தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF > எக்காலக் கண்ணி
 

ekkalak kaNNi
(author not known)

எக்காலக் கண்ணி
(ஆசிரியர் யார்என தெரியவில்லை)


Etext input : K. Kalyanasundaram, Lausanne, Switzerland  - Proof-reading: Dr. N. Kannan, Boelingen, Germany
Web & pdf versions: Dr.K. Kalyanasundaram, Lausanne, Switzerland
© Project Madurai 1999 - 2003 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

(**Text taken from the "Bulleltin of The Government Oriental Manuscripts Library" Madras,
vol. VI, No. 1, edited by T. Chandrasekaran, M.A.L.T, Curator, Govt. Oriental Manuscripts Library, Madras, Printed by the Superintendent, Govt. Press, Madras, 1953)

முன்னுரை (V.S. கிருஷ்ணன், 1953)
எக்காலக் கண்ணி
ஆராய்ச்சியுரை - (முனைவர் நா. கண்ணன், 2002 )



முன்னுரை (V.S. கிருஷ்ணன், 1953)

இது இரண்டிரண்டு வரிகள் கொண்ட "கண்ணி" என்னும் ஒருவகைப் பாலினால் அமைந்துள்ள சிறு நூலாகும். இதனுள் 201 கண்ணிகள் உள்ளன. ஒவ்வொரு கண்ணியின் இறுதியிலும் "எக்காலம்" என்று முடிவதால் "எக்காலக் கண்ணி" என்ற பெயர் இந்நூலுக்கு அமைந்துள்ளது போலும். தாயுமானவர் பாடல் தொகுப்பினுள் காணப்பெறும், எந்நாட் கண்ணி, பராபரக் கண்ணி முதலியனவற்றிற்கும் இங்ஙனமே பெயர் வந்துள்ளமை நோக்கத் தக்கது. கண்ணி என்பது ஒருவகை இசைப்பாட்டு என்று சென்னைப் பல்கலைக் கழக வௌியீடான தமிழ் லெக்ஸகினில் குறிக்கப்பட்டுள்ளது. இஃது இனிய எளிய நடை வாய்நதது. அரிய பெரிய வேதாந்தக் கருத்துக்களை யெல்லாம் மக்களனைவரும் உணருமாறு தௌிவாக விளங்குகின்றது. உலக வாழ்க்கையில் அகப்பட்டு உழலும் அனைவரும் இறைவன் இணையடி நிழலை யடைந்து உய்யும் வகையினை நன்கு எடுத்துக் கூறுகின்றது.

இத்துணைச் சிறப்புக்கள் பொருந்திய இச் சிறுநூலை இயற்றி நமக்களித்த ஆசிரியர் இன்னார் என்று தெரியவில்லை. இவ்வாசிரியர் தாயுமானவருக்குச் சிறிது காலம் முன்போ, பின்போ இருந்தவராதல் வேண்டும். இந்நூற் பாடல்கள் தாயுமானவர் பாடல்களைப் போன்ற தன்னையுடையனவாய் இருப்பதால், எந்நாட் கண்ணி, பராபரக் கண்ணி முதலியவற்றை இயற்றிய தாயுமானவரே இதனையும் இயற்றியிருக்கலாம் என்று ஊகிக்கவும் இடமுண்டு. ஆயின், தாயுமானவர் பாட்டுக்களின் தொகுப்பைக் கொண்ட அச்சுப் பிரதியினுள் "எக்காலக் கண்ணி" என்னும் இப்பகுதி காணப் பெற்றிலது. இஃது அறிஞர்கள் ஆராய்ச்சிக் குரியதொன்று.

இது, இந் நூல்நிலைய மூவருடக் காட்லாக்கில் R..912(b) என்ற எண்கொடுத்து வருணிக்கப்பட்டுள்ள பனையோலைப் பிரதியையும், அதனைப் பெயர்த்து எழுதப்பெற்ற R. No. 3434 என்ற காகித கையெழுத்துப் பிரதியினையும் ஆதரமாகக் கொண்டு இங்கு வௌியிடப் படுகின்றது.

** இந்நூலின் சிறப்பியல்புகள் 1952-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் நாள் இந் நூல் நிலையத்தைச் சேர்ந்த ஸரீ வி. ஆர். கல்யாணசுந்தரம் அவர்களால் சென்னை அகில இந்திய வானொலி நிலையத்திலிருந்து பேசப்பெற்றன.
--------


எக்காலக் கண்ணி

முத்திதரும் வேத மொழிந்தமெஞ் ஞானஞ்சொல்ல
வத்திமுகவர் பாத மருள்புரிய தெக்கலாம்.

1

ஆங்கார முள்ளடங்கி யைம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவ தெக்காலம்.

2

நீங்காச் சிவயோக நித்திரைகொண் டேயிருந்து
தேங்காக் கருணைவெள்ளஞ் சேருவது மெக்காலம்.

3

தேங்காக் கருணைவெள்ளந் தேங்கியிருந் துண்பவர்க்கு
வாங்காமல் விட்டகுறை வந்தடுப்ப தெக்காலம்

4

ஓயாக் கவலையினா லுள்ளிலிருந்து வாடாமல்
மாயாப் பிறவி மயக்கறுப்ப தெக்காலம்.

5

மாயாப் பிறவி மயக்கத்தை யூடறுத்துக்
காயா புரிக்கோட்டை கைக்கொள்ளுவ தெக்காலம்

6

காயா புரிக்கோட்டை கைவசமாய்க் கொள்வதற்கு
மாயா வனுபூதி வந்தடைவ தெக்காலம்.

7

சேயாய்ச் சமைத்துச் செவிடூமை போல்திரிந்து
பேய்போ லிருந்து பிரமைகொள்வ தெக்காலம்

8

கால்காட்டிக் கைகாட்டிக் கண்கீள்முகந் தான்காட்டி
மால்காட்டு மங்கையரை மறந்திருப்ப தெக்காலம்

9

பெண்ணிநல்லா ளாசை பிரமைதனை விட்டொழிந்தென்
கண்ணிரண்டு மூடிக் கவிழ்ந்திருப்ப தெக்காலம்.

10


வெட்டுண்ட புண்போல் விரந்தவல்குற் பைதனிலே
கட்டுண்டு நில்லாமல் கருதியிருப்ப தெக்காலம்.

11

ஆறாத புண்ணி லழுந்திக்கிட வாமல்யான்
தேராத சிந்தைதனைத் தேறுவது தெக்காலம்.

12

தந்தைதாய் மக்களுஞ் சகோதரமும் பொய்யெனவே
சிந்தைதனிற் கண்டு தௌிந்திருப்ப தெக்காலம்.

13

மன்னுயிரைக் கொன்று வதைத்துயிரைப் பார்க்காமல்
தன்னுயிரைப் போலெண்ணித் தவமுடிப்ப தெக்காலம்.

14

பாலியென்று பேர்படைத்துப் பாழ்நரகில் வீழாமல்
ஆவிநின்ற சூத்திரத்தை யடைவதினி யெக்காலம்.

15

உளியிட்ட கல்லு முருப்பிடித்த செஞ்சாந்தும்
புளியிட்ட செம்பதுபோற் பொருள்தெரிவ தெக்காலம்..

16

வேடிக்கை யுஞ்சொகுசு மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும்
வாடிக்கை யெல்லாம் மயக்கறுப்ப தெக்காலம்.

17

பட்டுடையு மொப்பனையும் பாவினையும் தீவினையும்
விட்டுவிட் டுன்பாதம் விரும்புவது மெக்காலம்.

18

தண்டிகையுஞ் சாவடியுஞ் சாலிகையும் மாலிகையுங்
கண்டு களித்துக் கருத்தில்வைப்ப தெக்காலம்.

19

அத்த னிருக்குமிட மாராய்ந்து பார்த்துநித்தம்
செத்த சலம்போலே திரிவதினி யெக்காலம்.

20


ஆமைவரு மான்கண் டவையடக்கஞ் செய்தாப்போல்
ஊமையுருக் கொண்டே யொடுங்குவது மெக்காலம்.

21

உள்ளே கருத்துவைத் துள்ளிரும்பு வெள்ளிரும்பாய்க்
கள்ளிப்பிணம் போலிருந்து காண்பதனி யெக்காலம்.

22

அற்ப சுகமறிந் தறிவையறி வால்மறந்து
கெர்ப்பத்தில் வீழ்ந்துகொண்டே கோளறுப்ப தெக்காலம்.

23

கருப்படுத்தி யென்னையெமன் கைப்பிடித்துக் கொள்ளுமுன்னே
உருப்படுத்தி யாண்டருள உடன்படுவ தெக்காலம்.

24

துாண்டு விளக்கமையத் தொடந்திருள்கள் சூழ்ந்தாப்போல்
மாண்டு பிழைத்துவந்த வகைதெரிவ தெக்காலம்.

25

தூரியில் மீனம்போல் கழன்றுமனம் வாடாமல்
ஆரியனைத் தேடி யடிபணிவ தெக்காலம்

26

எண்ணூ றுகமிருந்து மெய்யாத வீடுபெற
வெண்ணீறு பூசி விளங்குவது மெக்காலம்.

27

அவவேடம் பூண்டு மலைந்துதிரி யாமல்யான்
சிவவேடம் பூண்டு சிறந்திருப்ப தெக்காலம்.

28*

அண்டருக்காய் நஞ்சருந்தி யம்பலத்தி லாடுகின்றான்
தொண்டருக்குத் தொண்டனெனத் தொண்டுசெய்வ தெக்காலம்

29

பன்றி வடிவெடுத்துப் பாரிடந்த மால்காணக்
குன்றில் விளக்கொளியைக் கூடுவது யெக்காலம்

30


தித்திக்குந் தெள்ளமுதைச் சித்தாந்த துன்பொருளை
முத்திக்கு வித்தை முதல்நினைப்ப தெக்காலம்.

31

வேதாந்த வேதமெல்லாம் விட்டொழிந்தே னிச்சையினால்
ஏகாந்த மாகி யிருப்பதினி யெக்காலம்.

32

மத்திடத்தைத் தேடியெந்தன் வாணாளைப் போக்காமலெமக்
கொத்திடத்தைத் தேடி யுறங்குவது மெக்காலம்.

33

இன்றுள்ளோர் நாளை இருப்பதுவும் பொய்யெனவே
மன்றுள்ளோர் சொல்லும் வவைதெரிவ தெக்காலம்.

34*

கஞ்சா லபினுண்டு கள்ளுண்டு வாடாமல்
பஞ்சா மிருதவின்பம் பருகுவது மெக்காலம்.

35

செஞ்சலத்தி னால்திரண்ட கனமோக்கம் பெறவே
சஞ்சலத்தை விட்டுச் சரணடைவ தெக்காலம்.

36

கும்பிக் கிரைதேடிக் கொடுப்பா ரிடந்தோறுஞ்
சோம்பித் திரியாமற் றடுப்பதினி யெக்காலம்

37

ஆடுகின்ற சூத்திரந்தா னாமளவு மேதிரிந்து
போடுகின்ற நாள்வருமுன் போற்றுவது மெக்காலம்

38

நவசூத்தி ரம்போட்டு நானல்ல வென்றிருந்த
சிவசூத்தி ரத்தையினித் தேர்ந்தறிவ தெக்காலம்

39

இம்மைதனில் பாதகரு மிருவினைக்கி டாயெடுத்துப்
பொய்மைதனைப் போட்டுனடி போற்றிநிற்ப தெக்காலம்

40


உப்பிட்ட பாண்டமது உடைந்துகரு முன்னேநான்
அப்பிட்ட வேணியருக் காளாவ தெக்காலம்

41

சேவை தினம்புரிந்து சிவரூபக் காட்சிகண்டு
பார்வைதனைக் கழற்றிப் பரமடைவ தெக்காலம்

42

பரந்து மலாலங்கள் பாயும்புழக் கூட்டைவிட்டுக்
கலந்துன் னடிக்கீழ்க் கலந்துநிற்ப தெக்காலம்

43

சோற்றுத் துருத்தியிதைச் சுமந்துலர்ந்து வாடாமல்
ஊற்றச் சடம்போகட் டுனையடைவ தெக்காலம்

44

துடக்கைச் சதமெனவே சுமந்துலுத்துப் போகாமல்
இடக்கைக் கழற்றியுன்னை யடைவதினி யெக்காலம்

45

சூதுங் களவுஞ் சுடர்வினையுஞ் சுற்றிவர்காற்
றூதிவருந் துருத்திபோட் டுனையடைவ தெக்காலம்

46

ஆசைவலைப் பாகமதி லகப்பட்டு மாளாம
லோசைமலர் தீபமதி லொன்றிநிற்ப தெக்காலம்

47

குரல்நெரிய யானைகத்திப் கூப்பிடுங்காணாதமுந்தப்
பரமரக சியத்தைப் பார்த்திருப்ப தெக்காலம்.

48

புல்லாய் விலங்காய்ப் புழுவாய் நரவடிவாய்
எல்லாப் பிறப்பு மிருளகல்வ தெக்காலம்

49

தக்கவகைக் கோர்நினைவு சாராம லேநினைவில்
பக்குவத் துன்னருளைப் பார்த்திருப்ப தெக்காலம்

50


கல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவையாய்ப்
புல்லாய்ப் பிறசனனம் போக்குவது மெக்காலம்

51

புருவத் தலைவரோடு புல்கியின்பங் கொள்வதற்குத்
தெரிவைப் பருவம்வந்து சிக்குவது மெக்காலம்

52

தெரிவையின் பக்குவத்தின் சீராட்டெல் லாமறிந்து
குருவையறி வால்நினைத்துக் கும்பிடுவ தெக்காலம்

53

வளம்படிக்கும் மாதருடன் மண்ணுலகில் வாழ்ந்தவலும்
புளியம் பழத்தோடு போன்றிருப்ப தெக்காலம்

54

பற்றற்று நீரிற் படர்ந்தவண்ணச் சிற்றிலைபோல்
சுற்றத்தை நீக்கிமனந் தூரநிற்ப தெக்காலம்

55

சல்லாப லீலையிலே தன்மனைவி செய்தசுகஞ்
சொல்லார்கண் டோனுக்குச் சொல்வதினி யெக்காலம்

56

மருவு மயற்புருடன் வருநேரங் காணாம
லுருகுமனம் போலெனுள்ள முருகுவது மெக்காலம்

57

தன்கணவன் தன்சுகத்தில் தன்மனம் வேறாப்போல்
என்கருத்தி லுன்பதத்தை யேத்துவது மெக்காலம்

58

கூடிப் பிரிந்துவிட்ட கொம்பனையைக் காணாமல்
தேடித் தவிர்ப்பார்போல் சிந்தைசெய்வ தெக்காலம்

59

எவ்வரணப் பெண்மோக மெப்படியுண் டப்படிப்போல்
கைவதன்றி யானுன்மேல் கலந்திருப்ப தெக்காலம்

60


கண்ணா லருவி கசிந்துநின்று முத்துருளச்
சொர்ணப் பழம்பொருளைத் தொகுத்தறிவ தெக்காலம்

61

ஆகமிக வுருக வகமுருக வென்புருக
யோகவனு பூதிசிந்தை யுகந்திருப்ப தெக்காலம்

62

நீரில் குமிழியைப்போல் நீசமற்ற வாழ்வைவிட்டுன்
பேரில் கிருபைவெள்ளப் பெருக்கெடுப்ப தெக்காலம்

63

அன்புதனை யுருக்கி யறிவைதன் மேல்புகட்டித்
துன்பவலைப் பாசத்தைத் துடக்கறுப்ப தெக்காலம்

64

கருணைவழி யறிந்து கருத்தைச்செலுத் தாமற்கண்கள்
அருவிசொரிய வுன்மே லன்புவைப்ப தெக்காலம்

65

தௌியத் தௌியமிகச் சித்தாந்தந் தன்னிலன்பு
பொழியப் பொழியமனம் பூண்டிருப்ப தெக்காலம்

66

ஆதார மூலத் தடியிற்கண பதியைக்கண்டு
பாதர விந்தம் பணிந்துநிற்ப தெக்காலம்

67

மண்வளைய நாச்சதிரில் வளைந்திருந்த வேதாவைக்
கண்களைந்து பார்த்தெனுள்ளே கண்டிருப்ப தெக்காலம்

68

அப்புப் பிறைநடுவே யமைந்திருந்த விட்டுவைநா
னுப்புக் குடுககையுள்ளே யுகந்தறிவ தெக்காலம்

69

மூன்று வளையமிட்டு முளைத்தெழுந்த வெண்ணெருப்பில்
தோன்று முருத்திரனைத் தொழுதுநிற்ப தெக்காலம்

70


வாயுவறு கோணமதில் வாழு மகேசுரனைத்
தோயும்வகைக் கேட்கத் தொடங்குவது மெக்காலம்

71

வட்டவிழிக்குள்ளே மருவுஞ் சதாசிவத்தைக்
கிட்டவழி தேடக்கிருபைசெய்வ தெக்காலம்

72

உச்சிக் கிடைநடுவே யோங்கு குருபதத்தை
இச்சித்துக் கொண்டிருக்க லினிக்காண்ப தெக்காலம்

73

பராபர மீதிற் பஞ்சவர்ண நஞ்சாகி
வேராகி நீர்முளைத்த வித்தறிவ தெக்காலம்

74

கட்டறுக்க வொண்ணாக் கருவிகா ராதியெல்லாஞ்
சுட்டறுத்து நிட்டையிலே தூங்குவது மெக்காலம்

75

தூரோ டசைத்துச் சுழன்றுநின்ற தத்துவத்தைத்
வேரோ டறுத்து விளங்குவது மெக்காலம்

76

கள்ளக் கருத்தையெல்லாங் கட்டோடு வேரறுத்தே
லுள்ளக் கருத்தை யுணர்ந்திருப்ப தெக்காலம்

77

அட்டகா சஞ்செலுத்து மவத்தைத் தவத்துடனே
பட்டபா டத்தனையும் பகுத்தறிவ தெக்காலம்

78

அறிவுக் குவியுடனே அவத்தைப்படும் பாட்டையெல்லாம்
பிறிவுபட நிறுத்திப் பலப்படுவ தெக்காலம்

79

பூதம் பொறிகரணம் போந்தவிந்து நாதமுமாய்ப்
பேதம் பலவிதமும் பிரித்தறிவ தெக்காலம்

80


தோன்றாசை மூன்றுந் தொடர்ந்துவந்து சுற்றுமிந்த
மூன்றாசை லேரையடி மூடறுப்ப தெக்காலம்

81

புன்சனனம் பொன்றுமுள்ளே புரிவட்டம் போதிலினி
யென்சனன மீடேறு மென்றறிவ தெக்காலம்

82

நட்ட நடுவில்நின்ற நற்றிரோ தாயசத்தி
கிட்டவழிக் காட்டிக் கிருபைசெய்வ தெக்காலம்

83

நானே னெனவிருந்தால் நடுவுநின்ற கட்டழகி
தானே வௌிப்படுத்தித் தருவதென்ப தெக்காலம்

84

அடர்ந்த மனக்காட்டை யஞ்செழுத்து வாளாலே
தொடர்ந்துவெட்டித் தொடர்ந்து வெட்டிச் சுடுவதனி யெக்காலம்

85

ஐந்து பொறிவழிபோ யலையுமிந்தப் பாழ்மனத்தை
வெந்துவிடப் பார்த்து விழிப்பதினி யெக்காலம்

86

இனமாண்டு சேர்ந்திருந்தோ ரெல்லோருந் தான்மாண்டு
மனமாண்டு போகவருள் வந்திருப்ப தெக்காலம்

87

சினமாண்டு பேசுஞ் செயல்மாண்டு நான்மாண்டு
மனமாண்டு முத்திநிலை வந்தடைவ தெக்காலம்

88

அமையா மனத்தமையு மானந்த வீடுகண்டால்
இமையாமல் நோக்கி யிருப்பதினி யெக்காலம்

89

கூடுவிட்டுச் சீவன்மெள்ளக் கொட்டாவி கொண்டாப்போல்
மாடுவிடு முன்னேமன மாண்டிருப்ப தெக்காலம்

90


ஊனிறக்கக் காய முயிரிது போகுமுன்னே
நானிறந்து போகவினி நாள்வருவ தெக்காலம்

91

கெட்டுவிடு மாதர் கெருவிதங்கள் பேசிவந்து
சுட்டுவிடு முன்னென்னைச் சுட்டிருப்ப தெக்காலம்

92

தோலேணி வைத்தேறித் தூரநடந் தெய்யாமல்
நூலேணி வைத்தேறி நோக்குவது மெக்காலம்

93

வாயோடு கண்மூடி மயக்கமுற்று நில்லாமல்
தாயோடு கண்கூடித் தழுவிநிற்ப தெக்காலம்

94

முன்னைவினை யாலறிவு முந்தாமல் பின்மறைந்தார்
அன்னைதனைத் தேடிமுலை யருந்திநிற்ப தெக்காலம்

95

இணைபிரிந்த போதறிவி னின்பமுறும் நிலைபோலத்
துணைபிரிந்த போதருள்நூல் தொடர்ந்திருப்ப தெக்காலம்

96

பாகனடு மாறிப் பயந்தெடுத்த சித்திரத்தை
யேகனடு மூலத் திருத்துவது மெக்காலம்

97

காசிதனில் நடந்து காலோய்ந்து போகாமல்
வாசிதனி லேறி வருவதினி யெக்காலம்

98

ஒளிபடருங் குண்டலியை யுன்னினைவா லேயெழுப்பிச்
சுழிமுனைத் தாள்துறந்து தூண்டுவது மெக்காலம்

99

இடைபிங் கலைநடுவே இயங்குஞ் சுழிமுனைமேல்
தடையறவே நின்றுசலிப் பாற்றுவது மெக்காலம்

100


மூலை நெருப்பைவிட்டு மூடிநிலா மண்டலத்தில்
பாலை யிறக்கியுண்டு பசியொழிவ தெக்காலம்

101

ஆகவௌிக் குள்ளே யடங்காப் புரவிலனா
னேகவௌி காட்டி யிருப்பதினி யெக்காலம்

102

பன்னிரண்டு கால்புரவி பாய்ந்துசில்லந் தட்டாமல்
பின்னிநின்று சங்குலிக்குப் பிழைப்பதினி யெக்காலம்

103

நாட்டுக்கா லிரண்டுவிட்டு நடுவுக்கா லூடேபோய்
ஆட்டுக்கால் கண்டனுள்ளே யமர்ந்திருப்ப தெக்காலம்

104

பால்பசுவைப் பூட்டிப் பதியில்வைத்துச் சீராட்டிக்
கால்பசுவைப் போட்டியதில் கட்டிவைப்ப தெக்காலம்

105

பலவிடத்தி லேமனத்தைப் பரப்பிவிட்டுப் பாராமல்
நிலவரையி னூடேபோய் நெகப்படுவ தெக்காலம்

106

காமக் கனல்கடந்து கரையேறிப் போவதற்கு
ஓமக் கனல்வளர்த்திங் குள்ளிருப்ப தெக்காலம்

107

உதயச் சுடர்மூன்று முள்வீட்டி லேகொளுத்தி
இதயத் திருநடன மினிக்காண்ப தெக்காலம்

108

வேதாந்த வேதமெல்லாம் விட்டேறி யேகடந்து
நாதாந்த மூல நடுவிருப்ப தெக்காலம்

109

பட்டமது காற்றில் பாய்ந்தாடுஞ் சூத்திரம்போல்
விட்டுவௌிப் பாய்ந்த விசும்பெறிவ தெக்காலம்

110


அட்டாங்க யோக மதுக்கப்பா லாகநின்ற
கிட்டாப் பொருளெனக்குக் கிட்டுவது மெக்காலம்

111

ஒட்டாம லொட்டிநிற்கு முடலுமுயி ரும்பரிதி
லெட்டாப் பழம்பறிக்க வேணிவைப்ப தெக்காலம்

112

பாசத்தை நீக்கிப் பசுவைப் பதியில்விட்டு
நேசத்தி னுள்ளே நிறைந்திருப்ப தெக்காலம்

113

ஆசார நேம மனுட்டா னமுமறந்து
பேசாமல் ஞானநிலை பெற்றிருப்ப தெக்காலம்

114

பல்லா யிரங்கோடி பகிரங்க மும்படைப்பு
மல்லாது வேறிலையென றறிவதினி யெக்காலம்

115

ஆதிமுத லாகிநின்ற வரியென்னு மட்சரத்தை
யோதியறிந் துள்ளே யுணர்வதினி யெக்காலம்

116

சாத்திரத்தைச் சுட்டுச் சதுமறையைப் பேயாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு துயாறுப்ப தெக்காலம்

117

பஞ்சரித்துப் பேசும் பலகலைக்கெட் டாப்பொருளில்
சஞ்சரித்து வாழ்ந்து தலம்பெறுவ தெக்காலம்

118

மலமுஞ் சலமுமற்று மாய்கையற்று மானமற்று
நலமும் குலமுமற்று நானிருப்ப தெக்காலம்

119

ஓடாம லோடி யுலகை வலம்வந்து
தேடாம லென்னிடமாய்த் தெரிசிப்ப தெக்காலம்

120


அஞ்ஞானம் விட்டு மருள்ஞான .... தேவல் தொட்டுன்
மெஞ்ஞான வீடுபெற விடிவதினி யெக்காலம்

121

வெல்லுமட்டும் பார்த்து வெகுளியெலாம் விட்டகன்று
செல்லுமட்டுஞ் சிந்தை செலுத்துவது யெக்காலம்

122

மேலாம் பதந்தேடி மெய்ப்பொருளை யுள்ளிருத்தி
நாலாம் பதந்தேடி நான்பெறுவ தெக்காலம்

123

எண்ணாத தூரமெல்லா மெண்ணிப்பா ராமலுன்னைக்
கண்ணாடிக் குள்ளொளிபோற் கண்டறிவ தெக்காலம்

124

என்னை யறிந்துகொண்டே யெங்கோமா னோடிருக்கத்
தன்னை யறிந்து சமைந்திருப்ப தெக்காலம்

125

ஆறாத ரங்கடந்த யானந்தப் பேரொளியைப்
பேராகக் கண்டு பெற்றிப்ப தெக்காலம்

126

ஆணவ காமியத்தா லழிந்துசடம் போகாமல்
காணுத லின்பமுற்றுக் கண்டருள்வ தெக்காலம்

127

மாயத்தை நீக்கி வரும்வினையைப் பாழாக்கிக்
காயத்தை வேறாக்கி காண்பதுனை யெக்காலம்

128

மூம்மலமுஞ் சேர்ந்து முளைத்தெழுந்த காயமிதை
நின்மலமாய்க் கண்டுவினை நீக்கிநிற்ப தெக்காலம்

129

முன்னை வினைகெடவே மூன்றுவகைக் காட்சியினால்
உன்னை வௌிப்படுத்தி யுறுவதினி யெக்காலம்

130


கண்ணினொளி பாய்ந்ததுவுங் கருத்தறிந்து கொண்டதுவும்
விண்ணொளி கண்டதுவும் வௌிப்படுவத தெக்காலம்

131

கனவுகண்டாப் போலெனக்குக் காட்டிமறைந் தேயிருந்த
நினைவைப் பரவௌிமேல் நினைந்ததுவு மெக்காலம்

132

ஆரென்று கேட்டதுவு மறிவுவந்து கண்டதுவும்
பாரென்று சொன்னதுவும் பகுத்தறிவ தெக்காலம்

133

நினைக்குந் தினந்தோறும் நிறைந்தபரிபூரணத்தை
முனைக்குமேற் கண்டுகொண்டு முத்துதிர்ப்ப தெக்காலம்

134

இன்னதென்று சொல்லவொண்ணா வெல்லையற்ற வான்பொருளைச்
சொன்னதென்று நானறிந்து சொல்வதினி யெக்காலம்

135

முப்பாழும் பாழாய் முதல்பாழும் நிற்றுளா
யப்பாலும் பாழா யன்புசெய்த தெக்காலம்

136

மனத்தையொரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி
யெனதறிவை யம்பாக்கி யெய்வதினி யெக்காலம்

137

என்னை யிறக்கவெய்து யென்பதியை யூடழித்த
யுன்னை வௌியில்வைத்து யொளித்துநிற்ப தெக்காலம்

138

சீயென் றெழுத்தில் சிறந்துநின்ற வான்பொருளை
நீயென்று கண்டு நிலைபெறுவ தெக்காலம்

139

அவ்வெழுத்து மிவ்வெழுத்து மளவிநிற்குஞ் சீயெழுத்தும்
யவ்வெழுத்தி னுள்ளே யடங்கிநிற்ப தெக்காலம்

140

எழுத்தெல்லா மாண்டிறத் தேகமாய் நின்றதிலே
யழுத்தமாய்ச் சிந்தைதயைவைத் தன்புசெய்த தெக்காலம்

141

அருவா யுருவாகி யாதியந்த மாகிநின்று
குருவாகி வந்தெனையாட் கொண்டருள்வ தெக்காலம்

142

நானென் றறிந்தவென்னை நானறியாக் காலமெல்லாந்
தானென்று நீயிருந்து தனுவறிவ தெக்காலம்

143

ஒளியி லொளிவாயு உருப்பிறந்த வாறதுபோல்
வௌியில்வௌி யாயிருந்த விதமறிவ தெக்காலம்

144

ஒளியிட்ட மெய்ப்பொருளை யுள்வௌியி லேயடைத்து
வௌியிட்டுச் சாற்றிவைத்து வீற்றிருப்ப தெக்காலம்

145

மன்னும் பரவௌியை மனவௌியி லேயடைத்து
யென்று மொருநினைவை யெழுப்பிநிற்ப தெக்காலம்

146

பொன்னுமவென ளியும் பூண்ட பொற்பதத்தை யுள்ளமைத்து
மின்னு மொழிவிழியில் விட்டடைபப் தெக்காலம்

147

அப்பிலுறை யப்பு மானடியிற் சேரவொரு
செப்பிலெவ் வாறதென்று செப்புவது மெக்காலம்

148

கூட்டிலடை பட்ட குளவியுருக் கொண்டதுபோல்
வீட்டிலடை பட்டருளை வேண்டுவது மெக்காலம்

149

அருணப் பிரகாச மண்டமெங்கு முற்றதுபோல்
கருணைத் திருவடியிற் கலந்திருப்ப தெக்காலம்.

150


கடைய வெழுந்தருந்தக் கனலெழுப்பி வந்தாப்போல்
உடலி லொளித்தசிவ மொளிபிறப்ப தெக்காலம்

151

பொன்னில் பலவிதமாய்ப் பூடணமுண் டானதுபோல்
உன்னில் பிறந்துன்னி லொடுங்குவது மெக்காலம்

152

நாயில் கடைப்பிறப்பாய் நான்பிறந்த துன்பமற
வெய்யிற் கனலொளிபொல் விழுங்குவது மெக்காலம்

153

சூரிய காந்தவொளி சூழ்ந்தபஞ்சைச் சுட்டதுபோல்
லாரியன் தோற்ற மருள்பெறுவ தெக்காலம்

154

காந்தம் வலித்திரும்பைக் கவர்ந்திழுத்துக் கொண்டாப்போல்
பாய்ந்து வலித்திழுத்துப் பதத்தில்வைப்ப தெக்கலாம்

155

இரும்பில் கனல்மூட்டி யிவ்வுருப்போ யவ்வுருவாய்க்
கரும்பில் சுவைரசத்தைக் கண்டறிவ தெக்காலம்

156

கருக்கொண்ட முட்டைதனைக் கண்டாமை தானிருக்க
உருக்கொண்ட வாறதுபோ லுனைநினைப்ப தெக்காலம்

157

வீடுவிட்டுப் பாய்ந்து வௌியில்வரு வார்போல்நீ
கூடுவிட்டுப் பாய்ந்த குறிப்பறிவ தெக்காலம்

158

உடைந்தவெண்ணெய் மோரில் கலவாத வாறதுபோல்
அடைந்ததமி யேனுனக்கே யாட்படுவ தெக்காலம்

159

எள்ளுங் கரும்பு மிளமலருங் காயமும்போ
லுள்ளும் புறம்பும்நின்ற துணர்ந்தறிவ தெக்காலம்

160


இருளை வௌிவிழுங்கி யேகவுருக் கொண்டதுபோ
லருளை விழுங்குமிரு ளகன்றுநிற்ப தெக்காலம்

161

மின்னெழுந்து மின்னோங்கி விண்ணுலுறைந் தாப்போல்நீ
என்னுள் நிறைந்துநின்றது யானறிவ தெக்காலம்

162

விளங்கிநின்ற தாரகையை வெய்யோன் மறைத்தல்போல்
களங்கமற வுன்காட்சி கண்டறிவ தெக்காலம்

163

அன்னம் புனல்வகுத் தமுதத்தை யுண்டாப்போல்
யென்னை வகுத்துன்னை யினிக் காண்ப தெக்காலம்

164

கண்டபுனல் வகுத்ததில் கதிரொளிகள் பாய்ந்தாப்போல்
கொண்ட சொரூபமதைக் கூர்ந்தறிவ தெக்காலம்

165

பூணுகின்ற பொன்னணிந்தார் பொன்சுமக்கு மோயுடலைத்
தோணுகின்ற தென்கருத்தில் தோற்றுவது மெக்காலம்

166

செம்பில்நின்ற காளிதம்போற் சிவரூபத் தைவிழுங்கி
வெம்பிநின்ற மும்மலத்தை வேரறுப்ப தெக்காலம்

167

ஆவியுங் காயமும்போ லன்னத்தில் நின்றதைத்தான்
பாவி யறிந்துமனம் பற்றிநிற்ப தெக்காலம்

168

ஊமைக்கனாக் கண்டுரைக்க வூறிய லின்பமதை
நாமறிந்து கொள்வதற்கு நாள்வருவ தெக்காலம்

169

சாகாச் சிவனடியே தப்பாதா ரெப்போதும்
போகா ருடல்கண்டு போவரென்ப தெக்காலம்

170


காட்டுமருள் ஞானக் கடலிலின்பக் கப்பல்விட்டு
மூட்டுகரு ணைக்கடலில் மூழ்குவது மெக்காலம்

171

தானாரோ நீயாரோ தற்பரமாய் நின்றாரோ
நானாரோ வென்றறிய நாள்வருவ தெக்காலம்

172

நிட்டை தனைவிட்டு நினைவறிவு தப்பவிட்டு
வெட்ட வௌிக்குள்ளே விரவிநிற்ப தெக்காலம்

173

வெட்ட வௌிதனிலே விளைந்தவெறும் பாழைநான்
திட்டமறக் கண்டு தௌிவதினி யெக்காலம்

174

எங்கும் பலவடிவா யென்வடிவும் நின்வடிவாய்க்
கங்குல்பக லறியவுன்னைக் கண்டிருப்ப தெக்காலம்

175

உண்டதுவு மாதருடன் ஊடிச் சேர்வதுவுங்
கண்டதுவும் நீயெனவே கண்டுகொள்வ தெக்காலம்

176

எவரெவர்க ளெப்படிக்கண் டெந்தப் படிநினைத்தார்
அவரவர்க்குத் தானப்படி யாவதுவு மெக்காலம்

177

ஈமென்று கேட்டதுவு மென்னுள்ளே நின்றதுவும்
நாமென்று சொன்னதுவும் நமக்கறிவ தெக்காலம்

178

சித்தம்பிறந் திடமுந்தி சின்மயமாய் நின்றதுவுஞ்
சித்தமறந் திடமுந் தேர்ந்தறிவ தெக்காலம்

179

ஆட்டமொன்று மில்லாமல் அசைவுசற்றுங் காணாமல்
தேட்டமற்ற வான்பொருளைத் தேடுவது மெக்காலம்

180


போக்கும் வரவும் பிறப்புமுள்ளு மாகநின்று
காக்கமொரு பொருளைக் கலந்துநிற்ப தெக்காலம்

181

நானெனவும் நீயெனவு மிரண்டுமிது வொன்றானால்
ஞானெனவுஞ் சிந்தைதனி லெண்ணுவது மெக்காலம்

182

அறிவையறி வாலறிந்த வறிவுமறி யாமறிவில்
பிரிவுபட நில்லாமல் பிடிபடுவ தெக்காலம்

183

நீடும் புவனமெல்லாம் நிறைந்துநின்ற சித்திரமாய்
ஆடும் திருக்கூத்தை யறிவதினி யெக்காலம்

184

தித்தியென்ற கூத்தில் திருச்சிலம்பி னோசைகளும்
பத்தியுடன் கேட்டுப் பணிவதினி யெக்காலம்

185

நயனத் திடைவழிபோய் நண்ணும் பரவௌியிற்
சயனத்தி னில்திரிந்து தலைப்படுவ தெக்காலம்

186

அந்தரத்தில் பூத்தலாந்தெழுந்த தாமரைபோல்
தந்திரத்தால் நோக்கித் தலைப்படுவ தெக்காலம்

187

அருவி மலைநடுவே யாயிரக்கால் மண்டபத்துள்
திருவிளை யாட்டங்கண்டு தெரிசிப்ப தெக்காலம்

188

உற்றுற்றுப் பார்க்க வொளிதருமா னந்தமதை
நெற்றிக்குள் நேரேகண்டு நிலைப்பதினி யெக்காலம்

189

மீனைரொம்ப வுண்டுகக்கி விக்கிநின்ற கொக்கதுபோல்
ஞானத்தை ரொம்பவுண்டு நானிற்ப தெக்காலம்

190


கள்ளுண்ட வாயதுபோல் கலிதருமா னந்தமதில்
தள்ளுண்டு திண்டாடி தடிபுரள்வ தெக்காலம்

191

தானென்ற வாணவமுந் தத்துவமுங் கெட்டொழிந்து
தானென்ற பேச்சுமது தங்கிநிற்ப தெக்காலம்

192

பிறப்பு மிறப்புமற்றுப் பேச்சுமற்று மூச்சுமற்று
மறப்பும் நினைப்பு மற்று மாய்ந்திருப்ப தெக்காலம்

193

என்வசமுங் கெட்டு யிருந்தவ சமுமழிந்து
தன்வசமுங் கெட்டருளைச் சார்ந்துநிற்ப தெக்காலம்

194

தனமறந்து தவத்தி னிலைமறந்து மலக்குற்றக்
கனமறந்து கடையனேன் கதிபெறுவ தெக்காலம்

195

என்னையென்னி லேமறந் திருந்தபதி யும்மறந்து
தன்னையுந் தான்மறந்து தனித்துநிற்ப தெக்காலம்

196

தன்னையென்னி லேமறந்து தலைவாசல் தான்போட்டு
உன்னைநினைந் துள்ள முருகிநிற்ப தெக்காலம்

197

நானுன்னைப் பூண்டதெல்லா ஞானவழி யாலறிந்து
தானவனாய் நின்று சரணடைவ தெக்காலம்

198

தானந்த மில்லாத தற்பரத்தி லேயடைந்து
மானந்தன் கண்டுபதி யற்றிருப்ப தெக்காலம்

199

என்னினைவோ நானறியே னிந்தவண்ணஞ் சொன்னதெல்லாம்
முன்னினைவோர் கைக்கொள்ளுநான் முடிபடுவ தெக்காலம்

200

நச்சரவை நீக்கி நன்மணிகைக் கொண்டாப்போல்
சொற்சரவைத் தீர்த்தநல்லோர் துணைக்கொள்வ தெக்காலம்

201

முற்றும்


ஆராய்ச்சியுரை - (முனைவர் நா. கண்ணன், 2002 )

அன்பர்களே:

எக்காலக் கண்ணி என்ற இந்த நூல் அரசினர் கீழத்திய சுவடி நூலகத்தினால் 1953-ம் ஆண்டு வௌியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னுரை வழங்கியுள்ள திரு.வி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் இத்தொகுப்பின் ஆசிரியர் அறியப்படாததால் பின் வருமாறு எழுதுகிறார்:

"தாயுமானவர் பாடல் தொகுப்பினுள் காணப்பெறும், எந்நாட் கண்ணி, பராபரக் கண்ணி முதலியனவற்றிற்கும் இங்ஙனமே பெயர் வந்துள்ளமை நோக்கத் தக்கது. இத்துணைச் சிறப்புக்கள் பொருந்திய இச் சிறுநூலை இயற்றி நமக்களித்த ஆசிரியர் இன்னார் என்று தெரியவில்லை. இவ்வாசிரியர் தாயுமானவருக்குச் சிறிது காலம் முன்போ, பின்போ இருந்தவராதல் வேண்டும். இந்நூற் பாடல்கள் தாயுமானவர் பாடல்களைப் போன்ற தன்னையுடையனவாய் இருப்பதால், எந்நாட் கண்ணி, பராபரக் கண்ணி முதலியவற்றை இயற்றிய தாயுமானவரே இதனையும் இயற்றியிருக்கலாம் என்று ஊகிக்கவும் இடமுண்டு. ஆயின், தாயுமானவர் பாட்டுக்களின் தொகுப்பைக் கொண்ட அச்சுப் பிரதியினுள் "எக்காலக் கண்ணி" என்னும் இப்பகுதி காணப் பெற்றிலது. இஃது அறிஞர்கள் ஆராய்ச்சிக்குரியதொன்று."

என்று முடிக்கிறார். உண்மையில் இது ஆய்வுக்குரிய ஒன்றுதான். ஏனெனில் ஆறு வருடங்கள் கழித்து சென்னை பிரேமா பிரசுரம் வௌியீடாக இதே பாடல்கள் சற்று வித்தியாசங்களுடன் "பத்திரகிரியார் மெய்ஞானப் புலம்பல்" எனப் பெயரிடப்பட்டு, 'சித்தர் பெரிய ஞானக் கோவை என வழங்கும் சித்தர் பாடல்கள்' என்ற புத்தகத்தின் ஒரு தொகுதியாக வந்திருக்கிறது. வித்வான் நா.தேவநாதனும், அரு.ராமநாதனும் பாடபேதங்களைப் பரிசோதித்து, திருத்தமாக விளக்கக் குறிப்புகளுடன் இதை வௌியிட்டுள்ளனர். இவர்கள் அரசினர் கீழத்திய சுவடி நூலகத்தினால் 1953-ம் ஆண்டு வௌியிடப்பட்ட "எக்காலக் கண்ணி" என்ற நூலினை அறிந்தார்களா? அதையும் இத்தொகுப்பின் ஆய்வுக்கு உட்படுத்தினார்களாவெனத் தெரியவில்லை. பெரிய தொகுப்பாகிய 'சித்தர் பாடல்' களில் மூலப்பிரதி பற்றிய குறிப்பேதும் இல்லை.

எனவே இப்பாடல்கள் தெரியாத ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்டன என்பது போய் இதை எழுதியவர் தாயுமானவரா? இல்லை பத்திரகிரியாரா? என்ற சந்தேகத்தில் நாம் இப்போது நிற்கிறோம்! ஓலைகள் எழுதும் போது தவறுகள் ஏற்படுவது மிக சகஜம். இதைக் கீழ்க்காணும் குறிப்பு சுட்டுகிறது:

"இது நம்ம நாட்டு நாயத்து ஓலை. ரொம்பக்காலம் பழகிப் போனபடியால் கொஞ்சம் எழுத்து போயிருந்த படியாலும் அந்த ஓலைக்குப் பதில் புது ஓலை போட்டு யுவ வருஷம் அப்பிசை மாதம் 15 தேதி எழுதியிருக்கிறோம். ஏட்டுக் குத்தம், எழுத்துக் குத்தம், வாசகத் தப்பு, வரி மாறாட்டம் இருந்தபோதிலும் நீங்கள் அனைவரும் பொறுத்துக் கொள்ள வேண்டியது. கடவுள் துணை! " (கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள். ஆசிரியர் புலவர் செ.இராசு, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் 1991. பக். 217)

இனி எக்காலக் கண்ணியின் இரு பதிப்புக்களுக்குள் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் காண்போம்.

தலைப்பிடுவதிலேயே மாற்றம் தெரிகிறது. கீழத்திய சுவடி நூலகம் இதை 'எக்காலக் கண்ணி' என்றழைக்க, பிரேமா பிரசுரம் இதை 'பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல்' என்றழைக்கிறது. முன்னதன் முதல் பாட்டு, பின்னதில் காப்புச் செய்யுளாக கருதப்படுகிறது, சிறு மாற்றத்திடன்,

முத்திதரும் ஞான மொழியாம் புலம்பல் சொல்ல
அத்தி முகவந்தன் அருள்பெறுவது எக்காலம்?

என்பது காப்புச் செய்யுள். இருவேடுகளிலும் அத்தி முகம் கொண்ட விநாயகனுக்கு காப்பிட்டாலும், "ஞான மொழிப் புலம்பல்" என்ற வசனம் ஒரு ஏட்டிலும், "வேதமொழிந்த மெஞ்ஞானம்" என்ற வசனம் இன்னொரு ஏட்டிலும் காணப்படுகிறது. இவையே 'ஞானப்புலம்பல்' என்று ஒரு பதிப்பில் பெயர் பெருவதற்கும், மற்றொன்றில் 'எக்காலக் கண்ணி' என்று பெயர் பெருவதற்கும் காரணமாகிறது என்று ஊகிக்கலாம்.

இந்தக் காப்பு செய்யுள் சித்தர்கள் சிந்தனை மரபுடன் நெருங்கிக் காணப்படுகிறது. ஏனெனில், சித்தர்கள் நிறுவனப்படுத்தப்பட்ட மதத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள். சிவவாக்கியரின் பின்வரும் பாடல் இதைத் தெள்ளத்தௌிவாகக் காட்டும்,

"சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே!
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ?
மாத்திரைப்போ தும்முளே மறிந்து தொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது? சத்திமுத்தி சித்தியே!"

எனவே எக்காலம், எக்காலம் என்று புலம்பல் செய்த சித்தர் "முத்திதரும் வேத மொழிந்த மெஞ் ஞானஞ்சொல்ல" என்று சொல்லியிருப்பாரா? என்ற கேள்வி எழுகிறது. வேதம் என்பது அசைக்கியலா அதிகாரமாக உருப்பெற்று நிறுவனப்படுத்தப் பட்டு, பிறப்பால் உயர் சாதிக்காரர்களே வேதம் சொல்ல வல்லவர் என்ற இறுக்கமான ஒரு சமூக கட்டுப்பாட்டை சித்தர்கள் உடைக்கிறார்கள். நிறுவனம் பேசும் ஆசாரம் அனுஷ்ட்டானங்களை கேலி செய்து பராபரத்தின் உண்மை நிலை காட்டுகின்றனர். உதாரணமாக,

"சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்
சத்தியற்று சம்புவற்று சாதிபேதமற்றுநன்
மித்தியற்று மூலமற்று மூலமந்திரங்களும்
வித்தைஇத்தை ஈன்றவித்தில் விளைந்ததே சிவாயமே!"

மேலும் சித்தர் பாடல்களில் வரும் பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல் மொத்தம் 231 கண்ணிகளைக் கொண்டுள்ளது. விநாயகன் துதியுடன் ஆரம்பிக்கும் இத்தொகுப்பு அவனது இணையடியைத் தொழுது முடிகின்றது.

"ஐந்து கரத்தானை அடி இணைப் போற்றிசெய்து
நெஞ்சில் பொருத்தி நிலைபெறுவது எக்காலம்?"

இந்த வகையில் பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல் ஒரு முழுமை பெற்ற தொகுப்பாகத் தோன்றுகிறது. கம்பராமாயணத்திற்கு அதன் சிறப்பு குறித்து பல்வேறு படிகள் இருப்பதுபோல் பத்திரகிரியார் பாடலுக்கும் படிகள் இருப்பது, இப்பாடல் மக்கள் மத்தியில் எவ்வளவு பிரபலமாக இருந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இப்பாடல்களைப் படிப்பவர் மனதைத் தொடும் வண்ணம், அதே நேரத்தில் அவர்தம் ஆற்றாமையை புலம்பும் வண்ணம் இப்பாடல்கள் எழுதப்பட்டிருப்பது இதன் சிறப்பு.

பத்திரகிரியார் என்பவர் பட்டிணத்தாரின் சீடர் என்பது மரபு. பட்டிணத்தாரின் பாடல்களில் பெண்ணாசை குறித்த ஒரு வெறுப்பு மேலோங்கி இருக்கும். உதாரணமாக,

"மானிடர்க்கெல்லாம் யானெடுத்துரைப்பேன்
விழிவௌி மாக்கள் தௌிவுறக் கேண்மின்......
நகுவார்க்கு இடமாய் நான்று வற்றும்
முலையைப் பார்த்து முளரிமொட்டென்றும்
குலையுங் காமக் குருடர்க்கு உரைப்பேன்!"

இத்தொணி "எக்காலக் கண்ணி"யிலும் ஒலிக்கிறது!


பெண்ணிநல்லா ளாசை பிரமைதனை விட்டொழிந்தென்
கண்ணிரண்டு மூடிக் கவிழ்ந்திருப்ப தெக்காலம். 10

வெட்டுண்ட புண்போல் விரிந்தவல்குற் பைதனிலே
கட்டுண்டு நில்லாமல் கருதியிருப்ப தெக்காலம். 11

வெட்டுண்ட புண் போல விரிந்த அல்குல் என்னும் உவமையைச் சித்தர்கள் தவிர வேறு யாரும் பேசமுடியாது!

மேலும் சித்தர்களால்தான்,

வேதாந்த வேதமெல்லாம் விட்டொழிந்தே னிச்சையினால்
ஏகாந்த மாகி யிருப்பதினி யெக்காலம். 32

சாத்திரத்தைச் சுட்டுச் சதுமறையைப் பேயாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு துயாறுப்ப தெக்காலம் 117*

என்றும் சொல்லமுடியும்! இது தன்னிச்சையாக அலைந்து திரியும் ஒரு ஏகாந்தியின் ஞானமாக இருக்க முடியுமே தவிர, பூஜை, புனஸ்காரம் செய்யும் ஒரு வேதியரின் ஞானமாக இருக்க முடியாது!

தமிழ் மண்ணில் சித்தர்களைப் பற்றிய ஒரு பொது அபிப்பிராயம் வர கீழ்க்கண்ட பாடல்கள் உதவியிருக்கும் என்று நம்பலாம். சித்தி பெற்றவர்கள் பல்வேறு வகைகளில் உலாவுகின்றனர். சிலர் ஜடாமுடி தரிக்கின்றனர், சிலர் கஞ்சா, அபின் குடிக்கின்றனர், சிலர் மௌனியாக உள்ளனர், இப்படி எத்தனையோ...

சேயாய்ச் சமைத்துச் செவிடூமை போல்திரிந்து
பேய்போ லிருந்து பிரமைகொள்வ தெக்காலம் 8

தந்தைதாய் மக்களுஞ் சகோதரமும் பொய்யெனவே
சிந்தைதனிற் கண்டு தௌிந்திருப்ப தெக்காலம். 13

அவவேடம் பூண்டு மலைந்துதிரி யாமல்யான்
சிவவேடம் பூண்டு சிறந்திருப்ப தெக்காலம். 28

கஞ்சா லபினுண்டு கள்ளுண்டு வாடாமல்
பஞ்சா மிருதவின்பம் பருகுவது மெக்காலம். 35

வளம்படிக்கும் மாதருடன் மண்ணுலகில் வாழ்ந்தவலும்
புளியம் பழத்தோடு போன்றிருப்ப தெக்காலம் 54

பற்றற்று நீரிற் படர்ந்தவண்ணச் சிற்றிலைபோல்
சுற்றத்தை நீக்கிமனந் தூரநிற்ப தெக்காலம் 55

ஆசார நேம மனுட்டா னமுமறந்து
பேசாமல் ஞானநிலை பெற்றிருப்ப தெக்காலம் 114

மேலும் சித்தர்கள் சமயம் கடந்த ஒரு யோக நிலை பற்றி நிரம்பச் பேசுகின்றனர். அது 'எக்காலக் கண்ணி'யிலும் ஒலிக்கிறது.


ஆதார மூலத் தடியிற்கண பதியைக்கண்டு
பாதர விந்தம் பணிந்துநிற்ப தெக்காலம் 67

காசிதனில் நடந்து காலோய்ந்து போகாமல்
வாசிதனி லேறி வருவதினி யெக்காலம் 98

சித்தர்கள் பெண் சுகத்தைக் கண்டித்தாலும், அது தரும் சுவையை மெஞ்ஞான விளக்க மேற்கோள்களுக்கு பயன்படுத்தத் தவறுவதில்லை. திருமூலர் தொடர்ந்து பல சித்தர்கள் உடலின்பத்தை முக்திக்கான பாதையாகவும் (தந்திரம்- பரியங்க யோகம்) கருதுவதுண்டு.

சல்லாப லீலையிலே தன்மனைவி செய்தசுகஞ்
சொல்லார்கண் டோனுக்குச் சொல்வதினி யெக்காலம் 56

தன்கணவன் தன்சுகத்தில் தன்மனம் வேறாப்போல்
என்கருத்தி லுன்பதத்தை யேத்துவது மெக்காலம் 58

உண்டதுவு மாதருடன் ஊடிச் சேர்வதுவுங்
கண்டதுவும் நீயெனவே கண்டுகொள்வ தெக்காலம் 176

பாரதி போல் கள்ளுண்ணும் சுகம் பற்றியும் உவமை வருகிறது !

கள்ளுண்ட வாயதுபோல் கலிதருமா னந்தமதில்
தள்ளுண்டு திண்டாடி தடிபுரள்வ தெக்காலம் 191

சித்தர்கள் தமிழ் மரபில் வந்தவர்கள். நிறுவன மதங்களைக் கேலி பேசத் தயங்காதவர்கள். சித்தர்கள் பல்வேறு குலங்களிலிருந்து வருபவர்கள். அவர்கள் வாயிலிருந்து சிவனை 'ஆரியன்' என்னும் போது இச்சொல் மரியாதை நிமித்தம் பயன்படும் உயர்வு நவிற்சி என்று கொள்ளவேண்டுமே தவிர 'ஆரியன்' என்பது ஒரு மனித இனம் என்று கொள்ளலாகாது. அது ஒரு மொழிச் சொல்லாட்சி என்று பலர் விளக்கியம் இந்த ஆரிய-திராவிட சண்டை தமிழ் மண்ணில் ஓய்ந்த பாடில்லை!

தூரியில் மீனம்போல் கழன்றுமனம் வாடாமல்
ஆரியனைத் தேடி யடிபணிவ தெக்காலம் 26

வாடிய பயிரைக் கண்டு வாடிய இராமலிங்க வள்ளலார் போல் பத்திரகிரியாரும் மன்னுயிரைத் தன்னுயிர் என்று கருத வேண்டும் என்கிறார்.

மன்னுயிரைக் கொன்று வதைத்துயிரைப் பார்க்காமல்
தன்னுயிரைப் போலெண்ணித் தவமுடிப்ப தெக்காலம். 14

கண்ணா லருவி கசிந்துநின்று முத்துருளச்
சொர்ணப் பழம்பொருளைத் தொகுத்தறிவ தெக்காலம் 61

மெஞ்ஞானம் தெரிக்கும் பாடல்கள் பலப் பல, அவற்றுள் சில....

இன்றுள்ளோர் நாளை இருப்பதுவும் பொய்யெனவே
மன்றுள்ளோர் சொல்லும் வவைதெரிவ தெக்காலம். 34

ஐந்து பொறிவழிபோ யலையுமிந்தப் பாழ்மனத்தை
வெந்துவிடப் பார்த்து விழிப்பதினி யெக்காலம் 86

சினமாண்டு பேசுஞ் செயல்மாண்டு நான்மாண்டு
மனமாண்டு முத்திநிலை வந்தடைவ தெக்காலம் 88

ஊனிறக்கக் காய முயிரிது போகுமுன்னே
நானிறந்து போகவினி நாள்வருவ தெக்காலம் 91

பொன்னில் பலவிதமாய்ப் பூடணமுண் டானதுபோல்
உன்னில் பிறந்துன்னி லொடுங்குவது மெக்காலம் 152

செம்பில்நின்ற காளிதம்போற் சிவரூபத் தைவிழுங்கி
வெம்பிநின்ற மும்மலத்தை வேரறுப்ப தெக்காலம் 167

ஊமைக்கனாக் கண்டுரைக்க வூறிய லின்பமதை
நாமறிந்து கொள்வதற்கு நாள்வருவ தெக்காலம் 169

வெட்ட வௌிதனிலே விளைந்தவெறும் பாழைநான்
திட்டமறக் கண்டு தௌிவதினி யெக்காலம் 174

எங்கும் பலவடிவா யென்வடிவும் நின்வடிவாய்க்
கங்குல்பக லறியவுன்னைக் கண்டிருப்ப தெக்காலம் 175

சித்தர்களைப் பற்றிய தொன்மங்களில் அவர்கள் கூடுவிட்டுக் கூடு பாயும் திறனும் ஒன்று. அது பற்றிப் பேசும் பாடலொன்று.

வீடுவிட்டுப் பாய்ந்து வௌியில்வரு வார்போல்நீ
கூடுவிட்டுப் பாய்ந்த குறிப்பறிவ தெக்காலம் 158

அதுபோல், சித்தர்கள் இரசவாதம் போன்ற விஞ்ஞான சாத்திரங்களிலும் வல்லவர்கள். இயற்பியல் பேசும் பாடல்கள்...

சூரிய காந்தவொளி சூழ்ந்தபஞ்சைச் சுட்டதுபோல்
லாரியன் தோற்ற மருள்பெறுவ தெக்காலம் 154

விளங்கிநின்ற தாரகையை வெய்யோன் மறைத்தல்போல்
களங்கமற வுன்காட்சி கண்டறிவ தெக்காலம் 163

சித்தர்களின் காலம் 10 நூற்றாண்டிற்குப் பின்தான் என்பது அறிவியலார் கருத்து. பத்திரகிரியார் 'கண்ணாடி' பற்றிய உவமையைக் கையாள்கிறார். கண்ணாடி என்பதைத் 'தட்டொளி' என்று சித்தர்கள் காலத்திற்கு முன் வாழ்ந்த ஆண்டாள் பேசுகிறாள். பத்திரகிரியார் காலத்தில் இரசம் பூசிய கண்ணாடி இருந்திருக்கலாம். அது அவர் பிற்காலத்தவர் என்று யூகிக்கவும் இடம் கொடுக்கலாம்.

எண்ணாத தூரமெல்லா மெண்ணிப்பா ராமலுன்னைக்
கண்ணாடிக் குள்ளொளிபோற் கண்டறிவ தெக்காலம் 124

பத்திரகிரியார் மாணிக்கவாசகர் காலத்திற்கு பிற்பட்டவர் என்பதை அவர் கையாளும் திருவாசக வசனங்கள் சுட்டுகின்றன.

புல்லாய் விலங்காய்ப் புழுவாய் நரவடிவாய்
எல்லாப் பிறப்பு மிருளகல்வ தெக்காலம் 49

கல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவையாய்ப்
புல்லாய்ப் பிறசனனம் போக்குவது மெக்காலம் 51

போக்கும் வரவும் பிறப்புமுள்ளு மாகநின்று
காக்கமொரு பொருளைக் கலந்துநிற்ப தெக்காலம் 181

இவையனைத்தும் 'சிவபுராணத்தில்' பேசப்படும் விஷயங்களாகும். 'போக்கும் வரவுமற்ற புண்ணியன்' என்பது மாணிக்கவாசகர் வாக்கு. பத்திரகிரியார், வைணவ சித்தாந்தத்தில் வருவது போல் போக்கும் வரவும் இறைவனுக்கு உண்டு என்றும், அதில் அந்தர்யாமியாமியாக இறைவன் உள்ளான் என்றும் சொல்கிறார்!

சித்தர்களின் தமிழ் எளிய தமிழ், புதிய தமிழ். அது மக்கள் தமிழும் கூட!

தானாரோ நீயாரோ தற்பரமாய் நின்றாரோ
நானாரோ வென்றறிய நாள்வருவ தெக்காலம் 172

தாயின் தாலாட்டு கேட்கிறதா இப்பாடலில்?

மீனைரொம்ப வுண்டுகக்கி விக்கிநின்ற கொக்கதுபோல்
ஞானத்தை ரொம்பவுண்டு நானிற்ப தெக்காலம் 190

சாதாரணமான உதாரணமும், கக்கி-விக்கி போன்ற மக்கள் தமிழும் இங்குண்டு.

ஒருவகையில் 'எக்காலம், எக்காலம்' என்று இவர் புலம்புவது ஒரு சாதாரணனனுக்காக வக்காலத்தாக இவர் புலம்புவது போல் உள்ளது. நம் மனத்தின் ஆன்மீக ஆற்றாமைகள் இக்கண்ணிகளில் பட்டுத் தெரிக்கின்றன. ஒருவகையில் பத்திரகிரியாரே நம்மைப் போல் புலம்புவது நமக்கு ஆறுதல் அளிப்பதாகவுள்ளது. கடைசியாகச் சொல்கிறார், இப்படிப் பேசும்படி இவரைச் செய்வித்தவன் எவன்? என்று. இத்தனை ஞானமும் உள்ளொளியாய் வந்ததென்றும் புரிகிறது. அருணகிரிக்கு கந்தவேள் சொன்னதுபோல் 'சொல்லற, சும்மா இரு' என்னும் நிலைபற்றிப் பேசி முடிக்கிறார்!

என்னினைவோ நானறியே னிந்தவண்ணஞ் சொன்னதெல்லாம்
முன்னினைவோர் கைக்கொள்ளுநான் முடிபடுவ தெக்காலம் 200

நச்சரவை நீக்கி நன்மணிகைக் கொண்டாப்போல்
சொற்சரவைத் தீர்த்தநல்லோர் துணைக்கொள்வ தெக்காலம் 201.

அன்பன்
நா.கண்ணன்
போப்லிங்கன், ஜெர்மனி
ஏப்ரல் 06.04.2002

Mail Usup- truth is a pathless land -Home