தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments

Home > Tamil Language & Literature > Maha Kavi Subramaniya Bharathy > Index of Works - பட்டியல் > Bhavad Gita  -Commentary in Tamil 1-4 >  Bhavad Gita  - Commentary in Tamil 5-8 > Bhavad Gita  - Commentary in Tamil 9-12 > Bhavad Gita  - Commentary in Tamil -  13

Maha Kavi Subramaniya Bharathy
Bhavad Gita - Commentary in Tamil

பகவத் கீதை- பாரதியாரின் முன்னுரை 5-8



5.

பகவத் கீதை தர்ம சாஸ்திரமென்று மாத்திரமே பலர் நினைக்கின்றார்கள். அதாவது, மனிதனை நன்கு தொழில் புரியும்படி தூண்டி விடுவதே அதன் நோக்கமென்று
பலர் கருதுகிறார்கள். இது சரியான கருத்தன்று. அது முக்கியமான மோக்ஷ சாஸ்திரம். மனிதன் சர்வ துக்கங்களிலிருந்தும் விடுபடும் வழியைப் போதித்தலே
இந்நூலின் முதற்கருத்து. ஏனென்றால், தொழில் இன்றியமையாதது.

அங்ஙனமிருக்க, அதனைச் செய்தல் மோக்ஷ மார்க்கத்துக்கு விரோதமென்று பல வாதிகள்
கருதலாயினர். அவர்களைத் தௌஒவிக்கும் பொருட்டாகவே, கண்ணபிரான் கீதையில், முக்கியமாக மூன்றாம் அத்தியாயத்திலும், பொதுப்படையாக எல்லா
அத்தியாயங்களிலும், திரும்பத் திரும்பத் 'தொழில் செய்' 'தொழில் செய்' என்று போதிக்கின்றார். இதனின்றும், அதனை வெறுமே, தொழில் நூல் என்று பலர்
கணித்து விட்டார்கள்.

இங்குத் தொழில் செய்யும்படி தூண்டியிருப்பது முக்கியமன்று. அதனை என்ன நிலையிலிருந்து, என்ன மாதிரிச் செய்ய வேண்டுமென்று பகவான் காட்டியிருப்பதே
மிக மிக முக்கியமாகக் கொள்ளத் தக்கது.

பற்று நீக்கித் தொழில், பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி - இது தான் முக்கியமான பாடம். தொழில்தான் நீ செய்து தீரவேண்டியதாயிற்றே? நீ
விரும்பினாலும் விரும்பாவிடினும் இயற்கை உன்னை வற்புறுத்தித் தொழிலில் மூட்டுவதாயிற்றே? எனவே அதை மீட்டும் சொல்வது கீதையின் முக்கிய
நோக்கமன்று. தொழிலின் வலைகளில் மாட்டிக் கொள்ளாதே. அவற்றால் இடர்ப்படாதே. அவற்றால் பந்தப் படாதே. தளைப்படாதே. இதுதான் முக்கியமான
உபதேசம். எல்லாவிதமான பற்றுகளையுங் களைந்துவிட்டு, மனச் சோர்வுக்கும் கவலைக்கும் கலக்கத்துக்கும் பயத்துக்கும் இவையனைத்திலுங் கொடியதாகிய
ஐயத்துக்கும் இடங்கொடாதிரு. 'ஸம்சயாத்மா விநச்யதி' - 'ஐயமுற்றோன் அழிவான்' என்று கண்ணபிரான் சொல்லுகின்றான்.

"ஆத்மாவுக்கு நாசத்தை விளைவிப்பதாகிய நரகத்தின் வாயில் மூன்று வகைப்படும். அதாவது காமம், குரோதம், லோபம். ஆதலால் இம்மூன்றையும் விட்டு விடுக."
இவற்றுள் கவலையையும் பயத்தையும் அறவே விட்டுவிடவேண்டும். இந்த விஷயத்தை பகவத் கீதை சுமார் நூறு சுலோகங்களில் மீட்டும் மீட்டும் உபதேசிக்கிறது.
அதற்கு உபாயம் கடவுளை நம்புதல், கடவுளை முற்றிலும் உண்மையாகத் தமது உள்ளத்தில் வெற்றியுற நிறுத்தினாலன்றி, உள்ளத்தைக் கவலையும் பயமும்
அரித்துக்கொண்டுதான் இருக்கும். கோபமும் காமமும் அதனை வெதுப்பிக் கொண்டுதானிருக்கும். அதனால் மனிதன் நாசமடையத்தான் செய்வான்.
 


6.

"பொலிக, பொலிக, பொலிக, போயிற்று வல்லுயிர்ச் சாபம், நலியும் நரகமும் நைந்த நமனுக்கு யாதொன்றுமில்லை; கலியுங்கெடும், கண்டு கொண்மின்" என்று
நம்மாழ்வார் திருவாய் மொழியிற் கூறிய நம்பிக்கையை உள்ளத்தில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்குப் பக்திதான் சாதனம். பக்தியாவது, "ஈசன்
நம்மைக் கைவிட மாட்டான்" என்ற உறுதியான நம்பிக்கை.

"வையகத்துக் கில்லை மனமே, யுனக்கு நலஞ்
செய்யக் கருதியது செப்புவேன் - பொய்யில்லை,
எல்லா மளிக்கும் இறைநமையுங் காக்குமென்ற
சொல்லா லழியுந் துயர்"

இவ்விஷயத்தைக் குறித்து ஸ்ரீ பகவான் பின்வருமாறு திருவாய் மலர்ந்தருளி யிருக்கிறான் :-

"எல்லா ரகஸ்யங்களிலும் மேலான பெரிய ரகஸ்யமாகிய என் இறுதி வசனத்தை உனக்கு மீட்டுமொருமுறை சொல்லுகிறேன், கேள். நீ எனக்கு மிகவும்
இஷ்டனானதால், உனக்கு நன்மை சொல்லுகிறேன்" (கீதை 18-ஆம் அத்தியாயம், 64-ஆம் சுலோகம்)

"உன் மனத்தை எனக்கு ஆக்கிவிடு. என் பக்தனாயிரு. எனக்குப் பூஜை செய். என்னைக் கும்பிரு. நீ என்னையே எய்துவாய். இஃதுண்மை. உனக்குப் பிரதிக்கினை
செய்து கொடுக்கிறேன். நீ எனக்குப் பிரியமானவன்." (கீதை 18-ஆம் அத்தியாயம், 65-ஆம் சுலோகம்)

"எல்லாக் கடமைகளையும் பரித்யாகம் பண்ணிவிட்டு என்னையே சரண் புகு. நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கிறேன். துயரப் படாதே." (கீதை
18-ஆம் அத்தியாயம், 66-ஆம் சுலோகம்)

நதியினுள்ளே விழுந்துவிட்ட ஒருவன் இரண்டு கையையும் தூக்கி விடுவதுபோல, சம்ஸார வெள்ளத்தில் விழுந்த ஒவ்வொருவனும் இரண்டு கைகளையும்
தூக்கிக்கொண்டு (அதாவது, எவ்விதப் பொறுப்புமின்றி எல்லாப் பொறுப்புகளும் ஈசனுக்கென்று துறந்துவிட்டு) கடவுளைச் சரண்புக வேண்டும் என்று ஸ்ரீ
ராமாநுஜாசாரியர் உபதேசம் புரிந்தனர்.

பிரகலாதன் சரித்திரத்திலும், திரௌபதி துகிலிரியும் கதையிலும் இந்த உண்மையே கூறப்பட்டுக்கிறது.

இடுப்பு வஸ்திரத்தில் அவள் வைத்திருந்த இடது கையையும் விட்டுவிட்டு இரண்டு கைகளையும் தூக்கி முடிமீது குவித்துக்கொண்ட பிறகுதான், கண்ணபிரான்
அருளால் திரௌபதிக்கு மானபங்கம் நேராமல், அவளுடைய ஆடை மேன்மேலும் வளர்ச்சி பெறத் துச்சாதனன் கைசோர்ந்து வீழ்ந்தான். இக்கருத்தைப் பிள்ளைப்
பெருமாளையங்கார் -

"மெய்த்தவளச் சங்கெடுத்தான் மேகலை விட்டங்கைதலை
வைத்தவளச்சங் கெடுத்தான் வாழ்வு"

என்ற வரிகளில் மிகவும் அழகாகச் சொல்லியிருக்கிறார். "உண்மையாகிய வெண் சங்கைத் தரித்தவன் பாஞ்சாலி தன் கைகளை மேகலையினின்றும் எடுத்த
முடிமீது வைத்த போதில் அவளுடைய அச்சத்தைக் கெடுத்தவன் ஆகிய திருமாலுக்கு வாழ்விடம் (திருவேங்கடமலை) என்பது அவ்வரிகளின் பொருளாம்.

"சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச் சிவாய வே"

என்று நாவுக்கரசரின் உறுதி சான்ற சொற்களும் பரமபக்தியின் இலக்கணத்தைக் குறிப்பவனவாம். "தம்மை ஒரு சுற்றாணுடன் சேர்த்துக் கட்டிக் கடலுக்குள்
வீழ்த்திய போதிலும் தமக்கு நம்புவதற்குரிய துணை நமச்சிவாய (சிவனைப் பணிகிறேன்) என்ற மந்திரமல்லது வேறில்லை என்று திருநாவுக்கரசர் சொல்லுகிறார்.

இனி, இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாகக் கருதுதல் அவசியமென்கையில், அப்போது கடவுளை நம்புவதெதன் பொருட்டு? கடவுள் நம்மை அச்சந்தீர்த்துக்
காப்பானென்று எதிர்ப்பார்ப்பது எதன் பொருட்டு? நமக்குத் தீங்கு நேர்ந்தாலும், நன்மை நேர்ந்தாலும், வாழ்வு நேர்ந்தாலும், மரணம் நேர்ந்தாலும் - எல்லாம்
கடவுள் செயலாகையிலே நாம் எல்லாவற்றையும் சமமாகக் கருத வேண்டுமென்று பகவத் கீதை சொல்லுகையிலே, நமக்குக் கடவுள் துணை எதன் பொருட்டு?
நம்மைக் கற்றாணுடன் வலியக் கட்டி யாரேனும் கடலுள் வீழ்த்தினால், நாம் இதுவும் கடவுள் செயலென்று கருதி அப்படியே மூழ்கி இறந்து விடுதல்
பொருந்துமன்றி, நமச்சிவாய, நமச்சிவாய என்று கூறி நம்மைக் காத்துக்கொள்ள ஏன் முயல வேண்டும்? என்று சிலர் ஆக்ஷேபிக்கலாம்.

இந்த ஆக்ஷேபம் தவறானது.
யாங்ஙனமெனில், சொல்லுகிறேன். முந்திய கர்மங்களால் நமக்கு விளையும் நன்மை தீமைகளைச் சமமாகக் கருதி நாம் மனச்சஞ்லத்தை விட்டுக் கடவுளை
நம்பினால், அப்போது கடவுள் நம்மைச் சில வலிய சோதனைகளுக்கு உட்படுத்துகிறார். அந்தச் சோதனைகளில் நாம் மனஞ்சோர்ந்து கடவுளிடம் நம்பிக்கையை
இழந்து விடாமல் இருப்போமாயின், அப்போது நமக்குள் ஈசனே வந்து குடிபுகிறான். அப்பால் நமக்குத் துன்பங்களே நேர்வதில்லை. ஆபத்துக்கள் நம்மை அணுகா.
மரணம் நம்மை அணுகாது. எல்லாவிதமான ஐயுறவுகளும், கவலைகளும், துயரங்களும், தாமாகவே நம்மை விட்டு நழுவிவிடுகின்றன. இந்த உலகத்திலே நாம்
விண்ணவரின் வாழ்க்கை பெற்று நித்தியானந்தத்தை அனுபவிக்கிறோம்.

மேலும், எல்லாவற்றையும் ஞானி சமமாகக் கருதவேண்டுமென்ற இடத்தில், அவன் மனித வாழ்க்கைக்குரிய விதிகளையெல்லாம் அறவே மறந்து போய்ப் பித்தனாய்
விடவேண்டுமென்பது கருத்தன்று.

ஒரு குழந்தையைக் கொல்லுவதும், சிவ பூஜை செய்வதும் - இரண்டும் கடவுளுக்கு ஒரே மாதிரிதான். அவன் எல்லா இயக்கங்களும், எல்லாச் செயல்களும் தன்
வடிவமாக உடையவன், எனினும், மனித வதிப்படி சிசு ஹத்தி பாவமென்பதையும், சிவபூஜை புண்ணியமென்பதையும் கண்ணபிரான் மறுக்கவில்லை. மனிதன்
எல்லாந் துன்பங்களினின்றும் விடுபட்டும், என்றும் மாறாத பேரின்பத்தை நுகர விரும்புகின்றான். அதற்குரிய வழிகளையே கீதை காண்பிக்கிறது. கஷ்ட
நஷ்டங்களை நாம் மனோ தைரியத்தாலும் தெய்வ பக்தியாலும் பொறுத்துக் கொள்ளவேண்டும். ஆனால், நாம் மனமாரப் பிறருக்குக் கஷ்ட மேனும் நஷ்ட மேனும்
விளைவிக்கக் கூடாது. உலகத்துக்கு நன்மை செய்து கொண்டேயிருக்க வேண்டும். தன்னுயிரைப்போல் மன்னுயிரைப் பேணவேண்டும். நாம் உலகப் பயன்களை
விரும்பாமல், நித்திய சுகத்தில் ஆழ்ந்திய பின்னரும், நாம் உலகத்தாருக்கு நல்வழி காட்டும் பொருட்டுப் புண்ணியச் செயல்களையே செய்து கொண்டிருக்க
வேண்டுமென்று பகவான் கீதையில் உபதேசிக்கின்றார்.

மேலும், நமக்கே துன்பங்கள் நம்மை மீறி எய்தும்போது நாம் அவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதே நன்மையையுந் தீமையையும் நிகராகக்
கருதவேண்டுமென்ற உபதேசத்தின் கருத்தாகுமல்லாது, ஒரேயடியாக ஒருவன் தனக்கு மிகவும் இனிய காதலியை மருவும் இன்பத்துக்கும் தீராத
க்ஷயரோகத்தி஑ல் நேரும் துன்பத்துக்கும் யாதொரு வேற்றுமையுந் தெரியாமல் புத்தி மண்ணாய் விட வேண்டுமென்பது அவ்வுபதேசத்தின் கருத்தன்று.
ஏனென்றால், சாதாரண புத்தியிருக்கும் வரை ஒருவன் காதலின்பத்துக்கும் க்ஷயரோகத் துன்பத்துக்கும் இடையேயுள்ள வேற்றுமை உணராதிருத்தல்
சாத்தியமன்று. ஆத்ம ஞானமெய்தியதால் ஒருவன் சாதாரண புத்தியை இழந்து விடுவானென்று நினைப்பது தவறு. க்ஷயரோகம் நேரும்போது சாமன்ய மனிதன்
மனமுடைந்து போய்த் தன்னை எளிதாகவும் அந்நோயை வலிதாகவும் கருதி, ஆசையிழந்து நாளடைவில் மேன்மேலும் தன்னை அந்த நோய்க்கிரையாகிக்
கொண்டு, க்ஷயரோகி என்று தனக்கொரு பட்டஞ் சூட்டிக்கொண்டு வருந்து மடிவதுபோல் ஞானி செய்யமாட்டான். ஞானி அத்தகைய நோய், ஏதேனும் பூர்வ கர்ம
வசத்தால் தோன்றுமாயின், உடனே கடவுளின் பாதத்தைத் துணையென்று நம்பித் தன் ஞானத் தீயால் எரித்துத் தள்ளிவிடுவான்.

"ஞானக் நிஸ் ஸர்வ கர்மாணி பஸ்மஸாத் குருதே" - ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பலாக்குகிறது. கடவுளிடம் தீராத நம்பிக்கை செலுத்த வேண்டும்.
கடவுள் நம்மை உலகமாச் சூழ்ந்து நிற்கிறான். நாமாகவும் அவனே விளங்குகிறான். அசு வாயிலாவேனும் புற வாயிலாலேனும் நமக்கு எவ்வகை துயரமும் விளைக்க
மாட்டான். ஏன்? நாம் எல்லா வாயில்களாலும் அவனைச் சரண் புகுந்து விட்டோ மாதலின்.

அவனன்றி ஓரணுவு மசையாது. அவன் நமக்குத் தீங்கு செய்ய மாட்டான். தீங்கு செய்யவல்லான் அல்லன். ஏன்? நாம் அவனை முழுவதும் நம்பிவிட்டோ மாதலின்.

"கடவுளை நம்பினோர் கைவிடப் படார்" இதுவே பக்தி.

அந்தக் கடவுள் எத்தன்மையுடையான்? எல்லா அறிவும், எல்லா இயக்கமும், எல்லாப் பொருளும், எல்லா வடிவமும் எல்லாம் தானேயாகி நிற்பான்.

அவனை நம்பினார் செய்யத் தக்கது யாது? எதற்கும் துயரப்படாதிருத்தல். எதற்கும் கலவைப்படாதிருத்தல். எதனிலும் ஐயுறவு பூணாதிருத்தல்.

"ஸம்சயாத்மா விநச்யதி" - ஐயமுடையோன் அழிவான், நம்பினவன் மோக்ஷமடைவான்.
 


7.

குந்தியின் மகனே, சீதம், உஷ்ணம், இன்பம், துன்பம் என்பனவற்றைத் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் வந்து போகும் இயல்புடையன. அநித்யமாயின; அவற்றைப்
பொறுத்துக் கொள், பாரதா!" (பகவத் கீதை,2-ஆம் அத்தியாயம், 14-ஆம் சுலோகம்)

"ஆண்காளையே! இவை எந்த மனிதனைத் துன்புறுத்தமாட்டாவோ, இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கருதும் அந்தத் தீரன் சாகாதிருக்கத் தகுவான்"
(மேற்படி 15-ஆம் சுலோகம்)

இஃதே பகவத் கீதையின் சிகரம்.

சாகாதிருத்தல், மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல், இதுவே கீதையின் ரஸம்.

அமரத்தன்மை. இஃதே வேத ரகஸ்யம்.

இந்த வழியைக் காட்டுவது பற்றியே வேதங்கள் இத்தனை மதிக்கப்படுகின்றன.

இறந்து போன ஜீவன் முக்தர்கள் யாவரும் ஜீவன் முக்தியை எய்திய பின் அந்த நிலையினின்றும் வழுவியவாகளாகவே கருதப் படல்வேண்டும். நித்திய ஜீவிகளாய்
மண்மேல் அமரரைப் போல் வாழ்வாரே நித்திய ஜீவன் முக்தராவர். அத்தகைய நிலையை இந்த உலகில் அடைதல் சாத்தியமென்று மேற்கூரிய இரண்டு
சுலோகங்களிலே கடவுள் போதிததிருக்கிறார். அதற்கு உபாயமும் அவரே குறிப்பபிட்டிருக்கிறார். குளிர் - வெம்மை, இன்பம் - துன்பம் எனும் இவற்றை
விளைக்கும் இயற்கையின் அனுபவங்கள், தெய்வ கிருமையால் சாசுவதமல்ல. அநித்தியமானவை. தோன்றி மறையும் இயல்புடையன. ஆதலால் இவற்றைக்
கண்டவிடத்தே நெஞ்சமிளகுதலும் நெஞ்சுடைந்து மடிதலும் சால மிகப் பேதமையாமன்றோ? ஆதலால் இவற்றைக் கருதி எவனும் மனத்துயரப் படுதல் வேண்டா.
அங்ஙனம் துயரப் படாதிருக்கக் கற்பான் சாகாமலிருக்கத் தகுவான். இஃது ஸ்ரீ கிருஷ்ணனுடை கொள்கை. இதுவே அவருடைய உபதேசத்தின் சாராம்சம். பகவத்
கீதையின் நூற்பயன். எனவே பகவத் கீதை அமிர்த சாஸ்திரம்.
 


8.

'அமிர்த சாஸ்திரம்' - அதாவது சாகாமலிருக்க வழி கற்றுக் கொடுக்கும் சாஸ்திரமாகிய பகவத் கீதையைச் சிலர் கொலை நூலாகப் பாவனை செய்கிறார்கள்.
துரியோதனாதிகளைக் கொல்லும்படி அர்ஜுனனைத் தூண்டுவதற்காகவே, இந்தப் பதினெட்டு அத்தியாயமும் கண்ணபிரானால் கூறப்பட்டனவாதலால், இது
கொலைக்குத் தூண்டுவதையே தனி நோக்கமாகவுடைய நூலென்று சிலர் பேசுகிறார்கள். கொலை செய்யச் சொல்ல வந்த இடத்தே, இத்ததை வேதாந்தமும்,
இத்தனை சத்வ குணமும், இத்ததை துக்க நிவர்த்தியும் இத்தனை சாகாதிருக்க வழியும் பேசப்படுவதென்னே என்பதை அச்சில மூடர் கருதுகின்றனர்.

துரியோதனாதியர் காமக் குரோதங்கள். அர்ஜுனன் ஜீவாத்மா. ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா.

இந்த ரகசியம் அறியாதவருக்குப் பகவத் கீதை ஒருபோதும் அர்த்தமாகாது.

க்ஷத்திரய அரசர் படித்துப் பயன்பெறச் செய்ய வேண்டுமென்பதே இந்த நூலில் விசேஷ நோக்கம். பூ மண்டலத்தாரனைவருக்கும் பொதுமையாகவே
விடுதலைக்குரிய வழிகளை உணர்த்த வேண்டுமென்று கருதி எழுதப்பட்டதே பகவத் கீதை. இதில் ஐயமில்லை. எனினும், இந்த நூல் க்ஷத்திரிய மன்னருக்கு
விசேஷமாக உரியது. இது அவர்களுக்குள்ளேயே அதிகமாக வழங்கி வந்தது வேதங்கள், எப்படி உலகத்துக்கெல்லாம் பொதுவே ஆயினும், பிராமணர்களுக்கு
விசேஷமாக உரியனவோ அதுபோலே புராணங்கள் க்ஷத்திரியர்களுக்கு உரியன.

மேலும் கீதையைச் சொன்னவன் ராஜா; கேட்டவன் ராஜா.

ஆதலால் க்ஷத்திரிய அரசருக்கு இதில் ரஸம் உண்டாகும் பொருட்டாக இது போர்க்களத்தை முகவுரையாகக் கொண்ட மகா அற்புத நாடகத் தொடக்கத்துடன்
ஆரம்பிக்கிறது. இஃது, இந்நூல் ஞான சாஸ்திர்களில் முதன்மைப் பட்டிருப்பதுபோல், காவிய வரிசையிலும் மிக உயர்ந்ததென்பதற்குச் சான்றாகும்.

ஆனால், அதிலிருந்து இது ஞான சாஸ்திரமேயில்லை யென்று மறுக்கும் மூடர், முகவுரையை மாத்திரமே வாசித்துப் பார்த்தார்களென்று தோன்றுகிறது.

"முகவுரையில் மாத்திரமன்றே? நூலில், நடுவிலும் இடையிடையே, 'தஸ்மாத் யுத்யஸ்வ பாரத'- 'ஆதலால், பாரதா, போர் செய்', என்ற பல்லவி
வந்துகொண்டேயிருக்கின்றதன்றோ? என்று கூறிச் சிலர் ஆக்ஷேபிக்கலாம். அதற்குத்தான் மேலேயே கீதா ரகசியத்தின் ஆதார ரகசியத்தை எடுத்துச்
சொன்னேன். அதனை, இங்கு மீண்டும் சொல்லுகிறேன். துரியோதனாதிகள் - காமம், குரோதம், சோம்பர், மடமை, மறதி, கவலை, துயரம், ஐயம் முதலிய பாவ
சிந்தனைகள். அர்ஜுனன் ஜீவாத்மா. ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா.

 

continued

Mail Usup- truth is a pathless land -Home