தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF > உரைநடையில் கலேவலா


urainatail Kalevala  (chapters 33- 50)

உரைநடையில் கலேவலா
தமிழாக்கம்: ஆர். சிவலிங்கம் (உதயணன்)



Etext Preparation: Mr. Uthayanan; Proof-reading: Mr. Uthayanan of Helsinki, Finland
Web version: Dr. Kumar Mallikarjunan, Blacksburg, VA

© Project Madurai 1999 - 2003 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.  Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


பொருளடக்கம்
அத்தியாயம் 33. குல்லர்வோவின் பழிவாங்கல்
அத்தியாயம் 34. குல்லர்வோவும் பெற்றோரும்
அத்தியாயம் 35. குல்லர்வோவின் குற்றச்செயல்
அத்தியாயம் 36. குல்லர்வோவின் மரணம்
அத்தியாயம் 37. பொன்னில் மணமகள்
அத்தியாயம் 38. வடநாட்டுப் பெண்ணைக் கவர்தல்
அத்தியாயம் 39. வடநாட்டின் மீது படையெடுப்பு
அத்தியாயம் 40. 'கந்தலே' என்னும் யாழ்
அத்தியாயம் 41. 'கந்தலே' யாழை இசைத்தல்
அத்தியாயம் 42. 'சம்போ'வைத் திருடுதல்
அத்தியாயம் 43. 'சம்போ'வுக்காகக் கடற்போர்
அத்தியாயம் 44. புதிய யாழ்
அத்தியாயம் 45. கலேவலாவில் தொற்றுநோய்
அத்தியாயம் 46. வைனாமொயினனும் கரடியும்
அத்தியாயம் 47. சூாிய சந்திரர் திருடப்படுதல்
அத்தியாயம் 48. நெருப்பை மீட்டல்
அத்தியாயம் 49. வெள்ளிச் சூாியனும் தங்க நிலவும்
அத்தியாயம் 50. கன்னி மர்யத்தா
முடிவுரை
விளக்கக் குறிப்புகள்
உலகளாவிய கலேவலா


33. குல்லர்வோவின் பழிவாங்கல்

இல்மாினனின் மனைவி சுட்டுக் கொடுத்த ரொட்டியை முதுகுப் பையில் வைத்துக் கொண்டு பசுக்களைச் சேற்று நிலம்வழியாக ஓட்டிச் சென்றான் குல்லர்வோ. செல்லும்போது இப்படிச் சத்தமாய்ச் சொல்லிக் கொண்டே போனான்: "நான் ஒரு அதிர்ஷ்டம் கெட்ட பையன். சேற்று நிலங்களில் நடந்து மாட்டு வால்களுக்குக் காவல் காப்பது ஒரு பாவப்பட்ட வேலை!"

பின்னர் சூாிய ஒளி பரவிய புல்மேடு ஒன்றில் அமர்ந்தான். இப்படி ஒரு பாட்டைப் பாடினான். "இறைவனின் கதிரே, இப்பக்கம் ஒளிர்வாய்! ஆண்டவன் கைச் சக்கரமே, இந்த ஏழை இடையன்மேல் ஒளிர்வாய்! ஆனால் இல்மாினனின் வீட்டில் துலங்காதே! அதிலும் இல்மாினனின் மனைவியின் பக்கமே போகாதே! அவள் கோதுமை ரொட்டிகள் சுடுகிறாள். கொழுத்த பணியாரம் செய்கிறாள். வெண்ணெயை வழித்துப் பூசுகிறாள். வாயில் போட்டு விழுங்குகிறாள். ஆனால் எனக்கோ புல்லாிசி ரொட்டி. கம்பாிசியும் பதரும் கலந்தரைத்துச் சுட்ட பணியாரம். மிலாறுப் பட்டையும் வைக்கோலும் கலந்தரைத்துச் சுட்ட ரொட்டி. அத்துடன் கூம்புக்காய்ச் செதிலில் செய்த சிறு அகப்பையில் சேற்று நிலத்து நீரும் தருவாள்.

"இறைவனின் சூாியனே, ஊசியிலை மரங்களின் பக்கமாய்த் திரும்பு! கோதுமைச் செல்வமே, புதர்ப்பக்கம் போவாய்! பூர்ச்ச மரங்களின் உச்சிக்குப் பறப்பாய்! இறைவனின் கதிர் அப்படிச் சென்றால், இந்த இடையனும் வீட்டுக்குப் போகலாம்; வெண்ணெய்ச் சட்டியில் வெண்ணெய் வெட்டலாம்; புளியாத மாவின் பலகாரம் உடைக்கலாம்; தேன்சுவை அடைகளைக் கிண்டி எடுக்கலாம்."

குல்லர்வோ இப்படிப் பாடிய அதே நேரத்தில், இல்மாினனின் மனைவி வீட்டில் வெண்ணெய்ச் சட்டியில் வெண்ணெய் வெட்டினாள்; புளியாத மாவின் பலகாரம் உடைத்தாள்; தேன்சுவை அடைகளைக் கிண்டி எடுத்தாள். ஆனால் இந்தப் பையன் குல்லர்வோவுக்குக் குளிர்ந்த 19கோவிக்கீரையில் நீராய் ஓடும் ஒரு ரசம் செய்தாள். அந்த ரசத்தின் கொழுப்பை எல்லாம் நாய் தின்றிருந்தது.

பசும் சோலைக்குள் இருந்த ஒரு சின்னப் பறவை இப்படிப் பாடியது: "அடிமைப் பையன் உண்பதற்கு அாிய நேரம் வந்ததப்பா!"

குல்லர்வோ வானத்தில் சூாியனைப் பார்த்தான். உணவு உண்ணும் நேரம் வந்துவிட்டது என்று எண்ணினான். பசுக்களைப் புல்வௌிக்கு விரட்டி ஓய்வாக இருக்கவிட்டான். புல் மேடொன்றில் தானும் அமர்ந்தான். முதுகுப் பையைக் கீழிறக்கி ரொட்டியை வௌியே எடுத்தான். அந்த ரொட்டியைத் திருப்பித் திருப்பிப் பார்த்த பின்னர், "பல ரொட்டிகள் பார்வைக்கு வடிவாக இருக்கும். அதன் மேற்புறத்துப் பொருக்குகளும் மென்மையாக இருக்கும். ஆனால் பொருக்கின் கீழே, ரொட்டியின் உள்ளே உமியும் பதரும்தான் உள்ளுடனாக இருக்கும்" என்று சொன்னான். பின்னர் உறையிலிருந்து கத்தியை உருவி ரொட்டிமேல் வைத்து அழுத்தி வெட்டினான். ரொட்டிக்குள் இருந்த கல்லில் பட்டதும் கத்தி படக்கென்று உடைந்தது.

குல்லர்வோ கத்தியைப் பர்ாத்து அழுதான். "இந்தக் கத்தி ஒன்றுதான் எனது உடன்பிறப்புப்போல இருந்தது. எனது அன்புக்குாிய ஒரேயொரு பொருள். என் அப்பா வாழ்ந்த காலத்தில் வாங்கிய கத்தி. ரொட்டிக்குள் மறைந்திருந்த கல்லில் பட்டு அது உடைந்துவிட்டது. அந்தக் கொடியவளின் ஏளனச் சிாிப்புக்கு என்ன விலை தரலாம்?"

புதாில் இருந்த ஒரு காக்கை கரைந்தது. கரைந்த காக்கை இப்படிச் சொன்னது: "கலர்வோ என்பானின் ஒரேயொரு மகனே, நெஞ்சிலே துன்பம் சூழ்ந்தது எதனால்? எழுந்து போய் மிலாறு மரத்தில் ஒரு கோலை ஒடி! சாணம் பூசப்பட்ட தொடைகளையுடைய பசுக்களைச் சதுப்புக்கு ஓட்டிச்செல்! பாதிப் பசுக்களை ஓநாய்களுக்குள் சிதறச் செய்! மீதியைக் கரடிகள் நடுவில் கலந்துவிடு! பின்னர் ஓநாய்களையும் கரடிகளையும் பசுக்களின் இடத்தில் ஒன்றாய்ச் சேர்! அவற்றை வீட்டுக்கு ஓட்டிச்செல்! அந்தப் பெண்ணின் இகழ்ச்சிக்கு இப்படி விலை கொடு!"

"இரு, இரு! பாவியே, பரத்தையே, என் தந்தையின் கத்திக்கு நான் அழுவதுபோல உன் பசுக்களுக்காக நீயும் அழப்போகிறாய்" என்ற குல்லர்வோ காக்கை கூறியது போலவே கால்நடையை ஓநாய்களாகவும் கரடிகளாகவும் மாற்றி வீட்டுக்குக் கொண்டு செல்லத் தீர்மானித்தான்.

தென்மேற் புறமாய்த் திரும்பினான் கதிரவன். மேற்கில் இறங்கித் தோவதாருவின் உச்சிக்கு வந்தான். பால் கறக்கும் நேரம் நெருங்கி வந்தது. குல்லர்வோ பசுக்களில் பாதியை ஓநாய்க்கு உணவாக்கினான். மீதியைக் கரடிக்குக் கொடுத்தான். பின்னர் ஓநாய்களையும் கரடிகளையும் மந்திரத்தால் மந்தையாய் மாற்றி வீட்டுக்கு விரட்டிச் சென்றான். போகும்போது அவற்றிற்கு அறிவுரை சொன்னான். "தலைவி வந்து பால் கறப்பதற்காகக் குனிவாள். அப்போது அவளுடைய தொடையைக் கிழியுங்கள்! கெண்டைக் காலின் ஆடுதசையைக் கடித்துக் குதறுங்கள்!"

குல்லர்வோ துவோமிக்கி என்னும் பசுவின் எலும்பிலிருந்து ஒரு குழல் செய்தான். பன்னிறத்தாள் என்னும் பசுவின் 20குதிக்கால் எலும்பிலிருந்து ஒரு ஊதுகொம்பு செய்தான். வீட்டுக்கு வௌியே மலை முகட்டிலிருந்து மும்முறை ஊதினான். ஒழுங்கையின் வாசலில் நின்று ஆறு தரம் ஊதினான்.

வீட்டிலே இல்மாினனின் மனைவி பாலுக்காகக் காத்திருந்தாள். கோடை வெண்ணெய்க்காக வெகு நேரம் எதிர்பார்த்தாள். சேற்று நிலப் பக்கமாய்க் குழலொலி கேட்டது. அவள், "நல்ல தெய்வமே, உமக்கு நன்றியையா! குழலோசை கேட்கிறது. கால்நடை வருகிறது. ஆனால் இந்த அடிமைப் பயலுக்குக் குழல் எப்படிக் கிடைத்தது? இந்த ஊதுதல் எனது காதைத் துளைத்துத் தலையைப் பிளக்கிறதே" என்று சொன்னாள்.

அருகில் வந்த குல்லர்வோ, "இந்த அடிமைக்குக் குழல் சேற்றிலே கிடைத்தது. பசுக்கள் ஒழுங்கைப் பக்கமாய் வந்து வயற்புறத்துத் தொழுவத்தில் நிற்கின்றன. புகையை உண்டாக்கிப் பரப்பிவிட்டுப் பாலைக் கறக்கத் தொடங்கு!" என்று பதில் சொன்னான்.

அவள் வீட்டுப் பக்கமாய்த் திரும்பி ஒரு முதியவளை அழைத்தாள். "முதியவளே, நீ போய்ப் பாலைக் கற! எனக்கு மாப்பிசையும் வேலை இருக்கிறது."

உடனே குல்லர்வோ, "வீட்டில் இருக்கும் நல்ல புத்திசாலித் தலைவிகள் பாலைக் கறக்கத் தாமே செல்வார்கள்" என்றான்.

எனவே, இல்மாினனின் மனைவி புகையை மூட்டிவிட்டுத் தானே பால் கறக்க விரைந்தாள். பசுக்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, "பார்வைக்குப் பசுக்கூட்டம் நன்றாக இருக்கிறது. சிவிங்கியின் தோலைப் போல, காட்டுச் செம்மறியின் கம்பளி உரோமத்தைப்போல பசுக்களின் உரோமமும் மென்மையாக இருக்கிறது" என்று சொன்னாள்.

அவள் குனிந்து அமர்ந்து பால் மடியில் கையை வைத்து ஒரு முறை இழுத்தாள். இரு தரம் இழுத்தாள். அடுத்த கணம் ஓநாய் அவள்மேல் பாய்ந்தது. கரடி அவள்மேல் தாவியது. அவை அவளின் வாயைக் கிழித்துக் காலைக் கிழித்தன. ஆடுகால் தசையைக் கடித்தன. குதியைக் கடித்து எலும்பை முறித்தன. அவள் கத்தினாள். "அடேய், எளிய இடையா, நீ தீங்கு செய்தாய்! ஓநாய்களையும் கரடிகளையும் வீட்டுக்கு விரட்டி வந்தாய்!"

"ஆம். நான் எளிய இடையன்தான். தீங்கு செய்தேன்தான்" என்றான் குல்லர்வோ. "ஆனால் எளிய தலைவியே, நீ செய்ததும் நல்லதல்ல. ரொட்டி நடுவில் கல்லை வைத்து எனக்குக் கல் ரொட்டி சுட்டாய். அந்தக் கல்லிலே பட்டு எனது கத்தி தெறித்தது. என் தந்தை வழிச் சொத்து என்று சொல்ல அது ஒன்றுதான் இருந்தது."

"என் அன்பான இடையனே, உனது மந்திரச் சொற்களைத் திருப்பி அழை! ஓநாயின் வாயிலிருந்தும் கரடியின் நகங்களிலிருந்தும் என்னை விடுவி! உனக்கு நான் நல்ல மேற்சட்டை தருவேன். காற்சட்டை தருவேன். நீ வேலை எதுவும் செய்யாமலே ஒரு வருடத்துக்கு வெண்ணெய் தருவேன். கோதுமை ரொட்டி தருவேன். பால் பாலாய்ப் பருகத் தருவேன். அடுத்த வருடமும் அப்படித் தருவேன்" என்றாள் இல்மாினனின் மனைவி.

"நீ சாவதானால் செத்துப் போ! செருக்கும் பெருமையும் படைத்தவர்கள் மரண உலகில்தான் படுத்து இளைப்பாற வேண்டும்."

இல்மாினனின் மனைவி மீண்டும் கத்தினாள். "ஓ, மனுக்குல முதல்வனே, மாபெரும் தெய்வமே, உமது உயர்ந்த குறுக்கு வில்லை எடும்! எாியும் சரத்தைத் தொடும்! இந்தக் கலர்வோ மைந்தனின் கக்கத்தைக் கிழிக்க, தோள்களைப் பிளக்க உமது கொதிக்கும் கணையை விடும்!"

குல்லர்வோ சொன்னான்: "ஓ, மனுக்குல முதல்வனே, மாபெரும் தெய்வமே, உமது அம்பை என்மீது விடாதீர்! இல்மாினனின் இத்தீய மனைவியைத் தப்ப விடாதீர்! இந்த இடத்தைவிட்டு விலகாமல் இங்கேயே அவள் வீழட்டும்!"

பின்னர் கொல்லன் இல்மாினனின் மனைவி வீட்டுத் தோட்டத்தின் குறுகிய ஒழுங்கையில் உருண்டு புரண்டாள். கலயத்திலிருந்து கழன்று விழும் காிக்கறைபோல விழுந்து இறந்தாள். பல்லாண்டு காலமாகக் காத்திருந்து மணம் முடித்துப் பெருமையாய்ப் புகழாய் அழைத்து வந்த லொவ்ஹியின் அழகிய இளம் பெண்ணின் முடிவு இப்படியானது.


34. குல்லர்வோவும் பெற்றோரும்

கலர்வோ என்பானின் மஞ்சள் தலைமயிரையுடைய மைந்தன் குல்லர்வோ புறப்பட்டான். இல்மாினன் வீட்டுக்குத் திரும்பியதும் தனது மனைவி இறந்த விதத்தை அறிந்து குல்லர்வோவுடன் சண்டைக்குப் போவான். அதனால் அதற்கு முன்னரே தோல் காலணிகளை அணிந்து கொண்டு புறப்பட்டுவிட்டான் குல்லர்வோ.

குல்லர்வோ குழலை ஊதியபடி குதூகலமாகப் போனான். சத்தமிட்டுப் பாடியபடி காட்டு வழியாகப் போனான். அவனுடைய குழலோசை கேட்டுப் பூமி அதிர்ந்தது. சேற்று நிலம் உருண்டது. புதர் புற்றரை எதிரொலித்தது.

பட்டறையில் இருந்த கொல்லனின் காதுகளிலும் இந்த எக்காளம் கேட்டது. அவன் எழுந்து முற்றத்துக்கு வந்து எதற்காக எக்காளம் கேட்டது என்று பார்த்தான். அங்கே அவனுடைய அன்பு மனைவி வீழ்ந்து கிடந்ததைக் கண்டான். அவள் இறந்து போனதை அறிந்தான்.

அவன் கனத்த மனத்துடன் கல்லாய் நின்றான். பல இரவுகளை அவன் அழுதே கழித்தான். பல வாரங்களைக் கண்ணீரால் கரைத்தான். அவன் மனம் காியிலும் பார்க்க வெளுப்பாய் இல்லை.

அதே நேரத்தில் குல்லர்வோ கால் போன போக்கில் நடந்து திாிந்தான். பேய் மரங்கள் நிறைந்த பெரும் காடெல்லாம் சுற்றித் திாிந்தான். பொழுது சாய்ந்ததும் ஒரு புல் மேட்டில் தங்கினான். தனது நிலையை எண்ணிப் பார்த்தான். "வானத்தின் கீழுள்ள வெட்ட வௌியில் அலைந்து திாிவதற்கு என்னை யார் படைத்தார்? மற்றைய மனிதர்கள் தூங்குவதற்குத் தங்கள் மனைகளுக்குச் செல்வார்கள். ஆனால் இந்தக் காடுதான் எனக்கு வீடு. இந்தப் புற்றரைதான் எனக்குத் தோட்டம். காற்றிலேதான் எனது அடுப்பு. மழையிலேதான் எனது நீராவிக் குளியல்."

அவன் கடவுளைக் கும்பிட்டான். "நல்ல தெய்வமே, வேண்டாமையா! என்னைப் படைத்ததுபோல ஒரு தந்தையில்லாத தாயில்லாத பிள்ளையை என்றைக்குமே படைக்க வேண்டாம்! மலை முகடுகளில் அலைந்து திாியும் கடற்பறவையைப்போல என்னைப் படைத்தீர். தூக்கணாங் குருவிக்கும் துலங்கும் ஒரு நாள். சிட்டுக் குருவிக்கும் சிறக்கும் ஒரு நாள். காற்றின் பறவைகள் அனைத்துக்குமே களிப்பு வரலாம். ஆனால் எனக்கு மட்டும் இல்லையே, ஐயா!

"என்னைப் படைத்தவர் எவர் என்று நான் அறியேன். வாத்து ஒன்று என்னை வழியிலே பெற்றதா? தாரா ஒன்று என்னைச் சேற்றிலே செய்ததா? பாறையின் பொந்திலே நீர்வாத்துப் படைத்ததா?

"நான் எனது சிறு பராயத்திலேயே தாய் தந்தையை இழந்தேன். அவர்களோடு எனது இனத்தவரும் இறந்திருக்கலாம். எல்லோரும் என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டனர். இந்தப் பனிக்கட்டியில்தான் காலணிகளையும் காலுறைகளையும் விட்டுச் சென்றனர். இந்தப் பனிமழையிலும் சகதிச் சேற்றிலும் உருண்டு புரள என்னை விட்டுச் சென்றனர். ஆனால் எனக்கு இரண்டு கைகளும் ஐந்து விரல்களும் பத்து நகங்களும் உள்ளவரையில் நான் சேற்றில் புதையப் போவதில்லை."

அப்பொழுது அவனுக்கு உந்தமோவின் நினைவு வந்தது. அவனால் தனது தந்தைக்கு நேர்ந்த துயரங்களையும் தாய்க்கு வந்த துன்பங்களையும் தனக்கு வந்த அல்லல் மிகுந்த நாட்களையும் எண்ணிப் பார்த்தான். "அடேய், உந்தமோ! இரு, இரு! உனது வீட்டையும் தோட்டத்துக் காட்டையும் சேர்த்துக் கொழுத்துகிறேனா இல்லையா என்று இருந்து பார்!"

அவன் உடனே புறப்பட்டுக் காட்டு வழியாகப் போனான். அவன் எதிரே ஒரு முதிய பெண் வந்தாள். அவள் நீல உடை அணிந்தவள். நெடுங் காட்டைச் சேர்ந்தவள். "கலர்வோ மைந்தனே, குல்லர்வோவே, எங்கே போகிறாய்?" என்று அவள் கேட்டாள்.

"நான் உந்தமோவின் ஊருக்குப் போகிறேன். என் தந்தை தாயாாின் அழிவுக்கு அவனைப் பழிவாங்கப் போகிறேன்."

"உனது இனம் இன்னமும் அழியவில்லை. உன் தந்தையும் தாயும் உயிரோடுதான் இருக்கிறார்கள்" என்றாள் அந்தப் பெண்.

"ஓ, என் அன்புள்ள மூதாட்டியே, அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?"

"அவர்கள் லாப்புலாந்தின் பெரும் பரப்பில் இருக்கிறார்கள்" என்று தொடங்கிய மூதாட்டி, அவர்களின் வசிப்பிடத்தை விபரமாகக் கூறிப் பின்வருமாறு முடித்தாள்: "பின்னர் அங்கே ஒரு கடல்முனை முடிவில் ஒரு மீன் குடிசை இருக்கிறது. அங்கே உன் தந்தையும் தாயும் இரு சகோதாிகளும் வசிக்கிறார்கள்."

குல்லர்வோ நடையில் புறப்பட்டான். மூன்று நாள் பயணத்தின் பின் வடமேற் புறத்தில் ஒரு மலையடியை வந்து சேர்ந்தான். அங்கிருந்து இடப் பக்கமாகத் திரும்பி நடந்து ஓர் ஆற்றை அடைந்தான். பின்னர் மூன்று நீர்வீழ்ச்சிகளைக் கடந்து கடல்முனைக்கு வந்தான். அதன் கோடிக் கரையில் அந்த மீன் குடிசையைக் கண்டான்.

வீட்டுக்குள் நுழைந்த அவனை ஒருவருக்கும் அடையாளம் தொியவில்லை. "யார் இந்த அன்னியன்? எதற்காக வந்தனன்?" என்று கேட்டார்கள்.

"உங்களுக்கு உங்கள் சொந்த மகனையே அடையாளம் தொியவில்லையா? போாின்போது உந்தமோவின் ஆட்கள் கைப்பற்றிச் சென்றனர். அப்போது நான் அப்பாவின் கைச்சாண் அளவாய் அம்மாவின் நூற்கோல் அளவாய் இருந்தேன்" என்றான் குல்லர்வோ.

"ஓ, என் அருமை மகனே" என்று கத்தினாள் தாய். "ஏழைப் பையா, எனது தங்க அணியே, நீ இறந்துவிட்டாய் என்று எவ்வளவு காலம் அழுதிருப்பேன். இப்பொழுது நீ ஊரெல்லாம் சுற்றி வருவதை எனது கண்களால் பார்க்கிறேனே! எனக்கு அருமையாய் இரு மகன்களும் இரு மகள்களும் இருந்தார்கள். இவர்களில் மூத்த இரண்டு பிள்ளைகளை நான் இழந்து விட்டேன். ஒரு பையனைப் போாிலே இழந்தேன். ஒரு பெண் எப்படித் தொலைந்தாள் என்றே தொியவில்லை. இழந்த பையனை இன்று மீண்டும் பெற்றேன். ஆனால் என் மகள் மீண்டும் வரவில்லை."

"என் சகோதாி எப்படித் தொலைந்தாள்?" என்று கேட்டான் குல்லர்வோ.

"அவள் ஒரு நாள் மலைக் காட்டுக்குச் சிறுபழம் பொறுக்கப் போனாள். என் கோழிக் குஞ்சை அங்கேதான் இழந்தேன். அவள் அங்கே அகால மரணம் அடைந்திருக்கலாம். அவளுக்காக அழ என்னைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? நான் கரடிபோலக் காடெல்லாம் திாிந்து அவளைத் தேடினேன். நீர்நாயைப்போல வனமெல்லாம் தேடினேன். கடைசியில் ஒரு உயரமான மலையின் உச்சியில் ஏறி நின்று 'மகளே, நீ எங்கே இருக்கிறாய்?' என்று கத்தினேன்."

"மலைகளும் புற்றரைகளும், 'உன் மகளைத் தேடாதே! அவள் தாயின் வீட்டுக்குத் தன் வாழ்நாளில் திரும்பி வரமாட்டாள்' என்று எதிரொலித்தன."


35. குல்லர்வோவின் குற்றச்செயல்

குல்லர்வோ வெகு காலம் தன் பெற்றோருடன் வசித்து வந்தான். ஆனால் ஓர் ஆண்மகனுக்கு உாிய அறிவு அவனுக்கு இருக்கவில்லை. முன்னொரு காலத்தில் வேறு ஒருவனால் முட்டாள்த்தனமாக வளர்க்கப்பட்டதால் அவனுக்கு வளமான ஒரு மனம் அமையவில்லை.

அவன் பல தொழில்களைச் செய்து பார்த்தான். அனைத்திலும் தோல்வியையே கண்டான். அவன் ஒரு படகில் புறப்பட்டான். தனது முழுப் பலத்தையும் கூட்டித் துடுப்பை வலித்தான். துடுப்புகளும் உடைந்தன. படகும் அழிந்தது. அவன் மீன் பிடிக்கப் போனான். தனது முழுச் சக்தியையும் சேர்த்து மீனை அடித்தான். தண்ணீர் கலங்கிக் கஞ்சியானது. வலை கிழிந்து சணற் கூழானது. மீன்கள் குழைந்து பசைக் குழம்பானது.

அவனுடைய தந்தையான கலர்வோ வந்தான். மகனின் வேலைகளைப் பார்த்தான். பின்னர், "மகனே, நீ இந்த வேலைகளுக்குத் தகுந்தவன் அல்லன். நீ போய் நிலவாிகளைச் செலுத்திவிட்டு வா! ஒருவேளை பயணம் உனக்குப் பொருத்தமாக இருக்கலாம்" என்று சொன்னான்.

மஞ்சள் நிறத் தலைமயிரையுடைய குல்லர்வோ நீல நிறக் காலுறைகளும் தோல் காலணிகளும் அணிந்து புறப்பட்டான். வாிகளைச் செலுத்திய பின்னர், முன்னாளில் வெட்டித் திருத்திய வைனோ என்னும் வனப் புல்வௌிகளில் திரும்பி வந்து கொண்டிருந்தான். வழியில் பொன்னிறக் கூந்தலில் பாவை ஒருத்தியைக் கண்டான்.

குல்லர்வோ உடனே வண்டியை நிறுத்திவிட்டு வனிதையுடன் பேசினான். "வா பெண்ணே, வா! வந்து எனது வண்டியில் ஏறு! ஏறி, உரோம விாிப்பிலே படு!" என்றான்.

"மரணம் வந்து உன் வண்டியில் ஏறட்டும்! நோய் வந்து உன் விாிப்பிலே படுக்கட்டும்!" என்று அவள் சொல்லிவிட்டுச் சறுக்கிச் சென்றாள்.

குல்லர்வோ மணிமுனைச் சவுக்கால் ஓங்கி அறைந்தான். குதிரை பறந்தது. வண்டி விரைந்தது. பயணம் தொடர்ந்தது. வழித்தொலை குறைந்தது. சிறிது நேரத்தில் தௌிந்த பெரும் சமுத்திரத்தின் விாிந்து பரந்த கடற் பரப்பை வந்தடைந்தான். கடலோரம் நடந்து வந்தாள் காாிகை ஒருத்தி. கவின்மிக்க காலணிகளை அணிந்து வந்தாள்.

குல்லர்வோ வண்டியை நிறுத்தினான். வார்த்தைகளைத் தொிவு செய்து வடிவாகப் பேசினான். "அழகின் அழகே, அமர்வாய் வண்டியில்! பாாில் சிறந்த பாவையே, என் பயணத்தில் சேர்வாய் பூவையே!" என்றான்.

அவள் சொன்னாள்: "துவோனி உனது வண்டியில் அமரும். மரணம் உனது பயணத்தில் சேரும்."

குல்லர்வோ மணிமுனைச் சவுக்கால் ஓங்கி அறைந்தான். குதிரை பறந்தது. வண்டி விரைந்தது. பயணம் தொடர்ந்தது. வழித்தொலை குறைந்தது. சிறிது நேரத்தில் லாப்புலாந்து என்னும் வடநாட்டின் சமப்புல் வௌிகளை வந்தடைந்தான்.

அந்தச் சமப்புல் வௌிகளில், ஈயத்து நகைகளை நெஞ்சில் அணிந்தவள் வந்து கொண்டிருந்தாள். "அாிய பெண்ணே, அருகில் வா! வண்டிக்குள் வந்து எனது கம்பிளிப் போர்வையின் உள்ளே வா! ஆப்பிள் பழங்களும் உண்ணலாம். நல்ல விதைகளும் கடிக்கலாம்" என்று அழைத்தான் குல்லர்வோ.

"சீ, உனது வண்டியில் உமிழ்கிறேன். உனது கம்பிளிப் போர்வைக்குள் குளிர்தான் இருக்கிறது" என்றாள் அவள்.

குல்லர்வோ அவளை எட்டிப் பிடித்தான். வண்டிக்குள் இழுத்தான். உரோமப் போர்வைக்குள் புதைத்தான். "என்னை விடு!" என்று அவள் கத்தினாள். "என்னை விடாவிட்டால் உனது வண்டியை உதைப்பேன். உடைத்து நொருக்குவேன்."

குல்லர்வோ உடனே அவளுக்குத் தனது திரவியப் பெட்டியைத் திறந்து காட்டினான். உள்ளே வெள்ளிக் காசுகள்! வண்ணத் துணிகள்! பொன்னலங்காரக் காலுறை வகைகள்! வெள்ளியில் மின்னிய இடுப்புப் பட்டிகள்! வண்ணத் துணிகள் வனிதையை வென்றன. காசுகள் அவளை அடித்து வீழ்த்தின. வெள்ளி அவளின் செருக்கை அழித்தது. தங்கம் அவளை மயங்க வைத்தது.

குல்லர்வோ அதன்பின் அப்பெண்ணைத் தழுவினான். அணைத்தான். தன்வசமாக்கினான். அவனுடைய ஒரு கை குதிரையின் கடிவாளத்தில் இருந்தது. மறு கை மங்கையின் மார்பில் இருந்தது. அந்தச் செப்பு நிறப் போர்வையில், புள்ளிகள் நிறைந்த உரோம விாிப்பினில் அவளுடன் சல்லாபம் செய்து அவளைக் களைக்க வைத்தான்.

இறைவன் அருளால் அந்த நாள் முடிந்தது. இன்னுமொரு நாள் புதிதாய் விடிந்தது. அந்தப் பெண், "வலியவனே, உனது குடும்பமும் இனமும் எப்படிப்பட்டன? நீ ஓர் உயர்ந்த தந்தையின் வழிவந்தவனாக இருக்க வேண்டுமே!" என்று குல்லர்வோவைக் கேட்டாள்.

குல்லர்வோ சொன்னான்: "எனது இனம் ஒன்றும் பொியதுமல்ல; ஆனால் அத்தனை சிறியதுமல்ல. ஒரு நடுத்தரமானது. நான் கலர்வோ என்பவனின் மகன். அறிவில்லாத ஒரு மூடப் பையன். சாி, இனி உனது இனத்தைப்பற்றிக் கூறு! நீ ஒரு உயர்வான தந்தை வழிவந்தவளா?"

அவள் சொன்னாள்: "எனது இனம் ஒன்றும் பொியதுமல்ல; ஆனால் அத்தனை சிறியதுமல்ல. ஒரு நடுத்தரமானது. கலர்வோ என்பவனின் மகள். அறிவில்லாத ஒரு மூடப் பெண்.

"நான் சிறு பெண்ணாக இருந்த காலத்தில் ஒரு நாள் மலைக் காட்டுக்குச் சிறுபழங்கள் பொறுக்கப் போனேன். ஒரு நாள் பொறுக்கிய பின்னர் அங்கேயே தூங்கினேன். அடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் திாிந்து சிறுபழங்களைப் பொறுக்கினேன். நான் காட்டுக்குள் வெகு தூரம் சென்றுவிட்டதால், திரும்பி வீட்டுக்குப் போக வழி தொியவில்லை. நான் இரண்டு மூன்று நாட்களாக இருந்து அழுதேன். மூன்றாம் நாளில் ஒரு மலை உச்சியில் ஏறி நின்று கத்தினேன். ஆனால் மலையும் அதன் கீழிருந்த புல்வௌியும், 'கத்தாதே1 உனது கத்தல் உனது வீட்டில் யாருக்கும் கேட்காது' என்று எதிரொலித்தன.

"ஆறு நாட்கள் கழிந்த பின்னர், நான் இறந்து போக முயற்சி செய்தேன். ஆனால் இறப்பும் எனக்குக் கிட்டவில்லை. அப்பொழுது நான் இறந்திருந்தால், மூன்று கோடைகள் கழிந்திருக்கும். நான் புல்லாய் முளைத்துச் சலசலத்திருப்பேன். மலராய்த் தலைதூக்கி மலர்ந்திருப்பேன். பசும் புற்றரையில் சிறுபழச் செடியாய்ச் செழித்திருப்பேன். இத்தகைய அதிர்ச்சியான கொடுமையான செய்திகளைக் கேட்க நேர்ந்திருக்காது."

இதைச் சொன்னதும் அவள் எழுந்தாள். சறுக்கு வண்டியிலிருந்து குதித்தாள். ஆற்றை நோக்கி ஓடினாள். பயங்கர நீர்வீழ்ச்சிக்குள் பாய்ந்தாள். நுரைக்கும் நீருள் புகுந்தாள். அலைகளின் அடியில் அமைதி கண்டாள். மரணத்தின் மடியில் மவுனமானாள்.

குலர்வோவும் வண்டியிலிருந்து குதித்தான். பெரும் குரலெடுத்து அழுதான். "ஐயோ, நான் ஒரு பாவி! இதுவென்ன கொடுமை! எனது சொந்தச் சகோதாியையே கெடுத்தேனே! என் தந்தையே, தாயே, இந்த இழிய மகனை ஏன் பெற்றீர்கள்? இரண்டு இரா வயதில் நான் இறக்காததால் மரணம் தன் தர்மத்தைச் செய்யவில்லை. நோயும் தனது கடமையைச் செய்யவில்லை."

அவன் கத்தியை எடுத்துக் கடிவாளத்தை அறுத்துக் குதிரையை வண்டியிலிருந்து அவிழ்த்தான். அதன் முதுகில் பாய்ந்து ஏறிக் குறுகிய வழியால் தந்தையின் நாட்டை நோக்கி விரைந்தான்.

அவனுடைய தாய் முற்றத்தில் நின்றாள். குல்லர்வோ அங்கே போய்ச் சேர்ந்ததும், "ஓ, என் அம்மா, என்னைச் சுமந்தவளே, அந்த நாளில் சவுனாவில் புகையை நிரப்பி, அதில் என்னைப் போட்டுப் பூட்டியிருந்தால், நான் மூச்சடைத்துச் செத்திருப்பேனே! என்னைத் துணியில் சுற்றி நீருள் எறிந்திருந்தால் நான் மூழ்கிச் செத்திருப்பேனே! என்னை தொட்டிலோடு தூக்கித் தீயிலாவது எறிந்திருக்கலாமே! 'வீட்டில் இருந்த தொட்டில் எங்கே?' என்றோ, 'சவுனா அறை ஏன் பூட்டியிருக்கிறது?' என்றோ ஊரவர் கேட்டால், 'பார்லி முளையில் மாவூறல் செய்த போது தொட்டில் சவுனாவில் எாிந்துவிட்டது' என்று நீ சொல்லியிருக்கலாமே!"

தாய் விரைந்து வந்து கேட்டாள்: "நீ என்ன மரண உலகிலிருந்து வந்தவன்போலக் காணப்படுகிறாய்! உனக்கு நேர்ந்த கொடுமைதான் என்ன?"

"அம்மா, கொடுமையிலும் கொடுமை வந்தது உண்மை. என் அன்னை பெற்றவளுக்கு அல்லலைத் தந்தேன். நான் நிலவாியைச் செலுத்திவிட்டுத் திரும்பி வரும்போது வழியில் ஒரு பெண்ணைச் சந்தித்தேன். நான் அவளோடு களியாட்டம் நடத்தினேன். ஆனால் அவள் எனது சொந்தச் சகோதாி. அவள் உண்மையை அறிந்ததும் நீர்ச்சுழியில் பாய்ந்து மரணத்தைத் தழுவி நிம்மதி கொண்டாள். நான் எனது மரணத்தை எங்கே தேடுவேன்? ஊளையிடும் ஓநாயின் வாயிலே விழட்டுமா? உறுமும் கரடியின் அலகிலே புகட்டுமா? திமிங்கிலத்தின் வயிற்றிலே அல்லது கோலாச்சி மீனின் கோரப் பற்களிலே பாயட்டுமா?"

"வேண்டாம், மகனே!" என்று கெஞ்சினாள் தாய். "பின்லாந்து நாட்டில் எத்தனையோ மறைவிடங்கள் இருக்கின்றன. ஒரு மனிதன் தான் செய்த குற்றத்துக்காக ஒளித்து வாழச் சவோ என்ற இடத்தில் பொிய இடம் இருக்கிறது. காலம் கருணை காட்டும் வரை காலத்தால் காயம் ஆறும்வரை நீ அங்கே வாழலாம்."

"நான் மறைந்து வாழப் போகமாட்டேன். என்னைப்போலக் கொடியவன் ஒளித்து வாழக் கூடாது. நான் பொிய போர்க்களம் புகுந்து மரண வாயிலின் கதவைத் தட்டுவேன். ஆனால் உந்தமோ இன்னமும் உயிரோடு இருக்கிறான். தந்தையின் துயருக்கும் தாய் விழிநீருக்கும் அவன் பழிவாங்கப்படவில்லை. எனக்கு நேர்ந்தவற்றை இப்பொழுது நினைக்கத் தேவையில்லை."


36. குல்லர்வோவின் மரணம்

குல்லர்வோ தீட்டினான் வாளை. ஈட்டியைக் கூராக்கினான். ஒரு போருக்கு உடனே ஆயத்தமானான்.

தாய் அவனைத் தடுத்தாள். "ஏழை மகனே, வாள்களை மோதும் வலிய போருக்குப் புறப்பட வேண்டாம். தேவையில்லாமல் போரைத் தொடுப்பவன், தானே வலியச் சமருக்குப் போகிறவன் தானும் வீழ்ந்து அழிந்து போவான். ஆட்டுக் கடாவில் போருக்குப் போகிறாய். ஆடு சேற்றில் அமிழ்த்தப்படும். ஒரு நாயிலோ தவளையிலோ ஏறி நீ வீட்டுக்கு வருவாய்."

"நான் சேற்றில் புதையமாட்டேன். காக்கைகள் கரையும் வயற் காடுகளில் வீழவும் மாட்டேன். நான் போர்க் களத்திலேதான் வீழ்வேன். வாள்கள் மோதும் ஒலிகளின் நடுவில் இறந்துபோவது இனிமையானது. சமாில் சாவதே சாலச் சிறந்தது. நோய்வாய்ப்பட்டு நைந்து போகாமல் திடீரென இறப்பதே திருப்தியானது" என்றான் குல்லர்வோ.

"சாி. நீ போாிலே இறப்பதானால், உன் தந்தை, தாய், சகோதரன், சகோதாிக்கு அவர்களுடைய வயதான காலத்தில் எதை விட்டுச் செல்கிறாய்?" என்று தாய் கேட்டாள்.

"என் தந்தை தொழுவத்து எருக் குவியலில் விழுந்து சாகட்டும்! என் அன்னையும் கையில் வைக்கோல் கட்டுடன் மாட்டுக் கொட்டில் மூலையில் கிடந்து சாகட்டும்! என் சகோதரன் காட்டு வழியிலும் சகோதாி கிணற்று வழியிலும் விழுந்து சாகட்டும்!" இப்படிச் சொன்ன மூடன் குல்லர்வோ வீட்டைவிட்டுப் புறப்பட ஆயத்தமானான்.

"அப்பா, நான் போய்வருகிறேன். நான் இறந்ததாகச் செய்தி வந்தால் நீங்கள் அழுவீர்களா?" என்று அவன் தன் தந்தையைக் கேட்டான்.

"இல்லை" என்றார் தந்தை. "நீ இறந்தால் உன்னிலும் சிறந்த புத்திசாலிப் பிள்ளை ஒன்றைப் பெற்றுக் கொள்ளலாம்."

"நீங்கள் இறந்ததாகச் செய்தி வந்தால், நானும் உங்களுக்காக அழப் போவதில்லை. களிமண்ணில் வாயையும், கல்லிலே தலையையும், சிறு பழங்களில் கண்களையும், காய்ந்த புல்லில் தாடியையும் அலாியின் கவர்த்தடியில் கால்களையும், உளுத்த மரத்தில் இறச்சியையும் செய்து நானும் ஒரு தந்தையைத் தேடிக் கொள்வேன்" என்றான் குல்லர்வோ.

அவன் தன் சகோதரன் பக்கம் திரும்பினான். "சகோதரனே, நான் இறந்ததாகச் செய்தி வந்தால் நீ அழுவாயா?"

"இல்லை. நான் அழமாட்டேன். உன்னிலும் பார்க்க ஒரு நல்ல சகோதரனை நான் தேடிக் கொள்வேன்."

"என் சகோதாியே" என்று கேட்டான் குல்லர்வோ. "நான் இறந்ததாகச் செய்தி வந்தால் நீ அழுவாயா?" அவளும் தன் தந்தையும் சகோதரனும் கூறிய மறுமொழியையே சொன்னாள். குல்லர்வோ, "நானும் உனக்காக அழப் போவதில்லை. கல்லிலே தலையையும், களிமண்ணில் வாயையும், சிறுபழங்களில் கண்களையும், காய்ந்த புல்லில் கூந்தலையும், நீராம்பலில் செவிகளையும், மாப்பிள் மரத்தில் உடலையும் செய்யலாம்."

குல்லர்வோ தாய் பக்கம் திரும்பினான். "அன்னையே, என்னைப் பெற்ற அழகியே, என்னை வளர்த்த தங்கமே, நான் இறந்ததாகச் செய்தி வந்தால் நீங்கள் அழுவீர்களா?"

"ஓர் அன்னையின் உள்ளத்தை நீ அறியமாட்டாய்" என்று தாய் சொன்னாள். "எனது கண்ணீர் வெள்ளம் இந்தக் குடிசையை அடித்துச் செல்லும் வரை அழுவேன். இந்த மாட்டுக் கொட்டில் எனது கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கும்வரை அழுவேன். எனது கண்ணீரால் பனிமழை கட்டியாய் மாறும். பனிக்கட்டி நிலத்திலே படியும். நிலமும் பசுமையாய் மாறும். மற்றவர் முன்னிலையில் எனக்கு அழ முடியாமல் போனால், சவுனாவுக்குள் போயிருந்து இரகசியமாக அழுவேன். சவுனாவின் உயர்ந்த பலகைகள் கண்ணீர் அலைகளில் மிதக்கும்வரை அழுவேன்."

பின்னர் குல்லர்வோ குதூகலத்துடன் போருக்குப் புறப்பட்டான். அவன் சேற்றிலே இசைத்தான். புல்வௌியில் பாடினான். புற்றரையில் கூவினான். காய்ந்த புல் நிலத்தில் கானமிசைத்தான்.

தூதுவன் ஒருவன் வந்தான். செய்தி ஒன்றைத் தந்தான். "வீட்டிலே உனது தந்தை இறந்துவிட்டாரப்பா. அவருடைய கடைசிக் கடன்கள் நிகழ்வதைப் போய் பார்!" என்று தூதுவன் சொன்னான்.

"சாகட்டும்!" என்றான் குல்லர்வோ. "வீட்டிலே ஒரு பொலிக் குதிரை நிற்கிறது. அது அவரை இடுகாட்டுக்கு இழுத்துப் போகட்டும்!"

அவன் பாடிக் கொண்டே தன் பயணத்தைத் தொடர்ந்தான். அங்கே தூதுவன் ஒருவன் வந்தான். செய்தி ஒன்றைத் தந்தான். "உனது சகோதரன் இறந்துவிட்டானப்பா!"

குல்லர்வோ, "சாகட்டும்! வீட்டில் நிற்கும் பொலிக்குதிரை அவனை இடுகாட்டுக்கு இழுத்துப் போகட்டும்!" என்றான்.

பின்னர் தூதுவன் ஒருவன் வந்தான். செய்தி ஒன்றைத் தந்தான். "உனது சகோதாி இறந்துவிட்டாளப்பா!"

குல்லர்வோ, "சாகட்டும்! வீட்டில் ஒரு பெண் குதிரை நிற்கிறது. அது அவளை இடுகாட்டுக்கு இழுத்துப் போகட்டும்!" என்றான்.

அவன் பாடிக் கொண்டே தன் பயணத்தைத் தொடர்ந்தான். புற்றரையில் நடந்து சென்றான். காய்ந்த புல் நிலத்தில் கானமிசைத்தான். அப்போது தூதுவன் ஒருவன் வந்தான். செய்தி ஒன்றைத் தந்தான். "உன் தாய் இறந்துவிட்டாளப்பா!"

"என் அன்னை இறந்துவிட்டாள். நான் எத்தகைய துரதிர்ஷ்டசாலி! திரைத் துணி தைத்தவள், போர்வையில் பூவேலை செய்தவள், நீளமாய் நூல்களை நூற்றவள், நூற் கருவியில் கருமம் செய்தவள் இறந்துவிட்டாள். அவள் ஆவி பிாிந்த நேரம் நான் அருகில் இருக்கவில்லை. குளிர் தாங்கமுடியாமல் இறந்திருக்கலாம். உண்ண உணவில்லாமலும் இறந்திருக்கலாம்" என்றான் குல்லர்வோ.

"இறந்தவளை உயர்ந்த சவர்க்காரத்தால் கழுவுங்கள்! பட்டிலும் சணல் துணியிலும் அவளைக் கட்டுங்கள்! அவளை இடுகாட்டுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்யுங்கள்! சோக கீதங்கள் பாடுங்கள்! வீட்டுக்குத் திரும்பிப் போக எனக்கு நேரமில்லை. ஏனென்றால் உந்தமோ இன்னமும் பழிவாங்கப்படவில்லை" என்று குல்லர்வோ தூதுவனுக்குச் சொன்னான்.

அவன் பாடிக் கொண்டே போருக்குப் போனான். கடவுளை வழிபட்டு ஒரு பொிய வாளைப் பெற்றான். அந்த வாளால் உந்தமோவின் இனம் முழுவதையும் வெட்டிச் சாித்தான். வீடுகளைக் கொழுத்திச் சாம்பலாக்கினான். அடுப்புக் கற்களையும் முற்றத்துப் போி மரத்தையுமே அழியாது விட்டான்.

குல்லர்வோ திரும்பித் தன் பெற்றோர் இருந்த வீட்டுக்கு வந்தான். வீடு வெறுமையாக இருந்தது. கதவைத் திறந்தபோது வீட்டிலிருந்து எவரும் வந்து வரவேற்கவில்லை. அடுப்புச் சாம்பலில் கையை வைத்துப் பார்த்தான். அது குளிராக இருந்ததால் அன்னை உயிரோடு இல்லை என்பதைத் தொிந்து கொண்டான். கணப்பின் கற்களில் இருந்த குளிர் தந்தையும் இறந்துவிட்டார் என்பதைக் கூறியது. கண்களைத் தாழ்த்திச் சுத்தப்படுத்தாத நிலத்தைப் பார்த்தான். சகோதாியும் போய்விட்டாள் என்று விளங்கியது. இறங்கு துறைக்கு ஓடினான். அங்கே தோணிகள் எதுவும் இருக்கவில்லை. சகோதரனும் வீழ்ந்துவிட்டான் என்பதை அறிந்து கொண்டான்.

அவன் வெம்பி வெடித்து அழத் தொடங்கினான். "என் அருமை அன்னையே, இந்தப் பூமியில் எனக்காக எதை விட்டுவிட்டுச் சென்றாய்? உன் கண்களில் நான் அழுவதும் புருவத்தில் புலம்புவதும் தலையில் முறையிடுவதும் உனக்குக் கேட்கவில்லையா?"

கல்லறையில் கிடந்த அவனுடைய அன்னைக்கு அவன் குரல் கேட்டது. அவள், "உன்னோடு சேர்ந்து காட்டுக்கு வர ஒரு கறுப்பு நாயை விட்டுவிட்டு வந்தேன். அதனோடு காட்டுத் தோட்டத்துக்குப் போ. அங்கே தப்பியோவின் கோட்டைகளில் நீல உடைப் பெண்கள் இருப்பார்கள். உனக்கு அங்கே உணவும் கிடைக்கும். உல்லாசமும் கிடைக்கும்" என்று சொன்னாள்.

குல்லர்வோ கறுப்பு நாயுடன் காட்டு வழியே புறப்பட்டான். அவன் சிறிது தூரம் சென்ற பின்னர் ஓர் இடத்துக்கு வந்து சேர்ந்தான். அதுதான் அவன் தனது சகோதாியைக் கெடுத்த இடம்.

அந்த இடத்தில் அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த செயலால் மென்மையான புற்களும் மெதுவாக அழுதன. வயல்கள் வெம்பின. புற்கள் தேம்பின. பூக்கள் புலம்பின. அந்தப் பெண் வீழ்ந்த அந்த இடத்தில் புற்களும் முளைக்கவில்லை. பூக்களும் பூக்கவில்லை.

குல்லர்வோ தனது கூாிய வாளை உருவி எடுத்தான். அதனைத் திருப்பினான். பார்த்தான். இவ்விதம் கேட்டான்: "தவறு செய்தவன் தசையை நீ உண்பாயா? குற்றம் இழைத்தவன் குருதியை நீ குடிப்பாயா?"

வாளுக்கு விளங்கியது. அவனுடைய இக்கட்டை உணாந்தது. அது, "குற்றமிழைத்தவன் தசையை நான் ஏன் உண்ணேன்? குருதியையும் நான் ஏன் குடியேன்?" என்று கேட்டது.

கலர்வோவின் மைந்தனான குல்லர்வோ தனது வாளின் பிடியை புற்றரையில் புதைத்தான். கூாிய அலகைத் தனது மார்பின் பக்கமாகத் திருப்பினான். வாளில் தானே பாய்ந்து தன் உயிரை மாய்த்தான்.

இதுதான் அதிர்ஷ்டமற்ற ஓர் இளைஞனின் அபாக்கிய முடிவு. இதை அறிந்த வைனாமொயினன், "எதிர்கால மக்களே, உங்கள் பிள்ளைகளை முட்டாள்த்தனமாக வளர்க்காதீர்கள். அவனை அன்னியன் வளர்த்தால் அவனுக்கு அறிவே வராது. அவன் வளர்ந்து முதுமையை அடைந்தாலும் மகா பலம் பொருந்திய உடலைத்தான் பெற்றாலும் அவனுடைய மனத்தில் வளர்ச்சி இராது" என்று சொன்னான்.


37. பொன்னில் மணமகள்

இல்மாினன் தனது மனைவியின் மறைவுக்காகப் பல இரவுகள் நித்திரையின்றி அழுதான். பல பகற் பொழுதுகளும் உணவின்றி இருந்தான். கட்டழகி கல்லறைக்குள் போய்விட்டாளே என்று காலையிலும் அழுதான். கடந்த ஒரு மாத காலமாக அவனுடைய செப்புச் சுத்தியல் திரும்பியதில்லை. கொல்லப் பட்டறையில் வேலைச் சத்தம் எதுவும் கேட்டதுமில்லை.

கடைசியில் அவன், "எப்படி வாழ்வேன் என்றே எனக்குத் தொியவில்லை. மனத் துயரால் இரவு முழுவதும் கண் விழித்து இருக்கிறேன். மனமோ சோர்ந்து போய்விட்டது. உடலில் பலம் குன்றிவிட்டது. மயக்கும் மாலைகள் மங்கிப் போய்விட்டன. விடியும் காலைகள் வெறுமையாகிவிட்டன. இனிய இரவுகளில் இன்னல்கள் சூழ்ந்தன. எனது இளம் பருவத்துக்காக நான் ஏங்கித் தவிக்கவில்லை. கரும் புருவத்துக் காாிகைக்காகக் கடும் துயர் கொண்டுள்ளேன். சாமத்தில் ஏமத்தில் கனவு காணும் நேரத்தில் அக்கம் பக்கத்தைக் கை துளாவிப் பார்த்து அவள் இல்லாத வெறுமையை உணாந்து துடிக்கிறது."

கொல்லன் இல்மாினன், மனைவி இல்லாமலேயே வாழ்ந்து வயோதிபத்தை அடைந்தான். அவன் இரண்டு மூன்று மாதங்கள் அழுதான். நான்காம் மாதம் பொன்னையும் வெள்ளியையும் கடலில் பொறுக்கி எடுத்தான். முப்பது சறுக்கு வண்டிகள் நிறையக் காய்ந்த விறகுகளையும் ஏற்றிக் கொண்டு பட்டறைக்கு வந்தான்.

அவன் பொன்னையும் வெள்ளியையும் இலையுதிர் காலத்துச் செம்மறி ஆடு அளவு எடுத்தான். குளிர் காலத்து முயல் அளவும் எடுத்தான். அவற்றைக் கொல்லுலையில் கனலும் கனலில் திணித்தான். அடிமைகளை அழைத்து ஊத வைத்தான்.

அடிமைகள் ஊதினர். கைகளில் கையுறைகள் அணியாமலும் தோள்களைத் துணிகளால் மூடாமலும் துருத்தியை அழுத்தினர். தங்கத்திலும் வெள்ளியிலும் ஒரு பொன்னுருச் செய்யக் கொல்லன் இல்மாினன் தானும் உழைத்தான். அடிமைகளின் ஊதல் போதியதில்லை என்று தானும் ஊதினான்.

கடைசியில் செம்மறியாடு ஒன்று உலையில் உதித்தது. அதற்குத் தங்கத்திலும் செம்பிலும் வெள்ளியிலும் இருந்த உரோமத்தைக் கண்ட பிறர் ஆனந்தம் கொண்டனர். ஆனால் இல்மாினனுக்கு அது திருப்தி தரவில்லை.

இல்மாினன் ஆட்டை மீண்டும் கொல்லுலையில் தள்ளினான். மேலும் பொன்னையும் வெள்ளியையும் சேர்த்தான். அடிமைகளை அழைத்து ஊதச் சொன்னான். அவன் மீண்டும் கொல்லுலைக்குள் எட்டிப் பார்த்தபோது ஒரு குதிரைக்குட்டி உருவாகி வந்தது. அதற்குப் பொன்னிலும் வெள்ளியிலும் பிடாிமயிர் இருந்தது. செம்பில் செய்த காற்குளம்பு இருந்தது. "உன்னை ஓர் ஓநாய்தான் விரும்பும்" என்று சொல்லி, அதனைக் கொல்லுலையில் மீண்டும் போட்டான்.

அடிமைகளை அழைத்து ஊதச் சொன்னான். அவனும் அவர்களுக்கு உதவியாய் இருந்தான். ஒரு முறை, இரு முறை, மும்முறை ஊதிய பின்னர் உலைக்குள் அவனே எட்டிப் பார்த்தான்.

உதித்தாள் ஒரு பெண் உலையிலிருந்து. அவளுக்குப் பொன்னிலே கூந்தல். புற உறுப்புகள் பேரழகு. அதைக் கண்ட இல்மாினன் ஆனந்தம் கொண்டான். ஆனால் ஏனையோர் கவலையே கொண்டனர்.

அவன் இரவு பகலாக ஓய்வே இல்லாமல் அந்தப் பொன்னுருவைத் தட்டித் தட்டிப் பதமாக்கினான். கால்களைப் படைத்தான். கைகளைப் படைத்தான். ஆனால் அந்த உருவம் கால்களை அசைக்கவில்லை. கைகளைத் திருப்பி அவனை அணைக்கவுமில்லை. அவன் அந்தப் பெண்ணுக்குக் காதுகளை அமைத்தான். ஆனால் அந்தக் காதுகளில் ஒன்றும் கேட்கவில்லை. வடிவான ஒரு வாயை அமைத்தான். மின்னும் கண்களைப் பொன்னிலே செய்தான். வாயில் வார்த்தைகள் வந்ததுமில்லை. கண்களில் கனிவைக் கண்டதுமில்லை.

"ஆகா, இவளுக்குப் பேச்சும், பேச நாக்கும், நல்ல மனமும் இருந்தால், சிறந்த சுந்தாியாக இருப்பாள்" என்று இல்மாினன் சொன்னான்.

பின்னர் அவன் தனது பெண்ணைப் பட்டுப் படுக்கைக்குக் கொண்டு வந்தான். மென்மையான தலையணைகளை அடுக்கி வைத்தான். நீராவிக் குளியலுக்குச் சூடேற்றினான். சவர்க்காரமும் இலைக்கட்டும் எடுத்துக் குளிக்கச் சென்றான். மூன்று வாளி நீாில் அந்தப் பொற்பாவையைப் பொற்களிம்புகள் போகச் சுத்தமாகக் கழுவினான்.

அதன்பின் கொல்லனும் குளித்தான். இரும்பு வலைக்குள் பட்டுக் கட்டிலில் பெண்ணின் அருகே நீட்டி நிமிர்ந்து படுத்தான்.

அங்கே அவனுக்குக் குளிராக இருந்தது. உடனே சில போர்வைகளை எடுத்தான். இரண்டு மூன்று கரடித் தோல்களையும் ஐந்தாறு கம்பிளி விாிப்புகளையும் கொண்டு வந்தான். எல்லாவற்றாலும் பொற்பாவையை மூடிச் சூடு வரச் செய்தான். கம்பிளிப் போர்வைகளின் பக்கம் இருந்த அவனுடைய உடல் வெப்பமாக இருந்தது. ஆனால் தங்க மணமகளைத் தொட்ட பக்கம் கடலில் உறைந்த பனிக்கட்டிபோல, இறுகிக் குளிர்ந்த பாறையைப்போலக் கடும் குளிராக இருந்தது.

"இந்தப் பெண் எனக்குத் தோதாக இல்லை" என்றான் இல்மாினன். "இவளை வைனோ நாட்டுக்கு எடுத்துச் சென்று வைனாமொயினனின் வாழ்க்கைத் துணையாக்கலாம். அவனுடைய அன்புக் கோழியாக அங்கேயே இருக்கட்டும்."

இல்மாினன் பொற்பாவையை வைனோ நாட்டுக்குக் கொண்டு போனான். அங்கே போனதும், "ஓகோ, வைனாமொயினனே, உனக்குத் துணையாக ஒரு பெண்ணைக் கொண்டு வந்திருக்கிறேன். இவள் மிகுந்த அழகுடையவள். வீண் வார்த்தை பேசும் பொிய வாய் இல்லாதவள்" என்றான் இல்மாினன்.

நித்திய முதிய வைனாமொயினன் அந்தப் பொற்பாவையைக் கவனமாகப் பார்த்தான். பின்னர், "இந்தப் பாவையை ஏன் இங்கே கொண்டு வந்தாய்?" என்று கேட்டான்.

"வேறெதற்கு? எல்லாம் உனது நன்மைக்காகத்தான். வாழ்க்கை முழுக்க உனது அணைப்பிலே அன்புக் கோழியாக இருப்பாள்."

"ஓ, என் அன்புச் சகோதரா" என்றான் வைனாமொயினன். "இந்தப்பாவையைக் கொண்டு போய் நெருப்பிலே தள்ளி, நல்ல விதம்விதமான பொருட்களைச் செய்! அல்லது இதனை ரஷ்யாவுக்கோ ஜேர்மனிக்கோ கொண்டுபோ! அங்கே இவளைப் பெறுவதற்குப் பணம் படைத்தவர்கள் போராடுவார்கள். எனது இனத்துக்கு இவள் உகந்தவள் அல்லள். பொன்னாலும் வெள்ளியாலும் ஆன பெண்ணுக்கு ஆசைப்பட்டுப் பின்னர் அல்லல்படுவதும் எனக்கு உகந்ததுவல்ல."

அவ்விதமாக அமைதிநீர் மனிதன் என்னும் வைனாமொயினன் அந்தப் பொற்பாவையை நிராகாித்தான். பின்னர் அவன், வளரும் சந்ததியினர் பொன்னுக்கும் வெள்ளிக்கும் தலைவணங்குவதைத் தடுக்கும் வகையில் இப்படிச் சொன்னான்: "ஏழைப் பையன்களே, வளரும் வீரர்களே, உங்களிடம் செல்வம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திங்களின் வெண்ணிலவு திகழும்வரையில் பொன்னுக்கும் வெள்ளிக்கும் அலையாதீர்கள்! தங்கத்தின் ஒளியும் வெள்ளியின் மினுக்கமும் குளிரைத்தான் தரும்."


38. வட நாட்டுப் பெண்ணைக் கவர்தல்

அந்த அழிவேயில்லாத அற்புதக் கலைஞன் இல்மாினன், பொன்னாலும் வெள்ளியாலும் செய்த மணப்பெண்ணைக் கைவிட்டான். தனது பழுப்பு நிறக் குதிரையைச் சறுக்கு வண்டியில் பூட்டினான். வண்டியில் ஏறி வசதியாய் அமர்ந்தான். வடநாட்டுத் தலைவியின் அடுத்த மகளைக் கேட்பதற்காக வடநாடு நோக்கிப் புறப்பட்டுப் போனான்.

மூன்று நாட்கள் பயணம் செய்து வடநாட்டை வந்தடைந்தான் இல்மாினன். வடநாட்டின் தலைவி அவனைக் கண்டவுடன் முதலில் கேட்ட கேள்வி இதுதான்: "எனது மகள் தனது கணவனுடைய வீட்டில் எப்படி இருக்கிறாள்?"

இல்மாினன் ஆழ்ந்த துயரும் தாழ்ந்த தலையுமாய், உயர்ந்த தொப்பியும் ஒருங்கே சாிய, "மாமியாரே, உன் மகள் எப்படி வாழ்கிறாள் என்று என்னைக் கேட்க வேண்டாம்! அவளுக்கு ஒரு கொடிய காலம் வந்ததால் மரணத்தின் வாயில் வீழ்ந்துவிட்டாள். இப்பொழுது உன் இனிய மகள் புதருக்குள் துங்குகிறாள். என் கரும்புருவத்துக் கண்மணி புற்களின் கீழ் படுத்திருக்கிறாள். அன்பு மாமியே, இப்பொழுது நான் உன் இரண்டாவது மகளைக் கேட்டு வந்திருக்கிறேன். உன் இரண்டாவது மகள் வந்து தன் சகோதாியின் வெற்றிடத்தை நிரப்பட்டும்" என்று சொன்னான்.

"எனது மூத்த மகளை உனக்குத் தந்தபோதே நான் பெரும் பிழை செய்து விட்டேன். அந்தச் செங்கன்னம் படைத்த இனியவளை இளம் வயதிலேயே இறக்க விட்டாய். அடடா, அவளை ஓநாயின் வாய்க்குள் திணித்ததுபோல, உறுமும் கரடிக்குக் கொடுத்ததுபோல உன்னிடம் கொடுத்துவிட்டேனே! உன் வீட்டுக் காியைக் கழுவவும் தூசி துடைக்கவும் என் இரண்டாவது மகளைத் தரவே மாட்டேன். அதிலும் பார்க்க அவளைக் கொண்டுபோய் இரையும் நீர்வீழ்ச்சிக்குள் தள்ளிவிடலாம். துவோனி என்னும் மரண ஆற்றின் கோலாச்சி மீன் பற்களுக்கு இரையாக்கலாம்" என்று கத்தினாள் லொவ்ஹி.

இல்மாினன் இதைக் கேட்டதும் வாயைக் கோணித் தலையைத் திருப்பிக் கறுத்தத் தாடியைத் திருகி முறுக்கினான். வீட்டின் கூடத்தின் கூரையின் கீழ் நின்று சுருள் மயிர்த் தலையைச் சாித்தே அசைத்தான். "பெண்ணே, உன் சகோதாியின் இடத்தில் இருந்து தேன் ரொட்டி சுட்டு எடுக்கவும் மதுவை வடித்து வைக்கவும் என்னோடு புறப்படு!" என்று அவன் சொன்னான்.

நிலத்தில் இருந்த ஒரு பிள்ளை பாடியது. "அன்னியனே, போ வௌியே! முன்பொரு முறை நீ வந்து இந்தக் கோட்டைக் கதவைத் தட்டியபோதே ஒரு பக்கத்தை இடித்து அழித்தாய். பெண்ணே, சகோதாியே, இந்த மாப்பிள்ளையின் சொற்களைக் கேட்டோ பாதத்தைத் பார்த்தோ மயங்கி விடாதே! அவனிடம் இருப்பது ஓநாய் வாய் முரசு. நாியின் நகங்கள். இடுப்பில் இருப்பது இரத்தம் குடிக்கும் கொடிய கத்தி. "

லொவ்ஹியின் இரண்டாவது மகள் இல்மாினைிடம், "எனக்கு உன்னில் அக்கறை இல்லை. உன்னோடு புறப்படும் எண்ணமும் இல்லை. நீ என் சகோதாியைக் கொன்றாய்! என்னையும் கொல்வாய்! உன்னைப் போன்ற ஒரு மூடக் கொல்லனின் காிப் புகை சூழ்ந்த வீட்டில் நான் வாழ விரும்பவில்லை. எனக்கு ஒரு உயர்ந்தவன் வருவான். சிறந்த சறுக்கு வண்டியில் வருவான். தரமான வீட்டில் இருந்து அவன் வருவான்" என்று சொன்னாள்.

இல்மாினனுக்கு மீண்டும் கோபம் வந்தது. அந்தப் பெண்ணைப் பிடித்தான். வீட்டிலிருந்து பனிப்புயல்போலப் பாய்ந்து வந்தான். அவளைச் சறுக்கு வண்டிக்குள் திணித்தான். தானும் வண்டியில் ஏறி அமர்ந்தான். வண்டியைத் தனது வீடு நோக்கிச் செலுத்தினான். அவனது ஒரு கை குதிரையின் கடிவாளத்தில் இருந்தது. மறு கை மங்கையின் மார்புக் காம்பில் இருந்தது.

லொவ்ஹியின் மகள் அழுது புலம்பினாள். "நான் இதோ சிறுபழச் செடிகளின் சேற்று நிலத்துக்குப் போகிறேன். சேம்பங் கிழங்கின் கிடங்குக்குப் போகிறேன். ஒரு பறவையாய் அங்கே நான் அழிந்து போவேன். இல்மாினனே, கேள்! நீ இப்பொழுது என்னைக் கீழே இறக்கி விடாவிட்டால் உனது சறுக்கு வண்டியை உதைத்து நொருக்குவேன்" என்று சொன்னாள்.

"அதனாலேதான் வண்டியின் இரண்டு பக்கங்களையும் நல்ல இரும்பினால் செய்திருக்கிறேன். அது ஒரு பெண்ணின் போராட்டங்களையும் உதைகளையும் தாக்குப் பிடிக்கும்" என்று சொன்னான் இல்மாினன்.

காாிகை அப்போது கத்திப் புலம்பினாள். கைகளைப் பின்னிப் பிசைந்தாள். பின்னர் இப்படிச் சொன்னாள்: "இங்கிருந்து என்னை நீ விடுவியாது இருப்பாயாகில், நான் ஒரு பாடலைப் பாடுவேன். கடல்மீனாகிக் கடலுள் புகுவேன். வெண்மீனாகி வெள்ளலையில் மறைவேன்."

"கடல் மீனாகிக் கடலுள் புகுந்தாயானால் கோலாச்சி மீனாகிக் கூடவே நான் வருவேன்" என்றான் இல்மாினன்.

"கோலாச்சி மீனாகிக் கூடவே வருவாயானால், கல்லின் குழிக்குள் கீாியாய் நான் நுழைவேன்."

"கல்லின் குழிக்குள் கீாியாய் நுழைவாயானால், நீர்நாய் வடிவெடுத்து உனைத் தொடர்ந்து நான் வருவேன்."

"நீர்நாய் வடிவெடுத்து எனைத் தொடர்ந்து வருவாயானால், மேகப்புள் ஆவேன். மேகத்தில் மறைந்திருப்பேன்" என்றாள் அவள்.

"மேகப் புள்ளாகி மேகத்தில் மறைவாயானால், கழுகின் உருவெடுப்பேன். கன்னி உனைத் தொடர்வேன்" என்றான் இல்மாினன்.

சிறிது தூரம் சென்றதும் குதிரை செவிகளை நிமிர்த்திப் பரபரத்தது. அந்தப் பெண் தலையை உயர்த்தி எட்டிப் பார்த்தாள். பனிப் பாதையில் சில பாதச் சுவடுகள் தொிந்தன. "இந்தப் பாதையின் குறுக்காய் ஓடியது எது?" என்று அவள் கேட்டாள்.

"பாதையின் குறுக்காய் ஓடியது முயல்" என்றான் இல்மாினன். அவள் பெருமூச்சு விட்டாள். "ஓ, நான் எவ்வளவு துர்ப்பாக்கியசாலி! இந்தச் சுருங்கல் முகத்தானின் வண்டியில் இருப்பதிலும் பார்க்க முயலின் வழித் தடத்தில் இருந்திருக்கலாம். அந்த முயலுக்கு அழகான கம்பிளி உரோமம். இவனிலும் பார்க்கச் சிறந்த வாய் அதற்கு!" என்று சொன்னாள்.

இல்மாினன் தனது இதழைக் கடித்தான். தலையைத் திருப்பினான். வண்டியைத் தொடர்ந்து செலுத்திச் சென்றான். சிறிது தூரம் சென்ற பின்னர் குதிரை மீண்டும் செவிகளை நிமிர்த்திப் பரபரத்தது. அந்தப் பெண் தலையை உயர்த்தி எட்டிப் பார்த்தாள். பனிப் பாதையில் பாதச் சுவடுகள் தொிந்தன. "இந்தப் பாதையின் குறுக்காய் ஓடியது எது?" என்று கேட்டாள்.

"பாதையின் குறுக்காய் ஓடியது நாி" என்றான் இல்மாினன். அவள் பெருமூச்சு விட்டாள். "ஓ, நான் எவ்வளவு துர்ப்பாக்கியசாலி! இதிலும் பார்க்க ஒரு நாியின் வண்டியில் பயணிப்பது நன்றாக இருந்திருக்கும். நாியின் உரோமம் மிகவும் நல்லது. இவனிலும் பார்க்கச் சிறந்த வாய் அதற்கு!" என்று சொன்னாள்.

இல்மாினன் தனது இதழைக் கடித்தான். தலையைத் திருப்பினான். வண்டியைத் தொடர்ந்து செலுத்திச் சென்றான். சிறிது தூரம் சென்ற பின்னர் குதிரை மீண்டும் செவிகளை நிமிர்த்திப் பரபரத்தது. அந்தப் பெண் தலையை உயர்த்தி எட்டிப் பார்த்தாள். பனிப் பாதையில் பாதச் சுவடுகள் தொிந்தன. "இந்தப் பாதையின் குறுக்காய் ஓடியது எது?" என்று கேட்டாள்.

"பாதையின் குறுக்காய் ஓடியது ஓநாய்" என்றான் இல்மாினன். அவள் பெருமூச்சு விட்டாள். "ஓ, நான் எவ்வளவு துர்ப்பாக்கியசாலி! இந்தச் சுருங்கல் முகத்தானின் வண்டியில் இருப்பதிலும் பார்க்க ஓநாயின் வழித் தடத்தில் இருந்திருக்கலாம். அந்த ஓநாய்க்கு அழகான கம்பிளி உரோமம். இவனிலும் பார்க்கச் சிறந்த வாய் அதற்கு!" என்று சொன்னாள்.

இல்மாினன் தனது இதழைக் கடித்தான். தலையைத் திருப்பினான். வண்டியைத் தொடர்ந்து செலுத்திச் சென்றான். அவர்கள் ஒரு கிராமத்தை அடைந்தார்கள். ஓர் இரவு அங்கே தங்க வேண்டியதாயிற்று. இல்மாினன் பயணக் களைப்பினால் ஆழ்ந்து தூங்கினான். இல்மாினன் நல்ல உறக்கத்தில இருக்கையில், இன்னொருவன் வந்து பெண்ணைச் சிாிக்க வைத்தான்.

காலையில் கண் விழித்த இல்மாினன் கடும் சினம் கொண்டான். வாயைக் கோணித் தலையைத் திருப்பிக் கறுத்தத் தாடியைத் திருகி முறுக்கினான். "இவளை நான் இப்போது சபித்துப் பாடவா? வனமாகச் சபித்து வனத்தோடு சேர்க்கவா? நீருக்குள் சபித்து நீர்ப் பிராணி ஆக்கவா? வனமாகச் சபித்து வனமாகச் சேர்க்கேன். வனத்துக்கு அதனால் வாதைகள் வரலாம். நீருக்குள் சபித்து நீர்ப் பிராணி ஆக்கேன். நீாில் மீன்கள் விலகியே செல்லும். எனவே, வாளை எடுத்து வெட்டி வீழ்த்துவேன்" என்றான் இல்மாினன்.

இந்த மனிதனின் வார்த்தைகள் வாளுக்குப் புாிந்தது. "பெண்களைக் கொல்வதற்காக என்னைப் படைக்கவில்லை" என்று வாள் சொன்னது.

இல்மாினன் சினந்து மந்திரப் பாடல்களைப் பாடத் தொடங்கினான். அந்தப் பெண்ணைக் கடற் பறவையாக்கினான். அவள் கடற் பறவையாகி, கற்பாறைகளில் கத்தி, நீாில் எதிரொலித்து, காற்றிலே மோதிக் கலங்கி நின்றாள்.

அதன்பின் இல்மாினன் வண்டியில் ஏறிப் பயணத்தைத் தொடர்ந்தான். அவன் ஆழ்ந்த துயரும் தாழ்ந்த தலையுமாய்த் தனது நாட்டுக்கு வந்து சேர்ந்தான்.

முதிய பாடகன் வைனாமொயினன், "சகோதரனே, ஏன் வட நாட்டிலிருந்து சாிந்த தொப்பியும் துவண்ட மனமுமாய் திரும்பி வருகிறாய்? அங்குள்ளவர்கள் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்?" என்று கேட்டான்.

"வடக்கில் அவர்கள் சிறப்பாக வாழ்கிறார்கள். அங்கே சம்போ என்ற மந்திர ஆலை அரைக்கிறது. மின்னும் மூடி சுழல்கிறது. ஒரு நாளைக்கு உண்பதற்குத் தேவையான உணவை அரைக்கிறது. அடுத்த நாள் விற்பனைக்குத் தேவையான உணவை அரைக்கிறது. மூன்றாம் நாளில் சேமித்து வைக்கத் தேவையான உணவை அரைக்கிறது. திரும்பவும் சொல்கிறேன். அங்கே சம்போ இருப்பதனால் உழுதலும் அமோகம். விதைத்தலும் அமோகம். விளைச்சலும் அமோகம். அவர்களுடைய வாழ்வில் அளவில்லாச் சிறப்பு. அவர்களுடைய நாட்டில் அழிவில்லாச் செல்வம்!"

"இல்மாினனே" என்றான் வைனாமொயினன். "எங்கே உன் இளம் மனைவி? ஏன் வெறும் கையுடன் திரும்பி வந்தாய்?"

"நான் அவளை ஒரு கடற்புள்ளாகச் சபித்தேன். அவள் ஒரு கடற் பறவையாகக் கற்பாறைகளில் கத்தித் திாிகிறாள். நீர்ப்பாறை உச்சியில் கீச்சிட்டுத் திாிகிறாள்" என்று இல்மாினன் சொன்னான்.


39. வடநாட்டின் மீது படையெடுப்பு

முதிய வைனாமொயினன். வடநாட்டுக்கு வந்த வாழ்வைப்பற்றி எண்ணிப் பார்த்தான். பிறகு, "ஓகோ, நல்ல நண்பனே, இல்மாினனே, நாங்கள் வடநாட்டுக்குப் போவோம். போய் அந்தச் சம்போவைப் பெறுவோம். அந்த மின்னும் மூடியையும் பார்ப்போம்" என்று சொன்னான்.

"சம்போவையும் மூடியையும் நாங்கள் பெறவும் முடியாது. இங்கு கொண்டுவரவும் முடியாது" என்ற இல்மாினன் மேலும் விளக்கினான். "சம்போ, வடநாட்டின் கல்மலையின் செப்பு முடியில் ஒன்பது பூட்டுகள் போட்டுப் பூட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து ஐம்பத்தாறு அடி ஆழத்துக்கு வேர்கள் இறங்கி இருக்கின்றன. ஒரு வேர் பூமியன்னையைப் பலமாகப் பற்றியிருக்கிறது. மறு வேர் அருவிக்குள் ஓடி இறுக்கமாய் இருக்கிறது. மூன்றாவது வேர் வீட்டு மலைக்குள் மாட்டியிருக்கிறது."

"சகோதரனே, நாங்கள் எப்படியும் வடநாட்டுக்குப் போவோம். ஒரு பொிய கப்பலைக் கட்டி, அதில் சம்போவை வட நாட்டிலிலிருந்து கொண்டு வருவோம்" என்றான் வைனாமொயினன்.

"தரைவழிப் பயணம் பாதுகாப்பானது" என்றான் இல்மாினன். "கடல் வழியாகப் பேய் பிசாசுதான் பயணிக்கும். கடலின் அகன்ற பெருவௌியில் மரணம் வந்து சேரும். நாங்கள் எங்கள் விரல்களையும் உள்ளங்கைகளையும் துடுப்புகளாகப் பயன்படுத்த நேரும்."

"தரைவழிப் பயணம் பாதுகாப்பானதுதான். ஆனால் வளைந்து வளைந்து செல்லும் சுற்றுப் பாதை சிரமமானது. மின்னும் கடலில் துள்ளும் அலையில் தோணியில் செல்வது குதூகலமானது. மேற்குக் காற்று அசைத்தாட்ட தெற்குக் காற்றுத் தாலாட்ட, அலைகள் கப்பலை அணைத்துச் செல்ல, அந்தப் பயணம் இனிமையாய் அமையும். ஆனால் நீ கடற் பயணத்தை விரும்பாதபடியால், கரையோரமாகத் தரைவழியே போகலாம்" என்ற வைனாமொயினன் தொடர்ந்தான். "எனக்கு இப்போது தீ கக்கும் அலகுள்ள இரும்பு வாள் ஒன்றை அடித்துத் தா! புகார் மூடிய இருண்ட வடநாட்டில் தீய விலங்குகளையும் கொடிய மக்களையும் அதனால் வீழ்த்திச் சம்போவைக் கொண்டு வரலாம்."

இல்மாினன் என்னும் நித்தியக் கலைஞன் கொல்லுலையில் இரும்பைத் திணித்தான். கொஞ்சம் உருக்கையும் போட்டான். கைப்பிடியளவு பொன்னையும் கைப்பிடியளவு வெள்ளியையும் அதனுடன் சேர்த்தான். அடிமைகளை அழைத்து வந்து உலையை ஊத வைத்தான். இரும்பும் உருக்கும் கனிந்து களியாகிக் குழம்பாகி வந்தது. வெள்ளி உருகி நீர்போல மின்னியது. பொன்னோ கடலலைபோலப் பிரகாசித்தது.

இல்மாினன் குனிந்து உலைக்குள் எட்டிப் பார்த்தான். வாளொன்று தங்க முடியுடன் உலையில் பிறந்தது. அதனை வௌியே எடுத்து பட்டறைக் கல்லில் வைத்துச் சுத்தியலால் தட்டித் தட்டி ஓர் உயர்ந்த வாளை உருவாக்கினான்.

வைனாமொயினன் அங்கே வந்தான். அந்தத் தீ கக்கும் வாளைத் தனது வலது கரத்தில் ஏந்தித் திருப்பித் திருப்பிப் பார்த்தான். பின்னர் இப்படிக் கேட்டான்: "தாித்திருப்பவனின் தரத்துக்கு ஏற்பத் தகுதி வாய்ந்ததா இந்த வாள்?"

ஆம், அது உண்மையிலேயே தாித்திருப்பவன் தரத்துக்கு ஏற்பத் தகுதி வாய்ந்த வாள்தான். இல்மாினன் அந்த வாளுக்கு அலங்கார வேலையை இப்படிச் செய்திருந்தான். அதன் முனையில் முழுமதி திகழ்ந்தது. அதன் பக்கத்தில் பகலவன் துலங்கினன். கைப்பிடியில் விண்மீன்கள் கண்சிமிட்டின. அலகில் ஒரு குதிரை அருமையாய்க் கனைத்தது. குமிழில் ஒரு பூனை 'மியாவ்' என்று சொன்னது. உறையில் ஒரு நாய் உறுமியே நின்றது.

அதன்பின் வைனாமொயினன் அந்த வாளை ஓர் உயர்ந்த மலையின் உச்சி வெடிப்பில் சுழற்றித் தீட்டினான். "இந்த வாளால் ஒரு மலையையும் பிளப்பேன்" என்றான்.

இல்மாினன், "நீாிலும் நிலத்திலும் எழக்கூடிய அபாயத்திலிருந்து என்னை எப்படிப் பாதுகாப்பேன்? இரும்பிலே சட்டையைத் தட்டி அணியவா? உருக்குக் கவசமே அதனிலும் உகந்ததா? கவசம் மனிதனுக்கு மிகவும் முக்கியம். இரும்புக் கவசமே உரமாக இருக்கும். உருக்குக் கவசமோ அதனிலும் உறுதி" என்றான்.

பயணத்தைத் தொடங்கும் வேளை வந்தது. இரு நண்பர்களும் கைகளில் கடிவாளங்களையும் தோள்களில் குதிரையின் அணிகளையும் சுமந்தபடி, சணல் நூல் போன்ற பிடாி மயிர் கொண்ட ஒரு குதிரையைத் தேடிப் புறப்பட்டார்கள். நீல நிறத்து நெடுங் காட்டுப் புதர்கள் முழுவதிலும் தேடிக் கடைசியில் சணல் நிறத்துப் பிடாி மயிர்க் குதிரையைக் கண்டு பிடித்தார்கள்.

குதிரைக்குத் தலையணி பூட்டிக் கடிவாளத்தையும் கட்டினார்கள். குதிரையுடன் அவர்கள் பயணத்தைத் தொடங்கியபோது கடற்கரையிலிருந்து ஓர் அழுகுரல் கேட்டது.

"அது ஒரு பெண்ணின் அழுகை அல்லவா? ஒரு செல்லக் கோழியின் குரல் போலில்லையா? கிட்டவே போய்ப் பார்க்கலாம்" என்றான் வைனாமொயினன்.

அவர்கள் அருகில் போனபோது அது ஒரு பெண்ணல்ல என்பதைக் கண்டார்கள். அங்கே ஒரு படகுதான் புலம்பிக் கொண்டு இருந்தது.

"நீ ஏன் அழுகிறாய்? பலகைகள் பருமனாய்த் தடிப்பமாய் இருப்பதால் அழுகிறாயா?" என்று கேட்டான் வைனாமொயினன்.

படகு, "ஒருத்தியின் பிறந்த வீடு உயர்ந்ததாயினும், கணவன் வீடே சிறந்த வீடாம். படகும் நீாில் மிதப்பதையே சிறப்பாக விரும்பும். போர்க் கப்பல் ஒன்று உருவாகிறது என்று பாடிப் பாடியே என்னைக் கட்டினார்கள். ஆனால் நான் போருக்குப் போனதேயில்லை. தரங்கெட்ட படகுகள்கூட கோடை காலத்தில் மூன்று தரம் பொருட்களையும் திரவியங்களையும் சுமந்து வருகின்றன. நூறு பலகைகளால் நிர்மாணிக்கப்பட்ட நல்ல படகான நான் இந்தத் துறையில் கிடந்து உளுத்துப் போகிறேன். எனது வளைவுப் பட்டியில் நிலப் புழுக்கள் வாழ்கின்றன. பாய்மரத்தில் குருவிகள் கூடு கட்டுகின்றன. காட்டுத் தவளைகள் முன்னணியத்தில் துள்ளி விளையாடுகின்றன. நாி என்னைச் சுற்றி வரவும் எனது கிளைகளில் அணில் ஓடித் திாியவும் நான் ஓர் ஊசியிலை மரமாகவே இருந்திருக்கலாம்" என்று சொன்னது.

"அழாதே" என்றான் வைனாமொயினன். "நீ விரைவில் போருக்குப் போவாய்! நீ ஒரு தெய்வீகப் படைப்பாக இருந்தால், கையோ புயமோ தோளோ தொடாமல் தண்ணீாில் இறங்கு!"

"கை புயம் தோளால் தொட்டுத் தள்ளப்படாமல் எங்கள் இனத்தில் எவருமே தண்ணீாில் இறங்கியதில்லை" என்றது படகு.

முதிய வைனாமொயினன் குதிரையை ஒரு மரக் கிளையில் கட்டிவிட்டுப் படகைத் தண்ணீாில் தள்ளினான். "படகே, பார்வைக்குப் பொிதாகத் தொிகிற நீ எங்களைச் சுமந்து செல்லவும் பொருத்தமாக அமைவாயா?" என்று கேட்டான்.

"என்னிடம் போதிய இடம் இருக்கிறது. நூறு பேர் இருந்து துடுப்பை வலிக்கலாம். ஆயிரம் பேர் அமர்ந்து நன்றாய்ப் போகலாம்" என்றது படகு.

அதன்பின் வைனாமொயினன் அமைதியாகப் பாடத் தொடங்கினான். அவனுடைய பாடலால் சிலுப்பிய தலைகளும் உரத்த கைகளும் காலணிக் கால்களுமுடைய மாப்பிள்ளைகள் படகின் ஒரு பக்கத்தில் தோன்றினார்கள். அடுத்த பாடலால் தலைகளில் ஈய அணிகளும் செம்புப் பட்டிகளும் விரல்களில் தங்கமும் அணிந்த பெண்கள் மறு பக்கத்தில தோன்றினார்கள். துடுப்புப் பலகையாசனம் நிறைய முதிய மனிதர் தோன்ற இன்னொரு பாடலையும் பாடினான்.

வைனாமொயினன் தானே மிலாறு மரத்துப் [21]பின்னணியத்தில் அமர்ந்து மீண்டும் பாடினான்: "ஓடு படகே, ஓடு! மரங்களில்லாத நீர்ப் பரப்பில் ஓடு! நீாில் குமிழிபோல நழுவி ஓடு! அலையில் நீராம்பல் மலரைப்போல மிதந்து ஓடு!"

அவன் இளைஞர்கைளை அழைத்துத் துடுப்பு வலிக்கப் பணித்தான். அவர்கள் வலித்தனர். துடுப்புகள் வளைந்தன. ஆனால் தூரம் குறையவில்லை. பின்னர் இளைஞரை இருக்கச் சொல்லிவிட்டுப் பெண்களை அழைத்து வலிக்கப் பணித்தான். பெண்கள் வலித்தனர். விரல்கள் வளைந்தன. ஆனால் படகு அசைவில்லை. இளைஞரைப் பார்க்கச் சொல்லிவிட்டு முதியோரை அழைத்து வலிக்கப் பணித்தான். முதியோர் வலித்தனர். தலைகள் நடுங்கின. ஆனால் பயணம் தொடங்கவில்லை.

பின்னர் இல்மாினன் வந்தான் துடுப்பை வலித்தான். உடனே படகு புறப்பட்டது. பயணம் தொடங்கியது. துடுப்பை வலித்தபோது எழுந்த சத்தமும் உகைமிண்டின் ஓசையும் வெகு தூரத்திலும் கேட்டது. போிமரத் துடுப்புகள் அசைந்தபோது ஆசனங்கள் ஆடின. பக்கங்கள் வளைந்தன. துடுப்பின் பிடிகள் காட்டுக்கோழிபோலக் கத்தின. அலகுகள் அன்னம்போலக் கூவின. பின்னணியம் காகம் போலக் கத்தியது. உகைமிண்டு வாத்துப் போல இரைந்தது.

அந்தச் சிவப்புப் பின்னணியத்து ஆசனத்தில் துடுப்புடன் இருந்த வைனாமொயினன், தூரத்தில் ஒரு கடல்முனையையும் ஒரு வறிய கிராமத்தையும் கண்டான்.

அந்தக் கிராமத்தில் செங்கன்னத்துப் போக்கிாி லெம்மின்கைனன் வசித்து வந்தான். ரொட்டியும் மீனும் கிடையாமல் அவன் அந்த ஏழைக்குடிசையில் வருந்தி அழுது கொண்டிருந்தான்.

அந்தக் கடல்முனையில் பசிமுனை என்று அழைக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து லெம்மின்கைனன் ஒரு புதுப் படகுக்கு ஓடக்கட்டை சீவிக்கொண்டிருந்தான். அவன் கதிரவன் கீழே தலையைத் திருப்பினான். வடமேற் பக்கமாய்ப் பார்வை போனது. தூரத்தில் ஒரு வானவில்லும் அதற்கப்பால் ஒரு முகில் கூட்டமும் தொிந்தன. படகு அருகில் வந்ததும் வடிவாகத் தொிந்தது. அது வானவில்லல்ல. முகிலுமே அல்ல. தௌிந்த பெரும் சமுத்திரத்தின் விாிந்து பரந்த நீர்ப் பரப்பிலே மிதந்து சென்றது ஒரு கப்பல். அதன் பின்னணியத்தில் இருந்தவன் புகழில் நிகாில்லாதவன். துடுப்புடன் இருந்தவன் அழகில் இணையில்லாதவன்.

"இந்தப் படகைப்பற்றி நான் அறிந்ததில்லையே" என்றான் லெம்மின்கைனன். "அது பின்லாந்திலிருந்து வருகிறது. துடுப்புக் கிழக்கிலிருந்து அசைகிறது. சுக்கான் வட மேற்கைக் காட்டுகிறது."

செங்கன்னம் படைத்த லெம்மின்கைனன் உரத்துக் கத்தினான். "அது யாருடைய படகு?"

படகிலிருந்த ஆண்கள் பெண்கள் அனைவாிடமிருந்தும் பதில் ஒன்றாக வந்தது. "வைனாமொயினனின் படகையே அடையாளம் தொியாத காட்டுவாசியே, யாரப்பா நீ? பின்னணியத்தில் இருக்கும் நாயகனைத் தொியாதா? துடுப்புடன் இருக்கும் நாயகனைத் தொியாதா?"

குறும்பன் லெம்மின்கைனன், "இப்பொழுது பின்னணியத்தில் இருப்பவனைத் தொிகிறது. துடுப்புடன் இருப்பவனையும் தொிகிறது. வைனாமொயினனே, இல்மாினனே, எங்கே பயணம்?" என்று கேட்டான்.

"உயர்ந்து எழுகின்ற வெண்ணுரை அலைகளின் மேலே வடக்கு நோக்கிப் போகிறோம். செம்பு மலையிலிருக்கும் சம்போவைப் பெயர்த்து வரப்போகிறோம்."

"வைனாமொயினனே, என்னையும் மூன்றாவது வீரனாகச் சேர்த்துக்கொள்! போர் என்று ஒன்று வந்தால், எனது உள்ளங் கைகளுக்கும் தோள்களுக்கும் நான் ஆணையிட்டால் போதும். எனது வாள் தனது வீரத்தைக் காட்டும்."

இளைஞன் லெம்மின்கைனனையும் பயணத்தில் சேர்த்துக் கொள்ள வைனாமொயினன் சம்மதித்தான். லெம்மின்கைனன் கொஞ்சம் பலகைகளுடன் வந்து படகில் ஏறினான்.

"இந்தப் படகில் போதிய அளவு மரங்களும் பலகைகளும் இருக்கின்றன. எதற்காக நீயும் பலகைகளைக் கொணாந்து கப்பலில் நிறையைக் கூட்டுகிறாய்?" என்று கேட்டான் வைனாமொயினன்.

"பாதுகாப்பு ஒருபோதும் படகைப் புரட்டாது. வைக்கோல் போாின் ஆதார மரமே அதைக் கவிழ்த்துவிடாது. படகின் பக்க மரங்களை வடபுலக் காற்றுக் கேட்பது வழக்கம்" என்றான் லெம்மின்கைனன்.

வைனாமொயினன், "காற்று வந்து அடித்துச் செல்லாமல் இருக்கவும், புயல் வந்து புரட்டாமல் இருக்கவும்தான் போர்க்கப்பலின் மார்பு இரும்பினால் செய்யப்படுகிறது. முன்னணியம் உருக்கினால் செய்யப்படுகிறது" என்று சொன்னான்.


40. 'கந்தலே' என்னும் யாழ்

நித்திய முதிய வைனாமொயினன் பாடிக் கொண்டே பெரும் அலைகளின் மேல் படகை ஓட்டினான். கடல்முனையில் இருந்த வறிய கிராமம் பின்னால் தங்கிப் பார்வையிலிருந்து மறைந்தே போனது.

கடல்முனையின் மறுகரையில் சில பெண்கள் நின்றார்கள். "என்னது, கடலிலே பொிய களியாட்டம்? இதுவரை கேட்ட பாடல்களிலும் பார்க்க இன்று அதிகம் மகிழ்ச்சியூட்டும் பாடல்கள்?" என்று கேட்டார்கள்.

இதற்கிடையில் படகு போய்க் கொண்டே இருந்தது. ஒரு நாள் தரைப் பக்கத்து நீாில் சென்றார்கள். மறு நாள் சேற்று நீாில் சென்றார்கள். மூன்றாவது நாள் நீர்வீழ்ச்சிகளைக் கடந்து சென்றார்கள்.

பின்னர் அவர்கள் ஒரு பயங்கர நீர்வீழ்ச்சிக்கு வந்து, புனித நதியின் நீர்ச்சுழலை நெருங்கினார்கள். அப்பொழுது லெம்மின்கைனனுக்குச் சில மந்திரங்கள் நினைவுக்கு வந்தன. அவன் அவற்றைச் சொல்லத் தொடங்கினான். "நிறுத்து, நிறுத்து, நுரைப்பதை நிறுத்து! பெருகும் நீரே, பெருக்கை நிறுத்து! நீாின் நங்கையே, நுரையின் சக்தியே, நீர் இரைந்தோடும் நெடுங் கல்லில் அமர்க! அலைகளை அணைப்பாய்! நுரைகளைச் சேர்ப்பாய்! அவற்றைக் கட்டி அமைதி கொள்ளச் செய்வாய்! நீர் எழுந்து எங்களில் தெறியாது இருக்கட்டும்!

"அலைகளின் பெண்ணே, அலைகளை அள்ளி மார்போடு அணைத்து நல்வழியில் நடத்து! பிழை செய்யாத பயணிகளுக்குப் பங்கம் வராது இருக்கட்டும்! ஆற்றின் நடுவில் நிமிர்ந்துள்ள பாறைகள் தலையைக் குனிந்து எங்களுக்கு வழிவிடட்டும்.

"இதுவும் இன்னமும் போதாது என்றால், பாறையின் சக்தியே, கற்களின் தலைவா, துறப்பணத்தை எடு! நீாில் கிடக்கும் நெடும்பாறை நடுவில் துவாரத்தைத் துளை! அந்தத் துவாரத்தினூடாய் இந்தப் படகைப் போகவிடு!

"தண்ணீாின் தலைவனே, பாறைகள் அனைத்தையும் பாசிகளாக்கு! கடலுக்குள் இருக்கும் மலைமேல் படகு கோலாச்சி மீனின் நுரைப்பைபோலப் போகட்டும்!

"நீர்வீழ்ச்சி மகளே, நீல நிறத்தில் புகார் நூல் நூற்பாய்! நீல நூலை நீர்மேல் போடு! அந்த நூல் வழியே இந்த அன்னியப் பயணிக்குப் பாதையைக் காட்டு!

"துடுப்பின் தலைவியே, அன்புள்ள பெண்ணே, துடுப்புகளை உனது கைகளில் எடுப்பாய்! லாப்புலாந்து மாந்திாீகாின் மாய நீாிலிருந்து மீள வழி காட்டு!

"இதுவும் இன்னமும் போதாது என்றால், மனுக்குல முதல்வனே, சொர்க்க நாதனே, உருவிய வாளால் சுக்கானைத் தாங்கு! பருமரப் படகை அதன் வழி நடத்து!"

முதிய வைனாமொயினன் விரைவாகப் படகைச் செலுத்திச் சென்றான். பாறைகளின் நடுவாய், நுரைத்த நீர் மேலாய், தரை தட்டாமல் நேர்த்தியாய்ச் சென்றான்.

அகன்ற நீர்ப் பரப்புக்குப் படகு வந்ததும் ஓர் இடத்தில் படகு இறுகி நின்றது. இல்மாினனும் லெம்மின்கைனனும் பாாிய துடுப்பைக் கடலில் இறக்கிப் படகைத் தள்ளப் பார்த்தனர்.

வைனாமொயினன், "ஓ, குறும்பா, லெம்பியின் மைந்தா, குனிந்து ஒரு பக்கம் எட்டிப் பார்! படகு எதில் முட்டி நிற்கிறது? கல்லா? கட்டையா?" என்று கேட்டான்.

லெம்மின்கைனன் சுற்றிலும் நன்றாகப் பார்த்துவிட்டு, "அது கல்லுமல்லக் கட்டையுமல்ல! நீர்நாய் என்னும் கோலாச்சி மீனின் முதுகிலே முட்டி நிற்கிறது படகு" என்று சொன்னான்.

"ஆற்றில் மரக் கிளைகளும் கிடக்கலாம். கோலாச்சி மீன்களும் இருக்கலாம்" என்றான் வைனாமொயினன். "கோலாச்சி மீனின் தோளில்தான் இருக்கிறோம் என்றால், உருவு வாளை! மீனை இரண்டு துண்டாக வெட்டிப் பிள!"

லெம்மின்கைனன் இடுப்பிலிருந்து எலும்பை நொருக்கும் வாளை இழுத்து எடுத்தான். ஒரு பக்கமாய்த் தலையைத் தாழ்த்தி நீாில் வீசி நீரைக் கிழித்தான். அப்போது அவனே நீாில் தவறி வீழ்ந்தான். உடனே இல்மாினன் லெம்மின்கைனனின் தலைமயிரைப் பற்றித் தூக்கி மேலே எடுத்தான். பின்னர் இல்மாினன், "எல்லா வகையான ஆட்களும் தாடி உள்ளவர்களாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள். எண்ணிப் பார்த்தால் நூறும் ஆகலாம். ஆயிரமும் ஆகலாம்" என்று சொன்னான்.

இல்மாினனே தனது வாளை உருவி மீனை அறைந்தான். அவனுடைய வாள் துகள் துகளாக நொருங்கியது. மீனோ எதையும் கவனித்ததாகவும் தொியவில்லை.

அப்போது பின்னணியத்தில் இருந்த முதிய வைனாமொயினன், "உன்னில், ஒரு பாதி மனிதனைக்கூடக் காணோம். ஒரு வீரனில் மூன்றில் ஒரு பங்குகூட இல்லை" என்று சொன்னான். அவனே பின்னர் வாளை உருவி, கடலுள் அந்த வாளைத் திணித்து, கோலாச்சி முதுகைக் குத்தினான். வாள் மீனில் இறுகிக் கொண்டது. அவன் மீனைத் தூக்கி இரண்டாய்ப் பிளந்தான். மீனின் தலைதான் தோணித் தட்டில் இருந்தது. வாலோ கடலின் அடியில் கிடந்தது.

இப்பொழுது படகு தடையின்றி வேகமாகச் சென்றது. வைனாமொயினன் படகைத் திருப்பி ஒரு தீவுப் பக்கமாகக் கொண்டு வந்தான். கரைக்கு வந்ததும் மீனின் தலையைத் திருப்பிப் பார்த்தான். "இங்குள்ள இளைஞர்களில் வயது முதிர்ந்தவர் வந்து மீனை வெட்டலாம். தலையைப் பிளக்கலாம்" என்று சொன்னான்.

பக்கத்தில் இருந்த ஆண்களும் பெண்களும் ஒன்றாக, "மீனைப் பிடித்தவர் கைகள் இனிமையானவை. மீனைக் கொண்டவர் விரல்களும் புனிதமானவை" என்றனர்.

பின்னர் வைனாமொயினன் தானே கத்தியை உருவி மீனைப் பிளந்தான். இங்குள்ள 'பெண்களில் இளையவள் எவளோ, அவளே முற்பகல் உணவாகவும் பிற்பகல் உணவாகவும் மீனைச் சமைக்கட்டும்" என்றான்.

பத்துப் பெண்கள் போட்டியாய் வந்தனர். முற்பகல் உணவாக மீனைச் சமைத்தனர். அனைவரும் உண்ட பின்னர் மீனின் எலும்புகள் பாறையில் சிந்திக் கிடந்தன. வைனாமொயினன் வந்து அவற்றைப் பார்த்தான். "இந்தப் பற்களும் அகன்ற அலகெலும்பும் ஒரு கொல்லனின் உலையில் இருந்தால் என்னவாகும்? ஒரு கை தேர்ந்த கலைஞனின் கைகளில் இருந்தால் என்னவாகும்?" என்று கேட்டான்.

"ஒன்றும் இல்லாத ஒன்றிலிருந்து ஒன்றுமே வராது" என்றான் இல்மாினன். "எத்துணை கை தேர்ந்த கலைஞனாக இருப்பினும் மீன் எலும்பிலிருந்து எதுவுமே வராது."

"இதிலிருந்து எதுவும் வரலாம்" என்றான் வைனாமொயினன். "இந்த எலும்பிலிருந்து 'கந்தலே' என்னும் நரம்பிசைக் கருவியைச் செய்யலாம்" என்றான். அந்தப் பணியை எற்க எவருமே முன்வராதபடியால், வைனாமொயினனே கோலாச்சி மீனின் எலும்பில் ஓர் இனிய யாழைச் செய்து, உலகத்துக்கு இணையில்லாத இசையின்பத்தை வழங்கினான்.

கந்தலே என்னும் யாழின் கட்டமைப்பு எதனால் ஆனது? கோலாச்சி மீனின் பொிய அலகெலும்பினால் ஆனது! கோலாச்சியின் பற்களால் யாழின் முளைகள் அமைக்கப்பட்டன. பேய்ப் பொலிக் குதிரையின் உரோமங்களால் யாழின் நரம்புகள் கட்டப்பட்டன.

யாழைப் பார்க்க, ஆராய்ந்து பார்க்க இளம் மனிதர்கள் அங்கே வந்தார்கள். விவாகமான வீரர்களும் பாதிப் பராயமடைந்த பையன்களும் அங்கே வந்தார்கள். சிறிய பெண்களும் இளம் வயதுக் கன்னியரும் முதிய மாதரும் அங்கே வந்தார்கள்.

வைனாமொயினன் அனைவரையும் யாழைக் கையில் எடுத்து விரல்களால் மீட்டும்படி கேட்டுக் கொண்டான். இளைய வயதினர் நடுத்தர வயதினர் முதிய வயதினர் அனைவரும் யாழை எடுத்து மீட்டினர். வாலிபர் மீட்டியபோது விரல்கள் வளைந்தன. முதியவர் மீட்டியபோது தலைகள் நடுங்கின. இசை இசையாக வரவில்லை. வந்த இசை இன்பத்தைத் தரவில்லை.

லெம்மின்கைனன் எழுந்தான். "நீங்கள் எல்லோரும் பாதி அறிவுப் பையன்கள். மூடத்தனமான மங்கையர். எளிய பிறப்புக்கள். இசை வல்லுனர் என்று சொல்ல உங்களில் யாருமே இல்லை. அந்த யாழைக் கொண்டு வாருங்கள்! எனது முழங்கால்களின் மேல், எனது பத்து விரல்களின் நுனியில் அதை வையுங்கள்!" என்றான் அவன்.

லெம்மின்கைனன் அந்த யாழை இசைத்தான். ஆனால் அதில் இசை இசையாக வரவில்லை. வந்த இசை இன்பத்தைத் தரவில்லை.

வைனாமொயினன் தனது மக்களிடையே யாழை இசைக்கக்கூடிவர் எவரும் இல்லை என்பதைக் கண்டான். எனவே யாழை வடநாட்டுக்கு அனுப்பி அங்குள்ள மக்களை இசைக்கும்படி கேட்டுக் கொண்டான். வடநாட்டில் வாலிபர் இசைத்தனர். வனிதையர் இசைத்தனர். கணவன்மார் இசைத்தனர். மனைவியர் இசைத்தனர். இப்படித் திருப்பி அப்படித் திருப்பி அனைவரும் முயன்றனர். ஆனால் சுருதி சுத்தமாயில்லை. இசை இன்பமாயில்லை. யாழின் நரம்புகள் சிக்கியதால் ஒலி கோரமாய்க் கேட்டது.

அடுப்புப் புகட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு கிழவன், "நிறுத்துங்கள்!" என்று கத்தினான். "இந்த யாழின் ஒலி என் காதைக் கிழிக்கிறது. தைலையைத் துளைக்கிறது. உரோமம் சிலிர்த்து எழுகிறது. நீண்ட காலத்துக்குத் தூங்க முடியாமல் செய்கிறது. பின்லாந்து மக்களின் இந்த யாழ் இசையின்பத்தைத் தராவிடின், தாலாட்டித் தூக்கத்தைத் தராவிடின், அதைக் கொண்டு போய்த் தண்ணீருக்குள் எறியுங்கள்! அல்லது அதைச் செய்தவனுக்கே திருப்பி அனுப்புங்கள்! அதைப் படைத்தவனிடமே அது போகட்டும்!"

அப்பொழுது யாழே பேசியது. "தண்ணீருக்குள் போவதற்கு எனக்கு இன்னமும் காலம் வரவில்லை. என்னைப் படைத்தவன் கைக்கு நான் போய் நல்லிசை தருவேன்" என்று யாழ் சொன்னது. எனவே, அதைச் செய்த வைனாமொயினனின் கைகளுக்கே அதனை அனுப்பி வைத்தனர்.


41. 'கந்தலே' என்னும் யாழை இசைத்தல்

நித்திய முதிய வைனாமொயினன் ஒரு நிலைபேறுடைய மந்திரப் பாடகன். அவன் இன்னிசை என்னும் கல்லில் இருந்தான். பாடல் என்னும் பாறையில் அமர்ந்தான். வெள்ளி மலையின் தங்க முடியில் அவன் அமர்ந்திருந்தான்.

அவன் யாழை விரல்களில் எடுத்தான். முழங்கால்களில் வைத்துத் திருப்பினான். "எல்லோரும் வாருங்கள்! நித்தியப் பாடலின் நிறைவான இன்பத்தைக் கேட்க வாருங்கள்! கந்தலே என்னும் யாழின் கனிவான இசையைக் கேட்க வாருங்கள்!" என்று அழைத்தான்.

கோலாச்சி எலும்பில் அமைந்த யாழில் அவனுடைய விரல்கள் நடனமிட்டன. பெருவிரல்கள் துள்ளித் திாிந்தன. குதிரையின் சடைமயிர் நரம்புகளில் எழுந்த இன்னொலி இசைக்கு இலக்கணம் வகுத்தது. போிசை இன்பத்துக்குப் பிரமாணம் சொன்னது. அந்த இசையால் இன்பம் கிடைத்தது. இன்பத்தால் இசை உணரப்பட்டது. இசையும் இன்பமும் ஒன்றாய்க் கலந்தன. நன்றாய் இணைந்தன.

வைனாமொயினன் யாழை வாசித்தான்.

அந்த இசையின்பத்தைக் கேட்க ஓடி வராத நாலுகால் பிராணிகள் அந்தக் காடுகளிலே இல்லை எனலாம். கந்தலே யாழின் கனிவிசை கேட்க, அணில்கள் செழித்த கிளைகளிலிருந்து செழித்த கிளைகளுக்கு ஓடிப் பரவசப்பட்டன. கீாிகள் வேலிக்கு வேலி தாவித் திாிந்தன. காட்டுப் பசுக்கள் பசும்புல் மேடுகளில் பாய்ந்து வந்தன. சிவிங்கிகள் துள்ளித் துள்ளி மகிழ்ந்தன. சேற்று நிலத்து நாிகளுக்கு உறக்கம் கலைந்தது. ஊசியிலை மரக் குகையில் கரடிகள் எழுந்தன. வெகு தூரத்திலிருந்து ஓநாய் ஓடோடி வந்தது. வந்த பிராணிகள் அலைந்து திாிந்தன. வாயிலில் வந்தன. வேலியில் அமர்ந்தன. வேலிகள் ஒடிந்ததால் பாறையில் விழுந்தன. கதவுகள் கவிழ்ந்து புதருள் புகுந்ததால் மரத்துக்கு மரம் மாறியேறின.

கந்தலே யாழின் கனிவிசை கேட்க, காட்டரசன் தப்பியோவும் அவனுடைய இனத்தைச் சேர்ந்த ஆண் பெண் அனைவரும் மலைமுடியில் ஏறி நின்றனர். நீலக் காலுறையும் சிவப்புச் சாிகையும் அணிந்த காட்டரசி ஒரு மரக் கிளையின் வளைவில் அமர்ந்திருந்தாள்.

அந்த அற்புத இசையை அனுபவிக்க, வானத்தில் சுழலும் பறவைகள் எல்லாம் பூமியை நோக்கி விரைந்தே வந்தன. கழுகு குஞ்சுகளைக் கூட்டில் விட்டுவிட்டு தான் மட்டும் தனித்துப் பறந்து வந்தது. முகிலைக் கிழித்தொரு கருடன் வந்தது. அலையடியில் இருந்து வாத்துக்கள் வந்தன. பனிச் சேற்றிலிருந்து அன்னங்கள் வந்தன. சிறிய சிறிய குருவிகள் கீச்சிட்டு வந்தன. நுற்றுக் கணக்கான ஆயிரக் கணக்கான பறவைகள் வானத்தில் பறந்து நிறைந்து நின்றன. அவை இசையின்பத்தின் தந்தையான வைனாமொயினனின் தோள்களில் அமர்ந்தன; ஆனந்தமுற்றன.

இயற்கை மகளிாில் சிலர் வான் வௌியில் வந்து வானவில்லில் அமர்ந்து இசையைக் கேட்டு வியந்து போயினர். இன்னும் சிலர் செந்நிறக் கரைகள் மின்னிய முகில்களில் இருந்து இசையைக் கேட்டு அதிசயப்பட்டு உறைந்து போயினர். சிவப்பு நிற விளிம்புள்ள மேகத்தின் மேலும் வானவில்லின் வனப்பான வளைவிலும் சந்திரன் மகளும் சூாியன் மகளும் அமர்ந்து பொன்னிலும் வெள்ளியிலும் துணி நெய்து கொண்டிருந்தனர். அந்த இசையைக் கேட்டு அவர்கள் மெய்மறந்தனர். அவர்களின் கைகளில் இருந்த நூனாழியும் பொன் வெள்ளி இழைகளும் நழுவி விழுந்தன.

நீாில் வாழும் பிராணிகளில், கடலில் வாழும் மீன் இனத்தில், ஆறு சிறகுகள் படைத்த மீன்வகையில், அந்த இசையைக் கேட்டு இன்புறாதது எதுவுமே இல்லை. கோலாச்சி மீன்கள் நீந்தி வந்தன. நீர்நாய்கள் நகர்ந்து முன்னே வந்தன. வஞ்சிர மீன்கள் பாறைகளிலிருந்து வந்தன. வெண்ணிற மீன்கள் ஆழக் குழிகளிலிருந்து வந்தன. இன்னும் பல விதமான சிறு மீன்களும் வெண் மீன்களும் கரைக்கு வந்து நாணல் படுக்கையில் பதிந்து வைனாமொயினனின் பாடலைக் கேட்டுப் பரவசப்பட்டன.

அஹ்தோ என்பவன் கடலுக்கு அரசன். கோரைப் புல்லில் தாடி படைத்தவன். அவன் அலைமேல் வந்து ஆம்பலில் அமர்ந்து அற்புத இசையால் அகம் மிக மகிழ்ந்து, "ஆகா, இப்படி ஒரு இசையை இத்தனை காலம் கேட்டதேயில்லையே1" என்றான்.

வாத்து மகளிரைக் கடலோரத்து நாணற் புல்லின் மைத்துனிமார் என்றும் சொல்வர். அவர்கள் வெள்ளிப் பற்களுள்ள தங்கச் சீப்புகளினால் தங்களின் தளர்ந்த கூந்தலை வாாிக் கொண்டிருந்தனர். வைனாமொயினனின் அற்புத இன்னிசை அவர்களுக்கும் கேட்டது. சீப்புகள் நழுவி அலைகளில் விழுந்தன. கூந்தலை வாரும் வேலை பாதியில் நின்றது.

தண்ணீருக்குத் தலைவி ஒருத்தி இருந்தாள். அவள் சடைத்த கோரைப் புல் மார்பை உடையவள். அவள் அலைகளின் அடியிலிருந்து எழுந்து வந்தாள். கோரைப் புற் குவியலின் மேலே வந்தாள். அதிசயப் பாடலால் ஆனந்தம் கொண்டாள். ஒளிரும் பாறையில் வயிறு படியத் தூங்கியே போனாள்.

வைனாமொயினன் ஒரு நாள் இசைத்தான். இரு நாள் இசைத்தான். அந்த இசையால் உரமான மனிதனின் இதயம்கூட இளகித்தான் போனது. பின்னிய கூந்தலின் பெண்களின் பக்கம் நெஞ்சம் உருகி அழாதவர் இல்லை. பையன்கள், பாவையர், மணம் முடித்தவர், முடியாதோர், இளையவர், முதியவர் அனைவரும் இனிய இசையால் இன்புற்று அழுதனர்.

வைனாமொயினனும் அழுதான். அவனுடைய கண்ணீர்த் துளிகள் சிறுபழத்திலும் பொியவை. பயற்றம் விதையிலும் தடித்தவை. வனக்கோழி முட்டையிலும் வட்டமானவை. தூக்கணங் குருவித் தலையிலும் பொியவை. அந்தக் கண்ணீர்த் துளிகள் கண்களிலிருந்து கன்னத்தில் பாய்ந்தன. கன்னத்திலிருந்து அகன்ற தாடைக்கு வந்தன. தாடையிலிருந்து பரந்த மார்பிலே வீழ்ந்தன. மார்பினிலிருந்து முழங்கால்களில் வடிந்தன. அங்கிருந்து பாதங்களில் பாய்ந்து, அங்கிருந்து ஐந்து கம்பிளிச் சட்டைகள், ஆறு தங்கப் பட்டிகள், ஏழு நீல மேலாடைகள், எட்டுக் கைவேலைச் சட்டைகள் அனைத்தையும் கடந்து தரையைச் சேர்ந்தன.

வைனாமொயினனின் கண்ணீர் அங்கிருந்து நீலக் கடலின் நெடுங் கரை சென்று, தௌிந்த நீாின் உட்புறம் சென்று, கறுத்தச் சேற்றின் அடிப்புறம் சேர்ந்தது.

வைனாமொயினன், "கடலின் ஆழத்திலிருந்து எனது கண்ணீர்த் துளிகளை எடுத்து வர வல்லவர்கள் யாராவது தந்தையின் பிள்ளைகளில் இருக்கிறார்களா?" என்று கேட்டான்.

ஒருவரும் முன்வராதபடியால், வைனாமொயினன் மீண்டும், "எனது கண்ணீர்த் துளிகளை எவராவது எடுத்து வந்தால், அவருக்கு ஒரு இறகு மேலாடையைக் கொடுப்பேன்" என்றான்.

ஒரு காகம் முன்வந்தது. ஆனால் காகத்தால் முடியவில்லை.

அடுத்து ஒரு நீல நிற வாத்து வந்தது. அது பறந்து சென்று கடல் அடியில் மூழ்கிக் கருஞ் சேற்றிலிருந்து கண்ணீர்த் துளிகளைக் கொண்டு வந்து வைனாமொயினனின் கைகளில் கொடுத்தது. ஆனால் அந்தக் கண்ணீர்த் துளிகள் புவியாழும் மன்னர்களுக்கு மகத்தான மேன்மையையும் முடிவில்லாத மகிழ்ச்சியையும் அளிக்கக்கூடிய முத்துக்களாக மாறியிருந்தன.


42. சம்போவைத் திருடுதல்

நித்திய முதிய வைனாமொயினன், கொல்லன் இல்மாினன் மற்றும் குறும்பன் லெம்பியின் மைந்தன், மூவருமாகத் தௌிந்த பெரும் சமுத்திரத்தில் தொடர்ந்து பயணம் செய்தார்கள். எத்தனையோ வீரர்கள் போய் மாண்டுபோன இருண்ட வடநாட்டுக்கு இவர்களும் போய்க்கொண்டிருந்தார்கள்.

திரண்ட நுரையுடன் எழுந்த அலைகளின் மேல் கப்பல் விரைந்தது. கப்பலின் முன்புறத்தில் துடுப்புடன் இருந்தான் இல்மாினன். தாழ்வான பின்புறத்தில் துடுப்புடன் இருந்தவன் லெம்மின்கைனன். சுக்கான் பக்கம் அமர்ந்து கப்பலை விரைவாகச் செலுத்தினான் வைனாமொயினன். அவர்களுக்கு ஏற்கனவே பழக்கமான வடநாட்டுத் துறைமுகத்துள் கப்பல் புகுந்தது.

மார்புக்குத் தார் பூசிய அந்தக் கப்பலைக் கரைக்கு இழுத்து செப்பு உருளைகளில் நிறுத்தினார்கள்.

அங்கிருந்து அவர்கள் வீட்டின் உள்ளே நுழைந்தார்கள். வடநாட்டின் தலைவி லொவ்ஹி, "மனிதரே, என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறீர்கள்?" என்று கேட்டாள்.

"எங்களுடைய செய்தி சம்போவைப் பற்றியது" என்றான் வைனாமொயினன். "சம்போவில் பங்கு கேட்க வந்திருக்கிறோம். ஒளி வீசும் மூடியைப் பார்க்கவும் வந்திருக்கிறோம்."

"காட்டுக் கோழியை இருவர் பகிர்வதும் அணிலை மூன்று பங்கு வைப்பதும் நடப்பதில்லையே!" என்றாள் லொவ்ஹி. "சம்போ அதன் பலநிற மூடியுடன் வடநாட்டின் செப்பு மலையில் சுழல்வதுதான் சிறப்பு. அதற்குக் காப்பாளராக நானே இருப்பேன்."

"சம்போவில் பாதியை எங்களுக்குத் தராவிடில், சம்போ முழுவதையுமே கப்பலில் ஏற்றிக் கொண்டு செல்வோம்" என்றான் வைனாமொயினன்.

இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்தாள் லொவ்ஹி. வடநாட்டு வீரர்கள் அனைவரையும் வாளுடன் வருமாறு அழைத்தாள்.

வைனாமொயினன் உடனே கந்தலே யாழைக் கையில் எடுத்தான். யாழை இனிதாக இசைக்கத் தொடங்கினான். வடநாட்டவர் எல்லோரும் வந்து இசையை ரசித்து மகிழ்ந்தனர். ஆண் மக்கள் அனைவரும் நல்ல மன நிலையில் ஆனந்தம் கொண்டனர். பெண்கள் சிாித்த வாயுடன் சிந்தை மகிழ்ந்தனர். வீராின் விழிகளில் கண்ணீர் நிறைந்தது. பையன்கள் முழங்கால்களை மடித்துத் தரையில் இருந்தனர்.

பின்னர் அங்கு நின்ற மக்கள் எல்லோரும் களைத்து அயர்ச்சியுற்றனர். அடுத்து அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தனர். விவேகியான வைனாமொயினன் உடனே தனது சட்டைப் பைக்குள் கையை விட்டு ஒரு சிறு பையை வௌியே எடுத்தான். அதனுள்ளிருந்து தூக்கத்தைத் தரும் மந்திர ஊசிகளைக் கையில் எடுத்தான். அந்தக் கூட்டத்தினாின் கண்களில் தூக்கத்தை நிறைத்தான். கண் இமைகளைச் சேர்த்துக் கட்டினான். கண் மடல்களைக் கோத்துப் பூட்டினான். வடநாட்டு மக்கள் அனைவரும் நீண்ட காலத் தூக்கத்தில் மூழ்கிப் போயினர்.

அதன்பின், வைனாமொயினனும் மற்ற இரு வீரர்களும் சம்போ இருந்த செப்பு மலைக்குப் போனார்கள்.

அங்கு போய்ச் சேர்ந்ததும் வைனாமொயினன் மெதுவாக ஒரு மந்திரப் பாடலைப் பாடினான். இரும்புப் பிணைச்சல்கள் பொருத்திய செப்புக் கதவுகள் கிறீச்சிட்டு அசைந்தன. இல்மாினன் வெண்ணெய் எடுத்துப் பிணைச்சல்கள் பூட்டுகளில் பூசி அவை சத்தம் எழுப்பாது இருக்கச் செய்தான். விரல்களைப் பூட்டுக்குள் விட்டுத் துழாவித் திருப்பினான். தாழைத் தளர்த்தித் தள்ளினான். சட்டத்தை நெம்பித் தூக்கினான். பூட்டுகள் நொருங்கின. கதவு விாிந்து அகலத் திறந்தது.

வைனாமொயினன் லெம்மின்கைனனை அழைத்து, உள்ளே போய்ச் சம்போவையும் அதன் பலநிற மூடியையும் தூக்கி வரும்படி சொன்னான்.

"இறைவன் அருளால் எனக்குள்ளே இருக்கும் சக்தி இப்போது சம்போவைத் தூக்கும். பூமியில் வலக் காலை வைத்துக் குதிக்காலைத் தொட்டு பலநிற மூடியையும் சேர்த்துத் தூக்குவேன்" என்றான் லெம்மின்கைனன். பின்னர் அந்த ஆலையைக் கைகளால் அணைத்து, முழங்கால்களை நிலத்தில் ஊன்றி உதைத்துப் பெயர்க்க முயன்றான். ஆனால் சம்போ அசையவில்லை. அதனுடைய வேர்கள் ஐம்பத்தாறு அடி ஆழத்துக்கு ஓடி இறுகியிருந்தன.

லெம்மின்கைனன் உடனே சென்று ஒரு பொிய எருதைப் பிடித்து வந்தான். அதனுடைய உடல் உரத்துக் கொழுத்திருந்தது. அதனுடைய தசைநார்கள் தடித்துப் பலத்திருந்தன. அதன் கொம்பின் நீளம் ஆறடி. அலகின் அகலம் ஒன்பது அடியாம். புற்றரையில் மேய்ந்து கொண்டிருந்த எருதைக் கொண்டு வந்து, சம்போவின் வேர்ப் பகுதியை உழுதான். அப்போது செப்பு மலையிலிருந்து சம்போவும் அதன் பலநிற மூடியும் மெதுவாய் அசைந்தன.

பின்னர் மூன்று பேருமாகச் சேர்ந்து சம்போவைச் சுமந்து சென்று கப்பலில் சேர்த்தனர். அதன் பலநிற மூடியையும் உள்ளே வைத்தனர். நூறு பலகைகளால் கட்டப்பட்ட கப்பலைக் கடலில் தள்ளினர்.

"சம்போவை எங்கே கொண்டு போகலாம்?" என்று கேட்டான் இல்மாினன்.

"புகார் படிந்த கடல்முனையின் நுனிக்கு எடுத்துச் செல்லலாம்" என்றான் வைனாமொயினன். "அந்தச் சிறிய இடத்தில் சம்போ செல்வச் செழிப்போடு இருக்கும். அங்கே அடக்கியாளுதல் இல்லை. அடித்துப் பறிப்பதுமில்லை. வாளோடு மனிதர் வருவதுமில்லை." அதன்பின், வைனாமொயினன் கடலரசன் அஹ்தோவின் கருணையை வேண்டி மந்திரப் பாடல்களைப் பாடினான்.

பரந்த கடலில் எழுந்த அலைகளில் மூன்று நாயகர்களும் சென்று கொண்டிருந்தனர். அப்போது லெம்மின்கைனன், "அந்த நாட்களில் துடுப்புப் போடத் தண்ணீர் இருந்தது. பாடகர்களுக்குப் பாடல்கள் இருந்தன. ஆனால் இன்று அவை இல்லை. இந்த நாட்களில் கடலில் பயணிக்கும்போது பாடல்கள் கேட்பதேயில்லை" என்று சொன்னான்.

"மந்திரமும் பாடல்களும் கடலில் தேவையில்லை. அவற்றால் மனிதருக்குச் சோம்பல் ஏற்படும். பயணம் தாமதமாகும். இந்தப் பரந்த கடலில் எழுந்த அலைகளில் பொன்மாலைப் பொழுது வீணாகிப் போகும். நள்ளிரவு விரைவாக வந்து சேரும்" என்றான் வைனாமொயினன்.

"பாடினாலும் பாடாவிட்டாலும் பகலும் இரவும் வந்து போகும்" என்றான் லெம்மின்கைனன்.

மூன்று நாட்கள் சென்ற பின்னர் லெம்மின்கைனன், "வைனாமொயினனே, எங்களுக்குச் சம்போ கிடைத்துவிட்டது. நாங்கள் சாியான திசையில் போய்க்கொண்டு இருக்கிறோம். நீ ஏன் பாடாமல் இருக்கிறாய்?" என்று கேட்டான்.

"எங்களுடைய சொந்தக் கதவுகள் கண்களில் தொியும்போதுதான் பாடுவதற்குக் காலமும் நேரமும் வரும்" என்றான் வைனாமொயினன்.

"நான் பின்னணியத்தில் இருந்தால் இதுவரையில் பாடத் தொடங்கியிருப்பேன். இப்படியொரு சந்தர்ப்பம் இனிமேல் வராமலே போகலாம். நீ பாடாது இருப்பதனால், இதோ நான் பாடப் போகிறேன்."

குறும்பன் லெம்மின்கைனன் வாயைத் திறந்தான். கடுங்குரல் எடுத்துக் கத்தத் தொடங்கினான். அவனுடைய வாய் அசைந்தது. தாடி ஆடியது. தாடைகள் நடுங்கின. அவனுடைய கத்தல் ஏழு கடல்களுப்பால் இருந்த ஆறு கிராமங்களில்கூடக் கேட்டது.

ஓர் ஈரமான மேடு இருந்தது. அதில் ஒரு கட்டை இருந்தது. அந்தக் கட்டையில் ஒரு கொக்கு இருந்தது. அந்தக் கொக்கு தனது விரல் நகங்களை எண்ணிக் கொண்டிருந்தது. அது ஒரு காலைத் தூக்க நினைத்தபோது லெம்மின்கைனனின் கொடூரமான பாடல் அதன் காதில் விழுந்தது. அது பயந்து அலறிக்கொண்டே எழுந்து உயரப் பறந்தது. அது கத்திக் கொண்டே பல சதுப்புகளைக் கடந்து வடநாட்டை அடைந்தது. அந்தக் கத்தலால் வடநாட்டு மக்கள் துயில் கலைந்தனர். அவர்களைத் தூங்க வைத்த தீய சக்தியினின்று விடுபட்டனர்.

லொவ்ஹி தனது நீண்ட காலத் தூக்கம் கலைந்து எழுந்தாள். தோட்டப் பக்கம் போனாள். பசுக்கள் எல்லாம் களவுபோகாமல் அப்படியே இருந்தன. பின்னர் கல்மலைக்கு ஓடிப் போனாள். செப்பு மலையின் கதவருகில் வந்ததும், "ஐயோ, நான் ஒரு பாவி. யாரோ ஓர் அன்னியன் இங்கே வந்து போயிருக்கிறான். பூட்டுகள் உடைபட்டிருக்கின்றன. சம்போ திருட்டுப் போய்விட்டது" என்று சொன்னாள்.

அவள் தனது சக்தி குறைவதைக் கண்டு கடும் கோபம் கொண்டாள். பனிப்புகார் மகளை மனத்தில் இருத்திப் பிரார்த்தனை செய்தாள். "பனிப்புகார் மகளே, வானத்திலிருந்து மூடுபனியை இறக்கி விாிந்து பரந்த கடலை மூடு! வைனாமொயினனின் பாதை மறைந்து போகட்டும்!"

"இதுவும் போதாது என்றால்" என்று அவள் தொடர்ந்தாள். "கடலரக்கனே, அய்யோவின் மகனே, கடலில் இருந்து உன் தலையைத் தூக்கு! கலேவலா மக்களைக் கடலிலே வீழ்த்து! அவர்களின் தலைகளை அலைகளில் ஆழ்த்து! அதன்பின் சம்போவைப் பத்திரமாக வடநாட்டுக்கு அனுப்பு!

"ஓ, மனுக்குல முதல்வனே, மாபெரும் தெய்வமே, வானத்தில் இருக்கும் தங்க அரசனே, கடும் காற்றைப் படைத்துப் படகோடு மோதும்! வைனோவின் படகு ஓடாது நிற்கட்டும்!"

லொவ்ஹியின் பிரார்த்தனைக்கு உடன் பதில் கிடைத்தது. பனிப்புகார் மகள் பனியைப் படைத்தாள். கடலில் பரவினாள். காற்றை நிறைத்தாள். வைனாமொயினனும் கூட்டாளிகளும் மூன்று இரவுகள் தடைபட்டு நின்றனர்.

வைனாமொயினன் வாளை எடுத்தான். கடலைக் கிழித்தான். வாள் போன வழியில் தேன் வந்து பாய்ந்தது. பனிப்புகார் எழுந்து விண்ணோக்கிச் சென்றது. கடல் தௌிந்தது. பூமி தொிந்தது.

சிறிது நேரம் கழிந்தது. அந்தச் சிவப்புப் படகுக்குப் பக்கத்தில் ஒரு பொிய சத்தம் கேட்டது. படகை நோக்கி ஒரு பொிய அலை எழுந்து வந்தது. அதைக் கண்ட இல்மாினன் மிகவும் பயந்தான். கன்னத்து இரத்தம் வடிந்து காய்ந்து போனது. ஒரு கம்பிளித் துணியினால் தலையையும் முகத்தையும் மூடிக் கொண்டான்.

வைனாமொயினன் திரும்பிப் படகின் பக்கமாய்ப் பார்த்தான். அய்யோவின் மகனான கடலரக்கன் கடலிலிருந்து தனது பொிய தலையை உயர்த்தினான்.

நித்திய முதிய வைனாமொயினன் கடலரக்கனைக் காதில் பிடித்துத் தூக்கினான். "கடலரக்கனே, மனித இனத்துக்கு முன்னால் எதற்காகக் கடலிலிருந்து தலையைத் தூக்கினாய்? கலேவலா மைந்தனுக்கு எதற்காக உன் முகத்தைக் காட்டினாய்?"

கடலரக்கனின் மனதில் பொிய மகிழ்ச்சியும் இல்லை; பொிய பயமும் இல்லை. அதனால் அவன் பேசாமல் இருந்தான்.

வைனாமொயினன் மீண்டும் கேட்டான். மூன்றாம் முறை கேட்டதும் கடலரக்கன், "கலேவலா இனத்தை அழித்துவிட்டுச் சம்போவைக் கொண்டு போவதற்காகவே நான் கடலிலிருந்து தலையைத் தூக்கினேன். எனக்கு உயிர்ப் பிச்சை தந்து மீண்டும் கடலிலேயே விட்டுவிடு. இனிமேல் மனித இனத்தின் முன்னால் வரவே மாட்டேன்" என்றான்.

வைனாமொயினன் கடலரக்கனைக் கடலிலே விட்டான். சந்திர சூாியர் உள்ள இன்று வரையிலும் அவன் பின்னர் மனித இனத்தின் முன்னால் வரவேயில்லை.

வைனாமொயினன் கப்பலைச் செலுத்திக் கொண்டு தன் வழியே சென்றான். சிறிது நேரம் கழிந்தது. மானிட முதல்வன் அனுப்பிய கோரக் காற்றுச் சுழன்றடித்து மூர்க்கமாய் வந்து படகை மோதிற்று.

மேலைக் காற்று வேகமாய் வந்தது. 22 தென்மேல் காற்றுத் துரத்தி வந்தது. தென்புறக் காற்றுத் தூக்கியடித்தது. கிழக்குக் காற்றுக் கூவி வந்தது. தென்கீழ்க் காற்று உறுமி வந்தது. வடக்குக் காற்றுச் சத்தமிட்டது. மரங்களிலிருந்து இலைகள் பறந்தன. ஊசியிலை மரத்து இலைகளும் உதிர்ந்தன. புதர்ச் செடிகள் பூக்களையும் புற்கள் தாள்களையும் இழந்தன. கடலின் அடிச் சேறு கலங்கித் தௌிந்த நீருக்கு மேலே வந்தது.

காற்றுக் கடுமையாக வீசியதால், பாாிய அலைகள் எழுந்து படகை அடித்தன. கோலாச்சி எலும்பில் செய்த கந்தலே யாழையும் அடித்துக் கடலிலே எறிந்தன. அதைக் கண்டெடுத்த கடலரசன் அஹ்தோ அதனைத் தன் பிள்ளைகளிடம் சேர்ப்பித்து அவர்களுக்கு அழிவேயில்லாத இசையின்பத்தைக் கொடுத்தான்.

இந்தப் போிழப்பால் வைனாமொயினன் கண்ணீர் விட்டான். "நெடுநாள் நிலைக்கும் என்று எண்ணிய எனது இசையின்பம் இப்படி அழிந்ததே! கோலாச்சி எலும்பில் பிறந்த இசை இனி என்றுமே கிடையாது" என்று வருந்தினான்.

இல்மாினனும் மிகவும் கவலைப்பட்டான். "ஒரு கெட்ட காலம் இது. ஒரு கொடிய நேரத்தில் இந்தப் படகில் கால் வைத்துக் கடலில் புறப்பட்டேன். இந்தக் காலநிலையில் எனது தலைமயிரும் தாடியும் பயங்கர அனுபவங்களைக் கண்டன. இப்பொழுது எனக்குக் காற்றுத்தான் அடைக்கலம். கடல்தான் புகலிடம்."

"இந்தக் கப்பலில் எவரும் அழவோ புலம்பவோ வேண்டாம். ஏனென்றால் அழுகையும் புலம்பலும் இன்னலைப் போக்கா" என்றான் வைனாமொயினன்.

பின்னர் அவன் ஒரு மந்திரத்தைச் சொன்னான். "தண்ணீரே, உன் மகனுக்கு ஆணையிடு! அலையே, உன் பிள்ளையைத் தடு! அஹ்தோ, இந்த அலைகளை அடக்கு! வெல்லமோ, நீர்ச் சக்திகளை அமைதிப்படுத்து! எனது கப்பலில் தண்ணீர் அடியாது இருக்கட்டும்!"

"காற்றுகளே, விண்ணுக்கு எழுங்கள்! காட்டு வௌியில் மரங்களை வீழ்த்துங்கள். ஊசியிலை மரங்களை மலையுச்சியில் சாியுங்கள்! ஆனால் எனது கப்பலைத் தொடாதீர்கள்!"

குறும்பன் லெம்மின்கைனன், "லாப்புலாந்தின் கழுகே, இந்தக் கப்பலுக்குக் காவலாக இரண்டு மூன்று இறகுகளைக் கொண்டுவா!" என்றான்.

அவன் பின்னர் தண்ணீர் கப்பலின் உள்ளே புகாமல் இருப்பதற்காகக் கொஞ்சப் பலகைகளை எடுத்துக் கப்பலின் பக்கங்களில் பொருத்தி உயர்த்தினான்.

இப்பொழுது கப்பலின் பக்கங்கள் காற்றின் வேகத்தைத் தாங்கும் அளவுக்கு உயரமாக இருந்தன. இனி அலைகள் அடித்து, வெளுத்த நுரையை உள்ளே தள்ளமாட்டாது.


43. சம்போவுக்காகக் கடற்போர்

வடநிலத் தலைவியான லொவ்ஹி வடநாட்டு வீரர்களை அழைத்துக் குறுக்குவில், வாள் போன்ற படைக்கலங்களைக் கொடுத்தாள். ஒரு கப்பலைக் கட்டினாள். வாத்துத் தன் குஞ்சுகளை நீாில் ஒழுங்குபடுத்துவதுபோலப் போர்வீரர்களைக் கப்பலில் அமர்த்தினாள்.

பாய் மரங்கள் நிமிர்ந்தன. வானத்தில் முகில் கூட்டங்கள் திாிவதுபோல பாய்கள் விாிந்தன. வைனாமொயினனின் கப்பலிலிருந்து சம்போவைக் கைப்பற்றிவர ஒரு பொிய கூட்டம் புறப்பட்டது.

அதே நேரத்தில் வைனாமொயினனும் கூட்டாளிகளும் நீல நிறத்து நீண்ட பெரும் கடலில் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்பொழுது வைனாமொயினன், "லெம்மின்கைனனே, பாய்மரத்தின் உச்சிக்கு ஏறி வானத்தை வடிவாகப் பார்! காலநிலை நன்றாக இருக்கிறதா, வானவௌி தௌிவாக இருக்கிறதா என்று பார்த்துச் சொல்!" என்றான்.

செங்கன்னத்துக் குறும்பன் விறுவிறு என்று பாய்மர நுனிவரை ஏறினான். அவன் கிழக்கே பார்த்தான். மேற்கே பார்த்தான். வடக்கிலும் பார்த்துத் தெற்கிலும் பார்த்தான். பின்னர், "எதிரே காலநிலை நன்றாகவும் தௌிவாகவும் இருக்கிறது. ஆனால் பின்னால் வடக்கில் ஒரு சிறிய முகிற் கூட்டம் தொிகிறது" என்றான்.

"அது ஒரு படகாக இருக்கலாம். மீண்டும் கவனமாகப் பார்!" என்றான் வைனா மொயினன்.

"தூரத்தில் ஒரு தீவு தொிகிறது. அங்கே காட்டரசுகளில் கருடன்கள் இருக்கின்றன. மிலாறு மரங்களில் காட்டுக் கோழிகள் இருக்கின்றன."

"அவை கருடன்களோ காட்டுக் கோழிகளோ அல்ல. வடநாட்டு வீரர்களாக இருக்கலாம். இன்னும் கவனமாகப் பார்!" என்றான் வைனாமொயினன்.

அப்போது லெம்மின்கைனன் கத்தினான். "ஆம், அது ஒரு படகு. நூறு பேர் துடுப்பு வலித்து வருகிறார்கள். அதில் ஆயிரம் பேர் அடங்கியிருக்கிறார்கள்."

இந்தச் செய்தி உண்மை என்று வைனாமொயினனுக்குத் தொியும். துடுப்பை வேகமாக வலிக்கும்படி தன் ஆட்களுக்குப் பணித்தான். நீர்நாயைப்போல முன்னணியம் நீரைக் கிழித்து முன்னேறியது. நீர்வீழ்ச்சியைப்போல பின்னணியம் இரைந்து சென்றது. நீர் கொதித்துக் குமிழ்கள் பிறந்தன. நுரைத்த அலைகள் பாயில் பறந்தன.

கலேவலா வீரர்களின் கப்பல் வெகு விரைவாகச் சென்றது. ஆனால் வடநாட்டுத் தலைவியின் கப்பலும் வெகு விரைவாகத் துரத்தி வந்தது.

அபாயம் தன்னை அண்மித்துவிட்டது என்பதை வைனாமொயினன் உணாந்தான். அதிலிருந்து எப்படித் தப்பலாம் என்று சிந்தித்தான். "இதற்கு ஒரு மாற்று வழியான மந்திரம் எனக்குத் தொியும்" என்றான் அவன்.

அவன் தனது தீப்பெட்டியை எடுத்தான். அதிலிருந்து ஒரு தீத்தட்டிக் கல்லை எடுத்துத் தனது இடது தோளுக்கு மேலாகக் கடலில் எறிந்தான். "இதிலிருந்து ஒரு கற்பாறை எழட்டும்! ஓர் இரகசியத் தீவு வரட்டும்! வடநிலத் தலைவியின் படகு அதில் மோதிப் பிளக்கட்டும்" என்று சொன்னான்.

வடக்குப் பக்கமாய் உடனே ஒரு பாறை எழுந்தது. வடநிலத் தலைவியின் கப்பல் விரைந்து வந்து அதில் மோதிச் சிதறிற்று. அடிக் கப்பல் இரண்டாய்ப் பிளந்தது. பாய்மரம் உடைந்து கடலில் வீழ்ந்தது. பாய்களைக் காற்று அடித்துச் சென்றது.

லொவ்ஹி என்னும் வடநிலத் தலைவி கடலில் ஓடித் திாிந்து கப்பலை நிமிர்த்தப் பார்த்தாள். ஆனால் முடியவில்லை. கப்பலின் விலாப் புறங்கள் நொருங்கித் துடுப்புகளும் சிதறிப் போயின.

அப்போது அவளுக்கும் ஒரு மந்திரம் நினைவுக்கு வந்தது. ஐந்து அாிவாள்களையும் ஆறு மண்வெட்டிகளையும் எடுத்துப் பொிய நகங்களாக மாற்றித் தனது கைகளில் மாட்டினாள். உடைந்த கப்பலில் பாதியைத் தனக்குக் கீழே வைத்தாள். கப்பலின் பக்கங்களை இறகுகள் ஆக்கினாள். வலிக்கும் துடுப்பை வாலாக மாற்றினாள். நூறு ஆயிரம் வில் வீரர்களையும் வாள் வீரர்களையும் இறகுகளின் கீழும் வாலின் கீழும் வைத்தாள்.

அவள் தனது பிரமாண்டமான இறகுகளை விாித்து ஒரு கழுகைப்போல மேலே எழுந்து பறந்தாள். ஒற்றை இறகு வான்முகிலில் பட்டது. மற்ற இறகு கடல் நீரைத் தொட்டது.

அப்பொழுது, "வைனாமொயினனே, உனக்குப் பின்னால் வடமேல் பக்கமாய்த் திரும்பிப் பார்" என்று நீாின் அன்னையான அழகிய மாது எச்சாித்தாள். அவன் கதிரவன் கீழே தலையைத் திருப்பினான். அவனுக்குப் பின்னால் ஓர் அபூர்வமான பறவையாய் கருடனின் தோள்களுடன் இராட்சசக் கழுகின் இறகுகளுடன் லொவ்ஹி பறந்து வந்து கொண்டிருந்தாள்.

லொவ்ஹி தன்னைக் கடந்து பறந்து சென்று பாய்மர உச்சியில் நின்றதைக் கண்ட வைனாமொயினன் அதிசயப்பட்டான்.

இல்மாினன் உடனே தன்னை அர்ப்பணம் செய்து கடவுளைப் பிரார்த்தித்தான். "வலிய தெய்வமே, எங்களைக் காத்தருளும்! இறைவன் படைத்த பிள்ளைகளில் அன்னை பெற்ற பிள்ளை வீழாது இருக்கட்டும்! மனுக்குல முதல்வனே, விண்ணின் மேலான தந்தையும் நீரே! நெருப்பாடை ஒன்றை எனக்குத் தாரும்! அணிந்து அதனை நடத்துவேன் போரை! விண்ணின் மேலான தந்தையும் நீரே!"

வைனாமொயினன், "ஓகோ, வடநாட்டின் பேரரசியே, இந்தத் தீவின் பனிப்புகார் படிந்த கடல்முனையோரம் சம்போவைப் பங்கிடலாமா?" என்று கேட்டான்.

"நடக்காது" என்றாள் லொவ்ஹி. "சம்போவை உன்னுடன் பங்குபோட முடியாது" என்றவள் கப்பலிலிருந்து சம்போவைக் கைப்பற்ற முயன்றாள்.

லெம்மின்கைனன் தனது இடது பக்கப் பட்டியிலிருந்து வாளை உருவினான். கழுகின் கால்களையும் நகங்களையும் குறி பார்த்து அறைந்தான். அறையும்போது, "இறகில் மறைந்திருக்கும் நூறு வீரரும் வீழ்க!" என்று சொல்லியே அறைந்தான்.

பாய்மரத்து உச்சியில் இருந்து லொவ்ஹி கத்தினாள். "ஓ, நீயா? லெம்பியின் மைந்தனே, நீயோ இழிந்தவன். நீ உன் அன்னைக்குக் கொடுத்த வாக்கை மீறினாய்! பத்துக் கோடை காலம்வரை போருக்குப் போகேன் என்று உன் அன்னைக்குச் சொன்னாய், அல்லவா?"

இதுதான் தருணம் என்று எண்ணிய வைனாமொயினன் கடலில் இருந்த துடுப்பை எடுத்துக் கழுகின் நகங்களை அடித்தான். ஒரு சிறிய விரலைத் தவிர மற்றெல்லாம் நொருங்கி விழுந்தன. இறகிலிருந்து நூறு பேரும் வாலிலிருந்து ஆயிரம் பேரும் கடலில் வீழ்ந்து தெறித்தனர். ஊசியிலை மரத்திலிருந்து ஓர் அணில் விழுவதைப்போலக் கழுகும் வந்து கப்பலில் வீழ்ந்தது.

லொவ்ஹி தனது மோதிர விரலால் சிவப்புப் படகிலிருந்து சம்போவைத் தூக்கினாள். சம்போ தவறி நீலக் கடலில் விழுந்தது. பலநிற மூடியும் அதனுடன் விழுந்தது. இரண்டும் நொருங்கித் துகள் துகளாகின.

உடைந்த சம்போவின் பொிய துண்டுகள் கடலின் அடிக்குச் சென்று கருஞ் சேற்றில் படிந்து கடலரசன் அஹ்தோவின் செல்வங்களாகின. தங்க நிலவு திகழும் வரையில் அஹ்தோவுக்கு வேறு செல்வங்களே தேவையில்லை.

சிறிய துண்டுகளைக் காற்று நீரோடு நீராகத் தாலாட்டிச் சென்று கரையில் சேர்த்தது. சிறிய துண்டுகளை அலைகள் அடித்துக் கரையில் சேர்த்ததை வைனாமொயினன் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். "இதுதான் நிலையான எதிர்காலச் செல்வத்தின் ஆரம்பம். இந்த விதையிலிருந்து முளை உண்டாகும். கரையில் படிந்த இந்தத் துண்டுகளில் இருந்தே எல்லாப் பொருட்களின் உழுதலும் விதைத்தலும் விளைச்சலும் உண்டாம். பின்லாந்து நாட்டின் நல்ல நிலங்களிலெல்லாம் சூாியன் ஒளியும் சந்திரன் நிலவும் நன்றாய்த் துலங்கும்" என்று சொன்னான்.

லொவ்ஹி திரும்பிச் சென்றபோது, "உனது விதைத்தலுக்கும் விளைச்சலுக்கும் பசுக்களுக்கும் பயிர்களுக்கும் சூாியனுக்கும் சந்திரனுக்கும் எதிரான தந்திரம் ஒன்று எனக்குத் தொியும். நான் சூாியனையும் சந்திரனையும் கவர்ந்து மலைப் பாறைகளுக்குள் ஒளிப்பேன். உறைபனியை ஊற்றி அனைத்தையும் உறைய வைப்பேன். உனது நல்ல வயல்களில் இரும்புக் குண்டு மழையைப் பொழியச் செய்வேன். புல்வௌியில் ஒரு கரடியை எழுப்பி உனது கால்நடையை அழிப்பேன். கொடிய தொற்றுநோய்களை அனுப்பிக் கலேவா இனத்தவரை அடியோடு கொன்று முடிப்பேன். அதன்மேல், இந்தச் சூாியன் சந்திரன் உள்ளவரை உலகத்தில் கலேவலா மக்களைப்பற்றிய பேச்சே இருக்காது" என்று சொன்னாள்.

வைனாமொயினன், "எந்த லாப்புலாந்துகாரராலும் என்னைச் சபித்துப் பாட முடியாது. கடவுளின் கையிலேயே கடைசி வார்த்தை இருக்கிறது. அவரே செல்வத்தின் திறவு கோலை வைத்திருக்கிறார். பொறாமையும் வெறுப்பும் கொண்ட மனிதாின் கைக்கு அது வரவே வராது" என்று சொன்னான்.

அவனே தொடர்ந்தான்: "வடநாட்டுத் தலைவியே, உனது தீய செயல்களைக் கொண்டுபோய் மலைகளில் ஒளித்து வை! உனது தொல்லைகளைப் பாறைகளில் அடைத்து வை! ஆனால் சூாியன் சந்திரனை அல்ல. உறைபனி ஊற்றி உனது விளைச்சலையே உறைய வைக்கட்டும்! புல்வௌிக் கரடி உனது கால்நடையையே கொன்று தின்னட்டும்!"

லொவ்ஹி அழுதுகொண்டே வடநாட்டுக்குத் திரும்பிப் போனாள். சம்போவின் ஒரு சின்னஞ்சிறிய துண்டுதான் அவளுடைய மோதிர விரலில் கொளுவியிருந்தது. அதனால் வடநாட்டில் பசியும் பஞ்சமும் உண்டாயிற்று.

அதன்பின் முதிய வைனாமொயினன் கடவுளை நினைத்துப் பிரார்த்தனை செய்தான்:

"மாபெரும் கர்த்தரே, எங்களுக்கு நிறைவான வாழ்வைத் தந்து எங்களை ஆசீர்வதியும்! அதன்பின் இந்த இனிய பின்லாந்து நாட்டில், இந்த அாிய கர்யலாப் பகுதியில் எங்களுக்கு மேன்மையான மரணத்தையும் தாரும்!

"மாபெரும் காவலரே, எங்களுக்குக் காவலாக இரும்! இந்த மானிடாின் மாயங்களிலிருந்தும் பெண்களின் சதிகளிலிருந்தும் கடைத்தேற எங்களுக்கு வழிகாட்டும்! பூமியிலுள்ள தீவினைகளைப் பூமியிலேயே வீழ்த்தும்! நீாின் தீய சக்திகளை நீாிலேயே ஆழ்த்தும்!"

"உமது எல்லா மக்களுக்கும் அருகிலேயே இரும்! உமது எல்லாப் பிள்ளைகளுக்கும் உறுதியான பாதுகாப்பைத் தாரும்! இரவில் எங்கள் இரட்சகனாகவும் பகலில் எங்கள் பாதுகாவலனாகவும் இருந்து அருள் புாியும்! சூாிய ஒளியைத் தடை செய்யாதீர்! சந்திரன் நிலவைத் தடுத்து விடாதீர்! காற்று வீசுதலையும் மழை பொழிதலையும் நிறுத்தி விடாதீர்! உறைபனியால் எங்களை உறைய வையாதீர்! கொடிய காலநிலையால் கெடுதி செய்யாதீர்!"

"இந்த எனது தாய் நாட்டிலே, எனது மக்களின் பக்கங்களிலே, கல்லிலே ஒரு கோட்டை கட்டி, அதற்கு இரும்பிலே ஒரு வேலி வையும்! அது பூமியிலிருந்து வான் வரைக்கும் வானிலிருந்து பூமி வரைக்கும் வளரட்டும். அது எங்களுக்கு ஒரு நித்திய வீடாக அமையட்டும்! அது எங்களுக்கு ஒரு நல்ல வாழ்விடமாய்ப் பாதுகாப்பான புகலிடமாய்த் திகழட்டும். அகங்காரம் கொண்ட மனிதர் எங்கள் பொருள்களை அபகாியாது இருக்கட்டும்! எங்கள் அறுவடைக்கு அழிவு வராது இருக்கட்டும்! இவையெல்லாம் இந்தத் திங்களின் வெண்ணிலவு திகழும்வரை நிகழ அருள் புாியும்!"


44. புதிய யாழ்

நித்திய முதிய வைனாமொயினன் கொல்லன் இல்மாினனிடம் வந்தான். "நாங்கள் சொந்த வாழ்விடங்களுக்குத் திரும்பி வந்துவிட்டோம். நாங்கள் இனிய இசை கேட்டு இன்புற்றிருக்க வேண்டிய நேரம் இது. கந்தலே என்னும் யாழை நான் கடலிலே இழந்துவிட்டேன். அது அஹ்தோவின் இருப்பிடத்தில் வெல்லமோவின் பிள்ளைகளிடம் போய்விட்டது" என்று சொன்னான்.

அவனே தொடர்ந்து, "இல்மாினனே, எனக்கு ஒரு இரும்பு வாாியை அடித்துக் கொடு! அதற்கு நெருக்கமான பற்களும் நீண்ட கைப்பிடியும் இருக்கட்டும். எனது கோலாச்சி மீனெலும்பு யாழைத் தேடி அலைகளையும் கோரைப் புற்றடத்தையும் கரைகளையும் வாரப் போகிறேன்" என்றான்.

கொல்லன் இல்மாினன் ஓர் இரும்பு வாாியைத் தட்டிச் செய்தான். அதற்கு அறுநூறு அடி நீளத்தில பற்களும் மூவாயிரம் அடி நீளத்தில் செப்புக் கைப்பிடியும் இருந்தன. வைனாமொயினன் கடற்கரைக்கு வந்தான். அங்கே இரண்டு படகுகள் இருந்தன. அவற்றில் புதிய படகில் ஏறிப் புறப்பட்டான்.

அவன் கடலை வாாினான். அலைகளில் தேடினான். நீராம்பல் மலர்களை வாாிக் குவித்தான். கோரைப்புல் பூண்டுகளை அலசி ஆராய்ந்தான். குப்பை கூளங்களைக் கூட்டிக் குவித்தான். ஆழப் பகுதிகள் அகன்ற பகுதிகள் கற்பாறைகள் எங்கும் தேடினான். கந்தலே யாழ் கிடைக்கவேயில்லை.

ஆழ்ந்த துயரும் தாழ்ந்த தலையுமாய், உயர்ந்த தொப்பியும் ஒருங்கே சாிய, அவன் வீட்டுக்குத் திரும்பி வந்தான். வரும் வழியில், "கோலாச்சி மீனின் எலும்பில் செய்த யாழின் இன்னிசை இனி என்றுமே கிடைக்காது" என்று வருந்தினான்.

அப்போது அங்கே ஒரு மிலாறு மரம் அழும் சத்தம் கேட்டது. வைனாமொயினன் மரத்தின் அருகில் சென்றான். "வெண்பட்டி மரமே, நீ ஏன் அழுகிறாய்? உன்னை ஒருவரும் போருக்கு அனுப்பவில்லேயே!" என்று கேட்டான்.

பசுந்தழை மரமும் பகர்ந்தது இவ்விதம்: "நான் நல்ல மகிழ்ச்சியாக இருப்பதாகப் பலர் நினைக்கிறார்கள். உண்மை என்னவென்றால் நான் துன்பச் சுமையால் துவண்டு போயிருக்கிறேன். அல்லல்பட்ட அபலையாய் இருக்கிறேன். "

"கோடை காலம் வந்தால் குதூகலமும் வரும் என்று பலர் எதிர்பாார்த்திருப்பர். கோடை வந்தால்தான் எனக்குக் கவலையும் வரும். கோடையில் எனது பட்டையை உாிப்பார்கள். இலைகள் நிறைந்த கிளைகளை ஒடிப்பார்கள். வசந்த காலத்தில் பிள்ளைகள் வருவார்கள். எனது உடலைக் கத்தியால் கிழிப்பார்கள். கொடிய இடையர்கள் வருவார்கள். எனது வெண்ணிறப் பட்டியை எடுப்பார்கள். அதிலிருந்து பை செய்வார்கள். வாளுறை செய்வார்கள். சிறுபழம் போடக் கூடையும் செய்வார்கள். பெண்கள் வருவார்கள். என்கீழ் அமர்வார்கள். அரட்டை அடிப்பார்கள். இலைதழை ஒடித்து இலைக்கட்டு அமைப்பார்கள். இவை அனைத்திலும் மோசமானது நான் விறகுக்காக வெட்டபடுதலே! இந்தக் கோடையிலும் மூன்று தடவைகள் மனிதர்கள் வந்தார்கள். கோடாிகளைத் தீட்டினார்கள். எனது வாழ்வை முடிக்க முயற்சி எடுத்தார்கள். "

"இவைதாம் எனது கோடை காலக் குதூகலம். பனிமழை பொழியும் குளிர்காலம் ஒன்றும் சிறந்ததல்ல. காலத்துக்கு ஏற்றவாறு கவலையும் மாறும். அந்த இருண்ட நாட்களில் தலை தாழும். முகம் வெளுக்கும். எனது பசுமையான ஆடைகளைக் காற்றுக் கொண்டு போய்விடும். அழகிய பாவாடையைக் குளிர்பனி அகற்றும். குளிாிலும் பனிக் காற்றிலும் நான் நிர்வாணமாக நின்று நடுங்கித் தவிப்பேன்."

"பச்சை மிலாறுவே, அழாதே!" என்றான் வைனாமொயினன். "உனக்கு ஒரு புது வாழ்வு கிடைக்கும். நீ ஆனந்தக் கண்ணீர் சிந்துவாய். உனது மனத்தில் மகிழ்ச்சி நிறையும்."

வைனாமொயினன் ஒரு கோடை நாள் முழுவதும் வேலை செய்து சுருண்ட மிலாறுவிலிருந்து கந்தலே யாழுக்கு ஓர் உடலமைப்பை உருவாக்கினான். அது இசை இன்பத்துக்கே ஓர் உடலமைப்பை உருவாக்கியது போல இருந்தது. அதன்பின் யாழுக்கு முளைகள் தேடிப் புறப்பட்டான்.

தொழுவத்துத் தோட்டத்தில் ஓர் உயர்ந்த சிந்தூர மரம் நின்றது. அதன் ஒவ்வொரு கிளையிலும் ஒவ்வொரு விதையுள்ள பழம் இருந்தது. ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு பொற்பந்து இருந்தது. ஒவ்வொரு பந்திலும் ஒவ்வொரு குயில் இருந்து கூவியது. அந்தக் குயில்களின் இசையில் எழுந்த ஐந்து சுரங்களும் பொன்னாய் வெள்ளியாய்ப் பொன் வெள்ளி மேடுகளில் பொழிந்தன. சுருண்ட மிலாறுவில் உருவான கந்தலே யாழுக்கு வைனாமொயினன் அங்கே முளைகளைப் பெற்றான்.

"சாி, இப்பொழுது முளைகள் கிடைத்துவிட்டன. யாழுக்கு இன்னும் ஐந்து நரம்புகள் வேண்டுமே!" என்றான் அவன்.

அவன் பசுமையான காட்டு வழியாக நடந்து சென்றான். அங்கே காட்டு வௌியில் ஒரு கன்னி இருந்தாள். அவள் அழவுமில்லை. ஆனந்தப்படவுமில்லை. மாலைப் பொழுதில் மயங்கித் தன் மணாளனை நினைத்துத் தனக்குத் தானே பாடிக் கொண்டிருந்தாள்.

வைனாமொயினன் காலணியும் காலுறையும் அணியாமல் மெதுவாக அவள் அருகில் சென்று, "கன்னியே, எனது யாழுக்கு நரம்புகள் தேவை. உனது கூந்தலில் சிலவற்றைத் தருவாயா?" என்று கெஞ்சினான். அவள் தனது கூந்தலில் ஏழு இழைகளைத் தந்தாள். அவை கந்தலே யாழுக்கு நரம்புகளாக அமைந்தன.

இப்பொழுது கந்தலே என்னும் நரம்பிசைக் கருவி தயாராகிவிட்டது. வைனாமொயினன் ஒரு கல்லில் அமர்ந்தான். யாழைக் கையில் எடுத்தான். அதனை விண் நோக்கி நிமிர்த்தினான். உடற் பகுதியை முழங்காலில் வைத்து அழுத்தினான். நரம்புகளை மீட்டினான். சுருதி சேர்க்க முயன்றான்.

பின்னர் யாழை தனது முழங்காலில் குறுக்காக வைத்தான். நரம்புகளில் விரல்களை மெதுவாகப் படியவிட்டான். ஒலி அலையலையாய் எழுந்தது. அது இசையாக மலாந்தது. முதிய பாடகனின் சிறிய கரங்களும் மெலிந்த விரல்களும் நரம்புகளில் தவழ்நது தண்ணொலி எழுப்பின. அந்தப் பசுமை மரமும் தங்கக் குயில்களும் கன்னியின் கூந்தலும் அளித்த இசையால் இன்பம் பிறந்தது.

வைனாமொயினன் யாழை வாசித்தான்.

மலைகள் முழங்கின. பாறைகள் மோதின. குன்றுகள் குலுங்கின. கற்பாறைகள் கரைந்து கடலில் வீழ்ந்தன. கூழாங்கற்கள் கனிந்து நீாில் கலந்தன. 'பைன்' மரங்கள் பரவசப்பட்டன. அடி மரங்கள் ஆடி மகிழ்ந்தன.

சித்திரத் தையலில் மூழ்கியிருந்த கலேவலாப் பெண்கள் இசையைக் கேட்டதும் எழுந்து ஓடினர். நகைத்த வாயுடன் நதியினைப் போலவே நங்கையர் விரைந்தனர். கைகளில் தொப்பிகளை ஏந்திய வண்ணம் ஆண்கள் அனைவரும் அருகினில் வந்தனர். முதிய மாதர் கன்னத்தில் கை வைத்துக் கல்லாக நின்றனர். இளம் பெண்கள் அங்கே கண்ணீர் கசியக் கனிந்து நின்றனர். பையன்கள் முழங்கால்களை நிலத்தில் ஊன்றி மெய்மறந்து நின்றனர். எல்லோரும் கந்தலே யாழின் இசையின்பம்பற்றி ஒரே நாவால் ஒரே குரலால் ஒன்றாய் இவ்வாறு உரைத்தனா: "வானத்தில் சந்திரன் தோன்றிய காலத்திலிருந்து இப்படியொரு அற்புத இசையை நாங்கள் என்றுமே கேட்டதில்லை!"

அந்த மென்மையான இனிய இசை ஆறு கிராமங்களுக்கு எட்டியது. அந்த இசையைக் கேட்டு மகிழ வராத உயிருள்ள பிராணிகள் எதுவுமே இல்லை. கந்தலேயின் கனிவான இசையைக் கேட்கக் காட்டு விலங்குகள் கால்களை மடித்துத் தரையில் இருந்தன. காற்றில் பறக்கும் பறவைகள் எல்லாம் மரக்கிளைகளில் கூடின. நீாில் வாழும் மீனினம் எல்லாம் கரைக்கு வந்து கானம் கேட்டன. வைனாமொயினன் வழங்கிய இசையை மண்ணுக்குள் வாழும் மண்புழுக்கூட மண்மேல் வந்து மகிழ்வாய்க் கேட்டது.

வைனாமொயினன் தனது உடையையோ இடுப்புப் பட்டியையோ மாற்றாமல், ஒரே யொரு காலையுணவுடன் ஒரு நாள் இசைத்தான். மறுநாளும் இசைத்தான்.

ஊசியிலை மரத்தில் கட்டப்பட்ட தனது வீட்டுக்குள் அவன் நுழைந்தபோது, கூரை கீச்சிட்டது. சுவர்கள் எதிரொலித்தன. உத்தரம் இசைத்தது. கதவுகள் கானம் பாடின. யன்னல்கள் குதூகலப்பட்டன. அடுப்புப் புகடு அசைந்தது. மிலாறு மரத் தூண்கள் மந்திரம் கூறின.

அவன் ஊசியிலைக் காட்டுக்குள் நடந்தபோது, ஊசியிலை மரங்கள் தலைகளைத் தாழ்த்தின. தாரு மரங்கள் மலைப் பக்கம் திரும்பின. கூம்புக் காய்கள் நிலத்தில் உருண்டன. ஊசியிலைகள் வோில் சொாிந்தன. பசும் சோலைப் பக்கம் அவன் நடந்து செல்கையில், இலைகள் அசைந்து ஆனந்தப்பட்டன. மலர்ந்த மலர்கள் மகிழ்ச்சியில் திளைத்தன. இளஞ் செடிகள் தலைகளைத் தாழ்த்தி வணங்கத் தொடங்கின.


45. கலேவலாவில் தொற்றுநோய்

சம்போவின் பலநிற மூடியின் உடைந்த துண்டுகளால் கலேவா மாகாணம் செழிப்பாக இருக்கிறது என்றும் வைனாமொயினன் நன்றாக வாழ்கிறான் என்றும் வடநிலத் தலைவி லொவ்ஹி அறிந்தாள். அதனால் அவளுக்குப் பொறாமை ஏற்பட்டது. கலேவலா மக்களை எப்படி வருத்தி அழிக்கலாம் என்று எண்ணமிட்டாள்.

அவள் மனுக்குல முதல்வனை மனதில் நினைத்தாள். "ஓ, மனுக்குல முதல்வனே, மாபெரும் தெய்வமே, கலேவலா நாட்டில் இரும்புக் குண்டு மழையைப் பொழியும்! உருக்கினால் ஆன ஊசிகளைச் சொாியும்! கொடிய நோய்களைக் கொண்டுபோய்க் கொட்டும்! ஆண்கள் அனைவரும் வயல்களில் விழட்டும். பெண்கள் தொழுவத்து நிலத்தில் அழிந்து போகட்டும்!"

ஆயிரம் தீச்செயல்களுக்கு ஆரம்பமாக ஓர் அந்தகப் பெண் இருந்தாள். அந்த அவலட்சணமான பெண்ணுக்குப் பெயர் லொவியத்தார். மரண உலகில், துவோனியின் மகள்களில் அவளே மிகவும் கொடியவள். கருமை நிறம் கொண்ட இந்தக் குருட்டுப் பெண் தீய நிலத்தில் படுக்கையை விாித்தாள். நடுவழியில் நித்திரை செய்தாள். காற்றின் பக்கம் முதுகைக் காட்டினாள். குளிரான பக்கம் பின்புறம் காட்டினாள். விடியலை நோக்கி முகத்தை நீட்டினாள்.

அந்த வெட்டவௌியில் அவள் கிடந்தபோது கிழக்கிலிருந்து ஒரு பொிய காற்று எழுந்தது. அவளுடைய உதரத்துள் புகுந்தது. கருப்பையை நனைத்தது. கர்ப்பத்தைக் கொடுத்தது. அந்தக் கனத்த கடுமையான கர்ப்பத்தை இரண்டு மாதங்கள் சுமந்தாள். மூன்று, நான்கு, ஐந்து மாதங்கள் என்று ஒன்பதுவரை போனது. பெண்களுடைய பழைய கணக்குப்படி பத்தாம் மாதத்தில் பாதியும் போனது.

பத்தாம் மாதம் ஆரம்பமானதும், கரு பாரமானது. கடினமானது. நோவுடன் அழுத்தத் தொடங்கியது. இன்னும் பிறப்பு என்று ஒன்றும் நடக்கவில்லை.

அவள் பிரசவத்துக்கு இடம் தேடிப் புறப்பட்டாள். ஐந்து மலைகளின் நடுவே நிமிர்ந்து உயர்ந்த இரண்டு பாறைகளுக்கு நடுவே சென்றாள். இன்னும் பிறப்பு என்று ஒன்றும் நடக்கவில்லை.

அவள் பல இடங்களுக்கு அலைந்து திாிந்தும் பிரசவம் நடக்கவில்லை. அதனால் அவள் வெறுப்பாலும் வேதனையாலும் வாய்விட்டு அழுதாள். வானத்தில் மேகத்தின் மேல் இருந்த இறைவனுக்கு அவளுடைய அழுகுரல் கேட்டது. அவர் அவளுக்கு ஒரு வழி சொன்னார்: "வடநாட்டுக் கடற்கரையோரம் ஒரு சேற்று நிலம் இருக்கிறது. அதில் ஒரு முக்கோணக் குடிசை இருக்கிறது. பிள்ளைப் பேற்றுக்கு அங்கே போ! உனக்கு அங்கே ஓர் அலுவல் இருக்கிறது. உன்னை அங்கே எதிர்பார்த்து இருக்கிறார்கள்."

லொவியத்தார் வடநாட்டுக்கு விரைந்தாள். அங்கே காத்திருந்த நீக்கல் பல்லுள்ள லொவ்ஹி அவளை இரகசியமாகச் சவுனாவுக்கு அழைத்துச் சென்றாள்.

லொவ்ஹி இரகசியமாகவும் விரைவாகவும் சவுனா அறையைச் சூடாக்கினாள். கதவின் பிணைச்சல்கள் கிறீச்சிடாது இருப்பதற்காக அவற்றுக்கு 'பீர்'ப் பானத்தைப் பூசினாள். பின்னர் பிரசவத்துக்கான மந்திரத்தைச் சொல்லத் தொடங்கினாள்.

"இயற்கையின் மகளே, அம்பொன் அணங்கே, மாதர் அனைவாிலும் மூத்தவள் நீயே! மனித இனத்தின் முதல் தாய் நீயே! இடுப்பு வரைக்கும் அலைகளில் ஓடு! மீன்களின் கழிவை எடுத்து வந்து இந்தப் பெண்ணின் எலும்புகளில் பூசு! நோவில்லாமல் பிரசவமாகப் பக்கங்கள் எல்லாம் பதமாய்ப் பூசு!

"மனுக்குல முதல்வனே, மாபெரும் தெய்வமே, தேவையான நேரமிது. தவறாமல் வாருமையா! கூப்பிட்ட குரலின் குறை தீர்க்க வாருமையா! இந்தச் சவுனாப் புகையில் ஒருத்தி நோவுடன் இருக்கிறாள். வலது கையில் தங்கத் தடி எடும்! தடைச் சட்டத்தைத் தட்டி நொருக்கும்! கதவுத் தூணைத் தூள்பட விழுத்தும்! படைப்பவன் பூட்டைப் படாரெனத் திறவும்! உட்புறத் தாளை உடைத்துத் தள்ளும்! பொியதோ சிறியதோ பலவீனமானதோ எதுவென்றாலும் பிரசவமாகட்டும்!"

பின்னர், அந்த மரண உலகின் குருட்டுப் பெண் செப்பு அலங்காரம் செய்யப்பட்ட விாிப்பில் பிள்ளைகளைப் பெற்றாள். கோடை காலத்தின் ஒரே இரவில், அந்தச் சவுனா அறையில் ஒன்பது மைந்தர்களை ஒரே கருவிலிருந்து பெற்றெடுத்தாள்.

மற்றவர்களைப் போலவே லொவியத்தாரும் தனது பிள்ளைகளுக்கு பெயர்களை வைத்தாள். துளைக்கும் நோய் என்று ஒன்றுக்குப் பெயர் வைத்தாள். வயிற்று வலி என்று அடுத்ததற்குப் பெயர் வைத்தாள். எலும்பு நோய், கணைநோய், கட்டிநோய், குட்ட நோய், புற்றுநோய், தொற்று நோய் என்று எட்டுக்கும் பெயர் வைத்தாள். அந்தக் கொடிய சகோதரர்களின் இளையவன் மட்டும் பெயர் இல்லாமல் இருந்தான். அவன் ஒரு தீய சக்தியாய்ச் சூனியக்காரனாய் இருக்கட்டும் என்று சேற்றினில் தள்ளிவிட்டாள்.

இந்தக் கொடிய பிறவிகளுக்குக் கோபத்தை உண்டாக்கி, தென்புலம் நோக்கி அனுப்பி வைத்தாள் லொவ்ஹி. அதனால் கலேவலாப் பகுதி மக்களுக்கு வழக்கத்தில் இல்லாத பெயர் தொியாத நோய்கள் பல ஏற்பட்டு வருத்தியது. அவர்கள் வாடினார்கள். வாதையால் வருந்தினார்கள். தரைப் பகுதிகள் உளுத்துப் போயின. படுக்கை விாிப்புகள் வெளுத்துப் போயின.

அப்பொழுது முதிய வைனாமொயினன் என்னும் நிலைபேறுடைய மந்திரக் கலைஞன் நோயுடன் போராடி மக்களைக் காப்பாற்றப் புறப்பட்டான்.

சவுனாவுக்குச் சுத்தமான விறகுகளைக் கொண்டு வந்து தீமூட்டிச் சவுனாக் கற்களைச் சூடேற்றினான். ஆடைக்குள் ஒளித்துத் தண்ணீர் கொணாந்தான். குளியலின்போது விசிற நுறு கிளைகளை ஒடித்து மென்மையான இலைக்கட்டுகள் செய்து, அவற்றை வெப்பமாக்கினான்.

கனலை உமிழும் கற்களிலிருந்து தேன் போன்ற நீராவி எழுந்து அறையை நிறைத்தது. அவன் மந்திரம் சொன்னான்: "இறைவனே, இந்த நீராவியுள் வருக! வானகத் தந்தையே, வெப்பத்துள் வருக! காக்க, காக்க, எம் மக்களைக் காக்க! துரத்து, துரத்து, கொடிய நோயைத் துரத்து! அாிய இறைவனின் அனுமதியின்றி, அறியா மக்களை நோயா உண்பது? எங்கள்மேல் ஏவிய தீய மந்திரங்கள் ஏவியோன் தலையில் உடன் போய் விழட்டும்! மனுக்குல முதல்வனே, மாபெரும் தெய்வமே, தேவையான நேரமிது. தவறாமல் வாருமையா! கனல் கக்கும் வாளொன்றை என் கரத்தில் தாருமையா! அதனால் காற்றின் வழியே கொடிய நோவைத் துரத்துவேன். பாறைக் குகைக்குள் பெருநோயைச் செலுத்துவேன். நோயும் நோவும் பாறைகளுக்கு இல்லை!

"நோவின் பெண்ணே, துவோனியின் மகளே, மூன்று நதிகள் சேரும் இடத்தில, மூன்று அருவிகள் பிாியும் இடத்தில் நோ என்னும் பாறையில் அமர்ந்து இருப்பவளே, நோ என்னும் மலையைத் திருகி முறுக்கி நீலப் பாறையின் கீழே போட்டு அலையின்அடியில் தள்ளித் திணிப்பாய்! அங்கே காற்றும் கதிரும் போகாது இருக்கும்!

"இதுவும் இன்னமும் போதாது என்றால், நோவின் மகளே, நல்ல பெண்மணியே, உடன் இங்கு வருவாய்! செப்புச் சிமிழில் நோவை அடைப்பாய்! அதை நோ மலைக்குக் கொண்டு போய், விரலளவு சிறிய கலயத்தில் கொதிக்க வைப்பாய்!

"மலையின் உச்சியில் துறப்பணத்தால் துளைக்கப்பட்ட துளை ஒன்று இருக்கிறது. அதற்குள் கொடிய நோவைத் திணித்து அடைத்து வைப்பாய்! அதற்குள் என்றும் அடைபட்டே இருக்கட்டும்!"

பின்னர் முதிய வைனாமொயினன் தனது மக்களின் புண்களுக்கும் காயங்களுக்கும் ஒன்பது வகையான பூச்சு மருந்துகளைப் பூசினான். அதன்பின் வைனாமொயினன் இப்படிச் சொன்னான்: "ஓ, மனுக்குல முதல்வனே, சுவர்க்கத்தில் வாழும் முதிய மனிதனே, கிழக்கிலிருந்து ஒரு முகிலை அனுப்பும்! வடமேற்கிருந்தும் மேற்கிலிருந்தும் முகில்களை அனுப்பும்! நோயாளர் குளிக்கப் பொழிக நீர்மழை! சொாிக தேன்மழை!

"எனது கைக்கு எட்டா இடமெல்லாம் இறைவனார் கைகள் எட்டி தொடட்டும்! எனது விரல்கள் படாத இடமெல்லாம் இறைவனார் விரல்கள் தொட்டுப் படட்டும்! கடவுளின் கரங்கள் கருணை மிக்கவை. திங்களின் வெண்ணிலவு திகழும்வரை மக்களை நோய்கள் தீண்டாது இருக்கட்டும்." இவ்வாறு வைனாமொயினன் கொடிய மந்திரக் கட்டுகளை அவிழ்த்துத் தொற்று நோய்களைத் துரத்தி கலேவலா மக்களை அழிவிலிருந்தும் மரணத்திலிருந்தும் காப்பாற்றினான்.


46. வைனாமொயினனும் கரடியும்

கலேவலாவுக்கு அனுப்பபட்ட தொற்றுநோய்களிலிருந்து மக்களை வைனாமொயினன் காப்பாற்றிவிட்டான் என்ற செய்தி வடநாட்டுக்கு வந்தது.

லொவ்ஹி என்ற நீக்கல் பல்லுள்ள முதியவள் அதைக் கேட்டுக் கடும் சினம் கொண்டாள். உடனே புற்புதாிலிருந்து ஒரு கரடியை எழுப்பினாள். கலேவலாவின் புல் வௌிகளுக்கு ஏவி விட்டாள்.

வைனோவின் வயல்களில் ஒரு கரடி பசுக்களைக் கொன்று குவிப்பதாக வைனாமொயினன் அறிந்தான். உடனே கொல்லன் இல்மாினனிடம் விரைந்த வைனாமொயினன், தனக்குச் செப்பு அலகுள்ள திாிசூலம் ஒன்று செய்து தரும்படி கேட்டான். இல்மாினன் ஒரு முத்தலை வேலைச் செய்து முடித்தபோது, அது பார்வைக்கு மிகவும் அழகாக இருந்தது. அது ஒன்றும் பொியதுமல்ல; ஆனால் அத்தனை சிறியதுமல்ல. அதன் அலங்கார வேலை இவ்வாறு இருந்தது: ஓநாய் ஒன்று அதன் அலகில் நின்றது. நீண்ட முனையில் கரடி நின்றது. காட்டேறு பொருத்தில் சறுக்கிச் சென்றது. பாிக்குட்டி பிடியில் அலைந்து திாிந்தது. குமிழில் கலைமான் துள்ளிக் குதித்தது.

புதிய பனிமழை பொழியத் தொடங்கியது. கம்பிளி ஆட்டின் உரோமத்தைப் போல மென்மையாகவும் முயலின் உரோமத்தைப் போல வெண்மையாகவும் பனிமழை பொழிந்து பூமியை நிறைத்தது.

"நான் இப்போது காட்டுக்குப் போகிறேன். போய் அங்கே நீல மகளிரைக் காணப் போகிறேன்" என்று சொன்னான் வைனாமொயினன்.

அவன் பசுமையான காட்டு வழியாகச் செல்லும்போது, காட்டரசன் தப்பியோவுக்கான மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே போனான். முடிவில் தனது மந்திரம் ஓதுதலை இவ்வாறு முடித்தான்:

"கரடியே, காட்டு ஆப்பிளே, உனது கூாிய பற்களை முரசுக்குள் மறைத்து வை! சடைத்த உரோமத்தினுள் நகங்களை மறைப்பாய்! தேவதாரு மரங்கள் சுழன்றாடும் சோலையில் உனக்கு ஓர் இருப்பிடம் தேடு! காட்டுக் கோழி கூட்டில் இருப்பது போல, நீயும் உனது இருப்பிடத்துக்குள்ளேயே வட்டமடித்து வாழ்வாய்! "

பின்னர் சிறு கண் படைத்த நீண்ட மூக்குடைய கரடியின் தோட்டத்தில் நாய் குரைக்கும் சத்தம் வைனாமொயினனுக்குக் கேட்டது. அவன் விரைந்து வந்து கரடியைக் கொன்றான்.

காட்டுக் கரடியைத் தான் கொல்ல முடிந்ததற்காக வைனாமொயினன் கடவுளைப் புகழ்ந்து நன்றி கூறிப் பாடினான். அதன்பின் இறந்து கிடந்த கரடியைப் பார்த்து இப்படிச் சொன்னான்:

"கரடியே, தேன் பாதமே, நீ சினம் கொள்ளாதே! உன்னை நான் வீழ்த்தவில்லை. நீயாகவே இழுவை வளையத்திலிருந்து நழுவி வீழ்ந்தாய். இலையுதிர் காலத்தில் பாதை வழுக்கலாய் இருக்கும் என்பதை மறந்தாய். முகில் மூடிய நாட்களில் வழி இருட்டாக இருக்கும் என்பதையும் மறந்தாய். அதனால் ஊசியிலைக் காட்டில் மரக் கிளையிலிருந்து நீயாகவே நழுவி வீழ்ந்தாய்.

"இந்தக் குளிரான மிலாறுப் புதாில் அமைந்த வெறும் வீட்டைவிட்டு என்னுடன் புறப்படு! நான் உன்னை வீரர்கள் நிறைந்த நாட்டு மக்களின் மத்திக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கே உனக்கு இகழ்ச்சி ஏற்படமாட்டாது. தேனும் மதுவும் தந்து மதிப்பு அளிக்கப்படும்."

வைனாமொயினன் தனது தடித்த உரோமம் படைத்த விருந்தாளியுடன் பனிமழை மூடிய புல்வௌியில் பாடிக் கொண்டே நடந்து சென்றான். அவனுடைய பாடல் எல்லா வீடுகளிலும் கேட்டது. எல்லா வீட்டுக் கூரைகளிலும் எதிரொலித்தது.

பாடலைக் கேட்ட கலேவலா மக்கள், "காட்டிலிருந்து வரும் அந்தப் பாடலைக் கேட்டீர்களா? அது காட்டுக் குருவியின் கீதத்தைப் போன்றது. கானக மகளிாின் கானத்தைப் போன்றது" என்று தங்களுக்குள்ளே பேசிக் கொண்டனர்.

பின்னர் னைாமொயினன் தோட்டத்து வாயிலுக்கு வந்தான். அவனை வாழ்த்த ஊர்மக்கள் திரண்டு வந்தனர். அவர்கள், "இங்கே வந்துகொண்டிருப்பது தங்கமா, வெள்ளியா? காட்டிலே கிடைத்தது தேனா? தப்பியோ தந்தது சிவிங்கியா? ஏனென்றால் நீர் இசைத்துக்கொண்டு வருகிறீர். இசையுடன் சறுக்கிக்கொண்டு வருகிறீர்" என்றனர்.

"மந்திரப் பாடலில் கீாி மயங்கியது" என்றான் வைனாமொயினன். "ஆனால் இது கீாியுமல்ல; சிவிங்கியுமல்ல. இது வனத்தின் வனப்பு! அகலத் துணியில் ஆக்கிய ஆடை! இந்த விருந்தாளியை நீங்கள் வரவேற்பதானால், இல்லக் கதவுகளை அகலத் திறவுங்கள். விருந்தாளியை வேண்டாம் என்றால், வீட்டுக் கதவுகளை அடித்து மூடுங்கள்!"

மக்கள் கூட்டம் இப்படிச் சொன்னது: "தேன்பாதமே, வாழ்க, வாழ்க! சுத்தமான இந்தத் தோட்ட வௌிக்கு வருக, வருக! இந்தச் சிறிய முற்றத்துக்குக் கானகத் தங்கம், காட்டு வெள்ளி வருவதை அறிவிக்கும் தப்பியோவின் எக்காள ஒலிக்கு எக்காலமும் காத்திருந்தோம். சறுக்கணி சறுக்கிச் செல்லப் பனிமழையை எதிர்பார்த்திருப்பதுபோல, கன்னம் சிவந்த காாிகை காதலனுக்குக் காத்திருப்பதுபோல உனக்காக நாங்கள் காத்திருந்தோம்."

"மாலை வேளையில் யன்னலில் இருந்தோம். களஞ்சியப் படிகளில் காலையில் இருந்தோம். வாரக் கணக்காய் வாயிலில் நின்றோம். மாதக் கணக்காய் பாதை முகப்பிலே நின்றோம். குளிர் காலமெல்லாம் தொழுவின் பக்கத்தில் நின்றோம். பனிமழை இறுகிப் பனிக்கட்டியானது. பனிக்கட்டி உருகிப் படியெல்லாம் நனைந்தது. நனைந்த நிலமும் கற்தரையானது. கற்தரை கரைந்து மணலாய் வந்தது. மணல் கனிந்து பசும் தரையானது. காட்டுக் கரடி எங்கே என்று இத்தனை நாட்களாய்க் காத்துக் கிடந்தோம்."

"எங்கள் விருந்தாளியை எங்கே இருத்தலாம்?" என்று வைனாமொயினன் கேட்டான்.

கலேவலா மக்கள் பின்னர் இவ்வாறு கூறினர்: "விருந்தாளியை வீட்டுக் கூரை உத்தரத்தின் கீழே அமர்த்தலாம். விருந்துக்கு உணவும் பானமும் தயாராக இருக்கின்றன. நிலமெல்லாம் பெருக்கி நிலப் பலகைகள் சுத்தமாக்கப்பட்டுள்ன. பெண்கள் அனைவரும் சிறந்த ஆடைகளை அணிந்து தரமான தலையணிகளைச் சூடியிருக்கிறார்கள்."

வைனாமொயினன் கரடியை முன்கூடத்துப் படிக்குக் கொண்டு வந்தான். "பசுக் கூட்டம் பயப்படாது இருக்க, பெண்களே, எச்சாிக்கையாக இருங்கள். கதவு நிலைகளிலிருந்து விலகி நில்லுங்கள்!" என்று கூறிய வைனாமொயினன் தொடர்ந்தான்:

"கரடியே, காட்டு ஆப்பிளே, இந்த அாிவையரைப் பார்த்து அஞ்ச வேண்டாம். சுருங்கிய காலுறைகளை அணிந்திருக்கும் பெண்களுக்கும் பயப்படத் தேவையில்லை. எங்கள் வீரன் உள்ளே வரும் இந்த நேரத்தில் பெண்கள் எல்லோரும் அடுப்படிப் பக்கம் போயிருங்கள்."

அங்கிருந்த மக்கள், "வருக, வருக! உமது வரவு நல்வரவாகுக! உமது விருந்தாளியை இரும்புடன் இணைத்த தாரு மர வாங்கில் இருக்க விடுங்கள். அவருடைய உரோம ஆடையைத் தடவிப் பார்க்க ஆசைப்படுகிறோம்" என்று சொன்னார்கள்.

வைனாமொயினன் கரடியின் உரோமத் தோலை உாித்து உத்தரத்தில் தொங்விட்டபோது மக்கள் புகழ்ந்து பாடினார்கள். தங்கத்திலும் செப்பிலும் செய்த கலயத்தில் இறைச்சியைப் போட்டு, அதற்கு ஜேர்மன் உப்பையும் கலந்தனர். இரசம் கொதித்ததும், அடுப்பிலிருந்த கலயங்களைக் கொண்டு போய்த் தாரு மரத்து மேசையின் முனையில் வைத்தனர். இறைச்சியைத் தங்கக் கிண்ணங்களில் நிறைத்தனர்.

விருந்து சிறப்பாக நிகழ்ந்தது. செப்பிலே தட்டுகள். வெள்ளியில் கரண்டிகள். தங்கத்தில் தோய்த்துத் தட்டிய கத்திகள். காட்டு விருந்தினால் கலயங்கள் கிண்ணங்கள் எல்லாம் நிரம்பி வழிந்தன.

பின்னர் வைனாமொயினன் வனதேவதைகளை வணங்கினான். "தங்க நெஞ்சுள்ள தப்பியோவே, தேன் போன்ற மியலிக்கியே, செந்தொப்பி அணிந்த தப்பியோ மகனே, தெல்லர்வோ என்னும் தப்பியோ மகளே, உங்கள் எருதின் திருமணத்துக்கு வருக! உங்கள் நீண்ட உரோமத்துப் பிராணியின் விருந்துக்கு வருக! உண்பதற்கு நிறைய உணவு இருக்கிறது. குடிக்க நிறையப் பானமும் இருக்கிறது. ஊர் மக்கள் அனைவருக்கும் போதிய அளவு இருக்கிறது."

"கரடி பிறந்த இடம் எது? சவுனாவின் வைக்கோல் படுக்கையா?" என்று ஊர்மக்கள் கேட்டனர்.

"இல்லை" என்ற வைனாமொயினன் தொடர்ந்து பாடினான். "தேன் பாதக் கரடி பிறந்தது சந்திரன் அருகில். சூாியனின் ஜோதியில். சப்த நட்சத்திரங்களின் தோளில். காற்றின் கன்னியர் வாழுமிடத்தில்.

"வானத்தின் விளிம்பில் முகிலோரத்தில் இயற்கை மகள் ஒருத்தி உலாவி வந்தாள். அவள் நீலக் காலுறைகளையும் மின்னும் காலணிகளையும் அணிந்திருந்தாள். அவள் கையில் கம்பிளி நூல் கூடை ஒன்றை வைத்திருந்தாள். அவள் ஒரு கட்டுக் கம்பிளி நூலை நீாில் எறிந்தாள். அதனைக் காற்றுத் தாலாட்டியது. அலைகள் அதைத் தள்ளிக் கொண்டு வந்து தேன் காட்டில் சேர்த்தது.

"காட்டரசியான மியலிக்கி கரையில் ஒதுங்கிய கம்பிளிக் கட்டைக் கண்டாள். அதை எடுத்து வந்து துணியால் சுற்றி மாப்பிள் மரத் தொட்டிலில் இட்டாள். சடைத்து வளர்ந்த ஒரு மரத்தின் உயர்ந்த கிளையில் தொட்டிலைத் தொங்கவிட்டாள்.

"செழித்து வளர்ந்த ஊசியிலை, தேவதாரு மரங்களின் கீழே தொட்டிலை ஆட்டித் தாலாட்டினாள். கரடி அங்கே வளர்ந்து தரமான உருவத்தைப் பெற்றது. குறுகிய கால்களும் வளைந்த முழங்கால்களும் தட்டையான அகன்ற முன்வாயும் இருந்தன. பொிய தலையும் சின்ன மூக்கும் சடைத்த உரோமமும் இருந்தன. ஆனால் பற்களும் நகங்களும் மட்டும் வளர்ந்திருக்கவில்லை.

"இது தீச்செயல்கள் எதையும் செய்யாமல் இருக்குமானால், இதற்கு நான் பற்களையும் நகங்களையும் படைப்பேன்" என்று மியலிக்கி சொன்னாள். அப்படியே கரடியும் தான் தீச்செயல்கள் எதையும் செய்ய மாட்டேன் என்று இறைவனின் பெயரால் சத்தியம் செய்தது.

"மியலிக்கி பற்களையும் நகங்களையும் தேடிப் புறப்பட்டாள். அவள் வெள்ளிக் கிளையுடைய ஒரு தேவதாரு மரத்திடம் வந்தாள். தங்கக் கிளையுடைய ஓர் ஊசியிலை மரத்திடம் வந்தாள். அவற்றை ஒடித்து வளைத்துப் பற்களாகவும் நகங்களாகவும் கரடிக்குக் கொடுத்தாள். அதன்பின் கரடியை சேற்று நிலங்களிலும் புதர் பற்றைகளிலும் வனப் பிரதேசத்திலும் பசும்புல் வௌிகளிலும் உலாவிவர அனுப்பி வைத்தாள். சதுப்பிலும் சமதரைப் பரப்பிலும் மகிழ்ச்சியாக வாழும்படி அதற்குக் கூறினாள். குளிர் காலத்தில் வரும் கொடிய நாட்களைத் தாங்கத் தேவதாரு மரக் கோட்டையில், ஐந்து கம்பிளி விாிப்புகளிலும் எட்டுப் போர்வைகளிலும் இருக்கும்படியும் அறிவுரை கூறினாள்.

"அங்கேதான் நான் கரடியைக் கண்டேன்" என்று வைனாமொயினன் தனது பாடலை முடித்தான்.

"காட்டரசனும் காட்டரசியும் கரடியை அன்புடன் தந்தார்களா அல்லது அம்பினால் ஈட்டியால் வீழ்த்தப்பட்டதா?" என்று ஊர்மக்கள் கேட்டார்கள்.

"நான் காட்டரசனையும் காட்டரசியையும் துதித்து வாழ்த்திப் பாடல்களைப் பாடினேன். அவர்கள் அதற்கு மனம் இளகிக் கரடி இருந்த இடத்துக்குப் பாதையைத் திறந்து விட்டனார்" என்ற வைனாமொயினன் மேலும் சொன்னான்: "நான் கரடியின் இருப்பிடத்தை அடைந்த பின்னர் அங்கே அம்பையோ ஈட்டியையோ எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஊசிமரக் காட்டில் கிளைகளிலிருந்து அது தானாகவே விழுந்தது. கிளைகளும் சுள்ளிகளும் அதன் மார்பையும் வயிற்றையும் கிழித்திருந்தன."

பின்னர் வைனாமொயினன் பழைய மந்திரப் பாடல்களைப் பாடி விருந்தைச் சிறப்பித்தான். "நான் இப்போது கரடியின் நாசியை எடுத்து எனது நாசியைச் சீர்செய்கிறேன். ஆனால் முழுவதையும் நான் எடுக்க மாட்டேன். இதை மட்டும்தான் எடுப்பேன் என்றும் சொல்ல மாட்டேன். நான் இப்போது கரடியின் செவிகளை எடுத்து எனது செவிகளைக் கூர்மைப் படுத்துகிறேன். நான் இப்போது கரடியின் கண்களை எடுத்து எனது கண்களைத் துலங்க வைக்கிறேன். நான் இப்போது கரடியின் நெற்றியை எடுத்து எனது நெற்றியைச் சிறப்பாக்குகிறேன். நான் கரடியின் நாக்கை எடுத்து எனது நாக்கை நலமாக்குகிறேன். நான் கரடியின் வாயை எடுத்து எனது வாயை விாிவாக்குகிறேன்."

பின்னர், "இந்தக் கரடியின் இரும்பு முரசிலிருக்கும் பற்களை இளக்கி அசைக்கக்கூடிய வல்லவன் யாராவது இந்தக் கூட்டத்தில் இருந்தால் முன்னே வாருங்கள்!" என்று அழைத்தான் வைனாமொயினன்.

ஒருவரும் முன்வராதபடியால், தானே முழங்காலில் அமர்ந்து அதன் தாடையை இறுகப் பற்றிப் பற்களை அசைத்துப் பிடுங்கினான். அதன்பின், "காட்டுக் கரடியே, உனது பயணத்தைத் தொடங்கும் நேரம் வந்துவிட்டது. தேவதாருக் காட்டில் அமைந்த ஓர் உயர்ந்த வீட்டுக்குப் புறப்படுகிறாய். அங்கே கால்நடையின் மணியோசை கேட்டே உனது காலத்தைக் கழிப்பாய்."

அதன் பின்னர் வைனாமொயினன் அங்கிருந்து வீட்டுக்குத் திரும்பினான். ஊர்மக்கள், "கரடியை எங்கே கொண்டுபோய் விட்டீர்?" என்று கேட்டார்கள்.

"நான் கரடியைப் பனிக்கட்டியில் விடவில்லை. அங்கே நாய்கள் கிளறும். பறவைகள் மறைக்கும். சதுப்பு நிலத்தில் புதைக்கவும் இல்லை. அங்கே புழுக்கள் அாிக்கும். எறும்புகள் தின்னும். "

"நான் கரடியை தங்க மலையின் செப்பு முடிக்குக் கொண்டு போனேன். அங்கே புனிதமான ஓர் ஊசியிலை மரத்தின் பொிய கிளையில் கரடியை வைத்தேன். அதனால் மனிதருக்கு மகிழ்ச்சி உண்டாகும். வழிப்போக்கருக்கு மதிப்பு உண்டாகும். அதன் தாடை கிழக்கே பார்த்திருக்கிறது. கண்கள் வடமேற்கே பார்த்திருக்கின்றன."

பின்னர் வைனாமொயினன் மாலைப் பொழுதை மதிப்பாக்கவும் அன்றைய தினத்தை மகிழ்வாக்கவும் பாடல்கள் பாடினான். "சுடரேந்தியே, சுடரைக் கொணர்வாய்! நான் பாடும் நேரம் வந்துவிட்டது. பாடும்போது நான் ஒளியைப் பார்த்துப் பாட வேண்டும்."

அவன் அந்த மாலைப் பொழுதை மகிழ்வூட்டிப் பாடினான். முடிவில் இப்படிச் சொன்னான்:

"இறைவனே, இதுபோன்ற இன்ப நாட்களை இனிமேலும் எங்களுக்குத் தாரும்! நீண்ட உரோமக் கரடியின் கொண்டாட்டத்தில் இன்னும் ஒரு முறை பங்குபற்றும் வாய்ப்பை எங்களுக்குத் தாரும். இந்தப் பேரான பின்லாந்தின் பெருவௌிப் பரப்பினில், உயர்ந்து வரும் இளைஞர்களின், மேன்மையுறும் தேசிய மக்களாாின் மத்தியில் தப்பியோவின் எக்காளமும் காட்டுக் குழலும் என்றென்றும் கேட்கட்டும்!"


47. சூாிய சந்திரர் திருடப்படுதல்

கலேவலாவில் வைனாமொயினன் கந்தலே யாழை வெகு காலமாக வாசித்துக் கொண்டே இருந்தான். அந்த இசையின்பத்தில் ஊர்மக்கள் மூழ்கித் திளைத்தனர். அந்த இணையற்ற இசை சந்திரனின் இல்லத்திலும் கேட்டது. சூாியனின் சாளரத்திலும் ஒலித்தது. கந்தலேயின் கவினிசை கேட்பதற்காகச் சந்திரன் தனது இல்லத்தை விட்டு வௌியேறி வந்து ஒரு வளைந்த மிலாறுவில் இருந்தது. சூாியன் தனது கோட்டையை விட்டுப் புறப்பட்டு வந்து ஊசியிலை மரக் கிளையில் அமர்ந்தது.

நீக்கல் பல் முதியவளான லொவ்ஹி என்னும் வடநிலத் தலைவி சந்திர சூாியரைக் கைகளால் பிடித்தாள். அவற்றைத் தனது வீட்டுக்குக் கொண்டு சென்றாள். அந்த இருண்ட வடநாட்டில் ஒரு பலவர்ணப் பாறையின் உள்ளே அவற்றை ஒளித்து வைத்தாள். பின்னர் இப்படி ஒரு மந்திரப் பாடலைப் பாடினாள்: "சந்திரனே, நீ உதித்து உலகில் ஒளி வீசக் கூடாது! சூாியனே, நீ உதித்து உலகில் ஒளி வீசக் கூடாது! ஒற்றைப் பெண் குதிரை ஈன்ற ஒன்பது பொலிக் குதிரைகளுடன் நானே வந்து ஆணையிட்டால் தவிர உங்களுக்கு விமோசனம் இல்லை!"

சந்திர சூாியர் திருடப்பட்டு வடநாட்டின் இரும்பு மலைகளின் உள்ளே ஒளித்து வைக்கப்பட்டதால், கலேவலா வீடுகளில் வௌிச்சம் அற்றது. இருட்டு வந்தது. நெருப்பு அற்றது. கடும் குளிர் வந்தது. இரவும் பகலும் இரவாயே இருந்தன. இரவுக்கு எல்லை இல்லாமல் இருந்தது. விண்ணிலும் இருட்டு. விண்ணகத் தந்தையின் வீட்டிலும் இருட்டு. மண்ணிலே மனிதருக்கு வந்தது தொல்லை. மனுக்குல முதல்வர்க்கும் வந்தது தொல்லை.

மனுக்குல முதல்வராம் இறைவனுக்கும் அதிசயமாக இருந்தது. 'இந்தச் சந்திர சூாியருக்கு நேர்ந்தது என்ன? சந்திரனின் பாதையில் ஏற்பட்ட தடை என்ன? சூாியனைச் சூழ்ந்த புகார் என்ன?' என்று சிந்தித்தார். பின்னர் அவரே அவற்றைத் தேடிப் புறப்பட்டார். நீல நிறக் காலுறையும் மின்னும் குதியுயர்ந்த காலணியும் அணிந்து விண்ணின் விளிம்பில் மேகத்தின் ஓரத்தில் தேடலைத் தொடங்கினார். ஆனால் சந்திர சூாியர் எங்குமே காணப்படவில்லை.

நட்சத்திரங்கள் நிறைந்த சுவர்க்கத்தில் கடவுள் சுடர்மிகு வாளைச் சுழற்றி அடித்தார். அந்தத் தீயுமிழும் வாளால் தீப்பொறியைக் கிளப்பினார். விரல் நகத்திலும் உடல் உறுப்பிலும் நெருப்பை எழுப்பினார். அந்தப் பொறியை ஒரு பொற் பையில் வைத்து வெள்ளிப் பெட்டியில் அடைத்தார். அதனைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டி புதிய சந்திரனையும் சூாியனையும் வளர்க்கும்படி காற்று மகளிடம் கொடுத்தார்.

காற்றின் கன்னி வானத்தின் விளிம்பில் தங்கத் தொட்டில் கட்டி வெள்ளிச் சங்கிலி பூட்டி அந்தத் தீச்சுடராம் ஒளிச்சுடரைத் தாலாட்டி வளர்த்தாள். வெள்ளிச் சங்கிலி அசைந்தது. தங்கத் தொட்டிலும் அசைந்தது. மேகம் அசைந்தது. வானம் அசைந்தது. வானத்து மூடியும் அசைந்து வளைந்தது.

பின்னர் காற்றின் கன்னி ஒளிச்சுடரைக் கைகளில் எடுத்துக் கனிவாக அணைத்துத் தாலாட்டத் தொடங்கினாள். அப்போது கவனமற்ற கன்னியின் கைகளிலிருந்த தீச்சுடர் தவறிற்று. அது வானத்திலிருந்து வழுக்கி, மேகத்தின் மேலாய் நழுவி, சுவர்க்கத்தைத் துளைத்து, ஒன்பது கோளங்களைக் கிழித்து, ஏழு ஒளிவீசும் மூடிகளைக் கடந்து கீழ்நோக்கி விழுந்தது.

பூமியை நோக்கி விழுந்த தீச்சுடரை வைனாமொயினன் கண்டான். அவன், "இல்மாினனே, வா, போய்ப் பார்க்கலாம்! உயர்ந்த சுவர்க்கத்திலிருந்து பூமியை நோக்கி வந்த அந்த ஒளிச்சுடர் சந்திரனின் சக்கரமாகவோ சூாியனின் ஆழியாகவோ இருக்கலாம்" என்றான்.

தரையில் விழுந்த தீயைத் தேடி இரு நாயகர்களும் புறப்பட்டு, ஒரு பொிய ஆற்றின் கரைக்கு வந்தனர். வைனாமொயினன் ஆற்றைக் கடக்கக் காட்டில் மரம் எடுத்துக் கப்பல் ஒன்றைக் கட்டினான். இல்மாினன் தேவதாரு மரத்திலும் ஊசியிலை மரத்திலும் துடுப்புகள் செய்தான்.

கப்பலை ஆற்றில் இறக்கினர். நெவா என்னும் ஆற்றினைச் சுற்றி நெவா என்னும் கடல்முனையை அடைந்தனர். அங்கே இயற்கை மகளிாில் மூத்தவளான வாயுமகளைக் கண்டனர்.

அவள், "நீங்கள் யார்? உங்களுடைய பெயர்கள் என்ன?" என்று கேட்டாள்.

"நாங்கள் கடலோடிகள். முதிய வைனாமொயினன் என்பவன் நானே! இவன் எனது தோழன் இல்மாினன். இப்பொழுது சொல்! யார் நீ? உனது பெயர் என்ன? உன்னை நாங்கள் எப்படி அழைப்பது?" என்று கேட்டான் வைனாமொயினன்.

"பெண்களில் மூத்த பெண்ணும் நானே! வாயு மகளிாில் முதிர்ந்தவளும் நானே! தாய்களில் முதலாம் தாயும் நானே! ஐந்து பெண்களின், ஆறு மணப்பெண்களின் அழகும் அம்சமும் ஒருங்கே படைத்தவள் என்பர் என்னை! அது சாி, நீங்கள் எங்கே புறப்பட்டீர்கள்?" எனறு கேட்டாள் வாயுமகள்.

"எங்களின் நெருப்பு அணைந்து போய்விட்டது. ஒளியும் தேய்ந்து போய்விட்டது. அதனால் நாங்கள் இருட்டில் இருந்து இன்னல்படுகிறோம். மேகத்தின் ஊடாய்ப் பூமியில் விழுந்தது ஓர் ஒளிச்சுடர். அதைத் தேடியே புறப்பட்டோம்."

வாயுமகள் சொன்னாள்: "மேகத்தைக் கிழித்து இறங்கிய தீச்சுடர் புகைக்கூண்டு வழியாகப் புகுந்து காய்ந்த கூரை மரத்தைக் கடந்து தூாி என்னும் தேவதையின் புதிய வீட்டில் விழுந்தது. அங்கே அது கொடிய செயல்களை எல்லாம் செய்தது. பெண்களின் மார்புகளை எாித்தது. பையன்களின் முழங்கால்களை அழித்தது. தலைவாின் தாடிகளைத் தகித்தது. தொட்டிலில் கிடந்த ஒரு குழந்தையைக் கொன்று முடித்தது.

"குழந்தையின் தாய் கொஞ்சம் அறிவுள்ளவள். அதனால் தீயைத் தடுத்துத் தான் மட்டும் தப்பினாள். அத்துடன் அவள் அனலை அடக்கி ஓர் ஊசியின் கண்வழியாகச் செலுத்தி, கோடாி அலகின் துவாரத்தின் வழியாக நுழைத்து, பனிக்கட்டித் துளைக்கருவியின் புழை வழியாகப் புகுத்தி வயல் வௌியில் துரத்தினாள்" என்று முடித்தாள் வாயுமகள்.

"தூாியின் வயல்களிலிருந்து நெருப்புப் பின்னர் எங்கே சென்றது? காட்டுக்கா? கடலுக்கா?" என்று கேட்டான் வைனாமொயினன்.

வாயுமகள் சொன்னாள்: "அது ஏராளமான சதுப்பையும் சமதரைப் பரப்பையும் எாித்துக்கொண்டு தரை வழியாகச் சென்றது. செல்லும்போது நழுவி அலுவே என்னும் ஏாியின் அலைகளின் ஆழத்தில் விழுந்தது."

நெருப்பினால் ஏற்பட்ட அதிசயமான நிகழ்ச்சிகளை வாயுமகள் தொடர்ந்து சொன்னாள். "கோடை இரவில் மூன்று தடவைகளும் இலையுதிர் காலத்து இரவில் ஒன்பது தடவைகளும் ஏாி நுரைத்துப் பொங்கி ஊசியிலை மரத்து உயரத்துக்கு எழுந்தது. அலைகள் ஏாிக் கரைகளில் இரைந்து அடித்தன. காய்ந்த தரைக்கு எறியப்பட்ட மீன்கள் என்ன செய்வது, எப்படி வாழ்வது என்று எண்ணி அழுதன. ஒரு வளைந்த கழுத்துள்ள மீன் தீப்பொறியைத் தேடிச் சென்றது. ஆனால் தீப்பொறியை அது அடையவில்லை.

"கடைசியாக ஒரு நீல நிற மீன் நெருப்பைக் கண்டது. விழுங்கித் தின்றது. அதன்மேல் ஒரே இரவில் அந்த ஆறு பழைய நிலைக்கு மாறியது. கரைகளும் அலைகளும் முன்போல் மாறி நன்றாக இருந்தன.

"நெருப்பைத் தின்ற மீனுக்கு உடல்நோ ஏற்பட்டது. அது துன்பம் தாங்காமல் தீவுகளிலும் வஞ்சிரமீன் கூட்டம் உலாவும் பிளவுகளிலும் நூறு தீவுகளின் வளைவுகளிலும் ஒன்றிரண்டு நாட்கள் நீந்தித் திாிந்தது. ஒவ்வொரு தீவும் இப்படிச் சொன்னது: 'நெருப்பைத் தின்று நொந்து வாடும் இந்த அற்ப மீனை விழுங்கக் கூடியது எதுவும் இந்த அலுவே ஆற்றில் இல்லை.'

"இந்தச் செய்தி ஒரு கடல் வஞ்சிரத்தின் காதில் விழுந்தது. நீல மீனை அது விழுங்கிற்று. சிறிது நேரம் கழிந்தது. உடல்நோவுடன் நீந்தித் திாிந்த கடல் வஞ்சிரத்தை ஒரு கோலாச்சி மீன் விழுங்கித் தின்றது.

"பின்னர் கோலாச்சி மீனுக்கு உடல்நோ வந்தது. ஆனால் கோலாச்சியைப் பிடித்து விழுங்கக்கூடிய பொிய மீன் எதுவும் அந்த ஆற்றில் இருக்கவில்லை" என்று முடித்தாள் வாயுமகள்.

இந்த வரலாற்றைக் கேட்ட வைனாமொயினனும் இல்மாினனும் ஆற்றங் கரைக்கு விரைந்து சென்று ஒரு வலையைப் பின்னத் தொடங்கினார்கள். சூரைச் செடியில் நார் திாித்து வலையைப் பின்னி, அலாிப் பட்டையில் சாறு எடுத்துச் சாயம் காய்ச்சி அதற்குப் பூசினார்கள்.

முதலில் கலேவலாவில் வசிக்கும் பெண்களை அலுவே ஆற்றில் வலையை இழுக்கும்படி பணித்தார்கள். தீவுகள் எங்கும், வஞ்சிரம் வாழும் பிளவுகள் எங்கும், வெண்மீன் வாழும் வசிப்பிடம் எங்கும், பழுப்புப் புல்லும் நாணலும் வளர்ந்த படுக்கைகள் எங்கும் பெண்கள் வலையை வீசி இழுத்துப் புரட்டினர். ஆனால் எதிர்பார்த்த மீன் அகப்படவில்லை.

கலேவலாவில் வசிக்கும் ஆண்கள் ஆற்றில் இறங்கினர். கற்பாறை உச்சியில் நின்றும் கடற்குடா வாயிலில் நின்றும் அவர்கள் வலையை விாித்தனர். வீசினர். புரட்டினர். எடுத்தனர். வலைகளோ கொஞ்சம். வந்த மீன்களோ சிறியவை.

அப்போது கோலாச்சியும் கெண்டையும் வஞ்சிரமும் வெண்மீனும் தங்களுக்குள் இப்படிப் பேசிக் கொண்டன: "கலேவலாவின் வீரமுள்ள நாயகர்கள் எல்லோரும் இறந்து விட்டனரா? சணல் கயிறு திாிப்பவர்கள, பொிய வலை பின்னுபவர்கள், பொிய தடியை உடையவர்கள் அனைவரும் மறைந்துவிட்டனரா?"

இதைக் கோட்ட வைனாமொயினன் இவ்வாறு பதில் சொன்னான்: "கலேவலாவின் வீர நாயகர்கள் இறக்கவில்லை. அந்த வீர இனம் அழியவில்லை. ஒருவர் இறந்தால், நீரடிக்கும் தடியுடனும் இரு மடங்கு வலைகளுடனும் இருவர் பிறந்தார்."


48. நெருப்பை மீட்டல்

முதிய வைனாமொயினன் சிந்தித்துப் பார்த்தான். முடிவில் நூறு கண்கள் கொண்ட சணல் வலை ஒன்றைப் பின்னத் தீர்மானித்தான்.

ஒரு பொிய சதுப்பு நிலத்தில் இரண்டு அடிமரக் குற்றிகளுக்கு நடுவில் சுடுபடாத ஒரு துண்டு நிலம் இருந்தது. அதில் அடிமரத்து வேர் வரைக்கும் கிண்டிப் பார்த்தான் வைனாமொயினன். உள்ளே துவோனியின் புழுவின் களஞ்சியக் கிடங்கில் அவன் ஒரு சணல் விதையைக் கண்டு எடுத்தான்.

ஒரு காலத்தில் ஒரு படகு எாிந்ததால் ஏற்பட்ட சாம்பல் அலுவே ஆற்றங் கரையில் குவிந்து கிடந்தது. வைனாமொயினன் தான் கண்டெடுத்த சணல் விதையை அந்தச் சாம்பலில் விதைத்தான். விதை வெடித்து முளைத்தது. அந்தக் கோடை இரவில் செடியாக எழுந்தது.

விதைக்கப்பட்ட அதே இரவிலேயே சந்திரன் ஒளியில் உழப்பட்டது. களை எடுக்கப்பட்டது. கழுவப்பட்டது. கதிர் கொய்யப்பட்டது. அதை வீட்டுக்குள் எடுத்துச் சென்று பதப்படுத்தித் தொங்கவிட்டு உலர்த்தவும்பட்டது. பின்னர் குடிசைக்குள் கொண்டுபோய்ப் புடைத்து உடைத்துச் சுத்தமாகக் கூளத் தட்டில் போடப்பட்டது.

சணலை விளக்கி மினுக்கி கைத்தறியிடத்துக்கு எடுத்தேகப்பட்டது. அங்கே கலேவலாச் சகோதாிகள் அதனை நூலாக நூற்றார்கள். சகோதரர்கள் வலையாகப் பின்னினார்கள். மாமன்மார் அதற்குக் கண்ணிகள் கட்டினார்கள். கோடை காலத்து ஒற்றை இரவில் வலையின் வேலைகள் முற்றுப் பெற்றன. இழுவைக் கயிறுகள் இறுக்கி முடிந்தன. உருவான அந்த வலையின் அகலம் அறுநூறு அடிகள். நீளமோ நாலாயிரத்து இருநூறு அடிகள். வலையை நீாில் அமிழ்த்தக் கற்களும் கட்டி, அடையாளம் தொிய மிதக்கும் மிதவைகளும் கட்டப்பட்டன.

பின்னர் இளைஞர்கள் வந்தார்கள். ஆற்றில் இறங்கினார்கள். வலையை விாித்தார்கள். இழுத்துப் பிாித்தார்கள். கரையில் போட்டர்கள். கொஞ்ச மீன்கள் அகப்பட்டிருந்தன. வெள்ளி மீன் கொஞ்சம். வெண் மீன் கொஞ்சம். வேறு மீன் கொஞ்சம். ஆனால் வலை செய்தது எதற்கோ, அது வரவில்லை.

அடுத்ததாக வைனாமொயினனும் இல்மாினனும் ஆற்றில் இறங்கி வலையை வீசினார்கள். வலையின் ஒரு பக்கச் சிறகைத் தீவிலே விாித்து, மறு பக்கச் சிறகைக் குடாக்கடலின் மேட்டில் பரப்பினார்கள். அவர்களுக்கு ஏராளமான மீன்கள் அகப்பட்டன. நன்னீர் மீன்களும் வஞ்சிர மீன்களும் வெவ்வேறு மீன்களும் நிறையவே கிடைத்தன. ஆனால் வலை செய்தது எதற்கோ, அது வரவில்லை.

அவர்கள் மேலும் சில வலைகளைச் சேர்த்துக் கொண்டு இன்னும் ஆழமான நீாில் இறங்கினார்கள். அப்போது வைனாமொயினன் ஒரு மந்திரப் பாடலைப் பாடினான். "வெல்லமோவே, நீாின் அரசியே, கோரைப் புல் மார்புள்ள மங்கையே, உனது கோரைப் புல் சட்டையையும் கடல்நுரைத் தொப்பியையும் மாற்று! நான் உனக்குச் சந்திரன் மகளும் சூாியன் மகளும் நெய்த சிறந்த சணல் சட்டையைத் தருவேன்.

"அஹ்தோவே, அலைகளின் அரசே, நாப்பத்திரண்டு அடியில் ஒரு கோலை எடு! கடலடிக் களத்தைக் கலக்கி அடி! மீன்முள் அடுக்குகளை மேலே உயர்த்து! ஆழத்து மீன்களை அடித்து விரட்டு! அனைத்தையும் வளைத்து வலைக்குள் துரத்து!"

அப்போது கடல் அலையில் ஒரு சிறு மனிதன் தோன்றினான். அவன், "நீாினை அடிக்க ஆள் ஒன்று தேவையா?" என்று கேட்டான்.

வைனாமொயினன் ஆமென்று சொன்னதும், அந்தக் குள்ள மனிதன் கரையில் நின்ற தேவதாரு மரத்தில் ஒரு நீண்ட கோலை ஒடித்தான். அதில் ஒரு கற்பாறையைக் கட்டி நீாில் இறக்கினான். பின்னர், "எனது பலம் முழுவதையும் சேர்த்து அடிக்கவா, அல்லது தேவைக்கு ஏற்றவாறு அடிக்கவா?" என்று கேட்டான்.

"தேவைக்கு ஏற்ப அடித்தால் போதும்" என்றான் வைனாமொயினன்.

உடனே அந்தச் சிறிய மனிதன் நீாின் அடியாழத்தில் இருந்த மீன் கூட்டங்களை அடித்து விரட்டினான். திரண்டு வந்த மீன்களில், வலை செய்தது எதற்கோ, அந்த மீன் இருந்தது. அந்த நரைநிறக் கோலாச்சி மீன் அதில் இருந்தது.

வைனாமொயினன் வெறும் கைகளாலேயே அந்த மீனைத் தொடலாமா? என்று சிந்தித்தபோது, சூாியன் மகன் தோன்றி, "என் தந்தையின் வாள் மட்டும் என்னிடம் இருந்தால், கோலாச்சி மீனை நானே பிளப்பேன்" என்றான்.

உடனே வானத்தில் இருந்து ஒரு வாள் வந்து சூாிய மகனின் இடுப்புப் பட்டியில் இருந்த உறைக்குள் விழுந்தது. அந்த வாளின் தங்கப் பிடியைக் கையில் பிடித்தான். அதன் வெள்ளி அலகால் மீனைப் பிளந்து வாயையும் வயிற்றையும் கிழித்துப் போட்டான். கோலாச்சியின் வயிற்றில் வஞ்சிரம் இருந்தது. வஞ்சிர மீனின் வயிற்றில் வெண்மீன் இருந்தது. வெண்மீன் வயிற்றின் சுருண்ட குடலில் ஒரு நீலப் பந்து இருந்தது. அந்த நீலப் பந்தை அவிழ்த்துப் பார்த்தனர். அதனுள் ஒரு சிவப்புப் பந்து இருந்தது. அந்தச் சிவப்புப் பந்தை அவிழ்த்துப் பார்த்தனர். சுவர்க்கத்திலிருந்து வானைக் கிழித்துக் கொண்டு மேகத்தின் ஊடாய்ப் பூமியில் விழுந்த கனலின் கரு அதனுள் இருந்தது.

இந்தச் சுடரை எப்படி இருண்டு கிடக்கும் வீடுகளுக்குக் கொண்டு போகலாம் என்று வைனாமொயினன் சிந்தித்தான். அப்பொழுது சூாிய மகனின் கையிலிருந்து தீப்பொறி நழுவிப் பாய்ந்தது. வைனாமொயினனின் தாடியை தகித்தது. இல்மாினனின் கைகளையும் கன்னங்களையும் எாித்தது.

அந்தத் தீப்பொறி பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அலுவே ஆற்றின் அலைகளில் படிந்து சூரைச் செடிகளில் தாவிச் சூரைப் புதர்களைச் சுட்டு எாித்தது. செழித்த மரங்கள் அனைத்தையும் அழித்தது. சொற்ப நேரத்திலேயே அது பெரும் நெருப்பாகச் சுவாலைவிட்டு எழுந்து வடநாட்டில் பாதியையும், சவோவில் ஒரு பகுதியைையும் கர்யலாவின் இரு பக்கங்களையும் பொசுக்கிச் சுட்டது.

வைனாமொயினன் காட்டு வௌிகளில் தீப்பொறியைத் துரத்திக் கொண்டு சென்றான். ஓர் உளுத்த பூர்ச்ச மரக் குற்றியின் வேரடியில், இரண்டு அடிமரங்களின் நடுவில் அந்தத் தீச்சுடர் இருக்கக் கண்டான்.

"அனலே, ஆண்டவன் படைப்பே!" என்று ஆரம்பித்தான் வைனாமொயினன். "காரணம் இல்லாமல் நீ இவ்வளவு தூரம் பயணம் செய்தனையே! கல்லடுப்புக்குத் திரும்புதலே நீ செய்யக்கூடிய நல்ல பணியாகும். பகல் நேரங்களில் சமயலறையில் மிலாறு விறகுக் கட்டைக்குள் காியாய் நெருப்பாய்த் தணலாய் இருப்பதே உனக்குச் சிறப்பு!"

வைனாமொயினன் தீச்சுடரைக் கைப்பற்றி ஒரு மிலாறு மரக் காளான் செடிக்குள் திணித்தான். அதை ஒரு செப்புக் கலயத்தில் வைத்து அந்தத் தீவின் பனிப்புகார் படிந்த கடல்முனையோரத்து வீடுகளுக்கு எடுத்துச் சென்றான். அதனால் வீடுகளில் நெருப்பும் வௌிச்சமும் வெப்பமும் வந்தன.

இதற்கிடையில் தீயினால் சுடுபட்டுத் துன்பப்பட்ட இல்மாினன் கடலுக்குள் இறங்கி, அதனூடாகப் பயணித்து ஒரு நீர்ப்பாறையில் ஏறி அமர்ந்தான். இப்படி அவன் நெருப்பின் வேகத்தைத் தணித்த பின், சில மந்திரச் சொற்களைச் சொன்னான். "நெருப்பே, இறைவனின் படைப்பே, தணலே, சூாியன் மகனே, நீ ஏன் ஒரு கொடியவனாய் மாறி எனது கன்னங்களையும் இடுப்பையும் எாித்தாய்? எனது கைகளுக்கு ஏன் துன்பத்தைக் கொடுத்தாய்? இப்பொழுது நான் எனது மந்திரச் சொற்களால் உன்னைச் செயலறச் செய்வேன்.

"துர்யா நாட்டின் தையலே வருவாய்! லாப்புலாந்திலிருந்து புறப்பட்டு வருவாய்! காலுறைக்குள் பனிக்கூழ் திணித்து, காலணிக்குள் பனிக்கட்டி பரவி, சட்டைகள் நிறையப் பனிமணி உறையப் புறப்படு! பனிக்கூழ்க் கலயத்தைக் கையிலெடுத்து, கலயத்தினுள் ஓர் அகப்பையும் வைத்து, நெருப்புச் சினந்து சுட்ட காயங்கள்மீது பனிக்கூழை அள்ளித் தௌித்து மாற்று!

"இதுவும் இன்னமும் போதாது என்றால், வடநிலத்தில் வாழும் பையனே, புறப்படு! காட்டு நிலத்து மிலாறு மரம்போல் உயர்ந்த மனிதனே, இருண்ட லாப்பின் இதயத்திலிருந்து புறப்படு, புறப்படு! கையில் பனியுறை அணிந்து வா! காலில் பனியணி அணிந்து வா! பனியில் தொப்பி அணிந்து வா! இடுப்பில் பனிப்பட்டி அணிந்து வா! வடக்கில் குளிர்ந்த கிராமத்திலிருந்து பனிக்கூழ் அள்ளிச் சுமந்து வா! அங்கே அருவிகள் எங்கும் பனிமழை பெய்யும். ஏாிகள் எல்லாம் பனிக்கூழ் திரளும். காற்றுடன் பனிமழை கலந்தே பொழியும். பனிமழை பெய்த மலைகளின் சாிவில், பனியுறை ஆடையில் முயல்கள் தாவும். பனிக்கட்டி ஆடையில் கரடிகள் ஆடும். பனிக்கூழ் மூடிய அன்னங்கள் ஓடும்.

"சறுக்கு வண்டியில் பனிக்கூழ் கொணர்ந்து அனலால் விளைந்த அல்லலைப் போக்கு!"

"இதுவும் இன்னமும் போதாது என்றால், மனுக்குல முதல்வனே, மாபெரும் தெய்வமே, கிழக்கிலிருந்து ஒரு முகிலை அனுப்பும்! மேற்கிலிருந்து மறு முகில் அனுப்பும்! இரண்டின் கரைகளையும் ஒன்றாய் இணையும்! ஒன்றில் ஒன்றை மோதித் தள்ளும்! கனல் சுட்ட என் காயங்களின்மீது பனிக்கூழையும் பனிக்குழம்பையும் கவிழ்த்துக் கொட்டிப் பூச்சு மருந்தாய் மாற்றி அமையும்!"

இவ்வாறு இல்மாினன் தனது மந்திர சக்தியால் காயங்களைத் தணித்துப் பழைய நிலைக்கு வந்தான்.


49. வெள்ளிச் சூாியனும் தங்க நிலவும்

கலேவலாவின் இல்லங்களுக்கு நெருப்புக் கிடைத்த போதிலும், சூாிய ஒளி வரவில்லை. சந்திரன் நிலவும் கிடைக்கவில்லை. அதனால் கடும் குளிரால் பயிர்கள் வாடின. கால்நடைகள் வருந்தின. இருண்ட குளிர்ந்த காற்று, பறவைகளுக்கு அன்னியமாகப்பட்டது. மனிதருக்கும் மிகவும் துன்பத்தைக் கொடுத்தது.

கோலாச்சி மீன் வாழும் குழிகள் கோலாச்சி மீனுக்குத் தொியும். பறவைகளின் பாதை கழுகுக்குத் தொியும். கப்பலின் நாளாந்தப் பயணம் காற்றுக்குத் தொியும். ஆனால் அந்தத் தீவின் பனிப்புகார் படிந்த கடல்முனையோரத்து மனிதனுக்கு மட்டும் இரவு முடிந்தது எப்போது, காலை விடிந்தது எப்போது என்று தொியாமல் இருந்தது.

இந்த வறிய வடநாட்டில், சந்திரன் ஒளியும் இல்லாமல் சூாியன் ஒளியும் இல்லாமல் எப்படி வாழ்வது என்று கேட்டு இளைஞர்கள் கூடினார்கள். நடு வயதினர் கூடிப் பேசினார்கள். முடிவில் இல்மாினன் என்னும் தேவ கொல்லனிடம் போனார்கள்.

"இல்மாினனே, அடுப்புப் புகட்டில் ஓய்வெடுத்தது போதும்; எழுந்திரு! எங்களுக்குப் புதிய சந்திரனையும் சூாியனையும் அடித்துத் தருவாய்!" என்று கேட்டார்கள்.

உடனே இல்மாினன் தங்கத்தில் ஒரு புதிய சந்திரனையும் வெள்ளியில் ஒரு புதிய சூாியனையும் அடித்தான். ஆனால் அதைக் கண்ட வைனாமொயினனோ, "இல்மாினனே, நீ ஒரு பயனில்லாத வேலையைச் செய்கிறாய். திங்களைப்போலத் தங்கம் திகழாது. கதிரவன்போல் வெள்ளி ஒளிராது" என்று சொன்னான்.

கடைசியில் இல்மாினன் சந்திர சூாியரை அடித்து முடித்தான். வெயர்வை சிந்தச் சிந்த அவன் சந்திரனைச் சுமந்து கொண்டு போய் ஓர் ஊசியிலை மரத்து உச்சியில் வைத்தான். சூாியனை ஒரு தேவதாரு மரத்து நுனியிலே வைத்தான். ஆனால் சந்திரனோ சூாியனோ ஒளி தரவில்லை.

அப்பொழுது வைனாமொயினன், "திருவுளச் சீட்டால் அடையாளங்களைத் தேடிச் சந்திர சூாியர் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று சொன்னான்.

வைனாமொயினன் பூர்ச்ச மரத்தில் தெய்வீகச் சீட்டுகளைச் சீவினான். அவற்றை ஒழுங்காக அடுக்கினான். விரல்களால் புரட்டித் திருப்ப ஆயத்தமாகினான். பின்னர் இப்படிச் சொன்னான்: "இப்பொழுது நான் இறைவனிடம் ஓர் உண்மையான உத்தரவு கேட்கி றேன். தெய்வமே, சந்திரனும் சூாியனும் எங்கே ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை எங்களுக்குச் சொல்லும்! தெய்வீகமான திருவுளச் சீட்டே, அசை! திரும்பு! சாியான இடம் நோக்கி நகர்! உண்மையில் நிகழ்ந்ததை உடனே சொல்! மனிதாின் எண்ணங்களை வௌிப்படுத்தாதே! திருவுளச் சீட்டுப் பொய்யுரை செய்தால், தீயில் அவற்றைப் போட்டுப் பொசுக்குவேன். மனிதாின் நிமித்தங்களும் மாண்டே போகும்"

திருவுளச் சீட்டுகள் உண்மையைக் கூறின. சந்திரனும் சூாியனும் வடநாட்டு மலைகளுக்குள் மறைந்திருப்பதாகத் தொிவித்தன.

வைனாமொயினன் உடனே வடநாட்டுக்குப் புறப்பட்டான். மூன்று நாட்கள் நடந்து பயணம் செய்த பின்னர் வடநாட்டின் ஆற்றங் கரைக்கு வந்து சேர்ந்தான். ஆற்றுக்கு அப்பால் வடநாட்டின் வாயிலும் கற்பாறைச் சிகரமும் தொிந்தன.

ஆற்றைக் கடப்பதற்கு ஒரு தோணியைக் கொண்டுவரும்படி அவன் கத்தினான். அவன் கூப்பிட்ட குரல் அக்கரையில் கேட்கவில்லை. அதனால் காய்ந்த விறகுகளைக் கொண்டுவந்து குவித்துக் கொழுத்தினான். கொழுந்துவிட்டு எாிந்த நெருப்பும் தடித்த புகையும் வானத்தில் உயர்ந்து எழுந்தன.

யன்னல் பக்கமாக வந்த வடநிலத் தலைவி லொவ்ஹி அந்த நெருப்பையும் புகையையும் கண்டாள். "போர் அடையாளம் என்று சொல்ல முடியாத அளவுக்கு இந்த நெருப்புச் சிறிதாக இருக்கிறது. ஆனால் மீனவர் குழுவின் நெருப்பு என்று சொல்ல முடியாதபடிக்குப் பொிதாக இருக்கிறதே!" என்றாள்.

வடநாட்டுப் பையன் ஒருவன் புறப்பட்டு வந்து பார்த்தான். அவன், "ஆற்றின் மறுகரையில் மதிப்பான மனிதன் ஒருவன் உலாவிக் கொண்டிருக்கிறான்" என்று சொன்னான்.

வைனாமொயினன் பையனிடம் ஒரு படகைக் கொண்டுவருமாறு கூறினான். "இங்கே படகு எதுவும் இல்லை. கைகளையே துடுப்பாகப் பாவித்து நீந்தி வா" என்றான் பையன்.

"முன் வைத்த காலைப் பின் வைத்துத் திரும்பிச் செல்பவன் மனிதனே அல்லன்" என்று கூறிய வைனாமொயினன், கோலாச்சி மீன்போலக் கடலில் பாய்ந்தான். வெண்மீன் போல ஆற்றில் நீந்தினான். அருவியைக் கடந்து அக்கரை சேர்ந்தான்.

"உனக்குத் துணிவு இருந்தால், வடநாட்டின் முற்றத்துக்குள் நுழை, பார்க்கலாம்" என்றனர் வடநாட்டு மைந்தர்.

வைனாமொயினன் நுழைந்தான்.

"உனக்குத் துணிவு இருந்தால், வடநாட்டின் வீட்டுக்குள் நுழை, பார்க்கலாம்" என்றனர்.

வைனாமொயினன் துணிவுடன் நுழைந்தான். உள்ளே மனிதர்கள் இடுப்பில் கட்டிய வாளுடன் போர் உடைகளில் மது அருந்திக் கொண்டிருந்தனர். "இழிந்த மனிதனே, உனக்கு என்ன வேண்டும்?" என்று அவர்கள் கேட்டார்கள்.

"சந்திர சூாியர் பற்றி அதிசயமான செய்திகள் கிடைத்திருக்கின்றன. அவைகள் எங்கே மறைந்தன?" என்று கேட்டான் வைனாமொயினன்.

அந்த மனிதர்கள் செருக்குடன், "சந்திர சூாியர் இரும்பு மலையின் பலநிறப் பாறைக்குள் பதுங்கி இருக்கின்றன. எங்களுடைய ஆணை இல்லாமல் அவைகளுக்கு விடுதலை கிடைக்க மாட்டாது" என்று சொன்னார்கள்.

"அப்படியானால் வாளால் பேசலாம்" என்றான் வைனாமொயினன். "சந்திர சூாியரை விடுவியாது போனால் வாள்களை எடுப்போம். போரைத் தொடுப்போம்."

அவர்கள் எழுந்தனர். வாள்களை [23]அளந்தனர். மற்றையோாின் வாள்களைப் பார்க்கிலும் வைனாமொயினனின் வாள் ஒரு பார்லித் தானியம் அளவு நீளமாக இருந்தது. உடனே அவர்கள் வௌியே முற்றத்துக்கு வந்து நெஞ்சுக்கு நெஞ்சு நேருக்கு நேராய் நின்றனர்.

வைனாமொயினன் ஒரு முறை வீசினான். மறு முறை வீசினான். மூன்றாம் வீச்சில் முடித்தான் கதையை. வடநில வீராின் தலைகளைக் கிழங்கு சீவுவதுபோலச் போலச் சீவிக் குவித்தான்.

பின்னர் சந்திர சூாியரைக் கைப்பற்ற இரும்பு மலைக்கு விரைந்தான்.

சிறிது தூரம் சென்றதும் ஒரு பசுமையான குறுங்காடு வந்தது. அங்கே ஓர் உயர்ந்த மிலாறு மரம் நின்றது. அதன் கீழ் ஒரு குன்றும், அதனடியில் பொிய பாறையும் இருந்தன. அங்கே நூறு பூட்டுகளால் பூட்டப்பட்ட ஒரு கதவைக் கண்டான் அவன்.

பாறையில் படங்கள் வரையப்பட்டு இருந்தன. வைனாமொயினன் வாளை உருவினான். பாறையில் இருந்த வரைபடங்களைத் தீயுமிழ் அலகால் ஓங்கி அறைந்தான். பாறை இரண்டு மூன்று துண்டுகளாகப் பிளந்தது.

உள்ளே பாறையின் பிளவுக்குள் பாம்புகள் மது அருந்திக் கொண்டிருந்தன. "பாம்புகள் மது அருந்துகின்றன. அதனால்தான் ஏழைப் பெண்களுக்குப் போதிய மதுக் கிடைப்பதில்லை" என்ற வைனாமொயினன், பாம்புகளின் தலைகளை வெட்டி வீழ்த்திவிட்டு, இப்படிச் சொன்னான்: "இன்றிலிருந்து இனிமேல் பாம்புகள் மது அருந்தமாட்டா."

பின்னர் வைனாமொயினன் கையால் கதவைத் திறக்க முயன்றான். மந்திர சக்தியால் பூட்டைத் திறக்கப் பார்த்தான். ஆனால் கையின் பலத்துக்குக் கதவு அசையவில்லை. மந்திர சக்திக்குப் பூட்டுத் திறபடவில்லை.

"ஆயுதம் இல்லாத ஆண்மகன் பெண்களைப்போலப் பலவீனமானவன்" என்று கூறிய வைனாமொயினன், ஆழ்ந்த துயரும் தாழ்ந்த தலையுமாய் வீடு நோக்கித் திரும்பிச் சென்றான்.

வைனாமொயினனைச் சந்தித்த லெம்மின்கைனன், "வைனாமொயினனே, நீ ஏன் என்னையும் அழைத்துச் செல்லவில்லை? எனது மந்திர சக்தியால் பூட்டை உடைத்து சந்திர சூாியரை விடுவித்திருப்பேனே" என்று சொன்னான்.

"கைமுட்டியாலோ மந்திரத்தாலோ சந்திர சூாியரை விடுவிக்க முடியாது" என்று கூறிய வைனாமொயினன், இல்மாினனின் இருப்பிடம் சென்றான். அங்கே வைனாமொயினன் கேட்டபடி இல்மாினன் பனிக்கட்டிக் கருவிகள் பன்னிரண்டையும் ஒரு கொத்தில் பத்துத் திறப்புகளையும் ஒரு கட்டு ஈட்டிகளையும் செய்து கொடுத்தான்.

இதற்கிடையில் வடநிலத் தலைவியான லொவ்ஹி இரண்டு இறகுகளைச் செய்து தனக்குப் பொருத்திக் கொண்டு வடகடலின் மேலாகப் பறந்து இல்மாினனின் வேலைத் தலத்துக்கு வந்தாள்.

அங்கே ஆயுதங்கள் செய்து கொண்டிருந்த இல்மாினன் குளிர் காற்று வீசியது போல உணாந்தான். குளிர் காற்று எங்கிருந்து வருகிறது என்று பார்ப்பதற்காக அவன் எழுந்து சென்று யன்னலைத் திறந்தான். அங்கே காற்று எதுவும் வீசவில்லை. ஒரு நரை நிறக் கழுகுதான் நின்றிருந்தது.

"நீ ஏன் வந்து எனது யன்னலில் இருக்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்?" என்று இல்மாினன் கழுகைக் கேட்டான்.

"இல்மாினனே, நீ ஒரு கைதேர்ந்த திறமையான நித்தியக் கலைஞன்" என்று கழுகு சொன்னது.

"இதில் அதிசுயப்பட என்ன இருக்கிறது! வானத்தை வளைத்து அடித்தவன் நானே! சுவர்க்கத்தைச் செய்து முடித்ததும் நானே!"

"அது சாி. இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கழுகு கேட்டது.

"அந்த வடநாட்டுக் கிழவியை மலைச்சாரலில் பிணைத்து வைப்பதற்காக ஒரு கழுத்து வளையம் அடிக்கிறேன்" என்றான் இல்மாினன்.

தனக்கு ஆபத்து அருகில் வந்துவிட்டது என்பதை லொவ்ஹி உணாந்தாள். அவலக் குரலுடன் ஆகாயத்தில் எழுந்து வடக்கு நோக்கிப் பறந்தாள். சந்திரனையும் சூாியனையும் பாறைகளிலிருந்து விடுவித்தாள்.

பின்னர் அவள் ஒரு புறாவின் உருவம் எடுத்துக்கொண்டு மீண்டும் இல்மாினனிடம் பறந்து வந்தாள். இல்மாினனின் வேலைத் தலத்தின் வாயிலில் வந்து நின்றாள்.

"புறாவே, நீ ஏன் வந்தாய்? உனக்கு என்ன வேண்டும்?" என்று இமாினன் கேட்டான்.

"நான் உனக்கு ஒரு செய்தி கொண்டு வந்திருக்கிறேன். சந்திரனும் சூாியனும் பாறையிலிருந்து விடுதலையாகிவிட்டன" என்றாள்.

இல்மாினன் வௌியே ஓடிவந்து வானத்தை அண்ணாந்து பார்த்தான். அங்கே சந்திரன் திகழ்ந்தது. சூாியன் ஒளிர்ந்தது.

அவன் உடனே வைனாமொயினனின் வாழ்விடத்துக்கு ஓடிப் போனான். "ஓகோ, வைனாமொயினனே, சந்திரனும் சூாியனும் வானத்தில் முந்திய இடங்களில் இருக்கின்றன" என்றான்.

வைனாமொயினன் வௌியே வந்து பார்த்தான். "திகழும் நிலவே, வாழிய, வாழிய! தங்கக் கதிரே, வாழிய, வாழிய! பாறையிலிருந்து விடுதலை பெற்றீர். பொற்குயில்போல உங்கள் இருப்பிடங்களில் எழுந்தீர். ஒவ்வொரு நாளும் காலையில் எழுவீர்! எங்களுக்கு நற்சுகம் தருவீர்! எங்கள் பயிர்கள் செழிக்க, எங்கள் கான்வேட்டை சிறக்க, எங்கள் மீன்வேட்டை கொழிக்க அதிர்ஷ்டத்தைக் கொணர்வீர்!" என்று சொன்னான்.


50. கன்னி மர்யத்தா

மர்யத்தா ஓர் அழகி. அழகிய இளைய மகள். தாய்க்குக் கடைசி மகள். உயர்குடியில் பிறந்த தந்தையின் புகழான வீட்டில் அன்பான அன்னையின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தாள். அவள் ஐந்து சங்கிலிகளை அணிந்து கழித்தவள். தந்தையின் திறப்புகள் கோத்த ஆறு திறப்பு வளையங்கள் இடுப்பில் கிலுங்க உலாவி வருபவள். அவள் ஒளிமிக்க பாவாடைகள் அணிந்து திாிந்ததால், அவ்வொளி பட்டு வாயிற்படிகளின் ஒளி பாதி மங்கிவிட்டது. அவளுடைய பட்டுச் சால்வைகள் பட்டு மேலுத்தரத்தின் ஒளி மங்கிவிட்டது. அவளுடைய சட்டைக்கை மடிப்புகள் பட்டதால், கதவுநிலையின் ஒளி பட்டுப் போனது. காலணிக் குதிகள் தேய்த்ததால் நிலத்துப் பலகைகள் தேய்ந்தே போயின.

மர்யத்தா ஓர் அழகி. அழகிய இளைய மகள். தாய்க்குக் கடைசி மகள். அவள் ஒழுக்கத்தைப் பேணினாள். புனிதத்தைப் பாதுகாத்தாள். கற்புடன் வாழ்ந்து வந்தாள். அவள் நல்வகை மீனையும் தேவதாரு மரப் பட்டை ரொட்டியையும் உண்டாள். கோழிகளைச் சேவல்கள் கெடுப்பதால், அவள் கோழிமுட்டையை உண்ண மாட்டாள். செம்மறிக் கடாவுடன் சேர்வதால், அவள் செம்மறி இறைச்சியையும் உண்ண மாட்டாள்.

ஒரு நாள் பசுமாட்டில் பால் கறக்கும்படி பணித்தாள் தாய். மறுத்தாள் அவள். "பசுமாடுகள் காளைமாடுகளுடன் கூடுவதால், என் போன்ற பாிசுத்தமான பெண்கள் பசுவின் பால் மடிகளைத் தொடமாட்டார்கள். பச்சை இளம் கன்றில் பால் சுரந்தால்தான் நாங்கள் தொடு வோம்" என்பாள் மர்யத்தா.

அவளுடைய தந்தை குதிரையைச் சறுக்கு வண்டியில் பூட்டினார். அவள் வண்டியில் ஏற மறுத்தாள். சகோதரன் ஒரு பெண்குதிரையைக் கொண்டு வந்தான். "நான் பெண்பாி பூட்டிய வண்டியில் ஏறேன். ஏனென்றால் அவை ஆண்பாிகளுடன் கூடிக் குலாவுகின்றன. மாதக் கணக்கில் வயதுள்ள குட்டி பூட்டிய வண்டியில் மட்டுமே ஏறுவேன்" என்பாள்.

மர்யத்தா ஓர் அழகி. அழகிய இளைய மகள். தாய்க்குக் கடைசி மகள். அவிழ்த்த கூந்தலாள். அற்புதக் கன்னி. கால்நடை மேய்ப்பாள். கவனமாய்ப் பார்ப்பாள். ஒரு நாள் செம்மறியாடுகள் குன்றின் உச்சியில் மேய்ந்து திாிந்தன. மர்யத்தா காட்டு வௌியினில் காலாற நடந்தாள். பொற்குயில்கள் கூவும் வெள்ளிப் பறவைகள் பாடும் பூர்ச்சமரத் தோப்பில் மெதுவாக நடந்தாள்.

பின்னர் அவள் சிறுபழச் செடிகள் செழித்து நிறைந்த ஒரு மேட்டில் அமர்ந்தாள். "தங்கக் குயிலே கூவு, கூவு! வெள்ளிப் பறவையே, பாடு, பாடு! ஈய மார்பே, இனிதாய்ப் பாடு! ஜேர்மனியின் 'ஸ்ரோபாி'ப் பழமே, எனக்கு நீ இதைச் சொல்வாய்! அசையும் கூந்தலோடு ஆனிரை மேய்ப்பவளாய், இந்தக் காட்டு வௌியினில் நான் எவ்வளவு காலம் இருப்பேன்? ஒரு கோடையா, இரண்டு கோடையா? ஐந்தா, ஆறா? பத்து வருமா? அவ்வளவு வராதோ?"

மர்யத்தா ஓர் அழகி. அழகிய இளைய மகள். தாய்க்குக் கடைசி மகள். வெகு காலமாகக் கால்நடை மேய்த்தாள். இளம் பெண்கள் ஆனிரை மேய்ப்பது மிகவும் சிரமம். புல்லுக்குள் பாம்பு இருக்கும். புழு பல்லி நௌிந்து வரும். ஆனால் அங்கே பாம்பும் புழுவும் புரளவில்லை. மேட்டு நிலத்தில் பசும் புற்புதாில் பழச்செடி ஒன்று அவளை அழைத்தது.

"செங்கன்னம் படைத்தவளே, வா! ஈய மார்பணி அணிந்தவளே, வந்து என்னை ஆய்ந்தெடு! செம்பட்டி இடையாளே, கறுத்தப் புழு வந்து கடித்து உண்ணு முன்னர் நீ வந்து என்னைக் கொய்தெடு! நூறு பேர் என்னைக் கண்டார்கள். ஆயிரம் பேர் என்னருகில் அமர்ந்தார்கள். ஆனால் எவருமே என்னைத் தொடவில்லை. ஏழை என்னை நீயாவது வந்து பறித்திடு!" என்று ஒரு சிறுபழம் சொன்னது.

மர்யத்தா சிறிது தூரம் நடந்து சிறுபழச் செடியை அடைந்தாள். அவளுடைய மென்மையான விரல்கள் அந்தச் சிவந்த சிறுபழத்தைப் பறிக்கப் பரபரத்தன. தரையில் இருந்து உண்ண முடியாத அளவுக்குச் சிறுபழச் செடி உயரமாக இருந்தது. ஏறிப் பறிக்க முடியாத அளவுக்கு அது தாழ்வாக இருந்தது.

அவள் பக்கத்துப் புதாிலே ஒரு தடியை முறித்தாள். தடியால் தட்டிப் பழத்தை நிலத்தில் வீழ்த்தினாள். நிலத்தில் வீழ்ந்த பழம் மீண்டும் அவளுடைய காலணி வரை எழுந்தது. அங்கிருந்து அவளுடைய வெண்மையான முழங்கால்வரை எழுந்தது. அங்கிருந்து மின்னும் பாவாடைவரை எழுந்தது. அங்கிருந்து இடுப்புவரை, மார்புவரை, தாடைவரை எழுந்தது. அங்கிருந்து உதடுகளுக்கு வந்து, வாய்க்குள் நுழைந்து, நாவில் நழுவி, தொண்டைக்குள் சாிந்து வயிற்றில் வீழ்ந்தது.

மர்யத்தா ஓர் அழகி. அழகிய இளைய மகள். தாய்க்குக் கடைசி மகள். வயிற்றில் விழுந்த சிறுபழத்தால் அவள் நிறைந்தாள். மகிழ்ந்தாள். பருத்தாள். கொழுத்தாள். அதன் பிறகு அவள் அரைக்கச்சு அணிவதில்லை. இடுப்புப் பட்டி இல்லாமலும் இருப்பாள். இருட்டில் யாரும் அறியாமல் இரகசியமாகச் சவுனாவுக்குப் போய் வருவாள்.

மர்யாத்தாவின் அன்னைக்கு அதிசயமாக இருந்தது. "எங்கள் மர்யத்தாவுக்கு என்ன நடந்தது? எங்கள் வீட்டுக் கோழிக்கு என்ன வந்தது? அரைக்கச்சும் இடுப்புப் பட்டியும் அணியாமல் இருக்கிறாள். இரகசியமாகச் சவுனாவுக்குப் போகிறாள். இருட்டில் நடமாடுகிறாள் ... !"

"மர்யத்தா வெகு காலம் ஆனிரை மேய்க்கிறாள். தினமும் வெகு தூரம் நடந்து திாிகிறாள். அவளுக்கு இதுதான் நடந்தது" என்று ஒரு பிள்ளை சொன்னது.

மர்யத்தா கனத்த கர்ப்பத்தை ஏழு எட்டு மாதங்கள் சுமந்தாள். பெண்களின் பழைய கணக்குப்படி பத்தாம் மாதம் பாதியும் சுமந்தாள். அப்போது அவளுக்குக் கடுமையான நோ உண்டானது.

"அம்மா, தாயே, பிரசவ வேதனையில் இருக்கும் எனக்கு ஒரு புகலிடம் தயார் செய்! எனக்கு வெப்பமான ஒரு மறைவிடம் தேவை" என்று மர்யத்தா தாயைக் கேட்டாள்.

"நீ ஒரு பேயின் பரத்தை! யாரோடு படுத்தாய்? அவன் என்ன விவாகம் ஆனவனா, ஆகாதவனா?" என்றாள் தாய்.

மர்யத்தா ஓர் அழகி. அழகிய இளைய மகள். தாய்க்குக் கடைசி மகள். அவள் சொன்னாள்: "அம்மா, நான் எவரோடும் உறவு கொள்ளவில்லை. சிறுபழம் பறித்தேன். அது தவறி வாயில் விழுந்து வயிற்றுள் போனது. அதனால் வயிறு நிறைந்து கர்ப்பமானேன்."

மர்யாத்தா தன் தந்தையிடம் சென்று தனக்குச் சவுனாவில் நீராவிக் குளியல் தேவை என்று கேட்டாள்.

"தூரப் போ, வேசியே" என்றார் தந்தை. "நீ எாிக்கத் தக்கவள். கரடிகளின் குகைக்குப் போய்க் குழந்தையைப் பெறு!"

"நான் வேசியல்ல. எனக்கு ஓர் உயர்ந்த மகன் பிறப்பான். அவன் வைனா மொயினனிலும் வல்லவனாகப் இருப்பான்."

மர்யத்தாவுக்கு மனத்தில் மிகவும் துன்பம் ஏற்பட்டது. பிரசவத்துக்கு எங்கே போகலாம் என்று அவளுக்குத் தொியவில்லை.

பில்த்தி என்பவள் ஒரு சிறிய பெண். மர்யத்தா அவளை அழைத்தாள். "பில்த்தியே, சிறிய பெண்ணே, எனது பணிப்பெண்களில் மிகச் சிறந்தவளே, சாரா என்ற கிராமத்துக்குப் போ! அங்கே றுவோத்துஸ் என்பவனிடம் சவுனாக் குளியலறையைக் கேள்!" என்று சொன்னாள் மர்யாத்தா.

பில்த்தி என்பவள் பணிவுமிக்க பணிப்பெண். எந்தப் பணியையும் சொல்லி முடிக்குமுன் செய்து முடிப்பவள். அவள் ஓடினாள். பனிப்புகார் போல ஓடினாள். பாவாடை சட்டைகளைக் கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டு றுவோத்துஸ் என்பானின் இல்லத்துக்கு ஓடினாள். அவள் நடந்து செல்கையில் குன்றுகள் அசைந்தன. அவள் ஏறிச் செல்கையில் மலைச்சாிவுகள் ஆடின. கூம்புக்காய்கள் புற்றரையில் விழுந்து குதித்தன. கூழாங்கற்கள் சேற்றில் தெறித்தன. கடைசியாக றுவோத்துஸ் என்பவனின் வீட்டு வாசலில் வந்து நின்றாள்.

கொடியவன் றுவோத்துஸ் சட்டை அணிந்து மேசையின் தலைப் பக்கம் இருந்தான். பொிய அளவில் உண்டு குடித்துக் கொண்டிருந்தான். அவன் பில்த்தியைக் கண்டதும், "இழிந்த பிறவியே, நீ என்ன சொல்கிறாய்?" என்று நாய்போலக் குரைத்தான்.

"ஒரு நொந்துபோன பெண் ஆறுதல் பெறச் சவுனா தேவை. அதைக் கேட்கவே வந்திருக்கிறேன்" என்றாள் பில்த்தி.

இடுப்பில் கைகளை வைத்தபடி தரைப் பலகையில் உலாவிக் கொண்டிருந்த றுவோத்துஸின் கொடிய மனைவி, "யாருக்காகக் கேட்கிறாய் சவுனா?" என்று கேட்டாள்.

"எங்கள் மர்யத்தாவுக்காகக் கேட்கிறேன்."

றுவோத்துஸின் அவலட்சணமான மனைவி, "வெற்றுக் குளிப்பிடங்கள் கிராமத்தில் இல்லை" என்றாள். "வெட்டிச் சுட்ட காட்டு வௌியில் குளிப்பிடங்கள் இருக்கின்றன. ஊசியிலை மரத் தோப்பில் குதிரை லாயங்கள் இருக்கின்றன. பரத்தைப் பெண் குளிக்க அது போதும். குதிரைகளின் சுவாசத்தில் அவள் குளியலைப் பெறட்டும்."

பில்த்தி விரைவாகத் திரும்பிச் சென்று, றுவோத்துஸின் மனைவி கூறியதைச் சொன்னாள்.

"சாி சரி, நானும் ஓர் அடிமையைப்போல வெட்டிச் சுட்ட காட்டு வௌிக்குப் போக வேண்டியதுதான்" என்ற மர்யத்தா, தனது உடைகளை அள்ளி எடுத்தாள். தனது உடலைப் பேண, விசுறும் இலைக்கட்டையும் எடுத்துக் கொண்டாள். கடுமையான நோவுடன் தப்பியோவின் குன்றில் இருந்த லாயத்தை நோக்கி வேகமாகப் போனாள்.

போகும்போது, "உயர்மா தெய்வமே, உதவிக்கு வாரும்! இப்பெண்ணுக்கு நோ வந்த இந்நேரம் காவலைத் தாரும்! வாதையிலிருந்து விடுதலை தாரும்! இந்த அல்லலினாலே அழிந்து போகாமல் இருக்க, அருகினில் வந்து ஆறுதல் தாரும்!" என்று சொன்னாள்.

கடைசியாக அவள் குதிரைக் கொட்டகைக்கு வந்து சேர்ந்தாள். "நல்ல குதிரையே, நன்றாய்ச் சுவாசி! வெப்ப நீராவியை என்மீது ஊது! சவுனாவின் சூடான ஆவியைப் பரப்பு! அதனால் என் துயர் அற்றுப் போகட்டும்!"

அவள்மீது குதிரை நன்றாகச் சுவாசித்தது. அந்தச் சுவாசம், சவுனா அறையில் கொதிக்கும் கற்களில் தண்ணீரை எறிந்ததும் எழும் நீராவியைப்போல இருந்தது. தூய கன்னி மர்யத்தா நிறைந்த மனத்தோடு அந்த நீராவியில் வேண்டியமட்டும் குளித்து ஒரு சிறு பையனைப் பெற்றெடுத்தாள். சடைத்த குதிரையின் லாயத்தில் வைக்கோலின்மேல் அந்த மாசற்ற குழந்தையைக் கிடத்தினாள்.

மர்யத்தா தன் குழந்தையை கழுவினாள். துணியால் சுற்றினாள். முழங்காலிலும் மடியிலும் வைத்துத் தாலாட்டினாள். பிறர் கண்களில் படாமல் அன்பாய் அருமையாய் அணைத்து வளர்த்தாள்.

ஒரு நாள் வழக்கம்போலக் குழந்தையைத் தனது முழங்காலில் வைத்துத் தலை வாாினாள். அப்பொழுது குழந்தை திடீரென மறைந்துவிட்டது.

மர்யத்தாவின் மனதில் துயரம் சூழ்ந்தது. தனது தங்க ஆப்பிள் போன்ற, வெள்ளித் தடிபோன்ற குழந்தையைத் தேடி வௌியே ஓடினாள். அரைக்கும் திாிகைக் கற்களில் தேடினாள். சறுக்கி விரையும் வண்டியில் பார்த்தாள். கொழிக்கும் சுளகைத் திருப்பிப் பார்த்தாள். சுமக்கும் வாளியின் பின்புறம் பார்த்தாள். ஆடும் மரங்களில், பிாித்த புற்களில், அள்ளிச் சிந்திய வைக்கோல் கட்டினில் பார்த்தாள்.

அவள் நீண்ட காலமாகத் தன் குழந்தையை வயல்களில் தேடினாள். ஊசியிலை மரக் காடுகளில் தேடினாள். அடிமரக் குற்றிகளில் தேடினாள். புதர் பற்றைகளில் தேடினாள். சூரைச் செடிகளின் வேரைக் கிண்டினாள். வளர்ந்த மரங்களின் கிளைகளை நிமிர்த்தினாள்.

அவள் நடந்து சென்றபோது ஒரு நட்சத்திரம் எதிரே வந்தது. அதற்குத் தலை தாழ்த்தி வணங்கி, "வானுலக நட்சத்திரமே, என் மகன் எங்கே இருக்கிறான் என்று உனக்குத் தொியுமா?" என்று கேட்டாள்.

"தொிந்தாலும் சொல்ல மாட்டேன்" என்றது நட்சத்திரம். "ஏனென்றால் அவன்தான் என்னைப் படைத்தவன். இந்தக் கொடிய குளிாில் காிய இருட்டில் இருந்து கண் சிமிட்ட வைத்தவன்."

அவள் மேலும் நடந்தாள். சந்திரன் வந்தது. அதனிடம் தலையைத் தாழ்த்திக் கேட்டாள்.

"தொிந்தாலும் சொல்ல மாட்டேன்" என்றது சந்திரன். "ஏனென்றால் அவன்தான் என்னைப் படைத்தவன். இந்தக் கொடிய நாட்களில், பகலிலே ஓய்வு பெற்று, இரவிலே தனியாக விழித்திருக்க வைத்தவன்."

அவள் மேலும் நடந்தாள். சூாியன் வந்தது. அதனிடம் தலையைத் தாழ்த்திக் கேட்டாள்.

"எனக்குத் தொியும்" என்றது சூாியன். "அவன்தான் என்னைப் படைத்தவன். இந்த நல்ல நாட்களில் பொன்னாய் வெள்ளியாய் வீச வைத்தவன். அவன் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தொியும். தங்க ஆப்பிள் போன்ற உன் சிறுவன் இடுப்பு வரைக்கும் சேற்றில் புதைந்து இருக்கிறான்."

பின்னர் அவள் தன் மகனைச் சேற்றில் கண்டெடுத்து வீட்டுக்குக் கொண்டு போனாள். அவன் ஓர் அழகான பையனாக வளர்ந்து வந்தான். ஆனால் அவனுக்கு இன்னமும் ஒரு பெயர் இல்லை. 'மலரே' என்று மாதா அழைத்தாள். 'சோம்பேறி' என்று ஏனையோர் சொன்னார்கள்.

கடைசியில், அந்தப் பையனுக்கு ஞானமுழுக்கு ஆற்ற விரோகன்னாஸ் என்பவனை அழைத்து வந்தாள் மர்யத்தா. "ஆவி பிடித்தோருக்கும் இழிபிறப்பு ஆனவருக்கும் நான் ஞானமுழுக்கு ஆற்றேன்" என்றான் விரோகன்னாஸ். "இவனை முதலில் விசாாித்து, ஞானமுழுக்குக்குத் தகுந்தவன்தானா என்று தீர்மானிக்க வேண்டும்."

நித்திய முதிய வைனாமொயினன் என்னும் நிலைபேறுடைய மந்திரக் கலைஞன் பிள்ளையை விசாாிக்க முன்வந்தான். அவன் வருமாறு தீர்ப்பளித்தான்: "இந்தப் பையன் சேற்றில் இருந்து வந்ததாலும் சிறுபழத்திலிருந்து பிறந்ததாலும் இவனைச் சிறுபழச் செடிக்குப் பக்கத்தில் புதையுங்கள். அல்லது அந்தச் சேற்றில் தள்ளுங்கள்! தலையில் தடியால் அடியுங்கள்!"

அந்த இரண்டு வார வயதுடைய பிள்ளை பேசத் தொடங்கியது.

"ஓகோ!" என்றது பிள்ளை. "நீ ஓர் இழிந்த கிழவன். முட்டாள் மனிதன். உனது தீர்ப்பு எவ்வளவு மூடத்தனமானது. நீ சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தினாய்! நீயே பொிய குற்றங்களைச் செய்திருக்கிறாய்! இதுவரை உன்னை ஒருவரும் சேற்றுக்கு இழுத்துச் செல்லவில்லையே! உன்னை ஒருவரும் தடியால் அடிக்கவில்லையே! உன்னால் ஒரு பெண் கடலில் மூழ்கிச் செத்தாளே! அது நினைவில்லையா உனக்கு?"

இதைக் கேட்டதும் விரோகன்னாஸ் விரைந்து பிள்ளைக்கு ஞானமுழுக்கு ஆற்றினான் அத்துடன் அந்தப் பிள்ளையைக் கரேலியாவின் அரசனாக்கிச் சகல அதிகாரங்களுக்கும் காவலன் ஆக்கினான்.

இதனால் வைனாமொயினனுக்கு வெட்கம் வந்தது; கோபமும் வந்தது. அவன் புறப்பட்டுக் கடற்கரை ஓரமாக நடந்துகொண்டே கடைசி முறையாகத் தனது மந்திரப் பாடலைப் பாடினான். அவனுடைய பாடலால் செப்புத் தளத்துடன் ஒரு செப்புப் படகு தோன்றிற்று. அவன் அதில் ஏறி அமர்ந்து, தௌிந்த கடலில் பயணமானான். போகும்போது அவன் இப்படிப் பாடினான்:

"காலம் மாறும். ஒரு நாள் போகும். இன்னொரு நாள் வரும். பின்னொரு காலத்தில் நான் தேவைப்படலாம். சந்திர சூாியர் இல்லாமல் போய் அதற்கு வழி காட்ட ஒருவன் தேவைப்படும்போதும், இசையை இசைக்க ஒருவன் வேண்டியபோதும், சம்போவைக் கொண்டுவர ஒருவன் தேவை என்னும்போதும் நான் நினைக்கப்படலாம்."

பின்னர் வைனாமொயினன் தனது செப்புப் படகில் வெகு தூரம் பயணித்துப் பூவுலகின் உச்சிக்கு வந்தான். சுவர்க்கத்தின் கீழ்த் தளத்தை அடைந்தான். அங்கே ஓய்வு பெற்றான். அவன் தனது இசைக் கருவியான கந்தலே யாழின் இன்னிசையைப் பின்லாந்து மக்களுக்காகவும் தனது அாிய பாடல்களைப் பிள்ளைகளுக்காகவும் விட்டுச் சென்றான்.


முடிவுரை

நான் பாடுவதை நிறுத்தி, நாவை அடக்கி, வாயை மூட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நீண்ட பயணத்தின் பின் குதிரையும் இளைக்கும். கோடைப் புல் வெட்டியபின் கத்தியும் மொட்டையாகும். பல வளைவுகள் கடந்தபின் ஆற்று நீரும் அலுத்துப் போகும். இரவு முழுவதும் எாிந்தபின் நெருப்பும் ஓய்வுபெறும். ஏன் ஒரு பாடகனுக்கு மட்டும் இளைப்பும் களைப்பும் வரக்கூடாது?

'நீர்வீழ்ச்சி எவ்வளவு வேகமாகப் பாய்ந்தாலும் நீர் முழுவதையும் கொட்டி விடுவதில்லை, ஒரு பாடகன் எப்படித்தான் பாடினாலும் தனது ஆற்றல் அத்தனையும் அற்றுப் போகும்வரை பாடுவதில்லை. பாடலை நடுவிலே அரைகுறையாக வெட்டிவிடுவதைப் பார்க்கிலும் பாதியிலே நிறைவுபடுத்துவது நல்லது' என்பதையும் நான் கேள்விப்பட் டிருக்கிறேன்.

எனவே நான் பாடுவதை நிறுத்துகிறேன். பாடல்களைச் சேர்த்துப் பந்தாகச் சுருட்டுகிறேன். சுருட்டிய பந்தை மேன்மாடத்தில் எலும்புப் பூட்டுக்குள் வைக்கிறேன். எலும்புகள் உடைக்கப்படாமல், பற்கள் ஆட்டப்படாமல், நாக்கு அசைக்கப்படாமல் அந்தப் பந்தை விடுவிக்க முடியாது.

இப்பொழுது என்னை நேசிப்பதற்கு ஊசியிலை மரங்களும் மிலாறு மரங்களும் போி மரங்களும்தாம் இருக்கின்றன. நான் சிறு வயதிலேயே சொந்தத் தாயால் கைவிடப்பட்டு வளர்ப்புத் தாயால் வளர்க்கப்பட்டவன். அந்த அனுபவம் கல்லின் தளத்தில் நின்ற வானம்பாடி போல, பாறையில் நின்ற பாடும் பறவைபோல இருந்தது. அந்த அன்னிய அன்னை இரக்கமில்லாமல் இந்த அநாதையைக் கொடிய குளிர் காற்றில் வடக்குப் பக்கமாக விரட்டினாள்.

நான் வானம்பாடிபோல் சுற்றித் திாிந்தேன். வந்த காற்று அனைத்தையும் அறிந்து உணாந்தேன். கொடிய குளிாில் நடுங்கிக் கத்தினேன்.

இப்பொழுது பலர் வந்து என்னைக் கோபிக்கிறார்கள். தரக் குறைவாகத் தாக்குகிறார்கள். பொருத்தம் இல்லாத பாடல்கள் என்கிறார்கள். பாடல்களைப் பிழையாகப் புாிந்து கொண்டார்கள். பொருளை மாற்றித் பொய்ப் பொருள் கொண்டார்கள். வேண்டாம்! அப்படிச் செய்யதீர்கள்! நான் பேரறிஞர்களிடம் பாடம் கற்றவன் அல்லன். நான் கிழிந்த ஆடைகளில் குழந்தையாய் இருக்கையில், அன்னையின் நூல் நூற்கும் கருவியின் பக்கத்தில், எனது குடிசையிலேயே பாடல்களைப் பயின்றவன்.

இருப்பினும், நான் பாடகர்களுக்கு ஒரு பாதை அமைத்திருக்கிறேன். மரக் கிளைகளை வெட்டி ஒரு வழியைத் திறந்து வைத்திருக்கிறேன். உயர்ந்து வரும் இளைஞர்களுக்கும் மேன்மையுறும் தேசிய மக்களுக்கும் இனிமேல் இதுதானப்பா புதிய பாதை!


விளக்கக் குறிப்புகள்
  1. 1994ல் வௌிவந்த கலேவலாவின் செய்யுள் நடைத் தமிழாக்கத்தில் பாடல் 2 அடிகள் 159, 160ல் முழங்காலின் அளவு ஒன்றரை என்றும் இடுப்பின் அளவு இரண்டு என்றும் கூறியிருக்கிறேன்.இவை முறையே ஒன்றரை, இரண்டு fathoms ஆகும். இந்த விளக்கம் அதன் 'விளக்கக் குறிப்புகளி'ல் தவறிவிட்டது. இதனை அடிக் கணக்கில் இங்கே தந்திருக்கிறேன் (அத்தியாயம் 2).
  2. 'தெற்கில்' என்பதே சரியான மொழிபெயர்ப்பு. 'இலைதழை வடக்கில் வீழ்ந்தது' என்று 1994ல் வௌிவந்த கலேவலாவின் செய்யுள் நடைத் தமிழாக்கத்தில் தவறாக வௌிவந்துவிட்டது (அத்தியாயம் 2).

    2a. 'எல்லா வீரர்களும் விளங்கிக்கொள்ளக் கூடிய கதைகள் அல்ல' என்பதே சரியான மொழிபெயர்ப்பு. 'வீரர்கள் மட்டுமே விளங்கும் பாட்டிவை' என்று 1994ல் வௌிவந்த கலேவலாவின் செய்யுள் நடைத் தமிழாக்கத்தில் தவறாக வௌிவந்துவிட்டது (அத்தியாயம் 3).
  3. tomtit என்னும் சிறு குருவி (அத்தியாயம் 3).
  4. இது அந்தக் காலத்தைய ஒரு போர்முறை. போர் புரிபவர்கள் முதலில் தங்கள் வாள்களை அளந்து பார்ப்பர். எவருடைய வாள் நீளமாக இருக்கிறதோ, அவரே முதல் வீச்சை வீசவேண்டும் (அத்தியாயம் 3).
  5. 'ஏர்க்கால்' என்பதே சரியான மொழிபெயர்ப்பு. 1994ல் வௌிவந்த கலேவலாவின் செய்யுள் நடைத் தமிழாக்கத்தில் 'குதிரையின் பட்டி' என்றிருக்கிறது (அத்தியாயம் 3).
  6. அலங்கார மூடி, மின்னும் மூடி, ஒளிப் புள்ளிகளையுடைய மூடி என்றும் மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. (அத்தியாயம் 7).
  7. மூரிக்கி, மன்ஸிக்கி, புவோலுக்கா என்பன பசுக்களின் பெயர்கள். மன்ஸிக்கா, புவோலுக்கா என்ற பெயர்களில் சிறு பழங்களும் இருக்கின்றன (அத்தியாயம் 11).
  8. 'நூறு வாயால் சொன்னாலும்' என்றும் மொழிபெயர்ப்பு உண்டு (அத்தியாயம் 12).
  9. (i) துவோனி = மரணதேவன்; (ii) துவோனலா = துவோனி என்னும் மரணதேவனின் வதிவிடம், மரண உலகம்; (iii) துவோனியின் நதி = மரண உலகில் ஓடும் கறுப்பு நதி (அத்தியாயம் 14).
  10. ஏற்கனவே செய்யுள் நடையில் வௌிவந்த கலேவலாவின் தமிழாக்கத்தில் இந்த மந்திரப் பாடல் முழுவதும் அடிக்கு அடி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவற்றை அந்நூலில் பாடல் 17: அடிகள் 149 தொடக்கம் 572 வரை பார்க்க (அத்தியாயம் 17).
  11. 'வீரர்கள்கூட விளங்காத பாட்டிவை' என்பதே சரியான மொழிபெயர்ப்பு. 'வீரர்கள் மட்டும் விளங்கும் பாட்டிவை' 1994ல் வௌிவந்த கலேவலாவின் செய்யுள் நடைத் தமிழாக்கத்தில் தவறாக வௌிவந்துவிட்டது (அத்தியாயம் 17).
  12. 'மங்கிய பொழுதின்' என்பதே சரியான மொழிபெயர்ப்பு. இதைச் சிலர் 'பொழுது புலரும் வைகறை வேளை' என்றும், சிலர் 'பொழுது சாயும் அந்திவேளை' என்றும் விளங்கியிருக்கிறார்கள் (அத்தியாயம் 19).
  13. 'அடுத்த மாதத்தில்' என்றும் மொழிபெயர்க்கலாம் (அத்தியாயம் 20).
  14. 1994ல் வௌிவந்த கலேவலாவின் செய்யுள் நடைத் தமிழாக்கத்தில் 'பயிற்றம் நாற்று' என்று சொல்லப்பட்டது.'பயிற்றம் நெற்று', 'கடுகு நெற்று', 'புல் நெற்று' என்றும் மொழிபெயர்ப்புகள் உண்டு. (அத்தியாயம் 20)
  15. 1994ல் வௌிவந்த கலேவலாவின் செய்யுள் நடைத் தமிழாக்கத்தில் 'கன்னத்திலிருந்து இரத்தம் இறங்கிற்று' என்றிருக்கிறது. அதுவே அநேகரின் கருத்து. அதுவே சரியான மொழிபெயர்ப்புமாகும்.ஆனால் சினம் கொள்ளும் நேரத்தில் 'கன்னத்துக்கு இரத்தம் பாயும்' என்பது சிலரது கணிப்பு (அத்தியாயம் 26)
  16. அடிக்குறிப்பு 4ஐப் பார்க்க (அத்தியாயம் 26, 27)
  17. `ஒரு பறையளவு தானியத்தை விளைச்சலாகப் பெறக்கூடிய சிறிய நிலம்கூட இல்லை என்பது' சிலரது விளக்கம் (அத்தியாயம் 29).
  18. `குதிரைக்குட்டி' என்பதே சாி. 1994ல் வௌிவந்த கலேவலாவின் செய்யுள் நடைத் தமிழாக்கத்தில் `முயல்' என்று தவறாக வௌிவந்துவிட்டது (அத்தியாயம் 30).
  19. முட்டைக்கோசு, முட்டைக்கோவா (அத்தியாயம் 33).
  20. 'பின்னங்கால் எலும்பிலிருந்து', 'தொடை எலும்பிலிருந்து' என்றும் சில மொழிபெயர்ப்பாளர்கள் விளங்கியிருக்கிறார்கள்.(அத்தியாயம் 33).
  21. 'பின்னனியம்' என்பதே சரி. 1994ல் வௌிவந்த கலேவலாவின் செய்யுள் நடைத் தமிழாக்கத்தில் 'முன்னணியம் என்று வௌிவந்துவிட்டது. (அத்தியாயம் 39).
  22. 'தென்மேல் காற்று' என்பதே சரி. 1994ல் வௌிவந்த கலேவலாவின் செய்யுள் நடைத் தமிழாக்கத்தில் 'வடமேல்' என்று வௌிவந்துவிட்டது. (அத்தியாயம் 42).
  23. அடிக்குறிப்பு 4ஐப் பார்க்க. (அத்தியாயம் 49).

உலகளாவிய கலேவலா (The Kalevala Worldwide)

2001 ஆம் ஆண்டு வரையில் கலேவலா 52 உலக மொழிகளில் வௌியாகியிருக்கிறது. அவற்றுள் 36 பாடல்களாகவும் 16 உரைநடையாக அல்லது தெரிவு செய்யப்பட்ட பகுதிகள் மட்டும் பாடல்களாக வௌிவந்துள்ளன. அவை வருமாறு:

American English1988
Arabic1991
Armenian1972
Belorussian1956
Bulgarian1992
Catalan1994, 1997
Cheremis1991
Chinese1962, 1985, 2000
Croatian2000
Czech1894-1895, 1962
Danish1907, 1994
Dutch1905, 1985
English1868, 1888, 1907, 1963, 1989
Esperanto1964
Estonian1883, 1939
Faeroese1993
French1845, 1867, 1930, 1991
Fulani1983
Georgian1969
German1852, 1914, 1967
Greek1992
Hebrew1930, 1964
Hindi1990
Hungarian1871, 1901, 1972, 1976
Icelandic1957
Italian1906, 1910, 1988
Japanese1937, 1976
Komi1980
Latin1986
Latvian1924
Lithuanian1922, 1972
Low German2001
Macedonian1998
Moldavian1961
Norwegian1967
Oriya2001
Persian1999
Polish1958, 1974
Rumanian1942, 1959
Russian1847, 1888, 1998
Serbo-Croatian1935
Slovak1962, 1986
Slovene1961, 1997
Spanish1944, 1985
Swahili1991
Swedish1841, 1864, 1948, 1999
Tamil1994, 1999
Tulu1985
Turkish1965, 1982
Ukrainian1901
Vietnamese1986, 1994
Yiddish1954
Mail Usup- truth is a pathless land -Home