புலவர் புலமைப்பித்தன் " எனது வீடு எனது வாழ்வு, என்று வாழ்வது வாழ்க்கையா? இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா? " சாதி மல்லிப் பூச்சரமே
in the Ananda Vikatan 15 September 2002
''ஐ.ஏ.எஸ். படித்து விட்டு பியூன் வேலைக்கு வந்ததற்குச் சமமான ஒரு விபத்து'' என்று, தான் பாடல் எழுதவந்தது பற்றி வர்ணிக்கிறார் புலவர் புலமைப்பித்தன்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் தொடங்கி இன்று அஜீத், விஜய் வரைக்கும் தன்னை நீட்டித்துக் கொண்டிருக்கிற கவிஞர்.
எந்தச் சூழ்நிலைக்கும் இலக்கியத் தரமாகவே பாடல்கள் எழுதுவதில் முன்னோடி என்று இவரைச் சொல்லலாம்.
''பிறவி கம்யூனிஸ்ட் நான். ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கப் போராடும் யுத்தக்காரன். சமூக அநீதி கண்டு பொங்கும் போராளி. பாரதி, பாரதிதாசன் வழியில் வந்த தொடர்ச்சி. பொது உடைமையும் சம உரிமையும் விரும்புபவன். சினிமாவில் பாட்டெழுதுவது என் லட்சியம் அல்ல. பாடலாசிரியன் என்பது மட்டுமே என் முகவரி அல்ல.. என் முகங்களில் ஒன்று'' என்று சிரிக்கிறார்.
உடுத்துகிற சட்டை-வேட்டி, முறுக்கேறிய மீசை, வெடித்துக் கிளம்புகிற சிரிப்பு என அத்தனையும் பளிச் வெள்ளை!
''பஞ்சாலைக் கூலித் தொழிலாளி நான். புலவர் படிப்பு படித்துவிட்டு கோவையில் தமிழாசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். 1966-ம் வருடம் இயக்குநர் கே. சங்கர் என்னை சென்னைக்கு அழைத்தார். திடீரென வந்தது திரைப்பாடல் எழுதுகிற வாய்ப்பு. யார் யாரோ எழுதி சரி வராமல் போக, கடைசியில் என்னை எழுதச் சொன்னதாக நினைவு. மாம்பலம் பவர்ஹவுஸ் அருகில் ஒரு பெட்டிக்கடை வாசலில் நின்றுகொண்டே 'குடியிருந்த கோயில்' படத்துக்காக நான் எழுதிய பாடல்தான் -
நான் யார்? நான் யார்? நீ யார்? நாலும் தெரிந்தவர் யார்- யார்? தாய் யார்? மகன் யார்? தெரியார்; தந்தை என்பார் அவர் யார்- யார்? உறவார்? பகை யார்? உண்மையை உணரார்; உனக்கே நீ யாரோ? வருவார்; இருப்பார்; போவார்; நிலையாய் வாழ்வார் யார் யாரோ? 'ஒரு பைத்தியக்காரன் பாடுவது போல் எழுதுங்கள்!' என்று சொன்னதும் எனக்குத் தோன்றியது 'நான் யார்?' என்கிற கேள்விதான். எல்லோரும் தன்னைப் பார்த்துக் கேட்கவேண்டிய கேள்வி இது. பட்டினத்தான் கேட்டாலும் இதைத்தான் கேட்பான். பட்டினத்தானும் பைத்தியக்காரனும் ஒன்றுதானே...
இந்தப் பாடலுக்குக் கிடைத்த பெரும் வெற்றியால் நான் தொடர்ந்து பாடல்கள் எழுதலானேன். எந்தச் சூழல் தரப்பட்டாலும் அதற்குப் பொருந்துகிற மாதிரி என் முற்போக்கான கருத்துகளை, புரட்சிகர எண்ணங்களை எழுதிக்கொடுக்க ஆரம்பித்தேன். எம்.ஜி.ஆர். என்கிற சக்திவாய்ந்த கருவியைப் பயன்படுத்தி வீரமான இளைஞர்களுக்கு நான் விடுத்த அறைகூவல்தான் 'உழைக்கும் கரங்கள்' படத்தில் இடம்பெற்ற -
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே - இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே வாருங்கள் தோழர்களே - ஒன்றாய் சேருங்கள் தோழர்களே! என்கிற பாடல். இன்றைக்கும் கேட்ட விநாடி சிலிர்ப்பூட்டுகிற ஒரு பாடல் அது.
பஞ்சபூதங்களில் மண் மட்டும் தான் மனிதர்களால் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அவலத்தைத் தான்-
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது - மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது.. பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனித இதயமே - உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே... என்று 'இதயக்கனி' படத்தில் எழுதினேன். இன்று மண்ணை மட்டுமல்ல.. நீரையும் பிரித்து விட்டார்கள் என்பது பெரும் வேதனை.
என் பாடல்களின் மீது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மயக்கமே உண்டு.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே... என்கிற, 'நீதிக்குத் தலைவணங்கு' பாட்டு வரிகளை குடும்பநலத் துறை சார்பாக மாநிலம் முழுக்க எழுதி வைக்கச் செய்தார். ஒரு திரைப்படப் பாடலுக்கு அரசாங்கம் தந்த உச்சகட்ட அங்கீகாரம் இதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன்.
எம்.ஜி.ஆருக்கு நான் எழுதிய இளமை கொப்பளிக்கும் காதல் வரிகள் இன்றைக்கும் வாழ்பவை. சாகாவரம் பெற்றவை. 'அடிமைப் பெண்' படத்தின் 'ஆயிரம் நிலவே வா' பாடலில் வரும் -
பொய்கையெனும் நீர்மகளும் பூவாடை போர்த்து நின்றாள் தென்றலெனும் காதலனின் கைவிலக்க வேர்த்து நின்றாள் என்ன துடிப்போ அவள் நிலை நீயுணர மாட்டாயோ அந்த நிலையில் தந்த சுகத்தை நான் உணரக் காட்டாயோ? என்கிற வரிகள் விரகத்தின் தவிப்பை விளக்கினால், ஆண் - பெண் உறவை இலக்கியத்தரமாகச் சித்திரித்தது -
சந்தன மேனிகளின் சங்கம வேளையிலே சிந்திய முத்துகளைச் சேர்த்திடும் காலமிது தேன்கனிக் கோட்டையிலே சிற்றிடை வாசலிலே தோரண மேகலையில் தோன்றிய கோலமிது என்கிற வரிகள். காதலோடு நிறுத்திக்கொண்டுவிட முடியாதபடி என் சமூகச்சிந்தனை என்னைத் தூண்டிக்கொண்டே இருக்கும்.. அதுதான் என்னை இயக்குவது.
புண்ணிய பூமி என்று இந்தியாவைச் சொல்கிறோம். இங்கு இல்லை என்பதே இல்லை. இந்தத் திருநாட்டில் கங்கை உண்டு. ஆனால் தண்ணீர் இல்லை. வயல் எங்கும் உண்டு. உண்ணச் சோறு இல்லை. இந்த தேசத்தைத் துன்பங்கள் ஆள்கின்றன. வெறும் தேர்தல்களே இங்கு வாழ்கின்றன. இதுதான் புண்ணிய பூமியா? இந்த ஆதங்கத்தில்தான் -
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை - நம் பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லை. இது நாடா, இல்லை வெறும் காடா? - இதைக் கேட்க யாரும் இல்லை தோழா... என்று 'உன்னால் முடியும் தம்பி' படத்தில் எழுதினேன்.
வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு; ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம்தாண்டா சோறு என்று 'நல்லநேரம்' படத்துக்கு நான் எழுதிய பாட்டு திரையரங்குக்கு வெளியே கேட்டாலும் கண்ணீரை வரவழைப்பதற்கு என் சமூக அக்கறைதான் காரணம்.
இரும்பாக இறுகுகிற நான்தான் மெழுகாகக் குழையவும் முடியும். எரிமலை வரிகளை எழுதிவிட்டு,
பாடும்போது நான் தென்றல்காற்று
என்றும் எழுதமுடிகிறது.
தனிப்பட்ட முறையில் எந்த உணர்வு மனதை ஆட்கொண்டிருந்தாலும் பாடல் எழுதுவதற்கான சூழல் சொல்லப்பட்டவுடன் கதாபாத்திரமாக மாறித்தான் எழுதுவேன். பள்ளிப்பக்கமே எட்டிப் பார்த்திராத ஒருவன், தனக்குத் தெரிந்த மொழியில் தன் சோகத்தைச் சொல்ல வேண்டிய சூழலில்,
வட்டுக் கருப்பட்டியை வாசமுள்ள ரோசாவை கட்டெறும்பு மொச்சுதுன்னு சொன்னாங்க கட்டுக்கதை அத்தனையும் கட்டுக்கதை - அதைச் சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல்லே... என்று 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி'க்காக எழுதினேன். தன் மனைவி பற்றி ஊருக்குள் ஏதேதோ பேசுவதை நம்ப முடியாமல் தன் நெஞ்சை அறுக்கிற சோகத்தை கண்ணீர் வழியக் கதாநாயகன் பாடுவதைப் பார்க்கும் போதே நமக்கும் நெஞ்சு விம்மிப் போகும்.
'அழகன்' படத்தில் தனக்குப் மிகவும் பிடித்த பாடல் என்று இயக்குனர் கே. பாலசந்தர் குறிப்பிடும் 'சாதி மல்லிப் பூச்சரமே..'
பாட்டின் சரணத்தில்,
எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா? இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா?
என்று எழுதியிருப்பேன்.
அதே படத்தில் மொழி விளையாட்டாக,
தத்தித்தோம் வித்தைகள் கற்றிடும் தத்தைகள் சொன்னது தத்தித்தோம் தித்தித்தோம் தத்தைகள் சொன்னது முத்தமிழ் என்றுளம் தித்தித்தோம் கண்ணில் பேசும் சங்கேத மொழியிது கண்ணன் அறிய ஒண்ணாததா? உன்னைத் தேடும் ஏக்கத்தில் இரவினில் கண்ணுக்கிமைகள் முள்ளாவதா? என்றும் எழுதியிருப்பேன். என்னை வெகுவாக ரசிக்கும் இசைஞானி இளையராஜா ஒருமுறை என்னை அழைத்துவிட்டிருந்தார். பாரதியின் வழித்தோன்றலாக என்னைக் கருதிக்கொண்டிருக்கிறேன். அதே பாரதி, தனக்குப் பிடித்த, வே`றாருவர் எழுதிய பாடலைப் பாடுவதுபோலக் காட்சிஅமைப்பு. அதற்கு என்னை எழுதச்சொன்னார். என் முப்பாட்டனையே கவர்ந்த பாடலை எழுதுகிற உற்சாகத்தில் நான் எழுதினேன்,
வரிப்புலி அதள் தரித்தவன் எழில் கண்டேன் பிறப்பெனும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன் தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம் தரத் திருவுளம் வேண்டும் சகத்தினுக்கெனை தரத்தகும் நெறி வகுத்திடத் துணை வேண்டும் என்று நாத்திகனான நான், ஆத்திகம் பேசும் ஒரு பாடலை எழுதினேன். 'பாரதி' படத்தில் இடம்பெற்ற 'எங்கும் எதிலும் இருப்பான் அவன் யாரோ?' என்கிற பாடல் பெற்ற வரவேற்பைப் பற்றி உங்களுக்கே தெரியும்.
எனக்குள் ஒரு அழல் இருக்கிறது. எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. சிலபொழுது எரிந்து கொண்டும் சிலபொழுது கனிந்து கொண்டும்.
அதனால்தான் இருபத்தொன்பது வயதில் தத்துவப்பாடலும், அறுபத்திரண்டு வயதில்,
உன்னைப் படைத்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்கினான் காதல் பிச்சை வாங்கினான் என்றும் எழுத முடிகிறது. அந்த நெருப்பு இருக்கும்வரை என் பாட்டுகளும் வந்துகொண்டுதான் இருக்கும்!''
சந்திப்பு: ரமேஷ் வைத்யா படங்கள்: என். விவேக் |