தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF > ஏரெழுபது & திருக்கை வழக்கம் -  கம்பர்

ஏரெழுபது & திருக்கை வழக்கம் - கம்பர்
Erezupatu and tirukkai vazakkam of kampar


Etext input: selvi. Selva Nayagi, Chennai, Tamilnadu, India
Proof reading : tiru. N.D. Loga Sundaram, tmt. N.D. Rani Chennai, Tamilnadu, India.
Web version: tiru. N.D. Loga Sundaram , Chennai, Tamilnadu.
PDF version : tiru K. Kalyanasundaram, Lausanne, Switzerland

© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.tamil.net/projectmadurai
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


திருச்சிற்றம்பலம்

ஏரெழுபது - (வேளாண் தொழிலின் சிறப்பு)
கம்பர்

பாயிரம்

1 பிள்ளை வணக்கம்

கங்கைபெறும் காராளர் கருவியெழு பதுமுரைக்க
அங்கைபெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பு மணியமலை
மங்கைபெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமைவலஞ்செய்
கங்கைபெறுந் தடவிகடக் களிற்றானைக் கழல்பணிவாம்

2 மூவர் வணக்கம்

நிறைக்குரிய வந்தணர்கள் நெறிபரவ மனுவிளங்கத்
தறைக்குரிய காராளர் தமதுவரம் பினிதோங்க
மறைக்குரிய பூமனையும் வண்டுளபத் தாமனையும்
பிறைக்குரிய நெடிஞ்சடிலப் பெம்மானை யும்பணிவாம்

3 நாமகள் வணக்கம்

திங்களின்மும் மாரிபெயச் செகத்திலுயிர் செழித்தோங்கக்
கங்கைகுலா திபர்வயலிற் கருவீறத் தொழுகுலத்தோர்
துங்கமக மனுநீதி துலங்கிடவை யம்படைத்த
பங்கயன்ற னாவிலுறை பாமடந்தை பதந்தொழுவாம்

4 சோழ நாட்டுச் சிறப்பு

ஈழ மண்டல முதலென உலகத்

தெண்ணு மண்டலத் தெறிபடை வேந்தர்
தாழு மண்டலஞ் செம்பியன் மரபினோர்
தாமெ லாம்பிறந் தினியபல் வளத்தின்
வாழு மண்டலங் கனகமு மணிகளும்
வரம்பில் காவிரி குரம்பினிற் கொழிக்குஞ்
சோழ மண்டல மிதற்கிணை யாமெனச்
சொல்லு மண்டலஞ் சொல்வதற் கில்லையே

5 சோழ மன்னன் சிறப்பு

முடியுடைய மன்னவரின் மூவுலகும் படைத்துடைய
கொடியுடைய மன்னவரிற் குலவுமுதற் பெயருடையான்
இடியுடைய வொலிகெழுநீ ரெழுபத்தொன் பதுநாட்டுக்
குடியுடையான் சென்னிபிற ரென்னுடையார் கூறீரே

6 சோழன்தன் பெருநாட்டுச் சிறப்பு

மநுநகர மனைய திண்டோள் மணிமுடி வளவன் சேரன்
சுந்தர பாண்டி யன்றஞ் சுடர்மணி மகுடஞ் சூட
அந்தணர் குலமு மெல்லா வரங்களும் விளங்க வந்த
இந்திர னோலக் கம்போ லிருந்தது பெரிய நாடே

7 வேளாண் குடிகள்தம் சிறப்பு

ஆழித்தேவர் கடலானார் அல்லாத்தேவர் அம்பலத்தார்
ஊழித்தேவர் தாங்கூடி உலகங் காக்க வல்லாரோ
வாழித்தேவர் திருமக்கள் வையம் புரக்கும் பெருக்காளர்
மேழித்தொவர் பெருமைக்கு வேறே தேவர் கூறேனே

8 வேளாளர் சிறப்பு

தொழுங்குலத்திற் பிறந்தாலென் சுடர்முடிமன் னவராகி
எழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனுஞங
செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடைய ரானாலென்
உழுங்குலத்திற் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே

9 வேளாளர் புகழ் புலமையின் பெரிது

அழுங்குழவிக் கன்புடைய தாயேபோ லனைத்துயிர்க்கும்
எழுங்கருணைப் பெருக்காளர் எளியரோ யாம்புகழ
உழுங்கெழுவிற் கருவீறி யுலகமுதற் கருவாகச்
செழுங்கமலத் தயனிவரைச் செய்துலகஞ் செய்வானேல்

10 வேளாண் குலத்திற்கு நிகரில்லை

வேதியர்தம் உயர்குலமும் விறல்வேந்தர் பெருங்குலமும்
நீதிவளம் படைத்துடைய நிதிவண்கர் தம்குலமுஞ்
சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர்
கோதில்குலந் தனக்குநிக ருண்டாகிற் கூறீரே


நூல்

1 உழவிற்கு இனிய நாள் கோடலிஞ் சிறப்பு

சீர்மங்க லம்பொழியுந் தெண்டிரைநீர்க் கடல்புடைசூழ்
பார்மங்க லம்பொழியும் பல்லுயிருஞ் செழித்தோங்கும்
கார்மங்க லம்பொழியும் பருவத்தே காராளர்
ஏர்மங்க லம்பொழிய வினிதுழநாட் கொண்டிடினே

2 ஏர்விழாச் சிறப்பு

நீர்விழாக் கொளவளர்ந்த நிலமெல்லாந் தம்முடைய
சீர்விழாக் கொளவிளக்குந் திருவிழாப் பெருக்காளர்
ஏர்விழாக் கொளினன்றி யெறுழ்கரிதேர் மாப்படையாற்
போர்விழாக் கௌமாட்டார் போர்வேந்த ரானோரே

3 அலப்படைவாள் சிறப்பு

குடையாளு முடிவேந்தர் கொலையானை தேர்புரவி
படையாளு மிவைநான்கும் படைத்துடைய ரானாலென்
மடைவாளை வரும்பொன்னி வளநாடர் தங்கள்அலப்
படைவாளைக் கொண்டன்றிப் பகையறுக்க மாட்டாரே

4 மேழிச் சிறப்பு

வாழிநான் மறையோர்கள் வளர்க்கின்ற வேள்விகளும்
ஆழியால் உலகளிக்கும் அடல்வேந்தர் பெருந்திருவும்
ஊழிபே ரினும்பெயரா உரையுடைய பெருக்காளர்
மேழியால் விளைவதல்லால் வேறொன்றால் விளையாவே

5 ஊற்றாணிச் சிறப்பு

நீற்றோனும் மலரோனும் நெடியோனும் என்கின்ற
தோற்றாள ரிவராலே தொல்லுகம் நிலைபெறுமோ
மாற்றாக காவேரி வளநாடர் உழுங்கலப்பை
ஊற்றாணி யுளதாயின் உலகுநிலை குலையாதே

6 நுகத்தின் சிறப்பு

உரையேற்ற செங்கதிரோன் ஒளிநெடுந்தேர் பூண்டநுகம்
திரையேற்ற கடலுலகில் செறியிருளை மாற்றுவது
விரையேற்ற விருநிலத்தோர் நெறுமையோடு வீழாமே
கரையேற்றும் நுகமன்றோ காராளர் உழுநுகமே

7 நுகத்துளைச் சிறப்பு

வளைத்ததிரைக் கடல்சூழ்ந்த வையகத்தோ ரெல்லார்க்குந்
துளைத்ததுளை பசும்பொன்னின் அணிகிடங்குந் துளைத்தல்லால்
திளைத்துவரும் செழும்பொன்னி திருநாடர் உழுநுகத்தில்
துளைத்ததுளை போலுதவுந் துளையுளதோ சொல்லீரே

8 நுகத்தாணியின் சிறப்பு

ஓராணித் தேரினுக்கும் உலகங்க ளனைத்தினுக்கும்
பேராணிப் பெருக்காளர் பெருமைக்கு நிகருண்டோ
காராணிக் காவேரி வளநாடர் உழுநுகத்தின்
சீராணிக் கொப்பதொரு சிறந்தாணி செப்பீரே

9 பூட்டு கயிற்றின் சிறப்பு

நாட்டுகின்ற சோதிடத்தில் நாண்பொருத்தம் நாட்பொருத்தங்
காட்டுகின்ற கயிறிரண்டும் கயிரல்ல கடற்புவியில்
தீட்டுப்புகழ் பெருக்காளர் செழுநுகத்தோ டுழும்பகடு
பூட்டுகின்ற கயிறிரண்டும் புவிமகண்மங் கலக்கயிரே

10 கயிற்றின் தொடைச் சிறப்பு

தடுத்தநெடு வரையாலும் தடவரைக ளெட்டாலும்
உடுத்ததிரைக் கடலாலும் உலகினிலை வலியாமோ
எடுத்தபுகழ் பெருக்காளர் எழுநுகத்தோ டிணைப்பகடு
தொடுத்ததொடை நெகிழாதேல் உலகுதொடை நெகிழாதே

11 கொழுவின் சிறப்பு

வேதநூல் முதலாகி விளங்குகின்ற கலையனைத்தும்
ஓதுவா ரெல்லாரும் உழுவார்தந் தலைக்கடைக்கே
கோதைவேல் மன்னவர்தம் குடைவளமுங் கொழுவளமே
ஆதலால் இவர்பெருமை யாருரைக்க வல்லாரே

12 கொழு ஆணியின் சிறப்பு

செழுவான மழைவாரி திங்கடொறும் பொழிந்தாலும்
கெழுவார நிலமடந்தை கீழ்நீர்க்கொண் டெழுந்தாலும்
வழுவாத காவேரி வளநாடர் உழுகலப்பைக்
கொழுவாணி கொண்டன்றிக் குவலயஞ்சீர் நிரம்பாதே

13 நாற்றுமுடி, தாற்றுக்கோல் சிறப்பு

வெங்கோபக் கலிகடந்த வேளாளர் விளைவயலுள்
பைங்கோல முடிதிருந்த பார்வேந்தர் முடிதிருந்தும்
பொங்கோதை கடற்றானைப் போர்வேந்தர் நடத்துபெருஞ்
செங்கோலை நடத்துங்கோல் ஏரடிக்குஞ் சிறுகோலே

14 உழும் எருதின் சிறப்பு

வானமழை பொழிந்தாலும் வளம்படுவ தெவராலே
ஞானமறை யவர்வேள்வி நலம்பெறுவ தெவராலே
சேனைகொடு பொருமன்னர் செருக்களத்திற் செகுக்குமத
யானைவலி யெவராலே இவரெருத்தின் வலியாலே

15 எருதின் கழுத்துக்கறை சிறப்பு

கண்ணுதலோன் தனதுதிருத் கண்டத்திற் படிந்தகறை
விண்ணவரை யமுதூட்டி விளங்குகின்ற கறையென்பார்
மண்ணவரை யமுதூட்டி வானுலகங் காப்பதுவும்
எண்ணருஞ்சீர்ப் பெருக்காளர் எருதுசுவ லிடுகறையே

16 எருது பூட்டுதற் சிறப்பு

ஊட்டுவார் பிறருளரோ வுலகுதனில் உழுபகடு
பூட்டுவார் புகழன்றிப் பிறர்புகழும் புகழாமோ
நாட்டுவார் சயத்துவசம் நயப்பாரை இவர்க்குநிகர்
காட்டுவார் யார்கொலிந்தக் கடல்சுழ்ந்த வையகத்தே

17 ஏர் பூட்டலின் சிறப்பு

பார்பூட்டுந் திசையனைத்தும் பகடுகளும் பரம்பூணா
போர்பூட்டுங் காமனுந்தன் பொருசிலைமேற் சரம்பூட்டான்
கார்பூட்டுந் கொடைத்தடக்கை காவேரி வளநாடர்
ஏர்பூட்டி னல்லதுமற் றிரவியுந்தேர் பூட்டானே

18 ஏர் ஓட்டுதலின் சிறப்பு

கார்நடக்கும் படிநடக்கும் காராளர் தம்முடைய
ஏர்நடக்கு மெனிற்புகழ்சால் இயலிசைநா டகம்நடக்கும்
சீர்நடக்குந் திறநடக்குந் திருவறத்தின் செயநடக்கும்
பார்நடக்கும் படைநடக்கும் பசிநடக்க மாட்டாதே

19 உழுவோனின் சிறப்பு

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாருந்
தொழுதுண்டு பின்செல்வா ரென்றேயித் தொல்லுகில்
எழுதுண்ட மறையன்றோ இவருடனே இயலுமிது
பழுதுண்டோ கடல்சூழ்ந்த பாரிடத்திற் பிறந்தோர்க்கே

20 உழவின் சிறப்பு

அலகிலா மறைவிளங்கும் அந்தணரா குதிவிளங்கும்
பலகலையாந் தொகைவிளங்கும் பாவலர்தம் பாவிளங்கும்
மலர்குலாந் திருவிளங்கும் மழைவிளங்கும் மனுவிளங்கும்
உலகெலாம் ஒளிவிளங்கும் உழவருழும் உழவாலே

21 உழுத சாலின் சிறப்பு

பழுதுசால் வகையறியாப் பழமறையோர் பெருவேள்விக்
குழுதுசால் வதுகலப்பை யுயர்வான தென்றக்கால்
எழுதுசால் பெருங்கீர்த்தி யேராளும் பெருக்காளர்
உழுதசால் வழியன்றி யுலகுவழி யறியாதே

22 மண்வெட்டியின் சிறப்பு

மட்டிருக்குந் திருமாது மகிழ்திருக்கும் பூமாது
முட்டிருக்குஞ் செயமாது முன்னிருப்பார் முதுநிலத்து
விட்டிருக்குங் கலிதொலைத்து வோளாளர் தடக்கையினிற்
கொட்டிருக்க ஒருநாளும் குறையிருக்க மாட்டாதே

23 வரப்பின் சிறப்பு

மெய்வரம்பா நிற்கின்ற வேதநூல் நெறிவரம்பாம்
இவ்வரம்பும் அவ்வரம்பும் இப்புவிக்கு வரம்பாமோ
பொய்வரம்பு தவிர்த்தருளும் புவிமடந்தை திருமைந்தர்
செய்வரம்பு திருத்தாரேல் திசைவரம்பு திருந்தாதே

24 எருவிடுதலின் சிறப்பு

அடுத்திறக்கிப் பெருங்கூடை யளவுபட வேயெருவை
எடுத்திறக்கித் தலைமேலே கொண்டவர்தா மிடையிடையே
கொடுத்திறக்கி நிலமகளைக் கும்பிட்டு வணங்காரேற்
படுத்திறக்கித் திரிவார்தம் பழிமறுக்க மாட்டாரே

25 சேறாக்கலின் சிறப்பு

வெறுப்பதெலாம் பொய்யனையே வேளாளர் மெய்யாக
ஒறுப்பதெலாங் கலியினையே யுள்ளத்தால் வெள்ளத்தாற்
செறுப்தெல்லாம் புல்லினையே செய்யின்வளம் அறிந்தறிந்து
மறிப்பதெலாஞ் சேற்றினையே வளம்படுத்தற் பொருட்டாயே

26 பரம்படித்தலின் சிறப்பு

வரம்படிக்க மலர்பரப்பி வயலடிக்க வரம்புதொறும்
குரம்படிக்க மணிகொழிக்குங் குலப்பொன்னித் திருநாடர்
பரம்படிக்க வுடைந்தளைந்த பழனச்சேற் றுரமன்றி
உரம்படிப்பப் பிறிதுண்டோ வுண்டாயி னுரையீரே

27 வித்திடுதலின் சிறப்பு

பத்திவிளைத் திடுந்தெய்வம் பணிவார்க்குந் தற்பரமா
முத்திவளைத் திடுஞான முதல்வருக்கு மின்னமுதம்
வைத்துவிளைத் திடுவார்க்கும் வல்லவர்க்கும் பெருக்காளர்
வித்துவிளைத் திடிலன்றி வேண்டுவன விளையாவே

28 முளைத்திறனின் சிறப்பு

திறைமயங்கா தருள்விளக்குஞ் செயன்மயங்கா திறல்வேந்தர்
நிறைமயங்கா வணிகேசர் நிலைமயங்கா அந்தணர்கள்
மறைமயங்கா தொருநாளும் மனுமயங்கா துலகத்தின்
முறைமயங்கா தவர்வயலின் முளைமயங்காத் திறத்தாலே

29 நாற்றங்காலின் சிறப்பு

ஏறுவளர்த் திடுமுகிலும் இசைவளர்க்கு மெனவுரைப்பின்
ஆறுவளர்த் திடுவதுசென் றலைகடலைத் தானன்றோ
வேறுவளர்ப் பனகிடப்ப வோளாளர் விளைவயலின்
நாறுவளர்த் திடிலின்றி ஞாலமுயிர் வளராதே

30 நாற்று பறித்தலின் சிறப்பு

வெறுத்துமீன் சனிபுகிலென் வெள்ளிதெற்கே யாயிடிலென்
குறித்தநாள் வரம்பழியாக் குலப்பொன்னித் திருநாடர்
மறித்துநாட் டிடநின்ற வளவயலி னிடைநாற்றைப்
பறித்துநாட் கொண்டதற்பின் பார்பசிக்க மாட்டாதே

31 முடி இடுதலின் சிறப்பு

மாணிக்க முதலாய மணியழுத்தித் தொழில்சமைத்த
ஆணிப்பொன் முடிவேந்தர் அணிமுடியு முடியாமோ
பேணிப்பைங் கோலமுடி பெருக்காளர் சுமவாரேல்
சேணுக்குந் திசைப்புறத்துஞ் செங்கோன்மை செல்லாதே

32 உரிய இடத்தினில் முடிசேர்த்தலின் சிறப்பு

தென்னன்முடி சேரன்முடி தெங்குபொன்னி நாடன்முடி
கன்னன்முடி கடல்சூழ்ந்த காசினியோர் தங்கண்முடி
இன்னமுடி யன்றியுமற் றெடுத்துரைத்த முடிகளெல்லாம்
மன்னுமுடி வேளாளர் வயலின்முடி கொண்டன்றோ

33 நடவு மங்கலப்பாட்டின் சிறப்பு

வெய்யகலி வலிதொலைக்கும் வேளாளர் விளைவயலிற்
செய்யின்முடி விளிம்பாரேல் விளம்புவன சிலவுளவோ
மையறுமந் தணர்விளம்பார் மறைமனுமன் னவர்விளம்பார்
ஐயமறு புலவோரும் அருந்தமிழ்நூல் விளம்பாரே

34 பாங்கான நடவின் சிறப்பு

மெய்ப்பாங்கு படக்கிடந்த வேதநூல் கற்றாலென்
பொய்ப்பாங்கு படப்பிறரைப் புகழுநூல் கற்றாலென்
செய்ப்பாங்கு படக்கிடந்த செழுஞ்சாலி நன்னாற்றைக்
கைப்பாங்கு பகுந்துநடக் கற்றாரே கற்றாரே

35 உழுதலுடனே நடவு செய்தலின் சிறப்பு

உலகத்திற் பகடுழக்கும் ஓங்குமுடித் திறல்வேந்தர்
அலறத்தின் பகடுழுக்கும் அதுவுமொரு முனையாமோ
உலகத்திற் பகடுழக்கும் உயர்முடிகொள் வேளாளர்
சிலவருழச் சிலவர்நடும் அவையன்றோ திருமுனையே

36 சேறாக்கி எருவிடுதலின் சிறப்பு

ஏராலே சேறாக்கி யெருவாலே கருவாக்கி
நீராலே பைங்கூழை நிலைப்பார் தமையன்றிக்
காராலே காவேரி நதியாலே காசினியில்
ஆராலே பசிதீர்வார் அகலிடத்திற் பிறந்தோரே

37 வேளாண்மை முதலாதலின் சிறப்பு

அந்தணர்க்கு வேதமுதல் அரசருக்கு வெற்றிமுதல்
முந்தியசீர் வணிகருக்கு முதலாய முதலுலகில்
வந்தவுயிர் தமக்கெல்லா மருந்தாக வைத்தமுதல்
செந்தமிழ்க்கு முதலாய திருவாளர் செய்முதலே

38 பயிர் வளர்திறத்தின் சிறப்பு

சீர்வளரும் மறைவளரும் திறல்வேந்தர் முடிவளரும்
பேர்வளரும் வணிகருக்குப் பெருநிதிய மிகவளரும்
ஏர்வளரும் திருவளரும் இசைவளரும் கடல்சூழ்ந்த
பார்வளரும் காராளர் பயிர்வளருந் திறத்தாலே

39 நாளும் நீரிறைத்தலின் சிறப்பு

காற்றுமேல் வருகின்ற கார்விடினுங் கடல்சுவறி
யாற்றுநீ ரறவெள்ளி யரசனுந்தெற் காயிடினும்
ஏற்றமே கொடுநாளும் இறைத்துலகம் விளைவித்துக்
காத்துமே யுயிர்வளர்த்தல் காராளர் தங்கடனே

40 பாய்ச்சும் நீரின் சிறப்பு

கலையிட்ட மறைவேந்தர் கனல்வேள்வி வளர்ப்பதுவும்
மலையிட்ட புயத்தரசர் மணிமகுடஞ் சூட்டுவதும்
தலையிட்ட வணிகருயத் தனமீட்டப் படுவதும்
நிலையிட்ட வேளாளர் துலையிட்ட நீராலே

41 நிலம் திருத்தலின் சிறப்பு

மேடுவெட்டி வளப்படுத்தி மிகவரம்பு நிலைநிறுத்திக்
காடுவெட்டி யுலகநெறிக் காராளர் காத்திலரேல்
மேடுவெட்டி குறும்பறுக்கும் வேல்வேந்த ரெற்றாலும்
காடுவெட்டி யுழுதுவரும் கலிகளைய மாட்டாரே

42 சால்பலபோக்கி புழுதியாக்கலின் சிறப்பு

எழுதொணா மறைவிளங்கும் இயலிசைநா டகம்விளங்கும்
பழுதிலா அறம்விளங்கும் பார்வேந்தர் முடிவிளங்கும்
உழுதுசால் பலபோக்கி உழவருழக் கியவெங்காற்
புழுதியால் விளையாத பொருளுளவோ புகலீரே

43 பயிர் நட்டாரின் சிறப்பு

கெட்டாரைத் தாங்குதலாற் கேடுபடா தொழிற்குலத்தோர்
ஒட்டாரென் றொருவரையும் வரையாத வுயர்நலத்தோர்
பட்டாங்கு பகர்ந்தோர்க்கும் பசியகலப் பைங்கூழை
நட்டாரே வையமெலாம் நலந்திகழ நட்டாரே

44 நீர் பாய்ச்சுதலின் சிறப்பு

கார்தாங்குங் காவேரி நதிதாங்குங் காராளர்
ஏர்தாங்கு வாரன்றி யாவரே தாங்கவல்லார்
பார்தாங்கு மன்னுயிரின் பசிதாங்கும் பைங்கூழின்
நீர்தாங்கு வாரலரோ நிலந்தாங்கு கின்றாரே

45 களைநீக்கலின் சிறப்பு

வளைகளையும் மணிகளையும் மலர்களையும் வரும்பலவின்
சுளைகளையும் கொடுதரைக்கே சொரிபொன்னித திருநாடர்
விளைகளையுஞ் செஞ்சாலி வேரூன்றி கோடுகொள்ளக்
களைகளையா விடில்வேந்தர் கலிகளைய மாட்டாரே

46 கருபிடித்தலின் சிறப்பு

திருவடையும் திறலடையும் சீரடையும் செற்ிவடையும்
உருவடையும் உயர்வடையும் உலகெலா முயர்ந்தோங்கும்
தருஅடையும் கொடையாளர் தண்வயலிற் செஞ்சாலி
கருவடையும் பூதலத்திற் கலியடைய மாட்டாதே

47 கதிர் முதிர்தலின் சிறப்பு

ஏற்றேரு மரன்சிறப்புக் கெழிலேறு மகத்தழல்கள்
மாற்றேறு மரசர்முடி வளர்ந்தேறும் வளமைமிகும்
ஊற்றேருங் குலப்பொன்னி யுறைநாட ரிடுஞ்சாலி
ஈற்றேறும் போதுகலி யீடேற மாட்டாதே

48 கதிரின் பசிய நிறசிறப்பு

முதிராத பருவத்தும் முற்றியநற் பருவத்தும்
கதிராகி யுயிர்வளர்ப்ப திவர்வளர்க்குங் கதிரன்றோ
எதிராக வருகின்ற எரிகதிருங் குளிர்கதிருங்
கதிராகி உயிர்வளர்ப்ப துண்டாயிற் காட்டீரே

49 கதிரின் தலைவளைவின் சிறப்பு

அலைவளையும் புவிவேந்தர் அங்கையிற்றங் கியவீரச்
சிலைவளையு மதன்கருப்புச் சிலைவளையுங் கொடுங்கலியின்
தலைவளையுங் காராளர் தண்வயலிற் செஞ்சாலிக்
குலைவையும் பொழுதினிற்செங் கோல்வளைய மாட்டாதே

50 விளைவு காத்தலின் சிறப்பு

அறங்காணும் புகழ்காணும் அருமறையின் ஆகமத்தின்
திறங்காணும் செயங்காணும் திருவளர்க்கு நிதிகாணும்
மறங்காணும் கருங்கலியின் வலிதொலைத்த காராளர்
புறங்காணுஞ் சோறிட்டுப் புறங்காணப் புகந்திடினே

51 அறுவடை கொைடையின் சிறப்பு

அறிவுண்ட பொற்கதிரை நெற்கதிநே ராதுலர்க்குப்
பரிவுண்ட பெருவார்த்தை புதிதன்று பழைமைத்தே
விரிவுண்ட கடற்படியு மேகங்கள் மறுத்தாலுந்
திரிவுண்டோ காராளர் செயலினுக்குச் செப்பீரே

52 அறு சூட்டின் சிறப்பு

கோடுவரம் பிடையுலவுஞ் குலப்பொன்னித் திருநாடர்
நீடுபெரு புகழ்வளரு நிலமடந்தை திருமக்கள்
பீடுவரம் பிடைவயலிற் பிறைவாளிற் றடிகின்ற
சூடுவரம் பேறாதேற் சுருதிவரம் பேராதே

53 களம்செய்தலின் சிறப்பு

சீரான விறல்வேந்தர் செருவிளைத்துச் செல்லுவதும்
பேரான மனுநீதி பிறழாது விளங்குவதும்
நீராலே செஞ்சாலி விளைவித்து நெறிநடத்துங்
காராளர் விளைவயலிற் களம்பண்ணும் பொருட்டாலே

54 போர் அடிவலியின் சிறப்பு

கடிசூட்டு மலர்வாளி காமனடல் சூட்டுவதும்
கொடிசூட்டு மணிமாடக் கோபுரம்பொன் சூடுவதும்
முடிசூட்டி வயவேந்தர் மூவுலகும் இறைஞ்சுபுகழ்
படிசூட்டி யிருப்பதெல்லாம் படுசூட்டின் வலியாலே

55 அடிகோலின் சிறப்பு

முருட்டின்மிகு வெம்பகைவர் முரண்கெடுத்திவ் வுலகமெல்லாம்
தெருட்டிநெறி செல்கின்ற செங்கோன்மை செலுத்துங்கோல்
வெருட்டிமிகுங் கருங்கலியை வேரோடும் அகற்றுங்கோல்
சுருட்டிமிகத் தடிந்துசெந்நெற் சூடுமித்ித் திடுங்கோலே

56 போர் சிறப்பு

காராளும் கதியினமும் பயிரினமும் கைவகுத்துப்
போராளு முடிவேந்தர் போர்க்கோல மென்னாளுஞ்
சீராளுஞ் செழும்பொன்னித் திருநாடர் புகழ்விளக்கும்
ஏராளும் காராளர் இவர்செய்யும் போராலே

57 போர்க்களப் பாடலின் சிறப்பு

வளம்பாடுங் குடைமன்னர் மதயானை படைப்பொருத
களம்பாடும் பெருஞ்செல்வங் காசியினிற் சிறந்தன்று
தளம்பாடுந் தாரகலத் தாடாளர் தம்முடைய
களம்பாடும் பெருஞ்செல்வங் காசினியிற் சிறப்பன்றே

58 இரப்பவரும் தோற்காச் சிறப்பு

பார்வெந்தர் பெருஞ்செல்வம் பழுதுபடா தொருநாளும்
ஏர்வெந்தர் பெருஞ்செல்வம் அழிவுபடா திருத்தலினால்
தேர்வேந்தர் போர்களத்துச் சிலர்வெல்வர் சிலர்தோற்பர்
ஏர்வேந்தர் போர்களத்துள் இரப்பவருந் தோலாரே

59 நாவலோ நாவல் என்பதன் சிறப்பு

நாவலோ நாவலென நாடறிய முறையிட்ட
ஏவலோர் போர்களத்தில் எதிர்நிற்பர் முத்தமிழ்தேர்
பாவலோ ரிசைவல்லோர் பற்றுடைய பதிணெண்மர்
காவலோ ரெல்லாருங் கையேற்கும் பொருட்டாலே

60 எருது மிதித்தலின் சிறப்பு

எடுத்தபோர்க் களத்தரசர் இணைப்பகடு சிலநடத்திப்
படுத்தபோர் பயந்ததனாற் பார்தாங்கி வாழ்வதெல்லாம்
எடுத்தபோ ருழவருழு மிணைப்பகடு சிலநடத்திப்
படுத்தபோர் வையகத்தில் விளங்குகின்ற பயனாலே

61 நெற்பொலியின் சிறப்பு

விற்பொலியுங் பெருங்கீர்த்தி வேளாளர் விளைவயலில்
நெற்பொலியுண் டாமாகில் நிலமகளும் பொலிவுண்டாம்
பொற்பொலியுண் டாமுலகம் புகப்பொலிவுண் டாம்புலவோர்
சொற்பொலிவுண் டாங்கலியின் துயர்பொலிய மாட்டாதே

62 நெற்குவியலின் சிறப்பு

தன்னிகரொன் றொவ்வாத தலம்வளர்க்கும் பெருக்காளர்
மன்னுபெருங் களத்தினிடை மாருதத்திற் றூற்றியிடுஞ்
செந்நெல்லைப் பொலிவாலே செம்பொன்மலை யெனக்குவித்தே
அந்நெல்லின் பொலியாலே அவனியுயிர் வளர்ப்பாரே

63 நெற்கூடையின் சிறப்பு

ஆடையா பரணங்கள் அணிந்துமுடி சுமந்திடலும்
ஓடையா னையினெருத்தத் துயர்ந்துலகந் தாங்குதலும்
பேடையோ டனநீங்காப் பெருங்கழனிப் பெருக்காளர்
கூடையா னதுகையிற் கொண்டுகளம் புகுந்திடினே

64 தூற்றுமுறத்தின் சிறப்பு

வலியாற்று மன்னவர்க்கும் தேவர்க்கும் மறையவர்க்கும்
ஒலியாற்றும் பேருலகில் உய்யவமு திடுங்கூடை
கலிமாற்றி நயந்தபுகழ்க் காராளர் தம்முடைய
பொலிதூற்றுங் கூடைக்குப் போதுவதோ புகலீரே

65 பொலி கோலின் சிறப்பு

சீற்றங்கொள் கருங்கலியைச் செறுக்குங்கோல் செகதலத்துக்
கூற்றங்கொள் மனுநெறியை யுண்டாக்கி வளர்குங்கோல்
ஏற்றங்கொள் வயவேந்தர்க் கேப்பொருளுங் கொடுத்துலகம்
போற்றுஞ்சொற் பெருக்காளர் பூங்கையினிற் பொலிகோலே

66 நெற்கோட்டையின் சிறப்பு

திருத்தோட்டுப் பிரமாவாற் செனிக்கின்ற உயிர்களுக்கும்
உருத்தோட்டும் புகழுக்கும் உரிமைமுறை வளர்க்கின்ற
வரைக்கோட்டுத் திணிபுயத்து வளர்பொன்னித் திருநாடர்
விரைக்கோட்டை கொண்டன்றோ வேந்தரிடுங் கோட்டைகளே

67 கல்மணிகளின் சிறப்பு

தளர்ந்தவுயி ரித்தனைக்குந் தாளாள ரெண்டிசையும்
வளர்ந்தபுகழ் பெருக்காளர் வளமையா ருரைப்பாரே
அளந்துலக மனைத்தாளும் அரசர்வே தியர்புலவர்
களந்துவைக்க வையுகுத்த கல்லறைக ளுண்பாரேல்

68 வேளாளர் பெறும் பேற்றின் சிறப்பு

அரியா தனத்தின் மேலிருந்தே யம்பொற் குடைக்கீ ழரசியற்றும்
பெரியார் பக்கல் பெறும்பேறும் பேறேயல்ல பெருக்காளர்
சொரியா நிற்பச் சிலர் முகந்து தூற்றா நிற்பச் சிலரளந்து
புரியா நிற்பப் பெரும்பேறுக் கதுநே ரொக்கப் போதாதே

69 நன்மங்கல வாழ்த்து

பார்வாழி நான்மறைநூற் பருணிதரா குதிவாழி
கார்வாழி வளவர்பிரான் காவேரி நதிவாழி
பேர்வாழி பெருக்காளர் பெருஞ்செல்வக் கிளைவாழி
ஏர்வாழி யிசைவாழி யெழுபத்தொன் பதுநாடே

ஏரெழுபது முற்றிற்று



திருச்சிற்றம்பலம்

திருக்கை வழக்கம் (வேளாளர் ஈகைச் சிறப்பு)
கம்பர்

கலிவெண்பா

1
திருவாகிய மங்கை கூடியே வாழுங்கை

கங்கை குலந்தழைக்கக் காட்டும் பெருங்கீர்த்தி
மங்கை பிரியாமல் வாழுங் கை - திங்கள் அணி - 2

சந்தனம் அரைக்கும் கை
மூர்த்தி நாயனார் போன்று விரிஞ்சிபுரசிறுவன்

எம்பிரான் எம்பெருமான் இந்திராதி பர்க் கரிய
தம்பிரா னுக்குரைத்த சந்தனக் கை - அம்பொன் - 3

முளைத்த நெல்லை சோறக்கி ஈந்தகை
இளையான்குடி மாற நாயனார்

வளைவாரி வையகமும் வானகமும் போற்ற
முளைவாரி வந்த முழுக் கை - கிளை வாழக் - 4

எச்சிற்கையால் கல்லெறிந்தகை
சங்கமங்கை சாக்கியநாயனார்

கச்சித் தலத் தரனைக் கல்லால் எறியமறந்து
எச்சில் தயிர்ச்சோ றெறிந்திடுங் கை - பச்சை மிகு - 5

ஈசற்கான மாவடுசிந்தி தன்தலையை அரிந்தகை
கணமங்கலம் அரவாட்தாய நாயனார்

தேமா வடுக் கமரில் சிந்திற் றன்றே கழுத்தை
ஆமா மெனவே அரிந்திடுங் கை - வாம மறை - 6

தொண்டர்பின் ஈசன் எனமுடிபு கொண்டகை
மலைநாட்டுச்செங்குன்றூர் விறல்மிண்டநாயனார்

ஓது புகழ் நாயனுடன் ஊரன் புற கென்றே
மோது தடிகொண்டு முடுகுங் கை - தீ தகல - 7

திருந்தி ஈசனுக்கே பூசைசெய் பெருந்தகை
திருநாவுக்கரசு நாயனார்

அஞ் செழுத்தே ஒன்றாகி அப்பர்எனத் தோன்றிஅரன்
செஞ்சரணத்தே பூசை செய்யும் கை - வஞ்சியர் பால் - 8

ஈசனை ஏவல்கொண்டோர் அளியுதவி மறுத்தகை
ஏயர்கொன் கலிக்காம நாயனார்

தூ தரனைத் தான்விடுத்த சுந்தரனைக் காணாமல்
பேதமறக் தன்வயிறு பீறும் கை - பூதத்தின் - 9

சுந்தரர்பொருட்டு நெற்சிவிகை தாங்கியகை
குண்டயூர் கிழார்

மிக்க புலவனுக்கா ஏகி மனை மட்டாகத்
தக்க சிவிகை கணை தாங்கும் கை - மைக் கடு வாய் - 10

வறுமையிலும் கிடைத்தநாகமணி ஈந்தபொற்கை
சடையப்ப வள்ளல்

மூக்கில் புகைபுரிந்த மூதரவின் வாயிடத்து
நீக்கிய கை நாக் கதனில் நீட்டுங் கை - ஆக்கமுடன் - 11

உழவுக்கே உளோம் என சாசனமிட்ட கை

ஏத மற்ற கீர்த்தியைக் கொண் டேட்டகத்திலே அடிமைச்
சாதனம் இட்டே கொடுத்த தங்கக் கை - மேதினியில் - 12

மகவு தாங்கிய பெண்டிரும் விருந்தினுக் குதவுங்கை

சூலி முதுகில் சுடச்சுட அப்போது சமை
பாலடிசில் தன்னைப் படைக்குங் கை - சாலவே - 13

தனிமையிலிறந்த பாணனுடலை ஈடேற்றியகை
தொண்டைநாட்டு மறவை வாழ் அரங்கேசன்

நாணம் தராமல் நடுங்காமல் கூசாமல்
பாணன் பிணத்தைப் பரிக்குங் கை - காணவே - 14

தானுண்டதும் கூழே என காட்டிய கை
செம்பியனுக்காக பேறையூரான் செய்கை

தண் தமிழோன் தன்மனத்தில் சந்தேகம் தீரக்கூழ்
உண்ட வயிற்றை பீறி ஊற்றுங் கை - கண் டளவில் - 15

நீலிக்கஞ்சிய வணிகனுக்கு உறுதியளித்த கை
தொண்டை நாட்டு திருவாலங்காட்டு குடிகள்

நீலி தனக் கஞ்சிநின்ற வணிகே சனுக்காக்
கோலி யபயம் கொடுக்குங் கை - ஆல மெனும் - 16

நீலியினால் வணிகனிறக்க நெருப்பினிலிறங்கிய கை
மேற்படி

வன்னியிடை முழ்கி வானோர் பழிகழுவிக்
கன்னி தனையே மணந்த காட்சிக் கை - துன்னு மொரு - 17

உற்றோர் செய்ததை தானும்செய்திறந்தகை
மேற்படி

பேருலகை எல்லாம் பிழைப்பிக்கும் ஓர்கொழுவின்
கூரில் ஒருவன் கழுத்தைக் குத்தும் கை - பா ரறிய - 18

தானுண்கலத்தில் கையமைத்துக் காத்திட்டகை
பறைமுழைநந்தன்சாம்பான்-போராவூர்வேளாளன்

வீறு பெறும் பறையன் வீயாமல் ஓர் கலத்தில்
சோறு பிசைந் துண்ட சுடர் மணிக் கை - ஆறாத் - 19

புண்ணைக்காட்ட சீனபட்டாடை கிழித்தகை
சோழனெதிரில் சடையப்பவள்ளல்

தொடையில் எழுசிலந்தி தோற்றுவிக்கப் பட்டின்
புடவை கிழித்த பெருங் கை - கடல் சூழ்ந்த - 20

நாற்படைசெல்ல வெந்தணலில் ஏற்பூட்டும்கை

பார்பூட்டு மன்னர் பரிகரி பூட்டக் கதிரோன்
தேர் பூட்ட ஏர் பூட்டும் செம்பொற் கை - வீரமதன் - 21

காமன் வெற்றிக்கு தாற்றுக்கோல் தாங்குங்கை

ஐங்கோல் தொடுக்க அணைகோ லெடுக்கஉழும்
பைங்கோல் பிடிக்கும் பதுமக் கை - இங்கிதமாம் - 22

மன்னன் கோல்தாங்க தாம்மேழி தாங்குங்கை

சீர் படைத்த பூபாலர் செங்கோல் பிடிப்பதற்கு
பேர்படைத்த மேழி பிடிக்குங் கை - கார்படைத்த - 23

உலகில் நல்லறிவு படர நாற்று விசிறுங் கை

மிஞ்சுமதி கீர்த்த்ியைப் போல் மேதினி எல்லாம் தழைக்கச்
செஞ்சாலி நாற்றை தௌிக்குங் கை - எஞ்சாமல் - 24

கள்ளம் புல்பூண்டொழித்துலகம் காக்குங்கை

வெள்ளைக் களை களைந்து வீறும் பயிர் தழைக்கக்
கள்ளக் களை களைந்த கற்பகக் கை - வள் ளுறையும் - 25

க்ஷஷபல்வகைப் போர் வெற்றிக்கும் மூலமாங்கை

விற்போர் மதகரிப்போர் வெம்பரிப்போர் வெற்றிப்போர்
நெற்போர் முதல் போர் நெறித்திடுங் கை - கற்பகம் போல் - 26

மேழி சிங்கம் குயில் முக்கொடிகள் தாங்குங்கை

மேழிக் கொடி சிங்க வெற்றிக் கொடி குயிலின்
வாழிக் கொடியே மருவுங் கை - நீ ளுலகில் - 27

வறியவர் வேதாகமபுராணம் தழைக்குங்கை
திருநின்றையூர் காளத்திவாண முதலியார்

ஆதுலர்குச் செம்பொ னளிக்குங் கை ஆகமங்கள்
வேத புராணங்கள் விரிக்குங் கை - நீதிநெறி - 28

பதினாறுபேறும் யாவரும்பெற உழைக்குங்கை

மானம் குலம் கல்வி வண்ணம் அறிவுடைமை
தானம் தருமம் தழைக்குங் கை - ஆன தமிழ் - 29

நலிந்தோர் நலமழிந்தோர் தாங்குங்கை

கல்லார்கள் என்னாமல் கற்றோர்கள் என்னாமல்
எல்லாரையுங் காத் தீடேற்றுங் கை - வல்லமை சேர் - 30

ஈடில்லாத ஈடுகொள்ளாது பயனளிக்குங்கை

மைம் மா முகில் உலகை வாழ்விக்கும் மேன்மைபோல்
கைம்மா றிலா தளித்த கற்பகக் கை - சும்மை ஆர் - 31

பலருண்ண பயன்பலபெற வாழும் சீராளர்கை

ஊருணி நீர் போல் உலகத்தவர்க் கெல்லாம்
பேரறிவால் ஈயும் ப்ரதாபக் கை - பாரில் - 32

உற்றபோது வுடனுதவும் தண்கை

உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
கோடுக்க இசைந்த குளிர் கை - இடுக்கணினால் - 33

மூவருக்கும் முதலான மூலமாங்கை

மாமறையோர் மன்னர் வணிகர் முதலாகத்
தாம் அலையாமல் கொடுத்துத் தாங்குங் கை - தே மருவு - 34

இயன்ற மாவையும் ஈந்த ஏழையின்கை
கம்பநாடரிடம் ஓர் வேளாளன்

நாவில் புகழ் கம்பநாடற் கடிமை யென்றே
மாவைக் கரைத்து முன்னே வைக்குங் கை - பாவலர் தாம் - 35

விடநாக கடியினில்மிளிர் நனிநாகரீக நற்கை
சடையப்ப வள்ளல் கை

ஏர் எழுபது ஓதி அரங்கேற்றுங் களரியிலே
காரி விடநாகங் கடிக்குங் கை - பா ரறியச் - 36

பஞ்சகாலத்தில் நீளும் பாசமுள்ளகை
குமிழம்பட்டு, இடையாலம் வாழ்ந்த வேளாளர்

சங்கை யிட்டுத் தள்ளாமல் தன் சோற்றை வந்தவர்க்குப்
பங்கை யிட் டிரட்சித்த பங்கயக் கை - பொங்கமொடு - 37

என்னளவாயினும் ஈந்து சொற் பிறம்பாதகை
பொன்விளைந்த களத்தூர் குடிதாங்கி முதலியார்

செம்பென் விளை களத்தூர் செந்நெல் விளைந்ததனை
நம்பி மறையோர்கு அளித்த நாணயக் கை - அம்பொன் - 38

வந்த பின்னும் வருமுன்னும் காக்குங்கை

விளை பயிரைப் பார்த்து விரைகால் புலத்தை
வளைய மதி லிட்டு வருங் கை - கள மதனில் - 39

எக்காலத்தும் ஈவோமென சாசனமிட்ட கை

ஏற்கவந்த ஆதுலர்க் கில்லை யென்னாமல் செம்பொன்
கார்க் கையினால் முக் கை யிட்ட கற்பகக் கை - தீர்க்கமதாத் - 40

ஈசனுக்கு திருப்பணிகள் பற்பலசெய் கொண்டற்கை

திருப் பருத்திக் குன்றில் சிவன் ஆலயங்கள்
விருப்புடனே கட்டுவித்த மெய்க் கை- திருப்புகழை - 41

கலைஞான பயிர்விளைக்குங் பெற்றிணைகை

எண்ணை எழுத்தை இசையை இலக்கணத்தை
வண்மை பெற உண்டாக்கும் வா குள கை - பண்ணமைந்த - 42

நன்னெறியும் தன்மொழியும் காக்குங்கை
இருமொழி ஞானம் படைத்த நம்மாழ்வார்

வேத மொரு நான்கினையும் மிக்க தமிழ் நாலடியால்
ஓதி உரைத்தே கருணை ஓங்கும் கை - பூதலத்தில் - 43

புலவனெதிர் படைத்தகனி உவக்குங்கை

பாவல னெச்சில் படு மாங்கனியை எடுத்
தாவலுடன் நன்றா கருந்துங் கை - காவலன் - 44

மன்னவன்கண் பெரியதெவை காட்டிய கை
அநபாயனுக்கு சிறார் பருவ சேக்கிழார்

மண்ணில் கடலில் மலையின் பெரிய தென
எண்ணி எழுதிக் கொடுத்த ஏற்றக் கை - திண்ணமதாய் - 45

தமிழின் புகழினுக்கு முடியையே ஈந்தகை
குன்றையூர் எல்லன்

வையக மெங்குந் தேடி வந்த தமிழோன் புகழச்
செய்ய முடியைக் கொடுத்த செம்பொற் கை - துய்ய புகழ் - 46

வேளான் வீரனின் வெற்றிக்கை
கருணாகரத் தொண்டைமான்

அட்ட திக்கும் எண்கீர்த்தி ஆயிரத் தெட் டாணைதனை
வெட்டி பரணிகொண்ட வீரக் கை - திட்டமுடன் - 47

வென்றிபெறு பொருளீட்டம் ஈந்த ஈகைக்கை
முனையடுவார் நாயனார்

பொன்னால் அமுதும் பொரிக் கறியும் தான் கொணர்ந்து
நன் நாவலர்க் களித்த நாணயக்கை - முன்னாள் - 48

வணிகன்தன் கவலை போக்கியகை
ஆறைநகர் பரமேசுவரன் மகன் எல்லன்

மனக் கவலை யுற்ற வணிகன் முன்னே நின்று
தனைக் கா எனக் கேட்ட தண் கை - கனக்கவே - 49

ஆனிரைகளை பலஅளிக்கும் பாங்கானகை

அன் றீன்ற நா கெழுபதான எருமைத் திறத்தைக்
கன்றோடு நல்கும் கடகக் கை - வென்றி தரும் - 50

பாடலுக்கு கலம் நெல்லளிக்குங்கை

ஓர் ஆனை நூராயிரக் கலம்நெல் ஓர் கவிக்குச்
சீராக நல்கும் தியாகக் கை - பே ரியலைச் - 51

பாலாற்றின் கால்பல செய்தாற்றிய ஆண்மைக்கை

சாற்றும் ஒட்டக் கூத்தன் சரச கவி சொல்லப் பால்
ஆற்றுநீர் கால் கொணர்ந்த ஆண்மைக் கை - நேர்த்திபெற - 52

சிவிகை உதைத்த புலவன் காலிற்கு பூணளித்தகை
தொண்டைநாட்டு வல்லம் கச்சியப்ப வள்ளல்

வண் தமிழோன் தான் உதைத்த வாகுள காலுக்குப் பொன்
வெண்டய மிட்டே வணங்கும் வெற்றிக் கை - புண்டரிகக் - 53

முடிமேல் குட்டிய புலவனுக்கு ஆழியிட்டகை

கையால் புலவன் கனகமுடி மேல் குட்டச்
செய்யாழி பண்ணி யிட்ட கை - நொய்ய - 54

அரிசிகேட்டயிடத்து யானையே அளிக்குங்கை
ஏகம்பவாணன்

எறும்புக்கும் ஆகாரந் தானில்லை என்ற மட்டில்
திறம் புக்க யானை தரும் செங்கை - பறம்பு தனில் - 55

முனிகளுக்கு அளித்துவந்த பண்பட்டகை

எண்ணாயிரம் முனிவர்க்கு ஏற்றபடி அப்படியே
பண்ணாக் கொடுக்கும் பராக்ரமக் கை - விண்ணாடர் - 56

விண்ணடைந்தோர் புகழினை ஏற்றுங்கை

கூர்த்த புகழ் அண்ட கோளம் அளவும் படர
நால் திக்கும் மேருவின் நாட்டும் கை - சீர்குகனை - 57

சிவன் முருகன் பிள்ளை மூவரையும் போற்றுங்கை

ஆதார மானவனை ஐங்கரனைச் சங்கரனைப்
பாதாரவிந்தம் பணியும் கை - நீதி - 58

படைத்து காத்து ஈந்து இடர்களையயும் ஈரக்கை

நடக்கை இருக்கை நகைக்கை மிடி தீர்க்கை
கொடுக்கை செழுங்கை குளிர்க் கை- தொடுத்த தெல்லாம் - 59

எக்காலத்துமிடத்தும் ஈடேற்றும் இணையிற்கை
வேளாளர் குலத்துதித்த வல்லாளன்

சீராக உண்டாக்கும் செங்கைப் பெருங்கருணைக்
காராளர் கற்பகப் பூங் கை

திருக்கை வழக்கம் முற்றிற்று

Mail Usup- truth is a pathless land -Home