தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Tamil Language & Literature > Auvaiyar & her  Writings > ஒளவையார் பெருமை > Athisoodi with English Rendering - ஆத்திசூடி > Konraiventhan - கொன்றைவேந்தன் > Muthurai  - மூதுரை >  Nalvazhi with English Rendering - நல்வழி > Works of Auvaiyar :AticuTi, konRai vEntan, mUturai & nalvazi in tscii format

Auvaiyar Writings - Muthurai


[to read the Tamil text you may need to download & install a Tamil Unicode font from here - for detailed instructions please also see Tamil Fonts & Software]

 மூதுரை

கடவுள் வாழ்த்து

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கோல் என வேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால். 1

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர் 2

இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும்-இன்னாத
நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு 3

அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும் 4

அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா 5

உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான் 6

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகுமாம் குணம் 7

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று 8

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. 9

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல். 11

மடல் பெரிது தாழை (;) மகிழ் இனிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பொ¢து
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும் 12

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதவன் நன்மரம் 13

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி 14

வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம் 15

அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு 16

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு 17


சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டால் அங் கென்னாகும்? - சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால் 18

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன். 19

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு 20

இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும் 21

எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை. 22

கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம் 23

நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்
கற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம் 24

நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர். 25

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு 26

கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண். 27

சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடா (து;) ஆதலால் - தம்தம்
தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம்சிறியர் ஆவரோ மற்று.

28 மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
ஆகும்போ(து) அவளோடும் ஆகும்; அவள்பிரிந்து
போம்போ(து) அவளோடு (ம்) போம் 29

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம். 30

 
Mail Usup- truth is a pathless land -Home