"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > சூளாமணி - தோலாமொழித் தேவர் - முதல் பாகம்
Etext Preparation (input & proof-reading) : Dr. Geetha Bharathi, Hong Kong
Webpage: K. Kalyanasundaram, Lausanne
© Project Madurai 1999
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.projectmadurai.org
You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.
முதல் பாகம்
முதலாவது - நாட்டுச் சருக்கம்
சுரமை நாட்டின் சிறப்பு
மஞ்சுசூழ் மணிவரை யெடுத்த மாலமர்
இஞ்சிசூ ழணிநக ரிருக்கை நாடது
விஞ்சைந்ண ளுலகுடன் விழாக்கொண் டன்னது
துஞ்சுந்ணணள் ந்தியது சுரமை யென்பவே.
கயல்களும் கண்களூம்
பங்கயங் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம்
செங்கய லினநிரை திளைக்குஞ் செல்வமும்
மங்கையர் முகத்தன மதர்த்த வாளரி
அங்கயர் பிறழ்ச்சியு மறாத நீரவே.
வயல்களும் ஊர்களும்
ஆங்கவ ரணிநடை யன்னத் தோட்டன
தீங்குரன் மழலையாற் சிலம்புந் தண்பணை
வீங்கிள முலையவர் மெல்லென் சீறடி
ஓங்கிருஞ் சிலம்பினாற் சிலம்பு மூர்களே.
பொழில்களிலும் வீடுகளிலும் இன்னிசை
நிழலகந் தவழ்ந்துதே னிரந்து தாதுசேர்
பொழிலகம் பூவையுங் கிளீயும் பாடுமே
குழலகங் குடைந்துவண் டுறங்குங் கோதையர்
மழலையும் யாழுமே மலிந்த மாடமே.
வண்டுகளுங் கொங்கைகளும்
காவியும் குவளையு நெகிழ்ந்து கள்ளுமிழ்
ஆவியுண் டடர்த்ததே னகத்து மங்கையர்
நாவியுங் குழம்பு முண் ணகில நற்றவம்
மேவிநின் றவரையு மெலிய விம்முமே.
சுரமை நாட்டின் நானிலவளம்
வானிலங் கருவிய வரையு முல்லைவாய்த்
தேனிலங் கருவிய திணையுந தேரல்சேர்
பானலங் கழனியுங் கடலும் பாங்கணி
நானிலங் கலந்துபொன்னரலு நாடதே.
குறிஞ்சி நிலம்
முன்றி லெங்கு முருகயர் பாணியும்
சென்று வீழரு வித்திர ளோசையும்
வென்றி வேழ முழக்கொடு கூடிவான்
ஒன்றி நின்றதி ரும்மொரு பாலெலாம்.
முல்லை நிலம்
ஏறு கொண்டெறி யும்பணைக் கோவலர்
கூறு கொண்டெழு கொன்றையந் தீங்குழல்
காறு கொண்டவர் கம்பலை யென்றிவை
மாரு கொண்டுசி லம்புமொர் மாடெலாம்.
மருத நிலம்
அணங்க னாரண வாடல் முழவமும்
கணங்கொள் வாரணக் கம்பலைச் செல்வமும்
மணங்கொள் வார்முர சும்வய லோதையும்
இணங்கி யெங்கு மிருக்குமொர் பாலெலாம்.
நெய்தல் நிலம்
கலவ ரின்னிய முங்கட லச்சிறார்
புலவு நீர்ப்பொரு பூணெறி பூசலும்
நிலவு வெண்மண னீளிருங் கானல்வாய்
உலவு மோதமு மோங்குமொர் பாலெலாம்.
குறிஞ்சி நிலம்
கைவி ரிந்தன காந்தளும் பூஞ்சுனை
மைவி ரிந்தன நீலமும் வான்செய்நாண்
மெய்வி ரிந்தன வேங்கையும் சோர்ந்ததேன்
நெய்வி ரிந்தன நீளிருங் குன்றெலாம்.
முல்லை நிலம்
கொன்றை யுங்குருந் துங்குலைக் கோடலும்
முன்றி லேறிய முல்லையம் பந்தரும்
நின்று தேன்நிரந் தூதவி ரிந்தரோ
மன்றெ லாமண நாரும ருங்கினே.
மருதம்
நாற விண்டன நெய்தலு நாண்மதுச்
சேறு விண்டசெந் தாமரைக் கானமும்
ஏறி வண்டின மூன்றவி ழிந்ததேன்
ஊறி வந்தொழு கும்மொரு பாலெலாம்.
நெய்தல்
கோடு டைந்தன தாழையுங் கோழிருள்
மோடு டைந்தன மூரிக் குவளையும்
தோடு டைந்தன சூகமுங் கற்பகக்
காடு டைந்தன போன்றுள கானலே.
குறிஞ்சி
நீல வால வட்டத்தி னிறங்கொளக்
கோலும் பீலிய கோடுயர் குன்றின்மேல்
ஆலு மாமழை நீள்முகி லார்த்தொறும்
ஆலு மாமயி லாலுமொர் பாலெலாம்.
முல்லை
நக்க முல்லையு நாகிளங் கொன்றையும்
உக்க தாதடர் கொண்டொலி வண்டறா
எக்க ரீர்மணற் கிண்டியி ளம்பெடைப்
பக்க நோக்கும் பறவையொர் பாலெலாம்.
மருதம்
துள்ளி றாக்கவுட் கொண்டு சுரும்பொடு
கள்ள றாதசெந் தாமரைக் கானகத்
துள்ள றாதுதைந் தோகை யிரட்டுறப்
புள்ள றதுபு லம்பின பொய்கையே.
நெய்தல்
வெண்மு ளைப்பசுந் தாமரை மென்சுருள்
முண்மு ளைத்திர ளோடு முனிந்துகொண்
டுண்மு ளைத்திள வன்ன முழக்கலால்
கண்மு ளைத்த தடத்த கழியெலாம்.
குறிஞ்சி
காந்த ளங்குலை யாற்களி வண்டினம்
கூந்தி ளம்பிடி வீசக்கு ழாங்களோ
டேந்து சந்தனச் சர லிருங்கைமா
மாந்தி நின்றுறங் கும்வரை மாடெலாம்,
முல்லை
தார்செய் கொன்றை தளித்ததண் டேறலுண்
டேர்செய் கின்ற விளம்பு லிருங்குழைக்
கார்செய் காலை கறித்தொறு மெல்லவே
போர்செய் மாவினம் பூத்தண்பு றணியே.
மருதம்
அள்ளி லைககுவ ளைத்தடம் மேய்ந்தசைஇக்
கள்ள லைத்தக வுட்கரு மேதிபால்
உள்ள லைத்தொழு கக்குடைந் துண்டலால்
புள்ள லைத்த புனலபு லங்களே.
நெய்தல்
கெண்டை யஞ்சினை மேய்ந் து கிளர்ந்துபோய்
முண்ட கத்துறை சேர்ந்த முதலைமா
வண்டல் வார்கரை மாமக ரக்குழாம்
கண்டு நின்று கனலும் கழியெலாம்.
குறிஞ்சி
கண்ணி லாங்கழை யின்கதிர்க் கற்றையும்
மண்ணி லாங்குரல் வார்தினை வாரியும்
எண்ணி லாங்கவி ளைவன வீட்டமும்
உண்ணி லாங்குல வாமை யுயர்ந்தவே.
முல்லை
பேழ்த்த காயின பேரெட் பிறங்கிணர்
தாழ்த்த காயின தண்ணவ ரைக்கொடி
சூழ்த்த காய்த்துவ ரைவர கென்றிவை
மூழ்த்த போன்றுள முல்லை நிலங்களே.
மருதம்
மோடு கொண்டெழு மூரிக் கழைக்கரும்
பூடு கொண்ட பொதும்பரொ டுள்விராய்த்
தோடு கொண்டபைங் காய்துவள் செந்நெலின்
காடு கொண்டுள கண்ணக னாடெலாம்.
நெய்தல்
சங்கு நித்தில முத்தவ ழிப்பியும்
தெங்கந் தீங்குலை யூறிய தேறலும்
வங்க வாரியும் வாரலை வாரியும்
தங்கு வாரிய தண்கட னாடெலாம்.
திணை மயக்கம் [ மலர்]
கொடிச்சியர் புனத்தயல் குறிஞ்சி நெய்பகர்
இடைச்சியர் கதுப்பயர் கமழு மேழையம்
கடைச்சியர் களையெறி குவளை கானல்வாய்த்
தொடுத்தலர் பிணையலார் குழலுட் டோ ன்றுமே.
திணை மயக்கம் [ ஒலி ]
கலவர்தஞ் சிறுபறை யிசையிற் கைவினைப்
புலவர்தேம் பிழிமகிழ் குரவை பொங்குமே
குலவுகோற் கோவலர் கொன்றைத் தீங்குழல்
உலவுநீ ளசுணமா வுறங்கு மென்பவே.
சுரமை நாட்டின் சிறப்பு
மாக்கொடி மாணையு மெளவற் பந்தரும்
கார்க்கொடி முல்லையுங் கலந்து மல்லிகைப்
பூக்கொடிப் பொதும்பரும் பொன்ன ஞாழலும்
தூக்கடி கமழ்ந்துதான் றுறக்க மொக்குமே. 29
முதலாவது நாட்டுச் சருக்கம் முற்றிற்று
--------------------------
இரண்டாவது
நகரச் சருக்கம்
சுரமை நாட்டுப் போதனமா நகரம்
சொன்னநீர் வளமைத் தாய சுரமைநாட் டகணி சார்ந்து
மன்னன்வீற் றிருந்து வைக நூலவர் வகுக்கப் பட்ட
பொன்னவிர் புரிசை வேலிப் போதன மென்ப துண்டோ ர்
நன்னகர் நாக லோக நகுவதொத் தினிய தொன்றே.
நகரத்தின் அமைதி
சங்கமேய் தரங்க வேலித் தடங்கடற் பொய்கை பூத்த
அண்கண்மா ஞால மென்னுந் தாமரை யலரி னங்கேழ்ச்
செங்கண்மால் சுரமை யென்னுந் தேம்பொகுட் டகத்து வைகும்
நங்கையர் படிவங் கொண்ட நலத்தது நகர மன்றே.
அகழியும் மதிலரணும்
செஞ்சுடர்க் கடவு டிண்டே ரிவுளிகா றிவள வூன்றும்
மஞ்சுடை மதர்வை நெற்றி வானுழு வாயின் மாடத்
தஞ்சுட ரிஞ்சி , யாங்கோ ரழகணிந் தலர்ந்த தோற்றம்
வெஞ்சுடர் விரியு முந்நீர் வேதிகை மீதிட் டன்றே.
அம்மதிற் புறத்தே அமைந்த யானைகட்டுமிட மாண்பு
இரும்பிடு தொடரின் மாவி னெழுமுதற் பிணித்த யானைக்
கரும்பிடு கவள மூட்டும் கம்பலை கலந்த காவின்
அரும்பிடை யலர்ந்த போதி னல்லியுண் டரற்று கின்ற
கரும்பொடு துதைந்து தோன்றுஞ் சூழ்மதில் இருக்கை யெல்லாம்
மாடங்களின் மாண்பு
மானளா மதர்வை நோக்கின் மையரி மழைக்க ணார்தம்
தேனளா முருவக் கண்ணிச் செல்வர்தோ டிளைக்கு மாடங்
கானளாங் காம வல்லி கற்பகங் கலந்த கண்ணார்
வானளாய் மலர்ந்து தோன்று மணிவரை யனைய தொன்றே.
இதுவுமது - வேறு
அகிலெழு கொழும்புகை மஞ்சி னாடவும்
முகிலிசை யெனமுழா முரன்று விம்மவும்
துகிலிகைக் கொடியனார் மின்னிற் றோன்றவும்
இகலின மலையொடு மாட மென்பவே.
மாடங்களின் சிறப்பு
கண்ணெலாங் கவர்வன கனக கூடமும்
வெண்ணிலாச் சொரிவன வெள்ளி வேயுளும்
தண்ணிலாத் தவழ்மணித் தலமுஞ் சார்ந்தரோ
மண்ணினா லியன்றில மதலை மாடமே.
மாடத்திற் பலவகை ஒலிகள்
மாடவாய் மணிமுழா விசையு மங்கையர்
ஆடுவார் சிலம்பிணை யதிரு மோசையும்
பாடுவார் பாணியும் பயின்று பல்கலம்
முடிமா ணகரது முரல்வ தொக்குமே
வண்டுகளின் மயக்கம்
தாழிவாய்க் குவளையுந் தண்ணெ னோதியர்
மாழைவா ணெடுங்கணு மயங்கி வந்துசென்
றியாழவா மின்குர லாலித் தார்த்தரோ
ஏழைவாய்ச் சுரும்பின மிளைக்கு மென்பவே.
கடைத்தெரு
பளிங்குபோழ்ந் தியற்றிய பலகை வேதிகை
விளிம்புதோய் நெடுங்கடை வீதி வாயெலாம்
துளங்குபூ மாலையுஞ் சுரும்புந் தோன்றலால்
வளங்கொள்பூங் கற்பக வனமும் போலுமே.
சிலம்பொலிக்கு மயங்குஞ் சிறுஅன்னங்கள்
காவிவாய்க் கருங்கணார் காமர் பூஞ்சிலம்
பாவிவாய் மாளிகை யதிரக் கேட்டொறும்
தூவிவான் பெடைதுணை துறந்த கொல்லென
வாவிவா யிளவனம் மயங்கு மென்பவே.
அரசர் தெருவழகு
விலத்தகைப் பூந்துணர் விரிந்த கோதையர்
நலத்தகைச் சிலம்படி நவில வூட்டிய
அலத்தகக் குழம்புதோய்ந் தரச வீதிகள்
புலத்திடைத் தாமரை பூத்த போலுமே.
செல்வச் சிறப்பு
கண்ணிலங் கடிமலர்க் குவளைக் கற்றையும்
வெண்ணிலாத் திரளென விளங்கு மாரமும்
வண்ணவான் மல்லிகை வளாய மாலையும்
அண்ணன்மா நகர்க்கவைக் கரிய அல்லவே.
மாளிகைகளில் உணவுப்பொருள்களின் மிகுதி
தேம்பழுத் தினியநீர் மூன்றுந் தீம்பலா
மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியும்
மாம்பழக் குவைகளூ மதுத்தண் டீட்டமும்
தாம்பழுத் துளசில தவள மாடமே.
இன்ப உலகம்
மைந்தரு மகளிரு மாலை காலையென்
றந்தரப் படுத்தவ ரறிவ தின்மையால்
சுந்தரப் பொற்றுக டுதைந்த பொன்னக
ரிந்திர வுலகம்வந் திழிந்த தொக்குமே.
பயாபதி மன்னன் மாண்பு
மற்றமா நகருடை மன்னன் றன்னுயா
ஒற்றைவெண் குடைநிழ லுலகிற் கோருயிர்ப்
பொற்றியான் பயாபதி யென்னும் பேருடை
வெற்றிவேல் மணி முடி வேந்தர் வேந்தனே
பயாபதி மன்னன் சிறப்பு
எண்ணின ரெண்ணகப் படாத செய்கையான்
அண்ணிய ரகன்றவர் திறத்து மாணையான்
நண்ணுநர் பகைவரென் றிவர்க்கு நாளினும்
தண்ணியன் வெய்யனந் தானை மன்னனே.
மக்கட்குப் பகையின்மை
நாமவே னரபதி யுலகங் காத்தநாட்
காமவேள் கவர்கணை கலந்த தல்லது
தாமவேல் வயவர்தந் தழலங் கொல்படை
நாமநீர் வரைப்பக நலித தில்லையே.
குடிகளை வருத்தி இறை கொள்ளாமை
ஆறிலொன் றறமென வருளி னல்லதொன்
றூறுசெய் துலகினி னுவப்ப தில்லையே
மாறிநின் றவரையும் வணக்கி னல்லது
சீறிநின் றெவரையுஞ் செகுப்ப தில்லையே.
மன்னனின் முந்நிழல்
அடிநிழ லரசரை யளிக்கு மாய்கதிர்
முடிநிழன் முனிவரர் சரண முழ்குமே
வடிநிழல் வனைகதி ரெஃகின் மன்னவன்
குடைநிழ லுலகெலாங் குளிர நின்றதே.
இருவகைப்பகையும் அற்ற ஏந்தல்
மன்னிய பகைக்குழா மாறும் வையகம்
துன்னிய வரும்பகைத் தொகையும் மின்மையால்
தன்னையுந் தரையையுங் காக்கு மென்பதம்
மன்னவன் றிறத்தினி மருள வேண்டுமோ
அரசியல் சுற்றத்துடன் உலகப் பொதுமை நீக்குதல்
மேலவர் மெய்ப்பொருள் விரிக்கும் வீறுசால்
நூலினாற் பெரியவர் நுழைந்த சுற்றமா
ஆலுநீ ரன்னமோ டரச வன்னமே
போலநின் றுலகினைப் பொதுமை நீக்கினான்
அரசர் சுற்றத்தின் இயல்பு
கொதிநுனைப் பகழியான் குறிப்பி னல்லதொன்
றிதுநமக் கிசைக்கென வெண்ணு மெண்ணிலா
நொதுமலர் வெருவுறா நுவற்சி யாளர்பின்
அதுவவன் பகுதிக ளமைதி வண்ணமே.
அரசியர்
மற்றவன் றேவியர் மகர வார்குழைக்
கொற்றவர் குலங்களை விளக்கத் தோன்றினார்
இற்றதிம் மருங்குலென் றிரங்க வீங்கிய
முற்றுறா முலையினார் கலையின் முற்றியார்
அரசியர் இயல்பு
பஞ்சனுங் கடியினார் பரந்த வல்குலார்
செஞ்சுணங் கிளமுலை மருங்கு சிந்தினார்
வஞ்சியங் குழைத்தலை மதர்வைக் கொம்புதம்
அஞ்சுட ரிணர்க்கொசிந் தனைய வைம்மையார்
காமம் பூத்த காரிகையர்
காமத்தொத் தலர்ந்தவர் கதிர்த்த கற்பினார்
தாமத்தொத் தலர்ந்துதாழ்ந் திருண்ட கூந்தலார்
தூமத்துச் சுடரொளி துளும்பு தோளினார்
வாமத்தின் மயங்கிமை மதர்த்த வாட்கணார்.
பட்டத்து அரசிகள் இருவர்
ஆயிர ரவரவர்க் கதிகத் தேவியர்
மாயிரு விசும்பினி னிழிந்த மாண்பினார்
சேயிருந் தாமரைத் தெய்வ மன்னர் என்
றேயுரை யிலாதவ ரிருவ ராயினார்
பெருந்தேவியர் இருவரின் பெற்றி
நீங்கரும் பமிழ்த மூட்டித் தேனளாய்ப் பிழிந்த போலும்
ஓங்கிருங் கடலந் தானை வேந்தணங் குறுக்கு மின்சொல்
வீங்கிருங் குவவுக் கொங்கை மிகாபதி மிக்க தேவி
தாங்கருங் கற்பின் றங்கை சசிஎன்பாள் சசியோ டொப்பாள்
மங்கையர்க்கரசியராகும் மாண்பு
பூங்குழை மகளிர்க் கெல்லாம் பொன்மலர் மணிக்கொம் பன்ன
தேங்குழல் மங்கை மார்கள் திலகமாய்த் திகழ நின்றார்
மாங்கொழுந் தசோக மென்றாங் கிரண்டுமே வயந்த காலத்
தாங்கெழுந் தவற்றை யெல்லா மணிபெற வலரு மன்றே.
இவ்விருவரும் பயாபதியுடன் கூடியுறைந்த இன்பநலம்
பெருமக னுருகும் பெண்மை மாண்பினும் பேணி நாளும்
மருவினும் புதிய போலும் மழலையங் கிளவி யாலும்
திருமகள் புலமை யாக்குஞ் செல்விஎன் றிவர்கள் போல
இருவரு மிறைவ னுள்ளத் தொருவரா யினிய ரானார்
மன்னனும் மனைவியரும் ஓருயிர் ஆகி நிற்றல்
மன்னவ னாவி யாவார் மகளிரம் மகளிர் தங்கள்
இன்னுயி ராகி நின்றா னிறைமக னிவர்க டங்கட்
கென்னைகொ லொருவர் தம்மே லொருவர்க்கிங் குள்ள மோட
முன்னவன் புணர்த்த வாறம் மொய்ம்மலர்க் கணையி னானே
மங்கையர் மன்னனைப் பிணித்து வைத்தல்
சொற்பகர்ந் துலகங் காக்குந் தொழில்புறத் தொழிய வாங்கி
மற்பக ரகலத் தானை மனத்திடைப் பிணித்து வைத்தார்
பொற்பகங் கமழப் பூத்த தேந்துணர் பொறுக்க லாற்றாக்
கற்பகக் கொழுந்துங் காம வல்லியங் கொடியு மொப்பார்.
மாலாகி நிற்கும் மன்னன்
மங்கைய ரிருவ ராகி மன்னவ னொருவ னாகி
அங்கவ ரமர்ந்த தெல்லா மமர்ந்தருள் பெருகி நின்றான்
செங்கயல் மதர்த்த வாட்கட் டெய்வமா மகளிர் தோறும்
தங்கிய வுருவந் தாங்குஞ் சக்கரன் றகைமை யானான்
முற்றுநீர் வளாக மெல்லா முழுதுட னிழற்று மூரி
ஒற்றைவெண் குடையி னீழ லுலகுகண் படுப்ப வோம்பிக்
கொற்றவ னெடுங்க ணார்தங் குவிமுலைத் தடத்து மூழ்கி
மற்றவற் கரசச் செல்வ மின்னண மமர்ந்த தன்றே.
இரண்டாவது நகரச்சருக்கம் முடிந்தது.
---------------------------------------
மூன்றாவது
குமாரகாலச் சருக்கம்
தேவர்கள் இருவர் மண்ணுலகில் தோன்றுதல்
ஆங்கவர் திருவயிற் றமரர் கற்பமாண்
டீங்குட னிழிந்துவந் திருவர் தோன்றினார்
வாங்குநீர்த் திரைவளர் வளையு மக்கடல்
ஓங்குநீர் நிழலுமொத் தொளிரு மூர்த்தியார்
மிகாபதி விசயனைப் பெறுதல்
பெண்ணிலாந் தகைப்பெருந் தேவி பேரமர்க்
கண்ணிலாங் களிவள ருவகை கைம்மிகத்
தண்ணிலா வுலகெலாந் தவழந்து வான்கொள
வெண்ணிலா சுடரொளி விசயன் றோன்றினான்
சசி திவிட்டனைப் பெறுதல்
ஏரணங் கிளம்பெருந் தேவி நாளுறச்
சீரணங் கவிரொளித் திவிட்டன் றோன்றினான்
நீரணங் கொளிவளை நிரந்து விம்மின
ஆரணங் கலர்மழை யமரர் சிந்தினார்
விசயதிவிட்டர்கள் பிறந்தபொழுது உண்டான நன்மைகள்
திசையெலாத் தெளிந்தன தேவர் பொன்னகர்
இசையெலாம் பெருஞ்சிறப் பியன்ற வேற்பவர்
நசையெலா மவிந்தன நலியுந் தீவினைப்
பசையெலாம் பறந்தன பலர்க்கு மென்பவே
மைந்தர்களிருவரும் மங்கையர் மனத்தைக் கவர்தல்
செய்தமா ணகரியிற் சிறந்து சென்றுசென்று
எய்தினார் குமரராம் பிராய மெய்தலும்
மைதுழாம் நெடுங்கணார் மனத்துட் காமனார்
ஐதுலாங் கவர்கணை யரும்பு வைத்தவே
விசயனுடைய உடல், கண், குஞ்சி,காது
காமரு வலம்புரி கமழு மேனியன்
தாமரை யகவிதழ் தடுத்த கண்ணினன்
தூமரு ளிருடுணர்ந் தனைய குஞ்சியன்
பூமரு பொலங்குழை புரளுங் காதினன்
மாலை,மார்பு , நிறம் ,தோள், நடை ஆகியவை
வாடலில் கண்ணியன் மலர்ந்த மார்பினன்
தாடவழ் தடக்கையன் றயங்கு சோதியன்
கோடுயர் குன்றெனக் குலவு தோளினன்
பீடுடை நடையினன் பெரிய நம்பியே
திவிட்டனுடய உடல் முதலியன
பூவயம் புதுமலர் புரையு மேனியன்
துவிரி தாமரை தொலைத்த கண்ணினன்
தீவிரி யாம்பலிற் சிவந்த வாயினன்
மாவிரி திருமறு வணிந்த மார்பினன்
கை முதலியன
சங்கியல் வலம்புரி திகிரி யென்றிவை
தங்கிய வங்கைய னடித்தண் போதினன்
மங்கல மழகளி றனைய செல்கையன்
இங்குமுன் மொழிந்தவற் கிளய நம்பியே
இருவரும் இளமை எய்துதல்
திருவிளைத் துலகுகண் மலரத் தெவ்வர்தம்
யுரிவளை நன்னகர்ச் செல்வம் புல்லென
வரிவளைத் தோளியர் மனத்துட் காமநோய்
எரிவளைத் திடுவதோ ரிளமை யெய்தினார்
மைந்தர்கள் இருவரும் மங்கயர்கட்குத் தோன்றுதல்
உவர் விளை கடற்கொடிப் பவள மோட்டிய
துவரிதழ் வாயவர் துளங்கு மேனியர்
அவர்கட மருள்கொலோ வனங்க னாய்மலர்
கவர்கணை கடைக்கணித் துருவு காட்டினார்.
மங்கையர் மயங்குதல்
கடலொளி மணிவணன் கனவில் வந்தெம
துடலகம் வெருவிதா யுள்ளம் வவ்வினான்
விடலில னெம்முயிர் விடுக்குங் கொல்லென
மடவர லவர்குழா மயக்க முற்றதே
நங்கையர் மனத்தில் விசயன்
வார்வளை வண்ணனென் மனத்து ளான்பிறர்
ஏர்வளர் நெடுங்கணுக் கிலக்க மல்லனாற்
கார்வளர் கொம்பனா ரிவர்கள் காமநோய்
ஆர்வளர்த் தவர்கொலென் பருவ மாயினார்
மங்கையர் மாட்சி
கண்ணிலாங் கவினொளிக் காளை மார்திறத்
துண்ணிலா வெழுதரு காம வூழெரி
எண்ணிலாச் சுடர்சுட விரிந்து நாண்விடாப்
பெண்ணலாற் பிறிதுயிர் பெரிய தில்லையே
காதல் தீ வளர்க்கும் காளைப் பருவம்
திருவளர் செல்வர்மேற் சென்ற சிந்தைநோய்
ஒருவரி னொருவர்மிக் குடைய ராதலால்
உருவளர் கொம்பனா ருள்ளங் காய்வதோர்
எரிவளர்த் திடுவதோ ரிளமை யெய்தினார்
அரசன் மனைவியருடன் அமர்ந்திருத்தல்
மற்றொர்நா ளமரிகைக் கொடிகொண் மாமணிச்
சுற்றுவான் சுடரொளி தழுவிச் சூழ்மலர்
முற்றிவண் டினம்விடா முடிகொள் சென்னியக்
கொற்றவ னிளையவர் குழைய வைகினான்
அரசன் உறங்குதல்
மஞ்சுடை மணிநகு மாலை மண்டபத்
தஞ்சுட ரகிற்புகை யளைந்து தேனளாய்ப்
பஞ்சுடை யமளிமேற் பள்ளி யேற்பவன்
செஞ்சுட ரிரிவதோர் திறத்த னாயினான்
உடற் பாதுகாப்பாளர்கள்
மன்னவன் றுயில்விடுத் தருள மைந்தர்பொன்
றுன்னிய வுடையினர் துதைந்த கச்சையர்
பின்னிய ஞாணினர் பிடித்த வில்லினர்
அன்னவ ரடிமுதற் காவ னண்ணிணார்
திருப்பள்ளி எழுச்சி
தங்கிய தவழழொளி தடாவி வில்லிட
மங்கல வுழக்கல மருங்கு சேர்ந்தன
அங்கவன் கண்கழூஉ வருளிச் செய்தனன்
பங்கய முகத்தர்பல் லாண்டு கூறினார்
அந்தணர் வாழ்த்து கூற அரசன் அவர்களை வணங்குதல்
அந்தண ராசிடை கூறி யாய்மலர்ப்
பைந்துணர் நெடுமுடி பயில வேற்றினார்
செந்துணர் நறுமலர் தெளித்துத் தேவர்மாட்
டிந்திர னனையவ னிறைஞ்சி யேத்தினான்
வாயில் காப்போர் உலகு காப்போன் வரவை எதிர்பார்த்தல்
விரையமர் கோதையர் வேணுக் கோலினர்
உரையமர் காவல்பூண் கடையி னூடுபோய்
முரசமர் முழங்கொலி மூரித் தானையன்
அரசவை மண்டப மடைவ தெண்ணினார்
அரசன் வாயிலை அடைதல்
பொன்னவிர் திருவடி போற்றி போற்றிஎன்
றன்னமென் னடையவர் பரவ வாய்துகிற்
கன்னியர் கவரிகா லெறியக் காவலன்
முன்னிய நெடுங்கடை முற்ற முன்னினான்
மெய்க்காப்பாளர் அரசனைக் காத்தல்
மஞ்சிவர் வளநகர் காக்கும் வார்கழல்
நஞ்சிவர் வேனர பதியை யாயிடை
வெஞ்சுடர் வாளினர் விசித்த கச்சையர்
கஞ்சுகி யவர்கண்மெய் காவ லோம்பினார்
அரசன் திருவோலக்க மண்டபத்தை யடைதல்
வாசநீர் தெளித்தலர் பரப்பி வானகம்
எசுநீ ளிருக்கைய விலங்கு சென்னிய
மூசுதே னெடுங்கடை மூன்றும் போய்ப்புறத்
தோசைநீள் மண்டப முவந்த தெய்தினான்
வேறு - மண்டபத்திற்குள் புகுதல்
பளிங்கொளி கதுவப் போழ்ந்த பலகைகண் குலவச் சேர்த்தி
விளங்கொளி விளிம்பிற் செம்பொன் வேதிகை வெள்ளி வேயுட்
டுளொங்கொளி பவளத் திண்காற் சுடர்மணி தவழும் பூமி
வளங்கவின் றனைய தாய மண்டப மலிரப் புக்கான்
அரசன் அணையில் வீற்றிருக்கும் காட்சி
குஞ்சரக் குழவி கவ்விக் குளிர்மதிக் கோடு போலும்
அஞ்சுட ரெயிற்ற வாளி யணிமுக மலர வூன்றிச்
செஞ்சுட ரணிபொற் சிங்கா சனமிசைச் சேர்ந்த செல்வன்
வெஞ்சுட ருதயத் துச்சி விரிந்த வெய் யவனோ டொத்தான்
அரசன் குறிப்பறிந்து அமர்தல்
பூமரு விரிந்த நுண்ணூற் புரோகிதன் பொறிவண் டார்க்கும்
மாமல ரணிந்த கண்ணி மந்திரக் கிழவர் மன்னார்
ஏமரு கடலந் தானை யிறைமகன் குறிப்பு நோக்கித்
தாமரைச் செங்கண் டம்மாற் பணித்ததா னத்த ரானார்
சிற்றரசர்கள் தங்கட்குரிய இடங்களில் அமர்தல்
முன்னவ ரிருந்த பின்னை மூரிநீ ருலகங் காக்கும்
மன்னவன் கழலைத் தங்கண் மணிமுடி நுதியிற் றீட்டிப்
பின்னவன் பணித்த தானம் பெறுமுறை வகையிற் சேர்ந்தார்
மின்னிவர் கடகப் பைம்பூண் வென்றிவேல் வேந்த ரெல்லாம்
படைத் தலைவர்கள் உடனிருத்தல்
வழிமுறை பயின்று வந்த மரபினார் மன்னர் கோமான்
விழுமல ரடிக்கண் மிக்க வன்பினார்; வென்றி நீரார்;
எழுவளர்த் தனைய தோளா ரிளையவ ரின்ன நீரார்
உழையவ ராக வைத்தா னோடைமால் களிற்றி னானே
புலவர்கள் வருதல்
காவல னென்னுஞ் செம்பொற் கற்பகங் கவின்ற போழ்தில்
நாவல ரென்னும் வண்டு நகைமுகப் பெயரி னாய
பூவலர் பொலிவு நோக்கிப் புலமயங் களிப்ப வாகிப்
பாவல ரிசையிற் றோன்றப் பாடுபு பயின்ற வன்றே
இசைப் புலவர்கள் வாழ்த்து கூறுதல்
பண்ணமை மகர நல்யாழ்ப் பனுவனூற் புலவர் பாடி
மண்ணமர் வளாக மெல்லாம் மலர்ந்ததின் புகழோ டொன்றி
விண்ணகம் விளங்கு திங்கள் வெண்குடை நிழலின் வைகிக்
கண்ணம ருலகம் காக்கும் கழலடி வாழ்க வென்றார்
இதுவும் அது
மஞ்சுடை மலையின் வல்லி தொடரவான் வணங்க நின்ற
அஞ்சுடர்க் கடவுள் காத்த வருங்குல மலரத் தோன்றி
வெஞ்சுட ரெஃக மொன்றின் வேந்துகண் ணகற்றி நின்ற
செஞ்சுடர் முடியி னாய்நின் கோலிது செல்க வென்றார்
வாயிற் காவலனுக்கு ஒரு கட்டளை
இன்னணம் பலரு மேத்த வினிதினங் கிருந்த வேந்தன்
பொன்னணி வாயில் காக்கும் பூங்கழ லவனை நோக்கி
என்னவ ரேனு மாக நாழிகை யேழு காறும்
கன்னவி றோளி னாய்நீ வரவிடு காவ லென்றான்
நிமித்திகன் வரவு
ஆயிடை யலகின் மெய்ந்நூ லபவுசென் றடங்கி நின்றான்
சேயிடை நிகழ்வ தெல்லாஞ் சிந்தையிற் றெளிந்த நீரான்
மேயிடை பெறுவ னாயின் வேந்துகாண் குறுவன் கொல்லோ
நீயிடை யறிசொல் லென்றோர் நிமித்திக னெறியிற் சொன்னான்
அரசன் நிமித்திகனை வரவேற்றல்
ஆங்கவ னரசர் கோமான் குறிப்பறிந் தருளப் பட்டீர்
ஈங்கினிப் புகுமி னென்றா னிறைவனை யவனுஞ் சேர்ந்தான்
வீங்கிருந் தானை யானும் வெண்மலர் பிடித்த கையால்
ஓங்கிருந் தானங் காட்டி யுவந்தினி திருக்க வென்றான்
நிமித்திகன் தன் ஆற்றலை காட்டத் தொடங்குதல்
உற்றத னொழுக்கிற் கேற்ப வுலகுப சார நீக்கிக்
கொற்றவன் குறிப்பு நோக்கி யிருந்தபின் குணக்குன் றொப்பான்
முற்றிய வுலகின் மூன்று காலமூ முழுது நோக்கிக்
கற்றநூற் புலமை தன்னைக் காட்டுதல் கருதிச் சொன்னான்
அரசன் கனாக்கண்டதை நிமித்திகன் கூறுதல்
கயந்தலைக் களிற்றி னாயோர் கனாக்கண்ட துளது கங்குல்
நயந்தது தெரியி னம்பி நளிகடல் வண்ணன் றன்னை
விசும்பகத் திழிந்து வந்தோர் வேழம்வெண் போது சேர்ந்த
தயங்கொளி மாலை சூட்டித் தன்னிட மடைந்த தன்றே
கனவின் பயனை நிமித்திகன் கூறுதல்
மன்மலர்ந் தகன்ற மார்ப மற்றதன் பயனுங் கேண்மோ
நன்மலர் நகைகொள் கண்ணி நம்பித னாம மேத்தி
மின்மலர்ந் திலங்கு பைம்பூண் விஞ்சைவேந் தொருவன் வந்து
தன்மக ளொருத்தி தன்னைத் தந்தனன் போகு மென்றான்
தூதன் ஒருவன் வருவான் என்றல்
கட்பகர் திவலை சிந்துங் கடிகமழ் குவளைக் கண்ணித்
திட்பமாஞ் சிலையி னாய்! நீ தெளிகநா னேளு சென்றால்
ஒட்பமா யுரைக்க வல்லா னொருவனோ ரோலை கொண்டு
புட்பமா கரண்ட மென்னும் பொழிலகத் திழியு மென்றான்
நிமித்திகன் கூறியதை அவையோர் உடன்பட்டுக் கூறுதல்
என்றவ னியம்பக் கேட்டே யிருந்தவர் வியந்து நோக்கிச்
சென்றுயர் திலகக் கண்ணித் திவிட்டனித் திறத்த னேயாம்
ஒன்றிய வுலக மெல்லா மொருகுடை நீழற் காக்கும்
பொன்றிக ழலங்கன் மார்ப போற்றிபொய் யன்றி தென்றார்
அரசன் ஆராய்ச்சி மன்றத்தை அடைதல்
உரையமைந் திருப்ப விப்பா லோதுநா ழிகையொன் றோட
முரசமொன் றதிர்த்த தோங்கி யதிர்தலு முகத்தி னாலே
அரசவை விடுத்த வேந்த னகத்தநூ லவரை நோக்கி
வரையுயர் மாடக் கோயின் மந்திர சாலை சேர்ந்தான்
வேறு - அரசன் பேசுதல்
கங்குல்வாய்க் கனவவன் கருதிச் சொற்றதும்
மங்கலப் பெரும்பயன் வகுத்த வண்ணமும்
கொங்கலர் தெரியலான் கூறிக் கொய்ம்மலர்த்
தொங்கலார் நெடுமுடி சுடரத் தூக்கினான்
அமைச்சர்கள் பேசுதல்
சூழுநீ ருலகெலாந் தொழுது தன்னடி
நீழலே நிரந்துகண் படுக்கு நீர்மையான்
ஆழியங் கிழவனா யலரு மென்பது
பாழியந் தோளினாய் பண்டுங் கேட்டுமே
திவிட்டன் சிறந்தவனே என்றல்
நற்றவ முடையனே நம்பி யென்றுபூண்
விற்றவழ் சுடரொளி விளங்கு மேனியக்
கொற்றவன் குறிப்பினை யறிந்து கூறிய
மற்றவர் தொடங்கினார் மந்தி ரத்துளார்
வேறு - திவிட்டன் உருளைப்படை ஏந்துவான் என்றல்
சங்க லேகையுஞ் சக்கர லேகையும்
அங்கை யுள்ளன வையற் காதலால்
சங்க பாணியான் சக்க ராயுதம்
அங்கை யேந்துமென் றறையல் வேண்டுமே
வித்தியாதரர் தொடர்புண்டாகுமானால் நலம் என்றல்
விஞ்சைய ருலகுடை வேந்தன் றன்மகன்
வஞ்சியங் கொடியிடை மயிலஞ் சாயலான்
எஞ்சலின் றியங்கிவந் திழியு மாய்விடில்
அஞ்சிநின் றவ்வுல காட்சி செல்லுமே
பளிங்குமேடை யமைத்துக் காவல் வைப்போம் என்றல்
நாமினி மற்றவன் மொழிந்த நாளினால்
தேமரு சிலாதலந் திருத்தித் தெய்வமாம்
தூமரு மாலையாய் துரும காந்தனைக்
காமரு பொழிலிடைக் காவல் வைத்துமே
அரசன் கட்டளை பிறப்பித்துவிட்டு அந்தப்புரஞ் செல்லுதல்
என்றவர் மொழிந்தபி னிலங்கு பூணினான்
நன்றது பெரிதுமென் றருளி நாடொறும்
சென்றவன் காக்கென மொழிந்து தேங்குழல்
இன்றுணை யவர்கடங் கோயி லெய்தினான்
துருமகாந்தன் பொழிலையடைதல்
எரிபடு விரிசுட ரிலங்கு பூணினான்
திருவடி தொழுதுசெல் துரும காந்தனும்
வரிபடு மதுகர முரல வார்சினைச்
சொரிபடு மதுமலர்ச் சோலை நண்ணினான் 49
குமாரகாலச் சருக்கம் முற்றிற்று
--------------------
நான்காவது
இரதநூபுரச் சருக்கம்
நுதலிப்புகுதல்
புரிசை நீண்மதிற் போதன மாநகர்
அரசர் வார்த்தையவ் வாறது நிற்கவே
விரைசெய் வார்பொழில் விஞ்சையர் சேடிமேல்
உரையை யாமுரைப் பானுற நின்றதே
வெள்ளிமலை
நிலவு வெண்சுடர் பாய்நில மொப்பநீண்
டுலவு நீள்கட றீண்டியு யர்ந்துபோய்
இலகு வின்மணி வானியன் மாடெலாம்
விலக நின்றது விஞ்சையர் குன்றமே
தேவர் உடளொளிக்குச் செவ்வான் ஒளி சிறிது ஒத்தல்
தொக்க வானவர் சூழ்குழ லாரொடும்
ஒக்க வாங்குள ராய்விளை யாடலால்
உக்க சோதிகள் சோலையி னூடெலாம்
செக்கர் வானக முஞ்சிறி தொக்குமே
பொழிலில் தார் மணம்
அவிழுங் காதல ராயர மங்கையர்
பவழ வாயமு தம்பரு கிக்களி
தவழு மென்முலை புல்லத் ததைந்ததார்
கமழு நின்றன கற்பகச் சோலையே
பொழிலிற் குளிர்ச்சி
கிளருஞ் சூழொளிக் கின்னர தேவர்தம்
வளரும் பூண்முலை யாரொடு வைகலால்
துளருஞ் சந்தனச் சோலைக ளூடெலாம்
நளிருந் தெய்வ நறுங்குளிர் நாற்றமே
வாடையின் வருகை
மங்குல் வாடைமந் தார்வன மீதுழாய்ப்
பொங்கு தாதொடு பூமதுக் கொப்பளித்
தங்க ராகம ளாயர மங்கையர்
கொங்கை வாரிகள் மேற்குதி கொள்ளுமே
தழைப் படுக்கை
தேன கத்துறை யுஞ்செழுஞ் சந்தனக்
கான கத்தழை யின்கமழ் சேக்கை மேல்
ஊன கத்தவர் போகமு வந்தரோ
வான கத்தவர் வைகுவர் வைகலே
பாறையில் மகரந்தப்பொடி
மஞ்சு தோய்வரை மைந்தரொ டடிய
அஞ்சி லோதிய ராரள கப்பொடி
பஞ்ச ராகம்ப தித்தப ளிக்கறைத்
துஞ்சு பாறைகண் மேற்று தை வுற்றதே
பாறையில் அடிக்குறி
மாத ரார்நடை கற்கிய வானிழிந்
தாது வண்டுண வூழடி யூன்றிய
பாத ராகம்ப தித்தப ளிக்கறை
காத லார்தம கண்கவர் கின்றவே
அருவிநீரில் மல்லிகை மணம்
ஆகு பொன்னறை மேலரு வித்திரள்
நாக கன்னிய ராடலின் ஞால்கைம்மா
வேக மும்மத வெள்ளம ளாவிய
போக மல்லிகை நாறும்பு னல்களே
சேடி நாட்டின் சிறப்பு
பூக்க ளாவன பொன்மரை பூம்பொழில்
காக்க ளாவன கற்பகச் சோலைகள்
வீக்கு வார்கழல் விஞ்சையர் சேடிமே
லூக்கி யமுரைக் கின்றதிங் கென்கொலோ
இரதநூபுரச் சக்கரவாள நகரம்
வரையின் மேன்மதி கோடுற வைகிய
திருவ நீளொளித் தென்றிசைச் சேடிமே
லிரத நூபுரச் சக்கர வாளமென்
றுரைசெய் பொன்னக ரொன்றுள தென்பவே
வேறு -- வாழையின் மாண்பு
அம்பொன் மாலையார்க ளித்த லத்தெ ழுந்த ரத்தவாய்க்
கொம்பா னார் கொடுத்த முத்த நீர வாய கோழரைப்
பைம்பொன் வாழை செம்பொ னேப ழுத்து வீழ்ந்த சோதியால்
வம்பு பாய்ந்து வந்தொ சிந்து சாறு சோர்வ மானுமே
பாக்கு மரங்கள்
வேய்தி ழன்னி லாவி லங்கு வெள்ளி விம்மு பாளைவாய்ப்
பாய்நி ழற்ப சுங்க திர்ப்ப ரூஉம ணிக்கு லைகுலாய்ச்
சேய்நி ழற்செ ழும்பொ னாற்றி ரண்ட செம்ப ழத்தவாய்ப்
போய்நி ழற்பொ லிந்து வீழ்வ போன்ற பூக ராசியே
மாடங்களும் மரங்களும்
காந்தி நின்ற கற்ப கந்தி ழற்க லந்து கையறப்
பாய்ந்தெ ரிந்த போல்வி ரிந்து பாரி சாத மோர்செய
வாய்ந்தெ ரிந்த பொன் மாட வாயி லாறு கண்கொளப்
போந்தெ ரிந்த போன்ம ரம்பு றம்பொ லிந்தி லங்குமே.
இன்பத்திடையே தென்றல்
மாசில் கண்ணி மைந்த ரோடு மங்கை மார்தி ளைத்தலில்
பூசு சாந்த ழித்தி ழிந்த புள்ளி வேர்பு லர்த்தலால்
வாச முண்ட மாரு தந்தென் வண்டு பாட மாடவாய்
வீச வெள்ளி லோத்தி ரப்பொ தும்பர் பாய்ந்து விம்முமே
பலவகை மரங்கள்
ஆந்து ணர்த்த மால மும்ம சோக பல்ல வங்களும்
தாந்து ணர்த்த சந்த னத்த ழைத்த லைத்த டாயின
மாந்து ணர்ப்பொ தும்பர் வந்து வைக மற்ற தூன்றலால்
தேந்து ணர்ச்சு மந்தொ சிந்த சைந்த தேவ தாரமே
இன்ப துன்பம்
தெய்வ யாறு காந்த ளஞ்சி லம்பு தேங்கொள் பூம்பொழில்
பெளவ முத்த வார்ம ணற்ப றம்பு மெளவன் மண்டபம்
எவ்வ மாடு மின்ன போலி டங்க ளின்ப மாக்கலால்
கவ்வை யாவ தந்த கர்க்கு மார னார்செய் கவ்வையே
சுவலனசடி
மற்ற மாந கர்க்கு வேந்தன் மான யானை மன்னர் கோன்
அற்ற மின்றி நின்ற சீர ழற்பெ யர்ப்பு ணர்ச்சியான்
முற்று முன்ச டிப் பெ யர்சொன் மூன்று லஃகு மான்றெழப்
பெற்று நின்ற பெற்றியான் பீடி யாவர் பேசுவார்
சுவலனசடியின் பெருமை
இங்கண் ஞால மெல்லை சென்றி லங்கு வெண்கு டைந்நிழல்
வெங்கண் யானை வேந்தி றைஞ்ச வென்றி யின்வி ளங்கினான்
கொங்கு கொண்டு வண்ட றைந்து குங்கு மக்கு ழம்பளாய்
அங்க ராக மங்க ணிந்த லர்ந்த வார மார்பினான்
கல்விநலம் முதலியன
விச்சை யாய முற்றினான் விஞ்சையார்க ளஞ்சநின்
றிச்சை யாய வெய்தினா னேந்து செம்பொ னீண்முடிக்
கச்சை யானை மானவேற் கண்ணி லங்கு தாரினான்
வெச்ச னுஞ்சொ லொன்றுமே விடுத்து மெய்ம்மை மேயினான்
அம் மன்னவன்பால் ஒரு குற்றம் - வேறு
வெற்றி வெண்குடை விஞ்சையர் வேந்தவ
னொற்றை யந்தனிக் கோலுல கோம்புநாள்
குற்ற மாயதொன் றுண்டு குணங்களா
லற்ற கீழுயிர் மேலரு ளாமையே
அவ்வரசன் ஆட்சியில் நடுங்கியன
செம்பொ னீண்முடி யான்சொரு வின்றலை
வெம்பு வேலவன் விஞ்சையர் மண்டிலம்
நம்பி யாள்கின்ற நாளி னடுங்கின
கம்ப மாடக் கதலிகை போதுமே
ஆடவர் மேல் வளைந்த வில்
மின்னு வார்ந்தமந் தாரவி ளங்கிணார்
துன்னு தொன்முடி யானொளி சென்றநாள்
மன்னு மாடவர் மேல்வளைந் திட்டன
பொன்னு னார்புரு வச்சிலை போலுமே
உண்ணாத வாய்கள்
வெண்ணி லார்ச்சுட ருந்தனி வெண்குடை
எண்ணி லாப்புக ழானினி தாண்டநா
ளுண்ணி லாப்பல வாயுள வாயின
கண்ண னாரொடு காமக்க லங்களே
அந்நகரில் எவருங் கட்டுண்டு வருந்தார்
மாக்கண் வைய மகிழ்ந்துதன் றாணிழல்
நோக்கி வைக நுனித்தவ னாண்டநாள்
தாக்க ணங்கனை யார் தம தாயரால்
வீக்கப் பட்டன மென்முலை விம்முமே
கடியவையுங் கொடியவையும்
வடிய வாளவ னாளவும் வாய்களில்
கடிய வாயின கள்ளவிழ் தேமல
ரடிய வாய்ப்பயப் பட்டடங் காவலர்க்
கொடிய வாயின கொங்கவிழ் சோலையே
அரசன் மனைவி வாயுவேகை
மாய மாயநின் றான்வரை மார்பிடை
மேய பூமகள் போல விளங்கினாள்
தூய வாமுறு வற்றுவர் வாயவள்
வாயு வேகையென் பாள்வளர் கொம்பனாள்
வாயுவேகையின் மேன்மை
பைம்பொற் பட்ட மணிந்த கொல் யானையான்
அம்பொற் பட்ட நறுங்குழ லார்க்கெலாம்
செம்பொற் பட்டஞ் செறிந்த திருநுதல்
அம்பொற் பட்டுடை யாளணி யாயினான்
இருவரின் இன்பநிலை
கோவை வாய்குழ லங்குளிர் கொம்பனாள்
காவி வாணெடுங் கண்ணியக் காவலற்
காவி யாயணங் காயமிழ் தாயவன்
மேவு நீர்மைய ளாய்விருந் தாயினாள்
அருக்ககீர்த்தி என்னும் மகன் பிறத்தல்
முருக்கு வாயவண் முள்ளெயிற் றேர்நகை
யுருக்க வேந்த னொருங்குறை கின்றநாள்
பெருக்க மாகப் பிறந்தனன் பெய்கழல்
அருக்க கீர்த்தி யென் பானலர் தாரினான்
சுயம்பிரபை என்னும் மகள் பிறத்தல்
நாம நள்லொளி வேனம்பி நங்கையா
யேம நல்லுல கின்னிழிந் தந்நகைத்
தாம மல்லிகை மாலைச் சயம்பவை
காம வல்லியுங் காமுறத் தோன்றினாள்
சுயம்பிரபையின் அழகுச் சிறப்பு
கங்கை நீரன ஞான்ற கதிரிளந்
திங்க ளாற்றெழப் பட்டது செக்கர்வான்
மங்கை மார்பிறப் பும்மட மாதரிந்
நங்கை யாற்றெழப் பாடு நவின்றதே
முகம் , கண், புருவம், இடை ஆகியவை
வண்டு சூழ்மலர் போன்றள கக்கொடி
கொண்டு சூழ்ந்தது குண்டல வாண்முகங்
கெண்டை கண்கிள ரும்புரு வஞ்சிலை
உண்டு கொல்லென வுண்டும ருங்குலே
புருவங்கள் துவளுதல்
காதின் மீதணி கற்பகத் தொத்திணர்
ஊது தேனிற கூன்றியி ருத்தொறும்
போது தேர்முகத் தும்புரு வக்கொடி
நோத லேகொல்நொ சிந்துள வாங்களே
சுயம்பிரபையின் அழகு
விண்ண ணங்க விழித்துவி ளங்கொளி
மண்ண ணங்குற வேவளர் வெய்திய
பெண்ண ணங்கிது தோன்றிய பின்கொலோ
கன்ன ணங்குறு காரிகை கண்டதே
கொங்கு போதரு வான்குமிழ் கின்றன
அங்க ராகம ணிந்ததை யன்றியும்
நங்கை நாகரி கம்பொறை நாண்மதுத்
தங்கு வார்கொடி யிற்றளர் வித்ததே
வளருதல்
மங்கு றோய்வரை மன்னவன் றொல்குடி
நங்கை போற்றியென் றேத்தி நறுங்குழல்
மங்கை மார்பலர் காப்ப வளர்ந்துதன்
கொங்கை யாற்சிறி தேகுழை வெய்தினாள்
பற்கள் தோன்றுதல்
வாம வாணொடு நோக்கிம டங்கனி
தூம வார்குழ லாடுவர் வாயிடை
நாம நள்லொளி முள்ளெயி றுள்ளெழு
காம னாளரும் பிற்கடி கொண்டவே.
சுயம்பிரபை வித்தைகளடைதல்
மஞ்சு தோய்வரை யாரஞ்சு மாண்பினால்
அஞ்சி லோதிநி னைப்பின கத்தவாய்
விஞ்சை தாம்பணி செய்தல்வி ரும்பினன்
எஞ்சி லாவகை யாலிணர் கொண்டவே
சுயம்பிரபையின் பிறப்பால் அரசன் சிறப்படைதல்
நங்கை தோன்றிய பின்னகை வேலினாற்
கங்கண் ஞாமல மர்ந்தடி மைத்தொழில்
தங்க நீண்முடி யாற்றலை நின்றனர்
வெங்கண் யானைவி ளங்கொளி வேந்தரே
வேறு - வயந்ததிலகை மன்னனிடங் கூறுதல்
நங்கையாள் வளர்ந்து காம நறுமுகை துணர வைத்து
மங்கையாம் பிராய மெய்தி வளரிய நின்ற நாளும்
பைங்கண்மால் யானை யாற்குப் பருவம்வந் திறுத்த தென்றாள்
வங்கவாய்ப் பவழச் செவ்வாய் வயந்தமா திலகை யென்பாள்
வேனில் வரவைக் கூறுதல்
தேங்குலா மலங்கன் மாலைச் செறிகழன் மன்னர் மன்ன!
பூங்குலாய் விரிந்த சோலைப் பொழிமதுத் திவலை தூவக்
கோங்கெலாங் கமழ மாட்டாக் குணமிலார் செல்வ மேபோல்
பாங்கெலாஞ் செம்பொன் பூப்ப விரிந்தது பருவ மென்றாள்
வண்டுகள் களிப்பு
வேய்ந்திண ரொசிந்த சோலை வேனிலான் வென்றி யோகைத்
தேந்துணர் கொடுப்ப மூழ்கித் தேறல் வாய் நெகிழ மாந்தித்
தாந்துணர் துணையோ டாடிச் சாறுகொண் டூறு மேரார்
மாந்துண ரொசிய வேறி மதர்த்தன மனிவண் டெல்லாம்
இசைக்குப் பரிசில்
கடிமலர்க் கணையி னான்றன் கழலடி பரவிக் காமர்
படிமலர்த் தும்பி யென்னும் பாண்படை தொடர்ந்து பாடக்
கொடிவளர் மகளிர் பூங்கட் குடைந்துநீர் குடிமி னென்று
வடிமலர் வள்ளத் தேந்த வாய்மடுத் திட்ட வன்றே
தீயிடத்துக் கரியைப்போல் மலரிடத்திலே வண்டுகள் காணப்பெறல்
அஞ்சுடர் முருக்கி னங்கே ழணிமல ரணிந்து கொம்பர்த்
துஞ்சிடை பெறாது தும்பி துவன்றிமேற் றுகைக்குந் தோற்றம்
செஞ்சுட ரிலங்குஞ் செந்தீக் கருஞ்சுடர்க் கந்துள் சிந்தி
மஞ்சுடை மயங்கு கானம் மண்டிய வகையிற் றன்றே
வண்டுகள் மயக்கமும் தெளிவும்
அந்தழை யசோகம் பூத்த வழகுகண் டவாவி னோக்கி
வெந்தழற் பிறங்க லென்று வெருவிய மறுவி றும்பி
கொந்தவிழ்ந் துமிழப் பட்ட குளிர்மதுத் திவலை தூவச்
செந்தழற் பிறங்க லன்மை தெளிந்துசென் றடைந்த வன்றே
மாமரமும் மனந்திரிந்த செல்வரும்
மாஞ்சினை கறித்த துண்டந் துவர்த்தலின் மருங்கு நீண்ட
பூஞ்சினை முருக்கஞ் சோலைப் பூக்கள்வா யார மாந்தித்
தீஞ்சுவை மிழற்று கின்ற சிறுகுயில் செல்வ ரேனும்
தாஞ்சுவை திரிந்த பிஇன்றைச் சார்பவ ரில்லை யன்றே
பொழில்கள் புலம்புதல்
கோவைவண் டூது கின்ற குரவெனுங் குரைகொண் மாதர்
பாவைகொண் டாடு கின்ற பருவத்தே பயின்ற காமன்
ஆவிகொண் டிவளிக் கைவிட் டகலுமோ வென்று தத்தம்
பூவையுங் கிளியுங் கொண்டு புலம்பின பொழில்க ளெல்லாம்
அரசன் மனைவிமக்களுடன் மனோவனம் யென்னும் பூம்பொழிலை யடைதல்
வயந்தமாங் குணர்த்தக் கேட்டே மன்னவன் மக்க ளோடு
முயர்ந்ததன் னுரிமை யோடு முரிமைகாப் பவர்க ளோடும்
கயந்தலைக் களிருந் தேரும் வையமுங் கவின வேறி
நயந்தன னகரி னீங்கி னோவன நண்ணி னானே
வேறு - அரசனைப் பொழில் வரவேற்றல்
கோமான்சென் றணைதலுமே கொங்கணிந்த மலர்தூவித்
தேமாநின் றெதிர்கொள்ளச் சிறுகுயில்போற் றிசைத்தனவே
வாமான்றேர் மன்னற்கு மங்கலஞ்சொன் மகளிரைப்போற்
றூமாண்ட விளங்கொடிதந் தளிர்க்கையாற் றொழுதனவே
மணப்பொடி தூவிச் சாமரைகள் வீசிக் குடை பிடித்தல்
கடிவாச மலர்விண்ட கமழ்தாது கழலவற்கு
வடிவாசப் பொடியாக வனவல்லி சொரிந்தனவே
புடைவாசங் கொள மாலம் பூங்கவரி யெடுத்தெறியக்
குடைமாக மெனவேந்திக் கோங்கம்போ தவிழ்ந்தனவே
புகழ் பாடிப் பூவிறைத்தல்
கொடியாடு நெடுநகரக் கோமான்றன் குணம்பரவி
அடிபாடு மவர்களென வணிவண்டு முரன்றனவே
வடிவாய வேலவற்கு மலர்ச்சின்னஞ் சொரிவனபோல்
கொடுவாய கிளிகோதிக் குளிர்நறும்போ துகுத்தனவே
தென்றல் வீசுதல்
குரவகத்து குடைந்தாடிக் குளிர்நறவங் கொப்பளித்தார்த்
தரவவண்டின் னிசைபாட வருவிநீ ரளைந்துராய்
விரைமலர்ந்த துணர்வீசி விரைஞாற வருதென்றல்
புரவலன்றன் றிருமுடிமேற் போதலர வசைத்ததே
அரசன் பெண்களுக்கு பொழில் வளங்காட்டி விளையாடுதல்
இன்னவா றிளவேனி லெதிர்கொள்ள வெழில்யானை
மன்னவாந் தனிச்செங்கோன் மறவேல்வை யகவேந்தன்
தன்னவா மடவாரைத் தானுவந்து பொழில்காட்டி
மின்னவா மிடைநோவ விளையாட வருளினான்
இளவேனிற் பருவம் உங்கள் செல்வம் போன்றது என்றது
எரியணிந்த விளம்பிண்டி யிணரார்ந்த விடமெல்லாம்
பொரியணிந்த புன்குதிர்ந்து பூநாறுந் துறையெல்லாம்
வரியணி ந்து வண்டூத வளர்கின்ற விளவேனில்
புரியணிந்த குழலீர்நுஞ் செல்வம்போற் பொலிந்ததே
கைகளும் இடைகளும்
காரணிந்த குழலீர்நுங் கைத்தலங்க டகைநோக்கிச்
சீரணிந்த செழும்பிண்டி தளிரீன்று திகழ்ந்தனவே
வாரணிந்த முலையீர்நும் மருங்குறனின் வகைநோக்கி
ஏரணிந்த குருக்கத்தி யிளங்கொடித்தா யீன்றனவே
மாந்தளிர் முதலியவை
மாந்தளிரிங் கிவைநுமது நிறங்கொண்டு வளர்ந்தனவே
ஏந்திளந்தீங் குயிலிவைநுஞ் சொற்கற்பா னிசைந்தனவே
தேந்தளங்கு குழலீர்நுஞ் செவ்வாயி னெழினோக்கித்
தாந்தளிர்மென் முருக்கினிய தாதொடு ததைந்தனவே
கண்மலர்
காவியுஞ் செங் கழுநீருங் கமலமுங் கண் விரிந்துநளி
வாவியு மண் டபமுமெழின் மதனனையு மருட்டுமே
தூதுயருங் கிளியன்ன சொல்லினீர் துணையில்லார்
ஆவியுய்ந் துள்ளாராத லரிதேயிவ் விள வேனில்
வேறு - அரசன் திருக்கோயிலை அடைதல்
இன்னண மிளையவர் மருள வீண்டுசீர்
மன்னவன் வயந்தமாட் டருளி மாமணிக்
கன்னவில் புரிசையுட் கடவுட் காக்கிய
பொன்னவி றிருநகர் பூவொ டெய்தினான்
திருக்கதவம் திறத்தல்
உலமுறை தோளினா னுவகை கூர்ந்தனன்
குலமுறை வழிபடுந் தெய்வக் கோயிலை
வலமுறை வந்தனன் வரலு மாமணிக்
கலமுறை கதிர்நகைக் கபாடம் போழ்ந்ததே
சுடர் விளங்குதல்
பிணிநிலை பெயர்ப்பன பிறவி தீர்ப்பன
மணிநிலை விசும்பொடு வரங்க ளீவன
கணிநிலை யிலாத்திறற் கடவுட் டானகம்
மணிநிலைச் சுடரொளி மலர்ந்து தோன்றவே
அரசன் கடவுளைப் போற்றத் தொடங்குதல்
மெய்ம்மயி ரெறிந்தொளி துளும்பு மேனியன்
கைம்முகிழ் முடித்தடங் கதழச் சேர்த்தினான்
வெம்மைசெய் வினைத்துகள் விளிய வென்றவன்
செம்மலர்த் திருந்தடி சீரி னேத்தினான்
வேறு - வரிப்பாட்டு
எல்லாமாகிய நின்னை உணர்வார் அரியர் என்றல்
அணியாது மொளிதிகழு மாரணங்கு திருமூர்த்தி
கணியாது முழுதுணர்ந்த கடவுளென் றறையுமே
கணியாது முழுதுணர்ந்த கடவுளென் றறைந்தாலும்
அணிஞால முடையாயை யறிவாரோ வரியரே
படைக்கலந் தாங்காத நின்னை அறிபவர் அரியர் என்றல்
பகைநாறு மயிற்படைகள் பயிலாத திருமூர்த்திறை
இகன்மாற வென்றுயர்ந்த விறைவனென் றறையுமே
இகன்மாற வென்றுயர்ந்த விறைவவென் றறைந்தாலும்
அகன்ஞால முடையாயை யறிவாரோ வரியரே
ஒருமருவுமற்ற நின்னை எல்லோரும் உணரார் என்றல்
திருமறுவு வலனணிந்து திகழ்கின்ற திருமூர்த்தி
ஒருமறுவு மிலையென்ப தொழியாம லுணர்த்துமே
ஒருமறுவு மிலையென்ப தொழியாம லுணர்த்துகினும்
அருமறையை விரித்தாயை யறிவாரோ வரியரே
வேறு - அரசன் கோயில் வாயிலையடைதல்
இன்னண மிறைவனை யேத்தி யேந்தறன்
சென்னியுட் சேர்த்திய சேடப் பூவினன்
கன்னவி றிருமனிக் கபாடந் தாழுறீஇ
மின்னிய திருநகர் முற்ற முன்னினான்
சாரணர்கள் கோயிலையடைந்து போற்றுதல்
ஆரணங் கவிரொளி யெரிய வாயிடைச்
சாரணர் விசும்பினின் றிழிந்து தாதைதன்
ஏரணி வளநகர் வலங்கொண் டின்னணம்
சீரணி மணிக்குரல் சிலம்ப வாழ்த்தினார்
வேறு - வரிப்பாட்டு- அச் சாரணர் இறைவனை ஏத்துதல்
விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்
உரைமணந்தி யாம்பரவ வுண்மகிழ்வா யல்லை
யுண்மகிழ்வா யல்லை யெனினு முலகெல்லாங்
கண்மகிழ நின்றாய்கட் காத லொழியோமே
இதுவுமது
முருகணங்கு தாமரையின் மொய்ம்மலர்மேற் சென்று
யருகணங்கி யேத்தி யதுமகிழ்வா யல்லை
யதுமகிழ்வா யல்லை யெனினும் பெயராக்
கதிமகிழ நின்றாய்கட் காத லொழியோமே
இதுவுமது
மணமயங்கு தாமரைமேல் வான்வணங்கச் சென்றாய்
குணமயங்கி யாம்பரவக் கொண்டுவப்பா யல்லை
கொண்டுவப்பா யல்லை யெனினுங் குளிர்ந்துலகம்
கண்டுவப்ப நின்றாய்கட் காத லொழியோமே
வேறு - முனிவர்கள் போற்றுதலைக்கேட்ட உயிர்கள் தீவினை தீர்த்தல்
தீதறு முனிவர்தஞ் செல்வன் சேவடிக்
காதலி னெழுவிய காம ரின்னிசை
யேதமின் றெவ்வள விசைத்த தவ்வள
வோதிய வுயிர்க்கெலா முறுகண் டீர்ந்தவே
சமணமுனிவர்கள் அரசனுக்கு அறவுரை பகர விரும்பல்
இறைவனை யின்னண மேத்தித் தந்தொழில்
குறைவிலா முடிந்தபின் குணக்குன் றாயினார்
மறமலி மன்னனை நோக்கி மற்றவற்
கறமழை பொழிவதோ ரார்வ மெய்தினார்
சமணமுனிவர்கள் அமர்ந்த இடம்
தென்றலுஞ் செழுமதுத் திவலை மாரியும்
என்றுநின் றறாததோ ரிளந்தண் பிண்டியும்
நின்றொளி திகழ்வதோர் நிலாக்கல் வட்டமும்
சென்றவ ரமர்ந்துழித் திகழ்ந்து தோன்றுமே
அரசன் சென்று பணிதல்
வென்றவன் றிருநகர் விளங்கு வேதிகை
மூன்றில்சேர்ந் திருந்தனர் முனிவ ராதலும்
மின்றவழ் விளங்குவேல் வென்றி வேந்தனும்
சென்றவர் திருந்தடி முடியிற் றீட்டினான்
முனிவர்கள் அரசனுக்கு வாழ்த்துரை கூறி அமரச் செய்தல்
பாசிடைப் பரப்புடைப் பழன நாடனை
ஆசிடை கொடுத்தவ ரிருக்க வென்றலும்
தூசுடை மணிக்கலை மகளிர் சூழ்தர
ஏசிடை யிலாதவ னிருக்கை யெய்தினான்
முனிவர்கள் அரசன் நலத்தை வினாவ அரசன் வணங்குதல்
தாளுயர் தாமரைத் திருவுந் தண்கதிர்
நீளெழி லாரமு நிழன்ற கண்குலாம்
தோளிணை செவ்வியோ வென்னச் சூழொளி
வாளவன் மணிமுடி வணங்கி வாழ்த்தினான்
சடியரசன் வணங்கிச் சகநந்தனனை நோக்கிக் கூறுதல்
முனிவருட் பெரியவன் முகத்து நோக்கியொன்
றினிதுள துணர்த்துவ தடிக ளென்றலும்
பனிமலர்த் தாமரைப் பழன நாடனைக்
கனியமற் றின்னணங் கடவுள் கூறினான்
தன் கருத்தையுணர்ந்து முனிவர் கூற அரசன் அவரைப் பணிதல்
துன்னிய வினைப்பகை துணிக்குந் தொன்மைசா
லின்னுரை யமிழ்தெமக் கீமி னென்பதாம்
மன்னநின் மனத்துள தென்ன மாமணிக்
கன்னவில் கடகக்கை கதழக் கூப்பினான்
வேறு - சாரணர் அறிவுரை - பிறவிகள் அளவிடற் கரியன என்றல்
மெய்யறி விலாமை யென்னும் வித்தினிற் பிறந்து வெய்ய
கையறு வினைகள் கைபோய்க் கடுந்துயர் விளைத்த போழ்தில்
மையுற வுழந்து வாடும் வாழுயிர்ப் பிறவி மாலை
நெய்யுற நிழற்றும் வேலோ யினைத்தென நினைக்க லாமோ
நற்சார்பு கிடைக்கும் வரையிலும் உயிர்கள் பிறந்து வருந்தும் என்றல்
சூழ்வினை துரப்பச் சென்று சூழ்வினைப் பயத்தினாலே
வீழ்வினை பிறிது மாக்கி வெய்துற விளிந்து தோன்றி
ஆழ்துய ருழக்கு மந்தோ வளியற்ற வறிவில் சாதித்
தாழ்வினை விலக்குஞ் சார்வு தலைப்படா வளவு மென்றான்
அருகக்கடவுள் திருவடிகளே பிறவிப்பிணியை ஓழிக்கும் என்றல்
காதியங் கிளைகள் சீறுங் காமரு நெறிக்குங் கண்ணாய்ப்
போதியங் கிழவர் தங்க டியானத்துப் புலங்கொண் டேத்தி
யாதியந் தகன்று நின்ற வடிகளே சரணங் கண்டாய்
மாதுய ரிடும்பை தீர்க்குஞ் சரணெனப் படுவ மன்னா
இரத்தினத் திரயம்
மெய்ப்பொரு டெரிதல் மற்றப் பொருண்மிசை விரிந்த ஞான
மப்பொருள் வழாத நூலி னருந்தகை யொழுக்கந் தாங்கி
யிப்பொருள் ளிவைகள் கண்டா யிறைவனால் விரிக்கப் பட்ட
கைப்பொரு ளாகக் கொண்டு கடைப்பிடி கனபொற் றாரோய்
இரத்தினத் திரயத்தின் பயன் வீடுபேறு என்றல்
உற்றடு பிணியு மூப்பு மூழுறு துயறு நீக்கிச்
சுற்றிநின் றுலக மேத்துஞ் சுடரொளி யுருவந் தாங்கிப்
பெற்றதோர் வரம்பி லின்பம் பிறழ்விலா நிலைமை கண்டாய்
மற்ரவை நிறைந்த மாந்தர் பெறப்படு நிலைமை மன்னா
அறிவுரை கேட்டோ ர் மகிழ்ச்சி யடைதல்
அருந்துய ரறுக்கு மாண்பி னாரமிர் தவைகண் மூன்றும்
திருந்தநன் குரைப்பக் கேட்டே தீவினை யிருள்கள் போழும்
விரிந்தநல் லறிவின் சோதி விளங்கலிற் சனங்க ளெல்லாம்
பரிந்தகங் கழுமத் தேறிப் பாவம் பரிந் தவர்க ளொத்தார்
அரசன் மெய்யறிவடைதலும் உறவினர் நோன்பு மேற்கொள்ளலும்
மன்னிய முனிவன் வாயுண் மணிகொழித் தனைய வாகிப்
பன்னிய பவங்க டீர்க்கும் பயங்கெழு மொழிக டம்மால்
கன்னவில் கடகத் தோளான் காட்சியங் கதிர்ப்புச் சென்றான்
பின்னவ னுரிமை தானும் பெருவத மருவிற் றன்றே
வேறு - சுயம்பிரபை நோன்பு மேற்கொள்ள எண்ணுதல்
மன்னவன் மடமகள் வணங்கி மற்றவ
ரின்னுரை யமுதமுண் டெழுந்த சோதியள்
பன்னியொர் நோன்பு மேற் கொண்டு பாங்கினால்
பின்னது முடிப்பதோர் பெருமை யெண்ணினாள்
அரசன் முனிவரை வணங்கிக் கோயிலை வலஞ்செய்து செல்லுதல்
முனிவரர் திருந்தடி வணங்கி மூசுதேன்
பனிமலர் விரவிய படலை மார்பினான்
கனிவளர் பொழிலிடைக் கடவு ணன்னகர்
இனிதினின் வலமுறை யெய்தி யேகினான்
அரசன் பொழிலில் விளையாடி நகரத்தை அடைதல்
வாமமே கலையவர் மனத்தில் வார்பொழில்
காமவே ளிடங்கொள வருளிக் கண்ணொளிர்
தாமவே லிளையவர் காப்பத் தாழ்கதிர்
நாமவே னரபதி நகர நண்ணினான்
சமண முனிவர்கள் கடவுளை வணங்கி விண்வழியாகச் செல்லுதல்
அகநக ரரைசரோ டரைசன் சென்றபின்
சகதபி நந்தன ரென்னுஞ் சாரணர்
மிகநவின் றிறைவனை வணங்கி விண்ணிடைப்
பகனகு கடரொளி படர வேகினார்
சுயம்பிரபை நோன்பினால் மேம்படுதல்
அழற்கொடி யெறித்தொறுஞ் சுடரு மாடக
நிழற்கொடி யதுவென நிறைந்த காரிகைக்
குழற்கொடி யனையவள் கொண்ட நோன்பினால்
எழிற்கொடி சுடர்வதோ ரியற்கை யெய்தினாள்
மனநலத்தின் மாட்சி
முகைத்தவார் முல்லையை முருக்கு மெல்லியல்
நகைத்தவார் குழலவ டன்மை யாயினும்
வகுத்தவா றுயர்ந்தன நோன்பு மாசிலா
வகத்துமாண் புடையவர்க் கரிய தில்லையே
நோன்பினால் சுயம்பிரபை உடலொளி பெறுதல்
இந்திர வுலகமும் வணக்கு மீடுடைத்
தந்திர நோன்பொளி தவழத் தையலாள்
மந்திர நறுநெய்யால் வளர்ந்து மாசிலா
வந்தர வழற்கொடி யனைய ளாயினாள்
நோன்பு முடித்த சுயம்பிரபை அருகக்கடவுளுக்குத் திருவிழாச் செய்தல்
தாங்கருஞ் சுடொரொளி சக்கர வாளமென்
றோங்கிரும் பெயர்கொணோன் புயர நோற்றபின்
றீங்கரும் பனையசொற் சிறுமி தெய்வதக்
காங்கொரு பெருஞ்சிறப் பயர்தல் மேயினாள்
சுயம்பிரபை கடவுளைப் போற்றத் தொடங்கல்
தண்ணவிர் நிலாச்சுடர் தவழு மவ்வரைக்
கண்ணவிர் சென்னிமேற் கடவுட் டானமஃ
தண்ணலங் கோமக ளருச்சித் தாயிடை
விண்ணவ ருலகமூம் வியப்ப வேத்தினாள்
வேறு - வரிப்பாட்டு - சுயம்பிரபை கடவுளைப் போற்றுதல்
ஆதியங் கடவுளை யருமறை பயந்தனை
போதியங் கிழவனை பூமிசை யொதுங்கினை
போதியங் கிழவனை யொதுங்கிய
சேதியஞ் செல்வநின் றிருவடி வணங்கினம்
இதுவுமது -
காமனைக் கடிந்தனை காலனைக் காய்ந்தனை
தேமலர் மாரியை திருமறு மார்பனை
தேமலர் மாரியை திருமறு மார்பனை
மாமலர் வண்ணநின் மலரடி வணங்கினம்
ஆரருள் பயந்தனை யாழ்துய ரவித்தனை
யோரரு ளாழியை யுலகுடை யொருவனை
யோரரு ளாழியை யுலகுடை யொருவனை
சீரருண் மொழியநின் றிருவடி தொழுதனம்
வேறு - சுயம்பிரபை வழிபாட்டு மலர்களைச் சூடிக்கொள்ளுதல்
கருவடி நெடுநல்வேற் கண்ணி யின்னணம்
வெருவுடை வினைப்பகை விலக்கும் வீறுசால்
மருவுடை மொழிகளாற் பரவி வாமன
திருவடிச் சேடமுந் திகழச் சூடினாள்
சுயம்பிரபை தன் தந்தையின் அரண்மனையை அடைதல்
வானுயர் கடவுளை வயங்கு சேவடித்
தேனுயர் திருமலர்ச் சேடங் கொண்டபின்
மானுயர் நோக்கியர் பரவ மங்கைதன்
கோனுயர் வளநகர்க் கோயின் முன்னினாள்
சுயம்பிரபை தன் தந்தைக்கு வழி பாட்டுப் பொருள் கொடுத்தல்
வெஞ்சுடர் வேலவர்க் குணர்த்தி மெல்லவே
பஞ்சுடைச் சேவடி பரவச் சென்றுகன்
னஞ்சுடர் மெல்விரல் சிவப்ப வாழியின்
செஞ்சுட ரங்கையிற் சேட நீட்டினான்
அரசன் தன் மகளை உச்சிமோந்து சில மொழிகள் சொல்லத் தொடங்குதல்
அல்லியி னரவண் டிரிய வாய்மலர்
வல்லியின் வணங்கிய மகளை மன்னவன்
முல்லையஞ் சிகழிகை முச்சி மோந்திவை
சொல்லிய தொடங்கினான் சுடரும் வேலினான்
ஐந்து பாடல்கள் அரசன் தன் மகளைப் புகழ்ந்துரைத்தல்
தேந்துணர் பலவுள வேனுஞ் செங்குழை
மாந்துணர் வயந்தனை மலரத் தோன்றுமே
பூந்துண ரோதிநீ பிறந்து பொன்செய்தார்
வேந்துவந் திறைஞ்சயான் விளங்கு கின்றதே
கங்கைநீர் பாய்ந்துழிக் கடலுந் தீர்த்தமா
மங்கணீ ருலகெலா மறியப் பட்டது
நங்கைநீ பிறந்ததற் பின்னை நங்குடி
வங்கநீர் வரைப்பெலாம் வணக்கப் பட்டதே
போதுலாந் தாமரை பூத்த பொய்கையைத்
தீதுலாங் கீழுயிர் தீண்டச் செல்லல
மாதுலா மடந்தைநீ பிறந்திம் மண்டில
மேதிலா ரிடைதிற மிகந்து நின்றதே
வானகத் திளம்பிறை வளர வையகம்
ஈனகத் திருள்கெட வின்ப மெய்துமே
நானகக் குழலிநீ வளர நங்குடி
தானகத் திருள்கெடத் தயங்கு கின்றதே
கண்பகர் மல்லிகை கமழக் காதலால்
சண்பகத் தனிவனந் தும்பி சாருநீ
பெண்பகர் திருவனாய் பிறந்து நங்குடி
மண்பக ருலகெலா மகிழச் செல்லுமே
அரசன் தன் மகளை உண்டற்கு அனுப்புதல்
கொவ்வையந் துவரிதழ்க் கோல வாயவட்
கிவ்வகை யணியன கூறி யீண்டுநும்
மவ்வைதன் கோயில்புக் கடிசி லுண்கென
மவ்வலங் குழலியை மன்ன னேயினான்
கட்டளையும் மகிழ்ச்சியும்
பல்கலம் பெரியன வணியிற் பாவைத
னல்குனோ மெனச்சிலம் பணிந்து மெல்லவே
செல்கவென் றிருமக ளென்று செம்பொனான்
மல்கிய முடியினான் மகிழ்ந்து நோக்கினான்
அரசன் தன் மகளைப் பற்றி மனத்தில் எண்ணுதல்
மண்ணருங் கலமெலாம் வலிதின் வவ்வினும்
விண்ணருங் கலமெலாம் விதியி னெய்தினும்
பெண்ணருங் கலமிது பெறுதன் மானுடர்க்
கெண்ணருந் தகைத்தென விறைவ னெண்ணினான்
தன் மகளுக்குரிய கணவன் யாவன் என்று எண்ணுதல்
மையணி வரையின்வாழ் மன்னர் தொல்குடிக்
கையணி நெடுநல்வேற் காளை மார்களுள்
நெய்யணி குழலிவட் குரிய நீர்மையான்
மெய்யணி பொறியவ னெவன்கொல் வீரனே
மங்கையர் இயற்கை
பொலங்கலக் குரியவாம் பொருவின் மாமணி
யிலங்கல மென்மை வீயஞ் சேர்த்தினும்
குலங்கலந் தில்வழிக் குரவர் கூட்டினும்
மலங்கலங் குழலிய ரன்றென் கிற்பவோ
தாய் தந்தையர் நோக்கப்படி நடப்பர் என்றல்
அந்தைதா முறுவது கருதி யாருயிர்த்
தந்தைதா யென்றிவர் கொடுப்பிற் றையலார்
சிந்தைதா யிலாதவர் திறத்துஞ் செவ்வனே
நொந்துதாம் பிறிதுரை நொடிய வல்லரோ
காமமுங் காதலும்
காதலா லறிவது காமங் காதலே
யேதிலா ருணர்வினா லெண்ண லாவதன்
றாதலான் மாதரா டிறத்தி னாணைநூ
லோதினா ருரைவழி யொட்டற் பாலதே
அரசர் வாழ்க்கையும் அமைச்சர்களும்
தன்னுணர் பொறிபிறர் தங்கண் கூட்டென
வின்னண மிருவகைத் திறைவர் வாழ்க்கையே
தன்னுணர் பொறிப்புலந் தன்னி னாம்பிறி
தின்னணா மியற்றுகென் றமைச்ச ரேவுவார்
அரசர்கள் அமைச்சராற் சிறப்படைவார்கள் என்றல்
தண்ணிய தடத்தவே யெனினுந் தாமரை
விண்ணியல் கதிரினால் விரியும் வேந்தரும்
புண்ணியப் பொதும்பரே புரிந்து வைகினும்
கண்ணிய புலவரா லலர்தல் காண்டுமே
அமைச்சர் அறிவுரையால் அரசியல் இனிது நடைபெறும் என்றல்
மாமலர் நெடுங்கடன் மதலை மாசிலாக்
காலமைந் தொழுகுமேற் கரையுங் காணுமே
நூலவர் நுழைவொடு நுழைந்து செல்லுமேல்
மேலவ ரொழுக்கமும் வேலை காணுமே
உலகம் பலவிதம்
ஒன்றுநன் றென உணர்ந் தொருவன் கொள்ளுமே
லன்றதென் றொருவனுக் கறிவு தோன்றுமே
நின்றதொன் றுண்டினி நீதி நூலினோ
டொன்றிநின் றவருரை யுலக மொட்டுமே
ஆயிரங்கண்ணனுக்கும் ஆயிரம் அமைச்சர்கள் உண்டென எண்ணல்
அந்தண ரொழுக்கமு மரைசர் வாழ்க்கையும்
மந்திர மில்லையேன் மலரு மாண்பில
இந்திர னிறைமையு மீரைஞ் ஞாற்றுவர்
தந்திரக் கிழவர்க டாங்கச் செல்லுமே
அமைச்சர்களை அழைக்குமாறு கட்டளையிடுதல்
என்றுதன் மனத்தினா னெண்ணி யீண்டுசீர்
நின்றநூற் கிழமையி னீதி மாக்களை
யொன்றிநீர் தருகென வுழைக்குற் றேவலார்
சென்றவர்க் கருளிது வென்று செப்பினார் 120
இரதநூபுரச் சருக்கம் முற்றிற்று
---------------
ஐந்தாவது
மந்திரசாலைச் சருக்கம்
அமைச்சர்கள் அரசனிடத்திற்கு வருதல்
செஞ்சினைத் தெரியலா னருளிச் செய்தது
தஞ்செவிக் கிசைத்தலுந் தணப்பில் கேள்வியா
ரஞ்சினர் நடுங்கின ராகி யாயிடை
நஞ்சிவர் வேலினான் பாத நண்ணினார்
மந்திரசாலையின் அமைப்பு
உள்ளுணின் றொலிபுறப் படாத தொண் சிறைப்
புள்ளுமல் லாதவும் புகாத நீரது
வெள்ளிவெண் விளிம்பினால் விளங்கு வேதிகை
வள்ளறன் மந்திர சாலை வண்ணமே
அரசன் பேசத் தொடங்குதல்
ஆங்கமர்ந் தமைச்சரோ டரைசர் கோமகன்
பூங்கமழ் மண்டபம் பொலியப் புக்கபின்
வீங்கொளி மணிக்குழை மிளிர்ந்து வில்லிட
வீங்கிவை மொழிந்தன னிறைவ னென்பவே
வேறு - மன்னன் அமைச்சர் மாண்பு கூறுதல்
மண்ணியல் வளாகங் காக்கு மன்னவர் வணக்க லாகப்
புண்ணிய நீர ரேனும் புலவராற் புகலப் பட்ட
நுண்ணிய நூலி னன்றி நுழை பொரு ளுணர்த்த றேற்றா
ரெண்ணிய துணிந்து செய்யுஞ் சூழ்ச்சியு மில்லை யன்றே
அமைச்சர் மாண்பு
வால்வளை பரவி மேயும் வளர்திரை வளாக மெல்லாம்
கோல்வளை வுறாமற் காக்குங் கொற்றவ னெடிய னேனும்
மேல்விளை பழியும் வெய்ய வினைகளும் விலக்கி நின்றார்
நூல்விளை புலவ ரன்றே நுணங்குபோ தணங்கு தாரீர்
அரசனுக்கு அனைத்தும் ஆகுபவர் அமைச்சர்களே
சுற்றுநின் றெரியுஞ் செம்பொன் மணிமுடி சுடரச் சூட்டி
வெற்றிவெண் குடையி னீழல் வேந்தன்வேற் றிருக்கு மேனு
மற்றவன் மனமுங் கண்ணும் வாழ்க்கையும் வலியுஞ் சால்பு
மற்றமி லரசுங் கோலு மாபவ ரமைச்ச ரன்றே
அமைச்சர்கள் துணை கொண்டு அரசன் அரசியற் சுமையைத் தாங்குவான்
வீங்குநீர் ருலகங் காக்கும் விழுநுக மொருவ னாலே
தாங்கலாந் தன்மைத் தன்று தளையவிழ் தயங்கு தாரீர்
பாங்கலார் பணியச் சூழு நூலவர் பாக மாகப்
பூங்குலா மலங்கன் மாலைப் புரவலன் பொறுக்கு மன்றே
அரசன் முகமன் பொழிதல்
அற்றமின் றுலகங் காக்கு மருந்தொழில் புரிந்து நின்றான்
கற்றவர் மொழிந்த வாறு கழிப்பது கடன தாகு
மற்றவற் குறுதி நோக்கி வருபழி வழிகள் தூரச்
செற்றவர்ச் செருக்குஞ் சூழ்ச்சி தெருண்டவர் கடவ வன்றே
அரசனும் அமைச்சர்களும்
செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து சொன்னால்
அறிந்தவை யமர்ந்து செய்யு மமைதியா னரச னாவான்
செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து கூறி
அறிந்தவை யியற்று கிற்கு மமைதியா ரமைச்ச ராவார்
தோள்வலியும் சூழ்ச்சியும்
வாள்வலித் தடக்கை மன்னர் வையகம் வணக்கும் வாயில்
தோள்வலி சூழ்ச்சி யென்றாங் கிருவகைத் தொகையிற் றாகும்
ஆள்வலித் தானை யார்கட் காதிய தழகி தேனும்
கோள்வலிச் சீய மொப்பீர் சூழ்ச்சியே குணம தென்றான்
சூழ்ச்சியுட் சிறந்தோர் மாட்சிபெறுவர்
ஊழ்வர வன்ன தேனு மொருவகைக் கரும மெல்லாம்
சூழ்பவர் சூழ்ந்து சூழுஞ் சூழ்ச்சியுட் டோ ன்று மன்றே
யாழ்பகர்ந் தினிய தீஞ்சொ லமிர்தனா ரேனுஞ் சூழ்ச்சி
வாழ்பவர் வல்ல ராயின் மன்னராய் மலர்ப வன்றே
சூழ்சியே அரசன் ஆற்றல்
ஆற்றன்மூன் றோதப்பட்ட வரசர்கட் கவற்றின் மிக்க
ஆற்றறான் சூழ்ச்சி யென்ப தாதலா லதனை யாயும்
ஆற்றலா ரமைச்ச ராக வமைச்சரோ டமர்ந்து செல்லும்
ஆற்றலா னரச னாகி னரியதொன் றில்லை யன்றே
இன்ப வாழ்க்கையிற் படிந்த அரசர் துன்படைவர்
வடந்திகழ் முலையி னார்தங் காமத்தின் மதர்த்த மன்னர்க்
கடைந்தவர் மாண்பு மாங்கொன் றில்லையே லரசர் வாழ்க்கை
கடந்தவழ் கடாத்த வேழங் களித்தபின் கல்வி மாணா
மடந்தவ ழொருவன் மேல்கொண் டன்னதோர் வகையிற் றாமே
சூழ்ச்சி தவறினால் வீழ்ச்சிக் கிடமுண்டாம்
சுந்தரச் சுரும்புண் கண்ணிச் சூழ்கழ லரசர் வாழ்க்கை
தந்திர மறிந்து சூழ்வான் சூழ்ச்சிசார்ந் தமையல் வேண்டும்
மந்திரம் வழுவு மாயின் வாளெயிற் றரவு காய்ந்து
தந்திரந் தப்பி னாற்போற் றன்னையே தபுக்கு மன்றே
அமைச்சர் அறவுரை வழியாவர் அரசர்
எடுத்தன னிலங்கு சாதி யெழிலொடு திகழு மேனு
மடுத்தன நிறத்த தாகு மணிகிளர் பளிங்கு போல
வடுத்தவ மலர்ந்து நுண்ணூன் மதியவர் வினையின் மாட்சி
கொடுத்தவா நிலைமை மன்னன் குணங்களாக் கொள்ப வன்றே
உங்களால்தான் நான் சிறந்து விளங்குகிறேன் என்றல்
மன்னுநீர் வளாக மெல்லாம் வணக்குதல் வல்லீ ராய
பன்னுநூற் புலவீர் முன்னர்ப் பலபகர்ந் துரைப்ப தென்னை
யென்னைநீ ரிறைவ னாக்கி யிராப்பக லியற்ற வன்றே
யின்னநீ ரின்ப வெள்ள மியைந்தியா னுயர்ந்த தென்றான்
அரசன் சுயம்பிரபைக்கு மணமகன் யாவன் என்று கேட்டல்
கொங்குடை வயிரக் குன்றின் கொழுஞ்சுடர் விளக்கிட் டாங்கு
நங்குடி விளங்க வந்த நங்கைதன் னலத்திற் கொத்தான்
தங்குடி விளங்க நின்ற தன்மையா னெவன்கொ லென்றான்
சங்குடைந் தனைய தாழைத் தடமலர்த் தொடைய லானே
அமச்சர்கள் பதிலுரைத்தல்
இறையிவை மொழியக் கேட்டே யிருந்தவ ரிறைஞ்சி யேத்தி
யறைகழ லரவத் தானை யணிமுடி யரச ரேறே
நிறைபுக ழுலகங் காத்து நிலாகநின் னிறைமை யென்று
முறைமுறை மொழிய லுற்று முன்னிய முகத்த ரானார்
சச்சுதன் என்னும் அமைச்சன் பேசத் தொடங்குதல்
பணிந்துமற் றேனை யார்பாங் கிருப்பநூல் பலவு நோக்கித்
துணிந்துதன் புலைமை தோன்றச் சச்சுதன் சொல்ல லுற்றான்
இணந்துநின் றுலவுந் தும்பி யிடையிடை யிருண்டு தோன்ற
அணிந்துநின் றலரும் பைந்தா ரணிமணி முடியி னாற்கே
சூரியன் தோன்றச் சூரியகாந்தக்கல் தீயை வெளிப்படுத்தும்
பொற்கதிர் பரப்பி வந்து பொங்கிருள் புதைய நூறுந்
தொழிற்கதிர்க் கடவு டோ ன்றச் சூரிய காந்தமென்னும்
எழிற்கதிர்ப் பிறங்கல் வட்ட மெரியுமிழ்ந் திடுவ தன்றே
அழற்சதி ரிலங்குஞ் செவ்வே லதிர்கழ லரசர் கோவே
அரசர் பெருமையால் அமைச்சர் சிறப்புறுவர்
கோணைநூற் றடங்க மாட்டக் குணமிலார் குடர்க ணைய
ஆணைநூற் றடங்கக் காக்கு மரசர்த மருளி னாலே
பேணுநூற் புலவர் மாண்பும் பெருகுவ துருவத் தார்மேல்
பூணுநூற் பொலிந்து தோன்றும் பொன்வரை மார்ப வென்றான்
திங்கள் தோன்றினால் சந்திரகாந்தக்கல் நீரினை வெளிப்படுத்தும்
சூழ்கதிர் தொழுதி மாலைச் சுடர்பிறைக் கடவு டோ ன்றித்
நாழ்கதிர் சொரிந்த போழ்திற் சந்திர காந்த மென்னும்
வீழ்கதிர் விளங்கு வட்டம் வெள்ளநீர் விரியு மன்றே
போழ்கதிர் பொழிந்து பொங்கிப் புலானிணம் பொழியும் வேலோய்
நூலோர் சூழ்ச்சி அரசர் பெருமையால் சிறக்கும்
கண்ணளித் துலக மெல்லாங் கவின்பெறக் காவல் பூண்டு
தண்ணளித் தயங்கு செங்கோற் றாரவர் தவத்தி னாலே
மண்ணளித் தினிய நூலோர் மந்திர மலரு மென்றான்
விண்ணளித் திலங்கும் வெள்ளி விரிந்தவெண் குடையி னாற்கே
பொறுமையின் பெருமை
கண்ணிய கடாத்த வேழங் கவுளினா னுரிஞப் பட்டுந்
தண்ணிய தன்மை நீங்காச் சந்தனச் சாதி போலப்
புண்ணிய கிழவர் கீழோர் பிழைத்தன பொறுப்ப வாயின்
மண்ணியல் வளாக மெல்லாம் வழிநின்று வணங்கு மன்றே
அரசன் கொடியவனாயின் உலகம் துன்பத்தை யடையும்
நிறந்தலை மயங்க வெம்பி நெடுங்கடல் சுடுவ தாயின்
இறந்தலை மயங்கு நீர்வா ழுயிர்க்கிட ரெல்லை யுண்டோ ?
மறந்தலை மயங்கு செவ்வேன் மன்னவன் வெய்ய னாயின்
அறந்தலை மயங்கி வைய மரும்பட ருழக்கு மன்றே
இதுவுமது
மண்குளிர் கொள்ளக் காக்கு மரபொழிந் தரசர் தங்கள்
விண்குளிர் கொள்ள வோங்கும் வெண்குடை வெதும்பு மாயிற்
கண்குளிர் கொள்ளப் பூக்குங் கடிகயத் தடமுங் காவும்
தண்குளிர் கொள்ளு மேனுத் தாமிக வெதும்பு மன்றே
அரசன் தீயவனாயின் மக்கட்குப் புகலிடமில்லை
தீயினர் படர்ந்து வேந்தன் செறுவதே புரியு மாயிற்
போயினம் படர்ந்து வாழும் புகலிட மின்மை யாலே
வேயினம் படர்ந்த சாரல் வேங்கையை வெருவிப் புல்வாய்
மாயினம் படர்ந்த தெல்லாம் வையகம் படரு மன்றே
அறவழி நிற்கும் அரசன் அடிநிழலே அருந்துணை
மறந்தலை மயங்கி வையத் தொருவரை யொருவர் வாட்ட
விரந்தலை யுறாமை நோக்கி யின்னுயிர் போலக் காக்கும்
அறந்தலை நின்ற வேந்த ரடிநிழ லன்றி யார்க்கும்
சிறந்ததொன் றில்லை கண்டாய் திருமணி திகழும் பூணோய்
ஒருமையாற் றுன்ப மெய்து மொருவனை யும்மை யாலே
திருமையான் முயங்குஞ் செல்வச் செருக்கொடு திளைப்ப நோக்கி
இருமையு மொருமை யாலே யியற்றலி னிறைவன் போலப்
பெருமையை யுடைய தெய்வம் பிறிதினி யில்லை யன்றே
உலகத்திற்குக் கண்கள் மூன்று
கண்ணெனப் படுவ மூன்று காவலன் கல்வி காமர்
விண்ணினைச் சுழல வோடும் வெய்யவ னென்னும் பேரார்
எண்ணினுட் டலைக்கண் வைத்த கண்ணஃ தில்லை யாயின்
மண்ணினுக் கிருளை நீக்கும் வகைபிறி தில்லை மன்னா
இவ்வுலகில் துன்பமின்றேல் எவரும் விண்ணுலக வாழ்வை நாடார்
குடிமிசை வெய்ய கோலுங் கூற்றமும் பிணியு நீர்சூழ்
படிமிசை யில்லை யாயின் வானுளயார் பயிறு மென்பார்
முடிமிசைத் திவள வேந்தர் முறைமுறை பணிய விம்மி
அடைமிசை நரலுஞ் செம்பொ னதிர்கழ லரச ரேறே
அரசர்களைப்போல மக்கள் இலர்
தண்சுடர் கடவுள் போலத் தாரகைக் குழாங்க டாமே
விண்சுடர் விளக்க மாக விளங்கல வேந்தர் போல
மண்சுடர் வரைப்பின் மிக்க மக்களு மில்லை கண்டாய்
கண்சுடர் கனலச் சீறுங் கமழ்கடாக் களிற்று வேந்தே
அருந்தவமும் அரசாட்சியும் ஒன்று என்றல்
அருந்தவ மரைச பார மிரண்டுமே யரிய தம்மை
வருந்தியு முயிரை யோம்பி மனத்தினை வணக்கல் வேண்டும்
திருந்திய விரண்டுந் தத்தஞ் செய்கையிர் றிரியு மாயிற்
பெருந்துயர் விளைக்கு மன்றே பிறங்குதார் நிறங்கொள் வேலோய்
விண்ணுலக ஆட்சிபெற இருவழிகள்
அந்தரந் திரியுஞ் செய்கை யமரர்தம் மரசு வேண்டி
இந்திர வுலகங் காணு நெறியவை யாவை யென்னின்
மந்திரம் வழாத வாய்மை மாதவம் முயற லன்றேல்
தந்திரந் தழுவிச் செங்கோ றளர்விலன் றரித்த லென்றான்
அருந்தவமும் அரசாட்சியும் ஆற்றல் அரிது
மரந்தலை யிணங்கி வான்றோய் மணிவளர் வயிரக் குன்றம்
உரந்தனக் குயர வேந்தி யுய்த்திடு மொருவற் கேனும்
அருந்தவ மரசை பார மவைபொறை யரிது கண்டாய்
இரந்தவர்க் கீட்டப் பட்ட விருநிதிக் கிழவ வென்றான்
சூழ்ச்சியின் மாண்பு
உரிதினி னொருவன் செய்த வூழ்வினை யுதயஞ் செய்து
விரிதலி னதன துண்மை விளங்கினாற் போல வேந்தர்
கருதிய கருமச் சூழ்ச்சிப் பயத்தினாற் கருதும் வண்ணம்
எரிதவழ்ந் திலங்கும் வேலோய் என்ணுவ தென்ண மென்றான்
இதுவுமது
பஞ்சிநன் றூட்டப் பட்ட மாதுளம் பருவ வித்து
மஞ்சிநின் றகன்ற சாகை மலரிடை வடிவு காட்டும்
அஞ்சிநின் றனலும் வேலோய் சூழ்ச்சியு மன்ன தேயால்
வெஞ்சொலொன் றுரைக்க மாட்டா விடுசுடர் விளங்கு பூணோய்
செய்திகூறத் தொடங்கும் சச்சுதன் முன்னுரைக்கு அடங்கக் கூறல்
கொற்றவேன் மன்னர்க் கோதுங் குணமெலாங் குழுமி வந்து
முற்றுநின் றுருவு கொண்ட மூர்த்திநின் முன்னர் யாங்கள்
இற்றென வுரைக்கு நீதி யோதுநூ லெல்லை காணக்
கற்றவர் முன்னை யேனோர் கதையொத்துக் காட்டு மன்றே
செவ்வி கேட்டல்
தேன்மகிழ் தெரிய லாய்நின் றிருக்குலந் தெளிப்ப வந்த
பான்மகிழ்ந் தனைய தீஞ்சொற் பவழவாய்ப் பரவை யல்கும்
வான்மகிழ் மணங்கொண் மேனி யணங்கினுக் குரிய கோனை
யான்மகிழ் துணர்த்தக் கேட்பி னிடைசிறி தருளு கென்றான்
வேறு - விஞ்சையர் சேடி வண்ணனை
மஞ்சிவர் மால்வரைச் சென்னி வடமலை
விஞ்சையர் வாழும் விழாவணி நல்லுல
கஞ்சியல் வில்லோ யதுமற் றமரர்கள்
துஞ்சிய வில்லாத் துறக்க மனைத்தே
அது விண்ணுலகத்தைப் போன்றது
மண்ணியல் வாழ்நர்க்கும் வானுல கொப்பது
புண்ணிய மில்லார் புகுதற் கரியது
கண்ணிய கற்பகக் கானங் கலந்தது
வின்ணிய லின்பம் விரவிற் றினிதே
எல்லா இன்பப் பொருள்களும் ஒருங்கமையப்பெற்றது
எல்லா விருதுவு மீனும் பொழிலின்
தெல்லா நிதியு மியன்ற விடத்தின
தெல்லா வமரர் கணமு மிராப்பகல்
எல்லாப் புலமு நுகர்தற் கினிதே
பொன்னிதழ்த் தாமரை பொய்கையுட் பூப்பன
பொன்னிதழ்த் தாமம் பொழில்வா யவிழ்ப்பன
பொன்னிதழ்த் தாது மணிநிலம் போர்ப்பன
பொன்னிதழ்த் தாது துகளாய்ப் பொலிவன
அந்நாட்டுப் பொழில் முதலியன
கானங்க ளாவன கற்பகங் காமுகர்
தானங்க ளாவன சந்தனத் தாழ்பொழில்
நானங்க ளாவன நாவி நருவிரை
வானங்க ளாம்வகை மற்றுமொன் றுண்டோ ?
மணிக்கற் படாதன மண்டபம் செம்பொன்
குணிக்கப் படாதன குளிர்புனல் நீத்தம்
கணிக்கப் படாத கதிர்மணிக் குன்றம்
பிணிக்கப் படாதவர் யாரவை பெற்றால்
வடசேடியில் அறுபது பெரிய நகரங்கள்
ஆங்கதன் மேல வறுபது மாநகர்
தீங்கதிர் மண்டிலஞ் சேர்ந்து திளைப்பன
நீங்கரு மாநகர் தம்மு ணிலாவிரிந்
தோங்கிய சூளா மணியி னொளிர்வது
இரத்தின பல்லவம்
மரத்தினு மண்ணினு மாடங்கள் யாவும்
திருத்தின வில்லது செம்பொ னுலகில்
புரத்தினை வெல்வது பொன்னகர் பூந்தண்
ணிரத்தின பல்லவ மென்பதொன் றுண்டே
அந்நகர் விண்ணுலகம் மண்ணுலகில் வந்தாற் போன்றது
வளைத்தகை மங்கையர் மைந்தரொ டாடி
முளைத்தெழு காம முடிவில ராகித்
திளைத்தலி னின்னகர் தெய்வ வுலகம்
களித்திழிந் தன்னதோர் கவ்வை யுடைத்தே
அந்நகரத்தில் வாழ்வோர் வருந்திச் செய்யும் தொழில்
ஆடவர் கொம்பனை யாரிளை யாரவர்
பாடக மெல்லோர் பரவிய சீறடி
தோடலர் தொங்கலங் குஞ்சியுட் டோ யவைத்
தூட லுணர்த்துந் தொழிலதொன் றுண்டே
வருத்தமுள்ள நகர்
சிலைத்தடந் தோளவர் செஞ்சாந் தணிந்த
மலைத்தட மார்பிடை மைமதர்க் கண்ணார்
முலைத்தடம் பாய முரிந்து முடவண்
டிலைத்தடத் தேங்கு மிரக்க முளதே
முரிவன பல
வனைத்தன போலும் வளர்ந்த முலையார்
இனைந்துதங் காதல ரின்பக் கனிகள்
கனிந்து களித்தகங் காமங் கலந்துண
முனிந்து புருவ முரிவ பலவே
அந்நகரில் இளைப்போரும் கலங்குவோரும்
செவ்வாய்ப் பவழக் கடிகைத் திரளெனும்
அவ்வா யமிர்தமுண் டார்பல ராடவர்
ஒவ்வா திளைப்ப ரொசிந்தன ரோடரி
மைவா ணெடுங்கண் மலக்கம் பெரிதே
அந்நகரத்தில் வாழ்பவரை வருந்தச் செய்வது
வளர்வன போலு மருங்குல்க ணோவத்
தளர்வன போல்பவர் தாமக் குழன்மேற்
கிளர்வன போதிள வாசங் கிளைத்துண்
டுளர்வன போதரு மூதை யுளதே
அந்நகரத்தே அஞ்சி மறைவன
பஞ்சா ரகலல்குற் பாவையர் பூண்முலைச்
செங்சாந் தணிந்து திகழ்ந்த மணிவண்டு
மஞ்சார் பொழிலுள் வளர்பெடை கண்டதற்
கஞ்சா வொளிக்கு மயல ததுவே
இன்றமிழியற்கை யின்பம்
பாசிலை மென்றழைப் பள்ளியுட் பாவையர்
தூசினு ணின்று சொரிமணிக் கோவையும்
பூசின சாந்தும் பிணையலும் போர்த்திடை
மூசின வண்டின மொய்ப்பொழி லெல்லாம்
காதல் தூது
காம விலேகையுங் கற்பக மாலையும்
சேம மணிநகைச் செப்பினு ளேந்துபு
தூமக் குழலவர் தூது திரிபவர்
தாமத் தெருவிடை தாம்பலர் கண்டாய்
காமக்கடலைக் கலக்கும் தீமைத்தொழில்
தாமத் தொடையல் பரிந்து தமனிய
வாமக் கலங்கள் புலம்ப மகளிர்கள்
காமக் கடலைக் கலக்குங் கழலவர்
தீமைத் தொழிலவை தேர்ந்துள வன்றே
வேறு - மயூரகண்டனுக்கும் நீலாங்கனைக்கும் பிறந்தவன் அச்சுவக்கிரீவன்
பொன்னகர் தன்னை யாள்வான் புரந்தர னணைய மாண்பின்
மன்னவன் மயூர கண்டன் மற்றவன் தேவி மாருள்
மின்னவிர் மருங்கு னீலாங் கனையென விளங்கி நின்றா
ளன்னவள் புதல்வன் கண்டா யச்சுவக் கிரீவ னென்பான்
அச்சுவக்கிரீவன் அரசு எய்தியபின் உலகம் முற்றும் அவனடிப்பட்டது
அதிர்கழ லலங்கல் வேலோ யச்சுவக் கிரீவ னென்னும்
பொதியவிழ் பொலங்கொள் பைந்தார்ப் புரவலன் றிகிரி யெய்தி
மதிதவழ் குன்ற மெல்லாம் வணக்கிய பின்றை மண்ணும்
கொதிதவழ் வேலி னான்றன் குறிப்பொடு கூடிற் றன்றே
அச்சுவக்கிரீவன் தன்னிகறற்ற தனி மன்னன்
சுற்றமாண் புடைமை யாலுஞ் சூழ்கதிர்த் திகிரி யாளுங்
கொற்றமாங் குடைமை யாலுங் குலத்தது பெருமை யாலுங்
சுற்றமாண் விஞ்சை யாலுங் கருதிய முடித்த லாலும்
வெற்றிவே லவனோ டொப்பார் வேந்தர்மற் றில்லை வேந்தே
அச்சுவக்கிரீவனுடைய தம்பியர்
தம்பியர் நீலத் தேரோன் றயங்குதார் நீல கண்டன்
வம்புயர் மகரப் பேழ்வாய் வயிரமா கண்டன் வண்டும்
தும்பியுந் துவைக்குந் தொங்கற் சுகண்டனென் றிவர்கள் கண்டாய்
வெம்பிய வுருமுத் தீயுங் கூற்றமும் வெதுப்பு நீரார்
அவனுக்கு நிகரானவர் பிறர் இலர்
படையின தமைதி கூழின் பகுதியென் றிவற்றின் பன்மாண்
புடையவ ரவனொ டொப்பா ரொருவர்மற் றில்லை வேந்தே
விடயமொன் றின்றி வென்ற விடுசுடை ராழி யாளும்
நடையவ னுவப்பின் ஞாலம் பிறருழை நடப்ப தென்றான்
அமைச்சனும் நிமித்திகனும்
ஆணைநூ லமைச்ச னாவா னரிமஞ்சு வவன தற்றல்
கோணை நூற் பவரைத் தன்சொற் குறிப்பின்மே னிறுத்த வல்லான்
பேணுநூ னிமித்தம் வல்லான் சதவிந்து பெரிய நீரான்
காணுநூற் புலமை யாருங் காண்பவரில்லை கண்டாய்
அச்சுவக்கிரீவன் தன்மை
தன்னலாற் றெய்வம் பேணார் சார்ந்தவர் தானுஞ் சார்ந்தார்க்
கென்னலா லிவருக் குற்றா ரில்லையென் றிரங்கு நீரான்
பொன்னெலா நெதிய மாரப் பொழிந்திடு கின்ற பூமி
மன்னெலா மவனை யன்றி வணங்குவ தில்லை மன்னா
அச்சுவக்கண்டனது தோள்வன்மை
குளிருவா ளுழுவை யன்னான் குமாரகா லத்து முன்னே
களிருநூ றெடுக்க லாகக் கற்றிரள் கடகக் கையால்
ஒளிறுவா ளுழவ னேந்தி யுருட்டிவட் டாட வன்றே
வெளிறிலாக் கேள்வி யானை விஞ்சைய ரஞ்சி யிட்டார்
அச்சுவக்கிரீவனைப்பற்றி மேலுஞ் சில கூறுதல்
முற்றவ முடைமை யாலே மூரிநீ ருலக மெல்லாம்
மற்றவ னேவல் கேளா மன்னவ ரில்லை மன்னா
செற்றவ னலித லஞ்சித் திறைகொடுத் தறிவித் தன்றே
நற்றவ நங்கை தோன்றா முன்னநா மாண்ட தெல்லம்
சுயம்பிரபை பிறந்த பிறகு அவன் திறைகொள்ளவில்லை யென்றல்
ஈங்குநங் குலக்கொம் பொப்பாள் பிறந்தபி னினிய னாகித்
தேங்கம ழலங்கல் வேலோன் றிறைகொள லொழிந்து செல்லு
மாங்கவன் றிறங்க ளெல்லா மறிதியா லாணை வேந்தே
தீங்கியா னுணர்த்திற் றுண்டோ திருவடி தெளிக வென்றான்
சுயம்பிரபையை அவனுக்கு மணஞ்செய்விக்கலாம் என்றல்
மற்றவற் குரிய ணங்கை யென்பதன் மனத்தி னோடு
முற்றுவந் துளது சால வுறுதியு முடைய தொக்கும்
வெற்றிவேல் விஞ்சை யாரு மஞ்சுவர் மின்செய் பைம்பூண்
கொற்றவ குறிப்புண் டாயிற் கொடுப்பது குணங்கொ லென்றான்
பவச்சுதன் என்பவன் கூறத் தொடங்குதல்
சுடர்மணி மருங்குற் பைங்கட் சுளிமுகக் களிதல் யானை
யடர்மணிக் கதிரும் பைம்பொன் மாலையு மணிந்த சென்னித்
தொடர்மணிப் பூணி னாற்குச் சச்சுதன் சொல்லக் கேட்டே
படர்மணிப் படலை மாலைப் பவச்சுதன் பகர லுற்றான்
வேறு - சச்சுதன் சொல்லியவை உண்மை என்றல்
நூலா ராய்ந்து நுண்பொறி கண்ணு நொடிவல்லான்
மேலா ராயு மேதமை யாலு மிகநல்லான்
தோலா நாவிற் சச்சுதன் சொல்லும் பொருளெல்லாம்
வேலார் கையாய் மெய்ம்மைய வன்றே மிகையாலோ 70
அச்சுவக்கிரீவனுக்கு ஒரு குறை கூறுதல்
தேனும் வண்டுந் தீதில பாடுஞ் செறிதாரோய்!
யானுங் கண்டே னச்சுவ கண்டேன் றிறமஃதே
மானங் கொண்ட மாரதர் போரே றனையாயோ
ரூனங் கண்டே னொட்டினு மொட்டே னுரைசெய்கேன்
பிறந்த நாட் குறிப்புக் கூறல்
மானக் கோதை மாசறு வேலோய் வரவெண்ணி
நானக் கோதை நங்கை பிறந்த நாளானே
வானக் கோளின் மாண்புணர் வார்கண் மறுவில்லாத்
தானக் கோளிற் சாதக வோலை தலைவைத்தார்
காவிப் பட்டங் கள்விரி கானற் கடனாடன்
மேவிப் பட்டம் பெற்றவன் காதன் மேயனால்
ஏவிப் பட்ட மீந்தவ ரெல்லா மினிதேத்தும்
தேவிப் பட்டஞ் சேர்பவ ளன்றே திருவன்னாள்
இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடர்
நங்கோ னங்கை நன்மக னாகி நனிவந்தான்
தங்கோ னேவத் தானிள வேந்தாய்த் தலைநின்றான்
எங்கோ னென்றே யிவ்வுல கேத்து மியறன்னால்
செங்கோ லின்பஞ் சேர்பவ னன்றே செருவேலோன்
என்றா லன்றச் சாதக வோலை யெழுதிற்றால்
குன்றா வென்றிக் குன்றுறழ் யானைக் கொலைவேலோய்
நன்றா நங்கைக் கொன்றிய காமப் பருவத்தால்
நின்றா னன்றே யின்றுணை யாகுந் நிலைமேயான்
சாதகக் குறிப்பு அச்சுவக்கிரீவனுக் கமையாமை கூறல்
ஆழிக் கோமா னச்சுவ கண்ட னவனுக்கே
ஊழிக் கால மோடின வென்னு முரையாலும்
தாழிக் கோலப் போதன கண்ணா டகுவாளோ
சூழிக் கோலச் சூழ்களி யானைச் சுடர்வேலோய்
அச்சுவக்கிரீவனுக்குப் பட்டத்தரசி யுண்மை கூறல்
கண்ணார் கோதைக் காமரு வேய்த்தோட் கனகப்பேர்
மண்ணார் சீர்த்திச் சித்திரை யென்னு மடமாதின்
றெண்ணா ரின்பக் காதலி யாகி யியல்கின்றாள்
பெண்ணார் சாயல் பெற்றன டேவிப் பெறுபட்டம்
இரத்தின கண்டன் இளவரசன்
வானோ ருட்கு மக்களோ ரைஞ்ஞூற் றுவர்தம்முள்
ஈனோ ருட்கு மிரத்தின கண்ட னெனநின்றான்
ஏனோ ருட்கு மின்னிள வேந்தா யியல்கின்றான்
ஊனோ ருட்கு மொண்சுடர் நஞ்சூ றொளிவேலோய்
மன்னன் வினாதல்
அன்னா னாயி னாதலி னன்றே யவனன்னால்
என்னா னாவா னென்றனன் வேந்த னெனலோடும்
இன்னா னின்னா னிந்நக ராள்வா னிவனென்றே
அன்னா னன்னாற் கந்நக ரெல்லா மறிவித்தான்
சிறந்தவனைத் தெரிந்துகொடு வென்றல்
மையார் சென்னி மால்வரை யாளும் வயமொய்ம்பிற்
கையா ரெஃகிற் காளைக டம்முட் கமழ்கோதை
மெய்யா மேவு மேதகு வானை மிகவெண்ணிக்
கொய்யா விம்முங் கொங்கலர் தாரோய் கொடுவென்றான் 80
வேறு - இதுமுதல் கூ உக ஆம் செய்யுள் முடிய ஒரு தொடர்: பவச்சுதன் கூற்று
பவனஞ்சன் மாண்பு
கேடிலிம் மலையின் மேலாற் கின்னர கீத மாளும்
தோடிலங் குருவத் தொங்கற் சுடர்முடி யரசன் செம்மல்
பாடல்வண் டிமிரும் பைந்தார்ப் பவனஞ்ச னென்ப பாரித்
தாடலம் புரவி வல்ல அரசிளங் குமர னென்றான்
அமிழ்தபதி நாட்டு வேகரதன்
அளந்தறி வரிய செய்கை யமிழ்தமா பதியை யாளும்
வளந்தரு வயிரப் பைம்பூண் மன்னவன் சிறுவன் வண்டார்
விளங்கொளி யுருவத் திண்டோ ள் வேகமா ரதனை யன்றே
இளங்களி யுழுவை யாக விருநிலம் புகழ்வ தென்றான்
மேகபுரத்துப் பதுமரதன்
வேழத்தாற் பொலிந்த சோலை மேகமா புரம தாளும்
ஆழித்தே ரரவத் தானை யரசர்கோன் புதல்வ னந்தார்ப்
பாழித்தோ ளுருவச் செங்கட் பதுமத்தேர்ப் பெயரி னானை
ஊழித்தீ யென்று வேந்த ருட்குவ துருவத் தாரோய்
இரத்தினபுரத் தரசன் மகன் சுவர்ணரதன்
இலங்கொளி மாடவீதி யிரத்தின புரம தாளும்
உலங்கெழு வயிரத் திண்டோ ளொளிமுடி யரசன் செம்மல்
அலங்கலம் புரவித் தானை யருங்கலத் தேரின் பேரன்
குலங்கெழு குரிசில் கண்டாய் கொண்டல்வா னுருமோ டொப்பான்
கீதமாபுரத்தரசன் மகன் அரிகண்டன்
நங்கண்மால் வரையின் மேலோன் நன்னகர் கீத மென்னும்
திங்கண்மால் புரிசை வேலிச் செழுநக ரரசன் செம்மல்
அங்கண்மா ஞால மாளு மரிகண்ட னவனை விண்மேல்
செங்கண்மான் முனியு மேனுஞ் செய்வதொன் றில்லை கண்டாய்
திரிபுர அரசன் மகன் நளிதாங்கன்
சேந்தெரி செம்பொன் வீதித் திரிபுர மதனை யாளும்
வாய்ந்தெரி வயிரப் பைம்பூண் மன்னவன் புதல்வன் மல்லா
டேந்துதோ ளரசர் போரே றிவனளி தாங்க னென்பன்
காய்ந்தெரி கனலின் வெய்யோன் கல்வியாற் கடலோ டொப்பான்
சித்திரகூடத்து அரசன் ஏமாங்கதன்
செந்தளிர் புதைந்த சோலைச் சித்திர கூட மாளும்
அந்தளி ரலங்கன் மாலை யரசர்கோன் சிறுவ னந்தார்
இந்திரன் புதல்வ னன்னா னேந்தலே மாங்க தற்கிம்
மந்திர வுலகின் வாழு மன்னர்மா றில்லை மன்னா
அச்சுவபுரத்துக் கனக சித்திரன்
அருமணி யடுத்த வீதி யச்சுவ புரம தாளும்
திருமணி திகழும் பூணான் பெருமகன் சிறைவண் டென்னும்
கருமணி துதைந்த பைந்தார்க் கனகசித் திரனை யன்றே
ஒருமணி திலத மாக வுடையது நிலம தென்றான்
சிரீ நிலையத்தரசன் மகன் சித்திராதன்
சீரணி முழவ மோவாச் சிரீநிலை யதனை யாளும்
காரணி தடக்கை வேந்தன் கான்முளை கனபொ னார்ந்த
தேரணி யரவத் தானைச் சித்திரத் தேரின் பேரான்
தாரணி மார்ப னன்றே தரணிக்கோர் திலத மாவான்
கனக பல்லவத்தரசன் மகன் சிங்ககேது
கற்றவர் புகழுங் சீர்த்திக் கனகபல் லவத்தை யாளும்
கொற்றவன் சிறுவன் கோலக் குங்குமக் குவவுத் தோளான்
செற்றவர்ச் செருக்குஞ் செய்கை செருவல்லான் சிங்க கேது
மற்றவன் பிறந்த பின்னா மண்மகள் மகிழ்ந்த தென்றான் 90
இந்திர சஞ்சயத்தரசன் மகன் அருஞ்சயன்
இஞ்சிசூழ் ழெரிபொன் மாடத் திந்திரன் மிசைந்த நாமச்
சஞ்சய முடைய கோமான் றாண்முளை தரணி யெல்லாம்
அஞ்சுநீ ரலங்கல் வேலா னருஞ்சய னவனை நங்கண்
மஞ்சுசூழ் மலைக்கோர் சூளா மணியெனக் கருது மன்னா!
எங்கிவர் தம்முள் யாவ ரிலங்கிரும் பவழச் செவ்வாய்க்
கோங்கிவர் குவிமென் கொங்கைக் கொம்பினுக் குரிய காளை
ஆங்கவன் றன்னை யாராய்ந் தறிந்தருள் செய்க வென்றான்
வாங்கிரும் பரவை முந்நீர் மணிகொழித் தனைய சொல்லான்
வேறு - பவச்சுதன் கூறியவற்றிற்கு எல்லாரும் உடன்படுதல்
மன்னர் நீண்முடி மென்மணித் தொத்தொளி
துன்னு சேவடி யாற்குச் சுருங்கவே
பன்னு கேள்விப் பவச்சுதன் சொல்லலும்
அன்னதே யென்றெல் லார்களு மொட்டினார்
சுதசாகரன் என்பவன் சொல்லுதல்
அல்லி நாண்மலர்த் தாருமுத் தாரமும்
வல்லி யாங்கனி சாந்தும் வனைந்துராய்
மல்லி னான்மலி மார்பற்கு மற்றிவை
சொல்லி னான்சுத சாகர னென்பவே
பவச்சுதன் கூறியது உண்மை என்றல்
ஆழி யாள்கின்ற வச்சுவ கண்டன்மேல்
பாழி யாகின்ற திண்டோ ட் பவச்சுதன்
சூழி யானையி னாய் சொலப் பட்டன
ஊழி யாருரை யும்மொத் துள கண்டாய்
பிறருக்குக் கொடுப்பினும் பகையாகுமென்றல்
ஆயி னுஞ்சிறி துண்டறி வண்டினம்
பாயி னும்பனிக் கும்படர்க் கோதைதன்
வேயி னும்பணைக் கின்றமென் றோள்பிறர்
தோயி னும்பகை யாஞ்சுடர் வேலினாய்
அச்சுவகண்டன் ஆற்றலிற் சிறந்தவனென்றல்
வண்ட வாமுடி மன்னருண் மற்றவன்
தண்ட மாற்றுநர் தாமிலை யாற்சிறி
துண்டி யானுரைப் பானுறு கின்றது
விண்டு வாழுநர் மேனகு வேலினாய்
சுரேந்திரகாந்தத்து மேகவாகனன்
போக மாண்டவிச் சேடியோர் பொன்னகர்க்
கேக நாயக னாயினி தாள்பவன்
மேக வாகன னென்றுளன் வீழ்மத
வேக மால்களி றும்மிகு வேலினான்
மேகவாகனன் மனைவி மேகமாலினி
நாக மாலைகண் மேனகு வண்டினம்
ஏக மாலைய வாயிசை கைவிடாத்
தோகை மாமயில் போற்சுரி கூந்தலாள்
மேக மாலினி யென்றுரை மிக்குளாள்
அவர்களுடைய மகன் விச்சுவன்
தேவி மற்றவ டெய்வம் வழிபட
மேவி வந்தனன் விச்சுவ னென்பவன்
ஓவி றொல்புக ழானுளன் கூற்றமும்
ஏவி நின்றினி தாண்டிடு மீட்டினான் 100
விச்சுவன் பெருமை
மையில் வானுல காண்டுமண் ணோர்களுக்
குய்யும் வாயி லாணுர்த்திய தோன்றிய
ஐய னற்பிற வாரஞர் நீங்கியிவ்
வைய மாயதெல் லாம்வளர் கின்றதே
இவ்வுலகிற்கருள் செய்தபின் மீண்டும் தேவருலகை யடைவான்
மங்குல் வானுல காண்டு வரத்தினால்
இங்கு வந்தென னீணண்டளி யீந்தபின்
திங்கள் வானொளி யிற்றிகழ் சோதியாய்த்
தங்கு வானுல கிற்றகை சான்றதே
தன்னி னாய்விளை வித்திரு ளைத்தவிர்த்
தின்ன னாகவென் றெண்ணிய வெண்ணமோ
டன்ன னாதலி னாலவன் மேற்பிறர்
என்ன ரேனுமின் னாதன வெண்ணிலார்
சுயம்பிரபைக்கு விச்சுவன் தகுந்தவன் ஆவன் எனல்
காம்பின் வாய்ந்தமென் றோளியக் காதலன்
தீம்பன் மாலைநன் மார்பகஞ் சேருமேல்
ஆம்பன் மாலையு மாய்கதிர்த் திங்களும்
தாம்பன் மாலையுஞ் சார்ந்த தனைத்தரோ
விச்சுவன் தங்கை
நம்பி தங்கை நகைமலர்க் கற்பகக்
கொம்பி னன்னவன் கொங்கணி கூந்தலாள்
அம்பி னீண்டரி சிந்திய மாக்கயல்
வம்பி னீண்டமை வாணெடுங் கன்ணினாள்
அவளுடைய பெயர் சோதிமாலை
கோதின் மாலைகள் மேற்குதி கொண்டெழு
கீத மாலைய கின்னர வண்டினம்
ஊதி மாலைய வாயுறை யுங்குழல்
சோதி மாலையென் பாள்சுடர்ப் பூணினாள்
சோதிமாலை அருக்ககீர்த்திக்குரியவள் எனல்
வெம்பு மால்களி யானை விலக்குநீர்
நம்பி ஞாயிறு சேர்பெய ராற்கணி
அம்பி னீளரி வாணெடுங் கண்ணவள்
வம்பு சேர்முலை வாரி வளாகமே
சுதசாகரன் முடிவுரை
இன்ன வாறிசை யப்பெறின் யாவரும்
என்ன வாறு மிகப்பவ ரின்மையால்
அன்ன வாறரு ளுண்டெனி லாய்ந்தியான்
சொன்ன வாறுகொண் டீசுடர் வேலினோய்
சுமந்திரி என்பவன் கூறத்தொடங்குதல்
கொங்குவண் டலைந்த தாரான் குறிப்பறிந் திவைக ளெல்லாம்
அங்கவன் மொழிந்த பின்னை யவனையு மமைதி கூறி
நங்கைதன் றாதை தோழர் நால்வரு ணால்வ னாவான்
தொங்கலந் துணர்கொள் மார்பிற் சுமந்திரி சொல்ல லுற்றான்
எல்லோரையும் விலக்கிக் கூறுதல்
அண்ணலங் களிகொள் யானை யச்சுவ கண்டன் மூத்தாற்
கெண்ணலுந் தகுவ தன்றா லிவன்பணி யகற்ற லாற்றாக்
கண்ணலங் கவரும் வேலோர்க் கீயினுங் கரும மன்றால்
பெண்ணலங் கனிந்த பேதை யிருப்பதும் பெருமை யன்றே 110
விச்சுவனை விலக்கிக் கூறுதல்
சூழ்கதிர்ப் புரிசை வேலிச் சுரேந்திர மாளும்
தாழ்கதி ரார மார்பிற் றமனியக் குழையி னான்றன்
போழ்கதிர்க் கடவுள் போலும் புதல்வனுக் குரிமை செய்ய
தாழ்கதிர் விலங்க லாளு மரசவஃ தரிது கண்டாய்
விலக்கியதற்குக் காரணம் காட்டுதல்
மங்கையர் முகத்தி னீண்டு மைகடை மதர்ப்ப மாந்தி
அங்கயல் பிறழ்வ போலு மையரி யடர்த்த வாட்கண்
பங்கயச் செங்க ணான்மேற் படைத்தொழில் பயின்ற போழ்தும்
தங்கிய மனத்த னாகித் தளர்விலன் றவத்தின் மிக்கான்
விச்சுவன் இயல்பு
மண்கனி முழவச் சீரு மடந்தையர் தூக்கு மற்றும்
பண்கனி பாட லாடற் பாணியும் பயின்று மேவான்
விண்கனிந் தனைய வின்ப வெள்ளமும் வெறுத்து நின்றான்
கண்கனி யுருவக் காளை கடவுளர் தகையன் கண்டாய்
மேகவாகனன் விச்சுவன் வரலாறு கேட்டல்
செறிகழ லவற்குத் தாதை சித்திர கூட மென்னும்
அறிவரன் கோயி லெய்தி யணிவிழ வயர்த்த காலை
இறுதியி லவதி ஞானி யசோதர னென்னும் பேர
உறுவனை வணங்கிக் கேட்டான் மகன்றிற முலங்கொ டோ ளான்
அவதிஞானி விச்சுவனது பழம்பிறப்பு வரலாறு கூறுதல்
பங்கயப் பழன வேலிப் பவகிரி யரசன் பைந்தார்
தங்கிய தடங்கொண் மார்பன் சயசேன னவற்குத் தேவி
செங்கய னெடுங்கட் செவ்வாய்ப் பிரீதிமதி பயந்த காளை
வெங்களி யானை வல்ல விசயபத் திரனென் பானே
இதுவுமது -
மந்திரத் தரசர் கோவே மற்றவன் வையங் காக்கும்
தந்திரந் துறந்து நோற்று மறைந்தசா சார மென்னும்
இந்திர வுலக மெய்தி யேழொடீ ரைந்து முன்னீர்
அந்தர காலந் தேவர்க் கரசனா யாண்டு வந்தான்
ஆதலா லமர போக நுகர்ந்தவ னரைசர் செல்வம்
போதுலா மலங்கன் மார்ப பொருளென மருளல் செல்லான்
தீதெலா மகல நோற்றுச் சிவகதி சேரு மென்றக்
கோதிலா முனிவன் சொன்ன வுரையிவை கூறக் கேட்டாம்
இறைநிலையை எய்துவார்க்கு உறவினர் வேண்டியவரல்லர்
அம்மையாற் றவங்க டாங்கி யலர்ந்தநல் லறிவி னாலும்
இம்மையா னுடம்பு நீங்கி யிகந்துபோ மியற்கை யாலும்
செம்மையாற் கடவுட் டானஞ் சேர்வதே சிந்தை யாற்கு
மெய்ம்மையாற் கருமச் சுற்றம் வேண்டுவ தில்லை வேந்தே
சுயம்பிரபைக்கு சுயம்வரமும் கூடாது என்றல்
வாரணி முரச மார்ப்ப வயிரொடு வளைக ளேங்கத்
தாரவர் குழாங்க ளீண்டச் சயமர மறைது மேனும்
ஆரவி ராழி யனை யஞ்சுது மறிய லாகா
காரவி தடக்கை வேந்தே கழலவர் கரும மென்றான்
ஊழ்வினையின் ஆற்றல் உரைத்தல்
ஒன்றுநாங் கருதிச் சூழி னூழது விளைவு தானே
கன்றிநாங் கருதிற் றின்றி மற்றோர்வா றாக நண்ணும்
என்றுநாந் துணிந்த செய்கை யிதன்றிறத் தென்ன மாட்டாய்
இன்றுநாந் துணிது மாயி னினிச்சிறி துரைப்ப னென்றான் 120
சதவிந்து என்னும் நிமித்திகனைக் கலந்தெண்ணி ஆவனபுரிவோம் என்றல்
வீழ்புரி விளங்கு நூலோய் மேலுநங் குலத்து ளார்கட்
கூழ்புரிந் துறுதி கூறு முயர்குல மலர நின்றான்
தாழ்புரி தயங்கு நுண்ணூற் சதவிந்து மொழிந்த வாற்றால்
யாழ்புரி மழலை யாள் கண் ணாவதை யறிது மென்றான்
சுமந்தரி உரையை மற்றையோர் உடன்பட்டுக் கூறல்
என்றவன் மொழிந்த போழ்தி னேனையா ரினிதி னோக்கி
மின்றவழ் விளங்கு வேலோய் மெய்யினு மேவல் வேண்டும்
சென்றவன் மனையு ணீயே வினவெனச் சேனை வேந்தன்
நன்றவர் மொழிந்த வெல்லா நல்லவா நயந்து கேட்டான்
அமைச்சர்கள் அரசனை அவையைக் கலைக்குமாறு கூறுதல்
இந்திர னனைய நீரோ யினிப்பிறி தெண்ணல் வேண்டா
மந்திர நீளு மாயின் வருவன வறிய லாகா
சந்திரன் றவழ நீண்ட தமனியச் சூல நெற்றி
அந்தரந் திவளு ஞாயிற் கோயில்புக் கருளு கென்றார்
அரசன் அரண்மனையை அடைதல்
மந்திரக் கிழவர் தம்மை மனைபுக விடுத்து மன்னன்
சுந்தரச் சுரும்புந் தேனுஞ் சூழ்கழ னிரையு மார்ப்ப
வந்தர மகளிர் போல்வார் வரன்முறை கவரி வீச
அந்தரக் கடைக ணீங்கி யகனக ரருளிப் புக்கான்
வேறு - நண்பகலாதல்
மிகுகதிர் விலங்கலார் வேந்தன் றேனுடைந்
துகுகதிர் மண்டப மொளிர வேறலும்
தொகுகதிர் சுடுவன பரப்பிச் சூழொளி
நகுகதிர் மாண்டில நடுவ ணின்றதே
கண்டிரள் கழைவளர் கரும்பு கைமிகுத்
தொண்டிரள் வெள்ளிலை யுரிஞ்சு மோடைமா
வெண்டிரண் மணிபுடை சிலம்ப விட்டன
வண்டிரள் கிளையொடு வளைக ளார்த்தவே
ஒலிவிழா வண்டின மூத வூறுதேன்
மலிவிழாப் பிணையலு மணங்கொள் சாந்தமும்
பலிவிழாப் பதாகையும் பரந்து பாடுவார்
கலிவிழாக் கழுமின கடவுட் டானமே
குண்டுநீர்க் குழுமலர்க் குவளைப் பட்டமும்
மண்டுநீர் மரகத மணிக்கல் வாவியும்
கொண்டுநீ ரிளையவர் குடையக் கொங்கொடு
வண்டுநீர்த் திவலையின் மயங்கி வீழ்ந்தவே
பங்கயத் துகள்படு பழன நீர்த்திரை
மங்கையர் முலையொடு பொருத வாவிகள்
அங்கவ ரரிசன மழித்த சேற்றினும்
குங்குமக் குழம்பினுங் குழம்பு கொண்டவே
அங்கவள்வாய்க் கயம்வல ராம்ப றூம்புடைப்
பொங்குகா டேர்பட ஞெறித்துப் பூவொடு
கொங்கைவாய்க் குழலவர் குளிப்ப விட்டன
திங்கள் வாண் முகவொளி திளைப்ப விண்டவே 130
மாயிரும் பனித்தடம் படிந்து மையழி
சேயரி நெடுமலர்க் கண்கள் சேந்தெனத்
தாயரை மறைக்கிய குவளைத் தாதுதேன்
பாயமோந் திறைஞ்சினார் பாவை மார்களே
ஈரணிப்பள்ளி வண்ணனை
சந்தனத் துளித்தலை ததும்பச் சாந்தளைந்
தந்தரத் தசைப்பன வால வட்டமு
மெந்திரத் திவலையு மியற்றி யீர்மணல்
பந்தருட் பாலிகைக் குவளை பாய்த்தினார்
குருமணித் தாமரைக் கொட்டை சூடிய
திருமணிப் பீடமுஞ் செதுக்க மாயவும்
பருமணிப் பளிங்கென விளங்கு வான்பலி
அருமணிக் கொம்பனா ரலர வூட்டினார்
பொழுதுணர்மாக்கள் நாழிகை கூறுதல்
அன்னரும் பொழுதுகண் ணகற்ற வாயிடைப்
பன்னருங் காலநூல் பயின்ற பண்புடைக்
கன்னலங் கருவியோர் கழிந்த நாழிகை
மன்னவ னடிமுத லுணர்த்தி வாழ்த்தினார்
மன்னன் உண்ணுதல்
வாரணி முலையவர் பரவ மன்னவன்
ஈரணிப் பள்ளிபுக் கருளி னானிரந்
தோரணி யின்னிய மிசைத்த வின்பமோ
டாரணி தெரியலா னமிர்த மேயினான்
அரசன் தெருவில் நடந்து செல்லுதல்
வெள்ளிழை பொலிந்தொளி துளும்பு மேனியன்
வள்ளிதழ் மல்லிகை மலர்ந்த மாலையான்
அள்ளிதழ்ப் புதுமல ரடுத்த வீதிமேல்
கள்ளிதழ்க் கண்ணியான் காலி னேகினான்
அரசன் நடந்து செல்லுதல்
பொன்னலர் மணிக்கழல் புலம்பத் தேனினம்
துள்ளலர் தொடையலிற் சுரும்போ டார்த்தெழ
மன்னவன் னடத்தொறு மகர குண்டலம்
மின்மலர்த் திலங்குவில் விலங்க விட்டவே
மெய்காவலர் வேந்தனைச் சூழ்தல்
நெய்யிலங் கெஃகினர் நிறைந்த விஞ்சையர்
கையிலங் கீட்டியர் கழித்த வாளினர்
மெய்யிலங் குறையினர் விசித்த கச்சையர்
வையகங் காவலன் மருங்கு சுற்றினார்
அரசன் நிமித்திகன் வாயிலை அடைதல்
சுரும்புசூழ் பிணையலுஞ் சுண்ண மாரியும்
கரும்புசூழ் கிளவியர் சொரிந்து கைதொழ
நிரம்புநூ னிமித்திகன் மாட நீள்கடை
அரும்புசூழ் தெரியலா னருளி னெய்தினான்
நிமித்திகன் அரசனை வரவேற்றல்
எங்குலம் விளங்கவிக் கருளி வந்தவெங்
கொங்கலர் தெரியலாய் கொற்றங் கொள்கென
மங்கல வுழைக்கலம் பரப்ப மன்னனுக்
கங்கலர் கேள்வியா னாசி கூறினான்
அரசன் மண்டபத்தை அடைதல்
கொண்டமர்ந் தகிற்புகை கழுமிக் கோதைவாய்
விண்டமர்ந் தொழுகுவ மதுக்கள் வீழ்ந்துராய்
வண்டமர்ந் தொலிசெய மருங்குல் கொண்டதோர்
மண்டப மணித்தல மன்ன னெய்தினான்
அரசன் தான்வந்த காரியத்தை எண்ணுதல்
தழையவிழ் சந்தனப் பொதும்பு போன்மது
மழைதவழ் மண்டப மலிர வீற்றிருந்
துழையவர் குறிப்பறிந் தகல வொண்சுடர்க்
குழையவன் குமரிதன் கரும மென்னினான்
நிமித்திகன் பேசத் தொடங்குதல்
கனைத்தெதிர் கதிர்மணிக் கடகஞ் சூடிய
பனைத்திர ளனையதோட் படலை மாலையான்
மனத்தினை மறுவினூல் வாயி னாற்சொல
நினைத்திவை விளம்பினா னிமித்த நீதியான்
அரசன் அடைந்த காரியத்தை சதவிந்து கூறுதல்
மணங்கமழ் மதுமல ரலங்கன் மாலைபோல்
வணங்கெழி னுடங்கிடை மாழை நோக்கிநங்
கணங்குழை கருமமாங் கருதிற் றென்றனன்
அணங்கெழில் விரிந்தநூ லலர்ந்த நாவினான்
தெருவில் வலங்கொண்டு சென்றவள் திருமகள் என்றல்
வெண்ணிலா விரிந்தென விளங்கு மாலையள்
கண்ணிலாங் கவர்தகைக் கண்ணி மன்னனை
மண்ணிலா மறுகிடை வலங்கொண் டெய்தினாள்
எண்ணிலாங் கதுதிரு வெதிர்ந்த வன்ணமே
பொன்சுலாஞ் சுடரிழை பொறுத்த பூண்முலை
மின்சுலா நுடங்கிடை மெல்லி யாடிறம்
என்சொலா லின்றியா னியம்பு நீரதோ
மன்சுலா வகலநின் றலரும் வாளினாய்
சுயம்பிரபைக்குரிய மணமகனை மாபுராணம் கூறுகிறது என்றல்
ஆதிநா ளறக்கதி ராழி தாங்கிய
சோதியான் றிருமொழி விளக்கித் தோன்றுமால்
போதுவார் புரிகுழற் பொலங்கொம் பன்னவிம்
மாதராள் வனமுலைக் குரிய மைந்தனே
சதவிந்து மொழியைக்கேட்ட அரசன் மகிழ்ச்சி அடைதல்
அம்மயி லனையவ டிறத்தி னாரியன்
செம்மையில் விளம்பிய செல்வங் கேட்டலும்
மெய்ம்மையிற் றெரிந்தொளி துளும்பு மேனியன்
பொய்ம்மையில் புகழவன் பொலிந்து தோன்றினான்
மாபுராணத்தில் கூறப்பட்டிருத்தலைப்பற்றி அரசன் கேட்டல்
முன்னிய வுலகுகண் விடுத்த மூர்த்தியான்
மன்னிய திருமொழி யகத்து மாதராள்
என்னைகொல் விரிந்தவா றெனலு மன்னனுக்
கன்னவ னாதிமா புராண மோதினான்
உலகங்கள் எண்ணிறந்தன என்றல்
மூவகை யுலகினு ணடுவண் மூரிநீர்த்
தீவின தகலமுஞ் சிந்து வட்டமும்
ஓவல வொன்றுக்கொன் றிரட்டி கண்ணறை
ஏவலாய் விரிந்தவை யெண்ணி றந்தவே
உலக அமைப்பு உரைத்தல்
மந்தர நெடுமலை நடுவின் வாய்ந்தது
சுந்தர வேதிகை மருங்கு சூழ்ந்தது
நந்திய நளிசினை நாவன் மாமரம்
அந்தரத் துடையதிவ் வவனி வட்டமே
உலகில் உள்ளன
குலகிரி யாறுகூர் கண்ட மேழ்குலாய்
மலைதிரை வளர்புன லேழி ரண்டதாய்க்
கொலைதரு வேலினாய் கூறப் பட்டதிவ்
வலைதிரை நெடுங்கட லவனி வட்டமே
மாற்றறு மண்டில மதனு ளூழியால்
ஏற்றிழி புடையன விரண்டு கண்டமாம்
தேற்றிய விரண்டினுந் தென்மு கத்தது
பாற்றரும் புகழினாய் பரத கண்டமே
பரதகண்டம் மூன்று ஊழிக்காலம் இன்ப நிலமாக இலங்கி நின்றது
மற்றது மணிமய மாகிக் கற்பகம்
பொற்றிர ளணிபொழிற் போக பூமியாய்
முற்றிய வூழிமூன் றேறி மீள்வழிப்
பிற்றகை யூழிவட் பிரமர் தோன்றினார்
போக காலம் கழிதல்
வெங்கதிர்ப் பரிதியும் விரைவு தண்பனி
அங்கதிர் வளையமு மாதி யாயின
இங்கிவர் படைத்தன ரிழிந்த திவ்வகை
பொங்கிய புரவியாய் போக காலமே
அருகக் கடவுள் தோற்றம்
ஊழிமூன் றாவதோய்ந் திறுதி மன்னுயிர்
சூழ்துயர் பலகெடச் சோதி மூர்த்தியாய்
ஏழுய ருலகுடன் பரவ வீண்டருள்
ஆழியங் கிழமையெம் மடிக டோ ன்றினாய்
உலகம் அருகக்கடவுளின் வழிப்பட்டது
ஆரரு டழழுவிய வாழிக் காதியாம்
பேரருண் மருவிய பிரான்றன் சேவடி
காரிருள் கழிதரக் கண்க வின்றரோ
சீரருள் சரணென வுலகஞ் சேர்ந்ததே
அருகக்கடவுள் அறம் முதலியவற்றை ஆக்குதல்
அலந்தவ ரழிபசி யகற்றும் வாயிலும்
குலங்களுங் குணங்களுங் கொணார்ந்து நாட்டினான்
புலங்கிளர் பொறிநுகர் விலாத புண்ணியன்
நலங்கிளர் திருமொழி நாத னென்பவே
பரதன் என்னும் அரசன்
ஆங்கவன் றிருவரு ளலரச் சூடிய
வீங்கிய விரிதிரை வேலி காவலன்
ஓங்கிய நெடுங்குடை யொருவ னாயினான்
பாங்குயர் பரிதிவேற் பரத னென்பவே
பரதன் அருகக் கடவுளைப் போற்றிப் பணிதல்
ஆழியா லகலிடம் வணக்கி யாண்டவன்
பாழியா நவின்றதோட் பரத னாங்கொர்நாள்
ஊ ழியா னொளிமல ருருவச் சேவடி
சூழிமால் யானையான் றொழுது வாழ்த்தினான்
பரதன் அருகக் கடவுளைப் போற்றி எதிர்கால நிகழ்ச்சி கேட்டல்
கதிரணி மணிமுடி வணங்கிக் காவலன்
எதிரது வினவினா னிறைவன் செப்பினான்
அதிர்தரு விசும்பிடை யமிர்த மாரிசோர்
முதிர்தரு முகிலிடை முழங்கிற் றென்னவே
அருகக் கடவுள் கூறுதல்
என்முத லிருபத்தீ ரிருவர் நாதர்கள்
நின்முத லீரறு வகையர் நேமியர்
மன்முதல் பலவர்கே சவர்கண் மாற்றவர்
தொன்முத லவர்தொகை யொன்ப தொன்பதே
முதல் வாசுதேவனை மொழிதல்
மன்னவ நின்மகன் மரிசி மாற்றிடைப்
பொன்னவிர் போதன முடைய பூங்கழல்
கொன்னவில் வேலவன் குலத்துட் டோ ன்றினான்
அன்னவன் கேசவர்க் காதி யாகுமே
அவன் அச்சுவனைக் கொன்று அரசாட்சியைக் கைப்பற்றுவான் என்றல்
கேசவ னார்திறங் கிளப்பின் வெண்மலை
காசறு வனப்பினோர் கன்னி யேதுவால்
ஆசர வச்சுவக் கிரீவ னாவியும்
தேசறு திகரியுஞ் செவ்வன வெளவுமே
பிறகு அவன் கடவுள் ஆவான் என்றல்
தேரணி கடற்படைத் திவிட்டன் சென்றுபின்
ஆரணி யறக்கதி ராழி நாதனாம்
பாரணி பெரும்புகழ்ப் பரத வென்றனன்
சீரணி திருமொழித் தெய்வத் தேவனே
அருகக் கடவுள் கூறியதைப் பரதன் கேட்டு மகிழ்ந்தான் என்று நிமித்திகன் முடித்தல்
ஆதியு மந்தமு நடுவு நம்மதே
ஓதநீ ருலகுடை யுரிமை யென்றரோ
காதுவே லரசர்கோக் களிப்புற் றானிது
போதுசே ரலங்கலாய் புராண நீர்மையே
மாபுரணத்துட் கூறிய வாசுதேவனே திவிட்டன் என்றல்
அன்னணம் புராணநூ லகத்துத் தோன்றிய
கன்னவி விலங்குதோட் காளை யானவன்
மின்னவில் விசும்பின் றிழிந்து வீங்குநீர்
மன்னிய வரைப்பக மலிரத் தோன்றினான்
இதுவுமது
திருவமர் சுரமைநா டணிந்து செம்பொனால்
பொருவரு போதன முடைய பூங்கழல்
செருவமர் தோளினான் சிறுவ ராகிய
இருவரு ளிளையவ னீண்டந் நம்பியே
அவனுக்குச் சுயம்பிரபை உரியவள் என்றல்
கானுடை விரிதிரை வையங் காக்கிய
மானுட வுடம்பினான் மறைந்து வந்தவத்
தேனுடை யலங்கலான் றெய்வ மார்பகம்
தானடைந் தமர்வதற் குரிய டையலே
திவிட்டனால் அடையவிருக்குஞ் சிறப்பைக் கூறுதல்
ஆங்கவற் கீந்தபி னாழி தாங்கிய
ஈங்கவற் கொன்றுனக் கிரண்டு சேடியும்
தாங்கிய திருவினாற் றருமற் றென்றலும்
வீங்கிய வுவகையன் வேந்த னாயினான்
சதவிந்து தான் கூறும் நிமித்தத்திற்கு அடையாளமாகத் திவிட்டன் ஒரு சிங்கத்தின் வாயைப் பிளப்பான் என்றல்
கொங்கலர் தெரியலான் றிறத்திற் கொள்குறி
இங்கியா னிசைத்ததே யமையு மல்லதோர்
திங்கணா ளகவையிற் றிவிட்ட னாங்கொரு
சிங்கம்வாய் பிளந்திடுந் தெளியீ தென்னவே
நிமித்திக னுரைத்தது நிறைந்த சோதியான்
உமைத்தகை யிலாததோ ருவகை யாழ்ந்துகண்
இமைத்ததில னெத்துணைப் பொழுது மீர்மலர்ச்
சுமைத்தகை நெடுமுடி சுடரத் தூக்கினான்
சடியரசன் சதவிந்துவிற்குப் பரிசில் வழங்குதல்
இருதிலத் தலைமக னியன்ற நூற்கடல்
திருநிதிச் செல்வனச் செம்பொன் மாரியாச்
சொரினிதிப் புனலுடைச் சோதி மாலையென்
றருநிதி வளங்கொணா டாள நல்கினான்
அரசன் தன் மனைவி வாயுவேகைக்குச் செய்தி கூறுவித்தல்
மன்னவன் பெயர்ந்துபோய் வாயு வேகைதன்
பொன்னகர் புக்கனன் பொழுதுஞ் சென்றது
கன்னிதன் பெருமையுங் கருமச் சூழ்ச்சியும்
அன்னமென் னடையவட் கறியக் கூறினான்
மக்கட்பேற்றின் மாண்பு கூறல்
தொக்கின மலர்த்துதை விலாத சோலையும்
புக்கிளந் தாமரை நகாத பொய்கையும்
மிக்கிளம் பிறைவிசும் பிலாத வந்தியும்
மக்களை யிலாததோர் மனையு மொக்குமே
குலத்தைக் கற்பக மரமாகக் கூறுதல்
தலைமகள் றாடனக் காகச் சாகைய
நிலைமைகொண் மனைவியர் நிமிர்ந்த பூந்துணர்
நலமிகு மக்களா முதியர் தேன்களாக்
குலமிகு கற்பகங் குளிர்ந்து தோன்றுமே
நன்மக்களைப் பெறுதல் நங்கையர்க்கு அருமை என்றல்
சூழிநீண் முகத்தன துளைக்கைம் மாவொடு
மாழைநீண் மணியிவை யெளிய மாண்பினால்
வாழுநீர் மக்களைப் பெறுதன் மாதரார்க்
காழிநீர் வையகத் தரிய தாவதே
நின்மகள் விளக்குப் போன்றவள் என்றல்
தகளிவாய்க் கொழுங்சுடர் தனித்துங் கோழிருள்
நிகளவாய்ப் பிளந்தகஞ் சுடர நிற்குமே
துகளிலாச் சுடர்மணி துளும்பு பூணினாய்
மகளெலாத் திசைகளு மலிர மன்னினாள்
மகளாற் குலஞ் சிறப்படைந்தது என்றல்
வலம்புரி வயிற்றிடைப் பிறந்த மாமணி
நலம்புரி பவித்திர மாகு நாமநீர்
பொலம்புரி மயிலனாய் பயந்த பூங்கொடி
குலம்புரிந் தவர்க்கெலாங் கோல மாகுமே
நீ சிறப்படைந்தாய் எனல்
மக்களை யிலாதவர் மரத்தொ டொப்பவென்
றொக்கநின் றுரைப்பதோ ருரையு மூய்த்துநீர்
நக்கவா னிளம்பிறை வளர்ந்த நாட்கதிர்ச்
செக்கர்வா னனையதோர் திருவு மெய்தினாய்
சுயம்பிரபையின் பெருமை
மாவினை மருட்டிய நோக்கி நின்மகள்
பூவினுண் மடந்தைபொற் பூவை நாளொளித்
தேவனுக் கமிர்தமாந் தெய்வ மாமென
ஓவினூற் புரோகித னுணர வோதினான்
வாயுவேகை பதிலுரைக்கத் தொடங்குதல்
மத்தவார் மதகளிற் றுழவன் மற்றிவை
ஒத்தவா றுரைத்தலு மூவகை கைம்மிக
முத்தவாண் முகிழ்நகை யடக்கி மொய்குழல்
தொத்துவார் பிணையலா டொழுது சொல்லினாள்
சுயம்பிரபை நின்னருளினாற் சிறந்தவளாயினாள் என்றல்
மின்னவிர் மணிமுடி வேந்தர் வேந்தவிக்
கன்னிநின் னருளினே கருதப் பட்டனள்
மன்னவ ரருளில ராயின் மக்களும்
பின்னவர் பெறுவதோர் பெருமை யில்லையே
இதுவும் அது
பிடிகளை மகிழ்களிற் றரசர் பெய்ம்மலர்
முடிகளின் மணிபொர முரலு மொய்கழல்
அடிகள தருளினா லம்பொன் சாயலிக்
கடிகமழ் குழலினாள் கவினு மெய்தினாள்
அரசன் இன்புற்றிருத்தல்
திருமனைக் கிழத்திதன் றேங்கொள் சின்மொழி
மருமணி முடியினான் மகிழ்ந்து மற்றவள்
பருமணிப் பூண்முலை பாய மார்பிடை
அருமணித் தெரியறே னழிய வைகினான்
மறுநாள் மன்னன் மன்றங்கூடிப் பேசுதல்
மற்றைநாண் மகனையு மமைச்சர் தம்மையும்
கொற்றவாட் டடக்கையான் கூவிக் கொண்டிருந்
திற்றியான் கருதிய தென்று தொல்லைநூல்
கற்றநா வலனது கதையுஞ் சொல்லினான்
சுயம்பிரபை மணச்செய்தியை அரசன் சொல்ல அமைச்சர் பதில் கூறத்தொடங்குதல்
வீங்கிய முலையவ டிருவும் வெம்முலைக்
கோங்கிய முகிலவ னுரிய பெற்றியுந்
தாங்கிய புகழவன் மொழியத் தாரவர்
தேங்கிய வுவகையர் தெரிந்து சொல்லினார்
பயாபதி யரசனிடம் தூது அனுப்புவோம் என்றல்
தெய்வமே திரிகுழற் சிறுமி யாவதற்
கையமே யொழிந்தன மனலும் வேலினாய்
செய்யதோர் தூதினித் திவிட்டன் றாதையாம்
வெய்யவே லவனுழை விடுத்தும் வேந்தனே
மரீசியே தூது செல்வதற்கு ஏற்றவன் என்றல்
கற்றவன் கற்றவன் கருதுங் கட்டுரைக்
குற்றன வுற்றவுய்த் துரைக்கு மாற்றலான்
மற்றவன் மருசியே யவனை நாம்விடச்
சுற்றமுங் கருமமுஞ் சொல்ல வல்லனே
மரீசியைத் தூது அனுப்புதல்
காரியந் துணிந்தவர் மொழியக் காவலன்
மாரியந் தடக்கையான் வருக வென்றொரு
சீரிய திருமுகஞ் சிறப்பொ டீந்தனன்
ஆரியன் கழலடி யவனும் வாழ்த்தினான்
மரீசி சுரமைநாட்டுப் புட்பமாகரண்டப் பொழிலை வந்து சேர்தல்
மன்னவன் பணியொடு மருசி வானிடை
மின்னவிர் முகிற்குழா முழங்கும் வீதிபோய்த்
துன்னினன் சுரமைநாட் டகணி சூடிய
பொன்னகர் புறத்ததோர் பொழிலி னெல்லையே
வண்டினம் களியாட்டயர்தல்
புதுமலர்ப் புட்பமா கரண்ட மென்னுமப்
பொதுமலர்ப் பூம்பொழில் புகலும் பொம்மென
மதுமலர் பொழிதர மழலை வண்டினம்
கதுமல ரினையொடு கலவி யார்த்தவே. 192
மந்திரசாலைச் சருக்கம் முற்றிற்று
-----------------
ஆறாவது
தூதுவிடு சருக்கம்
பொழிலிலுள்ள மரங்கள், மகிழ், தேமா, சுரபுன்னை, புன்கு முதலியன
மருவினியன மதுவிரிவன மலரணிவன வகுளம்
திருமருவிய செழுநிழலன செங்குழையன தேமா
வரிமருவிய மதுகரமுண மணம்விரிவன நாகம்
பொரிவிரிவன புதுமலரென புன்குதிர்வன புறனே
சந்தனம் சண்பகம் குரா அசோகம் ஆகிய மரங்கள்
நிழனகுவன நிமிர்தழையன நிறைகுளிர்வன சாந்தம்
எழினகுவன விளமலரென வெழுசண்பக நிகரம்
குழனகுவன மதுகரநிரை குடைவனபல குரவம்
அழனகுவன வலர்நெரிதர வசை நிலையவ சோகம்
இரதம் இருப்பை தாழை புன்னை ஆகியவை
எழுதுருவின வெழுதளிரென விணரணிவன விரதம்
இழுதுருவின கொழுமலரிடை யெழில்பொலிவன மதுகம்
கழுதுருவின கஞலிலையன கழிமடலின் கைதை
பொழுதுருவின வணிபொழிலின பொழி தளிரென புன்னை
மல்லிகை முல்லை முதலிய கொடி வகைகளின் மாண்பு
வளர்கொடியன மணம்விரிவன மல்லிகையொடு மெளவல்
நளிர்கொடியன நறுவிரையக நறுமலரன நறவம்
குளிர்கொடியன குழைமாதவி குவிமுகையன கொகுடி
ஒளிர்கொடியன வுயர்திரளினோ டொழு கிணரன வோடை
கோங்கு முதலியன
குடையவிவன கொழுமலரின் குளிர்களின கோங்கம்
புடையவிழ்வன புதுமலரன புன்னாகமொ டிலவம்
கடியவிழ்வன கமழ் பாதிரி கலிகளிகைய சாகம்
இடையவிழ்வன மலரளவில விதுபொழிலின தியல்பே
பொழிலில் வாழும் வண்டு ,புள் முதலியவற்றின் சிறப்பு
மதுமகிழ்வன மலர்குடைவன மணிவண்டொடு தும்பி
குதிமகிழ்வன குவிகுடையன நுகிகோதுபு குயில்கள்
புதுமகிழ்வன பொழிலிடையன புணர்துணையன பூவை
விதிமகிழ்பவர் மதிமகிழ்வுற விரவுற்றன விரிவே
மரீசி பூங்காவில் உள்ள பொய்கைக்கரையை அடைதல்
அதுவழகுத கைமகிழ்வுற வலர்தாரவ னடைய
இதுவழகிய திவண்வருகென வெழுபுள்ளொலி யிகவா
விதிவழகுடை விரியிலையிடை வெறிவிரவிய வேரிப்
பொதியவிழ்வன புதுமலரணி பொய்கைக்கரை புக்கான்
பொய்கைக்கரை மரீசியை வரவேற்றல்
புணர்கொண்டெழு பொய்கைக்கரை பொரு திவலைகள் சிதறாத்
துணர்கொண்டன கரைமாநனி தூறுமலர்பல தூவா
வணர்கொண்டன மலலுற்றலை வளர்வண்டின மெழுவா
இணர்கொண்டெதி ரெழுதென்றலி னெதிர்கொண்டதவ் விடமே
விஞ்சையர் தூதுவனாகிய மரீசி அசோகமரம் ஒன்றைக் காணுதல்
புனல்விரவிய துளிர்பிதிர்வது புரிமுத்தணி மணல்மேல்
மினல்விரவிய சுடர்பொன்னொளிர் மிளிர்வேதிகை மிகையொண்
கனல்விரவிய மணியிடைகன கங்கணியணி திரளின்
அனல்விரவிய வலரணியதொ ரசோகம்மது கண்டான்
மரீசி அசோகமரத்தின் நிழலையடைந்ததும், துருமகாந்தன் கல்லிருக்கையைக் காட்ட மரீசி
திகைத்தல்
அதனின்னிழ லவனடைதலு மதுகாவல னாவான்
பொதியின்னவிழ் மலர்சிதறுபு பொலிகென் றுரை புகலா
மதீயின்னொளி வளர்கின்றதொர் மணியின்சிலை காட்ட
இதுவென்னென இதுவென்னென வினையன்பல சொன்னான் 10
வேறு - நிலாநிழற்கல்லில் அமர்ந்திருக்குமாறு துருமகாந்தன் மரீசியை வேண்டிக்கொள்ளுதல்
மினற்கொடி விலங்கிய விலங்கன்மிசை வாழும்
புனற்கொடி மலர்த்தொகை புதைத்தபொலி தாரோய்
நினக்கென வியற்றிய நிலாநிழன் மணிக்கல்
மனக்கினிதி னேறினை மகிழ்ந்திருமி னென்றான்
இதுபொழிற்கடவுளுக்காக ஆக்கப் பெற்ற பொன்னிடம் அன்றோ? என்று மரீசி கேட்டல்
அழற்கதி ரியங்கற வலங்கிண ரசோகம்
நிழற்கதிர் மரத்தகைய தாக நினை கில்லேன்
பொழிற்கடவுள் பொன்னிடமி தென்னைபுகு மாறென்
றெழிற்கதிர் விசும்பிடை யிழிந்தவன் மொழிந்தான்
துருமாந்தகன் மரீசிக்குப் பதிலுரத்தல்
நிலாவளர் நிழற்கதிர் நிமிர்ந்தொளி துளும்பும்
சிலாதல மிதற்குரிய தெய்வமெனல் வேண்டா
அலாதவ ரிதற்குரிய ரல்லரவ ராவிர்
உலாவிய கழற் றகையி னீரென வுரைத்தான்
அங்கத நிமித்திகன் கூறியவற்றைக் கூறத்தொடங்குதல்
என்னவிது வந்தவகை யென்னினிது கேண்மின்
நன்னகரி தற்கிறைவன் முன்னநனி நண்ணித்
தன்னிகரி கந்தவ னங்கத னெனும் பேர்ப்
பொன்னருவி நூல்கெழுபு ரோகித னுரைத்தான்
தூதன் வருவான் என்று கூறியதைச் சொல்லுதல்
மின்னவிர் விளங்குசுடர் விஞ்சையுல காளும்
வின்னவி றடக்கைவிறல் வேலொருவன் வேண்டி
மன்னநின் மகற்கொரு மகட்கரும முன்னி
இன்னவ னினைப்பகலு ளீண்டிழியு மென்றான்
அச்சுவக்கிரீவனைக் கொல்வான் என்று அங்கத நிமித்திகன் கூறியதாகக் கூறல்
மடங்கலை யடுந்திற னெடுந்தகைதன் மாறாய்
அடங்கல ரடங்கவடு மாழியஃ தாள்வான்
உடங்கவ னுடன்றெரி துளும்பவரும் வந்தால்
நடந்தவ னடுங்கவடு நம்பியிவ னென்றான்
தன்னை அரசன் அங்கு இருக்குமாறு அமர்த்தியதைக் கூறுதல்
ஆங்கவன் மொழிந்தபி னடங்கலரை யட்டான்
தேங்கமழ் பொழிற்றிகழ் சிலாதலமி தாக்கி
ஈங்கவ னிழிந்தபி னெழுந்தெதிர்கொ ளென்ன
நீங்கல னிருந்தன னெடுந் தகையி தென்றான்
மரீசி தூது வந்து பொழிலில் தங்கியுள்ளமையை யுணர்ந்த அரசன் தூதுவனின் வழிப்பயணத்
துன்பை மாற்றுமாறு நான்கு நங்கையரை அனுப்புதல்
என்றவன் மொழிந்தபி னருந்தன னிருப்பச்
சென்றவன் வழிச் சிரமை தீர்மினென நால்வர்
பொன்றவழ் பொருந்திழை யணங்கினனை யாரை
மின்றவழ் விளங்குகொடி வேந்தனும் விடுத்தான்
பயாபதி மன்னன் விடுத்த பாவையர் புட்பமாகரண்டப் பூங்காவை நோக்கிப் புறப்படுதல்
பொன்னவிர் மணிக்கலை சிலம்பொடு புலம்ப
மின்னவிர் மணிக்குழை மிளிர்ந்தொளி துளும்பச்
சின்னமலர் துன்னுகுழ றேறலொடு சோர
அன்னமென வல்லவென வன்னண நடந்தார்
நலங்கனி மடந்தையர் நடத்தொறு மிணர்ப்போ
தலங்கலள கக்கொடி யயற்சுடர வோடி
விலங்குபுரு வக்கொடி முரிந்துவெரு வெய்த
மலங்கின விலங்கின மதர்த்தவவர் வாட்கண் 20
அலத்தக மலைத்தன வடித்தல மரற்றும்
கலைத்தலை மலைத்து விரி கின்றகடி யல்குல்
முலைத்தலை முகிழ்த்தொளி துளும்பி யுள முத்தம்
மலைத்தலை மயிற்கண் மருட்டுவர் சாயல்
வண்டுகள் ஒலித்தல்
கணங்கெழு கலாவமொளி காலுமக லல்குல்
சுணங்கெழு தடத்துணை முலைசுமை யிடத்தாய்
வணங்கியும் நுணங்கியும் வருந்திய மருங்கிற்
கிணங்குதுணை யாய்ஞிமி றிரங்கின வெழுந்தே
இடையின் வருத்தங் கண்டு வண்டுகள் இரங்கியெழுந்தனவென்க
முலைத்தொழில் சிலைத்தொழிலி னாருயிர் முருக்கும்
நிலைத்தொழில் வென்றுள நினைத்தொழுக வின்பக்
கலைத்தொழில்கள் காமனெய் கணைத்தொழில்க ளெல்லாம்
கொலைத்தொழில்கொள் வாட்கணி னகத்தகுறி கண்டீர்
துடித்ததுவர் வாயொடுது ளும்புநகை முத்தம்
பொடித்தவியர் நீரொடுபொ லிந்தசுட ரோலை
அடுத்ததில கத்தினொட ணிந்தவள கத்தார்
வடித்தசிறு நோக்கொடுமு கத்தொழில்வ குத்தார்
வண்டுகள் மயக்கம்
பூவிரிகு ழற்சிகைம ணிப்பறவை போகா
வாவிகொள கிற்புகையுள் விம்மியவ ரொண்கண்
காவியென வூதுவன கைத்தலம் விலங்க
மேவியிவை காந்தளென வீழமிக நொந்தார்
சுரும்பொடு கழன்றுள குழற்றொகை யெழிற்கை
கரும்பொடு கலந்துள களித்தவவர் தீம்பண்
நரம்பொடு நடந்துள விரற்றலை யெயிற்றேர்
அரும்பொடு பொலிந்ததுவர் வாயமிர்த மன்றே
கணங்குழை மடந்தையர் கவின்பிற ழிருங்கண்
அணங்குர விலங்குதொ றகம்புலர வாடி
மணங்கம ழலங்கலுடை மைந்தர்த மனந்தாழ்
வணங்கிடை வணங்குதொ றணங்கென வணங்கும்
மைந்தர்கள் கலங்கி மெலிதல்
நெய்யலர் குழற்றொகை நெருப்பினடு மென்பார்
மையலர் நெடுங்கணிவை வல்லகொலை யென்பார்
தொய்யலிள மென்முலையி னீர்சுடுதி ராயின்
உய்யல மெனத்தொழுது மைந்தர்க ளுடைந்தார்
வேறு--
நாம நூற்கலை விச்சை யினன்னெறி யிவைதாம்
தாம நீள்குழற் றளர்நடை யுருவுகொண் டனையார்
வாம மேகலை மடவர லிவர்களை வளர்த்தார்
காம நூலினுக் கிலக்கியங் காட்டிய வளர்த்தார்
அம்மாதர்களின் தன்மை
இனிய வீங்கிய விளமுலை யிவர்களை வளர்த்தார்
பனியின் மென்மல ரலர்ந்தன வுவகையிற் பயில்வார்
கனிப வேலிவர் கடல்விளை யமிர் தெனக் கனிவார்
முனிப வேலிவ ரனங்கனைங் கணையென முனிவார் 30
புலவி தானுமோர் கலவியை விளிப்பதோர் புலவி
கலவி தானுமோர் புலவியை விளைப்பதோர் கலவி
குலவுவார் சிலை மதனனைங் கணையொடு குலவி
இலவு வாயுடை யிளையவ ருடையன விவையே 31
மன்னு வார்சிலை மதனனோர் வடிவுகொண் டிலாதான்
தன்னை நாமுமோர் தகைமையிற் றணத்துமென் றிருப்பார்
என்னை பாவமிங் கிவர்களைப் படைத்தன னிதுவால்
பின்னை யாங்கவன் பிறவிக்கு முதல் கண்ட வகையே.
வாம மேகலை முதனின்று வயிற்றிடை வளைர்ந்த
சாம லேகைகண் மயிர்நிரை யலதல மீது
காம நீரெரி யகத்து கனன்றெழ நிமிர்ந்த
தூம லேகைகள் பொடித்தன துணை முலை யுறவே
சூசுகக் கருமைக்கோர் காரணஞ் சொல்லுதல்
சனங்க டாஞ்சில தவங்களைத் தாங்குது மெனப்போய்
வனங்கள் காப்பவ ருளரென முனிவமற் றன்றேல்
தனங்க டாழ்ந்தவழ் சந்தனக் குழம்பிடை வளர்ந்த
கனங்கொள் வெம்முகங் கறுப்பதென் காரண முரையீர்
தூம மென்புகை துழாவிவண் டிடை யிடை துவைக்கும்
தாம வோதியர் தம்முகத் தனபிறர் மனத்த
காம நீள்சிலை கணையொடு குனிவகண் டாலும்
யாமெ மின்னுயி ருடையமென் றிருப்பதிங் கெவனோ
மங்கையர் மலர்ப்பொழிலை அடைதல்
என்று மைந்தர்க ளிடருற வெழுதிய கொடிபோற்
சென்று கற்பக வனமன செறிபொழி லடைந்தார்
இன்று காமுகர் படையினை யிடர்பட நடந்த
வென்றி காமனுக் குரைத்துமென் றிரைத்தளி விரைந்த
வேறு - பணிப்பெண்கள் கொண்டுவந்த பலவகைப் பொருள்கள்
ஆடைகைத் தலத்தொருத்தி கொண்டதங் கடைப்பைதன்
மாடுகைத் தலத்தொருத்தி கொண்டது மணிக்கலம்
சேடிகைத் தலத்தன செறிமணித் திகழ்வசெங்
கோடிகைத் தலத்தன குளிர்மணிப் பிணையலே
மற்றும் பலர் பலபொருள்களைக் கொண்டுசெல்லுதல்
வண்ணச் சந்தங்க ணிறைந்தன மணிச்செப்பு வளர்பூங்
கண்ணிச் சந்தங்க ணிறைந்தன கரண்டகங் கமழ்பூஞ்
சுண்ணச் சந்தங்க ணிறைந்தன சுடர்மணிப் பிரப்போ
டெண்ணச் சந்தங்கள் படச்சுமந் திளையவ ரிசைந்தார்
மகளிர் பலரின் வருகையைக் கண்ட மரீசி இது விண்ணுலகமே யென்று வியத்தல்
தகளி வெஞ்சுட ரெனத்திகழ் மணிக்குழை தயங்க
மகளிர் மங்கல வுழைக்கலஞ் சுமந்தவர் பிறரோ
டுகளு மான்பிணை யனையவ ருழைச் செல வொளிர்தார்த்
துகளில் விஞ்சையன் றுணிந்தனன் றுறக்கமீ தெனவே
மரீசிக்கு வேண்டுவன புரிதல்
துறக்கம் புக்கவர் பெறுவன விவையெனத் துணியா
வெறிக்கண் விம்மிய விரைவரி தாரவ னிருப்பச்
சிறைக்க ணோக்கமுஞ் சிறுநகைத் தொழில்களுஞ் சுருக்கி
அறைக்கண் மாந்தனுக் கதிதியந் தொழிலினி லமைந்தார்
மங்கையர் வழிபாட்டைப் பெறும் மரீசி தேவனைப்போலத் திகழ்தல்
ஆட்டி னார்வெறி கமழ்வன வணிகிளர் நறுநீர்
தீட்டி னார்நறுஞ் சாந்தமுஞ் சிறிதுமெய் கமழச்
சூட்டி னார்சிலர் நறுமல ரறுசுவை யடிசில்
ஊட்டி னாரவ னமரரு ளொருவனொத் தொளிர்ந்தான்
மாதர்கள் மாட்சிமையை எண்ணி மரீசி மகிழ்ந்திருத்தல்
வயந்த முன்னிய திலகைகல் லியாணிகை வடிவார்
வியந்த சேனைமென் கமலமா லதையென விளம்பும்
இயங்கு பூங்கொடி யனையவ ரியல்புக ணினையா
வயங்கு தொல்புக ழம்பர சரன்மகிழ்ந் திருந்தான்
வேறு - பயாபதி மன்னனுடைய கட்டளைப்படி மரீசியை அழைத்ததற்கு விசய திவிட்டர்கள் புறப்படுதல்
ஆங்கெழிற் பொலிந்தவன் னிருந்தபின் னலங்குதார்
வீங்கெழிற் பொலிந்தானை வேந்தனேவ வீவில்சீர்ப்
பூங்கழற் பொலங் குழைந் திவிட்டனோடு போர்க்கதந்
தாங்கெழிற் பெருங்கையானை சங்க வண்ண னேறினான்
யானைமீது விசய திவிட்டர்கள் ஏறிய சிறப்பு
தம்பியோடு ங்கவிசய திவிட்டர்கள் ஏறிய சிறப்பு
பைம்பொ னோடை வீழ்மணிப் பகட்டெருத்த மேறினான்
செம்பொன்மா மலைச்சிகைக் கருங்கொண்மூவி னோடெழூஉம்
வம்பவெண்ணி லாவிங்கு திங்கள்போல மன்னினான்
விசய திவிட்டர்களுடன் பலவகைப் படைகள் புறப்படுதல்
ஆர்த்தபல்லி யக்குழா மதித்தகுஞ்ச ரக்குழாம்
தேர்த்தவீரர் தேர்க்குழாந் திசைத்தபல்ச னக்குழாம்
போர்த்தசா மரக்குழாம் புதைத்தவெண் கொடிக்குழாம்
வேர்த்தவேந்தர் பல்குழாம் விரைந்தகூந்தல் மாக்குழாம்
விசய திவிட்டர்கள் கண்ட விளங்கிழையார் மயக்கம்
பாடுவார்வ ணங்குவார்ப லாண்டுகூறி வாழ்த்துவார்
ஆடுவாரோ டார்வமாந்த ரன்னரின்ன ராயபின்
சூடுமாலை சோரவுந் தொ டாரமாலை வீழவும்
மாடவாயின் மேலெலாம டந்தைமார்ம யங்கினார்
கொண்டலார்ந்த பொன்னொளிக் குழற்கொடிக்கு ழாமனார்
மண்டலந்நி றைந்ததிங்கள் வட்டமொத்த வாண்முகம்
குண்டலங்கொ ழும்பொனோலை யென்றிரண்டு கொண்டணிஇ
வண்டலர்ந்து மாலைதாழ்ந்து மாடவாய்ம றைந்தவே
கூடுதும்பி யூடுதோய்கு ழற்றொகைத்து ணர்துதைந்
தோடுமேலெ ருத்திடைக்கு லைந்தகோதை யோடுலாய்
மாடவாயின் மாலைஞால மாடமேறு மாதரார்
ஆடுமஞ்ஞை கோடுகொள்வ தென்னலாவ தாயினார்
தொண்டைவாய் மடந்தைமார்கள் சுடிகைவட்ட வாண்முகம்
கொண்டகோல நீரவாய கோடிமாட மேலெலாம்
வண்டுசூழ்ந்த பங்கயம லர்க்குழாமி ணைப்படூஉக்
கெண்டையோடு ந்ன்றலைந்த கேழவாய்க்கி ளர்ந்தவே
விசயதிவிட்டர்களை நகரத்து மாதர்கள் காணுதல்
மாலைதாழு மாடவாய் நிலத்தகத்து மங்கைமார்
வேலவாய நெடியகண் விலங்கிநின் றிலங்கலால்
சாலவாயி றாமெலாமொர் தாமரைத் தடத்திடை
நீலமாம லர்க்குழாநி ரந்தலர்ந்த நீரவே
சுண்ணமாரி தூவுவார் தொடர்ந்துசேர்ந்து தோழிமார்
வண்ணவார வளைதயங்கு முன்கைமேல்வ ணங்குவார்
நண்ணிநா ணொழிந்துசென்று நம்பிமார்கள் முன்னரே
கண்ணிதம்மி னென்றிரந்து கொண்டுந்ன்று கண்ணுவார்
பாடுவார்மு ரன்றபண்ம றந்தொர்வாறு பாடியும்
ஆடுவார்ம றந்தணிம யங்கியர்மை யாடியும்
சூடுவான்றொ டுத்த கோதை சூழ்குழன்ம றந்துகண்
நாடுவாய்நி ழற்கணிந்து நாணுவாரு மாயினார்
இட்டவில்லி ரட்டையுமி ரண்டுகெண்டை போல்பவும்
விட்டிலண்க்கு தொண்டையங் கனிப்பிழம்பொ டுள்விராய்ச்
சுட்டிசூட்ட ணிந்துசூளி மைமணிசு டர்ந்துனீள்
பட்டம்வேய்ந்த வட்டமல்ல தில்லைநல்ல பாங்கெலாம்
அலத்தகக்கு ழம்புதம்ம டித்தலத்தொர் பாகமா
நிலத்தலத்தொர் பாகமா நீடுவாயில் கூடுவார்
கலைத்தலைத்தொ டுத்தகோவை கண்ணெகிழ்ந்து சிந்தலான்
மலைத்தலைத்த ழற்சிதர்ந்த போன்றமாட வாயெலாம்
பாடகந்து ளங்கவும்பு சும்பொனோலை மின்னவும்
சூலகந்து ளும்பவஞ் சு ரும்புகழ்ந்து பாடவும்
ஊடகங்க சிந்தொசிந்து நின்றுசென்று வந்துலாய்
நாடகங்க ணன்னர்க்க ணங்கைமார்ந விற்றினார்
மாதர்கள் மயக்கம்
மாலையால்வி ளங்கியும்பொன் வாசச்சுண்ணம் வீசியும்
சாலவாயி லாறுசந்த னக்குழம்பு சிந்தியும்
நீலவாணெ டுங்கணார்நி ரந்து நெஞ்சு தாழொரீஇ
ஞாலமாளு நம்பிமாரின் மாலுமாகி நண்ணினார்
வேய்மறிந்த தோள்விளர்த்து வெவ்வுயிர்ப்பொ டுள்விராய்த்
தோமறிந்த சூழ்துகின்னெ கிழ்ந்துடுத்து வீழ்ந்தசைஇப்
பூமறிந்த தேங்குழன் முடிப்பொதிந்து வீழ்த்துலாய்த்
தாமறிந்த முல்லைவாய தாதுகுத்து டங்கினார்
விசயதிவிட்டர்களுடைய படை பொழிலை அடைதல்
கொங்குவார்ம லர்த்தடத்த மர்ந்தகோதை மார்களோ
டங்கராகம் வீற்றிருந்த ணிந்தவார மாகுலாய்
மங்கைமார்கள் கண்ணும்வண்டு மாலையும னங்களும்
தங்குமார்பி னம்பிமார்க டானைசோலை சார்ந்ததே
விசயதிவிட்டர்கள் பொழிலை அடைதல்
மானளாய நோக்கினார்ம னங்கலந்து பின்செல
வானளாய சோலைவாயின் மன்னவீரர் துன்னலலும்
கானளாய போதணிந்து காவிவிம்மு கள்ளளைஇத்
தேனளாவு வண்டுகொண்டு தெறல்சென் றெழுந்ததே
விசயதிவிட்டர்கள் வேழத்தினின்று இறங்குதல்
செம்முகப்ப சும்பொ னோடை வெண்மருப்பி ணைக்கரு
வெம்முகத்து வீழ்கடாத்து வேழநின்றி ழிந்தபின்
கைம்முகத்து வேலிலங்கு காமர் தாங்கொ லென்றுசென்
றம்முகத்து தும்பிவண்டு தேனொடாடி யார்த்தவே
பொழிலின் காட்சி
தாதுநின்ற தேறனீர் தளித்திவற்றின் மேலளி
கோதுகின்ற போதுகொண்டு சிந்திநம்பி மார்களை
மாதுநின்ற மாதவிக் கொடிகடந் தளிர்க்கையால்
போதுகென்றி டங்கள்காட்டு கின்றபோற்பொ லிந்தவே
பூங்காவின் பொதுக்காட்சி
போதுலாய வேரிமாரிஇ சாரலாய்ப்பொ ழிந்துதேன்
கோதலா னெரிந்துதாது கால்குடைந்து கொண்டுறீஇ
மாதுலாய வண்டிரைத்து மங்குல்கொண்டு கண்மறைத்
தேதிலார்க்கி யங்கலாவ தன்றுசோலை வண்ணமே
தென்றல் வீசுதல்
போதுலாய பூம்பொதும்பர் மேலதென்றல் வீசலால்
தாதுலாய போதணிந்து தாழ்ந்துதாம வார்குழல்
மாதரார்கள் போலவல்லி மார்புபுல்லி மைந்தரைக்
காதலால்வ ளைப்பபோன்று காவினுட்க லந்தவே
விசயதிவிட்டர்கள் அசோகமரத்தின் இடத்தை அடைதல்
புல்லிவண்ட மர்ந்துகங்கு பூந்தழைப்பொ தும்பிடை
மல்லிகைக்கொ டிக்கலந்து மெளவல்சூட வெளவுநீர்
வல்லிமண்ட பங்கள்சென்று மாதவிக் கொழுந்தணி
அல்லிமண்ட பத்தயல சோகமாங்க ணெய்தினார்
விஞ்சையர் தூதுவன் விசயதிவிட்டர்களை வணங்குதல்
பஞ்சிலங்கு மல்குலார்ப லாண்டுகூற வாண்டுபோய்
மஞ்சிலங்க சோகநீழன் மன்னவீரர் துன்னலும்
விஞ்சையன்ம கிழ்ந்தெழுந்து வென்றிவீரர் தங்களுக்
கஞ்சலித்த டக்கைகூப்பி யார்வமிக்கி றைஞ்சினான்
நீர் எம்மை வணங்குவது ஏன்? என்று விசயன் மரீசியைக் கேட்டல்
ஆங்கவனி றைஞ்சலு மலர்ந்ததிங்க ணீளொளிப்
பூங்கழற்பொ லங்குழைப்பொ லிந்திலங்கு தாரினான்
நீங்கருங்கு குணத்தினீவிர் நீடுகுரவ ராதலில்
ஈங்கெமக்கு நீர்பணிந்த தென்னையென்றி யம்பினான்
விசயதிவிட்டர்களை மரீசி வியந்து நோக்குதல்
பானிறக்க திர்நகைப ரந்தசோதி யானையும்
நீனிறக்க ருங்கட னிகர்க்குமேனி யானையும்
வானெறிக்கண் வந்தவன்ம கிழ்ந்துகண்ம லர்ந்துதன்
நூனெறிக்கண் மிக்கநீர்மை யொக்கநின்று நோக்கினான்
மேலும் விசயதிவிட்டர்களை நன்கு பார்த்தல்
வேல்கொடானை வீரர்தம்மை விஞ்சையன் வியந்துநீள்
நூல்கொள்சிந்தை கண்கடாவ நோக்கிநோக்கி யார்காலன்
கால்கள்கொண்டு கண்ணிகாறு முண்மகிழ்ந்து கண்டுகண்
மால்கொள்சிந்தை யார்கள்போல மற்றுமற்று நோக்கினான்
மரீசி விசயதிவிட்டர்களைப் பார்த்துப் பேசத் தொடங்குதல்
வேரிமாலை விம்மவும்வி ளங்குபூண்டு ளும்பவுந்
தாரொடார மின்னவுந்த யங்குசோதி கண்கொள
வாரநோக்க கில்லனன்ன னரசநம்பி மார்களைச்
சாரவாங்கொர் கற்றலத்தி ருந்துகான்வி ளம்பினான்
விஞ்சையர் தூதுவன் விசயதிவிட்டரின் மேம்பாட்டைக் கூறுதல்
செம்பொன்வான கட்டிழிந்து தெய்வ யானை யுண்மறைஇ
வம்புநீர்வ ரைப்பகம்வ ணக்கவந்த மாண்புடை
நம்பிமீர்க ணுங்கள்பாத நண்ணிநின் றி றைஞ்சுவார்
அம்பொன்மாலை மார்பினீர ருந்தவஞ்செய் தார்களே
திங்கள்வெண் கதிர்ச்சுடர்த் திலதவட்ட மென்றிரண்
டிங்கண்மா லுயிர்க்கெலாமெ ளிய்யவென்று தோன்றலும்
தங்கள்சோதி சாரலாவ வல்லவன்ன நீரவால்
எங்கண்முன்னை நுடங்கடன்மை யென்றுபின்னை யேத்தினான்
தந்தையைக் காணச்செல்வோம் என்று விசயதிவிட்டர்கள் மரீசியை அழைத்தல்
இமைகள்விட்ட நோக்கமேற வின்னபோல்வ சொல்லலு
மமைகமாற்றம் நூம்மை யெங்க ளடிகள்காண வேகுவாம்
சுமைகொண்மாலை தொடுகளிற்றெ ருத்தமேறு கென்றனர்
சிமைகொடேவர் போலநின்று திகழுகின்ற சோதியார்
மரீசியும் விசயதிவிட்டர்களும் யானைகள்மீது தனித்தனியே அரண்மனைக்குப் புறப்படுதல்
அம்பொன்மாலை கண் கவர்ந்த லர்ந்தசெல்வ வெள்ளமேய்
வெம்புமால்க ளிற்றெருத்தம் விஞ்சையாளன் மேல்கொளப்
பைம்பொன்மாலை வார்மதப்ப ரூஉக்கை யீரு வாக்கண்மீச்
செம்பொன்மாலை மார்பசேர்ந்து தேவரிற்று ளும்பினார்
மகளிர் எதிர்கொள்ள நகரஞ் சேர்தல்
கதிர்நகைக் கபாட வாயிற் கதலிகைக் கனக நெற்றி
மதிநக வுரிஞ்சு கோட்டு மாளிகை நிரைத்த வீதிப்
புதுநக ரிழைத்து முத்து பொலங்கலத் தொகையும் பூவும்
எதிர்நகைத் துகைத்து மாத ரெதிர்கொள நகரஞ் சேர்ந்தார்
மருசியும் விசயதிவிட்டரும் சேர்ந்திருந்ததன் வருணனை
விரைக்கதி ரலங்கற் செங்கேழ் விண்ணியங் கொருவ னோடும்
வரைக்கெதிர்ந் திலங்கு மார்பின் மன்னவ குமரச் செல்வர்
எரிக்கதி ரேற்றைக் கால மெழுநிலாப் பருவ மேக
நிரைத்தெழு மிருது மன்று நிரந்ததோர் சவிய ரானார்
தெருவிற் செல்லுதல்
வார்கலந் திலங்கு கொம்மை வனமுலை மகளி ரிட்ட
ஏர்கலந் தெழுந்த தூம வியன்புகை கழுமி நான
நீர்கலந் துகுத்த மாலை நிறமதுத் திவலை சிந்தக்
கார்கலந் திருண்ட போலுங் கண்ணகன் தெருவுட் சென்றார் 75
அரண்மனையின் வாயிலை அடைதல்
தெளிர்முத்த மணலுஞ் செம்பொற் சுண்ணமுஞ் சிதர்ந்து தீந்தேன்
தளிர்முத்த மலரும் போதும் சாந்தமு வண்டார்
ஒளிர்முத்த முறுவ லார்த முழைக்கலங் கலந்து மாலைக்
குளிர்முத்த நிழற்றுங் கோயிற் பெருங்கடை குறுகச் சென்றார்
பயாபதி மன்னன் பொற்கூடத்தில் அமருதல்
மற்றவை ரடைந்த போழ்கின் வாயிலோ ருணர்த்தக் கேட்டு
கொற்றவ னருவி தூங்குங் குளிர்மணிக் குன்றம் போல
முற்றிநின் றிலங்குஞ் செம்பொன் முடிமிசை முத்த மாலைக்
கற்றைகள் தவழச் சென்றோர் கனககூ டத்தி ருந்தான்
பயாபதி மன்னன் மூவரையும் அமரச் செய்தல்
மன்னவ குமர ரோடும் விஞ்சையன் மகிழ்ந்து வையத்
தின்னருள் புரிந்த வேந்த னிடையறிந் தினிதி னெய்திக்
கன்னவில் தோளி னான்றன் கழலடி தொழுது நின்றான்
அன்னவர்க் கிருக்கைத் தான மரசனு மருளிச் செய்தான்
பயாபதி அம்மன்னன் வீற்றிருக்கும் காட்சி
வீரியக் குமர ரொடும் விஞ்சையஞ் செல்வ னோடும்
காரியக் கிழவர் சூழக் கவின்றுகண் குளிரத் தோன்றி
ஆரியன் னலர்ந்த சோதி யருங்கலப் பீட நெற்றிக்
தாரகை யணிந்து தோன்றுஞ் சந்திர சவிய னானன்
மன்னவன் விஞ்சையனுக்கு முகமன் கூறியிருத்தல்
அலகையில் தானை வேந்த னம்பர சரனை நோக்கி
உலகுப சார மாற்ற முரைத்தலுக் குரிய கூறி
விலகிய கதிர வாகி விளங்கொளிக் கடகக் கையான்
மலரகங் கழுமப் போந்து மனமகிழ்ந் திருந்த போழ்தின் 80
மருசி கொண்டுவந்த திருமுகத்தை மதிவரன் வாங்குதல்
விஞ்சைய னெழுந்து தங்கோன் வெள்ளிவே தண்ட நோக்கி
அஞ்சலித் தடக்கை கூப்பி யரக்கிலச் சினையின் வைத்த
எஞ்சலி லோலை காட்ட விறைமகன் குறிப்பு நோக்கி
வஞ்சமில் வயங்கு கேள்வி மதிரவன் கரத்தில் வாங்கி
மதிவரன் திருமுகவோலையைப் படித்தல்
நிகரிகந் தழகி தாகி நெரிவடுப் படாத வேழப்
புகர்முகப் பொறிய தாய புகழ்ந்தசொல் லகத்துப் போகா
மகரவாய் மணிகட் செப்பின் மசிகலந் தெழுதப் பட்ட
பகரரும் பதங்கள் நோக்கிப் பயின்று பின் வாசிக் கின்றான்
இதுவும் அடுத்த பாடலும் திருமுகச் செய்தி
போதனத் திறைவன் காண்க விரதநூ புரத்தை யாளும்
காதுவேன் மன்ன னோலை கழலவன் றனக்கு நாளும்
ஆதிய வடிசி லொண்கே ழஞ்சன முள்ளிட் டெல்லாம்
தீதுதீர் காப்புப் பெற்றுச் செல்கென விடுத்த தன்றே
அல்லதூஉங் கரும தலங்குதா ரிவுளித் திண்டேர்
வல்லக னிளைய நம்பிக் குரியளா வழங்கப் பட்டாள்
மல்லக மார்பி னன்றான் மருமக ளிவளைக் கூவி
வல்லிதிற் கொடுக்க மன்னன் வாழ்கதன் கண்ணி மாதோ
திருமுகச்செய்திகேட்ட பயாபதிமன்னன் யாதுங் கூறாதிருத்தல்
என்றவ னோலைவாசித் திருந்தன னிறைவன் கேட்டு
வென்றியம் பெருமை விச்சா தரரென்பா ரெம்மின் மிக்கார்
இன்றிவன் விடுத்த திவ்வா றென்கொலோ வென்று சிந்தித்
தொன்றுமற் றுரைக்க மாட்டா திருந்தன னுரங்கொ டோ ளான்
மருசி சினத்துடன் கூறத்தொடங்குதல்
தீட்டருந் திலதக் கண்ணிச் செறிகழ லரசர் கோமான்
மீட்டுரை கொடாது சால விம்மலோ டிருப்ப நோக்கி
வாட்டரும் பெருமை யெங்கோ னோலையை மதியா வாறென்
றோட்டருங் கதத்த னாகிக்கேசர னுரைக்க லுற்றான்
மருசி சினந்து கூறுவன
முன்னமோர் கருமம் வேண்டி மொழிபவேல் மனிதர் தம்மால்
என்னவ ரேனு மாக விகழ்ந்திடப் படுப போலாம்
அன்னதே யுலக வார்த்தை யாவதின் றறியும் வண்ணம்
மின்னவின் றிலங்கும் வேலோய் நின்னுழை விளங்கிற் றன்றே
பூவிரி யுருவக் கண்ணிப் பொலங்குழை யிலங்கு சோதித்
தேவரே யெனினுந் தோறச் சில்பகல் செல்ப வாயில்
ஏவரே போல நோக்கி யிகழ்ந்துரைத் தெழுவ தன்றே
மாவிரி தானை மன்னா மனிதர தியற்கை யென்றான்
வரைமலி வயங்கு தோளாய் வியாதியான் மயங்கி னார்க்குச்
சுரைமலி யமிர்தத் தீம்பால் சுவைதெரிந் துண்ண லாமோ
விரைமலி விளங்கு பைந்தார் விஞ்சையர் செல்வந் தானும்
நுரைமலி பொள்ளல் யாக்கை மனித்தர்க்கு நுகர லாமோ
அறவிய மனத்த ரன்றி யழுங்குத லியல்பி னார்க்குப்
பிறவியை யறுக்குங் காட்சிப் பெருநிலை யெய்த லாமோ
வெறிமயங் குருவக் கண்ணி விஞ்சையர் விளங்கு தானம்
மறவியின் மயங்கி வாழும் மனித்தர்க்கு நிகழ்த்த லாமோ 90
அருங்கடி கமழுந் தாரை யழிமதக் களிற்றி னாற்றல்
மரங்கெடத் தின்று வாழுங் களபக்கு மதிக்க லாமோ
இரங்கிடு சிறுபுன் வாழ்க்கை யிந்நிலத் தவர்கட் கென்றும்
வரங்கிடந் தெய்த லாமோ மற்றெமர் பெருமை மன்னா
உள்ளிய மரங்கொள் சோலை மண்மிசை யுறையு மாந்தர்
ஒள்ளிய ரேனுந் தக்க துணர்பவ ரில்லை போலாம்
வெள்ளியஞ் சிலம்பி னென்கோன் விடுத்தே யேது வாக
எள்ளியோ ருரையு மீயா திருந்தனை யிறைவ வென்றான்
பயாபதி மன்னன் பதில் உரைத்தல்
ஆங்கவ னுரைப்பக் கேட்டே யம்பர சரனை நோக்கித்
தேங்கம ழலங்கன் மார்ப சிவந்துரை யாடல் வேண்டா
ஓங்கிய வோலை மாற்றக் குரியவா றுரைக்க மாட்டா
தீங்கியா னிருந்த தென்றா னெரிசுடர் வயிரப் பூணான்
வெஞ்சுடர் தெறுதீ விச்சா தரரென்பார் மிக்க நீரார்
செஞ்சுடர்த் திலதக் கண்ணித் தேவரே தெரியுங் காலை
மஞ்சிடை மண்ணுள் வாழும் மக்களுக் கவர்க டம்மோ
டெஞ்சிய தொடர்ச்சி இன்ப மெய்துதற் கரிது மாதோ
ஈட்டிய வூன்செய் யாக்கை யெம்முழை யின்ன வாறு
வாட்டமில் வயங்கு கண்ணி மணிமுடி மன்ன னோலை
காட்டிநீ யுரைத்த வெல்லாங் கனவெனக் கருதி னல்லான்
மீட்டது மெய்ம்மை யாக வியந்துரை விரிக்க லாமோ
இன்னவ னின்ன நீரா னின்னவே யெய்து கென்று
முன்னவன் செய்த மொய்ம்பின் வினைகளே முயல்வ தல்லால்
பின்னவன் பிறந்து தன்னாற் பெறுதலுக் குரிய வாய
துன்னுவ தென்றுக் கான்று துணியுமோ சொல்ல வென்றான்
மெய்ப்புடை தெரிந்து மேலை விழுத்தவம் முயன்று நோற்றார்க்
கொப்புடைத் துங்கள் சேரி யுயர்நிலைச் செல்வ மெல்லாம்
எப்படி முயறு மேனு மெங்களுக் கெய்த லாகா
தப்படி நீயு முன்னர் மொழிந்தனை யன்றே யென்றான்
விஞ்சைச் சாரணான் நாணிச் சினம் மறுதல்
இறைவனாங் குரைத்த சொற்கேட் டென்னைபா வம்பொ ருந்தாக்
கறையவா மொழிகள் சொன்னேன் காவலன் கருதிற் றோரேன்
பொறையினாற் பெரியன் பூபன் சிறியன்யா னென்று நாணி
அறிவினாற் பெரிய நீரா னவிந்தன கதத்த னானான்
பயாபதியின் ஐயத்தை மருசி அகற்றுதற்கு உரைக்கத் தொடங்கல்
கிளர்ந்தொளி துளும்பும் மேனிக் கேசர ரோடு மண்மேல்
வளர்ந்தொளி திவளும் பூணோர் மணவினை முயங்க லில்லென்
றளந்தறி வரிய சீரோற் கையமீ தகற்று கென்றாங்
குளர்ந்துன னுணர்வி னூக்கி யுரைக்கிய வெடுத்துக் கூறும்
விஞ்சையரும் மனிதரே என்பதை மருசி விளக்கிக் கூறுதல்
மஞ்சிவர் மணங்கொள் சோலை மணிவரைச் சென்னி வாழும்
விஞ்சையர் விச்சை யாலே விழுமிய ரென்ப தல்லால்
அஞ்சலில் தானை வேந்தே மனிதரே யவரும் யாதும்
வெஞ்சுடர் விளங்கு வேலோய் வேற்றுமை யின்மை கேண்மோ 100
விஞ்சையன் தன்னை விளக்கிக் கூறுதல்
மண்ணவில் முழவின் மாநீர்ப் பவபுர முடைய மன்னன்
பண்ணவில் களிதல் யானைப் பவனவே கற்குத் தேவி
கண்ணவில் வடிவிற் காந்தி மதியவள் பாவை
வண்ணவிற் புருவ வாட்கண் வாயுமா வேகை யென்பான்
மற்றவ ளோடும் வந்தேன் மன்னன்யான் மருசி யென்பேன்
அற்றமில் கேள்வி யெந்தை யஞ்சுமா னென்னும் பேரான்
பெற்றதா யருசி மாலை பெருமக னருளினால் யான்
கற்றநூல் பல்ல வாகுங் கருமணிக் கடகக் கையான்
அலகைசா லாதி காலத் தரசர்கள் தொடர்ச்சி யெல்லாம்
உலகநூல் பலவு மோதி யுணர்ந்தன னுரைப்பக் கேண்மோ
விலகிய கதிர வாகி விடுசுடர் வயிரக் கோலத்
திலகம்வீற் றிருந்த கண்ணித் திருமுடிச் செல்வ என்றான்
மருசி நமியின் வரலாறு கூறுகின்றான்
ஆதிநா ளரசர் தங்க ளருங்குல மைந்து மாக்கி
ஓதநீ ருலகின் மிக்க வொழுக்கமுந் தொழிலுந் தோற்றித்
தீதுதீர்ந் திருந்த பெம்மான் திருவடி சாரச் சென்று
நீதி நூற் றுலகம் காத்து நிலத்திரு மலர நின்றான்
முசிநாச் சுரும்பு பாய முருகுடைத் துருக்குஞ் சோலைக்
காசிநாட் டரசன் செங்கோற் கதிர்முடிக் கச்ச னென்பான்
மாசினாற் கடலந் தானை மன்னவற் றவற்குத் தேவி
தூசினாற் றுளும்பு மல்குல் சுதஞ்சனை சுடரும் பூணாய்
வேய்ந்தக நிழற்றுங் கோதை மிளிர்மணிக் கலாப வட்டம்
போந்தகந் திகழ்ந்து மின்னுப் பூந்துகில் பொலிந்த வல்குல்
வாய்ந்தகங் கமழுங் கோதை யவள்பெற்ற வரச சிங்க
நாந்தகக் கிழவர் கோவே நமியென்பான் நலத்தின் மிக்கான் 106
அங்கவ னரசு வேண்டா னற்கடல் படைத்த நாதன்
பங்கயங் கமழு மேனி பவித்திர பரம யோகி
தங்கிய தியானப் போழ்தி றாழ்ந்துதன் றடக்கை கூப்பிப்
பொங்கிய காதல் கூரப் பாடினன் புலமை மிக்கான்
அருகக் கடவுள் வணக்கம்
அலகிலா ஞானத் தகத்தடங்க நுங்கி
உலகெலாம் நின்று னொளித்தாயு நீயே
ஒளித்தாயு நீயே யுயிர்க்கெலாங் கண்ணா
யளித்தாயுங் காத்தாயு நீயேவாழி யறவேந்தே
அழனாறும் வெங்கதிரோ னாண வலராது
நிழனாறு மூர்த்தியாய் நின்றாயு நீயே
நின்றாயு நீயே நிறைபொரு ளெல்லைக்கட்
சென்றாயும் வென்றாயு நீயேவாழி திருமாலே
நிறைதரு கேவலத்தோய் நின்னடியார்க் கெல்லாங்
குறைதலி லின்பங் கொடுப்பயு நீயே
கொடுப்பயு நீயேயெங் குற்றவேல் வேண்டாய்
விடுத்தாயு நீத்தாயு நீயேவென்ற பெருமானே 110
நமிபாடிய இசையின் தன்மை
என்றவன் பாடக் கேட்டே யிறஞ்சின குறிஞ்சி யேகா
நின்றன விலங்கு சாதி நிலங்கொண்ட பறவை எல்லா
மன்றுமெய் மறந்து சேர்ந்தார் கின்னர ரமரர் தாழ்ந்தார்
வென்றவன் றியானத் துள்ளான் வியந்திலன் சிறிதும் வேந்தே
நமியின் இசைகேட்டு ஆதிசேடன் வருதல்
மணநிரைத் திலங்குந் தாரோய் மற்றவ னுலோக நாதன்
குணநிரைத் திசைத்த கீதங் கேட்டலு மணிகொள் கோவைக்
கணநிரைத் திலங்குங் காய்பொன் முடிமிசை யீரைஞ்ஞாறு
பணநிரைத் திலங்கப் புக்கான் பணதர ரரச னன்றே
நமியை வணங்குதல்
பன்னக ருலகங் காக்கும் பாய்கதிர்ப் பசும்பொன் மேனி
மின்னவிர் வயிரச் சூட்டு விடுசுடர் மணிப்பொற் பூணான்
தன்னிக ரிகந்த தோன்றல் சரணெனப் பரமன் பாதம்
மன்னர்கட் கரசன் முன்னை வலங்கொடு வணக்கங் செய்தான்
நமியின் இசையில் தேவர்கள் ஈடுபட்டமை
தேந்துண ரிலங்கு கண்ணித் தேவனத் தேவர் கோனைத்
தீந்தொடை நரம்பின் றெய்வச் செழுங்குரல் சிலம்ப வேத்தப்
பூந்துணர்க் கற்ப லோகம் புடைபெயர்ந் திட்ட போற்றா
வேந்துடை மான மெல்லாம் வேலினால் விடுத்த வேந்தே
ஆதிசேடன் நமியரசனை வினவுதல்
மாண்டதன் நிலைமை யுள்ளி வருபொருண் மெய்ம்மைநோக்கித்
தூண்டிய சுடரி னின்ற தியானத்தைத் துளங்கு வாய்போ
லீண்டுவந் திசைக்குற் றேவ லெம்மிறை யடிக்கட் செய்தாய்
வேண்டுவ தெவன்கொ லென்றான் மிடைமணிப் பூணினானே
நமியரசன் விடையிறுத்தல்
பண்மிசைப் படர்ந்த சிந்தைப் பணதரற் பணிந்து மாற்றத்
துண்மிசைத் தொடர்பு நோக்கி யுறுவலி யதனைக் கேளா
விண்மிசை யவர்கள் போல வேண்டிய விளைக்குஞ் செல்வ
மண்மிசைப் பெறுவ னாக மற்றிதென் மனத்த தென்றான்
ஆதிசேடன் நமிக்கு வரமளித்துச் செல்லுதல்
இச்சையங் குரைப்ப கேட்டாங் கிமைய வரியற்கை யெய்தும்
வீச்சையுந் துணையும் வெள்ளி விலங்கலுங் கொடுத்து வேந்தாய்
நிச்சமு நிலாக வென்று நிறுவிப்போய் நிலத்தின் கீழ்த்த
னச்சமி லுலகஞ் சேர்ந்தா னாயிரம் பணத்தி னானே
நமியின் வழித்தோன்றலே சடியரசன் என்று மரீசி பயாபதிக்குப் பகர்தல்
ஆங்கவன் குலத்து ளானெம் மதிபதி யவனோ டொப்பா
யோங்கிய குலமுஞ் செல்வப் பெருமையு முடைய நீயு
மீங்கிரு குலத்து ளீர்க்குங் கருமம்வந் திசைத்த போழ்தி
னீங்கரு நறுநெய் தீம்பால் சொரிந்தோர் நீர்மைத் தென்றான்
பயாபதியின் வரலாறு கூறத்தொடங்குதல்
தங்குலத் தொடர்ச்சி கூறித் தானவ னிருந்த போழ்தி
னுங்குல நிலைமை யெல்லா நூலினீ யுரைத்த வாறே
எங்குல நிலைமை யானு முரைப்பனென் றெடுத்துக் கொண்டு
பொங்கலர்ப் பிணைய லான்றன் புரோகிதன் புகல லூற்றான்
அங்கனிமித்திகன் கூறுதல்
யாவனாற் படைக்கப் பட்ட துலகெலாம் யாவன் பாத்த
தேவனால் வணக்கப்பட்ட தியாவன தகலஞ் சேர்ந்து
பூவினாள் பொறியொன் றானாள் புண்ணிய வுலகங் கான
ஏவினான் யாவ னம்மை யாவன துலக மெல்லாம் 120
மற்றவ னருளின் வந்தான் மரகத மணிக்குன் றொப்பச்
சுற்றி நின் றிலங்கு சோதித் தோள்வலி யெனும்பே ரானக்
கொற்றவ னுலகங் காத்த கோன்முறை வேண்டி யன்றே
கற்றவ ரின்று காறுங் காவனூல் கற்ப தெல்ல்லம்
வாகுவலி தவஞ்செய்யச் செல்லுதல்
கொடிவரைந் தெழுதப் பட்ட குங்குமக் குவவுத் தோளான்
இடிமுர சதிருந் தானை யிறைத்தொழில் மகனுக் கீந்து
கடிமண் மனுக்குந் தெய்வக் கழலடி யரசர் தங்கள்
முடிபொர முனிவிற் றான்போய் முனிவன முன்னினானால்
கயிலாயத்து முடியில் தவஞ்செய்தல்
விண்ணுயர் விளங்கு கோட்டு விடுசுடர் விளங்க மாட்டாக்
கண்ணுயர் கதலி வேலிக் கார்க்கயி லாய நெற்றிப்
புண்ணியக் கிழவன் போகிப் பொலங்கலம் புலம்ப நீக்கித்
திண்ணிய தியானச் செந்தீச் செங்சுடர் திகழ நின்றான்
வாகுவலியின் தவநிலைமை
கழலணிந் திலங்கு பாதங் கலந்தன கருங்கட் புற்றத்
தழலணிந் தெழுந்த வைவா யருமணி யாடு நாகம்
பொழிலணிந் தெழுந்த வல்லி புதைந்தன பூமி நாதன்
குழலணிந் தெழுந்த குஞ்சி குடைந்தன குருவிக் கூட்டம்
அருமுடி யரசர் தாழ்ந்த வடிமிசை யரவ மூரக்
கருவடி நெடுங்க ணல்லார் கலந்த தோள் வல்லி புல்ல
மருவுடை யுலகம் பாடல் வனத்திடைப் பறவை பாடத்
திருவுடை யடிக ணிண்ற திறமிது தெரிய லாமோ
வெண்டவாங் குவளைக் கண்ணி மன்னர்தம் மகுட கோடி
விண்டவாம் பிணைய லுக்க விரி மதுத் துவலை மாரி
உண்டவான் கழல்கள் சூழ்ந்த திருவடி யரவ மூரக்
கண்டவா றிங்க ணார்க்குங் கருதுவ தரிது கண்டாய்
அடுக்கிய வனிச்சப் பூவி னளிமே லரத்தச் செவ்வாய்
வடிக்கயல் நெடுங்க ணார்தம் வளிக்கையால் வளித்த மார்பில்
தொடுக்கிய தொடுத்த போலுந் துறுமலர்க் கத்தி மாதர்
கொடிக்கையா லிடுக்க றன்மேல் கொற்றவன் குலவப் பட்டன்
புல்லிய பொலங்கொம் பொப்பார் புலவியுட் கலவி சென்று
மெல்லிய மாலை தம்மால் விசித்தலை விடுத்து மீட்டு
மல்லுய ரலர்ந்த மார்பின் மாதவிப் பேதை யார்த்த
வல்லிகள் விடுக்க மாட்டா மனத்தினன் மன்ன னானான்
வாகுவலி தேவரினும் உயர்நிலை யடைதல்
ஓவலில் குணங்க ளென்னு மொளிர்மணிக் கலங்க டாங்கித்
தேவர்க ளுலக மெல்லாஞ் செழுமண மயர்ந்து கூட்டக்
கேவலப் பெண்ணென் பாளோர் கிளரரொளி மடந்தை தன்னை
ஆவியு ளடக்கிப் பின்னை யமரர்க்கு மரிய னானான்
வாகுவலியின் வழித்தோன்றலே பயாபதி மன்னன் என்றல்
எங்கள்கோ னிவன்க ணின்று மிக்குயர் குலத்து வேந்தர்
தங்களோர் புறஞ்சொல் வாராத் தன்மையா லுலகங் காத்தார்
அங்கவர் வழிக்கண் தோன்றி யகலிடம் வணங்க நின்ற
இங்கிவன் பெருமை நீயுமறிதியா லேந்த லென்றான் 130
மருசி மேலுங் கூறத்தொடங்குதல்
குடித்தொட ரிரண்டுங் கேட்டே குறுமயி ரெறிந்து கண்ணுள்
பொடித்தநீர்த் திவலை சிந்தப் புகழ்ந்தன ரிருந்த வேந்தர்
அடுத்தெரி யலர்ந்த செம்பொ னணிமணி முடியி னானங்
கெடுத்துரை கெடாத முன்னக் கேசர னிதனைச் சொன்னான்
வாகுவலி கச்சனுக்கு மருமகன் என்று கூறுதல்
இப்படித் தாயிற் பண்டை யிசைந்தது சுற்ற மென்னை
அப்படி யரிய செய்த வடிகளெம் மரச னாய
கைப்புடை யிலங்கு செவ்வேற் கச்சற்கு மருக னாரென்
றொப்புடைப் புராண நன்னூ லுரைப்பதியா னறிவ னென்றான்
மன்னவன் மனத்தி னாற்ற மிறைவனை வணங்கி வாழ்த்திப்
பின்னவன் ரன்னை நோக்கிப் பேசினன் பிறங்கு தாரோய்
முன்னிய வுலக நூலுங் குலங்களு முறையு முள்ளிட்
டின்னவா றறியு நீரோ ரில்லை நின் போல வென்றான் 133
அரசாட்சிப் பொறிக்கு வாய் தூதுவர் என்றல்
மந்திரக் கிழவர் கண்ணா மக்கடன் றாள்க ளாகச்
சுந்தர வயிரத் திண்டோ டோ ழராச் செவிக ளொற்றா
அந்தர வுணர்வ நூலா வரசெனு முருவு கொண்ட
எந்திர மிதற்கு வாயாத் தூதுவ ரியற்றப் பட்டார்
சிறந்த தூதுவன் சிறப்பு
ஆதிநூ லமைச்சர்க் கோது மாண்பொலா மமைந்து நின்றான்
தூதனாச் சொல்லிற் சொல்லாச் சூழ்பொரு ளில்லை போலா
மேதிலார்க் காவ துண்டோ வின்னன புகுந்த போழ்திற்
கோதிலாக் குணங்க டேற்றிக் கொழித்துரை கொளுத்த லென்றான்
பயாபதி மரிசியைப் பாராட்டல்
மற்றிம்மாண் புடைய நின்னை யுடையவம் மன்னர் மன்னன்
எற்றைநூற் றெய்த மாட்டா னிதன்றிற நிற்க வெம்மைச்
சுற்றமா நினைந்து நின்னைத் தூதனா விடுத்துச் செல்லப்
பெற்றியாம் பிறவி தன்னாற் பெறும்பயன் பெற்ற தென்றான்
பயாபதி மன்னன் மருசியை நோக்கிச் சில கூறுதல்
இன்றியா னின்னை முன்வைத் தினிச்சில வுரைக்கல் வேண்டா
ஒன்றியா னுரைக்கற் பால வுரையையு முணர்த்தி நீயே
வென்றியால் விளங்கு தானை விஞ்சையங் கிழவன் கண்ணா
நின்றியான் வாழ்வ தல்லா னினைப்பினி யில்லை மன்னோ
கொற்றவன் குறிப்பி தாயிற் கூவித்த னடியன் மாரை
உற்றதோர் சிறுகுற் றேவற் குரியராய்க் கருதித் தானே
அற்றமி லலங்கல் வேலோ னறிந்தருள் செய்வ தல்லான்
மற்றியா னுரைக்கு மாற்ற முடையனோ மன்னற் கென்றான்
மருசிக்குச் சிறப்புச் செய்தல்
தூதன்மற் றதனைக் கேட்டே தொழுதடி வணங்கிச் செங்கோல்
ஏதமில் புகழி னாயானடிவலங் கொள்வ னென்னப்
போதுசே ரலங்க லானும் பொலங்கலம் பொறுக்க லாகாச்
சோதிய சுடரச் சேர்த்திப் பெருஞ்சிறப் பருளிச் செய்தான்
மருசிக்கு நாடகங் காட்டி மறுநாள் அனுப்புதல்
அற்றைநா ளங்குத் தாழ்ப்பித் தகனகர்ச் செல்வந் தன்னோ
டுற்றவ னுவப்பக் கூறி யுரிமைநா டகங்கள் காட்டிப்
பிற்றைநாட் குரவர் தம்மைப் பின்சென்று விடுமி னென்று
மற்றவர்க் கருளிச் செய்தான் மருசியுந் தொழுது சென்றான்
மருசி தனது நகரத்தை அடைதல்
உலனல னடுதிண்டோ ளூழிவே லோடை யானைச்
சலநல சடியென்பேர்த் தாமரைச் செங்க ணான்றன்
குலநல மிகுசெல்கைக் கோவொடொப் பார்கள் வாழு
நலனமர் நளிசும்மைத் தொன்னகர் நண்ணி னானே 141
தூதுவிடு சருக்கம் முற்றிற்று
----------
ஏழாவது
சீயவதைச் சருக்கம்
மரீசி சடி மன்னனைக் காண்டல்
மற்ற மாநகர் மருசி புக்கபின்
கொற்ற வேலவன் கோயின் மாநெதி
முற்று வான்கடை மூன்றுஞ் சென்றுகோன்
சுற்று வார்கழ றெழுது துன்னினான் 7.1
விலங்கு வார்குழை மிளிர்ந்து வில்லிடக்
கலந்து மாமணிக் கடக மின்செய
அலங்கல் வேலினா னங்கை யாலவற்
கிலங்கு மாநிலத் திருக்கை யேவினான்
சடிமன்னன் மரீசியின் கருத்தைக் குறிப்பாலுணர்தல்
தொகுத்த மாண்புடைத் தூதன் மன்னவன்
வகுத்த மாமணித் தலத்தின் மேன்மனத்
தகத்தி னாலமர்ந் திருப்ப வாங்கவன்
முகத்தி னாற்பொருண் முடிவு கண்ணினான்
இதுவுமது
தூத னின்முகப் பொலிவி னாற்சுடர்க்
காது வேலினான் கரும முற்றுற
ஓதி ஞானிபோ லுணர்ந்த பின்னது
கோதில் கேள்வியான் றொழுது கூறினான்
இதுமுதல் உஅ செய்யுள்கள் மரீசியின் கூற்று
வெல்க வாழிநின் வென்றிவார்கழல்
செல்க தீயன சிறக்க நின்புகழ்
மல்க நின்பணி முடித்து வந்தனன்
பில்கு மும்மதப் பிணர்க்கை யானையாய்
இங்கு நின்றுபோ யிழிந்த சூழலும்
அங்கு வேந்தனை யணைந்த வாயிலும்
பொங்கு தானையான் புகன்ற மாற்றமுந்
தொங்கன் மார்பினாய் சொல்லு கேனெனா
அள்ளி லைச்செழும் பலவி னார்சுளை
முள்ளு டைக்கனி முறுகி விண்டெனக்
கள்ளு றைத்தொறுங் கழுமி யூற்றறா
வள்ளி லைப்பொழின் மகிழ்ந்து புக்கதும்
முள்ள ரைப்பசு முளரி யந்தடத்
துள்ளி ரைத்தெழு மொலிசெய் வண்டினம்
கள்ளி ரைத்துகக் கண்டு வண்சிறைப்
புள்ளி ரைப்பதோர் பொய்கை சார்ந்ததும்
நித்தி லம்மணி நிரந்து வெள்ளிவேய்
பத்தி சித்திரப் பலகை வேதிகை
சித்தி ரங்களிற் செறிந்து காமனார்
அத்தி ரம்மென அசோகங் கண்டதும்
தன்ணி ழற்சுடர்த் தமனி யத்தினான்
மன்ணி ழற்கொள மருங்கு சுற்றிய
வெண்ணி ழற்சுடர் விளங்கு கற்றலங்
கண்ணி ழற்கொளக் கண்ட காட்சியும்
சுரிந்த குஞ்சியன் சுடரு மேனியன்
எரிந்த பூணின னிலங்கு தாரினன்
வரிந்த கச்சைய னொருவன் வந்துவண்
டிரிந்து பாயவிங் கேறு கென்றதும்
மற்ற வன்றனக் குரைத்த மாற்றமுங்
கொற்ற வன்விடக் கொம்ப னார்சிலர்
உற்ற மங்கலக் கலங்க ளோடுடன்
முற்ற வூண்டொழின் முடிந்த பெற்றியும்
பங்கய யத்தலர்ச் செங்கண் மாமுடித்
திங்கள் வண்ணனுஞ் செம்பொ னீள்குழைப்
பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனும்
அங்கு வந்தது மவர்கள் சொற்றதும்
நற்பு றத்தன நாற்ப தாம்வய
திப்பு ரத்தன விளங்க ருங்கைம்மா
மொய்ப்பு றத்துமேன் முழங்கு தானையோ
டப்பு றத்தர சவைய டைந்ததும்
மன்ன வன்கழல் வணங்கி நின்றதும்
பின்ன வன்றனா லிருக்கை பெற்றதும்
பொன்னி றப்பொறி புகழ்ந்த சாதகந்
துன்னி வாசகந் தொழுது கொண்டதும்
ஓட்டி றானையா னோலை வாசகங்
கேட்ட மன்னவன் கிளர்ந்த சோதியான்
மீட்டொர் சொற்கொடா விம்மி தத்தனா
யீட்டு மோனியா யிருந்த பெற்றியும்
இருந்த மன்னன்மே லெடுத்த மாற்றமும்
வருந்தி மற்றவன் மறுத்த வன்ணமும்
புரிந்து தொல்குலம் புகன்ற பெற்றியு
மருந் தகைத் தொடர் பமைந்த வாக்கமும்
பின்னை மன்னவன் பேணி நன்மொழி
சொன்ன வண்ணமுஞ் சுற்ற மாயதும்
பொன்ன கைக்குலம் பொலிந்து கண்கொள
வின்ன கைச்சிறப் பருளி யீந்ததும்
அருங்கல லக்குழாத் தரசன் றேவிமார்
பெருங்கு லத்தவர் பெயர்ந்து கண்டது
மொருங்கு மற்றுளோ ருரைத்த வார்த்தையுஞ்
சுருங்கில் கேள்வியான் றொழுது சொல்லினான்
இதுமுதல் எட்டுச் செய்யுள்கள், பயாபதி மன்னனின் பெருமையை மரீசி கூறல்
சொன்ன வார்த்தையிஃ திருக்கச் சொல்லுவ
தின்ன மொன்றுள வடிகள் யான்பல
மன்னர் தங்களை மகிழ்ந்து கண்டன
னன்ன னீர்மையா ரரச ரில்லையே 20
கற்ற நூல்பிறர் கற்ற நூலெலா
முற்ற நோக்கினு முற்ற நோக்கல
வுற்ற நூலெலா முற்ற நூல்களாய்ப்
பெற்ற நூலவன் பெற்றி வண்ணமே
எரியு மாணையான் குளிரு மீகையான்
பெரியன் பெற்றியாற் சிறிய னண்பினா
னரியன் வேந்தர்கட் கெளிய னாண்டையார்க்
குரிய னோங்குதற் கோடை யானையான்
எல்லை நீருல கினிது கண்பட
வெல்லும் வேலவன் விளங்கு தண்ணளி
யில்லை யேலுல கில்லை யாமென
நல்ல னேயவ னாம வேலினாய்
கற்ற நூலினார் கலந்த காதலா
லுற்ற போழ்துயிர் கொடுக்கு மாற்றலாற்
கொற்ற வேலவன் குடையி னீழலார்
சுற்ற மாண்பினர் சுடரும் வேலினாய்
கோதிலார் குல மக்கண் மாக்கண்மற்
றேதி லாரென வியைந்த தின்மையார்
ஆத லாற்றமர் பிறர்க ளாவதங்
கோதி லாரவர்க் குள்ளஃ தில்லையே
வைய மின்புறின் மன்ன னின்புறும்
வெய்ய தொன்றுறிற் றானும் வெய்துறுஞ்
செய்ய கோலினாய் செப்ப லாவதன்
றைய தாரினா னருளின் வண்ணமே
வீவில் வீங்குநீர் வேலி வாழ்பவர்க்
காவி யாபவ ரரச ராதலாற்
காவ லோவுங்கொ லென்று கண்படான்
மாவ றானையம் மன்னர் மன்னனே
இதுமுதல் ஐந்து செய்யுட்கள் விசயதிவிட்டரின் பண்பு கூறுவன
மங்குல் மாமழை மாரி வண்கையான்
பொங்கு காதலால் புதல்வர் தாமுமற்
றிங்கண் வேந்தர்கட் கேனை மான்கண்முன்
சிங்க வேறெனச் செப்பு நீரரே
கைய வாச்சிலைக் காம னிங்கிரு
மெய்யி னால் வெளிப் பட்ட நீரதால்
வைய மாள்பவன் புதல்வர் வார்கழ
லையன் மார்கடம் மழகின் வண்ணமே
சங்க வண்ணனார் தம்பி தானுநீர்
பொங்கு கார்முகில் புரையு மேனிய
னங்க ணிவ்வுல காள நாட்டிய
மங்க லப்பொறி மன்ன காண்டியால்
செங்கண் மாலவன் தெய்வ மார்பகம்
பங்க யத்துமேற் பாவை தன்னுட
னங்கு லக்கொடி நங்கை சேர்வதற்
கிங்கன் மாதவ மெவன்கொல் செய்ததே
மரீசி திவிட்டனும் சுயம்பிரபைக்கும் அமைந்த ஒப்பினை வியத்தல்
நங்கை யங்கவ னலத்திற் கொப்பவ
ளிங்கி வட்குவ றேந்த லில்லிவர்
பொங்கு புண்ணியம் புணர்த்த வாறிது
வெங்கண் யனையாய் வியக்கு நீரதே
சடி மன்னன் மரீசிக்குச் சிறப்பு செய்தல்
என்று கூறலு மேந்து நீண்முடி
வென்றி நீள்புகழ் வேக யானையா
னன்று மற்றவற் கருளி யீந்தன
னின்று மின்சுடர் நிதியின் நீத்தமே
சடிமன்னன் அமைச்சரை வினாதல்
மற்ற வன்றனை மனைபு கப்பணித்
துற்ற மந்திரத்தவர்க ளோடிருந்
தெற்று நாமினிச் செய்வ தென்றனன்
வெற்றி நீள்குடை வேந்தர் வேந்தனே
அமைச்சரின் விடை
செங்க ணீன்முடிச் செல்வ சென்றொரு
திங்கள் நாளினுட் டிவிட்ட னாங்கொரு
சிங்கம் வாய் பகத் தெறுவ னென்பது
தங்கு கேள்வியான் றான்முன் சொன்னதே
இதுவுமது
ஆதலா லஃதறியும் வாயிலா
வோது மாண்பினா னொருவ னெற்றனாய்த்
தீதி றானையாய் செல்ல வைப்பதே
நீதி யாமென நிகழ்த்தி னாரரோ
மன்னன் ஒற்றாய்தல்
உய்த்து ணர்ந்தவ ருரைத்த நீதிமேல்
வைத்த வொற்றினன் மன்ன னானபி
னத்தி றத்தனே யமர்ந்த சிந்தைய
னொத்த சுற்றமோ டுவகை யெய்தினான்
இனி அச்சுவகண்டன் செய்தியைக் கூறுவாம் எனல்
இத்தி சைக்கணிவ் வாறிது செல்லுநா
ளத்தி சைக்கணஞ் சப்படு மாழியா
னெத்தி சைக்கும் வெய் யோனியன் முன்னுற
வைத்தி சைத்தன மற்றதுங் கூறுவாம்
இதுமுடல் 6 செய்யுள்கள் அச்சுவக்சுண்டன் காமக் களியாட்டம் கூறுவன
பஞ்சி மேன்மிதிக் கிற்பனிக் குந்தகை
யஞ்சி லோதிய ரம்முலை நாஞ்சிலா
மஞ்சு தோய்வரை மார்ப மடுத்துழத்
துஞ்ச லோவுந் தொழிலின னாயினான்
முத்த வாணகை மோய்பவ ளத்துணி
யொத்த வாயமு தொண்கடி கைத்திரள்
வைத்த வாயின னாய்மட வார்கடஞ்
சித்த வாரிக ளுட்சென்று தங்கினான்
ஆரந் தங்கிய மார்பனு மந்தளிர்க்
காருங் கொம்பனை யாருங் கலந்துழித்
தாருங் கொங்கை ளும்பொரத் தாஞ்சில
வாரம் பட்டணி வண்டின மார்த்தவே
வண்டு தோய்மது வாக்கிவள் ளத்தினுட்
கொண்டு கொம்பனை யார்கள் கொடுப்பவஃ
துண்டு மற்றவ ரொண்டுவர் வாயொளித்
தொண்டை யங்கனி யின்சுவை யெய்தினான்
தாம மென்குழ லார்தடங் கண்ணெனுந்
தேம யங்கிய செங்கழு நீரணி
காம மென்பதொர் கள்ளது வுண்டரோ
யாம மும்பக லும்மயர் வெய்தினான்
சுற்று வார்முலை யார்தந் துகிற்றட
முற்று மூழ்கும் பொழுது முனிவவ
ருற்றபோழ் துணர்த் தும்பொழு தும்மலான்
மற்றொர் போழ்திலன் மன்னவ னாயினான்
மண்க னிந்த முழவின் மடந்தையர்
கண்க னிந்திடு நாடகக் காட்சியும்
பண்க னிந்தவின் றீங்குரற் பாடலும்
விண்க னிந்திட வேவிழை வேய்தினான்
வாவி யும்மது மண்டபச் சோலையுந்
தூவி மஞ்ஞை துதைந்தசெய் குன்றமும்
பாவும் வெண்மண லும்புனற் பட்டமு
மேவு நீர்மைய னாய்விளை யாடினான்
மின்னுஞ் செங்கதிர் மண்டிலம் வெய்தொளி
துன்னுஞ் திங்கட் பனிச்சுடர் தண்ணிது
என்னு மித்துணை யும்மறி யான்களித்
தன்ன னாயின னச்சுவ கண்டனே
அச்சுவக்கண்டனின் அரசியல்
சீறிற் றேந்துணர் வின்றிச் செகுத்திடு
மாறுகண் டென்பதோர் மாற்றம் பொறான்மனந்
தேறின் யாரையும் தேறுஞ் செருக்கொடிவ்
வாறு சென்ற தவற்கர சென்பவே
பூமகள் அச்சுவக்கண்டன் ஆட்சியிலிருந்தகலச் செவ்வி தேர்தல்
தோடு மல்கு சுரும்பணி கோதையர்
கோடி மென்றுகிற் குய்யத் தடம்படித்
தாடித் தன்னணை யாமையிற் பூமகள்
ஊட லுற்றிடம் பார்த்துள ளாயினாள்
சதவிந்து என்பான் அச்சுவகண்டற்கு அரசியலறம் கூறல்
ஆங்கொர் நாளிறை பெற்றறி வின்கடல்
தாங்கி னான்சத விந்துவென் பானுளன்
நீங்க லாப்புக ழான்ற னிமித்திகன்
வீங்கு வெல்கழ லார்கு விளம்பினான் 7.50
அரசர்க்குரிய அறுவகைப் பகைகள்
மன்ன கேள்வளை மேய்திரை மண்டிலந்
தன்னை யாள்பவர்க் கோதின் தங்கணே
பன்னி னாறு பகைக்குல மாமவை
முன்னம் வெல்கவென் றான்முகம் நோக்கினான்
தன்னை வென்றதண் டார்வய வேந்தனைப்
பின்னை வேறல பிறர்க்கரி தாதலான்
மன்ன மற்றவ னாளும் வரைப்பகம்
பொன்னின் மாரி பொழிந்திடு நன்றரோ
மாசி றண்டன்ன தோண்மன்ன மன்னிய
கோசி றண்டத்த னாய்விடிற் கொற்றவ
னேசி றண்டம் பரவவின் வையக
மாசி றண்டத்த னாயினி தாளுமே
பெற்ற தன்முத லாப்பின் பெறாததுஞ்
சுற்றி வந்தடை யும்படி சூழ்ந்துசென்
றுற்ற வான்பொருள் காத்துய ரீகையுங்
கற்ற வன்பிறர் காவல னாகுவான்
அருக்கன் றன்னறி வாக வலர்ந்தநீர்த்
திருக்க வின்றசெல் வச்செழுந் தாமரை
செருக்கெ னப்படுந் திண்பனி வீழுமேல்
முருக்கு மற்றத னைமுகத் தாரினாய்
இகழ்ச்சி யிற்கெடு வார்களை யெண்ணுக
மகிழ்ச்சி யுண்மதி மைந்துறும் போதெனப்
புகழ்ச்சி நூலுட் புகன்றனர் பூவினுட்
டிகழ்ச்சி செல்பொன் மணிமுடி மன்னனே
அரசே! நீ சினந்தாலும் நினக்கு ஓர் உறுதி கூறுவேன் எனல்
நெறியி னீதிக்க னேரிவை யொப்பவு
மறிதி நீயவை நிற்க வழன்று நீ
செறுதி யேனுஞ்செம் பொன்முடி மன்னவோர்
உறுதி யானுரைப் பானுறு கின்றதே
அச்சுவக்கண்டனும் அங்ஙனமாயின் அவ்வுறுதி யாது கூறுதி எனல்
என்ற லும்மிணர் வேய்முடி மாலையா
னன்று சொல்லுக வென்று நகைமணிக்
குன்ற மன்னதிண் டோ ண்மிசைக் குண்டலஞ்
சென்று மின்சொரி யச்செவி தாழ்த்தினான்
நிமித்திகன் கூறல்
பூமி மேற்புரி சைம்மதிற் போதன
நாம நன்னக ராளு நகைமலர்த்
தாம நீண்முடி யான்றன் புதல்வர்கள்
காம வேளனை யாருளர் காண்டியால்
இதுவுமது
ஏந்து தோளவ ருள்ளிளை யானமக்
காய்ந்த தொல்பகை யாகுமென் றேயுறப்
போந்தொர் புன்சொ னிமித்தம் புறப்பட
வேந்த யான்மனத் தின்மெலி கேனரோ 60
அச்சுவக்கண்டன் நிமித்திகன் கூற்றைத் தடுத்தல்
முத்த நிண்முடி யான்மூன்ன மற்றதற்
கொத்த வாறுணர்ந் தீயென வென்செயு
மைத்த கைமனத் தன்மணித் தன்னெனக்
கைத்த லங்கதிர் வீச மறித்தனன்
அச்சுவக்கண்டன் கூறுதல்
மிகையின் வந்தவிச் சாதர வேந்தர்தந்
தொகையை வென்றவென் றோளுள வாப்பிற
பகையி னிப்படர்ந் தென்செயு மென்றன
னகைகொ ணீண்முடி நச்சர வம்மனான்
அச்சுவக்கண்டனின் சினமொழிகள்
மாசி லாலவட் டத்தெழு மாதரும்
வீச விண்டொடு மேருத் துளங்குமோ
பேசின் மானிடப் பேதைக ளாற்றலா
லாசி றோளிவை தாமசை வெய்துமோ
இதுவுமது
வேழத் தின்மருப் புத்தடம் வீறுவ
வாழைத் தண்டினு ளூன்ற மழுங்குமோ
வாழித் தானவர் தானையை யட்டவென்
பாழித் தோள்மனித் தர்க்குப் பணியுமோ
வேக மாருதம் வீசவிண் பாற்சிறு
மேக சாலம் விரிந்தெதிர் செல்லுமோ
வேக மாயவென் சீற்றமஞ் சாதெதி
ராக மானுடர் தாமசை கிற்பவோ
குலிச மிந்திரன் கொண்டு பணிக்கு மேன்
மலையின் மாசிக ரங்களும் வீழ்த்திடு
நிலைய வெஞ்சுட ராழி நினைப்பனேற்
றொலைவில் வானவர் தோளுந் துணிக்குமே
விச்சை மற்றவர் தம்மை விடுப்பதோ
ரிச்சை யென்கணுண் டாமெனின் யாவரே
யச்ச மின்றி நிற் பாரந் நிமித்த நூல்
பொச்ச லாங்கொல் புலந் தெழு நீர்மையாய்
புலவர் சொல்வழி போற்றில னென்பதோ
ரலகிற் புன்சொலுக் கெஞ்சுவ னல்லதே
லுலக மொப்ப வுடன்றெழு மாயினு
மலைவன் மற்றதன் கண்மதிப் பில்லையே
ஆத லாலாதற் கேற்ற தமைச்சர்க
ளோதி யாங்குணர்ந் தீகவென் றொட்டினான்
யாதுந் தன்கணல் லார்செயற் கேன்றதோ
ரேத முண்டெனு மெண்ணமில் லாதவன்
அச்சுவக் கண்டன் அமைச்சர் கூறுதல்
அலங்க லாழியி னானது கூறலுங்
கலங்கு நூற்கரு மத்தொழின் மாக்கடம்
புலங்கொள் சூழ்ச்சிய ராகிப் புகன்றன
ருலங்கொள் தோளவ னுக்குணர் வாயினார்
எரியுந் தீத்திர ளெட்டுணைத் தாயினுங்
கரியச் சுட்டிடுங் காந்திக் கனலுமேற்
றெரியிற் றொல்பகை தான்சிறி தாயினும்
விரியப் பெற்றபின் வென்றிடு கிற்குமே
முட்கொணச்சு மரமுளை யாகவே
யுட்கி நீக்கி னுகிரினுங் கொல்லலாம்
வட்கி நீண்டதற் பின் மழு வுந்தறு
கட்கு டாரமுந் தாங்களை கிற்பவோ
சிறிய வென்றிக ழார்பகை சென்றுசென்
றறிய லாவவன் றாலணி மாமலர்
வெறியும் வேரியும் விம்மி விரிந்துதேன்
செறியுந் தொங்கற்செம் பொன்முடி மன்னனே
அரிமஞ்சு என்னும் அமைச்சன் கூறுதல்
அஞ்சி நின்றவர் கூறிய பின்னரி
மஞ்சு வென்பவன் சொல்லுமற் றாங்கவன்
செஞ்செ வேபகை யாமெனிற் றேர்ந்துகண்
டெஞ்சி றொல்புக ழாய்பின்னை யெண்ணுவாம்
இதுவுமது
பகைய லாதவ ரைப்பகை யாக்கலும்
நகையி றீமனத் தாமரை நண் பெண்ணலு
முகையின் வேய்ந்தமென் மொய்ம்மலர்க் கண்ணியாய்
மிகையின் மற்றவை பின்னை வெதுப்புமே
அரிமஞ்சு கூறும் சூழ்ச்சி
அறியத் தேறுந் திறத்ததெவ் வாறெனிற்
றிறையிற் கென்று விடுதும்விட் டாற்றிறை
முறையிற் றந்து முகமன் மொழிந்தெதிர்
குறையிற் கொற்றவ குற்றமங் கில்லையே
அச்சுவக்கண்டன் மகிழ்ந்து தூதுவிடுதல்
என்ற லும்மிது நன்றென வேந்தொளி
நின்ற நீண்முடி நீடிணர்க் கண்ணியான்
சென்று தூதுவர் தாந்திறை கொள்கென
வென்றி வேலவன் மேல்விடை யேயினான்
அத்தூதர்களின் பண்பு
ஊட்ட ரக்குண்ட கோலரொண் கோலத்த
ரோட்ட ரும்பொறி யொற்றிய வோலையர்
நாட்டி யம்முணர் வாரொரு நால்வர்சேண்
மோட்டெ ழின்முகில் சூழ்நெறி முன்னினார்
வேறு - தூதர் போதன நகரத்தை எய்துதல்
தீதறு தென்மலை மாதிர முன்னுபு
தூதுவர் சூழ்சுடர் சூடிய சூளிகை
யோதின ரோதி யுலப்பற வோங்கிய
போதன மாநகர் புக்கன ரன்றே
அந்நகரச் சிறப்பு
செஞ்சுடர் மின்னொளி சென்று பரந்திட
மஞ்சொடு வைகிய மாமணி மாளிகை
வெஞ்சுடர் வீதி விலக்குவ கண்டுதம்
விஞ்சையர் செல்வம் வெறுத்தன ரன்றே
இதுவுமது
முரி முழாவொலி விம்மி முரன்றெழு
காரி மிழார்கலி யான் மயி லாலுவ
சோரி முழாவிழ விற்றெரு துற்றபின்
சீரி மிழாற்பொலி வெய்தினர் சென்றே
சூளிகை சூடிய சூல விலைத்தலை
மாளிகை மேன்மழை மாமுகில் போழ்தலின்
னீளிய நீரரு வித்திரள் வீழ்வன
காளைக டாதைந கர்ப்பல கண்டார்
கூடுநர் கோவை மணிக்கலை யுக்கவு
மூடினர் சிந்திய வொண்சுடர் மாலையு
மூடிய மூரி நெடுந்தெரு வொப்பவு
மூடு செலற்கரி தாயிட ருற்றார்
மூரிநடைக்களி யானை மதத்தினொ
டேரி னடைக்கலி மாதம் விலாழியு
மோரி நுரைப்ப வுகுத்த பெருங்கடை
வேரி வெறிக்கள மொப்பது கண்டார்
தூதர்கள் அரண்மனையை அடைதல்
வண்டு படக்குவ ளைப்பிணை நக்கலர்
விண்ட மதுப்பரு கிக்களி யின்மதர்
கொண்டு நடைக்களி யன்ன மிரைப்பதொர்
மண்டு புனற்புரி சைப்பதி சார்ந்தார்
கோயின் முகத்தது கோடுயர் சூளிகை
வேயின் முகத்ததின் மாமழை வீழ்வது
ஞாயின் முகத்த நகைத்திரண் முத்தணி
வாயின் முகத்து மடுத்திது சொன்னார்
தூதர்கள் தம் வருகை அறிவிக்கும்படி வாயிலோனுக் குரைத்தல்
வேய்தலை நீடிய வெள்ளி விலங்கலி
னோய்தலி லொண்சுட ராழியி னான்றமர்
வாய்தலி னின்றனர் வந்தென மன்னன்முன்
நீதலை சென்றுரை நீள்கடை காப்போய்
பயாபதி தூதர்களை அழைத்துவரப் பணித்தல்
என்றவர் கூற விருங்கடை யானடி
னான்றென நாறொளி நீண்முடி யானடி
மன்ற வணங்கி மொழிந்தனன் மன்னனும்
ஒன்றிய போதக என்ப துரைத்தான்
தூதர் பயாபதிக்கு ஓலை கொடுத்தல்
பொன்னவிர் நீள்கடை காவலன் போதக
வென்னலி னெய்தி யிலங்கொளி நீண்முடி
மன்னவன் வார்கழல் வாழ்த்திமடக்கிய
சொன்னவி லோலைகை தொழுதன ரீந்தார்
அந்த ஓலையைப் படித்தல்
வாசகன் மற்றது வாசினை செய்தபின்
மாசக னீள்முடி மன்னவன் முன்னிவை
தேசக மூசிய வாழியன் சீர்த்தம
ரோசைக ளோலை கொடொப்ப வுரைத்தர்
இதுமுதல் 6 செய்யுள்கள் தூதர்கள் கூறும் செய்தி
ஊடக மோடி யெரிந்தொளி முந்தூறு
மாடக மாயிர கோடியு மல்லது
சூடக முன்கையர் தோடக மெல்லடி
நாடக ராயிர நாரியர் தம்மையும்
தெண்டிரை சிந்திய சங்கொடு செங்கதி
ரெண்டர னம்பவ ழக்கொடி யீட்டமும்
கண்டிரள் முத்தொடு காழகி லந்துகில்
பண்டரு நீரன வும்பல் பண்டமும்
வெண்கதிர் முத்தகில் வேழ மருப்பொடு
கண்கவர் சாமரை வெண்மயி ரின்கணம்
தண்கதிர் வெண்குடை யாய்தரல் வேண்டுமி
தொண்சுட ராழியி னானுரை யென்றார்
வேறு - பயாபதியின் மனநிலை
வேந்தன்மற் றதனைக் கேட்டே வெற்றுவ னெறிந்த கல்லைக்
காந்திய கந்த தாகக் கவுட்கொண்ட களிரு போலச்
சேந்தவ ருரைத்த மாற்றஞ் சிந்தையு ளடக்கி வைத்து
நாந்தகக் கிழவர் கோமா னயந்தெரி மனத்த னானான்
இதுமுதல் 5 செய்யுள்கள் பயாபதியின் சிந்தனை
கருத்துமாண் குலனுந் தேசுங் கல்வியும் வடிவுந் தம்மில்
பொருத்தினாற் பழிக்க லாகாப் புலைமைமிக் குடைய ரேனு
மொருத்தனுக் கொருத்தன் கூறக்கேட்டுற்றுச் செய்து வாழத்
திருத்தினா னிறைவ னேகாண் செய்வினைக் கிழவ னென்பான்
மதியினை மலரச் சூழ்ந்து வருந்தித்தாம் படைக்கப் பட்ட
நிதியினை நுகர்ந்து மென்று நினைத்தினி திருந்த போழ்திற்
பதியினைக் கலக்கிச் சென்று பறித்துத்தாம் பிறர்க்கு நீட்டும்
விதியினை விலக்க மாட்டா மெலிபவால் வெளிய நீரார்
ஓளியினாற் பெரிய னாய வொருவனுக் குவப்பச் செய்தோ
ரளியினால் வாழ்து மென்னும் மவாவினு ளழுந்து கின்றாம்
தெளியநா மிதனைக் கண்டும் செய்வினைத் திறங்க ளோரா
மளிய மோ வளியஞ் சால வறிவினாற் பெரிய மேகாண்
அன்றுநா முயலப் பட்ட வினைகள்மற் றனைய வானா
லின்று நா மவலித் தென்னை யினிச்செய்வ தெண்ணி னல்ல
வென்றியான் விளங்கு மாழி யவர்கட்கு மேலை வேந்த
ரொன்றியாங் குவப்பித் தாண்ட துரைப்பக்கேட் டுணர்ந்தா மன்றே
பயாபதி தூதர்க்கு முகமன் மொழிதல்
என்றுதன் மனத்தி னெண்ணி யிலங்குகோற் கைய ராகி
நின்றகே சரரை நோக்கி நிலமன்ன னனைய சொன்னர்க்
கொன்றியா மிங்க ணுள்ள தொருப்படுத் துய்ப்பக் கொண்டு
சென்றுறு மிறவர்க் கெம்வா யின்னுரை தெரிமி னென்றான்
பயாபதி தன் மக்களறியாதபடி திறைப்பொருள் செலுத்த நினைத்தல்
ஆளிகட் கரச னன்ன வரசர்கோ னதனைக் கூறி
வாளிவிற் றடக்கை வெம்போர் மணிவரை யனைய மார்பிற்
காளைக ளிதனைக் கேட்பிற் கனல்பவா லவரை யின்னே
மீளுமா றமைப்ப னென்று வேண்டுவ விதியி னீந்தான் 7. 100
இதுமுதல் ஐந்து செய்யுள்கள் ஒருதொடர், பயாபதி திறை நல்குதல்
செய்யவாய்ப் பசும்பொ னோலைச் சீறடிப் பரவை யல்கு
லையநுண் மருங்கு நோவ வடிக்கொண்ட குவவுக் கொங்கை
வெய்யவாய்த் தண்ணெ னீலம் விரிந்தென விலங்கி நீண்ட
மையவா மழைக்கட் கூந்தன் மகளிரை வருக வென்றான்
அணிமுழா வனைய தோளா னருளிய தறிந்த போழ்தின்
மணிமுழாச் சிலம்பக் கொண்ட மண்டல வரங்கி னங்கண்
குணிமுழாப் பெயர்த்த பணி குயிற்றுத லிலயங் கொண்ட
கணிமுழ மருங்குற் பாடற் கலிப்பிவை தவிர்த்துச் சென்றார்
மஞ்சிடை மதர்த்த மஞ்ஞை வான்குழா மென்ன வாங்கண்
வெஞ்சுடர் விளங்கு மாடத் திடைநிலை விரவித் தோன்றி
வஞ்சிநன் மருங்கு னோவ மணிநகைக் கலாவ மின்னச்
செஞ்சுடர் சிலம்பு பாடத் தேன்றிசை பரவச் சேர்ந்தார்
மாடெலா மெரிந்து மின்னும் வயிரக்குண் டலத்தோ டம்பொற்
றோடுலாந் துளங்கித் தோன்றுஞ் சுடிகைவாண் முகத்து நல்லார்
பாடலா னரம்பின் தெய்வம் படிவங்கொண் டனைய நீரா
ராடலா லரம்பை யொப்ப ரவரிலா யிரரை யீந்தான்
காய்ந்தொளிர் பவழச் சாதிக் கடிகைகள் காண மின்னுப்
பாய்ந்தெழு சுடர்ச்சங் கீன்ற பருமணித் தரளக்கோவை
யேந்தொழிற் காக துண்ட மருப்பிணை கவரிக் கற்றை
யாய்ந்தொழின் மகரப் பூணா னுவப்பன வனைத்து மீந்தான்
பயாபதி திறை நல்கியதை விசயதிவிட்டர்கள் காண்டல்
அஞ்சுடர் வயிரப் பூணா னருளினான் விடுப்ப வாங்கண்
விஞ்சையர் விமானத் தோற்ற மேலருங் கலங்க ளேற்றிச்
செஞ்சுடர் திலகச் செவ்வாய் மகளிரை விமானஞ் சேர்த்திக்
கஞ்சிகை மறைக்கும் போழ்திற் காளைக ளதனைக் கண்டார்
திவிட்டன் அந்நிகழ்ச்சியை வினாதல்
என்னிது விளைந்த வாறித் தூதுவர் யாவ ரென்று
கன்னவில் வயிரத் திண்டோ ட் கடல்வண்ணன் வினவ யாரும்
சொன்னவின் றுரைக்க மாட்டார் துட்கென்று துளங்க வாங்கோர்
கொன்னவில் பூதம் போலுங் குறண்மக னிதனைச் சொன்னான்
குறளன் கூற்று
அறைகழ லரவத் தானை யச்சுவக் கிரீவ னென்பா
னிறைபுக ழாழி தாங்கி நிலமெலாம் பணிய நின்றான்
திறைதர வேண்டும் என்று விடுதரச் செருவந் தானை
யிறைவனு மருளிச் செய்தா னிதுவிங்கு விளைந்த தென்றான்
இதுமுதல் மூன்று செய்யுள் ஒருதொடர் - திவிட்டன் சீற்றம்
வேறு -
திறைக்கட னென்னுமத் தீச்சொற் கேட்டலு
நிறைக்கட னிரம்பிய நெஞ்சத் தீக்கலுண்
முறைகெட முளைப்பதோர் முனிவி னொள்ளெரி
கரைப்படு படையவன் கனல் மூட்டினான்
முடித்தலை முத்துதிர்ந் தாங்கு நெற்றிமேல்
பொடித்தன சிறுவியர்ப் புள்ளி யொள்ளெரி
யடுத்தெழு சுடரகத் துக்க நெய்த்துளி
கடுத்தசெங் கண்ணுநீர்த் திவலை கான்றவே
படத்திடைச் சுடர்மணி தீண்டப் பட்டெரி
கடுத்திடு மரவெனக் கனன்ற நோக்கமோ
டடுத்தெரிந் தழல்நகை நக்கு நக்கிவை
யெடுத்துரை கொடுத்தன னிளிய காளையே
இதுமுதல் 7 செய்யுள் ஒரு தொடர் - திவிட்டன் சினமொழிகள்
உழுதுதங் கடன்கழித் துண்டு வேந்தரை
வழிமொழிந் தின்னணம் வாழு மாந்தர்போ
லெழுதிய திறையிறுத் திருந்து வாழ்வதே
லழகிது பெரிதுநம் மரச வாழ்க்கையே
நாளினுந் திறைநுமக் குவப்பத் தந்துநா
டாளுது மன்றெனி லொழிது மேலெம
தோளினுந் தொடுகழல் வலியி னானுமிவ்
வாளினும் பயனெனை மயரி மாந்தர்காள்
விடமுடை யெரிக்கொடி விலங்கு நோக்குடை
யடைலுடைக் கடுந்தொழி லரவி னாரழற்
படமுடை மணிகொளக் கருதிப் பார்ப்பதோர்
மடமுடை மனத்தனும் மயரி மன்னனே
இருங்கலிப் படையினு மிகலி னாலுமெம்
மருங்கல் மிவைபெற்ற கரிய தாவதோர்
மருங்குள தெனினது மகளி ராற்சில
பெருங்கலத் தாங்கினாற் பெறலு மாகுமே
பாழியான் மெலிந்தவற் திறத்துப் பண்டெலா
மாழியால் வெருட்டி நின் றடர்த்தி போலுமஃ
தேழைகா ளினியொழித் திட்டுச் செவ்வனே
வாழுமா றறிந்துயிர் காத்து வாழ்மினே
அன்றெனிற் றிறைகொளக் கருதி னாங்கொடு
குன்றின்மேற் பெறுவதென் வந்து கொள்கையா
னின்றுத னெஞ்சக நிறைய வீழ்வன
வென்றியாம் பகழியும் விசும்பு மீவனே
இறைவனை மகளிர்போற் கழறி யென்னையெங்
குறையிது கூறுமின் சென்று தூதிர்காள்
திறையினை மறுத்தவர் திறத்துச் செய்வதோர்
முறையுள தெனினது முயன்று கொள்கவே
உட்கவாங் குரைத்தலு மொளிர்பொன் மாழையுங்
கட்கமழ் கோதையர் கணமு மீண்டது
வட்கிநம் மிறைவற்கு வலிது தெவ்வெனத்
துட்கெனு மனத்தினர் தூத ரேகினார்
தூதர்கள் அரிமஞ்சு என்பானிடம் சொல்லுதல்
போகிய தூதர் தங்கோன் பொலங்கழ றெழுத லஞ்சி
யாகிய தறிந்து சூழு மரிமஞ்சு லவனைக் கண்டே
யேகிய புகழி னானைக் கண்டது மீயப் பட்ட
தோகையஞ் சாய லார்தங் குழாங்களு நெதியுஞ் சொல்லி
இதுவுமது
மீட்டிளங் குமரர் கண்டு விடுசுட ரிலங்கு நக்கு
மோட்டிளங் கண்ணி தீய முனித்தழன் முழங்க நோக்கி
யூட்டிலங் குருவக் கோலோர் தங்களுக் குரைத்த வெல்லாம்
தோட்டிலங் குருவத் தொங்க லமைச்சற்குச் சொல்லி யிட்டார்
அரிமஞ்சு தனக்குள் சிந்தித்தல்
அரும்பெற லறிவின் செல்வ னரிமஞ்சு வதனைக்கேட்டே
பெரும்பகை யதனைக் கேட்டாற் பெரியவன் சிறிது நோனா
னிரும்பகை யிதனை யென்கொல் விலக்குமாறென்று தானே
சுரும்பிவர் தொடையன் மார்பன் சூழ்ச்சி கொண் மனத்தனானான்
இதுவுமது
மின்றொடர்ந் திலங்கு பூணான் விளைவுறா விளைமை தன்னா
னன்றுதீ தென்னுந் தேர்ச்சி நவின்றில னாத லால்யா
னொன்ற வோர் மாயங் காட்டி யுளைவித்துக் குறுக வோடிக்
குன்றிடைச் சீயந் தன்மேற் கொளப்புணர்த் திடுவனென்றான்
அரிமஞ்சு அரிகேதுவினை மாயச்சிங்கமாக்கி ஏவுதல்
அன்னண மனத்தி னாலே யிழைத்தரி கேது வென்னு
மின்னணங் குருவப் பைம்பூண் விஞ்சையன் றன்னைக் கூவிக்
கன்னவி றோளி னாற்குக் கருமமீ தென்று காட்டி
மன்னுமோர் மாயச் சீய மாகென வகுத்து விட்டான்
அம்மாயச்சிங்கத்தின் தன்மை
ஒள்ளெரி நெறிப்பட் டன்ன சுரியுளை மலைகண் போழும்
வள்ளுகிர் மதர்வைத் திங்கட் குழவிவா ளெயிற்றுப் பைங்க
ணுள்ளெரி யுமிழ நோக்கி வுருமென வதிரும் பேழ்வாய்க்
கொள்ளரி யுருவு கொண்டான் கொடியவன் கடிய சூழ்ந்தான்
அவ்வரிமாவின் செயல்
இலைத்தடஞ் சோலை வேலி யிமவந்த மடைந்து நீண்ட
சிலைத்தடந் தோளி னார்தஞ் சிந்துநா டதனைச் சேர்ந்து
மலைத்தடம் பிளந்து சிந்த மாண்புடை பெயர முந்நீ
ரலைத்துடன் கலங்கி விண்பா லதிரநின் றுரறி யிட்டான்
அப்பொழுது உலகில் ஏற்பட்ட குழப்பம்
பொடித்தலை புலம்பிக் கானம் போழ்ந்துமா நெரிந்து வீழ
வடித்தலை கலங்கி வேழம் பிடிகளோ டலறி யாழப்
புடைத்துழிப் பதடி போலத் துறுகற்கள் புரண்டு பொங்க
விடித்தலின் மனித்த ரெல்லா மெயிறுற விறுகிச் சோர்ந்தார்
அரிமஞ்சு திவிட்டன்பால் தூதுவிடல்
அப்படி யவனை யவ்வா றமைத்தபி னமைச்ச னாங்கண்
மெய்ப்படை தெரிந்து சொன்ன தூதுவ ரவரை மீட்டே
யிப்படி யிவைகள் சொல்லிப் பெயர்மினீ ரென்று வென்றிக்
கைப்படை நவின்ற வெம்போர்க் காளையைக் கனற்ற விட்டான்
ஆங்குத் தூதுவ ரதிர்முகி லாறுசென் றிழிந்து
பூங்கட் டேமொழிப் போதனத் திறைவன்றன் புதல்வர்
வீங்கு பைங்கழல் விடுசுடர் மிடைமணிப் பூணோர்
ஓங்கு தானையோ டுலாப்போந்த விடஞ்சென்றீ துரைத்தார்
தூதர்கள் திவிட்டனுக்கு இயம்புதல்
திரையின் மாற்றமுந் திறையினை விலக்கிய திறமும்
குறையென் றெங்களைக் குமரநீ பணித்ததுங் கூற
வரையும் பைங்கழ லாழியந் தடக்கையெ மரைச
னறையும் குஞ்சியா னன்றுநன் றெனச்சொல்லி நக்கான்
இதுவுமது
தளையின் விண்டுதேன் றயங்கிய தடங்கொடார் மார்ப
விளையை யென்பது மெங்கள்வாய்க் கேட்டபி னிறைவ
னொளியு மாற்றலும் தன்கணொன் றுள்ளது நினையா
னளியின் பிள்ளைதா னுரைத்தவென் றழன்றில னமர்ந்தான்
தூதுவர் திவிட்டனுக்கு அரிமா வுண்மை கூறல்
அறியு மாயிற்ற னரும்பெற னாட்டினை யரிய
வெறியு மின்னுரு மெனவிடித் திறுவரை முழையு
ளுறையுங் கோளரி யொழிக்கலா னமக்குவந் தீயுந்
திறையு மீட்கிய வலித்தவச் செருக்குடைச் சிறியோன் 133
திவிட்டன் வியந்து அயல் நின்றாரை வினாதல்
என்று மற்றது மொழிமின் றுரைத்தெமை விடுத்தா
னென்ற மாற்றமஃ திசைத்தலு மிளையவ னென்னே
சென்ற நாட்டகஞ் சிலம்பதின் றிடித்துயி ரலறக்
கொன்றொர் கோளரி கொடுமுடி யுறைவதோ வென்றான்
அயனின்றோர் அவ்வரிமா உளதெனல்
உனது வாழிநி னொலிபுனற் சிந்துநன் னாட்டிற்
களைதல் யாவர்க்கு மரியது கனமணிக் குன்றி
னுளது கோளரி யுருமென விடித்துயிர் பருகி
அளவி ணீன் முழை யுறைகின்ற தடிகளென் றுரைத்தார்
திவிட்டன் அவ்வரிமாவைக் கொல்வேன் என்று சூளுரைத்தல்
ஆயின் மற்றத னருவரைப் பிலமென வகன்ற
வாயைப் போழ்ந்துட லிருபிளப் பாவகுத் திடுவ
னேயிப் பெற்றியே விளை த்தில னாயினும் வேந்தன்
பேயிற் பேசிய பிள்ளையே யாகென்று பெயர்ந்தான்
இதுவுமது
புழற்கைத் திண்ணுதி மருப்பின் பொருகளி றிவைதா
நிழற்க ணோக்கித்தின் றழன்றன நிலையிடம் புகுக
வழற்க ணாறுப வடுபடை தொடுதலை மடியாத்
தொழிற்க ணாளருந் தவிர்கெனச் சூளுற்று மொழிந்தான்
இவரு மாமணிக் கொடுஞ்சிய விவுளித் தேர் காலாட்
கவரி நெற்றிய புரவிதங் காவிடம் புகுக
வெவரு மென்னொடு வரப்பெறார் தவிர்கென வெழில்சே
ருவரி நீர்வண்ண னுழையவ ரொழியுமா றுரைத்தான்
விசயன் திவிட்டனுடன் செல்ல நினைத்தல்
நகர மாசன மிரைப்பது தவிர்த்தபின் னளிநீர்ப்
பகரு மாகடல் படிவங்கொண் டனையவன் படரச்
சிகர மால்வரை தெளிந்தனன் திருவமார் பினன்பின்
மகர மாகடல் வளைவண்ன னுடன்செல வலித்தான்
இருவரும் அவ்வரிமா வதியும் இடம் எய்துதல்
புழற்கை மால்களிற் றெருத்திடைப் புரோசையிற் பயின்ற
கழற்கொள் சேவடி கருவரை யிடைநெறி கலந்த
வழற்கொள் வெம்பொடி யவைமிசை புதையவவ் வரிமான்
தொழிற்கொண் டாருயிர் செகுக்கின்ற சூழல்சென் றடைந்தார்
அம்மாய அரிமாவின் முழக்கம்
அடைந்த வீரரைக் காண்டலு மழலுளை யரிமா
வுடைந்த போகவோ ரிடியிடித் தெனவுடன் றிடிப்ப
விடிந்து போயின விறுவரைத் துறுகலங் குடனே
பொடிந்து போயின பொரியன நெரிவொடு புரளா
அவ்வரிமாவின் எதிரில் திவிட்டன் போர்க்கோலம் பூண்டு முழங்குதல்
காளி காளொளி முகில்வண்ணன் கழல்களை விசியாத்
தோளின் மேற்செலச் சுடர்விடு கடகங்கள் செறியாச்
சூளி மாமணித் தொடர்கொண்டு சுரிகுஞ்சி பிணியா
ஆளி மொய்ம்பனங் கார்த்தன னுடைத்ததவ் வரியே
அஞ்சி ஓடும் அரிமாவைத் திவிட்டன் தொடர்தல்
எங்குப் போவதென் றுடைநெறி யிறுவரை நெரியப்
பைங்கட் கோளரி யுருவுகொண் டவன்மிசைப் படர்ந்து
வெங்கட் கூற்றமுந் திசைகளும் விசும்பொடு நடுங்கச்
செங்கட் காரொளி நெடியவன் விசையினாற் சிறந்தான்
திவிட்டன் ஓடும் தன்மை
சுழலங் கார்த்தில காள்களு நிலமுறா முடங்கா
அழலுஞ் செஞ்சுடர்க் கடகக்கை யவைபுடை பெயரா
குழலுங் குஞ்சியு மாலையுங் கொளுவிய தொடரு
மெழிலுந் தோளிலு மெருத்திலுங் கிடந்தில வெழுந்தே
இதுவும் அது
மரங்கள் வேரொடுங் கீழ்ந்தென வழிதொடர்ந் தெழுந்த
நிரந்த மான்களும் பறவையும் நிலங்கொண்டு பதைத்த
வரங்கொள் வெம்பர லணிவரைக் கொடுமுடி யவைதா
முரங்கொ டோ ளவன் விரனுதி யுறவுடைந் தொழிந்த
அம்மாய அரிமா குகையிற் புக்கொளிதல்
மூடி யிட்டன முகிற்கண முரன்றிடை நொறுங்காய்க்
கூடி யிட்டன கொடுமுடித் துறுகற்கள் குளிர்ந்தாங்
காடி யிட்டன வனதெய்வ மரியுரு வுடையா
னோடி யிட்டன னொளிவரை முழையகத் தொளிந்தான்
அக்குகையில் உறைந்த மெய் அரிமா இவ்வாரவாரத்தே துயில் நீத்து எழுதல்
உலகத்தின் வீங்கிய வொளிமணிச் சுடரணி திணிதோ
ணலத்தின் வீங்கிய நளிர்புக ழிளையவன் விரையின்
நிலத்தின் கம்பமு நெடுவரை யதிர்ச்சியு மெழுவப்
பிலத்தின் வாழரி யரசுதன் றுயில்பெயர்ந் ததுவே
திவிட்டன் முழக்கம்
ஏங்கு வாழிய விருள்கெழு முழையகத் தொளித்தா
யோங்கு மால்வரை பிளந்திடு கெனவுளைந் துரவோ
னாங்க மாமுழை முகத்துல கதிரநின் றார்த்தான்
வீங்கு வாய்திறந் தொலித்தது விலங்கலிற் சிலம்பே
அக்குகைவாழ் அரிமாவின் முழக்கம்
அதிர வார்த்தலு மழன்றுத னெயிற்றிடை யலர்ந்த
கதிருங் கண்களிற் கனலெனச் சுடர்களுங் கனல
முதிர்வில் கோளரி முனிந்தெதிர் முழங்கலி னெரிந்து
பிதிர்வு சென்றது பெருவரை பிளந்ததப் பிலமே
எரிந்த கண்ணிணை யிறுவரை முழைநின்ற வனைத்தும்
விரிந்த வாயொடு பணைத்தன வெளியுகிர் பரூஉத்தாள்
சுரிந்த கேசரஞ் சுடரணி வளையெயிற் றொளியா
விரிந்த தாயிடை யிருணிண்றங் கெழுந்ததவ் வரியே
அவ்வரிமா வெளிப்படுதல்
தாரித் திட்டதன் றறுகண்மைக் குணங்களி னுலகை
வாரித் தீட்டிவண் வந்ததோ ரரியென மதியாப்
பூரித் திட்டதன் பெருவலி யொடுபுக ழரிமாப்
பாரித் திட்டது பனிவிசும் புடையவர் பனித்தார்
திவிட்டன் அவ்வரிமாவைப் பிளந்து கொல்லுதல்
அளைந்து மார்பினு ளிழிதரு குருதியைக் குடிப்பா
னுளைந்து கோளரி யெழுதலு முளைமிசை மிதியா
வளைந்த வாளெயிற் றிடைவலித் தடக்கையிற் பிடித்தான்
பிளந்து போழ்களாய்க் கிடந்ததப் பெருவலி யரியே
அமரர்களின் வியப்பு
சீய மாயிரஞ் செகுத்திடுந் திறலது வயமா
வாய வாயிர மாயிர மடுதிற லரிமா
ஏயெ னாமுனிங் கழித்தன னிவனெனத் தத்தம்
வாயின் மேல்விரல் வைத்துநின் றமரர்கண் மருண்டார்
அழிந்த கோளரிக் குருதிய தடுங்கடங் களிற்றோ
டொழிந்த வெண்மருப் புடைந்தவு மொளிமுத்த மணியும்
பொழிந்து கல்லறைப் பொலிவது குலிகச்சே றலம்பி
யிழிந்த கங்கையி னருவியொத் திழிந்தவவ் விடத்தே
திவிட்டனின் சால்புடைமை
யாது மற்றதற் குவந்திலன் வியந்தில னிகலோ
னோத நித்திலம் புரிவளை யொளியவற் குறுகி
யேத மற்றிது கடிந்தன னின்னினி யடிகள்
போதும் போதன புரத்துக்கென் றுரைத்தனன் புகழோன்
தம்பி யாற்றல்கண் டுவந்துதன் மனந்தளிர்த் தொளியால்
வம்பு கொண்டவன் போனின்று வளைவண்ணன் மொழிந்தா
னம்பி நாமினி நளிவரைத் தாழ்வார்கண் டல்லா
லிம்பர் போம்படித் தன்றுசெங் குருதிய திழிவே
இதுமுதல் 10 செய்யுள்கள் ஒருதொடர் -திவிட்டநம்பிக்கு விசயன் குறிஞ்சிநில வனப்பினை எடுத்துக் கூறல்
ஆங்கண் மால்வரை யழகுகண் டரைசர்கள் பரவும்
வீங்கு பைங்கழ லிளையவன் வியந்துகண் மலரச்
வீங்கி மாண்பின வினையன விவையென வினிதின்
வாங்கு நீரணி வளை வண்ண னுரைக்கிய வலித்தான் 154
புள்ளுங் கொல்லென வொலிசெயும் பொழில்புடை யுடைய
கள்ளி னுண்டுளி கலந்துகா லசைத்தொறுங் கமழு
வுள்ளுந் தாதுகொண் டூதுவண் டறாதன வொளிசேர்
வெள்ளென் றோன்றுவ கயமல்ல பளிக்கறை விறலோய்
காளை வண்ணத்த களிவண்டு கதிவிய துகளாற்
றாளை மூசிய தாமரைத் தடம்பல வவற்று
ளாளி மொய்ம்பவங் ககலிலை யலரொடுங் கிழிய
வாளை பாய்வன கயமல்ல வனத்திடர் மறவோய்
மன்னு வார்துளித் திவலைய மலைமருங் கிருண்டு
துன்னு மாந்தர்கள் பனிப்புறத் துணைமையோ டதிர்வ
இன்ன வாம்பல வுருவுக ளிவற்றினு ளிடையே
மின்னு வார்ந்தன முகிலல்ல களிறுகள் விறலோய்
உவரி மாக்கட் னுரையென வொளிர்தரு மயிர
அவரை வார்புனத் தருந்திமே யருவிநீர் பருகி
இவரு மால்வரை யிளமழை தவழ்ந்தென விவையே
கவரி மாப்புடை பெயர்வன கடல்வண்ண காணாய்
வேறு -
துள்ளிய ரும்புனற் றுளங்குபா றைக்கலத்
துள்ளுரா விக்கிடந் தொளிருமொண் கேழ்மணி
நள்ளிரா வின்றலை நகுபவா னத்திடைப்
பிள்ளைநா ளம்பிறை பிழற்தல்போ லுங்களே
வழையும்வா ழைத்தடங் காடுமூ டிப்புடங்
கழையும்வே யுங்கலந் திருண்டு காண் டற்கரு
முழையுமூ ரிம்மணிக் கல்லுமெல் லாநின
திழையினம் பொன்னொளி யெரிப்பத்தோன் றுங்களே
பருவமோ வாமுகிற் படல மூடிக்கிடந்
திரவுண்டே னைப்பக லில்லையொல் லென்றிழித்
தருவி யோ வாபுரண் டசும்புபற் றித்தட
வரையின்றாழ் வார்நிலம் வழங்கலா கார்களே
சூரலப் பித்தொடர்ந் தடர்துளங் கும்மரில்
வேரலோ டும்மிடைந் திருண்டுவிண் டுவ்விடார்
ஊரலோ வாதனன் றுயிரையுண் டிடுதலால்
சாரலா காதன சாதிசா லப்பல
பரியபா றைத்திரள் படர்ந்தபோ லக்கிடந்
திரியவே ழங்களை விழுங்கியெங் குந்தமக்
குரியதா னம்பெறா வுறங்கியூ றுங்கொளாப்
பெரியபாம் பும்முள பிலங்கொள்பேழ் வாயவே
அவைகள்கண் டாய்சில வரவமா லிப்பன
உவைகள்கண் டாய்சில வுளியமொல் லென்பன
இவைகள்கண் டய்சில வேழவீட் டம்பல
நவைகள்கண் டாயின நம்மலா தார்க்கெலாம்
குழல்கொடும் பிக்கணங் கூடியா டநகும்
எழில்கொடா ரோய்விரைந் தியங்கலிங் குள்ளநின்
கடில்களார்க் குங்களே கலங்கிமே கக்குழாம்
பொழில்கள்வெள்ள ளத்திடைப் புரளநூ றுங்களே
ஆக்கலா காவசும் பிருந்துகண் ணிற்கொரு
நீக்கநீங் காநிலம் போலத்தோன் றிப்புகிற்
காக்கலா காகளி றாழவா ழும்புறந்
தூக்கந்தூங் குந்தொளி தொடர்ந்துபொன் றுங்களே
இதுவித்தாழ் வார்நிலத் தியற்கைமே லாற்பல
மதியம்பா ரித்தன மணிக்கற் பாறையின்மிசை
நிதியம்பா ரித்தொளி நிழன்று துஞ் சன்னிலைக்
கதியின் வாழ் வாரையுங் கண்கள்வாங் குங்களே
வேறு
இருது வேற்றுமை யின்மையாற்
சுருதி மேற்றுறக் கத்தினோ
டரிது வேற்றுமை யாகவே
கருது வேற்றடங் கையினாய்
தொல்லுறு சுடர்போலுஞ் சூழொளி மணிப்பாறை
கல்லறை யவைகோங்கின் கடிமலர் கலந்துராய்
மல்லுறு வரைமார்ப வளரொளி யின்முளைக்கு
மெல்லுறு சுடர்வானத் தெழிலவா யினியவ்வே
திரைத்த சாலிகை
நிரைத்த போனிரந்
திரைப்ப தேன்களே
விரைகொண் மாலையாய்
வரைவாய் நிவத்த வடுமா வடுமா
விரைவாய் நிவந்து விரியா விரியா
புரைவா யசும்பு புலரா புலரா
இரவா யிருள்செ யிடமே யிடமே
இளையா ரிளையா ருடனாய் முலையின்
வளையார் வளையார் மனம்வேண் டுருவம்
விளையா விளையாட் டயருந் தொழிறான்
றளையார் தளையார் பொழிலின் றடமே
அளியாடு மமரங்க ளமரங்கள் மகிழ்ந்தானா
விளையாடும் விதமலர்ந்த விதமலர்ந்த மணிதூவும்
வளையார்கண் மகிழ்பவான் மகிழ்பவான் மலர்சோர்வ
இளையாரை யினையவே யினையவே யிடமெல்லாம்
தமரைத் திடத்திடை மலர்ந்த சாரல்வாய்த்
தாமரைத் துளையொடு மறலித் தாவில்சீர்த்
தாமரைத் தகுகுணச் செல்வன் சண்பகம்
தாமரைத் தடித்தலர் ததைந்து தோன்றுமே
நாகஞ் சந்தனத் தழைகொண்டு நளிர்வண்டு கடிவ
நாகஞ் சந்தனப் பொதும்பிடை நளிர்ந்துதா துமிழ்வ
நாகஞ் செஞ்சுடர் நகுமணி யுமிழ்ந்திருள் கடிவ
நாக மற்றிது நாகர்தம் முலகினை நகுமே
நகுமலரன நறவம் மவைசொரி வனநறவம்
தொகுமலரன துருக்கம் மவைதரு வனதுருக்கம்
மகமலரன வசோகம் மவைதருவ வசோகம்
பகுமலரன பாங்கர் பலமலையன பாங்கர்
அணங்கமர் வனகோட லரிதவை பிறர்கோடல்
வணங்கிளர் வனதோன்றி வகைசுடர் வனதோன்றி
இணங்கிணர் வனவிஞ்சி யெரிபொன் புடையிஞ்சி
மணங்கமழ் வனமருதம் வரையயல் வனமருதம்
சாந்துந் தண்டழை யுஞ்சுர மங்கையர்க்
கேந்தி நின்றன விம்மலை யாரமே
வாய்ந்த பூம்புடை யும்மலர்க் கண்ணியு
மீந்த சாகைய விம்மலை யாரமே
இயங்கு கின்னர ரின்புறு நீரவே
தயங்கு கின்றன தானமந் தாரமே
பயங்கொள் வார்பயங் கொள்பவ வனைத்தையும்
தயங்கு கின்றன தானமந் தாரமே
வேறு
பொன்விரிந் தனைய பூங் கோங்கும் வேங்கையு
முன்விரிந் துக்கன மொய்த்த கற்றல
மின்விரிந் திடையிடை விளங்கி யிந்திரன்
வின்முரிந் திருண்முகில் வீழ்ந்த போலுமே 180
நிழற்பொதி நீலமா மணிக்க லந்திரள்
பொழிற்பொதி யவிழ்ந்தபூப் புதைந்து தோன்றுவ
தழற்பொதிந் தெனத்துகி றரித்த காஞ்சியர்
குழற்பொதி துறுமலர்க் கொண்டை போலுமே
மேவுவெஞ் சுடரொளி விளங்கு கற்றலம்
தாவில்பூந் துகளொடு ததைந்து தோன்றுவ
பூவுக விளையவர் திளைத்த பொங்கணைப்
பாவுசெந் துகிலுடைப் பள்ளி போலுமே
வேறு
அழலணி யசோகஞ் செந்தா தணிந்துதே னரற்ற நின்று
நிழலணி மணிக்கன் னீல நிறத்தொடு நிமிர்ந்த தோற்றம்
குழலணி குஞ்சி மைந்தர் குங்குமக் குழம்பு பூசி
எழிலணி திகழ நின்றா லெனையநீ ரனைய தொன்றே
இணைந்துதேன் முழங்க விண்ட வேழிலம் பாலை வெண்பூ
மணந்துதா தணிந்து தோன்று மரகத மணிக்கற் பாறை
கணங்கெழு களிவண் டாலப் பாசடை கலந்த பொய்கை
தணந்தொளி விடாத வெண்டாமரை ததைந் தனையதொன்றே
காரிருட் குவளிக் கண்ணிக் கதிர்நகைக் கனபொற் றோட்டுக்
கூரிருள் சுரிபட் டன்ன குழலணி கொடிறுண் கூந்தல்
பேரிருள் கிழியத் தோன்றும் பிறையெயிற் றமர நோக்கிற்
சூரர மகளிர் வாழு மிடமிவை சுடர்ப வெல்லாம்
வாரிரு புடையும் வீக்கி வடஞ்சுமந் தெழுந்து வேங்கை
யேரிருஞ் சுணங்கு சிந்தி யெழுகின்ற விளமென் கொங்கைக்
காரிருங் குழலங் கொண்டைக் கதிர்நகைக் கனகப் பைம்பூண்
நீரர மகளிர் கண்டாய் நிறைபுனற் றடத்து வாழ்வார்
மேகமேற் றவழ்ந்து வேய்கண் மிடைத்துகீ ழிருண்ட தாழ்வர்
ஏகமா மலையி னெற்றி யிருஞ்சுனைத் தடங்க ளெல்லாம்
நாகமா மகளி ரென்னு நங்கையர் குடையப் பொங்கி
மாகமேற் றரங்கஞ் சிந்தி மணியறை கழுவு மன்றே
ஆவிவீற் றிருந்த காத லவரொடு கவரி வேய்ந்து
நாவின்வீற் றிருந்த நாறு நளிர்வரைச் சிலம்பின் மேயார்
காவிவீற் றிருந்த கண்ணார் கந்தர்வ மகளிர் கண்டாய்
பாவிவீற் றிருந்த பண்ணி னமுதினாற் படைக்கப் பட்டார்
அலங்கிண ரணிந்த விஞ்சை யரிவைய ரிடங்கள் கண்டாய்
விலங் கலின் விளங்கு கின்ற வெள்ளிவெண் கபாடமாடம்
இலங்கொளி மகரப் பைம்பூ ணியக்கிய ரிடங்கள் கண்டாய்
நலங்கிளர் பசும்பொற் கோயி னகுகின்ற நகர மெல்லாம்
போய்நிழற் றுளும்பு மேனிப் புணர்முலை யமிர்த னாரோ
டாய்நிழற் றுளும்பு வானோ ரசதியா டிடங்கள் கண்டாய்
சேய்நிழற் றிகழுஞ் செம்பொற் றிலதவே திகைய வாய
பாய்நிழற் பவழச் செங்காற் பளிக்கு மண் டபங்க ளெல்லாம்
எழின்மணிச் சுடர்கொண் மேனி யிமையவ ரிடங்கள் கண்டாய்
முழுமணிப் புரிசை வேலி முத்தமண் டபத்த வாய
கழுமணிக் கபாட வாயிற் கதிர்நகைக் கனக ஞாயிற்
செழுமணிச் சிகர கோடிச் சித்திர கூட மெல்லாம்
தும்பிவாய் துளைக்கப் பட்ட கீசகம் வாயுத் தன்னால்
வம்பவாங் குழலி னேங்க மணியரை யரங்க மாக
உம்பர்வான் மேக சால மொலிமுழாக் கருவி யாக
நம்பதேன் பாட மஞ்ஞை நாடக நவில்வ காணாய்
பொன்னவிர் மகரப் பைம்பூட் பொலங்குழை யிலங்கு சோதிக்
கன்னவில் வயிரத் திண்டோ ட் கடல்வண்ண னுவப்பக் காட்டி
மன்னவின் றிறைஞ்சுஞ் செய்கை வளைவண்ணன் மலையின் மேலால்
இன்னன பகர்ந்து சொல்லு மெல்லையு ணீங்க லுற்றார்
பாசிலைப் பாரி சாதம் பரந்துபூ நிரந்த பாங்கர்
மூசின மணிவண் டார்க்கு முருகறா மூரிக் குன்றம்
காய்சின வேலி னான்றன் கண்களி கொள்ளக் காட்டி
யோசனை யெல்லை சார்ந்து பின்னையிஃ துரைக்க லுற்றான்
வலிகற்ற மதர்வைப் பைங்கண் வாளொயிற் றரங்கச் சீயங்
கலிகற்ற களிறுண் பேழ்வாய்க் கலிங்கினா னிழிந்து போந்து
குலிகச்சே றலம்பிக் குன்றங் கொப்புளித் திட்ட தொப்ப
ஒலிகற்ற வுதிர நீத்த மொழுகுவ தின்ன நோக்காய்
இதுமுதல் 6 செய்யுட்கள் ஒரு தொடர் விசயன் திவிட்டனின் ஆற்றலை வியந்து பாராட்டுதல்
வெம்பவேங் குயிரை யெல்லாம் விழுங்கிய வெகுண்டு நோக்கிச்
கம்பமா வுலகந் தன்னைக் கண்டிடுங் களிகொள் சீயம்
நம்பநீ யழித்த தல்லா னகையெயிற் றதனை நண்ணல்
வம்பறா மகரப் பைம்பூண் வானவர் தமக்கு மாமோ
ஆங்குநீ முனிந்த போழ்தி னரிது வகல நோக்கி
வாங்குநீர் வண்ண கேளாய் மாயமா மதித்து நின்றே
னோங்குநீண் மலையின் றாழ்வா ரொலிபுன லுதிர யாறு
வீங்கிவந் திழிந்த போழ்து மெய்யென வியப்புச் சென்றேன்
குன்றிற்கு மருங்கு வாழுங் குழூஉக்களிற் றினங்க ளெல்லா
மன்றைக்கன் றலறக் கொன்றுண் டகலிடம் பிளப்பச் சீறி
வென்றிக்கண் விருப்பு நீங்கா வெங்கண்மா விதனைக் கொன்றா
யின்றைக்கொண் டுலக மெல்லா மினிதுகண் படுக்கு மன்றே
அரசரின் முதற் கடமை
உரைசெய்நீ ளுலகின் வாழு முயிர்களுக் குறுகண் கண்டால்
வரைசெய்தோண் மைந்தர் வாழ்க்கை மதிக்கிலார் வனப்பின் மிக்கார்
திரைசெய்நீ ருலகங் காக்குஞ் செய்கை மேற் படைக்கப் பட்ட
அரசர்தம் புதல்வர்க் கையா வறம்பிறி ததனி லுண்டோ
யாக்கையால் எய்தும் பயன்
கற்றவர் கடவுட் டானஞ் சேர்ந்தவர் களைக ணில்லா
ரற்றவ ரந்த ணாள ரன்றியு மனைய நீரார்க்
குற்றதோ ரிடுக்கண் வந்தா லுதவுதற் குரித்தன் றாயில்
பெற்றவிவ் வுடம்பு தன்னாற் பெறுபய னில்லை மன்னா
இறவாது நிற்போர் இவர் எனல்
மன்னுயிர் வருத்தங் கண்டும் வாழ்வதே வலிக்கு மாயி
லன்னவ னாண்மை யாவ தலிபெற்ற வழகு போலா
மென்னையான் கொடுத்தும் வையத் திடுக்கணோய் கெடுப்ப னென்னும்
நின்னையே போலு நீரார் நிலமிசை நிலவி நின்றார்
ஒருவனுடைய இருவேறு யாக்கைகள்
ஒருவன திரண்டி யாக்கை யூன்பயி னரம்பின் யாத்த
உருவமும் புகழு மென்றாங் கவற்றினூழ் காத்து வந்து
மருவிய வுருவ மிங்கே மறைந்துபோ மற்ற யாக்கை
திருவமர்ந் துலக மேத்தச் சிறந்துபின் னிற்கு மன்றே
வேறு - விசய திவிட்டர்கள் குறிஞ்சி நிலங்கடந்து பாலைநிலம் எய்துதல்
என்று தங்கதை யோடிரு நீண்முகிற்
குன்று சூழ்ந்த குழுமலர்க் கானகம்
சென்றொர் வெங்கடஞ் சேர்ந்தன ருச்சிமே
னின்று வெய்யவ னுநிலங் காய்த்தினான்
இதுமுதல் 8 செய்யுட்கள் ஒருதொடர்
விசயன் பாலைநிலத்தின் தன்மையை எடுத்தியம்பல்
ஆங்கவ் வெங்கடஞ் சேர்ந்த பினையகா
ணீங்கிவ் வெங்கடுங் கானகத் தீடென
ஏங்கு நீர்ககடல் வண்ணனுக் கின்னணம்
வீங்கு வெண்டிரை வண்ணன் விளம்பினான்
முழையு டைந்தழல் காலு முரம்பயற்
கழையு டைந்துகு கண்கவர் நித்திலம்
மழையு டைந்துகு நீரென வாய்மடுத்
துழையு டைந்துகு கின்றன வூங்கெலாம்
மிக்க நீள்கழை மேல்விளை வுற்றழ
லொக்க வோடி யுறைத்தலி னான்மிசை
உக்க நெற்பொரி யுற்றொரு சாரெலாம்
தொக்க கற்றல மேற்றுடிக் கின்றவே
ஏங்கு செங்கதி ரோனெ றிப்பநிழல்
வேங்கொ லென்றொளித் திட்டிபம் வீழ்ந்துசேர்
பாங்க லார்மனை போலப் பறைந்தரோ
ஓங்கி நின்றுல வுற்றன வோமையே
அற்ற நீரழு வத்திடை நெல்லியின்
வற்ற லஞ்சினை யூடு வலித்தரோ
மற்ற வெவ்வெயி லுந்நிழல் வாயழ
லுற்று வீழ்ந்தது போன்றுள வாங்கெலாம்
பைத்த லைப்பட நாக மழன்றுதம்
பொய்த்த ளைத்தலை போதரக் கார்செய்வான்
கைத்த லம்முகிற் கின்றன காந்தளென்
றத்த லைச்சிலை மானயர் வெய்துமே
விசையி னோடு வெண் டேர்செலக் கண்டுநீர்
தசையி னோடிய நவ்வி யிருங்குழா
மிசையில் கீழ்மகன் கண்ணிரந் தெய்திய
வசையின் மேன்மகன் போல வருந்துமே
துடியர் தொண்டகப் பாணியர் வாளியர்
கொடிய செய்துமு னைப்புலங் கூட்டுணுங்
கடிய நீர்மையர் கானகங் காக்குநி
னடிய ரல்லதல் லாரவ ணில்லையே
வேறு- விசய திவிட்டர்கள் பாலை கடந்து நாட்டின்கண் ஏகுதல்
அங்கவெங்க டங்கடந்த லங்குதாரி லங்குபூண்
சிங்கம் வென்ற செங்கண்மாலொ டம்பொன்மாலை வெண்கடாத்
திங்கள் வண்ணன் வெங்கண்யானை வேந்துசேர்ந்த நாடுசார்ந்
திங்கணின்ன இன்னகாணெ னப்புகழ்ந்தி யம்பினான்
முல்லை நிலத்தின் மாண்பு
மாலும்வாரி திங்கண்மூன்றும் வந்தறாத மாண்பினா
லாலுமாவ றானைநம்ம டிகளாளு நாட்டகம்
காலமாண்பி னன்றியுங் கார்கவின்ற நீரவே
போலுமாண்பி னேர்கலந்து பொங்குநீர புறணியே
கொண்டல்வாடை யென்னுங் கூத்தன் யாத்தகூத்தின் மாட்சியால்
விண்டமா மலர்ப்பொதும்ப ரங்கமா விரும்புநீர்
வண்டுபாட வல்லியென்னு மாதராடு நாடகங்
கண்டுகொன்றை பொன்சொரிந்த காந்தள்கை மறித்தவே
கைமலர்த்த காந்தளுங் கரியநீர்க் கருவிளை
மைம்மலர்த் தடங்கணேர் வகுத்தலர்ந்த வட்டமு
மொய்மலர்ப் பொதும்பின்மேன் முறுவலித்த முல்லையும்
கொய்மலர்க் குழற்றிரட்சி கொண்டு காய்த்த கொறையும்
தொண்டைவாய் நிறங்கொளக் கனிந்துதூங்கு கின்றவும்
வண்டுபாய வார்கொடி மருங்குலாய் வளர்ந்தவுங்
கண்டபாலெ லாங்கலந்து கண்கவற்று மாதலால்
விண்டுமாலை மாதராரின் மேவுநீர கானமே
தண்ணிலாவி ரிந்தமுல்லை தாதுசேர் தளிர்மிடைந்
தெண்ணிலாய சாயலம் மிடாமணற் பிறங்கன்மேற்
பண்ணிலாய வண்டுபாடு பாங்கரோடு பாங்கணிந்து
வெண்ணிலா விரிந்தவெல்லை போலுமிங்கொர் பாலெலாம்
தேனவாவி மூசுகின்ற தேம்பிறழ்பூ தாங்கலந்து
கானநாவல் கொம்பினிற் கனிந்துகா லசைந்தவற்
றேனைமாடு வண்டிருந் திருண்டகான மிங்கிதற்
கூனமா யிருட்பிழம் புறங்குகின்ற தொக்குமே
வாயிதழ் திறங்கொளக் கனிந்த தொண்டை வந்தொசிந்து
தூயிதழ்த் துணர்துதைந்து தோன்றுகின்ற தோன்றியின்
பாயிதழ்ப் பரப்பின்மே லரத்தகோப மூர்ந்தயற்
சேயிதழ்ப் பொலிந்தகாடு செக்கர்வான மொக்குமே
ஆடிணர்க் கொடிப்பட ரகிற்பொழுதும் பயற்பொலிந்த
கூடிணர்க் குழாநிலைக் கொழுமலர்க் குமிழ்மிசைக்
கோடிணர்க் குலைக்கொசிந்த கொன்றைவிண்ட தாதுசோர்ந்
தோடிணர்ச் சுடர்ப்பொனுக்க கானமொக்கு மூங்கெலாம்
பார்மகிழ்ந்த பைஞ்சுருட் பயிர்மிசைப் பயின்றெழுந்
தேர்கலந்து பாசிலைப் பரப்பினூ டிரைத்தரோ
கார்மகிழ்ந்த கார்மயிற் கலாபமொய்த்த கானக
நீர்மகிழ்ந்த நீர்க்கட னிரந்ததொக்கு நீரதே
ஏறுகொண்ட கோவல ரேந்து தன்ன வக்குரன்
மாறுகொண்ட கோடியர் மணிமுழா முழங்கலிற்
றாறுகொண்ட தோகைமஞ்ஞை யாடல்கண்டு கண்மகிழ்ந்து
சாறுகொண்டு மான்கணத் தயங்குநீர சாரெலாம்
கார்மணந்த கானயாறு கல்லலைத் திழிந்தொலிக்கு
நீர்மணந்த நீள்கரை நிரைத்தெழுந்த நாணல்சூழ்
வார்மணற் பிறங்கன்மாலை வல்லிவிண்ட தாதணிந்து
தார்மணந்த வாரமார்ப யாகசாலை போலுமே
கரவைகன்று வாய்மிகுந்த வமிழ்தினோடு கண்ணகன்
புறவின்மாம ரைம்முலைப் பொழிந்தபா றெகிழ்ந்தெழப்
பறவையுண்டு பாடவும் பால்பரந்த பூமியி
னறவுவிண்ட நாகுமுல்லை வாய்திறந்து நக்கவே
விசய திவிட்டர்கள் முல்லைநிலங்கடந்து மருதனிலம் எய்துதல்
வேரல்வேலி மால்வரைக் கவானின் வேய் விலங்கலிற்
சாரன்மேக நீர்முதிர்ந்து தண்டளந்து ளித்தலால்
மூரல்வா யசும்பறாத முல்லைவிள்ளு மெல்லைபோய்
நீரவாளை பூவின்வைகு நீள்பரப்பு நண்ணினார்
விசயன் மருதநிலத்தின் மாண்புரைத்தல்
புதுநாண் மலர்விண் டுபொழிந்த திழியு
மதுநா றுபுனன் மருதத் தினைமற்
றிதுகா ணெனவின் னனசொல் லினனே
விதுமாண் மிகுசோ திவிளங் கொளியான்
அயலோ தமிரட் டவலம் பொலிநீர்
வயலோ தமயங் கமயங் கவதிர்ந்
தியலோ தையிளஞ் சிறையன் னமெழக்
கயலோ டியொளிப் பனகாண் கழலோய்
வளவா சநிலப் பலவின் சுளையு
மிளவா ழையினின் னெழிலங் கனியும்
களமாங் கனியின் றிரளுங் கலவிக்
குளமா யினயோ சனை கொண் டனவே
வனமா வினிருங் கனியுண் டுமதர்த்
தினவா ளையிரைத் தெழுகின் றனகாண்
கனவா ழைமடற் கடுவன் மறையப்
புனவா னரமந் திபுலம் புவகாண்
வளமா நிலையே திமருப் பினிட
விளவா ழைநுதிக் கமழ்தே னொழுகிக்
குளமார் குளிர்தா மரைக்கொண் டநகைத்
தளவா யுகுகின் றனகாண் டகவோய்
இவைசெந் நெலிடை கருநீ லவன
மவையந் நெலிடை கழுநீ ரழுவ
முவையொண் டுறைவிண் டொளிவிம் முநகு
நகைவென் றனதா மரைநாண் மலரே
கழையா டுகரும் பினறைக் கடிகைப்
பொழிசா றடுவெம் புகைபொங் கியயற்
றழையோ டுயர்சோ லைகடாம் விரவி
மழையோ டுமலைத் தடமொத் துளவே
இதுமுதல் 5 செய்யுள் ஒரு தொடர்
மருத நிலத்தை ஒரு மகளாக உருவகித்தல்
கருநீ லமணிந் தகதுப் பினயற்
கருநீ லமணிந் தனகண் ணிணைகள்
கருநீ லமணிக் கதிர்கட் டியெனக்
கருநீ லமணிந் தகருங் குழலே
வளர்செங் கிடையி னெழில்வைத் தநுதல்
வளர்செங் கிடையி னொளிவவ் வியவாய்
வளர்செங் கிடையின் வளையா டும்வயல்
வளர்செங் கிடைமா மலர்மல் குசிகை
வயலாம் பனெறித் தவகைத் தழையன்
வயலாம் பன்மிலைத் தவடிச் சவியன்
வயலாம் பன்மலிந் தபரப் புடையன்
வயலாம் பன்மலர்த் தொகைமா லையினாள்
வளர்தா மரையல் லிமலர்த் தியகை
வளர்தா மரையல் லிமயக் குமொளி
வளர்தா மரையல் லிமகிழ்ந் தனள்போல்
வளர்தா மரையல் லிவனத் திடையாள்
நளிர்வார் கழலாய் புகழ்நா டிநயந்
தொளிர்வார் குழலா ளொருமா தவளு
ளுளர்வார் கனியும் மதுவுந் தெகிழத்
கிளர்பார் வையுறக் கிளர்கின் றதுகேள்
மதிகா ணநிமர்ந் தமதிற் சிகர
நுதிமா ளிகைமேல நுடங் குகொடி
கதிரோ ணொளிமாழ் கவெழுந் துகலந்
ததுகா ணமதா ரொளிமா நகரே
அறவே தியரா குதியம் புகையார்
உறவே திகைவிம் மியவொண் புறவ
நிறவே திகைமீ துநிமிர்ந் தபொழிற்
புரவே திகையே றுவகாண் புகழோய்
விசய திவிட்டர் போதனமாநகர் புகுதல்
இன்னன விளையவற் கியம்பு மெல்லையுட்
பொன்னக ரடைந்தனர் பொழுதுஞ் சென்றது
நன்னக ரிரைத்தது நரன்ற வின்னிய
மன்னவ குமரரும் வறுமை நீங்கினார்
இளங்களிக் குஞ்சர மிரட்டித் தாயிரம்
துளங்கொளிக் கலினமாத் தூளி யெல்லைய
வளங்கெழு குமரரை வலங்கொண் டெய்தின
அளந்தறிந் திலமகன் படையி னெல்லையே
துன்னிய துணரிளந் தோன்றி மென்கொடி
மன்னிய வனத்திடை மலர்ந்து நீண்டபோற்
கன்னியர் கைவிளக் கேந்தக் காவலன்
பொன்னியல் வளநகர் பொலியத் தோன்றினார்
காவியங் கருங்கணார் கமழ வூட்டிய
வாவியங் கொழும்புகை தழுவி யாய்மலர்க்
கோவையங் குழுநிலை மாடம் யாவையும்
பாவிய பனிவரைப் படிவங் கொண்டவே
மல்லிகை மனங்கமழ் மதுபெய் மாலையு
முல்லையம் பிணையலு மொய்த்த பூண்கடை
எல்லியங் கிளம்பிறைக் கதிர்கள் வீழ்ந்தன
தொல்லையங் கடிநகர் துயில்வ போன்றவே
பயாபதி மக்களைத் தன்பால் அழைத்தல்
செம்பொன்மா மணிநகர்ச் செல்வ வீதியுட்
கொம்பனா ரடிதொழக் கோயி லெய்தலு
நம்பிமார் வருகென நாறு நீரொளி
அம்பொன்மா மணிமுடி யரச னேயினான்
விசய திவிட்டர்கள் தந்தையை வணங்குதல்
அருளுவ தென்கொலென் றஞ்சி செஞ்சுடர்
இருளுக வெழுந்ததொத் திருந்த கோனடிச்
சுருளுறு குஞ்சிக டுதையத் தாழ்ந்தனர்
மருளுறு மனத்தினன் மன்னன் னாயினான்
பயாபதி மக்களைத் தழுவுதல்
திருவரை யனையதோட் சிழ்ருவர் தம்மையக்
கருவரை யனையவெங் களிதல் யானையா
னிருவரும் வருகென விரண்டு தோளினு
மொருவரை யகலத்தி னெடுங்கப் புல்லினான்
மானவா மதகளிற் றுழவன் மக்கடந்
தேனவாஞ் செழுமலர் செறிந்த குஞ்சியுட்
கானமா மலர்த்துகள் கழுமி வீழ்ந்தன
வானவாந் தடக்கையான் மகிழ்ந்து நோக்கினான்
என்னைநும் மீரலர்க் குஞ்சி தம்முளித்
துன்னிய வனத்துக டுதைந்த வாறென
மன்னவ னருளலு மகர வார்குழை
மின்னிவர் மணிக்கழல் விசயன் செப்பினான்
விசயன் தந்தைக்குத் திவிட்டன் அரிமாவினை அழித்தமை விளம்பல்
போற்றநம் புறணிசூழ் காடு பாழ்செய்வான்
சீற்றமிக் குடையதோர் சீயஞ் சேர்ந்தது
வேற்றுவன் றமர்கள்வந் துரைப்ப வெம்பியிவ்
வாற்றல்சா லடியன்சொன் றதனை நீக்கினான்
பயாபதியின் கழி பேருவகை
யானுமங் கிவனொடு மடிக ளேகினேன்
வானுய ரிமகரி மருங்கி லென்றுபூந்
தேனுய ரலங்கலான் சிறுவன் சொல்லலுந்
தானுயிர் தளிர்ப்பதோர் சவிய னாயினான்
சுடரொளி மிகுசோதி சூழ்கழற் காளை மார்தம்
அடரொளி முடிமன்ன னேவலா னாய்பொன் னாகத்
தொடரொளி சுடர்ஞாயிற் சூளிகை சூழு நெற்றிப்
படரொளி நெடுவாயிற் பள்ளிபம் பலங்கள் சேர்ந்தார் 7. 254
ஏழாவது சீயவதைச் சருக்கம் முற்றிற்று
முதல் பாகம் முற்றிற்று