தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF > சிந்து இலக்கியம்


cintu ilakkiyam
(pazaniyANTavan kAvaTiccintu, kantan maNampuri cintu,
cuppiramaNiyar cintu, cittarARUTa noNTic cintu & eNNaic cintu)

சிந்து இலக்கியம் :
பழனியாண்டவன் காவடிச் சிந்து, கந்தன் மணம்புரி சிந்து,
சுப்பிரமணியர் பேரில் சிந்து, சித்தராரூட நொண்டிச் சிந்து &
எண்ணெய்ச் சிந்து


Etext preparation : Mr. P.I.Arasu & Ms. Mahitha Sridhar, Toronto, ON, Canada
Proof-reading: Mr. P.K.Ilango, Erode, Tamilnadu, India
Etext prep in html, pdf formats: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

 
1. பழனியாண்டவன் காவடிச் சிந்து
நூலாசிரியர்: முத்துக் கறுப்பணன்

பழனிப்பதி வாழும் - வேலர்
பாதம்தனை நாளும்
உளமேதினம் துதிக்க - வினை
ஒடுக்கும் கதிகொடுக்கும்
வளமேவிய பரனே - சுத்த
மடவாழு தந்திமுகனே
அழகாகிய குருவாய் - எனக்
கருள்வாய் முன்பு வருவாய்
1. சுத்தமடம் - ஊர்; தந்திமுகன் - விநாயகர்

1


சிவகிரியில் வாழ்வோன் - எனைத்
தினமும் குடி ஆழ்வோன்
தவமேவிய குமரன் - புகழ்
தானே அடியேனே
நவமீறிய காவடிச் - சிந்து
நாடத் தினம் பாட
புவனச் சரசுவதியே - சிந்து
புகல வருவாயே
2. சிவகிரி - கயிலாயம், இங்குப் பழனியில் உள்ள சிவமலையைக் குறிக்கிறது.
நவமீறிய - புதுமை மிகுந்த; புவனம் - உலகம்

2


கள்ளமாய் அன்று வனத்தில் - வள்ளி
கானத் தினைப் புனத்தில்
உள்ளமே மகிழ்வாகிக் - கிழ
உருவாய்ப் பரண் ஏகி
தெள்ளிய தினை மாவை - பொசித்
திலகும் அண்டர் கோவை
வள்ளி நாயகப் பொருளைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
3. கள்ளமாய் - களவு நிலையில்; பொசித்திலகு - உண்டு விளங்கும்

3


துண்ட வெண்பிறை அணிவோன் - அருள்
சுத்தனைப் பரிசுத்தனை
அண்டர் கோன் பயம் - தீர்ப்போன்
அடியாரைத் தினம்காப்போன்
எண்டிசை பணி நேசன் - தவம்
இலகும் கிரிவாசன்
வண்டமிழ்ப் பழனியனைக் - கொண்டு
வருவாய் தோகைமயிலே
4. துண்ட வெண்பிறை - பிறைச் சந்திரன்
துண்ட வெண்பிறை அணிவோன் அருள் சித்தன் - சிவனார் அளித்த முருகன்
அண்டர்கோன் - தேவேந்திரன்; கிரிவாசன் - மலை வாழ்பவன்

4


செய்ய தாண்டவ ராயன் - அருள்
சேயனைக் கார்த்தி கேயனை
துய்ய குஞ்சரி பங்கனை - அயில்
துலங்கும் கர துங்கனை
உய்யவே அருள் கொடுப்போன் - அன்பர்
உளத்தில் குடி இருப்போன்
வையகம் புகழ் வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
5. தாண்டவ ராயன் - ஆடல்வல்லான்
சேயன் - மகன்; முருகன்; அயில் - வேல்; துங்கன் - மேன்மை உடையோன்
குஞ்சரி - தெய்வயானை

5


ஆனைமா முகன் துணைவன் - வள்ளிக்
கழகாகிய கண்ணன்
ஞானதே சிக போதன் - நவ
வீரரும் பணி நீதன்
தேனுலா விய கடப்ப - மலர்
செறிவோன் அருள் புரிவோன்
வானவர் பணி வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
6. போதன் - அறிவுடையோன், அறிவளிப்போன்
நவவீரர் - வீரவாகு தேவர் உள்ளிட்ட ஒன்பது பேர்
நீதன் - நீதி உள்ளவன், தலைவன்; செறிவோன் - சூடுவோன்

6


திங்கள் சேர் நுதல் - மீனாள்
தருதேனை முருகோனை
எங்கள் நாயகப் பொருளை - பணிந்
தேற்றார் மனத் திருளைத்
துங்கமா மனம் தேம்பிட்டேன் - உனைத்
தொழுதே நிதம் கும்பிட்டேன்
மங்களம் உயர் வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
7. திங்கள் சேர்நுதல் மீனாள் - பார்வதி
ஏற்றார் - கொண்டார்; துங்க - பெரிய; தேம்பிட்டேன் - கலங்கிட்டேன்

7


இச்செகம் தனில் அடியேன் - உனை
ஏற்ற தினம் போற்ற
மிச்சமாய்க் கலிவருத்த - நான்
மெலிவேனோ அலைவேனோ
அச்சமாய்த் துயர் ஓட - அருள்
நாடகக் கவி பாட
வச்சிரம் திகழ் வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
8. மிச்சமாய் - மிகுதியாய்; கலி - வறுமை; வச்சிரம் - வைரமணி, கூர்மை
வச்சிரம் திகழ் வேல் - வைரவேல் அல்லது கூர்வேல்

8


பூசுரர் வெகுமானி - சிவப்
பொருப்பில் வளர் ஞானி
தேச மேழும் புகழ் - காவடிப்
பூசை சிறக்கும் தமிழ்புரக்கும்
$........ ......... ......... ........
........ ......... ......... ........
வாசனை வடி வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
9. $ ஒருவரி விடுபட்டிருக்க வேண்டும்.
பூசுரர் - அந்தணர்; சிவப்பொருப்பு - கயிலைமலை; புரக்கும் - காக்கும்

9


படியெழும் புகழ் இடும்பன் - தினம்
பணியும் மலர்க் கடம்பன்
அடியார் வினை பொடி - செய்திடும்
மான புகழ் குமரன்
துடிமீறு மும்முரசன் - தெய்வம்
தொழுவாழ் கொலு வாசன்
வடிவேல் முருகனையே - கொண்டு
வருவாய் தோகை மயிலே
10. இடும்பன் - குமரனின் ஏவல் செய்வோன்
பொடி செய்திடும் - அழித்திடும்; மானபுகழ் - பெரும்புகழ்
துடிமீறு - மேன்மை மிகுந்த, முழக்கமிகுந்த
மும்முரசு - மங்கல முரசு, வெற்றிமுரசு, கொடைமுரசு

10


கர்த்தனாகிய முருகன் - அருள்
கனியும் திரு மருகன்
பத்தர்கள் மிக வாழி! - நிதம்
படிப்போர் தினம் வாழி!
சுத்தமா நகர் வாழும் - முத்துக்
கறுப்பணன் சொல் நாளும்
சித்தமேவிய பெரியோர் - தினம்
செழித்து மிக வாழி!
11. கர்த்தன் - தலைவன்; திரு - திருமகள்
முத்துக் கறுப்பணன் - நூலாசிரியர்; சித்தம் - உள்ளம்

11


பழனியாண்டவன் காவடிச் சிந்து முற்றும்


2. கந்தன் மணம்புரி சிந்து

நூலாசிரியர்: சண்முக தாசன்

வாழ்த்து

கங்கா தரனற் கருணையா லீன்றெடுத்த
சிங்கார ஆனைமுகத் தேசிகனே-மங்காத
கந்தன் மணம் புரியக் காதல்தனை மாநிலத்தில்
சிந்துகவி யானுரைக்கச் செய்

கங்காதரன் - கங்கையை முடியில் தரித்தவன்

தூம்பினில் வீழுஞ் சலந்தனைச் சாகரஞ் சூழ்ந்து கொண்டால்
வீம்பனென் றெண்ணி வெறுப்பதுண் டோயிந்த மேதினியில்
கூம்பலில் லாத தமியே னுரைத்த குழறு புன்சொல்
தாம்புக ழாகவாழ் வார்பெரி யோர்தடை வேறுள்ளதே

தூம்பு - சலதாரை
சாகரம் - கடல்
வீம்பன் - வம்பு வார்த்தை சொல்வோன்
கூம்பல் - ஒடுங்கல்
(மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு - குறள்
கூம்பாத மெய்ந்நெறியோர் - திருவருட்பா)

சீருடன் வள்ளியைச் சேரும்வடி வேலன்
சேவடியைப் போற்றி - கந்தன்
சிந்துநான் சொல்ல எந்தனக்கருள்
செல்வவி நாயகனே
சிறிய(ன்)னுரை மொழியுந் தமிழ்
குறமா தையே மணஞ் செய்திடும்
செந்தூ ரதனில் மேவியே
சேர்ந்து வாழ்ந்து சாந்த முடனே (சீருடன் வள்ளியைச்)
1. செந்தூர் - திருச்செந்தூர்; குறமாது - வள்ளி

1


பேரு பெரிய நம்பி மகரா சேந்திரன்
பெண்ணாக வந்துதித்துத் - தாதிப்
பெண்க ளுடன் தினைக் கங்காணங் காத்திடப்
பேசியே காக்க வைத்தார்
பிரியா மலே புனமே விய
பரண்மீ தினில் கவணோ சையால்
பலமாய்த் தினை விளை காத்து
உணங்கிப் பிணங்கி இருக்கப் (பேருபெரிய)
2. நம்பிமகராசேந்திரன்- நம்பிராசன் - வள்ளியின்தந்தை
கங்காணம் - கண்காணம்; கவணோ சை-கவண்கல் எழுப்பும் ஒலி
விளை - விளைபுலம் (ஆகுபெயர்)
உணங்கி - வாட்டம் அடைந்து

2


குன்றக் குருபரன் கோதையாள் வள்ளியைக்
கோரி வழி நடந்து - கந்தன்
குளறிக் குளறிப் புனத்தைத் தேடிக்
கொண்டான் வணிக னைப்போல்
குருநா ரத னுவந் தோதிய
உரைகேட் டிட வரு வேலவர்
குயிலோசையு மயில் பாசையும்
குறித்துத் தரித்துச் சிரித்து நின்று (குன்றக்குரு)
3. மயில் பாசை - குயில் ஓசைக்கு ஏற்பத் திரிந்து வந்தது
கோரி - விரும்பி; குருநாரதர் - நாரதர்

3


மன்றினி லுள்ள காலிகள் மாடுகள்
வளருந் தினைப்புனத்தில் - வள்ளி
மங்கையர் களுடன் செந்தினை காக்கவும்
மாது தலை விதியோ
மங்கைக் கிளி மொழியா ளென
தங்கப் பிர காச(ம்) மென
மருக இது சமய மென
மயங்கித் தியங்கிச் செயஞ்செ யமென்று (மன்றினி)
4. காலிகள் - பசுக்கள்; மாது - வள்ளி ; மருக - நெருங்க

4


கானக் குறக்குல மானே உனைத்தேடி
காவின் வழியே வந்தேன்
கைக்கு வளையலு மிக்கணமே தாரேன்
காசு கொடுத் திடு வாய்
காசி வட காசிப் பணி
ஆசை மிக வேகொண் டிடும்
கன்னடியன் சென்னை நகர்
கடந்து கடந்து தொடர்ந்து வந்தேனே (கானக்)
5. கா - சோலை; கணமே - நேரத்திலே
வட காசிப் பணி - வட காசியில் செய்த
செயல்திரம் உடைய அணிகலன்
கன்னடியன் - ஒரு சாதியான்.

5


சீனா வேலையிது தானே மலையாளம்
செஞ்சிக் கோட்டை நகரம் - அதில்
சீமான் மெச்சிய கோம ளப்பணி
செங்கை நீ தருவாய்
செக மொய்த்திடு வளை ரத்தினத்
தொகை செப்பிட முகநட் பிலை
திருமங்கை யாள்குல நங்கையே
சிரித்து விரித்துப் பரிக்கும் குறப்பெண் (சீனா)
6. சீனா வேலை - சீனர்களால் செய்யப் பெற்ற வளையல்
சீமான் - ஸரீமான் - திருமகள் கேள்வன் - இங்கு செல்வரைக் குறித்தது
கோமளப்பணி - அழகு மிகுந்த அணிகலன்
முகநட்பிலை - விரும்பவில்லை

6


கண்டி கதிர்காமம் காஞ்சி கொழும்புவங்
காளதே சப்பணி யே-புனக்
காவிற் கிளிகளைக் கூவிவி ரட்டிடும்
கன்னியே பெண்மயிலே
கவி வாணர்கள் அடி போற்றிடும்
துதி பெறுமான் இசை பெற்றிடும்
கலை மான துனை யீன்றதும்
கலங்கி யிலங்கி அலங்கா ரத்துடன் (கண்டி)
7. கண்டி, கதிர்காமம்-இலங்கையிலுள்ள முருகன்திருப்பதிகள்
புனக்கா - புனம்; இசை - புகழ்
கலைமான் - வள்ளியையீன்ற மான். (சிவமுனியின்
காமநோக்கால் கருவுற்றது என்பது புராணவரலாறு)

7


எண் டிசை போற்றிடும் யாழ்ப்பாண
தேசத்தி லிருந்து வருகிறேனடி - மன
திசைந்து யிசைந்து நடந்து வந்ததால்
இளைப்பும் கொண்டே னடி
இருநீ பரண் அடி கீழினில்
கரநீட் டிடு அணிவேன் வளை
இதுவே நல்ல சமய மல்லவோ
இகனை முகனை தகையுந் தீர்ந்தேனடி (எண்டிசை)
8. யாழ்ப்பாணம் - இலங்கைத் தலம்
மன திசைந்து - மனம் விரும்பி; இளைப்பு - சோர்வு
பரண் - காவல் மேடை
இகனை முகனை - எதுகை மோனை
இங்கே இடம்பப் பேச்சைக் குறிக்க வந்தது

8


ஆயிரங் கோடி திரவியந் தந்தால்
அதன்விலை மேலாகும் - வளை மேல்
ஆசை கொள்ளுவார் நேச மாகுவார்
அனாதியென் றெண்ணாதே
அடரும் தினை படரும் விளை
அதிலே கிளி களு மேயுது
அழகா கவும் மழமா கவும்
அறிந்து தெரிந்து மிருந்து மாவதென் (ஆயிரங்)
9. வளை - வளையல் ; அனாதி - திக்கற்றவன்
விளை - விளைபுலன் - ஆகுபெயர்
மழமாகவும்- இளமையாகவும் எனலாம்.

9


சேயிழை யேகொங்கு தேசம் திருப்பேட்டை
ஸரீரங்கப் பட்டணமாம் - (அதில்)
சிறந்த மனித ருறவுண் டாகும்
சித்திரப் பணியாம்
திரு வாவினன் குடி மேவியே
ஒரு மாதமும் அதில் தங்கியே
திடமாகவும் நடையாகவும்
சிகப்பு தரிப்பு முகப்புங் காற்குமே (சேயிழை)
10. சித்திரப்பணி - அழகுடன் விளங்கும் வளையல்

10


மக்கந் துலுக்காண மராட்டிய தேசமும்
வந்து பணியெடுத் தேன் - சிறு
மங்கையர்க் கேற்ற இங்கித முள்ள
வளைய லுங் கொடுத்தேன்
*ம(ய)லுற் றிடு காருண் ணிய
நகர்முற் றிலும் விலை கூறியே
வரும் பாதையில் குறியாச்சுது
மகிழ்ந்து புகழ்ந்து விருந்துவந் தேனடி (மக்கந்)
11. மக்கம், துலுக்காணம், மராட்டியம்- தேசங்கள்
பணி எடுத்தேன்- வளை கொடுத்தேன்
இங்கிதமுள்ள - இனிமையான - விரும்பதக்க
மயலுற்றிடு - ஆசை ஏற்படுத்தும்; காருண்ணிய - கிருபையுள்ள
குறியாச்சுது - நற்சகுனம் ஏற்பட்டது
விருந்து வந்தேன் - விருந்தாக வந்தேன்
*அயலுற்றிடு என்றும் பாடம்

11


துக்காணிப் பாளையப் பட்டு கல்கத்தா
கருதியே வந்தெடுத்தேன் - சேலம்
சுத்தியே வந்து மஞ்சள்குப்ப மதனில்
சில தோகையர்க் குங்கொடுத்தேன்
தொலையா வழி கடவாம லே
விலைமாதர்கள் குடி மேவிய
சுருக்காய்த் தரிக்கப் பரிக்கக் கொடாமலே (துக்காணி)
12. துக்காணி, பாளையப்பட்டு, கல்கத்தா - தேசங்கள்
தோகையர் - மகளிர்; தொலையாவழி - நெடுவழி
விலைமாதர்கள் - பரத்தையர்கள்

12


செஞ்சிக் கோட்டைவிட்டு சீனாக்கப்பல் ஏறித்
தென்தேசம் நாடி வந்தேன் - (வழி)
திகைத்துத் திகைத்துப் புனத்தி லோசையும்
செப்பிட வும் கண்டேன்
சிந்தை தௌி வாகியே நான்
வந்து னையுங் கண்டவு டன்
செயல் பெற்றனன் பயமற்றனன்
ஜெக மோகன புகழுண்டாகிய (செஞ்சிக்)
13. ஜெக மோகன புகழ் - உலகினை மயக்கும் புகழ்

13


வஞ்சிஎன் தாய்பேர் மீனாட்சி அல்லோ
பெற்ற மக்க ளிருவரடி - பெரு
வயிற்றன் கணேசன் இளைய செட்டிக்கு
வடிவேல் பட்டமடி
மாது தெய் வானை யல்லோ
ஏது மறி யாள் சிறியாள்
மணமுஞ் செய்தேன் துணை யாகவே
மறித்துக் குறித்து வெறுத்து வந்தேனே (வஞ்சிஎன்)
14. மீனாட்சி-பார்வதி தேவி; இளைய செட்டி - முருகன்

14


கந்தன் செட்டியென்று யித்தலைக் கெல்லாம்
கண்டவர் சொல்வகேள்-என்னைக்
காண வென்றாலுமே தோணாமல் போகுமே
காரணம் நீ யறியாய்
கர நீட்டிடு ரதம் போலவே
வளை மாட்டு வேன் இளையாமலே
கனி வாயினால் பணம் ஓதடி
கலங்கி யிலங்கு அலங்கிக் கொண்டானடி (கந்தன்)
15. இத்தலை - இக்காலம்; காண வென்றாலும் - காணவேண்டுமென்றாலும்
தோணாமல் - தோன்றமாட்டேன்
கனிவாய் - கனிபோன்ற வாய்; பணம் ஓது - விலை கூறு
அலங்கி - இரங்கி

15


சந்திர வட்டமொரு கண்ணாடி ஆயிரம்
பொண் பெருந் தையலரே - அது
தானும் போதா தொரு
சூரிய வட்டத்தின் மேல் விலை
சற்குணமே சமய மிது
தமையன் மார்கள் வருவாரடி
தருவாய் திரவியம் ஓதடி
தடித்துப் புடைத்துக் குடத்தி லடைக்க (சந்திர)
16. சந்திர வட்டம், சூரிய வட்டம் - வளையல் வகைகள்
சற்குணம் - நற்குணம் உடையவள்
திரவியம் - பொருள் - விலை

16


வள்ளி:-

ஆயிரம் பொன்பொருள் தாரே னுனக்கு
வரகு கூவரகு தனபடியாய் விளைந்த(து)
தானே இருக்கு தவிட்டரிசி புல்என்
தாய் தந்தைக் கோர் குழந்தை
தாதிகளுஞ் சகியார் நீ வந்ததுமே அறியார்
தருநிதி கள் வேறே இல்லை
தருவாய் பெறுவாய் குறைசொல் லாமல்தானே (ஆயிரம்)
17. தாரேன் - தரமாட்டேன்; கூவரகு - வரகின் ஒருவகை (வழக்கு)
சகியார் - விரும்பார்; தருநிதிகள் - வேறு செல்வங்கள்
தனபடியாய் - தானப்படிஎன்ற வழக்குச்சொல் -
அதிகமாய் எனப்பொருள் தரும்

17


முருகன்:-

ஆருக்கு வேணும் தவிட்டரிசி புல்
அசலார் வசை சொல்லுவார் - இதை
அப்புறஞ் சொன்னாலுமே என் குலப்
பழிப்பாக எனை வெல்லுவார்
ஆதி நேரமும் ஆச்சே தினைப்
பதிதா னிருப் பாச்சே
அகங் காரமோ பகை நேரமோ
அலைச்சல் உளைச்சல் விளைச்சல் இருந்தும் (ஆருக்கு)
18. ஆருக்கு - யாருக்கு; அசலார் - அயலார் - அடுத்தவர் - இங்கே இனத்தவர்
அதிநேரம் -அதிக நேரம்; இருப்பு - தங்குமிடம்
அகங்காரமோ - உன் ஆணவமோ
பகை நேரமோ - என் கெட்ட நேரமோ

18


வள்ளி:-

ஆனா லுனக்குத் தரவொரு காசில்லை
அண்ணே யென் செய்வேன் - முள்
ளடர்வனந் தனில் விளைதினை யல்லாமல்
ஆர் கொடுப் பார் காசு
அச்சமான தில்லாமலே
இச்சணமே யேகிவிடு
அறிந்து தெரிந்தும் இருந்தும் ஆவதென் (ஆனாலுனக்கு)
19. முள்ளடர் வனம் - முள்ளடர்ந்த காடு
இச்சணம்-இந்தக்ஷணம் - எதுகை நோக்கித் திரிந்தது

19


முருகன்:-

கானக் குறத்தியே நான் சொல்லும் வார்த்தை கேள்
கைக்கு வளையிடு வேன்
கட்டி யணைந்திடு முத்தங் கொடுத்திங்கு
காமனையுஞ் செயிப்பாய்
கலையைத் திற துடை தட்டியே
சிலையைக் கனை மூட்டியே
கனக ஸ்தனமும் நெருடியே
கருத்தில் நினைத்த படிக்கு முடிப்பேன் (கானக்)
20. காமனை - காமத்தைக் குறித்து வந்தது; கலை - ஆடை

20


வள்ளி:-

போங்காணும் பித்தப் பயித்தியங் கொண்டிடும்
போதங் கெட்ட செட்டியே-(இந்தப்)
புத்தி நீ எங்குப் படித்தாயிது
போதுமோ சொல் மட்டியே
பொறுக்க முடி யாதே யினி
முறுக்கும் மீசைக் கார ருனைப்
பொருவார் எதிர்வார் மனம்
பொறுத்தேன் உரைத்தேன் குறத்தி நானல்லவோ(போங்காணும்)
21. பித்தப் பயித்தியம் - ஒருபொருட் பன்மொழி
போதங் கெட்ட - அறிவு கெட்ட; மட்டி - மடையன்
முறுக்கும் மீசைக்காரர் - தமையன் மார்

21


பாங்காக நெத்தியில் பட்டமுஞ் சாத்தி என்
பக்கத்தில் வந்தா(ய்) - எந்தன்
பாங்கிமார் காணாமல் போங்காணுஞ் செட்டியே
பட்டப் பக லல்ல வோ
பல பேருட மகனே குற
குல மென்றெனை அறியாயோ நீ
பகவான் விதிப் படியோ இது
பகரும் விகடம் குகனுக் கேற்குமோ (பாங்காக)
22. பாங்காக - அழகாக; பட்டமும் - திருநீறும்
பாங்கிமார் - தோழியர்; பலபேருட மகன் - இழிவுரை
பகவான்- இறைவன்; விகடம் - கேலிப் பேச்சு
குகன் - முருகன்

22


செட்டி மகன்செட்டி போலே யெனதுட்
சிந்தையில் தோணவில்லை - கள்ளர்
சில்லாக்கு வந்த கள்ளரே அல்லாது
தெய்வ வணக்க மில்லை
செங்கைவடி வேலனே எங்கள்குல தெய்வமே
சின்னஞ்சிறு பெண்ணல்லவோ
சிவனார் மகன் அடியாள் எனை
தீங்காகவே நினையாம லேபோம் (செட்டிமகன்)
23. சில்லாக்கு- வழக்குச்சொல்
கள்ளரே - திருடர்போல்
சிவனார் மகன் - முருகன்

23


பட்டப் பகலில் பறிகொடுத்தவன் போல்
பார்த்து விழிக்கிறாய் - உன்னைப்
பார்க்கிலுங் கெட்டிக் காரன்போல்
தோன்றுதென் பரணி லொளிக்கிறாய்
பரிகாச மோயிரு உந்தனை ஒருபோதும்
விடார் கந்தனே
பயமில்லையோ அயில் கொண்டுனை
பறித்துக் குறித்துத் தரித்து விடுவார் (பட்டப் பகலில்)
24. ஒளிக்கிறாய் - ஒளிகிறாய்
பரிகாசமோ - கேலி செய்கிறாயோ; அயில் - வேல்

24


முருகன்:-

ஆதர வாகவுன் ஆலோலச் சத்தங்கேட்
டன்புட னிங்கு வந்தேன் - இங்கே
ஆண்துணை இல்லையே நாம்போவோ மென்றெண்ணி
அயர்ந்து நா னிங்கு வந்தேன்
அழகு வடி வான பொருள்
வளைய லிது கிடையா திது
அறி ஒருப கார மிது
அணிவாய் பணிவாய் துணிவா யிப்போது (ஆதரவாக)
25. ஆதர வாக - அன்பாக; ஆலோலம் - ஒலி
உபகாரம் - உதவி

25


வள்ளி:-

ஏதுமறி யாத போதங்கெட்ட செட்டி
ஏகும் வழி பாரு - இங்கு
எந்தனண் ணன்மார்கள் வந்து விடுவார்கள்
ஏசல் புரி யாதே
இண்டஞ்செடி யல்லோதலை கண்டுமவர் கொய்துவிட
ஏகும் வழி யறியாமலே - நீ
போகுந் தடந் தெரியாமலே
இச்சணமே ஏகிவிடு (ஏதுமறி)
26. ஏகும் வழி பாரு - தப்பிப் போக வழிபார்; ஏசல் - இகழ்ச்சி
இண்டஞ்செடியல்லோ - இண்டஞ்செடியைக் கொய்வதுபோல்
தடம் - பாதை; இச்சணம் - இ-க்ஷணம் - இப்பொழுதே

26


முருகன்:-

மாது குறவள்ளி மங்கையே நான்கொண்ட
மய்யலைத் தீராயோ - மோக
மாகினே னுந்தன்மேல் தாகமுங் கொண்டேன்
காமன் றனை வெல்லுவாய்
மலை யுற்றிடுங் குமரேசனும்
வரமுற்றிலும் அருள் செய்குவார்
மனதில் குறை நினையா மலே
மருவி செருவி உருவிப் புணர்வோம் (மாது)
27. மய்யல் - மையல்; மோகம் - காதல்
மருவி - கலந்து; செருவி - ஊடி

27


கோதை குழல்வள்ளி நாயகி யேஎன்னைக்
கூடி மருவிடு வாய்
கோமா னிருக்கும் கொலுவுக்கும் பாதை
கொண்டுமே காட்டிடு வாய்
குலவித்தைகளோ ஸ்தம்பனத்தில்
வித்தைகளோ செப்படி குறி
காரணமோ அறியேன்
குறத்தி சமர்த்தி நிறுத்தி வையாதே (கோதைகுழல்)
28. கோதை - மாலை
கோமான் - அரசன் - இங்கே மன்மதனைக் குறிக்க வந்தது
தம்பன வித்தை - உடலை அசைவற நிறுத்தும் வித்தை
செப்படி - செப்பிடுவித்தை - தந்திரவித்தை - செப்பில்
பந்தினை இட்டு மறைத்துக் காட்டும் வித்தை
சமர்த்தி - கெட்டிக்காரி;
குறி - ஒருவகைச் சாத்திரம் சொல்லுதல்

28


வள்ளி:-

செட்டி வெகு கெட்டிக்கார நீயல்லது
கேலிக ளின்ன முண்டோ - புனக்
கிள்ளைகளும் வனத்துள்ள பக்ஷிகளும்
கிளைகள் கூட்டும் உண்டோ
கிளையின் முறை உளதாயின
குளவின்தகு வளை கழனியில்
கெச கரணம் போட்டுவிடும்
கிறுக்கோ திருக்கோ யிதுக்கோ வந்தாய்நீ (செட்டிவெகு)
29. கெச கரணம் - யானை காதை அசைப்பது போல்
அசைக்கும் வித்தை; திருக்கு - வஞ்சகம்

29


ஒட்டாத வார்த்தையை நெட்டூர மாகவே
முன்னே யுரைத்தாயே நீயும்
ஓடிப்போ நில்லாத நானும் வேள்விமலைக்
குகந்த குறத்தி யல்லோ
உள்ளபடி சொல்லுகி றேன்
வள்ளியெனும் பெயரானதும்
உலகந் தனிலே கேட்டிடு
ஒளியின்ற வெகு பலன் சொல் (ஒட்டாத)
30. ஒட்டாத வார்த்தை - பொருந்தாத சொல்
நெட்டூரம் - நிட்டூரம் - கொடுமை
வேள்விமலை - வள்ளிக்குரிய மலை

30


மேவுங் குணவிதரண வள்ளி யெனவடி
வேலனுமே நினைந்தான் - குற
வேடங்கொண் டாப ரணங்களை
சூட்டினார் மெல்லியாள் என்றணைந்தார்
வேறே கதையாச்சே முதற்
சீரானதி லவன் போந்து
விபதை மகளான தினால் விடுமா
விரும்பி விரும்பிப் புகழ்ந்து (மேவும்)
31. குணவிதரண - குணச்சிறப்பு மிகுந்த (விதரணம் - அறிவு)
விபதை - தேவமகள் - திருமகள்

31


நாவலர் போற்றும் கவிவாணர் களுக்கும்
நாட்டி லனை வோர்க்கும்
நாடரிய வேலவர் தாசனடி யவர்
நண்பர்க்கும் வாழியதே
பலமாக சண்முக தாசனும்
கலைவாணி தனைப் போற்றியே
நல்கு தமிழ்ச் செல்வ மிது
நாளும் வாழ வாழி தாமே (நாவலர் போற்றும்)
32. நாடரிய - அருமையான - உயர்ந்த
(தேடக் கிடைக்காத செல்வம் என்பது போல)
சண்முக தாசன் - ஆசிரியர் பெயர்

32

கந்தன் மணம்புரி சிந்து முற்றும்


3. சுப்பிரமணியர் பேரில் சிந்து

(ஆசிரியர் பெயர் தெரியவில்லை)


ஆனந்தக் களிப்பு

சீர்பெருகு சந்தவரை மேவும் பழனிச்
சேவற் கொடியோன்மேல் சிந்துபோல் பாடக்
1. சந்தவரை - அழகு பொருந்திய மலை

1


கார்பெருகு தந்திமுகத் தையன் - செந்தில்
கடற்கரை ஆண்டிமேல் தமிழை நான் பாட
2. கார்பெருகு - கருணை மதம் பெருகு
தந்திமுகம் - அத்திமுகம் - ஆனைமுகம்
செந்தில் கடற்கரை - திருச்செந்தூர்

2


தார்பெருகும் அபிராமி சொல்வாள் - அருமைச்
சந்தக் களிப்பை யான் தத்திமொழி குளற
3. தார் - மாலை

3


ஏர்பெருகும் ஆறுமுகத் தையன் - நாளும்
என்னாவில் அனுதினமும் ஆனந்த மயமாய்
4. ஏர் - அழகு

4


அத்திமுக (வேல)வனை நித்தம் தொழுவேன் - நான்முகன்
நாவுடைய மாதே மனமேவி இப்போது
5. நான்முகன் நாவுடைய மாது - நாமகள்

5


புத்திவித்தை சவுபாக்கியம் தருவாள் - நாமும்
பூலோக நாயகன் குமரன்மேல் பாட
6. புத்தி - அறிவு; வித்தை - கல்வி; சவுபாக்கியம் - மிகுந்த செல்வம்

6


சத்திஉயர் அருள் பெற்ற வேலா - என்னைத்
தயங்காமல் காக்கிறது நின்கட னய்யா

7


வெற்றி மயில் ஏறி விளையாடும் - அய்யன்
வேலவ னய்ங்கரன் பாதமலர் துணையே 8. அய்ங்கரன் - விநாயகன்

8


குற்றங்குறை தெரியாது எனத் தமிழைக்
குமரன்என் நாவில்வந் தொழுங்காகச் சொல்வாயே

9


பத்தனைக் காக்கும் குறவள்ளி - ஏழையேன்
பாடுதற் கருள்தல் நின்கடன் தாயே

10


ஆறுகுற்றம் நூறுபிழை செய்யும் - அடிமை
யறியாக் குழந்தைமேல் அன்புசெய் தருள்வாய்

11


தேறுவேன் அபிராமி செயலால் - ஒரு
சிங்கார மாலைபோல் ஆனந்தக் களிப்பை*
12. தேறுவேன் - தௌிவேன்
*ஆனந்தக் களிப்பை - ஆனந்தக் களிப்பாய் எனவும்படும்

12


கூறுவேன் உனதுடைய நாமம் - எனக்குக்
குறையொன்று வாராமல் குமரநீ காப்பாய்

13


ஏறுமயில் மீதேறி மாலைக் கிப்போ
யிதுவேளை காப்பது நின்கட னய்யா

14


சூராதி சூரனை வெறுத்த - சிவ
சுப்பிரமணியர் அருள்பெற்று நான்தொழுவேன்

15


ஆராத கானங் கடந்தய்யன்* - ஞான
ஆறுமுகத் தையன்உன் தரிசனம் பெறவே
16. ஆராத கானம் கடந்து - அரிய வழி கடந்து
`ஆறாறு காதம் கடந்து' எனவும் பொருந்தும்
* ஆறாத நாமம் கடந்தய்யன் என்பது மூல வடிவம்

16


உபாங்கமுடன் காவடி எடுத்து அன்பர்
போற்றியே வேலருட* பாதமே துதித்து
17. உபாங்கம் - துணை (பக்க வாத்தியம்)
* வேலருடைய என்பதன் சிதைந்த வடிவம்

17


கைவேலு வட்டமிட் டாடச் - செந்தூர்க்
காவடிகள் இருகோடி சூழ்ந்து விளையாட

18


குயில்கூவ மயிலும் கூத்தாட - சாமி
குமரகுரு பரமுருக அரகர என்றாட

19


ஆண்டிமக னாண்டிகும ராண்டி - எங்கள்
ஆறுமுக வேலரென வந்த குமராண்டி
20. ஆண்டிமகன் - பிட்சாடனப் பெருமானாகிய சிவன்மகன்
குமராண்டி - ஆண்டிக் கோலம் கொண்ட முருகன்

20


தாண்டி மயி லேறிவரு வாண்டி - கிழவன்
தானாவே உருவெடுத்து வருவாண்டி

21


வேண்டிய கானவர்கள் வரவே - குமரன்
வேங்கைமர மாகவே நின்றவடி வாண்டி
22. கானவர்கள் - குறவர்

22


பாண்டிக் குறவருட மகளை - நித்தம்
பட்சமுட னிச்சித்து வந்தகும ராண்டி
23. பாண்டிக்குறவர் - பாண்டிய நாட்டுக் குறவர்
பட்சம் - அன்பு; இச்சித்து - விரும்பி

23


கைதனில்வே லாயுத மெடுத்து - நல்ல
கனகமணி ரத்தினத் தேரின்மே லேறி

24


எய்ததொரு சூரனையும் குத்தி - அவனை
இருபிளவு செய்துமே வாகனம தாக்கி

25


செய்ததவ முனிவோர்கள் தேவர் - தம்மைச்
சிறைவிடுத் தேதெய்வ லோகமீ தேற்றி
26. செய்ததவ முனிவோர்கள் - தவம் செய்த முனிவர்கள்

26


அய்வர் சகாயன் மருகன் - அனங்கர்*
ஆறுமுக வேலவரை வந்து தொழு தேத்தி
27. அய்வர் சகாயன் மருகன் - மால் மருகன்
அனங்கர் - கடவுள்
* அணங்கார் எனவும் பாடம் ஆயின் 'விழா அயரும்',
'வெறியாடுகின்ற' என்பது பொருளாகக் கொள்ளலாம்

27


பாருங்கோ பூலோகம் வாழும் - இந்தப்
பார்புகழும் வேந்தரே செந்தூர் நகரில்

28


வாருங்கோ ஒருமனது கொண்டு எங்கள்
வடிவேலர் பாதமதை வாழ்த்துங்கோ நின்று
29. ஒரு மனது - அலையாத ஒரு முகமான நினைவு

29


கலகலென வருதண்டைக் காலா - உக்கிர
காளிதிரி சூலிகவு மாரிபெறு பாலா
30. கலகலென - தண்டையின் ஒலிக் குறிப்பு
உக்கிரகாளி - கோபமிகுந்த காளி
திரிசூலி - சூலப்படையுடையாள்; கவுமாரி - பார்வதி

30


பலபல யோசனைசெய் யாமல் - எந்தன்
பவ வினையைத் தீர்ப்பதுவும் பழனிமலை யானே

31


ஆங்கார ஓங்கார சக்தியம்மாள் - தேவி
அம்மையுமை பங்கில்வளர் சிவனுடைய சத்தி
32. ஆங்கார ஒங்கார சத்தி - வெற்றிப் பெருமிதம் உடைய
ஒங்கார வடிவினளான சத்தி

32


வாங்காத காவடிகள் கட்டி - நல்
வையாபுரி சுற்றி வாரா னிடும்பன்
33. வாங்காத - வளையாத
வையாபுரி - பழனி

33


மருவும் மருக்கொழுந்தும் - வகையாய்
மாலை புனைந்து மரகதரூப மயி லேறியே
34. மரு, மருக்கொழுந்து - நறுமணப்பூண்டு
மரகத ரூப மயில் - பச்சை வண்ணம் உடைய மயில்

34


பயின்றரக்கன் சூரர் பகை தீரவே
திருவும் நிறைந்த தலம் திருப்பரங் குன்றில் மாடத்
தெருவில் பவனி வார தாரய்யா

35


அறுமுகன் பன்னிருகை அயில் கொண்டு
அசுரரைமுன் சமர்செயும் குமரரிவர் தானடி

36


சோலைகளும் கன ஆலயமும் திகழ்
சோபித சம்பிரமம் மீறிய செந்தினில் வேலன்மேல்*
37. சோபித சம்பிரமம் மீறிய - அழகும் களிப்பும் மிகுந்த
* இத்தொடர் அமைப்பு பொருள் விளங்கவில்லை

37


வாலிபர் அன்பொடு பாடிய சிந்தையில் ஆசைகள்
சிந்துகளவே மனதின்புற நானுமே

38


உத்தள வெண்ணீறணிந்து எத்திசை எங்கும் விளங்க
வித்தார பவனி வந்த தாரய்யா
39. உத்தள வெண்ணீறு - நீரில் குழையாது
உத்தூளனமாகப் பூசப்பட்ட வெண்ணீறு
வித்தாரப்பவனி - வித்தாரம் - விரிவு - பெரும்பவனி

39


சத்திவே லெடுத்துரண சுத்தவீரரைச் செயித்த
சண்முக முத்தையர் இவர் தாண்டி

40


சுத்தி விளையாட வென்றே இத்திசை தனிலே வந்து
அத்திதட மத்தகமீ தேறியே
41. அத்தி - யானை

41


சித்து விளையாட என்றே இத்திசை தனிலே வந்த
சேவகப் பெருமாள் இவர் தாண்டி
42. சேவகப் பெருமாள் - வீரனாகிய குமரன்
விசாகன் - குமரன் (திவாகரம் 1- 4)

42


சூரர்முகங் கிரியூடுருவும் படி வேல்விடு செங்கை விசாகன் அலங்
காரத் தோகை யிலங்கு மயூர துரங்கை வேலனே
43. மயூரதுரங்கன் - மயிலூர்தி (துரங்கம் - குதிரை - இது
ஆகுபெயராய் ஊர்தியைக் குறித்தது)

43


பதக்கஞ் சரப்பணியோன் பணிகள்
பருதிஒளி போல வாரதிவ ராரய்யா

44


கதிக்குங் கதலிகன்னல் நிறுத்தி மலர்தூக்கி
கனகரதம் ஏறியவர் தாண்டி

45


தாளந் தவில்முரசு தம்பட்ட மேளமொடு
சங்கீத ராகமுடன் வாரதிவ ராரய்யா
46. தாளம், தவில், முரசு, தம்பட்டம் - இசைக்கருவிகள்

46


வேழஞ் சரவணைகள் கண்டு பயின்றதொரு
வேலேறும் பவனி இவர் தானடி
47. வேழஞ் சரவணை - நானல் சூழ்ந்த சரவணப் பொய்கை
வேழஞ் சருளணைகள் - என்பது மூல வடிவம்

47


வள்ளிக் குறமக ளுள்ளபடி தினை
தெள்ளிச் சிறுதேனை வெல்லப் பொடிதனை
வாங்கியுண்ட காங்கையன் விசாகனே
கள்ளத் தனமுட னுள்ளத் தினில்மிகு
48. காங்கேயன் - முருகன் (கங்கை...கொண்டு சென்று
சரவணத்திடுதலால் பெற்ற பெயர். கந்த-திரு-16)
விசாகன் - குமரன் (கந்த-திருவிளை-60)

48


வள்ளிப் பெண்தனை மெள்ளத் திருடின
காங்கையன் சுப்பிரமணியர் தானடி

49


உத்த(ர) சிவகிரியில் நித்தம் குழந்தை வடி
வுகந்து குடியிருப்ப தாரய்யா
50. உத்தசிவகிரி - புகழுரை மிகுந்த சிவகிரி
உத்தரசிவகிரி - வடக்கில் உள்ள சிவகிரி எனலுமாம்

50


சுத்தி உலகமெங்கும் வெற்றிமயி லேறிவரும்
சுப்பிர மணிய வேலரிவர் தானடி

51


சென்னியில் கிரீடமின்ன செங்கையில் வேலிலங்க
திட்டமுடன் வார துரை ஆரய்யா
52. சென்னி - திருமுடி

52


சொன்னவடி வேலெடுத்து சூரனைச் சங்காரம் செய்யும்
சுப்பிர மணிய வேலரிவர் தாண்டி - எங்கள்
53. சொன்ன - சொர்ண - பொன்

53


திங்கள் துலங்கு முகத்தில் சேர்ந்த கத்தூரித்
திலகம் தீட்டிமிக வாரதுரை ஆரய்யா

54


மையல்கொண்டு வேலர்குற மாதைத் தேடியே - கந்தன்
மானிடர் வடிவு கொண்டு பாதை கூடியே - தெய்வ
55. மையல் - மயக்கம்

55


நாரதனே கூடச்சேர்ந்து வாவென்றே - கந்தன்
சீக்கிரம் குறப்பென்னாளைப் பார்க்கவே சென்று

56


வில்லெடுத்து அம்புதொட்டு வேடர் போலவே - கந்த
வேலவர் வனத்தைத் தேடி மிஞ்சி ஏலவே
57. மிஞ்சி - மிக, கடந்து; ஏல - பொருந்த

57


செல்லவழி கேட்டுத் திசை நாடியே - கந்தன்
சீக்கிரம் குறப்பெண்ணாளைப் பார்க்கவே - சென்று

58


கண்களுக் கெட்டாத தினைக் காடு தூரமோ - மெய்யா
கந்தன் வள்ளியைக் காண்ப தெந்த நேரமோ

59


தன்தினைப் புனமும் வள்ளித் தலமு மெதுவோ - வள்ளி
தன்னைக் காண்ப தெக்காலமோ சமயம் என்றைக்கோ

60


தூரவோ கிட்டவோ லக்குச் சொல்லு மெனக்கே - அந்தத்
தோகைதன்னைக் காண்பித்தால் சுகிர்த முண்டுனக்கு நாரதா
61. லக்கு - திசை, நெல்லை வட்டார வழக்கு
தோகை - மயில் போன்றவர்; சுகிர்தம் - நன்மை

61


வாவென்றே வேலா நண்ணி நடந்தார் - அந்த
நாகமலைக் கப்புறத்தில் நண்ணி நடந்தார்

62


வெள்ளிமலை தங்கமலை விந்தைமலை உண்டு - அங்கே
விரைகமழும் சந்தனச்சோலை வேலரது கண்டு
63. விரை - நறுமணம்

63


கிள்ளையும் குயிலன்னமும் கிளைபெருக்கவே - வேலர்
கேள்வியால் வள்ளிஎன்றதைக் கேட்டுக் கூவவே

64


தோகை வள்ளி கவணோசை தொடர்ந்துள்ளங் குளிர்ந்தார்-வேலர்
சோலைப் பெண்ணா ளோல மென்றது தோணிச்சே

65


வியாயந்தார் வாசாயத் தினைப்புனமும் வளமும் காண்கின்றார்-வேலர்
வள்ளியின் வடிவு கண்டு வந்தெதிர் நின்றார்

66


எந்தஊர் காணீர் எந்தத் தேசம் இப்பம்*
எனக் கறிய வகை வகையாய் விள்ளுவீரே நேசம்
67. விள்ளுவீர் - சொல்லுவீர்
*இப்பம் - இப்பவும் என்பதன் குமரி மாவட்டப் பேச்சு வழக்கு

67


தென்கழுகு மாமலை எந்த னூரு - யானும்
சிவலிங்கச் செட்டி மகன் கந்தனெனப் பேரு

68


சொந்தமுடன் இந்தவழி வந்து யானும்
தோகைமயில் கொண்டு இந்தப் பூமியில் வந்தேன்

69


வந்தவகை எந்தனுடன் சொல்லும் - நீரும்
வம்பு தும்பு பேசாமல் மரத்தடியில் நில்லும்
70. வம்பு - வம்புத்தனம், நேரின்மை, வஞ்சனை
தும்பு - அநாகரிக வார்த்தை

70


கண்டு கொண்டார் வேலவரும் - வள்ளி
கட்டழகி தன்னழகி செண்டுமுகில் மாதரசே வள்ளி
71. செண்டு - பூச்செண்டு

71


எந்தவூரு தேசமெதோ நாமறியோம் - இவள்
எவருபெற்ற பெண்மயிலோ நாமறியோம்

72


அந்தரமாய் வனந்தனிலே ஒரு ஆளுமில்லாக் கானகத்தின்
சுந்தரியோ லட்சுமியோ தோகையிள மாமயிலோ
மந்திரஞ்சேர் கயிலைமலை யிவள் வாழும் பரமீசுவரியோ
73. பரமீசுவரி - பரமேஸ்வரி

73


தெள்ளுபுகழ் மானவடிவு கண்டுசிந்தை மிகவே மயங்கி
வள்ளியரைத் தானெடுக்க என்ன வடிவெடுப்போம் வேலவரும்

74


குறவேஷமொடு வருவோம் வள்ளி தையலரைத் தானெடுக்க
பரதேசி வேடங் கொண்டு வள்ளிப் பாவையரை நாமெடுப்போம்

75


வளவிச்செட்டி வேடங்கொண்டு வள்ளிமாதரைக் கைப்பிடிப்போம்
இளகிமனம் வாடியதால் சுப்பிரமணியர் என்னவேடம் போடுவோம்
76. வளவி - வளையல் (பேச்சு வழக்கு)

76


வேடர்வேடம் போடுறதைக் கண்டு
மெல்லி நல்லா ளேது சொல்லுவாள்
77. மெல்லி - பெண்

77


வேறு

அன்னமே மாங்குயிலே - சின்ன
அஞ்சுகமே தேன்மொழியே
78. அஞ்சுகம் - கிளி

78



உன்னையல்லோ நானினைந்து - (இப்)பம்
உருகிமனம் வாடுகிறேன்

79


கன்னல் மொழி மின்னரசே - உந்தன்
கமலமுகம் காண்பதற்கு

80


என்னேனெஞ் சுருகு திப்போ - வள்ளி
ஏந்திழையே வாராயோ
81. ஏந்திழை - பெண் (அழகிய அணிகலன் அணிந்தவள்)

81


பட்டுடையும் தானிலங்கப்
பணிகள் மிகத் தான் துலங்க

82


இட்டமுடன் வந்துநின்று - இப்பம்
என் மயக்கம் தீராயோ
83. இட்டம் - அன்பு

83


காதழகும் மார்பழகும் - அளக*
முகத்தழகும் முத்தழகும்
*வசை முகத்தழகு என்றும் அமையும்

84


பாதச் சிலம்ப மேவு பண்பென்ன
பைங்கொடியே வந்திடாயோ

85


வனக் குறத்தி ஆசையினால் - வேலர்
மய்யல் கொண்டு தான் மயங்கி

86


எனக்கொருவர் தூது சொல்லி
இணங்கவரக் காணே னென்றார்

87


உன்னை மணம் செய்யுவேன் - உனைவிட்
டொருபக்கமும் போகேன் - என்னை

88


அன்னிதமென்று நினைந்துகொண்டால் - எனக்
காதரவார் பெண்ணே
89. அன்னிதம் - அந்நியம் என்பதன் பேச்சு வழக்கு
ஆதரவு - உதவி

89


ஆதரவென்று சொன்னால் - எனக்கு
அடுத்த கிளை நீயோ
90. கிளை - சுற்றம்

90


மித்திர பேதகம் பண்ணாதே நான் சகியேன் - இனிப்
பேசாமல் ஓடிப் போவீரே
91. மித்திரபேதகம் - நட்புப் பிரித்தல்

91


ஓடிப்போ என்று சொன்னால் - எனக்கு
உயிர்நிலை இங்கிருக்கே என்னைக்

92


கூடிக் குலாவியே கொஞ்சிக் கொண்டாலுன்
குருக்களுக்கே புண்ணியம்
93. குருக்கள் - குருமார்

93


புண்ணியமும் தவமும் மடந்தனில்
போனால் செய்வார்களே
94. மடம் - சத்திரம்

94


ஆரண்யமான வனந்தனிலே புண்ணியம்
ஆரிங்கே செய்யப் போறார்
95. ஆரணியமான வனம் - பெருங்காடு

95


ஆரிங்கே என்று சொன்னால் - எனக்
காதாரம் எங்கும் உண்டோ

96


சேரும் படிக்குநீ நம்பிக் கொண்டால் - உன்
சிநேகம் பிரியேனே

97


ஆற்ற மாட்டாமல் புகல் கெட்டு
அலைகிறீர் தொண்ணாந்து - சும்மா
98. ஆற்ற மாட்டாமல் - பொறுக்க மாட்டாமல்
தொண்ணாந்து - ஏங்கி (பேச்சு வழக்கு)

98


பீற்றாதே போமிந்த மட்டுக்கு - தர்க்கித்துப்
பேசினால் கோபம் வரும்
99. பீற்றாதே - தற்பெருமை பேசாதே
தர்க்கித்துப் பேசினால் - வாக்குவாதம் செய்தால்

99


கோபமுள்ள இடத்திலே அதிகக்
குணமுண்டு என்பார்களே - மனத்
100. மனத்தாபம் - மனவருத்தம்

100


தாபமில்லாமலே சேரு மந்திரித்
தாலுந்தன் தன்னாளாயிருப்பேன்
101. மந்திரித்தல் - மந்திரம் செபித்தல்

101


தன்னாளா யிருக்கநீ எனக்குத்
தாய்தகப்பன் கிளையோ

102


எட்டி உன்னாதே மெட்டி மின்னாதே*
இனி உன்னால் ஏன்றதைப் பார்
103. எட்டி உன்னுதல் - தாவி உயர்ந்து விரைந்தெழும்புதல்
*வெட்டி மின்னாதே என்றும்பாடம்-கண்டித்துப் பேசாதே

103


கோரணி பண்ணாதே இதுவரை
கோபம் பொறுத்திருந்தேன்
104. கோரணி - குறும்புச் செய்கை

104


ஆரென்றும் பாராமல் பாங்கியரை விட்
டடித்து முடுக்கச் சொல்வேன்
105. அடித்து முடுக்க - அடித்துத் துரத்த

105


அடித்து முடுக்க என்றால் எனக்கு
அவ்வளவும் லட்சம் பொன்னே

106


பிடித்த பிட்டுக்கு மண்சுமந்தே அடி
பட்டது சொக்க ரல்லோ

107


மனதுக் கேற்ற மாப்பிள்ளை தானே - குகனை
மணம் செய்துக்கோ வள்ளி மானே

108


தனதாகு மானால் வள்ளித் தாயே - கந்த
சாமி தருவார் வெகு நன்மையே
109. தனது (ஆகுமானால்) - நட்புரிமை

109



அசுரரைப் பொருதுமே வேலன் - அயி
லாண்டவள் உதவிய பாலன் சும்மா
110. அயிலாண்டவள் - அகிலாண்டேசுவரி - உலகநாயகி

110


வசியம் பனிரண்டுகை தோளன் - உந்தன்
மனதுக்கிசைந்த மணவாளன்
111. வசியம் - பரந்த

111


கழுகுமலையில் முருகேசன் - உந்தன்
கருணைக் கிணங்கும் உபகாரன் - அவரை

112


வேறு

தழுவிக் கொண்டால் வெகுசெம்மையே - கந்த
சாமி தருவேர் வெகு நன்மையே

113


கலியுக வரத குமாரன் - ஆர்க்கும்
கருணைக் குகந்த உபகாரன்
114.கலியுக வரதகுமாரன்-கலியுகத்தில் அருள்செய்யும்கடவுள்

114


சலியாமல் சேரச் சம்மதிப்பாயே - வள்ளித்
தாயேஉன் மனதில் பதிப்பாயே
115. சலியாமல் - துக்கப் படாமல்

115


ஆரோ எவரோ என்றெண்ணாதே - சும்மா
அணைந்துக்கோ வினைகள் வாராதே

116


வேறே பேதகம் நினையாதே - வெற்றி
வேலரைச் சேர்ந்துக்கோ மாதே
117. பேதகம் - வேறுபாடு

117


கமலச் சரவணச் சண்முகனே - மேவிக்
கலந்துக்கோ நல்ல சேவகனே
118.சரவணச் சண்முகன் - சரவணப் பொய்கையில்
வளர்ந்ததால் வந்த பெயர்

118


அசுரர் பணி குழந்தைக் குகனே - நீ
அணைந்து கொண்டால் நல்ல முகனே

119


வேலுண்டு வினையில்லை தானே - வெற்றி
வேலரைச் சேர்ந்துக்கோ மானே

120


தனித்துநீ இருப்பது வருத்தம் - இந்தச்
சாமிக்கும் உனக்கும் நல்ல பொருத்தம்

121


வள்ளியே உன்னைநான் கண்டேன் - இப்பம்
மையலைத் தீர்த்துவி டாயோ

122


கண்கொண்டு என்னைநீ பாராய் - சற்று
காத்துப் பார்த்துநீ தாராய்

123


வேறு

வேள்வி மலைக் கரசே சிற்றூர் குடி
வேடுவர் கோமானே (தனன)
124. வேள்வி மலைக் கரசு - வள்ளியின் தந்தைக்குரிய மலை

124


தாழ்விலா வாழ்க்கையுடன் எனைப்பெற்ற
தந்தையே அண்ணன் மாரே (தனன)
125. தாழ்விலா வாழ்க்கை - குறையா வாழ்க்கை

125


என் தாய் தேடினளே எனைத்தேடி
ஏங்கி இருப்பதுண்டோ

126


மறக்க மனம் கூடுதில்லை - வஞ்சி
மாதே உந்தன் மய்யல் கொண்டு

127


வாடுறேன் இப்போதே உறக்கமும்
வருகுதில்லை என்ன செய்குவேன்

128


வெயில்தனில் தனித்திருக்க விதிதானோ - உன்னை
விட்டிருக்கத் தாய்க்குச் சம்மதி தானோ
129. சம்மதி - சம்மதம்

129


நம்பின பேர்க்கு வஞ்சகம் செய்யலாகுமோ - உன்னை
நாடி வந்து வாடி நொந்து நையலாகுமோ

130


வம்பு சேரும் கொங்கைநடு வுற்று நானும் - முத்து
மாலையாய்க் குலுங்க வரம் பெற்றிலேனே
131. வம்பு - மார்புக் கச்சு

131


துள்ளுமுன் விழியிலிட்ட மைய தாகவே
துலக்கமா யிருந்தேனில்லை மெய்ய தாகவே
132. துலக்கம் - விளக்கம்

132


வள்ளியுடன் முகத்தில் பூசு மஞ்சளாகவே
மாதுடன் இருந்தே னில்லை தஞ்ச மாகவே
133. தஞ்சம் - அடைக்கலம்

133


கன்னல் மொழி மாது - வள்ளி
மின்னாள் அப்போது

134


அப்பனே குமராண்டி - உன்
தகப்பன் பேயாண்டி சொன்னால்

135


தண்ணீர் உண்ணநீர் எண்ணாமலே
நின்னீர் யெப்பவே உன்னை வேண்டித்
தொழ யிருப்பவே மனம் பூண்டீர்
136. நின்னீர் - நின்றீர்

136


அடியேன் வெண் ணீறணிந்தேன் உந்தன்
குடிநான் என்று துணிந்தேன்

137


மிடிதீர எனைப்பாரும் - இந்தப்
படியோர் புகழ் காரும்
138.மிடி - வறுமை
காரும் - 'காப்பாற்றும்' என்பதன் மரூஉ

138


வானோர் புகழ் வேலர் - நீர்
தானா வென்று துதிப்பேன்

139


இறைப் போதிலும் பிரியேன் - மாத்
திரைப் போதிலும் மறவேன்
140. இறைப்போது - சிறிது நேரம்
மாத்திரைப்போது - கைந்நொடி நேரம்

140


துரையாகிய செந்தூரச் சந்த
வரை மேவிய குமரா

141


பவனிச் சிறப்பு

பானை வயிற்றோன் கழலினை
பண்புடன் போற்றுவோமே - நற்கதலி
பழமொடு சர்க்கரை அவலொடு எள் பொரி
பலகனி பட்சண வகை
சடுதியில் அருந்தியே பாரத மேரு
வரைந்தோன் இளையவர் பாதம் பணிந்திடுவோம் (தனன)
142. பானை வயிற்றோன் - பிள்ளையார்
கதலி - வாழை; சடுதியில் - விரைவில்

142


வாரணங் கொட்டு முகில் மாதரசி வர
வந்து நடனஞ் செய நட்டுவர்கள்
மங்கையர் கொங்கைகள் செங்கை குலுங்கிட
மத்தள வீணைகள் கைத்தாளம் நேர்செய்ய
மாதர்கள் ஆடிடவே சுப்பிரமண்யர்
வந்தார் பவனிதனில் (தனன)

143


காரணனாக வந்து அடியாரைக்
காப்பது நின்கடன் காண் பொதிகையில்
கரக முனிக்கொரு குருவெனப் பத்திரு
கரமயில் கொடுவினை அறுபட ஏவிய
கழுகு மலைக் குமரா குறவள்ளி
காதலனே குகனே (தனன)
144.காரணன் - கடவுள் - "உயிர்கட்கெல்லாம் காரணம்
ஆய மேலோன்" (கந்தபுராணம்); கரகமுனி - குடமுனி
பத்திரு கரம் அயில் கொடு - பன்னிரு கைகளில்
வேலினைக் கொண்டு

144


அந்திமதி சூடும் பரமன்
அருளிய பாலகனே - கொடிய
அமர்தரு செருவினில் இயல்கொடு சமர்செய
அலகை நிணம்உண கழுகு குதிகொள
அசுரர்கள் மாய்ந்திடவே - தெய்வ லோகத்து
அமரர் சிறை மீட்டாய் (தனன)
145. அமர்தரு செரு-உக்கிரம் மிகுந்தபோர் நிகழுமிடம்
இயல் - முறை; அலகை - பிசாசம்
குதிகொள - குதித்தல், பெருகுதல்

145


விந்தை பேர்க் காவில் குறத்தியை
மேவிடவே நினைந்தாய் - குறவரில்
வில்லும் அம்பொடு செல்லும் பேர்துணை
வெல்லவே நினை வல்லவோ முன்
வேங்கை மர மாகி நின்றதொரு
வேலவ னேகுக னே (தனன)

146


வரம் பெற்ற கும்ப கர்ணன் இந்திர சித்து
மற்றுள பேரை எல்லாம் அடக்கியே
வஞ்சக ரானவர் நெஞ்சில் அறைந்திட
வாளிய தேவிய மால் மருகா குகா
வாய்த்திடு நற் கழுகு மலைதனில்
வாழும் குருபரனே (தனன)
147. வாளி - அம்பு; மால் - திருமால்

147


திறமுற்ற பன்னிருகை அயில்கோடு
சிந்தினை வேரறுப்பாய் - கயிலைச்
சிவமய ருத்திரன் அருளிய புத்திரனைத்*
தினமும் நினைத்திட வினைகள் அறுத்திடும்
சேவற் கொடியனே உனை நிதம்
சேவடி போற்றுவமே (தனன)
148. சிந்து - கடல் (வேல் கொண்டு வேலைப்
பண்டேறிவோனே - திருப்புகழ்)
சிவமய ருத்திரன் - மகா சங்கார காரணன் (அழித்தற் கடவுள்)
*புத்திரனே என்றும் பாடம்

148


ஆனையை முன்னாளில் சலந்தனில்
ஆம் கரா பற்றிட மூலமென்று
அழைக்கும் அக் கரி பிழைக்க நேமி தொட்டங்(கு)
கராவை முன் சங் கரித்திடும்
அரி மருகா குகனே நின்னடி
அன்புடன் போற்றுவமே (தனன)
149. கரா - முதலை; நேமி - சக்கரம்

149


செந்தினில் வளர்ந்த குமரன் அடியவர்
சிந்தையில் நிறைந்த முருகன் - கனக்குழல்
தெய்வத் திருமடந்தை கணவனைச்
சேவடி போற்றுவமே - தனன
சுந்தர மிலங்கு மயிலன் நலம் பெறுஞ்
சுந்தரி தருங் குருபரன் கதிர்சொரி
துய்யவடி வேலன் பாதமலர்
சூழ்ந்து வணங்குவமே (தனன)
150. சுந்தரம் இலங்கு மயிலன் - அழகியமயிலூர்தி உடையவன்
நலம் பெறுஞ் சுந்தரி - உமை; துய்ய - தூய - பரிசுத்த

150


செஞ்சர ணிறைஞ்சும் அடியார்க் கருள்தரும்
கஞ்ச மலர் மிஞ்சு சரணம் - தினைப்புனம்
சென்று குறமாதைப் புணர்ந்தருள்
தேசிகனைப் பணிவோம் (தனன)
151. செஞ்சரண் - சேவடி
கஞ்சமலர் மிஞ்சு சரணம் - தாமரையினை வெல்லும் சேவடி

151


தேசிகன் குருபரன்
அஞ்சின் இறை அஞ்சிலேன் - மெய்க்
கதிபுரை அம்பிகை
அலர்ந்த கருணைத் துரைத்திரு
ஆறுமுகக் குமரன் பதத்தை
அனுதினமும் வாழ்த்துவமே (தனன)
152.அஞ்சின் இறை அஞ்சிலேன் - ஐந்து புலன்களின்
அலைக்கழிவுக்கு அஞ்சாத என்னுடைய மெய்க்கதி
என்று கொள்ளலாம்

152


தோடவிழ் கடப்ப மலரும் பிரசம் கமழ்
ஏடவிழ் நறைத் தொடையலும் புனைந்தருள்
சோதிவடி வேலன் பதத்தைத்
துதித்து நாம் வாழ்த்துவமே (தனன)
153. தோடு, ஏடு - இதழ்; பிரசம் - தேன்

153


காடுறுமாச் சிறுமியைத் தினந்தினம் நாடி
மயலுற்ற தன்னை முன்னின்று
காத்த தனிக்குமரன் பதத்தைக்
கனிந்து வணங்குவமே (தனன)
154. காடுறுமாச் சிறுமி - தினைப் புனைத்திலிருந்த வள்ளி

154


வண்டுகுடி கொண்ட குழலின் - வணங்குவார்
பண்டை வினை துண்டு செயுமின் - பத்திரு
வள்ளிக் கிசைந்த குகன் பதத்தை
வணங்கிக் கொண்டாடுவமே (தனன)
155. பண்டை வினை - முன்வினை

155


சண்டனுடலங் கிழிபடத் திருக்கழல்
தந்த விமலன் தருகுகன் தனைத் தினம்
சாமி எனப் பணிவார் அருவினை
தானறும் நிச்சயமே (தனன)
156. சண்டன் - காலன் (எமன்)

156


திண்டிறல் மிகுங் குருபரன் திரள் செயும்
வண்டுகள் முழங்குமாலை சூழ
திருச் செந்தில் மால்வரை மேல் சிறந்த
வேலவனை வாழ்த்துவமே (தனன)
157. திண்டிறல் - மிகுவலி
திரள் செயும் வண்டுகள் - மிகுந்து முழங்கும் வண்டுகள்

157


பண்டுகட லுண்ட முனிவன் - கழலினை
தெண்டனிட வண்டமிழ் உரைதனைப் புகலும்
பன்னிரு கைக் குமரன் பதத்தைப்
பணிந்து கொண்டாடுவமே (தனன)

158


பள்ளு

கொண்டல் இளசைக் குமரன் எட்டேந்திரன்
மண்டலீகன் பண்ணை தனிலே - இன்று
159.கொண்டல் இளசை - மேகம் தவழும் இளசை
(மழைவளம் பொருந்திய இளசை)
மண்டலீகன் - மண்டலாதிபதி

159


கண்டிடும் நெல்லுக்கும் புல்லுக்கும் உள்ள
கணக்கு நான் சொல்கிறேன் ஆண்டே
160.ஆண்டே - பண்ணை முதலாளியைப் பணியாள்
அழைக்கும் முறை

160


மாலோன் வணங்கும் எட்டீசுபரன் கோவில்
வகைக்கேநற் சீரகச் சம்பா நெல்லில்

161


நாலாயிரம் கோட்டை ஓர் தொகையாய்
நம்மள் நாதர் பட்டர் வசம் அளந்தேன்
162. நம்மள் - நம் (நம்ம - நம்மள் - பேச்சுவழக்கு)

162


மெய்யான காரணராம் வெங்கிடாசல
விட்டுணு கோவிலுக்குந் தன் சம்பா நெல்லில்

163


அய்யாயிரம் கோட்டை நம்பி திருமலை
அய்யங்காரர் தன்வசம் அளந்தேன்

164


சாத்தூர்ப் பெருமாள் படித்தரம் பூசை
தவறாமல் என்றும் நடக்க உங்கள்
165. படித்தரம் - கோவில் முதலியவற்றுக்குச் செய்யும் கட்டளை

165


வார்த்தைப் படிக்கு ஆயிரம் கோட்டை கஸ்தூரி
வாரணனம் பாரத்தில் அளந்தேன்
166. கஸ்தூரி வாரணன் - பெயர்
அம்பாரம் - குவியல்

166


விண்ணோர் புகழும் கழுகா சலக்குக
வேளுக்குப் பூந்தாளைச் சம்பா நெல்லில்
167. பூந்தாளைச் சம்பா - நெல்வகை

167


அண்ணர் பட்டம் வசம் எண்ணாயிரம் கோட்டை
அட்டி பண்ணாமல் அளந்தேன்
168. அட்டி பண்ணாமல் - தடை சொல்லாமல்

168



கந்தன் குமர ரெட்ட பாண்டிய தெய்வேந்திரன்
கண்ணன் திருநாமம் துதிக்கும் நாகூர்

169


முத்துப் புலவர் வளவுக்குத் தானுண்ண
முன்னூறு கோட்டை நெல்ல ளந்தேன்
170. வளவு - இருப்பிடம்

170


திட்டமதாய்க் குளம் வெட்டுக் கென்றே - சேரில்
கட்டுநெல் லாயிரம் கோட்டைக் (குளத்)தைக்
171. சேர் - நெற்கூடு, வைக்கோல்புரி சுற்றி அமைப்பது

171


கெட்டியதாய் நோட்டம் பார்க்கின்ற ராக்கப்பன்
செட்டியார் தன்வச மளந்தேன்

172


சட்டமதாகப் படிக்கும் கனக
சபாபதியா பிள்ளை கணக்கின் படி
173. சட்டமதாக - செவ்வையாக

173


கொட்டிய முத்துப் பேயன்பால் எண்ணாயிரம்
கோட்டை நெல் பாட்டத்தில் அளந்தேன்
174. முத்துப்பேயன் - முத்தப்பய்யன்; பாட்டம் - பகுதி

174


உவணகிரி சுத்தித்தேர் ஓட்டி வைப்பதற்கு
ஒன்பதினாயிரம் கோட்டை நெல்
175. உவணகிரி - கழுகுமலை (உவணம் - கழுகு)

175


எவரும் புகழும் குமாரவேல் மணியத்துக்கு
ஏற்கவே தீர்க்கமாய் அளந்தேன்
176. தீர்க்கமாய் - திட்டமாய்

176


சம்பாதி வெற்புக் குமர குருபரர்
சன்னிதிச் சத்திரம் நடக்க வென்றே
177. சம்பாதி வெற்பு - கழுகு மலை

177


கொம்பு பெறவே தொண்ணூற் றொரு
கோட்டைநெல் சுப்பன் பகுதியில் அளந்தேன்
178. கொம்புபெற - மேன்மை பெற
பகுதி - வருவாய்

178


இந்தவகை அன்பத்தீராயிரத் தெழுநூற்று
ஒரு கோட்டைநெல் நீக்கிச் சேரில்
179. அன்பத்தீராயிரம் -ஐம்பத்தீராயிரம்

179


வந்தநெல் தொண்ணூத்தி ரெண்டுலட்சம் கோட்டை
சொந்த இருப்பு காணாண்டே

180


தீர்த்த விசேடம் பெறும் தனுக்கோடி
சிவராம லிங்கருக் கென்றேகண் பார்த்தும்

181


ஓராயிரம் கோட்டைநெல் நேர்த்தியாய்ப்
பள்ளையச் சம்பா நெல்லளந்தேன்
182. பள்ளையச் சம்பா - நெல்வகை

182


காசினி போற்றிடு மாற்றினிக் கிரிக்கோவில்
கட்டளைக் கெண்ணூறு கோட்டை விசு
183. கட்டளை - கோவில்களுக்குச் செய்யும் நிபந்தனை

183


வாசமதாய் நமசிவாயம் பண்டாரம்
வசத்தில் மிளகுநெல் அளந்தேன்

184


கூடல்வளர் சொக்கேசர் மீனாட்சிக் கெண்ணூறு
கோட்டைநெல் குங்குமச் சம்பாயிந்த

185


நாடறியும்படி கட்டளை மீனாட்சி
நாதர்பட்டம் வசமளந்தேன்

186


தாழ்வு வராமலே கேசய்யங் காற்குப்பூந்
தாளைச் சம்பா நெல்லளந்தேன்

187


காந்திமதி வடிவாள் நெல்லை நாயகர்
கட்டளைக் கெண்ணூறு கோட்டை

188


வராந்தக மாகப்புளுகு சம்பா நெல்லை
வாரிக் கையாரவே அளந்தேன்
189. வராந்தகம் - வராத்தம் - கட்டளை

189


புன்னைவனச் சங்கரேசுபரர் கோவிலுள்
பூசை தவறாமல் நடக்கத்தானே

190


அன்னதானச் சம்பா ஓர்தொகையாக
அளந்தேன் அறுநூறு கோட்டை

191


ஆதிவெயில் உகந்தாள் முப்பிடாரி
அலங்காரிக் கஞ்ஞூறு கோட்டை மனு
192. அஞ்ஞூறு - ஐந்நூறு

192


நீதியாகவே பண்டாரம் கையினில்
நேர்முத்துச் சம்பா நெல்லளந்தேன்
193.பண்டாரம் - சிவனடியார்; இச்சொல்
பண்டாரகன் என்பதன் திரிபு

193


மங்காத சீர்த்திபெறும் எட்டயபுரம் தனில்
தங்காளி நாயகிக் கென்றே - கன

194


பொங்கமாய் முன்னூறு கோட்டைநெல்
பூசாரி அங்கணன் பாரிசம் அளந்தேன்
195. கனபொங்கம் - பெருமையும் பொலிவும்
பாரிசம் - வசம் - இடம்

195


செப்பமுறும் தவசித் தம்பிரானுக்குச்
சித்திரக் காலி நெல்லதிலே சைவ

196


சுப்பன் பண்டாரன் வசமளந்தேன் ஓர்
தொகையாய் அறுநூறு கோட்டை

197


தாரணி போற்றும் இளசை அன்னதானச்
சத்திரத்துக்கே ராசவெள்ளை நெல்லில்

198


ஆருமகிழச் சிதம்பரத் தய்யன் வசத்
தாயிரங் கோட்டைநெல் அளந்தேன்

199


குலதெய்வமென்னுஞ் சகதேவிக் கானைக்
கொம்பன் சம்பா நெல்லதிலே நான்
200. சகதேவி - குலதெய்வத்தின் பெயர்
ஆனைக் கொம்பன் - நெல் வகை

200


நிலவரமாக முன்னூத் தஞ்சு கோட்டைநெல்
201. நிலவரம் - இங்கு வழக்கப்படி என்று கொள்ளலாம்
* நேற்று அந்தி எனப் பிரியும்

201


காசி கேதாரத்தினில் வாசமிகு விசுவேசர்
படித்தரம் நடக்கப்படி
202.படித்தரம் - கோயில் முதலியவற்றுக்கு உதவும்
தினசரிக் கட்டளை

202


பூசை தவறாமல் ஆயிரம் கோட்டைநெல்
போசன சம்பா நெல் அளந்தேன்
203. போசன சம்பா - நெல்வகை

203


மங்கையெனும் கோவில்பட்டி தனிலே
வாழ்பூவண நாதருக் கென்றே வெகு

204


இங்கிதமாகவே முன்னூறு கோட்டை
நெல்லிற்குச் சம்பா நெல்லளந்தேன்
205. இங்கிதமாக - இனிமையுடன்

205


சந்தவரை திருச்செந்தூரில் மேவிய
சண்முகனார் கட்டளைக்கே நல்ல

206


வெந்தயச் சம்பா எழுநூறு கோட்டைநெல்
வேலன் பகுதியில் அளந்தேன்
207. வெந்தயச் சம்பா - நெல்வகை; பகுதி - வருவாய்

207


சாத்திர தோத்திர வேத பாராயணத்
தாத் தய்யங்கார் வகைக்கென்றே

208


ஆத்தி கிணத்தினில் அஞ்ஞூறு கோட்டைநெல்
காத்தன் பகுதியில் அளந்தேன்

209


ஆதிக்கற்குப் பராபரி யாகிய
ஆன கண்ணப் பருந் தனக்கு

210


மாதிஷ்டமாகவே எண்ணூற் றஞ்சு கோட்டைநெல்
மாசற்ற சம்பாவில் அளந்தேன்

211


நற்றமிழ் ஓங்கும் கடிகைப் புலவர்
நமச்சிவாயப் புலவருக்கே துரை
212. துரை - தலைவர்

212


சொல் தவறாமல் முன்னூற்றஞ்சு கோட்டைநெல்
தூய வெள்ளை தனில் அளந்தேன்

213


வீணைதனில் சுர ஞான மிசைத் திடும்
வெள்ளை அண்ணாவி குமாரர் தனக்கும் என்று
214. சுர ஞானம் - இசை அறிவு
அண்ணாவி - கூத்து முதலியன பழக்குபவர்

214


வான்புகழ் தொண்ணூற் றஞ்சு கோட்டை நெல்
வாழைப் பூச் சம்பாவில் அளந்தேன்
215. வாழைப்பூச் சம்பா - நெல்வகை

215


சம்பிரதிப் பிள்ளை வயித்திய லிங்கர்
தயாலெழுதுங் கைக் கணக்கின் படி
216. சம்பிரதி - தலைமைக் கணக்கன்

216


அம்பாரஞ் சேரில் களஞ்சியந் தோறும்
அனேக நெல் கட்டினேன் ஆண்டே
217.அம்பாரம் - சேர், களஞ்சியம்;
நெல் சேர்த்து வைக்கும் இடம்

217


இத்தனை நெல்லும் உள்ளூர் மணியம்
வெங்கடேச ரெட்டு முன்னிலைக் கேயின்று
218. மணியம் - விசாரணைக் காரர்

218



கந்த னனுத்தாரப் படிக் களந்துமே
கட்டி வைத்தேன் பண்ணை ஆண்டே

219


நந்தவனச் சிந்து

சந்தமிகும் புஷ்பவனமே - முத்து
சாமி செய்த நந்தவனமே - என்று

220


சார்ந்தார் களிகூர்ந்தார் - மனந்
தேர்ந்தார் கலி தீர்ந்தார்
221. கலி - சிறுமை, வருத்தம்

221


கொந்து கொந்தாய் மலர்தூவும் - மயல்
கொண்டிடவே குயில் கூவும்
222. கொந்து - கொத்து

222


பின்னும் கூடும் பெடையோடும்
உறவாடும் விளையாடும்

223


பஞ்சவர்ணக் கிள்ளைச் செறிவும் - வெகு
பாந்தக் கலவிகள் புரியும் - கனி

224


பழுக்கும் கொத்தி இழுக்கும் - பிரசம்
ஒழுக்கும் நிலம் வழுக்கும்
225. பிரசம் - தேன்

225


அஞ்சிறைத் தும்பிகள் ஓங்கும் - குயில்
அன்புடன் வயினால் வாங்கும் - மலர்
226.அஞ்சிறைத் தும்பி - 'கொங்கு தேர் வாழ்க்கை
அஞ்சிறைத் தும்பி' - குறுந்தொகை - ஒப்பு

226


அடுக்கும் கீதம் தொடுக்கும் - மார்க்க
மெடுக்கும் இன்பம் கொடுக்கும்
227. கீதம் - இசை
மார்க்கம் - கூத்து வகை

227


இச்சையுடன் இரண்டு மந்தி - மாவில்
ஏறிப் பலாக்கனி அருந்திக் - கனிக்
228. கனிக்கெதிரும் - கனிக்காக எதிர்த்துக் கொள்ளும்

228


கெதிரும் சோலை உதிரும் - சுளை
உதிரும் கனி உதிரும்

229


உச்சிதச் செண்பகத் தோப்பும் - பெண்கள்
ஊடே மலர் கொய்யும் தாப்பும் - தென்றல்
230. உச்சித - உயர்ந்த
தாப்பு - நேரம், சௌகரியம், இடம்

230


ஓட்டமும் மலர் ஆட்டமும் குயில்
ஈட்டமும் கன தேட்டமும்
231. ஈட்டம் - கூட்டம்; தேட்டம் - செல்வம்

231


கற்பகக் காவனம் போலே - மயக்கங்
காணுதடி ஒருக்காலே - சுத்திக்
232. கற்பகக்கா - கற்பகச் சோலை
காவனம் - சோலை - ஒருபொருட் பன்மொழி
ஒருக்கால் - ஒருமுறை

232


கன்னலும் வளந் துன்னலும் கன
சென்னெலும் சடைப் பின்னலும்
233. கன்னல் - கரும்பு; வளந்துன்னல் - வளம் சேர்த்தல்
சென்னெல் - செந்நெல், எதுகைக்காகத் திரிந்தது

233


பொற்ப மிகுங்கன வாளையும் - தன்பூட்
டுட வாளெனும் தாளையும் - சாலைப்

234


பொங்கமும் திருவங்கமும் மகன்
சங்கமும் பிரசங்கமும்
235. பொங்கம் - பொலிவு
அங்கம் - அலங்காரம்
சங்கம் - கூட்டம்

235


குங்குமச் சந்தன மரமும் - புன்னை
கொண்டு வளர்ந்திடு முரமும் - மலர்க்

236


கொல்லையும் மணமுல்லையும் - பசுங்
குல்லையும் திருவில்லையும்
237. குல்லை - இருவாட்சி; வில்லை - வில்வம்

237


புங்கமிகு நந்தவனமும் - தெய்வ
பூமியிற் கற்பக வனமும் - கண்டு
238. புங்கம் - உயர்ச்சி

238


புகழ் ராதை இகழ்வார் மனம்
மகிழ்வார் கிட்ட யகழ்வார்

239


மாமரம் தோறும் உலாவி - குயில்
மாரனை வாவென்று கூவி - அதில்
240. மாரன் - மன்மதன்

240


வசிக்கும் குடல்பசிக்கும் - மெத்த
ருசிக்கும் கனி பொசிக்கும்

241


தென்னங் குரும்பையைத் தின்று
தெற்கே நிழலிலே உறங்கும் - மனம்

242


செழிக்கும் உடல் நௌிக்கும் முகம்
களிக்கும் மதங் கொழிக்கும்

243


பன்னகந் தென்றலைப் புசிக்கும் - கன
பண்புயரு மலையினில் வசிக்கும் - பல
244. பன்னகம் - பாம்பு

244


வளமும் பரிமளமும் கடல்
வளமும் மலை வளமும்
245. பரிமளம் - நறுமணம்

245


தங்கும் வளம் கண்டு மகிழ்ந்தார் - முத்து
சாமி தெய்வேந்திரனைப் புகழ்ந்தா - ருப
246. முத்துசாமி தெய்வேந்திரன் - பாட்டுடைத் தலைவன்

246


சரித்தார் மெள்ளச் சிரித்தார் - மலர்
பறித்தார் குழல் தரித்தார்

247


காவடிச் சிந்து

தாயே சரசோதி - அருள்
தரவேணுநீ தாயே
248. சரசோதி - சரசுவதி என்பதன் இசை வழக்குத் திரிபு

248


வாயீசுபரி அரசே - தமிழ்
வாணற் கருள் புரிவாய்
249. வாயீசுபரி - வா ஈச்வரி என வரும்

249


காவடிச் சிந்துபாடி - உந்தன்
கருணை மலர் தேடி

250


சேவடி தனைப் போற்ற - அருள்
புரிவாய் மனம் மகிழ்வாய்

251


ஆண்டி குமராண்டி - எழில்
அழகு மயிலாண்டி

252


மூண்டி ரண சூரர்களைத்
தாண்டி மயி லேறி
253. மூண்டி - கூடி ; இரணசூரர் - யுத்தவீரர்

253


முவ்விரண் டாறுமுகம்
எவ்வாரென் றறிந்து
254. மூவிரண்டு - முவ்விரண்டு எனக் குறுகியது

254


செவ்வே வழி நடந்தால் சிவன்
அவ்வாறே துணை செய்வார்
255. செவ்வே - நேரே நன்றாக

255


மாலிதனை வெல்வேன் - சரவண
வாவென்று சொல்வேன்
256. மால் - மயக்கம்

256


பரனே அறுமுகனே உனதிரு
நீறிட வினை தீர
257. உன - உன்னுடைய

257


ஞானக் கடல் மூழ்கி - வெகு
மானத்துடன் வாழ்க
258. வெகுமானம் - பரிசு, சன்மானம்

258


பாடுவமோ இவ்வனத்தை - வேலர்
பண்புனத்தை நாடுவமோ
259. பண்புனம் - பண்படுத்தப்பட்ட புனம்

259


தேடுவமே இவ்வனத்தில் - வேலர்
சிறந்திருக்கும் இடந்தேடி

260


ஓடுவமோ கிரியைச் சுற்றி
ஒளிந்திருந்தால் பிடிக்க லாமோ

261


ஆடுமன்ன மயிலினங்காள் - செந்தூர்
ஆண்டி வேலர் வரக் காணையளோ
262.காணையளோ - கண்டீர்களோ அல்லது
காணீர்களோ என்பதன் வட்டார வழக்கு

262


சின்ன அன்ன மயிலினங்காள்
செந்தூர் சேவகனைக் காணையளோ

263


அன்னநடைப் பட்சிகளே - எங்கள்
ஆண்டி வரக் காணையளோ

264


மாடப்புறாக் கிளிப் பிள்ளை - வடி
வேலர் வரக் காணையளோ

265


வாடை கண்டு மயங்கி வரும் - வடி
வேலர் வரக் காணையளோ
266. வாடை - வடகாற்று

266


சூரனையும் சூறையாடி வந்த
சொகுசன் வரக் காணையளோ
267. சூறையாடுதல் - அலைகழிக்க (வென்ற)
சொகுசன் - சுகானுபவமுள்ளவன் - நாகரிகன்

267


ஏறுமயில் ஏறிவரும் - எங்கள்
இறையவனைக் காணையளோ

268


கரடி பன்றி யாளிகளே - செந்தூரக்
கந்தன் வரக் காணையளோ

269


ஓரடியா லளந்தவர் தன் மருகன்
உத்தமனைக் காணையளோ

270


காடைகளே கவுதாரிகளே - செந்தூரக்
கந்தன் வரக் காணையளோ
271. காடை, கவுதாரி - பறவையினங்கள்

271


தேடி வரும் புள்ளினமே - செந்தூரச்
சேவுகனைக் காணையளோ

272


பஞ்சவர்ணக் கிள்ளைகளே - சிவன்
பாலன்வரக் காணையளோ

273


கொக்கினங்காள் குருகிணங்காள் - செந்தூரக்
குமரன் வரக் காணையளோ

274


சோலையில் வாழ் குயிலனங்காள் - செந்தூரச்
சொகுசன் வரக் காணையளோ

275


காலைமதி சூடிதரும் - கந்த
சுவாமி வரக் காணையளோ

276


பாய்ந்து வரும் புலிகரடி - சிவன்
பாலன் வரக் காணையளோ

277


மேய்ந்து வரும் தாராவே - எங்கள்
வேலர் வரக் காணையளோ
278. தாரா - ஒருவகைப் பறவை

278


கூவுகுயில் மயிலினங்காள் எங்கள்
குமரன் வரக் காணையளோ.

279


சுப்பிரமணியர் பேரில் சிந்து முற்றும்


4. சித்தராரூட நொண்டிச் சிந்து

(ஆசிரியர் பெயர் தெரியவில்லை)


அத்திமா முகவன் செய்ய வடியினைக் கமலம் போற்றிச்
சித்தரா ரூடம் தன்னில் செப்பிய பொருளா ராய்ந்து
சுத்தமா யெவர்க்கும் தோன்றச் சுருக்கமாய் நொண்டிச்சிந்தாய்
வித்தகர் அருளினாலே தமிழினால் விளம்பல் உற்றேன்

சித்தராரூடம் - சித்தர் எழுதிய ஆருடம் என்னும் நூல் (விஷவாகடம்)
அத்திமாமுகவன் - யானைமுகனாம் விநாயகர்
வித்தகர் - ஞானமுடையோர்

குமார நாயகன் துணை

தெட்சிணாமூர்த்தி கடாட்சம் முன்னிற்க வேணும்

கடாட்சம் - கடைக்கண் நோக்கு

திருமருதூர் வளரும் நாகலிங்கர்
சீர்பாதக் கமலமென் சிந்தையுள் வைத்து
மருவுசித்த ராரூடப் பொருளிதனை
வகுத்துச் சொல்லுறேனிந்த மகிலத்தில்
புண்டரீகத் திலுறை வோன்படைத்ததிற்
பொல்லாத விஷச்சந்து எல்லாமுமே
விண்டுரைக்கக் கேளுமினி நல்ல பாம்பு
விரியன்வழலை கொம்பேறி மூக்கன்
சாணார மூர்க்கன் புடையன் மண்டலி
சவளக்காரை மண்ணுளி சாரை

5

1 - 5.
திருமருதூர் - ஆசிரியரின் ஊராகலாம்
மகிதலம் - உலகம்; புண்டரீகம் - தாமரை
விண்டு - விளக்கமாக;விரியன், வழலை, கொம்பேறி மூக்கன், சாணார மூர்க்கன்,
புடையன், மண்டலி, மண்ணுளி, சாரை - பாம்பு வகைகள்


வாணாளை வாட்டும் செய்யான் இருதலை
மேலான சிலந்திப் புலிமுகப் பூச்சி
தேள்புள்ளி வண்டு பூரம் பச்சோந்தி
செவ்வட்டைபேய் நரிநாய் சோர்வெலி
வாள்பல்லுப் பூனை புலிபிங்கவங்கம்
வனத்துத்தவளை யட்டை வாசிமுதலை
அரணை நட்டுவக் காலி முதலியவை
அல்லாது சீவசெந்துவும் அனேகம் உண்டாம்
உரகத்தின் போநிறமும் சாதியும்
ஊரும் மணமும் மற்றுஉறைவிடமும்

10

6 - 10.
புள்ளி - பல்லி; பூரம் - பூரான்; அரனை - பாம்பரனை எனப்படும்
நட்டுவக்காலி - ஒரு நச்சுயிர் - நண்டு வாய்க்காலி என்ப
சீவசெந்து - வாழும் விஷ உயிர்கள்; உரகம் - பாம்பு


படமெடுத்தாடும் குறியும், முட்டை யிட்டுப்
பருவமறிந்து பொரித்தூரும் பரிசும் சில்
விடமுறு தங்கக் குறியும் கடித்திடும்
விடமும் கடித்தகடிமீளாததும்
கால்கடி அடக்ககுறி வேகக் குறி
கருதிய தூதரின் கண் குறிப்பும்
சீலமுள்ள மணி மந்திரத்தால் கருடதியானத்தால்
மருந்தினால் தீர்க்குஞ் செயலும்
குருமலரடி வணங்கி வகை யாய்க்
கூறுகி றெனிந்த குவலயத்தில்

15

11-15.
பரிசு - விதம்; தந்தம் - பல்
குரு - நூலாசிரியரின் ஆசிரியராகிய சித்தர்
குவலயம் - உலகம்


மருமலர்ப் பொருட்டுறைவோன் பயன்றருள்
மகவென வந்துதித்த மாதவத்தினோன்
காசிபன் மனைவிய ரில்மிக்கான கத்துரு
வயிற் றுதித்த கட்செவிகளைப்
பேசிடில் பேரனந்தன் வாசுகி பிலத்த
தக்கன் கார்கோடன் பற்பன்
மகாபற்பன் சங்கு பாலன் குளிகன் இம்
மாநாகம் எட்டுப் பேர்தானாதியிதில்

பாம்பின் சாதி

தேசுகட் செவி அனந்தன் குளிகனும்
செகத்தில் வேதியனென்று வகுத்தனரே

20

16 - 20
மருமலர்ப் பொருட்டுறைவோன் - பிரமன்
கத்துரு - காசிப முனிவரின் மனைவி. நாகங்களின் தாய்.
104 பிள்ளைகளையும் ஒரு பெண்ணையும் பெற்றவள்.
கட்செவி - பாம்பு
அனந்தன், வாசுகி, தக்ஷன், கார்க்கோடன், பத்மன், மகாபற்பன்,
சங்குபாலன், குளிகன் - கத்துரு பெற்ற எட்டுப் பாம்புகள்
நாகர் - பாம்புச் சாதியினர்; வேதியன் - அந்தணன்


வாசுகி சங்குபாலன் இதுரெண்டு மன்னவனாகு
மென்று சொன்னார் முன்னோர்
தேசுறு தற்கன் மகாபற்பன் ............
தே......... வணிகனென்று மொழிந்தனரே
சூத்திரன் கார்க்கோடன் கனபற்பன் என்று
சொன்னார்களிவரில் முன்சொன்ன பாம்பு
மூத்திடும் ஆணாகும் பின்னாக மொழிந்த
பெண்பாம்பென்று மொழிந்தனரே

பாம்பின் உணவு,இரை எடுக்கும் நாள்

ஆதித்த வாரம் அனந்தன் வாசுகி
அடுத்த திங்கட்கிழமைக்கு இரை எடுக்கும்

25

21 - 25
ஆதித்தவாரம் - ஞாயிற்றுக்கிழமை; இரை - உணவு


போதித்த செவ்வாய் தக்கன் கார்கோடன்
புதன்கிழமை அன்றைக்கு இரைஎடுக்கும்
விடங்கொண்ட துளையெயிற்றுப் பற்பன்
வியாழக்கிழமை தனில் இரைஎடுக்கும்
படர்ந்துசென்று இரை எடுக்கும் தேடிமகா
பற்பராசன் வெள்ளிக் கிழமைதனில்
கூறுசனிக் கிழமை பகல் சங்குபாலன்
குளிகன் இராக்காலம் இரைஎடுக்கும்
பூநில மறிந்த பாப்பான் வாயுவும்
பூமண மிரண்டும் பொசித்திருக்கும்

30

26 - 30
போதித்த - கூறப்பெற்ற
பொசித்திருக்கும் - உண்டிருக்கும்


அரசன் அருகங் கிழங்கு வண்டும் எடுத்தருந்த
வளைதனில் சென்றிருந் திடுமே
சூத்திரன் மீன்தவளை தண்ணீர்த்
துறைதனில் சென்றருந்தும்

இருக்குமிடம் ஆடும் குறி

சாத்திரம் சொன்னபடியே நாலு வகைச்
சாதியிருக்கு மிடந்தனைக் கேளும்
வேதியன் கோவிலிலே மரத்தினில் வேந்தன்
மனையில் செட்டி சூத்திரன் புற்றில்
நீதியாய் வாழ்ந்திருக்கும் நால்வரும்
நின்றாடும் குறிதனை நிகழ்த்துகின்றேன்

35

31 - 35
அருகங்கிழங்கு - அருகம்புல்லின் கிழங்கு
சாத்திரம் - பாம்பு சாஸ்திரம்
நாலுவகைச்சாதி - அநதணர், அரசர், வணிகர்,சூத்திரர்
நின்றாடும் குறி - பாம்பு ஆடும் திறம்


அண்ணாந்து பார்த்தாடும் வேதியன் அரசன்
செவ்வே பார்த்தாடி நிற்கும்
கண்ணாலே தெற்கும் வடக்கும் திசை
காட்டிக்கொண்டு நின்றாடும் செட்டிப்பாம்பு
வெள்ளாளன் பூமி தன்னையே பார்த்தாடும்
வேத முறைப்படி தப்பாதிதுவே

படத்தின் குறி, நிறம், மணம்

முள்ளாகும் பாம்பின்படம் தனில் வைத்த
முத்திரையைச் சொல்லுகின்றேன் சித்திரமாக
பார்ப்பான் படத்தில் சங்கு மன்னவன்
படத்தினில் சக்கரம் பதித்திருக்கும்

40

36 - 40
செவ்வே பார்த்தாடி - நேராகப் பார்த்தாடும்
கண்ணாலே ... செட்டிப்பாம்பு - வணிகப் பாம்பு தன் கண்களை
தெற்கும் வடக்கும் நோக்கியபடி ஆடும்
வெள்ளாளன் - சூத்திரன்; சங்கு - சங்கு போன்ற குறி


காப்பான வில்லு வணிகன் படத்தினில்
காரளன் படத்திற்புள்ளடி யிருக்கும்
*(பூசுரன் ரெத்த நிறமாம் புரவலன்
பொன்னிறம் செட்டி மதியின் நிறமாம்
மாசில்லாச் சூத்திரநிறந் தீட்டிய
மைநிற மாமிது மெய்யாகுமே)
அந்தணன் நாவிமணம் யிறையவர்க்கு
ஆகில் மலர்தாழை மணமாகும்
வந்திடும் வைசியன் மணம் பாதிரி பூமணம்
சூத்திரன் மனமிலுப்பையின்பூச்

45

41 - 45
வில்லு - வில் போன்ற குறி; காராளன் - வேளாளர்
புள்ளடி - பறவையின் அடிபோன்ற குறி
*இவை பாண்டிச்சேரி ஏட்டுப் பிரதியில் கண்டவை
பூசுரன் - அந்தணன்; ரெத்த - இரத்தத்தின் சிகப்பு நிறம்
புரவலன் - அரசன்; செட்டி - வணிகன்
மைநிறம் - கருப்பு நிறம்; நாவி - புனுகு மணம்
வைசிகன் - வணிகன்


முட்டையிட்டுப் பொரித்திடல்

சாதியிந்த வகைநாலும் ஆணும் பெண்ணும்
தழுவிப் பிணைந்து கர்ப்பம் தரித்தபின்பு
நீதியாய் முட்டையிட்டுப் பொரித்திடும்
நெறியையும் சொல்லுகிறேன் அறியவுமே
காற்றுறு ஆடிமாதம் ஆணும் பெண்ணும்
கலந்து புணர்ந்துடலில் கர்ப்பமுற்று
தோற்றிய கார்த்திகையினில் கருமுற்றிச்
சூல்உளைந்து ஈனுமன்று தொட்டேளுநாள்
இருநூற்று நாற்பத் தெட்டுமுட்டை யிட்டும்
இருநூற்றிருபத்தெட்டு மேழு நாளில்

50

46 - 50
பிணைந்து - கூடி; காற்றுறும் - காற்று மிகுந்த
கார்த்திகை - கார்த்திகை மாதம்; உளைந்து - வருந்தி
தொட்டேளு நாள் - தொட்டு ஏழு நாள்


பருகிடும் நாலுமுட்டை சாமுட்டை
பதினாறு முட்டை நல்ல பக்குவத்திலே
ஒருமித்திருபத் தேழாம் நாளில்
உச்சிதமாகப் பொரிந்தூர்ந்து திரியும்

விஷமேறும் குறி

நாலாறு காலும் உண்டாய்த் தோன்றிய
நாளேழு நாளினில் நஞ்சு வேண்டி
மேலேறு மாதித்தனைப் பார்த்தாடும்
விளங்கு மேல்வாயின் பல்லு நான்கிலும்
கொடுவிடம் வந்துதிக்கும் பால் சுரக்கும்
கூறுபோல் ஊறுமென்று மாறாமலே

55

51 - 55
சாமுட்டை - கெட்டுபோன முட்டை
உச்சிதமாய் - தகுதியாய்; ஆதித்தன் - சூரியன்
பால்சுரக்கும் கூறு - பால்சுரக்கும் மடிபோல்


கடுவிடம் நாலெயிற்றுக்கும் பேர் காளி
காளாத்திரியி யமனி மதூதன்
மேல்வாய் அலகு தன்னில் அரவுக்கு
விளக்கமாய் நாலுபல்லு முளைத்திருக்கும்
நாலுபல்லுக்குந் துளையிருக்கும் கடியுறில்
நச்சுப்பல் துளைவழியே நஞ்சுகழன்றுவந்து
கடிவாயினிறங்கித் தொண்ணூற் றெட்டு
மாத்திரை நின்றுடலின் மண்டியேறும்
அந்தமுள்ள படத்துரகம் தோன்றினால்
அறுபதில் தோலுரிக்கு மாறாமதியில்

60

56 - 60
காளி,காளத்திரி, யமன், யமன்தூதன் - பற்களின் பெயர்கள்
வாயலகு - மேல்வாய்
தொண்ணூற்றெட்டு மாத்திரை - 98 நொடி
படத்துரகம் - பாம்புப் படம்


குதித்திடும் விடமெயிற்றி லிதுரெண்டும்
கொண்டவா ளரவுக்குக் கண்டமென்பரால்

கடிவாயின் குறி

குதித்திடு மெயிற்றரவம் பல்லுத் தைக்கும்
கடிவாயின் குறியினைக் கழறுகின்றேன்
காளியென்னும் பல்லுத் தைத்தால் புள்ளடிபோல்
கடிவாயின் குறியினில் பனீர்போல் வடிவாகும்
மீளாத காளாத்ரி தைத்த வாயில்
விளங்கு முக்கோண மஞ்சள்நீர் பொசியும்
கோதாய் நமன்தோட்டிப் பல்லுத் தைத்தால்
கூர்முனையிற் செந்நீர் பாயும்

65

61 - 65
வடிவாகும் - வடியும்; பொசியும் - வடியும்
தோட்டிப்பல் - கோடரி போன்ற பல்


தூதனென்ற பல்லுத் தைத்தால் வில்போன்ற
சுவடில்கழு நீர்வந் துவட்டெடுக்கும்
பசியினில் பயத்தில் நொந்தால் கோபத்தால்
பல்லில் விடமிகுத்தால் மெல்ல மிதித்தால்
இசையுறு தேவர் முனிவர் காலனிவர்
ஏவலினால் வினைத் தாவலினால்
செய்தநன்றி குன்றின பேரைப் பூருவ
சென்மப் பகையினவரை வன்மமுள்ளோரைப்
பையரவம் வந்து கடிக்கும் இதிலொரு
பல்பட்டால் விஷம்தோலைப் பற்றியேறும்

70

66 - 70
வட்டெடுக்கும் - வடியும்; நொந்தால் - பாம்பு வருந்தினால்
மெல்ல மிதித்தால் - மனிதர் மிதித்தால்
வினை தாவலினால் - வினை வயத்தால்
பூர்வசென்மம் - முற்பிறப்பு; வன்மம் - வைராக்கியம்
பையரவம் - நச்சுப்பையினை உடைய பாம்பு


பல்லுரெண்டும் பட்டால் விசமாங் கிசத்தை
பற்றியேறும் மூன்றுபல் பட்டால் விஷம்
வல்யெலும்பைப் பற்றியேறும் நாலு பல்லால்
வகிர்ந்தால் மூளை புகுந்தேறும்
கால்கடி யொருபல்பட்டால் இரண்டு பல்லாய்க்
கடித்தால் கடியரைக் கடியாமே
மேல்பல்லு மூன்றும் பட்டால் கடிபட்ட
விடமுக்கால் கடியென்றிட லாமே
முளைத்தபல் நாலும்பட்டால் அந்தக்கடி
முழுக்கடியா மென்று வழுத்துவரே

75

71 - 75
மாங்கிசம் - மாமிசம், சதை; வகிர்ந்தால் - பல்லால் கீறினால்


துளைப்பல்லில் ஒருபல் பட்டால் அந்தக்கடி
துசங்கட்டி தியானிக்க விடந்தீரும்
இரண்டுபல்பட் டவிடத்தை மணிபதித் தேற்கு
மந்திரத்தாலும் தீர்க்க லாமே
முரண்டுமூன்று பல்பட்டால் அந்தக் கடிகை
மூலிகை கலிக்கம் நசியத்தால் தீரும்
அரவின்பல்நாலும் பட்டால் மணிமந்திர
அவுஷதம் தெய்வச் செயலால் தீர்க்கவேணும்
இரவினில் பாம்பு கடித்தால் அந்தக்கடி
மீளாத குறியிடம் விளம்புகிறேன்

80

76 - 80
துசங்கட்டி - துவசங்கட்டி, கொடிகட்டி
(உறுதியாக நின்று என்பதும் பொருள்)
கைமூலிகை - மூலிகை மருந்து
கலிக்கம் - கண்ணுக்கிடு மருந்து
நசியம் - மூக்கில் இடும் மருந்து
அவுஷதம் - அவுடதம், மருந்து வகை


உள்ளங்கால் உள்ளங்கை நெற்றி மார்பு
கழுத்து உதடுமுலை மூக்குபுருவம் கொப்புள்
தெள்ளுநாசிச் சந்தும் குதிக்கால் செவிபுறத்
தோடி ஆலமரத் தூரடியில்
புன்னைபுளி மூங்கிலரசில் நாணலில்
புற்றுக் கிணற்றில் புறமடையில்
பின்னமுள்ள பரன்கோவில் பாழ்
வீட்டில் பிணமிடு நிலத்தில்
நந்தவனம் புத்துமடத்தில் ஏரிக்கரை
நதிக்கரை சுனைக்கரை யாக சாலையில்

85

81 - 85
நாசிச் சந்து - மூக்குத்துவாரம்
புன்னை, புளி, மூங்கில், அரசு - மரவகைகள்
பிணமிடு நிலம் - சுடுகாடு; புத்துமடம் - புற்றுள்ள இடம்


அந்திசந்தி முச்சந்தியில் உறக்கத்தில்
ஐயன் பிடாரி துர்க்கை ஆலயத்தில்
மாயவரில் பாம்பு கடித்தால் தீராத
மரணநாள் சொல்லுகிறேன் பரணிமகம்
ஆயிலியம் திருவோணம் மூலம் கார்த்திகை
ஆதிரை சுளகு சித்திரை சோதி
சென்ம நாள்அனு சென்மநாள் திரிசென்ம
சேர்ந்திடுநாள் வதமவை நாசியங்
கன்மமும் நவமி சஷ்டி குளிகனில்
கடித்திடில் அந்தக் கடிநொடிக்குள் கொல்லும்

90

86 - 90
மாயவரில் - திருமால் கோட்டம்
பரணி, மகம், ஆயில்யம், திருவோணம், மூலம், கார்த்திகை,
ஆதிரை, சுளகு, சித்திரை - நட்சத்திரங்கள
சுளகு - விசாகநட்சத்திரம்; சோதி - நட்சத்திரம்
குளிகன் - குளிகை நேரம்


தானோடிக் கிடந்திடனும் அந்தக் கடி
தப்பாமல் கொல்லுமென்று செப்பலாமே
கடித்தவாய் தடிக்கில் கொல்லும்-வீங்கியே
கடுத்தெரிகினும் கொல்லும் கண்டம் சொரித்தும்
குடித்த மருந்தெடுக்கில் கொல்லும்-கடித்தவாய்
குமுறினும் செங்குருதி பாயினும் கொல்லும்
விடங்குதித் தொழுகில் கொல்லும்-நாவரண்டு
விழிசிவக்கினும் கொல்லும் மெய் நடிக்கினும்
படம்கொண்ட பொறியரவம் நாவெயிறும்
பதியப்படினும் கொல்லும் பல்லும் உகிரும்

95

91- 95
தடிக்கில் - வீங்கினால்; கண்டம் - கழுத்து
குடித்த மருந்தெடுத்தல் - வாந்தி எடுத்தல்
குமுறினும் - வெந்தால்; மெய்நடிக்கினும் - மெய் நடுங்குதல்
எயிறு - பல்; உகிர் - நகம்


கறுத்திடில் கொல்லும் உரகம் சீறியே
கடித்தவுடன் மலநீர் விடுக்கிற் கொல்லும்
விறைத்திடில் கைகால்விரல் நிமர்ந்திரு
விழி சொருகினும் கொல்லுமென்னலாமே

விஷத்தின் குணம்

நச்சரவில் ஆண் கடித்தால் மேல்நோக்கும்
நயனம்பெண் பாம்பெனில் கீழ்நோக்குமே
அச்சமில்லாமல் அடக்கில் வேர்வை மிகும்
அலிப்பாம்பெனில் விடம்கலிப் பாகும்
சூலாகி வயிறுளையும் முட்டையிட்ட
துட்டனெனில் நெட்டைவிழி முட்டை சிவக்கும்

100

96 - 100
நயனம் - கண்
அலிப்பாம்பு - ஆண், பெண் இரண்டுமல்லாத பாம்பு
கலித்தல் - மிகுதல்


மேலெயிற்றுக் காளி கடித்தால் வலதுகண்
வேதனை செய்யுமகில் பாம்புகடித்தால்
கடித்தவாய் வீக்கம் காணும் வேகமாயிளங்
கன்னிக் கிடதுகண் வேதனை காணும்
துடித்திடும் குட்டிப் பாம்பு கடித்திடில்
சோர்வு மயக்கமுடன் பாரில்வீழ்த்தும்
கருநாகம் கடித்ததென்றால் உடனிரு
காதும் செவிடாமென் றோதினாரே
ஒருநாகத் தடைவிதுவே பலவிடத்து
உரகங்கள் சரித்திர முரை செய்கிறேன்

105

101 - 105
காளி - பல்லின் பெயர்


முரட்டுப் பல்பொறி விரியன் சூல் கொண்டு
முதுகுதனில் வெடித்துக் குஞ்சு பொரித்தால்
கரட்டோணான் தேள்பூரம் நட்டுவாக்
காலிசிலந்தி புலிமுகப் பூச்சி
செய்யானுடன் பொறிவண்டு முதற்பல
சீவசந்துகள் அதிலே பிறக்கும்
மெய்யான பெருவிரியன் கடித்திடில்
வீங்கிக் கடுத்தெரிவு மீறிக்குருதி
வடிந்திடும் கடிவாயில் கண்ணுறங்கும்
மயங்கி உடல்வெதும்பித் தியக்கிடுமே

110

106 - 110
பொறிவண்டு - புள்ளியுடைய வண்டு
கடுத்தெரிவு - கடுத்தலும், எரிச்சலும்
இயக்கிடும் - இயங்குதல்


கடித்திடுமே ரத்தவெறியன் பல்லுபடக்
கடித்திடில் வாயிடம் காணும்குருதி
கற்றளி விரியன் கடித்திடில் வயிற்றினில்
காய்ந்தும் வயிற்றை வலித்திருந்து கொல்லும்
மற்றுமுள்ள மூவிரியனும் கடித்திடில்
வலித்துக் கடுத்தெரிந்து வீங்கும் கடிவாய்
வழலைக்கு வாய் வெளுத்தும் - கடிவாயில்
வடியும் ரத்தம்; கரு வழலைக் கெனில்
அழலென மேனிவெதும்பி வேர்வை மிகுந்து
அகங்கையும் காலும் சிவந்தைந் திரண்டும்

115

111 - 115
காய்ந்தும் - வெந்தும்
வழலை - பாம்பு
அழலென - தீயென
ஐந்திரண்டும் - பத்து விரல்களும்


மார்பினை அடைத்துக் கொல்லும் செவ்விரத்த
மண்டலிக் கெனில்மயிர்க் கால் வழியே
தாரைவிட் டோடும் குருதி சீதளம்
தானா மண்டலிக் குடல்குளிர்ந் தாட்டி
ஒழுகிடும் வேர்வைநீர் மூர்க்கனுக்குத் தான்
முதுகுகடி தடமும் நொந்து
பழகிய வாயும் கழுத்தும் திருகியே
பகரும் குரலும் நலிந்துடல் உதறும்
சுற்றுமயக் காராகில் இரு கண்ணும்
சுழன்றடிக் கடிமதி மயக்கிடுமே

120

116 - 120
இரத்தமண்டலி - பாம்பு
சீதளம் - குளிர்ச்சி
கடிதடம் - மறைவிடம்
மதி மயக்கிடும் - அறிவு மயங்கிடும் 5


பற்றுமுறுக் காராகில் உடல் முற்றும்
பதறிமுறுகித் திருகிடும் பூரம்
நின்றூதும் உகிர் கருக்கும் தேளுக்கு
நெறிகட்டிக் கடுத்தெரிக்கும் வேர்க்கும்
என்றார் நட்டுவாக் காலி கடிக்கில்
எரித்துக் கடுத்துக் குமுறிடும் வீங்கும்
செய்யானேல் பற்பட்ட கடிவாய் வீங்கியே
தேளின் சதமடங்கோர் நாளும் கடுக்கும்
பொய்யாஞ் சோர்அரவுக்குக் காயத்தில்
புள்ளிபோல் எங்கும் தடித்திடும் சிவப்பாய்

125

121 - 125
பூரம் - பூரான்; உகிர் - நகம்
கடுத்தெரிக்கும் - கடுத்து எரியும்
குமுறிடும் - வெந்திடும்; சதம் - நூறு
பொய்யாஞ் சோர்அரவு - பொய்யான் என்னும் விஷப்பாம்பு


கறுத்திடும் சோர்வுக்குத் தேக முற்றும்
கறுத்துத் தடித்துப் படர்ந்திடு மதர்க்கும்
ஒறுத்திடும் சிலந்தியெனில் கடிவாயில்
ஒருபொழு திருபொழு தெரித்த ழற்றும்
வண்டுகடிக்(கு) உடல்முழுதும் சில நாளில்
வட்டமிட்டுத் தடித்திட்டுப் படர்ந்தரிக்கும்
தண்டிய செவ் வட்டைகடித்தால் கடித்தவாய்
தடித்துச் சிவப்பேறி மதர்த் திருக்கும்
இன்னமொரு கோடியுண்டாம் அவையெல்லாம்
எடுத்துரைத் தோதுவதெவரால் முடியும்

130

126 - 130
ஒறுத்திடும் - வதைக்கும்; மதர்த்திருக்கும் - உணர்வற்றிருக்கும்


பாம்பின் வயது

பன்னகங்கள் வயதினையும் செயித்திடும்
பகையும் பிரிவினையும் பகருகிறேன்
பாப்பானுக் காயிரத்தெட்டுப் பாராளும்
பார்த்திபர்க்கு எண்ணூறு மாதம் வயது
வாய்ப்பான பதியார்க் கைந்நூறாம் என்று
வகுத்தனர் சூத்திரர்க்கு முன்னூறாம் என்றார்
இருதலை மயிணன் செந்நாய் மயக்கோடி
எருத்தின் குளம்பு மின்னலடி கீரி
கருமயில் கரடிபன்றி செம்போத்துக்
கெருடன் முதலையன லாந்தை, கூகை

135

131 - 135
பன்னகம் - பாம்பு; பகருகிறேன் - கூறுகிறேன்
பதியார் - வணிகர்
இருதலை மணியன் - மணி பொருந்திய இரண்டு தலைகளை
உடையதென்று சொல்லப்பெறும் பாம்பு
செம்பொத்து - ஒரு வகைப் பறவை; கூகை - கோட்டான்


செயலுள்ள மான்குளம்பு வேழ முதல்
செப்பியசத் துருவுக்குத் தப்பிப் பிழைத்தால்
வயதுநூற் றிருபத்துக்கும் சாகாமல்
மண்மிசை வாழ்ந்திருக்கும் உண்மை இதுவே
மண்மீது நூற்றிருபது பருவம் வாழ்ந்து
பிற(கு) உடல் தேய்ந்து குறுகி
ஒன்றான படம் சிறியதாய்ப் பறக்கும்போ
தந்தச் சிகையில் மணியொன்று தோற்றும்
தோற்றிய நாகமெட்டும் புவி விட்டுத்
தொடரும் வனத்தினும் விண்ணாடர் வெற்பினும்

140

136 - 140
வேழம் - யானை; சத்துரு - பகை உயிர்கள்
நூற்றிருபது பருவம் - நூற்றிருபது ஆண்டு
சிகை - தலை உச்சி; மணி - நாகரெத்தினம்
விண்ணாடர் வெற்பு - தேவருலகம்


போற்றிய பனிகோடிக் காவினுள்
புரவலர் போலிருந்தரசு செய்யும்
மானாகமென்னும் பேரரவங் கெருடற்கு
மாத்திரம் பயப்படும் நேத்திரமாக
தானாலு பல்லில் விடமும் இருகண்ணில்
கரித்திடும் பார்த்தவுடனெ ரித்திடுமே
பாம்பின் ராசாளி என்றும் புகலுவர்
பருவநூற் றிருபது சென்றதுபோக
தான்பெற்ற வயது குறையும் இருந்து பின்
சாலோக பதத்து மேலாகுமே

145

141 - 145
பனிகோடிக்கா - பாம்பு வாழும் காடு;
கெருடற்கு - கருடனுக்கு
சாலோகபதம் - இறைவன் உலகில் வாழும் பேறு


தூதன் வரும் குறிப்பு

தூதன் வந்துநிற்கும் வடிவும் ஆருடம்
சொல்லும்குறி தொடுகுறி பல்லின் குறியும்
நீதியுடன் சொல்லுகிறேன் ராகுவின்
நிலையில் பதறிவந்து நின்று சொல்லினும்
செய்யபூச் சூடிவரினும் கருந்துகில்
செய்யதுகில் புனைந்து பையவரினும்
கையில்தடி யூன்றிவரினும் கெடையா
கத்திகயிறு பிடித்துச் சுத்தி வரினும்
கண்ணில் நீர்வார்ந்து நிற்கினும் வாய்குழறி
கையை விரித்து நின்று மெய்பதறி

150

146 - 150
தூதன் - செய்தி கொணர்பவன்; ராகு - பாம்பு
செய்ய - செம்மை; கயிறு - பாசக்கயிறு


விண்ணோக்கிப் பார்த்து நிற்கினும்-தூணினும்
விறகினும் சாய்ந்துநின்று மெய்புகலினும்
மண்ணினைக் கால்கொண்டு கீறினும் தரையில்கை
வைத்துவரினும் உடைசுத்தி வரினும்
எண்ணெய் இட்டுவரினும் பாரில் விழுந்து
எழுந்து புலம்பித் தொழுதேங்கி வரினும்
பாம்பின்பேர் முன்பு சொல்லினும் பாம்பின்பல்
பட்டவன்பேர் பின்பு கண்டு நெட்டுயிர்ப்பினும்
சோம்புடன் கொட்டாவி விடினும் மார்புசந்தில்
சொறியினும் தன்மயிரைத் தூற்றிநிற்கினும்

155

151-155
விறகு-மரம்; எண்ணெய் இட்டு-எண்ணெய் தேய்த்து
தூற்றி-உதறி


வந்தவன் உயர்ந்து நிற்கினும் நோயாளன்
வரினும் மயிர்களைந்தோன் வந்து நிற்கினும்
அந்தகன் கைகால் தரிபட்டோன் மூக்குக்
காதறுபட்டோன் ஒற்றை விழிமறைபட்டோன்
இங்கிவர்கள் வந்து சொல்லினும் பூனைக்கண்
இயம்பினும் கால்கடி யென்று சொல்லலாமே
பாங்குடன் முன்வந்த தூதன் ஆருடம்
பதினாறு திசைக்கும் யான் பகருகின்றேன்
அருக்கினில் நல்லபாம்பு தேள்வழலை
ஆலைநீர்ப் பாம்புரக மெலிமண்டலி

160

156 - 160
மயிர்களைந்தோன் - நாவிதன்; அந்தகன் - குருடன்
தறிபட்டோன் - வெட்டுப்பட்டோன்; அருக்கு - அருகம்புல்


இருக்குநற் சாரைப்பாம்பு மாநாகம்
எறும்பு மயக்கார் வண்டரவமுடன்
பூரம்விரியன் சிலந்தி யிந்தப்படி
பூர்வமுதல் ஈசன் பரிந்துரைக்கும்
ஆருடமிதுவாகும் தூதன் நிலை
அறிந்தின்ன செந்துவென்று தெரிந்து கொள்ளே
முன்னே வந்துநின்ற தூதன் மூக்கையும்
முகத்தையும் தொடில்நல்ல பாம்பென்னலாம்
பண்ணும் களம்தனைத் தொட்டிடில் வழலையாம்
பருத்தவிரியன் கரத்துரத்தைத் தொட்டால்

165

161 - 165
மாநாகம் - தலைநாகம்; செந்து - ஜெந்து, விஷ உயிர்
களம் - கழுத்து; உரத்தை - மார்பை


சந்தாகில் மண்டலியாம் இரண்டுமுழந் தாளில்
தொடில்புடையன் கீழில் சிலந்தி
வந்தோன் இந்திரன் முதலாய் நாலுதிக்கும்
வரிகினும் அரணை என்று நிகழ்த்தினரே
ஈசன்அங்கு நிருதி திசைதனில் சொல்லில்
ஏந்திழையர் என்று தேர்ந்துரைத்தார்
வாசியுள்ள காற்றுத் திசையியம் பிடில்
வனத்து மிருகங்கள் தன்னினத்தில் என்றார்
கீழ்த்திசை வரும் தூதன் அகரமுன்
கிளத்திலொரு பல்யமன்றிசைக்கு ரெண்டாம்

170

166 - 170
சந்து - மார்புப் பகுதி; அரணை - பாம்பரணை
நிருதி - தென்மேற்குத் திசை; ஏந்திழையர் - பெண்கள்
காற்றுத்திசை - வடமேல் திசை; யமன்திசை - தெற்கு


வாட்டமிலா மேற்றிசையில் மூன்றுபல்
வடதிசைநாற் பல்லென்றிட லாமே
தென்திசை வரும் தூதன் இகரமுன்
செய்யில்ஒரு பல்மேற்கு ரெண்டுபல்லாம்
குன்றான வடதிசையில் மூன்றுபல்
குணதிசை நாலுபல்லும் பணிப்பலென்பாம்
மேற்றிசை வரும்தூதன் உகரமுன்
விளம்பிலொருபல் வடதிசைக்கு ரெண்டாம்
தோற்றுமிந்திரன் மூன்று தென்திசையில்
சொல்லிற்பல் நாலென்று சொல்லலாமே

175

171-175
குணதிசை-கிழக்கு


சோமனிலே வருதூதன் எகரமுன்
சொல்லிலொரு பல்கிழக்கு ரெண்டுபல்லாம்
பூமியிலிய மன்றிசையில் மூன்றுபல்
போலும் வருணனுக்கு நாலுபல்லாம்
எண்டிசை வருதூதன் ஒகரமுன்
இயம்பிடில் ஒருபல்லும் இல்லை எனலாம்
பண்டை வெள்ளை யாடைபுனைந்து வந்தொருவன்
பதறாமல் நிற்கில்விடம் சிறிதென்னலாம்
தூதன்சொன்ன சொல்லதனை யெழுத் தெண்ணித்
துணிந்தொரு மூன்றினில் ஈந்தசேடம்

180

176 - 180
சோமன் - சந்திரன்


ஓதுமொன்று சாவுதிண்ணம் ரெண்டினுக்
குயர்ந்துவிடம் தலைக்கொண்டே மீளும்
சரிவாய் யீய்ந்ததென்றால் விஷமில்லை
சாவு லெட்சணத்தையும் உரை செய்கிறேன்
சொரிஒரு பூரணத்தில் வந்தொருவன்
சூனிய திசையினில் போனானென்றால்
பல்பட்டான் பட்டானென்பாம் சூனியத்தில்
பதறாமல் வந்துநின்ற பூரணத்தில்
முற்பட்டான் எனில்விடத்தில் மெய்மயங்கி
மூர்ச்சித்துக் கிடந்தாலும் தீர்க்காயுளாம்

185

181 - 185
திண்ணம் - உறுதி; சொரி - சுழல்தல்
பூரணம் - முழுநிலவு; சூனியம் - ஆகாயம்


இடக்காந்தும் காரத்தைக் கண்ணினால் எழுதிப்
பார்த்திடில் தந்தம் வெளுக்கில் ஒன்று
வடிபொன்னிற மாகில் ரெண்டுபல்
வண்ணம் சிவக்கில் மூன்றுபல் எனலாம்
கறுத்திடில் நாலுபல்லாம் முகர்ந்திடில்
கடிமலர்த் தாழை வாசனை காணின்
மதித்தது நல்ல பாம்பு பாதிரிப்பூ
மணக்கில் வழலை புளி மணம் விரியன்
மல்லிகைப்பூ மண்டலியர் மிளகு சுக்கு
மணக்கின் சிறுபாம்பின் குணமாம்

190

186 - 190
தந்தம் - பல்


சொல்லிய முற்பழைய கையை அரவொன்றும்
தொடவில்லை என்று சொல்லும் திடமாம்
முற்பக்கத் திருளாகில் ஆணினைச் சர்ப்பம்
தொடர்ந்து வலக்காலில் கடிக்கும்
பொற்புறு மடவியரை யரவிடப்
புறந்தாள் தனில் கடித்தூர்ந்திடுமே
நற்பகலில் ஆணையிடத்தில் கடித்திடும்
நாரியரை வலத்தில் நாடிக் கடிக்கும்
விற்பகத் திருளாணை இடத்தினில் பெண்ணினை
வலப்புறம் நண்ணு பகலில்

195

191 - 195
மடவியர் - பெண்கள்; நாரியர் - பெண்கள்
விற்பக்கம் - ஒளிப்பக்கம்; நண்ணுதல் - பொருந்துதல்


கடித்திடும் ஆணை வலத்தில் பெண்ணினைக்
கடிக்கும் இடப்புறத்தில் மடிப்பாகப்
பிடித்திடும் வேகக் குறிதனைச் சொல்வேன்
பிணித்தேறு வேகம் மூவகையாகும்
வாயுவின் வேகமெட்டுக் குளிர் தரும்
வருணன் தனக்குமூ வேகம் என்பார்
தேயுவின் வேகம் பத்து மாத்திரை தரும்
வருணனுக்கு மூவொன்பதாகும் சரசம்
காற்றினுக் கைம்பதாகும் தேயுவுக்குக்
கணித்திடு மாத்திரை நூற்றைம்பதாம்

200

196 - 200
மடிப்பாக - வேகமாக
வேகம் மூன்று - வாயு,தேயு,வருணன்
கணித்திடும் - கணக்கிடும்


சாற்றிய வாயு வேக முதல் வேகம்
தானவரில் மூர்ச்சித்து வேர்வை வரும்பின்
இரண்டுக்கு வெதுப்ப முண்டாம் மூன்றில்
கண்ணேறச் சொருகும் நாலில் சோத்தியம் செய்யும்
திரண்டஞ்சிலக் கோழை யடைக்கும் ஆறுக்குச்
சிந்தை அறவழிக்கு மேழில் விறைக்கும்
எட்டாகில் உயிர் போக்கும் வருணனில்
எழுந்தமுதல் வேகமயிர்க் கூச்சாய்
நெட்டுடல் முட்டச் சிவப்பாம் இரண்டு
மட்டுமுடல் கரிந்துபாயும் உலர்ந்து

205

201 - 205
தானவரில் - தான் + அவரில்; வெதுப்பம் - வெப்பம்
சோத்தியம் - புலன்கள் செயலற்ற நிலை
கோழை - சளி; நெட்டுடல் - நெடிய உடல்


வெதும்பிடு மூணுவேக முன் விளைக்கும்
விளங்க நல்வேக மெனல் உளங்கலங்கித்
ததும்பிடும் கபம் கக்கும் அஞ்சினில்
தலையை நடுக்கும் நெஞ்சில் அறிவழிக்கும்
ஆறாகில் கண்ணை விழித்து மேல் பார்க்கும்
மீறுமோரேழ் வேகமெய் விறைக்கும்
கூறான இருநான்கில் அடக்கமாய்க்
குறித்திடு சுக்கிலம் ஒன்பதில் என்பரால்
பத்தாகில் மரணமென்பாம் அழல் வேகம்
பகருமுதல் வேகம் கண்கள் சிவந்து

210

206 - 210
கபம் - சளி; விறைக்கும் - மரத்து விடும்
சுக்கிலம் - இந்திரியம்; அழல் வேகம் - தேயுவேகம்


சத்தான முகம் கருகி ரெண்டினில்
கறுத்துச் சிறுநீரும் கடுத்திறங்கி
முகம்வேர்த்து உடல் முழுதும் ரோமங்கள்
முளைத்துக் கிளைத்ததெனத் திளைத்து நிற்கும்
செகமதில் மூவேகம் வாய் குளறிச்
சிந்தை கலங்கியுடல் நொந்து வீழ்த்தும்
நாலினில் குடலிறைந்து சோரஞ் செய்து
நாசியில் நீர்வடிந்து தேசுமாறும்
மேலெழும் ஐந்தனுக்கும் உடல் முற்றும்
வெடுவெடுத் தாட்டிக் கொள்ளுமாறாகில்

215

211 - 215
ஜெகம் - உலகம்; குடலிறைந்து - குடல் கெட்டு
சோரம் - வஞ்சனை; நாசி - மூக்கு


பல்லொடுபல் கடிக்கும் விறைத்துடல்
பதைக்கும் இருமூக்கில் நீர்பாயும்
சொல்லுரை கெடுமேழில் எட்டில்
சுவாசம்மேல் ஏறாமல் விழிமேல் நோக்கும்
ஓன்பதில் ஒடுங்குமுயிர் பத்தினில்
உடல்விட்டுப் பறந்திடும் உயிர்வானில்

அடக்ககுறி

என்புள்ள தாபரத்தில் அடக்கமாய்
இருக்குமுயிர்க் கலையை இயம்புகின்றேன்
அடக்க முற்றிடும் பொழுதில் இருவிழி
அதுமேல் நோக்கில் உயிரதுமேலாம்

220

216 - 220
பல்லொடுபல் கடிக்கும் - பல் கிட்டித்தல்
அடக்ககுறி - உயிர் அடங்கியிருக்கும் நிலை
என்பு - எலும்பு; தாபரம் - தாவரம், உடம்பு


மடக்கியவிழி கீழாய் விழித்திடில்
மானமான உயிர்கீழே நிற்கும்
பக்கத்தில் விழியொதுங்கில் சீவனும்
பக்கத்தில் இருக்குமென்றார் மிக்காகவே
சத்தெதிர் விழித்திருக்கில் சீவனும்
சடத்தில் நேர்நிலையெனத் திடத்துச்சொல்லே
ஒடுங்கு முன்னே பாதத்தைப் பிரம்புகொண்டு
ஓங்கி அடிக்கிலுடல் தடித்திடினும்
சடந்தணல் என வெதும்பில் மெய்சிவக்கில்
தண்ணீரில் போட்டிடில் தாழ்ந்திடிலும்

225

221 - 225
சீவன் - உயிர்; சடம் - உயிரற்ற உடம்பு; பாதம் - கால்


குடத்துநீர் மேல்சொரியில் உடல் முற்றும்
குளிர்ந்துமயிர் கூச்செறி வளைத்திருக்கில்
பிடித்துகை விரலில் நெட்டி பறித்திடில்
பிலத்தழுத்திட மயிர் வலுத்திருக்கில்
ஊன்றிடும் குடோரியிடில் செவ்விரத்தம்
ஒழுகின் தாதுஒன்று நடக்கில்
தோன்றிடும் ஆவியுள்ளே அடக்கமாய்ச்
சூட்சமாய் இருக்குமது மாட்சியறியே

229

விருத்தம்

(அடக்கம் எழுப்பவகை)

அடக்கமென் றறிந்த போதே அவர்தலை உச்சி கீறிக்
குடத்துவா யோட ழுத்திக் கொடும்புரை யடைத்துப் பின்னர்
விடுத்திடும் வேளைச் சாத்தை விட்டுமேல் ஒட்டை வைத்துக்
கடுக்கினில் எரிக்க மீண்டு கடிவிஷம் கடிவாய் காணும்

சிந்து

சிரசில் குடோரியிட்டுப் - பள்ளுஞ்
சேந்ததில் சூதம் களஞ்சியிட்டு

230

226 - 230
பிலத்தழுத்திட - பாதாளத்தில் அழுத்துவது போல் அழுத்திட
குடோரி - கீறி மருந்திடும் முறை; குடத்துவாய் - தலையின் ஓடு
வேளை - மருந்துச் செடி; கடுக்கினில் - விரைவில்


விரிவாயோர் ஓட்டை வைத்து ஓட்டு
மேல் கொடுந்தணல் தானெரிக்கில்
அடங்கிக் கிடந்த உயிர் காய்த்த
போல்வரும் சபை மெய்ப்புவரும்
காலன்தனை எழுப்பத் தந்திரம்
கற்றுணர்ந்தோர் சொன்ன வேத்தியத்தை
மேலான தந்திரத்தை யானும்
விஸ்தார மாய்ச்சொல்லத் தத்தையரே
கேளாய்நீ ஆடவர்க்கு ஞாளம்
கேள்படி ஆறுவிரல் நீளம்

235

231 - 235
சூதம் - ரசம்; களஞ்சி - சூதபாடானாம்
வேத்தியம் - முறை; தத்தையர் - கிளியனையர்
ஞாளம் - தண்டு


தாளாத மங்கையர்க்கு ஞாளம்
தானெட்டுக் கைவிரல் நீளமுமாய்
செம்பில் தகட்டி லடித்துவளர்
சென்னெலின் தாளின் பருவமொன்றும்
நம்பும் சிறுவிரல்போல் ஒன்று
ஞாள மிரண்டும் திரட்டியதை
ஊமத்தம் பூப்போல மேலாய்
ஒருபுறமும் விரிவாய் இருக்கும்(படி)
நேமித்துத் தண்டினிலே செல்ல
நீளம் அறுவிரல் ஞாளமதைச்

240

236 - 240
சென்னெல் - செந்நெல்; நேமித்து - வட்டமாக


செலுத்திக் குளத்தலையில் ஒரு
தீபத்தணல்வைத் ததின்மேல் சூதம்
நிலத்தில் அரைக் கழஞ்சி விட்டு
ஞாள வழிசென்று கீழிறங்கி
கால்கடி கடித்தே யுயிர்க்கை
கடந்தே உள்மெய் அடங்கி
மாலாய்க் கிடந்திடினும் சீவன்
வந்து புகுந்து கலந்திடுமே
பெண்ணாட்கும் இப்படியே செய்யப்
பிழைப்பள் உனக்கும் அளப்பிதுவே

245

241 - 245
கழஞ்சு - பன்னிரண்டு பண எடை
மாலாய் - மயக்கமாய்
சீவன் - உயிர்
அளப்பிதுவே - கூறமுடியாது 0


பண்ணும் தைலமொன்று செய்து
பட்ட பிணத்தையும் தொட்டெழுப்பிச்
செய்யும் வகைகேளாய் வளர்
செங்குன்றித் தோடுமியும் கருதி
துய்ய பருப்பெடுத்துக் கொண்டு
சோதித் தொருபிடி யோரதிலே
எருக்கன் இலைச்சாறும் வீழி
இலைச்சாறும் இரண்டும் ஒன்றாக விட்டுப்
பருப்பை அதில்போட்டு வைத்துப்
பத்துநாள் ஊறியெடுத் தரைத்து

250

246 - 250
செங்குன்றி - குண்டுமணி; வீழி - ஒரு வகை மருந்துச்செடி


கடிதாய் இரண்டும்ஒன்றாய்க் கட்டிக்
கஞ்ச கலத்தினில் அப்பிவைத்து
வெயில்முகத் திருக்க வைத்து
வீழும் தைலத்தைத் தானெடுத்துப்
பைய நிறுத்திக்கொண்டே அதில்
பாதிதான் வால்உளு வைஅரிசி
பொடித்தே உடன்சேர்த்து சேர்த்த
போதில் தைலத்தில் நாற்கழஞ்சும்
துடித்தாடும் சூதமொன்று நாற்றம்
தோன்றிய கெந்திவிருகன் ஒன்றும்

255

251 - 255
கடிதாய் - வேகமாய்; கஞ்சக்கலம் - வெண்கலம்
வால் உளுவை - ஒரு மருந்து (பெருஞ்சீரகமாகவும் இருக்கலாம்)
கெந்திவிருகன் - கந்தகம்


கூட்டி உத்தாமணியின் பஞ்சில்
கொள்ளவே தோய்த்ததை மெள்ளவைத்து
நாட்டில் அடக்கமுற்ற பேர்க்கு
ஞாளத்தைத் தண்டினிலே செலுத்தி
இருப்புச் சிலாகையொன்று ஞாளம்
நின்றமட்டும் விட்டுக் கொண்டிருந்தால்
உடனே எழுந்திருந்து பேசும் உண்மை
என்றே சொன்னார் இன்னமொன்று
சுடர்நாறும் கந்தகமும் காயம்
சூதம் எருக்கம்பால் வார்த்து

260

அரைத்து வழித்தெடுத்து வெள்ளை
ஆடையில் பூசித் திரியாக்கி
திரித்தே அனல்கொளுத்தித் தண்டில்
சேர்ந்திடும் நாளம்புகவே புகைத்தால்
அடக்கம் எழுப்புமென்று சொல்லிப்
போதித்தார் ஆருடம் சோதித்தவர்

விருத்தம்

நச்சர வான தெல்லாம் நாட்டில்மா னிடரைத் தீண்டிக்
குச்சித விடங்கள் மிஞ்சிக் கொடுவிடம் தலைமேல் கொண்டால்
வெச்ச மந்திர தந்திரத்தால் மருந்தினால் தீரா விட்டால்
உச்சித மாகத் தீர்க்கும் கெருடனை உரைக்கல் உற்றேன்

சிந்து

வேதியர் குலத்தின்கண் காசிபர்க்கு
வினதை பயந்தெடுத்த கனயோகன்
சாதியில் பட்சிராசன் அருணனுக்குத்
தம்பியென உதித்த கம்பீரன்

265

261 - 265
ஆருடன் சோதித்தவர் - முதல் நூல் ஆசிரியர்
நச்சரவு - நஞ்சினையுடைய பாம்பு
குச்சித - அசுத்தமான; உச்சிதம் - அருமை
வினதை - இவள் தட்சன் குமாரி; காசிபர் தேவி; கருடன், அருணன்,
சடாயு, சம்பாதி,சேநன் முதலியவர்களைப் பெற்றவள்.
கனயோகன் - கருடனின் பட்டப் பெயர்


அட்டமா நாகங்களைப் பாதாளம்
மட்டும் துரத்திவென்று வாகை புணைந்தோன்
துட்டனெனும் இந்திர ஜித்து தொட்ட நாகக்
கட்டுவிடந் தட்டுக்கெட விட்டபெரியோன்
பலத்தினில் சவுரியத்தில் ஒப்பில்லாப்
பலசாலி யானவெகு குணசாலி
குலத்தினில் பிரமகுலன் கீழ்க்கடல்
குடகடல் தென்கடல் வடகடலும்
நொடியினில் சுற்றிவருவோன் பாற்கடல்
நடுவினில் கண்வளரும் நாரணற்கு

270

266 - 270
துட்டனெனும்...பெரியோன் - இந்திரஜித்தின் நாகபாசத்தால்
கட்டுண்ட இலக்குவனைக் காப்பாற்றி நாகபாசத்தைப்
போக்கி இராமனின் அருளைப் பெற்ற கதை கூறப் பெறுகிறது.
சௌரியம் - வீரம்; நாரணர் - திருமால்


கொடிவாகன மானோன் தீவில்ஒரு
கோடிநிசா சரரைத் தேடி நுகர்ந்தோன்
கதியினில் நிலத்தின் காணும்நிலவும்
கனலியம் துதிசெய்யு மதிவேகன்
தாவில்நெடு மூக்கினாலும் சிறகாலும்
தடக்கையினாலும் இரு தாளினாலும்
மலைத்தவர் வெருண்டோட வென்றுசெய்
வாகை புனைந்து மனம் ஓகையுடன்
தலத்தினில் சிறுதாயாம் கத்துருமுன்
தங்கக் குடத்தமு தங்கே வைத்துச்

275

271 - 275
நிசாசரர் - இரவில் சஞ்சரிப்பவர்,அரக்கர் (பாம்பும் எனலாம்)
கனலி - ஞாயிறு
கருடன் தன் சிறிய தாயான கத்துரு என்பாள் முன் அமிர்தத்தைக்
கொண்டுவந்து வைத்து தன் தாயான வினதையின் இடுக்கண்
தீர்த்த வரலாறு கூறப்பெறுகிறது.
வினதையின் இடுக்கண்: இந்திரன் குதிரைவால் வெள்ளையா
யிருப்பது என்றும், அன்றாயின் நினக்கு அடிமையாவேன்
என்றும் வினதை கத்துருவினோடு பந்தயம் வைக்க, அவள்
அதனை வஞ்சனையால் கரிய தாக்க அஃதறியாது அவளுக்கு
அடிமையாகி வருந்துதல்.
அதனைக் களைதல்: இந்திரன் அமராவதிக்கண் கொண்டு
வைத்த அமிர்தம்தரின் அவள் அடிமை நிலை ஒழியுமென்று
கத்துரு சொல்ல அவளுக்குக் கருடன் அதைக் கொண்டு
வந்து கொடுத்துத் தாயை அடிமைத் தளையிலிருந்து மீட்டது.
(பரிபாடல் - உ.வே.சா பதிப்பு பக் 20)
ஓகை - உவகை - மகிழ்ச்சி 0


சாபத்தை அறத்தீர்த்த சுத்த வீரன்
தானும் தனக்கிணை தானானவன்
சிவதவநியமம் பெற்றோன் கெருட தியானம்
சிறகுரெண்டும் பச்சை நிறமாய்
விளர்சிவப்பாக மேனி முற்றிலும் (கண்டம்)
வெள்ளை நிறமாக விண்மண் ஒன்றாய்
அளவிடல் போலும் நிமிர்ந்த உருவமுமாக
அமுதகுடம் கரத்தில் வைத்து
திதிதரும் அசுரர்களும் அதிதி தரும்
சிறுவரும் பாற்கடல் அதனில் அமிர்தம்

280

276 - 280
நியமம் - நெறி
திதி - அசுரர்களின் தாய்
அதிதி - தேவர்களின் தாய்


கடைந்திட மேருவரையை வேரோடும்
பிடுங்கி மத்தாக நட்ட பெருமையினான்
மடந்தைக் கத்துருவெனும் தாய்சொல் சபத
மாற்றிட வேணுமென்று மனம் துணிந்து
பறந்து விண்ணுலகில் சென்று தெய்வேந்திரன்
பதியில் கருவூரில் மதிள்கதவைத்
திறந்துகொண்டு உள்புகுந்து காத்திருந்த
தேவ கணங்களையும் ஓட விரட்டி
பொற்குடம் நிறைந்திருக்கும் அமிர்தத்தைப்
பொற்புடனே எடுத்து வௌியில் வந்து

285

281 - 285
தேவரும் அசுரரும் பாற்கடல் கடைந்தபோது மேருமலையை
மத்தாகக் கொண்டு வந்து நிறுத்தியவன் கருடன்;
தாயின் துன்பத்தைத் தீர்த்தவன்.
தெய்வேந்திரன் - தேவேந்திரன்


மாற்கெதிர் பொருளை அயிராபதம்
முதல் முப்பத்து மூன்று கோடி
தேவர் கின்னர முனிவர் கந்திருவர்
சித்தியர்களா சுத்தி வளைந்தோரைப்
பேறாக மணிகோடி செபம் செய்த
பலபணி வண்ணமாலை தரித்தவராய்
பொன்னாடை ரெத்தினமகுடம் நுதலிலும்
சென்னியிலும் தரித்த திறத்தினராய்
மாலோனைப் புயத்தில் வைத்துக் கருணைநீர்
வழிந் தொழுகிய திருநயனமுமாய்

290

286 - 290
மாற்கெதிர் - போர்செய்வதற்கு எதிர்ந்த
கின்னரர் - பதினெண் கணத்துள் ஒருவர்
சித்தியர் - தெய்வமங்கையர்
நுதல் - நெற்றி; சென்னி - தலை; மாலோன் - திருமால்


மேலான விண்ணிற்பறந்து திசையெட்டும்
விளங்கவே இருளெனும் களங்கமற
வருபவராக நினைந்து கருடனை
மனதினில் தியானம் செய்ய வல்விஷங்கள்
பருதியைக் கண்ட பனிபோல் தட்டுக்கெட்டுப்
பறந்திடுமே உயிர் சிறந்திடுமே

மருந்துப் புடலம்

விருத்தம்

துதித்திடும் பணிகள் நான்கின் தோற்றமும் ஒடுக்கம் தானும்
விதித்திடும் வெவ்வே றான சாயின விதங்கள் தானும்
பயிற்றிடும் எயிற்றால் உற்ற குணங்களூம் வகுத்தேன் இப்பால்
கதித்திடும் விஷத்துக் கெல்லாம் மருந்தினைக் கழற லுற்றேன்

சிந்து

அத்தர்தென் மருதூர் காரண
சித்தர்புர மெரித்த தேவதேவர்
மத்தொடு கடுக்கை தும்பை கங்கைபிற
வைத்த சடிலர் யோகத்த ரானோர்

295

291 - 295
பருதி - சூரியன்; பணி - பாம்பு
எயிறு - பல்; கதித்தல் - மிகுதல்
புரம் - திரிபுரம்; மத்து - ஊமத்தை
கடுக்கை - பாம்பு; சடிலர் - சடையினை உடையவர்


கடுவமர்காள கண்டர் மான்மழுக்
கரத்தர்புலிச் சரமுரித் துடுத்தோர்
நடுவனை உரத்து தைத்தோர் தேடிமுன்
நாரண நான்முக ரானவர் காணாதவர்
சேடனுக்காக வந்நாள் சுயம்புதிரு
வுருவாக வந்த செகதீசர்
வேடனுக் கருள் புரிந்தோர் நாகய்யன்
வேதனுக்கன்று ரசவாதம் புகன்றோர்
தரித்திரந் தீரமதி மால் தனக்குமுன்
தந்தோலையர் திகிரிதனை யளித்தோர்

300

296 - 300
கடுவமர் - நஞ்சினையுடைய
காளகண்டர் - கரிய கண்டத்தை உடையவர்
புலிச்சரம் - புலித்தோல்; நடுவன் - யமன்
மார்க்கண்டேய வரலாறு இவ்வரியில் கூறப்பெறுகிறது.
சேடன் - ஆதிசேடன்; வேடன் - கண்ணப்பன்
நாகய்யன் - திருமரூதூர் இறைவன் பெயர்
திகிரி - சக்கரம்


கிரித்தளப் படையுடையோர் பணிமொழி
கிரியர சீன்றெடுத்த கிரிமகளும்
மலர்மகள் கலைமகளும் அருந்ததி
வனதுற்கை யகலிகை மாது
தவமுறு நெடுமாலும் கௌதமன்
சதுர்முகன் பருதி சந்திர முருகன்
பாணபத்திரன் கபில ெனெட்டு
மானாகர் அகஸ்தியர் திசைபாலர்
சேணிலத் தமரர்களும் முனிவரும்
தெரிசித்துப் பூசைசெய்யக் கதிகொடுத்தோர்

305

301 - 305
கிரித்தளப்படை - முத்தலைவேல்
கிரியரசன் - இமயத்தரசன்
கௌதமன் - முனிவன்
சதுர்முகன் - நான்முகன்; பருதி-சூரியன்
பாணபத்திரன் - மதுரையிலிருந்த பாடகன்


மெய்யென நம்பும் அடியார் தங்களுடை
வெய்யவினை யகற்றி விளங்கவைப்போர்
பொய்யெனச் சொல்வர்பால் ஒருநாளும்
புகுதாதவர் வினை கருதாதவர்
கலியுக வரதரென விளங்கிய
காரணத்தர் சதுரா ணத்தர்
மலைமகள் அழகிய நாயகிதனை
வலப்பாகம் வைத்துகந்த மகிமையாளர்
பத்தர்கள் பரிபாலர் நாகலிங்கர்
பாதமலர் எனது சிரத்தில் வைத்து

310

306-310
மலைமகள் - மலையத்துவசன் மகள், பார்வதி
பரிபாலர் - காப்பாற்றுபவர்


சித்தர்கள் அதிசயிக்கும் நாகமுதல்
சிற்றெறும் பாதியாய்ச் சேர்ந்த விஷயங்கள்
தீர்ந்திட நசியங்களும் ஒற்றிடச் செய்யும்
விஷமும் விடம் தீண்டினவுடன்
மாந்திடற்குள் மருந்து மாத்திரையும்
மையும் குழம்பும் கையிகிள்ளாக்கையும்
சோற்றினில் பாகில் கொடுக்கு மூலிகை
துவரும் முறுக்கும் கடிவாயில் பூச
மாற்றிடு...கா...ம் அஞ்சனமும்
வகைவகை யாகவேயான் பகருகின்றேன்

315

311 - 315
நசியம் - மூக்கில் இடும் மருந்து
மாந்துதல் - குடித்தல்; பாகில் - தேனில்
கடிவாயில் - பாம்பு கடித்த இடத்தில்


சோதனை பார்க்க வேளை வேர்தின்னத்
துவக்க கசக்க விஷமில்லை என்னலாம்
போதவே இனித்ததென்றால் நல்லபாம்பு
புளிக்கில் வழலை துவர்த்திடில் விரியன்
செருக்கிடில் மயக்கர் வரள்உப்பு
உறைக்கில் சிறிய புடையன் என்று அறிவாயே
நருக்குறு மிளகுரைக்கில் மண்டலியாம்
நாக்கில் கடுக்கில் மூர்க்கனாம்
இப்படி அறிந்திடுநீ சோதனை
எல்லா விடத்துக்கும் ஏக நசியம்

320

316-320
வேளை - ஒரு வகை மருந்துச்செடி
செருக்கிடில் - இருமிடில்; வரள்உப்பு - படிகாரம்
மிளகு - உணவுக்குரிய மிளகு 305


செப்பவும் கேளணங்கே வெற்றிலை
சிறியமிளகு கறியுப்பு நறுக்கிக்
கண்செவி மூக்கில் பிழியஉடல் விட்டுவிண்
புகுந்திட்ட உயிர் மீண்டு வருமே
பண்ணேர் மொழியினமே முருக்கிலை
படரும் எருக்கினில் தும்பை இலையும்
பிழிந்திடில் நாசிதனில் உடல்விட்டுக்
கழிந்த உயிரும் வந்து கலந்திடுமே
குளிர்ந்திடும் துளசியிலை தும்பையிலை
கொடிய மிளகும் கறியுப்பும் கசக்கி

325

321 - 325
அணங்கு - பெண்
பண்ணேர் மொழியினம் - இசையினை ஒத்த
மொழியினை உடைய பெண் இனம்
எருக்கு - எருக்கஞ்செடி; கறியுப்பு - உணவுப்பு


நாசியில் பிழிந்திடவே உயிர்விட்டுப்
பேசாமல் கிடந்த பிரேத மெழுமே
வீசிய முதல்வேகம் கண்சிவக்கில்
வெள்ளுள்ளி பெருமரப்பட்டை வசம்பு
பீநாறிப்பட்டை சிறுநீர் மூக்கினில்
பிழிந்திட முதல் வேகம் ஒழிந்திடுமே
ஆனாவிரண்டு மூன்று வேகத்துக் காற்றும்
மிளகு சுக்கு கடுகு இந்துப்புச்
சாரணை வெற்றிலையின் சாற்றினில்
தட்டி நசியமிட விட்டோடுமே

330

326 - 330
பிரேதம் - உயிரற்ற உடல்
வெள்ளுள்ளி - வெள்ளைப்பூண்டு
பெருமரப்பட்டை - பெருங்கள்ளிப்பட்டை (தலைச்சுருளிஎன்றும் கூறுவர்)
பீநாறிப்பட்டை - மருந்துப் பட்டை


காரணமாக வேகம் நாலைந்து
கடுகுமோர் ஆறேழுக்கு நசியம்
புகன்றிடும் இலுப்பைக் கட்டி நறுக்கியே
பொடித்துச் சிறுநீர்விட்டு மூக்கில் பிழிய
அகன்றிடும் அந்தவேகம் அப்பாலெட்
டதிவேகம் வந்தெழுந்து மதி மயக்கில்
கெந்தகமுள்ளி வசம்பு மிளகுடன்
கெடியான தும்பை துளசியிலை
தந்திடு முலைப்பாலும் நாசியில்
தறுகாமல் பிழிந்திட மறுமறுகிடுமே

335

331 - 335
இலுப்பைக்கட்டி - இலுப்பைப் புண்ணாக்கு
சாரணை - ஒரு வகைப் பூண்டு
கெந்தகம் - கந்தகம்; உள்ளி - வெங்காயம்
மறுமறுகிடும் - விஷம் நீங்கிடும்


சீலையில் எருக்கலாம்பால் தைவேளை
சிறந்திடும் சாறும் பெரும்பறட்டைச் சாற்றொடு
வேலை வைத்துத் தீயிடு சிறுநீர்தனில்
விட விடம் அறுமே
கொடிக்கள்ளிப் பால்கறந்து சீலையில்
கொள்ளவே தோய்த்துலர்த்திச் சுக்கும் வசம்பும்
அடித்திடும் பச்சைப் பாம்பு மிளகுகாயம்
அம்புவில் வமும் சமன் கூட்டித்
திரித்திடு துணியில்வைத்துத் திரிதனதை
தீயில் கொளுத்தி நெடுமூக்கில் புகைக்க

340

336 - 340
சீலை - மருத்துவத்திற்குப் பயன்படும் காரச்சீலை
எருக்கலாம்பால் - எருக்கஞ்செடியின் பால்
தைவேளை - தைவளைச் செடி
கொடிக்கள்ளி - காரமுள்ள கள்ளி
அம்பு - திப்பிலி; சமன் - சமமாக


மரித்திடும் மரணமெனினும் சீக்கிரம்
கருத்துடனே எழுப்பும் காலனில்லையே

ஒற்றடம் துவாலை

ஒற்றிடும் வேலிப்பருத்தி தைவேளை
ஊருடன் முதலியார் பூனை வணங்கி
மற்றுள்ள வேர்குருந்தும் பொன்னிறமாய்
வறுத்துடன் ஒற்றஉயிர் நிறுத்திடுமே
கீழ்வாய் நெல்லி துளசி முருக்கிலை
கிளறுமொடு வடக்கியிவை நாலும்
தாழாமல் இடித்தெடுத்துப் பிழிந்திடும்
சாற்றினைச் சடலமெங்கும் தேய்த்திடப்போம்

345

341 - 345
மரித்திடும் - இறந்திடும்
வேலிப்பருத்தி, தைவேளை - மருந்துச் செடிகள்
பூனைவணங்கி - குப்பைமேனி; வடக்கி - வதக்கி
சடலம் - உயிரற்ற உடம்பு


பேய்ச்சுரை பேய்க்குமட்டி .... ளிசிலை
பேய்ப் பீர்க்கில் சிறுநீர் விட்டிடித் தெடுத்து
தேய்த்திடு சடமுழுது விடத்தினால்
செத்த பிணமும் எழுந்திருந்திடுமே
முறுக்கி ஆணைவணங்கி சமூலம் கொடுவந்து
துவைத்துப் பூசி முறுக்க
உள்ளுக்குத் தூள்மருந்து கொல்லன் கோவைக் கிழங்கு
குப்பைக் கிழங்கு கையெடுத்தொழுது முழுது
தெள்ளிய சுலை சுருளி வேரிவை
திருந்தவிடத்துத் தெள்ளி வெருகடித்தூள்

350

346 - 350
பேய்ச்சுரை,பேய்க்கும்மட்டி,பேய்ப்பீர்க்கு - மருந்துச் செடிகள்
ஆனைவணங்கி - தேள்கொடுக்குப் பூண்டு
சமூலம் - வேர்முதல்; உள்ளுக்கு - உடம்பினுள்
கொல்லன் கோவை - ஒரு செடி


அள்ளியே எடுத்து வெந்நீர்தனில் கொள்ளக்
கொள்ளை விடங்கள் எல்லாம் குடிபோமே
பேயருசும் சமனாகக் கொண்டு வந்து
பெரியகுந் தாணியில் துவைத்தெடுத்து
காய்பிஞ்சுறு காராட்டின் நீர்விட்டு
கலந்திரவு முழுதும் கலத்தூறில்
பகலினில் நிழலுலர்த்தித் தூள் பண்ணிப்
பலபல விடத்துக்கும் வெருகடித்தூள்
சுகமுள்ள வெந்நீரில் கலக்கியே பயந்
துடவிட மெல்லாம் சுருண்டிடுமே

355

351 - 355
கொள்ளைவிடங்கள் - மிகுதியான நஞ்சு
குடி - விலகி; குந்தாணி - பெரிய உரல் /tr>

சித்தராரூட நொண்டிச் சிந்து முற்றும்


5. எண்ணெய்ச் சிந்து

(ஆசிரியர் பெயர் தெரியவில்லை)


காப்பு

சீர்பூத்த தென்குடவை தேவி ஆனந்தவல்லி
பார்பூத்த செங்கமலப் பாதம் தனைப்போற்றி
1. சீர்புத்த - சிறப்பு மிகுந்த
பார்பூத்த ... பாதம் - அன்னையின் திருவடி உலகின்
தோற்றத்திற்குக் காரணம் என்றபடி. "இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன"- ஐங்குறுநூறு

1


செப்பரிய எண்ணெய்ச் சிந்து தனைப்பாட
கற்பகக் கன்றான கணபதி காப்பாமே
2. கற்பகக் கன்று - அருள் வழங்கும் இளங்களிறு

2


வெள்ளைக் கலையாளே வெண்டா மரையாளே
தெள்ளரிய ஞானத் திரவியமே வந்துதவாய்

3


வீறுதரு சூரர்களை வென்றுலகைத் தானாண்ட
ஆறுமுகனே அடியாற்கு வந்துத வாய்

4


தெள்ளரிய எண்ணெய்ச் சிந்து தனைப்பாட
வள்ளி தெய்வானை மலரடியே காப்பாமே

5


கடவுள் வாழ்த்து

பனிமதிச் சடையாள் ஈசன் பரமனார் பாதம் போற்றி
கனியிதழ் உமையாள் சோதி காரணி தன்னை வாழ்த்தி
6. காரணி - காரணமானவள்

6


புனிதமாம் எண்ணெய்ச் சிந்தைப் புவிமிசை பாடுதற்குத்
தனியொரு கடவுளான தந்தியைச் சிந்தை செய்வோம்
7. கடவுளான தந்தி - ஆனை முகக் கடவுள்

7


அடிமுடி இல்லான் பின்னும் யாவையும் படைத்தோன் என்றும்
படிநமக் களக்கும் ஈசன் பரமனார் கிருபை யாலே

8


மடிதனில் அமிர்த மூட்டி வளர்த்தாய் மனதி ரங்கி
சடுதியில் அனுப்பு மம்மா சரணம் சரணம் தாயே
9. மடிதனில் - கருவறையில்; சடுதியில் - விரைவில்

9


வேறு

மண்ணுலகும் விண்ணுலகும் மற்றும் புவிவாழ்க
எண்ணும் புவியில் இருநிதியம்தான் பெருக
10. இருநிதியம் - பெருஞ்செல்வம்

10


கோதில்லா ஞானக் குருதே சிகனருளால்
தீதில்லா எண்ணெய்ச் சிந்துதனைப் பாடுகிறேன்
11. கோது - குற்றம்

11


ஒன்றுமில்லாக் காலம் உலகம் யாவும் படைத்து
இன்றுநமை நடத்தும் ஏகன் திருவருளால்
12. ஒன்றுமில்லாக் காலம் - மகா சங்காரகாலம், கடையூழிக்காலம்
ஏகன் - ஒப்பற்ற ஒருவன் (ஏகன் அநேகன் - திருவாசகம்)

11


முட்டைக் கருவால் முடிந்து புவிதனிலே
விட்டஇறை யோன்இரக்கம் விள்ளமுடியாது
13. இறையோன் இரக்கம் - உலகினைப் படைத்த தனிப்பெருங்கருணை

13


எட்டாது புத்திதன்னால் பாவிக்கக் கூடாது
சட்டமெமைப் படைத்த சுவாமி கிருபையதால்
14. பாவிக்கக் கூடாது - பாவனைக்கு எட்டாது, நினைப்பரிது
சட்டமெனப் படைத்த என்றும் பாடம்

14


திட்டமதாய்ச் சூழுகின்ற தீவினைக்கெல் லாம்பிழைத்து
சட்டமாய் இப்போ தமிழறியும் காலமதில்
15. சட்டமாய் - சட்டம் - செப்பம்.
சட்ட - செப்பம் உணர்த்த நின்ற தோர் இடைச்சொல்
அது சட்டம் என மருவியது. (சிவஞானமுனிவர்)

15


துட்டத் தனம்போக சூதுவஞ் சனையகல
பட்டமரம் தனிலே பச்சைத்தளிர் ஆனாற்போல

16


ஆவ லுடனே அண்ணாவி தன்னிடத்தில்
பாவ புண்ணிய மறியப்பள்ளிக்கு வைத்ததுவும்
17. அண்ணாவி - கூத்து முதலியன பழக்குவோர் -
இங்கு எழுத்தறிவிக்கும் ஆசிரியரைக் குறித்தது
பள்ளிக்கு வைத்தல் - பள்ளிக்கு அனுப்பல்

17


அண்ணாவி தாமும் அறிவித்த ஞானமது
நண்ணாகச் சொல்லுகிறேன் நாட்டிலெந்தன் மாதாவே

18


மண்ணும் புவியில் மணவாளனும் மாதும்
மின்னதிகச் செல்வம் மிகவாழ்ந் திருக்கையிலே
19. மணவாளன் - கணவன்

19


புத்திரனே வேணுமென்று புண்ணியம்செய் யத்துணிந்து
சத்திரங்கள் அம்பலங்கள் சாலை மடங்கள்செய்து
20. சத்திரம் - தங்கும் இலவசக் கூடம்
அம்பலம் - மன்றம்; சாலை - உணவிடுமிடம்

20


ஆதித்த வாரம் வாசி ஆதரித்து
நீதியுடன் தானதவம் நேராக வேபுரிய
21. ஆதித்த வாரம் - ஞாயிறு; வாசி - மூச்சோட்டம்

21


கண்டு சிவனார் கருணை மிகவிரங்கி
தொண்டு மிகச்செய்த தோகையாள் தன்வயத்தில்
22. வயத்தில் - வயிற்றில்

22


சற்புத் திரனாகத் தானருளிச் செய்தனராம்
விற்புருவ மாதுநல்லாள் மேன்மையுடன் பெற்றெடுத்த
23. சற்புத்திரனாக - உயர்ந்த மகனாக

23


வல்ல பிறையும் வளரும் வகைபோல்
செல்லக் குமரனையும் சீக்கிர மாய்வளர்த்து

24


பண்ணு தமிழைப் படிப்பிக்க வேணு மென்று
மன்னவனும் தேவியுமாய் மனதில் மிகநினைந்து
25. பண்ணு - ஓசை

25


காலுக்குத் தண்டை கழுத்துக்குக் காறையுடன்
கோலவர்ணச் சோமனையும் கொய்து மிகவுடுத்தி
26. காறை - கழுத்தணியுள் ஒன்று; சோமன் - வேட்டி
கொய்து - கொசுவி, மடித்து

26


வீரச்ச தங்கை விரலுக்கு மோதிரமும்
ஆரமிகப் பூட்டி அன்பாய் அலங்கரித்து
27. ஆரம் - மாலை

27


திரிபுண்ட ரீகத் திருநீறும் தான்பூசி
வெறிமாலை சுற்றி விளங்கு திலகமிட்டு
28. திரிபுண்ட ரீகம் - திரி புண்டரம், மூன்றுவரியாய்ப்
பூசும் திருநீறு; வெறிமாலை - மணமிக்க மாலை

28


காதில் கடுக்கனிட்டுக் கனத்த முருகும் தூக்கிச்
சீதநறும் வெள்ளி எழுத்தாணி தான்சேர்த்து
29. முருகு - காதணியில் ஒன்று; கனத்த - பருத்த

29


வாத்தியார் தன்னை வரவழைத்து அந்நேரம்
கோத்திரத்தில் உள்ளோரும் கூடி மிகஎழுந்து
30. கோத்திரத்தில் உள்ளோர் - சுற்றத்தார்

30


பள்ளிக் கூடத்தில் பண்பாகச் சென்றுபுக்கு
விள்ளரிய ஞான விமலன் திருவருளால்
31. விள்ளரிய - கூறமுடியாத

31


சாணியைக் கொண்டு தரையை மிகமெழுகி
பேணியே தூபமிட்டுப் பிள்ளையா ரைநிறுத்தி
32. சாணி - பசுவின் சாணம்

32


வாசமலரும் மகிழருகும் தான் சார்த்தி
நேசமிகும் தாம்பூலம் நிறைநாழி தானும்வைத்து
33. மகிழருகு - அருகம்புல்
தாம்பூலம் - வெற்றிலை பாக்கு
நிறைநாழி - மங்கலக்குறியாக நெல் வைத்து நிரப்பிய நாழி

33


கடலைஅவல் பயறு கனிவகைகள் சர்க்கரையும்
விடலையுயர் தரமிக்க வாழைப் பழமும்
34. விடலை - திண்ணிய

34


மாம்பழம் பலாப்பழமும் வரிசையா கப்படைத்து
சாம்பிராணி கற்பூரம் தாலத் திருவிளக்கும்

35


தாம்பிரம் வெள்ளிபொன் குருதட்சனை தானும்வைத்து
ஆம்பொருளான மத யானைமுகனைத் தொழுது

36


சீராக வாத்தியார் செய்யபனை ஓலைதனை
நேராகச் செப்பமிட்டு நிறைந்தமகு டம்பிடித்து
37. மகுடம் - தொடக்கத்தில் முழங்கும் பொருள் நிறைவுடைய
சொற்கள், அறிவோம் நன்றாக என்பது போல.

37


அரிஎன்ற எழுத்தை அப்போதி லேஎழுதி
தெரியப் படுத்தி சித்தரியும் தானெழுதி
38. அரி - கல்வி தொடங்குமுன் அறிவோம் நன்றாக
எனத் தொடங்குதலின் முன் எழுத்துக்கள்-அரி-
திருமாலைக் குறிப்பதாகக் கொள்ளப்பட்டது

38


கற்பகக் கன்றைக் கைதொழுது ஆதரித்து
அற்புதமாய் மைந்தனையும் அருகிலே தானிருத்தி
39. கற்பகக் கன்று - ஆனைமுகன்

39


கையைப் பிடித்து கதிபெறவே அண்ணாவி
மெய்யாக அண்ணாவி மெய்ஞ்ஞான மேவழங்க
40. கதி - பேறு; மெய்ஞ்ஞானம் - உண்மைஅறிவு

40


அரிவரி கொன்றைவேந்தன் அன்னையும் பிதாவுடனே
விரிவான எண்சுவடி மிக்க உலகநீதி
41. அரிவரி - அகரமுதலாகக் கோவை செய்யப்பட்ட
வரி வடிவ எழுத்துக்கள்

41


பிள்ளையார் விருத்தம் பெரியஅவ்வை மூதுரையும்
வள்ளுவமாலை வளம்குறள் நாலடியார்

42


நல்லபொருளை நவிலும் திவாகரமும்
சொல்லரிய நிகண்டும் சுப்பிரமண்யர் புகழும்
43. திவாகரம் - நிகண்டு. சேந்தன் எனும் அரசன் காலத்தில்
திவாகர முனிவரால் இயற்றப்பட்டது.
சுப்ரமண்யர் புகழ் - திருப்புகழ்

43


நல்பிள்ளைத் தமிழும் ராசரிசி பாடல்களும்
நல்ல புவியில் நலமுடனே எங்களுக்கு
44. ராசரிசி - ராஜரிசி - இளங்கோவடிகள்

44


படிப்பித்தார் வேறுபல சாஸ்திரம் தன்னையும்
படித்தோம்காண் மாதாவே பாருலகில் அண்ணாவி
45. சாஸ்திரம் - கலை நூல்; காண் - முன்னிலை அசை
அண்ணாவி நெடியோன் - அண்ணாவியாகிய பெரியோன்

45


நெடியோன் திருவருளால் நிமிடமிது தட்சணமே
வடிவாக எண்ணெய்தனை வாங்கிவரச் சொன்னார்கள்
46. தட்சணம் - உடன்

46


என்றறிந்து நாங்கள் இயம்பியசொல் தட்டாமல்
சிந்தை மகிழ்ந்து திருத்தாள் கரம்குவித்து
47. திருத்தால் கரம் குவித்து - திருவடிகளைத் தொழுது

47


சனி எண்ணெய்க் கென்று வந்தோம் தாயே சலியாதே
இனிதான நல்லெண்ணெய் இலுப்பெண்ணெய் ஆனாலும்

48


நான்கெண்ணெய் ஆனாலும் நறுநெய் ஆனாலும்
மங்கெண்ணெய் முத்தெண்ணெய் பொதுவாய்ச் சேர்த்தெண்ணெய்

49


எந்தநோ வானதுக்கும் எருக்கிடுமே வேப்பெண்ணெய்முதல்
எந்தஎண்ணெய் ஆனாலும் இப்போதே விட்டனுப்பு
50. எருக்கிடும் - அழித்திடும்

50


பேரம்மை சிற்றம்மை பெரியதாய் உடன்பிறந்தாள்
அத்தைமகள் மதனி அன்பான மச்சினமார்
51. பேரம்மை - பெரிய தாய்; சிற்றம்மை - சிறிய தாய்
மதனி - மைத்துனி

51


இத்தனை பேரும் எமக்கிரங்கி எண்ணெய் தனைச்
சித்தம் மகிழ்ந்து சீக்கிரமாய்த் தந்தனுப்பும்

52


செல்லக் குமாரருங்கள் திண்ணையிலே வந்துநிற்க
அல்லற்படுத் தாதேஎங்கள் அன்புடைய மாதாவே
53. அல்லல் - துன்பம்

53


முத்துக் குமாரருங்கள் முத்தத்தில் வந்துநிற்க
சித்தம் இரங்கிச் சீக்கிரத்தில் எண்ணெய்தனைத்
54. முத்தத்தில் - முற்றத்தில்

54


தந்தனுப்பும் எங்களுக்குத் தாயேநீ மாதாவே
மைந்தன் தனக்கிரங்கி வார்த்துவிடு எண்ணெய்தனை
55. வார்த்தல் - கொடுத்தல்

55


பிள்ளை தனக்கிரங்கிப் பெற்றார் உதவிசெய்தால்
கொள்ளை தவம்பெறுவீர் கொற்றவன்போல் வாழ்ந்திடுவீர்
56. கொள்ளை - மிகுதி
கொற்றவன் - அரசன்

56


அன்ன மணியே அருமையுள்ள மாதாவே
சின்னஞ்சிறு பாலகர்மேல் சித்தம் இரங்கியன்பாய்

57


மாதா மகிழ்ந்தெண்ணெய் வார்த்திடுவார் என்று சொல்லி
ஆதலால் வந்தோம்காண் அன்னையரே நீர்கேளிர்
காண் - முன்னிலை அசை

58


சோதிதிரு அண்ணாவி சொன்ன மொழிதவறி
நீதியுடனே நெடுநேர மான துண்டோ

59


எங்களையும் அண்ணாவி எண்ணாம லேஅடிப்பார்
பங்கய முகத்தழகு பவளவிதழ்த் தாய்மாரே
60. பங்கயம் - தாமரை

60


நன்னயமாய் எண்ணெய்தனை நலமாகத் தந்தனுப்பும்
இன்னமொரு சற்றுநேரஞ்சென்றால் எங்களையும் அண்ணாவி

61


கோவித் திடுவார் கொடிப்பிரம் பாலடிப்பார்
நாவூற நகட்டுவார் எங்க ளைத்தான்
62. நகட்டுவார் - நசுக்குவார்

62


அல்லாமல் சட்டம்பிள்ளை அவன்கொடுமை சொல்லரிது
செல்லப்பிள்ளை யானாலும் சினமே பொறுக்கறியான்
63. சட்டம்பிள்ளை - மாணவத்தலைவன்

63


கோதண்ட ராமனிலே கூசாமல் போட்டிடுவான்
மாதண்ட மாக வடுப்படவே தண்டிப்பான்
64. கோதண்டம் - பள்ளிச் சிறுவர் தண்டனையில் ஒன்று
கோதண்டந் தன்னிலே என்றும் பாடம்
வடுப்படவே - காயம்படவே

64


முட்டுக்கண்ணி போட்டு முதுகில்கல் எடுத்திடுவான்
கட்டியடிப்பான் கசையால் உரித்திடுவான்
65. கசையால் - சவுக்கால்

65


தூதுளை விளாறுவெட்டித் துடிக்க அடித்திடுவான்
மாதுளையம் கொம்பாலே மலர அடித்திடுவான்
66. தூதுளை விளாறு - தூதுவளை வளாறு

66


குட்டிப் பிரம்பாலே எட்டி அடித்திடுவான்
சட்டம்பிள்ளை துட்டனவன் சற்றும் இரக்கமில்லான்
67. துட்டன் - கொடியன்

67


காணிகன் கையாலும் காசினியி லண்ணாவி
தாணிகன் கையாலும் தானடியே பட்டுழன்று
68. தாணிகன் - உரிமை உடையவன் (ஸ்தாணிகன்)

68


பிள்ளை நாங்கள் புலம்பி அழுகையிலே
தள்ளைநீங்கள் கண்டால்தான் பொறுக்குமோ மனது
69. தள்ளை - தாய்

69


ஆதலினால் நாங்கள் அவசரமாய்ப் போவதற்கு
மாதாவே தாயே மனதிரங்கி யேயனுப்பும்

70


வந்தோம் வெகுநேரம் வருத்தமிகக் காணுதம்மா
தந்தை மனதிரங்கி தாய்மாரே நீங்களும்தான்

71


நிறுத்திவிட்டுப் பாராதே நீதியில்லாத் தாய்மாரே
சுறுதிதனில் அனுப்பும் சுகம்பெறுவீர் மாதாவே
72. சுறுதி - சுறுசுறுப்பு - விரைவு

72


உந்தனுட வீட்டிலெண்ணெய் உண்டில்லை யானாலும்
எந்த வீட்டிலானாலும் வாங்கிவிடு எண்ணெய்தனை
73. உந்தனுடைய - உன்தன் உடைய என்பதன் பேச்சுத் திரிபு

73


உண்டான எண்ணெய் ஒருகரண்டி குறையாமல்
கொண்டாந்து விட்டிடுவீர் கூர்மையுள்ள மாதாவே
74. கொண்டாந்து - கொண்டுவந்து என்பதன் பேச்சு வழக்கு

74


பழஞ்சோ றுண்ணாமல் வயிறு கொதிக்குதம்மா
குழைந்து விழுகுதம்மா கொவ்வையிதழ் மேனி யெல்லா
75. பழஞ்சோறு - நீரிட்டசோறு

75


வேர்த்து நடுங்குதப்பா மெய்சோர்ந்து காணுதிப்போ
ஆத்தில் நட்ட கோரைகள்போல் அலையுது சடலமெல்லாம்
76. ஆற்றில் நட்ட கோரை - அலைதலுக்கு உவமை

76


திண்ணக்க மில்லாமல் தியங்குதே என்னுடம்பு
அண்ணாவி தாமும் அடிப்பாரென் றென்மனது
77. திண்ணக்கம் - மனஉரம்

77


உள்ளம் பதறுதம்மா ஒளிச்சுதான் போகவென்று
கள்ளமனம் போலே கலங்குதம்மா உள்ளமெல்லாம்
78. ஒளிச்சு - ஒளிஞ்சு

78


சட்டமெழுதித் தயவுடனே தான்கணக்கு
திட்டம்தாய்ப் பார்க்கச் சிறுவர் தனக்கிரங்கி

79


ஆத்தாள் எனப்பயின்ற அன்னையே எண்ணெய்தனை
...... ....... ...... ....... ...... .......

...... ........ ........ ........ ...... ........
...... ........ ........ ........ ...... ........


(எண்ணெய்ச்சிந்து முற்றாகக் கிடைக்கப் பெறவில்லை)

சிந்து இலக்கியம் முற்றும்.

Mail Usup- truth is a pathless land -Home