தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Tamil Language & Literature > Paventhar Bharathidasan - பாரதிதாசன் >  icai amutu - இசை அமுது:  1. காதல் பகுதி > 2.தமிழ்ப் பகுதி  > 3. பெண்கள் பகுதி

CONTENTS
OF THIS SECTION
Last updated
11/03/07

Acknowledgement: Etext Preparation and Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland
Source  Icai amuthu by Bharathidasan, Published by Pari Nilayam, 184 Broadway, Chennai 600100.
 This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding. To view the Tamil text correctly you need to set up the following:
    i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
    ii)Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.    
 © Project Madurai 1999 - 2003 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

 


Literary Works of Bharathidaasan
( Kanakasubbaratnam, 1891-1964)
புரட்சி கவிஞர் பாரதிதாசன்
(கனகசுப்பரத்னம், 1891 - 1964) படைப்புகள்

icai amutu - இசை அமுது - 3. பெண்கள் பகுதி
 


1.45 பெற்றோர் ஆவல்  Sudha Ragunathan

 

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா? -- எமக்
கின்பம் சேர்க்கமாட் டாயா? -- நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்கமாட் டாயா? -- கண்ணே
அல்லல் நீக்கமாட் டாயா? துன்பம்...

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க -- எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க -- நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட் டாயா? -- கண்ணே
ஆடிக் காட்டமாட் டாயா? துன்பம்...

அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது -- யாம்
அறிகி லாத போது -- தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்டமாட் டாயா? -- நீ
இயம்பிக் காட்டமாட் டாயா? துன்பம்...

புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் -- தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் -- நல்
திறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச்
செல்வம் ஆகமாட் டாயா? -- தமிழ்ச்
செல்வம் ஆகமாட் டாயா? துன்பம்...



1.46 பெண் கல்வி

 

பெண்களால் முன்னேறக் கூடும் -- நம்
வண் தமிழ் நாடும்எந் நாடும்!
கண்களால் வழிகான முடிவதைப் போலே
கால்களால் முன்னேற முடிவதைப் போலே
பெண்களால் முன்னேறக் கூடும்!

படியாத பெண்ணினால் தீமை! -- என்ன
பயன்விளைப் பாளந்த ஊமை?
நெடுந்தமிழ் நாடெனும் செல்வி -- நல்ல
நிலைகாண வைத்திடும் பெண்களின் கல்வி!
பெண்களால் முன்னேறக் கூடும்!

பெற்றநல் தந்தைதாய் மாரே -- நும்
பெண்களைக் கற்கவைப் பீரே!
இற்றைநாள் பெண்கல்வி யாலே -- முன்
னேறவேண் டும்வைய மேலே!
பெண்களால் முன்னேறக் கூடும்!



1.47 தந்தை பெண்ணுக்கு

 

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் -- பாட
சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை!
சிலைபோல ஏனங்கு நின்றாய்? -- நீ
சிந்தாத கண்ணீரை ஏன்சிந்து கின்றாய்?
விலைபோட்டு வாங்கவா முடியும்? -- கல்வி
வேளைதோ றும்கற்று வருவதால் படியும்!
மலைவாழை அல்லவோ கல்வி? -- நீ
வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி!

படியாத பெண்ணா யிருந்தால் -- கேலி
பண்ணுவார் என்னைஇவ் வூரார் தெரிந்தால்!
கடிகாரம் ஓடுமுன் ஓடு! -- என்
கண்ணல்ல? அண்டைவீட் டுப்பெண்க ளோடு!
கடிதாய் இருக்குமிப் போது -- கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியுமப் போது!
கடல்சூழ்ந்த இத்தமிழ் நாடு -- பெண்
கல்விபெண் கல்விஎன் கின்றதன் போடு!



1.48 தாய் : வெற்றிலை வேண்டுமா?

 

 ஒருவேளை அல்ல திருவேளை
வெற்றிலை போடு! --போடா
தொதுக்கலும் நல்லஏற் பாடு!
சுரந்திட்ட எச்சிலை
வாயினில் தேக்குதல் போலே -- வேறு
தூய்மையில் லாச்செயல்
கண்டதில் லைவைய மேலே
ஒருவேளை...

கரியாகுமே உதடு! கோவைக்
கனியைநீ காப்பதும் தேவை!
தெரியாத ஆடவர்
வாய்நிறைய எச்சிலின் சேறு
தேக்கியே திரிவார்கள்
அவருக்கும் நீஇதைக் கூறு!
ஒருவேளை...

பூவைமார் 'நல்லிதழை' நல்ல
புன்னகை சிந்திடும் 'பல்லை'
நாவினால் யாம்சொல்வ தில்லை -- அவை
நன்மணத் தாமரை! முல்லை!
பாவைமார் வாயினில்
இயல்பான மணமுண்டு பெண்ணே!
பாக்குவெற் றிலைதனை
நீக்கலே மிகநன்று கண்ணே!
ஒருவேளை...



1.49 ஆண் பெண் நிகர்

 

ஆண்உயர் வென்பதும் பெண்உயர் வென்பதும்
நீணிலத் தெங்கணும் இல்லை
வாணிகம் செய்யலாம் பெண்கள்! -- நல்
வானூர்தி ஓட்டலாம் பெண்கள்!
ஆணுயர் வென்பதும்...

ஏணை அசைத்தலும் கூடும் -- அதை
யார் அசைத் தாலுமே ஆடும்!
வீணை மிழற்றலும் கூடும் -- அது
மெல்லியின் விரலுக்கா வாடும்?
நாணமும் அச்சமும் வேண்டும் -- எனில்
ஆணுக்கும் பெண்ணுக்கும் வேண்டும்.
ஆணுயர் வென்பதும்...

சேயிழை மார்நெஞ்ச மீது -- நாம்
சீறுபுலி யைக்காணும் போது
தீயதோர் நிலைமைஇங் கேது? -- நம்
தென்னாட்டின் அடிமைநில் லாது.
தூயராய்த் தொண்டாற்ற வேண்டும் -- பல
தொழிற்கல்வி யுங்கற்க வேண்டும்.
ஆணுயர் வென்பதும்...



1.50 பெண்கள் கடன்

 

மேகலையும் நற்சிலம்பும் பூண்டு -- பெண்ணே
வீழ்ச்சியும் சூழ்ச்சியும் தாண்டு!
போகவில்லை அகம்புறமும், நாலிரண்டும் நெஞ்சம்
புகுந்தோறும் புகுந்தோறும் அறம் எதிரிற் கொஞ்சும்
மேகலையும் நற்சிலம்பும்...

தமிழ்காத்து நாட்டினைக் காப்பாய் -- பெண்ணே
தமிழரின் மேன்மையைக் காப்பாய்
தமிழகம் நம்மதென் றார்ப்பாய்
தடையினைக் காலினால் தேய்ப்பாய்!
கமழும் சோலையும், ஆறும் நற்குன்றமும் கொண்டாய்
தமிழர் மரபினை உன்னுயிர் என்பதைக் கண்டாய்.
மேகலையும் நற்சிலம்பும்...

மூவேந்தர் கொடி கண்ட வானம் -- இன்று
முற்றிலும் கான்கிலாய் ஏனும்
ஓஓஎ னப் பகை தானும்
ஓடவே காத் திடுக மானம்
காவெலாம் தென்றலும் பூக்களும் விளையாடும் நாட்டில்
கதலியும் செந்நெலும் பயனைப் புரிந்தமணி வீட்டில்.
மேகலையும் நற்சிலம்பும்...



1.51 அச்சந்தவிர், மடமை நீக்கு!

 

அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்
அழகிய தமிழ் நாட்டின் கண்கள்
உச்சி இருட்டினில் பேய்வந்த தாக
உளறினால் அச்சமா? பேய் என்ப துண்டா?
அச்சமும் மடமையும்...

முச்சந்திக் காத்தானும் உண்டா? -- இதை
முணுமுணுப்பது நேரில் கண்டா?
பச்சைப் புளுகெலாம் மெய்யாக நம்பிப்
பல்பொருள் இழப்பார்கள் மடமை விரும்பி!
அச்சமும் மடமையும்...

கள்ளுண்ணும் ஆத்தாளும் ஏது? -- மிகு
கடியசா ராயமுனி ஏது?
விள்ளும்வை சூரிதான் மாரியாத் தாளாம்;
வேளைதோறும் படையல் வேண்டும்என் பாளாம்.
அச்சமும் மடமையும்...

மடமைதான் அச்சத்தின் வேராம் -- அந்த
மடமையால் விளைவதே போராம்!
மடமையும் அறமுநல் லொழுக்கமும் வேண்டும்
கல்விவேண் டும்அறிவு கேள்வியும் வேண்டும்.
அச்சமும் மடமையும்...



1.52 தாலாட்டு

 

ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆரரிரோ!

சீரோடு பூத்திருந்த செந்தாமரை மீது
நேரோடி மொய்த்துலவு நீலமணி வண்டுதனைச்
செவ்விதழால் தான்மூடும் சேதிபோல் உன்விழியை
அவ்விமையால் மூடியே அன்புடையாய் நீயுறங்கு!

கன்னங் கறேலென்று காடுபட்ட மேகத்தில்
மின்னி வெளிப்பட்ட விண்மீன்போல் உன்றன்விழி
சின்ன இமையைத் திறந்ததேன்? நீயுறங்கு!
கன்னலின் சாறே கனிச்சாறே நீயுறங்கு!

குத்துண்ட கண்ணாடி கொண்டபல வீரர்கள்போல்
துத்திக்காய் போலச் சுடர்முகத்தை நீசுருக்கி
ஏனழுதாய் என்றன் இசைப்பாட்டே கண்ணுறங்கு!
வான்நழுவி வந்த வளர்பிறையே கண்ணுறங்கு!

கன்னம்பூ ரித்துக் கனியுதடு மின்உதிர்த்துச்
சின்னவிழி பூத்துச் சிரித்ததென்ன செல்வமே?
அன்னைமுகம் வெண்ணிலவே ஆனாலும் உன்விழியைச்
சின்னதொரு செவ்வல்லி ஆக்காமல் நீயுறங்கு!

நெற்றிக்கு மேலேயுன் நீலவிழியைச் செலுத்திக்
கற்றார்போல் என்ன கருதுகின்றாய்? நீகேட்டால்
ஆனை அடிபோல் அதிரசத்தைச் சுட்டடுக்கித்
தேனில் துவைத்தெடுத்துத் தின்னென்று தாரேனோ?

கொட்டித் தும்பைப்பூக் குவித்ததுபோல் உன்னெதிரில்
பிட்டுநறு நெய்யில் பிசைந்துவைக்க மாட்டேனா?
குப்பைமணக்கக் குடித்தெருவெல் லாம் மணக்க
அப்பம் நிலாப்போல் அடுக்கிவைக்க மாட்டேனா?

மீன்வலைசேந் தும்கயிற்றை வேய்ந்த வளையம்போல்
தேன்குழல்தான் நான்பிழிந்து தின்னத் தாரேனா?
விழுந்துபடும் செங்கதிரை வேல் துளைத்ததைப்போல்
உழுந்துவடை நெய்யழுக உண்ணென்று தாரேனா?

தாழையின் முள்போன்ற தகுசீ ரகச்சம்பா
ஆழ உரலில் இடித்த அவலைக்
கொதிக்குநெய் தன்னில்தான் கொட்டிப் பொறித்துப்
பதக்குக் கொருபதக்காய்ப் பாகும் பருப்புமிட்டே

ஏலத்தைத் தூவி எதிர் வைக்கமாட்டேனா?
ஞாலத்தொளியே நவிலுவதை இன்னும் கேள்:
செம்பொன்னை மேற்பூசித் தேனைச் சுளையாக்கிக்
கொம்பில் பழுத்தநறுங் கொய்யாப் பழமும்

செதில்அறுத்தால் கொப்பரையில் தேன்நிறைந்த தைப்போல்
எதிர்த்தோன்றும் மாம்பழமும் இன்பப் பலாப்பழமும்
வேண்டுமென்றால் உன்னெதிரில் மேன்மேற் குவிந்துவிடும்.
பாண்டியனார் நன்மரபின் பச்சைத் தமிழே!

நெருங்க உறவுனக்கு நீட்டாண்மைக் காரர்
அறஞ்சிறந்த பல்கோடி ஆன தமிழருண்டே!
எட்டும் உறவோர்கள் எண்ணறு திராவிடர்கள்
"வெட்டிவா"வென் றுரைத்தால் கட்டிவரும் வீரர்அவர்

என்ன குறைச்சல் எதனால் மனத்தாங்கல்?
முன்னைத் தமிழர் முடிபுனைந்து ஞாலத்தை
ஓர்குடைக்கீழ் ஆண்ட உவகை உனக்குண்டு!
சேரனார் சோழனார் சேர்ந்தபுகழ் உன்புகழே!

ஓவியக் கரைகண்டார் உண்மைநெறி தாம்வகுத்தார்
காவிய சிற்பத்தில் கவிதையினில் கைகாரர்
உன்னினத்தார் என்றால் உனக்கின்னும் வேண்டுவதென்?
பொன்னில் துலங்குகின்ற புத்தொளியே கண்ணுறங்கு!

கற்சுவரை மோதுகின்ற கட்டித்தயிரா, நற்
பொற்குடத்தில் வெண்ணெய்தரும் புத்துருக்கு நெய்யா,நல்
ஆனைப் பசுக்கள் அழகான வெண்ணிலவைப்
போல்நிறைந்த பாலைப் புளியக்கொட்டை தான்மிதக்கும்

இன்பநறும் பாலா, என்னஇல்லை? கண்ணுறங்காய்!
அன்பில் விளைந்தஎன் ஆறுயிரே கண்ணுறங்கு!
காவிரியின் பாதாளக் காலின் சிலம்பொலியும்
பூவிரியப் பாடும் புதிய திருப்பாட்டும்

கேட்ட உழவர் கிடுகிடென நல்லவிழாக்
கூட்டி மகிழ்ச்சி குதிகொள்ளத் தோளில்
அலுப்பை அகற்றி அழகுவான் வில்போல்
கலப்பை எடுத்துக் கனஎருதை முன்னடத்திப்

பஞ்சம் தலைகாட்டப் பாராப் படைமன்னர்,
நெஞ்சம் அயராமல் நிலத்தை உழுதிடுவார்.
வித்துநெல் வித்தி விரியும் களையெடுத்துக்
கொத்துநெல் முற்றித் தலைசாய்ந்த கோலத்தை

மாற்றி யடித்து மறுகோலம் செய்தநெல்லைத்
தூற்றிக் குவித்துத் துறைதோறும் பொன்மலைகள்
கோலம் புரியும் குளிர்நாடும் உன்னதுவே!
ஞாலம் புகழும் நகைமுத்தோய் கண்ணுறங்கு!

செம்புழுக்கல் பாலோடு பொங்கச் செழுந்தமிழர்
கொம்புத்தேன் பெய்து குளிர்முக் கனிச்சுளையோ
டள்ளூற அள்ளி முழங்கையால் நெய்யழுக
உள்ளநாள் உண்ணும் உயர்நாடும் உன்னதுவே!

கோட்டுப்பூ நல்ல கொடிப்பூ நிலநீர்ப்பூ
நாட்டத்து வண்டெல்லாம் நல்லஇசை பாய்ச்சக்
கொத்தும் மரங்கொத்தி, தாளங் குறித்துவரத்
தத்துபுனல் தாவிக் கரையில் முழாமுழக்க

மின்னும்பசுமை விரிதழைப்பூம் பந்தலிலே
பன்னும் படம்விரித்துப் பச்சை மயிலாடுவதும்,
பிள்ளைக் கருங்குயிலோ பின்பாட்டுப் பாடுவதும்
கொள்ளை மகிழ்ச்சித் தமிழ்நாடு கொண்டாய்நீ

குப்பையெலாம் மாணிக்கக் கோவை, கொடுந்தூம்பிற்
கப்பும் கழுவுடையில் கண்மணியும் பொன்மணியும்!
ஆடும் குளிர்புனலோ அத்தனையும் பன்னீராம்!
சூடாமணி வரிசை தூண்டாச் சரவிளக்காம்!

எப்போதும் தட்டார் இழைக்கும் மணியிழையில்
கொப்பொன்றே கோடிபெறும் கொண்டைப்பூ என்பெறுமோ?
ஐந்தாறு வெண்ணிலவும் ஆறேழு செங்கதிரும்
வந்தாலும் நாணும் வயிரத் திருகாணி

ஒன்றுக்கே வையத்தை ஒப்படைக்க வேண்டுமெனில்
உன்மார்பின் தொங்கலுக்கு மூன்றுலகு போதுமா?
மின்காய்த்த வண்ணம் மிகுமணிக ளோடுபசும்
பொன்காய்த்த பூங்கொடியா ரோடுதம் காதலர்கள்

எண்ண மொன்றாகியே இல்லறத் தேர்தன்னைக்
கண்ணும் கருத்தும் கவருமோர் அன்புநகர்,
ஆரும்நிகர் யார்க்கும் அனைத்தும் சரிபங்கென்
றோரும்நகர், நோக்கி ஓடுந்தமிழ் நாடு

நின்நாடு! செல்வம் நிறைநாடு கண்ணுறங்கு
பொன்னான தொட்டிலில் இப்போது!

 

Mail Usup- truth is a pathless land -Home