தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments

Home > Tamil Language & Literature > பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் > பட்டுக்கோட்டை பாடல்கள் - பொருளடக்கம் >   அரசியல் அறம் > நாட்டு நலம் > இயற்கை >தெய்வம் தேடுதல் > சிறுவர் சீர்திருத்தம் > காதல் சுவைநகைச்சுவை > தத்துவம் > தனிப்பாடல்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
Pattukottai Kalyanasundaram: 1930 - 1959

 பட்டுக்கோட்டை தந்த பாட்டுக்கோட்டை பாடல்கள்
- இயற்கை

3.1 போட்டி வேண்டாம்
3.2 இருள் விலகும் விளக்கு
3.3 தட்டி எழுப்பிடும் சேவலே
3.4 மனிதனைக் கேலிசெய்யும் பறவை
3.5 ஆணவக் குரங்கு!
3.6 நல்லதைக் கெடுப்பவர்
3.7 ஓடும் நீரின் சங்கீதம்
3.8 இதயத்தை திருடியவள்
3.9
அனல் வீசும் நிலவு


3.1 போட்டி வேண்டாம்

    ரோஜா : ஓ....மல்லியக்கா

    மல்லி : ஏண்டி, ரோஜா அக்கா

    ரோஜா : மல்லியக்கா மல்லியக்கா எங்கடி போறே?
    கொஞ்சம் சொல்லடியக்கா
    எதுக்கு இப்படி குலுக்கி நடக்கிறே?

    மல்லி : நான்-மணவறையைச் சிங்காரிச்சு
    வாசனையை அள்ளித் தௌிச்சு
    வாரவங்க எல்லோரையும்
    மயக்கப் போறேன்
    மணப்பொண்ணு கூந்தலிலே
    மணக்கப் போறேன்

    ரோஜா : நீ-மணப்பொண்ணு தலையில் மட்டும்
    மணக்கப்போறே,
    நான்-மாப்பிள்ளை கழுத்தச்சுத்தி
    தொங்கப் போறேன்
    நீ-வாசனையைக் கொடுத்துப்பிட்டு
    வதங்கப் போறே,
    நான் வாரவங்க கையில் எல்லாம்
    குலுங்கப் போறேன்-அடி
    தந்தனத்தான தந்தனத்தான
    சரக்கிது தானா? - உன்
    தரத்துக்கும் உடல் நெறத்துக்கும் நான்
    கொறஞ்சு போனேனா?

    மல்லி : கள்ளமில்லா மனசுக் கென்னை உவமை
    சொல்வாங்க - பெரும்
    கவிஞரெல்லாம் காவியத்தில் இடம்
    கொடுப்பாங்க,
    காத்தடிச்சா போதும் என்னைக்
    காணத்துடிப்பாங்க - ஓன்னை
    கண்டாக்கூட முள்ளெ நெனச்சு
    முகஞ்சுளிப்பாங்க - அடி
    தந்தனத்தான தந்தனத்தான
    சரக்கிது தானா? - உன்
    தரத்துக்கும் உள்ளகுணத்துக்கும் நான்
    கொறஞ்சு போனேனா?

    ரோஜா : நீ - மலருமுன்னே வந்து கடைக்கு
    மலிஞ்சு போறவ!

    மல்லி : நீ - உலருமுன்னே தொட்டாக்கூட
    உதிர்ந்து போறவ!

    ரோஜா : நீ - வளரும் போதே கொம்பைத்
    தேடிப்புடிச்சவ!

    மல்லி : அதுக்கு வகையில்லாமெ
    தனிச்சு நின்னு!-அடி
    தந்தனத்தான தந்தனத்தான
    சரக்கிது தானா? - உன்
    தரத்துக்கும் உள்ளகுணத்துக்கும் நான்
    கொறஞ்சு போனேனா?

    (தாமரை வருதல்)

    தங்கச்சி தங்கச்சி
    தாமரைத் தங்கச்சி
    எங்களுக்குள்ளே எவதான் சிறந்தவ
    எடுத்துச் சொல்லு தங்கச்சி?

    தாமரை : மலருவதெல்லாம் உலருவதுண்டு
    மறந்துட வேணாம் அக்கச்சி! அக்கச்சி! - சில
    மனிதரைப் போல வம்புகள் பேசி
    பிரிந்திட வேணாம் அக்கச்சி! அக்கச்சி!

    தாமரை : உலகில் சிறந்தது என்ன?

    மல்லி : அன்பு உள்ளவர் செய்திடும் தானம்

    தாமரை : அந்த தானத்தில் சிறந்தது என்ன?

    ரோஜா : நல்ல தன்மை வளர்க்கும் நிதானம்

    தாமரை : அதிலும் சிறந்தது என்ன?

    மல்லி : பல அஹிம்சா மூர்த்திகள்
    ஆராய்ந்து சொன்ன உலக சமாதானம்!

    தாமரை : அதை நாம் உணர்ந்து
    நடக்க வேணும் எல்லோரும்-ஒன்றாய்
    இருக்கவேணும்!-அப்போதுதான்
    உலவும் சமாதானம்-எங்கும்
    நிலவும் சமாதானம்!

    மூவரும் : அதை நாம் உணர்ந்து
    நடந்திடுவோம்
    எல்லோரும் ஒன்றாய்
    இருந்திடுவோம்!

    [மக்களைப் பெற்ற மகராசி,1957]

3.2 இருள் விலகும் விளக்கு

    வா வா வெண்ணிலவே-வா இருள்
    மறைந்தோடப் பிறந்தாயென் விருந்தாளியே!
    மங்கை மனதிலே மலிந்திடும் கனவில்
    பங்கு கொண்டுதவும் பாற்குடமே! (வா வா)

    குமுதம் வாய் திறந்து குலுங்கும் வேளை
    குலவியுடன் ஒளிதனில் குளிக்கும் வேளை
    அமுதான நிலகண்டு கருமேகம் புகுந்தால்
    அதைநானும் சகியேனே! கலை வெள்ளமே!
    கலைவெள்ளமே! (வா வா)

    நாளை என் கண்கள் விழித்திருந்தாலுந்தன்
    நகை முகம் மகிழ்ந்திட நற்செய்தி சொல்லுவேனே
    நம்பினேன் உனதன்பையே நலம் பொங்க வா
    (வா வா)

    [சௌபாக்கியவதி,1957]

3.3 தட்டி எழுப்பிடும் சேவலே

    பெண் : கொக்கரக் கொக்கரக்கோ சேவலே!
    கொந்தளிக்கும் நெஞ்சிலே,
    கொண்டிருக்கும் அன்பிலே,
    அக்கறை காட்டினாத் தேவலே

    ஆண் : குப்பையைக் கிளறிவிடும் கோழியே
    கொண்டிருக்கும் அன்பிலே,
    ரெண்டும் உண்டு என்று நீ
    கண்டதும் இல்லையோ வாழ்விலே!
    கொக்கரக்கோ கொக்கரக்கோ
    கொக்கரக்கோ-கோ-கோ!

    பெண் : காலம் நேரம் அறிந்து உலகை
    தட்டி எழுப்பிடும் சேவலே!
    காத்திருப்பவரைக் கொத்தி விரட்டிடும்
    காரணம் என்ன சேவலே?

    ஆண் : கொத்தவுமில்லை விரட்டவுமில்லை
    குற்றம் ஏதும் நடந்திடவில்லை
    கொண்ட நினைவுகள் குலைந்து போனபின்
    இன்பம் ஏது கோழியே?-அந்த
    எண்ணம் தவறு கோழியே
    கொக்கரக்கோ கொக்கரக்கோ
    கொக்கரக்கோ-கோ-கோ!

    பெண் : நாட்டுக்கு மட்டும் போதனை சொல்லி
    நம்பிய பெண்ணின் நிலையை அறியா
    ஞானியை நீயும் பாரு-இது
    ஞாயந்தானா கேளு?

    ஆண் : நம்பியிருப்பதும் நட்பை வளர்ப்பதும்
    அன்பு-மெய் அன்பு! அந்த
    அன்பின் கருத்தை விதவிதமாக
    அர்த்தம் செய்வது வம்பு
    கொக்கரக்கோ கொக்கரக்கோ
    கொக்கரக்கோ-கோ-கோ!

    [பதிபக்தி,1958]

3.4 மனிதனைக் கேலிசெய்யும் பறவை

    பெண்கள் : காக்காய்க்கும் காக்காய்க்கும்
    கல்யாணமாம்
    கானக் கருங்குயிலு
    கச்சேரியாம்!

    ஆண்கள் : கண்ட கண்ட பக்கமெல்லாம்
    அழைப்புகளாம்
    காலம் தெரிஞ்சுக்கிட
    குறிப்புகளாம் (காக்)

    பெண்கள் : வீட்டுக்கு வீடு
    விருந்துகளாம்
    வில்லு வண்டிக் கூண்டுமேலே
    ஊர்வலமாம்

    ஆண்கள் : பழங்களும் விதைகளும்
    பரிசுகளாம்-அதன்
    பரம்பரை மொழியிலே
    வாழ்த்துகளாம்!

    எல்லோரும்: காக்காய்க்கும் காக்காய்க்கும்
    கல்யாணமாம்
    கானக் கருங்குயிலு கச்சேரியாம்!

    பெண்கள் : ஒற்றுமையில்லாத
    மனிதரைப்போல்-அது
    ஒண்ணைஒண்ணு கொத்திகிட்டு ஓடலையாம்!

    ஆண்கள் : உயர்வு தாழ்வு என்று பேதம் பேசிக்கிட்டு
    ஒதுங்கி வாழ இடம் தேடலையாம்
    ஒதுக்கி வாழ இடம் தேடலையாம்! (காக்)

    பெண்கள் : அதிகமாகச் சேத்துகிட்டு
    அல்லும் பகலும் பாத்துக்கிட்டு
    இருப்பவங்க போலே நடக்கலையாம்!

    ஆண்கள் : நல்ல இதயத்தை மாத்திகிட்டு
    ஈயாதவன் போல
    கதவைத்தான் சாத்திகிட்டுச்
    சாப்பிடலையாம்!

    பெண்கள் : வரிசை தவறாமே
    குந்திக்கிட்டுதாம்
    வந்ததுக்கெல்லாம் இடம்
    தந்திக்கிட்டு தாம்!

    ஆண்கள் : மனிதனைக் கேலி
    பண்ணிக் கிட்டுதாம்-அவன்
    வாழ்க்கையில் கோணலை
    எண்ணிக்கிட்டுதாம்!

    எல்லோரும்: காக்காய்க்கும் காக்காய்க்கும் கல்யாணமாம்!
    கானக் கருங்குயிலு
    கச்சேரியாம்
    [பிள்ளைக்கனியமுது,1958]

3.5 ஆணவக் குரங்கு!

    ஆடு மயிலே நீ ஆடு மயிலே
    ஆனந்த நடனம் ஆடுமயிலே! (ஆடு மயிலே)

    பாடு குயிலே இசை பாடு குயிலே
    அன்பு வாழ இன்பம் சூழ அகமதில்
    அமைதி பெருகி நிலைபெறவே! (ஆடு மயிலே)

    ஆடாதே நீயும் ஆடாதே-வீண்
    ஆணவக் குரங்கே ஆடாதே
    போடாதே சத்தம் போடாதே-கொடும்
    பார்வை ஆந்தையே போடாதே!
    வாடாதே முகம் வாடாதே
    வண்ண மலரே வாடாதே!
    வழக்கமான பூசை முடியுமுன்னே
    மறந்தும் இதழை மூடாதே! (வாடாதே)

    ஓடாதே மானே ஓடாதே-நீ
    ஓடும் வழி தவறி ஓடாதே!
    வேடன் வலையிலும் சிங்கத்தின் வாயிலும்
    விருந்தாய் விழுந்து விடாதே! (ஓடாதே)

    [இரத்தினபுரி இளவரசி,1959]

3.6 நல்லதைக் கெடுப்பவர்

    வா வா சூரியனே
    மனிதர் நிலையை தெரிஞ்சுக்க
    வஞ்சகர் அதிகம் உண்டு
    நோக்கம் பாத்து நடந்துக்க! (வா வா)

    தூங்கிக்கிடந்த உயிர்களெல்லாம்
    துள்ளி எழுந்திடும் காலையிலே
    சோர்ந்து கிடந்த கைகளெல்லாம்
    துணிந்திடும் பல வேளையிலே
    உலகத்தை நினைச்சாலே
    உடம்பு நடுங்குது
    ஊருகெட்ட கேட்டைப் பார்த்து
    நீதி பதுங்குது!
    உருவங்கள் மனிதர்போல
    ஓடி அலையுது
    உள்ளத்திலே எண்ணமெல்லாம்
    நஞ்சா விளையுது (வா வா)

    நாடு முன்னேற பலர்
    நல்லதொண்டு செய்வதுண்டு
    நல்லதைக் கெடுக்கச் சிலர்
    நாச வேலையும் செய்வதுண்டு
    ஓடெடுத்தாலும் சிலர்
    ஒற்றுமையாய் இருப்பதில்லை-இந்த
    உண்மையை தெரிந்தும்-நீ
    ஒருவரையும் வெறுப்பதில்லை! (வா வா)

    [பாண்டித்தேவன்,1959]

3.7 ஓடும் நீரின் சங்கீதம்

    சலசல ராகத்திலே
    டம்மு டும்மு தாளத்திலே
    சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா....நீ
    சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா?
    (சலசல)

    ஆத்துக்குள்ளே நானிருக்க
    அக்கரையில் மனமிருக்க
    அலைமேலே அவை எழுந்து
    ஆளை வந்து தள்ளிடுதே
    நேரத்திலே போகணும்
    நீண்ட கதை பேசணும்
    ஆழத்தையும் தாண்டியே
    அன்பு முகத்தைப் பார்க்கணும் (சல சல)

    பச்சை மலைச் சாரலிலே
    பனியுறங்கும் பாறையிலே
    படை போலே பறவையெல்லாம்
    பறந்துவந்து கூடுதே!
    மீனும் மீனும் மேயுதே
    வேடிக்கையாய்ப் பாயுதே
    ஆனந்தமாய்க் கண்களும்
    அவரை நாடிப் போகுதே (சல சல)

    [ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு,1960]

3.8 இதயத்தை திருடியவள்

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே-நீ
    இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே (என்)

    கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே-உன்னைக்
    காவல்காக்கும் தோழியரோ வெண்ணிலாவே (கண்)

    கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே-உன்
    காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே (என்)

    கள்ளமில்லா என்னிதயம் வெண்ணிலாவே-ஒரு
    கள்ளியிடம் இருக்குதுடி வெண்ணிலாவே-அந்த
    வல்லிதனை நீயறிவாய் வெண்ணிலாவே-அதை
    வாங்கி வந்து தந்துவிடு வெண்ணிலாவே! (என்)

    கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே....
    கொஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே-நீ
    கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே
    அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே-இது
    அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே-இது (அவள்)

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே-நீ
    இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
    இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே!

    [எல்லோரும் இந்நாட்டு மன்னர்,1960]

3.9 அனல் வீசும் நிலவு

    ஆசை கொண்ட நெஞ்சிரண்டு பேசுகின்றபோது
    ஆடாத சிலைகளும் ஆடாதோ?
    ஆனந்த கீதங்கள் பாடாதோ?

    ஆடலுக்கும் பாடலுக்கும்
    ஊதும்குழல் யாழினுக்கும்
    ஆதாரமானது கானம்
    ஊடலுக்கும் காதலுக்கும்
    உண்மைஅன்புக் கூடலுக்கும்
    உகந்தது வாலிப காலம்

    வண்டுலாவும்மலர்ச் சோலையிலே-தென்றல்
    வந்துலாவுகின்ற வேளையிலே-காளைக்
    கன்றுபோல் உருவம் கொண்டஆள் ஒருவன்
    நின்று போட்ட ஒரு பார்வையிலே-என்னைக்
    கொன்று விட்டானடி மாமயிலே!

    இதையும் அதையும் கண்டு
    மதியும் மயக்கங் கொண்டு
    இதயக்கதவை வந்து தட்டுதே-எண்ணம்
    இமயச் சிகரம் தன்னை எட்டுதே!
    அதிகத் துணிவு கொண்டு
    ஆசை கரைபுரண்டு
    அதிரத் தலை சுழன்று சுற்றுதே-நிலவு
    அனலை வாரிக் கொட்டுதே

    [இரும்புத்திரை,1960]

Mail Usup- truth is a pathless land -Home