் உணர்க. மேற்காட்டிய வெண்பாக்களிரண்டும், இவர் இராமாவதாரமரங்கேற்றிய காலத்து ஆண்டிருந்து கேட்டோ ர் பாடியவாமெனக் கொள்ளத்தகும்.
இவர் சோழனுடன் கோபித்துக் கொண்டது.
கம்பர் சோழனுடன் கோபித்துக் கொண்டு மதுரைக்குப் போகும்போது சொல்லியது.
காத மிருபத்து நான்கொழியக் காசினியை
யோதக் கடல்கொண் டொளித்ததோ--மாதவா
கொல்லி மலையுடைய கொற்றவா நீமுனிந்தா
வில்லையோ எங்கட்கிடம். (தமிழ்நாவலர் சரிதை)
இச்செய்யுளானும் இதன்றலைக் குறிப்பானும் கம்பர் சோழனுடன் கோபித்துக் கொண்டமை உணரப்படும். இதன்கட் கம்பர் சோழனை நோக்கி "நீ முனிந்தால்" எனக் கூறுதலால், அவன் இவரை முதற்கண் முனிந்தனனென்பது அறியப்படுகின்றது. இவரைச் சோழன் முனிதற்குக்காரணம், இவர், பெருஞ்செல்வத்தினும், பெருங்கொடையினும், புலவரெல்லாம் ஒருங்குபாராட்டுஞ் சிறப்பினும் சோழனாற் பெரிதும் அழுக்காறு கொள்ளப்பட்ட வெண்ணைச் சடைய வள்ளலையே மீப்படமதித்து இராமாவதாரத்துப் புகழ்ந்து பாடியதேயாகும்.
சடையன், முடியுடையரசரும் அழுக்காறு கொள்ளும் வளப்பமும் வண்மையும் உடையனாயினான் என்பதற்குப் பல கதைகள் வழங்குவன. அவற்றுட் சிலவற்றை ஈண்டைக்கேற்றவாறு சுருக்கியுணர்த்துவேன். முன்னர் இவர் சோழனால் பெரிதும் பாராட்டப் பெற்றவராவர். (செந்தமிழ் தொகுதி 3 பக்கம் 8 பார்க்க.)
ஒருநாள் சடையவள்ளல் சோழனதவைக்களத்தே போந்து சிறக்கவீற்றிருந்தபோது, பெருங்குடி வணிகனொருவன், கடலிற்பட்ட அருவிலையுடைய பெருகொளிப்பருமுத்துகள் பலவற்றைக் கொணர்ந்து சோழன் திருமுன்னர் வைத்து, 'இவை முடியுடை வேந்தர்க்குத் தக்கன' என்று கூறாநிற்ப, அரசன் அவற்றைக் கண்டு மகிழ்ந்து புகழ்ந்தானாக, அதுகண்ட சடையவள்ளல் கழனிபடு வளத்தையே மேம்படுத்தேத்தி, அக்கழனிபடுமுத்தைக் போல இவை பெரியனவும் ஒள்ளியனவுமாகா' என்று சோழற்கு மாறுரைத்தனன்.
அதுகேட்ட சோழன் கழனியில் முத்துப்படுவது கேட்டறிவதன்றி யாம் கண்டறிவதில்லை என்ன, சடையவள்ளல் அது நுமக்கரிதாவதன்றி எமக்கன்று; நுமக்கு யான் அதுகாட்டுவேன் என்று, தமது கழனியிற் கமுகுபோலப் பருத்துவளர்ந்துள்ள கரும்புகளில் ஒரு சிலவற்றைக்கொணருவித்து, அவற்றுட் கோணிக் குறுகியதொரு கரும்பினை எடுத்து அதனொரு கண்ணை முறித்தனன். அதினின்று பல முத்துகள் தெறித்து வீழ்ந்து, அரசனது முடிமணியொளியினும் பேரொளி பரப்பின.
அப்போது சடையவள்ளல் தன் கழனிகளிலொன்றில் ஆயிரக்கணக்கான கரும்புகளில் ஒரு சிலவற்றானாயதொரு சிறுகட்டின்கணிருந்தவற்றில் ஒரு கோணற் சிறுகரும்பின் ஒரு கண்ணிலிருந்தன இவை என்றும், இங்ஙனமே தன்கழனிதோறும் உள்ளனவற்றையெண்ணிற் கணக்கிலவாமென்றும் அரசற்கு எடுத்துக் கூறினன். அதுகேட்டு, அரசவையிலிருந்த சான்றோரெல்லாம் 'சடையன் கழனிபடுவ கடல்படா' என்று புகழ்ந்தனர். கரும்பினின்று தெறித்த முத்துகளெல்லாம் ஒளியானும் பருமையானும், வணிகன் கொணர்ந்த கடல்படு முத்துகளையும் வென்று சிறத்தலை அரசன் கண்ணாரக்கண்டு, முகத்தான் வியந்து, அகத்தாற் சடையனது செல்வத்தில் அழுக்காறு கொண்டனன் என்ப.
இவ்வரியகதையே மேல் இணையார மார்பனைப் பாண்டியன் இவன் ஆரென்னும்போது கம்பர் பாடும் வெண்பாவிற் "கன்னன்மதயானைக் கண்டன்மகந்முன்னங் கணையாழி முத்துதிர்க்கும்" என்பதனாற் குறிக்கப்படுவதாகும். மதயானைக் கண்டன்மகன் முன்னங் கன்னலினின்று கணையாழி முத்தினை உதிர்க்கும் என உரைக்க. கணையாழிமுத்து-திரட்சியையுடைய கடல்முத்து.
பின், ஒருநாள் வடநாட்டு வணிகன் மற்றொருவன், முடிவேந்தர்க்கேற்ற நுண்ணிய தொழில் பலவியற்றிய பெருவிலைப் பட்டொன்று கொண்டு சோழன்பால் எய்திய போது, சோழன் அவ்வழகிய பட்டாடையைக் கண்டு அதனைப்பெறுதற்கு மனமுவந்து அதற்குரியவிலையை அவ்வணிகன் பால் வினாயினான். அதற்கு வணிகன் கூறிய விலைப் பொன்னளவு, தனது பெருநிதியறைக்கணுள்ள பொன்னளவினும் பன்மடங்கு அதிகமானது கண்டு, அரசன் அவ்வழகிய பட்டினைக் கொள்ளவியலாமல் மனம்வாடி, அவ்வணிகனைச் செலவிடுத்தனன், பின்பு, அவ்வணிகன், அரசனினும் சடையவள்ளலையே பெருஞ்செல்வனாக நாடுமுழுதும் புகழ்தலைக் கேட்டு வெண்ணெய்நல்லூரெய்தி அவ்வள்ளல் பால் அப்பெருவிலைப்பட்டைக் காட்டி நிகழ்ந்ததுரைக்க, அவ்வள்ளல் மகிழ்ந்து அதனைக் கொள்ளுதல் கருதி விலையினைச் சொல்லக்கேட்டு, இப்பட்டின் மென்மையையும் நுண்டொழிலையும் கருதுமிடத்து இவ்விலை மிகவுஞ் சிறியதேயாமென்று நினைந்து, தனது பெருநிதியறைக்கணிருந்து அதன் பெருவிலையை எளிதினல்கி அப்பட்டினை வாங்கிக்கொண்டு வணிகனைச் செலவிடுத்தனன். இதன் மேற் சோழன் ஒருநாள் சடையவள்ளலைக் கண்டு அளவளாவவேண்டித் தூதரை விடுத்தானுக்கு, அவ்வள்ளல் தனக்குத் துடையிற் புண்ணுண்டாயிருந்ததலால் இவ்வமயம் அரசவையெய்தற்கு இயலாதென்றும், அதுதீர்ந்து சிறிது குணப்பட்டவாறே ஆண்டுதான் எய்தலாகுமென்றும் ஓலை போக்கி, சின்னாளில் அப்புண் சிறிது தீர்ந்தவாறே, முன் வணிகன்பால் வாங்கிய பெருவிலைப்பட்டினை உடுத்துக் கொண்டு சோழன்பால் எய்தினான். சோழன், தன்னாலுங் கொள்ளற்கியலாத அப்பட்டைச் சடையனதரையிற்கண்டு வியப்பும் அழுக்காறும் மிக்கு முகத்தான் அளவளாவுதற்கிடையே 'துடையிற் புண் தீர்ந்து முழுதும் குணப்பட்டதில்லையே: இப்போது எவ்வளவிலுள்ளது; அதனையாள் காணவிரும்புவல்' என அன்புடன் மொழிந்தனனாக, அப்போது சடையன், உடுத்த ஆடையைத் திரைந்து நீக்கித் துடையைக் காட்டுதல் அரசர் மரியாதைக்குப் பொருந்தாதென்று கருதுத், தான் பெருவிலை கொடுத்துப் பெற்ற அப்பட்டாடையைப் புண்ணுள்ள இடத்துக்கு நேரே கையாற் கிழித்து அப்புண்ணளவிற் கட்டினான். அது கண்டு அரசன், எமக்கரியதாய்த் தன் செல்வமிகுதி தோன்றற்குக் காரணமான இப்பட்டாடையையும் இவன் ஒரு பொருளாகக் கருதினானில்லை; இவன் செல்வநிலையும் மனநிலையும் இருந்தவாறென்னே! என்று முன்னினும் அதிகமாக இவன்பால் அழுக்காறுகொண்டனன் என்பர். இவ்வரிய கதையே,
"... ... ... ஆறாத்
துடையிலெழுசிலந்தி தோற்றுவிக்கப்பட்டின்
புடைவை கிழித்த பெருங்கை"
எனத் திருக்கை வழக்கத்தினும்,
"விளைவாஞ் சிலந்தியை ஆடையைக் கீறி வெளியிலிட்டும்
வளமான கீர்த்திகொள் வேளாளர்"
எனப் பாண்டிமண்டல சதகத்திலும் பாராட்டப்பட்டிருத்தல் காண்க. தன்னால் விலைகொடுத்துக் கொள்ளற்கியலாததொன்றை இவன் கொண்டதனைத் தனக்கறிவிக்கவே, இவன் இப்பட்டுடுத்திப் போந்தானென்றும், தான் அதிகமாக மதித்துள்ள இவ்வரிய பட்டாடையையும் இவன் ஒரு பொருளாக மதியாமையைத் தனக்குணர்த்தவே இவ்வாறு கிழித்தனன் என்றும் சோழன் கருதிச் சடையன்பாற் செற்றங்கொண்டனனாவன். அன்றியும்,
"மரபுதங்கிய முறைமை பேணிய மன்னர்போகிலெனாகிலென்
.................................................
சங்கரன் றரு சடையனென்றொரு தருமதேவதை வாழவே"
எனச் சங்கரன் பாடல்பெறுதலாலும் இவன்பால் அரசன் அழுக்காறு கொண்டனனாவன். இது முற்காலத்துப் பாரியென்னும் வள்ளற்றலைவன்பால் தமிழ் மூவேந்தரும் அழுக்காறு கொண்டதனோடு ஒக்கும்.
இனி, வேறொரு வணிகன், பெரும்பொருள் செலவு செய்து நெடுங்காலஞ் சென்றாலும் தனது தூய்மையினும் நறுமணத்தினும் குறைவுறாத மேலான கலவைச்சாந்தை மிகுதியாக இயற்றி அதனை ஒரு வண்டியிலுய்த்துச் சோழன் பாலெய்தினானுக்கு, தக்க பொருள் கொடுத்து அந்நறுஞ் சாந்தினைப் பெறுதற்கியலாமல் அவ்வணிகனை அரசன் செலவிடுக்க, அவன் சடையன் பாற்சென்று நிகழ்ந்தது தெரிவிக்க, இவ்வாறு முடியுடையரசரும் பெறுதற்கியலாத இத்தகைப் பொருள்களெல்லாம் தன்பாலெய்தற்கு இவ்வளம்பெறு கழனியே காரணமென்றும், அஃதே இவற்றை அனுபவித்தற்குரியதென்றுங் கருதி, அச்சாந்து முழுதையும் சில கழன்களில் உழுதொளியுடன் கலக்கி அச்சாந்துக்குரிய விலைப் பொருளை அது கொணர்ந்த வணிகற்கு ஈந்து விடுத்தனன் எனவும், அதுகேட்டுச் சோழன் சடையன்பால் அழுக்காறுஞ்செற்றமுங் கொண்டனனெனவுஞ்சொல்லுவர்16.
பின்னொரு காலத்து, புலவர் பலர் பரிசில் பெறுதற்கு வெண்ணெய் நல்லூரையெய்திச் சடையனது வளமனைக்கண் வீற்றிருந்தாராக, அவ்வமயம் கழனிவெளியிற் சென்றிருந்த சடையவள்ளல் தம் மனைமுற்றத்தைச் சார்ந்த வளவில் ஆண்டு நெல் மிகுதியாகச் சிதறுண்டு கிடத்தலைக் கண்டு, மக்கட்கு உயிர்போலச் சிறந்த இந்நல்லுணவு இவ்வாறு பலர் காலிற்பட்டுப் போவதாகாதே என்னுங் கருத்துக் கொண்டு அவற்றைப் பொறுக்கி ஒருங்கு சேர்க்கத் தலைப்பட்டனன். ஆண்டுக் குழுமிய புலவரெல்லாரும் அவ்வள்ளலது திருவுளத்தினைத் தேறாமல், இவ்வாறு ஒவ்வொரு நெல்லையும் விடாமற் பொறுக்கிச் சேர்ப்போன் நமக்கெவ்வாறு பொருள் வழங்க வல்லான்! என்று தம்முள்ளே கூறியிழிந்தனர். அதனைக் குறிப்பானுணர்ந்த சடையவள்ளல் சிதறிய நெல்முழுதையும் பொறுக்கிச் சேர்த்துவிட்டுக் கூடிய புலவர்க்கெல்லாம் நல்வரவு கூறி அவர்கட்குணவளித்தர்கு விரைந்து அவர்களனைவரையும் வரிசைப்பட அமர்த்தி வைத்து உண்கலனமைத்தனன்.
பொன்னையே அமுதும் பொரிக்கறியுமாகப் படைத்து அவற்றை உண்டு பசிதீருமாறு வேண்ட, அவரெல்லாம் ஒன்றும் அறியாராய்த் திகைத்திருந்தவளவில், பொற்கறியும் பொன்னமுதும் உண்டற்காகாவாதலால் இவற்றையெடுத்து வெளியே எறிந்து விட்டு வேறுண்கலம்பரப்பி நெற்சோறளிக்க என ஆவினான். உடனே தொழிற்குரியார் அவ்வாறே புரியப், புலவர்கள், வயிறாரவுண்டு கைகழுவி வாய் பூசி வெளியிற் குப்பையிலெறியப்பட்ட பொன்களைத் தாம்தாம் விரைந்து பொறுக்கிக் கொள்ளப் புக்குழி, அவர்கள் ஒருவரோடொருவர் கலகம்பட்டுப் பூசன்மிகுத்து நின்றார்கள். அப்போது சடையவள்ளல் அங்கேபோந்து 'எச்சிற்கலத்துக்குப் பெரும்புலவர்கள் இவ்வாறு கலகமிடலாகாதே' என்று கூறி அவர்கட்கு வேண்டுவன நல்கி விடுத்தனன் என்ப. இவ்வரிய கதையினொருபகுதியே,
"பொன்னா லமுதும் பொரிக்கறியுந் தான்கொணர்ர்ந்து
நன்னா வலர்க்களித்த காணயக்கை"
எனத் திருக்கைவழக்கத்திற் பாராட்டப்பட்டிருப்பதாகும்.
இவ்வாறு முடியுடை வேந்தரும் அழுக்காறுகொள்ளும் வளப்பமும் வண்மையும் சடையவள்ளல் உடையனாய்ச் சிறந்தனனென்பதற்கு இயையக் கேட்கப்படுங் கதைகள் பலவாம். இத்துணையுங் கூறியவற்றாற், சோழன் சடையன்பால் அழுக்காறு கொண்டிருந்தனனென்பது ஒருதலையாம். அவ்வழுக்காறடியாகச் சடையற்க்குயிர்த் துணையாய்ச் சிறந்த கம்பர்பாலும் சோழற்கு வெறுப்புண்டாயிற்றென்பது பொருந்திற்றேயாம். பல்லாற்றானும் தன்னால் அழுக்காறு கொள்ளப்பட்ட சடையனுக்கே கம்பர் உயிர்த்துணையாய்ச் சிறந்து அவனையே மீப்படப்பாராட்டியதும், தமக்கு அரசர்க்கொத்த வரிசை பலவளித்துத் தம்மை மிகவுமுயர்த்திய தன்னை அவ்வாறு பாராட்டாமையுமே சோழன் இவரை முனிதற்குக் காரணமென்பது உணர்ந்து கொள்க. இஃதன்றி வேறு வேறு கூறுவாருமுளர். பின்னர் பாண்டிய மன்னரால் பெரிதும் ஆதரிக்கப் பெற்று மீண்டும் சோழ நாடு திரும்பினார்.
கம்பர் பின்னொருகாற் சோழனுடனேகோபித்துக் கொண்டபோது சொன்ன வெண்பா
மன்னவனு நீயெயோ மண்ணுலகு மிவ்வளவோ
வுன்னையோ யான்புகழ்த்திங் கோதுவ தென்னை
விருந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ சோழா
குரங்கேற்றுக் கொள்ளாதோ கொம்பு.
(தமிழ் நாவலர் சரிதை)
எனவரிதலானறியப்படுகின்றது. இவர் சோழனுடன் திரும்பவும் இவ்வாறு கோபித்துக்கொள்ளுதற்குக் காரணம் என்னையெனிற் கேறுவேன். கம்பருக்கு அம்பிகாபதி என்னும் பெயரிலோர் திருமகனாரிருந்தனர். அவரும் புலமையாற் சிறந்து அரசவையேத்த வாழ்கின்ற காலத்துச் சோழன்றிருமகள் அவரைக் காமிக்க அவரும் அவளை விழைந்து களவினொழுகுதலைச் சோழன் தெரிந்துகொண்டு அவரை ஒறுத்தற்க்குக் காலம் பார்த்திருந்தனன். அக்காலத்து அம்பிகாபதி பாடுவனவெல்லாம் சிற்றின்பம் பற்றியே வரிதலை அரசன் தேர்ந்து ஒருநாள் அவன் அவரை நோக்கி "நீவிர் இப்போதே ஒருநூறு செய்யுள் சிற்றின்பம்பற்றாது பேரின்பமே பற்றிப் பாட வல்லீரோ?" என வினாவ அவரும் "அங்ங்னம் பாட வல்லேன்" என்ன, அரசன் அந்நூறிலொன்றேனுஞ் சிற்றின்பங் கலந்ததாயின் தலையை வெட்டிவிடுவேனென அவரும் ஒட்டிய முறைதவறின் அவ்வாறே புரிக என்றுடன்பட்டுப் பாடிக்கொண்டிருந்தனர். இச்செய்தியைக் கேள்வியுற்ற சோழன்மகள் தன் ஆசைநாயகருக்கு ஏதேனும் இடையூறு நேருமோ என்று கவன்றிருந்தவள் சில்போது கழிந்தவாறே அம்பிகாபதியாரைக் காண்டல் வேட்கை மீதூர்ந்து மாளிகையின் மேனிலையினோர்புறத்தே மறைந்து நின்று தலையை மட்டும் வெளிக் கொண்டு அவரிருந்த அரசவையை நோக்குவாளாயினாள். அந்நிலையில் அம்பிகாபதியார் தொண்ணூற்றொன்பது கவியும் பேரின்பமாகப் பாடியவர் ஊழ்வினை சூழ்தலான் அம்மறைந்து நோக்கிய சோழன்மகள் தலையினைத் தாம் முற்படக்கண்டு மயங்கி நூறாஞ் செய்யுளொன்றைச் 'சற்றே பருத்த தனமே குலுங்க' என்றெடுத்துச் சிற்றின்பமாகப் பாடி முடித்தனர். அப்போதே சோழன் ஒட்டியநெறி பிழைத்தீரென்று அம்பிகாபதியார்க்கு உரைத்து அவர் தலையினை வாளாலெறிந்தனன். இந்நிகழ்ந்தவெலாம் கம்பர் கேட்டு விரைந்து போந்து வெட்டுண்டு கிடக்கும் மகனுடலைக் கண்டு ஆறாத்துயருடையராய்,
மட்டுப் படாக்கொங்கை மானார் கலவி மயக்கத்திலே
கட்டுப்பட்டாயென்ன காதல்பெற் றாய்மதன்கையம்பினாற்
பட்டுப்பட்டாயினுந் தேறுவையோவென்று பார்த்திருந்தேன்
வெட்டுப்பட் டாய்மக னேதலை நாளின் விதிபடியே.
என்னுஞ் செய்யுளைக் கூறித் தம்மகனார்க்குச் செய்வன செய்திருந்தனர் என்ப. இங்ஙனந் தம்மருமை மகனாரை அரசன் கொன்றதே கம்பர் திரும்பவும் அவனுடன் கோபித்தற்குத் தலையாய காரணமாகும்.
இனி, கம்பர் வம்மிசத்தினர்க்குள் ஓர் அரிய கதை வழங்குகின்றது. அஃதாவது; - கம்பருக்குக் காவேரி என்னும் பெயரில் ஓர் அழகுடைத் திருமகள் இருந்தனள். அவளைச் சோழன்மகன் முறை தவறி விரும்பி அவளைத் தான் எய்தற்குப் பல்லாற்றானும் முயன்றனன். இது தெரிந்த அத்திருமகள் உயிரினும் பன்மடங்கு சிறந்த கற்பினையழித்துப் பழிமலைந்து வாழ்தலினும், அவ்வுயிரையிழந்து புகழெய்தலே சீரிதாமெனத் தேர்ந்து, கம்பர் திருமனையின்முற்றத்தொருபுறத்துக் கம்புநிறையப் பெய்திட்ட மிகவும் ஆழமான பெரியதோர் கம்பங்குழி நடுவில் ஒருநள்ளிரவில் தனியே இறங்கி மூழ்கிமாய்ந்தனள். [கம்பு என்னுந்தானியத்தை ஒரு பெருங்குழி நிறையப் பெய்து அதன்மேல் ஓர் திண்னியபொருளையிட்டால் அக்கம்பு எளிதிலிடம் விட்டுக் கொடுத்தலால், அப்பொருள் விரைந்து உள்ளே புக்கு மூழ்கலுறும்] இங்ஙனம் தம்மருமைமகள் மாய்ந்தவகையினைக் கம்பர் ஆராய்ந்தறிந்து ஆற்றொணா இடரில் மூழ்கினவராகி, 'இஃது அரசன் முறை தவறியதனானே எய்தியது' என்று தெரிந்தபோது அரசனை முனிந்தனர் என்பதேயாம். இப்போதும் இவர் வம்மிசத்தினர் மேற்காட்டிய காவேரி என்னுங் கற்புடையாட்டியைத் தங்கள்வீட்டுத் தெய்வமாகக் கொண்டு அவளது திருவுருவத்தை வழிபட்டு வருகின்றனர். இதுவும் கபர் சோழனை முனிதற்குத் தக்க பெருங்காரணமாம். இக்கதைகளில் உண்மை எவ்வளவோ! எனினும் கவிநயம் கருதி எழுதப் பெற்றது.
கம்பர் குறித்த தமிழ்ப்பெருமை
இக்காலத்துத் தமிழாராய்வாருட் சிலர் தமிழை வடமொழியினின்று திரிந்த மரூஉ மொழியெனவும் சிலர் அவ்வாறு திரியாத் தனிமொழியெனவும் க்க்றுவர். வேறுசிலர் தமிழ் என்னும் பெயரே திரமிளம் என்பதன்றிரிபு எனவுரைப்பர். பின்னர் சிலர் அப்பெயர் தமி என்பதனடியாய்ப் பிறந்ததென்பர்; சிலர் தமிழ் என்பது இனிமையென்னும் பொருட்டாதலின் அதுபற்றி அப்பெயர் எய்திற்றென்பர்.சிலர் தமிழ்மொழி சிவபிரான் பாற்றோன்றியதெனவுரைப்பர்; சிலர் தமிழ்மொழி என்றுமுள்ளதெனவுரைத்து அதனிலக்கணமே சிவபிரானரிளினர் என்பர்; சிலர் அகத்தியர் அவலோகிதன்பாற்றமிழ் கேட்டார் என்பர்; சிலர் சிவபிரான்பால் கேட்டனர் என்பர். சிலர் அகத்தியர் தமிழிலக்கணமே செய்திலர் என்பர். சிலர் தமிழ் வடவெல்லையாகிய வேங்கடத்தைக் குமரக்கடவுள் வரைப்பு என்பர். சிலர் அதனை நிலங்கடந்த நெடுமுடியண்ணலதென்பர். சிலர் பாண்டிய நாட்டைச் செந்தமிழ்நாடென்பர். சிலர் சோணாட்டை அங்ஙனம் கூறுவர்.
சிலர் செந்தமிழ்ப் புலவர் பலர் ஒருங்கு குழுமி ஆராய்ந்த சங்கமென்பது முன்னில்லையென்பர். இவ்வாறு தமிழின் பெருமை வரலாறு முதலியன பற்றிக் கேட்கப்படுவன வேறு வேறு மிகப் பலவாம். இன்னோரன்ன பலவற்றைப்பற்றி இற்றைக்குப்பன்னூறு வருடங்கட்குமுற் சிறந்து விளங்கிய அரிய கல்வியில் பெரிய கம்பர் கருத்தென்னவாமென ஆராய்வது இக்காலைத் தமிழ்மக்களால் விரும்பப்படுவதேயாகும்.
கம்பர் சீராமாயணமென்னுத் தேவபாஷைக்கதையினையே பாடப்புக்காரேனும், தாம் அத்திருக்கதையினைத் தம் அருமைத் தாய்மொழியாகிய பெருமைத் தமிழ்க்கண்ணேயாகலான் தாம்கண்டு கேட்டுணர்ந்த தமிழ் நாட்டியல்புகளையும், தமிழ்வழக்குகளையும், தமிழ்நூல் பொருள்களையுமே கொண்டு கோசலை நாட்டியல்புகளையும் அயோத்தியர் வழக்காசாரங்களையும் வருணித்தனர் என்று கருதுதலே பொருந்திற்றாகும்; என்னையெனின், மிகப் பழைய காலத்தே நிகழ்ந்தனவும் மொழியாலும் வழக்காலும் இயல்பாலும் பல வேற்றுமப்பட்டனவுமாகிய வேற்றுநாட்டுச் சரிதைகளை மிகப்பிற்பட்ட காலத்தே அவ்வேற்றுநாட்டுப் பரிச்சயமில்லாரொருவர் தந்தாய் மொழியில் புனைந்துரைக்கப் புகின், அவர்க்குத் தாங்கண்டு கேட்டுணர்ந்த தந்நாட்டு வழக்கியல்புகளேயன்றி வேறு தோன்றாவாதலான் என்க. வான்மீகி முநிவர் ஒரு சுலோகம் ஒன்றானே மிகச்சுருங்கவுரைத்த கோசலநாட்டினைக் கம்பர் வெருணிக்கப்புக்கு மழையை முன்னோதி ஆற்றைச்சிறப்பித்து நானிலம் பகுத்துக்கொன்டு விரித்துப் பலபல பாடல்களாற் புனைவதெல்லாம் தமிழ்நாட்டு இயல்பும் வழக்கும் பற்றியேயாகும், நாட்டு வருணனையில் மருதத்தையே மிகுத்துக் கூறுவதும் தாங்கண்ட காவிரிநாட்டியல்பு கொண்டேயாம்.
கம்பர் "காவிரி நாடன்ன கழனிநாடு" எனவும் "தெய்வப்பொன்னியே பொருவுங்கங்கை" எனவும் "பொன்னிநாட்டு வமைவைப்பை" எனவும் ஆங்காங்குப்பாடுதலாலும் இக்கருத்து வலியுறுவதென்க.
அம்முநிவர் நூற்றுக்கணக்கான சுலோகங்களால் மிக விரித்துப்புனைந்த தசரதருடைய அசுவமேதத்தை "முகமலரொளிர்தர" (திருவவதாரம்-86.) என்னுஞ் செய்யுளொன்றானே கம்பர் மிகச்சுருங்கவுரைத்து விடுதலும் தமிழர் சுவைக்கேற்பது கருதியேயாம்.
கம்பர் வான்மீகி முனிவர் போல அயோத்தியை 17அஷ்டா பதாகாரமான கட்டடங்களையுடைத்தெனவும் 18இராமனைக் காகபஷம் எனப்பெயரிய மயிர் முடியுடையனனெனவும் கூறினாரில்லை. இவ்வாறு தமிழ்நாட்டில்லைபோலும். கம்பர் "நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்" (ஆற்றுப்படலம் 3) என மகட்கொடுத்தானை மாதுலன் என்னும் பெயரால் வழங்கினார். மாதுலன் என்பது வடமொழியுள் தாயுடன் பிறந்தானுக்காவது. தாயுடன் பிறந்தானே மகட்கொடுத்தற்குரியனாதல் தமிழ்நாட்டுத் தொன்று தொட்ட வழக்கம்; "கண்போன்ற மாமன்மகள் கண்மணிப் பாவையன்னட் பெண்" [சிந்தாமணிப்பதிகம் 22] எனவருதலானுமுணர்க. இவ்வழக்குப் பற்றியே மாமன் என்பது தமிழில் தாயுடன் பிறந்தானுக்கும் மகட்கொடுத்தானுக்கும் பொதுவாக வழங்கப்படும்.
"மாமனானென்னு மதத்தா லுனையிகழ்ந்து, தோமுற்றார் தக்தனார் சோமேசா" என மாமனென்பது மகட்கொடுத்தாக்கானுயிற்று. இத்தமிழர் வழக்குப் பற்றியே மாதுலன் என்பதை மகட்கொடுத்தானுக்கு வழங்கினராவர்.
இங்ஙனமே கம்பர் முதனூற்கதைகளையும் தமிழர் சுவைக்கும் இயல்புக்கும் ஏற்ற பெற்றியாற்றிரித்தும் சேர்த்தும் விரித்தும் விடுத்துங் கூறியன பலவுள. இராமனும் சீதையும் மிதிலையில் வில் முறித்தற்கு முன்னே ஒருவரையொருவரைக் கண்டு விழைவு மிகுத்துக் காமத்தால் வருத்தினர் எனவைத்து வருணித்தல் முநிவர் உடன்படாதது "ஒத்த கிழவனும் கிழத்தியுங் காண்ப" (தொல்-கள-2) என்பதனாற் பிறப்பு முதலியவற்றானொப்புமையுடைய தலைவனுந் தலைவியும் ஒருவர் முயற்சியானன்றித் தனியெதிர்ப்பட்டு நோக்கெதிர் நோக்கி ஒருவருள்ளத்தொருவர்புகுந்து ஈருடற்கோருயிர்போல் இயையும் உழுவலன்பினையே தலையாய காமம் என்பது தமிழ் வழக்காதல் பற்றிக் கம்பர் அங்ஙனங் கூறினராவர்."அண்ணலு நோக்கினாவளு நோக்கினாள்" (மிதிலைக்காட்சி 35) "இருவரு மாறிப்புக்கிதய மெய்தினார்" (ஷெ 38) "ஒருங்கியவிரண்டுடற் குயிரொன்றாயினர்" (ஷெ 38) என இவர் ஓதியனபற்றியுணர்ந்து கொள்க. முநிவர் சூர்ப்பநகைக்கு மூக்கரிதலே கூறினராகவும் கம்பர் அம்மூக்குடன் முலையும் காதும் அரிதல் கூறுவர். "மூக்குங் காதும்மெம் முரண்முலைக் கண்களுமுறையாற், போக்கி" (சூர்ப்ப-64) "நங்கைநிருஞ் செவி முலையுமூக் குமரிந்தநாள்" (அங்கதப்படலம்) என வருதலானுமுணர்க.19 "முலையிரண்டு மில்லாதாள் பெண்காமுற் றற்று" என்பதும் "காதிரண்டுமில்லாதாள் ஏக்கழுத்தஞ் செய்தலும்"20 என்பதும் தமிழ்நூல் வழக்காதலால் முலையரித்து அவள் பெண்மையைக் குலைத்தும் காதரிந்து அவள் தலையெடுப்பினைத் தொலைத்தும் மூக்கரிந்து அவள் பிறர்முன் முகங்காட்டலை யொழித்தும் போக்கினர் என்றல் ஆண்டைக் கேற்பதேயாம்.
இராவணன் சீதையைத் தொடாமலே பன்னசாலையோடு பெயர்த்துக் கொண்டேகினான் எனக் கம்பர் கூறுவது முநிவர் கூற்றுக்கு மாறாம். அரக்கன் உலகுக்கொரு தாயைத் தொட்டிழுத்துச் சென்றான் என்பது பெருந்தமிழரான தம்பத்திக்கும் தந்நாட்டார் பேரன்பிற்குப் பொருந்தாதாதலின் அவ்வாறு க்க்றினார். சீதை இலங்கையிற் சிறையிருந்த காலத்து ஊண் துறந்திருந்தனள் என்பார் கம்பர்.
இந்திரன் நாளுந்தரும் பாயசத்தின் பகுதியை உண்டு உயிர் தரித்திருந்தனளென்றார் முநிவர். இதுவும் பத்தியான் மிகுத்துக் கூறியவாறாம். இங்ஙனம் சொல், பொருள், வழக்கு, கதை முதலியவற்றையும் தமிழுக்கியையக் கொண்டு இவர் கூறியன எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டப்புகின் மிக விரிஉமென்றுணர்க. சுருங்கவைத்து விளங்கவிரைக்கின் இவர் தமிழ் மாட்டுற்ற அளவிலன்பினால் தாமெடுத்துக் கொண்ட தெய்வக்கதையைத் தனி நாயகனான சீராமமூர்த்தியையும் தமிழ் முழுதுணர்ந்த தமிழறிவனாகக் கூறுவர். இதனை "தென்சொற் கடந்தான் வடசொற்கலைக்கெல்லை தேர்ந்தான்" (அயோத்தி-நகர் நீங்கு-140) என இவர் வழங்குதலாலுணர்க.
நச்சினார்க்கினியர் சிந்தாமணியுரையில் (குணமாலை-42) சாதாரண வரசராகிய விக்கிரமாதித்தனும், சீவகனும் முறையே எறும்பின் பாஷையையும் கரும்பின் பாஷையையும் உணர்ந்திருந்தனரெனக் கொள்ளுதலால் கல்வியிற்பெரியர் தெய்வவேந்தாகிய சீராமமூர்த்தியைத் தமிழ் வல்லவனாகவுங்கூறல் இழுக்காகாதென்க. எடுத்துக்கொண்ட கதாநாயகனைத் தமிழ்ச்சுவை அறியானாகக் கொண்டு அவனைச் செவ்விய மதுரஞ் சேர்ந்த நற்றிமிழால் துதிப்பதே இழுக்காமெனக் கொள்க. இவ்வாறு தமிழர் பண்பும் தமிழறிவும் ஓருருக்கொண்டாற் போன்ற இக்கல்வியிற் பெரியாருக்குத் தமிழைப்பற்றித் தனியே யுரைத்தற்கு அற்றம்வாயாவிடினும் அதன் பெருமையையும் அதன் தொன்மை வரலாறு முதலியவற்றையும் பற்றிச் சிறிதும் விளக்காமற் போயினாரில்லை.
இவர் பழைய தமிழ்ப் புலவர்களையும் அவர்களினிய கவிகளையும் அக்கவியின் சொன்னடை பொருளமைதிகளையும் அவற்றாலெய் துமின்பத்தினையுமே பலவிடத்தும் வாயாரப் புகழ்ந்து உயர்ந்த உவமையாகக் கூறுவர். "முத்தமிழ்த் துறையின் முறைபோகிய உத்தமக் கவிகள்"; (பாயிரம்) "துறைபடுத்த விருத்தத் தொகைக் கவிக்குறையடுத்த செவிகள் (ஷெ) "செவ்வியமதுரஞ் சேர்ந்தநற் பொருளிற் சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய கவிஞர்" (பால நகர்.1) "தென்னுண்டேனிற் றீஞ்சுவை செஞ்சொற் கவியின்பம்" (மிதிலை-23) "சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி" (சூர்ப்பந) "பாவருங் கிழமைத் தொன்மைப் பருணிதர் கொடுத்த பத்தி, நாவருங் கிளவிச் செவ்விநடை வருநடையள்" (நாடவிட்ட 64) என வருவனவற்றான் உய்த்துணரலாம்.
இவர் தாடகைபடலத்துத் "தமிழெனும் அளப்பருஞ் சலதி தந்தலன்" எனவும் அகத்தியப்படலத்து "நீண்ட தமிழ் வாரி நிலமேனி மிரவிட்டான்" 21எனவும் ஆறுசெல் படலத்து "எத்திறத்தினு மேழுலகும் புகழ் முத்துத்தமிழும்" எனவும் பம்பைப்படலத்துத் "தன்பாற்றழுவுங்குழல்வண்டு தமிழ்ப்பாட்டிசைக்குந் தாமரையே" எனவும் கூறினாராதலான் இவர் தமிழை அளத்தற்கரிய பெருங்கடலாகக் கொண்டு அது பல்வகையானும் பல்லுலகும் புகழத்தக்கதெனவைத்து அஃது இனிமையென்பதையே பொருளாக உடைத்தென்று காட்டி, அது வடமொழி போல் காடிந்நியம் உடையதின்றிக் குழைவே இயல்பாகவுடைத்தெறுரைத்துத் தமிழின் பெருமையை நன்கு விளக்கினார்.
இக்காலத்த்துப் புலவர் பல்பிறப்புத் தோறும் இடைவிடாமற் பயின்றாலும்எய் தற்காகாவென ஒரு தலையாகத் துணியப்படும் பெருங்கவியும் நுண்ணறிவும் அருங்கவித் திறனும் இயல்பிற் பெற்றுப் பாற்கடல் போலப் பல்லாயிரஞ் செய்யுட்களை இந்நிலவுலகில் நிமிர்ந்தேற விட்ட தெய்வப்புலவரே தமிழை அளப்பருஞ் சலதி எனவும் நீண்ட வாரி எனவும் உரைத்தருளுவரானால் அதனகலமும் ஆழமும் பெரும் பொருளமைதியும் யாமே யளத்தற்குரியேம். தமிழ்ப்பாஷை இரண்டு மூன்று வருஷத்துப் படிப்பின் முற்றுமென்று வாய்பிதற்றுவார் இவ்வரிய பெரியார் வாய்மொழிவழி நின்று சிறிது சிந்திப்பாராகுக.
அசரீரி, நாமகள், முருகக்கடவுள், சிவபிரான் முதலாகிய தெய்வங்களும் புகழ்ந்தோதிய பாடல்கள் நிறைதலால், தமிழ் பல்லுலகும் புகழ்வது எனக்கூறியது மிகையன்றாம். ஸ்ரீசடகோபராந் தெய்வக்கவிவாணர் "பாலேய் தமிழர்" எனப்பாடுதலால் தமிழின் இனிமையுங்குழைவுந் தூய்மையும் எளிதினறியத்தக்கதாம். இவ்வாறே சான்றோர் பலருந் தமிழைந் கூறுமிடனெல்லாந் தனியே கூறாமல் தட்பம், ஒட்பம், வண்மை, நறுமை, அருமை, பெருமை, இனிமை, செம்மை, பசுமை, நன்மை, விழுப்பம் முதலிய குணங்களாற் சிறப்பித்தே கூறுதலானும் இதனியல்புணரப்படும்.
இத்துணைக் குணங்களாற் சிறப்பிக்கப்படும் தீந்தமிழை ஒருசாரார் ஒன்றின் மரூஉமொழி என்பராலெனின் அது கல்வியிற் பெரியார்க்குக் கருத்தன்றாம் எனவுணர்க. அவர் அகத்தியப்படலத்து "என்றுமுள தென்றமிழ் இயம்பியிசை கொண்டான்" என்பதனால் தமிழை என்றுமுள்ளதென விளங்கவைத்தல் காண்க. ஒன்றினின்று மருவிய மரூஉவானால் இதற்குத் தனியே என்றுமுளதா தற்தன்மை யெய்தாதென்பது ஒருதலையாம். மற்று, இத்தமிழை இயம்பி இசைகோடலாவது எஞ்ஞான்றுமுளதாய் தமிழ்மொழிக்கு இலக்கணம் வகுத்துப்புகழ் பெறுதலாம் என்பது. புகழாவது குறுமுனியாகிய அகத்தியர் தமிழ்முனியெனச் சிறந்தோங்குதவாம். ஈண்டு "என்றுமுள தென்றமிழ்" எனவுரைத்து வைத்துமேல்,
"உழக்குமறை நாலினு முயர்ந்துலக மோதும்
வழக்கினு மதிக்கவி னினுமரபினாடி
நிழற்பொலி கணிச்சி மணிநெற்றியுமிழ் செங்கண்
தழற்புரை சுடர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான்."
என்பதனால் சிவபிரான் தந்தமிழ் என்பராலெனின் ஆண்டுச் சிவபிரான் தந்தது எனக் கூறியதும் தமிழிலக்கணத்தையேயாமென்க. சிவபிரான் தந்த தமிழிலக்கணத்தையே அகத்தியர் உலகிற்குத் தந்தார் என்பதே இதன் கருத்தாம். சிவபிரான் பாணினிக்குணர்த்தியதும் வடமொழி இலக்கணத்தையேயாகும். அதுபோல இதனையும் கொள்க. நான்மறையினும் உலகவழக்கினும் கவின்பெற நூலினும் முறைப்பட ஆராய்ந்து கடவுள் தந்த தமிழ் என்றதனாலும் அஃதிலக்கணமேயாவதறிக. நான்மறையினாராய்ந்தன - மொழிக்கு முதற்காரணம் எழுத்தென்றலும், அச்சும் அல்லுமாம். அவற்றின் வேற்றுமையும் கலப்பும் இயக்கமும் கருதி அவற்றிற்கு உயிரையும் உடலையும் உவமையாகக் கண்டு அங்ஙனமே குறியிடுதலும், அவற்றிற்குப் பிறப்பு வருணமுதலிய உணர்த்தலும், அவற்றிற்கு மாத்திரை காண்டலும், அவற்றிற்சிலவற்றிற்குப் புலுதங்கோடலும், அறம்பொருள் இனப்பகுதி கோடலும், நிலங்கட்குத்தெய்வங்கள் கூறலும், யாழோர் கூட்டமுடன்படலும், அந்தணர் அரசர் வணிகர் வேளாண்பக்கத்தியல்பு காட்டலும், அங்கடம் பிசி மந்திரம் வாய்மொழி முதலியன வகுத்தலும், பிறவும் ஆம். உலகவழக்கினாராய்ந்தன:- இயற்சொல் திரிசொல், செந்தமிழ்ச்சொல், கொடுந்தமிழ்ச்சொல், மரீஇயினசொல், மருவாமுதற்சொல், மங்கலச்சொல், இடக்கரடக்குக் குழூஉக்குறிச்சொல் முதலியனவும், மரபியலிற் முறித்தனவும், பிறவுமாம். மதிக்கவினினாடியன - தமிழ்நாட்டுத் தொன்றுதொட்டுக்கேள்வியான்வந்த அம்மானைவரி, ஊசல்வரி, குன்றங்குரவை, ஆய்ச்சியர் குரவை, வள்ளைப் பாட்டு, உழத்தில் பாட்டு, குறத்திப் பாட்டு, வெறிப் பாட்டு என்பன போன்ற பாடல்கள் பற்றி ஆராய்ந்தனவாம். மதி-நூல். அகத்தியனாராற் செய்யப்பட்டது மூன்று தமிழிலக்கணம் என அறியப்படுதலால் இம்மூன்றாகிய இயல், இசை, கூத்து எனப்பாகுபாடு செய்வதற்கேற்றவாறு, தமிழ் என்னும் பெயரிய மொழி அவரிலக்கணஞ் செய்வதற்கு முன்னே இருந்தவென்பது நன்கறியலாகும். இதனாற் சிவபிரான் திருவாய்மலர்ந்த தமிழிலக்கணத்தையே அகத்ஹ்டியர் முத்தமிழிலக்கணம் எனச்செய்து தொல்காப்பியர் முதலிய பன்னிரு புலவர்க்கும் அளித்தவாறு கூறிற்றாம்.
தொல்காப்பியனாரும் அம்முந்துநூல் கண்டு முறைப்படவெண்ணிப் புலர்ந்தொகுத்தோராதலால், தாம் அகத்தியர், வாயிலானுணர்ந்த அச்சிவபிரான் பரக்கவருளிய இலக்கணங்களினொருபகுதியையே சில்வாழ்நாட்பல்பிணிச் சிற்றறிவினர்க்கேற்றவாறு தொகுத்துச் சுருங்கவுரைத்தாரெனக் கொள்ளப்படும். இதுவே நல்லறிவுடைய தொல்பேராசிரியர்க்கும் கருத்தென்றுணர்க; அவர்,
தாயிற் சிறந்ததன்று நாண்டையலாருக்கந் நாண்டகைசால்
வேயிற் சிறந்தமென் றோளிதிண் கற்பின் விழுமிதன்றீங்
கோயிற் சிறந்துசிற்றம்பலத் தாடுமெங் கூத்தப்பிரான்
வாயிற் சிறந்த மதியிற் சிறந்த மதிநுதலே.
என்னுந் திருச்சிற்றம்பலக்கோவையுரையில் ("உயிரினுஞ் சிறந்தன்று" - தொல்காப்பியம் - களவியல் 22) என்றாராகலின் வாயிற்சிறந்த மதியிற் சிறந்த என்பதற்குத் தாய்போல நாண் சிறத்தலும் நாணிலும் கற்புச்சிறத்தலும் ஆகிய இரண்டும் கூத்தப்பிரான் வாயிற்சிறந்த நூல்களிடத்துச் சிறப்புடையப் பொருள் என்றுரைப்பினுமமையும்) என 'உயிரினுஞ் சிறந்தன்று நாணே' என்னுந் தொல்காப்பியத்தினை எடுத்தோதி அதனைக் கூத்தப்பிரான் வாயிற்சிறந்த நூலாகக் கொண்டு நாண் சிறத்தலும் கற்புச்சிறத்தலுமிரண்டும் அந்நூற்பொருளெனக் கூறுதற்குடன் பட்டதனாற்றெளிந்துகொள்க. இதனாலும் கூத்தப்பிரானருளியதிலக்கணமென்ப துணரப்படும். இனிக் கம்பர் நாடுவிட்ட படலத்தின்காண்,
"வடசொற்குந் தென்சொற்கும் வரம்பிற்றாய் நான்மறையு மற்றைநாலு
மிடைசொற்ற பொருட்கெல்லா மெல்லையதாய் நல்லறத்துக் கீறாய்வேறு
புடைசுற்றுந் துணையின்றிப் புகழ்பொதிந்த மெய்யேபோற் பூத்துநின்ற
வுடைசுற்றுந் தண்சார லோங்கியவேங் கடத்திற்சென் றுறுதிர்மாதோ".
"கோடுறுமால் வரையதனைக் குறுகுதிரே லுங்கொடிய கொடுமைநீங்கி வீடுறுதிர்" (26)
"பிறக்க முற்ற மலைநாடு காடி நகன்றமிழ்நாட்டிற் பெயர்தி மாதோ" (30)
"தென்றமிழ்நாட் டகன் பொதியிற் றருமுனிவன் தமிழ்ச் சங்கஞ் சேர்கிற்றீரேல்" (31)
என ஓதியபின்னரும் ஆறுசெல் படலத்துள்
"இருந்ததிற் றீர்ந்து சென்றார் வேங்கடத் திறுத்த காலை." (33)
"வலங்கொ ணேமி மழைநிற வானவ
னலங்கு தாளிணை தாங்கிய வம்மலை
விலக்கும் வீடுறு கின்றன மெய்ந்நெறிப்
புலங்கொள் வார்கட்கனையது பொய்க்குமோ?" (35)
"அனைய பொன்னி யகன்புன னாடொரீஇ
.......... ......... .......... ........... ...........
இனைய தென்றமிழ் நாடுசென் றெய்தினார்." (52)
"அத்தி ருத்தகு நாட்டினை யண்டர்நா
டொத்தி ருக்குமென் றாலுரை யொக்குமோ
வெத்திறத்தனு மேழுலகும்புகழ்
முத்துமுத்தமிழுந் தந்துமுற்றுமோ." (53)
எனவும் கூறுதலான் வடசொல், தென்சொல் இரண்டிற்குந் தனிப் பேரெல்லையாய் விளங்கியது, திருவேங்கடமலையென்றும், அம்மலை தன்னடைந்தார்க்கெல்லாம் வீடளிக்கவல்லதென்றும் அது வசக்கரத்துச் சக்கராயுதத்தைத் தரித்த மழைநிற வானவன் றிருத்தாளிணை தாங்கியதென்றும், சேர சோழ பாண்டிய நாடுகள் மூன்றினுள்ளும் சிறப்பித்துத் தமிழ் நாடென்பது பாண்டிய நாலாமென்றும் அந்நாட்டுப் பொதிய முனிவன் தமிழ்ச்சங்கம் ஒன்று முன்னே உண்டு என்றும் அந்நாடே பல்லுலகும் புகழ்கின்ற முத்தையும் முத்தமிழையுந் தந்ததென்றும் விளங்க வைத்தனராவர்.
திருவேங்கடம் வடசொற்குத் தெற்கெல்லையாகவும் தென்சொற்கு வடவெல்லையாகவும் இருப்பதென்று கருத்தாம். தொல்காப்பியப் பாயிரவுரையில் நச்சினார்க்கினியர் வடவேங்கடத்தை 'நிலங்கடந்த நெடுமுடியண்ணலைநோக்கியுலகந் தவஞ்செய்து வீடு பெற்ற மலை" என வுரைத்துள்ளார். அதுவும் "மால்வரையதனைக் குறுகுதிரேல் வீடுறுதீர்" எனவும் "மழைநிற வானவன் அலங்குதாளிணை தாங்கியவம்மலை விலங்கும் வீடுறுகின்றது" எனவும் ஓதிய பொருளையே தழுவி நிற்றல் நோக்கிக் கொள்க.
ஸ்ரீசடகோபரும் "திருவேங்கடநங்கட்குச் சமன்கொள் வீடு தருந்தடங்குன்றமே" எனப்பணிந்தருளினார். "வேங்கட மென்னு மோங்குயர் மலையத்துச்சிமீமிசை... நன்னிறமேக நின்றதுபோலச்....செங்கணெடியோ னின்ற வண்ணமும்" எனச் சிலப்பதிகாரத்துக் கூறியது கொண்டு "மழைநிற வானவன் தாளிணை தாங்கிய அம்மலை" என்றார் எனினுமமையும். ஆசிரியமாலை யுடையாரும்22 "புடையிது நெடுமால்வரைக் கப்புறம் புகினும்" எனவுரைத்தார். ஐயனாரிதனாரும்,
"வெறிகொ ளறை யருவி வேங்கடத்துச் செல்வி
னெறிகொள் படிவத்தோய் நீயும்--பொறிகட்
கிருளீயு ஞாலத் திடரெல்லா நீங்க
வருளீயு மாழியவன். (பாடாண்-(42))
என ஓதினார். பாரதம் பாடிய பெருந்தேவனாரும்,
தேனோங்கு நீழற் றிருவேங்கட மென்றும்
வானோங்கு சோலை மலையென்றுந்--தானோங்கு
தென்னரங்க மென்றுந் திருவத்தி யூரென்றுஞ்
சொன்னவர்க்கு முண்டோ துயர்"
எனப் பாடியருளினார். கம்பர் திருவாக்கு இப்பல்சான்றோர் கருத்தையுந் தழுவி விளங்குதல் கண்டுகொள்க. இனிக் 'காவிரிநாடன்ன கழனிநாடு' எனச் சோணாட்டை மேம்படுத்துரைக்கின்ற கம்பர் அதனை ஈண்டுத் தமிழ்பற்றிச் சிறப்பியாமற் பாண்டி நாட்டையே தென்றமிழ் நாடெனக் கூறி அதனைற் தமிழ்ச் சங்கத்தானும் முத்தமிழானும் புகழ்தலால் அதுவே செந்தமிழ் நாடெனக் கருதினராவரென உய்த்துணரப்படும். இவர் ஈண்டுக்குறித்த சங்கம் முதற்சங்கமாமென்பது "பொதியத்திருமுனிவன் தமிழ்ச் சங்கம்" என்றதனாலறியப்படும். ஈண்டுக்குறித்த சில கொண்டு இக்காலத்தார் கருத்துக்கும் அக்காலத்துக் கல்வியிற்பெரியார் கருத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை நன்குணர்ந்துகொள்க.
இனிக் கம்பர் சடகோபரந்தாதிக் கண்ணே,
சுவடிறக் கத்தொட ராசைக் களிற்றைத் தொடர்ந்திரண்டு
கவடிறக் கட்டிய பாசத் தளைக்கண் பரிந்துசங்கக்
குவடிறக் குத்திய மாறப் பெயர்க்கொலை யானைநங்காய்
இவடிறத் தொன்றும் படரந்தி வான மிருள்கின்றதே.
என்னும் பாட்டிற் சடகோபரைச் சங்கமாகிய மலைக்குவடு இடியக்குத்திய மாறன் என்னும் பெயருடைய கொலையானை எனக் கூறியுள்ளார். இதனால் சடகோபர் காலத்தே சங்கம் ஒன்றிருந்ததெனவும் அதனை அவர் வென்றனரெனவும் கம்பர் குறித்தனராவர்.
சடகோபர் சங்கம் ஒன்றை வென்ற கதை வைணவருக்குள்ளும் விளங்குகின்றது. அச்சங்கம் கூடலில் முந்நூறு புலவரையுடைத்தாயிருந்த தெனவும் அப்புலவரெல்லாம் வீற்றிருந்த தனிமரப்பலகை ஆழ்வாரருளிய ஒரு செய்யுள் வரைந்த ஓலையொன்றிற்கு இடந்தந்து வேறியார்க்கும் இடந்தராமற் றன்னுட்சுருங்கியதெனவும் அதுகண்டு புலவரெல்லாம் ஆழ்வாரைப் புகழ்ந்து பாடினரெனவும் கூறுவர்.
இதனுண்மை எவ்வாறோ எனக்கருதப்படுமாயினும், இவ்வரிய செய்தியின் குறிப்பு கல்வியிற்பெரியார் திருவாக்கினும் காண்டலால் இது முழுதும் பொய்யேயாமென நினைத்தற்கு இடமின்றாகிறது. இதெற்கேற்ப ஆழ்வார் திருநகரியினின்று கிடைத்த சில பழைய தமிழ் ஏடுகளில் "சங்கத்தார்க்கு ஆழ்வார் அருளிச்செய்த அகவல்" என்ற தலைப்பின் கீழ்
"அண்ட கோளத் தாரணு வாகிப்
பிண்டம் பூத்த பரெழி லொருமை
யீருயிர் மருங்கி னாருயிர் தொகுத்து
நித்திலத் தன்ன வெண்மணல் பரப்பில்
வேரும் வித்து மின்றித் தானே
தன்வலி யறியாத் தொன்மிகு பெருமர
மூவழி முப்பழ முறைமுறை தருதலி
னொன்றுண் டொண்சுவை தருவது மற்றது
கல்லி லெழுந்து கடலிலழுந்தி
யறுகாற் குறவ னீரற விளைக்கு
நிறைபொழிற் குப்பை தறுகட் பொன்றுவித்
தறுகோட் டாமா விளைக்கு நாட
னவனே தலையிலி யவன்மகண் முலையிலி
தானு மீனா ளீனவும் படாஅ
ளெழுவர் மூவர் சிறுவரைப் பயந்தன
ளவளிவ னவளென் றறித
றுகளறு காட்சிப் புலவரது கடனே"
என ஓரரும்பெருஞ் செய்யுள் காணப்படுகிறது. இதன் பொருள் பின்னர் கருத்தின்படி என்னால் விளக்கப்பட்டது. (அண்டகோள மெய்ப்பொருள் திருவல்லிக்கேணி வேத வேதாந்த வர்த்தினி மகாசபைப் பிரசுரம் 1934) இனி இச்சங்கப் புலவர்கள் முந்நூற்றுவர் எனக் கேட்கப்படுதலால் இச்சங்கம் முதல் மூன்று சங்கமும் இல்லையென்பது எளிதிலறியத்தகும். முன்னைமூன்று சங்கத்துக்கும் பின்னே வேறு சங்கம் உண்டோ என ஆராயுமிடத்துத் திகம்பர தரிசனம் என்னும் ஓர் சமயநூலின்கண் விக்கிரமசகம் 546-இல் (கி.பி. 470) பூச்சியபாதர் என்பாருடைய மாணாக்கருள் ஒருவராய் வச்சிரநந்தி என்பவரால் தென்மதுரையில் ஒரு திராவிட சங்கம் கட்டப்பட்டதென்று கூறப்பட்டிருத்தல் கேட்கப்படுகின்றது. 23 மதுரையில் இச்சைநர் தொகுத்த தமிழ்ச்சங்கம் கி.பி.470-முதல் எத்துணைக்காலம் நடைபெற்றதென அறியப்படாவிடினும், அது திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் காலத்துக்குப் பின்னும் ஆண்டிருந்ததெனக் கருதற்கு இடனில்லையாகும்.
அந்நாயனாரால் மதுரையிற் சைநர் கொலையுண்டது பல நூற்களாற்றெளிந்தது. அந்நாயனார் காலத்துப் பாண்டியன் நெல்வேலிவென்ற நெடுமாறன். அப்பாண்டியனுடன் நெல்வேலியிற் பொருதவன் நந்திபோதவன்மனுடைய சேனாதிபதியான உதயசந்திரன் என்பதும், நந்திபோதவன்மன் காலம் கி.பி.710 முதல் கி.பி.760 வரையாம் என்பதும் உதயேந்திர சாஸனத்தாலும் பிறசாஸனங்களாலும் உய்த்தறியப்படுகின்றன. இதனால் நெடுமாறனும் நந்திபோதவன்மனும் ஒருகாலத்தவராகத் துணியப்படுதலுடன் ஸ்ரீஞானசம்பந்தர் காலமும் அஃதாமெனக் கருதவுமாகும்.
அங்ஙனமாயின் மேற்குறித்த சைநர் தமிழ்ச்சங்கமும் கி.பி.470 முதல் கி.பி.760-வரைக்குமே இருந்ததாக வைத்துக் கொள்ளலாம். இக்காலந்தான் சைவர் சமணருடனும் சாக்கியருடனும் வாது செய்த காலமாகும். சடகோபர் "இலிங்கத்திட்ட புராணத்தீருஞ் சமணருஞ் சாக்கியரும், மலிந்து வாது செய்வீர்களு" மெனப்பணித்தலையும் ஈண்டைக்கு நோக்குக. இச்சங்கந்தான் கிளிவிருத்தம், எலிவிருத்த முதலிய நூல்களைத் தோற்றுவித்ததாகும்.
ஞானசம்பந்தர் காலத்துப் பின்னர்க் கூடலில் வேறுசங்கமுண்டென்பது எல்லாற்றானும் அறியப்படாமையாற் கல்வியிற் பெரியார் குறித்த ஆழ்வார் காலத்துச் சங்கம் இச்சைநசங்கமேயாமெனத் துணியப்படும். கம்பர் சடகோபரைத் "தெருளிற் கரும்பொக்கு மாயிரம்பாப்புண்டு செய்தவரே" எனப்பாடுதலால் ஆழ்வார் கம்பருக்கு மிக முந்திய காலத்தவராகக் கருதப்படுதலுங் காண்க.
இனி இக்கல்வியிற் பெரியாரால் மிகவுயர்த்திப் புகழப்பட்ட தமிழ் நூல்கள் இரண்டு எனத் தெரிகின்றது. அவை திருக்குறளுந் திருவாய் மொழியும். இவர் திருக்குறளை வேதமெனவும் திருவாய்மொழியினை உபநிடதம் எனவும் புகழ்வர்.
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வாற்மற் றெல்லாருந்
தொழுதுண்டு பின்செல்வ ரென்றேயித் தொல்லுலகி
லெழுதுண்டமறை சொன்னால்" (ஏரெழுபது) (16)
"தென்றலைத் தோன்று முபநிடத்தை யென்றீவினையை
நின்றலைத் தொன்று நியாய நெறியை நிறைகுருகூர்
மன்றலைத் தோன்று மதுரகவியை" (சடகோபரந்தாதி 62)
எனவருதலால் அறியலாம்.
இராமாவதாரம்
இது நம்நாட்டுள் மிகுதியாகப் பயின்றுவரும் சிறந்த தமிழ்க் காவியங்களுள் ஒன்று. இத்தமிழ் நூலை அறியாதார் ஒருவருமிராராயினும், ஈண்டுக்காட்டிய பெயர் மாத்திரம் பெரும்பாலார்க்குப் புதுமையாகத் தோன்றுமென்று நினைக்கின்றேன். அதன் காரணம் இக்காலத்து அந்நூல் வேறு பெயரான் வழங்கப்பட்டு வருதலேயாகும். இக்காலப்பெயர் "கம்பராமாயணம்" என்பதே.
கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பநாடார், தாம் சீராம கதையினை செந்தமிழ்த் தொடர்நிலைச் செய்யுளாக அமைத்த காலத்து 'இந்நூல் இவ்வாறு வழங்குக' என இட்டபெயர் இராமாயணம் என்னும் முதனூற் பெயர் அன்று; மேற்குறித்த இராமாவதாரம் என்பதேயாகும். என்னை?
"நடையி னின்றுயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவ தாரப்பேர்த்
தொடைநி ரம்பிய தோமறு மாக்கதை
சடையன் வெண்ணெய்நல் லூர்வயிற் றந்ததே."
என அவர்தாமே அந்நூற்கு அவ்வாறு பெயர் வழங்குதலால் என்க நம் மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்குக் கிடைத்த பழைய பாடல் காண்டப் பிரதி ஒன்றில் -
"இத்த லத்தினு மிராமாவ தாரமே
பக்தி செய்து பரிவுடன் கேட்பவர்
புத்தி மிக்கரும் புண்ணிய முந்தரு
மெத்த லத்து மவனடி யெய்துவார்."
என்னுஞ் செய்யுளொன்று உள்ளது. அதனாலும் கம்பர் இயற்றிய தொடர்நிலைச் செய்யுட்கு வழங்கிவந்த பெயர் இராமாவதாரமே என்பது நன்கு தெளியப்படும்.
தாமிட்ட அவ்விராமாவதாரப் பெயர், இராமபிரானது பிறப்பொன்றே விரிக்கும் நூல் என்னும் பொருள்படவும் நிற்றலான் இங்ஙனம் கொண்டு உலகம் மயங்காமைப் பொருட்டுத் திருமாலினது தசாவதாரங்களுள் ஒன்றாகிய இராமாவதாரத்து நிகழ்ந்த சரித முழுவதும் உணர்த்தும் நூல் என்பதே பொருளென்பார், "....நாயகன், தோற்றத் தினிடை நிகழ்ந்த விராமாவதாரப் பேர்த்....மாக்கதை" என்றார்.
இவ்வாறு ஒரு பெயர் வழக்குண்மை அறியாது சிலர் இராமாவதாரப் பேர் மாக்கதை என்பதற்கு 'இராமாவதாரத்தைக் குறித்த பிரசித்தமான கவித்தொடைகள் நிறைந்த குற்றமற்ற பெருமை பொருந்திய சரிதம்' எனப் பொருள் கூறினர்.
இது தவிர, அப்பெயர் கம்பநாடர் காலத்தன்றி, அவர் காலத்துக்குப் பின்னரும் வழங்கப்பட்டு வந்ததென்பதற்குமேல் உண்டோ வெனின்:- உண்டு. தான் எடுத்துக்காட்டும் தலைப்பில் அவ்வந்நூற்பெயரை எழுதி விளக்குவதும், பல அதிகாரவடைவுகளையுடையதுமாகிய 'புறத்திரட்டு' என்னுந் தொகை நூலுட் கம்பர் இயற்றிய தொடர்நிலைச் செய்யுளினின்றும் பல பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.
அங்ஙனம் அவையுள்ள இடங்களிலெல்லாம் இராமாயணம் என வேறு பெயராற் குறிக்கப்படாது, இராமாவதாரம் என்றே எழுதப்பட்டுள்ளது. அதனாற் புறத்திரட்டுத் தொகுத்தார் காலத்து அப்பெயரே வழங்கி வந்தமை நன்கு விளங்கும். இதுநிற்க.
இனி, அப்புறத்திரட்டு நூலுட் காணப்படும் இராமாவதாரச் செய்யுட்களுள்:-
"எய்தவின்னல் வந்தபோழ்தி யாவரேனும் யாவையுஞ்
செய்யவல்ல ரென்றுகொள்க செந்நெறிக்க ணேகிட
மையகண்ணி செய்யபாதம் வல்லவாய மற்றிவன்
கைகளின்று பன்னசாலை கட்டவல்ல வாயவே"
என்பதும் ஒன்று. இஃது அச்சுப்பிரதிகள் எவற்றினும் இல்லாதது. இப்புறத்திரட்டுச் செய்யுளுள் 'இவன்' என்றும் 'இன்று' என்றும் சுட்டப்பட்டிருத்தலால் இலக்குமணர் பன்னசாலை கட்டிய வரலாற்றினைக் குறித்த வேறுசில செய்யுள்கள் இருந்தனவாதல் பெறப்படும்.
அக்கதைத் தொடர்பு, அச்சுப்பிரதி அயோத்தியாகாண்டம் சித்திரகூடப்படலத்துள் 43-ஆம் செய்யுண்முதல் 48 வரை காணப்படுகின்றது. அன்றியும், "எய்தவின்னல்" எனும் புறத்திரட்டுச் செய்யுளின் கருத்தமைந்த செய்யுளால் அப்படலத்துள்:-
"மேவு கான மிதிலையர் கோன்மகள்
பூவின் மெல்லிய பாதமும் போந்தன
தாவி லெம்பிகை சாலை சமைத்தன
யாவை யாதுமி லார்க்கியை யாதவே."
என வேறு சந்தத்தில் உள்ளது. இச்செய்யுளும் மேற்காட்டிய 'எய்தவின்னல்' என்னுஞ் செய்யுளும் இருவேறு சந்தங்களில் அமைந்து பெரும்பான்மை பொருள் ஒத்து நிற்றலான், இவற்றுள் 'கம்பர் பாடல் இது' என ஒருதலை துணிதல் அரிதாயினும், புறத்திரட்டு தொகுத்தாரது பெருமையும் பழைமையும், அவர் நூலானும், இராமாவதாரமெனக் கம்பரிட்ட முற்காலப் பெயரையே வழங்குதலானும் தெளியக் கிடத்தலின், அவர் எடுத்தாண்ட செய்யுளே கம்பராற் செய்யப்பட்டதாமென ஊக்த்தல் ஆகும்.
அவ்வாறாயின், அவ்'எய்தவின்னல்' என்னும் பாடலும், அச்சந்தத்தில் வேறு பாடல் உளவாயின் அவையும் பிற்காலத்து நீக்கப்பட்டமையும், அவ்விடத்து 'மேவுகானம்' என்னும் வேறு சந்தங்கொண்ட பாடலும் மற்றுஞ் சிலவும் இடைச்செருகப்பட்டமையும் தெளிவாம். பரிபாடலுள் மிகைபடு பொருளை நகைபடுபுன்சொலில் தந்திடை மடுத்தும். சிந்தாமணி முதலாய முற்காலப் பெருங்காப்பியங்களுள் தஞ்செய்யுள்களை இடைச்செருகியும் போந்த கந்தியாரைப்போல, இடைக்கால இசக்கியங்களுள் இடைச்செருகிய வெள்ளி என்பார் காலத்தே இப்பிறழ்ச்சியும் நேர்ந்துள்ளது போலும்.
யாப்பருங்கல விருத்திகாரர் "பாதம் பலவரிற் பஃறொடை வெண்பா" (63) என்பதன் உரையில் "இன்னும் பலவடியான் வந்த பஃறொடை வெண்பா இராமாயணமும், புராண சாகரமு முதலாகவுடைய செய்யுட்களிற் கண்டுகொள்க" எனக் கூறுதலால் தமிழில் வெண்பாயாப்பிற் சீராம சரிதையை அமைத்து 'இராமாயணம்' எனப் பெயரிடப்பட்ட ஒரு நூல் முற்காலத்து இருந்ததாகத் தெரிகின்றது.
வீரசோழியவுரையிற் கண்ட சில பாடல்களின் பொருளை ஆராய்ந்தால், அவை சீராமகதையினைப் பற்றியன எனப் புலப்படும். அச்செய்யுள்கள் வருமாறு:-
"மற்றிவனை மாலென் றறிந்தாலவ் வாளரக்கன்
பெற்றி கருதுவதென் பேதையர்காண்-மற்றிவன்றன்
கண்டான் கடைசிவத்தற் குண்டோ கடலிலங்கை
வண்டா ரரக்கன் வலி.:
"ஐயிருப தோசனையு மாங்கோ ரிடமின்றிக்
கைபரந்த சேனைக் கடலொலிப்பத்-தையல்
வழிவந் திராமன் வடகரையா னென்றான்
விழிவந்து வேறாக மீட்டு."
(பொருட்படலம், "வேந்தன் சிறப்பு" என்னுங்கலித்துறையுரை.) இவை, அவ்விராமாயணச் செய்யுள்கள் போலும்!
கம்பர் காலம்
கம்பரது வரலாற்றால் அவரது காலம் இஃதாகுமென ஒருவாறு ஆராய்ந்து கொள்ளலாகும். ஆயினும் அதனைப் பலருந் தெளியுமாறு வெளிப்பட வைத்து விளக்கி ஈண்டுச் சில கூறுவேன். கம்பரது வரலாற்றால், அவர் சடையர்க்குயிர்த்துணைவர் எனவும் ஒரங்கலுருத்திரனாற் சிறப்பிக்கப்பட்டனரெனவும் தெரிதலோடு சடையவள்ளலுக்குச் சங்கரன் தந்தையெனவும் 24ஒட்டக்கூத்தர் அச்சங்கரனுக்கு முதலில் உதவித் தொழில் புரிந்து கொண்டிருந்தனரெனவும் தெளிதலுமாயிற்று. சங்கரசோழனுலா வுடையார்,
"கூடிய சீர்தந்த வென்றெடுத்த கூத்தனுலாச்
சூடிய விக்கிரம சோழனும்-பாடிய
வெள்ளைக் கலியுலா மாலையொடு மீண்டுமவன்
பிள்ளைத் தமிழ்மாலை பெற்றோனுந்-தெள்ளித்தன்
முன்னாய கரினவன் மூதுலாக் கண்ணிதொறும்
பொன்னாயிரஞ் சொரிந்த பூபதியும்"
என வுரைத்ததனாற், கூத்தர், விக்கிரமசோழன் முதலாக மூவர் சோழரைப் பாடினாரென்றறியப்படுதலின், அவர் அச்சோழர் மூவர் காலத்தவரென்பது நன்கறிந்தது.
அச்சோழர் மூவரும், விக்கிரமனும் அவன் மகன் குலோத்துங்கனும், அக்குலோத்துங்கன் மகன் இராசராசனும் ஆவரென்பது அக்கூத்தர் பாடிய மூன்றுலாக்களாலுந் தெளிந்தது. இவ்வுண்மை 'கூத்தருங் குலோத்துங்கன் கோவையும்' என்னும் ஆராய்ச்சியினும் நன்கு தெளிவிக்கப்பட்டதாம் (செந்தமிழ், தொகுதி-3, பக்கம்-194). புராதன சாசன ஆராய்ச்சியுடையார் பலரும் விக்கிரமன் கி.பி. ஆண்டு 1118 முதல் 1132 வரைக்கும், குலோத்துங்கன் கி.பி. ஆண்டு 1132 முதல் 1162 வரைக்கும், இராசராசந் கி.பி. ஆண்டு 1162 முதல் 1200க்கு மேற் சிலவாண்டுகள் வரைக்கும் அரசாண்டார்களெனக் கூறுவர்.
இதனாற் கம்பருக் குயிர்த்துணைவனான சடைய வள்ளலுடைய தந்தையாகிய சங்கரனுக்கு உதவித்தொழில் புரிந்து கொண்டிருந்த ஒட்டக்கூத்தர், கி.பி.1118-க்கும் கி.பி.1200க்கும் இடைப்பட்ட காலத்தே பெயர்சிறந்திருந்தவரென்று கொள்ளலாகும். விக்கிரமன் அரசாட்சிக்காலம் 14 ஆண்டேயாகக், கூத்தர் அக்காலத்தே புலமை நிரம்பினராகி அவனை உலாவாற் பாடினரென்பதால், அவர் அவ்விக்கிரமன் ஆட்சி செய்ததற்கு முன்னே பிறந்தவராதல் தெள்ளிதாம். கூத்தர், விக்கிரமன் அரசாட்சியினிறுதிக்காலத்தே தான் புலமை நிரம்பினராகி, அவனை உலாவாற் பாடினராவர் எனக் கூறுதலாகும். விக்கிரமனாட்சி 1132-க்கு மேற்படாமையால், கூத்தர் உலாப்பாடிய அவனாட்சியின் இறுதிக்காலம் 1130-க்கும் பிற்பட்டிருத்தல் பொருந்தாதாம்.
கூத்தர் விக்கிரமனை உலாப்பாடும்போது அவருக்கு வயது இருபதிற்குக் குறைந்திராதென வைத்துக்கொள்ளலாகும். விக்கிரம சோழன் கூத்தருக்கு முதன் முதல் பரிசில் பல நல்கிச் சிறப்புச் செய்தபோது அவர் 'இடுக்கட் புண்படு நிரப்புக் கொண்டுழன் றிரக்கச் சென்றவின் றெனக்குச் சிங்களந், திடுக்குற் றஞ்சும்வெஞ்சினத்துச் செம்பியன் றிருக்கைப் பங்கயஞ் சிறக்கத் தந்தன' என்பதனால் தம்வறுமைப்பட்ட நிலையை எடுத்துரைத்தலின், அக்காலம், குடும்ப வருத்தம் நெஞ்சிற்றோற்றி அதனைத் தீர்த்தற்கு அவர் உழன்றதோர் பெரும்பிராயகாலமாகுமென்றும் ஊகித்தல் கூடும். தமிழ் நாவலர் சரிதைக்கண் 25'கடித்தது நச்சரவு' என்னுஞ் செய்யுட்டலைப்பில் "சரசுவதி தம்பலங்கொடுக்கக் கவிதையுண்டாகிய கூத்தமுதலியார் அரும்பைத் தொள்ளாயிரம் பாடும்போது விக்கிரமசோழன் கேட்டு ஒரு கவியை ஒட்டச் சொல்லென்று சொன்னபோது பாடியது" என அமைந்திருத்தலால், கூத்தருக்குக் கவிதையுண்டாகிய காலம் என்பது விக்கிரமசோழன் ஆட்சிக்காலமே யென்பது அறியப்படும். கூத்தர் குலோத்துங்கன் ஆட்சிக்காலமாகிய முப்பதியாண்டையும் கடந்து இராசராசனது நெடிதாட்சிக் காலத்தின் முற்பகுதியின் பெரும்பாகத்தும் இருந்தாராவரென்று அறியப்படுதலால், அவர் விக்கிரமன் காலத்திற் கவிதையுண்டானவராகி அவனை உலாவாற்பாடியபோது, அதிகவயதாயினராகக் கொள்ளுதற்கும் இயையாதாம். இவற்றாற் கூத்தர் விக்கிரமனுலாப் பாடியபோது இருபது பிராயத்தினரெனவும் அது விக்கிரமன் இறுதியாட்சிக் காலமாகிய கி.பி.1130-க்கு அடுத்ததாமெனவும் கொள்ளின், கூத்தர் பிறந்த காலம் கி.பி.1110 எனக் கூறலாம்.
சடையவள்ளலுடைய தந்தையாகிய சங்கரனுக்கு உதவித் தொழில் புரிந்து கொண்டிருந்த கூத்தர் கி.பி.1110-ஆம் ஆண்டினை அடுத்துப் பிறந்தவரானால், கூத்தரை அத்தொழிற்கு அமைத்துக் கொண்ட சங்கரன் கூத்தரின் மிக மூத்தோனாவனென்று ஊகித்தலாகும். கூத்தர் சங்கரனுக்கு உதவித் தொழில் புரிந்தது அவருக்குக் கவிதையுண்டாததற்கு முன்னேயாம். அக்காலம் கூத்தருடைய இளமைக்காலமாகத் துணியப்படும். அன்றியும் கூத்தர் விக்கிரமனுலாவின்கண் அச்சோழனிருமருங்கும் 'மந்திரிகள், படைத்தலைவர், சிற்றரசர், பெருங்காணியாளர் எனப்பலர் மொய்த்தீண்ட உலாப்போந்தான்' எனக் கூறுமிடத்து விக்கிரமன் தந்தையாகிய அபயன்காலத்தேகலிங்கம் வென்று கொண்ட கருணாகரத்தொண்டைமான் முதலிய பலருடன்,
"...... ...... ...... மோட்டரணக்
கொங்கைக் குலைத்துக் குடகக் குவடொடித்த
செங்கைக் களிற்றுத் திரிகர்த்தனும்"
என்பதனால் திரிகர்த்தனைக் கூறுதலின், விக்கிரமசோழன் காலத்தே திரிகர்த்தனாகிய சடையன் சிறந்திருந்தனன் என்பது தெளியப்படும். சங்கரன் மகனான வெண்ணெய்ச் சடையனையே திரிகர்த்தன் என்பர் என்பது, 'இராமரொடும் பாமாலை சூடும் குலமுடையானை... ....வெண்ணெய்த்திரி கர்த்தனையே' எனவும் 26"பாரிலுள்ளோர் கண்ணாக வாழும் வெண்ணெய்த்திரிகர்த்தன்' எனவும் மேல்வரலாற்றுள் எடுத்துக்காட்டிய மேற்கோள்களால் நன்கறிந்தது. விக்கிரம சோழன் திருமருங்கும் மொய்த்தீண்டிய இப்பலர் வரிசையில்,
"....... ........ ........ மட்டையெழக்
காதித் திருநாடர் கட்டரணங் கட்டழிந்த
சேதித் திருநாடர் செல்வனும்"
என்பதனாற் சேதிராயனும் கூறப்பட்டுள்ளான். சேதிராயன் என்பான் சடையனுடனிருந்து கம்பருடைய ஏரெழுபதினைக் கேட்டவன் என்பதும் அவன் அவ்வரங்கேற்றத்திடையே பாம்பாற் கடியுண்டு, பின்னர்க் கம்பருடைய தெய்வவாக்கால் உயிர்ப்பிக்கப்பட்டான் என்பதும் முன்னை வரலாற்றாற் தெரிந்தனவாம். (செந்தமிழ், தொகுதி-3, பக்கம்-8) இச்சேதிராயன் காலத்தே திரிகர்த்தன் எனப்பட்டவன் சடையனல்லாமல் வேறில்லாமையால் விக்கிரமசோழ னுலாவிற் கூறப்பட்ட திரிகர்த்தன் சடையனே யாவனெனத் தெளிந்து கொள்க. இதனாற் கம்பர்பால் ஏரெழுபது கேட்ட சடையனும் சேதிராயனும் கூத்தர் விக்கிரமையுலாவாற்பாடும் போதே சிறப்புற்றிருந்தனராதல் அறியலாகும்.
இவ்விக்கிரமனுலாவிற் கூத்தர் சங்கரனைக் கூறாமற் சடையனையே கூறுதலால், அவர் விக்கிரமன் மேலுலாப் பாடும்போது சங்கரன் இறந்தனன் எனவும் சடையனே அக்குடியிற் தலை சிறந்த்தனன் எனவும் கொள்ளலாம். கூத்தருடைய இளமைக்காலத்தே அவரை உதவித் தொழிற்கு அமைத்துக்கொண்ட சங்கரன், அவர் புலமையெய்தி விக்கிரமனைப் பாடிய போது இல்லையாயினான் என்பதனால், அச்சங்கரன் இறந்தகாலம் கூத்தருடைய 16 பிராயத்திற்கும் 20 பிராயத்திற்கும் இடைப்பட்டதாகுமென்று உய்த்துணரலாகும். கூத்தர் பிறந்த காலம் கி.பி.1110 எனக் கொள்ளப்படுதலாற் சங்கரன் இறந்த காலம் கி.பி.1127ஆம் ஆண்டினை அடுத்ததாகுமென்று ஊகிக்கப்படும்.
கம்பர், சங்கரனுடைய இளையமகனும், சரராமனாகிய சடையனுக்குத் தம்பியும் ஆகிய இணையாரமார்பன் என்பானை 27என்னுடைய தம்பி சரராமனுக்கிளையான்... இணையாரமார்பனிவன்" என்று பாண்டியனுக்கு அறிவுரைத்தலாற் கம்பராற் றம்பியென்று சிறப்பிக்கப்பட்ட இணையாரமார்பன் பிறத்தற்கு முன்னே கம்பர் பிறந்தவராதல் தெளியப்படும்.
இதனாற் கம்பர் பிறந்த காலம் சங்கரன் இணையாரமார்பனைப் பிறப்பித்தற்கு முன்னேயாமெனத் தேறலாம். கம்பர் தெயவவரத்தினாற் கவிசொல்லிய நாளில் முதன் முதற் பாடிய 'மோட்டொருமை வாவிபுக' என்னும் வெண்பாவின்கண்ணே வெண்ணெய் நல்லூரை, "நாட்டில், அடையா நெடுங்கதவு மஞ்சலென்ற சொல்லு, முடையான் சரராமனூர்" எனவே கூறுதலாற் கம்பர் கவித்திறம் எய்தற்கு முன்னே சடையன் கொடைத் திறம்பயின்று சிறந்தனன் எனவும் அக்காலத்துச் சங்கரன் இல்லையாயினான் எனவும் துணியலாகும்.
கம்பர் கவித்திறமெய்தற்கு முன்னே சடையன் கொடையாற் சிறந்தனன் என்பதனாலும் கூத்தர் புலமை நிரம்பி விக்கிரமனைப் பாடும்போதே சடையனாகிய திரிகர்த்தன் சிறந்து விளங்கினன் என்பதனாலும் சடையன் கம்பருக்கு மூத்தோனாகக் கருதப்படுகின்றான்.28 அங்ஙனமாயின் கம்பர் பிறந்தது, சங்கரன் காலத்தே சடையன் பிறந்ததற்குப் பின்னும் இணையாரமார்பன் பிறந்ததற்கு முன்னும் ஆம் எனத் தெளியப்படும். கம்பர் கவித்திறம் எய்தற்கு முன்னே சங்கரன் இறந்துவிட்டனன் என்பதனாலும் கூத்தர் இளமைக்காலமெல்லாம் சங்கரனுக்கு உதவித் தொழில் புரிந்து கொண்டிருந்தனர் என்பதனாலும் கூத்தர் விளங்கிய விக்கிரமன் காலத்தே கம்பரும் புலமையாற் சிறந்தது புலப்படாமையாலும் கூத்தருக்கும் இளையராகவே துணியப்படுவர்.
கூத்தர் பிறந்தது கி.பி.1110-ஆம் ஆண்டினை அடுத்தும், சங்கரன் இறந்தது கி.பி.1127 ஆம் ஆண்டினை அடுத்தும் ஆதலின், கம்பர் பிறந்த காலமும் அந்த கி.பி.1110க்கும் கி.பி.1127க்கும் இடைப்பட்டதாகுமென்று தெளிந்துகொள்க. இந்நிலையிற் சடையனையும் கூத்தரையும் ஒத்த பிராயத்தினராகக் கொள்ளுதலும் அவ்விருவருக்கும் கம்பர் பத்து வருடம் இளையராகக் கருதுதலும் இழுக்காவாம். அவ்வாறு கொண்டு கருதிற் கம்பர் பிறந்தது கி.பி.1120-ஆம் ஆண்டினை அடுத்ததாமென உய்த்துணரப்படும். இதனாற் கம்பர் காலத்துக்கு முதலெல்லை சங்கரனது இறுதிக் காலத்தை யடுத்ததென்பதும், அதுவே விக்கிரமனது இடையாட்சிக் காலமென்பதும் உணர்ந்து கொள்க.
இனிக் கம்பருக்கு அடைப்பை கட்டிச் சிறப்புச்செய்த ஓரங்கல் உருத்திரன் காலத்தை யாராயுமிடத்து, ஓரங்கற் கணபதியரசர்களுள் இவ்வுருத்திரன் என்னும் பெயரினர் இருவரிருந்தமை காணப்படும்.
அவருள் ஒருவன் கி.பி.1162க்குச் சிறிதுமுன் முதல் கி.பி.1197க்குச் சிறிது பின்வரை அரசாட்சி புரிந்தனன் எனவும் மற்றொருவன் 29கி.பி.1288 முதல் கி.பி.1323 வரை அரசாண்டனன் எனவும் புராதனசாசன ஆராய்ச்சி செய்தார் கூறுவர். இவருள் பின்னோனாகிய உருத்திரன் காலந்தொட்டேதான் பிராதாபருத்திராப்தம் வழங்கியது.
இச்சங்கத்துள்ள சில பழையதமிழ் ஏடுகளில் அவ்வவ்வேடு எழுதப்புக்க (அல்லது எழுதி முடித்த) அப்தம் ஆண்டு திங்கள் நாள் முதலியவற்றை வரைந்த பிரதிகளும் உள்ளன.
இதன்கட் கூறப்பட்ட மற்றை அப்தங்களெல்லாம் இப்போது வழங்குவனவற்றோடு கணக்கிடுமளவிற் பொருந்தியனவேயாதலால் இதன் பிராதாபருத்திராப்தமும் உண்மையுடையதேயாமென நம்புதலாகும். இதன்கட்கண்ட சகாப்தம் முதலியவற்றாலிவ்வேடு நூற்றாறு வருடங்களுக்கு முற்பட்டதாமெனத் துணியலாம்.
அந்நூற்றாறினையும் 511-வருடத்துடன் கூட்டி நோக்கின் இப்போது பிராதாபருத்திராப்தம் 617 எனத் துணியப்படும். இந்த 617-வருடங்களையும் நிகழும் கி.பி.1905இல் கழித்தால் பிராதாபருத்திரன் காலம் கி.பி.1288 என்னலாகும். இதுவே, பின்னோனாகிய உருத்திரன் ஆட்சியெய்திய காலமாம்.
கம்பருக்கு அடைப்பை கட்டிய உருத்திரன் இப்பின்னோனாயின், கூத்தர் விக்கிரமனுலாப்பாடுதற்கு முன்னே இறந்த சங்கரன்காலத்தே இணையாரமார்பனுக்கு முன்னே பிறந்த கம்பர் (அது கி.பி.1120 அடுத்தது) கி.பி.1288க்குப் பிற்பட்டும் இருந்தாரெனப்பட்டுக் கம்பர் வாழ்நாள் 160 வருடங்களுக்கு அதிகமாகி இயற்கைக்கு மாறாகிப் பொய்யாகி விடும்.
முன்னோனாகிய உருத்திரனைப் பற்றி ஆராயுமிடத்து, அவன் பெயரிட்ட சாசனங்கள் கோதாவரி ஜில்லா திராக்ஷாராமா என்ற ஊரில் கி.பி.1179இல் அமைந்தது ஒன்றும் (Sewells List of Antiquities, Madras, Vol 1, p.31) கிருஷ்ணாஜில்லா குங்கலகுண்டா என்ற ஊரில் கி.பி.1197இல் அமைந்தது ஒன்றும் (Do. Do. p.71) 1162இல் அமைந்தது மற்றொன்றும் (Do. Vol.11, p.173) காணப்படுதலால் இவன் கி.பி.1162க்குச் சிறிது பின்னும் ஆட்சி புரிந்தவனாகக் கருதப்படுகின்றான்.
கி.பி.1120ஆம் ஆண்டினை அடுத்துப் பிறந்த கம்பர் கி.பி.1200க்கு மேற் சில்லாண்டிருந்தாலும், அது மக்கள் யாக்கைக்கு இயல்பாகிய ஆயுளைக் கடவாதாதலின் முதலாம் பிராதாபருத்திரனுடைய ஆட்சியின் இறுதிக் காலமாகிய கி.பி.1197இலும் கம்பர் இருந்து அவனால் அடைப்பை கட்டுஞ்சிறப்பப்ப் பெற்றனரென்பதில் விரோதமில்லையாம்.
இதனாற் கம்பருக்கு அடைப்பைக்கட்டினவன் முதலாம் உருத்திரன் எனவும் அவன் அவருக்கு அது புரிந்த காலம் கி.பி.1162க்கும் 1197க்கும் இடைப்பட்டதாகுமெனவும் கொள்ளத்தகும்.
இவற்றாற் கம்பருடைய காலத்ஹ்டிற்கு இறுதியெல்லை, முதலாம் உருத்திரனுடைய அரசாட்சியின் இறுதிக்காலமேயாமென்பதுணர்ந்து கொள்ளலாம்.
கி.பி.1162க்குப் பிற்பட்ட காலம் இராசராசன் காலமாதலால் கம்பர் ஓரங்கல் உருத்திரன்பாற்சென்று சிறப்பெய்தியதும், அவன் காலத்தேயாதல் ஒருதலையாம்.
இதனாற் கம்பரை முனிந்தவனும் கொன்றவனும் ஆகிய சோழன் இராசராசனே என்பதும் உய்த்துணரப்படும். இவன் காலத்தோடு சோழருடைய பேரரசாட்சி சிதைந்ததெனவும் பின் சிற்சில சிற்றரசர்களால் நாடு ஆளப்பட்ட போது ஓரங்கல் வேந்தர் படையெடுத்துச் சோணாட்டைக் கைப்பற்றிக் கொண்டு அதனை 14ஆம் நூற்றாண்டு வரை ஆண்டனரெனவும் புராதனசாசன ஆராய்ச்சியாற் றெரிகிறது (Sewells List of Antiquities, Madras, Vol 11, p.159). இதனாலே "என்பாட்டம்புநின் குலத்தைச் சுட்டெரிக்குமென்றே துணி" என்று கல்வியிற் பெரியரால் முனியப்பட்டவன் இவ்விராசராசனே யாவனென்று கொள்க.
கம்பர் இராமாயணம்பாடி அரங்கேற்றியதும் இவ்விராசராசன் காலமேயாகும். கூத்தர் தக்கயாகப்பரணி பாடிய காலமும் இவன் காலமேயாம். இவ்விராசராசன் காலம் கம்பருடைய 42 வயதுக்கு மேற்பட்டதாகலின் அதுவே இவரதுளத்தூய்மைக்கும் பத்தியொழுக்கங்கட்கும் உலகியலுணர்ச்சிக்கும் வீட்டுநெறி விழைவுக்கும் ஏற்றதாகும்.
கி.பி.1162க்கு முன்னெல்லாம் இவரது யெளவனகாலமாம். அக்காலங் குலோத்துங்கன் காலமே. அக்காலத்தே தான் இவர் வல்லியை விழைந்ததும் ஏரெழுபது பாடியதும் மும்மணிக் கோவை பாடியதும் ஆம். இவரது கவித்திறத்துக்கு உவந்து இவருக்குப் பெருஞ்சிறப்பெல்லாஞ் செய்தவன் குலோத்துங்கன் ஆவன்.
அவன் இவருடைய 42ஆம் பிராயத்தோடு இறந்தனன். இதன் பின்னேதான் 'இராமாயணமென்னும்பத்தி வெள்ளம்' கம்பருடைய அறிவுடை நெஞ்சிற் குடிகொண்டதாகும்.
இனி, "எண்ணிய சகாத்த மெண்ணூற் றேழின்மேற் சடையப்பன் வாழ்வு, நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்பநாடன், பண்ணிய விராம காதை" என்பதனாற் கம்பர் இராமாயணம் பாடியரங்கேற்றிய காலம் சகாப்தம் 807-என்று கூறுதலாற் கம்பர் காலமே மேற்காட்டிய காலத்துக்கு 1200-வருடம் முற்பட்டதன்றோவெனிற் கூறுவேன். சகாப்தம் 807-என்பது கி.பி.885 ஆகும்.
அது விக்கிரமன் காலத்துக்கு நெடுதூரமானது. அங்ஙனமாயின் அஃது ஒட்டக்கூத்தர் காலமும் அன்று. கூத்தர் காலமன்றாயிற் சங்கரன் காலமுமன்று. சங்கரன் காலமன்றாயிற் சடையன், சேதிராயன் காலமுமன்று. சடையன், சேதிராயன் காலமன்றாயிற் கம்பர் காலமுமன்றாம். ஓரங்கலுருத்திரன் காலமும் இஃதன்றாதல் கூற வேண்டா. இங்ஙனம் கம்பர் காலத்தவராகத் தெளியப்பட்ட வேறு பலர் காலங்கட்கும் இக் கி.பி.885 பொருந்தாதாதலின் அது கம்பருக்கும் பொருந்தாதென்பது ஒருதலை.
மேற்காட்டிய பிரபல பிரமாணங்களாற்றெளியப்பட்ட கம்பர் காலத்தோடு பொருந்த வைத்து நோக்கின், இந்த 'எண்ணியசகாத்தம்' என்ற செய்யுள் சிறிது பாடம் பிழைத்ததென்றேனும் வேறொரு பொருளுடைய தென்றேனும் கருதப்படும். பாடம் பிழைத்தலாவது 'எண்ணிய சகாத்தம்' என்ணூற்றேழின்மேல் எனவிருந்ததை "எண்ணிய சகாத்தம் எண்ணூற்றேழின்மேல்" எனக் கொண்டதாம்.
அஃதாவது 'எண்ணிய சகாத்தம், என்கின்ற நூற்றேழின் மேல்' என்றவாறாம். ஆயிரம் என்ற பேரெண்ணையொழித்துக் கொல்லமாண்டு முதலியவற்றை 80ஆம் ஆண்டு என்பது முதலாகச் சிற்றெண்ணையே வழங்கல் இக்கால வழக்காதல் போலப் பண்டும் சகாப்தம் ஆயிரத்து நூற்றேழினைச் சகாப்தம் நூற்றேழென வழங்கியதென்க. இனி வேறொரு பொருள் பெறுதலாவது "எண்ணிய சகாத்தம் எண்ணூற்றேழின்மேல்" என்ற பாடமே 'கருதிய சகாத்தம் எண்ணப்பட்ட நூற்றேழின் மேல்' என்ற பொருள் படுதல்.
இவ்விரு வகையினும் ஆயிரமாகிய பேரெண்ணையொழித்து உலகவழக்கு நெறியே தழுவிச் சிற்றெண்ணானே கூறியதாமெனக் கொண்டால், சகாப்தம் 1107 என்பது கி.பி.1185ஆம் ஆண்டாம். இந்தக் கி.பி.1185ஆம் ஆண்டு கம்பருக்கு 65ஆம் பிராயமெனக் கொள்ளப்படுமாதலின் அது கம்பர்காலமேயாதல் தேறப்படும்.
இந்த 'எண்ணிய சகாத்தம்' என்ற செய்யுளை இவ்வாறு இணங்கிக் கொள்வது, மேற்காட்டிய உண்மைப் பிரமாணங்களோடு பொருந்த நோக்குமிடத்து உசிதமேயாகும். அன்றியும் இஃது 30"இராமாயணமெனும் பத்தி வெள்ளங் குடிகொண்ட கோயி"லாகிய இராமாநுஜமுனிவர் நிலைநாட்டிய வைணவம் தழைத்தோங்குகின்ற காலமுமாம்.
அக்காலத்தே தான் ஞானபூரணரான ஸ்ரீசடகோபரது குணாநுபவம் செய்யும் அடியாரும் பகவரும் மிக்கனராவர். கம்பர் சடகோபரந்தாதிக் கண்ணே "கூட்டங்கடோ றுங் குருகைப் பிரான்குணங் கூறுமன்பர் ஈட்டங்கடோ றும் இருக்கப்பெற் றேமிருந் தெம்முடைய, நாட்டங்க டோ றும் புனல் வந்து நாலப்பெறேம்" எனப்பாடுதலால் இவர் காலத்தே பெரிய கோயிற்கண்ணே கூட்டம் கூட்டமாகக் குருகைப்பிரான் குணாநுபவம் பண்ணும் பரமபக்தர்கள் மிக்கிருந்தனரெனவும், அத்திருக்கூட்டத் தோடெல்லாம் தாமும் உடன் இருக்கப் பெற்றார் எனவும் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கினாரெனவும் அறியப்படும். இங்ஙனம் கம்பர் குருகைப்பிரானார் திருவடிகளில் ஈடுபடுதற்கேற்ற காலம் அதுவேயாமென நோக்கிக் கொள்க. ஈண்டுக்காட்டிய கி.பி.1185ஆம் ஆண்டு இராசராசன் ஆட்சியின் இடைக்காலமாதல் ஆராய்ந்து கொள்க.
இனி இவர் இராமாவதாரத்து "சென்னிநாட்டெரியல் வீரன் தியாகமாவிநோதன் தெய்வப், பொன்னிநாட்டுவமை வைப்பை"31 எனக் கூறிய விடத்துச் சென்னியாகிய சோழனொருவனை 'வீரன்' என்னும் பெயரால் வழங்கியுள்ளார். கூத்தர் இராசராசனுலா விறுதியிற் பாடிய,
"அன்று தொழுத வரிவை துளவணிவது
என்று துயில்பெறுவ தெக்காலந்-தென்றிசையி
னீரதிரா வண்ண நெடுஞ்சிலையை நாணெறிந்த
வீரதரா வீரோத யா."
என்னும் வெண்பாவிலும் இராசராசனுக்கு வீரசப்தமே பெயராகப் பயின்றுள்ளது. இவனை வீரராசராசன், வீரராசேந்திரன் எனவும் வழங்குவரெனத் தெரிகின்றது. இதனாலும் கம்பர் இராமாயணம் பாடிய காலத்தவன் இராசராசனென ஊகித்தலாகும்.
கம்பர் இராமாவதார இறுதியில் "அறைபுகழ்ச் சடையன்வாழி அனுமனெப்போதும்வாழி" என வாழ்த்துக் கூறுதலாற் சடையன் அவர் இராமாயணம் பாடி முடித்த காலத்தும் இருந்தனன் என்று கொள்ளப்படும். கூத்தர் உத்தரராமாயணம் பாடிய காலமும் அதுவாம். அக்காலத்துச் சடையற்கும் கூத்தருக்கும் 75 வயதாமெனக் கொள்ளலாகும்.
இனி "ஆவின் கொடைச்சகர ராயிரத்து நூறொழித்து" என்னும் வெண்பாவினை வைத்து நோக்கின் கம்பர் இராமாயணம் பாடியது சகாப்தம் 1100 (அஃதாவது கி.பி.1178) எனத் தெரியலாகும். அஃது 'எண்ணிய சகாத்தம்' என்ற செய்யுளாற் கொள்ளப்பட்ட சகாப்தம் 1107க்கு (அஃதாவது கி.பி.1185க்கு) ஏழுவருடம் முற்பட்டதாமெனக் கருதப்படும். 'எண்ணிய சகாப்தம்' என்ற செய்யுள் அரங்கேற்றக் காலமாக வைத்துக்கொண்டால் கம்பர் இராமாயணம் பாடிமுடித்த காலம் அவ்வரங்கேற்றத்திற்கு 7 வருடம் முற்பட்டதாமெனத் தேறலாம்.
இங்ஙனம் பல்லாற்றானோக்கினும் கம்பர் காலம் 1120க்கும் 1200க்கும் இடைப்பட்டதலால் கண்டு கொள்க.
திருத்தக்கதேவரும், கம்பரும்
இருவரும் யாத்த காவியம்
இவர்கள் இருவரும் தமிழிற் பெருங்காப்பிய நூல்கள் இயற்றி மிகச்சிறந்த புகழ்படைத்த புலவர் பெருமக்களாவர். துறையடுத்த விருத்தத் தொகைக்கவிகளாற் றொடர்நிலைச் செய்யுளை வளம்பெறப் பாடுதலில் இவர்களுடைய பேராற்றல் அளத்தற்கு அரியதேயாகும். இவருள் திருத்தக்கதேவர் பாடியது சீவகசிந்தாமணி என்பது. கம்பர் பாடியது இராமாவதாரமென்பது. இவ்விரு பெரும் புலவர்களுடைய அறிவின் ஒற்றுமை வேற்றுமைகளை ஆய்ந்தறிதற்கு இவ்விரண்டு நூல்களுமே உற்ற கருவிகளாவன.
சீவகன் கதையும், ராம் காதையும்
சீவகன் கதைக்கும் சீராமகாதைக்கும் சரிதையினியல்பு பற்றி நோக்குமிடத்துச் சிறிய உவர்க்குட்டத்துக்கும் பெரிய பாற்கடற்குமுள்ள வேற்றுமை புலனாகும். சீவகன் கதையாண்டுஞ் சிற்றின்பமே பெரும்பாலும் பயின்று வருகின்றது. சீராமகாதை அறம் பொருளின்பம் வீடு என்னும் நாற்பொருளும் மலிந்து இயல்வது. இக்காப்பியங்களின் தலைவர்களை நோக்குமிடத்துச் சீவகன் பல தாரங்களை மணந்தவனாவான்; சீராமமூர்த்தி ஏகதார மகாவிரதனாவான். சீவகசரிதையில் இரண்டோ ரிடங்களில் வாழ்வுந் தாழ்வுங் கலந்து இன்பச்சுவையும் துன்பச்சுவையும் காணப்படினும் பெரும்பாலும் கதையினைச் செல்வ வாழ்க்கையிலே கொண்டு செலுத்த சுவையின்றாவது. சீராமகாதைக்கண் யாண்டும் வாழ்வுந்தாழ்வும் பற்றி இன்பமும் துன்பமும் விரவிவருதலிற் சுவை மிகுதி பயக்கின்றது. இன்னோரன்ன சரித்திரவியல்புபற்றி இவ்விரண்டு நூல்களுக்குள் உயர்வு தாழ்வு காண்டல் எளிதேயாகும். ஆதலால் சரித்திரவியல்பினை எடுத்து இவ்விரு பெருங்காப்பியங்களையும் நன்றியற்றிய இவ்விரு நூலாசிரியர்களுக்குள் புலமைத்திறன் பற்றியுள்ள ஒற்றுமை வேற்றுமைகளையே யான் இவ்விடத்தாராயப்புக்கேன்.
புலமைத்திறன்
இவ்விரு புலவர்களும் காலத்தானுங் கொள்கையினானும் வேற்றுமைப்பட்டவர்களேயாயினும் புலமை எய்தியது தமிழ்க்கல்வியிலே யாதலால் இவர்கள் அம்மொழியில் கற்ற பெருநூல்களெல்லாம் பழைய சங்கநூல்களே யாகுமென்று துணியலாம். இவ்விருவர் வாக்கிலும் திருக்குறள், புறநானூறு, அகநானூறு முதலிய பழைய நூல்களின் அரிய வழக்குகள் பல விரவியிருத்தலானே ஈதறியப்படும். இவ்விருவரும் எடுத்தாண்ட சங்கநூல் மேற்கோள்களை இங்கு ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டப்புகின் மிக விரியுமாதலால் ஒரு சிலவே கூறிச்செல்வேன்.
சிந்தாமணியும் திருக்குறளும்
சிந்தாமணிக்கண்,
"வேட்டார்க்கு வேட்டனவே போன்றினிய வேய் மென்றோள்" (குணமாலை-192) என்பது
"வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோட்டார் கதுப்பினா டோ ள்" (1305) என்னும் திருக்குறளையும்;
"கண்ணிலா லின்று கண்டாங் கூற்றினைக் காமர் செவ்வாய்
.... ..... ..... ....... ......
பெண்ணுடைப் பேதைநீர்மைப் பெருந்தடங் கண்ணிற்றம்மா" (இலக்கணை-81) என்பது
"பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு" (1083)
என்னும் திருக்குறளையும் கொண்டு வந்தனவாதல் அறிக. இவ்வாறு முழு முழுத் திருக்குறளைக் கொண்டுவருவன இந்நூலுண் மிகப்பலவாகும். இவையன்றி ஒவ்வொரு திருக்குறளில் குறித்த உவமை பற்றி வருவனவும் பலவுள.
"பெரும்பார வாடவர்போல் பெய்பண்டந் தாங்கி" (முத்தி-186)
எனப்பகட்டிற்கு ஆடவரை-உவமித்தது "மடுத்த வாயெல்லாம் பகடன்னான்" (திருக்குறள்-624) என்பது கொண்டு என அறிக. "போதுவாய் திறந்தபோதே பூப்பொறி வண்டு சேர்ந்தால், கூதுமே மகளிர்க் கொத்த போகமு மன்னதொன்றே" (கேமசரி 379) என்பது "மலரினு மெல்லிது காமம்" (1289) என்னும் திருக்குறள் கருத்தினை விளங்கவுரைத்ததாம்.
"வாய்ப்படும் கேடு மின்றாம் வரிசையினரிந்து நாளும்
காய்த்தநெற் கவளத் தீற்றிற் களிறுதான் கழனிமேயின்
வாய்ப்பட லின்றிப் பொன்றும் வல்லனாய் மன்னன் கொள்ளின்" (முத்தி-309) என்பது
"சாய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
மாந்தை வில்லதும் பன்னாட் காகு
தூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினே
வாய்பகு வதனினும் கால்பெரிது கெடுக்கு
மறிவுடை வேந்த னெயறிந்து கொளினே" (184)
என்னும் புறப்பாட்டையும்;
"நெல்லுயிர் மாந்தர்க் கெல்லா நீருயி ரிரண்டு செப்பில்
புல்லுயிர்...........மன்னர்கண்டாய் நல்லுயிர்.............." (முத்து-310) என்பது
"நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே
மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம்" (186)
என்னும் புறப்பாட்டையும் கொண்டு வந்தன. இவைபோல வந்தன பிறவும் கண்டுகொள்க.
இராமாவதாரத்தில் திருக்குறள்
இனி இராமாவதாரத்தில்,
"ஊருணி நிறையவு முதவு மாடுயர்
யார்கெழு பயன்மரம் பழுத்தன் றாகவும்
கார்மழை பொழியவும் கழனி பாய்நதி
வார்புனல் பெருகவு மறுக்கின் றார்கள் யார்"
(அயோத்தி-மந்திரம்-82) என்பது
"ஊருணி நீர் நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் றிரு" (215)
"பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வ
நயனுடைய யான்கட் படின்" (216)
"கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றும் கொல்லோ வுலகு" (211)
என்னும் திருக்குறளையுட்கொண்டு எழுந்தது என்று துணியத்தகும். பேரறிவாளனும், நயனுடையானுமாகிய இராமன் அரசுச் செல்வம் எய்தல் ஊருணி நிறைதல் போலவும் பக்கத்துயர்ந்த பயன்மரம் பழுத்தது போலவும் கார்மழை பொழிதல் போலவும், கழனி பாய்ந்து பெருகல் போலவும் எல்லாரானும் தத்தமக்கு வரும் நன்மையாகக் கொண்டு விரும்பப்படும் என்றதாம். இதன்கண் நதிபெருகலொழித்து மற்றை மூன்றும் திருக்குறளைக் கொண்டு நின்றன.
"மானநோக்கில் கவரிமாவனைய நீ ரார்" (அயோத்தி-மந்திரம்-7) என்பது
"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னா
ருயிர்நீப்பர் மானம் வரின்"
என்னும் திருக்குறளைக் கொண்டு வந்தது.
"உரைசெயற் கெளிதுமாகி யரிதுமா மொழுக்கினின்றான்" (கிட்கிந்தை, அரசியல்-44) என்பது
"சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ்
சொல்லிய வண்ணஞ் செயல்" (664)
என்னும் திருக்குறளைக் கருதி வந்தது. இதன்கண் உரைசெயற்கு என்பதனை ஒரு சொல்லாகக் கொள்ளாது உரைக்கு செயற்கு எனப் பிரித்து உரைக்கு எளிதுமாகிச் செயற்கு அரிதுமாம் என இயைத்துரை கொள்க.
"கொடுப்பது விலக்குகொடி போயுனது சுற்ற
முடுப்பதுவு முண்பதுவு மின்றிவிடு கின்றாய்" (பால-வேள்வி-33) என்பது
"கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉ
முண்பதூஉ மின்றிக் கெடும்" (165)
என்னுந் திருக்குறளைப் பற்றி வந்தது. இவைபோல வந்தன பலவுள. கம்பர் திருக்குறளை "எழுதுண்டமறை" என்று வழங்கலால் அவருக்கு அந்நூற்கண் உண்ண நன்மதிப்பினை எளிதிலறியலாகும்.
சங்கத்தமிழும், கம்பரும்
இனிக் கிட்கிந்தாக்காண்ட கார்காலப்படலத்து
"காலமறி வுற்றுணர்தல் கன்னலள வல்லான்
மாலைபக லுற்றதென வோர்வரிது மாதோ" என்பது
"நிலனும் விசும்பு நீரியைந் தொன்றிக்
குறுநீர்க் கன்ன லெண்ணுத ரல்லது
கதிர்மருங்கறியா தஞ்சுவாப் பாஅய்த்
தளிமயங் கின்றே தண்குர லெழில்" (43)
என்னும் அகப்பாட்டினையே கருதிவந்தமை கண்டுகொள்க. கம்பர் கன்னல் என்றது குறுநீர்க்கன்னலை. குறுநீர்க்கன்னல் என்பது அளவுபட்ட நீரினையுடைய நாழிகை வட்டில்; ஒரு கடாரத்து நீரிலே ஒரு நுண்ணிய துளையுடையதோர் வட்டிலையிட்டு அதன்கண் நீர் புகுவதுபற்றி நாழிகையளப்பதோர் கருவியாகும்.32 சூர்ப்பநகைப் படலத்து,
"சேற்றவளை தன்கணவ னருகிருப்பச் சினந்திருகிச்
சூற்றவளை வயலுழக்குந் துறைகெழுநீர் வளநாடா"
என்பது
"கதிர்கோட்டு நந்தின் சுரிமுக வேற்றை
நாகிளந் தவளையொடு பகன்மணம் புகூஉ
நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல்" (296)
என்னும் புறப்பாட்டைக் கொண்டு கூறியதென்றுணரப்படும். புறப்பாட்டுரையாசிரியர் இப்பாடத்தினை எடுத்தோதி "நந்தி னேற்றை நாகிளந் தவளையுடனே தத்தம் இனத்தோடு புகன்மணம்புகூஉம் எனினுமமையும்" என்றார். இவ்வுரைக்குத் 'தத்தமினத்தொடு' பாடத்திலில்லாமல் வருவித்ததாம். இங்ஙனம் வருவித்துரையாது இப்பாடத்தின் நேர்பொருளே கொண்டு கம்பர் கூறியுள்ளாரென்று துணியப்படும். இவ்வாறு சங்கநூல் வழக்குப்பற்றி வருவன இராமாவதாரத்து மிகப்பலவாகும். இவற்றால் திருத்தக்க தேவருக்கும் கம்பருக்கும் சங்கம் மருவிய பழைய பெருநூல்களிலெல்லாம் நல்லதேர்ச்சியுண்லென்றுணரலாம்.
கம்பர்க்குற்ற ஏற்றம்
பண்டைத்தமிழ் நூற்பயிற்சி இருவர்க்கும் ஒத்ததென்று துணியப்பட்டவிடத்தும் கம்பருக்கும் சிந்தாமணியாரினுஞ் சிறந்ததோரேற்றமுள்ளது. அஃதாவது கம்பர் சிந்தாமணியார் பேரறிவையும் நன்கறிந்தவராவார். சிந்தாமணியார் கம்பருக்கு முற்பட்ட காலத்தவராதலால், சிந்தாமணியாரோ கல்வியிற் பெரியாராகிய கம்பரது விழுப்பேரறிவையறியார். கம்பர், சிந்தாமணி தமிழ்மக்களாற் பெரிதும் போற்றப்படுதலைக் கண்டுவைத்து அதனினுஞ் சிறக்கவே ஒரு பெருங்காப்பியஞ்செய்து புகழ்பெற வேண்டுமென்ற ஊக்கத்துடனே இராமாவதாரத்தைப் பாடியிருப்பார். இவர் காலமோ சிந்தாமணியையே அரியபெரிய காப்பியமாகப் போற்றிப் படித்த காலமாகும். அன்றியும் இவர் காலம் செயங்கொண்டார், சேக்கிழார் நாயனார், புகழேந்தியார், ஒட்டக்கூத்தர் முதலிய கவிவேந்தர்களெல்லாம் பெரிய பெரிய நூல்கள் பாடி அழியாப்புகழ் நிறுத்திய காலமாம். கம்பர் இவர்கள் அறிவையெல்லாமும் அளந்தறிந்து கொண்டவருமாவர். அளக்கலாகா இயற்கையறிவின் மாட்சி நன்கு பெற்ற ஒருவருக்குப் பல பெரிய புலவர்களின் புலமையையும் அளந்து க்ண்ட செயற்கையறிவும் நன்கு கூடுமாயின் அவருக்கு அரியவாவனயாவை? "மதிநுட்ப நூலோடுடையார்க் கதிநுட்பம், யாவுன முன்னிற் பவை" என்பது பொய்யாமொழியன்றோ?
சிந்தாமணியினும் சிறக்கப் பாடுதல்
இதனேற்றிருத்தக்க தேவர்க்கும் கம்பருக்கும் நூலான் எய்திய செயர்கையுணர்விலுஞ் சில வேற்றுமையுண்டென்று கொள்ளப்படும். மற்றுக்கம்பர் திருத்தக்கதேவர் கவிகளையும் நன்றறிந்தவர் என்றற்குச் சான்று என்னையெனின் இராமாவதார நூற்கண்ணே சிந்தாமணிச் சொல்லும் கருத்தும் ஆங்காங்குப் பயின்றிருதலேயாமென்க. கம்பர் சிந்தாமணிக் கருத்தை எடுத்தாளுமிடங்களிலெல்லாம் அந்நூற்கண் உள்ளவாறே கூறியொழியாது தாமெடுத்தாளப்புகுந்த ஒவ்வொரு கருத்தையும் முன்னதினுஞ் சிறக்கப் புனைந்து பல அழகும் ஒருங்கு பெறப்பாடுவரெனவறிக. சிந்தாமணியார் கருத்தும் கம்பர் பாற்பட்டு இனிய சுவையுடைத்தாமென்று கொள்க. இவ்வாறு வந்தன பலவற்றுள் ஈண்டுச் சில கூறுவல்.
குவளை மலர்ந்த தாமரை
கம்பர் ஆரணியகாண்டத்து மாரீசன்வதைப் படலத்து,
"ஆற்றாகிற்றம்மைக் கொண்டடங்காரோ வென்னா ருயிர்க்குக்
கூற்றாய் நின்றகுலச்சனகி குவளை மலர்ந்ததாமரைக்கு
தோற்றாயதனான கங்கரிந்தாய் மெலிந்தாய்வெதும்பத் தொடங்கினாய்
மாற்றார்செல்வங் கண்டழிந்தால் வெற்றியாக வற்றாமோ"
எனப் பாடியுள்ளார். இது சூர்ப்பநகையாற் சீதையின் பேரழகை நன்றுகேட்டு அச்சீதைபாற் பெருங்காமங் கொண்ட இராவணன், இரவிற்றண்ணிலவெறிப்பக்கண்டு, என்றுங் குளிர்கின்ற மதிமயங்கிச் சுடுகின்றதெனக்கருதி, மதிமயங்கி அத்தங்களை நோக்கிக் கூறியதுக்குச் செய்யுள். இதனட் 'குவளை மலர்ந்த தாமரை' என்பது சிந்தாமணியார் கருத்தாம்.
"தாமரைப் போதிற் பூத்த தண்ணறுங் குவளைப் பூப்போற்
காமரு முகஹ்த்டிற் பூத்த கருமழை தடங்கண் டம்மால்" (மண்மகள்-23) எனவும்
"இழையொளி பரந்த கோயி லினமர்க் குவளைப்பொற்பூ
விழைதகு கமல வட்டத் திடைவிராய்ப் பூத்த தேபோல" (ஷெ-29)
எனவும் வருவனவற்றானுணர்க. கம்பருக்குக் "குவளை மலர்ந்த தாமரை" என்னுங்கருத்து இச்சிந்தாமணி யடிகளினின்றும் உண்டாயிற்று என்று கொள்ளலாமாயினும் கம்பர் சிந்தாமணியார் கூறியாங்குக் கூறாமல், அக்குவளை தாமரைகளுக்கும் திங்களுக்கும் உள்ள இயைபினைத் தெளிந்து, குவளையும் தாமரையும் வேறு வேறிடங்களிலுளவாயின் முன்னதை யலர்த்தியும் பின்னதைக் குவித்து வாடுவித்தும் போதுகின்ற அத்திங்கள், குவளையைத் தன்னடுவில் வைத்துக் கொண்டதொரு தாமரையுளதாயின் அதனைக் குவிக்கலாற்றாது தோற்கும் என்று கண்டு, யாண்டுந் தாமரை திங்களுக்குத் தோற்றதுபோல் ஈண்டுச் சமயோசிதமாகக் 'குவளை மலர்ந்த தாமரைக்குத் தோற்றாய்' என்று அலங்கரித்தனர். திங்கள் குவளையைத் தன் நடுவில் வைத்துக்கொண்டதோர் தாமரைக்குத் தோற்ரவாறு யாங்ஙனமெனின், திங்களின் இயல்பு குவளையை அலர்த்தி தாமரையைக் குவித்தல் அன்றோ? இத்தாமரை குவளையைத் தன் நடுவில் வைத்துக் கொண்டடாதலால் தாமரையைக் குவித்தால் அதனடுவிலுள்ள குவளையும் அதனுள்ளே சாம்பும்; அப்போது தானியல்பாக அலர்த்தும் குவளையை இவ்விடத்டலர்த்தினானாகான்; குவளையை அலர்த்தினும் அதனை நடுவிலுடைய தாமரையும் அலர்ந்து விடும்; அப்போது தானியல்பாகக் குவிக்கின்ற தாமரையை ஈண்டுக் குவித்தானாகான்; இவ்வாறு தன்னியற்கையான செயல் ஈண்டு நிகழ்த்தலாகாற்றாது தோற்றான் என்க. இத்தகைய தாமரை சாநகி பாலுள்ளது. அதற்கு மதி தோற்றானென்க. இவ்வியைபெல்லாம் தம்முடைய பரந்தவுள்ளத்து விரைந்துபட்டனவில்லையாயின் "குவளை மலர்ந்த தாமரைக்குத் தோற்றாய் அதனால் அகங்கரித்தாய் மெலிந்தாய் வெதும்பத் தொடங்கினாய்" என அழகு பொலியக் கூறலாகாதென்க.
திங்கள் சாநகியினுடைய கண்களாகிய குவளை மலர்ந்த முகத்தாமரைக்குத் தோற்றதனா லுண்டாய உள்வெதுப்பு, அத்திங்களை அகங்கரித்து மெலியச் செய்து புறத்தும் வெதும்பத் தொடங்கிற்றானென்க. இப்பாட்டில் "மாற்றார் செல்வங் கண்டழிந்தால் வெற்றியாகவற்றாமோ" என்னும் அறவுரை நினைக்கத்தக்கது. இவ்வறவுரை உபதேசஞ் செய்கின்ற இராவணனார், தாம் இப்போது புரிகின்றது அம்மாற்ரார் செல்வங்கேட்டறபவர் போலும்! இதனாற் சிந்தாமணியார் கருத்து என்னப்பட்டதோர் நல்லவண்ணத்தில் கம்பர் தம்பேரறிவாகிய எழுதுகோலைத் தோய்த்துக் கண்டார் கண்ணும் மனமும் கவருந்தகைத்தாக ஒரு செய்யுளாகிய திருவுருவைச் சித்திரித்தனர் என்று துணியலாகும்.
இல்லை உண்டு என்னும் இடை
கம்பர் கோலங்காண்படலத்து,
"பல்லியனெறியிற்பார்க்கும் பரம்பொருளென்ன யார்க்கும்
இல்லையுண்டென்னநின்ற விடையினுக்கிடுக்கண் செய்தார்"
என்றார். இது,
"..................கண்கொள்ளா நுடங்கிடையை
யுண்டெனத்தமர்மதிப்பர் நோக்கினாற்பிற செல்லா
முண்டில்லையெனவையமல்ல தொன்றுணர்வரிதே" (நாமகள்-146)
என்பதுபற்றி வந்தது என்னலாம். இதன்கண் 'உண்டெனத் தமர் மதிப்பர்' என்பதுபற்றியே பின்னும் நாடவிட்ட மடலத்தின் கண் சீராமபிரான் "தொட்டவற்குணரலாமற்றுண்டெனுஞ் சொல்லுமில்லை" எனக்கூறியருளியதாகப் பாடினாரெனவுங் கருதலாம். இவ்வீரிடத்துஞ் சிந்தாமணியார் கருத்தே பயின்றதாயினும் கம்பர் சிந்தாமணியார் கூறியாங்கு 'உண்டு இல்லை யென வையம் உணர்வரிது' எனக் கூறியொழியாமல் "பல்லிய னெறியிற்பார்க்கும் பரம்பொருளென்ன யார்க்கும் இல்லையுண்டென்ன நின்ற இடை" என்ன மிகவும் அழகியதோருவமையினை முன் வைத்து இன்மையும் உண்மையுங் கூறுதல் காட்டியது, எத்துணையேற்ற முடையதென்பது உய்த்துணர்ந்து கொள்க. பரம்பொருளை யெய்தியறிந்த சுவாநுபூதிமான்களுக்கே அதனுண்மை புலனாம்; ஏனையோர்க்காகாது. அதுபோல இவளிடையும் தொட்டறிந்தவனுக் குணரலாமல்லாது ஏனையோர்க்காகாது. இக்கருத்துப்பற்றியன்றே "தொட்டவெற்குணரலா"மென்று சீராமமூர்த்தி திருவாக்கில் வைத்தார், கவிச்சக்கரவர்த்தி கம்பநாடர். இதுபோல் பல்வேறு இடங்களில் கம்பர், திருத்தக்க தேவரைத் தம் முன்னோடியாகக் கொண்டுள்ளார். இது என்னால் "செந்தமிழ்" தொகுதி 4 பகுதி 2இல் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.
இராமாவதாரவுரை
[முதல் இரு பாடல்களுக்கு விளக்கம்]
நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே.
(இதனுரை) நாடிய பொருள்-நாடப்பட்டவனாகிய கல்விப் பொருளும் செல்வப் பொருளும்; இவ்விரண்டனையுமே பொருளென்பதாகக் கருதினாரென்பது மேலிவற்றின் பயனாக ஞானமும் புகழுமுண்டாம் என்றதனானுய்த்துணரலாகும். கல்விப் பொருளான் ஞானமும் செல்வப் பொருளாற் புகழுமுண்டாம் என்க. பொருளைப் பெற்ருப் புகழெய்தாமலும், கல்வியைப் பெற்று ஞானெமெய்தாமலும் வாளாகழியும் உயிர்கள் பலவாதலின் அவற்றை வேறுகூறினார்; "ஓங்குபுகழ் செய்யான் -- பொருள் காத்திருப்பான்" (நாலடி) "கற்றவர் ஞானமின்றேற் காமத்தைக் கடக்கலாமோ" (இராமாவதாரம்) எனவருதலானுணர்க; கைகூடும் என்பது கால்சீத்தல் போல்வதோர்சொல். "திருவேறு தெள்ளியராதலும் வேறு" என்று கூறப்பட்ட இருவேறு நல்வினைப்பயன்களும் ஒருங்கே கைகூடும் என்றதாம். உண்டாம் என்றது, வித்தினின்று முளையுண்டாம் என்பதுபோல, அக்கைகூடிய பொருள்களினின்று இவைதோன்றலுணர்த்தி நின்றது. "ஞானிக்குமப் பயனில்லையேற் சிறுக நினைவதோர் நினைவுண்டாம் பின்னும் வீடில்லை." (திருவாய்மொழி) எனப் பெரியார் பணித்தலான் முன்னோதிய ஞானத்தாலும் எய்தலாகாமையின் "வீடியல் வழியுமாக்கும்" என வேறே கூறினார். மற்று "ஞானத்தால் வீடெனவே நாட்டு" என்பது போன்று வருவனவெல்லாம் பத்திவிசிட்ட ஞானத்தையே குறித்தனவாகும். "அன்பே தகளியா....ஞானச்சுடர் விளக்கேற்ரினேன்" எனவும், "ஞானநற்சுடர் கொளீஇ....... அன்பினன்றியாழியானை யாவர்காண வல்லரே" எனவும் "இனியார் ஞானங்களா லெடுக்க லெழாத வெந்தாய்" எனவும் வருந் திருவாக்குகளான் இதனுண்மை உணர்க. "பக்தி ஞானத்தினுஞ் சிறந்தது" என்னுமதம்பற்றி "வீடியல் வழி" என்று பக்தியையே ஞானத்தின் மேம்பயனாகக் கூறினார். வீடியல்வழி, வீட்டிற்கியலுநெறி; "பக்திநெறி" என்பது வழக்கு. வேரியங் கமலைநோக்கு வீடியல் வழியுமாக்கும் என்க. "வேரி மாறாத பூமேலிருப்பாள் வினைதீர்க்குமே" அதுவுமவன தின்னருளே" எனவரும் திருவாக்குகளையுட்கொண்டு கமலைநோக்கு அப்பக்திமையை உண்டாக்குமென்றார். பிறசான்றோரும், அருட்சத்திநோக்கந் தம்பால் வீழ்தலையே தெய்வ வழிபாட்டிற்குக் காரணமாகக் கூறுப. "அவனருளானே அவன்றாள் வணங்கி" என்பது அவர்க்கு மேற்கோள். இவ்விராமாயணம் பக்திசத்திரமாதலான் அப்பக்தியையே முடிவு பேறாகவுரைத்தார். "படிகொண்ட கீர்த்தியிராமாயணமெனும் பக்திவெள்ளம்" என்பது அமுதனார் திருவாக்கு. வேரி-தேன். நீடியவரக்கர்-அழிவில்லாத அரக்கர்; "நீடுவாழ்வார்" என்புழிப் பரிமேலழகருரைத்தவாறுணர்க. அரக்கருஞ் சேனையு நீறுபட்டழிய வாகைசூடிய சிலை-வென்றிமாலை சூடியவில், "நீறுபட்டழிய" என்றது. 33"நீறுபடவிலங்கை செற்றநேரா" என்ற தெய்வச்சடகோபர் திருவாக்கினையுட்கொண்டு கூறியதாம். "மசரதமனையவர் வரமும் வாழ்வுமோர், நிசரத கணக்களா னீறு செய்யாந், தசரதன் மதலையா வருதும்" என்று வரமணித்ததனையும் நோக்குக. "தென்னிலங்கையெரியெழச் செற்றவில்லியை" என்று அப்பெரியார் பணித்தலான் நீறுபட்ட வாறுணர்ந்து கொள்க. சீராமமூர்த்தி திருச்சரத்தைச் "சுடுசரம்"34 எனப் பலவிடத்துங்காண்க. அரக்கரை அழித்தல் முழுமுதற்கோர் பொருளன்றாதலின் வாகை சூடியது சிலையேயென்றார். சிலையிராமன், பரசுராமன், அலராமன் இவரின் வேற் பிரித்துணர வைத்தது. "இராமன் தோள்வலி கூறுவோர்க்கு" என்றது. "தென்னிலங்கை செற்ராய் திறல்போற்றி" என்ற திருவாக்கினையுட்கொண்டு கூறியதாம். "கற்பாரிராமபிரானையல்லான் மற்றுங்கற்பரோ" எனவும், "நிற்கின்ற செல்வம் வேண்டி நெறிநின்றவுயிர்களெல்லாங், கற்கின்றதிவன்றன்னாமம்" எனவும் வருதலாற் "கூறுவோர்க்கே" என்ற சொன்னோக்குணர்ந்து கொள்க.
கூறுவோர்க்கே கைகூடும், உண்டாம், கமலை நோக்கு ஆக்கும் எனவுரைக்க.
பாயிரம்
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலு நீக்கலு நீங்கலா
வலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசர ணாங்களே.
(இ-ரை) உலகம் என்றது புவனமும், சனமும். யாவையும் என்றது உலகிலுள்ள உயிர்கட்குத் தாரகபோட போக்கியங்களான மற்றெல்லாமும் எனலாம். உய்ர்கட்கு வேண்டிய தனுகரண புவனபோகமெனப்பட்ட நான்கனுள் ஈண்டுலகமென்றது அஃதொழிந்த மற்றைய மூன்றுமாம் எனினும் உலகம் என்பது காணப்பட்டதெனக்கொண்டு35 யாவையும் என்பது நூற்றொகைகளாற் கேட்கப்பட்டனவுமாம் என்னும் அமையும். கேட்கப்பட்டன சத்தியலோகாதிகள். தாமுள வாக்கல்-தாமேசிருட்டித்தல். தாம் என்றது உபாதான நிமித்தசக காரிகாரணங்கள் தம்மின் வேறல்லாமையுணர நின்றது. "மன்னுயிரெல்லாந் தானே வருவித்து வளர்க்குமாயன்" என மேலும் இக்கருத்தே பற்றிவந்தது. (இராம. வீடணனடைக்கலம் 114) நிலைபெறுத்தல்-நிற்றலைப் பெறுவித்தல், இம்முத்தொழிலும் நீங்கா விளையாட்டு, அகிலா விளையாட்டு-கணக்கில்லாத விளையாட்டு, உயிர்த்தொகைகளும் அவற்றின் கருமப்பகுதிகளும் அளக்கலாகாமையின் அவைபற்றி நிகழும் விளையாட்டும் கணக்கின்றாம் என்பது; முதற்காரணமுந் தாமேயாகவும் படைப்பளிப்பழிப்பானோர் துன்புறுதலிலர் என்பார் விளையாட்டென்றார். உயிர்த்தொகைகள் ஒரோவொன்றாக வீடுபெற்றேகின் இறுதியில் ஒருகால் விளையாட்டுக்குயிர்களே யில்லையாங்கொல் என்னுஞ் சங்கையைப் பரிகரித்தற்கு நீங்காவிளையாட்டென்றார். உயிர்ப்பகுதி ஒன்றொன்றாக எண்ணப்படினும் அதன் பெருந்தொகுதி எண்ணப்படாதென வறிக. இது காலம் என்பது, நிமிஷங் கலை காட்டை முகூர்த்தம் யாமம் பகல் இரவு நாள் திங்கள் ஆண்டூழி எனப் பலபகுதிகளாக எண்ணப்படினும் அதன் பெருந்தொகுதி முடிவுபெறாது நெடிதுசேறல் போலக் கொள்க. இம்முத்தொழில் விளையாட்டுடையாரே தலைவரென்றது. பிரமசூத்திரத்துள் வியாசபகவான் "இவற்றினுடைய தோற்றம் முதலியன எதனிடத்தினின்று நிகழ்வனவோ அது பிரமம்" எனக்கூறிய சூத்திரகருத்தைத் தழீஇயுரைத்தாம். இராமாநுசரும் அச்சாரீரகபாடிய முகத்து "எல்லாவுலகங்களுடையவும் படைப்பளிப்பு முதலிய விளையாட்டுடையான்" என இறைவனை முந்துறவுரைப்பது காண்க. தலைவர்-முதல்வர். இது பிரணவப் பொதுவாகிய தலைமைப்பண்புபற்றித் தலைவர் எனப்பெயராடலையுநோக்குக.
இதனையே வடமொழி வல்லுநரான பட்டரும் உலகின் படைப்பளிப்பழிப்பழிப்பினைப் புரிகின்றவனான இறைவன்36 அகரப் பொருள் என உரைத்தார். இனி, "அன்னவர்க்கே சரண்" என்பது, ஆன்மாக்கள் தமக்கேனும் அசித்துக்கேனும் உரியவல்லவவென்று உகாரப்பொருள் கொள்ள வைத்தது. உகாரம், "அகரப் பொருளான இறைவனுக்கன்றி வேறொருவர்க்கு உயிர்கள் உரியஅல்லாமை நியமிப்பது" என்றதற்கு இயையவந்தது. உகாரம் அவதாரணப் பொருள் குறித்துவரும். இனி, "நாங்கள்" என்றது மகாரப்பொருளைக் கொண்டு கூறியது; மகாரப்பொருள் ஜீவன் என்றுரைத்தவாறு நோக்கிக் கொள்க. இவ்வாறு, அ-உ-ம என்னும் மூன்றெழுத்துகளின் பொருள்களை முறையே கொண்டு கூறியவாறறிக. "அன்னவர்க்கு" என்றது, அகாரத்திலேறிக் கழிந்த சதுர்த்தியை விரித்துரைத்ததாம். "அன்னவர்க்கே சரணாங்களே" என்பது, "உனக்கே நாமாட்செய்வோம்" என்னுங் கோதையர் திருவாக்கின் கருத்தையே தழுவி நிற்பது, இதனாற் சரணங்களே என்ற பாடம் தவறாதலுணர்ந்து கொள்க.
இனித்தலைவர்க்கே நாங்கள் சரண் என்னாமல் தலைவரன்னவர்க்கே நாங்கள் சரணென்றது, தலைவர்க்கும் அவரொடொரு நீர்மயராகிய திருமகனார் முதலிய பாகவதர்க்கும் நாங்கள் சரண் எனினும் அமையும். நாங்கள் சரணென்றது நாங்கள் சரண்புக்கோம் என்றவாறு.
மற்றைய கடவுள் வாழ்த்துப் பாடல்களின் உரையைச் "செந்தமிழ்" இலக்கிய இதழ்களில் பரக்கக் காணலாம்.
ஆதிகாவியமும் தென்னக இலக்கியமும்
[மகாவித்வான் பல இடங்களில் கம்பன், காளிதாசன், வால்மீகியின் காவியங்களைப் பற்றி உரையாற்றியதுண்டு. இதன் குறிப்புகளை என் தந்தையார் சேகரித்து வைத்திருந்தார். அவற்றின் சுருக்கமே இது.]
இராமாயணம் என்ற மெரிய இதிகாசம் "ஆ சேது இமாசலம்" என்று பாரத காண்டம் முழுவதும் பலரால் படிக்கப்படும் பெருநூலாகும். வால்மீகியால் இயற்றப்பெற்ற இந்நூலை ஆதி காவியம் என்பர். காளிதாசனும் இரகுவம்சத்தில் இவ்வரலாற்ரைக் குறிப்பிடுகிறான். வால்மீகி இராமாயணத்தில் தான் வடமொழி அல்லாத பிறமொழிகளின் குறிப்பு காணப்படுகிறது. அநுமன் பிராட்டியிடம் உரையாடத் தேவபாஷையை ஒதுக்கி மானுட மொழியை உபயோகித்தான் எனக்கவி கூறுவர். இது தென்னகமொழியேயாகும். அநுமன் தாய் அஞ்சனை. இவள் பிறந்த ஊர் அஞ்சனை புரி, என்றும், மூசுஸ்ரீ (குரங்கின் ஊர்) அல்லது குரங்கிலூர், முசிறி என்றும் உலக் வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் கேட்கப்படுகிறது.
இது இன்றைய கேரள நாட்டில் உள்ள ஊராகும். (அஞ்சைக்களம், கரங்கலூர்) இது தேவாரப்பாடல் பெற்ற தலமாகும்.
இக்காவியத்தை இயற்றிய வால்மீகி, இராமனை, தேவ, மானிட பாவம் தோன்றவே சுலோகம் செய்துள்ளார். இதற்கிணங்க இராமன் "நான் தேவனல்லன், மனிதன்; தசரதன் புத்திரன்" என்று கூறுகிறான். விசுவாமித்திரரும் தசரதனிடம் "உலகத்தைக் காக்க உன் புதல்வனை நான் காப்பாற்றி உன்னிடம் சேர்க்கிறேன்" என்று தேவ, மனித பாவம் இரண்டும் விளங்குமாறு கூறுவார். தன் தெய்வத்தன்மையை அறிந்தபடியால்தான் இராமன், சபரியை அவள் விரும்பும் மேலுலகத்திற்குச் செல்ல வழி அமைக்கிறான். சீதையைவிடத் தன்னுடன் கூடியிருந்தவர்களுக்கே அன்பையும் அருளையும் காட்டுவதாகப் பல இடங்களில் வால்மீகி கூறுவார். இராவண வதத்திற்குப் பின்பு அநுமன் சீதையை அழைத்து வந்து அவள் கற்பின் மேன்மையை வாயார இராமனிடம் புகழ்வான். ஆனால் இராமனோ தன் அகன்ற மார்பை அநுமனைத் தழுவக் கொடுப்பான். "அகலகில்லேன் என்று உறையும் அலர்மேல் மங்கை"க்குத் தன் மார்பைத் தராது அநுமனுக்குக் கொடுத்தது, நட்பின் பெருமையைக் காட்டவில்லையா? சுக்கிரீவன் இலங்கை சென்று போராட்டத்திலிருந்து மீண்டு இராமனிடம் வருகிறான். சுக்கிரீவனைப் பார்த்து இராமன் "ஏதானும் உனக்குக் கேடு வருமானால் சீதையால் நான் பெறும் சுகம் என்ன?" என்று வருந்திக் கூறுவான். இராமாவதாரம் சரணாகதியின் பெருமையைக் கூறும் நூல் என்பர் வைணவர். விபீஷணனைத் தம்பக்கல் சேர்க்கக் கூடாது என்று பலரும் கூற "சர்வலோக சரண்யாய, ராகவாய, மகாத்மனே" என்று விபீஷணன் கூறிய வாக்குக்காகவே அவனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான். இதே போல் குகனையும் தன் தம்பியாக ஏற்றுக் கொள்கிறான்.
இராமனுடைய பாதுகைக்கு இராமனுடைய முடிசூடும் பாக்கியம் கிட்டியது பின் தன் அடி சூடிய முடியை இராவண வதத்திற்குப்பின் இராமன் முடிசூடினான். ஏனென்றால் தன் தம்பியும், பரமபகவதனுமான பரதன், தன் பாதுகையைச் சிரமேல் வைத்திருந்த அன்பு நோக்கியே, இராமன் தன் முடி மேலும் சூடினான். நந்திக் கிராமத்தில் பாதுகையில் வைத்த முடி இராம பிரானுக்குத் திருமுடியாகிறது.
அவதாரத்தின் மகியைக் காட்ட, வால்மீகி, தசரதன் பல மகளிரை மணந்தும் புத்திரப் பேற்றைப் பெறமுடியாமல் போய், பின் இராமன், யாரைத் தந்தையாக வரித்து அசுரர்களை அழிக்கலாம் என நினைத்து தசரதனுக்கு மகப் பேற்றை யாகத்தின் மூலம் அளித்தான் என்று கூறுவர். புதல்வர் பேறு இறைவனால் வருவது என்று பண்டைத் தமிழரும் கருதுவர்.
"குன்றக்குறவன் கடவுள் பேணி
ஓம்பினன் பெற்ற காதல் குறமகள்" (ஐங்குறு நூறு-257)
"மலைவாழ்குறவன் கடவுளைப் பேணித் தவங்கிடந்து பெற்ற அழகிய குறப்பெண்" என்பது இதன் பொருளாகும்.
கிஷ்கிந்தையில் சுக்ரீவன் சீதையைத் தேட அனுப்பும் வானர வீரர்களுக்குத் தெந்திசையில் உள்ள பெருநகரங்களையும், அவர்கள் பேசும் மொழியையும் வர்ணிக்கிறான். அவையாவன: ஆந்திரம், சோளம், கேரளம், பாண்டிய நாடுகள், பொன்மயமான வண்ணமுள்ளதாய் முத்துகளால் அலங்கரிக்கப் பெற்ற பாண்டியனின் கபாடபுரத்தையும் குறிப்பிடுகிறார் வால்மீகி. கபாடபுரம் இடைச்சங்கம் இருந்த ஊர் என்பர் பண்டைத்தமிழ் நூலார். இது போன்றே கேரள, சோழ நாட்டு நகரங்களையும் கவி வர்ணிக்கிறார்.
தமிழ் மக்களுடய பழக்க வழக்கங்களையும் வால்மீகி நன்கு அறிந்திருந்தார். தென்னாட்டவரைப்போல வடநாட்டு வீரர்களும் தலையில் பூக்களை அணிந்தனர் என்று பரதன் கூற்றாக அயோத்தியா காண்டத்தில் தெரிவிக்கிறார். தமிழ் அரசர் போருக்குச் செல்லுமுன் தங்கள் குலத்திற்கேற்பப் பூச்சூடுவது பண்டைத் தமிழ் நூல்களில் பரக்கக் காணலாம். இறந்தவர்களை எரிக்காமல் புதைக்கும் வழக்கமும் தென்னாட்டில் இருந்ததாகத் தெரிகிறது.
கம்பர் இராமாவதாரம் இயற்று முன்பே ஒருசில இராமாயணங்கள் தமிழில் இருந்தன. ஜைன இராமாயணம் இராமாயண வெண்பா நூல்களில் ஒரு சில பாட்டுகள் இப்பொழுது கிடைத்துள்ளன. இவற்றின் காலம் கூட நன்கு அறியப்பட இயலவில்லை.
சங்க இலக்கியங்களிலும், வைணவப்பிரபந்தங்களிலும் இராமாயணக் கதைக் குறிப்புகள் உள்ளன. சில செய்திகள் வடமொழி நூல்களில் காணப்படாதவையாகும். தனுஷ்கோடிக்கரையில் இராமபிரான் யுத்த சம்பந்தமான ஆலோசனை நடத்துகையில், ஆலமரத்தில் இருந்த பறவைகளின் ஒலியால் துன்பப்பட்டு, தன்கையமர்த்தி பறவைகளை ஒடுங்கி இருக்கச் செய்த சேதி வால்மீகியால் கூறப்படாதது கடுவன் மன்னனார் என்ற சங்கப் புலவர்,
வெள்வேல் கவுரியர் தொன்முதுகோடி
முழங்கிரும் பெளவம் இரங்கு முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக் கவித்த
பல்வீழ் ஆலம் போல ஒலி அவிந்து அன்றால்" (அகநானூறு-70)
என்று பாடுவர். "குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறை" என்று சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையில் குறிப்பிடுவது வால்மீகி குறிக்கும் சேதுவா, கன்னியாகுமரியா என்பதை அறிஞர்கள் ஆராயவேண்டும். வானரங்களுடன், அணிலும் அணைகட்ட உதவிய செய்தி வால்மீகியில் இல்லாதது. தொண்டரடிப் பொடியாழ்வார்,
"குரங்குகள் மலையை தூக்கக் குளித்துத்தாம் புரண்டிட்டோ டித்
தரங்கநீரடைக்கலுற்ற சலமிலா அணிலம் போலேன்" (திருமாலை-27)
என்று பாடியுள்ளார். இக்கதை தமிழ்நாட்டில் பலராலும் கேட்கப்பட்டதொன்று.
கம்பரும், வால்மீகியும் குறிப்பிடாத ஓர் அரிய செய்தி பெரியாழ்வார் வாக்கால் நாம் அறிகிறோம். மிகவும் அழகிய பாடல். சீதையிடம் அடையாளம் சொல்ல அனுப்பிய அனுமனிடம் இராமன் தனக்கும் சீதைக்கும் மட்டுமே தெரிந்திருக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறான்.
"எல்லியம் போதினிருத்தல் இருந்ததோர் இடவகையில்
மல்லிகை மாலை கொண்டங்கார்த்தது மோர் அடையாளம்"
(பெரியாழ்வார் திருமொழி 3-10)
சீதையும், இராமனும் தனித்து அயோத்தியில் இருக்கும் பொழுது, சீதை குறும்பாக இராமனை மல்லிகை மாலையால் கட்டினாளாம். கூனி முதுகில் உண்டைவில் அடித்த கதை தமிழ் நாட்டுக்கே உரியது. சூர்ப்பனகை மூக்கொரு மார்பையும் அறிந்ததும் அவ்வாறேயாகும்.
ஊன் பொதி பசுங்குடையார் என்ற சங்கப் புலவர் புறநானூற்ற்ல் உவமை முகமாக ஓர் அரிய செய்தி கூறுகிறார். சோழன் இளஞ்சேட் சென்னியிடம் பரிசில் பெற்ற புலவர்கள் தாங்கள் பெற்ற அணிகலன்களை அணியும் முறை அறியாமல் மாறி மாறி அணிந்தனர். சீதையின் அணிகலன்களைக் கண்டெடுத்த குரங்கினம் எவ்வாறு நகையாடும்படி அணிந்ததோ அவ்வாறு இருந்தது வறுமையுற்ற புலவர் செய்கை. [புறநானூறு 378] இந்த விநோத விவரம் கம்பராலும் காட்டப்படாடதாகும்.
ஜைன ராமாயணத்தில் தசரதன் காசி அரசன் என்றும், பின் அயோத்தி அரசனானதாகவும் கூறப்படுகிறது. கதையும் மிக வேறுபடுகிறது. அநுமன் அணுமகான் என்று குறிப்பிடப்படுகிறான். இலட்சுமணனால் இராவணன் அழிக்கப்படுகிறான். இராமன் துறவறம் மேற்கொண்டு சுவர்க்கமடைகிறான். இராவணனும், அநுமனும் ஜைன மதத்தைத் தழுவுகின்றனர். அநுமன் ஆயிரம் பெண்களை மணந்தான். ஓர் இராமாயணம், சீதையை இராவணன் மகளாகவே கூறும். பெளத்த இராமாயணம் புத்த ஜாதகக் கதைகளிலிருந்து அறியப்படுகிறது. சாக்கிய மரபில் உடன் பிறந்தோர் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்வது உண்டாம். இதன் மூலம் சீதையும், இராமனும் உடன் பிறந்தவர்கள் ஆவர். அகஸ்தியர் இயற்றியதாக அத்யாத்ம இராமாயணம் என்ற நூல் உண்டு. துளசிதாசர் இயற்றிய இந்தி இராமாயணமும், எழுத்தச்சன் எழுதிய மலையாள இராமாயணமும், தியாகையரின் இராமரைப் பற்றிய பாடல்களும் பக்தி ரசம் ததும்பப் பாடப்பட்டவை. அருணாசலக் கவிராயரின் இராமர்கதை நாடக பாணியில் அமைந்து உள்ளது.
கம்பர் பொதுவாக வால்மீகியைப் பின்பற்றுகிறார் சிலவிடங்களில் வேறுபடுகிறார். அகல்யையை "நெஞ்சினால் பிழையிலாள்" என்று கூறும் கம்பர், அவள் கெளதம முனிவர் வேடம் தரித்த இந்திரனோடு அடைந்த இன்பம் புதியது என உணர்ந்ததாகவும் கூறுகிறார்.
"தக்கதன்று என் ஓராள், தழ்ந்தனள்" என்பது கம்பர் வாக்கு. இவள் இவ்வாறு கூறி மயங்கியதற்குக் காரணம்:
"காமப் புதுமண மதுவின் தேறல் ஒக்க உண்டிருத்தலால்" ஏற்பட்டதாகு. கள்ளுண்டோ ர் இது "தக்கது", "தக்கது அன்று" என்று பிரித்து எண்ண முடியாத, மயக்க நிலையில் இருப்பார்கள். இவ்வாறு நாம் பொருள் கொள்ளாவிடில் அகல்யை மனதறிந்து குற்றம் செய்தவள் ஆகி விடுவாள். வில் முரிப்பதற்கு முன்பே இராமனும், சீதையும் ஒருவரையொருவர் பார்த்து உள்ளங்கவர்ந்தவராயினர் என்று தமிழர் சுவைக்கு ஏற்ப வைத்தார். இதற்குப் பழைய தமிழ் நூல் வழக்குகளிலும் சான்றுகள் உள்ளன. (தொல் காப்பியம், பொருளதிகாரம் 54 உரை). தம் வாழ்வில் புத்திர சோகம் கண்டவராகையால், இராமாயணத்தில் இப்படிப்பட்ட நிகந்ச்சிகள் வரும்பொழுது ஆதிகாவியத்தையும் மிஞ்சி விடுகிறார். மேகநாதன் மறைவு கேட்ட மண்டோ தரி இறந்த மகன் உடம்பைப் பார்த்தாள்.
பஞ்செரி உற்றதென்ன அரக்கர்தம் பரவை எல்லாம்
வெஞ்சின மனிதர் வெல்ல விளைந்ததே மீண்டதில்லை
அஞ்சினேள் அஞ்சினேன் இச்சீதை என்ற அமிழ்தாற்செய்த
நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இத்தகையன் அன்றோ? (யுத்தகாண்டம்)
வால்மீகியும், கம்பரும் பெண் கதாபாத்திரங்களை, நளினமாகக் கையாள்வார்கள். இராமாயணத்தைச் "சீதையின் மகத்தான சரிதம்" என்று வால்மீகி உரைப்பர். கம்பரும் "வாழி சானகி, வாழி இராகவன்" என்று சீதையை முற்பட வைத்தார். தாடகை, சூர்ப்பனகை, கைகேயி, கூனி, மண்டோ தரி போன்ற பெண்களைக் கூட நாம் மதிக்கும் வண்ணம் கதையில் சித்தரித்துள்ளனர்.
பல நூற்றாண்டுகள் இந்த இரு மகாகவிகளைப் பிரித்த போதிலும், மனநிலையை அறிவதில் ஒரே மாதிரியாகக் கவனம் செலுத்தினார்கள். இராவணன் வதத்திற்குப் பிறகு அநுமன் சீதையைச் சந்தித்தது, "அரக்கர் யாவரும் அழிந்து விட்டனர்" என்று கூறியவுடன் சீதை அடக்க முடியாத இன்பத்தில் கூத்தாடுவாள் என்று எதிர்பார்க்க, அவளோ பல விநாடிகள் ஏதும் பேசாமல் இருந்தாள். அநுமன் பன்முறை சொல்லியும் காதில் விழாதவள் போல் குனிந்து இருந்தாள். பலகாலமாக எதிர்பார்ஹ்த்து, நடக்க வேண்ட்ய ஒரு நிகழ்ச்சி நடைபெற்ற பொழுது, மனம் மரத்துச் செயலற்றுப் போகிறது. வால்மீகி இதைக் கையாளும் முறையைக் கம்பரும் மிகவும் ரசித்து அதே போல் கவிபாடுகிறார்.
இந்தியப் பண்பாட்டுக்கு இராம காதை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இரு மகாகவிகளும் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப மகாகாவியம் படைத்துள்ளனர். இதை அநுபவிக்கும் பேறு பாரத மக்களுக்கு எப்பொழுதும் கிட்ட வேண்டும்.
1 | இவ்வரிய பாடம், இச்சங்கத்துக்குக் கிடைத்த மிகப் பழையனவாகிய பாலகாண்ட ஏடுகள் பலவற்றிற் கண்டது. இப்பிரதிகளில் இக்காலத்து வழங்காத சில இனிய பாயிரச் செய்யுட்களும் உள்ளன. |
2. | 'தாரணி கொண்டான்' எனவும் பாடம். |
3. | இச்செய்யுள் பழைய ஏடுகளிலுள்ளது. |
4. | பழைய ஏடுகளிலுள்ளது. |
5. | 'கதைகளாயிரத்தைன்னூறு, பரவமர் பத்துநாலு படல நூற்றிருபத்தெட்டு' எனவும் பிரதிபேதமுண்டு. |
6. | 'செந்தமிழ்' தொகுதி 1 பகுதி 3 பக்கம் 138 |
7. | இச்செய்யுள் ஏட்டுப்பிரதிகளிலுள்ளது. |
8. | இச்செய்யுள் ஏட்டுப்பிரதிகளிலுள்ளது. |
9. | "குணப்பெய ரேனைப் புலவோர் கொடுப்பத், தணப்பில வாகித் தழுவும் பெயரே." என்றார் பன்னிரு பாட்டியலாரும். (147) |
10. | 'செந்தமிழ்' தொகுதி 3 பக்கம் 5 |
11. | இது மேலுணர்த்தப்படும். |
12. | சடகோபரந்தாதி, பாயிரம். |
13. | 'கோடலுரிபோ லாதாயினே துமிலையாதி' (நாகபாசப்படலம்-261) |
14. | "நம்மெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை, யெம்பவ ரவர்தம் ஏற்றத்தால்" (உபதேசரத்தின மாலை) என்ப. |
15. | மதுரையிற் செல்லத்தம்மை கோயிற் பூசகர்கள் கம்பர் வழியினரென்று கொண்டு தங்களைச் சூரியகுலத்தவரெனக் கூறுகின்றனர். அஃது இவ்வாதித்தன் என்னும் பெயர்பற்றி யாகுமெனத் தோன்றுவது. |
16. | இக்கதையினை வேணாடர்கொவுக்கேற்றிக் கூறுவாருமுளர். |
17. | பாலகாண்டம் - 5 - 19 |
18. | " - 50 - 21 |
19. | திருக்குறள்-402 |
20. | சிறுபஞ்சமூலம் 5 |
21. | 'நீண்ட தமிழாலுலகை நேமியினளந்தான்' எனவும் பாடம். |
22. | புறத்திறட்டு - பலவகை நிலையாமை. |
23. | Bombay Royal Asiatic Society's Journal No.XLIV, Vol. XVII, pp.74. |
24. | செந்தமிழ், தொகுதி-3, பக்கம்-6. |
25. | செந்தமிழ், தொகுதி-2, பக்கம்-368. |
26. | செந்தமிழ், தொகுதி-3, பக்கம்-5. |
27. | ' என்னுடைய தம்பி சரராம னுக்கிளையான்' என்புழிச் சரராமனுக்கிளையனானதால் எனக்குந் தம்பியாவான் எனபதே கருத்தன்றி, என்னுடைய தம்பியாகிய சரராமனுக்கிளையான் என்பது கருத்தில்லையாதல், 'அடியேற் குஞ்சாருஞ்சரரா மனுக்குமொரு தம்பியெனக்கம்பன் புகழும் எனச் சோழ மண்டல சதகமுடையார் கூறியதனானே தெளிந்து கொள்க. |
28. | செந்தமிழ், தொகுதி-3, பக்கம்-83. |
29. | கி.பி.0295 என்றலுமுண்டு. |
30. | இராமாநுஜ நூற்றந்தாதி, செய்யுள்-37. |
31. | யுத்தகாண்டம், மருத்துமலைப்படலம். |
32. | பத்துப்பாட்டு, பக்கம்-153, (முல்லைப்பாட்டுரை) |
33. | திருவாய்மொழி |
34. | தாடகை வதை |
35. | "லோக்ரு தர்சனே" என்பவாகலின் உலகம் காணப்பட்டதெனப் பொருள் தரும். |
36. | விஷ்ணு வியாபனசீலத்தாற் போந்த பெயர்; இறைவன் எப்பொருளினுந் தங்குவோன். இறுத்தல்-தங்குதல். |