எங்கும் எதிலும் தமிழோசை லண்டன் எதிரொலிக்கும் அந்த மணியோசை பொங்கும் தமிழ்ப்பாட்டின் இன்னோசை மனம் பூரித்துப் பாடுதம்மா என்னாசை
சங்கம் வளர்த்த தமிழ் உலகமெங்கும் இங்கு தனிநடை போடுதம்மா வீறுகொண்டு சங்கக்குலவிளக்கை தமிழ்த்தாயை இந்த தலைநகர் பாடுதம்மா ஆவல் கொண்டு
முருகன் கழுத்துக்கொரு மணியாரம் அவன் முன்னின்று பாடுதற்கு தேவாரம் நிறுமித்த நெஞ்சினிற்குப் புகழாரம் இந்த நேரத்தில் நான் இசைக்கும் தமிழாரம்
ஆக்கத்திரைக் கடலும் தமிழ் ஒலிக்கும் அதில் ஆடிடும் மீன்களெல்லாம் தமிழ்ப்படிக்கும் தீர்த்தக்கரையில் பெண்கல் குரல் ஒலிக்கும் அது திரும்பிய பக்கமெல்லாம் எதிரொலிக்கும் எங்கும் எதிலும் தமிழோசை
உலகம் முழுதும் சென்றார் தொழில் நடத்த தமிழன் உள்ளமும் சென்றதம்மா தமிழ் நடத்த கலையில் சிறந்த இசைக்கலை நடத்த நானும் கடலைக் கடந்து வந்தேன் தமிழ் வளர்க்க
எங்கள் குலத்துதித்த சோதரரே தினம் இன்முகம் காட்டி வரும் அன்னையரே உம்மை நினைத்திருக்கும் தாயகமே இந்த உலகத்திலே சிறந்த தமிழகமே தமிழகமே
அன்றொரு நாள் நம்மை அடிமைகொண்டார் முருகன் அவரையும் சேர்த்து இன்று அடிமை கொண்டார் இன்பத்தமிழர் தங்கள் கடமை கண்டார் கோவில் எழுப்பிவிட்டார் தமிழை ஏற்றிவைத்தார்
மலைக்குடி வேலன் இன்று கடல் தாண்டினான் லண்டன் மாநகரில் வந்து குடியேரினான் சிலைவடிவாக வந்து வரம் நல்கினான் தமிழர் திருவருள் கொள்வதற்குத் துணையாகினான்
எங்கிருந்தும் அவனை மறப்பதில்லை தமிழர் ஏற்றும் திருவிளக்கு அணைவதில்லை பொங்கும் தரும வெள்ளம் குறைவதில்லை தமிழர் புகழும் பொருளும் என்றும் அழிவதில்லை
நாகரீகம் வளர்ந்த மேற்கினிலே குமர நாயகன் கோவில் கண்டார் ஆசையிலே தேக உழைப்பை சிலர் உவந்தளித்தார் சிலர் திரவியம் தந்ததுடன் தம்மை தந்தார்
அறுபடை வீடு என்று அழைத்துவந்தோம் ஒரு அற்புத வீட்டை இங்கே படைத்துவிட்டோம் ஏழுபடைவீடு என்று தொடர்ந்து சொல்வோம் லண்டன் எழுப்பிய கோவிலையும் சேர்த்துக்கொள்வோம்
இலங்கை முருகனுக்கோர் கதிர்காமம் பொருள் இலங்கும் மலேசியாவில் பலகிராமம் துலங்கிடும் லண்டனுக்கும் தொடர்ந்துவந்தார் எங்கள் சுவாமிநாதன் அருளை சுரக்க வந்தார்
அருணகிரி ஒரு நாள் வரைந்துவைத்தார் அவர் அடிச்சுவட்டில் பலபேர் புகழ்ந்து வைத்தார் கருணை முருகன் தன்னை ஏற்றிவைத்தார் கவிஞர் கண்ணதாசன் இதனை பாட்டில் வைத்தார் உங்கள் சிர்காழி நானும் இங்கே பாடிவைத்தேன் |