பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் - ஈரோடு தமிழன்பன் நூலிலிருந்து...
"ஏம்பா சுத்த இவனா இருக்கிறே..."
பாரதிதாசன், தான் இளம் பருவத்தில் ஒரு `வஸ்தாதாக' இருந்தாக அவரே பலமுறை சொல்லியிருக்கிறார். அந்த நாள்களில் புதுச்சேரியில் கொட்டடி நாயக்கர், வல்லூறு நாயக்கர் என்று அழைக்கப்பெற்ற வேணு நாயக்கரின் உடற்பயிற்சிப் பள்ளியில் பாரதிதாசன் பயிற்சி பெற்றார். மற்போர், சிலம்பம் ஆகியவற்றில் தேர்ச்சி கண்டார். அவ்வேணு நாயக்கர் அப்போது புதுவையில் தங்கியிருந்த பாரதியாருக்கு நெருங்கிய நண்பர். இப்பின்னணியில் பார்த்தால், அறுபத்தெட்டாம் வயதில், `சும்மா ஏன் யானை முன்னால் போகிறது' என்று கேட்டுத் தாமே அதன் மீது உட்கார்ந்து வலம் வர விரும்பியிருப்பார் என்பதை ஏற்பதில் எவ்விதத் தடையும் இருக்காது என்றே எண்ணுகிறேன்...
இன்னும் ஒன்று - அவருள்ளத்திலிருந்து அவர் உடலிலும் பரவி வெளிப்பட எப்போதும்...
சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், தமிழ்ப் போர் மறவர்களும் காத்துத் துடித்துக் கொண்டிருந்தனர்.
புரட்சிக் கவிஞர் வீட்டிற்குச் சென்றால் - என்னைப் பொருத்த வரையில்,
"வாங்க"
"வா"
"அடடே நீயா?"
"நீங்களா" - வரவேற்பு இவ்வகையில் உண்டு.
புன்முறுவல் மட்டுமே சில சமயம்.
இவை எதுவுமில்லாமல் வெறும் பார்வையால் மட்டுமே வரவேற்பார். - சில நேரம். அவர் வீட்டுக்குச் சென்றுவிட்டால், அவர் வீட்டில்தான் உணவு உண்ண வேண்டும். விருந்து பேணுவதில் அப்படி ஓர் அக்கறையும் ஆசையும் கொண்டவர் புரட்சிக் கலைஞர்.
ஒரு முறை ஈரோட்டிலிருந்து சென்னை வந்த நான் நேராக அவர் வீட்டுக்குத்தான் சென்றேன். தியாகராய நகர் இராமன் தெருவில் உள்ள வளமனையின் புற வீட்டுக்கு அப்போது குடி பெயர்ந்திருந்தார். அங்கே சென்றதும் வெளிப்புறத்தில் அமர்ந்திருந்தார். புரட்சிக் கவிஞரிடம் என் வருகை அவர் வரவேற்பு எல்லாம் பதிவான பிறகு, நான் கொண்டு வந்திருந்த கைப்பெட்டியை அங்கு வைத்துவிட்டு வெளியே புறப்பட்ட நான், `நான் ஏதாவது விடுதியில் உணவருந்திவிட்டு வந்துவிடுகிறேன்' என்றேன். "ஏம்பா சுத்த இவனா இருக்கிறே! உள்ளே போய்ச் சாப்பிடு" என்று அன்பு கலந்த அதட்டல் அவரிடமிருந்து வெளிப்பட்டது.
"பராவயில்லை. நான் கடையில் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகிறேன்" என்றேன். திடீரென்று ஒரு வீட்டில் உணவை எதிர்பார்க்கக்கூடாது. வீட்டார்க்கு தொல்லை தரக்கூடாது என்கிற எண்ணம் உடையவன் நான். ஆனால் கவிஞர் அப்படி இல்லை. யாராயிருந்தாலும் தன் வீட்டிற்கு வந்தால், உணவு உண்ண வெளியே போகக்கூடாது என்பது அவர் கொள்கை.
அதனால் அன்பில் மீறிய அதட்டல் புரட்சிக் கவிஞரிடமிருந்து புறப்பட்டு வந்தது.
"கடையிலே சாப்பிடப் போறதுன்னா உன் பெட்டியையும் எடுத்துக்கிட்டுப் போ! போய்ச் சேரு!"
இவ்வளவுக்கும் அது உணவு நேரம்கூட இல்லை! நான் வெளியே சென்று சில அலுவல்களை முடித்துக் கொண்டு வர வாய்ப்பாக அவரிடம் அவ்வாறு சொல்லிக் கொண்டு புறப்பட்டதனால் - அவருக்கு ஏற்பட்ட அன்புச் சீற்றம்.
புரட்சிக் கவிஞரிடம் முன்னுரை பெற அவாவும் கவிஞர்களுக்கு அவர் ஏமாற்றம் தந்ததில்லை. அவருடைய கொள்கையே தமிழ்நாட்டில் எல்லாரும் கவிஞராக வேண்டும் என்பது தான். காரமேடு வள்ளிமணாளன் என்பவருடைய கவிதை நூலுக்குப் புரட்சிக் கவிஞர் எழுதிய முன்னுரையில்,
`எல்லாரும் இந்நாட்டில் கவிஞராகி எதிர்ப்பாரை எதிர்த்தோடிப் புதைக்க வேண்டும்' என்ற ஆக்க வரிகளை, ஊக்க வரிகளை வடித்துக் கொடுத்திருந்தார்.
இளங்கவிஞர்களின் படைப்புகளில் பருக்களாக உறுத்தும் பிழைகளைக் கண்டால் தாமே திருத்திக் கொடுப்பார். தக்கவரிடம் கொடுத்துப் பிழை நீக்குப் பார்வையைச் செலுத்தச் சொல்லித் திருத்திக் கொணரும்படி சொல்வார்.
நான் அவர் வீட்டில் இருந்த ஒருநாள், கல்லூரிப் பேராசிரியரும் கவிஞருமாகிய ஒருவர் முன்னுரைக்குத் தந்திருந்த `தேனிலவு' என்னும் நூலைப் படிக்க எடுத்தார். முதல் பக்கத்திலேயே அவர் முகத்தில் நெருப்பை மூட்டும் பிழை அமைந்திருந்தது.
"ஏம்பா, எது சரியான தமிழ்ச் சொல், `தெவிட்டாத' என்பதா, `திகட்டாத' என்பதா?" என்று என்னைக் கேட்டார்.
தெவிட்டாத என்பதுதான் சரியான வடிவம் என்று நான் சொன்னதும், இவன் `திகட்டாத' என்று போட்டிருக்கிறான்... என்ன இதெல்லாம் என்றவர், திரும்பவும் என்னிடம் ஒரு கேள்வியைச் சீற்ற வில்லில் வைத்துக் தொடுத்தார்.
"கரும்பு + இசை எப்படிப் புணரும்?"
கரும்பு + இசை - கரும்பிசை என்றுதான் புணரும் என்றேன்.
"இதோ! இந்த முண்டம் கரும்புயிசை என்று போட்டிருக்கு" என்று கடுஞ்சினம் கொண்ட புரட்சிக் கவிஞர் - அடுத்துச் சொன்ன வரிகள்தாம் என்னைக் கலங்க வைத்துவிட்டன.
"நான் செத்துவிட்ட பிறகு இப்படிப் பிழையெல்லாம் திருத்துவதற்கு ஆள் இல்லை என்று நினைக்கிற போது - என் பிள்ளை செத்துப்போனால் எப்படி வருத்தப்படுவேனோ, அப்படி வருத்தப்படுகிறேன்."
பிழை கண்டால் தழலாவது பாரதிதாசனின் இயல்புகளில் ஒன்று. அவரோடு பழகியவர்கள் ஒவ்வொருவரிடமும் இதற்கான சான்றுகள் இருக்கவே செய்யும். |